எழுத்துப் பிறப்பு – பொது விளக்கம்
ஒவ்வோர் எழுத்தும் பேச்சொலியாக இருந்து, பின்பே எழுத்து ஒலியாகப் பதிவு செய்யப்படுகின்றது. எனவே பேச்சிற்கு அடிப்படையாக அமையும் ஒலிகள் எவ்வாறு உருவாயின என்பதை இலக்கண நூலார் ஆராய்ந்து உள்ளனர். உடலில் இருந்து தோன்றி மேலே எழும் காற்று, எழுத்தொலியாக வெளிப்படும் நிகழ்வு எழுத்துப் பிறப்பு எனப்படும். இத்தகைய எழுத்து ஒலிகள் பிறப்பதற்கு உயிரின் முயற்சியும் உறுப்புகளின் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றன.
வெவ்வேறு ஒலிகள்
ஆனால், எல்லா எழுத்தொலியும் தோன்றுவதற்கு இந்த எட்டு உறுப்புகளின் முயற்சியும் ஒத்துழைப்பும் தேவைப்படுவது இல்லை. தேவைப்படும் உறுப்புகள் பொருந்தி இயங்கும் தன்மைக்கேற்பவே வெவ்வேறு ஒலிகள் தோன்றும். ஒவ்வோர் எழுத்தொலியும் தோன்றுவதற்கு வெவ்வேறு உறுப்புகளின் ஒத்துழைப்புக் காரணமாக அமைகின்றது.
இவ்வகையில், தொல்காப்பியரின் கருத்துப்படி, உயிரின் முயற்சியால் கொப்பூழில் இருந்து காற்று எழுகின்றது. இக்காற்று மேல்நோக்கிச் செல்கின்றது. இம்முயற்சிக்கு உறுப்புகள் துணை செய்கின்றன. இந்த உறுப்புகளில் அக்காற்று சென்று பொருந்துகின்றது. மேல்நோக்கி எழும் இக்காற்று பொருந்தும் உடல் உறுப்புகளைக் குறிப்பிடும் போது, தலை, கழுத்து, நெஞ்சு என்ற வரிசையில் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.
(1)காற்றுப் பொருந்தும் உறுப்புகள்.
(2)ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்கும் உறுப்புகள்
என்பன.
காற்றுப் பொருந்தும் உறுப்புகள்:
காற்றுப் பொருந்தும் உறுப்புகள் 3 ஆகும். அவை,
தலை,
கழுத்து,
நெஞ்சு.
என்பன.
ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்கும் உறுப்புகள்:
எழுத்தொலிகள் தோன்றுவதற்கு ஒன்றுடன் ஒன்று இயைந்து ஒத்துழைக்கும் உறுப்புகள் எட்டு ஆகும். அவை, முதலில் கூறப்பட்ட தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய மூன்றுடன்,
பல்,
இதழ்,
நாக்கு,
மூக்கு,
அண்ணம் ஆகிய ஐந்தும், சேர்ந்து 8 ஆகும்.
(1)உயிரின் முயற்சி
(2)உடல் உறுப்புகளின் ஒத்துழைப்பு
ஆகியன.
குறைபாடில்லாத நிறைந்த, உயிரின் முயற்சியினால் உள்ளே இருக்கும் காற்றானது மேலே எழும்பி நிற்கும்; அவ்வாறு எழுகின்ற காற்று, செவிகளுக்குக் கேட்கும்படியான அணுக்கூட்டமாகத் திரண்டு, மார்பு, கழுத்து, தலை, மூக்கு என்ற நான்கு இடங்களில் பொருந்தும்; பின்பு இதழ், நாக்கு, பல், அண்ணம் ஆகிய நான்கு உறுப்புகளின் இயக்கத்தினாலும் வேறுவேறு எழுத்துகளுக்கு உரிய ஒலிகள் தோன்றுகின்றன. இவ்வாறே எழுத்துகள் ஒலிவடிவம் பெறுகின்றன. இதனை எழுத்துகளின் பிறப்பு என்று கூறலாம் என்று நன்னூல் தெரிவிக்கின்றது.
(1)மார்பு,
(2)கழுத்து,
(3)தலை (உச்சி)
(4)மூக்கு
என்பன.
(1)இதழ்
(2)நாக்கு
(3)பல்
(4)அண்ணம்
என்பன ஆகும்.
இந்த நான்கு உறுப்புகளில் எந்த உறுப்பின் முயற்சியால் ஓர் எழுத்தொலி பிறக்கின்றதோ, அந்த எழுத்திற்கு அந்த உறுப்பு பிறப்பிடம் என்று அழைக்கப்படுகின்றது. எனவே உறுப்புகளின் ஒத்துழைக்கும் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு எழுத்தொலிகள் தோன்றுகின்றன. ஓர் எழுத்தொலி பிறக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகளின் ஒத்துழைப்பும் தேவையாக அமைவதும் உண்டு.
நிறை உயிர் முயற்சியின் உள்வளி துரப்ப
எழும் அணுத்திரள் உரம், கண்டம், உச்சி
மூக்கு உற்று, இதழ், நாப் பல் அணத் தொழிலின் வெவ்வேறு எழுத்தொலியாய் வரல் பிறப்பே.
என்பது நன்னூல் நூற்பா (73). இதில், உரம் என்பது மார்பையும், கண்டம் என்பது கழுத்தையும் குறிக்கும். அணம் என்பது அண்ணம், (மேல்வாய்) என்று பொருள்படும்.
(2)எழுத்துகள் பிறப்பதற்கு ஒத்துழைக்கும் உறுப்புகளில் ஒன்று மற்றொன்றோடு இயைந்து இயங்கும் தன்மைக்கேற்ப வேறு வேறு ஒலிகள் பிறக்கின்றன என்று இருவரும் உரைக்கின்றனர்.
(3)இரு நூலாரும், அடிப்படையில் எழுத்துஒலிகள் பிறப்பதற்கு அடிப்படையான உறுப்புகளாகக் குறிப்பிடும் உறுப்புகளின் மொத்த எண்ணிக்கை எட்டு ஆகும்.
நன்னூலார் காற்று மேலே எழுந்து தங்கும் இடங்களாக நான்கு உறுப்புகளைச் சுட்டுகிறார். அவை முறையே, நெஞ்சு, கழுத்து, உச்சி, மூக்கு என்பன.
(2)உறுப்புகளைக் குறிப்பிடுகையில் தொல்காப்பியர் மேலே இருந்து கீழே இறங்கி வருவது போல் தலை, கழுத்து, நெஞ்சு என்று குறிப்பிடுகின்றார்.
நன்னூலார் காற்று கீழிருந்து மேலே எழும்பும் அதே இயல்பான நிலையில் மார்பு, கழுத்து, உச்சி, மூக்கு என்ற வரிசையில் அமைத்துள்ளார்.
(3)எழுத்தொலிகள் பிறக்கப் பயன்படும் உறுப்புகளைத் தொல்காப்பியர் எட்டு என்று விரித்துள்ளார். காற்றுத் தங்கும் இடங்களான மூன்றையும் சேர்த்துக் குறிப்பிடுகின்றார்.
நன்னூலார், இந்த உறுப்புக்களில் இதழ், நாக்கு, பல், அண்ணம் என்ற நான்கு உறுப்புகளை மட்டுமே எழுத்துப் பிறப்பதற்கு இயங்கும் உறுப்புகளாகக் குறிப்பிடுகின்றார்.
எனவே, தமிழ் இலக்கணம் அறிவியல் முறைப்படி அமைந்தது என்பது இதனால் வெளிப்படுகின்றது. 2500 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய தொல்காப்பியம் இன்றைய மொழியியலாரின் கருத்துகளை அன்றே விளக்கி இருப்பது தமிழ் மொழியின் சிறப்புக்குச் சான்றாக உள்ளது.
பாடம் - 2
உயிர்எழுத்துகள் பன்னிரண்டும் மிடற்றில் (கழுத்தில்) பிறக்கும் காற்றினால் உருவாகி ஒலிப்பன. தம்நிலையில் இருந்து மாறாமல் இருக்கும் உயிர்எழுத்துகள் மட்டுமே கழுத்தில் இருந்து தோன்றுவன. ‘தம்நிலையில் இருந்து திரியாமல்’ இருப்பது என்னவெனில், ஓர் உயிர்எழுத்து எந்தவித மாற்றமும் பெறாமல் இருப்பது ஆகும். சில உயிர் எழுத்துகள், எடுத்துக்காட்டாக ‘இகர’மும் ‘உகர’மும், குற்றியலிகரமாகவும், குற்றியலுகரமாகவும் வருகின்ற போது, அவை தம்நிலையில் இருந்து திரிந்து (மாறி) விடுகின்றன. அவ்வாறு இல்லாமல், இயல்பாக வருகின்ற உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மிடற்றில் பிறக்கும் காற்றினால் எழுத்துஒலிகளாகத் தோன்றுகின்றன என்பது தொல்காப்பியர் கருத்தாகும். இதனை,
அவ்வழிப்,
பன்னீ ருயிருந் தந்நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்
(எழுத்து. 84)
(தந்நிலை = தம்நிலை; மிடறு = கழுத்து; வளி = காற்று)
என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குவதைக் காணலாம்.
நன்னூல் ஆசிரியரும் எழுத்துகள் பிறப்பதற்குக் கூறப்பட்ட பொதுவான இலக்கணத்தின் அடிப்படையில்தான் உயிர்எழுத்துகளும் பிறக்கும் என்கிறார். அந்த வழியில் உயிர்எழுத்துகள் பிறப்பதற்கு இடம் மிடறு ஆகும் (கழுத்து) என்பது அவர் கருத்து. நன்னூல் உயிர்எழுத்துகள் பிறப்பதற்கு உரிய இடத்தைச் சொல்லுகின்ற இந்த இடத்தில், மெய்யெழுத்துகள் பிறப்பதற்கான இடங்களையும் சேர்த்துச் சொல்கின்றது.
நூற்பா
அவ்வழி,
ஆவி இடைமை இடம் மிட றுஆகும்
மேவு மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை
(நன்னூல். 74)
(ஆவி = உயிர்; இடைமை = இடையினம்; மென்மை = மெல்லினம்; உரம் = நெஞ்சு; வன்மை = வல்லினம்)
‘அவ்வழி’ என்பது முந்தைய பாடத்தில் சொல்லப்பட்ட ‘எழுத்துப் பிறப்புக்கான பொது இலக்கணத்தின்படி’ எனப் பொருள்தரும்.
இந் நூற்பா உயிர்எழுத்துகளுக்கும் மெய்எழுத்துகளுக்கும் (முதல் எழுத்துகளுக்குப்) பிறப்பிடம் கூறுவதாக அமைகின்றது. எனினும் நாம் இந்தப் பாடத்தில் உயிர்எழுத்துகள் பிறப்பின் இலக்கணம் பற்றி மட்டும் காண்போம்.
நன்னூல், உயிர்எழுத்துகளில் ‘இயல்பாக அமையும் உயிர்’ என்றும் ‘தந்நிலை திரியும் உயிர்’ என்றும் வேறுபடுத்திக் கூறவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இப்போது, உயிர்எழுத்துகளின் பொதுவான பிறப்பிடம் குறித்த செய்திகளைத் தொகுத்துக் காணலாம்.
(1)உயிர்எழுத்துகள், எழுத்துஒலிகளின் பொதுவான பிறப்பிட இலக்கணத்தின் படியே பிறப்பன.
(2)உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் கழுத்து ஆகும்.
(3)தனியே வருகின்ற உயிர்எழுத்தும், எந்தவித மாற்றமும் அடையாத உயிர்எழுத்தும் மட்டுமே கழுத்தில் இருந்து தோன்றும். தன் மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கும் உயிரொலிகளுக்கு இந்தப் பிறப்பிட விதி பொருந்தாது.
(1)இரண்டு நூல்களும், எழுத்துஒலிகள் பிறப்பதற்குத் தேவைப்படும் பொதுவான முயற்சியே, உயிர்எழுத்துகள் பிறப்பதற்கும் தேவைப்படுவது என்பதை உரைக்கின்றன.
(2)இவ்விரு நூல்களும் உயிர்எழுத்துகள் பிறக்கின்ற இடமாகக் கழுத்தைக் (மிடறு) குறிப்பிடுகின்றன.
தொல்காப்பியம் ‘தந்நிலை திரியா’ என்ற தொடரைப் பயன்படுத்தித் தந்நிலை திரியும் உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் வேறு என்பதை நுட்பமாகப் புலப்படுத்துகின்றது.
நன்னூலில் அனைத்து உயிர்எழுத்துகளுக்கும் பொதுவாகப் பிறப்பிட இலக்கணம் காணப்படுகின்றது. இதில் இந்த நுட்ப வேறுபாடு கூறப்படவில்லை.
பன்னிரண்டு உயிர்எழுத்துகள் மூன்று விதமான முயற்சியினால் பிறக்கின்றன. அந்த முயற்சி வேறுபாட்டின் அடிப்படையில் உயிர்எழுத்துகளைப் பிரித்துக் காண்போம்.
அவை,
(1)அ, ஆ எழுத்துகளின் பிறப்பு
(2)இ, ஈ, எ, ஏ, ஐ எழுத்துகளின் பிறப்பு
(3)உ, ஊ, ஒ, ஓ, ஒள எழுத்துகளின் பிறப்பு
ஆகியன.
அவற்றுள்
அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும்
(எழுத்து. 85)
என்று விளக்குகின்றார்.
எழுத்தொலிகள் பிறப்பதற்கு நான்கு உறுப்புகளின் முயற்சியும் தொழிலும் தேவைப்படுவன என்று முந்தைய பாடத்தில் படித்தீர்கள். அந்த நான்கு உறுப்புகள்
(1)இதழ்
(2)நா
(3)பல்
(4)அண்ணம்
என்பவை. இந்த நான்கினுள் ‘அண்ணம்’ என்பது ‘மேல்வாய்’ என்று பொருள்படும்.
எனவே மேல்வாயைத் திறக்கும் முயற்சியின் பயனாக அகர ஆகார உயிர்ஒலிகள் தோன்றும் என்று அறியலாம்.
அவற்றுள்,
முயற்சியுள் ‘அ ஆ அங்காப்பு உடைய’
(நூற்பா. 75)
என்று தெரிவிக்கின்றது.
அ, ஆ ஆகிய இவை இரண்டும் ‘வாயைத் திறத்தல் – அங்காத்தல்’ என்னும் முயற்சியின் பயனாகத் தோன்றுகின்றன என்பதை, நன்னூலும் தெளிவுபடுத்துகின்றது.
தேவைப்படும் முயற்சி:
(1)வாயைத் திறத்தலாகிய அங்காத்தல்
(2)மேல்வாய்ப் பல்லை, நாக்கினது அடிப்பகுதியின் விளிம்பு சென்று பொருந்தும் முயற்சி ஆகியன.
ஒத்துழைக்கும் உறுப்புகள்: மேல்வாய்ப்பல், நாக்கு ஆகியன
இந்த எழுத்துகள் பிறப்பதற்கு ஒத்துழைக்கும் உறுப்புகள் மேல்வாய்ப் பல், நாக்கு என்பன. இதனைத் தொல்காப்பியம்,
இ, ஈ, எ, ஏ, ஐ யென இசைக்கும்
அப்பால் ஐந்தும் அவற்று ஓர் அன்ன
அவைதாம்
அண்பல் முதல்நா விளிம்பு உறல் உடைய
(எழுத்து. 86)
(அன்ன = போன்றவை; நா = நாக்கு; அண்பல் = மேல்வாய்ப்பல்; முதல்நா = நாவின் அடி)
என்று விளக்குகின்றது. இந்நூற்பா இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் ஒரே முயற்சியினால் பிறக்கின்றன என்று கூறுகின்றது. ‘ஐந்தும் அவற்று ஓர் அன்ன’ என்னும் தொடர், அகரம் ஆகாரம் என்னும் எழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் அங்காத்தல் முயற்சியே இந்த எழுத்துகள் பிறப்பதற்கும் தேவைப்படுகின்றது என்பதை உணர்த்துகிறது.
இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய உயிர்எழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சி பற்றியும், ஒத்துழைக்கும் உறுப்புகள் குறித்தும் நன்னூல் எடுத்துரைக்கின்றது. அவை,
தேவைப்படும் முயற்சி :
(1) வாயைத் திறத்தலாகிய அங்காத்தல். (2) மேல்வாய்ப் பல்லை நாக்கின் அடியின் ஓரமானது சென்று பொருந்துதல்.
ஒத்துழைக்கும் உறுப்புகள்: மேல்வாய்ப்பல், நாக்கு ஆகியன.
இதனை,
இ ஈ எ ஏ ஐ அங்காப்போடு
அண்பல் முதல்நா விளிம்புற வருமே
என்று நன்னூல் நூற்பா (76) விளக்குகின்றது.
(அங்காத்தல் = வாய் திறத்தல்; முதல் நா = அடி நாக்கு; விளிம்பு = ஓரம்)
உ ஊ ஒ ஓ ஒள என இசைக்கும்
அப்பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்
(எழுத்து. 87)
என்னும் தொல்காப்பிய நூற்பா உரைக்கின்றது. இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் பிறப்பதற்கு உயிரின் முயற்சியோடு, இதழ் குவிதலாகிய முயற்சியும் தேவைப்படுகின்றது என்பது தெளிவாகிறது.
நன்னூல் இந்த எழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சியையும், ஈடுபடும் உறுப்புகளையும் மிகச் சுருக்கமாகத் தெரிவிக்கக் காணலாம். இந்த உயிர்எழுத்துகள் இதழ் குவிதலால் தோன்றுகின்றன என்று தெரிவிக்கின்றது. இக்கருத்தை,
உ, ஊ, ஒ, ஓ, ஒள இதழ் குவிவே
(நூற்பா. 77)
என்னும் நூற்பாவின் மூலம் நன்னூல் விளக்கிச் செல்கின்றது.
ஒற்றுமை
இரு இலக்கண நூல்களும் அ, ஆ ஆகிய உயிர்எழுத்துகள் இரண்டும் வாயைத் திறத்தலால் பிறக்கும் என்றும், இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்து உயிர்எழுத்துகளும் மேல்வாய்ப் பல்லை (அண்பல்) நாக்கின் அடியானது (நாமுதல்) சென்று பொருந்த (விளிம்புறப்) பிறக்கும் என்றும், உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஐந்து உயிர்எழுத்துகளும் இதழ் குவிதலால் பிறக்கும் என்றும் கூறுகின்றன. எனவே இதில் இரண்டு நூலாசிரியர்களுக்கும் இடையில் எந்த வித வேறுபாடும் இல்லை.
எழுத்துகளின் பொதுவான பிறப்பியல் குறித்து இலக்கண நூல்களும் மொழியியலாரும் தெரிவித்த கருத்துகளை முந்தைய பாடத்தில் தெரிந்து கொண்டீர்கள். இந்தப் பாடத்தில் உயிர்எழுத்துகளின் பிறப்புப் பற்றி இலக்கண நூல்கள் தெரிவித்த கருத்துகள் மொழியியல் கருத்துகளோடு ஒத்திருக்கும் தன்மையைக் காணலாம்.
அவை,
(1).அ, ஆ,
(2).இ, ஈ, எ, ஏ, ஐ,
(3).உ, ஊ, ஒ, ஓ, ஒள – ஆகியன.
மொழிநூல் அறிஞர்களும் தமிழிலுள்ள உயிர்ஒலிகளை மேற்கண்ட பகுப்பின்படியே பிரித்துக் காட்டியுள்ளனர். மொழிநூல் அறிஞர்கள் உயிர்எழுத்துகளை பின்வரும் பகுப்பின்படி பிரிக்கின்றனர்.
அவை,
(1)முன் அண்ண உயிர்
(2)இடை அண்ண உயிர்
(3)பின் அண்ண உயிர் என்பன.
இந்த மூன்று பகுப்பின் கீழ், தமிழில் காணப்படும் உயிர்எழுத்துகளை அமைத்துக் காட்டுகின்றனர். அவ்வாறு அமைக்குமிடத்து,
அவை,
(1)முன் அண்ண உயிர்கள் : இ, ஈ, எ, ஏ
(2)இடை அண்ண உயிர்கள் : அ, ஆ
(3)பின் அண்ண உயிர்கள் : உ, ஊ, ஒ, ஓ
என்று வருவதைக் காணலாம். எனவே, தமிழ் இலக்கண நூல்கள், மொழியை, மொழிநூல் அறிஞர்கள் காணும் அறிவியல் நோக்கில் கண்டு ஆய்ந்துள்ளன என்பதையும் நாம் இங்குத் தெரிந்து கொள்ளலாம்.
‘ஐ, ஒள’ ஆகியவை தனியொலிகள் அல்ல என்பது மொழிநூலார் கருத்து; ஐ என்பது அகரமும், யகர மெய்யும் சேர்ந்த கூட்டொலி; ஒள என்பது அகரமும் வகர மெய்யும் இணைந்த கூட்டொலி என்று மொழியியல் விளக்குகின்றது. எனவே ‘கூட்டொலிகள்’ என்று தாம் கருதுகின்ற ஐ, ஒள ஆகிய இரண்டையும் தவிர்த்துவிட்டு உயிர்ஒலிகள் பத்து என்று மட்டும் மொழியியலார் தெரிவிக்கின்றனர்.
‘ஐ’ காரத்தைத் தொல்காப்பியர் உயிர்எழுத்தாகக் கூறியிருப்பினும் ஒலி அமைப்பினை விளக்குமிடத்து அது ‘கூட்டொலி’ என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்.
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் ‘ஐ’ யென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் (எழுத்து. 56)
என்னும் தொல்காப்பிய நூற்பாவில், அகர உயிர் யகர மெய்யுடன் இணைந்து ஐ காரம் தோன்றுகிறது என்று விளக்குகின்றார். எனவே பிற்காலத்தில் மொழிநூல் அறிஞர்கள் ஆய்ந்து கண்ட ‘கூட்டொலி’ பற்றிய கருத்தினைத் தொல்காப்பியர் எண்ணிப் பார்த்து விளக்க முற்பட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.
பாடம் - 3
மெய்யெழுத்துகள் தோன்றுகின்ற முறை குறித்து அறிந்து கொள்வதற்கு முன்னர், மெய்யெழுத்துகள் அமைக்கப்பட்டிருக்கும் வரிசை முறையை அறிந்து கொள்வது நல்லது. மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை இந்த மூன்று வரிசைப்படி அடுக்கப்படவில்லை. மெய்யெழுத்துகள் பதினெட்டில் முதலில் வரும் பத்து எழுத்துகள் ஒரு வல்லினம், ஒரு மெல்லினம் என்ற அமைப்பில் அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருக்கின்றன. அதன் பின்னர் இடையின எழுத்துகள் ஆறும் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளன. கடைசியில் இருக்கும் இரண்டு எழுத்துகளும் ஒரு வல்லினம், ஒரு மெல்லினம் என்ற முறையில் அமைந்துள்ளன.
மெய்யெழுத்துகளின் வகைப்பாடு :
வல்லினம் : க், ச், ட், த், ப், ற்
மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்
இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்
இப்போது மெய்யெழுத்துகள் அமைக்கப்பட்டிருக்கும் முறையைப் பாருங்கள்.
முதல் பத்து எழுத்துகள்
க்-வல்லினம்
ங் -மெல்லினம்
ச் -வல்லினம்
ஞ்-மெல்லினம்
ட் -வல்லினம்
ண் -மெல்லினம்
த் -வல்லினம்
ந் -மெல்லினம்
ப் -வல்லினம்
ம் -மெல்லினம்
கடைசி எட்டு எழுத்துகள்
ய்
ர்
ல் இடையின மெய்கள்
வ்
ழ்
ள்
ற்-வல்லினம்
ன்-மெல்லினம்
முதலில் மெய்யெழுத்துகள் பிறப்பது பற்றித் தொல்காப்பியம் தெரிவிக்கும் கருத்துகளைக் காண்போம்.
(1)வல்லின, மெல்லின மெய்களின் பிறப்பு
(2)இடையின மெய்களின் பிறப்பு
இங்கு மெய்யெழுத்துகள் பிறக்கின்ற இடங்களைப் பின்வருமாறு காணலாம். அவை,
(1)வல்லின மெய்கள் – தலையில் தங்கிய காற்றினால் பிறக்கின்றன.
(2)மெல்லின மெய்கள்- மூக்கில் தங்கிய காற்றினால் பிறக்கின்றன.
(3)இடையின மெய்கள்- கழுத்தில் தங்கிய காற்றினால் பிறக்கின்றன.
என்பன.
இதனைத் தொல்காப்பிய நூற்பா (எழுத்ததிகாரம் 3:10), அதன் உரை ஆகியவற்றிலிருந்து அறியலாம்.
ககார ஙகாரம் முதல்நா அண்ணம் (எழுத்து. 3 : 89)
என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குகின்றது
இதனை,
சகார ஞகாரம் இடைநா அண்ணம் (எழுத்து. 3 : 90)
என்ற நூற்பா கூறுகின்றது
டகாரம் ணகாரம் நுனிநா அண்ணம் (எழுத்து. 3 : 91)
என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குகிறது.
அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின்
நாநுனி பரந்து மெய்யுற ஒற்றத்
தாம்இனிது பிறக்கும் தகாரம் நகாரம்
(எழுத்து. 3 : 93)
என்னும் நூற்பா எடுத்துக் கூறுகின்றது. இந்நூற்பா தகாரம், நகாரம் எனப்படும் த், ந் என்னும் மெய்கள் தாம் இனிதாகப் பிறப்பதற்கு ‘மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியை நாவின் நுனி நன்கு சென்று பொருந்த வேண்டும்’ என்று அழகுபடக் கூறுகின்றது.
இதழ்இயைந்து பிறக்கும் பகாரம் மகாரம் (எழுத்து. 3 : 97)
என்னும் நூற்பா தெரிவிக்கின்றது.
அணரி நுனிநா அண்ணம் ஒற்ற
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்
(எழுத்து. 3 : 94)
என்னும் நூற்பா விளக்குகின்றது.
(1)வல்லின மெய்கள் பிறக்குமிடம்:மார்பு
(2)மெல்லின மெய்கள் பிறக்குமிடம்:மூக்கு
(3)இடையின மெய்கள் பிறக்குமிடம்:கழுத்து
என்பன. இதனை,
அவ்வழி
ஆவி இடைமை இடம் மிடறு ஆகும்.
மேவும் மென்மை மூக்கு, உரம்பெறும் வன்மை
(நூற்பா. 74)
என்னும் நூற்பா விளக்குகின்றது. இந்நூற்பா இடையின மெய்களும் உயிர்எழுத்துகளும் கழுத்தில் (மிடறு) இருந்து பிறக்கின்றன என்பதைச் சேர்த்து உரைக்கின்றது. உரம் என்பது நெஞ்சு, மார்பு என்று பொருள்படும்.
(1)க், ங், ச், ஞ், ட், ண்- பிறக்கும் முறை.
(2)த், ந்- பிறக்கும் முறை
(3)ப், ம்- பிறக்கும் முறை
(4)ற், ன் – பிறக்கும் முறை – என்பன.
நாவின் அடி மேல்வாயின் அடியைச் சென்று பொருந்தினால் க், ங் பிறக்கும்;
நாவின் நடுப்பகுதி மேல்வாயின் நடுப்பகுதியைச் சென்று பொருந்தும் நிலையில் ச், ஞ் என்னும் மெய்கள் தோன்றும்;
நாவின் நுனிப்பகுதி மேல்வாயின் நுனியைச் சென்று பொருந்தும்போது ட், ண் மெய்கள் பிறக்கும். இதனை,
கஙவும் சஞவும் டணவும் முதல்இடை
நுனிநா அண்ணம் உறமுறை வருமே (நூற்பா. 78)
என்னும் நன்னூல் நூற்பா எடுத்துரைக்கின்றது. இந்நூற்பாவில் ‘முதல் இடை நுனி’ என்பதை,
முதல்நா முதல் அண்ணம் என்றும்,
இடைநா இடை அண்ணம் என்றும்,
நுனிநா நுனி அண்ணம் என்றும்
விரித்துப் பொருள் காண வேண்டும்.
அண்பல் அடிநா முடியுறத் த, ந வரும் (நூற்பா. 79)
என்னும் நன்னூல் நூற்பா விளக்குகின்றது. இந்நூற்பாவில் ‘அண்பல்’ என்பது ‘மேல்வாய்ப்பல்லின் அடிப்பகுதி’ என்று பொருள்படும்.
மீகீழ் இதழ்உறப் பம்மப் பிறக்கும் (நூற்பா. 80)
என்பது நன்னூல் நூற்பா. இந்த நூற்பாவில் மீ என்பது மேல் என்று பொருள்படும். எனவே மேல் இதழும் கீழ் இதழும் பொருந்த (உற) ப், ம் என்னும் மெய்கள் பிறக்கும் என்று அறியலாம்.
அண்ணம் நுனிநா நனிஉறின் ற, ன வரும் (நூற்பா. 85)
என்னும் நூற்பா தெளிவுபடுத்துகின்றது. இந்நூற்பாவில் வரும் ‘நனி’ என்னும் சொல் நன்றாக என்னும் பொருளைத் தருவதாகும்.
மெய்யெழுத்துகளின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளை ஒப்பிட்டுக் காணலாம். முதலில் அவை இரண்டிற்கும் இடையில் காணப்படும் ஒற்றுமைகளைக் காண்போம்.
(2)இரு நூல்களும் இடையின மெய்கள் கழுத்தில் இருந்து தோன்றுகின்றன என்பதில் ஒற்றுமையாக இருக்கின்றன.
நன்னூலோ வல்லின மெய்கள் நெஞ்சில் இருந்து பிறக்கின்றன என்று உரைக்கின்றது.
ஆறு இடையின எழுத்துகள் அவை பிறக்கும் இயல்பிற்கு ஏற்ப நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
(1)ய்
(2)ர் ழ்
(3)ல் ள்
(4)வ்
என்பன.
யகர மெய் பிறப்பதை நன்னூலும்,
அடிநா அடிஅணம் உறயத் தோன்றும் (நூற்பா. 81)
என்ற நூற்பாவில் விளக்குகின்றது. நாக்கின் அடியானது மேல்வாய் அடியைச் சென்று பொருந்த யகரம் பிறக்கும் என்று நன்னூல் சுருக்கமாகக் கூறுகின்றது.
ரகர, ழகர மெய்களின் பிறப்பினை நன்னூல்,
அண்ணம் நுனிநா வருட ர ழ வரும் (நூற்பா. 82)
என்று கூறுகின்றது.
மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியை நாவின் ஓரமானது (விளிம்பு) தடித்துப் பொருந்தும் (ஒற்றும்) போது லகர மெய் தோன்றும; மேல்வாயை நாவின் ஓரமானது தடித்துத் தடவ (வருட) ளகர மெய் தோன்றும். இதனை,
நன்னூல் பின்வரும் நூற்பாவில் விளக்குகின்றது.
அண்பல் முதலும் அண்ணமும் முறையின் நாவிளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும் லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும் (நூற்பா. 83)
பல்இதழ் இயைய வகாரம் பிறக்கும் (எழுத்து. 3 : 98)
என்று கூறுகிறது.
இக்கருத்தையே நன்னூலும்,
மேற்பல் இதழ்உற மேவிடும் வவ்வே (நூற்பா. 84)
என்று விளக்கிக் கூறுகின்றது.
தொல்காப்பியம் பல், இதழ் என்று பொதுவாகக் கூறியிருப்பதைச் சற்று விளக்கமாக மேற்பல் என்றும் கீழ் இதழ் என்றும் நன்னூல் பிரித்துக் காட்டி விளக்கியுள்ளதை உணர வேண்டும்.
நீங்கள் முந்தைய பாடங்களில் சார்புஎழுத்துகள் பத்து என்று படித்து இருப்பீர்கள். அவை,
(1)உயிர்மெய்
(2)ஆய்தம்
(3)உயிரளபெடை
(4)ஒற்றளபெடை
(5)குற்றியலிகரம்
(6)குற்றியலுகரம்
(7)ஐகாரக்குறுக்கம்
(8)ஒளகாரக்குறுக்கம்
(9)மகரக்குறுக்கம்
(10)ஆய்தக்குறுக்கம்
ஆகியன.
சார்புஎழுத்துகளைப் பத்து என்று வகைப்படுத்தியிருப்பது நன்னூல். ஆனால் தொல்காப்பியம் சார்பெழுத்துகளை மூன்று என்று மட்டுமே தெரிவிக்கின்றது. அவை,
(1)குற்றியலிகரம்
(2)குற்றியலுகரம்
(3)ஆய்தம்
ஆகியன.
சார்பெழுத்துகள் பிறக்கும் முறையினைப் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளைத் தனித்தனியே காண்போம்.
தாமே தனித்து வரும் இயல்பில்லாமல் சில எழுத்துகளைச் சார்ந்துவரும் இந்தச் சார்புஎழுத்துகள் மூன்றும் தத்தமக்குச் சார்பாகிய எழுத்துகளின் பிறப்பிடத்திலேயே பிறக்கும் என்று தொல்காப்பியம் விளக்குகிறது. (எழுத்து. 3 : 10)
ஆய்தம் மட்டும் குற்றெழுத்தைச் சார்ந்து வரும் எனினும், அது தலையில் தங்கி வெளிப்படும் காற்றினால் பிறப்பதால், உயிரோடு சேர்ந்து வரும், வல்லெழுத்தினைச் சார்ந்தே பிறக்கும். வல்லின மெய்கள் தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எனத் தொல்காப்பியம் கூறுவதை முன்பு கண்டீர்கள்.
ஆய்தக்கு இடம்தலை; அங்கா முயற்சி; சார்புஎழுத்து ஏனவும் தம்முதல் அனைய (நூற்பா. 86)
என்னும் நன்னூல் நூற்பா விளக்குகின்றது.
எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிதுஉள வாகும் (நூற்பா. 87)
என்று நன்னூல் விளக்குகின்றது. இந்நூற்பாவில் எடுத்தல் என்பது உயர்த்தி ஒலித்தல் என்றும், படுத்தல் என்பது தாழ்த்தி ஒலித்தல் என்றும், நலிதல் என்பது நடுத்தரமாக ஒலித்தல் என்றும் பொருள்படும்.
எனவே எழுத்துகளுக்கான பிறப்பு விதிகள் அவற்றை உயர்த்தியும் தாழ்த்தியும் ஒலிக்கும் போது சிற்சில மாற்றங்களோடு அமைகின்றன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
தொல்காப்பியமும் நன்னூலும் மெய்யெழுத்துகள் பிறக்கின்ற இடத்தை அடிப்படையாக வைத்து மூன்று வகையாகப் பிரித்துள்ளன. அவை:
வல்லின மெய்கள்-பிறப்பிடம் நெஞ்சு (நன்னூல்); தலை (தொல்.)
மெல்லின மெய்கள்-மூக்கு
இடையின மெய்கள்-கழுத்து (மிடறு)
மொழியியல் அறிஞர்களும் மெய்யொலிகளை முதலில் அவை பிறக்கின்ற இடத்தை வைத்துப் பிரிக்கின்றனர். அடுத்த நிலையில் அந்த மெய்யொலி பிறப்பதற்கு முயற்சியில் ஈடுபடும் உறுப்புகளின் அடிப்படையில் பிரிக்கின்றனர். எனவே மொழியியல் அறிஞர்கள் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து வெளியிட்டுள்ள பாகுபாடு, இலக்கண நூல்கள் கூறும் பிறப்பிலக்கண அடிப்படையில் அமைந்திருக்கும் சிறப்பு வெளிப்படக் காண்கிறோம்.
பிறப்பிடம் குறித்த செய்திகள் ஒப்பிட்டு அனைத்தையும் ஆராய்வது மிகவும் நீண்டு விடும். எனவே, மெல்லின மெய்களின் பிறப்பிடத்தை மட்டும் ஒப்பிட்டுக் காண்பது போதுமானதாக அமையும்.
மொழியியல் அறிஞர்கள் மெல்லின மெய்களை அவற்றின் பிறப்பிடம் நோக்கி ‘மூக்கொலி’ (Nasal) என்று வரையறுக்கின்றனர். இந்த மூக்கொலிகளுள் ஒன்றாகிய மகரம் பிறப்பதை,
இதழ்இயைந்து பிறக்கும் பகார மகாரம் (எழுத்து. 3 : 97)
என்று தொல்காப்பியமும்,
மீகீழ் இதழ்உறப் பம்மப் பிறக்கும் (நூற்பா. 80)
என்று நன்னூலும் தெரிவிக்கின்றன.
மொழியியல் அறிஞர்கள் மகரத்தை முதலில் மூக்கொலி என்று வகைப்படுத்தி விட்டுப் பின்னர் அது ஈரிதழ் ஒலி என்று விளக்கிக் கூறுகின்றனர்.
பாடம் - 4
எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம்
(நூற்பா – 127)
என்ற நூற்பாவில் விளக்குகிறது.
இந்த நூற்பாவில் பின்வரும் செய்திகள் வெளிப்படையாகப் புலப்படுகின்றன; அவை,
(1)எழுத்துத் தனித்தும் வரலாம்.
(2)ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வரலாம்.
(3)ஆனால் அது பொருள் தருதல் வேண்டும் என்பதே இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இந்த நூற்பா உட்கருத்தாக மற்றொரு பொருளையும் தெரிவிக்கிறது. எழுத்துத் தனித்து வந்தாலும், எழுத்துகள் தொடர்ந்து வந்தாலும் பொருள் தரவில்லை என்றால் அது பதமாகாது; சொல்லெனக் கருதப்படமாட்டாது என்பதே அந்தக் கருத்தாகும்.
எனவே, இந்த நூற்பாவில் உயிர்ப்பாக இருப்பது ‘பொருள் தருதல்’ என்னும் தொடராகும்.
முதலில் தனித்துவரும் எழுத்துப் பதமாவதற்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
ஆ, ஈ – இவ்விரண்டு எழுத்துகளும் தனித்தனியே வந்து பொருள் தருகின்றன. ‘ஆ’ என்பது பசு என்னும் பொருளையும், ஈ என்பது பெயர்ச்சொல்லாக இருந்தால் பூச்சியாகிய ஈ என்னும் பொருளையும், வினைச்சொல்லாக இருந்தால் ‘தா’ என்னும் பொருளையும் உணர்த்துகின்றன. எனவே ஆ, என்பது ஒரு பதமாகிறது. ஈ என்பது மற்றொரு பதமாகிறது.
தனித்து வரும் எழுத்துப் பதமாகாமல் இருப்பதற்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
ச, க என வரும் குற்றெழுத்துகள் தனியே வருகின்றபோது அவை எந்தப் பொருளையும் உணர்த்துவதில்லை. எனவே பதமாகவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
இரண்டாவதாக, எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருகின்ற போது பதமாகின்றதற்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
தலை, தலைவி, தலைவன் என வரும் சொற்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
தலை-இரண்டெழுத்துகள் வந்து பொருள் தந்துள்ளது.
தலைவி-மூன்றெழுத்துகள் வந்து பொருள் தந்துள்ளது.
தலைவன்-நான்கு எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருகின்றது.
எழுத்துகள் தொடர்ந்து வந்தாலும் பொருள்தராமல் இருப்பின் பதம் ஆகாததற்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
கப, கபம, கிகருந என வருவனவற்றில் எழுத்துகள் தொடர்ந்து வந்துள்ளன. ஆனால் இவை பொருள் தரவில்லை என்பதால் பதமாக ஆவதில்லை. இதனை நன்கு மனத்தில் பதித்துக் கொள்ள வேண்டும்.
இந்த இருவகைச் சொற்கள் (மொழி) குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளைக் காண்போம்.
(1)ஓர்எழுத்து ஒருமொழி
(2)ஈர்எழுத்து ஒருமொழி
(3)பலஎழுத்து ஒருமொழி
.ஆகியன. இக்கருத்தை,
ஓர்எழுத்து ஒருமொழி ஈர்எழுத்து ஒருமொழி இரண்டுஇறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே (எழுத்து. 2 : 45)
என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குகின்றது. எனவே மேலே கண்ட மூவகை நிலைகளையும் இனித் தனித்தனியே காண்போம்.
நெட்டெழுத்து ஏழே ஓர்எழுத்து ஒருமொழி
(எழுத்து. 2: 43)
என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குகின்றது.
இந்நூற்பா, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனவரும் ஏழு நெடில் எழுத்துகளும் பொருள் தருவன. எனவே இவை ஓர்எழுத்து ஒருமொழிகள் என்று விளக்குகின்றது. இந்த நெடில்எழுத்துகள் ஒவ்வொன்றிற்கும் என்ன பொருள் என்பதைக் காண்போம்.
வ.எண் எழுத்து பொருள்
(1)ஆ பசு
(2)ஈ ஈ
(3)ஊ இறைச்சி
(4)ஏ அம்பு
(5)ஐ அழகு, தலைவன்
(6)ஓ மதகுநீர் தாங்கும் பலகை
(7)ஒள இந்த எழுத்திற்குப் பொருள் இல்லை
மேலே கண்டவற்றுள் ‘ஒள’ என்னும் எழுத்து ஓர்எழுத்து ஒருமொழி ஆவதில்லை. எனவே இந்நூற்பாவிற்கு உரை கூறும் அறிஞர்கள், இந்த நூற்பா உயிர்எழுத்துகளுக்கும் உயிர்மெய்எழுத்துகளுக்கும் பொது என்பதால் ‘ஒள’ என்பதை உயிர்மெய்யில் வரும் ‘கௌ, வௌ’ முதலியவற்றை உணர்த்துவதாகக் கருதவேண்டும் என்று தெரிவிக்கின்றனர். எனவே உயிர்எழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஆறு மட்டுமே ஓர்எழுத்து ஒருமொழி என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
உயிர் எழுத்துகளில் நெட்டெழுத்துகளைப் பற்றிக் கூறிய தொல்காப்பியம், குற்றெழுத்துகள் ஐந்தும் ஒர்எழுத்து ஒருமொழியாக வருதல் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.
குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே
(எழுத்து. 2 : 44)
என்பது தொல்காப்பிய நூற்பா.
இந்த நூற்பாவைக் காணும்போது அ, இ, உ, எ, ஒ என வரும் குற்றெழுத்துகளில் அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டுப் பொருளை உணர்த்துவன என்பது நினைவுக்கு வரும். எ என்னும் எழுத்து வினாப்பொருளை உணர்த்தும் என்பதும் நினைவுக்கு வரும். ஆனால் இவற்றை ஏன் ஓர்எழுத்து ஒருமொழி என்று குறிப்பிடவில்லை என்ற வினா நமக்கு எழக்கூடும். அ, இ, உ இம் மூன்றும் சுட்டெழுத்துகள்; எ என்பது வினா எழுத்து. சுட்டெழுத்துகளும் வினா எழுத்தும் ‘இடைச் சொற்கள்’ என்னும் பிரிவில் அடங்குவன. இடைச்சொல் என்பது தனியே வந்து பொருள் தரக்கூடியது அல்ல. அது பிற சொற்களோடு (பெயர், வினை) சேர்ந்து வந்தே பொருள் தரும். எனவே தனியே நின்று பொருள் தராத காரணத்தால் சுட்டெழுத்துகளான அ, இ, உ ஆகியவையும் ‘எ’ என்னும் வினா எழுத்தும் ஓர்எழுத்து ஒருமொழி என்னும் இலக்கண வரம்பிற்குள் வரவில்லை என்பது தெளிவாகிறது.
இரண்டு எழுத்துகள் சேர்ந்து வந்து பொருள் தருமானால், அது ஈர்எழுத்து ஒருமொழி எனப்படும்.
அணி, மணி, கல், நெல் எனவரும் சொற்களில் இரண்டு எழுத்துகள் இணைந்து வந்து பொருள் தருவதைக் காணலாம். இவை ஈர்எழுத்து ஒருமொழிக்கு எடுத்துக்காட்டுகள்.
கல்வி, கொற்றன், பாண்டியன் என வரும் சொற்களைப் பாருங்கள்.
(1)கல்வி-என்பதில் மூன்று எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருகின்றன.
(2)கொற்றன்-இதில் நான்கு எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருகின்றன.
(3)பாண்டியன்-இதில் ஐந்து எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருகின்றன.
ஆக, தொல்காப்பியம், ஒன்று, இரண்டு, பல என்னும் அடிப்படையில் எழுத்துகள் இணைந்து வந்து பொருள் தருவதை விளக்குகிறது.
அவ்வாறு ஓர்எழுத்து ஒருமொழியாக அமையும் தமிழ் எழுத்துகள் எத்தனை என்பதை நன்னூல் பட்டியலிட்டுக் காட்டுகின்றது. அவற்றை,
உயிர் ம வில் ஆறும், தபநவில் ஐந்தும் கவசவில் நாலும், யவ்வில் ஒன்றும், ஆகும் நெடில், நொ,து ஆம் குறில் இரண்டோடு ஓர் எழுத்து இயல்பதம் ஆறேழ் சிறப்பின
என்னும் நூற்பாவின் (128) வழி நன்னூல் விளக்குகிறது.
உயிர், மவில் ஆறும் (1)
உயிர்எழுத்துகள் 6
‘ம’ வருக்கத்தில் ஆறு 6
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
மா, மீ, மூ, மே, மை, மோ
தபந – இல் ஐந்தும்
(2) ‘த’ வருக்கத்தில் ஐந்து 5 ‘ப’ வருக்கத்தில் ஐந்து 5 ‘ந’ வருக்கத்தில் ஐந்து 5 தா, தீ, தூ, தே, தை
பா, பூ, பே, பை, போ
நா, நீ, நே, நை, நோ
கவச – இல் நாலும் (3) ‘க’வருக்கத்தில் நான்கு 4 ‘வ’வருக்கத்தில் நான்கு4 ‘ச’வருக்கத்தில் நான்கு 4 கா, கூ, கை, கோ
வா, வீ, வை, வௌ
சா, சீ, சே, சோ
ய வில் ஒன்றும் (4) ‘ய’ வருக்கத்தில் 1 யா
குறில் இரண்டும் (5)‘நொ, து’- குறில் 2 நொ, து
மொத்தம்42
மேலே பட்டியலில் காட்டியபடி தமிழில் ஓர் எழுத்து ஒரு மொழியாக அமைவன 42 என்று நன்னூல் வகுத்துள்ளது.
இப்போது இந்த 42 ஓர் எழுத்து ஒருமொழிகளும் உணர்த்தும் பொருள்களைக் காண்போம். இவற்றுள் பல சொற்களின் பொருள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். சில சொற்களை நாம் பேச்சு வழக்கிலே பயன்படுத்துகிறோம். பேச்சு வழக்கில் இல்லாத இலக்கிய வழக்குச் சொற்களும் இதில் இடம் பெற்றுள்ளன. அவற்றின் பொருள்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். எனவே மேலே கண்ட 42 எழுத்துகளும் உணர்த்தும் பொருள்களையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.
இந்த 42 எழுத்துகளை மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். அவை,
(1)உயிர்எழுத்துகள்- 6
(2) உயிர் மெய் நெடில் எழுத்துகள்-34
(3)உயிர் மெய்க் குறில் எழுத்துகள்- 2
மொத்தம் – 42
என்று அமையும்.
எழுத்து பொருள்
ஆ – பசு,
ஈ- ஈ,
ஊ- இறைச்சி,
ஏ- அம்பு,
ஐ- அழகு,தலைவன்,
ஓ – மதகு நீர் தாங்கும் பலகை.
‘ம’ வருக்கத்தில் (6)
மா- பெரியது,
மீ- மேல்,
மூ- மூப்பு,
மே- மேல்,
மை- மசி,
மோ- மோத்தல் ( நீர் மோத்தல் – முகத்தல்)
‘த’ வருக்கத்தில் (5)
தா, தீ, தை இவற்றின் பொருளை நீங்கள் அறிவீர்கள்.
தூ என்பது தூய்மை, வெண்மை என்றும்,
தே – என்பது கடவுள் என்றும் பொருள்படும்.
‘ப’ வருக்கத்தில் (5)
பா, பூ, பே, பை, போ என வருவனவற்றில் பூ, பை, போ ஆகியவற்றின் பொருள் உங்களுக்குத் தெரியும்.
பா என்பது பாடல் என்றும்
பே என்பது அச்சம் என்றும் பொருள்படும்.
‘ந’ வருக்கத்தில் (5)
நா, நீ, நே, நை, நோ இவற்றில் நா, நீ எனவரும் இரண்டு எழுத்துகள் உணர்த்தும் பொருள்களை நீங்கள் அறிவீர்கள்.
நே என்பது அன்பு என்று பொருள்படும்.
நை என்பது வருத்தம், துன்பம் என்று பொருள்படும்.
நோ என்பது துன்பம் என்று பொருள்படும்.
‘க’ வருக்கத்தில் (4)
கா, கூ, கை, கோ இவற்றில்
கா- காப்பாற்று, சோலை
கூ- பூமி
கோ- மன்னன், தலைவன்.
‘வ’ வருக்கத்தில் (4)
வா, வீ, வை, வௌ இவற்றில் வா, வை எனவரும் இரு எழுத்துகளின் பொருளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
வீ- மலர்
வௌ – திருடல், கவர்தல்
‘ச’ வருக்கத்தில் (4)
சா, சீ, சே, சோ இவற்றில் சா என்பது இறத்தல் என்று பொருள்படும்.
சீ இகழ்ச்சிக் குறிப்பாக வரும்; ஒளி என்றும் பொருள்படும்.
சே எருது (காளை)
சோ மதில்.
‘ய’ வருக்கத்தில் (1)
யா என்பது ஒருவகை மரம்.
உயிர்மெய்க் குறில்
நொ, து – ஆகிய உயிர்மெய்க் குறில் எழுத்துகள் இரண்டும் ஓர்எழுத்து ஒருமொழிகளாக அமைகின்றன.
நொ என்பது ‘வருத்து’ அல்லது ‘துன்புறுத்து’ என்ற பொருளையும், து என்பது ‘உண்’ என்னும் பொருளையும் உணர்த்தும்.
(2)பெரும்பாலும் நெட்டெழுத்துகளே ஓரெழுத்து ஒருமொழிகளாக வரும் என்பதை இரு நூல்களும் குறிப்பிடுகின்றன.
நன்னூல் உயிர்எழுத்துகளோடு உயிர்மெய் எழுத்துகளிலும் வரும் ஓர்எழுத்து ஒருமொழிகளைக் கூறுகின்றது.
(2) தொல்காப்பியம் ஏழு உயிர் நெடில் எழுத்துகளையும் ஓர்எழுத்து ஒருமொழிகள் என்று வகுத்துள்ளது.
நன்னூல், உயிர் நெடில்களில் ‘ஒள’ வை நீக்கி விட்டு, ஆறு நெடில்களை மட்டுமே ஓர்எழுத்து ஒருமொழி என்று வரையறுக்கின்றது. (3) தொல்காப்பிய நூற்பா குற்றெழுத்துகளில் எதுவும் ஓர்எழுத்து ஒருமொழியாக வருவது இல்லை என்று தெரிவிக்கின்றது.
ஆனால் நன்னூல் உயிர்மெய் எழுத்துகளில் இரண்டு குற்றெழுத்துகள் (நொ,து) ஓர்எழுத்து ஒருமொழியாக வருவன என்பதைக் கூறுகின்றது.
தமிழில் எழுத்துகள் தனித்து ஒலிக்கும்போது எந்த ஒலியைப் பெற்று இருக்கின்றனவோ அதே ஒலியைத் தான் அவை சொற்களில் வந்து அமையும்போதும் பெறுகின்றன. ஓர் எழுத்து சொல்லாக வரும் போதும், அல்லது பல எழுத்துகள் சேர்ந்து ஒரு சொல்லாக உருவாகும்போதும் எழுத்தின் ஒலிகளில் மாற்றம் நிகழ்வதில்லை என்பதே தமிழ் எழுத்துகளின் தனித்தன்மை ஆகும்.
இக்கருத்தை அரிய உவமை ஒன்றின் மூலம் நன்னூல் உரையாசிரியர் விளக்குகின்றார். “எழுத்துகள் இணைந்து சொற்கள் உருவாகும்போது அது மணம் தரும் நறுமணப் பொடிகள் (மஞ்சள், சுண்ணம் போன்றவை) கலந்த கலவையாக இருத்தல் கூடாது. அது வண்ணமலர்களால் தொடுக்கப்பட்ட மாலையாகத் திகழவேண்டும்” என்பதே அந்த உவமை ஆகும். இந்த உவமை உணர்த்தும் பொருள் என்னவெனில், சுண்ணப் பொடியில் கலந்துள்ள நறுமணப் பொடிகளைத் தனித்தனியே பிரித்து எடுக்க முடியாது. அதைப்போல அல்லாமல், சொற்களில் அமைந்திருக்கும் எழுத்துகள் தங்கள் ஒலி அடையாளங்களை இழந்து விடுதல் கூடாது.
மாறாக, மலர் மாலையில் காணப்படும் பூக்கள் இணைந்து நின்றாலும், அவை மாலையில் இருப்பது தனித்தனியாகத் தென்படுகின்றது. இதைப் போலவே தமிழ் எழுத்துகள் சொற்களில் அமையும் போது அவை ஒவ்வொன்றும் தத்தம் ஒலிஅமைப்பை இழக்காமல் இருக்கின்றன என்பதை இந்த உவமை உணர்த்துகிறது.
இக்கருத்தை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். தமிழில் எ – ண் – ண – ம் என்று நான்கு எழுத்துகள் சேர்ந்து ‘எண்ணம்’ என்ற சொல் உருவாகிறது. இந்த நான்கு எழுத்துகள் தனித்தனியே ஒலிக்கும்போது எழும் ஒலி ‘எண்ணம்’ என்ற சொல்லாகும் போதும் மாறிவிடுவதில்லை.
எனவே தமிழ் எழுத்துகள் தனித்து ஒலிக்கும் போதும், இணைந்து நின்று சொல்லில் அமையும் போதும் தங்கள் ஒலியின் தன்மையைப் பெரும்பாலும் இழப்பதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஓர்எழுத்து ஒருமொழி குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் விளக்கிக் கூறியுள்ளன. தொல்காப்பியம் சுருங்கச் சொல்லிய ஓர்எழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கையை நன்னூல் விரித்துக் கூறியுள்ளது. ஓர்எழுத்து ஒருமொழிகள் அனைத்தும் நெடில் எழுத்துகளாகவே வரும் என்பது அடிப்படைக் கருத்தாக அமைகின்றது. குறிப்பாக, உயிர்எழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஆறும் ஓர்எழுத்து ஒருமொழிகள் ஆகும், உயிர்மெய் எழுத்துகளில் நெட்டெழுத்துகள் முப்பத்தி நான்கும், உயிர்மெய்க் குற்றெழுத்துகளில் இரண்டும் என, 42 எழுத்துகள் ஓர்எழுத்து ஒருமொழிகளாக வருவன என்று நன்னூல் தெரிவிக்கின்றது.
தொல்காப்பியம் ஓர்எழுத்து ஒருமொழி, ஈரெழுத்து ஒருமொழி, தொடர்எழுத்து ஒருமொழி என்ற பகுப்பின் வழி செய்திகளை விளக்குகிறது. நன்னூல் தொடர்எழுத்து ஒருமொழியைப் பகாப்பதம், பகுபதம் என்று பெயரிட்டுப் பகுத்துக் காட்டுகிறது. பகாப்பதம் என்பது இரண்டு முதல் ஏழு எழுத்துகளைக் கொண்ட சொல்லாகும். பகுபதம் இரண்டு முதல் ஒன்பது எழுத்துகளைக் கொண்ட சொல்லாகும்.
பாடம் - 5
எடுத்துக்காட்டு :
‘மழை பொழிகிறது‘ இந்த வாக்கியத்தில் மழை, பொழிகிறது என்ற இரு பதங்கள் (சொற்கள்) உள்ளன. பொழிகிறது என்பதை, பொழி + கிறு + அது என்று பிரிக்கலாம். ‘பொழி‘ என்பதைப் பிரிக்கமுடியாது. பொ, ழி எனப்பிரித்தால் இரண்டு எழுத்துகளுக்கும் பொருள் இல்லை. அதே போல, ‘மழை‘ என்பதும் பிரித்தால் பொருள் தராதது, ஆகவே ‘மழை‘, ‘பொழி‘ ஆகிய இரண்டும் பகாப்பதம் ஆகும்.
இப் பகாப்பதம் நான்கு வகைப்படும். அவை,
(1)பெயர்ப்பகாப்பதம்
(2)வினைப் பகாப்பதம்
(3)இடைப் பகாப்பதம்
(4)உரிப் பகாப்பதம்
ஆகியன.
பெயர்ச் சொல்லாக அமையும் பகாப்பதம் பெயர்ப் பகாப்பதம் எனப்படும்.
எடுத்துக் காட்டுகள் :
நிலம், நீர், நெருப்பு, காற்று என வருவன.
(2) வினைப் பகாப்பதம்:
வினைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் வினைப் பகாப்பதங்கள் எனப்படும்.
எடுத்துக் காட்டுகள் :
நட, வா, உண், தின் முதலியன.
(3) இடைப்பகாப்பதம் :
இடைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் இடைப் பகாப்பதம் எனப்படும்.
எடுத்துக் காட்டுகள் :
மன், கொல், போல், மற்று என்பன.
(4) உரிப் பகாப்பதம் :
உரிச் சொற்களாக வரும் பகாப்பதம் உரிப் பகாப்பதம் எனப்படும்.
எடுத்துக் காட்டுகள் :
கூர், மிகு, உறு, தவ, நனி, கழி
மேலே சுட்டிய எடுத்துக் காட்டுகளில் கண்ட பெயர், வினை, இடை, உரிச் சொற்களைப் பிரித்தால் பொருள் தருவதில்லை; அவை இடுகுறியில், இட்டு வழங்கி வருகின்ற தன்மையில் அமைந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இதனை நன்னூல் பின்வருமாறு விளக்குகின்றது.
பகுப்பால் பயனற்று இடுகுறியாகி
முன்னே ஒன்றாய் முடிந்தியல் கின்ற
பெயர் வினை இடை உரி நான்கும் பகாப்பதம்
(1)பெயர்ப் பகுபதம் (பெயர்ச்சொல்லாக அமையும் பகுபதம்)
(2)வினைப் பகுபதம் (வினைச்சொல்லாக அமையும் பகுபதம்)
பெயர்ப் பகுபதத்தை மேலும் ஆறு வகையாகப் பிரிக்கலாம்.
அவை,
(1)பொருட்பெயர்ப் பகுபதம்
(2)இடப் பெயர்ப் பகுபதம்
(3)காலப் பெயர்ப் பகுபதம்
(4)சினைப் பெயர்ப் பகுபதம்
(5)குணப் பெயர்ப் பகுபதம்
(6)தொழில் பெயர்ப் பகுபதம்
என்பன.
ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பெயர்ப் பகுபதம் பொருட்பெயர்ப் பகுபதம் எனப்படும்.
எடுத்துக்காட்டு :
பொன்னன் – அவன் பொன்னை உடையவன் என்பது பொருள். இதைப் பிரித்தால் (பொன்+அன்) பொருள் தரக் கூடியதாகவும் அமைந்திருக்கின்றது. எனவே இது பொன் என்னும் பொருள் அடிப்படையாகப் பிறந்த பொருட் பெயர்ப் பகுபதம் ஆகும். ( இதைப் போலவே, பிற பெயர்ப் பகுபதங்களும் அமைகின்றன.)
(2) இடப் பெயர்ப் பகுபதம்
இடத்தின் அடிப்படையில் அமைவது இடப்பெயர்ப் பகுபதம் ஆகும்.
எடுத்துக்காட்டு :
விண்ணோர் – ‘விண்‘ என்னும் இடப்பெயரால் அமைந்த பகுபதம்.
அகத்தான் – ‘அகம்‘ என்னும் இடப்பெயரின் அடிப்படையில் அமைந்திருப்பதால் இது இடப் பெயர்ப் பகுபதம் என்று அழைக்கப்படுகிறது.
(3) காலப் பெயர்ப் பகுபதம்:
நாள், திங்கள், ஆண்டு எனவரும் காலப் பெயர்களின் அடிப்படையில் அமையும் பகுபதங்கள் காலப் பெயர்ப் பகுபதங்கள் எனப்படுவன.
எடுத்துக்காட்டு :
கார்த்திகையான் – இது கார்த்திகைத் திங்களில் பிறந்தவன் என்று பொருள்படும். இது காலப் பெயரின் அடிப்படையில் அமைந்திருப்பதால் காலப்பெயர்ப் பகுபதம் ஆகும்.
ஆதிரையாள் – ஆதிரை நாளில் (நட்சத்திரத்தில்) பிறந்தவள் என்று காலப் பெயர் அடிப்படையில் அமைந்த பகுபதம் ஆகும்.
(4) சினைப் பெயர்ப் பகுபதம்
சினை என்பது உறுப்பு என்று பொருள்படும். உறுப்பின் பெயர் அடிப்படையில் அமைந்த பகுபதங்கள் சினைப் பெயர்ப் பகுபதங்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு :
கண்ணன் – இச் சொல்லில் ‘கண்‘ என்பது உடலின் உறுப்பு (சினை). அதன் அடிப்படையில் கண்ணன் எனும் பெயர் அமைந்துள்ளது. இதனை கண் + அன் என்று பிரித்தால் ‘கண்‘ என்பது பொருள்தரும் சொல்லாக அமைகின்றது. எனவே இது சினைப் பெயர்ப் பகுபதம் ஆகும்.
இதைப் போலவே, மூக்கன், பல்லன் என்னும் சினைப் பெயர்ப் பகுபதங்களையும் அறிந்து கொள்ளலாம்.
(5) குணப் பெயர்ப் பகுபதம்:
ஒரு பண்பைக் (குணம்) குறிக்கும் சொல்லின் அடிப்படையில் அமையும் பெயர் குணப் பெயர்ப் பகுபதம் எனப்படும்.
எடுத்துக்காட்டு :
கரியன், – இச் சொல் கருமை என்னும் பண்புப் பெயரின் அடிப்படையில் அமைந்தது.
(6) தொழிற் பெயர்ப் பகுபதம்:
தொழிலின் பெயரை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பெயர்ச் சொற்கள் தொழிற் பெயர்ப் பகுபதங்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு :
தட்டான், தச்சன் எனவரும் பெயர்ச் சொற்கள் தொழிற்பெயரால் அமைந்தவை.
தெரிநிலை (வெளிப்படையாக)யாகவும் குறிப்பாகவும் காலத்தைக் காட்டும் வினைச் சொற்கள் வினைப் பகுபதங்கள் எனப்படுவன. வினைப் பகுபதங்களை முதலில் இரு வகையாகப் பிரித்துக் காணலாம். அவை,
(1)வினைமுற்றுப் பகுபதம்
(2)வினையாலணையும் பெயர்ப் பகுபதம்
என்பன.
வினைமுற்றுப் பகுபதம் இருவகைப்படும். அவை,
(1)தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம்
(2)குறிப்பு வினைமுற்றுப் பகுபதம்
என்பன.
தெரிநிலை, குறிப்பு வினைமுற்றுப் பகுபதங்களின் விளக்கங்களைக் காணலாம்.
(1) தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் : ஒரு வினைப் பகுபதம் காலத்தை வெளிப்படையாகக் காட்டுமானால் அது தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் எனப்படும்.
எடுத்துக்காட்டு :
நடந்தான், நடக்கின்றான், நடப்பான் – எனவரும் வினைமுற்றுகளில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று காலங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. இவ்வாறு வினை நிகழ்ந்த காலம் வெளிப்படையாகத் தெரிவதால் இவை தெரிநிலை வினைமுற்றுகள் எனப்படுகின்றன. தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் எதிர்மறையாகவும் வரும்.
எடுத்துக்காட்டு : நடவான்
(2) குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் : ஒரு வினைப் பகுபதம் காலத்தைக் குறிப்பால் உணர்த்துமானால் அது குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் எனப்படும். குறிப்பு வினை என்பது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறுவகைப் பெயர்களின் அடிப்படையாகத் தோன்றி, வினைச்சொல்லின் பொருளைத் தருவது எனப்படும்.
எடுத்துக் காட்டு :
பொன்னன், ஊணன், அற்று, இற்று எனவரும் சொற்களில் காலம் தெரிநிலையாக வெளிப்படவில்லை. ஆனால் இச்சொற்களில் காலம் குறிப்பால் உணர்த்தப்படுகின்றது. அவன் பொன்னனாக இருந்தான், பொன்னனாக இருக்கிறான், பொன்னனாக இருப்பான் எனப் பொருள் வரும் போது காலம் குறிப்பாக உணரப்படுகிறது. எனவே இவை குறிப்பு வினை முற்றுகள் எனப்படுகின்றன.
குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் எதிர்மறையிலும் வரும்.
எடுத்துக் காட்டு : அவன் இல்லாதவன்.
தெரிநிலையாகவும் குறிப்பாகவும் காலம் காட்டும் பெயரெச்சங்களும் வினையெச்சங்களும் வினைப் பகுபதங்களே.
பெயர் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம்.
எடுத்துக் காட்டு :
(1)உண்ட பையன்
(2)ஓடாத குதிரை
இத் தெரிநிலை வினைகள் பையன், குதிரை என்ற பெயர்ச்சொற்களைக் கொண்டு பொருள் முடிவு பெறுகின்றன. எனவே, இவை தெரிநிலைப் பெயரெச்சப்பகுபதம் எனப்படும்.
மற்றொரு வினைமுற்றைக் கொண்டு பொருள் நிறைவடையும் வகையில் அமையும் எச்சம் வினையெச்சப் பகுபதம் எனப்படும்.
எடுத்துக்காட்டு :
உண்டு வந்தான்
உண்ண வருகின்றான்
உண்டு, உண்ண எனவரும் வினைகள், வந்தான், வருகின்றான், என்னும் வினைமுற்றுகளைக் கொண்டு பொருள் முடிவைப் பெறுகின்றன.
குறிப்புப் பெயரெச்சம், குறிப்பு வினையெச்சம் இவை காலத்தைக் குறிப்பாகக் காட்டுவன.
எடுத்துக்காட்டு :
பெரிய பையன் – பெயரெச்சம்
மெல்ல வந்தான் – வினையெச்சம்
இதுவரையில் வினைமுற்றுப் பகுபதங்களை மட்டும் கண்டோம். இனி வினையாலணையும் பெயர்ப் பகுபதங்களைப் பற்றிக் காணலாம். அவை, இருவகைப் படும்.
(1) தெரிநிலை வினையாலணையும் பெயர்ப் பகுபதம்.
எடுத்துக்காட்டு : நடந்தானைக் கண்டேன், நடந்தவனைக் கண்டேன் என்பன. இவை காலத்தை வெளிப்படையாகக் காட்டுகின்றன.
(2) குறிப்பு வினையாலணையும் பெயர்ப் பகுபதம்:
எடுத்துக்காட்டு : பொன்னனைக் கண்டேன்,
இது காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. குறிப்பாகவே காலம் உணர்த்தும்.
(1)பகுதி
(2)விகுதி
(3)இடைநிலை
(4)சாரியை
(5)சந்தி
(6)விகாரம்
ஆகியன.
இப்பகுபத உறுப்புகளைப் பின்வரும் நன்னூல் நூற்பா தொகுத்துக் கூறுகின்றது.
பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை,
சந்தி, விகாரம் ஆறினும் ஏற்பவை
முன்னிப் புணர்ப்ப முடியும் எப்பதங்களும்
என்பது நூற்பா(133).
இந்த ஆறு உறுப்புகளையும் அறிவுடையோர் கூட்டிச் சேர்த்தால் எல்லாவிதமான பகுபதங்களும் அமையும் என்பது பொருள்
இனி, இந்த ஆறு உறுப்புகள் ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
பெயர்ப்பகுபதம் :வேலன்
வேல் + அன்.
இதில் வேல் – பகுதி
அன் – விகுதி
வினைப் பகுபதம் :செய்தான்
செய்+த்+ஆன்
இதில் செய் – பகுதி
த் – இடைநிலை
ஆன் – விகுதி.
எனவே ஒருபகுபதம் பகுதி, விகுதி ஆகிய இரு உறுப்புகளைப் பெற்றுவரலாம்: இவ்விரண்டோடு இடைநிலையைப் பெற்றும் வரலாம்.
மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் பகுபத உறுப்புகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டுத் தரப்பட்டன. இனி ஆறு பகுபத உறுப்புகளையும் பற்றிக் காண்போம்.
உண்டான் என்னும் பகுபதத்தில் (உண்+ட்+ஆன்) உண் என்பது பகுதியாகும்.
உண்டான் என்னும் பகுபதத்தில் (உண்+ட்+ஆன்) ஆன் என்பது விகுதி ஆகும். இது திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டுகிறது.
உண்+ட்+ஆன் என்னும் பகுபதத்தில் – உண் : முதனிலை
ட் : இடைநிலை
ஆன் : இறுதிநிலை.
என ‘இடைநிலை‘ – பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்திருத்தலைக் காணலாம்.
வந்தனன் என்னும் சொல் ‘வா+த்+த்+அன்+அன்‘
என்று பிரிந்து நிற்கும். இதில்,
வா-பகுதி
த்-சந்தி
த்-இடைநிலை
அன்-சாரியை
அன்-விகுதி,
‘த்’ இடைநிலைக்கும், ‘அன்‘ விகுதிக்கும் இடையில் சாரியை வந்துள்ளதைக் காணலாம்.
நடத்தல் என்னும் பகுபதம் நட+த்+தல் என்று பிரிந்து வரும்.
இதில் -நட -பகுதி
த்-சந்தி
தல்-விகுதி
பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் ‘த்‘ சந்தி வந்திருப்பதைக் காண முடிகிறது.
எடுத்துக்காட்டு :
வந்தனன் -வா+த்+த்+அன்+அன்
வா -பகுதி
த் -சந்தி
த் -இடைநிலை
அன் -சாரியை
அன் -விகுதி
இதில் வரும் வா என்னும் பகுதி வ எனக் குறுகியும், த் என்னும் சந்தி ந் என்று மாற்றம் அடைந்தும், விகாரமாகியுள்ளன.
இதனைப் பின்வரும் நன்னூல் நூற்பா விளக்குகின்றது.
தத்தம் பகாப்பதங்களே பகுதி யாகும் (134)
என்பது நூற்பா,
(1)பொன்னன் – இதன் பகுதி பொன். இது பெயர்ப் பகுதிக்கு எடுத்துக்காட்டாகும்.
(2)அறிஞன் – இதில் அறி என்னும் பகுதி வினைப்பகுதிக்கு எடுத்துக் காட்டாகும்.
(3)பிறன் என்னும் சொல்லில் பகுதி பிற என்பதாகும். இதில் ‘பிற‘ என்பது இடைச்சொல்லாகும். இது இடைச் சொல் பகுதி.
(4)கடியவை என்னும் பெயர்ப்பகுபதத்தின் பகுதி கடி என்பதாகும். இதன் பகுதியான ‘கடி‘ என்பது உரிச்சொல். எனவே இது உரிச்சொல் பகுதி.
(1)நின்றான், இதில் நில் என்பதும், நடந்தான் என்பதில் நட என்பதும் வினைப் பகுதிகள். இங்கு வினைச்சொற்களே பகுதிகள் ஆயின.
(2)போன்றான் என்பதில் போல் என்பது இடைச்சொல்; இங்கு இடைச்சொல் வினைப்பகுதியாக உள்ளது.
(3)
சான்றோன், கூர்ந்தான் என்பனவற்றில் வரும் சால், கூர் என்பவை உரிச்சொற்கள் வினைப்பகுதியாக வந்தமைக்கு எடுத்துக்காட்டுகள்.
பெயர்ப் பகுபதங்கள் ஆறு வகைப்படும். அவை பொருள், இடம், காலம், சினை, குணம் (பண்பு), தொழில் எனப்படுவன. இந்த ஆறுவகைப் பதங்களில் பண்புப் பெயர்ப் பகுபதங்கள். பிற பெயர்ப் பகுபதங்களில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றன. பண்புப் பெயர்களின் தனி அமைப்பே அதற்குக் காரணம். அவற்றின் தனித் தன்மையை நன்னூலார் நன்கு விளக்கிச் செல்கிறார்.
கரியன் என்னும் பண்புப் பெயர்ப் பகுபதத்தைப் பிரித்தால், அது,
கருமை+அன் என்று அமையும். இதில் ‘கருமை‘ என்பது பகுதி ‘அன்’ என்பது விகுதி. இதில் கருமை என்பதை, கரு+மை என மேலும் பிரிக்க இயலும் எனினும், இதில் வரும் ‘மை’ என்பதற்குப் பகுதிப் பொருளே அன்றி வேறு பொருள் இல்லை. ஆகவே, ‘கருமை’ என்பது பொருள் நிலையில் பகுக்கவியலாத தன்மையில் அமைந்துவிட்டது. எனவே ‘கருமை’ என்பதே பகாப் பதமாக நின்று, பகுபதத்தின் பகுதியாகி உள்ளது. இதனையே,
செம்மை, சிறுமை, சேய்மை, தீமை
வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை
திண்மை, உண்மை, நுண்மை, இவற்று எதிர்
இன்னவும் பண்பின் பகாநிலைப் பதமே
என்னும் நூற்பாவில் (135) நன்னூல் விளக்குகின்றது.
செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை, திண்மை, உண்மை, நுண்மை எனவரும் பண்புப் பெயர்ப் பகுபதங்களின் பகுதிகள் பகுபதங்களாக இருப்பினும், அவை பொருள் நிலையில் பகாப்பதங்களாக இருப்பதால் பகுதிகளாகவே கொள்ளப்படுகின்றன என்று இந்நூற்பா கூறுகிறது.
மேலே கண்ட பண்புப் பெயர்ப் பகுதிகளுடன் அவற்றிற்கு எதிரான பண்புப் பெயர்ப் பகுதிகளும் பொருள் நிலையில் பகாப்பதங்களே. அவை முறையே
செம்மை xவெண்மை, கருமை, பொன்மை, பசுமை
சிறுமை xபெருமை
சேய்மை xஅண்மை
தீமைxநன்மை
வெம்மை xதண்மை
புதுமை xபழமை
மென்மை xவன்மை
மேன்மை xகீழ்மை
திண்மை xநொய்மை
உண்மை xஇன்மை
நுண்மை xபருமை.
எனவருவன.
மேலே கண்ட பண்புப் பெயர்ப் பகுதிகள் பிற சொற்களோடு சேர்ந்து (புணர்ந்து) வரும்போது சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த மாற்றங்கள் ஏழு வகைகளில் நிகழ்கின்றன என்பர். ஒரு பண்புப்பெயர்ப் பகுபதம் பிற சொல்லோடு புணரும் போது இந்த ஏழுவகை மாற்றங்களில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவையோ ஒரே சொல்லில் வந்து அமையலாம். அம் மாற்றங்கள் பின்வருவன:
(1)ஈறுபோதல்
(2)இடை ‘உ‘கரம் ‘இ‘ ஆதல்
(3)ஆதி நீடல்
(4)அடி அகரம் ‘ஐ‘ ஆதல்
(5)தன் ஒற்று இரட்டல்
(6)முன்நின்ற மெய்திரிதல்
(7)இனம் மிகல்
இந்த மாற்றங்களை எல்லாம் பின்வரும் நன்னூல் நூற்பா தொகுத்துக் கூறுதல் காணலாம்.
ஈறு போதல், இடைஉகரம் ‘இ‘ ய்யாதல்
ஆதி நீடல், அடிஅகரம் ‘ஐ‘ ஆதல்
தன்ஒற்று இரட்டல், முன்நின்ற மெய்திரிதல்,
இனம்மிகல், இனையவும் பண்பிற்கு இயல்பே
(136)
இனி, இந்த மாற்றங்கள் ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
(1) ஈறுபோதல்
சிறுவன் – சிறுமை + அன், நல்லன் – நன்மை+அன் இவற்றில் ஈற்றில் உள்ள ‘மை‘ விகுதி கெட்டது
(2) இடை ‘உ‘கரம் ‘இ‘ ஆதல்
பெரியன் – பெருமை + அன்
இவற்றில் ‘மை‘ கெட்டது மட்டுமன்றிப் பெருமை, கருமை என்பதில் இடையில் உள்ள உகரம், இகரமாக ஆகியுள்ளது.
கரியன் – கருமை + அன்
(3) ஆதிநீடல் (முதல் எழுத்து நீண்டு வருதல்)
பசுமை + இலை = பாசிலை. பசுமை + இலை. பசுமை என்பதில் உள்ள முதல் எழுத்தான பகரம் நீண்டு ‘பா‘ ஆகியுள்ளது. ‘சு‘ என்பதில் உள்ள உகரம் ‘சி‘ என இகரமாயிற்று. ‘மை‘ விகுதிகெட்டது. எனவே பாசிலை என்றாயிற்று.
(4) அடி அகரம் ‘ஐ‘ ஆதல்
பைங்கண் என்பது பசுமை + கண் – பைங்கண். பசுமை என்பதில் உள்ள அடி (முதல்) எழுத்தான ப(ப்+அ) இல் உள்ள அகரம் பை (ப்+ஐ) என ஆகியுள்ளது. ‘மை‘ கெட்டுள்ளது. ‘சு‘ என்பதும் கெட்டுள்ளது.
(5) தன் ஒற்று இரட்டல்
வெற்றிலை = வெறுமை + இலை என்பது வெற்றிலை என்றாகிறது. இதில் று (ற்+உ) இல் உள்ள ஒற்றான ‘ற்‘ இரட்டித்துள்ளது. ‘மை‘ கெட்டுள்ளது.
(6) முன்நின்ற மெய்திரிதல்
செம்மை + ஆம்பல் – சேதாம்பல் என்றாயிற்று. இதில் ‘மை‘ விகுதி கெட்டது. ஆதி செ – சே என நீண்டது. ‘செம்‘ முன்னின்ற ‘ம்‘ ‘த்‘ என்னும் மெய்யாகத் திரிந்துள்ளது.
(7) இனம் மிகல்
பசுமை + தழை என்பது பசுந்தழை என்றாகும். இதில் ஈற்றில் உள்ள ‘மை‘ கெட்டது. ‘தலை‘ என்னும் சொல்லில் உள்ள ‘த்‘ என்னும் மெய்க்கு இனமான ‘ந்‘ என்னும் நகரமெய் மிகுந்துள்ளது (தோன்றியுள்ளது).
முதலில் தெரிநிலை வினைப் பகுபதத்தின் பகுதிகளைக் காண்போம். தெரிநிலை வினைப் பகுதிகள் செய் என்னும் ஏவல் பகாப்பதங்களாகவும் அமையும். இதனை,
நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை,
நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின்,
தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்று
எய்திய இருபான் மூன்றாம் ஈற்றவும்
செய் என் ஏவல் வினைப் பகாப்பதமே
என்னும் நன்னூல் (137) நூற்பா விளக்குகின்றது. இதில் நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை, நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்று வரும் இருபத்து மூன்றும் ‘செய்‘ என்னும் வாய்பாட்டில் அமைந்த ஏவலுக்குப் பகுதியாகவும் வரும்; பிற தெரிநிலை வினைகளுக்குப் பகுதியாகவும் வரும்.
இவை ஏவலாய் வரும் இடத்து நடப்பாய், வருவாய், தின்பாய் என்பவற்றில் நட, வா, தின் என்ற வினைப்பகுதிகளைப் பெற்று வரும்.
இவை வினைமுற்றுப் பகுபதங்களாய் வருமிடத்து இவற்றின் ‘வினைப்பகுதி‘ பின்வருமாறு அமையும்:
நடந்தான் நட
வந்தான் வா
மடிந்தான் மடி
சீத்தான் சீ
விட்டான் விடு
கூவினான் கூ
வெந்தான் வே
நொந்தான் நொ
போனான் போ
வௌவினான் வௌ
உரிஞினான் உரிஞ்
உண்டான் உண்
பொருநினான் பொருந்
திருமினான் திரும்
தின்றான் தின்
தேய்ந்தான் தேய்
பாய்ந்தான் பாய்
சென்றான் செல்
வவ்வினான் வவ்
வாழ்ந்தான் வாழ்
கேட்டான் கேள்
அஃகினான் அஃகு
மேலே காணும் வினை முற்றுகளில்
சீத்தான் என்பது சீவினான் என்றும்,
உரிஞினான் என்பது தேய்த்தான் என்றும்
பொருநினான் என்பது பொருந்தினான் என்றும்,
திருமினான் என்பது திரும்பினான் என்றும்
அஃகினான் என்பது சுருங்கினான் என்றும்
பொருள்படுவன.
இந்த 23 வினைப்பகுதி வாய்பாடுகளுக்கும் பொது வாய்பாடு ‘செய்‘ என்பதாகும்.
(1) இயல்பாக வருதல்
நட+ஆன் -நடந்தான்
பார்+ஆன் -பார்த்தான்
(2) விகாரம் அடைந்து வருதல்
தா + ஆன் – தந்தான். இதில் ‘தா‘ – தகரமாகக் குறுகியுள்ளது
சா + ஆன் – செத்தான் – இதில் ச்+ஆ (சா) என்பது (ச்+எ) செ ஆகத் திரிந்துள்ளது.
ஒரு செயலைத் தானே செய்வது தன்வினை. பிறரைக் கொண்டு செய்விப்பது பிறவினை. நட, வா, என வரும் 23 வினைகளும் தன்வினைப் பகுதிகள் ஆகும். இவற்றிற்கான பிறவினைப் பகுதிகளைக் காண்போம்.
இத் தன்வினை ஏவல் பகுதிகள் பிறவினைப் பகுதிகளாக மாறுதற்கு உரிய இலக்கணத்தை நன்னூலார் வகுத்துள்ளார்.
‘செய்’ என்னும் வினைப் பகுதியின் பின் ‘வி‘ என்பதோ அல்லது ‘பி‘ என்பதோ தனித்து வருமாயின் அது ‘செய்வி‘ என்னும் வாய்பாட்டு ஏவல் பகுதியாகும். அந்த வினையுடன் இவ்விரு விகுதிகளில் ஏதேனும் ஒன்று தன்னுடன் தானோ (பி+பி) தன்னுடன் பிறவோ (பி+வி அல்லது வி+பி) இணைந்து வருமாயின் அது செய்விப்பி என்னும் வாய்பாட்டு ஏவல் பகுதியாகும். இரு விகுதிகள் சேர்ந்து வருவது ஈரேவல் எனப்படும்.
வரு+வி – வருவி – ‘வி’ தனித்து வந்துள்ளது நடப்பி – நட+பி – பி தனித்து வந்துள்ளது நட+பி+பி – நடப்பிப்பி – ‘பி’ தன்னுடன் தான் பி+ பி என இணைந்து வந்துள்ளது. நடப்பிவி – இதில் நட+பி+வி என்று ‘பி’ யுடன் ‘வி’ இணைந்து வந்துள்ளது. ‘வி’ என்னும் விகுதி தன்னுடன் தான் இணைந்து வருவதில்லை.
இவை விகுதியுடன் சேர்ந்து வருவியாய், வருவிப்பாய், நடப்பியாய், நடப்பிப்பாய் என வரும். இதனை,
செய்என் வினைவழி ‘வி‘ப்‘பி‘ தனிவரின் செய்விஎன் ஏவல்; இணையின் ஈர்ஏவல்
என்னும் நூற்பா (138) விளக்குகிறது.
இவையே அல்லாமல் ஏவல் வினைப் பகுதிகள் பின்வரும் மூன்று முறைகளிலும் பிறவினையாக மாறுகின்றன. அவை,
(1)கு, சு, டு, து, பு, று என்ற விகுதிகளைப் பெற்றுப் பிறவினையாக மாற்றம் அடைகின்றன.
(2)சிலபகுதிகளில் இடையில் உள்ள மெல்லின மெய் வல்லின மெய்யாகத் திரிகின்றன.
(3)சில பகுதிகளில் நடுவில் மெய் இரட்டித்துப், பிறவினையாய் வருகின்றன.
(1) கு, சு, டு, து, பு, று என்ற விகுதிகளைப் பெற்றுப் பிறவினையாதல்
(1)போ + கு-போக்கு-கு விகுதி
(2)பாய் + சு-பாய்ச்சு-சு விகுதி
(3)உருள் + டு-உருட்டு-டு விகுதி
(4)நட + து – நடத்து-து விகுதி
(5)எழு + பு -எழுப்பு-பு விகுதி
(6)துயில் + று-துயிற்று-று விகுதி
(2) மெல்லின மெய்கள் வல்லின மெய்களாதல்
திருந்து – திருத்து – ந்- த் ஆதல்
தோன்று – தோற்று – ன்- ற் ஆதல்
(3) நடுவில் மெய் இரட்டித்தல்.
உருகு – உருக்கு – க் – க்க் – ஆதல்
ஆடு – ஆட்டு – ட் – ட்ட் – ஆதல்
தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவான வினைப்பகுதிகள்
தன்வினைகளுக்கும் பிறவினைகளுக்கும் பொதுவான வினைப் பகுதிகளும் உள்ளன. அவை,
கரை, தேய், மறை, உடை, அலை, சேர், மடி என்பன.
கரைந்தான், தேய்ந்தான் என்று மெல்லின மெய் பெற்றுத் தன்வினையாக வருவன. இவையே,
கரைத்தான், தேய்த்தான் என்று வல்லின மெய் பெற்றுப் பிறவினையாக வருவன.
பகாப்பதம் பெயர், வினை, இடை, உரி என நான்கு வகைப்படும் என்பது எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டது. பகுபதம் பெயர்ப்பகுபதம் என்றும் வினைப்பகுபதம் என்றும் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றது.
அடுத்ததாக வரும் வினைப்பகுபதங்களும் வினைமுற்று, வினையாலணையும் பெயர் என்று இருவகையாகப் பிரித்துக் காட்டப்பட்டன. இவற்றுள் வினைமுற்றுப் பகுபதம் தெரிநிலை என்றும் குறிப்புவினை என்றும் வகைப் படுத்தப்பட்டன. பெயரெச்சங்களும், வினையெச்சங்களும் பகுபதங்களாக அமைவதற்கான இலக்கணக் கூறுகள் விளக்கப்பட்டன.
வினையாலணையும் பெயர்ப் பகுபதங்கள் தெரிநிலை என்றும் குறிப்பு என்றும் இருவகைப்படும் என்பது எடுத்துக் காட்டுகளுடன் விளக்கப்பட்டது.
அடுத்ததாகப் பகுபதத்தின் உறுப்புகள் ஆறும் விளக்கப்பட்டன. அவை, ஒருபகுபதத்தில் வந்தமையும் பாங்கும் எடுத்துக் காட்டுகளுடன் காட்டப்பட்டது.
பகுபத உறுப்புகள் ஆறனுள் ‘பகுதி’ என்பது குறித்து விரிவாகக் கூறப்பட்டது. ஒரு பகுபதத்தின் முதலில் நிற்கும் ‘பகாப்பதமே’ பகுதி என்பதும், பெயர்ப்பகுபதத்திலும் வினைப்பகுபதத்திலும் வரும் பகுதிகள், எவ்வாறு வரும் என்பதும் விளக்கப்பட்டன.
பண்புப் பெயர்ப் பகுபதத்தின் பகுதிகளாக வரும் செம்மை, சிறுமை என்பனவற்றின் தன்மையும் இவை பிற சொற்களோடு புணரும் போது அடையும் மாற்றங்களும் விளக்கிக் கூறப்பட்டன.
தெரிநிலை வினைமுற்றுப் பகுபதத்தின் பகுதிகள். இவை ‘செய்’ என்னும் ஏவல் பகாப்பதங்களாகவும் அமையும் என்பதும் காட்டப்பட்டது. நட, வா, மடி, சீ எனவரும் 23 ஏவல்மற்றும் தெரிநிலைப் பகாப்பதங்களின் பட்டியல் எடுத்துக் காட்டப்பட்டது. இவை பிறவினையாய் வரும் முறைகள் எடுத்துக்காட்டப்பட்டன.
பாடம் - 6
விகுதிகளின் எண்ணிக்கை
நன்னூல் ‘அன்’ என்று தொடங்கி, ‘உம்’ என்று முடியும் 37 விகுதிகளைத் தொகுத்துக் கூறுகின்றது. அவை,
அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார்
அ, ஆ, கு, டு, து, று, என், ஏன், அல், அன்
அம், ஆம், எம், ஏம், ஓம்
கும், டும், தும், றும்
ஐ, ஆய், இ, மின், இர், ஈர், ஈயர்,
க, ய, உம் – என்பனவாம்.
இந்த விகுதிகளை நன்னூல் நூற்பா (140) தொகுத்துக் கூறுகிறது. இவற்றுள் கு, டு, து, று என்னும் நான்கும் தன்மை ஒருமை விகுதிகள். இவற்றுக்குள் து, று, டு என்னும் அஃறிணை ஒன்றன்பால் விகுதிகளும் அடங்கியுள்ளன. ஆகவே விகுதிகளின் மொத்த எண்ணிக்கை 40 ஆகும்.
விகுதிகளின் வகைகள்
விகுதிகளின் எண்ணிக்கையை 40 என்று நன்னூல் தொகுத்துத் தந்துள்ள போதிலும் அவற்றை முதல்நிலையில் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
(1)வினைமுற்று விகுதிகள்
(2)பெயர் விகுதிகள்
I. படர்க்கை வினைமுற்று விகுதிகள்:
(1)நடந்தனன், நடந்தான் – அன் – ஆன் – ஆண்பால்
(2)நடந்தனள், நடந்தாள் – அள், ஆள் – பெண்பால்
(3)நடந்தனர், நடந்தார் நடப்ப, நடமார் – அர், ஆர், – ப, மார் – பலர்பால்
(4)நடந்தன, நடவா – அ, ஆ – பலவின்பால்
(5)குறுந்தாட்டு, நடந்தது, போயிற்று – டு, து, று – ஒன்றன்பால்
(குறுந்தாட்டு = குறுகிய தாள்களை உடையது.)
II. தன்மை வினைமுற்று விகுதிகள்
தன்மை வினைகளைச் சுட்டும் வினைமுற்றுகளில் அமையும் விகுதிகளைத் தன்மை வினைமுற்று விகுதிகள் என்கிறோம்.
முதலில் தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகளைக் காண்போம்.
கு, டு, து, று. என்னும் விகுதிகள்:
யான் நடக்கு (நடப்பேன்) உண்டு (உண்டேன்) நடந்து (நடந்தேன்) சேறு (செல்வேன்)
இவை இன்று வழக்கில் இல்லை. இவற்றோடு என், ஏன், அல், அன் என்பனவும் தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் ஆகும்.
யான்
நடந்தனென், நடந்தேன் – என், ஏன்
நடப்பல், நடப்பன் – அல், அன்
நடப்பல் என்பது நடப்பேன் என்று பொருள்படும்.
தன்மைப் பன்மை வினை முற்று விகுதிகள்:
அம், ஆம், எம், ஏம், ஓம், கும், டும், தும், றும் ஆகியவை தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள் ஆகும்
யாம்
நடப்பம் – நடப்பாம் – அம், ஆம் நடப்பெம் – நடப்பேம் – எம், ஏம் நடப்போம், – ஓம்
யாம்
நடக்கும், உண்டும், நடந்தும், சேறும் – கும், டும், தும், றும்.
III. முன்னிலை வினைமுற்று விகுதிகள்
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள்:
நடந்தனை, நடந்தாய், நடத்தி – ஐ, ஆய், இ முன்னிலை ஒருமை விகுதிகள்
(நடத்தி என்பது நடப்பாய் என்று பொருள்படும்.)
முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள்:
நடமின் – மின்
நடந்தனிர் – இர்
நடந்தீர் – ஈர்
முன்னிலைப் பன்மை விகுதிகள்
இவற்றோடு வியங்கோள் வினைமுற்று விகுதிகளையும் ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டு வினைமுற்று விகுதியையும் சேர்த்துக் காண்பது பொருத்தமாகும்.
வியங்கோள் வினைமுற்று விகுதிகள்:
நிலீயர் – ஈயர்
நிற்க – க
வாழிய – ய
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று விகுதி, ‘உம்’ என்பதாம்.
அவன் நடக்கும் – உம
கரியன், கரியான் கரியள், கரியாள் கரியர், கரியார் கரியன கருந்தாட்டு, கரிது, குழையிற்று – அன், ஆன் – அள், ஆள் – அர், ஆர் – அ – டு, து, று படர்க்கை
கரியென், கரியேன் கரியம், கரியாம் கரியெம், கரியேம் கரியோம் – என், ஏன் – அம், ஆம் – எம், ஏம் – ஓம்
தன்மை
கரியை, கரியாய் வில்லி கரியிர், கரியீர் – ஐ, ஆய் – இ – இர், ஈர் முன்னிலை
இதுவரையில் வினைமுற்று விகுதிகளைக் கண்டோம். இனிப் பெயர் விகுதிகளைக் காண்போம்.
தெரிநிலைப் பெயரெச்ச விகுதிகள்:
நடந்த, நடக்கின்ற, நடவாத, நடக்கும் – இவற்றுள் அ, உம் விகுதிகள்.
குறிப்புப் பெயரெச்ச விகுதிகள்:
சிறிய – அ
பெரிய – அ
தெரிநிலை வினையெச்ச விகுதிகள்:
தெரிநிலை வினையெச்ச விகுதிகள் பின்வருமாறு.
உ, இ, ய், பு, ஆ, ஊ, என, ஏ, அ, இன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, கண், வழி, இடத்து, உம், மல், மை, மே, து முதலியன. இவற்றில் மல், மை, மே, து என்ற நான்கும் எதிர்மறைப் பொருளிலும் வருவன.
இனி இவற்றில் சிலவற்றிற்கு எடுத்துக் காட்டுகளைக் காண்போம்.
நடந்து, சென்று உ
ஓடி, நாடி இ
போய் ய்
உண்ணா ஆ
உண்ண, ஆட அ
உண்டால், பார்த்தால் ஆல்
உண்ணாமல், உண்ணாமை மல், மை
உண்ணாமே, உண்ணாது மே, து
இனி, குறிப்பு வினையெச்ச விகுதிகளைக் காண்போம்.
குறிப்பு வினையெச்ச விகுதிகள் பின்வருமாறு :
அ, றி, து, ஆல், மல், கால், கடை, வழி, இடத்து என்னும் 9 விகுதிகள்.
இவற்றில் சிலவற்றிற்கு எடுத்துக் காட்டுகளைக் காண்போம்.
மெல்ல – அ அன்றி – றி
அல்லது – து அல்லால் – ஆல்
என வருவன.
அன், ஆன், அள், ஆள், அர், ஆர், மார், து, அ, இ
என்பவை. இவற்றிற்கு எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்.
சிறியன், சிறியான் – அன், ஆன்
சிறியள், வானத்தாள் – அள், ஆள்
குழையர், வானத்தார் தேவிமார் – அர், ஆர், மார்
சிறியது, சிறியன, பொன்னி – து, அ, இ
இவற்றோடு, மன், மான், கள், வை, தை, கை, பி, முன், அல், ன், ள், ர், வ் என்னும் 13 விகுதிகளும் பெயர் விகுதிகளாம்.
வடமான், கோமான், கோக்கள் – மன், மான், கள்
அவை, இவை – வை.
எந்தை, எங்கை, – தை, கை
எம்பி, எம்முன், தோன்றல் – பி, முன், அல்
பிறன், பிறள், பிறர், அவ் – ன், ள், ர், வ்
தொழிற்பெயர் விகுதிகள் பின்வருமாறு:
தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து, என்னும் 19 விகுதிகள். இனி இவற்றில் சிலவற்றிற்கான எடுத்துக் காட்டுகளைக் காண்போம்.
நடத்தல் – தல்; ஆடல் – அல்; வாட்டம் – அம்; கொலை – ஐ; பார்வை – வை; போக்கு – கு; நடப்பு – பு; நடவாமை – மை.
மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், ஆர் என்பன. இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
நன்மை – மை தொல்லை – ஐ
மாட்சி – சி மாண்பு – பு
மழவு – வு நன்கு – கு
நன்றி – றி நன்று – று
நலம் – அம் நன்னர் – அர்
இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
செய்வி – வி நடப்பி – பி
போக்கு – கு பாய்ச்சு – சு
உருட்டு – டு நடத்து – து
எழுப்பு- பு துயிற்று – று
என்பன.
ஆய் விகுதி புணர்ந்த சொல்:
நீ நட; நீ நடப்பி; நீ செல் – இவற்றில் ஆய்விகுதி புணர்ந்து கெட்டது. ‘நீ நடப்பாய்’ எனவராமல் ‘நீ நட’ என்று வருதலே மரபாயிற்று.
பெயரெச்ச விகுதிகள் புணர்ந்து கெடல்:
கொல்களிறு, ஓடாக்குதிரை இவற்றில் பெயரெச்ச விகுதிகள் புணர்ந்து கெட்டன. இவற்றில் கொன்ற-அ; ஓடாத-அ எனும் விகுதிகள் கெட்டன.
தல் என்னும் தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெடல்:
அடி, கேடு, – இவற்றில் தல் என்னும் தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெட்டது. அடித்தல், கெடுதல், என்பவை விகுதி கெட்டு அடி, கேடு என வந்துள்ளன.
வகைகள்
பகுதி, விகுதிகளைப் போலவே இடைநிலைகளையும் இரு பிரிவுகளாகப் பிரித்துக் காணலாம்.
(1)பெயர் இடைநிலை
(2)வினை இடைநிலை
பெயர் இடைநிலைகளாக ஞ், ச், ந், த் என்னும் எழுத்துகள் அமைகின்றன.
அறிஞன், இளைஞன், கவிஞன் – ‘ஞ்’ இடைநிலை
வலைச்சி, இடைச்சி, புலைச்சி – ‘ச்’ இடைநிலை
செய்குநன், பொருநன் – ‘ந்’ இடைநிலை
வண்ணாத்தி, பாணத்தி – ‘த்’ இடைநிலை
(1) இறந்தகால இடைநிலைகள்
(2) நிகழ்கால இடைநிலைகள்
(3) எதிர்கால இடைநிலைகள்
என்பன.
இறந்தகால இடைநிலைகள்
த், ட், ற் என்னும் மெய்களும், இன் என்பதும் ஐம்பால் மூவிடங்களிலும் இறந்த காலத்தைத் தருகின்ற வினைப் பகுபதங்களுடைய இடைநிலைகளாகும். இதனை, நன்னூல்,
தடற ஒற்று, இன்னே ஐம்பால் மூவிடத்து
இறந்த காலம் தரும் தொழில் இடைநிலை (142)
என்று விளக்குகின்றது.
இதற்கான எடுத்துக்காட்டைப் பின்வருமாறு காண்போம்.
நடந்தான், பார்த்தான் – ‘த்’ இடைநிலை
கொண்டான், விண்டது – ‘ட்’ இடைநிலை
நின்றான், தின்றான் – ‘ற்’ இடைநிலை
ஒழுகினான், வழங்கினான் – ‘இன்’ இடைநிலை
‘இன்’ என்னும் இடைநிலை மட்டும் சில இடங்களில் இறுதி மெய் ‘ன்‘ கெட்டு ‘இ’ மட்டும் தனித்து வரும். சில இடங்களில் ‘இ’ கெட்டு ன் மட்டும் வரும்.
எடுத்துக்காட்டு:
எஞ்சியது – எஞ்சு+இ(ன்)ய்+அ+து இதில் ‘ன்’ கெட்டு ‘இ’ வந்தது.
போனது – போ(இ)ன்+அ+து. இதில் ‘இ’ கெட்டு ‘ன்’ மட்டும் உள்ளது.
நிகழ்கால இடைநிலைகள்
வினைப் பகுபதத்தில் நிகழ்காலத்தைக் காட்டும் இடைநிலைகளாக ஆநின்று, கின்று கிறு என்ற மூன்றினை நன்னூல் விளக்குகின்றது.
‘ஆநின்று கின்று, கிறு மூவிடத்தின்
ஐம்பால் நிகழ்பொழுது அறைவினை இடைநிலை, (143)
செல்லாநின்றான், நடவாநின்றான்- ஆநின்று
செல்கின்றான், நடக்கின்றான் – கின்று
செல்கிறான், நடக்கிறான் – கிறு
இதைப்போலவே இவ்வினை இடைநிலைகளை மற்ற பால், இடம் ஆகியவற்றிலும் இணைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எதிர்கால இடைநிலைகள்
எதிர்காலத்தைக் காட்டும் இடைநிலைகள் எதிர்கால இடைநிலைகள் எனப்படும். இவை, ப், வ், என இரண்டு மெய்களாகும். இரண்டிற்கும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
நடப்பான், துறப்பான் – ப்
வருவான், வருவாள் – வ்
இனி, இவற்றை எடுத்துக்காட்டுகளுடன் காண்போம்.
(1)று, றும் இறந்தகாலமும், எதிர்காலமும் காட்டும்.
சென்று (சென்றேன்) – று சென்றும் (சென்றோம்) – றும் இறந்தகாலம்
சேறு (செல்வேன்) – று சேறும் (செல்வோம்) – றும் எதிர்காலம்
(2)து, தும்: இறந்தகாலமும், எதிர்காலமும் காட்டும்.
வந்து (வந்தேன்) – து வந்தும் (வந்தோம்) தும் இறந்தகாலம்
வருது (வருவேன்) – து வருதும்(வருவோம்) தும் எதிர்காலம்
(3)டு, டும்: இறந்தகாலம் காட்டும்
உண்டு (உண்டேன்) – டு உண்டும் (உண்டோம்) – டும் இறந்தகாலம்
(4)கு, கும் எதிர்காலம் காட்டும்
உண்கு (உண்பேன்) – கு உண்கும் (உண்போம்) – கும் எதிர்காலம்
(5)மின், ஈர், உம், ஆய் எனும் ஏவல்விகுதிகள், வியங்கோள் விகுதிகள், இ, மார் விகுதிகள்
உண்மின் – மின் உண்ணீர் – ஈர் உண்ணும் – உம் உண்ணாய் – ஆய்
எதிர்காலம்
உண்க, உண்ணிய, உண்ணியர்-எதிர்காலம்
சேறி (செல்வாய்)-எதிர்காலம்
உண்மார் (உண்பதற்காக)-எதிர்காலம்
(6)ப விகுதி : இறந்தகாலமும், எதிர்காலமும் காட்டும்.
உண்ப (உண்டார்)-இறந்தகாலம்
உண்ப (உண்பார்)-எதிர்காலம்
(7)செய்யும் எனும் வாய்பாட்டின் உம் விகுதி
அவன் உண்ணும்-நிகழ்காலம் (உண்கிறான்)
அவள் உண்ணும்-எதிர்காலம் (உண்பாள்)
(8)ஆ விகுதி :எதிர்மறைப் பொருளில் மூன்றுகாலத்துக்கும் வரும்
உண்ணா -இறந்தகாலம்
உண்ணா -நிகழ் காலம்
உண்ணா -எதிர்காலம்
புகு+ஆன் – புக்கான் விடு+ஆள் – விட்டாள் பெறு+ஆர் – பெற்றார் இறந்தகாலம்
நெட்டெழுத்தைச் சார்ந்து வரும் ‘கு’ என்ற ஈற்றை உடைய சில சொற்களும் மெய் இரட்டித்து, இறந்தகாலத்தைக் காட்டும்.
போடு + ஆன் – போட்டான்
அடுத்ததாக, பகுபத உறுப்புகளில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து நிற்கும் உறுப்பான இடைநிலைகள் இருவகைப்படும் என்றும், அவை பெயர், வினை இடைநிலைகள் என்றும் கண்டோம். வினை இடைநிலைகள் இறந்த கால, நிகழ்கால, எதிர்கால இடைநிலைகள் என்று மூன்று காலத்தைக் காட்டுவதற்குத் தனித்தனியே அமைந்துள்ளன என்பது விளக்கப்பட்டது.
மூன்றாவதாக, காலங்காட்டும் விகுதிகள் டு, டும், று, றும், து, தும், கு, கும், ஆகியவற்றோடு ஏவல் வினை விகுதிகளும், வியங்கோள் வினை விகுதிகளும் காலங்காட்டும் தன்மை, எடுத்துக்காட்டுகளோடு விளக்கப்பட்டது.
சில பகுதிகள் இரட்டித்துக் காலம் காட்டும் தன்மையுடையன என்பதையும் இப் பாடத்தில் கண்டோம்.