இந்தப் பாடத்தில் தொல்காப்பியரும், நன்னூலாரும் எழுத்து இலக்கணத்தில் புணர்ச்சிக்கு எந்த அளவு முக்கிய இடம் தந்துள்ளனர் என்பது விளக்கிக் காட்டப்படுகிறது. புணர்ச்சி பற்றி நன்னூலார் தரும் விளக்கம் குறிப்பிடப்படுகிறது. நன்னூலார் புணர்ச்சியை எழுத்துகள், பதங்கள், பொருள், எழுத்து மாற்றம் என்னும் நால்வகை அடிப்படையில் பாகுபடுத்திக் கூறியிருப்பது தக்க சான்றுகளுடன் விளக்கிக் காட்டப்படுகிறது. தமிழில் புணர்ச்சி இலக்கணம் ஓசை இனிமையும், பொருள் நோக்கும் கொண்டது என்னும் கருத்துச் சுட்டிக் காட்டப்படுகிறது.
சான்று:
பொன் வளையல்
புணர்ச்சி என்பதைச் சந்தி என்றும் குறிப்பிடுவர். இரண்டு சொற்கள் சந்திப்பதைப் பற்றிய இலக்கணம் என்பதால் இவ்வாறு கூறினர் எனலாம். புணர்ச்சி என்பது தமிழ்ச் சொல். சந்தி என்பது வடசொல்.
புணர்ச்சியில் சேர்ந்து வரும் இரண்டு சொற்களில் முதலாவது வரும் சொல்லை நிலைமொழி என்றும், இரண்டாவது வரும் சொல்லை வருமொழி என்றும் நன்னூலில் பவணந்தி முனிவர் குறிப்பிடுகிறார். நிலைமொழி என்றால் நிற்கும் சொல் என்று பொருள். வருமொழி என்றால் நிலைமொழிக்குப் பின் வருகின்ற சொல் என்று பொருள்.
சான்று:
பொன் வளையல்
பொன் – நிலைமொழி
வளையல் – வருமொழி
தொல்காப்பியர் நிலைமொழி என்பதை நிறுத்த சொல் என்றும், வருமொழி என்பதைக் குறித்துவரு கிளவி என்றும் குறிப்பிட்டுள்ளார். மொழி, கிளவி, சொல் என்பன ஒரே பொருளுடைய சொற்கள். தற்காலத் தமிழ் இலக்கணத்தில் நிலைமொழி, வருமொழி என்பனவே வழக்கில் உள்ளன.
எழுத்து இலக்கணத்தில் புணர்ச்சிக்கு மிக முக்கியமான இடம் தரப்பட்டுள்ளது. தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்தில் முதலாவதாக அமைந்துள்ள அதிகாரம் எழுத்ததிகாரம் ஆகும். அதில் ஒன்பது இயல்கள் உள்ளன. அவற்றில் நூல் மரபு, மொழி மரபு, பிறப்பியல் என்னும் முதல் மூன்று இயல்களில் எழுத்துகளின் வகை, எண்ணிக்கை, பெயர், வடிவம், மாத்திரை, பிறப்பு முதலியன பற்றிக் கூறுகிறார். எஞ்சிய புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்னும் ஆறு இயல்களில் புணர்ச்சி பற்றியே கூறுகிறார்.
தொல்காப்பியரைப் போலவே நன்னூலாரும் நன்னூலில் முதலாவதாக அமைந்த எழுத்ததிகாரத்தில் புணர்ச்சிக்கு முக்கிய இடம் தந்துள்ளார். நன்னூல் எழுத்ததிகாரத்தில் ஐந்து இயல்கள் உள்ளன. அவை எழுத்தியல், பதவியல், உயிர் ஈற்றுப் புணரியல், மெய் ஈற்றுப் புணரியல், உருபு புணரியல் என்பனவாம்.
நன்னூலார் எழுத்து இலக்கணத்தை எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல் (சொல்லின் முதலில்), ஈறு (சொல்லின் இறுதியில்), இடைநிலை (சொல்லின் இடையில்), போலி, பதம், புணர்ச்சி எனப் பன்னிரு வகையாகப் பிரிக்கிறார்.
எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை,
முதல், ஈறு, இடைநிலை, போலி என்றா
பதம், புணர்பு, எனப் பன்னிரு பாற்று அதுவே (நன்னூல், 57)
(ஈறு = இறுதி: புணர்பு = புணர்ச்சி.)
இவற்றில் எண் முதல் போலி என்பது வரையில் உள்ள பத்து இலக்கணங்களை எழுத்தியலிலும், பதம் என்பதைப் பதவியலிலும் விளக்குகிறார். புணர்ச்சியை ஏனைய உயிர் ஈற்றுப் புணரியல், மெய் ஈற்றுப் புணரியல், உருபு புணரியல் ஆகிய மூன்று இயல்களில் விளக்குகிறார்.
மேற்கூறியவற்றால் தொல்காப்பியரும், நன்னூலாரும் எழுத்து இலக்கணத்தில் புணர்ச்சிக்கு முக்கியமான இடம் தந்துள்ளனர் என்பது நன்கு புலனாகிறது.
மெய் எழுத்தையும், உயிர் எழுத்தையும் முதலும் ஈறுமாக உடைய பகாப்பதம், பகுபதம் என்னும் இரண்டு பதங்களும், தன்னொடு தானும் (பகுபதத்தோடு பகுபதமும், பகாப்பதத்தோடு பகாப்பதமும்), பிறிதொடு பிறிதுமாய் (பகுபதத்தோடு பகாப்பதமும், பகாப்பதத்தோடு பகுபதமும்), அல்வழிப் பொருளிலோ (வேற்றுமை வழி அல்லாத நிலை), வேற்றுமைப் பொருளிலோ சேர்ந்து வரும்பொழுது, நிலைமொழியும், வருமொழியும் இயல்பாக இருந்தோ, விகாரம் பெற்றோ பொருந்துவது புணர்ச்சி எனப்படும்.
மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்களும்,
தன்னொடும் பிறிதொடும், அல்வழி வேற்றுமைப்
பொருளில் பொருந்துழி, நிலைவரு மொழிகள்
இயல்பொடு விகாரத்து இயைவது புணர்ப்பே (நன்னூல் -151)
(ஈறு = இறுதி; இரு பதங்கள் = பகாப்பதம், பகுபதம்; பொருந்துழி = சேர்ந்து வரும்பொழுது; நிலை வருமொழிகள் = நிலை மொழியும் வருமொழியும்; இயைவது = பொருந்துவது, சேர்வது; புணர்ப்பு = புணர்ச்சி.)
நன்னூலார் தரும் இப்புணர்ச்சி விளக்கத்தை நோக்கும்பொழுது, அவர் எழுத்துகளின் அடிப்படை, பதங்களின் அடிப்படை, பொருளின் அடிப்படை, எழுத்து மாற்றத்தின் அடிப்படை ஆகிய நான்கு வகை நிலைகளில் புணர்ச்சியைப் பாகுபடுத்திக் காண்கிறார் என்பது புலனாகிறது. இந்நால்வகைப் புணர்ச்சிப் பாகுபாடுகளைப் பற்றி ஒன்றன்பின் ஒன்றாகத் தக்க சான்றுகளுடன் காண்போம்.
மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்களும் (நன்னூல், 151-1)
எனக் குறிப்பிட்டிருப்பது காணலாம். எனவே பதங்கள் எழுத்து அடிப்படையில் நான்கு ஆகும். அவை வருமாறு:
(1)உயிர் முதல் உயிர் ஈறு
சான்று:அணி – உயிர் முதல் அ; உயிர் ஈறு இ (ண்+இ=ணி).
(2)உயிர் முதல் மெய் ஈறு
சான்று:அணில் – உயிர் முதல் அ; மெய் ஈறு ல்.
(3) மெய் முதல் உயிர் ஈறு
சான்று:மணி – மெய் முதல் ம் (ம்+அ=ம) உயிர் ஈறு இ (ண்+இ=ணி)
(4) மெய் முதல் மெய் ஈறு
சான்று:பல் – மெய் முதல் ப் (ப்+அ=ப); மெய் ஈறு ல்
இவ்வாறு அமையும் பதங்களே புணர்ச்சியில் நிலைமொழியாகவும் வருமொழியாகவும் வரும். நிலைமொழியின் ஈற்று எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் ஒன்றோடு ஒன்று பொருந்தி நிற்பதே புணர்ச்சி எனப்படும். நிலைமொழி ஈற்றில் உயிர் அல்லது மெய் எழுத்து இருக்கும். வருமொழி முதலிலும் உயிர் அல்லது மெய் எழுத்து இருக்கும். எனவே நிலைமொழியின் ஈற்றிலும், வருமொழியின் முதலிலும் இருக்கும் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு, புணர்ச்சியை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை வருமாறு:
(1)உயிர் ஈற்றின் முன் உயிர் வரல்
(நிலைமொழி இறுதி உயிர் + வருமொழி முதல் உயிர்)
சான்று: மணி + அடித்தான் (இ முன் அ வரல்)
(2)உயிர் ஈற்றின் முன் மெய் வரல்:
(நிலை மொழி இறுதி உயிர் + வருமொழி முதல் மெய்)
சான்று:அணி + கொடுத்தான் (இ முன் க் வரல்)
(3)மெய் ஈற்றின் முன் உயிர் வரல்
(நிலைமொழி இறுதி மெய் + வருமொழி முதல் உயிர்)
சான்று:கால் + அணி (ல் முன் அ வரல்)
(4)மெய் ஈற்றின் முன் மெய் வரல்
(நிலை மொழி இறுதி மெய் + வருமொழி முதல் மெய்)
சான்று:கால் + விரல் (ல் முன் வ் வரல்)
இவற்றுள் உயிர் ஈற்றின் முன் உயிர் வரல், உயிர் ஈற்றின் முன் மெய் வரல் என்னும் இருவகைப் புணர்ச்சி பற்றி உயிர் ஈற்றுப் புணரியலிலும், மெய் ஈற்று முன் உயிர் வரல், மெய் ஈற்று முன் மெய் வரல் என்னும் இருவகைப் புணர்ச்சி பற்றி மெய் ஈற்றுப் புணரியலிலும், விதிகள் பலவற்றைக் கொண்டு நன்னூலார் விளக்கிக் காட்டுவார்.
(1) பகாப்பதத்தின் முன் பகாப்பதம் வரல்
சான்று:பொன் + குடம்
(2) பகுபதத்தின் முன் பகுபதம் வரல்
சான்று:கண்ணன் + ஓடினான்
இவை இரண்டும், இருவகைப் பதங்களும் தன்னொடு தானே பொருந்தி வந்தவை ஆகும்.
(3) பகாப்பதத்தின் முன் பகுபதம் வரல்
சான்று:மணி + அடித்தான்
(4) பகுபதத்தின் முன் பகாப்பதம் வரல்
சான்று:கண்ணன் + கால்
இவை இரண்டும், இருவகைப் பதங்களும் பிறிதொடு பிறிதுமாய்ப் பொருந்தி வந்தவை ஆகும்.
இங்கே காட்டிய சான்றுகளில் பொன், குடம், மணி, கால் ஆகியன பகாப்பதங்கள். இவற்றைப் பகுபதங்களைப் போலப் பகுதி, இடைநிலை, விகுதி என்றவாறு பிரித்துக் காண முடியாது. எனவே இவை பகாப்பதங்கள். கண்ணன், ஓடினான், அடித்தான் ஆகியன பகுபதங்கள். இவற்றை முறையே,
கண்+அன் (பகுதி + விகுதி)
ஓடு + இன் + ஆன் (பகுதி + இடைநிலை + விகுதி)
அடி + த் + த் + ஆன் (பகுதி + சந்தி + இடைநிலை + விகுதி)
என்றவாறு பிரித்துக் காண முடியும். எனவே இவை பகுபதங்கள்.
தமிழில் வேற்றுமைகள் எட்டு. இவற்றுள் முதல் வேற்றுமை எழுவாய் வேற்றுமை என்று கூறப்படும். எட்டாம் வேற்றுமை விளிவேற்றுமை என்று கூறப்படும். இவ்விரு வேற்றுமைகளுக்கு என்று தனி வேற்றுமை உருபு கிடையாது. ஏனைய இரண்டு முதல் ஏழு வரையிலான ஆறு வேற்றுமைகள் ஒவ்வொன்றனுக்கும் தனித்தனி உருபுகள் உண்டு. அவை பின்வருமாறு:
வேற்றுமை உருபு
இரண்டாம் வேற்றுமை ஐ
மூன்றாம் வேற்றுமை ஆல்
நான்காம் வேற்றுமை கு
ஐந்தாம் வேற்றுமை இன்
ஆறாம் வேற்றுமை அது
ஏழாம் வேற்றுமை கண்
இவ்வுருபுகள் பெயர்ச்சொல்லோடு சேர்ந்து வந்து, அப்பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்துவதால் வேற்றுமை எனப்பட்டன.
சான்று:
இராமன் பார்த்தான்
இராமனைப் பார்த்தான்
இராமனால் பார்த்தான்
இத்தொடர்களில் முதல் தொடரில் பார்ப்பவன் இராமனாகவும், இரண்டாம் தொடரில் பார்க்கப்படுபவன் இராமனாகவும், மூன்றாம் தொடரில் பார்ப்பதற்குக் காரணமானவன் இராமனாகவும் பொருள் வேற்றுமை பெற்றுள்ளது. முதல் தொடரில் இராமன் எழுவாயாகவும், இரண்டாம் தொடரில் இராமன் செயப்படுபொருளாகவும், மூன்றாம் தொடரில் இராமன் கருவிப் பொருளாகவும் விளங்குவதாக இலக்கணம் கூறும். இந்தப் பொருள் வேற்றுமையைச் செய்வது எது? ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபும், ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும்தான் பொருள் வேற்றுமையைச் செய்கின்றன என்பதை உணரலாம். இனி, வேற்றுமைப் புணர்ச்சி என்றால் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
நிலைமொழியும், வருமொழியும் வேற்றுமைப் பொருளில் புணரும் பொழுது, அவ்விரு சொற்களுக்கும் இடையில் ஐ, ஆல், கு, இன், அது, கண் என்னும் ஆறு வேற்றுமைகளுக்கு உரிய உருபுகள் தொக்கியோ (மறைந்தோ), விரிந்தோ (வெளிப்பட்டோ) வருவது வேற்றுமைப் புணர்ச்சி எனப்படும். எனவே வேற்றுமைப் புணர்ச்சி ஆறு வகைப்படும்.
வேற்றுமை உருபுகள் தொக்கி வருவது வேற்றுமைத் தொகை எனவும், அவ்வேற்றுமை உருபுகள் தொகாது (மறையாது) விரிந்து வருவது வேற்றுமை விரி என்றும் கூறப்படும்.
சான்று:வேற்றுமைத் தொகை
உருபு
வேற்றுமை விரி
1. பால் குடித்தான் ஐ
பாலைக் குடித்தான்
2. தலை வணங்கினான் ஆல்
தலையால் வணங்கினான்
3. அரசன் மகன் கு
அரசனுக்கு மகன்
4. மலை வீழ் அருவி இன்
மலையின் வீழ் அருவி
5. மலை உச்சி அது
மலையினது உச்சி
6. மாடப் புறா கண்
மாடத்தின்கண் புறா
உயர்திணை அல்லாத திணையை அஃறிணை (அல்+திணை= அஃறிணை) என்று கூறுவதைப் போன்று, வேற்றுமைப் பொருள் அல்லாத வழி என்பதை அல்வழி என்று தமிழ் இலக்கண நூலார் கூறினர்.
அல்வழிப் புணர்ச்சியில் தொகைநிலைப் புணர்ச்சி, தொகாநிலைப் புணர்ச்சி என இருவகைகள் உள்ளன.
தொகைநிலைப் புணர்ச்சி
தொகைநிலைப் புணர்ச்சி ஐந்து வகைப்படும். அவை வருமாறு:
1.வினைத்தொகை- ஊறுகாய் (ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காய்)
2.பண்புத் தொகை- செந்தாமரை (செம்மை ஆகிய தாமரை)
3.உவமைத் தொகை- தாமரை முகம் (தாமரை போன்ற முகம்)
4.உம்மைத் தொகை- இராப்பகல் (இரவும் பகலும்)
5.அன்மொழித் தொகை- பொற்றொடி
(பொன்னாலாகிய வளையலை உடையாள்)
இத்தொகைகளில் வினைத்தொகையில் மூன்று கால இடைநிலைகளும், பண்புத் தொகையில் ஆகிய என்ற பண்பு உருபும், உவமைத் தொகையில் போன்ற என்ற உவமை உருபும், உம்மைத் தொகையில் உம் என்ற உம்மை உருபும், அன்மொழித் தொகையில் அல்லாத மொழியாகிய (சொல்லாகிய) உடையாள் என்பதும் தொக்கு வந்தன. எனவே இவை தொகை எனப்பட்டன.
தொகாநிலைப் புணர்ச்சி
அல்வழியில் மற்றொரு வகைப் புணர்ச்சியான தொகாநிலைப் புணர்ச்சி ஒன்பது வகைப்படும். அவை வருமாறு:
1. எழுவாய்த் தொடர்- இராமன் வந்தான்
2. விளித்தொடர்- இராமா வா
3. பெயரெச்சத் தொடர்- வந்த இராமன்
4. வினையெச்சத் தொடர்- வந்து போனான்
5. தெரிநிலை வினைமுற்றுத் தொடர்- வந்தான் இராமன்
6. குறிப்பு வினைமுற்றுத் தொடர்- நல்லன் இராமன்
7. இடைச்சொல் தொடர்- மற்றொன்று
8. உரிச்சொல் தொடர்- நனி நன்று (மிகவும் நன்று)
9. அடுக்குத் தொடர்- பாம்பு பாம்பு
இத்தொடர்களில் இருசொற்களுக்கு இடையே எந்த உருபும் மறைந்திருக்கவில்லை. எனவே இவை தொகாநிலைத் தொடர்கள் எனப்பட்டன.
மேலே கூறியவற்றால் அல்வழிப் புணர்ச்சி, தொகைநிலை ஐந்தும், தொகாநிலை ஒன்பதுமாக மொத்தம் பதினான்கு வகைப்படும் என்பது புலனாகும்.
வேற்றுமைப் புணர்ச்சி ஆறாகவும், அல்வழிப் புணர்ச்சி பதினான்காகவும் வகைப்பட்டு விளங்குவதை நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.
வேற்றுமை ஐம்முதல் ஆறாம், அல்வழி
தொழில், பண்பு, உவமை, உம்மை, அன்மொழி,
எழுவாய், விளி, ஈர் எச்சம், முற்று, இடை,உரி
தழுவுதொடர் அடுக்கு, என ஈர் ஏழே (நன்னூல், 152)
(தொழில் = வினைத்தொகை; ஈர் எச்சம் = பெயரெச்சம் வினையெச்சம்; முற்று – ஈர் முற்று = தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று; ஈர்ஏழு = பதினான்கு.)
வேற்றுமைத் தொகைகள் பற்றியும், அல்வழியில் உள்ள தொகை நிலைத் தொடர்கள், தொகா நிலைத் தொடர்கள் பற்றியும் அடுத்து வரும் பருவங்களில் விரிவாகப் படித்துத் தெரிந்து கொள்வீர்கள்.
விகாரம் அனைத்தும் மேவலது இயல்பே – (நன்னூல், 153)
(மேவலது – அடையாதது.)
சான்று:தாமரை + பூத்தது = தாமரை பூத்தது
பொன் + மலை = பொன் மலை
கதவு + திறந்தது = கதவு திறந்தது
தோன்றல், திரிதல், கெடுதல் விகாரம்
மூன்றும் மொழிமூ இடத்தும் இயலும் – (நன்னூல், 154)
(மொழி = சொல்; மூ இடத்தும் = சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய மூன்று இடங்களிலும்.)
தோன்றல் விகாரம்
இரு சொற்களுக்கு இடையில் எழுத்தோ, சாரியையோ தோன்றுவது தோன்றல் விகாரம் எனப்படும்.
சான்று:பூ+கொடி= பூங்கொடி (ங் என்ற எழுத்துத் தோன்றியது)
யானை+கொம்பு= யானைக் கொம்பு (க் என்ற எழுத்துத் தோன்றியது)
ஆ+பால்= ஆவின் பால் (இன் என்ற சாரியை தோன்றியது)
திரிதல் விகாரம்
இரு சொற்களில், ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து இன்னோர் எழுத்தாகத் திரிதல் (மாறுதல்) திரிதல் விகாரம் எனப்படும்.
சான்று:பொன்+குடம் = பொற்குடம்
(நிலைமொழி இறுதி ன் என்பது ற் எனத் திரிந்துள்ளது)
முன்+நிலை = முன்னிலை
(வருமொழி முதல் ந் என்பது ன் எனத் திரிந்துள்ளது)
சில நேரங்களில் நிலைமொழியின் இறுதி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் இன்னோர் எழுத்தாகத் திரிதல் உண்டு.
சான்று:பொன்+தாமரை = பொற்றாமரை
(நிலைமொழி இறுதி ன் என்பதும், வருமொழி முதல் த் என்பதும் ற் எனத் திரிந்துள்ளன.)
கெடுதல் விகாரம்
இரு சொற்களில் ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து மறைந்து போதல் கெடுதல் விகாரம் எனப்படும். (கெடுதல்-மறைதல்)
சான்று:மரம் + நிழல் =மரநிழல்
(நிலை மொழி இறுதி ம் என்பது கெட்டது.)
மேலே கூறப்பட்ட மூன்று விகாரங்களும் நிலைமொழியாகவும், வருமொழியாகவும் அமையும் இரு சொற்களின் முதல், இடை, இறுதி ஆகிய மூன்று இடங்களிலும் நிகழும் என நன்னூலார் குறிப்பிட்டுள்ளார்.
சான்று :ஆறு + பத்து =அறுபது
இதில் நிலைமொழியின் முதலில் உள்ள ஆ என்னும் நெட்டெழுத்து அ என்னும் குற்றெழுத்தாகத் திரிந்தது. வருமொழியின் இடையில் உள்ள த் என்ற மெய் கெட்டது.
ஒரே புணர்ச்சியில் பல விகாரங்கள்
இரு சொற்கள் சேர்ந்துவரும் ஒரு புணர்ச்சியில் தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்றுவகை விகாரங்களில் ஒரே ஒரு விகாரம் மட்டும் அல்லாமல் இரண்டு விகாரமோ, மூன்று விகாரமோ கூட வரப்பெறும் என்கிறார் நன்னூலார்
ஒரு புணர்க்கு இரண்டும் மூன்றும் உறப்பெறுமே – (நன்னூல், 157)
(புணர் = புணர்ச்சி)
சான்று :
1. யானை + கொம்பு = யானைக் கொம்பு
இதில் தோன்றல் விகாரம் மட்டும் வந்தது.
2. மரம் + பெட்டி = மரப்பெட்டி
இதில் நிலைமொழியின் இறுதியில் உள்ள மகரமெய் கெட்டு, அங்கே வருமொழியின் முதலில் உள்ள எழுத்துக்கு ஏற்ப, பகர மெய் தோன்றியதால் கெடுதல், தோன்றல் என்னும் இரு விகாரங்கள் வந்தன.
3. பனை + காய் = பனங்காய்
இதில் நிலைமொழியாக வந்துள்ள பனை என்பதன் இறுதியில் உள்ள ஐகாரம் கெட்டு (கெடுதல் விகாரம்), இடையில் அம் என்ற சாரியை தோன்றி (தோன்றல் விகாரம்), அம் என்ற சாரியையில் உள்ள மகரமெய் ஙகர மெய்யாகத் திரிந்ததால். (திரிதல் விகாரம்) மூன்று விகாரங்களும் வந்தன.
பனை + காய்
பன் + காய்
(ஐ – கெடுதல்)
பன் + அம்+காய்
(அம் – தோன்றல்)
பன் + அங்+காய்
(ம் ங் எனத் திரிதல்)
= பனங்காய்
புணர்ச்சியால் ஓசை இனிமையும், பொருள் தெளிவும்
இரு சொற்கள் புணர்ச்சியில் சேரும்பொழுது சில இடங்களில் இயல்பாக வருகின்றன என்பதையும், சில இடங்களில் தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் விகாரங்களுள் ஒன்றையோ பலவற்றையோ பெற்று வருகின்றன என்பதையும் மேலே பார்த்தோம். இவை எல்லாம் அச்சொற்களைச் சேர்த்துப் பேசுபவர்க்கு எளிதில் உச்சரித்துக் கூறும் ஓசை இனிமையையும், அவற்றைக் கேட்பவர்க்குச் செவி மடுத்துக் கேட்கும் ஓசை இனிமையையும் தருகின்றன. மேலும் சில இடங்களில் பொருள் தெளிவையும் தருகின்றன. இயல்பு புணர்ச்சிக்கும், விகாரப் புணர்ச்சிக்கும் மேலே காட்டிய சான்றுகளை நோக்கினால், அவற்றை வாய்விட்டுச் சொல்லிப் பார்த்தால் இவ்வுண்மை நன்கு தெரியவரும்.
பூ+கொடி என்பதை இயல்பாக, பூகொடி என்று சேர்த்தும், இடையில் ங் என்ற மெய் எழுத்துத் தோன்ற, பூங்கொடி என்று சேர்த்தும் சொல்லிப் பாருங்கள். பின்னதிலேயே ஓசை இனிமை உள்ளதை உணரலாம். மேலும் பூ என்பதோடு கா, சோலை, தடம், பொழில் முதலிய சொற்கள் சேர்ந்து வந்து பூங்கா, பூஞ்சோலை, பூந்தடம், பூம்பொழில் என்று ஓசை இனிமையுடன் அமைவதையும் காணலாம்.
மரம்+பெட்டி என்பதை இயல்பாக, மரம்பெட்டி என்று கூறினால் ஒரு பொருள்படும். அதையே மரப்பெட்டி என்று விகாரப்படுத்திக் கூறினால் வேறொரு பொருள்படும். மரத்தால் ஆகிய பெட்டி வாங்கி வந்த ஒருவர் மற்றொருவரிடம்,
நான் மரம்பெட்டி வாங்கி வந்தேன்
என்று இயல்பாகக் கூறினால், கேட்பவர்க்கு நான் மரமும் பெட்டியும் வாங்கி வந்தேன் என்றல்லவா பொருள்பட்டுவிடும்?
நான் மரப்பெட்டி வாங்கி வந்தேன்
என்று விகாரப்படுத்திக் கூறும் போதுதான், நான் மரத்தால் ஆகிய பெட்டி வாங்கி வந்தேன் என்று கேட்பவர்க்குப் பொருள் தெளிவுபடும். மேலும் மரப்பெட்டி என்று சொல்லும்போதே ஓசை இனிமையும் தோன்றுகிறது.
எனவே ஓசை இனிமைக்கும், பொருள் தெளிவுக்கும் காரணம் புணர்ச்சியே என்பதை நன்கு விளங்கிக் கொள்ளலாம்.
செய்யுளில் அசை, சீர், தளை, அடி, தொடை முதலியவற்றின் இலக்கணம் நோக்கிச் சில இடங்களில் சொற்கள் விகாரப்படுவது உண்டு. இவ்விகாரங்கள் செய்யுள் இலக்கணத்தை நிறைவு செய்தற்பொருட்டு வருவதால் செய்யுள் விகாரங்கள் எனப்பட்டன.
செய்யுள் விகாரங்கள் மொத்தம் ஒன்பது வகைப்படும். அவை வலித்தல் விகாரம், மெலித்தல் விகாரம், நீட்டல் விகாரம், குறுக்கல் விகாரம், விரித்தல் விகாரம், தொகுத்தல் விகாரம், முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை என்பனவாம்.
வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல்,
விரித்தல், தொகுத்தல் வரும்செய்யுள் வேண்டுழி (நன்னூல், 155)
ஒருமொழி மூவழிக் குறைதலும் அனைத்தே (நன்னூல், 156)
(மூவழி = சொல்லின் முதல், இடை, கடை என்ற மூன்று இடத்திலும்)
வலித்தல் விகாரம்
மெல்லின எழுத்தை வல்லின எழுத்து ஆக்குதல்.
சான்று :சிலப்பதிகாரம்
இதில் சிலம்பு என்பதில் உள்ள ம் என்ற மெல்லின எழுத்து ப் என்ற வல்லின எழுத்தாகியது.
மெலித்தல் விகாரம்
வல்லின எழுத்தை மெல்லின எழுத்து ஆக்குதல்.
சான்று:தண்டையின் இனக்கிளி கடிவோள்
(தினைப்புனத்தைக் காவல் காக்கும் தலைவி, தினைக்கதிர்களை உண்ணவரும் கிளிகளை, தென்னை, பனை ஆகியவற்றின் மட்டையை மூன்று அல்லது நான்காகப் பிளந்து செய்த தட்டை என்ற கருவியை அடித்து ஒலி எழுப்பி விரட்டுவாள்.)
இதில் தட்டை என்பது தண்டை என்றாகியது. ட் என்ற வல்லின எழுத்து ண் என்ற மெல்லின எழுத்தாகியது.
நீட்டல் விகாரம்
குற்றெழுத்தை நெட்டெழுத்து ஆக்குதல்.
சான்று:ஈசன் எந்தை இணையடி நீழலே
இதில் நிழல் என வரவேண்டியது, நீழல் என்று நீண்டது.
குறுக்கல் விகாரம்
நெட்டெழுத்தைக் குற்றெழுத்து ஆக்குதல்.
சான்று:……………………………………………………………………யானை
எருத்தத்து இருந்த இலங்கிலைவேல் தென்னன்
திருத்தார் நன்றென்றேன் தியேன்
(யானையின் பிடரியில் வீற்றிருந்த ஒளி வீசும் வேலை ஏந்திய பாண்டியன் மார்பில் கிடந்த அழகிய மாலை நன்று என்று சொன்னேன் தீயவளாகிய நான் – இது தலைவி தன் தோழியரிடம் கூறியது.)
இதில் தீயேன் என வரவேண்டியது தியேன் என்று குறுகியது.
விரித்தல் விகாரம்
ஒரு சொல்லில் இல்லாத எழுத்தை வருவித்தல்.
சான்று :சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே
(வெதிரின் = மூங்கிலின்)
இதில் விளையுமே என்று வரவேண்டிய இடத்தில், விளையும்மே என்று மகரமெய் வந்துள்ளது.
தொகுத்தல் விகாரம்
ஒரு சொல்லில் உள்ள எழுத்தை நீக்குதல்.
சான்று :சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே
சிறிய+இலை என்பதில். இடையில் உள்ள அகர உயிரை (சிறி+(ய்)+இலை-ய் என்பது உடம்படுமெய்) நீக்கியிருப்பதால் தொகுத்தல் விகாரம்.
முதற் குறை
ஒரு சொல்லில் முதல் எழுத்துக் குறைந்து வருவது.
சான்று :மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி
(தாமரை இதழைப் போன்ற அழகிய சிவந்த சிறிய பாதங்கள்)
இதில் தாமரை என்ற சொல்லில் முதல் எழுத்துக் குறைந்து வந்துள்ளதால் முதற்குறை.
இடைக்குறை
ஒரு சொல்லில் இடையில் உள்ள எழுத்துக் குறைந்து வருவது.
சான்று :வேதின வெரிநின் ஓதி முதுபோத்து
(வேதினம் = கருக்கரிவாள்; கருக்கரிவாளைப் போன்ற முதுகினைப் பெற்ற ஓந்தி; வெரிந் = முதுகு முதுபோத்து = முதிய ஆண்.)
இதில் ஓந்தி (ஓணான்) என்ற சொல்லின் இடையில் உள்ள நகர மெய் குறைந்து வந்துள்ளதால் இடைக்குறை.
கடைக்குறை
ஒரு சொல்லில் இறுதி எழுத்துக் குறைந்து வருவது.
சான்று:உண் துகிலிகை கடுப்ப
(நீலம் உண்ட வெண்மையான ஆடையைப் போன்று)
இதில் நீலம் என்ற சொல்லின் இறுதியில் உள்ள அகர உயிரும், மகர மெய்யும் குறைந்து வந்துள்ளதால் கடைக்குறை.
நிலைமொழியின் ஈற்றிலும், வருமொழியின் முதலிலும் வரும் எழுத்துகளை அடிப்படையாக வைத்துப் புணர்ச்சியை நன்னூலார் உயிர் ஈற்றின் முன் உயிர்வரல், உயிர் ஈற்றின் முன் மெய்வரல், மெய் ஈற்றின் முன் உயிர்வரல், மெய் ஈற்றின் முன் மெய்வரல் என நால்வகையாகப் பிரித்து விளக்குகிறார்.
இருசொற்கள் சேர்ந்து வரும்போது அவை எவ்வகைப் பொருளில் பொருந்துகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு புணர்ச்சியை வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என்று இருவகையாகப் பிரித்து விளக்குகிறார் நன்னூலார்.
இரு சொற்கள் சேர்ந்து வரும்போது அச்சொற்களில் நிகழும் எழுத்து மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு நன்னூலார் புணர்ச்சியை இயல்பு புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி என இருவகையாகப் பிரித்து விளக்குகிறார். இயல்பு புணர்ச்சியை ஒன்றாகவும், விகாரப் புணர்ச்சியைத் தோன்றல் விகாரம், திரிதல் விகாரம், கெடுதல் விகாரம் என மூன்றாகவும் பகுத்து அவர் விளக்குகிறார்.
புணர்ச்சியில் சொற்கள் சேர்ந்து இயல்பாக வருவதும், தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் விகாரங்கள் பெற்று வருவதும் பேசுவோர்க்கும், கேட்போர்க்கும் ஓசை இனிமையையும், பொருள் தெளிவையும் தருகின்றன.
இவற்றையெல்லாம் இந்தப் பாடத்தின் வாயிலாக நன்கு அறிந்துகொண்டோம்.
பாடம் - 2
நிலைமொழியின் இறுதியில் வரும் உயிர் எழுத்துகள் மற்றும் குற்றியலுகரத்தை வைத்து உயிர் ஈற்றுப் புணரியலையும், நிலை மொழியின் இறுதியில் வரும் மெய் எழுத்துகளை வைத்து மெய் ஈற்றுப் புணரியலையும் நன்னூலார் அமைத்துள்ளார். உயிர் ஈறுகளையும், மெய் ஈறுகளையும், குற்றியலுகர ஈற்றையும் கொண்ட நிலைமொழிகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற மெய்களை முதலாகக் கொண்ட சில வருமொழிச் சொற்களோடு பொருந்தி வருவது பற்றிய பொதுவான புணர்ச்சி விதிகளை நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் நான்கு நூற்பாக்களில் (நன்னூல், 158-161) கூறுகிறார். அவற்றைப் பற்றி இப்பாடத்தில் விரிவாகக் காண்போம்.
ஆவி, ஞணநமன யரல வழள மெய்,
சாயும் உகரம் நால்ஆறும் ஈறே (நன்னூல், 107)
(ஆவி=உயிர்; சாயும் உகரம்=குற்றியலுகரம்; நால்ஆறு=இருபத்து நான்கு.)
உயிர் எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும்போது பெரும்பாலும் மெய்யோடு சேர்ந்தே வரும். அஃதாவது உயிர்மெய்யாகவே வரும்.
சான்று :பல (ல்+அ=ல)
அணி (ண்+இ=ணி)
எகரம் மட்டும் மெய்யோடு சேர்ந்து ஈறாகாது. உயிரளபெடையில் மட்டும் ஈறாகும். சான்று சேஎ (சேஎ-எருது). உயிர் எழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழு. இவற்றில் ஔகாரம் நீங்கலான ஏனை ஆறும் தனித்து வந்து ஈறாகும்.
சான்று :ஆ (பசு), ஈ, ஊ (மாமிசம்), ஏ (அம்பு), ஐ (தலைவன்), ஓ (மதகுப் பலகை)
உயிர் எழுத்துகளில் குற்றெழுத்துகள் ஐந்து, இவற்றில் ‘அ, இ, உ’ என்பன சுட்டு எழுத்துகள்; ‘எ’ என்பது வினா எழுத்து. இவை நான்கும் நிலைமொழியாக வரும்போது அம்மொழியின் ஈற்று எழுத்தாகக் கருதப்படும்.
சான்று :அ+பொருள் = அப்பொருள்
இ+பொருள் = இப்பொருள்
எ+பொருள் = எப்பொருள்
குற்றெழுத்துகளில் மற்றோர் எழுத்து ‘ஒ’ என்பதாகும். இது தனித்து வந்து ஈறாவதில்லை. ‘ந்’ என்ற மெய் எழுத்தோடு சேர்ந்து ‘நொ’ என்ற ஒரு சொல்லில் மட்டும் ஈறாகும். (நொ-துன்பப்படு.)
மெய் எழுத்துகள் பதினெட்டு. இவற்றில் வல்லின எழுத்துகளாகிய ‘க், ச், ட், த், ப், ற்’ என்னும் ஆறும், மெல்லின எழுத்துகளில் ‘ங் ’ என்னும் ஒன்றும் ஆகிய ஏழும் மொழிக்கு இறுதியில் வாரா. மெல்லின எழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன்’ என்னும் ஐந்தும், இடையின எழுத்துக்களாகிய ‘ய், ர், ல், வ், ழ், ள்’ என்னும் ஆறும் ஆகிய பதினொன்று மட்டுமே மொழிக்கு இறுதியில் வரும். இவற்றுள் ‘ஞ், ந், வ்’ ஆகிய மூன்றும் நன்னூலார் காலத்தில் குறிப்பிட்ட ஒரு சில சொற்களில் மட்டுமே மொழிக்கு இறுதியில் வந்தன. ‘ஞ்’ என்பது உரிஞ் (தேய்த்தல்) என்னும் ஒரு சொல்லில் மட்டும் இறுதியில் வந்தது; ‘ந்’ என்பது பொருந் (ஒத்திருத்தல்), வெரிந் (முதுகு) என்னும் இருசொற்களில் மட்டும் இறுதியில் வந்தது; ‘வ்’ என்பது அவ், இவ், உவ், தெவ் (பகை) என்னும் நான்கு சொற்களில் மட்டுமே இறுதியில் வந்தது. இச்சொற்கள் இக்காலத் தமிழில் இல்லை.
குற்றியலுகரம் மொழிக்கு இறுதியில் வல்லின எழுத்துகள் ஆறின்மேல் ஏறி வரும். சான்று: பாக்கு, பஞ்சு, பட்டு, பந்து, அம்பு, கயிறு.
எனவே மொழிக்கு இறுதியில் வரும் என மேலே கூறப்பட்ட இருபத்து நான்கு எழுத்துகளே (உயிர் 12 + மெய் 11 + குற்றியலுகரம் 1 = 24) புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதியில் வரும் என்பதை அறியலாம்.
பன்னீர் உயிரும் கசதந பமவய
ஞங ஈர் ஐந்து உயிர் மெய்யும் மொழிமுதல் – (நன்னூல்,102)
இவற்றுள் உயிர்கள் தனித்து மொழிக்கு முதலில் வரும். ஆனால் மெய்கள் தனித்து மொழிக்கு முதலில் வாரா. உயிரோடு சேர்ந்து உயிர்மெய்யாகவே மொழிக்கு முதலில் வரும். உயிர்மெய்க்கு ‘மெய் முன்னும் உயிர் பின்னும்’ வரும்.
சான்று :க – க்+அ = க (கடல்)
கா – க்+ஆ = கா (காடு)
இங்கே காட்டப்பட்ட கடல், காடு ஆகிய சொற்களில் க் என்ற மெய் முதலில் தனித்து வாராமல், அ,ஆ என்னும் உயிர்களோடு சேர்ந்து உயிர் மெய்யாக வந்தாலும், அச்சொற்களுக்கு முதல் எழுத்து ‘க்’ என்ற மெய்யே ஆகும்.
மெய் எழுத்துகளில் ‘ங்’ என்பது, ‘ஙனம்’ என்ற ஒரு சொல்லில் மட்டுமே முதலாக வரும். ஙனம் என்ற சொல்லும் தனித்து வாராது. ‘அ, இ, உ’ என்னும் சுட்டு எழுத்துகளையும், ‘எ’ என்னும் வினா எழுத்தையும் அடுத்தே வரும்.
சான்று :அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம்
மேலே கூறப்பட்ட இருபத்திரண்டு எழுத்துகளே (உயிர் 12 + மெய் 10 = 22) புணர்ச்சியில் வருமொழியின் முதலில் வரும் என்பதை அறியலாம்.
1.மொழிக்கு இறுதியில் வரும் எனக் கூறப்பட்ட இருபத்து நான்கு எழுத்துகளையும் ஈற்றில் கொண்ட எல்லா வகையான நிலைமொழிகளுக்கும் முன்னே, ஞ, ந, ம, வ, ய என்னும் ஐந்து மெய் எழுத்துகளை முதலாகக் கொண்ட வருமொழிகள் வந்து சேரும்போது, அவ்வெழுத்துகள் அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் பொருளிலும் இயல்பாகவே வரும்.
சான்று :அல்வழி
இள + ஞாயிறு = இளஞாயிறு
(அ முன் ஞகரமெய் இயல்பாக வந்தது)
தென்னை + நீண்டது = தென்னை நீண்டது
(ஐ முன் நகரமெய் இயல்பாக வந்தது)
பூ + மலர்ந்தது = பூ மலர்ந்தது
(ஊ முன் மகரமெய் இயல்பாக வந்தது)
மரம் + வளர்ந்தது = மரம் வளர்ந்தது
(மகரமெய் முன் வகரமெய் இயல்பாக வந்தது)
எஃகு + யாது = எஃகு யாது
(குற்றியலுகரம் முன் யகரமெய் இயல்பாக வந்தது)
இங்கே காட்டப்பட்ட சான்றுகளில் இளஞாயிறு – பண்புத்தொகை; மற்றவை எழுவாய்த் தொடர்.
வேற்றுமை
ஒளி + ஞாயிறு = ஒளிஞாயிறு
(ஒளியை உடைய ஞாயிறு. இரண்டாம் வேற்றுமைத் தொகை)
தென்னை + நீட்சி = தென்னை நீட்சி
(தென்னையினது நீட்சி. ஆறாம் வேற்றுமைத் தொகை)
மனை + மாட்சி = மனைமாட்சி
(மனையினது மாட்சி. ஆறாம் வேற்றுமைத் தொகை)
எஃகு + வாள் = எஃகுவாள்
(எஃகால் ஆன வாள். மூன்றாம் வேற்றுமைத் தொகை)
கல் + யானை = கல்யானை
(கல்லால் ஆன யானை. மூன்றாம் வேற்றுமைத் தொகை)
2. தனிக்குறிலை அடுத்து யகரமெய் அமையும் சொல், ஓர் எழுத்து ஒரு மொழியாக வரும் ஐகாரமாகிய சொல், நொ,து என்னும் ஓர் எழுத்துச்சொற்கள் நிலைமொழிகளாக இருந்து அவற்றிற்கு முன்னே ‘ஞ,ந,ம’ என்னும் மெல்லின மெய் எழுத்துகளை முதலாகக் கொண்ட வருமொழிகள் வந்து சேரும்போது, அவ்வெழுத்துகள் அல்வழியிலும், வேற்றுமையிலும் மிகும்.
தனிக்குறிலை அடுத்து யகர மெய் வரும் சொல் மெய், பொய், நெய் என்பன. ஓர் எழுத்து ஒருமொழியாகிய ஐகாரச் சொல் கை, பை, தை, மை என்பன. இவை வழக்கில் உள்ளவை. நொ, து ஆகிய சொற்கள் வழக்கிழந்து போனவை.= துன்பப்படு; து = உண்.
சான்று :அல்வழி
மெய் + ஞான்றது = மெய்ஞ்ஞான்றது
மெய் + நீண்டது = மெய்ந்நீண்டது
மெய் + மாண்டது = மெய்ம்மாண்டது
கை + ஞான்றது = கைஞ்ஞான்றது
கை + நீண்டது = கைந்நீண்டது
கை + மாண்டது = கைம்மாண்டது
இவை எழுவாய்த் தொடர்
நொ + நாகா = நொந்நாகா
து + நாகா = துந்நாகா
இவை வினைமுற்றுத் தொடர்
(ஞான்றது = தொங்கியது; மாண்டது = சிறந்தது; நொந்நாகா = துன்பப்படு நாகனே; துந்நாகா = உண்பாய் நாகனே.)
வேற்றுமை
மெய் + ஞாற்சி = மெய்ஞ்ஞாற்சி (மெய்யினது ஞாற்சி)
மெய் + நீட்சி = மெய்ந்நீட்சி (மெய்யினது நீட்சி)
மெய் + மாட்சி = மெய்ம்மாட்சி (மெய்யினது மாட்சி)
இவை ஆறாம் வேற்றுமைத் தொகை
கை + ஞாண் = கைஞ்ஞாண் (கையின்கண் ஞாண்)
கை + நீளம் = கைந்நீளம் (கையினது நீளம்)
கை + மலர் = கைம்மலர் (கையின்கண் மலர்)
இவற்றில், கைஞ்ஞாண், கைம்மலர் – ஏழாம் வேற்றுமைத் தொகை; கைந்நீளம் – ஆறாம் வேற்றுமைத் தொகை. (ஞாற்சி = தொங்கல்; மெய் = உடம்பு, உண்மை; மாட்சி = சிறப்பு; ஞாண் = கயிறு.)
3. ‘ண, ள, ன, ல’ என்னும் மெய்களை இறுதியாகக் கொண்ட நிலைமொழிகளின் முன்னே, நகர மெய்யை முதலாகக் கொண்ட வருமொழிகள் வந்து புணரும்போது, வருமொழியின் முதலில் உள்ள நகரமெய் அல்வழி, வேற்றுமை என்னும் இருபொருளிலும் வேறொரு மெய்யாகத் திரியும்.
சான்று :அல்வழி
மண் + நீண்டது = மண்ணீண்டதுமுள் + நீண்டது = முண்ணீண்டது
பொன் + நீண்டது = பொன்னீண்டது
கல் + நீண்டது= கன்னீண்டது
இவை எழுவாய்த் தொடர்
வேற்றுமைமண் + நீட்சி = மண்ணீட்சி (மண்ணினது நீட்சி)
முள் + நீட்சி = முண்ணீட்சி(முள்ளினது நீட்சி)
பொன் + நீட்சி= பொன்னீட்சி(பொன்னினது நீட்சி)
கல் + நீட்சி= கன்னீட்சி(கல்லினது நீட்சி)
இவை ஆறாம் வேற்றுமைத் தொகை
இங்கே காட்டிய சான்றுகளில் ண, ள முன்னர் வந்த நகர மெய் ணகர மெய்யாகவும், ன,ல முன்னர் வந்த நகர மெய் னகர மெய்யாகவும் அல்வழி, வேற்றுமை ஆகிய இரு பொருள்களிலும் திரிந்தமை காணலாம்.
மேலே கூறிய மூன்று பொதுப்புணர்ச்சி விதிகளை நன்னூலார் பின்வரும் நூற்பாவில் ஒரு சேரக் குறிப்பிடுகிறார்.
எண்மூ எழுத்து ஈற்று எவ்வகை மொழிக்கும்
முன்வரு ஞநமய வக்கள் இயல்பும்;
குறில்வழி யத்தனி ஐந்நொது முன்மெலி
மிகலுமாம்; ணளனல வழிநத் திரியும். – (நன்னூல்,158)
(எண்மூ எழுத்து – இருபத்துநான்கு எழுத்து; எவ்வகை மொழிக்கும் -பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல், திசைச்சொல், வடசொல் என்னும் பலவகைப்பட்ட சொற்களுக்கும்.)
இந்நூற்பாவில் கூறப்படும் பொதுப்புணர்ச்சி அல்வழி, வேற்றுமை ஆகிய இரு பொருளிலும் நிகழும் என்று நன்னூலார் எங்கும் கூறவில்லை. புணர்ச்சி பற்றிக் கூறும் நூற்பாக்களில் இதுபோல, அல்வழி, வேற்றுமை இரண்டனுள் ஒன்றை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ கூறாத இடங்களில் எல்லாம் அவ்விரண்டையும் கொள்ள வேண்டும் என்று நன்னூல் உரையாசிரியர் கூறுகின்றனர். எனவே இந்நூற்பாவில் கூறப்பட்ட பொது விதிகளுக்குச் சான்றுகள் அல்வழி, வேற்றுமை இரண்டிற்கும் காட்டப்பட்டன.
உயர்திணைக்கும், அஃறிணைக்கும் பொதுவாக வழங்கும் பெயர் பொதுப்பெயர் எனப்படும். இதனை இருதிணைப் பொதுப்பெயர் என்றும் குறிப்பிடுவர்.
சான்று :சாத்தன், சாத்தி
இச்சொற்கள் உயர்திணையில் முறையே ஒருவனையும், ஒருத்தியையும் குறிக்கும் இயற்பெயர்களாகவும், அஃறிணையில் முறையே ஓர் எருதையும், ஒரு பசுவையும் அழைக்கும் பெயர்களாகவும் வழங்கி வந்தன. எனவே சாத்தன், சாத்தி என்பன பொதுப்பெயர்கள் என்று கூறப்படுகின்றன. இதே போல் தாய், தந்தை, ஆண், பெண், பிள்ளை போன்ற சொற்களும், நான்,யான்,யாம்,நாம் என்னும் தன்மை இடப்பெயர்களும், நீ, நீர், நீயிர், நீவிர் என்னும் முன்னிலை இடப்பெயர்களும் இருதிணைக்கும் பொதுவாக வழங்கிய பெயர்களாகும். நாம் வாழும் இக்காலத்திலும் வீட்டில் வளர்க்கும் விலங்குகள், பறவைகள், கோயில்களில் வளர்க்கும் விலங்குகள், பறவைகள் முதலியவற்றிற்கு மக்களுக்கு வைக்கும் இயற்பெயர்களை இட்டு அவற்றை அழைக்கும் வழக்கம் இருப்பதைக் காணலாம்.
உயர்திணைக்கு மட்டும் வழங்கும் பெயர் உயர்திணைப் பெயர் எனப்படும்.
சான்று :அவன், அவள், அவர்
நம்பி, நங்கை
மகன், மகள், மக்கள்
தோன்றல், குரிசில், நாடன், ஊரன்
பொதுப்பெயர், உயர்திணைப் பெயர் ஆகிய இருவகைப் பெயர்கள் நிலைமொழியில் நின்று, அவை வல்லின எழுத்துகளையும், பிற எழுத்துகளையும் முதலாக உடைய வருமொழிகளோடு புணரும் முறை பற்றி நன்னூலார் மூன்று பொதுவிதிகளைக் கூறுகிறார். அவற்றை ஈண்டுச் சான்றுடன் காண்போம்.
பொதுப்பெயர், உயர்திணைப் பெயர் ஆகியவற்றின் ஈற்றில் உள்ள மெய்கள், வருமொழி முதலில் வல்லினம் வந்தால் இயல்பாகும்.
பொதுப்பெயர் ஈற்று மெய் வல்லினம் வர இயல்பாதல்
சான்று:
சாத்தன் + சிறியன் = சாத்தன் சிறியன்- அல்வழி
சாத்தன் + சிறிது = சாத்தன் சிறிது
பெண் + பெரியள் = பெண் பெரியள்
நான் + சிறியேன் = நான் சிறியேன்
இவை எழுவாய்த் தொடர்.
சாத்தன் + கை = சாத்தன் கை- வேற்றுமை
சாத்தன் + கொம்பு = சாத்தன் கொம்பு
ஆண் + செவி = ஆண் செவி
ஆண் + கால் = ஆண் கால்
இவை ஆறாம் வேற்றுமைத் தொகை.
உயர்திணைப் பெயர் ஈற்றுமெய் வல்லினம் வர இயல்பாதல்
சான்று:
அவன் + சிறியன் = அவன் சிறியன்- அல்வழி
அவள் + பெரியள் = அவள் பெரியள்
மகன் + தடியன் = மகன் தடியன்
ஊரன் + கொடியன் = ஊரன் கொடியன்
இவை எழுவாய்த் தொடர்.
அவன் + புகழ் = அவன் புகழ்- வேற்றுமை
அவள் + பெருமை = அவள் பெருமை
மகன் + சிறுமை = மகன் சிறுமை
நாடன் + கை = நாடன் கை
இவை ஆறாம் வேற்றுமைத் தொகை.
மேலே காட்டிய சான்றுகளில் நிலைமொழியாக உள்ள பொதுப்பெயர்களின் இறுதியிலும் உயர்திணைப் பெயர்களின் இறுதியிலும் உள்ள மெய்கள், வருமொழி முதலில் வல்லினம் வர, அல்வழியிலும் வேற்றுமையிலும் இயல்பாயின.
பொதுப்பெயர், உயர்திணைப் பெயர்களின் ஈற்றில் நிற்கும் உயிர் எழுத்துகளின் முன்னும், யகர ரகர மெய்களின் முன்னும், வருமொழி முதலில் வருகின்ற வல்லின மெய்கள் மிகா; இயல்பாகவே வரும்.
பொதுப்பெயர் முன் வருகின்ற வல்லினம் இயல்பாதல்
சான்று:
பிள்ளை + சிறியன் = பிள்ளை சிறியன் – அல்வழி
பிள்ளை + சிறிது = பிள்ளை சிறிது
நீ + பெரியை = நீ பெரியை
நீவிர் + பெரியீர் = நீவிர் பெரியீர்
இவை எழுவாய்த் தொடர். (நீவிர் – நீங்கள்)
சாத்தி + கை = சாத்தி கை- வேற்றுமை
சாத்தி + தலை = சாத்தி தலை
தாய் + சொத்து = தாய் சொத்து
தாய் + செவி = தாய் செவி
இவை ஆறாம் வேற்றுமைத் தொகை.
உயர்திணைப் பெயர் முன் வருகின்ற வல்லினம் இயல்பாதல்
சான்று:
நம்பி + பெரியன் = நம்பி பெரியன்- அல்வழி
நங்கை +பெரியள் = நங்கை பெரியள்
அவர் + தீயர் = அவர் தீயர்
இவை எழுவாய்த் தொடர்.
நம்பி + பெருமை = நம்பி பெருமை- வேற்றுமை
நங்கை + புகழ் = நங்கை புகழ்
அவர் + கதை = அவர் கதை
இவை ஆறாம் வேற்றுமைத் தொகை.
மேலே காட்டிய சான்றுகளில் நிலைமொழியாக உள்ள பொதுப்பெயர், உயர்திணைப் பெயர் ஆகியவற்றின் இறுதியில் வல்லினம் அல்வழியிலும் வேற்றுமையிலும் மிகாமல் இயல்பாதலைக் காணலாம்.
3. உயிர் ஈற்றையும், மெய் ஈற்றையும் கொண்ட உயர்திணைப் பெயர்களுள் சில பெயர்கள் உயிர், வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற நாற்கணத்தோடு புணரும்போது, நிலைமொழி வருமொழிகள் தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் விகாரங்களை அடையும்.
சான்று :
கபிலன் + பரணன் = கபிலபரணர்- அல்வழி
வடுகன் + நாதன் = வடுகநாதன்
அரசன் + வள்ளல் = அரசவள்ளல்
விராடன் + அரசன் = விராடவரசன்
(கபிலபரணர் – கபிலரும் பரணரும், உம்மைத் தொகை; வடுகநாதன் – வடுகன் ஆகிய நாதன்; அரச வள்ளல் – அரசனாகிய வள்ளல்; விராட அரசன் – விராடன் ஆகிய அரசன். இவை இருபெயரொட்டுப் பண்புத் தொகை)
சமணர் + பள்ளி = சமணப் பள்ளி- வேற்றுமை
பாண்டியன் + நாடு = பாண்டிய நாடு
குமரன் + கோட்டம் = குமரக் கோட்டம்
மக்கள் + பண்பு = மக்கட் பண்பு
(சமணப் பள்ளி – சமணரது பள்ளி; பாண்டிய நாடு – பாண்டியனது நாடு; குமரக் கோட்டம் – குமரனது கோட்டம்; மக்கட் பண்பு – மக்களது பண்பு. இவை ஆறாம் வேற்றுமைத் தொகை.) [கோட்டம் - கோயில்]
இங்கே அல்வழிக்கும், வேற்றுமைக்கும் காட்டிய சான்றுகளில் நிலைமொழியிலும், வருமொழியிலும் வரும் உயர்திணைப்பெயர்கள் தம்முள் புணரும்போது தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் விகாரங்கள் அடைந்துள்ளதைக் கண்டு அறிந்து கொள்ளலாம்.
மேலே கூறிய மூன்று விதிகளையும் பின்வரும் நூற்பாவில் நன்னூலார் குறிப்பிடுகிறார்.
பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்கள் ஈற்றுமெய்
வலிவரின் இயல்பாம்; ஆவி யரமுன்
வன்மை மிகா; சில விகாரமாம் உயர்திணை – (நன்னூல், 159)
ஈற்றுயா வினா விளிப்பெயர் முன் வலி இயல்பே – (நன்னூல், 160)
சான்று :
அவனா + தந்தான் = அவனா தந்தான் ?
அவனே + தந்தான் = அவனே தந்தான் ?
அவனோ + தந்தான் = அவனோ தந்தான் ?
யா + தந்தான் = யா தந்தான் ? (எது தந்தான் ?)
தம்பீ + தா = தம்பீ தா
தோழீ + தா = தோழீ தா
ஆவி யரழ இறுதி முன்னிலை வினை,
ஏவல் முன் வல்லினம் இயல்பொடு விகற்பே (நன்னூல்,161)
விகற்பமாய் வருதலாவது, ஒரே புணர்ச்சியில் வல்லினம் இயல்பாகவும், மிக்கும் வருதலாகும். சான்றாக, கீழ்+குலம் என்பது கீழ்குலம் என இயல்பாகவும், கீழ்க்குலம் என வருமொழி முதல் எழுத்துக்கு ஏற்ற வல்லினம் மிக்கும் வருவதைச் சொல்லலாம். இதனை,
கீழின்முன் வன்மை விகற்பமும் ஆகும்.(நன்னூல்,226)
என்ற நூற்பாவால் அறியலாம்.
சான்று :முன்னிலை வினைமுற்று
உண்டனை + கொற்றா = உண்டனை கொற்றா
உண்டாய் + சாத்தா = உண்டாய் சாத்தா
உண்பாய் + தம்பி = உண்பாய் தம்பி
உண்டனீர் + புலவரே = உண்டனீர் புலவரே
ஏவல் வினைமுற்று
வா + கொற்றா = வா கொற்றா
பாய் + சாத்தா = பாய் சாத்தா
சேர் + தேவா = சேர் தேவா
வாழ் + புலவா = வாழ் புலவா
இங்கே காட்டிய சான்றுகளில் உயிர் எழுத்துகளையும், ய, ர, ழ என்னும் மெய் எழுத்துகளையும் இறுதியாகக் கொண்ட முன்னிலை வினைமுற்று, ஏவல்வினை முற்றுகளின் முன் வந்த க, ச, த, ப என்னும் வல்லின மெய் எழுத்துகள் மிகாது இயல்பாய் வந்தன.
நட + கொற்றா = நட கொற்றா, நடக்கொற்றா
எய் + கொற்றா = எய் கொற்றா, எய்க் கொற்றா
இங்கே காட்டிய சான்றுகளில் முன்னிலை வினைமுற்றின் முன்வரும் வல்லினம் இயல்பாகவும், மிக்கும் வந்தது.
இருபத்து நான்கு எழுத்துகளை இறுதியாகக் கொண்ட எல்லாவகைச் சொற்களுக்கும் முன்வரும் ஞ, ந, ம, வ, ய என்னும் மெல்லின, இடையின மெய்கள் இயல்பாக வரும். தனிக்குறிலை அடுத்து வரும் யகரமெய், தனி ஐகாரம், நொ, து என்பனவற்றிற்கு முன் வரும் ஞ, ந, ம என்னும் மெல்லின மெய்கள் மிக்கு வரும். நகரமெய் ‘ண,ள’ என்னும் மெய்களுக்கு முன் வரும்போது ணகரமாகவும், ‘ன,ல’ என்னும் மெய்களுக்கு முன் வரும்போது னகரமாகவும் திரியும்.
பொதுப்பெயர், உயர்திணைப் பெயர்களின் ஈற்று மெய்கள், வருமொழி முதலில் வல்லினம் வந்தால் இயல்பாகும்.
பொதுப்பெயர், உயர்திணைப் பெயர்களுக்கு முன்வரும் வல்லினம் இயல்பாகும்.
சில உயர்திணைப் பெயர்கள் நாற்கணத்தோடு புணரும்போது தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் விகாரங்களை அடையும்.
வினாப்பெயர், விளிப்பெயர்களுக்கு முன் வரும் வல்லினம் இயல்பாகும்.
உயிர்களையும், ய,ர,ழ என்னும் மெய்களையும் இறுதியாகக் கொண்ட முன்னிலை வினை, ஏவல்வினைகளுக்கு முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும். ஏவல் வினையின் முன் வரும் வல்லினம் சில இடங்களில் இயல்பாக வருதலோடு, மிக்கும் வரும்.
பாடம் - 3
உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி என்றால் என்ன? நிலைமொழியின் இறுதியில் வரும் உயிர் ஈறு, மெய் ஈறு, குற்றியலுகர ஈறு என்னும் இருபத்து நான்கு ஈறுகளுக்கும் பொதுவாகக் கூறப்படும் புணர்ச்சி பொதுப்புணர்ச்சி என்று கூறப்பட்டதைக் கடந்த பாடத்தில் பார்த்தோம். அதேபோல் நிலைமொழியின் இறுதியில் வரும் உயிர் ஈறுகள் எல்லாவற்றிற்கும், குற்றியலுகர ஈற்றிற்கும் சிறப்பாகக் கூறப்படும் புணர்ச்சி உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி எனப்படும்.
நன்னூலார் உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி பற்றி ஐந்து நூற்பாக்களில் (நன்னூல், 162-166) விளக்கிக் கூறுகிறார். அவற்றைத் தக்க சான்றுகளுடன் காண்போம்.
நிலைமொழியின் ஈற்றிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்துகள் வருமானால், அவ்விரண்டு உயிர்களையும் அடுத்தடுத்து ஒலிக்கும்போது, இரண்டுக்கும் இடையே விட்டிசை தோன்றும். ஓர் எழுத்தை ஒலித்து, சற்று இடைவெளி விட்டு, பின்பு அதற்கு அடுத்த எழுத்தை ஒலிப்பது விட்டிசை எனப்படும். விட்டு இசைப்பது விட்டிசை. இரண்டு உயிர்களுக்கு இடையே தோன்றும் விட்டிசை, ஒலிக்கும் முயற்சியை அரிதாக்குகிறது.
சான்று:மணி + அரசன் (இ முன் அ)
வர + இல்லை (அ முன் இ)
இச்சான்றுகளை அப்படியே உள்ளபடி வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள். நிலைமொழி ஈற்று உயிர்க்கும், வருமொழி முதல் உயிர்க்கும் இடையே விட்டிசை தோன்றுவதைக் காணலாம். இதற்குக் காரணம் மணி+அரசன் என்பதில், இ,அ என்னும் இரண்டு உயிர்களும் வர+இல்லை என்பதில், அ,இ என்னும் இரண்டு உயிர்களும் உடம்படாமல் (உடன்படாமல்) அல்லது ஒன்றுபடாமல் இருப்பதே ஆகும். இத்தகைய சூழலில் உடம்படாத அவ்விரண்டு உயிர்களை உடம்படுத்துவதற்காக, அவ்வுயிர்களுக்கு இடையே ய், வ் என்னும் மெய்களுள் ஏதேனும் ஒன்று வரும்.
சான்று :மணி + அரசன் > மணி + ய் + அரசன் = மணியரசன்
வர + இல்லை > வர + வ் + இல்லை = வரவில்லை
இச்சான்றுகளில் உள்ள மணியரசன், வரவில்லை என்பனவற்றை அப்படியே உள்ளபடி சொல்லிப் பாருங்கள். ஒலிக்கும் முயற்சியில் எளிமை இருப்பதை உணர்வீர்கள்.
உடம்படாத இரண்டு உயிர்களை உடம்படுத்துவதற்காக வருகின்ற மெய்கள் ஆதலால், நம் தமிழ் இலக்கண நூலார், ய்,வ் என்னும் மெய்களை உடம்படுமெய் என்று வழங்கினர். மொழியியலார் இவ்விரண்டு மெய்களை அரை உயிர்கள் (Semi Vowels) என்று குறிப்பிடுவர். இவை முறையே இகர உயிரையும், உகர உயிரையும் ஒத்த ஒலியை உடையதால் இவ்வாறு கூறினர்.
உயிர்முன் உயிர்வந்து புணரும் புணர்ச்சியில் உடம்படுமெய் வருவது பற்றி நன்னூலார் மூன்று விதிகளைக் குறிப்பிடுகிறார். அவை பின்வருமாறு:
1. நிலைமொழியின் ஈற்றில் இ,ஈ,ஐ – என்னும் மூன்று உயிர் எழுத்துகளில் ஏதேனும் ஒன்று நின்று, வருமொழியின் முதலில் ஏதேனும் ஓர் உயிர் எழுத்து வந்தால், அவ்விரண்டு உயிர் எழுத்துகளுக்கு இடையே யகர மெய்யானது உடம்படுமெய்யாக வரும்.
சான்று:மணி + அடித்தான் > மணி + ய் + அடித்தான் = மணியடித்தான்
தீ + அணைத்தான் > தீ + ய் + அணைத்தான் = தீயணைத்தான்
வாழை + இலை > வாழை + ய் + இலை = வாழையிலை
2. நிலைமொழியின் ஈற்றில் இ,ஈ,ஐ- என்னும் மூன்று உயிர் எழுத்துகளைத் தவிர, மற்ற உயிர் எழுத்துகளில் ஏதேனும் ஒன்று நின்று, வருமொழியின் முதலில் ஏதேனும் ஓர் உயிர் எழுத்து வந்தால், அவற்றிற்கு இடையே வகர மெய்யானது உடம்படுமெய்யாக வரும்.
சான்று:பல + இடங்கள் > பல + வ் + இடங்கள் = பலவிடங்கள்
நிலா + ஒளி > நிலா + வ் + ஒளி = நிலாவொளி
திரு + அருள் > திரு + வ் + அருள் = திருவருள்
பூ + அழகி > பூ + வ் + அழகி = பூவழகி
3.நிலைமொழியின் ஈற்றில் ஏ என்னும் உயிர் எழுத்து நின்று, வருமொழியின் முதலில் ஏதேனும் ஓர் உயிர் எழுத்து வந்தால், அவற்றிற்கு இடையே யகரம், வகரம் ஆகிய இரண்டும் உடம்படுமெய்களாக வரும்.
சான்று:சே + அடி > சே + ய் + அடி = சேயடி
சே + அடி > சே + வ் + அடி = சேவடி
(சே-செம்மை)
மேலே கூறப்பட்ட புணர்ச்சி விதிகளை நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.
இஈ ஐவழி யவ்வும், ஏனை
உயிர்வழி வவ்வும், ஏமுன் இவ் விருமையும்,
உயிர்வரின் உடம்படு மெய் என்று ஆகும். (நன்னூல் , 162)
(யவ்வும் – யகர மெய்யும்; வவ்வும் – வகர மெய்யும்; இவ்விருமையும் – இந்த யகரமெய், வகரமெய் ஆகிய இரண்டும்.)
எகர வினா எழுத்தின் முன்னரும், அ,இ,உ என்னும் மூன்று சுட்டு எழுத்துகளின் முன்னரும் நாற்கணமும் வந்து புணரும் புணர்ச்சி பற்றி நன்னூலார் பின்வரும் மூன்று விதிகளைக் குறிப்பிடுகிறார். அவற்றைச் சான்றுகளுடன் காண்போம்.
1. எ என்னும் வினா எழுத்தின் முன்னரும், அ,இ,உ என்னும் மூன்று சுட்டு எழுத்துகளின் முன்னரும் உயிர் எழுத்துகளும், யகர மெய்யும் வந்தால் அவற்றிற்கு இடையில் வகரமெய் தோன்றும்.
சான்று:
எ + அளவு > எ + வ் + அளவு = எவ்வளவு
அ + இடம் > அ + வ் + இடம் = அவ்விடம்
இ + உலகம் > இ + வ் + உலகம் = இவ்வுலகம்
உ + இடம் > உ + வ் + இடம் = உவ்விடம்
எ + யானை > எ + வ் + யானை = எவ்யானை
அ + யாழ் > அ + வ் + யாழ் = அவ்யாழ்
இ + யாழ் > இ + வ் + யாழ் = இவ்யாழ்
உ + யானை > உ + வ் + யானை = உவ்யானை
இச்சான்றுகளில் எகர வினா முச்சுட்டுகளின் முன்னர் உயிரும், யகரமும் வர, அவற்றிற்கு இடையில் வகர மெய் தோன்றியதைக் காணலாம்.
2. எகர வினா, முச்சுட்டுகளின் முன்னர் உயிரும் யகரமும் நீங்கிய பிற வல்லின, மெல்லின, இடையின மெய் எழுத்துகள் வரும்போது அவற்றிற்கு இடையில், வருகின்ற அந்தந்த மெய் எழுத்துகளே மிகும்.
சான்று:
வல்லினம்
எ + குதிரை= எக்குதிரை
அ + குதிரை= அக்குதிரை
இ + குதிரை= இக்குதிரை
உ + குதிரை= உக்குதிரை
மெல்லினம்
எ + நாள் = எந்நாள்
அ + நாள் = அந்நாள்
இ + நாள் = இந்நாள்
உ + நாள் = உந்நாள்
இடையினம்
எ + விதம்= எவ்விதம்
அ + விதம்= அவ்விதம்
இ + விதம்= இவ்விதம்
உ + விதம்= உவ்விதம்
இச்சான்றுகளில் எகர வினா, முச்சுட்டுகளின் முன்னர் வல்லினமும், மெல்லினமும், யகரம் நீங்கிய இடையினமும் வர அவற்றிற்கு இடையில், வருகின்ற மெய் எழுத்துகளே மிக்கு வந்துள்ளதைக் காணலாம்.
3. செய்யுளில் சுட்டு எழுத்து நீண்டு வரும்போது, அதற்கும் வருமொழியின் முதலில் உள்ள உயிர்க்கும் இடையில் யகரமெய் தோன்றும்.
சான்றஅ + இடை > ஆ + இடை > ஆ + ய் + இடை = ஆயிடை
இதில் வந்துள்ள ய் என்பது உடம்படுமெய் அன்று. ஆ+இடை என்னும் இரு சொற்களுக்கு இடையே, யகரமெய் தோன்றல் என்னும் புணர்ச்சி விதி காரணமாகத் தோன்றியதாகும்.
இத்தகைய சுட்டு நீண்டு அமையும் புணர்ச்சி செய்யுளில் மட்டுமே வரும். அதற்கேற்ப ஆயிடை என்றசொல்,
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்
என்ற தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் வந்துள்ளதைக் காணலாம்.
மேலே கூறப்பட்ட புணர்ச்சி விதிகளை நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.
எகர வினாமுச் சுட்டின் முன்னர்
உயிரும் எகரமும் எய்தின் வவ்வும்,
பிறவரின் அவையும், தூக்கில் சுட்டு
நீளின் யகரமும் தோன்றுதல் நெறியே.
(நன்னூல் – 163)
(தூக்கில் = செய்யுளில்)
குற்றியலுகரம் என்றால் என்ன? தனி நெட்டெழுத்தைத் தொடர்ந்தோ, இரண்டும் அதற்கும் மேற்பட்ட எழுத்துகளைத் தொடர்ந்தோ ஒரு சொல்லின் இறுதியில் வல்லின மெய்கள் ஆறன்மேல் ஏறிவரும் உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே குற்றியலுகரம் எனப்படும்.
குற்றியலுகரம், தான் ஏறியிருக்கும் வல்லின மெய்க்கு (கு,சு,டு,து,பு,று ஆகிய ஆறனுள் ஒன்றனுக்கு ) அயலே (இடப்பக்கத்தில்) வரும் எழுத்தைக் கொண்டு ஆறு வகைப்படும். அவையும் அவற்றிற்கான சான்றும் வருமாறு:
நெடில் தொடர்க் குற்றியலுகரம் – நாடு, காது, ஆறு
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் – அஃது, எஃகு
உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் – முரசு, வயது, கிணறு
வன்தொடர்க் குற்றியலுகரம் – பாட்டு, பத்து, பாக்கு
மென்தொடர்க் குற்றியலுகரம் – பந்து, பஞ்சு, குரங்கு
இடைத் தொடர்க் குற்றியலுகரம் – சார்பு, மார்பு, வீழ்து
இனி, முற்றியலுகரம் என்றால் என்ன என்று பார்ப்போம். தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின மெய்யின் மேல் ஏறி வருகின்ற உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறையாது ஒரு மாத்திரை அளவாகவே ஒலிக்கும். இது முற்றியலுகரம் எனப்படும்.
சான்று:
அது, பசு, கொடு, அறு.
மேலும் தனி நெட்டெழுத்தைத் தொடர்ந்தோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ ஒரு சொல்லின் இறுதியில் வல்லினம் அல்லாத பிற மெய்களின் மேல் ஏறி வரும் உகரமும் முற்றியலுகரம் ஆகும்.
சான்று:சாவு, நோவு, கதவு, உறவு, நிலவு
குற்றியலுகரத்தின் முன்னர் உயிர் எழுத்துகளும், யகர மெய்யும் வந்து புணரும் புணர்ச்சி பற்றி நன்னூலார் இரண்டு விதிகளைக் கூறுகிறார். சிலவிடங்களில் முற்றியலுகரத்திற்கும் இவ்விதிகள் பொருந்தும் எனக் கூறுகிறார். அவை வருமாறு:
1.நிலைமொழி ஈற்றில் குற்றியலுகரம் இருந்து, வருமொழி முதலில் உயிர் எழுத்து ஒன்று வந்து சேர்ந்தால், அக்குற்றியலுகரம் தான் ஏறியிருக்கின்ற வல்லின மெய்யை விட்டு நீங்கும்.3.0 பாட முன்னுரை
நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலின் தொடக்கத்தில் புணர்ச்சி என்றால் என்ன என்பது பற்றியும், புணர்ச்சியின் பாகுபாடு பற்றியும், பொதுப்புணர்ச்சி பற்றியும் கூறியனவற்றைக் கடந்த இரு பாடங்களில் பார்த்தோம். அவற்றைத் தொடர்ந்து அவர் உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி பற்றி விரிவாகக் கூறுகிறார்.
உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி என்றால் என்ன? நிலைமொழியின் இறுதியில் வரும் உயிர் ஈறு, மெய் ஈறு, குற்றியலுகர ஈறு என்னும் இருபத்து நான்கு ஈறுகளுக்கும் பொதுவாகக் கூறப்படும் புணர்ச்சி பொதுப்புணர்ச்சி என்று கூறப்பட்டதைக் கடந்த பாடத்தில் பார்த்தோம். அதேபோல் நிலைமொழியின் இறுதியில் வரும் உயிர் ஈறுகள் எல்லாவற்றிற்கும், குற்றியலுகர ஈற்றிற்கும் சிறப்பாகக் கூறப்படும் புணர்ச்சி உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி எனப்படும்.
நன்னூலார் உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி பற்றி ஐந்து நூற்பாக்களில் (நன்னூல், 162-166) விளக்கிக் கூறுகிறார். அவற்றைத் தக்க சான்றுகளுடன் காண்போம்.
சான்று:நாடு + எல்லாம்
(நா (ட்+உ)+ எல்லாம்) = நாடெல்லாம்
அஃது + இல்லார் = அஃதில்லார்
முரசு + அறைந்தான் = முரசறைந்தான்
பாட்டு + இசை = பாட்டிசை
பந்து + ஆட்டம் = பந்தாட்டம்
சார்பு + எழுத்து = சார்பெழுத்து
இங்கே காட்டிய சான்றுகளில் நிலைமொழி ஈற்றில் உள்ள குற்றியலுகரம், வருமொழியின் முதலில் உயிர் வந்து சேரும்போது, தான் ஏறியிருந்த வல்லின மெய்யை விட்டு நீங்கியதைக் காணலாம்.
2.வருமொழி முதலில் யகரமெய் வந்து சேர்ந்தால் குற்றியலுகரம் இகரமாகத் திரியும்.
சான்று:
நாடு + யாது = நாடியாது
குரங்கு + யாது = குரங்கியாது
களிற்று + யானை = களிற்றியானை
இங்கே காட்டிய சான்றுகளில், நிலைமொழியின் ஈற்றில் உள்ள குற்றியலுகரம், வருமொழி முதலில் யகரமெய் வந்து சேரும்போது இகரமாகத் திரிந்துள்ளதைக் காணலாம். இவ்வாறு திரிந்து வரும் இகரம் குற்றியலிகரம் எனப்படும்.
குற்றியலுகரத்திற்குக் கூறப்பட்ட இவ்விரண்டு விதிகளை முற்றியலுகரமும் சிலவிடங்களில் பெற்றுவரும்.
சான்று:சாவு + இல்லை = சாவில்லை
கதவு + எங்கே = கதவெங்கே
உறவு + இல்லை = உறவில்லை
இங்கே காட்டிய சான்றுகளில் நிலைமொழியின் ஈற்றில் உள்ள முற்றியலுகரம் வருமொழியின் முதலில் உயிர் வந்து சேரும்போது, தான் ஏறியிருக்கின்ற வகரமெய்யை விட்டு நீங்கியதைக் காணலாம்.
கதவு + யாது = கதவியாது
இங்கே முற்றியலுகரம் வருமொழியின் முதலில் யகரம் வர இகரமாகத் திரிந்திருப்பதைக் காணலாம்.
நூற்பா:உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்;
யவ்வரின் இய்யாம் முற்றும்அற் றொரோவழி. (நன்னூல் – 164)
(ஓடும் = நீங்கும்; உக்குறள், குறள் உ = குற்றியலுகரம்; மெய்விட்டோடும் – வல்லின மெய்யை விட்டு நீங்கும்; அற்று – குற்றியலுகரத்தைப்போல; முற்றும் – முற்றியலுகரமும்; ஒரோவழி = சிலவிடங்களில்.)
நன்னூலார் தாம் கூறும் இலக்கண விதிகள் சிலவற்றிற்குச் சான்றுகளை, அவ்விதிகளைக் கூறும் நூற்பாவினுள்ளேயே அமைத்துக் காட்டியிருப்பதைக் காணலாம். இந்நூற்பாவில்,
மெய்விட்டு + ஓடும் = மெய்விட்டோடும்
அற்று + ஒரோவழி = அற்றொரோவழி
என வருவனவற்றில் குற்றியலுகரம் வருமொழியின் முதலில் உயிர் வரும்போது, முறையே தான் ஏறியிருக்கின்ற டகர, றகர வல்லின மெய்களை விட்டு நீங்கியிருப்பதைக் காணலாம்.
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
க ச த ப மிகும் விதவாதன மன்னே. (நன்னூல் – 165)
(விதவாதன – சிறப்பு விதிகளில் சொல்லாதவை.)
இந்நூற்பாவில் கூறப்படும் இயல்பு ஈறு, விதி ஈறு என்பனவற்றை விளங்கிக் கொள்வது இன்றியமையாதது.
இயல்பு ஈறு
நிலைமொழியின் ஈற்றில் உள்ள உயிரானது, எத்தகைய விகாரமும் அடையாமல் இயல்பாய் இருப்பது இயல்பு ஈறு எனப்படும்.
சான்று:பலா, வாழை, மலை
(இவற்றுள் சொல்லின் இறுதியில் உள்ள உயிர் எழுத்துகள் இயல்பாய் அமைந்தவை.)
விதி ஈறு
நிலைமொழியின் ஈற்றில் இயல்பாய் நிற்கின்ற உயிர், மெய் ஆகிய இரண்டனுள், ஏதேனும் ஓர் இலக்கண விதி காரணமாக, உயிரானது நீங்கி வேறோர் உயிர் ஈறாய் நிற்பதும், மெய்யானது நீங்கி உயிர் ஈறாய் நிற்பதும், மெய்யின் மேல் ஓர் உயிர் ஏறி நிற்பதும் விதி ஈறு எனப்படும்.
சான்று:நேற்று – நேற்றை
மரம் – மர
தாழ் – தாழ
(இவற்றுள் சொல்லின் இறுதியில் உள்ள உயிர் எழுத்துகள் விதி காரணமாக அமைந்தவை.)
இனி, இயல்பு ஈறாகவும், விதி ஈறாகவும் நிற்கும் உயிர்களின் முன்னர், க,ச,த,ப என்னும் வல்லின மெய்கள் வந்து புணர்தலைச் சான்றுகளுடன் காண்போம்.
இயல்பு உயிர் ஈறுகளின் முன்னர் வல்லினம் வந்து மிகுதல்
சான்று:
எட்டி + காய் = எட்டிக்காய்
பலா + சுளை = பலாச்சுளை
வாழை + தோப்பு = வாழைத்தோப்பு
மலை + பழம் = மலைப்பழம்
இச்சான்றுகளில் எட்டி, பலா, வாழை, மலை என்னும் நிலைமொழிகளின் இறுதியில் இ, ஆ, ஐ என்னும் உயிர் ஈறுகள் இயல்பாய் நிற்றலால் இயல்பு உயிர் ஈறுகள் ஆகும். இவற்றின் முன்னர் வந்த க,ச,த,ப என்னும் வல்லின மெய்கள் மிக்கு வந்துள்ளதை இச்சான்றுகள் காட்டுகின்றன.
விதி உயிர் ஈறுகளின் முன்னர் வல்லினம் வந்து மிகுதல்
சான்று:
நேற்று + பொழுது = நேற்றைப்பொழுது
மரம் + கிளை = மரக்கிளை
தாழ் + கோல் = தாழக்கோல்
இச்சான்றுகளில் நேற்று என்பது நேற்றை என்றும், மரம் என்பது மர என்றும், தாழ் என்பது தாழ என்றும் சில இலக்கண விதிகளின் காரணமாக மாறியுள்ளன.
இவ்வாறு விதிகளின் காரணமாக மாறியுள்ள நிலைமொழிச் சொற்களாகிய நேற்றை, மர, தாழ என்பனவற்றில் முறையே இறுதியில் வரும் ஐ, அ என்பன விதி உயிர் ஈறுகள் ஆகும். இவ்விதி உயிர் ஈறுகளின் முன்னர் வந்த க, ச, த, ப என்னும் வல்லின மெய்கள் மிக்கு வந்துள்ளதை இச்சான்றுகள் காட்டுகின்றன.
சிறப்பு விதிகளில் சொல்லாதவை பெரும்பாலும் மிகும் என்றமையால், சிறப்பு விதிகளில் சொல்லியவை பெரும்பாலும் வல்லினம் மிகா என்பது பெறப்படும். அதனை அடுத்து வரும் உயிர் ஈற்றுச் சிறப்பு விதிகள் என்ற பாடத்தில் பார்க்கலாம்.
வேற்றுமைப் புணர்ச்சியில், உயிர் எழுத்தை ஈற்றிலே கொண்ட சில மரப்பெயர்களுக்கு முன்னர் வரும் க,ச,த,ப என்னும் வல்லெழுத்துகள், மேலே சொன்ன பொதுவிதிப்படி மிகாமல், வருகின்ற அவ்வல்லெழுத்துகளுக்கு இனமான மெல்லெழுத்துகள் தோன்றப் பெறுவதும் உண்டு.
மரப்பெயர் முன்னர் இனமெல் லெழுத்து
வரப்பெறு னவும்உள வேற்றுமை வழியே (நன்னூல் , 166)
சான்று:விள + காய் = விளங்காய்
மா + பழம் = மாம்பழம்
காயா + பூ = காயாம் பூ
நூற்பாவில், வரப்பெறுனவும் உள (தோன்றப் பெறுவதும் உண்டு) என்ற உம்மையால், மரப் பெயர்களின் முன்னர் மெல்லெழுத்துப் பெறாமல் வல்லெழுத்து மிகப் பெறுவனவே பெரும்பான்மை என்பது பெறப்படும்.
சான்று:பலா + காய் = பலாக்காய்
அத்தி + பழம் = அத்திப்பழம்
அத்தி + காய் = அத்திக்காய்
வாழை + காய் = வாழைக்காய்
வாழை + பழம் = வாழைப்பழம்
இலந்தை + பழம் = இலந்தைப்பழம்
நிலை மொழியின் இறுதியில் உள்ள குற்றியலுகரம், வருமொழியின் முதலில் உயிர் வரும்போது, தான் ஏறியிருக்கும் வல்லின மெய்யை விட்டு நீங்கும். முற்றியலுகரமும் வருமொழியின் முதலில் உயிர் வரும்போது தான் ஏறியிருக்கும் மெய்யை விட்டு நீங்கும்.
இயல்பு ஈறாகவும், விதி ஈறாகவும் மொழி இறுதியில் வரும் எல்லா உயிர்கள் முன்னும் வரும் க,ச,த,ப என்னும் வல்லின மெய்கள் நான்கும் பெரும்பாலும் மிகும். இவ்விதிக்கு மாறாகச் சில உயிர் ஈற்று மரப்பெயர்களின் முன்னர் வரும் வல்லினம் மிகாமல், அவ்வல்லினத்திற்கு இனமாகிய மெல்லினம் தோன்றப் பெறுவதும் உண்டு.
இவற்றை எல்லாம் இந்தப் பாடத்தின் வாயிலாக விளக்கமாக அறிந்து கொண்டோம்.
பாடம் - 4
மொழிக்கு இறுதியில் பன்னீர் உயிர்களும் வரும் என்கிறார் நன்னூலார். இவற்றுள் எ என்பது வினா எழுத்து என்ற நிலையில் மட்டும் ஈறாகும். இதனோடு நாற்கணமும் புணர்வது பற்றி உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சியில் ‘எகர வினா முச்சுட்டின் முன்னர்’ என்று தொடங்கும் நூற்பாவில் பேசினார். இதனைச் சென்ற பாடத்தில் பார்த்தோம்.
ஒ என்பது தனித்து ஈறாகாது. மெய்யோடு சேர்ந்து ஈறாகும்போது நகர மெய்யுடன் சேர்ந்து ‘நொ’ என்ற ஒரு சொல்லில் மட்டும் ஈறாகும். நொ என்ற சொல் புணர்ச்சியில் வருவது பற்றி ‘எண்மூ எழுத்து’ என்று தொடங்கும் பொதுப்புணர்ச்சி பற்றிய நூற்பாவில் கூறியுள்ளார், இதனையும் ஏற்கெனவே பார்த்துள்ளோம்.
ஔ என்னும் உயிர் கௌ, வௌ ஆகிய சொற்களில் மட்டுமே ஈறாகும். இவை சிறப்பில்லாதவை. எனவே எ, ஒ, ஔ ஆகிய மூன்று உயிர்களும் நீங்கலான பிற ஒன்பது உயிர் ஈற்றுச் சிறப்பு விதிகள் பற்றி, உயிர் ஈற்றுப் புணரியலில் பேசுகிறார்.
ஈகார ஈற்றுச் சிறப்பு விதியில் அவர் குறிப்பிடும் விதிகள் பெரும்பாலும் இடக்கர் அடக்கல் சொல் (பொது இடத்தில் பலர் முன் கூறத்தகாத சொல்) பற்றியனவாக உள்ளன.
எனவே ஈகார ஈற்றைத் தவிர்த்து, ஏனைய எட்டு உயிர் ஈற்றுச் சிறப்புவிதிகளை இப்பாடத்தில் ஒன்றன்பின் ஒன்றாகச் சான்றுகளுடன் விளக்கிக் காண்போம்.
அகர ஈற்றுச் சொற்கள் சிலவற்றின் முன் வல்லினம் இயல்பாதல்
1. செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களின் முன்னர் வரும் வல்லினம் (க, ச, த, ப) இயல்பாகும்.
சான்று:
காணிய + சென்றான்= காணிய சென்றான் (காண்பதற்குச் சென்றான்)
உண்ணிய + போனான்= உண்ணிய போனான் (உண்பதற்குப் போனான்)
2. பல வகைப்பட்ட அகர ஈற்றுப் பெயரெச்சங்களுக்கு முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும்.
சான்று:
உண்ட + பையன்= உண்ட பையன் (தெரிநிலைப்
பெயரெச்சம்)
கரிய + பையன்= கரிய பையன் (குறிப்புப்
பெயரெச்சம்)
அறியாத + பையன்= அறியாத பையன் (எதிர்மறைப்
பெயரெச்சம்)
3. பல வகைப்பட்ட அகர ஈற்று வினைமுற்றுகளுக்கு முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும்.
சான்று:
உண்டன + குதிரைகள்
= உண்டன குதிரைகள் (தெரிநிலை வினைமுற்று)
கரியன + குதிரைகள்
= கரியன குதிரைகள் (குறிப்பு வினைமுற்று)
வாழ்க + தலைவா
= வாழ்க தலைவா (வியங்கோள் வினைமுற்று)
4. ஆறாம் வேற்றுமைப் பன்மை உருபாகிய ‘அ’ என்பது பெயரைச் சார்ந்து வரும்போது அதன் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும்.
சான்று:
என + அ + கைகள் = என கைகள் (என்னுடைய கைகள்)
5. அகர ஈற்றுப் பன்மைப் பெயர்களுக்கு முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும்.
சான்று:
பல + குதிரைகள் = பல குதிரைகள்
சில + தந்தான் = சில தந்தான்
6. ‘அம்ம’ என்னும் உரையசை இடைச்சொல்லுக்கு முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும்.
சான்று:
அம்ம கண்ணா
(அம்ம என்னும் இடைச்சொல், ஒருவனை ஒருவன் ஒன்றுகேள் என்று சொல்லுதற்கண் வரும் என்பர் தொல்காப்பியர். அம்ம கேட்பிக்கும் – (தொல், சொல், 276)
மேலே கூறப்பட்ட புணர்ச்சி விதிகளை நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார் :
செய்யிய என்னும் வினையெச்சம், பல்வகைப்
பெயரின் எச்சம், முற்று, ஆறன் உருபே,
அஃறிணைப் பன்மை, அம்ம முன் இயல்பே (நன்னூல், 167)
‘சாவ’ என்னும் சொல்லின் முன் வல்லினம்
‘சாவ’ என்பது செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் ஆகும். இதனுடைய ஈற்றில் உள்ள வகர உயிர்மெய்யானது, வருமொழி முதலில் வல்லினம் வரும் போது கெடுதலும் (நீங்குதலும்) விதியாம்.
சாவ என் மொழிஈற்று உயிர்மெய் சாதலும் விதி (நன்னூல், 169)
சான்று:
சாவ + குத்தினான் = சாக்குத்தினான் – (சாகும்படி குத்தினான்)
‘இயல்பினும் விதியினும்’ என்ற பொதுவிதிப்படி, ‘சாவ + குத்தினான் = சாவக் குத்தினான்’ என வல்லினம் மிகும். சாவ என்னும் இச்சொல் செய்யுளில் ‘சா’ என இறுதி வகர உயிர்மெய் நீங்கி அமைதலும் உண்டு. அப்போது சா என நின்றாலும் வருமொழி முதலில் உள்ள வல்லினத்தோடு புணரும்போது சாக்குத்தினான் என வல்லினம் மிகுந்தே வரும். இதுவே விதி என நூற்பாவில் கூறப்படுகிறது.
பல, சில என்னும் சொற்கள் புணரும் முறை
1. பல, சில என்னும் இருசொற்களும் தமக்குமுன் தாமே வருமாயின் (பல என்பதற்கு முன் பல என்பதும், சில என்பதற்கு முன் சில என்பதும் வந்தால்), இயல்பாதலும், வல்லினம் மிகுதலும், நிலைமொழி இறுதியில் நின்ற அகரம் கெட, லகர மெய் றகர மெய்யாகத் திரிதலும் உண்டு.
சான்று:
பல + பல = பலபல இயல்பாயின
சில + சில = சிலசில
பல + பல = பலப்பல வல்லினம் மிக்கன
சில + சில = சிலச்சில
பல + பல = பற்பல அகரம் கெட லகரம் றகரம் ஆயிற்று
சில + சில = சிற்சில
2. பல, சில என்னும் இருசொற்களின் முன்னர், நாற்கணத்தில் தொடங்கும் சொற்கள் வரின், அவ்விரு சொற்களின் ஈற்றில் உள்ள அகரம் நிற்பதும் உண்டு; நீங்குவதும் உண்டு.
சான்று:
பல + ஆண்டு = பலவாண்டு, பல்லாண்டு
பல + கலை = பலகலை, பல்கலை
சில + நாள் = சிலநாள், சின்னாள் (சில் + நாள்)
பல + வகை = பலவகை , பல்வகை
நூற்பா:
பல சில எனும்இவை தம்முன் தாம்வரின்
இயல்பும், மிகலும், அகரம் ஏக
லகரம் றகரம் ஆகலும், பிறவரின்
அகரம் விகற்பம் ஆகலும் உளபிற
(நன்னூல், 170)
ஆகாரத்தின் முன் வல்லினம் இயல்பாதல்
அல்வழிப் புணர்ச்சியில் ஆ என்னும் பெயர்க்கும், மா என்னும் பெயர்க்கும், மியா என்னும் முன்னிலை அசைச்சொல்லுக்கும், ஆகார ஈற்று எதிர்மறைப் பலவின்பால் வினைமுற்றுக்கும் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும்.
அல்வழி ஆ, மா, மியா, முற்று முன்மிகா (நன்னூல், 171)
(ஆ – பசு ; மா – விலங்கு, மரம்)
சான்று:
ஆ + தின்றது = ஆ தின்றது
மா + பெரிது = மா பெரிது
கேண்மியா + கண்ணா = கேண்மியா கண்ணா
உண்ணா + குதிரைகள் = உண்ணா குதிரைகள் (உண்ணமாட்டா
குதிரைகள்)
தனிக்குறிலை அடுத்து வரும் ஆகார ஈற்றுச் சொற்கள்
நிலா, சுறா, இறா, கனா, உணா (உணவு) போன்றவை தனிக்குறிலை அடுத்து வரும் ஆகாரத்தை ஈற்றிலே உடைய சொற்கள். இத்தகைய சொற்கள் செய்யுளில் எவ்வாறு வரும் என்பது பற்றி நன்னூலார் கூறியுள்ளார். அவர் கூறுவதைச் சான்றுடன் காண்போம்.
தனிக்குறிலை அடுத்து வரும் ஆகாரத்தை ஈற்றிலே உடைய சொற்கள் செய்யுளில் வரும்போது, இறுதியில் உள்ள ஆகாரம் அகரமாகக் குறுகுதலும், அதனோடு உகரம் பெறுதலும், அவ்விரண்டும் அல்லாமல் இயல்பாய் நிற்றலும் ஆகிய மூன்று விதிகளை உடையன.
குறியதன் கீழ்ஆக் குறுகலும், அதனோடு
உகரம் ஏற்றலும், இயல்புமாம், தூக்கின் (நன்னூல், 172)
(தூக்கின் – செய்யுளில்)
சான்று:
நிலவிரி கானல்வாய் நின்று
- ஈற்றில் உள்ள ஆ என்பது அ எனக் குறுகியது.
மருவின் என் செய்யுமோ நிலவு
- ஆ என்பது அ எனக் குறுகி உகரம் ஏற்றது.
நிலா வணங்கும் வெண்மணல் மேல் நின்று
- இயல்பாயிற்று.
செய்யுளில் இம்மூன்றும் (நில, நிலவு, நிலா) வரும். எனவே, வழக்கில் இரண்டும் ஒன்றும் வரப்பெறும் என்பது பெறப்படும். அவ்வாறு வரும்போதும், ஆகாரம் குறுகி உகரம் ஏற்காமல் நிற்றல் (நில என நிற்றல்) வருவதில்லை. மற்ற இரண்டில், இரண்டுமோ, ஒன்று மட்டுமோ வழக்கில் வரும்.
சான்று:
நிலவு உதித்தது, நிலா உதித்தது
கனவு கண்டேன், கனாக் கண்டேன்
இச்சான்றுகளில் வரும் நிலா, கனா என்னும் சொற்கள் குறுகி, உகரம் ஏற்றல், இயல்பு என்ற இரண்டும் பெற்று வந்தன.
சுறா
இறா
இவை வழக்கில் இயல்பு என்ற ஒன்றுமட்டும் பெற்று வந்தன. இவை சுறவு, இறவு என வழங்குவது வழக்கில் இல்லை.
நாழி, உரி என்னும் சொற்களுக்குப் புணர்ச்சி விதி
நாழி, உரி என்பன பழங்காலத்தில் வழங்கிய முகத்தல் அளவைப் பெயர்கள். நாழி என்ற சொல் ஒரு படியையும், உரி என்ற சொல் அரைப் படியையும் குறிக்கும்.
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் (நல்வழி, 28:1)
என்ற ஔவையாரின் நல்வழிப் பாடலில் நாழி என்ற சொல் வந்திருப்பது காணலாம்.
நன்னூலார் நாழி என்ற சொல்லின் முன்னர் உரி என்ற சொல்லும், உரி என்ற சொல்லின் முன்னர் ஏற்ற பிற சொற்களும் புணரும் முறை பற்றி இரண்டு விதிகளைக் கூறுகிறார்.
1. நாழி என்னும் முகத்தல் அளவைப் பெயர் நிலைமொழியாக நிற்கும்போது, உரி என்னும் மற்றொரு முகத்தல் அளவைப் பெயர் வருமொழியாக வந்தால், நாழி என்பதன் ஈற்றில் உள்ள ழி என்னும் உயிர்மெய் நீங்க, அவ்விடத்தே டகரமெய் வரும்.
சான்று:
நாழி + உரி
நா + உரி (நாழி என்பதன் ஈற்று உயிர்மெய் ழி நீங்கியது)
நாட் + உரி (ழி நீங்க அவ்விடத்தே டகரமெய் வந்தது) = நாடுரி
(நாடுரி என்பதற்கு ஒன்றரைப்படி என்று பொருள்)
2. உரி என்னும் முகத்தல் அளவைப் பெயர் நிலைமொழியாக நிற்கும்போது, அதன் முன்னர் ஏற்ற சொற்கள் வந்து சேரும்போது, நிலைமொழியின் பின் யகர உயிர்மெய் வந்துசேரும்.
சான்று:
உரி + உப்பு = உரியவுப்பு
உரி + பயறு = உரியபயறு
உரி + மிளகு = உரியமிளகு
உரி + வரகு = உரியவரகு
நன்னூலார் இவ்விரு புணர்ச்சி விதிகளையும் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.
உரிவரின் நாழியின் ஈற்றுஉயிர் மெய்கெட
மருவும் டகரம்; உரியின் வழியே
யகரஉயிர் மெய்யாம் ஏற்பன வரினே (நன்னூல், 174)
(மருவும் – வரும்; ஏற்பன = ஏற்ற சொற்கள்)
புளி என்னும் சொல்லுக்குப் புணர்ச்சி விதி
புளி என்னும் இகர ஈற்றுச் சொல் புளியமரம், புளியம்பழம், புளிப்புச்சுவை என்னும் பல பொருளை உணர்த்தும் ஒரு சொல்லாகும். இவற்றுள் புளிப்புச்சுவை என்பது அறுவகைச் சுவைகளுள் ஒன்று.
சுவையை உணர்த்தும் புளி என்ற சொல்லின் முன்னர், வல்லினத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தால், அவ்வல்லினம் ‘இயல்பினும் விதியினும்’ என்ற பொதுவிதிப்படி மிகுவதோடு, அதற்கு இனமான மெல்லினமும் சில சமயம் மிகும் என்கிறார் நன்னூலார். இதனை,
சுவைப்புளி முன்இன மென்மையும் தோன்றும் (நன்னூல், 175)
என்ற நூற்பாவில் குறிப்பிடுவார்.
சான்று:
புளி + கறி = புளிங்கறி
புளி + சோறு = புளிஞ்சோறு
புளி + தயிர் = புளிந்தயிர்
புளி + பாளிதம் = புளிம்பாளிதம் (பாளிதம் – சோறு )
இவை பொதுவிதிப்படி முறையே புளிக்கறி, புளிச்சோறு, புளித்தயிர், புளிப்பாளிதம் என வல்லினம் மிக்கே பெரும்பாலும் வரும்.
அல்வழிப் புணர்ச்சியில் இகர, ஐகார ஈற்று அஃறிணைப் பெயர்கள்
அல்வழிப் புணர்ச்சியில் இகர, ஐகார ஈற்று அஃறிணைப் பெயர்கள் முன்னர் வல்லினம் வருமாயின், அவ்வல்லினம் இயல்பாகவும், மிகுந்தும், விகற்பமாகவும் வரும்.
அல்வழி ‘இ, ஐ’ம் முன்னர் ஆயின்
இயல்பும், மிகலும், விகற்பமும் ஆகும் (நன்னூல், 176)
இந்நூற்பாவில் கூறப்படும் புணர்ச்சி விதி இகர ஈற்றிற்கும், ஐகார ஈற்றிற்கும், ஒரு சேர உரியதாக உள்ளதால், நன்னூலார் இங்கே இகர ஈற்றோடு, ஐகார ஈற்றையும் உடன்வைத்துக் கூறினார்.
(i) வல்லினம் இயல்பாதல்
எழுவாய்த் தொடரிலும், உம்மைத் தொகையிலும் இ, ஐ முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும்.
சான்று :
புலி + சிறியது = புலி சிறியது
யானை + பெரியது = யானை பெரியது
இவை எழுவாய்த் தொடர்.
செடி + கொடி = செடி கொடி (செடியும் கொடியும்)
யானை + குதிரை = யானை குதிரை (யானையும் குதிரையும்)
இவை உம்மைத் தொகை.
(ii) வல்லினம் மிகுதல்
இருபெயரொட்டுப் பண்புத்தொகையிலும், உவமைத் தொகையிலும் இ, ஐ முன்னர் வரும் வல்லினம் மிகும்.
சான்று :
மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள் (மார்கழி ஆகிய திங்கள்)
சாரை + பாம்பு = சாரைப் பாம்பு (சாரை ஆகிய பாம்பு)
இவை இருபெயரொட்டுப் பண்புத் தொகை.
காவி + கண் = காவிக்கண் (காவி மலர் போன்ற கண்)
பனை + கை = பனைக்கை (பனைமரம் போன்ற கை)
இவை உவமைத் தொகை.
(iii) விகற்பமாதல்
சில எழுவாய்த் தொடர்களில் இ, ஐ முன்னர் வரும் வல்லினம் விகற்பம் ஆகும். அதாவது ஒரே புணர்ச்சியில் இயல்பாகவும், வல்லினம் மிக்கும் வரும்.
சான்று:
கிளி + சிறிது = கிளி சிறிது, கிளிச்சிறிது
தினை + சிறிது = தினை சிறிது, தினைச் சிறிது
சில முற்றியலுகர ஈற்றுச்சொற்கள் முன்னர் வல்லினம்
ஒடு என்னும் மூன்றாம் வேற்றுமை உருபுக்கும், அது என்னும் ஆறாம் வேற்றுமை உருபுக்கும், இயல்பாகவும், விகாரப்பட்டும் வரும் எண்ணுப்பெயர்களுக்கும், வினைத்தொகைக்கும், அது, இது, உது என்னும் சுட்டுப்பெயர்களுக்கும் இறுதியாகிய முற்றியலுகரத்தின் முன்னர் வருகின்ற வல்லினம் இயல்பாகும்.
மூன்று, ஆறு உருபு, எண், வினைத்தொகை, சுட்டு, ஈறு
ஆகும் உகரம் முன்னர் இயல்பாம். (நன்னூல், 179)
ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப் பெயர்களில் முற்றியலுகர ஈற்று எண்ணுப் பெயர் ஏழு என்பது மட்டுமே ஆகும். மற்ற ஒன்று, இரண்டு மூன்று முதலான எண்ணுப்பெயர்கள் எல்லாம் குற்றியலுகர ஈற்று எண்ணுப்பெயர்கள் ஆகும்.
ஒன்று, இரண்டு, ஆறு, ஏழு என்ற நான்கு எண்ணுப் பெயர்களும் புணர்ச்சியில் விகாரப்பட்டு முறையே ஒரு, இரு, அறு, எழு என முற்றியலுகர ஈறாக வரும். இவற்றை மொழியியலார் எண்ணுப்பெயரடைகள் (Numerical Adjectives) என்று குறிப்பிடுகின்றனர். காரணம் இவை இரு கோடுகள், அறு படைவீடுகள் எனப் பெயருக்கு அடையாக வருவதால் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.
இந்நூற்பாவில் நன்னூலார் குறிப்பிடும் முற்றியலுகரப் புணர்ச்சி விதிகள் ஐந்து. இவற்றினைச் சான்றுடன் காண்போம்.
1. மூன்றாம் வேற்றுமைக்கு உரிய ஒடு உருபின் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும்.
சான்று:
இராமனொடு + சென்றான் = இராமனொடு சென்றான்
கண்ணனொடு + படித்தான் = கண்ணனொடு படித்தான்
2. ஆறாம் வேற்றுமைக்கு உரிய அது உருபின் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும்.
சான்று:
இராமனது + கை = இராமனது கை
கண்ணனது + தலை = கண்ணனது தலை
3. (i) இயல்பாக வரும் முற்றியலுகர ஈற்று எண்ணுப்பெயர் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும்.
சான்று:
ஏழு + கடல் = ஏழு கடல்
(எண்ணுப்பெயர்களில் ஏழு என்ற எண்ணைத் தவிர ஒன்று, இரண்டு முதலிய பிற எண்ணுப்பெயர்கள் குற்றியலுகர ஈற்றுப் பெயர்கள் ஆகும்.)
(ii) விகாரப்பட்டு வரும் முற்றியலுகர ஈற்று எண்ணுப்பெயர் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும். (விகாரப்பட்டு வருதல் = சொல் உருமாறி வருதல். ஒன்று என்பது ஒரு எனவும், இரண்டு என்பது இரு எனவும், ஆறு என்பது அறு எனவும் வருதல்)
சான்று:
ஒரு + கை = ஒரு கை
இரு + படை = இரு படை
ஒரு + புறம் = ஒரு புறம்
இரு + புறம் = இரு புறம்
அறு + படைவீடு = அறுபடைவீடு
எழு + கடல் = எழுகடல்
4. வினைத்தொகையில், முற்றியலுகர ஈற்று வினைப்பகுதிக்கு முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும்.
சான்று:
நடு + கல் = நடுகல் (நட்ட, நடுகின்ற, நடும் கல்)
சுடு + சோறு = சுடுசோறு (சுட்ட, சுடுகின்ற, சுடும்சோறு)
வரு + புனல் = வருபுனல் (வந்த, வருகின்ற, வரும்புனல்)
5. அது, இது, உது என்னும் மூன்று சுட்டுப் பெயர்களின் முன் வரும் வல்லினம் இயல்பாகும்.
சான்று:
அது + கண்டான் = அது கண்டான்
இது + சிறியது = இது சிறியது
உது + பெரியது = உது பெரியது
சுட்டுப் பெயர்களின் முன்னர் வல்லினம் இயல்பாகும் எனவே, எது என்ற முற்றியலுகர ஈற்று வினாப்பெயர் முன்னர் வரும் வல்லினமும் இயல்பாகும்.
சான்று :
எது + கண்டான் = எது கண்டான்?
எது + சிறியது = எது சிறியது?
பூப்பெயர் முன்இன மென்மையும் தோன்றும் (நன்னூல், 200)
சான்று :
பூ + கொடி = பூங்கொடி
பூ + சோலை = பூஞ்சோலை
பூ + தடம் = பூந்தடம்
பூ + பொழில் = பூம்பொழில்
பொதுவிதிப்படி பூ முன்னர் வரும் வல்லினம் மிகும்.
சான்று :
பூ + பறித்தாள் = பூப்பறித்தாள்
பூ + கடை = பூக்கடை
பூ + கூடை = பூக்கூடை
ஏ, ஓ என்னும் இடைச்சொற்களுக்கு முன்னர் வரும் வல்லினம் பொதுவிதிப்படி மிகாமல் இயல்பாகும்.
இடைச்சொல் ஏ ஓ முன்வரின் இயல்பே. (நன்னூல், 201)
சான்று :
அவனே + கண்டான் = அவனே கண்டான்
அவனோ + கண்டான் = அவனோ கண்டான்?
வேற்றுமைப் புணர்ச்சியில் ஐகார ஈற்றுச் சொற்கள் நிலைமொழிகளாக நின்று, வருமொழிகளோடு புணரும் முறை குறித்து நன்னூலார் இரண்டு நூற்பாக்களில் கூறுகிறார். அவற்றைச் சான்றுடன் காண்போம்.
ஐகார ஈற்றுச் சொற்களின் முன்னர் மெய் எழுத்துகள் புணர்தல்
ஐகார ஈற்றுச் சொற்கள் சில வேற்றுமைப் புணர்ச்சியில் வரும்போது, ஈற்றில் உள்ள ஐகாரம் கெடுதலுடன், அம் என்னும் சாரியையைப் பெற்று முடிவதும் உண்டு.
வேற்றுமை ஆயின் ஐகான் இறுமொழி
ஈற்று அழி வோடும்அம் ஏற்பவும் உளவே (நன்னூல், 202)
(அழிவோடும் – கெடுதலுடன்; அம் – ஒரு சாரியை)
சான்று:
தென்னை + தோப்பு > தென்ன் + தோப்பு >
தென்ன் + அம் + தோப்பு = தென்னந்தோப்பு
ஆவிரை + வேர் > ஆவிர் + வேர் >
ஆவிர் + அம் + வேர் = ஆவிரம் வேர்
இச்சான்றுகளில் தென்னை, ஆவிரை ஆகிய சொற்கள், ஈற்று ஐகாரம் கெட்டு, அம் சாரியை பெற்று முடிந்தது காணலாம்.
நூற்பாவில் அழிவொடும் என்ற உம்மை கொடுத்துக் கூறியதனால், ஈற்றில் உள்ள ஐகாரம் கெடாமலேயே அம் என்னும் சாரியையைப் பெற்று முடிவதும் உண்டு என்பது பெறப்படும்.
சான்று:
புன்னை + கானல் > புன்னை + அம் + கானல் = புன்னையங் கானல்
முல்லை + புறவம் > முல்லை + அம் + புறவம் = முல்லையம் புறவம்
(புன்னை – ஒரு மரம்; கானல் – கடற்கரைச் சோலை ; முல்லை – ஒரு மலர்; புறவம் – காடு)
இச்சான்றுகளில் புன்னை, முல்லை ஆகிய சொற்கள், ஈற்று ஐகாரம் கெடாமலேயே அம் சாரியை பெற்று முடிந்தது காணலாம்.
பனை என்னும் சொல்லுக்குப் புணர்ச்சி விதி
வேற்றுமைப் புணர்ச்சியில் பனை என்னும் பெயர் நிலைமொழியாக வரும்போது வருமொழிகளுடன் புணரும் முறை பற்றி நன்னூலார் நான்கு விதிகள் கூறுகிறார்.
1. பனை என்னும் பெயரின் முன்னர், கொடி என்னும் பெயர் வருமாயின், வருகின்ற மொழி முதல் ககர மெய் மிகும்.
சான்று:
பனை + கொடி = பனைக்கொடி
(பனைக்கொடி – கண்ண பிரானின் அண்ணனாகிய பலராமனுடைய கொடி)
2. பனை என்னும் பெயரின் முன்னர்க் க, ச, த, ப என்னும் வல்லின மெய்கள் வருமாயின், நிலைமொழி (பனை) ஈற்று ஐகாரம் கெட்டு, அம் என்னும் சாரியை பெறும்.
சான்று:
பனை + கிழங்கு = பனங்கிழங்கு
பனை + சாறு = பனஞ்சாறு (பதநீர்)
பனை + தோப்பு = பனந்தோப்பு
பனை + பழம் = பனம்பழம்
3. பனை என்னும் பெயரின் முன்னர்த் திரள் என்ற சொல் வருமாயின், வருகின்ற மொழி முதல் தகர மெய் மிக்கும், ஈற்று ஐகாரம் கெட்டு அம் சாரியை பெற்றும் வரும்.
சான்று:
பனை + திரள் = பனைத்திரள், பனந்திரள்
4. பனை என்னும் பெயரின் முன்னர் அட்டு என்னும் பெயர் வருமாயின், நிலைமொழி ஈற்றில் உள்ள ஐகாரம் கெட்டு, வருமொழி முதலில் உள்ள அகரம் ஆகாரமாக நீளும்.
சான்று:
பனை + அட்டு
பன் + அட்டு (ஐகாரம் கெட்டது)
பன் + ஆட்டு (அகரம் ஆகாரமாக நீண்டது)
= பனாட்டு
(பனாட்டு – பனைவெல்லக் கட்டி)
மேலே சொன்ன நான்கு புணர்ச்சி விதிகளையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.
பனைமுன் கொடிவரின் மிகலும், வலிவரின்
ஐ போய் அம்மும், திரள்வரின் உறழ்வும்,
அட்டு உறின் ஐ கெட்டு அந் நீள்வுமாம் வேற்றுமை
(நன்னூல், 203)
செய்யிய என்னும் வினையெச்சம், அகர ஈற்றுப் பெயரெச்சம், அகர ஈற்று வினைமுற்று, ஆறாம் வேற்றுமைப் பன்மை உருபு, அகர ஈற்றுப் பன்மைப் பெயர் ஆகியவற்றின் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் என்பதைத் தெரிந்து கொண்டோம். குறிப்பாக இக்காலத் தமிழில் வந்த பையன், ஓடிய பையன், சென்ற பையன், நல்ல பையன் என்பன போல எவ்வளவோ அகர ஈற்றுப் பெயரெச்சங்கள் வழங்குகின்றன. இவற்றை வல்லினம் மிகாமல் எழுத நன்னூலார் கூறும் புணர்ச்சி விதிகள் மிகவும் பயன்படக் காண்கிறோம்.
பல, சில என்னும் சொற்கள் தம்முன் தாமும், தம்மொடு பிற சொற்களுமாகப் புணரும் திறத்தை அறிந்து கொண்டோம்.
நாழி, உரி போன்ற பழங்கால முகத்தல் அளவைப் பெயர்கள் புணர்ச்சியில் வருவதை அறிந்து கொண்டோம். நாழி + உரி = நாடுரி என்றாகி அச்சொல் ஒன்றரைப்படி என்னும் பொருளைத் தருவதையும் அறிந்து கொண்டோம்.
இகர, ஐகார ஈற்றுச் சொற்களின் முன்னர் வரும் வல்லினம் எழுவாய்த் தொடர், உம்மைத்தொகை ஆகியவற்றில் இயல்பாதலை அறிந்து கொண்டோம். அதே வல்லினம் இருபெயரொட்டுப் பண்புத்தொகை, உவமைத்தொகை ஆகியவற்றில் மிகுதலையும் தெரிந்து கொண்டோம்.
ஒடு உருபு, அது உருபு, முற்றியலுகர ஈற்று எண்ணுப் பெயர், வினைத்தொகை, அது, இது, உது என்னும் சுட்டுப் பெயர்கள், எது என்னும் வினாப் பெயர் ஆகியவற்றின் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் என்பதை நன்கு அறிந்து கொண்டோம்.
பனை என்ற பெயரோடு, க, ச, த, ப என்னும் வல்லின மெய்கள் புணரும்போது, பனை என்ற சொல் ஈற்று ஐகாரம் கெட்டு அம் சாரியை பெறும் என்பதை, பனங்கிழங்கு, பனஞ்சாறு, பனந்தோப்பு, பனம்பழம் முதலிய சான்றுகளால் அறிந்து கொண்டோம். இச்சொற்கள் யாவும் இன்றும் பனையோடு தொடர்புடையனவாய் வழங்கி வருவதை அறிந்து கொள்கிறோம்.
பாடம் - 5
இப்பாடத்தில், ஆறுவகைக் குற்றியலுகரங்கள் ஒவ்வொன்றின் முன்னரும் வருகின்ற வல்லினம், அல்வழிப் பொருளிலும் வேற்றுமைப் பொருளிலும் இயல்பாகவும், மிக்கும் வருவது பற்றி நன்னூலார் கூறும் இலக்கண விதிகள் தக்க சான்றுகளுடன் விளக்கிக் காட்டப்படுகின்றன. வேற்றுமையில் வரும் நெடில் தொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள் ஒற்று இடையில் மிக்கும், மிகாமலும் வருமொழிகளோடு புணரும் திறம் பற்றி நன்னூலார் பேசுகிறார். மேலும் வன்தொடர்க் குற்றியலுகரங்களாக அமைந்த திசைப்பெயர்கள் பற்றிய புணர்ச்சி விதிகளையும் அவர் குறிப்பிடுகிறார். இவையாவும் இப்பாடத்தில் விளக்கிக் கூறப்படுகின்றன.
சான்று:
காடு + கொடிது = காடு கொடிது (நெடில் தொடர்)
எஃகு + பெரிது = எஃகு பெரிது (ஆய்தத் தொடர்)
வரகு + சிறிது = வரகு சிறிது (உயிர்த்தொடர்)
வந்து + தந்தான் = வந்து தந்தான் (மென்தொடர்)
செய்து + கொடுத்தான் = செய்து கொடுத்தான் (இடைத் தொடர்)
இவற்றில் காடு கொடியது, எஃகு பெரிது, வரகு சிறிது என்பன எழுவாய்த் தொடர், வந்து தந்தான், செய்து கொடுத்தான் என்பன வினையெச்சத் தொடர்.
நூற்பாவில் வன்தொடர் அல்லன முன்மிகா என்று கூறப்பட்டிருப்பதால், வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வருகின்ற வல்லினம் மிகும் என்பது பெறப்படும்.
சான்று:
கொக்கு + பறந்தது = கொக்குப் பறந்தது
எடுத்து + கொடுத்தான் = எடுத்துக் கொடுத்தான்
கற்று + தந்தான் = கற்றுத் தந்தான்
பார்த்து + சிரித்தாள் = பார்த்துச் சிரித்தாள்
இவற்றில் கொக்குப் பறந்தது எழுவாய்த் தொடர். மற்றவை வினையெச்சத் தொடர்.
அல்வழியில் மென்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வருகின்ற வல்லினம் மிகாது எனக் கூறப்பட்டது. சான்று: வந்து தந்தான். இவ்விதிக்கு மாறாகச் சில மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்கு முன் வருகின்ற வல்லினம் மிகுதல் காணப்படுகிறது.
ஏழாம் வேற்றுமைக்கு இடப்பொருள், காலப்பொருள் என்னும் இருவகைப் பொருள்கள் உண்டு. இவற்றுள் இடப்பொருளை உணர்த்துகின்ற ‘அங்கு, இங்கு, உங்கு, எங்கு; ஆங்கு, ஈங்கு, ஊங்கு, யாங்கு; ஆண்டு, ஈண்டு, யாண்டு’ என்னும் மென்தொடர்க் குற்றியலுகர ஈற்று இடைச்சொற்களின் முன் வருகின்ற வல்லினம் மிகும்.
சான்று:
அங்கு + கண்டான் = அங்குக் கண்டான்
இங்கு + சென்றான் = இங்குச் சென்றான்
உங்கு + தந்தான் = உங்குத் தந்தான்
எங்கு + போனான் = எங்குப் போனான்?
ஆங்கு + கண்டாள் = ஆங்குக் கண்டாள்
ஈங்கு + சென்றாள் = ஈங்குச் சென்றாள்
ஊங்கு + தந்தாள் = ஊங்குத் தந்தாள்?
யாங்கு + போனாள் = யாங்குப் போனாள்?
ஆண்டு + கண்டோம் = ஆண்டுக் கண்டோம்
ஈண்டு + காண்போம் = ஈண்டுக் காண்போம்
யாண்டு + போனாய் = யாண்டுப் போனாய் ?
ஆனால், ஏழாம் வேற்றுமைக்கு உரிய மற்றொரு பொருளான காலப்பொருளை உணர்த்துகின்ற ‘அன்று, இன்று, என்று, பண்டு, முந்து’ என்னும் மென்தொடர்க் குற்றியலுகர ஈற்று இடைச்சொற்களின் முன் வருகின்ற வல்லினம் மிகாது.
சான்று:
அன்று + கொடுத்தேன் = அன்று கொடுத்தேன்
இன்று + கண்டேன் = இன்று கண்டேன்
என்று + காண்பேன் = என்று காண்பேன்
பண்டு + தந்தேன் = பண்டு தந்தேன்
முந்து + பெற்றேன் = முந்து பெற்றேன்
(பண்டு – முன்னர்; முந்து = முன்னமே)
இவையாவும் சொல்லால் அல்வழியும், பொருளால் வேற்றுமையும் ஆதலால், சில அல்வழி விதியையும் (அன்று, இன்று முதலியன), சில வேற்றுமை விதியையும் (அங்கு, இங்கு முதலியன) பெற்றன.
அல்வழியில் வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வருகின்ற வல்லினம் கட்டாயம் மிகும் என்று கூறப்பட்டது. ஆனால் ஒரே ஒரு விதிவிலக்கு. வினைத்தொகையில் மட்டும் வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வருகின்ற வல்லினம் மிகாது.
சான்று:
ஈட்டு + புகழ் = ஈட்டு புகழ் (ஈட்டிய, ஈட்டுகின்ற, ஈட்டும் புகழ்)
ஒற்று இடையில் மிகுவன
சான்று:
ஆடு + கால் = ஆட்டுக்கால் (நெடில் தொடர்)
வயிறு + பசி = வயிற்றுப்பசி (உயிர்த் தொடர்)
(ஆட்டுக்கால் – ஆட்டினது கால், ஆறாம் வேற்றுமைத் தொகை; வயிற்றுப்பசி – வயிற்றின் கண் பசி, ஏழாம் வேற்றுமைத் தொகை)
இவை, ஒற்று இடையில் மிக்கவை ஆகும். ஆடு என்ற நெடில் தொடர்க் குற்றியலுகரத்தின் இடையில் டகர ஒற்றும், வயிறு என்னும் உயிர்த்தொடர்க் குற்றியலுகத்தின் இடையில் றகர ஒற்றும் மிகுந்தன. இவை ஆடு கால், வயிறு பசி என்று இடையில் ஒற்று மிகாமல் வருவது இல்லை.
ஒற்று இடையில் மிகாதன
சான்று:
நாகு + கால் = நாகு கால் (நெடில் தொடர்)
வரகு + சோறு = வரகு சோறு (உயிர்த் தொடர்)
(நாகு – பசு; நாகு கால் – நாகினது கால், பசுவினது கால் – ஆறாம் வேற்றுமைத் தொகை; வரகு சோறு – வரகு என்னும் தானியத்தால் ஆக்கப்பட்ட சோறு, மூன்றாம் வேற்றுமைத் தொகை)
இவை ஒற்று இடையில் மிகாதவை ஆகும். இவை நாக்குக் கால், வரக்குச் சோறு என்று இடையில் ஒற்று மிகுந்து வருவது இல்லை.
இடைத்தொடர், ஆய்தத் தொடர், ஒற்று இடையில்
மிகா நெடில், உயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை
(நன்னூல், 182)
சான்று:
மார்பு + கடுமை= மார்பு கடுமை (இடைத்தொடர்)
எஃகு + பெருமை= எஃகுபெருமை (ஆய்தத்தொடர்)
நாகு + கால்= நாகு கால் (ஒற்று இடையில் மிகாத
நெடில் தொடர்)
வரகு + சோறு= வரகு சோறு (ஒற்று இடையில் மிகாத
உயிர்த்தொடர்)
(மார்பு கடுமை – மார்பினது கடுமை; எஃகு பெருமை – எஃகினது பெருமை, எஃகு – வேர். இவை ஆறாம் வேற்றுமைத் தொகை.)
ஒற்று இடையில் மிகும் குற்றியலுகரங்கள் முன் வல்லினம் வேற்றுமையில் மிகுதல்
ஒற்று இடையில் மிகாத நெடில் தொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்களின் முன் வருகின்ற வல்லினம் வேற்றுமையில் இயல்பாகும் எனவே, ஒற்று இடையில் மிகும் அவ்விரு குற்றியலுகரங்களின் முன் வருகின்ற வல்லினம் வேற்றுமையில் மிகும் என்பது பெறப்படும்.
சான்று:
ஆடு + கால் = ஆட்டுக்கால்
வயிறு + பசி = வயிற்றுப்பசி
மேலும், இந்நூற்பாவில் வேற்றுமையில் மிகா எனப்பட்ட குற்றியலுகரங்களில் கூறப்படாத வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன்னும் மென்தொடர்க் குற்றியலுகரத்தின் முன்னும் வருகின்ற வல்லினம் வேற்றுமையில் மிகும்.
சான்று:
பாக்கு + தின்றான் = பாக்குத் தின்றான் (பாக்கைத் தின்றான்)
பாட்டு + பாடினாள் = பாட்டுப் பாடினாள் (பாட்டைப் பாடினாள்)
கொக்கு + சிறகு = கொக்குச் சிறகு (கொக்கினது சிறகு)
இச்சான்றுகளில் வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வந்த வல்லினம் வேற்றுமையில் மிகுந்ததைக் காணலாம்.
குரங்கு + குட்டி = குரங்குக் குட்டி (குரங்கினது குட்டி)
வண்டு + கால் = வண்டுக்கால் (வண்டினது கால்)
கூண்டு + கிளி = கூண்டுக் கிளி (கூண்டின்கண் கிளி)
இச்சான்றுகளில் மென்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வந்த வல்லினம் வேற்றுமையில் மிகுந்ததைக் காணலாம்.
இதுகாறும் கூறியவற்றிலிருந்து, எந்த எந்தக் குற்றியலுகரங்களுக்கு முன் வரும் வல்லினம் அல்வழியிலும், வேற்றுமையிலும் மிகும், மிகாது என்பது பற்றி மூன்று கருத்துகள் பெறப்படுகின்றன. அவை வருமாறு.
1. ஆய்தத் தொடர், இடைத் தொடர், ஒற்று இடையில் மிகாத நெடில் தொடர், ஒற்று இடையில் மிகாத உயிர்த்தொடர் ஆகிய குற்றியலுகரங்களுக்கு முன் வருகின்ற வல்லினம் அல்வழி, வேற்றுமை என்னும் இருவகைப் புணர்ச்சியிலும் மிகா (இயல்பாகும்).
2. ஒற்று இடையில் மிகும் நெடில்தொடர், ஒற்று இடையில் மிகும் உயிர்த்தொடர், வன்தொடர் ஆகிய குற்றியலுகரங்களுக்கு முன் வருகின்ற வல்லினம் அல்வழி, வேற்றுமை என்னும் இருவகைப் புணர்ச்சியலும் மிகும்.
3. மென்தொடர்க் குற்றியலுகரத்துக்கு முன் வருகின்ற வல்லினம் அல்வழியில் மிகா; வேற்றுமையில் மிகும்.
நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள்
ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே (நன்னூல், 183)
(ஒற்று – மெய்; ட ற ஒற்று இரட்டும் – ட் என்பது ட்ட் எனவும், ற் என்பது ற்ற் எனவும் இரட்டிக்கும்; வேற்றுமை மிகவே – வேற்றுமைப் புணர்ச்சியில் பெரும்பாலும்)
சான்று:
நாடு + அரசன் = நாட்டரசன்
சோறு + பானை = சோற்றுப்பானை
காடு + மனிதன் = காட்டு மனிதன்
மாடு + வால் = மாட்டு வால்
இச்சான்றுகளில் டு, று என முடியும் நெடில்தொடர் முன் வேற்றுமையில் நாற்கணமும் வர, இறுதியில் உள்ள ட, ற என்னும் மெய்கள் இரட்டித்தன.
பகடு + ஏர் = பகட்டேர்
வயிறு + பசி = வயிற்றுப்பசி
முரடு + மனிதன் = முரட்டு மனிதன்
வயிறு + வலி = வயிற்று வலி
(பகடு – எருது, காளை; பகட்டேர் – காளை மாட்டைப் பூட்டிய ஏர்)
இச்சான்றுகளில் டு, று என முடியும் உயிர்த்தொடர் முன் வேற்றுமையில் நாற்கணமும் வர, இறுதியில் உள்ள ட, ற என்னும் மெய்கள் இரட்டித்தன.
மென்தொடர் மொழியுள் சிலவேற் றுமையில்
தம் இன மென்தொடர் ஆகா மன்னே (நன்னூல், 184)
இந்நூற்பாவில் வருமொழி முதல் எழுத்துச் சொல்லப்படவில்லை. எனவே நாற்கணமும் வருமொழி முதல் எழுத்தாகக் கொள்க என்பர் நன்னூல் உரையாசிரியர்கள்.
சான்று:
குரங்கு + இனம் = குரக்கினம்
மருந்து + பை = மருத்துப் பை
சுரும்பு + நாண் = சுருப்பு நாண்
கரும்பு + வில் = கருப்பு வில்
(சுரும்பு – வண்டு; நாண் – கயிறு; சுருப்பு நாண் – வண்டால் ஆகிய கயிறு; கருப்பு வில் – கரும்பால் ஆகிய வில். இது மன்மதனுக்கு உரியது)
இச்சான்றுகளில் வரும் குரங்கு, மருந்து, சுரும்பு, கரும்பு ஆகியன மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள். இவை வேற்றுமைப் புணர்ச்சியில் நாற்கணம் வர, முறையே குரக்கு, மருத்து, சுருப்பு, கருப்பு என வன்தொடர்க் குற்றியலுகரமாகத் திரிந்தன.
வேற்றுமைப் புணர்ச்சியில் மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்களாக மட்டும் வருபவையே அதிகம் என மேலே பார்த்தோம்.
சான்று:
சங்கு + இனம் = சங்கினம்
வண்டு + கால் = வண்டுக்கால்
சங்கு + மாலை = சங்கு மாலை
இவை வேற்றுமைப் புணர்ச்சியில் வன்தொடராகத் திரியாதவை.
ஐஈற் றுடைக் குற்றுகரமும் உளவே (நன்னூல், 185)
இந்நூற்பா மென்தொடர் என்று தொடங்கும் நூற்பாவை அடுத்து வருகின்றமையின், இந்நூற்பாவில் கூறப்படும் குற்றியலுகரம் மென்தொடர் என்றும், இந்நூற்பாவிலும் வருமொழி முதல் எழுத்துச் சொல்லப்படாமையால் நாற்கணமும் வரும் என்றும் உரையாசிரியர்கள் கூறுகின்றனர்.
சான்று:
ஒன்று + ஆள் = ஒற்றையாள்
பண்டு + காலம் = பண்டைக்காலம்
இன்று + நாள் = இன்றை நாள், இற்றைநாள்
இரண்டு + வேடம் = இரட்டை வேடம்
‘ஐ ஈற்றுடைக் குற்றுகரமும் உளவே’ என்று பொதுப்படக் கூறியிருப்பதால் பிறதொடர்க் குற்றியலுகரங்களும் சில சமயம் ஐகாரச் சாரியை பெறுதல் உண்டு.
சான்று:
நேற்று + கூலி = நேற்றைக் கூலி
நேற்று + பொழுது = நேற்றைப் பொழுது
இங்கே நேற்று என்ற வன்தொடர்க் குற்றியலுகரம் ஐகாரச் சாரியை பெற்று வந்தது.
திசைப்பெயரோடு திசைப்பெயரும், பிறபெயரும் புணரும் முறை
குற்றியலுகரத்தை ஈற்றிலே கொண்டு நிலைமொழியில் இருக்கும் திசைப்பெயர்களோடு, வருமொழியில் மற்றத் திசைப்பெயர்களும், பிற பெயர்களும் வந்து புணரும் போது, நிலைமொழியின் ஈற்றில் நிற்கும் ‘கு’ என்னும் உயிர்மெய்யும், அதன் அயலில் (இடப்புறத்தில்) நிற்கும், ‘க’ கர மெய்யும் நீங்குதலும், ஈற்று உயிர்மெய் (கு) நீங்கி, அதன் அயலில் நிற்கும் றகரமெய் னகரமெய்யாகவும், லகர மெய்யாகவும் திரிதலும் ஆகும் புணர்ச்சியைப் பெறும் என்கிறார் நன்னூலார்.
திசையொடு திசையும் பிறவும் சேரின்
நிலைஈற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்,
றகரம் னலவாத் திரிதலு மாம்பிற (நன்னூல், 186)
(உயிர்மெய் – கு என்பதாகும்)
நிலைமொழி ஈற்று உயிர்மெய்யும் (கு என்பதும்) கவ்வொற்று நீங்குதல், குணக்கு, குடக்கு, வடக்கு என்பனவற்றிற்கும், றகரம் னகரமாகத் திரிதல் தெற்கு என்பதற்கும், றகரம் லகரமாகத் திரிதல் மேற்கு என்பதற்கும் ஆகும். நூற்பாவில் ‘பிற’ என்றதனால், கிழக்கு என்பதில் உள்ள ழகரத்தின் அகர உயிர் நீங்கி, முதல் நீண்டு வருதலும் கொள்ளப்படும்.
எனவே, இந்நூற்பாவில் திசைப்பெயர்ப் புணர்ச்சி பற்றி நன்னூலார் நான்கு விதிகளைக் கூறியுள்ளார் என்பது புலனாகின்றது. அவற்றினைச் சான்றுடன் கீழே காண்போம்.
1. ஈற்று உயிர்மெய்யும் கவ்வொற்றும் நீங்குதல்
சான்று:
வடக்கு + கிழக்கு = வடகிழக்கு
வடக்கு + மேற்கு = வடமேற்கு
வடக்கு + திசை = வடதிசை
வடக்கு + வேங்கடம் = வடவேங்கடம்
வடக்கு + நாடு = வடநாடு
குடக்கு + மலை = குடமலை
குடக்கு + நாடு = குடநாடு
குணக்கு + நாடு = குணநாடு
இச்சான்றுகளில் நிலைமொழியில் உள்ள திசைப்பெயர்களின் ஈற்று உயிர்மெய்யும், அதன் அயலே நின்ற ககரமெய்யும் நீங்கியமை காணலாம்.
2. றகர மெய் னகர மெய்யாகத் திரிதல்
சான்று:
தெற்கு + மேற்கு = தென்மேற்கு
தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு
தெற்கு + திசை = தென்றிசை (தென்திசை)
தெற்கு + குமரி = தென்குமரி
தெற்கு + நாடு = தென்னாடு
இச்சான்றுகளில் நிலைமொழியில் உள்ள தெற்கு என்ற திசைப்பெயரின் ஈற்று உயிர்மெய் நீங்கி, அதன் அயலே நின்ற றகரமெய் னகர மெய்யாகத் திரிந்தது காணலாம்.
3. றகர மெய் லகர மெய்யாகத் திரிதல்
சான்று:
மேற்கு + நாடு = மேல்நாடு
மேற்கு + திசை = மேல்திசை
இச்சான்றுகளில் நிலைமொழியில் உள்ள மேற்கு என்ற திசைப்பெயரின் ஈற்று உயிர்மெய் நீங்கி, அதன் அயலே நின்ற றகரமெய் லகர மெய்யாகத் திரிந்தது காணலாம்.
4. ழகரத்தில் உள்ள அகரஉயிர் நீங்கி முதல் எழுத்து நீளூதல்
சான்று:
கிழக்கு + நாடு = கீழ்நாடு
கிழக்கு + திசை = கீழ்த்திசை
இச்சான்றுகளில் நிலைமொழியில் உள்ள கிழக்கு என்ற திசைப்பெயரின் ஈற்று உயிர்மெய்யும், கவ்வொற்றும் நீங்கி, அவற்றின் அயலே நின்ற ழ என்பதில் அகர உயிர் நீங்கி, ‘கி’ என்னும் முதல் எழுத்து ‘கீ’ என நீண்டது காணலாம்.
மேல், கீழ் என வருவன ஐகாரம் பெற்று வருதலும் உண்டு.
சான்று:
மேல் + நாடு = மேலை நாடு
கீழ் + கடற்கரை = கீழைக் கடற்கரை
திசைப்பெயர்கள் பிறதிசைப் பெயர்களோடும், பிறபெயர்களோடும் புணரும்போது, மேலே கூறப்பட்டவை போன்று எத்தகைய விகாரமும் பெறாமல் இயல்பாய் நிற்றலும் உண்டு என்பது பெறப்படும்.
சான்று:
தெற்கு + வடக்கு = தெற்கு வடக்கு
கிழக்கு + மேற்கு = கிழக்கு மேற்கு
வடக்கு + திசை = வடக்குத் திசை
மேற்கு + திசை = மேற்குத் திசை
தெங்கு முன்னர்க் காய்
தெங்கு என்னும் நிலைமொழியின் முன் காய் என்னும் சொல் வருமொழியாக வந்தால், தெங்கு என்னும் அந்நிலைமொழியின் முதல் நீண்டு அதன் ஈற்றில் உள்ள கு என்ற உயிர்மெய் நீங்கும்.
தெங்குநீண்டு ஈற்றுஉயிர் மெய்கெடும் காய்வரின் (நன்னூல், 187)
(தெங்கு – தென்னை மரம்)
சான்று:
தெங்கு + காய்
தேங்கு + காய் (முதல் நீளல்)
தேங் + காய் (ஈற்று உயிர்மெய் நீங்கல்)
= தேங்காய்
அல்வழியில் வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும்; ஏனைய ஐந்து தொடர்க் குற்றியலுகரங்களின் முன் வரும் வல்லினம் அல்வழியில் மிகாது.
வேற்றுமைப் புணர்ச்சியில் நெடில் தொடர்க் குற்றியலுகரமும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரமும் ஒற்று இடையில் மிகுதல், ஒற்று இடையில் மிகாதல் என்னும் இருவகையாக வரும்.
வேற்றுமையில் இடைத்தொடர், ஆய்தத்தொடர், ஒற்று இடையில் மிகாத நெடில்தொடர், ஒற்று இடையில் மிகாத உயிர்த்தொடர் ஆகியவற்றின் முன் வரும் வல்லினம் இயல்பாகும்.
வேற்றுமையில் வன்தொடர், மென்தொடர் என்னும் குற்றியலுகரங்கள் முன் வரும் வல்லினம் மிகும்.
வேற்றுமையில் நெடில்தொடர், உயிர்த்தொடர் என்னும் குற்றியலுகரங்களில் ஈற்றில் வரும் ட, ற என்னும் மெய்கள் இரட்டிக்கும்.
மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் சிலவும், பிற குற்றியலுகரச் சொற்கள் சிலவும் ஈற்றில் ஐகாரச் சாரியை பெற்று வருதல் உண்டு.
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, குணக்கு, குடக்கு ஆகியன திசைகளைக் குறிக்கும் பெயர்கள்.
வடக்கு, குணக்கு, குடக்கு ஆகிய திசைப்பெயர்கள் புணர்ச்சியில், ஈற்று உயிர்மெய் குவ்வும், அதன் அயலே உள்ள கவ்வும் நீங்கி வருமொழிகளோடு புணரும்.
தெற்கு என்பதில் உள்ள றகரம் னகரமாகவும், மேற்கு என்பதில் உள்ள றகரம் லகரமாகவும் திரியும்.
கிழக்கு என்பதில் உள்ள ழகரத்தில் உள்ள அகர உயிர் நீங்கி, முதல் எழுத்து நீண்டு வரும். இவற்றை எல்லாம் இப்பாடத்தில் விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்தோம்.
பாடம் - 6
ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களும், நூறு, ஆயிரம் என்னும் எண்ணுப்பெயர்களும், மற்ற எண்ணுப்பெயர்கள் எல்லாமும் தோன்றுவதற்கு அடிப்படையாக உள்ளன. இவ்வெண்ணுப் பெயர்களிலிருந்து மற்ற எண்ணுப்பெயர்கள் பெருக்கல் முறையிலும், கூட்டல் முறையிலும் தோன்றியிருப்பதைக் காணலாம். இருபது, முப்பது, நாற்பது போன்றவை 2 x 10 = 20, 3 x 10 = 30, 4 x 10 = 40 என்றாற் போலப் பெருக்கல் முறையில் அமைந்துள்ளன. பதினொன்று, இருபத்திரண்டு, நூற்றுமூன்று போன்றவை 10+1=11, 20+2=22, 100+3=103 என்றாற்போலக் கூட்டல் முறையில் அமைந்துள்ளன. ஒன்பது என்ற அடிப்படை எண்ணுப்பெயர்கூட, பத்திலிருந்து ஒன்று குறைந்தது என்ற கழித்தல் நிலையில் அமைந்துள்ளதாகத் தெரிகிறது.
ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களில் ஏழு என்பதைத் தவிரப் பிற ஒன்பது எண்ணுப்பெயர்களும், நூறு என்ற எண்ணுப்பெயரும் குற்றியலுகர ஈற்றுப் பெயர்கள். இவற்றில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்பன மென்தொடர்க் குற்றியலுகரங்கள்; ஆறு, நூறு என்பன நெடில் தொடர்க் குற்றியலுகரங்கள்; எட்டு, பத்து என்பன வன்தொடர்க் குற்றியலுகரங்கள்; ஒன்பது என்பது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம். இவை தவிர அமைந்த ஏழு என்பது முற்றியலுகர ஈற்றுப் பெயர். ஆயிரம் என்பது மெய் ஈற்றுப் பெயர்.
ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களில் குற்றியலுகர ஈற்றினை உடைய ஒன்பது எண்ணுப் பெயர்களும், ஏழு என்னும் முற்றியலுகர ஈற்று எண்ணுப்பெயரும் வருமொழியில் உள்ள எண்ணுப்பெயர்களோடும், பிற பெயர்களோடும் புணரும்போது அடையும் விகாரங்களைப் (மாற்றங்களை) பற்றிக் கூறுவதே எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி எனப்படும்.
சான்று:
இரண்டு + பத்து = இருபது
ஒன்று + மாடு = ஒரு மாடு
மூன்று + சந்தி = முச்சந்தி
இச்சான்றுகளில் இரண்டு, ஒன்று, மூன்று என்னும் எண்ணுப்பெயர்கள் முறையே பத்து என்ற எண்ணுப்பெயரோடும், மாடு, சந்தி என்ற பெயர்களோடும் புணரும்போது இரு, ஒரு, மு என விகாரம் அடைந்திருப்பதைக் காணலாம்.
நன்னூலார் ஒன்று முதல் எட்டு வரையிலான எண்ணுப்பெயர்களுக்கான புணர்ச்சி பற்றிய பொதுவிதியை முதலில் கூறுகின்றார். அதன்பின்பு ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, எட்டு, ஒன்பது, பத்து ஆகிய எண்ணுப்பெயர்கள் ஒவ்வொன்றிற்குமான புணர்ச்சி பற்றிய சிறப்பு விதிகளைக் கூறுகிறார்.
ஒன்று இரண்டு என்னும் எண்ணுப்பெயர்களின் முதலில் உள்ள குறில் நீளும்.
சான்று:
ஒன்று + ஆடு = ஓராடு (ஒ – ஓ என நீண்டது)
இரண்டு + ஆண்டு = ஈராண்டு (இ – ஈ என நீண்டது)
மூன்று, ஆறு, ஏழு ஆகிய எண்ணுப்பெயர்களின் முதலில் உள்ள நெடில் குறுகும்.
சான்று:
மூன்று + தமிழ் = முத்தமிழ் ( மூ – மு எனக் குறுகியது)
ஆறு + படைவீடு = அறுபடைவீடு (ஆ – அ எனக் குறுகியது)
ஏழு + பிறப்பு = எழுபிறப்பு (ஏ – எ எனக் குறுகியது)
ஆறு, ஏழு அல்லாத மற்ற ஆறு எண்ணுப்பெயர்கள் ஈற்றுயிர் மெய் கெடும். (கெடும் – நீங்கும்)
சான்று:
ஒன்று + ஆடு = ஓராடு (று – கெட்டது)
இரண்டு + ஆண்டு = ஈராண்டு (டு – கெட்டது)
மூன்று + தமிழ் = முத்தமிழ் (று – கெட்டது)
நான்கு + புறம் = நாற்புறம் (கு – கெட்டது)
ஐந்து + பொறி = ஐம்பொறி (து – கெட்டது)
எட்டு + குணம் = எண்குணம் (டு – கெட்டது)
ஏழு என்ற எண்ணுப்பெயரின் ஈற்றில் உள்ள உகர உயிர் கெடும்.
சான்று:
ஏழு + கடல் = ஏழ் கடல்
நூற்பா:
எண், நிறை, அளவும், பிறவும் எய்தின்
ஒன்று முதல் எட்டு ஈறாம் எண்ணுள்
முதல் ஈர்எண் முதல் நீளும்; மூன்று ஆறு
ஏழு குறுகும்; ஆறு ஏழு அல்லவற்றின்
ஈற்றுஉயிர் மெய்யும், ஏழன் உயிரும்
ஏகும் ஏற்புழி என்மனார் புலவர் (நன்னூல், 188)
(அளவு – முகத்தல் அளவை, நீட்டல் அளவை; ஏகும் – கெடும்; ஏற்புழி – ஏற்புடைய இடங்களில்; என்மனார் – என்று சொல்வர்)
இந்நூற்பாவில் கூறப்படும் முதல் நீளல், முதல் குறுகல் முதலான விகாரங்களை ஏற்புடைய இடங்களில் ஏற்றவாறு கொள்ள வேண்டும் என்கிறார் நன்னூலார். சான்றாக ஒன்று என்பது வருமொழி முதலில் உயிர் வரும் போது ஓராயிரம் என முதல் குறில் நீள்கிறது; ஆனால் வருமொழி முதலில் மெய்வரும்போது ஒரு கால் என முதல் குறில் விகாரம் எதனையும் கொள்ளாமல் குறிலாகவே உள்ளது. எனவேதான் நன்னூலார் ஏற்புடைய இடங்களில் கொள்ளவேண்டும் என்று கூறுகிறார். நூற்பாவில் வரும் ‘ஏற்புழி’ என்பதற்குப் பொருளும் விளக்கமும் இதுவேயாகும்.
ஈற்று உயிர்மெய் கெட்டு நின்ற இரண்டு என்னும் எண்ணுப்பெயரில் உள்ள ணகர மெய்யும், ரகரமெய்யை ஊர்ந்து நின்ற அகர உயிரும் கெடும். அவ்வாறு கெட்டபின் நிற்கும் ரகரமெய்யின் மேல் உகரம் வந்து சேர்வதும் உண்டு.
இரண்டு எண்களிலும் ரகரமெய்யுடன் உகரம் வந்து சேர்வது ஏற்புடைய இடங்களில் கொள்ளப்படும். ரகர மெய்யானது, வருமொழி முதலில் மெய்வரின் உகரம் பெறும்; வருமொழி முதலில் உயிர்வரின் உகரம் பெறாது.
சான்று:
ஒன்று + ஆயிரம் > ஒன்+ஆயிரம்> ஓன் + ஆயிரம் >
ஓர் + ஆயிரம் = ஓராயிரம்
பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் று என்பது கெட்டு, முதல் குறில் ஒ என்பது ஓ என நீண்டு, சிறப்பு விதிப்படி னகர மெய் ரகர மெய்யாக மாறியது.
ஒன்று + கால் > ஒன் + கால் > ஒர் + கால் >
ஒரு + கால் = ஒருகால்
பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் று என்பது கெட்டு, சிறப்பு விதியின்படி னகரமெய் ரகரமெய்யாக மாறி உகரம் பெற்றது.
இரண்டு + ஆயிரம் > இரண் + ஆயிரம் > இர் + ஆயிரம் >
ஈர் + ஆயிரம் = ஈராயிரம்
பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் டு என்பது கெட்டு, முதல்குறில் இ என்பது ஈ என நீண்டு, சிறப்பு விதிப்படி ணகரமெய் கெட்டு, ரகரமெய் மேல் நின்ற அகர உயிரும் கெட்டது.
இரண்டு + கால் > இரண் + கால் > இர் + கால் >
இரு + கால் = இருகால்
பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் டு என்பது கெட்டு, சிறப்பு விதிப்படி ணகரமெய் கெட்டு, ரகரமெய் மேல் நின்ற அகர உயிரும் கெட, ரகரமெய் மீது உகரம் ஏறி வந்தது.
சான்று:
மூன்று + ஆயிரம் > மூன் + ஆயிரம் >
மூ + ஆயிரம் = மூவாயிரம்
மூன்று + உலகு > மூன் + உலகு > மூ + உலகு = மூவுலகு
பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் று என்பது கெட்டது. சிறப்பு விதிப்படி வருமொழி முதலில் உயிர் வந்ததால் னகர மெய் கெட்டது. இடையில் வந்த வகரமெய் உடம்படுமெய்.
மூன்று + சந்தி > மூன் + சந்தி > முன் + சந்தி >
மு + சந்தி = முச்சந்தி
மூன்று + தமிழ் > மூன் + தமிழ் + முன் + தமிழ் >
மு + தமிழ் = முத்தமிழ்
பொதுவிதிப்படி ஈற்று உயிர் மெய் கெட்டு, மொழி முதல் நெடில் மூ என்பது மு எனக் குறுகியது. சிறப்பு விதிப்படி வருமொழி முதலில் மெய் வந்ததால், னகரமெய் வருகின்ற மெய்யாகத் திரிந்தது.
சான்று:
நான்கு + ஆயிரம் > நான் + ஆயிரம் >
நால் + ஆயிரம் = நாலாயிரம்
நான்கு + வகை > நான் + வகை > நால் + வகை = நால்வகை
பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் கு என்பது கெட்டு, சிறப்பு விதிப்படி உயிரும் இடையினமும் வர னகரமெய் லகர மெய்யாகத் திரிந்தது.
நான்கு + படை > நான் + படை > நாற் + படை = நாற்படை
பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் கெட்டு, சிறப்பு விதிப்படி வல்லினம் வர னகரமெய் றகர மெய்யாகத் திரிந்தது.
நான்கு + மணி > நான் + மணி = நான்மணி
பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் மட்டும் கெட்டது. னகரமெய் இயல்பாக வந்தது. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நான்மணிக்கடிகை என்ற நூலினது பெயரை நினைவுகூர்க.
சான்று:
ஐந்து + மூன்று > ஐந் + மூன்று > ஐம் + மூன்று = ஐம்மூன்று
பொதுவிதிப்படி ஈற்று உயிர் மெய் து என்பது கெட்டு, சிறப்பு விதிப்படி நகரமெய், வருகின்ற மகரமெய்யாகத் திரிந்தது.
ஐந்து + பொறி > ஐந் + பொறி > ஐம் + பொறி = ஐம்பொறி
பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் கெட்டு, சிறப்பு விதிப்படி நகரமெய் வல்லினம் வர அதற்கு இன மெல்லினமாகத் திரிந்தது.
ஐந்து + ஆயிரம் > ஐந் + ஆயிரம் > ஐ + ஆயிரம் = ஐயாயிரம்
ஐந்து + வகை > ஐந் + வகை > ஐ + வகை = ஐ வகை
பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் கெட்டு, சிறப்பு விதிப்படி உயிரும் இடையினமும் வர நகரமெய் கெட்டது. ஐயாயிரம் என்பதில் இடையில் வந்த யகரமெய் உடம்படுமெய். (ஐ + ய் + ஆயிரம் = ஐயாயிரம்)
சான்று:
எட்டு + ஆயிரம் > எட் + ஆயிரம் > எண் + ஆயிரம் = எண்ணாயிரம்
எட்டு + வகை > எட் + வகை > எண் + வகை = எண்வகை
பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் கெட்டு, சிறப்பு விதிப்படி டகர மெய் ணகர மெய்யாகத் திரிந்தது.
ஆறு, ஏழு
ஆறு, ஏழு என்னும் எண்ணுப்பெயர்கள் புணர்ச்சியில் பொதுவிதியில் கூறப்பட்ட விகாரங்களை மட்டுமே பெற்றுவரும். இவற்றிற்குச் சிறப்பு விதி இல்லை.
ஒன்பது என்னும் நிலைமொழியின் முன்னர்ப் பத்து, நூறு என்னும் எண்ணுப்பெயர்கள் வருமொழியில் வந்து புணரும்போது,
1. வருமொழியில் உள்ள பத்து, நூறு என்பனவற்றை முறையே நூறு எனவும், ஆயிரம் எனவும் திரித்து,
2. நிலைமொழியின் முதலில் உள்ள ஒகர உயிரோடு தகரமெய்யை அதற்கு ஆதாரமாக நிறுத்தி,
3. நிலைமொழியின் இறுதியில் உள்ள பது என்பதை நீக்கி,
4. பது என்பதற்கு அயலே நின்ற னகர மெய்யை முறையே ணகர மெய்யாகவும், ளகர மெய்யாகவும் திரித்துக் கொள்வதால் முறையே தொண்ணூறு, தொள்ளாயிரம் என்னும் எண்ணுப்பெயர்கள் அமைகின்றன.
ஒன்பா னொடுபத்தும் நூறும் ஒன்றின்
முன்னதின் ஏனைய முரணி, ஒவ்வொடு
தகரம் நிறீஇ, பஃது அகற்றி, னவ்வை
நிரலே ண, ளவாத் திரிப்பது நெறியே (நன்னூல், 194)
(ஒன்பான் – ஒன்பது; பஃது – பது; னவ்வை – னகரமெய்யை; நிரலே – முறையே)
இனி இவ்விதிப்படி தொண்ணூறு, தொள்ளாயிரம் என்பன எவ்வாறு அமைந்தன என்பதைக் காண்போம்.
1) தொண்ணூறு அமையும் முறை
ஒன்பது + பத்து
ஒன்பது + நூறு (பத்தை நூறாகத் திரித்தல்)
தொன்பது + நூறு (நிலைமொழி முதலில் தகரத்தை நிறுத்தல்)
தொன் + நூறு (பது என்பதை நீக்கல்)
தொண் + நூறு (னகரத்தை ணகரமாகத் திரித்தல்)
= தொண்ணூறு
2) தொள்ளாயிரம் அமையும் முறை
ஒன்பது + நூறு
ஒன்பது + ஆயிரம் (நூற்றை ஆயிரமாகத் திரித்தல்)
தொன்பது + ஆயிரம் (நிலைமொழி முதலில் தகரத்தை நிறுத்தல்)
தொன் + ஆயிரம் (பது என்பதை நீக்கல்)
தொள் + ஆயிரம் (னகரத்தை ளகரமாகத் திரித்தல்)
= தொள்ளாயிரம்
நிலைமொழியில் உள்ள எட்டுவரையிலான எண்ணுப்பெயர்கள் பொதுவிதியிலும், சிறப்பு விதியிலும் தமக்குச் சொல்லப்பட்ட விகாரங்களை ஏற்புடையவாறு பெற்று வரும்.
சான்று:
ஒன்று + பத்து = ஒருபது
இரண்டு + பத்து = இருபது
மூன்று + பத்து = முப்பது
நான்கு + பத்து = நாற்பது
ஐந்து + பத்து = ஐம்பது
ஆறு + பத்து = அறுபது
ஏழு + பத்து = எழுபது
எட்டு + பத்து = எண்பது
ஒன்பது என்னும் நிலைமொழியும், வருமொழியில் எண்ணுப்பெயர்கள் முதலானவை வந்து புணரும்போது, இவ்விரண்டு சாரியைகளுள் பொருந்தும் ஒன்றை ஏற்று நிற்கும்.
சான்று:
பத்து + ஒன்று > பத் + இன் + ஒன்று = பதினொன்று
பத்து + மூன்று > பத் + இன் + மூன்று = பதின்மூன்று
பத்து + பத்து > பத் + இற்று + பத்து = பதிற்றுப்பத்து
பத்து + மடங்கு > பத் + இன் + மடங்கு = பதின்மடங்கு
ஒன்பது + ஆயிரம் > ஒன்பது + இன் + ஆயிரம் = ஒன்பதினாயிரம்
சான்று:
பத்து + இரண்டு > பத் + இரண்டு > பன் + இரண்டு = பன்னிரண்டு
1. நிலைமொழியில் முதல் எழுத்தைத் தவிர ஏனைய எழுத்துகள் கெடும்.
2. அவ்வாறு கெட்டபின் வருமொழி முதலில் உயிர் வந்தால் வகர மெய் மிகும்; வருமொழி முதலில் மெய்வந்தால் வந்த மெய் மிகும்.
சான்று:
ஒன்று + ஒன்று > ஒ + ஒன்று > ஒ + வ் + ஒன்று = ஒவ்வொன்று
எட்டு + எட்டு > எ + எட்டு > எ + வ் + எட்டு = எவ்வெட்டு
இச்சான்றுகளில் நிலைமொழியில் வரும் ஒன்று, எட்டு என்னும் எண்ணுப்பெயர்களில் முதல் எழுத்துத் தவிர ஏனைய எழுத்துகள் கெட்டு, வருமொழி முதலில் உயிர் வந்ததால் வகர மெய் மிக்கது. மெய் வந்ததால், வந்த அந்த மெய்யே மிக்கது.
மூன்று + மூன்று > மூ + மூன்று > மூ + ம் + மூன்று = மும்மூன்று
பத்து + பத்து > ப + பத்து > ப + ப் + பத்து = பப்பத்து
இச்சான்றுகளில் நிலைமொழியில் வரும் மூன்று, பத்து என்னும் எண்ணுப்பெயர்களில் முதல் எழுத்துத் தவிர ஏனைய எழுத்துகள் கெட்டு, வருமொழி முதலில் மெய்வந்ததால், வந்த அந்த மெய்யே மிக்கது.
பத்து வரையிலான எண்ணுப்பெயர்களும், நூறு, ஆயிரம் என்னும் எண்ணுப்பெயர்களும், பிற எல்லா எண்ணுப்பெயர்களும் தோன்றுவதற்கு அடிப்படையாக உள்ளன.
அளவைப் பெயர்களும், பிற பெயர்களும் வருமொழியில் வந்தால் ஒன்று, இரண்டு என்னும் எண்ணுப்பெயர்கள் முதல் குறில் நீளும். மூன்று, ஆறு, ஏழு என்பன முதல் நெடில் குறுகும். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, எட்டு என்பன ஈற்று உயிர்மெய் கெடும். ஏழு என்பதில் ஈற்றில் உள்ள உகர உயிர் கெடும். இது எண்ணுப்பெயர்ப் புணர்ச்சிக்குப் பொதுவிதியாகும்.
ஒன்று, இரண்டு என்பன வருமொழி முதலில் உயிர் வரும்போது முறையே ஓர், ஈர் எனவும், வருமொழி முதலில் மெய்வரும்போது முறையே ஒரு, இரு எனவும் மாறும்.
மூன்று என்பதில் உள்ள னகரமெய் உயிர்வந்தால் கெடும்; மெய்வந்தால் வருகின்ற மெய்யாகத் திரியும்.
நான்கு என்பதில் உள்ள னகரமெய் உயிரும் இடையினமும் வரும்போது லகர மெய்யாகவும், வல்லினம் வரும்போது றகர மெய்யாகவும் திரியும்.
ஐந்து என்பதில் உள்ள நகரமெய் மெல்லினம் வரும்போது வருகின்ற மெய்யாகவும், வல்லினம் வரும்போது அதற்கு இனமெய்யாகவும் திரியும்; பிறவரின் கெடும்.
எட்டு என்பதில் உள்ள டகரமெய் ணகர மெய்யாகத் திரியும்.
ஒன்பதின் முன்னர்ப் பத்தும் நூறும் வந்து புணர்வதால் முறையே தொண்ணூறு, தொள்ளாயிரம் என்னும் எண்ணுப்பெயர்கள் அமைகின்றன.
எட்டு வரையிலான எண்ணுப்பெயர்களோடு வருமொழியில் பத்து என்பது வந்து புணரும்போது, அதன் இடையில் உள்ள தகரமெய் கெடும்.
பத்து, ஒன்பது என்னும் எண்ணுப்பெயர்கள் மற்ற எண்ணுப்பெயர்களோடும் பிறபெயர்களோடும் புணரும்போது இன், இற்று ஆகிய சாரியைகளில் ஏதேனும் ஒன்றை ஏற்கும். அப்போது பத்து என்பதன் இடையில் உள்ள தகர மெய் கெடும்.
இவையாவும் எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி பற்றிய சிறப்பு விதிகளாகும். இவற்றையெல்லாம் இப்பாடத்தின் வாயிலாக விரிவாக அறிந்து கொண்டோம்.