உலகின் பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ்மொழி. இது இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கூறுகளை உள்ளடக்கியது. இம்மூன்று கூறுகளும் இணைந்திருப்பது தமிழ்மொழியின் தனித்தன்மை, ஆதலால், இம்மொழி ‘முத்தமிழ்’ என்று அழைக்கப்படுகிறது. இம்மூன்று தமிழில் ‘இசை’ நடுவணதாக விளங்குவது சிறப்பு.
பழந்தமிழரின் இசைப்புலமை
பழந்தமிழ் மக்கள் நுட்பமான இசைப்புலமையும் இசை இலக்கண அறிவும் பெற்றிருந்தனர். தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள் இது பற்றிக் கூறுகின்றன. இந்நூல்கள் கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் எழுந்த நூல்களாகும்.
பழந்தமிழ் மக்கள் இயற்கையில் எழும் ஒலிக் கூறுகளை நுண்மையாக ஆராய்ந்தனர். அதனை ஒட்டி இனிமையான ஓர் இசை முறையை உருவாக்கினர். படிப்படியாகப் பண்படுத்திய அந்த இசை முறையைப் “பண்” என்று அழைத்தனர். வாழும் நிலத்திற்கேற்பப் பண்களை வகைப்படுத்தினர். நேரத்திற்குப் (காலத்திற்குப்) பொருந்த பண்கள் பாடினர். சுவைக்குத் தகுந்த பண்கள் பாடினர். பண்கள் 103 என்றும் வகுத்தனர்.
பல்வேறு கலைஞர்கள்
செயல்முறைத் தகைமைக்கு ஏற்பக் கலைஞர்கள் வெவ்வேறு வகுப்பினராகத் தொழில்பட்டனர். பாட்டுப் பாடினோர் பாணர். கூத்து ஆடினோர் கூத்தர். கருவி இசைத்தோர் யாழ்ப்பாணர், பறையர், துடியர், கிணைஞர் என்றவாறு அவரவர் கருவிப் பெயர் கொண்ட வகுப்பினர் ஆயினர்.
இசைக்கருவிகள்
நரம்புக் கருவி, காற்றுக் கருவி, தோற்கருவி ஆகியவற்றை முறையே யாழ், குழல், முழவு எனப் பொதுப்படக் கூறினர். இவை ஒவ்வொன்றிற்கும் உரிய பல்வேறு வகைக் கருவிகளை உருவாக்கினர். இசையின் பரிணாம வளர்ச்சிக்கு இவை உதவின.
இசையும் பரதமும்
இசையும் கூத்தும் பழந்தமிழ் நாட்டில் உயர்நிலை எய்தின. இக்கலைகளின் செவ்வியல் தன்மையைச் (classical status) சிலப்பதிகாரம் காட்டுகிறது.
பழந்தமிழர் பயன்படுத்திய பண் என்னும் இசை முறை வளர்ச்சி பெற்று, பிற்காலத்தில் ‘கருநாடக இசை’ என அழைக்கப்படலாயிற்று. பண்ணிசையோடு இணைந்து வளம் பெற்ற பழந்தமிழர் ஆடல்முறை இக்காலத்தில் “பரதநாட்டியம்” என்றாயிற்று.
மேற்குறிப்பிட்ட செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, இப்பாடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நூல்கள் எழுதப்பட்ட காலம் முச்சங்க காலம் என அறியப்படுகிறது. இம்முச்சங்க காலம் இற்றைக்கு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே தமிழர் இசையும் கூத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செவ்விய கலைகளாக (classical arts) விளங்கின என உறுதியாகக் கொள்ளலாம்.
மேற்கண்ட கருத்தை மேலும் தெளிவுபடுத்திக் கொள்ள முச்சங்க காலத்தில் இசைக்கும் கூத்துக்கும் இலக்கணம் எழுதிய தமிழ் நூல்கள் யாவை என்று தெரிந்து கொள்வோமா?
முச்சங்க காலத்தில் இசைக்கு இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. கூத்துக்கும் இலக்கணம் எழுதப்பட்டது. எனவே இரு கலைகளை இணைத்தும் இலக்கண நூல்கள் எழுதப்பட்டன.
கால ஓட்டத்தில் பல நூல்கள் அழிந்துபோயின. எஞ்சிய நூல்கள் பற்றி இடைக்கால உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அந்நூல்கள் பற்றித் தெரிந்து கொள்வோமா?
அகத்தியம் இது அகத்திய முனிவரால் எழுதப்பட்டது. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் இந்நூல் இலக்கணம் கூறும்.
இசை நுணுக்கம் சிகண்டி என்னும் முனிவரால் எழுதப்பட்டது. இது ஓர் இசைத் தமிழ்நூல்.
இந்திர காளியம் யாமளேந்திரர் என்பவரால் எழுதப்பட்டது.
பஞ்சபாரதீயம் தேவவிருடி நாரதன் எழுதிய நூல்.
பஞ்சமரபு அறிவனார் என்பவர் இந்நூலின் ஆசிரியராவார். பழந்தமிழர் இசை நாடக இலக்கண நூலிது. இசை மரபு, வாக்கிய மரபு, நிருத்த மரபு, விநய மரபு, தாளமரபு என்னும் ஐந்து மரபுகள் பற்றிய நூலிது.
பெருங்குருகு இந்நூல் முதுகுருகு என்றும் சொல்லப்படும்-
பெருநாரை இந்நூல் முதுநாரை என்றும் சொல்லப்படும் – ஓர் இசைநூலே.
தாளவகை யோத்து தாள இலக்கணம் கூறும் பழந்தமிழ் நூல். இசை, கூத்து ஆகிய இரண்டிற்கும் அவசியம் தேவைப்படுவது தாளம். இசையையும் கூத்தையும் ஓர் ஒழுங்கு அல்லது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவது ‘தாளம்’ அல்லவா?
எடுத்துக்காட்டாகப் பொருளதிகாரம் அகத்திணையியல் 18 ஆம் சூத்திரம் தமிழக வாழ்க்கை நெறியின் அடிப்படைப் பண்பாட்டுக் கருவூலங்களைக் குறிப்பிடுகிறது. அந்தச் சூத்திரம் வருமாறு :
தெய்வ முணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப
(தொல். அகத்திணையியல் – 18)
இங்கு தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, யாழ் ஆகிய பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த ஏழும் தமிழர் பண்பாட்டுக் கருப்பொருள்கள்.
ஏழு கருப்பொருளில் ஒன்று யாழ். மற்றொன்று பறை.
யாழ்
தொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக் குறிக்கும். இது மிடற்றிசை (குரலிசை), நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை)ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும்.
பறை
தொல்காப்பியர் கூறும் “பறை” என்னும் சொல் தாளம் பற்றியதாகும். அதாவது தாளத்தைக் கொட்டிக் கொடுக்கும் பல்வேறு தாளக்கருவிகளின் (percussion instruments) முறைகளும் மரபுகளும் பற்றியதாகும்.
தொல்காப்பியர் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டளவினது என்பது அறிஞர்கள் கருத்து. இந்நூலின் காலக் கணிப்பு தமிழர் இசையின் தொன்மையை உறுதிப்படுத்துகிறது அல்லவா?
நிலத்தை ஐந்தாக வகுத்துக் கொண்ட தமிழர் அந்தந்த நிலத்துக்குரிய இசையை உருவாக்கினர். அந்தந்த நிலத்திற்குரிய பண்களைக் கீழ்க்கண்டவாறு வகுத்துக் கொண்டனர்.
குறிஞ்சி நிலத்திற்குரியது குறிஞ்சிப் பண்.
முல்லை நிலத்திற்குரியது முல்லைப் பண்.
மருத நிலத்திற்குரியது மருதப் பண்.
நெய்தல் நிலத்திற்குரியது செவ்வழிப் பண்.
பாலை நிலத்திற்குரியது பாலைப் பண்.
இசைக்கருவிகளும் அவற்றுக்கான பொழுதும்
“பண்” பாடிய தமிழர் அவ்வந் நிலத்தில் இசைத்த யாழ், முழக்கிய பறை, தொழுத தெய்வம் ஆகியவற்றையும் வகுத்துக் கொண்டனர். பண் இசைப்பதற்குரிய சிறுபொழுதையும் வரையறை செய்தனர். இதோ! இந்த அட்டவணையைப் பாருங்கள்!
1 2 3 4 5 6
நிலம் இசைத்த பண் இசைத்த யாழ் முழக்கிய பறை தொழுத தெய்வம் பண்ணிற்குரிய சிறுபொழுது
குறிஞ்சி குறிஞ்சிப்பண் குறிஞ்சி யாழ் வெறியாட்டுப் பறை சேயோன் என்னும் யாமம்
தொண்டகப் பறை முருகன் அல்லது நள்ளிரவு.
முல்லை முல்லைப்பண் முல்லையாழ் ஏறுகோட்பறை மாயோன் என்றதிருமால் மாலை
மருதம் மருதப்பண் மருத யாழ் நெல்லரி மணமுழவு வேந்தன் என்றஇந்திரன் விடியல்
நெய்தல் செவ்வழிப் பண் விளரி யாழ் மீன் கோட் பறை வருணன் எற்பாடு
பாலை பாலைப்பண் பாலை யாழ் துடி கொற்றவை நண்பகல்
பண்களுக்கு உரிய இசை ஏழு. பழந்தமிழர் இவற்றைக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என அழைத்தனர். இவற்றை எப்படி இசைப்பது? ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் உயிர் நெட்டெழுத்து ஒலிகளால் இவற்றை இசைத்தனர்.
பண் இசைகள் இசைஒலி சமஸ்கிருத சுரம் இசைஒலி
குரல் ஆ ஸட்ஜம் ஸ
துத்தம் ஈ ரிஷபம் ரி
கைக்கிளை ஊ காந்தாரம் க
உழை ஏ மத்தியமம் ம
இளி ஐ பஞ்சமம் ப
விளரி ஓ தைவதம் த
தாரம் ஒள நிஷாதம் நி
பண்களுக்கு உரிய இசை, ஏழு அல்லவா?
சம்பூர்ண இராகம்
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று ஆரோசையிலும், தாரம், விளரி, இளி, உழை, கைக்கிளை, துத்தம், குரல் என அமரோசையிலும் ஏழு இசையும் அமைந்தால் அது “பண்” எனப்படும். (குறிப்பு : ஒலி அலகு (Frequency) கூடிச் செல்வது ஆரோசை. குறைந்து வருவது அமரோசை) கருநாடக இசையின் ஆரோகணம் அவரோகணம் என்பது தான் ஆரோசை அமரோசை ஆகும். இவ்வாறு ஆரோகண அவரோகணத்தில் ஏழு சுரங்களும் முறையே அமைந்தால் கருநாடக இசையில் இது “சம்பூர்ண இராகம்” எனப்படும்.
பண்ணியலும் திறமும்
ஏழிசையில் ஆறு இசை கொண்டவை “பண்ணியல்” எனப்படும். (கருநாடக இசையில் இது “ஷாடவ இராகம்” எனப்படும்). ஏழிசையில் ஐந்திசை கொண்டது “திறம்” எனப்படும். (கருநாடக இசையில் இது “ஒளடவ” இராகம் எனப்படும்).
ஏழிசைகளையும் பழந்தமிழர் இவ்வாறு வகுத்துக் கொண்டனர். பின் அவற்றைப் பின்வருமாறு பகுத்துக் கொண்டனர்.
பண் வகைகள் – (சம்பூர்ண இராகம்) 17
பண்ணியல்கள் – (ஷாடவ இராகம்) 70
திறங்கள் – (ஒளடவ இராகம்) 12
திறத்திறங்கள் – (சுராந்தரம்) 04
மொத்தம் 103
பஞ்சமரபு நூலின் ஆசிரியர் அறிவனார் இந்த விளக்கத்தை ஒரு வெண்பாவில் கீழ்வருமாறு தருகிறார்.
பண்ணோர் பதினேழாம்
பண்ணியல் பத்தேழாம்
எண்ணுந் திறமிரண்டும் பத்தென்ப – நண்ணிய
நாலாந் திறத்திற மோர் நான்கு
முளப்படப்
பாலாய பண் நூற்று மூன்று.
ஆம்பல்பண்
ஆம்பல் என்பது ஒருவகைப் பண்ணாகும்.இப்பண்ணைப் பற்றிய செய்திகள் நற்றிணை (123 : 10), ஐங்குறுநூறு (215 : 3-5), குறிஞ்சிப்பாட்டு (221-222)ஆகிய பாடல்களில் காணப் பெறுகின்றன. கோவலர்கள் ஆம்பல் பண்ணை இசைக்கின்றனர். தட்டை, தண்ணுமை போன்ற இசைக்கருவிகளுடன் மாலைக் காலத்தில் இசைத்து மகிழ்கின்றனர்.
ஆம்பலங் குழலின் ஏங்கி (நற்றிணை : 123: 10)
காஞ்சிப்பண்
காஞ்சிப் பண் துயருறும் மக்களின் துயரம் போக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. விழுப்புண் பட்டவர்கள், பேய் பிடித்தவர்களின் வருத்தம் தீர இப்பண்ணினைப் பாடிய குறிப்பு, புறநானூறு 296-யில் காணப்பெறுகிறது.
குறிஞ்சிப் பண்
மலையுறை தெய்வங்களை மகிழ்விக்க, கூத்தரும் விறலியரும் குறிஞ்சிப் பண்ணைப் பாடியதாக மலைபடுகடாம் குறிப்பிடுகிறது.
நைவளம்
நைவளம் எனும் பண்ணைப் பற்றி, குறிஞ்சிப்பாட்டு (146), சிறுபாணாற்றுப்படை (36-38), பரிபாடல் (18-20-21) வரிகளில் குறிப்புகள் உள. இப்பண் பகற்பொழுதில் இசைக்க வேண்டிய பண் என்றும், பாணன் யாழிசையுடன் பாடினான் என்றும், இப்பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது. மேலும் குறிஞ்சி, செவ்வழி, பஞ்சுரம், படுமலை, பாலை, மருதம், விளரி என்ற பண்களைப் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. இப்பண்கள் இசைக்கும் காலம், நிலம், இப்பண்கள் தரும் உணர்வுகள் பற்றியும் தமிழர் இசை எனும் நூலில் ஏ.என். பெருமாள் குறிப்பிட்டுள்ளார். (ப.79)
பழந்தமிழகத்தில் கலைகளில் நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற கலை வகுப்பினர் வாழ்ந்தனர். இசைக்கலை வகுப்பினர் இருந்தனர். கூத்துக்கலை வகுப்பினர் இருந்தனர். கவியிசைக் கலைஞரும் இருந்தனர். அவரவர்க்குத் தெரிந்த கலையை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தனர்.
பழந்தமிழகத்தில் மன்னர்கள் போருக்குச் செல்வர். வெற்றி வாகை சூடித் திரும்புவர். அப்போதெல்லாம் இக்கலைஞர்கள் உடனிருந்து பாடல்கள் பாடியும், கூத்தாடியும், கருவிகளை இசைத்தும் மகிழ்விப்பர்.
கலைப் பயன்கள்
மக்களிடையேயும் இக்கலைஞர்கள் பெருஞ் செல்வாக்குப் பெற்று விளங்கினர். கலைத்திறனால் மக்கள் மனத்துயரங்களைப் போக்கினர். போருக்குச் சென்ற தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு ஆறுதல் தரவும், ஊடியிருக்கும் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே துாது செல்லவும் பண்ணோடு பாடிய இவர்கள் கலைத்திறன்கள் உதவின.
மன்னரும் மக்களும் இவர்களுக்குப் பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்தனர்.
பாணர் பிரிவுகள்
பாணர்கள் இசையில் நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றவர்கள். இவர்களில் பல பிரிவினர் உண்டு. இசைப் பாணர், யாழ்ப் பாணர், மண்டைப் பாணர் என்போர் பாணர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
வாய்ப்பாட்டுப் பாடுவோர் இசைப்பாணர். யாழ்க்கருவி இசைப்போர் யாழ்ப்பாணர். தோற்கருவிகளை முழக்குவோர் மண்டைப் பாணர். பழந்தமிழகத்தில் “பறை” என்னும் தோற்கருவிக்கு “மண்டை” என்ற பெயரும் வழங்கி வந்தது. எனவே பறை அடிக்கும் பாணர் “மண்டைப் பாணர்” எனப்பட்டனர்.
யாழ்ப்பாணரில் “பேரியாழ்” என்னும் பெரிய யாழ்க்கருவி இசைத்தோர் பெரும்பாணர் எனப்பட்டனர். ‘சீறியாழ்’ என்னும் சிறிய யாழ்க்கருவி இசைத்தோர் சிறுபாணர் எனப்பட்டனர்.
சிறந்த குடிகள்
பழந்தமிழகத்தில் பாணர்குடி சிறந்த குடிகளுள் ஒன்றாகும். சங்கப் புலவர் மாங்குடி கிழார் என்பவர் புறநானூற்று 335 ஆம் பாடலில் இவ்வாறு கூறுகிறார்.
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியு மில்லை
நல்ல குடிமக்கள் என்று சொல்லப்படும் இவர்கள் யாவர்? தெரிந்து கொள்வோமா?
‘துடி’ என்னும் தோற்கருவியை இசைப்போர் துடியர்
‘பண்’ என்னும் இனிய இசை பாடுவோர் பாணர்
‘பறை’ என்னும் தோற்கருவியை இசைப்போர் பறையர்
முருக வழிபாட்டில் ஈடுபட்ட இசை வகுப்பினர் கடம்பர் (கடம்பன் என்பது முருகக் கடவுளைக் குறிக்கும்)
பாணர் குடியிருக்கும் பகுதி ‘பாண்சேரி’ என்று அழைக்கப்படும்.
பாடினியர் வேறு பெயர்கள்
இவர்களுக்குப் பாண்மகள், விறலி, பாடினி, மதங்கி, பாட்டி, பாடன்மகடு எனப் பல பெயர்கள் உண்டு.
பாடினியின் தன்மை
பாடினி, இனிய குரல்வளம் கொண்டவள். மென்மையான அழகுள்ளவள். மயில் போன்ற சாயல் கொண்டவள். அறிவுக்கூர்மை மிக்கவள். இது போன்ற பல செய்திகளை முடத்தாமக்கண்ணியார் “பொருநராற்றுப்படை” என்னும் நூலில் தருகிறார். இந்நூல் சங்கத் தொகை நூல்களுள் பத்துப்பாட்டுக்களில் ஒன்றாகும்.
(எ.டு)
யாழ், குழல், முழவு
தமிழர் உருவாக்கிய இசைக்கருவிகளின் தனித்தன்மையை இது உணர்த்துவதாகக் கொள்ளலாம்.
யாழ்
பண்களை இனிமையாக இசைக்கும் கருவி யாழ். இது நரம்புக் கருவி வகையைச் (stringed instruments) சேர்ந்தது. மேலை நாட்டு இசையில் நரம்புக் கருவிகளைக் கார்டோபோன்ஸ் (chordophones) என்று அழைப்பர்.
குழல்
பண்களை இனிமையாக இசைக்கும் மற்றைய கருவி குழல். இது காற்றுக் கருவி வகையைச் (wind instruments) சேர்ந்தது. மேலை நாட்டு இசையில் காற்றுக் கருவிகளை ஏரோபோன்ஸ் (aerophones) என்பர்.
முழவு
தாளங்களை (rhythms) அளவாக முழக்கி அடித்துத் தரும் கருவி முழவு. இது தோற்கருவி வகையைச் (percussion instruments) சேர்ந்தது. மேலை நாட்டு இசையில் தோற் கருவிகளை மெம்பிரானோபோன்ஸ் (membranophones) என்பர்.
பழந்தமிழர் யாழ், குழல், முழவு ஆகிய மூவகைக் கருவிகளையும் பாட்டிசையோடு இணைத்து இசைத்தனர். சங்கத் தொகை நூல்களில் எட்டுத் தொகையுள் ஒன்று பரிபாடல். இந்நூலில் இது பற்றித் தெளிவாகச் சொல்லியிருப்பதைப் பாருங்கள்.
எழுபுணர் யாழும் இசையுடன் கூடக்
குழலளந்து நிற்ப முழவெழுந் தார்ப்ப
(புணர்:இணைந்து, அளந்து:சரியாக, ஆர்ப்ப : பெரிதாக ஒலிக்க) அதாவது யாழில் இணைந்து எழுகின்ற இனிய இசை பாட்டிசையோடு கூடி இசைக்கும். அப்பொழுது குழலில் எழும் இசை அதனோடு அளவாகச் சேரும். இவற்றுடன் பெரிதாக ஒலித்தபடி முழவின் ஓசை சேரும்.
பழந்தமிழர் கருவிகளைப் பொதுப்பட யாழ், குழல், முழவு என்று வகைப்படுத்தினர். இவை ஒவ்வொரு வகையிலும் பல்வேறு கருவிகள் உண்டு. இவை பற்றி இனித் தெரிந்து கொள்வோமா?
பழந்தமிழர் பல்வேறு வகை யாழ்க் கருவிகளை இசைத்தனர். அவற்றில் வடிவத்தால் பெயர் பெற்றவை வில்யாழ், சீறியாழ், பேரியாழ் ஆகியன.
வில் வடிவத்தில்
இருக்கும் யாழ் வில்யாழ் எனப்பட்டது.
சிறிய உருவத்தில் இருக்கும் யாழ் சீறியாழ் எனப்பட்டது.
பெரிய உருவத்தில் இருக்கும் யாழ் பேரியாழ் எனப்பட்டது.
நிலத்தால் பெயர் பெற்றவை
நிலப்பெயரால் பெயர் பெற்றவை குறிஞ்சியாழ், முல்லையாழ், மருதயாழ், பாலையாழ் ஆகியவை.
இசைப்பரிணாம வளர்ச்சியால் பெயர் பெற்றவை
இசையின் பரிணாம வளர்ச்சியின் செவ்விசை நிலையில் யாழ்க் கருவி வகை நான்கு எனக் கொண்டனர் பழந்தமிழர். அவை பேரியாழ், மகரயாழ், சகோட யாழ், செங்கோட்டு யாழ் என அழைக்கப்படும். இக்கருவிகளில் நரம்புகளின் (strings) எண்ணிக்கையால் அவை வெவ்வேறாயின. இந் நான்கு வகைக் கருவிகளின் நரம்பு எண்ணிக்கையை இங்கே பாருங்கள்.
பேரியாழ் - 21 நரம்புகள்
மகரயாழ் - 19 நரம்புகள்
சகோடயாழ் - 14 நரம்புகள்
செங்கோட்டுயாழ் - 07 நரம்புகள்
இக் கருவிகளின் தோற்றம், மற்றும் உறுப்புகள் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப் படை, மலைபடுகடாம், திருமுருகாற்றுப்படை ஆகிய பத்துப்பாட்டு நூல்களில் காணலாம். எட்டுத்தொகை நூல்கள் யாழ்க்கருவியின் இனிய இசை பற்றிக் கூறுகின்றன.
“தேஎந் தீந்தொடை நல்யாழ்” எனப் புறநனூறு கூறுகின்றது. தேனென இனிமையாக ஒழுகும் யாழின் இசைச் சிறப்பை இது உணர்த்துகிறது அல்லவா?
யாழ் இசைப்பவர் தகுதி
யாழ் இசைப்பவருக்கு இசை இலக்கண அறிவு நிறைவாக இருக்கவேண்டும்.யாழ்க் கருவியின் நரம்புகளின் சுருதி மாறாமல் இசைக்க வேண்டும். பண்களின் இலக்கணம் தவறாமல் கருவியை இசைக்க வேண்டும். பாடலின் சொல், பொருள், எழுத்து ஆகியவற்றிற்கு ஏற்றவிதமாக இசை அமைக்கும் திறமை பெற்றிருக்கவேண்டும்.
இத் தகுதிகள் பெற்றவர் ‘யாழாசிரியன்’ என்று அழைக்கப்பெற்றார்.
தொடக்கநிலை குழல் வகைகள்
கொன்றை மரக் காயைக் குழலாக உருவாக்கி இசைத்தல்; ஆம்பல் கொடியின் தண்டினைக் (stem) குழலாக உருவாக்கி இசைத்தல்; இவை தமிழர் இசை மரபின் தொடக்கநிலைக் குழல் வகைகளாகக் கொள்ளலாம்.
செவ்வியல் நிலை குழல் வகைகள்
படிப்படியாகக் குழல்இசை, செவ்வியல் நிலையை (classical form) அடைந்தது. குரலிசைக்கு (vocal music) நிகரான எல்லா இசை நுட்பங்களையும் இசைக்க வல்ல சிறந்த கருவியாகப் பழந்தமிழர் இதனை உருவாக்கினர்.
குழலிசை பெறுமிடம்
குழலை, தனித்து இசையைப் பெருக்கும் கருவியாகப் பயன்படுத்தினர். யாழ், முழவு முதலான பிற கருவிகளோடு இணைத்தும் இசைத்தனர். பாட்டிசைக்குப் பக்க இசை வழங்கவும் பயன்படுத்தினர்.
குழலிசை முதலிடம் பெறல்
பழந்தமிழர் கண்ட இசை முறை செவிக்கினிய மெல்லிசை ஆகும். இம்முறைக்கு முதலில் ஆதாரமாக ஓர் ஒலி நிலை வேண்டும். இணையும் குழலிசை கருவியிசை ஆகிய அனைத்துக்கும் ஒரே ஆதார ஒலி வேண்டும். இக்காலத்தில் சுருதிப் பெட்டி, தம்புரா முதலான கருவிகள் ஆதார ஒலிக்காகப் பயன்படுத்தப்படும். ஆதார ஒலி காட்டப் பழந்தமிழர் குழல் கருவியைப் பயன்படுத்தினர்.
இதோ பாருங்கள்! கூட்டு இசை நிகழ்ச்சியில் குழல் இசை வழி யாழிசையும், யாழிசை வழி தண்ணுமை என்னும் தாள இசையும், தண்ணுமை இசைவழி முழவும் சேரும் பாங்கைச் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறுகிறது.
குழல்வழி நின்றது யாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தன்ணுமைப்
பின்வழி நின்றது முழவே . . .
குழல் அமைப்பு
மூங்கிலால் உருவாக்கப்படுவது குழல் கருவி. இதில் எட்டுத் துளைகள் இருக்கும். பொதுவாகக் கருவியின் நீளம் 15 அங்குலமாக இருக்கும். சுற்றளவு 3 அங்குலமாக இருக்கும். குழலின் இடப்பக்கத் துவாரம் அடைத்திருக்கும். வலப் பக்கத் துவாரம் திறந்திருக்கும். வாய் வைத்து ஊதும் முதல் துளை “முத்திரை” அல்லது “முத்திரைத் துளை” எனப்படும். மீதி ஏழு துளைகள் மேலும் ஏழு விரல்கள் பண் அமைப்பிற்கேற்ப மூடித் திறக்கும். அப்பொழுது பண்ணிசை காற்றில் இனிமையாக மிதந்து வரும்.
குழல் இசைப்பவர் தகுதி
குழல் இசைப்பவருக்குப் பண்களின் இலக்கணம் பற்றிய முழு அறிவும் இருக்க வேண்டும். தாள நுட்பங்கள் தெரிந்து மத்தளம், தண்ணுமை போன்ற முழவுக் கருவிகளோடு இணைந்து இசைக்கும் திறன் இருக்கவேண்டும். பாட்டிசையோடு சேர்ந்து இசைக்கும் ஆற்றல் இருக்க வேண்டும். பாட்டின் பொருள் தெரிந்திருக்க வேண்டும். மொழியின் வல்லின. மெல்லின, இடையின ஒலிகள் தெரிந்து அவ்வொலிகளைத் தழுவிக் குழலிசைக்க வேண்டும். இத் தகுதிகள் பெற்றவர் ‘குழலாசிரியன்’ எனப்பட்டார்.
பழந்தமிழர் உருவாக்கிய இக் கருவி இக்காலத்தில் புல்லாங்குழல் என அழைக்கப்படுகிறது.
தாளத்தின் சிறப்பு
பாடல், ஆடல் ஆகிய இரண்டையும் அளவிடுவது தாளம். சுருங்கக் கூறினால், வரம்பு கடந்து ஒடும் ஆறுகள் போன்றன பாடலும் ஆடலும். இவற்றை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தும் கரைகள் போன்றவை தாளங்கள்.
தாளக் கலை மிக நுட்பமானது. மிக விரிவானது. பழந்தமிழர் பல்வேறு வகைத் தாளங்களைக் கண்டறிந்தனர்.35 தாளங்கள், 108 தாளங்கள், 175 தாளங்கள் எனப் பலவகைத் தாள நுட்பங்களைப் பழந்தமிழர் பயின்றனர். இவற்றைக் கருவிகளில் முழக்கி இன்புற்றனர்.
தாளக்கருவிகள்
பழந்தமிழர் உருவாக்கிய தாளக் கருவிகள் ஏராளம். சிலப்பதிகார உரை ஆசிரியர் அடியார்க்கு நல்லார். இவர் பழந்தமிழர் பயன்பாட்டில் இருந்த சில தாளக் கருவிகளை நூற்பா ஒன்றில் தருகிறார். நூற்பா சொல்வதைப் பார்ப்போமா?
பேரிகை படகம் இடக்கை உடுக்கை
சீர்மிகு மத்தளம் சல்லிகை கரடிகை
திமிலை குடமுழாத் தக்கை கணப்பறை
தமருகம் தண்ணுமை தாவில் தடாரி
அந்தரி முழவொடு சந்திர வளையம்
மொந்தை முரசு கண்விடு துாம்பு
நிசாளம் துடுமை சிறுபறை அடக்கம்
ஆசில் தகுணிச்சம் விரலேறு பாகம்
தொக்க உபாங்கம் துடிபெரும் பறை.
காலகட்டத்தில் இவற்றில் பல அழிந்து போயின. ஒரு சிலவற்றின் தோற்றத்தை இங்குப் பார்க்கலாம்.
இசைபாடுபவர், யாழ் இசைப்பவர், குழல் வாசிப்பவர், தாளக்கருவி முழக்குபவர் ஆகியோர்க்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்ற விதிகள் இருந்தன. விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு அமைய அவ்வக் கலைஞர் இருக்கவேண்டும். இருந்தால் “ஆசிரியன்” என்றும் “முதல்வன்” என்றும் அக்காலச் சமுதாயத்தில் அவர் மதிக்கப்பட்டார்.
இதோ! இசையின் ஒவ்வொரு துறையிலும் இருப்பவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றிப் பாருங்கள்.
சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையில் இது தெளிவாகச் சொல்லப்படுகிறது.
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய சொற்களைச் சொல்லும் பொருளும் சிதையாமல் பாடத் தெரியவேண்டும். பாடற் சுவையை உணர்ந்து இனிமையாக இசைக்க வேண்டும்.
இத்தகுதிகளை உடையவர் ‘இசை ஆசிரியன்’ என மதிக்கப்பட்டார்.
அரங்கேற்றத்தின் பக்கஇசை வழங்கிய தாளக் கருவி தண்ணுமை ஆகும். இக்கருவியை இசைப்பவர் தகுதிகள் என்னென்ன?
தாள இலக்கணம் கூறும் எல்லா நுட்ப அறிவும் பெற்றிருக்க வேண்டும். இயல், இசை, நாடகம் எனப்படும் முத்தமிழும் தெரிந்திருக்க வேண்டும். இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகியவற்றின் சொற் பிரயோகங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
பண்களின் இலக்கணம் தெரியவேண்டும். பண், பண்ணியல், திறம், திறத்திறம் ஆகியவற்றின் இசை இயல்புகளுக்கு ஏற்பத் தாளக் கருவியைக் கையாளத் தெரிய வேண்டும்.
பாடல், ஆடல் நிகழ்ச்சிகளின் குறை ஏதும் ஏற்படின், குறை தெரியாமல் தன் கலைத் திறனால் நடத்திச் செல்லும் திறமை வேண்டும்.
இத்தகைய தகுதிகள் பெற்றவர் “தண்ணுமை முதல்வன்” என்று அழைக்கப்பட்டார்.
பாடம் - 2
கி.பி.7 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சமண சமய ஆதிக்கம் வலுப்பெற்றது. அதனால் சைவ நெறி வலுவிழந்தது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் மன்னருக்கும் மக்களுக்கும் சைவத்தின் பெருமைகளை உணர்த்தினர். எப்படி? தமிழகத்தில் பக்தி இயக்கத்தை உருவாக்கினர். கோயில்கள் தோறும் சென்று வழிபட்டனர். சிவனருளால் பல அற்புதங்களை நிகழ்த்தினர். அப்பொழுதெல்லாம் தேவாரப் பதிகம் பாடினர்.
பதிகம் என்றால் என்ன? பத்துப் பாடல்கள் கொண்டது ஒரு பதிகம். தேவாரப் பதிகமும் பத்துப் பாடல்கள் கொண்டது. பல ஆயிரம் தேவாரப் பதிகங்களைச் சம்பந்தரும், அப்பரும், சுந்தரரும் பாடினர். சிவபெருமானின் அருமை பெருமைகளையும் சிவநெறியின் உயர்வையும் இப்பாடல்கள் உணர்த்தும். சிவபெருமானுக்குப் பல மூர்த்தங்கள் உண்டு, இதோ சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவ மூர்த்தம்!
கால ஓட்டத்தில் பல தேவாரப் பாடல்கள் மறைந்து போயின. கி.பி.11 ஆம் நூற்றாண்டில் சோழ மாமன்னன் முதலாம் இராஜராஜன் பெரும்பாலான தேவாரப் பாடல்களை மீட்டெடுத்தான். தேவாரங்கள் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. அவற்றின் பண்ணிசை மரபுவழி பாதுகாக்கப்பட்டது.
ஓதுவார் என்னும் இசை வகுப்பினர் தேவாரப் பாடல்களை இன்றளவும் மரபு முறையில் பாடுகிறார்கள். இப்பாடுமுறை “தேவாரப் பண்ணிசை” என்றழைக்கப்படும்.
இவர்கள் பாடிய தேவாரங்கள் “தமிழ் வேதம்” என்று போற்றப்படுகின்றன.
இனி இம் மூவரது வாழ்க்கைப் பின்னணியைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.
பண் : நட்டபாடை
தோடு உடைய செவியன் விடைஏறி ஓர் துவெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள் செய்த,
பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான் இவன் அன்றே!
(முதல் திருமுறை, 1)
(விடை = எருது (சிவனின் வாகனம்), மதி -சந்திரன், சுடலைப் பொடி = சாம்பல், ஏடு உடைய மலரான் = பிரமன்)
சிவப்பொருளை இனிய பண்களில் பாடும் உயர்வான ஞானத்தைப் பெற்றார் பிள்ளையார். அதனால் அவரை ஞானசம்பந்தர் என எல்லோரும் அழைத்து மகிழ்ந்தனர்.
பண்ணும் தாளமும் சிறக்கத் தேவாரம் பாடும் பச்சிளம் பாலகனைத் தந்தையார் தோள் மீது ஏற்றிக் கொண்டார். சில அடியார்கள் திரளாகச் சூழ்ந்து கொண்டனர். ஊர் ஊராகச் சென்று கோயில்களைத் தரிசித்தனர். அப்பொழுதெல்லாம் சம்பந்தர் தேவாரப் பதிகங்கள் பாடினார். மக்களுக்கு இனிய இசையால் இறைவழி காட்டினார். இம் மண்ணில் நல்லவாறு வாழலாம் என்று பாடினார். பிறவிப்பிணி தீர்க்கலாம் என்று பாடினார்.
பண்: தக்கராகம்
>துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து
பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்;
அணி வளர் கோலம்எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ! மங்கையை வாட மயல் செய்வதோ இவர்
(முதல் திருமறை,470)
இதன் பொருள் : முழு மதியானது கீற்றாக விளங்கும் பிறைமதியைத் தம் ஒளிபொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டியுள்ளார். பாம்புகளை அணிந்தவர். பூதங்கள் சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவர். அழகிய தோற்றுத்துடன் விளங்கும் நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவன் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகிறார். அப்படிப்பட்ட இறைவன் இம்மழவர் மகளை வாடுமாறு துன்பம் செய்தல் அவர் பெருமைக்குப் பொருந்துவதாகுமா?
சிவன் பெருமைகளைக் கூறி, இப்பெண்ணை இவ்வாறு துன்புற விடுவது உனக்குப் பெருமையா? எனப் பாடினார்.
பாண்டியன் நெடுமாறன் சைவ சமயத்தவன். ஆனால் சமணர்களுடைய போதனையால் சமணனாக மாறினான். இதனால் பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் வேதனைப்பட்டார். பாண்டி நாட்டிற்கு வரும்படி ஞானசம்பந்தரை அழைத்தார். அழைப்பை ஏற்று வந்த சம்பந்தர் மதுரை எல்லையில் ஒரு திருமடத்தில் தங்கினார்.
வெப்பு நோயால் துடித்துக் கொண்டிருந்தான் மன்னன். சமணர்களது மருந்து மாயமோ, மந்திர தந்திரமோ எதுவும் நோயைக் குணப்படுத்தவில்லை. பாண்டிமாதேவியும் மந்திரி குலச்சிறைநாயனாரும் சம்பந்தரை அணுகினர்.
மன்னரைக் காப்பாற்றும்படி அன்போடு கேட்டனர். திருநீற்றின் பெருமை சொல்லும் தேவாரம் பாடினார். இதோ அந்தப் பாடல்.
பண்: காந்தாரம்
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே!. .
(இரண்டாம் திருமுறை, 2178)
(வானவர் = தேவர் (சிவயோகத்தில் உள்ளவர்), சுந்தரம் = அழகு, தந்திரம் = ஆகமம்)
அத்திருமணத்திற்கு வந்த அனைவரும் முத்தி பெற வேண்டிச் சம்பந்தர் தேவாரம் பாடினார். பின்னர், “நமசிவாய” என்ற ஐந்தெழுத்தின் பெருமையைக் கௌசிகப் பண்ணில் பாடினார். கேட்போமா இப் பாடலை?
பண் : கௌசிகம்
காதல் ஆகிக் கசிந்து, கண்ணீர் மல்கி,
ஒதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது,
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
(மூன்றாம் திருமறை, 3320)
இதுவே ஞானசம்பந்தர் பாடிய கடைசித் தேவாரத் திருப்பதிகமாகும்.
சம்பந்தர் இம்மண்ணில் வாழ்ந்த 16 ஆண்டு காலத்துள் 16,000 தேவாரப்பதிகங்கள் பாடினார். தேவார மூவருள் அதிகப் பண்களிலும் பலவகைத் தாளங்களிலும் பாடல்கள் பாடியவர் சம்பந்தர். சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் சம்பந்தரை, “இசைஞானி” என்றும் ‘கானத்தின் எழு பிறப்பு’ என்றும் போற்றி மகிழ்ந்தார். (கானத்தின் எழு பிறப்பு = இறைவன் புகழைப் பாடுவதற்கென்றே தோன்றிய தெய்வப்பிறவி என்பது இதன் பொருள்)
மொத்த பதிகம்
வ. எண் பண்கள் பதிக எண்கள் முதல் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை
1 . நட்டபாடை 1-22 22
2. தக்கராகம் 23-46 24
3. பழந்தக்க ராகம் 47-62 16
4. தக்கேசி 63-74 12
5. குறிஞ்சி 75-103 29
6. வியாழக் குறிஞ்சி 104-128 25
7. மேகராகக்
குறிஞ்சி யாழ்முரி 129-135 136 7 1
8. இந்தளம் 1-39 39
9. சீகாமரம் 40-53 14
10. காந்தாரம் 54-82 29
11. பியந்தைக்
காந்தாரம் 83-96 14
12. நட்டராகம் 97-112 16
13. செவ்வழி 113-122 10
14 காந்தார பஞ்சமம் 1-24 24
15. கொல்லி 25-41 17
16. கொல்லிக் கௌவாணம் 42 1
17. கௌசிகம் 43-56 117 15
18. பஞ்சமம் 57-66 10
19. சாதாரி 67-99 33
20. பழம் பஞ்சுரம் 100-116 17
21. புறநீர்மை 118-123 6
22. அந்தாளிக் குறிஞ்சி 124-125 2
ஆக 136 122 125
திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் பண் அடிப்படையில் பகுக்கப்பட்டிருப்பதனை இப்பட்டியல் சுட்டுகிறது. இக்காலத்திலும் இப்பண்ணமைவோடே பாடப் பெறுகின்றன. பண்களைப் பற்றித் தேவாரப் பாடல்களில் பல செய்திகள் காணப்படுகின்றன. சம்பந்தர் இறைவனைப் பண்ணிலாவும் மறை பாடலினால் (2.3.1) என்று குறிப்பிடுகிறார். தமது பாடல்களைப்‘பண்ணோடு இசைப்பாடிய பத்தும்’ என்று குறிப்பிடுகிறார்.பண்ணுடைய பாடல் நன்று என்றும், அத்தகைய பாடல் தவழும் ஊர் நல்ல ஊர் என்றும், இத்தகைய இசை வல்லவர்களைப் பண்ணார் என்றும், பண்ணினைப் பாடி ஆடினால் இறையருளை எளிதில் பெறமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேவாரத் திருத்தலங்களுள் ஒன்றான திருவீழிமிழலைப் பதிகத்தில் பண்பற்றியும், பண்ணிசை பற்றியும் பண்மூலம் எழும் பல்வேறு ஓசை பற்றியும், அப்பண்ணின் மூலம் எழும் சுவை பற்றியும்,அவைகளின்ஊடே அமையும் தாள ஒலி பற்றியும் குறிப்பிடுகிறார்.
பண்ணும்பத மேழும்பல வோசைத் தமிழவையும் உண்ணின்றதொர் சுவையுமுறு தாளத்தொலி பலவும் மண்ணும்புன லுயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும் விண்ணும்முழு தானானிடம் வீழிம் மிழலையே
(பண் : நட்டபாடை, திருஞானசம்பந்தர்)
இதையெல்லாம் அவரது தமக்கையார் கொஞ்சமேனும் விரும்பவில்லை. தம்பியார் மீண்டும் சைவநெறிக்கு வரவேண்டும் என விரும்பினார்.
வயிற்றுவலியால் துன்புறல்
திருவருளால் மருள் நீக்கியாருக்குத் தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டது. சூலை நோய் எனப்பட்ட அந்த வயிற்றுவலியால் அவர் துடிதுடித்தார். குடைந்து குடைந்து நோயின் கொடுமை கூடியது. என்ன செய்வார்? தமக்கையாரே தஞ்சமென்று திலவதியாரிடம் சென்றார். நோயின் துன்பத்திலிருந்து தன்னைக் காப்பாற்றும்படி அழுது கேட்டார்.
பண்: கொல்லி
கூற்றாயினவாறு விலக்ககிலீர்!
கொடுமை பல செய்தன நானறியேன்,
ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்! அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
(நான்காம் திருமறை, 4150)
(கூற்றாயினவாறு = கூற்றுவனைப் போல (கூற்று = யமன்), தோற்றாது = நோய் முதல் புலப்படாது, அகம்படியே = உள் உறுப்புகளையே, துடக்கி முடக்கியிட = செயல்படாமல் முடக்குதலால்)
சூலைநோய் நீங்கியது
தேவாரப் பதிகத்தின் பத்துப் பாடல்களைப் பாடி முடித்தார். சூலை நோய் தானாக அகன்றது. இனிமையான தமிழில் பாமாலை பாடியதால் “நாவுக்கரசர்” என்றழைக்கப்பட்டார். நாவுக்கரசரும் சிவநெறி நின்று மகிழ்ந்தார்.
சுண்ணாம்புக் காளவாய்
நாவுக்கரசரைக் கொடும் சுண்ணாம்பு அறையில் அடைத்தார். சிவபெருமானின் இணையற்ற திருப்பாதங்களை நிழலாக நினைத்த நாவுக்கரசருக்குச் சுண்ணாம்பின் வெப்பம் ஒன்றும் செய்யவில்லை. அவருக்கு அது எப்படி இருந்தது தெரியுமா? இனிமையான வீணை இசையும், மாலை நிலாவும், வீசும் தென்றலும், குளிர்ச்சியான பொய்கையும் போன்று இதமாக இருந்தது. இதை அவர் இப்படி, அழகாகப் பாடி இன்புற்றார்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே
(ஐந்தாம் திருமுறை, 6112)
(மாசில் = குற்றமில்லாத, மாலை மதியம் = மாலைநேரத்தில் தோன்றும் முழுமதி, தென்றல் = தென்றல் காற்று,(இதமான காற்று) வீங்கு = பெருகிய, வண்டறை = வண்டுகள் மொய்க்கின்ற)
கல்லோடு கடலில் எறிந்தது
கடைசி முயற்சியாக நாவுக்கரசரைக் கல்லோடு கயிற்றால் கட்டினார்கள். ஆழ்கடலில் வீசி எறிந்தார்கள். எமக்குத் துணை ஐந்தெழுத்தாகிய “நமசிவாய” என்று துதித்தார் நாவுக்கரசர். சிவ அன்பில் ஊறிய நம்பிக்கையில் தேவாரம் பாடினார். காந்தார பஞ்சமப் பண்ணில் பாடிய அப் பாடலைக் கேட்போமா?
பண் : காந்தார பஞ்சமம்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணையாவது நம சிவாயவே
(நான்காம் திருமுறை, 4262)
(சொற்றுணை = சொல்லளவான வேத முதல்வன், கற்றுணைப்பூட்டி = கல்லோடு சேர்த்துக் கட்டி)
இவ்வாறு தொடங்கும் நமசிவாயப் பதிகப் பாடல்களைப் பாடி முடித்தார். சமணர்கள் கொடுமைகளிலிருந்து விலகினார் நாவுக்கரசர். பல்லவ மன்னனும் நாவுக்கரசரை வணங்கிச் சிவனடியாரானார்.
நாவுக்கரசர் ஒருதடவை சீ்ர்காழி வந்தார். சம்பந்தர் அவரை அன்புடன் வரவேற்றார். அப்பொழுது நாவுக்கரசர் சம்பந்தர் கால்களைத் தொட்டு வணங்கினார். தம்மில் வயதில் முதிர்ந்த நாவுக்கரசரை அன்போடு “அப்பரே” என்று அழைத்தார் சம்பந்தர்.
இருவரும் அன்பினால் பிணைக்கப்பட்டனர். அதுமுதல் நாவுக்கரசரை எல்லோரும் “அப்பர்” என்று அழைத்து மகிழ்ந்தனர்.
திங்களூர் என்னும் ஊரில் அப்பூதி அடிகள் என்பவர் வாழ்ந்தார். இவர் நாவுக்கரசரைத் தன் குருவாக மதித்தார். தமது பிள்ளைகள், தண்ணீர்ப்பந்தல், கிணறு, குளம், அறச்சாலை என எல்லாவற்றிற்கும் “நாவுக்கரசு” எனப் பெயரிட்டு மகிழ்ந்தார். இச் செய்தியைக் கேள்விப்பட்ட நாவுக்கரசர் அப்பூதி அடிகளார் வீட்டிற்குச் சென்றார்.
அமுது உண்ண அப்பரை அழைத்தல்
ஆனந்தம் பெருக்கெடுக்க நாவுக்கரசரை வரவேற்றார் அப்பூதி அடிகளார். தமது வீட்டில் அமுது செய்தருள வேண்டும் என அன்புடன் கேட்டார். நாவுக்கரசரும் அவர் வேண்டுகோளுக்கு இசைந்தார்.
அறுசுவை உணவு ஆக்கப்பட்டது. நாவுக்கரசருக்கு அதைப் படைக்க நல்ல வாழை இலை வேண்டும். தோட்டத்திலிருந்து அதை அரிந்து வரத் தன் புதல்வன் மூத்த நாவுக்கரசை அனுப்பினார். ஓடிச் சென்று வாழைக் குருத்தை அரிந்தான். ஐயோ! அங்கு இருந்த ஒரு நச்சுப் பாம்பு அவனைத் தீண்டியது. விஷம் தலைக்கு ஏறுமுன் ஓடிவந்து இலையைத் தந்தையிடம் கொடுத்தான். மயங்கி விழுந்தவன் விறைத்துப் பிணமானான்.
“ஐயையோ! குருநாதர் திருஅமுது செய்யும் நேரத்தில் இந்த இடையூறு ஏற்பட்டதே!” என்று அப்பூதி அடிகள் கலங்கினார். யாருக்கும் தெரியாமல் மகனின் சடலத்தை மறைத்து வைத்தார். எதுவும் நடக்காதது போல், நாவுக்கரசரை அமுது செய்ய அழைத்தார்.
இறந்தவன் எழுந்தான்
தம்மை அமுது உண்ணச் செய்வதற்காக மைந்தனின் மரணத்தை மறைத்த அப்பூதி அடிகளாரின் குரு பக்தியை நினைத்தார். கருணை கொண்டு இறைவனை வேண்டி, “ஒன்றுகொலாம்,” எனத் தொடங்கித் தேவாரம் பாடினார். ‘இந்தளப்’ பண்ணில் உருக்கமாகப் பாடினார்.
ஒன்று கொ லாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்று கொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்று கொலாமிடு வெண்டலை கையது
ஒன்று கொலாமவ ரூர்வது தானே
(நாலாம் திருமுறை, 4335)
(உயர்வரை = உயர்ந்த கயிலை மலை, வெண்டலை = மண்டையோடு, ஊர்வது = காளை)
நீண்ட காலம் இம் மண்ணுலகில் வாழ்ந்த அப்பர் ஏராளமான தேவாரப் பதிகங்கள் பாடினார். கையில் உழவாரக் கருவி ஏந்திக் கோயில் திருவீதிகளைச் சுத்தம் செய்தார். கல், முள், பொன், மணி என எது இருந்தாலும் அவற்றை உழவாரத்தால் அகற்றினார். பொன்னும் மணியும் கூட அவரைப் பொருத்தவரை கல், முள் போன்றனவே. உலகத்தார் மதிப்பது போல் அவர் மதிக்கவில்லை.
எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே
(ஆறாம் திருமுறை, 7215)
(கண்ணிலேன்= வேறுகாட்சியில்லேன், ஒண்ணுளே= வாழ்வதற்குப் பொருந்திய உறையுளாகிய உடம்பு, ஒன்பது வாசல் = ஒன்பது துவாரங்கள் (வளைகள்)
அப்பர் பாடிய பதிகங்கள்
அப்பர் சுமார் 49,000 தேவாரப் பதிகங்கள் பாடினார். இவற்றில் சில பதிகங்கள் தாள அமைப்பில் அமைந்தவை. இவை பண்ணாங்கப் பாடல்கள் எனப்படும். மற்றையவை தாள அமைப்பில்லாமல் பாடியவை. இவை சுத்தாங்கப் பாடல்கள் எனப்படும். திருத்தாண்டகம், திருவிருத்தம், திருக்குறுந்தொகை ஆகியவை அப்பர் பாடிய சுத்தாங்கப் பதிகங்களாகும்.
தாண்டகம் என்னும் பாவகையைப் பாடுவதில் பெருந்திறமை பெற்றவர் அப்பர். அதனால் அப்பருக்குத் “தாண்டக வேந்தர்” என்ற பெயரும் உண்டு.
வ.எண் பண் திருப்பதிகங்கள் மொத்தம்
1. கொல்லி திருப்பதிகம் திருநேரிசை 22 முதல் 79
வரை 58 திருவிருத்தம் 80 முதல் 113 வரை 34 93
2. காந்தாரம் 2 முதல் 7 வரை 6
3. பியந்தைக் காந்தாரம் 8 1
4. சாதாரி 9 1
5. காந்தார பஞ்சமம் 10-11 1
6. பழந்தக்க ராகம் 12-13 2
7. பழம் பஞ்சுரம் 14-15 2
8. இந்தளம் 16-18 3
9. சீகாமரம் 19-20 2
10. குறிஞ்சி 21 1
ஆக 113
“தமிழோடு இசைபாடல் மறந்தறி” யாத திருநாவுக்கரசர் பாடிய பண்களில் பத்து நமக்குக் கிடைத்துள்ளன. இதில் முதல் பண்ணாகக் கொல்லிப் பண் அமைந்துள்ளது.
‘கூற்றாயின வாறு விலக்கலீர்,’ எனும் பதிகம்கொல்லிப் பண்ணினால் அமைந்தது. கொல்லிப்பண் பகைமையைக் கொல்லும் பண் ஆகும். தேவாரத்தில் அதிகமான பதிகங்களில் இப்பண் பயன்படுத்தப் பெறுகின்றது. இறைவன் இப்பண்ணை விரும்பி ஏற்பான் என்பதை, ‘கொல்லியாம் பண்ணுகந்தார் குறுக்கை வீரட்டனாரே’ என்று நாவுக்கரசர் போற்றுகிறார்.
திருமணம் தடைப்படல்
நம்பியாரூரருக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. மிக்க கோலாகலமாக மணமேடையில் நம்பியாரூரரும் மணப்பெண்ணும் வீற்றிருந்தனர். உற்றார். பெற்றோர் உறவினர் யாவரும் மணப்பந்தலில் மகிழ்வோடு இருந்தனர். மணவினைகள் தொடங்கும் நேரம். அப்பொழுது அங்கு ஒரு முதியவர் வந்து, “இதோ! இங்கு மணமகனாக வீற்றிருக்கும் நம்பியாரூரன் என்னுடைய அடிமை, இவனுக்கும் எனக்கும் ஒரு வழக்குண்டு” என்றார். திருமணம் தடைப்பட்டது.
பித்தனின் செயல்
கோபமடைந்தார் நம்பியாரூரர். “நீர் பித்தன்” என்று திட்டினார். “நான் உமக்கு அடிமையா? அதற்கான ஓலையைக் காட்டும்” என்றார். முதியவர் கையிலிருந்த ஓலையைப் பிடுங்கினார். அதைக் கிழித்து எறிந்தார். ஆனால் முதியவர் சிரித்தார். “திருவெண்ணெய் நல்லூருக்கு வாரும். நீர் எனக்கு அடிமை என்பதை அங்குக் காட்டுவேன்” என்றார். வேகமாக முன் சென்றார் முதியவர். பின் தொடர்ந்தார் நம்பியாரூரர். சுற்றத்தார் யாவரும் உடன் சென்றனர். முதியவர் திருவெண்ணெய் நல்லூர் கோயிலுள் புகுந்தார். பின் மாயமாய் மறைந்தார்.
தன்னைத் தடுத்து ஆட்கொள்ள வந்தவர் சிவபெருமான் என்பதை நம்பியாரூரர் கருதினார். ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். இறை அன்பில் திளைத்து நின்ற நம்பியாரூரர், இனிய தமிழில் இறைவனைப் போற்றிப் பாடினார்
பண்: இந்தளம்
பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர்
அருள்துறையுள்
அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே.
(ஏழாம் திருமுறை, 7225)
(பித்தன் = பேருரள் உடையவன் (சிவனைக்குறிப்பது), பிறைசூடி= சந்திரணை அணிந்தவன், எத்தான் = எவ்வாற்றாலும், அருள்துறை = கோயிலின் பெயர், அத்தா = தலைவா)
சுந்தரர் இறைவனிடம் தோழமை உறவு கொண்டார். இறைவனை நட்புரிமையில் புகழ்ந்தும் வலிந்து வேண்டியும் பல தேவாரங்கள் பாடினார். சிவத்தலங்கள் தோறும் சென்று இறைவன் பெருமைகளைப் பாடினார். மக்களுக்குத் தேவாரப் பாடல்களால் நல்வழி காட்டினார்.
இறைவன் தூதுபோதல்
சில காலத்திற்குப் பின் தல யாத்திரை சென்றார் சுந்தரர். அக்காலத்தில் திருவொற்றியூர் என்னும் ஊரில் சங்கிலியார் என்னும் அழகிய பெண்ணைக் கண்டார். கண்டதும் காதல் கொண்டார் சுந்தரர். அவளை மணக்க விரும்பினார். சுந்தரர் விருப்பம் நிறைவேறியது.
பண்: கொல்லிக் கௌவாணம்
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்
இல்லையே யானாதா இயற்பகைக்கும் அடியேன்
இலையாற்தன் கொடிமாறன் அடியாற்க்கும் அடியேன்
(ஏழாம் திருமுறை,7617)
சுந்தரர் தமது முதல் பதிகத்தை இந்தளப் பண்ணில் பாடினார் அல்லவா? அதே இந்தளப் பண்ணில் கடைசிப் பதிகத்தையும் பாடினார். அவர் மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் பாடிய கடைசிப் பதிகம் இதுவே.
சுந்தரரைத் திருக்கயிலைக்கு ஏற்றிச் செல்ல வெள்ளை யானையை இறைவன் அனுப்பி வைத்தார். வெள்ளை யானை மேல் ஏறிய சுந்தரர் திருக்கயிலாயம் சென்றார். தாம் யானை மேல் ஏறிச்சென்ற செய்தியைச் சுந்தரர் திருநொடித்தான் மலைப் (கயிலாயம்) பதிகத்தில் கூறுகின்றார். இப்பதிகம் பஞ்சமம் என்னும் பண்ணில் அமைந்துள்ளது.
திருக்கயிலையில் சிவபெருமானும் உமை அம்மையாரும் சுந்தரரை வரவேற்றனர். சுந்தரரும் சிவானந்த வெள்ளத்துள் அழுந்தி முத்தி பெற்றார்.
வ. எண் பண் பதி பதிக எண்கள்
1. இந்தளம் 12 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12
2. காந்தாரபஞ்சமம் 1 77
3. காந்தாரம் 5 71, 72, 73, 74, 75
4. குறிஞ்சி 4 90, 91, 92, 93
5. கொல்லி 7 31, 32, 33, 34, 35, 36, 37
6. கொல்லிக்
கௌவாணம் 9 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46
7. கௌசிகம் 1 94
8. சீகாமரம் 4 86, 87, 88, 89
9. செந்துருத்தி 1 95
10. தக்கராகம் 4 13, 14, 15, 16
11. தக்கேசி 17 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70
12. நட்டபாடை 5 78, 79, 80, 81, 82,
13. நட்டராகம் 14 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30
14. பஞ்சமம் 7 96, 97, 98, 99, 100
15 பழம்பஞ்சுரம் 7 47, 48, 49, 50, 51, 52, 53
16 பியந்தைக் காந்தாரம் 1 76
17 புறநீர்மை 3 83, 84, 85
சுந்தரர் பாடிய பண்களில் செந்துருத்திப் பண் மிகவும் சிறப்பானதொரு பண்ணாகும். இப்பண்ணை ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் பாடவில்லை. மீளா அடிமை என்று தொடங்கும் பாடலில் (பதி-95) இப்பண் இடம் பெறுகிறது. இது ஒரு மங்கலகரமான பண்ணாகும். அரங்கிசை இறுதியில் இப்பண் இசைக்கும் மரபு இருந்துள்ளது.
தேவாரப் பண் இந்தியத் திருநாடு முழுவதும், போற்றப் பெற்றது. தஞ்சையில் இராசராசசோழன் தஞ்சைப் பெரிய கோயிலில் தேவாரம் விண்ணப்பிக்கச் செய்தமையைக் கல்வெட்டு மூலம் அறிகிறோம்.
மலைபோலக் குவிந்து கிடந்தன தேவார ஓலைகள். அவற்றில் கறையானால் அரிக்கப்பட்டுப் போன ஓலைகள் பல. ஒடிந்து போன ஓலைகள் பல. இருந்தும் நம்பியாண்டார்நம்பி என்பவரைக் கொண்டு பல ஓலைகளை மீட்டெடுத்தான் மன்னன்.
இவ்வாறு வகுக்கப்பட்ட திருமுறையுள் மொத்தம் 797 பதிகங்கள் இன்று கிடைக்கின்றன, இடையில் இல்லாதவை போக இவற்றுள் 8272 தேவாரப் பாடல்கள் அடங்கும். இதனை விவரமாக இங்குப் பார்க்கலாம்.
தேவார அமைப்பு
அருளியோர் திருமுறை எண்கள் பதிகங்கள் பாடல்கள்
சம்பந்தர் முதல், இரண்டு, மூன்று 384 4169
அப்பர் நான்கு, ஐந்து, ஆறு 312 3066
சுந்தரர் ஏழு 101 1037
தலைமுறை தலைமுறையாக இவர்கள் வழி வந்தவர்கள் ஓதுவார் எனப்பட்டனர். இவர்கள் தேவாரங்களின் பண்ணிசைகளை மரபுவழி பாடுவர்.
தேவாரப் பாடல்களை ஓதுவார்கள் இருபத்து மூன்று பண்களில் பாடுவார்கள். அப்பண்கள் பெயர் பின்வருமாறு:
1. செவ்வழிப் பண் 2. தக்கராகப் பண்
3. புறநீர்மைப் பண் 4. பஞ்சமப்பண்
5. நட்டபாடைப் பண் 6. அந்தாளிக் குறிஞ்சிப்பண்
7. காந்தாரப் பண் 8. பழம்பஞ்சுரப் பண்
9. மேகராகக் குறிஞ்சிப் பண் 10. கொல்லிக் கௌவாணப் பண்
11. பழந்தக்கராகப் பண் 12. குறிஞ்சிப் பண்
13. நட்டராகப் பண் 14. வியாழக் குறிஞ்சிப் பண்
15. செந்துருத்திப் பண் 16. தக்கேசிப் பண்
17. கொல்லிப் பண் 18. இந்தளப் பண்
19. காந்தார பஞ்சமப் பண் 20. கௌசிகப் பண்
21. பியந்தைக் காந்தாரப் பண் 22. சீகாமரப் பண்
23. சாதாரிப் பண்
கால ஓட்டத்தில் பல தேவாரங்கள் மறைந்தன. இருந்தும் பெரும்பாலான பாடல்களை மீட்டெடுத்தான் சோழ மாமன்னன் முதலாம் இராஜராஜன். தேவாரங்களைப் பண்ணோடு பாடத் தஞ்சைப் பெரிய கோயிலில் ஏற்பாடுகள் செய்தான். தலைமுறை தலைமுறையாக இவர்கள் வழி வந்தவர்கள் ஓதுவார் ஆவர். ஓதுவார்கள் 23 பண்களில் தேவாரம் பாடுவர். தற்போது தேவாரப் பண்ணிசைக் கச்சேரிகள் பொது அரங்குகளில் நடைபெறுகின்றன.
பாடம் - 3
இசை மிடற்றிசை, கருவியிசை என இருவகைப்படும். குரலால் பாடப்படுவது மிடற்றிசையாகும். கருவிகளால் இசைக்கப்படுவது கருவி இசையாகும். இசையை இசைப்பதற்கும், இசைக்கு மேலும் செறிவூட்டவும் இக் கருவிகள் பயன்படுகின்றன. இசைக்கு மேலும் செறிவூட்டும் வகையில் அமையும் பொழுது இவற்றைத் துணைக்கருவிகள் என்பர். இசையில் பல புதிய பாணிகள் தோன்றுவதற்கு இசைக் கருவிகளே துணை புரிந்துள்ளன. ஐந்நூற்றிற்கும் மலோக இசைக் கருவிகள் இந்தியாவில் உள்ளன. இவற்றில் சுமார் இரு நூற்றைம்பது இசைக் கருவிகள் தமிழகத்தில் உள்ளன. இத்தகைய இசைக்கருவிகளை இசைக்கும், தரத்திற்கும் ஏற்ப வகைப்படுதியுள்ளனர்.இவற்றைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி என்று வகைப்படுத்துவர்.
தொன்மை மிகு காலம் முதல் இசைவளம் நிரம்பியவர்களாகத் தமிழர்கள் விளங்கினர். அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இசை முக்கியமானதோர் இடத்தைப் பெற்றிருந்தது. பொழுதுபோக்கு நிலையில் இது தொடங்கினாலும் வாழ்வின் அங்கமாக வளர்ந்தது. சமுதாய விழாக்களிலும், ஆலய வழிபாட்டிலும், தனிமனித வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது.
தமிழர் வாழ்வோடு மிக நெருங்கிய இசையாக மங்கல இசை விளங்குகிறது. இதன் பெயர்க்காரணம், இவ்விசைக் குழுவின் அமைப்பு, இவ்விசைக் குழுவில் முக்கியக் கருவியாக விளங்கும் நாகசுரம், தவில் ஆகிய கருவிகளின் அமைப்பு, ஆலய வழிபாட்டில் இவைகளின் பங்கு, புகழ்பெற்ற கலைஞர்கள் முதலியவை பற்றி இப்பாடம் நமக்குப் புகட்டுகிறது.
உடுக்கை, உறுமி, கஞ்சிரா, கடம், கிணை, தண்ணுமை, தவில், பம்பை, பறை, மிருதங்கம், முரசு போன்ற தோற்கருவிகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. இவை கருங்காலி, செங்காலி, வேம்பு, பலா, உலோகம், மண் போன்றவற்றால் செய்யப் படுகின்றன. ஆவின் தோல், ஆட்டுத்தோல், காளையின் தோல் போன்றவற்றால் போர்த்தப்படுகின்றன. தோல்களை இறுக வளைத்துக்கட்ட தோல் வார்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
பறை
பறை மிகத் தொன்மையான தோற்கருவியாகும். தொல்காப்பியர் குறிப்பிடும் திணைக்குரிய கருப்பொருள்களில் பறையும் ஒன்றாகும். இப்பறை ஏனைய தோற்கருவிகளைப் போல் தோலால் போர்த்தப்பட்ட கருவியாகும்.வாரால் விசித்து இறுகக்கட்டப்பட்டதாகும் .இது ஒரு முக முடையது. இரட்டை முகங்களுடனும் இருந்துள்ளது. குறுந்தடி கொண்டு பறையடித்து ஒலி எழுப்புவர். பறை போர்ப்பறை, வெருப்பறை, வெறியாட்டுப்பறை, பேரோசைப் பறை, தட்டைப்பறை என்று வழங்குவர். தொல்காப்பியர் திணை அடிப்படையில் குறிஞ்சிப் பறை, முல்லைப் பறை, மருதப் பறை, நெய்தற் பறை, பாலைப் பறை என்று நிலத்தின் அடிப்படையில் அழைக்கிறார்.
பகைவர் நாட்டைக் கைக் கொண்டபின் பறையறைந்து செய்தி அறிவித்தலும்,வெற்றி பெற்ற பின் வெற்றிப்பறையிடுதலும், தோல்வியைப் பறையறைந்து தெரிவித்தலும் பண்டைய மரபாகும்.
வயலில் வேலை செய்யும் உழவர்கள் ஊக்கம் பெற மருதப்பறை ஒலிப்பர். நெல்லறுக்கும் பொழுது அரிப்பறை முழங்குவர். ஆறலைக் கள்வர் வழிப்பறி செய்யும் பொழுது பறை கொட்டுவர். மதம் பிடித்த யானையின் வருகையை அறிவிக்கப் பறை ஒலிப்பர். கழைக் கூத்தாடுபவர் களத்தின் கண் பறை முழங்குவர். செய்தி அறிவிக்கப் பறை முழங்குவர்.
இவ்வாறு தொன்மை மிகு தோற்கருவியான பறை இன்றும் வழக்கில் உள்ளது. நாட்டுப்புற மக்களால் போற்றப்பட்டு வருகிறது.
குழல் கருவிகளாக நாதசுரம், புல்லாங்குழல்,கிளாரினெட், ஒத்து, ஆர்மோனியம், கொம்பு, முகவீணை போன்ற கருவிகள் உள்ளன.
குழல்
குழலினிது என்று திருக்குறள்குறிப்பிடுகின்றது. மிகவும் இனிமையான கருவி. இதில் ஒன்பது துளைகள் உள்ளன. எல்லாத் துளைகளையும் திறந்தும் பிறகு ஒவ்வொன்றாக முறையே விரல்களினால் மூடியும் வாசித்து வரும் பொழுது ஏழு சுரங்களும் பிறக்கும். உருண்டை வடிவமான குழலின் மேல் துளையிடுவர். குழலை வங்கியம் என்றும் அழைப்பர்.
குழல் கருவி மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி ஆகியவற்றால் செய்யப்படுகிறது.மூங்கில் மரத்தால் செய்யப்பட்ட குழலே அனைத்திலும் சிறந்த ஒன்றாகும். இளமையும் மூப்பும் இல்லாமல் நடுவயதில் வளர்ந்துள்ள மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஓராண்டு வைத்த பிறகு குழல் செய்வர்.
பி. சைதன்ய தேவா தாம் எழுதிய இசைக் கருவிகள் என்ற நூலில் நரம்புக் கருவிகளை மூன்று வகையாகக் குறிப்பிடுகின்றார்.
1) சுருதி அல்லது தாள உபகரணமாகப் பயன்படுபவை. – தம்புரா
2) ஒரு தந்தி ஒரு சுரம் மட்டும் இசைக்கப் பயன்படுபவை. – யாழ்
3) ஒரே தந்தியில் பல சுரங்கள் இசைக்கப்படுபவை – வீணை
பண்டைய காலத்தில் யாழ் என்ற இசைக்கருவி மிகச் சிறப்புடன் விளங்கியது. சங்க இலக்கியம் இக் கருவி பற்றியும், இக்கருவியிலிருந்து எழும் இசையினிமை பற்றியும், இக் கருவி இசைக்கும் இசைக் கலைஞர்கள் பற்றியும் நன்கு எடுத்தியம்புகிறது. 21 நரம்புகளைக் கொண்ட பேரியாழ், 17 நரம்புகளை உடைய மகரயாழ், 16 நரம்புகளை உடைய சகோடயாழ், 7 நரம்புகளைக் கொண்ட செங்கோட்டு யாழ் பற்றிய இலக்கியச் செய்திகளை அறியலாம்.இசை இலக்கணத்தை நரம்பின் மறை என்று தொல்காப்பியமும் குறிப்பிடுகின்றது.
வீணை
இசைக் கருவிகளின் அரசி என்று போற்றப்படும் வீணை மிகச்சிறந்த நரம்புக் கருவியாகும். இன்றும் வழக்கில் உள்ளது. தற்போது வழக்கத்தில் உள்ள வீணயைத் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் இரகுநாதநாயக்கர் (கி.பி. 17-ஆம் நூற்) உருவாக்கியது என்பர். இதனால் இரகுநாத வீணை என்றும், தஞ்சை வீணை என்றும் அழைக்கப்படுகிறது.
குடம், மேற்பலகை, தண்டு, சுரைக்காய்,பிரடைகள்,யாளி முகம், மேளச் சட்டம், மெழுகுச் சட்டம், 24 மெட்டுக்கள் போன்ற பாகங்களைக் கொண்டு விளங்கும். பலாமரத்தால் செய்யப்படும்.
வலது கையின் ஆள் காட்டி விரலும், நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள் காட்டி விரலும் நடுவிரலும் இசைப்பதற்கும் பயன்படுத்தப்படும். தாள, சுருதித் தந்திகள் வலது கை சுண்டு விரலால் மீட்டப்படும். தந்திகளை மீட்டுவதற்காகச் சிலர் விரல்களில் நெளி எனப்படும் சுற்றுக் கம்பிகளையும் இட்டுக் கொள்வர்.
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் (திருவாசகம், திருப்பள்ளி 4 : 1) என்ற தொடரால் வீணையும் யாழும் மாணிக்கவாசகர் காலத்தில் வழக்கில் இருந்துள்ளதனை அறிய முடிகின்றது. காலப்போக்கில் யாழை விட வீணை அதிகம் வரவேற்புப் பெற்ற கருவியாக விளங்கியுள்ளது.
வீணை தனம்மாள், வீணை காயத்திரி, வீணை எசு.பாலசந்தர், வீணை சிட்டிபாபு போன்றோர் இத்துறை மேம்பாட்டிற்காக உழைத்துள்ளனர்.
மணிகளையும் தாளமாகக் கருதும் நிலை உள்ளது. கையினால் மணியை ஆட்டியும், குச்சியினால் அடித்து ஒலி எழுப்பும் நிலையிலும், கிராமப்புற மக்கள் காய்ந்த விதைகளை யுடைய காய்கள் மூலமும் தாள ஓசையை எழுப்புவர். ஆடலரங்கில் மலர் மொட்டுக்களைப் போன்றுசலங்கைகளைத் தொடுத்து தோல்வாரில் அமைத்து ஆடலில் பயன்படுத்துவர். இதனை வட இந்தியாவில் குங்க்ரு என்றும் தென்னகத்தில் கெச்சைஎன்றும் அழைப்பர். ஆலயங்களில், நாட்டுப்புற நடனங்களில் இச்சலங்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. சலங்கை என்றாலே நாட்டியத் தொழிலைக் குறிக்கும் அளவிற்கு முக்கிய நிலை பெற்றுள்ளது.நாட்டிய அரங்கேற்றம் செய்யும் பொழுது சலங்கை வழிபாடு செய்யும் மரபுள்ளது.
பீங்கான் கிண்ணங்களில் நீரை நிரப்பி வெவ்வேறு சுரஒலிகளை ஒலிக்கச் செய்து இசை நிகழ்ச்சியைத் தருகின்றனர். இதனை லதரங்கம் என்பர்.நீரின் அலைகள் என்ற பொருளில் சலதரங்கம் என்ற தொடர் பயன் படுத்தப்படுகிறது. கிண்ணங்களை அரை வட்டத்தில் வரிசையாக வைத்து, இசைப்பவர் நடுவில் அமர்ந்து கொண்டு ஒரு மூங்கில் குச்சியால் கிண்ணங்களின் ஓரங்களைத் தட்டி ஓசை எழுப்பி இசை நிகழ்ச்சியை நிகழ்த்தி வருகின்றனர்.
பல்பொருள்
மங்கலம் என்ற சொல் சுபம், ஆக்கம், பொலிவு, நற்செயல், திருமணம், அறம், வாழ்த்து, வழக்கு என்ற பொருள்களில் கையாளப்படுகிறது.
மேளம்
மங்கல இசைக் குழுவினை மேளக்காரர் என்றும், இவ்விசையை மேள இசை என்றும் வழங்குவர். மேளம் என்ற சொல் குழு என்ற பொருளில் கையாளப்படுகிறது. நாகசுரம், ஒத்து, தவில், தாளம் என்ற நான்கின் தொகுதி மேளம் என்று அழைக்கப்படுகிறது. இக்கருவிகளை இசைப்பவர்களை மேளக்காரர் என்று அழைப்பர். இதன் அடிப்படையில் கருவிகளுக்குச் சுருதி சேர்ப்பதை மேளங்கட்டுதல் என்பர்.
சின்ன மேளம், பெரிய மேளம்
மேளக் குழுவினரைப் பெரிய மேளம் என்று ஆலய வழிபாட்டு மரபில் அழைப்பர். இதில் நாகசுரம், தவில், ஒத்து, தாளம் என்று இசைப்பவர்கள் இருப்பர். இந்நிலையில் ஆலயத்தில் ஆடல் மூலம் இறை வழிபாடு செய்வதனைச் ‘சின்ன மேளம்’ என்று அழைப்பர். ஆலய வழிபாட்டில் ஓர் அங்கமாக விளங்கிய ஆடற்கலை வெளியேறிய பின்பு இவ்வாறு அழைக்கப்படும் மரபும் நின்று விட்டது.
நாகசுரமா? நாகசுவரமா?
தொடக்கத்தில் நாகசுரம் என்று வழக்கிலிருந்த இந்த இசைக் கருவி, பின்னர் நாதசுவரம் என வழங்கப்பட்டது. இதுவே சரியான வடிவம் என்னும் எண்ணத்தில் எல்லோரும் சொல்ல ஆரம்பித்து, இப்போது நாதசுவரமாகவே நிலைத்து விட்டது. இதன் மூல வடிவம் நாகசுரம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கருவி வகைகள்
நாகசுரத்தில் பாரி, திமிரி, இடைப்பாரி, மத்திம சுருதி என்ற வகைகள் உள்ளன. நாகசுரத்தின் அளவிற்கு ஏற்பவும் துளை அமைக்கும் முறையாலும் இவ்வாறு பெயரிடப்படுகின்றன. பாரி நாயனம் திருவாரூர்க்குரிய சிறப்பான கருவியாகும். இது முகவீணை என்ற கருவிக்கும், இன்று நிலவும் நாகசுரத்திற்கும் இடைப்பட்ட நீளமுடையதாகும். இது சோழர் காலத்துக் கருவியாகத் திகழ்கிறது. சிற்பங்களில் காணப்படும் கருவி இதுவேயாகும். திருவாரூரில் குடமுழா என்ற பஞ்ச முக வாத்தியமும், பாரி நாயனமும் இன்றும் சிறப்புடன் போற்றப்பட்டு வருகின்றன.
இரட்டை நாயன முறை
மேளக் குழுவில் ஒரு நாகசுரம், ஒரு தவில், ஒரு தாளம், ஒரு சுருதி என்ற நிலையில் இசைக் குழுவினர் இருப்பர். பிறகு இக்குழுவில் இரண்டு நாகசுரம், இரண்டு தவில், ஒரு தாளம் ஒரு சுருதிக்காரர் என்ற நிலையில் குழு தோன்றியது. நாகசுர இசை உலகில் இரு நாகசுரக் காரர்கள் சேர்ந்து இசைக்கும் முறையை, திருப்பாம்புரம் சாமிநாதப் பிள்ளை குமாரர்கள் நடராசசுந்தரம், சிவ சுப்ரமணியம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருவீழிமிழலை சுப்பிரமணியப் பிள்ளை, நடராச சுந்தரம் பிள்ளையும் தொடர்ந்தனர். இன்று மதுரை சகோதரர்கள், திருப்பாம்புரம் சகோதரர்கள், பின்னை மாநகர் சகோதரர்கள் என்ற நிலையில் இரட்டை நாயன முறை நிலவி வருகிறது. இந்நிலையில் இரு தவில்களும் இடம்பெறலாயின. பிறகு தனித்தவில் என்ற நிலை தோன்றியது. இக்குழுவில் கிடுகிட்டி என்ற ஒரு கருவியையும் சேர்த்துக் கொண்டு இசைத்துள்ளனர். திருவீழிமிழலை கிடுகிட்டி கிருட்டிணன் என்பவர் மிகச் சிறந்த கலைஞராக விளங்கியுள்ளார்.
பெயர்க்காரணம்
தவில், தவுள், தவல், மேளம், கொட்டு என்ற பெயர்களில் இக்கருவிக்குத் தவில் என்ற பெயரே இயற்பெயராகவும், ஏனையவை இதன் திரிபுகளாகவும் வழங்கப்படுகின்றன.
மணமுழவு
தவில் என்ற சொல் பிற்கால வழக்குச் சொல்லாகும். இதனை மணமுழவு என்று அழைத்தனர். மணமுரசு என்ற சொற்றொடரை விழா முரசு என்று சிலப்பதிகார உரை குறிப்பிடுகின்றது. மணமுழவு என்பதனை மருதநிலப் பறை என்று தொல்காப்பியப் பொருளதிகார உரை குறிப்பிடுகின்றது. மணக்கோலம், மணப்பொருத்தம், மணம் புரிதல், மணமகன், மணமகள், மணமண்டபம், மணவறை, மணவறைத் தோழன் போன்ற சொற்களில் வரும் மணம் என்ற சொல் திருமணத்தைக் குறிப்பதால் மணமுழவு என்பதும் திருமணத்திற்குரிய முழவு என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளது. இன்றும் திருமண விழாக்களின் பொழுது தவில் கருவி பயன்படுத்தப்படுகிறது. திருமாங்கல்யம் திருப்பூட்டுச் செய்யும் பொழுது கெட்டி மேளம் என்ற பெயரில் இசைக்கப்படுகிறது.
அமைப்பு
தவிலை அவநத்த வாத்தியம் என்பர். அவநத்தம் என்றால் மூடப்படுவது என்பது பொருள். உருளை வடிவமான மரத்தில் குடையப்பட்ட பானையில் இரு புறங்களும் தோலால் மூடப்பட்ட கருவியாதலால் இது அவநத்த வாத்தியமாயிற்று.
தவில் கருவி
பானை, வண்டோதரி, குண்டோதரி, கண்கள், தோல், வாள் வளையம், நாபி, புள், கழி உறை போன்ற உறுப்புகளைக் கொண்டிருக்கும், தவில்.
தவிலில் மந்தார சுருதி தவில், திமிரி தவில் என இரு வகைகள் உள. மந்தார சுருதி தவில் திமிரி தவிலைவிட அளவில் சற்றுப் பெரியதாக இருக்கும். சிவாலயங்களில் மந்தார சுருதி தவில்கள் இருப்பதனை இன்றும் காணலாம். இன்றைய நிலையில் திமிரி தவில்களையே கலைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
செட்டுத் தவில்
தவிலிசைக்குப் பெருமை சேர்த்த கலைஞர்கள் பலர் உள்ளனர். நாகசுரம், தவில், தாளம், ஒத்து என்ற நான்கும் சேர்ந்ததனை நமனம் என்று பழங்காலத்தில் குறிப்பிடுவர். இக்குழுவில் ஒவ்வொருவர் மட்டும் இடம் பெறுவர். இவர்கள் மேற்கொள்ளும் இசை நிகழ்ச்சியைச் சேவகம் என்பர். ஒரு மேளக் குழுவில் நிரந்தரமாக இடம் பெறும் தவில் கலைஞரைத் தவில்காரர் என்பர். இதனால் இவர்களுக்குள் ஓர் ஒருங்கிணைப்பும், நெருக்கமும் இருக்கும். பின்பு இக்குழுவில் தனியாக ஒரு சிறப்பு வாய்ந்த தவில்காரர் இடம் பெறலாயினர். இவரைத் தனித்தவில்காரர் என்பர்.தனித்தவில் இசைக்கும் முறையைத் தவிலிசை மேதை நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் தொடங்கி வைத்தார். இவர்கள் காலத்தில் இசைக் குழுவில் ஒரு தவில் இடம் பெறும் நிலைமாறி இரு தவில்கள் இசைக்கும் முறை தோன்றியது.
ஐந்து கால வழிபாடு
ஆலயங்களில் பெரும்பாலும், நாள்தோறும் ஐந்து கால வழிபாடுகள் நடைபெறும். காலைச்சந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, இரண்டாம் காலம், அர்த்த சாமம் என்று ஐந்து கால வழிபாடுகள் நடைபெறும். இவ்வைந்து கால வழிபாடுகளின் பொழுதும், மேளக் குழுவினர் இசைப்பர். காலையில் திருப்பள்ளி எழுச்சி முதல் இரவில் பள்ளிக்கு இறைவனை எழுந்தருள வைத்தல் வரை இவர்களின் பணி இருக்கும். இறைவன் பள்ளியிலிருந்து எழுந்தருளும் போது பூபாள இராகம் அல்லது பௌளி இராகம் இசைத்து அதற்குரிய இசைகளை இசைப்பர்.
தேவாரப் பாடலில் திருஞான சம்பந்தர் பாடிய ‘மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை’ என்ற பாடல் பூபாள இராகத்தில் அமைந்த பாடலாகும்.
மல்லாரி
மங்கல இசைக் குழுவிற்காக உரிய இசை உருப்படியாக மல்லாரி அமைந்துள்ளது. இசைப் பரிமாணத்திற்குரிய உருப்படியாக இது அமையும். இதனால் இலயக் கருவியான தவிலின் பங்கு இதில் மிகுதி. இறைவன் வீதி உலா எழுந்தருளும் பொழுது கம்பீரநாட்டை இராகத்தில் வீரச் சுவை நிரம்பிய இசை உருப்படியான மல்லாரியை இசைப்பர். இது போல ஆலயச் செயற்பாட்டின் ஒவ்வொரு நிலையிலும் அச்செயலுக்கேற்ற மல்லாரி இசைக்கப்படுவதுண்டு.
இறைவனின் நீராடலுக்கு நீர் கொண்டு வருவதனைத் திருமஞ்சனம் என்பர். திருமஞ்சன நீர் கொண்டு வரும் பொழுது திருமஞ்சன மல்லாரி இசைக்கப்படும்.
இறைவனின் தளிகை உணவு தயாரிக்கும் இடமான மடைப்பள்ளியிலிருந்து தளிகை கொண்டு வரப்படும். அப்பொழுது தளிகை மல்லாரி இசைக்கப்படும்.
ஆலயத் திருவிழாக் காலங்களில் இறைவனைத் தேரில் எழுந்தருளச் செய்தல் உண்டு. இது பெரும்பாலும் ஆலயப் பெருந்திருவிழாவான ஒன்பதாம் நாள் நடைபெறும். தொண்டர்கள் தேரின் வடம் பிடித்துத் தேரை இழுப்பர். இவர்களை உற்சாகப்படுத்தும் நிலையில் தேர் மல்லாரி இடம் பெறும்.
ஆலயங்களில் இறைவன் வீதியுலா எழுந்தருளும் போது சின்ன மல்லாரி இசைக்கப்படும். சிவாலயங்களில் இறைவன் காளை (இடப) வாகனத்தில் – பஞ்ச மூர்த்திகளும் – எழுந்தருளும் பொழுது பெரிய மல்லாரி இசைக்கப்படும். இவ்விசை அமைதிகளைக் கொண்டு ஆலயத்தில் இன்ன செயற்பாடு நடைபெறுகிறது என்பதனை உணர்த்தும் அடையாள இசையாக மல்லாரி விளங்குகிறது. ஆலயப் பெருந்திருவிழாவின் இறுதி நாளன்று பெரும்பாலும் மல்லாரி இசைப்பதில்லை. மற்ற நாட்களில் இறைவன் வீதியுலா முடிந்ததும் அலங்காரம் களைந்து பள்ளியறைக்குச் செல்லும்பொழுது ஊஞ்சல் பாட்டு இசைப்பர்.இது முடிந்ததும் கதவு தாளிடுவர். தாளிட்டதும் மல்லாரியைக் கொஞ்ச நேரம் இசைக்க வேண்டும். இம்மரபு முறைகள் குருகுலக் கல்வியின் மூலம் மாணவர்களுக்கு ஆசிரியரால் அளிக்கப்படும்.
கோயில் மேளம், ஏற்பாடு மேளம்
ஒவ்வொரு ஆலயத்திலும் அந்த ஆலயத்திற்கென்று நிர்ணயம் செய்யப்பட்ட மேளக் குழுவைக் கோயில் மேளம் என்றும், உள்ளூர் மேளம் என்றும் கூறுவர். இவருக்குத்தான் இக்கோயிலின் மரபுகள் அனைத்தும் தெரியும். நாள்வழிபாடு, விழாக்காலங்களில் இவர்கள் இசை வழிபாடு செய்வர். ஆலயங்களில் வாத்திய மண்டபம் உண்டு. இம்மண்டபத்தில் அமர்ந்து இவர்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்துவர்.
திருவிழாக் காலங்களில் வெளி ஊரிலிருந்து மேளக் குழுவை வரவழைத்துச் சிறப்பு இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வர். இதனை வெளியூர் மேளம் அல்லது ஒற்றை மேளம் என்பர். இவர்கள் உள்ளூரின் மேளக்காரரை சார்ந்தே இருப்பர். ஆலயங்களில் கோபுர வாசல் வரை உள்ளூர் மேளக்காரரே இசைப்பார். இவர் என்ன வகையான இராகம் தாளங்களில் வாசித்து முடித்தாரோ அதற்கு ஏற்றபடி வெளியூர் மேளக்காரர் தொடர்ந்து இசைக்க வேண்டும்.
தட்டிச் சுற்று
நாகசுரம் தாளம் ஆலய வழிபாட்டின் கருவி்கள் என்பதனை நினைவுபடுத்தும் நிலையில் இக்கருவிகளுக்குரிய துணி உறைகள், பட்டைகள் வரை காவி நிறத்தில் தைக்கப்படும். காலப் போக்கில் இவையும் மாறி வந்துள்ளன. இறைவன் வீதி உலா முடிந்து கோயிலுக்குள் வந்ததும் இறைவனை நிறுத்தி மேளக் குழுவினரும் பண்ணிசைக் குழுவினரும் முறை சுற்றி வருவர். இதனைத் தட்டிச் சுற்று என்பர். இது நடைபெறும் மண்டபத்திற்குத் தட்டிச் சுற்று மண்டபம் என்பர். திருவீழிமிழலை, திருவிடைமருதூர், திருவாவடுதுறையில் உள்ள ஆலயங்களில் இதனைக் காணலாம்.
புகழ்பெற்ற நாகசுரக் கலைஞர்கள்
நாகசுரக் கலைக்குச் சமுதாயத்தில் மிக உயரிய இடத்தைத் தந்தவராக திருவாடுதுறை இராசரத்தினம் (1848-47) விளங்கினார். தோடி என்ற இராகம் இசைப்பதில் வல்லவர். ஆதலால் தோடி இராசரத்தினம் என்று போற்றப்பட்டார். இவரது மங்கல இசை முழக்கத்தோடு இந்தியச் சுதந்திர பிரகடனம் 15.8.1947 அன்று ஒலிபரப்பப்பட்டது.
சாவேரி கீழ்வேளூர் கந்தசாமி பிள்ளை (1826-1894) சாவேரி இராகம் இசைப்பதில் வல்லவர். கீழ்வேளூர் கேடிலியப்பர் ஆலய இசைக் கலைஞராக விளங்கினார்.
கோட்டை சுப்பராயப் பிள்ளை (1843-1919) காம்போதி, தோடி இராகங்கள் இசைப்பதில் வல்லவர். இவர் சுமார் 300 வர்ண இசை உருப்படிகளை இசைப்பதில் கைதேர்ந்தவர் என்று போற்றப்பட்டார்.
ஆடற்கலை ஆசானாகக் கலை உலகில்அறிமுகமாகி நாகசுரக் கலைஞராகத் திகழ்ந்தவர் கூறைநாடு நடேசபிள்ளை (1830-1905) ஆவார். கோட்டை சுப்பராயப் பிள்ளையிடம் நாகசுரப் பயிற்சிப் பெற்றார். இராக ஆலாபனை, கீர்த்தனை இசைப்பதில் வல்லவர். இவரின் ஆடற்கலை நாகசுரக் கலை மேம்பாட்டிற்குப் புதுப் பொலிவினைத் தந்தது. தான வர்ணங்கள் அமைப்பதிலும், இசைப்பதிலும் வல்லவர். தில்லை கோவிந்தராசர் ஆலயக் கோயில் மாலை எனும் நூலை உருவாக்கினார்.
நாகசுர உலகில் சின்ன பக்கிரி என்று அழைக்கப் பட்டவர் மன்னார்குடி சின்னபக்கிரி ஆவார். நாகசுரச் சக்கரவர்த்தி இராசரத்தினம் பிள்ளைக்கு முன்னோடியாக விளங்கினார். இவர் கீர்த்தனை, இராக ஆலாபனை, பல்லவி போன்ற அனைத்து நிலைகளிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.
யானைத்தந்தத்தில் அமைந்த நாகசுரம் இசைக்கும் பரம்பரைக் காரராக, திருவாரூர் சாமிநாதப் பிள்ளை திகழ்ந்தார். இவர்களை நயினார்க் கடியார் பரம்பரையினர் என்று அழைப்பர்.
திருவையாறு தியாகராசர் ஆராதனை விழாவினைச் சிறப்போடு நடத்திய திருவீழிமிழலை சுப்ரமணிய பிள்ளை, நடராச சுந்தரம்பிள்ளை ஆகியவர்கள் தியாகராசர் கீர்த்தனைகளையும் பிற கீர்த்தனைகளையும் இசைப்பதில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர்.
திருப்பாம்புரம் சிவசுப்ரமணியபிள்ளை, நடராச சுந்தரம் பிள்ளைச் சகோதரர்கள் இரண்டு பேர் நாகசுரம் சேர்ந்து இசைக்கும் மரபினைத் தோற்றுவித்தவர்களாக விளங்குகின்றனர்.
ஆண்டிக் கோயில் கருப்பையா, வேதாரண்யம் வேத மூர்த்தி, குழித்தலை பிச்சப்பா பிள்ளை, நாமகிரிப் பேட்டை கிருஷ்ணன் போன்ற தலை சிறந்த மேதைகள் பலர் இக்கலையை வளர்த்த பெரியவர்களாகத் திகழ்கின்றனர்.
தற்போது வளர்ந்து வரும் கலைஞர்கள் பலர் கலைச் சேவை பலவற்றைச் செய்து வருகின்றனர். ஆண்டார்கோயில் செல்வரத்தினம் பிள்ளை, மாநகர் சகோதரர்கள், திருப்புறம்பயம் சகோதரர்கள், மதுரை பொன்னுசாமி சகோதரர்கள் போன்றோரின் பணி பாராட்டுதலுக்குரியதாகும்.
புகழ்சால் தவிற் கலைஞர்கள்
தவிலிசைக்குப் பெருமை கூட்டிய கலைஞர்கள் பலர் உள்ளனர். தவிலிசையால் அவர்களும், அவர்களால் தவிலிசையும் மேன்மை பெற்றதை அறிவோம். தவில் உலகில் தனிப்பெரும் இடத்தைப் பெற்றவராக அம்மாப்பேட்டை பக்கிரிப்பிள்ளை விளங்கினார். நாகசுர உலகில் “தவிலிசைக்கு ஒரு பக்கிரி” என்று சொல்லும் வகையில் வாழ்ந்தார். புகழ்பெற்ற நாகசுரக் கலைஞர்களோடு இவர் வாசித்துள்ளார்.
தவிலிசை உலகில் முக்கிய இடம் பெற்றவர்களுள் அம்மா சத்திரம் கண்ணுசாமி பிள்ளை குறிப்பிடத் தக்கவர் ஆவார். 14 வயதிலேயே மிகச் சிறப்பாக விளங்கினார். தவிலை மிருதங்கம் போல் இசைப்பதிலும் இவர் வல்லவர்.
நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தவில் உலகில் (1894-1949) தனக்கு மிக்காரும் ஒப்பாரும் இல்லை என்ற நிலையில் வாழ்ந்தவர். ஒரு காலக்கட்டத்தில் தவில்காரர் என்ற சொல் இவரையே குறித்தது. தனித்தவில் வாசிக்கும் முறையை இவரே அறிமுகப்படுத்தினார்.
திருக்கடையூர் சின்னையா பிள்ளை (1900-1976) தாளக் கணக்கில் வல்லவர். இலயச் சிம்மம் என்று போற்றப்பட்ட சிதம்பரம் வைத்திய நாகசுரக்காரர் குழுவில் இருந்தவர் இவர். 1927-ல் தருமபுர ஆதீன கர்த்தரால் சிங்கமுகத் தவிற் சிலையும், இராமநாதபுர அரசரால் தங்கப் பதக்கமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
தவில் கலைஞரான மலைக்கோட்டை பஞ்சாமிப்பிள்ளை (1905-1935) தவிற்கலையில் வல்லவராகத் திகழ்ந்ததோடு இசைக் கீர்த்தனைகள் இயற்றுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.
யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி (1933-1975) தவில் வானின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தார். இலயக் கணக்கிலே வேகமும் கொண்டவர். சங்கீர்ணம் என்ற தாள சாதியை மகேந்திர பல்லவன் கண்டு பிடித்தது போல, 11 அட்சரமுடைய மற்றொரு முறையை இவர் உருவாக்கினார்.
சிறப்பாகத் தவில் வாசித்தலில் புகழ் பெற்றவர் பலர். ஆசிரியராக இருந்து பலருக்கு வாழ்வளித்தவராக திருவாழபுத்தூர் பசுபதிப் பிள்ளை (1879-1958) விளங்கினார். தஞ்சை மாவட்டத்தில் சிறப்புடன் விளங்கிய பலருக்கு இவரே குரு ஆவார்.
வாழ்ந்து வரும் தவிற் கலைஞர் பலர் மிக உன்னதச் சிறப்புடன் இக்கலை மேம்பாட்டிற்காக உழைத்து வருகின்றனர். நாகசுரத்திற்குப் பக்க வாத்தியமாக விளங்கிய தவிற்கலையை முதன்மைக் கலையாக்கிய பெருமைக்குரியவர்களாக அரித்துவார மங்கலம் பழனிவேலு, திருவாழபுத்தூர் கலியமூர்த்தி, தஞ்சை கோவிந்தராசன், வேதாரண்யம் பாலு, வலையப்பட்டி சுப்பிரமணியன் போன்றோர் விளங்குகின்றனர். பல்வேறு இசைக் கருவிகளை இசைப்பதோடு ஆடற்கலை வளர்ப்பதிலும் பலர் வெற்றி கண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்து வரும் இரண்டாவது பாடத்தில் மங்கல இசை பற்றிய செய்திகள் எடுத்துரைக்கப்படுகின்றன.
தமிழகத்தின் தனிப்பெரும் இசைக்குழுவாக விளங்கும் மங்கல இசைக்குழு தமிழகத்தின் சிறப்பை உலகறியச் செய்த குழுவாகும். ஆலயத்தில் தோன்றி, ஆலயத்தால் வளர்க்கப்பட்டு, ஆலயத்தோடு வாழ்ந்து வரும் கலையாகும். தமிழிசையின் தொன்மையையும் சிறப்பையும் வளத்தையும் காப்பாற்றி, வளர்ந்து வருகிறது. தலைசிறந்த கலைஞர்களால் இக்கலை மேம்பட்டது. தமிழகத்தில் தமிழர்கள் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் இக்குழு இடம் பெற்று வருகிறது. மிகச்சிறந்த தொடர்ந்திசைக் கருவியாக நாகசுரமும் இராச வாத்தியம் என்ற நிலையில் தவிற்கருவியும், சிறப்பான நாதம் தரும் கஞ்சக் கருவியும், இவை அனைத்தையும் ஒரே சுருதியில் கொண்டு வரும் ஒத்துக் கருவியும் இணைந்த இக்குழுவை மேளம் என்று அழைக்கின்றனர்.
பாடம் - 4
பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது கீர்த்தனை. இவை இனிமையான இராகங்களில் அமைந்திருக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் கீர்த்தனைகள் உள்ளன.
“சங்கீத மும்மூர்த்திகள்” என்று அழைக்கப்படும் சியாமாசாஸ்திரி, தியாகைய்யர், முத்துசுவாமிதீட்சிதர் ஆகிய மூவருக்கும் ‘ஆதிமும்மூர்த்திகள்’ காலத்தால் முற்பட்டவர்கள்.
தமிழில் முதன் முதலாகக் கீர்த்தனை பாடிய மூவரும் எந்தக் காலத்தில் வாழ்ந்தனர்? இவர்கள் வாழ்ந்த காலத்தைக் கீழ்வருமாறு குறிக்கலாம்.
முத்துத்தாண்டவர் கி.பி. 1525 – 1625 க்கு இடைப்பட்ட காலத்தவர்
அருணாசலக்கவிராயர் கி.பி. 1711 – 1779
மாரிமுத்தாபிள்ளை கி.பி. 1712 – 1787
இம்மூவரில் காலத்தால் மூத்தவர் முத்துத்தாண்டவர். அருணாசலக் கவிராயரும் மாரிமுத்தா பிள்ளையும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்.
இராகம் : மாயாமாளவகௌள தாளம் : ஆதி
பல்லவி
ஆடிக் கொண்டாரந்த வேடிக்கை காணக்கண்
ஆயிரம் வேண்டாமோ ?
சிதம்பர நடராசரின் அற்புதத் திருநடனத்தைக் கண்குளிரக் காண ஆயிரம் கண்கள் போதுமோ? என்று பாடுகிறார் முத்துத்தாண்டவர். இவர் சிதம்பர நடராசர் மீது அளவில்லாத பக்தி கொண்டு பல கீர்த்தனைகள் பாடினார். இவற்றைப் பாடுவதற்கான இவரது வாழ்க்கைப் பின்னணியை முதலில் தெரிந்து கொள்ளலாம்.
தாண்டவர் என்பது இவரது இளமைக்காலப் பெயர். இசை வளோளர் குலத்தவரான இவரது குடும்பத்தினர் சீர்காழிக் கோயிலில் நாகசுர இசை வாசிக்கும் தொண்டு செய்தனர்.
உடற்பிணியும் பசிப்பிணியும்
தாண்டவர் இளமையில் தீராத நோய் ஒன்றினால் துன்பப்பட்டார். எனவே குலத்தொழிலை அவரால் செய்ய முடியவில்லை. இதனால் குடும்பத்தார் இவரை வெறுத்து ஒதுக்கினார்கள். மனம் வருந்திய தாண்டவர் நாள்தோறும் கோயிலுக்குச் சென்றார். தோணியப்பரையும் திருநிலைநாயகியையும் வழிபட்டார். கோயிலையே தஞ்சமாகக் கொண்டு தனித்து வாழ்ந்தார். உண்ண உணவில்லாது பல நாட்கள் பட்டினியாய்க் கழித்தார்.
பொழுது விடிந்தது. கோயிற் பூசாரியும் மற்றையோரும் கோயிற் கதவுளைத் திறந்து உள்ளே வந்தனர். கையில் கிண்ணத்தோடு அம்பிகையின் சந்நிதியில் தாண்டவர் நிற்கக் கண்டனர். ஆச்சரியத்தோடு எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
அன்னஅமுது அளித்த அம்பிகை சிதம்பரம் போகும்படி சொன்னதாகவும் கூறினார். தாண்டவர் கையிலிருந்த பொற் கிண்ணமும் முத்துப்போல் ஒளி பரப்பிய அவரது முகப்பிரகாசமும் உண்மையை உணர்த்தியது. எல்லோரும் மகிழ்ச்சியோடு அவரை, “முத்துத்தாண்டவர்” என அழைத்தனர். அன்று முதல் தாண்டவர் முத்துத்தாண்டவரானார். சீர்காழி அவர் பிறப்பிடமாதலால் சீர்காழி முத்துத்தாண்டவர் என்றும் அழைத்தனர்.
இராகம் : அபினா
பல்லவி
பூலோக கைலாசகிரி சிதம்பரம் அல்லால்
புவனத்தில் வேறும் உண்டோ?
முத்துத்தாண்டவர் இக்கீர்த்தனையை முழுமையாகப் பாடி முடித்தார். உடனே அதுநாள் வரை அவரை வாட்டிய கொடிய நோய் மறைந்தது. கோயிற் பஞ்சாட்சரப் படிமேல் ஐந்து பொற்காசுகள் தோன்றின. படிக்காசு பெற்ற முத்துத்தாண்டவர் பரவசமுற்றார். (பொன்னம்பல மேடைக்கு ஏறஉதவும் படிக்கட்டுகள் பஞ்சாட்சரப்படி என்று அழைக்கப்படும்)
நாளுக்கொரு கீர்த்தனை
முதற் கீர்த்தனை பாடிய நாள்முதல் முத்துத்தாண்டவர் நாள்தோறும் சிதம்பரம் சென்றார். பக்தியோடு இறைவனை வழிபட்டார். அடியார்கள் கூட்டத்திடையே கேட்கும் முதல் சொல்லை வைத்துப் புதிதாக ஒரு கீர்த்தனை பாடினார். இவ்வாறு நாளுக்கொரு கீர்த்தனையாகப் பல இராகங்களிலும் தாளங்களிலும் ஏராளமான கீர்த்தனைகள் பாடினார்.
கிடைக்கும் கீர்த்தனைகள்
ஏறக்குறைய எண்பது ஆண்டுகள் இம் மண்ணுலகில் வாழ்ந்தார் முத்துத்தாண்டவர். நாளுக்கொன்றாகப் பலநூறு கீர்த்தனைகள் பாடினார். இவற்றில் 85 பாடல்கள் மட்டும் இன்று கிடைக்கின்றன. அறுபது பாடல்கள் இறைவனை நேரடியாகப் பாடும் கீர்த்தனைகள். இருபத்தைந்து பாடல்கள் பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற கீர்த்தனை அமைப்பில் அகப்பொருள் சார்ந்து விளங்கும். இவை இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் வைத்துப்பாடும் காதல் சுவைப் பாடல்களாகும். கருநாடக இசையில் இத்தகைய பாடல் வகை “பதம்” என்று அழைக்கப்படும்.
தாண்டவக் கீர்த்தனைகள்
முத்துத்தாண்டவர் கீர்த்தனைகளில் பெரும்பாலானவை நடராசப் பெருமானின் ஆடலை வியந்து பாடும் வகையில் இருக்கும். இதோ பாருங்கள்! அவர் ஆசை எப்படிப்பட்டதென்று.
“ஆரார் ஆசைப்படார் ? நின் பாதத்திற்கு
ஆரார் ஆசைப் படார்.”
இந்த ஆசையை வெகுவாக மனதில் வளர்த்துக் கொண்டார் முத்துத் தாண்டவர். அதைப் பூர்த்தி செய்யும் வகையில் தன் பாட்டில் இறைவனை ஆட வைத்தார். எப்படி ? பாடலில் நாட்டிய ஜதிக்கோர்வைகளை அமைத்தார். ஜதிக் கோர்வையின் இறுதியில் “என” என்னும் சொல்லைச் சேர்த்துப் பல்லவியோடு இணைத்தார். உள்ளத்திலும் உருவத்திலும் இறைவன் ஆடுகிறான் என்ற உணர்வைக் கொடுத்தார். இங்குப் பாருங்கள்! அவரது ஒரு கீர்த்தனையின் சரணப்பகுதி நாட்டிய ஜதிக்கோர்வைகளால் அமைந்து பல்லவியோடு சேர்கிறது.
சரணத்தின் கடைசிப் பகுதி
ததண தஜெணுத ததள தஜெணுத
தத்தங் கிணதோம் ததிங் கிணதோம் என
பல்லவி
ஆடிய வேடிக்கை பாரீர் – ஐயன்
ஆடிய வேடிக்கை பாரீர்.
இவ்வாறு அமையும் கீர்த்தனைகள் “தாண்டவக் கீர்த்தனைகள்” எனப்படும். சிலர் “சொற்கட்டுக் கீர்த்தனைகள்” என்றும் சொல்வர்.
சிவத்தாண்டவத்தைச் சித்திரிக்க ஜதிக்கோர்வைகளை முத்துத்தாண்டவர் கையாண்ட இம்முறையைப் பிற்காலத் தமிழ்க் கீர்த்தனையாளர் பலர் பின்பற்றினர். கோபாலகிருஷ்ணபாரதியார், நீலகண்ட சிவன், சுத்தானந்த பாரதியார், பாபநாசம் சிவன் முதலானோர் தாண்டவக் கீர்த்தனைகள் பாடியுள்ளனர்.
பாடல் தொடக்கம் இராகம் தாளம்
1. ஆடிக்கொண்டார் மாயாமாளவகௌள ஆதி
2. அருமருந்தொரு காம்போதி ரூபகம்
3. மாயவித்தை செய்கிறானே கரகரப்பிரியா ஆதி
4. ஆடிய வேடிக்கை பாரீர் சாருகேசி மிச்ரஜம்பை
5. தெருவில் வரானோ கமாசு ஆதி
இராகம் : பைரவி தாளம் : ஆதி
பல்லவி
யாரோ இவர் யாரோ என்ன
பேரோ அறியேனே
இப்பாடல் அருணாசலக் கவிராயர் இயற்றிய இராமாடகக் கீர்த்தனை என்னும் நூலில் இடம்பெறும் ஒரு கீர்த்தனை. இராமபிரானின் சரித்திரத்தை ஓர் இசை நாடகமாக எழுதியவர் அருணாசலக் கவிராயர். தமிழில் கீர்த்தனைகள் பாடிய முதல் மூவரில் ஒருவரான அருணாசலக் கவிராயர் வாழ்க்கைப் பின்னணியை இப்பொழுது பார்ப்போம்.
அருணாசலக் கவிராயரின் பல்புலமைத் திறன்களைத் தருமபுர ஆதீனத் தலைவர் பெரிதும் மதித்தார். எனவே கவிராயரைச் சீர்காழிக்கு அழைத்தார்.
குடும்பத்தோடு சீர்காழியில் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார். சீர்காழியில் வாழ்ந்ததால் சீர்காழி அருணாசலக் கவிராயர் என்று அழைக்கப் பெற்றார். பல மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார். பல நூல்களை இயற்றினார். இவற்றுள் இராம நாடகக் கீர்த்தனை நூல் இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது. கி.பி.1779 ஆம் ஆண்டு தமது 67வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அரங்கேற்றம்
இராமாயணக் கதையை வால்மீகி சமஸ்கிருதத்தில் இயற்றினார். கம்பர் தமிழ்மொழியில் பாடினார். அருணாசலக் கவிராயர் 258 இசைப்பாடல்களில் இராம நாடகத்தை வடிவமைத்தார். கீர்த்தனைகளால் தமிழில் முதன்முதலில் இசைநாடகம் படைத்தார்.
ஒரு கதையைச் சுவையாக மக்களுக்குச் சொல்வதற்குக் கீர்த்தனைகள் ஏற்றன என்பதை நிறுவிக் காண்பித்தார்.
கம்பரது இராமாயணம் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் அரங்கேற்றப் பட்டது. அதே போல் அருணாசலக் கவிராயரது இராமநாடகக் கீர்த்தனையும் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் அரங்கேறியது.
மக்கள் இராம நாடகக் கீர்த்தனைகளைக் கேட்டு மகிழ்ந்தனர். அருணாசலக் கவிராயருக்கு “இராமாயணக் கவிஞன்” என்று பட்டம் வழங்கிப் பாராட்டினர். “இராம நாடகக் கீர்த்தனை” என்னும் நூல் பின்னர் “இராம நாடகம்” என்றும், “சங்கீத இராமாயணம்” என்றும் அழைக்கப்பட்டது.
பாடல் தொடக்கம் இராகம் தாளம்
1. யாரோ என்றெண்ணாமலே சங்கராபரணம் ஆதி
2. யாரோ இவர் யாரோ பைரவி ஆதி
3. ராமனுக்கு மன்னன் இந்தோளம் ஆதி
4. யாரென்று ராகவனை யதுகுலகாம்போதி ஆதி
5. ஸ்ரீராம சந்திரனுக்கு மத்தியமாவதி ஆதி
6. எனக்குன்இரு இராகமாலிகை ஆதி
7. ஏன் பள்ளி கொண்டீர் மோகனம் ஆதி
ஒலி நாடா மூலம் “யாரோ இவர் யாரோ” என்ற கீர்த்தனை எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியால் மிகப் பிரபலமடைந்தது. “எனக்குன்இருபதம்” என்ற கீர்த்தனையை இராகமாலிகையில் பாடிப் பிரபலப்படுத்தினார் டி.கே.பட்டம்மாள், “இராமனுக்கு மன்னன்” என்ற கீர்த்தனை திரைநடிகையும் பாடகியுமான பானுமதியால் பிரபலமடைந்தது. இராம நாடகக் கீர்த்தனை நூலை அரங்கேற்றுவதற்கு முன் அருணாசலக் கவிராயர் ஸ்ரீரங்கநாத சுவாமிகள் மேல் “ஏன் பள்ளி கொண்டீர்” என்ற கீர்த்தனையைப் பாடினார். என்.சி. வசந்தகோகிலம் பாடிய ஒலிநாடாவால் இப்பாடல் பிரபலமடைந்தது.
இராகம் : யதுகுலகாம்போதி தாளம் : ஆதி
பல்லவி
காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே – என்னைக்
கைதூக்கியாள் தெய்வமே
பக்திச் சுவை நிறைந்த இக்கீர்த்தனையை இயற்றியவர் மாரிமுத்தாபிள்ளை. இவர் தில்லை நடராசர் மீது பல கீர்த்தனைகள் இயற்றினார். தமிழில் கீர்த்தனை பாடிய முதல் மூவரில் மாரிமுத்தாபிள்ளையும் அருணாசலக் கவிராயரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். மாரிமுத்தாபிள்ளையின் கீர்த்தனைகள் பற்றித் தெரிவதற்கு முன்பு அவரது வாழ்க்கைப் பின்னணியைப் பார்க்கலாம்.
மாரிமுத்தாபிள்ளையின் மூத்த மகன் ஒரு தடவை மதிமயக்கத்தால் தன் நினைவிழந்தான். இதைக் கண்டு மாரிமுத்தாபிள்ளை மனம் பெரிதும் வருந்தினார். “புலியூர் வெண்பா” என்னும் நூலைப் பாடினார்.
அதுமுதல் மாரிமுத்தாபிள்ளை இறைவனைப் போற்றிப் பல நூல்களும் பல கீர்த்தனைகளும் இயற்றினார். தமது 75 வது வயதில் கி.பி.1787ஆம் ஆண்டு காலமானார்.
இதை விளங்கிக் கொள்ள மாரிமுத்தா பிள்ளையின் ஒரு கீர்த்தனையை எடுத்துக் கொள்ளலாம். பாடலைப் பார்ப்பதற்கு முன் அதன் பொருளைத் தெரிந்து கொள்வோம்.
நடராசப்பெருமான் ஆடுகிறான். ஒரு காலை ஊன்றி ஒரு காலைத் தூக்கி ஆடுகிறான். உண்மையில் இந்த ஆட்டத்தின் தத்துவம் என்ன ? இது அண்ட சராசர இயக்கத்தை உணர்த்தும் தத்துவத் தோற்றம். ஆட்டம் நின்று விட்டால் அண்டமும் பிண்டமும் அகில சராசரமும் இயங்காது நின்று விடும். எனவே எல்லாம் தொடர்ந்து இயங்கக் கருணை கொண்ட இறைவன் எந்நேரமும் காலைத் தூக்கி ஆடிக் கொண்டேயிருக்கிறான். இந்த உயர்ந்த தத்துவத்தை விளக்கும் இறைவன் கருணையை வியந்து வியந்து புகழ விரும்பினார் மாரிமுத்தாபிள்ளை, அதை இகழ்வது போலப் பாடிப் பெருமைப் படுத்தினார். பல்லவி, அநுபல்லவி, சரணம் ஆகிய பகுதிகளில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
பல்லவி
ஏன் எப்பொழுதும் ஒரு காலைத் தூக்கிநொண்டிக் கொண்டிருக்கிறீர்?
அநுபல்லவி
நீர் பொன்னால் வேய்ந்த பொன்னம்பலத்தில் குடியிருக்கிறீர், இருந்தும் ஏன் தூக்கிய காலை ஊன்றாமல் இன்னும் நிற்கிறீர்?
சரணம்
இறைவனின் தூக்கிய காலுக்குக் காரணம் கேட்பது போல், இறைவன் அடியவர்க்கு இரங்கிய கருணைச் செயல்களை ஒவ்வொன்றாகக் கேட்கிறார். உம்முடைய கால் நொண்டிக் கொண்டிருப்பதற்கு காரணம்.
அ. தக்கன் வீட்டிற்கு நடந்ததாலோ? ஆ. எமனை உதைத்துச் சுளுக்கு ஏறியதாலோ? என்றவாறு சிவப்பெருமை கூறும் புராணச் செய்திகளை ஒவ்வொன்றாகக் கூறி இறைவனை நிந்திப்பது போல் புகழ்ந்து பாடுகிறார்.இப்பொழுது இந்தக் கீர்த்தனையைப் பார்ப்போமா?
இராகம் : தோடி தாளம் : ஆதி
பல்லவி
எந்நேரமும் ஒருகாலைத் தூக்கி நொண்டிக்
கொண்டிருக்கிற வகையேதையா
அநுபல்லவி
பொன்னாடர் போற்றுந்தில்லை நன்னாடர்
பொன்னம்பல வாணரே இன்னந்தானும் ஊன்றாமல்
சரணம்
எக்கிய நெருப்பவிக்கத் தக்கன் வீட்டில் நடந்தோ.
எமனை உதைத்த போதில் எதிர் சுளுக்கேறி நொந்தோ.
புகழ் பெற்றவை
தில்லை நடராசப் பெருமான் மீது நிந்தாதுதியாகப் பாடிய கீர்த்தனைகள் மாரிமுத்தாபிள்ளையைத் தனித்து அடையாளங்காட்டும். இவரது கீர்த்தனைகள் சில இசைக் கச்சேரிகளிலும் நாட்டியக் கச்சேரிகளிலும் பாடப்பெறுகின்றன. அவற்றின் விவரங்களை இங்கே காணலாம்.
பாடல் தொடக்கம் இராகம் தாளம்
1. காலைத்தூக்கி நின்று யதுகுலகாம்போதி ஆதி
2. எந்நேரமும் தோடி ஆதி
3. ஒருகால் சிவசிதம்பரம் ஆரபி ஆதி
4. ஏதுக்கு இத்தனை சுருட்டி ஆதி
5. என்ன பிழைப்பு சௌராட்டிரம் ஆதி
19 ஆம் நூற்றாண்டில் இத்தகையதொரு நிலை தமிழகத்தில் உருவாகியது. இக்காலகட்டம்தான் “கருநாடக இசையின் பொற்காலம்” என மேன்மை பெற்றது. சங்கீத மும்மூர்த்திகள் என இசை உலகோர் பாராட்டும் சியாமாசாஸ்திரி, தியாகைய்யர், முத்துசுவாமி தீட்சிதர் ஆகிய மூவரும் இக்கால கட்டத்தில் தமிழகத்தில் வாழ்ந்தனர். தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் அருமையான கீர்த்தனைகளைப் பாடினர். இதே காலத்தில் வாழ்ந்த பலரும் தமிழில் கீர்த்தனைகளைப் பாடினர்.
கி.பி. 17-18ஆம் நூற்றாண்டுகளில் முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாபிள்ளை ஆகிய மூவரும் வாழ்ந்தனர். தமிழில் கீர்த்தனைகள் பாடிய இம் மூவரும் ஆதி மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுவர்.
இவர்களில் அருணாசலக் கவிராயர் மற்றும் மாரிமுத்தாபிள்ளை காலத்தில் வாழ்ந்தவர் ஊத்துக்காடு வெங்கடசுப்பய்யர். ஆதி மும்மூர்த்திகளைப் போல் இவர் தமிழில் மட்டும் கீர்த்தனைகள் பாடவில்லை. இவர் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் கீர்த்தனைகள் பாடியுள்ளார்.
கீர்த்தனைகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது அது சொல்லும் பொருளும் அப்பொருளை இனிதாக உணர்த்தும் இசைப்போக்கும் (tune/melody) ஆகும். இந்த வகையில் பொருள் பொதிந்த இசைப்பாடல்களை, உணர்வைத் தூண்டி எழுப்பும் அருமையான மெட்டுகளில், பாடித்தந்த சில கீர்த்தனையாளர்கள் பற்றி இப்பொழுது சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.
“அலைபாயுதே கண்ணா – உன்
ஆனந்த மோகன வேணுகானமதில்
நிலைபெயராது சிலைபோலவே நின்று
நேரமாவதயறியாமலே வெகுவிநோதமான
முரளிதற என்மனம்”
கானடா இராகத்திலான வெங்கடசுப்பையரின் இப்பாடலைக் கேட்டுச் சுவைக்காதவர் யாரேனும் உண்டா?
பிறந்த ஊரும் பெற்றோரும்
தஞ்சை மாவட்டத்தில் ஊத்துக்காடு என்பது ஒரு சிற்றூர். இங்கு முத்துகிருஷ்ணய்யருக்கும் செங்கமலம் அம்மையாருக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார் வெங்கடசுப்பய்யர். இவர் குடும்பத்தோரின் குலதெய்வம் கண்ணபெருமான். குடும்பத்தோர் அனைவரும் கண்ணனை இசையால் உருகிப் பாடுவதை வாழ்வின் பெரும் பேறாகக் கொண்டு வாழ்ந்தனர்.
ஞானகுரு கண்ணன்
இந்தச் சூழலில் வாழ்ந்த வெங்கடசுப்பய்யரும் இளமையிலேயே கண்ணனைத் தன் ஞானகுருவாக ஏற்றார். கண்ணனையே நினைத்துப் பல கீர்த்தனைகள் பாடினார்.
இவர் கீர்த்தனைகளின் சிறப்பு
இவரது கீர்த்தனைகளின் சிறப்பு அவற்றின் மத்தியமகால பாடல் பகுதியாகும். அதாவது கீர்த்தனையின் இடையில் சொற்கள் அடுக்கி வந்து அவற்றின் இசை நடையும் விரைவாக இருக்கும். பாடலின் இடையே வரும்
சொற்கட்டுகள், சுரக்கோர்வைகள் ஆகியன திச்ர (மூன்று), சதுச்ர (நான்கு), கண்ட (ஐந்து) போன்ற தாள நடை அமைப்புகளைக் கொண்டு அழகாக அமைந்திருக்கும்.
இவர்தம் புகழ்பெற்ற பாடல்கள்
இவர் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பல கீர்த்தனைகள் இயற்றினார். கண்ணனைக் குழந்தையாகவும் காதலனாகவும் கற்பனை செய்து பாடினார். இவரது புகழ்பெற்ற சில கீர்த்தனைகளை இப்பொழுது பார்ப்போமா?
பாடல் இராகம் தாளம்
1. அலைபாயுதே கண்ணா … கானடா … ஆதி
2. ஆடாது அசங்காது வா … மத்யமாவதி … ஆதி
3. புல்லாய்ப் பிறவி … செஞ்சுருட்டி … ஆதி
4. பால்வடியும் முகம் … நாட்டைக்குறிஞ்சி … ஆதி
பல்லவி
“வேலவரே உமைத் தேடி ஒரு மடந்தை
விடியுமளவு காத்திருக்கிற வகை என்ன”
புகழ்பெற்ற இந்த பைரவி இராகப் பாடலை இயற்றினார் கனம் கிருஷ்ணய்யர். இது போன்ற பல தமிழ்ப் பாடல்களால் தமிழிசைக்குப் பெருமை சேர்த்தவர் கிருஷ்ணய்யர்.
பிறப்பும் பெற்றோரும்
இவர் திருச்சிராப்பள்ளியில் திருக்குன்றம் என்னும் ஊரில் பிறந்தார். இராமசாமி ஐயர் இவரது தந்தையார். கிருஷ்ணய்யர் தமிழிலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்றார்.
இசைத்திறன்
இளம் வயதிலிருந்தே புதிய புதிய பாடல்களை இயற்றி இசையமைத்துப் பாடினார். அருமையான குரல் வளமும் இசை ஞான முதிர்ச்சியும் பெற்ற கிருஷ்ணய்யருக்குச் சான்றோர்கள் தொடர்பும் ஆதரவும் கிடைத்தன. ஆதலால் தெய்வங்கள் மேல் பாடுவதோடு தம்மை ஆதரித்த பெரியவர்களைப் புகழ்ந்தும் பாடினார். இவர் சில காலம் மராத்திய மன்னன் அமரசிம்ம இராசாவின் அரசவை இசை வித்வானாக இருந்தார்.
பல மாணவர்கள் கனம் கிருஷ்ணய்யரிடம் இசை பயின்றனர்.
புகழ்பெற்ற கீர்த்தனைகள்
கனம் கிருஷ்ணய்யர் இயற்றிய சில புகழ்பெற்ற கீர்த்தனைகளின் விவரங்களை இங்கே காணலாம்.
பாடல் இராகம் தாளம்
திருவொற்றியூர் தியாகராஜன்… அடாணா… ரூபகம்
வேலவரே… பைரவி… ஆதி
பாரெங்கும் பார்த்தாலும்… கல்யாணி… ஆதி
நல்ல நல்ல நிலவு… சங்கராபரணம்… ஆதி
பதறி வருகுது… காம்போதி… ஆதி
யாதொன்றும் தெரியேனே”
காம்போதி இராகத்திலான இப்பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? இதை இயற்றியவர் கவிகுஞ்சர பாரதியார். இவர் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நல்ல புலமை பெற்றவர்.
பிறப்பும் இசைச்சிறப்பும்
இவர் இராமநாதபுரத்திலுள்ள பெருங்கரை என்னும் ஊரில் பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் கோடீசுவரன். சிவகங்கை மன்னர் இவரது இயலிசைத் திறனை மெச்சிக் “கவிகுஞ்சரம்” என்ற சிறப்புப் பெயரை வழங்கினார். இதுவே பின்னர் கவிகுஞ்சர பாரதி ஆகியது.
கவிகுஞ்சர பாரதியார் பேரின்பக் கீர்த்தனைகள் பாடினார். ஸ்கந்த புராணக் கீர்த்தனைகள் பாடினார். வேங்கைக் கும்மி பாடினார். இவற்றோடு அழகர் குறவஞ்சி என்னும் இசை நாடகமும் படைத்தார்.
‘அழகர் குறவஞ்சி’ இசை நாடகத்தில் 25-க்கும் மேற்பட்ட கீர்த்தனைகள் உள்ளன. இவை தோடி, கல்யாணி, கரகரப்பிரியா பைரவி, அடாணா, சகானா முதலிய இராகங்களில் உள்ளன. இந்துஸ்தானி இசைச் சாயலுடைய பெஹாக், சாரங்கா ஆகிய இராகங்களிலும் கவிகுஞ்சர பாரதியார் கீர்த்தனைகள் பாடினார்.
புகழ் பெற்ற பாடல்கள்
புகழ் பெற்ற இவரது பாடல்களின் விவரங்களை இங்கே காணலாம்.
பாடல் இராகம் தாளம்
இவனாரோ… காம்போதி… மிச்ரசாபு
இனிமேல் அவருக்கும்… பைரவி… சாபு
வன்கொடுமை பெஹாக் ஆதி
கோலமிகும் செங்கண்… சாரங்கா… ஆதி
அங்குலியமிட்ட கரம்… எதுகுல காம்போதி ஆதி
தமிழக மக்களின் தாய்மொழி தமிழ். இந்நிலையில் கி.பி.19 ஆம் நூற்றாண்டில் தமிழிசையால் தமிழகமெங்கும் இறை உணர்வை வளர்த்தார்,
இசை மேதை கோபாலகிருஷ்ண பாரதியார். இவரது இசைப் பின்னணி மற்றும் இசைப் பணி பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வது நன்று.
இக்கால இசை, நாட்டிய அரங்குகளில் அடிக்கடி கேட்கும் ஒரு கீர்த்தனையின் பல்லவியை முதலில் கேட்போமா?
நடனம் ஆடினார் வெகு நாகரிகமாகவே
கனக சபையில் ஆனந்த – நடனம்
வசந்தா ராகக் கீர்த்தனை இது. கண்டசாபு தாளத்தில் அமைந்திருக்கிறது. இக் கீர்த்தனையை இயற்றியவர் கோபாலகிருஷ்ண பாரதியார்.
இவர் சிவபெருமான் மேல் அளவில்லாத பக்தி கொண்டவர். தமிழில் பல கீர்த்தனைகளைச் சிவனைப் போற்றிப் பாடியுள்ளார். ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ என்ற இசை நாடகத்தை இயற்றிப் பாடினார். இசையால் இறை உணர்வைத் தமிழகமெங்கும் பரப்பினார்.
இவர் காலத்தில் மராத்திய மன்னர் குலத்தைச் சேர்ந்த அமரசிம்ம மகாராஜா திருவிடைமருதூரில் ஆட்சி செய்தார். இவர் ராமதாஸ் என்னும் ஒர் இந்துஸ்தானி இசை மேதையை ஆதரித்தார். இவரிடம் இந்துஸ்தானி இசை பயின்றார் கோபாலகிருஷ்ண பாரதி. இக்கால கட்டத்தில் இந்துஸ்தானி இசை தமிழகத்திற்குப் புதிது. கோபாலகிருஷ்ண பாரதியார் இந்துஸ்தானி இசை இராக நுட்பங்களை நன்கு தெரிந்து கொண்டார். அவற்றைக் கருநாடக இசை முறைக்கு ஏற்பத் தமது கீர்த்தனைகளில் பயன்படுத்தினார்.
இராகம் : ஆபோகி தாளம் – ரூபகம்
பல்லவி
சபாபதிக்கு வேறு தெய்வம்
சமானம் ஆகுமா – தில்லை
அநுபல்லவி
கிருபா நிதி இவரைப் போலக்
கிடைக்குமோ இத்தரணி தன்னிலே
(சபாபதி)
பஞ்சரத்தின கீர்த்தனைகள்
தியாகையர் பஞ்சரத்தின கீர்த்தனைகளை ஐந்து இராகங்களில் பாடினார். இக்கீர்த்தனைகளை இன்றளவும் தியாகையருடைய ஆராதனை விழாவின் போது இசைத் தொண்டர்கள் பாடுகிறார்கள். கோபாலகிருஷ்ண பாரதியாரும் தியாகையரைப் போல் அதே ஐந்து இராகங்களில் பஞ்சரத்தின கீர்த்தனைகள் இயற்றினார். அவற்றின் விவரங்களைத் தெரிந்து கொள்வோமா?
பாடல் இராகம் தாளம்
1. அரகரசிவ சங்கர… நாட்டை … ரூபகம்
2. சரணாகதியென்று… கௌள…. ஆதி
3. பிறவாத வரந்தாரும்… ஆரபி… ஆதி
4. ஆடிய பாதமே கதி… வராளி ஆதி
5. மறவாமல் எப்படியும்… ஸ்ரீராகம் ஆதி
பாரதியாரின் பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் சிவனைப் போற்றும் சிவபக்தி நிறைந்த பாடல்களாகும்.
தொண்டர் வாழ்க்கை இசைக்கதையாகியது
சிவத் தொண்டர்களின் வாழ்க்கையை இசைக் கதையாகக் கீர்த்தனைகளால் பாடினார். திருநீலகண்டநாயனார், இயற்பகை நாயனார், காரைக்கால் அம்மையார், நந்தனார் ஆகியோரது சரித்திரங்களை எளிமையான கீர்த்தனைகளில் பாடினார். இவற்றில் “நந்தனார் சரித்திரக் கீர்த்தனை” மிகப் புகழ்பெற்றது.
நந்தனார் கதை
சோழ நாட்டில் ஆதனூர் என்று ஒரு சிற்றூர். இவ்வூரில் புலைப்பாடியில் நந்தனார் பிறந்தார். பிறப்பு எப்படியாயினும் நந்தனார் சிவபெருமான் மேல் அதிக பக்தியோடு வாழ்ந்தார்.
நந்தனார் ஓர் அந்தணரின் பண்ணை ஆளாக வேலை செய்தார். எப்பொழுதும் சிவனை நினைத்து வாழ்ந்த நந்தனார் சிதம்பரம் போக விரும்பினார். பார்ப்பவரிடமெல்லாம், “நாளை போவேன், நாளை போவேன்” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். இதனால் இவரை “நாளைப் போவார்” என்றும் அழைத்தனர்.
ஆனால் சிதம்பரம் போய் வர அந்தணர் அனுமதி கொடுக்கவில்லை. வயலில் அறுவடை முடிந்த பின் போகலாம் எனக் காலங்கடத்தினார். இறைவனைக் காணத்துடித்த நந்தனார் உள்ளம் இறைவன் அறியாததா?
அதிசயம் நிகழ்ந்தது. என்ன அதிசயம்?… மறுநாளே நெற்கதிர்கள் அறுவடைக்குத் தயாராக விளைந்திருந்தன. அந்தணர் அதிசயித்தார். நந்தனாரின் சிவபக்தியின் உயர்வை உணர்ந்தார். சிதம்பரம் போக அனுமதி கொடுத்தார்.
பக்தி மேலிடச் சிதம்பரம் சென்றார் நந்தனார். அங்குள்ள அந்தணர்களாகிய கோயில் தீட்சிதர்கள் அவரை வரவேற்றனர். நடேசப் பெருமானின் திருநடனக் காட்சியைக் கண்குளிரக் கண்டார் நந்தனார். அப்படியே ஒளி வெள்ளத்தில் மூழ்கினார். பேரானந்தப் பேறு பெற்றார.்
இத்தகைய பேறு பெற்ற நந்தனார் அறுபத்துமூன்று சைவ நாயன்மாரில் ஒருவராக மதித்துப் போற்றப்படுகிறார்.
நந்தனார் கதையின் வடிவமாற்றம்
கதாகாலட்சேபம் என்பது ஒரு வகைக் கலை. அதாவது ஒரு கதையை இனிய பாடல்களால் பாடி விளக்கிச் சொல்லும் ஒரு கலை. இது ‘ஹரிகதா’ என்றும் சொல்லப்படும்.
கோபாலகிருஷ்ண பாரதியார் இக்கலை முறையைப் பயன்படுத்தினார். நந்தனாரின் கதையை இசைப் பாடல்களால் இயற்றினார். இயற்றிய கீர்த்தனைகளைக் கவர்ச்சியான மெட்டுகளில் அமைத்தார். நந்தனார் கதையைக் கீர்த்தனைகளில் பாடி மக்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார். நந்தன் கதையில் வரும் ஒவ்வொரு பாடலும் மக்கள் மனங்களில் ஆழப் பதிந்தது. பட்டி தொட்டிகளிலெல்லாம் நந்தனார் கீர்த்தனைகள் பரவின. இதோ கேளுங்கள் ஓரிரு பாடல்களின் சில பகுதிகளை:
1) பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது
பேரின்ப மன்றுளே
(நந்தனார் பாடுகிறார்)
2) மார்கழி மாதம் திருவாதிரை நாள்
வரப்போகுது ஐயே
(நந்தனார் பாடுகிறார்)
3) அரகர சிவ சிவ அம்பலவாணா
தில்லை அம்பல தேசிக நாதா
(நந்தனார் பாடுகிறார்)
நந்தனார் கீர்த்தனைகளின் புகழ்
கோபாலகிருஷ்ண பாரதியார் காலத்திலேயே அவரது நந்தனார் சரித்திரக் கீர்த்தனை நூலாக வெளிவந்தது. பிரெஞ்சு அலுவலர் சீசையா முயற்சியால் கி.பி. 1848 இல் இந்நூல் வெளியானது.
பிற்காலத்தில் நாடகக் கலைஞர்கள் நந்தனார் கீர்த்தனைகளை மேடைகளில் பாடினர். திரைப்படம் வாயிலாகவும் இக்கீர்த்தனைகள் புகழ்பெற்றன. கே.பி. சுந்தராம்பாள், எம்.எம். தண்டபாணி தேசிகர் ஆகியோர் திரைப்படங்களில் நந்தனாராக நடித்துக் கீர்த்தனைகளைத் தாமே பாடினர்.
கோபாலகிருஷ்ண பாரதியாரின் மாசற்ற தொண்டினால் தமிழிசை வளம்பெற்றது. நாட்டில் பக்தி நெறி தழைத்தது.
இவர் மறைந்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்றும் அவரது கீர்த்தனைகள் அழியாப் புகழோடு தமிழ் மக்களிடையே பயிலப்படுகின்றன. மனதைச் சிவ உணர்வில் உருக வைக்கும் அவரது கீர்த்தனை ஒன்றை இப்பொழுது கேட்போமா?
இராகம் : தேவகாந்தாரி தாளம்: ஆதி
பல்லவி
எந்நேரமும் உந்தன் சந்திதியிலே நான்
இருக்க வேண்டும் ஐயா – பொன்னையா
அநுபல்லவி
தென்னஞ்சோலை தழைக்கும் தென் புலியூர்
பொன்னம்பலத்து அரசே என் அரசே
(எந்நேரமும்)
சரணம்
சிவ மருவும் தெருவும் திருக்கூட்டமும்
தேவருலகில் கிடையாத அதிசயமும்
பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும்
பயங்கள் தீர்ந்து மலர்கள் தூவிக் கொண்டு
(எந்நேரமும்)
இராகம் : கருநாடக தேவகந்தாரி தாளம்: ஆதி
பல்லவி
எப்படிப்பாடினரோ? எப்படிப்பாடினரோ?
அடியார் அப்படிப்பாட நான் ஆசைகொண்டேன் சிவமே
அநுபல்லவி
அப்பரும் சுந்தரரும் ஆளுடையப் பிள்ளையும்
அருள்மணி வாசகரும் பொருளணர்ந்து உன்னையே
(எப்படி)
சரணம்
குருமணி சங்கரரும் தாயுமாணவரும்
அருணகிரி நாதரும் அருள்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கன்னித்தமிழ்ச் சொல்லினால் இனிதுனை அனுதினமும்
இசை அரங்கு, பரத நாட்டிய அரங்கு, பஜனை ஆகிய நிகழ்ச்சிகளில் கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள் இன்றளவும் இடம்பெறுகின்றன. சில பிரபலமான கீர்த்தனைகளின் விவரங்களைக் காண்போமா?
பாடல் இராகம் தாளம்
அரகரசிவ சங்கர…… நாட்டை…. ரூபகம்
அறிவுடையோர்….. சக்ரவாகம்… ஜம்பை
ஆடியதாண்டவம்…… பிலஹரி…. சாபு
எப்போ வருவாரோ….. கமாஸ்…. ஆதி
கனகசபாபதிக்கு…. அடாணா…. ரூபகம்
சிவலோக…… நாதநாமக்கிரியா ரூபகம்
தில்லைச் சிதம்பரம்…. பூர்வகல்யாணி சாபு
நடனமாடினார்….. வசந்தா…. கண்டசாபு
சபாபதிக்கு….. ஆபோகி…. ரூபகம்
கருநாடக இசையின் வளமைக்குத் தமிழ்க் கீர்த்தனையாளர் மூவரும் தனித் தனிப் பங்காற்றியுள்ளனர். ஏறக்குறைய இருநூறு முந்நூறு ஆண்டுகள் கழிந்தும் இவர்களது சில கீர்த்தனைகள் இன்றும் பாடப்பட்டு வருகின்றன. அவை பக்திச்சுவை தரும் இராகங்களில் அமைந்திருக்கின்றன.
கோபாலகிருஷ்ண பாரதியார் பக்திச் சுவை மிகுந்த கீர்த்தனைகள் பாடினார். சிவத்தொண்டர்களின் கதைகளைக் கீர்த்தனைகளாகப் பாடினார். மக்களுக்கு இசை வழியால் இறை உணர்வை ஊட்டினார். இவரைப் பிற்காலக் கீர்த்தனையாளர்களில் ஓர் இசை மேதை எனத் தனித்து இனங்காணலாம்.
பாடம் - 5
சித்திரம் வரையத் தாள் தேவைப்படுவது போல் உள்ளீட்டைத்தாங்கி நிற்க வடிவம் தேவை. இதனை யாப்பு என்பர். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற உறுப்புகளைக்கட்டி உரைக்கும் தன்மையால் இது யாப்பு எனப்பட்டது.
பாடல்களில் காணப்படும் வடிவ அமைதியை ஒலிவடிவம், பொருள்வடிவம் என்று பிரிக்கலாம். பாடலைப் பொருள் ஒழுங்கிற்கு ஏற்றாற்போல் இன்று படித்து வருகிறோம். ஆனால் இதன் ஓசை அமைதியைச் சுவைக்க இன்று தவறவிட்டுவிட்டோம். மௌனமாகப் படிக்கும் முறையாலும்,யாப்பு உரைநடையால் அமைந்தமையாலும் பாட்டை ஓசை வடிவத்தோடு படிக்கும் பழக்கம் இன்று மிக மிகக் குறைந்துவிட்டது. வாய்விட்டுப் படிக்கும் போது அதன் ஓசையினிமையை உணர இயலும், அதன் நடைப்பாங்கினை அறியஇயலும்.
பாடலில் காணப்படும் ஓசை ஒழுங்கைச் சந்தம் என்பர். இந்த ஓசை ஒழுங்கு ஒவ்வொரு பாடலுக்கும் அடிநாதமாக விளங்கும். படைப்போன் இவ்வோசை ஒழுங்கினை முறைப்படுத்திக்கொண்டு, பொருளோடும், உணர்ச்சிப்பாங்கும் கற்பனை வளமும் கலந்தும் தரும்போது ஓசைகளுக்கேற்பச் சொற்கள் அமையும். அப்பொழுது சொற்கள் கவிஞனிடத்தில் நடனமாடும். இந்த அரிய, இனிய கலையை இன்றைய தமிழ் உலகம்மெல்ல, மெல்ல இழந்து வருகிறது. இதற்குப் புத்துணர்வு தரவும், மீட்டுருவாக்கம் தரவும், இப்பாடப்பகுதி இசைப்பாடல்களில் சந்த அமைப்புகள் என்ற நிலையில் உருவாக்கப்படுகிறது.
குறில் எழுத்துகள் மிகுதியாகப் பயின்று வருவதனைத் தொல்காப்பியம் குறுஞ்சீர் வண்ணம் என்கிறது.
குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும்
(தொல். பொருள் 213)
எடுத்துக்காட்டு:
பொழில் தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
(சிலம்பு 7:14)
நெடில் எழுத்துகள் மிகுதியாகப் பயின்று வரும் நிலையில் அமைவதனை நெடுஞ்சீர் வண்ணம் என்கிறது.
நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும் (தொ.பொ.212)
வாராயோ தாயே – பாதம் தாராயோ நீயே – (கீர்த்தனை)
சித்திர வண்ணம்
நெடியவும் குறியவும் நேர்ந்துடன் வருமே
(தொ.பொ.214)
நெட்டெழுத்தும், குற்றெழுத்தும் சார்ந்து வருவதனைச் சித்திர வண்ணம் என்று குறிப்பிடுகின்றது.
பாதி மதிநதி போது மணிசடை – திருப்புகழ்
ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த எழுத்துகள் அதிகம் பயின்று வரும் தன்மையை வைத்து வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணங்கள் அமைந்துள்ளன.
பாட்டில் வல்லெழுத்துகள் மிக்கு வருவதனை வல்லிசை வண்ணம் என்பர்.
வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே
(தொ.பொ.208)
புற்றரவு பற்றியகை நெற்றியது மற்றொருகண்
ஒற்றை விடையன் (சம்பந்தர் தேவாரம். 3:68:2)
மெல்லெழுத்துகள் மிக்கு வருவதனை மெல்லிசை வண்ணம் என்பர். “மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே” (தொல்.பொருள். 209) இடையின் எழுத்து மிக்கு வருவதனை இயைபு வண்ணம் என்பர்.
இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே
(தொ.பொ.210)
இவ்வாறு பாடலில் மிக்கு வரும் எழுத்துகளால் இவ்வண்ணங்கள் பெயரிடப்படுகின்றன.
எழுத்தளவு
தமிழ்ச் சந்தங்கள் எழுத்தளவு கொண்டவை.
ஈரெழுத்து அளவுச் சொற்கள்:
தா – தத்;
தா – தந்;
மூவெழுத்து அளவுச் சொற்கள்:
தத், த – ததா;
தந், த – தந்தா;
தன், ன – தன்ன;
நான்கெழுத்து அளவுச் சொற்கள்:
தைய்யா – தையா;
தனத், த – தனத்;
த – தனந் – த;
தமிழிசைக் களஞ்சியம் இவற்றில் மூன்றன் எழுத்தளவும் நான்கன் எழுத்தளவும் தென்னக இசையின் அடிப்படை என்கிறது.
தேவாரத்தில் சந்த வண்ணச் சொற்கள் தென்னா என்று அழைக்கப்படுகின்றன.
தென்னவென்று வரிவண்டிசை செய் திருவாஞ்சியம்
(2-7-1)
தென்னாத் தெனாத் தெத்தெனா வென்று பாடி
(7-2-6)
இசை நிகழ்வில் ஆளத்தி (ஆலாபனை) செய்யும் பொழுது தென்னா என்றும், தெனா என்றும் இசைப்பர். இச்சொற்களின் திரிபாக, தன, தானா என்ற சொற்கள் சந்த இசைச் சொற்களாக மருவி வந்திருக்கும்.
சந்த விருத்தப் பாடல்கள்
வைணவ இலக்கியமான நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் பன்னிருஆழ்வார்களுள் ஒருவரான திருமழிசையாழ்வார் பாடிய பாடல்திருச்சந்த விருத்தம் என்று அழைக்கப்படுகின்றது. இவை சந்தமிக்க இனிய ஓசை யுடையன. தாளக் கட்டமைப்புச் செறிவுடையன.
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அல்ல வற்று ளாயு மாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்தும்ஆகி அந்த ரத்த ணைந்துநின்று
ஐந்து ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே
(நாலா:754)
கட்டு + அளவு – கட்டப்பட்ட அளவு – கட்டளை
இயல் தமிழில் கட்டளைக் கலித்துறை, கட்டளைக் கலிப்பா என்ற பாவகைகள் உள்ளன. இவை எழுத்து எண்ணிப் பாடப்படும் பாடலாகும். இயல் தமிழில் வரும் கட்டளை எழுத்து எண்ணிக்கை உடையது. இசைத்தமிழில் வரும் கட்டளை எழுத்தோசை பற்றியதாகும். செய்யுளில் வரும் கட்டளை யாப்புப் பற்றியது. இசையில் வரும் கட்டளை தாளம் பற்றிய சந்தமாகும்.
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன தனதான
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணி
இதில் கைத்தல என்ற சொல்லின் முதலில் வரும் கை என்பது நெடிலாகும். ஆனால் சந்தத்தில் இரு மாத்திரை பெறும் நெடிலாக இடம் பெறாமல் ஒரு மாத்திரை பெறும் குறிலே சந்தமாக வந்துள்ளது. இசை மரபில் எழுத்துகள் தத்தமக்குரிய மாத்திரை அளவிலிருந்து மாறி ஒலிப்பதும் ஒற்றெழுத்துகள் நீட்டி ஒலிப்பதும் ஆகிய மரபுண்டு என்று தொல்காப்பியரும் கூறியுள்ளார்.
அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர் (தொல்.எழுத்து. 33)
கொற்றவன் குடி உமாபதி சிவாசாரியார் திருமுறை கண்ட புராணம் என்னும் தம் நூலில் கட்டளை பற்றிய விளக்கங்களைத் தந்துள்ளார்.‘சொல் நட்டபாடைக்குத் தொகை எட்டுக் கட்டளை’ எனத் தொடங்கும் திருமுறை கண்டபுராணம் ஒன்பது பகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் இன்னின்ன பண்ணிலே பாடப்பட்டுள்ள பாடல்களுக்கு இன்னின்ன கட்டளைகள் என்று பகுத்துக்கூறப்பட்டுள்ளது.
திருஞானசம்பந்தர் பதிகங்கள்
எண். பண் கட்டளை
1) நட்டபாடை 8
2) தக்கராகம் 7
3) பழந்தக்கராகம் 3
4) தக்கேசி 2
5) குறிஞ்சி 5
6) வியாழக்குறிஞ்சி 6
7) மேகராகக்குறிஞ்சி 2
8) இந்தளம் 4
9) சீகாமரம் 2
10) காந்தாரம் 3
இவ்வாறே 22 பண்களுக்கும் கட்டளை அமைப்புத் தரப்பட்டுள்ளது.
இவை போல் திருநாவுக்கரசர், சுந்தரர் பாடிய பதிகங்களுக்கும் கட்டளைகள் கூறப்பட்டுள்ளன.
இக் கட்டளைகள் சிலவற்றால் காணப்படும் சந்த அமைதிகளைக் காண்போம்.
நட்டபாடையில் கட்டளை
நட்டபாடை எட்டுக் கட்டளைகள் பெறும் என்பர். இதில் முதல் கட்டளை ஞானசம்பந்தர் முதலில் பாடிய சீர்காழிப் பதிகமான தோடுடைய செவியன் என்ற பாடலில் வரும் கட்டளையாகும் .
தானன தானன தானன தானன தானா தனதானா
தோடுடை யசெவி யன்விடை யேறியோர் தூவெண்
மதிசூடிக் காடுடையசுட லைப்பொடி பூசியென் னுள்ளங்
கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனை நாட்பணிந்தேத்த அருள்செய்த பீடுடை யபிர மாபுரம் மேவிய ெபம்மா னிவனன்றே
இதில் முதலடியில் என்ன சந்தம் அமைந்ததோ அதுவே ஏனைய அடிகளிலும் உரிய சந்தமாக அமையும். அதுபோல ஏனைய பதிகப் பாடல்களிலும் இதுவே சந்தமாக அமையும். இச் சந்தக் கட்டுக்கோப்புப் பாடலைச் சிதைவு அடையாமல் காக்கும்.
யாழ்முரி
திருஞானசம்பந்தர் தந்த அற்புதமான சந்த அமைப்புப் பதிகங்களில் ஒன்று யாழ் முரியாகும். இது காரைக்கால் அடுத்துள்ள தருமபுரத்தில் பாடப்பட்டது. மேகராகக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்ததாகும். இதனை நீலாம்பரி இராகத்தில் பாட வேண்டும். ஆனால் தற்காலத்தில் இதனை அடாணா இராகத்தில் பாடி வருகின்றனர். யாழ் முரியைச் சிலர் பண்ணாகவும் கூறுவர். இது தவறு. இது பண்ணன்று , பதிகப் பெயர் என்பது பலரின் முடிவு.
இது முரி என்ற இசை வகைக்குரிய பாடலாகும். எடுத்த இயலும் இசையும் முரித்துப் பாடுதலின் இது முரியாயிற்று. இசையின் உள்ளோசைகள் நிறைந்த பதிகமாகும். தற்காலத்தில் இசைவாணர்கள் பாடிவரும் பல்லவி பாடும் முறைக்கு இப்பதிகம் முன்னோடியான பதிகமாகும். திருமுறைகண்ட புராணம் இதற்குத் தனிக் கட்டளை கூறவில்லை. இது மேகராகக் குறிஞ்சியின் கட்டளையின் பாற்படும்.
தான தனத்தனனா – தன – தானன தானனா
தனா – தனா – தனா – தனா – தனதன தனனா
மாதர் மடப்பிடியும் மட அன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படைநின் றிசை பாடவு மாடுவர்
அவர் படர் சடைந் நெடு முடியதொர் புனலர்
(1.136.1)
இதில்
தான - 1
தனத்தனனா - 1
தன - 1
தானன - 1
தானனா - 1
தனா - 4
தனதன - 1
தனனா - 1
—– 11 —–
இதில் சந்தம் முரிந்து வருகிறது.
திருஇருக்குக் குறள்
ஞானசம்பந்தர் பாடிய சந்தமார் இன்னிைசைப் பாவில் திருஇருக்குக் குறளும் ஒன்றாகும். இது ஒரு புதுவகையான இசை உருப்படியாகும். இது இரு சீரசையாகிய குறளடியால் அமைந்தது . வட மொழியாகிய இருக்கு வேதத்தினைப் போன்று தமிழ்மறையாக இது திகழ்வதால் சேக்கிழார் இதனைத் தமிழ் இருக்குக் குறள் என்பர். இது குறிஞ்சிப் பண். தலம் திருவீழிமிழலை.
தனை தானனா தனன தானனா
வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏச லில்லையே (1.92-1)
இதில் தனன தானனா என்ற சந்தம் இருமுறை வந்துள்ளது.
தேவாரப் பதிகங்களையும் திவ்விய பிரபந்தப் பதிகங்களையும் இவ் வகையில் காணலாம்.
சந்தமெல்லாம் அரச்சு சாத்தவல்ல மறைஞான
சம்பந்தன் – கடவூர் திருப்புகழ்
சந்தமிகு ஞானமுணர் பந்தன் -பழுவூர்திருப்புகழ்.
திருப்புகழ்ப் பாடல்கள் 24 வகையான சந்தங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன என்று திருப்புகழ்ப் பாடல்களில் சந்தக் கூறுகள் என்ற பொருளில் ஆய்வு செய்த முனைவர் இ. அங்கயற்கண்ணி குறிப்பிட்டுள்ளார். ப. 48) இவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளார்.
1) மூன்று அலகுகள் கொண்டவை (திசுரம்)
2) நான்கு அலகுகள் கொண்டவை (சதுசுரம்)
3) ஐந்து அலகுகள் கொண்டவை (கண்டம்)
இந்நிலையில் அமையும் சந்த அமைப்புகளின் அடிப்படையில் அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும் என்ற நூல் எழுதிய தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை. தமக்குக் கிடைத்த திருப்புகழ்ப் பாடல்கள் 1307-இல் 1008 சந்தங்கள் உள்ளன என்கிறார். (ப.28)
மும்மை அலகு
மும்மை அலகுடைய ஒரு பாடலின் சந்த அமைதியைக் காண்போம்.
தனன தனன தனன தனன
தனன தனன தனதானா
தமரு மமரு மனையு மினிய மனமு மரசும் அயலாகத்
இதில் வரும் தனன தனன என்னும் சந்தம் தகிட, தகிட என்ற மும்மை அளவுடைய சந்தமாகும். தனதானா என்று தொங்கல் முடிந்துள்ளது. (அயலாக) என்பது தொங்கல்
நான்கலகு
நான்கலகு உடையதனை சதுசுரம் என்பர்
தனதன தனதன தனதான
தனதன தனதன தனதான
நிறைமதி முகமெனு மொளியாலே
நெறிவிழி கணையெனு நிகராலே
ஐந்து அலகு
ஐந்தலகுடையதனைக் கண்ட சாதி என்பர்
தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதன தனாதன தனதான
நிராமய புராதன பராபர வராம்ருத
நிராகுல சிராதிகப் ப்ரபையாகி
இதில் வரும் தனாதன என்பதில் குறில் 3 நெடில் 1 நெடில் மாத்திரை 2 ஆக ஐந்து அலகுகள் கொண்டதாக உள்ளது.
சென்னி குளநகர் வாசன் – புகழ்
தேறும்அண் ணாமலைத் தாசன் – செப்பும்
ஜெகம்மெச்சிய மதுரக்கவி
யதனைப் புது வரையிற்புனை தீரன்
அயல் வீரன்
தன்னன்ன தன்னன்ன தானா – தன
தன்னன்ன தானன்னா தானா – தன
தனனத்தன தனனத்தன
தனனத்தன தனனத்தன தானா தன தானா
இது முதலடி. இதுபோல் இக்காவடிச்சிந்தில் ஏனைய 3 அடிகள் உள. இதே நிலையில் இச்சந்தம் ஏனைய அடிகளிலும் இடம் பெறும். இச்சிந்துப் பாடலில் அருணகிரியாரின் திருப்புகழ்ப் பாட்டில் தன்னை மறந்த நிலையை ஆசிரியர் உரைத்துள்ளார்.
அருணகிரி நாவில் பழக்கம் – தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம் – பல
அடியார்கணம் மொழிபோதினில்
அமராவதி இமையோர்செவி அடைக்கும்
அண்டம் உடைக்கும்
பொன்னுலவு சென்னிகுள
நன்னகர்அண் ணாமலைதனி
புந்தியில் மகிழ்ந்துநித்தம் நின்றவன் – முந்தி
வெந்திறல் அரக்கர்களை வென்றவன் – மயில்
போல ஏனலின் மீது லாவுகி
ராத மாதுமுன் ஏகி யேஅடி
பூவையே உனதுதஞ்சம் என்றவன் – ஈயும்
மாவையே இனிதுமென்று தின்றவன்
வழிச்செல்வோர் முருகா! முருகா! என்று கூறிக்கொண்டே சென்றனர். இந்தப் பயணம் தமிழிசை உலகிற்கு அருமையான சந்தமெட்டுடைய காவடிச்சிந்தைத் தந்தது.
மூசுவண்டு வாசமண்டு
காவில்மொண்டு தேனைஉண்டு
மோகன முகாரிராகம் பாடுமே – மைய
லாகவே பெடையுடனே கூடுமே – அலை
மோது வாரிதி நீரை வாரிவிண்
மீது லாவிய சீத ளாகர
முகில்பெருஞ் சிகரம் முற்றும் மூடுமே – கண்டு
மயிலினம் சிறகை விரித் தாடுமே.
பச்சைத் திருமயில் வீரன்
அலங் காரன்
கவு மாரன் – ஒளிர்
பன்னிரு திண்புய பாரன் – அடி
பணி சுப்பிர
மணியற்கருள்
அணிமிக் குயர்
தமிழைத் தரு
பக்தர்க் கெளியசிங் காரன் – எழில்
அண் ணாமலை யூரன்
பாரதி பாடியதில் இந்த ஒரு கண்ணி மட்டும் கிடைத்துள்ளது. ஏனையவை கிடைக்கப் பெறவில்லை. பாரதி பாடல்களில் ‘எங்கள் தாய்’ என்ற தலைப்பில் அமைந்த ‘தொன்று நிகழ்ந்த தனைத்தும்’ என்னும் பாடல் அண்ணாமலை ரெட்டியாரின் ‘ஆறுமுக வடிவேலவனே’ என்ற காவடிச்சிந்து மெட்டைப் பின்பற்றிப் பாடப்பட்டதாகும். மாகாளியின் புகழைப் பாடும் ‘காலமாம் வனத்திலண்ட’ என்ற பாடல் அண்ணாமலையாரின் ‘பாலைவாய்க் கமுகில் வந்தூர்’ என்ற காவடிச்சிந்தின் மெட்டில் அமைந்த பாடலாகும். ‘தேடியுனைச் சரணடைந்தேன்’ என்ற முத்து மாரியம்மன் பாடலைக் காவடிச் சிந்தில் பாடி வருகின்றனர். மக்களால் பெரிதும் போற்றப்பட்ட காவடிச்சிந்தை மக்களுக்காகக் கவிபாடிய பாரதியும் பாடினார்.
சுருளிமலை மீதில்மேவும் சீலா – உனைத்
தேடித்திரிந்தேன் சுப்ரமணிய வலோ – பசுந்
தோகைமயில் மீதிலேறி
வாருடனே காத்தருளும் துய்யா – முரு கையா
என்று தொடங்கும் பாடலைப்பாட ஆரம்பித்தார். இவரது காவடிச்சிந்து இசையில் சிறை அதிகாரிகள் தம்மை மறந்தனர். நெடுநேரம் பாடினார். தூக்கிலிடும் நேரம் தாண்டிவிட்டது. உடனிருந்த வழக்கறிஞர் இவரைத் தூக்கிடும் நேரம் முடிந்துவிட்டது. சட்டப்படி இனி இவரைத் தூக்கிலிட முடியாது என்றனர். காதர்பாட்சா விடுதலையானார். காதர் பாட்சாவை விடுதலையாக்கிய மெட்டு அண்ணாமலை ரெட்டியார் பாடிய
தெள்ளுதமி ழுக்குதவு சீலன் – துதி
செப்பும் அண்ணா மலைக்கனு கூலன் – வளர்
செழியர் புகழ்விளைத்த
கழுகுமலை வளத்தைத் தேனே சொல்லுவேனே -
என்பதாம்
ஆராரோ ஆரிராரோ – கண்ணேநீ
ஆரரிரோ ஆராரோ
ஆரடித்தார் நீ சொல்லியழு – கண்ணே வுனை
அடித்தாரைச் சொல்லியழு
பஞ்சு மெத்தை பட்டுமெத்தை கண்ணே வுனக்குப்
பாட்டன் கொடுத்த மெத்தை
என்று வரும். இது வரும் பாடலின் கருத்தைப் பற்றிக்கூட கவலைப்படாமல் தாயின் உணர்வு மெட்டாக அமைந்து குழந்தையை உறங்க வைக்கும்.
மாரியம்மன் பாட்டு
நாட்டுப்புற மக்களின் வழிபடும் தெய்வமான மாரியம்மன் மீது பாடப்படும் பாடல்கள் பல உள. மாரியம்மன் ஆலய வழிபாட்டின் பொழுது இவை ஆட்டப் பாடல்களாக அமையும். கொட்டு முதலான இசைக் கருவிகளின் மூலம் முழங்கும் நடைக்கேற்ப இப்பாடல்களை இசைப்பர்.
தன்னான னன்ன னானே தன்னான னன்ன னானே
ஒன்னாங் கரகமடி எங்கமுத்து மாரி
என் வளத்துத் தாயே
இது போலத் தேரோட்டத்தின் பொழுது சந்த நயமிக்க பாடலைப் பாடி ஆடுவர்.
நன்னானே நன்னானே தானே நன்னே
நன்னானே நன்னானே தான நன்னே
என்ற மெட்டை இசைத்துப் பாட்டுப் பாடுவர்.
ஆடுங்கடி பெண்களே பாடுங்கடி – நம்ம
அம்மன் மாரியம்மா கோயிலாலே
நல்ல சிலம் பெடுத்து ஆடுங்கடி – நம்ம
நல்லம்மா தேரும் ஓடையிலே………… (கண்ணானே)
இது இன்பக் களியாட்டமிக்க ஆட்டப்பாடலாக அமையும். ஒலிக்குத் தக்கவாறு மெட்டு அமையும்.
ஏற்றப்பாட்டு
ஏற்றப்பாட்டிற்கு எதிர்பாட்டில்லை என்பர். தண்ணீரை ஏற்றம் மூலம் இறைக்கும் பொழுது அலுப்புத்தட்டாத நிலையில் இசை இனிமையோடும் பாடுவர். ஏற்றம் இறைக்கும் பொழுது இருவர் மாறி மாறி விளித்துக் கொண்டு பாடுவர்.
வேலமரப் பாதையிலே – வேலையா
வேலையிலே கண்ணிருக்கு – சுப்பையா
வேலியோரம் போகுதுபார் – வேலையா
வேட்டித்துணி போட்டிருக்கோ – சுப்பையா
தெம்மாங்கு
நாட்டுப்புற மக்களின் பாடல்களில் மிகவும் சிறப்புடையது தெம்மாங்குப் பாடல்களாகும். இவற்றை மக்கள் இசையுடன் பாடி ஆடிமகிழ்வர். தென்பாங்கு என்பது தெம்மாங்கு ஆயிற்று.
வட்ட வட்டப் பாறையிலே – குட்டி
வரகரசி தீட்டையிலே
தூயச் சேல- குட்டி
ஆல வட்டம் போடுதடி
தேனினும் இனிய தெம்மாங்குப் பாடல்கள் தேன் பாங்காகத் திகழும். இதனாலும் தேன்பாங்கு தெம்மாங்கு ஆயிற்று என்றும் கூறுவர். உரையாடல் அமைப்பில் அமைந்தும் விளங்கும்.
ஆண்:
வட்ட வட்டப் பாறையிலே – குட்டி வலிய நெல்லு குத்தையிலே ஆர் கொடுத்த சாயச்சீலை – குட்டி ஆலவட்டம் போடுதடி.
பெண்:
யாரும் கொடுக்க வில்லை – மாமா யாசகமும் பெறவில்லை. பாடுபட்டு நாளும் தானே – மாமா வாங்கி னேனடா சாயச்சேல.
ஒப்பாரி
பிறந்த மனிதன் இறப்பது இயற்கை. இறந்தவனை எண்ணி அவன் செய்த சேவைகளை எண்ணிப் பாடுவது மரபு. இதற்கு மெட்டுகளே உயிரோட்டமாக அமையும், ஒவ்வொரு வரியும் பாடி முடிக்கும் பொழுது மெட்டை ஒலித்துக் கொண்டே வருவர். இதனைப் பின்பாட்டுப் பாடுவது என்றும் கூறுவர்.
தன்னானே தானனே தானனே தானனே
தன்னானே தானனே தானனான தானனே
கல்லளித்து மண்ணளித்துக் கானகம் போனாயே,
கானகம் போகுமுன்னே கன்னியிடம் சொன்னாயோ
வாயார முத்தமிட்டு வண்ணத் திலகமிடுவாய்
வாயெதுவும் கூறாமல் வான்வழியே சென்றாயே
சித்தர் பாடல்கள் நாட்டுப்புற மக்களால் பெரிதும் விரும்பிப் போற்றப்பட்டு வருகின்றன. நாட்டுப்புற மக்களால் இம்மெட்டுக்களில் பாக்கள் படைக்கப்பட்டு வருகின்றன. சித்தர் பாடல்கள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. எளிமை, இனிமை, தெளிவு, ஆழம் கொண்ட பாடல்களாக உள்ளன. பிற்காலப் படைப்புகளில் இப்பாடல்களின் இசை மெட்டுகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
1) வழிவழி வந்த செய்யுள் மரபின 2) சிற்றிலக்கியச் சந்த மரபின
3) இசைப்பா வடிவில் அமைவன 4) விளிப்பாடல் வடிவின
1) வழிவழி வந்த செய்யுள் மரபின
வழிவழி வந்த செய்யுள் மரபின் அடிப்படையில் சித்தர் பாடல்கள் அமைந்துள்ளன. ஆசிரியம், கலி, விருத்தம் என்ற யாப்படிப்படையில் அமைந்துள்ளன. நல்ல சொற்செட்டுகள் கொண்ட இனிமையான எளிமையான சந்த வடிவுடன் உள்ளன. கருவூர், திருமாளிகைத் ே்தவர், பட்டினத்தடிகள், சிவவாக்கியர் பாடல்கள் இவ்வகையில் அமைந்துள்ளன.
நட்ட கல்லைத் தெய்வ மென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ -
சிவவாக்கியார்
தன்ன தன்ன தன்ன தன்ன தன்னதன்ன தானனே என்ற இசைமெட்டின் அடிப்படையில் இப்பாடல் அமைந்துள்ளது.
2) சிற்றிலக்கியச் சந்த வகை
சிற்றிலக்கியப் பாடல்கள் சந்தக் கவிதைகளாக உள்ளன. இசைப் பாடல்களில் சிற்றிலக்கியச் சந்த வகைகள் காணப்படுகின்றன.
பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகங்களில் பயன்படுத்தப்படும் காவடிச்சிந்து, நொண்டிச்சிந்து, ஆனந்தக்களிப்பு, கண்ணிப் பாடல்களின் சந்தமெட்டு அடிப்படையில் சித்தர் பாடல்கள் அமைந்துள்ளன. இதில் ஆனந்தக் களிப்பு என்ற இசைமெட்டு வகையைக் கடுவெளிச் சித்தர் பாடல்களில் காண்கிறோம். இதனைப் பாரதியும், பிற்காலப் புலவர்களும் பயன்படுத்தியுள்ளனர்.
தந்தன தானன தானே – தன
தந்தன தானன தானன – தானே
ஆனந்தக் களிப்பு – கடுவெளிச் சித்தர்
நந்த வனத்திலோர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தானொரு தோண்டி – மெத்தக்
கூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி
என்ற சந்த மெட்டில் அமைந்துள்ளது.
3) இசைப்பா வடிவில் அமைவன
இசைப்பா வடிவில் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு அடிப்படையாலும், கும்மி, கண்ணி என்ற வடிவாலும் சித்தர் பாடல்களில் இசைச் சந்த மெட்டுகள் காணப்படுகின்றன. பிற்கால இசைப்பாக்களுக்கு இவை துணை புரிந்துள்ளன. கீர்த்தனை என்ற இசைப்பா வடிவம் இன்று பெரு வழக்கில் உள்ளது. புகழ்பாடும் இசைப்பாவாக எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்ற முக்கூறுகளைக் கொண்டு இது அமையும்.
தரவு, தாழிசை, சுரிதகம் என்ற நிலைகளின் வளர்ச்சியாக இது அமைந்துள்ளது.
கடுவெளிச் சித்தர் பாடல்கள் எடுப்பு, தொடுப்பு என்ற நிலையில் அமைந்துள்ளன.
எடுப்பு
பாபஞ்செய் யாதிரு மனமே – நாளைக்
கோபஞ் செய்தே யமன் கொண்டோடிப் போவான்
தொடுப்பு
பாரிலு யர்ந்தது பத்தி – அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரில் உயர் சித்தி – யார்க்கும்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி
கும்மி என்ற அருமையான இசை மெட்டில் கொங்கணச்சித்தர் பாடல்கள் அமைந்துள்ளன. பிற்காலத்தில் இராமலிங்க அடிகளார், பாரதி, பாரதிதாசன் போன்றோர் இம்மெட்டில் பாடல்களைப் படைத்துள்ளனர்.
ஊமை யெழுத்தே யுடலாச்சு – மற்றும்
ஓமென் றெழுத்தே உயிராச்சு
ஆமிந் தெழுத்தை யறிந்து கொண்டுவிளை
யாடிக் கும்மி யடியுங்கடி
விளிப்பாடல் வடிவில்
முன்னிலையில் ஒருவரை விளித்துப் பாடும் நிலையில் இனிமையான சந்தப்பாக்கள் சித்தர் பாடல்களில் உள்ளன.
கண்ணம்மாவை முன்னிலைப்படுத்தி அழுகணி சித்தர் பாடல்கள் அமைந்துள்ளன.
வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித்
தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததா
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா
வாழ்வெனக்கு வாராதோ
தாண்டவக்கோனை முன்னிலைப்படுத்தி இடைக்காட்டுச் சித்தர் பாடியுள்ளார்.
தாந்தி மித்திமி தந்தக்கோ னாரே
தீந்தி மித்திமி தீந்தக்கோ னாரே
ஆநந்தக் கோனாரே – அருள்
ஆனந்தக் கோனாரே
குதம்பாய் என்ற பெண்ணை விளித்துக் குதம்பைச் சித்தர் பாடியுள்ளார்.
காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு
வீணாசை ஏதுக்கடி – குதம்பாய்
வீணாசை ஏதுக்கடி
இவ்வாறு சந்தமார் இன் கவிகளாகக் குதம்பைச் சித்தர் பாடல்கள் விளங்குகின்றன.
பாடம் - 6
(1) தஞ்சை. இராவு சாகிபு. மு. ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் தொகுதி I, II (1917) கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற நூல்கள்.
(2) மதுரை எம்.கே.எம். பொன்னுச்சாமி பூர்வீக சங்கீத உண்மை (1930)
(3) விபுலானந்த அடிகளாரின் யாழ் நூல் (1947)
என்ற நூல்கள் இசைத்தமிழ் ஆய்வின் வளங்கண்ட நூற்களாக உள்ளன. இவர்களின் இசைத்தமிழ் ஆய்வினைப் பற்றி இப்பாடம் வாயிலாக அறியலாம்.
தமிழகத்தின் கலைப் பணியில் இசைக் கலைக்குத் தனியிடம் உண்டு. இவ்விசைக் கலையை வளர்த்த பெரியவர்களாக இசைக் கலைஞர்கள் விளங்குகின்றனர்.
இசைக் கலைஞர்களின் இசைப் பணியை அறிமுகம் செய்யும் வகையில் இப்பாடம் அமைக்கப்பட்டுள்ளது. இசைப் பொழிவுக் கலைஞர், குரலிசைக் கலைஞர், கொன்னக்கோல் கலைஞர், குழலிசைக் கலைஞர் ஆகிய சிலரையும், இசை வளர்த்த நங்கையர்கள் பற்றியும் அறிமுகம் செய்கிறது.
ஆசிரியப் பணியை விட்டு விட்டு மருத்துவராகச் செயல்பட்டார். இசைத் தமிழ் ஆய்வினைத் தொடங்கி வைத்தவராகவும், இயலிசைப் புலவராகவும் விளங்கினார். சங்கீத வித்தியா மகாஜன சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்திச் செயல்படுத்தினார்.
இசை மாநாடுகள்
தஞ்சை மாநகரில் தனது சொந்தப் பொருட் செலவில் ஏழு இசை மாநாடுகளை ஆபிரகாம் நடத்தினார். சங்கீத வித்தியாலயாமகாசன சங்கம் என்ற அமைப்பினை ஏற்படுத்தி, 1912- ஆம் ஆண்டு முதல் 1916-ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுக் காலத்தில் ஏழு இசை மாநாடுகளை நடத்தினார். மருத்துவப் பணியின் மூலம் ஈட்டிய பொருளை இசைத் தமிழ் ஆய்விற்காகச் செலவழித்தார். இசைப் பேரறிஞர்கள், இசை ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள் போன்ற பலர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இம்மாநாடுகள் மூலம் கண்டுணர்ந்த செய்திகளையெல்லாம் திரட்டி ஆய்வு மேற்கொண்டு 1917-இல் 1346 பக்கங்கள் கொண்ட கருணாமிர்த சாகரம் என்ற இசைத் தமிழ் ஆய்வு நூலைத் தந்தார்.
(1) சுரவியல் அல்லது நரம்பியல் (2) பண்ணியல் (இராகவியல்) (3) ஆளத்தியல் (ஆலாபனைக்குரிய நெறிமுறைகள்) (4) நான்கு நிலத்திற்குரிய நாற்பெரும் யாழ்கள் (பெரும் பண்கள்) (5) ஏழ் பெரும் பாலைகள் (6) பண்ணமைக்கும் முறை (7) இணை, கிளை, நட்பு, பகை நரம்புகள் பற்றியன. (8) இசைக் கருவியல் (9) இசைப் பாட்டியல் (10) செம்பாலை என்பது சங்கராபரணமே என்ற விளக்கம்
என்பன.
சுருதி கணக்கியல் என்ற நூல் சுமார் 750 பக்கங்கள் கொண்டது. இந்நூல் நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது.
முதல் பாகம் – இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்
இரண்டாம் பாகம் - 22 சுருதிகள் பற்றியது
மூன்றாம் பாகம் - தென்னிந்தியாவில் வழங்கி வரும் இசைத் தமிழ்ச் சுருதிகள்
நான்காம் பாகம் - கர்நாடக சங்கீதம் என்றழைக்கப்படும் இசைத் தமிழில் வழங்கி வரும் சுருதிகளின்கணக்கு.
இவர் படைத்த பிலகரி இராக சுரஜதி,“வாரும் தேவ தேவா இங்கு வாரும் உமதடிமை மனமகிழ” என்பதாகும். இப்பாடலை இவர் குடும்பத்தார்கள் இன்னும் பாடி வருகின்றனர். இவ்வகையில் சிறந்த இயலிசைப் புலவராகவும்,. இசைத் தமிழ்க் கல்வியாளராகவும் ஆபிரகாம் பண்டிதர் விளங்கினார்.
சுருதி ஆய்வு
இவரின் சுருதிக் கோட்பாடு ஒப்பற்ற ஆய்வாகும். ஓர் இயக்கில் விளங்கும் சுர அலகுகள் 22 என்று பலர் கூறினர். இச்சுர முறைகளில் ஒழுங்குமுறை காணப்படவில்லை என்று நினைத்து, அதனை ஒழுங்குபடுத்தும் நிலையில் அலகுகள் 24 என்று கூறினார். இதனை அகில இந்திய அளவில் 20.3.1916 இல் கூடிய இசை ஆய்வு மாநாட்டில் தனது மகள்களான திருமதி. மரகதவல்லி துரைபாண்டியன், திருமதி கனகவல்லி துரைபாண்டியன் மூலம் பாடியும் வீணை மூலம் இசைத்தும் காண்பித்தார்.
தியாகராசர் கீர்த்தனை இராகம் பண்டிதர் மொழி பெயர்ப்பு
எந்தவேடுகோ சரஸ்வதி மனோகர சிந்தை தேர நீ
நன்னு கன்னுதல்லி சிந்து கன்னடா மண்ணுலக மீதில்
மருகேலரா ஜெயந்த ஸ்ரீ வரந்தரவே வா தேவா
நின்னு வினா நவரச கனடா என்றும் உனை நான் மறவேன்
நூலமைப்பு
பூர்வீக சங்கீத உண்மை என்ற நூல் ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது.
(1) நூன் மரபு (2) கர்த்தா ராகத்தின் நிர்ணயம் (3) மூர்ச்சை பிரசுதாரம் (4) கர்த்தா இராகங்களும் அனுபவத்திலிருக்கிற ஜன்ய இராகங்களும் (5) இசை நுணுக்கம் என்னும் சுதிபேத ராக சூட்சுமம்
முதலாவது இயல் பன்னிரு சுரங்கள் பற்றியும், பன்னிரு சுரங்களும் வான் மண்டலத்தில் நிலவும் பன்னிரு இராசிகளில் நிற்கும் முறையையும் விளக்குகின்றது.
இரண்டாவது இயல் பழந்தமிழ் மக்கள் 32 தாய் இராகங்களில் பாடி வந்துள்ள நிலையை எடுத்துரைக்கின்றது.
மூன்றாவது இயல் பண், பண்ணியல், திறம், திறத்திறம் அமையும் நிலைகளை விளக்குகிறது.
நான்காவது இயல் பரதர், சாரங்கதேவர், சோமநாதர், புண்டரீக விட்டலர், வெங்கடாத்ரி ராஜா, வேங்கடமகி ஆகியவர்களின் இசை இலக்கண அமைப்புகளைக் குறிப்பிட்டு, பொன்னுச்சாமியின் தாய் இராகங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
இதில் 32 தாய் இராகங்களே உண்மையானவை என்றும் விளக்கியுள்ளார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்கு மைசூர் மன்னரின் உதவியோடு சென்று அம்மாநாட்டில் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் இவர் கூறிய தாய் இராகம் 32 என்கிற கொள்கை விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
யாழ்நூல் பாயிரவியல், யாழ் உறுப்பியல், இசை நரம்பியல், பாலைத் திரியியல், பண்ணியல், தேவார இயல், ஒழிபியல் என்ற ஏழு இயல்களைக் கொண்டு அமைந்துள்ளது.
பாயிரவியல்
இசை நரம்புகளின் பெயரும் முறையும், இசை நரம்புகளின் ஓசைகளும் அவைகளுக்குப் பிற்காலத்தார் வழங்கிய பெயர்களும், இயற்கையின் இயன்ற இசையும், மெய்ப்பாடுகளும் இணை, கிளை, பகை, நட்பு என்னும் பொருந்திசை நிலைகள். ஆரோசை, அமரோசை, மூவகைத் தானம், தேவபாணி, பரிபாடல், மிடற்றுப் பாடல், கருவிப் பாடல், பாணர் வரன்முறை, திணைக் கருப்பொருளாகிய யாழின் பகுதி, யாழ்க் கருவியின் தெய்வ நலம், இக்கருவி தமிழ்நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குப் பரவிய வரன்முறை போன்றன கூறப்பட்டுள்ளன.
யாழ் உறுப்பியல்
யாழ் உறுப்பியல் என்ற பகுதியில் வில் யாழ், பேரியாழ், மகரயாழ், சீறியாழ், செங்கோட்டி யாழ்,சகோட யாழ் ஆகியவற்றின் உறுப்புகளின் அமைதி பற்றிக் கூறப்பட்டுள்ளது.
வில் வடிவில் அமைந்த யாழ் வில் யாழாகும். யாழ் வகைகளில் முதன்மை பெறும் யாழ்கள் நான்காகும்.பேரியாழ், மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் என்பனவாகும். இந்நான்கு வகை தவிர நாரத யாழ், கீசக யாழ், தும்புரு யாழ், மருத்துவ யாழ் போன்றனவும் உள.
ஏனைய இயல்கள்
யாழ் நூலில் இசை நரம்பியல், பாலைத் திரியியல், பண்ணியல், தேவார இயல், ஒழிபியல் என்ற பகுதிகளில் இசை இலக்கணங்கள் பற்றிய செய்திகள் உள்ளன; அந்நூல் இசை இலக்கிய ஆய்வாகவும் அமைந்துள்ளது.
பண்ணியலில் பாலை யாழ், குறிஞ்சி யாழ், மருத யாழ், நெய்தல் யாழ் என்ற நாற்பெரும் பண்களும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் நால்வகை வேறுபாடுகளினால் ஒவ்வொன்றும் நான்காகி 16 பண்கள் ஆகும் நிலை கூறப்பட்டுள்ளது.
தேவார இயலில் 103 பண்களில் தேவாரப் பாடலில் காணப்படும் பண்கள், கட்டளை விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
பழந்தமிழிசை மரபிற்கும் வடநாட்டிசை மரபிற்கும் அமைந்த தொடர்பு நிலையையும் விளக்கியுள்ளார்.
இசைப் பேரறிஞர் க.பொ.சிவானந்தம், அடிகளார் கண்டு உணர்ந்த யாழ்களை மீட்டி இன்னிசை பொழிந்தார்.
குடந்தை ப.சுந்தரேசன்
குடந்தை ப.சுந்தரேசனார் தமிழிசை ஆய்வினை யாழ்நூல் விபுலானந்தரின் மூலம் கற்று, தமிழிசை ஆய்வு மேற்கொண்டார். இயல், இசை, இலக்கணம் நன்கு அறிந்தவராகத் திகழ்ந்ததோடு சிறந்த இசைக் கலைஞராகவும் விளங்கினார். பழந்தமிழிசை வளத்தைத் தமிழகமெங்கும் பரப்பினார். தனது மரபைப் பின்பற்றும் மாணவர் பரம்பரையை உருவாக்கினார். இசைத் தமிழ்ப் பயிற்சி நூல் முதல் ஐந்திசைப் பண்கள் என்ற நூற்களையும் ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றையும் தந்துள்ளார்.
பேராசிரியர் கு.கோதண்டபாணி பிள்ளை
இசைத் தமிழின் தொன்மை வளம் பற்றிப் பழந்தமிழிசை என்ற நூலின் மூலம் வெளியிட்டார். முல்லைப் பண் பற்றி ஆராய்ந்துள்ளார். முல்லைப் பண் ஐந்து அலகுகள் கொண்டது என்றும், இதுவே பழமையானது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
பேராசிரியர் க.வெள்ளைவாரணனார்
அண்ணாமலைப் பல்கலைக்கழத்திலிருந்து தமிழிசைப் பணி ஆற்றிய பெரியவர்களுள் பேராசிரியர். க. வெள்ளைவாரணனாரும் ஒருவராவார். யாழ்நூல் விபுலானந்த அடிகளாரால் உருவாக்கப்பட உதவியவருள் இவரும் ஒருவராவார். இவர் இசைத் தமிழ் என்ற அரிய நூல் ஒன்றைத் தந்துள்ளார். இந்நூல் முத்தமிழ்த் திறம், இசை நூல் வரன்முறை, இசையமைதி, இசைத் தமிழ் இலக்கியம், இசைக் கருவிகள், இசைப்பாட்டின் இலக்கணம், இசைத் தமிழ்ப் பயன், தமிழிசை இயக்கம், இசைத்தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கமாகும் பணிகள் என்ற ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளது.
பேராசிரியர் து.ஆ.தனபாண்டியன்
பேராசிரியர் து.ஆ.தனபாண்டியன் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் குடும்ப வழித் தோன்றல்களுள் ஒருவராவார். தமிழ்ப் பல்லைக்கழகத்தின் இசைத் துறைத் தலைவராகப் பணி ஆற்றியுள்ளார். தமிழ்க் கீர்த்தனையாளர்கள், குறவஞ்சி நாட்டிய நாடகம், நாட்டியப் பதங்கள், தேவார இசையமைப்புப் பற்றிய கருத்தரங்குகளை நடத்தினார். புதிய இராகங்கள், இராகங்களின் நுண்ணலகுகள், ஆபிரகாம் பண்டிதர், இசைத் தமிழ் வரலாறு தொகுதி I, II, III நூற்களை வெளியிட்டுள்ளார். இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார். வானொலி மற்றும் ஒலிநாடாக்கள் மூலம் இசையமுதம் தந்துள்ளார்.
பேராசிரியர் வீ.ப.கா.சுந்தரம்
பேராசிரியர் வீ.ப.கா.சுந்தரம் இயல் தமிழ் அறிவும், இசைத் தமிழ் நுட்பமும் நன்கறிந்த தமிழிசை ஆய்வாளர் ஆவார். பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல், தமிழிசையியல் என்ற சிறந்த ஆய்வு நூற்களையும், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மூலம் தமிழிசைக்களஞ்சியத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். இக்களஞ்சியங்கள் தமிழிசை ஆய்விற்குப் பெருந்துணை புரியும். தாளத்தின் தன்மை, நுட்பம், கணக்கீடுகள் பற்றி மிகச் சிறப்பாக ஆய்ந்துள்ளார்.
பேராசிரியர் பி.சாம்பமூர்த்தி
இசைப் பேராசிரியராக விளங்கிய பேராசிரியர். பி. சாம்பமூர்த்தி அவர்கள் தென்னக இசை (South Indian Music – IV) என்ற நூல்களையும், தென்னக இசை அகராதி (Dictionary South Indian Music and Musicians) என்ற தொகுதிகளையும்,இசை வரலாறு பற்றி (Great Composers and Great Musicians) என்ற நூற்களையும் சுர தாளக் குறிப்புகளுடன் கூடிய இசை நூற்களையும் வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏறத்தாழ 50 நூற்களை எழுதி வெளியிட்டுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியராகவும், திருப்பதி வெங்கடேசுவரப் பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது இசைப் பணிக்காக இசைப் பேரறிஞர், சங்கீத கலாநிதி, பத்ம பூஷன் விருதுகளைப் பெற்றுள்ளார்.
முனைவர் எஸ்.இராமநாதன்
முனைவர். எஸ். இராமநாதனின் சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம் என்னும் நூல் 1956இல் வெளியிடப்பட்டது. இது மிகச் சிறந்த இசைத் தமிழ் ஆய்வு நூல்களுள் ஒன்றாகும். இந்நூலில் வீணையில் உள்ள தந்திகளின் ஒலி அளவுக் கணக்குகளை வெளியிட்டுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக் கழக இசைத்துறையில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார். இசைப் பேராசிரியராக கர்நாடக இசைக் கல்லூரியில் பணியாற்றினார். அமெரிக்காவில் உள்ள வெஸ்லியன்,கோல்கேட், இல்லினாய்ஸ், வாஷிங்டன் பல்கலைக்கழகங்களில் இசைப் பேராசிரியராகப் பணியாற்றினார். சிலப்பதிகாரத்தில் இசை என்ற பொருளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இசைக் கலைஞர்கள் பல புதிய முறைகளைக் கையாண்டு இசையை வளர்த்து வருகின்றனர். இத்தகு இசைக் கலைஞர்களை, வாய்ப்பாட்டுக் கலைஞர்கள், இறையருள் பாடகர், திரைப்படப் பாடகர், வில்லுப்பாட்டுக் கலைஞர், வயலினிசைக் கலைஞர், மிருதங்கக் கலைஞர், வீணைக் கலைஞர், குழலிசைக் கலைஞர், கோட்டுவாத்தியக் கலைஞர், முகர்சிங் கலைஞர், கடம் கலைஞர், சலதரங்கக் கலைஞர், கஞ்சிராக் கலைஞர், ஆர்மோனியக் கலைஞர், கொன்னக்கோல் கலைஞர், நாகசுரக் கலைஞர், தவில் கலைஞர்,கிளாரினெட் கலைஞர், நாட்டுப்புற இசைக் கலைஞர் என்று வகைப்படுத்தலாம்.
வாய்ப்பாட்டுக் கலைஞர்
வாய்ப்பாட்டுக் கலைஞர்களை மிடற்றிசைக் கலைஞர் என்பர். காஞ்சிபுரம் நாயனா , பிடாரம் கிருட்டிணப்பா, பல்லவி சுப்பையா பாகவதர், தஞ்சாவூர் பொன்னையா ,மதுரை மணி்யய்யர், அரியக்குடி இராமானுச அய்யங்கார், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை , எம்.எம்.தண்டபாணி தேசிகர், திருப்பாம்புரம் ந.சிவசுப்பிரமணிய பிள்ளை, திருவாரூர் நமச்சிவாயம், எஸ்.ஜி.கிட்டப்பா, எம்.டி.இராமநாதன் போன்ற மிகச் சிறந்த விற்பனர்கள் வாழ்ந்துள்ளனர்.
இவர்களைப் போல் எம்.எசு. சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி, திருமதிகள் இராதா ஜெயலட்சுமி, சரோஜா-லலிதா, சேலம் செயலட்சுமி, சௌமியா போன்ற பெண்மணிகள் மிகச் சிறந்த இசைக் கலைஞர்கள் ஆவர்.
இறையருள் பாடகர்
தெய்வத் தமிழ் பாடும் இறையருள் பாடகர்கள் பலர் உள்ளனர். பித்துக்குளி முருகதாஸ், தருமபுரம் சுவாமிநாதன், குருவாயூர் பொன்னம்மாள், எம்.ஆர்.விசயா , திருத்தணி சுவாமிநாதன், சீர்காழி திருஞானசம்பந்தம், மழையூர் சதாசிவம், தஞ்சை ஞானமணி போன்றோர் இறையருள் பாடகர்களாக விளங்குகின்றனர்.
திரை இசைக் கலைஞர்
திரை தந்த இசைக் கலைஞர்கள் பலர் மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றவர்களாக விளங்குகின்றனர். எம்.கே.தியாகராச பாகவதர், பி.யு.சின்னப்பா, பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராசன், சிதம்பரம் செயராமன், சீர்காழி கோவிந்தராசன், எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈசுவரி, எசு.பி.பாலசுப்பிரமணியன் போன்றோர் விளங்குகின்றனர்.
குழலிசைக் கலைஞர்
தொன்மையான கருவியான குழல் கருவி இசைத்துப் பெருமைப் பெற்ற பலர் உள்ளனர். பல்லடம் சஞ்சீவிராவ், மாலி என்கிற மகாலிங்கம், என்.இரமணி, டி.ஆர்,நவநீதம், வேதாரண்யம் கனகாம்புசம், சிக்கில் நீலா குஞ்சுமணி, சோழபுரம் சுப்பையா, பிரபஞ்சம் சீதாராம் போன்றோர் உள்ளனர்.
கோட்டு வாத்தியம்
அரிய நரம்பிசைக் கருவிகளுள் கோட்டு வாத்தியமும் ஒன்றாகும். இது வீணையிலிருந்து தோன்றிய கருவியாகும்.
துரையப்ப பாகவதர், ஏ.நாராயணய்யர், சாவித்திரி அம்மாள், திருவிடைமருதூர் சகாராமராவ், பூதலூர் கிருட்டிண மூர்த்தி சாத்திரிகள் போன்றோர் சிறந்த கலைஞர்களாக விளங்கினர். கோட்டு வாத்தியத்தில் துரித காலத்தில் இசைப்பது கடினமாகும். இக்கலைஞர்கள் இவற்றில் சிறந்து விளங்கினர்.
முகர்சிங் கலைஞர்
முகர்சிங் ஓர் அற்புதமான கருவியாகும். இதனைச் சிறந்த இலயக் கருவியாகக் கையாள்வர். இசைக்குழுவில் அதிகமாகப் பயன்படுத்தப் பட்டும் வருகிறது. மன்னார்குடி நடேச , ஆர்.வி.பக்கிரிசாமி, புதுக்கோட்டை எசு.மகாதேவன், குத்தாலம் வெங்கடேசன் போன்றோர் உள்ளனர்.
கடம் கலைஞர்
மண்குடத்தால் ஆன கடம் என்ற இலய இசைக் கருவி இசைப்பவர்கள் அன்றும் இன்றும் உள்ளனர்.ஆலங்குடி இராமச்சந்திரன், உமையாள்புரம் விசுவநாதய்யர், டி.எச்.விநாயகராம் போன்றோர் இக்கருவியால் பெயர் பெற்றவர்கள் ஆவர்.
கஞ்சிராக் கலைஞர்
கஞ்சிரா ஒரு தோற்கருவி. இலயக் கருவி. உடுமலைப்பேட்டை ஜி.மாரிமுத்தாபிள்ளை, கஞ்சிரா அரிஹரன், வி.நாகராசன், திருச்சி தாயுமானவன் போன்றோர் சிறந்த கலைஞர்கள் ஆவர்.
ஆர்மோனியக் கலைஞர்
ஆர்மோனியம் என்ற இசைக்கருவி நாடகக் குழுவிலும், தெருக்கூத்திலும், இசைக் குழுவிலும் முக்கியமான இசைக்கருவியாக விளங்குகிறது. ஆர்மோனியம் வாசிப்பதில் முறையாகக் கற்றோரும், கேள்வி ஞானத்தால் பயின்றோரும் உள்ளனர். முறையாகக் கற்றோரால் இக்கருவியிசை மேம்பட்டது. சுப்பிரமணிய தீட்சிதர், தேவுடு அய்யர், பல்லடம் வெங்கடரமண ராவ் போன்றோர் சிறந்த இசைக் கலைஞர்களாக விளங்கினர்.
கொன்னக்கோல் கலைஞர்
மத்தளச் சொற்கட்டுக்களை வாயால் சொல்லி முழங்குவதனைக் கொன்னக்கோல் என்பர். திருச்சி வானொலி நிலையத்தில் பணிபுரிந்த மிருதங்க இசைக் கலைஞர் தாயுமானவன். இவர் இவ்விசையில் தலைசிறந்த கலைஞராக உள்ளார். இவர் திருக்கோகர்ணம் இசைவழி வந்தவர். மன்னார்குடி பக்கிரியா பிள்ளை தலைசிறந்த கலைஞராக விளங்கினார். தேவாரக் காலத்தில் முழவுச் சொல் முழங்குதலை வாய்முரி என்றனர்.
வில்லுப்பாட்டுக் கலைஞர்
வில்லிசையின் மூலம் மக்களை மகிழ்விப்பதோடு மக்களுக்கு நல்ல அறிவுரைகளையும், கதைகளையும் உரைக்கும் வகையில் கிராமியம் தந்த நல்ல கலைவடிவமாக விளங்குவது வில்லுப்பாட்டாகும். தோவாளை சுந்தரம் பிள்ளை, கோலப்ப பிள்ளை, பொட்டல் பொன்னுமுத்து நாடார், சாத்தூர் பிச்சை குட்டி, சேவல்குளம் சி.தங்கையா, சுப்பு ஆறுமுகம், குலதெய்வம் இராசகோபால் போன்றோர் இக்கலை காத்த செம்மல்களாக உள்ளனர்.
வயலின் கலைஞர்
மேலைநாட்டு நரம்பிசைக் கருவியாக விளங்கும் வயலின் கருவியைக் கருநாடக இசைக் குழுவில் பக்க இசைக் கருவியாகப் பயன்படுத்தினார்கள். இக்கருவியால் இசைப் பயிரை வளர்த்த கலைஞர்கள் பலர் உள்ளனர். துவாரம் வெங்கடசாமி , மருங்காபுரி கோபால கிருஷ்ணய்யர், திருக்கோடிகாவல் கிருட்டிணய்யர், திருவாலங்காடு சுந்தரேசய்யர், மயிலாடுதுறை கோவிந்தராசு , மைசூர் சௌடய்யா, கும்பகோணம் இராசமாணிக்கம் , லால்குடி செயராமன், குன்னக்குடி வைத்தியநாதன், டி.என்.கிருட்டிணன், செல்வி கன்னியாகுமரி போன்றோரால் வயலின் இசை மேம்பட்டது, மேம்பட்டும் வருகிறது.
மிருதங்கக் கலைஞர்
மிருதுவான அங்கமுடைய காரணத்தால் மிருதங்கம் என்று பெயர் பெற்ற தோற் கருவியைப் பழங்காலத்தில் தண்ணுமை என்பர். இது, இசைக் குழுவில் இலயக் கருவியாக விளங்கி வருகிறது. இக்கருவியால் இசை மழை பொழிந்து பெருமை பெற்ற இசைக் கலைஞர்களும், பெருமை பெற்று வரும் இசைக் கலைஞர்களும் உள்ளனர். இராமநாதபுரம் முருகபூபதி, பழனி சுப்பிரமணிய அய்யர் உமையாள்புரம் சிவராமன், மைலாட்டூர் சாமி்யய்யர், திருக்கோகர்ணம் அரங்கநாயகி அம்மாள், பாலக்காடு மணி அய்யர், பாலக்காடு ரகு, தஞ்சை உபேந்திரன், தஞ்சை டி.கே.மூர்த்தி, வேலூர் இராமபத்திரன் போன்றோர் அவர்களில் சிலர்.
வீணை இசைக் கலைஞர்
இசைக் கருவிகளின் இராணியாக விளங்கும் வீணை இசையை வளர்த்த கலைஞர்கள் பலர் உள்ளனர். வீணை தனம்மாள், காரைக்குடி சாம்பசிவய்யர், தஞ்சை கோமதி சங்கரய்யர், தஞ்சை கே.பி.சிவானந்தம், சாரதா சிவானந்தம், சிட்டி பாபு, எஸ்.பாலசந்தர், காயத்திரி, அரங்கநாயகி இராசகோபாலன், இராசேசுவரி பத்மநாபன், சி.என்.தண்டபாணி, பிச்சுமணிய்யர் முதலியவர்கள் இதில் சிறப்புப் பெற்றவர்கள்.
ஜலதரங்கக் கலைஞர்
பல்வேறு அளவுள்ள பீங்கான் கோப்பைகளில் நீரால் நிரப்பிச் சுரங்களைக் குறிக்கும் வகையில் வைத்துக் கொண்டு இருகரங்களிலும் குச்சிகளைக் கொண்டு கொட்டி இசையை எழுப்புவர். இதனைச் சலதரங்கம் என்பர். சலம் = நீர் என்ற பொருள் தரும் வடசொல். தரங்கம் = நீரலைகளின் அதிர்வு. நீர் நிரம்பியுள்ள பீங்கான்களின் மூலம் ஓசையை உண்டாக்கல். மதுரை டி.சீனிவாசையங்கார், காமகோடிபாய் போன்றோர் சிறந்த கலைஞர்களாக விளங்கினர்.
நாட்டுப்புற இசைக் கலைஞர்
நாட்டுப்புற மக்கள் தந்த நல்ல இசை வடிவங்களான ஏற்றப் பாடல், கரகப்பாட்டு, தெம்மாங்குப் பாட்டு, கும்மிப் பாடல், தெருக்கூத்துப் பாடல்கள், கோலாட்டப் பாட்டு, காவடியாட்டப் பாட்டு போன்றவற்றைப் பாடிப் புகழ் கண்ட கலைஞர்கள் விசயலட்சுமி நவநீதகிருட்டிணன், கொல்லங்குடி கருப்பாயி போன்றோர் உளர்.
நாகசுரக் கலைஞர், தவில் கலைஞர்
நாகசுரக் கலைஞர்கள் பற்றியும் தவில் கலைஞர்கள் பற்றியும் மங்கல இசை என்ற பாடப் பகுதியில் கூறப்பட்டுள்ளது.
கிளாரினெட் கலைஞர்
கிளாரினெட் ஒரு மேனாட்டு இசைக் கருவியாகும். நாகசுரக் கருவி அமைப்பில் அமைந்தும், துளைகள் பொத்தான்களால் மூடியும் இருக்கும். இது ஒரு துளைக்கருவி. ஐரோப்பாவில் சலூமியா என்னும் ஒரு வகைக் குழலினின்றும் இக்கருவி தோன்றியது. இக்கருவி தமிழகத்தில் மிகச் சிறந்த இசைக் கலைஞர்களின் கையாளுமையால் செவ்வியல் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏ.கே.சி.நடராசன், ந.இராதாகிருட்டினன் ஏ.கே.சி.வேணுகோபால், பி.ஆர்.மணி போன்றோர் இக்கருவி இசையை மேம்படுத்திய வல்லுநர்கள் ஆவர்.
இவ்வாறு பல்வேறு வகையான இசைக் கருவிகளைக் கையாண்ட இசைக் கலைஞர்களும், குரலிசைக் கலைஞர்களும் இசை மேதைகளாக விளங்கி உள்ளனர். வாழையடி வாழையென வரும் திருக்கூட்ட மரபினோர்போல் இக்கலைஞர்கள் உள்ளனர். குருகுலமுறையில் கற்று குருவின் மரபினைப் பின்பற்றி, மேலும் புத்தம் புதுநிலைகளைக் கையாண்டு மக்களால் பெரிதும் போற்றப்படும் மேதைகளாக விளங்கி வருகின்றனர்.
திருமுருக கிருபானந்த வாரியார்
திருமுருக கிருபானந்த வாரியார் வடஆர்க்காடு மாவட்டம் காங்கேய நல்லூரில் 25.8.1906இல் பிறந்தார். தனது தந்தையார் மல்லையதாசரிடம் நன்னூல், தேவாரம், திருப்புகழ்ப் பாடல்களைக் கற்றார். நாள்தோறும் விடியற்காலைப் பொழுதில் இசை பயின்றார். பன்னிரண்டு வயதிற்குள் 19,000 பாடல்களை மனப்பாடம் செய்தார்.இயலிலும் இசையிலும் வல்லவராகத் திகழ்ந்தார். தமிழகத்திலும் மேலைநாடுகளிலும் இசைச் சொற்பொழிவு செய்தார். திருப்புகழ்ப் பாடல்களைப் பாடுவதனைத் தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு திருப்புகழ் இசையைப் பரப்பினார். தலைசிறந்த முருக பக்தராக முருகன் திருவருள் பாடும் பேசும் கலைஞராக விளங்கினார். இதனால் இவரைத் திருமுருக கிருபானந்த வாரியார்என்று உலகம் போற்றியது.
வாரியார் அருணகிரியாரின் திருப்புகழ்ப் பாடல்களைப் பின்பற்றி 103 பாடல்களை உடைய குகப் புகழ்பாடல்களைப் பாடியுள்ளார்.
24.4.1950இல் வடலூர் சத்திய ஞான சபைக்குத் திருக்குடமுழுக்குச் செய்தார். சென்னை தமிழிசை மன்றம் இவருக்கு இசைப் பேரறிஞர் என்ற சிறப்பு விருதை அளித்தது. தமிழ்நாடு இயலிசை மன்றம் கலைமாமணி விருதளித்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் அளித்தது. திருப்புகழ் அமிர்தம் என்ற மாத இதழை 37 வருடங்கள் தொடர்ந்து நடத்தினார். வீணை இசைப்பதிலும் வல்லவர். தென்மடம் வரதாசாரியாரிடம் வீணை கற்றார். 68 ஆண்டுகள் இசை மூலம் சமயச் சொற்பொழிவுகளைச் செய்தார். கந்தபுராணம், இராமாயணம், மகாபாரதம், திருப்புகழ், திருவருட்பா, தேவார திருவாசகங்களை இசை மூலம் மக்கள் மனத்தில் பதிய வைத்தார்.
இராகம் பாடுவதிலும், சுரம் பாடுவதிலும் வல்லவர். திருப்புகழ்ப் பாடல்களைப் பாடி நிரவல் செய்வதில் வல்லவர். மேற்கோள்களுடன் நகைச்சுவை உணர்வு ததும்ப மக்களை ஈர்த்து இசைச் சொற்பொழிவு செய்தார். கோடிக்கணக்கான தமிழர் உள்ளங்களில் நற்பண்புகளையும் நெறிமுறைகளையும் வளர்த்த வாரியார் தமது 88வது வயதில் நவம்பர் 1993-இல் இலண்டன் மாநகரில் சிகிச்சை பெற்று, சென்னைக்குத் திரும்பும் வழியில் விமானத்திலேயே மாரடைப்பால் இறந்தார்.
சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை
இசையுலகில் திருப்புகழ் இசை பரப்பிய இலயமேதை காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளையின் மாணவர் பரம்பரையில் வந்தவர் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை ஆவார். கருநாடக இசைப் பாடகருள் குறிப்பிடத் தக்கவர். ஆந்திர மாநிலம் சித்தூரில் பேரையா-முகிலம்மாளுக்கு 1907இல் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் கனகையா ஆகும். காஞ்சிபுரம் நாயணார் பிள்ளை குருகுல முறையில் இசை பயின்று நாயணார் பிள்ளையிடம¢ இயற்பெயரான சுப்பிரமணியன் என்ற பெயரைத் தனது பெயராக அமைத்துக் கொண்டார்.
இவரது தாய்மொழி தெலுங்கு. ஆயினும் தமிழில் தேர்ச்சி பெற்று, தமிழிசை உலகில் சிறப்பிடம் பெற்றார். சென்னை நகரிலும், அண்ணாமலை நகரிலும் தங்கி இருந்தார். இசைத் தொண்டே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட இசைப்பாடல்களை இயற்றியுள்ளார்.
நான்கு மணி நேரமாயினும் இசையரங்கில் பாடுவார். இவரது இசையரங்குகளில் தாள இசைக் கருவிகள் அதிகம் இடம் பெறும். கின்னரி, மத்தளம், கஞ்சிரா, கொன்னக்கோல், கடம், மோர்சிங் கருவிகள் இடம் பெறும். தாள நுட்பமும், இலயச் சிறப்பும் மிகுந்து காணப்படும்.
அண்ணாமலைப் பல்கலைக் கழக இசைத் துறைத் தலைவராகவும், திருப்பதி வெங்கடேசுவரப் பல்கலைக் கழக இசைத்துறைத் தலைவராகவும் திருவையாறு இசைக் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் பொன்னம்பல இராமநாதன் கல்லூரியிலும் பணியாற்றினார். இசைத் துறையில் பல விருதுகளைப் பெற்றுள்ளார். திருப்புகழ்ப் பாடல்கள் சிலவற்றிற்கு இசையமைத்து அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாகப் பதிப்பித்துள்ளார். இசையுலகில் சிறந்த கலைஞரான இவர் 1982இல் மறைந்தார்.
மதுரை எஸ்.சோமசுந்தரம் (1919-1989)
இசையுலகில் மணிக்கணக்கில் இராகம் பாடுவதில் வல்லவராக விளங்கியவர். மருதமலை மாமணியே என்ற திரை இசைப் பாடலை உலகறியச் செய்த மதுரை எசு.சோமசுந்தரம், சித்தூர் சுப்பிரமணியின் மாணவர் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியராகவும் நுண்கலைப் பல்துறைத் தலைவராகவும் விளங்கினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இசைத் திறமைக்காக இவருக்கு டாக்டர் பட்டம் அளித்தது. தமிழக அரசின் அரசவைக் கலைஞராகவும் இருந்தார்.
இராகம் பாடுவதில் இணையற்றவர். சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையிடம் 14 ஆண்டுகள் குருகுலவாசம் மூலம் பெற்ற அனுபவங்களையும் தனது சிறப்பான கற்பனை ஆற்றலையும் கலந்து, வந்தது வராமல் மணிக்கணக்கில் இராகம் பாடுவார். இசை தெரியாத பாமர மக்களும் இவரது இசையால் ஈர்க்கப் பெற்றனர். இசை நுட்பம் அறிந்தோர் இவரது இசை நுட்பம் அறியக் கூடுவர். தமிழகத்திலும் அயல்நாடுகளிலும் இவரது இசையரங்குகள் இடம்பெறாத திருவிழாக்கள் இல்லையென்று கூறும் அளவிற்கு இடம் பெற்றன.
இசைப் பேரறிஞர், சங்கீத சக்கரவர்த்தி, அருள் ஞான தெய்வீக இசைக் கடல், பத்ம ஸ்ரீ பட்டங்களைப் பெற்றுள்ளார். பக்க இசைக் கலைஞர்கள் இவரது இசையரங்கு என்றால் அச்சம் கொள்ளும் அளவிற்குப் பயன்படுத்துவார். இவரது இசை பாணி தனித்தன்மை வாய்ந்தது.
சீர்காழி கோவிந்தராசன்
தமிழிசை எழுச்சியை உருவாக்கிய தலங்களுள் சீர்காழி முக்கியமானதொரு இடம் பெறும். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர் தோன்றிய தலம். நட்டபாடைப் பண்ணமைந்த ‘தோடுடைய செவியன்’ என்று தொடங்கும் தேவாரம் உதயமான தலம். தமிழில் கீர்த்தனை வரலாற்றைத் தொடங்கிய முத்துத்தாண்டவர் தோன்றிய தலம். தலைசிறந்த தமிழ் நாடகக் கீர்த்தனையான இராம நாடகக் கீர்த்தனையை அருணாசலக் கவிராயர் உருவாக்கிய தலம். இத்தலத்தில் தலைசிறந்த தமிழிசைக் கலைஞராக, திரையிசைக் கலைஞராக விளங்கியவர் சீர்காழி கோவிந்தராசன் ஆவார்.
சீர்காழி கோவிந்தராசன் சீர்காழியின் சிவசிதம்பரம் – அபயாம்பாள் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். சங்கீத கலாநிதி திருப்பாம்புரம் என்.சுவாமிநாத பிள்ளையிடம் இசை பயின்றார். 1949 இசைமாமணி பட்டம் பெற்றார். சென்னை தமிழிசைக் கல்லூரியில் (1949-50) இசைமணி பட்டமும், சென்னை கர்நாடக இசைக் கல்லூரியில் (1951-52) சங்கீத வித்துவான் பட்டமும் பெற்றார். 1971 இல் தமிழக அரசின் தலைசிறந்த பின்னணிப் பாடகர் விருது பெற்றார். 1980இல் சங்கீத நாடக அகாடமியின் விருது பெற்றார். தமிழ்நாட்டின் அரசவைக் கலைஞராக விளங்கினார். 1982இல் சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் இசைப் பேரரறிஞர் பட்டத்தையும் பெற்றார். 1983இல் சென்னைப் பல்கலைக் கழகம் தனது வெள்ளி விழாவில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது. அண்ணாமலைப் பல்கலைக் கழக இசைத்துறைத் தலைவராகவும், நுண்கலைத் துறைகளின் தலைவராகவும் விளங்கினார்.
சிறந்த குரல் வளமும், மிகத் தெளிவான உச்சரிப்பும், கற்பனை நயம் மிக்க இசைநுட்பமும், இராகம், தானம், பல்லவி பாடுவதில் வல்லவராகவும், பொருளுணர்ந்து அதற்கேற்பப் பாடுவதில் சிறந்தவராகவும் விளங்கிய குரலிசைக் கலைஞர் ஆவார். கர்நாடக இசை அரங்குகளிலும், தமிழிசை அரங்குகளிலும், இறையருள் பாடும் அரங்குகளிலும், திரை இசையரங்குகளிலும் இவரது கம்பீரமான குரல் ஒலித்தது. இன்றும் ஒலி நாடாக்களின் வழியே கேட்டு இன்புறலாம்.
வேணுகான சரப சாஸ்திரிகள் (1872-1904)
தமிழகத்தில் வாழ்ந்த குழலிசை மேதைகளில் வேணுகான சரப சாத்திரிகளுக்குத் தனிச் சிறப்பிடம் உள்ளது. குழலிசைத் திறனால் இவரது பெயருக்கு முன் வேணு கானம் என்ற சிறப்புப் பெயர் இடம் பெற்றுள்ளது. தஞ்சாவூர் மகர்நோன்பு சாவடி வேங்கட சுப்பையரிடம் தியாகராசரின் கீர்த்தனைகளைக் கற்றார். பின்பு புல்லாங்குழல் இசை கற்றார். இவர் பெரிய புராண நாயன்மார்கள் அறுபத்து மூவர் சரித்திரங்களைத் தமிழிலும் மராட்டியிலும் கதைப் பாடலாக அமைத்து இசையமைத்துள்ளார்.
சரப சாத்திரியார் புல்லாங்குழலில் தனி இசையரங்கு அமைத்தார். கண் நோயால் பார்வை இழந்த நிலையிலும் முயற்சியால் குழலிசை மேதையாக விளங்கினார். ‘நகுமோமு கனலேனி’ என்ற ஆபேரி கீர்த்தனையில் அற்புதங்கள் பலவற்றை அமைத்துத் தந்துள்ளார்.
கொன்னக்கோல் பக்கிரியார்(1857-1937)
மத்தளச் சொற்கட்டுக்களை வாயால் சொல்லி முழங்கும் கொன்னக்கோல் இசைக் கலைஞர் மன்னார்குடி பக்கிரியார் ஆவார். இவர் நட்டுவனார் மரபில் வந்த இலயக் கலைஞர். இவரின் தந்தையார் சொக்கலிங்க நட்டுவனார். இளமையில் பரதக் கலை பயின்றார். பின்பு மன்னார்குடி சொர்ண தவில்காரரிடம் தவில் பயின்றார். இருபது வயது முதல் தவிலிசைக் கலைஞராக விளங்கினார். மிகச்சிறந்த நாகசுரக் கலைஞரான மன்னார்குடி சின்ன பக்கிரிக் குழுவில் தவிலிசைக் கலைஞராக விளங்கினார்.
இசைக் கலையில் சிறந்து விளங்கிய இராமச்சந்திர பாகவதரின் இசைக் குழுவில் கொன்னக்கோல் இசைத்தார். காஞ்சிபுரம் நாயனார் பிள்ளை குழுவிலும் கொன்னக்கோல் இசைத்தார்.
நாட்டியம், கொன்னக்கோல், தவில், திருப்புகழ்த் தாள நுணுக்கம் போன்றவற்றில் சிறந்த கலைஞராக விளங்கிய இவர் 2.11.1937இல் மறைந்தார்.மன்னார்குடியின் இசைப் பரம்பரையில் இவர் முன்னோடியாக விளங்கினார்.
சோமசுந்தர ஓதுவார்
இறையருள் பாடகருள் சோமசுந்தர ஓதுவாருக்குத் தனியிடம் உள்ளது. தேவார இசையை இசைப்போரை ஓதுவார் என்பர். கல்வெட்டுக்கள் இவர்களைப் பிடாரர் என்று கூறும். தமிழிசை மரபுகளைத் தொன்று தொட்டுக் காத்து வரும் மரபினராக இவர்கள் விளங்குகின்றனர்.
சோமசுந்தர ஓதுவார் வேதாரண்யம் என்று கூறப்படும் திருமறைக்காட்டில் வேதய்யா தேசிகருக்கும் வேலம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். தந்தை தாய் வழி தேவார மரபுகளையும் பாடல்களையும் கற்றார்.அண்ணாமலைப் பல்கலைக் கழக இசைத் துறைத் தலைவர் எம்.எம்.தண்டபாணி தேசிகரிடம் தேவார இசை முறைகளைக் கற்றதோடு அவரோடு முப்பது வருடங்கள் உடனிருந்தார்.அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசை ஆசிரியராகப் பணிபுரிந்தார். கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் திருப்புகழ்,தேவார இசையரங்குகளை நடத்தினார்.
‘திருமுறை இசை அமுதம்’ நூலை, சுர தாளக் குறிப்புடன் வெளியிட்டார். இலங்கை, மலேசியா நாடுகளிலும் தமிழகத் திருக்கோயில்களிலும் திருமடங்களிலும் இவரது தேவார இசை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்கள் பலரை உருவாக்கினார்.
பழனி சண்முகசுந்தரம், திருவிடைமருதூர் சம்பந்த ஓதுவார், தருமபுரம் சுவாமிநாதன், சோமசுந்தர தேசிகர், முத்துக்கந்தசாமி தேசிகர் போன்றோர் பலர் திருமுறை விண்ணப்பிக்கும் இசைக் கலைஞர்களாக உள்ளனர்.
சங்க காலம் முதல் இசைத் துறையில் சிறப்புடன் விளங்கிய இவர்கள் காப்பியக் காலத்தில் அரசவையில் வீற்றிருக்கும் கலைஞராகத் திகழ்ந்தனர். தென்னக இசையின் தாயாகவும் பாவை பாடிய பாவையாகவும் விளங்கியதோடு தேவாரப் பண்களைக் காத்து அளித்தவர்களாகவும் விளங்கினர்.
பிற்காலத்தில் ஆண்களுக்கு நிகராக இசை உலகில் திகழ்ந்தனர். இசைக் கருவிகளின் இராணியான வீணை இசையில் தனக்கென ஒரு தனி பாணியை இசை உலகில் நிலவச் செய்தவராக வீணை தனம்மாள் (கி.பி.1868-1938) திகழ்ந்தார். இவர் சங்கீத கலாநிதி டி.பாலசரசுவதியின் பாட்டியாவார். மிகச் சிறந்த இசைப் பரம்பரையை இவர்கள் தோற்றுவித்தனர்.
திருவையாற்றில் தியாகராசர் ஆலயத்தைக் கட்டி ஆராதனை விழா மிகச் சிறப்புடன் நடைபெற ஏற்பாடு செய்த பெங்களூர் நாகரத்தினம்மாள் (1878-1952) தியாகராசர் சமாதியை 7.1.1925இல் கோயிலாக்கிக் குடமுழுக்குச் செய்வித்தார். 1905க்கும் 1935க்கும் இடையில் 1235 இசை நிகழ்ச்சிகளைத் தந்தார். இந்தியக் குடியரசுத் தலைவரால் தியாக சேவா சக்தி என்ற விருது வழங்கப்பட்டார். இவர் பழம்பெரும் இசை நூல்களைப் பதிப்பித்தவரும் ஆவார்.
இசையரசியர் மூவர் என்று போற்றப்படும் டாக்டர் எம்.எசு.சுப்புலட்சுமி, சங்கீத கலாநிதி டி.கே.பட்டம்மாள், டாக்டர் எம்.எல்.வசந்தகுமாரி மூவரும் தலைசிறந்த மேதைகளாக விளங்கினர்.
இசை உலகில் பேரரசியாக டாக்டர் எம்.எசு.சுப்புலட்சுமி திகழ்ந்தார். இசைத் துறையில் பெண்கள் ஆர்வத்தோடு ஈடுபட இவர் வழிகாட்டினார். இந்தியத் திருநாட்டின் பல்வேறு சிறப்பு விருதுகளைப் பெற்றார். இந்தியத் திருநாட்டில் முதன் முதல் வழங்கப்பட்ட பத்மபூசன் விருதினை (1954) இவர் பெற்றார். பின்னர் ‘பாரத ரத்ன’ விருதும் வழங்கப்பட்டது.
சங்கீத கலாநிதி டி.கே.பட்டம்மாள் ஆண்களுக்கு நிகராக, குரலிசை பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். வீணையும் வயலினும் இசைப்பார். பல்வேறு சிறப்பு விருதுகளைப் பெற்றார். இசையுலகில் இவரின் வாரிசாக நித்யமசிறீ மாகாதேவன் விளங்குகிறார்.
ஆண்டாள் பாடிய திருப்பாவையை இசைப் பாடல் மூலம் பெருமைப்படுத்தியவராக எம்.எல். வசந்தகுமாரி விளங்கினார். 500க்கும் மேற்பட்ட ஒலிப்பதிவுகளையும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளையும் இவர் தந்துள்ளார். கற்பனை வளம் நிறைந்த இசைக்குச் சொந்தக்காரராக விளங்கினார்.
சுதந்திரப் போராட்டக் காலங்களில் சுதந்திர இசைப் பயிர் வளர்த்த ஹேமாவதி தியாகராசன். அகில இந்திய வானொலியின் முதன்மைக் கலைஞராக விளங்கிய மைதிலி சீனிவாசன் ; முத்துச்சாமி தீட்சதரின் நவக்கிரகக் கீர்த்தனைகளைப் பாடிப் பெருமை சேர்த்த மணி கிருட்டிணசாமி, தமிழிசை வளர்ப்பதனை நோக்கமாகக் கொண்ட இசை நிகழ்வும் ஆய்வும் தந்துவரும் டாக்டர் சேலம் எசு.செயலட்சுமி முதலியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இன்றைய இசைவானில் இளம் நடசத்திரங்கள் மிகப் பல மின்னிக் கொண்டிருக்கின்றன.
உடன்பிறந்த சகோதரிகளுடன் இணைந்து இசையால் கலை வளர்த்த நங்கையர்கள் பலர் உள்ளனர். ஏனாதி சகோதரிகள், தனுசுகோடி காமாட்சி அம்மாள் சகோதரிகள், பம்பாய் சகோதரிகள், சூலமங்கலம் சகோதரிகள் போன்றோர் இருந்துள்ளனர்.
குழலிசையில் சிக்கில் நீலா-குஞ்சுமணி, திருமதி டி.ஆர் நவநீதம் போன்றோர் விளங்குகின்றனர்.
ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நாகசுர இசையில் மதுரை எம்.எசு.பொன்னுத்தாய், தஞ்சை சாமவல்லி, சின்னமனூர்ச் சகோதரிகள் சிறப்புடன் சேவை செய்து வருகின்றனர்.
தவிலிசைக் கலைஞராக தஞ்சாவூர் கல்யாணி அம்மாள் திகழ்ந்தார்.
நாட்டுப்புற இசைத்துறையில் கொல்லங்குடி கருப்பாயி, முனைவர் விஜயலட்சுமி நவநீத கிருட்டிணன், அனிதா குப்புசாமி, குன்னக்குடி பாலா, பரவை முனியம்மாள் போன்றோர் சிறப்புடன் விளங்குகின்றனர்.
இவ்வாறு இசைத் துறையை மேம்படுத்திய நங்கையர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். வாழ்ந்து வருகின்றனர். இவர்களால் தமிழிசையும் தமிழர் பண்பாடும் மேம்பாடு அடைந்து வருகின்றன.
கே.பி.சுந்தராம்பாள்
தமிழகத்தில் நிலவிய பெண்பால் இசைக் கலைஞருள் முக்கியமானதொரு நிலையை அடைந்த பெருமையை, கே.பி.சுந்தராம்பாள் பெற்றுத் திகழ்ந்தார். நாடக உலகில் நுழைந்து, திரைப்பட உலகில் கால் பதித்து, கருநாடக இசையிலும் குறிப்பாகத் தெய்வத் தமிழிசையில் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெற்றவராக இவர் விளங்கினார். கொடுமுடி என்ற ஊரில் 1908ஆம் ஆண்டில் பிறந்தார். தாயார் பெயர் பாலாம்பிகை. இதனால் தன்னுடைய பெயருக்குமுன் ஆங்கில எழுத்தில் கே.பி.என்று அழைத்துக் கொண்டார்.
தனது கணவரின் அண்ணனிடம் முறையாக இசை பயின்றார். கணவரின் இறப்பிற்குப் பின் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். தேசிய விடுதலை வீரர் தீரர் சத்தியமூர்த்தி அவர்களிடம் கொண்ட பற்றுதலால் தேசிய விடுதலை இயக்கக் கூட்டங்களில் பாடினார்.
இவரது கம்பீரமான குரல் ஆண் குரல்களோடு போட்டியிடும் நிலையில் அமைந்திருந்தது. ஐந்து கட்டைச் சுருதியில் பாடுவார். இவரின் ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’, ‘ஒன்றானவன்’ போன்ற பாடல்களும், பூம்புகார் படத்தில் கவுந்தியடிகள் வேடமேற்றுப் பாடிய பாடலும் மிகவும் சுவையானவை. இவர் 1980இல் தம் எழுபத்திரண்டாவது வயதில் இறந்தார். இவரது கம்பீர இசை பாணி தனிச் சிறப்புடையதாகும்.
இசைத் தமிழ் வளத்தைத் தமிழகமெங்கும் பரப்பிய குடந்தை ப.சுந்தரேசன், கு.கோதண்டபாணி , பேராசிரியர் க.வெள்ளை வாரணனார், பேராசிரியர் தனபாண்டியன், பேராசிரியர் வீ.ப.கா.சுந்தரம் ஆகியோர் சிறந்த ஆய்வு நூற்களையும், வரலாற்று நூற்களையும், தமிழிசைக் கலைக் களஞ்சியங்களையும் வெளியிட்டு இசைத் தமிழ் ஆய்வை வளப்படுத்தினர். இவர்களின் ஆய்வுப் போக்கால் இசைத்தமிழ் ஆய்வு இன்று பெருகி வளர்வதோடு எங்கும் தமிழிசை என்ற நிலைமை மேம்பட்டு வருகிறது. தமிழிசை ஆய்வால் தமிழிசை வளத்தை உலகறியும் வாய்ப்பு ஏற்பட்டு வருகிறது.
இசை குரலிசை, கருவி இசை என்று இருவகைப்படும். இவ்விசைகளை வளர்த்த கலைஞர்கள் வாழையடி வாழையென வாழ்ந்து வருகின்றனர். பொது மக்களாலும் அரசுகளாலும் மதிக்கப்படும் கலைஞர்களாக வாழ்கின்றனர்.
இசைப் பயிர் வளர்த்தவர்களில் பெண்களும் முக்கிய இடம் பெற்றுள்ளனர். ஆண்களுக்கு நிகராக இவர்களும் விளங்கியுள்ளனர்.

