93

இலக்கியத் திறனாய்வு

பாடம் 1

இலக்கியத் திறனாய்வு

1.0 பாட முன்னுரை

திறனாய்வு என்பது, இன்று வளர்ந்து வருகிற ஒரு துறை. இலக்கிய வளம் உடைய எல்லா மொழிகளிலும் திறனாய்வு போற்றப்படுகிறது. இலக்கியத்தின் வளர்ச்சிக்கும், சிந்தனை வளர்ச்சிக்கும் திறனாய்வு பெரிய அளவில் துணை செய்து வருகிறது. இலக்கியம் என்ற பூஞ்செடிக்கு உரமாகவும் நல்ல நீராகவும் திறனாய்வு இருக்கிறது.

எனவே, மொழியைப் பற்றியும் இலக்கியம் பற்றியும் பயில விரும்புகிற மாணவர்கள் திறனாய்வு பற்றியும் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.

1.1 திறனாய்வு

கணினி-வலைப்பின்னல்

நம்மைச் சுற்றி, புத்தகங்களாக அச்சிலும் மற்றும் கணினி-வலைப்பின்னலிலும் இலக்கியங்கள் என்ற பெயரில் ஏராளமாகவும் தாராளமாகவும் நிறைய எழுத்து வடிவங்கள் கிடைக்கின்றன. நாம், எல்லாவற்றையும் படிக்க முடியுமா? முடியாது. படிப்பனவற்றிலும் எல்லாமே நமக்குச் சுவையாக இருக்கிறதா? இல்லை. சுவையாக இருப்பவையும் தொடர்ந்து சலிக்காமல் இருக்கின்றவா? இல்லை. சுவையாகவும் சலிப்பில்லாமலும் இருந்தால் எல்லாம் நல்லனவாக, மனத்தையும் நம் அனுபவத்தையும் வளர்ப்பனவாக இருக்கின்றனவா? இல்லை. அப்படியானால் சுவையானவற்றையும் அதேபோது நல்லனவற்றையும் பயனுள்ளவற்றையும் நாம் எப்படித் தெரிந்து கொள்வது? எப்படித் தேர்ந்தெடுப்பது?

இங்கே தான் திறனாய்வு வருகிறது.

திறனாய்வு இதற்குத்தான் நமக்கு முதலில் தேவைப்படுகிறது.

1.1.1 திறனாய்வும் இலக்கியமும் இலக்கியம் என்பது ஒரு கலை வடிவம். படைப்பு அல்லது ஆக்கம் என்ற பண்பை உடையது. திறனாய்வு அத்தகைய கலை வடிவத்தின் மீதான ஒரு அறிவியல் விசாரணை ஆகும். இலக்கியம், ஆக்கப் படுகிறபோதே திறனாய்வும் தோன்றிவிடுகிறது. இதனை எப்படி எழுத வேண்டும்? பிறர் எப்படி எழுதியிருக்கிறார்கள்? நாம் ஏன் இதனை, இப்படி எழுதியிருக்கிறோம்? என்று இலக்கியத்தை ஆக்குகிற படைப்பாளி நினைக்கின்ற போதே திறனாய்வுக்குரிய மனப்பான்மையும் தோன்றிவிடுகிறது. இலக்கியத்தின் பல்வேறு பகுதிகளையும் பண்புகளையும் பற்றித் தெரியாமல், இலக்கியம் எழுதுபவன் இல்லை; அதுபோல அவற்றைத் தெரிந்து கொள்ளாமல் திறனாய்வு செய்பவனும் இல்லை.

எனவே, இலக்கியமும் திறனாய்வும் ஒன்றையொன்று சார்ந்தும் இணைந்தும் இருக்கின்றன.

1.1.2 திறனாய்வு என்ற கலைச்சொல் இலக்கியத் திறனாய்வு என்ற சொல் இலக்கியத்தின் திறனை ஆராய்வது என்று விரிவு படுகிறது. இதன் எடுகோள் அல்லது அடிப்படைக் கருத்து என்ன? இலக்கியத்திற்குத் ‘திறன்’ இருக்கிறது. அதனைக் கண்டறிய வேண்டும் என்று சொல்லுகிறது. இலக்கியத்தின் திறன் என்பது, அதன் வடிவழகில், மொழி வளத்தில், உத்திகளின் உயர்வில், சொல்லுகிற செய்திகளின் மேன்மையில், அதன் நோக்கத்தில் இருக்கிறது என்று பொருள். அதனைக் கண்டறிந்து சொல்வது, இலக்கியத் திறனாய்வு என்பதற்குப் பொருள் ஆகும். இலக்கியத்தின் திறனை மேலோட்டமாகச் சொல்லக்கூடாது. ஆழமாகப் பார்த்திட (‘ஆய்வு’) வேண்டும் என்றும் இச்சொல் நமக்கு உணர்த்துகிறது.

திறனாய்வுக்கு இணையான ஆங்கிலச் சொல், ‘criticism’ என்பது. இதனை ஒரு கலைச் சொல்லாக முதலில் பயன் படுத்தியவர் ஜான் டிரைடன் (John Dryden) (18 ஆம் நூற்றாண்டு) எனும் ஆங்கிலக் கவிஞர் ஆவார். அதற்கு முன்னால் (1605-இல்), Critic என்ற சொல்லைப் பயன்படுத்தியவர், சிந்தனையாளர் பிரான்சிஸ் பேக்கன் (Francis Bacon) ஆவார்.

தமிழில் criticism என்ற சொல்லுக்கு இணையாக விமர்சனம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர், (1944) பேராசிரியர் ஆ.முத்து சிவன் ஆவார். ‘விமரிசை’ என்ற வடமொழி வழக்கிலிருந்து வந்த இச்சொல்லுக்குப், பாராட்டிச் சொல்லுதல், விளக்கமாகவும் விரிவாகவும் சொல்லுதல் என்று பொருள்.

தமிழில், இச்சொல்லுக்கு இணையாகத் ‘திறனாய்வு’ என்ற சொல்லை வழக்கத்தில் விட்டவர், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் ஆவார் (1953).

இன்று, கல்வியியலாளர்கள் இடையில் திறனாய்வு என்ற சொல் பெருவழக்காகவும், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் இடையில் விமர்சனம் என்ற சொல் பெருவழக்காகவும் பயன்பட்டு வருகிறது.

1.2 திறனாய்வு : சில பொது வரையறைகள்

இலக்கியத்தைப் பற்றித் திறனாய்வு என்ன சொல்கிறது என்பதற்குப் பல வரையறைகள் உள்ளன. அவை எண்ணிலடங்கா. திறாய்விற்கும் ஓர் அடிப்படை உண்டு.

1.2.1 வரையறைகளின் விளக்கம் இலக்கியத்தின் மீது அல்லது இலக்கியம் பற்றி எழுவது திறனாய்வு. அந்த இலக்கியத்தை, இலக்கியத்தின் பல்வேறு பண்புகளைத் திறனாய்வு விளக்குகிறது. விளக்குகின்ற அதே நேரத்தில் அந்த இலக்கியத்தைப் பற்றி மதிப்பீடு செய்கிறது. என்ன இருக்கிறது, எப்படி இருக்கிறது என்று சொல்லுவதோடு, அதனுடைய திறன், அந்த இலக்கியத்தில் மொத்தமாக எவ்வாறு வெளிப்படுகிறது என்றும் சொல்லுகிறது. அதன் மூலமாக அந்த இலக்கியத்தை மதிப்பீடு செய்கிறது. இலக்கியம் வாழ்க்கையைப் பேசுகிறது என்றால், அத்தகைய வாழ்க்கையை இலக்கியம் எவ்வாறு பேசுகிறது என்று திறனாய்வு சொல்லுகிறது.

இராமன்-சீதை-இராவணன்                      கம்பர்

கம்பனுடைய ராமாயணம் இராமன்-சீதை-இராவணன் என்று இவர்களை மையமிட்ட வாழ்க்கையைச் சொல்லுகிறது என்றால், அந்த நூல் பற்றி வ.வே.சு.ஐயர் எழுதிய Kamba Ramayanam – A study என்ற நூல், அவ்வாறு வாழ்க்கையைச் சித்திரிப்பதில் கம்பன் என்ன என்ன வகையான உத்திகளைக் காட்டியுள்ளான். அவற்றின் நேர்த்தியும் சீர்த்தியும் என்ன என்று பேசுகிறது. அது போல், ஏ.சி.பால் நாடார், டி.கே.சிதம்பர நாத முதலியார், மு.மு. இஸ்மாயில், ப.ஜீவானந்தம், எஸ்.ராமகிருஷ்ணன், அ.ச.ஞான சம்பந்தன், ச.சோமசுந்தர பாரதியார் முதலிய அறிஞர்களுடைய நூல்களும், கம்பனுடைய இலக்கியத்திறன் பற்றிப் பேசுகின்றன. எனவே ஒரே இலக்கியத்தின் மீது பல திறனாய்வுகள் தோன்றுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் விளக்கம் தருகின்றன; அதன் திறன்பற்றி ஆராய்கின்றன.

ப.ஜீவானந்தம்                               டி.கே.சி                   அ.ச.ஞானசம்பந்தன்            மு.மு.இஸ்மாயில்

நாம் இதுவரை சொன்ன வரையறைகள் மட்டுமே, திறனாய்வின் வரையறைகள் என்று எண்ணிவிடக் கூடாது. இலக்கியம் பற்றிய வரையறைகள் என்றாலும், இலக்கியத் திறனாய்வு பற்றிய வரையறைகள் என்றாலும் இவை எண்ணில் அடங்கா. குறிப்பிட்ட இலக்கியம், குறிப்பிட்ட காலம், குறிப்பிட்ட திறனாய்வாளன், குறிப்பிட்ட தேவை. நோக்கம் முதலிய பலவற்றைச் சார்ந்துதான் திறனாய்வும் அமைகிறது; திறனாய்வு பற்றிய வரையறைகளும் அமைகின்றன. இவற்றை அவ்வப்போது, தேவைப்படுகிற இடங்களில், நாம் பேசுவோம்.

1.2.2 அடிப்படை இலக்கியத் திறனாய்வு பற்றிய அடிப்படையான வரையறை என்ன? இலக்கியத்தின் உற்ற தோழனாக இருந்து அதனை உண்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படுத்த வேண்டும் என்று டி.எஸ். எலியட், ரெனே வெல்லக் முதலிய மேலைநாட்டுத் திறனாய்வாளர்கள் வற்புறுத்துகிறார்கள். குறிப்பிட்ட இலக்கியத்திற்கும் சரி, பொதுவானதொரு இலக்கியச்சூழலுக்கும் சரி, திறனாய்வு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்; அதனை மேலும் வளர்ப்பதாக அமைய வேண்டும். இலக்கியத்தை மேலும் படிப்பதற்கும் விளங்கிக் கொள்வதற்கும் திறனாய்வு ஒரு “கிரியா ஊக்கியாக” (catalyst) இருக்க வேண்டும். இதுவே திறனாய்வின் அடிப்படை நோக்கமாகும்.

1.3 இலக்கியமும் திறனாய்வும்

இலக்கியத்திற்குப் பல விளக்கங்கள் உள்ளன. அவை திறனாய்வுக்கு மிகவும் தேவை. இலக்கியப் படைப்பாளனுக்கும், இலக்கியம் படிப்பவனுக்கும் சரியான முறையில் அறிமுகம் தேவை. சில நேரங்களில் இலக்கியத்தைப் படிப்பவனுக்குச் சில சங்கடங்கள் ஏற்படுகின்றன. அவற்றைப் போக்குவதற்கும் திறனாய்வாளனின் சேவை தேவைப்படுகிறது.

1.3.1 இலக்கியம் திறனாய்வுக்கு அடித்தளம் இலக்கியம்தான். எனவே, அந்த இலக்கியத்தைப் பற்றி நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இலக்கியத்திற்கு ஒரு விளக்கம், அல்ல – பல்வேறு விளக்கங்கள் இருக்கின்றன. இலக்கியம், ஒரு கலை. இலக்கியம், மொழியாலான ஒரு கலை. இலக்கியம், அழகு உடையது. அழகான முறையான, சீர்மை கொண்ட வடிவமைப்புக் கொண்டது. இலக்கியம், பொருள்களை மறைத்து வைக்கிறது; ஆழமாக வைக்கிறது, இலக்கியம் வாழ்க்கையைச் சொல்லுகிறது; வாழ்க்கையை விமரிசிக்கிறது; வாழ்க்கையை உணர்வுத் தளமாக ஆக்குகிறது. இலக்கியம் காலத்தின் குரல். இலக்கியம் ஒரு காலத்தில் காலூன்றி இன்னொரு காலத்தில் கைபரப்புகிறது. இலக்கியம், அதனைப்படைப்பவனை இனங்காட்டுகிறது. இலக்கியம், மனத்தைச் செழுமைப் படுத்துகிறது. மனத்திற்கு ‘இதம்’ தருகிறது. இலக்கியம் இனிமையானது. ஒரு மொழிக்குப் பெருமை அல்லது கவுரவம் தருகிறது. இவ்வாறு இலக்கியத்திற்குக் கூறப்படும் வரையறைகள் மிகப்பல.

கம்பர், கவியின் பண்பு பற்றிக் கூறுவார்:

சவியுறத் தெளிந்து தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச்

சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி . . . . . . .

(ஆரணியகாண்டம், சூர்ப்பணகைப் படலம்-1)

ஆழம், தெளிவு, குளுமை, ஒழுக்கம் என்ற பண்புகளைக் குறிப்பிட்டு வற்றாத ஆற்றுக்கு உவமையாகக் கவிதையைக் கூறுகிறார், கம்பர்.

கவிதைக்கும் இலக்கியத்திற்கும் இப்படி எண்ணற்ற வரையறைகள் உண்டென்றாலும், எந்த வரையறையும் இலக்கியத்தை முழுமையாகக் காட்டுவதில்லை; காட்ட இயலாது என்று ரெனே வெல்லக் என்ற அறிஞர் கூறுகின்றார்.

1.3.2 இலக்கியமும் படிப்பவரும் இலக்கியம் என்பது எழுதப்படுவது. எழுதுவது என்பது, பிறர் படிப்பதற்காக, அல்லது கேட்டு அறிந்து கொள்வதற்காக. எனவே இலக்கியம் என்பது உருப் பெற்றவுடன் படிப்பவர் (Reader) பக்கம் நோக்கி நகர்கிறது. இலக்கியமும் படிப்பவரும், முரண்பாடுகளின்றி, தமக்குள் ஓரளவாவது ஒத்துவருகிற சமதளத்தில் நின்றால்தான், எழுதுவதால் பயன் கிடைக்கும்; படிப்பதனால் பயன் கிடைக்கும். படிப்பவர் பல திறத்தவர். ஒருவருக்குப் பல இலக்கியங்கள் படித்துப் பழக்கம் இருக்கலாம்; இன்னொருவருக்கு அத்தகைய பழக்கமே இல்லாமலிருக்கலாம். ஒருவருக்குப் பலதுறைகளில் அறிவும் பயிற்சியும் இருக்கலாம்; இன்னொருவருக்கு அது இல்லாமலிருக்கலாம். படிப்பவர், தத்தம் தேவைக்கும் பின்னணிக்கும், பயிற்சிக்கும் ஏற்பவே இலக்கியத்தைத் தேர்ந்தெடுக்கிறார்; இலக்கியத்தைப் புரிந்து கொள்கிறார். எனவே இலக்கியமும் அதனைப் படிப்பவரும் சரியானமுறையில் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ள வேண்டியிருக்கிறது. படைப்பாளியும் படிப்பாளியும் வெவ்வேறு திசைகளில் முகம் திருப்பிக் கொண்டிருக்க முடியாது.

• படிப்பவர் சிக்கல்கள்

ஏற்கெனவே சொன்னது போல, படிப்பாளிக்கு எல்லைக்கோடுகள் இருக்கின்றன. அவை, இலக்கியத்திற்கும் அவருக்கும் குறுக்கே நிற்கின்றன. படிப்பவரின் சங்கடங்கள் பல. அவற்றுள் ஒன்று கால வேறுபாடு. இலக்கியம் ஒரு காலத்தில் எழுதப்பட்டிருக்கும்; இரண்டு மூன்று தலைமுறைகள் தாண்டி வருகிற படிப்பாளிக்கு, அதனைப் புரிந்து கொள்வதில் சங்கடம் இருக்கும். குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகள் வேறுபட்ட கோணங்களில் இருக்கும்; அவற்றில் பழக்கமில்லாத படிப்பாளிக்கு அவற்றைப் புரிந்து கொள்ளுவது சிரமமாயிருக்கும். படிப்பாளி முதலில் ஒரு சுவைஞன் (ரசிகன்) ; குறிப்பிட்ட இலக்கியத்தில் அவனுக்குரிய சுவை கிடைக்காமல் போகுமானால், அவன் சிரமப் படுவான். இம் மாதிரியான சூழ்நிலைகளில் திறனாய்வாளன் உள்ளே நுழைகிறான்; அவனுடைய சேவை, படிப்பாளிக்குத் தேவையாக ஆகிவிடுகிறது.

1.3.3 திறனாய்வு பாரதியார்

திறனாய்வுக்கு, இலக்கியம்தான் ‘களம்’ ஆகலின், அந்த இலக்கியம் பற்றி நீங்கள் என்ன – எப்படிப் – புரிந்து கொள்கிறீர்கேளா, அதனடிப்படையில்தான் உங்கள் திறனாய்வும் அமைகிறது. குறிப்பிட்ட இலக்கியத்தின் குறிப்பிட்ட விளக்கம், அந்த இலக்கியம் மீதான திறனாய்வுக்கு அடிப்படையான கருதுகோளாக அல்லது நோக்கமாக அமைகிறது. உதாரணமாக ‘இலக்கியம், காலத்தின் குரல்’ என்ற விளக்கத்தை முன்வைப்போமானால், பாரதியாரைப் பற்றிய திறனாய்வில், பாரதியாரின் காலத்தைப் பற்றி நாம் பேசவேண்டிவரும். பாரதியாரின் காலத்துக்குச் சற்று முன்னால் இருந்த இலக்கியத்தின் தன்மைகளையும் சமூகச் சூழ்நிலைகளையும் சொல்லிவிட்டுப் பாரதியாரின் சமகாலத்திலிருந்த அரசியல் விடுதலை இயக்கம், அன்றைய சமூகத்தின் பொதுவான நிலைப்பாடுகள் முதலியவற்றைப் பேச வேண்டும். அவற்றின் பின்னணியில், பாரதியார் அந்தக் காலத்தை எவ்வாறு வெளிப்படுத்துகின்றார் என்று வேண்டும். எனவே இலக்கியத்தைப் பற்றிய குறிப்பிட்ட மதிப்பீடு, அதனுடைய திறனாய்வுக்கு வாயிலாக அமைகின்றது.

1.4 முக்கூட்டு உறவு

இலக்கியம் என்ற பெரிய தளத்தில் படைப்பாளி, வாசகன், திறனாய்வாளன் மூவரும் இணைந்து செயல் பட வேண்டும்.

1.4.1 படைப்பாளி, வாசகன், திறனாய்வாளன் நாம் ஏற்கெனவே சொன்னது போன்று – இலக்கியம், எண்ணிறந்த வரையறைகளையுடையது; பல்வேறு பண்புகளை உடையது. வாசகன் என்பவனுக்குப் பல எல்லைக்கோடுகள் இருக்கின்றன; அதேபோது அவனுடைய தேவைகள் பல திறத்தனவாக இருக்கின்றன. திறனாய்வின் வேலைகள், இலக்கியத்திலிருந்து தொடங்குகின்றன; வாசகனை நோக்கிச் செல்லுகின்றன. இந்த மூன்றின் பரஸ்பரத் தேவைகளைப் பின்வருகிற வரைபடம் மூலம் அறியலாம்.

• திறனாய்வாளர் – ஒரு முகவர், ஒரு துணைவர்

இந்த முக்கூட்டுறவில், படைப்பாளிதான் மையத்திலிருக்கிறார். திறனாய்வாளர், படைப்புக்கும் படிப்புக்கும் இடைப்பட்ட இடைவெளிகளை நீக்குகிறார். திருக்குறளுக்குப் பரிமேலழகர், பரிதியார், காலிங்கர் முதல் மு.வரதராசனார் வரை வந்த உரையாசிரியர்களை நினைத்துப் பாருங்கள். திருக்குறள் தோன்றிய காலம் இன்று 18 நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தென்றால், இந்தக் கால இடைவெளியில் திருக்குறளைப் படிக்க/ வாசிக்க வந்த படிப்பாளிகளின் சிரமங்களை இந்த உரைகள் போக்கியிருக்கின்றன. காலம் என்ற இடைவெளியைக் குறைத்திருக்கின்றன.

திருவள்ளுவர்

படிக்கிறவர்களுக்கு அல்லது ஓரளவாவது படிப்பதிலே ஆர்வம் உள்ளவர்களுக்கு, இலக்கியங்களைத் தேர்ந்தெடுக்கத் திறனாய்வு உதவுகிறது. அதேபோது அவர்களை, இலக்கியத்தின் பக்கமாய் – நல்ல இலக்கியத்தின் பக்கமாய் அழைத்துக் கொண்டு போகிறது. இலக்கியத்திறன்களைப் படிக்கிற வாசகர்களுக்குச் சொல்லுகின்ற திறனாய்வு, அந்த வாசகர்களின் திறனையும் வளர்க்கிறது; அவர்களின் அறிவையும், ரசனையையும் விரிவடையச் செய்கிறது. வாசிப்பின் தரம் உயர்வடையச் செய்கிறது. எனவே, படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் இடையில் பாலமாகி இருக்கின்ற திறனாய்வாளன், இருவருக்கும் உற்ற தோழனாய் இருக்கின்றான்.

1.5 தொகுப்புரை

திறனாய்வு பற்றிய இந்த முதல் பாடத்தில், நாம் திறனாய்வு என்றால் என்ன என்று அறிமுக நிலையில் தெரிந்து கொண்டோம். இலக்கியம் பல பண்புகளைக் கொண்டது. இலக்கியங்கள் பல திறத்தன. பல விளக்கங்களையும் பலவரையறைகளையும் கொண்ட இலக்கியத்தின் தேவைக்கும், அதனை வாசிக்கிற வாசகனின் தேவைக்கும் ஏற்பத் திறனாய்வு என்பது அமைகிறது. இலக்கியத்தைப் படைக்கிறவர், அதனைப் படிக்கிறவர். அதனைத் திறனாய்வு செய்கிறவர் என்ற மூன்று பரிமாணங்கள், இலக்கியம் என்ற பொதுவான தளத்தின் அடிப்படையாகும். திறனாய்வு, ஒரு பாலமாக அமைய வேண்டும். உற்ற தோழனாக அமைய வேண்டும். இலக்கியத்தைப் படிப்பவரின்     அறிவையும் ரசனையையும் தரத்தையும் உயர்த்துவதாகத் திறனாய்வு அமைய வேண்டும்.

பாடம் 2

திறனாய்வாளன் பண்புகளும், பணிகளும்

2.0 பாட முன்னுரை

திறனாய்வின் பொதுவான விளக்கத்தையும் அதன் அறிமுகத்தையும் சென்ற பாடத்தில் பார்த்தோம். இப்போது திறனாய்வாளன் யார்? அவனுடைய பண்புகள் என்ன என்று பார்க்கப் போகிறோம். சரியான அல்லது ஒரு நல்ல திறனாய்வு அமைய வேண்டுமானால், திறனாய்வாளன் அதற்கேற்பப் பொருத்தமுற அமைகிறான். சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் கிடைத்தது போல.

எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே என்று அவ்வையார் சொன்னது போல, எவ்வழி திறனாளி, அவ்வழி நல்லை வாழிய திறனாய்வே.

2.1 திறனாய்வாளனும் பிறரும்

முந்தைய பாடத்தில் திறனாய்வு என்றால் என்ன? திறனாய்வாளன் யார்? என்பவைப்பற்றிப் பார்த்தோம். இதில் திறனாய்வாளனுக்கும் வாசகனும், திறனாய்வாளனுக்கும் படைப்பாளிக்குமுள்ள தொடர்பு பற்றிப் பார்ப்போம்.

2.1.1 திறனாய்வாளனும் வாசகனும் திறனாய்வாளன், முதலில் ஒரு வாசகன். வாசகன், குறிப்பிட்ட ஒரு இலக்கியத்தைப் – பனுவலை – வாசிக்கிறான். தன்னளவில், அந்தப் பனுவலைப் புரிந்து கொள்கிறான் ; ரசிக்கிறான் ; அனுபவிக்கவும், அந்தப் பனுவலோடு பழகிக் கொள்ளவும் செய்கிறான். ஒரு ஈடுபாடும், தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற மனநிலையும் கொண்டவனாக ஆகிறான். இது, முதல்நிலை. பயிற்சி பெற்ற வாசகன், அடுத்த நிலையில் உள்ளவன் தேர்ந்தெடுத்துப் படிக்கிற பயிற்சியும் தேடிப்போகிற மனநிலையும் இருக்கிறது. அதற்குரிய சரியான அளவுகோல் அவனுக்குத் தெரியாது ; ஆனால், தொடர்ந்து படிக்கும் பயிற்சி இருப்பதால், ஒரு மேலோட்டமான அளவுகோல் இருக்கிறது. நல்லது – வல்லது என்ற அபிப்பிராயங்கள் – கருத்தோட்டங்கள் – அவனுக்கு ஏற்படுகின்றன. இது இரண்டாம் நிலை அடுத்து, அதற்கும் மேல் நிலையில் உள்ள வாசகன், தான் வாசித்தவற்றைப் பற்றித் தருக்க நீதியான ஏன், என்ன, எப்படி என்ற கேள்விகளுக்கு வரத் தெரிந்தவன். மதிப்பிடுவது, விளக்குவது, ஒப்பிடுவது முதலிய மனநிலைகள் வாய்க்கப் பெற்றவன். குறிப்பிட்ட படைப்பின் தரம், குறிப்பிட்ட படைப்பாளியின் நிலை முதலியவற்றை அனுமானிக்கத் தெரிந்த இவனைக் குறிக்கோள் வாசகன் என்று சொல்ல முடியும். மூன்றாவது நிலை இது. திறனாய்வாளன் இவனிலிருந்து தொடங்குகிறான்; பிறக்கிறான்.

வாசிப்பு அனுபவமும், அதனைத் திரும்பத் திரும்ப உள்வாங்கிக் கொண்டு அதுபற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் மனநிலையும், அதனை வெளிப்படுத்துகிற ஆற்றலும் உடையவன், திறனாய்வாளன். வாசகன், குறிப்பிட்ட சில அளவுகேளாடு நின்றுவிடுகிறபோது, பிற நூல்கள் பற்றிய அறிவையும், இலக்கியம் மற்றும் அதுசார்ந்த பொதுவான கோட்பாடுகளைப் பற்றிய அறிவையும் கொண்டு, தன்னுடைய வாசிப்பு அனுபவங்களை ஒரு முறைமைக்கும் ஒரு தேவைக்கும் ஏற்ப வெளிப்படுத்துகிறவன், திறனாய்வாளன்.

ஈடுபாடு, வாசிப்பு, தொடர்ந்த வாசிப்பு – நின்றுவிடுமானால் மற்றும் கருத்துருக்களும் வெளிப்படுத்தியுரைக்கின்ற திறனும் இல்லாமல் போய் விடுமானால் – திறனாய்வாளன் முடிந்துவிடுகிறான். தொடர்ந்த ஈடுபாட்டோடு, வாசிப்பு ஒரு பயிற்சியாகவும் அனுபவமாகவும் அமைகிறபோது, அதுபற்றிய விளக்கம், கருத்துருக்கேளாடு வெளிப்படுகிற நிலையேற்படுமானால், வாசகன், திறனாய்வாளனாக உருவாகிவிடுகிறான்.

2.1.2 திறனாய்வாளனும் படைப்பாளியும் படைப்புமனம் என்பது, ஒரு நிகழ்ச்சியை அல்லது ஒரு பொருளை அல்லது ஓர் எண்ணத்தை உளங்கொண்டு உணர்ந்து, உந்துணர்வோடு, அதுபோன்ற ஒன்றாகவோ அதிலிருந்து விலகிச் செல்லும் இன்னொன்றாகவோ, புதியது போன்ற தோற்றமுடையதாகவோ வெளிப்படுத்த ஏதுவாக இருக்கிற ஒரு மனநிலையாகும். இது, ஒரு படைப்பாளிக்கு இருக்கிற மிகமுக்கியமான ஒருதேவை. அதுபோல், திறனாய்வாளனுக்கும் அடிப்படையில் இத்தகையதொரு மனநிலை இருக்கிறது. படைப்புமனம் இருந்தாலொழியப் படைப்பினைப் புரிந்துகொள்வது என்பது முடியாது. படைப்பாளி, அத்தகைய படைப்பு மனத்தைக் கலை வடிவோடு ஆக்குகிறான் ; படைப்புத் திறன் அவனிடம் முந்தி நிற்கிறது. அடிப்படையான படைப்பு மனத்தோடு அறிவியல் உளப்பாங்கும் விசாரணை உளப்பாங்கும் கூடிவருகிறபோது திறனாய்வாளன் உருவாகிறான். ஒருவன் கலைஞன்; அடுத்தவன் அறிஞன். ஒருவன் உணர்வால் எழுதுகிறான்; அடுத்தவன் அறிவால் எழுதுகிறான். ஆனால் இந்த இரண்டும் முரண்பாடு கொண்டவையல்ல என்பதும் எது முதன்மையாக இருக்கிறது என்பதுமே முக்கியம்.

‘படைப்பாளியாக ஆக முடியாமல் தோல்வியுற்றவன், திறனாய்வாளனாகிறான்’ என்று மேலை நாட்டுத் திறனாய்வாளர்கள் கூறுவதுண்டு. இது, மிகையான கூற்று; எனினும், திறனாய்வாளனின் இலக்கிய உள்ளத்தை இந்தக்கூற்று வெளிப்படுத்துகிறது.

படைப்பாளி, ஒரு அழகை அல்லது ஒரு பொருளை அல்லது அதன் சாரத்தைத் தனது படைப்பில் பொதிந்து / ஒளித்து வைக்கிறான். திறனாய்வாளன் அதனைத் தேடி எடுத்துத்தருகிறான். படைப்பாளி, விடுகதை போடுகிறான்; திறனாய்வாளன் அதனை விடுவிக்கிறான். படைப்பாளி, பல சமயங்களில் மவுனமாகி நிற்கிறான்; திறனாய்வாளன் அந்த மவுனங்களை உடைக்கிறான்; அந்த மவுனங்களுக்கு விளக்கம் தருகிறான்.

ஒரு படைப்பாளி, ஒரு திறனாய்வாளனுக்குள் மட்டும் முடிந்து விடுவதில்லை. பலர் வருகிறார்கள் ; பல விளக்கங்கள் தந்துபோகிறார்கள். அது போலவே, திறனாய்வு, ஒரு படைப்புக்குள் மட்டும் நின்றுவிடுவதில்லை. ஒரு நேரத்தில் ஒரு படைப்புப்பற்றிப் பேசுவதாக இருந்தாலும், திறனாய்வாளன் சுதந்திரமாக ‘வெளியே’ சென்று வருகிறான் ; பல செய்திகளைக் கொண்டு வருகிறான்.

2.1.3 திறனாய்வாளனும் தும்பியும் பாரதிதாசன்

பாரதிதாசன், தமிழ்மொழியை ஒரு பூக்காடு என்றும், தம்மை ஒருதும்பி என்றும் வருணிப்பார்:

தமிழே நீ ஒரு பூக்காடு

நானோர் தும்பி

தமிழ் மொழிவளமும் இலக்கிய வளமும் சிந்தனைவளமும் நிரம்பியது; பூங்கா அழகும் நேர்த்தியும் மணமும் நிரம்பியது; பலவிதமான சுவைகள். பல வண்ணங்கள். இதனால் தமிழ் ஒரு பூங்காவாக – பூக்காடாகத் தோன்றுகிறது. அதிலே திளைத்து மகிழும் ஒரு தும்பி – அந்த அனுபவத்தைப் பிறர்க்குச் சொல்லும் போது – ஒரு ரசிகனாக மட்டுமல்ல, ஒரு சிறந்த திறனாளியாக விளங்குகிறது.

திறனாய்வாளன்                                                                                தும்பி

தேடுவதும் தேர்வதும் திறனாய்வின் அடிப்படையான பண்பு. தேர்ந்ததை, அனுபவித்ததை அனுபவித்தவாறு விருப்பு வெறுப்பின்றிச் சொல்லுவது அவனுடைய கடமை. குறுந்தொகைப் பாடல் ஒன்றில் இறையனார் என்ற புலவரின் ஒரு வேண்டுகோள்:

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமஞ்செப்பாது கண்டது மொழிமோ………

இது திறனாய்வாளனைப் பார்த்துச் சொல்வது போன்ற தோற்றமுடையது. தேனை நாடிப் போவதும், நல்ல தேனை விரும்பித் தேர்வதும் தும்பியின் – தேனீயின் வாழ்க்கை. திறனாய்வாளனுக்கும் இதுவே தொழில் ; இதுவே வாழ்க்கை. ஆனால், அது, தான் தேர்ந்த தேனை உண்டுகாட்டியாக இருந்து பிறர்க்குச் சொல்ல வேண்டும். அதுவும், தனக்கு ஈடுபாடு இருக்கிறது என்பதற்காக மிகவும் விருப்பம் கொண்டு மிகையாகச் சொல்லக்கூடாது. மிகைவிருப்பம் (காமம்) இன்றி உள்ளதை உள்ளவாறு சொல்ல வேண்டும். தேனீ அல்லது தும்பியிடம் தெரிவிக்கின்ற இந்தச் சொல், திறனாய்வாளனை நோக்கிச் சொல்லுவதாக எடுத்துக் கொள்ளலாம்.

எல்லோராலும் திறனாய்வாளனாக முடியாது. திறனாய்வாளனுக்கென சில ஆற்றலும், அறிவும் வேண்டும். இத்தகைய திறன்கள் பெற்றோரே திறனாய்வாளனாக இயங்க இயலும்.

2.2.1 அறிவாற்றல் திறனாய்வாளன், அடிப்படையில் அறிவாற்றல் வாய்ந்தவன். அதாவது, முக்கியமாக அறிவாற்றல் மூலமாகவே இலக்கியத்தைக் கண்டு சொல்கிறான். அறிவாற்றல் என்பது என்ன? ஒருபொருளை உணர்ச்சிக்குட்பட்டு – அதாவது அகவய நிலையில் – பார்க்காமல், புறவய நிலையில் நின்று பார்ப்பது அறிவியலின் முதல் தேவையாகும். அதுபோல, காரண – காரியம் பற்றியதாகப் பார்வையும் பேச்சும் அமைதல் வேண்டும். மேலெழுந்த வாரியாக அபிப்பிராயங்களை உதிர்ப்பது திறனாய்வாகாது. ஒரு இலக்கியப் பனுவல் பற்றிப் பேசுகிறோம் என்றால், அதில் என்ன இருக்கிறது – ஏன் அவ்வாறு இருக்கிறது – அதனால் ஏற்பட்டுள்ள பண்புகள், மாற்றங்கள் என்ன என்பதைப் பற்றிய பார்வை அவசியம். உதாரணமாகப் பாரதியாரின் பாஞ்சாலிசபதம் எனும் குறுங்காவியம், பாரதமாதாவின் சபதமே என்று சொன்னால், அவ்வாறு சொல்லுதற்குரிய சூழல், பின்னணி, இவற்றோடு பாஞ்சாலிசபதம் எனும் பனுவலில் அதற்குரிய தடயங்கள், சொல் வடிவங்கள், பாத்திரவார்ப்புகள் எவ்வாறு இருக்கின்றன என்று கண்டறிந்து சொல்ல வேண்டும்.

அறிவியல் கண்ணோட்டத்தில், எடுபொருள் பற்றிய கருதுகோள், தகவுகள், தரவுகள் முதலியன தேவை. தருக்க ரீதியான கண்ணோட்டமும் சரியான வழிமுறையும் தேவை. பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலி எனும் பாத்திரம், சக்தியின் வடிவமாக விளங்குவது பற்றியும், அடிமைவிலங்கொடித்து எழுச்சி பெறுகிற சக்தி அதனுடைய அம்சமாக விளங்குவது பற்றியும் எடுத்துக் காட்டுகிறபோதுதான் அந்தக் குறுங்காவியத்தின் நோக்கத்தை நம்மால் சொல்ல முடியும்.

அறிவியல் சார்ந்த இந்த அறிவாற்றல், உண்மையைத் தேடுவது ஆகும். எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், யாருடையதாயிருந்தாலும் உண்மை உண்மைதான். அதனைத் திறனாய்வாளன் கண்டறிகிறான் – ஒரு தேடுதலோடு.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்று வள்ளுவர், (வெவ்வேறு இடங்களில்), அறிவின் தொழில் உண்மையைத் தேடுதல் என்று சொன்னதோடு, அதன் சரியான வழியையும் இணங்காட்டுவார். அதற்கேற்ப, உண்மைப் பொருளை, மெய்ப்பொருளை இலக்கியத்தில் தேடியறிந்து சொல்வது திறனாய்வாளனின் பண்பாகும் என்று அறியப்படுதல் வேண்டும்.

2.2.2 பரந்த அறிவும் பயிற்சியும் திறனாய்வாளனிடம் எதிர்பார்க்கத் தகுந்த முக்கியமான பண்பு, ஆழ்ந்து அகன்ற அறிவும் அத்தகைய அறிவின் விசாரணையில் தொடர்ந்து பயிலுகின்ற பயிற்சியும் ஆகும். இலக்கியத்தின் பரப்பு, ஆழமும் அகலும் உடையது என்பதாலும் அளவிலும் பண்பிலும் அதற்குப் பல பரிமாணங்கள் உண்டு என்பதாலும், திறனாய்வாளனுக்கு இத்தகைய பண்பு, மேலும் மேலும் தேவையாகின்றது.

இலக்கியம் மொழியாலானது. ஒரு செய்ந் நேர்த்தியுடனும், அழகான ஓர் ஒழுங்கமைவுடனும் இருப்பது. படைப்பாளியின் உள்ளத்தோடு நெஞ்சமாக இருப்பது. சமூகத்தோடு, வரலாற்றோடு, அரசியலோடு, பண்பாட்டுத் தளத்தோடு, பொருளாதார அடிக்கட்டுமானத்தோடு இலக்கியம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு கொண்டிருக்கிறது. இத்தகைய அறிவும், இந்தத் துறைகேளாடு ஒரு பயிற்சியும் திறனாய்வாளனுக்கு மிகவும் அவசிமயாகும். பல்துறையறிவும் பன்முகமான பயிற்சியும் இல்லையெனில், திறனாய்வு, வலிவும் பொலிவும் இல்லாது போகும். உண்மையை அதனால் தேடமுடியாது போய்விடும்.

பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற நாவல் பற்றித் திறனாய்வு செய்கிறவனுக்கு அது எந்தக் காலத்தைச் சேர்ந்தது, எந்தச் சூழலிலானது என்ற அறிவு இருந்தால்தான் அதனைத் தொட்டுத் தொடர முடியும் ; ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒர ராஜா………. ! என்பது போல அந்தக் காலத்துப் பாட்டிமார் கதைப் பாணியில் அது சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் காலத்தில் அப்படிக் கதை கூறுதலைப் பார்க்க முடியாது. அதுபோல ஞானாம்பாள் என்ற அந்த நாவலின் கதைத்தலைவியை இன்றைய மரபில் பார்க்கமுடியாது. அந்த நாவல், பெண்மையை ஒரு அதீதப்புனைவு நவிற்சியாகச் சித்திரிக்கிறது. இன்று அத்தகைய புனைவு சாத்தியமில்லை. ஆனால் பெண்ணியம் எழுச்சிபெற்ற இந்தக் காலத்தில் பெண்ணியக் கோட்பாடு பற்றியும் புனைவு நவிற்சி பற்றியும் போதிய பயிற்சி இருந்தால் (மட்டுமே), அந்த நாவலைச் சரியாகத் திறனாய்வு செய்ய முடியும். இது ஓர் உதாரணம்.

திறனாய்வாளனுக்குச் சில கோட்பாடுகளிலாவது நல்ல பயிற்சி இருத்தல் வேண்டும். உளவியல், அமைப்பியல் முதற்கொண்டு மார்க்கியம், சமூகவியல் முதலிய கோட்பாடுகள் பற்றிய அறிவு, மிகவும் அவசியமாகும். கோட்பாடுகள், திறனாய்வுக்கு ஒளிதருகின்றன ; இலக்கியப் பனுவல்களின் மீது ஒளி பாய்ச்சுகின்றன.

எந்த இலக்கியம் அல்லது எந்த ஆசிரியர் பற்றித் திறனாய்வு மேற்கொள்ளப்படுகிறதோ, அதுபற்றி மட்டுமல்லாது வேறுபிற ஒத்த இலக்கியங்கள் பற்றிய பயிற்சியும் பரந்த இலக்கிய அறிவும் திறனாய்வாளனுக்கு அவசியமாகும். கம்பனின் இராமகாதை பற்றி ஆராய்கிறபோது, வான்மீகி, ஹோமர், மில்டன் பற்றிய அறிவு இருந்தால், அந்த ஆராய்ச்சி எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

திறனாய்வு, பல நேரங்களில், பல சூழல்களில் பலர் செய்வது. ஒரு திறனாய்வாளனுக்கும், பிறதிறனாய்வாளர்கள் என்ன செய்திருக்கிறார்கள், எவ்வாறு ஒரு நூலை அணுகியிருக்கிறார்கள் என்ற அறிவும் தேவை. தன்னுடைய திறனாய்வு என்னவாகி, எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த அறிவு, பயன்படும்.

கற்றறிந்தார் கல்வி விளங்கும் என்பது வள்ளுவம். திறனாய்வாளனுக்கும் இது பொருந்தும்.

2.3 திறனாய்வாளன் பணி

விருப்பு வெறுப்பின்றிச் செயல்படுகின்ற நடுவுநிலையாளனாகவும், குறைநிறை பார்த்து தீர்ப்பு வழங்கக் கூடியவனாகவும் செயல்படவேண்டியது, திறனாய்வாளனின் பணிகளாகும்.

2.3.1 நடுவுநிலைமை காமஞ்செப்பாது கண்டது மொழிகின்றபோது, திறனாய்வாளனுடைய கருத்தில் – செயல்பாட்டில் – இயல்பாகவே நடுவுநிலைமை வந்துவிடுகிறது. அகவய உணர்வுகளுக்கு ஆட்படாமல், அறிவியலாளன் பாணியில், புறவயமாக நின்று அணுகுவது நடுவுநிலைமைக்கு இட்டுச் செல்லும்.

திறனாய்வாளனுக்கு விருப்பு வெறுப்புகள் காரணமாகப் பக்கச் சார்புகள் ஏற்படக்கூடும் ; காழ்ப்பும் கசப்பும் பார்வையை மோசமாக்கி விடக்கூடும். இத்தகைய பக்கச் சார்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் : 1. சமயச் சார்பு காரமணாக இருக்கலாம். 2. தற்செயலாகக் கிடைத்தவற்றின்மேல் அல்லது பழகியவற்றின்மேல் அல்லது நாலுபேர் திரும்பத்திரும்பச் சொன்னவற்றின்மேல் ஒரு தனித்த ஈடுபாடு இருக்கலாம். 3. சாதி, சொந்த ஊர் அல்லது வட்டாரம், நட்பு அல்லது இதுபோன்ற சில – இருக்கலாம். 4. அரசியல் கொள்கை அல்லது தனக்குரிய சில தனிப்பட்ட தேவைகள் இருக்கலாம். இத்தகைய சூழ்நிலைகள், பக்கச் சார்புக்கு இட்டுச் செல்லும்.

தமிழ்த் திறனாய்வாளர்கள் சிலரிடம் இந்தக் குறைபாடு உண்டு. முக்கியமாக மேற்கூறியவற்றுள் முதல் இரண்டும் பழைய இலக்கியங்களை ஆராய்வோரிடமும், பின்னைய இரண்டும், அண்மைக்கால / இக்கால இலக்கியங்களை ஆராய்வோரிடமும் அதிகம் காணப்படுகின்றன.

இதுபோன்ற குறைபாடுகள், திறனாய்வுக்குத் தடைக்கற்கள். நல்ல திறனாய்வாளனுடைய பண்பு, இத்தகைய குறைகளைத் தவிர்த்துவிட்டுத், துலாக்கோல் (தராசு) போல், ஆள்முகம் பார்க்காமல், பொருள்களின் இனபரிமானத்தை மட்டும் சொல்லுவது ஆகும்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி

ஒருபால் கோருதல் – ஒருபக்கச் சார்பு – திறனாய்வாளராகிய சான்றோர்க்கு அழகு அல்ல.

இருவேறு இலக்கியப் பனுவல்களை – நூல்களை – ஒப்பிட்டு ஆராய்வோர்க்கு, இத்தகைய சமன்நோக்கு, மிகவும் முக்கியமாகும்.

2.3.2 குணமும் குற்றமும் நாடி மனிதன்போல இலக்கியமும், குற்றம் குறை உடையது. நிறைகள் அதிகம் இருப்பின் மனிதன் மதிக்கப்படுகிறான்; போற்றப்படுகிறான். ஆனால், அறிவாராய்ச்சி உள்ளம் கொண்டவர்கள், நிறைகளைப் பாராட்டுவது போலவே, குறைகளையும் கண்டறிந்து சுட்டிக்காட்டி அறிவுரைதருவார்கள். இது சான்றோர் பணி. இலக்கியத் திறனாய்வாளனும், இலக்கியத்தில் அதன் எல்லாப் பண்புகளையும் பார்க்கிறான். நிறைகளை மட்டும், அல்லது குறிப்பிட்ட இலக்கியப் பனுவலில் தனக்கு மிகவும் பிடித்ததைமட்டும் எடுத்துக்காட்டி ஆகா, ஓகா என்று புகழ்ந்தால், அது போற்றியுரை யாகும்மயின்றித் திறனாய்வாகாது. போற்றியுரைகள், மேலோட்டமானவை; அவை இலக்கியத்தை என்றும் வளர்ப்பதில்லை. அதுபோலவே, குறைகளைக் கண்டுபிடிப்பதிலேயே கவனம் செலுத்தினால், திறனாய்வாளனுடைய எதிர்நிலைப் பண்பாகவே அது அமையும ; மேலும், இலக்கியம் வளராது; சேதம் அடையும்.

எனவே, திறனாய்வுக்கு எடுத்துக் கொண்ட ஒரு நூலினுடைய இரண்டு பக்கங்களையும் மயக்கமின்றிப் பார்க்க வேண்டும். எது எப்படி இருக்கிறது என்று காணவேண்டும். எது மிகையாக இருக்கிறது என்பதைக் கூறவேண்டும்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்

திறனாய்வாளனுடைய பணி, வாசகனுக்கு, இருப்பதை, உள்பாதை, உள்ளவாறு சொல்லுதல் ஆகும்.

நல்ல திறனாய்வாளனின் பண்பு, குணம் – குற்றம் என்ற இரண்டையும் பார்ப்பது. எது அதிகமோ, அதனைச் செய்வது. ஆனால் அதேபோது, மற்றதை, அதாவவது, குறைவாகி இருப்பதைச் சொல்லாமலே விட்டு விடுவது அல்ல. அப்படிச் செய்யாமல் விடுவது, பெரும் குறையாகும். ‘இடிப்பார் இல்லையெனில், கெடுப்பார் இல்லையெனினும் கெடும்’ புகழ்ந்து சொல் – போற்று – பாராட்டு ஆனால், நிதானமாக இருக்க வேண்டும். நிதானமற்ற புகழ்மொழி, படைப்பாளியைச் செருக்கும் தறுக்கும் உடையவனாக ஆக்கிக் கெடுத்துவிடும். அதேபோது, குறைகள் இருக்குமானால், சற்றுக் கணிசமாகவே இருந்தாலும் கூட – அவற்றை அடக்கமாகச் சொல்ல வேண்டும். ஓங்கும் போது பெரிதாகத் தோன்றினாலும் அது அதனை எறிகிறபோது – விழுகிறபோது – மெல்ல விழவேண்டும். ‘கடிதோக்கி மெல்ல எறிக’.

எனவே, நிறை கூறுக ; குறை காட்டுக ; அதன் மிகை சொல்லுக; வளரும் நெறி தருக. இவ்வாறு, திறனாளியாய்க் கடமையாற்றுக.

2.4 திறனாய்வாளனின் பங்கு

படைப்பாளி – திறனாளி – வாசகன் என்ற முக்கூட்டுறவில், திறனாளியின் இடம் அல்லது பங்கு அல்லது பணி, வாசகனைப் படைப்பாளியின் பக்கமாக – அதாவது படைப்பின் பக்கமாக மிக நெருங்கச் செய்தல் ஆகும். படைப்பாளியின் நோக்கம் வாசகனைச் சென்றடைவதுதான் ; அதுபோல், திறனாளியின் நோக்கமும் வாசகனைச் சென்றடைவதுதான். இந்த உறவில் திறனாளி, எந்த விதத்திலும் ஓர் இலக்கு அல்ல. இலக்கு – ஒன்றிப் படைப்பு ; அல்லது வாசகன். இந்த இரண்டிற்கும் இடையே, திறனாளி, வாசகன் பக்கம் சென்று, தான் பெற்ற இன்பம் சொல்லி, பெற்றதன் முறைமையும் வல்லமையும் சொல்லி, வழி சொல்லிப் படைப்பின் திறன் நோக்கி அனுப்புகிறான். அதாவது, வாசகனைப் படைப்பின் பக்கமாகத் திறனாளி ஆற்றுப்படுத்துகிறான் என்று பொருள்.

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்

சென்றபயன் எதிரச் (சொல்லுதல்)

ஆற்றுப்படையின் இலக்கணம் என்று தொல்காப்பியர் கூறுவார். திறனாய்வும், இதுபோல், ஆற்றுப்படுத்துகிற செயலைச் செய்கிறது.

2.4.1 வாசகனுக்கு உறுதுணை எனவே, திறனாய்வாளன், வாசகனுக்கு படைப்பைப் புரிந்து கொள்வதில் உறுதுணையாக அமைகிறான் எனலாம். வாசகனுக்கு வழி சொல்லி, வாசகனுக்கு ஏற்படலாகும் ஐயப்பாடுகளை யூகித்தறிந்து தீர்ப்பான்போல் விளக்கம் தந்து, தகவல்கள் தந்து, துணையாக நிற்கிறான், திறனாய்வாளன்.

புதுமைப்பித்தன்

வாசகனுக்கும் படைப்புக்கும் இடையில் உள்ள தலைமுறை இடைவெளிகளைக் – கால வேறுபாடுகளைக் – குறைக்கிறான். அதுபோல இடங்கள், தூரந்தொலைவுகள் என்ற நிலையில் ஏற்படுகிற இடைவெளிகளையும் குறைக்கிறான். உதாரணமாகப், புதுமைப்பித்தன், திருநெல்வேலி மாவட்டத்துக்காரர்; அவருடைய கதைகளில் அந்த வட்டாரத்துச் சொற்கள், மொழிநடை, பழக்கவழக்கங்கள் முதலியவை இடம் பெறுகின்றன. கோவை மாவட்டத்துக்காரர்களுக்கு அவற்றுள் சில புரியாமல் போகலாம் அல்லது கடினமாக இருக்கலாம். திறனாய்வாளன் வாசகனுக்கு வழி தந்து அந்த சிரமங்களைக் குறைக்கிறான்.

இவ்வாறு, திறனாய்வாளன், வாசகனுக்கு உகந்த உசாத்துணையாகவும் உற்ற நண்பனாகவும் உயர்ந்த வழிகாட்டியாகவும் விளங்குகிறான். சிறந்த வாசகர்கள் உருவாவதற்கும், ஒரு நல்ல இலக்கியச் சூழல் அமைவதற்கும், திறனாய்வாளனின் இத்தகைய பண்பு பெரிதும் உதவுகின்றது.

2.4.2 செவிலி மனப்பான்மை படைப்பாளி, தாய் என்றால், திறனாளி, படைப்பிற்கும் படைப்பாளிக்கும் செவிலி போன்றவன் ஆவான். குறிப்பிட்ட ஒரு படைப்பாளிக்கும் அந்தப் படைப்புக்கும் மட்டுமல்ல – அத்தகைய ஒரு குழுவுக்கும் பொதுவான ஓர் இலக்கியச் சூழலுக்கும் ஒரு செலிவிபோல் இருந்து பேணுகிற பண்பு, திறனாய்வாளனின் பண்பாகும். வாசகனுக்கு ஓர் உசாத்துணையாக இருப்பதுபோல, படைப்பாளிக்கும் – படைப்புக்கும் – ஒரு நல்ல படைப்புச் சூழலுக்கும் – செவிலியாக இருந்து நலம் பேணி வளர்த்தெடுக்கும் பணியைத் திறனாய்வு செய்கிறது.

குற்றங்குறைகளைச் சொல்லியும் உதாரணப்படுத்தியும் எழுதுகிற திறனாய்வு, எதிர்நிலையாகச் செயல்படக் கூடியது. இது, படைப்பாளியைச் சோர்வடையச் செய்கிறது. உற்சாகம் குன்றுகிறபோது படைப்பாளி, மேலும் மேலும் எழுதத்தயங்குகிறான். அண்மைக் காலங்களில், தமிழில் சிறு (இலக்கியப்) பத்திரிக்கைகள் பலவற்றில், குழுமனப்பான்மையுடன், காழ்ப்புணர்வுடன் படைப்பாளிகளை அணுகும் போக்கும் அதிகம் காணப்படுகிறது. தாக்குதல் விழுகிறபோது, வலுவான / அனுபவம் உள்ள படைப்பாளி ஓரளவு தப்பித்துக் கொள்கிறான் ; ஆனால் வளர்ந்து வரும் படைப்பாளிகள், தாக்குதல்களைத் தாங்கமுடியாமல் சோர்ந்து போகிறார்கள்.

2.4.3 தோழமை ஒரு நல்ல திறனாய்வாளனின் பண்பு, படைப்பாளியின் உற்றதோழனாய் இருப்பது ; படைப்புக்குத் தோழமை உணர்வைக் காட்டுவது.

திறனாய்வாளன், கவிதை, புனைகதை என்று எந்தவகை இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலும் அல்லது தனிப்பட்ட ஒரு ஆசிரியரை அல்லது ஒரு நூலை எடுத்துக்கொண்டாலும், அதன் நேர்த்தி, அதன் பொருள், அதன் கட்டமைப்பு, அதன் நோக்கம், அதுப் பிறவற்றோடு கொண்டுள்ள தொடர்பு முதலியவற்றோடு அதனுடைய சுவை, அதனுடைய தனித்தன்மை, குறிப்பிட்ட படைப்பாளியின் தனிப்பட்ட திறன் – ஆளுமை – முதலியவற்றையும் சொல்லுகிறான். அவ்வாறு சொல்லுகிறபோது காணப்படுகின்ற நியாயமான / நேர்மையான அணுகல்முறைகள், படைப்பாளியின் முன்நோக்கிய பார்வைகளுக்கு நலம் செய்கின்றன. இலக்கியப் பனுவல்களையே அத்தகைய திறனாய்வுகள் வாழவைக்கின்றன.

இறையனார் களவியல் மிகச்சுருக்கமான நூற்பாக்களைக் கொண்டது. ஆனால் அதற்கு எழுதப்பட்ட விளக்கமான உரைதான், அந்த நூற்பாக்களை வாழவைத்துள்ளது. நூற்பாக்களைத் தழுவி அவற்றை விளக்குகின்ற அதேபோது, ஒரு பொதுவான இலக்கியச் சூழலை அந்த உரை பேணி வளர்க்கிறது. களவியல் நூற்பாக்கள், தாய்மை உடையவை யென்றால், அதன் உரை, செவிலியாக இருந்து அதனைப் பேணிக் காக்கின்றதாக அமைகிறது எனலாம்.

2.5 திறனாய்வாளனின் தகுதிகள்

திறனாய்வாளன், படைப்பாளியைவிடவும், வாசகனைவிடவும் பொறுப்பாகச் செயல்பட வேண்டியவன் எனவே, அதற்கு அவனுக்குச் சில தகுதிகள் தேவை.

2.5.1 தெளிவும் திறனும் ஆங்கிலத் திறனாய்வாளர் டி.எஸ்.எலியட், திறனாய்வாளன், தன்னுடைய அணுகுமுறையிலும், நோக்கத்திலும் சரியான கண்ணோட்டம் கொண்டிருக்க வேண்டும் என்று அதேபோது, தான் சொல்லுவதில் குழப்பமற்ற நிலையும் தெளிவும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். சரியான பார்வை – சரியான நோக்கம் – தெளிவான நடையின் அடையாளங்கள்.

இன்று திறனாய்வில் புதிய கோட்பாடுகள் பல வந்திருக்கின்றன. அமைப்பியல், பின்னை அமைப்பியல், பின்னை நவீனத்துவம் முதலியன அவை. மேலும் அதற்கு முன்னால் மிகைநடப்பியல், குறியீட்டியல், உளவியல் முதலிய இசங்களும் அல்லது இலக்கியச் செல்நெறிகளும் வந்தன. இவையெல்லாம் மேலை நாட்டிலிருந்து வந்தவை. இவற்றைத் தமிழ்த் திறனாய்வாளர்கள் படித்தறிந்து தமிழுக்குக் கொண்டுவர முயலுகிறார்கள். தமிழ் இலக்கியங்கேளாடு பொருந்திவைத்துப் பார்க்க முயலுகிறார்கள். ஆனால் மேலை நாட்டு் மரபுகளைச் சரிவரப் புரிந்து கொள்ளாத போதும், இங்குள்ள சூழல்கள் அந்தக் கருத்துக்களுக்குச் சரிவரப் பொருந்தி நிற்காததாலும் இந்தத் திறனாய்வுகள் குழம்பி நிற்கின்றன. உதாரணமாக, அண்மைக்காலம் வரை ஆங்கில மரபாகிய image என்ற கலைச்சொல்லுக்கு உருவகம், படிமம், குறியீடு என்று மாறிமாறிப் பொருள் உரைக்கப்பட்டது. இதைவிடத் தெளிவற்ற நிலை, flash back (பின்னோக்கு உத்தி) மற்றும் stream of cousciousness (நனவோடை உத்தி) என்ற இரண்டையும் விளக்குவதில் இருந்தது – இன்னும் கூட இருக்கிறது. நனவோடை, முக்கியமாகப் பகுப்பியல் உளவியலாளராகிய சிக்மண்ட் ஃபிராய்டு விளக்கிய அடிமனம் பற்றிய கருத்து நிலையைச் சேர்ந்தது. அதனைப் புரிந்து கொள்ளாதபோது, நனவோடையைப் பற்றிய விளக்கமும் தெளிவற்றுப் போய்விடும். இதுபோலவே அமைப்பியல் பற்றித் தமிழில் எழுதிய பலர், அதனை விளக்குவதற்குப் பதிலாகக் குழப்பியிருக்கிறார்கள்.

சிக்மண்ட் ஃபிராய்டு

திறனாய்வின் அணுகுமுறையிலும் அதனைச் சொல்லுவதிலும் தெளிவு இல்லாதபோது, அதற்கு ஆட்படுகிற படைப்பிலக்கியமும் பெரும் குழப்பத்துக்காளாகிறது. பின்னை நவீனத்துவம் (Post Modernism) என்ற கொள்கையை அடியொற்றி எழுதுவதாக முனைந்த சில தமிழ் நாவல்கள் தெளிவற்றுப் போனதைச் சமீபகாலத்தில் தமிழில் பார்க்கமுடிகிறது.

எனவே, திறனாய்வாளன், தன்னுடைய கருத்துகளைச் சொல்லுவதில் தெளிவும் திறனும் உடையவனாக இருக்க வேண்டும். அப்படியானால் தான் அவனுடைய கருத்துகள் வாசகரையடைய முடியும். பரவலான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். திறனாய்வு தன்னுடைய பாணியைச் செய்ய முடியும்.

2.5.2 சமூகப் பொறுப்பு ஒரு படைப்பாளி, தனிமனிதனாக இருந்து எழுதினாலும், இந்தச் சமூகத்தில் தோன்றிய ஒரு சமூக மனிதன், அவன். அவனுடைய எழுத்துகள் சமூகத்தை நோக்கிப் போகின்றன. அந்தச் சமூகத்தில் ஏதேனும் ஒரு சலனத்தை அல்லது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே படைப்பாளிக்கு ஒரு சமூகப்பொறுப்பு இருக்கிறது. அதுபோலவேதான், திறனாய்வுக்கும் இருக்கிறது.

திறனாய்வு, குறிப்பிட்ட ஓர் இலக்கியத்தைத் தளமாகக் கொண்டு செய்யப்படுகிறதென்றாலும், உண்மையில், இலக்கியம் சார்ந்த ஒரு சமூகத்தளத்தை அது தனது தளமாகக் கொண்டு விளக்குகிறது. இலக்கிய அழகு, செய்ந்நேர்த்தி மட்டுமல்லாமல், இலக்கியம் கூறுகின்ற மனித வாழ்க்கையனுபவங்களையும் மனித சமூக மதிப்புகள் அல்லது விழுமியங்களையும் திறனாய்வு ஆராய்ந்து சொல்லுவதால் அதற்கு சமூக உறவுகளும் தாக்கங்களும் இயல்பாகவே இருக்கின்றன. திறனாய்வு வாசகரை நோக்கிச் செல்கிறது. படிக்கிற பலரைத் திறனாய்வு சிந்திக்க வைக்கிறது; அவர்களிடம் தாக்கம் ஏற்படுத்துகிறது.

திறனாய்வு இலக்கியத்துக்குள் மட்டும் நிற்பதில்லை. பல சமூகவியல் கோட்பாடுகளையும், பல அரசியல் – பண்பாட்டுக் கோட்பாடுகளையும் அது கொண்டிருக்கிறது ; அவை பற்றியெல்லாம் பேசுகின்றது. எனவே சமூக அக்கறை இருக்கிறது என்று பொருளாகிறது. அப்படியானால் அதற்குரிய பொறுப்பும் அதற்கு இருக்கிறது. இன்று, உலகின் பல நாடுகளில் திறனாய்வாளர்கள், புகழ்பெற்ற சமூக சிந்தனையாளர்களாகச், சமூக நிகழ்வுகளில் தாக்கம் ஏற்படுத்திவருகின்றனர். உதாரணமாகச் சிலபெயர்கள், டெல்லி ஈகிள்டன், டெர்ரிடா, போதிலார், ஃபூகோ, உம்பர்ட்டோ ஈக்கோ, எட்வர்ட்செய்த், ஃபேனான், காயத்ரி ஸ்பைவக் முதலியவர்கள் (எல்லோரும் அண்மைக்காலத்தவர்கள்).

சமூகப்பொறுப்பு என்பது, திறனாய்வைப் பொறுத்த அளவில், முதலில் நல்லதொரு இலக்கியச் சூழலையேற்படுத்துவதில் கவனம் செலுத்துவது ஆகும். பிறகு, மொழி மற்றும் அரசியல் – சமூக – பண்பாட்டுத் தளத்தில் முறையான சரியான – சிந்தனைப் பரப்பைக் கட்டமைப்பது; புதியபுதிய கோட்பாடுகள் அறிமுகமாகும்போது அவற்றைச் சரியாகப் புரிந்துகொண்டு, சமூகவிழிப்புணர்வுடன், தேவையானவற்றைத் தெளிவாகவும் திடமாகவும் அறிமுகப்படுத்துவது; சமூகத்தில் நடைபெறும் சீரழிவுகளை எதிர்நின்று விமரிசிப்பது; மொழியை வளப்படுத்துவது. இவ்வாறு திறனாய்வாளனுக்குச் சமூகப் பொறுப்புகள் பல இருக்கின்றன. ஒரு இலக்கியவாதி என்ற முறையிலும் ஒரு சிந்தனையாளன் என்ற முறையிலும் அவனுக்கு இந்தக்கடமைகள் காத்திருக்கின்றன.

2.6 தொகுப்புரை

திறனாய்வாளனுடைய பண்புகளையும் பணிகளையும் பார்த்தோம். அதன்வழித், திறனாய்வின் பண்புகள் வெளிப்படுகின்றன. திறனாய்வாளனின் நோக்கமும் குறிக்கோளும் – உண்மையைத் தேடுவதாகும். நல்ல அறிவும் பயிற்சியும் கொண்டு, புறவயமான பார்வையோடு, இலக்கியத்தை அவன் அணுகவேண்டும். சரியானவற்றைத் தேர்வதிலும் தேர்வதைச் சொல்லுவதிலும், காழ்ப்பு இருக்கக் கூடாது; பக்கச் சார்பு இருக்கக்கூடாது. நடுவுநிலைமை வேண்டும். குணம் நாடிக் குற்றமும் நாடவேண்டும். படைப்புக்குத் தோழனாகவும் உசாத்துணையாகவும் இருக்க வேண்டும். நல்லதொரு இலக்கியச்சூழலை வளர்ப்பவனாக இருக்க வேண்டும். புதிய கோட்பாடுகேளா வேறு எதுவோ ஆயினும், புரிந்துகொள்வதிலும், சொல்லுவதிலும் தெளிவு இருக்க வேண்டும். தெளிவு இருக்கும்போதுதான் வாசகரை அது சென்று அடைய முடியும். சமூகப் பொறுப்பு என்பது படைப்பாளிக்கு மட்டுமல்ல, திறனாய்வாளனுக்கும் இருக்கிறது. ஏனென்றால் திறனாய்வாளன், ஒரு சிந்தனையாளனாகவும் இருக்கிறான் – இருக்கவேண்டும்.

பாடம் 3

இலக்கியமும் வாழ்க்கையும்

3.0 பாடமுன்னுரை

இலக்கியமும் திறனாய்வும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை என்று முன்னர்க் கூறியிருக்கிறோம். இலக்கியம் இன்றேல் திறனாய்வு இல்லை; இலக்கியத்திற்காகத் தானே திறனாய்வு! எனவே, இந்த இலக்கியம் எத்தகையது, இதன் அடிப்படைகள் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வாறு அறிந்துகொண்டு, திறனாய்வு அதன்மேல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பின்னால் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இலக்கியத்தின் அடிப்படைப் பண்பு, அது வாழ்க்கையோடு இணைந்து கிடக்கிறது என்பதுதான். எனவே, இலக்கியமும் வாழ்க்கையும் என்பது பற்றி இந்தப் பாடத்தில் பார்க்கலாம்.

3.1 இலக்கியமும் வாழ்க்கையும்

திறனாய்வு, இலக்கியத்தின் மேல் அக்கறை கொள்கிறது என்றால், முக்கியக் காரணம் இலக்கியம் என்ன சொல்கிறது; அதனை எப்படிச் சொல்கிறது என்று அறிய வேண்டும்; அவ்வாறு அறிந்ததைச் சொல்ல வேண்டும் என்பது தான்.

நாம் அறிந்த வாழ்க்கையோடு அது தொடர்பு கொண்டிருக்கிறது. நாம் அறிந்த வாழ்க்கையை அது பேசுகிறது. நம்மை அதுபற்றிச் சிந்திக்க வைக்கிறது. அவ்வாறிருக்கும் போது, அது செவ்வையாக இருக்க வேண்டும் என்று திறனாய்வு விரும்புகிறது. செவ்வையாக இருக்கிறதா என்று பார்த்து அதுபற்றி விளக்க வேண்டியிருக்கிறது. திறனாய்வின் கடமை இதுவாதலால், இலக்கியம் வாழ்க்கையோடு எவ்வாறு ஒன்றிணைந்து அதுபற்றிப் பேசுகிறது என்று ஆராய்வதில் திறனாய்வு விருப்பம் கொண்டிருக்கிறது.

3.1.1 திறனாய்வாளனும் வாழ்க்கையும் திறனாய்வு, நேரடியாக வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதில்லை. ஆனால் இலக்கியத்தின் வழியாக அதனை ஆய்வு செய்து மதிப்பிடுவதன் வழியாக வாழ்க்கையைப் பற்றியும் அதன் சாரங்கள் மற்றும் அறநெறிகள் பற்றியும் திறனாய்வு பேசுகின்றது.

இலக்கியம் என்பது வாழ்க்கையைத் தட்டையாக, ஒரு நேர்முக வர்ணனையாகச் சொல்வதல்ல. அதற்கென ஒரு பார்வை, ஒரு நோக்கு, ஒரு வரையறை, உத்தி முதலிய எல்லாம் இருக்கின்றன. இவற்றை வெளிக்கொணர வேண்டும். இவற்றின் வன்மை, மென்மைகளைப் புலப்படுத்த வேண்டும்.

வாழ்க்கை பற்றி இலக்கியப் படைப்பாளிக்கு எவ்வாறு பட்டறிவும் (அனுபவமும்), நோக்கமும், சார்பு நிலையும், விருப்பமும் இருக்கின்றனவோ, அதுபோல் திறனாய்வாளனுக்கும் உண்டு. மேலும், வாசகனுக்கு அத்தகைய வாழ்க்கை எவ்வாறு போய்ச் சேரவேண்டும் என்ற ஒரு பார்வையும் இலட்சியமும் உண்டு.

எனவே திறனாய்வாளன், இலக்கியத்தைப் பார்க்கிறான். அது சொல்லும் வாழ்க்கையைப் பார்க்கிறான்; ஏன், எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கிறான். வாசகனுக்கு இவை பற்றி விளக்குகிறான். திறனாய்வுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு இந்த முனையில் அல்லது இந்தக் கோணத்தில் இருக்கிறது.

3.1.2 படைப்பாளியும் வாழ்க்கையும் இலக்கியம் படைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள படைப்பாளிக்கு அதற்குரிய உந்துதல்களாகச் சில ஆர்வநிலைகள் இருக்கின்றன. அவை,

(அ) தன்னுடைய வாழ்க்கையனுபவம், வித்தியாசமானது, விசேடமானது, என்று அவன்(ள்) கருதுகிறான்(ள்).

(ஆ) பிறருடைய வாழ்க்கைப் பற்றி, அனுபவங்கள் பற்றி அறிந்து கொள்ள முயலுகிறான், கேட்டறிதல், உற்றறிதல், உய்த்தறிதல் என்பவற்றின் மூலமாக.

(இ) தன்னுடைய வாழ்க்கை பற்றியும் பிறருடைய வாழ்க்கை பற்றியும் அபிப்பிராயங்களையும் கருத்துகளையும் உருவாக்கிக் கொள்ள ஆர்வம் கொள்கிறான்.

(ஈ) இவற்றை வெளிப்படுத்திச் சொல்ல ஆர்வம் கொள்கிறான்; அல்லது இவற்றிற்கு உள் அர்த்தங்கள் கண்டு அவற்றைச் சொல்ல ஆர்வம் கொள்கிறான்; அல்லது மறைத்து, வேறு ‘பதிலி’களை முன்னிறுத்த ஆர்வம் கொள்கிறான்.

(உ) எவ்வாறாயினும், இவற்றைக் கலையழகுடன் பிறர் மனங்கொள்ளுமாறு சொல்ல ஆர்வம் கொண்டிருக்கிறான்.

3.1.3 இலக்கியத்தின் பாடுபொருளும் வாழ்க்கையும் இலக்கியம், வாழ்க்கை பற்றியதாகத்தான் அமைய வேண்டும்; அதன் பாடுபொருள் (Theme) வாழ்க்கையே என்று பொதுவாகப் பலரும் கூறினாலும், தமிழ் மரபு இதனை வலியுறுத்தச் சொல்கிறது. தொல்காப்பியம், எழுத்து, சொல், தொடர் எனும் இவை பற்றி மட்டுமல்லாமல், இலக்கியம் பற்றியும் பேசுகிறது என்பதை நாம் அறிவோம். பொருள் அதிகாரம் என்ற மூன்றாவது அதிகாரம் கவிதைக் கொள்கை (Poetics) பற்றியது. இதில், அந்நூல் முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன பற்றிப் பேசுகிறது. இந்த மூன்றும் கவிதையில் இடம் பெறுவன. இவற்றுள் முதலும் கருவும் இயற்கையையும் இயற்கையோடு ஒட்டியவற்றையும் பேசுகின்றன. உரிப் பொருள் என்பது காதல் அல்லது அகவாழ்க்கை பற்றியது. இதுவே இன்றியமையாதது. முதலும் கருவும் இல்லாவிடினும் உரிப்பொருள் அமைந்திருக்க வேண்டும்.

தொல்காப்பியம் கூறும் அகம், புறம் எனும் இரண்டும் இலக்கியத்தின் பாடுபொருள்களாகும். இவ்றைப் பற்றியே அந்நூல் விளக்கமாகப் பேசுகிறது. அகம், புறம் எனும் இந்த இரண்டினை மையமாகக் கொண்டதுதான், அன்றைய இலக்கியக் கொள்கை. எனவே, இலக்கியம் வாழ்க்கையைச் சித்தரிப்பதையே நோக்கமாகவும் வழிமுறையாகவும் கொண்டது என்பது அறியப் பெறுகின்றது.

3.1.4 இலக்கியமும் வாழ்க்கையின் பரிமாணங்களும் வாழ்க்கை, ஒற்றைப் புள்ளியில் அமைந்ததல்ல. ஒற்றைக் கோடாக அமைந்ததல்ல. ஒரே பாதையில் செல்வதல்ல; ஒரே சீராகவும் போவதல்ல. பல கோலங்கள், பல போக்குகள், பல பரிமாணங்கள் (Dimension) உண்டு. வாழ்க்கை விரிவானது; ஆழமானது தொடர்ச்சியுடையது. வாழ்க்கை இவ்வாறு பன்முக மாகவும் பல தோற்றங்கள் கொண்டதாகவும் விளங்குவதால், இலக்கியம் அத்தகைய வாழ்க்கையைச் சொல்லுவது எளிதாகவும் இருக்கிறது; ஏற்புடையதாகவும் இருக்கிறது.

வாழ்க்கை என்பது நிகழ்ச்சிகளாலும் நினைவுகளாலும் உணர்வுகளாலும் ஆனது. இலக்கியம், வாழ்க்கையை ‘அப்படியே’ சித்தரிப்பதில்லை. வாழ்க்கையை அனுபவமாக்கித் தன்வயப்படுத்திக் கொள்வது, இலக்கியத்தின் வழிமுறை. தன்னுடைய வாழ்க்கை அனுபவம் மட்டுமல்லாமல் பிறருடைய வாழ்க்கையிலிருந்து பெறப்படுபவற்றைத் தன்வயப்படுத்தித் தன் அனுபவமாக ஆக்கிக் கொள்வதும், இலக்கியத்திற்குரிய வாழ்க்கையனுபவமாகும். எல்லோரும் எல்லா அனுபவங்களையும் பெறமுடியும் என்பதோ தன்னுடைய அனுபவங்களையெல்லாம் அல்லது அவற்றை மட்டுமே எழுத முடியும் என்பதோ சாத்தியமல்ல. எனவே, பிறருடையவற்றைத் தன்னுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். கூடுவிட்டுக் கூடு பாய்வது படைப்பாளியின் பண்பு.

3.2 இலக்கியமும் வாழ்க்கையின் உறவுகளும்

இலக்கியம் வாழ்க்கையும் நெருக்கம் கொண்டவை. ஆனால் இந்த ஒழுக்கம் எத்தகையது; உறவுகள் எத்தகையன என்று இனிமேல் பார்ப்போம்.

3.2.1 பதிவும் பிரதிபலிப்பும் இலக்கியம், வாழ்க்கையைப் பதிவு செய்கிறது என்று ஒரு விவாதம். ‘மிகச் சிறந்த உள்ளங்களின் மிகச் சிறந்த பதிவேடுதான் உயர்ந்த இலக்கியம்’ என்று ஒரு கருத்து உள்ளது. பதிவு என்றால், வரலாற்றுப் பதிவு போன்றது என்றாகிவிடும். உண்மைகளை, தகவல்களை அப்படியே பதிவு செய்வது இலக்கியத்தில் சாத்தியமில்லை என்று இது மறுதலிக்கப்படுகிறது. இலக்கியத்தில், படைப்பாளியின் மனநிலைக்கும் உத்திமுறைக்கும் ஏற்ப, வாழ்க்கையின் ஒரு பகுதி பதிவாகியிருக்கிறது என்று சொல்லலாம்.

இலக்கியம், வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்பது ஒரு வாதம். ஆனால், பிரதிபலிப்பது என்றால் அப்படியே நேர்முகமாக (கண்ணாடியைப் போல) பிரதிபலிப்பது அல்ல. இலக்கியம், வாழ்க்கை எனும் இந்த இரண்டிற்கும் நடுவே படைப்பாளி இருக்கிறான். படைப்புப் பற்றிய கோட்பாடு இருக்கிறது. வாழ்க்கையிலிருந்து வரும் ஒளிக்கற்றை, படைப்பாளி படைப்புக் கோட்பாடு எனும் ஆடி (Lens) வழியாக வந்து இலக்கியப் பொருளாகிறது. நேரடியான புறவய உண்மை (external reality) எனும் வாழ்க்கை, படைப்பாளி படைப்புக்கோட்பாடு எனும் அகவய நிலைபெற்றுக் கலைவய உண்மையாக (artistic reality) இலக்கியத்தில் மாறுகிறது. இவ்வாறு தான் வாழ்க்கை, இலக்கியத்தில் பதிவாகிறது; பிரதிபலிக்கிறது என்று கொள்ள வேண்டும்.

3.2.2 விளக்கமும் விமரிசனமும் ஆங்கில நாட்டின் புகழ்பெற்ற இலக்கியவாதி மாத்யூ ஆர்னால்ட், ‘இலக்கியம் என்பது வாழ்க்கை விமரிசனமே’ (Literature is the criticism of life) என்று கூறிச் சென்றார். சிலர், இலக்கியம் என்பது வாழ்க்கையைப் புலப்படுத்துவது (Expression of life) என்றனர்; இன்னும் சிலர் இலக்கியம் வாழ்க்கையை விளக்குவது (Interpretation of life) என்றனர்.

வாழ்க்கையை அப்படியே சித்தரிப்பது இலக்கியமல்ல; அதன் அனுபவங்களையும் அர்த்தங்களையும் சொல்லுவதுதான் இலக்கியம். எனவே வாழ்க்கையை வெறுமனே,வருணிக்காமல் அதன் பல்வேறு கோணங்களையும் உள்மடிப்புகளையும், காரண காரியங்கேளாடு உணர்ந்து விளக்க வேண்டும். உதாரணமாகத் தி.ஞானசேகரனின் குருதிமலை என்ற புதினம். இது, இலங்கைத் தேயிலைத் தோட்ட (இந்தியவமிசா வழி) தொழிலாளர்களின் வாழ்க்கை அவலங்களை நடப்பியலாக விளக்குகிறது. அவர்கள் படுகிற பாடுகளின் பல தன்மைகளையும் அவற்றிற்குக் காரணமான சமுதாய பொருளாதாரப் பின்புலங்களையும் முரண்பாடுகளையும் விளக்கிச் செல்கிறது.

ஆ.வேலுப்பிள்ளையின் இனிப் படமாட்டேன் என்ற புதினம் – இது இலங்கையிலுள்ள இந்திய வமிசா வழித் தமிழர்களின் வாழ்க்கையையும், இந்தியாவுக்குத் திரும்பிவிட வேண்டும் என்ற ஊசலாட்ட எண்ணங்களையும், இந்தியாவுக்கு வந்து மீண்டும் குடியேறுவதில் ஏற்படும் அவலங்களையும் விமரிசனம் செய்கிறது. வாழ்க்கை பற்றிய இந்த விமரிசனப் பார்வைதான் ‘இனிப் படமாட்டேன்’ என்ற ஒரு முடிவுக்கு வரச் செய்கிறது.

3.3 இலக்கியமும் வாழ்க்கையின் பரப்பும்

இலக்கியம் சித்தரிக்கின்ற வாழ்க்கை எத்தகைய பரப்புக் கொண்டது என்று இப்போது பார்ப்போம். காலம், இடம், பண்பாடு என்ற பல தளங்களில் இந்தப் பரப்பு அமைந்துள்ளது.

3.3.1 இலக்கியமும் காலப் பரப்பும் இலக்கியம் சொல்லுகிற வாழ்க்கை, குறிப்பிட்ட காலம், இடம் ஆகிய அச்சுக்களை அல்லது தளங்களைக் கொண்டது. வாழ்க்கைச் சித்திரம், ஒரு கணநேரத்துச் சித்திரமாக இருந்தாலும், அந்தக் கணநேரம் என்பது கடந்த காலத்தின் ஒரு தொடர்ச்சி அல்லது ஒரு பகுதியேயாகும்; அதுபோல வருங் காலத்தின் ஒரு முன்கூறு அல்லது ஒரு பகுதியேயாகும். திறனாய்வாளன், இலக்கியம் சொல்லியிருக்கிற வாழ்க்கையை இவ்வாறுதான் ஒரு பரந்த தளத்தில் எடுத்துக் கொள்கிறான்.

ஒளவையார்

உதாரணமாக, ஒளவையார், அதியமானைப் பற்றிப் பாடிய புறநானூற்றுப் பாடல்களைப் பற்றி எண்ணிப் பார்க்கலாம். அதியமானுடைய வாழ்க்கை, கொடைத்திறன், ஒளவையாரிடம் அவன் காட்டிய பரிவு முதலியவை, குறிப்பிட்ட ஒரு காலத்தினைச் சேர்ந்தவையென்றாலும், அந்தப் பாடல்கள் மூலமாகத் தெரியவரும் தமிழர்களின் கொடை உள்ளம், புலவர்கள் மேல்காட்டி வந்த அன்பு உள்ளம் முதலியவை தொன்றுதொட்டு வந்தவை; அதுபோல பின்னரும் இந்த உணர்வுகள், காலம்தோறும் பாராட்டப்பட்டு வருபவை. இதனையே திறனாய்வு கண்டறிந்து விளக்குகிறது; காலம் எனும் உரைகல்லில் வாழ்க்கையை உராய்ந்து பார்த்துப் புலப்படுத்துகிறது.

3.3.2 வாழ்க்கையும் இடமும் கி. ராஜநாராயணன்                      தி.ஜானகிராமன்

எந்த வாழ்க்கையும் குறிப்பிட்ட ஓர் இடத்தில் அல்லது தொடர்ந்து பல இடங்களில் காலூன்றித்தான் இயங்குகிறது. எனவே அந்த இடம் அல்லது இடங்களின் பிரத்தியேகமான பண்புகள், அந்த வாழ்க்கையில் பிணைந்து கிடக்கின்றன. கி.ராஜநாராயணன் என்ற எழுத்தாளரின் புனைகதைகளில் கரிசல்காடு, களமாக அமைகிறது. ஆர்.ஷண்முகசுந்தரத்தின் புதினங்களில் கொங்குமண்டலம் களமாக அமைகிறது; தி.ஜானகிராமன் புதினங்களில் தஞ்சைத் தரணி களமாக அமைகிறது. எனவே இத்தகைய புனைகதைகளில், அந்த அந்த வட்டாரங்கள், இடங்கள் ஆகியவற்றின் சிறப்பியலான அம்சங்கேளாடு கூடிய வாழ்க்கையைக் காணமுடியும்.

ஆனால், வாழ்க்கை இவ்வாறு, குறிப்பிட்ட ஓர் இடத்தில் காலூன்றி யிருந்தாலும், எந்த இடமும் தனியாக இருப்பதில்லை. மாநிலம், நாடு என்ற பரந்த எல்லைகளின் ஒரு பகுதியாகவே ‘இடம்’ அமைந்திருக்கிறது. மேலும், இலக்கியம், அதன் பொதுமைத் தன்மை (Universality) மற்றும் கலைநேர்த்தி காரணமாக, இடத்தைப் பெரும் பரப்பின் ஒரு பண்பாக ஓர் அம்சமாக ஆக்கிவிடுகிறது. தமிழகத்து சிறிய கிராமத்து வாழ்க்கை இந்திய வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகிவிடுகிறது.

3.3.3 வாழ்க்கையும் பண்பாடும் பொருளாதாரம், அரசியல், சமூகம், பண்பாடு எனும் இவற்றைப் பொருளாகக் கொண்டது வாழ்க்கை. இலக்கியத்தின் உள்ளடக்கமாக இருக்கும் வாழ்க்கையில் இவை உள்ளார்த்தமாக இருக்கின்றன.

இலக்கியத்தை ஆராய்ந்து வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பகுத்து விளக்கும் பிரெஞ்சு நாட்டு அறிஞர் தெயின் (

.A.Taine), அத்தகைய இலக்கியத்தில் மூன்று பரிமாணங்கள் (Dimensions) இருப்பதாக விவரிக்கிறார்.

(அ) இனம் (Race): மக்களின், பாரம்பரியமாக வரும் / வெளிப்படும் தொகுப்பு.

(ஆ) பண்பாட்டுச் சூழல் (Milieu): மனிதன் வாழ்நிலையில், இயற்கை முதற்கொண்டு, சமூக நிலைகள், அரசியல் நிறுவனங்கள் வரை பல சூழல்களின் ஓர் ஒட்டுமொத்தநிலை.

(இ) காலத்தின் மனம் (moment): குறிப்பிட்ட இலக்கியம் தோன்றிய, மற்றும் அது சொல்லும் வாழ்க்குப் பின்புலமான காலத்தின், தேசத்தின் பொதுவான மனமும் உணர்வும்.

எல்லாருடைய வாழ்க்கையிலும், வாழ்க்கையின் சிறு சிறு கூறுகளிலும், இந்த மூன்று பரிமாணங்களும் இருக்கின்றன என்று கூறுகிறார் தெயின். இலக்கியத்தில் காணக்கூடிய இந்த நிலைகளை திறனாய்வாளன் பகுத்து ஆராய்ந்து கூறுகிறான்.

மேலும், இலக்கியம் கூறும் பல்வேறுபட்ட வாழ்க்கையின் மூலம், அவ்வக்கால சமூக பண்பாடுகளை இனம் கண்டறிந்து, வகுத்தும் தொகுத்தும் திறனாய்வாளன் கூறலாம். இந்த முயற்சிகளில் பல தமிழ் அறிஞர்கள் ஈடுபட்டுத் தமிழ்ப்பண்பாடு பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள்.

3.4 வாழ்க்கைச் சித்திரங்கள்

இலக்கியம், ஏற்கனவே முன்னர் நாம் சொன்னது போல வாழ்க்கையின் நேர்முக வருணனை அல்ல. அது, வாழ்க்கையைக் கலையுருவில் தருகிறது. சிலவற்றை விடுகிறது; சிலவற்றைச் சேர்க்கிறது; சிலவற்றை மங்கலாக்குகிறது; சிலவற்றைப் பூதாகரப்படுத்துகிறது. இத்தன்மைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

3.4.1 மறுதலிப்பும் மாற்றும் சு. சமுத்திரம்

வெளியுலகு வாழ்க்கை படைப்பாளியின் மனத்தில் அனுபவமாகி, அவனுடைய நோக்கின் வழியாக வெளிப்படு்கிறது. படைப்பாளி, வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது அம்சத்தை வெறுக்கலாம்; மறுக்கலாம். இத்தகைய மறுதலிப்பு, நேரடியாக இடம் பெறுவதில்லை; மறைமுகமாகவோ, புனைகதை உத்திகளுடன் வித்தியாசமான கோணங்களுடனோ இவை வருகின்றன. உதாரணமாக, சு.சமுத்திரம் எழுதிய ‘பாலைப் புறாக்கள்’ எனும் புதினம். முழுக்கவும் எய்ட்ஸ் நோயாளிகளை மனிதாபிமானத்துடன் அணுகவேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு புதினம். அதற்கு ஏற்ற மாதிரியாகப் பல நிலைகளிலிருந்து பல கதை மாந்தர்கள் உருவாக்கப்படுகின்றனர். தற்செயலாக ஒரு விபத்துப் போல எய்ட்ஸ் நோய்க்கு ஆளானவன், அவனுடைய மனைவி, டாக்டர், சமூக சேவகி, அவனுக்கு அனுசரணையாக உள்ள இன்னொரு எய்ட்ஸ் நோயாளி என்று இந்தப் பாத்திரங்கள் இடம் பெறுகின்றனர். வாழ்க்கையின் பெரும் அவலமாகிய இந்த நோய் மறுதலிக்கப்பட்டுச் சித்திரமாகியுள்ளது. இதுபோல் பல புதினங்கள், வாழ்க்கையின் எதிர்நிலைகளை மறுதலிக்கின்றன.

இவ்வாறு, மறுதலிக்கிறபோது, இதற்கு மாற்று (Alternative) கூறுவது உண்டு; தீர்வு போன்று சில கருத்து நிலைகளைக் கூறுவதும் உண்டு; இரண்டுமல்லாமல், மறுதலிக்கிற சித்திரமாகவே முடித்து விடுவதும் உண்டு. படைப்பாளிக்கு இதில் சுதந்திரம் உண்டெனினும், திறனாய்வாளன், இத்தகைய சித்திரங்களை, மிக ஆழமாகக் கண்டறிந்து குறைகளெனவும், நிறைகளை நிறைகளெனவும் சொல்ல வேண்டியவனாகிறான்.

மேலும், வாழ்க்கையென்பது ஒரே சீரானது அல்ல. பல பிரச்சனைகள் பல உருவத்தில் உண்டு. கதைமாந்தர்களையும் அவர்தம் வாழ்க்கையையும் சித்தரிக்கும்போது பிரச்சனைகள் பற்றியோ அவற்றை எதிர்கொள்வது பற்றியோ சித்தரிக்காமல், மிகையான கற்பனைகள், அலங்காரமான சொற்கோலங்கள் முதலியவற்றால் திருப்தியடைந்து சித்திரங்களை முடித்துவிடுவது உண்டு. இத்தகைய மனப்போக்கு, நழுவல் அல்லது தப்பித்துச் செல்லுதல் (Escapes) என்று சொல்லப்படுகிறது. இலக்கியத்தில் இது, பலமுனைகளில் இருக்கின்றன. திறனாய்வுக்கு, இதையறிந்து சொல்வதில் அக்கறையுண்டு.

3.4.2 எதிர்கால நோக்கும் வாழ்க்கைச் சித்திரமும் “பாருக்குள்ளே சமத்தன்மை – தொடர்

பற்றும் சகோரத் தன்மை

யாருக்கும் தீமை செய்யாது – புவி

யெங்கும் விடுதலை செய்யும்”

“பொய்க்கும் கலியை நான் கொன்று

பூலோ கத்தார் கண்முன்னே

மெய்க்கும் கிருத யுகத்தினையே

கொணர்வேன் தெய்வ விதியிஃதே”

“எல்லோரும் அமரநிலை யெய்தும் நன்முறையை

இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்

இந்தியா உலகிற்களிக்கும்”

இவ்வாறு மகாகவி பாரதியார், இந்தியா சுதந்திரமடைவதற்குக் கால் நூற்றாண்டு முந்தியே எழுதினார். இதில், பாரதியின் வருங்காலத்துவம் இருக்கிறது. நிகழ்காலத்தில் காலூன்றினாலும் வருங்காலம் பற்றிய ஒரு தொலைநோக்குப் பார்வை, இலக்கியத்தில் சாத்தியம். எழுத்தாளர்கள் பலர், வருங்கால உலகம் பற்றிக் கனவு கண்டிருக்கிறார்கள். இதனைத் திறனாய்வு எடுத்துச் சொல்லக் கடமைப் பட்டுள்ளது.

இவ்வாறு தொலைநோக்குப் பார்வை அமைவதற்குக் காரணம், படைப்பாளியிடம் வாழ்க்கைப்பற்றி, இந்தச் சமூக வாழ்க்கை பற்றி, ஒரு தீர்க்கமான கண்ணோட்டமும் சார்பு நிலையும் இருப்பதுவேயாகும்.

3.5 தொகுப்புரை

திறனாய்வுக்குத் தளமாக இருப்பது இலக்கியம். இலக்கியத்திற்குத் தளமாக இருப்பது வாழ்க்கை. இலக்கியம் வாழ்க்கையைச் சித்திரிக்கிறது; வாழ்க்கையைப் பதிவு செய்கிறது; வாழ்க்கையை விளக்குகிறது; வாழ்க்கையை விமரிசனம் செய்கிறது.

இலக்கியத்தில் சொல்லப்படும் வாழ்க்கை குறுகிய காலப் பகுதியாகவும் குறுகிய இடம் பற்றியதாகவும் தோன்றினாலும், உண்மையில் அது அதனுடைய கலைநேர்த்தி மற்றும் பொதுமைத்தன்மை காரணமாக, கடந்தது, நிகழ்வது, வருவது என்ற நீண்ட காலத்தையும், பெரும் நிலப்பரப்பையும் உள்ளடக்கியிருக்கிறது. இத்தகைய இலக்கியத்தின் பரப்புக்குள் இனம், பண்பாடு, காலம் ஆகியவற்றின் ‘மனநிலை’ இருக்கின்றது.

இலக்கியம், வாழ்க்கையின் நேர்முன் வருணனை அல்ல. வாழ்க்கையைப் பல உருவங்களில், பல நிலைகளில், பல வழிமுறைகளில் சொல்கின்றது.

திறனாய்வு, இத்தகைய இலக்கியம் கூறும் வாழ்க்கையைக் காரண காரியங்களுடன் ஆழமாக உட்சென்று புலப்படுத்துகின்றது.

பாடம் 4

இலக்கியமும் மொழியும்

4.0 பாட முன்னுரை

“இலக்கியமும் வாழ்க்கையும்” என்ற பாடத்தில் திறனாய்வுக்குத் தளமாக இருப்பது இலக்கியம் எனவும், அந்த இலக்கியத்தின் பாடுபொருளாக அல்லது உள்ளடக்கமாக இருப்பது வாழ்க்கை எனவும் கண்டோம். அவ்வாறு வாழ்க்கையைச் சித்தரிக்கும் போது, அது, எதன் மூலமாக அல்லது எதன் ஊடாகச் சித்தரிக்கின்றது? எதுவும் மொழியின் வழியாகத் தான், சொல்லப் படுகிறது.

இலக்கியத்திலுள்ள மொழியை – இலக்கியமாகியிருக்கின்ற மொழியைத் – திறனாய்வு மிக்க கவனத்துடன் மதிப்பிடுகின்றது. எப்படி? இனி, பார்ப்போம்.

4.1 இலக்கியமும் மொழியும்

கலைகள் பல. கலைகள் யாவும் வாழ்க்கை அல்லது வாழ்க்கை பற்றிய உணர்வுகளின் மீது தான் அமைகின்றன. ஆனால், எதன் மூலமாக அல்லது எதனைக் கருவியாகக் கொண்டு அமைகின்றன என்று பார்க்கும் போது, அவற்றின் சில அடிப்படை வேறுபாடுகள் புலனாகின்றன. சிற்பம், கல்லால் ஆனது. இசை, ஓசையின் விகற்பங்களால் ஆனது. ஓவியம், வண்ணக் குழம்புகளாய் ஆனது. இலக்கியம், ஒரு கலை, அது எதனால் ஆனது? அது மொழியால் ஆனது.

4.1.1 மொழிசார் கலை ‘இலக்கியம், மொழிசார் கலை’ (Verbal art). புகழ்பெற்ற மொழியாராய்ச்சியாளர் ரோமன் யகோப்சன் (Roman Jakobson) இந்த வரையறையைத் தருகிறார். ‘மொழிதான் ஒரு படைப்பின் அடிப்படை அம்சமாக எப்போதும் இருக்கும்’ என்று வலியுறுத்திக் கூறுகிற கான்ஸ்டாண்ட் ஃபெடின் என்ற உருசிய இலக்கிய ஆசிரியர், “எழுத்தாளனுடைய படைப்புத் திறன் அல்லது செய்ந்நேர்த்தி பற்றிய பேச்சு, எப்போதும் மொழியிலிருந்தே தொடங்கப் பட வேண்டும்” என்று கூறினார். படைப்பாளிக்கும் திறனாய்வாளனுக்கும் தரப்படுகின்ற ஒரு பொதுவான விதிமுறை இது.

இலக்கியத்திற்கு உருவம் தருவது, மொழி. மொழியை முறையாகவும் திறன்படவும் கையாளுகிறபோதுதான், சொல்லுகிற செய்தி முறையாகவும் சிறப்பாகவும் வெளிப்படுகிறது. மொழியே சிந்தனையின் கருவி. தெளிவின்றிச் சிந்திக்கப்படுவது, எதுவும் தெளிவின்றியே வெளிப்படுகிறது. மொழியை முறையற்று கையாளுவது, முறையற்றுச் சிந்திப்பதாகவே முடியும். இவ்வாறு மொழித் திறன் இவ்வாறு முக்கியமானதாக உள்ளது.

4.1.2 மொழித் தளம் இலக்கியத்தின் மொழி என்ன என்ன தளங்களிலிருந்து செய்யப்படுகிறது?

(அ) குறிப்பிட்ட காலம்

(ஆ) இடம்

(இ) இலக்கியத்தின் வகை (Genre and type)

(ஈ) படைப்பாளியின் தற்கூற்றுநிலை

(உ) கதைமாந்தர் பின்புலம் கூற்று

(ஊ) வாசகர் / படைப்பு வெளியாகும் இதழ்.

காலம், இடம் என்பன குறிப்பிட்ட இலக்கியம் தோன்றிய அல்லது அவ்விலக்கியம் கூறுகிற சமூகச் சூழலும் செய்தியும் சார்ந்திருக்கின்ற தளங்களைக் குறிப்பிடுகின்றன. இவற்றின் விளக்கத்தை இந்தப் பாடத்தின் பிற்பகுதியில் பார்ப்போம்.

• இலக்கிய வகைகளும் வேறுபாடுகளும்

தனிநிலைக் கவிதை, வருணனைக் கவிதை, சிறுகதை, புதினம் முதலிய இலக்கிய வகைகள், மொழிநடையின் வேறுபாடுகளுக்குக் காரணமாக அமைகின்றன. தனிநிலைக் கவிதையின் முக்கியத் தேவை, உணர்வுகளை முன்னிறுத்துவதும் இசையைத் தழுவுவதும் ஆகலின் மொழியின் தளம் அதற்கேற்ப இருக்கும். வருணனைக் கவிதை அல்லது காப்பிய வகைப்பட்ட கவிதையின் நோக்கம், நிகழ்ச்சிகளைச் சித்தரிப்பதும் கதை மாந்தர்களையும் அவர்தம் செயல்களையும் சித்தரிப்பதும் ஆதலின், அந்தக் கவிதைமொழி, அதற்கேற்ப அமைந்திருக்கும்.

• கூற்று நிலை

புனை கதைகளில் கதைமாந்தர் கூற்றுக்கள் இடம் பெறுகின்றன. இம்மாந்தர்களின் சமூகப் பின்புலங்கள் வேறுபடலாம்; ஆண் பெண் வயது வேறுபாடுகள் இருக்கலாம். அப்போது, மொழியின் தளமும் வேறுபடும். பெரும்பாலான சூழல்களில் படைப்பாளியின் (நேரடியான) கூற்றுநிலைகள் வெளிப்படுகின்றன. மற்றும் கதை மாந்தர்கள் கூற்றுக்களினிடையேயும் இவை இடம் பெறுகின்றன. கதைமாந்தர் கூற்றுநிலையிலிருந்து, இத்தகைய கூற்று நிலை, மொழிநடையில் வேறுபட்டு அமைந்திருக்கும்.

• மொழி நடையும் வாசகரும்

இறுதியாக, குறிப்பிட்ட இலக்கியம் யாருக்காக எழுதப்படுகிறதோ, அத்தகைய வாசகர்களை மனதில் கொண்டு மொழிநடை மாறுபடும். காட்டாகக் குழந்தை இலக்கியத்தின் மொழிக்கும் கற்றோர் மொழிக்கும் உள்ள வேறுபாடு, வாசகர் தளத்தையொட்டியதே. சில படைப்பாளிகள் பத்திரிகையின் தேவைக்கேற்பத் தம் மொழியை அமைப்பர். ஒரே ஆசிரியர், வணிகப்பத்திரிகையில் எழுதுவதற்கும் இலக்கிய சஞ்சிகையில் எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு. நடைமுறையில் இது கண்கூடு.

இப்பகுதியில், மொழிக்கு ஆதாரமாகவும் அடையாளமாகவும் இருக்கும் ‘சொல்’ பற்றிப் பார்க்கலாம்.

4.2.1 சொல்வளம் இலக்கியத்தின் மொழிதல் திறனுக்கு அடி இழையாக இருப்பது, சொல். மரபின் ஆளுகைக்கு உட்பட்ட சொல், உயிர்த்தன்மையுடையது. காலம், இடம் முதலிய சூழல்களுக்கேற்ப மாறுதலும் வளர்ச்சியும் அடைவது சொல்லின் சிறப்பு.

• சொல்வளம் – விளக்கம்

சொல்வளம் என்பது நிறையச் சொற்களைப் பயன்படு்த்துவது என்பது அல்ல; இலக்கியத்தின் பொருளுக்கும் அழகுக்கும் நோக்கத்திற்கும் ஏற்ற பொருள் உடைய – பொருள் ஆழமுடைய சொற்களைப் பயன்படுத்துவது என்பதாகும். இலக்கிய ஆசிரியன், அகராதிகளைத் தேடிப் போகிறவன் அல்ல. அகராதிகள், இலக்கியத்தைத் தேடிப் போக வேண்டாம்.

• இரண்டு பண்புகள்

பொருள் தரும் நிலையில், சொல்லுக்கு, அல்லது மொழிக்கு இரண்டு பண்புகள் அல்லது செயல்பாடுகள் உண்டு. முதலில் நேரடிப் பொருள் தருவது (denotative / referential) இது உணர்வாய் அல்லாமல், அறிவால் ஊட்டப்படுவது. அறிவியல், சட்டம், அறிவிக்கை முதலியவற்றிற்குக் இது உகந்தது. இரண்டாவது குறிப்பு நிலையில் (Suggestrue / connotative) பொருள் தருவது. இது பெரிதும் உணர்வால் ஊட்டப்படுகிறது. இது, இலக்கியத்திற்கு உகந்தது. மேலும், இலக்கியத்தில் அழகு தருகிற பொருள் அடுக்குகளுக்கு உதவுவது, இது. இந்த இருவகைச் செயல்பாடுகளையும், புகழ்பெற்ற ஆங்கிலத் திறனாய்வாளர் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் (I.A. Richards) அறிவியல் சார்ந்தது என்றும் உணர் அறிவை (Emotive) சார்ந்தது என்றும் வகைப்படுத்துகிறார்.

4.2.2 சொல்லும் தொடரும் சொல் தனித்து நின்றும் பொருள் தரும். பல சொற்களாகச் சேர்ந்து நின்றும் பொருள் தரும். பொருளைச் சொல்லுவதில் ஓர் ஆரம்பமும் முடிவுமாக ஒரு வரன்முறை பெறுமானால் அதனை வாக்கியம் அல்லது தொடர் என்கிறோம். பொருள் தொடர்நிலை என்று சொல்லப்படுகின்ற சொற்றொடர் (Phrase) மற்றும் வாக்கியம் (Sentence) இலக்கியத்தில் முக்கியமாகக் கவிதையில் தனித்தன்மையுடன் அமைகிறது.

• சொற்களின் இணைதலும் பொருளும்

சொற்கள் இணைகிற போது, சொற்றொடர்க்கு ஒரு புதிய சுழற்சி (twist) ஏற்பட்டுவிடுகிறது. பொருள் ஒரு புதிய பரிமாணமும் சக்தியும் பெறுகிறது. உதாரணமாக ஆகுலநீர பிற (குறள்), கற்பின் கனலி (கம்பன்), அக்கினிக்குஞ்சு (பாரதியார்), அழகின் சிரிப்பு (பாரதிதாசன்) முதலிய சொற்றொடர்களை எண்ணிப் பாருங்கள்.

ஆகுலநீர பிற

கற்பின் கனலி

அக்கினிக்குஞ்சு

அழகின் சிரிப்பு

• அடைமொழி

பால்           தேன்

அடைமொழி சொல்லுக்கும் சொற்றொடர்க்கும் காரண காரியத் தோடான அழகையும் ஆழத்தையும் தருகிறது. காட்டாக, வள்ளுவர் காதற் சிறப்புரைக்கிறார். கனி முத்தம் தரும் காதலனுக்குத் தன் காதலியின் கனிவாயிலிருந்து ஊறும் நீர், பாலொடு தேன் கலந்ததாகி இருக்கிறதாம். ‘எயிறு (பல்) ஊறிய நீர்’ என்ற தொடர் இடம் பெறுகிறது. ஆனால் அது அப்படியே அமையுமானால் சுவையும் இல்லை; பயனும் இல்லை. அதற்கு அடைமொழி தேவைப்படுகிறது. எயிறு-பல்- எத்தகையது? காவியேறிய ஊத்தைப்பல்லா? அல்ல, ‘வால் எயிறு – ஒளிசிந்துகின்ற வெண்மையான (தூய்மையான) எயிறு. அதுவும் யாருடையது? காதலி எப்படிப்பட்டவள்? குளுமையான மொழி பேசும், பணிவான மொழிக்குரியவள், ‘பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்’ என்கிறார் வள்ளுவர். அடைமொழி, மொழிக்கு அழகும் ஆழமும் இன்சுவையும் தருகின்றதன்றோ!

• சூழலும் தொடர்களும்

இனித் தொடர்கள் குறுகியனவாகவோ, நீண்டனவாகவோ இருக்கலாம். தேவையும் சூழரும் கருதி நாடக உத்தி, உணர்ச்சிப் பீறல், ஆணையிடுதல், அறுதியிடுதல் முதலிய சூழல்களில் சிறிய சிறிய தொடர்கள் எனும் அமைப்புப் பெரிதும் உதவுகிறது. வள்ளுவரிடம் நிறையப் பார்க்கலாம். ‘கற்க கசடற; நிற்க அதற்குத்தக;’ இது ஓர் உதாரணம். வருணனை, கற்பனை, நீண்ட சிந்தனை முதலிய சூழல்களில் நீண்ட தொடர்கள் வருவது இயல்பு. புனைகதைகளில் முக்கியமாகப் புதினங்களில் இதனை நெடுகக் காணலாம்.

4.2.3 சொல்லும் பொருளும் ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்தானிருக்கும் என்பதோ, ஒரு பொருளுக்கு ஒரு சொல்தான் இருக்கும் என்றோ கூறமுடியாது. இது ஒரு பொதுப்பண்பு. ஒரு சொல் பல பொருள், ஒரு பொருள் பலசொல் என்பன வழக்காற்றிலிருப்பன. காட்டாகச் செத்தான், இறந்தான், மாய்ந்தான், மாண்டான், துஞ்சினான், உயிர் நீத்தான், மரித்தான், காலமாகிப் போனான், சிவலோக பதவி அல்லது வைகுண்ட பதவியடைந்தான், இறையடி சேர்ந்தான், இயேசுவுக்குள் அல்லது கர்த்தருக்குள் அடக்கமானான் இவையெல்லாம் ஒரு பொருள் குறித்து வந்த பல சொற்கள். ‘மாண்ட’ என்ற ஓரு சொல் தமிழில் உண்டு. பழந்தமிழில் மாட்சிமைப்பட்ட/ நல்ல என்ற பொருள் இதற்கு உண்டு. “மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்” என்பது நரையின்றி் என்பதற்குக் காரணம் கூறும் பிசிராந்தையார் பாடல், இன்றைய வழக்கியல் இச்சொல்லுக்கு ‘இறந்துபோன..’ என்பது பொருள். பழைய வழக்குக்கு மாண்(பு) என்பது அடிச்சொல்; புதிய வழக்கிற்கு ‘மாள்’ என்பது அடிச்சொல். இதுபோன்று, சான்றோன்/சான்றோர் என்பதற்கு வீரர் என்ற பொருள் பழையது. சங்க காலத்திலேயே இதற்கு அறிஞர் என்ற பொருளும் வந்து விட்டது.

மேலும், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், சொல்லுக்கு நான்கு வகையான பொருட்பண்பு உண்டு என்கிறார்.

(அ) அறிவு புலப்படுதல் (Sense)

(ஆ) உணர்வு புலப்படுதல் (Feeling)

(இ) தொனி அல்லது குறிப்புப் பொருள் (Tone)

(ஈ) விருப்பம் அல்லது நோக்கம் (Intention)

இலக்கியத்தின் சொல் பொருளுக்கு அகராதிகளைப் பார்ப்பது, பொருத்தமன்று; போதியதன்று; சூழமைவுப் பொருள் (contextual meaning), குறிப்புப் பொருள் (suggestive meaning), சார்புடைப் பொருள் (shades of meaning) என்று பல நிலைகள், இலக்கியத்தில் உண்டு. முக்கியத்தை ஆராய்கிறவர்கள், பொருட்களை, இலக்கியத்தின் சூழமைவுகளிலேயே ஆராய வேண்டும்.

4.3 உத்திகளும் புலப்பாட்டுத் திறன்களும்

இலக்கியத்தில் மொழி பயின்று வருகிற போது காணக்கூடும் சில உத்திகளையும், புலப்பாட்டுத் திறன்களையும் இப்பகுதியில் பார்க்கலாம்.

4.3.1 அழகியல் உத்திகள் இலக்கியத்தில் வழங்குகிற மொழி, தட்டையாக, நேரடியானதாக இருப்பதில்லை. வெளியீட்டு முறையில் சில அழகியல் உத்திகள் காணப் படுகின்றன. ஒன்றோடு ஒன்று ஒவ்வுதல் அல்லது ஒப்புமை புலப்படுகின்ற பண்பு மிக முக்கியம். உவமம் அடிநாதமாக இருக்கிறது. உருவகம், படிமம், குறியீடு என்பன இன்றைய திறனாய்வாளர்கள் போற்றும் உத்திமுறைகளாகும். இவற்றுள் உருவகம் (Metaphor) என்பது உவம உருபுகள் நீங்கிப் போகச் செரிவுடைய ஓர் உவம வடிவமாகும். காளை போன்றவன் காளியப்பன் என்றால், அது உவமம். அதே போது, (காளியப்பன் காளை) காளை வந்தான் என்பது உருவகம் ஆகும். படிமம் (Image) என்பது உவமத்தின் இன்னொரு கோலல். சொல்லப்படும் பொருளை கேட்பு அல்லது காட்சி வடிவில், உருவெளித் தோற்றம் என்ற நிலைக்கு கொண்டுவருவது, இது. சாயுங்கால மேகம், எங்கும் வண்ணக்குழம்பு கரைந்துவிட்டதுபோல் மேகமெல்லாம்

செவ்வண்ணச் சாயம். தங்கத் தீவுகள் போன்ற மேகம் என்றோ தங்கத்தீவு மேகம் என்றோ சொல்லாமல், பாரதியார் (பாஞ்சாலி சபதம்) ‘தங்கத்தீவுகள்’ என்கிறார். நீலப் பொய்கைகள், கரிய பெரும்பூதம், செழும்பொன் காய்ச்சிவிட்ட ஓடைகள் என்று மேங்களை வருணித்துச் செல்கிறார். இவை உருவகங்கள். அடுத்துக் குறியீடு (Symbol) என்பது ஒரு சொல்லோ தொடரோ தனது பொருள் தளத்தைத் தாண்டிய ஒரு பொருண்மையை அல்லது கருத்து நிலையைக் குறித்து வருவது. அக்கினி அல்லது தீ என்ற சொல், தீ எனும் தோற்றத்தை உணர்த்தாமல், அத்தன்மை கொண்ட இன்னொரு பொருண்மையை உணர்த்துகிறது. உதாரணமாக, வன்முறை, பேருணர்வு, புரட்சி என்பவற்றுள் ஒன்றைத் தருமானால், அது குறியீடாகிறது. பாரதியின் ‘அக்கினிக்குஞ்சு’ என்ற சொற்றொடர் ஒரு குறியீடாகும்.

4.3.2 புலப்பாட்டுத் திறன்கள் மொழியைப் பயன்படுத்துகிற விதம், இலக்கியத்தின் புலப்பாட்டுத் திறனை உணர்த்தும். ஏற்கனவே சொன்ன அழகியல் உத்திகளையும் தொடர் மற்றும் பொருள் நிலைகளையும் இத்தகைய மொழித்திறன் பண்புகளாக நாம் அறிகிறோம். அன்றியும் வித்தியாசமான சொற்சேர்க்கைகளும் தொடரியல் அமைப்புகளும் கவனிக்கத்தக்கவையாக உள்ளன.

கவிதையில், சொற்களை உடைத்துப் போட்டு அதன் மூலம் புதிய பொருளை உருவாக்குகிற முயற்சி நடைபெறுகிறது. ‘எவளாவது ஒருத்தி’ என்பது ஒரு தொடர் ; இது, இயல்பானது. அதனை வித்தியாசப்படுத்தி ‘ஒருத்-தீ’ (தி-தீ என்று ஆகிறது) எனப்பிரித்து,

“எவளாவது ஒருத்

தீ

வரமாட்டாளா?”

என்று கவிதையாக்கியிருக்கிறார், சி.மணி. ‘ஒருத்தி’ என்பதற்கும் ‘ஒருத்-தீ’ என்பதற்கும் உணர்வின் தளத்தில் பெரும்வேறுபாடு உண்டு. வழக்கமானதை வித்தியாசப்படுத்துவது (difference/ defermilarize) இந்த மொழிநடை.

இரவு என்பது ஒரு நேரத்தைக் குறிப்பது. இது தொட்டு உணர்தல் போன்ற புலன்களுக்கு அகப்படாதது. அதாவது நுண்மையானது. இதை நுண்பொருள் (abstract) என்பார்கள். தொட்டு உணரும் கடினத் தன்மையுள்ள பொருளுக்குப் பருப்பொருள் (concrete) என்று பெயர். பருப்பொருள் உடைத்தால் உடையும். நுண்பொருளுக்கு அந்தத் தன்மை இல்லை. பருப் பொருளின் தன்மையாகிய உடைதல் நுண்பொருளாகிய இரவுக்கு இருப்பது போன்று ந.பிச்சமூர்த்தி என்ற கவிஞர் படைக்கிறார். “விழுந்துடைந்த இரவு” என்று பாடுகிறார். “விழுந்துடைந்த இரவு” இது ஒரு நடைத்திறன். விழுந்துடைந்த கண்ணாடி என்றால் இயல்பானது; விழுந்துடைந்த இரவு அதிலிருந்து வித்தியாசப் பட்டு ஒரு புதிய தளத்தைக் கட்டமைக்கிறது.

இதுபோன்று, பாரதியார் முரண்பட்ட சொற்சேர்க்கை மூலம், வித்தியாசமான மொழியமைப்பைக் காட்டுகிறார். தேன் திரவப் பொருள்; செந்தமிழ் நாடு என்று உச்சரிப்பது, ஒலி வடிவம். தேன், செந்தமிழ் என்ற இரண்டையும் ஒன்றிணைக்கிறார்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே.

காதுக்குள் தேன் போகுமோ? நடைமுறைத் தர்க்கம், கவிதையில் நடையழகிற்காக மாறுபடுகிறது.

கம்பர், சொற்றொடர் அமைப்பு அன்றியும், தொடரியல் அமைப்பில் வித்தியாசமான கட்டமைப்பைக் கொண்டு வந்து அழகு தருகிறார், எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை – இதுவே தமிழில் சொற்றொடர் அமைப்பின் மரபு. ஆனால் தேவை கருதி, சொல்லின் ஆற்றலையும் உணர்வின் திறனையும் காட்டும் பொருட்டு நான், கண்களால் கற்பினுக்கு அணியைக் (சீதையை) கண்டேன் என்று சொல்வதற்குப் பதில், இந்த அமைப்பு முறை மாறுகிறது.

கண்டனென் கற்பினுக்கணியைக் கண்களால்

என்று சொல்லின் செல்வன் அனுமன் கூறுவதாகக் கம்பன் காட்டுகிறார். இவ்வாறு சொல்வது மொழியின் புலப்பாட்டுத் திறனுக்கு அணி சேர்க்கிறது.

4.4 காலமும் இடமும்

காலம், இடம் எனும் தளங்களை ஒட்டி, இலக்கியத்தின் மொழி எவ்வாறு கவனிக்கத் தகுந்ததாக உள்ளது என்பதைப் பார்ப்போம்.

4.4.1 காலமும் மொழியும் மொழி வெளிப்படுகின்ற தளம் மற்றும் அதனால் வெளிப்படுத்தப்படும் தளம் காலம் ஆகும் (மற்றொன்று – இடம்). குறிப்பிட்ட இலக்கியம் எந்தக் காலத்தில் தோன்றியதோ, அந்தக் காலப் பகுதியின் மொழிநிலையை அது சார்ந்திருக்கும். காட்டாகச், சங்க இலக்கியம் என்பது, கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்கு முந்திய சங்க காலத்து மொழியைச் சார்ந்து இருக்கிறது. இப்படிக் கூறுவதில் நான்கு நிலைப்பாடுகள் உண்டு.

(அ) சிறு சிறு வேறுபாடுகள் இருந்தாலும், அந்தக் குறிப்பிட்ட காலத்தின் இலக்கியங்களிலுள்ள மொழி நிலைகளையெல்லாம் குறிப்பிட்ட ஒரே தளத்துக்குள் கொண்டு வந்து விடுகிறோம்.

(ஆ) இதனடிப்படையில் குறிப்பிட்ட காலத்து இலக்கியத்தின் மொழியையும் மொழி நடையையும் மொழி வரலாற்றையும் ஆராய்கிறோம்.

(இ) இலக்கிய வரலாறு காணவும் இத்தகைய பொதுவான மொழித்தளம் நமக்கு உதவுகிறது.

(ஈ) குறிப்பிட்ட புலவர் அல்லது கவிஞர்களின் மொழிநடையை அல்லது மொழித்திறனை ஆராயவும் காலத்தை மையமிட்ட மொழித்தளம் நமக்கு உதவுகிறது.

கல்கி

அடுத்து, குறிப்பிட்ட இலக்கியம் தோன்றிய காலம் அன்றியும், அந்த இலக்கியம் எந்தக் காலத்தின் சமூகத்தைப் பற்றிய செய்தியைக் கூறுகின்றதோ, அதனுடைய காலத்து மொழியை, அந்த இலக்கியம் சார்ந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, கல்கி என்ற புகழ்பெற்ற வரலாற்றுப் புதின ஆசிரியர் எழுதிய ‘பார்த்திபன் கனவு’ம் ‘சிவகாமியின் சபதமும்’ பல்லவர் காலத்தைத் தளங்களாகக் கொண்டவை ; அதுபோல், ‘பொன்னியின் செல்வன்’ பிற்காலச் சோழர் காலத்தைத் தளமாகக் கொண்டது. ஆனால், இந்தப் புதினங்கள், குறிப்பிட்ட அந்தக் காலங்களின் மொழியை ஓரளவாவது சார்ந்திருக்கின்றனவா? கதைமாந்தர்களின் பேச்சுக்கள் மூலமாகவாவது, வெளிப்படுகின்றனவா? என்று பார்த்தால் மிகச் சில சொற்கள் தவிர வேறு அறிகுறிகள் இல்லை. இலக்கியத் திறனாய்வு, இந்த நிலைகளையெல்லாம் பார்த்துத்தான் மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கின்றது.

4.4.2 வட்டார மொழி இலக்கியத்தின் மொழி, ஒரு பொதுவான தரம் கொண்ட (standard and common language) மொழியையே, பெரும்பாலும் தனது தளமாகக் கொண்டிருந்தாலும், உண்மைத் தோற்றம் (appearance of reality) மற்றும் நடைத்திறன் காரணமாக வட்டார மொழியையும் பிரதிபலிக்கின்றது.

தி.ஜானகிராமன்                                                   புதுமைப்பித்தன்

வட்டார மொழி (dialect) என்பது, முக்கியமாக இடம் சார்ந்தது. குறிப்பிட்ட இலக்கியம் சித்தரிக்கின்ற சமுதாயம், எந்தப் பகுதியைச் சார்ந்ததோ, அந்தப் பகுதியில் வழங்குகின்ற அல்லது அந்தப் பகுதியை இன்னதென அடையாளங் காட்டுகின்ற மொழியையே அது தனது தளமாகக் கொண்டிருக்கிறது. அந்த மொழியை வட்டாரமொழி என்கிறோம். இது மண்ணின் வாசனையோடு (regional colour) சேர்ந்தது, மேலும் தற்காலத்தில் சில வட்டாரங்கள், வட்டாரமொழிச் சித்தரிப்புக்கு உரியனவாகக்’ கருதப்படுகின்றன. குறிப்பாகச் சென்னை (முக்கியமாகச் சேரிகள் அல்லது அடித்தள சென்னை வாசிகள்), கொங்கு மண்டிலம், தஞ்சை, மதுரை, திருநெல்வேலிப் பகுதி, செட்டிநாட்டுப் பகுதி, மேற்குக் குமரி மாவட்டப் பகுதி முதலியவை. வட்டாரச் சித்தரிப்புக்கு உரியனவாகக் கருதப் படுகின்றன. கொங்குமண்டிலத்தின் ஆர்.ஷண்முகசுந்தரம், தஞ்சைத் தரணியின் தி.ஜானகிராமன், நெல்லைச்சீமையின் புதுமைப்பித்தன் முதலியோர் இவ்வகையில் குறிப்பிடப்பட வேண்டிய வட்டார மொழி பயன்படுத்தி எழுதியவர்களுள் சிலர்.

இடம் அன்றியும் தற்காலத்தில் இனம் அல்லது சாதியும் வட்டார மொழியின் தளத்துக்குள் முக்கிய பங்கு வகிக்கின்றது. பிராமணர், வேளாளர், நகரத்தார் (செட்டியார்) கவுண்டர், நாயக்கர், சவுராட்டிரர் முதலிய இனங்கள் பற்றிய படைப்புகளில் சாதி அடிப்படையிலான வட்டார மொழியைப் பார்க்கலாம். தலித்திய வாழ்க்கைச் சித்தரிப்புகளில் தலித் மொழி (பறையர், பள்ளர், அருந்ததியர்) இன்று உணர்வுடன் சித்தரிக்கப்பட்டு வருகின்றது.

இதுவன்றியும் இன்று, ஆங்கிலம் கற்றோர் மற்றும் பாமரர் என்ற வேறுபாடு, வட்டார மொழி என்ற அமைப்புக்குள் பெரிதும் இடம் பெற்று வருகிறது.

இன்றைய இலக்கியத்தில் (முக்கியமாக – நடப்பியலை – மையமிட்ட) – சிறுகதையிலும் புதினத்திலும் (ஆனால் கவிதைகளில் இது, அரிது) வட்டார மொழி என்பது முக்கியப்பங்கு வகிக்கிறது.

4.5 மொழியியலும் மொழியின் எல்லையும்

இப்பகுதியில் மொழியை ஆராய்கின்ற மொழியியல் பற்றியும், மொழியின் வீச்சிலும் எல்லைகள் உண்டு என்பதையும் பார்ப்போம்.

4.5.1 மொழியும் மொழியியலும் மொழியைப் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி, மொழியியலாகும் (linguistics). இதில் விளக்கமுறை, வரலாற்றியல், ஒப்பீடு முதலிய பல முறைகள் அல்லது துறைகள் உண்டு. டி.சாசூர் முதற்கொண்டு புகழ்பெற்ற பல மொழியியலறிஞர்கள், மொழியாராய்ச்சிக்கு மிகச் சிறந்த பங்களிப்புச் செய்துள்ளார்கள். இந்த மொழியியல் அறிஞர்களில் பலர், இலக்கியத்திலும், இலக்கியம் அக்கறை கொள்கின்ற பல சிந்தனைத் துறைகளிலும் ஆர்வம் உடையவர்கள்; ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள். இலக்கிய மொழியை, மொழியியல் துணைக்கொண்டு ஆராய்வது மொழியியல் அணுகுமுறை என்றும் நடையியல் (Linguistic Approach; stylistics) என்றும் வழங்கப்படுகிறது. ரோமன் யகோப்சன், ஸ்டீபன் உல்மன், சாமுவேல் லெவின், சாட்மன், ஃபவுலர், ரிஃபாத்தேர், எம்.ஏ.கே.ஹாலிடே, எம்.எல்.பிராத் முதலியோர் இத்துறையில் ஆழமாக ஈடுபட்டவர்களில் சிலர்.

இலக்கியத்திற்கு அடிப்படையானது அல்லது இலக்கியம் என்றால் இன்னது என்று இனங்காட்டுவது, இலக்கியத்தனம் அல்லது இலக்கியப் பண்பே (Literariness) என்று கூறுவர், மேலும் அது மொழியின் விசேடமான பண்புகளில் உள்ளது என்றும் மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தக் கருதுகோளே, மொழியியல் வழிப்பட்ட திறனாய்வுக்கு அடிப்படையாகும்.

மொழி, பொதுப் பண்புகள் கொண்டதெனினும், இலக்கியத்தில் இடம் பெறுகிறபோது, அதற்கு இலக்கியமாக்குகின்ற சக்தியிருக்க வேண்டும். இது ஒலி, சொல், சொற்றொடர், வாக்கியம் முதலிய கூறுகளிலும் அவற்றின் வருகை முறைகளிலும், இலக்கியத்திற்கான சிறப்பியல் கூறுகளைப் பெற்று வருகிறது; பொதுமொழியிலிருந்து வித்தியாசப்பட்டும் பிறழ்ந்தும் வருகிறது (deviation / difference). முன்னர் ஓரிடத்தில் சொன்னது போல, ‘நான் என் கண்களால் கற்பினுக்கு அணியாம் சீதையைக் கண்டேன்’ என்பது இயல்பு மொழியெனின், கவிதைக்கெனப் ‘பிறழ்தொடராக’க் ‘கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்’ என்று வருவது போன்றது இது.

4.5.2 மொழியும் அதன் எல்லையும் மொழியே குறிக்கோள் அல்ல. இலக்கியத்தில் ‘என்ன’ என்பதுதான் முதன்மையானது. அதனோடு சேர்ந்தது தான் ‘எப்படி’ என்பது. சொல்லும் பொருள் இன்றிச் சொல்லுதற்குரிய மொழி இல்லை. பொருளும் பொருள் இன்றிச் சொல்லுதற்குரிய மொழி இல்லை. பொருளும் மொழியும் உடன் நிகழ்வு ஆகலாம். ஆனால், நோக்கம், மொழி ஆகாது. சொல்ல வேண்டிய வாழ்க்கையே முதன்மை. மொழி முன்னிறுத்திக் கொண்டு நிற்குமானால் அழகும் சிதையும்; இலக்கியத்தின் நோக்கும் சிதையும்.

மொழியால் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. மொழி – மொழியை பயன்படுத்தும் படைப்பாளி – அதனை உள்வாங்க வேண்டிய வாசகர், இந்த மூன்று இலக்குகளின் இடையிலும் எப்போதும் தவிர்க்க முடியாத இடைவெளி இருக்கிறது. போதாமை அல்லது இடைவெளி, மொழியின் எல்லையாக மட்டுமல்லாமல், அதன் சிறப்பான – தேவையான – ஒரு பண்பாகவும் இருக்கின்றது. ஏனென்றால் திறனாய்வாளனுக்கு அப்போதுதான் தேடும் வேலை கூடுகிறது.

மொழி அல்லது சொல்லின் எல்லையைக் கவிஞர் சி.மணியின் சொல்லில் சொல்லிப் பார்க்கலாம் ;

சொல்ல விரும்பிய தெல்லாம்

சொல்லில் வருவதில்லை.

கோட்டை கட்டியபடியா

குழந்தை பிறக்கிறது.

என்றோ எப்பொழுதோ ஒருமுறை

வானுக்கு விளக்கடிக்கும்

வால் மீனாக

சொல்ல வந்தது சொல்லில் வரும்.

4.6 தொகுப்புரை

இலக்கியம் எனும் பயிர்க்கு நிலமாக இருப்பது மொழி. சிந்தனைக்கு வடிவம் தரும் மொழி, அதன் தெளிவையும் அதன் பல்வேறு கோலங்களையும் எடுத்துக்காட்டுகிறது. இலக்கியத்தின் மொழி, காலம், இடம் மற்றும் குறிப்பிட்ட படைப்பு, படைப்பாளி ஆகிய தளங்களில் செயல் படுகிறது. இந்தச் செயல்பாடு அறிவு என்ற நிலையிலும் உணர்வு என்ற நிலையிலும் ஆகிய இருமுறைகளிலும் நிகழ்கிறது. இவற்றோடு குறிப்புணர்த்துதல், விருப்பம் உணர்த்துதல் ஆகிய பொருள் நிலைகளையும் கொண்டது. மொழி, இலக்கியத் திறனாய்வு, மொழியின் இத்தகைய ஆற்றலைத் தனிநிலையில் அல்லாமல், அதன் சூழமைவையும் பயன் பாட்டையும் கொண்டு மதிப்பிடுகின்றது.

மொழியின் அழகு, அதன் ஒலி வடிவம் முதற்கொண்டு, சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகிய அதன் கூறுகளிலும், அந்தக் கூறுகளின் சேர்க்கைகளிலும் புலப்படுகிறது. உவமம், படிமம், உருவகம், குறியீடு ஆகியவை இவ்வாறு புலப்படும் சில உத்திகளாகும். படைப்பாளி, மொழிக் கூறுகளின் சில வித்தியாசப்பட்ட பண்புகளையும், சிறப்பியல் கூறுகளையும் பயன்படுத்திக் கொள்கிறான். இந்த மொழித்திறனை, மொழியியல் ஆராய்கிறது. இவ்வாறு ஆராய்ந்த மொழியியல் வழித் திறனாய்வாகும். இது அறிவியல் முறையோடு கூடிய ஒரு திறனாய்வாகும்.

பாடம் 5

‘கலை, கலைக்காகவே’ எனும் வாதம்

5.0 பாட முன்னுரை

முந்தைய பாடங்களில் இலக்கியமும் மொழியும் மற்றும் இலக்கியமும் வாழ்க்கையும் என்ற தலைப்புக்களில் மொழியும் வாழ்க்கையும் இலக்கியத்தில் ஒன்றிணைந்து பொதிந்து கிடப்பதைப் பற்றிப் பார்த்தோம். இந்த இரண்டும் இலக்கியத்தின் இருபக்கங்கள். இவ்வாறு இருக்க, இத்தகைய இலக்கியத்தின் செயல்பாடு அல்லது நோக்கம் என்னவாகி இருக்கிறது என்று பார்க்கத் திறனாய்வு கடமைப்பட்டுள்ளது. ஏனெனில், கலை இலக்கியத்தின் தகுதி அல்லது விழுமியம் (Value), அதன் மூலமாகி நம்மால் அறியப்படுகிறது. எனவே, கலை, கலைக்காகவா அல்லது வாழ்க்கைக்காகவா என்ற கேள்வி அல்லது வாதம் இங்கே வைக்கப்படுகிறது. வாதம் பழையதுதான் என்றாலும், இதன் மூலம் திறனாய்வு ஒரு சரியான முனைப்பை அல்லது கோணத்தைத் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது என்பதால், இது மிகவும் அவசியமாகும்.

5.1 கலை கலைக்காகவே என்ற வாதம்

கலை, கலைக்காகவே என்ற கேள்வியை மையங்கொண்ட வாதம், பல வடிவங்களில், படைப்பாளர்களின் மனங்களில் உறைந்து கிடக்கிறது. ஏன் எழுதுகிறோம், நாம் எழுதுவது என்ன செய்கிறது என்ற சிந்தனை, எழுதுகிறவனுக்கு இருக்கும்; அவ்வாறிருந்தால் தான், அவனுடைய இலக்கு சரியாகவும் இருக்கும்.

கலை, கலைக்காகவே என்ற வாதம், நம்முன் சில பிரச்சனைகளை முன் வைக்கிறது. அவற்றை இங்கே பார்க்கலாம்.

(1) கலை, இலக்கியம் என்பது அழகாகவும் நேர்த்தியாகவும் செய்யப்படுவதே அல்லாமல், அதற்கு என்று செயல்பாடு கூறுவது சரியாகுமா: இந்தக் கேள்வி, கலையின் இலக்குப் பற்றிப் பேசுகிறது. இலக்கு, கலையோடு முடிந்துவிடுகிறதா அல்லது அதற்கு அப்பாலும் செல்கிறதா.

(2) கலைகளைக் காண்பவர் அல்லது கேட்பவர் அல்லது வாசிக்கிறவர் அந்தக் குறிப்பிட்ட கலையின் பக்கம் ஏன் செல்லுகிறார்? என்ன எதிர்பார்த்துப் போகிறார்? என்ற கேள்வி, முக்கியமானதாகும். மேலும் அவ்வாறு அவ்வாசகர், எதிர்பார்த்துப் போவது, கிடைக்கிறதா என்ற கேள்வியும் இதன்போது எழக்கூடும்.

(3) கலையின் நோக்கு அல்லது கலைஞனின் நோக்கு என்று உண்மையில் இருக்கிறதா? அப்படியானால் அது என்ன? கலைஞன் இதனை வெளிப்படையாகச் சொல்லுவதில்லை; கலையின் மூலமாகவே வெளிப்படுத்துகிறான். அப்படியானால் அவ்வாறு வெளிப்படுவது என்ன? இந்தக் கேள்விகளும் உடன் எழுகின்றன. இவற்றிற்குரிய பதில்கள் தனித்தனியாகச் சொல்லப்பட வேண்டியதில்லை; ஆனால் வாதத்தின் பல நிலைகளிலும் இவை ஊடுசரடாக இருக்கின்றன.

5.1.1 கொள்கை விளக்கம் கலை, கலைக்காகவே என்ற நிலைப்பாடு அல்லது கொள்கை அடிப்படையில் தனது நிலைப்பாடாக என்ன சொல்லுகிறது.

(1) கலையில் உருவம் உள்ளடக்கம் என்ற இருபகுதிகள் உண்டல்லவா அவற்றிலே உருவமே பிரதானம் என்று சொல்லுகிறது, இது. உருவகத்தின் அல்லது வடிவத்தின் அழகும் நேர்த்தியுமே, கலையின் பண்பைத் தீர்மானிக்கிறது. கலையென்றால் இத்தகைய கலையியல் பண்பேயாகும். இதுவே கலையின் தகுதியையும் தரத்தையும் தீர்மானிக்கிறது. இவ்வாறு அக்கொள்கை கூறுகின்றது.

(2) கலையில் அழகையும் அது தரும் ரசனையையும் தவிர, வேறு ஒன்றையும் தேடக் கூடாது. எல்லாம் உள்ளே அகவய நிலையில் இருக்கிறது.

(3) எனவே, கலை இலக்கியத்தில் அது கூறும் செய்தி பற்றியோ அதனுடைய தன்மை அல்லது தகுதி பற்றியோ பொருட்படுத்தக் கூடாது என்றும் இது கூறுகிறது.

(4) மேலும், இலக்கியம் குறிப்பிட்டதொரு வாழ்க்கையை, வாழ்க்கை நிலையைச் சித்தரிக்கின்றது என்று சொல்லப்படுகிறது அல்லவா இக்கொள்கை அத்தகைய கருத்தினுக்கு வரக்கூடாது, இடம் தரக் கூடாது என்று சொல்லுகிறது.

(5) கலை இலக்கியம், குறிப்பிட்ட மனநிலை மாற்றத்திற்கு உதவும் என்ற கருத்தினையும் இது மறுக்கிறது. ஓர் இலட்சியம் வாழ்க்கைத் தேடல் போன்றவற்றை இலக்கியத்தில் பார்க்கக் கூடாது என்றும் இந்தக் கொள்கை கூறுகிறது.

(6) கலை உயர்வானது; அது புனிதமானது; வேறு எதனையும் வேண்டாதது. அதாவது தன் அளவில் அது முழுமையானது (Complete in itself); கலைஞனும் உயர்வானவன் என்று இந்தக் கொள்கை கூறுகிறது.

சுருக்கமாகச் சொன்னால் கலை (இலக்கியம்) அழகால் ஆனது; அழகை அனுபவிப்பதற்காகவே கலை இருக்கிறது; அதிலே, வாழ்க்கையையோ அதாவது வாழ்க்கை பற்றிய சித்திரத்தையோ எதிர்பார்க்கக் கூடாது என்பது இதன் அடிப்படையாகும்.

5.1.2 எதிர்நிலைப் பார்வை கலை, கலைக்காகவே என்ற கொள்கை, அகவய நிலைப்பட்டது. இதற்கு நேர்மாறான கொள்கை, பயன்பாட்டுக் கொள்கை (utility or Pragmatism) ஆகும். கலை, பிரச்சாரத்துக்காகவே இருக்கிறது. நீதி சொல்லுவதற்காகவே இருக்கிறது என்பது இந்தக் கொள்கை. இது, கலையில் வடிவம் அல்லது உருவம் என்ற பகுதியை அலட்சியப்படுத்துகிறது. அழகு, செய்ந்நேர்த்தி, கலையியல் அனுபவம் முதலியவற்றைப் புறந்தள்ளுகிறது. நேரடியாக நமக்கு எதுவும் அது சொல்லுகிறதா, படிப்பினை தருகிறதா, நம்முடைய நடைமுறைகளுக்குப் பயன்விளைக்கிறதா என்று பார்க்குமாறு அது தூண்டுகிறது. ஆசாரக் கோவை, ஏலாதி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது முதலிய நீதிநூல்கள் மாதிரி, நீதிவிளக்கங்களை மையமாகக் கொண்டிருப்பதை இக்கொள்கை போற்றுகிறது. இலக்கியம் பக்தி இலக்கியமாக, சமய உண்மைகளை, சமய சடங்குகளை, அவற்றின் பெருமைகளை வலியுறுத்துவதாக இருக்கவேண்டும் என்று கருதுகிறது. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் நூல்களுக்கும் மாணிக்கவாசகரின் பாடல்களுக்கும் இது வித்தியாசம் பார்ப்பதில்லை. பக்தி அல்லது சமயம் என்ற அளவைக்குள் சமமாக அவற்றைப் பாவிக்கிறது. எப்படிச் சொல்லப் பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்பதில்லை.

மாணிக்கவாசகர்

தமிழில் இத்தகைய நூல்கள் (சோதிடம், மருத்துவம்) முதற்கொண்டு, பல உண்டு. உரைநடை செல்வாக்குப் பெறாத காலத்தில் எல்லாவற்றையும் யாப்பு வடிவத்தில் அல்லது செய்யுளில் சொல்வது வழக்கமாக இருந்தது, இவை செய்யுளில் சொல்லப்பட்டன. எனவே செய்யுளில் சொல்லப்பட்டன எல்லாம் இலக்கியம் அல்ல என்ற பார்வை நமக்கு அவசியம். திறனாய்வுக்கு, அத்தகைய பார்வை இல்லையென்றால் செயல்படவே முடியாது.

இந்த இருவகைப்பட்ட எதிர்நிலைகளையும், பெரும்பாலான திறனாய்வாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. முக்கியமாக, இரண்டாவதாகச் சொன்ன கலை, பிரச்சாரத்துக்காகவே அல்லது நீதி சொல்லுவதற்காகவே என்ற கருத்து, வலுவிழந்து போன ஒரு கருத்து நிலையேயாகும்.

5.2 இலக்கியம் தரும் இன்பம்

கலைகள் பல வகைப்பட்டவை. கட்டிடக் கலை முதல் சிற்பம், ஓவியம், இசை, இலக்கியம் என்று பல திறத்தில் கலைகள் இருக்கின்றன. எல்லாக் கலைகளும் ஒரே மாதிரியானவையல்ல. இவற்றின் நோக்கமும் ஒரு மாதிரியானதல்ல.

சித்தன்னவாசல் ஓவியம்                   தஞ்சைக் கோயில்

சித்தன்னவாசல் ஓவியத்தைப் பார்க்கிறோம். தஞ்சைப் பெருவுடையார் கோயில் கோபுரத்தைப் பார்க்கிறோம். காருகுறிச்சி அருணாசலத்தின் நாதசுர இசை கேட்கிறோம். பால சரசுவதி அல்லது பத்மாசுப்பிரமணியத்தின் பரத நாட்டியத்தைப் பார்க்கிறோம். நமக்கு என்ன கிடைக்கிறது? முதலில், ஒரு பிரமிப்பு; ஒரு வியப்பு. பின்னர் அவற்றோடு ஒரு லயிப்பு. பிறகு- ஒரு மகிழ்ச்சி; ஓர் இன்பம்; கவலைகளையும், சுற்றுப்புறங்களையும் மறந்த ஒரு இதமான உணர்வு, இவை ஏற்படுகின்றன. இலக்கியம் படிக்கிற போதும் அதே வகையான மகிழ்ச்சியும் இன்பமும் கிடைக்கிறது என்பது உண்மை ; ஆனால், முன்னர் சொன்ன கலைகளில் எதிர்பார்ப்பது மாதிரி, அதே வகையான இன்பத்தோடு, இலக்கியம் முடிந்து விடுகிறதா?

இலக்கியம், மொழியால் ஆனது. மொழி, வெறுமனே ஒலிகளால் அமைந்தது அல்ல; பொருள்களால் ஆனது. இந்தப் பொருள்கள் வாழ்க்கையிலிருந்தும் வாழ்க்கையுணர்வு அனுபவங்களிலிருந்தும் அறிவிலிருந்தும் வருகின்றன. அத்தகைய மொழியால் ஆன இலக்கியக் கலையில் இன்பமும் மகிழ்ச்சியும் மற்றும் அதற்குக் காரணமான அழகும் நேர்த்தியும் மட்டும் இல்லை, வாழ்க்கையும் அது பற்றிய ஒரு தேடுதலும் இருக்கிறது. எனவே எல்லாக் கலைகளும் ஒரே மாதியான நோக்கம் கொண்டன அல்ல. கலை, கலைக்காகவே என்ற கொள்கை, பிற கலைகளுக்குச் சிறிது பொருந்தி வரக்கூடும்; ஆனால் இலக்கியத்திற்குப் பொருந்தி வராது.

5.2.1 கலைஞனும் வாசகனும் கலையைப் படைக்கும் கவிஞன், அந்தக் கலைக்காகவே மட்டுமே படைக்கின்றானா? கலையுள்ளம், கற்பனைத்திறன், உந்துணர்வு எனும் இவை மட்டும் தான் கலையை உருவாக்கக் காரணங்களா? இல்லை. படைப்பதைப் பிறருக்குக் கொண்டு போக வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புகின்றனர். நாலுபேர் பாராட்ட வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர். தன்னுடைய எழுத்து, சிந்தனை, பிறருடைய மனதில் ஏதாவதொரு சலனத்தை, அசைவை ஏற்படுத்த வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். சார்த்தர் (Jean. Paul. Sartre) எனும் புகழ்பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர், ‘நான் ஏன் எழுதுகிறேன்’ எனும் கட்டுரையில், எழுத்தாளன், வாசகனிடத்தில் இத்தகையதொரு எழுச்சியை (appeal) உண்டு பண்ணுகிறான் என்று சொல்லுகிறார். கடினமான அல்லது இறுக்கமான உணர்வுடைய வாசகன் கூட, குறிப்பிட்ட இலக்கியத்தில், அது கூறும் வாழ்க்கைச் சித்திரத்தோடு ஒன்றிவிடுகிறபோது, மனம் கசிந்து விடுகிறான்; நெக்குருகி விடுகிறான் என்கிறார். கலைக்கு அத்தகையதொரு சக்தி இருக்கிறது.

பிக்காசோவின் ஓவியம்

பிக்காசோவின் (Piccaso), போர் அவலங்குறித்த நவீன ஓவியங்களைக் கண்டவர்கள், பலர் போரையும் கொடூரங்களையும் வெறுக்கின்ற மனப்பக்குவத்தை அடைந்ததாகக் கலை வரலாறுகள் கூறுகின்றன. இதற்கு மாறாக, மோசமான திரைப்படங்களைப் பார்த்து, அவற்றில் சித்திரிக்கப் படுவது போல் திட்டமிட்டுக் கொள்ளைகள் அடித்ததாகவும், பாலியல் பலாத்காரங்களில் ஈடுபட்டதாகவும், கொலைகள் செய்ததாகவும் பல குற்றவாளிகள் வாக்குமூலம் தந்திருப்பதை அவ்வப்போது செய்திகள் மூலம் அறிகிறோம்.

நல்ல கலைகள் நல்லன செய்யமுடியும்; கெட்டவை, கெட்டது செய்ய முடியும். கேட்போரையும் பார்ப்போரையும் கலைகள் யாதானும் ஒருவகையில் ‘பாதிப்பு’ செய்கின்றன என்பது சார்த்தர் முதலிய பல அறிஞர்களின் கருத்து.

5.3 கலை, கலைக்காகவே என்பது பற்றிய கருத்துகள்

கலை, கலைக்காகவே என்ற கொள்கை, மேலைநாடுகளில் தான் பரிணமித்தது; மேலும், அங்கேதான் பலராலும் திரும்பத் திரும்பப் பேசப் பட்டது. முக்கியமாகக் கவிதைக்கு முக்கியத்துவமும் தனிச்சிறப்பும் கொடுக்கிறவர்களாலும், உருவவியலில் அக்கறை கொண்டோர்களாலும் இக்கொள்கை வலியுறுத்தப்பட்டது.

5.3.1 மேனாட்டார் கருத்து கவிதையாராய்ச்சியில் ஈடுபாடு கொண்டவரும் ஷேக்ஸ்பியரின் அவல நாடகங்கள் பற்றி ஆராய்ந்தவருமான ஏ.சி.பிராட்லி (A.C. Bradley), இந்த கொள்கையைப் பிரபலப்படுத்தினார். அவர் சொல்கிறார் கலை ஒரு தனி உலகம். அதனை அனுபவிக்கத் தொடங்குகிறபோது, புறவுலகு நினைவே சிறிதும் வரலாகாது. கற்பனையின் துணையுடன் கவிதை, சில அனுபவங்களை வெளியிடுகின்றது. அவற்றை நாமும் அப்படியே பகிர்ந்து கொள்ளலாமே தவிர, வேறு பயன் தேடக் கூடாது. அவ்வாறு தேடினால், கவிஞன் என்ன கருதி அதனை ஆக்கினானோ, அதனை நாம் இழந்து விடுவோம். இன்ப அனுபவம் தவிர, வேறு பிற எல்லாம் இரண்டாம் நிலையானவை ; முக்கியமானவையல்ல.” இவ்வாறு அவர், ‘கலையைக் கலைக்குள்ளிருந்து பார்; கலையாகப் பார்; வேறொன்றையும் பார்க்காதே’ என்கிறார். ஜான் ஸ்டூவர்ட் மில்(J.S. Mill) எனும் அறிஞர், “கவிதை என்பது ஓர் உணர்வு ; தனிமையாக இருக்கும் நேரங்களில், அது தனக்குள் தானே பேசிக் கொள்கிறது. கவிஞனின் வாசகன், சாராம்சத்தில் ஒரே ஆளாகச் சுருங்கி விடுகிறான். அத்தகைய ஒரே வாசகன், அந்தக் கவிஞன் தான்” என்கிறார். (“The Poet’s audience is reduced to a single member, consisting of the poet himself”) இம்மானுவேல் காண்ட் என்ற அறிஞரும் கலையின் உயர்வு குறித்து, இத்தகைய கொள்கையுடையவரே.

ஆனால், ‘கலை, கலைக்காகவே’ எனும் கொள்கை, பல அறிஞர்களால் மறுக்கப்படுகிறது. உதாரணமாகக் கவிஞரும் திறனாய்வாளருமாகிய மாத்யூ அர்னால்டு, ‘கவிதையென்பது, அடிப்படையில் வாழ்க்கை பற்றிய திறனாய்வேயாகும்’ என்றும், ‘ஒழுக்கநெறிகளைப் புறக்கணிக்கும் கவிதை, வாழ்க்கையையே புறக்கணிப்பதாகும்’ என்றும் கூறுகிறார். ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் எனும் புகழ் பெற்ற திறனாய்வாளர், ‘இலக்கியம் என்பது, மனித சமுதாயத்தின் மனச்சான்று’ என்று வருணிக்கிறார். ‘கலை, மனித சமுதாயத்தின் மகிழ்ச்சிக்கு உதவுமானால், ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை பெறச் செய்ய உதவுமானால், அது சிறந்த கலையாகும்” என்றும் கூறுகிறார். எனவே, கலை, கலைக்காகவே என்ற கொள்கை சரியன்று என்பது தான் பலருடைய கருத்தும் ஆகும்.

5.3.2 தமிழ் மரபு கலையை வாழ்க்கைக்குரிய ஒன்றாக, அதன் நலனுக்குரியதாகவும் அதனைச் சித்திரிப்பதாகவும் கொள்வதே தமிழ் மரபாகும். தொல்காப்பியத்திலே பல இடங்களில் இத்தகைய குறிப்பு உண்டு. கவிதை, மக்கள் வாழ்க்கையைச் சித்திரிக்க வேண்டும் என்பதற்காகவே ‘உரிப்பொருள்’ என்பதைக் கூறி, அது, திணை ஒழுக்கத்தைச் சொல்லுவதாக அந்நூல் வருணிக்கிறது. மேலும், “அறனும் பொருளும் இன்பமும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை” என்றும் அது வலியுறுத்துகிறது. சங்க இலக்கியம், எவ்வாறெல்லாம் வாழ்க்கைப் பற்றிப் பேசுகிறது என்பது தெரியுமல்லவா? ‘செவியறிவுறூஉ’ என்ற ஒரு துறை அல்லது பாடல் வகை உண்டு. மன்னவர்க்குச் செவியில் விழும்படியாகப் புத்திமதி கூறுவது, அந்த வகையான பாடல்.

இளங்கோவடிகள்

சிலப்பதிகாரம் எனும் காவியம் ஏன் எழுந்தது? அதற்குக் காரணம், இளங்கோவடிகளே சொல்லுகிறார்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவதூஉம்

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்

எனும் மூன்று உண்மைகளை நிலைநாட்டுவதற்காக ‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்’ என்று இளங்கோவடிகள் கூறியுள்ளார்.

மகாகவி பாரதியார், ‘பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திடவேணும்’ என்று சொல்லியிருப்பருது தெரியுமல்லவா? மேலும், “சொல்லடி சிவசக்தி- எனைச் சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயே இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே” என்று அவர் சொல்லியிருப்பதும், அதற்கேற்ப அவருடைய கவிதைகள் அழகும் இனிமையும் கொண்ட தேசியப் பாடல்களாகப் பரிணமித்தன என்பதும் யாவரும் அறிந்ததல்லவா? அழகையும் சுவையையும் மட்டுமே பார்க்கவேண்டும் என்று சொல்லுகிற மனப்போக்கு தமிழில் இன்றைத் திறனாய்வாளர்கள் சிலரிடம் உண்டு எனினும், அது பரவலாகப் பலராலும் நிராகரிக்கப்படுகிறது. இலக்கியத்தை வாழ்க்கையோடு ஒட்டியதாகப் பார்க்க வேண்டும் என்பதே தமிழ் மரபில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

5.4 தனித்தன்மையும் பொதுத்தன்மையும்

5.4.1 தனித்தன்மை எனக்கான விடுதலை

என் கவிதை.

உனக்கானதை

நீ எழுதிக்கொள்.

அண்மையில் வந்த ஒரு கவிதை இது. இப்படி, ‘எனக்கானது என் கவிதை; நான் இதனை எழுதிக் கொள்கிறேன்; உன் கவிதை, உனக்கானது; அதனை நீ எழுதிக் கொள்” என்று ஒவ்வொருவரும் அவரவர்க்கு என்று எழுதிக் கொண்டிருக்க முடியுமா? அல்லது, அவரவர் எழுதியது, அவரவர்க்கு மட்டும் தானா? ஏற்கனவே சொன்னது மாதிரி, இது சாத்தியமும் இல்லை; அவ்வாறு கருதுவது ஏற்புடையதுமல்ல. ஒருவருக்கான கவிதை, ஒவ்வொருவருக்குமானது; ஒவ்வொருக்குமான கவிதை, எல்லோருக்குமானது.

5.4.2 பொதுத்தன்மை தரமான அல்லது நல்ல கலைக்கு அல்லது இலக்கியத்திற்குத் தனித்துவப் பண்புகளும் உண்டு; தன்னொத்த பிறவற்றோடு அதற்குப் பொதுத் தன்மைகளும் உண்டு. எழுதியவர் வாழ்க்கையைச் சொல்லுவதாகத் தோன்றும்; அவர்க்கே உரியதாகவும் தோன்றும். ஆனால், அது எல்லோருடைய உணர்வுகளுக்கும் பொதுவானது தான். தனிநிலைப் பாடல்கள், பக்திப் பாடல்களை ஆகியவற்றைப் பாருங்கள், உண்மை தெரியும். எடுத்துக்காட்டாகச் சங்க இலக்கியப் பாடல் ஒன்று.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்

எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்

வென்றெறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார் யாம்எந்தையும் இலமே

தம் தந்தையையும், தம் சொத்துக்களையும், சுகங்களையும் இழந்து நிற்கும் பாரிமகளிர் பாடியதாக உள்ள பாடல் இது. ஆனால் இந்த அவலமும் ஆற்றாமையும் அவர்களுக்கு மட்டுமே உரியதா? எல்லாம் இழந்து, தனிமைப் பட்டு நிற்கும் அவலத்தில், குறிப்பிட்ட ஒருவரின் உணர்வும் இருக்கிறது; எல்லோரும் உணரக் கூடிய உணர்வும் இருக்கிறது. எனவே கலை, கலைக்குரியதாகவும் குறிப்பிட்ட ஒரு கலைஞர்க்கே உரியதாகவும் இல்லாமல், எல்லோருக்கும் உரியதாக உள்ளது. முகலாயப் பேரரசன் ஷாஜகான் தாஜ்மஹாலைத் தன்னுடைய காதலி மும்தாஜுக்காக, அவள் நினைவுக்காகக் கட்டினான்; ஆனால், அதோடு அது நின்றுவிட்டதா?

தாஜ்மஹால்

படைத்தவனோடு படைப்பு நின்று விடுவதில்லை. அரசியல் சுதந்திரத்திற்காக மட்டுமன்றிச் சமூக விடுதலைக்காகவும் போராடிய காந்தியடிகளுக்கு, அத்தகைய மனநிலைக்கு எழுச்சியூட்டியது எது? ஜான்ரஸ்கின் எழுதிய ‘கடைக்கோடி மக்களுக்காக’ (Unto the last) என்ற நூல் அல்லவா? அதுபோல, ருசிய நாவலாசியரியர், லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘போரும் அமைதியும்’ முதலிய நாவல்கள் அவருக்கு மனஎழுச்சி தந்தன. நவீன இந்தியா உருவாவதற்கு அயராமல் பாடுபட்ட ஜவகர்லால் நேருவுக்கு, ராபர்ட் ஃபிராஸ்ட் (Robert frost) என்ற ஆங்கிலக் கவிஞரின் கவிதைகள், எழுச்சி தந்தன என்று பார்க்கிறோம். இதுபோல், உதாரணங்கள் பல உண்டு. இது, எதனைக் காட்டுகிறது? கலை, இலக்கியம், வாழ்க்கையைச் சித்திரிக்கக் கூடியது; வாழ்க்கையின் மன எழுச்சிகளுக்கு உதவுவது என்பதைத்தான் காட்டுகிறது.

காந்தியடிகள்                           லியோ டால்ஸ்டாய்                  ஜான்ரஸ்கின்

5.5 நோக்கமும் பண்பும்

கலை இலக்கியத்தின் நோக்கம், கலைக்காக, அதன் அழகினைக் காட்டுவதற்காக என்ற வாதம், பொருத்தமில்லாதது என்று கண்டோம். உருவம் மட்டும் நேர்த்தியாக இருந்து, உள்ளடக்கம், சீர்குலைவு தரக் கூடியதாகவும் தவறான ஒழுக்கத்தை உணர்த்துவதாகவும் இருந்தால், அந்த இலக்கியமே பிழைபட்டதாகத் தான் இருக்கும். அது போல், உயர்ந்த கருத்துகளைச் சொல்லுகிற உந்துதலில், அதனை அழகுபட நேர்த்தியாகச் சொல்லவில்லையென்றால், அந்த இலக்கியம் சக்தியிழந்ததாகவும் நோக்கத்தை நிறைவேற்ற முடியாததாகவுமே இருக்கும்.

5.5.1 நோக்கம் கலை இலக்கியத்தின் நோக்கம் வாழ்க்கையைச் சித்திரிப்பது; வாழ்க்கையின் மேம்பாட்டிற்கு ஓரளவாவது உதவுவது ஆகும். ஆனால், அதேபோது சொல்லுவதை மனங்கொள்ளுமாறு சொல்ல வேண்டும்; உணர்த்துவதை நேர்த்திபட உணர்த்த வேண்டும்; அறம், அறிவுரையாக அமையும் போது, அது அழகுபட அமைய வேண்டும். நீதியும் அறமும், திருக்குறள் போல, கலையியல் கூறுகளுடன், படிப்போர் சுவைத்தறியுமாறு அமைய வேண்டும். அதுவே கலையின் பண்பும் நோக்கமும் ஆகும்.

5.5.2 பண்பு உருவம், உள்ளடக்கம் எனும் இரண்டும் முக்கியமே. ஆனால் இரண்டும் ஒன்றனையொன்று சார்ந்து, தமக்குள் முரண்பாடுகளன்றி இசைந்து இருக்க வேண்டும். கலையின் பண்பும் பயனும் இணைந்து அமைகிறபோது தான், கலையின் நோக்கம் வெற்றி பெறும். மேலும், கலைகள் எல்லாம் ஒரே வகையின அல்ல. கட்டிடக் கலை, சிற்பக் கலை, ஓவியக்கலை எனும் இவற்றின் பண்பும் செயல்பாடும் வேறு. இசைக்கலை, கருவி இசையாகவும், பாடலாகவும் அமைகிறது. இவற்றின் செயல்பாடுகளும் வேறு. இலக்கியம், மொழியால் ஆன கலை. இதனுடைய பண்பும் செயல்பாடும், ஏனைய கலைகளினும் வேறுபட்டது. திரைப்படக் கலை மற்றும் தொலைக்காட்சி இன்று மிகவும் பிரசித்தமானது. பல நூறாயிரம் மக்களைத் தினமும் சந்திக்கும் அந்தக் கலை, மொழியோடும், இசையோடும், காட்சி வடிவத்தோடும், கணினி உத்திகேளாடும் அமைந்தது. ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொரு வகையான சக்தி அல்லது திறன் உண்டு. கலைகள், தம்முடைய சிறப்பியல் பண்புகளைக் கைவிடாமல், அதேபோது, உயர்ந்த நோக்கங்களையும் கைவிடாமல் அமைந்திருக்க வேண்டும். கலை, வாழ்க்கைக்காகவே என்று சொல்லுவது, வாழ்க்கை உணர்வுகளின் நேர்த்திகளுக்கு அதனுடைய கலையியல் நேர்த்திகள் அனுசரணையாக அல்லது துணையாக இருக்க வேண்டும் என்று சொல்லுவதையும் சேர்த்தே குறிப்பிடுகிறது.

5.6 தொகுப்புரை

கலையின் நோக்கம் எத்தகையதாக இருக்கிறது என்பதனைச் சார்ந்து கலைப்படைப்பினுடைய பண்பும் அமையக் கூடும். எனவே, கலை இலக்கியத்தின் நோக்கத்தை அறிவதும் அது பற்றிய ஓர் அணுகுமுறையைப் பெற்றிருப்பதும் இலக்கியத் திறனாய்வுக்கு அவசியமாகும்.

கலை கலைக்காகவே என்ற கொள்கை, ஒரு சாராரிடம் உண்டு. கலையில் அதன் அழகையும் அது தரும் ரசனை அனுபவத்தையும் மட்டுமே பார்க்க வேண்டும் ; பிறவற்றைப் பார்க்கக் கூடாது என்று இக்கொள்கை கூறுகிறது.

இதற்கு மாறாக நீதி நெறிகளையும், அரசியல், சமயம் போன்றவற்றையும் பிரச்சாரம் செய்வதற்குத் தானே கலை வடிவம் என்று கருதுகிற கருத்தும் உண்டு. இது, அழகையும் நேர்த்தியையும் புறந்தள்ளி மறுக்கிறது.

கலை, வாழ்க்கைக்காகவே என்ற கொள்கையே பரவலாகப் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கலை முக்கியமாக இலக்கியக்கலை, வாழ்க்கையைச் சித்திரிக்கும் நோக்கம் கொண்டது என்றும் மனித வாழ்க்கை பற்றிய மன எழுச்சிகளுக்கு அது துணையாகவும் உந்துதலாகவும் இருக்கிறதென்றும் இக்கொள்கை கூறுகிறது.

கலை, வாழ்க்கைக்காகவே என்ற கொள்கையே தமிழ் மரபில் வேரூன்றியுள்ளது. தொல்காப்பியம், சிலம்பு முதல் பாரதியார் வரை இந்தக் கொள்கை வலியுறுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

உருவமும் உள்ளடக்கமும் அதாவது கலையழகும் கலையின் நோக்கமும் இரண்டற வேறுபாடின்றிக் கலந்து வெளிப்படுவதே உயர்ந்த கலையாகும். கலை, வாழ்க்கைக்காகவே எனும் கருத்து, இதனை முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.

பாடம் 6

திறனாய்வும் பிறதுறைகளும்

6.1 இலக்கியமும் கலைகளும்

இலக்கியம் ஒரு கலை. கலையென்றால், சொல்லுகிற அல்லது சொல்ல விரும்புகிற செய்திகளை அழகும் நேர்த்தியும் படச் சொல்வது; காண்பார், கேட்பார் அல்லது படிப்பார் மனதில் சுவைபடவும், அவர்கள் மனம் கொள்ளுமாறும், அவர்கள் சிந்தையில் அல்லது உணர்வில் ஓரளவாவது அசைவையும் தாக்கத்தையும் ஏற்படுத்துமாறும் அமைவது; மேலும் மேலும் காணுமாறும் கேட்டுமாறும் படிக்குமாறும் ஓர் ஆர்வத்தைத் தூண்டுவது படைப்பாற்றல் பண்பு, கலைகளின் அடிப்படைப் பண்பும் அதுவே ஆகும்.

• கலைகள்

கலைகள் பல. அறுபத்து நான்கு எனச் சொல்லுவது ஒரு மரபு. இலக்கியம், அவற்றுள் தலையாய கலை. இது, மொழிசார் கலை என்று ஏற்கனவே நாம் சொல்லியிருக்கிறோம். மேலும், மொழியை ஊடிழையாகக் கொண்டு அமையும் இந்தக் கலை, நுண்கலை (Fine Art) என்றும் பயன்கலை (Useful Art) என்றும் சொல்லப்படுகிறது.

கலைகளைப் பல வகையாகப் பகுப்பார்கள். நுண்கலை, பயன்கலை, பருண்மைக் கலை (Plastic Art), கவின் கலை (Aesthetic Art), நிகழ்த்துகலை (Performing Art) என்பன இவற்றுள் முக்கியமானவை.

• நுண்கலை

நுண்மையான உறுப்புக்களையும், நுண்ணிய திறன்களையும் நுண்ணிய உணர்வுகளையும் கொண்டது நுண்கலை. கவிதை, இசை, ஆடல், ஓவியம் முதலியன, இதனுள் அடங்கும்.

• பயன்கலை

கைலாசநாதர் கோயில்                             திரையரங்கு

பயன்களை முக்கிய நோக்கமாக்கக் கொண்டது பயன்கலை. இலக்கியம் இதனுள்ளும் அடங்கும். கட்டடக் கலை, அண்மையில் தோன்றிய திரைப்படக் கலை முதலியவை, பயன்கலைகள்.

• பருண்மைக் கலை

பருண்மைக் கலை என்பது பருப்பொருளாலான ஊடுபொருள்களைக் கொண்டு அமைவது. கட்டடக் கலை, சிற்பக்கலை ஆகியவை, இவற்றுள் அடங்கும்.

• கவி்ன் கலைகள்

ஓவியம், ஒப்பனை முதலிய கலைகள், கவின் கலைகளாகும். அதாவது, அழகான தோற்றத்தை நோக்கமாகக் கொண்டு அமைவது.

• நிகழ்த்து கலை

நிகழ்த்து கலை என்பது, பார்வையாளர் (Audience) மத்தியிலிருந்து நிகழ்த்திக் காட்டப்படும் கலையாகும். ஆடல், கூத்து (நாடகம்) ஆகியவை, முக்கியமான நிகழ்த்து கலைகளாகும். இசையும் இவ்வாறு நிகழ்த்தப்படுகிற கலையேயாகும்.

• கலையும் நுகர்வும்

கலையின் பண்புகளும் வகைகளும் கண்டோம். கலை எதன் மூலமாக நுகரப்படுகிறது? ஐம்புலன்கள் இருந்தாலும் அடிப்படையில் கண், செவி ஆகிய இரண்டினாலேயே பெரும்பாலும் கலைகள் நுகரப்படுகின்றன. இவற்றுள் சில, கண்ணால் மட்டுமே நுகரப்படுகின்றன. அவை, ஓவியம், சிற்பம், கட்டிடம் போன்றவையாகும். சில கலைகளுக்குச் செவியே, பிரதானம். இசைக்கலை அத்தகையது. சில கலைகளுக்குக் கண், செவி இரண்டுமே முக்கியம். ஆடல், கூத்து ஆகியவை இத்தகையன. நீங்கள், சமையல் என்பதை ஒரு கலையாகக் கொள்கிறீர்களா? அப்படியானால் நுகர்வுக்குரிய புலன்கள் என்னென்ன? நிச்சயம் செவி இல்லை. சரி. வேறென்ன?

6.1.1 இசையும் இலக்கியமும் கவிதை, இலக்கியக் கலையின் அரசி என்று அழைக்கப்படுகிறது. மேலும் அதுவே, ஏனைய இலக்கிய வகைகளுள் மூத்தது; மையமானது.

• கவிதை

கவிதை என்பது, அடிப்படையில் பாடல் என்றே அறியப்படுகிறது. சொற்களின் ஓசை ஒழுங்குமுறையோடு, இசை தழுவி அமைவது, பாடல் அல்லது கவிதையாகும்.

• மூன்று கலைகள் (முத்தமிழ்)

பழந்தமிழில் சிலம்பு முதற்கொண்ட பல நூல்களில் ஆடல், பாடல், இசை அல்லது இயல், இசை, நாடகம் என்று மூன்று கலைகள் ஒன்றோடு ஒன்று இணைந்தும் தழுவியும் வருபவையாகக் கூறப்படுகின்றன. இயல் என்பது பாடல் அல்லது கவிதையைக் குறிக்கும். இந்த மூன்று கலைகளும் சேர்ந்து முத்தமிழ் என்று சொல்லப்படுகிறது. இவற்றுள் இசை நடுத்தரமானது. அது கவிதைக்கும் வேண்டும்; ஆடல் அல்லது கூத்துக்கும் வேண்டும்.

“ஆடல், பாடல், இசையே, தமிழே” என்று அரங்கேற்று காதையில் (மாதவி, அரங்கேற்றுவதை வருணிக்கும் இயல்) இளங்கோ அடிகள் இந்த மூன்று கலைகளையும் இணைத்துக் காணுகிறார். மேலும், பாடல் எனும் கலை, இசையோடு சேர்ந்து அமைவதையும் அவர் கூறுகிறார்.

யாழுங் குழலும் சீரும் மிடறும்

தாழ்குரல் தண்ணுமை பாடலொடு இவற்றின்

இசைந்த பாடல் இசையுடன் படுத்து

……………………………………..

கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்

பகுதிப் பாடலும் கொளுத்தும் கலை….

(அரங்கேற்றுகாதை 26-34)

சிலம்பின் இந்த வரிகள், மூன்று கலைகளும் சேர்ந்து இயங்குவதையும் அதே போது, பாடலுக்கு இசை ஒரு பகுதியாக அமைவதையும், மேலும் கவிஞனுடைய குறிப்பு அல்லது கோட்பாடும் அதிலே உள்ளது என்பதையும் சொல்லுகின்றன.

இசை, மனதை நெகிழ்விப்பது; மொழிக் கடந்து பொதுமைத்தன்மை (Universal) கொண்டது. தமிழ் இலக்கியம் இதன் சிறப்பைத் தொடர்ந்து பேசுகின்றது. திறனாய்வு, இத்தகைய இலக்கியம் பற்றியப் பேச வேண்டியிருப்பதனாலும், கலையறிவு இல்லாமல் இலக்கியத்தைக் காண முடியாது என்பதனாலும், திறனாய்வாளனுக்கு இசை பற்றிய அறிவும் அது பற்றிய கண்ணோட்டமும் இருப்பது அவசியமாகின்றது.

6.1.2 கூத்து அல்லது நாடகம் முத்தமிழில் கூத்து என்பது ஒன்று. இது ஆடல் என்றும் சொல்லப்படும். ஆடல், தனியாளாகவும் அல்லது குழுவாகவும் நிகழ்த்தப்படுவது. அதற்குக் கதை என்பது அவசியமில்லை. கூத்து என்பது, நாடகம் என்று பின்னர் சொல்லப்பட்டது. இது, குழுவாக, ஒப்பனை, நடிப்பு முதலியவற்றுடனும் கதை நிகழ்ச்சிகளுடனும் நிகழ்த்தப்படுவது.

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் மாதவியின் ஆடற்கலையும் அதற்குரிய முன்னேற்பாடுகளும் விரிவாகப் பேசப்படுகின்றன. கூத்து, நிகழ்ச்சிகள் மற்றும் உணர்வுப் பின்னல்களால் கட்டமைக்கப்படும் அமைப்பை உடையது. இத்தகைய கட்டமைப்பு, சற்று நீளமான வருணனைக் கவிதையிலும் (Narrative Poem) காவியத்திலும் கட்டாயமாகக் காணப்படுவதேயாகும். மேலும், நாடகம் நிகழ்த்தப்படுவதாக மட்டுமல்லாமல், எழுதப்படுவதாகவும் அமைகிறது. தவிரவும், கோயில்களிலும் திருவிழாக்களிலும், தெருக்களிலும் கூத்துக்கள் அல்லது நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இலக்கியம், புராணம், காப்பியம் முதலியவற்றிலிருந்து கதைகளையும் கதைச் சூழல்களையும் இந்தக் கூத்துக்கள் பெற்றுக் கொள்வதுண்டு. அதே போல், கூத்துக்கள் அல்லது நாடகங்களிலிருந்து இலக்கியம், பல கூறுகளை எடுத்துக் கொள்வதுமுண்டு. உதாரணமாகப் பாரதியின் பாஞ்சாலி சபதம் என்பது ஒரு சிறிய காப்பியம், இது, 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் அதன் பிறகும் பிரசித்தமாக இருந்த “திரவுபதி, வஸ்திராபரணம்” என்ற தெருக்கூத்தைப் பின்பற்றி எழுந்ததாகும். அதுபோல, கோபால கிருஷ்ணபாரதி என்பாரின் நந்தனார் சரித்திர கீர்த்தனைகள் கதாகாலட்சேபம் என்பது அன்றைய பிரசித்தமான கீர்த்தனை வடிவத்திலான கதாகாலட்சேபம். இது, சேக்கிழாரின் திருநாளைப் போவார் புராணத்தைப் பின்பற்றிச் சில மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டதேயாகும்.

இவ்வாறு, கூத்து அல்லது நாடகம், இலக்கியத்தோடு நெருக்கமாக உள்ளது; அமைப்பு முறையிலும் ஒத்து விளங்குகிறது. எனவே திறனாய்வு, இத்தகைய கூறுகளைக் கண்டறிந்து சொல்ல வேண்டியிருக்கிறது.

6.1.3 இலக்கியமும் ஓவியமும் ஓவியயம், மிகப் பழங்காலத்திலேயே தோன்றிய ஒரு கலை. ஒன்றனைப் போல் இன்னொன்று – அதாவது ஒவ்வுதல் எனும் பொருளையுடையது ஓவியம். உவமம் என்ற சொல்லும் அதனோடு உறவுடையது. ஒவ்வுதல் – ஓவம் – ஓவியம். காட்சியளவில் பார்த்தற்குரிய இந்த நுண்கலை, புனைந்து செய்யப்படுவது. புனையா ஓவியம் என்று சங்கப் பாடல் கூறுகிறது.

‘ஓவியம், பேசாத கவிதை (Silent Poetry); கவிதை, பேசுகிற ஓவியம் (Speaking Picture) என்று பிரான்சு நாட்டு ஓவியர் சார்ல்ஸ் ஃபிரஸ்நொய் (Charles A.D. Fresnoy) என்பவர் கூறுகிறார். கவிதைக்கும் ஓவியத்துக்கும் எவ்வளவு நெருக்கம் உண்டு என்பதை உணர்த்துகிறது இதன் கருத்து ஆகும். பேராசிரியர் எனும் தொல்காப்பிய உரையாசிரியர் இதனையே வேறொரு வகையில் சொல்லுகிறார். மெய்ப்பாடு பற்றிப் பேசுகிற போது, மெய்ப்பாடு எனும் உணர்ச்சி வடிவம், கவிதையில் காட்சி வடிவமாக ஆக்கப்படுகிறது என்கிறார் அவர். “கவி, கண் காட்டும்” என்பது அவருடைய கூற்று.

சங்க காலப் புலவர்கள், அழகாகப் புனைந்து செய்யப் பட்டுள்ள பொருட்களை – அவை வீடு அல்லது இல்லமாயினும், ஊராயினும் – ஓவியமாகக் காணுகின்றனர்.

ஓவத்தன்ன இடனுடை வரைப்பில் (புறம் – 251)

ஓவத்தன்ன உருகெழு நெடுநகர் (பதிற்றுப்பத்து – 88)

என்பன சில வரிகள்.

மணிமேகலை, அழகிய பூங்கா ஒன்றை ஓவியமாகக் (சித்திரமாக) காணுகிறது.

வித்தகரியற்றிய விளங்கிய கைவினைச்

சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுபோல்

ஒப்பத் தோன்றிய உவவனம்.

இவ்வாறு ஓவியம் காட்சிப்படுத்தலைச் செய்கிறது. இலக்கியத்தில் காட்சிப்படுத்தல் என்பது உவமம், உருவகம், படிமம் முதலியவை மூலமாகவும் நடைபெறுகின்றது.

6.2 திறனாய்வும் அறிவியலும்

திறனாய்வு, ஒரு கலையா? அல்லது, அறிவியலா? இப்படியொரு கேள்வியை நாம் கேட்டுக் கொள்ளலாம்.

• கலைத்தன்மை

திறனாய்வில் படைப்பாற்றல் தன்மை, ஓரளவு இருக்கிறது. மேலும் திறனாய்வு என்பது சுவையாகவும் மனங்கொள்ளுமாறும் செய்யப்படுவது; நேர்த்தியாகச் செய்யப்படுவது. எனவே, இத்தன்மைகளைக் கொண்டு அதனைக் கலை, எனலாமா? ஆனால் திறனாய்வைக் கலையென்று சொல்லுவதற்கு இந்தப் பண்புகள் போதாதவை.

• அறிவியல் தன்மை

அப்படியானால், திறனாய்வை அறிவியல் என்று சொல்லலாமா? இயற்பியலோ, வேதியியலோ போன்ற ஓர் அறிவியலாக இது இருக்க முடியாது. ஆனால், அறிவியலுக்குரிய சில முக்கியமான பண்புகளைத் திறனாய்வு பெற்றிருக்கிறது எனலாம். தருக்கம் (Logic), அகவயச் சார்பு அற்ற, புறவயநிலைக்குட்பட்ட மனநிலை (objectivity), காரணகாரிய முறையிலமைந்த கண்டறிதல் ஆகிய வழிமுறைகள் அல்லது பண்புகள் திறனாய்வில் இருக்கின்றன. ஆனால், இயற்பியல் முதலிய அறிவியல்களில் இருப்பது போன்று இவை திறனாய்வில் மையமாகவும், நிறைவாகவும் இருப்பதில்லை. பல சமயங்களில் இவற்றை மீறியும் வேறுபட்டும் திறனாய்வு செய்யப்படுகிறது.

• நல்ல திறனாய்வு

ஒரு நல்ல திறனாய்வு என்பது, அறிவியலின் பண்புகளையும் அதன் கூறுகளையும் இயன்ற அளவு கொண்டிருக்க வேண்டும். மனப்பதிவாக, அந்த அந்த நேரத்தில் தோன்றும் அபிப்பிராயங்களையெல்லாம் திறனாய்வு என்று சொல்ல முடியாது. எனவே, அறிவியலோடு திறனாய்வு நெருங்க வேண்டும்; அதே சமயத்தில் படைப்பாற்றல், நேர்த்தி முதலிய கலைப் பண்புகளையும் திறனாய்வு ஒதுக்கிவிட முடியாது.

6.2.1 திறனாய்வின் மொழி மொழியை ஆள்வதில் இலக்கியத்திற்கென்று ‘ஒரு’ மொழி இருக்கிறது. இதனுடைய சில சிறப்பியல் தன்மைகளை ‘இலக்கியமும் மொழியும்’ என்ற பாடத்தில் ஏற்கனவே கூறியிருக்கிறோம். மேலும், அதன் உள்ளும் அதன் அதன் வகைமை, நோக்கம், சூழல், சென்று சேரும் இலக்கு முதலியவற்றிற்கு ஏற்ப இந்த மொழி அமைந்திருக்கும். திறனாய்விலும் மொழியின் இத்தகைய கூறுகள் தனிச்சிறப்புத் தன்மை பெற்றிருக்கும்.

• மொழிநடை

திறனாய்வு என்பது குறிப்பிட்ட இலக்கியத்தைச் சார்ந்தும், அதனைத் தளமாகக் கொண்டும் அமைவது. ஆனால், அதனுடைய மொழி ஆளுகை, அந்த இலக்கியத்தின் மொழி நடையையோ, மொழி அமைப்பையோ கொண்டிருப்பதில்லை. மாறாகக் குறிப்பிட்ட அந்த இலக்கியம் என்ன வகையான செய்தியைக் கொண்டிருக்கிறதோ, அதற்கேற்ற நடையையும் மற்றும் திறனாய்வு செய்கிற ஆசிரியனுடைய பயிற்சி மற்றும் பாணியையும் தேவையையும் கொண்டு அமைந்திருக்கும். மேலும் யாருக்குத் திறனாய்வுப் பற்றிய செய்திகள் செல்ல வேண்டும் என்று திறனாய்வாளன் கருதுகிறானோ அதற்கு ஏற்றவாறும், மேலும் (இன்றையக் காலத்தைப் பொறுத்த அளவில்) திறனாய்வு பிரசுரமாகவும் ஊடகத்தின் தன்மைக்கு ஏற்றவாறும் திறனாய்வின் மொழி அமைந்திருக்கும் என்று கருதலாம்.

• மொழிநடை வேறுபாடுகள்

எடுத்துக்காட்டாக, நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்குப் பெரியவாச்சான் பிள்ளை முதலியோருடைய ஈட்டுரைகளை நோக்குவோம். இவற்றை, அன்றைய திறனாய்வுகள் எனக் கொண்டால், திருவாய்மொழியின் இலக்கியச் சுவைக்கு ஏற்றதாகவும், அதனுடைய செய்தியாகிய வைணவ தத்துவத்தைக் கொண்டு வருகிறதற்கு உதவுவதாகவும், மேலும், உரையாசிரியரின் பயிற்சியைக் காட்டுவதாகவும் அந்த உரைகளின் மொழிநடை அமைந்திருக்கிறது என்று கூறலாம். ரசனை முறைத் திறனாய்வாளராகிய டி.கே.சிதம்பரநாத முதலியாரின் மொழிநடை, எளிமையும் தெளிவும் அழகும் கொண்டு, அவருடைய ரசனைக்கு ஏற்ற மாதிரியாகவே இருக்கிறது. பின்னால் தமிழ்த் திறனாய்வாளர்கள் பலர், மேலைநாட்டு நூல்களையும் கொள்களையும் பின்பற்ற நினைப்பவர்கள்; ஆதலால் அவர்களின் மொழிநடை, ஆங்கில மொழித் தாக்கமுடைய ஒரு கலப்பு நடையைக் கொண்டிருக்கிறது.

திறனாய்வின் நடை, வாசிப்பதற்கும் அதனை அப்படியே புரிந்து கொள்வதற்கும் ஏற்ற விதத்தில் எளிமையும் தெளிவும் கொண்டிருக்க வேண்டும். திறனாய்வாளனின் ‘மேதாவித் தனத்தைக்’ காட்டுவதல்ல, திறனாய்வும் மற்றும் அதன் மொழியும் நல்ல மொழி என்பது நல்ல சிந்தனை அறிகுறி.

6.3 திறனாய்வும் சமூகவியலும்

இலக்கியம், குறிப்பிட்ட ஒரு சமூகப் பின்புலத்தில் தோன்றி, அந்தச் சமூகத்தைக் காட்டுவதாகவும் அதன் ஓர் அங்கமாகவும் விளங்குவது. அதுபோன்றதுதான், இலக்கியத் திறனாய்வும், சமுதாயத்தோடு நெருக்கமுறப் பிணைந்திருக்கிறது; பிணைந்திருக்க வேண்டும். ஏனென்றால், இலக்கியத்தின் படைப்புத் தளம், திறனாய்வின் ஆய்வுத் தளமாகவும் பார்வைத் தளமாகவும் அமைகிறது.

• சமூகப் பின்புலம்

திறனாய்வாளனுடைய சமூகப் பின்புலம், சமூகத் தேவை மற்றும் சமூக நோக்கம் முதலியவை அவனுடைய திறனாய்வில் பிரதிபலிக்கின்றன; அவனுடைய திறனாய்வின் குறிப்பிட்ட வகையான அணுகுமுறை காரணமாக அமைகின்றன. எடுத்துக்காட்டாக, வ.ராமசாமி, ப.ஜீவானந்தம் பெ.தூரன், சிதம்பர ரகுநாதன், கலாநிதி கைலாசபதி முதலியோர்க்குத் தேசிய இயக்கம், விடுதலை, சமூக மாற்றம் முதலியவை குறித்த சமூகத் தேவையும் நோக்கமும் உண்டு. எனவே, பாரதியார் பற்றிய அவர்களுடைய திறனாய்வுகளிலே, அத்தகைய பார்வையும் அணுகுமுறையும் காணப்படுகின்றன. இது போல, ம.பொ.சிவஞானம். இவர் ஒரு தேசியவாதி; ஓர் அரசியல் தலைவர்; அதே நேரத்தில் தமிழ் இனவழித் தேசியத்தை முன்னிறுத்தியவர். இந்தச் சமூகப் பின்புலமே, சிலம்பு பற்றிய அவருடைய நூல்களிலும் மற்றும் வில்லிபாரதம், கலிங்கத்துப் பரணி முதலியவை பற்றிய கட்டுரைகளிலும் பார்வைத் தளமாக அமைந்திருக்கிறது. சிலப்பதிகாரத்தை தமிழ்த் தேசிய எழுச்சியின் குறியீடாகவும் இலட்சியமாகவும் அவர் காணுகிறார்.

குறிப்பிட்ட சமூகப் பின்னணியோடு, அதிலே நல்ல அறிவும் ஈடுபாடும் கொண்ட ஒருவர், அந்த வகையான சமூக வாழ்வோடு கூடிய இலக்கியத்தைப் படைக்க முடியும் அல்லவா? அதுபோலவே, பொருத்தமான சமூகப் பின்புலமும் அது பற்றிய போதிய அறிவும் ஈடுபாடும் கொண்ட திறனாய்வாளரே, அத்தகைய இலக்கியத்தைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியும் என்றும் அதுபற்றி ஆழமாக எழுத முடியும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம் அல்லவா?

• சமூகப் பொறுப்பு

ஒரு நல்ல திறனாய்வாளனுடைய தகுதிகளில் முக்கியமானது, சமூகவியல் பற்றிய அறிவினைச் சரியாகப் பெற்றிருப்பது ஆகும். அத்தகைய திறனாய்வாளனே சமூகத்தையும், இலக்கியத்தையும் மற்றும் சமூகம் சித்தரிக்கும் இலக்கியத்தையும் புரிந்து கொண்டு புலப்படுத்துகிறான். இலக்கியப் படைப்பாளிக்குச் சமூகப் பொறுப்பு இருப்பது போலவே, திறனாய்வாளனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது.

6.3.1 திறனாய்வும் வரலாற்றியலும் காலங்களின் தொடர்ச்சியில் சூழல்களாலும் பிறவற்றாலும் சமுதாயமும் பண்பாடும் மாறிக்கொண்டே இருக்கும். அதுபோல, கலை, இலக்கியமும் குறிப்பிட்ட போக்குகளையும் மாற்றங்களையும் கொண்டிருக்கும் என்பது இயல்பு. மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கணக்கிலெடுத்துக் கொள்வது, அறிவாராய்ச்சிகளின் நடைமுறை. அம்முறையில், திறனாய்வு, வரலாற்றியலை அறிந்திருப்பது என்பது அதன் முக்கியமான தேவையாகும்.

• வரலாற்று அறிவு

இன்று நாம் செய்யத் தொடங்குகிற திறனாய்வு, எந்தத் தன்மைகளைப் பெற்றிருக்க வேண்டும், எந்த முறையில் வித்தியாசமாகவும் புதிதாகவும் இருக்க வேண்டும், எந்த வகையான குறைகளைத் தவிர்க்க வேண்டும் என்று நமக்கு நாமே தீவிரமாக அனுமானம் செய்து கொள்ள வேண்டும். அப்படியானால் தான் அடுத்ததை நோக்கி அடியெடுத்து வைக்க முடியும். எனவே திறனாய்வாளனுக்குத் திறனாய்வின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாகப் புதுக்கவிதை பற்றி இன்று திறனாய்வு செய்கிற ஒருவர், வல்லிக்கண்ணன், நா.வானமாமலை, சி.கனகசபாபதி முதலிய திறனாய்வாளர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். பாலுணர்வு, அந்நியமாதல், விரக்தி, வக்கிரம் முதலிய மனநிலைகளும், புதிதாக எழுதுதல், யாப்புக்களைத் தளைகளாகக் கருதி அவற்றிலிருந்து விடுபட்டுச் சுதந்திரமாக எழுதுதல், பரிசோதனை முதலிய வழிமுறைகளும் புதுக்கவிதையில் காணப்படுவதை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாம் அவற்றை ஏற்றுக் கொள்கிறோமா – மறுத்து வேறொன்று சொல்லப் போகிறோமா என்று முடிவு செய்ய, நமக்குப் புதுக்கவிதைத் திறனாய்வின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும்.

மேலும், முக்கியமாக, இலக்கியத்தின் வரலாற்றைத் திறனாய்வாளன் அறிந்திருக்க வேண்டும். காலம், இடம் என்ற தளங்களை வைத்து இலக்கியத்தைப் பார்க்கவில்லையானால், பெரும்பிழைகள் வந்து சேரும். எனவே இலக்கியத்தின் வரலாறு அறிவது, திறனாய்வின் முக்கியமான கடமையாகும். அதுபோன்று, சமூக வரலாறும், பண்பாட்டு வரலாறும் திறனாய்வுக்குத் தேவை. வரலாற்றுயல் இல்லையானால், திறனாய்வு தனது அடிப்படைப் பண்பை வழிமுறையை இழக்கவேண்டும்.

6.3.2 திறனாய்வும் தத்துவ நெறியும் முதலில் தத்தும் என்றால் என்ன என்று பார்ப்போம்.

• தத்துவம்

இந்த உலகத்திற்கும் மனிதனுக்குமுள்ள உறவுகள், மனித வாழ்க்கையின் நடைமுறை அனுபவங்கள் மற்றும் அவனுடைய உள்ளாற்றல்கள், நம்பிக்கைகள், பயங்கள், ஆசைகள் முதலிய உணர்வு நிலைகள் ஆகியவற்றிலிருந்து பொதுமைப்படுத்தி ஓர் ஒழுங்கு முறையாகச் (System) செய்யப்படுவது தான் தத்துவம் ஆகும். தத்துவம் எல்லாம் சமயச் சார்புடையது அல்ல. வாழ்க்கையின் ‘தேடுதல்’தான் தத்துவத்தின் சாராம்சம். வாழ்க்கை மீதான ஒரு கோட்பாடு தான் தத்துவத்தின் நடைமுறை.

• இலக்கியமும் தத்துவமும்

இலக்கியமும் வாழ்க்கை மீதான ஓர் எதிர்வினை தான் (Response). வாழ்க்கை பற்றிய பல கருத்தியல்களைக் கலாபூர்வமாக வெளிப்படுத்துவது தான், இலக்கியம். மேலும், பல தத்துவ நெறிகளை இலக்கியம் உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. எனவே இத்தகைய நிலையில், இலக்கியத் திறனாய்வு, தத்துவ நெறிகளை அறிந்திருக்க வேண்டியிருக்கிறது.

• லோகாயுத வாதம்

லோகாயுத வாதம் (Materialism) என்பது ஒரு தத்துவம். இதில் பொருள் (Matter) தான் முதன்மை. பொருள் பற்றிய சிந்தனை அல்லது எண்ணம் (Idea) அதனையடுத்து வருவதுதான் என்று இந்தத் தத்துவம் பேசுகிறது. இரண்டற்குமுள்ள உறவையும் விளங்குகிறது. சங்க இலக்கியத்தைத் திறனாய்வு செய்கிற போது முக்கியமாக இந்தத் தத்துவம் துணை செய்கிறது.

நம்மாழ்வார், திருவாய்மொழி எனும் இலக்கியம் இயற்றினார். அது, சமயம் சார்ந்ததுதான். அவருக்குப் பின்னால் வந்த இராமானுசர் முதற்கொண்டு நஞ்சீயர், மணவாள மாமுனிகள் முதலிய பலர், நம்மாழ்வார் பாடல்களிலிருந்து வைணவ, விசிஷ்டாத்வைத – தத்துவங்களைக் கண்டறிந்து விளக்குகிறார்கள். எனவே, இலக்கியத்தை ஆய்வு செய்கிறவர்களுக்குத் தத்துவவியல் பற்றிய அறிவு தேவைப்படுகிறது.

• திறனாய்வும் தத்துவமும்

மேலும், பல நேரங்களில் திறனாய்வே கூடத் தத்துவம் தருவதாக அல்லது அதன் சாயலைக் கொண்டதாக அமைந்து விடுகிறது. மேலை நாட்டில், இம்மானுவேல் காண்ட் (Immanuel Kant), ஜார்ஜ் சண்டயானா (George Santayana) முதலியோரும், இன்றையக் காலத்தைச் சேர்ந்த டெர்ரிடா (Derrida), ஃபூக்கோ (Foucoult) முதலியோரும் இலக்கியத் திறனாய்வு கோட்பாட்டாளர்களாகவும் அதேபோது, தத்துவ வியலாளர்களாகவும் கருதப்படுகிறார்கள்.

• தொன்மங்களும் தத்துவமும்

இலக்கியத்தில், குறியீடுகள் (Symbols), தொன்மங்கள் (Myths) இடம் பெறுகின்றன. உதாரணமாகப் ‘பத்தினி’ என்பது ஒரு தொன்மம். கண்ணகி, இந்தத் தொன்மத்தை முதன்மையாகப் பிரதிநித்துவப் படுத்துகிறார். அதுபோல், பின்னர் புனிதவதியார் (காரைக்காலம்மையார்), குண்டலகேசி முதலியோரும் சங்க காலத்திய – பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டும் (புறம் – 246) (இவள், கணவன் இறந்தவுடன், தானே வலியச் சென்று, பொய்கையும் தீயும் ஒன்றே என்று சொல்லித் தீப்பாய முனைந்தவள்) ‘பத்தினி’ எனும் தொன்மத்திற்குரியவர்கள். ‘பத்தினி’ எனும் இந்தத் தொன்மத்தைத் தத்துவ நிலையில் கொண்டுவந்து ‘பத்தினித் தெய்வம்’ என்ற வழிபாடு வந்தமையை விளக்குவதற்குத் திறனாய்வில் இடம் உண்டு.

6.4 தொகுப்புரை

இலக்கியம், வாழ்க்கையை, அதன் பல்வேறு துறைகளுடன் சார்ந்து சித்தரிக்கும் ஒரு கலைவடிவம். அதன்மீது அதுபற்றி அமைந்த திறனாய்வும் பல துறைகேளாடு உறவு கொண்டும் அவற்றைச் சார்ந்தும் அமைகிறது.

இலக்கியம், இசை, கூத்து, ஓவியம் முதலிய பலகலைகளின் பண்புகளைக் கொண்டிருக்கிறது. மேலும் அக்கலைகள் பற்றிய பல செய்திகளையும் சொல்கிறது. திறனாய்வு, அத்தகைய கலைகளைப் பற்றிய அறிவு பெற்றிருந்தால் தான், அத்தகைய இலக்கியங்களைச் சரிவர விளக்கமுடியும்.

• கலைப்பண்பு கொண்ட அறிவியல்

இலக்கியத் திறனாய்வு, கலையா? அறிவியலா? சொல்லுகிற நேர்த்தி, அழகு, படைப்பாற்றல் பண்பு முதலியன இருப்பதால் கலைப்பண்பு அதிலே உண்டு. ஆனாலும் தருக்கம், புறவயத்தன்மை, காரண காரிய முறையிலான பார்வை, திறனாய்வுக்கு அவசியம். ஆதலின் அறிவியல் என்ற நிலையும் அதற்குண்டு. சுருக்கமாகச் சொன்னால், திறனாய்வு கலைப்பண்பு கொண்ட ஓர் அறிவியல் முறையாகும்.

• வரலாற்று அறிவு

திறனாய்வுக்கு வரலாற்றியல் அறிவு மிகவும் அவசியம். முதலில், திறனாய்வின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். அடுத்து, குறிப்பிட்ட இலக்கியத்தின் வரலாறும், மேலும் அது கூறும் செய்திகள் அல்லது சமூகம் பற்றிய வரலாற்றறிவும் திறனாய்வுக்கு வேண்டும்.

• சமூகவியல் அறிவு

திறனாய்வுக்குச் சமூக பின்புலம், சமூகத் தேவை, சமூகப் பொறுப்பு, இலக்கு முதலியன உண்டு. எனவே சமுதாயவியல், திறனாய்வாளனுக்கு மிகவும் தேவையான தொடர்புடைய ஒரு துறையாகும்.

• மொழியியல் அறிவு

திறனாய்வுக்கு மொழியியல் பின்புலம் உண்டு. திறனாய்வு, தான் சென்று சேர்கின்ற இலக்கினையும் முறையினையும் கொண்டிருக்கிறது. ஆதலால் அதற்குரிய தனிச்சிறப்பான மொழி நடையும் நேர்த்தியும் வேண்டும்.

• தத்துவவியல் அறிவு

திறனாய்வு இலக்கியத்திலுள்ள தத்துவத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் திறனாய்வே, பல கொள்கைகளையும் சிந்தனைமுறைகளையும் சார்ந்து இருக்கிறது. எனவே, திறனாய்வுக்குத் தத்துவவியல் மிகவும் தொடர்புடைய ஒரு துறையாகும்.