128

அவனுக்கு வேண்டாமோ என்று கேட்கிறது .

உடனே கூத்திப்பேய் என் கணவன் குடிக்க மாட்டான் என்று சொல்லிக் கூழ் முழுவதையும் குடிக்கின்றது .

இதனைக் கீழே உள்ள பாடல் விளக்கும் .

தடியால் மடுத்துக் கூழ் எல்லாம்

தானே பருகித் தன்கணவன்

குடியான் என்று தான்குடிக்கும்

கூத்திப் பேய்க்கு வாரீரே

( கூழ் அடுதல் : 575 )

( தடி = தசை , மடுத்து = அமிழ்த்தி , கூத்திப்பேய் = கூத்தாடும் பேய் , வாரீர் = ஊற்றுங்கள் )

• நான்முகனுக்கும் கிட்டாத கூழ்

இவ்வாறு பேய்கள் கூழை உண்ணும்போது நான்முகனைப் ( பிரம்மனை ) பார்த்து நகைக்கின்றன .

நான்முகன் தனக்கு மட்டும் நான்கு வாயைப் படைத்துக் கொண்டான் .

ஆனால் நமக்கு ஒரு வாயைத்

தந்துள்ளான் .

இதனால் நான்முகன் வஞ்சகன் .

என்றாலும் அமுதம் போன்ற இந்தக் கூழினைக் குடிக்க நான்முகனுக்குக் கொடுத்து வைக்கவில்லை : ஆனால் ஒரு வாய் பெற்ற நாமோ இக்கூழினைக் குடித்து மகிழ்கின்றோம் .

ஆதலால் நான்முகனும் வெட்கப்படும்படி மகிழ்ச்சியுடன் கூழினை உண்போமாக என்று பேய்கள் கூறி மகிழ்கின்றன .

இதனைக் கீழே உள்ள பாடல் விவரிக்கும் .

தமக்கு ஒரு வாயொடு வாய்மூன்றும்

தாம் இனிதாப் படைத்துக் கொண்டு

நமக்கு ஒரு வாய் தந்த நான்முகனார்

நாணும்படி களித்து உண்ணீரே

( கூழ் அடுதல் : 581 )

( நான்முகனார் = பிரமன் , களித்து = மகிழ்ந்து )

இவ்வாறாகப் பல்வேறு பேய்களின் கூழ் உண்ணும் நிலைகளைச் சயங்கொண்டார் கற்பனை வளத்துடன் வருணித்துப் படைத்துள்ளதை அறிய முடிகின்றது .

அகப்பொருள்

கலிங்கப் போர் முடிந்து வீரர்கள் சோழ நாடு திரும்புகின்றனர் .

ஆனால் தாம் வருவதாகக் கூறிய காலம் கடந்து பணி முடித்து வருகின்றனர் .

காலம் கடந்து வருவதால் மகளிர் ஊடல் கொள்கின்றனர் .

தம் கணவனை எதிர்கொண்டு வரவேற்காமல் கதவைத் தாழிட்டுக் கொள்கின்றனர் .

இந்நிலையில் புலவர் மகளிரைக் கதவு திறக்க வேண்டுகிறார் .

இது கடை திறப்பு எனும் பகுதியாக அமைகின்றது .

மகளிரின் பல்வேறு காதல் செயல்களையும் நிகழ்ச்சிகளையும் நினைவூட்டுகிறார் புலவர் .

இத்தகைய இனிய பெண்களே !

கதவைத் திறவுங்கள் என்று வேண்டுகிறார் .

1.5.1 அழகியும் ஆடவர் உயிரும்

பெண்கள் கூந்தலில் செங்கழுநீர் மலர்களைச் செருகுகின்றார்கள் .

செங்கழுநீர் மலர்களை மட்டுமா செருகுகின்றார்கள் ?

இல்லை !

இவ்வுலகத்தில் வாழும் இளைஞர்களின் உயிர்களையும் சேர்த்து அல்லவா செருகுகின்றார்கள் ?

இதனை விளக்கும் பாடல் வருமாறு :

செக்கச் சிவந்த கழுநீரும்

செகத்தில் இளைஞர் ஆருயிரும்

ஒக்கச் செருகும் குழல்மடவீர்

உம்பொற் கபாடம் திறமினோ

( கடை திறப்பு : 74 )

( செக்கச் சிவந்த = மிகச்சிவப்பான , கழுநீர் = பூ , செகம் = உலகம் , குழல் = கூந்தல் , கபாடம் = கதவு )

1.5.2 கதவு திறத்தலும் அடைத்தலும்

கணவன்மார் குறித்துச் சென்ற காலம் வந்தது . அவர் வருகையை எதிர்பார்த்து மனைவியர் கதவைத் திறந்து வழிமேல் விழி வைத்துப் பார்த்து நின்றனர் .

கணவன்மார் வரவில்லை .

துயரத்தால் வெறுப்பு உற்றுக் கதவைப் படார் எனச் சாத்தினர் .

இவ்வாறாக இரவு முழுவதும் திறப்பதும் சாத்துவதுமாக இருந்தனர் .

இதனால் கதவில் உள்ள சுழலும் குடுமி தேய்ந்தது .

இதனைப் புலவர் நயம்படப் புனைந்துள்ளார் .

வருவார் கொழுநர் எனத் திறந்தும்

வாரார் கொழுநர் என அடைத்தும்

திருகும் குடுமி விடியளவும்

தேயும் கபாடம் திறமினோ

( கடை திறப்பு : 69 )

( கொழுநர் = கணவர் , குடுமி = கதவு திறக்கவும் மூடவும் உதவும் அச்சு )

இவ்வாறாகக் கடைதிறப்புப் பகுதி முழுவதும் அகப்பொருள் நிறைந்ததாகச் சுவைபடப் புலவர் புனைந்து இருப்பதை அறிய முடிகின்றது .

தொகுப்புரை

நண்பர்களே !

இதுவரை பரணி இலக்கியம் பற்றிய செய்திகளை அறிந்து இருப்பீர்கள் .

இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுப்படுத்திப் பாருங்கள் .

பரணி என்றால் என்ன என்பது பற்றியும் பரணி சொற்பொருள் விளக்கம் பற்றியும் அறிந்து இருப்பீர்கள் .

பரணி பற்றிப் பாட்டியல் நூல்கள் தரும் இலக்கண விளக்கங்களை அறிந்து இருப்பீர்கள் .

பண்டைய நாள் பரணி இலக்கியங்கள் தொடங்கிப் பரணியின் வளர்ச்சி மாற்றம் பற்றிய செய்திகளை அறிந்து இருப்பீர்கள் .

கலிங்கத்துப் பரணி பற்றிச் சிறப்பான செய்திகளை அறிந்திருப்பீர்கள் .

கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் , பாட்டுடைத் தலைவன் , இலக்கியச் சிறப்புகள் முதலியன பற்றி விரிவாக உணர்ந்து இருப்பீர்கள் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் .

ஆவார் .

விடை

2. கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத் தலைவன் .

ஆவான் .

விடை

3. கருணாகரன் .

மன்னனின் படைத்தலைவன் ஆவான் .

விடை

4. செயங்கொண்டார் இயற்றிய மூன்று நூல்கள் யாவை ?

விடை

5. சயங்கொண்டாரும் சயங்கொண்டானும் - விளக்குக .

விடை

6. காளியின் தோற்றப் பொலிவை விளக்குக .

விடை

7. மறவர்கள் காளிக்குத் தங்களைப் பலியிட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியை விவரிக்க .

விடை

8. பேய்களின் செயல்பாடு பற்றிக் குறிப்புரை தருக .

விடை

9. கடை திறப்பு மகளிரின் செயல்களுள் இரண்டினை விவரிக்க .

பிள்ளைத்தமிழ் இலக்கியம்

பாட முன்னுரை

தமிழ் இலக்கியத்தின் வடிவமும் உள்ளடக்கமும் காலந்தோறும் மாறி வந்துள்ளன .

சங்ககாலம் தொடங்கி இன்று வரை எண்ணற்ற இலக்கிய வடிவங்களை - வகைமைகளைத் தமிழ்மொழி பெற்றுள்ளது .

இந்த இலக்கிய வகைமைகளைச் சிற்றிலக்கியங்கள் எனும் பெயரால் இலக்கண நூல்கள் குறித்துள்ளன .

இத்தகு சிற்றிலக்கிய வகையில் ஒன்றே பிள்ளைத்தமிழ் .

பிள்ளைத்தமிழ் இலக்கிய வகையாக உருவெடுத்த காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு என்பர் . ( கு. முத்துராசன் , 1992 )

இதற்கு முன்பும் தமிழிலக்கியங்கள் பிள்ளைத்தமிழின் சில கூறுகளை வெளிப்படுத்தி உள்ளன .

நண்பர்களே !

இந்தப் பாடம் பிள்ளைத்தமிழ் பற்றிய பொது அறிமுகத்தை முதலில் கூறுகின்றது .

இரண்டாவதாக மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூலை அறிமுகம் செய்கிறது .

இனிப் பாடப்பகுதிக்குள் செல்வோமா ?

பிள்ளைத்தமிழ்

அன்பு தருவதிலே உனைநேர்

ஆகும்ஓர் தெய்வம் உண்டோ

என்று குறிப்பிடுவார் பாரதி .

அன்பு செலுத்துவதற்கும் அன்பு பெறுவதற்கும் உரிய பருவம் குழந்தைப் பருவமே .

புலவர்கள் தம் அன்புக்குரிய ஒருவரைக் குழந்தையாக வைத்துப் பாடிமகிழ்ந்தார்கள் .

இதுவே பிள்ளைத்தமிழ் ஆயிற்று .

புலவர் பெருமக்கள் தம் அன்பிற்குரியவராகப் பின்வருவோரை எண்ணினார்கள் .

இறைவன்

இறைவி

இறையடியார்கள்

வள்ளல்கள்

தலைவர்கள்

ஆசிரியர்கள்

இவர்களுள் ஒருவரைத் தலைவராகக் கொண்டு பிள்ளைத்தமிழ் பாடப்படும் .

இவர்களின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள் மூலம் அரிய பெரிய சாதனைகளைப் புலவர்கள் விளக்கிக் கூறுவர் .

பிள்ளையைத் தமிழால் பாடுவது என்ற பொருளில் பிள்ளைத்தமிழ் என்ற பெயர் அமைந்துள்ளது .

2.1.1 பிள்ளைத்தமிழ் நூல்கள்

பிள்ளைத்தமிழ் எனும் பெயரில் நமக்குக் கிடைக்கும் முதல் நூல் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் .

இது ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது .

கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது .

இந்நூல் இரண்டாம் குலோத்துங்கச் சோழனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது .

இதன் பின்னர்ப் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டன .

பகழிக்கூத்தர் , குமரகுருபரர் , மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலான புலவர் பெருமக்களால் பிள்ளைத்தமிழ் வளர்ச்சி அடைந்தது .

இதுவரை முந்நூறுக்கும் மேற்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டுள்ளதாகக் கு.முத்துராசன் தம் நூலில் பட்டியல் இட்டுள்ளார் .

2.1.2 பிள்ளைத்தமிழ் இலக்கணம்

பிள்ளைத்தமிழ் பற்றிய இலக்கணக் குறிப்பை முதலில் வழங்கும் நூல் தொல்காப்பியமே ஆகும் .

குழவி மருங்கினும் கிழவது ஆகும்

( தொல் .

பொருள் .

புறம் .

24 )

என்ற தொல்காப்பிய நூற்பா பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு இலக்கணம் கூறி உள்ளது .

குழந்தைப் பருவக்காலத்தில் குழந்தைகளை விரும்பி அவரது செயல்களைப் பாடுவது உண்டு என்ற பொருளில் உரையாசிரியர் இளம்பூரணர் உரை எழுதி உள்ளார் .

இன்னொரு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்குரிய பத்துப் பருவங்களைச் சுட்டி இருக்கிறார் .

காப்பு , செங்கீரை , தால் , சப்பாணி , முத்தம் , வருகை , அம்புலி , சிற்றில் , சிறுதேர் , சிறுபறை ஆகியன பிள்ளைத்தமிழின் பத்துப் பருவங்கள் ஆகும் .

குழந்தையின் மூன்றாம் திங்கள் முதல் இருபத்து ஓராம் திங்கள் வரையில் உள்ள மாதங்களே பத்துப் பருவங்களாகப் பகுக்கப் பெறும் .

இந்தப் பத்துப் பருவங்களில் குழந்தையின் சிறப்பினைப் பாடுவதாகப் பிள்ளைத்தமிழ் அமைந்துள்ளது .

2.1.3 பிள்ளைத்தமிழின் அமைப்பு

நண்பர்களே !

இதுவரை பிள்ளைத்தமிழின் இலக்கணம் பற்றி ஓரளவு அறிந்தீர்கள் .

பிள்ளைத்தமிழ் இலக்கணம் பற்றித் தொல்காப்பிய நூற்பா குறிப்பாகச் சில செய்திகளைக் கூறி உள்ளது .

பிற்காலப் பாட்டியல் நூல்களே இதுபற்றி விரிவாகக் கூறி உள்ளன .

பிள்ளைத்தமிழின் பத்துப் பருவங்கள் பற்றி முன்பே கோடிட்டுக் காட்டப்பட்டது . பத்துப் பருவங்கள் வருமாறு :

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. பிள்ளைத்தமிழ் பற்றிய இலக்கணக் குறிப்பு முதன் முதலில் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது ?

அ. அகத்தியம்

ஆ. தொல்காப்பியம்

இ. இறையனார் களவியல்

விடை

2. பிள்ளைத்தமிழ்ப் பருவங்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

அ. ஏழு

ஆ. பதின்மூன்று

இ. பத்து

விடை

3. தமிழில் கிடைக்கும் முதல் பிள்ளைத்தமிழ் நூல் எது ?

அ. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

ஆ. குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்

இ. சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

விடை

4. கீழே தரப் பெற்றுள்ள பருவங்களில் ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்களைப் பிரித்துத் தருக .

அ. நீராடல்

ஆ. சிற்றில் சிதைத்தல்

இ. அம்மானை

ஈ. ஊசல்

உ. சிறுதேர் உருட்டல்

ஊ. சிறுபறை முழக்கல்

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

மதுரை மீனாட்சி அம்மையைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு அவள் பெயரால் அமைந்தது இப்பிள்ளைத்தமிழ் நூல் .

இந்நூலைக் குமரகுருபரர் இயற்றி உள்ளார் .

பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் தலை சிறந்ததாக இந்நூல் கருதப்படுகிறது .

மதுரை மீனாட்சி அம்மனின் பெருமைகளை எடுத்து உரைப்பதே இந்நூலின் நோக்கம் .

தேவி புராணங்களின் அடிப்படையிலும் , கடவுள் தத்துவங்களின் அடிப்படையிலும் இந்த நூல் இயற்றப்பட்டுள்ளது .

தென்னற்கும் அம்பொன்மலை மன்னற்கும் ஒருசெல்வி

( மீனா .

பிள் .

13 )

என்ற பிள்ளைத்தமிழ்ப் பாடலின் தொடர் குறிப்பிடத்தக்கது .

மீனாட்சி பாண்டிய மன்னனின் மகளாகவும் இமயமலை இமயவர்மனின் செல்வியாகவும் விளங்குவதை அத்தொடர் குறிப்பிட்டுள்ளது .

தமிழோடு பிறந்து பழமதுரையில் வளர்ந்த கொடி

சப்பாணி கொட்டி அருளே

( மீனா .

பிள் .

34 )

என்ற பாடல் , தமிழுடன் மீனாட்சி பிறந்ததாகக் கூறித் தமிழுக்கு ஏற்றம் தந்துள்ளது .

இப்பிள்ளைத்தமிழ் மீனாட்சி எனும் சைவ சமயத் தாய்க்கடவுளையும் பாண்டிய நாட்டையும் தமிழ் மொழியையும் சேர்த்துப் பெருமைப்படுத்துவதில் முன் நிற்கிறது .

2.2.1 நூலாசிரியர்

இந்நூலை இயற்றிய குமரகுருபரர் கி.பி. 17- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் .

நெல்லை மாவட்டம் திருவைகுண்டத்தில் பிறந்தவர் .

சண்முக சிகாமணிக் கவிராயரும் , சிவகாமி அம்மையாரும் இவருடைய பெற்றோர்கள் ஆவர் .

குமரகுருபரர் இளம் வயதில் ஐந்து ஆண்டுகள் வரை பேசாது இருந்தார் .

பின்பு திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் ஆற்றல் பெற்றார் என்று மரபு வழிச்செய்தி கூறுகிறது .

பேச்சாற்றல் பெற்ற இவர் முருகனின் மீது கந்தர் கலிவெண்பா எனும் நூலைப் பாடினார் . முருகப்பெருமான் இவர் கனவில் தோன்றி ' ' நீ குருபரன் ஆகுக ' ' என்று கூறினார் .