105

ஆற்றிலே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது அந்த நீரை ஊர்மக்கள் பயன்படுத்துவார்கள் .

அந்த ஆற்றிலே நீர் வற்றிப் போன கோடைகாலத்தில் அதில் தோண்டப்பட்ட சிறிய ஊற்றுகளின் வாயிலாக அது ஊர்மக்களுக்கு நீர் வழங்கும் .

அதைப் போன்று , வள்ளல் குடியில் பிறந்தவர்கள் செல்வம் இருக்கும் போதும் வழங்குவார்கள் ; வறுமை நிலையை அடைந்துவிட்டாலும் பிறருக்கு வழங்குவார்கள் என்று வள்ளல்களின் தன்மையை நல்வழி தெரிவிக்கிறது .

• வெறும் பானை பொங்குமோ ?

நம்மிடம் செல்வம் இருக்கும் போது நாம் பிறருக்கு வழங்க வேண்டும் .

அவ்வாறு பிறருக்கு வழங்குவது அறச் செயல் ஆகும் .

இந்த அறச் செயலைச் செய்கின்றவர்களுக்குச் செல்வம் வந்து சேரும் .

அவ்வாறு செய்யாதவர்களுக்குச் செல்வம் வந்து சேராது .

செய்தீவினை இருக்க , தெய்வத்தை நொந்தக்கால்

எய்த வருமோ இருநிதியம் - வையத்து

அறும்பாவம் என்றுஅறிந்து அன்றுஇடார்க்கு இன்று

வெறும்பானை பொங்குமோ மேல்

( நல்வழி : 17 )

( செய் = செய்த , தீவினை = தீய செயல் , நொந்தக்கால் = வருத்தப்பட்டால் , எய்த = அடைய , இருநிதியம் = பெருஞ்செல்வம் , வையத்து = உலகத்து , அறும் = நீங்கும் , இடார்க்கு = கொடுக்காதவர்க்கு )

தொடர்ந்து தீய செயல்களைச் செய்து விட்டு , கடவுளை வணங்கினால் பெருஞ்செல்வம் சேராது .

அவ்வாறு செல்வம் சேரவில்லையே என்று கடவுளை நினைத்து வருந்துவதாலும் பயன் கிடையாது .

செய்த தீய செயல்களால் ஏற்பட்ட பாவம் நீங்க வேண்டும் என்றால் செல்வம் இல்லாதவர்களுக்குச் செல்வத்தை வழங்க வேண்டும் .

அவ்வாறு வழங்கினால் பாவம் நீங்குவதோடு புண்ணியம் சேரும் .

இதை விளக்குவதற்கு ஒளவையார் , ‘ வெறும்பானை பொங்குமோ மேல் ’ என்னும் உவமையைப் பயன்படுத்தியுள்ளார் .

பானையில் எதுவும் போடாமல் நெருப்பு மூட்டினால் அந்தப் பானையிலிருந்து எதுவும் பொங்கி மேலே வராது .

அதுபோல , பாவம் நீங்கும் படியாகப் புண்ணியம் செய்யாதவர்களுக்குச் செல்வம் வந்து சேராது என்பது இதன் மூலம் விளக்கப்பட்டுள்ளது .

• தீயாரும் இடுவர் !

தாம் சேர்த்த பொருளைப் பிறருக்கு வழங்குவதற்கு நல்ல குணம் வேண்டும் .

அந்த நல்ல குணம் இல்லாதவர்களும் சில வேளைகளில் வழங்குவார்கள் .

எப்போது அவர்கள் வழங்குவார்கள் என்பதைப் பின்வரும் நல்வழிப்பாடல் தெளிவாக்குகிறது .

பெற்றார் , பிறந்தார் , பெருநாட்டார் , பேர் உலகில்

உற்றார் , உகந்தார் என வேண்டார் , மற்றோர்

இரணம் கொடுத்தால் இடுவர் ; இடாரே

சரணம் கொடுத்தாலும் தாம்

( நல்வழி : 18 )

( பெற்றார் = பெற்ற தாய் , தந்தை , பிறந்தார் = உடன் பிறந்தவர் , பெருநாட்டார் = தன் நாட்டைச் சேர்ந்தவர் , உற்றார் = உறவினர் , உகந்தார் = வேண்டியவர் , மற்றோர் = அயலார் , இரணம் = துன்பம் , சரணம் = தாள் பணிதல் )

பெற்ற தாயும் தந்தையும் , உடன்பிறந்தவர்களும் தன் நாட்டைச் சேர்ந்தவர்களும் , உறவினரும் , வேண்டிய நண்பர்களும் கெஞ்சிக் கேட்டாலும் வள்ளல் குணம் இல்லாதவர்கள் சிறிது பொருளும் கொடுக்க மாட்டார்கள் .

ஆனால் , தொடர்பே இல்லாதவர்கள் மிரட்டித் துன்புறுத்திக் கேட்டால் அவர்களுக்குக் கொடுத்து விடுவார்கள் என்று ஈகைக் குணம் இல்லாதவர்களின் இழி குணத்தை நல்வழி கூறுகிறது .

இத்தகைய ஈகைக் குணம் இல்லாதவர்கள் அஞ்சி , பொருள் வழங்குவதற்கு என்ன காரணம் ?

யாருக்கும் வழங்காமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பதால் கருமிகளிடம் செல்வம் மிகுதியாகச் சேர்ந்து விடுகிறது .

மிகுதியான பொருள் சேர்ந்து விடுவதால் அந்தப் பொருளைப் பாதுகாப்பதில் அவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது .

மேலும் உறவினர்கள் , நண்பர்கள் என்று யாருடனும் நல்ல உறவு இல்லாததால் அவர்களின் உதவியையும் கருமிகள் இழந்து விடுகிறார்கள் .

எனவே , கருமிக்கு அச்சம் மேலும் கூடுகிறது .

இத்தகைய கருமிகளை மிரட்டினால் அவர்கள் அஞ்சி , பொருளைக் கொடுத்துவிடுகிறார்கள் .

3.2.3 செல்வம்

செல்வம் என்பது பலவகையான சொத்துகளைக் குறிக்கும் .

தோட்டம் , வீடு , மாடு போன்ற பல வகையான சொத்துகளுடன் பணமும் செல்வம் ஆகும் .

செல்வம் இருப்பவர்களை எல்லோரும் போற்றுவார்கள் .

செல்வம் இல்லாதவர்கள் மதிக்கப்படுவதில்லை .

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன்று உண்டாயின்

எல்லாரும் சென்றுஅங்கு எதிர்கொள்வர் ; இல்லானை

இல்லாளும் வேண்டாள் ; மற்று ஈன்றுஎடுத்த

தாய்வேண்டாள் ; செல்லாது அவன்வாயின் சொல்

( நல்வழி : 34 ) ( கைப் பொருள் = செல்வம் , எதிர்கொள்வர் = வரவேற்பர் , இல்லானை = செல்வம் இல்லாதவனை , ஈன்று = பெற்று , இல்லாளும் = மனைவியும் , வாயின் சொல் = வாய்ச்சொல் , பேச்சு )

கல்வி அறிவு உடையவர்கள் அனைவராலும் மதிக்கப்படுவர் .

கல்வி அறிவு இல்லாதவர்கள் அவ்வாறு மதிக்கப்படுவதில்லை .

ஆனால் , கல்வி அறிவு இல்லாதவனுக்குச் செல்வம் இருந்தால் அவனையும் எல்லோரும் சென்று போற்றிப் புகழ்வார்கள் .

செல்வம் இல்லாதவனை அவனது மனைவி கூட விரும்பமாட்டாள் ; அவனைப் பெற்ற தாயும் விரும்பமாட்டாள் ; அவன் சொல்லும் சொல்லை யாரும் பெரிதாகக் கருதி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று செல்வத்தின் உயர்வை ஒளவையார் பாடியுள்ளார் .

• செல்வத்தின் நிலை

செல்வம் எப்போதும் ஒருவரிடமே நிலைத்து இருப்பதில்லை .

அது அடிக்கடி ஒருவரைவிட்டு வேறு ஒருவரிடம் செல்லும் .

இந்த இயல்பை ஒளவையார் பின்வரும் பாடலில் அழகிய உவமையின் வாயிலாக விளக்கியுள்ளார் .

ஆறுஇடும் மேடும் மடுவும்போல் ஆம்செல்வம்

மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் ! - சோறு இடும் ;

தண்ணீரும் வாரும் ; தருமமே சார்புஆக ,

உள்நீர்மை வீறும் , உயர்ந்து

( நல்வழி : 32 )

( இடும் = உருவாக்கும் , மடு = பள்ளம் , ஏறிடும் = உயர்ந்திடும் , வீறும் = மிகும்)

ஆற்றில் தண்ணீர் ஓடும் வேகத்திற்கு ஏற்ப மேடுகளும் பள்ளங்களும் மாறி மாறி அமையும் .

அதைப்போல் , செல்வமும் ஒருவரிடம் நிலைத்து இருப்பது இல்லை .

ஒருவரிடம் மிகுதியாகச் செல்வம் சேரும் .

வேறு ஒருவரிடம் குறைவாகச் சேரும் .

அதுவும் நிலையாக இருப்பதில்லை .

எனவே , செல்வம் இருக்கின்ற போதே அந்தச் செல்வத்தைப் பயன்படுத்தி உணவளித்தல் , தண்ணீர்ப் பந்தல் அமைத்தல் முதலிய அறச்செயல்களைச் செய்தல் வேண்டும் .

இவ்வாறு அறச்செயல்கள் செய்தால் நமது உள்ளம் மகிழ்ச்சி அடையும் என்று நல்வழி தெரிவிக்கிறது .

3.2.4 உழவுத்தொழில்

உலகில் உள்ள பழமையான தொழில்களில் உழவுத் தொழிலும் ஒன்று .

உழவுத் தொழில் நடைபெறவில்லை என்றால் உலகில் உள்ள மக்கள் உண்ண உணவு இல்லாமல் துன்பப்படுவார்கள் .

எனவே , உழவுத் தொழிலைச் சிறப்பித்து , பல புலவர்கள் பாடியுள்ளனர் .

ஆற்றங் கரையின் மரமும் , அரசுஅறிய

வீற்றிருந்த வாழ்வும் , விழும்அன்றே ; ஏற்றம்

உழுதுஉண்டு வாழ்வதற்கு ஒப்புஇல்லை கண்டீர் ;

பழுதுஉண்டு வேறுஓர் பணிக்கு

( நல்வழி : 12 )

( ஏற்றம் = உயர்வு , பழுது = குறை )

ஆற்றங்கரையில் நிற்கின்ற மரம் ஆற்றில் ஓடும் நீரின் உதவியால் நன்கு செழித்து வளரும் , நீண்ட காலம் நிலைத்து நிற்கும் .

அந்த மரமும் , மண் அரிப்பின் காரணமாக ஒரு நாள் விழும் .

அரசனுக்கு இணையாக வாழ்கின்றவனின் உயர்ந்த வாழ்விலும் தாழ்வு ஏற்பட வாய்ப்பு உண்டு .

பிற தொழில்களிலும் ஏதோ ஒரு வகையில் குறை உண்டு .

ஆனால் , உழவுத் தொழில் செய்து அதனால் கிடைக்கும் விளைச்சலில் உணவு உண்டு உயிர் வாழ்கின்றவர்களுக்கு வாழ்வில் எந்நாளும் ஏற்றமே நிலைக்கும் .

உழவுத் தொழிலின் மேன்மையைத் திருக்குறள் பத்துக் குறட்பாக்களில் தெரிவிக்கிறது .

ஒளவையாரின் நல்வழி ஒரே ஒரு பாடலில் உழவுத்தொழிலின் மேன்மையைத் தெரிவித்தாலும் மிகவும் தெளிவாகத் தெரிவித்துள்ளதை இப்பாடல் வழியாக நாம் அறிந்து கொள்ள முடியும் .

3.2.5 வரவு செலவு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வரவுக்கேற்பச் செலவு செய்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்று தமிழ் நூல்கள் தெரிவித்துள்ளன .

ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை

போகாறு அகலாக் கடை

( 478 )

என்று வரவு செலவு பற்றி , திருக்குறள் கூறியுள்ளது .

வருவாய் குறைவாக இருந்தாலும் செலவு மிகாமல் இருந்தால் தவறு இல்லை என்பது இதன் பொருள் .

வருவாயை விடவும் செலவு மிகுதியாக இருந்தால் ஏற்படும் இழிநிலையை நல்வழி பின்வரும் செய்யுள் வாயிலாகத் தெளிவுபடுத்தியுள்ளது .

ஆன முதலில்அதிகம் செலவு ஆனால்

மானம் அழிந்து மதிகெட்டு , போனதிசை

எல்லார்க்கும் கள்ளன்ஆய் , ஏழ்பிறப்பும் தீயன்ஆய் நல்லார்க்கும் பொல்லன்ஆம் நாடு

( 27 )

( முதலில் = வருவாயில் , மதி = அறிவு , பொல்லன் = தீயன் , ஏழ் பிறப்பு = தோன்றும் பிறப்பு )

வரவுக்கு மேல் செலவு செய்கிறவர்களின் மானம் அழியும் ; அறிவு கெடும் ; சென்ற இடங்களில் எல்லாம் திருடன் என்ற இழிபெயரை ஏற்க வேண்டிவரும் ; அடுத்து வரும் பிறவிகளிலும் இந்தத் தீமை தொடர்ந்து வரும் ; நல்லவர்கள் கூட அவர்களைத் தீயவர்கள் என்று இகழ்வார்கள் .

எனவே , வரவுக்கு மேல் செலவு செய்யக்கூடாது என்று ஒளவையார் குறிப்பிட்டுள்ளார் .

3.2.6 இன்சொல்

இனிமையான சொற்களைப் பேசுகிறவர்கள் எல்லோராலும் மதிக்கப்படுவார்கள் .

வன்மையான ( கடுமையான ) சொற்களைப் பேசுகிறவர்கள் பிறரால் இகழப்படுவார்கள் .

இது எல்லாக் காலத்திற்கும் பொதுவானது .

இதை ஒளவையார் ,

வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் ; வேழத்தில்

பட்டுஉருவும் கோல்பஞ்சில் பாயாது ; நெட்டிருப்புப்

பாரைக்கு நெக்குவிடாப் பாறை , பசுமரத்தின்

வேருக்கு நெக்கு விடும்

( 33 )

( வெட்டென = கடுமையாகப் பேசும் பேச்சுகள் , மெத்தென = மென்மையான பேச்சுகள் , வேழம் = யானை , உருவும் = வெளியேறும் , கோல் = வேல் , நெட்டிருப்புப்பாரை = நீண்ட கடப்பாரை , நெக்கு = உடைதல் , பசுமரம் = பச்சைமரம் )

என்று பாடியுள்ளார் .

கடுமையாகப் பேசும் பேச்சுகளால் மென்மையான பேச்சுகளை வெல்ல இயலாது என்ற உண்மையை ஒளவையார் உணர்த்த விரும்பியுள்ளார் .

அதற்காக இரண்டு உவமைகளை அவர் பயன்படுத்தியுள்ளார் .

வலிமையான யானையின் மேல் எறியப்பட்ட கூர்மையான ஈட்டி , அதன் ஒருபக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குச் செல்லும் .

ஆனால் அதே ஈட்டியால் மென்மையான பஞ்சின்மேல் பாய இயலாது என்பது ஓர் உவமை .

பெரிய கடப்பாரையால் கூடப் பிளக்க இயலாத வலிமை வாய்ந்த பாறையானது , பச்சை மரத்தின் வேரால் பிளவுபடும் என்பது மற்றோர் உவமை .

முதல் உவமையில் கூர்மையான ஈட்டியால் பஞ்சைப் பிளக்க முடியாது என்பது உணர்த்தப்பட்டுள்ளது .

இரண்டாவது உவமையில் மென்மையான வேரால் , வலிமையான பாறையைக் கூடப் பிளக்க முடியும் என்பது உணர்த்தப்பட்டுள்ளது .

முதல் உவமையில் கூறப்பட்டுள்ள கூர்மையான ஈட்டி வன்சொல் போன்றது .

வன்சொல்லால் , மென்சொல்லை வெல்ல முடியாது என்பது இதன்மூலம் அறிய வருகிறது .

இரண்டாம் உவமையில் கூறப்பட்டுள்ள மென்மையான வேர் , இன்சொல் போன்றது .

இன்சொல்லால் , வன்சொல்லை வெல்ல முடியும் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது .

தொகுப்புரை

ஒளவையார் இயற்றிய அற நூல்களில் ஆத்திசூடி , கொன்றைவேந்தன் ஆகிய இரு நூல்கள் கூறும் அறக்கருத்துகளை முந்தைய பாடத்தில் படித்தீர்கள் .

இப்பாடத்தில் மூதுரை , நல்வழி ஆகிய இரு நூல்களில் ஒளவையார் கூறிய அறக் கருத்துகளை அறிந்து கொண்டீர்கள் .

கல்வி கற்றவர்களுக்குச் ‘ சென்ற இடம் எல்லாம் சிறப்பு ’ என்றும் , கல்வி கற்றவர்களின் பெருமையைக் கல்வி கற்றவர்களே அறிவார்கள் என்றும் கல்வியின் சிறப்பை மூதுரை தெரிவித்துள்ளது .

சான்றோர்கள் நற்பண்புகளின் இருப்பிடமாக விளங்குவார்கள் .

அவர்கள் தங்கள் செல்வ நிலையில் தாழ்ந்தாலும் , சான்றாண்மைப் பண்பிலிருந்து பிறழமாட்டார்கள் என்று மூதுரை அறிவித்துள்ளது .

இயன்ற அளவு எல்லாருக்கும் உதவவேண்டும் என்றும் , தீயவர்களுக்கு உதவி செய்வதால் தமக்குத் தீமை வரும் என்றால் அந்த உதவியைச் செய்யக்கூடாது என்றும் ஒளவையார் தெரிவித்துள்ளார் .

நல்வழி என்னும் நூல் வள்ளல்களின் இயல்பையும் , செல்வத்தின் பெருமையையும் , உழவுத்தொழிலின் உயர்வையும் , வரவுக்கேற்ற செலவே வாழ்க்கைக்கு உதவும் என்பதையும் தெரிவித்துள்ளது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. ‘ நல்வழி ’ - பெயர்க்காரணம் தருக .

[ விடை ]

2. ஆற்றில் தண்ணீர் ஓடவில்லை என்றால் அந்த ஆறு எதன் மூலம் தண்ணீர் கொடுக்கும் ?

[ விடை ]

3. செல்வம் இல்லாதவனை யார் எல்லாம் விரும்ப மாட்டார்கள் ?

[ விடை ]

4. எத்தொழிலுக்கு ஒப்பான தொழில் எதுவும் இல்லை ?

[ விடை ]

5. வன்சொல்லால் வெல்ல முடியாததை எச்சொல்லால் வெல்ல முடியும் ?

வெற்றிவேற்கையும் உலகநீதியும்

பாட முன்னுரை

பிற்காலத்தில் தோன்றிய அறநூல்களில் ஒன்று வெற்றிவேற்கை .

இதை இயற்றியவர் அதிவீரராம பாண்டியன் . இவர் பாண்டிய நாட்டின் தென்பகுதியை ஆண்ட மன்னர் .

மன்னராய் இருந்த இவர் , தமிழில் புலமை பெற்று விளங்கியதால் , தமிழ்ப் புலவர்களுக்கு ஆதரவு அளித்தார் .

புலவர்கள் இயற்றிய படைப்புகள் குற்றம் உடையதாக இருந்தால் இவர் தண்டித்தார் ; சிறப்பாக இருந்தால் பரிசுகள் வழங்கினார் .

இவர் , நைடதம் , காசிக்காண்டம் , திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி முதலிய வேறு நூல்களையும் இயற்றியுள்ளார் .

வெற்றிவேற்கை

வெற்றிவேற்கை என்னும் இந்நூல் முதலில் ‘ நறுந்தொகை ’ என்றே அழைக்கப்பட்டது .

நல்ல பாடல்களின் தொகுப்பு என்பது இதன் பொருள் ஆகும் .

இந்த நூலின் பயனைத் தெரிவிக்கும் பாடல் ‘ வெற்றிவேற்கை‘ என்று தொடங்குகிறது .

ஆத்திசூடி , கொன்றைவேந்தன் , வாக்குண்டாம் முதலிய அறநூல்கள் செய்யுளின் முதல் சொல்லால் அழைக்கப் படுவதைப் போல் இந்த நூலும் ‘ வெற்றிவேற்கை ’ என்று அழைக்கப் படுகிறது .

வெற்றி வேற்கை வீரராமன்

கொற்கை ஆளி , குலசேகரன் , புகல்

நல்தமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்

குற்றம் களைவோர் குறைவிலா தவரே

( வெற்றிவேற்கை )

( ஆளி = ஆட்சி செய்பவன் , களைவோர் = போக்குவோர் , புகல் = உரைத்த )

என்னும் நூல்பயன் பாடலில் இடம் பெற்றுள்ள ‘ வெற்றிவேற்கை ’ என்பதே நூலின் தலைப்பு ஆகிவிட்டது .

இங்கே வெற்றி வேற்கை என்பது அதிவீரராம பாண்டியனுக்கு அடைமொழியாக வந்துள்ளது .

வெற்றிதரும் வேலைக் கையில் ஏந்திய வீரராமன் என்பது இதன் பொருள் .

இந்தப் பாடலின் மூலம் , அதிவீரராம பாண்டியன் கொற்கையை ஆட்சி செய்தவன் என்பதையும் குலசேகரன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவன் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்

4.1.1 கடவுள் வாழ்த்து

வெற்றி வேற்கையின் கடவுள் வாழ்த்தில் விநாயகக் கடவுள் போற்றப்பட்டுள்ளார் .

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்

சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே

என்னும் கடவுள் வாழ்த்தில் விநாயகப் பெருமான் ஐங்கரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளார் .

ஐங்கரன் என்பது ஐந்து கரங்களைக் கொண்டவன் என்பதை உணர்த்தும் .

விநாயகன் வலப்பக்கத்தில் இரண்டு கைகளையும் இடப்பக்கத்தில் இரண்டு கைகளையும் முன்பக்கத்தில் தும்பிக்கையையும் கொண்டவன் .

இவ்வாறு ஐந்து கரம் கொண்டுள்ளதால் ஐங்கரன் என்று அழைக்கப்பட்டுள்ளான் .

பிரணவ மந்திரத்தின் பொருளாக ஐங்கரன் விளங்குகிறான் என்பதையும் இந்தக் கடவுள் வாழ்த்துப் பாடல் தெரிவிக்கிறது .

4.1.2 கல்வியும் கல்லாமையும்

உலகில் உள்ள எல்லாப் பொருள்களையும் விட , கல்வியே சிறந்தது .

கல்வியின் சிறப்பை உணர்த்தும் பல தொடர்களை வெற்றி வேற்கை தெரிவித்துள்ளது .

கல்வி கற்றவர்கள் பிறரால் மதிக்கப்படுவார்கள் .

கல்வி கல்லாதவர்கள் அவ்வாறு மதிக்கப்படுவதில்லை .

கல்வி கல்லாதவர்கள் செல்வத்தில் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் உலகம் அவர்களை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என்பதை வெற்றி வேற்கை தெரிவித்துள்ளது .

• கசடு அற மொழிதல்

கல்வி பெருமையுடையது ; கற்றவர்கள் மதிக்கப்படுவார்கள் என்பதில் எள் அளவும் ஐயம் இல்லை .

ஆனால் , ஒருவன் கல்வி அறிவு பெற்றவன் என்பதை எதன் மூலம் அறிய முடியும் ?

அதற்கு அதிவீரராம பாண்டியன் ஒரு வழியைக் காட்டியுள்ளார் .

கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்

( வெற்றிவேற்கை : 2 )

( கசடு = குற்றம் , அற = நீங்க )

ஒருவன் குற்றம் இல்லாத சொற்களைத் தெளிவாகப் பேசுவதிலிருந்தே அவன் கல்வி கற்றவன் என்பதை அறிந்து கொள்ளமுடியும் என்று இந்த அடி தெரிவிக்கிறது .

• கற்கை நன்றே !

கல்வி கற்பது ஒன்றே ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு நன்மையைத் தரும் .

கல்வி மட்டும்தான் நன்மையைத் தரும் என்றால் அந்தக் கல்வியை எந்த வகையிலாவது பெற வேண்டும் அல்லவா ?

கல்வி கற்பதற்குப் பொருள் தேவைப்படுகிறது .

அந்தப் பொருள் இல்லாதவர்கள் அதற்குத் தேவையான பொருளை முயன்று திரட்ட வேண்டும் .

முயற்சி செய்தும் பொருள் திரட்ட இயலவில்லை என்றால் அவர்களால் கல்வி கற்க இயலாது அல்லவா ?

அவர்கள் கல்வி கற்க வேண்டாமா ?

இதற்கு வெற்றிவேற்கை என்ன சொல்கிறது என்று பார்ப்போமா ? கற்கை நன்றே ; கற்கை நன்றே ;