12

புணர்ச்சி - 2

பாடம் - 1

மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் – I

1.0 பாட முன்னுரை

நன்னூலார் எழுத்திலக்கணத்தைப் பன்னிரு வகையாகப் பிரித்துக் கொண்டார். அவற்றுள் இறுதி வகையாகிய புணர்ச்சியை உயிர் ஈற்றுப் புணரியல், மெய் ஈற்றுப் புணரியல், உருபு புணரியல் என்னும் மூன்று இயல்களாகப் பிரித்து விளக்குகிறார். உயிர் ஈற்றுப் புணரியலில் அவர் கூறியுள்ள புணர்ச்சி விதிகளை இதற்கு முந்தைய பாடங்களில் பார்த்தோம். இனி, மெய் ஈற்றுப் புணரியலில் அவர் கூறும் புணர்ச்சி விதிகளைப் பார்ப்போம்.

மொழிக்கு இறுதியில் வல்லின மெய்கள் வாரா. மெல்லின மெய்களுள் ஙகரம் நீங்கிய ஏனைய ஐந்தும், இடையின மெய்கள் ஆறுமாக மொத்தம் பதினொரு மெய்கள் மொழிக்கு இறுதியில் வரும். இப்பதினொரு மெய்களும் நிலைமொழியின் இறுதியில் நின்று, வருமொழி முதலில் வரும் உயிர்களோடு புணரும் முறையைப் பொது விதிகள் கொண்டு நன்னூலார் விளக்குகிறார்; பின்னர், வருமொழி முதலில் வரும் மெய்களோடு புணரும் முறையைச் சிறப்பு விதிகள் கொண்டு மெய் ஈற்றுப் புணரியலில் விளக்கிக் காட்டுகிறார். அவற்றை இப்பாடத்திலும், இதனைத் தொடர்ந்து வரும் இரண்டு பாடங்களிலும் காண்போம்.

இப்பாடத்தில் மெய்யின் முன்னர் உயிர்வந்து புணர்வது பற்றி நன்னூலார் குறிப்பிடும் பொதுவிதிகள் முதலில் விளக்கிக் காட்டப்படுகின்றன. அதனை அடுத்து ணகர, னகர ஈறுகளுக்கு அவர் கூறும் சிறப்பு விதிகள் விளக்கிக் காட்டப்படுகின்றன.

1.1 மெய் ஈற்றின் முன் உயிர்வந்து புணர்தல்

நிலைமொழியின் இறுதியில் நிற்கும் எல்லா மெய்களின் முன்னும் உயிர்வந்து புணர்தல் பற்றி நன்னூலார் இரண்டு பொதுவிதிகளைக் கூறுகிறார். அவை மெய்யின் மேல் உயிர் வந்து ஒன்றுதல், தனிக்குறில் முன் நின்ற மெய், உயிர்வரின் இரட்டுதல் என்பனவாம்.

1.1.1 மெய்யின் மேல் உயிர் வந்து ஒன்றுதல் நிலைமொழியின் இறுதியில் நிற்கும் மெய்யின்மேல், வருமொழியின் முதலில் உள்ள உயிர் வந்து கூடி உயிர்மெய்யாக மாறும். இவ்வாறு மாறுவது விகாரப் புணர்ச்சி அன்று; இயல்பு புணர்ச்சி ஆகும்.

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (நன்னூல், 204)

(உடல் – மெய் எழுத்து; உயிர் – உயிர் எழுத்து ; ஒன்றுவது – கூடுவது)

சான்று:

உயிர் + எழுத்து = உயிரெழுத்து

வேல் + எறிந்தான் = வேலெறிந்தான்

(உயிரெழுத்து – உயிராகிய எழுத்து. இருபெயரொட்டுப் பண்புத்தொகை. அல்வழிப் புணர்ச்சி; வேலெறிந்தான் – வேலை எறிந்தான். இரண்டாம் வேற்றுமைத் தொகை. வேற்றுமைப் புணர்ச்சி)

இச்சான்றுகளில் நிலைமொழியின் இறுதியில் நிற்கும் ர், ல் என்னும் மெய்களோடு, வருமொழியின் முதலில் உள்ள எ என்னும் உயிர் வந்து கூடி, முறையே ரெ, லெ என்று உயிர்மெய்களாக மாறியிருப்பதைக் காணலாம். இம்மாற்றம் இயல்பாக நிகழ்ந்திருப்பதால் நன்னூலார் நூற்பாவில் ‘இயல்பே’ என்று கூறினார்.

1.1.2 தனிக்குறில் முன் நின்ற மெய் உயிர்வரின் இரட்டுதல் நிலைமொழி தனிக்குறிலை அடுத்துவரும் ஒரு மெய்யைக் கொண்டதாக இருந்து, வருமொழி முதலில் உயிர்வந்தால், நிலைமொழி இறுதியில் நிற்கும் அம்மெய்யானது இரட்டிக்கும்.

தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும் (நன்னூல், 205)

(ஒற்று – மெய்)

சான்று:

மெய் + எழுத்து = மெய்யெழுத்து

பல் + உடைந்தது = பல்லுடைந்தது

முள் + இலை = முள்ளிலை

பொன் + ஆரம் = பொன்னாரம்

(மெய்யெழுத்து – மெய் ஆகிய எழுத்து. இருபெயரொட்டுப் பண்புத்தொகை; பல்லுடைந்தது – எழுவாய்த் தொடர். இவை இரண்டும் அல்வழி. முள்ளிலை – முள்ளை உடைய இலை. இரண்டாம் வேற்றுமைத் தொகை; பொன்னாரம் – பொன்னாலாகிய ஆரம். மூன்றாம் வேற்றுமைத் தொகை. இவை இரண்டும் வேற்றுமை)

இச்சான்றுகளில் தனிக்குறிலை அடுத்துவந்த ய், ல், ள், ன் என்னும் மெய்கள் வருமொழி முதலில் உயிர் வரும்போது அவை முறையே ய்ய், ல்ல், ள்ள், ன்ன் என இரட்டித்தமையைக் காணலாம்.

கண், மண், கல், பல், முள், எள், தின், பொன் போன்ற சொற்கள் தனிக்குறிலை அடுத்த மெய்யை உடையனவாய் வழங்குகின்றன. ஆனால் பேச்சுத் தமிழில் இச்சொற்களை எவரும் மெய் ஈறாக ஒலிப்பதில்லை. மெய் ஈறாக ஒலிப்பது அருகிக் காணப்படுகிறது. இச்சொற்களின் இறுதியில் உள்ள மெய்யோடு உகரம் சேர்த்துப் பேச்சுத்தமிழில் எல்லோருமே கண்ணு, மண்ணு, கல்லு, பல்லு, முள்ளு, எள்ளு, தின்னு, பொன்னு என ஒலிக்கின்றனர். உகர உயிர் சேரும்போது இச்சொற்களில் தனிக்குறிலை அடுத்து வரும் மெய்கள் இரட்டிப்பதைக் காணலாம். இவ்வாறு உகரம் சேர்த்து ஒலிப்பதில் எளிமை காணப்படுகிறது.

1.2 ணகர, னகர ஈற்றுப் புணர்ச்சி விதிகள்

இதுவரை மெய் ஈறுகளுக்கு உரிய பொதுவான புணர்ச்சி விதிகள் பற்றி நன்னூலார் கூறியனவற்றைப் பார்த்தோம். இனி நன்னூலார் மெய் ஈறுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துக்கொண்டு அவை வருமொழி முதலில் வரும் மெய்களோடு புணரும்போது அடைகின்ற மாற்றங்களைக் குறிப்பிட்டு விளக்குகிறார். மொழிக்கு இறுதியில் வரும் மெய்கள் ‘ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்’ என்னும் பதினொன்றாகும். இவற்றுள் ஞ் என்பது உரிஞ் (தேய்த்தல்) என்னும் ஒரு சொல்லிலும், ந் என்பது பொருந் (பொருநுதல் = ஒத்திருத்தல்; போல இருத்தல்) வெரிந் (முதுகு) என்னும் இரு சொற்களிலும், வ் என்பது அவ், இவ், உவ், தெவ் (பகை) என்னும் நான்கு சொற்களிலும் மட்டுமே ஈறாகும். ஆனால் இச்சொற்கள் காலப்போக்கில் வழக்கிழந்து மறைந்து போயின. ஏனைய ண், ம், ன், ய், ர், ல், ழ், ள் என்னும் எட்டு மெய்களே காலந்தோறும் பெருவாரியான சொற்களில் இறுதியாக இருந்து வருபவை ஆகும். எனவே இந்த எட்டு மெய் ஈறுகள் பற்றி நன்னூலார் கூறும் புணர்ச்சி விதிகள் மட்டுமே இங்கே விளக்கிக் காட்டப்படுகின்றன.

முதற்கண், ணகர, னகர மெய் ஈறுகள், வருமொழி முதலில் வரும் வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் மூவின மெய்களோடு புணரும்போது அடைகின்ற மாற்றங்கள் பற்றி நன்னூலார் குறிப்பிடும் புணர்ச்சி விதிகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சான்றுடன் காண்போம்.

1.2.1 ணகர, னகர ஈறுகள் இயல்பாதலும் திரிதலும் 1. நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகர, னகரங்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் முறையே டகரமாகவும், றகரமாகவும் திரியும்.

சான்று:

மண் + குடம் = மட்குடம்

சிறுகண் + களிறு = சிறுகட்களிறு

பொன் + காசு = பொற்காசு

பொன் + குடம் = பொற்குடம்

(மட்குடம் – மண்ணால் ஆகிய குடம். மூன்றாம் வேற்றுமைத் தொகை; சிறுகட்களிறு – சிறிய கண்ணை உடைய களிறு. இரண்டாம் வேற்றுமைத் தொகை; பொற்காசு – பொன்னால் ஆகிய காசு; பொற்குடம் – பொன்னால் ஆகிய குடம். இவை மூன்றாம் வேற்றுமைத் தொகை.)

இச்சான்றுகளில் வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர ணகரம் டகரமாகவும், னகரம் றகரமாகவும் திரிந்தன.

2. வேற்றுமைப் புணர்ச்சியில் ணகர, னகரங்கள் மெல்லினமும், இடையினமும் வந்தால் இயல்பாகும்.

சான்று:

மண் + மேடை = மண்மேடை

பொன் + முடி = பொன்முடி

கண் + வலி = கண்வலி

பொன் + வளையல் = பொன்வளையல்

(மண்மேடை – மண்ணால் ஆகிய மேடை; பொன்முடி – பொன்னால் ஆகிய முடி; முடி – கிரீடம்; இவை இரண்டும் மூன்றாம் வேற்றுமைத் தொகை. கண்வலி – கண்ணில் வலி. ஏழாம் வேற்றுமைத் தொகை; பொன்வளையல் – பொன்னால் ஆகிய வளையல். மூன்றாம் வேற்றுமைத் தொகை.)

இச்சான்றுகளில் வேற்றுமைப் புணர்ச்சியில் ணகர னகரங்கள் மெல்லினமும், இடையினமும் வர இயல்பாயின.

3. அல்வழிப் புணர்ச்சியில் ணகர, னகரங்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் மூவினமெய்கள் வந்தாலும் இயல்பாகும்.

சான்று:

மண் + சரிந்தது = மண் சரிந்தது

பொன் + பெரிது = பொன் பெரிது

கண் + மங்கியது = கண் மங்கியது

பொன் + மலிந்தது = பொன் மலிந்தது

கண் + வலிக்கிறது = கண் வலிக்கிறது

பொன் + வலிது = பொன் வலிது

(இவையாவும் எழுவாய்த் தொடர்)

இச்சான்றுகளில் அல்வழிப்புணர்ச்சியில் ணகர, னகரங்கள் மூவின மெய்களும் வர இயல்பாயின.

மேலே சொல்லப்பட்ட மூன்று விதிகளையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் தொகுத்துக் கூறுகிறார்.

ணன வல்லினம் வரட் டறவும், பிறவரின்

இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு; அல்வழிக்கு

அனைத்துமெய் வரினும் இயல்பு ஆகும்மே (நன்னூல், 209)

1.2.2 சில ணகர ஈற்றுப் பெயர்களுக்குச் சிறப்பு விதி 1. சாதி பற்றி வரும் பாண், உமண் என்ற பெயர்களுக்கும், கூட்டம் பற்றி வரும் அமண் என்ற பெயர்க்கும், பரண், கவண் என்ற பெயர்களுக்கும் இறுதியில் உள்ள ணகர மெய், வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் இயல்பாகும்.

(பாண் – இசை பாடுவதில் வல்ல சாதியார்; உமண் – உப்பு விற்கும் சாதியார்; அமண் – சமண சமயத்தைச் சார்ந்த கூட்டத்தார். இவர்கள் ஆடையில்லாமல் திரிவதால் அமண் எனப்பட்டனர்; பரண் – தினைப்புனம் காப்பதற்கு அதன் நடுவில் போட்டிருக்கும் மேடை; கவண் – கல் எறியும் கருவி.)

சான்று:

பாண் + சேரி = பாண்சேரி

உமண் + குடி = உமண்குடி

அமண் + சேரி = அமண்சேரி

பரண் + கால் = பரண்கால்

கவண் + கல் = கவண்கல்

(கவண்கல் – கவணில் வைத்து எறியப்படும் கல். ஏழாம் வேற்றுமைத் தொகை. மற்றவை ஆறாம் வேற்றுமைத் தொகை)

2. உணவுப்பொருளாகிய எள் என்பதைக் குறிக்கும் எண் என்ற பெயர்க்கும், ஒன்பது அங்குல அளவுள்ள சாண் என்ற நீட்டல் அளவைப் பெயர்க்கும் இறுதியில் உள்ள ணகர மெய், அல்வழிப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் டகரமாகத் திரியும்.

சான்று:

எண் + சிறிது = எட்சிறிது

சாண் + கோல் = சாட்கோல்

3. சாதிபற்றி வரும் பெயர்க்கும், கூட்டம் பற்றி வரும் பெயர்க்கும் இறுதியில் வரும் ணகர மெய் வேற்றுமையில் அகரச் சாரியை பெற்று வருவதும் உண்டு. (இவ்விதி நூற்பாவில் பிற என்று கூறப்படுவதால் பெறப்படுகிறது.)

சான்று:

பாண் + குடி = பாணக்குடி

அமண் + சேரி = அமணச்சேரி

இம்மூன்று, விதிகளையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் தொகுத்துத் தருகிறார்.

சாதி, குழூஉ, பரண், கவண்பெயர் இறுதி

இயல்பாம் வேற்றுமைக்கு; உணவு எண், சாண் பிற

டவ்வா கலுமாம் அல்வழி யும்மே (நன்னூல், 211)

(குழூஉ – கூட்டம்; எண் – எள் என்னும் உணவு)

1.2.3 னகர ஈற்றுச் சாதிப்பெயர்க்குச் சிறப்பு விதி னகரத்தை இறுதியில் உடைய சாதிப்பெயர், வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர, ஈறு திரியாமல் இயல்பாதலும், அகரச் சாரியை பெறுதலும் ஆகிய புணர்ச்சியைப் பெறும்.

னஃகான் கிளைப்பெயர் இயல்பும், அஃகான்

அடைவும் ஆகும் வேற்றுமைப் பொருட்கே (நன்னூல், 212)

(கிளைப்பெயர் – சாதிப்பெயர்; அஃகான் – அகரச் சாரியை; அடைவும் – பெறுதலும்)

சான்று:

எயின் + குடி = எயின்குடி

எயின் + குடி > எயின் + அ + குடி = எயினக்குடி

(எயினக்குடி – எயினரது குடி. ஆறாம் வேற்றுமைத் தொகை)

எயின் என்பது பாலை நிலத்தில் வாழும் வேட்டுவச் சாதியைக் குறிக்கும். இச்சாதிப்பெயரின் ஈற்று னகரமெய் வல்லினம் வர இயல்பானதுடன், அகரச் சாரியையும் பெற்று வந்தது.

1.2.4. மீன் என்னும் சொல்லுக்குச் சிறப்பு விதி மீன் என்னும் சொல்லின் இறுதியில் உள்ள னகரமெய், வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர, இயல்பாவதோடு, றகர மெய்யாகவும் திரியும்.

மீன் றவ்வொடு பொரூஉம் வேற்றுமை வழியே (நன்னூல், 213)

(பொரூஉம் – விகற்பமாகும்)

சான்று:

மீன் + கண் = மீன்கண் (னகரம் இயல்பானது)

மீன் + கண் = மீற்கண் (னகரம் றகரமாகத் திரிந்தது)

(மீன்கண் – மீனினதுகண். ஆறாம் வேற்றுமைத் தொகை)

1.2.5 தேன் என்னும் சொல்லுக்குச் சிறப்பு விதி தேன் என்னும் சொல், அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழிகளோடு பின் வருமாறு புணரும்.

வருமொழி முதலில் வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற மூவின மெய்கள் வந்தால் தேன் என்ற சொல்லின் இறுதியில் உள்ள னகர மெய் இயல்பாகும்.

சான்று:

அல்வழி

தேன் + சிறிது = தேன் சிறிது

தேன் + மாண்டது = தேன் மாண்டது னகரம் இயல்பானது

தேன் + யாது = தேன் யாது

(இவை மூன்றும் எழுவாய்த் தொடர்)

வேற்றுமை

தேன் + குடித்தான் = தேன் குடித்தான்

தேன் + மாட்சி = தேன் மாட்சி னகரம் இயல்பானது

தேன் + வாங்கினான் = தேன் வாங்கினான்

(தேன் குடித்தான் – தேனைக் குடித்தான்; தேன் வாங்கினான் – தேனை வாங்கினான்; இவை இரண்டும் இரண்டாம் வேற்றுமைத் தொகை. தேன்மாட்சி – தேனினது மாட்சி; இது ஆறாம் வேற்றுமைத் தொகை.)

வருமொழி முதலில் மெல்லினம் வந்தால், தேன் என்ற சொல்லின் இறுதியில் உள்ள னகர மெய் இயல்பாதலே அன்றிக் கெடுதலும் உண்டு.

சான்று:

அல்வழி

தேன் + மொழி = தேன்மொழி (னகரம் இயல்பானது)

தேன் + மொழி = தேமொழி (னகரம் கெட்டது)

(தேன்மொழி – தேன் போன்ற இனிய மொழி. உவமைத்தொகை; மொழி – சொல்)

வேற்றுமை

தேன் + மலர் = தேன்மலர் (னகரம் இயல்பானது)

தேன் + மலர் = தேமலர் (னகரம் கெட்டது)

(தேன்மலர் – தேனை உடைய மலர்; இரண்டாம் வேற்றுமைத்தொகை)

வருமொழி முதலில் வல்லினம் வந்தால், தேன் என்ற சொல்லின் இறுதியில் உள்ள னகரமெய் இயல்பாதலே அன்றிக் கெட்டு, வருமொழி முதலில் உள்ள வல்லினமோ அதற்கு இனமான மெல்லினமோ மிகுவதும் உண்டு.

சான்று:

அல்வழி

தேன் + குழம்பு = தேன்குழம்பு (னகரம் இயல்பானது)

தேன் + குழம்பு = தேக்குழம்பு (னகரம் கெட்டு, வல்லினம் மிக்கது)

தேன் + குழம்பு = தேங்குழம்பு (னகரம் கெட்டு, மெல்லினம் மிகுந்தது)

(தேன்குழம்பு – தேன் ஆகிய குழம்பு. இருபெயரொட்டுப் பண்புத்தொகை)

வேற்றுமை

தேன் + குடம் = தேன்குடம் (னகரம் இயல்பானது)

தேன் + குடம் = தேக்குடம் (னகரம் கெட்டு வல்லினம் மிக்கது)

தேன் + குடம் = தேங்குடம் (னகரம் கெட்டு மெல்லினம் மிகுந்தது)

(தேன்குடம் – தேனை உடைய குடம். இரண்டாம் வேற்றுமைத் தொகை)

மேலே கூறிய மூன்று விதிகளையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

தேன்மொழி மெய்வரின் இயல்பும், மென்மை

மேவின் இறுதி அழிவும், வலிவரின்

ஈறுபோய் வலிமெலி மிகலுமாம் இருவழி (நன்னூலார், 214)

1.2.6 தன், என், நின் என்னும் சொற்களுக்குச் சிறப்பு விதி தான் என்பது படர்க்கை ஒருமை இடப்பெயர். நான் என்பது தன்மை ஒருமை இடப்பெயர். நீ என்பது முன்னிலை ஒருமை இடப்பெயர். இம்மூன்று பெயர்களும் வேற்றுமை உருபு ஏற்கும்போது, அவற்றின் முதலில் உள்ள நெடிலானது குறிலாகக் குறுகும். எனவே, இவற்றை நெடுமுதல் குறுகும் பெயர்கள் என்பர்.

தான் + ஐ = தன்னை

நான் + ஐ = என்னை

நீ + ஐ = நின்னை

தன், என் எனும் நெடுமுதல் குறுகிய இடப்பெயர்களின் ஈற்றில் உள்ள னகரம், வல்லினம் வந்தால் ‘ணன வல்லினம் வரட் டறவும்’ என்ற விதிப்படி றகரமாகத் திரிதலும், அவ்விதியை ஏற்காது இயல்பாதலும் உண்டு.

சான்று:

தன் + பகை = தற்பகை, தன்பகை

என் + பகை = எற்பகை, என்பகை

(தற்பகை, தன்பகை – தனது பகை ; எற்பகை, என்பகை – எனது பகை; இவை ஆறாம் வேற்றுமைத் தொகை)

நின் என்னும் நெடுமுதல் குறுகிய இடப்பெயரின் ஈற்றில் உள்ள னகரம், வல்லினம் வந்தால் திரியாமல் இயல்பாகும்.

சான்று:

நின் + பகை = நின்பகை

(நின்பகை – நினது பகை. ஆறாம் வேற்றுமைத் தொகை)

1.3 தொகுப்புரை

இதுகாறும் மெய்ஈற்றின் முன் உயிர் வந்து புணரும் பொதுவிதிகள் பற்றியும், ணகர னகர ஈற்றுச் சிறப்பு விதிகள் பற்றியும் நன்னூலார் கூறியனவற்றைப் பார்த்தோம். ஈண்டு அவற்றைச் சுருக்கமாகத் தொகுத்துக் காண்போம்.

நிலைமொழியின் இறுதியில் நிற்கும் மெய்யின்மேல், வருமொழியின் முதலில் உள்ள உயிர் வந்து கூடி உயிர்மெய்யாக மாறும். தனிக்குறிலை அடுத்து வரும் மெய், வருமொழி முதலில் உயிர்வந்தால் இரட்டிக்கும்.

நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகர, னகரங்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் முறையே டகரமாகவும், றகரமாகவும் திரியும்; மெல்லினமும், இடையினமும் வந்தால் இயல்பாகும். அல்வழிப் புணர்ச்சியில் அனைத்து மெய்களும் வந்தாலும் இயல்பாகும்.

பாண், உமண், அமண், பரண், கவண் போன்ற பெயர்ச்சொற்களின் இறுதியில் உள்ள ணகரமெய் வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் இயல்பாகும்; சிலவிடங்களில் அகரச் சாரியை பெறும்.

அல்வழி, வேற்றுமை என்னும் இருவகைப் புணர்ச்சியிலும் தேன் என்ற சொல், வருமொழி முதலில் மூவினமெய்கள் வந்தால், அதன் இறுதியில் உள்ள னகர மெய் இயல்பாகும்; வருமொழி முதலில் மெல்லினம் வந்தால், அதன் இறுதியில் உள்ள னகரமெய் இயல்பாதலே அன்றிக் கெடுதலும் உண்டு; வருமொழி முதலில் வல்லினம் வந்தால், அதன் இறுதியில் உள்ள னகரமெய் இயல்பாதலே அன்றிக் கெட்டு, அவ்விடத்தே வருமொழி முதலில் உள்ள வல்லினமோ அல்லது அதற்கு இனமான மெல்லினமோ மிகுவதும் உண்டு. இவற்றையெல்லாம் இப்பாடத்தின் வாயிலாக அறிந்து கொண்டோம்.

பாடம் - 2

மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் – II

2.0 பாட முன்னுரை

சென்ற பாடத்தில் ணகர, னகர ஈற்றுப் புணர்ச்சி பற்றி நன்னூலார் கூறியனவற்றைப் பார்த்தோம். இப்பாடத்தில் மகர ஈற்றுப் புணர்ச்சி பற்றியும், யகர, ரகர, ழகர ஈற்றுப் புணர்ச்சி பற்றியும் அவர் மெய் ஈற்றுப் புணரியலில் கூறுவனவற்றைப் பார்ப்போம்.

மகர மெய்யை இறுதியாகக் கொண்ட சொற்கள், வருமொழி முதலில் வரும் உயிரோடும், வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் மூவினமெய்களோடும் புணரும் முறையைப் பொதுவிதியும், சிறப்பு விதியும் கொண்டு விளக்கிக் காட்டுகிறார். மேலும் நும், தம், எம், நம் என்னும் மகர ஈற்று மூவிடப்பெயர்கள், அகம் என்ற உள்ளிடப்பெயர் ஆகியன வருமொழிகளோடு புணரும் முறையைச் சிறப்பு விதிகள் தந்து விளக்குகிறார்.

யகர, ரகர, ழகர மெய்களை இறுதியாகக் கொண்ட சொற்கள் வருமொழி முதலில் வரும் வல்லின மெய்களோடு புணரும் முறையைப் பொது விதி கொண்டு விளக்கிக் காட்டுகிறார். மேலும், தமிழ், தாழ், கீழ் என்னும் ழகர ஈற்றுச் சொற்கள் வருமொழிகளோடு புணரும் முறையைச் சிறப்பு விதிகள் கொண்டு விளக்கிக் காட்டுகிறார். இவற்றை எல்லாம் இப்பாடத்தில் ஒன்றன்பின் ஒன்றாகக் காண்போம்.

2.1 மகர ஈற்றுப் புணர்ச்சி விதிகள்

மகர மெய்யை ஈற்றிலே கொண்ட சொற்கள், ஈற்றிலே உள்ள மகரமெய் கெட்டு உயிர் ஈறாய் நின்றும், ஈற்றிலே உள்ள மகர மெய் கெடாமல் நின்றும் வருமொழிகளோடு புணரும் முறையைப் பொது விதி கொண்டும், சிறப்பு விதி கொண்டும் நன்னூலார் விளக்கிக் காட்டுகிறார். மேலும், நும், தம், எம், நம் என்னும் மூவிடப் பெயர்கள், அகம் என்னும் இடப்பெயர் ஆகியவை வருமொழிகளோடு புணரும் முறையைச் சிறப்பு விதிகள் கொண்டு விளக்கிக் காட்டுகிறார். அவற்றை ஈண்டுக் காண்போம்.

2.1.1 மகர ஈற்றுப் புணர்ச்சி – பொதுவிதி மகர மெய் ஈற்றுப் புணர்ச்சிக்குரிய பொது விதியாக நன்னூலார் இரண்டனைக் குறிப்பிடுகிறார். அவை வருமாறு:

1. நிலைமொழியில் உள்ள மகர மெய் ஈற்றுச் சொற்கள், வருமொழியின் முதலில் வரும் உயிர், வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் நாற்கணங்களோடு புணரும்போது, இறுதியில் உள்ள மகர மெய் கெட்டு (நீங்கி), உயிர் ஈறாய் நிற்கும். அவ்வாறு நிற்கும் உயிர் ஈற்றின் முன்னர், வருமொழி முதலில் உயிர்கள் வந்தால் அவை உடம்படுமெய் பெறும்; வல்லினம் வந்தால் வருகின்ற அவ்வல்லின எழுத்து மிகும்; மெல்லினமும் இடையினமும் வந்தால் அவை இயல்பாகும்.

சான்று:

அல்வழி

இச்சான்றில் நிலைமொழியாக உள்ள பவளம் என்பது மகர மெய் ஈற்றுச்சொல். இச்சொல் வருமொழியில் இகர உயிரை முதலாகக் கொண்டு வரும் இதழ் என்ற சொல்லோடு புணரும்போது, இறுதியில் உள்ள மகர மெய் கெட்டுப் பவள என அகர உயிர் ஈறாக நின்றது. இவ்வாறு நிற்கும் அகர உயிர் ஈற்றின் முன்னர், இதழ் என்னும் வருமொழி முதலில் வந்த இகர உயிர் வகர உடம்படுமெய் பெற்றுப் பவளவிதழ் என்றாயிற்று.

(பவளவிதழ் – பவளம் போன்ற சிவந்த இதழ். உவமைத் தொகை; கமலக்கண் – கமலம் போன்ற சிவந்த கண். உவமைத்தொகை; கமலம் – தாமரை; வட்டமுகம் – வட்டமாகிய முகம். பண்புத்தொகை; பவளவாய் – பவளம் போன்ற சிவந்தவாய். உவமைத்தொகை)

வேற்றுமை

(மரவடி – மரத்தினது அடி; மரக்கிளை – மரத்தினது கிளை ; மரநார் – மரத்தினது நார்; மரவேர் – மரத்தினது வேர். இவை நான்கும் ஆறாம் வேற்றுமைத் தொகை.)

2. வருமொழி முதலில் வல்லினம் வந்தால், ஈற்று மகரமெய் கெடாமல், வருகின்ற வல்லினத்திற்கு இனமான மெல்லெழுத்தாகத் திரியும்.

சான்று:

அல்வழி

நாம் + சிறியேம் = நாஞ்சிறியேம்

நிலம் + தீ = நிலந்தீ

உண்ணும் + சோறு = உண்ணுஞ்சோறு

(நாஞ்சிறியேம் – எழுவாய்த்தொடர்; நிலந்தீ – நிலமும் தீயும். உம்மைத் தொகை; உண்ணுஞ்சோறு – செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்)

இச்சான்றுகளில் நிலைமொழி ஈற்றில் உள்ள மகரமெய் அல்வழிப் புணர்ச்சியில் கெடாமல், வருமொழி முதலில் உள்ள வல்லினத்திற்கு இனமான மெல்லெழுத்தாகத் திரிந்தது காணலாம். சகரத்திற்கு இனமெல்லெழுத்து ஞகரம் ஆகும்; தகரத்திற்கு இனமெல்லெழுத்து நகரம் ஆகும்.

வேற்றுமை

மரம் + கண்டார் = மரங்கண்டார்

அறம் + கூறவையம் = அறங்கூறவையம்

(மரங்கண்டார் – மரத்தைக் கண்டார்; அறங்கூறவையம் – அறத்தைக் கூறும் அவையம்; பழங்காலத்தில் வழக்காடும் நீதிமன்றத்திற்குரிய பெயர்; இவை இரண்டும் இரண்டாம் வேற்றுமைத் தொகை)

இச்சான்றுகளில் நிலைமொழி ஈற்றில் உள்ள மகரமெய், வேற்றுமைப் புணர்ச்சியில் கெடாமல், வருமொழி முதலில் உள்ள வல்லினத்திற்கு இனமான மெல்லெழுத்தாகத் திரிந்தது காணலாம். ககரத்திற்கு இனமெல்லெழுத்து ஙகரம் ஆகும்.

மகர ஈற்றுப் புணர்ச்சிக்குரிய இவ்விரண்டு பொது விதிகளையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

மவ்வீறு ஒற்றுஅழிந்து உயிர்ஈறு ஒப்பவும்,

வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும் (நன்னூல், 219)

(மவ்வீறு – மகரமெய் ஈறு; ஒற்று – மகரமெய்; அழிந்து – கெட்டு; உயிர்ஈறு ஒப்பவும் – உயிர் ஈற்றுச் சொற்களைப் போலப் புணர்வனவும்)

2.1.2 மகர ஈற்றுப் புணர்ச்சி – சிறப்பு விதி வேற்றுமைப் புணர்ச்சியில், வருமொழி முதலில் வல்லினம் வந்தால், நிலைமொழியின் இறுதியில் உள்ள மகர மெய் கெட்டு, வருகின்ற வல்லினமோ, அவ்வல்லினத்திற்கு இனமான மெல்லினமோ மிகும். அல்வழிப் புணர்ச்சியில் உயிரும் இடையினமும் வந்தால் இறுதியில் உள்ள மகரமெய் கெடாமல் இயல்பாகும். இதனை நன்னூலார் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

வேற்றுமை மப்போய் வலிமெலி உறழ்வும்,

அல்வழி உயிர் இடை வரின் இயல்பும் உள (நன்னூல், 220)

சான்று:

வேற்றுமை

குளம் + கரை > குள + கரை > குள + க் + கரை = குளக்கரை

குளம் + கரை > குள + கரை > குள + ங் + கரை = குளங்கரை

(குளக்கரை, குளங்கரை – குளத்தினது கரை; ஆறாம் வேற்றுமைத் தொகை)

இச்சான்றுகளில் குளம் என்ற சொல் குள என மகரம் கெட்டு நின்று, கரை என்னும் வல்லின முதல் வருமொழியோடு புணரும்போது, குளக்கரை என வல்லினம் மிக்கும், குளங்கரை என வல்லினத்துக்கு இனமான மெல்லினம் மிக்கும் புணர்ந்தமை காணலாம்.

அல்வழி

குளம் + அழகியது = குளமழகியது

ஆளும் + அரசன் = ஆளுமரசன்

மரம் + வளர்ந்தது = மரம் வளர்ந்தது

கொல்லும் + யானை = கொல்லும் யானை

(குளமழகியது, மரம் வளர்ந்தது – எழுவாய்த் தொடர்; ஆளுமரசன், கொல்லும் யானை – செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்)

இச்சான்றுகளில் உயிரும், இடையினமும் வர, ஈற்று மகரமெய் கெடாமல் இயல்பாயிற்று.

2.1.3 நும், தம், எம், நம் என்னும் சொற்களுக்குச் சிறப்பு விதி நீர் என்பது முன்னிலைப் பன்மை இடப்பெயர்; தாம் என்பது படர்க்கைப் பன்மை இடப்பெயர்; யாம், நாம் என்பன தன்மைப் பன்மை இடப்பெயர். இந்நான்கு பெயர்களும் வேற்றுமை உருபு ஏற்கும்போது, அவற்றின் முதலில் உள்ள நெடிலானது குறுகும். எனவே இவற்றை நெடுமுதல் குறுகும் பெயர்கள் என்பர்.

நீர் + ஐ = நும்மை

தாம் + ஐ = தம்மை

யாம் + ஐ = எம்மை

நாம் + ஐ = நம்மை

எனவே வேற்றுமை உருபு ஏற்கும் போது நீர், தாம், யாம், நாம் என்பன முறையே நும், தம், எம், நம் என நெடுமுதல் குறுகும் பெயர்களாக மாறும் என்பது பெறப்படும்

நும், தம், எம், நம் என்னும் நான்கு சொற்களின் இறுதியில் உள்ள மகர மெய்யானது, வருமொழி முதலில் வருகின்ற ஞகர மெய்யாகவும், நகர மெய்யாகவும் திரியும்.

நும், தம்

எம், நம் ஈறாம் மவ்வரு ஞநவே (நன்னூல், 221)

சான்று:

நும் + ஞாண் = நுஞ்ஞாண்

தம் + ஞாண் = தஞ்ஞாண்

எம் + ஞாண் = எஞ்ஞாண்

நம் + ஞாண் = நஞ்ஞாண் (ஞாண் = கயிறு)

நும் + நூல் = நுந்நூல்

தம் + நூல் = தந்நூல்

எம் + நூல் = எந்நூல்

நம் + நூல் = நந்நூல்

2.1.4 அகம் என்னும் சொல்லுக்குச் சிறப்பு விதி அகம் என்னும் இடப் பெயரின் முன் செவி, கை என்னும் சினைப்பெயர்கள் வந்தால், அச்சொல்லின் இறுதியில் உள்ள மகரமெய், வருமொழியின் முதலில் உள்ள வல்லினத்திற்கு இனமாகிய மெல்லெழுத்தாகத் திரிதலேயன்றி, அதன் நடுவில் நிற்கும் ககரமெய்யும் அதன் மேல் ஏறிய அகர உயிரும் கெடும்.

அகம்முனர்ச் செவி, கை வரின் இடையன கெடும் (நன்னூல், 222)

(முனர் – முன்னர்; இடையன – இடையில் உள்ள ‘க’ என்னும் உயிர்மெய்)

சான்று:

அகம் + கை > அகங் + கை > அங் + கை = அங்கை

அகம் + செவி > அகஞ் + செவி > அஞ் + செவி = அஞ்செவி

‘அங்கைப் புண்ணிற்கு ஆடியும் வேண்டுமோ? என்பது ஒரு பழமொழி. இதில் அகம் + கை என்பது அங்கை என வந்துள்ளது. (அங்கை – உள்ளங்கை.)

2.2 யகர, ரகர, ழகர ஈற்றுப் புணர்ச்சி விதிகள்

யகர, ரகர, ழகர மெய்களை ஈற்றிலே கொண்ட சொற்கள் நிலைமொழியில் இருக்கும்போது அவற்றோடு, வருமொழி முதலில் வரும் க, ச, த, ப என்னும் வல்லின மெய்கள் அல்வழியிலும், வேற்றுமையிலும் புணரும் முறையை நன்னூலார் பொதுவிதி கொண்டு விளக்கிக் காட்டுகிறார். மேலும் தமிழ், தாழ் (தாழ்ப்பாள்), கீழ் என்னும் ழகர ஈற்றுச் சொற்கள் நிலைமொழியில் இருந்து வருமொழிகளோடு அவை புணரும் முறையை அவர் சிறப்பு விதிகள் கொண்டு விளக்கிக் காட்டுகிறார்.

2.2.1 யகர, ரகர, ழகர ஈற்றுப் புணர்ச்சி – பொதுவிதி யகர, ரகர, ழகர, ஈற்றுப் புணர்ச்சிக்குப் பொது விதியாக நன்னூலார் இரண்டனைக் குறிப்பிடுகிறார்.

யகர, ரகர, ழகர மெய் ஈறுகளின் முன்னர் வரும் க, ச, த, ப என்னும் வல்லினமெய்கள் அல்வழியில் இயல்பாதலும், மிகுதலும் பெறும்.

நன்னூலார் இங்கே ய, ர, ழ முன்னர் வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாகும் அல்லது மிகும் எனப் பொதுப்படக் கூறினாலும், வல்லினம் இயல்பாதல் எழுவாய்த் தொடர், உம்மைத் தொகை, வினைத்தொகை ஆகிய மூன்றில் மட்டுமே ஆகும்; வல்லினம் மிகுதல் வினையெச்சத் தொடர், பண்புத்தொகை, உவமைத்தொகை ஆகிய மூன்றில் மட்டுமே ஆகும்.

அல்வழியில் வல்லினம் இயல்பாதல்

சான்று:

வேய் + கடிது = வேய்கடிது எழுவாய்த் தொடர்

வேர் + சிறிது = வேர்சிறிது

வீழ் + பெரிது = வீழ் பெரிது

(வேய் – மூங்கில்; வீழ் – மர விழுது)

பேய் + பூதம் = பேய்பூதம் உம்மைத் தொகை

நீர் + கனல் = நீர்கனல்

இகழ் + புகழ் = இகழ்புகழ்

(பேய்பூதம் – பேயும்பூதமும்; நீர்கனல் – நீரும் கனலும்; கனல் – நெருப்பு; இகழ் புகழ் – இகழும் புகழும்)

செய் + தொழில் = செய்தொழில் வினைத்தொகை

தேர் + பொருள் = தேர்பொருள்

வீழ் + புனல் = வீழ்புனல்

(தேர் – ஆராய்தல்; புனல் – நீர்)

அல்வழியில் வல்லினம் மிகுதல்

சான்று:

போய் + பார்த்தான் = போய்ப்பார்த்தான் (வினையெச்சத் தொடர்)

மெய் + கீர்த்தி = மெய்க்கீர்த்தி இருபெயரொட்டுப் பண்புத்தொகை

கார் + பருவம் = கார்ப்பருவம்

பூழ் + பறவை = பூழ்ப்பறவை

(மெய் – உண்மை; கீர்த்தி – புகழ்; மெய்க்கீர்த்தி – உண்மை ஆகிய புகழ் ; கார்ப்பருவம் – கார் ஆகிய பருவம்; பூழ் – காடை; பூழ்ப் பறவை – காடை ஆகிய பறவை)

வேய் + தோள் = வேய்த்தோள் உவமைத்தொகை

கார் + குழல் = கார்க்குழல்

(வேய் – மூங்கில்; கார் – மேகம் ; குழல், கூந்தல்; வேய்த்தோள் – மூங்கில் போன்ற வழுவழுப்பான தோள்; கார்க்குழல் – மேகம் போன்ற கரிய கூந்தல்)

யகர, ரகர, ழகர மெய் ஈறுகளின் முன்னர் வரும் க, ச, த, ப என்னும் வல்லின மெய்கள் வேற்றுமையில் மிகுதலும், இனத்தோடு உறழ்தலும் பெறும். (இனத்தோடு உறழ்தலாவது ஒரே புணர்ச்சியில் வல்லினமும் மெல்லினமும் மிகுந்து வருதல் ஆகும்.)

வேற்றுமையில் வல்லினம் மிகுதல்

சான்று:

நாய் + கால் = நாய்க்கால்

தேர் + கால் = தேர்க்கால்

ஊழ் + பயன் = ஊழ்ப்பயன்

(நாய்க்கால் – நாயினது கால்; தேர்க்கால் – தேரினது கால்; கால் – சக்கரம்; ஊழ்ப்பயன் – ஊழினது பயன்; ஊழ் – விதி. இவை மூன்றும் ஆறாம் வேற்றுமைத் தொகை)

வேற்றுமையில் வல்லினம் இனத்தோடு உறழ்தல்

சான்று:

வேய் + குழல் = வேய்க்குழல், வேய்ங்குழல்

ஆர் + கோடு = ஆர்க்கோடு, ஆர்ங்கோடு

குமிழ் + கோடு = குமிழ்க்கோடு, குமிழ்ங்கோடு

(வேய் – மூங்கில்; வேய்க்குழல் – மூங்கிலால் ஆகிய குழல், புல்லாங்குழல்; ஆர் – ஆத்திமரம்; கோடு – கிளை; குமிழ் – குமிழ்மரம்; ஆர்க்கோடு – ஆத்திமரத்தினது கிளை; குமிழ்க்கோடு – குமிழமரத்தினது கிளை. இவை இரண்டும் ஆறாம் வேற்றுமைத் தொகை)

யகர, ரகர, ழகர ஈறுகளுக்குரிய இவ்விரு புணர்ச்சி விதிகளை நன்னூலார் பின்வரும் நூற்பாவில் தருகிறார்.

யரழ முன்னர்க் கசதப அல்வழி

இயல்பும் மிகலும் ஆகும்; வேற்றுமை

மிகலும், இனத்தோடு உறழ்தலும் விதிமேல் (நன்னூல், 224)

(இனத்தோடு உறழ்தல் – வல்லினமாகவும், அதற்கு இனமாகவும் மிகுந்து வருதல். இதை வல்லினம் விகற்பித்தல் என்றும் கூறுவர்.)

2.2.2 தமிழ், தாழ் என்னும் சொற்களுக்குச் சிறப்பு விதி 1. தமிழ் என்னும் ழகர மெய் ஈற்றுச் சொல் வேற்றுமைப் புணர்ச்சியில் நாற்கணங்களும் வர அகரச் சாரியை பொருந்தவும் பெறும்.

சான்று:

தமிழ் + அரசன் > தமிழ் + அ + அரசன் = தமிழவரசன்

தமிழ் + பிள்ளை > தமிழ் + அ + பிள்ளை = தமிழப்பிள்ளை

தமிழ் + நாகன் > தமிழ் + அ + நாகன் = தமிழநாகன்

தமிழ் + வளவன் > தமிழ் + அ + வளவன் = தமிழவளவன்

(தமிழப்பிள்ளை – தமிழை உடைய பிள்ளை; இரண்டாம் வேற்றுமைத் தொகை. மற்றவற்றிற்கும் இவ்வாறே வேற்றுமைப் பொருள் விரித்துக் கொள்க.)

2. தாழ் என்ற ழகர ஈற்றுச் சொல்லும், கோல் என்னும் சொல் வருமொழியில் வரும்போது அகரச்சாரியை பெறும்.

சான்று:

தாழ் + கோல் > தாழ் + அ + கோல் = தாழக்கோல்

(தாழக்கோல் – திறவுகோல்)

தமிழ் அவ்வுறவும் பெறும் வேற்றுமைக்கே;

தாழும் கோல்வந்து உறுமேல் அற்றே (நன்னூல், 226)

2.2.3 கீழ் என்னும் சொல்லுக்குச் சிறப்பு விதி கீழ் என்னும் சொல்லின் முன்னர் வரும் வல்லினம் விகற்பம் ஆகும். அதாவது ஒரே புணர்ச்சியில் வல்லினம் இயல்பாதல், மிகுதல் ஆகிய இரண்டையும் பெறும்.

கீழின்முன் வன்மை விகற்பமும் ஆகும் (நன்னூல், 226)

சான்று:

கீழ் + குலம் = கீழ்குலம், கீழ்க்குலம்

கீழ் + தெரு = கீழ்தெரு, கீழ்த்தெரு

2.3 தொகுப்புரை

இதுகாறும் மகர ஈற்றுப் புணர்ச்சி பற்றியும், யகர, ரகர, ழகர ஈற்றுப்புணர்ச்சி பற்றியும் நன்னூலார் கூறியனவற்றை விரிவாகப் பார்த்தோம். ஈண்டு அவற்றைச் சுருக்கமாகத் தொகுத்துக் காண்போம்.

மகர ஈற்றுச் சொற்கள், ஈற்றில் உள்ள மகரமெய் கெட்டு உயிர் ஈறாய் நின்று நாற்கணங்களை முதலாகக் கொண்ட வருமொழிகளோடு புணரும். அவ்வாறு உயிர்ஈறாய் நிற்கும் சொற்களின் முன்னர் வருமொழி முதலில் உயிர்கள் வந்தால் அவை உடம்படுமெய் பெறும்; வல்லினம் வந்தால் வருகின்ற வல்லினம் மிகும்; மெல்லினமும் இடையினமும் வந்தால் அவை இயல்பாகும்.

நீர், தாம், யாம், நாம் என்னும் மூவிடப் பன்மைப் பெயர்கள் புணர்ச்சியில் நும், தம், எம், நம் என நெடுமுதல் குறுகிய பெயர்களாக நின்று, வருமொழி முதலில் உள்ள ஞகர, நகர மெய்களோடு புணரும்.

அகம் என்ற சொல், செவி, கை என்னும் சொற்களுடன் புணரும்போது அச்சொல்லின் இடையில் உள்ள ‘க’ என்ற உயிர்மெய் கெடும்.

ய, ர, ழ என்னும் மெய் ஈறுகளில் முன் வரும் க, ச, த, ப என்னும் வல்லின மெய்கள் அல்வழியில் இயல்பாதலும், மிகுதலும் பெறும்; வேற்றுமையில் மிகுதலும், இனத்தோடு உறழ்தலும் பெறும்.

வேற்றுமைப் புணர்ச்சியில் தமிழ் என்ற சொல் அகரச் சாரியை பெற்றுப் புணரும். கீழ் என்னும் சொல்லின் முன் வரும் வல்லினம் இயல்பாகவும் வரும்; மிக்கும் வரும். இவற்றை எல்லாம் இப்பாடத்தின் வாயிலாக அறிந்து கொண்டோம்.

பாடம் - 3

மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் – III

3.0 பாட முன்னுரை

சென்ற இருபாடங்களில் ண், ன், ம், ய், ர், ழ் ஆகிய ஆறு மெய் ஈறுகளுக்கான புணர்ச்சி பற்றி நன்னூலார் கூறியனவற்றைப் பார்த்தோம். இப்பாடத்தில் லகர, ளகர மெய் ஈற்றுப் புணர்ச்சி பற்றி அவர் மெய் ஈற்றுப் புணரியலில் கூறுவனவற்றைப் பார்ப்போம்.

மெய் ஈற்றுப் புணரியலில் எல்லா மெய் ஈறுகளுக்கான புணர்ச்சியையும் தனித்தனியே ஒன்றன்பின் ஒன்றாகக் கூறி முடித்த பின்னர், நன்னூலார் வருமொழியின் முதலில் வரும் தகர மெய்யும் நகர மெய்யும் நிலைமொழியின் இறுதியில் வரும் ன், ண், ல், ள் ஆகிய மெய்களோடு புணரும்போது, வேறு மெய்களாகத் திரிகின்ற முறையைக் குறிப்பிட்டு விளக்குகிறார். உயிர் ஈற்றுப் புணரியலிலும் மெய் ஈற்றுப் புணரியலிலும் கூறிய புணர்ச்சி விதிகளுக்கு மாறுபட்ட சொற்புணர்ச்சிகள் சில செய்யுள் வழக்கிலும், பேச்சு வழக்கிலும் இருப்பதைக் கண்ட நன்னூலார் அவையும் ஒரு காரணம் கருதி அமைந்திருப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மெய் ஈற்றுப் புணரியலில் உள்ள இறுதி நூற்பாவில் குறிப்பிடுகிறார். இவற்றையும் இப்பாடத்தில் விளக்கமாகக் காண்போம்.

3.1 லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி விதிகள்

லகர, ளகர மெய்களை ஈற்றிலே கொண்ட சொற்கள், வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் மூவின மெய்களை முதலாகக் கொண்ட வருமொழிகளோடு புணரும் முறையைப் பொது விதி கொண்டும், சிறப்பு விதி கொண்டும் நன்னூலார் விளக்குகிறார். மேலும் நெல், செல், கொல், சொல், இல் என்னும் லகர ஈற்றுச் சொற்கள் வல்லினத்தை முதலாகக் கொண்ட வருமொழிகளோடு புணரும் முறையைச் சிறப்பு விதிகள் கொண்டு விளக்குகிறார். அவற்றை ஈண்டுக் காண்போம்.

3.1.1 லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி – பொதுவிதி லகர,ளகர மெய் ஈற்றுப் புணர்ச்சிக்குப் பொதுவிதியாக நன்னூலார் நான்கனைக் குறிப்பிடுகிறார். அவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சான்றுடன் காண்போம்.

நிலைமொழி இறுதியில் உள்ள லகர, ளகர மெய்கள், வேற்றுமைப் புணர்ச்சியில், வருமொழி முதலில் வல்லினம் (க, ச, த, ப) வந்தால் முறையே றகர மெய்யாகவும், டகர மெய்யாகவும் திரியும். அதாவது லகர மெய் றகர மெய்யாகவும், ளகரமெய் டகர மெய்யாகவும் திரியும்.

சான்று:

கல் + கோயில் = கற்கோயில்

முள் + செடி = முட்செடி

(கற்கோயில் – கல்லால் ஆகிய கோயில். மூன்றாம் வேற்றுமைத் தொகை; முட்செடி – முள்ளை உடைய செடி. இரண்டாம் வேற்றுமைத் தொகை)

அல்வழிப் புணர்ச்சியில், வருமொழி முதலில் வல்லினம் வந்தால், லகர ளகர மெய்கள் முறையே றகர மெய்யாகவும், டகர மெய்யாகவும் திரிந்தும் வரும்; திரியாமல் இயல்பாயும் வரும்.

சான்று:

கால் + பெரிது = காற்பெரிது, கால்பெரிது

முள் + சிறிது = முட்சிறிது, முள்சிறிது

(இவை அல்வழியில் எழுவாய்த் தொடர்)

இச்சான்றுகளில் ஒரே புணர்ச்சியில் லகரம் றகரமாய்த் திரிந்தும், திரியாமல் இயல்பாயும் வந்துள்ளதையும், ளகரம் டகரமாய்த் திரிந்தும், திரியாமல் இயல்பாயும் வந்துள்ளதையும் காணலாம்.

அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழி முதலில் மெல்லினம் வந்தால் லகர மெய் னகர மெய்யாகவும், ளகர மெய் ணகர மெய்யாகவும் திரியும்.

சான்று:

கல் + மனம் = கன்மனம் அல்வழி

வாள் + மாண்டது = வாண்மாண்டது

(கன்மனம் – கல் போன்ற மனம். உவமைத் தொகை; வாண் மாண்டது – வாள் மாட்சிமைப்பட்டது. எழுவாய்த்தொடர்)

தோல் + முரசு = தோன்முரசு வேற்றுமை

முள் + மலர் = முண்மலர்

(தோன்முரசு – தோலால் கட்டப்பட்ட முரசு. மூன்றாம் வேற்றுமைத் தொகை ; முண் மலர் – முள்ளை உடைய மலர். இரண்டாம் வேற்றுமைத் தொகை)

அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழி முதலில் இடையினம் வந்தால் லகர, ளகர மெய்கள் இயல்பாகும்.

சான்று:

கொல் + யானை

= கொல்யானை அல்வழி

கள் + வழிந்தது = கள்வழிந்தது

(கொல் யானை – வினைத்தொகை; கள் வழிந்தது – எழுவாய்த் தொடர்)

வில் + வளைத்தான்

= வில் வளைத்தான் வேற்றுமை

தோள் + வலிமை = தோள் வலிமை

(வில் வளைத்தான் – வில்லை வளைத்தான். இரண்டாம் வேற்றுமைத் தொகை; தோள் வலிமை – தோளினது வலிமை – ஆறாம் வேற்றுமைத் தொகை.)

லகர ளகர ஈற்றுப் புணர்ச்சிக்குரிய இந்நான்கு பொதுவிதியையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

லள வேற்றுமையில் றடவும், அல்வழி

அவற்றோடு உறழ்வும் வலிவரின் ஆம், மெலி

மேவின் னணவும், இடைவரின் இயல்பும்,

ஆகும் இருவழி யானும் என்ப (நன்னூல், 227)

(உறழ்வும் – ஒரே புணர்ச்சியில் லகர, ளகர மெய்கள் றகர, டகர மெய்களாகத் திரிந்தும், திரியாமல் இயல்பாய் வருதலும் உண்டு; வலி – வல்லினம்; மெலி – மெல்லினம்; மேவின் – வந்தால்; இடை – இடையினம்; இருவழி – அல்வழி, வேற்றுமை)

3.1.2 லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி – சிறப்பு விதி நன்னூலார் லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சிக்கு உரிய சிறப்பு விதிகள் சிலவற்றைக் குறிப்பிடுகிறார்.

தனிக்குறிலைச் சார்ந்த லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி

அல்வழிப் புணர்ச்சியில், தனிக்குறிலின் பின் நின்ற லகர, ளகர மெய்கள் வருமொழி முதலில் தகர மெய் வருமானால் முறையே றகர, டகர மெய்களாகத் திரிவதோடு அல்லாமல் ஆய்தமாகவும் திரியும்.

குறில்வழி லளத் தவ்வணையின் ஆய்தம்

ஆகவும் பெறும் அல்வழி யானே (நன்னூல், 228)

(தவ்வணையின் – த அணையின் ; அணையின் – வருமானால்)

சான்று:

கல் + தீது = கற்றீது, கஃறீது

முள் + தீது = முட்டீது, முஃடீது

இச்சான்றுகளில் வருமொழி முதலில் தகரமெய் வர, தனிக்குறிலின் பின் நின்ற லகர ளகரமெய்கள் பொதுவிதிப்படி முறையே றகர, டகர மெய்களாகத் திரிந்ததோடு மட்டும் அல்லாமல், ஆய்தமாகவும் திரிந்தன.

வருமொழி முதலில் உள்ள தகரம் லகரத்தை அடுத்து வரும்போது றகரமாகவும், ளகரத்தை அடுத்து வரும்போது டகரமாகவும் திரிவதற்கு விதி னல முன் றனவும் என்று தொடங்கும் நூற்பாவில் பின்னர்க் கூறப்படும்.

தனிக்குறிலைச் சாராத லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி

தனிக்குறிலைச் சாராத லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி பற்றி நன்னூலார் மூன்று சிறப்பு விதிகளைத் தருகிறார். கல், முள் போன்ற சொற்களில் தனிக்குறிலைச் சார்ந்து லகர ளகர மெய்கள் ஈறாக வந்தன. வேல், வாள் போன்ற சொற்களில் தனி நெட்டெழுத்தைச் சார்ந்தும், மரங்கள் போன்ற சொற்களில் பல எழுத்துகளை அடுத்தும் ல, ள இரண்டும் ஈறாக வந்தன. இத்தகைய சொற்களின் இறுதியில் வரும் லகர ளகர மெய்களே தனிக்குறிலைச் சாராத லகர ளகர மெய்கள் எனக் கூறப்படுகின்றன.

1. அல்வழிப் புணர்ச்சியில் தனிக்குறிலைச் சார்ந்து வாராத லகர, ளகர மெய்கள், வருமொழியின் முதலில் வந்த தகரம் திரிந்த பின்பு தாமும் கெடும். (லகரத்தின் முன் வரும் தகரம் றகரமாகவும், ளகரத்தின் முன்வரும் தகரம் டகரமாகவும் திரியும்.)

சான்று:

இச்சான்றில் வருமொழி முதலில் உள்ள தகரமெய் றகர மெய்யாகத் திரிந்தபின்பு, நிலைமொழி இறுதியில் உள்ள லகரமெய் கெட்டது.

இச்சான்றில் வருமொழி முதலில் உள்ள தகரமெய் டகரமெய்யாகத் திரிந்தபின்பு, நிலைமொழி இறுதியில் உள்ள ளகரமெய் கெட்டது.

2. அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழியில் முதலில் வந்த நகரமெய் திரிந்த பின்பு நிலைமொழி இறுதியில் உள்ள லகர ளகர மெய்கள் கெடும். (லகரத்தின் முன் வரும் நகரம் னகரமாகவும், ளகரத்தின் முன்வரும் நகரம் ணகரமாகவும் திரியும். இவ்வாறு திரிவதற்கு விதி ‘னல முன் றனவும்’ என்ற நூற்பாவில் பின்னர்க் கூறப்படும்.)

சான்று:

அல்வழி

(வேள் – வேளிர் குலத் தலைவன்)

வேற்றுமை

(தோன்றல் என்பது ஒருவன் பெயர். தோன்றலினது நன்மை, வேளினது நன்மை ஆறாம் வேற்றுமைத் தொகை)

இச்சான்றுகளில் லகரத்தை அடுத்து வந்த நகரம் னகரமாகவும், ளகரத்தை அடுத்து வந்த நகரம் ணகரமாகவும் திரிந்த பின்பு, நிலைமொழி இறுதியில் உள்ள லகர, ளகர மெய்கள் கெட்டன.

3. வருமொழி முதலில் வல்லின மெய்கள் வந்தால் லகர ளகர மெய்கள் அல்வழிப் புணர்ச்சியில் இயல்பாதலும், முறையே றகரமெய்யாகவும், டகர மெய்யாகவும் திரிதலும் உண்டு; வேற்றுமைப் புணர்ச்சியில் திரியாமல் இயல்பாதலும் உண்டு.

சான்று:

அல்வழி

கால் + கை = கால்கை (காலும் கையும்)

பொருள் + புகழ் = பொருள்புகழ் (பொருளும் புகழும்)

இவை உம்மைத் தொகை. இச்சான்றுகளில் வல்லினம் வர அல்வழியில் லகர ளகர மெய்கள் இயல்பாயின.

வேல் + படை = வேற்படை (வேல் ஆகிய படை)

வாள் + படை = வாட்படை (வாள் ஆகிய படை )

இவை இருபெயரொட்டுப் பண்புத்தொகை. இச்சான்றுகளில் வல்லினம் வர அல்வழியில் லகர ளகர மெய்கள் முறையே றகர மெய்யாகவும், டகர மெய்யாகவும் திரிந்தன.

வேற்றுமை

கால் + பிடித்தான் = கால் பிடித்தான் (காலைப் பிடித்தான்)

வாள் + பிடித்தான் = வாள் பிடித்தான் (வாளைப் பிடித்தான்)

இவை இரண்டாம் வேற்றுமைத்தொகை. இச்சான்றுகளில் வேற்றுமையில் வல்லினம் வர லகர ளகர மெய்கள் இயல்பாயின.

குறில் செறியா லள அல்வழி வந்த

தகரம் திரிந்தபின் கேடும், ஈரிடத்தும்

வரும் நத் திரிந்தபின் மாய்வும், வலிவரின்

இயல்பும் திரிபும் ஆவன உள பிற (நூற்பா, 229)

இந்நூற்பாவின் இறுதியில் பிற எனக் கூறப்படுவது கொண்டு பின்வருவனவற்றையும் கொள்ளவேண்டும்.

1. பொதுவிதிப்படி அல்வழியில் லகர, ளகர மெய்கள் கல்சிறிது, கற்சிறிது, முள்சிறிது, முட்சிறிது என உறழ்ந்தே வரவேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால்,

வில் + படை = விற்படை

எனப் பொதுவிதிப்படி உறழாது. லகரமெய் றகரமெய்யாகத் திரிந்தது காணலாம்.

2. தனிக்குறிலைச் சாராத ல, ள ஆகிய இரண்டும் அல்வழியில் இயல்பாகும் எனக் கூறப்பட்டது. சான்று: கால்கை, பொருள்புகழ். ஆனால் தனிக்குறிலைச் சார்ந்த ல, ள ஆகிய இரண்டும் அல்வழியில் இயல்பாக வருதலும் உண்டு.

சான்று:

கொல் + களிறு = கொல்களிறு

கொள் + பொருள் = கொள்பொருள்

இவை வினைத்தொகை.

3.1.3 நெல், செல், கொல், சொல் என்னும் சொற்களுக்குச் சிறப்புவித

நெல், செல், கொல், சொல் என்னும் நான்கு சொற்களின் இறுதியில் உள்ள லகரமெய் அல்வழிப் புணர்ச்சியில் பொதுவிதிப்படி உறழாது, வேற்றுமைப் புணர்ச்சியைப் போல றகர மெய்யாகத் திரியும்.

நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்

அல்வழி யானும் றகரம் ஆகும் (நன்னூல், 232)

(செல் – மேகம்; கொல் – கொல்லனது தொழில்)

சான்று:

நெல் + சிறிது = நெற்சிறிது

செல் + கரிது = செற்கரிது

கொல் + கடிது = கொற்கடிது

சொல் + புதிது = சொற்புதிது

3.1.4 இல் என்னும் சொல்லுக்குச் சிறப்பு விதி இல் என்னும் சொல்லுக்கு வீடு, இன்மை (இல்லாமை) எனப் பல பொருள் உண்டு. இங்கு இன்மைப் பொருளை உணர்த்தும் இல் என்ற சொல்லினது புணர்ச்சிக்குரிய சிறப்புவிதி பின்வருமாறு நன்னூலாரால் கூறப்படுகிறது.

1. இல் என்னும் சொல்லோடு ஐகாரச் சாரியை வந்து சேர்ந்தால், வருமொழி வல்லினம் விகற்பமாகும். (அதாவது மிக்கும், மிகாமல் இயல்பாயும் புணர்தல்)

சான்று:

இல் + பொருள் > இல் + ஐ + பொருள் > இல்லை + பொருள் = இல்லைப்பொருள், இல்லை பொருள்

2. இல் என்னும் சொல்லோடு ஆகாரச் சாரியை வந்து சேர்ந்தால் வருமொழி வல்லினம் மிகும்.

சான்று :

இல் + பொருள் > இல் + ஆ + பொருள் = இல்லாப் பொருள்

3. இல் என்னும் சொல், மேலே கூறிய ஐகாரச் சாரியையோ, ஆகாரச் சாரியையோ பெறாமல் வல்லினத்தோடு இயல்பாகப் புணர்வதும் உண்டு.

சான்று:

இல் + பொருள் = இல்பொருள்

இல் என் இன்மைச் சொற்கு ஐ அடைய

வன்மை விகற்பமும், ஆகா ரத்தோடு

வன்மை யாகலும், இயல்பும் ஆகும் (நன்னூல், 233)

3.2 வருமொழித் தகர, நகரத் திரிபுகள்

மெய் ஈற்றுப் புணரியலில் நன்னூலார் நிலைமொழியின் ஈற்றில் உள்ள மெய்கள் வருமொழியின் முதலில் உள்ள எழுத்துகளோடு புணரும்போது, அவை என்னென்ன மாற்றங்கள் பெறுகின்றன என்பதைப் பற்றி இதுவரை விளக்கிக் கூறினார். பொதுவாக நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது, நிலைமொழியின் ஈற்றில் உள்ள மெய்களே, வருமொழியின் முதல் எழுத்துக்கு ஏற்பத் திரியும்.

சான்று:

மண் + குடம் = மட்குடம்

பொன் + குடம் = பொற்குடம்

மரம் + கண்டார் = மரங்கண்டார்

கல் + கோயில் = கற்கோயில்

முள் + செடி = முட்செடி

கல் + மனம் = கன்மனம்

முள் + மலர் = முண்மலர்

நிலைமொழியின் இறுதி எழுத்துக்கு ஏற்ப வருமொழியின் முதல் எழுத்தும் பிற எழுத்தாகத் திரிவது உண்டு. இவ்வாறு திரிகின்ற வருமொழி முதல் எழுத்துகள் தகர மெய்யும் நகர மெய்யும் ஆகும். வருமொழியின் முதலில் வருகின்ற இவ்விரண்டு மெய்களும், நிலைமொழியின் ஈற்றில் உள்ள ன, ல, ண, ள ஆகிய நான்கு மெய்களுக்கு முன் வரும்போது மட்டுமே திரிபடைகின்றன. இந்த வருமொழித் தகர நகரத் திரிபுகள் பற்றி நன்னூலார் கூறுவனவற்றைச் சான்றுடன் காண்போம்.

1. நிலைமொழியின் இறுதியில் உள்ள னகர, லகர மெய்களுக்கு முன், வருமொழி முதலில் வரும் தகர மெய் றகர மெய்யாகத் திரியும்.

சான்று:

பொன் + தாமரை = பொற்றாமரை

கல் + தாழை = கற்றாழை

(இவற்றில் நிலைமொழி ஈற்றில் உள்ள ன-வும் ல-வும் திரிந்துள்ளன. இதற்கு உரிய விதியை முந்தைய பாடத்தில் (Co2141 பகுடி 1.2.1) படித்தோம். நினைவிருக்கிறதா?)

2. நிலைமொழியின் இறுதியில் உள்ள னகர, லகர மெய்களுக்கு முன், வருமொழி முதலில் வரும் நகர மெய் னகர மெய்யாகத் திரியும்.

சான்று:

பொன் + நாடு = பொன்னாடு

தென் + நாடு = தென்னாடு

பல் + நலம் = பன்னலம்

3. நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகர, ளகர மெய்களுக்கு முன், வருமொழி முதலில் வரும் தகர மெய் டகர மெய்யாகத் திரியும்.

சான்று:

எண் + தேர் = எண்டேர் (எட்டுத்தேர்)

முள் + தாமரை = முட்டாமரை

3. நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகர ளகர மெய்களுக்கு முன், வருமொழி முதலில் வரும் நகரமெய் ணகர மெய்யாகத் திரியும்.

சான்று:

கண் + நீர் = கண்ணீர்

கண் + நோய் = கண்ணோய்

எள் + நெய் = எண்ணெய்

மேலே கூறிய வருமொழித் தகர நகரத் திரிபுகளை நன்னூலார்,

னலமுன் றனவும், ணளமுன் டணவும்,

ஆகும் தநக்கள் ஆயுங் காலே (நன்னூல், 237)

என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

3.3 உயிர் ஈற்று, மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகளுக்குப் புறனடை

புறனடை = ஏற்கெனவே கூறிய விதிகளுள் அடங்காதவற்றைத் தனியே ஒரு நூற்பாவில் அமைத்துக் காட்டுவது)

நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலிலும், மெய் ஈற்றுப் புணரியலிலும் எல்லா ஈற்று நிலை மொழிகளும், வருமொழிகளோடு புணரும் முறை பற்றிக் கூறிய புணர்ச்சி விதிகளை இதுவரை பார்த்தோம். நன்னூலார் அவ்விரண்டு இயல்களிலும் கூறிய புணர்ச்சி விதிகளுக்கு மாறுபட்ட சொற்புணர்ச்சிகளும் தமிழில் உள்ளன. சான்றாக,

மாயிரு ஞாலத்தை விழுங்கும் வாயினர்

(கம்பராமாயணம், 3008:2)

என்ற கம்பராமாயணப் பாடல் அடியில் மாயிரு என வருகிறது. இதற்கு ‘மிகப் பெரிய’ என்று பொருள். இது,

மா + இரு

எனப் பிரியும். மா என்னும் உயிர் ஈற்றுச் சொல் வருமொழி முதலில் உயிர் வரும்போது,

இ, ஈ ஐ வழி யவ்வும் ஏனை

உயிர்வழி வவ்வும் (நன்னூல், 162:1-2)

என்ற புணர்ச்சி விதிப்படி, இடையில் வகர உடம்படுமெய் பெற்று,

மா + இரு > மா + வ் + இரு = மாவிரு

என வரவேண்டும். ஆனால் இவ்விதிக்கு மாறாக,

மா + இரு > மா + ய் + இரு = மாயிரு

என இடையில் யகர மெய் பெற்று வந்துள்ளது.

இதற்குக் காரணம் யாது? மா என்னும் ஓர் எழுத்துச் சொல் மரம், விலங்கு என்னும் இரு பொருள்களைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகவும், மிகுதி என்னும் பொருளைக் குறிக்கும் உரிச்சொல்லாகவும் வழங்குகிறது.

மா என்னும் சொல் பெயர்ச்சொல்லாக நிலைமொழியில் நின்று, வருமொழி முதலில் உள்ள உயிரோடு புணரும்போது, விதிப்படி வகர உடம்படுமெய்யே பெறும்.

சான்று :

மா + இலை > மா + வ் + இலை = மாவிலை (மாமரத்தின் இலை)

மா + ஏறினான் > மா + வ் + ஏறினான் = மாவேறினான்

(மரத்தில் ஏறினான், விலங்கின்மேல் ஏறினான்)

ஆனால் மா என்னும் சொல் உரிச்சொல்லாக நிலைமொழியில் நின்று, வருமொழி முதலில் உள்ள உயிரோடு புணரும்போது, விதிப்படி வகர உடம்படுமெய் பெறாது, யகர மெய்யே பெறுகிறது. இந்த யகர மெய் உடம்படுமெய் அன்று. மா + இரு என்பதற்கு இடையில் தோன்றல் விகாரம் என்னும் புணர்ச்சி விதியின்படி யகரமெய் தோன்றி, மாயிரு என அமைந்தது என்று உணர்ந்து கொள்ளலாம்.

இதுபோல, ஏற்கெனவே விதித்த புணர்ச்சி விதிகளில் அடங்காது ஒரு காரணம் பற்றி வேறுபட்ட, மாயிரு போன்ற சொற்புணர்ச்சிகளை மெய்ஈற்றுப் புணரியலின் இறுதி நூற்பாவில் நன்னூலார் அமைத்துக் காட்டுகிறார். அந்நூற்பா புறனடை நூற்பா எனப்படுகிறது. புறனடை நூற்பா என்பதற்கு ‘ஏற்கெனவே விதித்தவற்றுள் அடங்காதவற்றைத் தனியே அமைத்துக் காட்டும் நூற்பா’ என்று பொருள். அந்நூற்பா வருமாறு:

இடை, உரி வடசொலின் இயம்பிய கொளாதவும்,

போலியும், மரூஉவும் பொருந்திய ஆற்றிற்கு

இயையப் புணர்த்தல் யாவர்க்கும் நெறியே (நன்னூல், 239)

“இடைச்சொற்கள், உரிச்சொற்கள், வடசொற்கள் ஆகியவற்றிற்கு உயிர் ஈற்றுப் புணரியலிலும், மெய் ஈற்றுப் புணரியலிலும் சொல்லப்பட்ட தோன்றல், திரிதல், கெடுதல், இயல்பாதல் என்னும் புணர்ச்சி இலக்கணங்களைக் கொள்ளாமல் வேறுபட்டு வருவனவற்றையும் இலக்கணப்போலிச் சொற்களையும், மரூஉச்சொற்களையும் உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் வழங்கும் முறைமைக்குப் பொருந்துமாறு கூட்டி முடித்தல், அறிவுடையோர் எல்லோர்க்கும் முறை ஆகும்” என்பது இந்நூற்பாவின் பொருள்.

நன்னூலார் இந்நூற்பாவில் கூறும் கருத்துகளைச் சான்றுடன் காண்போம்.

இடைச்சொற்கள்

சான்று:

ஒன்று + அன் + கூட்டம் > ஒன்றன் + கூட்டம் = ஒன்றன்கூட்டம்

வண்டு + இன் + கால் > வண்டின் + கால் = வண்டின்கால்

இவை இரண்டும் ஆறாம் வேற்றுமைத் தொகை. ஒன்றன் கூட்டம் – ஒரே பொருளினது கூட்டம்; வண்டின்கால் – வண்டினது கால்.

வேற்றுமைப் புணர்ச்சியில், ணன வல்லினம் வரட்டறவும் (நன்னூல், 209) என்ற விதிப்படி, நிலைமொழி ஈற்று னகரமெய், வருமொழி முதலில் வல்லினம் வரின் றகர மெய்யாக வேண்டும். இவ்விதிப்படி,

ஒன்றன் + கூட்டம் = ஒன்றற்கூட்டம்

வண்டின் + கால் = வண்டிற்கால்

என வரவேண்டும். ஆனால் இந்நிலைமொழிகளின் ஈற்றில் உள்ள அன், இன் என்பன சாரியைகள் ஆகும். சாரியைகள் இடைச்சொற்கள் ஆதலால், அவை இவ்விதியைக் கொள்ளாமல்.

ஒன்றன் கூட்டம், வண்டின்கால்

என இயல்பாகப் புணர்ந்தன.

உரிச்சொற்கள்

சான்று :

நனி + பேதை = நனிபேதை (மிகவும் பேதை)

மழ + களிறு = மழகளிறு (இளமையான களிறு)

நனி, மழ என்பன உரிச்சொற்கள். உயிர் ஈற்று உரிச்சொற்கள். உயிர் ஈற்றுச் சொற்களின் முன் வல்லினம் வரின்,

இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்

க, ச, த, ப மிகும் (நன்னூல், 165)

என்ற விதிப்படி இச்சொற்கள் ,

நனி + பேதை = நனிப்பேதை

மழ + களிறு = மழக்களிறு

என வல்லினம் மிகுந்து வரவேண்டும். ஆனால் நனி என்பது மிகுதி என்னும் பொருளையும், மழ என்பது இளமை என்னும் பொருளையும் உணர்த்தும் உரிச்சொற்கள் ஆதலால், இவை இவ்விதியைக் கொள்ளாது,

நனிபேதை, மழகளிறு

என வல்லினம் மிகாது இயல்பாகப் புணர்ந்தன.

வடசொற்கள்

சான்று:

இதயம் + கமலம் = இதய கமலம்

உதயம் + தாரகை = உதய தாரகை

(இதயம் – உள்ளம்; கமலம் – தாமரை ; உதயம் – விடிதல்; தாரகை – வெள்ளி நட்சத்திரம்; உதயதாரகை – விடிவெள்ளி)

இவை மவ்வீறு ஒற்று அழிந்து உயிர் ஈறு ஒப்பவும் (நன்னூல், 219) என்ற விதிப்படி, இதயக் கமலம், உதயத் தாரகை என வரவேண்டும். ஆனால் மகர ஈறு கெட்டாலும், இவை வடசொற்கள் ஆதலால் இவ்விதியைக் கொள்ளாமல் இயல்பாகப் புணர்ந்தன. ஆதிபகவன், உதய சூரியன் போன்றவற்றிலும் வடசொற்கள் இயல்பாகப் புணர்ந்தமை காணலாம்.

இலக்கணப் போலிச் சொற்கள்

இலக்கணம் இல்லாதனவாயினும், இலக்கணம் உடையது போலச் சான்றோர்களால் தொன்றுதொட்டு வழங்கப்பட்டுவரும் சொற்கள் இலக்கணப் போலிச் சொற்கள் எனப்படும். சான்று: இல்முன் என்பதை முன்றில் எனக் கூறுதல்.

இல்முன் > முன் + இல் = முன்றில்

இதில் சொற்கள் முன்பின்னாக மாறிப் புணர்ந்துள்ளதால் இலக்கணப்போலி என்றனர். முன் + இல் என்பது,

தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும் (நன்னூல், 205)

என்ற விதிப்படி முன்னில் என வரவேண்டும். ஆனால் இது இலக்கணப்போலி ஆதலால் இவ்விதியைக் கொள்ளாமல் இடையில் றகரமெய் பெற்று முன்றில் என முடிந்தது.

மரூஉச் சொற்கள்

தொன்றுதொட்டு வருதலின்றி இடையில் சில எழுத்துகள் தோன்றியும் திரிந்தும் கெட்டும் இலக்கணம் சிதைந்து தானே மருவி வழங்கும் சொற்கள் மரூஉச் சொற்கள் எனப்படும். சான்றாக அருமருந்தன்ன என்பதை அருமந்த என்று கூறுதலைச் சொல்லலாம்.

அருமை + மருந்து + அன்ன = அருமருந்தன்ன

என வரவேண்டும். ஆனால் இது அருமந்த எனவருகிறது. மருந்து + அன்ன என்பது உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் (நன்னூல், 164) என்ற விதிப்படி மருந்தன்ன என்று வாராமல், சில எழுத்துகள் கெட்டு (நீங்கி) மந்த என்று அமைந்து வழங்குகிறது.

மேலே கூறியவற்றைப் போல, கூறப்பட்ட புணர்ச்சி விதிகளுக்கு மாறாக ஒரு காரணம் பற்றி வேறொரு புணர்ச்சியுடன் அமைவனவற்றை ஏற்றுக்கொள்ளலாம் என்பது நன்னூலார் கருத்து. இதனை அடியொற்றியே இன்று கற்றறிந்த அறிஞர்கள் கூட, எழுத்துத் தமிழில், வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்துக் ‘கள்’ என்னும் விகுதியைச் சேர்த்து எழுதும்போது, ‘வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன்வரும் வல்லினம் மிகும்’ என்ற நன்னூல் விதிப்படி,

கருத்து + கள் = கருத்துக்கள்

எழுத்து + கள் = எழுத்துக்கள்

என்று வல்லினம் மிகுமாறு எழுதாமல்,

கருத்து + கள் = கருத்துகள்

எழுத்து + கள் = எழுத்துகள்

என வல்லினம் மிகாமல் எழுதி வருகின்றனர். வன்தொடர்க் குற்றியலுகரச் சொல்லின் முன்னர் வரும் ‘கள்’ என்னும் பன்மை விகுதி இடைச்சொல்லாதலால் நன்னூலார் கூறிய புறனடை நூற்பாவின்படி, கருத்துகள் என வல்லினம் மிகாமல் இயல்பாக எழுதுவது ஏற்புடையதே ஆகும்.

3.4 தொகுப்புரை

இதுவரை லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி பற்றியும், வருமொழி தகர, நகரத் திரிபுகள் பற்றியும் நன்னூலார் கூறியனவற்றை அறிந்து கொண்டோம். உயிர் ஈற்றுப் புணரியல், மெய் ஈற்றுப் புணரியல் ஆகியவற்றில் சொல்லப்பட்ட புணர்ச்சி விதிகளுக்கு மாறுபட்டு இடைச்சொற்கள், உரிச்சொற்கள், வடசொற்கள் ஆகியவையும், இலக்கணப் போலிச் சொற்களும், மரூஉச் சொற்களும், வேறுபட்ட சில புணர்ச்சியைப் பெற்று வருதலை ஏற்றுக் கொள்ளலாம் என்று நன்னூலார் குறிப்பிடும் விதிவிலக்கினை அறிந்து கொள்ளலாம். நன்னூலார் குறிப்பிடும் விதிவிலக்கின் வழிநின்று, புணர்ச்சி இலக்கணப்படி வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் கள் விகுதி சேர்த்து எழுதும் போது, கருத்துக்கள், எழுத்துக்கள் என வல்லினம் மிகுமாறு எழுதாமல் கருத்துகள், எழுத்துகள் என வல்லினம் மிகாமல் எழுதுவது இன்று கற்றறிந்த அறிஞர்களிடமும் நிலைத்துவிட்டது என்பதை அறிந்துகொள்ளலாம்.

பாடம் - 4

உருபு புணர்ச்சி – I

4.0 பாட முன்னுரை

வேற்றுமை உருபுகள் நிலைமொழியோடும் வருமொழியோடும் புணரும் புணர்ச்சி உருபு புணர்ச்சி எனப்படும். ‘ஐ, ஆல், கு, இன், அது, கண்’ என்பன வேற்றுமை உருபுகள் ஆகும். இவை பெயர்ச்சொல்லுக்கு இறுதியில் வந்து, அப்பெயர்ச்சொற்களின் பொருளை வேற்றுமை செய்யும் காரணத்தால் வேற்றுமை உருபுகள் எனப்பட்டன என்பதைப் புணர்ச்சியும் அதன் பாகுபாடும் என்ற பாடத்தில் ஏற்கெனவே பார்த்தோம்.

வேற்றுமை உருபுகள் வருமொழியாக நின்று, நிலைமொழியில் உள்ள பெயர்ச்சொல்லோடு புணரும். சான்று: கல் + ஐ = கல்லை. பெயர்ச்சொல்லோடு சேர்ந்து நிலைமொழியின் இறுதியில் நின்று வருமொழியில் உள்ள சொற்களோடும் புணரும். சான்று: கல்லை + கண்டான் = கல்லைக் கண்டான். இவ்வாறு புணரும்போது அவ்வேற்றுமை உருபுகள் உயிர் ஈற்றுப் புணர்ச்சியிலும், மெய்ஈற்றுப் புணர்ச்சியிலும் வேற்றுமைக்குச் சொல்லப்பட்ட புணர்ச்சி விதிகளைப் பெறும்.

பெயர்ச்சொல்லோடு வேற்றுமை உருபுகள் வந்து புணரும்போது, அவை இரண்டனுக்கும் இடையே சாரியைகள் என்று சொல்லப்படும் இடைச்சொற்கள் வருதலும் உண்டு. சான்றாக மரம் என்ற பெயர்ச்சொல்லோடு, ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு வருமொழியில் வந்து புணரும்போது, மரமை என்று புணராது; மரத்தை என்று புணரும். மரம் + அத்து + ஐ என்பதே மரத்தை என்றாகியது. இங்கே மரம் என்பதற்கும், ஐ என்பதற்கும் இடையில் வந்துள்ள அத்து என்பது சாரியை ஆகும். நிலைமொழியில் உள்ள பெயர்ச்சொல்லையும், வருமொழியில் வரும் வேற்றுமை உருபுகளையும் சேர்த்து எளிதாக உச்சரிப்பதற்குச் சாரியை வருகின்றது.

நன்னூலார் எழுத்ததிகாரத்தில் இறுதியாக அமைந்த உருபு புணரியலில் உருபு புணர்ச்சி பற்றியும், உருபு புணர்ச்சியில் சாரியைகள் வருவது பற்றியும் கூறுகிறார். எல்லாம், எல்லாரும், எல்லீரும், ஆ, மா, கோ என்னும் பெயர்களும், தான், தாம், நாம், யான், யாம், நீ, நீர் என்னும் மூவிடப் பெயர்களும் வேற்றுமை உருபுகளோடு புணரும் முறை பற்றியும் கூறுகிறார். உருபு புணரியலில் அவர் கூறும் கருத்துகளை இப்பாடத்திலும், இதனை அடுத்து வரும் பாடத்திலும் விளக்கமாகவும் விரிவாகவும் காண்போம்.

இப்பாடத்தில் வேற்றுமை உருபுகளும், அவை வரும் இடமும், வருவதற்குக் காரணமும் பற்றி நன்னூலார் கூறும் கருத்துகள் விளக்கிக் காட்டப்படுகின்றன. வேற்றுமை உருபுகள் நிலைமொழி வருமொழிகளோடு புணரும் உருபு புணர்ச்சி பற்றி அவர் கருத்துகள் சான்றுடன் விளக்கப்படுகின்றன. சாரியைகள் என்று கூறப்படும் இடைச்சொற்கள் விகுதிப் புணர்ச்சி, பதப்புணர்ச்சி, உருபு புணர்ச்சி என்னும் மூவகைப் புணர்ச்சியிலும் வருமென நன்னூலார் குறிப்பிடுகிறார். இம் மூவகைப் புணர்ச்சியிலும் வரும் பொதுச்சாரியைகளைத் தொகுத்து அவர் தருகிறார், இவையும் இப்பாடத்தில் சான்றுகளுடன் விளக்கிக் காட்டப்படுகின்றன.

4.1 வேற்றுமை உருபுகள்

வேற்றுமை எட்டு வகைப்படும். அவற்றுள் முதல் வேற்றுமை பெயர் வேற்றுமை எனப்படும். இவ்வேற்றுமை உருபு எதுவும் ஏற்காது. பெயர் மட்டுமே நிற்றலால், பெயர் வேற்றுமை எனப்பட்டது. இப்பெயர் ஒரு தொடரில் எழுவாயாக வருவதால் எழுவாய் வேற்றுமை என்றும் கூறப்படும். எட்டாம் வேற்றுமை விளித்தல் (அழைத்தல்) பொருளில் வருவதால் விளிவேற்றுமை என்று கூறப்படும். இவை இரண்டும் நீங்கலான பிற ஆறு வேற்றுமைகளுக்கு மட்டுமே தனித்தனி உருபுகள் உண்டு. அவை ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன ஆகும். இவ்வேற்றுமைகள் ஒவ்வொன்றும் அவற்றிற்கு உரிய உருபினைக் கொண்டு ஐ வேற்றுமை, ஆல் வேற்றுமை என்றவாறு பெயரிட்டும் அழைக்கப்படும்.

நன்னூலார் சொல்லதிகாரத்தில் அமைந்த முதல் இயலாகிய பெயரியலில் வேற்றுமையின் இலக்கணத்தை விளக்குகிறார். (நன்னூல், 291-293) அதில் வேற்றுமையில் எழுவாயாக வரும் பெயரையும் உருபு என்றே குறிப்பிடுகிறார். எழுவாயாக வரும் அப்பெயர் உருபே, ஐ முதலாகிய ஆறு வேற்றுமை உருபுகளையும் ஏற்கும் என்கிறார். இதனை,

ஆறன் உருபும் ஏற்கும் அவ்வுருபே (நன்னூல், 293)

என்ற பெயரியல் நூற்பாவில் குறிப்பிடுகிறார். (அவ்வுருபே – எழுவாய் உருபே)

விளிவேற்றுமையும் பெயரின் திரிபாதலால் அதனையும் நன்னூலார் உருபு என்றே கொள்கிறார். பெயர்ச்சொல்லோடு விளியுருபுகள் சேர்ந்தே எட்டாம் வேற்றுமை விளித்தல் பொருளில் வரும்.

சான்று:

இராமன் > இராமா

அரசன் > அரசே

இங்கு ஆ, ஏ என்பன விளியுருபுகளாக வருகின்றன. எனவே நன்னூலார் கருத்துப்படி எட்டு வேற்றுமைகளுமே உருபுகள் என்பதாம். அவை பெயர், ஐ, ஆல், கு, இன், அது, கண், விளி என்பன ஆகும்.

இந்த எட்டு வேற்றுமை உருபுகளும் நாற்பது ஆகின்றன என்று நன்னூலார் உருபு புணரியலில் கூறுகிறார்.

4.1.1 வேற்றுமை உருபுகள் எட்டும் நாற்பது ஆதல் ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என்னும் வாய்பாடுகளில் அமைந்துவரும் ஐம்பால் பெயர்களோடு, பெயர் வேற்றுமை முதல் விளிவேற்றுமை வரையிலான எட்டு வேற்றுமை உருபுகளையும் பெருக்கிக் கணக்கிட, வேற்றுமை உருபுகள் நாற்பது ஆகும்.

ஒருவன் ஒருத்தி பலர்ஒன்று பல என

வருபெயர் ஐந்தொடு பெயர்முதல் இருநான்கு

உருபும் உறழ்தர நாற்பதாம் உருபே (நன்னூல், 240)

(உறழ்தர – பெருக்கிக் கணக்கிட)

சான்று:

நம்பி

– முதல் வேற்றுமை (பெயர் வேற்றுமை)

நம்பியை

– இரண்டாம் வேற்றுமை (ஐ வேற்றுமை)

நம்பியால் – மூன்றாம் வேற்றுமை (ஆல் வேற்றுமை)

நம்பிக்கு – நான்காம் வேற்றுமை (கு வேற்றுமை )

நம்பியின் – ஐந்தாம் வேற்றுமை (இன் வேற்றுமை)

நம்பியது – ஆறாம் வேற்றுமை (அது வேற்றுமை)

நம்பி கண்

– ஏழாம் வேற்றுமை (கண் வேற்றுமை)

நம்பீ – எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை)

இவ்வாறே நங்கை, மக்கள், மரம், மரங்கள் என்னும் ஏனைய நான்கு வாய்பாட்டுப் பெயர்களோடு எட்டு வேற்றுமை உருபுகளையும் கூட்டினால் வேற்றுமை உருபுகள் மொத்தம் நாற்பது ஆகும்.

4.1.2 வேற்றுமை உருபுகள் வருதற்குக் காரணமும் வரும் இடமும் வேற்றுமை உருபுகள் தமது பொருளைக் கொடுக்க, பெயர்க்குப் பின்னால் வரும்.

பெயர்வழித் தம்பொருள் தரவரும் உருபே (நன்னூல், 241)

தம்பொருள் தரவரும் என்றது பெயர் வேற்றுமை உருபு கருத்தாப் பொருளையும், ஐ உருபு செயப்படுபொருளையும், இதுபோல மற்ற வேற்றுமை உருபுகள் தத்தமக்கு உரிய பொருளையும் பெயர்க்குப் பின்னால் வந்து தரும் என்பதைக் குறிக்கும்.

சான்று

நம்பி கண்டான் – பெயர் – கருத்தாப்பொருள்

நம்பியைக் கண்டான் – ஐ – செயப்படுபொருள்

நம்பியால் பெற்றான் – ஆல் – கருவிப்பொருள்

நம்பிக்குக் கொடுத்தான் – கு – கொடைப்பொருள்

நம்பியின் பிரிந்தான் – இன் – நீங்கல்பொருள்

நம்பியது வீடு – அது – கிழமைப்பொருள்

நம்பிகண் செல்வம் – கண் – இடப்பொருள்

நம்பீ! வா – விளி – விளிப்பொருள்

(கிழமைப்பொருள் – உடைமைப்பொருள்)

4.1.3 வேற்றுமை உருபுகள் நிலைமொழி வருமொழிகளோடு புணரும் முறை

வேற்றுமை உருபுகள் மெய்யையும் உயிரையும் முதலிலும் ஈற்றிலும் பெற்று வரும்.

வேற்றுமை உருபுகள்

வருமொழியாக வரும்போது

நிலைமொழியில் சேர்ந்து நிற்கும் போது

ஐ – உயிர்முதல்

ஐ – உயிர் ஈறு

ஆல்

ஆ – உயிர்முதல்

ல் – மெய் ஈறு

கு

க் – மெய்முதல்

உ – உயிர் ஈறு

இன்

இ – உயிர்முதல்

ன் – மெய் ஈறு

அது

அ – உயிர்முதல்

உ – உயிர் ஈறு

கண்

க் – மெய் முதல்

ண் – மெய் ஈறு

இனி நன்னூலார் வேற்றுமை உருபுகள் நிலைமொழி வருமொழிகளோடு புணரும் உருபு புணர்ச்சி பற்றிக் கூறுவனவற்றைக் காண்போம்.

மெய்யையும் உயிரையும் முதலும் ஈறுமாக உடைய ‘ஐ, ஆல், கு, இன், அது, கண்’ என்னும் ஆறு வேற்றுமை உருபுகளும் நிலைமொழி வருமொழிகளோடு புணரும்போது, ஏற்கெனவே உயிர்ஈற்றுப் புணரியல், மெய் ஈற்றுப் புணரியல் ஆகிய இரண்டு இயல்களுள்ளும், வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சொல்லப்பட்ட இயல்பாதல், விகாரமாதல் (தோன்றல், திரிதல், கெடுதல்) என்னும் புணர்ச்சி விதிகளைப் பெரும்பாலும் ஒத்து நடக்கும்.

ஒற்றுஉயிர் முதல்ஈற்று உருபுகள் புணர்ச்சியின்

ஒக்கும்மன் அப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே (நன்னூல், 242)

(வேற்றுமைப் புணர்ப்பு – வேற்றுமைப் புணர்ச்சி)

சான்று: 1

உயிர் எழுத்தை ………மிகாது.

நம்பி + கண் = நம்பிகண்

உயிர் எழுத்தை ஈறாகக் கொண்ட உயர்திணைப் பெயர் முன் வரும் வல்லினம் மிகாது.

பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்கள் ஈற்றுமெய்

வலிவரின் இயல்பாம் ஆவி யரமுன்

வன்மை மிகா (நன்னூல், 159)

என்ற விதிப்படி நம்பி என்ற இகர உயிர் ஈற்று உயர்திணைப் பெயர்முன், வருமொழி முதலில் வந்துள்ள க் என்ற வல்லினம் மிகாமல் நம்பிகண் என்று இயல்பாயிற்று.

நம்பிகண் + வாழ்வு = நம்பிகண் வாழ்வு

கண் என்ற ஏழாம் வேற்றுமை உருபு, நம்பி என்ற நிலைமொழியோடு இயல்பாய்ப் புணர்ந்து, நம்பிகண் என்று நிலைமொழியாக நிற்க, அந்தக் கண் உருபின் இறுதியில் உள்ள ணகரமெய், வருமொழி முதலில் வ் என்ற இடையின மெய் வர,

ணன வல்லினம் வரட்டறவும் பிறவரின்

இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு (நன்னூல், 209)

(ணன என்னும் மெய்கள், வல்லினம் அல்லாத பிறமெல்லின, இடையின மெய்கள் வருமொழி முதலில் வரின் வேற்றுமையில் இயல்பாகும்) என்ற விதிப்படி இயல்பாகி, நம்பிகண் வாழ்வு என வந்தது.

சான்று: 2

உறி + கண் + பால்

உறி + கண் = உறிக்கண்

இயல்பு ஈறாகவும், விதி ஈறாகவும் நிலைமொழியின் இறுதியில் நின்ற உயிர்முன் வரும் க, ச, த, ப என்னும் வல்லின மெய்கள் மிகும்.

இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்

கசதப மிகும் (நன்னூல், 165)

என்ற விதிப்படி, உறி என்னும் நிலைமொழியின் இறுதியில் இயல்பு ஈறாக நின்ற இ என்ற உயிர்முன் வருமொழி முதலில் வந்துள்ள க் என்ற வல்லினமெய் மிக்கு, உறிக்கண் என்றாயிற்று.

உறிக்கண் + பால் = உறிக்கட்பால்

கண் என்ற ஏழாம் வேற்றுமை உருபு, உறி என்னும் நிலைமொழியோடு மிக்குப் புணர்ந்த பின்னர், உறிக்கண் என்று நிலைமொழியாக நிற்க, அவ்வுருபின் இறுதியில் உள்ள ணகர மெய், வருமொழி முதலில் ப் என்ற வல்லினமெய் வர,

ணன வல்லினம் வரட் டறவும் …….. வேற்றுமைக்கு

(நன்னூல், 209)

என்ற விதிப்படி டகர மெய்யாகத் திரிந்து உறிக்கட்பால் என்றாயிற்று.

சான்று: 3

பழி + கு + அஞ்சி

பழி + கு = பழிக்கு

இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்

கசதப மிகும்

என்ற விதிப்படி, பழி என்னும் நிலைமொழியின் இறுதியில் நின்ற இ என்னும் இயல்பு உயிர்முன், வருமொழியின் முதலில் வந்த க் என்ற வல்லின மெய் மிக்கு, பழிக்கு என்றாயிற்று.

பழிக்கு + அஞ்சி = பழிக்கஞ்சி

பழி என்ற நிலைமொழியோடு கு என்ற நான்காம் வேற்றுமை உருபு வல்லினம் மிக்குப் புணர்ந்து, பழிக்கு என்று நிலைமொழியாக நிற்கிறது. அதன் இறுதியில் உள்ள கு என்பது வேற்றுமை உருபாகவே கொள்ளப்படுகிறது. அதிலுள்ள உகரமானது முற்றியலுகரம் ஆகும். அம் முற்றியலுகரமானது (உகர உயிரானது),

உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்

யவ்வரின் இய்யாம் முற்றும்அற்று ஒரோவழி (நன்னூல், 164)

(வருமொழியின் முதலில் உயிர் வரின், நிலைமொழி இறுதியில் உள்ள முற்றியலுகரம், குற்றியலுகரத்தைப் போலத் தான் ஏறியிருக்கும் மெய்யை விட்டு ஒரு சில இடங்களில் நீங்கும் என்பது இந்நூற்பாவின் பொருள்.)

என்ற விதிப்படி, தான் ஏறியிருக்கும் ககரமெய்யை விட்டு நீங்கி, பழிக்க் என நிற்கிறது; அதனோடு வருமொழி முதலில் உள்ள அகர உயிரானது,

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (நன்னூல், 204)

என்ற விதிப்படி, இறுதியில் நின்ற ககர மெய்யோடு பொருந்தி, பழிக்கஞ்சி என்றாயிற்று.

நூற்பாவில் ஒக்கும்மன் (பெரும்பாலும் ஒத்து நடக்கும்) என்றமையால், சிறுபான்மை ஒவ்வாது வருவதும் உண்டு என்பது பெறப்படும்.

சான்று:

நம்பி + கு = நம்பிக்கு

இங்கே “உயர்திணைப் பெயர்கள் ஈற்று… ஆவி யரமுன் வன்மை மிகா” (நன்னூல், 159) என்ற விதியை ஒவ்வாது, “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க, ச, த, ப மிகும்” (நன்னூல், 165) என்ற விதிப்படி, நம்பி என்ற இகர உயிர் ஈற்று உயர்திணைப் பெயர்முன், வந்துள்ள கு என்னும் நான்காம் வேற்றுமை உருபின் முதலில் உள்ள க் என்ற வல்லினம் மிக்கு, நம்பிக்கு என்றாயிற்று.

4.2 சாரியைகள்

ஒரு பதத்தின் (சொல்லின்) முன்னர் விகுதியும், பதமும் வேற்றுமை உருபும் வந்து புணரும்போது அவற்றிற்கு இடையே சில இடைச்சொற்கள் வந்து சார்ந்து பொருந்துதல் உண்டு. அச்சொற்களுக்குச் சாரியை என்று பெயர். விகுதியையோ, பதத்தையோ, வேற்றுமை உருபையோ சார்ந்து வருதலின் சாரியை எனப்பட்டது.

பதத்தின் முன்னர் விகுதி வந்து புணர்வது விகுதிப் புணர்ச்சி என்றும், பதத்தின் முன்னர் பதம் வந்து புணர்வது பதப்புணர்ச்சி என்றும், பதத்தின் முன்னர் வேற்றுமை உருபு வந்து புணர்வது உருபு புணர்ச்சி என்றும் கூறப்படும். இம்மூவகைப் புணர்ச்சியிலும் சாரியைகள் வரும் முறைமை பற்றியும், இம்மூவகைப் புணர்ச்சிக்கும் உரிய பொதுச்சாரியைகள் பற்றியும் நன்னூலார் உருபு புணரியலில் கூறுகிறார். அவற்றைச் சான்றுடன் காண்போம்.

4.2.1 சாரியைகள் வரும் முறைமை பதத்தின் முன்னர் விகுதியும், பதமும், வேற்றுமை உருபும் வந்து புணரும்போது, அவற்றிற்கு இடையே சாரியை ஒன்றோ பலவோ வருதலும், வாராதிருத்தலும், இவ்விரண்டும் ஆகிய விகற்பமாதலும் ஆகும்.

பதம்முன் விகுதியும் பதமும் உருபும்

புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை

வருதலும், தவிர்தலும், விகற்பமும் ஆகும் (நன்னூல், 243)

(விகற்பமாதல் – ஒரே புணர்ச்சியில் சாரியை வருதலும், வாராது இருத்தலும் ஆகும்.)

நன்னூலார் கூறியவாறு விகுதிப்புணர்ச்சி, பதப்புணர்ச்சி, உருபு புணர்ச்சி என்னும் மூவகைப் புணர்ச்சியிலும் சாரியை வரும் முறையைச் சான்றுடன் காண்போம்.

விகுதிப் புணர்ச்சி

பதத்தின் முன்னர் விகுதி வந்து புணர்வது விகுதிப்புணர்ச்சி எனப்படும்.

சான்று:

1. நடந்தனன்

நட பகுதி+ த்(ந்) சந்தி விகாரம்+ த் இடை நிலை+ அன் சாரியை+ அன் விகுதி

அன் சாரியை வந்தது

2. நடந்தான்

நட பகுதி+ த்(ந்) சந்தி விகாரம்+ த் இடை நிலை+ ஆன் விகுதி

சாரியை வரவில்லை

3. நடந்தன

நட பகுதி

+ த்(ந்) சந்தி விகாரம்

+ த் இடை நிலை

+ அன் சாரியை

+ அ விகுதி

அன் சாரியை வந்தது

விகற்பம்

4. நடந்த

நட பகுதி+ த்(ந்) சந்தி விகாரம்+ த் இடை நிலை+ அ விகுதி

சாரியை வரவில்லை

பதப்புணர்ச்சி

பதத்தின் முன்னர்ப் பதம் வந்து புணர்வது பதப்புணர்ச்சி எனப்படும்.

சான்று:

1. புளி + பழம் > புளி + அம் + பழம்= புளியம்பழம்-அம் சாரியை வந்தது

2. புளி + சோறு > புளி + ச் + சோறு= புளிச்சோறு-வல்லினம் மிக்கதே தவிரச் சாரியை வரவில்லை

3. நெல் + குப்பை > நெல் + இன் + குப்பை

இன் சாரியை வந்தது

விகற்பம்= நெல்லின்குப்பை

நெல் + குப்பை= நெற்குப்பை

-

சாரியை வரவில்லை

உருபு புணர்ச்சி

பதத்தின் முன்னர் வேற்றுமை உருபு வந்து புணர்வது உருபு புணர்ச்சி எனப்படும்.

சான்று:

1. மரம் + ஐ > மர + அத்து + ஐ = மரத்தை

அத்து என்னும் ஒரு சாரியை வந்தது

மரம் + ஐ > மர + அத்து + இன் + ஐ = மரத்தினை

அத்து, இன் என்னும் இரு சாரியைகள் வந்தன

மரம் + கு > மர + அத்து + இன் + உ + கு = மரத்தினுக்கு

அத்து, இன், உ என்னும் மூன்று சாரியைகள் வந்தன

இச்சான்றுகளில் பதத்தின் முன்னர் வேற்றுமை உருபு புணரும்போது இடையில் சாரியை ஒன்றோ பலவோ வந்தமை காணலாம்.

2. நாம் + ஐ = நம்மை

யான் + ஐ = என்னை

சாரியை வரவில்லை

3. ஆ + ன் + ஐ = ஆனை– னகரச் சாரியை வந்தது

விகற்பம்

ஆ + வ் + ஐ = ஆவை- வகர உடம்படுமெய் வந்ததே தவிரச் சாரியை வரவில்லை

(ஆனை, ஆவை – பசுவை)

உருபு புணரியலில் நன்னூலார் சாரியை வரும் முறைமை பற்றிக் கூறும்போது, பதத்தின் முன்னர் வேற்றுமை உருபு வந்து புணரும் உருபுபுணர்ச்சியில் வரும் சாரியை பற்றிக் கூறுவது மட்டுமே பொருத்தமானது ஆகும். ஆனால் அதனோடு, பகுபத உறுப்புகளைப் பற்றிப் பேசும் பதவியலில் கூறவேண்டிய விகுதிப் புணர்ச்சியையும், உயிர் ஈற்று, மெய்ஈற்றுப் புணரியல்களில் கூறவேண்டிய பதப்புணர்ச்சியையும் ஆண்டுக் கூறாது, உருபு புணரியலில் இந்நூற்பாவில் சேர்த்துக் கூறியதற்குக் காரணம் ஒப்பின் முடித்தல் என்ற உத்தி ஆகும். ஓரிடத்தே ஒன்றற்குச் சொல்லும் இலக்கணம், அவ்விடத்தே சொல்லத் தேவையில்லாத வேறு ஒன்றற்கும் ஒத்து வருமாயின் அதற்கும் அதுவே இலக்கணமாகும் என்று அதனையும் சேர்த்துக் கூறுதல் ஒப்பின் முடித்தல் என்னும் உத்தி ஆகும்.

4.2.2 பொதுச் சாரியைகள் அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன என்ற பதினேழும், இவை போல்வன பிறவும் பொதுச்சாரியைகள் ஆகும்.

அன்ஆன் இன்அல் அற்றுஇற்று அத்துஅம்

தம்நம் நும்ஏ அஉ ஐகுன

இன்ன பிறவும் பொதுச் சாரியையே (நன்னூல், 244)

இச்சாரியைகள் விகுதிப்புணர்ச்சி, பதப்புணர்ச்சி, உருபுபுணர்ச்சி என்ற மூன்று புணர்ச்சிகளிலும், தனிமொழிகளிலும் வருதலினால் பொதுச்சாரியைகள் என்று வழங்கப்பட்டன.

சான்று:

அன்– ஒன்றன் கூட்டம்

(ஒன்று + அன் + கூட்டம்)

ஆன்– ஒருபாற்கு

(ஒருபது + ஆன் + கு) (இப்போது இது வழக்கில் இல்லை)

இன்– வண்டின்கால்

(வண்டு + இன் + கால்)

அல்– தொடையல்

(தொடை + அல்) – (= மாலை)

அற்று– பலவற்றை

(பல + அற்று + ஐ)

இற்று– பதிற்றுப்பத்து

(பத்து + இற்று + பத்து)

அத்து– மரத்துக்கிளை

(மரம் + அத்து + கிளை)

அம்– புளியம்பழம்

(புளி + அம் + பழம்)

தம்– எல்லார்தம்மையும்

(எல்லார் + தம் + ஐ + உம்)

நம்– எல்லா நம்மையும்

(எல்லா + நம் + ஐ + உம்)

நும்– எல்லீர் நும்மையும்

(எல்லீர் + நும் + ஐ + உம்)

ஏ– ஒன்றே கால்

(ஒன்று + ஏ + கால்)

அ– புளியமரம்(புளி + அ + மரம்)

உ– அவனுக்கு

(அவன் + உ + கு)

ஐ– பண்டைக்காலம்

(பண்டு + ஐ + காலம்)

கு– செய்குவாய்

(செய் + கு + ஆய்)

ன்– ஆனை

(ஆ + ன் + ஐ)

(செய்குவாய் – விகுதிப்புணர்ச்சி; தொடையல் – தனிமொழி; ஒன்றன்கூட்டம், வண்டின்கால், பதிற்றுப்பத்து, மரத்துக்கிளை, புளியம்பழம், ஒன்றேகால், புளியமரம், பண்டைக்காலம் – பதப்புணர்ச்சி; ஒருபாற்கு, பலவற்றை, எல்லார்தம்மையும், எல்லா நம்மையும், எல்லீர் நும்மையும், அவனுக்கு, ஆனை – உருபு புணர்ச்சி.)

4.3 தொகுப்புரை

இதுகாறும் வேற்றுமை உருபுகள் நிலைமொழி வருமொழிகளோடு புணரும் உருபு புணர்ச்சி பற்றியும், புணர்ச்சியில் சாரியைகள் வரும் முறைமை பற்றியும் நன்னூலார் உருபியலில் கூறியனவற்றை விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்தோம். அவற்றை ஈண்டுச் சுருக்கமாகக் காண்போம்.

வேற்றுமை எட்டு வகைப்படும். அவை: பெயர், ஐ, ஆல், கு, இன், அது, கண், விளி என்பன ஆகும். இவை எட்டுமே உருபுகள் ஆகும். பெயர் ஒரு தொடரில் எழுவாயாக வரும். அந்த எழுவாயே உருபாக நின்று ஐ, ஆல், கு, இன், அது, கண் என்னும் வேற்றுமை உருபுகளை ஏற்றுவரும். விளிவேற்றுமையும் பெயரின் திரிபாதலின் உருபே ஆகும்.

வேற்றுமை உருபுகள் பெயருக்குப் பின்னால் வரும். பெயர் பால் அடிப்படையில் ஆண்பால் பெயர், பெண்பால் பெயர், பலர்பால் பெயர், ஒன்றன்பால் பெயர், பலவின்பால் பெயர் என ஐந்து வகைப்படும். எனவே ஐம்பால் பெயர்களோடு எட்டு வேற்றுமை உருபுகளையும் பெருக்கிக் கணக்கிட வேற்றுமை உருபுகள் நாற்பது ஆகும்.

வேற்றுமை உருபுகள் தத்தமக்கு உரிய கருத்தாப் பொருள், செயப்படுபொருள், கருவிப்பொருள் முதலானவற்றைத் தர, பெயருக்குப் பின்னால் வரும்.

ஐ, ஆல், கு, இன், அது, கண் என்னும் வேற்றுமை உருபுகள் மெய்யையும் உயிரையும் முதலும் ஈறுமாக உடையவை. இவை நிலைமொழி, வருமொழிகளோடு புணரும்போது, ஏற்கெனவே உயிர்ஈற்றுப் புணரியலிலும், மெய் ஈற்றுப் புணரியலிலும் வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சொல்லப்பட்ட புணர்ச்சி விதிகளைப் பெரும்பாலும் பெறும்.

பதத்தின் முன்னர் விகுதி வந்து புணர்வது விகுதிப் புணர்ச்சி எனப்படும். பதத்தின் முன்னர் பதம் வந்து புணர்வது பதப்புணர்ச்சி எனப்படும். பதத்தின் முன்னர் வேற்றுமை உருபு வந்து புணர்வது உருபு புணர்ச்சி எனப்படும். இம்மூவகைப் புணர்ச்சியிலும் சாரியைகள் என்னும் இடைச்சொற்கள் வருவது உண்டு. இம்மூவகைப் புணர்ச்சியிலும் சாரியைகள் வரும்போது, ஒரு புணர்ச்சியில் ஒன்றாகவோ பலவாகவோ வரும்; வாராது இருத்தலும் உண்டு- ஒரே புணர்ச்சியில் சாரியை வருதலும், வாராமையும் ஆகிய விகற்பமும் உண்டு.

‘அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன’ என்னும் பதினேழும் பொதுச்சாரியைகள் ஆகும். இவை விகுதிப்புணர்ச்சி, பதப்புணர்ச்சி, உருபுபுணர்ச்சி ஆகிய மூவகைப் புணர்ச்சியிலும், இவற்றோடு தனிமொழியிலும் வரும்.

பாடம் - 5

உருபு புணர்ச்சி – II

5.0 பாட முன்னுரை

நிலைமொழியாக நிற்கும் பெயர்ச்சொற்களோடு வேற்றுமை உருபுகள் புணரும்போது இடையில் சாரியை பெற்றும் பெறாமலும் புணர்வதையும், சாரியைகள் வரும் முறைமையையும் சென்ற பாடத்தில் பார்த்தோம்.

இப்பாடத்தில் எல்லாம், எல்லாரும், எல்லீரும் என்ற பன்மைப் பெயர்ச்சொற்களோடு வேற்றுமை உருபுகள் புணரும்போது சாரியைகள் எவ்விடத்தில் வரும் என்பது பற்றி நன்னூலார் கூறும் கருத்துகள் விளக்கிக் காட்டப்படுகின்றன. தான், தாம், நாம் முதலான மூவிடப்பெயர்கள் எல்லாம் நெடிலை முதலாகக் கொண்டு தொடங்கும் பெயர்கள் ஆகும். இவை வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது தம் நெடு முதல் குறுகப் பெறுகின்றன. (அதாவது தான் தன் என்றும், தாம் தம் என்றும், நாம் நம் என்றும் ஆகி, பிறகு உருபு ஏற்கும்.) இதுபற்றி நன்னூலார் கூறும் கருத்துகள் எடுத்துக்காட்டப் படுகின்றன. அவ், இவ், உவ், அஃது, இஃது என்னும் சுட்டுப்பெயர்கள் வேற்றுமை உருபு ஏற்கும்போது பெறும் சாரியைகள் பற்றி நன்னூலார் கூறும் கருத்துகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அகர ஈற்றுப் பெயர்களின் முன்னர் வரும் அத்துச்சாரியை அடைகின்ற மாற்றம் பற்றிய நன்னூலார் கருத்துக் கூறப்படுகிறது-

உயிர் ஈற்றுப் புணரியல், மெய் ஈற்றுப் புணரியல் ஆகிய இயல்களில் வேற்றுமைத் தொகைப் புணர்ச்சிக்குச் சொல்லப்பட்ட சில பொதுவிதிகளினின்று இரண்டாம் வேற்றுமை மாறுபட்டு அமைந்திருப்பது பற்றி நன்னூலார் கூறும் கருத்துகள் விளக்கிக் காட்டப்படுகின்றன.

5.1 சில பெயர்களோடு வேற்றுமை உருபுகள் புணரும் முறைமை

எல்லாம் என்னும் இருதிணைப் பொதுப்பெயர், எல்லாரும் என்னும் உயர்திணைப் படர்க்கைப் பெயர், எல்லீரும் என்னும் இருதிணை முன்னிலைப் பொதுப்பெயர், தான், தாம், நாம் முதலான மூவிடப்பெயர்கள் ஆகியவற்றோடு வேற்றுமை உருபுகள் புணரும் முறையை நன்னூலார் விளக்கிக் கூறுகிறார். மேலும் ஆ, மா, கோ என்னும் ஓர் எழுத்துப் பெயர்கள், அவ், இவ், உவ், என்னும் வகர ஈற்றுச் சுட்டுப்பெயர்கள், ஆய்தம் இடையே வந்த அஃது, இஃது, உஃது என்னும் சுட்டுப்பெயர்கள் ஆகியவற்றோடு வேற்றுமை உருபுகள் புணரும் முறையையும் அவர் விளக்கிக் கூறுகிறார். சாரியைகளில் அத்து என்னும் சாரியை மட்டும் புணர்ச்சியில் விகாரம் அடைவதை அவர் குறிப்பிடுகிறார். இவற்றை ஈண்டு ஒன்றன்கீழ் ஒன்றாகக் காண்போம்.

5.1.1 எல்லாம் என்னும் பெயர் எல்லாம் என்பது அஃறிணைப் பன்மைப் பெயராகவும், உயர்திணையில் தன்மைப் பன்மைப் பெயராகவும் வரும். எனவே இது இருதிணைப் பொதுப்பெயர் எனப்படும். இப்பொதுப்பெயர் வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது, அஃறிணைப் பொருளை உணர்த்த ஒரு சாரியையும், உயர்திணைப் பொருளை உணர்த்த ஒரு சாரியையும் பெறும். சாரியையே இன்ன திணைப் பொருள் என்பதை அறிய உதவுகிறது. இனி இப்பொதுப்பெயரோடு வேற்றுமை உருபுகள் புணரும் முறை பற்றி நன்னூலார் கூறுவதைக் காண்போம்.

எல்லாம் என்னும் இருதிணைப் பொதுப்பெயர் அஃறிணையில் வரும்போது, அதனோடு ஆறு வேற்றுமை உருபுகளும் வந்து புணர்ந்தால், இடையே அற்று என்னும் சாரியையும், வேற்றுமை உருபின்மேல் உம் என்ற முற்றும்மையும் பெறும்.

சான்று:

எல்லாம் + ஐ > எல்லா + அற்று + ஐ + உம் = எல்லாவற்றையும்.

எல்லாம் என்பது உயர்திணையில் வரும்போது, இடையே நம் என்னும் சாரியையும், வேற்றுமை உருபின்மேல் உம் என்ற முற்றும்மையும் பெறும்.

சான்று:

எல்லாம் + ஐ > எல்லா + நம் + ஐ + உம் = எல்லா நம்மையும்

(எல்லா நம்மையும் – நம் எல்லாரையும்)

எல்லாம் என்பது இழிதிணை ஆயின்

அற்றோடு உருபின் மேல்உம் உறுமே;

அன்றேல் நம்இடை அடைந்து அற்றாகும் (நன்னூல், 245)

(இழிதிணை – அஃறிணை; அன்றேல் – அவ்வாறு இல்லாமல் உயர்திணையில் வரும்போது; அற்றாகும் – அவ்வாறே வேற்றுமை உருபின் மேல் முற்றும்மையும் பெறும்.)

5.1.2. எல்லாரும், எல்லீரும் என்னும் பெயர்கள் எல்லாரும் என்பது உயர்திணைப் படர்க்கைப் பன்மைப் பெயர். எல்லீரும் என்பது இருதிணைக்கும் பொதுவான முன்னிலைப் பன்மைப் பெயர். இவ்விரு பெயர்களோடு வேற்றுமை உருபுகள் புணரும் முறை குறித்து நன்னூலார் திறம்படக் கூறுகிறார். அதனை ஈண்டுக் காண்போம்.

எல்லாரும், எல்லீரும் என்னும் இரு பெயர்களோடு ஆறு வேற்றுமை உருபுகளும் வந்து புணரும்போது, அப்பெயர்களின் இறுதியில் உள்ள முற்றும்மைகளை நீக்கிவிட்டு, அவை இருந்த இடங்களில் முறையே தம் என்னும் சாரியையும், நும் என்னும் சாரியையும் வந்து பொருந்தும். அச்சாரியைகளால் நீக்கப்பட்ட முற்றும்மைகள் வேற்றுமை உருபுகளின் பின்னே வந்து பொருந்தும்.

எல்லாரும் எல்லீரும் என்பவற்று உம்மை

தள்ளி நிரலே தம்நும் சாரப்

புல்லும் உருபின் பின்னர் உம்மே (நன்னூல், 246)

(தள்ளி – நீக்கிவிட்டு; நிரலே – முறையே; புல்லும் – பொருந்தும்)

சான்று:

1. எல்லாரும் + ஐ > எல்லார் + ஐ > எல்லார் + தம் + ஐ + உம்

= எல்லார்தம்மையும்

2. எல்லீரும் + ஐ > எல்லீர் + ஐ > எல்லீர் + நும் + ஐ + உம்

= எல்லீர்நும்மையும்

(எல்லீர்நும்மையும் – உங்கள் எல்லாரையும்)

இக்காலத்தில் எல்லாம், எல்லாரும், எல்லீரும் என்னும் சொற்கள்

எல்லாம், எல்லாரும், எல்லீரும் எனவும், அவை வேற்றுமை உருபு ஏற்கும்போது சாரியை பெற்று எல்லாநம்மையும், எல்லார்தம்மையும், எல்லீர்நும்மையும் எனவும் நன்னூலார் காலத்தில் வழங்கிய சொற்கள் இன்று எவ்வாறு வழங்குகின்றன என்பதைப் பற்றிச் சிறிது காண்போம்.

நன்னூலார் காலத்தில் எல்லாம் என்ற சொல் அஃறிணைப் பன்மைக்கும், உயர்திணையில் தன்மைப் பன்மைக்கும் பொதுவாக வழங்கியது. இக்காலத்தில் எல்லாம் என்ற அச்சொல் அஃறிணைப் பன்மை, உயர்திணைத் தன்மைப் பன்மை, முன்னிலைப் பன்மை, படர்க்கைப் பன்மை ஆகிய எல்லாவற்றிற்கும் பொதுவாக வழங்குகிறது.

சான்று:

மாடுகள் எல்லாம் வந்தன அஃறிணைப் பன்மை

அவை எல்லாம் வந்தன

நாங்கள் எல்லாம் வந்தோம்

- உயர்திணைத் தன்மைப் பன்மை

நீங்கள் எல்லாம் வந்தீர்கள்

- முன்னிலைப் பன்மை

அவர்கள் எல்லாம் வந்தார்கள்

படர்க்கை உயர்திணைப் பன்மை

மாணவர்கள் எல்லாம் வந்தார்கள்

எல்லாம் என்பது வேற்றுமை உருபு ஏற்று, அஃறிணையில் வரும் போது, நன்னூலார் காலத்தைப் போலவே இக்காலத்திலும் அற்றுச் சாரியை பெற்று எல்லாவற்றையும் என்றே வழங்குகிறது. ஆனால் எல்லாம் என்ற அச்சொல் உயர்திணையில் வரும்போது எல்லா நம்மையும் என்று இக்காலத்தில் வழங்குவது இல்லை. நம்மை எல்லாம் என்று வழங்குகிறது.

சான்று:

நம்மை எல்லாம் ஆசிரியர் வரச்சொன்னார்

இதில் வரும் நம் என்பது நாம் என்ற தன்மைப்பெயரின் உருபு ஏற்கத் திரிந்த வடிவம் ஆகும். எல்லா நம்மையும் என்பதில் வரும் நம் என்பது சாரியை ஆகும்.

நன்னூலார் காலத்தில் எல்லாரும் என்பது படர்க்கைப் பன்மையில் மட்டும் வந்தது. எல்லாரும் வந்தனர் என்றால், அதில் உள்ள எல்லாரும் என்பது படர்க்கையாரை மட்டும் குறிக்கும். மற்றத் தன்மையாரையோ, முன்னிலையாரையோ குறிக்காது. இக்காலத்தில் எல்லாரும் என்பது உயர்திணையில் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடங்களிலும் உள்ள எல்லாரையும் குறிக்கும் பொதுச் சொல்லாக வழங்குகிறது. ஆயினும் இச்சொல் அம்மூவருள் யாரைக் குறிக்கிறது என்பதை அச்சொல்லின் முன் வரும் மூவிடப் பன்மைப்பெயர்கள் உணர்த்துகின்றன.

சான்று:

நாங்கள் எல்லாரும் வந்தோம்

நாம் எல்லாரும் வந்தோம்

நீங்கள் எல்லாரும் வந்தீர்கள்

அவர்கள் எல்லாரும் வந்தார்கள்

எல்லாரும் என்ற சொல் பொதுச்சொல்லாகி விடவே, முன்னிலைப் பன்மையாரை மட்டும் உணர்த்தி வந்த எல்லீரும் என்ற சிறப்புச்சொல் வழக்கு இழந்துவிட்டது.

எல்லாம், எல்லாரும் என்னும் இவை பொதுச்சொற்களாகி விட்ட நிலையில், இவை வேற்றுமை உருபு ஏற்பதிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. எல்லாரும் என்ற சொல் வேற்றுமை உருபு ஏற்று எல்லாரையும் என்று வழங்கியது. வேற்றுமை உருபை அடுத்தே உம் சேர்க்கப்படுகிறது. முன்வரும் சொற்களால் இடவேறுபாடு அறியப்படும். முன்வரும் சொற்களும் வேற்றுமை உருபு ஏற்கத் தம் நெடுமுதல் குறுகிய வடிவங்களாக உள்ளன.

சான்று:

எங்கள் எல்லாரையும் ஆசிரியர் வரச்சொன்னார்

நம் எல்லாரையும் ஆசிரியர் வரச்சொன்னார்

உங்கள் எல்லாரையும் ஆசிரியர் வரச்சொன்னார்

அவர்கள் எல்லாரையும் ஆசிரியர் வரச்சொன்னார்

எல்லாம் என்ற சொல் இதுபோல உருபு ஏற்பது இல்லை. முன்னர் வரும் சொற்களால் அஃறிணை, உயர்திணைத் தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற நான்கு வேறுபாடும் அறியப்படும். அச்சொற்களோடு வேற்றுமை உருபு சேர்ந்துவரும்.

சான்று:

மாடுகளை எல்லாம் ஓட்டி வந்தனர்

எங்களை எல்லாம் ஆசிரியர் வரச்சொன்னார்

நம்மை எல்லாம் ஆசிரியர் வரச்சொன்னார்

உங்களை எல்லாம் ஆசிரியர் வரச்சொன்னார்

அவர்களை எல்லாம் ஆசிரியர் வரச்சொன்னார்

மாணவர்களை எல்லாம் ஆசிரியர் வரச்சொன்னார்

5.1.3 தான், தாம், நாம் முதலான மூவிடப் பெயர்கள் யான், யாம், நாம் என்பன தன்மை இடப்பெயர்கள். நீ, நீர் என்பன முன்னிலை இடப்பெயர்கள். தான், தாம் என்பன படர்க்கை இடப்பெயர்கள். இவை வேற்றுமை உருபுகளோடு புணரும் முறை பற்றி நன்னூலார் நான்கு விதிகளைக் கூறுகிறார்.

வேற்றுமை உருபுகளோடு புணரும்போது தான், தாம், நாம் என்னும் மூன்று பெயர்களும் தமது நெடுமுதல் குறுகி முறையே தன், தம், நம் என வரும்.

சான்று:

தான் + ஐ = தன்னை ; தான் + ஆல் = தன்னால்

தாம் + ஐ = தம்மை ; தாம் + ஆல் = தம்மால்

நாம் + ஐ = நம்மை ; நாம் + ஆல் = நம்மால்

யான், யாம், நீ, நீர் என்னும் நான்கு பெயர்களும் முறையே என், எம், நின், நும் எனக் குறுகி வரும்.

சான்று:

யான் + ஐ = என்னை; யான் + ஆல் = என்னால்

யாம் + ஐ = எம்மை; யாம் + ஆல் = எம்மால்

நீ + ஐ = நின்னை; நீ + ஆல் = நின்னால்

நீர் + ஐ = நும்மை; நீர் + ஆல் = நும்மால்

இவ்வேழு பெயர்களோடு நான்காம் வேற்றுமை உருபாகிய கு வந்து புணரும்போது இடையே அகரச்சாரியை வரும்.

சான்று:

தான் + கு > தன் + கு > தன் + அ + கு = தனக்கு

தாம் + கு = தமக்கு

நாம் + கு = நமக்கு

யான் + கு = எனக்கு

யாம் + கு = எமக்கு

நீ + கு = நினக்கு

நீர் + கு = நுமக்கு

நான்காம் வேற்றுமை உருபாகிய கு வந்து புணரும்போது இடையே வரும் அகரச்சாரியையின் உயிர் வந்தாலும், ஆறாம் வேற்றுமைக்கு உரிய அது, ஆது, அ என்னும் உருபுகளின் முதலில் உயிர் வந்தவிடத்தும், அவ்வேழு பெயர்களின் குறுக்கங்களாகிய தன், தம், நம், என், எம், நின், எம் என்பனவற்றின் இறுதியில் உள்ள ஒற்றுகள் இரட்டித்து வாரா.

இவை ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ என்ற விதிப்படி என்னக்கு, என்னது, என்னாது, என்னா என ஒற்று இரட்டித்து வாரா. ஒற்று இரட்டாமலே வரும்.

சான்று:

என் + கு > என் + அ + கு = எனக்கு – நான்காம் வேற்றுமை

என் + அது = எனது

என் + ஆது = எனாது

என் + அ = என

ஆறாம் வேற்றுமை

(எனது கை, எனாது கை, என கைகள்)

தான்தாம் நாம்முதல் குறுகும்; யான்யாம்

நீர் என்எம் நின்நும் ஆம், பிற

குவ்வின் அவ்வரும் நான்கு ஆறு இரட்டல (நன்னூல், 247)

நூற்பாவில் பிற என்றதனால் நீ என்பது உன் எனவும், நீர் என்பது உம் எனவும் திரிந்து வரும். மேலும் இந்நூற்பாவில் கூறப்படாத நான் என் எனவும், நீயிர், நீவிர் என்பன நும், உம் எனவும் திரிந்துவரும்.

5.1.4 ஆ, மா, கோ என்னும் ஓர் எழுத்துப் பெயர்கள் ஆ, மா, கோ என்னும் ஓர் எழுத்துப் பெயர்கள் வேற்றுமை உருபுகளோடு புணரும் போது னகரச் சாரியை பொருந்தவும் பெறும்.

ஆ மா கோ னவ் அணையவும் பெறுமே (நன்னூல், 248)

(ஆ – பசு, மா – விலங்கு; கோ – அரசன், தலைவன்; அணையவும் – பொருந்தவும்)

இந்நூற்பாவில் அணையவும் (பொருந்தவும்) என்பதில் உள்ள உம்மையால், சாரியை அணையாமலிருக்கவும் பெறும் என்பது பெறப்படும். எனவே இம்மூன்று பெயர்களும் வேற்றுமை உருபுகளோடு புணரும்போது னகரச் சாரியை பெற்றும், பெறாதும் விகற்பமாக வரும் என்பது புலனாகும்.

சான்று:

ஆ + ஐ > ஆ + ன் + ஐ = ஆனை

மா + ஐ > மா + ன் + ஐ = மானை

கோ + ஐ > கோ + ன் + ஐ = கோனை

என னகரச் சாரியை பெற்றும்,

ஆ + ஐ > ஆ + வ் + ஐ = ஆவை

மா + ஐ > மா + வ் + ஐ = மாவை

கோ + ஐ > கோ + வ் + ஐ = கோவை

என னகரச் சாரியை பெறாமல், வகர உடம்படுமெய் பெற்றும் விகற்பமாக வந்தன.

5.1.5 அவ், இவ், உவ் என்னும் சுட்டுப்பெயர்கள் அவ், இவ், உவ் என்னும் வகரமெய் ஈற்று மூன்று சுட்டுப்பெயர்களும், வேற்றுமை உருபுகளோடு புணரும்போது, அற்று என்னும் சாரியை பெறுதல் முறைமை ஆகும். (அவ் – அவை; இவ் – இவை; உவ் – உவை)

வவ்விறு சுட்டிற்கு அற்று உறல் வழியே (நன்னூல், 250)

(வழி – முறைமை)

சான்று:

அவ் + ஐ > அவ் + அற்று + ஐ = அவற்றை

இவ் + ஐ > இவ் + அற்று + ஐ = இவற்றை

உவ் + ஐ + உவ் + அற்று + ஐ = உவற்றை

(உவற்றை என்பது இப்போது வழக்கில் இல்லை)

5.1.6 அஃது, இஃது, உஃது என்னும் சுட்டுப்பெயர்கள் அது, இது, உது என்பன சுட்டுப்பெயர்கள். இவை, உயிரை முதலாகக் கொண்ட சொற்கள் தம்முன் வரும்போது இடையே ஆய்தம் பெற்று அஃது, இஃது, உஃது என வழங்கும்.

சான்று:

அஃது அறியாதோர்க்கே (நற்றிணை, 174:8)

இஃது எவன்கொல்லோ தோழி (நற்றிணை, 273:1)

அஃது, இஃது, உஃது என்னும் மூன்று சுட்டுப் பெயர்களும் வேற்றுமை உருபுகளோடு புணரும்போது, இடையே அன் சாரியை வந்தால், அ, இ, உ என்னும் சுட்டு எழுத்துகளை அடுத்துள்ள ஆய்தம் கெடும்.

சுட்டின் முன் ஆய்தம் அன்வரின் கெடுமே (நன்னூல், 251)

சான்று:

அஃது + ஐ > அஃது + அன் + ஐ > அது + அன் + ஐ = அதனை. அன் சாரியை வரும்போது ஆய்தம் கெட்டவிடத்து, அது, இது, உது என ஆய்தம் இல்லாச் சுட்டுப் பெயர்களாகிப் பின்பு அன் சாரியை பெறுதலால், ஆய்தம் இல்லாச் சுட்டுப்பெயர்கள் அன் சாரியை பெறுவதற்கும் இதுவே விதியாகும்.

5.1.7 அத்துச் சாரியையின் முதல் கெடுதல் இயல்பாகவோ, இலக்கண விதியின் காரணமாகவோ நிலைமொழியின் ஈற்றில் நின்ற அகர உயிரின் முன் வந்து புணரும் அத்துச் சாரியையின் முதலில் உள்ள அகர உயிர் கெடும்.

அத்தின் அகரம் அகர முனை இல்லை (நன்னூல், 252)

(முனை – முன்; அகர முனை – நிலைமொழியின் இறுதியில் உள்ள அகர உயிரின்முன் வந்தால்)

சான்று:

மக + அத்து + கை > மக + த்து + கை = மகத்துக்கை

(இயல்பு உயிர் ஈறு)

(மக – மகன் அல்லது மகள், பிள்ளை)

மரம் + அத்து + ஐ > மர + அத்து + ஐ > மர + த்து + ஐ = மரத்தை (விதி உயிர் ஈறு)

5.2 சில வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சிறப்பு விதிகள்

நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலிலும், மெய் ஈற்றுப் புணரியலிலும் ஒவ்வோர் ஈற்றிற்கான புணர்ச்சி விதிகளைக் கூறும்போது, வேற்றுமைப் புணர்ச்சிக்கான பொதுவிதிகளையும் கூறிச்செல்கிறார். வேற்றுமைகளில் இரண்டாம் வேற்றுமையும், மூன்றாம் வேற்றுமையும் ஆங்கே சொல்லப்பட்ட வேற்றுமைப் புணர்ச்சி விதிகள் ஒரு சிலவற்றினின்று மாறுபட்டு அமைகின்றன. அவற்றை நன்னூலார் உருபுபுணரியலில் தொகுத்துக் கூறுகிறார். அவற்றை ஈண்டுச் சான்றுடன் விளக்கிக் காண்போம்.

5.2.1 இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சிறப்பு விதிகள் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி, முன்னமே வேற்றுமைப் புணர்ச்சிக்குக் கூறப்பட்ட பொதுவிதிகள் சிலவற்றிலிருந்து மாறுபட்டு அமையும். அவை பின்வருமாறு:

இயல்பாக வரவேண்டிய இடத்தில் விகாரப்பட்டு வரும்.

பொதுவிதிப்படி நின் என்ற சொல்லின் இறுதியில் உள்ள னகரமெய் வல்லினம் வந்தால் வேற்றுமையில் இயல்பாகும். இது மெய்ஈற்றுப் புணரியலில் ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது.

நின் ஈறு இயல்பாம் (நன்னூல், 218: 2)

சான்று:

நின் + பகை = நின்பகை (நினதுபகை, ஆறாம் வேற்றுமைத் தொகை)

ஆனால் இரண்டாம் வேற்றுமையில் நின் என்பதன் இறுதியில் உள்ள னகரமெய், வல்லின மெய் வந்தால் றகர மெய்யாகத் திரியும்.

சான்று:

வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப (தொல்.பொருள், 415: 1)

(அரசே! நீ வழிபடுகின்ற தெய்வம் நின்னைப் பாதுகாக்க)

இத்தொடரில் இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புணர்ச்சியாக,

நின் + புறங்காக்க = நிற்புறங்காக்க

என வந்துள்ளது. நின் என்பதன் இறுதியில் உள்ள னகரமெய் வருமொழி முதலில் வல்லினமெய் வந்தால் இயல்பாகும் என்ற பொதுவிதிக்கு மாறாக இங்கு றகர மெய்யாகத் திரிந்துள்ளது. னகரம் றகரமாகத் திரிந்தது மூவகை விகாரங்களுள் திரிதல் விகாரம் ஆகும்.

விகாரப்பட்டு வரவேண்டிய இடத்தில் இயல்பாக வரும்.

பொதுவிதிப்படி, நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகரமும் னகரமும், வருமொழி முதலில் வல்லினம் வந்தால் வேற்றுமையில் முறையே டகரமாகவும், றகரமாகவும் திரியும். இது மெய் ஈற்றுப் புணரியலில் ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது.

ணன வல்லினம் வரட் டறவும் ….. வேற்றுமைக்கு

(நன்னூல், 209: 1-2)

சான்று:

மண் + குடம் = மட்குடம் (மண்ணால் ஆகிய குடம்)

பொன் + குடம் = பொற்குடம் (பொன்னால் ஆகிய குடம்)

இவை இரண்டும் மூன்றாம் வேற்றுமைத்தொகை.

ஆனால் இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகர, னகர மெய்கள் வல்லினம் வந்தால் அவ்வாறு திரியாது இயல்பாக நிற்கின்றன.

சான்று:

மண் + கொணர்ந்தான் = மண்கொணர்ந்தான்

பொன் + கொடுத்தான் = பொன்கொடுத்தான்

(மண்கொணர்ந்தான் – மண்ணைக் கொணர்ந்தான்; கொணர்ந்தான் – கொண்டுவந்தான்; பொன் கொடுத்தான் – பொன்னைக் கொடுத்தான்)

எனவே மற்ற வேற்றுமைகள் விகாரப்பட்டு வரவேண்டிய இடத்தில், இரண்டாம் வேற்றுமை இயல்பாக வந்தது.

இனி இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சியில் உருபு கட்டாயம் விரிந்தே வருதலைப் பற்றியும், தொக்கு வருதலைப் பற்றியும் நன்னூலார் இரண்டு விதிகளைக் கூறுகிறார். அவற்றைக் காண்போம்.

உயர்திணைப் பெயரினிடத்து ஐ உருபு விரிந்து வரும். தொக்கும் (மறைந்தும்) வரும்.

சான்று: 1

நம்பியைக் கொணர்ந்தான்

ஈண்டு நம்பி என்ற உயர்திணைப் பெயரில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு விரிந்து நின்றது. இவ்விடத்தில் நம்பி கொணர்ந்தான் என உருபு தொக்கு வாராது. நம்பிகொணர்ந்தான் என்றால், நம்பி ஏதோ ஒன்றைக் கொண்டுவந்தான் என்று பொருள்படும். எனவே நம்பியைக் கொணர்ந்தான் என்ற தொடரில் ஐ உருபு கட்டாயம் விரிந்தே வரும்.

சான்று: 2

மகன் + பெற்றாள் = மகற்பெற்றாள்

(மகற்பெற்றாள் – மகனைப் பெற்றாள்)

ஈண்டு மகன் உயர்திணைப் பெயரில் ஐ தொக்கு வந்தது. மகன் பெற்றாள் என ஐ உருபு தொக்கு நின்றாலும், மகனைப் பெற்றாள் என ஐ உருபு விரிந்து நின்றாலும் ஒரே பொருள் ஆகும். எனவே இதுபோன்ற தொடரில் ஐ உருபு தொக்கு வரும். ஆனால் நம்பியைக் கொணர்ந்தான் என்ற தொடரில் ஐ உருபை விரித்தே சொல்லவேண்டும்.

விரவுப்பெயர்களில் (இருதிணைப் பொதுப்பெயர்களில்) ஐ உருபு விரிந்தும், விரிதல் இன்றித் தொக்கும் வரும்.

சான்று: 1

சாத்தனைக் கொணர்ந்தான்

ஈண்டுச் சாத்தன் என்பது பொதுப்பெயர். எருதையும், மனிதன் ஒருவனையும் குறிப்பதால் பொதுப்பெயர். இப்பொதுப்பெயரில் ஐ உருபு விரிந்தே வரும்.

சான்று : 2

ஆண் பெற்றாள் (ஆணைப் பெற்றாள்)

ஈண்டு ஆண் என்ற பொதுப்பெயரில் ஐ உருபு தொக்கு வந்தது.

மற்ற வேற்றுமைகளில் உயர்திணையிலும், இருதிணைப்பொதுப் பெயர்களிலும் உருபு விரிந்தே வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு தொடரில் வேற்றுமை உருபு தொக்கும் விரிந்தும் வரலாம். பொருள் மாறாது. சான்றாக, உயர்திணைப் பெயரிலும், இருதிணைப் பொதுப்பெயரிலும் ஆறாம் வேற்றுமைத் தொகையில்,

நம்பி பெருமை

உயர்திணைப் பெயர்

மகன் பெருமை

சாத்தன் செவி

இருதிணைப் பொதுப் பெயர்

ஆண் கை

என உருபு தொக்கு வரும். இத்தொடர்களில் ஆறாம் வேற்றுமைக்கு உரிய அது என்னும் உருபை விரித்து,

நம்பியது பெருமை

மகனது பெருமை

சாத்தனது செவி

ஆணினது கை

எனச் சொன்னாலும் ஒரே பொருள். எனவே மற்ற வேற்றுமைகளில் உருபு தொக்கும், விரிந்தும் வரும். ஆனால் இரண்டாம் வேற்றுமை மட்டும் உருபு விரிந்து மட்டுமே வருதல், தொக்கும் விரிந்தும் வருதல் என்ற இருவேறு நிலைகளை உடையது.

மேலே கூறிய நான்கு விதிகளையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் தொகுத்துக் கூறுகிறார்.

இயல்பின் விகாரமும், விகாரத்து இயல்பும்,

உயர்திணை இடத்து விரிந்தும் தொக்கும்,

விரவுப் பெயரின் விரிந்தும் நின்றும்,

அன்ன பிறவும் ஆகும் ஐ உருபே (நன்னூல், 255)

(நின்றும் – உருபு மறைந்தும்)

5.3 தொகுப்புரை

இதுகாறும் நன்னூலார் உருபு புணரியலில் எல்லாம், எல்லாரும், எல்லீரும் என்பன போன்ற சில பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபுகளோடு புணரும் முறைமை பற்றியும், இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிகளுக்கான சிறப்புவிதி பற்றியும் கூறியனவற்றை விரிவாகவும், விளக்கமாகவும் பார்த்தோம். அவற்றை ஈண்டுச் சுருக்கமாகத் தொகுத்துக் காண்போம்.

வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது எல்லாம் என்ற பொதுப்பெயர் அஃறிணைப் பொருளை உணர்த்த அற்றுச் சாரியையும், உயர்திணைப் பொருளை உணர்த்த நம் சாரியையும் பெறும்; எல்லாரும் என்ற பெயர் தம் சாரியை பெறும்; எல்லீரும் என்ற பெயர் நும் சாரியை பெறும்.

தான், தாம், நாம், யான், யாம், நீ, நீர் என்னும் மூவிடப் பெயர்கள் வேற்றுமை உருபு ஏற்கும்போது தமது நெடுமுதல் குறுகும்.

ஆ, மா, கோ என்னும் ஓர் எழுத்துப் பெயர்கள் வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது னகரச் சாரியை பெறும்; பெறாமல் வருவதும் உண்டு.

வேற்றுமை உருபுகளோடு புணரும்போது, அவ், இவ், உவ் என்னும் சுட்டுப்பெயர்கள் அற்றுச் சாரியை பெறும்; அஃது, இஃது, உஃது என்னும் சுட்டுப்பெயர்கள் அன் சாரியை பெறும்.

அகர ஈற்றுப் பெயர்களின் முன் அத்துச் சாரியை வந்து புணரும்போது, அதன் முதலில் உள்ள அகர உயிர் கெடும்.

உயிர் ஈற்றுப் புணரியல், மெய் ஈற்றுப் புணரியல் ஆகிய இயல்களில் கூறப்பட்ட பொதுவிதிகள் சிலவற்றினின்று இரண்டாம் வேற்றுமையும் மூன்றாம் வேற்றுமையும் மாறுபட்டு அமைந்துள்ளன. இவற்றை எல்லாம் இப்பாடத்தின் வாயிலாகப் பார்த்தோம்.

பாடம் - 6

இக்காலத் தமிழில் வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

6.0 பாடமுன்னுரை

நிலைமொழியில் உள்ள ஒரு சொல், வருமொழியில் உள்ள மற்றொரு சொல்லோடு வேற்றுமைப் பொருளிலும், அல்வழிப் பொருளிலும் புணரும் புணர்ச்சி பற்றி நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியல், மெய் ஈற்றுப் புணரியல், உருபு புணரியல் என்னும் மூன்று இயல்களில் கூறியனவற்றை இதற்கு முந்தைய பதினொரு பாடங்களில் விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்தோம். நன்னூலார் புணர்ச்சி பற்றிக் கூறியுள்ள விதிகள் இக்காலத்தில் நாம் தமிழைப் பிழையின்றி எழுதவும், திருத்தமுறப் பேசவும் உதவுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை வல்லினம் மிகும் இடங்கள், வல்லினம் மிகா இடங்கள் ஆகிய இரண்டும் ஆகும்.

நன்னூலார், நிலைமொழியின் இறுதியில் உள்ள உயிர்களின் முன்னர், வருமொழி முதலில் வருகின்ற க, ச, த, ப என்னும் வல்லினமெய்கள் பெரும்பாலும் மிகும் என்கிறார். இதனைப் பின்வரும் உயிர் ஈற்றுப் புணரியல் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்

க ச த ப மிகும் விதவாதன மன்னே (நன்னூல், 165)

(விதவாதன – சிறப்பு விதிகளில் சொல்லாதவை; மன் – பெரும்பாலும்)

நன்னூலார் இந்நூற்பாவில், நிலைமொழியின் இறுதியில் நிற்கும் உயிர்களின் முன்னர், வருமொழி முதலில் வரும் வல்லினம் பெரும்பாலும் மிகும் என்று பொதுவாகக் கூறியுள்ளாரே தவிர, எந்தெந்த இடங்களில் மிகும் என்பதைத் தனித்தனியே எடுத்துக் கூறவில்லை. ஆனால் உயிர் ஈற்றுப் புணரியலில் ஒவ்வோர் உயிர் ஈற்றுச் சிறப்பு விதியிலும் எந்தெந்த இடங்களில் உயிர்முன் வரும் வல்லினம் மிகாது என்பதைத் தனித்தனியே எடுத்துக் கூறுகிறார். சான்றாக, அகர ஈற்றுச் சிறப்பு விதியில்,

செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களின் முன்னரும்,

பல்வகைப் பெயரெச்சங்களுக்கு முன்னரும்

பல்வகை வினைமுற்றுகளுக்கு முன்னரும்

ஆறாம் வேற்றுமை அ உருபிற்கு முன்னரும்

பல சில என்னும் அஃறிணைப் பன்மைப் பெயர்களுக்கு முன்னரும்

அம்ம என்னும் இடைச்சொல்லுக்கு முன்னரும்

வரும் வல்லினம் மிகாது இயல்பாகும் என்கிறார். இதனை,

செய்யிய என்னும் வினையெச்சம், பல்வகைப்

பெயரின் எச்சம், முற்று, ஆறன் உருபே,

அஃறிணைப் பன்மை, அம்ம முன் இயல்பே (நன்னூல், 167)

என்ற நூற்பாவில் உணர்த்துகிறார். இதுபோல் ஒவ்வோர் உயிர் ஈற்றின் முன்னரும் வரும் வல்லினம் எந்தெந்த இடங்களில் மிகாது என்பதை எடுத்துக் கூறுகிறார். சிறப்பு விதிகளில் வல்லினம் மிகாது என்று கூறப்படும் இடங்களைத் தவிர, பிற எல்லா இடங்களிலும் உயிர் முன் வரும் வல்லினம் மிகும் என்பது நன்னூலார் கருத்து, இதையே ‘இயல்பினும் விதியினும்’ என்ற நூற்பாவில் விதவாதன மிகும் (சிறப்பு விதிகளில் சொல்லாதவை மிகும்) என்று குறிப்பிட்டார்.

மெய் ஈற்றுப் புணரியலில் மெய் எழுத்துகளில் ய, ர, ழ என்னும் மெய்களின் முன்னர் வரும் வல்லினம் எந்தெந்த இடங்களில் மிகும் என்பதையும், மிகாது இயல்பாகும் என்பதையும்,

யரழ முன்னர்க் கசதப அல்வழி

இயல்பும் மிகலும் ஆகும்; வேற்றுமை

மிகலும் இனத்தோடு உறழ்தலும் விதிமேல் (நன்னூல், 224)

என்ற நூற்பாவில் நன்னூலார் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் இதுபோல உயிர்களின் முன்னர் வரும் வல்லினம் அல்வழியிலும் வேற்றுமையிலும் எந்தெந்த இடங்களில் மிகும், மிகாது என ஒரு சேரக் கூறவில்லை. உயிர்களின் முன்னர் வரும் வல்லினம் மிகாத இடங்களை மட்டும் கூறி, வல்லினம் மிகாத அவ்விடங்களைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் வல்லினம் மிகும் என்று பொதுப்படக் கூறுவதோடு அமைந்தார்.

எனவே உயிர் ஈற்றின் முன்னரும், ய,ர,ழ என்னும் மெய் ஈறுகளின் முன்னரும் வருகின்ற வல்லினம் எந்தெந்த இடங்களில் மிகும் என்பதையும், மிகாது இயல்பாகும் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் தேவையானதும் இன்றியமையாததும் ஆகும். இப்பாடத்தில் வல்லினம் மிகும் இடங்களும், வல்லினம் மிகா இடங்களும் இக்காலத் தமிழ்வழிநின்று தக்க சான்றுகளுடன் விளக்கிக் காட்டப்படுகின்றன.

6.1 வல்லினம் மிகும் இடங்கள்

நிலைமொழியின் இறுதியில் உள்ள உயிர்களின் முன்னரும், ய,ர,ழ என்னும் மெய்களின் முன்னரும் வருமொழி முதலில் வருகின்ற க,ச,த,ப என்னும் வல்லின மெய்கள் எந்தெந்த இடங்களில் மிகும் என்பதைச் சான்றுடன் காணலாம்.

6.1.1 சுட்டு, வினா அடியாகத் தோன்றிய சொற்கள் முன் வல்லினம் மிகல்

அ, இ என்பன சுட்டு எழுத்துகள்; எ, யா என்பன வினா எழுத்துகள். இவற்றின் முன்னும், இவற்றின் அடியாகத் தோன்றிய அந்த, இந்த, எந்த; அங்கு, இங்கு, எங்கு; ஆங்கு, ஈங்கு, யாங்கு; அப்படி, இப்படி, எப்படி; ஆண்டு, ஈண்டு, யாண்டு; அவ்வகை, இவ்வகை, எவ்வகை, அத்துணை, இத்துணை, எத்துணை என்னும் சொற்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.

சான்று:

அ + காலம் = அக்காலம்

எ + திசை = எத்திசை

அந்த + பையன் = அந்தப் பையன்

எந்த + பொருள் = எந்தப் பொருள்

அங்கு + கண்டான் = அங்குக் கண்டான்

எங்கு + போனான் = எங்குப் போனான்

யாங்கு + சென்றான் = யாங்குச் சென்றான்

அப்படி + சொல் = அப்படிச் சொல்

எப்படி + சொல்வான் = எப்படிச் சொல்வான்

ஈண்டு + காண்போம் = ஈண்டுக் காண்போம்

யாண்டு + காண்பேன் = யாண்டுக் காண்பேன்

அவ்வகை + செய்யுள் = அவ்வகைச் செய்யுள்

எத்துணை + பெரியது = எத்துணைப் பெரியது

6.1.2 ஓர் எழுத்துச் சொற்களின் முன் வல்லினம் மிகல் கை, தீ, தை, பூ, மை என்னும் ஓர் எழுத்துச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும்.

சான்று:

கை + குழந்தை = கைக்குழந்தை

கை + பிடி = கைப்பிடி

தீ + பிடித்தது = தீப்பிடித்தது

தீ + பெட்டி = தீப்பெட்டி

தீ + புண் = தீப்புண்

தை + பொங்கல் = தைப்பொங்கல்

தை + திருநாள் = தைத்திருநாள்

பூ + பறித்தாள் = பூப்பறித்தாள்

பூ + பல்லக்கு = பூப்பல்லக்கு

மை + கூடு = மைக்கூடு

மை + பேனா = மைப்பேனா

6.1.3 குற்றியலுகரச் சொற்கள் முன் வல்லினம் மிகல் வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் முன்னும், சில மென்தொடர் மற்றும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் முன்னும், உயிர்த்தொடர் போன்ற அமைப்பை உடைய சில முற்றியலுகரச் சொற்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.

வன்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகல்

சான்று:

பாக்கு + தோப்பு = பாக்குத்தோப்பு

அச்சு + புத்தகம் = அச்சுப்புத்தகம்

எட்டு + தொகை = எட்டுத்தொகை

பத்து + பாட்டு = பத்துப்பாட்டு

இனிப்பு+ சுவை = இனிப்புச்சுவை

கற்று + கொடுத்தான் = கற்றுக்கொடுத்தான்

சில மென்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகல்

சான்று:

குரங்கு + குட்டி = குரங்குக் குட்டி

பஞ்சு + பொதி = பஞ்சுப்பொதி

துண்டு + கடிதம் = துண்டுக்கடிதம்

மருந்து + சீட்டு = மருந்துச் சீட்டு

பாம்பு + தோல் = பாம்புத்தோல்

கன்று + குட்டி = கன்றுக்குட்டி

இவற்றை வல்லினம் மிகாமல் குரங்கு குட்டி, மருந்து சீட்டு என்று எழுதினால் குரங்கும் குட்டியும், மருந்தும் சீட்டும் என்று பொருள்பட்டு உம்மைத் தொகைகள் ஆகிவிடும்.

சில உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகல்

சான்று:

முதுகு + தண்டு = முதுகுத்தண்டு

விறகு + கடை = விறகுக்கடை

படகு + போட்டி = படகுப்போட்டி

பரிசு + புத்தகம் = பரிசுப்புத்தகம்

மரபு + கவிதை = மரபுக்கவிதை

6.1.4 முற்றியலுகரச் சொற்கள் முன் வல்லினம் மிகல் தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின மெய்யின் மேலும், பிற மெய்களின் மேலும் ஏறிவருகின்ற உகரம் முற்றியலுகரம் எனப்படும். நடு, புது, பொது, பசு, திரு, தெரு, முழு, விழு என்னும் முற்றியலுகரச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும்.

சான்று:

நடு + கடல் = நடுக்கடல்

புது + புத்தகம் = புதுப்புத்தகம்

பொது + பணி = பொதுப்பணி

பசு + தோல் = பசுத்தோல்

திரு + கோயில் = திருக்கோயில்

தெரு + பக்கம் = தெருப்பக்கம்

முழு + பேச்சு = முழுப்பேச்சு

விழு + பொருள் = விழுப்பொருள்

தனி நெட்டெழுத்தை அடுத்தோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ ஒரு சொல்லின் இறுதியில் வல்லினமெய் அல்லாத பிற மெய்களின் மேல் ஏறி வருகின்ற உகரமும் முற்றியலுகரம் ஆகும். இத்தகைய முற்றியலுகரச் சொற்கள் பெரும்பாலும் ‘வு’ என முடியும். இவற்றின் முன் வரும் வல்லினமும் மிகும்.

சான்று:

சாவு + செய்தி = சாவுச்செய்தி

உணவு + பொருள் = உணவுப்பொருள்

உழவு + தொழில் = உழவுத்தொழில்

நெசவு + தொழிலாளி = நெசவுத்தொழிலாளி

தேர்வு + கட்டணம் = தேர்வுக்கட்டணம்

கூட்டுறவு + சங்கம் = கூட்டுறவுச் சங்கம்

பதிவு + தபால் = பதிவுத்தபால்

இரவு + காட்சி = இரவுக்காட்சி

6.1.5 வேற்றுமைப் புணர்ச்சியில் வரும் வல்லினம் மிகல் இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரையிலான ஆறு வேற்றுமைகள் ஒவ்வொன்றும் புணர்ச்சியில் மூன்று வகையாக வருகின்றன.

வேற்றுமை உருபு தொக்கு (மறைந்து) வருவது. இது வேற்றுமைத்தொகை எனப்படும்.

சான்று:

கனி + தின்றான் = கனிதின்றான்

இத்தொடருக்குக் கனியைத் தின்றான் என்று பொருள். கனி தின்றான் என்பதில் இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ தொக்கு வந்துள்ளது. எனவே இது இரண்டாம் வேற்றுமைத் தொகை.

வேற்றுமை உருபும், அதனோடு சேர்ந்து வரும் சில சொற்களும் தொக்கு வருவது. இது வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை எனப்படும்.

சான்று:

தயிர் + குடம் = தயிர்க்குடம்

இத்தொடருக்குத் தயிரை உடைய குடம் என்று பொருள். தயிர்க்குடம் என்பதில் இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ என்பதும், அதனோடு சேர்ந்து வந்துள்ள உடைய என்பதும் தொக்கு வந்துள்ளன. எனவே இது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.

வேற்றுமை உருபு விரிந்து வருவது. இது வேற்றுமை விரி எனப்படும்.

சான்று:

கனியை + தின்றான் = கனியைத் தின்றான்

மேலே கூறிய சான்றுகளை நோக்குவோம். வல்லினம் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் மிகாமலும், மற்ற இரண்டிலும் மிக்கும் வந்துள்ளது புலனாகும். இதுபோல ஒவ்வொரு வேற்றுமையும் மூவகைப் புணர்ச்சியில் வல்லினம் மிக்கும், மிகாமலும் வரும்.

இனி வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் மிகும் இடங்களைப் பார்ப்போம்.

(i) இரண்டாம் வேற்றுமை விரியின் (ஐ உருபின்) முன் வரும் வல்லினம் மிகும்.

சான்று:

ஒலியை + குறை = ஒலியைக் குறை

பாயை + சுருட்டு = பாயைச் சுருட்டு

கதவை + தட்டு = கதவைத் தட்டு

மலரை + பறி = மலரைப் பறி

(ii) நான்காம் வேற்றுமை விரியின் (கு உருபின்) முன்வரும் வல்லினம் மிகும்.

சான்று:

எனக்கு + கொடு = எனக்குக் கொடு

வீட்டுக்கு + தலைவி = வீட்டுக்குத் தலைவி

ஊருக்கு + போனான் = ஊருக்குப் போனான்

(iii) நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாயின் அதன்முன் வரும் வல்லினம் மிகும்.

சான்று:

குறிஞ்சி + தலைவன் = குறிஞ்சித் தலைவன்

(குறிஞ்சிக்குத் தலைவன்)

படை + தளபதி = படைத்தளபதி (படைக்குத் தளபதி)

கூலி + படை = கூலிப்படை (கூலிக்குப் படை)

(iv) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.

சான்று:

நகை + கடை = நகைக்கடை (நகையை விற்கும் கடை)

தயிர் + குடம் = தயிர்க்குடம் (தயிரை உடைய குடம்)

எலி + பொறி = எலிப்பொறி (எலியைப் பிடிக்கும் பொறி)

மலர் + கூந்தல் = மலர்க்கூந்தல் (மலரை உடைய கூந்தல்)

நெய் + குடம் = நெய்க்குடம் (நெய்யை உடைய குடம்)

(v) மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.

சான்று:

வெள்ளி + கிண்ணம் = வெள்ளிக் கிண்ணம்

(வெள்ளியால் ஆகிய கிண்ணம்)

இரும்பு + பெட்டி = இரும்புப் பெட்டி (இரும்பினால் ஆகிய பெட்டி)

தேங்காய் + சட்னி = தேங்காய்ச் சட்னி (தேங்காயால் ஆன சட்னி)

பித்தளை + குடம் = பித்தளைக் குடம் (பித்தளையால் ஆன குடம்)

(vi) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் பெரும்பாலும் மிகும்.

சான்று:

கோழி + தீவனம் = கோழித் தீவனம் (கோழிக்கு உரிய தீவனம்)

குழந்தை + பால் = குழந்தைப் பால் (குழந்தைக்கு ஏற்ற பால்)

(vii) ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.

சான்று:

வாய் + பாட்டு = வாய்ப்பாட்டு (வாயிலிருந்து வரும் பாட்டு)

கனி + சாறு = கனிச்சாறு (கனியிலிருந்து எடுக்கப்படும் சாறு)

(viii) ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.

சான்று:

தண்ணீர் + பாம்பு = தண்ணீர்ப்பாம்பு (தண்ணீரில் உள்ள பாம்பு)

சென்னை + கல்லூரி = சென்னைக் கல்லூரி (சென்னையில் உள்ள கல்லூரி)

மதுரை + கோயில் = மதுரைக்கோயில் (மதுரையில் உள்ள கோயில்)

மலை + பாம்பு = மலைப்பாம்பு (மலையில் உள்ள பாம்பு)

(ix) ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாய் இருப்பின், அதன் முன்னர் வரும் வல்லினம் மிகும்.

சான்று:

கிளி + கூண்டு = கிளிக்கூண்டு

புலி + குட்டி = புலிக்குட்டி

நரி + பல் = நரிப்பல்

வாழை + தண்டு = வாழைத்தண்டு

எருமை + கொம்பு = எருமைக் கொம்பு

தேர் + சக்கரம் = தேர்ச்சக்கரம்

6.1.6 அல்வழிப் புணர்ச்சியில் வரும் வல்லினம் மிகல் அல்வழிப் புணர்ச்சியில் வரும் தொடர்கள் தொகை நிலைத்தொடர், தொகாநிலைத் தொடர் என இருவகைப்படும். இவ்விரு வகைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகும் இடங்களைப் பற்றிப் பார்ப்போம்.

தொகை நிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகல்

அல்வழிப் புணர்ச்சியில் வரும் தொகைநிலைத் தொடர்கள் வினைத்தொகை, பண்புத்தொகை (இருபெயரொட்டுப் பண்புத்தொகையும் இதில் அடங்கும்), உவமைத் தொகை, உம்மைத்தொகை, அன்மொழித் தொகை ஆகிய ஐந்தும் ஆகும். இத்தொகைநிலைத் தொடர்களில் எந்தெந்தத் தொடர்களில் வல்லினம் மிகும் என்பதைப் பார்ப்போம்.

i) பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.

சான்று:

சிவப்பு + துணி = சிவப்புத்துணி

புதுமை + பெண் = புதுமைப்பெண்

தீமை + குணம் = தீமைக்குணம்

வெள்ளை + தாள் = வெள்ளைத்தாள்

மெய் + பொருள் = மெய்ப்பொருள்

பொய் + புகழ் = பொய்ப்புகழ்

புது + துணி = புதுத்துணி

பொது + பண்பு = பொதுப்பண்பு

ii) இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.

நிலைமொழியில் சிறப்புப் பெயரும் வருமொழியில் பொதுப்பெயருமாகச் சேர்ந்து வரும். இடையில் ஆகிய என்ற பண்பு உருபு மறைந்து வரும். இதுவே இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும். இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.

சான்று:

மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள்

வெள்ளி + கிழமை = வெள்ளிக் கிழமை

மல்லிகை + பூ = மல்லிகைப்பூ

சாரை + பாம்பு = சாரைப்பாம்பு

உழவு + தொழில் = உழவுத்தொழில்

iii) உவமைத் தொகையில் வரும் வல்லினம் மிகும்.

சான்று:

மலர் + கண் = மலர்க்கண் (மலர் போன்ற கண்)

தாமரை + கை = தாமரைக்கை (தாமரை போன்ற கை)

தொகாநிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகல்

எழுவாய்த் தொடர், விளித்தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத் தொடர், இடைச்சொல் தொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத்தொடர் என்னும் ஒன்பதும் அல்வழிப் புணர்ச்சியில் வரும் தொகாநிலைத் தொடர்கள் ஆகும். இவற்றுள் எந்தெந்தத் தொடர்களில் வரும் வல்லினம் மிகும் என்பதைப் பார்ப்போம்.

i) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்

பெயரெச்சத்தில் ஒரு வகை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். அறியாத என்பது எதிர்மறைப் பெயரெச்சம். இதன் முன் வரும் வல்லினம் மிகாது. சான்று: அறியாத பிள்ளை. ஆனால் அறியாத என்பதில் உள்ள ‘த’ என்னும் ஈறு கெட்டு (மறைந்து), அறியா என நிலைமொழியில் நிற்கும். இது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். இதன் முன் வருமொழி முதலில் வரும் வல்லினம் கட்டாயம் மிகும். சான்று: அறியா + பிள்ளை = அறியாப்பிள்ளை.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகுதலுக்கு மேலும் பல சான்றுகள் காட்டலாம். அவை வருமாறு:

செல்லா + காசு = செல்லாக் காசு (செல்லாத காசு)

ஓடா + குதிரை = ஓடாக் குதிரை (ஓடாத குதிரை)

தீரா + சிக்கல் = தீராச் சிக்கல் (தீராத சிக்கல்)

காணா + பொருள் = காணாப் பொருள் (காணாத பொருள்)

ii) அகர ஈற்று, இகர ஈற்று, யகர மெய் ஈற்று வினையெச்சங்களின் முன்னும், வன்தொடர்க் குற்றியலுகர ஈற்று வினையெச்சங்களின் முன்னும், ஆக, ஆய் என முடியும் வினையெச்சங்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.

அகர ஈற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகல்

சான்று:

வர + சொன்னான் = வரச் சொன்னான்

உண்ண + போனான் = உண்ணப் போனான்

உட்கார + பார்த்தான் = உட்காரப் பார்த்தான்

இகர ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகல்

சான்று:

ஓடி + போனான் = ஓடிப் போனான்

தேடி + பார்த்தான் = தேடிப் பார்த்தான்

கூறி + சென்றான் = கூறிச் சென்றான்

கூடி + பேசினர் = கூடிப் பேசினர்

யகர மெய் ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகல்

சான்று:

போய் + பார்த்தான் = போய்ப் பார்த்தான்

வன்தொடர்க் குற்றியலுகர ஈற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகல்

சான்று:

கற்று + கொடுத்தான் = கற்றுக் கொடுத்தான்

வாய்விட்டு + சிரித்தான் = வாய்விட்டுச் சிரித்தான்

படித்து + கொடுத்தான் = படித்துக் கொடுத்தான்

எடுத்து + தந்தான் = எடுத்துத் தந்தான்

கடித்து + குதறியது = கடித்துக் குதறியது

வைத்து + போனான் = வைத்துப் போனான்

ஆக, ஆய், என என்று முடியும் வினையெச்சங்களின் முன் வல்லினம் மிகல்

சான்று:

தருவதாக + சொன்னான் = தருவதாகச் சொன்னான்

வருவதாய் + கூறினார் = வருவதாய்க் கூறினார்

வா என + கூறினார் = வா எனக் கூறினார்

மேலே காட்டிய சான்றுகள் எல்லாம் தெரிநிலை வினையெச்சங்கள் ஆகும். வினையெச்சத்தில் குறிப்பு வினையெச்சம் என்ற ஒன்றும் உண்டு. ஒரு தொழிலை உணர்த்தும் வினைப்பகுதியிலிருந்து தோன்றுவது தெரிநிலை வினையெச்சம். சான்று: உண்ணப் போனான். உண் என்ற வினைப்பகுதியிலிருந்து தோன்றியதால் உண்ண என்பது தெரிநிலை வினையெச்சம். ஒரு பண்பை உணர்த்தும் பெயர்ப்பகுதியிலிருந்து தோன்றுவது குறிப்பு வினையெச்சம். சான்று: மெல்லப் பேசினாள். மென்மை என்ற குணத்தை உணர்த்தும் பெயர்ப்பகுதியிலிருந்து தோன்றியதால் மெல்ல என்பது குறிப்பு வினையெச்சம். மொழியியலார் இதனை வினையடை (Adverb) என்று குறிப்பிடுவர். மேலே பார்த்த தெரிநிலை வினையெச்சம் போலவே குறிப்புவினையெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகும்.

சான்று:

நிறைய + பேசுவான் = நிறையப் பேசுவான்

இனிக்க + பேசுவான் = இனிக்கப் பேசுவான்

நன்றாக + சொன்னான் = நன்றாகச் சொன்னான்

வேகமாக + கூறினான் = வேகமாகக் கூறினான்

விரைவாய் + பேசினார் = விரைவாய்ப் பேசினார்

மெல்லென + சிரித்தாள் = மெல்லெனச் சிரித்தாள்

6.1.7 மகர இறுதி கெட்டு உயிர் ஈறாய் நிற்கும் சொற்கள் முன்வரும் வல்லினம் மிகல்

புணர்ச்சியில் மகர இறுதி கெட்டு, உயிர் ஈறாய் நிற்கும் சொற்கள் முன்வரும் வல்லினம் மிகும்.

சான்று:

மரம் + கிளை > மர + க் + கிளை = மரக்கிளை

குளம் + கரை > குள + க் + கரை = குளக்கரை

ஆரம்பம் + பள்ளி > ஆரம்ப + ப் + பள்ளி = ஆரம்பப் பள்ளி

தொடக்கம் + கல்வி > தொடக்க + க் + கல்வி = தொடக்கக் கல்வி

அறம் + பணி > அற + ப் + பணி = அறப்பணி

கட்டடம் + கலை > கட்டட + க் + கலை = கட்டடக்கலை

வீரம் + திலகம் > வீர + த் + திலகம் = வீரத்திலகம்

மரம் + பெட்டி > மர + ப் + பெட்டி = மரப்பெட்டி

பட்டம் + படிப்பு > பட்ட + ப் + படிப்பு = பட்டப்படிப்பு

மேலே வல்லினம் மிகும் இடங்களைச் சான்றுடன் பார்த்தோம். இதுபோல வல்லினம் இன்னும் சில இடங்களில் மிகும். ஒற்றைக்கை, இரட்டைக் குழந்தைகள், மற்றப் பிள்ளைகள், பயிற்சிப் பள்ளி, பயிற்சிக் கூடம், நகரவைத் தலைவர் என்பன போல வல்லினம் மிகுந்து வரும் தொடர்கள் பல உள்ளன. நமக்குப் பாடத்திட்டத்தில் அமைந்துள்ள பாடங்களையும் (Lessons) பாடநூல்களையும் (Text–Books), பிற நூல்களையும் படிக்கும்போது வாய்விட்டுப் படித்து, எந்த எந்த இடங்களில் வல்லினம் மிக்கு வருகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

6.2 வல்லினம் மிகா இடங்கள்

இதுகாறும் வல்லினம் எந்தெந்த இடங்களில் மிகும் என்பதைப் பார்த்தோம். இனி, நிலைமொழி இறுதியில் உள்ள உயிர்களின் முன்னரும் ய, ர, ழ என்னும் மெய்களின் முன்னரும் வருமொழி முதலில் வருகின்ற க, ச, த, ப என்னும் வல்லின மெய்கள் எந்தெந்த இடங்களில் மிகாது இயல்பாகும் என்பதைச் சான்றுடன் காண்போம்.

6.2.1 சுட்டு, வினா அடியாகத் தோன்றிய சொற்கள் முன் வல்லினம் மிகாமை

அது, இது, எது; அவை, இவை, எவை; அன்று, இன்று, என்று, அத்தனை, இத்தனை, எத்தனை; அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு ; அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு என்னும் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

அது + சிறிது = அது சிறிது

எது + பெரியது = எது பெரியது?

அவை + போயின = அவை போயின

எவை + பெரியவை = எவை பெரியவை?

அன்று + பார்த்தான் = அன்று பார்த்தான்

என்று + காண்பேன் = என்று காண்பேன்?

அத்தனை + செடிகள் = அத்தனை செடிகள்

எத்தனை + பழங்கள் = எத்தனை பழங்கள்?

அவ்வளவு + பேர் = அவ்வளவு பேர்

எவ்வளவு + தருவாய் = எவ்வளவு தருவாய்?

அவ்வாறு + பேசினான் = அவ்வாறு பேசினான்

எவ்வாறு + படித்தாள் = எவ்வாறு படித்தாள்?

வந்த, கண்ட, சொன்ன, வரும் என்பன போன்ற பெயரெச்சங்களோடு படி, ஆறு என்னும் சொற்கள் சேர்ந்து வரும் வினையெச்சச் சொற்களின் முன்வரும் வல்லினம் மிகாது.

கண்டபடி + பேசினான் = கண்டபடி பேசினான்

சொன்னபடி + செய்தான் = சொன்னபடி செய்தான்

கண்டவாறு + சொன்னான் = கண்டவாறு சொன்னான்

சொன்னவாறு + செய்தான் = சொன்னவாறு செய்தான்

வரும்படி + கூறினான் = வரும்படி கூறினான்

வருமாறு + கூறினான் = வருமாறு கூறினான்

6.2.2 எண்ணுப்பெயர்கள், எண்ணுப்பெயரடைகள் முன் வல்லினம் மிகாமை ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களில் எட்டு, பத்து ஆகியன வன்தொடர்க் குற்றியலுகரங்கள். இவற்றின் முன்வரும் வல்லினம் மிகுவதை ஏற்கனவே பார்த்தோம். ஏனைய ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்னும் மென்தொடர்க் குற்றியலுகர எண்ணுப்பெயர்களின் முன்னும், ஆறு, நூறு என்னும் நெடில் தொடர்க் குற்றியலுகர எண்ணுப்பெயர்களின் முன்னும், ஏழு என்னும் முற்றியலுகர எண்ணுப்பெயரின் முன்னும், ஒன்பது என்னும் உயிர்த்தொடர்க் குற்றியலுகர எண்ணுப்பெயரின் முன்னும் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

ஒன்று + போதும் = ஒன்று போதும்

இரண்டு + தடவை = இரண்டு தடவை

மூன்று + குழந்தைகள் = மூன்று குழந்தைகள்

நான்கு + கால்கள் = நான்கு கால்கள்

ஐந்து + சிறுவர்கள் = ஐந்து சிறுவர்கள்

ஆறு + கடைகள் = ஆறு கடைகள்

ஏழு + சிறுகதைகள் = ஏழு சிறுகதைகள்

ஒன்பது + கிரகங்கள் = ஒன்பது கிரகங்கள்

நூறு + பழங்கள் = நூறு பழங்கள்

ஒரு, இரு, அறு, எழு என்னும் எண்ணுப்பெயரடைகளின் முன்வரும் வல்லினம் மிகாது.

சான்று:

ஒரு + பொருள் = ஒருபொருள்

இரு + தடவை = இருதடவை

அறு + படைவீடு = அறுபடைவீடு

எழு + கடல் = எழுகடல்

6.2.3 வேற்றுமைப் புணர்ச்சியில் வரும் வல்லினம் மிகாமை i) இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

சாமி + கும்பிடு = சாமி கும்பிடு (சாமியைக் கும்பிடு)

நகை + செய்தான் = நகை செய்தான் (நகையைச் செய்தான்)

கனி + தின்றான் = கனி தின்றான் (கனியைத் தின்றான் )

காய் + கொடுத்தான் = காய்கொடுத்தான் (காயைக் கொடுத்தான்)

தமிழ் + படித்தான் = தமிழ் படித்தான் (தமிழைப் படித்தான்)

நீர் + பருகினான் = நீர் பருகினான் (நீரைப் பருகினான்)

ii) நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் அதன்முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

பொன்னி + கணவன் = பொன்னி கணவன் (பொன்னிக்குக் கணவன்)

iii) ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாக இருப்பின் அதன்முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

காளி + கோயில் = காளிகோயில்

கண்ணகி + சிலம்பு = கண்ணகி சிலம்பு

தம்பி + துணி = தம்பி துணி

மகளிர் + கல்லூரி = மகளிர் கல்லூரி

ஆசிரியர் + கழகம் = ஆசிரியர் கழகம்

தாய் + சொத்து = தாய் சொத்து

மனைவி + கண்ணீர் = மனைவி கண்ணீர்

நடிகை + கோபம் = நடிகை கோபம்

வள்ளி + திருமணம் = வள்ளி திருமணம்

iv) மூன்றாம் வேற்றுமைக்கு ஆன், ஆல், ஒடு, ஓடு, உடன் என்னும் உருபுகள் உள்ளன. இவற்றுள் ஒடு, ஓடு என்பன உயிர் ஈறு கொண்டவை. இவற்றின் முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

என்னொடு + படித்தவன் = என்னொடு படித்தவன்

யாரோடு + பேசினாய் = யாரோடு பேசினாய்?

இக்காலத் தமிழில் ‘கொண்டு’ என்னும் சொல்லுருபும் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய கருவிப் பொருளில் வழங்குகிறது. இதன் முன் வரும் வல்லினமும் மிகாது.

சான்று:

கத்தி கொண்டு + குத்தினான் = கத்திகொண்டு குத்தினான்

(கத்தியால் குத்தினான்)

வாள்கொண்டு + போர் செய்தான் = வாள்கொண்டு போர் செய்தான்

v) ஐந்தாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் இல், இன் என்பன ஆகும்; பொருள் : நீக்கப் பொருள் (விலகிச் செல்லல்). ஐந்தாம் வேற்றுமை விரியில் இல், இன் என்னும் உருபுகள் மட்டும் நின்று நீக்கப் பொருளைக் காட்டுவது இல்லை. இல் என்பதோடு இருந்து என்னும் சொல்லுருபும், இன் என்பதோடு நின்று என்னும் சொல்லுருபும் சேர்ந்தே நீக்கப் பொருளை உணர்த்துகின்றன. இவ்விரு உருபுகளின் முன்வரும் வல்லினமும் மிகாது.

சான்று:

வீட்டிலிருந்து + சென்றான் = வீட்டிலிருந்து சென்றான்

கூட்டினின்று + பறந்தது = கூட்டினின்று பறந்தது

vi) ஆறாம் வேற்றுமைக்கு உரிய உருபுகளாக நன்னூலார் அது, ஆது, அ என்னும் மூன்றனைக் குறிப்பிடுகிறார். இவற்றுள் ஆது, அ என்பன இக்காலத் தமிழில் இல்லை. அது என்பது மட்டுமே உண்டு. அது என்னும் உருபின் முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

யானையது + கொம்பு = யானையது கொம்பு

எனது + புத்தகம் = எனது புத்தகம்

இக்காலத் தமிழில் ‘உடைய’ என்னும் சொல்லுருபும், ஆறாம் வேற்றுமைக்கு உரிய கிழமைப் பொருளில் (உடைமைப் பொருளில்) வழங்குகிறது. இதன் முன் வரும் வல்லினமும் மிகாது.

சான்று:

என்னுடைய + புத்தகம் = என்னுடைய புத்தகம்

பண்புடைய + கணவர் = பண்புடைய கணவர்

ஆசிரியருடைய + பெருமை = ஆசிரியருடைய பெருமை

6.2.4 அல்வழிப் புணர்ச்சியில் வரும் வல்லினம் மிகாமை அல்வழிப் புணர்ச்சியில் வரும் தொகைநிலைத் தொடர், தொகா நிலைத்தொடர் என்னும் இருவகைத் தொடர்களில் வல்லினம் மிகும் இடங்கள் எவை என்பதைப் பார்ப்போம்.

தொகைநிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகாமை

i) அல்வழியில் உள்ள தொகைநிலைத் தொடர்களில் ஒன்றான வினைத்தொகை மிகவும் அற்புதமான தொகை. ஊறுகாய் என்று சொன்னதும், நம் நாவில் அந்தக் காயின் சுவை ஊறி நிற்கும். நேற்று ஊறிய காய், இன்று ஊறுகின்ற காய், நாளையும் ஊறும் காய் – ஊறுகாய். மூன்று காலங்களையும் காட்டும் இடைநிலைகள் என்னும் உருபுகள் மறைந்திருப்பதால், வினைத்தொகை எனப்பட்டது. வினைத்தொகையில் வரும் வல்லினம் கட்டாயம் மிகாது. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும் எனப் பார்த்தோம். ஆனால் வினைத்தொகையில் மட்டும் நிலைமொழி வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தாலும் வல்லினம் மிகாது.

சான்று:

நாட்டு + புகழ் = நாட்டுபுகழ்

ஈட்டு + பொருள் = ஈட்டுபொருள்

இவ் வன்தொடர்க் குற்றியலுகரங்களின் முன்வரும் வல்லினம் வினைத்தொகையில் மிகவில்லை.

சுடு + காடு = சுடுகாடு

நடு + கல் = நடுகல்

குடி + தண்ணீர் = குடிதண்ணீர்

மூடு + பனி = மூடுபனி

சுடு + சோறு = சுடுசோறு

விடு + கதை = விடுகதை

திருவளர் + செல்வன் = திருவளர் செல்வன்

திருவளர் + செல்வி = திருவளர் செல்வி

ii) இரண்டு சொற்களோ, இரண்டுக்கு மேற்பட்ட சொற்களோ வரும்போது, அச்சொற்களின் இறுதியில் உம்மை மறைந்திருப்பது உம்மைத் தொகை எனப்படும். உம்மைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

இட்லி + தோசை = இட்லி தோசை (இட்லியும் தோசையும்)

யானை + குதிரை = யானை குதிரை (யானையும் குதிரையும்)

மா + பலா + வாழை = மா பலா வாழை (மாவும், பலாவும், வாழையும்)

இரவு + பகல் = இரவு பகல் (இரவும் பகலும்)

நரை + திரை = நரைதிரை (நரையும் திரையும்)

கல்வி + கேள்வி = கல்வி கேள்வி (கல்வியும் கேள்வியும்)

நன்மை + தீமை = நன்மை தீமை (நன்மையும் தீமையும்)

தொகாநிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகாமை

i) எழுவாய்த் தொடரில் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

கண்ணகி + பேசினாள் = கண்ணகி பேசினாள்

மாதவி + பாடினாள் = மாதவி பாடினாள்

கோழி + கூவியது = கோழி கூவியது

யானை + பிளிறியது = யானை பிளிறியது

ii) விளித்தொடரில் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

மகனே + கேள் = மகனே கேள்

தம்பீ + போ = தம்பீ போ

அரசே + பார் = அரசே பார்

iii) ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று ஆகியவற்றின் முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

ஏவல் வினைமுற்று

வா + கண்ணா = வா கண்ணா

போ + தம்பி = போ தம்பி

படி + பாடத்தை = படி பாடத்தை

புறப்படு + பள்ளிக்கு = புறப்படு பள்ளிக்கு

வியங்கோள் வினைமுற்று

வாழ்க + தலைவா = வாழ்க தலைவா

ஒழிக + தீமைகள் = ஒழிக தீமைகள்

வருக + புலவரே = வருக புலவரே

iv) அகர ஈற்றுப் பெயரெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகாது.

பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம், ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப் பலவகைப்படும். இவற்றுள் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தைத் தவிர, மற்றப் பெயரெச்சங்கள் அனைத்தின் முன்னும் வரும் வல்லினம் மிகாது. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகும் என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.

தெரிநிலைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகாமை

தெரிநிலைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

வந்த + பையன் = வந்த பையன்

ஓடிய + குதிரை = ஓடிய குதிரை

கேட்ட + கேள்வி = கேட்ட கேள்வி

பாடிய + பாட்டு = பாடிய பாட்டு

கொடுத்த + கை = கொடுத்த கை

கூடிய + கூட்டம் = கூடிய கூட்டம்

குறிப்புப் பெயரெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகாமை

குறிப்புப் பெயரெச்சத்தை இக்கால மொழியியலார் பெயரடை (Adjective) என்று குறிப்பிடுவர். இதன் முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

நல்ல + பையன் = நல்ல பையன்

பெரிய + தெரு = பெரிய தெரு

புதிய + சிந்தனை = புதிய சிந்தனை

சிறிய + பேனா = சிறிய பேனா

கரிய + குதிரை = கரிய குதிரை

அரிய + பொருள் = அரிய பொருள்

எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகாமை

செல்லாத, காணாத, ஓடாத என்பன போன்ற பெயரெச்சங்கள் எதிர்மறைப் பொருளை உணர்த்துவதால் எதிர்மறைப் பெயரெச்சங்கள் எனப்படும். இவற்றின் முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

செல்லாத + காசு = செல்லாத காசு

காணாத + கண்கள் = காணாத கண்கள்

ஓடாத + குதிரை = ஓடாத குதிரை

v) ண்டு, ந்து, ன்று என முடியும் மென்தொடர்க் குற்றியலுகர வினையெச்சங்களுக்கு முன்னும், ய்து என முடியும் இடைத்தொடர்க் குற்றியலுகர வினையெச்சங்களுக்கு முன்னும் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

கண்டு + பேசினார் = கண்டு பேசினார்

கொண்டு + போனான் = கொண்டு போனான்

வந்து + சென்றான் = வந்து சென்றான்

தின்று + பார்த்தான் = தின்று பார்த்தான்

கொன்று + குவித்தான் = கொன்று குவித்தான்

செய்து + தந்தான் = செய்து தந்தான்

கொய்து + கொடுத்தாள் = கொய்து கொடுத்தாள்

வினையெச்சத்திலே குறிப்பு வினையெச்சம் என்ற ஒன்று உண்டு என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அகர ஈற்றுக் குறிப்பு வினையெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகும் என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம். குறிப்பு வினையெச்சத்தில் உகர ஈற்றுக் குறிப்பு வினையெச்சங்களும் உண்டு. இவற்றின் முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

நன்கு + பேசினான் = நன்கு பேசினான்

நன்று + பேசினாய் = நன்று பேசினாய்

6.2.5 வல்லினம் மிகா இடங்கள் – மேலும் சில i. ஆ, ஓ என்னும் வினா எழுத்துகளை இறுதியிலே கொண்டு முடியும் சொற்களுக்கு முன்னர் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

அவனா + தந்தான் = அவனா தந்தான் ?

அவளோ + கொடுத்தாள் = அவளோ கொடுத்தாள் ?

ii. பல, சில என்னும் சொற்களின் முன்வரும் வல்லினம் மிகாது.

சான்று:

பல + பொருள் = பலபொருள்

சில + பூக்கள் = சிலபூக்கள்

iii. இரு வடமொழிச் சொற்கள் சேர்ந்து வரும் தொடர்களில் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

ஆதி + பகவன் = ஆதிபகவன்

தேச + பக்தி = தேச பக்தி

iv. வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் முன் கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதியும், தல் என்னும் தொழிற்பெயர் விகுதியும் வந்தால் வல்லினம் மிகுவதில்லை.

சான்று:

எழுத்து + கள் = எழுத்துகள்

வழக்கு + கள் = வழக்குகள்

வாக்கு + கள் = வாக்குகள்

வகுப்பு + கள் = வகுப்புகள்

ஆக்கு + தல் = ஆக்குதல்

வாழ்த்து + தல் = வாழ்த்துதல்

கூப்பு + தல் = கூப்புதல்

தூற்று + தல் = தூற்றுதல்

6.3 தொகுப்புரை

இதுகாறும் இக்காலத் தமிழில் வல்லினம் எந்தெந்த இடங்களில் மிகும் என்பதையும், எந்தெந்த இடங்களில் மிகாது இயல்பாகும் என்பதையும் தக்க சான்றுகளுடன் விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்தோம். வல்லினம் மிகும் மற்றும் மிகா இடங்கள் பற்றி இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ள விதிகளை நன்கு பின்பற்றினால் நாம் தமிழைப் பிழையில்லாமல் எழுதவும், பேசவும் முடியும். நாம் நாள்தோறும் படிக்கின்ற தமிழ் நாளிதழ்கள், அவ்வப்பொழுது படிக்கின்ற தமிழ் நூல்கள், நமக்குப் பாடமாக அமைந்த பாடநூல்கள், இணையவழிப் பாடங்கள் ஆகியவற்றை உற்று நோக்கி எங்கெங்கு வல்லினம் மிகுகிறது, மிகாது இயல்பாகிறது என்பதை எல்லாம் ஆழ்ந்த கவனத்துடன் படித்து வருவோமேயானால் தமிழை நல்ல தமிழாக, பிழையில்லாத தமிழாக எழுத நம்மால் முடியும்.