பாட்டுடைத் தலைவனின் வீரமே இந்த இலக்கியத்தின் மையக் கருவாகும் .
இது பற்றிப் பன்னிரு பாட்டியல் கூறுவது வருமாறு :
வஞ்சி மலைந்த உழிஞை முற்றி
தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை
வெம்புசின மாற்றான் தானை வெங்களத்தில்
குருதிப் பேராறு பெருகும் செங்களத்து
ஒருதனி ஏத்தும் பரணியது பண்பே
( பன்னிரு : 240 )
மன்னன் பகைவனது நாட்டை வெல்வதற்காக வஞ்சிப் பூமாலை அணிந்து போர்க்களம் சென்றான் .
உழிஞைப் பூமாலை அணிந்து பகைவனது மதிலை முற்றுகை இட்டான் .
தும்பைப் பூமாலையைச் சூடிப் பகைவனுடன் போர் செய்தான் .
பகை வீரர்கள் மடிந்தனர் ; குருதி ஆறு பெருக்கெடுத்து ஓடியது ; பகைவனை வென்றான் .
இவ்வாறு படை எடுத்துச் சென்று வாகை மாலை சூடிய மன்னனின் வீரத்தைப் புகழ்வதே பரணி இலக்கியம் ஆகும் .
பரணி , வீரத்தைப் பற்றிப் பாடினாலும் காதல் இலக்கிய மரபையும் கொண்டு உள்ளது .
மகளிரை அழைத்துப் போர் பற்றிய செய்திகளைக் கூறும் பகுதி ' கடைதிறப்பு ' எனப்படும் .
' தலைவன் புகழைக் கேட்கக் கதவைத் திறவுங்கள் ' என்று கூறுவது கடைதிறப்பு ஆகும் .
இப்பகுதி முழுவதும் காதல் இலக்கிய மரபை அடியொற்றி அமைந்துள்ளது .
1.1.1 பரணி பெயர்க் காரணம்
பரணி என்பது நட்சத்திரத்தின் பெயர் ; காளியையும் யமனையும் தெய்வங்களாகக் கொண்ட நாள் .
பரணி நாளில் பிறந்தவன் பெரும் வீரனாவான் என்பதும் நம்பிக்கை .
எனவே போர்க்களத்தில் யானைகள் பலவற்றைக் கொன்று , பல உயிர்களையும் யமன் கவர்ந்து கொள்ளுமாறு செய்து , அரசனின் வீரம் வெளிப்பட , போர்க்களத்தில் காளிக்குக் கூழ் சமைத்து வழிபட்ட நிகழ்ச்சிகளைக் கூறுவதால் இந்நூல் பரணி என்று பெயர் பெற்றிருக்க வேண்டும் .
காளிக்கு உரிய நாள் பரணி .
காளியைத் தெய்வமாகக் கொண்டு பாடப்படுவதால் இந்நூலுக்குப் பரணி எனப்பெயர் வந்தது என்றும் விளக்கம் கூறுவர் .
1.1.2 பரணியின் இலக்கணம்
பரணியின் இலக்கணம் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடவில்லை .
இருந்தாலும் ' யானை மறம் ' என்ற துறையைச் சுட்டி உள்ளது .
யானைகளின் வெற்றியைப் பாடுவது இந்தத் துறை .
சங்க இலக்கியங்களில் பரணி இலக்கியக் கூறுகள் காணப்படுகின்றன .
போர்க்களத்து வீர நிகழ்ச்சிகள் - பேய்களின் நிகழ்ச்சிகள் - முதலியவற்றைச் சுட்டலாம் .
பரணி இலக்கியத்திற்கான இலக்கணம் பாட்டியல் நூல்களில்தான் விரிவாகக் கூறப்பட்டுள்ளது .
நண்பர்களே !
இதுபற்றிய சில செய்திகளை இப்பொழுது தெரிந்து கொள்வோம் .
• இலக்கண விளக்கம்
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி
( இலக் .
வி. 839 )
( அமர் - போர் ; மானவன் - படைவீரன் . )
என்று இலக்கண விளக்கம் கூறியுள்ளது .
போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனின் வெற்றியைப் பாடுவதே பரணி - என்பது இதன் பொருள் .
• பன்னிரு பாட்டியல்
எழுநூறு யானைகளைக் கொன்ற ஏந்தலை ( தலைவனை ) ப் பாராட்டுவதே பரணி என்று பன்னிரு பாட்டியல் கூறியுள்ளது .
ஏழ்தலை பெய்த நூறுஉடை இபமே
அடுகளத்து அட்டால் பாடுதல் கடனே
( பன்னிரு .
243 )
( இபம் - யானை , அடுகளம் - போர்க்களம் , அட்டால் - கொன்றால் , கடன் - முறைமை . )
யானையைக் கொன்ற போர்க்களம் அல்லாத பிற போர்க்களங்கள் பரணி பாடுவதற்குத் தகுதி உடையன அல்ல .
இதனை , யானை சாய்த்த அடுகளத்து அல்லது
யாவரும் பெறாஅர் பரணிப் பாட்டே
( பன்னிரு .
242 )
என்ற பாடலால் அறிய முடிகிறது .
• வெண்பாப் பாட்டியல்
வெண்பாப் பாட்டியல் பரணியின் பாட்டுடைத் தலைவனைப் பற்றிப் பேசியுள்ளது .
மூண்ட அமர்க்களத்து மூரிக் களிறு அட்ட
ஆண்டகையைப் பரவி ஆய்ந்துரைக்க
( வெண்பா : 28 )
( மூரி - வலிமை , களிறு - யானை , அட்ட - கொன்ற , ஆண்டகை - வீரன் , பரவி - புகழ்ந்து . )
என்று கூறியுள்ளது .
' போர்க்களத்தில் ஊறுபாடு ( சேதம் ) இன்றி இருத்தல் வேண்டும் ; பகைவர் யானைகளை அழித்தல் வேண்டும் ; போரில் வெற்றிவாகை சூட வேண்டும் ; இவ்வாறு திகழ்பவனே பரணியின் பாட்டுடைத் தலைவன் ஆவான்'
1.1.3 பரணியின் அமைப்பு
பரணி இலக்கியம் பத்து உறுப்புகளைப் பெற்று விளங்குகிறது .
பத்து உறுப்புகள் அனைத்துப் பரணி நூல்களுக்கும் உரியன , ஒரு சில பரணிகளில் இந்தப்பத்து உறுப்புகள் அல்லாது ஒரு சில உறுப்புகள் கூடுதலாகவும் உள்ளன .
இந்த உறுப்புகள் பண்டைய பரணி நூல்களுக்கே பொருந்தும் .
பிற்கால நூல்களுக்குப் பொருந்தாது .
சான்றுக்குச் சீனத்துப் பரணியை இங்குக் கூறலாம் .
நண்பர்களே !
இனிப் பத்து உறுப்புகள் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்வோம் .
மேற்கூறிய பத்து உறுப்புகள் பண்டைய பரணி நூல்கள் அனைத்திற்கும் உரியன .
இவை அல்லாமல் இந்திரசாலம் ( பேயின் மாயாசாலம் பற்றியது ) , இராசபாரம்பரியம் ( சோழர் பரம்பரை பற்றிய விளக்கம் ) , அவதாரம் ( பாட்டுடைத் தலைவனின் பிறப்பு பற்றியது ) ஆகிய உறுப்புகள் கலிங்கத்துப் பரணியில் காணப்படுகின்றன .
பரணியின் உறுப்புகள் கடவுள் வாழ்த்து முதலாக ஒரே அமைப்பாக எல்லாப் பரணி நூல்களிலும் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .
1.1.4 பரணியின் தோற்றம்
பரணி இலக்கியம் பற்றிய தொன்மையான இலக்கணக் குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை .
பரணியைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடைக்கால நூலாகக் கொள்ள வேண்டும் .
சோழர் காலத்தில்தான் பரணி ஓரு தனி இலக்கிய வகையாகத் தோற்றம் பெற்றுள்ளது .
இந்த இலக்கிய வகையின் தோற்றம் வளர்ச்சி மாற்றங்கள் பற்றி இங்குக் காண்போம் .
கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கலிங்கத்துப் பரணி நூலே இன்று நமக்குக் கிடைக்கும் முதல் பரணி நூலாகும் .
இதற்கு முன்பும் பரணி நூல்கள் இருந்துள்ளன .
ஆனால் அவை கிடைக்கவில்லை .
1 ) முதல் இராசேந்திரசோழன் - 11- ஆம் நூற்றாண்டு - கொப்பத்துப் பரணி
2 ) வீரராசேந்திரசோழன் - 11- ஆம் நூற்றாண்டு - கூடல் சங்கமத்துப் பரணி
மேலே உள்ள பரணி நூல்களைப் பெயர் அளவில் மட்டுமே நாம் அறிகிறோம் .
• பரணியின் பாடுபொருள் மாற்றம்
கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரை தோன்றிய பரணி நூல்களுக்குத் தலைவர்களாக இணையற்ற வீரர்கள் தமிழகத்தில் இருந்தார்கள் .
ஆனால் அதன் பின் தமிழக ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது .
அதன் பின் இணையற்ற வீரர்கள் அவ்வளவாகத் தமிழகத்தில் தோன்றவில்லை .
எனவே பரணி நூல்கள் சமயச் சார்புடையனவாக அமைந்தன .
வீரர்களின் போர்க்களத் திறனைப் பாடிய உள்ளம் தெய்வங்களின் போர்களை , சமயத் தத்துவங்களைப் பாடியது .
1.1.5 சமயம் தழுவிய பரணி நூல்கள்
சமயத் தத்துவங்களையும் , சமயம் தொடர்பான புராணக்கதைகளையும் அடிப்படையாகக் கொண்டு சில பரணி நூல்கள் வெளிவந்தன .
• தக்கயாகப் பரணி
இந்நூலின் ஆசிரியர் ஒட்டக்கூத்தர் .
தக்கன் , தான் செய்த யாகத்தின்போது சிவபெருமானை அழைக்காது விட்டான் .
இதனால் சிவனுக்கும் சக்திக்கும் மனவேறுபாடு ஏற்பட்டது .
இறுதியில் சிவனின் அருளால் வீரபத்திரர் என்பவர் தக்கன் யாகத்தை அழித்தார் .
இந்தப் புராணத்தைக் கருவாகக் கொண்டு இப்பரணி அமைந்துள்ளது .
• அஞ்ஞவதைப் பரணி இந்நூலினைத் தத்துவராய சுவாமிகள் பாடி உள்ளார் .
அஞ்ஞானத்தினை ( அறியாமை ) ஓர் அரசனாக்கி , அகங்காரம் ( ஆணவம் ) முதலிய தீய பண்புகளைப் படைகள் ஆக்கி இவற்றை ஞானமாகிய இறைவன் அழித்ததாகப் பாடப்பட்டதே இந்நூல் .
இதனை ஞானப்பரணி என்றும் கூறுவர் .
• திருச்செந்தூர்ப் பரணி
இந்த நூலினைச் சீனிப்புலவர் இயற்றி உள்ளார் .
முருகன் சூரனை அழித்த புராணத்தைப் பாடுகிறது இந்நூல் .
• இரணியன் வதைப் பரணி
இந்நூலாசிரியர் யார் என்பதை அறிய முடியவில்லை .
சிலர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் இந்நூல் ஆசிரியராக இருக்கலாம் என்பர் .
திருமாலின் நரசிம்ம அவதாரத்தைப் பாடுகிறது இந்தநூல் .
தன்மதிப்பீடு : வினாக்கள் - I
1. பரணி என்ற சொல்லுக்குரிய பொருள்களைக் குறிப்பிடுக .
விடை
2. எத்தனை யானைகளைக் கொன்றால் பரணி இலக்கியத்தின் பாட்டுடைத் தலைவன் ஆகலாம் ?
விடை
3. பரணியின் உறுப்புகளில் ஐந்தினைக் குறிப்பிடுக .
விடை
4. பண்டைய பரணி நூல்களுள் நான்கைக் குறிப்பிடுக .
கலிங்கத்துப் பரணி
பரணி நூல்களில் காலத்தால் முற்பட்டது இந்நூல் .
முதல் குலோத்துங்க சோழன் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வெற்றி பெற்றான் .
இந்த வெற்றியைச் சிறப்பித்துப் பாடியதே கலிங்கத்துப் பரணி ஆகும் .
நண்பர்களே இனி வரும் பாடப்பகுதியில் கலிங்கத்துப் பரணி பற்றி மூன்று நிலைகளில் செய்திகளை அறிய இருக்கிறோம் .
1 ) கலிங்கத்துப் பரணி - நூலாசிரியர் வரலாறு
2 ) கலிங்கத்துப் பரணி - பாட்டுடைத் தலைவன்
3 ) கலிங்கத்துப் பரணி - இலக்கியச் சிறப்புகள்
1.2.1 நூலாசிரியர்
கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் சயங்கொண்டார் ஆவார் ' பரணிக்கு ஓர் சயங்கொண்டான் ' என்று பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இவரைப் பாராட்டி உள்ளார் .
இவரது இயற்பெயரை அறிய முடியவில்லை .
புலவர் பலரும் சொற்போர் நிகழ்த்துவது வழக்கம் .
இத்தகு சொற்போரில் வென்றதால் இவருக்குச் சயங்கொண்டார் என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பர் .
இவருடைய ஊர் தீபங் குடி/
• குலோத்துங்கனும் சயங்கொண்டாரும்
குலோத்துங்கன் கலிங்கத்துப் போரில் வெற்றி பெற்றான் .
வெற்றிக்குப் பின்பு சயங்கொண்டாரோடு உரையாடிக் கொண்டிருந்தான் .
அப்போது புலவரை நோக்கி , ' புலவரே !
கலிங்கத்தைச் சயங்கொண்டமையால் நானும் சயங்கொண்டான் ஆயினேன் ' என்று கூறினான் .
இதனைக் கேட்ட சயங்கொண்டார் உளம் மகிழ்ந்தார் .
' அப்படி ஆனால் சயங்கொண்டானைச் சயங்கொண்டான் பாடுவது மிகப் பொருத்தம் ' என்று கூறிக் கலிங்கத்துப் பரணியைப் பாடினார் என்பர் .
• கலிங்கத்துப் பரணியும் பொன் தேங்காயும்
சயங்கொண்டார் பரணி பாடி முடித்தார் .
பின்பு குலோத்துங்கன் அவையில் அரங்கேற்றம் செய்யத் தொடங்கினார் .
அந்தக் காலத்தில் ஒருவர் நூல் செய்தால் பலர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் ; பலரின் ஒப்புதலைப் பெற வேண்டும் .
இம்மரபினைத் தொல்காப்பிய அரங்கேற்றத்தில் இருந்தே காண்கிறோம் .
அரங்கேற்றம் செய்யும் காலத்தில் அரசர்கள் புலவர்களுக்குப் பரிசு அளித்துப் பாராட்டுவர் .
சயங்கொண்டார் பாடலைக் குலோத்துங்கன் சுவைத்தான் ; ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொன்னால் ஆகிய தேங்காயை உருட்டிக் கவிஞரையும் நூலையும் சிறப்புச் செய்தான் .
• சயங்கொண்டார் நூல்கள்
சயங்கொண்டார் புகார் நகரத்து வணிகரைப் புகழ்ந்து ' இசை ஆயிரம் ' என்ற நூலைப் பாடி உள்ளார் .
விழுப்பரையர் மீது ' உலாமடல் ' என்ற நூலையும் இயற்றி உள்ளதாகத் தெரிகிறது .
1.2.2 பாட்டுடைத் தலைவன் கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத் தலைவன் முதல் குலோத்துங்க சோழன் .
இவன் இராசேந்திர சோழன் மகள் சோழ இளவரசி அம்மங்கைக்கும் சாளுக்கியர் குல இராசராச நரேந்திரனுக்கும் பிறந்தவன் .
இவன் மாமன் வீரராசேந்திர சோழன் இறந்த பின்பு அவன் மகன் அதிராசேந்திரன் பட்டம் ஏற்றான் .
இவனும் சில திங்களில் இறந்தான் .
சோழ நாடு வாரிசு இல்லாமல் குழப்பத்தில் ஆழ்ந்தது .
குழப்பத்தை நீக்கச் சாளுக்கியர் குலத்தைச் சேர்ந்த குலோத்துங்கன் பட்டம் ஏற்றான் .
• பரணி உருவான கதை
கலிங்கத்துப் பரணி உருவானதற்கான காரணம் பற்றிக் கதை ஒன்று உண்டு .
குலோத்துங்கன் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தான் .
அப்போது தென்னவர் , வில்லவர் முதலிய மன்னர்கள் திறை ( தோற்ற மன்னர் தன்னை வென்றமன்னர்க்குக் கொடுக்கும் நிதி ) செலுத்திப் பணிந்தனர் .
வட கலிங்க மன்னன் மட்டும் திறை செலுத்தாமல் இருந்தான் .
இதனை அறிந்த குலோத்துங்கன் சினம் கொண்டான் .
அவன் சினத்தைக் கண்டு ஏனைய மன்னர்கள் நடுங்கினார்கள் .
' வட கலிங்க மன்னனின் அரண்கள் ( மதில்கள் ) வலிமை உடையனவாம் !
அவற்றை அழித்து வாருங்கள் ; அவனுடைய யானைகளை வென்று வாருங்கள் ' என்று கூறினான் .
அந்த அளவில் குலோத்துங்கன் தளபதி கருணாகரன் எழுந்து நானே சென்று கலிங்கனை அடக்குவேன் என்று சபதம் இட்டான் .
பின்னர்க் கலிங்கப் போர் மூண்டது .
சோழர்கள் வெற்றி வாகை சூடினர் என்று கதை முடிகிறது .
• கலிங்கம் வென்ற கருணாகரன்
குலோத்துங்கனின் படைத்தலைவர்களுள் சிறந்தவன் கலிங்கத்துப் பரணியின் இன்னொரு கதாநாயகன் கருணாகரன் ஆவான் .
குலோத்துங்கன் ஆணையின்படி கலிங்க நாட்டின் மீது படை எடுத்துச் சென்று அந்நாட்டை அழித்தவன் .
திருவரங்கன் எனும் இயற்பெயரை உடையவன் .
' வேள் ' ' தொண்டைமான் ' எனும்
பட்டங்கள் குலோத்துங்கனால் இவனுக்கு வழங்கப்பட்டன .
இவன் பல்லவர் குலத்தைச் சேர்ந்தவன் .
கலிங்கப் போரினால் குலோத்துங்கனுக்குப் புகழ் தேடித் தந்தான் கருணாகரன் ; கருணாகரனுக்குப் பரணியின் வாயிலாகப் புகழ் தேடித் தந்தார் செயங்கொண்டார் .
இலக்கியச் சிறப்பு
முதல் குலோத்துங்க சோழன் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து அந்நாட்டை வெற்றி கொண்டதன் நினைவாக இப்பரணி பாடப்பட்டுள்ளது .
வீரம் மிக்கதாய் இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது .
கற்பனை கலந்த நிகழ்ச்சிகள் இலக்கிய நயத்தோடு இடம் பெற்றுள்ளன .
நண்பர்களே !
இந்த பாடப்பகுதியில் கலிங்கத்துப் பரணியின் அமைப்பு , இலக்கியச் சிறப்பு எனும் இரு நிலைகளில் செய்திகளை அறிய இருக்கிறோம் .
1.3.1 கலிங்கத்துப் பரணியின் அமைப்பு
கலிங்கத்துப் பரணி 14 பகுதிகளை உடையதாக அமைக்கப்பட்டுள்ளது .
முதலாவதாகக் கடவுள் வாழ்த்துப் பகுதி அமைந்துள்ளது .
அடுத்துக் கடைதிறப்பு எனும் பகுதி அமைந்துள்ளது .
கலிங்கப் போர் புரியச் சென்ற மறவர்கள் காலம் தாழ்த்தி வந்தனர் .
இதனால் மகளிர் ஊடல் கொண்டு கதவை அடைத்தனர் .
அவ்வூடல் நீக்கப் புலவர் கடையைத் ( கதவை ) திறக்கச் சொல்வது கடைதிறப்பு ஆகும் .
• காளி
போர்த் தெய்வமாகிய காளி வாழும் காட்டை விவரிப்பது காடு பாடியது எனும் பகுதி ஆகும் .
கோயில் பாடியது எனும் பகுதி காளி தேவியின் கோயிலை வருணிப்பதாகும் .
அடுத்துத் தேவி பாடியது எனும் பகுதி காளியைப் பாடுவதாகும் .
காளியைச் சூழ்ந்திருக்கும் பேய்களை விவரிப்பது பேய்களைப் பாடியது எனும் பகுதி ஆகும் .
ஒரு பேய் காளி தேவியின் முன் மாயாசாலங்களைச் செய்து காட்டுகிறது .
இது இந்திரசாலம் எனும் பகுதி ஆகும் .
• சோழர் வரலாறு
அடுத்துச் சோழர்களின் குல வரலாற்றை இராச பாரம்பரியம் எனும் பகுதி எடுத்துக் கூறுகிறது .
குலோத்துங்க சோழன் பிறந்ததை அவதாரம் எனும் பகுதி விவரிக்கிறது .
• போர்க்களமும் பேய்களும் காளிக்குக் கூளி கூறியது எனும் பகுதி கலிங்கப் போர் ஏற்பட்டதற்கான காரணத்தை விளக்குகிறது .