101

ஒளவையார் பழத்தை ஊதுவதை மரத்தின் மேலிருந்த சிறுவன் கண்டான் .

‘ பாட்டி...!

பழம் சுடுகிறதா ?

நன்றாக ஊதிச் சாப்பிடுங்கள் ! ’ என்று கூறினான் .

அப்போதுதான் ஒளவையாருக்குச் ‘ சுட்ட பழம் எது ?

சுடாத பழம் எது ? ’ என்பது புரிந்தது .

ஆடு மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் , தன்னை வென்று விட்டானே என்று வெட்கப்பட்டார் .

தனது வெட்கத்தை நினைத்து வருந்திய ஒளவையார் பின்வரும் பாடலைப் பாடினார் .

கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி

இருங்கதலித் தண்டுக்கும் நாணும் - பெருங்கானில்

கார்எருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது

ஈரிரவு துஞ்சாது என்கண்

( கருங்காலிக் கட்டை = ஈட்டி மரக்கட்டை , நாணா = கலங்காத , கோடாலி = கோடரி , கதலித்தண்டு = வாழைத்தண்டு , ஈரிரவு = இரண்டு இரவு , துஞ்சாது = தூங்காது )

கருங்காலிக் கட்டை மிகவும் உறுதியானது .

அதை எளிதில் பிளக்கக் கூடிய கோடரி , வாழைத்தண்டை வெட்டும்போது சறுக்கும் .

அதுபோல நானும் எருமை மாடு மேய்க்கின்ற சிறுவனிடம் தோற்றுவிட்டேன் .

எனவே இரண்டு இரவுகள் எனக்குத் தூக்கம் வராது என்று வருந்தினார் .

ஆடு , மாடு மேய்ப்பவனாக வேடம் தாங்கி அங்கே இருந்தவன் முருகன் ஆவான் .

ஒளவையாரின் மனவருத்தத்தைப் போக்க அவன் கருதினான் .

எனவே , அவன் தனது உண்மை வடிவுடன் ஒளவையாருக்குக் காட்சி அளித்தான் .

‘ முருகன்தான் ஆடு , மாடு மேய்ப்பவன் போல் வேடமிட்டு வந்து தனது கர்வத்தைப் போக்கினான் ’ என்பதை அறிந்த ஒளவையார் மனம் தெளிந்தார் .

முருகனை வணங்கினார் .

2.2.3 கொடியது

முருகனை வணங்கிய ஒளவையாரின் மனத்திலிருந்த புலமைக் கர்வம் அகன்றது ; நெஞ்சில் அமைதி குடி கொண்டது .

ஒளவையாரைப் பார்த்து முருகன் , ‘ ஒளவையே உமது அமுதத் தமிழைக் கேட்கவும் சில ஐயங்களுக்குத் தெளிவு பெறவுமே நான் வந்தேன் .

எனது ஐயங்களைத் தங்கள் அன்பு மொழியால் போக்குங்கள் ’ என்றான் .

‘ முருகா !

நீ அறியாதது எதுவும் உண்டா ?

நீ சாமிநாதனாக இருந்து உன் தந்தைக்கே மந்திரம் சொன்னவன் அப்பா !

உனது ஐயத்தைப் போக்கும் பெருமை என் தமிழுக்குக் கிடைக்கட்டும் ’ என்றார் ஒளவையார் .

அப்போது முருகன் கொடியது , இனியது , பெரியது , அரியது எவை என்று கேட்டான் .

அதற்கு ஒளவையார் விடையாக இந்தப் பாடல்களைப் பாடியுள்ளார் .

கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்

கொடிது கொடிது வறுமை கொடிது ;

அதனினும் கொடிது இளமையில் வறுமை ;

அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய் ;

அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர் ;

அதனினும் கொடிது இன்புற

அவர்கையில் உண்பதுதானே

( ஒளவையார் தனிப் பாடல் : 54 )

இந்த உலகில் மிகவும் கொடுமையானது எது என்றால் வறுமைதான் .

அந்த வறுமையும் இளமைப் பருவத்தில் வந்தால் மிக மிகக் கொடுமையானது .

அத்தகைய வறுமையை விடக் கொடுமையானது தீராத கொடிய நோய் ஆகும் .

தீராத கொடிய நோயைவிடக் கொடுமையானது அன்பே இல்லாத பெண்ணுடன் வாழ்வது .

அதைவிடக் கொடுமையானது அந்தப் பெண்ணிடம் உணவைப் பெற்று உண்பது ஆகும் என்று கொடுமையானவற்றுள் எல்லாம் மிகவும் கொடுமையானது அன்பு இல்லாத பெண் இடும் உணவை உண்பதுதான் என ஒளவையார் குறிப்பிட்டுள்ளார் .

2.2.4 இனியது

இனியது கேட்கின் தனிநெடு வேலோய் !

இனிது இனிது ஏகாந்தம் இனிது ;

அதனினும் இனிது ஆதியைத் தொழுதல் ; அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல் ;

அதனினும் இனிது அறிவுள்ளாரைக்

கனவினும் நனவினும் காண்பது தானே !

( ஒளவையார் தனிப் பாடல் : 55 )

இந்த உலகில் மிகவும் இனிமையானது எது என்றால் , தனிமையில் இருப்பதுதான் .

அதைவிட இனிமையானது இறைவனை வணங்குவது .

இறைவனை வணங்குவதை விட அறிவு உடையவர்களைச் சேர்ந்து வாழ்வது இனிமையானது .

அதைவிட இனிமையானது கனவிலும் நனவிலும் அறிவு உடையவர்களைப் பார்த்துக் கொண்டு இருப்பது ஆகும் .

இப்பாடலில் தனிமை , இறைவனை வணங்குதல் முதலியவற்றை இனிமையானது என்று ஒளவையார் தெரிவித்துள்ளார் .

என்றாலும் இவற்றை விட இனிமையானதாக அறிவுடையாரைப் பார்ப்பதை ஒளவையார் கூறியுள்ளார் .

இதிலிருந்து அறிவுக்கு இருக்கும் மதிப்பை நாம் அறிந்து கொள்ள முடியும் .

2.2.5 பெரியது

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய் !

பெரிது பெரிது புவனம் பெரிது ;

புவனமோ நான்முகன் படைப்பு ;

நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன் ;

கரிய மாலோ அலைகடல் துயின்றோன் ;

அலைகடல் , குறுமுனி அங்கையில் அடக்கம் ;

குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன் ;

கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம் ;

அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம் ;

உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம் ;

இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம் ;

தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே !

( ஒளவையார் தனிப் பாடல் : 56 )

உலகில் மிகப்பெரியது எது என்று கேட்டால் , இந்த உலகம்தான் பெரியது .

ஆனால் இந்த உலகமோ நான்முகனால் படைக்கப்பட்டது .

எனவே நான்முகன்தான் பெரியவன் என்றால் நான்முகனோ திருமாலின் உந்தியில் ( தொப்புள் ) தோன்றியவன் .

எனவே திருமால்தான் பெரியவன் என்றால் திருமாலோ அலைகடலில் தூங்குகிறவன் .

திருமாலைத் தாங்கும் கடல்தான் பெரியது என்றால் , அந்தக் கடலும் அகத்தியனின் உள்ளங்கையில் அடங்கியது .

எனவே அகத்தியர்தான் பெரியவர் என்றால் , அந்த அகத்தியரும் கலயத்தில் ( சிறு மண்குடம் ) அடங்கி இருந்தவர் .

எனவே , கலயம் தான் பெரியது என்றால் அந்தக் கலயமோ இந்தப் பூமியில் உள்ள மண்ணால் செய்யப்பட்டது .

எனவே , பூமிதான் பெரியது என்றால் , இந்தப் பூமியை ஆதிசேடன் என்னும் பாம்பு தனது ஒரு தலையில் தாங்கியிருக்கிறது .

பூமியைத் தாங்கும் ஆதிசேடன் என்னும் பாம்புதான் பெரியது என்றால் அந்தப் பாம்பை , உமையவள் தனது விரலில் மோதிரமாக அணிந்துள்ளாள் .

எனவே உமையவள்தான் பெரியவள் என்றால் , அந்த உமையவளோ சிவனது உடலின் ஒரு பாதியில் ஒடுங்கியிருக்கிறாள் .

எனவே சிவன்தான் பெரியவன் என்றால் , அந்தச் சிவனோ அடியவர்களின் உள்ளத்தில் ஒடுங்கியிருக்கிறான் .

எனவே அடியவர்களின் பெருமைதான் உலகில் பெரியது என்று ஒளவையார் பாடியுள்ளார் .

2.2.6 அரியது

அரியது கேட்கின் வரிவடி வேலோய்

அரிது அரிது மானிடர் ஆதல் அரிது ;

மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு

பேடு நீங்கிப் பிறத்தல் அரிது .

பேடு நீங்கிப் பிறந்த காலையும்

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ;

ஞானமும் கல்வியும் நயந்த காலையும்

தானமும் தவமும் தான்செயல் அரிது

தானமும் தவமும் தான்செய்வராயின்

வானவர் நாடு வழி திறந்திடுமே

( ஒளவையார் தனிப் பாடல் : 57 )

உலகில் மிகவும் அரியது எது என்றால் , மானிடராகப் பிறப்பது தான் அரியது . மானிடராகப் பிறந்தாலும் கூன் , குருடு , செவிடு முதலிய குறைகள் இல்லாமல் பிறத்தல் அரியது .

இந்தக் குறைகள் நீங்கிப் பிறந்தாலும் அறிவும் கல்வியும் விரும்பிக் கற்றவனாக ஆதல் அரியது .

அறிவும் கல்வியும் பெற்றாலும் பிறருக்குக் கொடுக்கும் ஈகையும் நோன்பும் உடையவராய் இருத்தல் அரியது .

ஈகையும் நோன்பும் உடையவராக வாழ்கின்றவர்களுக்கு வான்உலகப் பெருவாழ்வு கிடைக்கும் என்று ஒளவையார் பாடியுள்ளார் .

மேலே நீங்கள் பார்த்த ஒளவையாரின் நான்கு தனிப்பாடல்களிலும்

நெடிய வெவ்வேலோய்

தனிநெடு வேலோய்

எரிதவழ் வேலோய்

வரி வடிவேலோய்

என்னும் தொடர்கள் இடம் பெற்றுள்ளன .

இவற்றில் வரும் , ' வேலோய் ' என்னும் சொல் வேலை உடையவனை அழைக்கும் சொல்லாய் அமைந்துள்ளது .

வேலை உடையவன் வேலன் .

அவனது வேலின் தன்மையை இத்தொடர்கள் விளக்குகின்றன .

இவ்வாறு ஒளவையாரைப் பற்றி , பல நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன .

இவற்றின் வாயிலாக ஒளவையாரின் கவித்திறனையும் பெருமையையும் நாம் அறியமுடியும் .

இனி ஒளவையார் பாடிய ஆத்தி சூடி , கொன்றை வேந்தன் ஆகிய நூல்களை நாம் காண்போம் .

ஆத்திசூடி

ஒளவையார் பாடிய நூல்களில் ஆத்திசூடியும் ஒன்று .

‘ ஆத்திசூடி ’ என்பது ஆத்தி மாலையைச் சூடியுள்ள சிவனைக் குறிக்கும் .

ஆத்திசூடி என்பது காப்புச் செய்யுளின் முதல்சொல் ஆகும் .

அந்தச் சொல்லே நூலுக்குப் பெயராக அமைந்துள்ளது .

காப்புச் செய்யுள் என்பது கவிஞன் தான் புனைய முனைந்துள்ள நூலினை முழுமையாக இயற்றி முடிப்பதற்கு இறைவன் துணை நின்று காக்க வேண்டும் என்ற கருத்தில் நூல் முதலில் அமையும் செய்யுள் ஆகும் .

ஆத்திசூடி அமர்ந்த தேவனை

ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே

( ஆத்திசூடி , காப்புச் செய்யுள் )

ஆத்தி மாலையைச் சூடி வீற்றிருக்கும் சிவபெருமானை நாம் போற்றி வணங்குவோம் என்று ஆத்திசூடி தொடங்குகிறது .

இந்நூல் 109 அடிகளைக் கொண்டுள்ளது .

இந்நூலில் உள்ள அடிகள் அகரவரிசையில் அமைந்துள்ளன .

படிக்கின்றவர்கள் தாங்கள் படித்தவற்றை மனத்தில் எளிதில் பதிய வைப்பதற்கு இந்த அகர வரிசை உதவும் .

2.3.1 கல்வி

கல்வி பயிலும் மாணவர்களுக்கு நல்ல பண்புகளைக் கற்பிக்கும் நோக்கில் எழுதப்பட்ட நூல் ஆத்திசூடி .

எனவே , கல்வி பற்றிய பல செய்திகள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன .

அவற்றைக் கற்போர் , கல்வியின் சிறப்பையும் தேவையையும் புரிந்து கொள்ள இயலும் .

• நூல் பல கல்

‘ நூல் பல கல் ’ ( 71 ) என்பது ஆத்திசூடியில் இடம்பெற்றுள்ள தொடர் .

பல வகை நூல்களைக் கற்க வேண்டும் என்பது இதன்பொருள் .

இதே கருத்தை , ‘ கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் ’ என்னும் பழமொழியும் உணர்த்துகிறது .

கண்ணில் காணும் நூல்களை எல்லாம் கற்கின்ற ஒருவன் அறிஞன் ஆவான் என்பது இப்பழமொழி உணர்த்தும் கருத்து ஆகும் .

இதற்கு ஏற்பவே ஆத்திசூடியும் சிறு சொற்றொடரின் துணையுடன் ‘ நூல் பல கல் ’ என்று குறிப்பிட்டுள்ளது .

• ஓதுவது ஒழியேல்

ஓதுதல் என்பது கற்றலையும் கற்பித்தலையும் குறிக்கும் .

கல்வியும் கற்பித்தலும் தொடர்ந்து நடைபெற வேண்டிய செயல்கள் .

கற்கக் கற்க அறிவு வளரும் .

கல்வியைக் கற்காமல் இடையில் நிறுத்தினால் அறிவு வளர்ச்சி குறைவது மட்டும் அல்லாமல் முன்பு கற்ற கல்வியும் மறந்துவிடும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் .

எனவே தான் ஒளவையார் ,

ஓதுவது ஒழியேல் ( 11 )

என்று பாடியுள்ளார் .

அறிவுக்கு அடிப்படையானது கல்வி .

கல்விக்குக் கரை கிடையாது .

ஆனால் அதைக் கற்கின்ற மனிதனின் வாழ்நாள் குறைவு . இந்தக் குறைந்த வாழ்நாளைக் கொண்ட மனிதன் இடைவிடாது கற்க வேண்டும் .

அவ்வாறு கற்றால்தான் அறிவைப் பெறமுடியும் என்பது இதன் பொருள் .

• எண் எழுத்து இகழேல்

எண் என்பது கணிதம் முதலான அறிவியல் கல்வியையும் எழுத்து என்பது இலக்கியம் முதலான கலையியல் கல்வியையும் குறிக்கும் .

இவை இரண்டும் மனிதனின் இருகண்களைப் போன்றவை .

மனிதனின் இரு கண்களும் சேர்ந்து ஒரு பார்வையைக் கொடுப்பது போல அறிவியல் கல்வியும் கலையியல் கல்வியும் சேர்ந்து மனிதனுக்கு அறிவைக் கொடுக்கின்றன .

எனவே மனிதன் தனது வாழ்நாளில் அறிவியல் கல்வியையும் கலையியல் கல்வியையும் இகழ்ந்து ஒதுக்கக் கூடாது .

‘ எண் எழுத்து இகழேல் ’ ( 7 ) என்னும் ஆத்திசூடி வரி இதையே கூறுகிறது .

தொடர்ச்சியாகக் கற்கும் இயல்பைக் கொண்ட மனிதன் அறிவியல் கல்வியையும் கலையியல் கல்வியையும் தொடர்ந்து கற்க வேண்டும் என்பதே இதன் பொருள் .

• இளமையில் கல்

கல்வியை ஒருவன் முறையாகக் கற்றுக் கொள்ள விரும்பினால் அவன் அதை இளமை முதலாகக் கற்றல் வேண்டும் .

இளமையில் ஒருவன் கற்கின்ற கல்வி அவனது நெஞ்சில் பசுமரத்து ஆணிபோல் எளிதில் சென்று பதியும் .

எனவே தான் ,

இளமையில் கல் ( 29 )

என்று ஒளவையார் பாடியுள்ளார் .

இளமைப் பருவம் என்பது தொல்லைகள் இல்லாமல் துள்ளித் திரியும் காலம் .

இந்தக் காலத்தில் கற்கின்ற கல்வியானது அவனது வாழ்க்கை முழுவதும் உதவும் வகையில் உள்ளத்தில் ஆழ்ந்து பதியும் .

இளமையில் கற்காமல் மனம்போன போக்கில் வாழ்கிறவர்கள் முதுமையில் துன்பப்பட நேரிடும் என்பதை நாம் அன்றாட வாழ்வில் காண இயலும் .

எனவே ஒவ்வொருவரும் இளமையில் முயன்று கல்வி கற்றல் வேண்டும் .

• கேள்வி முயல்

கற்றல் இருவகையில் நிகழும் .

ஒன்று : நூல்களில் இருக்கும் பல்வேறு கருத்துகளை நாமே படித்து அறிந்து கொள்ளுதல் .

இன்னொன்று : நல்ல கல்வி அறிவு உடையவர்களின் அறிவுரைகளைக் கேட்டல் என்பவை ஆகும் .

கற்றலை விடவும் கேட்டலே நன்று என்று நம் முன்னோர்கள் கருதினார்கள் .

அதையே ஒளவையாரும்

கேள்வி முயல் ( 39 )

என்று பாடியுள்ளார் .

ஒவ்வொரு நூலாகத் தேடிப் பிடித்து நாம் கற்பது என்றால் அதற்கு நெடுங்காலம் ஆகும் .

ஆனால் பல நூல்களைக் கற்று அறிந்த அறிஞர்களின் உரையைக் கேட்பதன் மூலம் அந்த நூல் கருத்துகளை நம்மால் சில மணிநேரத்தில் அறிந்து கொள்ள முடியும் .

கேள்வி அறிவு என்பது கற்றவர்களுக்கும் அறிவைக் கொடுக்கும் .

கல்வி அறிவு இல்லாதவர்களுக்கும் அறிவைக் கொடுக்கும் .

இதைத் திருவள்ளுவர் ,

கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு

ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை

( 414 )

( ஒற்கம் = மனத்தளர்ச்சி , ஊற்று = ஊன்றுகோல் )

என்று குறிப்பிட்டுள்ளார் .

ஒருவன் கல்வி அறிவு பெற்றவன் இல்லை என்றாலும் , கல்வி அறிவு பெற்றவர்களின் அறிவுரைகளைக் கேட்க வேண்டும் .

அது அவனுக்குத் தக்க சமயத்தில் உதவும் , அந்த உதவி எவ்வாறு இருக்கும் என்பதற்குத் திருவள்ளுவர் ஓர் உவமையைப் பயன்படுத்தியுள்ளார் .

முதுமையினால் தளர்ச்சி ஏற்பட்டவனுக்கு ஊன்றுகோல் எவ்வாறு உதவியாய் இருக்குமோ அதுபோல் மனத்தளர்ச்சி ஏற்படும் போது கேள்வியறிவு உதவும் என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார் .

இதையே நாலடியாரும் ,

கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின்

நல்லறிவு நாளும் தலைப்படுவர்

( 139 )

என்று குறிப்பிட்டுள்ளது .

2.3.2 ஒழுக்கம்

ஒழுக்கம் என்பது ஒழுங்கு என்ற பொருள் அடிப்படையில் தோன்றியது .

ஒழுங்கு என்பது முறையாகச் செய்தலைக் குறிக்கும் சொல் ஆகும் .

முறையான வாழ்க்கையின் நிலைப்பாடுதான் ஒழுக்கம் .

மனித வாழ்வில் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதுதான் ஆத்திசூடியின் நோக்கம் . ஒழுக்கத்தைத் தனிமனித ஒழுக்கம் , சமுதாய ஒழுக்கம் என்னும் இருநிலைகளில் காணமுடியும் .