புதிய பரிமாணங்கள்
பாடம் - 1
அமைப்பியலும் பின்னை அமைப்பியலும்
1.0 முன்னுரை
இலக்கியத் திறனாய்வின் முக்கியமான செயல்நிலைப் பண்புகளில் ஒன்று – அது இலக்கியத்துக்குள்ளிருந்து மட்டும் முகிழ்ப்பதல்ல; தத்துவம், சமுதாயவியல் முதலியவற்றிலுள்ள கருத்தியல்/கொள்கைத் தளங்களிலிருந்தும் அது முகிழ்க்கின்றது என்பதாகும். காட்டாக, சார்பியல், (Relativity) மற்றும் பரிணாமவியல் (theory of evolution) ஆகியவை அறிவியல் கொள்கைகளை. வழிமுறையாக்கிக் கொண்டும் திறனாய்வு முகிழ்க்கின்றது. மொழியியல் என்பது, அடிப்படையில் மொழிசார்ந்த ஒரு கொள்கை; ஆனால் இலக்கியத் திறனாய்வுக்கும் அது ஓர் அடிப்படையாக அமைகின்றது. அதுபோலவே அமைப்பியல் என்பது, நாட்டுப்புறவியல், மொழியியல், சமுதாயவியல் முதலிய தளங்களை மையமாகக் கொண்டது; ஆனால் அதேபோது இலக்கியத் திறனாய்வுக்கு அது மிக முக்கியமான முறையியலைத் (methodology) தந்திருக்கிறது.
இலக்கியத்திறனாய்வுத் துறையில், அமைப்பியல் (structuralism), செல்வாக்கு வாய்ந்த ஒரு திறனாய்வு அணுகுமுறையாக விளங்குகிறது. பல திறனாய்வாளர்கள் இந்த அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளனர். முக்கியமாக, கதை, கதை தழுவிய பாடல், காப்பியம், நாவல் முதலியவற்றிற்கு அமைப்பியல் சிறந்த ஒளிகாட்டுகின்றது. ஆனாலும் சிந்தனை உலகில், ஒன்று மட்டுமே நின்று கோலோச்சுவதில்லை. காலங்கள் மாறுகிறபோது சிந்தனை முறையும் மாறுகிறது.அதுபோல், திறனாய்வு முறைகளும் மாறுகின்றன.அமைப்பியல் செல்வாக்குடன் திகழ்ந்தாலும், அதுவும் பழையதாகிவிட, இதன் வளர்ச்சியாகவும், அதிலிருந்து மாறுபட்டதாகவும் முரண்பட்டதாகவும் வேறு பல முறையியல்கள் தோன்றிவிடுகின்றன. பின்னை அமைப்பியல் (post- structuralism) என்பது, இவ்வாறு அமைப்பியலின் அடுத்த கட்டமாக, அமைப்பியல் போதாது என்ற நிலையில், அதனை மறுத்து எழுகின்றது. இரண்டையும் அறிந்து கொள்ளுவதன் மூலமாக, இலக்கியத் திறனாய்வின் சிறப்பான இரண்டு அணுகுமுறைகளை நாம் அறிந்து கொள்கிறோம்.
1.1 அமைப்பியல் : வரலாறு
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ருசிய உருவவியல் (Russian Formalism) மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்தது. செக்கோஸ்லோவாகியா நாட்டில் அது வளர்ந்து பல புதிய கோணங்களையும் முனைப்புகளையும் பெற்றது. மொழியியல் அறிஞர்களின் ஆராய்ச்சி, உருவவியலுக்குப் புதிய கண்ணோட்டங்களைத் தந்தது. 1930 – களுக்குப் பிறகு, ருசிய உருவவியல், செக் நாட்டின் மொழியியல், ஜெர்மானிய தத்துவங்கள், பிரான்சு நாட்டின் நவீனத்துவ சிந்தனைப் போக்குகள் முதலியவற்றின் பின்னணியில், அமைப்பியல் தோன்றியது. ருசியாவின் முக்கோரவ்ஸ்கி (Jan Mukorovski), ஸ்வீடன் நாட்டு மொழியியலாளர் டிசாசூர் (Ferdinand De saussure),ருசிய நாட்டுப்புறவியல் அறிஞர் விலாதிமிர் பிராப் (Vladimir Propp), பிரான்சு நாட்டின் நாட்டுப் புறவியல் அறிஞர் லெவ் ஸ்ட்ரோஸ் (Levi Strauss), மற்றும் அந்நாட்டின் தோதொரொவ் (Todorov), முதலியவர்கள் அமைப்பியலுக்கு வித்திட்டதோடு அதனை நன்கு வளர்த்தார்கள்.
பிரான்சு நாட்டில் அமைப்பியல், மிகவும் சிறப்பாக வளர்ச்சிபெற்றது. முக்கியமாக, நாட்டுப்புறவியலையும், மொழியியலையும் இலக்கியத்தையும் விளக்கிட அது பெரிதும் துணை செய்தது. பிறகு அது அமெரிக்காவுக்கு ‘ஏற்றுமதி’ யானது. அங்கு அது, பிற யாவற்றிலும் தனித்து நின்று செல்வாக்கு மிகுந்த துறையாகி விளங்கத் தொடங்கியது. முக்கியமாக இலக்கியத் திறனாய்வில் அது தனிச் சிறப்புப் பெற்று விளங்கியது.தொடர்ந்து சமுதாயவியல் மற்றும் தத்துவம் முதலிய துறைகளிலும் அது சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டது.
1.1.1 அமைப்பியலின் விளக்கம்
அமைப்பு (structure) என்பது ஒரு கலைச்சொல் (technical term). அது, தூலமான கட்டுமானத்தைக் குறிப்பிடுகிறது. ஒரு பொருளில் பல உறுப்புக்கள் இருக்கின்றன. ஆனால் இவை பிரிக்க முடியாதவை; ஒன்று மற்றொன்றை மாற்றி வளர்ப்பதாக உள்ள இந்த உறுப்புக்கள், ‘முழுமை’ யொன்றில் உயிர்ப்புடன் ஒன்றிணைந்திருக்கின்றன என்று அமைப்புப் பற்றி அமைப்பியல் விளக்கம் தருகிறது. இத்தகைய அமைப்பு, ஒரு செய்தியை அல்லது ஒரு பொருளை உணர்த்துகிறது. ‘அழகே செய்தி (Beauty is Information), அமைப்பே அழகு, அமைப்பே செய்தி என்று அமைப்பு என்பதனை ஆழமானதொரு கருத்தியலாக அமைப்பியல் கொண்டிருக்கிறது. அந்த அமைப்பினுடைய அழகையும் அது தரும் செய்தியின் உண்மைகளையும் அமைப்பியல் ஆராய்கின்றது. அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதனால், அந்த அமைப்பினைப் படைப்பு (work) எனக் கொள்ளாமல் பனுவல் (text) என அது கொள்கிறது. பனுவலுக்குள்ளேயே, ஒரு கலை வடிவத்தின் அல்லது இலக்கியத்தின் அழகும் பொருளும் எல்லாமும் இருக்கின்றன-வெளியே அல்ல என்று அமைப்பியல் கூறுகிறது. படைப்பாளி மற்றும் படைப்பு என்பதற்குள்ள முக்கியத்துவத்தை வாசகன் (reader) பக்கமாக நகர்த்துவது, அமைப்பியலின் முக்கியமான பண்பாகும். பனுவல் என்பது இயங்குதல் தன்மை கொண்ட பல பகுதிகள் கொண்டது; அந்தப்பகுதிகள், ஒரு முழுமையின் பகுதிகளேயன்றித் தனிமையானவை அல்ல என்றும், அத்தகைய பகுதிகளை வாசகன் எவ்வாறு புரிந்துகொள்கிறான்; வாசகனுடைய புரிதல் தன்மைகள், பனுவலின் விசேடத்தன்மைகளை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன- என்றும், அமைப்பியல் விளக்குகிறது.
1.1.2 அமைப்பியல் அடிப்படைகள்
அமைப்பு என்பதற்குரிய விளக்கத்தை அமைப்பியல் எவ்வாறு காணுகிறது எனக் கண்டோம். இது அமைப்பியலின் அடிப்படை விதி. இவ்வாறு ஒரு பகுதியை, ஓர் உறுப்பை ஆராய்கின்ற போது, அந்த அந்த ஒழுங்கிணைவுக்குள்ள அதன் உறவோடு ஆராயவேண்டும். உதாரணமாக, லெவ் ஸ்ட்ரோஸ், மானிடவியலில் (Anthropology) இனக்குழுக்கள் பற்றி ஆராய்கிறபோது உறவு முறைகள் பற்றி (kinship) விளக்குவார். அந்த அடிப்படையைப் பின்பற்றித் தமிழ் மரபில் உள்ள உறவுமுறைகளைப் பார்க்கவும், தமிழில் ‘மாமா’ என்பது தாய்வழியே வரும் ஓர் உறவு; சித்தப்பா / பெரியப்பா என்பது தந்தை வழி வரும் உறவு; இந்த உறவுகள் திருமண உறவுகள் முதலியன வரை நீள்வன. இவற்றைத் தமிழ்க் குடும்ப அமைப்புக்குள் மட்டுமே விளக்க முடியும். ஆங்கில மரபில் இரண்டற்குமே ‘uncle’ என்ற சொல்தான் உண்டு. தமிழகக் குடும்ப அமைப்பை விளக்குவதற்கு உரியது அல்ல, இது. அது போன்று தமிழில் குடும்ப உறவுகளைக் காட்டப் பல சொற்கள் உண்டு. அவற்றுள் சில: அப்பச்சி, அம்மாச்சி, ஆத்தா, அப்பத்தா ஐயா, அம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, சின்னம்மா, அக்கா தங்கை, அண்ணன், தம்பி, அத்தான், மச்சான், மாப்பிள்ளை, மருமான், மாமா, அம்மான் , மாமனார், அத்தை , மாமியார், அண்ணி, கொழுந்தன், கொழுந்தி, மச்சினிச்சி, கணவன், மனைவி, இல்லாள், அகமுடையான், அத்திம்பேர்….. இப்படிப் பல சொற்கள் உண்டு. சொற்களின் வளம் (vocabulary) தமிழ்ச்சமூகத்தில் குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் காட்டும், மேலும், இந்தச் சொற்கோவையில் மணவுறவு, சாதி, ஆணாதிக்கத்தன்மை எல்லாவற்றையும் பார்க்கலாம். (உதாரணம்: கணவன், அகமுடையான் ஆகிய ஆண்பாற்களுக்கு இணையாகப் பெண்பால் காட்டுகிற “ள்”- என்ற எழுத்தில் முடிகிற பெண்பால் சொற்கள் இல்லை; அதுபோல் ‘இல்லாள்’ என்பதற்கு இணையாக ‘ன்’- இல் முடிகிற ஆண்பாற் சொற்கள் இல்லை). இவையெல்லாம் ‘குடும்பம்’ என்ற முழுமை அல்லது அமைப்புக்குட்பட்ட உறவுகள் அல்லது உறுப்புக்கள் பற்றிய ஆராய்ச்சியினால் வெளிப்படுகின்றன. இது, அமைப்பியலின் ஓர் அடிப்படையாகும். மேலும், கதைப் பின்னல், இருநிலை எதிர்வு என்பன அமைப்பியலின் சிறப்பான அம்சங்களாகும். அவற்றைப் பார்க்கலாம்:
1.2 இருநிலை எதிர்வு
ஒரு கதை அல்லது நிகழ்ச்சிவருணனையில் (narrative) நிகழ்வுகள், நீள்வரிசை முறையில் அமைந்திருக்கின்றன என்று அமைப்பியலுக்கு முன்னரக் கருதப்பட்டு வந்தது. நிகழ்வுகள் அல்லது செய்திகளின் பண்பு, இதன் மூலமாகப் புறக்கணிக்கப்படுகின்றது: வரிசை முறை மட்டுமே சொல்லப்படுகிறது. ஆனால் அமைப்பியலை விளக்கும் லெவ் ஸ்ட்ரோஸ், நிகழ்வுகளின் பண்புகளை எடுத்துக்கொண்டு, அந்தப் பண்புகள் காரணமாகவே, அந்த அமைப்புக் கட்டப்பட்டிருக்கிறது என்று விளக்குகிறார். படம், பாடம்; படம், பழம்; பழம், பணம் – இப்படி இணைகளை எடுத்துக்கொள்வோம். இவை வேறு வேறு பொருளை உணர்த்துவன. இந்த வேறுபாடுகள் எதனால் வெளிப்படுகின்றன? படம் – பாடம்- இரண்டுக்கும் இடையில் உள்ளது – ‘ப’ என்பது குறில், ‘பா’ என்பது நெடில். என்ற வேறுபாடு. குறில்/ நெடில் என்ற இத்தகைய சிறிய வேறுபாட்டினால் பொருளே வேறுபடுகிறது. இரு சொற்கள் முரண்பட்டு எதிர் எதிராக வழங்குகின்றன. இதனையே அவர் இருநிலை எதிர்வு (binary opposition) என்கிறார். தொல் மானிடவியல் அடிப்படையில் பண்பு x பண்பாடு (nature x culture) என்ற ஒரு இருநிலை எதிர்வை அவர் விளக்குகிறார். பண்பு என்பது இயற்கையானது; ஏற்கெனவே இருப்பது. பண்பாடு என்பது ஆக்கிக் கொள்வது; பண்படுத்தப்படுவது. இரண்டும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவை யென்றாலும் முரண்பட்டவை. இதனை, பதனப்படாதது x பதனப்பட்டது- (raw x cooked) என்ற எதிர்வாகக் கொள்ளலாம். இத்தகைய பண்பு, அமைப்பு முழுக்க விரவிக்கிடப்பதாகவும், அதன் இயக்கம் இத்தகைய ஆற்றலினால் அமைந்துள்ளது என்றும் அமைப்பியல் காட்டுகிறது. நல்லவன் x கெட்டவன்; வலியவன் x மெலியன்; ஆண் x பெண்; கதாநாயகன் x வில்லன் என்று இந்தப்பண்புகளின் நீட்சியைக் கூறிச்செல்லலாம். கதை கூறும் உத்தியில் இந்தப் பண்புகளை அறிந்துகொள்ளவேண்டும்
1.3 கதைப் பின்னல்
கதை அல்லது கதைப் பண்பு கொண்ட நிகழ்ச்சிவருணனை (narrative)யில், கதைக்குரிய பண்பு, அதாவது ஒன்றற்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள், கதைத்தன்மையுடையனவாக எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்று விளக்குகின்றபோது, அது, கதைப்பின்னல் (plot) என்பதனால் ஆனது என்று அமைப்பியல் கூறுகிறது. கதைப்பின்னல் என்பது, கதையமைப்பைத் தீர்மானிக்கிற ஒரு சக்தியாகும். இது, சிறு சிறு நிகழ்ச்சிகளின் கூட்டு வடிவமாகத் தோன்றினாலும், தன்னளவில் இது முழுமையானது, தன்னளவில் கட்டுக்கோப்பானது. பாடுபொருள் அல்லது கரு (theme) என்று சொல்லப்படுவதை விளக்குவதாகவும் அதனை ஒரு தூலப்பொருளாக ஆக்குவதாகவும் கதைப்பின்னல் அமைகின்றது. “உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்” என்பது சிலப்பதிகாரத்தின் பாடுபொருள் எனக் கொண்டால், அதனை அவ்வாறு கொண்டுவருவதற்குக் காரணமாகவும், அதனை விளக்குகிறதாகவும் அமைவது கதைப்பின்னலாகும், கண்ணகி, தெய்வமாகிறாள், கவுந்தியடிகள் எனும் சமணத்துறவி முதல் பலரும் அவளைப் பாராட்டுகின்றனர்; சேரன் செங்குட்டுவன், இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து பத்தினிக் கோட்டம் சமைக்கிறான்.- இது கதைப்பின்னல் ஆகும். கதைப்பின்னலின் சிறப்பு என்பது, கதையை வாசிக்கிற வாசகன், கதைப்பின்னலின் போக்கோடு இயைந்து சென்று, அதன் முழுமையை அறிந்துகொள்வதில் இருக்கிறது. இத்தகைய சிறப்புடன் கதைப்பின்னல் இல்லையென்றால், சிறுகதையோ, நாவலோ, காவியமோ சிறப்படையாது.
1.4 பின்னை அமைப்பியல் : அறிமுகம்
அமைப்பியலின் வளர்ச்சியாக எழுந்தது – பின்னை அமைப்பியல் (post structuralism) ஆகும். வளர்ச்சி என்றால், முந்தையது போதாது என்ற நிலையில் தோன்றியதேயாகும். போதாது எனும்போது, பழையதிலிருந்து மாறுபடவும், பழையவற்றுள் பலவற்றை மறுப்பதாகவும் அமைவது. எனவே, பின்னை அமைப்பியல் என்பது, அமைப்பியலுக்குப் பின்னர்த்தோன்றியது என்று கூறுவதை விட, அமைப்பியலை மறுதலிப்பதாக அது எழுந்தது என்றே கொள்ள வேண்டும். இது பிரான்சில் தோன்றியது. நவீனத்துவம் என்ற போக்கு மேலோங்கியிருந்த ஒரு சூழலில், பல துறைகள் பற்றிப் பல விவாதங்கள் தோன்றின. அந்தச்சூழலில் தோன்றியதுதான் பின்னை அமைப்பியல் எனும் சிந்தனைமுறை / இலக்கியத்திறனாய்வு முறை ஆகும். இதன் எழுச்சிக்கு முக்கியமாக வித்திட்டவர் ரோலந் பார்த் (Roland Barthes) என்பவர். இதனை வழிநடத்தி முன்கொண்டு சென்றவர் டெர்ரிடா (Jacques Derrida) என்பவர் ஆவார். தொடர்ந்து, மிக்கேல் ஃபூக்கோ (Michael Foucault) எனும் சமுதாயவியல் அறிஞரும் லக்கான் (Jacques Lacan) எனும் உளவியல் பகுப்பாய்வாளரும், ஜூலியா கிறிஸ்தோவா (Julia Kristeva) எனும் பெண்ணியலாளரும் மற்றும் காயத்ரி ஸ்பைவக், பால் டிவேர் முதலியோரும் பின்னை அமைப்பியலுக்கு முக்கியமான பங்களிப்புகளையும், பரிமாணங்களையும் தந்துள்ளார்கள். இது, செல்வாக்கு மிகுந்த ஒன்று என்பது மட்டுமல்லாமல், பின்னர் வந்த கொள்கைகளில் இது பெருந்தாக்கம் ஏற்படுத்தியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1.4.1 பின்னை அமைப்பியல் : அடிப்படைகள்
அமைப்பியல் பனுவல், வாசகன் ஆகியவற்றை முதன்மைப் படுத்தியது.அதற்குமுன்பு, படைப்பு-படைப்பாளிக்குத் திறனாய்வில் முக்கியத்துவம் தரப்பட்டது. படைப்பிலிருந்து நகர்ந்து அதன் முக்கியத்துவம் பனுவல் எனும் கட்டுக்கோப்பான அமைப்பை நோக்கி நகர்கிறபோது, பின்னை அமைப்பியல் தோன்றுகிறது என்று போலந் பார்த் என்ற பிரபல ஃபிரஞ்சுத் திறனாய்வாளர் கூறுவார். அது போல், இலக்கியம் என்பது, வரையறைகளுக்குட்பட்ட பொருள்களைக் கொண்டது என்றும், அது தன்னுள் முடிவு பெற்ற – அதாவது, வேறு எதனையும் வேண்டிப் பெறாத – ஓர் அமைப்பு என்றும் முன்னர்க் கருதப்பட்டது. இதனைப் பின்னை அமைப்பியல் மறுக்கிறது; பன்முகமான தளங்களை நோக்கிப் பனுவலின் விளக்கம் நகர்கிறது என்று அது விளக்குகிறது.
இலக்கியம் என்பது எழுதப்பட்ட ஒரு பனுவல். அது இயங்குதல் தன்மை பெற்றது, உயிர்ப்புக் கொண்டது. அதனை ஒரு வாசகன் வாசிக்கிறான்;ஒரு பொருள் கொள்கிறான்; சில நாள் கழித்து மீண்டும் வாசிக்கிறான்; வேறொரு பொருள் விளக்கம் கொள்கிறான். அதுபோல் ஒரு வாசகன் குறிப்பிட்ட ஒரு விதத்தில் பொருள் கொள்கிறான் என்றால், இன்னொரு வாசகன், அவனுடைய பயிற்சி, புரிதல் திறன், சூழல் முதலியவற்றின் காரணமாக இன்னொரு பொருள் கொள்கிறான். இப்படியே ஒரு வாசிப்பு. மீண்டும் ஒரு வாசிப்பு. அதன் காரணமாக, அந்த வாசகன் கொள்ளும் ஒரு பனுவல்… இன்னொரு பனுவல்… என்று ஒரு பன்முகத்தன்மை (multiple reading, plural text) ஏற்படுகிறது. பின்னை அமைப்பியலின் அடிப்படையான கருத்தியல், இந்தப் பன்முக வாசிப்பு ஆகும்.
1.5 மொழியும் பனுவலும்
மொழி, அற்புதமான ஆற்றல் படைத்தது. அமைப்பியல், மொழியின் ஆற்றலை அதன் அமைப்புக்குள்ளிருந்து (மட்டும்) பார்க்கிறது. மொழிக்கூறுகள், தமக்குள் தாம் உறவுபட்டுக் கிடக்கிற முறையில் எவ்வாறு அவை பொருள் கொண்டிருக்கின்றன என்பதனை அது ஆராய்கின்றது. இதற்கும் மாறாக, மொழியின் ஆற்றலை, அதனுடைய அமைப்பிலிருந்து மீறியதாகப் பின்னை அமைப்பியல் பார்க்கிறது. மொழியின் கூறுகள் – அதாவது, சொற்கள் முதலியவை – பொருள்களோடு கொண்டிருக்கிற உறவுகளில் எப்போதும் கட்டுப்பாடும், நிரந்தரத் தன்மையும் கிடையாது. உறவுகளின் இந்த நெகிழ்வுத்தன்மை பின்னை அமைப்பியலுக்குக் களம் சமைக்கின்றது. இந்த உறவுகளிலுள்ள ‘மாய்ம்மை’யை (mystery), மொழியியல் அறிஞர் டி சாசூர் விளக்கியிருக்கின்றார். சொல்லப்படுகின்ற அல்லது எழுதப்படுகின்ற மொழிவடிவத்தின் எல்லைக்குள் மட்டுமே நின்றுகொண்டு ‘பொருளை’ இன்னது என்று வரையறுத்துவிட முடியாது என்கிறார் அவர். பொருட்குறி (signified) என்பது, தூலமாக அல்லது இறுக்கமாக இருப்பதல்ல; ஒரு குறிப்பானுக்குள் (signifier) அது சிதறிக்கிடக்கிறது, அதாவது சொல்லுக்குள்ளோ தொடருக்குள்ளோ அது சிதறிக் கிடக்கிறது. தொடர்ந்து ஒரு தொடரையோ, முழுவாக்கியத்தையோ ஒரு பனுவலையோ வாசிக்கிறபோது, சிதறிக் கிடப்பனவாகத் தோன்றிய பொருள்கள் அல்லது காட்சித் துண்டங்கள், ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு தொடர்ச்சியாக ஆகின்றன. மேலும் இன்னொரு வாக்கியத்தோடு அதனைச் சேர்த்து வாசிக்கிறபோது, அந்தத் தொடர்ச்சி விசாலமாகிறது. மொழியின் இத்தகைய பண்பு, பனுவலுக்கும் அதனை வாசிக்கிற வாசகனுக்கும் விரிந்த தளங்களைத் திறந்துவைக்கிறது; வாசகனைப் பல வழிகளுக்கு அது இட்டுச் செல்கிறது.
இத்தகைய ஆற்றலினால்தான், பன்முக வாசிப்புக்களும், பன்முகமான விமரிசனங்களும் சாத்தியப்படுகின்றன. பாரதியார்க்கு எத்தனை வகையான விமரிசனங்கள்-யோசித்துப் பாருங்கள். அவர் எழுதியவை என்னவோ கொஞ்சம்தான்; ஆனால், சிலர் அவற்றை வேதாந்த தத்துவமாக உரை கூறுகின்றனர்; சிலர், சமுதாய உணர்வுடையனவாகவும் சமுதாய மாற்றத்தை முன்மொழிவனவாகவும் எடுத்துரைக்கின்றனர்; சிலர், தேசிய எழுச்சியூட்டுவனவாகப் பொருள் விளக்கம் தருகின்றனர், சிலர் அவற்றில் பிரச்சார நெடி இருக்கிறதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். அவரவரின் வேறுபட்ட வாசிப்புக்களுக்கும் விமரிசனங்களுக்கும் இவ்வாறு பாரதியின் பாடல்கள் எனும் பனுவல், இடம் தருவதைத்தான் பின்னை அமைப்பியலின் சிறப்பியலான பண்பு என்கிறோம்.
1.6 கட்டவிழ்ப்பு.
இலக்கியத் திறனாய்வுக்கு ஒரு புதிய கோணத்தை / பரிமாணத்தைக் குறிப்பது கட்டவிழ்ப்பு (Deconstruction) ஆகும். உண்மைகளின், அல்லது உண்மை போன்ற தோற்றங்களின் வெவ்வேறு கோணங்களை இது வெளிக்கொணர்கிறது. அமைப்பு என்பது இறுக்கமானது அல்ல; அமைப்பு எனும் சட்டத்திற்குள் மட்டுமே அதன் பொருள் அமைந்திருக்கவில்லை. ஒரு பனுவலின் விளக்கம், அமைப்பு என்பதற்குள் முடிந்துவிடுவதில்லை. மையத்திற்கு வெளியே, அதனோடு புறநிலையில் இருப்பவை, அந்தப் பனுவலின் நேர்முகப் பொருளோடு (உள்ளடக்கத்தோடு) ஒப்புநோக்கப்படுகின்ன; வேறுபடுத்தப்படுகின்றன. பழைய கட்டுமானம் தளர்கிறது. இவ்வாறு பின்னை அமைப்பியல் கூறுகிறது. பனுவலாக அமைகின்ற ‘கட்டு’ அவிழ, புதிய விளக்கங்கள், அதன்வழியாக உருவாகின்றன. இதனையே கட்டவிழ்ப்பு என்கிறோம். டெர்ரிடா என்ற அறிஞரின் முக்கியமான பங்களிப்பு இது. பனுவல்களின், தருக்கவியல் சார்ந்த அமைப்பு முறை தளர்கிறது என்பதைக் கட்டவிழ்ப்பு எனும் அணுகுமுறை காட்டுகிறது.
காட்டாகப், பாரதியின் பாஞ்சாலி சபதத்தை எடுத்துக்கொள்வோம். இந்திய தேசிய உணர்வை எழுப்பும் நோக்கில் அமைந்த இந்தக் குறுங்காவியம், பெண்ணின் பெருமை பேசுவது; பெண்ணை வீரமுடையவளாகக் காட்டுவது. ஆனால், துச்சாதனன், பாஞ்சாலியைத் தெருவில் இழுத்துக் கொண்டு செல்லுகின்ற போது, மக்கள் அந்தச் செய்கையை எதிர்த்துநிற்காமல் பொருமிக் கொண்டு, ஆனால், செயலற்று இருந்தார்கள் என்பதைக் கோபத்தோடு கூற நினைக்கிறார், பாரதி. அந்த மக்கள், ‘நெட்டை மரங்கள் என நின்று புலம்பினார்” என்று கூறுவார், அத்தோடு நிற்காமல் அந்தப் புலம்பலைப் ‘பெட்டைப் புலம்பல்’ என்று குறிப்பிடுகிறார். அதாவது, பெண்ணின் புலம்பல் என்கிறார். அப்படியானால்- பெண்ணின் புலம்பல் என்பது செயல்இழந்ததா? ஆண், செயல்கள்புரிபவன்; பெண், செயலற்றவளா? – என்ற கேள்விகளை எழுப்பிப் பாரதியின் உள்ளத்தில் ‘ஆணாதிக்க மனப்பான்மை’ இருக்கிறது என்று வாதிடுவார்கள். இது கட்டவிழ்ப்புத் திறனாய்வு ஆகும். ஒரு சொல்லாயினும், அதன் குறிதிறன்/ஆற்றல் புறக்கணிக்கத் தகுந்ததல்ல என்பது அவர்கள் வாதம். இதுபோல், மக்கட் செல்வத்தைப் போற்றும் திருக்குறளின் ஓர் அதிகாரத்திற்கு மணக்குடவர் எனும் உரையாசிரியர் ‘மக்கட் பேறு’ என்று பெயரிட, அதே அதிகாரத்திற்குப் பரிமேலழகர் எனும் இன்னொரு உரையாசிரியர், ‘புதல்வரைப் பெறுதல்’ என்று பெயரிடுவார். இதுவும் ஆண் ஆதிக்க சமூகத்தின் குரலே என்று கட்டவிழ்ப்பு முறையில் பெண்ணியலாளர்கள் விளக்குவார்கள்.
பொருள் விளக்கம் தருவதில், அலுத்துப் போகும் வாய்பாடாக (formula) வல்லார் வகுத்த ஒரே பாதையிலேயே செல்லாமல், மறைந்தும், பிறரால் மறைக்கப்பட்டும் கிடப்பவற்றைக் கிண்டியெடுத்துப் புதிய செய்திகளை இந்தத் திறனாய்வு தருகின்றது.
1.7 தொகுப்புரை
இன்றைய திறனாய்வில் ஆற்றல் வாய்ந்தவையாகவும் செல்வாக்குக் கொண்டனவாகவும் இருப்பவை, அமைப்பியலும் பின்னை அமைப்பியலும் ஆகும். நவீனத்துவம் மேலோங்கிய இடைநிலையில் இவை இரண்டும் அடுத்தடுத்துத் தோன்றின. அமைப்பியலுக்குப் பிறகு தோன்றியது பின்னை அமைப்பியல்; எனினும் அமைப்பியலின் போதாமை காரணமாக அதனை மறுதலித்துத் தோன்றியது எனவே ‘பின்னை’ என்பது ‘பிறகு’ என்ற பொருளை விட ‘மறுப்பு’ என்ற பொருளையே உட்கொண்டிருக்கிறது.
அமைப்பியல் என்பது ஒரு கலைவடிவம் அல்லது சிந்தனைவடிவத்தின் கட்டமைப்புப்பற்றிப் பேசுகிறது. அமைப்பு என்பது தன்னளவில் முழுமையானது; அதன் அழகு, அது கூறும் செய்தி-எல்லாம் அமைப்புக்கு உள்ளேயே இருக்கிறது; வெளியே அல்ல என்று அது சொல்லுகிறது. அமைப்பியல், படைப்பாளிக்கு முக்கியத்துவம் தருவதில்லை; வாசகனுக்கு முக்கியத்துவம் தருகிறது. கதை, கதை சார்ந்த அல்லது ஒரு சிந்தனையின் விளக்கம் சார்ந்த வருணிப்புக்கு அமைப்பியல் உகந்த அணுகுமுறையாக உள்ளது. கதைமைத் தன்மையின் கட்டுக் கோப்பில் கதைப்பின்னலின் பண்பும் இடனும் குறித்து விளக்கமாகப் பேசும் அமைப்பியல், உயிர்ப்புடைய அமைப்பின் கட்டுமானத்தில் இருநிலை எதிர்வு என்பதன் அவசியத்தையும் அதன் செயல்பாட்டையும் விளக்குகிறது.
பின்னை அமைப்பியல், பனுவல் என்ற கருத்து நிலையை முன்வைத்து, அது எவ்வாறு தனக்குள் முடியாமல், அதனைச் சார்ந்து புறத்தே இருக்கின்றவற்றோடும் உறவு கொண்டிருக்கிறது என்பதனைப் பேசுகிறது. பனுவலின் உள்கட்டமைப்புக்கூறுகள் தமக்குள் பிணைந்தும் முரண்பட்டும் புதிய தளம் நோக்கி நகர்கின்றன என்றும் அது பேசுகிறது. அதனுடைய சிறப்பியலான கருத்தியல்களில் பன்முக வாசிப்பு என்பதும் கட்டவிழ்ப்பு என்பதும் மிக முக்கியமானவை.
தமிழில், சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம்வரை, ஆழமாக ஆராயவும் பல உண்மைகளையும் அழகுகளையும் புதியனவாக வெளிப்படுத்தவும் இவ்விரண்டு திறனாய்வுகளும் பெரிதும் உதவுகின்றன; பல ஆய்வாளர்கள் இவற்றில் கவனம் செலுத்தியுள்ளனர்.
நவீனத்துவமும் பின்னை நவீனத்துவமும்
2.0 பாட முன்னுரை
அமைப்பியலும் பின்னை அமைப்பியலும், இலக்கியத் திறனாய்வுலகில் செல்வாக்கு மிகுந்த அணுகுமுறைகளாகவும் கருத்தியல்களாகவும் விளங்கி வருகின்றன என்ற முறையில் அவை பற்றி முன்னர் விரிவாகக் கண்டோம். அதுபோலவே, பின்னை நவீனத்துவம் (Post-Modernism) என்பதும் செல்வாக்குக் கொண்ட ஒரு திறனாய்வு முறையாகவும் ஒரு கொள்கை யாகவும் விளங்குகிறது. அதுபற்றி விளக்கமாகக் காண வேண்டும். இது பிரான்சு, இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன் முதலிய மேலைநாடுகளிலும், தொடர்ந்து அமெரிக்காவிலும் எழுபதுகளில் தோற்றம் பெற்று, எண்பது- தொண்ணூறுகளில் செல்வாக்குப் பெற்று விளங்கியது. தமிழில், தொண்ணூறுகளில் இந்தப் பின்னை நவீனத்துவம் செல்வாக்குப் பெற்றது. பல முன்னணித் திறனாய்வாளர்கள் இந்தக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்கள்.
நவீனத்துவம் என்பதற்குப் பின்னால் இது தோன்றியது; நவீனத்துவம் என்ற கொள்கை, இலக்கியத்தையோ. சமுதாயவியலையோ விளக்கப் போதாது என்ற சூழ்நிலையில், அதன் விளைவாகப் பின்னை நவீனத்துவம் தோன்றியது. எனவே, முதலில் நவீனத்துவம் என்றால் என்ன அதன் செயல்பாடுகள் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. மேலும், நவீனத்துவத்தினுடைய செல்வாக்கு ஏனைய பிறவற்றினும் விரிவானது; ஆழமானது; பல்வேறு துறைகளிலும் அது தாக்கம் செலுத்தியுள்ளது; இன்னும் தாக்கம் செலுத்தி வருகிறது. எனவே, முதலில் நவீனத்துவம் பற்றி விளங்கிக் கொள்வது அவசியம்.
2.1 நவீனத்துவம் விளக்கம்
நவீனத்துவம் என்ற கலைச்சொல்லில் பழைமை, தொன்மை என்பவற்றிற்கு ‘மாறானது’ என்ற பொருள், காணப்படுகிறது. மிக நீண்ட காலமாக இருந்துவந்த சமூக – பொருளாதார நிலைமைகளிலிருந்து அறிவியல் தொழில் நுணுக்கப் புரட்சி காரணமாகப் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. முதலாளித்துவம் பெரும் சக்தியாக, 19-ஆம் நூற்றாண்டில் வளர்கிறது. இதனோடு, அல்லது இதன் விளைவாக, அன்றைய சமூக- பொருளாதாரப் பண்பாட்டுச் சூழ்நிலைகளை எதிர்கொள்கிற விதத்தில் நவீனத்துவம் தோன்றுகிறது. நவீனத்துவம் என்பது வெறுமனே ஒரு கலை இலக்கியக் கொள்கை மட்டும் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை; ஒரு மனநிலை; ஒரு பண்பாட்டு வடிவம். பழைமை, மரபு என்பது நீண்ட காலமாக ஒரே மாதிரியான பாதையில், ஒரே மாதியான போக்கில் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதனை மறுத்து, அதற்கு வித்தியாசமாகப் புதிய பாதைகளையும் புதிய தடங்களையும் தேடுவதாக நவீனத்துவம் அமைகிறது. உதாரணமாக, செய்யுள் வடிவம் என்பது இலக்கியத் துறையில் தொன்றுதொட்டு ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு வடிவமாகும். அதனை மறுத்து, உரைநடை என்பது புதிய சமூக இருப்புகளையும் வெவ்வேறு நிகழ்வுகளையும் சொல்லுவதற்கு உரிய ஒரு வடிவமாக ஆகிறது; பல்வேறு துறைகளிலும் அது ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் காரணமாகப் புதிய புதிய இலக்கிய வகைகள் தோன்றுகின்றன. நவீனத்துவம் ஒரு புதிய பண்பாட்டு நிலைமையின் வெளிப்பாடாகக் கலை, இலக்கியத் தளத்தில் அமைகிறது.
2.1.1 நவீனத்துவம் – சில அடிப்படைகள்
கலை இலக்கியத்தளத்தில், நவீனத்துவத்தின் அடிப்படைகளாகவும் வெளிப்பாடுகளாகவும் அமைகின்றவற்றுள் மிக முக்கியமானது. அது, புதியகலை, புதிய இலக்கியம், புதிய வடிவம் என்ற நிலைகளையும் தேவைகளையும் வற்புறுத்துகின்றது. தமிழில், சற்றுப் பழைய இலக்கிய வடிவங்கள் தலபுராணங்கள், பிள்ளைத் தமிழ், உலா போன்ற பிரபந்தங்கள் எனின், அவற்றிற்கு மாறாக உரைநடை இலக்கியங்கள் மற்றும் அவற்றின் பல வகைமைகளை நவீனத்துவம் கொண்டாடுகிறது. பொதுவாக, பழைய இலக்கிய வடிவங்கள் (முன்னர்க் கூறப்பட்டவை மற்றும் அவை போன்ற பிறவும்) தத்தமக்குரிய சமகாலங்களின் பிரச்சினைகளையும் சமூக நீரோட்டங்களையும் சொல்லுவதில்லை. ஆனால் நவீன இலக்கியம் என்பது சமகாலச் சமூக (Contemporary Society) வாழ்வுகளை ஏதாவதொரு வகையில் முன்னிறுத்துகின்றது. உதாரணமாக, நவீன இலக்கிய வடிவமாகிய சிறுகதை, தமிழில் அது தோன்றிய காலத்திலேயே அன்றைய (19-ஆம் நூற்றாண்டு மற்றும் 20 -ஆம் நூற்றாண்டு) சமூகப் பிரச்சினையாகிய பால்ய விவாகம், விதவை மணம் முதலியவற்றைச் சித்திரிக்கின்றதைக் காணமுடியும்.
கலை இலக்கியம், சுதந்திரமும் சுயாதிக்கமும் கொண்டது என்று நவீனத்துவம் பிரகடனப்படுத்துகிறது. இலக்கிய வடிவங்களில் சோதனைகள் செய்வதை நவீனத்துவம் முன்னிறுத்துகிறது. இலக்கியத்தில் உயர்ந்த தரம் வேண்டும் என்றும், இலக்கியப் படைப்பு என்பது புனிதமானது என்றும், அது தனித்துவம் அல்லது தனக்கெனத் தனித்தன்மைகள் கொண்டது என்றும் நவீனத்துவம் வாதிடுகின்றது. அத்தகைய நிலைகளில் – இலக்கியம் எல்லோராலும் படைக்கப்படுவதில்லை; அதற்கு, உயர்ந்த திறனும் ஆளுமையும் வேண்டும் என்று அது சொல்கிறது. அதேபோல, தாராளம் கொண்ட மனிதநேயம் (Liberal humanism) நவீனத்துவத்தின் ஒரு முக்கியமான மனநிலையாக அமைகிறது. மனிதனை, அவனுடைய சமகாலத்துச் சூழ்நிலையோடு சித்திரிக்க வேண்டும் என்று கருதுவதால், அவனுடைய வாழ்நிலைகளில் அக்கறை கொள்வது இயல்பேயாகும்.
2.1.2 சில வெளிப்பாடுகள்
நவீனத்துவத்தின் உடன்தோன்றியது அல்லது அதனுடைய முக்கியமான வெளிப்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுவது நடப்பியல் அல்லது எதார்த்தவாதம் (Realism) ஆகும். மனிதச் செயல்பாடுகளை உண்மையாகக் காட்ட வேண்டும்; உண்மை என்பது நேர்கோட்டில் அமைவது அல்ல; முரண்பாடுகளும் மோதல்களும் கொண்டது; அவற்றிற்குக் காரணங்களும் உரிய சூழல்களும் உண்டு என்ற கருத்தோட்டம் கொண்டது நடப்பியல். இது, நவீனத்துவத்தின் உடன் தோன்றிய ஒரு முக்கியமான வெளிப்பாடு. மேலும், குறியீட்டியல்(Symbolism), இருத்தலியல் (Existentialism), மீமெய்ம்மையியல் (Surrealism), இருண்மை வாதம் (Obscurity), அபத்தவாதம் (Absurdity) முதலிய கருத்து நிலைகளும் நவீனத்துவத்தின் வெளிப்பாடுகளேயாகும். அன்றியும், உருவவியல், அமைப்பியல் முதற்கொண்டு ஃபிராய்டியம், மார்க்சியம் முதலியனவும் நவீனத்துவத்தின் உடன்தோன்றியனவே யாகும்.
நாம் ஏற்கெனவே கூறியவாறு, நவீனத்துவம் புதிய இலக்கிய வடிவங்களையும் வகைமைகளையும், இலக்கியச் செல்நெறிகளையும் உருவாக்குகிறது. அல்லது, அவை உருவாக இது காரணமாக அமைகின்றது. புனைகதை என்ற இலக்கிய வகைமை அத்தகையவற்றில் ஒன்று என்பது மட்டுமல்லாமல், அதிலே தோன்றிய அல்லது காணப்படுகின்ற புதிய புதிய உத்திகளுக்கும் வடிவங்களுக்கும் நவீனத்துவம் காரணமாக அமைகின்றது எனலாம். புதுமைப்பித்தன், தமிழ்ச் சிறுகதையுலகில் நவீனத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறவர். (இது அவருடைய புனைபெயர். உண்மைப் பெயர் சொ.விருத்தாசலம் என்பது. நவீனத்துவத்தின் தாக்கமே, அவருடைய புனைபெயர்) இவர், சிறுகதைகளில் பல சோதனைகள் (Experiments) நிகழ்த்தியவர். “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்ற பழந்தமிழ் வாசகத்தை இறுதி வாசகமாகக் கொண்டு, கல்தூணில் அமைந்த பழங்காலத்திய தெருவிளக்குகளின் இடத்தில் மின்விளக்கு அமைகிறது என்ற நிகழ்வை மையமிட்டுப் புதுமையின் அவசியத்தைக் குறியீடாகச் சித்திரிக்கும் தெரு விளக்கு முதலிய அவருடைய கதைகளில் பல, இவ்வாறு புதிய உத்திகளைச் சோதனை முறையில் செய்து காட்டியனவேயாகும்.
தமிழில் புதுமையின் அவசியத்தை அல்லது நவீனத்துவத்தை முன்னிறுத்துவதற்காகவே, 1950-1960களுக்குப் பிறகு பல இலக்கிய இதழ்கள் தோன்றின. மணிக்கொடி இவற்றுள் மிக முக்கியமானது. இது , சிறுகதை இலக்கியத்திற்கு முக்கியத்துவம் தந்தது. மற்றும் கிராம ஊழியன், சரசுவதி, எழுத்து, இலக்கிய வட்டம் முதலிய இதழ்களும் நவீனத்துவக் கருத்தோட்டங்களை முன்வைத்தன.
2.2 மரபும் நவீனத்துவமும்
மரபு என்பது காலங்காலமாகத் தொடர்ந்து வருவது ; ஆழமாக வேரூன்றிக் கிடப்பது. இலக்கணங்கள், வாய்பாடுகள், வரையறைகள், விதிகள் என்ற முறையில் கட்டுப்பாடுகள் கொண்டது. ஆனால் அதேபோது, மரபும் இயங்காற்றல் மற்றும் உயிர்ப்புக் கொண்டதாதலால் அதனுடைய பெரும் நீரோட்டத்தில், பல புதிய வரவுகளும் உண்டு. மரபை மறுப்பதாக நவீனத்துவம் குரல் கொடுக்கிறது. அந்த முறையில் தமிழில் தோன்றியதுதான் புதுக்கவிதை எனும் வடிவமாகும்.
தமிழில் குறிப்பாக 18,19-ஆம் நூற்றாண்டுகளில் கவிதை, வெறுமனே செய்யுள் வடிவமாகவே இருந்தது. யாப்புக்கட்டுப்பாடு, அதற்குள்ளேயே விளையாட்டு, உள்ளடக்கத்தில் தலங்கள் பற்றிய வருணனைகள், ஜமீன்தார்கள் பற்றிய கேளிக்கைகள். என்று இவ்வாறு இருந்தன. யாப்பு வரையறைகள், கவிதையை வளரவிடவில்லை. இத்தகைய மரபுகளை மறுத்து 1950-களுக்குப் பிறகு கவிதை, புதிய கோலங்களைப் பெறத் தொடங்கியது. ரகளைக்கவி, சுயேச்சா கவி, வசன கவிதை என்றெல்லாம் முதலில் அழைக்கப்பட்டுப் பின்னர், புதுக்கவிதை எனும் கோலம் பெற்றது. ந.பிச்சமூர்த்தி,. சி.மணி, மயன் முதலியவர்கள் இத்தகைய கவிதைகளை எழுதினார்கள். யாப்புத் தளைகளை மீறுவது இதன் முக்கியமான போக்கும் நோக்கும் ஆகும். உரைநடையின் செல்வாக்கு இதில் கணிசமாக உண்டு. படிமம், குறியீடு முதலியன போற்றப்பட்டன. காதல் மட்டுமன்றி, இருத்தலியல், இருண்மை வாதம் முதலியன அதிகம் இடம்பெற்றன. ஆனால் மரபை மீறுதல் என்ற வேகத்தில் ஆங்கிலச் சொற்களைக் கலப்பது அதிகம் இருந்தது. புதுக்கவிதையை ஒர் இயக்கம் போன்று வளர்ப்பதை, சி.சு.செல்லப்பாவின் எழுத்து என்னும் இதழ் மேற்கொண்டது. புதுக்கவிதை, புதுமை எனும் நெறியின் அடையாளமாகத் தமிழில் வளர்ச்சி பெற்றது.
2.2.1 நவீனத்துவமும் திறனாய்வும்
எதனையும் அது புதுசு என்றால் வரவேற்பது, சோதனைகள் என்று கருதப்படுபவற்றை முன்னிலைப்படுத்துவது, தரம், புனிதம் பற்றி அக்கறை கொள்வது, மேலைநாட்டுக் கருத்தோட்டங்களை ஏற்றுத் தமிழ் இலக்கியத்தில் பொருத்திப் பார்ப்பது, உருவ உத்திகளுக்கு முதனிலை தருவது என்பவை, நவீனத்துவம் – புதுமை என்று பேசிய சில திறனாய்வாளர்களிடம் காணப்படுகிற பொதுவான நிலைகள் ஆகும். க.நா.சுப்பிரமணியம், சி.சு.செல்லப்பா, வெங்கட்சுவாமிநாதன் முதலியோர் இத்தகைய போக்குக் கொண்டவர்கள். தமிழ் மரபில் இவர்களுக்குப் போதிய அறிவோ, பின்னணியோ இல்லாவிடினும், அவற்றில் உள்ள பல நல்ல அறிவுநிலைகளை ஒதுக்குவதும் மறுப்பதும் இவர்களின் செயல்முறையாக இருந்தது.
தமிழ் இலக்கியமே, நவீன இலக்கியத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்ற கருத்து நிலைகள் இலக்கியத் திறனாய்வுக்குத் தீங்கு தருபவை என்பது அறிந்ததே. ஆயினும், மரபும் புதுமையும் சேர்ந்து அறிந்த பல திறனாய்வாளர்கள் நவீனத் திறனாய்வாளர்களாக இலக்கிய அறிவை வளர்த்திருக்கிறார்கள். முக்கியமாக எதார்த்தவியல், மார்க்சியம், ஃபிராய்டியம், இருத்தலியல் முதலிய கருத்தமைவுகளை இலக்கியத்தில் பொருத்திக் காண்பதிலும், புனைகதை இலக்கியத்தின் மாறிவரும் போக்குகளையும் வடிவங்களையும் கணிப்பதிலும் இத்திறனாய்வு பெரும்பங்களிப்புச் செய்து வருகிறது.
2.3 பின்னை நவீனத்துவம் – தோற்றமும் சூழலும்
முதலாளித்துவப் பொருளாதாரம், ஏகபோக பன்னாட்டு முதலாளித்துவமாக வளர்ந்த சூழலில், பின்னை நவீனத்துவம் தோன்றுகிறது. நவீனத்துவம் இந்த உலகையும் சிந்தனை முறையையும் விளக்குவதற்கு போதாது என்ற நிலை வளர்ந்தபோது அதற்கு மாற்றாக இது தோன்றுகிறது. முதலில், கட்டிடக் கலையின் வடிவமைப்பு முறையில் ஏற்பட்ட சிந்தனையாகத் தோன்றியது இது. பின்னர், பண்பாட்டையும் இலக்கியத்தையும் விளக்கக் கூடியதாக 1970-80களில் வளர்ச்சி பெறுகிறது. ஜேக்கு டெர்ரிடா முதலியோர் முன்மொழிந்த பின்னை அமைப்பியலின் தாக்கம் இதிலுண்டு. அதிகார மையங்கள், பண்பாட்டு அரசியல் முதலியவை பற்றிப் பேசிய மிக்கேல் ஃபூக்கோ (Michael Foucault) மற்றும் கிராம்ஷி (Gramsei) ஆகியோரின் தாக்கமும் இதிலுண்டு. மேலும், நீட்ஷே, ஹெய்டேக்கர் முதலிய தத்துவவாதிகளின் தாக்கமும் இதிலுண்டு. இலக்கியத்தில் லியோத்தா, மோதிலார், ஹேபர்மாஸ், லிண்டோ ஹு ட்ஷியோ, ஃபிரடெரிக் கேம்சன், டெர்ரி ஈகிள்டன் முதலியோர் பின்னை நவீனத்துவச் சிந்தனையாளர்களாகக் கருதப்படுகிறார்கள். தமிழிலும் அ.மார்க்ஸ், பிரேம், ஜமாலன் முதலியோர் இந்த வகைத் திறனாய்வில் ஈடுபட்டார்கள். முக்கியமாக, இலக்கியச் சிற்றிதழ்கள், இந்தச் சிந்தனைமுறையை வலியுறுத்தி வந்துள்ளன. பின்னை அமைப்பியலின் புகழ் மங்குகிற அளவிற்குப் பின்னை நவீனத்துவம் சமீப காலப் பகுதியில் செல்வாக்குப் பெற்றது.
2.3.1 சில அடிப்படைகள்
பின்னை நவீனத்துவத்தின் துவக்கக் கொள்கை நூலாகக் கருதப்படுவது, லியோதா (Jean Francois Lyotard) என்ற பிரெஞ்சு சிந்தனையாளரின் பின்னை நவீனத்துவ நிலைமை (La condition Post moderne) என்ற நூலாகும். பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் , பண்பாட்டு உலகிலும் ஏற்பட்டுவிட்ட நுகர்வுக் கலாச்சாரம் (consumerism) பற்றியும் இலக்கியத்தில் அதன் வெளிப்பாடுகள் பற்றியும் கொள்கை ரீதியாக இந்த நூல் பேசுகிறது. இலக்கியத்திலும் சரி, பண்பாடு நிகழ்வுகளிலும் சரி, மையம் (center) என்று ஒன்று இல்லை; இருத்தலாகாது. எனவே, முழுமை (totality) என்பது அர்த்தமற்றது என்று பின்னை நவீனத்துவம் பேசுகிறது. முழுமை என்பதற்குப் பதிலாகப் பகுதிகள் அல்லது கூறுகள் (Fragmentation) என்பதை இது முன்வைக்கிறது. கூறுகளே உண்மை என்று கூறுகிறது. இந்தக் கூறுகளும்கூட, ஒன்றோடு ஒன்று தொடர்பற்றவையே என்றும் இது பேசுகிறது. சமூக- பண்பாட்டு அமைவுகளில் ஒதுக்கப்பட்டனவாக விளிம்புகள் (edge) இருக்கின்றன என்றும், எப்போதும் விளிம்புகளுக்கும் மையங்களுக்கும் இடையே மோதல்கள் இருக்கின்றன என்றும், விளிம்புகள் மையங்களை நோக்கி நகர்கின்றன என்றும் பின்னை நவீனத்துவம் கூறுகின்றது.
பின்னை நவீனத்துவக் கொள்கையில் இதுவன்றியும் பின்வரும் கருத்தியல்களும் அடிப்படைகளாக இருக்கின்றன. அவற்றுள் சில:
நவீனத்துவம், கலை வடிவங்களைப் புதிய வடிவங்களாகக் காண விரும்புகிறது; பின்னை நவீனத்துவம், எதிர்நிலை வடிவமாகக் (anti-form) காணவிரும்புகிறது.
உயர்வு, உயர்ந்தோர் வழக்கு, உயர்தரம் என்பவற்றையும், பலராலும் மரபு வழியாக அங்கீகரிக்கப்பட்ட ‘புனிதம்’ என்பதனையும் இது மறுக்கிறது.
பெரும் நீரோட்டம், பெருநெறி, பெருங்கதையாடல் என்பதற்கு மறுப்புத் தெரிவிக்கிறது. அதேபோது சிறு நெறிகளுக்கு முக்கியத்துவம் தருகிறது.
நடைமுறை நிகழ்வுகளை – அவை, கலகங்களாக, மோதல்களாக இருந்தாலும் – இது மொழி விளையாட்டுகளாகவே காண்கிறது. மாற்றுவது, தீர்ப்பது இதன் நோக்கமல்
ஒற்றைப் போக்கு, ஒற்றைத் தன்மை என்பதற்கு மாறாகப் பன்முகத்தன்மையை இது முன்வைக்கிறது.
இவ்வாறு பின்னை நவீனத்துவம், மொத்தப்படுத்துதல், முழுமைப்படுத்துதல், புனிதப்படுத்துதல் என்பவற்றிற்கு மாறாகக் கருத்தியல்களை முன்மொழிந்தாலும், சுயமுரண்பாடுகள் கொண்டதாகவும் வேறுபட்ட பல கருத்துகளைக் கொண்டதாகவும் இது விளங்குகிறது. மேலும், ‘கொள்கைக்கு எதிராகவே’ (Resistance to Theory) இருப்பதாகவும் இது தன்னைச் சொல்லிக் கொள்கிறது. இதனுடைய இன்னும் சில முக்கியமான கருத்தமைவுகளைச் சற்று விரிவாக இனிக் காணலாம்.
2.4 மையமும் விளிம்பும்
ஒரு சமூக அமைப்பில், பார்ப்பனர் அல்லது உயர்சாதி வகுப்பினர் மையம் என்ற நிலையில் நடுவே இருக்கிறார்கள் என்றால் தலித்துகள், பெண்கள், அரவாணிகள் மற்றும் இதுபோன்ற நிலையினர் விளிம்புநிலையில் இருக்கிறார்கள். விளிம்பு நிலையிலிருப்போர் மையத்திலிருப்பவரோடு மோதலும் கலகமும் செய்கிறார்கள். மையத்தை நோக்கி நகர்கிறார்கள். எப்போதும் இந்தச் சச்சரவு நடந்து கொண்டேயிருக்கிறது. இவ்வாறு பின்னை நவீனத்துவம் கூறுகிறது. இதன் காரணமாகப் பெண்ணியம், தலித்தியம் முதலியவற்றில் இது அக்கறை காட்டுகிறது. “விளிம்பு நிலை வாழ்க” (“
ail to Edge” – Linda utcheon) என்று கூறினாலும் தீர்வுகளுக்கோ, சமூக மாற்றங்களுக்கோ இது வழிமுறை சொல்லுவதில்லை. மேலும், விளிம்பு நிலையிலிருப்போரைக் கூடத் தனித்தனிக் குழுக்களாகப் பார்க்கவே இது விரும்புகிறது. குழுக்களிடையே செயலளவிலான தொடர்புகளை இது கூறவில்லை.
2.4.1 புனிதம்
பின்னை நவீனத்துவத்தின் ஒரு முக்கியமான பங்களிப்பு, வழிவழியாகப் ‘புனிதம்’ என்று வழங்கப்படுபவற்றை மறுத்தது ஆகும். காட்டாக, திருமணம்- ஒருத்திக்கு ஒருவன் , ஒருவனுக்கு ஒருத்தி எனும் கற்புநிலை, குடும்பம் முதலிய அமைப்புகளும் அவை பற்றிய கருத்தியல்களும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. அவற்றை, இது கேள்வி கேட்டு மறுக்கிறது. அதுபோல் உயர்வு அல்லது தரம் என்று இலக்கியத்தை அடையாளம் காட்டுவதையும் அல்லது பாராட்டுவதையும் இது மறுக்கிறது. அப்படியானால், வணிகரீதியாக எழுதப்பெறும் மர்ம நாவல்கள் உள்ளிட்ட ஜனரஞ்சக (Mass or Popular literature) எழுத்துகளையும் பின்னை நவீனத்துவம் ஏற்றுக் கொள்கிறது என்று பொருள். ஆனால், நடைமுறையில் தமிழில் பின்னை நவீனத்துவவாதிகள் இதனை ஏற்றுக் கொள்ளுவதில்லை.
2.4.2 பெருங்கதையாடல்
பின்னை நவீனத்துவ வாதிகளால் அதிகமாகப் பேசப்பெறும் ஒன்று கதையாடல் (Narrative) ஆகும். அறிகிற / தெரிகிற ஒரு நிகழ்வை அல்லது செய்தியைச் சொல்லுதல்- விளக்கமாகச் சொல்லுதல் என்பதாக மொழி மாற்றம் செய்வதுதான் கதையாடல் ஆகும். நடைமுறை நிகழ்ச்சிகளின் மீது ஒரு தொடர்ச்சியையும் அர்த்தத்தையும் திணிக்கின்ற ஒரு செயல் வடிவத்தின் வடிவமாகவே இது கொள்ளப்படுகிறது என்று விளக்கம் அளிப்பார் ஹேடன் ஒயிட் என்பார். இதனைப் பின்னை நவீனத்துவம் இரண்டு நிலைகளாகப் பார்க்கிறது. ஒன்று – மிகப் பலரால் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு வருகின்ற, பலவற்றிற்கு மையமாக இருக்கின்ற, பெருங்கதையாடல் (grand or great narrative) என்பது. இது, சங்க கால வரலாறு, வீரயுகம் என்பது போன்ற வரலாறாக இருக்கலாம்; தாய்மை என்பது போன்ற கருத்துநிலை பற்றிய விளக்கமாக இருக்கலாம். இவற்றைப் பின்னை நவீனத்துவம் மறுக்கிறது; மாறாகத் தனித்தனி வட்டாரங்கள், தனித்தனிக் குழுக்கள், குடும்பமோ பிற கட்டுப்பாடுகளோ அற்ற உறவுகள் முதலியவற்றைச் சிறுகதையாடல் (Little narrative) என்று கொண்டு, அவற்றைப் பின்னை நவீனத்துவம் வரவேற்றுப் போற்றுகிறது.
2.5 தொகுப்புரை
அண்மைக் காலத்திய ஒரு திறனாய்வு மற்றும் பண்பாட்டுச் சிந்தனை முறை, பின்னை நவீனத்துவமாகும். இது, நவீனத்துவத்துக்குப் பிறகு வந்தது என்றாலும், நவீனத்துவத்தின் போதாமையில் தோன்றியது என்பது மட்டுமல்லாமல், நவீனத்துவத்திற்கு மறுப்பாக இது தோன்றியது என்பதாக, இதனுடைய கொள்கையைப் பற்றிப் பேசுகிற லியோதா, மோதிலார் முதலிய பலர் கூறுகின்றனர். நவீனத்துவம், புதுமை, புதிய கலை, புதிய வடிவம் என்று தன்னை முன்னிறுத்துகிறது. அதுபோல உயர்வு, தரம், தாராளத்துவம் என்பன பற்றிப் பேசுகிறது. தமிழில் நவீனத்துவத்தின் முக்கியமான பிரதிநிதிகளில் ஒருவராக மதிக்கப்படுகிறவர் புதுமைப்பித்தன் ஆவார். சிறுகதை உத்திகளில் பல சோதனைகள் செய்தவர் இவர். தமிழில் ஒருசார் நவீனத்துவ விமரிசகர்கள் தமிழ் மரபுகளையும் தொன்மை இலக்கியங்களின் பெரும் சாதனைகளையும் மறுப்பர். இருப்பினும், நவீனத்துவம் பல போக்குகள் கொண்டது. தற்காலத் தமிழ் உலகில் பல நல்ல இலக்கியங்களை அது உருவாக்கித் தந்துள்ளது. புதுக்கவிதை எனும் இலக்கிய வகை நவீனத்துவத்தின் குழந்தையாகக் கருதப்படுகிறது.
பின்னை நவீனத்துவம் என்பது பண்பாட்டு முதலாளித்துவம், நுகர்வுக் கலாச்சாரம் ஆகியவற்றின் ஒரு விளைவாகும். மொத்தப்படுத்துதல், முழுமை, மையம், புனிதம், தரம் முதலிய கருத்து நிலைகளை இது தீவிரமாக மறுக்கிறது. அவற்றிற்குப் பதிலாக, கூறுபடுத்துதல், கூறு அல்லது பகுதி, விளிம்பு, எதிலும் புனிதம், தரம் என்று பார்க்கக் கூடாது என்ற மனநிலை முதலியவற்றை முன்னிறுத்துகிறது.பெருநெறி மரபுகளை மறுத்து சிறு நெறிகளை, தொடர்பற்ற தன்மைகளை இது போற்றுகிறது.1990-களில் இது தமிழில் மிகப் பிரபலமாக – முக்கியமாக – இலக்கியச் சிற்றிதழ்களால் பேசப்பட்டது. இன்று, மீண்டும் திறனாய்வு புதிய தடங்களை நோக்கி நகரத் தயாராகவுள்ளது.
மார்க்சியத் திறனாய்வு
3.0 பாட முன்னுரை
இலக்கியவுலகில் மிகவும் செல்வாக்கு வாய்ந்த திறனாய்வுமுறை, மார்க்சியத் திறனாய்வு ஆகும். மார்க்சியம் எனும் சமூகவியல் தத்துவத்தை அடித்தளமாகவும் வழிகாட்டுதலாகவும் கொண்டது மார்க்சிய அணுகுமுறையாகும். மார்க்சியம் என்பது அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய சமூக தளங்களில் மனிதகுல விடுதலையை முன்னிறுத்துவது ஆகும். இது, அறிவியல் பூர்வமானது; தருக்கம் சார்ந்தது; இயங்கியல் தன்மை கொண்டது. மார்க்சியத்தின் மூல ஊற்றுக்கண் கார்ல்மார்க்ஸ் ஆவார்; மற்றும் அவருடன் சேர்ந்து சிந்தித்த, சேர்ந்து செயல்பட்ட ஏங்கல்சும், தொடர்ந்துவந்த லெனினும் மாசேதுங்கும் மார்க்சிய சித்தாந்தத்தின் முன்னணிச் சிந்தனையாளர்கள் ஆவர். மேலும், இந்தத் தத்துவத்தை இவர்களும், தொடர்ந்து ஜார்ஜ் லூகாக்ஸ், கிறிஸ்டோபர் காட்வெல், மற்றும் இக்காலத்து டெர்ரி ஈகிள்டன், ஃபிரெடெரிக் ஜேம்சன் முதலியோரும் இலக்கியத் திறனாய்வுக்குரிய ஒரு நெறிமுறையாக விளக்கிக் காட்டியுள்ளனர் இவர்களின் எழுத்துக்களையும் சிந்தனைகளையும் கொண்டு அமைவது மார்க்சியத் திறனாய்வு.
3.1 மார்க்சிய அணுகுமுறை
மார்க்சிய அணுகுமுறைக்கு, மார்க்சிய சித்தாந்தமே அடிப்படை.மார்க்சியம், ஓர் அரசியல் பொருளாதார சித்தாந்தமாக விளங்கினாலும்,அது சமூகவியல் அடிப்படைகளை விளக்குகிற ஒரு சித்தாந்தமாகலின், அழகியல், கலை, இலக்கியம், ஆகியவற்றையும் அது விளக்குகிறது; ஏனெனில், இவை சமூகத்தின் பண்புகளாகவும் பகுதிகளாகவும் இருப்பவை.
3.1.1 வரையறையும் விளக்கமும்
மார்க்சியத் திறனாய்வு, சமூகவியல் திறனாய்வோடும் வரலாற்றியல் திறனாய்வோடும் மிக நெருக்கமாக உறவு கொண்டது. இலக்கியம் என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகத்திலிருந்து தோன்றுகிறது. அந்தச் சமூகத்தை நோக்கியே அது அமைகிறது. அதுபோல, சமூகம் என்பது காலம், இடம் என்ற வெளிகளில் அவற்றை மையமாகக் கொண்டு இயங்குவது; எனவே வரலாற்றியல் தளத்தில் இயங்குவது. இலக்கியம் இத்தகைய சமூக- வரலாற்றுத்தளத்தில் தோன்றி, அதன் பண்புகளைக் கொண்டது ஆகலின், இலக்கிய ஆராய்ச்சிக்குச் சமூக – வரலாற்றுப் பின்புலங்களும் அவற்றின் செய்திகளும் மிகவும் முக்கியமானவையாக அமைகின்றன . மார்க்சியத் திறனாய்வு இங்கிருந்துதான் தொடங்குகிறது என்று சொல்ல வேண்டும். அதாவது, சமூக வரலாற்றுத் தளத்திலிருந்துதான் மார்க்சியத் திறனாய்வு தொடங்குகிறது.
சமூகம் மாறக்கூடியது; வளர்ச்சி பெறக்கூடியது. அது போன்று இலக்கியமும் வளர்நிலைப் பண்புகளைக் கொண்டது. அத்தகைய பண்புகளைத் தற்சார்பு இல்லாத முறையில், காரணகாரியத் தொடர்புகளுடன் மார்க்சியத் திறனாய்வு விளக்குகிறது. இலக்கியம், மக்களுடைய வாழ்க்கை நிலைகளிலிருந்து தோன்றுகிற உணர்வுநிலைகளின் வெளிப்பாடு. அதேபோது அந்த உணர்வுநிலைகளை அது செழுமைப்படுத்துகிறது. மக்களிடமிருந்து தோன்றுகிற இலக்கியம், மக்களின் வாழ்வோடு நெருக்கம் கொண்டு இயங்குகிறது. மார்க்சியத் திறனாய்வு, இலக்கியத்தை மக்களோடு நெருங்கியிருக்கச் செய்கிறது. மனிதகுல மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இலக்கியம் உந்துதலாக இருப்பதை அது இனங் காட்டுகிறது. மார்க்சியத் திறனாய்வின் நோக்கம், இலக்கியத்தை மனிதனோடு நெருங்கியிருக்கச் செய்வதும், மனிதனை இலக்கியத்தோடு நெருங்கியிருக்கச் செய்வதும் ஆகும்.
3.1.2 மார்க்சியத் திறனாய்வின் அடிப்படைகள்
மார்க்சும் ஏங்கல்சும் திறனாய்வுநூல்கள் எழுதியவர்கள் அல்லர்; அதுபோல், இலக்கியக் கொள்கைகளைப் பரிமாறிக் கொண்டவர்கள் அல்லர். ஆனால், தம்முடைய அரசியல்- பொருளாதார நூல்களிடையே இலக்கியங்கள் பற்றியும் பேசுகின்றனர். இருவரும் ஜெர்மனியப் பேரறிஞர்கதே (Goethe) என்பவர் பற்றிப் பேசுகின்றனர். அதுபோல் மின்னா கவுட்ஸ்கி, மார்கரெட் ஹார்கன்ஸ், லாசல்லே ஆகியோரின் இலக்கியப் படைப்புகளைப் பற்றிப் பேசுகின்றனர். ஷேக்ஸ்பியர் மற்றும் பால்ஜாக் ஆகிய இலக்கிய மேதைகளை உதாரணங்களாக்கிப் பேசுகின்றனர். லியோ டால்ஸ்டாயின் நாவல்களைப் பற்றி லெனின் பாராட்டிப் பேசுகிறார். இலக்கியம் பற்றிய கருதுகோள்களை இதன் மூலம் இவர்கள் வெளிப்படுத்துகின்றனர். குறைகள் கண்டவிடத்தும் கூட, அவற்றைப் பெரிதுபடுத்தாமல், குறைகளைக் களைந்து மேலும் சிறந்த முறையில் எழுதுவதற்கு யோசனைகள் சொல்லும் முறை, மார்க்சிடமும் ஏங்கல்சிடமும் காணப்படுகிறது. அதுபோல், லெனினும். லியோ டால்ஸ்டாய், மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளாமல் கிறித்துவ இறையாண்மையே ஏற்றுக் கொண்டவரானாலும், அவருடைய நாவல்களில் அன்றைய சமூகமும், அதன் மாற்றங்களும் பாராட்சமில்லாமல் சித்திரிக்கப்படுகின்றன என்று சொல்லிப் பாராட்டுகின்றார். மார்க்சியத் திறனாய்வின் நசம் கொண்ட வழிகாட்டுதலை இந்த உதாரணங்கள் உணர்த்துகின்றன.
மார்க்சியத் திறனாய்வின் அடிப்படை, மார்க்சியமே என்பதைச் சொல்லிக் காட்டவேண்டியதில்லை. அரசியல்-பொருளாதாரக் கோட்பாடுகளன்றியும் இந்த மார்க்சியத்திற்கு அடிப்படையாகி இருப்பவை, இயங்கியல் வாதம் (Dialectical Materialism) மற்றும் பொருள்முதல் வாதம் (
istorical Materialism) ஆகியவை. வரலாற்றியல் வாதம் மற்றும் இயங்கியல் பொருள்முதல் வாதம் (istorical Materialism and Dialectical Materialism) இவற்றிற்குட்பட்டவையாகும். மேலும், எதார்த்தம், உருவம் உள்ளடக்கம் பற்றிய கருத்துநிலை, எதிரொலிப்பு, தீர்வு முதலியவை பற்றிய கருத்து நிலைகள் மார்க்சிய அழகியலுக்கு அடிப்படை நெறிமுறைகளாக உள்ளன.
3.1.3 இலக்கியம் பற்றிய கருதுகோள்
ஒவ்வொரு திறனாய்வு முறைக்கும், இலக்கியம் பற்றிய கருதுகோள் என்பது மிகவும் அவசியம். ஆயின் இது, அவ்வத் தேவைகளுக்கு ஏற்றவாறு வெவ்றோக இருக்கக் கூடும். மார்க்சியத் திறனாய்வைப் பொறுத்த அளவில் இலக்கியம் பற்றிய அதனுடைய கருதுகோள் அல்லது வரையறை; இலக்கியம் என்பது ஒரு கலைவடிம்; சமுதாய அமைப்பில் அதன் மேல் கட்டுமானத்தில் (Super-Structure) உள்ள ஓர் உணர்வு நிலை. சமுதாய அடிக்கட்டுமானமாகிய (Basic Structure) பொருளாதார உற்பத்தியுறவுகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சார்ந்து இருப்பது, அது. இதுவே, இலக்கியத்தைப் பற்றிய அடிப்படையான வரையறை என மார்க்சியம் கருதுகிறது. மேல்கட்டுமானத்தைச் சேர்ந்த கலை, இலக்கியம், அரசியல் தத்துவம், சாதி, சமயம் முதலியவை அடிக்கட்டுமானத்தோடு ஒன்றுக் கொன்று தொடர்பும் தாக்கமும் கொண்டவை. அதாவது இதனுடைய பொருண்மை என்னவென்றால்- இலக்கியம், மக்களிடமிருந்து தோன்றுகிறது; மக்களை நோக்கியே செல்கிறது; மக்களின் உணர்வுகளையும் வாழ்நிலைகளையும் ஏதேனும் ஒருவகையில் பாதிக்கிறது. எனவே இலக்கியத் திறனாய்வு, இலக்கியத்தின் இந்தப் பண்பினையும் பொருண்மையினையும் பாதுகாக்கிறது; வளர்க்கிறது. இதுவே மார்க்சியத் திறனாய்வின் நோக்கமும் ஆகும்.
இலக்கியம் சுயம்புவானது அல்ல; சுயாதிக்கம் உடையது அல்ல; தன்னளவில் முற்ற முழுமையுடையதும் அல்ல. சமுதாய அடிக் கட்டுமானத்தோடும், ஏனைய அமைப்புக் கூறுகளாகிய அரசியல், தத்துவம் முதலியவற்றோடும் சேர்ந்து இருப்பது; அவற்றின் அழகியல் வெளிப்பாடாக இருப்பது. எனவே திறனாய்வு, இலக்கியத்தை இத்தகையதொரு தளத்திலிருந்து காணவேண்டும் என்று மார்க்சியத் திறனாய்வு கூறுகிறது. எனவே, கலை, கலைக்காகவே என்பதையும், கலை, தனிமனிதன் சம்பந்தப்பட்டது என்பதையும், ஒரு சில உயர்ந்தோருக்கும் மேதைகளுக்கும் மட்டுமே உரியது என்பதையும் மறுத்து, கலையை மக்களுக்குரியதாகச் சொல்லுகிறது. எனவே மார்க்சியத் திறனாய்வாளனுக்குச் சமூகவுணர்வும், பொறுப்பும் உண்டு என்பது வற்புறுத்தப்படுகிறது.
3.2 மார்க்சியக் கொள்கையும் இலக்கியமும்
இலக்கியத்தைச் சமூகத்தின் வரலாறாகப் பார்க்கிறது மார்க்க்சியத்திறனாய்வு. இதன்வழிச் சமூக அமைப்பின் வளர்நிலைகளைக் கணிக்கிறது. வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்ற கோட்பாட்டை அது முன்வைக்கிறது. இலக்கியத்தை வர்க்கங்களின் மோதல் அடிப்படையில் மார்க்சியத்திறனாய்வு மதிப்பிடுகிறது. வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தையும், வர்க்கப் போராட்டத்தையும் மார்க்க்சியத்திறனாய்வு இலக்கியத்தில் காண்கிறது.
3.2.1 வரலாற்றியல் பொருள் முதல்வாதம்
கருத்து (idea) அல்லது சிந்தனையே முதன்மையானது எனக்கூறி, உலகத்தை அதன்வழியாகக் காண்பது கருத்து முதல்வாதம் (Idealism), அவ்வாறன்றிப் பொருளே (matter) முதன்மையானது எனக் கொண்டு, உலகை அதன்வழிப் பார்ப்பதும் விளக்குவதும் பொருள் முதல்வாதம் (materialism) ஆகும். வரலாற்றியல் பொருள்வாதம் என்பது, பொருளின் இயங்குநிலை எவ்வாறு மனிதகுல வரலாற்றை விளக்குவதற்கு அடிப்படையாக இருக்கிறது என்று கூறுகிறது. மனித சமுதாயத்தை ஒற்றைப் பரிமாணம் கொண்டதாகவும், தேக்க நிலை கொண்டதாகவும் பார்க்கக்கூடாது என்று சொல்லி, அதனை எப்போதும் தன்னுள்ளே இயங்குகின்ற ஆற்றலுடையதாகவும் மாற்றமும் வளர்ச்சியும் கொண்டதாகவும் பார்க்கவேண்டும் என்று வரலாற்றியல் பொருள்வாதம் வலியுறுத்துகிறது.
சமூகவியலுக்கு இதனுடைய முக்கியமான பங்களிப்பு, சமுதாய வரலாற்றை, சமுதாய – பொருளாதார வடிவாக்கங்களின் (socio- economic formations) படிநிலை வளர்ச்சிகளாக விளக்கியிருப்பது ஆகும். அந்த வடிவாக்கங்கள்:
புராதன கூட்டுக்குழு அமைப்பு (Primitive Communism)
அடிமையுடைமை (Slave owning)
முதலாளித்துவம் (Capitalism)
பொதுவுடைமை வளர்ச்சிபெறுவதற்கு முன்னால் அதன் முன்னோடியாக இருப்பது சமதர்மம் அல்லது சோஷலிசம் ஆகும். அதுபோல், முதலாளித்துவம் என்பது பொதுவான சொல்லாக இருந்தாலும், குழும முதலாளித்துவம் (Corporate capitalism), பன்னாட்டு முதலாளித்துவம் (Multi national capitalism), ஏகபோக முதலாளித்துவம் (Monopoly capitalism) என்று பல நிலைகள் அதிலே உண்டு. இத்தகைய சமூக அமைப்புக்களுக்கு ஏற்ப, அவ்வக் காலத்திய சமூகவுணர்வு நிலைகளும், அழகியல், அரசியல், கலை இலக்கியம் முதலியனவும் இருக்கும் என்று மார்க்சியம் கூறுகிறது. தமிழில், சங்க இலக்கியம் முதல் தொடர்ந்து வரும் இலக்கியங்களில், மேற்கூறிய சமூக அமைப்புக்களும் அவை சார்ந்த உணர்வு நிலைகளும் எவ்வாறு காணப்படுகின்றன என்று பார்ப்பதற்கு ஏராளமான வாய்ப்புக்கள் உண்டு.
3.2.2 வர்க்கமும் இலக்கியமும்
மார்க்சியம், சமூகத்தை வர்க்க சமுதாயமாகக் காணுகிறது. வரலாற்றியல் பொருள் முதல் வாதத்தின் ஒருபகுதியாக அமைந்துள்ள வர்க்கக் கண்ணோட்டம் இலக்கியத்தின் செய்நெறிகளையும் இலக்கியம் கூறும் செய்திகளையும் கண்டறிய உதவுகிறது. வர்க்கம் (class) என்பது என்ன? சமுதாயத்தின் வளங்களையும் நலன்களையும், பெறுவதிலும், பங்கிடுவதிலும், துய்ப்பதிலும் உள்ள பிரிவினையைக் குறிப்பது இது. பொருளாலே உற்பத்தியுறவுகளின் அடிப்படையில் பிறரோடு வேறுபட்டும், தமக்குள் பொதுத்தன்மை பெற்றும் இருக்கிற மக்கள் பிரிவினைகளே வர்க்கங்கள் ஆகும். ஏழை – பணக்காரன் என்ற பிரிவினை அல்ல, இது. உற்பத்திகளையும் உற்பத்திசாதனங்களையும் உடைமையாகக் கொண்ட முதலாளி – அதிலே உழைக்கிற, உழைப்பைக் கூலியாகப் பெறுகிற தொழிலாளி என்ற பிரிவினையே, இது. உற்பத்தியில் முழுதுமாகத் தன் உழைப்பை நல்கிடும் தொழிலாளி, அதன் பலனையும் நலனையும் பெறமுடியாத நிலையில், முதலாளியோடு முரண்படுகிறான்; குழுவாக இணைகிறான், மோதல் நடைபெறுகிறது. இதனை வர்க்கப் போராட்டம் என்கிறோம். சமூகத்தில் நடைபெறும் இத்தகைய நிலைகளை இலக்கியத்தில் காணமுடியும். உதாரணமாக, ரகுநாதனின் ‘பஞ்சும்பசியும்’ என்ற நாவலில் இதனைக் காணலாம். விக்கிரமசிங்கபுரம் நூற்பாலையில் பணிபுரியும் தொழிலாளிகள், தங்களுடைய வேலை உத்திரவாதம், கூலி நிர்ணயம் முதலியவற்றுக்காக, ஒன்றிணைந்து, ஊர்வலம், வேலை நிறுத்தம் முதலிய வழிமுறைகள் கொண்டு முதலாளியோடு போராடுகிறார்கள். இவ்வாறு சித்திரிக்கும் இந்த நாவல், தொழிலாளிகள் வர்க்க உணர்வு பெற்று இணைந்து நிற்பதைக் காட்டுகிறது. ராஜம்கிருஷ்ணனின் ‘கரிப்புமணிகள்’, ஸ்ரீதர கணேசனின் ‘உப்பு வயல்’ ஆகிய நாவல்களில் தூத்துக்குடி வட்டார உப்பளங்களில் உழைக்கும் உப்பளத் தொழிலாளிகள் தங்களுடைய முதலாளிகளுக்கு எதிராக எழுச்சி பெற்று நிற்பது இடம் பெறுகிறது. ‘நாங்கள் சேற்றில் கால்வைக்காவிட்டால், நீங்கள் சோற்றில் கைவைக்க முடியாது, – என்பது போன்ற புதுக்கவிதைகளிலும் இத்தகைய குரல் ஒலிப்பதைக் கேட்கலாம்.
3.3 அடிப்படைக் கூறுகள் - 1
மார்க்சிய இலக்கியக் கொள்கையில் உள்ளடக்கத்திற்கேற்ற உருவம் என்பது அடிப்படையான கூறாக இருக்கிறது. அதுபோல இலக்கியத்தை மதிப்பிட எதார்த்த இயல்பை அடிப்படையாகக் கொள்கிறது. இவ்விரண்டு அடிப்படைக் கூறுகளும் படைப்பைச் சார்ந்தவை.
3.3.1 உருவமும் உள்ளடக்கமும்
பொருள்கள் தமக்குள் உறவுபெற்றவை. அவை, எதிர்முறையான சக்திகளின் உள்ளார்ந்தனவும் புறமார்ந்தனவுமான மோதல்கள் கொண்டவை. மோதல்கள்-இணைவுகள் என்ற தன்மை காரணமாகப் பொருள்கள் இயங்கு சக்தி கொண்டிருக்கின்றன. இவ்வாறு மார்க்சிய இயங்கியல் சொல்லுகிறது. காரணகாரிய விதிமுறைகளுக்குட்பட்ட இந்த இயங்குநிலை, பொருள்களின் பண்புநிலை (quality) மற்றும் அளவுநிலை (quantity) மாற்றங்களுக்குக் காரணமாகின்றது. பண்புநிலையில் ஏற்படுகிற மாற்றம் அளவுநிலை மாற்றத்திற்கும், அளவு நிலை மாற்றம், பண்புநிலை மாற்றத்திற்கும் இட்டுச் செல்லுகிறது. இரண்டும் இவ்வாறு தமக்குள் சார்ந்து செயலாற்றலுடன் இருக்கின்றன. அளவுநிலை என்பது உருவத்தையும், பண்பு நிலை என்பது உள்ளடக்கத்தையும் குறிக்கின்றது.
உருவம்-உள்ளடக்கம் (form and content) என்பவற்றுள், உள்ளடக்கம் முதன்மையானது, ஆனால், உருவத்தின் முக்கியத்துவம் குறைந்தது அல்ல. உள்ளடக்கத்தின் பண்புக்கும் தேவைக்கும் மாற்றத்துக்கும் ஏற்ப, உருவம் அமைகின்றது; அதேபோது உருவம் உள்ளடக்கத்தைத் தன்னுடைய செல்வாக்கிற்கு உட்படுத்தி அதனுடைய வளர்ச்சியை முன்கொண்டு செல்லக்கூடிய ஆற்றல் படைத்தது. மார்க்சிய சித்தாந்தத்தில் உருவம்-உள்ளடக்கம் பற்றிய கருத்துநிலை முக்கியமான ஒன்றாகும். நேர்த்தி, உத்தி முதலியவற்றிற்கு உட்பட்ட உருவத்தை மார்க்சியம் குறைத்து மதிப்பிடாமல் போற்றுகிறது. லெனின் சொல்லுவார்: உருவத்துக்கும் உள்ளடக்கம் போலவே , சார்புடைத் தனித்துவம் (relative independence) உண்டு. உள்ளடக்கத்தின் வீச்சுக்கு அது பின்தங்கிப் போவதும், அதனை மீறிச் சிலபோது பெரும் வேகம் கொள்வதும் உண்டு. மேலும், ஒரு உள்ளடக்கத்திற்கு ஒரே வகையான உருவம்தான் சாத்தியம் என்பதில்லை; ஒத்த அல்லது பலவேறு பட்ட வடிவங்கள் இருக்கலாம். மார்க்சிய அழகியல் இவ்வாறு உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பரஸ்பரம் சார்ந்து இயங்குகிற சக்தியாக விளக்குகிறது.
இதன் பின்னணியில், சிறு கதை என்ற இலக்கிய வடிவத்திற்கும் நாவல் எனும் இலக்கிய வடிவத்திற்குமுள்ள வேறுபாடுகளை, உருவம் உள்ளடக்க வீச்சுக்கள் அடிப்படையில் அறிந்துகொள்ளலாம். மையமான ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு உணர்வு நிலையைச்சுற்றி, ஒரு இடம் அல்லது ஒரு சூழலை மையமாகக் கொண்டு (பிறவும் வரும் எனினும் அவை மையங்களைச் சார்ந்தனவாகவே இருக்கும்), குறுகிய நேரத்தில் வாசிக்கக்கூடிய கூர்மையைக் கொண்டிருப்பது சிறுகதை. நாவல் என்பது, விரிவான சூழல்களையும், விளக்கமான நிகழ்ச்சிகளையும் பலவான உணர்வு நிலைகளையும் கொண்டு, நீண்ட நெடும் நேரத்தில் வாசிக்கக் கூடியதாக அமைந்திருக்கும்; குறிப்பிட்ட வாழ்நிலையின் விளக்கத்தை அதன் பல அம்சங்களைச் சொல்வதாக அமைந்திருக்கும். காட்டாக, கி. ராஜநாராயணன், கம்மவார் எனும் தெலுங்கு பேசும் மக்கள், கரிசல் காட்டுப்பகுதியில், கிராமப் புறங்களில் குடியேறி அமர்ந்திருப்பதையும், அவர்களின் வாழ்க்கையில் உள்ள முரண்களையும் சிரமங்களையும் சொல்ல விரும்புகிறார். இதனைக் ‘கிடை’ எனும் சிறுகதையாக ஆடுகள்- காதல் – கிராமத்து நியாயம் என்ற உணர்வுநிலையில் கம்மவார் மக்களைச் சித்திரிப்பார். ஏறத்தாழ அதேவகையான கிராமத்து வாழ்க்கையை – ஒரு விரிவான தளத்தில், சொல்லுவதற்கு, அவர் நாவல் எனும் வடிவத்தைத் தேர்ந்தெடுக்கிறார். கோபல்ல கிராமம் என்பது அப்படி அமைந்த ஒரு நாவலாகும். இப்படி உள்ளடக்கத்தின் தேர்வும் அதன் தன்மையும் பண்பும், பொருத்தமான வடிவத்தை தேர்ந்தெடுத்துக் கொள்வதைத் தமிழ் இலக்கியங்களின் வழி அறிந்து கொள்ளவேண்டும். இரண்டும் ஒன்றற்கொன்று ஒத்தும் பொருந்தியும் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
3.3.2 எதார்த்தம் அல்லது நடப்பியல்
எதார்த்தம் (realism) என்பது ஓர் உள்ளடக்கம். எதார்த்தம் என்பது ஓர் உத்தி அல்லது வடிவம். ஆம், எதார்த்தம் இவ்விரண்டும் தான். நல்ல இலக்கியத்தில் இவ்விரண்டும் இணைந்து பரிணமிப்பதைக் காணமுடியும். மார்க்சியத் திறனாய்வு இதன் காரணமாகத்தான், இதனை முதன்மைப் படுத்துகிறது. இதனை ஒரு சக்தி வாய்ந்த கருவியாகக் கருதுகிற மார்க்சிய முன்னவர்கள், இது இலக்கியத்தில் எவ்வாறு அமைந்திருக்கும் அல்லது எப்படி இதனை உருவாக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளனர். மார்க்சியத் திறனாய்வுக்கு எதார்த்தவியல் அல்லது நடப்பியல் என்பது ஒரு நல்ல அளவுகோலாக விளங்குகிறது/பயன்படுகிறது. கண்டதைக் கண்டவாறே சொல்லுதலோ, விவரங்களை அடுக்குதலோ எதார்த்தமாகி விடாது. அது இயல்பு நவிற்சி (Naturalism) யாகலாம். வெளித்தோற்றமெல்லாம் உண்மையாகிவிடுவதில்லை.
கண்ணால் காண்பது அல்ல, அதனைத் தீர விசாரித்தறியவேண்டும். காரண காரியங்களோடு வெளிப்படுத்துதல் வேண்டும். சமூகப் பின்புலமும் நடத்தைகளின் சுருக்கநிலைகளும் எதார்த்தத்தைச் சரிவரக் காட்டும்.
இலக்கியங்களில் இது எவ்வாறு வெளிப்படக்கூடும்? விவரங்களின் உண்மையோடு, சித்திரிக்கப்படும் சூழ்நிலைகள் வகைநிலையாகவும் (type) பொருத்தமாகவும் அமைய வேண்டும்; பாத்திரங்களும் அதுபோல, இந்த இந்தச் சூழ்நிலையில் இன்னின்னவாறு இருக்கும் என்று உறுதிபடக் கூறுகிற அளவில் வகைநிலை உடையதாகப் பொருத்தமுற அமைய வேண்டும். இதனை ஏங்கல்ஸ் typical characters in the typical situations என்பார். வகைநிலையான பாத்திரம் என்பது பொதுமையின் பிரதிநிதியாக, அதே நேரத்தில் பிரத்தியேகப் பண்புகளுடன் அமையக் கூடியது ஆகும். மாந்தர்களும் அவர்கள் தோன்றும் சூழல்களும் பொருத்தமாகவும் உண்மையாகவும் இருக்கிறபோது, சித்திரமாகியிருக்கும் இலக்கியம் நடப்பியல் அல்லது யதார்த்தத்தைப் பெற்றிருக்கும்.
இத்தகைய எதார்த்தம், விமரிசனப் போக்குக் கொண்டதாக அமையலாம். சோஷலிசம் போன்ற சமூகக் கட்டுமானத்தை உருவாக்க உதவுவதாகவும் இருக்கலாம்.
3.4 அடிப்படைக் கூறுகள் - 2
உலக நடப்புகள் படைப்பாளனுக்குள் பிரதிபலித்து இலக்கியத்தில் இடம்பெறுகின்றன. இதனை மார்க்சியம் பிரதிபலிப்புக் கொள்கை என்கிறது. படைப்பாளன் சமூக உணர்வுள்ளவனாக உழைப்பவர் ஒடுக்கப்பட்டவர் ஏழைகள் என்ற வர்க்கத்தின் சார்பாளனாக இருந்து படைக்க வேண்டும் எனவும் மார்க்சியம் கூறுகிறது; நம்பிக்கையும் முன்மாற்றமும் தரும் தீர்வுகளையும் படைத்துக்காட்ட வேண்டுமென்று கூறுகிறது. இவையும் மார்க்சியத் திறனாய்வின் அடிப்படைக் கூறுகள்.
3.4.1 பிரதிபலிப்புக் கொள்கை
உலகத்தில் காணப்படுகிற நடைமுறை உண்மைகள், மற்றும் சமூக அமைப்பிலுள்ள வர்க்க முறைகள், வர்க்க உணர்வுகள், சமூக மாற்றங்கள் முதலியன இலக்கியங்களில் பிரதிபலிக்கின்றன; அந்த அந்தக்காலங்கள், அவ்வக் காலங்களில் தோன்றும் இலக்கியங்களில் பிரதிபலிக்கின்றன.இவ்வாறு மார்க்சியம், பிரதிபலிப்புக் கொள்கையை (Theory of Reflexion) கூறுகின்றது. ஆனால் புறவயமாகத் தோன்றுகிற (objective) இவையெல்லாம் அப்படியப்படியே பிரதிபலிக்கின்றன என்று இதனை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதிலும் மார்க்சிய அழகியல் கவனமாக இருக்கிறது. புறவய உண்மை, கலைஞனுடைய அகவய நிலையில் (subjective feelings) சென்றடைகிறது. ஆனால் அது, கலைப் பொருளில் கலை வயப்பட்டு வெளிவர வேண்டும். புறவய உண்மை, அழகியல் உண்மையாக அல்லது கலையியல் உண்மையாக (Aesthetic or Artistic Reality) வரவேண்டும். இதுதான் பிரதிபலிப்பினுடைய பண்பாகும். கலைஞனுடைய பயிற்சி, நோக்கம்,மற்றும் கலைப்படைப்பின் தேவை, தேசிய விடுதலை எனும் ஒரு உண்மை / புறவய உண்மை, எப்படியெல்லாம் நம் கவிஞர்களிடமும் எழுத்தாளர்களிடமும் பிரதிபலித்துள்ளது என்பதை அறியலாம். இது பாரதியிடம் இருந்ததுபோலப் பாரதிதாசனிடம் இருக்க வில்லை; நாமக்கல் கவிஞரிடமும், சுத்தானந்த பாரதியிடமும் இருந்தது போல, தேசிகவிநாயகம் பிள்ளையிடம் இருக்கவில்லை. இவர்களிடம் இருந்தது போல, புதுக்கவிதையாளர்களிடம் இருக்கவில்லை;அல்லது, வித்தியாசமாக இருந்தது. பிரதிபலிப்பினுடைய பல கோணங்கள் இவை. ஒரு பொருள் அல்லது ஒரு நடப்பு, எவ்வாறு ஒரு படைப்பாளியிடம் பிரதிபலிக்கிறது என்று அறிவதன் மூலம், அந்தப் படைப்பையும் படைப்பாளியையும் நம்மால் திறனாய முடியும்.
3.4.2 சார்பு நிலையும் தீர்வும்
ஒரு எழுத்தாளனிடம் சார்பு நிலை இருக்குமா- இருக்கவேண்டுமா- என்பது பல காலமாக இருந்து வரும் கேள்வி. சார்பு என்பது, எழுத்தாளனுடைய பின்னணி, நோக்கம் முதலியவற்றைச் சார்ந்தது. வசதியான பின்புலங்களையுடையவன், அத்தகையவர்க்கு உதவுகிறமாதிரியாக எழுதுவான் என்பது ஒருநிலை. ஆனால் மார்க்சியம் இதனை முழுதுமாக ஒத்துக் கொள்வதில்லை. படைப்பாளியினுடைய உண்மையுணர்வும் (sincerity) படைப்பு மீதான அவனுடைய நேர்மையும்,அவனுடைய உயர் வர்க்கத்தையும் தாண்டிச் சமூக உணர்வு கொண்ட சார்பு நிலைகளைத் தரும் என்கிறார் மார்க்ஸ். பால்ஜாக் (Balzac) என்ற புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் பற்றி அவர் கூறினார். பால்ஜாக், பிரபுக்களைக் கொண்ட நிலவுடைமைச் சமுதாய அமைப்பில் நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டவர். ஆனால், தன் காலத்துச் சமுதாயத்தை ஆழமாகவும் உண்மையாகவும் கண்டு அதனை நேர்மையுணர்வுடன் சித்திரிக்கிற முயற்சியின் காரணமாக, தனக்குப் பிடித்தமான பிரெஞ்சு நிலவுடைமைச் சமுதாயம், தன்னுடைய கண்ணுக்கு எதிரேயே நொறுங்கி விழுவது கண்டு அப்படியே உண்மையாக எழுதுகிறார். எனவே, உண்மைகளின்பால் தனக்குள்ள ‘உண்மை’ அல்லது நேர்மை காரணமாகத் தன்னுடைய சொந்த வர்க்க நலன்கள் மற்றும் அரசியல் பேதங்களுக்கு எதிராகச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிவிட்டார். எனவே சார்பு என்பது, எழுத்தாளனுடைய நேர்மையையும் உண்மையின் தீவிரத்தையும் பொறுத்தது ஆகும்.
சார்பு என்பதற்காக அந்தச் சார்பை வெளிப்படுத்த எழுத்தாளன் பிரச்சாரம் செய்ய வேண்டியதில்லை. கலைத்தன்மையோடு அது இயல்பாக வெளிப்பட வேண்டும் .எனவே, கதைகளில் தீர்வுகள் சொல்லுவது (நீதிக்கதைகளில் இப்படி உண்டு.) தவிர்க்கப் படவேண்டும் என்று மார்க்சியத் திறனாய்வு கூறுகிறது. முடிவுகள், ‘தட்டிலே வைத்துத் தரப்படுவன அல்ல.’ பிரச்சனைகளுக்குத்தான் தீர்வு. இது முக்கியமாக இரண்டு வகைகளில் வெளிப்படுகின்றது. முதலில் – தீர்வு, தீர்வின்மை என்ற பேச்சுக்கே இடமில்லாமல், கதைத்தளத்துக்குள் பரவி நின்று சித்திரமாக அமைந்திருப்பது. அதிலிருந்து தீர்வினை, வாசகன் எளிதாக ஊகித்து அறிந்து கொள்ளுவான். இனி இரண்டாவது -பாத்திரங்களின் மற்றும் கதைச் சூழமைவுகளின் இயங்கு திசை வேகத்தின் காரணமாக, கதை எனும் அந்தத் தளத்தினுள் ஒரு முனைப்புப் பெற்று வெடிக்கப் பெறுவது. இத்தகைய தீர்வு, வெளிப்படையாக இருப்பது போல் தோன்றினாலும், இது பல சமயங்களில், படைப்புகளின் கலைத்தன்மையோடு நெருக்கமாக இணைந்திருக்கக் கூடியதேயாகும். இந்த இரண்டுமல்லாது, தீர்வு, வெறுமனே நீதி சொல்லுவதாகவோ, பிரச்சாரம் செய்வதாகவோ இருக்கக் கூடாது என்று மார்க்சியத் திறனாய்வு கூறுகிறது. சமூகஉணர்வும் வேண்டும் அதேபோது கலைத்தன்மையும் வேண்டும் என்று இத் திறனாய்வு முறை வலியுறுத்துகிறது.
3.5 தொகுப்புரை
சமுதாயவியலோடும் வரலாற்றியலோடும் நெருக்கம்கொண்டது மார்க்சியத் திறனாய்வு. இலக்கியம் மக்களிடமிருந்து தோன்றுகிறது; மக்களிடம் செல்கிறது; திறனாய்வு இதற்கு அனுகூலமாக இருக்க வேண்டும் என்று அது கூறுகிறது. மார்க்சியம் அரசியல்- பொருளாதார – சமூக அறிவியல் சித்தாந்தம் எனினும், சமூக அமைப்பை இயங்குநிலையோடு காண்பதாலும், அந்தச் சமூகத்தை, மனித மேன்மை குறித்ததாக ஆக்க வேண்டும் என்று விரும்புவதாலும், கலை, இலக்கியம், அழகியல் ஆகியன குறித்தும் மார்க்சும் ஏங்கல்சும் பேசுகின்றனர். பொருளாதார அமைப்பு சமூகத்தின் அடிக்கட்டுமானமாக, இறுதித் தீர்மான சக்தியாக விளங்கினாலும், மேல்கட்டுமானங்களில் ஒன்றாகிய இலக்கியம், சமூக- பொருளாதாரக் கட்டமைப்புக்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இலக்கியம், இந்நிலையில், அவ்வக்காலச் சமூகத்தின் பிரதிநிதியாகவும் பிரதிபலிப்பாகவும் அமைகின்றது. இலக்கியத்தில் உள்ளடக்கமே பிரதானமானது என்றாலும் அதனை வடிவமைக்கிற உருவமும் முக்கியமானது ஆகும். இலக்கியம், நேர்த்தியாகவும் கலையியல் தன்மையோடும் அமைய வேண்டுவது; எனவே புறவய உண்மைகள், இலக்கியத்தில் கலையியல் உண்மைகளாக மறு ஆக்கம் பெறுகின்றன. இத்தகைய உண்மைகளில் நேர்மையும் அக்கறையும் இருக்க வேண்டுவது படைப்பாளியின் பொறுப்பு ஆகும் . மார்க்சியத் திறனாய்வு, இவ்வாறு சமூகத்தின் மேன்மைக்கு உரியதாக இலக்கியத்தைக் கண்டு மதிப்பிடுகிறது; படைப்பாளியை ஊக்கப் படுத்துகிறது.
பெண்ணியத் திறனாய்வு
4.0 பாட முன்னுரை
இலக்கியத் திறனாய்வு முறைகளில் பெண்ணியம் (Feminism) சிறப்பான தொரு பார்வைக் கோணத்தைத் தந்திருக்கிறது. எந்தத் திறனாய்வுக்கும் அதனுடைய பார்வை, கூர்மையும் தெளிவும் கொண்டிருப்பது மிகவும் அவசியம். பெண்ணியம், அத்தகையதொரு கூர்மையைத் தந்திருப்பதோடு, வழக்கமான விளக்கங்களுக்கு மாற்றாகப் (alternative) புதிய விளக்கங்களை- பெண்மை- என்ற கோணத்திலிருந்து தந்திருக்கிறது. எனவே திறனாய்வுக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்திருக்கிறது. நவீன இலக்கியத்தை எழுதுவதற்குரிய புதிய தளங்களை அது முன்வைக்கிறது; அதேபோது, வாழ்க்கைநிலையிலுள்ள எதிரும்புதிருமான பிரச்சனைகளின் உண்மைகளைக் காட்டிச் சிந்திக்கவும் தூண்டுகிறது. அண்மைக் காலமாக – குறிப்பாக 1970-களுக்குப் பிறகு, தமிழகத்தில் பெண்விடுதலை முழக்கங்கள் கேட்கத் தொடங்கியுள்ளன. அதன் பின்னணியில் இலக்கியத்திலும் பெண்ணியச் சிந்தனை பெருகி வந்துள்ளது.
4.1 பெண்ணியம் : விளக்கம்
Feminism என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக வழங்குவது, பெண்ணியம் என்ற சொல்லாகும். இதனையே சிலர், ‘பெண்ணிலை வாதம்’ என்றும் சொல்லுவர். பெண்ணின் நிலையிலிருந்து கருத்துக்கள் அல்லது வாதங்கள் எழுவது, பெண்ணியவாதம் ஆகும். ஆண்டாண்டுக் காலமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் பெண் அடிமைப்பட்டே இருந்தாள். குடும்ப நிர்வாகம் முதற்கொண்டு பல கடமைகளைச் செய்தாலும், இனவிருத்தி செய்து குடும்பத்தைப் பெருக்கினாலும், அன்பு, பாசம் முதலிய பல நல்ல பண்புகளைப் பெற்றிருந்தாலும் பெண், தொடர்ந்து அடிமையாகவே இருக்கிறாள். இந்தச் சமுதாயம் ஆண்களை மையமிட்டது; எல்லாக் கருத்துக்களும் செயல்களும் ஆண்களை மையமிட்டே நடக்கின்றன. இவ்வாறு பெண்ணியம் தீவிரமான கருத்துக்களை முன்வைக்கிறது. இத்தகைய சமுதாயச் சூழ்நிலையை மாற்றவேண்டும்; பெண், விடுதலை பெற வேண்டும் என்று பெண்ணியம் கூறுகிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆளுமை (personality) உண்டு; அந்த ஆளுமை காப்பாற்றப்பட வேண்டும்; வளர்க்கப்பட வேண்டும்; காட்டிக்கொள்ளப்பட வேண்டும் – என்று பெண்ணியம் கூறுகின்றது. பெண் விடுதலை என்பது, சமூக – பொருளாதார அரசியல் – பண்பாட்டுத் தளங்களில், பெண் சுயமாக இயங்குவதற்கு வேண்டிய உரிமைகளைப் பெறுவது – போராடியாவது பெறுவது- ஆகும்.
4.1.1 பெண்ணியம் : வரலாறு
கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெண்ணியம் என்ற கோட்பாடு, நவீனத்துவத்தின் சூழமைவில், எழுந்தது. தொடர்ந்து பிரான்சு நாட்டைச் சேர்ந்த சய்மோன் தெபௌவோ (Simon De Beauvoir) எழுதிய இரண்டாவது பாலினம் (The Second Sex; 1949) என்ற பிரசித்தமான நூலை முன்னோடியாகக் கொண்டு, பெண்ணியம் ஓர் அறிவார்ந்த கொள்கையாகவும் போராட்டக் கருவியாகவும் முன்வைக்கப்பட்டது. பல நாடுகளில் பெண்ணுரிமை ஒரு பிரச்சினையாகப் பேசப்பட்டது; இயக்கங்களும் தோன்றின. இந்தியாவில் சமூகச் சீர்திருத்த உணர்வுடைய பலர் இது பற்றிப் பேசியும் எழுதியும் வந்தனர். தமிழகத்தில், முதல் நாவலாசிரியராகிய மாயவரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பெண் விடுதலை பற்றி எழுதியுள்ளார். பெண்மதி மாலை அவருடைய நூல்களில் ஒன்று. திரு. வி.க.வின் பெண்ணின் பெருமை இவ்வகையில் மிகச் சிறந்த ஒரு நூலாகும். தமிழகத்தில் பெண் விடுதலை பற்றி அழுத்தமாகவும் புதுமைக் கண்ணோட்டத்துடனும் எழுதியவர்கள் இருவர். ஒருவர், மகாகவி பாரதியார்; இன்னொருவர் பெரியார் ஈ. வெ. இராமசாமி. தமிழகத்தில் 1980-கள் வாக்கில் இயக்கங்கள் பல தோன்றின. இந்தச் சூழ்நிலையில்தான் பெண்ணுரிமை தொடர்பான இலக்கியங்களும் தோன்றின. வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம், புனைவியல் நவிற்சியாக ஒரு பெண்ணின் அற்புத ஆற்றலைக் கதையாக்கித் தந்துள்ளது.
4.2 பெண்ணியம் : பல கோணங்கள்
பெண்ணியம் அல்லது பெண்ணிலை வாதம் என்பது ஒரே நிலைப்பாடு கொண்டதல்ல. அதனுள் பல கருத்தியல்கள் – கோணங்கள் உண்டு. அவற்றுள், ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.
4.2.1 மிதவாதப் பெண்ணியம்
இது பெண்ணின் சிறப்புக்களைக் கூறுவதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறது கடவுளுக்கு முன், ஆண் – பெண் எல்லோரும் சமம் என்று சொல்லுகிற அதே நேரத்தில் அதற்காகப் போராடுவதைத் தவிர்க்கிறது. வழக்காடுமன்றங்கள், சட்டமன்றங்கள் முதலியவற்றிற்குப் போவதில் ஆர்வம் கொள்கிறது.
4.2.2 போராட்ட குணம் மிக்க பெண்ணியம்
பெண் உரிமைகளைப் போராடித்தான் பெற முடியும்- பெறவேண்டும் என்று இது வற்புறுத்துகிறது. பெண்களுக்குச் சொத்துரிமை போன்றவற்றிற்காக இது போராடிப் பெற்றும் தந்துள்ளது.
4.2.3 தீவிரவாதப் பெண்ணியம்
நவீனப் பெண்ணியம் என்று சொல்லுகின்ற இது, ‘அரசியல் அமைப்புச் சட்டங்களிலும் அரசு ஆணைகளிலும் வழங்கப்பட்டுள்ள ஆண் – பெண் சமத்துவம் நடைமுறையில் அவைக்குதவாதது’ என்று குற்றம் காட்டுகிறது. குடும்பம், பாலியல் உறவு முதலியவை பெண்ணை அடிமைப் படுத்துகின்றவை; எனவே இவற்றிலிருந்து பெண் விடுதலையாகி, வெளியே வர வேண்டும் என்று பேசுகிறது.
4.2.4 புரட்சிகரப் பெண்ணியம்
பாலியல் உரிமை (sexual right), கட்டற்ற அல்லது கட்டுப்பாடற்ற பாலியல் உறவு (free sex), பெண் – ஓரினச் சேர்க்கை (lesbianism), குழந்தை பெறுவதை மறுத்தல்- முதலியவற்றை இது வலியுறுத்துகிறது.
4.2.5 சமதர்மப் பெண்ணியம்
குடும்பத்திற்குள்ளும் அதற்கு வெளியேயும் பெண், பொருளாதார அடிப்படையில் சுய நிலையும் பெறவேண்டும். அப்போதுதான் பெண் விடுதலை சாத்தியமாகும் என்று சொல்கிறது. ஒட்டுமொத்தமான சமூக – சமதர்ம அமைப்பிலேயே பெண்ணும் நிரந்தரமாக சமத்துவநிலை பெறுகிறாள் என்று இது கூறுகிறது. இந்தியாவில்/ தமிழகத்தில், பெண்ணியச் சிந்தனைகளில் இதுவே பெரும்பான்மையாகக் காணப்படுகிறது.
4.3 பெண்ணியத்திறனாய்வு : வரையறைகள்
‘சமூக வரலாற்றில், மக்களில் பல பகுதியினர் ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வந்தனர்; அதற்கான காரணகாரியங்களை வெளிப்படுத்த வேண்டும்; அதன் வழி, மாற்றங்களையும் கொண்டு வரவேண்டும்” – இது, பெண்ணியத் திறனாய்வின் நோக்கமாகும். பெண்ணின் நோக்கிலிருந்து செயல்படுவது இத்திறனாய்வு. பெண் விடுதலை என்ற ஒளியில் பெண்ணியத் திறனாய்வு என்பது, சமுதாயம் என்ற பன்முகப்பட்ட அனுபவங்கள் தந்த உணர்வு நிலையில், பெண்ணின் ஆளுமை எவ்வாறு இலக்கியத்தில் வெளிப்படுத்தப்படுகிறது என்று பார்ப்பதாக அமைகிறது. ஆனால் அத்தோடு அமையாது, இதுகாறும் பெண்கள் பற்றிச் சொல்லப்பட்டு வந்த நியாயங்கள், உருவாக்கப்பட்டு வந்த மதிப்புகள், கற்பிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட புனிதங்கள் என்பனவற்றை அடையாளங்கண்டு விளக்குவது, பெண்ணியத் திறனாய்வு ஆகும். இந்தச் சமூக அமைப்பு, ஆண்களை மையமிட்டது; அதனை எதிர்கொண்டு, பெண்களின் எதிர்வினைகளை இது முன்வைக்கிறது.
வரலாறு, கருத்துநிலை, வடிவம் நடை முதலியவற்றில், பெண்ணியப் படைப்பாளிகள், தமக்கென ஒரு குறிப்பிட்ட போக்கினையும் குறிப்பிட்ட பாணியையும் உருவாக்கிக் கொள்வதற்குப் பெண்ணியத் திறனாய்வு தூண்டுகிறது. இவ்வாறு எலைன் ஷோவால்ட்டர் (Eline Showwalter) கூறுகிறார். மரபுவழிவந்த இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுவரும் பெண் பற்றிய போலியான கருத்துருவாக்கங்களை உடைத்தெறிவதும், பெண் அடக்குமுறைகளின் பல வடிவங்களை வெளிக்கொணர்வதும், பாலியல் (sex) மற்றும் பாலினம் (gender) ஆகியவற்றை மையப்படுத்தி, அதிகார உறவுகளையும் ஆதிக்க மனப்பான்மைகளையும் எடுத்துக்காட்டுவதும் பெண்ணியத் திறனாய்வின் பணிகளாகும். இவ்வாறு கேட் மில்லட் (Kate Millet) கூறுவார்.
சமூகவியல், வரலாற்றியல், உளவியல், மார்க்சியம், அமைப்பியல், பின்னை அமைப்பியல் முதலிய ஏனைய பிற கோட்பாடுகளோடு இது நெருக்கம் கொண்டிருக்கிறது. மேலும், இதன் கருத்துநிலைகள், மிதவாதம், தீவிரவாதம் முதலிய பல பண்புகளைப் பெற்றிருக்கின்றன.
4.3.1 பெண்ணியத்திறனாய்வு : மூன்று கோட்பாடுகள்
மேலை நாடுகளின் சூழலில் பெண்ணியம், மூன்று வகையான கோட்பாடுகளாக வெளிப்படுகின்றது. அவை:
1. பிரஞ்சுப் பெண்ணியத் திறனாய்வு. இது உளவியல் பகுப்பாய்வு முறையில் பெண்ணியத்தை விளக்கவேண்டும் என்கிறது. பெண்ணின் சுயமான விருப்பங்கள், உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், இவற்றின் முறிவுகள், சிதைவுகள் முதலியவை உள்ளத்தே அழுத்தப்பட்டிருக்கின்றன (Repression). அவை ஏற்புடைய சூழ்நிலைகள் வருகிறபோது பல வடிவங்களில்- குறியீடுகளாகவோ, படிமங்களாகவோ, சொற் சிதறல்களாகவோ- வெளிப்படுகின்றன. இவ்வாறு பிரஞ்சு பெண்ணியக் கோட்பாடு சொல்கிறது.
2. ஆங்கிலப் பெண்ணியத் திறனாய்வு. இது முக்கியமாக, மார்க்சிய ஒளியில் பெண்ணியத்தை விளக்குகிறது. பெண் ஒடுக்கப்பட்டவள் (Oppression) என்ற கோணத்தில், வரலாற்றின் இறுக்கத்தில் சமுதாயத்தில் பெண் ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறாள் என்றும் பெண்ணடிமைத்தனம் பல்வேறு வடிவங்களையும் செயல்நிலைகளையும் கொண்டிருக்கிறது என்றும், இது பெண்ணியத்தைக் காணுகின்றது.
3. அமெரிக்கப் பெண்ணியத் திறனாய்வு. இது,முக்கியமாக, புறவய நிலைக்குச் செல்லாமல், இலக்கியப் பனுவலை (text) மையமிட்டே செல்லுகின்றது. பெண்ணியம்,இலக்கியப் பனுவல்களில் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் காட்டிக் கொள்கிறது, அல்லது, அதனைச் சொல்லிக் கொள்கிறது (Expression) என்று காண்பதை வலியுறுத்துகிறது. பின்னை அமைப்பியல் கூறும் வழியை இது பயன்படுத்திக் கொள்கிறது.
இந்தியச் சூழலிலோ, தமிழ்ச் சூழலிலோ பெண்ணியத்திறனாய்வு, இவ்வாறுதான் இருக்கிறது என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாது. இந்த மூன்றனுடைய தாக்கங்களும் இங்கே பரவலாக உண்டு. ஆயினும், முக்கியமாக,ஆங்கிலப் பெண்ணியத் திறனாய்வுமுறையே, இங்கே அதிகம் வழக்கத்திலுள்ளது என்று சொல்ல வேண்டும்.
4.3.2 பெண்ணியப் பார்வையில் பெண்ணடிமை
வரலாற்று நிலையில் தமிழ்ச் சமூக அமைப்பில் பெண்ணடிமைத்தனம் எவ்வாறு இருந்தது என்பதனையும்,அதனைச் சங்கப்பாடல் எவ்வாறு பதிவு செய்திருக்கிறது என்பதனையும் ஓர் எடுத்துக்காட்டு மூலம் இங்கே காணலாம். மன்னன் பூதபாண்டியன் மாண்டு போகின்றான். மனைவி பெருங்கோப் பெண்டு, அவன் எரியுண்ட ஈமத்தீயில் தானும் விழுந்து சாக முனைகிறாள். அருகே இருந்த சான்றோர் தடுக்கின்றனர். அதனை மறுத்து, ‘பல்சான்றீரே பல் சான்றீரே….. பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான்றீரே..’ என்று விளித்து அவள் பேசுகிறாள்!
அணில் வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள் எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
பரல்பெய் பள்ளிப்பா யின்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ…
நள்ளிரும் பொய்கையும், தீயும் ஓரற்றே.”
இந்தப் பாடலைக் கொண்டு, பெருங்கோப் பெண்டு, எவ்வளவு அன்பு கொண்டிருந்தாள் அவனிடம் என்றும், என்னே அவள் கற்புத் திறன் என்றும் வியந்து பலர் விளக்குகின்றனர். ஆயின், பெண்ணியத் திறனாய்வு இந்த விளக்கத்தை மறுக்கிறது. இந்தப்பாடலில், எங்காவது பூதபாண்டியன்- பெருங்கோப்பெண்டு அன்பு சொல்லப்பட்டிருக்கிறதா? இல்லை. காதல் கொண்ட அவனைப் பிரிந்திருக்கமுடியாது என்று எங்காவது அவள் சொல்லியிருக்கிறாளா? இல்லை. கணவன் இறந்த பின், அந்தப் பொறுப்பு இவளுக்குத் தரப்படலாம் என்று குறிப்புரையாக எதாவது உண்டா? இல்லை. ஆனால் கைம்மை நோன்பின் கொடுமை, பெயரளவில் உயிரோடு இருந்து நடைமுறையில் செத்துக்கொண்டிருக்கும் அவலம்- இதுதானே பாடல் முழுதும் இடம் பெறுகிறது! பெண்ணடிமைத்தனம் ஆழமாக வேரூன்றிக் கிடப்பதைப் பெண்ணியத் திறனாய்வு வெளிப்படுத்துகின்றது. அந்தப் பெண்- பெருங்கோப் பெண்டு, இறுதியில் “உயவற் பெண்டிரேம் அல்லேம்” என்று (உயவற் பெண்டிர் = கைம்மை நோன்பால் வருந்தும் பெண்டிர்) பிரகடனப்படுத்துவது, வேதனைகளின் குமுறலாக மட்டுமல்லாமல், ஒரு கலகக்குரலாகவும் (rebellious voice) வெளிப்படுகிறது. இவ்வாறு, பெண்ணியத் திறனாய்வு, மறைந்து கிடப்பவற்றிலிருந்து உட்பொருள் கண்டு விளக்குகிறது.
4.3.3 ஆண் – பெண் சமத்துவம்
எல்லா நிலைகளிலும் ஆணும் பெண்ணும் சமநிலையிலிருக்க வேண்டும்; சலுகைகள் வேண்டாம் – உரிமைகளே வேண்டும்; பெண்ணின் பங்கு இல்லையென்றால், குடும்பம் மட்டுமல்ல, சமூக முன்னேற்றமும் தடைப்படும் என்று பெண்ணியத் திறனாய்வு கூறுகிறது. ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் என்ற நாவலை முன்வைத்து இதனைப் பார்க்கலாம். எழுபதுகளுக்கு முன்னால், வழக்கமான குடும்ப நாவல்கள் எழுதியவர், இவர். அதன் பின்னர் சமூக உணர்வும் போராட்ட குணமும் கொண்ட படைப்புக்களை எழுதத் தொடங்கினர்.கரிப்பு மணிகள் என்ற நாவல், தூத்துக்குடி உப்பளத் தொழில் பற்றியதாகும். உப்பளத்தில் பல பிரச்சனைகள்- வேலை நிரந்தரமின்மை, தொழிலாளர்களுக்குப் பல வசதிக்குறைகள், போதாத கூலி, பெண்தொழிலாளர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – இப்படி அவ்வப்போது பிரச்சனைகள். சங்கம் வைக்கிறார்கள். போராடுகிறார்கள். ஆனால் பாதிக்கப்படுகிறார்களே தவிர, வெற்றி கிடைக்கவில்லை. காரணம்? நாவலாசிரியர், கதையின் ஊடேயும் இறுதியிலும் முத்தாய்ப்பாக முன் வைக்கும் கருத்து: தொழிற் சங்கத்திலும் எல்லோரும் ஆண்கள். போராட்டத்தில் தலைமை தாங்குபவர்களும் முன்னணியில் நிறுத்தப்படுபவர்களும் ஆண்கள். தொழிலாளர்களுள், பாதிக்குமேற்பட்டவர்கள் பெண்கள்; ஆனால், சங்க அமைப்புகளிலும் போராட்டங்களிலும் அவர்களின் பங்கு இல்லை. ஆண் ஆதிக்கம் வெற்றி தேடித்தராது. பெண்களின் பங்கு- செயல்பாடு- இல்லையேல் சமூக நியாயங்களும் உரிமைகளும் கிடைக்காது. இந்தக் கருத்து, நாவலின் சாராம்சமாகச் சித்திரிக்கப்படுகிறது. எனவே ஆண் பெண் சமத்துவம் என்பது சமுதாயத்தின் பல பரிமாணங்களிலும் ஏற்படவேண்டும் என்று பெண்ணியம் வலியுறுத்துகிறது.
4.3.4 தொன்மங்களும் பெண்ணியமும்
தொன்மம் (myth) என்பது பழங்கதை வடிவம். நீண்ட வரலாற்றின் சில நிகழ்வுகளையும் உணர்வுகளையும் சாராம்சமான கதை வடிவத்தில் ஆக்கித் தருவது தொன்மம். சங்க இலக்கியத்தில் பாரி மகளிர், வெள்ளி வீதியார், பேகன் மனைவி கண்ணகி, நன்னனால் (காவல் மரத்தின் மாங்கனி தின்றதற்காகக்) கொலை செய்யப்பட்ட பெண், பூதபாண்டியனின் மனைவி- இவர்கள் பற்றிய செய்திகள் தொன்மம் சார்ந்தவை. பெண்ணியத் திறனாய்வின் மூலம், இந்தப் படைப்புகளை ஆராய நிறைய வாய்ப்புண்டு. பெண் நிராகரிக்கப்படுதல், அவலத்திற்குள்ளாதல் முதலிய நிலைகளுக்கு ஆளாகிறாள். சமுதாயவியல் அடிப்படையில் பெண் ஏன் அடிமையானாள் என்பதை ஆராயலாம். களவு- கற்பு ஆகிய காதல் உறவுகளில், பெண்ணுக்கு வரையறைகளும் ஒழுக்கக்கட்டுப்பாடுகளும், அச்சம் மடம் நாணம் போன்ற உணர்வுகளும் வலியுறுத்தப்படுகின்றன என்ற செய்தியும் இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு உதவும்.
4.3.5 பெண்மொழியும் பெண் உடலும்
மரபு வழியில் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துமொழி, ஆண் ஆதிக்கத்தைச் சார்ந்தது என்று பெண்ணியச் சிந்தனையாளர்கள் கருகின்றனர். உடல்வலு, வன்மை சார்ந்த மனம், அலட்சியம், ஒதுக்கம் (ஒதுக்கி வைக்கும் மனப்பான்மை), ‘தான்’ என்ற அகந்தை – முதலிய உணர்வுகள் சார்ந்த மொழி, ஆணின் மொழி. குடும்ப உறவுகளிலும் சமூக உறவுகளிலும் பணிந்து போகிறதாகப் பெண்ணின் மொழி வெளிப்படுகிறது. பெண் உரிமை, பெண் விடுதலை முதலிய சூழல்களில் பெண்ணின் மொழி கூர்மையடைகிறது; இது, புதிய ஆளுமையைப் பிரதிபலிக்கிறது என்று பெண்ணியத் திறனாய்வு கருதுகிறது.
ஆண்டாண்டுக் காலமாகப் பெண்களின் உடலை – உடல் உறுப்புகளை ‘அழகு’ என்ற பெயரில் போகப் பொருளாகவே கருதி வருணித்து வருகிறார்கள் என்று பெண்ணியம் கூறுகின்றது. ஆனால், பெண், தன் உடல் உறுப்புகளின் வலிமையையும் மேன்மையையும் முதலில் அறிந்துகொள்ள வேண்டும் என்று பெண்ணியம் சொல்லுகிறது. பாலின வேறுபாடு், உடல்மொழி ஆகியவற்றைக் கொண்டு பெண் ஒடுக்கப்படுவதையும், இதன் பின்னால் அதிகார அரசியல் செயல்படுவதையும் வெளிப்படுத்துகிறார், கேட் மில்லட் என்ற பெண்ணியத் திறனாய்வாளர், இவர் எழுதிய “பாலியல் அரசியல்” என்ற நூல் (Sexual Politics) இவ்வகையில் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது.
தமிழில் பெண் கவிஞர்கள் பலர் இன்று பெண்ணியச் சிந்தனை யுடையவர்களாக விளங்குகிறார்கள். அவர்களைப் பற்றியும் அவர்களுடைய கவிதைகளில் பெண்ணியம் படிந்து கிடக்கும் படிமங்கள், குறியீடுகள், பலவித சொல்லாடல்கள் பற்றியும் ஆராய்வது பெண்ணிலை வாத ஆராய்ச்சிக்கு உதவக் கூடியதாகும்.
பெண் – உடல்மொழி எனும்போது கருப்புப் பெண்ணியமும் (Black Feminism) பெண்ணியல் சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுவது நினைவுக்குவரும். பெண்ணடிமைத்தனம், பொதுவாக இருந்தாலும் அதனுள்ளும் கறுப்பர் இனத்துப் பெண்கள் கூடுதலாகவே பாதிக்கப் படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. தமிழ்ச் சூழலில், சிவப்பு – கறுப்பு என்ற நிறங்கள் பேதப்படுத்தப்பட்டு அதனடிப்படையில் பெண்கள் அவமானப்படுத்தப் படுகின்றனர். தொலைக்காட்சி ஊடகம், பெண்களை மோசமாகச் சித்திரிப்பதில், இந்த நிற வேற்றுமை மிகவும் வன்மை யுடையதாகக் காணப்படுகிறது. பெண்ணியத் திறனாய்வு இதனுடைய சித்திரிப்பு முறைகளைக் கவனமாக எடுத்துக் கொள்ளுகிறது.
4.4 பெண்ணியத் திறனாய்வின் பணி
பெண்கள் எவ்வாறு இலக்கியங்களிலும் ஊடகங்களிலும் சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று விளக்கவியல் அடிப்படையில் பார்ப்பது போதாது. சமூக- பொருளாதார- பண்பாட்டுத் தளங்களில் பெண்களின் சில இருப்புகளையும் எழுச்சிகளையும், தருக்கவியல் அடிப்படையிலும், எதிர்நிலையிலான முரண்கள் வழியாகவும், வரலாற்றுச் சூழமைவுகள் மற்றும் எதிர்காலத்துவம் என்ற பின்னணியிலும் பார்க்கப்பட வேண்டும். அதுவே பெண்ணியத் திறனாய்வின் பணியாகும்.
படைப்பாளிகள் ஆண்களா, பெண்களா என்பது முக்கியமல்ல- என்றாலும், பெண் என்ற அடையாளம், பெண் என்ற உணர்வு, பெண் என்ற அனுபவம் நேரடியாக இருக்கும் என்பதால் பெண் எழுத்தாளர்களிடம் பெண்ணியச் சிந்தனையையும் பெண்ணிய மொழியையும் எதிர்பார்ப்பது என்பது இயல்பே. பெண்ணிய எழுத்து, ஒடுக்கப்பட்ட பெண்ணின் உணர்வுகளை வெளியே கொண்டு வர வேண்டும். ஏனென்றால், பெண்ணியம் என்பது, சுயம் பற்றிய உணர்வு, போராட்ட குணம், அடக்குமுறை அல்லது ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஓர் எழுச்சி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
4.5 தொகுப்புரை
இலக்கியத் திறனாய்வின் புதிய பரிமாணங்களில் ஒன்று, பெண்ணியத் திறனாய்வு ஆகும். நவீனத்துவத்தின் ஒரு வெளிப்பாடாகவும், உலக அளவில் விடுதலை பற்றிய உணர்வுகளின் ஒரு அங்கமாகவும் தோன்றியது, இது. வரலாறு நெடுகிலும் சமூக அமைப்பில், பெண் அடிமைப்பட்டுக் கிடக்கிறாள்; தான், அடிமைப்பட்டிருப்பதும் அதிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதும் அவளுக்கே தெரியாது. ஆனால், அவளுக்குள் ஒடுக்கப்பட்ட நிலைமைகளுக்கு எதிராகப் போராட்ட உணர்வு தோன்றி வருகிறது என்ற கருதுகோள்களைக் கொண்டது,பெண்ணியம்.
இலக்கியத்தில் பெண் சித்திரிக்கப்படுகிறாள். ஆனால், எப்படிப் பட்டவளாக அவள் சித்திரிக்கப்படுகிறாள் – அவளுடைய ஆளுமையும் அவளுடைய தனித்தன்மைகளும், வெளிப்படும்படியாகவா – என்ற கேள்வியோடு, பெண்ணியத் திறனாய்வு தோன்றுகிறது. இதுகாறும் வெளிப்படாத பல உண்மைகளையும் சமூக அவலங்களையும் இந்தத் திறனாய்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் திறனாய்வில் தருக்கவியலும் உண்டு; கலகக் குரலும் உண்டு.
தமிழ்ச் சூழலில், பெண்ணியத்தை முன்னிலைப்படுத்திய சிந்தனையாளர்களில் மகாகவி பாரதியார், பெரியார் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். பெண்ணியச் சிந்தனையின் வழியாகத் தமிழில் சில நாவல்களும் வெளிவந்துள்ளன. அம்பை, ராஜம்கிருஷ்ணன், உமா மகேசுவரி முதலியவர்களும், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன், றஞ்சி, தயாநிதி, மல்லிகா, வசந்திராஜா, கருணா முதலிய ஈழத்துப் புலம்பெயர் (பெண்) எழுத்தாளர்களும் குறிப்பிடத் தகுந்தவர்கள், அண்மைக் காலமாகத் தமிழில் பெண் கவிஞர்கள் பலர், உணர்வுப் பூர்வமாகவும் எழுச்சியுடனும் பெண்ணிய நிலைப்பாட்டுடன் எழுதி வருகிறார்கள். பெண்ணியத் திறனாய்வில் ஈடுபாடு கொண்ட / தடம் பதித்த பெண் எழுத்தாளர்கள் குறைவு என்றாலும், இத்துறை மேலும் மேலும் வளர வாய்ப்புக்கள் பல உண்டு.
தலித்தியத் திறனாய்வு
5.0 பாட முன்னுரை
ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் என்ற வகைமைக்குள் தொழிலாளர், கூலி விவசாயி, புலம்பெயர்ந்தோர், மற்றும் பெண்கள், தலித்துக்கள் முதலியோருடைய பிரச்சனைகள் குறித்த எழுத்துக்கள் அடங்கும். சென்ற பாடத்தில் பெண்ணியம் பற்றிப் பார்த்தோம். அது எப்படி ஒடுக்கப்பட்டோர் வழிச் சிந்தனை முறையோ அதுபோன்று தலித்தியம் என்பதும் அத்தகைய பண்பு கொண்டதேயாகும். பெண்ணியம், மனிதகுலத்தில், பால் வேறுபாடு எப்படிப் பல கொடுமைகளுக்குரியதாக ஆகிறது என்பது பற்றிப் பேசுகிறது. தலித்தியம் என்பது சாதியப் படிநிலைகள் கொண்டு மனித சமூகம் பிரிக்கப்பட்டிருப்பதன் அவலங்களைப் பற்றிப் பேசுகிறது. பெண்ணியம் உலகளாவியது; ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குமேல் பல வடிவங்களில் – பல குரல்களில் பேசப்பட்டு வருவது. தலித்தியம், வருணாசிரம தருமம் வேரூன்றியுள்ள இந்தியப் பெருநாட்டில் பரவிக்கிடப்பது. இதற்கும் ஒரு நூற்றாண்டுக்கால வரலாறு கூறப்பட முடியும் என்றாலும், மிக அண்மைக் காலத்தில்தான், அது ஒரு கொள்கை வடிவமாகவும் போராட்டக் கருவியாகவும் ஆகியுள்ளது. இலக்கியத்திலும் தலித்து- தலித்தியப் பார்வை ஆழமாகவும் கூர்மையாகவும் இடம் பெற்று வருகிறது. எனவே, திறனாய்வு இதில் அக்கறை கொள்வது இயற்கையே.
5.1 தலித்தியம் - ஒரு விளக்கம்
அண்மைக்காலத்தில், சமூக – பண்பாட்டுத்தளத்தில் தோன்றியுள்ள தலித் எழுச்சி, கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது. பரவலாகவும் சற்று ஆழமாகவும் உரத்த குரலில் இது தன்னைக் காட்டி வருகிறது. ‘தலித்’ என்ற சொல் மராட்டியச் சொல். ‘ஒடுக்கப்பட்ட மக்கள்’ என்பது இதன் பொருள். இது சாதியைக் குறிப்பதல்ல. ஆனால், இன்று, ‘தாழ்த்தப்பட்ட மக்கள்’ என்ற பொருளை இது உணர்த்துகிறது. பஞ்சமர், அட்டவணைச் சாதிகள் (Sheduled castes and tribes), அரிசனங்கள், ஆதி திராவிடர்கள் என்றெல்லாம் முன்னர் அழைக்கப்பட்டு வந்த (அரசு நிலையில் இன்றும் அப்படித்தான்) வகுப்பினர், அண்மைக்காலமாகத் ‘தலித்துகள்’ என்று அடையாளப்படுத்தப் படுகின்றனர். இன்று தலித் என்ற சொல், தாழ்த்தப்பட்ட சில சாதிகளின் ஒரு கூட்டுவடிவ இலச்சினையாகவும், சற்று விரிவான பொருளில் ஒரு பண்பாட்டு அரசியலின் அடையாளமாகவும் இருக்கின்றது. மேலும், இந்தச் சொல்லோடு, போராடுகிற ஒரு பண்பு, கூர்மையான ஒரு கருத்தாடல், ஒரு கலகக் குரல் என்ற பொருண்மைகளும் இணைந்துள்ளன. தலித் என்ற வழக்கு, குறிப்பிட்ட சில தாழ்த்தப்பட்ட வகுப்பினரைக் குறித்தாலும், இன்று சமூகச் சிந்தனையாளர்கள் பலரும் இந்தச் சொல்லை, சமூக விழிப்புணர்ச்சி பற்றிய சூழலில் பயன்படுத்துகின்றனர்.
5.1.1 தலித்திய வரலாறு
இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் சூழலில், சமூகத்தின் பல மட்டங்களிலிருந்து எழுச்சியின் அசைவுகளும் அறிகுறிகளும் தோன்றின. அவற்றில் முக்கியமானது, ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியாகும். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர், தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை மலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், எம்.சி. ராஜா முதலியோர் தலித்து எழுச்சிக்கு வித்திட்டவர்கள்; அதுபற்றிய சிந்தனையையும் முன்வரைவுத் திட்டங்களையும் வகுத்துக் கொடுத்தவர்கள். கோயில் நுழைவுப் போராட்டங்கள் உள்ளிட்ட “ஒடுக்கப்பட்டோர் எழுச்சி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஏற்பட்டுவிட்டது என்றாலும், தொடர்ந்து விடுதலைப் போராட்டக் காலத்தில் அவ்வப்போது தலைகாட்டியது என்றாலும், 1990 – களில்தான் தலித் எழுச்சி, குறிப்பிடத்தக்க உணர்வு நிலையாகவும் போராட்டப் பண்பாகவும் ஆகியது. 1991, 1992 ஆகிய இரண்டு ஆண்டுகள் அம்பேத்கர் நூற்றாண்டு விழா நடந்தது. இதனுடைய தூண்டுதல், தலித்தியத்திற்கு உந்து சக்தியாக இருந்தது. முக்கியமாக, ஜனநாயகம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையான விடுதலையைத் தரவில்லை; இந்திய அரசியல் கட்சிகள் தங்களைப் பகடைக் காய்களாகவும், வாக்கு வங்கிகளாகவுமே (vote bank) பயன்படுத்துகின்றன என்ற உணர்வு தலித் மக்களை வெகுவாகப் பாதித்த சூழல், அது. எனவே தலித்தியம், ஒரு வேகத்தோடு எழுந்தது. முக்கியமாகச் சிந்தனையாளர்களையும் இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் ஈடுபட்டோரையும் இது அதிகமாகப் பாதித்தது. இதற்குமுன் பிரபலமடைந்திருந்த பெண்ணியத்தைவிடத் தலித்தியமே பரவலாகவும் கூர்மையாகவும் படைப்பிலக்கியத்திலும் மற்றும் பண்பாட்டுத் தளங்களிலும் தடம் பதித்திருக்கிறது.
5.2 தலித்தியமும் இலக்கியமும்
தாழ்த்தப்பட்டவர்கள் (தலித்துகள்) பற்றிய குறிப்புகள் பழைய இலக்கியங்களில் காணப்படுகின்றன. சங்க இலக்கியத்திலும் பக்தி இலக்கியத்திலும் பிற்கால இலக்கியங்களிலும் தலித்துகளின் வாழ்வும் பணியும் பேசப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சமய மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையில் தாழ்த்தப்பட்டவர்களை மையப்படுத்திய ‘பள்ளு இலக்கியம்’ போன்றவையும் உருவாயின. இன்றைய இலக்கியத்திலும் அது பேசப்படுகிறது. தனி இலக்கிய வகையாகவும் அது உருப்பெற்றுத் தலித் இலக்கியம் எனப் பெயர் பெற்றிருக்கிறது.
5.2.1 பழைய இலக்கியங்களில் தலித்துகள்
தொல்காப்பியம் உள்ளிட்ட சங்கநூல்கள் உழைக்கும் மக்களைத் தாழ்த்தப்பட்டவர்களாகச் சித்திரிக்கின்றன. இழிசினன் (புறநானூறு, 82,287,289), இழிபிறப்பாளன், புலையன் (புறம்,360), புலைத்தி (புறம், 259,311) முதலிய சொற்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. துடியெனும் இசைக்கருவியை இசைக்கிறவனைப் புறநானூறு (170) சித்திரிக்கின்றது.
‘இழி பிறப்பாளன் கருங்கை சிவப்ப
வலி துரந்து சிலைக்கும் வன்கட் கடுந்துடி.’
இந்தப் பாடலுக்கு அப்படியே பொருள் தருவது திறனாய்வாகாது. அவனுடைய கைகளைக் ‘கருங்கை’ என்று அடைகொடுத்துச் சொல்லுவதையும், கைகள் ‘சிவப்ப’ என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதன் காரணத்தையும், ‘துடி’ என்ற இசைக்கருவிக்குக் கொடுக்கின்ற அடைமொழிக்குரிய அவசியத்தையும் சொல்லவேண்டும். அப்போதுதான் அது தலித்திய வாழ்க்கையைக் காட்டும் திறனாய்வாக ஆகமுடியும்.
பெரியபுராணத்தில் திருநீல கண்ட யாழ்ப்பாணர், திண்ணன், திருநாளைப் போவார் எனும் நந்தன் ஆகிய மாந்தர்கள் நாயன்மார்களாக வருகிறார்கள். இவர்களின் சித்திரங்கள் வரலாற்றுப் பின்புலங்களோடும் காரண காரியங்களோடும் ஆராயப்படுகின்ற போது, தலித்தியத் திறனாய்வின் பயன் சிறப்படையும். இப்படிப் பழைய இலக்கியங்கள் சிலவற்றில் ‘இழிசினர்’ அல்லது ஒடுக்கப்பட்டோர் வருகின்றனர். ஆனால் மிகவும் குறைவாகவே இடம் பெறுகின்றனர். பல இலக்கிய வகைமைகளில் இவர்கள் இடம் பெறுவதே இல்லை. ஏன் என்று தலித்தியத் திறனாய்வு கேள்வி கேட்டுப் பதில் சொல்ல வேண்டும். பிற்காலத்திய பள்ளு இலக்கியங்களில்தான், முதன் முறையாகத் தலித்துகள் (பள்ளர்) தலைமை இடம் பெறுகின்றனர். ஆனால் இவர்களை அல்லது இவர்களின் உழைப்புகளைப் போற்றுவதற்காக இல்லை; அவர்கள் பெரிய பண்ணையார்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்ளவேண்டும் என்ற உட்குறிப்பு இவற்றிலே உண்டு. பள்ளு இலக்கியம் பற்றித் திறனாய்வாளர் கோ. கேசவன் கூறும் கருத்து தலித்தியத் திறனாய்வுக்கு முன்னோடியாக அமைகிறது.
5.2.2 இன்றைய இலக்கியங்களில் தலித்துகள்
தலித்து என்ற சொல்லை மையமாகக் கொண்டு, தலித்து பற்றிய கொள்கை உருவானது, தமிழில் 1990-களுக்குப் பிறகுதான். ஆனால் அதற்குப் பிறகுதான் தலித் இலக்கியம் தோன்றியது என்று சொல்வது பொருந்தாது. அந்தச் சொல் புதிதாக இருந்தாலும், அதே பொருண்மை நீண்டகாலமாக இருந்து வருவதுதான். அதுபோல், தலித் உணர்வு என்பதும் வெவ்வேறு வகைகளில் ஏற்கனவே இருந்து வருவதுதான்.
இன்றைய இலக்கியம் என்பதைப் பொறுத்த அளவில், டி. செல்வராஜ் எழுதிய ‘மலரும் சருகும்’ (1970) என்ற நாவல்தான் முதல் தலித் நாவல் என்று சொல்லப்படவேண்டும். நெல்லை வட்டாரத்தைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல், தலித்துக்களை ஒரே தளத்தில்- ஒரே பரிமாணத்தில்- அல்லாமல், பல தளங்களில் பல பரிமாணங்களில் காட்டுகின்றது. கூலி விவசாயிகளாகவும் சிறு நிலவுடைமைக்கிழார்களாகவும் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட பாமர மக்கள் எப்படித் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், தங்கள் நிலங்களையும் தொழில்களையும் காப்பாற்றிக் கொள்ளவும் துன்பப்படுகிறார்கள் என்பதை இந்த நாவல், எதார்த்தமான உத்தியில் சித்திரிக்கின்றது. இவர்கள் மத்தியில் தோன்றிய ஒரு இளைஞன் சப்இன்ஸ்பெக்டராக ஆகிறான். ஆனால் அந்த அதிகாரமும் புதிய உறவுகளும் அவனைத் தன்னுடைய சக மனிதர்களுக்கு எதிராக நிறுத்துகின்றன. இன்னொருவன், ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வருகிறவன்; தன்னுடைய மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு அவர்களுக்காக உழைக்கிறான். இந்நாவலில் வருகிற ஒவ்வொரு பாத்திரமும், தலித்துகளின் மாறிவரும் வாழ் நிலைகளையும் உணர்வுகளையும் நடப்பியல் நிலையில் சிறப்பாக வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது.
அடுத்து, ஈழத்தின் சூழலில் கே. டானியல் எழுதிய ‘பஞ்சமர்’ என்ற நாவலும் தலித்துக்களின் வாழ்க்கையை எதார்த்தமாகவும் போராட்டப் பண்போடும் சித்திரிக்கின்றது. டி. செல்வராஜ், டேனியல், பூமணி – என்ற மூவரும் தலித்து இலக்கியத்தின் முன்னோடிகள், ஆனால் இவர்கள், சமூக மாற்றம் வேண்டுகிற புரட்சிகர மனப்பான்மை கொண்டவர்களாதலால் தங்கள் எழுத்துக்களை ‘தலித்’ எழுத்துக்கள் என்று அடையாளப்படுத்த விரும்புவதில்லை. மேலும் தலித்துகளின் சாதியடையாளத்தை முதன்மைப் படுத்தாமல் அவர்களை ஒரே நேரத்தில் தலித்துகளாகவும், உழைப்பாளிகளாகவும் பார்க்கின்ற பார்வை, இவ்வகை எழுத்தின் முக்கியமான பண்புகளில் ஒன்று. ஸ்ரீதர கணேசன் என்பவரின் உப்பு வயல் என்ற நாவலில் இந்தப் போக்கு முதன்மையாக உள்ளது. ஒரு தலித் பெண்ணின் வாழ்க்கை அனுபவங்களைச் சித்திரிக்கின்றது இந்த நாவல். அவள் ஒரு பெண்; ஒரு தலித்; உப்பளத் தொழிலாளி என்ற மூன்றும் ஒன்றாக இயங்குகிற ஒரு வடிவமாக அவள் விளங்குகிறாள். உண்மையுணர்வோடும் போராட்ட உணர்வோடும் கூடிய இந்த நாவல், தலித் நாவல் என்ற வகையில் புதியதொரு கோணத்தைச் சேர்ந்ததாகும். ராஜ் கவுதமன், பாமா , இமையம், சோ. தருமன், விழி.பா. இதய வேந்தன், அழகிய பெரியவன் ஆகியோரும், மாற்கு, சி. இராசநாயகம், பெருமாள் முருகன், சோலை சுந்தரப் பெருமாள், பஞ்சு முதலியோரும் தலித் வாழ்க்கைகளை மையமாகக் கொண்டு நல்ல பல புனைகதைகள் எழுதியுள்ளனர்.
சிறுகதைகள், புதினங்களன்றியும் தலித் சிந்தனையாளர்கள் பலர் கவிதைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மிகச்சிறந்த கவிதைகள் வந்துள்ளன. மதிவண்ணன், என். டி. ராஜ்குமார், உஞ்சைராஜன், பாமரன், இராச. முருகுபாண்டியன், பிரதிபா ஜெயச்சந்திரன், பாரதி வசந்தன் முதலிய பெயர்கள் இத்தகைய கவிஞர்களின் அணிக்கு அழகு சேர்க்கின்றன.
5.3 தலித்துக் கலைவடிவம்
கலை என்பது வட்டாரம், இனம், சாதி, வர்க்கம் முதலியவற்றைச் சார்ந்து அமைவதுதான். தலித்துகளின் அழகியல் வெளிப்பாடுகளில் அவர்களின் கலை வடிவங்கள் முக்கியமானவை. தலித்து மக்களின் கலை வடிவங்கள், வெளியிடங்களில் நிகழ்த்தப் பெறுகிற நிகழ்த்துகலை வடிவங்களே ஆகும். மேலும் உயர்சாதியினரிடம் காணப்படுவது போன்ற தூலமற்ற நுண்கலை வடிவம் (Abstract Art Form) இவர்களிடம் மிகக் குறைவு. பெருந்தெய்வ வழிபாடுகளைச் சார்ந்திருத்தலும், வைதிகச் சடங்குமுறைகளைச் சார்ந்திருத்தலும் தலித்துக் கலைகளில் இல்லை. நவீன மேடைகள், பெரிய அரங்குகள் முதலியவை இவர்களின் கலை நிகழ்வுகளில் கிடையாது.
தலித் மக்களின், முக்கியமான கலை வடிவங்களாகக் கூறப்பட்டுபவை:
பறையாட்டம், தப்பாட்டம், பெரிய மேளம், நையாண்டி மேளம், கரகாட்டம், மாடுபிடியாட்டம், ராசா – ராணியாட்டம், கரடியாட்டம், உறுமி மேளம், குறவன் குறத்தியாட்டம் முதலியவைகளாகும்.
உணர்வுநிலைகளை நேரடியாக வெளிப்படுத்துதல், எதார்த்தமும் தூலமும் கொண்ட நிகழ்வுகள், தனியாளாக அல்லாமல் பலர் சேர்ந்து நிகழ்த்தும் நிலைகள் என்ற பண்புகளை முக்கியமாகக் கொண்டவை தலித் கலைகள். சிறு தெய்வங்களையும், சிறு தெய்வங்கள் தொடர்பான கதைகள் அல்லது தொன்மங்களையும், நடைமுறை வாழ்வில் கண்ட அல்லது வெகுவாகப் பாதித்த செய்திகளையும் இவை சொல்லுகின்றன. தெய்வங்களின் வழிபாட்டு இடங்கள், நடவு நடுதல், கதிர் அறுப்பு முதலிய விவசாயம் நடைபெறும் வயல்வெளிகள், காடுகள், சாவுகள் நடக்கிற இடங்கள்- இவற்றிலேதான் இவை அதிகம் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் அண்மைக் காலங்களில் தலித் கலை வடிவங்கள் ஒரு ‘வித்தியாசம்’ என்ற முறையில், அரசு விழாக்களிலும், பொதுக் கலை அரங்குகளிலும் ஊர்வலங்களிலும் நிகழ்த்தப்படுகின்றன.
5.3.1 தலித்திய நாட்டுப்புறக் கலைகளும் நாடகங்களும்
சங்க காலத்திலிருந்தே பல கூத்து வடிவங்கள், பாமர மக்கள் மத்தியிலே பிரத்தியேகமாக வழங்கி வந்தன. தொடர்ந்து எல்லாக் காலங்களிலும் செவ்வியல் கலைவடிவங்களுக்கு இணையாக, இன்னொரு பக்கம், தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாகப் பங்கு பெறுகிற கூத்துக்களும் இருந்து வந்தன. நாயக்கர் காலத்தில் பள்ளு நாடகங்கள், குளுவ நாடகங்கள், குறவஞ்சி நாடகங்கள் முதலியவை பிரசித்தமாக இருந்தன. ‘அரக்கன்வதை’ என்ற கதை சொல்லல் மரபும் இருந்தது. மேலும், நொண்டி நாடகங்கள் என்ற வகை மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். ஆட்டமும் கூத்தும் பாட்டும் இணைந்த எள்ளலும் நகைச்சுவையும் கொண்ட ஒரு கலை வடிவம், இது.
தலித் மக்களை – அதாவது, அன்று தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்பட்ட மக்களை மையமாகவும் நாயகர்களாகவும் கொண்டு பல நாட்டுப்புறக் கதைகளும் கதைப்பாடல்களும் (Ballads) தோன்றியுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை, காத்தவராயன் கதை மற்றும் மதுரைவீரன் கதை ஆகியவை. காத்தவராயன், பறையர் இனத்தவன்; மதுரை வீரன், சக்கிலிய இனத்தவன். இரண்டு பேருமே தங்கள் சாதிக்கு மீறிய உயர்சாதி. மற்றும் ஆளும் இனத்தைச் சேர்ந்த பெண்களைக் காதலிக்கிறார்கள். அதற்காகப் பழி வாங்கப்படுகிறார்கள். கொலைக்கும் செத்தவர் ஆவிக்கும் பயந்தவர்களால் இவர்கள் சிறு தெய்வங்களாகவும் ஆக்கப்பட்டார்கள். தலித்தியத் திறனாய்வுக்கு, இவை சிறந்த களங்களாக அமையக் கூடியன. நந்தன் கதை, திருநாளைப் போவார் கதையாகப் பெரிய புராணத்தில் இடம் பெறுகிறது. இந்தக் கதையினைத் தாழ்த்தப்பட்ட இனத்தவர், மற்றும் பண்ணை – அடிமை விவசாயிகள் சார்பாக இருந்து, கதா கலாட்சேபமுறையில் கலை வடிவமாக ஆக்கியவர், 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண பாரதியார். கதையின் பெயர், நந்தனார் சரித்திரக் கீர்த்தனை. இன்று, நவீனத்துவத்தின் பின்னணியில், தலித்து நாடகங்கள் பல எழுதப்பட்டும் இயக்கப்பட்டும் வருகின்றன.
5.4 தலித்தியத் திறனாய்வு - வரையறைகள்
தலித்திய வழியிலான திறனாய்வு என்பது, நடைமுறையில் சமுதாயவியல் திறனாய்வேயாகும். இலக்கியத்தில் தலித்து மக்கள் எவ்வாறு சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள், அவர்களுடைய வாழ்க்கையனுபவங்கள், உணர்வுகள், சிந்தனைகள், எதிர்வினைகள் முதலியவை எவ்வாறு சித்திரிக்கப் பட்டுள்ளன என்று பார்ப்பது இதனுடைய பணி. இது ஒரு பொதுவான வரையறைதான். ‘தலித்’ என்பதை விதந்து (குறிப்பிட்டு) பிரத்தியேகமாகச் சொல்லுவதற்குரிய காரணத்தையும் புரிந்துகொள்ளுதல் வேண்டும். “தலித்துகளுக்கு பிரத்தியேகமான – வித்தியாசமான- வாழ்நிலைகள் உண்டு; வித்தியாசமான வரலாற்றுச் சூழல்கள் உண்டு; தாழ்த்தப்படுதல், ஒடுக்கப்படுதல், தீண்டாமைக்கு ஆளாதல், பொருளாதார நிலையில் பிறரைச் சார்ந்திருத்தல் எனும் கொடிய நிலைகள் உண்டு”- என்ற கருதுகோள்கள் அல்லது முன்னோட்டமான கருத்தியல்கள் தலித்தியத் திறனாய்வுக்குச் சரியான பார்வையைத் தருபவையாகும். மேலும், சமூக வன்கொடுமைகளுக்கு எதிராக எழுச்சி பெறுதல் என்பது தலித்தியத் திறனாய்வின் அடிப்படையுணர்வாக அமைகிறது.
குறிப்பிட்ட வகுப்பினரின் வாழ்க்கையை – அதன் பிரச்சனைகளைச் – சொல்லுவதாக இருந்தாலும் அதனை, நேர் கோடாகப் பார்ப்பதை இது மறுக்கிறது. சாதியம், தீண்டாமை, என்பது தத்துவம் என்ற அடிப்படை மதவாதத்தோடு பிணைந்து கிடக்கிறது என்பதனைக் கருத்திற் கொண்டு, அத்தகையதொரு சூழலை மறுதலிப்பதாகவும், மாற்றுத் (alternative) தேடுவதாகவும் தலித்துக்களின் வாழ்க்கைச் சித்திரம் அமைய வேண்டும் என்று இத்திறனாய்வு கருதுகிறது. எனவே தலித் இலக்கியத்தை இயங்கியல் (dialectics) முறையில், முரண்பட்ட சக்திகளின் மோதலாகப்பார்க்க வேண்டும். இது, இந்தத் திறனாய்வின் அடிப்படையான பார்வைக் கோணமாகும்.
5.4.1 தலித் இலக்கியத்தின் பரிமாணங்களும் திறனாய்வும்
தலித் வாழ்க்கை நிலைகளையும் தலித் உணர்வுகளையும், அவர்களுடைய தனிச் சிறப்பான பண்பு நிலைகள் என்று கொள்வதும் இவ்வகை எழுத்தின் முக்கியமான பணியாகும். அமிழ்த்தப் பட்டுக் கிடக்கும் தலித் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, ஒன்றோடு ஒன்றாயிணைந்த இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று- உழைப்பையே கூலியாகவும் வாழ்க்கையாகவும் கொண்டிருக்கிற அல்லது மிகச்சிறு நிலங்களுக்கு உரிமையாளர்களாக இருக்கின்ற அடித்தள வர்க்கம் என்ற நிலை. அடுத்து, வருணம் அல்லது சாதியம் என்ற முறையில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுத் தீண்டாமை முதலியவற்றின் பிடியில் இறுக்குண்டு கிடக்கும் நிலை. இவ்விரண்டும், பொருளாதார- சமூகத் தளங்களில் தொடர்ந்து காணப்படுகின்றவை. தலித் இலக்கியத்தின் முக்கியமான பரிமாணங்களாக இவை விளங்குகின்றன.
தலித்தியத்தின் இன்னொரு முக்கியமான பகுதி, தலித்தியப் பெண்கள் பற்றியது. தலித் என்ற முறையிலும் பெண் என்ற நிலையிலும்- இரண்டு பக்கங்களிலும் அவர்களுக்கு ஏற்படுகின்ற நிலை பற்றியது தலித்தியப் பெண்ணியம். சாதிய முறையிலான அடக்கு முறைகளின் ஒரு அடையாளமாக உயர்சாதிக்காரர்களால், தலித் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள். காவல் துறையும் நீதி மன்றங்களும் கூட இத்தகைய பெண்கள் மீது பரிவோ நியாய உணர்வோ கொள்வதில்லை என்பது இன்னொரு அவலம்.
தலித்திய இலக்கியத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய கலையியல் பரிமாணம் ஒன்று உண்டு. அது, அவர்களின் சொல்வழக்கும் மொழி நடையும் பற்றியது. பிராமணர்கள் தங்கள் மொழிவழக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். வாழ்க்கை நடைமுறைகள், புழங்குகிற பொருள்கள், பிற பிற சூழ்நிலைகள் காரணமாகத் தலித் மக்களிடம், தனிப்பட்ட சில மொழி வழக்குகள் காணப்படுகின்றன. உயர் சாதி மக்கள். அதனை இழிவழக்கு என்று கருதுதல் கூடும். ஆனால் அந்த மொழியில் உயிர்ப்பும் எதார்த்தமும் உண்டு. திறனாய்வு, இத்தகைய சொல்வழக்குகளையும் மொழி நடையையும் ஆழ்ந்து கவனித்து அதன் அழகையும் பயனையும் கண்டறிந்து சொல்ல வேண்டும். அதேபோது இந்த மொழிவழக்கு, சூழ்நிலைகளையும் காலங்களையும் பொறுத்து மாறுதல் அடையக் கூடியதே என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.
5.4.2 தலித்தியத் திறனாய்வின் சில பிரச்சனைகள் தலித் இலக்கியமும் அதன் திறனாய்வும் சந்திக்கின்ற ஒரு முக்கியமான கேள்வி, தலித் இலக்கியம், யாரால் எழுதப்படுவது என்பதாகும். தலித்துக்கள் பற்றித் தலித் எழுதுவதே தலித் இலக்கியம் என்றொரு கருத்துநிலை- முக்கியமாக, ஒரு சில தலித் எழுத்தாளர்களால் முன் வைக்கப்படுகிறது. ஒரு தலித்து, தலித்துக்களின் வாழ்க்கை பற்றி நன்றாக அறிந்திருப்பது சாத்தியம் தான். ஆனால் மாறிவரும் சூழலில், இன்றைய தலித்துகளில் பலர், புதிய சூழ்நிலைகளால், பல புதிய பின்புலங்களோடு வாழ்கிறார்கள். மேலும், பிறப்பினாலேயே, ஒருவர்,தன்னுடைய வர்க்கம், தன்னைச் சுற்றியிருப்போரின் தாழ்த்தப்பட்ட நிலை, தன்னுடைய வரலாற்றுப் பின்புலம் முதலியவற்றில் உணர்வும் சார்பும் பெற்றிருப்பார் என்பது நிச்சயமில்லை. இன்னொரு பக்கம் – வேறொரு சூழ்நிலையைச் சேர்ந்த ஒருவர், தலித்துக்களின் மேலோ, ஒடுக்கப்பட்ட பிறர் மேலோ, அனுதாபமும் அக்கறையும் கொண்டிருக்கக்கூடும் என்பதை மறுத்துவிடவும் முடியாது. எனவே சார்பு என்பது வெறுமனே பிறப்பின் அடிப்படையில் அமைவதல்ல. மனிதநேயம் சார்ந்த கொள்கை, உண்மையின் மீதான அக்கறை போன்றவை, சார்பு நிலைகளைத் தீர்மானிக்கின்றன.
மேலும், குறிப்பிட்ட ஒன்றனை எழுதியவர் யார், அவருடைய சாதி என்ன, உட்சாதி என்ன என்பவற்றை வாசகரோ திறனாய்வாளரோ அறிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறாகும். அது இயலாததும் ஆகும். படைப்பும், அதனுள்ளிருக்கும் உண்மைகளுமே முக்கியம்.
தலித் இலக்கியத்தின் பிறப்பிடம் என்று அறியப்படுவது, மராத்திய மாநிலம், வளர்ப்பிடம் என்றறியப்படுவது, கர்நாடகம். பம்பாயில் 1958-இல் தலித் இலக்கியம்- பண்பாடு பற்றிய முதல் மாநாட்டில் ஒரு பிரகடனம் அறிவிக்கப்பட்டது. “ஒடுக்கப்பட்டோரால் எழுதப்பட்ட இலக்கியமும் ஒடுக்கப்பட்டோர் பற்றி மற்றோரால் எழுதப்பட்ட இலக்கியமும் தலித் இலக்கியம் எனும் தனியடையாளத்துடன் ஏற்றுக் கொள்ளப்படுகிறது” தலித்தியத் திறனாய்வுக்கு இது ஒரு வரைகோடு தருகிறது.
மேலும், யார் எழுதுகிறார்கள் என்பதை விட, யாருடைய வாழ்க்கை, எவ்வாறு தரப்படுகிறது என்று பார்ப்பது தான் சரியான கண்ணோட்டமாகும்; சரியான திறனாய்வாகும்.
5.5 தொகுப்புரை
ஒட்டுமொத்தமான மக்கட் பிரிவினரில், தாழ்த்தப்பட்டோர் அல்லது தலித்து எனும் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு, அம்மக்களின் தனிச் சிறப்பியல் கூறுகளாக (distinctive features) உள்ளவற்றை ஆய்வு செய்வது, தலித்தியல் திறனாய்வாகும். வருணாசிரமம் அல்லது சாதிய அமைப்புமுறை கொண்ட இந்தச் சமுதாயத்தில் ஆண்டாண்டுக் காலமாகத் தொடர்ந்து தீண்டாமை, கடின உழைப்பு, ஏழ்மை முதலியவற்றால் அவதிப்படும் தலித் மக்கள், அண்மைக் காலமாக எழுச்சி பெற்று வருகிறார்கள். இந்த எழுச்சி, இலக்கியத்தில் ஆழமாகவும் பரவலாகவும் காணப்பட்டு வருகிறது. தலித் இலக்கியம் என்று அடையாளம் காட்டுகிற நிலையில் இது வளர்ச்சி பெற்றுள்ளது.
தலித்தியத் திறனாய்வு என்பது, இலக்கியங்களில் தலித்துகள் சித்திரிக்கப்படுவதை மட்டுமல்லாது, ஏனைய பிற மக்களோடு அவர்களுடைய உறவுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதையும், அவர்களை இந்தச் சமுதாயம் எவ்வாறு பல்வேறு நிலைகளில் அடிமைப்படுத்தி அல்லது தாழ்த்தி வைத்திருக்கிறது என்பதையும், தலித்து மக்களின் வெவ்வேறு எதிர்வினைகளையும் ஆராய்கிறது. ஏனைய அணுகுமுறைகளோடு ஒப்ப நோக்கினால், இது அண்மைக் காலத்தில் அறிமுகமான அணுகுமுறைதான். ஆனால் அதே நேரத்தில், இது, அழுத்தமும் வேகமும் கொண்டியங்குவது ஆகும். சமுதாயவியல் திறனாய்வின் ஓர் அங்கமாக இருந்தாலும், அதற்கு அணிசேர்க்கிற விதத்தில் இது தனித்து இயங்குகிறது.
புலம்பெயர்வுத் திறனாய்வு
6.0 பாட முன்னுரை
தமிழ்த் திறனாய்வுப் பரப்பில், பல சூழ்நிலைகளின் காரணமாகப் புதிய புதிய கொள்கைகளும் தளங்களும் தோன்றுகின்றன. சமூக வரலாற்றிலும் இலக்கிய வரலாற்றிலும் ஏற்படுகின்ற மாற்றங்களும் வளர்ச்சிகளும் இத்தகைய புதிய தளங்களையும் புதிய பரிமாணங்களையும் தவிர்க்க முடியாதனவாக ஆக்குகின்றன. பின்னை அமைப்பியலும் பின்னை நவீனத்துவமும் அதுபோலப் பெண்ணியமும் தலித்தியமும், கொள்கைகளையும் அவற்றின் புதிய கோணங்களையும் ஒட்டிப் பிறந்தன. புலம்பெயர்வு என்பது குறிப்பிட்ட கொள்கை அல்லது முறையியல் சார்ந்தது அல்ல; மாறாக, வித்தியாசமான சூழ்நிலையையும் வாழ்நிலையையும் அது குறிக்கின்றது. புலம்பெயர்வு என்ற நிகழ்வு பழைமையானது; ஆனால் அது பற்றிய உணர்வும் ஆய்வும் புதியது. இன்று அது சமூகவியலாளர்களிடையேயும், இலக்கிய ஆய்வாளர்களிடையேயும் பெரிதும் கவனத்திற்குள்ளாகி வருகிறது. தமிழ்ச் சூழலிலும் இத்தகைய ஆய்வுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகக் கருதப்படுகிறது.
6.1 புலம்பெயர்வு - விளக்கம்
ஒரே இடத்தில் தொடர்ந்து வாழாமல், இடம்விட்டு இடம் நகர்தல், ஊர் விட்டு வேற்றூர் வாழ்தல் என்ற பொதுவான பொருளை இது குறிக்கிறது என்றாலும், இன்று ஒரு கலைச்சொல்லாக (technical term) வழங்குகிறது. சமூக நகர்வுகள் (Social mobility) குடியேற்றங்கள், இருவகைப்பட்ட பண்பாடுகளின் உறவுகள், மொழி உறவுகள் என்ற பொருள்நிலை, புலம்பெயர்வு என்ற சொல்லுக்கு உண்டு. பிழைப்பும் பாதுகாப்பும் நாடிச் செல்லுகின்ற சாதாரணச் குடிமக்களிலிருந்து நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானிகள், கணினிப் பொறியாளர்கள், பணம் குவிக்கும் கனவுகளோடு வணிகர்கள், தஞ்சம் அடையும் அரசியல் போராளிகள் என்று இவர்கள் வரை புலம்பெயர்வோர் பல திறத்தினர்; பல தரப்பினர். புலம்பெயர்வுக்குக் காரணங்களைப் பொதுவாக இப்படிக் கூறலாம்.
(1) இயற்கையின் சீற்றம், வறுமை முதலியன. (2) யுத்தங்கள் (3) வேற்றுநாட்டு ஆதிக்கங்கள் (4) இனக்கலவரங்கள், பெருந்தேசியவாத அரசியல் தரும் நெருக்கடிகள், சமய வழக்கு (5) புதிதாய் வசதிகளும் வாய்ப்புகளும் பற்றிய தேட்டங்கள் / விருப்பங்கள்.
இவை பொதுவான காரணங்கள். வெவ்வேறு சூழல்களின் பின்னணியில் நடைபெறும் வெவ்வேறு வகையான புலம்பெயர்வுகளாலும் புலம் அமர்வுகளாலும், வாழ்நிலை, சூழ்நிலை வேறுபாடுகளும் பொருளாதார – பண்பாட்டுப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இவ்வாறு புலம்பெயர்ந்தோரின் இலக்கியங்களைப் புலம்பெயர்வு இலக்கியம் (Emigrant Literature) என்று அழைப்பர்.
6.1.1 புலம்பெயர்வு – வரையறை
பிறந்து வளர்ந்து பரம்பரையாக இருந்த தங்கள் நிலப்பகுதியிலிருந்து அல்லது தேசத்திலிருந்து, அகன்று/ பெயர்ந்து, வேறுநாடு சென்று, நீண்ட காலமாகவோ, நிரந்தரமாகவோ குடியமர்தலை அல்லது குடியமராமல் அலைப்புண்டு திரிதலைப் புலம்பெயர்வு என்பது குறிக்கின்றது. இரண்டு வேறு நாடுகள், இரண்டு வேறு மொழிகள், இரண்டு வேறு பண்பாடுகள் என்ற ஒருநிலை, இந்தப் புலம்பெயர்வில் காணப்படும் நிலையாகும். இதனுடைய ஆங்கிலச்சொல் Diaspora என்பதாகும். இது disappearing என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. மொழி, பண்பாடு முதலானவற்றில் பொது அடையாளங் கொண்ட குழுவினர், தம்முடைய பாரம்பரியமான நிலங்களை அல்லது தேசங்களை விட்டு அகன்று, வேற்றுப்புலம் அல்லது வேற்றுநாடுகளில் சிதறிப் போதல் (scattering of persons or groups) என்பது இந்தச் சொல்லின் பொருளாகும். ஒரே நாட்டிற்குள் வெவ்வேறு மொழிகள் பேசுகின்ற பகுதிகளில் – உதாரணமாக, இந்தியாவிற்குள், தமிழ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆந்திர மாநிலத்திற்கோ, மேற்குவங்க மாநிலத்திற்கோ சென்று வசிப்பதை, அதுவும் ஒரு வகையில் இடம்விட்டு இடம் நகர்தலாக இருந்தாலும் புலம்பெயர்வு என்று அழைப்பதில்லை. புலம்பெயர்வு பற்றிய ஆராய்ச்சிக்கு முக்கியம் இருவேறு நாடுகள் சார்ந்த புலம்பெயர்வாக இருக்க வேண்டும். இருவேறு பண்பாட்டுச் சூழமைவுகளும் இருவேறு மொழிநிலைகளும் அடுத்த நிலையில் தளங்களாக அமைகின்றன. புலம்பெயர்வு என்ற கருத்தமைவில் அடிப்படையாக உள்ள உணர்வுநிலை தம்முடைய நாடு, மொழி, பண்பாடு முதலியற்றை ஒட்டியமைகிற இன அடையாளம் பற்றிய தேடலே ஆகும். புலம்பெயர்வு இலக்கியங்களில் இந்த உணர்வுநிலை பல வடிவங்களில் வெளிப்படக்கூடும். திறனாய்வாளன் இவற்றை உற்றறிந்து புலப்படுத்த வேண்டும். உதாரணமாக தம் தாயகமாகிய ஈழத்தைவிட்டுப் பிரிந்து கனடாவில் வாழும் சேரன் முதலிய கவிஞர்களின் கவி வரிகளில் இந்த மனநிலையைப் பார்க்கமுடிகிறது.
6.1.2 புலம்பெயர்வு வரலாறு
‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்பது பழமொழி. உலகத்தில் பல இனங்கள், பல்வேறு காலங்களில் தம் நாடுகளைவிட்டுப் புலம்பெயர்ந்துள்ளனர். மிக நீண்டகாலமாக இது நடந்து வருகிற ஒன்றுதான். புலம்பெயர்வு (Diaspora) பற்றிய கருத்துநிலை முதலில், பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கின்ற அதே நேரத்தில் தொடர்ந்து ஒரே இடத்தில் இல்லாமல் பல நாடுகளுக்கும் அலைகின்ற/அலைந்து திரிந்த யூதர்களின் (Jews) வாழ்நிலைகளைக் குறிப்பதாகவே எழுந்தது. ஜெரூசேலம் (Jerusalem) நகரைச் சேர்ந்த ஆப்ரஹாம் உள்ளிட்ட யூதர்களைப் பார்த்து ஆண்டவர் சபித்தாராம்; ‘நீங்கள் பிறந்த, உங்கள் தந்தையர் நாட்டைவிட்டு உடனே வெளியேறக் கடவீர்கள் ! வேற்று தேசங்களில் அலைந்து திரியக் கடவீர்கள் !” – இந்தச் சாபத்திற்கு விமோசனம் இல்லை. எனவே யூதர்கள் பல்வேறு நாடுகளிலும் அலைகிறார்கள்; குடியேறியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுவே Diaspora என்ற கருத்துநிலைக்கு மூலமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இசுரேயில் (Isreal) என்று இவர்களுக்கென ஒரு நாடு பிறந்திருக்கிறது; இருப்பினும் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட மிகப் பல நாடுகளில் (இந்தியாவிலும் தான்; கேரளாவில்) இவர்கள் குடியமர்ந்திருக்கிறார்கள்.
புலம்பெயர்வு அதிகம் நடந்த இடம் என்று பார்த்தால் மத்திய ஆசியா – மெசபடோமியா, ஐரோப்பா முதலியன உள்ளிட்ட பகுதிதான். தொடக்கத்தில் அதிகமாகப் புலம்பெயர்ந்தவர்கள் ஆரியர்கள். அதன்பின் தொடர்ந்து, அதே இனத்தோடு உறவுடைய ஐரோப்பியர்கள். உலகத்தின் பல நாடுகள், ஐரோப்பியர்களின் குடியேற்ற நாடுகளாக ஆகியிருக்கின்றன. இருப்பினும் தொழிற்புரட்சி மற்றும் இரண்டு உலகப் போர்கள் ஆகியவற்றுக்குப்பின், பல தேசிய இனங்களின் புலம்பெயர்வுகள் கணிசமாகவே காணப்படுகின்றன. 2005 ‘சர்வதேச ஒருங்கிணைவு மற்றும் அகதிகள் சங்கம்’ (I.I.R.N) என்ற அமைப்பின் கணக்குப்படி, தம் நாடுகளையும் உறவுகளையும் விட்டுப் புலம்பெயர்ந்து சென்றோரின் எண்ணிக்கை, ஏறத்தாழ இருநூறு மில்லியனையும் தாண்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
6.2 புலம்பெயர்வு சில விவரங்கள்
நவீன காலத்தில் (Modern period) தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்ற காலப்பகுதியை இரண்டு வகையாகப் பகுக்கலாம். ஒன்று – இந்திய சுதந்திரத்திற்கு முன்னர். இரண்டு – இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு. சுதந்திரத்திற்கு முன்னர்ச் சென்றவர்கள் இந்தியாவை அன்று ஆண்ட ஆங்கிலப் பேரரசு, பிரெஞ்சுப் பேரரசு, போர்த்துகீசிய அரசு ஆகியவற்றினால் அவர்களுடைய ஆதிக்கங்களின் கீழ் இருந்த ஃபிஜி, பர்மா முதலிய பின்தங்கிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள். இவர்கள் அங்கே துயரம் மிகுந்த அநாதரவான வாழ்க்கையை அனுபவித்தார்கள். சுதந்திரத்திற்குப் பின்னர், முதலில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பணிக்காகப் போனவர்கள், முதல் அலை; எழுபதுகளுக்குப் பிறகு போனவர்களில் பெரும்பான்மையோர் கணினிப் பொறியாளர்கள், இரண்டாவது அலை.
தமிழர்களில் துயரமான சூழ்நிலைகளுக்கு இடையே தாயகம் விட்டு வெளியேறியவர்கள், ஈழத்துத் தமிழர்களே. இலங்கையின் பெருந்தேசிய இனவாத அரசியலே இதற்குக் காரணம். 1956-இல் இலங்கை அரசினால் புகுத்தப்பட்ட ‘சிங்களவர்கள் மட்டுமே’ என்ற நடவடிக்கைகள் முதற்கொண்டு, பின்னர் 1972 அதன் பின்னர் 1983இல் நடந்த பெருங்கலவரத்தையொட்டிக் கணக்கற்ற தமிழர்கள் அடைந்த பெருந்துயரம், நிராதரவான நிலை என்ற இந்தச் சூழ்நிலைகள் மற்றும் நெருக்கடிகளுக்கிடையே ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கனடா, ஜெர்மனி, நார்வே, பிரிட்டன் முதலிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றார்கள்.
தமிழ் இனத்தவர்கள், ஏறத்தாழ எழுபது மில்லியன்பேர் உலகின் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். ஏற்கெனவே கூறியது போல, பிரிட்டிஷ், பிரெஞ்சு குடியேற்ற ஆதிக்க அரசுகளால் 18-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி ஆயிரக்கணக்கான பேர் மொரீஷியஸ், ஃபிஜி, ரியூனியன், தென்னாப்பிரிக்கா, இலங்கை (மலையகம்), மலேசியா, பர்மா முதலிய நாடுகளுக்குக் கரும்புத் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், இரப்பர்த் தோட்டங்கள் முதலியவற்றை உருவாக்கவும், தொடர்ந்து அந்தப் பொருட்களை உற்பத்தி செய்யவும் அனுப்பப்பட்டார்கள். அண்மைக் காலத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்சு முதலிய செல்வந்தர் நாடுகளுக்குத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இவர்களிடையே பல தரங்களும் பல நோக்கங்களும் உண்டு. தமிழ்மொழியையும் பண்பாட்டையும் இவர்கள் தங்களிடையே தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று காண்பது, புலம்பெயர்வு ஆய்வின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாகும்.
6.2.1 புலம்பெயர்வுப் பிரச்சினைகள்
ஏற்கெனவே தாயகத்தில் ஓரளவு வசதிகள் உடையவர்கள், மேலும் கூடுதல் வசதிகளும் உயர்நிலைகளும் வேண்டி, வெளிநாடுகளில் குடிபெயர்வது என்பது வேறு; பிரச்சினைகள் இருப்பினும் அவை குறைவே. ஆனால், நெஞ்சத்தில் அழுந்தும் சுமைகளோடும், வேறு வழியில்லை என்ற நிலைகளோடும் புலம்பெயர்ந்தோர் படுகிற சிரமங்களும் கசப்பான அனுபவங்களும் அதிகமாகும். முக்கியமாக இத்தகைய நிலைகளில் ஏற்படுகிற பிரச்சினைகள் பொதுவாக நான்கு. அவை :
(1) வேற்று நாடுகளில் குடியமர்ந்த பின்னும், தங்களுடைய தாயகம், தங்களுடைய பாரம்பரியம், சொந்தபந்தம் முதலியவை பற்றிய உணர்வுகள், பிரிவுகளின் எதிரொலிகள் முக்கியமான பிரச்சினையாகும்.
(2) வேற்றுநாட்டில், வேற்றுச்சூழலில் வேர்விடுகின்ற முயற்சியும் அதன் விளைவுகளும் தருகிற பிரச்சனை.
(3) தாயகத்துச் சூழல்கள், வாழ்ந்த வாழ்க்கைகள் ஆகியவற்றுக்கும் இப்போது குடியேறிய நாடுகளில் ஒன்றாவதற்கு முயலும் முயற்சிகளுக்கும் இடையே தம்முடைய சுய அடையாளம் பற்றிய நெருக்கடிகள்.
(4) சில காலங்களுக்குப் பிறகு, மீண்டும் தம் தாயகம் திரும்பவேண்டும் என்ற சூழ்நிலைகள் ஏற்படலாம்; மனநிலைகள் உருவாகலாம்; வருவதற்குரிய முயற்சிகள் நடைபெறலாம் வந்து மீண்டும் அமரலாம்; அவ்வாறு அமரும்போது, முன்னால் இருந்த வாழ்வு, உறவு முதலியவை பலவித உணர்வுகளை ஏற்படுத்தலாம். இவையும் முக்கியமான பிரச்சினைகளாகும்.
புலம்பெயர்வு வாழ்க்கையில் இத்தகைய பிரச்சினைகளும் இவற்றைச் சார்ந்தனவும் பலவாக ஏற்படுகின்றன. புலம்பெயர்ந்தோரின் இலக்கியங்களில் இத்தகைய உணர்வுநிலைகளைக் கண்டறிந்து விளக்குதல் வேண்டும். நாம், கடைசியாகச் சொன்ன ‘மீண்டும் தாயகம் திரும்புதல் – அதிலே சந்திக்கின்ற பிரச்சனைகள்’ என்பதனை ஹெப்சியா ஜேசுதாசனின் புத்தம் வீடு என்னும் நாவல் மிக அழகாகச் சித்திரிக்கின்றது. பர்மாவுக்குச் சென்ற தமிழ்க் குடும்பம், அங்கு ஏற்பட்ட போர் முதலிய சூழல்கள் காரணமாக மீண்டும் தாயகம் வருகிறது. ஆனால், அதனால் படுகின்ற சிரமங்கள் பல. இதனைப் புத்தம் வீடு ஒரு எதார்த்தமான படப்பிடிப்பாக்கிக் காட்டுகிறது.
6.3 பழந்தமிழகமும் புலம்பெயர்வும்
புலம்பெயர்வு என்ற சொல், சங்க இலக்கியத்திலேயே கிடைக்கிறது. அதுபோல, புலம்பெயர்ந்த நிலைகள், நிகழ்வுகள் குறித்த குறிப்புகளும் கிடைக்கின்றன. ‘மொழிபெயர்தேயம்’ என்ற தொடர், புலம்பெயர்வு நிலையைக் குறிப்பிடும் ஒரு தொடர். இது அகநானூறு முதலியவற்றில் பல இடங்களில் காணப்படுகிறது. மேலும் ‘வேறுபுலம்’ (புறம் 254), ‘அறியாத் தேயம்’ (அகம் 369) முதலிய சொற்களும் கிடைக்கின்றன. தமிழில், புலம்பெயர்வு வாழ்நிலையையும் அதன் காரணமாக உள்ள பொருளாதாரச் செயற்பாடுகளையும் குறிப்பிடுகிற முதல் நூல் பட்டினப்பாலை என்பதாகும். ஏற்றுமதி இறக்குமதி வணிகமும் செல்வமும் கொண்ட புகார் நகரத்தின் சிறப்பினை அது இப்படிச் சொல்கிறது.
தொல் கொண்டித் துவன் றிருக்கைப்
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினிது றையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்.
பல பொருட்கள், அவற்றைக் கொண்டு வந்து விற்பனை செய்கின்ற பல குழுக்கள் (ஆயங்கள்) – அவர்கள் பதி, இடம், ஊர் பழகிவிடுகிறார்கள். மொழி ஒன்றல்ல, மொழிகள் பல அங்கே பேசப்படுகின்றன. இப்படி வேற்றிடங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்த மக்கள், அந்த ஊர் மக்களோடு கலந்து, மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து வந்த மக்கள், மொழி இன வேறுபாடின்றி மகிழ்ச்சியோடிருந்தார்கள் என்ற புலம்பெயர்வு வாழ்க்கையின் சீரிய சிறந்த பண்பினை இப்படி உருத்திரங்கண்ணனார் காட்டுகிறார். இதே கருத்தினை ஏறத்தாழ இதே சொற்களில் சிலம்பும் இதே மாதிரிப் புகாரை வருணிக்கிறபோது சொல்லுகின்றது. ‘கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்’ – கலந்து இருந்து உறைவதாக அது கூறுகின்றது.
ஆனால், தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து வந்த மக்களை இவ்விலக்கியங்கள் கூறுகின்றனவே தவிர, தமிழகத்து மக்கள், வேற்றுப்புலங்களுக்குப் பெயர்ந்து சென்றார்கள் என்று கூறவில்லை. ஒருவேளை இது அதிகம் இல்லாமலிருந்திருக்கலாம். மேலும் தமிழ் மக்களின் உளவியல், இருக்கிற இடத்தில் சுகமாக இருத்தல் என்பதனையே சுற்றி வந்திருக்கிறது. சிலம்பு, இதனை இரண்டு இடங்களில் புகார் பற்றிப் பேசுகிற போதும், மதுரை பற்றிப் பேசுகிற போதும் கூறுகின்றது.
பதியெழு பறியாப் பழங்குடி தழீஇய
பொதுவறு சிறப்பிற் புகார் (1 : 15-16)
என்று புகார் நகர் பற்றியும், அதே பாணியில்,
பதியெழு யறியாப் பண்புமேம்பட்ட
மதுரை மூதூர் மாநகர் (15 : 5-6)
என்று மதுரை பற்றியும் சிலம்பு வருணிக்கிறது. எனவே, வெளியிலேயிருந்து வந்து தமிழ்நாட்டில் குடியேறலாம். ஆனால், இங்கே இருந்துபோய் வேற்றுப் புலம்படர்வது கூடாது என்ற மனநிலை அன்று இருந்திருக்கிறது போலும் ! இதனைத் தொட்டுக் காட்டுவதும் இதற்குரிய வரலாற்றுப் பின்புலங்களைக் கண்டறிவதும் திறனாய்வாளனின் வேலையாகும்.
6.3.1 பாரதியும் புதுமைப்பித்தனும்
கி.பி.1777-இல் முதன்முதலாகத் தமிழர்கள் சிலரை, பிரிட்டன் குடியேற்ற அரசு ஃபிஜியத்தீவிற்கு அனுப்புகிறது. பின்னர், தொடர்ந்து பலரை அனுப்புகிறது. பெண்களும் அனுப்பப்படுகின்றனர். கரும்புத்தோட்டம் பயிரிடவேண்டும்; விளைவிக்கவேண்டும்; விளைந்த கரும்புகளை வெட்டி அனுப்ப வேண்டும். தமிழர்கள் கடினமாக உழைத்தார்கள். ஆனால் பலன்? தாய்நாட்டை மறந்து, தொடர்ந்து, உடல்நலம் இழந்து வாடிப் போனதுதான் மிச்சம். பத்திரிகையாளனாக இருந்த பாரதிக் கவிஞனுக்கு இது தெரியும். அந்தப் புலம்பெயர் வாழ்வின் அநாதரவான நிலைமைகளைக் கண்டு நெஞ்சங் கலங்குகிறார். அவருடைய “பிஜித் தீவிலே ஹிந்துஸ்திரீகள்” எனும் இசைப்பாடல்தான், இன்றைத் தமிழில் தோன்றிய முதல் புலம்பெயர்வுக் கவிதை என்று சொல்ல வேண்டும். புகலிடத்தில் அடைகிற துயரம், தாய்நாடு பற்றிய ஏக்கம், ஆதரவற்ற நிலை என்பவற்றைச் சொல்லுவதோடு அவர்களுடைய துயரத்தில் வாசகர்கள், மனத்தளவில் பங்கு பெறுகிற ஒரு நிலையையும் இக்கவிதை உருவாக்குகிறது. கரும்புத்தோட்டத்திலே. . . என்ற பல்லவியோடு தொடங்கும் அந்தப்பாடல் :
நாட்டை நினைப்பாரோ? – எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ? – அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே – துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
விம்மி யழவுத் திறல்கெட்டுப் போயினர்.
பாரதியின் இந்தக் கவிதைக்குப் பிறகு 25 ஆண்டுகள் கழிந்து, புதுமைப்பித்தன் துன்பக்கேணி (இது பாரதியின் கவிதைச் சொல்) என்று ஒரு நீண்ட கதை (குறுநாவல்) எழுதினார். திருநெல்வேலி புஞ்சைக் காட்டுப் பகுதியில் வறுமையின் பிடியில் இருந்த மருதி எனும் தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண் இலங்கைத் தேயிலைத் தோட்டத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறாள். அங்கே புகலிடத்தில் கங்காணிகளாலும் பரங்கியர்களாலும் அவர் துன்பப்படுகிறாள். தேயிலைத் தோட்டத்தில் அவளுடைய இளமை, உழைப்பு எல்லாம் வீணாகிப் போக, திரும்பத் தாயகம் வருகிறாள். இங்கும் இருக்க முடியாமல் மீண்டும் இலங்கை செல்கிறாள். புகலிடத்தில் தொடர்ந்து அவள் படும் சிரமங்களைப் புதுமைப்பித்தன் சித்திரிக்கின்றார். தமிழ்ப் புனைகதை வரலாற்றில் புதுமைப்பித்தனுடைய துன்பக்கேணியே முதல் கதையிலக்கியமாகும். இதன் பின்னர், இன்னுமொரு 25 ஆண்டுகள் கழிந்த பின்னர்தான், தமிழகத்திலிருந்து இலங்கை தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்றவர்களைப் பற்றி அந்த மக்களாலேயே அல்லது அவர்கள் மேல் அக்கறை கொண்டவர்களால் புலம்பெயர்வு இலக்கியம் படைக்கப்படுகிறது. அது ‘மலையக இலக்கியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
6.4 இலங்கை மலையகம் எனும் புகலிடம்
இலங்கை மலையகங்களில் வெள்ளைக்கார முதலாளிகளுக்குத் தேயிலைத் தோட்டங்களைப் புதிதாக உருவாக்க வேண்டும். தமிழகத்தில் அனுபவப்பட்ட கூலிகள் கிடைத்தார்கள். முதன்முதலாக 1824-இல் தமிழகத்திலிருந்து 16 குடும்பங்கள ் கப்பலேற்றி இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள். 1920வரை இது தொடர்ந்தது. அங்கே, ரத்தம் உறிஞ்சும் அட்டைக் கடிகளிடையேயும், உழைப்பையும் இளமையையும் உறிஞ்சும் கங்காணிகள், பறங்கி அதிகாரிகள் மற்றும் முதலாளிமார்களிடையேயும் தமிழர்கள், தமிழ்ப் பெண்கள் பெரும் துன்பங்களுக்குள்ளானார்கள். இலங்கை சுதந்திர நாடாக ஆன பிறகும் கொடூரம் தொடர்ந்தது. இலங்கைவாழ் இந்தியத் தமிழர்களுக்கு வாக்குரிமையோ வாழ்வுரிமையோ அளிக்கப்படவில்லை. ஒப்பந்தங்கள் பல; ஆனால், எல்லாம் வெற்றுத்தாள்களாகிவிட்டன. இத்தகைய குமுறல்களின் வெளிப்பாடுதான், இலங்கை மலையகப் பகுதிகளிலிருந்து வந்த புலம்பெயர்வு இலக்கியங்கள்.
கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய மூன்று வகைகளிலுமே குறிப்பிடத்தக்க எழுத்துகள் இங்கிருந்து வந்தன. குறிஞ்சித் தென்னவன், சுபேயர் (Zubair) சாரண கையூம், புஸ்ஸெல்லா இஸ்மலிகா, மலைத்தம்பி முதலிய கவிஞர்களும், என்.எஸ்.எம். இராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன், மாத்தளை சோமு முதலிய சிறுகதை எழுத்தாளர்களும், ராஜு , கே.ஆர்.டேவிட், தி.ஞானசேகரன், தெளிவத்தை ஜோசப், சி.வி.வேலுப்பிள்ளை முதலிய நாவலாசிரியர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.
புலம்பெயர்ந்துபோய்ப் புகலிடத்தில் பொல்லாத் துயரங்களை நாடோறும் அனுபவிக்கும் அவர்களின் வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்லுவதில் இந்தப் புனைகதையிலக்கியங்கள் சாதனைகள் செய்துள்ளன என்று சொல்லவேண்டும் . கங்காணிகள் தருகிற துன்பங்கள், காடையர் எனும் சிங்களவர் தருகிற தொல்லைகள், இலங்கை அரசு செய்கிற உதாசீனங்கள், இவற்றோடு தாயகமாம் தமிழகத்தில் அரசாங்கமும் அதிகாரவர்க்கமும், மக்களும் படுத்துகிறபாடுகள் இவற்றிற்கிடையே படும் சொல்லொணாத் துயரங்கள் தாம் மலையக எழுத்துகளின் மையங்கள். இந்தியர் தமிழகம், தம்மைச் சேர்ந்த இலங்கை மலையகத்துத் தமிழர்களை எவ்வளவு அலட்சியமும் கொடுமையும் படுத்துகிறது என்பதனை சி.வி.வேலுப்பிள்ளையின் இனிப்படமாட்டேன் என்ற நாவல் அழகாகச் சித்திரிக்கின்றது. இலங்கை மலையகத்துத் தமிழ் இலக்கியம், தமிழகத் திறனாய்வாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளதெனினும் மேலும் விரிவாக ஆராய்வதற்கு இதிலே நிறைய இடம் உண்டு.
6.4.1 ஈழத்தமிழர் புலம்பெயர்வு
உலகிலுள்ள மக்கள் இனங்கள் பல, புதிய புகலிடம் தேடிப் புலம்பெயந்துள்ளன என்றாலும், அவர்களுள் ஈழத் தமிழர்களின் நிலையே மிகவும் கொடூரமானதாக உள்ளது என்பது ஆய்வாளர்கள் பலர் கருதுகின்றனர். குறிப்பாக 1983-க்குப் பிறகு ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள், இலங்கையின் பேரினவாத அரசியல் காரணமாக அங்கே வாழமுடியாத நிலையில், பல நாடுகளுக்கு குறிப்பாகக், கனடா முதலிய நாடுகளுக்குப் பெயர்ந்து சென்றார்கள். அந்நாடுகளில் இவ்வாறு குடியேறுவதற்குச் சட்டப்பூர்வமான அனுமதிகள் உண்டு. அந்நாடுகளில் வசதியான சூழலில் இவர்கள் வாழவில்லை. இருப்பினும் புகலிடங்களில், குறிப்பிடத்தக்க சிறுபான்மையினத்தவராக வாழ்கின்றனர்.
புலம்பெயர்ந்த பல்வேறு இனத்தவருள், ஈழத்தமிழ் மக்களே, அதிகமாக இணையத்தளங்களை (Web-sites) பயன்படுத்துவோர் ஆவர். என்ன என்ன வகைகளில் இவை பயன்படுகின்றன?
(1) பல்வேறு நாடுகளிலேயுள்ள தமிழர்களிடையே கருத்துப் பரிமாற்றங்கள் முக்கியமான பயன்பாடாகும்.
(2) மேலும், தாய்நாட்டுத் தமிழர்களுக்குச் செய்திகள் சொல்லுதல், அவர்களிடமிருந்து தம் நாட்டின் நிலவரங்களையறிதல்.
(3) இலங்கையிலே நடக்கும் பலவிதமான எழுச்சிகளுக்கு ஆதரவாக உலகத் தமிழர்களின் ஆதரவைத் திரட்டுதல். இத்தகைய பயன்பாடுகளை நோக்கமாகக் கொண்ட இலக்கிய இதழ்கள், புத்தகங்கள் முதலியவற்றை வெளியிடுகிற முயற்சிகளும் நடைபெறுகின்றன.
புலம்பெயர்ந்து சென்ற தமிழ் இனத்தவருள், புகலிடங்களிலிருந்து தம்முடைய மொழி, பண்பாடு, இலக்கியம் பற்றி அதிகம் சிந்திப்பவர்கள் ஈழத்தமிழர்களே யாவர். எனவே இவர்களிடமிருந்து இலக்கிய ஆக்கம் தொடர்ந்தும் பலவாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இவை, தமிழகம் ஈழம் உள்ளிட்ட தாயகப் பகுதிகளிலிருந்து வருகிற எழுத்துகளுக்குச் சளைப்பில்லை என்று சொல்லுகிற அளவிற்குப் பல தளங்களையும், பல தரங்களையும் பல பரிமாணங்களையும் பெற்றிருக்கின்றன. ஈழத்தமிழர் புலம்பெயர்வு இலக்கியங்களிலே காணப்படுகின்ற முக்கியச் செல்நெறிகளும் பண்புகளும் கவனிக்கத்தக்கன. அவை:
(1) தம் தாயகம் பற்றியும், தம்முடைய மரபு, பண்பாடு, மொழி பற்றியும் திரும்ப நினைத்தல் ; நினைவூட்டிக் கொள்ளுதல்.
(2) தாயகத்திலுள்ள அரசியல் நிகழ்வுகளையும் நிலைகளையும் விமரிசனம் செய்தல்.
(3) புகலிடங்களில் படுகிற துயரங்கள், புகலிடங்களில் இணைந்து ஒன்றி விடுவதற்கான முயற்சிகள், பண்பாட்டுக் கலப்புகள் முதலியவற்றை வெளிப்படுத்துதல்.
(4) தம் இனத்தவரிடையேயுள்ள சாதியம், பெண்ணடிமைத்தனம் முதலிய முரண்பாடுகளைச் சுயவிமரிசனம் செய்தல்.
(5) மேலைநாட்டுச் சிந்தனை முறைகளின் தாக்கத்தினால் பின்னை அமைப்பியல், பின்னை நவீனத்துவம், பின்னைக் காலனித்துவம், நவீன – பெண்ணியம் முதலிய கருத்துநிலைகளுக்குட்பட்டுப் புதிய எழுத்துமுறையை உருவாக்குதல்.
இவை ஈழத்துத் – தமிழ்ப் புலம்பெயர்வு இலக்கியத்தில் வெளிப்பட்டு நிற்கும் பண்புகள். ஆனால், இவை யெல்லாவற்றிற்கும் செயல்கள், சிந்தனைகள், எழுத்துகள் இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் உணர்வு, அடையாளம் தேடுதல் (Ethnic Identity) என்பதேயாகும்.
6.4.2 பிற முயற்சிகள்
தமிழர்களின் புலம்பெயர்வு, விசாலமான தளங்களைக் கொண்டது; பல தரப்பட்ட சூழல்களைக் கொண்டது. ஆயின், இதனை ஒப்புநோக்க இலக்கியங்கள், இதுகாறும் கூறியன தவிரவும் ஒருவகையில் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். பர்மாவில் தமிழர்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் குடியிருந்து அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் பங்களிப்புச் செய்தார்கள். இனக்கலவரம், உலகப் போர் காரணமாகத் தமிழர்கள் பெரும்பகுதியினர் திருப்பியனுப்பப்பட்டனர். ஆனால், அவர்கள் பற்றிய இலக்கியங்கள் மிகக் குறைவேயாகும். ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி மற்றம் கலைஞர் மு.கருணாநிதியின் பராசக்தி (நாடகமாக எழுதப்பட்டு பிரசித்தமான திரைப்படமாக வந்தது) முதலியவை குறிப்பிடத்தக்கன. இவற்றில் பர்மா போய் இருந்து பின்னர் திரும்பி வந்தோரின் துயரங்கள் நன்கு சொல்லப்பட்டிருக்கின்றன.
மலேசியத் தமிழர்கள் தமிழ் உணர்வும் பண்பாட்டுணர்வும் அதிகம் உடையவர்கள். 1910-20 என்ற காலப் பகுதியில் இங்கிருந்து நாவல்கள் தோன்றத் தொடங்குகின்றன. 1950-60 காலப்பகுதியில் ம.இராமையாவும் மா.செ.மாயத்தேவனும் சேர்ந்து எழுதிய நீர்ச்சுழல் என்ற நாவலும், அறிவானந்தம் எழுதிய மல்லிகா என்ற நாவலும், முழுக்க மலேசியப் பின்னணியைக் கொண்டு எழுந்தவையாகும். தொடர்ந்து மலேசியாவிலிருந்து பல நாவல்களும் சிறுகதைகளும் கவிதைகளும் வெளிவந்துள்ளன. மலேயாவில் உள்ள ரப்பர்த் தோட்டங்களில் தமிழர்கள் படுகிற துயரங்களை பால்மரக் காட்டிலே என்னும் நாவலாக எழுதியவர் தமிழகத்து அகிலன் ஆவார். சிங்கப்பூர்த் தமிழர்களிடமிருந்தும் பல கவிதைகளும் புனைகதைகளும் வெளிவந்துள்ளன.
6.5 தொகுப்புரை
புலம்பெயர்வு என்பது மனித சமூக வரலாற்றில் நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு நிகழ்வு ஆகும். முதன்முதலில் பல நாடுகளில் படர்ந்துகிடக்கும் யூதர்களின் வாழ்நிலைகளை ஒட்டித்தான் புலம்பெயர்வு எனும் கருத்து நிலை தோன்றியது. எனினும் இன்று அது விரிவான பொருளைப் பெற்றுள்ளது. சமூக-பண்பாட்டு வரலாற்றறிஞர்கள் பலரின் கவனத்தைப் புலம்பெயர்வு பற்றிய ஆய்வு கவர்ந்துள்ளது. பழந்தமிழகத்தில் பல வெளிநாடுகளிலிருந்து (கிரேக்கம், எபிரேயம் மற்றும் வடக்கே மகதம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து) புலம்பெயர்ந்து இங்கே இனிதே வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் பழந்தமிழகத்தில், தமிழர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடு செல்வது போற்றப்படவில்லை. ‘பதியெழுபு அறியாப் பழங்குடி’ என்பது போற்றப்பட்டது.
தமிழர்களில் பல பகுதியினர், பிரிட்டீஷ் – குடியேற்ற ஆதிக்க அரசு, பிரெஞ்சுக் குடியேற்ற அரசு, போர்த்துகீசியக் குடியேற்ற அரசு ஆகியவற்றினால் கி.பி.18ஆம் நூற்றாண்டினிறுதியிலிருந்து, அவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட பின்தங்கிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களுடைய பின்னணியிலிருந்த ஏழ்மை, அவர்களுடைய புகலிடங்களும் தொடர்ந்தது. இந்தியச் சுதந்திரத்திற்குப் பின்னர்ப் பல நாடுகளுக்குக் குடிபெயர்ந்து சென்றவர்களின் பின்புலங்களும் நன்றாக இருந்தன; புகலிடங்களிலும் அந்த வசதிகளைப் பெற்றுள்ளார்கள். ஆயினும் இன அடையாளம் பற்றிய நெருக்கடிகள் அவர்களிடம் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன.
இந்தியத் தமிழகத்திலிருந்து இலங்கை மலையகங்களில் குடியேறிய மக்களிடமிருந்தும், ஈழத்திலிருந்து பேரினவாத அரசியல் தந்த நெருக்கடிகள் காரணமாக நார்வே, கனடா முதற்கொண்டு பல நாடுகளுக்குச் சென்ற தமிழர்களிடமிருந்தும் கணிசமாகப் புலம்பெயர்வு இலக்கியம் வெளிவந்தது. திறனாய்வுக்கு நல்ல தளங்களையும் புதிய பரிமாணங்களையும் இந்த இலக்கியங்கள் தருகின்றன.