110

5.7.2 போலித் துறவியர்

துறவற வாழ்வைச் சரியாகப் பின்பற்றாமல் வாழ்கின்ற துறவியரைப் போலித்துறவியர் என்கிறோம் .

நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை

கஞ்சுகம் அன்று ; பிறிதுஒன்றே - கஞ்சுகம்

எப்புலமும் காவாமே , மெய்ப்புலம் காக்கும் ; மற்று

இப்புலமும் காவாது இது ( 92 )

( புறம்பா = துறவற எண்ணம் இல்லாமல் , கஞ்சுகம் = ஆடை , பிறிது = வேறானது )

மனத்தில் துறவற எண்ணம் இல்லாமல் உடலில் மட்டும் துறவறத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொண்டு வாழ்கின்றவர்கள் போலித் துறவியர் .

இந்தப் போலித் துறவியர் அணிந்துள்ள ஆடைகளால் அவர்களின் எந்தப் புலனையும் காக்க இயலாது .

எனவே துறவற வாழ்க்கை என்பது மனத்தில் வரவேண்டிய ஒன்று என்பதைத் துறவியர் புரிந்துகொள்ள வேண்டும் என்று குமரகுருபரர் உணர்த்தியுள்ளார் .

5.7.3 புகழ் விரும்பும் துறவியர்

ஒருவன் தனது செயலைத் தானே வியந்து புகழ்தலைத் தற்புகழ்ச்சி என்கிறோம் .

தன்னைத்தானே புகழ்வதால் யாருக்கும் புகழ்ச்சி வந்து சேராது .

ஒருவனது செயலாற்றும் திறத்தாலும் பண்பாலுமே புகழ் வந்து சேரும் .

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்

நல்நீர் சொரிந்து வளர்த்தற்றால் - தன்னை

வியவாமை அன்றே வியப்பு ஆவது இன்று

நயவாமை அன்றே நலம் ( 18 )

( வியப்பிப்பான் = பாராட்ட விரும்பி , தற்புகழ்தல் = தன்னைப் புகழ்தல் , நயவாமை = புகழாமை , நலம் = புகழ் )

நெருப்பைப் பெரிதாக எரியச் செய்ய வேண்டும் என்றால் அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும் .

தண்ணீரை ஊற்றினால் நெருப்பு எரியுமா ?

எரியாது .

மாறாக அணைந்து போகும் .

அது போல ஒருவன் தனக்குப் புகழ் வரவேண்டும் என்று விரும்பித் தன்னைப் புகழ்ந்தால் அவனுக்குப் புகழ்ச்சி வந்து சேராது .

சமுதாயத்தில் வாழ்கின்ற ஒரு மனிதனிடம் தற்புகழ்ச்சி செய்யும் இயல்பு இருந்தால்கூட ஓரளவு மன்னிக்கலாம் .

ஆனால் இந்தத் தற்புகழ்ச்சி இயல்பு துறவியரிடம் இருந்தால் அவர்கள் செய்யும் நல்ல செயல்களும் தீய செயல்களாகவே முடியும் .

விலக்கிய ஓம்பி , விதித்தனவே செய்யும்

நலத்தகையர் நல்வினையும் தீதே - புலப்பகையை

வென்றனம் ; நல்ஒழுக்கின் நின்றேம் , பிறஎன்று

தம்பாடு தம்மில் கொளின் ( 17 )

( விலக்கிய ஓம்பி = விலக்கியவற்றைச் செய்யாமல் , நலத்தகையார் = துறவியர் , தம்பாடு தம்மில் கொளின் = தமது துறவின் பெருமையை எண்ணினால் )

என்னும் நீதிநெறிவிளக்கப் பாடல் , துறவியரின் தற்புகழ்ச்சியால் வரும் இழிவை விளக்குகிறது .

துறவோர் செய்யக்கூடாது என்று ஒதுக்கியவற்றை ஒதுக்கி , செய்யவேண்டும் என்று விதித்தவற்றைச் செய்வதே துறவியரின் இயல்பு .

அத்தகைய துறவியர் ‘ ஐம்புலனையும் வென்றுவிட்டோம் ’ என்று ஆணவம் கொண்டு தமது துறவின் பெருமையை எண்ணினால் அவர்கள் செய்யும் நற்செயல்களும் தீய செயல்களாகிவிடும் என்று துறவியருக்குக் குமரகுருபரர் உணர்த்தியுள்ளார் .

தெய்வம் யார் ?

அனைவராலும் தெய்வம் என்று ஒரு கடவுள் வணங்கப்பட்டாலும் இவ்வுலகில் வாழுகின்ற மக்களில் ஒவ்வொருவர்க்கு ஒவ்வொருவர் தெய்வமாக விளங்குவர் என்று மனிதருள் சிலரையும் தெய்வநிலைக்குக் குமரகுருபரர் உயர்த்தியுள்ளார் .

குலமகட்குத் தெய்வம் கொழுநனே ; மன்ற

புதல்வர்க்குத் தந்தையும் தாயும் ; அறவோர்க்கு

அடிகளே தெய்வம் ; அனைவோர்க்கும் தெய்வம்

இலைமுகப் பைம்பூண் இறை ( 26 )

( குலமகள் = குடும்பப் பெண் .

கொழுநன் = கணவன் , இலைமுகப் பைம்பூண் இறை = இலை வடிவ வேல்தாங்கிய முருகன் )

நல்ல ஒழுக்க நெறிப்பட்ட பெண்ணுக்கு அவளது கணவன் தான் தெய்வம் .

குழந்தைகளுக்கு அன்னையும் தந்தையும் தெய்வம் .

மாணவர்களுக்கு ஆசிரியர்களே தெய்வம் .

எல்லோருக்கும் இலை வடிவ வேலைக் கையில் தாங்கிய முருகனே தெய்வம் என்று குமரகுருபரர் கூறியுள்ளார் .

அன்னை , தந்தை , ஆசிரியர் , ஆண்டவன் என்று நால்வரையும் தெய்வமாகக் கருதும் மரபு மக்களிடையே காணப்படுகிறது .

ஔவையார் ‘ அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ’ என்று கொன்றை வேந்தனில் அன்னையையும் தந்தையையும் தெய்வமாகக் காட்டியுள்ளார் .

இந்த மரபை நன்கு உணர்ந்த குமரகுருபரர் அன்னை , தந்தை , ஆசிரியர் ஆகியோரைத் தெய்வமாகக் கூறி அவர்கள் உள்ளடங்கிய அனைவருக்கும் முருகனே தெய்வம் என்று முருகனை முழுமுதற் கடவுளாகக் காட்டியுள்ளார் . தொகுப்புரை

நீதி நெறிவிளக்கம் , கடவுள் வாழ்த்துச் செய்யுளுடன் நூற்று இரண்டு பாடல்களைக் கொண்டுள்ளது .

இந்த நூல் மனித வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிகளை விளக்குகிறது .

கல்வியின் சிறப்பையும் செல்வத்தின் தேவையையும் எடுத்துக் கூறுகிறது .

மனிதன் தனது விடா முயற்சியின் உதவியால் விதியையும் மாற்றி அமைக்கமுடியும் என்னும் நம்பிக்கையை இந்நூல் வாயிலாகக் குமரகுருபரர் ஊட்டுகிறார் .

செயல்திறம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பதையும் , சான்றோர்கள் கடவுளைப் போல் அனைவருக்கும் உதவி செய்வார்கள் என்பதையும் இந்நூல் தெரிவிக்கிறது .

ஆசைகளைத் துறந்து துறவியர் வாழவேண்டும் என்பதையும் அவர்கள் அறுசுவை உணவையும் தூக்கத்தையும் மிகுதியாக விரும்பக் கூடாது என்பதையும் அறியமுடியும் .

போலித் துறவியர் கொண்டுள்ள தவ வேடத்தால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்னும் உண்மையையும் நீதிநெறிவிளக்கம் தெரிவித்துள்ளது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. எந்தச் செல்வத்தால் பயன் இல்லை ?

[ விடை ]

2. எச்செயல்கள் செய்வதற்கு எளிமையானவை ?

[ விடை ]

3. சான்றோரைக் குமரகுருபரர் எதனுடன் உவமித்துள்ளார் ?

[ விடை ]

4. அனைவருக்கும் தெய்வமாகக் குமரகுருபரர் யாரைக் குறிப்பிட்டுள்ளார் ?

[ விடை ]

5. யாரைப் போலித்துறவியர் என்கிறோம் ?

நன்னெறி

பாட முன்னுரை

தமிழில் தோன்றிய அறநூல்களில் நன்னெறியும் ஒன்று .

மக்களை நல்வழிப்படுத்தும் நல்ல அறநெறிகளைக் கூறுவதால் இந்நூல் நன்னெறி எனப்படுகிறது .

இந்நூலைச் சிவப்பிரகாசர் இயற்றியுள்ளார் .

இவரைத் துறை மங்கலம் சிவப்பிரகாசர் என்றும் சிவப்பிரகாச சுவாமிகள் என்றும் அழைப்பர் .

துறைமங்கலத்தில் நெடுநாள் தங்கியிருந்ததால் அப்பெயரையும் சிவப்பிரகாசரின் பெயருடன் சேர்த்து அழைக்கின்றனர் .

திருமணம் செய்து கொள்ளாமல் இறை அடியவராகவே வாழ்ந்ததால் சிவப்பிரகாசரைச் சுவாமிகள் என்றும் அழைக்கின்றனர் .

இவரது காலம் பதினேழாம் நூற்றாண்டு .

முப்பத்திரண்டு ஆண்டுகள் மட்டுமே இம்மண்ணில் வாழ்ந்த சிவப்பிரகாசர் முப்பது நூல்கள் படைத்துள்ளார் .

இவர் படைத்துள்ள நூல்கள் முழுவதையும் நீங்கள் இணைய நூலகத்தில் பார்த்துப் படிக்கலாம் .

இந்தப் பாடத்தில் அவர் இயற்றிய நன்னெறியில் இடம்பெற்றுள்ள அறக் கருத்துகளை மட்டும் பார்ப்போம் .

நன்னெறி என்னும் இந்நூல் நாற்பது பாடல்களைக் கொண்டது .

இந்நூலில் உள்ள பாடல்களைச் சிவப்பிரகாசர் முதலில் கடற்கரையில் உள்ள மணலில் எழுதினார் .

பின்னர் அவருடைய மாணவர்கள் அவற்றை ஏடுகளில் எழுதினார்கள் என்று இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

இப்பாடல்கள் ‘ மகடூஉ முன்னிலை ’யாக அதாவது ஒரு பெண்ணை அழைத்துக் கூறுவது போல அமைந்துள்ளன .

நட்பு

இருவர்க்கு இடையே ஏற்படும் தொடர்புகளில் மிகவும் பெருமை உடையதாகக் கருதப்படுவது நட்பு ஆகும் .

நட்பின் பெருமையைச் சங்க காலத்திலிருந்தே நாம் காணமுடிகிறது .

பாரிக்கும் கபிலருக்கும் இடையே இருந்த நட்பும் , அதியமானுக்கும் ஒளவையாருக்கும் இடையே இருந்த நட்பும் , கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் இடையே இருந்த நட்பும் அனைவரும் அறிந்த நட்பு ஆகும் .

நட்பின் பெருமையைத் திருக்குறள் ,

செயற்குஅரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்குஅரிய யாவுள காப்பு ( 781 )

என்று கூறியுள்ளது .

திருக்குறள் நல்ல நட்புக் கிடைப்பதை மிகவும் அரியது என்று குறிப்பிட்டுள்ளது .

அந்த நல்ல நட்புக் கிடைத்துவிட்டால் அந்த நட்பே ஒருவனுடைய செயலுக்குச் சிறந்த பாதுகாப்பாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது .

6.1.1 நல்லவர் நட்பும் தீயவர் நட்பும்

நல்லவர் நட்பு எப்படிப் பட்டது , தீயவர் நட்பு எப்படிப்பட்டது என்பதைச் சிவப்பிரகாசர் பின்வரும் பாடலில் தெளிவுபடுத்தியுள்ளார் .

நல்லார் செயும்கேண்மை நாள்தோறும் நன்றாகும்

அல்லார் செயும்கேண்மை ஆகாதே - நல்லாய்கேள்

காய்முற்றின் தின்தீங் கனியாம் இளம்தளிர்நாள்

போய்முற்றின் என்ஆகிப் போம் ( 38 ) ( கேண்மை = நட்பு , அல்லார் = நண்பர் அல்லாதவர் .

ஆகாது = உதவாது , நல்லாய் = பெண்ணே )

காயானது முற்றினால் தின்பதற்குப் பயன்படும் இனிய கனியாகும் .

இளம்தளிர் முற்றினால் அது சருகாகிப் பயன்படாமல் போகும் .

இவை போன்றே நல்லவர் நட்பு நாள்தோறும் நன்கு வளர்ந்து நன்மையைத் தரும் .

தீயவர் நட்பு நாள்தோறும் தேய்ந்து துன்பம் தருவதாகவே இருக்கும் என்று சிவப்பிரகாசர் குறிப்பிட்டுள்ளார் .

இந்தப் பாடலில் நல்லவர் நட்பிற்கு உவமையாகக் காய் முற்றி , கனி ஆவதையும் தீயவர் நட்பிற்கு உவமையாக இலை முற்றி , சருகு ஆக மாறுவதையும் உணர்த்தியுள்ள பாங்கு உணர்ந்து இன்புறத்தக்கது .

நட்பு என்பது ஒன்று .

அதில் நன்மை தருவது ஒருவகையாகவும் தீமையைத் தருவது இன்னொரு வகையாகவும் அமைந்துள்ளதைக் காண்கிறோம் .

அது போன்றே செடி என்பது ஒன்று தான் .

அதில் உள்ள காய் முற்றினால் கனியாகப் பயன்தருகிறது .

அதில் உள்ள இலை முற்றினால் சருகாகிப் பயனற்றுப் போகிறது என்று ஒரே பொருளை அடிப்படையாகக் கொண்டு உவமை அமைத்துள்ள தன்மையைக் காணமுடிகிறது .

6.1.2 தீய நட்பு

நல்லவருடன் கொண்டுள்ள நட்பையும் தீயவருடன் கொண்டுள்ள நட்பையும் குறிப்பிட்டுள்ள சிவப்பிரகாசர் , தீயவர் நட்பு எப்படிப் பட்டது என்பதை மட்டும் பின்வரும் பாடலில் தெரிவித்துள்ளார் .

கற்றுஅறியார் செய்யும் கடுநட்பும் தாம்கூடி

உற்றுழியும் தீமைநிகழ்வு உள்ளதே - பொற்றொடீ

சென்று படர்ந்த செழுங்கொடியின் பூமலர்ந்த

அன்றே மணம் உடையதாம் ( 39 )

( கடுநட்பு = ஆழ்ந்த நட்பும் , உற்றுழி = நட்புக் கொண்ட உடனே , பொற்றொடீ = தொடி என்னும் நகையணிந்த பெண்ணே )

கொடியில் பூக்கின்ற மணமிக்க பூவானது பூத்த அன்றே வாடிவிடும் இயல்பைக் கொண்டது .

அது போல , கல்வி அறிவு இல்லாத தீயவரிடம் கொண்டுள்ள நட்பும் தோன்றிய அன்றே மறைந்துவிடும் இயல்பு உடையது என்பதை இப்பாடல் விளக்குகிறது .

நிலையற்ற நட்பை உணர்த்துவதற்கு நிலையற்ற பூவை உவமைப்படுத்தியுள்ள திறம் போற்றுதற்கு உரியது ஆகும் .

6.1.3 நட்பில் பிரிவு

இருவர் ஒன்றாகக் கலந்து நட்புக் கொண்டு வரும்போது அந்த நட்பில் பிரிவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .

ஏனெனில் பிரிவு ஏற்பட்டபின் மீண்டும் நட்புக் கொண்டாலும் அந்த நட்பில் பழைய உறுதிநிலை இருக்காது என்று நன்னெறி தெரிவித்துள்ளது .

நீக்கம் அறும்இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்

நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்

நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்

புல்லினும் திண்மைநிலை போம் ( 5 )

( நீக்கம் = விலகுதல் , நொய்து = இழிவு , புல்லினும் = சேர்ந்தாலும் , திண்மை = உறுதி )

என்னும் பாடலில் நட்பில் பிரிவு கூடாது என்பதை விளக்குவதற்கு ஓர் உவமையை அவர் தெரிவித்துள்ளார் .

நெல்லின் உட்பகுதியில் அரிசி இருக்கும் .

அதன் வெளிப்பகுதியில் அரிசிக்குப் பாதுகாப்பாய் உமி இருக்கும் .

அந்த உமியில் பிளவு ஏற்பட்டு அரிசி வெளியே வந்தபிறகு மீண்டும் அந்த உமியைப் பொருத்தி அரிசிக்குப் பாதுகாப்பைக் கொடுக்க இயலாது .

அதுபோல இருவரது நட்பில் பிரிவு ஏற்பட்டால் மீண்டும் அந்த நட்பில் பழைய உறுதிநிலை இருக்காது என்று சிவப்பிரகாசர் உணர்த்தியுள்ளார் .

எனவே நண்பர்கள் தங்களுக்குள் பிரிவு ஏற்படாமல் நட்பைக் காத்துக்கொள்ள வேண்டும் .

இன்சொல்

இனிமையான சொற்களைப் பேசுகிறவர்கள் எல்லோராலும் போற்றப்படுவார்கள் .

இன்சொல் பேசுவதன் சிறப்பை நல்வழியில் ஒளவையார் விளக்கியுள்ளார் .

அதை , இந்தத் தொகுதியில் உள்ள மூதுரையும் நல்வழியும் என்ற பாடத்தில் நீங்கள் படித்திருப்பீர்கள் .

இன்சொல் பேசுதலின் பெருமையையும் வன்சொல் பேசுவதால் ஏற்படும் இழிவையும் சிவப்பிரகாசர் எவ்வாறு கூறியிருக்கிறார் என்பதை இங்கே பார்ப்போம் .

6.2.1 வன்சொல்லும் இன்சொல்லே

கொடிய சொற்கள் பேசுகிறவர்களை யாரும் விரும்பமாட்டார்கள் ; இனிய சொற்களைப் பேசுகிறவர்களை எல்லோரும் விரும்புவார்கள் என்று கூறிய சிவப்பிரகாசரே ‘ கொடுஞ்சொல்லும் இனிய சொல்லே ’ என்று கூறியுள்ளார் .

கொடுஞ்சொல்லைச் சிவப்பிரகாசர் ஏன் இனிய சொல் என்று கூறியுள்ளார் என்பது சிந்தனைக்கு உரியது அல்லவா ?

இதற்கும் அவரே விளக்கம் தந்துள்ளார் .

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல்இனிது ஏனையவர்

பேசுற்ற இன்சொல் பிறிதுஎன்க - ஈசற்கு

நல்லோன் எறிசிலையோ நல்நுதால் ஒண்கரும்பு

வில்லோன் மலரோ விருப்பு ( 2 )

( பிறிது = வேறு , ஈசற்கு = சிவனுக்கு , நல்லோன் = சாக்கிய நாயனார் , எறிசிலை = எறிந்த கல் , கரும்பு வில்லோன் = கரும்பு வில் கொண்ட மன்மதன் , நல்நுதால் = அழகிய நெற்றியை உடைய பெண்ணே ) என்னும் பாடலில் உள்ளத்தில் கள்ளம் இல்லாமல் ஒருவர் சொல்கின்ற கொடிய சொல்லும் இன்சொல்லே என்று அவர் கூறுகிறார் .

உள்ளத்தில் கள்ளம் இல்லாதவர்கள் பிறருக்குத் தீமை செய்ய மாட்டார்கள் .

அவ்வாறு தீமை செய்யாத நல்லவர்கள் கொடிய சொல்லைச் சொல்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு காரணத்தால்தான் அவ்வாறு சொல்லியிருப்பார்கள் .

அந்தக் கொடிய சொல்லால் பிறருக்கு நன்மையே விளையும் .

மாணவனைப் பார்த்து ஆசிரியர் சொல்லுகின்ற கொடுஞ்சொல்லும் , மகனைக் கண்டிக்கும் தந்தையின் கொடுஞ்சொல்லும் உண்மையில் கொடுமையானவை அல்ல .

அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகக் கூறுபவை .

எனவே , அந்தக் கொடுஞ்சொற்களும் இன்சொற்களாகவே கருதப்படும் என்று நாம் அறிதல் வேண்டும் .

இந்தக் கருத்தை விளக்கும் வகையில் ஒரு பழமொழியும் நிலவுகிறது .

‘ மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் ’ என்பதே அப்பழமொழி .

நெல்லிக்காயை உண்ணும்போது அது முதலில் கசக்கும் .

பின்னர் அதுவே இனிக்கும் .

அதைப் போன்றே பெரியவர்கள் சொல்லும் அறிவுரையும் முதலில் நமக்கு மனக் கசப்பைத் தந்தாலும் அந்த அறிவுரைகள் நமது வாழ்க்கையில் பயன்படும்போது நமக்கு இனிப்பைத் தரும் என்பதே இப்பழமொழியின் விளக்கம் .

இந்தப் பழமொழிக்கு ஏற்பவே சிவப்பிரகாசரும் ‘ வன்சொல்லும் இன்சொல்லே ’ என்று விளக்கியுள்ளார் .

இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம்

வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய்

அதிர்வளையாய் !

பொங்காது அழல்கதிரால் தண்என்

கதிர்வரவால் பொங்கும் கடல் ( 18 )

( இருநீர் = கடல் , வியன்உலகம் = அகன்ற உலகம் ; பொன்செய் அதிர்வளையாய் = பொன்னால் செய்யப்பட்ட வளையல் அணிந்த பெண்ணே , அழல்கதிர் = சூரியன் , தண்என்கதிர் = நிலவு )

என்னும் பாடலும் இன்சொல்லின் சிறப்பை விளக்குகிறது .

இனிய சொற்களைப் பேசினால் இந்த உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள் .

வன்சொல் பேசினால் அவர்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள் என்ற உண்மையை ஓர் உவமையின் வாயிலாக நன்னெறி விளக்கியுள்ளது .

கதிரவனின் ஒளி வெப்பமானது .

அந்த வெப்பத்தில் கடலின் அலைகள் பொங்கி எழுவதில்லை .

நிலவின் ஒளி குளிர்ச்சியானதுதான் .

என்றாலும் கடலின் அலைகள் பொங்கி எழுகின்றன .

அதைப் போல வன்சொல் பேசும்போது யாரும் மகிழ்வதில்லை ; இன்சொல் பேசும்போது தான் மகிழ்ச்சி அடைகிறார்கள் .

இதில் அலை பொங்கி எழுவதை மகிழ்ச்சி பொங்குவதற்குச் சிவப்பிரகாசர் ஒப்புமைப்படுத்தியுள்ளார் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. நன்னெறியில் எத்தனை பாடல்கள் உள்ளன ?

[ விடை ]

2. நட்பில் பிரிவு கூடாது என்பதற்கு நன்னெறி கூறியுள்ள உவமையை விளக்குக .

[ விடை ]

3. எவரை யாரும் விரும்ப மாட்டார்கள் ?

[ விடை ]

4. எப்போது கடலின் அலை பொங்கி எழுகிறது ?

கல்வி

கல்விக்கு எல்லை கிடையாது .

ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் கல்வி கற்றுக் கொண்டே இருக்கலாம் .

அவ்வாறு , வாழ்நாள் முழுவதும் ஏன் கல்வி கற்க வேண்டும் ?

அப்படிக் கற்பதால் என்ன பயன் ?

என்னும் கேள்விகள் எழுகின்றன அல்லவா ?

இந்தக் கேள்விக்கு வெற்றி வேற்கையில் அதிவீரராம பாண்டியன் பதிலளித்துள்ளார் .

கல்வி கற்றவர்களை உயர்ந்த பதவிகள் தேடிவரும் என்றும் எந்தக் குடியில் பிறந்தவராக இருந்தாலும் கல்வி கற்றவர்களை அறிஞர்கள் போற்றுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார் .

அதிவீரராம பாண்டியனின் கருத்துக்கு ஏற்பவே கல்வியின் பெருமையை நன்னெறியும் தெரிவித்துள்ளது .

அவற்றை இங்கே காண்போம் .

6.3.1 உண்மைக் கல்வி

கல்வி என்பது மனிதனை முழுமையை நோக்கி அழைத்துச் செல்கிறது .

நன்கு கற்று அறிந்தவன் வீண் ஆரவாரங்களில் காலத்தை வீணாக்கமாட்டான் .

அறிவுக்கும் மனித உயிருக்கும் உதவும் உண்மைக் கல்வியையே மேலும் மேலும் கற்றுத் தெளிந்து கொண்டிருப்பான் . அப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையின் இலட்சியமாகவே கல்வியைக் கொண்டு வாழ்வார்கள் .