103

ஏர் கொண்டு நிலத்தை உழுது உணவுப்பொருள் உற்பத்தி செய்வதால் இதை ஏர்த்தொழில் என்றும் குறிப்பிடுகிறார்கள் .

இந்த ஏர்த் தொழிலின் சிறப்பை ஒளவையார் ,

சீரைத் தேடின் ஏரைத்தேடு

( 29 )

என்று பாடியுள்ளார் .

ஒருவன் தனது வாழ்க்கையில் சிறப்பு வேண்டும் என்று தேடினால் ஏர்த் தொழிலைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் .

பிற தொழில்களைச் செய்கிறவர்கள் தாங்கள் உயிர்வாழ்வதற்கு மட்டுமே பொருள் ஈட்டுகிறார்கள் .

ஆனால் ஏர்த்தொழில் செய்கிறவர்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருளுடன் உலக மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் ஈட்டுகிறார்கள் .

எனவேதான் ஒளவையார் , சிறப்பைத் தேடுபவர்களைப் பார்த்து ஏர்த் தொழிலைத் தேடச் சொல்லியுள்ளார் .

• மேழிச் செல்வம் கோழைபடாது

ஏர்த் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளுள் முதன்மையானது கலப்பை .

கலப்பையை மேழி என்று ஒளவையார் குறிப்பிட்டுள்ளார் .

கலப்பை என்னும் கருவியால் செய்யும் ஏர்த் தொழிலால் உருவான செல்வம் எல்லாக் காலத்திலும் ஒருவனைக் காக்கும் என்பதை அவர் ,

மேழிச் செல்வம் கோழை படாது

( 77 )

என்று பாடியுள்ளார் .

இந்த உழவுத் தொழிலின் மூலம் ஈட்டிய செல்வம் என்றும் குறைவுபடாது என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது .

• உழுது ஊண் இனிது

உணவானது அதன் சுவையால் மட்டுமே இனிமை தருவதில்லை .

அது எந்த வழியில் வந்தது என்பதன் அடிப்படையிலும் இனிமையைத் தரும் என்று கொன்றை வேந்தன் தெரிவிக்கிறது .

தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது

( 46 )

என்னும் கொன்றை வேந்தன் தொடர் இக்கருத்தை விளக்குகிறது .

ஒருவரிடம் அடிமையாக இருந்து அவரை வணங்கிப் பெற்று உண்ணும் உணவு சுவையானதாக இருந்தாலும் அது இனியது அல்ல .

உழவுத் தொழிலால் உருவாக்கி உண்ணும் உணவில் சுவை குறைவாக இருந்தாலும் அந்த உணவே இனிமையானது என்று ஒளவையார் தெரிவித்துள்ளார் .

2.4.4 விருந்தோம்பல்

இல்லற வாழ்வின் இனிமையைக் கண்டவர்கள் தமிழர்கள் .

அவர்கள் இல்வாழ்க்கையில் முதன்மையானதாக விருந்தோம்பலைக் கூறி உள்ளனர் .

விருந்தினர்களை வரவேற்று அவர்களுக்கு உணவு வழங்கும் தன்மையை ஒளவையார் தமது கொன்றைவேந்தனில் சிறப்பாகப் பாடியுள்ளார் .

உறவினர்களுடன் இணக்கமாய் வாழத் தெரிந்தவனுக்கு மற்றவர்களுடன் இணக்கமாக வாழவும் தெரியும் .

விருந்தினர்கள் , உறவினர்களாக இருந்தாலும் உறவு அல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு விருந்து படைக்கும் இன்முகம் கொண்டவர்கள் தமிழ்ப் பெண்கள் .

• மருந்தே ஆயினும் விருந்தோடு உண்

தங்களிடம் இருக்கும் உணவுப் பொருள்களைப் பிறருக்கும் கொடுத்துப் பகிர்ந்து உண்ணும் வழக்கமே விருந்தோம்பலின் அடிப்படை .

இந்தப் பகிர்ந்து உண்ணும் பழக்கம் கொண்டவர்கள் , கிடைத்தற்கு அரிய அமிர்தமே கிடைத்தாலும் , தாங்கள் மட்டும் தனியாக உண்போம் என்று கருதாமல் அதையும் விருந்தினருடன் பகிர்ந்து உண்பார்கள் .

இந்தப் பண்பு உடையவர்களின் வாழ்க்கையில் இன்பம் குடிகொண்டிருக்கும் .

ஏனென்றால் இவர்கள் பிறர் மகிழ்ந்து உண்பதைப் பார்த்து இன்பம் அடையும் நல்ல குணம் கொண்டவர்கள் .

இந்த விருந்தோம்பல் பண்பில் மக்கள் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்று கருதிய ஒளவையார் ,

மருந்தே ஆயினும் விருந்தோடு உண்

( 70 )

( மருந்து = அமிர்தம் )

என்று குறிப்பிட்டுள்ளார் .

கிடைத்தற்கு அரிய அமிர்தமே கிடைத்தாலும் அதையும் விருந்தினருடன் சேர்ந்து உண்ண வேண்டும் என்பது இதன் பொருள் ஆகும் .

• விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்

இல்லற வாழ்க்கையின் சிறப்புகளுள் ஒன்று விருந்தோம்பல் ஆகும் .

விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்று உணவு வழங்கும் பண்பு இல்லாதவர்கள் இல்லற வாழ்வின் சிறப்பைப் பெற இயலாது .

இதை ,

விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்

( 83 )

என்று ஒளவையார் பாடியுள்ளார் . பொருந்திய ஒழுக்கம் என்பது இல்லற வாழ்க்கையைக் குறிக்கும் .

விருந்தினரைப் பேணும் பண்பு இல்லாதவர்க்கு இல்லற வாழ்க்கையின் பயன் கிடைப்பது இல்லை என்பது இதன்பொருள் .

இத்தொடர் விருந்தோம்பலின் சிறப்பை விளக்குவது ஆகும் .

இவை தவிர , கொன்றை வேந்தன் வாயிலாக , இல்லறத்தின் பெருமை , ஒற்றுமையின் வலிமை , சான்றோர் பெருமை முதலியவற்றையும் அறிந்து கொள்ள முடியும் .

தொகுப்புரை

ஒளவையார் எழுதிய ஆத்திசூடி , கொன்றை வேந்தன் என்னும் நூல்களின் வழியாக அறக்கருத்துகள் பல தெரிவிக்கப்பட்டுள்ளன .

அவற்றில் சிலவற்றை இப்பாடத்தில் பார்த்தோம் .

ஆத்திசூடியில் ,

நூல்பல கல்

ஓதுவது ஒழியேல்

எண் எழுத்து இகழேல்

இளமையில் கல்

கேள்வி முயல்

என்னும் தொடர்கள் கல்வியின் சிறப்பையும் கேள்வியின் தேவையையும் விளக்குகின்றன .

தனிமனித ஒழுக்கத்திற்கு வழிவகுக்கும் ,

அறம் செயவிரும்பு

ஆறுவது சினம்

முதலிய தொடர்களையும் ,

சமுதாய ஒழுக்க மேம்பாட்டிற்கு அழைத்துச் செல்லும்

ஒப்புரவு ஒழுகு

ஊருடன் கூடிவாழ்

ஆகிய தொடர்களையும் ஆத்திசூடி வழங்கியுள்ளது .

தானமது விரும்பு

இயல்வது கரவேல்

ஈவது விலக்கேல்

முதலிய தொடர்கள் ஈகையின் பெருமையை எடுத்துக் கூறுகின்றன .

போர்த்தொழில் புரியேல்

முனை முகத்து நில்லேல்

என்னும் ஆத்திசூடித் தொடர்கள் , போர்களால் மக்கள் அடையும் இன்னல்களை எடுத்துக் கூறுகின்றன .

கொன்றை வேந்தன் என்னும் அறநூல் , கல்வியின் சிறப்பு , முயற்சியின் உயர்வு , உழவுத் தொழிலின் பெருமை , விருந்தோம்பல் பண்பு முதலிய வாழ்க்கை மேம்பாட்டுச் செய்திகளையும் பிற அறக்கருத்துகளையும் வழங்கியுள்ளது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. ‘ கொன்றைவேந்தன் ’ என்னும் நூலை இயற்றியவர் யார் ?

[ விடை ]

2. ஒளவையார் எவற்றைக் கண்களுக்கு இணையாகக் குறிப்பிட்டுள்ளார் ?

[ விடை ]

3. கைப்பொருளை விட மெய்ப்பொருள் எது ?

[ விடை ]

4. போனகம் என்பது எதைக் குறிக்கும் ?

[ விடை ]

5. மருந்து என்பது எதைக் குறிக்கும் ?

மூதுரையும் நல்வழியும்

பாட முன்னுரை

ஒளவையார் எழுதிய அறநூல்களில் மூதுரையும் நல்வழியும் அடங்கும் .

ஓர் அடியின் வாயிலாக ஆத்திசூடியிலும் கொன்றைவேந்தனிலும் அறக்கருத்துகளை உணர்த்திய ஒளவையார் , இவற்றில் நான்கு அடியால் ஆன பாடல்களின் மூலம் அறக்கருத்துகளை உணர்த்துகிறார் .

மூதுரை

பழமையான அறக்கருத்துகளைக் கொண்டதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது .

இந்நூல் வாக்குண்டாம் என்றும் அழைக்கப் படுகிறது .

இந்நூலின் கடவுள் வாழ்த்துப்பாடல் வாக்குண்டாம் என்று தொடங்குவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது .

மூதுரையில் முப்பது பாடல்கள் உள்ளன .

இவை தனித்தனிக் கருத்துகளை உணர்த்துவனவாய் உள்ளன . இச்செய்யுள்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன .

3.1.1 கடவுள் வாழ்த்து

மூதுரையின் கடவுள் வாழ்த்தில் விநாயகக் கடவுள் போற்றப் பட்டுள்ளார் .

வாக்குஉண்டாம் நல்ல மனம்உண்டாம் மாமலராள்

நோக்குஉண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு

துப்புஆர் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு

( மூதுரை )

( வாக்கு = சொல்வன்மை , மாமலராள் = திருமகள் , நோக்கு = அருள் பார்வை , மேனி = உடல் , துப்பு = பவளம் , நுடங்காது = சோர்வு அடையாது , ஆர் = போன்ற , தும்பிக்கையான் = விநாயகப் பெருமான் )

எனும் கடவுள் வாழ்த்துப் பாடலில் தும்பிக்கையான் என்று விநாயகர் குறிப்பிடப்பட்டுள்ளார் .

இப்பாடலில் விநாயகனை வணங்குகிறவர்கள் பெறும் பயன்களாகப் பின்வருவனவற்றை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார் .

1. சொல்வன்மை பெருகும் .

2. நல்ல எண்ணங்கள் உருவாகும் .

3. செல்வ வளம் பெருகும் .

என்பனவற்றில் ‘ செல்வ வளம் பெருகும் ’ என்னும் கருத்தைக் குறிப்பிடுவதற்கு , ‘ மாமலராள் நோக்கு உண்டாம் ’ என்று பாடியுள்ளார் .

‘ மாமலராள் ’ என்னும் சொல் , தாமரைப் பூவில் வீற்றிருக்கும் திருமகளைக் குறிக்கும் .

‘ நோக்கு ’ என்னும் சொல் அருள் பார்வையை உணர்த்தும் .

திருமகளின் அருள் பார்வையைப் பெற்றவர்கள் , செல்வ வளம் பெற்று விளங்குவார்கள் என்று ஒளவையார் தெரிவித்துள்ளார் .

மேலும் இப்பாடலில் விநாயகப் பெருமானின் நிறம் சிவப்பு என்பதற்கு ஓர் உவமையைப் பயன்படுத்தியுள்ளார் .

‘ துப்பு ’ என்றால் பவளம் என்று பொருள் .

பவளத்தின் நிறம் சிவப்பு , பவளம் போன்ற சிவந்த நிறம் கொண்டவன் விநாயகன் என்பதை விளக்குவதற்கு ‘ துப்பு ஆர் திருமேனி ’ என்னும் தொடரை ஒளவையார் பயன்படுத்தியுள்ளார் .

3.1.2 கல்வி

மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையானவற்றில் அடிப்படையானது கல்வி .

எனவே கல்விக்கு மூதுரை முதலிடம் கொடுத்துள்ளது .

ஒரு மன்னன் கல்வி அறிவு இல்லாதவனாக இருந்தால் அவனுக்குப் பெருமை கிடையாது .

ஆனால் , கல்வி அறிவு உடையவன் மன்னனாக இல்லை என்றாலும் பெருமை உடையவன் ஆவான் என்னும் கருத்தைப் பின்வரும் மூதுரைப் பாடல் தெரிவிக்கிறது .

மன்னனும் மாசுஅறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புஉடையன் ; மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்புஇல்லை ; கற்றோற்குச்

சென்றஇடம் எல்லாம் சிறப்பு

( மூதுரை : 26 )

( மாசு அற = குற்றம் நீங்கும் படியாக , மன்னனின் = மன்னனை விட , கற்றோற்கு = கல்வி கற்றவனுக்கு , சிறப்பு = பெருமை)

மன்னனுக்கு அவனது நாட்டில் மட்டும்தான் பெருமை உண்டு .

ஆனால் கல்வி உடையவனுக்குச் சென்ற இடங்களில் எல்லாம் பெருமை வந்து சேரும் .

எனவே , மன்னனை விடவும் கற்றவனுக்கே பெருமை உண்டு என்று இப்பாடல் தெரிவிக்கிறது .

செல்வநிலையிலும் வாழ்க்கை முறையிலும் உயர்ந்த நிலையில் இருப்பவன் மன்னன் .

அந்த மன்னனை விடவும் கல்வி அறிவு பெற்றவனை உயர்வுபடுத்தியிருப்பதன் மூலம் கல்வி , பெருமைப்படுத்தப் பட்டுள்ளது .

• கற்றாரைக் கற்றவர் விரும்புவர்

கல்வி அறிவு பெற்றவர்களால்தான் கற்றவர்களின் பெருமையை அறிய முடியும் .

கல்வி அறிவு இல்லாதவர்களால் கற்றவர்களின் அறிவுத் திறனை அறிந்து கொள்ள இயலாது .

நல்தா மரைக் கயத்தில் நல்அன்னம் சேர்ந்தாற்போல்

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் ; கற்புஇலா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் ; முதுகாட்டில்

காக்கை உகக்கும் பிணம்

( மூதுரை : 24 )

( கயம் = குளம் , காமுறுவர் = விரும்புவர் , கற்புஇலா = கல்வி இல்லா , முகப்பர் = விரும்புவர் , உகக்கும் = விரும்பும் )

தாமரைப்பூக்கள் பூத்திருக்கும் குளத்தில் அன்னப்பறவைகள் நீந்தி மகிழும் .

அதைப்போல , கற்றவர்களுடன் கற்றவர்கள் சேர்ந்து மகிழ்வார்கள் .

இடுகாட்டில் உள்ள பிணங்களைக் காக்கை விரும்பி உண்ணும் .

அதைப்போல , கல்வி அறிவு இல்லாதவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்களுடன் விரும்பிச் சேர்ந்து வாழ்வார்கள் . இந்தச் செய்யுளில் இரண்டு உவமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன .

1. நல்தாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தாற்போல் .

2. முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம் .

என்பவை அந்த உவமைகள் ஆகும் .

இவ்வுவமைகளில் கற்றவர்களின் பெருமையைக் குறிப்பிடுவதற்குத் தாமரைக் குளத்தையும் அன்னத்தையும் உவமையில் பயன்படுத்தியுள்ளார் .

ஆனால் கல்வி அறிவு இல்லாதவர்களின் இழிவைக் குறிப்பிடுவதற்குக் காக்கையையும் பிணத்தையும் உவமையில் பயன்படுத்தியுள்ளார் .

உயர்ந்த பொருள்களை உயர்ந்த கருத்திற்கு உவமையாகவும் இழிந்த பொருள்களை இழிந்த கருத்திற்கு உவமையாகவும் மூதுரை வழியாக ஒளவையார் தெரிவித்துள்ள நுட்பம் சிறப்பு உடையது ஆகும் .

• கல்லாதவர் நிலை

கல்வி அறிவு இல்லாதவர்கள் பெருமை பெற இயலாது என்பதை மூதுரை தெரிவித்துள்ளது .

கல்வி அறிவு பெற்றவர்களுக்குக் கிடைக்கும் பெருமையைப் பார்த்து , கல்வி அறிவு பெறாதவர்களும் அதுபோல் பெருமையைப் பெற விரும்பிச் செயல்பட்டால் அவர்களுக்குப் பெருமை வந்து சேராது .

இதை உணர்த்த , மூதுரை

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்து , தானும்தன்

பொல்லாச் சிறகைவிரித்து ஆடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி

( 14 )

( கானம் = காடு , பாவித்து = நினைத்துக்கொண்டு , பொல்லாச்சிறகு = அழகு இல்லாச் சிறகு , கவி = கவிதை )

என்னும் பாடலைத் தந்துள்ளது .

கல்வி அறிவு உடையவன் அழகிய கவிதைகளை எழுதுவான் .

அக்கவிதைகளில் நல்ல கருத்துகள் நிறைந்திருக்கும் .

அதைப் பார்த்து , கல்வி அறிவு இல்லாதவனும் கவிதை எழுதினால் அது சிறப்பாக இருக்காது .

இது மூதுரை தெரிவிக்க விரும்பிய கருத்து ஆகும் .

இதை விளக்குவதற்கு ஓர் உவமையைக் காட்சியாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது .

இதோ அந்த உவமைக் காட்சியைக் காணுங்கள் .

காட்டில் ஒரு மயில் தனது தோகையை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது .

அதைப் பார்த்து அதன் அழகிலும் ஆட்டத்திலும் ஒரு வான்கோழி மயங்கியது .

தோகை உடைய மயில் ஆடுவதைப் போல் தோகை இல்லாத வான்கோழியும் ஆடுவதற்கு ஆசைப்பட்டது என்பதுதான் அந்த உவமைக் காட்சி .

இந்த உவமையில் மயிலைக் கல்வி அறிவு பெற்றவனுக்கும் மயிலின் தோகை விரித்த ஆட்டத்தைக் கல்வி அறிவு உடையவன் எழுதிய கவிதைக்கும் ஆசிரியர் உவமித்துள்ளார் .

வான்கோழியைக் கல்வி அறிவு இல்லாதவனுக்கும் அதன் ஆட்டத்தைக் கல்வி அறிவு இல்லாதவனின் கவிதைக்கும் உவமையாக்கியுள்ளார் .

கல்வி அறிவு இல்லாதவனின் இழிவை விளக்குவதற்கு மூதுரை மேலும் ஒரு பாடலைத் தெரிவித்துள்ளது .

கவைஆகி , கொம்புஆகி , காட்டகத்தே நிற்கும்

அவைஅல்ல நல்ல மரங்கள் ; சபைநடுவே

நீட்டுஓலை வாசியா நின்றான் , குறிப்புஅறிய

மாட்டா தவன்நல் மரம்

( மூதுரை : 13 )

( கவை = கிளை , கொம்பு = மரக்கிளையின் ஒரு பகுதி , சபை = அவை , நீட்டு ஓலை = ஓலைச்சுவடி )

என்பதே அப்பாடல் .

கற்றவர்கள் நிறைந்த அவையில் நிற்கும் ஒருவனிடம் ஓர் ஓலை கொடுக்கப்படுகிறது .

அந்த ஓலையில் எழுதப்பட்டுள்ளதை அவன் படிக்க வேண்டும் .

கல்வி அறிவு இல்லாத அவனால் அதைப் படிக்க இயலவில்லை .

எனவே அவன் அப்படியே நிற்கிறான் .

அவனை ‘ மரம் ’ என்று ஒளவையார் குறிப்பிட்டுள்ளார் .

கல்வி அறிவு இல்லாதவனை ‘ மரம் ’ என்று குறிப்பிட்ட ஒளவையார் மரங்களை ‘ மரம் இல்லை ’ என்று குறிப்பிட்டுள்ளார் .

கிளைகளாகப் பிரிந்து நீண்ட கொம்புகளைக் கொண்டு காட்டில் நிற்கும் .

அவை மரங்கள் அல்ல .

கற்றோர் அவையில் கொடுக்கப்பட்ட ஓலையைப் படிக்க இயலாமல் நிற்பவனும் அவையின் குறிப்பை அறியமாட்டாதவனும் ஆகியவனே ' நல்ல மரம் ' ஆவான் என்று மேலும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார் .

3.1.3 சான்றோர்

அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குபவர்களைச் சான்றோர் என்று கூறுவோம் .

இத்தகைய சான்றோர்களையே நாம் நல்லவர்கள் என்று போற்றுகிறோம் .

நல்ல பண்புகள் கொண்ட சான்றோர்களுடன் தொடர்பு கொண்டு வாழ வேண்டும் என்பதைப் பின்வரும் செய்யுள் தெரிவிக்கிறது . நல்லாரைக் காண்பதுவும் நன்றே ; நலம்மிக்க