112

அப்படிப்பட்ட வறியவர்களுக்குச் செய்வதுதான் உதவி என்பது திருவள்ளுவரின் கருத்து .

இதைச் சிவப்பிரகாசர் ,

கைம்மாறு உகவாமல் கற்றுஅறிந்தோர் மெய்வருந்தித்

தம்மால் இயல்உதவி தாம்செய்வர் - அம்மா

முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு

விளைக்கும் வலியனதாம் மென்று ( 27 )

( கைம்மாறு = பதில் உதவி , உகவாமல் = எதிர்பார்க்காமல் , மெய்வருந்தி = உடல் வருந்துமாறு , எயிறு = பல் , வலியன = கடினமான பொருள்கள் )

என்று பாடியுள்ளார் .

கல்வி அறிவு பெற்ற அறிஞர்கள் பயனை எதிர்பார்க்காமல் பிறர்க்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள் .

இவ்வாறு அவர்கள் செய்கின்ற உதவி எதைப் போன்று இருக்கிறது என்பதையும் நன்னெறி தெரிவித்துள்ளது .

வாயில் உள்ள பல்லானது உணவுப் பொருள்களை மென்று , உணவின் சுவையை நாவிற்கு உணர்த்துகிறது .

உணவை மென்று நாவிற்குக் கொடுக்கும் பல் , பயன் எதையும் எதிர்பார்ப்பதில்லை .

அதைப்போன்றே கற்றறிந்தவர்கள் பயனை எதிர்பார்க்காமல் உதவி செய்வார்கள் என்று இப்பாடல் தெரிவிக்கிறது .

6.6.2 உதவியின் அளவு

பிறருக்கு உதவி செய்கிறவர்கள் எந்த அளவிற்கு உதவி செய்ய வேண்டும் என்பதையும் நன்னெறி கூறியுள்ளது .

பெரியவர்கள் தம்மிடம் இருக்கும் பொருளின் அளவுக்கு ஏற்ப மனம் உவந்து உதவி செய்வார்கள் .

மிகுதியாகப் பொருள் இருக்கும் போது மிகுதியாகக் கொடுத்தும் , குறைவாகப் பொருள் இருக்கும் போது குறைவாகக் கொடுத்தும் உதவுவார்கள் .

பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட்கு ஏற்ப

விருப்ப மொடுகொடுப்பர் மேலோர் - சுரக்கும்

மலையளவு நின்ற முலைமாதே மதியின்

கலையளவு நின்ற கதிர் ( 13 )

( பெருக்கம் = மிகுதி , சுருக்கம் = குறைவு , மதி = நிலவு , கலையளவு = வளர்தல் , ( தேய்தலின் அளவு )

நிலவின் அளவுக்கு ஏற்பவே நிலவின் ஒளி இருக்கும் .

அதாவது பிறைநிலவாய் இருக்கும்போது அதன் ஒளி குறைவாகவும் அது வளர வளர ஒளி மிகுதியாகவும் இருக்கும் .

அதைப்போல , பெரியவர்கள் பொருள் குறைவாக இருக்கும் போது குறைவாகவும் , பொருள் மிகுதியாக இருக்கும்போது மிகுதியாகவும் கொடுத்து உதவுவார்கள் என்று சிவப்பிரகாசர் கூறியுள்ளார் .

பெரியோர்கள் அளவு அறியாமல் உதவி செய்து பொருள் எல்லாம் தீர்ந்து விட்டாலும் தொடர்ந்து உதவி செய்து கொண்டே இருப்பார்கள் என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது .

எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்று அவன்

மைந்தர்தம் ஈகை மறுப்பரோ - பைந்தொடீஇ

நின்று பயன்உதவி நில்லா அரம்பையின் கீழ்க்

கன்றும் உதவும் கனி ( 17 )

( எந்தை = எம் தந்தை , நல்கூர்ந்தான் = வறுமை நிலை அடைந்தான் , ஈந்து = கொடுத்து , பைந்தொடி = பசும்பொன்னால் ஆன வளையல் அணிந்த பெண்ணே , அரம்பை = வாழைமரம் )

அரம்பை என்பது வாழை மரத்தைக் குறிக்கும் .

வாழை மரத்தின் இலை , பூ , காய் , பழம் , தண்டு என்று அனைத்துப் பாகங்களும் உணவாகப் பயன்படும் .

ஒரு வாழைமரத்தின் அனைத்துப் பாகங்களும் உணவாகப் பயன்பட்டு இல்லாமல் போய்விட்டாலும் அந்த வாழைமரத்தின் கீழ்வளரும் கன்றும் வளர்ந்து உணவாகப் பயன்படும் .

அதைப்போல , தந்தை தம்மிடம் இருந்த பொருளை எல்லாம் , இல்லாதவர்களுக்குக் கொடுத்து வறியவராகி விட்டார் என்று நினைத்து , அவரது மகன் பிறர்க்குக் கொடுப்பதை நிறுத்தி விடுவதில்லை .

அவனும் தன்னால் இயன்ற அளவு பிறருக்கு உதவிசெய்து வாழ்வான் என்று சிவப்பிரகாசர் தெரிவித்துள்ளார் .

இப்பாடலில் உதவி செய்து வாழ்கின்ற வள்ளல் மனப்பான்மை கொண்டவரின் குலப்பெருமை விளக்கப்பட்டுள்ளதை நாம் காணமுடிகிறது .

6.6.3 உதவி யாருக்கு ?

உதவி செய்யும் போது அந்த உதவியை உயர்ந்தோருக்குச் செய்கிறோமா , தாழ்ந்தோருக்குச் செய்கிறோமா என்று சான்றோர்கள் பார்ப்பதில்லை , உதவி தேவைப்படுபவர் வேண்டியவராக இருந்தாலும் வேண்டாதவராக இருந்தாலும் எல்லோருக்கும் கொடுத்து உதவுவார்கள் .

தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துஉயர்ந்தோர்

தம்மை மதியார் தமைஅடைந்தோர் - தம்மின்

இழியினும் செல்வர் இடர்தீர்ப்பர் அல்கு

கழியினும் செல்லாதோ கடல் ( 16 )

( இழியினும் = தாழ்ந்தவராக இருந்தாலும் , இடர் = துன்பம் , அல்கு கழியினும் = சுருங்கிய உப்பங்கழியிலும் )

கடலானது அளவில் மிகப்பெரியது .

உப்பங்கழி அளவில் சிறியது .

அளவில் பெரிய கடல்நீர் , அளவில் சிறிய உப்பங்கழியிலும் சென்று பாயும் .

அதுபோல , சான்றோர்கள் தமது உயர்வைப் பெரிதாகக் கருதாமல் , தாழ்ந்த நிலையில் இருப்பவர்களையும் தேடிப்போய் உதவி செய்வார்கள் .

இப்பாடலில் உதவி செய்வதற்கு உயர்ந்தோர் , தாழ்ந்தோர் என்னும் பேதம் பார்க்கத் தேவையில்லை என்ற கருத்து விளக்கப்படுகிறது . உதவி செய்யும் போது பேதம் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்திய சிவப்பிரகாசர் உதவி தேவைப்படுபவருக்கு உதவ வேண்டும் என்பதை அறிவித்துள்ளார் .

மேலும் அந்த உதவியைப்பெற விரும்புபவர் சமுதாயத்திற்குக் கேடு விளைவிப்பவராக இருந்தால் அத்தகையோருக்கு உதவி செய்யக்கூடாது என்பதையும் சிவப்பிரகாசர் தெரிவித்துள்ளார் .

தக்கார்க்கே ஈவர் தகார்க்குஅளிப்பார் இல்என்று

மிக்கார்க்கு உதவார் விழுமியோர் - எக்காலும்

நெல்லுக்கு இறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி

புல்லுக்கு இறைப்பரோ போய் ( 36 )

( தக்கார் = தகுதி உடையவர் , ஈவர் = கொடுப்பர் , தகார் = தகுதி இல்லாதவர் , இல் = இல்லை , மிக்கார் = நல்வழியை மீறிச் செயல்படுபவர் , உதவார் = உதவமாட்டார் , விழுமியோர் = சிறந்த குணம் உடையவர் , எக்காலும் = எந்தக் காலத்திலும் , காட்டு முளி = காட்டில் காய்ந்து கிடக்கும புல் )

என்னும் பாடலில் நல்லநெறிப்பட்டு வாழாதவர்களுக்கு உதவக்கூடாது என்பது விளக்கப்பட்டுள்ளது .

வாய்க்காலில் வருகின்ற நீரை நெற்பயிருக்கு இறைத்து ஊற்றுவார்கள் .

காட்டில் உள்ள பயனற்ற புல்லுக்கு ஊற்றுவார்களா ?

ஊற்றமாட்டார்கள் .

அதுபோல , தகுதி உடையவர்களுக்கு மட்டுமே சான்றோர்கள் உதவி செய்வார்கள் ; தீயவர்களுக்கு உதவ மாட்டார்கள் .

6.6.4 உதவி பெறுவது எப்படி ?

உதவி தேவைப்படுபவர்களுக்குச் சான்றோர்கள் தாமே முன்வந்து உதவி செய்வார்கள் .

ஆனால் உதவி செய்வதற்கு முன்வராதவர்களிடமிருந்தும் உதவி பெறவேண்டியிருந்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் சிவப்பிரகாசர் பாடியுள்ளார் .

தங்கட்கு உதவிலர்கைத் தாம்ஒன்று கொள்ளின்அவர்

தங்கட்கு உரியவரால் தாம்கொள்க - தங்கநெடும்

குன்றினால் செய்தனைய கொங்கையாய் ஆவின் பால்

கன்றினால் கொள்ப கறந்து ( 3 )

( உதவிலர் = உதவி செய்யாதவர் , கைத்தாம் = கையில் இருக்கும் பொருள் , உரியவர் = வேண்டியவர் , ஆவின் = பசுவின் )

பசுவின் பாலைக் கறக்க விரும்புபவர்கள் , முதலில் பசுவின் மடியில் கன்றைப் பால்குடிக்க விடுவார்கள் .

கன்று பால் குடித்துக் கொண்டிருக்கும் போது அதைப்பிடித்து இழுத்து அருகில் கட்டிவிட்டு , பாலைக் கறப்பார்கள் .

அவ்வாறு , கன்றை முதலில் பால் கறக்க விடவில்லை என்றால் பசுவின் மடியில் பால்சுரக்காது .

பால் சுரக்காத மடியில் இருந்து பால் கறக்க முடியாது அல்லவா ?

எனவே , பசுவின் பாலைக் கறக்க வேண்டும் என்றால் கன்றுக்குட்டி முதலில் பசுவிடம் பால் குடிப்பது அவசியம் .

அதைப்போல , உதவி செய்யாதவர் ஒருவரிடம் இருந்து உதவிபெற வேண்டும் என்றால் , அவருக்கு வேண்டியவர் மூலமாக முயற்சி செய்து உதவி பெற வேண்டும் என்று நன்னெறி வழி காட்டுகிறது .

ஆணவம்

அகந்தை , செருக்கு என்னும் சொற்கள் ஆணவத்தைக் குறிக்கும் .

ஆணவம் கொண்டவர்களைத் ‘ தலைக்கனம் பிடித்தவர்கள் ’ என்றும் கூறுவார்கள் .

ஆணவம் கொண்டவர்கள் தங்கள் ஆணவப் போக்கை அகற்றிக் கொள்ளவில்லை என்றால் வாழ்வில் இன்னல்களை அடைய நேரிடும் .

‘ நான்தான் ’ என்னும் எண்ணம் மேம்படுதலே ஆணவத்தின் தொடக்கம் .

இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றால் ‘ நானும் ’ என்னும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் .

இந்த ஆணவம் கல்வி அறிவு மிகுதியாகப் பெற்றவர்களிடமும் செல்வம் மிகுதியாகக் கொண்டவர்களிடமும் ஏற்படும் .

6.7.1 கல்விச் செருக்கு

கல்வியில் சிறந்து விளங்கி அனைவராலும் பாராட்டப்படும் நிலைக்கு வந்தவர்களில் சிலருக்குக் கல்விச் செருக்கு ஏற்படுவது உண்டு .

கற்றவர்களிடம் ஏற்படும் இந்தக் கல்விச் செருக்கைப் போக்குவதற்குச் சிவப்பிரகாசர் பின்வரும் பாடல் வாயிலாக வழிகாட்டியுள்ளார் .

கடலே அனையம்யாம் கல்வியால் என்னும்

அடலேறு அனைய செருக்குஆழ்த்தி - விடலே

முனிக்கரசு கையால் முகந்து முழங்கும்

பனிக்கடலும் உண்ணப் படும் ( 7 )

( அனையம் = போன்றவர் , அடல் ஏறு = வலிமையான ஆண் சிங்கம் , முனிக்கு அரசு = அகத்தியர் , முகந்து = மொண்டு , முழங்கும் = ஒலிக்கும் , பனிக்கடல் = குளிர்ந்த நீரைக் கொண்ட கடல் )

முனிவர்களுக்கு அரசர் என்று போற்றப்படுபவர் அகத்தியர் .

அவர் குள்ளமான உருவம் கொண்டவர் .

அந்தக் குள்ளமான உருவம் கொண்ட அகத்தியர் பெரிய கடலையே குடித்துவிட்டார் என்னும் புராணக் கருத்து இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது .

தாரகன் முதலான அசுரர்கள் கடலில் மறைந்து கொண்டு , அவ்வப்போது தேவர்கள் முதலானவர்களுக்குத் துன்பம் செய்து வந்தனர் .

அந்தக் தாரகன் முதலான அசுரர்களை வெளியேற்றுவதற்காக அகத்தியர் கடலைக் குடித்தார் என்று மச்ச புராணம் தெரிவிக்கிறது .

பெரிய கடலைக் கூட , குள்ளமான உருவம் கொண்ட அகத்தியர் குடித்துவிட்டார் .

எனவே , கடல் அளவு மிகுதியான கல்வி அறிவு உடையவன் என்று ஆணவம் கொள்ளக்கூடாது என்று நன்னெறி கூறுகிறது .

6.7.2 செல்வச் செருக்கு

கல்விச் செருக்கு எவ்வாறு மனிதனிடம் இருக்கக் கூடாதோ அதைப்போல , செல்வச் செருக்கும் ஒருவனிடம் இருக்கக் கூடாது என்பதைச் சிவப்பிரகாசர் பாடியுள்ளார் . தொலையாப் பெரும்செல்வத் தோற்றத்தோம் என்று

தலையா யவர்செருக்குச் சார்தல் - இலையால்

இரைக்கும்வண்டு ஊதும்மலர் ஈர்ங்கோதாய் மேரு

வரைக்கும்வந் தன்று வளைவு ( 14 )

மேரு என்னும் மலை புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மிகப்பெரிய மலை , இந்த மலை நூற்றுக்கணக்கான சிகரங்களைக் கொண்டது ; பொன்மலை என்று போற்றப்படுவது ; உறுதிக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படுவது .

இத்தகைய உறுதியான மேரு மலையைக் கூட , சிவபெருமான் வில்லாக வளைத்துக் கையில் தாங்கினார் .

எனவே , குறையாத செல்வத்தைக் கொண்டவன் என்று யாரும் ஆணவம் கொள்ளக்கூடாது என்று சிவப்பிரகாசர் அறிவுறுத்தியுள்ளார் .

தொகுப்புரை

நாற்பது வெண்பாக்களைக் கொண்ட நன்னெறி என்னும் இந்த நூல் மக்கள் வாழ்க்கைக்கு உரிய நல்ல நெறிகளைத் தொகுத்துக் கூறுகிறது .

நல்ல நட்பின் பெருமையையும் , நட்பில் பிரிவு கூடாது என்னும் அறிவுரையையும் சிவப்பிரகாசர் விளக்கியுள்ளார் .

இனிமையான சொற்களைப் பேசுவதால் ஏற்படும் நன்மைகளையும் கொடிய சொற்களைப் பேசுவதால் ஏற்படும் தீமைகளையும் நன்னெறி தெரிவித்துள்ளது .

மேலும் நல்ல பண்பாளர்கள் சொல்லும் வன்சொல்லும் நன்மையைத்தான் தரும் என்றும் தெரிவித்துள்ளது .

கல்வியின் சிறப்பைப் பற்றியும் , கற்றவர்களின் புறத்தோற்றத்தை வைத்து அவர்களின் அறிவுத் திறத்தை எடை போடக் கூடாது என்பதைப் பற்றியும் சிவப்பிரகாசர் கூறியுள்ளார் .

அறிஞர்களின் பெருமையையும் மன்னனை விடவும் அறிஞர்கள் மதிக்கப்படுவதையும் நன்னெறி வழியாக நாம் அறிய முடிகிறது .

பெரியோர்கள் புகழ்ச்சியில் மயங்குவதில்லை என்பதையும் , அவர்கள் பிறருக்கு ஏற்பட்ட இன்னலைக் கண்டு உள்ளம் வருந்துவார்கள் என்ற உண்மையையும் சிவப்பிரகாசர் தெரிவிக்கிறார் .

உதவி செய்து வாழ வேண்டிய தேவையையும் , உதவி செய்யும் போது பயன்கருதாமல் உதவி செய்ய வேண்டும் என்பதையும் , சமுதாயத்தில் தீயவர்களாகக் கருதப்படுகிறவர்களுக்கு உதவி செய்யக் கூடாது என்பதையும் நன்னெறி உணர்த்துகிறது .

கல்வியாலும் , செல்வத்தாலும் ஆணவம் கொள்ளக்கூடாது .

அவ்வாறு ஆணவம் கொண்டவர்கள் கல்வியையும் செல்வத்தையும் இழக்க நேரிடும் என்றும் நன்னெறி அறிவுரை கூறியுள்ளது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. கல்வியின் உண்மைப் பொருளை அறிந்தவர்களின் முன் யார் அஞ்சி ஒடுங்குவார் ?

[ விடை ]

2. இந்தப் பாடத்தில் ‘ புணை ’ என்பதற்கு எந்தப் பொருள் கூறப்பட்டுள்ளது ?

[ விடை ]

3. கல்வி கற்றவர்களின் பெருமையை எதன் துணைகொண்டு அறிய முடியும் ?

[ விடை ]

4. யாரை அறிஞர்கள் என்கிறோம் ?

[ விடை ]

5. பெரியவர்கள் எதைக்கண்டு வருந்துவார்கள் ?

சிற்றிலக்கியம் - ஓர் அறிமுகம்

பாட முன்னுரை

நண்பர்களே !

தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளைப் பற்றிப் பின்வரும் பாடங்களில் அறிய உள்ளோம் .

அதற்கு முன்னால் சிற்றிலக்கியம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா ?

இவ்வகையில் " சிற்றிலக்கியம் - ஓர் அறிமுகம் " என்ற இப்பாடப்பகுதி அமைகின்றது .

இப்பாடத்தில் சிற்றிலக்கியம் என்றால் என்ன , அதன் வகைகள் , பாகுபாடுகள் முதலியன பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளலாமா ?

இலக்கிய வகை

ஒரு மொழியில் காலம்தோறும் பல்வேறு இலக்கியங்கள் தோன்றி வளர்ந்து வருகின்றன .

இவ்வாறு , ஒரு மொழியில் காணப்படும் இலக்கியங்களை அவற்றின் அமைப்பு , உள்அடக்கம் அல்லது பொருள் , யாப்பு முதலியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்துவர் .

அவற்றை இலக்கிய வகைகள் எனலாம் .

தமிழ் மொழியிலும் பல்வேறு இலக்கியங்கள் காணப்படுகின்றன .

அவற்றைப் பொதுவாகப் பின்வருமாறு வகைப்படுத்திக் காட்டலாம் .

மேற்கண்ட பாகுபாடு மூலம் தமிழ் இலக்கிய வகைகளில் சிற்றிலக்கியம் என்பதும் ஒன்று என்பது தெரிகின்றது .

சிற்றிலக்கியம் என்று கூறுவதால் பேரிலக்கியம் என்பது என்ன வென்று உங்கள் மனத்தில் கேள்வி எழுகிறதா ?

அதற்கான விளக்கத்தைப் பின்னர் பார்க்கலாம் .

1.1.1 சிற்றிலக்கியம் - சொல்லாட்சி

நண்பர்களே !

இப்போது சிற்றிலக்கியம் என்ற சொல் எவ்வாறு வழக்கத்தில் வந்தது என்று பார்ப்போமா ?

முதன் முதலில் சிற்றிலக்கியம் என்பது பிரபந்தம் என்ற சொல்லால் வழங்கப்பட்டு வந்தது .

பிரபந்தம் என்பது சமஸ்கிருத மொழிச் சொல் ஆகும் .

பிரபந்தம் என்ற சொல்லின் பொருள்யாது ? நன்கு கட்டப்பட்டது என்பது அதன் பொருள் .

அதாவது நன்றாக இயற்றப்பட்டது என்பது பொருள் .

எல்லா வகையான இலக்கியங்களும் நன்றாக இயற்றப் பட்டவைதானே ?

பின் ஏன் குறிப்பிட்ட சில இலக்கிய வகைகளை மட்டும் குறிப்பிடப் பிரபந்தம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது என்ற சிந்தனை எழுகிறதல்லவா ?

எனவே , குறிப்பிட்ட சில இலக்கிய வகைகளைக் குறிப்பிடச் சிறு பிரபந்தம் என்று குறிப்பிட்டனர் .

காலப் போக்கில் தனித்தமிழ் ஆட்சி வலுப்பெற்றது .

அப்போது சிறு பிரபந்தம் என்பது சிற்றிலக்கியம் என்ற சொல்லால் அழைக்கப்பட்டது .

1.1.2 சிற்றிலக்கியம் - விளக்கம்

நண்பர்களே !

சிற்றிலக்கியம் என்ற சொல் எவ்வாறு ஏற்பட்டது என்று கண்டோம் .

இனி , சிற்றிலக்கியம் என்பதன் விளக்கத்தைப் பார்ப்போமா ?

காப்பியம் போல் கதைத் தொடர்ச்சி இல்லாமல் , தனித்தனி எண்ணங்கள் , தனித்தனி உணர்வுகள் , தனித்தனிப் பாடல்கள் அமைந்து ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து வருவது சிற்றிலக்கியம் என்பர் .

மேலும் பல அறிஞர்கள் சிற்றிலக்கியம் என்பது குறித்துத் தம் கருத்துகளைக் கூறியுள்ளனர் .

அவற்றைத் தொகுத்துப் பார்க்கும் போது பின்வரும விளக்கம் கிடைக்கின்றது .

சிற்றிலக்கியம் என்பது ,

1 ) இறைவன் , மன்னன் , வள்ளல் , ஞானக்குரவர் , சாதாரண மக்கள் முதலியோருள் ஒருவரைத் தலைவராகக் கொண்டு பாடப்படும் இலக்கிய வகை .

2 ) பாட்டுடைத் தலைவனின் வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டும் பாடுபொருளாகக் கொள்ளும் .

3 ) அறம் , பொருள் , இன்பம் , வீடு என்பன நான்கு உறுதிப் பொருள்கள் .

இவற்றுள் ஒன்றைப் பற்றிக்கூறும் .

4 ) குறைந்த பாடல் எண்ணிக்கையைக் கொண்டு அமையும் .

5 ) பல்வேறு வகையான யாப்பு அமைப்புகளால் பாடப்படும் .

6 ) ஒவ்வொரு சிற்றிலக்கியமும் ஒவ்வொரு வகையான யாப்பில் அமைந்திருக்கும் .

இந்த இலக்கணங்களைக் கொண்ட நூல்களே சிற்றிலக்கியங்கள் ஆகும் .

1.1.3 பேரிலக்கியம் - சிற்றிலக்கியம் வேறுபாடு

வ.எண் பேரிலக்கியம் சிற்றிலக்கியம்

1 ) பாட்டுடைத் தலைவனின்

வாழ்க்கையை

முழுமையாகக் கூறும் .

ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் கூறும் .

2 ) பாடல்களின் எண்ணிக்கை

அல்லது பாடல்களின் நீளம் மிகுதி .

பாடல் எண்ணிக்கை குறைவு .

ஆகவே குறுகிய அளவு உடையது .

3 ) அறம் , பொருள் , இன்பம் , வீடு

ஆகிய நான்கு பொருள்

பற்றியது .

ஏதேனும் ஒரு பொருள் பற்றியது .

1.1.4 சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை

பாட்டியல் நூல்கள் சிற்றிலக்கிய வகைகளின் இலக்கணத்தைக் கூறுகின்றன .

பாட்டியல் நூல்கள் என்றால் என்ன என்ற வினா உங்களிடையே எழலாம் .

அதற்கான விளக்கத்தைக் கீழே பார்க்கலாம் .

பாட்டு + இயல் = பாட்டியல் .

பாட்டு என்றால் செய்யுள் என்று பொருள் .

இயல் என்றால் இயல்பு என்பது பொருள் .

எனவே பாட்டின் இயல்புகளை அல்லது இலக்கணங்களை வரையறுத்துக் கூறும் நூல்கள் பாட்டியல் நூல்கள் ஆகும் .

சிற்றிலக்கிய வகைகளின் இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்கள் கீழே தரப்படுகின்றன .

பன்னிரு பாட்டியல்

வெண்பாப் பாட்டியல்

நவநீதப் பாட்டியல்

பிரபந்த மரபியல் சிதம்பரப் பாட்டியல்