95

திறனாய்வாளர்கள்

பாடம் - 1

திறனாய்வும் உரை மரபும்

1.0 பாட முன்னுரை

இலக்கியத் திறனாய்வு என்பது நேரடியாக மேலை நாட்டிலிருந்து இங்கே இறக்குமதியான ஓர் அறிவாற்றல் திறன் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அது தவறானது. இங்கே, தமிழில் ஒன்றுமில்லை ; எல்லாம் மேலைச் சரக்குத்தான் என்று சொல்வது, வரலாறு பற்றிய அறியாமை என்றுதான் சொல்ல வேண்டும். இன்றுள்ள மாதிரியே அன்றும் இருந்தது என்று யாரும் எதிர்பார்க்க முடியாது ; ஆனால் தமிழில், மிகப்பழங்காலத்திலேயே, இதனுடைய தொடக்கநிலைக் கூறுகள் இருந்தன. திறனாய்வு என்பது இலக்கியம் பற்றிய கருத்துகளைப் புலப்படுத்துதலைச் செய்கிறது என்றால், பழங்காலத்திலே உரை என்பது அத்தகையதொரு பணியைச் செய்திருக்கிறது எனலாம். இன்று அறிவியல் மற்றும் பல சிந்தனைகளின் வளர்ச்சி காரணமாகத் திறனாய்வு, ஒரு தனித்துறையாக நவீனமான முறையியல்களோடு வளர்ந்திருக்கிறது என்பது உண்மையே ; ஆனால், திறனாய்வு இன்று செய்கின்ற பணியினை ஏதோ ஒரு வடிவில், குறிப்பிட்ட எல்லைகளுடன் உரை அன்று செய்தது. எனவே இலக்கியத் திறனாய்வு பற்றிப் பேசுகிற நாம் உரைமரபு பற்றிப் பேசுவதும் மிகவும் அவசியமாகும்.

1.1 உரை - விளக்கம்

லக்கியம் என்பது படைக்கப்படுவது. அது ஒரு கலைவடிவம். உரை என்பது அறிவு சார்ந்தது ; இலக்கியத்தைப் பிறர்க்கு விளக்குவது ; இலக்கியம் பற்றிப் பேசுவது. உரை என்ற சொல், வளம் நிறைந்தது. அது, மூன்று நிலைகளில் பயன்படுகிறது அல்லது பொருள்படுகிறது. தமிழின் மிகப் பழைய இலக்கணமாகிய தொல்காப்பியத்திலேயே இதனைக் காணலாம். உரை – உரைத்தல் ; சொல்லுதல் (To tell); இதுதான் அடிப்படையான பொருள். அடுத்து, உரை – உரைநடை (prose) . மூன்றாவதாக உரை – விளக்கம் ; இலக்கியம் அல்லது இலக்கணத்தை விளக்குவது (Commentary).

நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்

- (தொல்காப்பியம்,கற்பியல்-12)

என்று வருகிற இடத்தில் சொல்லு-கூறு என்ற பொருளில் உரை என்ற சொல் இடம் பெறுகிறது. இதுவே பெரும்பான்மையான வழக்கு. அடுத்து, இச்சொல் உரைநடை (prose) என்ற பொருளிலும் தொல்காப்பியரால் பயன்படுத்தப் படுகிறது. செய்யுளியல் என்ற பகுதியில் (சூத்திரம் 157, 158), அடிவரையறையில்லாச் செய்யுள்கள் ஆறு என்று சொல்லி, அவற்றுள் ஒன்றாக, உரை என்பதை அவர் சொல்லுகிறார். பாடல் முழுவதும் பாட்டாக அல்லாமல் இடையிடையே குறிப்பாகவும் விரிவாகவும் இடம் பெறுவது உரை என்பது அவர் கூற்று.

பாட்டிடை

வைத்த குறிப்பி னானும்

பாவின் றெழுந்த கிளவி யானும்

பொருள்மர பில்லாப் பொய்ம்மொழி யானும்

பொருளாடு புணர்ந்த நகைமொழி யானும்

உரைவகை நடையே நான்கென மொழிப

- (செய்யுளியல்-166)

இவ்வாறு உரை அல்லது உரைநடை அமைகிறது என்பதுதான் உரைநடையின் தொடக்கப் பண்பு ஆகும். சிலப்பதிகாரம், ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்று அதன் பதிகம் கூறுகிறது. உரைநடையின் வரலாறு இவ்வாறு அமைகிறது ; அது தனியாகப் பார்க்கத் தகுந்தது.

அடுத்து, உரை என்பது, விளக்கம் அல்லது புலப்பாடு என்ற பொருளில், மரபியலில் தொல்காப்பியர் பேசுகிறார். சூத்திரத்தின் உட்பொருளைப் பேசுவது உரை ; உட்பொருள் மட்டுமல்லாது, இன்றியமையாத கருத்துகளையும் பேசுவது உரை ; மேலும் ‘ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்குவது உரை’ என்று தொல்காப்பியர் சொல்கிறார் (மரபியல் 105, 106).

இம்மூன்று பொருள்களையும் தொகுத்து, “உரைத்தல் – உரைநடையில் உரைத்தல் – இலக்கியம் அல்லது இலக்கணத்தின் உட்பொருளையும் அதனைச் சார்ந்த வேறுபொருட்களையும் செவ்விதின் உரைத்தல் அல்லது விளக்குதல்” உரை என்று சொல்லலாம். உண்மையில் இதுதான் திறனாய்வுக்கும் உரிய அடிப்படையான வரையறையாகும்.

1.1.1 உரையும் அதன் பகுப்புகளும் தொல்காப்பியமும் அதன் பின்னால் வந்த நன்னூலும் உரை என்பதனை இலக்கணத்திற்குரியது எனும் முறையிலேயே பேசுகின்றன. தொல்காப்பியம் உரையை வகைப்படுத்திச் சொல்லவில்லை. ஆனால் நன்னூல், காண்டிகையுரை, விருத்தியுரை என்ற இரண்டு பகுப்புகளாகக் கூறுகின்றது. ஆனால் இவை, இலக்கண உரைகளுக்கு உரிய பாகுபாடுகளே ஆகும். இலக்கியத்திற்குரிய உரைகள் பாகுபடுத்தப்படவில்லை.

காண்டிகையுரை என்பது கருத்து, சொற்பொருள், எடுத்துக்காட்டு எனும் மூன்றையும் தரவேண்டும் ; அவற்றோடு வினா விடையும் தரப்படல் வேண்டும். இலங்கையைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் நன்னூலுக்கு இவ்வகையான காண்டிகை உரையைத் தந்திருக்கிறார். ஆகவே அது நீண்டகாலமாகப் பாடநூலாகப் பயிலப்பட்டு வருகிறது. விருத்தியுரை என்பது விரிவாகச் சொல்லுகின்ற உரை. சூத்திரத்தின் உட்பொருளை மட்டுமல்லாது,. இன்றியமையாத விளக்கங்களையும் அது சொல்ல வேண்டும். பிறருடைய உரையை அல்லது கருத்தை எடுத்துரைத்து அதனை மறுத்தோ, அதற்கு உடன்பட்டோ, தன்னுடைய கருத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். ஐயங்களை அகற்ற வேண்டும். இவ்வகையில், நன்னூலுக்குச் சங்கர நமச்சிவாயர் சிறந்த விருத்தியுரை எழுதியுள்ளார்.

தொல்காப்பிய உரைகளுக்குக் காண்டிகை, விருத்தி என்ற பாகுபாடுகள் இல்லை. எல்லா உரைகளுமே, விளக்கமாகவும் எடுத்துக்காட்டுகளுடனும் அமைந்த உரைகளாகும். யாப்புக்கள் பற்றிப் பேசும் யாப்பருங்கலக் காரிகை உரை, சுருக்கமான உரை. யாப்பருங்கலம் எனும் நூலுக்கு அமைந்த யாப்பருங்கல விருத்தியுரை, விளக்கமான உரை. இலக்கணங்களுள் தொல்காப்பியத்துக்கே அதிகமான உரைகள் உள்ளன. இன்றும்கூட அதற்கு உரைகள் எழுதப்படுகின்றன. தொல்காப்பியம் இலக்கியம் பற்றியும் வாழ்நெறி பற்றியும் பேசுகிறது என்பதே இதன் காரணி. இது தொல்காப்பியத்தின் பெருமையைக் காட்டுகிறது.

1.2 உரையும் பாடம் கேட்டலும்

“கற்றலில் கேட்டலே நன்று”, “கற்றிலனாயிலும் கேட்க.” – இவை சான்றோர் வாக்கு. முன்னர், ஏடுகள் அரிதாகவே கிடைப்பனவாதலாலும், முறையான பாடசாலைகளும் அரியனவாகவே இருந்தன என்பதாலும், வீடுகளிலே அமர்ந்து வாசித்து, மகிழுவதும் அரியதாகவே இருந்தது. இந்த நிலையில் பொது மன்றத்தில் பலர் கூடியிருக்க, ஒருவர், ஒரு நூலையோ, பாடத்தையோ உரக்கப் படித்து அதற்குப் பொருளும் விளக்கமும் சொல்லுதல் என்பது அன்றைய நிலையாக இருந்தது ; அதுவே கல்வி முறையாகவும் இருந்தது. எனவே, கேள்வி அல்லது செவிவழிச் செல்வம், அன்று பெரிதும் பாராட்டத் தகுந்ததாகவும் ஏற்புடையதாகவும் இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் விளக்குதல் என்பது உரைத்தல் என்பதாகவும் இருந்தது. ஒரு நூலையோ, பாடத்தையோ, ஒரு குழு அல்லது கூட்டத்தின் முன்னால் உரைப்பது என்பது அப்படியே அந்த நூலை வரிவரியாக வாசிப்பது அல்லது ஒப்பிப்பது என்பதாகாது. மாறாக, அதனை விளக்குவது, உடனிருப்போரின் ஐயங்களை நீக்குவது, அவர்களுடைய வினாக்களுக்கு விடைகள் தருவது, கேட்போரின் கருத்தை ஈர்ப்பது என்பதாக அது இருந்தது. இது, இன்றைய நடைமுறையில், பாடம் சொல்லுவது, பாடம் கேட்பது உள்ளிட்ட கல்விமுறை (Pedagogy) ஆகும். உரையின் இத்தகைய பண்பு போன்றதுதான், திறனாய்வின் அடிப்படைப் பண்பு ஆகும். திறனாய்வில் பல புதிய கொள்கைகள் பெருகிவிட்டபோதும், அது கல்விசார்ந்த ஒரு முறையியலாக மேலை நாட்டவர் பலரால் இன்றும் கருதப்பட்டு வருகிறது.

1.2.1 இறையனார் அகப்பொருளுரை தரும் விளக்கம் அறுபது நூற்பாக்கள் கொண்ட இறையனார் அகப்பொருள் அல்லது இறையனார் களவியல் என்று வழங்கப்பெறும் நூலுக்கு உரைகள் சில எழுதப்பட்டன ; ஓதப்பட்டன. அவற்றுள் சிறந்த ஒன்றை (அதாவது இன்று வழங்குகின்ற உரையை) உருத்திர சன்மன் என்பவன் தேர்ந்தெடுத்தான் என்று அந்த உரை கூறுகிறது. இந்த உரைதான், முதன்முதலாக முச்சங்கங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது. அந்த உரை கூறும் சில செய்திகள் இங்கே நமக்கு ஏற்புடையனவாக இருக்கும். மூலநூல் எதுவாயினும் – அது இறையனாரின் அகப்பொருள் நூலாயினும் – அதற்கு உரை என்பது இன்றியமையாதது. உரை சொல்லும் போதுதான், மூலநூல் சரியான விளக்கம் பெறுகிறது. இவ்வழி, திறனாய்வு எவ்வளவு அவசியமானது என்பது தெரியவரும். ஒரு நூலுக்குப் பல உரைகள் எழக்கூடும். ஆயின் எல்லாம் மிகச் சரியான விளக்கங்களைத் தரும் என்பதில்லை. அவையும் மதிப்பீடு செய்வதற்குரியவையே. இந்த அகப்பொருளுக்குச் செய்யப்பட்ட உரை, புலவர்கள், சான்றோர்கள் பலர் இருக்கும் அவையில் உரைக்கப்பட்ட உரையாகும். மேலும், இது தொடர்ந்து பல தலைமுறைகளாக வரிசையாகச் சொல்லப்பட்டு வந்தது. ‘மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார், தம்மகனார் கீரங்கொற்றனார்க்கு உரைத்தார் ; அவர் தேனூர்கிழார்க்கு உரைத்தார் ; அவர், படியங்கொற்றனார்க்கு உரைத்தார்…’ என்று இப்படியே வரிசைப்படுத்திக் கூறிச் செல்லுகிறது, உரை. இதன்மூலம் உரை என்பது தொடர்ந்து பல தலைமுறையினரும் புரிந்துகொள்ளும்படியாக, போற்றும்படியாக இருக்க வேண்டும் என்ற கருத்துப் புலப்படுகிறது. திறனாய்வு, தலைமுறை இடைவெளிகளை இட்டு நிரப்புவது ; ஒரு செய்தியைப் பல தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வது.

இறையனார்அகப்பொருளுரை பல வகைகளில் சிறப்புடையது. பழைய மரபுகளைக் கொண்டு வந்து ஒப்பவைத்துச் சொல்லுதல், புதிய செய்திகளைச் சொல்லுதல், பிறருடைய கருத்துகளைச் சொல்லி அவற்றை, ஏற்புடையனவெனின் ஏற்றுக் கொள்ளுதல், அல்லவெனின் மறுத்தல், வினாக்களை எழுப்புதல், அவற்றிற்கு விடைகள் சொல்லுதல், நூற்பாக்கள் சார்ந்த பல பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு வந்து சொல்லுதல் என்று பல பண்புகளை இதிலே காணலாம். இவையெல்லாம் திறனாய்வுநெறிக்கு உகந்தவை. தமிழ் உரைமரபு, இவ்வாறு திறனாய்வின் வரலாற்றோடு இணைந்திருக்கிறது.

1.3 உரைகளின் பணி

மனிதனின் சமூக வாழ்க்கையையும், தனிமனித உணர்வுகளையும் சொல்லுவதும், மனித வாழ்வு மேன்மையுறக் கலையியல் பண்புகள் மூலமாக உதவுவதும் இலக்கியத்தின் பணியாகும். மொழியின் அமைப்பு, அதன் பல்வேறு கூறுகள் முதலியவற்றை முறைப்படுத்திச் சொல்லி, அம்மொழியை வழிப்படுத்துவது இலக்கணத்தின் பணி. இந்தப் பணிகளைச் செவ்வையாகவும், இடையறாமலும் தொடர்ந்து செய்திட உதவுவது உரைகளின் பணியாகும்.

ஒரு காலத்தில் – அந்தக் காலத்தின் பண்புகளுக்கும் சூழல்களுக்கும் ஏற்ப – எழுதப்பட்ட இலக்கியங்களும் இலக்கணங்களும், காலம் என்ற பரந்த வெளியில் தெளிவாகப் புரியமுடியாமல் போவதுண்டு. அருகிய சொல்லமைப்புகள், சொற்பொருள் மாற்றங்கள், பண்பாட்டு வழக்காறுகளில் ஏற்படும் மாற்றங்கள் முதலியவற்றின் காரணமாகப் ‘புரிதல்’ என்பதில் இடைவெளிகள் ஏற்படக்கூடும். மூலப் பனுவல்களின் நோக்கம், தலைமுறைகள் கடந்து அவை எல்லார்க்கும் பயன்படவேண்டும் என்பது. கால இடைவெளிகள் அல்லது தலைமுறை இடைவெளிகளை நீக்குவதில் உரைகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன. காட்டாகப் பட்டினப்பாலை,

முட்டாச் சிறப்பின் பட்டினம் (அடி: 218)

என்று சொல்லுகிறது. ‘முட்டா…’ என்ற சொல் வழக்கு, சங்க காலத்தில் பெருவழக்காக இருந்தாலும், பின்னாளில் குறிப்பாக நம்முடைய காலத்தில் அது அருகிய வழக்கு. எனவே புரிதலில் ஒரு தகவல் இடைவெளி (Communication gap) விழுகிறது. நச்சினார்க்கினியரின் உரை, இந்த இடைவெளியைக் குறைக்க வருகிறது. “குறைவுபடாத தலைமையை உடைய பட்டினம்” என்று உரை சொல்லுகிறது. இப்போது அந்தப் பாடல் கூறவந்த பொருளும் அதன் சிறப்பும் நமக்கு எளிதாகத் தெரியவருகின்றன. இவ்வாறு உரை, மூலப்பனுவலுக்கும், அதனை வாசிக்கிற பல்வேறு தலைமுறையினர்க்கும் தகவல் இடைவெளிகள் விழாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது. இதுவே, உரைகளின் அடிப்படையான பண்பும் பயனும் ஆகும். திறனாய்வின் அடிப்படையும் இதுதான்.

1.4 உரை தோன்றுவதற்குரிய சூழல்கள்

தமிழில் உரைகள் தோன்றியதற்குரிய அடிப்படைச் சூழல்கள்:

(1) சங்க கால வீழ்ச்சிக்குப் பிறகு வந்த வேற்றரசர்களின் ஆட்சிக் காலங்களில், மீண்டும் சங்க இலக்கியங்களையும் தொல்காப்பியத்தையும் படிக்கவும், அவை பற்றிச் சிந்திக்கவும் கூடிய ஆர்வநிலை ஏற்பட்டது; அதேபோது, மொழிநடை, பண்பாட்டு மாற்றங்கள், செய்திகளின் அருமைகள் முதலியவை தலைமுறைகளின் இடைவெளி காரணமாகச் சிறிய சிறிய தடைகளை ஏற்படுத்தின. எனவே உரை கூறுவது அவசியமாயிற்று.

(2) சங்க இலக்கியப் பாடல்கள் தனித்தனியாக எழுதப்பட்டவை ; பாடப்பட்டவை ; இவை, கி.பி.6ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு- தொகுக்கப்பட்டன. தொகைகளாக வரும்போது, மொத்தமாகப் படிப்பதற்கும் உரை கூறுவதற்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன.

(3) சமணத் துறவிகளின் செயல்பாடுகளினால் பல சமணப் பள்ளிகள், சங்கங்கள் ஏற்பட்டன ; அப்போது இலக்கண இலக்கிய நூல்களும் தத்துவங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன; விவாதிக்கப்பட்டன. இந்தச் சூழ்நிலைகள் தமிழில் உரைகள் தோன்ற நல்ல தளம் அமைத்தன.

1.4.1 உரைகள் வரலாறு தமிழில் இன்று கிடைப்பவற்றுள், முதல் உரையாகக் கருதப்படுவது இறையனார் களவியலுரை ஆகும். இந்த உரை, நக்கீரர் பெயரால் வழங்குகிறது. கி.பி. 8 அல்லது 9ஆம் நூற்றாண்டில் எழுதப் பெற்றது. இதன் நடை, உரைநடைவளர்ச்சிக்கு மிக முக்கியமான அடித்தளமாகும். இதனைத் தொடர்ந்து, தொல்காப்பியம் பலருடைய கவனத்தைக் கவர்ந்தது. இளம்பூரணர் என்பார் முதன்முதலாகத் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதினார். அதன் பின்னர், சேனாவரையர் பேராசிரியர், முதலிய பலர் உரை எழுதினார்கள். தொல்காப்பிய உரைகளுள், பொருளதிகாரத்துக்குப் பேராசிரியர் எழுதிய உரை, தமிழில் இலக்கியக் கொள்கை பற்றி எழுத மிகவும் துணை நிற்பது. கி.பி.11-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் உரைகள் அதிகம் தோன்றின. தொடர்ந்து உரைகள் காலம்தோறும் எழுதப்பட்டு வருகின்றன.

20-ஆம் நூற்றாண்டிலும் உரைகள் பல தோன்றியுள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்கது. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் எழுதிய திருவாசக உரையாகும் கதிர்மணி விளக்கம் என்பது இதன்பெயர். மறைமலையடிகள் எழுதிய முல்லைப்பாட்டு – ஆராய்ச்சி உரை மற்றும் பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை என்ற இரண்டும் உரைகளாக மட்டுமல்லாமல், இக் காலத்துத் தமிழ்த் திறனாய்வின் தொடக்க கால முயற்சிகளாகவும் கருதப்படுகின்றன. உரை என்பதற்கும் திறனாய்வு என்பதற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் குறைவே என்பதனை மறைமலையடிகளின் இந்த இரு உரைகளும் நமக்குக் காட்டுகின்றன.

தமிழில் வழங்கும் இன்றைய திறனாய்வின் வரலாறு எழுதுகிறவர்கள், இதனைக் குறிப்பிடாமல் போவதில்லை. அடுத்து, ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதிய சிலப்பதிகார உரையும், பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் எழுதிய சங்க இலக்கிய உரைகளும் குறிப்பிடத் தக்கவை. வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார், கம்பராமாயணத்துக்கு விரிவான உரை எழுதியுள்ளார். இதிலுள்ள விளக்கங்களும் ஒப்பீட்டுக் குறிப்புகளும் எடுத்துக்காட்டுப் புராணக் கதைகளும் குறிப்பிடத்தக்கவை. சேக்கிழாரின் பெரியபுராணத்துக்கு சி.கே.சுப்பிரமணிய முதலியார் விளக்கமான உரையை எழுதியுள்ளார்.

1.4.2 உரைகளின் வகைகள் எவ்வகையான நூல்கள் மீது உரைகள் அமைகின்றன என்பதன் அடிப்படையில் உரைகளை முக்கியமாக இரண்டாகக் கொள்ளலாம். ஒன்று இலக்கண உரைகள். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றுக்கு உரை எழுதுவது பழைமையானது; அதே சமயத்தில் தொடர்ந்து வழங்கி வருவதும் ஆகும். இரண்டு – இலக்கிய உரைகள். முக்கியமாகப் பழைய இலக்கியங்களுக்கான உரைகள் பலரால் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இலக்கணம், இலக்கியம் ஆகிய இரண்டிற்கும் உரையெழுதியவர்கள் மிகவும் குறைவு. நச்சினார்க்கினியர் தொல்காப்பியத்துக்கும் உரையெழுதியுள்ளார் ; அதே சமயத்தில் பத்துப்பாட்டு எனும் சங்க இலக்கியத்தொகை நூலுக்கும், சீவக சிந்தாமணி எனும் காப்பிய நூலுக்கும் உரை கண்டுள்ளார். இலக்கியமும் இலக்கணமும் அல்லாமல், சமய தத்துவ நூல்களுக்கும் உரை எழுதுதல், ஒரு தேவையாகவும் முறையாகவும் உள்ளது. மெய்கண்டாரின் சிவஞானபோதத்திற்கு, சிவஞான மாபாடியம் எனும் உரையை சிவஞான முனிவர் எழுதியுள்ளதை எடுத்துக்காட்டாகக் கூறலாம். தமிழில் தத்துவ நூல்களுக்கு எழுந்த உரைகள் மிகவும் குறைவேயாகும். இலக்கியத்திற்கு அமைந்த உரைகளே அதிகம்.

1.4.3 உரைகளின் முக்கியத்துவம் மூலப் பனுவல்களே, முதன்மையும் முக்கியத்துவமும் உடையவை என்றாலும், பெரும்பாலான உரைகள் மூலப் பனுவல்களின் அளவுக்கு – ஆனால், ‘உரைகள்’ என்ற எல்லைக்குள் – முக்கியத்துவம் உடையனவாக உள்ளன. அடியார்க்கு நல்லார் உரை, தமிழின் நாடகம் பற்றியும் இசை பற்றியும் அறிவதற்கு இன்றியமையாத மூலமாக உள்ளது. சைவ சித்தாந்த வரலாற்றில் மெய்கண்ட தேவர் எழுதிய சிவஞானபோதம் எவ்வளவு முக்கியமானதோ, அந்த அளவிற்கு, சிவஞானமுனிவரால் எழுதப்பட்ட சிவஞான மாபாடியம் எனும் உரையும் முக்கியமானதாக விளங்குகிறது. சில உரைகள், மூல நூல்களைவிட முக்கியத்துவமும் பெருமையும் பெற்றுவிடுகின்றன. காட்டாக, இறையனார் களவியல் உரை மற்றும் யாப்பருங்கல விருத்தியுரை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழின் மொழி வரலாறு, பண்பாடு மற்றும் சமூக வரலாறு முதலியவற்றை எழுத இலக்கண இலக்கிய நூல்கள் உதவுகின்றன. அதுபோலவே உரைகளும் உதவுகின்றன. காட்டாக, தொல்காப்பியம் – சொல்லதிகாரத்துக்குச் சேனாவரையர் ழுதிய உரை, தமிழ்மொழியில் சொற்பாகுபாடுகள், சொல்லமைப்புகள் முதலியவற்றை அறியப் பெரிதும் உதவுகின்றது. அதுபோல் தமிழின் கவிதையியலை (poetics) அறிவதற்கு யாப்பருங்கலத்துக்கு அமைந்த விருத்தியுரை, கவனத்திற்குரிய பல செய்திகளையும் பண்புகளையும் தருகிறது.

உரைகள் யாப்பு வடிவில் அமைந்தவை அல்ல. அவை உரைநடையிலேயே அமைந்துள்ளன. தமிழின் உரைநடை (prose) வளர்ச்சியில் இந்த உரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. தொடரமைப்பு, சொல் தேர்வு, விளக்கமுறைக்கான பிரத்தியேகமான நடை, வினா-விடை பாணியிலான நடை, தெளிவு, ஆற்றொழுக்கான போக்கு முதலியவற்றைக் கொண்டுள்ள இந்த உரைகள், தமிழ் உரைநடையின் சிறந்த பண்புகளாக உள்ளன. உரையாசிரியர்களே அன்று சிறந்த உரைநடையாசிரியர்களாக இருந்திருக்கிறார்கள்..

1.5 தொகுப்புரை

இலக்கியம் பல நெறிகளையும் பல நிலைப்பாடுகளையும் கொண்டு வளர்கிற கலை. குறிப்பிட்டதொரு காலச் சூழ்நிலையில் தோன்றினாலும், பல காலங்களிடையேயும் பல தலைமுறையினர் மற்றும் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வாழக்கூடிய திறன்களையும் நோக்கங்களையும் கொண்டதாக அது இருக்கிறது. அதனுடைய உள்ளார்ந்த பண்புகள் இவையெனினும், கால வளர்ச்சியில் மொழிவழக்குகளிலும் பண்பாடு முதலிய வழக்குகளிலும் தோன்றக்கூடிய தகவலிய இடைவெளிகளை உரைகள் அகற்றுகின்றன. இலக்கிய இலக்கண நூல்களை, அவ்வக்காலங்களுக்குப் பொருந்துமாறு செய்வதில் உரைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. உரைநடை வளர்ச்சிக்கும் இலக்கியம் குறித்த திறனாய்வின் வரலாற்றுக்கும் மொழிநிலை குறித்த அறிவியல் மற்றும் பயன்பாட்டு வளர்ச்சிக்கும் உரைகள் பணியாற்றுகின்றன.

உரைகள் என்பவை சொற்பொருள் விளக்கம் தருகின்றன ; கருத்துரைகள் தருகின்றன ; மேற்கோள்கள் தருகின்றன ; பிறர் கருத்துகளைக் கூறி ஏற்கவோ, மறுக்கவோ செய்கின்றன ; தோன்றக்கூடிய ஐயப்பாடுகளுக்கும் வினாக்களுக்கும் விடை தருவதுபோல் விளக்கங்கள் தருகின்றன. புதிய வழக்குகளைப் புதிய செய்திகளைச் சொல்லுகின்றன. மூலநூலுக்கு உற்ற தோழியாக இருந்து வருவது உரை. திறனாய்வும் இந்தப் பணியைத்தான் செய்கிறது. எனவே, தமிழ்த் திறனாய்வு என்பதை அறிந்து கொள்ளவிரும்புவோர், தமிழில் தோன்றியுள்ள உரைகளையும் உரை மரபையும் புரிந்து கொள்வதும் அறிந்து கொள்வதும் அவசியமாகும்.

பாடம் - 2

இலக்கிய உரையாசிரியர்கள் - I

2.0 பாட முன்னுரை

ஒரு காலத்தே எழுதப்பட்ட நூலுக்கு இன்னொரு

காலத்திலோ அதே காலத்திலோ (அது அருகிய வழக்கு)

எழுதப்படுகின்ற – பெரும்பாலும், உரைநடையிலான – விளக்கத்தை,

உரை என்கிறோம். தலைமுறை இடைவெளியையும், எழுதியோன்-

படிப்போன் என்போருக்கு இடையேயுள்ள இடைவெளியையும்

குறைக்கின்ற நோக்கத்தில் அமைகின்ற உரைகள், தமிழ் மரபில்

மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. இன்று, திறனாய்வுகள்

செய்கிற வேலையை, அன்று இந்த உரைகள் ஓரளவு செய்தன

என்று சொல்லலாம். இந்த உரைகள் தொல்காப்பியம், நன்னூல்

முதலிய இலக்கண நூல்களுக்கு அமைந்தவையென்றும்,

பத்துப்பாட்டு, சிலம்பு முதலிய இலக்கிய நூல்களுக்கு

அமைந்தவையென்றும் இரண்டு நிலைகள் கொண்டவை என

அறிகிறோம். உரைகள், தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான

இடம் வகிக்கின்றன. மேலும், சமூக, பண்பாட்டு வரலாற்றிலும்

அவை சிறப்பான இடம் வகிப்பதற்குரியவை. பெரும்கவிஞர்களுக்கு

அன்று இருந்த அதே தகுதி, திறன் ஆகியவற்றுடன் விரிவான

அறிவுப் பரப்பும் கொண்டவர்களாக உரையாசிரியர்களில் பலர்

திகழ்ந்தனர்.

2.1 இலக்கிய உரைகள் - விளக்கம் ஏற்கனவே குறிப்பிட்டுக் காட்டியது போன்று, உரைகள் இரு

வகைப்படும். ஒன்று இலக்கண உரைகள், மற்றது இலக்கிய உரைகள்.

இவை தவிர, சமயத் தத்துவ நூல்களுக்கும் உரைகள் உண்டு.

உரைகள் இன்னின்னவாறு அமைய வேண்டும் என்று சில இலக்கண

வரையறைகள் உண்டு; ஆனால் அவை, இலக்கண உரைகளுக்கே

உரியவை. காண்டிகை உரை, விருத்தியுரை என்ற பாகுபாடும்

இலக்கண உரைகளுக்கே உரியது. இலக்கிய உரைகளுக்கு

இலக்கணம் என்று தனியே எதுவும் கூறப்படவில்லை.

சூத்திரத்து உட்பொருள் அன்றியும் யாப்புற

இன்றி யமையாது இயைபவை யெல்லாம்

ஒன்ற உரைப்பது உரைஎனப் படுமே – (மரபியல், 105)

என்று தொல்காப்பியர் உரைக்குக் கூறும் வரையறை,

இலக்கண உரைக்கே உரியது. ஆயினும் தொடர்ந்து அவரே,

மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்

. . . . . . . . . . . . . . . .. . . .

ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கித்

தெற்றென ஒருபொருள் ஒற்றுமை கொளீஇத்

துணிவொடு நிற்றல் என்மனார் புலவர் (106)

என்று கூறுவது, இலக்கிய உரைக்கும் பொருந்துகிற

வரையறைதான். ஆயின், இலக்கிய உரையின் முக்கியமான பண்பு,

பொருளை விளக்குவதோடன்றிக் குறிப்பிட்ட அவ்விலக்கியப்

பகுதியின் நயத்தையும் நோக்கத்தையும் விளக்குவதும் ஆகும்.

இலக்கியம் கூறுகிற செய்தியின் உட்பொருளையும், அது

பிறவற்றோடு உறவு கொண்டிருக்கும் திறனையும், குறிப்பிட்ட

இலக்கிய ஆசிரியனின் தனித்திறனையும் இலக்கிய உரை காட்ட

வேண்டும். இலக்கியத்தின் வழியாக வெளிப்படுகின்ற அல்லது

அதிலிருந்து சுட்டி உரைக்கக்கூடிய வரலாற்றுச் செய்தி, பண்பாடு,

தத்துவம் ஆகியவற்றையும் இலக்கிய உரை சொல்லுகிறது.

2.1.1 இலக்கிய உரை – ஒரு பொது வரலாறு தமிழில் இன்று காணக்கூடிய உரைகளில், காலத்தினால்

முந்தியது இறையனார் அகப்பொருள் உரையே என்பதில் கருத்து

வேறுபாடில்லை. அது, கி.பி.9ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக்

கூறப்படுகிறது. கி.பி. ஒன்பதிலிருந்து பதினான்கு முடிய நிறைய

உரைகள் தோன்றின. இந்த இடைக்காலத்தை உரைநடையின் காலம்

எனலாம். ஆனால் இலக்கண உரைகளுக்குப் பின்னர், இரண்டு

அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் இலக்கிய உரைகள்

தோன்றின என்று தோன்றுகின்றது. மொழியின் மாற்றங்கள் மற்றும்

வளர்ச்சி நிலைகளின் பின்னணியில் இலக்கணங்களுக்கு உரைகள்

மிக அவசியமாக இருத்தல் போன்று, இலக்கியங்களுக்கு அத்தகைய

நிலை இல்லை போலும். இலக்கியங்கள், புலவர்கள் பலர் நிறைந்த

அவைகளிலே ஓதப்பட்டன. இந்நிலையில் முதன்முதலில்

அருஞ்சொற்களுக்குப் பொருள் தருதலும், இலக்கணக் குறிப்புகளும்

அணி நயங்களும் குறிப்பிடுதலும், சில வரலாற்றுக் குறிப்புகள்

தருதலும் என்று இவையே வழக்கத்திலிருந்தன.

சிலப்பதிகாரத்திற்கு முதலில் அரும்பதவுரை தோன்றியது. இன்றும்

இது வழக்கிலுள்ளது. அதுபோல், ஐங்குறுநூறு, புறநானூறு,

பதிற்றுப்பத்து, அகநானூறு முதலிய சில சங்கப் பாடல்களுக்கும்

குறிப்புரைகளும், சுருக்கமான பொழிப்புரைகளும் தோன்றின.

இந்தக் குறிப்புரைகளின் ஆசிரியர்கள் யாவரென்று தெரியவில்லை.

சிலப்பதிகாரத்துக்கு விரிவான உரையெழுதிய அடியார்க்கு

நல்லார், சிலம்பின் பழையவுரையைப் பெரிதும் பின்பற்றியே

உரையெழுதினார். அடியார்க்கு நல்லார் காலம் கி.பி.12ஆம்

நூற்றாண்டின் தொடக்கம் என்பர். திருக்குறளுக்கு உரை கண்ட

பரிமேலழகர் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக்

கூறப்படுகிறார். ஆனால் குறளுக்கு உரை கண்டவர்களாகக்

கூறப்படும் பதின்மரில் இவரே இறுதியானவர். அப்படியாயின்,

இவருக்கு ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பே அதாவது, அடியார்க்கு

நல்லாருக்கும் முன்பே, திருக்குறளுக்கு உரைகள் வந்திருக்கின்றன

எனலாம். நச்சினார்க்கினியர் கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச்

சேர்ந்தவர்.

2.2 இலக்கண உரைகளில் இலக்கியம் பற்றிய பார்வை

இலக்கண உரைகளில் இரண்டு வகைகள் காணலாம். ஒன்று:

எழுத்து, சொல் ஆகியவற்றின் இலக்கணங்களுக்கு அமைந்த

உரைகள். இரண்டு; பொருள் (யாப்பு, பொருள், அணி)

இலக்கணத்துக்கு அமைந்த உரைகள். முதலாவது வகை

தொல்காப்பியத்தின் எழுத்து, சொல் அதிகாரங்களுக்கோ,

அல்லது எழுத்து, சொல் மட்டுமே கொண்ட நன்னூலுக்கோ அது

போன்ற பிறவற்றுக்கோ அமைந்த உரைகள்; மொழியின்

அடிப்படைகள், அமைப்பு விதிகள் முதலியவற்றை மட்டும்

பேசுவன இவை. இரண்டாவதாக அறியப்படும் பொருள்

இலக்கணங்கள், இலக்கியம் பற்றிப் பேசுபவை; செய்யுள்

இலக்கியத்தின் பல்வேறு உறுப்புகள், பாடுபொருள்கள் மற்றும் பிற

பண்புகள் பற்றிப் பேசுபவை. ஒருவகையில், இலக்கியக் கொள்கை

பற்றியன இவை எனலாம். தொல்காப்பியப் பொருளதிகாரம்,

இறையனார் களவியல், யாப்பருங்கலம், நம்பியகப் பொருள்

முதலியன இத்தகையவை.

பொருள் இலக்கண உரைகள், இலக்கியத் திறனாய்வுக்கு

அடிப்படையாக உள்ள இலக்கிய உருவாக்கம் – கொள்கை -

பற்றியன; ஆதலால், இவ்வுரைகளில், இலக்கியம் பற்றிய

பார்வைகளும், இலக்கிய நயங்களும், அவற்றிற்கு அடிப்படையாக

உள்ள பண்புகளும் சொல்லப்படுகின்றன. இறையனார்

அகப்பொருள் உரையில் இந்தப் பண்பினைக் காணமுடியும்.

உதாரணத்துக்கு ஒன்று: ஆம்பல் மலர் போல் வாய் மணக்கும்-

இப்படிச் சொல்லுவதில் உவமம், ஏற்கனவே நிருபணமான ஒரு

பொருள் (ஆம்பல்); உவமிக்கப்படுவது, காதலியின் வாய். இதுவே

மரபு. ஆனால் இதனை மாற்றி, ‘வாய்போல் நாறும் ஆம்பல்’

என்று சொல்லலாமா? இதற்கு ஒரு மேற்கோள் பாடலை

எடுத்துக்காட்டி, உரைகாரர் சொல்லுகிறார். “இவள் வாய் போல

நாறும் ஆம்பல் உளவே என, வாயை உவமையாக்கி, ஆம்பலை

உவமிக்கப்படும் பொருளாகச் சொல்லுதல் குற்றம் பிற எனின்,

அறியாது சொல்லினாய்; உலகத்து இவை உவமை, இவை

உவமிக்கப்படும் பொருள் என்று நிலைபெற்றன உளவே யில்லை.

உரைக்கும் கவியது குறிப்பினான் உவமையும் உவமிக்கப்படும்

பொருளாம்; உவமிக்கப்படும் பொருளே உவமையாகவும்

அமையும்..” இறையனார் அகப்பொருள் உரையின் இந்த

வாக்கும், குறிப்பிட்ட பாடல்அடி ஒன்றனுடைய அழகையும்

நயத்தையும் காட்டுவதோடு, அந்த அடியின் பொருத்தத்தினையும்

சொல்லுகிறது. அதனோடு அமையாது, உவமம் எவ்வாறு அமையும்

என்ற கவிதைக் கோட்பாட்டையும் விளக்குகிறது. இவ்வாறு,

பொருள் இலக்கணத்திற்கு அமைந்த உரை இலக்கிய

உரைபோன்று அமைகிறது என்பதை நாம் அறிய வேண்டும்.

மேலும் அவ்விலக்கணத்தின் தன்மையினை ஒட்டி, இலக்கியக்

கோட்பாட்டையும் நாம் அதன்வழி அறிகிறோம். இதுபோலவே,

தொல்காப்பியப் பொருளதிகாரத்துக்கு உரையெழுதிய

பேராசிரியரிடமும், இலக்கிய நயம் பற்றிய பேச்சையும் இலக்கியக்

கோட்பாடு பற்றிய பார்வையையும் நாம் காணலாம்.

உதாரணத்துக்குச் சொன்னால், தொல்காப்பியர் செய்யுளியலில்

(நூற்பா 100) ‘நோக்கு’ எனும் ஓர் உறுப்புப் பற்றிக் கூறுவார்.

அதற்குப் பேராசிரியர் தருகிற உரையைப் படித்து அறிந்து

கொள்க. இதிலே, சொல்லுக்குச் சொல்லும் தொடருக்குத்

தொடருமாக இணைந்து பொருள் வளத்தை எவ்வாறு பாடல்

குறித்து நிற்கிறது என்பதை அறிவதற்கு நெருங்கி நோக்கிப்

பார்க்கிற முறையைப் பேராசிரியர் பயன்படுத்தியுள்ளார். இதனை

அமெரிக்காவின் புதுத்திறனாய்வு (Neo Criticism) எனும்

முறையியலோடு ஒப்பிட முடியும்.

2.2.1 இலக்கிய உரைகளின் அமைப்பு இலக்கிய உரைகள் இவ்வாறுதான் அமைய வேண்டும் என்ற

வரையறை இல்லை. ஆயினும், இவ்வுரைகளில் நடைமுறையில்

காணப்படுபவற்றின் அடிப்படையில், அவற்றின் பொதுவான

அமைப்புகளைக் கூறமுடியும்.

(1) பாடலின் திரண்ட கருத்தைப் பொழிப்புரையாகச்

சொல்லுதல்.

(2) பாடலின் அமைப்பை, அதன் சொற்களாலேயே

சுருக்கமாக்கிச் சொல்லிப் பாடல் வாக்கிய அமைப்புப்

பிறழாமல் இருக்குமாறு செய்தல்.

(3) பொழிப்புரை, பொதுவான திரண்ட கருத்தாக

இருத்தலின், சிறப்புக் கருதிச் சில சொற்கள் அல்லது

சொற்றொடர்களுக்குச் சுருக்கமான குறிப்புரை தருதல்.

(4) மேற்கோள் பாடல்கள் காட்டுதல் அல்லது பாடல்

அடிகளோடு ஒப்புமையுடைய பிற பாடல் அடிகளைக்

காட்டுதல்.

(5) உவமம், உருவகம் போன்ற அணிச் சிறப்புகளைக்

காட்டுதல்.

(6) அருஞ்சொற்களுக்கு விளக்கம்/பொருள் கூறுதல்.

(7) சில போது, இலக்கணப் பொருத்தங்கள்/குறிப்புகள்

காட்டுதல்.

(8) பாட வேறுபாடு காட்டுதல்

மேலே நாம் கூறியவை, இதே வரிசைமுறையில் எல்லா

உரைகளிலும் இருக்கின்றன என்ற பொருளில் அல்ல. ஆனால்,

இந்தக் கூறுகள் அல்லது பகுதிகள் இந்த உரைகளில்

அமைந்திருக்கின்றன அல்லது இடம் பெற்றிருக்கின்றன

என்பதையே குறிக்கும்.

2.3 சங்க இலக்கிய உரைகள் - 1

சங்க இலக்கியம் என்று பொதுப் பெயரால்

அழைக்கப்படுகின்ற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை

கி.பி.ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டுவாக்கில்

தொகுக்கப்பட்டனவாகக் கூறப்படுகின்றன. தொகுக்கப்பட்ட

காலத்துக்குப் பின்னர், இவற்றுக்குக் குறிப்புரைகளும்,

பொழிப்புரைகளும் எழுதப்பட்டன. இவற்றை யார் எழுதினார்கள்

என்று தெரியாவிட்டாலும், இவை முக்கியமான இரண்டு

பணிகளைச் செய்தன. ஒன்று, இந்தப் பாடல்களைச் சிதறவிடாமல்

பாதுகாத்தன. இரண்டு, பின்னால், சற்று விரிவாக உரையெழுத

முனைந்தவர்களுக்கு இவை அடியெடுத்துக் கொடுத்தன.

பத்துப்பாட்டுள் ஒன்றாகிய திருமுருகாற்றுப்படைக்கு

மட்டும் (நச்சினார்க்கினியருக்கு முன்பு எழுதப்பட்ட) நான்கு

பழையவுரைகள் கிடைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவற்றின்

ஆசிரியர்களுடைய பெயர்களில் பரிமேலழகர் முதற்கொண்டு பல

பெயர்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எதுவும்

நிறுவப்படவில்லை. இது போலவே, எட்டுத்தொகை நூல்களுள்

நற்றிணை தவிர ஏனையவற்றுக்கும் பழையவுரைகள்

வெளிவந்திருக்கின்றன. பத்துப்பாட்டு நூல்கள் முழுமைக்கும்

சேர்த்து நச்சினார்க்கினியர் (14ஆம் நூற்றாண்டு)

உரையெழுதியிருக்கிறார். இவரே, எட்டுத்தொகையுள் ஒன்றாகிய

கலித்தொகைக்கும் முழுதாக உரையெழுதியிருக்கிறார்.

சங்கப் பாடல்களுக்கு அமைந்துள்ள – ஆசிரியர் பெயர்

தெரியாத பழைய உரைகளில் – புறநானூற்றுக்குள்ள பழைய

உரை, மிகவும் சிறப்பாகவும் ஓரளவு விரிவாகவும் உள்ளது.

இவ்வுரையைப் பதிப்பித்த உ.வே.சாமிநாத ஐயர், “இளம்பூரணர்,

பேராசிரியர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார்

முதலியவர்களுடன் ஒப்பக்கருதும் அறிவுடையவராக” இந்த

உரையாசிரியரைப் புகழ்ந்துரைக்கிறார். திணை, துறை பற்றிய

உணர்வும், புறநானூற்றுக் காலத்திய வரலாறு பற்றிய உணர்வும்,

இலக்கிய மரபும் நன்கறிந்த திறனும் புறநானூற்று உரையில்

புலப்படுகிறது. இவர் வேதத்திலும் சமயத்திலும் பெரும் ஈடுபாடு

உடையவர். அதனுடைய பிரதிபலிப்பு உரையில் உண்டு.

2.3.1 சங்க இலக்கிய உரைகள் – 2 சங்க இலக்கியங்களுக்குச் சுருக்கமான மற்றும் ஆசிரியர்

பெயர் தெரியாத பழைய உரைகள் அல்லது குறிப்புரைகளன்றிப்

புகழும் பெருமையும் வாய்ந்த உரையாசிரியர்களால் எழுதப்

பெற்ற விரிவான உரைகள் இடம் பெற்றவை கலித்தொகை,

பரிபாடல் மற்றும் பத்துப்பாட்டு ஆகியவையேயாகும்.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனும் இரண்டு தொகைகளிலுமே

நச்சினார்க்கினியரின் பங்களிப்பு இருக்கின்றது.

கலித்தொகைக்கு அமைந்த நச்சினார்க்கினியர் உரை,

தொல்காப்பியர் வழிநின்று அகப்பொருள் இலக்கண உணர்வோடு

கூடியதாக அமைகிறது. மேலும், கலித்தொகையின் அமைப்பு,

கூற்று நிலைகளுடன் கூடிய நாடக அமைப்புடன் கூடியது.

நச்சினார்க்கினியரின் உரை, இந்த அமைப்பு முறையை

நன்குணர்ந்து அதற்கேற்ப அமைகிறது. அடுத்து எட்டுத்

தொகையில் பரிபாடலுக்குச் சிறந்த உரையெழுதியவர்,

திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் ஆவார். இதன்

பதிப்பாசிரியராகிய உ.வே.சா. கூறுவர் : “நுணுகி ஆராயின்,

திருக்குறள் உரையிலும் இவ்வுரையிலும் ஒத்த கருத்துகளும்

பரிமேலழகருடைய கொள்கைகளும் பல காணலாம்.”

(பரிமேலழகரின் கொள்கை – வைதிகம், வைணவம்).

பத்துப்பாட்டு முழுமைக்கும் உரையெழுதியவர்

நச்சினார்க்கினியர். இலக்கண நூல்களுள் தொல்காப்பியம், சங்க

இலக்கியங்களுள் கலித்தொகை, பத்துப்பாட்டு, காப்பியங்களில்

சீவக சிந்தாமணி ஆகிய நூல்களுக்கு உரையெழுதியவர் இவர்.

‘உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்’ என்று புகழப்படும்

இவர் பரந்த இலக்கிய – இலக்கண அறிவும், வைதிக சமய

ஈடுபாடும் உடையவர். பழம்பாடல்களில் உள்ள வாக்கிய

அமைப்புகளில் எப்போதும் ‘இடர்’ காண்கின்றவர் இவர். எனவே,

தமிழ்மொழித் தொடரமைப்பின் விதிகளுக்குட்பட்ட சங்கப் பாடல்

அடிகளை உடைத்து, முன் பின்னாக மாற்றி, ஒரு நேர்கோட்டில்

சமன்படுத்துவது போன்ற உணர்வுடன் தம்முடைய

உரையின்பொருட்டு அந்த அடிகளை இவர், மாற்றியமைக்கிறார்.

கொண்டு கூட்டல் பொருள்கோள் என்ற பெயரளவில், இவர்

இதனைச் செய்கிறார். எளிமையான தொடரமைப்புக்கூட இவ்வாறு

மாற்றப்படுகிறது. காட்டாக:

அருவிட ரமைந்த களிறுதரு புணர்ச்சி

வானுரி யுறையுள் வயங்கியோ ரவாவும்

பூமலி சோலை யப்பகல் கழிப்பி

– (குறிஞ்சிப்பாட்டு, 212-214)

என்ற அடிகள், எவ்வித மாற்றமும் இல்லாமல், எளிதாகப்

பொருள் தரக்கூடியவை. ஆனால் நச்சினார்க்கினியர், ‘வான்

உரிய உறையுள் வயங்கியோர் அவாவும் அருவிடர் அமைந்த

பூமலி சோலை களிறுதருபுணர்ச்சி அப்பகல் கழிப்பிய – என்று

தொடரமைப்பினை மாற்றிக் கொள்கிறார். இதன் மூலம், இலக்கிய

நயம் எதனையும் அவர் கொண்டு வரவில்லை. மேலும்,

களிறுதருபுணர்ச்சி’ என்ற நிகழ்ச்சியின் சிறப்பினையும் இது

போக்கிவிடுகிறது. தவிரவும், கவிதைத் தொடர்மொழியின் (Poetic

Syntax) அழகும் போய்விடுகிறது. இவ்வாறு பல இடங்கள்

உண்டெனினும், நச்சினார்க்கினியர், அகன்று பரந்த தம்

உரையினாலும், சொல் விளக்கங்களினாலும், பல நூல்களுக்கு

உரையெழுதிய ஆற்றலினாலும் பின்னால் வந்த பலரால் பெருமை

சேர்க்கப்படுகிறார்.

2.4 பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் உரைகள்

சங்க காலத்திற்குப் பிறகு தோன்றிய நீதி நூல்கள் சிலவும்,

காதல் முதலியன பற்றிய நூல்கள் சிலவும், பதினெண்

கீழ்க்கணக்கு என்ற பெயரில் தொகுக்கப்பட்டன. திருக்குறள்,

இதில் தலையாயது; அடுத்து, நாலடியாரும் சிறப்புடையது.

திருக்குறளுக்கு கி.பி.15 ஆம் நூற்றாண்டுக்கு முன்

உரையெழுதியவர்கள் பத்துப் பேர். ஏனைய பதினேழு நூல்களில்

பெரும்பாலனவற்றிற்குப் பழைய உரைகள் கிடைத்துள்ளன. இவை

பெரும்பாலும் பொழிப்புரைகளாக உள்ளன. இவற்றுள்

நாலடியார்க்கு மட்டும் மூன்று பழைய உரைகள் உள்ளன.

இவற்றுள் பதுமனார் என்பவர் எழுதிய உரை நாலடியார்க்கு

முழுமையாக உள்ளது. உரையன்றியும், நாலடியாரை அறம்,

பொருள், இன்பம் என்று மூன்றாகப் பகுத்து, மேலும், பத்துப்

பத்துப் பாடல்களாகப் பொருளின் அடிப்படையில்

அதிகாரங்களாகப் பகுத்தவரும், இவரே. திருக்குறளைப்

பின்பற்றி இதனை இவர் செய்தார்.

திருக்குறள் பழங்காலத்திலேயே சான்றோரையும்

புலவரையும் உரையாசிரியர்களையும் கவர்ந்துள்ளது என்பது

அறிந்ததே. இதற்குப் பத்துப் பேர் உரையெழுதியதாகக் கூறுகிறது

ஒரு தனிப்பாடல்;

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்

பரிதி பரிமே லழகர் – திருமலையர்

மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற்(கு)

எல்லையுரை செய்தார் இவர்.

ஆனால், மணக்குடவர், பரிதி, பரிப்பெருமாள்,

பரிமேலழகர், காலிங்கர் என்ற ஐந்துபேரின் உரைகளே

கிடைக்கின்றன. இவர்கள் தவிர, வெவ்வேறு நூல்களுக்கு

உரையெழுதியவர்களும் திருக்குறள்கள் ஒன்றிரண்டை

எடுத்துக்காட்டி விளக்கமும் தந்துள்ளனர்.

திருக்குறள் உரைகளிடையே பல வேற்றுமைகள்

காணப்படுவது பற்றிப் பல அறிஞர்கள் எழுதியுள்ளனர்.

அதிகாரங்களுக்குப் பெயரிடுவது, திருக்குறள் அடிகளில் பாட

வேறுபாடுகள் கொள்ளுவது ஆகியவை இந்த வேறுபாடுகளில்

குறிப்பிடத்தக்கவை. காட்டாக, இரண்டாவது பிரிவாகிய

பொருட்பாலைப் பரிமேலழகர், அரசியல், அங்கவியல், ஒழிபியல்

என்று மூன்றாகப் பிரிக்கிறார். மணக்குடவர், பரிப்பெருமாள்,

பரிதி ஆகிய மூவரும், அரசியல், அமைச்சியல், பொருளியல்,

நட்பியல், துன்பவியல், குடியியல் என்று ஆறாகப் பிரிக்கின்றனர்.

காலிங்கர், அரசியல், அமைச்சியல், அரணியல், கூழ்இயல்,

படையியல், நட்பியல், குடியியல் என்று ஏழாகப் பிரிக்கின்றார்.

இது, மற்றையவற்றைவிடப் பொருத்தமாக இருப்பதாக அறிஞர்கள்

கருதுவர். ஏனெனில், திருக்குறளின் பொருட்பால், முதல் குறளிலேயே,

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு

என்று கூறுகிறது. அரசியல் என்று முதலிற்கூறி, அதன்பின்

ஆறையும் சேர்த்து, ஏழு இயல்களாகப் பிரித்திருப்பது மிகவும் பொருந்துகிறதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

2.4.1 திருக்குறள் உரைகள் திருக்குறளுக்குப் பல சிறப்புகள் உண்டு. அவற்றுள்

ஒன்று, தமிழில் வேறு எவற்றையும்விட இதற்கே உரைகளும்

விளக்கங்களும் அதிகம் உண்டு என்பது. மேலும், இதுவே

அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டு வந்துள்ளது. உரைகளும்,

விளக்கங்களும் பலவாகத் திருக்குறளுக்குத் தோன்றியமைக்குக்

காரணம், இது ‘தமிழ் இனப் பெருமைக்கு’ அடையாளமாக

விளங்குகிறது என்பது மட்டுமல்லாமல், இதனுடைய செறிவும்,

இது உணர்த்துகின்ற சிந்தனைவளமும், காலந்தோறும் இதற்குள்ள

ஏற்புடைமை மற்றும் தேவையும் ஆகும்.

திருக்குறளுக்கு உரையெழுதியவர்களுள் பலராலும்

பாராட்டப்படுகிறவர் பரிமேலழகர். இவர் குறளின் ஏனைய

உரையாசிரியர்களைவிடக் காலத்தால் பிந்தியவர். 13-ஆம்

நூற்றாண்டைச் சேர்ந்தவர். தமக்கு முந்திய

உரையாசிரியர்களிடமிருந்து கொள்ளுவன கொண்டு, தள்ளுவன

தள்ளி உரை செய்தவர் பரிமேலழகர். மேலும், தமக்கு முந்திய

பல இலக்கியங்களிலிருந்து கற்ற கல்வியையும் உரையில் அவர்

பயன்படுத்திக் கொள்கிறார். இதன்மூலம் , பொருள்விளக்கமும்

நயமும் வெளிப்படுகின்றன. உதாரணமாக:

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை யளாவிய கூழ் – (திருக்குறள் – 64)

எனும் குறளுக்கு (மக்கட்பேறு, 64) விளக்கம் கூறுகிறபோது,

பாண்டியன் அறிவுடைநம்பியின் (புறம், 188) பாடல் அடிகளைக்

கொண்டுவந்து மிக இயல்பாக விளக்குகிறார்.

“சிறுகையான் அளாவலாவது, இட்டும் தொட்டும், கவ்வியும்

துழந்தும், நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல்” என்று

நயம்படச் சொல்கிறார். அதுபோலப் “பெயக்கண்டும்

நஞ்சுண்டமைவர்…’ என்ற குறளுக்கு (580) உரையெழுதுகிறபோது,

“நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல், முந்தை யிருந்து

நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்…’ எனும்

நற்றிணை (355) அடிகளை எடுத்தாளுகிறார். இன்றைய

திறனாய்வாளன், ஒப்பியல் நோக்குக் கொண்டிருப்பது போன்று

பரிமேலழகரிடமும் ஒப்பியல் நோக்குக் காணப்படுகிறது.

பரிமேலழகர் உரை இவ்வாறு பல சிறப்புகள்

கொண்டிருந்தாலும், வைதிக சமயக் கருத்துகளைக் குறட்பாக்களில்

ஏற்றிச் சொல்லுதல் பலவிடங்களில் காணப்படுகிறது. உதாரணமாக

அறம் என்று வள்ளுவர் பேசுவது தமிழ் அறம். வடமொழி மனு

சொல்லுவதோ வருணாசிரம தருமம். ஆனால், பரிமேலழகர்

வலிந்து சென்று, “இனி, மனு முதலிய அற நூல்களால்

பொதுவாகக் கூறப்பட்ட இல்லறங்கள் எல்லாம் இவர் தொகுத்துக்

கூறிய இவற்றுள் அடங்கும்” (குறள் 240) என்று கூறுகிறார். இவர்

என்று அவர் சொல்லுவது வள்ளுவரை.

பரிமேலழகர், திருக்குறளுக்கு மட்டும் அன்றி, சங்க

இலக்கியத் தொகுப்புக்குள் ஒன்றாகக் கருதப்படும்

பரிபாடலுக்கும் உரையெழுதியுள்ளார்.

2.5 தொகுப்புரை

படைப்போர், படிப்போர் என்ற இருவேறு நிலைகளில்

ஏற்படும் இடைவெளிகளையும் கால இடைவெளிகளையும்

தவிர்க்கிற அல்லது குறைக்கிற பணியைச் செய்வன உரைகள்.

அவை, இன்றைய திறனாய்வு செய்கிற வேலையையே அன்றே -

ஓரளவாயினும் செய்தன. உரைகள், பொதுவாக இலக்கண

உரைகள், இலக்கிய உரைகள் மற்றும் சமய, தத்துவ நூல்

உரைகள் என்ற முறையில் அறியப்படுகின்றன. இலக்கண

உரைகளில், எழுத்து, சொல் ஆகிய மொழியமைப்புப் பற்றிய

உரைகளன்றி, பொருள் இலக்கணத்திற்கு விளக்கம் தரும்

உரைகளும் உண்டு. அகம், புறம் உட்பட்ட பொருள், யாப்பு,

அணி ஆகிய இலக்கணங்களுக்கு உரை கூறும்போது, இலக்கியக்

கோட்பாடும், திறனாய்வுக்குரிய அடித்தளமும்

புலப்படுத்தப்படுகின்றன.

சங்க இலக்கியம் முதற்கொண்ட இலக்கியங்களுக்கு எழுந்த

உரைகளை இலக்கிய உரைகள் என்கிறோம். இவை, செய்யுள்

இலக்கியங்களுக்கே உரியனவாக உள்ளன. இலக்கிய உரைகள்,

குறிப்புரைகளாகவோ, பொழிப்புரைகளாகவோ, அல்லது

இரண்டுமே கொண்டு, மற்றும் அருஞ்சொல் விளக்கங்களையும்

பொருள் நயங்களையும் அணிநயங்களையும் கொண்டனவாகவோ

விளங்குகின்றன.

தமிழில் அதிகமான நூல்களுக்கு உரையெழுதியவர் கி.பி.

14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நச்சினார்க்கினியர். இவர்

தொல்காப்பியம் எனும் இலக்கண நூலுக்கும்,

கலித்தொகைக்கும், பத்துப்பாட்டுக்கும் மற்றும் சீவக

சிந்தாமணிக்கும் உரையெழுதியுள்ளார். விளக்கமான விரிவான

உரைகள் இவை. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில்

பெரும்பாலானவற்றிற்குப் பழைய உரைகள், பெரும்பாலும்,

சுருக்கமான பொழிப்புரைகளாக அமைந்துள்ளன.

நாலடியார்க்குப் பதுமனார் உள்ளிட்ட மூன்றுபேர் உரை

யெழுதியுள்ளனர். திருக்குறளுக்குப் பதின்மர்

உரையெழுதியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், காலிங்கர்,

பரிமேலழகர், மணக்குடவர், பரிதி, பரிப்பெருமாள் ஆகியோர்

உரைகளே கிடைக்கின்றன. இவர்களுள், கி.பி. 13-ஆம்

நூற்றாண்டைச் சேர்ந்த பரிமேலழகர், திருக்குறளுக்கு மட்டும்

அன்றி, பரிபாடலுக்கும் உரையெழுதியிருக்கின்றார். பழைய

இலக்கியங்களைக் கற்க விரும்புவோர்க்கு இன்றும், இந்த

உரைகள் மிகவும் உதவியாக இருந்து வருகின்றன.

பாடம் - 3

இலக்கிய உரையாசிரியர்கள் - II

3.0 பாட முன்னுரை

உரைகள் காலந்தோறும் தோன்றிக் கொண்டேயிருந்தன;

ஏனெனில் உரைகளுக்குத் தேவைகள் இருந்தன; கற்றறிந்த

அறிஞர்கள் உரையெழுத ஆர்வம் கொண்டிருந்தனர்; மேலும்

இலக்கியக் கல்வி தொடர்ந்து பேணப்பட்டு வந்தது. சங்க

இலக்கியத்துக்கும் திருக்குறளுக்கும் பல உரைகள்

இடைக்காலத்திலே தோன்றின எனக் கண்டோம். ஆனால்,

காப்பியங்களுக்கு அந்த அளவிற்கு உரைகள் தோன்றவில்லை.

காப்பியங்களுள் சிலப்பதிகாரமே அந்தக் காலப் பகுதியில் புகழும்

பெருமையும் பெற்றிருந்தது. கி.பி.12-ஆம் நூற்றாண்டில்தான்

கம்பராமாயணம் உருவாயிற்று. காப்பியங்களுக்குப் பெருமையும்

விசாலமான தளமும் இருந்தாலும், சங்க இலக்கியங்களுக்கும்

திருக்குறளுக்குமே பலகாலம் வரை, செல்வாக்கு இருந்தது போலும்!

எனவே உரையாசிரியர்களையும் அவை வெகுவாகக் கவர்ந்தன.

இப்பாடத்தில் காப்பிய உரைகளையும், சமய இலக்கியங்களுக்கான

உரைகளையும் தற்கால உரையாசிரியர்களின் உரைகள் குறித்தும்

காணலாம்.

3.1 காப்பியங்களும் உரைகளும்

கி.பி.3-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, சிலப்பதிகாரம் வழி நடத்தத் தொடர்ந்து பல காப்பியங்கள் தோன்றின. ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற பெயர் கொண்ட தொகுப்புகளுக்குள் அல்லாமல், பெருங்கதை, அதன் பின் திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணம், கம்பனுடைய இராமகாதை இப்படிப் பல காப்பியங்கள் தோன்றின. ஆனால் சிலம்புதான் அதிகச் செல்வாக்குடன் திகழ்ந்தது. தமிழ்ப்பண்பாட்டு மீட்டுருவாக்கத்தை அது முன்னிறுத்தியது; அதுவே அதனுடைய செல்வாக்கிற்குச் காரணம்.

காப்பியங்களுள், சிலம்பு, சீவகசிந்தாமணி எனும் இந்த இரண்டனுக்கும் பெருமையும் சிறப்பும் உடைய உரைகள் உண்டு. இந்த இரண்டுமே சமண சமயம் சேர்ந்தவை; இவற்றிற்கு மட்டுமே உரைகள் அன்று தோன்றின என்று தெரிகின்றது. பொதுவாகக் காப்பியங்கள் உரையாசிரியர்களை ஏன் கவரவில்லை? இதற்குக் காரணங்களாக முக்கியமாக இரண்டு கருதுகோள்களை இங்கே கூறலாம்:

சிலம்பு முதலிய ஓரிரண்டு தவிர பெரும்பாலான காப்பியங்களின் கதைகளும் கருத்துகளும், தமிழ் மரபிலிருந்து வரவில்லை; வடமொழி மரபிலிருந்து அல்லது வெளியேயிருந்து வந்தவை.

காப்பியங்கள் விசாலமான தளங்கள் கொண்டவை; பல கிளைக் கதைகள், பல புராண மரபுக் கதைகள் உடையவை; எனவே, உரை கூறுவதில் சிரமம் இருக்கக் கூடும்.இந்த இரண்டையும் முக்கியமான கருதுகோள்களாகக் கூறலாம்.

3.1.1 காப்பிய உரைகளின் பொதுப்பண்புகள் காப்பியங்களுக்கு உரைகள் அதிகம் தோன்றவில்லை எனக்கண்டோம். காப்பிய உரைகள், இரண்டு பொதுவான பண்புகளையும் தேவைகளையும் பெற்றிருக்கவேண்டும். அவற்றைச் சுருக்கமாகக் காணலாம். i) காப்பியங்கள் நீண்ட மையக் கதைகளையும் பல கிளைக் கதைகளையும் கொண்டவை. உரையாசிரியன் இவற்றில் நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்குள்ள மரபிலிருந்தும் வடமொழிப் புராணங்களிலிருந்தும் இந்தக் கதைகள் கிளைத்து வளர்ந்திருக்கக் கூடும். உரையாசிரியர், மிகப்பலவான இந்தக் கதைகளையும் அவற்றின் உட்பொருள்களையும் அறிந்திருக்க வேண்டும். ii) தமிழில் காப்பியங்கள், சமயம் சார்ந்தவை. அவற்றிற்கு உரையெழுத வேண்டுமாயின், ஆசிரியனுக்குச் சமயங்களைப் பற்றிய தெளிவான அறிவும், அதேநேரத்தில் அதுபற்றிய ஒரு நடுநிலையும் வேண்டும்.இவை காப்பிய உரையாசிரியனுக்குரிய தகுதிகளும் தேவைகளுமாகும். சிலப்பதிகார உரையிலும் சீவகசிந்தாமணி உரையிலும் இந்தப் பண்புகள் இருக்கின்றன என்பது அறியத்தக்கது.

இந்தத் தேவைகளும் பண்புகளும் மட்டும் அன்றி i) காப்பியம் என்ற இலக்கிய வகையினத்தை (Genre) நன்குணர்ந்திருக்க வேண்டும்; அதாவது, சங்கப் பாடல்கள் போன்ற தனிநிலைப் பாடல்களிருந்து இது மாறுபட்டது என்ற உணர்வு இருக்க வேண்டும். ii) காப்பிய உத்திகள், சொற்சுவைகள், முரண்கள் உள்ளிட்ட நயங்களை அறிந்திருக்க வேண்டும். மேலே கூறிய இப்பண்புகள், காப்பிய உரையாசிரியர்களிடமிருந்து நாம் கண்டறிந்தவை யாகும். குறிப்பாக, அடியார்க்கு நல்லாருடைய உரையில் சிலம்பின் காப்பியப் பண்பு நன்கு புலப்படும்படியாக அதன் விளக்கம் அமைந்துள்ளதைக் காணலாம். அண்மைக்காலத்தில் கம்பராமாயணத்துக்கு உரையெழுதிய வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார், பெரியபுராணத்துக்கு உரையெழுதிய சி.கே. கப்பிரமணிய முதலியார் முதலியோர் உரைகளிலும் இத்தகையபண்புகள் இருக்கின்றன என்பதைக் காணலாம்.

3.1.2 காப்பிய உரைகளின் பொதுப்பண்புகள் சிலப்பதிகாரத்துக்கு அமைந்துள்ள அரும்பதவுரை, அடியார்க்கு நல்லார் உரை ஆகிய இரண்டுமே போற்றத் தக்கனவாக உள்ளன. அடியார்க்கு நல்லார் கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவர்க்கு இரண்டு அல்லது அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தியவர் அரும்பத உரைகாரர். அரும்பதவுரை, சிலம்பு முழுமைக்கும் உண்டு. ஆனால் அடியார்க்கு நல்லார் உரை, வஞ்சிக் காண்டத்துக்கு இல்லை. மதுரைக் காண்டத்திலே கூட ஊர்சூழ் வரி என்பதுக்கு மேல் இவருடைய உரைகிடைக்கவில்லை. கானல்வரிக்கும் இவருடைய உரை கிடைக்கவில்லை.

அரும்பதவுரையின் வழியிலேயே அடியார்க்கு நல்லாரின் உரை, பெரிதும் அமைந்திருக்கிறது. சிலம்பின் அரும்பதவுரை, வெறுமனே அரும்பதங்களுக்கு, அதாவது கடினமான சொற்களுக்கு மட்டும் உரை தரவில்லை. மாறாகப் பல இடங்களில் நீண்ட தொடர்களையும் திரண்ட கருத்துகளையும், காட்சிகளையும், சிலம்புக்குத் தேவைப்படும் பிற கலை வடிவங்களையும் விளக்கமாகவே சொல்லுகிறது. அரங்கேற்று காதையில், மேடை அரங்கம் பற்றிய செய்திகளும், பாடலாசிரியன், யாழ் ஆசிரியன், குழல் ஆசிரியன் முதலிய கலைஞர்கள் – கலை வடிவங்கள் பற்றிய செய்திகளும் சுருக்கமாகவும் குறிப்பாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அரும்பதவுரையாசிரியர், இவற்றை விளக்கியுரைக்கிறார். மேலும், இசை, நடனம், முதலிய கலைகள் பற்றித் தெளிவாகப் பேசுகிறார். அடியார்க்கு நல்லாரும், இந்த விளக்கத்தை அப்படியே பின்பற்றுகின்றார். சில இடங்களில் மாறுபடுவதுண்டு. ஆனால், 20- ஆம் நூற்றாண்டின் சிலம்பு உரையாசிரியர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ‘இருவரும் மாறுபட எழுதியிருக்கும் உரைகளை ஆராய்வுழிச் சிலவிடங்களில் அரும்பதவுரையே பொருத்தமுடையதாகக் காணப்படுகிறது’ என்று கூறுவார். அரும்பதவுரைகாரரின் சிறப்பு, இதன்மூலம் புலப்படும்.

அரும்பதவுரைகாரரின் உரைத் திறனுக்கு ஓர் உதாரணம்;

இமிழ்கடல் வரைப்பில் தமிழக மறியத்

தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி

(அரங்கேற்றுகாதை; 37-38)

என்று இளங்கோ பேச, அரும்பதவுரைகாரர்: “ஆரவாரத்தினையுடைய கடல் சூழ்ந்த நிலத்தில், வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும் வேங்கடங் குமரி, தீம்புனற் பௌவமெனத் தமிழோரால் எல்லை கூறப்படா நின்ற தமிழ்த் தேசத்தாரறிய மூன்று தமிழும் போலுமென்னும் தன்மையுடையனாகி” என்று உரையெழுதுவார். இதனை அடியார்க்கு நல்லார் தம் உரையில், எழுத்துப் பிறழாமல் அப்படியே பின்பற்றுகிறார். இந்த உரையில், தமிழோர் என்பது, தமிழ்த்தேசம் என்பது, அதற்கு எல்லை கூறுவது, மற்றும் முத்தமிழ் என்று சொல்லுவது ஆகிய இவை கவனத்திற்கு உரியவை. இவருக்கு முத்தமிழ் அறிவும் முத்தமிழ் உணர்வும் மட்டுமல்லாமல், கட்டடக் கலை பற்றிய அறிவும் இருக்கிறது. “வேயாமாடம்” (இந்திரவிழவூரெடுத்த காதை,7) என்பதற்குத் “தட்டோடிட்டுச் சார்ந்து வாரப்பட்டன; நிலா முற்றமுமாம்” என்று விளக்கவுரை தருவார். மேலும் இந்தச் சொற்கள் இன்றும் பெருவழக்காக உள்ளன என்பதும் கவனித்தற்குரியது.

அடியார்க்கு நல்லார் உரைக்குப் பல சிறப்புகள் உண்டு. அவற்றில் சில: சிலம்பு எனும் காப்பியத்தின் கட்டுக்கோப்பை நன்கறிந்து அதற்கேற்றாற் போல உரை கூறுதல்; ‘இயலிசை நாடகப் பொருட்டொடர்நிலைச் செய்யுள்’ என்று சுட்டுதல்; பாத்திரப் படைப்பு முறைகளை நன்கறிந்து அதனை விளக்குதல் ஆகியன. அரங்கேற்று காதையின் உரை, பல்லாற்றானும் சிறப்புடையது; பலரும் போற்றுவது. சுருக்கமாகச் சொன்னால்- அடியார்க்கு நல்லார், சிறந்த திறனாய்வாளர்க்குரிய பல பண்புகளைப் பெற்றவர். திறனாய்வுக்குரிய எடுபொருள் அல்லது தளம் பற்றிய கூர்த்த அறிவும், அதற்கு உரிய, அதனோடு சார்ந்த பல கருத்துகளையும், துறைகளையும் நன்கு கைவரப்பெற்று உரியவாறு பயன்படுத்துதலும், இலக்கிய நயம்/உத்திகள் முதலியவற்றைப் புலப்படுத்துதலும், இவருடைய உரைகளில் காணத்தக்கன.

3.1.3 சீவக சிந்தாமணி உரை சீவக சிந்தாமணி விருத்தப்பாவில் நன்கமைந்த காப்பியம். ஓர் ஆண்-சீவகன்-எட்டு வகையான திறன்களை உடைய பெண்களைக் காதலித்து மணம் செய்து கொள்கிறான்; நாட்டை மீட்கிறான்; இறுதியாகத் துறவறம் பூணுகிறான். மணநூல் என்பது இதற்கு இன்னொரு பெயர். இது சமணக் காப்பியம். இதற்கு விரிவான உரையெழுதி, அந்த உரையின் மூலமாக இந்த நூலுக்குப் பெருமை தந்தவர் நச்சினார்க்கினியர்; அவர் பிராமணர்; வைதிக சமயத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். அவர் மணக்காப்பியத்துக்கு உரையெழுதியது அவருடைய ‘சமயப்பொறை’க்குச் சாட்சியாக அமைகிறது. இந்தப் பண்பு, இன்றைய திறனாய்வாளனுக்கு வேண்டிய ஒன்று. காப்பிய நோக்கைச் சரிவரப் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல், பாத்திரங்களின் பேச்சையும் பாடல்களின் கருத்தமைவுகளையும் மனங்கொண்டு உரையெழுதுகிறார், உரையாசிரியர். அவரது இத்தகைய திறனாய்வு உள்ளத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு: கனக மாலை எனும் பெண், தன்காதலன் சீவகனுடைய பிரிவால் வாடி இருக்கிறாள். சீவகன் தம்பி நந்தட்டன் அங்கே வருகிறான். அவளைக் காணுகிறான். அப்போது கனகமாலையைக் காட்டுகிற திருத்தக்கத் தேவர், அவளுடைய சோகமான தோற்றத்தைக் கூறாமல், அழகான வடிவத்தை வருணிக்கிறார். நந்தட்டன் அவளுடைய சீறடிச் சிலம்பை (மட்டும்) நோக்குகிறான். ஆனால், எவ்வாறாயினும், அந்தநேரத்தில் அவளுடைய அழகை வருணிக்கிற – அது ஆசிரியர் கூற்றாக இருப்பினும் இத்தகைய செயல், காப்பியத்தின் நோக்கத்தினையும் பாத்திரப்படைப்பின் பண்புகளையும் சிதைத்துவிடும் என்று அஞ்சிய உரையாசிரியர், மிகச் சாதுரியமாக உரை பகர்கிறார்: “கயற்கண்ணினாளுடைய, முன்பு திங்களை ஒக்கும் முகத்தில் இப்போது நிகழ்கின்ற வாட்டத்தையும் நோக்கானாய்,(முன்பு நன்றாகிய மார்பகம்) இப்பொழுது பசந்த பசப்பையும் நோக்கானாய், முன்பு கலாபம் மின்னும் ஆடை, மாசுண்ட தன்மையையும் நோக்கானாய், தான் இறைஞ்சி நிற்றலின், அடியிற் சிலம்பு ஒன்றையுமே நோக்கி, ‘எங்குள்ளார் அடிகள்’ என்று இப்படி ஒரு வார்த்தை கூறினான் என்க” என்று கூறுகிறார். காப்பியப் போக்கும் சிதைவுறவில்லை; நந்தட்டன் பாத்திரப் படைப்பும் இப்போது சிறப்புப் பெறுகிறது. மூல ஆசிரியன் விட்டதை உரையாசிரியன் மீட்கிறான். உரையின் பணி எத்தகையது என்பதை இதன் மூலம் அறியலாம்.

இன்னோரிடம் சீவகன் ஆண்மகன் என்பதையும் நாயகன் என்பதையும் சிறப்பிக்கின்ற விதத்தில், ஆசிரியர், “ஈயின்றி இருந்த தேன்” என்று வருணிப்பார். ஆண்மகனைத் தேனீயாகவும் பெண்ணைத் தேன் அல்லது பூ என்பதாகவும் வருணிப்பது மரபு. இங்கே, மாறாகப் பெண்மக்கள் தான் சீவகனை நாடிச் செல்கின்றனர் என்று கூறப்படுகிறது. “இதற்கு முன்பு ஒரு மகளிரும் இவனை நுகராது இருந்தமை உணர்ந்து…” என்று நச்சினார்க்கினியர் உரை இதனை உணர்ந்து விளக்குகிறது:

3.2 சமய நூல்கள்

பொதுவாக, இலக்கியப் பண்புகள் உடையவற்றை இலக்கியங்கள் என்ற பெயரால் அழைத்தாலும், சமய நிகழ்வுகளாலும் சமயக் கருத்துகளாலும் ஆதிக்கம் செலுத்தப்படுவனவற்றையும் அல்லது அவற்றையே மையப்படுத்துகிறவற்றையுமே சமய இலக்கியங்கள் என்று அழைப்பது மரபு. வைணவ சமய இலக்கியங்களும், பின்னால், இசுலாமிய, கிறித்துவ சமய இலக்கியங்களும் தமிழில் கணிசமாகக் கிடைக்கின்றன. இத்தகைய சமய இலக்கியங்களுக்கு அமைந்த உரைகள் ஒருவகையென்றால், சமய தத்துவ நூல்களுக்கு அமைந்த உரைகள் இன்னொருவகை.

சமய இலக்கியங்களுள், வைணவம் சார்ந்த நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களுக்கு (பழைய) உரைகள் உண்டு. குருபரம்பரையாக/ அல்லது ஆசிரிய – மாணவ வழியில் தொடர்ந்து பல உரைகள், இப்பாசுரங்களுக்குத் தோன்றின. சைவம் சமய இலக்கியங்களுள் – பத்துப் பாட்டில் ஒன்றாகத் கருதப்படுகிற- திருமுருகாற்றுப்படைக்கு நச்சினார்க்கினியர் உரை உண்டு. அதுபோன்று, மணிவாசகரின் திருக்கோவையாருக்குச் சிறந்ததோர் உரை உண்டு. பொதுவாக, இந்த இடைக்காலத்தில் சைவ சமயமே, வேறு எந்தச் சமயத்தை விடவும் மிகுந்த செல்வாக்குடன் இருந்தது என்றாலும் , சைவ இலக்கியங்கள் உரையாசிரியர்களின் கவனத்தை அதிகம் கவரவில்லை. 20-ஆம் நூற்றாண்டில்தான், இவற்றுள் சிலவற்றிற்கு விரிவான உரைகள் தோன்றியுள்ளன.

3.2.1 வைணவ இலக்கிய உரைகள் வைணவ இலக்கியங்கள் என்றால், பெரும்பாலும் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களே நினைவுபடுத்தப்படுகின்றன. இவை, பொய்கை, பூதம், பேய் ஆகிய (கி.பி. 7-ஆம் நூற்றாண்டு) முதல் மூன்று ஆழ்வார்கள் முதல் நம்மாழ்வார், ஆண்டாள் முதலிய பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பட்டவை. இவை, நாதமுனிகள் (கி.பி. 9-ஆம் நூற்றாண்டு) என்பவரால் தொகுக்கப்பட்டன. அப்போது உரைகள் தோன்றவில்லை. ஆனால், வடமொழி வேதத்துக்கு நிகரான ‘திராவிட வேதம்’ இது என்ற பெருமை இதற்குக் கிடைத்தது. எனவே, தத்துவச் சிறப்பும், இலக்கிய நயமும், பக்தி உருக்கமும் கொண்ட இந்த வைணவ பிரபந்தங்கள் குறிப்பாக, நம்மாழ்வாரின் திருவாய்மொழி உள்ளிட்ட பாடல்கள் – வைணவ அறிஞர்களின் உள்ளங்களைக் கவர்ந்தன. இவை இசைவடிவிலும், விளக்கங்களுடனும் ஓதப்பட்டு வந்தன. பின்னர், நாதமுனிகள் வழிவந்த ஆளவந்தார், மற்றும் இராமாநுஜர் ஆகியோரின் விருப்பத்தினால், திருக்குருகைப்பிரான்பிள்ளை (பிள்ளான்) என்பவரால், முதன்முதலாக, நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு விளக்க உரை எழுதப்பட்டது. வைணவ சம்பிரதாயத்தில் குருபரம்பரை முக்கியமானது. இதன் வழித் திருவாய்மொழிக்கு மேலும் மேலும் விளக்கமாகத் தொடர்ந்து, உரைகள் எழுதப்பட்டன. இந்த உரைகள், முக்கியமாக இரண்டு அம்சங்களைக் கொண்டவை : i) பெரும்பாலான பகுதிகள், தமிழும் சமற்கிருதமும் கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டன. ii)எழுத்துகளின் எண்ணிக்கை முறையில் – அதாவது ‘படி’ என்ற முறைகொண்டு எழுதப்பட்டவை. மணிப்பிரவாளம் என்பது – தமிழ் சிவந்த மாணிக்கமும் (மணி), வடமொழிச் செம்பவளமும் (பிரவாளமும்) வேறுபாடின்றிக் கலந்து கோத்த கோவை என்று பொருள்படும். ஒரு ‘படி’ என்பது மெய்யெழுத்துகள் நீங்கலாக, உயிரும் உயிர்மெய்யுமாக 32 எழுத்துகளைக் கொண்டது. இந்த கிரந்த எண்ணிக்கை முறையில் உரைகள் அடையாளம் பெறுகின்றன. திருவாய் மொழிக்கு அமைந்த இத்தகைய உரைகள் பின்வருமாறு

திருக்குருகைப் பிரான் பிள்ளை (பிள்ளான்)

- 6,000 படி(ஆறாயிரப்படி)

நம்பிள்ளை

- 9,000 படி (ஒன்பதாயிரப்படி) (இந்த உரை சொன்னவர் நஞ்சீயர் என்ற கருத்து உண்டு.)

பெரியவாச்சான் பிள்ளை

- 24,000 படி (இருபத்து நாலாயிரப்படி)

வடக்குத் திருவீதிப் பிள்ளை

- 36,000 படி முப்பத்தாறாயிரப்படி)

மணவாளசீயர் (சுருக்கமாக)

- 12,000 படி (பன்னீராயிரப்படி)

இந்தத் திருவாய்மொழி வியாக்கியானங்களை வைணவர்கள் ‘பகவத்விஷயம்’ என்று கொண்டு அவற்றைப் போற்றுவர். இவ்வுரையாசிரியர்களில் தனிச்சிறப்புப் பெற்றவர் பெரியவாச்சான்பிள்ளை ( ஆசான் = ஆச்சான் ). இவர், திருவாய்மொழிக்கு மட்டுமல்லாமல், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் முழுமைக்கும் உரையெழுதியுள்ளார். இதனால் இவரை “வியாக்கியானச் சக்கரவர்த்தி” என்பர்.

வடக்குத்திருவீதிப் பிள்ளையின் திருவாய்மொழி 36,000 படி உரை, ‘ஈடு’ என்றும் வழங்கப்படுகிறது. நம்பிள்ளை, நாள்தோறும் காலட்சேபத்தில் (சொற்பொழிவில்) அருளிச் செய்தவற்றை வடக்குத் திருவீதிப் பிள்ளை உரையாக்கி எழுதிவைத்தார்; அதனாலேயே இது ஈடு எனக் கூறப்பட்டதெனச் சொல்லப்படுகிறது. இந்த உரை பதசாரம் (பொழிப்புரை-சுருக்கம்), விளக்கம், (தேவைப்படுகிறபோது) மேற்கோள்கதை, கருத்துரை, எடுத்துக்காட்டு- என்ற சில பகுதிகளைக் கொண்டு விளக்கமாக அமைகிறது.

திருவாய்மொழிக்கும் ஏனைய திவ்வியப் பிரபந்தங்களுக்கும் அமைந்த வியாக்கியானங்கள், கதாகாலட்சேப முறையைக் கொண்டு, எளிய பேச்சு நடையில் அழகும் ஆற்றலும் கொண்டு, எண்ணற்ற பழமொழிகளையும் நாட்டுப்புறக் கதைகளையும், நாட்டுப்புறப் பழக்கவழக்கங்களையும், அவர்களின் மொழியில் உள்ள மரபுத் தொடர்களையும் கொண்டு விளங்குகின்றன. இவற்றுள் பல இடங்களில் வைணவ தத்துவமும், இலக்கிய நயமும் ஒருசேர விளக்கப்படுகின்றன. இவை, திருவாய்மொழியை ரசனையோடு காணுகின்றன; சாரமான கருத்துகளையும், உள்ளுறையாக விளங்கும் தத்துவங்களையும் ஒருசேர விளக்குகின்றன. முக்கியமாக, பெரியவாச்சான் பிள்ளை உரையும், வடக்குத் திருவீதிப் பிள்ளையின் உரையும், அன்றைய திறனாய்வுக்குச் சாட்சியமாகவும், திறனாய்வு வரலாற்றுக்கு அணிகலமாகவும் விளங்குகின்றன.

3.2.2 சைவ இலக்கிய உரைகள் வைணவ – திவ்வியப் பிரபந்தம், ‘உரைக்களஞ்சியம்’ கொண்டது. ஆனால் சைவ இலக்கியங்களுக்கு உரைகள் மிகவும் குறைவு, திருமுருகாற்றுப்படைக்கு நச்சினார்க்கினியருடைய உரை உண்டு, பத்துப்பாட்டிலுள்ள பிற பாடல்களோடு சேர்ந்து இந்த உரை தோன்றியது. பன்னிரு திருமுறைகள், உரையாசிரியர்களின் கவனத்தைப் பெறவில்லை. முக்கியமாக, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் தேவாரப் பாடல்கள், சைவ உலகில் மிகுந்த பெருமையும் செல்வாக்கும் பெற்றவை. ஆயின் இவற்றுக்கு உரைகள் எழவில்லை. பெரியபுராணம் என்ற காப்பியத்துக்கும் அன்று உரை எழவில்லை. திருமுறைகளின் இந்நிலை குறித்துச் சைவப் பெருமக்கள் வருந்துகின்றனர். கி.வா.ஜகந்நாதன் அவர்கள், “பழங்காலத்தில் திவ்வியப் பிரபந்தத்துக்குச் சில பெரியோர்கள் உரை வகுத்தது போல (சைவ) திருமுறைகளுக்கும் யாரேனும் வகுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இப்போதுள்ள (திருமுறைகளின்) மூலத்தில் எத்தனையோ பிழைகள் இருக்கின்றன. பல பாடல்களுக்கு எத்தனைதான் மண்டையை உடைத்துக் கொண்டாலும் பொருள் விளங்குவதில்லை”. என்று துன்புற்றுக் கூறுகிறார்.

சைவ இலக்கியங்களில், சிறந்த உரையைப் பெற்றது, மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ஆகும். கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்த உரையின் ஆசிரியர் யார் என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. தொல்காப்பியத்துக்கு உரையெழுதிய பேராசிரியரே இதற்கும் உரையெழுதியதாகப் பலர் கூறுகின்றனர். ஆனால், ஆராய்ந்து பார்த்தால், தொல்காப்பிய உரையாசிரியர்க்கும் இவர்க்கும் நடையாலும், மொழியாலும், கருத்தாலும் ஒற்றுமைகள் இல்லை. ஆயின், திருக்கோவையார் உரை, இலக்கியத்தின் பண்பும் சிறப்பும் உணர்ந்த சிறந்த உரையாகும். “திரு” என்பதற்கு அவர் தருகிற உரை, தமிழர்தம் அழகியலுக்கு (Aesthetics) அடியெடுத்துக் கொடுக்கிறது. “திரு என்பது கண்டோரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் – என்றது அழகு” என்று தெளிவாக வரையறை செய்கிறது. தொடர்ந்து அது பற்றி விளக்கவும் செய்கிறது.

இந்நூலாசிரியரின் திருவாசகம், ‘திருவாசகத்துக்கு உருகார், ஒருவாசகத்துக்கும் உருகார்’ என்று போற்றப்படுவது. ஆனால், 19- ஆம் நூற்றாண்டில்தான், தாண்டவராயர் என்பவரால் திருவாசக அனுபூதி உரை என்பது எழுதப்பட்டது. ‘சம்பிரதாய உபதேசம்’ என்று இதனை இவர் குறிப்பிடுகிறார். 20-ஆம் நூற்றாண்டில், திருவாசகத்தில் உள்ள திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை ஆகிய மூன்றற்குமட்டும் பண்டிதமணி. மு.கதிரேசன் செட்டியார் உரையெழுதினார். கதிர் மணி விளக்கம் என்ற பெயர் பெற்ற இவ்வுரை, பலவகையாலும் சிறப்புக் கொண்ட உரையாகப் போற்றப்படுகிறது.

பெரியபுராணம், அறுபத்து மூன்று நாயன்மார்களின் கதைகளைக் கோத்துக் காப்பியப் பண்புடன் ஆக்கப்பட்ட செல்வாக்கு மிக்க சைவ இலக்கியம். இதற்கு விளக்கவுரை, 20-ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது. சி.கே. சுப்பிரமணிய முதலியார், சைவத்திலும், சைவ அடியார்களிடத்திலும் சேக்கிழாரிடத்தும் மிகுந்த பற்றுதலோடு இதற்கு உரையெழுதியுள்ளார். அவ்வுரை, குறிப்பிடத்தக்க ஒரு பணியைச் செய்கிறது: நாயன்மார்கள், குறிப்பாக அப்பரும் சம்பந்தரும் பல தலங்களுக்குச் சென்று, வழிபாடுகள் நிகழ்த்தியவர்கள்; வழிபாடுகளைத் தொடங்கி வைத்தவர்கள்; இவர்களும் பிற நாயன்மார்களும் தலயாத்திரை சென்று வந்த வழிகளைப் பெரியபுராணம் துணை கொண்டு விளக்குகிற வகையில் மண்டல வரைபடங்கள் (maps) தயாரிக்கப்பட்டு இவ்வுரையில் தரப்பட்டுள்ளன. 20-ஆம் நூற்றாண்டின் அறிவியல் முன்னேற்றத்தின் பயன் இவ்வாறு உரையில் வெளிப்படுகிறது.

3.3 தற்கால உரைகள்

தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியை, பழைய இலக்கிய -இலக்கணங்களைத் திரட்டித் தொகுத்த தொகுப்புகளின் காலம் எனவும், கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் 14-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியை உரையாசிரியர்கள் காலம் எனவும், பொதுவாகப் பகுத்துக் கூறலாம். அதுபோல 20-ஆம் நூற்றாண்டு, புத்திலக்கிய முயற்சிகளின் காலம் ஆகும். இந்தக் காலப்பகுதியில்தான், தமிழில் இலக்கியத் திறனாய்வு, பல பரிமாணங்களோடு பல வீச்சுக்கள் பெற்று வேகமாக வளர்ச்சி பெறுகிறது. இலக்கியத்திறனாய்வு, நவீன முறையியல்களையும் சிந்தனை முறைகளையும், மேலும், தற்கால இலக்கியம் எனும் தளத்தையும் கொண்டது. இதனோடு ஒப்புடையதாகக் காணக்கூடிய உரை, பொதுவாகப் பழைய இலக்கியங்களைத் தளமாகக் கொண்டது; அதனை மரபுவழியாக விளக்குகிற முயற்சியைக் கொண்டது. 20-ஆம் நூற்றாண்டில் இத்தகைய உரைகளும் பல எழுந்தன என்பது கவனத்துக்குரிய செய்தியாகும்.

இந்நூற்றாண்டில் காணப்படுகின்ற உரைகாணும் முயற்சிகளில் இரண்டு முக்கிய அம்சங்கள் கவனிக்கத்தக்கன: i) இலக்கியங்களின் பல வகைகளுக்கும் உரைகள் எழுந்தன. ii) ஏற்கெனவே, முன்பு உரைகள் எழுதப்பட்ட இலக்கியங்களுக்கு மீண்டும் உரைகள் எழுதப்பட்டன. திருக்குறள், தொடர்ந்து பல அறிஞர்களின் கருத்தை ஈர்த்தது. ஏறத்தாழ ஒரு நூறுபேருக்கு மிகாமல், பலர், திருக்குறளுக்குப் பல தேவைகளின் பொருட்டும், பல நோக்கங்களோடும் உரைகள் எழுதினர். பழைய இலக்கியங்கள், செய்யுள் வடிவத்தில் இருப்பதால், இன்றைய பொதுமக்களுக்கு வசதியாக, அவை வசனங்களாகவும் எழுதப்பட்டன. இன்றைய உரையாசிரியர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், பெருமழைப்புலவர். பொ.வே.சோமசுந்தரனார்., சி.கே. சுப்பிரமணிய முதலியார் மற்றும் எளிய முறையில் சாதாரண மக்களுக்காக எழுதிய புலியூர்க் கேசிகன் ஆகியோர். 14-ஆம் நூற்றாண்டின் நச்சினார்க்கினியர் போன்று இருபதாம் நூற்றாண்டின், வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியாரே தமிழில் அதிகமான நூல்களுக்கு உரையெழுதியவர். கம்பராமாயணம் முழுவதற்கும் உரையெழுதினார். மேலும், வில்லிபாரதம், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரத்தில் அடைக்கலக்காதையும் கடலாடுகாதையும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், முதுமொழிக் காஞ்சி, மதுரைக் கலம்பகம், திருவேங்கடக் கலம்பகம், நாலடியார். அஷ்டப் பிரபந்தம். சடகோபர் அந்தாதி முதலிய பலவற்றின் உரையாசிரியர், இவர். இவ்வுரைகளில் கம்பராமாயணத்துக்கு அமைந்த உரையே மிகவும் சிறப்பானது. தொடர்களுக்கு உரை, கருத்துரை, நயம், இலக்கணக்குறிப்பு முதலியவை மட்டுமல்லாமல், தொடர்புடைய பல புராணக்கதைகளையும் ஒப்புமை கருதி எடுத்துக்காட்டி விளக்குகின்றார். அவருடைய ஆழ்ந்தகன்ற புலமையையும் இராமாயணத்தில் உள்ள ஈடுபாட்டையும் இந்த உரை உணர்த்துகிறது. ந.மு.வேங்கடசாமி நாட்டார், சிலப்பதிகாரம் முழுமைக்கும் விரிவான உரை எழுதியுள்ளார். பலவிடங்களில் பழையவுரைகாரரையும் அடியார்க்கு நல்லாரையும் பின்பற்றிச் சென்றாலும், காலத்திற்கேற்ற வளர்ச்சி, அவ்வுரையில் காணப்படுகிறது. சிலம்புக்கு மட்டுமல்லாமல் மணிமேகலைக்கும் மற்றும் அகநானூறு, திருவிளையாடற் புராணம், நானாற்பது (இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது) ஆகியவற்றுக்கும் நாட்டார் உரையெழுதியுள்ளார். பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்காக, சங்ககால இலக்கியங்களுக்கும் பிற்கால இலக்கியங்கள் சிலவற்றுக்கும் விரிவான உரைகள் எழுதியுள்ளார்.

மரபுவழி உரைக்கும், வளர்ந்துவரும் புதிய திறனாய்வு முறைக்கும் இடைப்பட்டதாக மறைமலையடிகள், முல்லைப்பாட்டுக்கும் பட்டினப்பாலைக்கும் ஆராய்ச்சியுரைகள் எழுதியுள்ளார். நச்சினார்க்கினியர், மாட்டு எனும் உறுப்பைப் பயன்படுத்திப் பாடல் அடிகளைச் சிதைப்பார். இதனைப் பொறாது, மறைமலையடிகள் இந்த ஆராய்ச்சி உரைகளை எழுதினார். இந்த உரைகள் ஆழமாகவும் தெளிவாகவும் அமைந்துள்ளன. விமர்சனரீதியாகப் பாடல் அடிகளை மதிப்பிடவும் செய்கின்றன. தமிழ்த் திறனாய்வாளர்கள் வரிசையில், மறைமலையடிகளுக்கு இடம் தந்துதான் திறனாய்வு வரலாறு எழுதப்படுகிறது.

3.4 தொகுப்புரை

உரைகள், தொடர்ந்து தமிழ் இலக்கிய உலகிற்கு வளம் அளித்தன. காப்பியங்களுக்கும் சமய நூல்களுக்கும் பல சிறந்த உரையாசிரியர்கள் உரையெழுதினர். காப்பியங்களுள் சிலப்பதிகாரத்துக்கு எழுந்த பழையவுரையாகிய அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும் பல சிறப்புகள் கொண்டவை. காப்பியம் என்ற கட்டுக் கோப்புப் பற்றிய அறிவு, பாத்திரப் படைப்புப் பற்றிய அறிவு, காப்பியம் கூறும் இசை, கூத்து, நடனம் முதலிய கலை வடிவங்கள் பற்றிய தெளிவு முதலியவை இந்த உரை விளக்கங்களில் நன்கு புலப்படுகின்றன. தொல்காப்பியம் எனும் இலக்கணம் மற்றும் பத்துப்பாட்டு, கலித்தொகை உள்ளிட்ட தனிநிலைப் பாடல்கள் ஆகியவற்றுக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர், காப்பியங்களுள் சீவகசிந்தாமணிக்கும் விரிவாக உரையெழுதியுள்ளார்.

சமய இலக்கியங்களுள், திராவிடவேதம் என்று போற்றப்படும் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களுக்குச் சிறந்த உரைகள் தோன்றின. நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு நம்பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை முதலியோர் விரிவான உரைகள் எழுதியுள்ளனர். இலக்கிய நயம் பற்றிய உணர்வும், தத்துவ நெறி பற்றிய உணர்வும் ஒருங்கே கூடிவருகிற விளக்கங்களை இந்த உரைகளில் காணமுடியும். இவை, எழுத்துகளின் எண்ணிக்கையளவில் ‘படி’ எனும் பெயரால் சொல்லப்படுகின்றன. வடக்குத் திருவீதிப் பிள்ளையின் உரைகள் ஈட்டு உரைகள் என்று வழங்கப்படுகின்றன. அன்று, நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களுக்கு உரைகள் தோன்றினாலும் சிறந்த வைணவக் காப்பியமாகிய கம்பனின் இராமகாதைக்கு, 20-ஆம் நூற்றாண்டில்தான் விளக்கமான உரை எழுந்திருக்கிறது.

சைவத் திருமுறைகள், உரையாசிரியர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கவில்லை. ஆனால், மணிவாசகரின் திருக்கோவையார்க்கு, இலக்கியவுணர்வுடன் கூடிய சிறந்த உரையொன்று அன்றே உண்டு. பெரியபுராணத்துக்கு 20-ஆம் நூற்றாண்டில்தான், சி.கே.சுப்பிரமணிய முதலியார் என்பவரால் உரையெழுதப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டில் பல இலக்கியங்களுக்கு உரைகள் எழுதப்பட்டுள்ளன. திருக்குறளே, பல சான்றோர்களையும் தொடர்ந்து கவர்ந்துள்ளது; அதற்குப் பல உரைகள் இந்நூற்றாண்டில் தோன்றியுள்ளன.

பாடம் - 4

இன்றைய திறனாய்வாளர்கள்-I

4.0 பாட முன்னுரை

தமிழ்த் திறனாய்வின் வரலாற்றில் இலக்கிய உரைகள் செய்த பணிகளையும் பங்களிப்புகளையும் தொடர்ந்து, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் இருபதாம் நூற்றாண்டிலும், இன்றைய திறனாய்வு, புதிய புதிய பரப்புகளையும் பரிமாணங்களையும் பெற்று வளர்ச்சியடைந்துள்ளது. தமிழ்த் திறனாய்வு, குறிப்பிடத்தக்க ஒரு துறையாகவும் களமாகவும் இன்று சிறப்புற்று விளங்குகிறது. முன்பு, இலக்கியங்கள் தோன்றி, சில பல நூற்றாண்டுகள் கழிந்து அவற்றிற்குரிய விளக்கங்கள் அல்லது உரைகள் தோன்றின. எடுத்துக்காட்டாக, சேர இளவல் படைத்த சிலப்பதிகாரம் எனும் காப்பியம், கி.பி 4 அல்லது 5ஆம் நூற்றாண்டில் தோன்றியதெனின் அதற்கு ஒரு பழைய உரையும் பின்னர் அடியார்க்கு நல்லார் உரையும் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில்தான் எழுகின்றன; அதாவது ஏழு, எட்டு நூற்றாண்டுகள் கழிந்துதான் தோன்றுகின்றன. சங்க இலக்கியங்களுக்கும் திருக்குறளுக்கும் அப்படியே. ஆனால் இன்றைய திறனாய்வு என்பது, தனக்கு மிகவும் அண்மைக்காலத்துத் தோன்றிய அல்லது சமகாலத்திய இலக்கியங்களைப் பற்றி உடனடியாக அல்லது வெகுசீக்கிரமாகப் பேசத் துவங்கிவிடுகிறது. எடுத்துக்காட்டாக, புதுக்கவிதைகள் சிலவற்றைத் தொகுத்துப் புதுக்குரல்கள் என்ற நூல் (சி.சு. செல்லப்பா) வெளிவந்தவுடன், அதனுடைய போக்கை விமரிசித்துப் பல கட்டுரைகள் உடனடியாக வெளிவந்தன. அதுபோன்று, பல நூல்களுக்கு உடனடியாகத் திறனாய்வுகள் செய்யப்படுவதைப் பார்க்கலாம். இன்றைய திறனாய்வின் முக்கியமான அடையாளம், உடனடியாக எதிர்வினை (Immediate Response) நிகழ்த்துகின்ற அதன் பண்பு ஆகும்.

4.1 தோற்றச் சூழல்கள்

இன்றைய திறனாய்வு தோன்றியதற்குரிய சூழ்நிலைகள் என்ன? கல்வி பரவலாக்கப்பட்டு வளருகிறது. அச்சு முதலிய அறிவியல் சாதனங்கள் பெருகுகின்றன. சங்க இலக்கியம், சிலம்பு, குறள், கம்பராமாயணம் முதலிய பழைய இலக்கியங்கள், ஏட்டுச் சுவடிகள் என்ற     நிலையிலிருந்து,     பலருக்கும்     கிடைக்குமாறு பதிப்பிக்கப்படுகின்றன. இது 19-ஆம் நூற்றாண்டில் பரவலாக நிகழ்ந்தது. இதனால் அவ்விலக்கியங்கள் பற்றிய அறிவும் உணர்வும் புத்துணர்ச்சி பெற்று எழுகின்றன. இது ஒன்று; அடுத்து-தம்முடைய மரபு பற்றியும் வரலாறு பற்றியும் சமூக-பண்பாட்டு நிலைகள் பற்றியும் இலக்கியச் சாதனைகள் பற்றியும் தேடிப்பார்க்கவும் ஆராயவும் எடுத்துச் சொல்லவும் வேண்டும் எனும் ஆர்வம் அறிஞர்கள் மத்தியில் தோன்றுகின்றது. அடுத்து – மேலை நாட்டார்தம் நூல்களின் தாக்கம் உரைநடையின் பரவலான வீச்சு; சொல்லுபவற்றை அறிவியல் ரீதியாக அல்லது அறிவார்ந்து சொல்லவேண்டும் என்ற ஒருநிலை ; அடுத்து, முக்கியமாக, பத்திரிகைகள் தோன்றிப் புதிது புதிதாக எழுதுவதற்கு இடம் தந்தமை இவையெல்லாம் இலக்கியத் திறனாய்வைத் தூண்டி வளர்த்தன என்று சொல்ல வேண்டும்.

4.2 தொடக்க காலத் திறனாய்வாளர்கள்

இன்றைய திறனாய்வு என்பதனைப் பொறுத்த அளவில், தமிழில் முதல் திறனாய்வாளர் யார் என்பது அண்மைக்காலம் வரை விவாதிக்கப்பட்டு வந்தது. Kamba Ramayanam – A study என்ற நூலையும் ‘கவிதை’ என்ற கட்டுரையையும் (1918) எழுதிய வ.வே. சுப்பிரமணிய ஐயர் தான் முதலாமவர் என்று தொ.மு.சி.ரகுநாதன், சி.சு. செல்லப்பா முதலியவர்கள் கூறினார்கள். அதன்பின்னர், சாலை இளந்திரையன், கலாநிதி கைலாசபதி ஆகியோர், திருமணம் செல்வக்கேசவராய முதலியார் தான் முதலாமவர் என்று கூறினர். இதுவே இன்று தொடர்ந்து பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

செல்வக்கேசவராயர் கல்வியியலாளர் ; அன்று உரைநடை வேகமாக வளர்ந்து வந்தது ; செல்வக்கேசவராயர் கம்பனிடம் ஈடுபாடு கொண்டவர். ‘வசனம்’ என்ற கட்டுரையில், தமிழில் உரைநடையின் வளர்ச்சியை மதிப்பீடு செய்கிறார். வசனத்தின் நடை பற்றியும் விளக்குகின்றார். ‘செய்யுள்’ என்ற கட்டுரை, அழகும் நுட்பமும் கொண்டது. இதில் அவர் ஆங்கிலத் திறனாய்வு முறையைப் பின்பற்றியிருப்பதாக, க.நா. சுப்பிரமணியன் என்ற திறனாய்வாளர் மதிப்பிடுகிறார். 1897-ஆம் ஆண்டிலேயே இவர் கம்பன் பற்றி ஆராய்ந்து சித்தாந்த தீபிகை என்ற இதழில் எழுதியிருக்கிறார். இவரையடுத்து, மறைமலையடிகளைக் குறிப்பிட வேண்டும். மாணவர்களுக்காகவும் மற்றும் நச்சினார்க்கினியர் என்ற உரையாசிரியரின் கருத்திலிருந்தும் உரைகூறுகிற முறையிலிருந்தும் மாறுபடுவதற்காகவும், முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, (1903) பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை (1906) ஆகிய இரண்டு சிறுநூல்கள் எழுதினார். உரைமரபு சார்ந்த திறனாய்வு இவற்றிலே காணப்படுகிறது. பொழிப்புரை, கருத்துரை, விளக்கம் என்ற முறை பின்பற்றப்படுகிறது. சங்கப்பாடல் அடிகளை முன்பின்னவாக மாற்றிக், கொண்டுகூட்டிப் பொருள் உரைக்கின்றவர் நச்சினார்க்கினியர். பத்துப்பாட்டு எனும் தொகை நூல் முழுக்க இவ்வாறு வாக்கியங்களை முறிக்கின்ற மாட்டு எனும் இலக்கணம் இருப்பதாகச் சொல்லிப் பாட்டுகளை விருப்பம்போல் சிதைத்து விடுவார் நச்சினார்க்கினியர். இதனை மறுக்கிற விதமாகவும் வாக்கிய மரபிலிருந்து பொருள்கள் நேராகவும் தெளிவாகவும் எவ்வாறு புலப்படுகின்றன என்பதைக் காட்டுகின்ற விதமாகவும் மறைமலையடிகள், முல்லைப்பாட்டுக்கும் பட்டினப்பாலைக்கும் உரையெழுதுகின்றார். மேலும், இப்பாடல்களின் பொருட்சிறப்பையும், அணிநயத்தையும் ஒலிநயத்தையும் புலப்படுத்தி விளக்கம் தந்திருக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், The Tamilian Antiquary என்ற ஆராய்ச்சி இதழ், தொடர்ந்து பல ஆண்டுகள் வெளிவந்தது. தமிழ் இலக்கியம், பண்பாடு, சமூக வரலாறு முதலிய துறைகளில் ஆழங்கால்பட்டு எழுதிய பல ஆய்வுக் கட்டுரைகளை இது வெளியிட்டு வந்தது. ஜி.யூ.போப், கே.ஜி.சேஷ ஐயர், மு.இராகவையங்கார், ஜே.எம். நல்லசாமிப்பிள்ளை, வெ.கனகசபைப்பிள்ளை, பெ.சுந்தரம் பிள்ளை முதலிய பல அறிஞர்களின் ஆய்வுகளை இந்த இதழ் வெளியிட்டுவந்தது. பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை (1906) திருஞானசம்பந்தரின் காலம் குறித்து எழுதிய ஆய்வுக்கட்டுரை, (இது ஆங்கிலத்தில் எழுதப்பட்டது), கால ஆராய்ச்சி பற்றிய மிகச் சிறந்த கட்டுரையாகும். அது போன்று பத்துப்பாட்டு ஆராய்ச்சி குறித்த கட்டுரை, பத்துப்பாட்டுத் தொகை நூல்களின் சிறப்புகளைப் பகுத்து ஆராய்கின்ற முறையில் ஆராய்ந்து கூறுகின்றது.

வ.வே.சு. ஐயர், ‘கவிதை’ பற்றி (1924) எழுதினார். பழம்பாடல்கள் பற்றியே பேசினாலும், கவிதையின் பண்புகளைத் தனியே எடுத்து விதந்து கூறியமையும், செய்யுள் எனக் கூறாது, கவிதை என்ற சொல்லைப் பயன்படுத்தியமையும் இக்கட்டுரையின் சிறப்புகள். மேலைநாட்டார் கூறும் கவிதைப் பண்புகள் சிலவற்றை இவர் எடுத்துக்காட்டுகிறார். பின்னர், இவர் ‘Kambaramayanam – A Study’ என்ற ஒரு நூலை எழுதினார். கம்பனை வடமொழியின் வால்மீகியோடும் ஆங்கிலத்தின் மில்ட்டனோடும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ள இந்த நூல், தமிழில் ஒப்பிலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. கம்பனே பிறரினும் சிறந்தவன் என்பது இவருடைய முடிவு. மேலும், ‘இரசனைச்சுகம், கம்பராமாயணத்தில் அதிகம் காணப்படுகிறது என்பதே எனது கட்சி’ என்று இவர் சொல்லுவார். இவருடைய அணுகுமுறையில், ரசனையும், கம்பன் பற்றிய ஒரு வியப்பு நிலையும் காணப்படுகின்றன.

இவ்வாறு, தமிழ்த் திறனாய்வு முன்னோடிகளிடம் மரபு மீதான சார்பு, ரசனை மீதான ஆர்வம்/ பயிற்சி, தமிழிலக்கியம் மற்றும் தமிழர் பண்பாடு குறித்த ஒரு செம்மாப்புணர்வு முதலியவை தூக்கலாகக் காணப்படுகின்றன.

4.3 திறனாய்வும் ஆராய்ச்சியாளர்களும்

ஆராய்ச்சி என்பது தருக்கமும் நுணுக்கமும் கொண்டது. மூல நூல்கள், சான்றாதாரங்கள் என்பவை ஆராய்ச்சிக்கு முக்கியம். முடிவுகளும் நோக்கங்களும் கருதுகோள்களும் காரணகாரியத் தொடர்புகளுடன் இருக்க வேண்டும். படைப்பினுடைய வாசகப்பரப்பையும் படைப்பாக்க முறைகளையும், உள்ளர்த்தங்களையும் வெளிக்கொணர்வது திறனாய்வுக்கு முதன்மையான தேவையாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் புதிய தேவைகளையொட்டி நாடு, இனம், மொழி, இலக்கியம், பண்பாடு முதலியவற்றின் தேடுதல்களாக வந்தவை, முதலில் ஆராய்ச்சிகளேயாகும். ஆயினும் இவற்றில் பல, இலக்கியங்களை மையமிட்டே செய்யப்பட்டன. யாழ் விபுலானந்த அடிகள், பண்டித நடேச சாஸ்திரியார், எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார், மு.இராகவையங்கார், ரா.ராகவையங்கார்,கே.என். சிவராஜபிள்ளை, எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை, வெ. கனகசபைப்பிள்ளை , எம். சீனிவாசஐயங்கார், பி.டி. சீனிவாச ஐயங்கார், கே. எஸ். சீனிவாச பிள்ளை, வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர், எல். டி. சாமிக்கண்ணுப்பிள்ளை, நா. கதிரைவேற்பிள்ளை ஆகியவர்கள் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் இலக்கியங்களைத் திறனாய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகினர். தமிழ் இலக்கியம் பற்றிய ஆழமான பரந்த அறிவும் மதிப்பீடுகளும் கருத்து நிலைகளும் இவர்களுடைய நூல்களிலே உண்டு. இவர்களைத் தொடர்ந்துதான் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, எஸ்.வையாபுரிப்பிள்ளை, டி.வி. சதாசிவ பண்டாரத்தார், தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், கலாநிதி கைலாசபதி முதலிய பலஆராய்ச்சியாளர்கள் தோன்றினர்.

4.4 திறனாய்வாளர்களும் பழைய இலக்கியங்களும்

இன்றைய திறனாய்வு, பொதுவாக, இன்றைய இலக்கியங்களையே தனது தளமாகவும் நோக்கமாகவும் கொண்டிருக்கிறது. அதுவே அதனுடைய முக்கியமான இயல்பு. எனினும் இலக்கியங்களின் காலப்பகுதி, திறனாய்வுக்குத் தடையாக இருப்பதில்லை; இருக்கவும் கூடாது. எனவே பழைய இலக்கியங்களையும் திறனாய்வாளர்கள் தம்முடைய ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டனர். தொடக்க காலத் திறனாய்வாளர்கள் அல்லது ஆய்வாளர்களுக்கு இது தவிர்க்க முடியாத ஒன்று. ஏனெனில், அன்று புத்திலக்கியங்கள் அதிகம் தோன்றவும் இல்லை. புத்திலக்கியங்கள் அதிகமாகத் தோன்றிய பிறகும் பல ஆய்வாளர்கள் / திறனாய்வாளர்கள், பழைய இலக்கியங்களிலேயே அதிகமான அக்கறை செலுத்தினர். பெரும்பாலும் கல்வியியலாளர்கள் இத்தகையவர்களாக இருந்தனர்; வளர்ந்து வரும் புதிய இலக்கியங்களில் இவர்கள் ஈடுபாடு கொள்ளவில்லை.

பழைய இலக்கியங்களைத் திறனாய்வு செய்வோர், அதிகமாக எடுத்துக்கொண்ட இலக்கியங்கள் கம்பனுடைய இராமகாதை, இளங்கோவின் சிலம்பு, வள்ளுவரின் குறள் மற்றும் சங்க இலக்கியங்கள் ஆகும். சமயத்தில் ஈடுபாடு கொண்டோர் பெரியபுராணம், திருவாசகம், தேவாரம் முதலிய நூல்களில் ஆர்வம் கொண்டிருந்தனர். பொதுவாக இத்தகையவர்களில் பெரும்பான்மையோர், ரசனை முறையிலும் உரை மரபிலேயும் சென்றார்கள். மொழிப்பற்றும், சமயப்பற்றும் இவர்களின் ஆய்வுகளிலே இருந்தன.

புதிய இலக்கியங்களிலே ஈடுபாடு கொள்ளாமல், பழைய இலக்கியங்களையே தம் ஆய்வுப்பொருளாகக் கொண்ட கல்வியியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்ரா. பி. சேதுப்பிள்ளை, ச. சோமசுந்தர பாரதியார், மு. வரதராசன், அ.ச. ஞானசம்பந்தன், வ.சுப. மாணிக்கம் ஆகியோர். இவர்களுள் பேராசிரியர் மு. வரதராசன், 1950-60-களிலே கல்லூரி மாணவர்களையும் இளைஞர்களையும் கவருகின்ற விதத்தில் பல நாவல்கள் எழுதிப் பிரபலமானவர். ஆனால், இவர் தம்மையொத்த நாவலாசிரியர்கள் பற்றியோ, பாரதியார், பாரதிதாசன் போன்ற சமகாலத்திய கவிஞர்கள் பற்றியோ திறனாய்வு செய்யவில்லை. மாறாகச் சங்க இலக்கியத்தில் இயற்கை, குறுந்தொகைச் செல்வம், நெடுந்தொகைச் செல்வம், நற்றிணை விருந்து என்று பெரிதும் சங்க இலக்கியங்களிலேயே கவனம் கொண்டிருந்தார். இது, அண்மைக்காலம் வரை, தமிழ்க் கல்வியியலாளர்கள் மத்தியிலே பெரும் போக்காக இருந்தது. மேலும், பொதுவாக ரசனை முறைத் திறனாய்வுக்கும் மரபு சார்ந்த பார்வைக்கும் கம்பன், இளங்கோ உள்ளிட்ட தொன்மை இலக்கியங்களே ஏற்புடையனவாக இருந்தன. இன்றும் கூட இந்தப்போக்குப் பிரதானமாகக் காணப்படுகிறது. மேலும், மேடைச் சொற்பொழிவாளர்களுக்கு, இந்தத் தளமே பொருந்தி வருகிறது. ஆனால் அதேபோது, அமைப்பியல் மார்க்சியம், பெண்ணியம் முதலிய புதிய பார்வைகளுக்கும் கொள்கைகளுக்கும், சங்க இலக்கியம் உள்ளிட்ட தொன்மை இலக்கியங்களும் சிறந்த களங்களாக இருந்து வருகின்றன. அணுகுமுறைகளும் கொள்கைககளுமே திறனாய்வுக்குச் சரியான பண்புகளையும் பயன்பாடுகளையும் தருவன. எந்த இலக்கியம் என்பதல்ல – எவ்வாறு அது திறனாய்வு செய்யப்படுகிறது என்பதுவே முக்கியம்.

4.5 திறனாய்வாளர்களில் மூன்று தரப்பினர்

திறனாய்வாளர்கள் எந்தத்துறை அல்லது எந்தத் தரப்பிலிருந்து – அதாவது, எந்தப் பின்புலத்திலிருந்து வந்தவர்கள் என்ற அடிப்படையில், மூன்று வகையாக அவர்களைக் கண்டறிய முடியும். i) கல்வியாளர்கள் ii) படைப்பாளிகள் iii) பிற துறையினர்,

4.5.1 கல்வியாளர்கள் கல்விப் பணியில் ஈடுபட்டவர்களைக் கல்வியாளர் என்று குறிப்பிடுகிறோம். கல்வியாளர்கள் என்பவர்கள், மாணவர்க்காகக் கற்று, அதனை அவர்கள் மனங் கொள்ளுமாறு சொல்லுபவர்கள்;சொல்ல வேண்டியவர்கள். எனவே, இலக்கியத்தை விளக்குவதும், மதிப்பிட்டுச் சிபாரிசு செய்வதும்; இவர்களின் நல்லன தீயன என்று பார்க்கும் அறக்கோட்பாடு, பழைமைவாதம் சேர்ந்த மரபு நெறி, போதனை பண்ணுகிற மனப்போக்கு, பலவற்றையும் கற்ற அல்லது கற்பதற்கு வாய்ப்புக் கிடைத்த சூழ்நிலை, ஒரு பாதுகாப்பான வாழ்நிலை முதலியவற்றைக் கொண்டிருப்பதும் இவர்களிடம் காணப்படுகிற சில பொது நிலைகள். இவர்கள் மத்தியில், மரபிலும், தொன்மை இலக்கியத்திலும் மூழ்கிவிடுகிறவர்கள் முதல், புறவயமான அறிவியல் நிலையிலும், மார்க்சியம் மற்றும் பல்துறை அணுகுமுறையிலும் பயிற்சியும் வல்லமையும் உடையவர்கள் வரை பலர் உண்டு. இவர்களில் சிலரை மட்டும் இங்குக் குறிப்பிடுவோம். முதல் திறனாய்வாளராகக் கருதப்படுகிற திருமணம் செல்வக்கேசவராயரும் சுவாமி வேதாச்சலம் என்ற மறைமலையடிகளும் ஆசிரியர்களாக இருந்தவர்கள். இவ்வகையில், எஸ்.வையாபுரிப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், கலாநிதி கைலாசபதி, நா. வானமாமலை, கோ. கேசவன்; அ. மார்க்ஸ், கா. சிவத்தம்பி, கோவை ஞானி, தமிழவன், எம்.ஏ. நுஃமான் – இப்படிச் சில பெயர்களை உதாரணத்துக்காக இங்குக் குறிப்பிடலாம்.

4.5.2 படைப்பாளிகள் இவர்கள் கவிதை, சிறுகதை, நாவல் முதலிய துறைகளில் படைப்பாளிகளாகவும் அதேபோது திறனாய்வாளர்களாகவும் பரிணமித்தவர்கள். இவர்களுடைய திறனாய்வில், படைப்பு மனம் இருக்கும்; மரபுகளை – அவை இன்னின்னவை என்று பெரும்பாலும் தெரியாமலேயே கூட – மறுக்கின்ற தீவிரத்தனம் இருக்கும்; தம்மையும் தம்மைச் சார்ந்தோரையும் பாராட்டுகிற ஒரு பெருமித உணர்வு இருக்கும். படைப்பாளர் – திறனாய்வாளர்களுள் வ.வே.சு.ஐயர் முதன்மையானவர். குளத்தங்கரை அரசமரம் உள்ளிட்ட பல சிறுகதைகள் எழுதித் தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி என்ற பெயர்பெற்ற இவர், திறனாய்விலும் முன்னோடிகளில் ஒருவராக இருந்தார். தொடர்ந்து, தொ. மு.சி. ரகுநாதன், க. நா. சுப்பிரமணியன், வல்லிக்கண்ணன், சி.சு. செல்லப்பா முதலிய படைப்பாளிகள், சிறந்த திறனாய்வாளர்களாகவும் விளங்கினார்கள். அண்மைக்காலமாகப் படைப்பாளர் பின்புலங்களோடு திறனாய்வு செய்கிறவர்கள் பலர் ; பெயர்கள் சொல்லின் பெருகும். மேலும், பாரதியார், புதுமைப்பித்தன், வ.ரா., கு.ப. ராசகோபாலன் ஆகிய படைப்பாளிகளிடமும் திறனாய்வுக் கருத்துநிலைகள் குறிப்பிடத்தக்கவையாக உண்டு.

4.5.3 பிற துறையினர் மேற்கூறிய இரு துறைகளும் அல்லாத வேறு பணிகளில் ஈடுபட்டவர்கள் இவர்கள். வெவ்வேறு பின்புலங்களைக் கொண்ட பலரும் திறனாய்வில் தடம் பதித்துள்ளனர். உதாரணம், டி.கே. சிதம்பரநாதமுதலியார். இவர் பண்ணையார் ; வழக்குரைஞர் ; அரசுத்துறையில் ஒரு தலைமை அதிகாரி ; அரசியலில் தொடர்பும், பெரிய தலைவர்களுடன் நெருக்கமும் கொண்டவர். தமிழில் ரசனை முறைத் திறனாய்வுக்கு இவரே முன்னோடி. அடுத்து, அரசியலில் முன்னாளிலிருந்த ப.ஜீவானந்தம், ம.பொ. சிவஞானம் ஆகிய இருவரும் திறனாய்வுத்துறையிலும் குறிப்பிடத்தக்கவர்கள். மார்க்கபந்து சர்மா, வெ. சாமிநாதசர்மா, சாமி சிதம்பரனார் மற்றும் அண்மையில் எழுதிவரும் வெங்கட் சுவாமிநாதன், எஸ். வி. ராஜதுரை, தி.க. சிவசங்கரன், வெ. கிருஷ்ணமூர்த்தி, ரவிக்குமார் முதலிய பல பெயர்களைக் குறிப்பிடலாம். எந்தப் பின்புலங்களிலிருந்து வந்தாலும், திறனாய்வு என்பது ஒரு தனித்துறை, அதிலே செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்ற உணர்வு, தமிழ்த் திறனாய்வாளர்கள் பலரிடமும் உண்டு என்பது கவனங் கொள்ளத்தக்கது.

4.6 பாரதியாரும் திறனாய்வும்

கவிஞராகவே அறியப்பட்டு வருபவர், சுப்பிரமணிய பாரதியார். இதுவன்றியும், இவர் பத்திரிகையாளராகவும், கட்டுரையாளராகவும் விளங்கினார். அவர் இலக்கியம் பற்றிய தம் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார் என்பது பலருக்கு வியப்பாகவும் இருக்கும்.

இலக்கியத்தைப் பற்றிப் பாரதியாருக்கு அனுமானங்களும் சில கணிப்புக்களும் உண்டு. பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும் என்ற போது, இலக்கியத்தின் நோக்கம் பற்றிய கணிப்பும், யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் இளங்கோவைப் போல் வள்ளுவன் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்று சொல்லும்போது ஒரு மதிப்பீடும் – இப்படிப் பல தன்மைகளும் வெளிப்படுகின்றன. ஆனால், இவற்றிலும் சிறப்பாக, சில கட்டுரைகளிலே, கலை இலக்கியங்கள் பற்றி அவர் விரிவாகவும் தீர்க்கமாகவும் பேசியிருக்கிறார்.

1916-ஆம் ஆண்டிலேயே இவர், ஜப்பானிய ஹைக்கூ பற்றி எழுதியிருக்கிறார். அதன் வரையறை, பண்பு, திறன் ஆகியன பற்றிப் பேசியிருக்கிறார். சுருங்கச் சொல்லி விளங்கவுரைக்கும் அதன் செறிவைத் திருக்குறளோடு ஒப்பிட்டிருக்கிறார். சில ஹைக்கூ கவிதைகளை மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார்; அதோடு நிற்காமல், அந்தக் கவிதைகளை விமரிசனமும் செய்திருக்கிறார். (ஜப்பானிய கவிதை பற்றி முதலில் சொன்னவர் பாரதியாரே ஆவார்.)

‘ஸங்கீத விஷயம்’ என்ற கட்டுரை மிகவும் அற்புதமான ஒன்று. நாட்டுப்புறப் பாடல்களின் மேன்மையைக் கூறி, வித்வான்கள் அவற்றிலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தவும் செய்கிறார். “பொது ஜனங்களை நம்ப வேண்டும் ; இனிமேல் கலைகளுக்கெல்லாம் போஷணையும் ஆதரவும் பொது ஜனங்களிடமிருந்து கிடைக்கும்” என்று பேசுகிறார். கலையும் சமூகமும் பற்றிய உணர்வு நிலையின் வெளிப்பாடு, இது. மேலும் கமலாம்பாள் சரித்திரம் எழுதிய ராஜம் ஐயர் பற்றி இவர் பாராட்டியிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும். இவ்வாறு, பாரதியார், ஒரு திறனாய்வாளராகவும் காட்சி தருகிறார்.

4.7 புதுமைப்பித்தனும் கு.ப.ரா.வும்

படைப்பாளர் திறனாய்வில் ஈடுபட்டதற்கு இவர்கள் இருவரும் எடுத்துக்காட்டு. புதுமைப்பித்தன், கு.ப.ராசகோபாலன் இருவருமே ‘மணிக்கொடி’ (1933-45) என்ற இலக்கியப் பத்திரிகையில் எழுதியவர்கள்; மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள். இலக்கியப் பத்திரிகை அல்லது சிற்றிதழ் என்பது, வணிகப் பத்திரிகைகளுக்கு அல்லது பிரபலத்தன்மைகளும் வெகுஜன பாமர ரசனையும் கொண்ட பத்திரிகைகளுக்கு மாற்றாக அமைவதாகும். இத்தகைய இலக்கிய இதழ்களுக்கு மணிக்கொடி முன்னோடியாகும். இலக்கியத்தில் படைப்பு முறையையும், தீவிரத்தன்மையையும், பரிசோதனை முயற்சிகளையும் முன்வைப்பவை இவை. இவற்றின் சரியான பிரதிநிதியாக அமைபவர் புதுமைப்பித்தன். இவர் சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பது மட்டுமல்லாமல், சிறுகதையிலக்கியம் பற்றியும், பிற தற்கால இலக்கியங்கள் பற்றியும் தீவிரமான கருத்துகள் கொண்டவர்.

வெகுஜன-ஜனரஞ்சக ரசனைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த புதுமைப்பித்தன், அத்தகைய ஜனரஞ்சகப் போக்கின் பிரதிநிதியாக இருந்த கல்கியை மிகத் தீவிரமாகச் சாடி, மறுத்து எழுதுகிறார். ஆர்வ நிலைகளை ஏற்படுத்துதல், மிகையான புனைவுகள், தொடர்கதைத் தன்மைகள் முதலியவற்றை எதிர்த்துப் புதுமைப்பித்தன் போர் தொடுக்கிறார். இலக்கியத்தில் ஜனரஞ்சகப் பண்பாடு (Mass Culture) மற்றும் பிரபலத்துவம் (Populism) ஆகியவற்றிற்கு மாற்றாக, நவீனத்துவம் (Modernity) என்பதை முன்வைத்த கலகக் குரல் இவருடையது. ஆனால் இதனாலேயே, பலருக்கும் புரியாது என்று சொல்லுகிற முறையில் எழுதிய மௌனியை இவர் பாராட்டிப் பேசுகிறார். அதேபோது, நேரடியாகத், திராவிடர் பகுத்தறிவு இயக்கத்தின் குரலாக ஒலித்த பாரதிதாசனையும் இவர் பாராட்டுகிறார். பாரதிதாசன் பற்றி அதே காலத்தில் ஒரு உடனடித் தன்மையோடு எழுதியவர் புதுமைப்பித்தன். ‘பாரதியார் தமிழுக்கென்று விட்டுச்சென்றவை இரண்டு ; ஒன்று, அவருடைய கவிதை; இன்னொன்று பாரதிதாசன்’ – என்பது புதுமைப்பித்தனுடைய பாராட்டு மொழி.

கு.ப.ரா, தேசிய விடுதலை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். பாரதியாரைக் கல்கியும் ராஜாஜியும், ‘அவர் கவிஞர் தான் ; நல்ல கவிஞராக இருக்கலாம் ; ஆனால் ஷேக்ஸ்பியர், மில்ட்டன், ஷெல்லி போல மகாகவி அல்ல’ என்று மறுத்துரைப்பர். பாரதி பற்றிய கல்கியின் இந்தக் கருத்தைத் தீவிரமாக மறுப்பவர், கு.ப.ரா. அவரும், பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி) என்ற இன்னொரு எழுத்தாளரும் சேர்ந்து, கல்கியை மறுப்பதோடு, பாரதியார், மகாகவி தான் என்று வலியுறுத்தி எழுதினார்கள் (நூல் : ‘கண்ணன்- என்கவி’).

4.8 தொகுப்புரை

தற்காலத் திறனாய்வு என்பது, இன்றைய இலக்கியம் தோன்றுகின்ற போது பிறந்தது எனலாம். பழைய இலக்கியங்கள் பதிப்பிக்கப்பட்டு, இலக்கிய வாசிப்புகள் பெருகவும், நவீனத்துவம் என்ற சிந்தனை முறை தோன்றவும் ஆன சூழல், திறனாய்வின் தோற்றத்திற்கு ஏற்புடையதாக இருந்தது. திருமணம் செல்வக்கேசவராயர், மறைமலையடிகள், வ.வே.சு. ஐயர் முதலியவர்கள் திறனாய்வின் முன்னோடிகள் ஆவர். தமிழில் நவீனக் கவிதையைத் தொடங்கி வைத்த மகாகவி பாரதியாரிடமும், திறனாய்வுக் கருத்துகள் – திறனாய்வு செய்கிற முறைகள் காணப்படுகின்றன. இன்றைய திறனாய்வாளர்களை, முக்கியமாக மூன்று விதமான பின்புலங்களிலிருந்து வந்தவர்களாகக் கண்டறிய முடியும். கல்வியியலாளர்கள் மத்தியிலிருந்து வந்தவர்கள்; படைப்பாளிகள் மத்தியிலிருந்து வந்தவர்கள்; மற்றும் இவை இரண்டுமல்லாத வேறுவேறு பின்புலங்களிலிருந்து வந்தவர்கள் என்று மூன்று வகைகளில் இவர்களைக் காணமுடியும். கல்வியியலாளர்கள் பொதுவாக, ஆராய்ச்சியில் ஈடுபாடுடையவர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆராய்ச்சியே பெருவழக்காக இருந்தது. தொடர்ந்து, இருபதாம் நூற்றாண்டிலும் இலக்கிய ஆராய்ச்சி முக்கிய இடம் வகித்து வருகிறது; இருப்பினும், திறனாய்வு இல்லாமல் ஆராய்ச்சி என்பது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். திறனாய்வு, புதிய புதிய வடிவங்களுடன், புதிய வழித்தடங்களில் வளர்ச்சி பெறத் தொடங்குகிறது.

பாடம் - 5

இன்றைய திறனாய்வாளர்கள்-II

5.0 பாட முன்னுரை

இன்றைய திறனாய்வு என்று நாம் உடனடியாகப் புரிந்து கொள்வது – அது, இன்றைய இலக்கியம் பற்றிப் பேசுவது; இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்பப் பேசுவது ; இன்றைய சிந்தனை     முறைகளை     அடியொற்றிப்     பேசுவது – என்பவற்றைத்தான் கொள்கிறோம். ஆனால் இவ்வாறு கொள்வது, ஒரு பொதுவான வழக்கு ஆகும். இதற்கு மாறாக, தொன்மை இலக்கியம் பற்றியும், தொன்மையான கருத்தியல் வடிவத்தைப் பின்பற்றியும் இன்றைய திறனாய்வு பேசுதல்     கூடும். எவ்வாறாயின், இன்றைய திறனாய்வின் அடிப்படையான பணி அல்லது பண்பு இன்றைய சூழ்நிலைகளுக்குப் பொருந்துமாறும், இவற்றின் தேவைகளுக்கு உதவுமாறும் இருக்க வேண்டும். உண்மையில், தமிழில் இன்றைய திறனாய்வின் வளர்ச்சி, இதற்கேற்ப அமைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். படிப்படியாகப் புதிய புதிய அணுகுமுறைகளையும் கருத்துகளையும் கொள்கைகளையும் ஏற்றும் தழுவியும் அது வளர்ந்துள்ளது.

5.1 மரபுமாற்றமும் சமயச்சார்பும் திறனாய்வும்

தமிழ்த்திறனாய்வு ஆங்கில மரபினால் பெற்ற மாற்றமும் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்கன. தமிழிலக்கியப் பரப்பில் பாதியளவு இடம்பிடித்திருந்த சமயத்தின் செல்வாக்கும் திறனாய்வில் படிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் இவ்விரு தாக்கங்கள் குறித்துக் காண்போம்.

5.1.1 ஆங்கில மரபும் தமிழ்த் திறனாய்வும் ‘திறனாய்வு என்பதே, ஆங்கிலேயர்களின் கொடை; ஆங்கில மரபின் தாக்கத்தினால்தான் தமிழில் திறனாய்வு தோன்றியது’ – இவ்வாறு சமீப காலம் வரை நவீனவாதிகளால் சொல்லப்பட்டு வந்தது. இவ்வாறு அவர்கள் கூறுவதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு. ஒன்று-இருபதாம் நூற்றாண்டின் விடியலில், செல்வக்கேசவராயர் உள்ளிட்ட தொடக்க காலத் திறனாய்வாளர்களும், பின்னர் வந்த திறனாய்வாளர்களும் ஆங்கிலக் கல்வி கற்றவர்களே என்பது. இரண்டு-நவீன அல்லது தற்காலத் திறனாய்வு தோன்றுவதற்குச் சற்றுமுன்புவரை, தமிழில், உரைகூறும் மரபில், போற்றியுரைப்பது, மரபுகளை விதிமுறைகளாகக் கொள்வது ஆகிய போக்குகளே இருந்தன என்பது. இவ்வாறு சொல்லப்படும் இந்த இரண்டு கருத்துகளுமே, அவசரப்பட்டு வந்த முடிவுகளேயன்றி ஆராய்ச்சிக்குட்பட்டு வந்த முடிவுகள் அல்ல.

தமிழ்த் திறனாய்வில் மேலைநாட்டுத் திறனாய்வு மற்றும் சிந்தனை முறைகளின் தாக்கம் உண்டு. ஆனால், திறனாய்வே அங்கிருந்து வந்த கொடை அல்ல. தமிழ்த் திறனாய்வின் நீண்ட வரலாற்றில் பல நீரோட்டங்கள் உண்டு. மேலைநாட்டு முறையியலும் தாக்கம் செலுத்துவதில் வியப்பு இல்லை. ஆனால், எது எது எந்த அளவில், எந்தத் திறனில் என்று சரியாகக் கணித்துவிட முடியாது. அறிவியல் வளர்ச்சி காரணமாகவும், உலகளாவிய தகவலியப் பரப்புகள் காரணமாகவும், புலம்பெயர்வு போன்றவை காரணமாகவும், தமிழில் திறனாய்வு, சர்வதேசப் பண்புகளைப் பெற்று வளர்ந்துள்ளது என்று சொல்ல வேண்டும். இன்றைய தமிழ்த் திறனாய்வாளர்களுள் (1970) எழுபதுகளுக்குப் பிற்பட்டவர்களிடமே மேலைநாட்டு முறையியல்கள் மற்றும் சிந்தனைகளின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. எவ்வாறாயினும், எல்லாமே தமிழ்ச் சூழலின் பின்னணியிலும், அதன் பொருத்தத்திலுமே இங்கு வந்து அமர்கின்றன ; இடம் பெறுகின்றன.

5.1.2 சமயச் சார்பும் திறனாய்வாளர்களும் தமிழ் ஆராய்ச்சி உலகில், சமயச் சார்பு என்பது முக்கியமான இடம் வகிக்கிறது ; குறிப்பாக, 1950-60களுக்கு முற்பட்ட ஆராய்ச்சிகளில், சமயச் சார்பு தூக்கலாகவே இடம்பெறுகிறது. மேலும், இத்தகைய சார்பில், சைவ சமயச் சார்பே அதிகமாகவும் வலுவாகவும் இடம்பெற்றுள்ளது. தொடக்க காலத் திறனாய்வாளர்களில் ஒருவராக மதிக்கப்பெறும் மறைமலை யடிகளிடம் இது தெளிவாகவே காணப்படுகிறது. வளோளர் நாகரிகம் பற்றியும் சைவ சமயப் பெருமைகள் பற்றியும் (இந்த இரண்டும் ஒன்றே )அவர் பல நூல்களில் பாராட்டிப் பேசுவார்.தேவாரம் தொகுப்பிலும் நாயன்மார் அறுபத்துமூவர் என்ற தொகையிலும் அடங்காத (அவ்வாறு அடங்காததாலேயே) மாணிக்கவாசகரைச் சங்க காலத்தின் பக்கத்திலே கொண்டு வைப்பார். இதற்கான சான்றுகள் பற்றிப் பொருட்படுத்தவும் மாட்டார். இவர் மட்டுமல்லர், இலக்கிய வரலாற்று நூல்கள் எழுதிய மு.அருணாசலம் முதலிய பலர், இவ்வாறு சமயப் பற்றுக் காரணமாகப் பல நூல்களின் காலங்களை முன்னும் பின்னுமாக வரையறை செய்வர். நான்குவருணம் என்ற வகுப்பையே வளோளர்கள்தான் செய்தார்கள் என்பது மறைமலையடிகளின் வாதம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவை மறுத்து, அது மருட்பாவே என்று சொல்லி ஈழத்து ஆறுமுக நாவலர் போர் தொடுக்கிறார். இதற்குக் காரணமாக அமைந்தது, ‘சைவ சமயத் தூய்மை’ பற்றிய கருத்தியலே ஆகும். சைவ சமயப்பற்றுக் காரணமாகச் சமணக் காப்பியம் என்று கருதப்படும் சிலப்பதிகாரத்தையும் திருக்குறளையும் சைவ சமய நூல்களே என்று பேசியவர்கள் பலர் உண்டு. அதுபோலப் பெரிய புராணத்தின்மீதும் சேக்கிழார் மீதும் தனிப்பற்றுக் கொண்ட அ.ச.ஞானசம்பந்தன், அதனைத் தேசிய இலக்கியம் என்பதாக முத்திரை குத்தி, விளக்கம் தருவார். இத்தகையவர்கள், கம்பனை வெறுமனே ரசனைக்காகவும், பெரியபுராணம், தேவாரம், திருவாசகம் முதலியவற்றைக் கொள்கைக்காகவும் பாராட்டியுரைக்கின்றனர். ஆனால், இத்தகைய சமயச் சார்பு, பெரும்பாலும் ஆராய்ச்சிகளிலேயே அதிகம் காணப்படுகிறது; அதுவும் பழைய இலக்கியங்கள், அவற்றை மையமிட்ட வரலாறு ஆகியவற்றிலேயே காணப்படுகிறது. (இன்றைய) திறனாய்வில் வேறு பிற சார்நிலைகள் உண்டு.

5.2 செவ்விலக்கியங்களும் திறனாய்வும்

செவ்விலக்கியங்களான சங்க இலக்கியங்கள், திருக்குறள், காப்பியங்கள் ஆகியன திறனாய்வாளர்களுக்கு ஆய்வுக் களமாக ஆனதில் வியப்பில்லை. பல வகைக் கோணங்களில் இவற்றை ஆய்ந்து ரசனைமுறை, சமூக உணர்வு, அறவுணர்வு என்ற பல இலக்கிய அணுகுணர்வுகளை வாசகர்களிடையே உருவாக்கினார்கள்.

5.2.1 திருக்குறளும் திறனாய்வும் இதுபோல் திருக்குறள் பற்றிய ஆராய்ச்சியும் தமிழில் கணிசமாக உண்டு. திருக்குறளைத் தமிழர்தம் வேதமாகக் காண்பது; தமிழர்களின் பெருமிதமாகக் காண்பது; உலக இலக்கியங்களில் தலையாயதாகக் காண்பது; பல சமயங்களுக்கும் பொதுவாகவும், பல சமயங்களின் கருத்துகள் அதில் இருப்பதாகவும் காண்பது; திருக்குறளின் அழகினையும் கட்டமைப்பையும் காண்பது என்று பல கோணங்களில் திருக்குறள் திறனாய்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ் அறிஞர்கள் மட்டுமன்றிப் பல மேலை நாட்டவர்களும் திருக்குறள் பற்றி ஆராய்ந்துள்ளனர்.

5.2.2 சங்க இலக்கியமும் திறனாய்வும் சங்க இலக்கியங்கள் பற்றிய ஆராய்ச்சிகள், தமிழில் கணிசமாகவே உண்டு. இவ்வாராய்ச்சிகளில் தமிழர் பண்பாடு, தமிழ்ப் பெருமித உணர்வு முதலியவை அதிகம் காணப்படுகின்றன. தமிழக வரலாற்றைக் கண்டறியச் சங்க இலக்கிய ஆராய்ச்சி இன்றியமையாதது என்பதை அறிஞர்கள் அறிவர். தொடக்க கால ஆய்வாளர்களும் சரி, பின்னர் வந்த ஆய்வாளர்களும் சரி, இதில் பெரிதும் ஈடுபாடு காட்டியுள்ளனர். முக்கியமாகக் கல்வியாளர்கள் சங்க இலக்கியம் பற்றி நிறையவே எழுதியுள்ளனர்.

5.2.3 காப்பியங்களும் திறனாய்வாளர்களும் தமிழில், பழைய இலக்கியங்களுள், ஆராய்ச்சியாளர்களை அவர்களுள்ளும் முக்கியமாகக் கல்வியாளர்களை அதிகம் கவர்ந்தவை, காப்பியங்களே. அவற்றுள்ளும் கம்பராமாயணமே அதிகமான அறிஞர்களைக் கவர்ந்துள்ளது. திறனாய்வாளர்களையும் ஆய்வாளர்களையும், காப்பியங்கள் ஏன் சிறப்பாகக் கவருகின்றன?

அ) இலக்கிய ரசனை : சொல்நயம், பொருட்சிறப்பு, சந்தம், வருணனை, காதல் முதலிய அம்சங்களில் ஏற்பட்ட ரசனை முக்கிய காரணம். இதிலும் கம்பனைப் பற்றி எழுதுபவர்களிடமும் பேசுபவர்களிடமும் இந்த ரசனை உணர்வு பிரதானமாகக் காணப்படுகிறது. வ.வே.சு. ஐயர், டி.கே.சி. முதலியவர்களிடம் இந்தப் போக்கினைக் காணலாம்.

ஆ) கதைச்சுவை : காப்பியங்கள் கூறும் கதைகளும் கிளைக்கதைகளும் ஏற்கெனவே தமிழர்கள் மத்தியில் நன்றாகப் பரவியிருக்கின்றன. எனவே அவற்றைப் பற்றி எழுதுவதும் பேசுவதும் பலருக்கு வசதியாகவும் எளிதாகவும் இருக்கிறது. முக்கியமாக மேடைச் சொற்பொழிவாளர்களுக்கு, இதன் காரணமாகக் கம்பனையும் இளங்கோவையும் பற்றிப் பேசுவது வசதியாக இருக்கிறது.

இ) காப்பியக் கட்டமைப்பு : சிலப்பதிகாரத்தின் கட்டுக்கோப்பு, பாத்திரப் படைப்பு, அழகியல் இவற்றையொட்டிப் பலர் விளக்கம் தந்துள்ளனர். காப்பியங்களின் பொதுப்பண்புகளையும் வரலாறுகளையும், அவற்றுள் குறிப்பாகக் கம்பராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியவற்றையும் பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் காவிய காலம் விரிவாகவும் முறையாகவும் விளக்கிப் பேசுகிறது. பேராசிரியர், தொ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் குடிமக்கள் காப்பியம், கானல்வரி ஆகிய நூல்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை. மார்க்கபந்து சர்மா, சிலம்பு பற்றிப் பல நூல்களை எழுதியுள்ளார். சிலப்பதிகார ரசனை அவற்றுள் குறிப்பிடத்தகுந்தது.

ஈ) தமிழ் மேம்பாட்டுணர்வு : சிலப்பதிகார ஆராய்ச்சியில் இது, பிரதானமாகக் காணப்படுகிறது. ம.பொ.சிவஞானம், சிலப்பதிகாரத்தைப் புரட்சிக் காப்பியம் என்று வருணிக்கிறார். தமிழ்த் தேசியம், சிலம்பின் மூலமாகக் கட்டமைக்கப்படுகிறது. ம.பொ.சிவஞானம், சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்படுகிறார். பழைய இலக்கியத்தை இன்றைய சூழலுக்கேற்பப் பொருத்திக் காணுகிற முயற்சி பலரால் மேற்கொள்ளப் பட்டுள்ளது. கம்பனுடைய காப்பியத்தை இன்றைய சமுதாயத்தின் தேவைக்கேற்ப விளக்கம் கொடுத்தவர்களில் முக்கியமானவர் ப.ஜீவானந்தம்.

உ) சமூக வரலாறு : காப்பியங்களைக் கொண்டு, தமிழக அரசியல் – சமூக – பண்பாட்டு வரலாறுகளைக் காணுகிற முயற்சியும் பல ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. தொ.மு.சி.ரகுநாதனின் “இளங்கோவடிகள் யார்” எனும் நூல் இத்தகையது.

ஊ) ஒப்பிலக்கியம்/ இலக்கிய ஒப்பீடு : கம்பராமாயணம் இவற்றிற்குரிய முக்கியமான தளமாக இருந்து வந்துள்ளது. வ.வே.சு. ஐயர், ஏ.சி.பால் நாடார், எஸ்.ராமகிருஷ்ணன் முதலியோர் இதிலே முக்கியமானவர்கள். கம்பனை மறுத்தும் எதிர்த்தும் பகுத்தறிவு இயக்கம் சார்ந்தவர்கள் விளக்கம் தந்துள்ளனர். சி.என்.அண்ணாத்துரையின் தீ பரவட்டும், கம்பரசம் ஆகிய நூல்கள் இத்தகையன.

5.3 திறனாய்வு முன்னோடிகள்

இலக்கியத்தை அழகியல் சார்ந்தும் ஆக்கம் சார்ந்தும் தரம் சார்ந்தும் சமூக அக்கறை சார்ந்தும் அணுகும் திறனாய்வுகளில் முத்திரை பதித்தவர்கள் உளர். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் குறித்து இப்பகுதியில் காணலாம்.

5.3.1 டி.கே.சிதம்பரநாத முதலியார் டி.கே.சிதம்பரநாத முதலியார் என்ற டி.கே.சி தமிழில் ரசனை முறைத் திறனாய்வு அல்லது அழகியல் திறனாய்வுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர். 1940-50 ஆகிய காலப் பகுதியில் இயங்கிய இவர், தமிழில் திறனாய்வைக் கிட்டத்தட்ட இயக்கம்போலவே நடத்தியவர். ஆ.முத்துசிவன், சீனிவாசராகவன், ராஜாஜி, கல்கி, வி.ஆர்.எம்.செட்டியார், ல.சண்முகசுந்தரன் முதலிய பலர், இவரோடு சேர்ந்து இலக்கிய ரசனையைப் பகிர்ந்து கொண்டார்கள். தம்முடைய திறனாய்வு முறைக்கு, மேலைநாட்டு இலக்கியக் கொள்கையையோ வேறு எதனையுமோ முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளாத இவர், ரசானுபவத்தையும், தாள லயத்தையும், சொற்சுவையையும் அடியொட்டியே தம்முடைய பார்வையை வகுத்துக் கொண்டார். இதற்கு இவருக்குத் தளமாக இருந்தது, முக்கியமாக, கம்ப ராமாயணமாகும். கம்பன் பெயரால் உள்ள பாடல்களையெல்லாம் கம்பரே படைத்தார் என்பதை இவர் ஒத்துக்கொள்வதில்லை; 1514 பாடல்களை மட்டுமே (தரமான) கம்பனுடைய பாடல்களாக இவர் ஒத்துக் கொள்வார். கம்பர்தரும் ராமாயணம் என்பது இவருடைய நூல். முத்தொள்ளாயிரத்தையும் இவர் பதிப்பித்துள்ளார். இதய ஒலி, அற்புத ரஸம் ஆகியவை இவருடைய நூல்கள். ‘இலக்கியத்தில் உருவமே பிரதானம்’ என்று சொல்கிறார். இவருடைய திறனாய்வு, உரைநடையின் பக்கம் செல்லவில்லை. ரசனைக்கு உரியது கவிதையே என்பது இவருடைய அபிப்பிராயம். இவரைப் பின்பற்றியெழுதிய பேராசிரியர் ஆ.முத்துசிவன், (அசோகவனம், கவிதை), ரசனைத் திறனாய்வுக்கு மேலைநாட்டுத் திறனாய்வு முறையைப் பின்பற்றியிருக்கிறார்.

5.3.2 க.நா.சுப்பிரமணியம் க.நா.சு என்ற க.நா.சுப்பிரமணியமும் டி.கே.சி. போலவே, அழகியல் திறனாய்வாளர்தான். ஆனால் டி.கே.சி. அதனைக் கவிதையில் செய்தார்; பழைய இலக்கியங்களைத் தளமாகக் கொண்டார். ஆனால், க.நா.சுப்பிரமணியம் தம்முடைய ரசனையை உரைநடைப் பக்கம் செலுத்தினார்; தற்கால இலக்கியத்தைத் தளமாகக் கொண்டார். டி.கே.சி. ரசனையில் மட்டும் நின்று கொண்டு இலக்கிய அனுபவத்தை முன்வைத்தார். க.நா.சு., தம்முடைய அழகியல் வழித் திறனாய்வை, இலக்கியங்களின் தரத்தைச் சொல்லுதற்கும், இது சிறந்தது, இது சிறந்தது அல்ல என்று பட்டியல் போடுவதற்கும் பயன்படுத்தினார். இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய பல மொழிகள் அறிந்த இவர், பிறநாட்டு நாவல் சிலவற்றைத் தமிழில் கொண்டு வந்திருக்கிறார். தமிழில் எழுதப்பட்ட பல படைப்புக்கள், எழுதிய பல எழுத்தாளர்கள் பற்றி நிறையவே எழுதியிருக்கிறார். “வேறு எதில் வேண்டுமானாலும் சமரசம் (compromise) பேசலாம்; இலக்கியத்தின் தரத்தில் மட்டும் சமரசம் பேசி முடிவுகட்டக்கூடாது” என்று இவர் சொல்கிறார். இருப்பினும் இவருடைய அளவுகோல்களிலும் தரவரிசையிலும் அவ்வப்போது மாறுதல்கள் செய்துகொள்வார். இவருடைய சக எழுத்தாளர்கள் பலர், இவருடைய அபிப்பிராயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்பவர்கள்தாம் என்றாலும், “இவர், ஒரு இலக்கிய சிபாரிசுக்காரர் மட்டுமே” (சுந்தரராமசாமி) என்றும், “இவருடைய விமரிசனங்கள், எழுத்துலகில் எதிர்ப்புக்களை உண்டாக்கியனவே தவிர, உரிய நியாயமான பலன்களை விளைவிக்கவில்லை” (வல்லிக்கண்ணன்) என்றும் பலருடைய கண்டனத்துக்கு உள்ளானார். திறனாய்வாளர்களில் அதிகம் பேசப்பட்டவர் இவர்.

5.3.3 சி.சு. செல்லப்பா க.நா.சு.போலவே சி.சு.செல்லப்பாவும் படைப்பாளியாகவும், பத்திரிகையாளராகவும் திறனாய்வாளராகவும் இருந்தார். இவரும், உள்ளடக்கத்தைப் புறந்தள்ளிவிட்டு, உருவம், அழகு, தரம் என்பவற்றில் அக்கறை செலுத்தினார். தற்கால இலக்கியத்தில் மட்டுமே அக்கறையும் பயிற்சியும் உடைய இவர், க.நா.சுவும் நவீனத்துவவாதிகளும் போல, தமிழ் மரபு என்பதை மறுப்பவர். தமிழ் மரபு பற்றிப் போதிய அறிவோ பயிற்சியோ இல்லாவிட்டாலும் பழைமைவாதத்தையும், தமக்கு ஒவ்வாதவற்றையும் தமிழ் மரபு என்ற பெயரால் மறுக்கின்ற இவர், தமிழில் புதுக்கவிதையின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநின்றார். எழுத்து எனும் தம்முடைய இலக்கிய இதழ் மூலமாக ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா, ந.சிதம்பர சுப்பிரமணியம் ஆகிய எழுத்தாளர்கள்மேல் தனி ஈடுபாடு கொண்ட இவர் எழுதிய தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது (1972) என்ற நூல், தமிழில் வ.வே.சு அய்யரின் காலத்திலிருந்து சிறுகதைகள் எப்படிப் படிப்படியாக வளர்ச்சி பெற்றன என்று அவற்றின் படைப்பாக்க முறைகளையும் உத்திகளையும் பகுத்துச் சொல்லித் திறனாய்வு செய்கின்றது. தான் ஒரு திறனாய்வாளராக இருந்தது மட்டுமல்லாமல் பல திறனாய்வாளர்களை இவர் வளர்த்துமிருக்கிறார்.

5.3.4 வல்லிக்கண்ணன் வல்லிக்கண்ணன், மணிக்கொடி எழுத்தாளர். இவரும் படைப்பாளியாகவும் திறனாய்வாளராகவும் இருந்தவர். மென்மையான போக்குக் கொண்டவர். தீவிரச் சார்புநிலை கொண்டவரல்லர். ‘புதுக்கவிதை – தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூல் புதுக்கவிதையின் வரலாற்றைச் சொல்வதோடு அதனை விமரிசனம் பண்ணவும் செய்கிறது. தொடர்ந்து மணிக்கொடி என்ற பத்திரிகையின் பங்களிப்புப் பற்றியும் சரஸ்வதி பத்திரிகையின் பங்களிப்புப் பற்றியும் வரலாற்றுரீதியாகத் திறனாய்வு செய்துள்ளார்.

5.3.5 தருமு சிவராமு தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் (little magazines or literary magazines) குழு விரோதங்கள் / தனிப்பட்ட மோதல்கள் பல உண்டு. முக்கியமாக, 1970-80 காலப்பாதையில் இது கவனிக்கத்தக்க ஒரு நிகழ்வாகவும் போக்காகவும் இருந்தது. இதில் தருமு சிவராமு முக்கியமானவர். இவர் தவிர இன்னும் சிலரும் உண்டு.

தருமு சிவராமு, எழுத்து இதழில் தொடர்ந்து எழுதியவர் ; புதுக்கவிதைப் படைப்பாளி ; படிமக்கவிஞர் என்று பேசப்படும் சிறப்புடையவர். திறனாய்வில் சில சார்புகளோடு கண்டிப்பும் வேகமும் கொண்ட இவர் எழுதிய இத்தகைய நூல், விமரிசன ஊழல்கள் என்பது. திறனாய்வில் காணப்படுகின்ற சாதிச்சார்பு நிலை உள்ளிட்ட வெளிப்படையான சில உண்மைகளையும் கருத்துகளையும் இந்நூல் பேசுகிறது.

5.3.6 வெங்கட்சாமிநாதன் தருமு சிவராமு போன்றே வெங்கட் சாமிநாதனும் திறனாய்வில் குழு மோதலில் ஈடுபட்டவர். வெங்கட் சாமிநாதன் படைப்பாளி அல்லர். எழுத்து இதழிலும் இன்னும் வெவ்வேறு இதழ்களிலும் திறனாய்வாளராக மலர்ந்தவர். மார்க்சியம், ்எதார்த்தவியல், சமூகத் தளம் முதலியவற்றையும் வரலாறு,தமிழ்மரபு ஆகியவற்றையும் மறுக்கின்ற இவர், படைப்புலகில் தனி மனித சாதனைகளையும் தரங்களையும் பற்றிப் பேசுகிறார். எழுத்துலகில் காணப்பெறும் அனுமானங்களை மறுக்கின்றார். பாலையும் வாழையும், ஓர் எதிர்ப்புக்குரல் என்பன இவருடைய நூல்கள். படைப்புகளை மட்டுமல்லாமல் தனிமனிதர்கள் என்ற நிலையில் படைப்பாளிகளையும் விமரிசிக்கின்றார் இவர்.

5.3.7 சி. கனகசபாபதி இவர் கல்வியாளர், திறனாய்வாளர். தமிழ்ப் பேராசிரியராக இருந்து, முதன்முதலாகப் புதுக்கவிதையை வரவேற்று எழுதியவர் என்று பாராட்டப்படுகின்ற கனகசபாபதி, முக்கியமாக எழுத்து இதழில் தொடர்ந்து எழுதினார். புதுக்கவிதையின் உருவ அமைப்பு, உருவகம், படிமம் முதலியவை உள்ளிட்ட அதன் உத்திகள், பொதுவான கட்டமைப்பு முதலியவற்றை விரிவாக விளக்குகிறார். புதுக்கவிதை என்ற பெயருக்கேற்ப, அதிலே தற்காலத்துவம் (modernity), நவீனக் கருத்துகள் முதலிய காணப்படுவதாக விளக்குகிறார். இவரிடம் முக்கியமாகவும் வேறு யாரிடம் காணப்படாததாகவும் உள்ள ஒரு அணுகுமுறை – புதுக்கவிதை என்ற யாப்பு மீறிய கவிதையை யாப்புடைய சங்க இலக்கியக் கவிதைகளோடு ஒப்பிடுவதாகும். முக்கியமாக இணைக் குறளாசிரியப்பா என்ற பாவகையை எடுத்துக்காட்டி, அதனோடு புதுக்கவிதைகள் எவ்வாறு நெருக்கம் கொண்டிருக்கின்றன என்று எடுத்துக்காட்டுகிறார். தமிழில் 1960-களின் காலப்பகுதியில் தோன்றிப் படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்த புதுக்கவிதைக்கு மரபுவழி கூறுவதும், கல்வியாளர்கள் மற்றும் பிறர் மத்தியில் புதுக்கவிதைக்கு அங்கீகாரம் தேடுவதும் இவருடைய திறனாய்வின் முக்கியப் பணியாகும். மரபும் புதுமையும் அறிந்த திறனாய்வாளராக அவர் விளங்கினார்.

இதே 60-70-களின் காலப்பகுதியின் திறனாய்வில், புதிய இலக்கியம் பற்றி அக்கறை கொண்ட பிற கல்வியாளர்கள், சாலை இளந்திரையன், தா.வே.வீராசாமி, மா.இராமலிங்கம், இரா.தண்டாயுதம், தி.லீலாவதி முதலியோர். மேலும், இதே காலப்பகுதியில் கல்வியாளர்கள் மத்தியிலிருந்து பல திறனாய்வாளர்கள் மலர்ந்தனர். அவர்களுள் கலாநிதி கைலாசபதி, நா.வானமாமலை, கா.சிவத்தம்பி முதலியோரும் அடங்குவர்.

5.4 பத்திரிகைகளும் திறனாய்வும்

தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே, இதழ்கள் பல தோன்றத் தொடங்கி விட்டன. செய்திகளை முன்னிட்டும், வணிகம், தொழில் முதலிய அமைப்புகளை முன்னிட்டும் சாதி, சமயம் ஆகிய நிலைப்பாடுகளை முன்னிட்டும், இதழ்கள் தோன்றின. மேலும் ஆராய்ச்சி, வரலாறு முதலியவற்றை மையமாகக் கொண்டும் இதழ்கள் வந்தன. ஞானபோதினி, சித்தாந்த தீபிகை, செந்தமிழ்,     தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி Tamilian Antiquary, Tamil Culture முதலிய இதழ்கள் ஆராய்ச்சிகளை மையமிட்டவை. பின்னர் ஆனந்த விகடன், குமுதம் போன்ற இதழ்கள், வணிக நோக்கத்தை மையமிட்டு வந்தன. இலக்கியத்தை ஒரு தீவிர மனப்பான்மையோடு கொண்டுவர அதற்கெனத் தனியே இதழ்கள் தேவைப்பட்டன. 1940-களின் காலப்பகுதியில் வெளிவந்த மணிக்கொடி இதில் முதன்மையிடம் பெறுகிறது. புதுமை, தரமான இலக்கியம் என்ற முறையில் பல எழுத்தாளர்கள் வளர இது இடம் தந்தது. இலக்கியத் திறனாய்வின் வளர்ச்சிக்குரிய நல்ல சூழலையும் இது உருவாக்கியது. அதன்பிறகு கிராம ஊழியன், கலாமோகினி ஆகிய இலக்கிய இதழ்கள் வெளிவந்தன. விமரிசனத்துக்காக என்று     சொல்லி,     சி.சு.செல்லப்பா     என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது எழுத்து. க.நா.சு.வின் இலக்கிய வெளிவட்டம்,     விஜயபாஸ்கரனின்      சரஸ்வதி, எஸ்.ஏ.முருகானந்தத்தின் சாந்தி, ஜீவாவின் தாமரை முதலிய பத்திரிகைகள் படைப்பிலக்கியத்தையும் விமரிசனத்தையும் பல பரிமாணங்கள் உடையனவாய் வளர்த்தன. இவற்றிலிருந்து பல திறனாய்வாளர்கள் உருவாயினர். 1970-களுக்குப் பிறகு ஆராய்ச்சி, கசடதபற, அஃ, பரிமாணம், படிகள், வானம்பாடி, யாத்ரா, மனஓசை, நிகழ், செம்மலர், காலச்சுவடு முதலிய இலக்கிய இதழ்கள் தோன்றின. 1990- களுக்குப் பிறகும் புதிய பல இலக்கிய இதழ்கள் தோன்றியுள்ளன. பொதுவாக இவை, சில தனியாட்களால் அல்லது குழுக்களால்     வணிக-லாப     நோக்கமின்றி நடத்தப்படுவன. அதே சமயம்,இலக்கிய வளர்ச்சியில் ஒரு தீவிர மனப்போக்கையும், நவீனத்துவத்தையும் புதிதாகத் தோன்றிவரும் பெண்ணியம், தலித்தியம் முதலியவற்றையும் இவை முன்னிறுத்துகின்றன. இதன் காரணமாக இலக்கியத் திறனாய்வும், புதிய புதிய கோலங்களையும் முனைப்புகளையும் பெற்று வளர்கின்றது.

5.5 தொகுப்புரை

இன்றைய திறனாய்வு என்பது முக்கியமாக, இன்றைய இலக்கியம் பற்றிப் பேசுவதையே பண்பும் பயனுமாகக் கொண்டிருந்தது. எனினும் பழைய இலக்கியங்களும் திறனாய்வுக்குரிய தளங்களாக இருந்தன. முக்கியமாகக் கல்வியாளர்களின் பலர், மற்றும் டி.கே.சி., வ.வே.சு.ஐயர், போன்றவர்கள் பழைய இலக்கியத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். படைப்பாளிகளில் சிலர், திறனாய்வாளர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் இன்றைய இலக்கியத்தைத் தளமாகக் கொண்டவர்கள். பழைய இலக்கியத்தை உதாசீனப்படுத்துவதும், தமிழ் மரபைப் புறந்தள்ளுவதும் இத்தகையோரில் பலருக்கு வழக்கமாக இருந்துள்ளது. பழைய இலக்கியங்களை ஆராய்கின்ற பலரிடம் சமயச் சார்பு காணப்படுகிறது. பழைய இலக்கியங்களுள் கம்பனும் இளங்கோவும், வள்ளுவனும் அதிகமான கவனத்தைப் பெற்றுள்ளனர்.

இன்றைய திறனாய்வுலகில், 1950-70-களின் காலப்பகுதியில் அதிகமான பங்களிப்புச் செய்தவர்கள் பலர். அவர்களுள் டி.கே.சி., க.நா.சு., சி.சு.செல்லப்பா, வல்லிக்கண்ணன், தருமு சிவராமு, வெங்கட் சாமிநாதன், சி.கனசபாபதி முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களிடம், உருவவியல் சார்ந்த பார்வை அதிகமாகக் காணப்படுகிறது. தரம் பற்றிப் பேசுவதும், தனிமனிதர்கள் நிலையில் கசப்பும் வெறுப்பும் காட்டுவதும் இன்றைய திறனாய்வுலகில் காணப்படுகிற சில போக்குகள். ஆயினும், இன்றைய இலக்கியத்தின் பன்முகப்பட்ட வளர்ச்சிக்கும் சில கூர்மையான போக்குகளுக்கும், திறனாய்வு பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளது. இலக்கிய இதழ்கள் என்ற ஊடகம், பல திறனாய்வாளர்களுக்கு நல்ல களமாக இருந்துவருகிறது என்பது கவனிக்கத்தகுந்தது.

பாடம் - 6

இன்றைய திறனாய்வாளர்கள்-III

6.0 பாட முன்னுரை

தமிழில் இன்றைய திறனாய்வுலகில், திறனாய்வு முறைகளும் பலவாகக்     காணப்படுகின்றன. திறனாய்வாளர்களும் பல நெறியினராகக் காணப்படுகின்றனர். இவர்கள் பல முனைகள் அல்லது பல பின்புலங்களிலிருந்து வந்தவர்கள். படைப்பாளர்கள் மத்தியிலிருந்தும் கல்வியாளர்கள் மத்தியிலிருந்தும் வந்தவர்கள் பெரும்பகுதியினர்.     மற்றும்     இந்த இரண்டுமல்லாத தரப்புக்களிலிருந்தும்     பல திறனாய்வாளர்கள் வந்துள்ளனர். பொதுவாக, தொடக்கத்தில் செல்வக்கேசவராயர், வ.வே.சு. ஐயர் ஆகியோர் காலத்துத் திறனாய்வு, பொதுவான விளக்கத்தையும் புலப்படுத்தல் என்பதையும் சார்ந்திருந்தது . பின்னர், டி.கே.சி., க.நா.சு., ஆகியோர் காலத்துத் திறனாய்வு கூர்மை பெற்று வளர்ந்தது; அழகையும் தரத்தையும் அக்கறையோடு கவனித்த அத்திறனாய்வு, ஒரு தீர்மானிப்புத் தன்மையோடு தன்னைக் காட்டிக்கொண்டது. அதன்பின், 1980-களுக்குப் பின்னர் வந்த திறனாய்வாளர்களிடம் திறனாய்வுக்கென அமைந்த நவீனச் சிந்தனை வழிப்பட்ட கொள்கையும் அக்கொள்கையின் சார்பும் மையமாக அமைந்தன. எனவே, இம்முறையில் பார்த்தால், இவ்வாறு மூன்று வளர்ச்சி நிலைகளை இன்றைய திறனாய்விலே காணக்கூடும்.

6.1 திறனாய்வு நூல்களும் திறனாய்வும்

இன்றைய திறனாய்வு பற்றிப் பேசுகிற நாம், படைப்பிலக்கியங்கள் எவ்வாறு திறனாய்வு செய்யப்படுகின்றன என்பதையே அதிகமாகப் பார்க்கிறோம்; அதிலேயே கவனமும் செலுத்துகிறோம். ஆனால், திறனாய்வு எவ்வாறு செய்யப்படுகிறது- அல்லது செய்யப்படவேண்டும் – அதன் வரையறைகள் மற்றும் அதன் கொள்கைகள் என்ன என்பது பற்றிய நூல்களையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும். ஏனெனில் திறனாய்வு செய்வதற்கு அத்தகைய நூல்களே வழிகாட்டிகளாக இருக்கின்றன. மேலும், திறனாய்வு என்பது சில வரையறைகளுக்குட்பட்ட ஓர் ஒழுங்குமுறை (System) என்பதை இத்தகையவைதாம் உணர்த்துகின்றன. இத்தகைய ஒழுங்குமுறை அல்லது கொள்கை, பழங்காலத்திலேயே இருந்து வந்திருக்கிறது. இதற்குத் தொல்காப்பியம் ஓர் உதாரணம். குறிப்பிட்ட எந்த இலக்கியத்தையும் இது திறனாய்வு செய்யவில்லை; மேலும், திறனாய்வு எவ்வெவ்வாறெல்லாம் செய்யப்பட வேண்டும் என்பது பற்றியும் “நேரடியாக” இது பேசவில்லை. ஆனால், இவற்றிற்கும் ஒரு மேல்நிலையில், இலக்கியம் எவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது, அதன் பண்புகள், பகுதிகள், செயல்கள், செய்திகள் என்ன என்று இலக்கியக் கொள்கை பற்றிப் பேசுகிறது. இது திறனாய்வு பற்றியது அன்று எனினும், இதனைக் கொண்டு, திறனாய்வு செய்தலும், அது பற்றிப் பேசுதலும் சாத்தியமாகின்றன. இது போன்றுதான் அரிஸ்டாட்டிலின் Poetics (கவிதையியல்) என்ற நூலும் அமைந்துள்ளது. எனவே, இலக்கியத்தைத் திறனாய்வு செய்கிற செய்முறை (practice), அத்தகைய திறனாய்வின் பண்புகளைச் சொல்கிற கொள்கை, இவற்றை உட்கொண்டிருக்கிற இலக்கியம் பற்றிய கோட்பாடு என்ற மூன்று நிலைகள் உண்டென நாம் அறிய வேண்டும்.

6.1.1 திறனாய்வு நூல்கள் தமிழில் முதன் முதலாக எழுதப்பட்ட விமரிசனம் (திறனாய்வு) பற்றிய நூல், தொ.மு.சி.ரகுநாதனின் இலக்கிய விமரிசனம். இது. 1948 – இல் எழுதப்பட்டது. கவிதை பற்றிய கருத்தோட்டங்கள், கவிதையை அனுபவிக்கிற-காண்கின்ற பார்வை, இலக்கியத்தின் சமூகத்தனம் ஆகியவை பற்றி இந்நூல் பேசுகிறது. இதன்பின், க.நா.சுப்பிரமணியம் 1951-இல் எழுதியது விமரிசனக்கலை என்ற நூல். இது, ஆங்கிலத் திறனாய்வாளர்களின் வழி நின்று விமரிசனத்தின் பண்புகளை விளக்குகிறது. இந்த இரண்டு நூல்களுமே அவர்கள் படைப்பாளர்களாக இருந்து எழுதிய நூல்களாகும். இதன்பிறகே, 1953-இல் இலக்கியக் கலை என்ற நூல் வெளிவந்தது. எழுதியவர் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன். இதன்பிறகு, இலக்கியத் திறன் என்ற நூல் வெளிவந்தது. எழுதியவர் பேராசிரியர் மு.வரதராசன். இவ்விரண்டு நூல்களுமே, இலக்கியத்தின் பண்புகளைப் பற்றியும், அதன் ஒழுங்குமுறைகள் பற்றியும் பேசுகிற கோட்பாடு சம்பந்தப்பட்ட நூல்களே யன்றித் திறனாய்வு நூல்கள் என்று சொல்வதற்குரியன அல்ல. ஹட்சன் (W.

.

udson), வின்செஸ்டர் (C.T.Winchester) முதலிய ஆங்கில ஆசிரியர்களின் நூல்களைப் பின்பற்றி எழுதப்பட்டவை இவை. ஆனால், இவை தமிழ் இலக்கியங்களிலிருந்து, ஏற்ற எடுத்துக்காட்டுகளைத் தருகின்றன. முக்கியமாக இலக்கியக் கலை எனும் நூல், இலக்கியக் கூறுகளைப் பழைய இலக்கியங்களோடு விளக்கமாகப் பொருத்திக் காட்டுகிறது. பேராசிரியர் தா.ஏ.ஞானமூர்த்தி என்பார் எழுதிய இலக்கியத் திறனாய்வியல் எனும் நூல் இலக்கியத்தின் பல பகுதிகளையும் பண்புகளையும் பேசுகிறது. எனினும் தமிழ் இலக்கியங்களோடு பொருத்திக் காட்டுவதில் அக்கறை காட்டவில்லை. தொடர்ந்து, முக்கியமாக 1970-களுக்குப் பிறகு, திறனாய்வு குறித்துப் பல கட்டுரைகள் வெளிவந்தன. கலாநிதி கைலாசபதியின் இலக்கியமும் திறனாய்வும் (1979), திறனாய்வுப் பிரச்சனைகள் (1980) ஆகிய நூல்கள் திறனாய்வு பற்றியன. தி.சு. நடராசனின் திறனாய்வுக் கலை எனும் நூல் திறனாய்வின் வகைகள், அணுகுமுறைகள், திறனாய்வின் கொள்கைகள் முதலியன பற்றி இன்றைய இலக்கியத்தோடும் பழைய இலக்கியத்தோடும் பொருத்திக் காட்டி விளக்குகிறது. சரியாகச் சொல்லப் போனால், இத்தகைய நூல்கள் தமிழில் மிகவும் குறைவு; இலக்கியங்களை விளக்குகிற கொள்கை சார்ந்த நூல்களே அதிகம்.

6.2 இன்றைய திறனாய்வாளர்கள்

திறனாய்வாளர்களைப் பொதுவாக அவர்தம் நிலைப்பாடுகள், கொள்கைகள், அணுகுமுறைகள் முதலியவற்றின் அடிப்படையில், பகுத்துக் காண்பது திறனாய்வின் சில போக்குகளை அறிய உதவுகின்றது. ஏற்கெனவே அவர்களைப் படைப்பாளர்களின் வழிவந்தோர், கல்வியாளர் வழிவந்தோர், ஏனைய பிற தளங்களிலிருந்து வந்தோர் என்று பகுத்தறிந்து சொன்னோம். மேலும் சில வகையினரைக் காண்போம்.

அ) பொதுவான ஆராய்ச்சியாளர்கள் : பொதுவான ஆராய்ச்சிகள், ஓரே தளத்திலிருந்து செய்யப்படுபவை; பல திறத்தவை ;பல தரத்தவை. இவர்களுள் இலக்கிய ஆராய்ச்சியைப் பொறுத்த அளவில் குறிப்பிடப்பட வேண்டியவர், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறு எழுதிய ஏ.வி.சுப்பிரமணிய ஐயர் ஆவார். இவையன்றி இலக்கியம், வரலாறு, தத்துவம், கலைகள், மொழிநூல் முதலிய பல துறைகளை இணைத்து ஆராய்கின்ற பல்துறை ஆய்வு (Inter disciplinary) முக்கியமானதாகும். இதில் குறிப்பிடத்தக்கவர்கள், பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் மற்றும் மயிலை சீனி. வேங்கடசாமி முதலியோர்.

ஆ) மார்க்சியத் திறனாய்வாளர்கள்: தமிழில் மார்க்சியத் திறனாய்வு மிகவும் செல்வாக்குடையது. மார்க்சியம் அல்லது மார்க்சியம் அல்லாதது என்று இரு நிலைகளாகப் பார்க்கின்ற அளவுக்கு, மார்க்சியத் திறனாய்வு செல்வாக்குடன் விளங்குகிறது. இதில் பலர் குறிப்பிடத் தகுந்தவர்களெனினும், மிக முக்கியமாகக் குறிப்பிடத் தகுந்தவர்கள். தொ.மு.சி.ரகுநாதன், பேராசிரியர் நா.வானமாமலை, கலாநிதி கைலாசபதி மற்றும் கா.சிவத்தம்பி, கோ.கேசவன், எஸ்.தோத்தாத்திரி ஆகியோர் ஆவர்.

இ) குறிப்பிட்ட படைப்புகளை ஆய்வோர் : ஆய்வுப் பொருளாக – தளமாக அமைந்தவர்களில் முதன்மையானவர்கள் இளங்கோவடிகள், திருவள்ளுவர், கம்பர், பாரதியார் ஆகியோர். இந்தத் தளங்களுள்ளும் பாரதி ஆய்வுகள் பல பரிமாணங்களையும் அணுகுமுறைகளையும் பெற்றுள்ளன. முக்கியமாகப் பாரதி மீது தனி அக்கறை செலுத்துகிறவர்கள் மற்றும் பாரதி ஆய்வாளர்கள் என்று கருதத்தக்கவர்கள். இன்றைய படைப்பிலக்கியத்தில் தனியாக – சிறப்பாகக் கவனம் செலுத்துகிறவர்கள் ஆவர். ஜீவா, வ.ரா., கு.ப.ராசகோபாலன், பெ.சு.மணி முதலியோர் பாரதி ஆய்வாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஈ) அழகியல் ஆய்வாளர்கள் : உருவம், உத்தி, அழகு, தரம் முதலியன பற்றித் தனி அக்கறை செலுத்திய – செலுத்துகிற திறனாய்வாளர்களும் தமிழில் பலராக உள்ளனர். இவர்களுள் டி.கே.சி., க.நா.சு. மிக முக்கியமானவர்கள்.

உ) மேலைத் திறனாய்வு முறையில் ஆய்வோர்: அடுத்து, மேலைநாட்டுப் புதிய சொல்லாடல்கள் – சிந்தனை முறைகள் (discourses), புதிய பிரச்சனைகள் முதலியவற்றில் கவனம் செலுத்துகிற போக்கு 1990-களுக்குப் பிறகு, தமிழில் வளர்ந்து வந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்கவர்கள் தமிழவன், எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ், தி.சு.நடராசன், ராஜ்கௌதமன், க.பஞ்சாங்கம், பிரேம்-ரமேஷ் முதலியோர் ஆவர்.

6.3 ஈழத்துத் திறனாய்வாளர்கள்

ஈழத்துத் திறனாய்வாளர்களில் பலர் முற்போக்கு இலக்கியப் பார்வை கொண்டவர்கள். மார்க்சிய அடிப்படையில் அமைந்த திறனாய்வுகளோடு எதிரான போக்கிலமைந்த திறனாய்வுகளும் ஈழத்தில் நிலவுகின்றன. அவை குறித்து இப்பகுதியில் காண்போம்.

6.3.1 கலாநிதி கைலாசபதி இலங்கையைச் சேர்ந்த கைலாசபதி, லண்டன் பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் புறநானூற்றை முக்கியமாகக் கொண்டு Tamil

eroic Poetry என்ற தலைப்பில் ஆய்வு செய்து கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெற்றவர். கல்வியியல் வழிவந்த சிறந்த திறனாய்வாளராகவும், மார்க்சியத் திறனாய்வு முறையில் ஒரு சாதனையாளராகவும், பல திறனாய்வாளர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு முன்மாதிரியாகவும் விளங்கிய கைலாசபதி 1965-68 என்ற காலப்பகுதியில் நூல்களையும் கட்டுரைகளையும் எழுதினார். பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், தமிழ் நாவல் இலக்கியம், சமூக இயலும் இலக்கியமும், திறனாய்வுப் பிரச்சனைகள், ஒப்பியல் இலக்கியம் முதலியவை குறிப்பிடத்தக்கவை. பழைய இலக்கியம் முதல் இன்றைய படைப்பிலக்கியம் வரை ஆராய்ந்துள்ள இவர், அவை பற்றிய சமூக வரலாற்று உள்ளடக்கங்களை ஆழ்ந்து வெளிப்படுத்தினார். சமூகத்தின் வளர்நிலைகளிலுள்ள அவலங்கள் முதலியவற்றை இலக்கியங்கள் எவ்வாறு சித்திரிக்கின்றன என்று காட்டுவதில் அக்கறை கொண்ட இவர், இருப்புக்களும் மாற்றங்களும், காரண- காரியங்களோடு அமைந்திருக்கின்றன என்ற கருதுகோள் கொண்டவர். ஈழத்திலும் தமிழகத்திலும் திறனாய்வாளர்களிடையே அதிகமாகப் பாதிப்பை ஏற்படுத்தியவர் கலாநிதி கைலாசபதி.

6.3.2 கா.சிவத்தம்பி கைலாசபதியோடு சேர்த்து நினைக்கப்படுகிறவர், கா.சிவத்தம்பி. இவரும் கல்வியாளர் ; மார்க்சிய ஆய்வாளர்; இலக்கியங்களின் நீண்ட வரலாற்றை ஆய்வுத்தளமாகக் கொண்டவர். மேலும், நாடகங்களையும் திரைப்படத் துறையையும் தம்முடைய ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டவர். இலக்கிய வரலாறு எழுதும் முறைகளில் அறிவியல் நிலைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இன்று ஏற்பட்டு வரும் நவீனச் சிந்தனை முறைகள் பற்றியும் அவை தமிழ் இலக்கியத்தில் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பது பற்றியும் இவர் விரிவாகப் பேசியுள்ளார்.

6.3.3 பிறர் ஈழத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க இன்னொரு திறனாய்வாளர்கள் எம்.ஏ.நுஃமான். சமூகவியல் ஆய்வில், முன்னர்ச் சொன்ன இருவர் போன்று அக்கறை கொண்ட இவர், இலக்கியத்தில் மொழியியல், நடைச்சிறப்பு, அழகியல் ஆகியவை பற்றிய அக்கறையும் வேண்டும் என வலியுறுத்துகின்றார். எஸ்.பொன்னுத்துரை, சண்முகதாஸ், மௌனகுரு, ந.சுப்பிரமணியம் முதலியோரும் ஈழத்தைச் சேர்ந்த பிற திறனாய்வாளர்கள் ஆவர். ஏ.ஜே.கனகரத்தினா இவர்களுள் நவீனத் திறனாய்வு முறைகள் பற்றித் தீர்க்கமான கருத்துகள் கொண்டவர். மு.தளைய சிங்கம், காந்தியம் – சர்வோதயம் என்ற கருத்து நிலையின் பின்னணியில் இலக்கியத்தையும் பண்பாட்டையும் திறனாய்வு செய்கின்றார். ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி எனும் நூலில் 1956-63 என்ற குறுகிய ஏழாண்டுக் காலப் பகுதியை அளவாகக் கொண்டு, ஈழத்துத் தமிழ் இலக்கியத்தையும் திறனாய்வுப் பிரச்சனைகளையும், அரசியல் பண்பாட்டு – நிகழ்வுகளையும் தெளிவுறத் திறனாய்ந்து சொல்கிறார்.

6.4 மார்க்சியத் திறனாய்வாளர்கள்

முன் பகுதியில் ஈழத்துத் திறனாய்வாளர்களைப் பார்த்தோம். இப்பகுதியில் தமிழ்நாட்டின் சமகால மார்க்சியத் திறனாய்வாளர்கள் சிலரைப் பற்றிப் பார்ப்போம்.

6.4.1 தொ.மு.சி.ரகுநாதன் இலக்கிய ஆராய்ச்சி, இலக்கியத் திறனாய்வு என்ற இரண்டும் நெருக்கமாக உறவுடையவை. பல சமயங்களில் இவை வேறுபாடின்றியும் அமைவதுண்டு. ஆராய்ச்சிக்கும் திறனாய்வுக்கும் இடைப்பட்ட நிலையில், தெ.பொ.மீ., எஸ்.வையாபுரிப்பிள்ளை, கலாநிதி கைலாசபதி, கா.சிவத்தம்பி, ரகுநாதன், கோ.கேசவன் முதலியோரைக் காணலாம். இவர்களுள் தொ.மு.சி.1940-களிலிருந்து தொடங்கி, ஒரு ஐம்பதாண்டுகளுக்குமேல், கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, திறனாய்வு முதலிய பல துறைகளில் ஆழமாக எழுதியவர். மார்க்சிய அறிஞராக விளங்கியவர். இலக்கிய விமரிசனத்திற்கெனத் தனிநூல் எழுதியவர். இலக்கியத்தை வரலாற்றியல் – இயங்கியல் பார்வையில், இலக்கியம் கூறும் செய்திகளும், அவ்வக்காலச் சமுதாயச் சூழமைவுகளும் காரண காரியங்களோடு அமைவன என்று கொண்டு அவர் எழுதினார். பாரதியின் பல கவிதைகளுக்குப் பின்னால் அவருடைய காலத்துச் சமுதாயச் சூழ்நிலைகளும் அவருடைய தனிப்பட்ட சூழ்நிலைகளும் தர்க்கரீதியாகப் பின்னிக்கிடப்பதை, அவருடைய பாரதி- காலமும் கருத்தும் என்ற ஆராய்ச்சி நூல் புலப்படுத்துகிறது.

6.4.2 கோ.கேசவன் தொ.மு.சி.ரகுநாதன் போன்றே, மார்க்சியத் தத்துவம் கூறுகின்ற வரலாற்று இயங்கியல் (

istorical materialism) முறையில் ஆய்வு செய்தவர் கோ.கேசவன். இவர் கல்வியாளர். அதேபோது இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதியவர். சாதி, சமயம், வர்க்கம் முதலியவை பற்றிய ஆழமான கண்ணோட்டம் கொண்ட கேசவன், தமிழ்ச் சமூக வரலாற்றியலை மீட்டுருவாக்கம் செய்வதில் ஆர்வம் கொண்டு எழுதினார். மண்ணும் மனித உறவுகளும், பள்ளு இலக்கியம் – ஒரு சமூகப்பார்வை, இலக்கிய விமர்சனம் – ஒரு மார்க்சியப் பார்வை ஆகிய நூல்களை எழுதிய இவர், கலாநிதி கைலாசபதியின் திறனாய்வு பற்றியும் தனியே எழுதியிருக்கிறார். பள்ளு இலக்கியம் என்பது தாழ்த்தப்பட்ட பள்ளர்களின் பெருமையையும் வாழ்க்கையையும் பற்றிக் கூறுவது என்று சொல்லப்பட்டு வந்தது. அதற்கு மாறாகப் பண்ணையார்கள் மற்றும் உயர் சாதிக்காரர்கள் என்ற நிலையிலிருந்து, பண்ணையடிமைகளைப் பற்றி எழுதப்பட்டதே முக்கூடற்பள்ளு முதலிய பள்ளு இலக்கியங்கள் என்று கோ.கேசவன் விளக்குகிறார்.

6.4.3 நா.வானமாமலை கலாநிதி கைலாசபதி போன்றே, தமிழகத்தில் மிகச் சிறந்த மார்க்சியத் திறனாய்வாளராக விளங்கியவர் பேராசிரியர் நா.வானமாமலை. நெல்லை ஆய்வுக்குழு, ஆராய்ச்சி இதழ் ஆகியவற்றை நிறுவிய இவர், பல இளம் திறனாய்வாளர்களை உருவாக்கி வளர்த்தவர். இலக்கியமன்றியும் நாட்டுப்புறவியலிலும் தனியான அக்கறை கொண்ட இவர், அத்துறையைத் தமிழகத்தில் சிறப்புறும்படி வளர்த்தவர். சமயம், தத்துவம், நாட்டுப்புறவியல், இலக்கியம் முதலிய பல்துறைகளும் இணைந்த பல்துறை ஆராய்ச்சியாளர் இவர். தமிழில் 1960-70களில் புதுக்கவிதை எனும் புதுவகை தோன்றுகிறபோது, அதில் கவனம் செலுத்தினார். சமூக மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் புறம்பாகவுள்ள போக்குகளைப் பிற்போக்கானவை யென்றும், நம்பிக்கைகளையும், சமூக உணர்வுகளையும், மனித நேயங்களையும் கொண்ட போக்குகளை முற்போக்கானவை என்றும் இனங்கண்டறிந்து விமர்சிக்கும் அவருடைய நூல், புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் என்பது. பின்னர், தொடர்ந்து மார்க்சிய அழகியல், உருவம், உள்ளடக்கம் பற்றியும் எழுதினார்.

6.4.4 கோவை ஞானி தற்கால இலக்கியங்களைக் குறிப்பிட்ட சில உருவவியல் மற்றும் சமூகவியல் கொள்கைகளோடு பொருத்தி விரிவாகத் திறனாய்வு செய்தவர்களில் கோவை ஞானி (பழனிச்சாமி), தமிழவன் (கார்லோஸ்), அ.மார்க்ஸ் ஆகியவர்கள் முக்கியமானவர்கள். இம் மூவரும் கல்வியாளர்கள் ; அதேபோது, இலக்கியச் சிற்றிதழ்கள் நடத்தியவர்கள். சிற்றிதழ்கள் சார்ந்த எழுத்தாளர்களிடையே செல்வாக்கு உடையவர்கள்.

கோவை ஞானி 1970-90-களில் நிறைய எழுதினார். இவருக்குக் கலை-இலக்கியப் பிரச்சனைகள் என்பவை உருவம்- உள்ளடக்கம் என்பவற்றையும் தாண்டி, அப்பால், மனிதனின் ஆன்மீகம் பற்றிய பிரச்சனைகளாகத் தோன்றின. “எப்போதும், சூத்திரங்கள் எனக்குப் போதுமானவையல்ல; சூத்திரங்களினூடேயும் அப்பாலும் உண்மைகளைத் தேடிச் செல்வது என் இயல்பு” என்று இவர் சொல்கிறார். சமூக அக்கறையும் உணர்வும் ஒரு பக்கம் இருக்க, வைதிக சமயங்களின் வழிப்பட்ட ஆன்மீக வாதம் சார்ந்த தத்துவத்தேடல் இவருடைய திறனாய்வின் அம்சமாக உள்ளது. மேலைநாட்டுத் தத்துவங்களில் அந்நியமாதல் (alienation) என்பது இவர் அதிக அக்கறை கொண்ட ஒரு கருத்தியல் ஆகும். கலை இலக்கியம் ஒரு தத்துவப் பார்வை, மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் என்ற நூல்கள் இவர் எழுதியவற்றுள் சில.

6.4.5 தமிழவன் தமிழவன், அமைப்பியலைத் (Structuralism) தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தியவர்களில் ஒரு முன்னோடி. இருபதில் கவிதை (1971), படைப்பும் படைப்பாளியும் (1989) ஆகியவை இவர் எழுதியவற்றுள் சில. படைப்பிலக்கியத்தின் பன்முகத் தன்மையை அமைப்பியல்தான் சரியாக விளக்க முடியும் என்று நம்பியவர் இவர். இதனடிப்படையில், திருப்பாவை எனும் இலக்கியத்தை அமைப்பியல் விமர்சனம் செய்து விளக்கினார். புதுக்கவிதைகள், நாவல்கள் மட்டுமல்லாமல் தொல்காப்பியம் முதற்கொண்ட தொன்மை நூல்களிலும், இவர் தன் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார். படைப்பிலக்கியம் போன்று, திறனாய்வுக்கும் முதன்மையான இடம் உண்டு என்ற கொள்கையுடையவர்.

6.4.6 அ.மார்க்ஸ் தமிழவன் அமைப்பியல்வாதி என்றால், அ.மார்க்ஸ் பின்னை அமைப்பியல்வாதி (post-structuralism) ஆவார். மேலும், பின்னை நவீனத்துவத்திலும் (post-modernism) ஈடுபாடுடையவர் இவர். அழகும் செய்தியும் வெளியே இல்லை; பனுவலுக்குள்ளேயே (Literary text) இருக்கிறது என்று அமைப்பியல் பேசுகிறது, ஒருமுறை வாசித்தவுடன், கிடைக்கிற பொருள், அதன் பொருள் அல்ல ; மீண்டும் மீண்டும் வாசிக்கும்போது, பொருள்களின் பல உண்மைகள் புலப்படுகின்றன என்றும், அந்தப் பனுவல் பல வாசிப்புத் தளங்களைக் கொண்டது என்றும், அந்த வாசிப்புத் தளங்கள் இன்னொரு இணைபனுவலைக் (parallel text) கட்டமைக்கின்றன என்றும், பனுவலின் உண்மை அது கட்டவிழ்க்கப்படுகிற போது வெளிப்படுகிறது என்றும் பின்னை அமைப்பியல் கூறுகின்றது. பனுவலில் அதிகார அரசியல் (politics of power) செயல்படுகிறது என்றும் கூறுகிறது. அ.மார்க்ஸ் இந்த அடிப்படையில் கவிதைகள், நாவல்கள், பல்வேறு பண்பாட்டு- வரலாற்று ஆவணங்கள் முதலியவற்றை ஆராய்கிறார். பெண் விடுதலை, தலித் விடுதலை என்பவற்றிற்கான மூலாதாரங்களில் அக்கறை கொண்ட இவர், படைப்பாளி – வாழ்க்கை – இலக்கியம், மார்க்சிய இலக்கியக் கொள்கை, தலித் அரசியல் – அறிக்கையும் விவாதமும் முதலிய பல நூல்களையும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இலக்கியம், பெண்ணியம், தலித்தியம், பெரியாரியம், மனிதவுரிமை முதலிய பல தளங்களிலே எழுதியும் இயங்கியும் வருகிற அ.மார்க்ஸ், தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் அதிகமான தளங்களில் இயங்கி வருகிற திறனாய்வாளர் என்று சொல்லத்தக்கவர்.

6.4.7 பிறர் நா.வானமாமலையைத் தொடர்ந்து வந்தவர், எஸ்.தோத்தாத்ரி. இவர் கல்வியாளர். தமிழ் நாவல்கள் பற்றிச் சமூகவியல் அடிப்படையில் நூல்களும் கட்டுரைகளும் எழுதினார். மார்க்சிய மெய்ஞ்ஞானம், மார்க்சிய அழகியல், சோசலிச யதார்த்தவாதம் ஆகியவற்றை விளக்குவதில் இவருடைய திறனாய்வு கவனம் செலுத்துகிறது. இவர்களைத் தொடர்ந்து வெ.கிருட்டிணமூர்த்தி, இலக்கியத் திறனாய்வின் மூலம் தமிழ்ப் பண்பாட்டை விளக்குவதில் ஆர்வம் காட்டினார். ஆய்வு வட்டம் என்ற அமைப்பு வழித் தொடர்ந்து கட்டுரைத் தொடர் – தொகுப்பு முயற்சியை இவர் மேற்கொண்டிருந்தார்.

தொடர்ந்து, இன்றுவரை பல திறனாய்வாளர்கள் படைப்பிலக்கியத்தின் பல்வேறு தளங்களையும் பரிமாணங்களையும் புலப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இளம்படைப்பாளிகள் பலர், திறனாய்விலும் ஆர்வம் செலுத்தி வருவது பாராட்டுக்குரியதாகவுள்ளது.

6.5 தொகுப்புரை

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து அதன் இறுதிக்காலம் வரையுள்ள ஒரு நூற்றாண்டுக் காலத்தில் தமிழ்த் திறனாய்வு பெருமைப்படும்படியாக வளர்ந்துள்ளது. தொடக்கத்தில், பொருள் விளக்கம் கூறுதல், நயம் சொல்லுதல் என்ற நிலையிருந்தது. அதன்பிறகு, இடையில் நவீனத்துவத்தின் வரவினால், புதியதைப் பாராட்டுதல் என்ற முறையில் திறனாய்வு, கூர்மை பெற்று வளர்ந்தது. அதன்பிறகு நவீனச் சிந்தனை முறை, கொள்கைகள் முதலியன கொண்டு இலக்கியத்தை மேலும் ஆழமாகக் காண்பது வளர்ச்சி பெற்றது.

தமிழில் திறனாய்வும், ஆராய்ச்சியும் நெருக்கமாகக் காணப்படுகின்றன. அத்தகைய முறையில் சிலர் இலக்கியத்தைத் திறனாய்ந்துள்ளனர். மேலும், இலக்கியத்தை, தத்துவம், நாட்டுப்புறவியல், வரலாறு, மொழியியல் உள்ளிட்ட பல துறைகளை இணைத்துப் பல்துறை ஆய்வாக ஆராய்கிற முறையும் தமிழ்த் திறனாய்வு உலகில் காணப்படுகிறது. அடுத்து, அமைப்பியல், பின்னை அமைப்பியல், பின்னை நவீனத்துவம் முதலிய அண்மைக் காலத்துக் கொள்கைகள் / சிந்தனை முறைகள் ஆகியவற்றின் பின்னணியில் இலக்கியப் பனுவல்களையும், பிற ஆவணங்களையும் ஆராய்ந்து கூறுகிற போக்கு, இன்று பல திறனாய்வாளர்களிடையே காணப்படுகிறது. இப்போக்குத் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இலக்கியப் பனுவல்களுக்குப் புதிய புதிய விளக்கங்கள் தருவதும், இன்றைய சூழலின் சமூக – அரசியல் – பண்பாட்டுச் சூழமைவுகளுக்கும் தேவைகளுக்கும் பொருந்துமாறு திறனாய்வு முறைகளை வகுத்துக் கொள்வதும் இன்றைய திறனாய்வாளர்களிடையே காணப்படுகிற முக்கியமான போக்குகளாகும். இன்று படைப்பாளர்கள் பலர், கல்வியாளர்களாகவும் இருக்கிறார்கள். இத்தகையோரில் பலர், திறனாய்வாளர்களாகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது வரவேற்கத்தக்க ஒருநிலை ஆகும்.