109

ஒருவன் யாரிடமும் இனிமையாகப் பேசிப் பழகமாட்டான் ; பணிந்து அடங்கி நடக்க மாட்டான் என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் அவனிடம் செல்வம் இருந்தது என்றால் அவனுடன் இனிமையாகப் பேசிப் பழகுவார்கள் .

உலகில் பலரும் அவன் காலால் இடும் வேலையைச் செய்வதற்குக் காத்துக் கிடப்பார்கள் .

இவ்வாறு செல்வத்தின் நிலையைக் குமரகுருபரர் விளக்கியுள்ளார் .

5.4.1 ஈயாத செல்வன்

செல்வத்தை ஒருவன் மிகுதியாகப் பெற்றிருந்தால் எல்லோராலும் போற்றப்படுகிறான் .

செல்வம் அவனிடம் இருக்கிறது என்னும் தகுதியைத் தவிர வேறு எந்தத் தகுதியும் அவனிடம் இல்லை என்றாலும் அவனைப் புகழ்கிறார்கள் .

அவன் பிறருக்குப் பொருள் வழங்கும் ஈகைக் குணம் இல்லாதவன் என்று தெரிந்தும் போற்றுகிறார்கள் .

இதை ,

இவறன்மை கண்டும் உடையாரை யாரும்

குறையிரந்தும் குற்றேவல் செய்ப ; பெரிதும்தாம்

முற்பகல் நோலாதார் , நோற்றாரைப் பின்செல்லல்

கற்புஅன்றே ; கல்லாமை அன்று ( 11 )

( இவறன்மை = ஈயாத் தன்மை , உடையாரை = செல்வம் உடையவரை , குறையிரந்து = குறை நீங்கிடப் பொருள் கேட்டு , குற்றேவல் = சிறு எடுபிடி வேலைகள் , நோலாதார் = தவ வலிமை இல்லாதவர் , நோற்றார் = தவ வலிமை உடையவர் , கற்பு அன்றே = கல்வி அறிவு உடைய செயல் தான் , அன்று = இல்லை )

தவ வலிமை இல்லாதவர்கள் , தவ வலிமை உடையவர்களைப் பின்பற்றி வாழ்தல் அறிவுடைய செயல்தான் ; அறிவற்ற செயல் என்று சொல்ல இயலாது .

அதுபோல , பிறருக்குப் பொருள் வழங்காத இயல்பு உடையவன் என்று தெரிந்தும் அவன் பொருள் தருவான் என்று எண்ணி அவனுக்குச் சிறு எடுபிடி வேலைகளைச் செய்து அவனைப் பின்பற்றி வாழ்வதும் அறிவுடைய செயல்தானோ ?

என்று குமரகுருபரர் வினா எழுப்பியுள்ளார் .

இப்பாடல் வழியாகச் செல்வத்தை ஈயாதவர்களின் இழிவையும் செல்வம் வேண்டி அவர்கள் பின்னால் செல்கின்றவர்களின் அவல நிலையையும் வெளிக்காட்டியுள்ளார் .

5.4.2 செல்வப் பயன்

செல்வத்தின் பயன் பிறருக்குப் பயன்படும் தன்மையில் இருக்கிறது .

பிறருக்கு எதுவும் ஈயாதவனிடம் இருக்கும் செல்வத்தால் எந்தப் பயனும் கிடையாது .

செல்வத்தின் பயன்பாடு எந்த வகைகளில் இருக்கிறது என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது .

பொதுமகளே போல்ப தலையாயார் செல்வம் ;

குலமகளே ஏனையோர் செல்வம் ; கலன்அழிந்த

கைம்மையார் பெண்மை நலம்போல் கடையாயார்

செல்வம் பயன்படுவது இல் ( 65 )

( பொதுமகள் = விலைமகள் , தலையாயார் = சிறந்தவர் , கலன் அழிந்த = தாலி இழந்த , கைம்மையார் = கணவனை இழந்தார் , கடையாயார் = கருமியர் )

யாரிடம் இருக்கும் செல்வம் பிறருக்குப் பயன்படும் என்பதை விளக்குவதற்குக் குமரகுருபரர் மூவகைப் பெண்களை உவமையாகக் காட்டியுள்ளார் .

அந்த மூவகைப் பெண்களும் யார் என்பதைப் பார்ப்போமா ?

1. விலைமகள் 2. குலமகள் 3. கைம்பெண்

விலைமகள் என்பவள் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கட்டுப்பாட்டில் வாழ்வதில்லை .

எனவே அவள் எல்லோருக்கும் பொதுவானவளாக இருக்கின்றாள் .

ஒருவனுக்கு ஒருத்தி என்னும் குடும்ப எல்லையில் வாழ்பவள் குலமகள் .

எனவே , அவள் அவளது கணவனுக்கு மட்டுமே உரியவள் .

கணவனை இழந்தவள் கைம்பெண் .

அவள் யாருக்கும் உரியவள் அல்லள் .

விலைமகள் எல்லோருக்கும் பொதுவானவளாக வாழ்வது போல் சிறந்தவர்களிடம் இருக்கும் செல்வம் எல்லோருக்கும் பயன்படும் .

குலமகள் கணவனுக்கு மட்டும் உரியவளாக வாழ்வதுபோல் இடைப்பட்டாரின் செல்வம் அவர்களின் குடும்பத்திற்கு மட்டும் பயன்படும் .

கைம்பெண் யாருக்கும் உரியவளாய் இல்லாமல் வாழ்வது போல் கடைப்பட்டாரின் செல்வமும் யாருக்கும் பயன்படுவது இல்லை என்று இந்தப் பாடல் விளக்குகிறது .

இப்பாடலில் விலைமகள் , பண்பில் இழிந்தவள் என்றாலும் அவளது பொதுத் தன்மையைக் கருதி , சிறந்தவர்களின் செல்வம் பொதுவாக எல்லோருக்கும் பயன்படும் நிலைக்கு அதனை உவமைப்படுத்தியுள்ளார் , குமரகுருபரர் .

செல்வம் இருப்பவனிடம் ஈகைத்தன்மை இல்லை என்றால் அச்செல்வத்தால் பயன் இல்லை .

எனவே ஈகைத்தன்மை இல்லாதவனிடம் இருக்கும் செல்வத்தை விடவும் செல்வம் இல்லாதவனிடம் இருக்கும் வறுமையே சிறப்புடையது என்கிறார் குமரகுருபரர் .

செல்வம் இல்லாதவனின் வறுமை ஏன் சிறப்பிக்கப் பட்டுள்ளது என்பதை நாம் அறிய வேண்டாமா ?

இதோ நீதிநெறி விளக்கப் பாடல் அதை விளக்குகிறது .

வள்ளன்மை இல்லாதான் செல்வத்தின் மற்றையோன் நல்குரவே போலும் நனிநல்ல ; கொன்னே

அருள்இலன் , அன்புஇலன் , கண்ணறையன் என்று

பலரால் இகழப் படான் ( 66 )

( வள்ளன்மை = வள்ளல்தன்மை , நல்குரவு = வறுமை , கொன்னே = அசைச்சொல் [ பொருள் இல்லாச் சொல் ] , கண்ணறையன் = இரக்கம் இல்லாதவன் )

செல்வம் இருப்பவன் , செல்வம் இல்லாதவர்களுக்குப் பொருளை வழங்கவில்லை என்றால் அவனைக் கருணை இல்லாதவன் , அன்பு இல்லாதவன் , இரக்கம் இல்லாதவன் என்று எல்லோரும் இகழ்வார்கள் .

ஆனால் வறியவனிடம் செல்வம் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும் . அவனால் பிறருக்கு எதையும் கொடுக்க இயலாது என்று உணர்ந்து வறியவனை யாரும் இகழ்வது இல்லை .

எனவே வறியவனே சிறந்தவன் என்று கருதப்படுகிறான் .

முயற்சி

மனிதன் தனது முயற்சியால் மண்ணில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளான் .

அந்த வெற்றிகளின் வழிகாட்டலில் மனித சமுதாயம் நல்வாழ்க்கை வாழ்கிறது .

தமிழில் தோன்றிய அறநூல்கள் யாவும் முயற்சியின் சிறப்பை எடுத்துக் கூறியுள்ளன .

திருக்குறள் ‘ முயற்சி திருவினை ஆக்கும் ’ என்று தெரிவித்துள்ளது .

ஆத்திசூடி ' ஊக்கமது கை விடேல் ’ என்று கூறியுள்ளது .

முன்னோர் வழியில் நின்று குமரகுருபரரும் முயற்சியைப் பாடியுள்ளார் .

5.5.1 முயன்றால் முடியும்

எந்தச் செயலையும் இறுதிவரை முயன்று செய்யவேண்டும் ; முடியாது என்று விட்டுவிட வேண்டாம் .

ஏனெனில் நம்மால் முடியாது என்று நாம் முடிவு செய்த செயல்கூட நல்ல முறையில் நம்மால் செய்யப்படக் கூடும் .

உறுதி பயப்ப கடைபோகா ஏனும்

இறுவரை காறும் முயல்ப ; இறும்உயிர்க்கும்

ஆயுள் மருந்துஒழுக்கல் தீதுஅன்றால் ; அல்லனபோல்

ஆவனவும் உண்டு சில ( 48 )

( உறுதி பயப்ப = நன்மை தரும் செயல்கள் , கடை போகா ஏனும் = வெற்றி பெறாவிட்டாலும் , இறுவரைகாறும் = இறுதிவரை , இறும் = சாகின்ற , ஒழுக்கல் = கொடுத்தல் , தீது அன்று = தீமை இல்லை , அல்லன = வெற்றி பெறாதன , ஆவன = வெற்றி பெறுவன )

என்னும் பாடல் இக்கருத்தை விளக்குகிறது .

உயிர் போகின்ற நிலையில் இருப்பவரின் உயிரைக் காப்பாற்றும் கடைசி முயற்சியாக மருந்து கொடுப்பது உண்டு .

அந்த மருந்தால் அவர் உயிர் பிழைத்தாலும் பிழைப்பார் .

அதுபோல நன்மை தரும் ஒரு செயல் ‘ வெற்றியாக முடியாது ’ என்று கருதினாலும் அச்செயலைச் செய்வதற்கு இறுதிவரை முயற்சி மேற்கொள்ள வேண்டும் .

அந்த முயற்சியின் விளைவாக அந்தச் செயல் வெற்றியாக முடிந்தாலும் முடிந்துவிடும் .

எனவே முயற்சியைக் கைவிடக்கூடாது என்கிறது நீதிநெறிவிளக்கம் .

5.5.2 விதியை வெல்லும் முயற்சி

விதிப்படிதான் வாழ்க்கையில் எல்லாம் நிகழ்கின்றன என்னும் எண்ணத்தில் எந்தச் செயலையும் முயன்று செய்யாமல் இருந்தால் எந்தச் செயலையும் வெற்றியாக முடிக்க இயலாது .

விதி ஒன்றாக இருந்தாலும் அந்த விதியையும் புறந்தள்ளி வெல்ல முடியும் என்னும் நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும் .

முயலாது வைத்து முயற்று இன்மையாலே

உயல்ஆகா , ஊழ்த்திறந்த என்னார் - மயலாயும்

ஊற்றம் இல்விளக்கம் ஊழ்உண்மை காண்டும்என்று

ஏற்றார் எறிகால் முகத்து ( 49 )

( முயலாது = முயற்சி செய்யாது , முயற்று = முயற்சி , உயல் = வெற்றிபெறல் , ஊழ்த்திறந்த = விதி வலிமையால் , மயலாயும் = அறியா மயக்கத்தில் , ஊற்றம் இல் = பாதுகாப்பு இல்லாத , ஏற்றார் = ஏற்றி வைக்க மாட்டார் , எறி கால் முகத்து = காற்று வீசும் இடத்தில் )

விதியின் பயனால் விளக்கு அணையாது என்று காற்றடிக்கும் இடத்தில் அதனை ஏற்றி வைக்கக் கூடாது .

காற்று மிகுதியாக வீசாத இடத்தில் விளக்கைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் .

அதைப்போல எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்று முயற்சி செய்யாமல் இருக்கக்கூடாது .

முயற்சியால் விதியை மாற்றி அமைத்து வெற்றிபெற முடியும் என்று குமரகுருபரர் குறிப்பிட்டுள்ளார் .

விதியை முயற்சியால் வெல்லமுடியும் என்பதற்குக் குமரகுருபரர் ஒரு சான்றைப் பின்வரும் பாடலில் காட்டியுள்ளார் .

உலையா முயற்சி களைகணா , ஊழின்

வலிசிந்தும் வன்மையும் உண்டே - உலகுஅறியப்

பால்முளை தின்று மறலி உயிர்குடித்த

கால்முளையே போலும் கரி ( 50 )

( உலையா = தளரா , களைகண் = பற்றுக்கோடு , ஆ = ஆகா , மறலி = எமன் , பால்முளை = ஊழ்வினையின்முளை , கால்முளை = மார்க்கண்டேயன் , கரி = சான்று )

தளராத முயற்சியால் வெற்றிபெற முடியும் என்பதற்கு மார்க்கண்டேயனே சான்று ஆவான் .

எனவே விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்று யாரும் முயற்சி செய்யாமல் இருக்கக்கூடாது என்று குமரகுருபரர் கூறியுள்ளார் .

• மார்க்கண்டேயன்

மிருகண்டு என்னும் முனிவருக்கும் மருத்துவதி என்னும் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவன் மார்க்கண்டேயன் .

விதிப்படி இவன் பதினாறாம் வயதில் இறப்பான் என்று இருந்தது .

அந்த விதியை மாற்றுவதற்காக மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்தபடி வணங்கிக் கொண்டிருந்தான் .

அந்த வேளையில் அவனது உயிரைக் கவர வந்த எமன் தனது பாசக் கயிற்றை மார்க்கண்டேயன்மீது வீசினான் .

தன்னை வணங்கிக் கொண்டிருக்கும்போதே மார்க்கண்டேயனின் உயிரை எடுக்க வந்த எமன் மேல் சிவன் ஆத்திரம் கொண்டு அவனை மிதித்துக் கொன்றான் .

மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு வயதாகவே இருக்கும் என்று சிவன் அருள்புரிந்தான் . பின்னர் பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி எமனைச் சிவன் உயிர்பெறச் செய்தான் .

இதில் மார்க்கண்டேயன் தனது விடாமுயற்சியால் இறவாநிலை பெற்றான் என்று குமரகுருபரர் தெரிவித்துள்ளார் .

செயல்திறம்

யாரும் செயல் அற்று இருப்பதில்லை .

எல்லோரும் செயலாற்றுகிறார்கள் .

ஆனால் எல்லோருடைய செயலும் பலனைத் தருவதில்லை .

சிலர் செய்கின்ற செயல் பயன் உடையதாகவும் வேறு சிலர் செய்கின்ற செயல் பயன் அற்றதாகவும் இருப்பதற்குக் காரணம் எது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டாமா ?

இதைச் செயல் செய்யும் வகையாக நீதிநெறிவிளக்கம் தெரிவித்துள்ளது .

காலம் அறிந்துஆங்கு இடம்அறிந்து செய்வினையின்

மூலம் அறிந்து விளைவுஅறிந்து - மேலும்தாம்

சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து

ஆள்வினை ஆளப் படும் ( 51 )

( செய்வினை = செய்யும் செயல் , மூலம் = செயலைத் தொடங்கும் காரணம் , விளைவு = பயன் , சூழ்வன = ஆராய வேண்டியன , துணைமை = உதவி செய்வோர் , வலி = வலிமை , ஆள்வினை = செயல் , ஆளப்படும் = செய்யப்படும் )

ஒரு செயலைச் சிறப்பாகச் செய்ய விரும்புபவன் அச்செயலைச் செய்வதற்கு உரிய காலத்தையும் இடத்தையும் முதலில் நன்கு அறிந்து கொள்ளவேண்டும் ; அதன்பிறகு அச்செயலை எதிலிருந்து தொடங்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கொள்ளவேண்டும் ; அச்செயலைச் செய்வதன் மூலம் ஏற்படும் விளைவையும் நன்கு ஆராய்ந்து கொள்ள வேண்டும் .

அதன்பிறகு அச்செயலைச் செய்வதற்கு யாரெல்லாம் நமக்கு உதவியாய் இருப்பார் என்பதையும் அவர்களின் வலிமையையும் அறிந்துகொள்ள வேண்டும் .

அதன்பிறகு ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் சிறப்பாகச் செய்து முடிக்க இயலும் என்று நீதிநெறிவிளக்கம் வழிகாட்டுகிறது .

5.6.1 செயல் செய்யும் முறை

செயலைத் தொடங்குவதற்கான காலம் , இடம் , மூலம் முதலானவற்றை எல்லாம் ஒருவன் முடிவு செய்தபிறகு அச்செயலை எப்படிச் செய்யவேண்டும் என்று குமரகுருபரர் கூறியுள்ளார் .

மெய்வருத்தம் பாரார் ; பசிநோக்கார் ; கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி

அருமையும் பாரார் ; அவமதிப்பும் கொள்ளார்

கருமமே கண்ணாயி னார் ( 52 )

( மெய்வருத்தம் = உடல் துன்பம் , பாரார் = பொருட்படுத்தமாட்டார் , துஞ்சார் = தூங்கமாட்டார் , செவ்வி = காலம் )

ஒரு செயலைச் சிறப்பாகச் செய்து முடிக்க விரும்புபவர்கள் தமது உடலளவில் ஏற்படும் துன்பத்தைப் பொருட்படுத்த மாட்டார்கள் ; பசியையும் தூக்கத்தையும் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள் ; பிறர் செய்யும் தீமைகளுக்காக வருந்தமாட்டார்கள் ; காலத்தின் அருமையையும் கருதமாட்டார்கள் ; பிறர் தம்மை அவமதிப்பதை எண்ணியும் வருந்த மாட்டார்கள் என்று செயல் செய்யும் முறையை நீதிநெறி விளக்கம் தெரிவித்துள்ளது

5.6.2 நற்செயல்

செயலைத் திறமையாகச் செய்கிறவர்கள் அச்செயலானது சமுதாயத்திற்கு நன்மை தருவதுதானா என்பதை எண்ணிப் பார்த்துச் செய்தல்வேண்டும் .

அவ்வாறு எண்ணிப் பார்க்காமல் தீய செயல்கள் செய்வதற்கு எளிமையானவை என்று கருதி அவற்றைச் செய்யக்கூடாது .

சிறுமுயற்சி செய்துஆங்கு உறுபயன் கொள்ளப்

பெறும்எனில் , தாழ்வரோ ?

தாழார் - அறன்அல்ல

எண்மைய ஆயினும் கைவிட்டு , அரிதுஎனினும்

ஒண்மையின் தீர்ந்துஒழுக லார் ( 69 )

( உறுபயன் = பெரும்பயன் , தாழ்வரோ = இழிந்த செயல் செய்வரோ , தாழார் = இழிசெயல் செய்யமாட்டார் , எண்மைய = எளிமையான , ஒண்மை = நல்ல செயல் , ஒழுகலார் = செய்யமாட்டார் )

சிறிதளவு முயற்சியினாலேயே இழிந்த செயலைச் செய்துவிடமுடியும் ; மிகுந்த முயற்சி மேற்கொண்டால்தான் அறம் சார்ந்த நற்செயல்களைச் செய்யமுடியும் என்னும் நிலை ஏற்பட்டாலும் நல்லவர்கள் மிகுந்த முயற்சி செய்து நல்ல செயல்களையே செய்வார்கள் ; எளிமையாக இருக்கிறது என்று எண்ணி இழிந்த செயல்களைச் செய்யமாட்டார்கள் .

மேலே நாம் படித்தபடி நல்ல செயல்களைச் செய்கின்றவர்கள் பிறரது பாராட்டுக்காக ஏங்கித் தவிக்கமாட்டார்கள் .

பயனற்ற செயலைச் செய்கிறவர்கள் ஆரவாரத் தன்மை கொண்டு அந்தப் பயனற்ற செயலைப் பிறர் புகழவில்லையே என்று புலம்பித் திரிவார்கள் .

அல்லன செய்யினும் ஆகுலம் கூழாக்கொண்டு

ஒல்லாதார் வாய்விட்டு உலம்புப ; வல்லார்

பிறர்பிறர் செய்பபோல் செய்தக்க செய்துஆங்கு

அறிமடம் பூண்டு நிற்பார் ( 71 )

( அல்லன செய்யினும் = பயன் இல்லாதவற்றைச் செய்தாலும் , ஆகுலம் = ஆரவாரம் , கூழாக்கொண்டு = வருவாயாக எதிர்பார்த்து , ஒல்லாதார் = திறமையில்லாதவர் , உலம்புப = புலம்புவர் , செய்பபோல் = செய்ததுபோல் , செய்தக்க = பயனுள்ள செயல்கள் , அறிமடம் பூண்டு = அறிந்தும் அறியாதவர் போல் )

என்னும் பாடலில் நல்ல செயல் செய்கிறவர்களின் அடக்கம் போற்றப்பட்டுள்ளது .

இந்தப் பாடல் கருத்துக்கு ஏற்ப ‘ குறைகுடம் கூத்தாடும் ; நிறைகுடம் நீர் தளும்பல் இல் ’ என்னும் பழமொழி கூறப்படுகிறது .

குறைவாக நீர் இருக்கும் குடத்தை எடுத்துச் சென்றால் அந்தக் குடத்தில் இருக்கும் நீர் தளும்பி வழியும் .

ஆனால் நீர் நிறைந்த குடத்தை எடுத்துச் சென்றால் அவ்வாறு தளும்பி வழிவதில்லை .

அதுபோல , சான்றோர்கள் தாங்கள் செய்து முடித்த அரிய செயல்களைப் பற்றிப் பிறர் புகழவில்லை என்று வருந்தாமல் அடக்கமாக இருப்பார்கள் .

ஆனால் பயனற்ற செயலைச் செய்தவர்கள் ஆரவாரம் செய்வார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம் .

5.6.3 சான்றோர் செயல்

சான்றோர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பிறருக்கு நன்மையையே செய்வார்கள் .

அவர்கள் ‘ கற்பகத் தரு ’ போன்றவர்கள் என்று குமரகுருபரர் கூறியுள்ளார் . கண்நோக்கு அரும்பா , நகைமுகமே நாள்மலரா ,

இன்மொழியின் வாய்மையே தீங்காயா - வண்மை

பலமா , நலம்கனிந்த பண்புடையார் அன்றே

சலியாத கற்ப தரு ( 36 )

( நோக்கு = பார்வை , நகை = சிரிப்பு , வண்மை = ஈகைப்பண்பு , பலம் = பழம் )

கற்பகத் தரு என்பது கற்பக மரத்தைக் குறிக்கும் .

இதைத் தேவலோக மரம் என்று கூறுவார்கள் .

இம்மரம் கேட்டவர்க்குக் கேட்ட பொருளைக் கேட்ட உடனே கொடுக்கும் இயல்பு உடையது .

எனவே பிறர் கேட்ட பொருளை உடனே வழங்குபவர்களைக் கற்பக மரம் போன்றவர்கள் என்று புலவர்கள் போற்றிக் கூறுவார்கள் .

இங்கே சான்றோர்களைக் கற்பகத் தருவுக்கு ஒப்பாகக் கூறியுள்ள குமரகுருபரர் அதை எவ்வாறு ஒப்புமைப்படுத்தியுள்ளார் என்று பார்ப்போமா ?

கற்பக மரத்தில் அரும்பு , மலர் , காய் , பழம் முதலியவை கிடைக்கும் .

அதைப்போல , நல்ல பண்புடைய சான்றோர்களின் அருள்பார்வை அரும்பைப் போன்றும் , சிரித்த முகம் மலரைப் போன்றும் , இனிய சொல் இனிய காயைப் போன்றும் அவர்களின் ஈகைப்பண்பு பழத்தைப் போன்றும் இருப்பதால் சான்றோர்கள் கற்பகத் தருவைப் போன்றவர்கள் என்று குமரகுருபரர் கூறியுள்ளார் .

சான்றோர்கள் பிறருக்குத் தேவைப்படும் உதவிகளைத் தேவைப்படும் நேரத்தில் செய்கின்ற இயல்பு கொண்டவர்கள் என்னும் கருத்தைப் பின்வரும் பாடல் விளக்குகிறது .

எவர்எவர் எத்திறத்தர் அத்திறத்த ராய்நின்று

அவர்அவர்க்கு ஆவன கூறி - எவர்எவர்க்கும்

உப்பாலாய் நிற்ப , மற்று எம்உடையார் தம்உடையான்

எப்பாலும் நிற்பது என ( 97 )

( எத்திறத்தர் = எத்தன்மை உடையவர் , உப்பாலாய் = மேற்பட்டவராய் , எம் உடையார் = ஆசிரியர் , சான்றோர் ; தம்உடையான் = இறைவன் , எப்பாலும் = எல்லா இடங்களிலும் )

இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்து இருப்பான் .

என்றாலும் எந்த இடத்திலும் சாராமலும் இருப்பான் .

அதைப்போல , சான்றோரும் யார் எத்தன்மை உடையவரோ அத்தன்மைக்கு ஏற்ப அவரவர்க்கு வேண்டிய நல்லறிவுரைகளை வழங்கி அவர்களுடன் சாராமல் இருப்பர் என்று நீதிநெறி விளக்கம் சான்றோரின் செயலை விளக்கியுள்ளது .

துறவியர்

துறவுநெறிப்பட்டு வாழ்கிறவர்களும் மனிதர்கள்தாம் .

அவர்களுக்கும் மனிதனுக்குரிய எல்லா உணர்வுகளும் உண்டு .

துறவியர் தங்கள் துறவற நெறிக்கு ஏற்ப , பல உணர்வுகளை விலக்கி வாழ்கிறார்கள் .

அந்தத் துறவியர் எவற்றை முழுமையாக விலக்க வேண்டும் என்பதைக் குமரகுருபரர் கூறியுள்ளார் .

5.7.1 நல்ல துறவியர்

துறவற நெறியில் தவறாது வாழ்கின்ற துறவியரை நல்ல துறவியர் என்று கூறுகிறோம் .

அந்த நல்ல துறவியர் மண் , பொன் , பெண் ஆசைகளை விட்டு விலகி வாழ்வார்கள் .

பெண்மை வியவார் ; பெயரும் எடுத்து ஓதார் ;

கண்ணொடு நெஞ்சு உறைப்ப நோக்குறார் ; பண்ணொடு

பாடல் செவிமடார் ; பண்புஅல்ல பாராட்டார்

வீடுஇல் புலப்பகையி னார் ( 84 )

( வியவார் = வியந்து போற்றமாட்டார் , ஓதார் = சொல்ல மாட்டார் , உறைப்ப = பதியும் படியாக , பண் = இசை , செவிமடார் = கேட்கமாட்டார் , பாராட்டார் = போற்றமாட்டார் ; புலப்பகையினார் = புலன்களை வென்றவர்கள் )

துறவியர் தங்கள் புலன்களின் வழியே மனத்தைச் செலுத்தாமல் துறவற வழியில் புலன்களை அடக்கியாளும் தன்மை உடையவர்கள் .

எனவே நல்ல துறவியரைப் புலப்பகையினார் என்று குமரகுருபரர் விளக்கியுள்ளார் .

இத்தகைய நல்ல துறவியர் , பெண்மைத் தன்மையை வியந்து போற்றமாட்டார்கள் ; பெண்களின் பெயரைக்கூடச் சொல்ல மாட்டார்கள் ; பெண்களின் உருவம் மனத்தில் பதியும்படியாகப் பார்க்க மாட்டார்கள் ; மனத்தில் கிளர்ச்சியூட்டும் இசைப் பாடல்களைக் கேட்க மாட்டார்கள் ; பண்புக்கு ஒவ்வாத செயல்களைப் போற்றமாட்டார்கள் என்று நல்ல துறவியரின் இயல்பை எடுத்துக் கூறியுள்ளார் .

தூக்கத்தால் ஏற்படும் இன்பத்தை நல்ல துறவியர் பெரிதாகக் கருதமாட்டார்கள் .

அதுபோன்றே அறுசுவை உணவால் அடையும் இன்பத்தையும் விரும்பமாட்டார்கள் என்றும் நீதிநெறி விளக்கத்தின் எண்பத்தைந்தாம் பாடல் எடுத்துரைக்கிறது .

அறுசுவை உணவை மிகுதியாக உண்பதால்தான் துறவியருக்குத் தூக்கத்தால் உண்டாகும் இன்பத்தின் மேலும் பெண்களைத் தழுவுவதால் ஏற்படும் இன்பத்தின் மேலும் நாட்டம் ஏற்படுகிறது .

எனவே அவர்கள் எளிமையான உணவைக் குறைவாக உண்ண வேண்டும் என்று குமரகுருபரர் குறிப்பிட்டுள்ளார் .

துறவற நெறியில் சிறந்து விளங்குபவர்கள் தங்கள் உடலைப் போற்ற மாட்டார்கள் .

அன்பொடு அருள்உடைய ரேனும் உயிர்நிலை மற்று

என்புஇயக்கம் கண்டும் புறந்தரார் - புன்புலால்

பொய்க்குடில் ஓம்புவரோ , போதத்தால் தாம்வேய்ந்த புக்கில் குடிபுகுது வார் ( 86 )

( என்பு = எலும்பு , புறந்தரார் = கொள்கையில் விலகமாட்டார் , பொய்க்குடில் = பொய்யான உடம்பு , ஓம்புவரோ = பாதுகாக்கமாட்டார் , போதத்தால் = அறிவால் , புக்கில் = வீட்டில் , குடிபுகுதுவார் = குடியேற விரும்புபவர் )

துறவியர் பிற உயிர்களின்பால் அன்பும் கருணையும் உடையவர்கள் .

ஆனால் அவர்கள் தங்கள் உடலைப் பாதுகாக்க விரும்பமாட்டார்கள் .

தங்கள் உடலைப் புலால் கொண்ட பொய்க்குடில் என்றே இகழ்வார்கள் .

தங்கள் உடலில் உள்ள எலும்புகள் வெளியே தெரியும்படியாக மெலிவு ஏற்பட்டாலும் உடலைப் பாதுகாக்கமாட்டார்கள் . அறிவின் தெளிவாக அவர்கள் கருதும் பேரின்ப வீட்டு வாழ்க்கையையே பெரிதாகக் கருதுவார்கள் என்று துறவியரின் இயல்பை நீதிநெறிவிளக்கம் தெரிவித்துள்ளது .