1

பாரதியார் கவிதை உலகம் - 1

1.0 பாட முன்னுரை

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையுலகின் தலைமகன் பாரதி. பாரதிதாசன் மொழியிலே குறிப்பிடுவது என்றால், பாரதி பைந்தமிழ்த் தேர்ப்பாகன்; அவன் ஒரு செந்தமிழ்த் தேனீ; சிந்துக்குத் தந்தை; குவிக்கும் கவிதைக்குயில். வைரமுத்துவின் வார்த்தைகளிலே கூறுவது என்றால் பாரதி, எட்டயபுரத்துக் கொட்டு முரசம்; சுதந்திரச் சூரியன்; தமிழுக்குப் புது ரத்தம் தந்த கவிஞன்; எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையே பள்ளம் இல்லாத பாவலன். இத்தகைய பாரதியின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகக் காட்டுவது இப்பாடத்தின் நோக்கம் ஆகும்.

“இத் தரணியில் தமிழ்மொழி உள்ள வரையில் பாரதியாரின் தீஞ்சுவைச் சொற்கள் மந்திரம் போன்று ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை”; என்பார் ப.கோதண்டராம், (பாரதி யுகம், பக்.18)

1.1 தோற்றமும் பிள்ளைப் பருவமும்

தமிழ்நாட்டுப் பெருங் கவிஞர்களுள் ஒருவர் சி.சுப்பிரமணிய பாரதி. இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த எட்டயபுரம் என்ற ஊரில், 1882ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் நாளில் (தமிழ்க் கணக்குப் படி சித்திரபானு ஆண்டு கார்த்திகை மாதம், 27ஆம் நாள் மூலநட்சத்திரத்தில்) பிறந்தார். தந்தையார் பெயர் சின்னசாமி ஐயர்; தாயார் பெயர் இலட்சுமி அம்மாள். பிற்காலத்தில் ‘மகாகவி’ என்று அனைவராலும் மதிப்போடும் மரியாதையோடும் அழைக்கப் பெற்ற பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியம். இது அவருடைய பாட்டனாரின் பெயர். இப்பெயரைச் செல்லமாகச் சுருக்கிச் ‘சுப்பையா’ என்றே அவருடைய உற்றாரும் உறவினரும் அழைத்தனர்.

1.1.1 இளமைப் பருவ ஈடுபாடு சின்னசாமி ஐயர் அந்த நாளில் எட்டயபுரம் மன்னரின் சமஸ்தானத்தில் சிறப்பானதோர் இடத்தைப் பெற்றிருந்தார். சுப்பையா இளமைப் பருவத்தில் தம் தந்தையிடமே தொடக்கக் கல்வி கற்றார். சின்னசாமி ஐயர் ஆங்கிலம் நன்கு அறிந்தவர்; தமிழில் புலமை மிக்கவர்; கணிதத்தில் தேர்ச்சி பெற்றவர்; கூரிய மதி நுட்பம் கொண்டவர். எனவே, அவர் தம் மகனும் கணிதம், ஆங்கிலம் போன்ற துறைகளில் புலமை பெறவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் சுப்பையாவோ கவிதையில் நாட்டம் கொண்டிருந்தான். நல்ல தமிழ்க் கவிதை புனைய விரும்பினான். தீயைப் போல ஒளி வீசும் கவிதை, இந்த வையகத்தையே காத்து வளர்த்திடக் கூடிய கவிதை. இதுவே அவன் கனவாக இருந்தது. சுப்பையாவின் இளமைப் பருவம் பற்றி திரு ரா.அ.பத்மநாபன் குறிப்பிடுவது இங்கு நினைவு கூரத்தக்கது:

“சுப்பையாவுக்கு ஆங்கிலத்தில் ஈடுபாடில்லை. கணக்கும் யந்திரக் கலையும் வேப்பங் காயாகக் கசந்தன. தகப்பனார் ‘கணக்குப் போடு’ என்றால், அவன் மனதுக்குள், ‘கணக்கு’, ‘பிணக்கு’, ‘வணக்கு’, ‘ஆமணக்கு’ என்று எதுகையும் மோனையுமாக அடுக்கிக் கொண்டே போவான்.” (பாரதியார், பக். 4)

1.1.2 தாயார் மறைவு சுப்பையா 1887ஆம் ஆண்டில், தம் ஐந்தாவது வயதில் தாயை இழந்தார். தாயற்ற சேயான அவர், சிறிது காலம் தாய்வழிப் பாட்டனாரின் வீட்டில் வளர்க்கப் பெற்றார்.

என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில்

ஏங்கவிட்டு விண் எய்திய தாய் (சுயசரிதை: 20)

எனப் பிற்காலத்தில் பாடிய ‘சுயசரிதை’யில் தம் தாயைப் பற்றிய நினைவைப் பதிவு செய்துள்ளார் பாரதியார். தாயின் மறைவுக்குப் பிறகு, பாட்டியான பாகீரதி அம்மாளே சுப்பையாவை அன்புடன் வளர்த்து வந்தார்.

1.1.3 கவிதையில் ஆர்வம் 1889ஆம் ஆண்டில் சின்னசாமி ஐயர், வள்ளியம்மாள் என்னும் மங்கை நல்லாளை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். அச் சமயம் குலமரபுப்படி சிறுவன் சுப்பையாவுக்கு உபநயனம் செய்விக்கப்பட்டது. சிற்றன்னையான வள்ளியம்மைதான் சுப்பையாவைப் பரிவுடன் போற்றி வளர்த்த வளர்ப்புத் தாயார் ஆவார். பிள்ளைப்பருவத்தில் சுப்பையா தம் தந்தையிடம் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார். சுப்பையாவை உரிய பருவத்தில் தந்தை பள்ளிக்கு அனுப்பினார். பள்ளியில் படிக்கும் போதே, சுப்பையா தம் தந்தையுடன் எட்டயபுரம் சமஸ்தானத்திற்குச் செல்வார்; அங்கே நடைபெறும் விவாதங்களைக் கூர்ந்து கேட்பார். தந்தையும் கல்வியறிவு மிக்கவர்; பழகிய இடமோ கற்றோர் அவை. எனவே இயற்கையிலேயே அதுவும் இளமையிலேயே கவிதைகள் புனையும் ஆற்றல் சுப்பையாவுக்கு வாய்த்து விட்டது. அவர் தம் ஏழாம் வயதிலேயே கவிதை புனையத் தொடங்கி விட்டார். அவ்வப்போது சமஸ்தானப் புலவர்கள் தரும் ஈற்றடிகளைக் கொண்டே அருமையான பாடல்களைப் பாடி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அத்தகைய சுவையான நிகழ்ச்சி ஒன்று இதோ!

ஒரு முறை எட்டயபுரம் சமஸ்தானத்தில் கூட்டம் கூடியிருந்தது. காந்திமதி நாதன் என்ற புலவரும் அவையில் இருந்தார். சிறுவனான சுப்பையாவும் இருந்தார். சுப்பையாவைச் சற்று ஏளனம் (கிண்டல்) செய்ய விரும்பினார் புலவர். ‘பாரதி சின்னப் பயல்’ என்று முடியும் படியாக ஒரு வெண்பா இயற்ற முடியுமா என்று சவால் விடுத்தார்.

சிறுவன் ஆயினும் தம் புலமைத் திறமையும் அறிவுக் கூர்மையும் வெளிப்பட, ஒரு பாடல் புனைந்து பாடினார். சுப்பையாவின் பாடல் ‘பாரதி சின்னப் பயல்’ என்றுதான் முடிந்தது. ஆனால் பொருளோ ‘காந்திமதிநாதனைப் பார்! அதி சின்னப் பயல்’ என்று ஆகும்படி அமைந்திருந்தது. பாரதியின் திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது, ஏளனம் செய்ய நினைத்தவர் வெட்கித் தலை குனியும்படியாக ஆயிற்று.

1.1.4 தந்தையார் கண்டிப்பும், பள்ளிப் படிப்பில் ஆர்வக்குறைவும்

சின்னசாமி ஐயர் தம் மகன் சுப்பையா கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் சுப்பையாவை மிகுந்த கண்டிப்புடன் வளர்த்தார்; பிற சிறுவர்களுடன், வீதியில் சென்று விளையாட அனுமதிக்கவில்லை. சுப்பையாவால் மற்ற சிறுவர்களைப் போல ஆடியும், ஓடியும், துள்ளித் திரியவும் முடியவில்லை. அந்த ஏக்கத்தை அவர் தம் ‘சுயசரிதை’யில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டோர் பத்தினில் ஆடியும் ஓடியும்

ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும்

ஈண்டு பன்மரத்து ஏறிஇ றங்கியும்

என்னொடுஒத்த சிறியர் இருப்பரால்;

வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சியான்

வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன்,

தூண்டு நூற் கணத்தோடு தனியனாய்த்

தோழமை பிறிதின்றி வருந்தினேன்

(சுயசரிதை: 4)

இளமைக்கால ஏக்க உணர்வை இப்பாடலில் அழகுறப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் பாரதி. காற்றை வேலியிட்டுத் தடுக்க முடியுமா, என்ன? அல்லது, கடலுக்குத் தான் மூடிபோட்டு அடைத்து விடமுடியுமா? பிறவிக் கவிஞன் பாரதியின் கவித்திறமையைப் பள்ளிக்கூடம் மூட்டைகட்டி ஒதுக்கி வைக்க முடியவில்லை.

“ஏழெட்டு வயதிலேயே மோகனமான பகற்கனவுகள் காண்பதிலும், சிங்கார ரசமுள்ள கவிகள் இயற்றுவதிலும் பிரியம் கொண்டார் . . . பசி, தாகம் கூட அவருக்குத் தெரிவதில்லை” என்கிறார் பாரதியின் சரித்திரத்தைப் பின்னாளில் எழுதிய அவர் மனைவி செல்லம்மா.

ஆம். பள்ளிப் படிப்பிலே அறிவு சென்றிடவில்லை என்றாலும், கவிதை புனையும் ஆர்வம் மட்டும் அவர் உள்ளத்தின் ஆழத்தில் வளர்ந்த வண்ணமாகவே இருந்து வந்தது. நாட்டிலும் காட்டிலும் நாளெல்லாம் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தார் அவர்.

பள்ளிப் படிப்பினிலே மதி

பற்றிட வில்லை எனிலும் தனிப்பட

வெள்ளை மலரணை மேல் அவள்

வீணையும் கையும் விரிந்த முகமலர்

விள்ளும் பொருள் அமுதும் கண்டேன்

வெள்ளை மனது பறிகொடுத்தேன் அம்மா!

(‘ஸரஸ்வதி காதல்’ 1)

(அவள் = கல்விக் கடவுள் ஆகிய ஸரஸ்வதி; விள்ளும் = உணர்த்தும்)

என்று பின்னாளில் ‘ஸரஸ்வதி காதல்’ என்னும் தலைப்பில் பாடிய தோத்திரப் பாடலில் பாரதியார் தமது இளமைப் பருவத்து அனுபவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

1.1.5 புலமைக்குப் பெருமை 1893ஆம் ஆண்டில் சுப்பையாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓர் அனுபவம் சிறப்பானது. எட்டயபுர மன்னருடைய அவைக் களத்தில் சிவஞான யோகியின் தலைமையில் புலவர்கள் கூடியிருந்தனர். அப்புலவர்கள் பதினொரு வயது சுப்பையாவின் கவிபாடும் திறனைக் கண்டு வியந்தனர். அவர் நாவில் கலைமகள் தாண்டவமாடுவதைக் கண்டு ‘பாரதி’ (கலைமகள்) என்ற பட்டத்தினை அவருக்கு வழங்கினர். புலவர்கள் வழங்கிய இந்தப் பட்டமே சுப்பையாவின் பெயருக்கு மகுடமாக என்றென்றும் நிலைத்துவிட்டது. அன்று முதல் சுப்பையா சுப்பிரமணிய பாரதி ஆனார்.

1.1.6 பாரதி விரும்பாத ஆங்கிலக்கல்வி சின்னஞ்சிறு வயதில் யாருக்குமே கிடைக்காத பட்டம் புலவர்களால் தம்மகனுக்கு வழங்கப் பெற்றதை நினைத்து உள்ளூர மகிழ்ச்சியடைந்தாலும், தம் மகன் படித்துப் பட்டம் பெற்று உயர்பதவியில் அமர வேண்டும் என்றே பெரிதும் ஆசைப்பட்டார் சின்னசாமி ஐயர். எனவே, அவர் பாரதிக்கு ஆங்கிலக் கல்வியைக் கற்பிக்க வேண்டி, அவரை 1894ஆம் ஆண்டில் திருநெல்வேலி இந்துக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார்.

ஆங்கிலக் கல்வியில் பாரதிக்குச் சற்றும் விருப்பம் இல்லை. அவர் மனத்தில் பெரும் கசப்பை ஏற்படுத்தியது அக்கல்வி. பின்னாளில் தம் ‘சுயசரிதை’யில் ஆங்கிலக் கல்வியை ‘அற்பர் கல்வி’ என்றும் ‘பேடிக் கல்வி’ என்றும் பலவகையில் தூற்றுகிறார். இக்கல்வியினால் அவர் பெற்ற பயன் என்ன என்று சொல்கிறார் பாருங்கள்:

செலவு தந்தைக்கு ஓர்ஆயிரம் சென்றது;

தீது எனக்குப் பல்ஆயிரம் சேர்ந்தன;

நலம்ஓர் எள்துணையும்கண்டிலேன் அதை

நாற் பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்!

(சுயசரிதை: 29)

வேண்டா வெறுப்பாக ஆங்கிலக் கல்வியைத் தொடர்ந்த பாரதியார் 1897ஆம் ஆண்டு வரை படித்தார். அப்போதைய ஐந்தாம் படிவம் என்ற பத்தாம் வகுப்புக் கல்வியை முடித்தார்.

1.1.7 பள்ளிச் சிறுவனுக்குப் பால விவாகம் பாரதியாருக்குப் பள்ளி நாட்களிலேயே அவருடைய பதினான்கு வயதிலேயே திருமணம் நிகழ்ந்தது. 1897ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் நாள் கடையத்தைச் சேர்ந்த செல்லப்பா ஐயரின் புதல்வி செல்லம்மாள் என்ற ஏழு வயதுச் சிறுமிக்கும் பாரதிக்கும் அவரது தந்தையார் திருமணம் செய்து வைத்தார்.

1.1.8 தந்தையார் செல்வச் சரிவும் உயிர் இழப்பும் பாரதிக்குத் திருமணம் நடந்து ஓராண்டு கழிந்தது. இந்த நிலையில் அவரது வாழ்வில் ஒரு பெரும்துயரம் நிகழ்ந்தது. பாரதியின் தந்தையார் தம் செல்வத்தை இழந்து வறுமைக்கு ஆளானார். பலப்பல வாணிகம் ஆற்றி மிக்க பொருள் சேர்த்துப் பெருவாழ்வு வாழ்ந்த சின்னசாமி ஐயர் துயரக்கடலில் வீழ்ந்தார். இதனால் உள்ளம் குன்றித் தளர்ந்த அவர் 1898ஆம் ஆண்டு ஜூன் மாதம் மரணமடைந்தார். ஐந்து வயதில் தாயை இழந்த பாரதியார் பதினைந்து வயதில் தந்தையையும் இழந்து தனிமரமாய் நின்றார். தந்தை இறந்த பின்னர், யாரும் ஆதரவு காட்ட இல்லாத நிலையில் அகதியைப் போல் ஆனார் பாரதியார். தம் அவல நிலை குறித்துச் சுயசரிதையில் அவர் பாடியிருக்கும் அடிகள் வருமாறு:

தந்தைபோயினன், பாழ்மிடி சூழ்ந்தது;

தரணி மீதினில் அஞ்சல் என்பார்இலர்;

சிந்தையில்தெளிவு இல்லை; உடலினில்

திறனும்இல்லை; உரன்உளத்து இல்லையால்

எந்தமார்க்கமும் தோற்றிலது என் செய்கேன்?

ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?

(சுயசரிதை: 46)

(மிடி = வறுமை; தோற்றிலது = தோன்றவில்லை)

1.2 வறுமையும் இளமையும்

இனி என்ன செய்வது, எங்கே போவது என்ற கேள்விகள் பிறந்தன பாரதியின் வாழ்விலே. கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை அல்லவா? எந்த வழியும் புலப்படாமல் இருந்த நிலையில் காசி நகரில் வாழ்ந்து கொண்டிருந்த பாரதியாரின் அத்தை குப்பம்மாள் அவருக்கு உதவ முன் வந்தார். அவரது அழைப்பினை ஏற்று 1898ஆம் ஆண்டு காசிக்குச் சென்றார் பாரதியார்.

1.2.1 காசிநகரத்து வாழ்க்கை ஒரு திருப்புமுனை பாரதியார் காசியில் தம் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். அங்கே காசி இந்து கலாசாலையில் சேர்ந்து, வடமொழி, இந்தி ஆகியவற்றைப் பயின்றார்; அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ‘பிரவேசப் பரீட்சை’யில் தேறினார். காசி வாழ்க்கை பாரதியாரைப் பன்மொழிப் புலவராக மாற்றியது. அங்கே தான் கச்சம் வைத்து வேட்டி கட்டும் பழக்கமும், தலைப்பாகை கட்டும் பழக்கமும் அவருக்கு ஏற்பட்டன. அவர் மீசை வைத்துக் கொண்டதும் அங்கேதான்.

நடை, உடை, பாவனைகளில் மட்டுமன்றி, உணர்வு நிலையிலும் காசி நகர வாழ்க்கை பாரதியாரின் ஆளுமையில் நல்லதொரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தக் கால கட்டம் நாடெங்கும் திலகர் அலை வீசிய காலம். பத்திரிகைகளின் வாயிலாக நாட்டு நடப்பை அறிந்து கொண்டார் பாரதியார். அதன் காரணமாகச் சுதந்திர உணர்வு என்னும் கனல் அவரது உள்ளத்தில் மூண்டது; நாட்டுச் சிந்தனையே அவரது அன்றாடச் சிந்தனை ஆயிற்று; ‘சுதேசியம்’ அவரது வாழ்வியல் நெறி ஆயிற்று. இங்ஙனம் காசி நகரின் சூழ்நிலை பாரதியாருக்கு நிரம்பவும் பிடித்துப் போயிற்று; அவர் அங்கேயே நிலையாகத் தங்கிவிடவும் எண்ணம் கொண்டார். ஆனால், எழுதிச் செல்லும் விதியின் கை பாரதியின் வாழ்க்கைப் போக்கை வேறு விதமாக எழுத முடிவு செய்தது.

1.2.2 எட்டயபுரம் சமஸ்தானப் பணி விக்டோரியா மகாராணி மரணமடைந்து, ஏழாம் எட்வர்டு பதவி ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சியை ஒட்டி, கர்ஸன் பிரபு தில்லியில் ஒரு தர்பார் நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற எட்டயபுரம் மன்னர், திரும்பும் வழியில் பாரதியாரைச் சந்தித்துத் தம் அரண்மனைக்கு வரும்படியாகக் கேட்டுக் கொண்டார். இந்த அழைப்பினை ஏற்று, பாரதியார் 1902 ஆம் ஆண்டு காசியில் இருந்து எட்டயபுரம் திரும்பினார். இது குறித்துச் செல்லம்மாள் பாரதி தம் நூலில் பதிவு செய்திருப்பது வருமாறு:

“காசியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், பாரதியாருக்கு வடநாட்டிலேயே தங்கிவிட வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தை மாற்றி அவரைத் தென்னாட்டுக்கு அழைத்து வந்தவர் எட்டயபுரம் மகாராஜாதான். மகாராஜா பாரதியாரைச் சந்தித்துத் தம்முடன் எட்டயபுரம் வந்து இருக்கும்படி அழைத்தார். அவரைத் தட்டிச் சொல்ல மனமின்றி, ஊருக்கு வந்து என்னையும் அழைத்துக் கொண்டு எட்டயபுரத்தில் குடித்தனம் ஆரம்பித்தார்” (பாரதியார் சரித்திரம், பக். 35).

எட்டயபுரம் சமஸ்தானத்தில் பாரதியார் பணியில் அமர்ந்தார். மன்னருக்குப் பத்திரிகைகள், புத்தகங்கள் படித்துக் காட்டுவது, அரசவைக்கு வருகின்ற வித்துவான்களுடன் கலந்துரையாடுவது, வேதாந்த, தமிழ் நூல்களை ஆராய்ச்சி செய்வது இவைதாம் பாரதியாரின் அன்றாட அலுவல்கள்.

எட்டயபுர வாழ்க்கை செல்லம்மாளுடன் இணைந்து மனையறம் நடத்தும் வாய்ப்பினைப் பாரதியாருக்கு நல்கியது. இக்கால கட்டத்தில் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர்களான ஷெல்லி, பைரன், கீட்ஸ் போன்றோரது கருத்துகளால் பாரதியார் பெரிதும் ஈர்க்கப்பட்டார். குறிப்பாக அக்கவிஞர்களின் விடுதலை உணர்வு அவரை மிகவும் கவர்ந்தது. இதனை, “அந்தக் காலத்தில் அவர் ‘ஷெல்லிதாசன்’ என்னும் புனைபெயருடன் பத்திரிகைகளுக்குச் சில வியாசங்கள்கூட எழுதியதுண்டு” (பாரதியார் சரித்திரம், பக். 29) எனச் செல்லம்மா பாரதி தம் நூலில் நினைவு கூர்ந்துள்ளார்.

1.2.3 மதுரையில் ஆசிரியர் பணி விடுதலை உணர்வில் தீராத வேட்கை கொண்டிருந்த பாரதியாருக்கு நாளடைவில் சமஸ்தானப் பணி சலிப்பைத் தந்தது. 1904ஆம் ஆண்டு அவர் அப் பணியில் இருந்து விடுதலை பெற்றார்; எட்டயபுரம் ஊரை விட்டும் வெளியேறினார். தம் மனத்திற்கு உகந்த பணி ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்து அவர் மதுரைக்கு வந்தார். மதுரையில் புலவர் கந்தசாமி நடத்திய ‘விவேகபாநு’ என்ற பத்திரிகையில் 1904ஆம் ஆண்டு ஜூலை மாத இதழில் பாரதியாரின் ‘தனிமை இரக்கம்’ என்ற பாடல் வெளியாயிற்று. இதுவே அச்சு வடிவில் வெளிவந்த பாரதியாரின் முதல் பாடலாகும் என்பர் (தமிழகம் தந்த மகாகவி, பக். 18).

மதுரையில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் பாரதியார் தற்காலிகமாகத் தமிழாசிரியராகப் பணியாற்றினார்; 1.8.1904 ஆம் ஆண்டு முதல் 10.11.1904 ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ மூன்று மாத காலம் அப்பணியில் இருந்தார். அதிலும் அவரது மனம் முழுமையாக ஈடுபடவில்லை. பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தையே பாலித்திட விழைந்தவர் அல்லவா அவர்? எனவே, மதுரையிலே ஒரு தமிழாசிரியராக மட்டும் தம்வாழ்க்கையைச் சுருக்கிக்கொள்ள அவர் விரும்பவில்லை.

1.3 பத்திரிகை ஆசிரியர் பணியும் விடுதலை இயக்க ஈடுபாடும்

கவிதையே தொழில் எனக் கொண்டு, இமைப்பொழுதும் சோராது நாட்டிற்கு உழைக்க விரும்பினார் பாரதியார். அவருடைய கவிதை ஓட்டத்திற்கும், விடுதலை உணர்ச்சிக்கும் துணையாக நின்றன பத்திரிகைகள். எழுச்சி ஊட்டும் கவிதைகள், உணர்ச்சி ஊட்டும் கட்டுரைகள் இவற்றை மக்கள் மத்தியிலே எடுத்துச் செல்வதற்குப் பத்திரிகைகள் உதவின. எஞ்சிய நேரங்களில் பொதுக்கூட்டங்களைக் கூட்டினார், சோம்பியிருந்த மக்களுக்குத் தம் பாடல்கள் மூலமும், சொற்பொழிவுகள் மூலமும் உணர்ச்சி ஊட்டினார்; விடுதலை வேட்கையை மக்களிடையே பெருகவிட்டார்.

1.3.1 சுதேசமித்திரனும், சக்கரவர்த்தினியும் சுதேசமித்திரன்’ அக்காலத்தில் தேசிய இயக்கத்திற்குத் துணையாய்ச் செயலாற்றிய பத்திரிகை ஆகும். ‘தமிழ்ப் பத்திரிகையின் தந்தை’ எனப் பாராட்டப் பெற்ற ஜி.சுப்பிரமணிய ஐயர் தாம் சுதேசமித்திரனின் உரிமையாளராக இருந்தவர். அவர் 1904ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாரதியாரைச் சுதேசமித்திரன் ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொண்டார். சுப்பிரணிய ஐயரிடம் பாரதியார், பத்திரிகைப் பயிற்சியை முறையாகப் பெற்றதோடு, அவரது அரிய வழிகாட்டுதலில் நாடறியும் கவிஞரானார். தேசிய இயக்கத்திற்குப் புதிய உயிரும் உருவமும் கொடுத்தார்.

சுதேசமித்திரனில் பணியாற்றிய வேளையில்தான் பாரதியாருக்குத் தங்கம்மாள் என்னும் மகள் பிறந்தார்.

1905ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் நாள் வங்காளம் பிரிக்கப்பட்டது. இந்தப் பிரிவினையால் பாரத நாடு முழுவதும் தேசிய உணர்ச்சி அலையெனப் பொங்கி எழுந்தது; அது கிளர்ச்சியாக வெடித்தது. இந்த அலையின் வீச்சு பாரதியாரின் உள்ளத்திலும் மோதியது; இதன் விளைவாக அவர், தீவிர அரசியலில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். இந்த நிலையில் தமது தீவிரமான கருத்துகளையும் கொள்கைகளையும் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் வெளியிட இயலாதது குறித்து வருந்தினார். தம்முடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் எந்த ஒரு தடையும் இல்லாமல் சுதந்திரமாக வெளியிடும் நோக்கோடு அவர் தொடங்கிய புதிய தேசிய இதழே ‘சக்கரவர்த்தினி’ ஆகும். ‘சுதேசமித்திர’னில் பணியாற்றிக் கொண்டே அவர் ‘சக்கரவர்த்தினி’யிலும் அவ்வப்போது எழுதிவந்தார். 1905ஆம் ஆண்டு நவம்பர் மாதச் ‘சக்கரவர்த்தினி’ இதழில் பங்கிம் சந்திரரின் ‘வந்தே மாதரம்’ என்ற புகழ்பெற்ற பாடலின் மொழிபெயர்ப்பை விளக்கக் குறிப்போடு வெளியிட்டார் பாரதியார்.

1.3.2 காங்கிரஸ் மாநாடுகளும் தேசியத் தலைவர்களின் தொடர்பும்

1905ஆம் ஆண்டு காசியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும், 1906ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்டார் பாரதியார். தாதாபாய் நவுரோஜி தலைமையில் நடைபெற்ற கல்கத்தா காங்கிரஸ் மாநாடு இந்திய தேசிய இயக்க வளர்ச்சியில் புதிய வரலாறு ஒன்றைப் படைத்தது. அந்த மாநாட்டில்தான் நவுரோஜி நாட்டிற்குச் ‘சுயராஜ்யம் வேண்டும்’ என்ற தாரக மந்திரத்தினை முழங்கினார். அந்த மாநாடு பாரதியாரின் அரசியல் வாழ்வில் மட்டுமன்றி, தனிவாழ்விலும் ஒரு திருப்புமுனையை மாற்றத்தை ஏற்படுத்தியது. அம் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பாரதியார், அச்சமயம் டம்டம் நகரிலே இருந்த நிவேதிதா அம்மையாரைத் தரிசித்து அருளுபதேசமும் ஆசியும் பெற்றார்.

1.3.3 ‘இந்தியா’ பத்திரிகையின் தொடக்கம் கல்கத்தா மாநாட்டில் இருந்து சென்னை திரும்பிய பாரதியாரின் உள்ளத்தில் தேசிய உணர்ச்சி கரை புரண்டு ஓடியது; அவரது பார்வையில் புதிய ஒளி வீசியது; ‘சுயராஜ்யம் எமது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவோம்’ என முழங்கிய பால கங்காதர திலகரின் தலைமையை அவர் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் மிதவாதியான சுப்பிரமணிய ஐயரின் தலைமையில் இயங்கிய ‘சுதேசமித்திர’னில் பாரதியார் தமது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும், சுதந்திரமாகவும் முழுமையாகவும் வெளியிட இயலாமல் தவித்தார்; அவற்றை வெளியிடுவதற்குச் சரியான கருவி தனிப்பத்திரிகை ஒன்றைத் துவங்குவது தான் என்று தெளிந்தார். ‘ஆங்கில மோகம்’ தலைவிரித்தாடிய அந்தக் காலகட்டத்தில் தமிழிலே நல்லதொரு பத்திரிகை நடத்த வேண்டும் என்ற தீவிரமான முயற்சியில் ஈடுபட்டிருந்தார் மண்டயம் திருமலாச்சாரியார்; தாம் புதிதாகத் துவங்க இருக்கும் பத்திரிகைக்குப் பாரதியாரே தகுதியான, சிறந்த பொறுப்பாசிரியர் ஆவார் என்பதை உணர்ந்தார். இருவரது சந்திப்பின் விளைவாக, 1906ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற மூன்று தாரக மந்திரங்களைத் தனது இலட்சியங்களாகக் கொண்டு ‘இந்தியா’ பத்திரிகை வெளிவரத் தொடங்கியது. தீவிரமான எண்ணமும் உணர்வும் கொண்ட தேசபக்தர்களின் வீரமுரசாக விளங்கியது அப்பத்திரிகை.

‘இந்தியா’ பத்திரிகையின் முகப்புப் பக்கத்தில் சுதந்திர உணர்வை ஊட்டத்தக்க நாட்டு நடப்பைக் காட்டக்கூடிய கருத்துப் படங்களை (Cartoons) வெளியிட்டார் பாரதியார். இம் முறையை முதன்முதலில் பத்திரிகைத் துறையில் கையாண்டு வெற்றி கண்டவர் பாரதியாரே ஆவார். இது தவிர வேறு பல புதிய உத்திகளையும் ‘இந்தியா’ பத்திரிகையில் புகுத்திப் பத்திரிகைத் துறையில் பெரும் புரட்சி செய்தார் அவர். இதனால் ‘இந்தியா’ பத்திரிகை மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றது. இந்தச் சமயத்தில் பாரதியாரை வ.உ.சிதம்பரனார் சந்தித்தார்; இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆயினர்.

‘இந்தியா’ பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிக்கொண்டே ‘பால பாரத்’ என்ற ஆங்கில வாரப் பத்திரிகையையும் பாரதியார் வெளியிட்டார்; ‘இந்தியா’ பத்திரிகையின் இணைப்பத்திரிகையாகவே அதனை வெளியிட்டார்.

1.3.4 கடற்கரைக் கூட்டங்களும் தேசிய எழுச்சியும் பத்திரிகைப் பணியோடு பாரதியார் அமைதி அடைந்து விடவில்லை; ஓய்வு நேரத்தில் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் அவர் கூட்டம் கூட்டிப் பேசினார். ‘வந்தே மாதரம்’ என்று முழங்கினார்; நாட்டில் எங்கும் சுதந்திர ஆர்வத்தை ஊட்டினார். கோழையான ஜனங்களுக்கு உண்மைகளைக் கூறினார்; எழுச்சியூட்டும் தேசிய இயக்கப் பாடல்களைப் பாடினார். இந்தக் கால கட்டத்தில் மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார், எஸ்.துரைசாமி ஐயர், வி.சர்க்கரைச்செட்டியார், டாக்டர் நஞ்சுண்ட ராவ், சுரேந்திரநாத் ஆர்யா ஆகியோரின் நட்பும் தொடர்பும் பாரதியாருக்குக் கிடைத்தன.

1907ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் நாள் பஞ்சாப் சிங்கம் லாலா லஜ்பத்ராய் நாடு கடத்தப்பட்டார். அதனை ஒட்டிச் சென்னையில் மே மாதம் 17ஆம் நாள் விபின் சந்திர பாலர் பேசினார். அவரது ஆவேசமான, உணர்ச்சிமயமான சொற்பொழிவு தேசிய எழுச்சிக்கு உரம் ஊட்டியது. விபின் சந்திர பாலரின் சென்னை வருகைக்கும் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கும் காரணமாக இருந்தவர் பாரதியார்தான்.

1.3.5 சூரத் காங்கிரஸ் மாநாடும் தீவிரவாத ஆதரவும் சூரத் நகரில் 1907ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் நாள் 23ஆவது காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து மிகுதியான எண்ணிக்கையில் சார்பாளர்களை (delegates) அழைத்துச் செல்வதில் தீவிரம் காட்டினார் பாரதியார். அம் மாநாட்டின் போது திலகர், அரவிந்தர், லஜ்பத்ராய் போன்ற தலைவர்களை அவர் நேரடியாகச் சந்தித்து அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். குறிப்பாக, இக் காலகட்டத்தில் பாரதியார் திலகரின் தீவிரவாதக் கொள்கையை முற்றிலும் ஆதரிக்கத் தொடங்கினார்.

சூரத்தில் இருந்து சென்னை திரும்பிய பாரதியார், முன்னைக் காட்டிலும் முனைப்பாகப் பல புதிய பணிகளில் ஈடுபட்டார். தீவிரவாதிகளுக்கு என்று ‘சென்னை ஜனசங்கம்’ என்ற ஓர் அமைப்பைத் தோற்றுவித்தார்; சென்னையில் வெளிநாட்டுப் பொருள்கள் புறக்கணிப்பு இயக்கத்தையும் முழுமூச்சோடு நடத்திக்காட்டினார்; திலகரின் கட்டளையை ஏற்று ‘சுயராஜ்ய தினத்தைச்’ சென்னையில் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடினார்.

1.4 பாண்டிச்சேரியில் பத்து ஆண்டுகள்

பாண்டிச்சேரி என்று அழைக்கப்படும் புதுச்சேரி அக்காலத்தில் பிரஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது. 1908 முதல் 1918 வரையிலான பத்து ஆண்டுகளைப் பாரதியார் புதுச்சேரியில் கழித்தார். சூழ்நிலைகளின் கட்டாயத்தால் புதுச்சேரிக்கு வந்த பாரதியாருக்குப் புதிய சூழலும் புதிய நண்பர்களும் இசைவாகவே அமைந்தனர். இலக்கியப் படைப்புகள், சமுதாயச் சீர்த்திருத்தம், அரசியல் விடுதலை ஆகிய அனைத்திலும் அரிதான சாதனைகளைச் செய்து காட்டினார்.

1.4.1 பாண்டிச்சேரிக்குச் சென்ற பின்னணி பாரதியார் ‘இந்தியா’ பத்திரிகையில் வாரந்தோறும் நாட்டு நடப்பைக் காட்டும் படங்கள், பாடல்கள், கட்டுரைகள், கருத்துப் படங்கள் (cartoons), தலையங்கங்கள் (editorial) ஆகியவற்றை வெளியிட்டார்; அவற்றின் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டினார். சுருங்கக் கூறின், ‘இந்தியா’ பத்திரிகையையே கேடயமாகக் கொண்டு ஆங்கில அரசுடன் மோதினார் பாரதியார். இதன் விளைவாக, ‘இந்தியா’ பத்திரிகையை அடக்கி ஒடுக்கும் நோக்கோடு அரசு கொடியதோர் அச்சுச் சட்டத்தை (Press Act) 1908ஆம் ஆண்டில் பிறப்பித்தது; ‘இந்தியா’ பத்திரிகை வெளியிடுவதற்குக் காரணமானவர்களைக் கைது செய்யும் உத்தரவையும் போட்டது. எனவே, இந்தச் சூழ்நிலையில் எந்த நேரமும் பாரதியாருக்குப் ‘பிடிவாரண்டு’ (கைது செய்வதற்கான உத்தரவு) வரலாம் என்பதை அவரது நெருங்கிய நண்பர்கள் உணர்ந்தனர்; சென்னையில் இருந்து ‘பிடிவாரண்’டில் அகப்பட்டுக் கொள்வதைவிடப், புதுச்சேரி சென்று, அங்கிருந்து கொண்டே நாட்டுக்குத் தொண்டு புரியலாம் என்று அவர்கள் பாரதியாரிடம் வற்புறுத்திக்கூறினர்; அவரைப் புதுச்சேரி செல்லவும் இசைய வைத்தனர். அதன்படி 1908ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாரதியார் புதுவை சென்றடைந்தார்.

புதுச்சேரியில் சிட்டி குப்புசாமி ஐயங்காரின் வீட்டில் நண்பர் சீனிவாஸாச்சாரியார் தந்த அறிமுகக் கடிதத்தால் தங்க இடம் பெற்றார் பாரதியார். ஆனால், அங்கே அவரால் நீண்ட காலம் தங்கியிருக்க முடியவில்லை. சென்னை அரசினரின் தூண்டுதலின் பேரில் பிரஞ்சுக் காவல்துறையினர் குப்புசாமி ஐயங்காரை மிரட்டினர். எனவே அவர் பாரதியாரை வேறு இடம் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டார். இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் பாரதியார் தவித்தபோது எங்கிருந்தோ வந்தார் குவளையூர்க் கிருஷ்ணமாச்சாரியார். அவர் இறுதிவரை

பாரதியாருக்குத் துணையாக நின்றார்; தனிமையிலும் துயரத்திலும் உதவியாக இருந்தார்.

1.4.2 ‘இந்தியா’ பத்திரிகையின் மறுபிறவி 1908ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் ‘இந்தியா’ பத்திரிகை சென்னையில் இருந்து வெளிவருவது நின்று போய் இருந்தது. ஆனால், பாரதியார் புதுச்சேரி வந்த ஒரு மாதத்திற்குள் அச்சகமும் புதுச்சேரிக்கு இரகசியமாக வந்து சேர்ந்தது; மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரும் புதுவைக்கு வந்து சேர்ந்தார். அக்டோபர் 20ஆம் நாள் மீண்டும் ‘இந்தியா’ புதுவை மண்ணில் இருந்து புதுப்பொலிவுடன் வீரமுரசு கொட்டத் தொடங்கியது. ஆம். பாரதியார் பிரஞ்சு எல்லையில் வாழ்ந்து கொண்டே, பிரிட்டிஷ் அரசின் மீது போர் தொடுத்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு சுதந்திர இயக்க வளர்ச்சிக்கு முன்னைவிட வலிமையோடும் வேகத்தோடும் விறுவிறுப்போடும் தொண்டாற்றினார்; அரசின் அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் அஞ்சாமல், மனம் கலங்காமல் தமது பத்திரிகைப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வந்தார்.

1.4.3 இளைய மகள் சகுந்தலாவின் பிறப்பு பாரதியார் புதுவைக்கு வரும்போது, அவருடைய துணைவியார் செல்லம்மா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். எனவே, செல்லம்மாவை அவரது சகோதரர் கே.ஆர். அப்பாத்துரை கடையத்திற்கு அழைத்துச் சென்றார். பாரதி மிகுந்த ஆர்வத்துடன் மகாகவி காளிதாசனின் ‘சாகுந்தலம்’ என்னும் வடமொழி நாடகத்தைப் படித்துவந்த சமயத்தில் கடையத்தில் செல்லம்மாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்குச் ‘சகுந்தலா’ என்று பெயர் வைக்கும்படி கடிதம் எழுதினார் பாரதியார். குழந்தை பிறந்த ஆறுமாதத்திற்குள் செல்லம்மாளும் புதுச்சேரி வந்து சேர்ந்தார்.

1.4.4 நண்பர் கூட்டம் அரவிந்தர், வ.வே.சுப்பிரமணிய ஐயர் ஆகியோரின் கூட்டுறவால் 1910ஆம் ஆண்டில் பாரதியாரின் அரசியல் வாழ்க்கை, கலைத்துறை வாழ்க்கை ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டன. இவ்விரு அறிஞர்களின் உறவால் பாரதியார் அமைதியும், ஆறுதலும், வேதாந்த, இலக்கிய இன்பமும் பெற்றார். இதற்கிடையில், பாரதியாருக்குப் புதுச்சேரியில் நண்பர்கள் நிறையக் கிடைத்தனர். இவர்களுள் பரலி சு.நெல்லையப்பர், வ.ராமசாமி., ஆராவமுத ஐயங்கார், பாரதிதாசன் என்ற கனக சுப்புரத்தினம் ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்கள் தவிர பாரதியாரின் குடும்ப வாழ்க்கை இயன்ற வரையில் எந்த இடையூறும் இல்லாமல் நடைபெற உதவியவர்கள் என்ற முறையில் சிட்டி குப்புசாமி ஐயங்கார், சுந்தரேச ஐயர், கிருஷ்ணசாமி செட்டியார், பொன்னு முருகேசம் பிள்ளை, பாரதியாரின் வீட்டில் வேலை பார்த்து வந்த அம்மாக்கண்ணு என்ற பெண்மணி ஆகியோரையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

1.4.5 இலக்கியப் படைப்புகளும் சமூகச் சீர்திருத்தமும் 1912ஆம் ஆண்டு பாரதியார் வாழ்க்கையில் உழைப்பு மிகுந்த ஆண்டு எனலாம். இந்த ஆண்டில்தான் அவர் பல அற்புதமான இலக்கியங்களைப் படைத்தார்; குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் என்னும் முப்பெரும் காவியங்களை இயற்றினார்; பகவத் கீதையைத் தமிழில் மொழி பெயர்த்தார்; பதஞ்சலி யோக சூத்திரத்திற்கு உரை எழுதினார்.

பாரதியார் புதுச்சேரியில் பற்பல நற்செயல்களைச் செய்தார். இந்தியாவைப் பற்றியுள்ள சாதி வேற்றுமையும் தீண்டாமைக் கொடுமையும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் மிகுந்த கவனம் செலுத்தினார். எல்லோரையும் ஒரு குலமாகவே கருதிய அவர், அனைவர்க்கும் வழிகாட்டியாகவே வாழ்ந்தார். 1913ஆம் ஆண்டில் கனகலிங்கம் என்ற ஆதி திராவிடச் சகோதரருக்குப் பூணூல் அணிவித்தார். இதில் குறிப்பிடத்தக்க ஒரு வியப்பு என்னவென்றால், பாரதியார் தாம் பூணூல் அணிவதை நீண்ட காலத்திற்கு முன்பே விட்டு ஒழித்திருந்தார். அவர் தமது புதுச்சேரி வாழ்க்கையின்போது சிறிது காலம் தாடி மீசை வளர்த்து வந்தார்; வைணவ ஆழ்வார்களைப் போலவே திருநாமமும் தரித்துக் கொண்டார். பாரதியார் 1908 முதல் 1918 வரை ஏறத்தாழ பத்து ஆண்டுகள் வனவாசம் செய்து, காவியங்கள் பலவற்றைப் படைத்தும், மொழி பெயர்ப்புப் பணிகள் புரிந்தும், பத்திரிகைகளில் படைப்புக்கள் பலவற்றை வெளியிட்டும் தமிழன்னைக்குப் புதிய அணிகளையும், பாரத மாதாவுக்குப் பல தேசிய அணிகளையும் அணிவித்து மகிழ்ந்தார். பாரதியாரின் புதுவை வாழ்க்கையைத் ‘தமிழ் இலக்கிய உலகின் பொற்காலம்’ என்றே ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

1.4.6 ஆங்கிலேயரிடம் சிறைப்படுதல் ‘அரண் இல்லாச் சிறையில் விலங்கு இல்லாக் கைதி’யாகப் புதுவையில் வாழ்ந்து வந்த வாழ்க்கை கசந்ததால், பாரதியார் புதுச்சேரியை விட்டு வெளியேறுவது என்று முடிவு செய்தார். அதன்படி 1918ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் அவர் தம் குடும்பத்துடன் புதுச்சேரியை விட்டுக் கிளம்பினார். பாரதியார் பிரிட்டிஷ் எல்லையில் கால் வைத்ததுதான் தாமதம்; வில்லியனூருக்கு அருகில் ஆறாவது மைலில் தலைமைக் காவலர் ஒருவரால் கைது செய்யப்பெற்றார்; கடலூர் சிறைச்சாலையில் இரண்டு நாள் அவரை வைத்திருக்கும்படி நீதிபதி உத்திரவிட்டார். பாரதியார் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்த ‘சுதேசமித்திரன்’ ரெங்கசாமி அய்யங்கார், எஸ்.துரைசாமி ஐயர் ஆகியோர் அவரது விடுதலைக்காக முயற்சி எடுத்தனர். 22 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 1918 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் நாள் பாரதியாரை விடுதலை செய்தது ஆங்கில அரசு. சிறையில் இருந்து வெளிவந்த அவர், சென்னை வந்து, அதன் பிறகு தமது மனைவியின் ஊரான கடையத்திற்குச் சென்றார்.

1.5 பாரதியாரின் கடைசி மூன்று ஆண்டுகள்

பாரதியார் வாழ்க்கையின் கடைசி மூன்று ஆண்டுகளிலும் துயரமும், சோதனைகளும், ஏமாற்றங்களும் தாம் கலந்து இருந்தன. ஆயினும் கொள்கைப் பிடிப்பில் தளராமலும், மனம் சோராமலும் பாரதியார் அனைத்தையும் எதிர்கொண்டார். மக்கள் தூற்றியதைப் பொருட்படுத்தாமல் தம் சீர்திருத்தப் பணிகளைத் தொடர்ந்தார். கவிஞன் என்ற பெயருக்கு மாசுபடாமல் கௌரவம் காத்தார். இந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் கடையத்திலும் ஓர் ஆண்டு சென்னையிலும் வாழ்ந்தார்.

1.5.1 பாரதியாரைக் கடையத்து மக்கள் தூற்றுதல் பாரதியார் ஏறத்தாழ இரண்டு ஆண்டுக் காலம் கடையத்தில் வாழ்ந்தார். அங்கு இருந்தபடியே ‘சுதேசமித்திர’னுக்குக் கட்டுரைகள் எழுதி வந்தார்; ‘கலா நிலையம்’ என்ற ஓர் அமைப்பை நிறுவி, அதன் வாயிலாகத் தமிழ்ப்பணி புரிய விரும்பினார். தனி மனித சுதந்திரம் சாதி, சமய வேறுபாடற்ற சமுதாயம் ஆண், பெண் நிகர் கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகச் செய்தல் முதலான தம் சீரிய கனவுகளை முற்போக்கான சிந்தனைகளைச் செயற்படுத்த முற்பட்டார்; ஆயின், கடையம் மக்களோ அவரைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் தூற்றினர். இதனால் சலிப்பும் சோர்வும் உற்றார் பாரதியார்.

1.5.2 கனவுகள் பொய்த்தாலும் ஊக்கம் தளராமை கடையத்தில் பாரதியாருக்கு இருக்க விருப்பமில்லை. எனவே, அவர் திருவனந்தபுரம், எட்டயபுரம் ஆகிய ஊர்களிலும் சிறிது காலம் வாழ்ந்தார். எட்டயபுரத்தில் தங்கியிருந்த சமயத்தில் 1919ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் நாள் தமக்கு உதவி செய்ய வேண்டி வெங்கடேச எட்டப்ப பூபதி ஜமீன்தாருக்கு இரு சீட்டுக்கவிகள் எழுதினார். இவற்றின் வாயிலாகப் பாரதியாரின் உள்ளப் பாங்கினை நம்மால் நன்கு அறிந்துகொள்ள முடிகின்றது. பன்னிரண்டு ரூபாய்க்குச் சேவகம் செய்துவந்த பழைய சுப்பையாவாகத் தம்மைக் கருதாமல், கவியரசனைப் புவியரசன் தக்கபடி ஆதரிக்க வேண்டும் என்பதை இச்சீட்டுக்கவிகள் விளக்குகின்றன. வறுமையில் உழன்றாலும் தன்மானம் இழக்கத் துணியாத பாரதியாரின் செம்மையான உள்ளப் பண்பே இங்குச் சுடர் விட்டு நிற்கின்றது எனலாம்.

பாரதியாருக்கு ஜமீன்தாரிடம் இருந்து உதவி கிடைக்கவில்லை. அவரது வாழ்க்கையில் சோதனைகள் தொடர்ந்தன. என்றாலும், மனம் கலங்காத பாரதியார் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதன் மூலம் தம் கவலைகளை மறந்தார்; திருநெல்வேலிக்கு அடிக்கடி வந்து கவிதைகள் பாடி மக்களை மகிழ்வித்தார். 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை சென்றபோது ராஜாஜி இல்லத்தில் பாரதியார் காந்தியடிகளைச் சந்தித்தார்; காந்தியடிகள் தொடங்கப் போகும் இயக்கத்திற்குத் தம் வாழ்த்துகளைத் தெரிவித்தார்; அன்று மாலை திருவல்லிக்கேணிக் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் ‘வாழ்க நீ எம்மான்’ என்ற பாடலால் காந்தியடிகளை மனங்குளிர வாழ்த்திப் பாடினார்.

சென்னையில் சிலநாள்கள் தங்கி இருந்துவிட்டு, மீண்டும் கடையம் புறப்பட்டார் பாரதியார். பின்னர், அவர் கானாடு காத்தான், காரைக்குடி ஆகிய ஊர்களுக்குச் சென்று வந்தார்; தம் கவிதைத் திறத்தாலும் சொல்வன்மையாலும் மக்களைக் கவர்ந்தார். 1920 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் நாள் பொட்டல்புதூரில் ‘இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை’ என்ற பொருள் பற்றி உரையாற்றினார். இந்நிலையில் தமது நூல்களை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் பாரதியார் உள்ளத்தில் எழுந்தது; தமது நூல் வெளியீட்டுத் திட்டத்தை விளக்கி மதுரை நண்பர் சீனிவாச வரதனுக்குக் கடிதம் எழுதினார்; நூல் வெளியீட்டுத் திட்டத்தை விளக்கிச் சுற்றறிக்கையாகவும் பலருக்கு அனுப்பி வைத்தார். வழக்கம் போலவே இம் முயற்சியிலும் பாரதியாருக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

1.5.3 மீண்டும் சென்னையில் பத்திரிகைப்பணி 1920ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் பணியாற்ற வருமாறு மீண்டும் ரெங்கசாமி ஐயங்காரிடமிருந்து பாரதியாருக்கு அழைப்பு வந்தது; அதனை ஏற்று அவர் சென்னை சென்றார்; ‘சுதேசமித்திர’னில் துணையாசிரியராகப் பொறுப்பேற்றார்; தம் இயற்பெயரிலும், ‘காளிதாசன்’, ‘சக்திதாசன்’ என்னும் புனைபெயர்களிலும் தம் படைப்புகளை எழுதிவந்தார்.

சென்னையில் பாரதியார் முதலில் தம்புச்செட்டித் தெருவிலும், பின்னர் திருவல்லிக்கேணியில் துளசிங்கப்பெருமாள் கோயில் தெருவிலும் வாழ்ந்து வந்தார். இக்காலகட்டத்தில் பாரதியாருக்கு வ.வே.சுப்பிரமணிய ஐயர், குவளைக் கிருஷ்ணமாச்சாரியார், சுரேந்திரநாத் ஆர்யா, துரைசாமி ஐயர் ஆகியோருடன் மீண்டும் கலந்து உறவாடும் வாய்ப்புக் கிடைத்தது. இவர்களுடன் உரையாடிப் பொழுதுபோக்குவது பாரதியாரின் அன்றாடத் தொழில் ஆயிற்று. பத்திரிகையில் பணியாற்றிய நேரம் போக, மீதியுள்ள நேரத்தில் அவர் வெளியூர்களுக்குச் சென்று சொற்பொழிவுகள் ஆற்றினார்: கூட்டங்களில் உணர்ச்சி மிக்க குரலில் பாடினார். 1921 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் நாள் அவர் கடலூர் சென்று பேசினார்.

1.5.4 கோயில் யானை தூக்கி எறிதல் பாரதியார் சென்னையில் வாழ்ந்த காலகட்டத்தில் இறை வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். நாள்தோறும் பார்த்தசாரதி கோயில் சென்று வழிபாடு செய்துவந்தார். அக்கோயில் யானையுடன் மிக நெருங்கிப் பழகினார்; யானைக்குத் தேங்காய், பழம் முதலியன கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டார். அந்த யானைக்கு ஒரு நாள் திடீரென்று மதம் பிடித்துக் கொண்டது. வழக்கம்போல் பாரதியார் யானையிடம் சென்றார்; அங்கே இருந்தவர்கள் எச்சரித்தும் கேளாமல் அதற்குத் தின்பண்டம் அளித்தார். கோயில் யானை பாரதியாரைத் துதிக்கையால் தூக்கிப் போட்டுவிட்டது. காயமுற்று, உணர்விழந்த நிலையில் யானைக்குச் சற்றுத் தொலைவிலேயே விழுந்த பாரதியாரை, குவளையூர் கிருஷ்ணமாச்சாரியாரே துணிவுடன் வந்து காப்பாற்றினார்.

பாரதியாருக்குத் தலையிலும் உடம்பிலும் காயம் ஏற்பட்டதால், உடனடியாக இராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பெற்றது. சில நாட்களில் அவர் உடல்நலம் பெற்றார். என்றாலும், முன்பு போல் உடம்பு அவ்வளவு தெம்பாக இல்லை. வழக்கம் போல் ‘சுதேசமித்திரன்’ அலுவலகம் சென்று அவர் தமது பத்திரிகைப் பணிகளைக் கவனித்து வந்தார்; வெளியூர்களுக்குச் சென்று அவ்வப்போது சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் வந்தார். 1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு நாளில் பாரதியார் ஈரோடு சென்றார்; ஈரோட்டை அடுத்த கருங்கல்பாளையத்தில் இருந்த வாசகசாலை ஆண்டு விழாவில் ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற பொருள் பற்றிச் சொற்பொழிவாற்றினார்; ஆகஸ்ட் 2ஆம் நாள் ஈரோட்டில் வாய்க்கரையில் ‘இந்தியாவின் எதிர்கால நிலை’ என்பது பற்றி உரையாற்றினார். முதல்நாள் ஆன்மிகச் சொற்பொழிவு; அடுத்த நாள் அரசியல் சொற்பொழிவு. ஆன்மிகத்தையும் அரசியலையும் உயிர் மூச்சாகக் கொண்டிருந்த பாரதியாரின் இறுதிச் சொற்பொழிவுகள் இவையே ஆகும்.

1.5.5 மகாகவியின் மரணம் யானையால் தாக்குண்ட அதிர்ச்சியினின்றும் பாரதியார் ஓரளவு நலம் பெற்றார் என்றாலும், உடல் மட்டும் முழுவதும் தேறவில்லை. 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் அவரது உடல்நிலை சீர்கெட்டது; வயிற்றுக் கடுப்பு நோய் அவரை வாட்டியது. ஏற்கனவே உடல் நலிவுற்றிருந்த நிலையில் நோயை எதிர்த்து நிற்பதற்கு உரிய ஆற்றல் பாரதியாரின் உடலில் இல்லை. மருந்து உண்ணுமாறு நண்பர்களும் உறவினர்களும் வற்புறுத்திக் கூறியதைப் பாரதியார் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் நோயின் கடுமையால் பாரதியார் பெரிதும் துன்புற்றார்; அன்று நள்ளிரவு தாண்டி ஒரு மணியளவில், அவர் உயிர் பிரிந்தது ஆம்; தமது முப்பத்தொன்பதாம் வயது முடியும் முன்னரே மரணமடைந்தார் மகாகவி பாரதி.

1.6 தொகுப்புரை

கவிஞர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர், சீர்திருத்தவாதி, முற்போக்குச் சிந்தனையாளர், பெண்ணியப் போராளி, மனிதாபிமானி, தேசியவாதி, அஞ்சா நெஞ்சினர், அசைவிலா ஊக்கம் கொண்டவர், கூடி வந்த இன்னல்களுக்கு இடையேயும் கொள்கைகளை விட்டுக் கொடுக்காதவர் என்ற பல அடை மொழிகளுக்கும் உரியவர் மகாகவி பாரதியார். மரணத்தைக் கண்டு மனம் கலங்காதவர், ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்று முழங்கியவர், ‘காலா’ என்றன் கால் அருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்’ என்று காலனை (யமனை) ஏளனம் செய்தவர், தமது 39ஆம் வயது முடியும் முன்னரே காலமாகி விட்டார்! தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு (contribution) அளவிடற்கு அரிது. தமிழ்மொழி உள்ள அளவிற்கும் அவர் பெயர் நிலைக்கும், ஆம், அறிஞர் வெ.சாமிநாத சர்மா சொன்னது போல்

“தமிழ்மொழியிலே இனிமை இருக்கிறவரையில்

கவிதையிலே உணர்ச்சி இருக்கிறவரையில்,நாட்டிலே

பெண்மைக்கு மதிப்பு இருக்கிறவரையில் பாரதியார்

வாழ்ந்து கொண்டிருப்பார்”

(நான் கண்ட நால்வர், பக்.261)

பாடம் - 2

பாரதியாரின் தேசியப் பாடல்கள்

2.1 பாரத நாடு

பாரத நாடு பழம்பெருமை வாய்ந்த நாடு. சிறந்த பாரம்பரியத்தையும், உயர்ந்த பண்பாட்டையும் உடைய நாடு. இங்குத் தோன்றிய சிந்துவெளி நாகரிகம், உலக நாகரிகங்களுள் தொன்மையானது. நில வளமும் நீர்வளமும் கலைவளமும் மிகுந்த நாடு. இதன் சிறப்பினைப் பாரதியார் பல பாடல்களின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

2.1.1 பாருக்குள்ளே நல்ல நாடு’ உலகில் உள்ள நாடுகளுள், பாரத நாடு ஒரு நல்ல நாடு. அறிவிலும், வீரத்திலும், மானத்திலும், கற்பிலும், இரக்கத்திலும், ஆன்மீகத்திலும் சிறந்த ஒரு நாடு. இவற்றைக் கருதித்தான் பாரதியார்,

பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்

பாரத நாடு

(பாரத நாடு – பல்லவி)

என்று புகழ்கிறார். மேலும் இந்த நாட்டின் பெருமைக்கு என்ன காரணம் என்பதனையும் வரிசையாக எடுத்துக் கூறுகிறார். உலகிலுள்ள மிக உயர்ந்த மலையாகிய இமயமலையை உடைய நாடு. வற்றாத கங்கை நதியை உடைய நாடு. வேதங்களை உடைய நாடு. கௌதம புத்தர் தோன்றியதும் இந்நாடு. இத்தகைய சிறப்புகளைப் பாரதியார் தம் பாடல்களில் பாடிப் பெருமை அடைகிறார்.

மன்னும் இமயமலை எங்கள் மலையே

மாநிலம் மீதிது போல்பிறிது இலையே!

இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் ஆறே

இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?

பூரண ஞானம் பொலிந்த நன்னாடு

புத்தர் பிரான்அருள் பொங்கிய நாடு

பாரத நாடு பழம் பெரும் நாடே

பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே.

(எங்கள் நாடு-1,2)

இவ்வாறு, பாரத நாட்டின் பெருமையைப் பற்றிப் பாடி மகிழ்கிறார் பாரதியார்.

2.1.2 தாயின் மணிக்கொடி ஒரு நாடு இன்னொரு நாட்டை கைப்பற்றியதற்கு அடையாளமாக, வெற்றிபெற்ற நாட்டின் கொடியைக் கைப்பற்றப்பட்ட நாட்டின் கோட்டையில் பறக்கவிடுவார்கள். கொடி ஒரு நாட்டின் சின்னம். ஆட்சியின் அடையாளம். அரசனின் அடையாளம். ஒரு நாட்டின் மானம் அந்த நாட்டின் கொடியில் இணைந்திருக்கிறது. கொடிக்குக் கொடுக்கும் மரியாதை நாட்டுக்குக் கொடுக்கும் மரியாதையாகக் கருதப்படும். ஒரு நாட்டின் கொடியை அவமதித்தால், அது அந்த நாட்டை அவமானப்படுத்தியதாகக் கொள்ளப்படும். தம் நாட்டின் கொடியைக் காப்பாற்றுவதற்காக, தம் உயிரையே மாய்த்துக் கொண்ட வீரர்கள் பலர் இருந்திருக்கின்றனர். கொடிகாத்த திருப்பூர் குமரன் என்ற தேசபக்தரே இதற்குத் தகுந்த உதாரணம். எனவே, ஒரு நாட்டின் ஆட்சியை, அரசனை, மக்களை மதிக்க விரும்புவோர், அந்நாட்டின் கொடியை முதலில் மதிக்க வேண்டும். இன்றைக்கும் கொடிக்கு வணக்கம் செலுத்துவது மரபாக உள்ளது.

ஒரு நாட்டின் கொடிக்கு எத்தகைய சிறப்பு உண்டு என்பதை அறிந்த பாரதியார், இந்திய தேசியக் கொடியின் பெருமையைப் பலவாறு புகழ்ந்து பாடுகிறார்.

பாரதத்தின் தேசியக் கொடியின் புகழைப் பாட முன் வந்தார் பாரதியார். இந்தியா சுதந்திரம் அடையுமுன்பே அதற்கொரு கொடியைக் கற்பனை செய்து மனக் கண்ணில் பறக்கவிட்டு, அதை வணங்க அனைவரையும் அழைக்கிறார். இது சுதந்திரம் அடைந்தே தீருவோம் என்ற அவருடைய நல்லார்வ நலத்தைப் புலப்படுத்துகிறது (Optimism).

தாயின் மணிக்கொடி பாரீர்! – அதைத்

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

(தாயின் மணிக்கொடி : பல்லவி)

இந்தியத் தாயின் கொடி ஒளிபொருந்திய ஒன்று என்பதனை வெளிப்படுத்த, ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ என்று குறிப்பிடுகிறார். மணி என்றால் ஒளி என்றும் ஒரு பொருள் உண்டு. அடிமை இருளில் அகப்பட்டிருக்கும் பாரதத்திற்குச் சுதந்திர ஒளி வீச வேண்டும். அதையே இந்தக் கொடி புலப்படுத்துகிறது என்கிறார் பாரதி.

சுதந்திரப் போராட்டத்தின் தாரக மந்திரமாக (ஒன்றை அடைவதற்கு மிக மிக ஆதாரமானதாகவும் உள்ளத்தில் என்றும் நீங்காமல் நிற்கும்படியாகவும் ஏற்றுக் கொள்ளப்படுவது) ஒலிக்கப்பட்ட ஒரு குரல் ‘வந்தே மாதரம்’ என்பது. ‘வந்தே மாதரம்’ என்பது தாய் மண்ணைப் போற்று என்று பொருள்படும். ‘வந்தே மாதரம்’ என்ற தாரக மந்திரத்தையே தலைப்பாக வைத்து வங்கக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி கவிதை இயற்றினார். அக்கவிதையின் ஈர்ப்பில் கவரப்பட்ட பாரதியார் அதனை அழகுத் தமிழில் கவிதையாக்கித் தந்துள்ளார். அந்தத் தாரக மந்திரம் இந்தக் கொடியின் பொறியில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது பாருங்கள் என்கிறார் பாரதி.

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் – அதன்

உச்சியின் மேல் ‘வந்தே மாதரம்’ என்றே

பாங்கின் எழுதித் திகழும் – செய்ய

பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!

(தாயின் மணிக்கொடி பாரீர்- 1)

(பாங்கின் = அழகின், செய்ய = செப்பமான, சிறந்த)

2.2 பாரத மக்கள்

பாரதம், பல நூற்றாண்டுகளாக, பலவிதமான உள்நாட்டுப் போர்களாலும், வெளிநாட்டுப் படையெடுப்புகளாலும் மிகவும் பாதிக்கப்பட்டது. பாரத நாட்டில் பல சமயத்தவர், பல மொழி பேசுபவர், பல இனத்தவர் வாழ்ந்தனர். இதனால், மக்களிடையே வேறுபாடுகளும், கசப்பு உணர்வுகளும் பூசல்களும் ஏற்பட்டன. இச்சூழலைப் பயன்படுத்தி, டச்சுக்காரர்களும், பிரஞ்சுக்காரர்களும், போர்த்துக்கீசியரும், பின்னர் ஆங்கிலேயரும், இந்தியாவின் பல பகுதிகளை ஆட்சி செய்தனர். பின்னால் வந்த ஆங்கிலேயர் 400 ஆண்டுகளுக்கு மேல், இந்தியா முழுவதையும் ஆட்சி செலுத்தினர்.

ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்த பாரதத்தை, விடுதலை அடையச் செய்யப் போராடியவர்களுள் பாரதியும் ஒருவர். இந்தியர்களிடையே ஒற்றுமை இல்லாமையால்தான் அந்நியர், இந்திய நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினர், ஆட்சி செலுத்தினர்; எனவே, இந்தியர்களிடம் ஒற்றுமை இருந்தால் தான், அந்நியர் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெறும் என்று பாரதி உணர்ந்தார். எனவே, மக்கள் ஒற்றுமையை வற்புறுத்திப் பாடினார்.

2.2.1 ஆயிரம் உண்டு இங்கு சாதி பாரதம் பல மொழிகள் பேசும், பல இன மக்களை உடைய ஒரு நாடு. இவ்வாறு பன்முகப்பட்ட ஒரு நாட்டில் இருந்து அந்நியர் ஆட்சியை அகற்ற வேண்டுமானால் மக்கள் ஒற்றுமையாகப் போராட வேண்டும். அப்பொழுது தான் வெற்றிபெற முடியும். இதனை நன்கு உணர்ந்தவர் பாரதியார். எனவே, இந்திய தேச ஒற்றுமைக்காகப் பல பாடல்களைப் பாடினார். மக்களுக்கு ஒற்றுமை உணர்வை ஊட்ட

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த

ஞானம் வந்தபின் நமக்கெது வேண்டும்?

(பாரத தேசம், வந்தே மாதரம் – 4)

‘பாரத தேசம்’ என்ற தலைப்பில், பாடிய பாடலில், பாரத மக்கள், ஒருவரோடு ஒருவர் எவ்வாறு உறவு கொள்ளவேண்டும், எவ்வாறு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை மிகச் சிறப்பான கவிதை ஒன்றின் மூலம் வெளிப்படுத்துகிறார். அந்தப் பாடலை இதோ கேளுங்கள்.

பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் – மிடிப்

பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்

சிந்து நதியின்மிசை நிலவினிலே

சேரநன் னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்

தோணிகளோட்டி விளையாடி வருவோம்

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்!

(பாரத தேசம் பல்லவி -5,6,7)

(மிடி = துன்பம்)

இந்தப் பாடலில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்?

இந்தியாவுக்குப் பெருமை தரும் நதிகளில் ஒன்று சிந்து. அந்த நதியில் கேரளநாட்டு அழகான பெண்களுடன், இனிமையான தெலுங்கு மொழியில் பாடல்கள் பாடி, தோணிகள் (படகுகள்) ஓட்டி விளையாடுவோம்; இந்தியாவின் பெருமைக்குரிய இன்னொரு நதி கங்கை. இது இந்தியாவின் வட பகுதியில் உள்ளது. அதைப் போல், தென்பகுதியில் சிறப்பு வாய்ந்த நதி காவிரி. இரண்டு நதிகளும் பாயும் பகுதியில் உள்ள மக்கள் ஒருவரோடு ஒருவர் உறவு கொள்ளவேண்டும். கங்கைச் சமவெளியில் விளைவது கோதுமை, காவிரி நதிக்கரையில் வளர்வது வெற்றிலை-இரண்டையும் பண்ட மாற்றம் செய்வோம் என்கிறார் பாரதியார்.

ஒருவர் காசியிலிருந்து பேசுவதைக் காஞ்சிபுரத்தில் உள்ளவர் கேட்கும் வகையில் ஒரு கருவி கண்டுபிடிக்க வேண்டுமென்று தொலைநோக்குப் பார்வையுடன் தொழில்வளம் குறித்துப் பாடியிருக்கிறார் பாரதி.

இதற்கு மேலாக, நாட்டிலுள்ள நதிகளைத் தேசியமயமாக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலியுறுத்துகிறார்.

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

(பாரததேசம் – 2)

ஒற்றுமை இருந்தால்தான், அந்நியராகிய ஆங்கிலேயரை வெளியேற்ற முடியும் என்று கருதினார்.

இந்தியாவில் பல சாதிப் பிரிவுகள் உண்டு. அதைப் பயன்படுத்தி அந்நியர்கள், இந்தியாவின் ஒற்றுமையைக் குலைத்து விடக்கூடாது தம் ஆட்சியை நிலைக்க வைத்துவிடக்கூடாது என்று அஞ்சினார். தம் அச்சத்தை,

ஆயிரம் உண்டு இங்கு ஜாதி – எனில்

அன்னியர் வந்து புகல் என்ன நீதி?

(பாரத நாடு – வந்தே மாதரம் – 3)

என்று வினவுகிறார். மேலும், நாங்கள், பாரதமாதாவாகிய ஒரு தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர்கள்; இங்கு வேறுபாடுகள் இல்லை என்கிறார். இதனை,

ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்

ஜன்மம் இத்தேசத்தில் எய்தின ராயின்

வேதிய ராயினும் ஒன்றே – அன்றி

வேறு குலத்தின ராயினும் ஒன்றே

(பாரத நாடு – வந்தே மாதரம் – 1)

என்ற பாடல் மூலம் வெளிப்படுத்தி, இந்தியாவின் ஒற்றுமையை உணர்த்துகிறார்.

இந்தியாவின் ஒற்றுமையை – ஒருமைப்பாட்டை வெளியிடும் மற்றுமோர் அருமையான பாடல், ‘எங்கள் தாய்’.

முப்பது கோடி முகமுடையாள், உயிர்

மொய்ம்புற வொன்றுடையாள் – இவள்

செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற்

சிந்தனை ஒன்றுடையாள்.

( எங்கள் தாய் – 3)

(மொய்ம்பு = வலிமை)

இந்தியாவில், அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பதினான்கு. இவற்றைத் தவிர வேறு பல மொழிகளும் பேசப்படுகின்றன. எனவே, பாரதியார், பதினெட்டு மொழிகளைப் பேசும் மக்கள் இருந்தாலும், எல்லோரும் ஒரே சிந்தனை உடையவர்கள் என்று அறிவித்தார். மொழியால் வேறுபட்டாலும் உணர்வால் ஒன்றுபட்டவர்கள் என்று உணர்த்துகின்றார். இந்த வேறுபாடுகளை நினைத்து ஆங்கிலேயர் நம்மை வேறுபடுத்திப் பிரிக்க இயலாது என்று கருதி, மக்களின் வேற்றுமையுணர்வை நீக்க இங்ஙனம் பாடியிருக்க வேண்டும். இதனை இன்னும் நேரடியாகவே ‘பாரத சமுதாயம்’ என்ற பாடலில் கூறுகிறார்.

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்.

(பாரத சமுதாயம் – 14)

இவ்வாறு, இந்தியாவின் ஒற்றுமையைப் பற்றிப் பல பாடல்களைப் பாடினார். அவரது தேசிய உணர்வுக்கு இவை சிறந்த எடுத்துக்காட்டுகள்.

2.2.2 ‘அஞ்சி அஞ்சிச் சாவார்’ வேறுபாடுகளை மறந்து மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று கூறிய பாரதியார், அவர்களின் மன இயல்புகளையும் செயல்களையும் சுட்டிக்காட்டி, அவற்றிலிருந்து அவர்கள் திருந்த வேண்டும் என்றும் கூறுகிறார். அப்பொழுதுதான் பாரதம் முன்னேறும் என்று கருதினார்.

அச்சம்

மனதில் உறுதி வேண்டும்; அச்சம் தவிர்க்க வேண்டும்; அச்சம் இல்லாமல் இருந்தால்தான் எந்த ஒரு செயலையும் தைரியத்துடனும், சிறப்புடனும் செய்ய முடியும் என்று கருதினார் பாரதியார். எனவே, அச்சத்தால் அவதியுறும் மக்களைப் பார்த்து

நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,

அஞ்சி யஞ்சிச் சாவார் – இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே.

(பாரத ஜனங்களின் தற்கால நிலைமை-4)

என்று மிகவும் வருந்துகிறார்.

இத்தகைய மக்கள் எதைக்கண்டு அஞ்சுகிறார்கள் என்பதையும் பட்டியலிட்டுக் கூறுகிறார்.

மூடநம்பிக்கை

பேய்கள் பற்றிய மூடநம்பிக்கை இந்திய மக்களிடம் இருக்கிறது. கிராமப்புறங்களில் இன்றும் இந்த நம்பிக்கை மக்களை அச்சுறுத்தி வருகிறது. இரவு நேர இருட்டில் மரங்கள் காற்றினால் அசைந்தால் கூட, பேய் மரத்தில் ஏறி அமர்ந்திருக்கிறது-அது தான் அசைக்கிறது என்றும், குளத்திலுள்ள நீரில் ஏதாவது அசைவு ஏற்பட்டாலும், பேய் குளித்துக் கொண்டு இருக்கிறது என்றும் சொல்வார்கள். பகல் நேரத்தில், அதோ தெரிகிறதே, மலை, அதன் உச்சியில் பேய் தூங்கிக் கொண்டிருக்கும்; இரவில் இறங்கி வரும் என்று கூறுவார்கள். இதைத்தான் பாரதியார், வேடிக்கையாக,

வஞ்சனைப் பேய்கள் என்பார் – இந்த

மரத்தில் என்பார் – அந்தக்குளத்தில் என்பார்

துஞ்சுது முகட்டில் என்பார் – மிகத்

துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்.

(பாரத ஜனங்களின் தற்கால நிலைமை – 1)

(துஞ்சுது = தூங்குகிறது, முகடு = மலை உச்சி)

என்று குறிப்பிடுகிறார்.

பேய்களுக்கு மட்டுமா அஞ்சுகிறார்கள்? மந்திரம், சூனியம் போன்றவைகளைக் கண்டும் அஞ்சுகிறார்களே என்று வருந்துகிறார். மந்திரவாதிகள் என்ற பெயரைக் கேட்ட உடனேயே எப்படி அஞ்சுகிறார்கள், என்பதனை,

மந்திர வாதி என்பார் – சொன்ன

மாத்திரத்திலே மனக் கிலி பிடிப்பார்

(பாரத ஜனங்களின் தற்கால நிலைமை – 2)

என்று குறிப்பிடுகிறார். சிப்பாய்கள் எதிரே வந்தால் அவர்களைக் கண்டும் அஞ்சுவார்கள். துப்பாக்கியுடன் ஒரு சிப்பாய் வந்தால், அவ்வளவுதான். பயந்து வீட்டுக்குள் ஓடி ஒளிந்துகொள்வார்கள். இத்தகைய கோழைகளை, எதைக் கண்டும் அஞ்சி அஞ்சி வாழும் மக்களை வைத்து எவ்வாறு, அந்நிய ஆட்சியை எதிர்க்க முடியும்? இந்த அறியாமையைக் கொண்டே நம்மை அவன் அடிமைப்படுத்துவான். எனவே இவர்களுக்கு மன உறுதியை வரவழைக்கவேண்டும் என்று கருதினார் பாரதி. அதனால், இத்தகைய கோழைகளைப் பார்த்து, உங்களால் இந்தப் பாரத தேசத்திற்கு எந்தவித நன்மையும் இல்லை; இங்கிருந்து போய்விடுங்கள் அல்லது உங்கள் அச்சத்தை, கோழைத்தனத்தைப் போக்குங்கள் என்று அவர்களை உசுப்புகின்றார் (எழுப்புகின்றார்).

2.2.3 போகின்ற பாரதம் சாதிப்பாகுபாடும், சாதியச் சிந்தனையும் பிற்போக்கானவை. கோழைத்தனம், பிற்போக்கு சக்தி, அச்சம், அறியாமை, பொய் சொல்லுதல் முதலியனவும் பிற்போக்குக் கூறுகள். இவற்றை நீக்கினால் தான், பாரத மக்கள் முன்னேற்றம் அடைவார்கள். விடுதலை பெறும். இந்தியாவில் நல்ல குடிமக்களாக வாழ்வார்கள் என்று கருதினார் பாரதியார். இதனை, நயமாகவும் எளிமையாகவும் தம் பாடல்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்.

வலிமை யற்ற தோளினாய் போ போ போ

கிலிபிடித்த நெஞ்சினாய் போ போ போ

நன்று கூறினால் அஞ்சுவாய் போ போ போ

சென்று போன பொய்யெலாம் மெய்யாகச்

சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ.

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ

சோதி மிக்க மணியிலே காலத்தால்

சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ.

(போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்- 1)

ஒரு தடவைக்கு இருமுறை அல்ல மூன்று முறை போ போ போ என்று கூறுகிறார் இல்லையா? அதற்குக் காரணம் என்ன? அந்த அளவுக்கு அத்தகைய செயல்களைப் பாரதியார் வெறுக்கிறார். மேற்குறிப்பிட்ட வகையைச் சார்ந்தவர்களை வெறுக்கிறார். சரி, பின் எத்தகையோரை விரும்புகிறார்? மேற்குறிப்பிட்ட பண்புகளுக்கு எதிரான பண்புகள் உடையவர்களையே பாரதியார் விரும்புகிறார்.

2.2.4 வருகின்ற பாரதம்! முன்னைய பகுதியில், தம் விருப்பத்திற்கு அல்லது எண்ணத்திற்கு மாறானவர்களைப் போ போ என்று வெறுத்து ஒதுக்கிய பாரதியார், அவர் விரும்பத்தக்க இயல்பு கொண்டோரை வா வா என அழைக்கிறார்.

சாதி, சமய பாகுபாடு பார்க்காத பார்வை, எதைக்கண்டும் அஞ்சாத திடமான பார்வை, தெளிவான சிந்தனை உடைய பார்வை ஆகிய பண்புகள் பொருந்திய பாரதத்தின் இளைய தலைமுறையினரை அழைக்கிறார் பாரதியார்.

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா

சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா.

களையி ழந்த நாட்டிலே முன்போலே

கலைசிறக்க வந்தனை வா வா வா.

(போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும் – 5,7)

தெளிந்த சிந்தனை கொண்டவர்களால்தான் புதுயுகம் படைக்க இயலும். அத்தகையோரே நாட்டுக்குத் தேவை என்று எண்ணி இவ்வாறு பாடுகிறார். இத்தகைய சிறப்பு இயல்புகளை உடைய பாரத மக்களை எதற்காக அழைக்கிறார்? விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு வெற்றியை ஈட்டித் தரும்படி, ‘வெற்றி கொண்ட கையினாய் வா வா வா’ என அழைக்கிறார் பாரதி.

2.3 தமிழ்நாடும் பாரதமும்

பாரதியார் தாம் தமிழ்நாட்டினர் என்பதிலும், இந்தியர் என்பதிலும் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்கிறார். தமிழ் நாடு எத்தகையது? வேதம் நிறைந்தது, வீரம் செறிந்தது. காவிரி, வைகை போன்ற நீர்வளமிக்க ஆறுகளைக் கொண்டது. கம்பன், வள்ளுவன், இளங்கோ போன்ற புலவர்களைக் கொண்டது. மாமுனிவர்கள் வாழ்ந்தது. மேலும்,

சீன மிசிரம் யவனரகம் – இன்னும்

தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை

ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக

நன்று வளர்த்த தமிழ்நாடு

(செந்தமிழ்நாடு – 10)

என உலக அரங்கில் புகழ் பரப்பிச் செழித்த நாடு எனத் தமிழ்நாட்டைப் பாராட்டுகின்றார். பிறந்த நாட்டைத் ‘தாய்நாடு’ என்று சொல்லும் மரபை மாற்றித் ‘தந்தையர் நாடு’ எனப் போற்றுகின்றார்;

-எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே

ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே

(செந்தமிழ்நாடு – 1)

தமிழ்நாட்டைப் போற்றிப் பரவும் அதே வேளையில்,

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித்திரு நாடு!

(வாழிய செந்தமிழ் – 1,2)

என்ற வாழ்த்துத் தொடரில் தமிழ், தமிழர், பாரதம் என்று வரிசைப்படுத்தி வாழ்த்தும் பாங்கு கருதத்தக்கது.

2.4 பாரதத் தலைவர்கள்

பாரத விடுதலைப் போரில் பங்கு பெற்று அரிய தியாகங்களைச் செய்த தலைவர்கள் பலர். அவர்கள் தாய் நாட்டின் மீதுள்ள பற்றினால், அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல துன்பங்களை அனுபவித்தார்கள். இத்தகைய தேசியத் தலைவர்களைப் பற்றியும் பாரதியார் பாடியுள்ளார்.

பாரதியார் தலைவர்களைப் பற்றிப் பாடியதன் நோக்கம் என்ன? தாய்நாட்டிற்காகத் தொண்டு செய்த தலைவர்களின் தன்னல மற்ற தியாகத்தை இளைய தலைமுறையினர் உணரவும், அதைப் பின்பற்றவுமே அவர்களைப் பற்றிப் பாடுகிறார்.

2.4.1 மகாத்மா காந்தி ‘பாரதபிதா’ என்றும் ‘மகாத்மா’ என்றும் பாரத மக்களால் அழைக்கப்பட்டு மகிழும் பெருமைக்கு உரியவர் காந்தி அடிகளார். அவர் இலண்டனில், பாரிஸ்டர் பட்டம் பெற்றார். பின்னர் தென் ஆப்பிரிக்காவில், வழக்கறிஞராகப் பணியாற்றினார். அப்பொழுது அந்நியர் ஆட்சியின் கொடுமையிலிருந்து நாடுகள் விடுதலை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.

1919இல் இந்தியாவுக்குத் திரும்பியதும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டார். இந்திய மக்களை ஒன்று திரட்டி, அமைதியான வழியில் ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்தினார். 1947இல் இந்தியா விடுதலை அடைந்தது. உலகில் பல நாடுகள் வன்முறையினால், போரினால் விடுதலை அடைந்தன. ஆனால், காந்தி அடிகளாரின் அறவழிப் போராட்டத்தினால், இந்தியா கத்தியின்றி ரத்தமின்றி விடுதலை பெற்றது. இது உலக வரலாற்றில் வேறு எந்த நாட்டிலும் நிகழாத சிறப்பு வாய்ந்த செயல். இதைப் பாரதியார்.

பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்

அதனிலுந் திறன்பெரி துடைத்தாம்

அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்

அறவழியென்று நீ அறிந்தாய்

நெருங்கிய பயன்சேர் ஒத்துழையாமை

நெறியினால் . . . . . . . .

(தேசியத் தலைவர்கள் – மகாத்மா காந்தி – 5)

(ஒத்துழையாமை – ஒத்துழைப்புத் தர மறுப்பது (Non co-operation)

என்று கூறிக் காந்திஜி கடைப்பிடித்த ஒத்துழையாமை இயக்கத்தைப் பாராட்டுகிறார். இத்தகைய அரிய செயலை – தியாகத்தை, தொண்டைச் செய்த காத்மாவைப் பாரதியார் பலவகையில் பாராட்டுகிறார்.

வாழ்க நீ, எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்

தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்

பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசம் தன்னை

வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா ! நீ வாழ்க;வாழ்க!

(தேசியத் தலைவர்கள் – 1)

எம் தலைவராகிய காந்தி அடிகளாரே நீங்கள் வாழ்க! நீடுழி வாழ்க! இந்த உலகத்திலுள்ள நாடுகளிலே இந்தியா அந்நியருக்கு அடிமையாகித் தாழ்ந்த நிலையில் இருந்தது. அவ்வாறு பாழாகி இருந்த பாரத தேசத்தை வாழ்விக்க வந்த காந்தி அடிகளாரே! நீங்கள் வாழ்க! வாழ்க! எனப் பாராட்டுகிறார் பாரதி. இந்திய தேசத்திற்கு மகாத்மா காந்தி எத்தகைய பெரியசேவையைச் செய்தார் என்பதைக் குறிப்பிடுகிறார் பாரதி.

2.4.2 குரு கோவிந்தர் காந்தியடிகளைப் போன்று இந்திய விடுதலைப் போரில் கலந்து கொண்டு தியாகங்கள் செய்த குரு கோவிந்தர், தாதாபாய் நௌரோஜி, பாலகங்காதர திலகர், வ.உ.சிதம்பரம்பிள்ளை போன்ற தலைவர்களையும் பாரதியார் பாடியுள்ளார்.

குருகோவிந்தர் சீக்கியர்களின் பத்தாவது குருவாக விளங்கியவர். அவர் சீக்கிய மக்களை, சாதி பேதங்களை எல்லாம் கைவிடச் செய்து ஒரே அணியில் திரட்டினார். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் ஈடுபட்ட இலக்கிய நெஞ்சினரான பாரதிக்குக் குரு கோவிந்தரின் வீரவாழ்வும் தியாக வாழ்வும் புதிய எழுச்சி ஊட்டின. குரு கோவிந்தரின் வீரத்தைப் போற்றுவதன் மூலம் அஞ்சா நெஞ்சமும் தியாக மனப்பான்மையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று எண்ணினார் பாரதி. ஆகவே ‘குரு கோவிந்த சிம்ஹ’ என்ற தலைப்பில் ஒரு பாடலை எழுதினார். அப் பாடல் குரு கோவிந்தர் தம் சீடர்களிடம்.

ஒன்றாம் கடவுள், உலகிடைத் தோன்றிய

மானிடரெல்லாம் சோதரர் . . .

பிரிவுகள் துடைப்பீர்

(குரு கோவிந்தர் 178-183)

(சோதரர் = சகோதரர், உடன்பிறந்தவர்)

என்று கூறுவதாக அமைந்துள்ளது. தன்னலமற்ற பெரியோர்களைப் பற்றிப் பாடுவதன் மூலம் அத்தகைய தலைவர்களின் தலைமையின் கீழ் இந்திய மக்களை ஒன்றுபடச் செய்ய வேண்டும், விடுதலை இயக்கத்தில் முழு மூச்சுடன் ஈடுபட வைக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம்.

2.4.3 தாதாபாய் நவுரோஜி பாரத நாட்டுப் பெண்கள் வயிற்றில் கல்வியாளர் தாதாபாய் நவுரோஜியைப் போன்ற புதல்வர்கள் பிறக்க வேண்டும் என்று வேண்டுகிறார் பாரதியார். அதைப் போன்று நாட்டுப்பற்று உடைய புதல்வர்கள் தோன்ற வேண்டும் என்பதே பாரதியின் ஆசை. தனி ஒரு மனிதனால் இத்தகைய அரிய செயலைச் செய்ய இயலாது. நல்ல தலைமை இருந்தால் தான் தன்னலமற்ற தொண்டர்கள் உருவாக முடியும் என்று பாரதியார் கருதினார். தாதாபாய் நவுரோஜியின் ‘ஸ்வராஜ்ய முழக்கம்’ பாரதியைப் பெரிதும் கவர்ந்தது. அவருடைய புரட்சி மனப்பான்மையை எண்ணிப் பரவசமடைந்த பாரதியார், “தாதாபாய் நவுரோஜி சொல்லி இருக்கும் சுய அரசாட்சிக்கு மார்க்கம் உத்தேசித்துப் பார்ப்போமாகில், இதுவரையில் அனுசரித்து வந்த விண்ணப்பமும் கெஞ்சலும் தொலைந்து புதிய கட்சியின் கொள்கையாகிய நமக்கு நாமே துணை என்னும் கொள்கையையே கொண்டு பாடுபட வேண்டும்” என்று ‘இந்தியா‘ என்ற பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் எந்த மாநிலத் தலைவர்களாக இருந்தாலும் அவர்களை இனம் கண்டு பாராட்டும் பண்புடையவர் பாரதியார். ஏனென்றால் விடுதலை இயக்கம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நடந்தால் போதாது. இந்தியா முழுவதும் பரவலாக, நாடு தழுவிய போராட்டமாக அமைய வேண்டும், அனைத்து மக்களின் தன்னலமற்ற சேவை நாட்டுக்குத் தேவை என்று சுட்டிக்காட்டினார் பாரதியார்.

2.4.4 பாலகங்காதர திலகர் ‘சுயராஜ்யம்’ நமது பிறப்புரிமை என்ற கொள்கைக்காகவே உழைத்தவர் பாலகங்காதர திலகர். பாரதியார் பாலகங்காதர திலகரிடம் மிகுந்த ஈடுபாடுடையவர், அவரையே தம் அரசியல் குருவாகக் கொண்டிருந்தார். பாலகங்காதர திலகர் சென்னைக்கு வருகை தந்த போது அவருடைய பேச்சைக் கேட்ட சென்னை நகர மக்கள் பரவசமடைந்தனர். பாரதியார் அவரைத் துன்பமாகிய கடலைக் கடக்க உதவும் தோணியாகவும் சோர்வாகிய பேயை ஓட்டும் சூழ்ச்சியாகவும் உருவகப்படுத்திப் பாடுகிறார்.

துன்ப மென்னுங் கடலைக் கடக்குந் தோணி அவன் பெயர்

சோர்வென்னும் பேயை யோட்டும் சூழ்ச்சி அவன் பெயர்.

(வாழ்க திலகன் நாமம் – 3)

(தோணி – படகு, சூழ்ச்சி- உபாயம், திட்டம்)

என்றும்,

துஞ்சு மட்டுமிப் பாரத நாட்டிற்கே

தொண்டி ழைக்கத் துணிந்தவர் யாவரும்

அஞ்செழுத்தினைச் சைவர் மொழிதல் போல்

அன்பொ டோது பெயருடை யாரியன்

(திலகர் முனிவர் கோன் – 3)

என்றும் புகழ்ந்து பாடுகிறார் பாரதியார்.

(அஞ்செழுத்து – ‘சிவனை வணங்குகிறேன்’ என்ற பொருள் தரும் நமசிவாய என்னும் ஐந்து எழுத்துத் தொடர்; சைவர் – சிவபெருமானைத் தெய்வமாக வழிபடுபவர்)

2.4.5 வ.உ. சிதம்பரம் பிள்ளை பாரதியார் வ.உ. சிதம்பரம் பிள்ளையிடம் மிகுந்த அன்பு கொண்டவர். வ.உ.சிதம்பரம் பிள்ளை வெள்ளையரை எதிர்த்து ‘சுதேசி கப்பல் கம்பெனி’ ஒன்றை நடத்தினார். அவர் வெள்ளையரை எதிர்த்துப் போராடியதால் சிறையில் வைக்கப்பட்டார்; சிறையில் செக்கிழுத்துப் புண்பட்டார். அவரைப் பார்த்து,

கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ

வருந்தலை என் கேண்மைக் கோவே!

(வ.உ.சி. க்கு வாழ்த்து – 2)

(வருந்தலை= வருந்தாதீர், கேண்மை = நட்பு, உறவு, கோ = தலைவன்)

என்று பாரதியார் பாடிய பாடல், இந்தியா விடுதலை அடையும் நாள் அண்மையில் உள்ளது என்று அவருக்கு ஆறுதல் கூறுவது போல் உள்ளது. கேளாத கதை என்று அவர் கூறுவது ‘இந்தியா பெறப் போகும் விடுதலை’ என்பது குறிப்பிடத்தக்கது.

இங்ஙனம் நாட்டில் உள்ள நல்ல தலைவர்களைப் பற்றிப் பாடினார் பாரதியார். இத்தகைய தலைவர்களின் கீழ் போராடினால் விடுதலை நிச்சயம் கிட்டும் என்ற உணர்வை மக்களிடையே உருவாக்க இடைவிடாமல் முயற்சி செய்தார் பாரதியார்.

மேலும், “பாரதியார் தூத்துக்குடிக் கம்பெனி (வ.உ.சி. அவர்கள் துவக்கிய சுதேசிக் கப்பல் கம்பெனி) நமது முதற் பெருந்தொழில் முயற்சி. இதைக் கைவிட்டு விட்டால் நம்மைப் பிறகு உலகத்தில் யாரும் நம்பவே மாட்டார்கள் அரைக் காசாக இருந்தாலும் சரி, அதை அனுப்பி நமது மாதாவின் மானத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறினார். தாய் நாட்டுக்காக நடத்தும் இயக்கத்திற்குத் தாராளமாக நிதி உதவி செய்ய முன் வருமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

2.5 பாரத விடுதலை

பாரத நாட்டின் விடுதலையைப் பற்றிப் பாடிய கவிஞர்களுள் பாரதியார் முதன்மையானவர். தூங்கிக் கிடந்த பாரதத்தைத் தம் உணர்ச்சிகரமான பாட்டுகளால், தட்டி எழுப்பிய பெருமை பாரதிக்கு உண்டு’ என்பார்கள். வேறு பலரும் விடுதலை இயக்கத்தைப் பற்றிப் பாடினர். ஆனால் பாரதி, நாட்டின் ஒற்றுமை, அதனால் ஏற்படும் பலன், விடுதலை பெற வேண்டியதன் தேவை ஆகியவற்றையும் பாடினார். அத்துடன், இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னரே தீர்க்க தரிசனமாக

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்

(சுதந்திரப் பள்ளு – பல்லவி)

என்று விடுதலை பெற்றுவிட்டதாகக் கனவு கண்டு ஆனந்தக் கூத்தாடினார் அமரகவி பாரதியார்.

2.5.1 விடுதலை வேட்கை இந்தியா, ஆங்கிலேயராகிய அந்நியரிடம் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்பது பாரதியாரின் தணியாத ஆசை. அதற்காக, இந்திய மக்களை எந்த வகையில் எல்லாம் விழிப்புணர்ச்சி அடையச் செய்ய வேண்டுமோ, அந்த வகையில் எல்லாம் உணர்ச்சிகரமான பல விடுதலை இயக்கப் பாடல்களைப் பாடினார். முதலில், விடுதலை என்ற உணர்வு எந்தவகையில் இந்திய மக்களின் உள்ளத்தில் வேரூன்றி இருந்தது என்பதைத் தம் பாடல்களில் வெளிப்படுத்துகிறார். இந்திய மக்களுக்கு வேண்டியது விடுதலையே அன்றி வேறொன்றும் இல்லை என்பதனை,

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்

வேறொன்று கொள்வாரோ? – என்றும்

ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில்

அறிவைச் செலுத்து வாரோ?

(சுதந்திரப் பெருமை – 1 )

என்ற பாடலில் குறிப்பிடுகிறார். கிடைப்பதற்கு அரிய அமுதத்தை உண்ண விரும்புவோருக்கு அறிவை மங்கச் செய்யும் கள்ளைக் கொடுத்தால் உண்பார்களா? விடுதலை வேட்கை உடைய இந்தியர்கள், விடுதலையைத் தவிர, வேறு எதற்கும் உடன்பட மாட்டார்கள் என்பதை மிகவும் தெளிவாகத் தெரிவிக்கிறார். ஏன் என்றால், விடுதலை வேட்கை எனும் இந்தப் பயிரைத் தண்ணீரை விட்டு வளர்க்கவில்லை; தியாகிகளின் கண்ணீரை விட்டே வளர்த்தோம்.

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்

கண்ணீரால் காத்தோம்

(சுதந்திரப் பயிர் – 1)

எனவே, விடுதலையைப் பற்றிய எங்கள் தாகம் என்றைக்கும் தணியாது. எங்கள் சுதந்திர தாகம் என்றைக்கு அடங்கும்? என்றைக்கு என் பாரதத் தாய் அடிமை விலங்குகளைத் தகர்த்து எறிந்து விடுதலை பெறுவாள்? – என்று ஏங்கிக் கொண்டிருக்கிறோம். இதனை,

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

(சுதந்திர தாகம்- 1)

என்ற பாடலின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்துகிறார் பாரதியார்.

2.5.2 விடுதலை ! விடுதலை !! இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னரே விடுதலையைப் பற்றிக் கனவு கண்டார் மகாகவி பாரதியார், விடுதலையைப் பற்றிய உணர்வுகளை வெளிப்படுத்தினார். இந்த உணர்வுகளினால் உந்தப்பட்டிருந்த, இந்திய மக்கள், விடுதலை பெற்றால், எத்தகைய உணர்ச்சியைப் பெறுவார்கள்? என்பதைத் தம் கற்பனை மூலம் மிகச் சிறப்பாகப் பாடுகிறார். அவர்

விடுதலை ! விடுதலை ! விடுதலை !

பறைய ருக்கும் இங்கு தீயர்,

புலைய ருக்கும் விடுதலை,

பரவ ரோடு குறவ ருக்கும்

மறவ ருக்கும் விடுதலை!

(விடுதலை- 1)

என்று விடுதலை என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவருக்கும் உரியது விடுதலை என்று வெளிப்படுத்துகிறார் பாரதி.

ஆங்கிலேயரிடமிருந்து நாடு விடுதலை பெற வேண்டும் என்பது மட்டும் அல்ல பாரதி விரும்பியது; இந்திய மக்களே தங்களுக்குள் சாதி, சமய, இன வேறுபாட்டால் ஒருவருக்கொருவர் அடிமையாய் இருந்தனர். இந்த வழக்கத்தில் இருந்தும் விடுதலை பெறவேண்டுமென்று பாடுகிறார்.

விடுதலை பெற்றபின், சுதந்திர இந்தியா எத்தகைய மாற்றத்தைப் பெற வேண்டுமென்று அவர் கண்ட கனவையும் வெளிப்படுத்துகிறார்.

சுதந்திரத்தைத் தேவியாக உருவகித்து, எத்தனைத் துயரமடைந்தாலும் உன்னைத் தொழ மறக்கமாட்டேன் என அவர் பாடுவது இந்தியா சுதந்திரம் அடைந்தே தீரும் என அவர் திண்ணமாக நம்பியதைக் காட்டுகிறது. அவருடைய விடுதலை வேட்கை அவ்வாறு எண்ணத் தூண்டுகிறது. எனவே,

சுதந்திர தேவி! நின்னைத்

தொழுதிடல் மறக்கிலேனே

(சுதந்திர தேவியின் துதி – 1)

என்று பாடுகிறார்.

ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு நீங்க வேண்டும்; உயர்ந்த சாதி, இழிந்த சாதி; ஆண், பெண் என்ற ஏற்ற தாழ்வு ஒழிய வேண்டும்; மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என்ற உணர்வு வேண்டும் என்று பாரதி விரும்பினார். அந்த விருப்பத்தை அடைந்து விட்டதாகவே பாடி மகிழ்ந்தார்.

ஏழை என்றும் அடிமை என்றும்

எவனும் இல்லை ஜாதியில்

இழிவு கொண்ட மனிதர் என்பது

இந்தியாவில் இல்லையே!

(விடுதலை-2)

மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமை யைக்கொ ளுத்துவோம்

(விடுதலை – 3)

எவ்வளவு நம்பிக்கையாகப் பாடியுள்ளார் பாருங்கள்! இந்தியா விடுதலை அடைந்த பின்னர், இவையெல்லாம் நடைபெறவேண்டும் என்று விரும்பினார். எனவே, இந்தியா விடுதலை பெற்று விட்டதாகவும், இந்திய மக்களைப் பற்றிய அவரது ஆசைகள் எல்லாம் நிறைவேறிவிட்டதாகவும் எண்ணிப் பெருமிதத்துடன் பாடுகிறார் பாரதியார்.

விடுதலை அடைந்து விட்டோம். அது சாதாரண சுதந்திரம் அல்ல. மகிழ்ச்சி தரும் ஆனந்த சுதந்திரம். அதை அடைந்து விட்டோம். எனவே, ஆடுவோம், பள்ளுப் பாடுவோம் என்று எவ்வளவு தன்னம்பிக்கையாக, தீர்க்கதரிசனமாகப் பாடி மகிழ்கிறார் பாரதியார்.

2.6 தேசிய இயக்கப் பாடல்கள்

பாரதியாரின் நாடி நரம்பெல்லாம் விடுதலை உணர்வு, நாட்டுப் பற்று முதலியவை ஊறிக் கிடந்தன. அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய மக்களை எந்த வழிகளில் எல்லாம் நாட்டுப்பற்றை ஊட்டி விழிப்புறச் செய்ய வேண்டுமோ அந்த வழிகளை எல்லாம் இடைவிடாது விடா முயற்சியுடன் கையாண்டார்.

2.6.1 சத்ரபதி சிவாஜியின் வீர உரை சத்ரபதி சிவாஜி மராட்டிய மன்னன். மகாராட்டிர சுயராஜியத்திற்கு அடிப்படைக் காரணமானவர். சிவாஜியின் வீரம், நடுவு நிலைமை முதலிய அருங்குணங்களை இந்தியர் அறிந்து கொள்ள வேண்டும் என்று பாரதி ஆசைப்பட்டார். சிவாஜியின் எழுச்சி பற்றி இந்தியர்கள் அறிய வேண்டுவது காலத்தின் தேவை என்று கருதினார். ஆகவே பாரதி, சத்ரபதி சிவாஜி தம் படைகளுக்குக் கூறியதாகப் பாடியுள்ளார்.

பலம் கொண்ட அந்நியர் நம்மை அடிமைப்படுத்தி நம் நாட்டை ஆண்டாலும் அது தம் உரிமைப் பொருள் என்பதை இந்திய மக்கள் மறவாதிருக்க வேண்டும் என்று நினைத்தார் பாரதியார். இதோ! மராட்டிய வீரர் சிவாஜி தம் படைகளைப் பார்த்துக் கூறியதாகப் பாடியிருப்பதைப் பாருங்கள்.

பாரத பூமி பழம்பெரும் பூமி

நீரதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்

பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம்

ஊன மொன்றறியா ஞான மெய்ப்பூமி

(தேசிய இயக்கப் பாடல்கள், சத்ரபதி சிவாஜி -24-27)

இந்திய நாடு எத்தகையது? பழமையானது, பெருமையுடையது, உலகம் என்ற பெண்ணின் திலகமாக விளங்குவது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாட்டின் புதல்வர் நீங்கள்! அவ்வாறிருக்கும்போது நாகரிகமற்ற அந்நியருக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதோ? பாரத நாட்டில் வாழ்ந்தவர்கள் மிகுந்த வீரம் உடையவர். வீமர், துரோணர் போன்ற வீரர்கள் வாழ்ந்த நாடு. அவர்களுடைய வீரம் உங்களிடம் உண்டு. அத்தகைய வீரம் கொண்ட நீங்கள் சோம்பிக்கிடப்பதோ? என்று தம் படைகளைப் பார்த்துக் கூறுவதாக உள்ளது.

பேடிமை அகற்று! நின் பெருமையை மறந்திடேல்

ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக!

(சத்ரபதி சிவாஜி 172, 173)

எல்லா வளமும் நிறைந்த பாரத நாட்டில் அந்நியரை நம்பிப் பிழைக்க வேண்டியதில்லை. நம் நாடு, நம் மக்கள் என்ற எண்ணத்துடன் இந்தியர் போராட வேண்டும் என்று பாரதியார் பாடுகிறார்.

2.6.2 தொண்டு செய்யும் அடிமை ஆங்கிலேயருக்குத் தொண்டு செய்து அவர்களை அண்டி அடிமையாய் இருந்து வாழ்தலே மேன்மையானது என்ற எண்ணத்துடன் வாழும் மக்களைப் பாரதியார் அடிமை என்றே குறிப்பிடுகிறார். இந்தியாவை யார் ஆண்டால் என்ன என்ற எண்ணம் மக்களிடம் அரும்பிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார் பாரதியார். அங்ஙனம் சிலரேனும் நினைத்திருந்தால் அவர்களை, அந்த எண்ணத்தைப் பழித்துக் காட்டும் வகையில்

தொண்டு செய்யும் அடிமை – உனக்குச்

சுதந்திர நினைவோடா?

பண்டு கண்ட துண்டோ ? – அதற்குப்

பாத்திர மாவாயோ

(தொண்டு செய்யும் அடிமை – 1 )

(பண்டு = முன்பு)

என்று பாடுகிறார். அடிமை என்ற சொல்லைப் பல முறை பயன்படுத்திப் பாரத மக்களின் அடிமை உணர்வு நீங்கப் பாடுபட்டவர் பாரதியார்.

உள்நாட்டு அடிமைகள்

இந்தியர்கள் அந்நியரிடம் மட்டுமா அடிமைப்பட்டுக் கிடந்தனர்? இல்லை. அவர்கள் தங்களுக்குள்ளே உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, சமயப் பிரிவு, இனப்பிரிவு எனப் பல்வேறு வழக்கங்களுக்கும் சமுதாயப் பழக்கங்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடந்தனர். இவற்றுக்கும் விடுதலை வேண்டும் என்று கருதினார். இழிந்தவர் என்று யாரும் இல்லாமல் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்று விரும்பினார். எனவே தான்,

பறைய ருக்கு மிங்கு தீயர்

புலைய ருக்கும் விடுதலை!

பரவ ரோடு குறவ ருக்கும்

மறவ ருக்கும் விடுதலை . . .

ஏழை யென்றும் அடிமை யென்றும்

எவனு மில்லை ஜாதியில்

(விடுதலை 1,2)

என்று பாடுகிறார்.

2.7 பிற நாடுகள்

பாரதியாரின் பார்வை தம் நாடு, தம் மக்கள் என்று குறுகி இருக்கவில்லை. எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் விடுதலை வேண்டும் என்ற உலகளாவிய நோக்கம் கொண்டதாக இருந்தது.

2.7.1 பெல்ஜியம் பெல்ஜியத்தை வீழ்த்திய ஜெர்மனி இந்திய வீரர்களிடம் அனுதாபம் உடையதாக இருந்தது. இந்தியாவிலிருந்த தேசபக்தர்களிலே பெரும்பாலோர் ஜெர்மனியின் வெற்றியையே விரும்பினர். இந்த நேரத்தில்தான் ஜெர்மனியால் வீழ்த்தப்பட்ட பெல்ஜியத்திற்கு வாழ்த்துக் கூறியிருக்கிறார் பாரதியார். இந்த இடத்திலே பாரதியாரின் தேசாபிமானத்தையும் வென்று நிற்கிறது மனிதாபிமானம்.

இந்திய விடுதலைக்கான போரில் ஜெர்மனிக்கு முக்கிய பங்கு உண்டு. இந்திய மக்கள் ஜெர்மனியையே ஆதரித்தனர். இருந்தும், பாரதியார் ஜெர்மனியின் ஆதிக்க மனப்பான்மையைத் தாக்கியும் பெல்ஜியத்தின் வீரத்தைப் பாராட்டியும்,

அறத்தினால் வீழ்ந்து விட்டாய்

அன்னியன் வலியனாகி

மறத்தினால் வந்து செய்த

வன்மையைப் பொறுத்தல் செய்வாய்

துளக்கற ஓங்கி நிற்பர்

துயருண்டோ துணிவுள் ளோர்க்கே!

(பெல்ஜியத்திற்கு வாழ்த்து – 1,9)

(துளக்கற = மனக்கலக்கம் இல்லாமல்)

என்று பாடுகிறார் பாரதியார். ஜெர்மனிய நாட்டுக்கு ஐரோப்பா கண்டம் ஆதரவளித்தாலும் மிகுந்த மனிதாபிமானத்தோடு பெல்ஜிய நாட்டு மக்களைப் பார்த்து, அவர் பாடுவது அவருடைய மனித நேயத்தைக் காட்டுகிறது.

2.7.2 உருசியா ஐப்பானிய யுத்தத்தின் ஆரம்ப முதலாகவே உருஷ்யாவில் உள்நாட்டுக் குழப்பம் தொடங்கி விட்டது. அது முதல் புரட்சிக் கட்சியாருக்குப் பலம் அதிகரித்துக் கொண்டு வந்தது. நமது உருசியத் தோழர்கள் செய்து வரும் உத்தமமான முயற்சிகளின் மீது கடவுள் பேரருள் செலுத்துவாராக என்று உருசியாப் புரட்சி பற்றிப் பாரதியார் பாடுகிறார். இதற்குக் காரணம் வெளிநாட்டில் நடைபெறுகின்ற செய்திகளை எல்லாம் தமிழர்கள் அறிந்து பயன்பெற வேண்டும் என்ற நல்ல எண்ணமே. கொடுங்கோலர்களின் ஆட்சி மறைய வேண்டும் நல்லாட்சி மலர வேண்டும் என்ற துடிப்பில் இப்பாடலைப் பாடியிருக்கிறார்.

உருசியா நாடு புரட்சியில் வெற்றியடைந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறார். அதை நினைத்து ஆனந்தமாகப் பாடிக் களிக்கிறார். இப்பாடல் சுதந்திரம் கிடைக்குமா என்று அவநம்பிக்கை கொள்ளும் இந்தியர் மனத்தில் நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளது. இந்திய மக்கள் அனைவரும் தம் வேற்றுமை மறந்து ஒன்றுபட்டு நின்றால் உருசியா கண்ட யுகப் புரட்சியை இங்கும் காண முடியும். ஆங்கில ஆட்சியை வீழ்த்த முடியும். மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியும் என்று எண்ணினார். சமூக மாற்றத்திற்கும் இறையருள் தேவை என்று கருதிய பாரதியார்,

மாகாளி பராசக்தி உருசிய நாட்

டினிற் கடைக்கண் வைத்தாள் அங்கே

ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி

கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்

அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது

அடிமையில்லை அறிக

(புதிய உருசியா – 1)

என்ற பாடல் உணர்த்துகிறது.

சர்வாதிகாரிகள், ஏகாதிபத்திய அரசுகள் தங்களை யாரும் வீழ்த்த முடியாது என்றெண்ணுகின்றனர். அவர்களையும் புரட்சியால் வீழ்த்த முடியும் என்பதை உருசிய புரட்சி தெரிவிக்கிறது. எனவே இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்து விட்டான் ஜார் அரசன் (உருசியா – 5) என்று பாரதி பாடுகிறார். இதுபோல் ஆங்கில ஆட்சியையும் ஒழிக்க முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார்.

2.8 தொகுப்புரை

பாரததேசத்தின் பெருமை, பாரத மக்கள், அவர்களது விடுதலை வேட்கை, விடுதலை பெறுவதால் அடையும் மகிழ்ச்சி, பயன் இவை பற்றியும் தேசத்தலைவர்கள், பிற நாட்டுத் தலைவர்கள் குறித்தும் தமது தேசியப் பாடல்களில் மிகச் சிறந்த கருத்துகளைப் பாரதியார் பாடியுள்ளார். தேச உணர்வு, மனிதாபிமானம், தொலைநோக்குப் பார்வை, நல்லார்வ நலம், விடுதலை வேட்கை போன்ற பாரதியின் அரும் பண்புகளை அவருடைய தேசியப் பாடல்களின் வழியே காணமுடிகிறது.

பாடம் - 3

பாரதியாரின் தெய்வப் பாடல்கள்

3.0 பாட முன்னுரை

தமிழில் கிடைக்கும் நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம். அந்நூலில் திருமால், முருகன், இந்திரன், வருணன் முதலிய தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அதையடுத்துத் தோன்றிய சங்க இலக்கியங்களிலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களுக்குரிய தெய்வங்களுடன் சிவபெருமானைப் பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன. இருப்பினும் பக்தியை மட்டும் பாடல் கருத்தாகக் கொண்டு முதலில் எழுந்த நூல்கள் நாயன்மார்கள் இயற்றிய தேவாரம், திருவாசகம் மற்றும் ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் நூல்களேயாகும். பாரதியார் பாடாத துறையே இல்லை என்று சொல்லுமளவு தமிழ்நாடு, தமிழ் மொழி, பாரத நாடு, குயில், கிளி, தராசு முதலியன பற்றிப் பாடியுள்ளார். தெய்வப் பாடல்களில் அவர் என்ன கூறியிருக்கின்றார் என்று பார்க்கலாமா?

பாரதியாரின் தெய்வப் பாடல்களாகத் தொகுக்கப்பட்டிருக்கும் பாடல்களில் முதலாவது இடம்பெற்றிருப்பது விநாயகர் நான்மணிமாலை. இதையடுத்து, முருகன், வள்ளி, பராசக்தி (காளி, சக்தி, தேசமுத்துமாரி, கோமதி) இராமர், கண்ணன், திருமகள், கலைமகள், புத்தர், இயேசு கிறிஸ்து, அல்லா முதலிய தெய்வங்களைப் பற்றிப் பாடியிருக்கிறார். இயற்கையையும் தெய்வமாகவே கொண்டு சிறப்பாகப் பாடியுள்ளார்.

சமுதாயம், அரசியல் முதலியவற்றில் பாரதியார் புரட்சிகரமான சீர்திருத்தவாதி. என்றாலும் தெய்வ நம்பிக்கை மனித வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதது என்று கருதினார். வேத ஆகம சாஸ்திரங்களின் உண்மைக் கருத்துகளைத் தெளிவாக உணர்ந்த பாரதி, கடவுளை நம்பினோர் கைவிடப் படார் என எண்ணினார் ஆயினும் எல்லா மதங்களும் மனித நலத்தையே பேசுகின்றன என்பது அவரது உறுதியான கொள்கை.

தெய்வ நம்பிக்கையும் வழிபாடும்

‘தெய்வ நம்பிக்கையும் வழிபாடும்’ என்பது கடவுள் மீது கொண்ட உறுதியால் அவரை வணங்கும் செயலைக் குறிப்பது. பாரத நாட்டில் தெய்வ நம்பிக்கையும் வழிபாடும் பண்டைக்காலம் தொட்டே காணப்படுகிறது. தமிழ் நாட்டில் பக்தியைப் பாடல் பொருளாகக் கொண்டு பாடியவர்கள் எல்லாம் தாங்கள் வழிபட்ட தெய்வத்தை மட்டுமே பாடினார்கள். சைவ சமயத்தைச் சார்ந்த நாயன்மார்கள் சிவபெருமான் மீதும், வைணவ சமயத்தைச் சார்ந்த ஆழ்வார்கள் திருமால் மீதும் பாடியிருப்பதை நோக்கும்போது, அவர்கள் பிற சமயத்திலுள்ள தெய்வங்கள் பற்றிப் பாடவில்லை என்பது தெரிகிறது. ஆனால் பாரதியார் இவர்களிலிருந்து வேறுபட்டு நிற்கின்றார். அவர் வைதிகச் (வேதத்தை ஆதாரமாகக் கொண்ட சமயம்) சமயத்தைச் சார்ந்தவர். ஆயினும் பிற சமயத் தெய்வங்களான புத்தர், இயேசு கிறிஸ்து, அல்லா ஆகியோரையும் பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்களிலோ, கட்டுரைகளிலோ ஓர் இடத்தில் கூடச் சமய வெறுப்புணர்வு இடம்பெறவில்லை. மக்கள் எல்லோரும் சகோதரர்கள் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் ஆணிவேராய் நிலை பெற்றிருந்தது. அனைவரையும் ஒன்றாகப் பார்க்கும் பொதுநோக்கு, பரந்த உள்ளம், சமயப் பொறை போன்றவை அவரிடம் காணப்பட்டன. எல்லாத் தெய்வங்களையும் பாரதி வணங்குகிறார். இந்த ஒப்பற்ற மேலான நிலை வேறு எந்தக் கவிஞனிடமும் தென்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்பாடம் இயற்கை வழிபாடு, இந்துசமயத் தெய்வங்கள், பிற சமயத் தெய்வங்கள், பாரதியாரின் வேண்டுதல் என்னும் நான்கு பகுப்பினுள் அடங்கும்.

3.1 இயற்கை வழிபாடு

மனிதன் வாழ்வதற்கு நீர், காற்று, முதலியவை தேவை. இவையே இயற்கையாகும். இயற்கையில்லாமல் அவனால் தனித்து வாழ முடியாது. இயற்கை தன்னை விட வலிமையுடையது எனக் கருதினான் மனிதன். அந்த இயற்கை பாரதிக்குத் தெய்வமாய்த் தோற்றமளித்தது.

இயற்கைப் பொருள்களான சூரியனைப் பற்றிச் சூரியதரிசனம், ஞாயிறு வணக்கம், ஞானபானு என்னும் பாடல்களும், நிலவைப் பற்றிச் சோமதேவன் புகழ், வெண்ணிலாவே என்னும் பாடல்களும் பாடியுள்ளார். பகலில் சூரியனும் இரவில் நிலவும் இருளைப் போக்கி மனித குலத்திற்கு ஒளி தருகின்றன. மனித குலத்திற்கு உதவும் இவை பற்றிப் பாரதி பாடுவதைப் பாருங்கள்.

3.1.1 சூரியன் உலகிலுள்ள பொருள்கள் யாவிற்கும் அடிப்படையான, முதல் பொருளாகச் சூரியனை காண்கிறார். தாய் தந்தையாய்க் கருதி வணங்குகிறார் பாரதி.

பரிதியே! பொருள் யாவிற்கும் முதலே!

(சூரிய தரிசனம் – 1)

(பரிதி = சூரியன்)

ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே

ஆயிரந் தரம் அஞ்சலி செய்வேன்

(ஞாயிறு வணக்கம் – 3)

உலகிற்கு ஒளி வழங்கத் தினந்தோறும் உதிக்கிறது சூரியன். இதைப் பூமி மீது கொண்ட காதலால் சூரியன் தினமும் தோன்றுகிறது என்று கற்பனை செய்து பாடியுள்ளார்.

காதல் கொண்டனை போலும் மண்மீதே

கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!

மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்

மண்டினாள் . . . . . . .

(ஞாயிறு வணக்கம் – 3)

(மண்டினாள் = நெருங்கினாள் )

புற இருளை நீக்க ஒளி வேண்டும். அறியாமை என்னும் அக இருளை நீக்க அறிவாகிய ஞானம் வேண்டும். கவலை, சிறுமை முதலியவை அறிவிலாமை என்ற இருளில் காணப்படும் பேய்கள். இந்தப் பேய்களை ஞானமாகிய ஒளி நெருங்கினால் அறிவிலாமை என்ற இருள் நீங்கும் என்று பாரதி ஞானத்தைச் சூரியனாக உருவகித்துள்ளார்.

கவலைகள், சிறுமை, நோவு, கைதவம், வறுமைத் துன்பம்

இவையெலாம் அறிவி லாமை என்பதோர் இருளிற் பேயாம்

நவமுறு ஞானபானு நண்ணுக தொலைக பேய்கள்

(ஞானபானு : 1,2)

(கைதவம் – வஞ்சகம், நவம் – புதுமை, ஞானபானு – அறிவாகிய கதிரவன்)

சூரியனின் தோற்றத்தைப் பலர் பாடியுள்ளனர். ஆனால் அதை ஞானமாகவும் அறிவுத் தெய்வமாகவும் பாரதியே பாடியிருக்கிறார். அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்நாட்டு மக்கள் ஞானம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பாடினாரோ?

3.1.2 வெண்ணிலா நிலவைப் பாடாத புலவர்களில்லை. பாரதியின் கண்களுக்கு இன்பம் அளிக்கும் தீவாக நிலவு தென்படுகிறது. வானமாகிய கடலின் நடுவில் உள்ள தீவு நிலவு என்பது பாரதியின் கற்பனை.

………………………………விழிக்கு

இன்பம் அளிப்பதோர் தீவென்று இலகுவை வெண்ணிலாவே

(வெண்ணிலாவே – 1)

(இலகுவை – விளங்குவாய்)

மேலும்,

மாதர் முகத்தை நினக்கிணை கூறுவர் வெண்ணிலாவே அஃது

வயதிற் கவலையின் நோவிற் கெடுவது வெண்ணிலாவே!

(வெண்ணிலாவே – 2)

என்று பெண்கள் முகத்தை நிலவுக்கு ஒப்பிடுகிறார். பெண்கள் முகம் வயதால் மூப்படையும், கவலையினாலும் நோயினாலும் அழகு கெடும். ஆனால் இந்த நிலை நிலவுக்கு இல்லை. அது என்றும் குறையாத அழகு உடையது.

நிலவு தன் ஒளியை நல்லவர், தீயவர் என்ற பாகுபாடு இல்லாமல் வழங்குகிறது. ஆகையால் அது உயர்வானது. அது போல் எல்லோரையும் சமமாகக் கருதும் மேலான மனநிலையை உடையவர்கள் மேலோர் என்று குறிப்பிடுகிறார்.

தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் வெண்ணிலாவே! – நலம்

செய்தொளி நல்குவர் மேலவ ராம் அன்றோ. . . . .

(வெண்ணிலாவே – 4,5)

3.2 இந்து சமயத் தெய்வங்கள்-I

இயற்கையை வழிபட்ட பாரதி பராசக்தி, (சக்தி, சிவசக்தி, காளி, தேச முத்துமாரி, கோமதி) கலைமகள், திருமகள், வள்ளி, விநாயகர், கண்ணன், முதலிய தெய்வங்களைக் குறித்துப் பாடியிருக்கிறார். அதைப் பார்ப்போமா?

3.2.1 பராசக்தி அழித்தல் தொழிலைச் செய்யும் சிவபெருமானுக்கு ஏற்றார்போல் சக்தியும் வீரமும் அமையப் பெற்றவள் பராசக்தி. பெண் தெய்வ வழிபாடு சங்க காலத்திலேயே தமிழ்நாட்டில் காணப்படுகின்றது. பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவை. பின்னாலும் அவ்வழக்கம் தொடர்ந்தது. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியும் அதைப் பின்பற்றுகிறார். பெண் தெய்வ வழிபாடு தமிழ் நாட்டில் மிகுந்துள்ளது. பாரதியார் சிறிது காலம் காசியில் இருந்தார் என்பதை அவருடைய வாழ்க்கைச் சித்திரம் பாடத்தில் படித்திருப்பீர்கள். காசியிலும் வங்காளத்திலும் உள்ள மக்கள் காளி வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள். அந்தப் பழக்கம் அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் விளைவால் அவர் காளி மீது 28 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஒளிபடைத்த கண்களும் நெற்றியில் சிவந்த குங்குமமும் கொண்ட பாரதியின் தோற்றமே அவரைக் காளி பக்தனாகக் காட்டும். பராசக்தியை, சிவசக்தி, காளி, கோமதி, முத்துமாரி என்று பல பெயர்களில் வணங்குகிறார். பாரத நாட்டையே பாரத தேவியாகவும் சக்தியாகவும் காண்கிறார்.

சக்தி

எந்தப் பொருளானாலும் தானாக உருவாக முடியாது. அதை உருவாக்கும் காரணகர்த்தா, படைப்பாளி உண்டு. அவர் எல்லாவற்றையும் கடந்தவர், அவரையே கடவுள் என மக்கள் நம்புகின்றனர். ஒரு படைப்பாளிக்கு ஆற்றல் தேவை. அந்த ஆற்றலே சக்தி. அது செயல்படாத நிலை சக்தியாக (Potential energy) அல்லது செயல்படும் இயங்கு சக்தியாக (Kinetic energy) எல்லாப் பொருளிலும் நிறைந்து காணப்படுகிறது. அந்த ஆற்றலைத் தெய்வமாக மதிக்கிறார் பாரதி. இந்த உலகு அனைத்தையும் தோற்றுவிப்பவள் அன்னை அல்லவா? ஆகவே, உலகிலுள்ள தெய்வம் உட்பட அனைத்துப் பொருள்களும் காளியிடமிருந்து பிறப்பதாக எண்ணுகிறார். எல்லாம் அவளுடைய அம்சம் தானே! குழந்தை தனக்கு வேண்டியதை யாரிடம் கேட்கும்? அன்னையிடம். எனவே, தம் பாவங்கள் போகத் தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய விரும்பித் தம் உடல் உறுப்புகள் அனைத்தையும் சக்திக்கு அர்ப்பணம் செய்கிறார்.அவளைச் சரணடைந்தால் கவலை தீரும், துன்பம் நீங்கி இன்பம் பெருகும். சக்தியை வழிபடுங்கள். சொல், செயல், எண்ணம் இவை மூன்றும் சக்தியைப் பற்றியே இருக்க வேண்டும் என்று சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் என்னும் பாடலில் சக்தி தனக்கே உரிமையாக்கு என்று பாடுவதைக் காணலாம்.

ஜீவாத்மாவாகிய உயிர் இறுதியில் பரமாத்மாவான இறைவனை அடைய முழு சரணாகதியே சிறந்த வழி என்று நம்பிய பாரதி,

கரணமும் தனுவும் நினக்கெனத் தந்தேன்

(மகாசக்தி பஞ்சகம்)

(கரணம் – மனம், தனு – உடல்)

என்று முழுவதுமாகத் தம்மை அர்ப்பணிக்கிறார்.

தெய்வத்தின் உதவியின்றி மனித முயற்சியால் மட்டுமே எந்தச் செயலையும் செய்ய முடியாது என்பது பாரதியின் எண்ணம். ஆகவே

நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி

நலத்தை நமக்கிழைப் பாள்

அல்லது நீங்கும் . . . . . .

(ஓம் சக்தி – 2)

(அல்லது – துன்பம்)

என்று குறிப்பிடுகிறார்.

மகாபாரதத்தில் திரௌபதி கண்ணனிடம்,

வையகம் காத்திடு வாய் கண்ணா!

மணிவண்ணா என்றன் மனச்சுடரே!

ஐய, நின் பதமலரே – சரண்

ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி

(பாஞ்.சப.299)

என்று முழு சரணாகதி அடைந்த பிறகே அவளுக்குக் கண்ணன் அருள் கிடைத்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

யாதுமாகி நிற்கும் தெய்வம்

காளியாகிய சக்தி உலகில் எல்லா இடங்களிலும் நீக்கமற நிலைத்து, நிறைந்து இருப்பதை,

யாதுமாகி நின்றாய் – காளி! எங்கும் நீநி றைந்தாய்

பூதம் ஐந்தும் ஆனாய் – காளி! பொறிகள் ஐந்தும் ஆனாய்

(காளிப்பாட்டு)

என்று பாடுகிறார். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் அவளே. கண், செவி, வாய், மூக்கு, மெய் என்னும் ஐந்து பொறிகளும் அவளே. இவற்றில் இயக்கம் இல்லாவிடில் உலகிலும் உடலிலும் சலனம் இருக்காது. உள்ளுக்குள் இருந்து செயல்படச் செய்பவள் அவளே.

ஒன்றில் பல

பராசக்தி என்ற ஒப்பற்ற சக்தியிடம் பல தெய்வங்களையும், இயற்கையையும் பார்க்கிறார் பாரதி. உருவமும் பெயரும் வேறாக இருந்தாலும் தெய்வம் ஒன்று என்று காட்டுகிறார். தெய்வத்தைப் பல பெயர்களில் குறிப்பிட்டாலும் எந்தப் பெயரில், எந்த வடிவத்தில் மனம் ஒருமுகப்படுகிறதோ அந்தத் தெய்வத்தை மக்கள் வழிபடுகின்றனர். இந்தப் பிரபஞ்சம் (அண்ட சராசரங்கள், அனைத்து உலகமும்) முழுவதும் சக்தி கலந்து ஊடுருவியிருப்பதை,

பரிதி யென்னும் பொருளிடை ஏய்ந்தனை

கரிய மேகத் திரளெனச் செல்லுவை

காலும் மின்னென வந்துயிர் கொல்லுவை

சொரியு நீரெனப் பல்லுயிர் போற்றுவை

வாயு வாகி வெளியை அளந்தனை

(மகாசக்தி வாழ்த்து 3,4)

(பரிதி – சூரியன், ஏய்ந்தனை – பொருந்தினாய், காலும் – பொழியும், வெளி -வானவெளி)

என்னும் பாடல் குறிப்பிடுகிறது.

சக்தியிடம் முருகனையும், சங்கரனையும், கண்ணனையும் காண்கிறார் பாரதி. இதை,

சக்தியென்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்

சங்கரனென்று உரைத்திடுவோம் கண்ணன் என்போம்

(பேதை நெஞ்சே – 3)

என்ற பாடல் உணர்த்துகிறது. மேலும், சக்தியை வேதக் கருப்பொருளாய்க் கலைமகளாய்க் (ஓம்சக்தி – 5) காண்பது மட்டுமன்றி, எல்லாவற்றிற்கும் மலோன பரம்பொருளாய், சர்வேஸ்வரியாய்க் காண்கிறார். நவராத்திரி பாட்டில் சர்வேஸ்வரியாம் பரம்பொருளை வாணி, ஸ்ரீ தேவி, பார்வதி ஆகிய மூவராகப் பார்த்துப் பாடுகிறார்,

பின்னாளில் சிறு தெய்வமாக வணங்கப்படும் தேசமுத்து மாரியிடமும் (தேசமுத்துமாரி – 1) சக்தியையே காண்கிறார்.

3.2.2 கலைமகள் கல்விக்குத் தெய்வமாகக் கருதப்படுபவள் கலைமகள். படைப்புக் கடவுளான பிரம்மனின் மனைவி. ஒரு படைப்பாளிக்கு மிகுந்த அறிவு தேவை. அதன் அடிப்படையில் பிரம்மன் மனைவியாக விளங்குபவள். கலைமகள் மீது ஸரஸ்வதி ஸ்தோத்திரம், ஸரஸ்வதி தேவியின் புகழ், மூன்று காதல் என்னும் பாடல்கள் பாடியுள்ளார் பாரதியார்.

புண்ணியம் பெறும் வழி

வெள்ளைத் தாமரையில், வீணை செய்யும் ஒலியில், பாவலர் மனத்தில், வேதத்தில், பாட்டில், மக்கள் பேசும் மழலையில் (சரஸ்வதி தேவியின் புகழ் 1,2) கலைமகள் இருப்பதாக விளக்கியுள்ள பாரதி, புண்ணியம் என்னும் கல்வியறிவைப் பெறும் வழியைக் காட்டுகிறார்.

பூமணித் தாளினையே கண்ணிலொற்றிப்

புண்ணிய மெய்திடுவோம்

(ஆறுதுணை – 4)

‘புண்ணியம்’ என்று அவர் நினைப்பது கல்வியை எனக் கொள்ளலாம்.

கவிதை இயற்றக் கல்வியறிவு தேவை, அந்த அறிவைப் பெற விரும்பும் பாரதி, ஒரு கணப் (விநாடி) பொழுதும் கலைமகளைப் பிரிய விரும்பவில்லை. கலைமகளிடம்

எங்ஙனம் சென்றிருந்தீர் – என

தின்னுயரே! யென்றன் இசையமுதே!

(ஸரஸ்வதி ஸ்தோத்திரம் – 1)

என்று கேட்ட பாரதி,

பாதங்கள் போற்று கின்றேன் – என்றன்

பாவ மெலாங் கெட்டு ஞானகங்கை

நாதமொடு எப்பொழுதும் – என்றன்

நாவினி லேபொழிந் திடவேண்டும்

(ஸரஸ்வதி ஸ்தோத்திரம் – 2)

என்று வேண்டுகிறார். ஞானம் வந்து விட்டால் அகந்தை கெடும். எனவே ஞானம் வேண்டுகிறார்.

தொழில் கல்வி

கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் தெய்வமாகத் திகழ்பவள் கலைமகள். கொல்லர், தச்சர், வணிகர் ஆகியோருக்கும் தெய்வமாக விளங்குகிறாள். ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் தொழில் கல்விக்கும் அவளே துணை என்று காட்டுகிறார் பாரதி. ஏட்டுக்கல்வி, மற்றும் ஏட்டுக் கொள்கை இவை மட்டுமே அறிவு என்று கருதும் அறியாமையைச் சாடுகிறார். தொழில் கல்வியைப் போற்றுகிறார். வெள்ளையர் ஆட்சியில் இந்திய நாட்டுக் கைத்தொழில்கள் நலிவடைந்ததால் அவற்றைப் புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில் அவர் இவ்வாறு பாடியிருக்கலாம்.

கலைமகளை வழிபடும் விதம்

மந்திரம் சொல்லி புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைத்து வழிபடுவது கலைமகள் பூசை அல்ல என்று கண்டிக்கிற பாரதி, அவளை முறையாக வழிபடுவது எங்ஙனம் என்று தெளிவுபடுத்துகிறார். அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் மனத்தில் அறிவுத் தீயை ஏற்றுகிறார். எனவே

மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை

வரிசையாக அடுக்கி அதன்மேல்

சந்தனத்தை மலரை யிடுவோர்

சாத்தி ரமிவள் பூசனை யன்றாம்

(ஸரஸ்வதி தேவியின் புகழ் – 5)

என்று கலைமகளை வழிபடும் விதத்தைக் கண்டிக்கிறார். பின் எது தான் முறையான பூசை? இதோ அவரது விளக்கம்:

வீடு தோறும் கலையின் விளக்கம்

வீதி தோறும் இரண்டொரு பள்ளி

நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்

நகர்கள் எங்கும் பலபல பள்ளி

தேடு கல்வியி லாததொரு ஊரைத்

தீயி னுக்கிரை யாக மடுத்தல்

(ஸரஸ்வதி தேவியின் புகழ் – 5)

(விளக்கம் – இருப்பிடம், மடுத்தல் – மூட்டுதல், அழித்தல்)

ஏடுகளை அடுக்கி வைத்து இன்னமுது படையலிட்டால் அறிவு வளராது, அறியாமை நீங்காது. அறிவு வளர வீடுகளிலும் வீதிகளிலும் கல்வி முழக்கம் செழிக்க வேண்டும். கல்வியில்லாத ஊரைத் தீக்கிரையாக்க வேண்டுமென்று சினந்து கூறுகிறார் பாரதி. ஊரையும் நாட்டையும் அழிக்கச் சொல்வது அவர் நோக்கமல்ல.

கலைமகளின் ஒளி பாரத நாட்டில் மட்டுமல்லாது யவனம், சீனம், பாரசீகம் போன்ற அயல் நாடுகளிலும் பரவவேண்டுமென்று பாரதி விரும்புகின்றார். (சரஸ்வதி தேவியின் புகழ் – 7) மக்கள் அனைவரும் கலைமகள் அருள் பெற்றால் அக இருள் நீங்கி அறிவு பெருகும். அப்போது உலகில் ஒற்றுமை ஓங்கும் அல்லவா?

புண்ணியம் கோடி

ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் எல்லாத் தானங்களையும் விடச் சிறந்தது. அதனால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்று எழுத்தறிவு கொடுக்கத் தூண்டுகிறார். தூண்டல் (stimulus) வலிமை பெற்றால் துலங்கல் (response) பொலிவு பெறும் அல்லவா?

அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்

(வெள்ளைத்தாமரை – 9)

அந்தச் செயலை நடைமுறையில் கொண்டு வர மக்களிடம் நிதி கேட்கிறார், நிதி கொடுக்க முடியாதவர்களிடம் உழைப்பைக் கேட்கிறார், அதுவும் செய்ய இயலாதவர் அது குறித்துப் பிறரிடம் பேச வேண்டும் என்கிறார். இவ்வாறு அவர் கூறுவு எதையும் கொடுத்து எழுத்தறிவு பெறச் செய்ய வேண்டும் என்னும் உறுதிப்பாடு, அனைவருக்கும் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்ததையே காட்டுகிறது. இது கடவுளை வணங்கும் பார்வையாக இல்லாமல் அதன் வழிக் கல்வி கற்பிக்கும் புத்திப் பார்வையாக விளங்குகிறது. மேலும் ‘உழைப்பினை நல்கீர்’ (வெள்ளைத்தாமரை – 10) என்ற பாடல் அடி செயல் செய்வதைச் சுட்டும் கர்மயோகப் பார்வையாக அமைந்துள்ளது.

பெண்கல்வி பெருக வேண்டும் என்னும் நோக்கில்,

தேமொழி மாதர்க ளெல்லாம்

வாணிபூசைக் குரியன பேசீர்

(ஸரஸ்வதி தேவியின் புகழ் – 10)

(வாணி = கலைமகள்)

என்று பாடியிருக்கிறார். பெண்கள் கல்வியில் ஈடுபாடு கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார். ஓர் ஆண் கல்வி கற்றால் அவன் மட்டும் பயனடைவான். ஆனால், ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பமே பயனடையும். இவ்வாறு பாரதியின் பார்வை வெறும் பக்திப் பார்வையாக இல்லாமல் புத்திப் பார்வையாக, கர்மயோகப் பார்வையாக விளங்குகிறது.

3.2.3 திருமகள் திருமகள் காக்கும் கடவுளான திருமாலின் மனைவி. செல்வத்திற்கு அதிபதி. உயிர்களைக் காக்கப் பொருள் தேவை. ஆகவே, காக்கும் கடவுளாம் திருமாலுக்கு மனைவியாகத் திருமகள் விளங்குகிறாள் எனக் கொள்ளலாம்.

திருமகளைப் பற்றிப் பாரதியார் லக்ஷ்மி தேவி சரண் புகுதல், லக்ஷ்மி பிரார்த்தனை, ஸ்ரீ தேவி ஸ்துதி, திருக்காதல், மூன்று காதல் என்னும் தலைப்புகளில் பாடியுள்ளார்.

இருப்பிடம்

இலக்குமியின் இருப்பிடம் திருமாலின் மார்பு என்று கூறுவர். ஆனால் பாரதி அவள் திருமால் மார்பில் மட்டுமல்லாது வீரர் தோள், கன்னியர் நகை, காடு, சோலை, மன்னர் முகம் முதலிய இடங்களில் இருப்பதாகப் பாடி யிருப்பது புதுமையாக உள்ளது. (லக்ஷ்மி தேவி – சரண் புகுதல் – 4)

மேலும் பாரதி,

செல்வம் எட்டும் எய்தி – நின்னாற்

செம்மையுற வாழ்வேன்

(இலக்குமி பிரார்த்தனை – 5)

என்று பாடுவது இலக்குமியிடம் பொருள் பெற்றுச் சிறப்பாக வாழ வேண்டும். அவர் நம்பியதைக் காட்டுகிறது. இல்லாமை என்னும் கொடுமை உலகில் யாருக்கும் ஏற்படக் கூடாது, எல்லோரும் எல்லாம் பெற்று வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்,

இல்லை என்ற கொடுமை உலகில்

இல்லையாக வைப்பேன்

எல்லையற்ற சுவையே எனை நீ

என்றும் வாழ வைப்பாய்

(இலக்குமி பிரார்த்தனை – 5)

என்று ஒரு கவிஞனுக்கே உரிய தன்னம்பிக்கையுடன் கேட்கின்றார். எல்லோரும் எல்லாம் பெற்று எப்படி வாழ முடியும் என்ற அவநம்பிக்கை, சோர்வு வாதம் (pessimism) அவரிடம் எழவில்லை. எதிலும் நல்லார்வ நலமே (optimism) ஓங்கி நிற்கிறது.

3.3 இந்துசமயத் தெய்வங்கள் - II

இந்துசமயத் தெய்வங்களில பராசக்தியைப் பல வடிவங்களில் கண்டு போற்றிய பாரதியார் ஏனைய தெய்வங்களை பாடியிருப்பதை இப்போது காணலாம்

3.3.1 விநாயகர் விநாயகர் சிவபெருமானின் புதல்வர். பாண்டிச்சேரியில் பாரதியார் வாழ்ந்த காலத்தில் அங்குள்ள ‘மணக்குள விநாயகர்’ மீது பாடிய பாடலே ‘விநாயகர் நான் மணிமாலை’. இப்பாடல் முறையே வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்ற யாப்பில் அமைந்துள்ளது. அதனால் நான்மணிமாலை என்ற பெயர் பெற்றது. அந்தாதித் தொடையால் ஆனது. (ஒரு பாடலின் இறுதி அடி அல்லது சீர் அடுத்த பாடலுக்குத் தொடக்கமாக வருவது. (அந்தம் = முடிவு, ஆதி = தொடக்கம்) இதில் 40 பாடல்கள் உள்ளன. எனவே நான்மணிமாலை என்று பெயர் பெற்றது.

விநாயகர் எத்தகையவர்? அவர் சொல்லுக்கு அரியர், சூழ்ச்சிக்கு அரியர், பல உருவாகப் படர்ந்த வான்பொருள், உலகம் காக்கும் சக்தி, ஓம் எனும் பொருளை உள்ளத்தில் நிறுத்திச் சக்தியைக் காப்பவர், எளியவர் (விநாயகர் நான்மணிமாலை – 2) என்றெல்லாம் விநாயகரை அனைத்துமாய்ப் பார்க்கிறார் பாரதியார்.

விநாயகர் உருவத்திலேயே வைதிகச் சமய கடவுள்களான முருகன், நாராயணன், சிவபெருமான் முதலிய தெய்வங்களை மட்டுமன்றிப் பிறசமயத் தெய்வங்களான அல்லா, யெஹோவா (விநாயகர் நான்மணிமாலை – 8) ஆகியோரையும் காண்பதாய் பாடியிருப்பது, ஒன்றில் பல தெய்வங்களைக் காணும் பாரதியின் பொது நோக்கை, தனித்தன்மையைக் காட்டுகிறது. சக்தியிடம் எல்லாத் தெய்வங்களையும் பார்த்தது போல் விநாயகரிடமும் சிறு தெய்வம், பெருந்தெய்வம் முதலிய அனைவரையும் பார்க்கும் பண்பு பாரதியிடம் உள்ளது. இதை

பரம்பொரு ளேயோ! பரம்பொரு ளேயோ!

ஆதி மூலமே! அனைத்தையும் காக்கும்

தேவா! தேவா! சிவனே! கண்ணா!

வேலா! சாத்தா! விநாயகா! மாடா!

இருளா! சூரியா! இந்துவே! சக்தியே

வாணி! காளி! மாமக ளேயோ!

(விநாயகர் நான்மணிமாலை – 20)

என்னும் பாடல் விளக்குகிறது.

கடவுள் வடிவங்கள் தத்துவங்களே. கடவுள் உறவுமுறை மனிதனின் பாவனைகளே அன்றி வேறல்ல. சிவம் – சக்தி, அம்மை – அப்பன், இலிங்க அமைப்பு எல்லாமே ஒன்றின் பல, பலவின் ஒன்று. உலக இயக்கமே ஆண்மை – பெண்மை அடிப்படையிலேயே விளங்குகின்றது. வழிகள் (சமயம்) பலவாயினும் அவை சேருமிடம் (இறைவன்) ஒன்றே என்ற உணர்வுடையவர் பாரதி என்பதை,

இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித்

தாயாய்த் தந்தையாய்ச் சக்தியும் சிவனுமாய்

உள்ளொளி யாகி யுலகெலாம் திகழும்

பரம்பொரு ளேயோ! பரம்பொரு ளேயோ!

(விநாயகர் நான்மணிமாலை – 20)

என்ற பாடல் தெரிவிக்கிறது.

விநாயகர் நான்மணிமாலை பாடலின் இறுதியில் வெற்றிக்கும் வீரத்திற்கும் வாழ்த்துக் கூறிப் பக்திக்கும், உண்மைக்கும், ஊக்கத்திற்கும் வரவேற்பு கூறுகிறார் பாரதி. மனிதரிடம் உள்ள நல்ல குணங்களே தேவர்கள். யுகங்கள் நான்கு. அவை கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பன. பாரதி வாழ்ந்த யுகம் கலியுகம். கலியுகத்தின் தன்மையாக மறம் ஓங்கும், அறம் நீங்கும், கேடு விளையும், நீதி தூங்கும் என்று சான்றோர் கூறியுள்ளனர். கலியுகத்திற்கு அடுத்து வரும் யுகம் கிருதயுகம். யாருக்கும் எக்காலத்தும் துன்பம் வருவதை விரும்பாத பாரதி, இனி வரும் யுகமாகிய கிருதயுகத்தில் எல்லோரும் நன்மை பெற்றுத் தீமை இல்லாமல் வாழ்வதற்கு விநாயகரை வேண்டுகிறார்.

எல்லாக் கவிஞர்களும் தாம் வாழ்ந்த – வாழும் கால நிலையை மட்டும் பாடினார்கள். பாரதியோ அவர்களையும் மிஞ்சி ஒளிமயமான எதிர்கால யுகத்திற்காக இப்போதே வேண்டுகிறார். யாரிடம் வேண்டுகிறார் ? கற்பக விநாயகரிடம். கற்பகமரம் கேட்டவர்க்குக் கேட்டதைக் கொடுக்கும் தன்மை உடையது. இல்லை என்ற சொல்லுக்கு அங்கு இடமில்லை. ஆகவே, பாரதியார் தாம் கேட்கும் வேண்டுதல்கள் எல்லாம் திண்ணமாய்க் கிடைக்கும் என நம்புகிறார். நம்பிக்கை தானே வாழ்வின் அடிப்படை? எனவே, அந்த நல்ல வாழ்வை அடைய அன்பாகிய தவம் மேற்கொள்ள வேண்டும்.

வையத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார்

இன்புற்று வாழ்தல் இயல்பு

(விநா-37)

அதன் மூலம் அனைவரும் இன்புற்று வாழலாம் என்பதை அவர் பாடல்கள் நினைவூட்டுகின்றன.

3.3.2 முருகன் அன்னைப் பராசக்தியின் குழந்தை முருகன். விநாயகரின் தம்பி. முருகன் குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம். பாரதியார் முருகன் மீது முருகா! முருகா!, வேலவன் பாட்டு, முருகன் தூது, முருகன் பாட்டு முதலிய பாடல்கள் பாடியுள்ளார். காந்தியடிகள் 6.4.1919ஆம் நாளை சத்யாக்ரக நாளாகக் கொண்டாட வேண்டுமென்று கூறியிருந்தார். திரு.வி.கலியாண சுந்தரனார் விரும்பியதன் பொருட்டு ‘முருகா’ என்று தொடங்கும் பாடலைப் பாரதி அன்று பாடினார். முருகனின் வேலும் மயிலும் தம்மைப் பாதுகாப்பதாக அவர் நம்பியதை இந்தப் பாடல் தெரிவிக்கிறது.

முருகனை அறிவுத் திருவுருவாக எண்ணிச் ‘சுருதிப் பொருளே வருக’ என்று அழைக்கிறார். முருகனை வேதம் உணர்த்திய குரு, தமிழ்ப் பாவலருக்கு அருள்பவன் என்றெல்லாம் பாடும் பாரதி, அவனை வணங்கினால் பராசக்தி வேண்டிய வரம் தருவாள் என்று முருகனிடம் ஆற்றுப்படுத்துகிறார் (முருகன் பாட்டு – 2). மேலும், முருகனை நினைந்து உள்ளம் உருகப் பாடும் பாரதி,

அறிவா கியகோ யிலிலே

அருளா கியதாய் மடிமேல்

(முருகன் பாட்டு 1-5)

என்று அறிவைக் கோயிலாகவும் அருளைத் தாயாகவும் உருவகப் படுத்திப் பாடியிருப்பது பக்திச் சுவையுடன் இலக்கியச் சுவையும் கலந்து விளங்குவதைக் காட்டுகிறது.

3.3.3 கண்ணன் வசுதேவனுக்கும் தேவகிக்கும் பிறந்த கண்ணன் ஆயர் பாடியில் நந்த கோபனுக்கும் யசோதைக்கும் மகனாக வளர்ந்தார். பாரதியாரின் முப்பெரும் பாடல்களில் ஒன்று கண்ணன் பாட்டு. அது நீங்கலாகப் பாரதியார் கண்ணன் மீது பாடிய சில பாடல்களும் பக்திப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அவை கண்ணன் பிறப்பு, கண்ணன் வரவு, கண்ணன் துதி, கோவிந்தன் பாட்டு, கண்ணம்மா-1, கண்ணம்மா-2, கண்ணம்மா-3 என்பனவாகும். இப்பாடல்களில் பக்தியுடன், கற்பனையும் கலந்து காணப்படுகின்றது.

கண்ணனிடம் மிகுந்த பக்தி கொண்டவர் பாரதியார். அவர் கண்ணனுடன் இரண்டறக் கலக்க விரும்பியதைக் ‘கண்ணன் வரவு’ என்ற பாடல் வெளிப்படுத்துகிறது. கண்ணன் தம் அறிவில் ஒளிர வேண்டும், உயிரின் அமுதாய்ப் பொழிய வேண்டும், கருவாய்த் தன்னுள் வளர வேண்டும். தம் உயிரிலே கலக்க வேண்டும், இதயத்தில் அமர வேண்டும் என்றெல்லாம் பாரதி விரும்புகிறார். கலியுகத்தின் இறுதியில் அசுரர்கள் தலைகளைச் சிதறச் செய்யப் படையோடு கண்ணன் எழ வேண்டும் என்று பாடுவது பகவத்கீதையில் கண்ணன்

“தர்மம் நீங்கி அதர்மம் ஓங்கும் போது தர்மத்தை நிலை நாட்ட அவதரிப்பேன்” என்று பகவத்கீதையில் கூறியதை எதிரொலிப்பது போல் உள்ளது. மேலும்,

தொழுவேன் சிவனாம் நினையே – கண்ணா!

(கண்ணன் வரவு -3)

என்ற பாடல் அடி சிவபெருமானையும் கண்ணனையும் ஒன்றாகப் பாரதி பார்ப்பதைக் காட்டுகிறது. பாரதியாருக்குத் தெய்வபக்தி என்றால் காளி வழிபாடுதான் என்பதல்ல. காளி, கண்ணன், முருகன் ஆகியோரையும் வழிபட்டார். ஆயினும் உள்பொருள் ஒன்றே என்று அவர் நினைத்தது தெரிகிறது.

பாரதியாரின் பக்தி கோவிந்தன் பாட்டில் விரிந்து நிற்கிறது. காற்று, வான், பறவை, முகில், மண் போன்ற பலவற்றிலும் கடவுளைக் காணத் துடிக்கும் பாரதி அவருடன் சேரத் துடிக்கிறார். இறைவனும் (பரமாத்மா) உயிரும் (ஜீவாத்மா) வேறுவேறாய் நிற்க இயலாது. நிற்கக் கூடாது. இரண்டும் சேர வேண்டும் என்ற அத்வைதத் தத்துவக் கருத்துக் கொண்டவர் என்பது புலப்படுகிறது.

கண்ணம்மா

கண்ணனைப் பாரதியார் கண்ணம்மாவாகப் (பெண்ணாக) பார்த்துக் காதலில் கரைகிறார். இப்பாடல் காதலுக்கு ஓர் இலக்கணமாய் விளங்குகிறது. பெரும்பாலும் தமிழ் இலக்கியத்தில் கடவுளைக் காதலனாகப் பாவித்துப் பாடும் நாயகன் நாயகி – பாவமே காணப்படுகிறது. திருநாவுக்கரசர்,

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

(தேவாரம் : 6501)

என்னும் பாடலில் தம்மைப் பெண்ணாகவும் சிவபெருமானை ஆணாகவும் பாவித்துப் பாடுகிறார். இது போல் ஆழ்வார்களும் பாடியிருக்கிறார்கள். ஆனால் பாரதி தம்மை ஆணாகவும் கண்ணனைக் கண்ணம்மா என்ற பெண்ணாகவும் பாவித்து மரபை மாற்றிப் பாடிய நிலையைக் கண்ணம்மாவின் காதல், கண்ணம்மாவின் நினைப்பு ஆகிய பாடல்கள் உணர்த்துகின்றன.

கண்ணம்மாவைக் கண்ணன் திருமார்பில் இருக்கும் திருமகளாய், சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும் பார்வதியாய்ப் பார்க்கிறார்.

கண்ணன் திருமார்பில் கலந்த கமலைஎன்கோ?

விண்ணவர் தொழுதிடும் – வீரசிங் காதனத்தே

நண்ணுச் சிவனுடலை – நாடும் அவள்என்கோ?

(கண்ணம்மா – 1)

இவ்வாறு ஒன்றில் பலரை நோக்கும் பாங்கு, மனநிலை பாரதியின் பாடல்களில் காணப்படுகின்றது.

கண்ணன் அவதாரத்தில் கண்ணன் ஆயர்பாடியில் குழந்தைகளோடு குழந்தையாய் வளர்ந்து வந்த காரணத்தால் பாரதி அவரைத் தந்தையாய், தாயாய், நண்பனாய், சேவகனாய், காதலனாய், தெய்வமாய்க் காண்கிறார். பாரதியின் காலத்திற்கு அந்தச் சொல்லுக்குத் ‘தொண்டன்’ என்று புதுப்பொருள் தருகிறார். இராமபிரான் சக்கரவர்த்தித் திருமகன். ஆகவே, அவரைக் கண்ணனைப்போல் பல உறவு முறைகளில் பாடவில்லை. பாரதியார் இராமனிடம் சாகா வரம் கேட்பதாக ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

கண்ணம்மாவின் அங்க வர்ணனைப் பாடல் புதுக்கவிதை அமைப்பில் எளிமையாக உள்ளது. புதுக்கவிதைக்கு வித்திட்டவர் பாரதி. சொற்களைக் கையாளும் வித்தைப் பாரதிக்கே உரிய சொத்து என்பதை,

எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ

எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப் பூ

(கண்ணம்மா – அங்கவர்ணனை – பல்லவி)

என்ற பாடல் அடிகள் உணர்த்துகின்றன.

3.4 பிற சமயத் தெய்வங்கள்

இது வைதிகச் சமயமல்லாத புத்த சமயம், கிறித்துவ சமயம், இசுலாமிய சமயம் போன்றவற்றைக் குறிக்கும். பாரதி பிற சமயங்களையும் மதிக்கத் தெரிந்தவர். அந்தச் சமயத்தைச் சார்ந்தவர்களைத் தம் சகோதரர்களாகக் கருதுகிறார். ஆகவே, அவர்கள் வழிபட்ட தெய்வங்களையும் பாடுகிறார்.

3.4.1 புத்தர் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என உலகிற்குப் போதித்தவர் புத்தர். பாரதி தாம் கண்ட கனவில் புத்தரின் அருள் ஒளி தம் மீது பாய்ந்ததாக ஆரிய தரிசனம் என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

3.4.2 இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்து மக்களுக்கு நல்வழி காட்ட வந்த மகான். அவருடைய தியாக குணமும் மன்னிக்கும் மாண்பும் பாரதியைக் கவர்ந்தன. நல்லவை எங்கு இருந்தாலும் யாரிடம் இருந்தாலும் அதைப் பாராட்டத் தயங்காத பாரதி இயேசுவை வணங்குகிறார். ஒரு கிறித்தவர் எப்படி உருகிப் பாடுவாரோ அது போல் பாரதியின் பாடல் விளங்குகிறது. இயேசுவைப் பற்றி அவர் பாடிய,

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்

எழுந்து உயிர்த்தனன் நாள்ஒரு மூன்றில்

நாசம் இன்றி நமைநித்தம் காப்பார்

நம்அகந் தையை நாம்கொன்று விட்டால்!

(இயேசு கிறிஸ்து – 1)

என்னும் பாடல், ‘நான்’ என்ற அகந்தையை மனிதர்கள் அழித்தால் இயேசு போல் மகிமை பெறலாம் என்று காட்டுகிறது.

3.4.3 அல்லா பாரதி எல்லா மதங்களையும் மதிப்பவர் என்ற நிலையில் அல்லாவைப் பாடுகிறார். கல்லார்க்கும், பொல்லார்க்கும், எல்லார்க்கும் அருள்புரியும் அல்லாவின் எளிமையைப் பாடுவதன் மூலம் அந்தச் சமயத்தின் எளிமைத் தன்மையைப் பிறருக்குக் காட்டுகிறார் (அல்லா).

பாரதி தெய்வப் பாடல்களை விநாயகர் நான்மணிமாலையில் தொடங்கி ‘அல்லா’வில் கொண்டு முடிக்கிறார். பாரதியார் கடவுளைப் பற்றிய நோக்கில் ஒரு பொது மனிதனாகவே விளங்குகிறார்.

3.5 பாரதியின் வேண்டுதல்

‘வேண்டுதல்’ என்பது, கடவுள் தம் சக்தியால் பக்தர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காகக் கேட்பது என்று பொருள்படும். மக்கள் தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால், அந்தத் துன்பம் நீங்கவும், உலக வாழ்க்கைக்குத் தேவையான விருப்பங்கள் நிறைவேறவும் இறைவனிடம் வேண்டுவர்.

அடியார்களின் வேண்டுதல்

இறைவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட பக்தர்கள் தங்கள் துன்பம் நீங்க இறைவனிடம் வேண்டவில்லை. இறைவனோடு சேர வேண்டும் என்றே விரும்புகின்றனர். இந்த மண்ணுலக வாழ்க்கைத் துன்பமானது. ஆகவே, பிறவி வேண்டாம் என்று அவர்கள் பாடுவதைக் காணலாம். காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம்,

பிறவாமை வேண்டும் மீண்டும்

பிறப்பு உண்டேல் உன்னைஎன்றும்

மறவாமை வேண்டும்

(பெரியபுராணம் : காரைக்கால் அம்மையார் – 1781)

என்று வேண்டுவதாகச் சேக்கிழார் சொல்கிறார். அவர் பிறப்பை விரும்பவில்லை, பிறந்துவிட்டால் சிவபெருமானை மறக்காமல் இருக்க விரும்புகிறார். வேறு எந்த நோக்கமும் அவருக்கில்லை.

திருநாவுக்கரசர், ‘சிவபெருமானின் குனித்த புருவத்தையும், குமிண் சிரிப்பையும், நடனமாடுவதற்காக எடுத்த பாதங்களையும் காண்பதென்றால் மனிதப் பிறவி வேண்டும் (தேவாரம்- 4941) என்று கேட்கிறார்.

இராமலிங்க அடிகள், ‘அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மையப்பா’ என்று சிவபெருமானை வேண்டுகிறார்.

ஆண்டாள்,

எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம்; உனக்கேநாம் ஆட்செய்வோம்

(திருப்பாவை – 29)

எனக் கண்ணனிடம் விண்ணப்பிக்கிறாள். இவர்கள் நல்ல உள்ளம், நல்ல சிந்தனை உடையவர்கள். இறைவனை உறுதியாக நம்பினர். ஆயினும், இவர்கள் வேண்டுதல்கள் தங்களைக் கடைத்தேற்றும் நோக்கத்தில் உள்ளன. வீடு பேறு அடையப் பிறவியாகிய துன்பத்தைக் கடக்க விரும்புகின்றனர். பாரதிக்கு முன்னோடியாக, அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் என்று இராமலிங்க அடிகள் இறைவனிடம் வேண்டுகிறார். இவர்களைப் பின்பற்றிப் பாரதியின் வேண்டுதல்கள் விளங்குகின்றன. பாரதியின் வேண்டுதல்கள் என்ன என்று பார்க்கலாமா?.

3.5.1 அனைத்தும் இன்புற வேண்டுதல் இந்த நாட்டு மண்ணையும் மைந்தர்களையும் தம் உயிராக மதித்தவர் பாரதி. ஆகவே, உலகிலுள்ள ஓரறிவுடைய உயிரினம் முதல் ஆறறிவுடைய மனித இனம் வரை இன்புற்று வாழவேண்டும் என்று வேண்டுகிறார். தம் வேண்டுதல்களை விநாயகர் விரைவில் நிறைவேற்றுவார் என்று நம்புகிறார். ஆகவே,

கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்

மண்மீ துள்ள மக்கள் பறவைகள்

விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்

யாவுமென் வினையால் இடும்பைத் தீர்ந்தே

இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

செய்தல் வேண்டும் , . . . . . . . . . . . . .

(விநாயகர் நான்மணிமாலை – 32)

என்று பாரதி வேண்டுகிறார்.

மனிதன் முதல் புல் பூண்டு வரை இன்பமாக வாழ விரும்புகிறார் பாரதி. அந்த அரிய செயலை விநாயகர் தம் உள் இருந்து அருள்புரிந்து தாமே பிற உயிர்களின் துன்பத்தை நீக்க அருள் புரிய வேண்டும் என்று கேட்கிறார். எல்லா உயிர்களிலும் உள்ளிருந்து ஆட்டுவிப்பவன் இறைவனே!.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்தார் தாயுமானவர். வாடிய பயிரைக் கண்டு வாடினார் இராமலிங்க அடிகள். பாரதியும் புல், பூண்டு, பூச்சி இவைகளும் இன்புற்று வாழ வேண்டும் என்பதைத் தம் வேண்டுகோளாக முன் வைக்கிறார்.

3.5.2 திண்ணிய நெஞ்சம் எல்லா உயிர்களுக்கும் நல்லது செய்ய விரும்பும் பாரதி, சக்தியிடம் கேட்பதைப் பாருங்கள்.

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்

திண்ணிய நெஞ்சம் வேண்டும்.

(அன்னையை வேண்டுதல்)

எதை விதைக்கிறோமோ அதுதான் விளையும். நல்ல எண்ணத்தை விதைத்தால் நல்ல செயல் விளையும். ஆகவே நல்லதை எண்ணவும், அதைச் செயல்படுத்தவும் தேவையான வலிமையும் உறுதியும் உடைய நெஞ்சம் கேட்கிறார் பாரதி. இங்கு,

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்

(குறள் : 666)

என்ற குறளின் கருத்து ஒப்பு நோக்கத் தக்கது.

3.5.3 பயனுற வாழ வல்லமை தாராயோ? உலகில் பிறக்கும் மனிதர்கள் பயனுள்ள வகையில் வாழ்தலே சிறப்பு என்று நினைக்கிறார் பாரதி. ஆகவே, சிவசக்தியைப் பார்த்து, என்னை அறிவு மிகுந்தவனாகப் படைத்து விட்டாய். அந்த அறிவால் மனித குலம் பயன்படும் வகையில் வாழ்வதற்கான வலிமையைக் கொடு என்று வேண்டுகிறார். எதற்காக? இந்த உலகம் பயனுற வாழ்வதற்காக. ஆகையால்,

எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்,

வல்லமை தாராயோ, – இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

( கேட்பன – 1)

என்று பாடுகிறார்.

3.5.4 நூறு வயது, நீண்ட புகழ், செல்வம் 39 ஆண்டுகளே உலகில் வாழ்ந்த பாரதி நூறு வயது, நீண்ட புகழ், செல்வம், பேரழகு முதலியன தமக்கு வேண்டுமென்று விரும்பியிருக்கிறார். இந்த உலகை மேனிலைப் படுத்த அறிவும் வலிமையும் இருந்தால் போதுமா? போதாது. அவர் விரும்பியதைச் செய்து முடிக்க நீண்ட ஆயுள், செல்வம் முதலியவை தேவை. ஆகவே, பாரதி விநாயகர், சக்தி, ஆகியோரிடம்,

எனக்கு வேண்டும் வரங்களை

இசைப்பேன் கேளாய் கணபதி

கனக்கும் செல்வம் நூறுவயது

இவையும் தரநீ கடவாயே

(விநாயகர் நான்மணிமாலை – 7)

நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்

(விநாயகர் நான்மணிமாலை – 20)

நீண்டபுகழ் வாணாள் நிறைசெல்வம் பேரழகு

வேண்டு மட்டும் ஈவாய் விரைந்து

(விநாயகர் நான்மணிமாலை – 33)

நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்

நோக்கங்கள் பெற்றிட வேண்டு மென்றே

(வைய முழுதும் – 6)

(வாணாள் – வாழ்நாள், ஆயுட்காலம்)

எனத் தம் உயர்ந்த நோக்கங்கள் நிறைவேற வேண்டுகிறார். நூறாண்டு காலம் உலகில் வாழ அருள் செய்யும் படி மூன்று முறை கேட்கிறார். அதைச் செய்து முடிப்பதற்கு முன்பு காலன் (எமன்) தம் உயிரைக் கவர்ந்து விடக்கூடாது என்று நினைத்த பாரதி காலனைப் பார்த்து,

காலா! . . . . . . . . . . . . . . . . .என்றன்

காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன் . . .

ஆலாலம் உண்டவன்அடி சரணென்ற மார்க்கண்டன் – தனது

ஆவி கவரப்போய் நீபட்ட பாட்டினை அறிகுவேன் . . . .

(காலனுக்கு உரைத்தல்)

(ஆலாலம் – விடம், ஆலாலம் உண்டவன் – விடம் உண்ட சிவபெருமான், மார்க்கண்டன் – சிவபக்தன், என்றும் பதினாறு வயதாக வாழும் வரம் பெற்றவன்)

என்று எச்சரிக்கிறார். காலனிடம் அவர் செல்ல மாட்டாராம். காலன் அவரிடம் செல்ல வேண்டுமாம்.

பாரதி, தம் பூத உடம்பு நீங்கினாலும் புகழுடம்பு நிலைத்து நிற்க விரும்பி நீண்ட புகழ் வேண்டியிருக்கிறார். அவர் கனவு நனவாகி விட்டது. இன்றும் அவர் பேசப்படுகிறாரல்லவா?

பாரதி வாழ்ந்த காலச் சூழலில் இந்தியாவில் விடுதலை வேட்கை மேலோங்கி இருந்தது. சமுதாயக் சீர் கேடுகள் மலிந்திருந்தன. இவற்றையெல்லாம் சீர்செய்ய 100 ஆண்டுகள் வாழ விண்ணப்பிக்கிறார். தம் கடமையாக அவர் கருதுவதே பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல் ஆகும் (விநாயகர் நான்மணிமாலை – 8).

செல்வத்துப் பயனே ஈதல்

(புறநானூறு – 189)

என்னும் புறநானூற்றுப் பாடல் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

அடிப்படைத் தேவை

மக்கள் யாவரும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் முதலியவை பெற்றுத் தன்னிறைவுடன் (self- sufficiency) வாழ வேண்டும் என ஆசைப்பட்டார் பாரதி. அவற்றைத் தமக்கு அருள வேண்டும் என்று பராசக்தியிடம் விண்ணப்பம் செய்வதைப் பாருங்கள்.

காணிநிலம் வேண்டும் – பராசக்தி

காணி நிலம் வேண்டும் ……………..அந்தக்

காணி நிலத்திடையே – ஓர் மாளிகை

கட்டித் தர வேண்டும்

(காணி நிலம்,1)

காதல் மகவு வளர்ந்திட வேண்டியது

வறுமை போலக் கொடியது எது? வறுமை போலக் கொடியது வறுமையே அன்றி வேறொன்றுமில்லை என்று வறுமைக்கு ஒப்பாக வறுமையையே காட்டுகிறார் வள்ளுவர் (குறள் : 1041).

தமக்கென எதுவும் வேண்டாமல், உலகிற்காக, நாட்டிற்காக, மக்களுக்காக, புல்பூண்டு போன்ற உயிர்களுக்காகப் பாடிய பாரதி தெய்வத்திடம்,

காதல் மகவு வளர்ந்திட வேண்டும் – என்

சிந்தை அறிந்தே – அருள்

செய்திட வேண்டும் என்றால் அருள் எய்திடும் .. . .

(பக்தி – 7)

என்று தம் மகள் உடல்நலம் பெற அறிக்கையிட்டு வேண்டுவதாகப் பாடல் விளங்குகிறது. ஒருமுறை அவருடைய இளைய மகள் சகுந்தலாவிற்கு உடல் நலமின்றி இருந்தபோது, அவர் மனைவி செல்லம்மாள் மருத்துவரை அழைத்து வரக் கேட்டுக் கொண்டாராம், மருத்துவச் செலவுக்குத் தம் கையில் பணமில்லாத பாரதியார் அதைத் தெரிவிக்காமல் தெய்வத்தைத் தொழுதால் போதும், அதைவிடச் சிறந்த மருந்தில்லை என்று கருதியிருக்கிறார். அன்றைய சூழ்நிலையில் அவர் பிரார்த்தனை ஒன்றையே நம்பியிருக்கிறார்.

3.5.5 சாகா வரம் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ விரும்பியிருக்கிறார் பாரதி. ஆகவே,

சாகாவரம் அருள்வாய் ராமா!

(சாகாவரம் – பல்லவி)

என்று இராமனிடம் கேட்ட அவர்,

சாவினை வேண்டேன் தவிர்ப்பாய்

(போற்றி அகவல்- அடி 23)

என்று சக்தியிடமும் வேண்டுகிறார்.

இந்த உலகம் கடவுளால் மக்களுக்காகப் படைக்கப்பட்டது. கடவுள் படைத்த இந்த அழகான உலகை பாரதி,

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் – எங்கள்

இறைவா!

(இறைவனை வேண்டுதல்)

என்று பாடியிருப்பது சாகாவரம் பெற்று இந்த உலகில் பல்லாண்டு காலம் பயனுற வாழ விரும்பியதைப் புலப்படுத்துகிறது.

3.5.6 மக்கள் சேவை பாரதியார் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று கருதினார். இந்த உலகைக் காப்பது கர்மயோகம் என்று வேதங்கள் கூறுகின்றன. பகவத் கீதையில் கண்ணனும் ‘கடமையைச் செய் பலனை எதிர் பாராதே’ என்றார். நல்ல கருமம் நல்ல பலன் தரும். இதுவே பகவத் கீதையின் சாரம். பாரதியார் இறைவனை வழிபடுவதற்குத் தொண்டு செய்தலே சிறந்த வழியென்று நம்பினார். இதன் அடிப்படையில்

கர்ம யோகம் ஒன்றே உலகில்

காக்கு மென்னும் வேதம்

(காளிஸ் தோத்திரம் – 3)

என்ற பாடலைப் பாடியிருக்கிறார் எனக் கொள்ளலாம்.

காளியிடமிருந்து பொருள் பெற்று உலகில் உள்ள துன்பங்களை, வறுமைகளை மாய்த்துவிடத் துடிக்கிறார். இது ஒரு பக்தனுக்குள்ள வைராக்கிய உணர்வைக் காட்டுகிறது. துறவியாக இருந்து மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில்லை. இல்லறத்தானாக இருந்து தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கலாம் என்று நம்பியிருக்கிறார் (விநாயகர் நான்மாணிமாலை – 10).

3.5.7 அறிவே தெய்வம் இது, அறிவைத் தெய்வமாகக் கொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பிடுவது ஆகும். பாரதி, மானிடர்கள் வணங்கும் தெய்வம் ஒன்று எனக் கருதினார். அவர்கள் வழிபடும் தெய்வங்களின் பெயர், வடிவம் வேறாக இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்று வலியுறுத்துகிறார். அந்தப் பரம்பொருள் எல்லாவற்றிற்கும் மேலானவர். எல்லா உயிர்களிலும் ஊடுருவி இருப்பவர். பரம்பொருளின் கூறுகளே உலகில் உள்ள உயிர்கள். பரம்பொருளும் உயிர்களும் வேறானவை அல்ல. இரண்டும் ஒன்று என்ற அத்வைதக் கொள்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறார். அவ்வாறு பின்பற்றினால் சமயச் சண்டை தோன்றாதல்லவா?

பல சாதி, பல சமயங்கள் உள்ள இந்திய நாட்டு மக்களை ஒன்றுபடுத்த விரும்பிய பாரதி அறிவையும் உண்மையையும் தெய்வமாக வணங்க வேண்டும் என்று வழிகாட்டுகிறார். ஆகையால்,

மாடனைக் காடனை வேடனைப் போற்றி

மயங்கு மதியிலிகாள் – எத

னூடுநின்று ஓங்கும் அறிவொன்றே தெய்வமென்று

ஓதி அறியீரோ?

(அறிவே தெய்வம் – 2)

உண்மையின் பேர்தெய்வம் என்போம்- அன்றி

ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்

(உயிர் பெற்ற தமிழர் பாட்டு – புராணங்கள்)

என்று அறிவும் உண்மையுமே தெய்வம் என்று காட்டுகிறார். இவை இரண்டையும் தெய்வமாகக் கொண்டு அன்பு வழியில் நடக்கத் தூண்டுகிறார். அறிவு இருந்தால் தெளிவு பிறக்கும். தெளிவு பிறந்தால் எல்லாவற்றையும் ஒன்றாகக் காணும் பண்பு வளரும்.

3.6 தொகுப்புரை

பாரதியாரின் தெய்வப்பாடல்கள் வழி அவர் இயற்கையை வழிபட்டதையும், ஒரே தெய்வத்தில் பல தெய்வங்களைப் பார்த்ததையும் காண முடிகிறது. எழுத்தறிவித்தல், தொழில் கல்வி போன்றவற்றைப் போற்றுவதே கலைமகள் வழிபாடு என்று காட்டுவதைக் காணலாம். அனைத்து மக்களுக்காக அவர் வேண்டியதையும் அறியலாம். எல்லாச் சமயங்களையும் ஒன்றாக அவர் எண்ணியதையும், ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்று அறிவுறுத்தியதையும் கண்டு மகிழலாம். பிறர் நலனுக்காக, நாட்டுக்காக வேண்டுவதன் மூலம் பிற கவிஞர்களிடமிருந்து தனித்து நிற்பதை உணரலாம். அறிவே தெய்வம் என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கத் தூண்டியதையும் அறிந்து கொள்ளலாம்.

பாடம் - 4

பாரதியாரின் முப்பெரும் பாடல்கள்

4.0 பாட முன்னுரை

பாரதியார், அளவிலும் உள்ளடக்கத்திலும் பெருமை வாய்ந்த மூன்று பாடல்களைப் பாடியுள்ளார். அவை

1. கண்ணன் பாட்டு

2. பாஞ்சாலி சபதம்

3. குயில் பாட்டு

என்பன. மூன்றும் மூன்று வகைக்கு உரியவை.

இக்கட்டுரை,

1. இப்பாடல்களைப் பாடுவதற்கான பின்புலம்

2. பாடல்களின் பொதுக்கருத்து,

3. பாடல்களின் உள்ளுறை

4. பாடல்களைப் படைத்த நோக்கம்

என்ற நான்கு கூறுகளை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கண்ணன்பாட்டு, பாரதியார் சமயத் தத்துவங்களைத் தாண்டிச் சென்ற நிலையையும், பாஞ்சாலி சபதம் நிகழ்காலச் சிக்கல்களை ஆழமாக ஊடுருவிப் பார்க்க ஒரு பழைய இதிகாசக் கதை மறுவார்ப்பாகப் பயன்படுத்தப் பெறும் பாங்கையும், குயில்பாட்டு, இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள அத்வைதத் தத்துவத்தை உருவகமாக விவரிக்கும் அழகையும் காட்டுகின்றன என்பதை இப்பாடம் விளக்கியுள்ளது.

4.1 புதுவையில் பாரதி

சுப்பிரமணிய பாரதியார் சென்னையை விட்டுப் புதுவைக்குச் (புதுச்சேரி) செல்ல வேண்டிய சூழல் 1908ஆம் ஆண்டு ஏற்பட்டது. 1906ஆம் ஆண்டு மே மாதத்தில் சென்னையில் தோற்றுவிக்கப்பட்ட ‘இந்தியா’ பத்திரிகையில் பாரதியாரின் கனல் தெறிக்கும் கட்டுரைகள் வெளிவந்தன. இந்தியா பத்திரிகை தமிழ் நாடெங்கும், புதுவையிலும் பரவலாகப் பலரால் படிக்கப் பெற்றுப் பாரதியாரின் புகழ் பரவியது. இந்த நிலையில், தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியரின் தடையுத்தரவை மீறிக் கூட்டம் நடத்தியதற்காக வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் 12.03.1908இல் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலிப் பகுதிகளில் கொந்தளிப்பு ஏற்பட்டது. திருநெல்வேலியில் பெரும் கலவரம் எழுந்தது குறித்து 29.03.1908 அன்று சென்னையில் நடந்த அனுதாபக் கூட்டம் ஒன்றில் பாரதியார் பேசினார்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி திரட்டும் முயற்சியில் இறங்கினார். பாரதி அந்த அனுதாபக் கூட்டத்தில்,

“திருநெல்வேலியில் நடந்த அந்தக் கலவரம் கடவுளின் செயலாகும். அது நாட்டிற்கு இறுதியில் நன்மை பயக்கவே நடந்தது. அந்தக் கலவரங்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். அவர்களுடைய பெண்டு பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் இருந்தால் அவர்கள் உதவிக்கு உரியவர்கள். எனவே அவர்களின் நிவாரண நிதிக்கு இயன்றவரை நிதி கொடுத்து உதவ வேண்டும்”

(மகாகவி பாரதி வரலாறு – சீனி.விசுவநாதன், பக்.319)

என்று பேசினார். தூத்துக்குடி, நெல்லை வழக்குத் தொடர்பாகப் பாரதியாரையும், ஆங்கிலேயரின் ஒற்றர் படை தொடர்ந்து கண்காணித்தது. அவர் பேச்சுகள் குறிப்பெடுக்கப்பட்டு மேலிடத்திற்கு அனுப்பப்பட்டன. நெல்லைக் கலவர வழக்கில் சாட்சியம் அளிக்க வழக்கு மன்றத்திலிருந்து பாரதியாருக்கு அழைப்பாணை (summon) அனுப்பப்பெற்றது. இந்தியா பத்திரிகையில் அரசுக்கெதிரான செய்திகளை வெளியிட்டதற்காகவும் அயர்லாந்து நாட்டு விடுதலை இயக்கத்தின் புரட்சி ஏடான ‘காயலிக் அமெரிக்கன்’ என்பது இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதனை இரகசியமாக வரவழைத்ததற்காகவும் பாரதியைக் கைது செய்ய முடிவு செய்தது ஆங்கில அரசு. இந்நிலையில் பாரதியின் நண்பர்கள் பாரதி அரசின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக அவரைப் புதுவைக்கு அனுப்ப எண்ணினர். (புதுவை ஆங்கில ஆதிக்க எல்லைக்கு அப்பால், பிரெஞ்சு ஆதிக்க எல்லைக்குள் இருந்தது) பாரதி தொடக்கத்தில் உடன்படவில்லை. நண்பர்களின் வற்புறுத்தலும், கோவைச் சிறையிலிருந்து வ.உ.சிதம்பரம் பிள்ளை பாரதியைப் புதுவைக்குச் செல்லுமாறு அனுப்பிய செய்தியும் பாரதியைப் புதுவைக்கு அனுப்பி வைத்தன. 1908ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் பாரதியார் புதுவையை அடைந்தார்.

பாரதியார் புதுவையில் பத்தாண்டுகள் வாழ்ந்தார். அங்கிருந்து ‘இந்தியா’ பத்திரிகையைப் பதினேழு மாதங்கள் நடத்தினார். இதோ அந்த ‘இந்தியா’ ஏட்டின் ஒரு பகுதியை நீங்கள் இங்குக் காணலாம். அரசாங்கத்தின் அடக்கு முறையால் புதுவையிலும் பாரதியாரால் ‘இந்தியா’ இதழை நடத்த முடியவில்லை. 12.03.1910ஆம் நாளோடு ‘இந்தியா’ பத்திரிகை வெளிவருவது நின்று போயிற்று.

4.1.1 பத்தாண்டுப் படைப்புகள் பாரதியார் புதுவையில் தங்கியிருந்த காலத்தில் இந்தியா, கர்மயோகி, விஜயா, சூர்யோதயம் ஆகிய பத்திரிகைகளை நடத்தினார். எனினும் பத்திரிகைகள் தொடர்ந்து வெளிவரவில்லை. பத்திரிகைகள் நின்று போன நிலையில் பாரதியின் இலக்கியப் படைப்புகள் பல வெளிவந்தன.

பாரதி புதுவையில் இருந்த காலத்திலேயே சக்திப் பாடல்கள், வேதாந்தப் பாடல்கள், சுயசரிதை, பெண் விடுதலைப் பாடல்கள், வசன கவிதைகள் ஆகியன அவரால் எழுதப்பெற்றன. இவற்றுக்கு மேலாக, பாரதியாரின் முப்பெரும் பாடல்களான கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியன புதுவையிலேயே உருவாயின.

4.1.2 உடலும் உள்ளமும் புதுவையில் இருந்த காலத்தில் பாரதியாருக்கு நிறைய எழுத வேண்டும் என்று உள்ளம் துடித்தது. எனினும் உடலும், குடும்பப் பொருளாதாரமும் அத்துடிப்பை அடக்க முனைந்தன. அந்நிலையில் அவர் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் என்ற முப்பெரும் பாடல்களைப் படைத்தார். இவற்றைப் படைக்கும் போது அவர் எவ்வாறு இருந்தார்? அவர் உடலும் உள்ளமும் எவ்வாறிருந்தன? இதோ அவரே சொல்கிறார்:

“உடல் படுத்துக் கொண்டது. உடலை வைரம் போல இலாகவம் உடையதாகவும், சிங்கத்தைப் போல வலியுடையதாகவும் செய்ய வேணும். உடனே வசப்படா விட்டால் இந்த உலகத்தில் வாழ்க்கை பெருந்துன்பந்தான். உடம்பே எழுந்து உட்காரு. உடம்பு எழுந்து விட்டது. முதுகு கூறுகிறது. அந்த வழக்கத்தைத் தொலைத்து விட வேண்டும்.

வயிறு வேதனை செய்கிறது உஷ்ண மிகுதியால். நோயற்று இருப்பதற்குச் சக்தியை ஓயாமல் வேண்டிக் கொள் . . . . மகனே, உடல் வெற்றி கொள். அது எப்பொழுதும் நீ சொன்ன படி கேட்க வேண்டும். அது சொன்னபடி நீ கேட்கலாகாது. அது மிருகம்; நீ தேவன். அது யந்திரம்; நீ யந்திரி.” (இலாகவம் – எளிமை)

உடலைப் பற்றி இவ்வாறு அவர் நிறைய எழுதியுள்ளார்; மனத்தைப் பற்றியும் அவர் எழுதுகிறார்.

“இந்த மனமாகிய கடலை வென்று விடுவேன்; பல நாளாக இதை வெல்ல முயன்று வருகிறேன். இந்த மனத்தை வெல்ல நான் படும் பாடு தேவர்களுக்குத்தான் தெரியும். இதிலே ப்ராண பயம், வியாதி பயம், தெய்வ பக்திக் குறைவு, கர்வம், மமதை, சோர்வு, முதலிய…. மிகுதிப்பட்டிருக்கின்றன. இவற்றை ஒழித்து விட வேண்டும்”.

(பாரதி – சித்தக்கடல்)

இவ்வாறு அவர் தம் உடலும் உள்ளமும் இருந்த நிலை பற்றிக் கூறுகின்றார். நோய், அச்சம், கடன்காரர் தொல்லை, வீட்டு வாடகை பாக்கி, நண்பர்கள் உற்றதுன்பம், நாட்டின் அடிமை நிலை ஆகிய இவற்றுக்கிடையே காவியங்கள் அல்லது நீண்ட பாடல்கள் தோன்றுமா? பாரதியின் உள்ளம் உடம்பை வென்றது. மெலிந்த உடலில் மெலியாத உள்ளம் வைரமாய் நின்று இயக்கியது.

விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்

வேண்டியபடி செலும்உடல் கேட்டேன்

நசையறு மனம்கேட்டேன் – நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்

தசையினைத் தீசுடினும் – சிவ

சக்தியைப் பாடும்நல் அகம்கேட்டேன்

(தோத்திரப்பாடல் – கேட்பன – 2)

என்று பாரதியார் தமக்கு வேண்டும் உடலும் உள்ளமும் பற்றிக் குறிக்கின்றார். புதுவையிலிருந்த அக்காலத்தில் துன்பங்களுக்கிடையே காவியப் படைப்புகளுக்கும், ஞானத் தேடல்களுக்கும் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கச் செய்தது தெய்வத்தின் அருளேயாகும்.

4.1.3 ஞானத்தேடல்கள் பாரதியார் புதுவையில் இருந்த காலத்தில் அவன் உள்ளம் தத்துவ ஆய்வுகளிலும், ஞானத் தேடல்களிலும் முழுகி முழுகி எழுந்தது. அரவிந்தரும், குள்ளச்சாமியும், கோவிந்தசாமியும், யாழ்ப்பாணத்து சுவாமியும், குவளைக்கண்ணனும், பாரதிதாசனும் பாரதியின் ஆழ்ந்த அறிவாராய்ச்சிகளுக்குத் துணை நின்றிருக்கின்றனர். அரவிந்தரின் துணையால் பாரதி வேத வேதாந்தக் கருத்துகளை மிக ஆழமாக எண்ணித் தம் கவிதைகளில் அவற்றிற்கு உருக்கொடுத்தார். குள்ளச்சாமி முதலான சித்தர்கள், தமிழ்நாட்டுச் சித்தர் மரபின் சித்தாந்தக் கோட்பாடுகளைப் பாரதி அறியக் காரணமாயிருந்தனர். குள்ளச்சாமியைப் பற்றிப் பாரதியார்.

முப்பாழும் கடந்தபெரு வெளியைக் கண்டான்

முக்தியெனும் வானகத்தே பரிதி யாவான்

தப்பாத சாந்தநிலை அளித்த கோமான்

தவம் நிறைந்த மாங்கொட்டைச் சாமித்தேவன்

குப்பாய ஞானத்தால் மரண மென்ற

குளிர்நீக்கி எனைக்காத்தான், குமார தேவன்

(பாரதி அறுபத்தாறு – 20)

(முப்பாழ் = ஆணவம், கன்மம், மாயை)

என்று கூறுகின்றார். பாரதிதாசன் பழக்கத்தால் பாரதி புலவர் உலகின் கேள்விக் கணைகளுக்குத் தக்க விடை கொடுக்க முடிந்தது.

நானும் அவர்க்கே எழுத்தியல் உதவுமோர்

தொண்டினால் அவர்க்கும் புலவர்க்கும் தோன்றும்

சண்டையில் வெற்றி கண்டிடச் செய்தேன்

(பாரதிதாசன் – கவிஞரும் காதலும் – வாழ்த்து)

என்று பாரதிதாசனே கூறுகின்றார். தாம் பழகிய எல்லாரிடமும் பேராற்றல் மறைந்திருப்பதாகப் பாரதியார் கருதினார். கடலில் மீன் பிடிக்கும் செம்படவனின் பாட்டு பாரதியாரின் நோக்கில் பலஆழ்ந்த பொருண்மைகளைக் கொண்டதாக அவருக்குத் தோன்றியிருக்கின்றது.

“பிரபஞ்சத்தின் அடிப்படையை அந்தச் செம்படவன் எனக்கு உபதேசம் பண்ணினான்”

- (புதுவையில் பாரதி – பக்.171 ப.கோதண்டராமன்)

என்று கூறுகிறார். சீனா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, இரஷ்யா ஆகிய நாடுகளின் இலக்கியம், வரலாறு, அரசியல், தத்துவ ஞானம் ஆகியன அவரால் அலசப்பட்டிருக்கின்றன; வேதாந்த சித்தாந்தங்கள் மிக நுணுக்கமாக ஆராயப்பட்டிருக்கின்றன. சமயங்களை ஒட்டியும் சமயங்களைத் தாண்டியும் அவர் சிந்தித்திருக்கிறார். இச்சிந்தனைச் சுவடுகளை முப்பெரும் பாடல்களில் காணலாம்.

4.2 பாஞ்சாலி சபதம்

பாடல் பின்னனி

புதுவையில் ஈசுவரன் தர்மராஜா கோயில் என்றொரு கோயில் உள்ளது. அதனை மக்கள் திரௌபதி அம்மன் கோயில் என்றே கூறுவர். அக்கோயில் பாரதியாரை ஈர்த்தது. கோயிலும், கோயிலில் உள்ள பாண்டவர் சிலைகளும் பாரதியாரின் உள்ளத்தில் உணர்ச்சிக் கொந்தளிப்பை உண்டாக்கின. பாஞ்சாலி துகில் உரியப்பட்ட காட்சி, அவையில் அவளுடைய குமுறல் ஆகியன பாரதியாரின் உள்ளத்தில் பேரலை வீச்சுகளைத் தொடர்ந்து எழுப்பின.

வியாசர் எழுதிய மகாபாரதம் ஒரு தெய்வ அவதாரத்தின் மேன்மையைக் கூறுவது. கொடியோரை ஒறுத்து (தண்டித்து) நல்லவர்களைக் காக்கத் தெய்வ அவதாரம் அவ்வப்போது தோன்றும். இந்தக் கருத்தை மெய்ப்பிக்க அந்த இதிகாசம் எழுந்தது.

அரசியல் நெறிகள், கோட்பாடுகள், அறத்தின் வலிமை, நல்லவர் அடையும் சோதனைகள், தெய்வம் அறத்தை நிலைநாட்டுவதற்கு அவதாரம் எடுத்தல், உடன்பிறந்தோர் அன்பு, செய்நன்றி அறிதல், கடமையிலிருந்து வழுவாமை போன்ற நற்பண்புகளை வியாசரின் மகாபாரதம் உணர்த்திற்று. தமிழில் எழுந்த வில்லிபாரதம் பெரும்பாலும் வியாச பாரத நோக்கங்களையே கொண்டிருந்தது.

பாரதியார் வியாச பாரதத்தையே தழுவித் தம் பாஞ்சாலி சபதத்தை படைத்ததாகக் கூறுவர். வியாச பாரதத்தில் இடம்பெறும் சூதுப்போர்ச் சருக்கத்தையே பாஞ்சாலி சபதமாகப் படைத்துள்ளார். வில்லிபாரதத்தில் 283 பாடல்களில் பேசப் பெறும் இந்நிகழ்ச்சியைப் பாரதியார் 308 பாடல்களில் பாஞ்சாலி சபதமாக்கியுள்ளார். பாரதியார் இந்த இதிகாசப் பகுதியை ஒரு தனிக் காவியமாக ஏன் பாடினார்?

பாடல் நோக்கம்

ஒரு காவியம் புனைய வேண்டுமென்ற தூண்டலை விடத் தாம் வாழும் சமூகத்திற்கு உணர்த்த வேண்டிய கருத்துகளை இயம்ப, இக்காப்பியத்தைத் தகுந்த ஓர் ஊடகமாகப் (medium) பாரதியார் படைத்தார் எனலாம். நாட்டின் அடிமை நிலை, மக்களின் கவலையற்ற போக்கு, பெண்களின் பிற்போக்குத்தன்மை ஆகியவற்றை உணர்ச்சியோடு எடுத்துக் கூறி உணர்த்துவதற்குப் பாரதக் கதை நிகழ்வு அவருக்குத் துணை செய்திருக்கின்றது.

“தமிழ் ஜாதிக்குப் புதிய வாழ்வு தர வேண்டுமென்று கங்கணம் கட்டி நிற்கும் பராசக்தியே என்னை இத்தொழிலிலே தூண்டினாள் . . . ”

(பாஞ்சாலி சபத முன்னுரை)

என்று அவரே கூறுகின்றார். ஒரு பழைய காவியத்தை மறுபடியும் புலவர் ஒருவர் பொழுதுபோக்காக மக்கள் படிக்க எளிமையாகப் படைத்துத் தந்தது என்று பாஞ்சாலி சபதத்தை எண்ண முடியவில்லை.

4.2.1 பெண்ணுரிமைக்கான போர்க்குரல் துரியோதனனின் ஏவலில் அவனுடைய தேர்ப்பாகன் திரௌபதியை அவைக்கு அழைத்துவரச் சொன்னதாகச் சொல்கிறான். திரௌபதி சீறுகின்றாள்.

. . . யார் சொன்ன வார்த்தையடா!

சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து

மாதர் வருதல் மரபோடா . . .

(பாஞ்.சபதம் – விதுரன் சொல்வது – 48)

என முழங்குகின்றாள். பாகன் மன்னனிடம் வந்து அவன் ஏவலால் மீண்டும் வந்து திரௌபதியை அழைக்கின்றான். அப்போது திரௌபதி கேட்கிறாள்;

நாயகர் தாம் தம்மைத் தோற்ற பின் – என்னை

நல்கும் உரிமை அவர்க்கில்லை – புலைத்

தாயத்திலே விலைப்பட்ட பின் – என்ன

சாத்திரத்தால் எனைத் தோற்றிட்டார்? – அவர்

தாயத்திலே விலைப்பட்டவர் – புவி

தாங்கும் துருபதன் கன்னி நான் – நிலை

சாயப் புலைத் தொண்டு சார்ந்திட்டால் – பின்பு

தாரமுடைமை அவர்க்குண்டோ?

(பாஞ்.சபதம். – திரௌபதி சொல்லுதல் – 52)

இந்தத் தருக்கம் பாரதியின் சொற்களில் மிக வலிவாக வெளிப்பட்டுள்ளதல்லவா? இங்கே தான் பாரதி பறக்கவிடும் பெண்ணுரிமைக் கொடி தன் முழுப் பொலிவையும் காட்டி நம்மை ஈர்க்கின்றது.

1. அடிமைகளுக்கு என்னைத் தோற்கும் உரிமை இல்லை,

2. தகுதியற்ற தொழிலில் ஈடுபடுவோர்க்கு நான் மனைவி ஆகமாட்டேன்

இந்த இரண்டு உரிமைப் பட்டயங்களைத் திரௌபதி உயர்த்திப் பிடிக்கிறாள். புதிய பெண்ணுலகம் உரிமைகளை மீட்டுக் கொள்ளும் போராட்டத்தில் இவை இடம் பெறுகின்றன என்பது கருதத்தக்கது.

பாஞ்சாலியைத் தெய்வமாக எண்ணுவதற்குக் களம் அமைத்தது மகாபாரதம். ஆனால் பாரதி கண்ட பாஞ்சாலி தெய்வம் அல்லள்; மானிடப் பெண்; ஆனால் புதுமைப்பெண். கொடுமை கண்டவிடத்துச் சீறிச் சினந்து போராடும் துணிவு பெண்ணுக்கு வேண்டும் என்று காட்டும் புரட்சிப்பெண்ணாக அவள் விளங்குகின்றாள்.

4.2.2 விடுதலை நோக்கு பாஞ்சாலி சபதம் ஓர் உள்ளுறைக் கருத்துப் பொதிந்த பாடல் என்பது அறிஞர் பலர் கருத்தாகும். என்ன உள்ளுறை? பாஞ்சாலி என்பவள் உண்மையில் பாரததேவியே என்பது அவர்கள் கருத்தாகும். அடிமைப்பட்டுப் பழம் பெருமைகள் குலைந்து புகழ்குன்றி நின்ற பாரத நாட்டை மக்கள் முன் உருவகப்படுத்தப் பாரதிக்குப் பாஞ்சாலியே மிகப் பொருத்தமானவளாகப் புலப்பட்டிருக்கிறாள்.

போச்சுது போச்சுது பாரத நாடு!

போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்!

ஆச்சரியக் கொடுங்கோலங்கள் காண்போம்!

ஐயஇதனைத் தடுத்தல் அரிதோ!

(பாஞ். சபதம்:சபா நிர்மாணம் – 113)

என்று விதுரன் கூறும் மொழிகள் பாரதத்தின் அடிமை நிலையை உள்ளுறையாகப் பொதிந்து கூறுவதே எனக் கருதலாம். இதனைவிடத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இக்காப்பியம் நிகழ்கால உணர்வோடு எழுதப்பட்டது என்பதற்கும் விடுதலை நோக்கு இதன் குறிக்கோள் என்பதற்கும் உரிய ஓர் எடுத்துக்காட்டைக் காணலாம்.

“அன்னை பாஞ்சாலி – பாண்டவர்களின் காதலி – துரியோதனனால், அவமதிக்கப்பட்ட பொழுது, பெண்ணாக மட்டுமல்ல, அடிமைத்தனத்தில் அவமதிக்கப்படும் நமது பாரத தேவியைப் போலவே காணப்படுகிறாள். இறுதியில் அவளது பெண்மை வெற்றி கொண்ட வேகத்தில் – சபதம் செய்யும் பொழுது, – பராசக்தியின் ஸ்வரூபமாகிறாள். இக்காவியப் பகுதியை பொறுக்கியெடுத்ததிலேயே, பாரதியின் ரசிகத்தன்மையும், நுட்பமான ஆராய்ச்சி சக்தியும் நன்கு வெளியாகிறதல்லவா? தன் கொள்கைக்கேற்ற ஒரு கதையை எடுத்துப் பட்டை தீட்டிப் புது வைரமாக்கியிருக்கிறார்”.

(புதுவையில் பாரதி – சம்பந்தம், பக்.109)

என்று கூறுவது எண்ணத்தக்கது. இதனை எழுதி முடிக்கின்ற வரை பாரதியார் உணர்ச்சிக் கடலாக, அமைதியற்று இருந்தார் எனக் கூறப் பெறுகின்றார். நிகழ் காலத் துன்பங்களை எண்ணாத நிலையில் இத்தகைய உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு இடமில்லை.

பாரத நாடு பாருக்கெலாம் திலகம்; நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர் என்று பாடிய பாரதி, பாஞ்சாலி சபதத்தில் தருமன் சூதாட்டத்தில் நாட்டைத் தோற்ற போது,

ஆயிரங்களான நீதி அவை உணர்ந்த தருமன்

தேயம் வைத்திழந்தான்; சிச்சீ சிறியர் செய்கை செய்தான்!

(பாஞ்.சபதம்: சூது மீண்டும் தொடங்குதல்15)

என்று கூறக் காண்கிறோம். முன் நூல்களில் இல்லாத இந்தச் சினக்குரல், பாரதிக்கு நிகழ்கால நாட்டு நிலையால் உண்டானது எனக் கருத வேண்டும்.

4.2.3 சக்தியின் எழுச்சி பாரதி சக்தி வழிபாட்டை மேற்கொண்டவர். காளி, மாரி, சாமுண்டி, பைரவி, உமை, பராசக்தி எனச் சக்தியின் பல வடிவங்களையும் அவர் பாடுகின்றார். ஆனால் மற்ற சக்தி வழிபாட்டுக்காரர்களைப் போலக் குறிப்பிட்ட சில உருவங்களுக்கும், வடிவங்களுக்கும் உரியதாக வைத்துச் சக்தியைத் ‘தோத்திரப் பாட்டுப்’ பாடுகின்ற அளவில் அவர் நின்றுவிடவில்லை. சக்தியைக் குறித்த சிந்தனையில் ஒரு புதிய பரிமாணத்தைப் புலப்படுத்துகின்றார். சக்தி கோயில்களில் உறையும் ஒரு பொம்மைத் தெய்வமாக அவருக்குத் தோன்றவில்லை. மாறாக உலகமெங்கும் தோன்றும் அறக்கேடுகளை மாற்றுகின்ற பேராற்றலாக அவருக்குத் தோன்றுகின்றது. அந்த நிலையிலே தான்,

மாகாளி பராசக்தி உருசிய நாட்

டினிற் கடைக்கண் வைத்தாள். அங்கே

ஆகா என் றெழுந்ததுபார் யுகப்புரட்சி.

(புதிய ருஷ்யா – 1)

என்று பாடுகின்றார். அதே நிலையில் பாஞ்சாலியை அவர் பாரத சக்தியாகக் காண்கின்றார். சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே என்று பாடிய பாரதி, பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலியைச் சுதந்திரத்திற்கு அவாவும் பாரத தேவியாகவே காண்கிறார். பாரத நாட்டில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் சக்தியின் வடிவமாகத் திகழ்வதைக் காணும் பாரதியார், அவர்களின் விடுதலைக் குரல் எழுப்புகின்றவளாகப் பாஞ்சாலியைக் காண்கின்றார்.

இப்பொழுதை நூல்களினை எண்ணுங்கால், ஆடவருக்கு

ஒப்பில்லை மாதர்; ஒருவன் தன் தாரத்தை

விற்றிடலாம்; தானமென வேற்றவர்க்குத் தந்திடலாம்

முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை.

(பாஞ்.சபதம் – வீட்டுமா சாரியன் சொல்வது – 64)

என்று அறிஞனாகத் திகழ்கின்ற பீஷ்மர் சொல்கின்றார். இதற்குப் பாஞ்சாலி ‘பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்று மறுமொழி கூறுகின்றாள். பாரதிக்கு முன்பு பாரதக் கதையை எழுதியவர்கள் திரௌபதியைப் பாண்டவரின் மனைவியாகக் கண்டனர்; பாரதப் பண்பாட்டின் உருவமாகச் சித்திரித்தனர்; கொடியவர்களின் சூழ்ச்சியால் அவமானத்திற்குள்ளாகி இறைவனால் காப்பாற்றப்பட்ட இரக்கத்திற்குரிய பெண்ணாகக்காட்டினர். பாரதி அவர்களிலிருந்து வேறுபட்டுப் பாஞ்சாலியை அன்னையாகக் கண்டார். நாணம் முதலிய பாரம்பரியப் பண்புகளோடு அமைதியாக வீட்டிலிருந்து மனையறம் செய்யும் பெண், தீமை கண்டால் விலகிப் போகாமல் எதிர்க்கவும், கயமையைக் கண்டு கொந்தளித்து எழும்சக்தியாக உருக்கொள்ளவும் வேண்டுமென்பதைப் பாஞ்சாலி உணர்த்தும் வகையில் பாரதி அவளைப் படைத்தார்.

துச்சாதனன் எழுந்தே – அன்னை

துகிலினை மன்றிடை உரிதலுற்றான்

(பாஞ். சபதம், திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை – 88)

என்று கூறுவதில் உள்ள நுட்பம் காண்பதற்குரியது. பேராசிரியர் வ.சுப.மாணிக்கம்

“திரௌபதி துகில் என்னாது அன்னை துகில் என்று

சொல்லுங்கால், தாயின் துகிலை உரிந்தவன் கொடுமை

சட்டெனப் பதிவதோடு, சின உணர்ச்சியும் தோன்றி

விடுகின்றது”

என்று கூறுகின்றார். பேயனான துச்சாதனன் தாயின் துகிலினை உரிகின்றான். பீஷ்மர், துரோணர் போன்ற அறவோரெல்லாம் பார்த்திருக்கின்றனர்; துரியோதனன் வெறியோடு களித்திருக்கின்றான்; அந்நிலையில் பாஞ்சாலி நிலை யாது?

பிச்சேறியவனைப் போல் – அந்தப்

பேயனும் துகிலினை உரிகையிலே

உட்சோதியிற் கலந்தாள்; அன்னை

உலகத்தை மறந்தாள்; ஒருமையுற்றாள்.

(பாஞ். சபதம், திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை – 88)

என்று கூறுகின்றார் பாரதியார். இந்த நிலையில் அவள் பெண்மை தெய்வத்தால் காப்பாற்றப் பெறுகின்றது. மானுடப் பெண்களெல்லாம் சக்தியின் வடிவமென்பது பாரதியின் கொள்கை. ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை நல் அருளினால் ஒரு கன்னிகை ஆகியே, தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள் (‘புதுமைப்பெண்’ 10) என்று கூறுமாறு பாரதி பாஞ்சாலியை உருவாக்கியுள்ளார்.

4.3 கண்ணன் பாட்டு

பாரதி சக்தியின் பல வடிங்களைப் பாடியவர் என்பதை முன்னரே கண்டோம். சக்தியை மட்டுமன்றி, பிள்ளையார், முருகன், வள்ளி, கலைமகள், திருமகள், ஞாயிறு, நிலவு, அக்கினி, ஆகிய தெய்வங்களைப் பாடுவதோடு தோத்திரப் பாடல்கள் அல்லது தெய்வப்பாடல்களில் கண்ணனையும் பாடுகின்றார். தெய்வப் பாடல்களிலேயே பாரதியார் கண்ணனைக் கண்ணம்மா ஆக்கியிருக்கிறார். இவற்றைத் தவிரக் ‘கண்ணன் பாட்டு’ என்ற தலைப்பில் இருபத்து மூன்று தலைப்புகளில் கண்ணனைப் பல கோணங்களில் புனைந்து எழுதியுள்ளார். தோழன், தாய், தந்தை, சேவகன், அரசன், சீடன், சற்குரு, குழந்தை, விளையாட்டுப்பிள்ளை, காதலன், காதலி, ஆண்டாள், குல தெய்வம் எனப் பல்வேறு உறவு நிலைகளில் பாரதியார் கண்ணனை இப்பாடல்களில் வைத்து எண்ணுகின்றார்.

மகாபாரதம், பாகவதம் ஆகிய இரு நூல்கள் கண்ணனின் அழகு, இளமை, அறிவு, ஆண்மை, அரசியல் தந்திரம், ஆட்சித்திறம், எல்லாவற்றுக்கும் மேலான தெய்வப் பேராற்றல் ஆகியவற்றைப் புனைகின்றன. மகாபாரதத்தின் பகுதியாகிய ‘பகவத் கீதை’யில் கண்ணனை அத்வைத வேதாந்தத்தின் சிகரமாகக் காண்கிறோம். தமிழில் தோன்றிய சிலப்பதிகாரம் காட்டும் ‘ஆய்ச்சியர் குரவை’, ஆழ்வார்களின் பாசுரங்கள் ஆகியன கண்ணனைப் போற்றுகின்றன. பகவத் கீதையில் அருச்சுனன் “மகனுக்குத் தந்தையாகவும், தோழனுக்குத் தோழனாகவும், காதலிக்குக் காதலனாகவும் அருள் செய்க” என்று கண்ணனை வேண்டுகிறான்.

நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்ப்

பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்

(கண்ணன் பாட்டு – 4)

விளங்குகிறான் கண்ணன் எனப் பாரதியார் கூறுவது அவர் பகவத் கீதையின் தாக்கத்தைப் பெற்றிருந்தார் எனக்காட்டும். ஆழ்வார்கள் வைணவ சித்தாந்தங்களுடன் பக்தி உணர்ச்சியோடும் கண்ணனை அணுகியிருக்கின்றனர். பாரதி இந்த எல்லைகளைத் தாண்டி மிக உரிமையோடு கண்ணனை அணுகுகின்றார்.

4.3.1 பாரதி நோக்கில் கண்ணன் பாரதி கண்ணனைத் திருமாலின் ஓர் அவதாரமாகக் கண்டு, அந்த அவதாரத்தின் செயற்கரிய செயல்கள் புரிந்த வித்தகத்தைப் (திறமையை) போற்றி வழிபடும் தோத்திரப் பாடல்களுக்கு உரிய கருப்பொருளாகக் காணவில்லை. மனிதர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களின் தேவைகளை நிறைவேற்றுகின்றவனாகவும், மனிதர்களுக்கு மிக நெருங்கிய உறவினனாகவும் பாரதி கண்ணனைக் காண்கிறார். அவருடைய இந்த அணுகு முறை குறித்து,

‘இறைவனைப் பாடுதல் இரண்டு வகை. ஒன்று உலகியல் வட்டத்திலிருந்து பாடுதல், பிறிதொன்று இறை வட்டத்திலிருந்து பாடுதல்’ என்கிறார் பி.ஸ்ரீ. பாரதி. உலகியல் வட்டத்திலிருந்து கண்ணன் பாடல்களைப் பாடுகிறார் என்பது தெளிவு. மீராபாய், ஆழ்வார்கள் போல் பாரதி பக்தி மயமாக மட்டும் வாழ்ந்தவரல்லர். தன் இறைப்பற்றின் வெளிப்படலாகப் பல பக்திப் பாடல்களைப் பாடுகிறார். என்றாலும் அவர் வறுமை, அறியாமை, நோய், பிணி ஆகிய சமுதாயத் தீமைகளை நீக்கும் ஆசையும், தேசவிடுதலை, பெண்விடுதலை போன்ற சமுதாயக் கடமைகளும் நிறைந்தவர். அவர் பாடிய கண்ணன் பாடல்களிலும் இச் சமுதாய உணர்வுதான் மேலோங்கிச் சிறக்கிறது”

(கண்ணன் பாட்டு – மா.செண்பகம் பக்.15)

என்று கூறுவது கருதத்தக்கது. கண்ணனை வைணவ சமயவழியாக அணுகும் அணுகுமுறை பாரதியிடம் இல்லை. இதனைப் பக்தி இலக்கியத்தின் ஒரு வளர்ச்சி என்றும், இறைவனைக் கோயிலிலிருந்து வீட்டுக்கே கொண்டு போய்விடும் நோக்கு எனவும் கூறலாம்.

4.3.2 பக்தி இலக்கியத்தில் ஒரு பரிணாமம் பக்தி இலக்கியத்தில் மூன்றுவகைக் கோட்பாடுகளை இலக்கியங்களின் வழியாக நாம் காணலாம். அவையாவன:

1.இறைவனைப் போற்றும் மந்திரங்கள், (108, 1008 போன்றவை) போற்றிப் பாடல்கள் வழியாகத் தொழுது போற்றுதல்.

2.இறைவனை ஆண்டவனாகவும், பிறவிப்பிணி நீக்குபவனாகவும் கருதி வீட்டுலகம் வேண்டும் பாடல்களைப் பாடுதல்.

3.இறைவனை நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் வைத்து, பக்தியில்காதற்சுவையைக் குழைத்து என்னை ஏற்றுக் கொள் என வேண்டுதல்.

தமிழ் இலக்கிய வரலாற்றின் இருபது நூற்றாண்டு இலக்கியங்களில் மேற்கூறிய மூன்று தன்மைகளே காணப்பெறுகின்றன. பாரதி இந்த மூன்றையும் கடந்து, கடவுளை இன்னும் நெருக்கமான முறையில் நோக்குகின்றார். இந்த உரிமையைப் பாரதியாருக்கு யார் கொடுத்தது? நாட்டின், சமூகத்தின் கதியற்ற நிலை, பிணி தீர்ப்பதற்குரிய நெருக்கமான ஆள் இல்லாத சூழல் ஆகியன பாரதியாருக்கு இந்த நோக்கு நிலையை (உரிமையை) வழங்கியிருக்கிறது. மேலும் முன்னை இலக்கியங்களில் இந்த உரிமை மனப்பாங்கு ஆங்காங்கு இல்லாமல் இல்லை. முருகனை கடவுள் ஆயினும் ஆக, மடவை மன்ற வாழிய முருகே’ (முருகனே வாழ்க! நீ திண்ணமாக அறியாமை உடையவன்) என்று நற்றிணையில்(34, அடி 11) கூறுவதையும், இடைக்காலத்தில் இறைவனைப் பழிப்பதுபோல் புகழும் நெறியில் புலவர்கள் பாடிய (நிந்தாஸ்துதி) பாடல்களையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். எனினும் பாரதியே இதனை முழுப் பரிமாணங்களோடு விரிவுபடுத்தியவர் என்பதைக் கண்ணன் பாட்டுக் காட்டுகின்றது. பாரதியார் பாடியுள்ள தெய்வப்பாடல்களில், கண்ணன் பாட்டிலேயே இந்தப் பரிணாமம் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

4.3.3 சொல்லும் பொருளும் கண்ணன் பாட்டின் சொற்கள் எளிமை உடையவை; ஆனால் ஆழமான பொருள் உடையவை. மழைக்குக்குடை; பசிநேரத்து உணவு என்றன் வாழ்வினுக்கு எங்கள் கண்ணன் என்கிறார் பாரதியார். வழிபடுபொருளாக இல்லாமல் கடவுளைப் பயன்படு பொருளாகப் பாரதியார் மாற்றுகின்றார். உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எங்கள் கண்ணன் என்று நம்மாழ்வார் கூறியதை இங்கு நாம் ஒப்பு நோக்கலாம். ஆனால் பக்தி இலக்கியப் பாரம்பரியம் கூறமுடியாத, வகையில்.

நாலு குலங்கள் அமைத்தான்; – அதை

நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்

சீலம் அறிவு கருமம் – இவை

சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்

(கண்ணன் என் தந்தை – 8)

என்று கண்ணனின் குலப்பகுப்பைக் கூறுவதைக் காணலாம். சேவகனாக வரும் கண்ணன்

மாடுகன்று மேய்த்திடுவேன்; மக்களை நான் காத்திடுவேன்

வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;

சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்

(கண்ணன் என் சேவகன் – 4)

என்று கூறுமளவு இறங்கி வரக் காண்கிறோம். சங்கு சக்கரங்கள் ஏந்திய திருமாலின் அவதாரத்தின் கையில் ‘வீடுபெருக்கி’ வைக்கும் துடைப்பத்தைக் கொடுத்துத் தமக்குச் சேவகனாக்கிக் கொள்ளும் உரிமை பாரதிக்கே வாய்த்திருக்கின்றது.

கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்

(கண்ணன் என் சேவகன் – 4)

என்று கூறுகிறார். இங்குத் தெய்வம் ஆட்கொள்வது போய் தெய்வத்தை இவர் ஆட்கொள்வது தொடங்கிவிட்டது. என்ன இது! கண்ணனை வேலைக்காரனாக்கி ஆட்கொண்டதாகப் பாரதி கூறி விட்டாரே! அவதாரப் பெருமையே போய்விட்டதே என்று யாரும் துயருறத் தேவையில்லை. இதோ! கண்ணனைக் குழந்தையாக்கித் தோளிலே ஏற்றிக் கொள்கிறார். மரபு வழியிலான பிள்ளைத் தமிழ் நூற் பகுதிகளைக் ‘கண்ணம்மா என் குழந்தை’

வென்று விடுகிறது.

ஓடி வருகையிலே – கண்ணம்மா

உள்ளங் குளிருதடீ!

ஆடித்திரிதல் கண்டால் – உன்னைப்போய்

ஆவி தழுவுதடீ!

(கண்ணம்மா என் குழந்தை – 8)

குழந்தை விழுந்துவிடுமோ என்ற கவலையிலும் பதைப்பிலும், உடல்போய்த் தழுவ முடியாத விரைவில் ஆவி தழுவுவதாகக் கூறுவதில்தான் எவ்வளவு உண்மை இருக்கிறது!

பக்தி இலக்கிய உலகில் இறைவனைக் காதலனாகவும் அன்பர்கள் தம்மைக் காதலியாகவும் எண்ணுவதே பெரும்பான்மை மரபு. தாகூர் கீதாஞ்சலியில் ஓரிடத்தில் இறைவனைக் காதலியாகவும் புனைந்துள்ளார். பாரதி இறைவனைக் காதலனாகவும் காதலியாகவும் பாடியுள்ளார். சுத்தானந்த பாரதியார்.

“காதலனும் காதலியுமாக மாறி மாறி ஆண் பெண் இரண்டு இன்பமும் அனுபவிக்கிறார். இது ஒரு புத்தம் புதுமையான மதுரபாவனை. சைதன்யர் பரம ஹம்ஸாதிகள் தம்மை ராதையாகவே பாவித்து நாயகியாகவே காதல் செய்தனர். பாரதியார் கண்ணனைத் தம் சொந்தக் காதலியாகவே எண்ணுகிறார்”

(பாரதி விளக்கம்)

(சைதன்யர் – கிருஷ்ண சைதன்யர் ஒரு கிருஷ்ண பக்தர், பரம ஹம்ஸாதிகள் – இராம கிருஷ்ண பரம ஹம்ஸர் முதலானோர்)

என்று கூறுகிறார். கண்ணம்மா என் காதலியில்,

சுட்டும் விழிச்சுடர் தான் – கண்ணம்மா

சூரிய சந்திரரோ?

வட்டக் கரிய விழி கண்ணம்மா

வானக் கருமை கொல்லோ

பட்டுக் கருநீலப் – புடவை

பதித்த நல் வயிரம்

நட்ட நடுநிசியில் – தெரியும்

நட்சத்திரங்க ளடீ!

(கண்ணம்மா என் காதலி: 16)

என்று பாடும் பாடலில் கண்ணன் பெண்ணுருக் கொண்டு இயற்கையையே தன் உடலாகவும் உறுப்புகளாகவும் கொண்டு தோன்றுவதை மாறாத காதலன்போடு பேசுகின்றார்.

பாயும் ஒளி நீ எனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;

தோயும் மது நீ எனக்குக் தும்பியடி நானுனக்கு;

வாயுரைக்க வருகுதில்லை வாழி நின்றன் மேன்மையெல்லாம்;

தூய சுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!

(கண்ணம்மா என் காதலி: 21)

(சூறை- சுழற்காற்று)

எனக் கண்ணம்மாவுக்கும் தமக்குமுள்ள நீங்காத, நீக்க முடியாத தொடர்புகளை அழகாகக் கூறுகின்றார். தமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு பல பிறவிகளாகத் தொடர்வது என்கிறார்.

நேற்று முன்னாளில் வந்த உறவன்றடீ! மிக

நெடும்பண்டைக் காலமுதல் நேர்ந்து வந்ததாம்;

போற்றும் இராமனென முன்புஉதித்தனை – அங்கு

பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்

ஊற்றமு தென்னஒரு வேய்ங்குழல் கொண்டோன் – கண்ணன்

உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்குநான்.

(கண்ணம்மா என் காதலி: 4)

இவற்றோடு அத்தொடர்பு விடவில்லை. முன்பு நான் இரணியன் – நீ நரசிங்கன்; முன்பு நான் யசோதை – நீ புத்தன். என்றும் கூறுகிறார். உயிர், இறை ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு காலங்களை எல்லாம் கடந்து தொடர்ந்து வருவதென்பதை இதனைப் போல வேறு எந்த இலக்கியமும் கூறவில்லை. இரணியனாகத் தன்னை உருவகித்துக் கொள்வதில்தான் புதுமை இருக்கிறது. இரணியனும் இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றவனே. ஆட்கொள்ளப்பெற்ற முறையே வேறு. இந்த உண்மையைப் பாரதியின் பாட்டு மிகத் தெளிவாக விளக்குகின்றது.

4.4 குயில்பாட்டு

பாரதி 1921 இல் அமரர் ஆனார். அவரது ‘குயில் பாட்டு’ 1923இல் அச்சேறியது. இந்தப் பாட்டுக்குப் பாரதியார் தந்த தலைப்புக் ‘குயில்’ என்பதே. பாரதியாரின் ‘குயில்’ கையெழுத்துப் படியில் ‘இது எழுதப்பட்ட காலம் 1914 அல்லது 1915’ என்று குறிக்கப்பட்டிருப்பதாகச் சீனி.விசுவநாதன் குறிக்கின்றார்.

(மகாகவி பாரதி – சில புதிய உண்மைகள் பக்.129)

புதுவையில் முத்தியாலுப்பேட்டை என்றொரு பகுதி நகரின் மேற்கே உள்ளது. அங்கு கிருஷ்ணசாமிசெட்டியார் என்பவருக்கு ஒரு தோப்பு இருந்தது. மரங்கள் அடர்ந்து செழித்த அங்கு இயற்கையின் முழு எழில் கோலமிட்டிருந்தது. அந்தத் தோப்பிற்குச் சென்ற பாரதியார் அதன் இயற்கை அழகில் மயங்கினார்; அங்குத் தொடர்ந்து குயில் கூவுவதைக் கேட்டார். குயில் பாட்டு உடனே பாரதியாரிடம் தோன்றி விட்டது. புதுவையில் அவரோடு இருந்த வ.ரா.என்று பெயர் பெற்ற வ.ராமசாமி ஐயங்கார் கூறுகின்றார்;

“முத்தையாலுப்பேட்டை கிருஷ்ணசாமி செட்டியாரின் தோட்டத்திலே நோக்கி நோக்கிக் களியாட்டம் ஆடுவார் பாரதியார். அவருடைய ஆனந்தம் வர்ஷ தாரையாகப் பெருக்கடையும். உன்மத்தனைப் போலச் சில சமயங்களில் அவர் ஆகி விடுவார்….குரலிலே ஸரிக-க-காமா; காலிலே தாளம்; கைகள் கொட்டி முழங்கும். உடல் முழுதும் அபிநயந்தான் … குழந்தை பிறந்தவுடன் சோர்ந்து நித்திரையில் ஆழ்ந்துவிடும் தாய்மார்களைப் போல, கவிதை பிறந்தவுடன் பாரதியார் சோர்ந்து போய் மண் தரையில் படுத்துக் கொள்வார்”

- (மகாகவி பாரதியார், பக்.87)

இவ்வாறு தான் குயில்பாட்டுத் தோன்றியது. இது பட்டப் பகலில் பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டைக் கனவின் விளைச்சல். “உண்மையிலேயே இது ஒரு கனவு; மதுமயக்கத்தில் உண்டாகும் மிகைப் பேச்சுப் போல, கவிக்கு அருள் வந்த வேளையில் மெய்மறந்து கொட்டிய கற்பனை” என்கிறார் கு.ப.ராஜகோபாலன் ( கண்ணன் என் கவி.பக்.35)

4.4.1 குயிலின் கதை குயில் பாட்டின் கதை விந்தையானது. புதுவை நகரின் மேற்கில் ஒரு மாஞ்சோலை. அங்கு வேடர் வாராத ஒரு நாளில் விந்தைக் குயிலொன்று பாடியது.

காதல் காதல் காதல்

காதல் போயின் காதல் போயின்

சாதல் சாதல் சாதல்

(குயிலின் பாட்டு – 1)

என்று துள்ளும் இன்ப வெறியும் துயரும் கலந்த குரலில் குயில் பாடியதைக் கவிஞன் கேட்டான். குயிலே! உன் துயரம் யாது என்று அதனிடம் வினவினான். நான் மனிதர்களின் மொழியெல்லாம் அறியும் பேறு பெற்றேன்; பாட்டில் நெஞ்சைப் பறி கொடுத்தேன்; இப்போது காதலை வேண்டிக் கரைகின்றேன் என்றது அந்தப் பெண் குயில். கவிஞனுக்குக் குயிலின் மீது அடங்காக் காதல் பிறந்து விட்டது. அந்த நேரத்தில் மற்ற பறவைகளெல்லாம் சோலைக்கு வந்துவிட்டன. காதலுக்குரிய தனிமை போய்விட்ட சூழலில் குயில் கவிஞரை நான்காம் நாள் அவ்விடத்திற்கு மறவாமல் வந்து விடக்கூறி மறைந்து விடுகிறது.

கவிஞனின் காதல் மனம் உறங்கவில்லை; காதலியைப் பிரிந்த துயர் வருத்த மறுநாளே சோலைக்குச் செல்கின்றான். அங்குக் குயில் ஒரு குரங்கோடு காதல்மொழி பேசிக் கொண்டிருந்தது. நீசக் கருங்குயில் நெருப்புச் சுவைக் குரலில் “காதல் காதல் காதல்”, என்ற முன்னாள் இசைத்த அதே பாட்டைப் பாடிக் குரங்கின் அழகைப் பாராட்டிக் கொண்டிருந்தது. கவிஞன் வாளை உருவிக் குரங்கின மீது வீச, குரங்கு தாவி ஒளிந்தது. குயிலும் பிற பறவைகளும் மறைந்தன.

இரவு முழுவதும் துயில் கொள்ளாமல் இருந்து மூன்றாம் நாட் காலையில் கவிஞன் சோலைக்குச் சென்றான். அப்போது குயில் கிழக் காளை மாடு ஒன்றோடு காதல் மொழி பேசிக்கரைந்து கொண்டிருந்தது. ‘காதல் காதல் காதல்’ என்ற அதே பாட்டில் சோலை முழுவதையும் குயில் சொக்க வைத்துக் கொண்டிருந்தது. கவிஞன் சினம் பெருக வாளை உருவிக் காளையின் மீது வீச, காளை ஓடிவிடக் குயிலும் மற்றைப் பறவைகளும் மறைந்தன.

நான்காம் நாள் கவிஞன், சோலையிலே குயிலைச் சந்தித்து அதன் வஞ்சகப் பொய்ம்மையை எடுத்துரைக்கின்றான். குயில் கண்ணில் நீர் சிந்தத் தன் முற்பிறவிக் கதையைக் கூறுகின்றது. “சேரநாட்டின் மலைச் சாரலில் பிறந்த சின்னக்குயிலி என்பாள், தன் மாமன் மகன் மாடன் என்பவனையும் தனக்காக மணம் நிச்சயிக்கப்பட்ட நெட்டைக் குரங்கன் என்பவனையும் புறக்கணித்து விட்டு மலைச்சாரலுக்கு வரும் சேர இளவரசன்பால் மையல் கொள்கிறாள். மாடனும் குரங்கனும் சேர இளவலை வெட்டி வீழ்த்துகின்றனர். மறுபிறப்பில் சந்திப்பதாகக் கூறி இளவரசன் விழி மூடுகின்றான். மறு பிறப்பிலும் காதலர் சேர முடியாதவாறு மாடனும் குரங்கனும் இடையூறு செய்கின்றனர். குயிலியைக் குயிலாக மாற்றி விடுகின்றனர்”. இந்தக் கதையைப் பொதிகை மலை முனிவர் குயிலிடம் கூறி விட்டு அதன் சாபம் தொண்டை நாட்டு மாஞ் சோலையில் தீருமென்றும் கூறுகிறார்.

கவிஞன் குயிலின் பழம்பிறப்பையும் மாடன் குரங்கனின் மாமாயச் செயல்களையும் உணர்ந்து தெளிகிறான். குயிலை முத்தமிடுகிறான். குயில் மறைந்து அங்கே கொள்ளை வனப்புடைய பெண் நிற்கிறாள். அப்பெண்ணைத் தழுவி முத்தமிட்டு மோகப் பெருமயக்கில் ஆழ்ந்திருக்கும் போது, பெண், சோலை ஆகிய எல்லாம் மறைந்து விடக் கவிஞன் சுவடி, எழுதுகோல், பத்திரிகை, பழம்பாய் ஆகியவை சூழ்ந்த தன் வீட்டில் இருப்பதைக் கண்டான்.

4.4.2 உள்ளுறையும் தத்துவமும் குயிலின் கதை முடிந்த பிறகு குயில் பாட்டின் இறுதியில் கவிஞர் மூன்று அடிகளில் ஒரு வினாவை எழுப்புகின்றார்.

ஆன்ற தமிழ்ப் புலவீர்! கற்பனையே ஆனாலும்

வேதாந்தமாக விரித்துப் பொருள் உரைக்க

யாதானும் சற்றே இடமிருந்தாற் கூறீரோ!

(குயில் பாட்டு, இறுதி அடிகள்)

இவ்வினாவே இப்பாட்டு ஓர் உள்ளுறை உடையது என்பதைக் காட்டி விடுகிறது. எனவே இப்பாட்டு வேதாந்த உள்ளுறை உடையது என்று கருதினர் சிலர்; வேறு சிலர் இதில் சித்தாந்த உள்ளுறை அமைந்திருப்பதாகக் கூறினர். எவ்வாறாயினும், குயில், மாடு, குரங்கு என்பவற்றைக் குறியீடுகளாகக் கருதும் நிலையில் இப்பாட்டு ஒரு தத்துவ உள்ளுறை உடையதே என்பது புலப்படும்.

குயில்பாட்டு வேதாந்தக் குறியீடுகள்

குயில்                                இறைவன்

குரங்கு, மாடு                   மாயை

வாள்                              அறிவு (ஞானம்)

வேதாந்த நெறிப்படி இறைவனும் உயிரும் வேறு வேறு அல்ல. இரண்டையும் வேறு வேறாகக் காட்டுவது மாயையின் செயல். இந்த மாயை பக்தி, ஞான, கர்மயோகங்களால் விலகும். இதன்படி நோக்கக் குயில் நாத வடிவான இறைவனின் குறியீடு என்பது விளங்கும். கவிஞன் பாட்டின் பொருண்மை எனில், குயில் அப்பாட்டின் நாதம். இரண்டும் ஒன்றுபடத் தடையாயிருப்பது மாயை. மாயை மாடாகவும் குரங்காகவும் வந்து பொய்த் தோற்றங்களைப் படைக்கின்றது. அறிவு என்ற வாளின் வீச்சிலே பொய்த் தோற்றம் கலைகிறது.

எத்தனை கோடி படை கொண்டு வந்தாலும்

மாயையே – நீ

சித்தம் தெளிவெனும் தீயின்முன்

நிற்பாயோ – மாயையே

(மாயையைப் பழித்தல் – 1)

என்று பாரதி தெய்வப் பாடல்களில் மாயை குறித்துப் பாடியுள்ளார். மாயை வகுத்தளிக்கும் பொய்க்காட்சி, புலனின்பம் ஆகியவற்றைத் தாண்டி உயிர் இறைவனைச் சேர்தலை இப்பாட்டு விளக்குவதாக அறிஞர் கருதுவர்.

குயில்பாட்டின் தத்துவ உள்ளுறை

குயில்                                 சீவான்மா (உயிர்) (Soul)

கவிஞன்                          பரமாத்மா (கடவுள்) (God)

குரங்கு                                    மனம் (mind)

மாடு                                       ஐம்பொறி (Senses)

உடைவாள்                     ஞானம் (மெய்யறிவு) (Real Knowledge)

ஏனைய பறவைகள்          உலகியல் (Worldly life)

சோலை                                           பிரபஞ்சம் (Universe)

நான்குநாள்                                    சீவன் பக்குவம்

பெறுவதற்குரிய காலம்

(Time required for the

soul to be fit)

இப்பாட்டில் குயில் – சீவான்மா, கவிஞன் – பரமாத்மா, குரங்கு- மனம், மாடு-ஐம்பொறி, உடைவாள்-ஞானம், ஏனைய பறவைகள்- உலகியல், சோலை-பிரபஞ்சம், நான்கு நாள்- சீவான்மா பக்குவம் பெறுவதற்குரிய காலம் என்ற வகையில் தத்துவம் அடங்கியதாகக் கருதுவர்.

இப்பாடலைச் சைவ சித்தாந்த நோக்கில் கணிப்பவர்,

“ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களில் காதலை மாயா சக்தியாகவும் ஆணவம், கன்மம், என்பவைகளை மாடனும் குரங்கனுமாகப் பாவித்து, குயிலைப் பசுவாக ஆன்மாவாகப் பாவித்து மன்னவன் மகனைப் பதியாகப் பாவித்துப் பொருள்கொள்ளுவதே பொருத்தமுடைத்தாம்

- (பாரதியார் வரலாறும் கவிதையும், பக்.110)

குயில்பாட்டு : சைவசித்தாந்த நோக்கு

காதல்                             மாயை

மாடன்                      ஆணவம்

குரங்கு                      கன்மம்

குயில்                              பசு

சேர இளவரசன்        பதி

என்று பேராசிரியர் சுந்தரம் விளக்குகின்றார். இப்பாட்டு, நாட்டு விடுதலையை உள்ளடக்கிய ஓர் ஆன்ம விடுதலை நோக்கமுடையது என்று கூறுவதையும் காணலாம். தேச விடுதலை என்ற நிலையிலிருந்து அதன் மேற் பரிணாம நிலையாகிய ஆன்ம விடுதலை முயற்சியில் இறங்கிய அரவிந்தரைப் போலவே, பாரதியும் எண்ணியதன் விளைவாகப் பாரதி இப்பாட்டைப் பாடியிருக்கலாம். (ஆய்வுக் களங்கள்; கு.வெ. பாலசுப்பிரமணியன், பக்.120)

4.4.3 கற்பனை வீச்சு பாரதியின் பாடல்களிலேயே மிக நீண்ட பாட்டுக் குயில்பாட்டேயாகும். கீட்ஸ் பாடிய நைட்டிங்கேல் பறவைப் பாட்டு இப்பாட்டை இசைக்கத் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம். ஆனால் கற்பனை வீச்சில் குயில்பாட்டு எல்லா எல்லைகளையும் தாண்டிச் செல்கிறது. குயில் குரங்கைப் பாராட்டுகிறது.

வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே

தெய்வம் கொடுத்த திருவாலைப் போலாமோ?

சைவசுத்த போசனமும், சாதுரியப் பார்வைகளும்

வானரர்போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?

(குயிலும் குரங்கும் – 5)

கற்பனை வேகத்தில் குரங்கின் வால் கூடத் திரு என்ற அடைமொழி பெறுகின்றது. காலைப் பொழுதின் இளவெயில் வானத்தில் மேகங்களைப் பல நிறங்களாகக் காட்டுகின்றது.

தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி

எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ?

(இருளும் ஒளியும் – 5)

தங்கத்தை உருக்கினால் போதுமா? சூட்டை மாற்றித் தேனைப்போல இனிமை பொங்க எங்கும் பரவச் செய்த அழகு என்கிறார் கவிஞர். உலகையும் உலகிலுள்ள பல்வேறு இயற்கைக் கூறுகளையும் இறைவன் படைத்திருக்கலாம். ஆனால் அவன் படைப்புகளிலேயே மிக உயர்ந்தது பாட்டு என்னும் கலையேயாம் என்கிறார் கவிஞர்.

ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே

கானாமுதம் படைத்த காட்சிமிக விந்தையடா!

காட்டு நெடுவானம் கடலெல்லாம் விந்தையெனில்

பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா!

(குயிலும் மாடும் – 7)

என்று பாட்டுக் கலையைப் போற்றும் கவிஞர் அந்தப் பாட்டுக் கலைக்குரிய நாதம்-இசைக்கூறு, அதனையுடைய குயில், கவிஞனின் கை தீண்டியவுடன் பெண்ணாய் உருச்சமைந்து பேசாத எழிலோவியமாய்த் தம் முன்னே நிற்பதாகக் கற்பனை செய்கிறார். அவள் எப்படி இருந்தாள்?

கற்றவர்க்குச் சொல்வேன்; கவிதைக் கனிபிழிந்த

சாற்றினிலே, பண்கூத்துஎனும் இவற்றின் சாரமெலாம்

ஏற்று, அதனோடே இன்னமுதைத் தான் கலந்து

காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்

மாதவளின் மேனி வகுத்தான் பிரமன்என்பேன்

(குயில் பாட்டு – 9)

என்கிறார். ஒரு பெண்ணின் வடிவத்தை இவ்வளவு கற்பனை வீச்சுக் கொள்ளும்படி யாரும் புனையவில்லை. குயில்பாட்டு ஒரு கற்பனைக் களஞ்சியம் எனில் மிகையில்லை.

4.5 முப்பெரும் பாடல்கள்

பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு ஆகிய முப்பெரும்பாடல்கள் மூன்றும் வெவ்வேறு வகையின. ஒரு கவிஞனின் பல்வேறு பரிமாணங்களை இவை காட்டுகின்றன.

பாஞ்சாலிசபதம்-பழைய கதை நிகழ்வின் புதிய வார்ப்பு

கண்ணன்பாட்டு-சமய எல்லைகளைத் தாண்டிய பக்தி இலக்கிய பரிணாமம் விளங்கும் வகையில் படைக்கப் பெற்ற படைப்பு

குயில் பாட்டு-தேவதைக் கதைகளின் பாங்கில் தத்துவ உள்ளுறை அமைந்த உருவாக்கம்

இந்த மூன்று பாடல்களின் ஒவ்வொரு பகுதியும் ஆழ்ந்து கற்கும் போதெல்லாம் புதிய புதிய செய்திகளை நமக்கு அளிக்கும் வைரச் சுரங்கங்களாகக் காட்சி தருகின்றன. பாரதியின் சமயம், அவர் காண விரும்பிய சமுதாயம், அவரது கவிதை உலகம் ஆகிய மூன்றும் இந்த முப்பெரும் பாடல்களால் நமக்குப் புலனாகின்றன.

4.5.1 பாரதியின் சமயம் சடங்கு, ஆசாரம், சம்பிரதாயப் பழக்கங்கள் ஆகியவற்றால் பாரதியைக் கட்டுப்படுத்த முடியாது! ‘தெய்வம் நீ என்று உணர்’, ‘வேதம் புதிது செய்’ என்று கூறியவர் பாரதியார்.

தெய்வம் பலபல சொல்லிப் – பகைத்

தீயை வளர்ப்பவர் மூடர்

உய்வ தனைத்திலும் ஒன்றாய் – எங்கும்

ஓர் பொருளானது தெய்வம்

(பல்வகைப்பாடல்கள் – முரசு – 11)

என்று பாடிய பாரதி சமயங்களைக் கடந்த நிலையிலிருந்தார். பாஞ்சாலி சபதம் காட்டும் கண்ணனும், கண்ணன் பாட்டுக் கூறும் கண்ணனும், வைணவ சமயத்தவர் போற்றி வணங்கும் ஒரு சமய வட்டத்துக்குள்ளான கண்ணன் இல்லை. ‘புத்தர், சங்கரர், இயேசு, இராமன், கண்ணன் ஆகிய எல்லோரும் இறந்து விட்டார்கள்; நான் இறக்கமாட்டேன்’என்று கூறியவர் பாரதி. பல்வேறு வடிவங்களில் அவரால் போற்றப்பட்ட தெய்வம் ஒன்றே. அந்தத் தெய்வம் எந்த சமய எல்லைக்குள்ளும் இருப்பதில்லை. வழிபாடு செய்து, பூப்போட்டுச் சூடம் சாம்பிராணி காட்டி, மந்திரங்கள் சொல்லிப் போற்றப் படுவதாக இருந்த தெய்வத்தை மக்களுக்கு இன்னலிலே உதவுகின்ற ஓர் எளிமையான உறவுடையதாகப் பாரதியார் பாஞ்சாலி சபதத்திலும் கண்ணன் பாட்டிலும் படைக்கிறார்.

ஏழைகளைத் தோழமை கொள்வான் – செல்வம்

ஏறியார் தமைக்கண்டு சீறிவிழுவான்

தாழவரு துன்பம் அதிலும் – நெஞ்சத்

தளர்ச்சி கொள்ளாதவர்க்குச் செல்வ மளிப்பான்

(கண்ணன்- என் தந்தை – 5)

என்று பாரதியார் பாடுவதைக் கொண்டு, துன்புறும் மனிதர்க்குத் துணையாகும் ஓர் அன்புச் சமயம் அவருடையது என அறியலாம்.

4.5.2 பாரதியின் சமுதாயம் நிறம், குலம், சாதி என்ற பிரிவுகளில் பாரதிக்கு நம்பிக்கை இல்லை. எந்தச் சாதியினர் வீட்டிலும் அவர் உண்பார். கனகலிங்கத்திற்கும் அவர் நண்பர்களுக்கும் அவர் பூணூல் அணிவித்தார். தம்போலா என்ற தோட்டியின் இல்லத்தில் சென்று தங்கினார். தாம் பூணூல் அணிவதை விட்டு விட்டார். ஒரு முறை பொங்கல் பண்டிகையைக் குறித்த சாத்திரத்தை யதுகிரி அம்மையார் கேட்டபோது,

“அதோ பார்! தாடியுடன் இருக்கும் அந்த ஐயரைக் கேள்! எனக்குத் தெரியாது, அவர் ஏதாவது சாஸ்திரங்களில் ஆய்ந்து சரக்குச் சேர்த்து வைத்திருப்பார், எனக்கு வழக்கம் சாஸ்திரம் புராணம் கட்டோடு பிடிக்காது”

(-மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சித்திரம்-தி.முத்துகிருஷ்ணன் பக்.213)

என்று கூறி வ.வே.சு.ஐயரைக் காட்டி விடுகிறார். அவர் வாழ்ந்த காலத்தில் இத்தகைய சமுதாய நோக்கத்திற்காக அவர் மிகவும் துன்பப்படுத்தப் பட்டிருக்கிறார். கண்ணன் மறக்குலத்தில் பிறந்து, இடைக்குலத்தில் வளர்ந்து, பார்ப்பனருள்ளே சிறந்து, செட்டிமக்களோடு உறவு கொண்டு வாழ்கிறான் என்றும் கூறுகிறார். குயில் பாட்டில் சேர அரச குமரன் வேடர் மகளைக் காதலிக்கின்றான். பாரதியின் பொதுமைச் சமுதாய உணர்வை முப்பெரும் பாடல்கள் காட்டுகின்றன.

4.5.3 பாரதியின் கவிதை உலகம் பாரதியாரின் கவிதை உலகம், தன்னிகரற்ற மூன்று காப்பியங்களை, முப்பெரும் பாடல்களைக் கொண்டுள்ளது. இவை மரபுவழிக் காப்பிய அளவுகோல்களுக்கு உட்படாதவை. இருபதாம் நூற்றாண்டுக் காப்பிய மறுமலர்ச்சிக்கு இவை அமைத்துள்ள அடித்தளம் மிகவும் வலிமையானது. தேசிய பாடல்கள் ஒரு தேவையை ஒட்டித் தோன்றியவை; தெய்வப் பாடல்கள் அவரது ஆன்ம நிறைவை ஈடேற்றப் பிறந்தவை; பலவகைப் பாடல்கள் அவ்வப்போதிருந்த சூழல்களால் வெளிப்பட்டவை; முப்பெரும் பாடல்கள் அவருடைய படிப்பாலும் அனுபவத்தாலும் ஆராய்ச்சியாலும், ஞானத்தாலும் எழுதப் பெற்றுத் தமிழ் இலக்கிய உலகில் அவருக்கெனத் தனி அரியணை அமைத்தவை.

4.6 தொகுப்புரை

கவிஞன் கடந்த கால இலக்கியப் படைப்பு நெறியிலேயே போவதை விட்டுப் புதிய நெறிகளில் முயலும் போது, மொழிக்குப் புதிய உத்திகளும் படைப்புகளும் கிடைக்கின்றன. பழைய செய்திகளை நிகழ்காலத் தேவைகளை ஒட்டி மறுவார்ப்புச் செய்வதற்குக் கவிஞனுக்குப் பேராற்றல் வேண்டும். பாரதியிடம் அப்பேராற்றல் இருந்ததனை முப்பெரும் பாடல்கள் காட்டுகின்றன.

பாடம் - 5

பாரதியார் பாடல்களில் சமுதாய நோக்கு

5.0 பாட முன்னுரை

பாரதியார் வாழ்ந்த காலத்தில் நம் நாட்டில் வறுமை, அடிமைத்தனம், சாதிவேறுபாடு, தீண்டாமை, மூடநம்பிக்கை, பெண்ணடிமை, பயனற்ற கல்வி ஆகியவை மிகுந்து இருந்தன. இவற்றின் பயனாகச் சமூக நற்பண்புகளாகிய சமத்துவம், ஒற்றுமை, மனிதநேயம் போன்றவை அரிதாகவே இருந்தன. இவற்றைக் கண்டு பாரதியார் மிக வருந்தினார். இவை சமுதாய முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாய் இருந்தன என்பதை உணர்ந்தார். இவற்றைப் போக்குவதற்குரிய வழிமுறைகள் எவை என்பதைத் தம் பாடல்கள் வழியாக வெளிப்படுத்தினார். இது தொடர்பான செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

5.1 பொதுவுடைமையும் பொருளாதாரச் சமத்துவமும்

பொதுவுடைமை என்பது உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லாமல் சமுதாயத்தில் எல்லோருக்கும் எல்லாப் பொருளும் கிடைக்கச் செய்வது ஆகும். உலகில் மக்கள் அனைவரும் சமம் என்றும் மக்களுக்குச் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் கூறும் கொள்கை சமத்துவம் எனப்படும்.

சமுதாயம் என்பதற்கு மக்கள் தொகுதி என்பது பொருள். தனிமனிதன், தன் தாய், தந்தை, மனைவி, மக்கள், உடன்பிறந்தோர் இவர்களோடு சேர்ந்து குடும்பமாக வாழ்கின்றான். இந்தக் குடும்பம், இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த உறவுகள் என்று அது தொடர்கிறது. பல குடும்பங்கள் சேர்ந்து வாழும் இடம் ஊர், நகரம் எனப் பெயர் பெறுகின்றது. பல ஊர்களும் நகரங்களும் சேர்ந்து நாடு ஆகிறது – சமுதாயம் பிறக்கின்றது. எனவே, குடும்பம் என்ற அமைப்பே சமுதாயத்தின் அடிப்படையாய் அமைகிறது.

மனிதன் சேர்ந்து வாழும்போது விட்டுக்கொடுத்தல், உதவி செய்தல் பொறுத்துக் கொள்ளுதல், அன்பு செலுத்துதல், பிறரை மதித்தல் பிறர் துன்பங் கண்டு வருந்துதல், தனக்காகவும் தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் உழைத்தல், இயற்கையை ரசித்தல், இயற்கைச் சீற்றத்திலிருந்து காத்துக் கொள்ளுதல், வாழ்க்கை அனுபவத்தால் அறிவைப் பெறுதல், அறிவை வளர்க்க மேலும் கல்வி கற்றல், தாம் கற்றதைப் பிறருக்கு எடுத்துரைத்தல், அடுத்த தலைமுறைக்கு நூலாக எழுதி வைத்தல், ஆட்சி அமைப்பு, நிர்வாகம் முதலியவை நிகழ்கின்றன. இவை அனைத்திற்கும் சேர்ந்து வாழ்தல் என்ற சமுதாயப் பண்பே அடிப்படையாய் அமைகின்றது.

5.1.1 பாரதியும் சமுதாயமும் நம்மிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சாதிப்பிரிவுகள், சாதிப்போராட்டங்கள், சமயப் பிரிவுகள், சமயச் சண்டைகள், பெண் அடிமை, பெண் விடுதலை, கல்வி, கல்வி சார்ந்த கலைகள், ஒற்றுமைப் பண்பு, மனித நேயம் இவை அனைத்தும் காணப்படுகின்றன. இவை அனைத்திலும் பாரதியார் தம் பார்வையைச் செலுத்தியுள்ளார்.

சமுதாய அமைப்பில், வளர்ச்சி நோக்கில் ஏற்படும் சிறுமாற்றங்களைச் சமுதாயச் சீர்திருத்தம் என்றும், அதன் அடிப்படையில் தோன்றும் புதிய எழுச்சிகளைச் (renaissance) சமுதாய மறுமலர்ச்சி என்றும் கூறுவார்கள். பாரதியார் நம் சமுதாயத்தின் அடிப்படையை மாற்றிச் சமுதாய மறுமலர்ச்சியைக் காண விரும்பினார்.

5.1.2 செகத்தினை அழித்திடுவோம்’ இறைவன் படைப்பில் அனைத்து இயற்கை வளங்களும், விளைச்சலும் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் ஒருசிலர் சொத்துகளைக் குவித்து இது எங்கள் உடைமை என்று கூறி, உழைக்கும் மக்களைப் பசியிலும் பஞ்சத்திலும் தவிக்கவிட்டுத் தாம் மட்டும் உண்டு மகிழ்ந்திருக்கின்றனர். இந்நிலை கண்டு பாரதியார்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்

உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்

(சுதந்திரப்பள்ளு – சரணம் 4)

(நிந்தனை = பழிப்பு (disrespect))

எனப் பாடுகிறார்.

ஒரு சமுதாயத்தைச் சீர்குலைப்பவற்றுள், இல்லாமை, கல்லாமை, தீமை இம்மூன்றும் அடங்கும். இல்லாமை மிகக்கொடியது. எனவே, ‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்குவாழும் மனிதருக்கெல்லாம்’ எனப் பாரதியார் விரும்பினார்.

பசியின் கொடுமையை அனுபவித்து அறிந்தவர் பாரதியார். பசியால் உயிர்துடித்துச் சாகின்ற மக்களைப் பார்த்தபோது கொதித்தெழுகிறார். அக்கொதிப்பில் எழுந்த கவிதை தான்,

இனி ஒரு விதிசெய்வோம் – அதை

எந்த நாளும் காப்போம

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்

செகத்தினை அழித்திடுவோம்

(பாரத சமுதாயம் – சரணம் 2)

என்பது.

இந்த உலகில் பிறந்த எந்த ஒரு மனிதனும் பசியினால் வருந்தக்கூடாது. அவ்வாறு பசியினால் வருந்தக்கூடிய சூழல் இருக்குமானால், அதற்குக் காரணமான இந்த உலகத்தையே அழித்துவிடுவோம் என்கிறார் பாரதியார்.

5.1.3 ‘தீயை அகத்தினிடை மூட்டுவோம்’ பாரதியார் வாழ்ந்த காலத்தில் ‘நாட்டுக்கு அரசியல் சீர்திருத்தம் தேவையா? சமுதாயச் சீர்திருத்தம் தேவையா?’ என்ற கேள்வி எழுந்தது. பாரதியார் சமுதாயச் சீர்திருத்தமே தேவை என்றார். சமுதாயம் சீர்மைப்பட்டால் மக்களால் அமைக்கப்படும் அரசியலும் செம்மைப்படும் என்பது பாரதியாரின் எண்ணம்.

எனவே, சமுதாயத்தில் வாழும் மக்கள் தம் அறியாமையிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் விடுபட வேண்டும்; அநீதி கண்டு பொங்கி எழவேண்டும், அடிமைத் தளையை அறுத்தெறிய வேண்டும்; உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற நிலை ஒழிக்கப்படவேண்டும்; புரட்சி வெடிக்க வேண்டும், புதிய சமுதாயம் அமையவேண்டும் என்று பாரதியார் எண்ணினார். இரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியும் பிரெஞ்சு நாட்டில் ஏற்பட்ட புரட்சியும் போன்று இந்தியாவிலும் ஏற்படவேண்டுமெனக் கருதினார்.

தீயை அகத்தினிடை மூட்டுவோம்

என்றும்,

ஈயைக் கருடநிலை ஏற்றுவீர்

(பல்வகைப் பாடல்கள் – சொல்4)

என்றும் மக்கள் உள்ளத்தில் புரட்சிக்கனலை மூட்டுகின்றார்.

‘உன் உள்ளத்திலே சக்திக்கனலை மூட்டு, புது வேகமும் புது உற்சாகமும் ஏற்படும். தரையில் சுற்றித் திரிந்து அகப்படும் அசிங்கத்தை உண்டு, சமுதாயத்துக்குக் கேடு விளைவித்து வாழும் ஈயாக நீ வாழாதே! வானில் எழுந்து வட்டமிடும், கூரிய பார்வையும், இலக்கைப் பாய்ந்து சென்று எடுக்கும் ஆற்றலுமுள்ள கருடனாக நீ மாறுக. அப்போது இன்பம் வாழ்வில் மலைபோலக் கொட்டும். அப்போதும் துன்பம் ஏற்படலாம் அதைக்கண்டு துவண்டுவிடாதே. அதனை வெட்டிவீழ்த்து, வேகம் விவேகம் இந்த இரண்டும் உனக்குத்தேவை’

எனப் பாரதியார் கூறும் இப்பகுதி மக்கள் மனத்தில் தூவும் புரட்சி விதைகள் அல்லவா? பாரதியார் ஒவ்வொரு இந்தியக் குடிமகன் உள்ளத்திலும் சக்திக்கனலை மூட்டி, ஈயாக இருந்தவர்கள் பரிணாம வளர்ச்சியடைந்து கருடனாக மாறிப் புரட்சி செய்ய வேண்டும் என்கிறார். ஒற்றுமை உணர்வை வளர்க்கிறார்.

5.1.4 யாரும் இப்போது அடிமை இல்லை, அறிக! மக்கள் சக்தியைப் பராசக்தியாகக் கண்டவர் பாரதியார். அதனால் இரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சிக்குக் காரணம் பராசக்தியின் கடைக்கண் பார்வை தான் எனக் கூறுகின்றார்.

மாகாளி பராசக்தி உருசிய நாட்

டினில் கடைக்கண் வைத்தாள், அங்கே;

ஆகாஎன் றெழுந்ததுபார் யுகப்புரட்சி

(புதிய ருஷியா – 1)

ஜார் சக்கரவர்த்தி என்ற கொடுங்கோலனின் ஆட்சியில் இரஷ்ய நாட்டில் பொய், சூது, தீமை எல்லாம் பாம்புகள் போல் மலிந்து வளர்ந்தன. விளைவு:

உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை;

பிணிகள் பல உண்டு; பொய்யைத்

தொழுது அடிமை செய்வார்க்குச் செல்வங்கள்

உண்டு; உண்மை சொல்வோர்க் கெல்லாம்

எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு;

தூக்குண்டே இறப்பது உண்டு…..

(புதிய ருஷியா – 3)

இம்மட்டுமோ? “‘இம்’ என்றால் சிறைவாசம்; ‘ஏன்’ என்றால் வனவாசம்” – இதை எல்லாம் கண்ட மக்கள் மாகாளி பராசக்தியைப் போல் வெகுண்டு எழுந்தனர் புரட்சிப் புயலாக! முடிவு:

இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்துவிட்டான்

ஜார் அரசன்………

(புதிய ருஷியா – 5)

இத்தகைய மக்கள் புரட்சிக்கு இந்தியாவின் வீர இளைஞர்களை ஆற்றுப்படுத்தும் முயற்சி அல்லவா ‘புதிய ருஷியா’ என்ற கவிதை!

5.1.5 ‘எல்லோரும் ஓர் நிறை’ பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாத, வறுமை இல்லாத, வளமான சமுதாயத்தைக் காண விரும்பிய பாரதியார் அந்தச் சமுதாயத்தில்,

எல்லாரும் ஓர்நிறை; எல்லாரும் ஓர்விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர்

(பாரத சமுதாயம், சரணம் – 4)

எனக் கூறுகின்றார். எல்லோரும் ஒரே சிறப்புத்தன்மை உடையவர். எல்லோரும் ஒரே மதிப்புடையவர், எல்லோரும் இந்நாட்டில் முழு உரிமைபெற்ற ஆட்சியாளர்கள் என்கின்றார்.

சமுதாயத்தின் மேடு பள்ளங்களாய்ச் செல்வமும் வறுமையும் காணப்படுவதைச் சமன்படுத்தி, நம்நாட்டில் எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்; இல்லாமை இல்லாத நிலைவேண்டும் என்று ஆசைப்படுகின்றார் பாரதியார்.

அடிமைத்தனம் இல்லாத, ஏழ்மை இல்லாத, ஏற்றத்தாழ்வு இல்லாத பொதுவுடைமைச் சமுதாயம் அமைய மக்கள் எண்ணத்தில் புரட்சி ஏற்படவேண்டும் என்றும்; அவ்வாறு அமையும் புதிய சமுதாயம் பொருளாதாரச் சமத்துவம் உடையதாக,

ஏழை என்றும் அடிமை என்றும்

எவனுமில்லை ஜாதியில்

இழிவு கொண்ட மனித ரென்பது

இந்தி யாவில் இல்லையே;

வாழி கல்வி செல்வம் எய்தி

மனம கிழ்ந்து கூடியே

மனிதர் யாரும் ஒருநிகர்ச

மானமாக வாழ்வமே

(விடுதலை – 2)

என்று கூறும்படி அமையவேண்டும் என்றும் பாரதியார் விரும்புகின்றார்.

5.1.6 ‘கோடி வகைத் தொழில்கள் செய்வோம் ஓயுதல் செய்யோம்’

பாரதியார் விரும்பும் இன்பம் பெறவேண்டுமெனில் எல்லோரும் தொழில் செய்ய வேண்டும். செய்யும் தொழிலைத் தெய்வமாக மதித்தால் செல்வம் தானே வந்து சேரும். உடலை உறுதியாக்கிப், பல தொழில்கள் செய்து செல்வத்தைப் பெருக்கி இந்திய நாட்டை உலக அரங்கில் உயர்த்த வேண்டும் என்கிறார். ஆகவே

கூடும் திரவியத்தின் குவைகள்-திறல

கொள்ளும் கோடிவகைத் தொழில்கள்-இவை

நாடும் படிக்கு வினை செய்து-இந்த

நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்க(யோகசித்தி – 6-9)

(குவைகள் = குவியல்கள் , திறல் = வெற்றி)

வரம் வேண்டுகிறார்.

இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாகத் திகழ வேண்டும். அதுவரை உறக்கம், ஓய்வு என்பதே நமக்கு இல்லை என்றும், பெரிய ஆலைகள் முதல் சிறிய பொருள்களாகிய குடைகள், உழுவதற்குப் பயன்படும் பொருள்கள் முதலியன நாமே நம் நாட்டில் செய்ய வேண்டும் என்றும் கருதி,

ஆயுதம்செய் வோம்நல்ல காகிதம் செய்வோம்

ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்

ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்

குடைகள்செய் வோம்உழு படைகள்செய் வோம்;

கோணிகள்செய் வோம்இரும் பாணிகள்செய் வோம்

(பாரத தேசம், 9,10)

என்றும் பாடியுள்ளார். இந்தியா கருத்துச் செலுத்த வேண்டிய துறைகள் இரண்டு எனக் குறித்தார். அவை:

1. உழவு

2. தொழில்.

இவையிரண்டும் தேக்கமுற்றுக் கிடந்த நிலை அவரால் பல பாடல்களில் குறிக்கப் பெறுகின்றது. இவ்விரு செயல்களும் சிறப்புற மனிதர்களிடம் சோம்பல் ஒழிந்து ஊக்கம் பிறக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

5.2 சாதி ஒழிப்பு

நமது சமுதாயத்தைக் கூறுகளாக்கிக் குழிக்குள் போட்டுப் புதைக்கும் சாதிப் பிரிவுகளைப் பற்றிப் பாரதியார் கவலைப்பட்டார். சாதிகளை ஒழித்துச் சாதிகள் இல்லாத புதிய சமுதாயத்தை அமைக்க அவர் விரும்பினார். ‘சாதிக் குழப்பம்’ என்ற தமது கட்டுரையில்

“சாதியத் தன்னலக் கொள்கையின் உள்மன நிலைமை ஜனத்திற்கு ஏற்பட்ட மூளைவியாதியைத் தவிர வேறில்லை. தற்காலத்து அந்த நோயின் அறிகுறிகள் எவையெனில் சிவந்த கண்களும், குவிந்த முட்டிகளும், கொடுஞ்சொற்களும், கொடுஞ் செயல்களுமாம்.”

எனச் சாதிக் கொடுமையால் ஏற்படும் வன்முறைக் கலவரங்களைக் குறிப்பிடுகின்றார். மேலும் சாதி என்பது ஒரு மூளைவியாதி என்று அவர் கூறுவதும் காணத்தக்கது.

இந்தியச் சமுதாய அமைப்புச் சாதியின் அடிப்படையிலானது. அதனால் ஏற்றத் தாழ்வுகள், வேறுபாடுகள், சுரண்டல்கள் (Exploitation), தீண்டாமை போன்றவை ஏற்பட்டன. இவற்றைக் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பாரதியார்.

5.2.1 தீண்டாமை சாதி அடிப்படையில் அமைந்த தீண்டாமை என்பது மிகக்கொடிய ஒன்றாகும். தன் வீட்டில் நாய், பூனை போன்றவற்றிற்கு இடங்கொடுத்து அன்பு செலுத்துகின்ற மனிதன், மனித இனத்தில் உடன் பிறந்தோரைத் தீண்டத்தகாதவர் என விலக்கி வைப்பதும் விலகி வாழ்வதும் பண்பாடற்ற செயல் என்பது பாரதியாரின் கருத்து. தீண்டாமை என்பது உடலோடு மட்டும் தொடர்பு உடையது அன்று. அது உள்ளத்துள்ளே உறைந்து கிடப்பது. உதட்டளவில் மட்டும் சாதியை ஒழிப்பதாகக் கூறிவிட்டு உள்ளுக்குள்ளே சாதிவெறியை வளர்ப்பதால் எந்தப் பயனும் இல்லை. குழந்தைகளின் பிஞ்சு நெஞ்சங்களில் சாதி என்ற நச்சுணர்வை விதைத்து விடுகின்றனர். அவர்கள் வளர வளர அந்தத் தீய உணர்வும் வளர்கிறது. அந்தப் பிஞ்சு நெஞ்சங்களில் சாதிகள் இல்லை என்ற உணர்வை விதைக்க வேண்டும் என்று கருதிய பாரதியார்,

சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்

(பாரதி – பாப்பாப் பாட்டு – 15)

எனக் கூறுகிறார். ஒரு பெண் இந்த உணர்வைப் பெற்றால் அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் அந்த உணர்வை ஊட்டுவாள். படிப்படியாகச் சமுதாயம் முழுமைக்கும் அது பரவும் எனக் கருதிய பாரதியார் பெண் குழந்தையை நோக்கிப் பாடுகிறார். ஒரு சாரார் மற்ற பகுதியினரைத் தீண்டத்தகாதவர்கள் எனப் புறக்கணிப்பதற்கு என்ன காரணம் எனப் பாரதியார் சிந்திக்கிறார். இந்தத் தீண்டாமை நோயின் அடிப்படை அறிந்து அதனை நீக்கிவிட்டால் அந்நோயும் நீங்கும் அல்லவா?

அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வகை சாதிப் பிரிவில், கடைசியாகக் குறிப்பிடப்படுவோரின் உழைப்பின் பலனே ஏனைய மூன்று இனத்தவருக்கும் உணவாக அமைகிறது. உழைக்கும் பிரிவினராகிய ஏழைகள் புறக்கணிக்கப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவை சமுதாய ஏற்றத்தாழ்வு, உணவுப் பழக்கவழக்கங்கள், தூய்மைக் குறைவான பகுதியில் வசித்தல் முதலியனவாகும். ஊருக்குப் புறத்தே அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் சேரி எனப்பட்டது. (எந்தக் குலத்தவராயினும் பலர் சேர்ந்து வாழுமிடம் பண்டைக் காலத்தில் ‘சேரி’ எனப்பட்டது. பார்ப்பனச்சேரி, உமண்சேரி, பாணச்சேரி என்ற வழக்குகள் உண்டு. இந்த நிலை காலப்போக்கில் மாறி வருண அடிப்படையில் தாழ்ந்தவர்கள் எனக் கருதப்பட்டோர் வாழும் இடத்தைச் சேரி எனக் குறிக்கும் வழக்கம் தோன்றியது.) அவர்கள் ஊருக்குள் சென்று வாழத் தடை இருப்பதை உணர்ந்த பாரதியார் அதை நீக்கிவிட வேண்டும் என்று நினைத்தார்.

இரபீந்திரநாத் தாகூர் 1917-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் ‘மாடர்ன் ரெவியூ’ என்ற பத்திரிகையில் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையைப் பாரதியார் ‘அடங்கிநட’ என்று தமிழாக்கம் செய்துள்ளார்.

அதில் “சாதிக் கட்டுகளை அறுத்தெறியச் சாமியார்களோ குருமார்களோ மக்களுக்கு எடுத்துரைக்காத காரணத்தாலும், இதற்கு மாறாகத் துணை நின்றதாலும் நாடு அடிமைப்பட நேர்ந்தது என்பது வரலாற்றுண்மை எனக் குறிப்பிட்டுள்ளார். பாரதியார் தம் கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் இரபீந்திரநாத் தாகூரின் கட்டுரையைத் தமிழ் மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளதை அறிய முடிகிறது.

5.2.2 தமிழச்சாதி சாதிகளை ஒழித்துச் சாதிகளற்ற சமுதாயத்தைக் காணவிரும்பினார் பாரதியார் என்பதனைக் கண்டோம். தமிழ் நாட்டில் உள்ள அனைவரும் சாதி சமய வேறுபாடு அழிந்தபின், அவர்களை என்ன பெயரில் அழைப்பது அச்சமுதாயத்தின் பெயர் என்ன? ஒரு குறியீடு வேண்டுமல்லவா? எனப் பாரதியார் சிந்திக்கிறார். அச்சிந்தனையின் விளைவாக, நாம் தமிழ் என்ற மொழியால் ஒன்றுபட்டுத் ‘தமிழச்சாதி’ என அழைக்கப்படுவோம் என்கிறார். இது புதுமையான சிந்தனை அல்லவா? மொழியால் உணர்வால் ஒன்றுபட்ட தமிழச்சாதி பற்றிப் பல இடங்களில் குறிப்பிடும் இவர், ‘தமிழச்சாதி’ என்ற தலைப்பில் கவிதை எழுதியுள்ளார். அதில், தமிழச் சாதியினர் உலகில் பல இடங்களில் பரவி உள்ளனர் எனக் குறிப்பிடுகின்றார்.

ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்

தென்முனை அடுத்த தீவுகள் பலவினும்

பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள

பற்பல தீவினும் பரவிஇவ் எளிய

தமிழச்சாதி

(தமிழச்சாதி – 31-35)

எனக் குறிப்பிட்டுத் தமிழர்கள் எங்கெல்லாம் பரவி உள்ளனர் என்பதனை மிகவும் நயமாகக் குறிப்பிடுகிறார்.

………………………….. முன்பு நான் தமிழச்

சாதியை ‘அமரத்தன்மை வாய்ந்தது’ என்று

உறுதி கொண்டிருந்தேன்

(தமிழச்சாதி : 25-27)

என்றும், இன்றுள்ள நிலையை எண்ணி

விதியே விதியே தமிழச் சாதியை

என்செயக் கருதி யிருக்கின்றாயடா?

(தமிழச்சாதி ; 116-117)

என்றும் அக்கவிதையில் குறிப்பிடுவது தமிழச்சாதி பற்றிய பாரதியாரின் சிந்தனையை நமக்கு விளக்குவனவாகும். 3.4.1918இல் சுதேசமித்திரனில் பாரதியார் கீழ்க்காணுமாறு எழுதுகின்றார்.

“இந்த நிமிஷத்திலே தமிழ் ஜாதியின் அறிவு கீர்த்தி வெளியுலகத்திற்குப் பரவாமல் இருப்பதை நான் அறிவேன். போன நிமிஷம் தமிழ் அறிவொளி சற்றே மங்கி இருந்ததையும் நான் அறிவேன். ஆனால் போன நிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த நிமிஷம் சத்தியமில்லை. நாளை வரப்போவது சத்தியம், மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலகம் முழுவதிலும் பரவாவிட்டால் என் பேரை மாற்றி அழையுங்கள்”

நாளை என்பதில் பாரதியார் கொண்டிருந்த நம்பிக்கையையும், தமிழச்சாதி உயர்நிலை எய்தும் என்ற தீவிர எண்ணமும் மேலே குறிப்பிட்ட கட்டுரைப் பகுதியில் தெளிவாகின்றன.

5.3 மூடநம்பிக்கை ஒழிப்பு

சமுதாயத்தில் சில பழக்க வழக்கங்கள் ஏன் செய்கிறோம் என்ற சிந்தனை இல்லாமலே காலம் காலமாக மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. இத்தகைய “கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போகட்டும்” (பாழாகப் போகட்டும்) என்றார் வள்ளல் இராமலிங்க அடிகளார். தொடர்ச்சியாக வந்த சில பழக்க வழக்கங்களையும், பொய்மைச் சாத்திரங்கள் கூறும் தவறான செய்திகளையும் (சடங்குகளையும்) சுய சிந்தனை இல்லாமல் கண்மூடித்தனமாக நம்புவதும், செய்வதும் தவறு. புதுமைகளைச் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்து நமக்கு ஏற்றதெனில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல காலவகையி னானே

(நன்னூல் – நூற். 462)

என்பது மொழியின் இலக்கண விதிக்குக் கூறப்பட்டது என்றாலும், நம் வாழ்க்கைக்கும் அது பொருந்தும். அதன் கருத்து, பழைய விதிகள் நீங்குதலும், புதிய விதிகள் ஏற்படுதலும் உண்டு; அது தவறல்ல; அது காலத்தின் தன்மைக்கேற்ப மாறும்.

பேய், பிசாசு

அச்சத்தின் அடிப்படையில் ஏற்படும் பேய், மந்திரம், தந்திரம் இவற்றைப் பற்றிய நம்பிக்கை ஒழிய வேண்டும் என்கிறார் பாரதியார்.

நெஞ்சு பொறுக்கு தில்லையே – இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்

அஞ்சி அஞ்சிச் சாவார் – இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே!

வஞ்சனைப் பேய்கள் என்பார் – இந்த

மரத்தில் என்பார் ; அந்தக்குளத்தில் என்பார்

துஞ்சுது முகட்டில் என்பார் ; மிகத்

துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்

(பாரத ஜனங்களின் தற்கால நிலைமை-1)

(அவனி = பூமி, துஞ்சுவது = தூங்குவது, தங்குவது, முகட்டில் = மலை உச்சியில்)

என்று அச்சத்தில் உழன்று செய்வதறியாது திகைத்து நின்ற தம் சமகால இந்திய மக்களை எண்ணி நெஞ்சு வெதும்புகின்றார்.

தாம் பாடிய புதிய ஆத்திசூடியில்,

பேய்களுக்கு அஞ்சேல்

அச்சந் தவிர்

எனச் சிறுவர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.

நாள், நட்சத்திரம்

‘நல்லதைச் செய்ய நாள் பார்க்கத் தேவை இல்லை’ என்பது பழமொழி. என்றாலும் அச்சத்தின் காரணமாக நாள் நட்சத்திரம் பார்ப்பது, சோதிடம் பார்ப்பது என்பன நம் முயற்சியைக் கெடுக்கும்.

சோதிடம் பார்ப்பது தவறு என்பது பாரதியார் கருத்து. இதைப் புதிய ஆத்திசூடியில்,

சோதிடந் தனை இகழ்

என அவர் கூறுவதன் வழி அறியலாம்.

சுவர்க்கமும், நரகமும்

பாரதியார் சுவர்க்கம், நரகம் போன்ற மூடநம்பிக்கைகளில் மக்கள் மூழ்கிக் கிடப்பதைக் கண்டு வருந்துகிறார். சுவர்க்கம், நரகம் இரண்டும் நாமே ஏற்படுத்திக் கொள்ளக்கூடியன என்றும், அவை வேறெங்கும் இல்லை நம் உள்ளத்தில் தான் உள்ளன என்றும் கூறுகின்றார்.

கவலைப் படுதலே கருநரகு, அம்மா!

கவலை அற்றிருத்தலே முத்தி

(விநா.நா.ம.மாலை. 36)

எனக் கவலைப்படுவதுதான் நரகம், கவலையற்று மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் சுவர்க்கம் எனப் புது விளக்கம் தருகின்றார்.

5.4 சமுதாயச் சீர்திருத்தம்

சட்டம், சமூகம் முதலியவற்றில் நடைமுறையில் நிலவும் சீர்கேடுகளை அல்லது ஒழுங்கற்ற முறையை மாற்றுவதற்கான நடவடிக்கையே சமுதாயச் சீர்திருத்தம்.

5.4.1 குடும்ப வாழ்க்கை சமுதாயத்தின் அடிப்படையான குடும்ப வாழ்க்கையில் திருமணம் என்பது முக்கியமான ஒன்றாகும். ஓர் ஆணும் பெண்ணும் வளர்ந்து உடலாலும் உள்ளத்தாலும் முழுநிலை பெற்ற பின்னர், காதல் கனிந்து திருமணம் செய்து கொள்ளுதலே இயல்பான திருமணமாகும். இத்திருமணத்திலும் குழந்தைத் திருமணம், வரதட்சணைத் திருமணம், பொருந்தாத் திருமணம் போன்ற பழக்கங்கள் புகுந்து சமுதாயத்தைச் சீர்குலைத்தன. இவற்றைக் கண்டு வருந்தி ‘வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்’ என்று பாடுகிறார் பாரதியார். (பெண்விடுதலைக் கும்மி – 5)

குழந்தை மணம்

குழந்தைகளுக்குச் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கத்தைப் பாரதியார் கடுமையாக எதிர்க்கிறார். ஆகையால்,

பால ருந்தும் மதலையர் தம்மையே

பாதகக் கொடும் பாதகப் பாதகர்

மூலத் தோடுகு லங்கெடல் நாடிய

மூட மூடநிர் மூலப் புலையர்தாம்

கோல மாகமணத்திடைக் கூட்டும்இக்

கொலையெனும் செயல் ஒன்றினை.

(பாரதியார் சுயசரிதை மணம்- 34)

என்று குழந்தைத் திருமணம், கொலை செய்வதைவிடக் கொடுமையானது எனக் கண்டிக்கிறார். அதனைச் செய்து வைப்பவர்கள் மிக இழிந்தவர்கள் என்றும் சினந்து கூறுகிறார்.

வரதட்சணைக் கொடுமை

பண்டைக் காலத்தில் வரன் (மணமகன்) தான் மணக்கப்போகும் வதுவிற்கு (மணமகளுக்கு) அவளை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்குத் தட்சணையாகப் பொருள் (பணம்) கொடுப்பது வழக்கமாக இருந்தது. இது வரதட்சணை என்ற பெயர் கொண்டது. வரதட்சணை என்ற சொல்லுக்கு வரன் – மணமகன், தட்சணை என்பது பணம் எனப் பொருள்படும். பின்னாளில் மணமகள் மணமகனுக்குக் கொடுக்கும் சீதனப் பொருளாக இது மாறியது. இப்பழக்கம் பண்டைத் தமிழகத்தில் இல்லை. ‘பொன்னைக் கொடுத்துப் பெண்ணை எடுத்தல்’ என்பது தமிழ் மரபு. மாட்டை விலை கொடுத்து வாங்குவது போல் மணமகனை விலைகொடுத்து வாங்கும் அநாகரிகச் செயலைப் பாரதியார் வெறுக்கிறார். அன்பை அடிப்படையாகக் கொண்ட மண உறவுக்குப் பணத்தை அடிப்படையாக வைத்துப் பேசும் வழக்கத்தால் பல பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமலே முதிர்கன்னிகளாக (முதிர்கன்னி – வயது முதிர்ந்தும் திருமணம் ஆகாத பெண்கள்) சமுதாயத்தில் வாழ்வதைக் காணமுடிகிறது அல்லவா?

இதைப் பற்றிப் பாரதியார் ‘மாப்பிள்ளை விலை’ என்ற தம் கட்டுரையில் எழுதுகிறார். அதில் வரதட்சணை வாங்குதல் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அதற்குப் பெண் விடுதலை தேவை என்றும் குறிப்பிடுகின்றார்.

விதவைக் கொடுமை

மனைவியை இழந்த ஓர் ஆண் வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு பெண் கணவனை இழந்தால் அவள் வாழ்நாள் முழுக்க விதவையாகவே உலக இன்பங்கள் மறந்து வாழ வேண்டும் என்ற மூடப்பழக்கத்தைப் பாரதியார் வன்மையாகக் கண்டிக்கின்றார். விதவைகள் நிலை பற்றிய கருத்துப் பரிமாற்றத்தில், அண்ணல் காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர் போன்றவர்களைக்கூட மறுத்துப் பேசும் அளவுக்குப் பாரதியாரின் நெஞ்சில் விதவைக் கொடுமை ஆழமாகப் பதிந்திருந்தது. விதவைகளைக் கொடுமைப்படுத்தும் விதிமுறைகளைக் கடுமையாகச் சாடுகிறார். விதவைக் கொடுமையை ஒழிக்க வீர இளைஞர்கள் விதவைகளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனக் கூறுகின்றார். விதவைத் திருமணமே விதவைக் கொடுமையை ஒழிக்கச் சிறந்தவழி என்கிறார்.

ஆண், பெண் கற்பு – நிலை

ஆணுக்குக் கற்புத் தேவையில்லை; பெண்ணுக்குத்தான் தேவை என்ற ஆண் ஆதிக்க நிலையை, பெண்ணடிமைத்தனத்தைப் பாரதியார் கடுமையாக எதிர்க்கிறார். எனவே,

ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்

அப்போது பெண்மையும் கற்பழிந்தி டாதோ?

நாணமற்ற வார்த்தையன்றோ? வீட்டைச் சுட்டால்

நலமான கூரையும்தான் எரிந்திடாதோ?

(பாரதி அறுபத்தாறு – விடுதலைக்காதல் – 56)

என்று வினா எழுப்புகிறார். வீடு தீப்பற்றி எரிந்தால் வீட்டிலுள்ள கூரையும் தீப்பற்றி எரியாதா; ஓர் ஆண் கற்பிழந்தால் சமுதாயத்தில் தீங்கு நேராதா எனக் கேட்கிறார் பாரதியார்.

இக்காலத்தில் தோன்றி அச்சுறுத்தும் ‘எய்ட்ஸ்’ போன்ற நோய்களுக்கு ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற நம் பண்பாட்டை மறந்த ஆண்களின் ஒழுக்கக்கேடே காரணமல்லவா? எனவே இருவருக்கும் கற்பு பொதுவானது என்ற நோக்கில், கற்பு நிலையென்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் (பெண் விடுதலைக் கும்மி – 5) என்று பாடினார்

5.4.2 சமுதாய ஒற்றுமை சமுதாய முன்னேற்றத்திற்குத் தேவையானது ஒற்றுமை. அதற்கு அடிப்படை மனிதநேயம். இவற்றைத் தம் பாடல்கள் மூலம் அறிவுறுத்தினார் பாரதியார்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிதைத் தேர்ந்திடல் வேண்டும் இந்த

ஞானம் வந்தால் பின்நமக்கெது வேண்டும்

(வந்தே மாதரம் – 4)

எனப் பாரத சமுதாயத்தின் மேம்பாட்டுக்குத் தேவை ஒற்றுமையே என்று கூறுகின்றார். ஒற்றுமை தேவை என்பதை அறிய வேண்டும் என்று கூறாது ஞானம் வந்தால், (அதாவது அறிவுத் தெளிவு ஏற்பட்டால்) போதும் வேறு எதுவும் வேண்டாம் என வலியுறுத்துகிறார். இது நம் சிந்தனைக்கு விருந்தாகும்.

இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன்,

எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில்

யாவர்க்கும் அந்தநிலை பொதுவாகும்!

முப்பது கோடியும் வாழ்வோம் – வீழில்

முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்.

(வந்தே மாதரம் – 5)

என வாழ்விலும் சாவிலும் கூட ஒற்றுமையுடன் இருப்போம் என்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் இந்திய மக்கள் தொகை முப்பது கோடி என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இந்திய ஒற்றுமைக்குப் பாரதியார் அணுகிய பாதையே சரியானது எனக் கூறலாம். ஒவ்வொரு மாநிலத்தின் தனிச் சிறப்புகளை மற்ற மாநிலத்தவர் போற்றிப் பாராட்ட வேண்டும், பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் ஒற்றுமை ஓங்கும்; வேற்றுமை அகலும் என்கிறார்.

‘பாரத தேசம்’ என்ற பாடலில் சிங்க மராட்டியரின் கவிதைக்கு ஈடாகச் சேரநாட்டு யானைத் தந்தங்களைப் பரிசளிப்போம்; வங்காளத்தில் உள்ள நீர்வளத்தைக் கொண்டு மத்தியப் பிரதேசத்தில் விவசாயத்தைப் பெருக்குவோம்; கங்கையாற்றுப் பகுதியில் விளையும் கோதுமைக்கு ஈடாக காவிரியாற்றுப் பகுதியில் விளையும் வெற்றிலையைக் கொடுப்போம் எனக் கூறுகின்றார்; மாநிலங்களுக்கு இடையேயான, மொழிகளுக்கு இடையேயான வேறுபாடுகளைத் தகர்த்துப் பாரத ஒற்றுமையை வலியுறுத்துகிறது இப்பாட்டு. மாநிலங்களுக்குரிய பொருண்மைகளைப் பாரத நாட்டின் உடைமைகளாக மாற்றுவதின் வழியே ஒரு தேசிய ஒற்றுமையை உருவாக்க வழிகாட்டும் வகையில் இப்பாட்டுப் பாடப்பெற்றது. இப்பாட்டின் ஏனைய பகுதிகளிலும், மொழிவாரியான மக்களுக்கு இடையே கொண்டும் கொடுத்தும் வாழ்கின்ற ஒரு பரிவருத்தனை உறவுமுறை சித்தரிக்கப் பெறக் காணலாம்.

மனித நேயம்

அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்

மக்கள்பண் புஇலா தவர்

(திருக்குறள். 997)

என்பது திருக்குறள். கூர்மையான அறிவு இருந்தாலும் மனிதப் பண்பு இல்லாதவன் மரம் போன்றவனே என்பது இதன் கருத்து. எனவே ஒருவன் மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதும், இரக்கம் காட்டுவதும், மற்றவர் துன்பம் கண்டு வருந்துவதும், இன்பம் கண்டு மகிழ்வதும் மனிதப் பண்புகளாகும். இவை அனைத்தும் அன்பின் அடிப்படையில் நடப்பவை. நேயம் என்ற சொல்லுக்கு அன்பு என்று பொருள். மனிதன் மற்றவர்மீது செலுத்தும் அன்பு என்ற மனிதப்பண்பே மனித நேயம் எனப்படும். இதனைப் பாரதியார்,

பக்கத் திருப்பவர் துன்பம் – தன்னைப்

பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி

(உயிர்பெற்ற தமிழர் பாட்டு – 16)

எனக் கூறுகிறார். யார் ஒருவன் தன் அருகில் இருப்பவன் துன்பத்தைக் காணப் பொறுக்காது வருந்துகிறானோ, யார் ஒருவன் அடுத்தவர் துன்பம் போக்க உதவி செய்கிறானோ அவனே சிறந்த புண்ணியம் செய்தவன் என்பது அவர் கருத்து. ஆகையால்,

உற்றவர் நாட்டவர் ஊரார் – இவர்க்கு

உண்மைகள் கூறி இனியன செய்தல்

நற்றவம் ஆவது கண்டோம்

(உயிர்பெற்ற தமிழர்பாட்டு. 15)

என்று பாடுகிறார். தன்னைச் சார்ந்தவர்கள், தன்னாட்டினர், தன் ஊரினர் இவர்களுக்கு உண்மையை எடுத்துக் கூறுவதும் அவர்களுக்கு இன்பந்தரும் செயல்களைச் செய்வதுமே நல்ல தவமாகும் எனத் தவத்துக்கு மனிதநேய அடிப்படையில் புதுவிளக்கம் தருகிறார் பாரதியார்.

5.5 பெண் முன்னேற்றம்

மக்கள் தொகையில் ஒரு பாதியாக இருக்கும் பெண்களை அடிமையாக நடத்தும் எந்த ஒரு நாடும் உரிமை பெற்றதில்லை. அடிமைப் பெண்கள் அடிமைக் குணமுள்ள குழந்தைகளையே பெறுவார்கள். அக்குழந்தைகளின் உள்ளத்தில் சுதந்திர உணர்வு எழாது. அதனால் அடிமை வாழ்வு தொடருமே ஒழிய சுதந்திரச் சீர்திருத்தச் சமுதாயத்தைக் காணமுடியாது. எனவே பெண்களுக்குச் சம உரிமையும் மதிப்பும் கொடுக்க வேண்டும் என்கிறார் பாரதியார். பெண்கல்வியே சமுதாய முன்னேற்றத்திற்குச் சிறந்தவழி என வழிகாட்டுகிறார். பெண்கள் முன்னேற்றம் குறித்துத் தமது கருத்துகளைச் ‘சக்கரவர்த்தினி’ என்ற இதழில் கட்டுரைகளாகவும், மற்றும் எழுச்சிமிக்க கவிதைகளாகவும் எழுதியுள்ளார். தாம் எழுதிய சிறுகதைகளிலும் குறிப்பிட்டிருக்கிறார். புதிய பாரத சமுதாயத்தை உருவாக்க, புதுமைப் பெண்களைப் படைத்துக் காட்டுகின்றார். அவற்றைக் காண்போம்.

பெண்ணடிமை

பெண்களை எண்ணத்தால், சொல்லால், செயலால் இழிவுபடுத்துவது அறிவற்ற செயல் என்றும் அதனை அறவே நீக்க வேண்டும் என்றும் பாரதியார் குறிப்பிடுகின்றார்.

மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமை யைக்கொ ளுத்துவோம்

(விடுதலை – 3)

மேலும், நாட்டுக்கு நன்மை செய்ய எண்ணமுள்ளவர்கள் பெண்களை அடிமை நிலையிலிருந்து மீட்டு முன்னேற்றப் பாடுபட வேண்டும் என்கிறார். ஆகவே,

பெண்கள் முன்னேற்றத்திற்குரிய கடமைகளைச் செய்யத்

தவறுபவர்கள் தேச விரோதிகள்

(சக்கரவர்த்தினி கட்டுரை)

எனக் கடுமையாகப் பேசுகின்றார்.

பெண் கல்வி

பெண்ணின் வாழ்வியலை வகுத்தால், அது கல்வியில் தொடங்க வேண்டும். வேறு பிறவழிகளில் பெறமுடியாத முன்னேற்றத்தைக் கல்வியால் பெறமுடியும் என்பது பாரதியாரின் அழுத்தமான நம்பிக்கை. பெண்களின் முன்னேற்றத்திற்கு மூன்று வழிகளைக் கூறுகின்றார்.

“அதற்கு மூன்றுவிதமான உபாயங்கள் இருக்கின்றன. முதலாவது உபாயம் கல்வி; இரண்டாவது உபாயம் கல்வி; மூன்றாவது உபாயம் கல்வியே! அதாவது கல்வியைத் தவிர வேறு எல்லா விதமான உபாயமும் சிறிதேனும் பயன்படாது என்பது கருத்து”

(சக்கரவர்த்தினி கட்டுரை-பக்.83)

(உபாயம் = வழிமுறை)

இதில் கல்வி ஒன்றே பெண்களுக்கு அடிமை நிலையிலிருந்து முன்னேற்றத்தை நல்கும் கருவி எனப் பாரதியார் நம்புவது புலப்படுகிறது.

படித்த பெண்கள் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்பதோடு ஆட்சியிலும் பங்கேற்கிறார்கள். இதை,

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கேபெண்

இளைப்பில்லை காண்

(பெண்கள் விடுதலைக்கும்மி – 6)

எனப் படித்த விடுதலைப் பெண்கள் கூறுவதாகப் பாரதியார் குறிப்பிடுகின்றார்.

நாட்டு வளர்ச்சியில் பெண்கள் பங்கு

கல்வி கற்ற பெண்கள் பல நாடுகளுக்குப் பயணம் செய்து அறிவின் மேன்மையை அங்குப் புலப்படுத்திப் புகழ்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அங்குள்ள புதுமைகளைக் கொண்டுவந்து நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் பாரதியார் விரும்புகின்றார். பெண்களே கூறுவது போல் அவர் கூறுவதைக் காண்போம்.

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்

ஓது பற்பல நூல்வகை கற்கவும்

இலகு சீருடை நாற்றிசை நாடுகள்

யாவும் சென்று புதுமை கொணர்ந்திங்கே

திலக வாணுதலார் தங்கள் பாரத

தேசம் ஓங்க உழைத்திடல் வேண்டுமாம்

(புதுமைப்பெண் – 8)

நான்கு திசைகளிலுமுள்ள நாடுகளுக்குச் செல்வது வாழ்க்கை நுட்பத்தை அறியவும் பற்பல நூல்களைக் கற்கவும் பயன்படும் எனக் கூறுகின்றார். இந்த நோக்கத்தில்,

சென்றி டுவீர் எட்டுத்திக்கும் – கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

(தமிழ்த் தாய் – 11)

எனக் கூறிய பாரதியார், அப்பணிக்குப் படித்த பெண்கள் செல்ல வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறார். எதிர்கால இந்தியச் சமுதாயத்தின் வளத்திற்கும் நலத்திற்கும் பெண்களின் பங்கு இன்றியமையாதது என்பதை உணர்த்துகிறார்.

புதுமைப் பெண்கள்

கல்வி பெற்ற, ஆளுமைபெற்ற, சுதந்திர உணர்வுடைய, அச்சமற்ற, ஆணுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் வீறுகொண்டு வெற்றி உலாவரும் புதுமைப் பெண்களைப் பாரதியார் படைத்துக் காட்டுகின்றார். அவர் போற்றும் புதுமைப் பெண்ணின் இயல்புகளும், திறன்களும் பிறிதோர் பாடத்தில் (Co1116: பாரதியார் நோக்கில் பெண்மை) விளக்கப் பெற்றுள்ளன.

5.6 கல்வியும் அறிவியல் நோக்கும்

கல்வியின் சிறப்பினை உணர்ந்தவர் பாரதி. கல்வியினால் மக்களுக்கு ஏற்படும் அறிவு வளர்ச்சியை எடுத்துரைத்தவர்; மேலும் சமுதாய முன்னேற்றத்திற்கு அறிவியல் நோக்கு மிகவும் தேவை என்பதையும் அறிந்தவர். இவற்றை அவரது பாடல்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

கல்விபெற வாய்ப்பில்லாத மக்களின் நிலைகண்டு பாரதியார் வருந்துகிறார். சத்திரம், கோயில் முதலியவை கட்டுதலைவிட ஏழைக்குக் கல்வி புகட்டுதல் மேலானது என்கிறார்.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்;

ஆல யம்பதி னாயிரம் நாட்டல்;

அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்குஎழுத்தறி வித்தல்

(வெள்ளைத்தாமரை – 9)

என்கிறார்.

வயிற்றுக்குச் சோறும், மனத்துக்கு உணர்வும், வாழ்வில் ஏற்றமும் தருவது கல்வி அல்லவா?

5.6.1 ஆங்கிலக் கல்வியின் அவலம் ஆங்கிலக் கல்விக்கூடங்களில் கற்பிக்கப் பெறும் கல்வி இந்திய நாட்டின் இயல்புக்கு ஒத்ததாக இல்லை என்பது பாரதியார் கருத்து.

கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர், பின்

கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்;

அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும்

ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்;

வணிகமும் பொருள்நூலும் பிதற்றுவார்;

வாழுநாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்…

(சுயசரிதை – 23)

(கார்கொள் = கரிய மேகம் சூழ்ந்த; மீனிலை = வானில் நட்சத்திரங்களின் நிலை)

எனக் கற்கும் கல்வியின் பொருள் இன்னது எனத் தெரியாது அயல்மொழி என்ற மோகத்தில் சிக்கி நாட்டினர் உழல்வதை அவர் இந்தப் பகுதியில் எடுத்துக் காட்டுகின்றார்.

கம்பன், காளிதாசன், திருவள்ளுவர் போன்ற உள்நாட்டுக் கவிஞர்கள்; பாஸ்கரன், பாணினி போன்ற மேதைகள்; அசோகன், சிவாஜி மற்றும் சேர, சோழ, பாண்டியர் போன்ற மன்னர்கள் ஆகியோரைப் பற்றி யாதும் அறிந்து கொள்ள மாட்டார்கள். ஆங்கிலப் பயிற்சி பெறும் மாணவர்கள்;

முன்ன நாடு திகழ்ந்த பெருமையும்

மூண்டிருக்கும் இந்நாளில் இகழ்ச்சியும்

பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்

பேடிக்கல்வி பயின்றுழல் பித்தர்கள்;

என்ன கூறி மற்று எங்ஙன் உணர்த்துவேன்

இங்கு இவர்க்கு எனது உள்ளம் எரிவதே

(சுயசரிதை: 26)

(பெற்றி = சிறந்த நிலை)

என்று ஆங்கில மோகம் கொண்டோரை நினைக்கையில் தன் உள்ளம் எரிவதை உணர்த்துகிறார் பாரதியார். இப்படிக் கூறுவதால் ஆங்கில மொழிக்கு எதிரானவர் பாரதி என்று பொருள் கொள்ள வேண்டாம். கல்வியைத் தாய் மொழியில் பயிலும் போது சிந்தனைத் தெளிவு உண்டாகும்; புதியன படைக்கத் தோன்றும். புரியாத, அதிலும் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரின் மொழியை இந்த மண்ணுக்குப் பயன்தராத வகையில் கற்பதால் பயனேதுமில்லை என்பதாலேயே பாரதி தவிப்பும் எரிச்சலும் அடைகிறார்.

5.6.2 புதிய தேசியக் கல்வித்திட்டம் ஆங்கிலக் கல்வியின் விளைவால் தாய்மொழிக்கல்வி புறக்கணிக்கப்பட்டது. இந்திய நாட்டுத் தொழில்கள் நலிந்தன.

இந்தியா சுதந்திரம் அடைந்ததும், மக்கள் எல்லோரும் கல்வியறிவு பெற வேண்டும் என்ற நோக்கில் கல்வித்திட்டம் வகுக்கப்பட்டது. கல்வியில் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும், தொழிற்கல்வி கற்பிக்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாக இருந்தது.

பாரதியார் தாம் வாழ்ந்த காலத்திலேயே ஆங்கிலக் கல்வியின் பயனற்ற தன்மையைக் கண்டு நமது நாட்டின் தன்மைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற புதிய தேசிய கல்வித் திட்டத்தை வகுத்துத் தருகிறார். அதற்கான பயிற்று மொழியாகத் (கற்றல் மொழி) தாய்மொழியான தமிழை வைத்துப் பாடத் திட்டத்தை அமைத்துக் கொடுக்கிறார்.

தேசியக் கல்வியோடு ஒவ்வொருவரும் தாய்மொழிக் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறுகிறார். அப்பாடத்திட்டத்தில் எழுத்து, படிப்பு, கணக்கு, சமூக வரலாறு, புவி இயல், சமய இயல், அரசியல், பொருளியல், அறிவியல் ஆகியவற்றோடு விவசாயம், தோட்டப் பயிற்சி, வியாபாரம், உடற்பயிற்சிக் கல்வி, விளையாட்டுக்கல்வி, பயணக்கல்வி முதலியனவும் இடம்பெறுகின்றன. இவற்றுள் தொழிற்கல்வியின் தேவையினை வற்புறுத்துகிறார். மாணவன் பள்ளிப் படிப்பு முடிந்ததும் தன் சொந்தக் காலில் நிற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தன்னம்பிக்கை உணர்வை ஊட்ட வேண்டுமென்கிறார். இன்று கல்வியியலாளர் பலரும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தும் கல்வித்திட்டமல்லவா இது? ஆனால் நடைமுறையில் அதைச் செயல்படுத்த இயலாததாலேயே சமூகத்தில் இளைஞர்களின் வேலையில்லாதத் திண்டாட்டமும் வன்முறையும் நாளும் நாளும் வளர்ந்து வருகின்றன. இனியாவது விழித்துக் கொண்டால் பாரதியின் விருப்பம் நிறைவேறும்.

5.6.3 அறிவியல் நோக்கு மக்களிடையே நிலவும் தேவையற்ற அச்சத்தையும், பொருளற்ற மூடநம்பிக்கைகளையும் தகர்க்க, அறிவியல் நோக்கும் அறிவியல் நுட்ப அறிவும் தேவை என்பதை உணர்த்துகிறார் பாரதியார். எனவே வெளிநாட்டினரின் அறிவியல் நுட்பங்களைப் பற்றிக் கூறும் நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்றும், புதிய அறிவியல் நுட்பங்களைக் கூறும் நூல்களை நாமே படைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகின்றார். அவருடைய அறிவியல் பார்வை வேறொரு பாடத்தில் விவரமாக விளக்கப்பட்டுள்ளது.

5.7 தொகுப்புரை

பாரதியார் சமுதாய முன்னேற்றத்திற்குத் தடையாய் இருந்தவற்றைப் போக்க, தகுந்த வழிமுறைகளை எடுத்துச் சொல்லுகிறார். வறுமை ஒழிக்கப்படவேண்டும், பொதுவுடைமைச் சமுதாயம் மலரவேண்டும் என்று விரும்புகிறார்.

சமுதாயத்தைச் சீர்குலைத்த சாதிவேறுபாடுகள், தீண்டாமை, சமயவேறுபாடு இவற்றை ஒழிக்க வேண்டும் என்றார். தூய்மையான வாழ்வே வேறுபாட்டை நீக்கும் என்கிறார். ஆறில் ஒரு பங்கு மக்களைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கியதால் நாடு அடிமைப்பட்டது என்கிறார். சாதிகளற்ற சமுதாயத்தைச் ‘தமிழச் சாதி’ என்று பெயரிட்டுப் புதுமையாக அழைக்கிறார். புதிய பாரத சமுதாயத்தைக் காண்கின்றார். அந்தப் பாரத சமுதாயம் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் என்கிறார்.

மூடநம்பிக்கைகளைச் சாடுகின்றார். அச்சமே இவற்றிக்கு அடிப்படைக் காரணம் என்கிறார். கட்டாயத் திருமணம், குழந்தை மணம், வரதட்சணைக் கொடுமை, விதவைக் கொடுமை இவற்றை நீக்க வேண்டுகிறார். பெண்கல்வி பற்றியும், புதுமைப்பெண்கள் பற்றியும் கூறுகிறார்.

ஆங்கிலக் கல்வியின் அவலத்தையும், தாய்மொழிக் கல்வியின் சிறப்பையும் எடுத்துரைத்து, புதிய கல்வித்திட்டத்தை வகுத்துத் தருகிறார். அறிவியல் நோக்குடன் புதியன படைக்க வேண்டுகின்றார்.

பாரதியார் பாடல்களில் பெண்ணியச் சிந்தனைகள்

பாடம் - 6

பாரதியார் பாடல்களில் பெண்ணியச் சிந்தனைகள்

6.0 பாடமுன்னுரை

இன்று பெண்ணியம் (Feminism) பற்றிப் பரவலாகப் பேசப்படுகின்றது; சுருக்கமாகக் கூறின், பெண்ணியம் என்பது இன்று ஓர் இயக்கமாகவே (Movement) இயங்கி வருகிறது. இன்றைய பெண்களின் சிந்தனைகளைப் பாரதியார் பல ஆண்டுகளுக்கு முன்பே தம் படைப்புகளில் அழுத்தமாகவும் ஆழமாகவும் கூறியுள்ளார். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், பெண் விடுதலை, பெண்கள் விடுதலைக் கும்மி, புதுமைப்பெண், பெண்மை என்னும் நான்கு கவிதைகளில் பெண்ணியம் தொடர்பான எத்தனையோ முற்போக்கான சிந்தனைகளை அவர் வெளியிட்டுள்ளார். கவிதைகளில் மட்டுமன்றி, தமது கட்டுரைகளிலும் கதைகளிலும் வாய்ப்பு நேரும் போதெல்லாம் பெண்ணியம் பற்றிய பல்வேறு கருத்துகளை எழுதிச் சென்றுள்ளார் பாரதியார். அவற்றை எடுத்துச் சொல்ல முனைகிறது இப்பாடம்.

”பாரதி படைத்த பெண்ணுலகிலும் அவரது பார்வையின் தெளிவும் திறனும் ஒளிவிடுகின்றன. அது நமது பழக்க வழக்கங்களின், பாரம்பரியத்தின் திரைகள் அனைத்தையும் ஊடுருவிக் காணும் பார்வை” என்பார்

- வா.செ. குழந்தைசாமி

(பாரதியின் அறிவியல் பார்வை, பக்-40-41)

6. 1 பெண்மை போற்றும் பாரதியார்

மகாகவி பாரதியார் பெண்மை வாழ்க என்றும், பெண்மை வெல்க! என்றும் கூத்தாடியவர்; பெண் விடுதலைக்காகக் கும்மி வடிவில் குரல் கொடுத்தவர்; காற்றே! துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் மீண்டும் உரையாயோ? என்று பிஜித் தீவில் கரும்புத் தோட்டத்தில் பணிபுரியும் இந்தியப் பெண்களின் அவல நிலையைக் கருணை உள்ளத்தோடு எழுத்தில் வடித்தவர்; புதுமைப் பெண்ணைப் படைத்துத் தம் கவிதையுலகில் உலா வரச் செய்தவர்; பாஞ்சாலி சபதத்திற்கு முதன்மை தந்து ஒரு தனிக்காவியம் படைத்தவர்; பாரத மாதாவுக்கு நவரத்தின மாலையும், திருப்பள்ளியெழுச்சியும், திருத்தசாங்கமும் இயற்றியவர். தமிழ்த் தாயாக இருந்து தம் மக்களை எட்டுத்திக்கும் சென்றிடுமாறும் புதிய சாத்திரம் படைக்குமாறும் ஆணையிட்டவர்; ஸரஸ்வதி, லட்சுமி, மாகாளி, பராசக்தி, முத்துமாரி, கோமதி முதலான பெண் தெய்வங்களின் திருப்புகழைத் தம் தோத்திரப் பாடல்களில் நெஞ்சாரப் போற்றிப் புகழ்ந்தவர்; சுதந்திர தேவியினைத் தொழுது வணங்கியவர்; பாரதி அறுபத்தாறில் பெண் விடுதலை பற்றிப் பேசியவர்; தையலை (தையல்= பெண்) உயர்வு செய்! என்று புதிய ஆத்திசூடி புனைந்தவர்.

பாப்பாப் பாட்டு வடிவில் சிறு பாப்பாவுக்கும் சீரிய பாடல் ஆக்கித் தந்தவர்; பெண்மை தான் தெய்வீகமாம் காட்சியடா! என்று குயில் பாட்டில் வியந்து பாடியவர்; கண்ணன் பாட்டில் கண்ணம்மாவைக் கொண்டு வந்து நிறுத்தி, குழந்தையாகவும் காதலியாகவும் குலதெய்வமாகவும் கண்டு களித்தவர்; பூலோக குமாரி, மனப்பெண், கவிதா தேவி, வள்ளி, அம்மாக் கண்ணு, மனைத்தலைவி ஆகியோருக்காக வகைவகையாகப் பாட்டிசைத்தவர்; வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா என்றும், மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் என்றும் ஒரே பாடலில் அடுத்தடுத்துத் தாயையும் தாரத்தையும் ஒருசேர உயர்த்திக் கூறியவர்; பெண் இனிது எனத் தம் வசன கவிதையிலும் விடாமல் பெண்மைக்குப் புகழாரம் சூட்டியவர். இனி, கவியரசர் பாரதியாரின் படைப்புகளில் கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள பெண்ணியச் சிந்தனைகளைக் காண்போம்.

6.2 நிவேதிதை அம்மையார்

பாரதியாரின் தனிவாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும்போது புலனாகும் ஓர் உண்மை உண்டு. பாரதியார், காந்தியடிகள் இருவருக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பு எத்துணை முக்கியமானதோ, அத்துணை முக்கியமானது பாரதியார் – நிவேதிதை அம்மையார் ஆகியோருக்கு இடையே நிகழ்ந்த சந்திப்பு. 1905ஆம் ஆண்டினை ஒட்டி நிகழ்ந்த இச் சந்திப்பு பாரதியாரின் தனிவாழ்வில் சிந்தனைப் போக்கில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது; பெண்மை பற்றிய அவரது பார்வையில் பெருமாற்றத்தினைத் தோற்றுவித்தது.

இதன் விளைவாக, பாரதியார் நிவேதிதை அம்மையாரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டார்; ‘மாதரசி’ என்று அவரை மிகுந்த மதிப்புடனும் மரியாதையுடனும் சுட்டினார். 1909ஆம் ஆண்டில் வெளியிட்ட தமது ஸ்வதேச கீதங்கள் என்னும் நூலின் இரண்டாம் பாகத்தை நிவேதிதை அம்மையாருக்கு ‘ஸமர்ப்பணம்’ (dedication) செய்தார். ஒருமுறை நிவேதிதை அம்மையார் நோய்வாய்ப்பட்டிருந்தபோது விரைவில் அவர் உடல்நலம் பெற இறையருளை வேண்டி ‘இந்தியா’ இதழில் ஒரு கட்டுரை எழுதினார்; பின்னாளில் ‘தாய் நிவேதிதையைத் தொழுது’ ஒரு பாடலும் புனைந்தார்.

பெண்மை பற்றிய பாரதியாரின் கண்ணோட்டத்தில் ஒரு நல்ல மாற்றம் விளைவதற்கு நிவேதிதை அம்மையார் தூண்டுதலாக இருந்தார் என, பாரதி சரித்திரம் என்னும் நூலில் அவரது துணைவியார் செல்லம்மா பாரதி குறிப்பிட்டுள்ளார் (பக். 37-38). மேலும், “மகனே! புருஷர்கள் அனேகம் பேர் படித்தும் ஒன்றும் அறியாத சுயநல வெறி கொண்டவர்கள். ஸ்திரீகளை அடிமைகளென மதிப்பவர்கள். ஒரு சிலர் உன் போன்ற அறிவாளிகள், அவர்களும் கூட இப்படி அறியாமையில் மூழ்கி, ஸ்திரீகளுக்குச் சம உரிமையும் தகுந்த கல்வியும் கொடுக்காவிட்டால், எப்படி நாடு சமூகச் சீர்திருத்தம் அடையும்? . . . சரி, போனது போகட்டும். இனிமேலாகிலும் அவளைத் தனியென்று நினைக்காமல், உனது இடக்கை என்று மதித்து, மனத்தில் அவளைத் தெய்வமெனப் போற்றி நடந்து வருதல் வேண்டும்” (பக். 38) என்று நிவேதிதை அம்மையார் பாரதியிடம் கூறியதாக எழுதியுள்ளார் செல்லம்மா. நிவேதிதையின் சொல்லை அப்படியே ‘குருஉபதேசமாக’ ஏற்று அதன்படி செயல்பட்டார் பாரதியார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

6.3 கற்பைப் பொதுவில் வைப்போம்

ஐரோப்பாவில் ‘விடுதலைக் காதல்’ (Free Love) என்னும் கொள்கையைக் கடைப்பிடிப்போர் ஒரு சாரார் உள்ளனர். ‘மாதர் எல்லாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார்; பிரியம் வந்தால் கலந்து, அன்பு பிரிந்துவிட்டால் வேதனை ஒன்றில்லாதே பிரிந்து சென்று வேறொருவன் தனைக் கூட வேண்டும் என்பார்’ என்பது அவர்களின் காதல் கொள்கை. பாரதியாருக்கு இக்கொள்கையில் சிறிதும் உடன்பாடு இல்லை. இக் காதலைப் ‘பொய்மைக் காதல்’ என்றும், இக்கொள்கையினரை ‘வீரமிலா மனிதர்’ என்றும் ‘பாரதி அறுபத்தா’றில்(54) அவர் கடுமையாகச் சாடுகின்றார். அத்துடன், ஒருபுறம் பெண் இன்பத்தை நுகர்வதையே நோக்கமாகக் கொண்டு, மறுபுறம் கற்பை உபதேசிக்கும் ஆண்களைப் பார்த்து அவர் கூரிய கேள்விக் கணை ஒன்றைத் தொடுக்கின்றார்.

ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்

அப்போது பெண்மையும் கற்பு அழிந் திடாதோ?

நாணற்ற வார்த்தை அன்றோ? வீட்டைச் சுட்டால்

நலமான கூரையும் தான்எரிந் திடாதோ?

(பாரதி அறுபத்தாறு, : 56)

என்பதே பாரதியார் ஆணினத்தை நோக்கித் தொடுக்கும் கூரிய, பொருள் பொதிந்த கேள்விக்கணை ஆகும்.

ஒரு பெண்ணின் கற்பு போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், அதற்கு அவளைச் சார்ந்த ஆணும் கற்புடையவனாக இருக்கவேண்டும்; ஆண் தனது கற்பு நெறியைக் கைவிட்டுத் தவறு செய்ய முற்பட்டால், அப்போது பெண்ணின் கற்பும் பிழைபடும். இக் கருத்தினை விளக்குவதற்குப் பாரதியார் ஓர் எளிய உவமையைக் கையாண்டுள்ளார். ஒரு வீடு தீப்பற்றி எரிகிறது என்றால், அதன் கூரையும் தான் அதனுடன் சேர்ந்து பற்றி எரியும்; முடிவில் அழியும். அது போல் தான் ஓர் ஆணின் ஒழுக்கக் குறைபாடு, அவனைச் சார்ந்த பெண்ணின் வாழ்விலும் இழுக்கத்தை ஏற்படுத்தவே செய்யும்.

எனவே, பாரதியாரின் கருத்தில் கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் உரியதன்று; ஆண், பெண் இருவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்றே ஆகும். இந்நிலையில், ‘கற்பு’ என்ற ஒற்றைச் சொல்லால் சுட்டாமல், ‘கற்பு நிலை’ என்ற ஒரு புதிய தொடரைக் கையாண்டுள்ளார் பாரதியார்.

கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

(பெண்கள் விடுதலைக்கும்மி, செய்யுள் : 5)

என்பது அவர் இசைக்கும் புதிய ‘பெண்கள் விடுதலைக் கும்மி’ ஆகும். இங்கே கற்பினை ஆண், பெண் இருவருக்கும் பொதுவாக்கி ‘கற்பு நிலை’ என்ற ஒரு பொருள் பொதிந்த சொல்லினை உருவாக்கியுள்ளார் கவியரசர்.

ஆண் ஒழுக்கம் தவறினால், பெண் எப்படி அதைப் பேண முடியும்?

கவிதையில் மட்டுமன்றி, கட்டுரையிலும் பாரதியார் கற்புநெறி பற்றிய தம் கருத்தினைப் பதிவு செய்துள்ளார். சான்றாக, ‘மாதர்’ பகுதியில் ‘பதிவிரதை’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையை இங்கே சுட்டிக்காட்டலாம். அதில் அவர், ‘ஒழுக்க நெறி என்பது ஆண் – பெண் இருவருக்கும் பொதுவானது; பெண்ணின் ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்றால், அதற்கு ஆணும் ஒழுக்கம் தவறாமல் இருக்க வேண்டும் என்ற கருத்தைத் தமக்கே உரிய பாணியில் தருக்க நெறியைப் பின்பற்றி வெளியிட்டுள்ளார்; ஆண்களின் பரத்தைமை இழுக்கத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். இதோ, பாரதியாரின் சொற்களிலேயே அக்கருத்தினைக் காண்போம்:

‘ஸ்திரீகள் பதிவிரதையாக இருக்க வேண்டும்’ என்று எல்லோரும் விரும்புகிறார்கள். அதிலே கஷ்டம் என்னவென்றால், ஆண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை. ஆண் மக்களில் ஒவ்வொருவனும் தன் மனைவி, மக்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ, அத்தனை ஆவல் இதர ஸ்திரீகளின் பதிவிரத்யத்திலே காட்டுவதில்லை. . .

அட, பரம மூடர்களா! ஆண் பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் எப்படிப் பதிவிரதையாக இருக்க முடியும்? கற்பனைக் கணக்குப் போட்டுப் பார்ப்போம். ஒரு பட்டணத்தில் லக்ஷம் ஜனங்கள். ஐம்பதினாயிரம் பேர் ஆண்கள், ஐம்பதினாயிரம் பேர் பெண்கள். அதில் நாற்பத்தையாயிரம் ஆண்கள் பரஸ்திரீகளை இச்சிப்பதாக வைத்துக் கொள்வோம். அதிலிருந்து குறைந்த பக்ஷம் நாற்பத்தையாயிரம் ஸ்திரீகள் பர புருஷர்களின் இச்சைக்கிடமாக வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் இருபதனாயிரம் புருஷர்கள் தம் இச்சையை ஓரளவு நிறைவேற்றுவதாக வைத்துக் கொள்வோம். எனவே, குறைந்த பக்ஷம் இருபதனாயிரம் ஸ்திரீகள் வ்யபசாரிகளாக இருத்தல் அவசியமாகிறது. ”

(பாரதியார் கட்டுரைகள், பக். 131 – 132)

‘அட, பரம மூடர்களா! ‘ – எத்துணைக் கடுமையான, காரமான, காட்டமான சாடல் கவனித்தீர்களா?

6.4 புதுமைப் பெண்

பாரதியார் தம் எதிர்பார்ப்பு, ஏக்கம், கனவு, கற்பனை, குறிக்கோள், வேட்கை ஆகிய அனைத்தையும் சம விகிதத்தில் கலந்து உருவாக்கிய ஒரு கற்பனை ஓவியமே ‘புதுமைப் பெண்’. தமது கற்பனையில் உருவான ‘புதுமைப் பெண்’ணுக்குப் பல்வேறு சிறப்புப் பெயர்களையும் அடைமொழிகளையும் அணிவித்து மகிழ்ந்துள்ளார்: ‘மாதரசு’, ‘பெண்மைத் தெய்வம்’, ‘செம்மை மாதர்’, ‘உதய கன்னி’, ‘வீரப் பெண்’, ‘இளைய நங்கை’ என்பன இவ்வகையில் சிறப்பாகக் குறிக்கத்தக்கவை. ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டும் எனக் காலங்காலமாகப் பேசப்பட்டு வந்த அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் மரபு வழியான குணங்களை அடியோடு மாற்றி, ‘நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்’ என்று முற்றிலும் புதுமையான முறையில் பாடியுள்ளார் கவியரசர். மேலும், தாம் கனவு காணும் ‘புதுமைப் பெண்’ணின் சொற்களும் செய்கைகளும் எத்தகையனவாய் இருக்கும் என்பதையும் அவர் அழகுறச் சுட்டிக் காட்டியுள்ளார்:

ஞான நல்லறம்வீர சுதந்திரம்

பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.. .

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்.. .

இலகு சீருடை நாற்றிசை நாடுகள்

யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்து இங்கே

திலக வாணுதலார் தங்கள் பாரத தேசம் ஓங்க உழைத்திடல் வேண்டுமாம்

(புதுமைப் பெண், செய்யுள் : 4,7,8)

(திறம்புவது = மாறுபடுவது, தவறுவது; வாணுதலார் = ஒளி பொருந்திய – நெற்றி உடையவர்கள்)

‘அச்சமும் மடமும் நாணும் முந்துறுத்த

நிச்சமும் பெண்பாற்கு உரிய’

(தொல், பொருள், களவியல்.நூற்.9)

(நிச்சமும் – எப்பொழுதும்)

என்று தொல்காப்பியம் கூறியது. சங்க இலக்கியம்

வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல் மனையுறை

மகளிர்க்கு ஆடவர் உயிர்

(குறுந்தொகை,135)

(வாள்நுதல் – ஒளி பொருந்திய அழகிய நெற்றியை உடைய).

என்று பெண்களுக்கு அவர்களது வீட்டையே உறைவிடமாக்கி – உலகமாக்கிப் பாடியது; ‘மனையுறை மகளிர்’ என்றே பெண்களைச் சுட்டியது. பாரதியாரோ தம் முன்னோர் மொழிந்த இக்கருத்துகளில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டார். ‘விலகி வீட்டில் ஓர் பொந்தில் வளர்வதை, வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்’ என்று பாடினார். பெண்களை வீட்டிற்கு மட்டுமன்றி, நாட்டிற்கும் உரியவர்களாக – நாட்டிற்காக உழைப்பவர்களாக – உயர்த்திப் பாடியுள்ளார். ‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ என்று இருந்த பத்தாம் பசலித்தனமான போக்கினை அடியோடு மாற்ற விரும்பினார். ‘உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும், ஓது பற்பல நூல்வகை கற்கவும், பெண்கள் நாற்றிசை நாடுகளுக்கும் செல்ல வேண்டும்’ என்று பாடினார். பெண்களின் எழுச்சிக்கும் உயர்ச்சிக்கும் ஏற்ற வழிவகைகளைக் குறிப்பிட்டுள்ளார்.

பாரதியார் படைத்துள்ள ‘புதுமைப் பெண்’ணுக்கு வாழ்வைப் பற்றியும் ஒரு தனிப்பட்ட கருத்து உள்ளது. நற்குடிப் பெண்ணுக்குக் கற்பு என்பது இயல்பான ஒரு பண்பு நலன்; இதிலே அவளுக்குக் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால், பெண்ணின் கற்பு நலத்தைக் காக்கிறேன் என்று சொல்லி, அவளுக்குக் கொடுமைகள் பல செய்வதிலும், அவளது அறிவை மழுங்கச் செய்வதிலும் முனையும் ஆணின் செயலில் அவளுக்குச் சற்றும் உடன்பாடு இல்லை.

குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம்

கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந்

நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்

(புதுமைப் பெண், 5)

என நறுக்குத் தெறித்தாற் போல் நயம்பட உரைக்கிறாள் அவள். மேலும், அவள் ‘அடிமைச் சுருளைத் தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டும்’ எனக் கருதுகிறாள்; ‘பேரிருளாம் அறியாமையில் அமிழ்ந்து, அவலம் எய்தி, கவலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ள ஆயத்தமாக இருக்கிறாள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆணைப் பற்றிய அவளது பார்வை – பாவனை – தெள்ளத் தெளிவாகவும் மிகத் துல்லியமாகவும் உள்ளது. எல்லா ஆண்களுமே அவளுக்கு எதிரிகள் அல்லர்; தனக்கு எதிராகக் கொடுமை செய்யும் ஆண்களையே அவள் வெறுக்கிறாள்; சாடுகிறாள்; அவர்களிடம் இருந்து விடுதலை பெற்றிட எண்ணுகிறாள். நல்ல ஆணின் துணையோடு – தோழமையோடு – வாழவேண்டும், அவன் போற்றிடும் வண்ணம் வாழ வேண்டும் என்ற எண்ணமே அவளுக்கு முனைப்பாக உள்ளது.

ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்

இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ

(புதுமைப்பெண். 9)

என அவளது எண்ணத்தினை எடுத்துக் காட்டியுள்ளார் பாரதியார்.

6.4.1 புதுமைப் பெண் : பாஞ்சாலி பாரதியார் படைத்திருக்கும் பாஞ்சாலி, அவர் கனவு கண்ட புதுமைப் பெண்ணின் வடிவம். எனவே தான், தன் கணவன் தன்னைச் சூதாட்டத்தில் பணையப் பொருளாக வைத்தான் என்பதைக் கேள்விப்பட்டதும் பொங்கி எழுகிறாள். தன்னை அழைத்துச் செல்ல வந்த தேர்ப்பாகனிடம் நியாய நுணுக்கங்களைக் கேள்வி ஆக்குகிறாள். பாண்டவர்கள் தம்மை இழந்த பின்னர் என்னைப் பணையம் வைத்தனரா- அல்லது – முதலில் என்னை இழந்து, பின்னர் தம்மைப் பணையம் வைத்தனரா எனக் கேட்கிறாள். தம்மை முன்னரே இழந்திருந்தால், அவர்களுக்குத் திரௌபதியைப் பணையம் வைக்கும் உரிமை இல்லை என்பதால் இவ் விவரத்தைக் கேட்டு வரும்படி சொல்கிறாள் தேர்ப்பாகனிடம்.

வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர்தாம்

என்னை முன்னே கூறி இழந்தாரா? தம்மையே

முன்னம் இழந்துமுடித்து என்னைத் தோற்றாரா?

என்று ஸபையில்இச் செய்தி தெரிந்துவா!

(பாஞ்சாலி சபதம், 105)

என்று சொல்லித் திருப்பி அனுப்புகிறாள். தனது கேள்விக்குப் பதிலளிக்க இயலாமல் திணறும் தேர்ப்பாகனிடம்,

நாயகர்தாந் தம்மைத்தோற்றபின் – என்னை

நல்கும் உரிமைஅவர்க்கு இல்லை – புலைத்

தாயத்தி லேவிலைப் பட்டபின் – என்ன

சாத்திரத் தால்எனைத் தோற்றிட்டார்?

(பாஞ்சாலி சபதம், 256)

(நல்கும் = கொடுக்கும்; புலை = கீழான; தாயத்திலே = பகடை (dice) யிலே

மூடன் துச்சாதனன் அவள் கூந்தலைப் பற்றிச் சபைக்கு இழுத்துச் செல்கிறான். அங்கும் திரேளபதி கூடியிருந்தோரிடம் நீதி கேட்கிறாள். சாத்திரநூல்கள், ‘ஆடவருக்கு ஒப்பில்லை மாதர். ஒருவன் தன் தாரத்தை விற்றிடலாம்; தானம் என வேற்றவர்க்குத் (அயலவருக்குத்) தந்திடலாம்’ என்று கூறியிருப்பதால், ‘தீங்கு’ எனத் தெரிந்தும் ‘தடுக்கும் திறம்’ இல்லை என வீட்டுமாச்சாரியன் சொல்கிறார். அவமானம், ஆவேசம், இயலாமை அனைத்தும் ஒன்று சேர, வெடிப்புறப் பேசுகிறாள் பாஞ்சாலி:

பேயரசு செய்தால்,பிணந்தின்னும் சாத்திரங்கள்,

மாயம் உணராத மன்னவனைச் சூதாட

வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ நேர்மையோ?

பெண்டிர் தமையுடையீர்; பெண்களுடன் பிறந்தீர்!

பெண்பாவம் அன்றோ? பெரிய வசை கொள்வீரோ?

(பாஞ்சாலி சபதம், திரௌபதி சொல்வது 67 )

என்று தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து ஆவேசமாகக் குரல் எழுப்புகிறாள்.

இங்ஙனம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடுகின்ற வீரப் பெண்ணாகப் பாஞ்சாலியைப் படைத்துக் காட்டியுள்ளார் பாரதியார். மகாபாரதத்தில் எத்தனையோ பகுதிகள் இருக்கின்றன. ஆயினும், பெண்ணின் எழுச்சியைக் காட்டும் ‘சூதுபோர்ச் சருக்கம்’ என்னும் பகுதியை எடுத்துக் கொண்டு, ‘பாஞ்சாலி சபதம்’ என அதற்குப் பெயர் இட்டிருப்பது, பெண்கள் வீறுகொண்டு எழ வேண்டும் என்னும் பாரதியாரின் விருப்பத்தையே வெளிப்படுத்துகிறது. எழுத்தாளர் நா.பார்த்தசாரதி குறிப்பிடுவது போல, “பாரதிக்கு முன்பு மகாபாரதக் கதையைப் பாடிய அத்தனை கவிகளும் பாரதத்தின் எல்லாக் கதாபாத்திரங்கள் மேலும், சிறப்பாகப் பாண்டவர்கள் மேலும் கவனமும் கருணையும் செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் மகாகவி பாரதி பாடிய பாஞ்சாலி சபதத்திலோ கவியின் கவனமும் கருணையும் எல்லாமே பாஞ்சாலியின் மேல் மட்டும் செலுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்” (தமிழகம் தந்த மகாகவி, பக். 306-307).

6.5 பெண் விடுதலை': பாரதியின் கருத்துகள்

அரசியல், சமூக, பொருளாதார விடுதலைகளுக்குத் தந்துள்ள முதன்மையைப் பாரதியார் பெண் விடுதலைக்கும் தந்துள்ளார். பெண் விடுதலை, பெண்கள் விடுதலைக் கும்மி எனக் கவிதையில் பாடிய அவர், ‘பெண் விடுதலை’ என்ற தலைப்பில் மூன்று தொடர் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை

கற்பு நெறியை ஆண், பெண் இருவர்க்கும் பொதுவாக்கிக் ‘கற்பு நிலை’ என்று கவிதைகளில் பாரதியார் பாடினார். தம் கட்டுரைகளிலும் கதைகளிலும் பெண்களுக்கு எதிராக ஆண்கள் செய்யும் பலவிதமான கொடுமைகளைக் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். பெண்களுக்குக் கொடுமைகள் புரியும் ஆண்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். “அவர்களைச் செக்கு மாடுகளாகப் பாவிப்போர் ஒரு திறத்தார். பஞ்சுத் தலையணைகளாகக் கருதுவோர் மற்றொரு திறத்தார். இரண்டும் பிழை”; (பாரதியார் கட்டுரைகள், பக்.129) என ‘மாதர்’ பகுதியில் ‘தமிழ்நாட்டின் விழிப்பு’ என்ற தலைப்பில் எழுதி உள்ளார். பெண்ணைப் பற்றிய ஆண்களின் பிழையான நோக்கினைச் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், அதே கட்டுரையின் வேறு ஓர் இடத்தில் “இன்று தமிழ்நாட்டில் மாத்திரமேயல்லாது பூ மண்டல முழுதிலும், பெண்ணைத் தாழ்வாகவும் ஆணை மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு; அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம்; அநீதிகளுக்கெல்லாம் கோட்டை; கலியுகத்திற்குப் பிறப்பிடம்” (பக். 130) எனக் கூறியுள்ளார். அவரது நோக்கில், “விவாகம் செய்துகொண்ட புருஷனுக்கு ஸ்திரீ அடிமையில்லை; உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்றுகோல்; ஜீவனிலே ஒரு பகுதி; சிவனும் பார்வதியும் போலே, விஷ்ணுவும் லட்சுமியும் போலே விளங்குகிறார்கள்.”

(பாரதியார் கட்டுரைகள், பக். 130).

விதவா விவாகம் செய்யத்தக்கது

இனி, பாரதியாரின் கதைகளில் இடம்பெற்றுள்ள பெண்ணியச் சிந்தனைகளைக் குறித்துக் காண்போம். அவரது ‘சந்திரிகையின் கதை’ இவ்வகையில் முதலில் குறிப்பிடத்தக்கது. இதில் வரும் விசாலாட்சிக்கு வயது இருபத்தைந்து. பத்து வயதில் கன்னிப் பருவத்தில் விதவையான இளம்பெண் அவள். அவளது அண்ணன் மனைவியான கோமதி இறக்கும் தருவாயில் அவளிடம் கூறும் உருக்கமான சொற்கள் வருமாறு:

“விசாலாட்சி! விசாலாட்சி! நான் இரண்டு நிமிஷங்களுக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டேன். என் பிராணன் போகு முன்னர் உன்னிடம் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறேன். அதை உன் பிராணன் உள்ள வரை மறந்து போகாதே! முதலாவது, நீ விவாகம் செய்துகொள். விதவா விவாகம் செய்யத்தக்கது. ஆண்களும் பெண்களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால், ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய், ஆண்களுக்குப் பெண்கள் அஞ்சி ஜீவனுள்ள வரை வருந்தி வருந்தி மடிய வேண்டிய அவசியமில்லை. ஆதலால், நீ ஆண்மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன் சென்னைப் பட்டணத்துக்குப் போய் அங்குக் கைம்பெண் விவாகத்துக்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து, அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு. இரண்டாவது, நீயுள்ள வரை என் குழந்தையைக் காப்பாற்று. அதற்குச் ‘சந்திரிகை’ என்று பெயர் வை”

(பாரதியார் கதைகள், பக். 170)

கோமதி கூறிய இவ்வறிவுரைகளின் படி விசாலாட்சி தக்க ஆண்மகன் ஒருவனிடம் தன் வாழ்க்கையை ஒப்படைக்க விரும்பி, அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறாள்; ஆனால், அம் முயற்சியின் போது, அவள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் மிகமிகக் கசப்பானவையாகவே அமைகின்றன. இதோ, கதையின் பிற்பகுதியில் பாரதியாரே விசாலாட்சியின் அனுபவங்களைக் குறித்துப் பின்வருமாறு எழுதுகிறார்:

“அவரிடம் (தாயுடன் பிறந்த மாமன்) பணத்தை வாங்கிக்கொண்டு விசாலாட்சி புறப்பட்டு வழி நெடுக ஸ்தல யாத்திரை செய்த சமயத்தில் அவளுடைய கற்பையழிக்கவும், அவள் கையிலிருந்த பணத்தை அபகரித்துக் கொள்ளவும், அல்லது அவ்விரண்டு வகை பாதகச் செயல்களையும் கலந்து செய்யவும் பல ஆண் மக்கள் முயன்றனர். ஆனால் அவளை சாஸ்த்ரோக்தமாக (சாத்திர நெறிக்கு ஏற்றாற்போல) விவாகம் செய்து கொண்டு அவளுடன் சதிபதியாக (கணவன் மனைவியாக) வாழக்கூடியவனாக அவளுக்கு எவனும் தென்படவில்லை”

(பாரதியார் கதைகள், பக். 222).

‘சந்திரிகையின் கதை’யில் இடம்பெறும் மேற்குறித்த இரு பகுதிகளின் வாயிலாகப் புலனாகும் பாரதியாரின் உள்ளக் கருத்துகள் இரண்டு. அவை வருமாறு:

1. பாரதியாருக்குக் கைம்பெண் மறுமணத்தில் – (விதவா விவாகத்தில்) உடன்பாடு உள்ளது. ‘சந்திரிகையின் கதை’யில், ‘விதவா விவாகம் செய்யத்தக்கது’ என வரும் கோமதியின் கூற்றின் வாயிலாக இதனை உணர முடிகின்றது.

2. பெண்களுக்கு எதிராகச் சுயநல உணர்வோடு ஆண் மக்கள் எழுதி வைத்திருக்கும் கருத்துகளையும் (‘நீசத்தனமான சுயநல சாஸ்திரம்’) பெண்களின் கற்பைச் சூறையாட நினைத்து ஆண்கள் செய்யும் பலவிதமான கொடுஞ் செயல்களையும் எண்ணும்போது பாரதியாரின் உள்ளத்தில் ஆத்திரமும் கோபமும் பொங்கி எழுகின்றன.

6.5.1 பெண் விடுதலைக்காகச் செய்ய வேண்டுவன தமது கட்டுரைகளில் பாரதியார் பெண்களுக்கு விடுதலை கொடுக்கும் வகையில் செய்யத்தக்கன எவை, செய்யத்தகாதன எவை என்பவற்றை அக்காலச் சூழ்நிலையின் அடிப்படையில் விவரித்துள்ளார். விருப்பமில்லாத விவாகம், குழந்தைத் திருமணம் இவை கூடாது என்கிறார். விவாகத்திற்குப்பின் விரும்பினால் கணவனைவிட்டு விலகவும் அல்லது விவாகமே செய்யாமல், சுயமாகத் தொழில் செய்து கௌரவமாக வாழவும் பெண்களுக்கு உரிமை தர வேண்டும் என்கிறார். கணவனைத் தவிர வேறு ஆடவருடன் பேசக்கூடாது என்ற நிபந்தனையை ஒழிக்க வேண்டும் என்கிறார். பெண்களுக்கும் தந்தையர் வழிச்சொத்தில் சமபங்கும், உயர்கல்வி பயிலும் உரிமையும், அரசு அலுவலகப் பணிகளை ஏற்கும் உரிமையும் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.

“ஸ்திரீகளை மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம் மஹரிஷிகளாக முயலுதல் மூடத்தனம். பெண் உயராவிட்டால் ஆண் உயராது” (பக். 141-142) என்னும் முத்தாய்ப்பான கருத்துடன் அக் கட்டுரையை முடித்துள்ளார் கவியரசர்.

ஆணுக்குச் சமமான கல்வி

‘ஆண்மக்கள் பெண்மக்களைத் தங்களுக்குச் சரிநிகர் சமானமாக எப்போது மதிப்பார்கள்? வேறு வகையாகக் கூறினால், ஆண்கள் தங்களைத் தக்கபடி மதிக்க வேண்டும் என்றால் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்கிறீர்களா? இதோ, பாரதியாரே ‘தமிழ்நாட்டு மாதருக்கு’ என்ற கட்டுரையில் இவ்வினாவுக்கான விடையினைக் கூறியுள்ளார். அவர் தமிழ்நாட்டு மாதருக்கு விடுக்கும் செய்தி (Message) இதுதான்:

“ஆண்களுக்கு ஸமமான கல்வித் திறமை பெண்களுக்குப் பொதுப்படையாக ஏற்படும்வரை, ஆண்மக்கள் பெண்மக்களைத் தக்கபடிமதிக்க மாட்டார்கள்; தாழ்வாகவே நடத்துவார்கள்”

(பாரதியார் கட்டுரைகள், பக். 156).

இதே கருத்தை வேறு வடிவில் பாரதியார் தம் கவிதையிலும் அறிவிக்கக் காண்கிறோம்:

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி

பேணி வளர்த்திடும் ஈசன்;

மண்ணுக்குள்ளே சிலமூடர் – நல்ல

மாதர் அறிவைக் கெடுத்தார்.

கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்தி

காட்சி கெடுத்திட லாமோ?

பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்

பேதமை யற்றிடும் காணீர்

(முரசு. 9, 10)

‘பெண்கள் அறிவை வளர்த்தால் இந்த வையகம் பேதைமை அற்றிடும்’ என்பது பாரதியாரின் அழுத்தம் திருத்தமான – ஆணித்தரமான கருத்து.

தர்ம யுத்தம்

தங்களுக்கு எதிராகக் கொடுமைகளும் பாதகங்களும் செய்யும் ஆண்மக்களைப் பெண்கள் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது பற்றியும் பாரதியார் ஆழமாகச் சிந்தித்துள்ளார். இவ் வகையில் தமிழ்ப் பெண்கள் செய்யத் தக்கது யாது என்று அவர் தம் கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத்தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மைத்துனராகவும், தந்தை பாட்டனாராகவும், கணவர் காதலராகவும் வாய்த்திருக்கின்றனர். இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதை நினைக்கும்போது, என்னுடைய மனம், குருக்ஷேத்ரத்தில் போர் தொடங்கிய போது அர்ஜுனனுடைய மனது திகைத்ததுபோலே, திகைக்கிறது. ஆண்மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்கத் தகாத காரியம். அது பற்றியே ‘சாத்வீக எதிர்ப்பி’னால் இவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டுமென்று நான் சொல்கிறேன்.”

(பாரதியார்கட்டுரைகள், பக். 144).

பாரதியார் இங்கே சுட்டும் ‘சாத்வீக எதிர்ப்பு முறை’ என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? இதோ, இவ் வினாவுக்கான தக்க விடையினையும் அவரே தொடர்ந்து கூறுகின்றார். அவரது சொற்களிலேயே அதனைக் காண்போம்:

‘நான் எல்லா வகையிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மத முண்டானால் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால் இன்று இராத்திரி சமையல் செய்ய மாட்டேன். எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போட மாட்டேன். நீ அடித்து வெளியே தள்ளினால் ரஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன்’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிடவும் வேண்டும். இங்ஙனம் கூறும் தீர்மான வார்த்தையை, இந்திரிய இன்பங்களை விரும்பியேனும், நகை, துணி முதலிய வீண் டம்பங்களை இச்சித்தேனும் (விரும்பியேனும்), நிலையற்ற உயிர் வாழ்வைப் பெரிதாகப் பாராட்டியேனும் மாற்றக்கூடாது… நமக்கு நம்முடைய புருஷர்களாலும், புருஷ சமூகத்தாராலும் ஏற்படக்கூடிய கொடுமைகள் எத்தனையோ யாயினும், எத்தன்மை யுடையனவாயினும் அவற்றால் நமக்கு மரணமே நேரிடினும், நாம் அஞ்சக்கூடாது… ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. தர்மத்துக்காக மடிகிறவர்களும் மடியத்தான் செய்கிறார்கள்; ஸாமான்ய ஜனங்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஆதலால் ஸஹோதரிகளே, பெண் விடுதலைக்காக இந்த க்ஷணத்திலேயே தர்ம யுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம். நமக்கு மஹாசக்தி துணைசெய்வாள்”

(பாரதியார்கட்டுரைகள், பக்.145).

இன்றைக்கு நாம் காணும் பெண்களின் சமூக நிலை வேறு, பாரதியார் காலத்தில் இருந்த சமூக நிலை வேறு, இடையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஏற்புடைய ஒன்று. இம்மாற்றத்திற்குக் காரணமாக எத்தனை பேர் பாரதியின் அறிவுரையைப் பின்பற்றி தர்ம யுத்தம் செய்தார்கள் என்பது சொல்ல முடியாது. தர்ம யுத்தங்கள் நடந்தனவோ இல்லையோ, பாரதியின் வார்த்தைக் கூர்மையும்,பாரதி போன்றோரின் செயல் ஆர்வமும், மக்களுடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் ஏற்புடையதாக மாற்ற உதவின என்பது உண்மை.

6.6 தொகுப்புரை

கற்பை ஆண் – பெண் இருவர்க்கும் பொதுவாக்கிக் ‘கற்பு நிலை’ என்று பாடியிருப்பதும், ‘புதுமைப் பெண்’ணைப் படைத்திருப்பதும், ‘பாஞ்சாலி சபதத்தைக் காப்பியப் பொருள் ஆக்கியிருப்பதும், பெண்களின் கற்பை அழிப்பதற்கு முயலும், பெண்களுக்குப் பல வகையிலும் கொடுமைகள் செய்யும் ஆண்களுக்கு எதிராக அழுத்தமாகவும் ஆவேசமாகவும் குரல் கொடுத்திருப்பதும், ‘பெண் விடுதலை’க்கான வழிமுறைகளைச் சுட்டிக்காட்டி இருப்பதும், ‘விதவா விவாகம் செய்யத்தக்கது’ என்ற முற்போக்கான எண்ணத்தைப் பதிவு செய்திருப்பதும் பாரதியார் எப்போதும் பெண்களின் கட்சி பேசுகிற ஓர் ஆண்மை வீரர் என்பதைப் பறைசாற்றி நிற்கின்றன.