அருள்போன்று
அலர்ஆய் விளைகின்றது அம்பல் கைம்மிக்கு
ஐயமெய்அருளே
( பாடல் - 180 )
( அலர் = மலர் ; வந்தித்து = வணங்கி ; கழல் = அடி ; அலர் = வெளிப்படையான பழிச்சொல் )
திருமால் சிவபெருமானை ஆயிரம் மலர்கள் கொண்டு வழிபாடு செய்தான் .
அவனுடைய அன்பைக்கண்டு மகிழ்ந்த சிவபெருமான் திருமாலுக்குச் சக்கரம் ஆகிய படையை அல்லது கருவியைக் கொடுத்தான் .
இத்தகைய சிவபெருமானின் அருளைப் போன்று நீ தலைவிக்கு அருள் செய்ய வேண்டும் .
ஏனெனில் , நீ தலைவியை மறைவாகச் சந்தித்துப் பழகுவது ஊரில் உள்ள மக்களுக்குத் தெரிந்து அவர்கள் வெளிப்படையாகப் பழிகூறுகின்றனர் .
எனவே , விரைவில் நீ தலைவியை மணம் செய்து கொள்ள வேண்டும் என்று தலைவனிடம் தோழி கூறுகின்றாள் .
6.3.2 தலைவனின் துணிவு
தலைவன் தலைவியின் உறவினர்களுக்குத் தெரியாமல் தலைவியை உடன் அழைத்துக் கொண்டு செல்ல எண்ணுகிறான் .
இந்த எண்ணத்தைத் தலைவன் தோழியிடம் கூறுகின்றான் .
இதை அறிந்த தோழி தலைவனின் எண்ணத்தைத் தலைவியிடம் கூறுகின்றாள் .
இந்தக் கருத்து அடங்கிய துறை துணிந்தமை கூறல் என்று குறிப்பிடப்படுகிறது .
இந்தத் துறையில் இடம் பெறும் பாடல் இதோ தரப்படுகிறது .
குறப்பாவை நின்குழல் வேங்கைஅம் போதொடு கோங்கம்
விராய்
நறப்பா டலம்புனை வார்நினை வார்தம் பிரான்புலியூர்
மறப்பான் அடுப்பதுஒர் தீவினை வந்திடில் சென்றுசென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னும்துன்னத் தகும் பெற்றியரே
( பாடல் - 205 )
( போது = மலர் ; விராய் = கலந்து ; நறவு = தேன் ; புளைவார் = அணிவார் ; அடுப்பது = கூடுவது ; அடுப்பினும் = அவ்வாறு ஏற்படினும் ; துன்னத் தகும் = சேரத்தகும் ; பெற்றியது = தன்மையது )
தலைவி தோழியிடம் கூறுகின்றாள் .
குறவர் குலத்தில் பிறந்த பெண்ணே !
சிவபெருமானுடைய புலியூரை நினைத்தவர்கள் ஒரு பொழுதும் அதை மறக்க மாட்டார்கள் அவ்வாறு அவர்கள் மறக்க நேர்ந்தால் அதனால் தீய வினை வந்து சேரும் .
அந்தத் தீயவினையால் பல பிறப்புகள் பிறப்பர் .
அவ்வாறு பல பிறப்புகள் பிறந்தாலும் ( மீண்டும் ) சேரத்தகும் தன்மை உடையவர் .
அத்தகைய தலைவர் உன் கூந்தலில் வேங்கைப் பூவோடு கோங்கம் பூவையும் பாதிரி மலரையும் சூட நினைக்கின்றார் .
எனவே அவருடன் செல்லாது இருத்தல் ஆகாது என்று தோழி தலைவியிடம் தலைவனின் எண்ணத்தைத் தெரிவிக்கின்றாள் .
இறைவனை அன்புடன் நினைப்பவர்க்குப் பிறப்பு இல்லை என்பது இப்பாடலில் கூறப்படுகிறது .
எத்தனைப் பிறப்புகள் பிறந்தாலும் கற்பு உடைய மகளிர் கணவனைப் பின்தொடர்ந்து செல்வதற்கு உரியவர்கள் ஆவர் என்பதும் இப்பாடலில் சுட்டப்படுவதைக் காணலாம் .
6.3.3 தலைவியின் துணிவு
தலைவன் உடன் செல்லும்படி தோழி தலைவியிடம் கூறுகின்றாள் .
தலைவியும் தலைவனிடம் கொண்ட அன்பின் காரணமாகத் தலைவனுடன் செல்லத் துணிகின்றாள் .
இந்தச் செய்தியைத் தோழி தலைவனிடம் கூறுகிறாள் .
இதுவே ' ' துணிவெடுத்து உரைத்தல் " என்ற துறையாக அமைகிறது .
இந்தத் துறையில் அமையும் பாடலைப் பார்ப்போம் .
கம்பம் சிவந்த சலந்திரன் ஆகம் கறுத்ததில்லை
நம்பன் சிவநகர் நற்றளிர் கல்சுரம் ஆகும்நம்பா
அம்புஅஞ்சி ஆவம் புகமிக நீண்ட அரிசிந்து
கண்ணாள்
செம்பஞ்சி யின்மதிக் கின்பதைக் கும்மலர் சீறடிக்கே
( பாடல் - 209 )
( கம்பம் = நடுக்கம் ; சிவந்த = கோபம் கொண்ட ; ஆகம் = உடம்பு ; கறுத்த = முனிந்த ; நம்பன் = எல்லோராலும் விரும்பப்படும் இறைவன் ; சிவநகர் = சிவபெருமானின் திருத்தலங்களில் ஒன்று ; சுரம் = காடு ; ஆவம் = அம்புக் கூடு ; அரி சிந்து = வரி ஓடிய ; செம்பஞ்சி = ஒரு வகை மலர் ; பதைக்கும் = வருந்தும் ; சீறடி = சிறிய அடி )
சலந்தரனை வெகுண்டவர் சிவபெருமான் .
அத்தகைய சிவபெருமானின் தலங்களில் ஒன்று சிவ நகர் என்பது ஆகும் .
நம் தலைவி , அம்புகள் அச்சம் கொண்டு அம்புக் கூட்டினுள் நுழைந்து விடும் படியான சிவந்த வழிகளை உடையவள் .
அவளுடைய பாதங்கள் மென்மையான செம்பஞ்சு மலரை மதிப்பதற்குக் கூட அஞ்சும் . அத்தகைய மென்மையான அடிகளை உடையவள் தலைவி .
அப்படிப்பட்ட தலைவி உன்னுடன் வருவதற்குத் துணிந்து உள்ளாள் .
எனவே , அவளுக்கு நீ செல்லும் வழியில் உள்ள கற்கள் நல்ல தளிர் போன்று இருக்கும் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள் .
இப்பாடலில் தலைவியின் கண்கள் அழகாக வருணிக்கப்படுவதைக் காணலாம் .
தலைவி தலைவனிடம் கொண்ட அன்பும் வெளிப்படுத்தப் படுகிறது .
உடன்போக்கு
தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்பிக் காதல் கொள்ளும் போது பெற்றோருக்குத் தெரியாமல் தம்தம் சொந்த ஊரை விட்டு , வெளியூர் செல்வது உண்டு அதை உடன் போக்கு என்பர் .
6.4.1 தலைவனோடு செல்லுதல்
தலைவி தன் வீட்டை விட்டுத் தலைவனுடன் சென்று விடுகிறாள் .
இருவரும் மக்கள் அதிகம் காணப்படாத கொடிய வழியில் செல்கின்றனர் .
வழிநடை வருத்தம் தெரியாமல் இருக்க இருவரும் விளையாடிக் கொண்டு செல்கின்றனர் .
அப்போது அவர்கள் எதிரே வழிப்போக்கர் ஒருவர் வருகின்றார் .
அவரிடம் தாங்கள் செல்ல வேண்டிய நகரம் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று தலைவனும் தலைவியும் கேட்கின்றனர் .
அதற்கு அவர் நீங்கள் செல்ல வேண்டிய நகரம் பக்கத்தில் உள்ளது என்று கூறுகிறார் .
இதுவே ' ' நகர் அணிமை கூறல் ' ' என்ற துறை ஆகும் .
இந்தத் துறையில் அமைந்த பாடல் பின்வருமாறு .
மின்தங்கு இடையொடு நீவியன் தில்லைச்சிற்
றம்பலவர்
குன்றம் கடந்துசென் றால்நின்று தோன்றும் குரூஉக்
கமலம்
துன்றுஅம் கிடங்கும் துறைதுறை வள்ளைவெள்
ளைநகையார்
சென்றுஅங்கு அடைதட மும்புடை சூழ்தரு சேண்நகரே
( பாடல் - 221 )
( மின் = மின்னல் ; இடையொடு = இடையை உடைய பெண்ணொடு ; வியன் = அகன்ற ; குன்றம் = மலை ; குரூஉ = நிறம் ; கமலம் = தாமரை துன்று = நெருங்கிய ; அம் = அழகிய ; கிடங்கு = அகழி ; வள்ளை = வள்ளைப் பாடல் ; நகையார் = பற்களை உடைய பெண்கள் ; அடை = சேரும் ; தடம் = குணம் ; சேண் = உயர்ந்த )
தலைவி மின்னல் போன்ற இடையை உடையவள் .
அவளொடு நீ அகன்ற தில்லையில் சிற்றம்பலவன் ஆகிய இறைவனின் மலையைக் கடந்து செல்ல வேண்டும் .
சிறிது தூரம் சென்றவுடன் தாமரைப் பூக்கள் நிறைந்த அகழிகள் காணப்படும் .
உரலில் நெல்லை இட்டு உலக்கையால் பெண்கள் குற்றும் போது , பாடல் பாடுவர் .
அந்தப் பாடல் வள்ளைப் பாட்டு அல்லது உலக்கைப் பாட்டு எனப்படும் .
இவ்வாறு பாடல் பாடுகின்ற பெண்கள் குளங்களில் சென்று நீராடுவர் .
அத்தகைய குளங்களும் உள்ளன .
இத்தகைய வளம் மிக்க தில்லை ஆகிய நகர் தோன்றும் .
எனவே , விரைந்து செல்வீர்களாக என்று வழிப்போக்கர் தலைவன் , தலைவி ஆகியோரிடம் கூறுகின்றார் .
6.4.2 தலைவனின் பிரிவு
தலைவன் தலைவியைத் திருமணம் செய்வதற்கு வேண்டிய பொருளை ஈட்டுவதற்காகப் பிரிந்து செல்ல எண்ணுகிறான் .
தலைவியோ தலைவனிடம் மிகுந்த அன்பு கொண்டுள்ளாள் .
எனவே , தலைவனின் பிரிவைத் தலைவி தாங்கமாட்டாள் .
ஆகவே , தலைவன் தலைவியிடம் கூறாது பிரிந்து செல்ல எண்ணுகின்றாள் .
இது ' ' சொல்லாது ஏகல் ' ' என்ற துறையாக அமைகிறது .
இந்த துறையில் பின்வரும் பாடல் இடம் பெறுகிறது .
வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும்
மனம்மகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும் வகையில்லை
சீர்அருக்கன்
குருட்டில் புகச்செற்ற கோன்புலி யூர்குறு
கார்மனம்போன்று
இருட்டில் புரிகுழ லாட்கு எங்ஙனே சொல்லி ஏகுவனே
( பாடல் - 270 )
( வருட்டில் = தடவினால் ; திகைக்கும் = மயங்கும் ; வசிக்கில் = இன்பமான சொற்களைக் கூறினால் ; தெருட்டில் = தெளிவித்தால் ; அருக்கன் = சூரியன் ; குருட்டில் = குருடு ஆகிய இழி பிறவியில் ; செற்ற = செல்லும்படி சினந்த ; குறுகார் = அடையாதவர் ; ஏகுவன் = செல்லுவேன் ) தலைவன் தனக்குள் எண்ணுகின்றான் .
தலைவியின் நெற்றி , தோள் முதலிய உறுப்புகளைத் தடவிக் கொண்டு நான் பிரிந்து செல்லப் போவதைக் கூற எண்ணினால் அதை உணர்ந்து கொண்டு தலைவி மயங்குவாள் .
இனிய சொற்களைக் கூறி அவளை மயக்க நினைத்தால் அவள் என் எண்ணத்தை அறிந்து கொண்டு உண்ணவும் மாட்டாள் .
உறங்கவும் மாட்டாள் .
வெளிப்படையாக நான் பிரிந்து செல்வதன் காரணத்தைக் கூறினாலும் அவள் தெளிவு பெறமாட்டாள் .
எனவே , நான் பிரிந்து செல்வதை அவனிடம் கூறுவதற்கு எந்த வழியும் இல்லை .
தக்கன் செய்த வேள்வியின் போது இறைவனாகிய சிவபெருமான் சூரியனின் கண்களைக் குருடு ஆக்கினான் .
அத்தகைய இறைவனது புலியூர் ஆகிய ஊரை அடையாதவர்களின் மனம் இருட்டாக இருக்கும் .
அதுபோல கரிய நிறம் உடைய சுருண்ட கூந்தலை உடைய தலைவியிடம் நான் என்ன சொல்லிக் கொண்டு பிரிந்து செல்வேன் என்று தலைவன் ஏங்குகின்றான் .
நெற்றியைத் தடவுதல் , தோள்களைத் தடவுதல் போன்றவை அன்பு கொண்டவர் செய்யும் செயல்கள் ஆகும் .
அன்புடையவர்கள் பிரியும் போது இனிமையான சொற்களைக் கூறுதல் உலக வழக்கு .
எனவே , இவை இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன .
இதைப் போன்று இறைவனை எண்ணாதவர்களுடைய மனம் இருண்டு காணப்படும் என்பதும் காட்டப்படுகிறது .
6.4.3 திருமணமும் மகிழ்ச்சியும்
தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் ஈட்டச் சென்றான் .
பொருளை ஈட்டிய பின் தலைவியை மணக்க வருகின்றான் .
இதனால் திருமண முரசு ஓலிக்கிறது .
தலைவியின் வீட்டருகில் வந்து விட்டனர் .
இந்தத் திருமண முரசின் ஒலியைத் தலைவியின் வீட்டில் உள்ளவர்கள் கேட்கின்றனர் .
தலைவிக்குத் திருமணம் நடக்கப் போவதை எண்ணி மகிழ்கின்றனர் .
இது மண முரசு கேட்டு மகிழ்ந்து உரைத்தல் என்ற துறை ஆகும் .
இந்தத் துறையில் வரும் பாடலைக் காண்போம் .
பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரியம் ஆர்க்கதொல் மால்அயற்கும்
காரணன் ஏரணி கண் நுதலோன் கடல் தில்லைஅன்ன
வாரண வும்முலை மன்றல்என்று ஏங்கும் மணமுரசே
( பாடல் - 296 )
( நீடுக = எங்கும் ஓங்குவதாக ; தூரியம் = ஒருவகை இசைக்கருவி ; ஆர்க்க = முழங்க ; தொல் = பழைமையான ; அயன் = பிரம்மன் ; காரணன் = காரணனாக உள்ள சிவபெருமான் ; ஏர் அணி = அழகு உடைய ; வார் அணவும் = வார் பொருந்திய ; மன்றல் = திருமணம் ; ஏங்கும் = ஒலிக்கும் )
சிவபெருமான் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் காரணன் ஆக உள்ளவன் .
நெற்றியில் கண்ணை உடையவன் .
சிவபெருமானின் தில்லை நகரைப் போன்ற மார்பை உடைய தலைவியின் திருமணத்தை அறிவிக்கும் வகையில் மண முரசு ஒலிக்கிறது .
எனவே வாயில்களில் எல்லாம் நீரால் நிறைக்கப்பட்ட பொன்னால் ஆகிய குடங்களை வையுங்கள் .
எல்லா இடங்களிலும் தோரணங்களைக் கட்டுங்கள் .
இசைக்கருவிகளை முழக்குங்கள் என்று தலைவியின் வீட்டில் உள்ளவர்கள் கூறுகின்றனர் .
திருமணத்தின் போது பொற்குடங்கள் வைத்தல் , தோரணம் கட்டுதல் , இசைக்கருவிகளை முழக்குதல் போன்ற வழக்கங்கள் உண்டு என்பது இதன் மூலம் தெரிய வருகிறது .
6.4.4 ஊடல் நீங்குதல்
இந்தத் துறை திருக்கோவையார் நூலின் இறுதிப் பாடலாக அமைகிறது .
தலைவன் பரத்தையிடம் கொண்ட காதல் காரணமாகத் தலைவியைப் பிரிந்து விடுகிறான் .
இதனால் தலைவி தலைவனுடன் ஊடி இருக்கின்றாள் .
இந்த நிலையில் தோழி தலைவியிடம் தலைவனுடைய பயன்களை எடுத்துக் கூறுகின்றாள் .
தலைவன் உலகில் உள்ளவர்களுக்கு எத்தகைய பயன் உடையவனாக உள்ளான் என்பதை விளக்கிக் கூறுகிறாள் .
எல்லோருக்கும் பயன் உடையவன் ஆதலால் தலைவன் பிடித்தவரிடம் செல்வதும் குற்றம் அல்ல .
எனவே நீ அவனோடு ஊடல் கொள்ளாதே என்று அறிவுரை கூறித் தலைவி தலைவனிடம் கொண்ட ஊடலைத் தோழி தீர்க்கின்றாள் .
இது ஊதியம் எடுத்து உரைத்து ஊடல் தீர்த்தல் என்ற துறையாகக் காட்டப்படுகிறது .
இந்தத் துறையில் வரும் பாடல் இதோ .
கார்அணி கற்பகம் கற்றவர் நல்துணை பாணர்ஒக்கல்
சீர்அணி சிந்தாமணிஅணி தில்லைச் சிவன்அடிக்குத்
தார்அணி கொன்றையன் தக்கோர் தம்சங்க
நிதிவிதிசேர்
ஊருணி உற்றவர்க்கு ஊரன்மற்று யாவர்க்கும் ஊதியமே ( பாடல் - 400 )
( ஊரன் = ஊரை உடைய தலைவன் ; கார் = மேகம் ; கற்பகம் = கற்பக மரம் ; ஒக்கல் = சுற்றத்தினர் ; சிந்தாமணி = நினைத்ததைக் கொடுக்கும் மணி ; தக்கோர் = பெரியவர் அல்லது சான்றோர் ; சங்க நிதி = குறையாத செல்வம் ; ஊருணி = ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் குடிக்கும் நீரை உடைய குளம் ; உற்றவர் = சுற்றத்தார் ; ஊதியம் = பயன் )
தோழி தலைவனின் பெருமைகளைத் தலைவிக்குக் கூறுகிறாள் .
தலைவன் கேட்காமல் பிறர்க்குக் கொடுப்பவன் .
எனவே அவன் மேகத்தைப் போன்றவன் .
கேட்பவர்களுக்கும் கொடுப்பவன் .
எனவே கேட்பவர்களுக்குக் கேட்டவற்றைச் கொடுக்கும் கற்பக மரம் போன்றவன் ; தலைவன் கல்வி கற்றவன் .
எனவே அவன் கற்றவர்களுக்கு நல்ல துணைவன் .
பாணர்களுக்கு அவர்களுடைய உறவினரைப் போன்றவன் .
நினைத்ததைக் கொடுப்பவன் , ஆகையால் அவன் சிந்தாமணி என்ற மணியைப் போன்றவன் .
சிவபெருமான் அணியும் கொன்றைப் பூவின் தன்மை உடையவன் .
சான்றோர்களுக்குச் குறையாத செல்வம் போன்றவன் .
நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும் வேறுபாடு இல்லாது பயன் அளிப்பதால் அவன் தலைவிதியைப் போன்றவன் .
உறவினர்களுக்குப் பயன்படுவதால் ஊருணியைப் போன்றவன் .
எனவே , அவன் பரத்தையர்க்கும் பயன்படுகின்றான் .
ஆகவே அவனிடம் நீ ஊடல் கொள்ளாதே என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள் .
தொகுப்புரை
நண்பர்களே !
கோவை இலக்கியம் பற்றி இதுவரையிலும் பார்த்தவற்றைத் தொகுத்துக் காண்போமா ?
கோவை இலக்கியத்தில் அகத்துறைகள் பல நிரல் ( வரிசை ) படச் சேர்க்கப்பட்டுள்ளன .
கோவை இலக்கியத்தின் துறைகள் சிலவற்றைப் பற்றி அறிய முடிகிறது .
திருக்கோவையார் என்ற நூலில் பாட்டுடைத் தலைவன் ஆகிய சிவபெருமானின் பெருமைகளை அறிய முடிகின்றது .
பண்டைத் தமிழர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றி உணர முடிகிறது .
கோவை இலக்கிய வகையின் இலக்கியச் சிறப்புகளை அறிய முடிகிறது .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. ஒரே துறையில் 400 பாடல்களை அமைத்துப் பாடும் கோவை இலக்கியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
விடை
2. திருக்கோவையார் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
விடை
3. தலைவிக்காகத் தலைவன் செய்யத் தயாராய் உள்ள வேலைகள் யாவை ?
விடை
4. குறி இடம் கூறல் என்ற துறையின் பொருள் யாது ?
பரணி இலக்கியம்
பாட முன்னுரை
தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்று பரணி இலக்கியம் .
போர் பற்றிய நிகழ்ச்சிகளே இந்த இலக்கிய வகைக்கு அடிப்படையாகும் .
சங்க காலத்தில் போர் பற்றிய பாடல்கள் உண்டு .
இவை புறம் என்று கூறப்பட்டன .
இவை தனிக்கவிதைகளாக இருந்தன .
சிற்றிலக்கிய வகையாகப் போர்ச் செய்திகள் வளர்ந்த போது பரணி ஆக உருப்பெற்றன .
போர்த் தெய்வம் கொற்றவை .
இதனைச் சங்க இலக்கியங்களில் இருந்து அறிய முடியும் .
போரில் பேய்கள் , பூதங்கள் பங்கேற்கும் என்று கருதுவது ஒரு நம்பிக்கை .
இதனையும் சங்க இலக்கியங்களின் மூலம் அறியலாம் .
இவற்றோடு போர் நிகழ்ச்சிகள் சேர்ந்து பரணியாக வடிவு எடுத்து உள்ளன .
பரணி இலக்கியம் பற்றிய செய்திகள் இந்தப் பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன .
பரணி
பண்டைத் தமிழ் இலக்கியத்தை அகம் , புறம் என்று பிரிப்பர் .
தமிழர்களின் காதல் வாழ்க்கையைப் பாடுபவை அக இலக்கியங்கள் .
வீரம் , கொடை , மானம் முதலியவற்றைப் பாடுபவை புற இலக்கியங்கள் . பரணி புற இலக்கியம் .