111

அவர்கள் கல்வியின் உண்மைப் பொருளை அறிந்தவர்கள் .

அவ்வாறு கல்வியின் உண்மைப் பொருளை அறிந்தவர்களின் முன்னால் கல்வியில் முழுமை அடையாதவர்கள் அஞ்சி ஒடுங்குவார்கள் என்று சிவப்பிரகாசர் தெரிவித்துள்ளார் .

எழுத்துஅறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்

எழுத்துஅறிவார் காணின் இலையாம் - எழுத்துஅறிவார்

ஆயும் கடவுள் அவிர்சடைமுன் கண்டஅளவில்

வீயும் சுரநீர் மிகை ( 21 )

( அறியார் = அறிவில்லாதவர் , இலை = இல்லை , அவிர் = ஒளி , வீயும் = அடங்கும் , சுரநீர் = விண்ணிலிருந்து பாயும் நீர் .

மிகை = மிகுதி )

என்னும் நன்னெறிப் பாடல் இக்கருத்தை விளக்குகிறது .

இதற்குச் சிவனது சடைமுடியையும் வானதியாகிய கங்கையையும் பயன்படுத்தியுள்ளார் .

பகீரதன் என்பவன் விண்ணுலகில் பாய்ந்து கொண்டிருந்த கங்கையை மண்ணுலகுக்குக் கொண்டு வருவதற்காகத் தவம் செய்தான் என்று ஒரு புராணக்கதை கூறுகிறது .

அதில் பகீரதனின் தவத்திற்கு ஏற்ப , விண்ணுலகக் கங்கை பூமிக்கு வந்து கொண்டிருந்தது .

அவ்வாறு வரும்போது அதன் வெள்ளப் பெருக்கு மிகுதியாக இருந்ததால் அந்தப் பெருக்கில் பூமியே மூழ்கி விடும் என்று அனைவரும் அஞ்சினார்கள் .

கங்கையின் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி உதவ வேண்டும் என்று சிவனை நோக்கி , பகீரதன் தவம் செய்தான் .

பகீரதனின் தவத்திற்கு மனம் இரங்கிய சிவபெருமான் , கங்கையின் வெள்ளப் பெருக்கைத் தனது தலையில் உள்ள சடைமுடியில் தாங்கி அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தியதாக அந்தக் கதை கூறுகிறது .

இந்தக் கதை நிகழ்வைச் சிவப்பிரகாசர் இப்பாடலில் உவமையாகப் பயன்படுத்தியுள்ளார் .

சிவபெருமானின் சடைமுடியைக் கண்டதும் ஆகாய கங்கையின் வெள்ளப்பெருக்கு அடங்குவதைப் போல் , உண்மைக் கல்வி அறிவு பெற்றவர்களைக் கண்டதும் ஆரவாரக் கல்வி அறிவு பெற்றவர்கள் அனைவரும் அடங்கி விடுவார்கள் என்று நன்னெறி விளக்குகிறது .

6.3.2 கற்றவரும் மற்றவரும்

கல்வி அறிவில் சிறந்து விளங்குகின்றவர்கள் தம்மைப்போல் கல்வி அறிவில் சிறந்தவர்களிடம் சேர்ந்து பழகும் போது அவர்களின் குணம் மேலும் சிறப்பை அடையும் .

சிறந்த கல்வி அறிவு பெற்றவர்கள் , கயவர்களிடம் சேர்ந்து பழகும் போது அவர்கள் தங்கள் கல்விப் பெருமையை இழப்பதுடன் இழிவையும் அடைகிறார்கள் .

கல்லா அறிவுஇல் கயவர்பால் கற்றுஉணர்ந்த

நல்லார் தமதுகனம் நண்ணாரே - வில்லார்

கணையில் பொலியும் கருங்கண்ணாய் !

நொய்தாம் புணையில் புகும்ஒண் பொருள் ( 25 )

( கனம் = பெருமை , நண்ணார் = அடையமாட்டார் , கணை = அம்பு , நொய்து = குறைவு )

என்னும் நன்னெறிப் பாடல் இந்தக் கருத்தை விளக்கியுள்ளது .

புணை என்பதற்குத் தெப்பம் என்று பொருள் .

தெப்பம் நீரில் மிதக்கும் இயல்புடையது .

எவ்வளவு கனமான பொருளைத் தெப்பத்தில் வைத்தாலும் அதுவும் தெப்பத்துடன் மிதக்கும் ; தனது கனத்தை இழக்கும் .

அதைப்போல , கயவர்களுடன் பழகும் கற்றவர்களும் தங்கள் பெருமையை இழப்பார்கள் .

இப்பாடல் மூலம் கற்றவர்கள் கல்வி கற்காத கயவர்களுடன் பழகினால் தங்கள் பெருமையை இழக்க நேரிடும் என்பதைச் சிவப்பிரகாசர் குறிப்பிட்டுள்ளார் .

6.3.3 கண்அளவா , விண்அளவா ?

கல்வி கற்றவர்களின் பெருமையை அவர்களது அறிவின் துணைகொண்டுதான் அறிய முடியும் .

அவ்வாறு அறிய முயலாமல் கல்வி கற்றவர்களின் உடல் அழகைக் கொண்டோ , உடை அழகைக் கொண்டோ அறிய முயன்றால் உண்மையான அறிஞர் யார் என்பதை அறிந்து கொள்ள இயலாது .

உடலின் சிறுமைகண்டு ஒண்புலவர் கல்விக்

கடலின் பெருமை கடவார் - மடவரால்

கண்அளவாய் நின்றதோ காணும் கதிர்ஒளிதான்

விண்அளவா யிற்றோ விளம்பு ( 26 )

( கடவார் = அறியார் ; விளம்பு = சொல் , மடவரால் = பெண்ணே )

என்னும் நன்னெறிப் பாடல் , உண்மை அறிஞரை அறிவதற்கு ஓர் உவமையைப் பயன்படுத்தியுள்ளது .

கதிரவனின் ஒளி நமது பார்வை செல்லும் தொலைவில் மட்டும் பரந்து உள்ளதா அல்லது விண்முழுவதும் பரந்து உள்ளதா என்று ஒரு கேள்வி கேட்கிறார் .

இந்தக் கேள்விக்கு உரிய பதிலைச் சிவப்பிரகாசர் எதிர்பார்த்துக் கேட்கவில்லை .

ஏனெனில் கதிரவனின் ஒளி , உலகம் முழுவதும் பரந்து காணப்படுவதை அனைவரும் அறிந்துள்ளார்கள் .

இது உலக உண்மை .

விண்முழுவதும் பரந்து காணப்படும் கதிரவனின் ஒளியை எவ்வாறு நமது கண்ணால் அளவிட முடியாதோ அதைப்போல , கற்றவர்களின் அறிவுத்திறத்தை நமது கண்ணால் அளவிட முடியாது .

அறிவால்தான் அளவிட முடியும் என்று நன்னெறி கூறியுள்ளது .

அறிஞர்கள்

கல்வி கற்று அடங்கியவர்களை அறிஞர்கள் என்கிறோம் .

அவர்கள் எதையும் அறிவால் அணுகுவதுடன் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் அந்த அறிவின் துணையாலேயே போக்கி விடுவார்கள் . இத்தகைய அறிவுடையவர்கள் பழி என்றால் அஞ்சுவார்கள் .

கோடி பொருள் கொடுத்தாலும் பழிநேரும் செயல்களைச் செய்ய மாட்டார்கள் .

அறிவுடையார் அன்றி அதுபெறார் தம்பால்

செறிபழியை அஞ்சார் சிறிதும் - பிறை நுதால்

வண்ணம்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக்

கண்அஞ்சு மோஇருளைக் கண்டு ( 34 )

( அது பெறார் = அறிவில்லாதார் , செறி = சேரும் , பிறைநுதால் = பிறைபோன்ற நெற்றியைக் கொண்ட பெண்ணே )

என்னும் நன்னெறிப்பாடல் , அறிவுடையவர்கள் பழிக்கு அஞ்சுவார்கள் என்பதைத் தெரிவிக்கிறது .

ஒளி பொருந்திய கண்கள் இருளைக் கண்டு அஞ்சும் .

ஒளியே இல்லாத குருட்டுக் கண்கள் ஒளியைக் காணுவதும் இல்லை .

அவை இருளைக் கண்டு அஞ்சுவதும் இல்லை .

அது போல அறிவுடையவர்கள் தம்மேல் வரும் பழியைக் கண்டு அஞ்சுவார்கள் , அறிவில்லாதவர்கள் பழியைக் கண்டு அஞ்சமாட்டார்கள் .

6.4.1 அறிஞர் வீரம்

கல்வி அறிவில் சிறந்து விளங்கும் அறிஞர்கள் வீரத்திலும் சிறந்து விளங்கினால் அது மேலும் பெருமை சேர்க்கும் , அறிஞர்கள் அறிவுத்திறத்துடன் வீரமும் பெற்று விளங்குவார்கள் என்பதை நன்னெறி தெரிவித்துள்ளது .

பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே

வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய்

மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல்

கைசென்று தாங்கும் கடிது ( 31 )

( நேரிழாய் = பெண்ணே , வியன் = பெரிய ; கடிது = விரைந்து )

என்னும் பாடலில் அறிஞர்களின் வீரம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அவர்களின் வீரமும் பிறருக்கு உதவும் பொருட்டே வெளிப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதை உணர்த்துவதற்கு ஓர் உண்மையைச் சிவப்பிரகாசர் குறிப்பிட்டுள்ளார் .

நமது உடலில் படுகின்ற அடியை விரைந்து சென்று கை தாங்கிக் கொள்ளும் .

அதைப்போல , பிறருக்கு நேரும் துன்பத்தைத் தாங்குவதற்கு அறிஞர்கள் வீரத்துடன் விரைந்து செல்வார்கள் என்று நன்னெறி கூறுகிறது .

இப்பாடலில் வீரம் என்பது , பிறர் துன்பத்தைத் தீர்ப்பது என்று பொருள் தருகிறது .

6.4.2 அறிஞர் கோபம்

அறிஞர்கள் பிறர்மீது கோபம் கொண்டாலும் அக்கோபத்தால் பிறருக்குக் கேடு எதுவும் விளைவதில்லை .

ஏனென்றால் அறிஞர்களுக்குப் பழிவாங்கும் எண்ணம் சிறிதும் இருப்பதில்லை .

மாறாக உதவும் எண்ணமே மிகுந்திருப்பதால் அவர்கள் கோபப்பட்டாலும் உதவுவார்கள் .

முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளக்

கனிவினும் நல்கார் கயவர் - நனிவிளைவில்

காயினும் ஆகும் கதலிதான் எட்டிபழுத்து

ஆயினும் ஆமோ அறை ( 28 )

( முனிவினும் = கோபப்பட்டாலும் , நல்குவர் = வழங்குவர் , நனி = நன்றாக , விளைவில் = விளையாத , எட்டி = ஒருவகைக் காய் .

அறை = சொல் )

என்னும் பாடல் அறிஞர்கள் கோபப்பட்டாலும் பிறருக்கு உதவி செய்வார்கள் என்பதை விளக்குகிறது .

வாழைக்காய் பழுத்துப் பழமாகாமல் காயாக இருந்தால் கூட உணவுப் பொருளாகி உதவும் .

ஆனால் எட்டிக்காய் பழுத்திருந்தாலும் எதற்கும் உதவாது .

அதைப்போல , அறிஞர்கள் கோபப்பட்டாலும் பிறருக்கு உதவுவார்கள் .

ஆனால் , கயவர்கள் அன்பொழுகுமாறு பேசினாலும் பிறருக்கு உதவமாட்டார்கள் என்று சிவப்பிரகாசர் பாடியுள்ளார் .

இப்பாடலில் அறிஞர்கள் உதவி செய்வதை விளக்குவதற்கு வாழைக்காயையும் கயவர்கள் உதவி செய்யமாட்டார்கள் என்பதை விளக்குவதற்கு எட்டிக் கனியையும் உவமையாக நன்னெறி காட்டியுள்ளது .

வாழைக்காய் , காயாக இருந்தாலும் உணவுக்கு உதவும் என்பதன் மூலம் அறிஞர்கள் கோபப்பட்டாலும் உதவுவார்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது .

எட்டிக்காய் பழுத்த கனியாக இருந்தாலும் எதற்கும் பயன்படாது என்பதன் மூலம் கயவர்களின் உதவாத தன்மை விளக்கப்பட்டுள்ளது .

6.4.3 அறிஞரா , மன்னனா ?

அறிஞர் உயர்ந்தவரா ?

மன்னன் உயர்ந்தவனா ?

என்ற வினாவைச் சிவப்பிரகாசர் எழுப்பியுள்ளார் .

அந்த வினாவிற்கு அவரே விடையும் தந்துள்ளார் .

அந்த விடையையும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கூறியுள்ளார் .

அந்த வினாவையும் விடையையும் உள்ளடக்கிய பாடல் இதோ இங்கே தரப்பட்டுள்ளது . பொன்அணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி

மன்னும் அறிஞரைத்தாம் மற்றுஒவ்வார் - மின்னுமணி

பூணும் பிறஉறுப்புப் பொன்னே அது புனையாக்

காணும்கண் ஒக்குமோ காண் ( 40 )

( புனையா = அணியா , ஒவ்வார் = ஒப்பாகமாட்டார் , பூணும் = அணிகலன்களை அணியும் , ஒக்குமோ = ஒப்பாகுமோ )

மன்னன் பலவகையான அணிகலன்களை அணிந்திருப்பான் .

ஆனால் அறிஞரோ அத்தகைய அணிகலன்களை அணிந்திருப்பதில்லை .

என்றாலும் மன்னனை விடவும் அறிஞரே மதிக்கப்படுவார் .

மன்னனை விடவும் அறிஞர் எப்படி மதிக்கப்படுவார் என்னும் ஐயம் நம்முள் எழுகிறது அல்லவா ?

இதே ஐயம் சிவப்பிரகாசருக்கும் எழுந்துள்ளது .

இந்த ஐயத்தை அகற்றுவதற்குச் சிவப்பிரகாசர் ஓர் உவமையைப் பயன்படுத்தியுள்ளார் பாருங்கள் .

நமது உடலில் பல உறுப்புகள் இருக்கின்றன .

இந்த உறுப்புகளில் அழகுக்காகப் பல அணிகலன்களை அணிகிறோம் .

கையில் வளையலும் விரலில் மோதிரமும் மூக்கில் மூக்குத்தியும் கழுத்தில் மாலைகளும் காதில் தோடும் காலில் கொலுசும் அணிகிறோம் .

ஆனால் கண்ணில் ஏதேனும் அணிகலனை அணிகிறோமா ?

அணிவதில்லை .

அணிகலன் எதுவும் அணியவில்லை என்று நாம் யாராவது கண்ணை இழிவாகக் கூறுவதுண்டா ?

உயர்வுபடுத்தித் தான் கூறுவோம் .

பேச்சு வழக்கில் உயர்வான பொருள்களைக் கூறுவதற்கு மட்டுமே கண்ணை உவமையாகக் கூறுவோம் .

கண்ணைப்போல் காப்பேன் , கண்ணே ,

என்றுதான் உவமைப்படுத்துகிறோம் .

எனவே , அணிகலன்களை அணிகிற உறுப்புகளை விடவும் அணிகலன்கள் எதையும் அணியாத கண்ணை உயர்வாகக் கூறுகிறோம் .

அதைப் போன்றே , பலவகையான அணிகலன்களை அணிகிற மன்னனை விட அணிகலன் எதுவும் அணியாத அறிஞரே உயர்ந்தவர் என்று அவர் கூறியுள்ளார் .

இப்போது கூறுங்கள் !

யார் உயர்ந்தவர் ?

மன்னனா , அறிஞரா ?

இந்தப் பாடலில் மேலும் ஒரு கருத்தையும் சிவப்பிரகாசர் தெரிவித்துள்ளார் .

கண் அணிகலன் எதையும் அணியவில்லை என்றாலும் கண்ணுக்கு அணிகலனாக அதன் ஒளி இருக்கிறது .

அதைப் போன்றே அறிஞரும் அணிகலன் எதையும் அணியவில்லை என்றாலும் அவருக்கு அணிகலனாக அறிவு இருக்கிறது .

இந்த இயற்கை அணிகலன்களைத் தவிர , செயற்கையாக அணியும் அணிகலன்களால் பயன் எதுவும் இல்லை என்பதும் இதன்மூலம் விளக்கப்பட்டுள்ளது .

பெரியோர்

பெருமை மிக்க செயல்களைச் செய்கிறவர்கள் பெரியோர் எனப்படுவர் .

பெரியோர்கள் நல்ல பண்புடையவர்களாக விளங்குவதால் அவர்கள் நேருக்கு நேர் புகழ்ச்சியை எதிர்பார்ப்பதில்லை .

தம்மைப் புகழ்கின்றவர்கள் என்றும் புகழாதவர்கள் என்றும் வேறுபாடு பார்ப்பதில்லை .

இவ்வாறு புகழ்ச்சியை விரும்பாமல் நல்ல பண்புகளுடன் சமுதாய நலம் கருதிச் செயல்படுகிற பெரியோர்களைச் சான்றோர்கள் என்றும் சிறப்பித்துக் கூறுகிறோம் .

பெரியோர்களின் நல்ல பண்பைப் பின்வரும் நன்னெறிப் பாடல் விளக்குகிறது .

என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்

சென்று பொருள்கொடுப்பர் , தீதுஅற்றோர் - துன்றுசுவை

பூவின் பொலிகுழலாய் !

பூங்கை புகழவோ ,

நாவிற்கு உதவும் நயந்து ( 1 )

( முகமன் = நேருக்கு நேர் புகழ்தல் , துன்று = மிகுந்த , பொலி = விளங்கும் , குழலாய் = கூந்தலைக் கொண்ட பெண்ணே , பூங்கை = அழகிய கை , நயந்து = விரும்பி )

நமது உடலுக்குத் தேவையான உணவுப் பொருள்களை நாக்குச் சுவைத்து வயிற்றுக்குள் செலுத்துகிறது .

இந்த உணவுப் பொருள்களைக் கைதான் நாக்குக்கு எடுத்துக் கொடுக்கிறது .

இவ்வாறு உணவுப் பொருள்களை நாக்குக்குத் தான் எடுத்துக் கொடுப்பதால் தன்னைப் புகழ வேண்டும் என்று கை எதிர்பார்ப்பதில்லை .

அதைப்போல , பெரியோர்களும் தம்மைப் பிறர் புகழ வேண்டும் என்று கருதாமல் உதவி செய்வார்கள் .

அவ்வாறு அவர்கள் உதவிசெய்யும் போது யார் தம்மைப் புகழ்கிறவர் என்று பார்க்காமல் தேவைப்படும் எல்லோருக்கும் உதவி செய்வார்கள் என்று பெரியோர் பெருமையைச் சிவப்பிரகாசர் பாடியுள்ளார் .

இச்செய்யுளில் நாக்கானது சுவைத்து உண்ணும் பொருட்டு நமது கை , உணவுப் பொருளை எடுத்துக் கொடுப்பது என்பது இயல்பாக நாள்தோறும் நிகழும் நிகழ்ச்சி ஆகும் .

இந்த இயல்பான நிகழ்ச்சியைப் போன்றே பெரியோர்கள் , பொருள் தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுத்து உதவுவதும் இயல்பான நிகழ்ச்சியே என்று இப்பாடல் தெரிவித்துள்ளது .

6.5.1 பெரியோர் உள்ளம் பெரியவர்கள் பிறர் படும் துன்பத்தைக் கண்டு பெரிதும் வருந்துவார்கள் .

அவர்களுக்குத் தம்மால் ஆன உதவியைச் செய்வதற்கு முயற்சி செய்வார்கள் .

இவ்வாறு பிறர் துன்பத்தைக் கண்டு பெரியோர் வருந்துவதும் இயல்பான செயல் என்று பின்வரும் பாடல் தெரிவிக்கிறது .

பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண்டு உள்ளம்

எரியின் இழுதுஆவர் என்க - தெரியிழாய்

மண்டு பிணியால் வருந்தும் பிறஉறுப்பைக்

கண்டு கலுழுமே கண் ( 20 )

( நோய் = துன்பம் , எரி = நெருப்பு , இழுது = நெய் , தெரியிழாய் = தேர்ந்தெடுக்கப் பட்ட அணிகலன்களை அணிந்த பெண்ணே , மண்டு = முற்றிய , கலுழும் = நீர் சொரியும் )

நமது உடலில் உள்ள ஏதாவது ஓர் உறுப்பில் ஏதேனும் காயம் ஏற்பட்டாலும் அக்காயத்திற்காகக் கண்கள் கண்ணீர் வடிக்கும் .

அதைப்போல , பிறரது துன்பத்தைக் கண்டு பெரியோர்கள் வருந்துவார்கள் என்பதே இப்பாடலின் பொருள் ஆகும் .

இதில் இரண்டு உவமைகள் இடம் பெற்றுள்ளன .

முதல் உவமையானது , பிறரது துன்பத்தைக் கண்டு பெரியவர்கள் படும் வருத்தத்தைக் கூறுகிறது .

இரண்டாவது உவமையானது அவர்கள் எவ்வாறு வருத்தப்படுவார்கள் என்பதை விளக்குகிறது .

முதல் உவமையின் விளக்கம் பாடலின் விளக்கத்துடன் இடம் பெற்றுள்ளது .

இனி , இரண்டாம் உவமையின் விளக்கத்தைக் காண்போமா ?

‘ நெருப்பில் இட்ட நெய் போல ’ என்பதுதான் அந்த இரண்டாம் உவமை .

நெய்யை நெருப்பில் வைத்தால் அது எவ்வாறு உருகுமோ அதைப்போல் பிறரது துன்பத்தைக் கண்டு பெரியவர்கள் உருகுவார்கள் என்பதே அதன் விளக்கம் .

இதன் மூலம் , பெரியவர்களின் உள்ளம் எவ்வளவு மென்மையானது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும் .

திருக்குறளிலும் இதே கருத்து இடம் பெற்றுள்ளது .

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

தம்நோய்போல் போற்றாக் கடை ( 315 )

என்னும் குறளே அது .

பிறர் அடையும் துன்பத்தைத் தாம் அடையும் துன்பமாக எண்ணாதவர்கள் பெற்றுள்ள அறிவினால் எந்தப் பயனும் இல்லை என்பது இக்குறள் தரும் பொருள் .

இங்கே அறிவுடையவர்களுக்குக் கூறப்பட்டுள்ள பண்பு , நன்னெறியில் பெரியவர்களுக்கு உரியதாய்க் கூறப்பட்டுள்ளது .

பிறரது துன்பத்தைக் கண்டு மனம் வருந்தும் அறிவுடையவர்களே பெரியவர்களாக மதிக்கப்படுவார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும் .

உதவி

மனிதனாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் .

ஏனென்றால் , நாம் ஏதோ ஒரு வகையில் பிறரிடம் உதவி பெற்றே வாழ்கிறோம் .

எனவே , உதவி செய்து வாழ்தல் இன்றியமையாதது ஆகும் .

உதவி செய்யாமல் சேர்த்து வைக்கும் பொருளால் பயன் எதுவும் விளைவதில்லை .

அந்தப் பொருள் வீணாகத்தான் அழியும் .

ஏனென்றால் இந்த உலகில் மனிதன் நிலையாக வாழ்வதில்லை .

எனவே மனிதன் வாழும் காலத்திலேயே தான் சேர்த்த பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்கிறார் சிவப்பிரகாசர் .

கொள்ளும் கொடும்கூற்றம் கொள்வான் குறுகுதன்முன்

உள்ளம் கனிந்துஅறம் செய்து உய்கவே - வெள்ளம்

வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்

பெருகுதற்கண் என்செய்வார் , பேசு ( 30 )

( கொள்ளும் = உயிரைப் பறிக்கும் , கூற்றம் = யமன் , குறுகுதன் முன் = வந்து சேர்வதன் முன் , உய்க = பிழைத்துக் கொள்க , அணைகோலி = அணைபோட்டு , பேசு = சொல் )

வெள்ளம் வருவதற்கு முன்பே அந்த வெள்ளத்தைத் தடுக்கும் வகையில் அணைபோட்டுவிட வேண்டும் .

வெள்ளம் வந்தபிறகு அணைபோட முயன்றால் அது முடியாது .

வெள்ளத்தின் வேகமானது அணைபோடும் போதே அடித்துச் சென்றுவிடும் .

அது போல , எமன் வந்து நமது உயிரை எடுப்பதற்கு முன்பே நாம் சேர்த்த செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து நற்பயனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நன்னெறி கூறியுள்ளது .

6.6.1 பயன்கருதா உதவி

பிறருக்கு உதவி செய்யும்போது பயனை எதிர்பார்க்காமல் நாம் உதவிசெய்ய வேண்டும் .

அவ்வாறு செய்கின்ற உதவிதான் உதவியாகக் கருதப்படும் .

பயனை எதிர்பார்த்துச் செய்வது உதவியாகாது .

இதைத் திருவள்ளுவர் ,

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்

குறியெதிர்ப்பை நீரது உடைத்து ( 221 )

என்று குறிப்பிட்டுள்ளார் . பொருளில்லாத ஏழையால் பெறும் உதவிக்குப் பதில் உதவி செய்ய இயலாது .