94

திறனாய்வும் அணுகுமுறையும்

பாடம் - 1

திறனாய்வின் வகைகள் - I

1.0 பாட முன்னுரை

மனத்தாலும் அறிவாலும் அறியப்படும் ஒரு பொருளை, அழகுற உணர்த்தும் படைப்பாக்கம் அல்லது கலைத் திறன் என்பது இலக்கியம் எனப்படுகிறது. இது நோக்கம், தேவை முதலியவற்றின் சாதனமாக உள்ளது. இத்தகைய இலக்கியம் தன்னகத்தே பல பண்புகளையும், பல செல்நெறிகளையும் பல கருத்து நிலைகளையும் கொண்டிருக்கிறது. அவற்றை ஆராயவும் விளக்கவும் திறனாய்வு உருவாகிறது.

இத்திறனாய்வு பல அணுகுமுறைகளையும், வகைகளையும் கொண்டிருக்கிறது. இவற்றைக் கண்டறிவது, திறனாய்வின் ஆழமான பண்புகளையும் பரந்துபட்ட பாதைகளையும் அறிவதற்குத் துணை செய்யும். ஏனெனில் திறனாய்வு என்பது ஒற்றைத்தன்மை அல்லது ஒற்றைப் போக்குக் கொண்டதன்று; பன்முகமான பண்புகளும் வழி முறைகளும் கொண்டது. எனவே முதலில் திறனாய்வின் வகைகளை இங்கே அறிவது மிகவும்அவசியமாகிறது.

1.1 திறனாய்வு வகைகள்

திறனாய்வின் வகைகள் என்பவை, திறனாய்வு செய்யப்படுவதற்குரிய வழிமுறைகள் இன்னின்ன என்பதன் அடிப்படையில் அமைகின்றன. உதாரணமாகப் பல இலக்கியங்களிலிருந்து அவற்றின் சில பண்புகளைச் சாராம்சமான பண்புகளாகப் பிழிந்தெடுத்து அடையாளங் காட்டுவது ஒருவகை. குறிப்பிட்ட ஒரு கொள்கை, அல்லது ஒரு பண்பு நிலையை அளவுகோலாகக் கொண்டு அதனைப் பல இலக்கியங்களோடு பொருத்திப் பார்த்தல் என்பது இன்னொருவகை. அதாவது திறனாய்வு செய்வதற்குரிய வழிமுறை (Method) அல்லது செய்முறையைப் பேசுவது, திறனாய்வின் வகை என்று அறியப்படுகிறது.

திறனாய்வின் வகைகள் பல. எனினும் அவற்றுள் மிக அடிப்படையானவை அல்லது முக்கியமானவை என்பவை பின்வருமாறு:

(1) பாராட்டுமுறைத் திறனாய்வு (2) முடிபுமுறைத் திறனாய்வு (3) விதிமுறைத் திறனாய்வு (4) செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு (5) விளக்கமுறைத் திறனாய்வு (6) மதிப்பீட்டு முறைத் திறனாய்வு (7) ஒப்பீட்டுத் திறனாய்வு (8) பகுப்புமுறைத் திறனாய்வு

இவற்றில் முதல் நான்கு திறனாய்வு வகைகளைப் பற்றி இப்பாடத்தில் காண்போம்.

1.2 பாராட்டுமுறைத் திறனாய்வு

பாரதியார்

“எதனைப் போற்றுகின்றோமோ அது வளரும்” என்று பாரதியார் சொல்வார். மேலும், பாராட்டுதல் என்பது ஒரு நல்ல மனிதப் பண்பு. பேசப்படும் பொருளைப் போற்றியுரைப்பது என்பது சொல்லுகின்ற வழிமுறையின் ஒரு பண்பு ஆகும். எடுத்துக் கொண்ட பொருளையும், இலக்கியத்தையும் குறை காணாமல், அந்தக் குறைகளைக் கண்டாலும் அவற்றைப் பற்றி அதிகம் பேசாமல் நிறைகளை மட்டுமே விதந்து பேசுவது பாராட்டுமுறைத் திறனாய்வு (Appreciative Criticism) ஆகும்.

(1) பாராட்டுமுறைத் திறனாய்வு, அடிப்படையில் விளக்க முறையாக அமையக் கூடும். ஆனால் பாராட்டுதல் என்பது விளக்கமுறையின் நோக்கமல்ல.

(2) விளக்கிச் செல்லும் போது அதனைப் போற்றுகிற விதத்தில் பண்புகளையே கூறிச் செல்வதால் அத்தகையதைப் பாராட்டுமுறைத் திறனாய்வு என்கிறோம்.

(3) இன்று, இலக்கியச் சொற்பொழிவாளர்கள், கல்வியாளர்கள் முதலியவர்களிடம் , பாராட்டு முறை பரவலாகக் காணப்படுவதைக்காணலாம் .சிலவகையான மேடையுத்திகள் , சில விருப்பங்கள் காரணமாக இந்தப் பாராட்டுமுறை நிறையவே இடம் பெறுகிறது.

(4)                                                                                                                   கம்பன்

இரசனை முறையில் ஈடுபாட்டுடன் பாராட்டுகின்ற ஆய்வுகள் தமிழில் நிறையவே உண்டு. உதாரணம் கம்பனைப் புகழ ஓர் குழுவினரே உண்டு. அவர்கள் பல தரப்பினர். ஜெகவீரபாண்டியன், டி.கே.சிதம்பரநாத முதலியார், ஏ.சி. பால்நாடார், கம்பனடிப்பொடி சா.கணேசன்,ப.ஜீவானந்தம், எஸ்.ராமகிருஷ்ணன், பேராசிரியர் அ.ச. ஞான சம்பந்தன், நீதிபதி மு.மு.இஸ்மாயில், தெ.ஞானசுந்தரம் இப்படிப் பலர் உள்ளனர்.

1.2.1 பாராட்டுமுறையின் எல்லை

திறனாய்வு என்பது குறிப்பிட்ட இலக்கியத்தின் விளக்கங்களையும், தனித்தன்மைகளையும் வாசகர் மனதில் பதியும்படி கொண்டு செல்ல வேண்டும். இவற்றைத் தவிரக் குறை அல்லது நிறை என்ற ஒன்றனையே கண்டு அதனையே விதந்துஉரைப்பதை நோக்கமாகக கொள்ளக்கூடாது. அது அவ்விலக்கியத்தின்பலவிதமானஅல்லதுவேறுபட்ட பண்புகளை ஒதுக்கி விடுவது ஆகும். பாரபட்சம் அல்லது பக்கச் சார்புக்குத் திறனாய்வு இடம் தரலாகாது.

மேலும், எதுவும் அளவோடு சொல்லப்பட வேண்டும். திறனாய்வில் வெற்று உரைகள் முக்கியமல்ல என்பதை அறிய வேண்டும். பாராட்டுக்களால் அலங்கரிப்பதும், குறைகளைப் பெரிதுபடுத்துவதும் இரண்டுமே உண்மையை உதாசீனப்படுத்தி விடும். ஆகையால் திறனாய்வுக்கு உண்மை என்பது முக்கியம்.

1.3 முடிபுமுறைத் திறனாய்வு

முடிபுமுறைத் திறனாய்வு (Judicial criticism) என்பது அடிப்படையான சில வரையறைகளையும் விதிகளையும் அளவுகோலாகக் கொண்டு குறிப்பிட்ட இலக்கியம் பற்றிய முடிபுகளை அல்லது தீர்வுகளைச் சொல்லுவது ஆகும்.

கெர்

உதாரணமாகத் தண்டியலங்காரம் கூறும் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்ற காப்பிய இலக்கணம் கொண்டோ, சாட்விக் (Chadwick), கெர் (W.P.Ker), பவுரா (C.M.Bowra) போன்ற மேனாட்டார் கூறும் கோட்பாடுகள் கொண்டோ ஒரு காப்பியத்தின் அமைப்பையும் பண்பையும் கணிப்பது, முடிபுமுறைத் திறனாய்வு ஆகும்.

தன்னிகரில்லாத் தலைவனைக் கொண்டதாகக் காப்பியம் அமைய வேண்டும் என்று தண்டியலங்காரம் சொல்கிறது. இவ்வாறே மேலைநாட்டு அறிஞர்கள் சிலரும் கூறுகின்றனர். ஆனால் சிலப்பதிகாரத்தில் அத்தகைய தலைவன் (கோவலன்) இல்லை என்பதற்காக அதனைக் காப்பியம் அன்று என்று கூறி விட முடியுமா?

தன்னுடைய இயல்பான போக்கில் ஏற்புடைய பல உள்கட்டமைப்புகள் பெற்றுள்ள சிலப்பதிகாரம், உலகக் காப்பியங்களின் வரிசையில் வைத்து எண்ணத் தகுந்தது அல்லவா?

இராமகாதை

மேலும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம், கம்பனின் இராமகாதை ஆகிய செவ்வியல் காவியங்களை முன்னுதாரணங்களாகக் கொண்டு, பெரிய புராணம் முதலிய பிற தமிழ்க் காப்பியங்களைப் பார்ப்பதும் இதன் அடிப்படையில் அது சரியான காப்பியமே என்றோ காப்பியம் அன்று என்றோ மதிப்பிடுவதும் முடிபுமுறைத் திறனாய்வு ஆகும்.

1.3.1 முடிபுமுறைத் திறனாய்வின் பண்புகள் ஒரே அளவுகோல் அல்லது ஒரேவிதமான வரையறை கொண்டு ஒன்றற்கு மேற்பட்ட இலக்கியங்களைப் பொருத்திப் பார்ப்பது இதன் பண்பு ஆகும். இதனடிப்படையில் ஒன்றன் சிறப்பு அல்லது தரம் உயர்ந்தது என்று முடிவு கூறுவதற்கு இந்த வகையான திறனாய்வு முயலுகிறது. இது, ஏற்கெனவே எழுதப்பட்ட விதிகளுக்கும் அவற்றின் விளக்கங்களுக்கும் ஏற்ப நீதிபதி தீர்ப்பு வழங்குவதைப் போன்றது ஆகும். எனவே இங்குக் கவனம் மிகவும் அவசியம் ஆகும். இத்திறனாய்வில் முடிபுகள் என்பது சமன்நிலையில் சீர்தூக்கும் கோல்போல் இருக்க வேண்டும்.

கல்வியியல் பட்டம் சார்ந்த ஆய்வேடுகள் பல, முடிபு முறைகளைச் சார்ந்தே அமைந்துள்ளன. தமிழில் உள்ள முன் மாதிரிகளையோ வரையறைகளையோ இவை பின்பற்றாவிட்டாலும் அல்லது அவற்றைப் பற்றி இவை அறிந்திராவிட்டாலும், மேலைநாட்டார் கொள்கைகளையும் மேற்கோள்களையும் வரையறைகளாகக் கொண்டு இந்த ஆய்வேடுகள் தமிழ் இலக்கியங்களுக்கு முடிபு சொல்ல முயலுகின்றன; அவற்றை மதிப்பிட முயலுகின்றன. ஆனால் இங்கே விதிகள் அவ்விலக்கியங்களிலிருந்து எடுக்கப்படாமல், வெளியே புறத்தே இருந்து எடுக்கப்படுகின்றன. ஆகையால் இவை எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்று எதிர்பார்க்க முடியாது.

1.3.2 முடிபுமுறைத் திறனாய்வின் எல்லை ஆயினும் சிறந்த இலக்கியங்களைப் போற்றுவதற்கு இது ஓரளவு உதவக் கூடியதேயாகும்.சில பொதுமைகளின் பின்னணியில் குறிப்பிட்ட ஒன்றைக் காண்பதற்கு இது உதவக் கூடியதாகும். புதிய வடிவங்களை, சோதனை முயற்சிகளை இது புறக்கணித்து விடுகிறது. இன்றைய தமிழிலும் இது இருக்கிறது. பழந்தமிழிலும் இது இருந்தது.

திறனாய்வு என்பது இலக்கியங்கள் புதிய பாதைகளில் பயணிக்க வழி மறுப்பது அல்ல; வழி வகுப்பது, வழி தருவது ஆகும்.

1.4 விதிமுறைத் திறனாய்வு

முடிபுமுறைத் திறனாய்வுக்கும் விதிமுறைத் திறனாய்வுக்கும் (Prescriptive criticism) பெருத்த வேறுபாடு இல்லை. இரண்டும் நெருக்கமான உறவுடையவை. முடிபுமுறைத் திறனாய்வு என்பது சில அளவுகோல்களைக் கொண்டு, குறிப்பிட்ட இலக்கியம் பற்றிய முடிபுகளையும் மதிப்புகளையும் வழங்குவது ஆகும். விதிமுறைத் திறனாய்வு என்பது, விதிகளையும் அளவுகோல்களையும் அப்படியே ஓர் இலக்கியத்தில் பொருத்திக் காண முற்படுவது. ஆனால் இதன் மூலம் முடிபுகளையோ தீர்வுகளையோ சொல்லுவதற்கு முற்படுவதில்லை. மாறாகக் குறிப்பிட்ட ஓர் இலக்கியத்தைச் சில வரையறைகளைக் கொண்டு விளக்குவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

இது, ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்பதற்கு மாறாக இலக்கணங் கண்டதற்கு இலக்கியங் காணல்’ என்ற மனப்பான்மை கொண்டது. இப்பார்வை உரையாசிரியர்களிடம் பரவலாகக் காணப்படுவதைப் பார்க்க முடியும்.

நெடுநல்வாடை அகமா? புறமா? என்ற கேள்வியை எழுப்பியவர் நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியர் ஆவார். இவர் நெடுநல்வாடை தோன்றிய காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்ட காலத்தில் தோன்றியவர். நெடுநல்வாடையில் புறச்செய்திகள் நெடுகப் பேசப்பட்டாலும், இறுதி நிலையில் சாராம்சமாக அகமே பேசப்படுகிறது.ஆயினும் தொல்காப்பியரின் விதிப்படி, அது அகம் இல்லை என்கிறார் நச்சினார்க்கினியர்.

அன்பின் ஐந்திணையில் ‘தலைவனோ தலைவியோ சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர்’ – இது தொல்காப்பியர் கூற்று. நெடுநல்வாடையில் தலைவனின் இயற்பெயர் சுட்டப் பெறவில்லைதான்; ஆனால், வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம் எனப் பாண்டிய மன்னர்களின் அடையாளப் பூவாகிய வேப்பம்பூவைக் கூறியமையால் இது அகம் அல்ல என நச்சினார்க்கினியர் கூறுகிறார். இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனே என்று அவர் உறுதியாகக் கூறுகிறார்.

ஆனால், அதற்குரிய சான்று அந்த நெடுநல்வாடையில் இல்லை. மேலும் பாட்டுடைத் தலைவனின் இயற்பெயர் சுட்டப்பெறாத போது தொல்காப்பியர் வழிநின்று கூட அதனைப் புறம் என்று கூறமுடியாது. இருப்பினும் நச்சினார்க்கினியார் விதி முறைத் திறனாய்வை மனதிற் கொண்டு அவ்வாறு அதனை அகம் என்று கூறுவதை மறுத்துப் ‘புறம்’ என்று கூறுகிறார்.

இவ்வாறு, முன்னோர் மொழிந்த பொருளைப் பொன்னே போற்கொண்டு, அதனை விதிமுறையாகக் கொள்கின்றதையும் அதற்காக வலிந்து பொருள் கொள்வதையும் பார்க்க முடிகிறது. ஆனால், இதனை இன்றைய திறனாய்வாளர்கள் திறனாய்வு முறையாக- வகையாகக் கொள்வதில்லை. ஆயினும் விதிகளைப் பொருத்திக் காணுகிற பார்வை, திறனாய்வாளர்கள் பலரிடம் இல்லாமலில்லை. குறிப்பாகக் கல்வியாளர்களிடம் இது பெரிதும் காணப்படுகிறது என்பது உண்மை.

1.5 செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு

விதிமுறைத் திறனாய்வும் முடிபுமுறைத் திறனாய்வும் செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்விலிருந்து மாறுபட்டவை. முற்கூறிய இரண்டும் இலக்கணத்திலிருந்து இலக்கியத்திற்குப் போகிறது. படைப்புவழித் திறனாய்வு இலக்கியத்திலிருந்து இலக்கணத்திற்குச் செல்லுகிறது.

பொது விதிகளையோ வரையறைகளையோ வைத்துக் கொண்டு, அவற்றின் வழியாக இலக்கியத்தைப் பார்ப்பதிலுள்ள குறைபாடுகளை மனதிற் கொண்டு அவ்றைத் தவிர்க்கும் நோக்கில் அந்த அந்தப் படைப்பின் வழியாகவே அதனதற்குரிய விதிகளை வடித்தெடுக்க வேண்டும் என்று சொல்வது, செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு (Inductive Criticism) ஆகும்.

வரையறைகளை முடிபுமுறைகளாக வைத்து ஒன்று உயர்ந்தது, மற்றது தாழ்ந்தது என்று கூறும் தீர்வு முறையிலிருந்து (Judicial Method) இது மாறுபடுகிறது. ஒரு படைப்பு மற்றதிலிருந்து வேறுபட்டது என்று (மட்டுமே) இது சொல்கிறது. பொது முடிவுகளுக்கும் பொதுவான விதிகளுக்கும் உள்ள அளவுகோல்களைப் புறக்கணிக்கிற இத்திறனாய்வு, குறிப்பிட்ட கலைக்கு உரிய விதிமுறைகளை அவ்வக் கலைஞர்களின் வழிமுறைகளிலிருந்தே பார்க்க வேண்டும்; வேறு வகையில் பார்ப்பது, அதற்குப் புறம்பானது என்று கூறுகிறது. ஒன்றன் வரையறையை அல்லது ஒரு கலைஞனின் வழிமுறையை வேறொரு படைப்பிலோ, வேறொரு கலைஞரிடமோ பொருத்திப் பார்க்கக் கூடாது என்று இது வற்புறுத்துகிறது. தீர்வுமுறையை மட்டுமின்றி, மதிப்பீட்டு முறையையும் ஒப்பீட்டு முறையையும் இது தவிர்க்கிறது; மறுக்கிறது.

1.5.1 செலுத்துநிலைத் திறனாய்வின் சிறப்பு படைப்பாளிகளின் ஒவ்வொரு படைப்புக்கும் (இலக்கியத்துக்கும்) தனித்தனியாக அமைப்பு விதிகள் உண்டு என்கிறது இத்திறனாய்வு. படைப்பாளிகளைப் பற்றிப் பேசும்போது அவரவரின் வழிமுறைகளை ஒட்டியே பேசவேண்டும் என்று கூறுகிறது. மேலும், அவர்களுக்கிடையே வேறுபாடுகள் இருக்கின்றன என்று சுட்டிக் காட்டுகிறது. ஆயின், அந்த வேறுபாடுகளின் முக்கியத்துவமும் காரணமும் பற்றியோ, அவர்களின் தரமும் தகுதியும் பற்றியோ இது பேச மறுக்கின்றது. ஆனால் திறனாய்வு, இவற்றில் அக்கறை காட்டாமலிருக்க முடியாது ஏனெனில் இது திறனாய்வின பணி. ஆனால் இலக்கியத்தின் வளர் நிலையையும், தனித்தன்மைகளையும் இந்தச் செலுத்துநிலைத் திறனாய்வு கவனத்தில் கொள்கிறது. மேலும் விதிமுறைகளையும் வரையறைகளையும் உருவாக்குவதற்குச் செலுத்து நிலையாகிற வழிமுறையின் பங்களிப்பும் தேவையான ஒன்றேயாகும்.

1.6 தொகுப்புரை

இலக்கியம் தன்னகத்தே பல பண்புகளையும், பல கருத்துகளையும் கொண்டிருக்கிறது. அவற்றை ஆராயவும் விளக்கவும் திறனாய்வு வகைகள் தேவைப்படுகின்றன. திறனாய்வு வகைகளில் ஒன்றாகக் கருதப்படும் பாராட்டு முறைத் திறனாய்வு இலக்கியத்தின் நிறை, குறைகளைச் சமமாக அறிந்து மதிப்பீடு செய்யாமல், நிறைகளை மட்டும் எடுத்துக் கூறி அவற்றைப் போற்றும் தன்மையைக் கொண்டது ஆகும். ஒரு திறனாய்வாளன் தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட சில விதிமுறைகளையும், கருதுகோள்களையும் அளவுகோலாகக் கொண்டு குறிப்பிட்ட இலக்கியம் பற்றிய முடிபுகளை அல்லது தீர்வுகளைச் சொல்லுவதுண்டு. இதனை முடிபுநிலைத் திறனாய்வு என்கிறோம்.

விதிமுறைத் திறனாய்வு ஒரு நிலையில் முடிபுமுறைத் திறனாய்வு போன்று இருந்தாலும், இத்திறனாய்வு இலக்கியத்தின் வரையறைகளை முன்கூட்டி இன்னவை என எடுத்துக் கொண்டு, இலக்கணம் கண்டதற்கு இலக்கியம் என்று பேசுகிறது. செலுத்துநிலைத் திறனாய்வு என்பது விதிமுறையில் நின்று இலக்கியத்தைப் பார்ப்பதில் ஏற்படும் குறைபாடுகளை மனத்திற் கொண்டு அவற்றைத் தவிர்க்கும் நோக்கில் அமைவது. ஒவ்வோர் இலக்கியத்திற்கும் தனித்தனியாக அமைப்பு விதிகள் உண்டு என்பது போன்ற நோக்கத்தில் அமைவது இத்திறனாய்வு வகை.

திறனாய்வின் வகைகள் - II

2.0 பாட முன்னுரை

இலக்கியப்     படைப்புகளின் தன்மைகளும், அவற்றின் பல்வேறு உத்திகளும், மற்றும் உள்ளடக்கக் கூறுகளும் எவ்வாறு அமைந்துள்ளன என்று கூற வேண்டுவது திறனாய்வின் பண்பு ஆகும். இலக்கியத்தின் காலம், இடம் என்ற பரிமாணங்களின் இடைவெளியை நிரப்பிப் புரிந்து கொள்ளுதலுக்குத் திறனாய்வு துணை நிற்கிறது. மேலும் திறனாய்வு, இலக்கியத்தை விளக்குகிறது; மதிப்பீடு செய்கிறது. இத்தகைய திறனாய்வு பலவகையான வழிமுறைகளையும் செய்முறைகளையும் கொண்டது. திறனாய்வுக்கு அணுகுமுறைகள் இன்றியமையாதன என்பது போல, திறனாய்வு செய்கிற வழி முறைகளும் முக்கியமாக உள்ளன. சென்ற பாடத்தைத்தொடர்ந்து இப்பாடத்தில் திறனாய்வின் ஏனைய நான்கு வகைகளைக் காண்போம்.

2.1 விளக்க முறைத் திறனாய்வு

காலம், இடம் எனும் தளங்களையும் வாசகர்களின் அறிதிறன்கள், ஏற்புமுறைகள் முதலியவற்றையும் எதிர்கொண்டு வாழ்கிற திறனை இலக்கியம் பெற்றுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட கலைஞனால் இலக்கியம் படைக்கப்படுவதேயெனினும், அது புதிது புதிதாய் உயிர்க்கிற அற்புதப் பண்பினைப் பெற்றிருக்கிறது. இத்தகைய திறம் அதன் உள்ளார்ந்த பண்புகளிலும் சூழமைவுகளிலும் பொதிந்து கிடக்கிறது. அவ்வாறு பொதிந்து கிடப்பதைப் புரிந்து கொள்கிற போதுதான் கலைப் பொருள் தொடர்ந்து நுகரப்படுகிறது; வாழ்கிறது.

இலக்கியம் நுகர்திறனும்

இலக்கியம் மட்டுமல்ல; எந்தப் பொருளும் சரியான நுகர்திறன் பெற்றிருந்தால் மட்டுமே வாழும். சரியான பயன், சரியான நுகர்திறன் பெற வேண்டுமானால், அது நுகர்வோனால் சரியாகப் புரிந்து கொள்ள அல்லது விளங்கிக் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. ‘ஒரு பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ளவோ, மேலும் அதனைக் கூடுதலாக அறிந்து கொள்ளவோ உதவுகிற வகையில் அந்தப் பொருளை வேறுசொற்களில் (re-phrasing) மீளவும் சொல்லுதல்’ என்பதே விளக்கமுறைத் திறனாய்வின் அடிப்படை ஆகும்.

2.1.1 அறிஞர் விளக்கம் விளக்கமுறைத் திறனாய்வு என்பதனை விளக்குகிறபோது லியோன்லெவி என்பவர் ‘ஒரு பொருள் அல்லது ஓர் அனுபவம், குறிப்பிட்ட ஒரு முறையில் அல்லது மொழியமைப்பில் அமைந்திருக்குமானால், அதன்மீது ஒளி பாய்ச்சி, அதன் உண்மையையும் பல்வேறு பண்புகளையும் வேறு சொல் வடிவங்களில் அல்லது மொழியமைப்பில் வெளிப்படுத்துவதே விளக்கமுறைத் திறனாய்வு எனப்படுகிறது’ என விளக்குகிறார்.

மேலும், இதைத் தெளிவுபடுத்த வேண்டுமானால் ஒரு பனுவலுக்கு (Text) விளக்கமாகவோ அல்லது அதற்கு மாற்றாகவோ சார்ந்ததாகிய இன்னொரு பனுவலை (Alternative text) தருவது விளக்கமுறைத் திறனாய்வு எனப்படுகிறது.

உதாரணம் :

செருக்குஞ் சினமும் சிறுமையு மில்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து

இது குற்றம் களைந்தவர்களின் செல்வம் பற்றிய திருக்குறள் வாசகம். ஏழு அல்லது எட்டு நூற்றாண்டுக்குப் பின்னர் வந்த வாசகர்களுக்கு இக்குறளின் கருத்து சரிவரப் போய்ச் சேராது என்று கருதிய பரிமேலழகர், காலத்தின் அத்தகைய இடைவெளியை நிரப்பும் பொருட்டு “மதம் – செல்வக் களிப்பு சிறியோர் செயலாகலின் அளவிறந்த காமம் ‘சிறுமை’ எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான், இவற்றைக் கடிந்தார். செல்வம், நல்வழிப்பாடும் நிலைபேறும் உடைமையின் மதிப்புடைத் தென்பதாம்” என்று குறிப்பிடுகிறார். தமிழில் உரையாசிரியர்களின் பங்களிப்பு, விளக்கமுறைத் திறனாய்வைச் சார்ந்ததாக அமைகின்றது.

சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற

இன்றி யமையாது இயைபவை யெல்லாம்

ஒன்ற வுரைப்ப துரையெனப் படுமே

என்று தொல்காப்பியர் மரபியல் நூற்பாவில் குறிப்பிடுகிறார். இதனடிப்படையில் விளக்கமுறைத் திறனாய்வு என்பதைக் குறிப்பிட்ட இலக்கியப் பனுவலின் உட்பொருளையும், அதனோடு இணைந்த, பொருத்தமான பிற வசதிகளையும் ஏற்புடையதாகச் சொல்லுதல் என்பதாக வரையறை செய்யலாம்.

2.1.2 விளக்க முறையின் தளங்கள் விளக்கமுறைத் திறனாய்வு ஒன்றன் முறையில் நின்றுவிடுவதில்லை அது வளர்நிலைத் தன்மை கொண்டது.

(1) படைப்பின் பண்புகள்

(2) விளக்கம் கூற முயல்வோரின் நோக்கம்

(3) பயிற்சி

(4) மொழிவளம்

(5) விளக்கம் யாருக்காக என்னும் பார்வை

இந்த ஐந்து வகைக் காரணங்களால் அல்லது தளங்களினால் விளக்கங்கள் வளர்நிலை பெற்று அமைகின்றன.

எடுத்துக்காட்டாகச் சொல்வதனால், கம்பனுடைய இராமகாதைக்கு எழுந்த பல்வேறு விளக்கங்களை இங்கே சுட்டிக் காட்டலாம். வைணவ சம்பிரதாயத்தில் ஆழ்ந்த பற்றுடையவர்கள், இராமகாதையைச் சரணாகதி தத்துவத்தின் சாரமாக விளக்கிக் காட்டுவர். அழகு, ரசனை, நயம் ஆகியவற்றில் ஈடுபாடும் பயிற்சியும் உடையவர்கள் கம்பனுடைய பாடல்களில் ஈடுபட்டு அவற்றின் உவம நயத்தையும், சொற்பொருள் திறனையும், இசை நேர்த்தியையும் விளக்கி மகிழ்கின்றனர். சமயத்தை மறுக்கின்ற பகுத்தறிவுக் கொள்கையினர், கம்பனுடைய பாடல்களில் வெறுமனே பாலுணர்வும், ஆரியர் மேம்பாட்டு உணர்வும் இருப்பதாக விளக்குவர். விளக்கமுறைத் திறனாய்வு இவ்வாறு பலவகையான விளக்கங்களுக்கு இடம் தரக்கூடும்.

2.2 மதிப்பீட்டு முறைத் திறனாய்வு

திறனாய்வின் பணி, இலக்கியத்தை மதிப்பீடு (Evaluation) செய்கிற பண்பினை அடியொற்றியது ஆகும். இலக்கியத்தைப் பகுத்தாய்வதும் விளக்கியுரைப்பதும் அதனுடைய சமுதாய நிலைகளையோ, உளவியல் பண்புகளையோ அளவிட்டுரைப்பது மட்டுமல்ல; அதே தளங்களிலிருந்து அவ்விலக்கியத்தை மதிப்பிட்டுரைப்பதும் ஆகும். உதாரணமாகக் குறிப்பிட்ட ஓர் இலக்கியத்தில் சமுதாயம் பற்றிய செய்திகள் எவ்வளவு ஆழமாகவும், உண்மையாகவும், திறம்படவும் சொல்லப் பட்டிருக்கின்றன என்ற அடிப்படையில் அவ்விலக்கியத்தை மதிப்பிடலாம். இவ்வாறு மதிப்பிட்டுரைப்பதுதான் மதிப்பீட்டு முறைத் திறனாய்வின் அடிப்படைக் கருதுகோள் ஆகும்.

திறனாய்வின் பல அணுகுமுறைகளின் போக்கிலும் நோக்கிலும், மதிப்பீட்டு முறை என்பது அடிநாதமாக விளங்குகிறது. காட்டாகப், புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் ஒன்றான கயிற்றரவு எனும் கதையில் அத்துவைத தத்துவம் இருக்கிறது; அதனைத் தத்துவ நோக்கில் ஆராய்கிற போது, அதன்வழி அந்தக் கதை மதிப்பிடவும்படுகிறது.

2.2.1 மதிப்பீட்டு முறையின் நோக்கம் மதிப்பீட்டுத் திறனாய்வு என்பது, குறிப்பிட்ட இலக்கியத்தின் தரம், தகுதி, சிறப்பு, சீர்மை என்பவற்றைப் பேசுவதோடு, அவ்விலக்கியத்தில் அமைந்திருக்கும் கூறுகளும், பண்புகளும், உண்மைகளும் பிறவும் இலக்கிய மதிப்பு (Literary value) உடையவை என்பதையும் பேசுகிறது. இலக்கிய மதிப்பு என்பது மேலே குறிப்பிட்ட கூறுகளும் பண்புகளும், பிறவும் இலக்கியமாகியிருக்கின்ற கலைநேர்த்தி பற்றியது ஆகும்.

ஒரு குறிப்பிட்ட இலக்கியத்தின் நிறை குறைகளைக் கண்டு, குணம் நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி மிக்கன கொண்டு அது இத்தகையது என மதிப்பீடு செய்தல், மதிப்பீட்டுத் திறனாய்வின் நோக்கம் ஆகும்.

2.2.2 இலக்கிய மதிப்பீட்டு அளவுகோல் பல இலக்கியங்களுக்குப் பொதுவாகவும், பலராலும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும், அதேபோது, குறிப்பிட்ட இலக்கியத்திற்கு மிகவும் ஏற்புடையதாகவும் சிறப்புடையதாகவும் கருதப்படுவது இலக்கிய மதிப்பீடு எனப்படும். சொல்கிற செய்தி, சொல்லப்படுகிற உத்தி, உள்ளடக்க வீச்சு, செய்ந்நேர்த்தி முதலியவற்றில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறப்புக் கூறு அல்லது பண்பு அமைந்திருப்பது, இலக்கிய மதிப்பு எனப்படுகிறது. அத்தகைய மதிப்பினை இனங்கண்டறியவும், திறனறிந்து கூறவும் வழித்துணையாக இருப்பதே மதிப்பீட்டு முறையாகும். இதுவே இதன் அளவுகோல் ஆகும்.

ஓர் எடுத்துக்காட்டு

ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ்

மதிப்புப் பற்றிய கணக்கீடும், தகவல் பரிமாற்றம் பற்றிய கணக்கீடும் திறனாய்வுக் கோட்பாட்டின் இரண்டு தூண்கள் என்று மதிப்பீட்டு முறைத் திறனாய்வு பற்றி ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் கூறுவார். சங்க இலக்கியத்திலிருந்து நாம் ஓர் எடுத்துக்காட்டுத் தரலாம்.

“சுடர்த்தொடீஇ களோய்” எனத் தொடங்கி “நகைக் கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்” என முடியும் கபிலரின் குறிஞ்சிக்கலிப் பாடல் (பா.51), தான் காதலுற்ற செய்தியினைத் தலைவி, தோழியிடம் கூறுவதாக அமைந்தது. இப்பாடலில் தலைவனின் குறும்பு, தலைவியின் மென்மையான உரைப்பாங்கு, தாயின் பரிவு, அவர்கள் வாழும் சமுதாயத்தின் ஒழுக்கம் ஆகியவை ஆழமாகவும் உண்மையாகவும் சொல்லப் பட்டிருக்கின்றன. இப்பாடலில் உள்ளமைந்த மதிப்பு என்ன?

“தோழீ! கேட்பாயாக. அன்னையும் யானும் இல்லின்கண் இருந்தோம். ‘இல்லீரே! உண்ணுநீர் வேட்டேன்’ எனச்சொல்லி வாயில் முன் வந்து நின்றவனுக்கு, அன்னை, ‘பொற்குவளையில் வார்த்து உண்ணுநீர் ஊட்டிவா’ என்றாள். யானும் என்னை அறியாமல் சென்றேன். சென்ற பின்னர் அவன் என்னுடைய வளையல் அணிந்த முன்கையைப் பற்ற, யானோ அச்சத்தால் நடுங்கி, ‘அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்’ என்றதும், உள்ளிருந்த அன்னை அலறிக்கொண்டே ஓடிவந்தாள். அதற்குள், அவன் செய்ததை மறைத்து, அன்னையிடம் ‘உண்ணுநீர் விக்கினான்’ என்று ஓர் பொய்யைச் சொன்னேன். அன்னையும் அவனுடைய முதுகை நீவிக் கொடுக்க, அவனோ என்னைக் கடைக்கண்ணால் கொல்வான் போல நோக்கி நகைக்கூட்டம் செய்தான்.”

இப்பாடலின் அமைப்பில், கதை சொல்லுகின்ற பாணி, நாடகப் பாங்கு மற்றும் நகை, இவற்றோடு மெல்லிய தூய்மையான காதல் உணர்வுகள் ஆகியவை இலக்கிய மதிப்புகளாய் அமைந்துள்ளன.

2.3 ஒப்பீட்டுத் திறனாய்வு

இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களை ஒரு சேர வைத்து, அவற்றிற்கிடையேயுள்ள ஒப்புமையையும், வேற்றுமையையும் பார்ப்பது மனித இயல்பு. அதுபோலவே, கலை இலக்கியங்களுக்கிடையே ஒன்றுபட்ட பண்புகளைப் பார்ப்பது என்பது படிப்பவரின் மன இயல்பு. ஒப்பிடுவது என்பது சில கூறுகளில் வேறுபட்டும் சிலவற்றில் ஒன்றுபட்டும் இருக்கின்ற இரண்டு பொருட்களின் மேல் நிகழ்த்துகின்ற ஒரு செயல். ஒப்புமைக்கு நேர்மாறான பொருள் சாத்தியம் இல்லை. இரண்டு பொருள்களின் ஒத்த தன்மைகள் ஒப்பீட்டு முறைக்கு வாய்ப்பாக அமையும். ஒப்பிடுவதன் நோக்கம், ஒன்றனைவிட இன்னொன்று சிறப்பானது, உயர்வானது என்று பேசுவது அல்ல. ஒவ்வொன்றன் சிறப்பையும் தனித்தனியே அறிவதற்கு ஒப்பீடு என்பது ஒருவழிமுறை அல்லது உத்தியே ஆகும்.

2.3.1 ஒப்பீட்டுத் திறனாய்வின் கருதுகோள் (1) ஒத்த சமுதாய வரலாற்றுச் சூழல்களில் அல்லது பின்புலத்தில் பிறக்கும் இலக்கியங்கள் ஒத்த தன்மைகளைப் பெற்றிருக்கக் கூடும்.

(2) ஏற்புத் திறனைச் சார்ந்து, ஓர் இலக்கியம் இன்னோர் இலக்கியத்தைத் தனது செல்வாக்கிற்கு உட்படுத்தக்கூடும்.

(3) மொழியாலும், இனத்தாலும் அரசியல்-புவியியல் பரப்பாலும் வேறுபட்டாலும் அத்தகைய வரையறைகளை மீறி, இலக்கியங்கள் தமக்குள் ஒன்றுபட்ட பண்புகளையும் பயன்களையும் பெற்றிருக்கக் கூடும்.

(4) ஒன்றுபட்டும் வேறுபட்டும் அமைகிற பின்புலங்களிலிருந்து பார்க்கிறபோது, குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகளும் கூறுகளும் தெளிவாகவும் விளக்கமாகவும் காணக்கூடும்.

இந்தக் கருத்து நிலைகளே ஒப்பீட்டுத் திறனாய்வின் கருதுகோள்கள் ஆகும்.

2.3.2 ஒப்பிடுவதற்குக் காரணம் (1) ஒன்றனை ஒன்று ஒப்பிடுவதற்குக் காரணம் குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகளை மேலும் சரியாகவும், நிறைவாகவும் புரிந்து கொள்ளவும் பிறர்க்கு விளக்கவும் உதவும்.

(2) ஒரு புதிய கோணத்தில், இலக்கியப் பொதுமைப் பண்புகளின் பின்னணியில் ஒப்பீட்டுத் திறனாய்வு செய்கின்ற போது, அந்த இலக்கியம் ஏற்புடைய தளத்தில் வைத்துத் திறனாய்வு செய்யப்படுகின்றது.

(3) இது மதிப்பீட்டு முறையில் வரையறை செய்யப்படுகின்றது.

(4) இந்த ஒப்பீட்டின் மூலம் குறிப்பிட்ட இலக்கியம் பெற்றிருக்கின்ற குறிப்பிட்ட தளத்தை அறிய முடிகிறது.

2.3.3 தமிழில் ஒப்பிலக்கியம் வளர்ந்த நிலை (1) தமிழ் உரையாசிரியர்களிடம், தாம் கூறும் உரைக்கும் நூலுக்கும் இணையான பிற இலக்கிய, இலக்கண மேற்கோளை ஒப்பீட்டு முறையில் எடுத்துக்காட்டுகின்ற போக்கு இருக்கின்றது. இதன் மூலம் ஒப்பீட்டு முறை, பழங்காலந்தொட்டே இருத்தலை அறிய முடிகிறது.

(2) ஒப்பீட்டு முறை, மேலை நாட்டுக்கல்வி மற்றும் அந்த நாட்டு இலக்கியங்களின் வரவு முதலியவை காரணமாக 19ஆம் நூற்றாண்டில் மேலும் வளர்ந்தது.

(3) கிரேக்க இலக்கியமும் தமிழ் இலக்கியமும் உருவத்திலும் உள்ளடக்கத்திலும், சமுதாய நிலையிலும் பெரும் ஒற்றுமைகள் பெற்றிருக்கின்றன என்று க.கைலாசபதி விளக்கிக் கூறுகிறார்.

பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை

(4) பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை, காவிய காலம் என்னும் தனது நூலில் கிரேக்கக் காவியம், காவியக் கூறுகள், பண்புகள், அமைப்பு நிறைவுகள் முதலியவை தமிழ்க் காவியங்களோடு ஒத்துள்ளன ; வேறுபட்டும் உள்ளன என்று கூறுகிறார்.

(5) வ. வே. சு. ஐயரின் ‘Kamba Ramayana – A Study’ எனும் நூல் கம்பனை வால்மீகியுடனும் மில்டனுடனும் ஒப்பிடுவது, ஒப்பீட்டுத் துறைக்கு மேலும் ஒரு நல்ல உதாரணம் என்று கூறலாம்.

ஷெல்லி

(6) தொ.மு.சி. ரகுநாதன், எஸ்.ராமகிருஷ்ணன், க.செல்லப்பன் வை. சச்சிதானந்தன், முதலிய அறிஞர்கள் தமிழ்க் கவிஞர்களை ஷெல்லி, கீட்ஸ், பைரன், வால்ட்விட்மன் முதலிய மேலை நாட்டுக் கவிஞர்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

கல்கி

(7) கல்கி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன் முதலிய தமிழ்ப் புனைகதை ஆசிரியர்களை, ஸ்காட், டி.எச்.லாரன்ஸ், மாப்பசான் முதலிய மேலைநாட்டு ஆசிரியர்களோடு ஒப்பிட்டுப் பல ஆய்வேடுகள் வெளிவந்துள்ளன.

2.3.4 மேலை நாட்டில் ஒப்பிலக்கியம் (1) சென்ற நூற்றாண்டின் ஃபிரான்சு நாட்டின் சிந்தனை மரபில் இது தொடங்கியது. மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இது அமெரிக்காவில் வளர்ச்சி பெற்றது.

(2) பிரான்சில் இலக்கிய வரலாற்றின் ஓர் அங்கமாக இது கருதப்பட்டது.

(3) அமெரிக்காவில் பரந்த நிலையில் வளர்ந்தது.

(4) ஒப்பீட்டுத் திறனாய்வு, இன்று வளர்ச்சி பெற்று ஒப்பிலக்கியம் (Comparative literative) என்ற தனி அறிவுத் துறையாக வளர்ந்துள்ளது.

ஒப்பிலக்கியம் என்பதற்கு அமெரிக்கா – இந்தியானா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹெச்.ஹெச்.ரீமாக் (

.

.Remack) கூறிய வரையறையே பெரிதும் பின்பற்றப்படுகிறது.

‘ஒப்பிலக்கியம் என்பது ஒரு நாட்டின் இலக்கியத்தை இன்னொரு நாட்டு இலக்கியத்தோடு ஒப்பிடுவது; இலக்கியங்களுக்கிடையேயான உறவுகளை ஒரு பக்கமும், சமுதாயவியல் தத்துவம் போன்ற துறைகளை இன்னொரு பக்கமுமாக ஒப்பிட்டுக் கூறுவது ; இலக்கியத்திற்கும், இசை, ஓவியம், கூத்து போன்ற கலை வடிவங்களுக்குமிடையேயான உறவுகளைக் கூறுவது’ என்று ரீமாக் குறிப்பிடுகிறார்.

இசை                      ஓவியம்                    கூத்து

2.3.5 ஒப்பிலக்கியம் – இன்றைய நிலை (1) இன்று பிரெஞ்சு ஒப்பிலக்கியக் கொள்கை, இலக்கியங்களோடு பிற கருத்து நிலைகளையோ, பிற கலைகளையோ ஒப்பிட்டுக் கூறுவதை ஏற்றுக் கொள்வதில்லை.

(2) இன்று ஒப்பிலக்கியம் தனித்துறையாக, ஆனால் திறனாய்வோடு தொடர்புடையதாக வளர்ந்துள்ளது.

(3) ஒப்பீட்டுத் திறனாய்வு என்பது, இலக்கியங்களை ஒப்பிடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஒரே மொழியிலுள்ள இலக்கியங்களையும் ஒரே படைப்பாளியின் வெவ்வேறு இலக்கியங்களையும், அதுபோல ஒரே நாட்டிலுள்ள வெவ்வேறு மொழி இலக்கியங்களையும் என்ற தளங்களில் இலக்கிய ஒப்பீடு நிகழ்த்தப்படுகின்றது.

2.4 பகுப்புமுறைத் திறனாய்வு

மனித அறிவுகளில் அடிப்படையானது, பகுத்தல், தொகுத்தல் ஆகிய அறிவு ஆகும். உலகத்துப் பொருள்களை ஒற்றுமை கருதியும், அவற்றிற்கிடையேயுள்ள சிறப்புப் பண்புகள் கொண்டு வேற்றுமை கருதியும், பகுத்தும், தொகுத்தும் பார்ப்பது அறிதலின் பண்பு ஆகும். இலக்கியத் திறனாய்விற்கும் இது வேண்டப்படுகின்ற பண்பாகும்.

பகுப்புமுறைத் திறனாய்வு (Analytical Criticism) என்பது குறிப்பிட்ட இலக்கியத்தின பண்புகள அல்லது கூறுகளை யாதாயினும் ஓர் அளவுகோல் அல்லது நோக்கம் கொண்டு பகுத்துக் காண்பது ஆகும். இவ்வாறு பகுத்தாய்வு செய்யும் போது, ஆய்வு செய்யப் படுகின்றவற்றின் முழுமை அல்லது தொகுதிக்கு முரணானதாகவோ, அதைச் சிதைப்பதாகவோ இருக்கக் கூடாது. உண்மையில் இதன் நோக்கம் என்னவென்றால் முழுமையின் சிறப்பினை அல்லது பண்பினை அதன் கூறுகளையும் உட்கூறுகளையும் கொண்டு ஆராய்வதாகும். ஒன்றுபட்டும், வேறுபட்டும் இருக்கிற தன்மைகளைக் கண்டுகொள்வது என்பது அவ்விலக்கியங்களின் சிறப்புக் கூறுகளால் புலப்படுகிறது. இத்தகைய பகுப்புமுறை, அடிப்படையான ஒரு வழி முறையாதலால் திறனாய்வுக்கு வேண்டப்படுகின்ற ஒரு வழிமுறையாக உள்ளது.

பகுப்புமுறைத் திறனாய்வுக்கு ஒர் எடுத்துக்காட்டு

திறனாய்வாளர்களில் சி.சு.செல்லப்பாவிடம் இத்தகைய திறனாய்வு காணப்படுகிறது. மௌனியின் மனக்கோலம் என்ற தலைப்பில் எழுத்து எனும் இதழில் வந்த அவருடைய கட்டுரைகள், மௌனியின் சிறுகதைகளிலுள்ள உத்திகளையும் உண்மை நிலைகளையும் வேறுபடுத்தி விவரிக்கின்றன. இதன் மூலமாகத் தமிழ்ச் சிறுகதைகளின் பண்புகளையும் சிறப்புகளையும் அவர் ஆராய்கிறார். இதனை ‘அலசல் முறைத் திறனாய்வு’ என்று அன்றைய திறனாய்வாளர்கள் அழைத்தனர். மேலும், அவருடைய தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது என்னும் நூல், வ.வே.சு.ஐயரின்

வ.வே.சு.ஐயர்

குளத்தங்கரை அரசமரம் முதற்கொண்டு பல சிறுகதைகள் எப்படி ஒன்றன்பின் ஒன்றாகக் கதைகூறும் பண்புகளில் மாற்றமும் வளர்ச்சியும் பெற்றிருக்கின்றன என்று விவரிக்கின்றது.

2.4.1 இன்றைய ஆராய்ச்சித்துறையும் பகுப்புமுறையும் பகுப்புமுறைத் திறனாய்வு, கல்வியியல் சார்ந்த ஆராய்ச்சிகளில், ஆய்வேடுகளில், வசதி கருதிப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, ஒரு படைப்பாளியின் புனைகதை உத்திகள் என்றால் பாத்திரப் படைப்பு, நோக்குநிலை, கதைப் பின்னல், தொடக்கமும் முடிவும், வருணிப்பு, மொழி நடை என்று மேல் அளவில் பல பகுப்புகளைக் கொண்டு ஆராய்கின்றனர். இத்தகைய போக்கில் பாத்திரப் படைப்பு என்னும் தலைப்பின் கீழ், ஒருநிலைப் பாத்திரம், மாறுநிலைப் பாத்திரம், தலைமைப் பாத்திரங்கள், துணைமைப் பாத்திரங்கள், உடனிலை – எதிர்நிலைப் பாத்திரங்கள் மற்றும் ஆண், பெண், இளையோர், முதியோர் என்ற உட்பகுப்புகளையும் கொண்டு ஆய்வு செய்கின்றனர். ஆனால், குறிப்பிட்ட இலக்கியத்தின் மொத்தமான கட்டமைப்புத் திறனையும் பாத்திரப் படைப்புகளின் சமூக இருப்புகளையும் மெய்ப் படுத்தாமல் வெறுமனே பகுத்துச் சொல்லும் இத்தகைய போக்கு இயந்திரத்தனமாகவும், பல சமயங்களில் மிகையாகவும் அமையக் கூடும். அதன் போது சலிப்பும் சொல் விரயமும் உடையதாக ஆகி விடுகிறது. தேவையறிந்து அளவறிந்து பயன்படுத்துகிறபோது திறனாய்வுக்கு அது அணிசேர்க்கவல்லதாக அமையும்.

2.5 தொகுப்புரை

திறனாய்வு வகைகள் என்பது திறனாய்வு செய்யப்படுகிற வழிமுறைகள் அல்லது செய்முறைகள் என்பதைக் குறிப்பதாகும். இது விளக்கமுறைத் திறனாய்விலிருந்து பல வகைகளாக அமைகின்றது.

இலக்கிய மதிப்பீடு என்பது, குறிப்பிட்ட இலக்கியத்தின் தரம், தகுதி, சிறப்பு, சீர்மை என்பவற்றைப் பேசுவதோடு, அவற்றின் கூறுகளும், பண்புகளும் இலக்கிய மதிப்பு உடையவனவா என்பதையும் பேசுகிறது.

ஒரு பொருளை, இன்னொரு பொருளோடு பொருத்தி வைத்துச் சார்பு நிலையில் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது அடிப்படையான ஒரு பார்வையாகும். அம்முறையில் அது ஒப்பீட்டுத் திறனாய்வு செய்வதாக அமைகிறது. இது பின்னர், ஒப்பீட்டு இலக்கியம் என்ற தனி ஆய்வுத் துறையாக வளர்ந்துள்ளது.

இலக்கியங்களின் சிறப்புப் பண்புகள் கருதி, அவற்றைப் பகுத்தும், தொகுத்தும் பார்ப்பது பகுப்புமுறைத் திறனாய்வாகும். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு தலைப்பில் பல்வேறு உள்தலைப்புகளை ஆராயும் போது அவ்விலக்கியத்தின் சிறப்பான பண்புகள் தெரிய ஏதுவாக அமையும்.

திறனாய்வு அணுகுமுறைகள் - I

3.0 பாட முன்னுரை

இலக்கியம், ஒரு கலையாக, ஒரு சாதனமாக, ஒரு சக்தியாக வருணிக்கப்படுகிறது. அது    நேரடியாகவும், மறைமுகமாகவும் பலவற்றைப் பொதிந்து வைத்தும் பேசுகிறது. இலக்கியத்தின் அத்தன்மைகளையும், அதனுடைய சாத்தியங்களையும் வழிகளையும் ஆராய்வது திறனாய்வு. இத்தகைய திறனாய்வை மேற்கொள்ளப் பின்பற்றப்படும் வழிமுறையே அணுகுமுறை எனப்படும். இவை பற்றிய செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

3.1 அணுகுமுறை

ஒரு குறிப்பிட்ட இலக்கியத்தை அல்லது பல இலக்கியங்களைக் கண்டு நெருங்கி அது பற்றிச் சொல்வதற்கு ஒரு வழிமுறை தேவைப்படுகிறது. அதனையே நாம் அணுகுமுறை என்கிறோம்.

அணுகு(ம்) + முறை = முறையாக நெருங்கும் முறை என்றும், அணுக்கம் என்பது நெருக்கம் என்றும் பொருள்படும். மேலும், அணுகுதல் என்பது நெருங்குதல் என்றும் குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் குறிப்பிட்ட இலக்கை நோக்கிச் செல்லுதல் என்றும் பொருள்படும். மேலும் அணுகுமுறை என்பதற்கு இலக்கியத்தோடும் இலக்கியத்தை வாசிப்பதோடும், வாசிக்கின்ற வாசகனோடும் நெருங்கியிருப்பது என்றும் பொருள் கூறலாம்.

எடுத்துக்காட்டாக, ஒரு மனிதனை இன்னொரு மனிதன் காண்பதற்கும், நன்கு பேசுவதற்கும், காரியங்களை ஈடேற்றுவதற்கும், அவன் ஒரு சில வழிமுறைகளைப் பின்பற்றுவான். அவ்வழிமுறையே அணுகுமுறை எனப்படும். மேலும் அணுகுமுறை என்பது கொள்கை அல்லது கோட்பாடுகளோடு இருப்பது ; உதாரணமாக மார்க்சியம் என்ற கொள்கையோடு கூடியது அல்லது அதன் வழிகாட்டுதலில் அமைவது மார்க்சிய அணுகுமுறை எனப்படும்.

3.1.1 அணுகுமுறையின் இன்றியமையாமை ஓர் இலக்கியத்தைச் சுவைப்பது என்பது வேறு ; திறனாய்வு செய்வது என்பது வேறு. சுவைப்பதற்கு அணுகுமுறை தேவையில்லை. ஆனால் திறனாய்வதற்கு அணுகுமுறை என்பது இன்றிமையாததாகின்றது.

திறனாய்வு ஒரு அறிவுத்தேடலாக அமைந்திருக்கின்றதென்றால் அதற்கு அடிப்படையாக இருப்பது குறிப்பிட்ட ஒரு கொள்கையோடு கூடிய அணுகுமுறையாகும். சரியான பாதையைத் தேர்ந்தெடுக்காவிட்டால் சரியான இலக்கை நோக்கிப் போக முடியாது. அதுபோலவே சரியான அணுகுமுறை அமைந்திருப்பது திறனாய்வு சிறப்பாக அமைவதற்கு அவசியமாகும். சில வேளைகளில் அணுகுமுறை தவறானதாக இருந்தால், தவறான கருத்தே முடிவாகக் கிடைக்கும்.

ஆய்வுக் கடலைக் கடக்கும் மரக்கலம்

அணுகுமுறையின் இன்றியமையாமை என்பது இலக்கியத்தின் செய்ந்நேர்த்தியை, கலையழகை, அவ்விலக்கியத்தின் சிறப்பை என எல்லாவற்றையும் அவ்விலக்கியத்தின் வழியே சென்று கண்டவறிவதாகும். அதுபோலவே இலக்கியத்தின் பாடுபொருள் மற்றும் அதன் சமூகவியல், உளவியல், வரலாற்றியல் கூறுகளைச் சரியான வழிமுறை இல்லாமல் காண முடியாது. இவற்றைக் காண அணுகுமுறை இன்றியமையாதாகின்றது. மேலும், அணுகுமுறை என்பது திறனாய்வுக்கும், திறனாய்வாளனுக்கும் மட்டுமில்லாமல், இலக்கிய ஆராய்ச்சி செய்யும் எம்ஃபில் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகளுக்கும் இன்றியமையாததாகின்றது. சுருக்கமாகச் சொன்னால் ஆய்வு என்ற கடலினைக் கடக்க உதவும் மரக்கலம் போன்றது அணுகுமுறை எனலாம்.

3.1.2 ஆய்வுப் பொருளும் அணுகுமுறையும் திறனாய்வு என்பது இலக்கியத்தின் மீது அமைவது. ஆனால் இலக்கியம் என்பது மக்களின் வாழ்க்கை மீதும் படைப்புத் திறன் மீதும் அமைவது. வாழ்க்கை என்பதோ விசாலமும், ஆழமும் கொண்டது. புதிர்களும் கொண்டது. அதுபோலவே இலக்கியமும். இலக்கியம் மேலும் கலையழகும் நுட்பமும் கொண்டது. இதில், திறனாய்வின் பணி அந்நுட்பத்தையும் கலையழகையும் வெளிக்கொணர்வது ஆகும். இவ்வெளிக்கொணர்வுக்கு வழிகாட்டல் அணுகுமுறையாகும். குறிப்பிட்ட அணுகுமுறை குறிப்பிட்ட ஓர் இலக்கியத்திற்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கலாம். அதேபோல இன்னோர் இலக்கியத்திற்குப் பொருந்தாமல் போய்விடலாம். ஏனெனில் ஆய்வுப் பொருள் ஒரு திறத்ததானது அல்ல; பல திறத்ததானது. இந்தத் திறனாய்வுப் பொருட்களைச் சரியான அணுகுமுறையின் மூலம் கண்டறிய வேண்டியிருக்கிறது. மேலும் அணுகுமுறை என்பது,

(1) திறனாய்வாளனுடைய அறிவுப்பரப்பு, அவனுடைய பயிற்சி, அவனது அனுபவம், தேவை, நோக்கம் ஆகியவற்றைப் பொறுத்தது.

(2) இலக்கியத்தில் பெரும்பான்மையாக இருக்கின்ற அதன் பண்பு, போக்கு, அதன் அவசியம், அதன் கொள்கை முதலியவற்றையும் அடியொற்றி அமைகிறது.

இத்தகைய அணுகுமுறையில் இவ்ஆய்வுக்கு எது மிகச் சரியாகப் பொருந்தும் என்ற கணிப்பு மிக அவசியம். உதாரணமாக, கற்புநிலை பற்றிப் பேசவந்த பொன்னகரம் என்னும் புதுமைப்பித்தனுடைய கதைக்கு ஏற்புடைய அணுகுமுறை, காதல் பற்றியும் அது சார்ந்த உளவியல் பற்றியும் பேசும். இது கு.ப.ராஜகோபாலனுடைய கதைகளுக்கு அப்படியே பொருந்துவதாக அமையாது.

ஒரு பொருள் குறித்த பல வகை அணுகுமுறைகள்

மேலும் காதல் என்பது ஆய்வாளன் மேற்கொண்டுள்ள ஓர் ஆய்வுப்பொருள் என்று கொள்வோமேயானால், அதனை உளவியல் முறையிலும் அணுகலாம். சமுதாயவியல் அணுகுமுறையின் மூலமும் அதனுடைய பல்வேறு தளங்களை அறியலாம். வரலாற்றியல் அடிப்படையில் காதலின் பல பரிமாணங்களையும் அறிந்து கூறலாம். சங்க இலக்கியத்தில் காதல் பாடுபொருளாக இடம்பெற்றுள்ளதையும் இன்றைய சிறுகதைகள் மற்றும் நாவல்களில் காதல் இடம்பெறுவதையும் அதற்குரிய சூழலையும் ஆராயலாம். எவ்வாறாயினும், குறிப்பிட்ட ஆய்வுப் பொருளை, குறிப்பிட்ட நோக்கத்திலும் குறிப்பிட்ட கொள்கையாலும் கண்டு விளக்குவதற்கு அணுகுமுறை பயன்படுகிறது.

3.1.3 இலக்கியமும் அணுகுமுறையும் ஓர் இலக்கியத்தைத் திறனாயும்போது, ஆய்வுப்பொருள் என்ன என்பதற்கு ஏற்ப அணுகுமுறை மாறும். காட்டாக, திருக்குறள் என்பது ஓர் இலக்கியம். ஆனால் அதனுள் நூற்றுக்கணக்கான ஆய்வுப்பொருள்கள் உண்டு. திருக்குறளைத் திறனாய்ந்த சான்றோர்கள் திருக்குறளில் ஆராய்ந்து கண்ட எண்ணிறந்த ஆய்வுப்பொருள்களுக்கும் அவற்றிற்குரிய அணுகுமுறை என்பது உண்டு. அதேபோல, அகம், புறம், அறம், பக்தி, காவியம், சிற்றிலக்கியம் என்ற ஒவ்வோர் இலக்கிய வகைக்கு ஏற்பவும் ஆய்வின் அணுகுமுறை மாறும். மேலும் தேவை, நோக்கம், கொள்கை முதலியவற்றிற்கு ஏற்பவும் இது மாறும் தன்மையுடையது.

இலக்கிய அணுகுமுறைக்குப் பின்புலமாக உள்ள கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியவை ஒன்றாக இருப்பினும் வழிமுறை, உத்திகள் முறையியலுக்கு உரிய கருவிகள், கருதுகோள்கள், முடிபுகள் வேறுபாடாக இருக்கலாம். எனவேதான் கவிதைத் திறனாய்வு, நாவல் அல்லது சிறுகதைத் திறனாய்வு என்று வேறு வேறு முறைகளில் திறனாய்வு அமைந்துள்ளது.

சரியான அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பதே சரியான திறனாய்வுக்கு வழிவகுக்கிறது. பொருத்தமான அணுகுமுறையிலிருந்துதான் திறனாய்வின் வெற்றி தொடங்குகிறது எனலாம்.

3.2 அணுகுமுறை வகைகள்

அணுகுமுறை என்பது இலக்கியம் பற்றிய மற்றும் சமூகம் பற்றிய பார்வைக் கோணத்தை அடித்தளமாகக் கொண்டதாகும். அந்த அடிப்படையில் அணுகுமுறைகள், பல வகைகளாக அமைந்திருக்கின்றன. மேலும் ஓர் இலக்கியத்திற்கே கூட அதன் தேவையையும் பண்பையும் ஒட்டி, ஒன்றிற்கும் மேற்பட்ட அணுகுமுறைகள் தேவைப்படக் கூடும் என்று வெயின் பூத் என்ற அறிஞர் கூறுகிறார். இக்கூற்றின் மூலம், அணுகுமுறைகள் பல வகைகளாக அமைந்திருக்கின்றன என்ற செய்தியை உணரமுடிகின்றது.

பல்வேறு அணுகுமுறைகள்

வில்பர் ஸ்காட் (Wilbur scott) எனும் அறிஞர், திறனாய்வில் ஐந்து அணுகுமுறைகளை இனங்கண்டறிந்து சொல்கிறார். இலக்கியத் திறனாய்வின் ஐந்து அணுகுமுறைகள் (Five Approaches of literature.) என்பது அவரது புகழ்பெற்ற நூல். அதில் அவர் கூறும் ஐந்து அணுகுமுறைகள் பின்வருவன :

(1) அறிவியல் அணுகுமுறை ( அறிவியல் குறிக்கோள்களும் இலக்கியமும்)

(2) உளவியல் அணுகுமுறை (உளவியல் கோட்பாட்டு் வெளிச்சத்தின் இலக்கியம்)

(3) சமுதாயவியல் அணுகுமுறை ( சமுதாயக் குறிக்கோள்களும் இலக்கியமும்)

(4) உருவவியல் அணுகுமுறை (அழகியல், அமைப்புப் பார்வையில் இலக்கியம்)

(5) தொல்படிமவியல் அணுகுமுறை (தொன்மங்களின் ஒளியில் இலக்கியம்)

இவ்வாறு வில்பர் ஸ்காட், ஐந்து அணுகுமுறைகளைப் பேசுகிறார். ஆனால் இவ்வைந்து முறைகள் மட்டுமே அணுகுமுறைகள் என்று சொல்லமுடியாது. இவற்றைத் தவிரவும் பல அணுகுமுறைகள் உண்டு. இலக்கியத்தின் தேவைக்கேற்ப இவை அமைகின்றன. அவை :

(1) வரலாற்றியல் அணுகுமுறை

(2) இலக்கிய வகைமையியல் அணுகுமுறை

(3) மானுடவியல் அணுகுமுறை

(4) மார்க்சிய அணுகுமுறை

(5) தத்துவவியல் அணுகுமுறை

(6) அழகியல் அணுகுமுறை

(7) மொழியியல் அணுகுமுறை

(8) பகுப்பியல் அணுகுமுறை

(9) ஒப்பியல் அணுகுமுறை

(10) அமைப்பியல் அணுகுமுறை

(11) பின்னை அமைப்பியல் அணுகுமுறை

(12) பின்னை நவீனத்துவ அணுகுமுறை

(13) தலித்திய அணுகுமுறை

(14) பெண்ணிய அணுகுமுறை

மேற்கூறிய வகைகள், அணுகுமுறைகளை விரிவாகப் பேசுபவை ஆகும். திறனாய்வின் தேவையையும் வளர்ந்து வருகின்ற காலத்தின் சூழலையும் அடிப்படையாகக் கொண்டு இவற்றில் சில குறையலாம்; கூடலாம்.

3.2.1 அணுகுமுறை அமையும் விதம் திறனாய்வுக்கு அணுகுமுறை இன்றியமையாததென்றால், அந்த அணுகுமுறை பொருத்தமானதாக இருக்கவேண்டும். பொருத்தமாக அமையவில்லை என்றால் அது பிழைபட்ட முடிவுகளையே தரும். அவ்வாறானால் பொருத்தமான அணுகுமுறை எதனடிப்படையில் அமையும் என்பது குறித்துக் காண்போம்.

(1) இலக்கியத்தின் பொதுவான தன்மைகளும், இலக்கியம் எழுந்த சூழலமைவுகளும்

(2) குறிப்பிட்ட இலக்கியத்தின் போக்கு அல்லது செல்நெறி

(3) இலக்கியத்தின் பாடுபொருள்

(4) இலக்கியத்தில் மையமாக இருக்கின்ற குறிப்பிட்ட கொள்கை அல்லது கோட்பாடு

(5) இலக்கியத்தின் கலை மற்றும் உருவவியல் உத்திகள்

இவற்றைத் தவிர, திறனாய்வு செய்கின்றவனுடைய சில பண்புகள் அல்லது திறன்கள் அவனுடைய அணுகுமுறைத் தேர்வுக்குப் பெரிதும் உதவுகின்றன. அவை :

(1) திறனாய்வாளனுடைய தேவையும், நோக்கமும்

(2) திறனாய்வாளனுடைய தேர்ச்சியும், பயிற்சியும்

(3) திறனாய்வாளன் அறிந்துள்ள இலக்கியக் கோட்பாடுகள்

(4) திறனாய்வாளனுடைய உலகக் கண்ணோட்டம்

என்பனவாகும்.

திறனாய்வாளனின் கண்கள்

மேலும் அணுகுமுறையின் தேர்வு மட்டுமில்லாமல், திறனாய்வுக்குரிய இலக்கியத் தேர்வும் இதனடிப்படையிலேயே அமைகிறது. பொருத்தமான இலக்கியம், பொருத்தமான அணுகுமுறை இவ்விரண்டும் திறனாய்வாளனுடைய இரண்டு கண்களாகும்.

கைலாசபதியின் அணுகுமுறை

சான்றாக, கலாநிதி கைலாசபதி அவர்கள் சங்க இலக்கியத்தை ஆராய்வதற்கு அறிவியல் பூர்வமான சமுதாயவியல் அணுகுமுறையை மிகப் பொருத்தமான முறையில் தேர்ந்தெடுத்தார். இதன் காரணத்தினால், அன்றைத் தமிழர்தம் வாழ்க்கையை இதுவரை யாரும் சொல்லாத வகையில் புலப்படுத்தியிருக்கிறார். அதுபோல அவர் தமிழ் நாவல் இலக்கியத்தை அதன் பல்வேறு பரிமாணங்கள் வெளிப்படும் வகையில் வரலாற்றியல் அணுகுமுறை மூலம் ஆராய்ந்திருக்கிறார் என்பதைச் சுட்டலாம்.

அணுகுமுறையும் திறனாய்வும்

சரியான அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பதே சரியான திறனாய்வுக்கு அடிகோலுகிறது. திறனாய்வின் வெற்றி, ஏற்கனவே நாம் சொன்னது போன்று பொருத்தமான அணுகுமுறையிலிருந்துதான் தொடங்குகிறது. அணுகுமுறைகள் பல திறத்தன என்று சொல்வோம். அவற்றை இனி, விரிவாகப் பார்க்கலாம். முதலில், அழகியல் அணுகுமுறை பற்றி இந்தப் பாடத்தில் பார்க்கலாம்.

3.3 அழகியல் அணுகுமுறை

இலக்கியத் திறனாய்வில், அழகியல் அணுகுமுறை (Aesthetic Approach) புகழ்பெற்றதும் பழைமையானதுமான ஓர் அணுகுமுறையாகும். மேலும், வரையறுக்கப்பட்ட எந்தவிதக் கட்டுப்பாடுகளுக்கும் உட்படாமல் மனரீதியான ரசனைகளையும், அவற்றின் வெளிப்பாட்டையும் பதிவு செய்வதால், பலராலும் இவ்வணுகுமுறை, ஆர்வம் காட்டப்படுகிறது. எனவே, பல அணுகுமுறைகளைப் பற்றிப் பேசவிருக்கிற நாம், முதலில் அழகியல் அணுகுமுறை பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

அழகியல்

இலக்கியத் திறனாய்விற்கு அழகியல் என்பது அடிப்படையாக அமைகிறது. அழகியல் என்பதனை ரசனை என்றும் குறிக்கலாம். ஒரு சாதாரண மனிதனுக்குத் திறனாய்வுத் திறன் இல்லாவிட்டாலும், ஒரு படைப்பை ரசிக்கும் திறனாவது இருக்கும் ; இருக்க வேண்டும். இந்த ரசனையே பல்வேறு திறனாய்வுகளுக்கு அவனை இட்டுச் செல்லும். இது மொழியால் அமைவதல்ல: மனதால் அமைவது.

இங்ஙனம் அழகியல் என்பது, கலைப்படைப்பின் அழகினை அனுபவிக்கும் ஒவ்வொரு வாசகருக்குள்ளும், ஒரு மனமகிழ்வு, மன அமைதி, ரசிப்புத் தன்மை உருவாகியிருப்பதைக் குறிக்கின்றது.

படிப்பவரின் பங்கீடு

ரசனைமுறை, அழகியல் இரண்டுமே அடிப்படையில் ஒன்றுதான். அழகியல் அணுகுமுறையானது படைப்பவரை விடப் படிப்பவரின் பங்கீட்டை வெளிக்காட்டுகின்றது. இதற்குக் காரணம், படிப்பவரின் வாழ்க்கை அனுபவங்கள், அவர் படிக்கும் படைப்பிலே சந்திக்கும் அனுபவங்களோடு ஒத்துப்போவதுதான் எனலாம். வாசகர் ஒருவர் தன் நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை, படைப்பாளி ஒருவர் தம் படைப்பில் படைத்துள்ளார் எனில், அதைப் படிக்கும் வாசகர் ஓர் இனிய அனுபவத்தைப் பெறுவார் என்பதில் வியப்பில்லை.

3.3.1 அழகியல் – வரையறை இம்மானுவேல் காண்ட்

அழகியலை மேலைநாட்டு அறிஞர்கள் பலர் வரையறை செய்துள்ளனர். அழகியல் அணுகுமுறைக் கோட்பாட்டில் முன்னோடியாகத் திகழும் இம்மானுவேல் காண்ட் என்ற அறிஞர் “புலனின்பமும் அழகும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “அழகு என்பது தற்செயலான மற்றும் தனிப்பட்ட புலன் இன்ப நுகர்ச்சிகளைவிட மேன்மையானது. மனித அங்கீகாரத்தின் மீது உயர்வானதொரு உரிமையும் இதற்கு உண்டு. இந்த அழகை அனுபவிப்பது என்பது இயற்கையையும், இயற்கை வடிவத்திலுள்ள முறையையும் அறிதல் என்பதோடு உறவு கொண்டது” என்கிறார். மேலும், அழகியல் அணுகுமுறை ‘சுயாதிக்கமானது’ (Autonomy) என்பதும் அவர் கருத்தாகும்.

வாழ்க்கை என்பது அனைவரும் ஒரே மாதிரியாக ருசிக்கத்தகுந்த ஒரே வகைப் பண்டமல்ல. அவரவருக்குத் தனித்தனியான அனுபவங்களும், ரசனைகளும், விருப்பு வெறுப்புகளும் உண்டு. பலருக்கும் ஒத்த உணர்வுகள் ஏற்பட வழி உண்டெனினும் அவை நீடிக்கும் தன்மை உடையன அல்ல. இங்ஙனமான வாழ்வில் தனிப்பட்ட ஒருவரால் அளிக்கப்பெறும் படைப்பு, பலராலும் விரும்பப்படும் ஒன்றாகவும் அல்லது வெறுக்கப்படும் ஒன்றாகவும் கருத வழியுண்டு. இது அழகியல் அனுபவத்தில் இயற்கையாகவும் தவிர்க்க முடியாததாகவும் அமைகிற ஒன்று. இவ்வாறு அமெரிக்கக் கலைக்களஞ்சியம் ( Encyclopedia Americana ) அழகியல் பற்றி வரையறை செய்கிறது.

3.3.2 அழகியல் அணுகுமுறை விவாதம் திறனாய்வில் ஏற்படும் பெரிய பிரச்சினைகளில் ஒன்று, உருவம் – உள்ளடக்கம் பற்றியதாகும். இவற்றுள் எது முதன்மையானது எது முக்கியமானது – என்பது நீண்ட காலமாக இருந்து வரும் விவாதம் ஆகும். இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை; இரண்டும் தத்தம் அளவில் முக்கியமானவையே என்று பலராலும் சொல்லப்பட்டு வந்தாலும், இந்தப் பிரச்சினை இன்னும் பேசப்பட்டுத்தான் வருகிறது.

சொல்லும் விதம்

உருவமே முதன்மையானது ; அதுவே இலக்கியத்திற்குக் கலையழகைத் தரக்கூடியது என்பதும், இலக்கியத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிட எப்படி சொல்லப் பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும் என்பதுமே அழகியல் திறனாய்வு பற்றிய விவாதத்தின் அடிப்படையாகும்.

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்துள் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்

பரத்துள் மறைந்தது பார்முதற் பூதம்

திருமூலர்

என்ற திருமூலர் பாடலில், உருவத்தைப் பிரதானப்படுத்துபவர்கள், மயக்கம் தரும் இந்நடையினை ரசித்தலே இதில் முக்கியம் என்பர். உள்ளடக்கத்தினை மையப்படுத்திக் காண்கின்றவர்கள் இதில் பொதிந்துகிடக்கின்ற தத்துவத்தை எடுத்துக்காட்டுவர். ஆனால், உருவமே பிரதானம் என்று வாதிடுவோர், இதன் பொருளில் ஆழ்ந்து விடாமலும் அக்கறை செலுத்தாமலும் கவிதை அழகிலும், நடையழகிலும் கவர்ந்து போகின்றனர்.

உள்ளடக்கமும் உருவமும்

உருவத்தையும் அதன் அழகையும் மையப்படுத்தும் அழகியல் அணுகுமுறை உள்ளடக்கத்தால் சிறப்புப் பெறும் அறநூல்களை – நீதி சொல்லும் இலக்கியங்களை ஏற்றுக்கொள்ளத் தயங்குவர். நீதி சொல்பவை கலைத்தன்மையுடையன அல்ல என்றால் குறளும் நாலடியாரும் கலைத்தன்மை உடையன அல்ல என்றாகிவிடுமே. ஆனால், அப்படி அவை ஆவதில்லை. அவற்றில், உவமையும், உருவகமும், குறியீடும், சொல்லும் ஓசையும் சரியான அளவில் கலந்து இருக்கின்றன. எனவே, உள்ளடக்கம்தான் கட்டுமானப் பணிக்கான அமைப்பைத் தருகிறதே தவிர உருவத்திற்காக யாரும் உள்ளடக்கத்தினைப் புகுத்திக் கொள்வதில்லை. இது, குழந்தை பிறந்த பிறகு அதற்கு உயிரை ஊட்டுவது என்று சொல்வது போலாகும்.

ஒரு கலைப்படைப்பு, பொருளில்லாது இருக்குமானால் அது உயிரற்ற உடம்புதான். வெறும் உடம்பினால் என்ன பயன்? உயிர் இல்லாத உடம்பின் உறுப்புகளை எத்தனைக் காலம், என்ன கருத்திற்காக ரசித்துக் கொண்டும், பாராட்டிக் கொண்டும் இருக்கமுடியும்? இவையெல்லாம் உள்ளடக்கத்தினர் வாதம் ஆகும். மேலும்,

தத்தித்தா தூதூதி தாதூதித் தத்துதி

துத்தித் துதைதி துதைத்ததா தூதூதி

தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த

தெத்தாதோ தித்தித்த தூது

என்னும் செய்யுளில், தகர மெய் விளையாடுகின்றது. ஒரே ஒரு சிறு செய்தியைக் கூறும் இதை எந்த மதிப்பீட்டிற்காகப் பாராட்ட முடியும்? உருவத்தின் பிரமிப்பில் எத்தனை நாள் ஆழ்ந்து போக முடியும்.

கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக

என்ற குறளில் உள்ளடக்கத்திலும் குறைவு வரவில்லை. அதனை எடுத்துச் சொல்லும் கவிதையழகிலும் குறையவில்லை.

எனவே, உருவம்-உள்ளடக்கம் இவற்றுள் எது முதன்மையானது என்பதல்ல பிரச்சனை. உண்மையில் இவை இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை. தத்தம் அளவில் முக்கியமானவை. உருவமும், உள்ளடக்கமும் அழகியலின் பகுதிகளாகும். உருவத்தில் சொல்லிலும் ஓசையிலும் காணக்கூடிய உணர்ச்சி வடிவங்கள், உவம, உருவகங்கள், ஆர்வத் தூண்டல்கள் முதலியவை அழகியல் கூறுகளாக அமைகின்றன .ஆயின், அழகியல் அல்லது ரசனைமுறைத் திறனாய்வு, உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தாமல், உருவத்தின் நேர்த்தியிலேயே கவனம் செலுத்துகிறது.

3.3.3 அழகியலும் கவிதையும் கவிதையைப் பொறுத்தமட்டும், என்ன என்பதைவிட எப்படி என்பதுதான் சிறப்பானது. மனித அனுபவத்தையே மனிதனுக்கு எடுத்துச் சொன்னாலும் அழகான மொழியில், அவனுக்குப் புரியும் மொழியில், அவனுக்குப் பிடித்த முறையில், என்றென்றும் அவன் நெஞ்சத்தில் அக்கவிதை உல்லாசமாக உலாவித் திரியும்படி செய்யவல்ல ஆற்றல் கவிதைக்கு உண்டு. இச்சிறப்பு, கவிதைக்கு வாய்த்திருப்பதால் எல்லோரும் அதைப் பாராட்டுகின்றனர். பாட்டைப் படித்தால் எத்தனை சுகம்! எத்தனை இன்பம்! சந்த ஒலியின் பெருமுழக்கத்தில் செவி நனைகின்றது.

கலையழகு

சாதாரணமாக, இயல்பாக ஒரு செய்தி சொல்லப்படுமானால், அதனைக் கேட்பவர் விரும்பிக் கேட்பதில்லை. கேட்பவரை, எழுந்திருக்கவிடாமல் ஈடுபாடு கொள்ளச் செய்வது அதனுடைய அழகு சார்ந்த பகுதியாகும். கவிதைக்கு அல்லது இலக்கியத்திற்கு அந்த இயல்பு உண்டு. இலக்கியம், இலக்கியம் அல்லாதது (Non-literary) என்ற வேற்றுமைக்குக் காரணம், கலையழகே யாகும். எனவே அழகியல், கவிதைக்குக் கவிதைத் தன்மையைத் (Poeticalness) தருகிறது.

வழங்கப்படும் முறை

நாம் வெளிப்படையான உண்மைச் செய்தியைப் படிக்க மட்டுமா கவிதையை வாசிக்கிறோம். அது வழங்கப்படுகின்ற முறை, அதன் நயம் மற்றும் இன்பத்திற்காகவும்தானே வாசிக்கிறோம். பாடல்களில் பயின்று வரும் சந்த விளையாட்டுகளையும், ஓசையின்பங்களையும் கவனித்தால், எத்தனை முறை வேண்டுமானாலும் வாய் சலியாது, செவி சலியாது, மனமும் சலியாது படித்துக்கொண்டே இருக்கலாம் போலத் தெரிகிறது. இது அழகியல் அணுகுமுறை அல்லது ரசனைமுறைத் திறனாய்வின் குரலாகும்.

3.3.4 டி.கே.சிதம்பரநாதனாரும் ரசனையும் “கவிக்கு விஷயமல்ல – உருவமே பிரதானம்”, இது ரசனைமுறைத் திறனாய்வின் முன்னோடியும், அதனை ஓர் இயக்கம் போலவே நடத்தியவருமான டி.கே.சிதம்பரநாத முதலியாரின் அறிவிப்பு. மேலும் அவர், ரசனை முறைகளிலேயே இலக்கியத்தைப் பார்த்தார், பேசினார், படைத்தார். இதனால்தான் ரசிகமணி டி.கே.சி. என்ற பெருமையும் பெற்றார்.

கவிதையின் அழகு

இலக்கிய ரசனைக்குக் ‘கவிதையே’ உகந்ததாக இவருக்குப் பட்டது. எளிமை, சந்தம், தாளம், லயம், உணர்வு இவையே, இவருடைய ரசனை முறைக்கு அடிப்படைகளாகும். இவற்றிற்கெல்லாம் கவிதையே இடம் தருவதாக இவருக்குத் தோன்றியது. மேலும் கவிதையின் அழகில் லயித்துப்போய்ப் பொருள் விளக்கம் தருவதும் இவரது வழக்கமாகும். டி.கே.சி. விஷயம், உணர்ச்சி ஆகியவற்றை உருவத்தின் காரியங்களே என்கிறார். சாமானியமாய் அல்லது காரியம் ஒன்றைக் கண்ட மாத்திரத்தில், உள்ளத்தில் எழுகிற உணர்ச்சியை அற்புதரசமாக அவர் வருணிக்கிறார். இவ்வாறு அற்புத ரசம் எழுகின்றபோது அதற்கு உருவம் ஏற்பட்டுக் கலை பிறக்கிறது என்கிறார்.

கவிதையில் எளிமை

ரசனை முறைத் திறனாய்வின் இன்னொரு முக்கியமான பண்பு எளிமையாகக் கவிதைகள் அமையவேண்டும் என்பதாகும். ரசிப்பதற்குச் சிரமம் இருக்கக்கூடாது. உடனடியாகப் புரிந்துவிடும் படி அமைக்க வேண்டும். இவ் அளவுகோலையே டி.கே.சி கொண்டிருந்தார். இக்காரணத்தினாலேயே சங்க இலக்கியத்தை இவர் புறக்கணித்தார். நீண்ட காலங்களின் இடைவெளி காரணமாகச் சங்க இலக்கியச் சொற்கள் கடினமாக இருக்கின்றன. பொருள் புரிதலிலும் சிரமம் இருக்கின்றது என்பது இவர் வாதம். மேலும், தாளம், லயம், சந்தம் முதலியன இல்லாவிட்டால் குரல் எழுப்பி ரசித்துச் சுவைக்க முடியாது என்பது இவருடைய கருத்தாகும்.

3.3.5 அழகியலில் மனப்பதிவு அழகியல் அணுகுமுறையில் பதிந்துள்ள உள்தோற்றம், மனப்பதிவு ஆகும். இது, கலைஞனின் அனுபவங்கள் ஒன்று மட்டும், அதிகமாக அனுபவிக்கப்பட்டு, சுக அனுபவம் பெறுகிற நிலைக்குத் தள்ளப்படுகின்ற ஒரு நிலை எனலாம். ஏன், எப்படி என்ற காரண காரியங்களுக்கு உட்படாதது. இது, தனிப்பட்ட ஒருவரின் மனதைப் பொறுத்தது. மனப்பதிவு முறை என்பது நேரிடையான ஒரு படைப்பின் மீதான பொருளைத் தகர்த்து வேறொரு தளத்திற்குக் கொண்டு செல்லவும் செய்கிறது. ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்கிற பாரதியின் கோபத்தைப் பசுமைப்புரட்சிப் பக்கம் திருப்பி விட்டவர்களும் இத்தகையவர்களே. அவர்கள் பாரதியின் கூற்றை வைத்து, ஜகத்தினை அழிக்க முற்பட்டால் தினமும் அல்லது ஒவ்வொரு நொடியும் உலகத்தை அழித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்று கிண்டல்பேசி, பாரதி சொன்னது, ஜகம் என்ற காட்டை அழித்துப் பயிர்களை உண்டு பண்ணிப் பசித்தவர்களுக்குச் சோறு போடவேண்டும் என்பதுவே என்று புதுப் பொருள் விளக்கம் அளித்தார்கள். இப்போக்கு, சங்க இலக்கியத்தினையும் விட்டுவைக்கவில்லை. சங்க இலக்கியத்தின் திணை என்பது, அடிப்படையில் நிலமும், பொழுதும் இயற்கையுமெனக் குறிக்கப்பட்டது. இயற்கையின் பதிவு தானே தவிர, தலைவன் தலைவிக்குக் கூறியது, தலைவி தோழிக்குக் கூறியது என்பதெல்லாம் பின்னால் வந்தவர்களின் தலையீடு என்றார்கள்.

மேலும், தாளம், லயம், எளிமை என்ற அளவுகோல்களையும் சொந்த விருப்பு வெறுப்புகளையும் கொண்டு இவர்கள் திருக்குறள் என்பது இலக்கியமே அல்ல என்று கூறுவதற்குக்கூடத் தயங்கவில்லை. ஆனால் இங்ஙனம் குறிப்பிட்டது காழ்ப்புணர்வோடு கூடிய சிலரது மனப்பதிவு முறையே யாகும்.

3.4 அழகியல் திறனாய்வில் முன்னோடிகள்

அழகியல் திறனாய்வின் முன்னோடிகள் பலர். அவர்களைப் பற்றி இனிப் பார்ப்போம்.

டி.கே.சியும் குழுவினரும்

தமிழ் இலக்கியத்தில் இத்தகைய ரசனை பற்றிப் பேசுபவர்கள் ரசிகமணி டி.கே.சி மற்றும் அவர்குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களுள் கல்கி, ராஜாஜி, பேராசிரியர் அ.சீனிவாசராகவன், பேராசிரியர் ஆ.முத்துசிவன், பி.ஸ்ரீ., நீதிபதி எஸ்.மகாராஜன், தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், வித்துவான் ல.சண்முகசுந்தரம் முதலியவர்கள் முக்கியமானவர்கள். இவர்கள் ரசிகமணியின் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களன்றியும், இவர்களுக்குப் பின்னால், பலர் இந்த அணுகுமுறையைப் பின்பற்றினார்கள்.

வ.வே.சு. அய்யர்

மேலைநாட்டுத் திறனாய்வின் அறிமுகத்துடன் தமிழ்ச்சூழலை அணுகியவர் வ.வே.சு.அய்யர். இவரது பார்வை, அழகியலுக்கு உட்பட்டது. அவர் முதலில் சுவை அல்லது பேருணர்ச்சி என்ற அளவுகோலினை வரையறுத்துக் கொண்டார். ரசனை பற்றிய அவர் கருத்து என்னவெனில் “கதையின் ஓட்டத்தையும், கம்பரசனைகளின் அமைப்பையும் ரசிகன் இருதயத்திற்குள் திருப்தி அளிக்கும்படி பொருத்தமாகச் சேர்த்து வைத்து எழுதுவதே ரசனையாகும்” என்பதாகும்.

க.நா.சுப்பிரமணியம்

இலக்கியம் என்பது கொள்கை, கோட்பாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனமல்ல. அது உள்ெளாளி உடையது. ஓர் இலக்கியத்தினிடம் அகவயமான வாசிப்புடன்தான் தொடர்புகொள்ள முடியுமே தவிர, புறவயமான வாசிப்புகளால் அல்ல என்பது அழகியல் வாதத்தினர் முன் வைத்த கருத்தாக இருந்தது. இதில் க.நா.சுப்பிரமணியம் குறிப்பிடத்தக்கவர். அவர் தன் கவிதைகளைப் பற்றிப் பேசுகிற போது “வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக இருப்பது போலவே என் கவிதையும் சிக்கலும் சிடுக்கும் நிரம்பியதாக இருக்கவேண்டும் என்பதே என் ஆசை. தெளிவு தொனிக்க வேண்டும ஆனால் சிக்கல் விடுவிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். கவிதை நயம் எது என்று எடுத்துச் சொல்லக் கூடியதாக இருக்க வேண்டும். புரியவில்லை போல இருக்கவேண்டும். அதே சமயம் பூராவும் புரியாமல் இருந்துவிடக்கூடாது. திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்து, பின் உள்ளத்தைப் பிடித்துக் கொள்ளும் குணம் கொண்டதாக இருக்க வேண்டும்” என்று பேசுகிறார்.

தளங்கள்

அழகியல் திறனாய்வினை மேலைநாட்டு ஒளியில், ஒரு கொள்கையாகச் செய்தவர்கள் க.நா.சுப்பிரமணியமும் மற்றும் அவர் வழி வந்தவர்களும் ஆவர். மனப்பதிவு முறைத் திறனாய்வு இவர்களின் முறை. டி.கே.சி முதலியவர்கள், அழகியல் அணுகுமுறைக்கு உரிய தளமாகக் கவிதையைத் தேர்ந்தெடுத்தார்கள். பின்னால் வந்தவர்கள் நவீனவாதிகள். இவர்கள் உரைநடை இலக்கியத்தைத் தளமாகக் கொண்டார்கள். சிறுகதையும் நாவலும், இவர்களால் அழகியல் அணுகுமுறைக்குத் தளங்களாயின

கம்பராமாயண ரசனை

கம்பராமாயணம்

டி.கே.சி தன்னுடைய ரசனைக்கு அதிகமாக உட்படுத்திய இலக்கியம், கம்பராமாயணமே யாகும். கம்பனை மிகவும் சுவைபட ரசித்துச் சொன்னவர் அவர். தாளம், லயம், சந்தம் என்று கம்பன் கவிதையை அவர் ரசித்துச் சொன்னார். ஆனால் கம்பனுடைய எல்லாப் பாடல்களையும் இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுபோலக் கம்பனுடைய வைணவத் தத்துவத்தையோ கம்பன் கண்ட சமுதாயத்தையோ இவர் பேசவில்லை. இவரைப் பின்பற்றி எழுதியவர்களும் பெரும்பாலும் கம்பனைப் புகழ்ந்து எழுதினார்கள். முத்துசிவனின் அசோகவனம், பி.ஸ்ரீயின் சித்திர ராமாயணம், ஏ.சி.பால் நாடாரின் கம்பனைப் பற்றிய ஆங்கிலக் கட்டுரைகள் முதலியனவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

3.5 தொகுப்புரை

இலக்கியம் காலத்தின் பெட்டகமாகும். இவ்விலக்கியப் பேழையில் பல அற்புதங்கள் மறைந்துள்ளன. அப்பேழையை முறைப்படி அணுகினால் மட்டுமே அவ்வற்புதங்களைப் பெறமுடியும். அதற்கு அணுகுமுறை என்ற திறவுகோல் அவசியமாகும். இது ஓர் அறிவுத் தேடலின் ஊன்றுகோலாய், இருண்ட இடத்தில் ஒரு துளி ஒளியாய்ப் பாதை காட்டும் இயல்புடையது. இலக்கு நோக்கிய பயணத்தை அணுகுமுறை வெற்றியடையச் செய்கிறது.

குறிப்பிட்ட இலக்கியத்தைக் கண்டு நெருங்கி, அவ்விலக்கியத்தில் என்ன சிறப்பு இருக்கின்றது என்பதை முறைப்படியானதொரு அணுகுமுறையால் கண்டு அறிவிப்பதே அணுகுமுறை எனப்படும். இம்முறைகளில் அழகியல் என்ற அணுகுமுறை முக்கியமானது. இதன் மூலம் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள உருவநேர்த்தி, உத்திகள் போன்றுள்ள அழகைக் கண்டு சொல்லலாம். தமிழில், டி.கே.சியும் அவருடைய இலக்கிய வட்டத்தைச் சேர்ந்தவர்களும் இவ்வணுகுமுறையைப் பெரிதும் பின்பற்றினார்கள்.

 திறனாய்வு அணுகுமுறைகள் - II

4.0 பாட முன்னுரை

இலக்கியத்தை ஒரு திட்டமிட்ட முறையோடு திறனாய்ந்து காண்பதற்குப் பல வகையான அணுகுமுறைகள் உண்டு என்பது பற்றியும், அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகிய அழகியல் அணுகுமுறை என்பது பற்றியும் கடந்த பாடத்தில் பார்த்தோம். இப்பாடத்தில் உருவவியல் அணுகுமுறை, தத்துவவியல் அணுகுமுறை, அறநெறி அணுகுமுறை என்னும் மூன்று வகையான திறனாய்வு அணுகுமுறைகளைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பார்ப்போம்.

4.1 உருவவியல் அணுகுமுறை

இலக்கியத் திறனாய்வு அணுகுமுறைகளில் மிகப் பரவலாகச் செல்வாக்குப் பெற்றிருப்பது உருவவியல் அணுகுமுறையாகும். படைப்பு இலக்கியத்தின் வடிவத்தையும், அதன் நேர்த்தியையும் ஆராய்கின்ற உருவவியல், மேலைநாடுகளில் தோன்றி வளர்ந்தது. ஆனால் தமிழ்நாட்டில் உருவத்தின் அழகையும் உத்திகளையும் பற்றிப் பார்க்கின்ற பார்வை நீண்ட நாளாக இருந்து வந்திருக்கிறது. அவை பற்றிய செய்திகளை இங்கு காண்போம்.

உருவம் (Form) என்பது வடிவம் அல்லது தோற்றம் ஆகும். இலக்கியத்திற்கு வடிவத்தையும் அதன் மூலமாக அதற்கு ஓர் அழகையும் தருவது இது. இலக்கியத்தை வாசிப்பதற்கோ அல்லது ஆராய்வதற்கோ நுழைகின்ற போது முதலில் எதிர்ப்படுவது உருவமே ஆகும். உருவத்தின் மூலமாகவே அதனைச் சுவைக்கத் தொடங்குகிறோம். இங்ஙனம், உருவத்தையே பிரதானமாகக் கொண்டு உருவத்தையே இலக்காகக் கொண்டு அணுகுவது உருவவியல் அணுகுமுறை எனப்படும். அழகியல் பார்வை அல்லது ரசனை முறைப் பார்வை என்பதனை முன்வைத்த டி.கே.சிதம்பரநாதன் அவர்களும், அவர் சார்ந்த இலக்கியத் தொட்டிக் குழுவினரும் இலக்கியத்தில் உருவத்தின் அழகு பற்றியே பேசினார்கள். ஆனால் மேலைநாடுகளில் தோன்றிய உருவவியல் ஆராய்ச்சி, மேற்குறிப்பிட்ட இத்தகைய அழகியல் பார்வைக்கு முறையான கட்டுக்கோப்பையும், கொள்கையையும் வடிவமைத்திருக்கிறது.

உருவம் என்பது, ஒரு படைப்பில் செயல்பாட்டளவில் ஒன்றிணைந்த பல உறுப்புகளின் (Functional Constituents or organs) ஒரு மொத்த வடிவமேயாகும். தொல்காப்பியரின் செய்யுளியல், செய்யுள் என்பது மாத்திரை, எழுத்து, அசை, சீர் முதலிய இருபத்தாறு உறுப்புகளின் ஒன்றிணைந்த ஒரு வடிவமே என்று பேசுகிறது. ஆனால் இவற்றில் திணை, கைகோள் முதலிய உள்ளடக்கக் கூறுகளும் உண்டு. இவை அனைத்தும் தம்முள் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒன்றற்கு அடுத்து ஒன்று என வளர்ந்து ஒரு முழுமையை உருவாக்கும். உள்ளடக்கத்திற்கு ஒரு தோற்றமும் வடிவும் தரும். இத்தகைய உறவுகளையும் செயல்களையும் உருவவியல் ஆராய்கிறது.

4.1.1 உருவவியல் வரையறை ஷ்க்லோவஸ்கி

‘கலை- ஓர் உத்தியாக’ என்று ருசிய அறிஞர் ஷ்க்லோவஸ்கி 1916இல் கட்டுரை ஒன்று எழுதினார். “கலை என்பது அடிப்படையில் ஒர் உத்திதான். உத்திகளின் மொத்தமே கலையாக வடிவங் கொள்கிறது” என்று பேசிய இக்கட்டுரை உருவவியலின் கொள்கைக்கு அடிப்படையை வகுத்துத் தந்தது.

கலையும் உருவவியல் பண்பும்

ஒரு கலை உருவாவதற்கு எத்தனையோ மூலாதாரப் பொருட்கள் தேவை, அது ஒலியாக இருக்கலாம்; சொல்லாக இருக்கலாம்; அல்லது அது போன்ற வேறொன்றாக இருக்கலாம். கலையியல் படைப்பாக உருவாவதற்கு முன் இந்த மூலாதாரப் பொருட்கள் எல்லாம் உருவம் சாரா உறுப்புகள் என்றும், கலை வயப்படா உறுப்புகள் என்றும் அழைக்கப் பெறும். கலைப்படைப்பாக ஆவதற்குரிய சிறப்பான பண்புகள் தனித்தனியாக உள்ள அவ்வுறுப்புகளில் இல்லை. ஆனால் அவ்வுறுப்புகள் குறிப்பிட்ட ஒரு சீர்மைத் தன்மையுடன் ஒன்றிணைகிற போது, அவற்றின் ஒன்றிணைந்த செயல்பாடுகளிலும் பயன்பாடுகளிலுமே உருவவியல் பண்பு வெளிப்படுகின்றது.

உருவம்

உருவம் என்பது, உறுப்புகளின் ஒன்றிணைந்த செயல்பாடுகளின் வெளிப்பாடு; அது, நடையியல் உத்திகளின் ஒரு ஒட்டு மொத்தமாம் என்று ஷ்க்லோவ்ஸ்கி சொல்லுவார். மேலும், ரோமன் யாகோப்சன் எனும் ருசிய அறிஞர், இதனைக் கூறும் போது, “இலக்கிய ஆராய்ச்சியின் உண்மையான தளம், இலக்கியம் அல்ல; ஆனால் இலக்கியத்தனமே (Literariness) ஆகும்“ என்கிறார். அதாவது குறிப்பிட்ட ஒரு படைப்பை எது- எந்தப் பண்பு- இலக்கியமாக ஆக்கியிருக்கிறது என்பதேயாகும். உருவவியலுக்கு இத்தகைய பார்வையே அடித்தளமாக அமைகிறது.

இலக்கியத்தனம்

யாகோப்சன் கூறுகிற இலக்கியத்தனம் (இலக்கியப்பண்பு) என்பது உருவவியல் கொள்கையின் முக்கியமானதொரு பகுதியாகும். மொழி சார்ந்த குறிப்பிட்ட ஓர் உருவத்தை, ‘இலக்கியத் தன்மை உள்ளது, இலக்கியத் தன்மை இல்லாதது’ என்று பாகுபடுத்திப் பார்த்து இலக்கியத் தன்மை என்பதனை ஒரு சிறப்பியல் பண்பாக (distinctive character) இன்னொரு ருசிய உருவவியல்காரராகிய தின்யனெவ் பேசுகிறார். கலை பற்றி அக்கறை கொள்கிற எந்த ஆராய்ச்சித் திட்டமும் கலையையும் கலையல்லாததையும் வேறுபடுகின்ற சிறப்பியல் பண்புகளை உள்ளடக்கியதாகவே இருக்கவேண்டும் என்கிறார் அவர்.

உருவவியல் – விளக்கம்

மேலும் சிலர் கூறுகையில், உருவம் வேறு, இலக்கியம் வேறு இல்லை என்பார்கள். உருவம் பற்றிய கருத்துநிலை, இலக்கியம் பற்றிய கருத்து நிலையாக அதனோடு ஒன்றிணைந்து விட்டது; ஆகவே இலக்கியத்தின் படைப்பாக்க முறையையும், அதன் துணைமைச் செயலாகிய அழகியல் நிலையிலான புலப்பாட்டையும் புரிந்து கொள்ள வேண்டும். இதன் எல்லைக்குள் படைப்பாளி இல்லை. படைப்பாளியின் பின்புலங்கள் இல்லை. பனுவலும் (Text) அதற்குட்பட்ட உறுப்புகளும், உத்திகளுமே அதன் எல்லைக்குள் இருப்பவை என்றாகி விடுவதாக உருவவியல் விளக்குகிறது.

4.1.2 உருவவியல் வரலாறு உருவவியல், ருசியாவில் 1917இல் உருக்கொண்டது. இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில், மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்த இக்கொள்கை, ருசிய வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. இதன் வரலாற்றை முதன் முதலாக முழுமையாக எழுதி ஆங்கிலம் அறிந்த உலகிற்கு விரிவாக அறிமுகப்படுத்தியவர் விக்டர் எர்லிஹ் என்பவர். இவர் இதனை ருசியாவில் நடந்த புரட்சிக் காலத்தின் குழந்தை என்றும் அதன் பிரத்தியேகமான அறிவுலகச் சூழ்நிலையின் ஒன்றிணைந்த ஒரு பகுதியாக இது ஆகிவிட்டது என்றும் வருணிக்கின்றார். உருவவியல் தோன்றுவதற்குக் களமாக இருந்தவை மொழியியல் பற்றிய சிந்தனைகளும் கவிதையில் மொழிநிலைகளின் இடம் பற்றிய சிந்தனைகளும் ஆகும்.

முன்னோடிகள்

தொமோஷோவ்ஸ்கி

விக்டர் ஷ்க்லோவஸ்கி, போகிஸ் எய்ஹென்பாம், ரோமன்யா கோப்சன், தொமோஷோவ்ஸ்கி, யுரிதின்யனொவ் ஆகியோர் உருவவியலின் முன்னோடிகளாவர். இவர்களே உருவவியல் கொள்கைகள் வகுத்தவர்கள். ஆனால், இவர்கள் யாரும் தம்மை உருவவியல்காரர்கள் என்றோ தம் கொள்கையை உருவவியல் என்றோ அழைத்துக் கொள்ளவில்லை. ஆயினும் இவர்தம் கொள்கையின் ஆதார சுருதி உருவம் பற்றியது ஆதலின், இவர்தம் கொள்கை உருவவியல் கொள்கை என்றே அழைக்கப்படுகிறது. உருவவியல் ருசியாவில் தோன்றினாலும், ஒத்த சூழ்நிலைகளின் பின்னணியில் இது பிற மேலைநாடுகளில் வெவ்வேறு வடிவங்களில் இருந்தது. எனவே இது மிக வேகமாக செல்வாக்குப் பெற்றது. செக்லோஸ்லோவேகியா, பிரான்சு, இத்தாலி, அமெரிக்கா என்று பல நாடுகளுக்குப் பரவியது.

4.1.3 உருவவியலின் சிறப்புக் கூறுகள் குறிப்பிட்ட வித்தியாசமான ஒலிப்பின்னல்கள், குறிப்பிடும்படியான சொற்சேர்க்கைகள், புதிய சொல் வழக்கு, சொற்பொருள் மாற்றம், உவமங்கள், உருவங்கள், படிமங்கள், குறிப்புச் சொற்கள், ஒலி அல்லது சொல் திரும்ப வருதல் போன்றவை, மற்றும் இவற்றோடு பலவிதமான உறுப்புகளும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிற விதத்தில் காணப்படுகின்ற கவனிக்கத்தக்க தன்மைகள் ஆகிய இவை உருவவியலின் செயல்பாட்டளவிலான சிறப்புக் கூறுகள் ஆகும். இவை எப்படி அல்லது எந்த வழிமுறையில் இலக்கியப் பண்பாக உருக்கொள்கின்றன? சொற்களையும், தொடர்களையும் மட்டுமல்லாமல், நடைமுறையில் வெளிப்படையாகவும், உடனடியாகவும் தோன்றக்கூடிய அனுபவம் முதற்கொண்ட மூலாதாரப் பொருட்களை, அதாவது பழகிய பொருட்களை, பழக்கமிழக்கச் செய்தல் (Defamiliarize) என்பதன் மூலம் இலக்கியப் பண்பு உருக்கொள்வதாக இவர்கள் சொல்கிறார்கள். தமிழ் இலக்கணப் பின்னணியிலிருந்து சொல்வோமேயானால், இது, இயல்பு வழக்கு என்பதனைச் செய்யுள் வழக்காக மாற்றுவது போலாகும்.

இலக்கியம் என்பது முக்கியமாக ஓர் உருவமே என்றும், எனவே திறனாய்வு உள்ளிட்ட இலக்கிய அறிவியல் என்பது இத்தகைய கருதுகோளை அடிப்படையாகக் கொண்டு, உருவத்தின் பல்வேறு அம்சங்களையும் பண்புகளையும் அறிவார்ந்து புலப்படுத்த வேண்டும் என்றும் உருவவியல் வலியுறுத்துகிறது.

4.2 உருவவியலும் பிற அணுகுமுறைகளும்

உருவவியலுக்கும் பிற அணுகுமுறைகளுக்கும் உள்ள தொடர்புகளை இனிப் பார்ப்போம்.

புதுத் திறனாய்வும் உருவவியலும்

ஐரோப்பாவில் உருவவியல் தோன்றி வளர்ந்த காலத்தில் அமெரிக்காவில் புதுத் திறனாய்வு (New Criticism) என்பது 1920இல் தோன்றியது. இதுவும் உருவம் பற்றிப் பேசுவதுதான். இலக்கியத்தின் பனுவலை அதற்கு வெளியே போகாமல் “நெருங்கி நோக்குதல்” (Close-reading) வேண்டும் என்று இது வற்புறுத்துகிறது. இலக்கியத்தின் ஒவ்வோர் உறுப்பிலும், பகுதியிலும், அழகும், பொருளும் செய்தியும் இருக்கின்றன என்று கூறி அவற்றை நெருக்கமாக இருந்து காண வேண்டும். அதன் மூலம் விளக்கமான பொருள் தெரியவரும் என்று இது கூறுகிறது.

மார்க்சியமும் உருவவியலும்

ருசியாவில் மார்க்சியம் அரசியல் அதிகாரத்துக்கு வருகிற சூழ்நிலையில்தான் இந்த உருவவியலும் பிறக்கிறது. ஆனால் மார்க்சியம் எந்தப் பொருளையும் தன்னளவில் மட்டுமே இயங்குவது என்றோ முழுமையானது என்றோ கருதுவதில்லை. மேலும் உள்ளடக்கத்தில் முக்கியத்துவத்தையும் அதன் தீர்மானிப்புத் திறனையும் மார்க்சியம் வலியுறுத்துகிறது. வரலாற்று-சமுதாய நிலைமைகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் மார்க்சியம் வலியுறுத்துகின்றது. ஆனால் உருவவியல் இந்த நிலைப்பாடுகளுக்கு மாறானதும் முரணானதும் ஆகும். எனவே மார்க்சியவாதிகளுள் ஒரு சிலர், உருவவியலின் சில ஏற்புடைய தன்மைகளை முக்கியமாக இலக்கியத்தை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும் என்பது போன்ற சில விதிகளை ஒத்துக் கொண்டாலும் மிகப் பலரால் அது மறுதலிக்கப்படுகிறது.

4.2.1 கதைக்கூறு இலக்கியத் திறனாய்வுக்கு உருவவியல் தந்த ஒரு முக்கியமான பங்களிப்பு- கதைக்கூறு, இழை பொருள், கதைப்பின்னல் ஆகிய கருத்து நிலைகளைத் தந்தது ஆகும்.

கதைக்கூறு (fabula) என்பது இலக்கியமாவதற்கு முந்திய ஒரு மூலாதாரப் பொருளேயாகும். மேலும், தமக்குள் பரஸ்பரமாகவும், உள்ளார்ந்தும் தொடர்பு கொண்டிருக்கிற பல நிகழ்ச்சிகளின் கூட்டு வடிவம் இது எனலாம். இது இலக்கியமாகிற நிகழ்வுக்கு முந்தியதாகவும் அதே நேரத்தில் அதற்கு உட்படுகிறதாகவும் என்று இருநிலைக்குட்பட்டது. இது எழுத்தாளன் உருவாக்கிக் கொண்டதல்ல. ஏற்கனவே இருப்பது ; அவன் தனது படைப்பில் பயன்படுத்திக் கொள்வதற்காக இருப்பது ஆகும். வாழ்க்கை அனுபவங்களில், ஒத்த பல கதைக் கூறுகளைக் காணுகிற எழுத்தாளன் அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கலை வடிவமாக ஆக்கிக் கதைப்பின்னல் என்ற அமைப்பாக ஆக்குகிறான்.

4.2.2 இழைபொருள் இழைபொருள் (Motif) என்பது புனைகதையிலக்கியத்தின் அல்லது வண்ணனையின் (Narrative) மிகச் சிறிய பகுதியாகும். மையக் கதையோடு தொடர்பு கொண்டதாகவோ, தொடர்பு அற்றதாகவோ விளங்குகின்ற தனித்தனிக் காட்சிகள் செயல்நிலைகள் முதலியன யாவும் இழைபொருட்களேயாகும். கதைப்பின்னலுக்குள் அதனுடைய உருவ நேர்த்திக்கும் பிற தேவைகளுக்கும் பொருந்துகின்ற விதத்தில் இழையோடுகிற இழைபொருட்கள் உருவவியலின் ஆதாரமான அழகியல் கூறுகள் ஆகும்.

4.2.3 கதைப்பின்னல் கதைப்பின்னல் (Plot) என்பது, கதைக்குரிய மூலாதாரமான நிகழ்ச்சிகளைத் தமக்குள் ஒன்றிணைகிற முறையில் கலையியல் நேர்த்தியுடன் கட்டமைப்பது ஆகும். தொடர்புபட்ட பல இழை பொருட்களைத் தன்னுள் கொண்டு, புனைகதை முழுவதும் பரவிப் பிணைந்து உருவநிலையிலான உருவாக்கத் திறனைப் பெற்றிருப்பது இக்கதைப் பின்னல்.

மேலும், உள்ளடக்கம் என்ற சொல்லே தேவையில்லை என்று ஷக்லோவஸ்கி கூறுவார். அவர் கூறுகையில் ‘என்ன’ என்பதற்குக் கதைக்கூறு விடை தரும் என்றால், Ôஎப்படிÕ என்பதற்குக் கதைப் பின்னல் விடை தருகிறது என்று கூறுவார். கதைப்பின்னல் கலையியல் பண்பு கொண்டது ; இலக்கியத்திற்கு இலக்கியத்தன்மை தருவது ; ஆனால் இந்தக் கதைப் பின்னல் புனைகதைகளுக்கும், வர்ணனைக் கவிதைகளுக்கும்தான் (Narrative Poems) பொருந்துமே தவிர, எல்லா இலக்கிய வகைகளுக்கும் உரியதல்ல என்பது கவனித்தல் கொள்ளப்பட வேண்டும். நாட்டுப்புறக் கதைப் பாடல்களை ஆராயவும் கதைப்பின்னல் பற்றிய பார்வை துணை செய்யும்.

உதாரணமாக சு.சமுத்திரத்தின் பாலைப்புறா என்ற (எய்ட்ஸ் பற்றிய முதல் தமிழ் நாவல்) நாவலை எடுத்துக் கொள்வோம். இதில் எய்ட்ஸ் நோயாளிகளைப் பற்றிய பல செய்திகள், நிகழ்ச்சிகள் வருகின்றன. மனோகர்க்கு அந்த நோய் கண்டது ; அதனால் அவனுக்கு வருகிற துயரமான வாழ்க்கை; அவன் மணந்து கொண்ட கலைவாணியை அந்த நோய் தொற்றிக் கொள்வது; அவளுடைய சிறிய சிறிய அனுபவங்கள், போராட்டங்கள் என்று பற்பல செய்திகள் வருகின்றன. இவை, நுண்இழைகளாக – இழைபொருளாக அமைகின்றன. இவை தொகுதிகளாகப் பெரிய அளவில் கதைக்குரிய தளத்தை அமைப்பதாகவும் பொருத்தமாகவும் அமையும் போது, கதைப்பின்னல் அமைகிறது. எய்ட்ஸ் நோயாளிகளைப் பற்றிய விவரங்களும், அந்நோய் பற்றிய கொடூரங்களும், மனித வாழ்க்கை மதிப்பீடுகளும், கதைப் பின்னலுக்கு ஆதாரமான – கதைக்கூறுகளாக உள்ளன. இவ்வாறு உருவவியல் அணுகுமுறையைப் பயன்படுத்தி இலக்கியத்தைப் பார்க்கலாம்.

4.3 தத்துவவியல் அணுகுமுறை

இலக்கியம் என்பது மனித வாழ்வியலையும் ஒழுக்க நெறியையும் உள்ளடக்கியது. தத்துவம் இதனையே சுட்டுகிறது. இதன் அடிப்படையில் இலக்கியங்களைத் திறனாய்வு செய்யும் அணுகுமுறை தத்துவவியல் அணுகுமுறை ஆகும். தத்துவத்தை எளிதாக அணுக முடியாத ஒன்றாகப் பலரும் நினைப்பர். தத்துவம் பல திறத்தது. மேலும் அது பல கிளைகளாய்ப் பிரிவது, தமிழிலக்கியத்தில் மரபுவழித் தத்துவங்களும், நவீனத் தத்துவங்களும் இழையோடிக் கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொணர்வது வாழ்க்கை பற்றிய கண்ணோட்டங்களை அறியப் பயன்படுகிறது. இதற்கு வாசிப்பாளர் மிகுந்த படிப்பாளியாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் கவனமாக ஊன்றிப் பார்த்தல் அவசியமாகும்.

4.3.1 தத்துவவியல் தத்துவம் என்பது மனிதனை நல்வாழ்வியலுக்கும் ஒழுக்கவியலுக்கும் கைப்பிடித்து அழைத்துப் போகும் குணம் கொண்டது. மனித சிந்தனைகளின் சாரமே, தத்துவம். மனிதன், தன்னையும் பிறரையும் புரிந்து கொள்ளவும், புரிந்து கொண்டு முன் செல்லவும், பலதரப்பட்ட அனுபவங்களையும், நியாயங்களையும் அனுசரிக்கவும் கற்றுத் தருகின்றது தத்துவம். தத்துவத்தை இறுக்கமானதாகவும் மாறாப் பண்பினதாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. வரலாற்றுக்கும் சமுதாய அமைப்புகளுக்கும் ஏற்ப வேறுபட்டு, வளர்நிலைகளுடன் அமையக் கூடியதுதான் தத்துவம்.

வாழ்க்கையின் பல நிலைகளைப் புரிந்து கொள்வதற்கும் யதார்த்த அனுபவங்களுடன் முரண்படாமல் கால மாற்றத்தையும், கருத்தியல் மாற்றத்தையும் கற்றுக் கொள்வதற்கும் தேவையான தருணத்தில் அவற்றோடு விவாதிக்கவும் தத்துவக் கல்வி அவசியம். இதனைப் பிளேட்டோ வற்புறுத்துகிறார்.

4.3.2 தத்துவவியல் அணுகுமுறை – வரையறை தத்துவவியல் ஏனைய அறிவார்ந்த துறைகள் போன்று திறனாய்வுக் கருத்து நிலைகளையும் வழிகாட்டுதலையும் தருகின்றது. இன்று தத்துவப் பார்வை, திறனாய்வுக்கு அவசியமான ஒன்றாக ஆகியுள்ளது. ஒரு கலைஞனும் சரி, அவனுடைய படைப்பும் சரி, குறிப்பிட்ட தத்துவச் சார்பு கொண்ட பண்பாட்டுத் தளத்துடன் தொடர்பு கொண்டவர்களே என்பதைக் கருதுகோளாகக் கொண்டு செயல்படுவதே தத்துவவியல் அணுகுமுறை எனப்படும்.

4.3.3 இந்திய, மேலைநாட்டுத் தத்துவ மரபுகள் ஏற்கெனவே சுட்டிக் காட்டியது போல், இனம், சமயம,் நாடு, காலம் முதலியவற்றின் காரணமாகத் ‘தத்துவங்கள்’ மாறுபடும். எனவே, இந்திய நாட்டின் தத்துவங்களும் மேலைநாடுகளின் தத்துவங்களும் ஒரே தன்மையின அல்ல. இந்திய சமயத் தத்துவம் வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உண்டாக்கப் பெற்றிருக்கின்றது. இந்தியத் தத்துவ மரபில் முக்கியமாக, அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகியன மிகவும் அடிப்படையான விவாதங்களை முன்வைக்கின்றன. ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைச் சைவ சித்தாந்தம் என்னும் தத்துவம் விளக்குகிறது. தமிழிலக்கியத்தில் இத்தத்துவங்களின் கூறுகளைப் பார்க்க முடியும்.

இந்தியத் தத்துவ மரபு போதிப்பது, ஓதுவது என்ற பாவனையில் அமைந்தவை. மேலும் இந்தியத் தத்துவங்கள் பெரும் மோதல்களையும் அழிவுகளையும் இறுதியாக முடிவுகளாக ஏற்றுக் கொள்வதோ போதிப்பதோ இல்லை. அதனால்தான் இங்கே கிரேக்கம் மற்றும் பின்னைய மேலைநாடுகளில் இருப்பது போல அவல நாடகங்கள் இல்லை. அங்கே (கிறித்துவ சமயத்தில்) பாவத்தின்சம்பளம் மரணம் ஆனால் இங்கே (இந்து சமயத்தில்) அதற்கு மாறாக, பாவத்தின் சம்பளம் மறுபிறப்பு ஆகும். பாவங்கள் அல்லது கர்மங்களுக்கு ஏற்பப் பிறப்புகள் அமைகின்றன.

கன்ம பந்தமும் அதன் வழியிலான ஜன்ம பந்தமும் அழியப் பெறும்போது கிடைக்கிற ஆன்மீக விடுதலையின் ஆனந்தக் களிப்பே இந்தியத் தத்துவங்களில் மையமாக உணர்த்தப்படுகிறது. இந்தியத் தத்துவமரபு, ‘அபூர்வ உண்மை’ அதனோடான ‘அனுபூதிநிலை’ என்பதான புனிதத்தை முன்னிலைப்படுத்தியது. இது தத்துவத்தைச் சமய வகைக்குள் வைத்துப் பூட்டி விட்டது. தத்துவம் என்றால் விமரிசனத்துடனான ஒரு தேடல் ; ஐரோப்பியர் தத்துவங்கள் இதைக் கற்றுக் கொடுத்திருக்கின்றன.

4.3.4 மார்க்சியமும் தத்துவமும் கார்ல் மார்க்ஸ்

மார்க்சியம் இருபதாம் நூற்றாண்டில் கார்ல் மார்க்ஸால் முன்வைக்கப்பட்டது. பொருளையும் அதன் இயக்கத்தையும் முதன்மையாகவும் மூலமாகவும் கொண்டு உலகத்தையும் அதன் வாழ்வியல் உத்திகளையும் விளக்குவது மார்க்சியம். சமூகம், வர்க்கமாகப் பிளவுபட்டிருப்பதை இனங்கண்டு விளக்குகிறது இந்தத் தத்துவம்.

பொதுவாகத் தத்துவங்கள் என்பவை மனித வாழ்க்கை உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுவன. ஆனால் மார்க்சியம் மட்டும் சமுதாய மாற்றத்தை முன் மொழிகிறது. மேலும் மார்க்சியம் ‘பொருள்’ (Matter) என்பதனை முதன்மையாகவும் உண்மையாகவும் கொண்டு அமைகிறது.

ஏனைய தத்துவங்கள், கருத்து (Idea) என்பதனை முதன்மையாகக் கொண்டு அமைபவை. எனவே, ஆன்மீகம் மற்றும் அகவய உணர்வுகளை அவை முதன்மைப்படுத்துகின்றன. தத்துவங்கள் ஆன்மீகத்தைக் கைக்கொண்டு மனிதன் தனது அகத்தையும் புறத்தையும் வடிவமைத்துத் தர முடியும், செழுமைப்படுத்த முடியும் என்பதை வலியுறுத்துகின்றன. அக வளர்ச்சியும் புற வளர்ச்சியும் சமூகத்தையும் உலகையும் மனிதர் யாவரையும் இணைத்துப் பார்க்கும் அன்பு, கருணையுடன் இயங்க முடியும் என்பது சமயத் தத்துவங்களின் உள்ளீடான விளக்கமாகும்.

4.3.5 தமிழ் இலக்கியமும் தத்துவமும் தத்துவவியல் அணுகுமுறையின் மூலம் இப்போது ஒவ்வொரு படைப்பையும் மறுவாசிப்பு செய்ய முற்படுகிறோம். சமயச் சார்பற்ற நேரடியான வாழ்க்கை முறைகளோடு சம்பந்தப்பட்டதாகச் சங்க இலக்கியத்திலிருந்து தத்துவத்தைக் காண முடியும். மேலும், இந்தியத் தத்துவங்களின் விளக்கங்களின் பின்னணியில் பார்க்கிற போதுதான் சிலப்பதிகாரத்தில் வஞ்சிக் காண்டத்தினுடைய தேவையையும் சிறப்பையும் அறிய முடியும். தத்துவவியல் அணுகுமுறை வாழ்க்கை ஒழுக்கங்களைக் கற்பிக்கப் பயன்படுகின்றது.

மேலைநாட்டுப் புராணங்களையும், காப்பியங்களையும் இந்தியச் சூழலில் பொருத்திப் பார்க்க முடியாது. நம்முடைய தத்துவ அளவுகோல், நமது பண்பாட்டு அடிப்படையிலானது. இதைப் போல் நம்முடையதும், அவர்களின் பார்வைக்குப் பொருத்தமானதாக இருக்க முடியாது. ஆனால் காதல், காமம், குரோதம், அன்பு போன்றவை உலகம் முழுவதும் ஒத்தவை. ஆனால் இவற்றைக் கொண்ட உறவுகளும், உரிமைகளும் அவரவர்களுக்கானவை. எனவே, இவை பற்றிப் பேசும் புராணங்களும் காவியங்களும் அவ்வவ் இனங்களோடு சம்பந்தப்பட்டவை.

காப்பியங்களும், புராணங்களும் வாழ்வியலோடு தொடர்புபடுத்தப்படும் கருத்தாக்கங்கள் உடையவை ; அறக்கருத்துகளைப் பேசுபவை ; இச்சட்டகம், உலகம் முழுமைக்கும் ஒன்றல்ல. இவை அனைத்தும் அந்தந்த இனக்குழுப் பண்பாட்டின் அடிப்படையில் பிறப்பவை. இராமாயணம் எனும் காப்பியத்தைப் பார்ப்பதற்கு விசிஷ்டாத்வைதம் என்னும் தத்துவம் மிகவும் முக்கியமானது. இது கூறும் ‘சரணாகதி’ எனும் கொள்கையே இராமாயணம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. அது, இலக்குமணன், பரதன், அனுமன் முதலிய பலரிடம் பல வடிவங்களில் வெளிப்படுகிறது. இராவணன் மூலமாகவும் வெளிப்படுகிறது.

4.4 அறநெறி அணுகுமுறை

இனி, அறநெறி அல்லது நீதிக் கோட்பாடு அணுகுமுறை என்பது பற்றிப் பார்க்கலாம். காலந்தோறும் காணப்படும் மனித அறங்களை மையமாகக் கொண்டு, இலக்கியத் திறனாய்வின் பார்வை அமைகின்றபோது, அதனை அறநெறி அணுகுமுறை (Ethical or Moralistic criticism) என்கிறோம். சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியங்கள் அச்சமூகம் கட்டிக் காத்துவரும் அறக்கருத்துகளையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழில் இலக்கியப் பார்வையில் அறவியல் பார்வை நீண்ட காலமாகப் பரவலாக இருந்து வருகிறது.

4.4.1 அறநெறி அணுகுமுறை – விளக்கம் மனித சமூகத்தில் தொன்றுதொட்டு மரபுவழியாக வந்தவை அறங்கள்; மனித சமூகத்திற்கு ஒரு கூட்டு வாழ்வையும் தகுதியையும் தருவன அறங்கள். இவை மனித ஒழுகலாறுகளின் போக்குகளிலிருந்து சாராம்சமாகக் கண்டறியப்பட்டவை. இலக்கியங்களாக எழுதிவைக்கப்பட்டவை. எனவே சட்டங்களாக இல்லாமல் மரபுகளாகவும், இறுக்கமானவையாக அல்லாமல் நெகிழ்வானவையாகவும் இவை அமைகின்றன. இவை, நுண்மையானவை (Abstract). இத்தகைய அறநெறிக் கொள்கையை மையமாகக் கொண்டு இலக்கியங்களை அணுகுதல் அறநெறி அணுகுமுறை எனப்படும்.

மனித வாழ்க்கைச் சூழல்களிலிருந்து பிறந்து மனித வாழ்க்கைகளின் எதிர் வினைகளை (Responses) இலக்கியம், படம் பிடித்துக் காட்டுகின்றது. காலந்தோறும் இலக்கியங்களில் சொல்லப்பட்டு வருகின்ற அறநெறிக் கருத்துகளைத் தொகுப்பது இதன் நோக்கமல்ல. காலந்தோறும் மாறியும் வளர்ந்தும் வந்திருக்கின்ற இலக்கியங்களை அறநெறி எவ்வாறு வழிநடத்திச் செல்கிறது என்று காண்பதும், இலக்கியங்களின் உள்ளே பொதிந்து கிடக்கின்ற அறநெறிப் பண்புகளையும், ஆற்றலையும் காண்பதும் அறநெறி அணுகுமுறையின் நோக்கமாகும்.

4.4.2 அறநெறி அணுகுமுறை – வரையறை தனக்கு ஏற்புடையதென்று பலகாலமாக அங்கீகரித்திருக்கின்ற ஒரு குறிப்பிட்ட ஒழுக்கமுறையினை அல்லது கருத்தமைவினைச் சமுதாய மதிப்பு (Social Value) என்பர். காட்டாகக், கற்பு என்பது தமிழ் மரபில் ஒரு சமூக மதிப்பு. இதனைப் பேணுவதும், பேணுவதற்கு வற்புறுத்துவதும், அறவியலின் செயல்முறையாகும். அதாவது, சமுதாய மதிப்பு என்று எதைக் கொள்கிறோமோ அதுவே அறமாக அமையும் எனலாம். இச்சமுதாய மதிப்பினை அதன் தகுதி நிலைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது அறநெறி சார்ந்த அணுகுமுறையின் தளமாகவும் இலக்காகவும் அமையும்.

சமூக அமைப்பில் முரண்பாடுகள் உண்டு. இவை இயற்கையானவை. நல்லது x கெட்டது, தீங்கற்றது x தீங்கானது, ஏற்புடையது x ஏற்புடையதல்லாதது என்ற முறையில் காலந்தோறும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இவற்றைத் தெரிந்து, ஏற்புடைய அறங்களைச் சமூகம் அங்கீகரிக்கின்றது. மனிதாபிமான உணர்வும் பிறர்க்குக் கேடற்ற நடத்தையும் சமுதாய நல்லுணர்வோடு தனிப்பட்ட மனிதனின் மனநலனும் கூடி வருகின்ற அறங்களையே அறநெறி என்கிறோம். இது, காலந்தோறும் சமுதாய அமைப்பிற்கேற்ப மாறுபடக்கூடும். மேலும், இத்தகைய கருத்தமைவு சமுதாய அமைப்போடு சார்ந்திருப்பதாகலின் சமுதாயவியல் திறனாய்வோடு அறவியல் திறனாய்வு நெருங்கிய தொடர்பு கொண்டதாகும்.

4.4.3 அறநெறி அணுகுமுறை – வரலாறு பிளேட்டோ

திறனாய்வு அணுகுமுறைகளில் இது மிகவும் பழையது. பழங்காலத்தில் அறிஞர்கள் இலக்கியங்களை அறங்களின் அடிப்படையிலேயே மதிப்பிட்டார்கள். தமிழில் தொல்காப்பியர் அறங்களை வலியுறுத்தினார். கிரேக்கத்தில் பிளேட்டோ வலியுறுத்தினார். ஆங்கில நாட்டிலும் இது செல்வாக்கோடு இருந்தது. ஆங்கிலக் கவிஞரும் விமர்சகருமான மாத்யூ அர்னால்டு, இது பற்றி வலியுறுத்திப் பேசுகிறார். இலக்கியத்தில் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பது முக்கியம். இதுவே அறநெறி அணுகுமுறையின் அடித்தளமாகும். மேலைநாடுகளில் 19ஆம் நூற்றாண்டிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இத்தகைய பார்வை பிரசித்தமாக இருந்தது. இக்கருத்துகள் கொண்ட கருத்தாளர்களைப் ‘புதிய மனிதநேயவாதிகள்’ (New

umanists) என்றழைத்தனர். இவர்கள் இலக்கியத்தை வாழ்க்கையின் விமர்சனம் என்று கண்டனர். இம்முறை ஆய்வில் பால் எல்மர் மோர், இர்விங் பாப்பிட் ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். இவர்களைத் தொடர்ந்து இதே வரையறையை நார்மன் பாஸ்டர், எச்.எச்.கிளார்க், ஜி.ஆர்.எலியட் போன்றவர்களும் பின்பற்றினர் – வளர்த்தனர். இவர்களின் காலத்திற்குப் பின், நவீனத்துவம் மிக வேகமாகப் பரவியது ; பழைய மரபுகளை இது மறுதலித்தது. இலக்கியத் துறையில் ஒரு புதிய கேள்வி எழுந்தது. அது, அறக் கோட்பாடுகள் என்பன மதம் சார்ந்தவையா? அல்லவா என்பதாகும். சாராம்சமாக, மனிதனுக்கு இயல்பான அறஉணர்வு இருக்கும்- இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதே சமயத்தில் சூழ்நிலைகளிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல, மனசாட்சி என்ற ஒன்றுக்கும் கட்டுப்பட வேண்டும் என்றும் கருத்துக் கூறப்பட்டது.

4.4.4 தமிழ் இலக்கியமும் அறங்களும் இலக்கிய உலகில், அறநெறிக் கோட்பாடுகள் சமூகவியல் நோக்கோடு ஆராயப்படுகின்றன. குறிஞ்சி, முல்லை முதலாகிய ஐந்திணை பற்றிப் பேச வந்த தொல்காப்பியர், வெறுமனே ஐந்திணை என்று மட்டும் சொல்லி நிறுத்தாமல் அதற்கு ஒரு நீண்ட அடைமொழி தருகிறார். ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை’ என்று பேசுகிறார்.

சங்க இலக்கியங்களில் அன்றைய காலத்து அறநெறிக் கருத்துகள் ஏராளம். குறிப்பாக அக இலக்கியங்களுக்கும் புற இலக்கியங்களுக்கும் அறநெறிகள் அடிப்படை வாழ்க்கை நெறியைத் தந்திருக்கின்றன. மேலும் காப்பியங்கள் தோன்றிய போதும் பாவிகம் என்ற நிலையில், அவை அறம் பற்றிப் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அரைசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவதூஉம்

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் -(சிலப்பதிகாரம்)

என அறநெறி சார்ந்த கருத்துகளாகவே அமைகின்றன. இங்ஙனம் சங்க இலக்கியம் முதல் இன்றைய தற்கால இலக்கியங்கள் வரை அறநெறித் திறனாய்வை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

இக்கால இலக்கியமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் நாவல் பெண்ணின் பெருமையைப் பேசுகிறது என்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த ஆண், சிறந்த பெண், சிறந்த குடும்பம் எப்படியிருக்க வேண்டும் என்பதை மரபு வழியிலான தமிழ்ச் சமுதாயத்தின் அறவழியில் நின்று விளக்கமாகப் பேசுகின்றது. அதன் பாத்திரப் படைப்புகளும் கருப்பின்னல்களும், சூழலும், உரையாடல்களும் இந்த அறநெறிக் கோட்பாட்டின் மூலமாக வெளிப்படுகின்றன.

தமிழ் இலக்கியத்தின் நீண்ட வரலாற்றில், பெரும்பாலானவை அறம் பேசுபவையாகவே அமைந்துள்ளன. “அறம், பொருள், இன்பம், வீடடைதல் நூற்பயன்” என்று இலக்கணம் பேசுகின்றது. ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க’ ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ என்று திருக்குறள் சமயம் சாராத அறத்தைக் கூறுகிறது.

இவ்வாறு, நீதி நூற்கள் முதற்கொண்டு இன்றைய காலம் வரை நிறையவே அறக்கருத்துகள் இருக்கின்றன. தொடர்ந்து இவை காணப்படுகின்றன. ஆனால் இன்றைய இலக்கியங்களில் முக்கியமான வேறுபாடு என்னவென்றால் மரபு வழிபட்ட அறங்கள் விமரிசிக்கப் படுகின்றன. மறுபரிசீலனைகளுக்கு ஆளாகின்றன. எவ்வாறாயினும் இவை அவ்வக் காலத்தினுடைய தமிழ்ச் சமுதாயத்தின் அறநெறிக் கோட்பாடுகளை அளவிட உதவுகின்றன.

4.4.5 காலந்தோறும் மாறுபாடுகள் மனிதனின் வாழ்வியல் முறையிலும் சிந்தனை முறையிலும் ஏற்படுகின்ற மாற்றம் இலக்கியங்களிலும் வெளிப்படுகின்றது. காலம் மற்றும் இடச்சூழலுக்கு ஏற்ப இலக்கியங்களில் வடிவ அமைப்பு முறையிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன.

சங்க காலத்தில் காதலும் வீரமும் வாழ்வியல் ஒழுக்கங்களாக இருந்தன. உருவும் திருவும் ஒத்த இருவர் கருத்தொருமித்துக் காதல் கொள்வது அறமாக இருந்தது. தலைவியின் காதல் தோழிக்குத் தெரிய வந்து, பின் செவிலித்தாய் மூலம் நற்றாய்க்குத் தெரியவந்து, நற்றாய் மூலம் தமையன், தந்தைக்குத் தெரிய வரும். அல்லாமல் தலைவி நேரிடையாகத் தன் காதலை வீட்டாரிடம் சொல்வது மரபில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இப்படியாகக் காதலைச் சொல்வது நடைமுறையில் இல்லை. இன்றைய சிறுகதை, நாவல், நாடக இலக்கியங்களிலும் காதல் வெளிப்படுவதில் இத்தகைய வரிசைகளைப் பார்ப்பது மிக அரிது.

இதே போல், கற்பு என்பது மிகவும் முக்கியமான ஒரு கருத்தமைவு. இது, காலந்தோறும் மாறி வந்துள்ளது. ஒருத்திக்கு ஒருவன் என்பது புனிதமான ஒழுக்கமாகப் பெண்ணுக்கு வலியுறுத்திச் சொல்லப்பட்டது. இன்று, ‘கற்புநிலையென்று சொல்ல வந்தார். இரு கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்’ என்று பாரதி சொல்லும் நிலை வந்தது.

அறநெறி அணுகுமுறை இலக்கியத்திலிருந்து வாழ்க்கையையும் வாழ்க்கையிலிருந்து இலக்கியத்தையும் அறவியல் கண்ணோட்டத்துடன் உய்த்துணர்ந்து விளக்கம் தருகிறது.

4.5 தொகுப்புரை

அமைப்பியலுக்கு முந்தியதும், அதற்குப் பூர்வாங்கமாக அமைந்ததும் உருவவியலாகும். உருவத் தோற்றத்தின் நேர்த்தி மற்றும் அழகு பற்றிப் பேசுவது இதன் அடிப்படை. உருவவியல், மேலைநாட்டில் பிறந்தாலும் தமிழ்த் திறனாய்வு உலகில் செல்வாக்குடைய ஒரு அணுகுமுறையாக இன்றும் வழங்குகிறது.

வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்ததே தத்துவம். இலக்கியங்களிலிருந்தும் இதைக் காணலாம். மார்க்சியம் மட்டும் பொருள் முதல் என்பதை மையமாகக் கொண்டு அமைந்திருக்கிறது. மற்றவை கருத்து முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டவை.

சமுதாயத்தில் மதிப்பு என்று எது கொள்ளப்படுகின்றதோ அதுவே அறமாகக் கருதப்படுகின்றது. கலையியலாகச் சமுதாயத்தை வெளிப்படுத்தும் இலக்கியத்தில் அறம் ஏதேனும் ஒரு வகையில் வெளிப்படுகிறது. அறவியல் அணுகுமுறை இலக்கியத்தில் வெளிப்படும் ஒழுக்க முறையை ஆராய்வதோடு இலக்கியத்தை அதனடிப்படையாகத் தரம் பிரித்தும் கூறுகிறது.

 திறனாய்வு அணுகுமுறைகள் - III

5.0 பாட முன்னுரை

இலக்கியத்தைத் திறனாய்வு செய்வதற்கு, திறனாய்வாளர்கள் மேற்கொள்ளும் அணுகுமுறைகள் பலவாகும். அத்தகு அணுகுமுறைகளில் குறிப்பிடத்தக்க சிலவற்றைக் கடந்த இரு பாடங்களில் பார்த்தோம். அவற்றைத் தொடர்ந்து இப்பாடத்தில் வரலாற்றியல் அணுகுமுறை,     உளவியல்    அணுகுமுறை, தொல்படிமவியல் அணுகுமுறை என்னும் மூன்றுவகையான திறனாய்வு அணுகுமுறைகளைப் பற்றி விரிவாகவும் விளக்கமாவும் பார்ப்போம்.

5.1 வரலாற்றியல் அணுகுமுறை

இலக்கியத்தை ஆராய்வதில் வரலாறு மிக முக்கியமான இடம் வகிக்கின்றது. இலக்கியத்தின் பின்னணிகள், இலக்கியம் கூறும் செய்திகள் முதலியவற்றை அறியப் பல வகைககளில் அது ஒளி பாய்ச்சியிருக்கின்றது; தொடர்ந்து பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. வரலாற்றியல் திறனாய்வு, சுய விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ, அகவய மனப்பதிவுகளின் முறையிலோ அமைவது அல்ல. சரியான தகவல்களுடன், திட்டமான வரலாற்றுக் கொள்கைகளுடனும் முறையான இலக்கியக் கோட்பாட்டுப் பின்னணிகளுடனும் அது அமையும். அங்ஙனம் அமைதல் வேண்டும். அங்ஙனம் அமைதலே சிறப்பான வரலாற்றுத் திறனாய்வு அணுகுமுறையாகக் கருதப்படும்.

இலக்கியம் என்பது வெற்றுவெளியில் தானாகத் தோன்றுவது கிடையாது. அப்படித் தோன்றவும் முடியாது. அது, குறிப்பிட்ட காலத்தின் பின்னணியில் குறிப்பிட்ட காலத்தைச் சேர்ந்த படைப்பாளியினால் படைக்கப்படுவதாகும். மேலும் கூறுவதானால் இலக்கியம் என்பது குறிப்பிட்ட காலத்தின் வெளிப்பாடு என்பதனை மறுக்க முடியாது. இத்தகைய காரணங்களினால் அது, தான் தோன்றிய காலத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மற்றும் உடன்பாடாகவோ எதிர்நிலையாகவோ காட்டுகிறது.

வரலாற்றின் அடிப்படையும் இலக்கியமும்

வரலாற்றிற்கு அடிப்படையாக அமைவன காலம், இடம் எனும் மையங்களாகும். இவற்றிலே காலூன்றி நிற்பது இலக்கியம். நினைவுகளையும் நிகழ்வுகளையும் எடுத்துக் கொண்டு எந்த இடத்தில் சுழன்றாலும் அதனுடைய ஈர்ப்பு, காலம் என்னும் மையத்தை நோக்கியதாகத்தான் அமையும். வரலாற்றில் ஏற்படும் மாற்றங்களை எடுத்துக் கொள்ளவும். அந்த மாற்றங்களுக்குத் தானும் ஒரு காரணமாக அமையவும் கூடிய திறன் பெற்றது இலக்கியம்.

5.1.1 வரலாற்றியல் அணுகுமுறை – வரையறை மனிதகுலம், மிக இயல்பாகத் தன்னையே உற்பத்தி செய்து கொள்வது; மற்றும் பொருள்களை உற்பத்தி செய்வது எனும் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது. அதோடு காலம், இடம் என்னும் புற நிலைகளின் காரணமாகவும் அது வளர்ச்சி பெறக் கூடியது. இவை வரலாற்றிற்குரிய அடிப்படைக் கருதுகோள்களாகும். மேலும் காலம், இடம் என்ற அச்சுகளில் காரண-காரியங்களுடன் கூடிய முன்னோக்கிய மாற்றங்களைக் கொண்ட நிகழ்வுகளின இணைப்பை இது குறிப்பதாகும்.

மாற்றங்களும் வரலாற்றியலும்

மாற்றம் என்பது உயிருடைய பொருள்களின் தன்மை; மாற்றமில்லாதது என்பது சடப் பொருள்களின் தன்மை. மாறுதல் பெறுவதும், அதன் காரணமாக வளர்வதும் என்ற அடிப்படைப் பண்பைக் கொண்டு, குறிப்பிட்ட பொருள்களின் பண்பு மற்றும் உறவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியனவும், பொருளின் சாராம்சமாக விளங்கக் கூடியனவுமாகிய முன்னோக்கிய மாற்றங்களை, வரலாற்றியல், கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இதனடிப்படையில் இலக்கியத்தை ஆராய்வதற்குத் துணை நிற்கிற அணுகுமுறை வரலாற்றியல் அணுகுமுறையாகும். வரலாற்றியல் அணுகுமுறையில் முக்கியமாக மூன்று நிலைகள் இருக்கின்றன. அவை:

(1) இலக்கியத்திலிருந்து வரலாறு காண்பது.

(2) இலக்கியத்தினுடைய வரலாற்றினைக் காண்பது

(3) இலக்கியத்தை வரலாற்றின் பின்னணியில் பார்ப்பது

என்பனவாகும்.

5.1.2 இலக்கியத்தின் வரலாறு ரெனிவெல்லாக்

இலக்கியத்தின் வரலாறு காண்பது என்பது, இலக்கியங்களை ஒரு தொடர்ச்சியாக அல்லது தொடர்ச்சியின் ஒரு பகுதியாகக் காண்பதாகும். ஆங்கில இலக்கியக் கோட்பாட்டாளராகிய ரெனிவெல்லாக் (Rene Wellek) இலக்கியத் திறனாய்வும், இலக்கிய வரலாறும் இணை பிரிக்க முடியாதவை என்பார். அதாவது திறனாய்வாளனை அகவயமான சொந்த விருப்பு வெறுப்புக்களுக்குப் போகவிடாமலும், அவசர முடிவுகளுக்குச் சென்று விடாமலும், இலக்கியத்தின் வரலாறு பற்றிய அறிவு பாதுகாக்கிறது. திறனாய்வாளனுக்கு இலக்கியத்தின் வரலாறு தெரியவில்லையானால் அவனுடைய முடிவுகள் தவறாகப் போய் விடலாம். உதாரணமாகப் பரிபாடலையும் திருமுருகாற்றுப்படையையும் அகநானூறு, புறநானூறு ஆகியவற்றின் காலத்தோடு சேர்த்து வைத்துக் கணக்கிடும்போது, சங்க காலச் சமுதாய, பண்பாட்டு வரலாற்றினை ஆராய்வதில் குழப்பங்களும் சிக்கல்களும் ஏற்படுகின்றன. எனவே, இவ்விரண்டின் காலங்களையும் கணக்கில் எடுத்துச் சொல்வது திறனாய்வாளனுக்குத் தேவையாகி விடுகிறது. மேலும், இலக்கியத்திற்குரிய வரலாற்றுத் தொடர்புகளும் காரணங்களும் அறியப்படவில்லையென்றால், குறிப்பிட்ட இலக்கியத்தைப் புரிந்து கொள்வதிலும், அதன் இடத்தைத் தீர்மானிப்பதிலும் தொடர்ந்து தவறுகள் ஏற்படும். இந்த உறவு அறுபடுமானால் சீரழிவு ஏற்படும். இலக்கிய வரலாறு காணவும் எழுதவும் முற்படுபவர்கள் இந்தத் தவறிலிருந்து தப்புதல் வேண்டும்.

5.1.3 இலக்கியத்தில் வரலாறு இலக்கியத்திற்கு உள்ளே – சமூகம், அரசியல், பண்பாடு முதலியவற்றின் வரலாற்றினைக் காண முற்படுவது இலக்கியத்தில் வரலாறு காணும் முறையாகும். வரலாற்றியல் அணுகுமுறையில் இலக்கியத்தில் வரலாறு காண்பது இலக்கியத்தை வரலாற்று மூலமாகக் (

istorical Source) கொள்ளுதலாகும்.

வரலாற்றுக் கொள்கலன்கள்

காலம் – இடம் எனும் தளத்திலிருந்து முகிழ்க்கும் இலக்கியம், அவ்வக் காலத்தின் வாழ்வுகளையும், உணர்வுகளையும் பதிவு செய்யும் கலை வடிவமாகும். எனவே வரலாறு எழுதுவதில் இலக்கியம் சான்று மூலமாக அமைகிற உரிமையும் தகுதியும் பெற்றுள்ளது எனலாம்.

இலக்கியங்களை வரலாற்றுக்குரிய சான்று மூலங்களாகக் கொள்வதை, வரலாற்றுப் பேராசிரியர்கள் பலர் ஒத்துக் கொள்வதில்லை. எனினும் குறிப்பாக அகழ்வாராய்ச்சிகள், கல்வெட்டுகள், நாணயங்கள் முதலிய முதன்மைச் சான்றுகள் கிடைக்காத போதும் அல்லது சரிவரக் கிடைக்காத போதும் இவர்களுக்கு இலக்கியங்களின் துணை தேவைப்படுகிறது. ஆனால் தனித்தனியே அறிவுத் துறைகள் விரிந்து, கிளைத்து வளராத காலத்தில் இலக்கியமே அக்காலத்திய அறிவியலிலிருந்து மருத்துவம், சோதிடம் வரையிலான அறிவுத் துறைகள் பலவற்றிற்கும் சான்றுகள் தருகிற வரலாற்றுக் கொள்கலனாக இருந்திருக்கிறது.

கார்லைல்

இந்த அடிப்படையில்தான் “ஒரு நாட்டின் கவிதை வரலாறு என்பது அந்நாட்டின் அரசியல், விஞ்ஞான சமய வரலாற்றின் சாராம்சமேயாகும்.” என்று கார்லைல் (Carlyle) அவர்களும், “இலக்கியம் என்பது காலங்கள் தோறும் காட்சி விளக்கக் குரல்களாகக் கேட்கும் ஒரு கூட்டுக்குரல் ஒலியே” என்று ரெனிவெல்லாக்கும் குறிப்பிடுகின்றனர். இதே போல் பிரடெரிக் எங்கல்ஸ் (Frederik Engels) “பிரெஞ்சு நாவலாசிரியரான பால்ஜாக்கின் எழுத்துகள் தொழில்முறை வரலாற்றறிஞர்கள், பொருளாதாரவாதிகள், புள்ளிவிவரக்காரர்கள் ஆகியவர்களை விடவும் உண்மையாகவும் அற்புதமாகவும் பிரெஞ்சு வரலாற்றைத் தருகின்றன” என்று கூறுகிறார்.

பிரடெரிக் எங்கல்ஸ்

5.1.4 வரலாற்றின் பின்னணியில் இலக்கியம் இலக்கியம், குறிப்பிட்ட வரலாற்றின் சூழமைவில் தோன்றுகிறது; வளர்கிறது; ஏற்றுக்கொள்ளப்படுகிறது; போற்றப்படுகிறது. இலக்கியத்தை வரலாற்றின் தளமாகவும், தாக்கமாகவும், எதிரொலியாகவும், வரலாற்றைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் பார்க்க வேண்டும். உதாரணமாக, கா.சீ.வேங்கடரமணியின் முருகன் ஒர் உழவன், தேசபக்தன் கந்தன் ஆகிய நாவல்களை ஆராயவும், ந.சிதம்பர சுப்பிரமணியத்தின் மண்ணில் தெரியுது வானம், நா.பார்த்தசாரதியின் ஆத்மாவின் ராகங்கள் முதலிய நாவல்களை ஆராயவும், சுதந்திரப் போராட்டம், காந்திய யுகம் என்ற வரலாற்றுப் பின்னணிகள் மிகவும் அவசியமாகும். அதுபோல், பாரதியார் கவிதைகளை ஆராயவும், இந்திய சுதந்திரப் போராட்டம் என்ற காலப் பின்னணி மிகவும் அவசியமாகும்.

பின்புலத்தைக் காணுதல்

நடப்பியல் உண்மைகளை அல்லது வரலாற்றுச் செய்திகளை இலக்கியம் அப்படியே தருவதில்லை; நேரடியாகத் தருவதில்லை. அது, கலைவடிவம் ஆகும் போது படைப்பாளி, அவனுடைய சூழல், அவனுடைய நலன், நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மைகள் பிரதிபலிக்கப்படு்கின்றன. எனவே, கலையாக்க முறைகளைப் புரிந்து கொண்டு, கற்பனையின் பாங்கினை அறிந்து கொண்டு பின்புலத்தைக் காணுதல் வேண்டும்.

5.1.5 இலக்கிய வரலாறெழுதியல் இலக்கிய வரலாறு எழுதுவதில், நடைமுறையில் ஐந்து கோணங்கள் அல்லது வகைகள் இருப்பதை அவதானிக்கலாம்.

(1) நூற்றாண்டுக் கால வரிசை

(2) அரச மரபு வரிசை

(3) இலக்கிய வகைகளின் வழி

(4) இலக்கிய இயக்கங்களின் வழி

(5) கருத்து நிலைகளின் வழி

இவற்றைப் பொதுவாகவும் தனித்தனிப் போக்குகளாகவும் எடுத்துக் கொண்டு வரலாற்று முறையியல்களை ஆராயலாம்.

இங்ஙனம் இவ்வரலாற்றியல் அணுகுமுறை இலக்கிய உலகினைச் சரியாகவும், தெளிவாகவும் புலப்படுத்தும் திறன் பெற்றுள்ளது. கடந்த காலம் சமைத்த பாதையில் மட்டுமல்லாமல் நிகழ்வின் வெளிப்பாடுகளிலும் எதிர்வின் தரிசனங்களிலும் இது ஒளி பாய்ச்சும் எனலாம்.

5.2 உளவியல் அணுகுமுறை

இலக்கிய உருவாக்கத்திற்கும் இலக்கியத்தில் படைக்கப்படும் மனிதர்களின் செயல்பாட்டிற்கும் பண்புகளுக்கும் மனத்தின் வேறுபட்ட உணர்வுகளே அடிப்படைக் காரணிகளாக உள்ளன. இந்த அடிப்படையில் ஓர் இலக்கியத்தை அணுகுவதை உளவியல் அணுகுமுறை (Psychological Approach) என்று கூறுகிறோம். இவ் அணுகுமுறை, பல புதிய செய்திகளையும் விளக்கங்களையும் தந்திருக்கிறது என்ற முறையில், மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

உள்ளத்தின் உணர்வு

மனித உள்ளத்தின் உணர்வே எல்லா அறிவியல்களுக்கும் கலைகளுக்கும் கருவறையாக விளங்குகிறது. ஆழ்மனத்தில் படிந்து கிடக்கும் உணர்வுகளே இவ்வுலகில் ஆக்கங்களையும் அழிவுகளையும் தருகின்றன. இது உளவியலாளர்களின் முடிபு. மேலும் உள்ளம் என்பது ஒரே வகையான இயக்கமும் ஒரே வகையான தன்மையும் கொண்டதல்ல.

உளவியலாளரும் உளவியலும்

தனியொரு துறையாக உளவியல் வளர்வதற்கு முன்பு, அவல நாடகங்களை (Tragedy) உருவாக்கியவர்களே உளவியல் அறிஞர்களாக இருந்திருக்கிறார்கள். பார்வைகளைத் தம்வசப்படுத்துவதிலும், தாம் படைக்கும் உணர்வுகளைப் பார்வையாளர்களிடம் சென்று சேர்ப்பதிலும் உளவியல் உத்திகளை இவர்கள் கையாண்டார்கள். ஆனால் இன்று உளவியல் என்பது அறிவியல் மற்றும் மருத்துவவியலில் மட்டுமல்லாமல் அழகியலிலும், கலை இலக்கியத்திலும், திறனாய்விலும் தன்னுடைய செயல்பாட்டுத் தளத்தினைப் பரப்பி நிற்கின்றது.

5.2.1 உளவியல் அணுகுமுறை – வரையறை கலை இலக்கியத்தில் உளவியல், மனித வாழ்வின் அனுபவங்களையும் மனித நடத்தையையும் அவற்றின் வெளிப்பாடாகவும், உந்துதலாகவும் உள்ள மனத்தையும் ஆழமாகவும், அழகாகவும் சித்தரிக்க முயலுகிறது. இலக்கியத்தின் இந்தப் பண்பினைப் புரிந்து கொள்வது தேர்ந்த வாசகனுக்கும் விமர்சகனுக்கும் அவசியமாகிறது.

வாசகனும் உளவியலும்

இலக்கியத்தைப் புரிந்து கொள்ளவும் படைப்பின் வழியாகத் தனி மனித மற்றும் சமூக மனத்தினைப் புரிந்து கொள்ளவும், படைப்பினை மேன்மேலும் சுவையூட்டக் கூடியதாக மாற்றவும் எனப் பல கோணங்களில் வைத்துப் பார்ப்பதற்கு உளவியல் துணை நிற்கிறது. சமூக மனிதனின் பலமும் பலவீனமும் இதன் மூலம் அடையாளப்படலாம். இவற்றுள் வாசகர் உளவியல் என்பதும் கவனிக்க வேண்டிய பகுதியாகும். ஒவ்வொரு வாசகரும் தத்தமக்குரிய மனநிலைகளிலிருந்து கலை இலக்கியங்களைப் பார்ப்பவர்கள். எனவே, அவர்களின் ரசனையும் பார்வையும் அவரவரின் உணர்வு நிலைகளோடு தொடர்புடையவை.

உளவியல் திறனாய்வு என்பது,

(1) இலக்கியத்தில் சித்திரிக்கப்படும் கதை மாந்தர்களின் மனங்களையும் நடத்தைகளையும் அறியவும்,

(2) படைப்பாளியின் மனவெளிப்பாடுகளை அறியவும்,

(3) படிக்கிற வாசகர்தம் மனவுணர்களுக்கு உகந்தவாறு அமைகிற கூறுகளை அறியவும்,

என முக்கியமாக மூன்று அடிப்படைகளில் செயல்படுகிறது.

5.2.2 உளவியல் அணுகுமுறையில் முக்கிய நிலைகள் (1) இலக்கியப் படைப்பாக்கத்தின் வழிமுறைகளை உளவியல் நிலையில் புலப்படுத்துதல்.

(2) படைப்பாளியின் உள்ளத்து நிலையையும் அதற்குரிய காரணங்களையும் அறியக் கொண்டு வருதல். அதாவது படைப்பாளியின் சுய வரலாற்றைப் படைப்பில் காணுதல்.

(3) குறிப்பிட்ட இலக்கியத்தில் காணப் பெறுகின்ற கதை மாந்தர்களின் உணர்வுகளையும், செயல்களையும் விளக்குதல்.

(4) இலக்கியத்தில் தொல்படிமம் முக்கிய இடம் பெறுகிறது என்பதைக் கருதுகோளாகக் கொண்டு அதன் உருவாக்கத்தைப் புலப்படுத்துதல்.

(5) குறிப்பிட்ட படைப்பிலுள்ள தனிச் சிறப்பான சொற்களையும் தொடர்களையும் மற்றும் சிறப்பான உத்திமுறைகளையும் உள்ளத்து உணர்வுப் பிரதிபலிப்புக்களாக இனங்கண்டு விளக்குதல்.

(6) வாசகரின் உள்ளத்தில் இலக்கியம் ஏற்படுத்துகிற உறவையும் தாக்கத்தையும் காணுதல்.

இவற்றின் மூலம் இலக்கியத்தின் உள்ளர்த்தங்களையும் ஆழங்களையும் உளவியல் வெளிப்பாடுகளாக இத்திறனாய்வு பார்க்கிறது.

5.2.3 பகுப்புமுறை உளவியலும் திறனாய்வும் சிக்மண்ட் ஃபிராயிட்

உளவியல் திறனாய்வில், பகுப்புமுறை உளவியலே (Psychoanalysis) பெரிதும் போற்றப்படுகிறது; பின்பற்றப்படுகிறது. இதனை ஆராய்ந்து சொன்னவர் சிக்மண்ட் ஃபிராயிட் (Sigmund Freud) எனும் ஜெர்மானிய மருத்துவர். இவர், மருத்துவத் துறையில் கண்டறிந்ததைக் கலை இலக்கியத்திலும் பொருத்திப் பார்த்தார்.

உள்ளத்தின் அடுக்கு நிலை

உள்ளம் (Psyche or mind) என்பதனை அடுக்கு நிலையில் இருப்பதாக ஃபிராயிட் சொன்னார். வெளிப்படையாகத் தெரியவரும் நிலையில் உள்ள நனவுடை மனம் (Conscious mind); வெளிப்படையாகத் தெரியாத, ஆனால் மனித செயல்களுக்கும், வெளிப்பாடுகளுக்கும் காரணமாக உள்ள நனவிலி மனம் (unconscious mind), அதற்கும் உள்ளே ஆழ்மனத்தில் புதைந்து கிடக்கும் அடிமனம் (Subconscious mind) என்று மூன்று அடுக்குகள் உண்டு என்கிறார். அடிமனம் தன் முனைப்புக் (Ego) கொண்டது; பாலியல் இணைவிழைச்சு (Sexual instincts) மற்றும் சமூக அளவில் தடுக்கப்பட்ட விலக்குகள் (Taboos) முதலியவற்றால் ஆனது என்று விளக்குகிறார்.

இலக்கியத்தை இதன் அடிப்படையில் ஃபிராய்டும் அவர் வழி வந்தோரும் விளக்குகின்றனர். முக்கியமாக ஓடிபஸ் மன உணர்வு (Oedipus complex) என்பது பாலியல் தொடர்பான அடிமனம் பற்றியது. இளம் பால பருவத்தில் ஓர் ஆண் மகனுக்குத் தன் தாய் மீதான பாலியல் உணர்வு நிலை இருப்பதாகவும், அதன் காரணமாகத் தன் தந்தை மீது ஒரு வகையான பொல்லாப்பு உணர்வு இருப்பதாவும் ஃபிராய்டு வருணிக்கிறார். இது, பலரால் மறுக்கப்பட்டாலும், உளவியல் திறனாய்வாளர்கள் மத்தியில் இதற்குச் செல்வாக்கு உண்டு. ஃபிராய்டின் இந்தக் கருத்து நிலையை ஜெயகாந்தன், ரிஷிமூலங்கள் என்ற குறுநாவலாகப் படைக்கிறார். ஃபிராய்டின் செல்வாக்கை இன்றையப் படைப்பாளிகள் பலரிடம், பலவகைகளில் பார்க்க முடியும். ஃபிராய்டு கனவுகளுக்குத் தருகிற ஆழ்மனம் சார்ந்த விளக்கங்கள், பல எழுத்தாளர்களிடம் தாக்கம் ஏற்படுத்தியிருக்கின்றன .

5.2.4 தன் வரலாற்று உளவியல் திறனாய்வு இலக்கியத்தில் வெளிப்படுகின்ற கதை மாந்தர்களின் அனுபவங்களும் உணர்வுகளும் அவ்விலக்கியத்தைப் படைத்த படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பிரதிபலிப்பனவே என்பதைக் கருதுகோளாகக் கொண்டது, தன் வரலாற்றுத் திறனாய்வு (Biographical criticism) ஆகும். இதனையும் ஓர் ஆய்வுமுறையாகச் சொன்னவர் ஃபிராய்டே ஆவார். இதனைப் பின்பற்றிப் பல திறனாய்வாளர்கள் திறனாய்வு செய்துள்ளனர்.

படைப்பாளன் வாழ்வும் படைப்பும்

சார்லஸ் டிக்கன்ஸ்

அமெரிக்கத் திறனாய்வாளர் எட்மண்ட் வில்சன் என்பவர் சார்லஸ் டிக்கன்ஸ் (Charles Dickens) நாவல்களில் காணப்படும் கற்பனைகளுக்கும் மன உணர்வுகளுக்கும் உரிய காரணங்களாக அந்தப் படைப்பாளியின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். டிக்கன்சின் இளமைக் காலத்தில் அவருடைய தந்தை கடனுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டார் அதன் காரணமாக அவருடைய மகன் டிக்கன்ஸ் சிறு வயதிலேயே பட்டறையொன்றில் கடின வேலைக்குச் சென்றார். அங்கே அவமானங்களும் சிரமங்களும் பட்டார். இதன் காரணமாகக் கட்டாயமாக வேலைக்கு அனுப்பிய அம்மாவின் மீது அவருக்குக் கோபமும் மனத்தாங்கலும் உண்டு. இந்த வாழ்க்கை அனுபவங்கள் அமிழ்ந்து, அவருடைய நாவல்களின் குறிப்பிட்ட உணர்வுகளுக்கும் போக்குகளுக்கும் மறைமுகமான காரணங்களாக அமைகின்றன என்கிறார் வில்சன். தமிழில் ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் முதலிய எழுத்தாளர்களின் படைப்புகளிலுள்ள அவர்களுடைய சுயவாழ்க்கை அனுபவ வெளிப்பாடுகளையும் இதே போல ஆராயலாம்.

ஜெயகாந்தன்

சூழல்

மேலும், குறிப்பிட்ட இலக்கியத்தினுடைய குறிப்பிட்ட சூழலின் தேவை, கதை மாந்தர்களின் செயல்கள், அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் மற்றும் படைப்பாளியின் நோக்கம் இவை காரணமாகச் சொல்லுகின்ற பாணியிலும் வடிவமைப்பிலும் வேறுபாடுகள் காணப்படும் என்பதனையும் இவ்அணுகுமுறை கவனத்திற் கொள்கிறது.

5.3 தொல்படிமவியல் அணுகுமுறை

உளவியல் அணுகுமுறையோடு நெருங்கிய தொடர்பு கொண்டது தொல்படிமவியல் அணுகுமுறை ஆகும். தொன்மை வரலாற்று வழியாக மனிதனின் உணர்வுகள், அவன் மூதாதையின் பண்புகளோடு உறைந்து கிடக்கின்றன. மனிதன் படைக்கின்ற கலை இலக்கியம் இத்தகைய உணர்வுநிலைகளை வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ, கலவைநிலையில் சித்திரிக்கின்றது. எனவே, இலக்கியத்தை ஆராய்கின்றவன், உறைந்து கிடக்கும் இந்த உணர்வு நிலைகளையும் உள் அர்த்தங்களையும் கண்டறிய வேண்டியவனாக ஆகிறான். இதை விளக்குவதே தொல்படிமவியல் அணுகுமுறை (Archetypal criticism) எனப்படும்.

5.3.1 தொல்படிமவியல் அணுகுமுறை – வரையறை தொல்படிமம் என்பது வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு மனித குலத்தின் மூளையில் பதிந்த பண்பாட்டுத் தடயங்களின் சாரமாகவும், மரபு வழியாக வரும் கூட்டு நனவிலி (Collective unconsciousness) மனத்தின் வடிவமாகவும், மனித குலம் அதன் வெவ்வேறு காலகட்டங்களைச் சந்தித்த வகை மாதிரியான எண்ணற்ற அனுபவங்களின் உளவியல் நிலையிலான எச்சமாகவும் கொள்ளப்படுகிறது.

சமூகக் குழுக்களின் பொதுவான குறியீடுகளாகத் தொன்மங்களாக, சடங்குகளாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் மூலவடிவம், (Arche-type) தொடர்ந்து வருவதாகத் தொல்படிமம் வருணிக்கப்படுகிறது. இனம் சார்ந்த நினைவுகளின் (Racial memory) சார்பினைப் பெற்றதாகவும், தொல்படிமம் விளக்கப்படுகிறது. ஒரு சமூகத்தின் பண்பாட்டுத் தளங்களோடு பிணைந்தும் அவற்றின் தாண்டவியலாத கட்டமைப்புகளுடனும் இது அமைந்திருக்கின்றதாக வருணிக்கப்படுகிறது. தொல்படிமவியல் அணுகுமுறை இலக்கியத்தில் தொல்படிமங்களைத் தேடுகிறது; அவற்றை விளக்குகின்றது. இலக்கியத்தில் காணப்படுகின்ற சொற்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் தொல்படிமங்களின் அடிப்படையில் விளக்கம் தருகிறது.

மூதாதையின் அறிவும் உணர்வும்

மனிதன் எவ்வளவுதான் நவநாகரிகங்களில் சிக்குண்டாலும் அவனுடைய மனத்தின் ஆழத்தில் அவனே அறியாத நிலையில் வரலாற்றுக்கு முந்திய அவனுடைய தூரத்து மூதாதையின் அறிவும், உணர்வும் நினைவுகளும் சாராம்சமாகப் படிந்து உறைந்து கிடக்கின்றன. அடிப்படையில் இவை பகுத்தறிய முடியாத் தன்மையுடையன. எனவே, இவை சாராம்சமான அடிப்படை வடிவங்களாகும். பின்னைய மனிதன் அவற்றைத் தொன்மங்களாக இங்ஙனம் ஏதாயினுமானதாக வெளியிடுகிறான். இப்பின்னணிக்குள்ளிருந்தே தொல்படிமவியலை அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது. இந்தத் தொல்படிமவியல் அணுகுமுறை அண்மைக் காலத்தில் கணிசமான கவனத்தைப் பெற்று வருகிறது.

5.3.2 தொன்மம் தொன்மை, பழமை மற்றும் காலத்தால் முந்தியது எனும் பொருளினைக் கொண்டது தொன்மம் (Myth) எனும் சொல். இச்சொல் பழமையானது. தொல்படிமம் மற்றும் தொன்மம் எனும் கருத்துநிலையின் முக்கியமான பண்பு, அது காலங்கடந்த ஒரு பொதுமையைக் குறிக்கிறது என்பதாகும். இதன் மூலம் இது குறிப்பிட்ட காலம் எனும் வரையறைக்குள் அடங்காதது என்பது அறிய வருகிறது.

மனிதப் பண்பாட்டின் தகவமைப்புகளைப் பெற்றுவிட்ட குறியீடுகள், சடங்குகள், எச்சங்கள் இன்று தொன்ம-தொல்படிம நிலைகளைப் பெற்றிருக்கின்றன. இவற்றிலிருந்து மனிதக் குழுமத்தின் உணர்வு நிலைகளைப் பதிவு செய்து கொண்டிருக்கிறோம்.

தொன்மங்களின் நிலை

கண்ணகி                             சீதை

தொன்மங்களாகப் படிந்துவிட்ட வாழ்வுச் சாரங்களில் தாய்மை என்பது முக்கியமானது. இன்றைய நாவல்களிலும் திரைப்படங்களிலும் இதனைப் பல வடிவங்களில் நிறையப் பார்க்க முடியும். அதுபோல, கற்பு என்பது கண்ணகி, சீதை, மண்டோதரி முதலியவர்களைக் கொண்டும் இன்றைய காலத்து நாவல் பாத்திரங்களைக் கொண்டும் அறியலாம். தொன்மங்கள், புராண வடிவங்களையும் பெறுகின்றன. மேலைநாட்டு மரபில், சாத்தான் (Satan) என்பவன் கேடு, தீங்கு என்ற உணர்வுநிலைகளின் தொன்மம் ஆகும். பிறன்மனை நோக்கிய பேதைமைக்கு இராவணனும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கநெறிக்கு இராமனும் தொன்மங்களாக ஆகியிருக்கிறார்கள். இத்தகைய நிலை, இன்றைய படைப்புகளிலும் நிறைய உண்டு.

5.3.3 சில தொல்படிமங்கள் இலக்கியங்களிலும், நாட்டார் கதைகளிலும், புராணங்களிலும், சடங்குகளிலும் நம்பிக்கைகளிலும் மட்டுமல்லாது இன்றையத் திரைப்படங்களிலும் தொல்படிமங்களும் அவற்றின் வெளிப்பாடுகளும் நிரம்பிக் கிடக்கின்றன. எம்.ஜி.ராமச்சந்திரன் பற்றிய சித்திரிப்புகள் குறிப்பிட்ட வகையான கொடை குறித்த தொல்படிமமாக அமைகிறதைக் காணலாம். பாரி, பேகன் முதலிய கடையெழு வள்ளல்கள் பற்றிய சித்திரங்களின் பாணியில் இவை அமைந்துள்ளன.

தொல்படிமமும் திரைப்படமும்

கர்ணன்                              துரியோதனன்

ரஜினிகாந்த், மம்முட்டி நடித்த ‘தளபதி’ என்ற திரைப்படம், கர்ணன் கதையைப் புதிய சமூகச் சூழல்களில் தொல்படிமமாகச் சித்திரிக்கின்றது. கர்ணன்-துரியோதனன் (ரஜினிகாந்தும் மம்முட்டியும்) தருமன், பாஞ்சாலி, குந்தி முதலிய தொல்படிமங்கள், இன்றைச் சமூக மனிதர்களாக அதிலே சித்திரிக்கப்பட்டுள்ளனர். திரைப்படத்தில் தொல்படிமம் உருவாக்கத்திற்கு ஒரு சிறப்பான உதாரணம் இது.

தொல்படிமங்களின் அடையாளங்கள்

தலைமுறை, தலைமுறையாகப் படிந்து கிடக்கும் தொல்படிமங்கள் இவ்வாறு தொடர்ந்து பல வடிவங்களில் வெளிப்படுகின்றன. இவற்றிற்கு இலச்சினையாகப் புராண, வரலாற்று மாந்தர்களின் பெயர்கள் நினைவு கொள்ளப்படுகின்றன. கோவலன், கண்ணகி, மாதவி, இராமன், சீதை, வீடணன், அகலிகை என இப்படிப் பலர் தொல்படிமங்களுக்கு அடையாளங்களாக நிற்கிறார்கள்.

தொல்படிமங்களின் சிறப்பு

தொன்மம் அல்லது தொல்படிமவியலை ஒரு குறியீடாகவும், அடையாளமாகவும் கொண்டு பண்பாட்டினை – சமூக மதிப்பினை அறிந்து கொள்கிறோம். பெயர்கள், அவற்றில் சாராம்சமாகப் படிந்துள்ள கருத்து நிலைகள் தொன்றுதொட்டு நமது வாழ்க்கை நிகழ்வுகளில் கலந்தும் திரிந்தும் எதிர்க்கப்பட்டும் வருவதை இதன்மூலம் அறிய முடிகிறது. ஓர் இனத்தின் பண்பாட்டினை, அதன் தேடலை அதன் இருப்பை, அதன் சிந்தனை முறையை இயற்கையோடும் மனித உறவுகளோடும் அவர்கள் கொண்டிருந்த உறவைக் காண்பதற்குரியனவாகத் தொல்படிமங்கள் ஆராய்ச்சிக்கு இடம் தருகின்றன.

5.4 தொகுப்புரை

திறனாய்வு அணுகுமுறைகளில் சிறப்பானதோர் இடத்தை வகிப்பவை, வரலாற்றியல் திறனாய்வு, உளவியல் திறனாய்வு மற்றும் தொல்படிமவியல் திறனாய்வு ஆகியவையாகும். காலம், இடம் எனும் மையங்களில் இலக்கியம் காலூன்றி நிற்கிறது எனும் கருதுகோளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது வரலாற்றியல் அணுகுமுறை. இது காலச் சூழமைவையும், காலந்தோறும் இலக்கியம் பெறுகின்ற மாற்றத்தையும் ஆராய்கிறது.

உள்ளத்தின் கோலங்களையும் இலக்கியத்தில் அவை சித்திரிக்கப் பட்டிருக்கின்ற கோணங்களையும் உளவியல் அணுகுமுறை உள்நுழைந்து வெளிப்படுத்துகிறது. சிக்மண்ட் ஃபிராய்டு வகுத்த பகுப்பியல் உளவியல் என்பது, திறனாய்வில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.

உளவியல் ஆராய்ச்சிக்குட்பட்ட ஒரு பகுதியாகக் கருதப்படக் கூடியது, தொல்படிமவியல் அணுகுமுறை. கூட்டு நனவிலி மனம் என்ற கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டு இது அமைகிறது. மனித குலத்தின் நினைவோட்டங்களில் ஆழமாகப் பதிந்துள்ள தொன்மங்களைப் பற்றியும் தொல்படிமவியல் அணுகுமுறை ஆராய்கிறது.

திறனாய்வு அணுகுமுறைகள் - IV

6.0 பாட முன்னுரை

இலக்கியத்தை ஒரு திட்டமிட்ட முறையோடு அணுகுவதற்கும் விளக்குவதற்கும் பல அணுகுமுறைகள் உண்டு என முன்னைய பாடங்களில் கண்டோம். அவற்றுள் குறிப்பிடத்தக்க சில அணுகுமுறைகளை விளக்கிக் கண்டோம். தொடர்ந்து, இலக்கியங்களை ஒப்பிடுகின்ற முறை பற்றியும், மொழியியல், இலக்கிய ஆராய்ச்சிக்குத் துணை நிற்பது பற்றியும், சமுதாயவியலும் இலக்கியமும் என்பது பற்றியும் காணவிருக்கிறோம். இம்மூன்று அணுகுமுறைகளும் இலக்கியங்களின் சில அடிப்படைப் பண்புகளையும் சிறப்புக் கூறுகளையும் அறிந்து கொள்ள உதவுகின்றன. இலக்கியங்களின் எல்லைகளைக் குறுக்கிவிடாமல், இலக்கியத்தின் திறனை நாம் அறிய வேண்டும். இலக்கியத்தின் திறன், இலக்கியத்தோடு உறவு கொண்ட பொருள்களையும் கருத்தமைவுகளையும் சேர்த்துத்தான் அறியப்படுகிறது. இவை பற்றிய செய்திகள் இப்பாடத்தில் இடம் பெற்றுள்ளன.

6.1 ஒப்பியல் அணுகுமுறை

ஒரு பொருளின் தனித்தன்மைகளை அல்லது சிறப்புகளை அறிவதற்கு, அதனை அதனோடு ஓரளவு ஒத்த இன்னொரு பொருளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது மனித இயல்பே. அதனடிப்படையில் அமைவதுதான் ஒப்பியல் அணுகுமுறை. ஒப்பிட்டுத் திறனாய்வதற்குத் தளமாக இருப்பன, ஒன்றற்கு மேற்பட்ட கலை, இலக்கியங்கள் மற்றும் அவற்றின் கருத்தமைவுகள் ஆகும். இவற்றுள் பொதுத் தன்மையும் (commonness) இருக்க வேண்டும்; வேறுபட்ட தன்மையும் (difference) இருக்க வேண்டும். இத்தகைய இலக்கியங்கள் மேல் ஒப்பீடு செய்வது, ஒன்றனைவிட இன்னொன்று சிறப்பானது, உயர்வானது என்று கண்டறியும் நோக்கத்தைக் கொண்டதல்ல. எதனை எடுபொருளாகக் கொண்டிருக்கிறோமோ, அதன் தனித்தன்மைகளை ஆராய்வதுதான் ஒப்பியலின் முக்கிய நோக்கமாகும். கம்பனை மில்ட்டனோடு ஒப்பிடுகிறோம் என்றால், மில்ட்டனின் குறைகளைச் சொல்வதோடு, கம்பனின் உயர்வுகளை மிகைபடச் சொல்வதோ அல்ல; மாறாகக் கம்பனின் திறனையும், தனித்தன்மைகளையும், கம்பனுடைய சூழ்நிலைகளையும் சொல்வதே நோக்கமாகும். மேலும், ஒத்த சமுதாய வரலாற்றுச் சூழல்களில் தோன்றுகிற இலக்கியங்கள் ஒத்த தன்மைகளைப் பெற்றிருக்கக் கூடும் என்பதும், அதே சமயத்தில் படைப்பாளியின் திறத்தினாலும், குறிப்பிட்ட சிறப்பியலான சில பண்பாட்டுச் சூழலினாலும் வித்தியாசப்பட்ட தன்மைகளைப் பெற்றிருக்கக் கூடும் என்பதும், ஒப்பியல் அணுகுமுறையின் அடிப்படைக் கருதுகோள்கள் ஆகும்.

6.1.1 ஒப்பியல் அணுகுமுறை – வரையறை அறிஞர் ரீமாக்

இலக்கியங்களை ஒப்பிடுதல் என்பது புதிதல்ல. தமிழில் உரையாசிரியர்களிடமே இது காணப்படுகிறது. அதுபோல் மேலைநாடுகளிலும் பல காலமாக இருந்துவருகிறது. ஆயினும் அது ஒரு தனித்துறையாகவும் திட்டமிட்ட தனி வழிமுறையாகவும் வளர்ந்தது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே ஆகும். பிரான்சு நாட்டில்தான் இது இவ்வாறு முதலில் வளர்ச்சி பெற்றது. பின்னர், ஏனைய நாடுகளுக்கும் இது சென்றது. ஒப்பியல் திறனாய்வு என்பது, வளர்ச்சி பெற்று ஒப்பிலக்கியமாகித் (comparative literature) தனித்துவம் அல்லது தனித்துறையாக ஆனது. ஒப்பியல் அணுகுமுறையை அடித்தளமாகக் கொண்ட ஒப்பிலக்கியத்திற்கு, அமெரிக்க அறிஞர் ரீமாக் (

.

.Remack) தந்துள்ள விதிமுறைகளே, எங்கும் ஏற்றுக் கொள்ளத் தக்கனவாகி உள்ளன. அவை:

(அ) குறிப்பிட்ட ஒரு நாட்டினுடைய இலக்கியத்தை இன்னொரு நாட்டு இலக்கியத்தோடு ஒப்பிட்டுக் காண்பது.

(ஆ) இலக்கியங்கள் எவையும் தனிமையானவை அல்ல; ஒன்றோடு ஒன்று உறவு கொண்டிருக்கக் கூடும். இந்த உறவுகளைக் கண்டறிவது ஒப்பியல்.

(இ) இலக்கியங்களுக்கும் உளவியல், தத்துவம், சமுதாயவியல் முதலியவற்றிற்கும் தொடர்புகள் உண்டு; அவற்றைக் கண்டறிவது.

(ஈ) இலக்கியம் ஒரு கலை. அதுபோல இசை, கூத்து, ஓவியம் முதலிய கலைகள் உண்டு. இந்தக் கலைகளுக்கு இடையேயுள்ள உறவுகளையும் தாக்கங்களையும் கண்டறிவது.

இவ்வாறு, ஒப்பீடு என்பது இத்தகைய அடிப்படைக் கருத்து நிலைகளைக் கொண்டிருக்கிறது. இதன் மூலம், ஒத்த அல்லது இணைவான பண்புகள் (parallelism), தாக்கங்கள் (impact), செல்வாக்கு (influence) முதலியவற்றை இது கண்டறிகிறது. மேலும், மொழிபெயர்ப்பு எனும் துறையை, ஒப்பீட்டு அணுகுமுறை, தனக்கு உறவு கொண்டதாகக் கொள்கிறது. ஏனெனில் மொழிபெயர்ப்பு மூலமாக இலக்கியங்களும், அவற்றின் செல் நெறிகளும், அடிக்கருத்துகளும் (themes) நாடு விட்டு நாடு, மொழிபெயர்ந்து பரவுகின்றன. இலக்கியங்களுக்கு இடையேயுள்ள தாக்கங்களைக் கண்டறியும் மொழிபெயர்ப்புப் பற்றி அறிவது மிகவும் தேவையாகும்.

6.1.2 தமிழில் ஒப்பீடு வால்மீகி

ஒப்பிடுதல் என்பது தமிழில் மிகப் பழங்காலத்திலேயே இருந்து வந்திருக்கிறது. களவு, கற்பு எனும் நெறியைத் தொல்காப்பியர், மறையோர் அல்லது வடவர் நெறியோடு ஒப்பிட்டுக் குறிப்பிட்டுள்ளார். மொழிபெயர்ப்புப் பற்றியும் பேசியிருக்கிறார். ஆனால், ஒப்பீடு ஒரு முறையியலாகத் தமிழில் வளரவில்லை. தேசிய உணர்வின் (Nationalism) தூண்டுதலால் தான் ஒப்பிடுதல் இங்கே வளர்ச்சி பெற்றுள்ளது என்று சொல்ல வேண்டும். இந்திய விடுதலை வேண்டிப் போராடியவர்களில் ஒருவராகிய வ.வே.சு.ஐயர் “Kamba Ramayana – A study” என்ற நூலை (1923) எழுதினார். இது, கம்பனை வால்மீகியுடனும் மில்டனுடனும் ஒப்பிடுகிறது. ஒப்பிட்டுக் கம்பனின் பெருமையை விதந்து பேசுகிறது. ( விதந்து-வேறுபடுத்தி )

தாகூர்

தமிழிலக்கியம் பற்றிய ஒப்பீடுகளில் இந்நூலே முதலாவது என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து, தொ.மு.சி.ரகுநாதன், பாரதியையும் ஷெல்லியையும் ஒப்பிட்டு நூல் எழுதினார். எஸ்.ராமகிருஷ்ணன் கம்பனும் மில்டனும் எனும் நூல் எழுதினார். கலாநிதி கைலாசபதி பாரதியையும் தாகூரையும் ஒப்பிட்டு இருமகா கவிகள் என்ற ஒரு நூல் எழுதினார். மேலும் அவர் எழுதிய ஒப்பியல் இலக்கியம் எனும் நூலே தமிழில் ஒப்பியல் பற்றி விளக்குகிற முதல் நூலாகும். பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், ஒப்பியலக்கியத் துறையில் பல கட்டுரைகளும் நூல்களும் எழுதியதோடு, தமிழகத்தில் பல்கலைக்கழக அளவில், முதன்முறையாக அதற்கென ஒரு தனித் துறையையும் ஏற்படுத்தினார். அண்மைக்காலத்தில் தமிழ் இலக்கியங்கள், மிகப் பரவலாகப் பிறமொழி இலக்கியங்களோடும், மார்க்சியம், உளவியல் முதலிய கருத்தமைவுகளோடும் ஒப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன.

6.2 மொழியியல் அணுகுமுறை

பாரதிதாசன் கண்ணதாசன்

திறனாய்வு அணுகுமுறைகளில், உருவத்தை முக்கியமெனக் கருதுவனவற்றுள் இதுவும் ஒன்று. அதேநேரத்தில், இலக்கியத்தின் உணர்வு, அழகு, முதலியவற்றில் இது கவனம் செலுத்துகிறது. உணர்வுகள், மொழியின் வாயிலாக வெளிப்படுகின்றன; இலக்கியம், ஒருகலைப் பொருளாக அழகு பெற்றிருப்பதற்கு மொழியே சிறந்த வாயிலாக இருக்கிறது என்ற கருதுகோள்களைக் கொண்டது இந்த அணுகுமுறை. சிறந்த கவிஞர்கள் என்போர், மொழியைக் கையாளுவதில் சிறந்தவர்களாக இருப்பவர்கள் என்பது ஓர் உண்மை. பாரதியையும், பாரதிதாசனையும் பின்னர், கண்ணதாசனையும் இந்த வகையான மொழித்திறன் உடையவர்களாகக் காணமுடியும்.

6.2.1 மொழியியல் அணுகுமுறை – விளக்கம் ரோமன் யகோப்சன்

மொழி என்பது வேண்டுகிற செய்தியைச் சொல்லுவதற்குரிய சாதனம்; அழகாகவும் பிறர் மனங்கொள்ளுமாறும் சொல்லுவதற்குரிய சாதனம். இலக்கியம் என்பது ஒரு கலை. ஆனால், ஓவியம், இசை, சிற்பம், நடனம் முதலிய பிற கலைகளிலிருந்து அது வேறுபடுகிறது. எவ்வழி? முக்கியமாக, மொழியின்வழி. பிற கலைகள், மொழியைச் சார்ந்திருப்பவையல்ல; ஆனால், இலக்கியமோ, மொழியைச் சார்ந்தது. மொழியின் வழியாகவே அது தன்னை வெளிப்படுத்துகிறது. எனவே, அதனை மொழிசார் கலை (Verbal Art) என்பர். இலக்கியத்தின் மொழியமைப்பானது, அதாவது அதனுடைய செயல்பாடுகள், அந்த இலக்கியத்தின் பண்புகளுக்குக் காரணியாகவும் அடையாளமாகவும் விளங்குகின்றன. இலக்கியத்திற்கு அதனுடைய இலக்கியத் தன்மையே (Literariness) காரணம் என்றும் அதனைத் தருவது, மொழியமைப்பே என்றும் ரோமன் யகோப்சன் (Roman Jakobson) கூறுவார். இதனடிப்படையிலேயே இந்த அணுகுமுறை அமைந்துள்ளது. இலக்கியத்தில் முக்கியமாகக் கவிதையில் மொழி சில தனிச்சிறப்பான பண்புகளுடன் இயங்குகிறது என்று இந்த அணுகுமுறையை முன்னிறுத்திய ஹேரி லெவின் (

erry Levin), செய்மோர் சேட்மன் (Seymore Chatman) ரீஃபாத்தே (Riffattere) முதலிய அறிஞர்கள் விளக்குகின்றனர்.

சேட்மன்                                ரீஃபாத்தே

6.2.2 இயல்பு வழக்கும் இலக்கிய வழக்கும் நடைமுறைப் பேச்சு வழக்கை இயல்பு வழக்கு (Casual Language) என்று சொல்வோமானால், இலக்கியத்தில் சிறப்பாக வழங்குகிற மொழிவழக்கை இலக்கிய வழக்கு (Literary usage) என்கிறோம். இதனைச் செய்யுள் வழக்கு என்பார் தொல்காப்பியர். வித்தியாசப்படுதல் (difference) என்பது இதன் பண்பு அல்லது நோக்கம். உதாரணமாகத் தேன் என்பது ஒரு திரவப் பொருள். இது, காதுக்குள் போகுமா? போனால் என்ன ஆகும்? அதுவும் தேன்; அது இனிப்பானதாகத்தான் இருக்கட்டுமே – செவிக்குள் பாய்ந்து செல்லுமா? சாத்தியமா? நடைமுறையில் முடியாது. ஆனால் கவிதையில், குறிப்பிட்ட உணர்ச்சியை விதந்தும் அழகாகவும் சொல்ல வேண்டுமானால், அது சாத்தியம்; அது முடியும். பாரதியார் சொல்லுகிறார்.

செந்தமிழ் நாடனெும் போதினிலே – இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே

தேன், காதிலே வந்து பாய்வதாகச் சொல்வது, மற்றைச் சூழ்நிலைகளில் தர்க்கமற்ற (illogical) ஒரு வழக்கு; கவிதையில் உணர்வூட்டச் சொல்லுவது ஒருவகையான தருக்கம் – கலையியல் தருக்கம் – உடைய வழக்காகும். இந்த நிலையை, மொழியியல் அணுகுமுறை விளக்குகிறது. இதேபோன்று, இன்னொரு உதாரணம். பொதுவாக, இலக்கண வழக்கில், தமிழில் – எழுவாய் – செயப்படுபொருள் – பயனிலை என்ற வகையில் வாக்கியம் அமைவதே மரபு. எடுத்துக்காட்டு “நான் அவளைக் கண்டேன்” என்பது. ஆனால், எழுவாய் (வெளிப்படையாக) இல்லாமல், பயனிலையை வாக்கியத்தின் முதலில் அமைத்தால், இலக்கணப்படி தவறு போல் தோன்றும். ஆனால், இலக்கியத்தில் அது வழுவமைதியாகக் கருதப்படுகிறது. கம்பன் படைத்துக்காட்டும் சொல்லின் செல்வன் அனுமன், இராமனின் ஆணைப்படி சீதையைத் தேடிச் செல்லுகின்றான். சீதையைக் கண்டு மீள்கிறான். ஆவலோடு இருக்கும் இராமனிடம் அதுபற்றிச் சொல்லுகிறான்.

அனுமன்

கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்

(கம்ப. சுந்தர: திருவடி தொழுதபடலம் 56;1)

தகவலின் உடனடித் தேவையாகிய உணர்வுநிலை, மனநிலை ஆகியவற்றைச் சார்ந்து இந்த வாக்கியம் அமைகிறது. “நான் சீதையைக் கண்டேன்” என்றோ “நான் கற்பினுக்கு அணியாகிய சீதையைக் கண்களால் கண்டேன்” என்றோ சொல்லுவதைவிட, அனுமனின் சொல்திறன், சிறப்பாகவும் அழகாகவும் இருக்கிறதல்லவா?

6.2.3 நடையியல் கூறுகள் மேற்கூறியவற்றை இலக்கியத்தின் மொழியியல் திறனாய்வில், நடையியல் கூறுகள் (Stylistic Features) என்பர். ஒலியமைப்பு, (Sound texture), சொல் அமைப்பு (Lexical, diction), தொடரமைப்பு (Syntactic) ஆகிய நிலைகளில்,இத்தகைய நடையியல் சிறப்புக் கூறுகள் காணப்படுகின்றன. சொல்லுவோன் உணர்ச்சிக்கும், அவனுடைய மொழியில் வெளிப்படுகிற குரல் அல்லது ஒலியின் ஏற்ற இறக்கம் அல்லது அமைப்புக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது என்ற அடிப்படையில் கவிதை மொழியின் ஒலியமைப்பு அல்லது ஒலிப்பின்னல் அமைகிறது. அதுபோலவே சொற்களும், அவை திரும்பத் திரும்ப வருதலாகிய பண்பும் அமைகின்றன. குழைவு, கனிவு, காதல் போன்ற சூழல்களில், ஒலிகளும் சொற்களும் அமைவதற்கும், கோபம், எரிச்சல் முதலிய சூழல்களில் அவை அமைவதற்கும் வேறுபாடுகள் உண்டு. எடுத்துக்காட்டாக, இராமன் மேல் விருப்பம் கொண்டு, சூர்ப்பனகை மாயவேடம் பூண்டு அழகிய வஞ்சி மகளென, அவன்முன் தோன்றுவதாகச் சொல்லும்போதும், குகன், பரதன் மேல் எதிரியெனச் சந்தேகங்கொண்டு அவனைக் கோபத்தோடு பேசுவதாகச் சொல்லும் போதும் கம்பன் கையாளுகிற ஒலித்திறனையும் சொற்றிறனையும் கண்டு கொள்க. இவ்வாறு, நடையியல் கூறுகள், மொழியியல் அணுகுமுறையின் மூலமாக அறியப்படுகின்றன. மொழியைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் பேசுகிற மொழியியல், இலக்கியத்தின் திறனறிய இவ்வாறு பயன்பட்டு வருகிறது.

6.3 சமுதாயவியல் அணுகுமுறை

வெ.கனகசபைப்பிள்ளை

தமிழில், பலரால் அறியப்பட்டதும், பின்பற்றப்படுவதும், சமுதாயவியல் அணுகுமுறை (Sociological approach) ஆகும். இது, இலக்கியத்தின் உள்ளடக்கம் பற்றியே அதிகம் அக்கறை கொள்கிறது; அதனையே தளமாகக் கொள்கிறது. ஒரு சமுதாயவியல் அறிஞன் செய்கிற வேலையை இந்த அணுகுமுறை மூலம், திறனாய்வாளன் செய்கிறான். சமுதாய வரலாறு எழுத இந்தத் திறனாய்வுமுறை, பல சமயங்களில் அறிஞர்களுக்கு உதவுகின்றது. தமிழ்ச் சமூக வரலாற்றுக்கு – முக்கியமாகப் பழந்தமிழ்ச் சமூகத்தை அறிய – இந்த அணுகுமுறை பெருமளவில் துணை செய்துள்ளது. வெ.கனகசபைப் பிள்ளை, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் முதலிய பல அறிஞர்கள் இவ்வாறு பல நூல்கள் செய்துள்ளனர்.

6.3.1 சமுதாயவியல் அணுகுமுறை – விளக்கம் சமுதாயவியல் அணுகுமுறையின் அடிப்படைக்கருதுகோள்கள் பின்வருவன :

(1) இலக்கியம் வெற்று வெளியிலிருந்து பிறப்பதில்லை; குறிப்பிட்ட சமுதாயச் சூழலில்தான் அது பிறக்கிறது.

(2) அவ்வாறு தோன்றும் இலக்கியம், ஒரு சமுதாய அமைப்பில் இயங்குகிறது; ஒரு சமுதாயத்தை நோக்கிச் செல்கிறது; அச் சமுதாயத்தினால் ஏற்கப்படவோ, புறக்கணிக்கப்படவோ செய்கிறது.

(3) ஒரு சமுதாயப் பின்புலத்தில் பிறக்கிற இலக்கியம், அந்தச் சமுதாயத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ புலப்படுத்துகின்றது.

(4) படைப்பாளியின் சமுதாய நோக்கம், தேவை முதலியன அவனுடைய இலக்கியத்தில் வெளிப்படுகின்றன.

வாழ்வியல் நடைமுறைகளின் காரணமாக, சமுதாயத்தின் ஒரு விளைபொருளாக அமைகிற (Social product) இலக்கியம், தோற்றம், பொருள், பயன்பாடு ஆகிய மூன்று நிலைகளிலும் மனித குலத்தோடு நெருக்கம் கொண்டதாக விளங்குகின்றது. சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தவும், விளைவு ஏற்படுத்தவும் கூடியதாக இலக்கியம் அமைவதால், சமூகத்தில் அக்கறை கொண்ட பலரும் இத்திறனாய்வின் பயன்பாட்டில் அக்கறை கொள்கின்றனர். முக்கியமாக, மார்க்சிய அறிஞர்கள், இந்தத் திறனாய்வு முறையில் கவனம் செலுத்துவதோடு, மார்க்சிய மெய்ஞ்ஞானம் காட்டும் முறையியலின் வழியாக, இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் உள்ள உறவுகளை விளக்குகின்றனர். சமுதாய மாற்றம், மார்க்சியவாதிகளால் முன் மொழியப்படுவதால், இலக்கியத்தைச் சமூகவியலின் அங்கமாகப் பார்ப்பது, அவசியப்படுகிறது.

6.3.2 சில அடிப்படைப் பண்புகள் அல்லது கோணங்கள் சமுதாயவியல் திறனாய்வு மிகவும் விசாலமானது ; மேலும், இது மிகவும் பழைமையானதும் அதே நேரத்தில் தொடர்ந்து பரவலாகச் செய்யப்பட்டு வருவதும் ஆகும். எனவே, இது பல கோணங்களில் (dimensions or angles) வெளிப்படுகிறது. அவற்றுள், குறிப்பாகச் சமுதாயப் பின்புலம் (Social background) காணுதல், மற்றும் குறிப்பிட்ட இலக்கியம் தோன்றுவதற்குக் குறிப்பிட்ட பின்புலமே காரணம் என்ற முறையில் ஆராய்தல் ஆகியவற்றை இங்குப் பார்க்கலாம். உதாரணமாக, தமிழ்ச் சிறுகதைகளின் தொடக்க காலத்தில், விதவையர் சோகம், பால்ய விவாகத்தின் கொடுமைகள் முதலியவற்றை மிகுதியாகவே காணலாம். காரணம், 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச் சமூகத்தில், முக்கியமாகப் பிராமண இனத்தவரிடையே பால்ய விவாகம், ஒரு சமூகக் கட்டாயமாக இருந்து வந்தது. அந்தச் சோகமே, இத்தகைய கதைகள் தோன்றக் காரணம்; அதே நேரத்தில், அண்மைக் காலமாகத் தமிழ்ப் புனைகதைகளில் அத்தகைய பாடுபொருளைக் காண்பதரிது. காரணம், அந்தச் சூழ்நிலை இப்போது இல்லை. காலதாமதமாகத் திருமணமாகின்ற முதிர்கன்னிகள் பிரச்சனை, இன்றையப் புனைகதைகளில் இடம் பெற்று வருவதைப் பார்க்கலாம். மேலும், பெண்கள் எழுச்சி மற்றும் பெண்ணியச் சிந்தனை பெருகி வருவதையும் பார்க்கலாம்.

சமுதாய நிறுவனங்கள் (Social Institutions) பற்றிய சித்திரிப்பு: திருமணம், தனிக்குடும்பம், கூட்டுக் குடும்பம், சமூக நியதிகள் அல்லது எழுதப்படாத சட்டங்களும் மரபுகளும், சாதி முதலியவை சமுதாய நிறுவனங்களாகும். இலக்கியத்தில் இவை எவ்வெவ்வாறு இடம் பெற்றுள்ளன என்று கண்டறிவது சமுதாயவியல் அணுகுமுறையில் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

அடுத்துச் சமுதாய மதிப்புகள் அல்லது விழுமியங்கள் (Social Values) . இவை, பெரும்பான்மை மக்களால் அல்லது செல்வாக்குப் பெற்ற சமூகக் குழுவினரால் இவையிவை நல்லன அல்லது தீயன, கெட்டன அல்லது ஏற்புடையன என்று நீண்டகாலமாக அங்கீகரிக்கப்பட்டு வருவனவாகும்.

எடுத்துக்காட்டாகக் காதல் என்பது தனிமனித உணர்வுகளையும் நியாயங்களையும் சார்ந்திருக்கிற அதே வேளையில் அது ஒரு சமுதாய மதிப்பாகவும் விளங்குகிறது. எனவேதான் காதலை ஏற்பது, நிராகரிப்பது என்பன சமூக நிகழ்வுகளாகி அமைகின்றன. நவயுகக் காதல் எப்படிப்பட்டதாக இருக்கிறது. சாதியும் மதமும் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று கிண்டல் செய்கிறார் கவிஞர் மீரா. குறுந்தொகைக் காதல், பெற்றோர் யார், ஊர் எது, உறவினர் யார் என்று பார்க்காமல், செம்புலத்தில் பெய்த மழைபோல் இருவர் மனமும் கலப்பதாக இருந்தது. இப்போது? கவிஞரின் பார்வையில்,

உனக்கும் எனக்கும்

ஒரே ஊர்

வாசுதேவ நல்லூர்

நீயும் நானும்

ஒரே மதம்

திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார்

வகுப்புங் கூட

உன்றன் தந்தையும்

என்றன் தந்தையும்

சொந்தக்காரர்கள்

எனவே

செம்புலப்பெயல் நீர்போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே.

இவ்வாறு, காதல், ஒரு சமூக மதிப்பாக வெளிப்படுகிறது. சமுதாயவியல் அணுகுமுறையில் இத்தகைய தகவல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு, சமுதாயத்தின் நிலைப்பாடுகளையும், அதன் பல்வேறு அங்கங்களையும், அதன் நிறுவனங்களையும், அதன் மரபுகளையும் சித்திரிப்பதும் விமரிசனம் செய்வதும் தொன்றுதொட்டு இலக்கியத்தில் பல வடிவங்களில் காணப்பட்டு வருகிறது. மேலும், சமுதாயக் குழுக்கள், இருப்பிடங்கள், சமுதாய மாற்றங்கள் முதலியன பற்றியும் இலக்கியங்கள் சித்திரிக்கின்றன. இவற்றையெல்லாம் ஒரு முறையியலோடு அல்லது வழிமுறையோடு திறனாய்வு செய்வது, சமுதாயவியல் அணுகுமுறையின் கடமையாக அமைகிறது.

6.4 தொகுப்புரை

திறனாய்வு அணுகுமுறைகள், இலக்கியத்தைக் குறிப்பிட்ட முறையியல்கள் கொண்டு விளக்குவதற்கு உரியவை. இவற்றுள் ஒப்பியல் அணுகுமுறை, மொழியியல் அணுகுமுறை, சமுதாயவியல் அணுகுமுறை ஆகிய மூன்று அணுகுமுறைகளை இப்பாடத்தில் கண்டோம். ஒத்த தன்மைகளும் அதே நேரத்தில் வேறுபட்ட தன்மைகளும் கொண்ட ஒன்றற்கு மேற்பட்ட இலக்கியங்களை ஒப்பிடுகின்ற ஒப்பியல் திறனாய்வு, நாம் எடுத்துக் கொண்ட இலக்கியத்தின் தனிச்சிறப்புக்களையும் பண்புகளையும் தருகின்றது. இலக்கியங்களை இலக்கியங்களோடு மட்டுமன்றிப் பிற கலைகளோடும் இலக்கியத்தை ஒப்பிடலாம். முக்கியமாக கருத்தமைவுகள் கொண்டும் ஒப்பிடலாம். குறிப்பிட்ட ஒரு மொழியில் தோன்றிய இலக்கியத்தைப் பிறமொழி இலக்கியத்தோடு ஒப்பிடுதல் சிறப்பானது. ஒப்பிலக்கியம் என்பது இதனடிப்படையில் தனியொரு துறையாக வளர்ச்சி பெற்றுள்ளது. மொழியியல் திறனாய்வு என்பது, இலக்கியத்தில் அமைந்திருக்கிற மொழி அதன் பல்வேறு கூறுகளுடனும் பண்புகள் அல்லது செயல்பாடுகளுடனும் இலக்கியத்திற்கு எவ்வாறு அழகும் திறனும் சிறப்பும் தருகின்றது என்பதனை விளக்குகின்றது. ஒலிப்பின்னல், சொல் தேர்வு, சொல் வளம், வாக்கிய அமைப்பு முதலியவற்றில் நடையியல் கூறுகள் வெளிப்படுகின்றன. இவை பெரும்பாலும் உரைநடை இலக்கியத்தில் சிறப்புப் பெறுவதைவிடக் கவிதையிலேயே அதிகம் சிறப்புப் பெறுகின்றன. சமுதாயவியல் அணுகுமுறை, மிகவும் பழைமையானதும், விசாலமான தளம் கொண்டதும், பரந்துபடப் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருவதும் ஆகும். இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையேயுள்ள நெருக்கத்தை, அதன் இயங்கு திறனாய்க் கொண்டு, இந்த அணுகுமுறை அமைகிறது. சமூகச் சித்திரிப்புகள், சமூகப் பின்புலங்கள், தளங்கள், சமூக நிறுவனங்கள், சமூக மதிப்புக்கள், மாற்றங்கள் முதலியவற்றின் கோணங்களில் அல்லது பரிமாணங்களில் இவ் அணுகுமுறை வெளிப்படுகின்றது.