13

பண்பாட்டு வரலாறு - 1

பாடம் - 1

பண்பாடு - ஒரு விளக்கம்

1.0 பாடமுன்னுரை

பொதுவாகப் பண்பாடு (Culture) என்பதைப் பற்றிப் பல்வேறு வகையான கருத்துகள் கூறப்படுகின்றன. நாகரிகத்திற்கும் (Civilization) பண்பாட்டிற்கும் வேறுபாடு தெரியாமல் நாகரிகக் கூறுகளைப் பண்பாட்டுக் கூறுகளாகக் குறிப்பிடுகின்றனர். எனவே பண்பாடு என்றால் என்ன என்பதனைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது. மேலும் தமிழர் பண்பாடு பற்றிப் பல பாடங்கள் அமைய உள்ளன. அதனால், பண்பாடு என்பதனைப் பற்றி ஒரு தெளிவான, முழுமையான விளக்கம் தேவை என்பதனை உணர்ந்து இந்தப் பாடம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடத்தில் பண்பாடு என்றால் என்ன என்பது பற்றிய விளக்கம், பண்பாட்டின் வகைகள், பண்பாட்டின் கூட்டுவடிவங்கள், பண்பாட்டின் எல்லை, பண்பாட்டின் மாற்றங்கள் முதலியன எடுத்துக் காட்டுகளுடன் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

1.1 பண்பாடு - ஒரு விளக்கம்

சமூக இயல் அறிஞர்களின் (Social Scientists) கருத்தின் படி, பண்பாடு என்பது, வாழ்க்கை முறை (way of life) என்பதாகும். ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு. ஒரு சமுதாயத்தில் வாழுகின்ற பெரும்பான்மை மக்களின் ஒருமித்த நடத்தைகளையும் எண்ணங்களையும் அது வெளிப்படுத்தும். ஒரு சமுதாயத்தில் அமைந்துள்ள கலை, நம்பிக்கை, பழக்கவழக்கங்கள், மொழி, இலக்கியம், விழுமியங்கள் (Values) முதலியன அந்தச் சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகள் எனப்படும்.

1.2 பண்பாட்டு வாயில்கள்

மனிதன் சமுதாயத்தின் ஓர் அங்கம். எனவே, மனிதன் பேசும் மொழி, அணியும் ஆடை, உண்ணும் உணவு, வாழும் முறை, செய்யும் பணி, எண்ணங்கள் ஆகியவை அவன் சார்ந்த சமுதாயத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வாயில்களாகக் கருதப்படுகின்றன.

1.2.1 உணவு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் மிகவும் முக்கியமானது உணவு. ஆனால், அவன் எதை உண்ணவேண்டும், எப்பொழுது உண்ண வேண்டும், எப்படி உண்ணவேண்டும் என்பதை அவனது பண்பாடுதான் கற்றுக் கொடுக்கிறது.

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர்கள், காலை உணவாகத் தீயில் சுட்ட (smoked Fish) மீனை உண்ணுவார்கள். அமெரிக்கர்கள், குளிர்ந்த தானியங்களை உண்ணுவார்கள். தமிழர்கள் காலை உணவாக, ஆவியில் வேகக்கூடிய, இட்லி போன்ற உணவுகளை உண்பார்கள். இவை எதைக் காட்டுகின்றன? அவரவர் பண்பாட்டிற்கு ஏற்ப அவர்களின் உணவு வகைகள் அமைந்திருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.

உண்ணும் நேரம்

அமெரிக்க ஐக்கிய நாடுகளின், நடுமேற்குப் பகுதியில் வாழ்பவர்கள் இரவு உணவை, மாலை 5 அல்லது 6 மணிக்குள் உண்டுவிடுவார்கள். ஸ்பானியர்கள் இரவு 10 மணிக்குத்தான் இரவு உணவை உண்பார்கள். சமணர்கள், இரவு வருவதற்குள், அதாவது இருட்டுவதற்கு முன்னர், தங்கள் இரவு உணவை உண்பார்கள். தமிழர்கள் இரவு 7 அல்லது 8 மணிக்குள் இரவு உணவை உண்பார்கள். இவை ஒவ்வொருவரின் பண்பாட்டிற்கு ஏற்ப அமைந்துள்ளன.

உண்ணும் முறை

உண்ணும் முறையிலும் ஒவ்வொருவரது பண்பாடும் வெளிப்படுகிறது.

1. மேலைநாடுகளைச் சேர்ந்தவர்கள், உயர்ந்த நாற்காலியில் அமர்ந்து, உயர்ந்த மேசை மீது உணவை வைத்து உண்பார்கள்.

2. சப்பானியர், பாயில் அமர்ந்து, குள்ளமான மேசை மீது உணவைப் பரிமாறி உண்பார்கள்.

3. தமிழர்கள், பாயில் உட்கார்ந்து, தரையில் பரப்பிய வாழை இலையில் உணவை உண்பார்கள்.

இவை, மனிதன் தனக்கு உரிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பொழுது பின்பற்றும் முறையினால் வெளிப்படும் பண்பாட்டுக் கூறுகள்.

1.2.2 அணியும் ஆடை ‘ஆள் பாதி ஆடை பாதி’ என்று தமிழில் ஒரு பழமொழி வழங்குகிறது. ஒருவன் அணிந்திருக்கும் ஆடை அவனது தன்மை, தரம், சார்பு போன்றவற்றை அல்லது இயல்பை எடுத்து இயம்பும் என்பர். ஆடை என்பது ஒருவனை அடையாளம் காட்டுவதற்குரிய ஒன்று.

ஒருவன் அணிந்திருக்கும் ஆடையை அடிப்படையாகக் கொண்டு, அவன் எந்த நாட்டைச் சார்ந்தவன், எந்தச் சமயத்தைச் சார்ந்தவன், எத்தகைய தட்பவெப்ப நிலையில் வாழ்கின்றவன் என்பன போன்றவற்றை அறிய இயலும். அதோடு மட்டுமல்லாமல், ஒருவன் அணியும் ஆடையும் ஒருவனது பண்பாட்டை வெளிப்படுத்தும்.

தமிழர்களும் ஆடையும்

தமிழ்ப் பெண்கள் சேலை அணிவது, நீண்ட நெடுங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு பழக்கம் (habit). இப்பழக்கத்தின் பின்புலம் தமிழர் பண்பாட்டின் ஒரு கூறு.

தமிழர்களும் ஆடையும்

பொதுவாகக் குளிர் மிகுந்த பகுதிகளில் வாழ்பவர்கள், உடலின் பெரும் பகுதியையும் ஆடையால் போர்த்திக் கொள்வர். பூமத்திய ரேகைக்குப் பக்கத்திலிருப்பவர்கள் (Tropical Region) மிகவும் குறைந்த அளவு ஆடையையே அணிந்து கொள்வர். ஆனால், பூமத்திய ரேகைக்குப் பக்கத்து நிலத்தில் வாழும் தமிழர்கள் குறிப்பாகத் தமிழ்ப் பெண்கள் உடலின் பெரும்பகுதியை மறைக்கும் சேலையை ஏன் அணியவேண்டும்?

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கும் தமிழ்ப் பெண்களிடம் எதிர்பார்க்கக் கூடிய பண்பு நலன்கள். இவை அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் எதிர்பார்க்கப்படுபவை. அச்சமும், நாணமும் கொண்ட பெண், தான் அணியும் ஆடையின் வாயிலாகவும் அவற்றை வெளிப்படுத்துகிறாள். எனவே, தன் உடலின் பெரும்பகுதியையும் போர்த்தக் கூடிய ஆடையாகிய சேலையை அணிகிறாள். இது தமிழர் பண்பாட்டின் ஒரு கூறாகத் திகழ்கிறது.

1.3 பண்பாட்டின் வகைகள்

பண்பாட்டை மூன்று வகையாகச் சமூக இயல் அறிஞர்கள் பிரிப்பார்கள்.

1. மனிதன் தன் அடிப்படைத் தேவைகளை (Basic needs) நிறைவு செய்யும் முறைகளினால் வெளிப்படும் பண்பாடு.

2. கல்வி, கேள்வி வழியாகப் பேணப்படும் பண்பாடு

3. குறியீடுகளைப் (Symbols) பயன்படுத்துவதின் வாயிலாக வெளிப்படும் பண்பாடு.

1.3.1 அடிப்படைத் தேவைகளும் பண்பாடும் மனிதனின் அடிப்படையான தேவைகள் உணவு, உடை, உறைவிடம் ஆகும். இவற்றின் வாயிலாகவும் ஒருவன் சார்ந்திருக்கும் பண்பாடு வெளிப்படும். இவற்றுள் உணவு, உடை ஆகியவை பற்றி முன்னரே விளக்கினோம். இனி, உறைவிடம் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையினைப் பார்ப்போம்.

உறைவிடம்

காடுகளில் விலங்கினங்களோடு வாழ்ந்த மனிதன், விலங்கினங்களின் தொல்லையிலிருந்து விடுபட்டு, இயற்கையான மழை, வெயில் ஆகியவற்றிலிருந்து வரும் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு, பாதுகாப்பாக வாழ்வதற்குப் பல உறைவிடங்களைத் தேர்ந்தெடுத்தான். மலைக்குகைகளில் (Cave) வாழ்ந்தான். மரத்தின்மேல் பரண் அமைத்து வாழ்ந்தான். அதன்பிறகு படிப்படியாக, குடிசைகள் அமைத்து, கட்டடங்கள் கட்டித் தான் வாழும் இருப்பிடத்தை அல்லது உறைவிடத்தைச் சிறப்பாக அமைத்தான். இத்தகைய உறைவிடங்களும் அவரவர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வாயிலாகவும் இருந்தன.

தமிழர் உறைவிடம்

தமிழ் மக்களும் இத்தகைய நீரோட்டத்தில் தம்மையும் உட்படுத்தியவர்களே. இருப்பினும் தங்கள் பண்பாட்டிற்கு ஏற்பத் தம் உறைவிடங்களையும் உருவாக்கிக் கொண்டனர்.

தமிழர்களின் வீட்டு அமைப்பில் உள்முற்றம், வெளிமுற்றம், முன்பக்கம் திண்ணை போன்றவை அமைந்திருக்கும். இந்த அமைப்பே தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும்.

மகளிர், ஆடவர்களைப்போல வெளி உலகத்துடன் தொடர்பு கொள்கின்றவர்கள் அல்லர். வீட்டிற்குள்ளேயே தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியையும் கழிப்பவர்கள். அவர்களது அன்றாட நடவடிக்கைகள், அடுக்களையில் சமையல் செய்வதிலிருந்து தொடங்கும். ஏனைய நேரங்களில் உள்முற்றத்திலேயே பொழுதைப் போக்குவர். பெண்மக்களுக்குள் உரையாடல், உணவுப்பொருள்களை உலர வைத்தல், அம்மானை ஆடல், கழல் விளையாடல் முதலிய பல செயல்கள் உள் முற்றத்திலே நிகழும். உள் முற்றம் திறந்த வெளியாகவும், ஞாயிற்றின் ஒளிவருமாறும் அமைக்கப் பட்டிருக்கும்.

உள்முற்றம்

வெளிமுற்றம்

வீட்டிற்கு முன்னால் வெளிமுற்றம் அமைந்து இருக்கும். நாள்தோறும் காலையில் எழுந்ததும் முதல் நிகழ்ச்சியாக முற்றத்தைச் சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்து, மெழுகி, முருகியல் உணர்வு (aesthetic sense) கொண்ட அழகிய கோலங்களைப் பெண்மக்கள் இடுவார்கள். ஒவ்வொரு விழாவிற்கும் ஒவ்வொரு வகையான அழகு மிகுந்த கோலங்களை இடுவர். தமிழில் “கோலம்” என்பதற்கே அழகு என்று பொருள். அவை தமிழர்களின் பண்பாட்டுக் கூறான, கலைத் தன்மையினை வெளிப்படுத்துவன.

மேலும் வெளிமுற்றத்தில், தாய் தன் குழந்தைக்கு நிலாவினைக் காட்டி சோறு ஊட்டுவாள். சிறுவர்கள் நிலா விளையாட்டு விளையாடுவார்கள். ஆடவர் அக்கம் பக்கத்தில் உள்ளோரிடம் உரையாடுவர். அறுவடை செய்த தானியங்களையும் சேமித்து வைப்பர்.

இன்றைக்கும் கிராமங்களில் உள்ள தமிழர்கள் வீடுகளில் திண்ணை (PIAL) அமைந்திருப்பதைப் பார்க்கலாம். தமிழர்களின் விருந்தோம்பும் பண்பாட்டிற்கு எடுத்துக் காட்டாய்த் திகழ்வது திண்ணையே.

திண்ணை

போக்குவரத்து வசதியில்லாத காலத்தில், ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் பயணம் செய்யும்போது இரவு நேரங்களில் பயணத்தை மேற்கொள்ள இயலாது. அத்தகைய சூழலில் போகும் வழியில் உள்ள பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள வீட்டுத் திண்ணையில் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு, மீண்டும் மறுநாள் காலையில் தங்கள் பயணத்தைத் தொடர்வார்கள். வழிப்போக்கர் யார் வந்தாலும் தங்கிச் செல்லும் வகையில், வீடுதோறும் திண்ணைகள் அமைக்கப்பட்டிருக்கும். தங்கள் வீட்டுத் திண்ணையில் தங்கிச் செல்லும் வேற்று ஊர்க்காரர்களுக்குத் தேவைப்பட்ட உணவையும், பிற உதவிகளையும் செய்து மகிழ்வர். விருந்தோம்பலின் அடையாளமாக வீட்டுத் திண்ணைகளை அமைத்திருப்பது தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று.

1.3.2 பண்பாட்டுக்கல்வி எந்த ஒரு மனிதனும் பண்பாட்டுக் கூறுகளுடன் பிறப்பதில்லை. எனவே, வம்சா வழியாக (biological inheritance) அவனிடம் பண்பாடு வந்து சேராது. அவனாகவே, பிறரிடமிருந்து தெரிந்து கொள்ளவேண்டும்.

குழந்தை தனது அனுபவத்தினாலும், பிறரைப் போலச் செய்தலினாலும் (imitation) பண்பாட்டைத் தெரிந்து கொள்ளுகிறது. தன்னைச் சுற்றி இருக்கும் மக்கள் என்ன பேசுகிறார்கள், என்ன செய்கிறார்கள், எதை எதை எல்லாம் சரி என்று சொல்கிறார்கள், எதையெல்லாம் தவறு என்று கூறுகிறார்கள் என்பவற்றைக் கவனித்தும் (watching), கூர்ந்து நோக்கியும் (observation), தான் சார்ந்த சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகளைத் தெரிந்து கொள்ளுகிறது.

கற்று அறிவது

சில பண்பாட்டுக் கூறுகளைப் பெற்றோரோ, பிறரோ சொல்லிக் கொடுப்பதில் இருந்து குழந்தைகள் தெரிந்து கொள்ளுகின்றனர். எடுத்துக்காட்டாகத் தமிழ்க் குழந்தைகளிடம் பெரியவர்களைப் பார்த்தால் எழுந்திருக்க வேண்டும், வணக்கம் சொல்ல வேண்டும், பணிவாகப் பேச வேண்டும் என்று பெற்றோர் சொல்லிக் கொடுக்கின்றனர். குழந்தைகள் அவற்றைப் பின்பற்றுகின்றன.

தானாக அமைவது

ஆயினும், குழந்தைகளிடம் சில பண்பாட்டுக் கூறுகள் அவர்கள் அறியாமலே, அவர்களிடம் படிந்துவிடுவதும் உண்டு. எடுத்துக்காட்டாக, அரேபியர்கள், ஒருவரோடு ஒருவர் பேசும் பொழுது மிகவும் நெருங்கி நின்று பேசுவார்கள். அரேபியக் குழந்தைகளும், அவர்களை அறியாமலே எல்லோரிடமும் நெருங்கி நின்று பேசுகிறார்கள். இதை யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. இந்தப் பண்பாட்டுக் கூறு குழந்தைகளிடம் தானாகவே அமைந்து விடுகிறது.

1.3.3 பண்பாடும் குறியீடும் ஒரு கருத்தைத் தெரிவிக்கும் அடையாளம் குறியீடு (Symbol) எனப்படும். சிவப்புக் கொடி அபாய அடையாளத்தின் குறியீடு. ஒவ்வொரு பண்பாட்டைச் சார்ந்தவர்களும் பயன்படுத்தும் குறியீடுகளும் அவரவர்களின் பண்பாட்டுக் கூறுகளாகக் கருதப்படுகின்றன.

வண்ணங்கள்

பல்வேறு சமுதாயங்களும் வண்ணங்களை (colours) வெவ்வேறு பொருள் உணர்த்தும் குறியீடுகளாகப் பயன்படுத்துகின்றன. ஒரே வண்ணம், ஒவ்வொரு பண்பாட்டைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்ப, ஒவ்வொரு விதமான பொருளைக் கொடுக்கும்.

எடுத்துக்காட்டாக, வெண்மை நிறம், ஐரோப்பியர்களிடையே தூய்மையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. திருமணங்களில் வெள்ளை ஆடைகளையே அவர்கள் அணிகின்றனர். வெண்மை அங்கு மங்கலமாகக் கருதப்படுகிறது; கருப்பு துக்கத்தின் அடையாளமாகக் கொள்ளப்படுகிறது. ஆனால், சீனர்களுக்கோ வெள்ளை நிறம் துக்கத்தின் அடையாளம்!

தாலியும் மெட்டியும்

தமிழ்நாட்டில் திருமணமான பெண்கள் கழுத்தில் அணியும் தாலியும், காலில் அணியும் மெட்டியும் இவ்வகையில் பண்பாட்டுக் குறியீடுகளே யாகும். இவ்வாறு, எல்லாப் பண்பாடுகளும், தங்கள் பண்பாட்டை வெளிப்படுத்தவும், அதனைப் பேணவும் குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன. நெற்றியில் அணியும் திலகமும், திருநீறும், தலையில் சூடும் மலரும், கைகளில் அணியும் வளையலும் இவ்வகையிலான பண்பாட்டுக் குறியீடுகளே.

1.4 பண்பாட்டில் கூட்டு வடிவங்கள் தனிக்கூறுகளும்

தனிக்கூறுகளும், தொடர்புடைய தனிக்கூறுகள் சில இணைந்தும் உருவாகும் கூட்டு வடிவங்களைத் தன்னகத்தே கொண்டு பண்பாடு அமையும். அகஉணர்வு என்பதும், புறச்செயல்கள் அல்லது சம்பிரதாயங்கள் என்பவையும் பண்பாட்டின் இரு கூறுகள். அகஉணர்வின் வெளிப்பாடே புறச்செயல்கள். இவை இரண்டும் சேர்ந்து அமைவதே பண்பாட்டின் கூட்டு வடிவங்கள்.

விருந்து ஓம்புதல் எனும் சிந்தனை அகஉணர்வு வெளிப்படுத்தும் பண்பாடு. விருந்து ஓம்பும்பொழுது மேற்கொள்ளும் உபசரித்தல், பணிவிடை செய்தல் போன்றவை புறப்பண்பாடு.

இத்தகைய கூட்டு வடிவங்களால் அமையும் பண்பாட்டை இரண்டு வகையாகப் பிரிப்பார்கள்.

1. புறச்செய்கைகள், பழக்கவழக்கங்கள் வெளிப்படுத்தும் பண்பாடு (Material Culture) புறப்பண்பாடு.

2. அக உணர்வுகள் வெளிப்படுத்தும் பண்பாடு (Non Material Culture) அகப்பண்பாடு.

1.4.1 புறத்தோற்றங்களினால் வெளிப்படுத்தும் பண்பாடு நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் சில சடங்குகள், சில அமைப்புகள், பழக்க வழக்கங்கள் முதலியன புறத்தோற்றத்தினால் வெளிப்படும் பண்பாட்டுக் கூறுகளாகக் கருதப்படுகின்றன.

பூவால் புலப்படும் பண்பாடு

பொதுவாகத் தமிழ் வீரர்கள் வாழ்வில் பூ முக்கிய பங்கு வகிக்கிறது. பண்டைத் தமிழர் போர் செய்தலையும் ஒரு நெறியாக, ஒழுக்கமாகக் கருதினர். எனவே, போரின் ஒவ்வொரு நிலையையும் வெளிப்படுத்த, ஒவ்வொரு வகையான பூக்களைப் போர்வீரர்கள் அணிந்து சென்றனர். அவை, போர்வீரர்கள், எத்தகையப் போரை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் அடையாளங்களாக அமைந்திருந்தன. உழிஞைப் போர், தும்பைப் போர், வாகை என அவற்றிற்குப் பெயர் சூட்டியிருந்தனர். (உழிஞை, தும்பை, வாகை என்பன பூக்களின் பெயர்கள்).

உழிஞைப்போர்

ஒரு மன்னன் இன்னொரு மன்னனின் கோட்டையைச் சுற்றி முற்றுகை இடுவது உழிஞைப்போர் என்று அழைக்கப்பட்டது. அப்பொழுது முற்றுகையிடும் நாட்டைச் சார்ந்த படைவீரர்கள் உழிஞைப் பூவை அணிந்திருப்பார்கள்.

தும்பைப்போர்

இருபடைகளும் ஒன்றிற்கு ஒன்று மோதிப் போரிடுவதைத் தும்பைப்போர் என்று அழைப்பர். போரிடும்போது இரு தரப்பினரும் தும்பைப் பூவை அணிந்திருப்பர்.

வாகை

தமிழில் வாகை என்றால் வெற்றி என்று பொருள். வெற்றி பெற்ற வீரர்கள், தாம் வெற்றி பெற்றதற்கு அடையாளமாக வாகைப் பூவைச் சூடிச் செல்வர்.

நாட்டை ஆளுகை செய்த பாண்டியர், சேரர், சோழர் ஆகிய மன்னர்களும், தம் நாட்டிற்கு முறையே வேப்பம் பூ, பனம்பூ, ஆத்திப்பூ ஆகியவற்றையே இலச்சனைகளாகக் (ensign) கொண்டிருந்தனர்.

இல்வாழ்க்கையிலும் பூ சிறப்பிடம் பெற்றிருந்தது. கன்னியரும், மணமான பெண்களுமே தம் தலையில் பூச்சூடுவர். கணவனை இழந்த கைம்பெண் (Widow) தலையில் பூச்சூடிக் கொள்வதில்லை. இவையெல்லாம், புறச்செய்கைகளில் காணும் பண்பாட்டுக் கூறுகள் ஆகும்.

இதைப்போல, மனிதர்களால் உருவாக்கப்படும், கட்டடங்கள், ஒப்பனைகள், அணிகலன்கள், ஓவியங்கள், சிற்பங்கள் ஆகியவற்றில் காணும் சிறப்புகள் புறத்தோற்றத்தில் வெளிப்படும் பண்பாட்டுக் கூறுகள் ஆகும்.

1.4.2 அக உணர்வுகள் வெளிப்படுத்தும் புறப்பண்பாடு மேலை நாடுகளில் தாம் அணிந்திருக்கும் தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்துவார்கள். கீழ்த்திசை நாடுகளில், இரண்டு கைகளையும் கட்டி, குனிந்து நிற்பார்கள். இத்தகைய நிகழ்ச்சிகள் எல்லாம், அக உணர்வை வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகள்.

தமிழர் பண்பாடு

தமிழர்கள், வயதில் மூப்பு உடையவர்களையும் சிறப்பு உடையவர்களையும் நேரில் பார்த்தால், எழுந்து நிற்பார்கள். இது தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறார்கள். இந்நிகழ்ச்சி, புறத்தோற்றம் போல் காணப்பட்டாலும், அவர்களின் அக உணர்வுகளையே அவர்களது புறச் செயல் வெளிப்படுத்துகின்றது.

அக உணர்வுகள் வெளிப்படுத்தும் பண்பாடு

ஆங்கிலத்திலுள்ள ‘CULTURE’ என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்தல் என்று ஒரு பொருளும் உண்டு. மனம் பக்குவம் பெற்ற அல்லது மனம் பண்பட்ட ஒருவரை Cultured man என்று அழைக்கின்றோம். மனப்பக்குவம் என்பது உயர்ந்த சிந்தனைகளை உள்வாங்கி அவற்றிற்கு ஏற்றவாறு மனத்தை உருவாக்கிக் கொள்ளுதல் ஆகும். நல்ல சிந்தனைகள் நல்ல மனத்தின் வெளிப்பாடு. நல்ல சிந்தனைகள் அல்லது உயர்ந்த சிந்தனைகள் ஓர் இனத்தின் அல்லது ஒரு நாட்டின் உயர்ந்த பண்பாட்டைக் குறிப்பிடும்.

இனத்திற்கு இனம், நாட்டிற்கு நாடு வேறுபட்ட சிந்தனைகள் உருவாவது இயல்பு. அது சூழலின் அடிப்படையில் அமையும். வேறுபட்ட சிந்தனைகள் வேறுபட்ட பண்பாட்டை வெளிப்படுத்தும். இத்தகைய சிந்தனைகள் ஒரு மனிதனின் அக உணர்வுகளையே வெளிப்படுத்தும். எனவே சிந்தனைகளின் வாயிலாகப் புலப்படும் அகஉணர்வுகள், பண்பாட்டின் வெளிப்பாடு எனலாம்.

நாடோடிக் கூட்டமாக அலைந்து திரிந்த மக்கள், குடியிருப்பு அமைத்து, முடியாட்சியைத் தோற்றுவித்துக் குடியாட்சி மலரச் செய்த காலம் வரையிலும், குழுவாக, இனமாக இன்னும் பலபலப் பிரிவாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொண்ட நிகழ்ச்சிகள் பல. இத்தகைய சூழலில், இந்த உலகிலுள்ள மனிதர் அனைவரும் ஓர் இனம், ஒருவருக்கு ஒருவர் உறவு உடையவர்கள். எல்லா ஊரும் தம் சொந்த ஊரே என்பதனை “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பல எல்லைகளைக் கடந்த உயர்ந்த சிந்தனையாகத் தமிழர்கள் வெளியிட்டுள்ளனர். அது அந்தச் சிந்தனையைக் கூறிய காலத்திலும், இன்றைய சூழலிலும் மிகச் சிறந்த சிந்தனையாகக் கருதப்படுகிறது. இது தமிழர்களின் அகஉணர்வின் – பண்பாட்டின் வெளிப்பாடு.

மனத்தூய்மை

‘அறம்’ என்றால் என்ன என்பதற்குப் பலரால் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் திருவள்ளுவர், அறன் என்பதற்கு

மனத்துக்கண் மாசிலன் ஆதல், அனைத்துஅறன்

ஆகுல நீர பிற (குறள்: 34)

(கண் = இடம், மாசு = குற்றம், இலன் = இல்லாதவன், பிற ஆகுல நீர் = பிற ஆரவாரத் தன்மையன)

என்று விளக்கம் கொடுக்கிறார்.

மனத்தில் எந்த விதக் குற்றமும் இல்லாமல் தூய்மையாக இருப்பதுதான் அறம் என்று வள்ளுவர் கூறுகிறார். மனத்தூய்மை என்பது சமயத்தவரும், சமுதாயத்தவரும், ஒத்துக் கொள்ளுகின்ற ஓர் அக உணர்வு. இந்த அக உணர்வு வள்ளுவரால் வெளிப்படுத்தப்படும் தமிழர்களின் பண்பாட்டுக்கூறு.

1.5 பண்பாட்டின் எல்லை

பண்பாட்டுக்கு ஒரு வரையறை அல்லது எல்லை கூற இயலாது. ஒரு நாட்டிற்கு என ஒரு பண்பாடு அமைவது உண்டு. ஒரு குழுவுக்கு என ஒரு பண்பாடு அமைவதும் உண்டு. உலகளாவிய நிலைகளிலும் சில பண்பாட்டுக் கூறுகள் அமைந்திருக்கும்.

1.5.1 உலகு போற்றும் பண்பாடு (International Culture) சில பண்பாட்டுக் கூறுகள், குறிப்பிட்ட சில பண்பாட்டிற்கே உரியன. சில ஒன்றிற்கு மேற்பட்ட பல பண்பாட்டிற்குப் பொதுவானவை. சில பண்பாட்டுக்கூறுகள் உலகம் முழுவதும் பரவி உள்ளன.

குடியேற்ற நாடுகளாகிய ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்ரிக்காவின் பகுதிகள் ஆகியவற்றில், தாய்நாடாகிய இங்கிலாந்தின் பண்பாட்டுக் கூறுகளும், ஆங்கில மொழியும் இருக்கின்றன. இதனால், ஆடை அணியும் முறை, இசை, விளையாட்டு முதலியவற்றில் ஒரு பொதுத்தன்மை அமைந்துள்ளது. இவற்றில் சில உலகம் முழுவதும் பரவியுள்ளன.

உலகளாவிய தமிழரின் பொதுத்தன்மை

இதைப்போல குடியேற்ற நாடுகளாகிய மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா, ரியூனியன், பர்மா, மலேயா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் வாழும் தமிழர்களிடமும் தமிழ் மொழியும், தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளாகிய தமிழர்களின் நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும், வழிபாட்டு முறைகளும், சமயச் சடங்குகளும் பெருமளவில் பின்பற்றப்படுகின்றன. இவற்றால் உலகளாவிய அளவில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே பயன்படுத்தும் மொழி, பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றிடையே ஒரு பொதுத்தன்மை ஏற்பட்டுள்ளது.

குடியேற்றம் உலகப் பொதுப் பண்பாட்டுக் கூறுகளை உருவாக்குகின்றது. தற்காலத்தில் பெருகிவரும் தகவல் தொடர்புச் சாதனங்களும் உலகப் பொதுப்பண்பாட்டுக் கூறுகளை உருவாக்குவதில் துணை செய்கின்றன.

1.5.2 நாடு போற்றும் பண்பாடு ஒரு நாட்டில் வாழ்வோர் அவர்கள் வாழும் நிலம், சூழல், பழக்க வழக்கங்கள், நடவடிக்கைகள், நம்பிக்கைகள், உணர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையாக ஒரு தனித்தன்மை வாய்ந்த பண்பாட்டை உருவாக்கிக் கொள்வர். அப்பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டே அவர்களை அடையாளம் காண இயலும். இதை நாட்டுப் பண்பாடு என்பர்.

மேற்குறிப்பிட்டவற்றின் அடிப்படையிலே, இந்தியப் பண்பாடு, சப்பானியர் பண்பாடு, அமெரிக்கப் பண்பாடு என்று சுட்டுவர்.

இந்தியப் பண்பாடு

நெற்றியில் பொட்டு இடல், திருமணத்தில், விழாக்களில், சடங்குகளில் மலருக்குக் கொடுக்கும் சிறப்பு முதலியன இந்திய நாட்டின் பண்பாட்டுக் கூறுகளாகக் கருதப்படுகின்றன.

தமிழ்நாட்டுப் பண்பாடு

ஆடை அணிதல், உணவுமுறை, பழக்க வழக்கங்கள், நம்பிக்கை, வழிபாடு ஆகியவற்றில் தமிழர்களுக்கு என சில தனித்தன்மை அமைந்துள்ளது. ஆடவர் வேட்டி அணிதல், தலைப்பாகை அமைத்தல், இளம் மங்கையர் தாவணி அணிதல், முகத்தில் மஞ்சள் பூசுதல், திருமணத்தின்போது கணவன் மனைவிக்குத் தாலி கட்டுதல், மாட்டுப்பொங்கல் முதலியன தமிழர்களுக்குரியவை.

இக்கூறுகள் தமிழ்நாட்டுப் பண்பாட்டை வெளிப்படுத்துவன.

1.5.3 சமுதாயப் பண்பாடு (Sub Culture) ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு. ஒரு நாட்டில் வாழ்வோர், அந்த நாட்டிற்கு உரியதான தேசியப் பண்பாட்டில் கலந்து கொள்வார்கள். அதே நாட்டில் வாழும் சமுதாயக் குழுக்கள், பிரிவுகள், தாம் சார்ந்த சமுதாயத்திற்கு உள்ளேயே, தமது சொந்தப் பண்பாட்டு மாதிரிகளை உருவாக்குவார்கள். இதை சமுதாயப் பண்பாடு (Sub-Culture) என்று குறிப்பிடுவார்கள்.

பெரிய நகரங்களில், தெருக்களில் சுற்றித்திரியும் இளைஞர்கள் (Teenage Street Gang) அவர்களாகவே சில பண்பாட்டுக் கூறுகளை உருவாக்கிக் கொள்வதும் உண்டு.

ஒரு நாட்டினுள் வாழும், ஒவ்வொரு பிரிவினரும் அல்லது ஒவ்வொரு சாதியினரும், மலைவாசிகள் போன்ற பழங்குடியினரும் தங்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சடங்குகள் முதலியவற்றின் அடிப்படையில் தங்களுக்கு என சில பண்பாட்டுக் கூறுகளை அமைத்துக் கொள்வர்.

1.6 சமுதாயமும் பண்பாடும்

அறிவியல் கண்டுபிடிப்புகளாலும், அரசியல், சமூக மாற்றங்களினாலும் உலகம் முழுவதும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், சில நாடுகள், தங்களது, பண்பாடுகளைத் தனித் தன்மையுடன் பாதுகாத்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, திபேத்திலுள்ள திபேத்தியர்கள், தங்கள் பழைய பண்பாட்டை, இன்றைக்கும் தனித்தன்மை கெடாதவாறு பாதுகாத்து வருகின்றனர்.

1.6.1 பன்முகப் பண்பாடு (Multiculture) இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளிலும், வணிகம், அலுவலகப்பணி ஆகியவை மிகுந்த நகரங்களிலும் பல நாட்டவர்களும், பல மாநிலத்தவரும் வந்து குடியேறியமையால், பல நாட்டுப் பண்பாடுகளும் கலந்துள்ளன. எனவே, பல நாட்டுப் பண்பாடுகளின் சங்கமமாக, அந்த நாடுகளின் பண்பாடுகள் அமைந்துள்ளன. எனவே, அத்தகைய பண்பாட்டைப் பன்முகப் பண்பாடு என்று அழைக்கின்றனர்.

1.6.2 ஒன்றுபடும் பண்பாடு அரசியல், பொருளாதாரம், வணிகம் போன்ற காரணங்களுக்காக வேற்று நாடுகளின் குடியேற்றங்கள் (Migration) பல நாடுகளில் ஏற்பட்டன. அவ்வாறு வந்தடைந்த நாடுகளில், எதனுடைய பண்பாடு செல்வாக்குப் பெற்றிருந்ததோ, அதன் பண்பாட்டுக் கூறுகளோடு பிற பண்பாட்டுக் கூறுகள் ஒன்றிப் பிணைந்த (assimilated) ஒரு புதுவகைப் பண்பாடு தோன்றுகிறது.

தமிழரும் பிறரும்

தமிழ்நாட்டில், நாயக்கர் காலத்திலும், மராட்டியர் காலத்திலும், அரசியல் படையெடுப்புகளைத் தொடர்ந்து வந்து குடியேறிய தெலுங்கர்கள், மராட்டியர்கள் போன்றவர், இன்று, இனம் பிரித்து அறியாதவாறு, பெரும் அளவில் தமிழர் பண்பாட்டுடன் ஒன்றிவிட்டனர்.

1.6.3 உலகத் தமிழரும் தமிழ்ப் பண்பாடு மேற்குறிப்பிட்டவாறு, குடியேறியவர்களில் சிலர், சில நாடுகளில், குடியேறிய நாட்டுப் பண்பாடுடன் ஒன்று பட்டாலும், தங்கள் பண்பாட்டின் தனித் தன்மையையும் (Individual Identity) காப்பாற்றி வருகின்றனர். உலகநாடுகள் பலவற்றில் குடியேறிய சீக்கியர்கள் இன்றளவும் தங்கள் பண்பாட்டைப் பாதுகாத்து வருகின்றனர்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள்

தமிழர்கள் உலகத்தின் பல பகுதிகளிலும் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். தாம் வாழும் பகுதிகளில், தாய்த் தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளை அவர்கள் பாதுகாத்துப் பின்பற்றி வருகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள், தங்களை அடையாளம் காட்டவும், தங்கள் தனித்தன்மையைப் புலப்படுத்தவும், தங்கள் பண்பாட்டுப் பெருமையை உணர்ந்து பெருமைப்படவும் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் பலவற்றை இன்றளவும் போற்றி வளர்த்து வருகின்றனர்.

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, மொரீசியஸ், ரீயூனியன், தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் பலவற்றைப் பாதுகாத்து வருகின்றனர். தமிழ்க் கடவுளாகக் கருதப்படும் முருகன் வழிபாடும், முருகன் கோயில்களும் தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் இடம் பெற்றுள்ளன. சிறு தெய்வங்களாகிய, மாரியம்மன் வழிபாடும், பச்சையம்மன் வழிபாடும், காவடி எடுத்தல் போன்ற சமயச் சடங்குகளும் பின்பற்றப்படுகின்றன. தாங்கள் குடியேறிய நாடுகளில் கூட, திருநெல்வேலி, சேலம் போன்ற தமிழ்நாட்டு ஊர்களின் பெயர்களையே இட்டுள்ளனர். தாமும் தமிழ்ப் பெயர்களையே கொண்டுள்ளனர். இவ்வாறு, பிறநாடுகளிலும் தங்கள் பண்பாட்டைப் பெரும் அளவில் பாதுகாத்து வருகின்றனர்.

அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் பொங்கல் விழா கொண்டாடுவதும், தமிழ்ச் சங்கங்கள் அமைப்பதும், விழாக்காலங்களில், தமிழ்ப்பண்பாட்டின் கூறுகளாகிய, புடவை அணிதல், பூச்சூடுதல், வேட்டி கட்டுதல், பூசை செய்தல் போன்றவற்றால் தங்கள் பண்பாட்டின் தனித்தன்மையைக் காத்து வருகின்றனர்.

1.7 பண்பாட்டு மாற்றங்கள்

அறிவியல் கண்டுபிடிப்புகளால், இன்று உலகம் ஒரு சிறு கிராமமாகச் (Global Village) சுருங்கி விட்டது. இதனால், நாடுகள் இடையேயும், மக்கள் இடையேயும் இடைவெளி குறைந்து விட்டது. தொடர்புகள் மிகுந்துள்ளன. இவற்றால், மனிதச் சிந்தனைகளிலும், பழக்க வழக்கங்களிலும், நம்பிக்கைகளிலும், சடங்குகளிலும், வாழ்க்கை முறைகளிலும் சமுதாய அமைப்புகளிலும், பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவை, கருத்துப் பரிமாற்றம், பண்டப் பரிமாற்றம் ஆகியவற்றோடு, பண்பாட்டுக் கூறுகளிடையேயும் பரிமாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. இதனால், நீண்ட நெடுங்காலமாகத் தனித்தன்மை சிதையாதவாறு பாதுகாக்கப்பட்டு வந்த பண்பாடுகளிடையே கூட பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

புதிய கண்டுபிடிப்புகள், தொழில் புரட்சியை ஏற்படுத்தின. இதனால், தொழில் நிறுவனங்களில், பல பண்பாட்டுப் பிரிவினர் கலந்து பணியாற்றும் புதிய சூழல்கள் ஏற்பட்டன.

இப்புதிய சூழல் மொழிக்கலப்பு, பண்பாட்டுக் கலப்பு, நம்பிக்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றில் மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தின. இம்மாற்றங்கள், பண்பாடுகளின் இடையேயும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

முன்னேறாத நாடுகளில் (Underdeveloped) இருந்தும், முன்னேறிக் கொண்டிருக்கும் (Developing) நாடுகளிலிருந்தும், முன்னேறிய (Developed) நாடுகளுக்கு வணிகம், அலுவலகப் பணி போன்றவற்றிற்குச் செல்வோர், அந்த நாடுகளின் பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக் கொண்டு வாழ்கின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழுகின்ற பிறநாட்டவர், அமெரிக்கர்களின் வாழ்க்கை முறைகள் பலவற்றை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

1.7.1 புதிய சூழலும் தமிழர் பண்பாடும் அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்ட புதிய சூழலில், நவீன கருவிகள் கொண்டு மேற்கொள்ளும் செயல்களில் தமிழர்களிடையே பல மரபுவழி பண்பாட்டுக் கூறுகள் மறைந்துவிட்டன.

அந்நியர் படையெடுப்புகளாலும், அந்நிய ஆதிக்கத்தினாலும் அவற்றின் வாயிலான குடிபெயர்ப்புகளினாலும், புறப் பண்பாட்டுத் தாக்கம் அமைந்தது. அதனாலும், தமிழர்களிடையே பண்பாட்டு நெகிழ்ச்சியும் மாற்றமும் ஏற்பட்டன.

படையெடுப்பு

இசுலாமியர் படையெடுப்பு, நாயக்கர் படையெடுப்பு, டச்சுக்காரர், போர்த்துகீசியர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் போன்ற அந்நியர்களின் ஆக்கிரமிப்புகளினாலும் ஆட்சியினாலும், அரசியலில் மட்டும் அல்ல, சமுதாயத்திலும் பல மாறுதல்கள் ஏற்பட்டன. அதனால், தமிழர்களின் பண்பாட்டில் பல மாறுதல்கள் தோன்றின. ஆடை அணிதல், ஒப்பனை செய்தல், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சமயக்கோட்பாடுகள் முதலியவற்றில் பல மாறுதல்கள் தோன்றியுள்ளன.

வணிகம்

‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது தமிழர்களின் முதுமொழி. வணிகத்தின் பொருட்டு பல நாடுகளுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டு இருந்தனர். அவற்றால் பண்டமாற்றம் ஏற்பட்டதைப் போல், பண்பாட்டு மாற்றங்களும் நிகழ்ந்தன. வணிகத்தின் பொருட்டு வேற்று நாடுகளில் பலர் குடியேறினர். அவர்கள், தங்கள் பண்பாட்டை எடுத்துச் சென்றாலும், சூழலுக்கு ஏற்ப அங்குள்ள சில பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக் கொண்டனர்.

புலம் பெயர்தல்

டச்சு, போர்த்துகீசு, இங்கிலாந்து போன்ற ஆதிக்கச் சக்திகளால் ஏற்பட்ட குடியிருப்பு நாடுகளில், குடியேறிப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் சென்றடைந்த நாடுகளின் பண்பாட்டுச் செல்வாக்காலும், பண்பாட்டு ஆதிக்கத்தாலும் தம் பண்பாட்டில் பல மாற்றங்களை ஏற்றுக் கொண்டனர்.

எடுத்துக்காட்டாக, பல நாடுகளில் பல பகுதிகளில், தொன்மைக் காலத்திலும் அண்மைக் காலத்திலும் சென்று வாழ்ந்து வருகின்ற தமிழர்களில் பலர் பழைய பண்பாட்டுக் கூறுகளைத் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர். சிலர் தம் பண்பாட்டுக் கூறுகளைப் பிற பண்பாடுகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளனர். சிலர் பெரும்பான்மையான பண்பாட்டுக் கூறுகளை விட்டுவிட்டு, ஒரு சிலவற்றை மட்டும், அடையாளங்களுக்காகப் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா, ரீயூனியன் போன்ற நாடுகளில் வாழ்பவர்கள், தமிழ்ப் பெயர்களையும், தமிழ் வழிபாட்டு முறைகளையும் பின்பற்றி வந்தாலும், தமிழ் மொழியை மறந்து விட்டனர். அதைப்போல், பல பண்பாட்டுக் கூறுகளையும் இழந்து விட்டனர்.

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்பவர்கள், ஒரு சில பண்பாட்டுக் கூறுகளைத் தவிர பிற எல்லா பண்பாட்டுக் கூறுகளையும் தாயகத்தில் உள்ளவர்களைப் போல், பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.

1.7.2 குடியேற்றமும் (Colonization) ஆக்கிரமிப்பும் (Invasion) குடியிருப்பு நாடுகளிலும், அரசியல் ஆக்கிரமிப்பு நாடுகளிலும் பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்கின்றன. இத்தகைய சூழல்களில் வாழ்வோர் செல்வாக்குடன் இருக்கும் பண்பாட்டுக் கூறுகளை அல்லது பெரும்பான்மையோர் பின்பற்றுகின்ற பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக் கொண்டு, தமது பண்பாட்டுக் கூறுகளை விட்டு விடுகின்றனர். இவ்வாறு கலந்து வாழ்கின்ற பொழுது, தங்கள் பண்பாட்டின் தனித் தன்மையையும் இழந்து விடுகின்றனர்.

கடன் வாங்குதல்

பிற பண்பாட்டுடன் தொடர்பு கொள்ளும் பொழுது, பண்பாட்டு நெகிழ்ச்சியும் மாற்றமும் நிகழ்கின்றன. இத்தகைய சூழல்களில், பிற பண்பாட்டுக் கூறுகளைக் கடன் வாங்க நேர்கிறது. இவை, சில நேரங்களில், பிற பண்பாட்டுடன் நேரடியான தொடர்பு இல்லாவிட்டாலும், தொடர்புடைய பிறர்வாயிலாகவும் நிகழ்கின்றன.

பின்பற்றல்

பிற நாடுகளில், பணியின் காரணமாகவோ, வணிகத்தின் பொருட்டோ, கல்வி கற்கவோ சென்று விட்டுத் தாயகம் திரும்பிய பலர், தான் சென்று வந்த நாட்டின் பண்பாட்டுக் கூறுகள் சிலவற்றைப் பின்பற்றுகின்றனர்.

இதைப்பார்த்து, அவற்றில் தனக்குப் பிடித்த, தான் பின்பற்றுவதற்கு ஏற்ற சில பண்பாட்டுக் கூறுகளையும் ஏற்றுக் கொள்கின்றனர். இத்தகைய செயல்களும் பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

இவை, பெரும்பாலும், ஆடை அணிதல், பழக்க வழக்கங்கள், கருவிகளைப் பயன்படுத்தல், ஒப்பனை செய்து கொள்ளுதல் போன்ற பண்பாட்டுக் கூறுகளில் மாற்றங்கள் நிகழச் செய்கின்றன.

1.7.3 சூழலும் வளர்ச்சியும் இவற்றைத் தவிர, ஒரே சமுதாயத்தில், அல்லது ஒரே இனத்தில், காலச் சூழலின் மாற்றத்தினாலும், கல்வி வளர்ச்சியினாலும், பண்பாட்டிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

எடுத்துக்காட்டாகப் பெண்கள் கல்வி கற்றல், பணிக்குச் செல்லுதல், கணவன் இறந்த பின்னரும் பூச்சூடிக் கொள்ளுதல், பொட்டு வைத்தல், வண்ணப் புடவைகளை அணிதல், சமத்துவம் போன்ற பலவகை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை, கல்வி வளர்த்த சூழலில் ஏற்பட்ட பண்பாட்டுக் கூறுகளின் மாற்றம் தானே?

1.8 தொகுப்புரை

பண்பாடு என்பது ஒரு வாழ்க்கை முறை. ஒரு சமுதாயத்தில் அமைந்துள்ள கலை, நம்பிக்கை, பழக்கவழக்கங்கள், விழுமியங்கள் ஆகியவை பண்பாட்டுக் கூறுகளாகக் கருதப்படும். நாம் உண்ணும் உணவு, அணியும் ஆடை, உறைவிடம் முதலியன பண்பாட்டு வாயில்கள். மனிதனால் உருவாக்கப்படும் கட்டடங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் முதலியன புறத்தோற்றத்தால் வெளிப்படும் பண்பாடு. அதைப்போல ஒரு சமுதாயத்தின் சிந்தனை வளம், எண்ணச் சிறப்பு, விழுமியம் ஆகியவை அச்சமுதாயத்தின் அகப்பண்பாட்டின் வெளிப்பாடுகளாக அமைகின்றன. உலகளாவிய நிலையிலும், நாட்டளவிலும், சமுதாய அளவிலும் சில வகையான பண்பாடுகள் அமைந்துள்ளன. பல நாடுகளின் பண்பாடுகள் கலந்து பன்முகப் பண்பாட்டிற்கு வாய்ப்பு அளிக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகம் ஒரு கிராமம்போல் சுருங்கிவிட்டது. அதனால் பல பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்கின்றன. இவ்வாறு பண்பாடு பற்றிய ஒரு பொது விளக்கம் இப்பாடத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

பாடம் - 2

மொழியும் பண்பாடும்

2.0 பாட முன்னுரை

மொழியும் பண்பாடும் என்பது இந்தப் பாடத்தின் தலைப்பு. மொழி நாகரிகம் என்ற குழந்தையின் தொட்டில்! அதைக் கண்டு பிடிப்பதற்கு மனித இனம் என்ன பாடுபட்டிருக்கும். இன்பமாக மனிதர்கள் ஆடியும் பாடியும் பொழுது போக்கிக் கொண்டிருந்த நிலையிலிருந்துதான் மொழி தோன்றியிருக்க வேண்டும் என்கிறார், மேலைநாட்டு அறிஞர் ஒருவர். மொழி தோன்றுவதற்கு முன் சைகைகளாலும், பல்வேறு குறியீடுகளாலும் மனிதர்கள் கருத்தைப் புலப்படுத்தியிருக்க வேண்டும். அறிவு இல்லாமல் மொய்த்துக் கிடந்த மனிதக் கூட்டம் என்ற வெள்ளத்தின் மேலே செந்தாமரைக் காடு பூத்ததுபோல் மொழி பூத்தது என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

முந்திய நாளினில் அறிவும் இலாது

மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது

செந்தாமரைக் காடு பூத்தது போலே

செழித்த என் தமிழே ஒளியே வாழி

(பாரதிதாசன் இசைஅமுது தொகுதி -1, தமிழ் :1)

(மொய்த்த = நெருங்கிய , புனல் = நீர்)

மொழி மனிதனுக்குக் கிடைத்த ஒப்பற்ற கருத்துப் புலப்பாட்டுக் கருவியாகும். மொழியில் எழுத்து, பேச்சு என்று இரு வழக்குகள் உள்ளன. உலக மொழிகளில் சில மொழிகள் பழைமையும் இலக்கிய வளமும் உடையன. அச்சில மொழிகளில் தமிழ் ஒன்று. தமிழ் நல்ல பண்பாடு வளர்க்கும் ஒரு கருவியாக உள்ளது. பல்வேறு காலப்பகுதிகளில் தமிழ் பாதுகாத்து வளர்த்த பண்பாடு பல அயல்மொழிகளின் தாக்கங்களைப் பெற்றிருக்கிறது. இச்செய்திகள் இப்பாடத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளமை காணலாம்.

2.1 மொழி பற்றிய விளக்கம்

ஒரு வகுப்பார் அல்லது நாட்டார் தம் கருத்தைப் பிறருக்குப் புலப்படுத்துதற்கு ஒரு கருவியாகக் கொள்ளும் ஒலித்தொகுதியே ‘மொழி’ என்பார் பாவாணர்.

நம் மனத்தின் உள்ளே, ஏதாவது ஒன்றைப் பற்றிச் சிந்திப்பதும் மொழியின் ஒருநிலை ஆகும். பலர் சேர்ந்து ஓர் இனமாக வாழ்கிறார்கள் என்பதற்கு அவர்களின் நிறமோ, பழக்கவழக்கங்களோ காரணமில்லை; அவர்கள் ஒருமொழி பேசுவோராக இருப்பதுதான் காரணமாகும் என்பர். எனவே மொழி என்பது ஓர் இனத்தின் புற அடையாளம் எனலாம்.

மொழிதல் என்றால் சொல்லுதல் என்பது பொருள். பேச்சு மொழியே முதலில் தோன்றியது. அறிஞர் மு. வரதராசனார்,

‘பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; ஆயினும் எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவைகளே அன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவைகளும் மொழியே ஆகும்’

என்று கூறுகிறார். எனவே மொழி என்பதைப் பேச்சு, எழுத்து, எண்ணம் என்றும் பல நிலைகளில் அறியலாம். ஒலிவடிவான குறியீடுகளைக் கொண்டது பேச்சுமொழி; வரிவடிவான குறியீடுகளைக் கொண்டது எழுத்துமொழி.

2.1.1 உலக மொழிகள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய கண்டங்களில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மொழிகள் பல மொழியினங்களில் அடங்குவன. திராவிட மொழியினம், ஆரிய மொழியினம், முண்டா மொழியினம் என்பவை இந்தியாவில் உள்ளன. கிரேக்கம், இலத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், வெல்ஷ் ஆகிய ஐரோப்பிய மொழிகளும் ஆரிய மொழியினத்தைச் சார்ந்தனவே. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, பிராகுவி போன்ற மொழிகள் திராவிட மொழியினத்தைச் சார்ந்தவை. தமிழம் என்னும் பெயரே திராவிடம் எனத் திரிந்தது என்பார் மொழி அறிஞர் பாவாணர் அவர்கள். சீனமொழி, திபேத்திய மொழி, பர்மிய மொழி, சயாம் மொழி ஆகியவை ஓரினத்தைச் சேர்ந்தவை.

பெ.சுந்தரம் பிள்ளை

ரஷ்யாவிலும் துருக்கியிலும் வழங்கும் மொழிகள் சிந்திய மொழிகளாகும். அரேபியாவிலும், வட ஆப்பிரிக்காவிலும் வழங்கும் மொழிகள் செமிட்டிக் மொழிகளாகும். தமிழ்மொழி, கிரேக்க மொழி, இலத்தீன் மொழி, எபிரேய மொழி, சீன மொழி, சமஸ்கிருத மொழி ஆகியவை உலக மொழிகளில் பழைமையானவை. இவற்றில் தமிழ் மூவாயிரம் ஆண்டுக் கால வரலாற்றைக் காட்டுவதுடன் இன்று வரை வழக்கிலிருந்து மறையாமல் இருந்து வருகிறது. எனவே, மனோன்மணியம் நாடகம் எழுதிய பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள், தமிழ் வாழ்த்துப் பாடலில், வட வாரியம் போல் வழக்கொழியா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துவமே என்று குறிப்பிடுகிறார்.

2.1.2 பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு பேச்சு மொழி ஓடும் ஆறு போன்றது; எழுத்து மொழி அந்த ஆற்றில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது என்பர் அறிஞர். குளிர் மிகுதியால் பனி உறைந்து வேறுபட்டதைப் போல் கற்றவர்களின் முயற்சியால் மொழி இறுகி அமைந்ததே எழுத்து மொழி. பிரெஞ்சு மொழி, சீனமொழி ஆகியவற்றில் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் மிகவும் வேறுபாடு உடையனவாக உள்ளன. தமிழில் பேச்சு மொழியிலிருந்து எழுத்துமொழி மிகவும் வேறுபாடு உள்ளது.

பேச்சும் எழுத்தும்

பொதுவாக எல்லா மொழிகளிலும் பேச்சு மொழியில் வாக்கியங்கள் அளவில் சுருங்கியதாக இருக்கும். எழுத்து மொழியில் வாக்கியங்கள் நீண்டு அமையும். பேச்சு மொழியில் உணர்ச்சிக் கூறுகள் அதிகமாக இருக்கும். எழுத்து மொழியில் உணர்ச்சிக் கூறுகள் குறைந்திருக்கும். தமிழும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

அப்பா, எம்புட்டுப் பெரிசுப்பா இந்த மலை!                    பேச்சு மொழி

ஏ! அப்பா! எவ்வளவு பெரிய மலை                                   பேச்சுமொழியின் உயர்நிலை

அது மிகப் பெரிய மலை                                                         எழுத்து மொழி

2.1.3 இலக்கியச் சிறப்பு – செவ்வியல் பாங்கு உலக மொழிகள் எல்லாவற்றிலும் இலக்கிய வளம் இருப்பதாகச் சொல்வதற்கில்லை. பேச்சளவில் அமைந்தவை, ஓரளவு இலக்கியம் உடையவை, ஓரளவு இலக்கணம் உடையவை என்ற நிலையில் உள்ள மொழிகளும் இருக்கின்றன. சில நூறு சொற்களை வைத்துக்கொண்டே வாழும் மொழிகளும் உள்ளன. தமிழில் இரண்டாயிரம் ஆண்டுக்கால இலக்கியங்கள் உள்ளன. தொன்மையும், பிறரைச் சாராத, பிறவற்றிலிருந்து உருவாகாத சுய மரபும், செறிவும் சிறப்பும், வாய்ந்த பழமையான இலக்கியங் கொண்ட மொழியைச் செம்மொழி (Classical language) என்பர். தமிழ் உலகிலுள்ள தொன்மையான மொழிகளில் ஒன்று. இன்றைய இந்திய இலக்கியங்களை விட ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. கி.மு. 200ற்கு முற்பட்ட தொல்காப்பியம் எனும் சிறந்த இலக்கண நூலை உடையது. எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என்னும் மிகச் சிறந்த இலக்கியத் தொகுப்புகளைக் கொண்டது. சமஸ்கிருதம் தென்னிந்தியாவில் பரவுவதற்கு முன்னரே- செல்வாக்குப் பெறுவதற்கு முன்னரே, தனித்தன்மை வாய்ந்த மொழியாகத் தோன்றியது. பிற மரபைச் சாராது, பிற மரபிலிருந்து தோன்றாது, சுய மரபை உடையது. எனவே தமிழும், கிரேக்கம், இலத்தீன், சீனம், பெர்சியன், சமஸ்கிருதம் போன்ற உலகச் செம்மொழிகளுள் ஒன்று என அறிஞர் ஜார்ஜ் ஹார்ட் (George

art) என்பார் குறிப்பிடுவார்.

2.2 தமிழும் தமிழ்ப் பண்பாடும்

தமிழ்நாட்டில் ஆறுகோடி மக்களாலும், வடஇந்தியாவிலும் அயல்நாடுகளிலும் மூன்று கோடி மக்களாலும் பேசப்படும் மொழி தமிழ். திராவிட மொழிக் குடும்பத்தில் மூத்த முதல் மொழி தமிழ்.

தமிழ் மொழி இலக்கணம் ஐந்து பிரிவுகளை உடையதாக வளர்ந்தது. எழுத்து, சொல், பொருள், யாப்பு (செய்யுள் இலக்கணம்), அணி என்பன அந்த ஐந்து பிரிவுகளாகும்.

2.2.1 தமிழின் சொல்சிறப்பு (Diction) (அ) குறைவான எழுத்துகளின் கூட்டு

தமிழ் மொழியிலுள்ள சிறப்புகளில் ஒன்று அதன் சொற்சிறப்பு. உயிரும் மெய்யும் கலந்து புதிய எழுத்து வடிவங்கள் கொள்வதால், தமிழில் எழுத்துகளின் எண்ணிக்கை அதிகம் இல்லை. ஆயினும் இது வேறு வகையில் பயன் தருவதாக அமைகிறது. ஆங்கிலம் போன்ற மொழிகளில் உள்ளவாறு ஒரு சொல்லில் 20, அல்லது 23 எழுத்துகளைப் பார்க்க இயலாது. தமிழிலுள்ள எந்தச் சொல்லாக இருந்தாலும் ஏழு எழுத்துகளுக்கு மேல் இல்லை.

(ஆ) ஓர் ஏழுத்து ஒரு சொல்

ஓர் எழுத்தே ஒரு சொல்லாக அமைவதும் தமிழ் மொழிக்கு உரிய சிறப்புகளில் ஒன்று.

(எடுத்துக்காட்டு)

ஆ    பசு

நா    நாக்கு

கை    ஓர் உறுப்பு

கோ    மன்னன்

தீ      நெருப்பு

மை     கருமை

பூ        மலர்

வா    அழைத்தல்

போ    அனுப்புதல்

தா    கொடு

தை     ஓர் மாதம்

மா    விலங்கு

இ) சொல்வளம் காட்டும் அறிவு நிலை

காணும் பொருள் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து, அதன் வளர்ச்சி நிலையில் அல்லது பிற வகையில் உள்ள வேறுபாடுகளைத் தனித்துப் பெயரிட்டு வழங்கிய அறிவு முதிர்ந்த பக்குவம் தமிழ் மொழியில் காணும் சிறப்பு ஆகும். அவ்வகையில் பெண்ணுக்கு வழங்கிய பல வளர்ச்சி நிலைச் சொற்களைக் காணுங்கள்:

பேதை                         5 வயதிற்கு உட்பட்ட பெண்

பெதும்பை                  10 வயதிற்கு உட்பட்ட பெண்

மங்கை                  16 வயதிற்கு உட்பட்ட பெண்

மடந்தை               25 வயதிற்கு உட்பட்ட பெண்

அரிவை             30 வயதிற்கு உட்பட்ட பெண்

தெரிவை            35 வயதிற்கு உட்பட்ட பெண்

பேரிளம்பெண்              45 வயதிற்கு உட்பட்ட பெண்

ஆண்களைக் குறிக்கும் சொற்களும் இவ்வாறு பருவத்திற்கும் உருவத்திற்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளன.

இதே போன்று தாவர இனத்தில் ஓர் இலையின் வளர்ச்சி நிலையில் பல்வேறு வகையான பருவத்தைச் சுட்டும் சொற்கள் உள்ளன.

கொழுந்து, தளிர், இலை, பழுப்பு, சருகு ஆகிய சொற்கள் இலையின் பல பருவங்களை வெளிப்படுத்துவன.

இவ்வாறே, பூவின் பல பருவ மாறுதல்களைக் குறிக்கும் சொற்களும் உள்ளன. பூவின் உருவத்தையும் பருவத்தையும் இணைக்கும் சொற்களைப் பாருங்கள்.

அரும்பு     பூ அரும்பும் நிலை

மொட்டு     பூ மொக்கு விடு நிலை

முகை    பூ முகிழ்க்கும் நிலை

மலர்    பூ மலரும் நிலை

அலர்     பூ மலர்ந்த நிலை

வீ     பூ வாடும் நிலை

செம்மல்     பூ வதங்கும் நிலை

இயற்கைப் பொருள்களின் வளர்ச்சி நிலைக்கு ஏற்றவாறு வெவ்வேறு பெயர்களை வழங்கியமை அம்மொழி பேசிய மக்களின் இயற்கை ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் எடுத்துக்காட்டுகிறது. புலன் நுகர்ச்சிகளைப் பகுத்துப் பொருள் கொள்ளும் அறிவு முதிர்ச்சி நிலையையும் அது உணர்த்தி நிற்கிறது. இவ்வகையில் தமிழ்ப் பண்பாடு தமிழ் மொழியால் விளக்கம் பெறுகிறது.

பொருள் பொதிந்த சொற்கள்

தொல்காப்பியர் சொல்லுக்கு இலக்கணம் கூறும் பொழுது எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று குறிப்பிடுகிறார் (தொல். சொல் பெயரியல் நூ.1). தமிழ்ச்சொற்கள் ஒவ்வொன்றையும் அதன் வேர்ச்சொல்லைக் கண்டு ஆராயும் பொழுது அதில் பொதிந்திருக்கும் பொருள் புலப்படும்.  இத்தகைய வேர்ச்சொல் ஆய்வினை அறிஞர் பலர் மேற்கொண்டுள்ளனர். ‘இறப்பு’ என்ற சொல்லுக்குத் தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் தரும் விளக்கத்தைப் பாருங்கள்.

தமிழறிஞர் தேவநேயப் பாவாணர்

‘இறப்பு’ என்பது ஓர் உயிரின் முடிவு அல்லது அழிவைச் சுட்டும். இது ‘இறு’ – முடிவு என்னும் வேர்ச்சொல்லின் அடியாய், ஓர் உயிரின் முடிவைச் சுட்டும் ‘இறப்பு’ எனச் சொல்லாக்கம் பெற்றது என்பார் பாவாணர்.

அடைமொழிகளும் காட்சிப்படிமங்களும்

பகல் வேளையில் கதிரவன் ஒளியின் மரநிழலை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நிழல்களில் தான் எத்தனை வகை? கொழுநிழல், புள்ளி நிழல், வலை நிழல், வரி நிழல் என வகைப்படுத்திக் காட்டுகிறது, சங்க காலத் தமிழ் இலக்கியம்.

i) “இருள் திணிந்தன்ன ஈர்ந்தண் கொழு நிழல்”

(குறுந்தொகை: 123)

இருள் திணிக்கப்பட்டது போல் தோற்றமும், குளிர்ச்சியான தன்மையும் அமைந்து இருக்கும் நிழலைக் கொழு நிழல் என்று சுட்டியுள்ளனர்.

(ii) புள்ளி புள்ளியாகக் காட்சியளிக்கும் நிழல் “புள்ளி நிழல்”

(அகநானூறு:379)

(iii) வலை பின்னப்பட்டிருப்பதைப் போல் மெல்லியதாக அமைந்திருக்கும் நிழல் “வலை வலந்தன்ன மென்னிழல்”

(பொருநராற்றுப்படை : 50).

(iv) கோடு கோடாக இருக்கும் நிழல்”வரி நிழல்”

(சிறுபாணாற்றுப்படை : 12).

மர நிழல்களில் தங்கியும் மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்கியும், விழா எடுத்தும் நிறைவாக வாழ்ந்த தமிழர், இயற்கை நிகழ்வுகளில் முழுமையாகத் துய்த்து ஒன்றிய வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் அல்லவா இந்த அடை மொழிகள் காட்டுகின்றன!.

2.2.2 பழமொழியும் பண்பாடும் அன்றாட வாழ்விலும், பலரது வாய்மொழியிலும் இடம் பெற்று உயிர்ப்புடன் விளங்குவது பழமொழி. ஒரு நாட்டின் உண்மையான வாழ்க்கைநெறி, நாகரிகம், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனை வளம், ஆகிய பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துவது பழமொழி (proverb).

• பழமொழி

‘பழம்’ என்றால் பழமை என்ற பொருள் உண்டு. அதைப் பழைய என்றும் குறிப்பிடுவர். பழமை வாய்ந்த மொழியைப் பழமொழி (பழம் + மொழி) என்பர். இதை முதுமொழி என்றும் அழைப்பர். முதுமை என்றாலும் பழமையைச் சுட்டும்.

பழமொழி என்றால் என்ன என்பதற்குத் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். தாம் நினைத்த கருத்தைப் பிறருக்கு எளிமையாகப் புரியும்படி, நுண்மையாகவும், தெளிவாகவும், இனிமையாகவும், சுருக்கமாகச் சொல்வது முதுமொழி (பழமொழி) என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.

நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்

மென்மையும் என்றிவை விளங்கத்தோன்றிக்

குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்

ஏது நுதலிய முதுமொழி என்ப”

(தொல் பொருள்:478)

(நுண்மை = நுட்பம், வரூஉம் = வரும், ஏது = காரணம், நுதலிய = சொல்லிய)

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே, தமிழ் மக்களிடம் பழமொழிகள் வழங்கப்பட்டு வந்துள்ளன என்பது இதனால் புலனாகும்.

• பழமொழியின் பயன்

தம் வாழ்வில் பழமொழியைக் கேட்டிராத மக்கள் இல்லை எனலாம். பிறர் சொல்ல நாம் கேட்கிறோம் என்ற உணர்வு எழாத வகையில் நமது உரையாடலில் (conversation) முழுமையாகக் கலந்து நிற்கும் வலிமை உடையது பழமொழி. இளையவர், முதியவர் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரையும் சமுதாய விழுமியங்களுக்கு உட்படுத்தும் தன்மை உடையது பழமொழி.

ஒரு செயலைச் செய்யும் வகை அறியாது திகைத்து நிற்கும் போது, செய்ய வேண்டியதைச் சுட்டிக்காட்டி அறிவுரை கூறுவதுபோல் அமைந்திருப்பது பழமொழி. துன்பம் மிகுந்த சூழலில் மன அமைதி நல்குவது பழமொழி. பாமரர்க்கு வாழ்வியல் வழிகாட்டியாகத் திகழ்வது பழமொழி.

காலந்தோறும் அழியாமல் வழங்கப்படும் தமிழ்ப் பழமொழிகள் முன்னோர்களின் பட்டறிவையும், அறிவுரைகளையும், எச்சரிக்கைகளையும் தாங்கி வரும் பண்பாட்டுக் கருவூலங்களாகவும் காட்சியளிக்கின்றன.

• முயற்சியின் சிறப்பு

உலகிலுள்ள பல சாதனைகளுக்கு அடிப்படைக் காரணம் முயற்சியே. மனிதரின் விடா முயற்சியின் காரணமாகவே அறிவியல் கண்டுபிடிப்புகள் பல நிகழ்ந்துள்ளன; நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தனி மனித முன்னேற்றத்திற்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும், நாட்டு முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைவது முயற்சி. இந்த உண்மையை உணர்ந்த தமிழர்கள் தமது பட்டறிவைப் (Experience) பழமொழியாக வழங்கினர்.

‘முயற்சி திருவினையாக்கும்’

(திரு = செல்வம்)

என்னும் பழமொழி முயற்சியின் முக்கியத்துவத்தையும் அதனால் பெறும் பலனையும் சுட்டிக்காட்டுகிறது.

ஒருவன் முயற்சி செய்வானானால் அவனுக்கு அவனது முயற்சிக்கு ஏற்றவகையில் பலன் கிடைக்கும். அதாவது செல்வத்தை வழங்கும். தமிழில் ‘திரு’ என்பதற்குப் பலபொருள்கள் உண்டு. செல்வம், அழகு, பெருமை, உயர்வு, அறிவு அனைத்தையும் அது குறிக்கும். முயற்சியினால் ஏற்படும் அறிவியல் சாதனைகளால், பெருமையும் புகழும் வரும். சிலருக்குச் செல்வம் கிடைக்கும். சிலருக்குப் பணி உயர்வு, பொருளாதார மேம்பாடு கிட்டும். முயன்று மேலும் மேலும் கற்கக் கற்க அறிவு பெருகும். எனவே முயன்றால் கிட்டாதது எதுவும் இல்லை என்பதே இப்பழமொழியின் பொருள்.

தம் முயற்சியில் நம்பிக்கை கொண்ட, முயற்சியினால் கிடைக்கும் பயனை உணர்ந்த ஒரு பண்பாட்டுப் பெருமை உடையவர்கள் தமிழர்கள் என்பதை இத்தகைய பழமொழிகள் புலப்படுத்துகின்றன.

• ஐந்தும் ஐம்பதும்

ஒருவனை இளமைப் பருவத்தில் எவ்வாறு வளர்க்கிறோமோ, பழக்குகிறோமோ, பக்குவப்படுத்துகிறோமோ, அதற்கேற்பவே, அவனது வருங்கால நடவடிக்கைகள், பண்பு நலன்கள் ஆகியவை அமையும். இந்த வளர்ப்புமுறை எப்பொழுது தொடங்கும்? அறியாப்பருவத்திலிருந்து அறியும் அல்லது பிறவற்றைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் நிலையைப் பெறும் பொழுது தொடங்கும். இது பொதுவாக ஐந்து வயதில் தொடங்கும். அதாவது இந்தப் பருவம்தான் ஒரு குழந்தையை உருவாக்குவதற்குரிய தொடக்க நிலை என்பர். இந்தப் பருவத்தில் கொடுக்கும் பயிற்சி, அறிவுரை, கல்வி போன்றவை இறுதிக்காலம் வரையிலும் நிலைத்து நிற்கும். இந்த உண்மையை உணர்ந்த தமிழ் மக்கள், இவ்வுண்மை வருங்காலச் சமுதாயத்திற்கும் பயன்படும் என்ற வகையில் பழமொழியாக வழங்கியுள்ளனர்.

‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ என்பதுதான் அந்தப் பழமொழி. ஐந்து வயதில் அல்லது அந்தப் பருவ நிலையில் பக்குவப்படாதது பிறகு ஐம்பது வயது ஆனாலும் பக்குவம் அடையாது என்ற செய்தியையே அந்தப் பழமொழி விளக்குகிறது.

இதில் வளையாதது என்ற சொல்லை மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். மூங்கில் அல்லது பிரம்பு போன்றவற்றின் கொம்புகளை வில்லாகவும், வளையமாகவும் வளைப்பர். அதை எப்போழுது வளைப்பார்கள்? அது முதிர்ச்சியடைந்த பிறகா? இல்லை. அது இளமையாக இருக்கும்போது ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக வளைத்து, பிறகு வில்லாகவோ, வட்ட வடிவமாகவோ ஆக்கிவிடுவர். அது பிறகு கடைசி வரையிலும் வளைத்த அதே வடிவத்தில் இருக்கும். அதைப் போலவே மிகவும் இளமைப்பருவத்தில் பக்குவப்படுத்தப்பட்ட ஒருவன், பிற்காலத்திலும் பக்குவப்பட்டவனாக இருப்பான். இளமையில் பக்குவப்படுத்தப்படாவிட்டால், பின்னர் ஒன்றும் செய்ய முடியாது என்பதே இதன் பொருள்.

இதுபோன்ற பழமொழிகள் பழந்தமிழர் நம்பிக்கைகளையும் அவற்றின் அடிப்படையிலான பண்பாட்டுக் கூறுகளையும் வெளிப்படுத்துகின்றன.

2.2.3 விடுகதையும் (Riddles) பண்பாடும் பழமொழியைப் போல, பாமரர்களிடம் வாய்மொழியாக வழங்கி வரும் இன்னொரு பண்பாட்டுக் கூறு விடுகதை. இது இன்றைய நொடி வினா (Quiz) முறைக்கு முன்னோடி எனலாம். இதுவும் எந்த மொழியில் வழங்கப்படுகிறதோ அந்த மொழி பேசுவோரின் மதி நுட்பத்தையும், புலமையையும் ஆற்றலையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இன்று வரையிலும் இதைக் காப்பாற்றி வருபவர்கள் பாமரர்களே.

விடுகதை என்பது ‘அது என்ன?’ ‘அது யார்?’ என்பது போன்ற கேள்விகளுடன் அமைந்திருக்கும். விடையைத் தானே ஊகித்துத் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளடக்கம் அமைந்திருக்கும். இதுவே விடுகதை. வினாவுக்கு உரிய விடை மூலம் விடுவிக்கப்பட வேண்டிய கற்பனைக் கதை என்பதினால் விடுகதை என அழைக்கப்பட்டது என்பர்.

இது குறுகிய வடிவ அமைப்பைக் கொண்டது. மிக எளிமையாக அமைந்திருக்கும். முதலில் பாட்டாக இருந்தது. பின்னர் உரைநடையிலும் அமைந்துள்ளது.

• விடுகதையும் சொற்புதிரும் (Puzzle)

சொற்களுக்குள் புதிர் அமைத்துச் சொல்லும் விடுகதைகள் மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றவை. பெரும்பாலும் நகைச்சுவை மிகுந்திருக்கும் அவை மக்களைச் சிந்திக்க வைப்பதோடு, விடை கண்டுபிடித்த பின் வியப்பும் மகிழ்ச்சியும் ஊட்டுவதாக அமைந்திருக்கும். விடை தெரிந்த பின் மீண்டும் மீண்டும் அந்த விடுகதையை நினைவுபடுத்தும் ஆர்வத்தை ஊட்டும்.

கீழ்க்குறிப்பிடும் விடுகதை அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

கால் இல்லாத கள்வன்

கால் உள்ளவனைப் பிடித்தான்

தலையில்லாதவன் அதைப் பார்த்துக்

கலகலவென்று சிரித்தான் – அவர்கள் யார்?

இது படிப்பதற்குச் சுவையாக உள்ளது. இதில் நகைச்சுவைத் தன்மையும் அமைந்துள்ளது. கால் இல்லாமல் நடக்க இயலாதவன் எப்படிக் கால் உள்ளவனைப் பிடிக்க முடியும்? தலையில்லாதவனுக்கு முகமும் கிடையாதே, அவன் எப்படி முகமில்லாமல் சிரிக்க முடியும்? இவ்வாறு விடுகதையைக் கற்போர் பல வினாக்களை வினவும் வாய்ப்பை இந்த விடுகதை ஏற்படுத்துகிறது.

பாம்பு தவளையை வாயால் கவ்வியது; இதைப் பார்த்து நண்டு சிரித்தது. இதுதான் இவ்விடுகதைக்குரிய விடை.

(பாம்புக்கு கால் கிடையாது. நண்டுக்குத் தலை கிடையாது)

இந்த விடுகதையை உற்று நோக்கினால். உங்களுக்கு மேலும் ஒரு கருத்துப் புலப்படும். பாம்பைக் ‘கள்வன்’ என்றும் தவளையைக் ‘கால் உள்ளவன்’ என்றும், நண்டைச் ‘சிரித்தான்’ என்றும் உயர்திணையில் கூறும் நயத்தை அறிந்து கொள்ள இயலும். உயிரினங்களில் மனிதனைத் தவிர பிற உயிரினங்கள் எதுவும் சிரிப்பதில்லை. ஆனால் இந்த விடுகதையில், நண்டு சிரிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திணை மாற்றம் விடுகதையின் புதிர்த்தன்மையையும் சுவையையும் கூட்டும் ஓர் உத்தி ஆகும்.

இத்தகைய விடுகதைகள் கேட்போரைச் சிந்திக்க வைக்கின்றன; விடையைக் கண்டுபிடிப்பதற்கு முன் ஒருவித ஆர்வநிலையை (suspense), ஏற்படுத்துகின்றன; விடை தெரிந்த பின் மகிழ்ச்சியையும், ஒரு சாதனை புரிந்த நிறைவையும் ஏற்படுத்துகின்றன.

இத்தகைய விடுகதையை உருவாக்குவது எளிதான செயல் அல்ல. அறிவாற்றலும், கற்பனைத் திறனும், இயற்கைப் பொருள்களைக் கூர்ந்து கவனிக்கும் மனநிலையும் இருக்க வேண்டும். எனவே தமிழில் வழங்கும் விடுகதைகள் பண்பட்ட ஒரு சமுதாயத்தின் வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன.

2.3 இலக்கணமும் பண்பாடும்

தமிழ் இலக்கணத்தில் இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இரண்டு பிரிவுகள் உண்டு. ஒரு பொருளை அறிவதற்கு அமைந்துள்ள சொல்லால் சொல்லுவது தகுதி அல்ல என்று கருதி வேறொரு சொல்லால் சொல்வது தான் தகுதி என்று எண்ணிக் கூறுவது தகுதி வழக்கு. தகுதி வழக்கில், இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என்று மூன்று கூறுகள் உண்டு.

2.3.1 பகுத்தறிவுக்கு இசைந்த திணை பால், பிரிவுகள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நடைமுறை வழக்கில் இருந்து வருகிறது. அதன் தனிச் சிறப்புகளாகக் கீழ்க்கண்டவற்றை அறிஞர் காட்டுகின்றனர். பகுத்தறிவுக்கு இசைந்த திணை, பால் முதலிய பிரிவுகள் தமிழ் இலக்கண மரபின் சிறப்பு எனலாம்.

எடுத்துக்காட்டாக,

பெண் வந்தாள்

ஆண் வந்தான்

ஆணும் பெண்ணும் வந்தனர்

பசு வந்தது

பசுக்கள் வந்தன

என்று தமிழில் திணை, பால் முதலிய பிரிவுகள் பகுத்தறிவுக்கு உட்பட்டு வழங்கப்படுகின்றன. ஆனால் சில மொழிகளில் இதுபோன்ற அமைப்பு இல்லை. குறிப்பாகச் செர்மானிய மொழியில் கைகள் பெண்பாலாகவும், கால்கள் ஆண்பாலாகவும், கால்விரல்கள் பெண்பாலாகவும் கொள்ளப் பெறுகின்றன.

மனித உயிராகப் பிறந்து விட்டாலேயே அதனை உயர்திணையாக இலக்கணம் கருதவில்லை. குழந்தை பேசிற்று, குழந்தை தூங்கிற்று என்றே கூறுவர். நன்மை, தீமைகளைப் பகுத்துணரும் அறிவுநிலை அடைந்த பிறகே உயர்திணை என்ற நிலையை ஒரு பிறப்பு அடையும். அதேபோலப் பண்பால் உயர்ந்த ஒருவன் இறந்து கிடக்கும் போது அவனைப் பிணம் கிடக்கின்றது என்று கூறாமல் உயிர் இழந்து ஒரு மகன் கிடந்தான் என்று உயர்திணையாகவே மொழிவர். பண்புகளுக்குத் தகுந்தாற்போல உயர்வு தாழ்வு கற்பித்து வழங்கும் நெறியைத் தமிழ் இலக்கணம் பெற்றுள்ளது.  ‘கள்’ என்ற விகுதி அஃறிணைக்கு உரியது என்றாலும் மரியாதையாக ஒருவரைக் குறிக்க ‘ஐயா அவர்கள் வந்தார்கள்’ என்று குறிக்கும் பண்பாடு உள்ளது. அக்கா வந்தாள் என்று சொல்ல வேண்டுவதே இலக்கணமாக இருக்க, அன்பு காரணமாக ‘அக்கா வந்தது’ என்று கூறும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இங்கு அஃறிணைப்படக் கூறினாலும் இஃது உயர்ந்த தன்மையையே குறிக்கும்.

2.3.2 இடக்கரடக்கல் சில தகாத சொற்களைச் சில இடங்களில், குறிப்பாக சிறப்புடையோர் மத்தியில் சொல்லக்கூடாது. எனவே அவற்றிற்குப் பதிலாகப் பிற சொல்லைச் சொல்வது இடக்கரடக்கல் எனப்படும். ஓர் இடத்தில், சொல்லத்தகாத சொல்லை அடக்கி, இன்னொரு சொல்லைச் சொல்வதால் அதை ‘இடக்கரடக்கல்’ என்று குறிப்பிட்டனர்.

(எடுத்துக்காட்டு) ஒன்றுக்குப் போனான்

சிறுநீர் கழிப்பதற்குச் சென்ற ஒருவனை ‘ஒன்றுக்குப் போனான்’ என்று சொல்வது இடக்கரடக்கல் எனப்படும். நாகரிகம் கருதி, சொல்லத்தகாத சொற்களைச் சொல்லாமல், இன்னொரு சொல்லைச் சொல்ல நினைப்பதுவும், சொல்வதுவும் ஒருவரது பண்பாடு. இத்தகைய பழக்கத்தை இலக்கணம் வகுத்து நெறிப்படுத்தியிருப்பது தமிழ்ப் பண்பாட்டின் உயர்வைச் சுட்டுகிறது.

2.3.3 மங்கலம் நன்மை தரும் செயல்களை மகிழ்ச்சி தரும் செய்திகளைக் குறிப்பிடுவது மங்கலம் எனப்படும். மங்கலம் இல்லாத அமலங்கச் செய்தியாக இருந்தால், பண்பாடு கருதி, மங்கலமாகச் சொல்லுதல் மங்கலம் எனப்படும்.

ஒருவன் இறந்துவிட்டால், மங்கலமாகத் ‘துஞ்சினான்’ (தூங்கினான்) என்று குறிப்பிடுவர். கணவன் இறந்து தாலி இழந்த பெண்ணைச் சுட்டி, அவளுக்குத் ‘தாலி பெருகிற்று’ என்று கூறுவர். பசியோடு ஒருவன் இல்லம்தேடி வந்து, பிச்சை கேட்கும்போது உணவு இல்லாவிட்டால், ‘இல்லை’ என்று சொல்லாமல் ‘உணவு மிஞ்சி விட்டது’ என்று சொல்வார்கள்.

எதையும் மங்கலமாகச் சொல்ல வேண்டும் என்ற மனநிலை தமிழர்களுக்குப் பாரம்பரியமாக வழங்கி வந்திருக்கிறது. அது அவர்களது உயர்ந்த பண்பாட்டைக் காட்டுகிறது.

2.3.4 குழூஉக்குறி ஒவ்வொரு கூட்டத்தாரும் அல்லது குழுவினரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக, ஒரு பொருள் தரும் சொல்லை விட்டுவிட்டு, அதனை வேறொரு சொல்லால் குறிப்பிடுவது குழூஉக்குறி என்பதாகும்.

நன்கு மது அருந்திக் கொண்டு தள்ளாடிக் கொண்டு செல்லுபவனைப் பார்த்து, ‘குதிரையில் போகிறார்’ என்று சொல்வர். இது ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கே புரியும்.

சில சொற்களைச் சில இடங்களில் சொல்ல இயலாது. அதைச் சொல்லவேண்டிய முறையில் பக்குவமாகச் சொன்னால்,சிறப்பாக இருக்கும் என்று கருதிக் கூறுவர். இதற்கும் ஒரு வகையான மனப்பக்குவம் தேவை. அந்த மனப்பக்குவத்தை வழங்குவது பண்பாடு. தமிழர்களிடம் இத்தகைய பண்பாட்டுக் கூற்றை அவர்கள் வழங்கும் குழூஉக்குறியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

2.4 தொகுப்புரை

மொழி கருத்துப் பரிமாற்றத்திற்குத் துணை செய்யும் கருவி. அதில் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு என இரு கூறுகள் உண்டு. இலக்கியச் சிறப்புடைய மொழிகள் செவ்வியல் மொழி என அழைக்கப்பட்டன.

உலகிலுள்ள செம்மொழிகளுள் தமிழும் ஒன்று.

தமிழ் மொழி திராவிட குடும்பத்தில் மூத்த மொழி. இதில் அமைந்த சொற்களும், சொல்லாக்கமும் சிறப்பு வாய்ந்தவை. தமிழ் மொழியில் வழங்கப்படும் பழமொழி, விடுகதை, இலக்கண வழக்கு ஆகியவை தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலங்களாக அமைந்துள்ளன.

எனவே, தமிழ்மொழி ஒரு பண்பட்ட மொழி என்பதோடு, அதன் இலக்கண வழக்குகளும், சொற்களும், பழமொழி போன்றவைகளும் தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்துவனவாகக் காணப்படுகின்றன.

பாடம் - 3

தமிழ்நாடு - நில அமைப்பும் வரலாறும்

3.0 பாட முன்னுரை

உலகம் என்ற சொல்லை ஒரு மங்கலச் சொல்லாகக் கருதியவர் தமிழர். வான ஊர்தியில் ஒரு பறவையைப் போல் பறந்து இந்த உலகத்தைப் பார்க்கும்போது எவ்வளவு இனிய காட்சி நல்குகின்றது! வையத்தில் மூன்று பகுதி கடல்; ஒருபகுதி நிலம். கண்டங்களாகக் கடலால் துண்டாடப்பட்ட நாடுகளின் தொகை. இதோ பூகோள உருண்டையைச் சுற்றினால் நம் கண்முன் தோன்றும் உலகப்படம்!

கடலால் வளைக்கப்பட்டது இந்த உலகம். “பெருங்கடல் வளைஇய உலகம்” என்று கூறுகிறது குறுந்தொகை என்ற இலக்கியம். கடலை ஆடையாக உடுத்த நில மங்கை என உருவகம் செய்கிறார் மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம்பிள்ளை. உலகிலேயே நாட்டை ஒரு பெண்ணாக முதன் முதல் உருவகித்த பெருமை தமிழ்ப் புலவனுக்கே உரியது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் இந்தியத் திருநாட்டை ஒரு பெண்ணாக இளங்கோவடிகள் ஓவியப்படுத்திக் காட்டுகின்றார். “அலைகளைக் கொண்ட நீரை ஆடையாக உடுத்தவள். மலைகளை மார்பகங்களாகக் கொண்டவள். ஆறுகளை முத்தாரமாக அணிந்தவள். மழை முகில்களைக் கூந்தலாகப் பெற்றவள்” என்பது அவர் காட்டும் சொல்லோவியம்.

உலகப் படத்தில் இந்தியாவைக் காணுங்கள்! இமயம் தலையாக அமைந்துள்ளது. குமரி திருவடிகளாக உள்ளது. மகவை அணைக்க எழுந்த இரு கைகளாக மேற்கிலும் கிழக்கிலும் அகன்ற நிலப்பகுதிகள் அமையக் காணலாம்.

வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில்

வாழும் குமரிமுனை பாப்பா

(பாரதி – பாப்பாப்பாட்டு: 13)

வாழும் குமரி என்றும் பிறிதொரு இடத்தில் நித்தம் தவம்செய் குமரி என்றும் பாரதியார் கூறியது குறித்துச் சுவாமி விபுலானந்தர், “மேலும் கடல் நிலத்தைக் கொண்டு விடாமல் இருக்க வேண்டும்” என்று கருதியதைக் காட்டும் என்பர். இந்தியாவின் இன்றைய தென்னெல்லைதான் கன்னியாகுமரி! முன்னொரு காலத்தில் அதற்கப்பால் பல நூறு கற்கள் நிலமாக இருந்தமையினை வரலாறு காட்டுகின்றது. அவ்வாறு இருந்த காலம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

சங்ககாலத் தமிழ் மக்கள், தாம் வாழ்ந்த நிலத்தை அதன் பூகோள அமைப்பிற்கும் (Geographical Structure) தட்பவெப்ப நிலைக்கும் ஏற்ப, ஐந்து வகையாகப் பிரித்தனர். அவர்கள் வாழ்க்கை முறையும் நிலப்பாகுபாட்டின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. அவர்களால் படைக்கப்பட்ட, கலைகளும், பிறபண்பாட்டுக் கூறுகளும் நிலப்பிரிவினைப் பின்புலமாகக் கொண்டே அமைந்துள்ளன.

3.1 தமிழ்நாடு

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” என்று பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்தின் பாயிரம் கூறுகின்றது. அன்றிருந்த நிலை மாறிவிட்டது. இன்று வடவேங்கடம் என்று கூறப்படும் திருப்பதி திருமலை ஆந்திர நாட்டிற்கு உரியதாகிவிட்டது.

நீலத்திரைக்கடல் ஓரத்திலே – நின்று

நித்தம் தவம் செய்யும் குமரியெல்லை – வட

மாலவன் குன்றம் இவற்றிடை யேபுகழ்

மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு

(பாரதி – செந்தமிழ்நாடு : 5)

என்று சுப்பிரமணிய பாரதியார் பாடியுள்ளார். அந்த நிலை மாறி இன்று திருத்தணியிலிருந்து கன்னியாகுமரி வரையிலான பகுதி ‘தமிழ்நாடு’ என வழங்குகிறது. சென்னை மாநிலம் என்றும் மெட்ராஸ் ஸ்டேட் (Madras State) என்றும் வழங்கிய இப்பகுதி அறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் பெற்றது.

3.1.1 நிலவரையறை தமிழகம் இந்தியத் தீபகற்பத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது. வங்காள விரிகுடா இதன் கிழக்கு எல்லையாக நீண்டு கிடக்கின்றது. மேற்கே கேரளமும், வடக்கே ஆந்திரமும், வடமேற்கில் கர்நாடகமும், தெற்கில் இந்துமாக்கடலும் அமைந்துள்ளன. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 1,30,057 சதுர கிலோமீட்டர். இதன் இன்றைய மக்கள் தொகை ஏறத்தாழ ஆறுகோடிப் பேர். வங்கக் கடற்கரையை ஒட்டிய சமவெளிப்பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலைகளோடு இணைந்து விளங்கும் மலை நிலப்பகுதி, இவ்விரண்டு பகுதிகளுக்கு இடையே உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் என மூன்று பெரும்பகுதிகளாகத் தமிழகம் விளங்குகின்றது. மலைப்பகுதிகள், காட்டுப்பகுதிகள், கடற்கரைப்பகுதிகள், வயல்வெளிப் பகுதிகள் என நால்வகை நிலங்களும் தமிழகத்தில் உள்ளன.

தேக்கு மரங்களும் சந்தன மரங்களும், வேங்கை, கோங்கு, ஆச்சா மரங்களும் வானுயர வளர்ந்து நிற்கும் தமிழகக் காட்டுப் பகுதிகளைக் காணுங்கள்! இத்தகைய காட்டைத்தான்

“மந்தியும் அறியா மரம்பயில் அடுக்கம்”        (அக: 92-8)

என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. மந்திக் குரங்கிற்கும் தெரியாத மரங்கள் நெருங்கிய மலைக்காடு என்பது இதன் பொருள். இதோ! குளிர் தூங்கும் குற்றால அழகைக் காணுங்கள்!

வானரங்கள் கனிகொடுத்து மந்தியுடன் கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

(குற்றாலக்குறவஞ்சி)

அருவிகள் வைரமாலை போலத் தொங்கும் அழகு காண்பதற்குரியது. ஆண்டில் பாதிநாள் சுறுசுறுப்பாய் வேலை நடக்கும் இந்த வயல்வெளிகளைப் பாருங்கள்! இந்த வயல் வெளிகளில் நாற்று நடுதல், களையெடுத்தல், அறுவடை போன்ற நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பண்பாட்டின் உயிர்மூச்சாய்த் திகழும் நாட்டுப்புறப் பாடல்கள் ஒலிப்பதைக் கேளுங்கள்!

களை எடுக்கும் பெரியகுளம் கணக்கெழுதும் ஆலமரம்

கொத்தடிக்கும் கொட்டாரம்

கூறுவைக்கும் களத்துமேடு

கண்ணாடி வளையல்போட்டு

களையெடுக்க வந்த புள்ளே

கண்ணாடி மின்னலிலே

களை எடுப்புப் பிந்துதடி

வெள்ளிப் புடி வளையல் – நல்ல

விடலைப் பிள்ளை கைவளையல்

சொல்லி அடிச்சவளை – நல்லா

சுழட்டுதில்ல நெல்களையை

கடற்கரைகளில் விடியற்காலையில் கட்டு மரங்களில் புறப்பட்டுக் கடலில் சென்று மீன்பிடித்துக் கொண்டு அந்தியில் திரும்பும் மீனவர்களின் பாடல்களைக் கேளுங்கள்.

ஏலங்கடி ஏலோ ஏலங்கடி ஏலோ

கட்டுமரம் ஏறிப்போனா ஐலேசா

காத்தம்மா துணையிருப்பா ஐலேசா

காத்தடிச்சாக் கடல் கலங்கும்

கல்லு போட்டாத் தலை ஒடையும்

கரையோரம் புன்னமரம் ஐலேசா

கண்ணாட்டி நிக்குநெழல் ஐலேசா

காத்திருக்க நா போறேன்

கவலையெல்லாம் மாறிப்போகும்.

3.1.2 நிலப் பாகுபாடு கிரீஸ் நாடு மிக அழகான ஒரு நாடு என்று குறிப்பிடுவார்கள். அதற்குக் காரணம் அந்த நாட்டின் நில அமைப்பு என்பார்கள். அதன் கடற்கரை பல வளைவுகளை (Gulf) உடையது. அதன் நதிகளும் தாழ்வான குன்றுகளும், ஓர் அழகான பரப்பளவு உடையதாக அமைந்திருக்கும். ஒரு பகுதியோடு இன்னொரு பகுதி மிக நெருக்கமாக இணைந்திருக்கும். அளவிலே சிறியதாக இருந்தாலும், சுய உணர்வும், சுயசிந்தனையும், தனித்தன்மையும், சுதந்திரமும் அங்குச் சிறப்பாக உள்ளன என்று கூறுவார்கள்.

அதைப்போல, தமிழ்நாட்டின் நிலப்பரப்பும், பிளவுபட்ட சிறிய மலைகளும், காடுகளும், நதிகளும், கடலும் இயற்கையிலேயே மிக அழகாக அமைந்திருக்கின்றன. கிரீஸைப்போல, சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் உருவாவதற்கும் தமிழ்நாட்டின் நிலஅமைப்பு வாய்ப்பு அளித்தது. இந்த நில அமைப்பு பல பிரிவுகளை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது.

எனவே, சங்ககாலத் தமிழர், மலைப்பகுதியையும், காடுகள் அடர்ந்த பகுதியையும், வயல்கள் நிரம்பிய பகுதியையும், கடலோரப் பகுதியையும், வறட்சியான வரண்ட பகுதிகளையும், தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர்.

மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சி நிலம் என்று அழைத்தனர். மலைக்கு அடுத்து இருந்த நிலப்பகுதி காடும், காட்டைச் சார்ந்த இடமும். இப்பகுதியை முல்லைநிலம் என்று கூறினர். முல்லைக்கு அடுத்து இருந்த வயலும் வயலைச் சார்ந்த இடத்தை மருதம் என்று குறிப்பிட்டனர்.

பண்டைத் தமிழ்நாட்டின் கிழக்கும், மேற்கும், தெற்கும் கடல் எல்லையாக இருந்தது. இந்தக் கடலையும் கடலைச் சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலம் என்றனர். பருவகாலத்தில், பெய்ய வேண்டிய மழை பெய்யாமல், வறட்சி ஏற்பட்டு, நிலம் பசுமை இல்லாமல் வரண்டு இருக்குமானால் அப்பகுதியைப் பாலை என்று சுட்டினார்கள்.

3.1.3 நிலம் சார்ந்த வாழ்வுமுறை ஓர் இனத்தின் வாழ்க்கைமுறையும், நம்பிக்கைகளும், குணநலன்களும், பண்பாட்டுக் கூறுகளும் அந்த இனம் சார்ந்திடும் நிலத்தன்மை, தட்பவெட்ப நிலை ஆகியவற்றின் பின்னணியில்தான் அமையும் என குரோஸ் ஹோட்ஜ் (Grose

odge) எனும் நிலவியல் அறிஞர் குறிப்பிடுவார். இக்கூற்று பண்டைத் தமிழர்களுக்கு முற்றிலும் பொருந்தும்.

ஐந்து வகை நிலப்பாகுபாட்டுடன் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, செய்த தொழில், வழிபாடு ஆகியவை ஹோட்ஜின் கருத்தை உறுதிப்படுத்தும்.

குறிஞ்சி நிலம்

குறிஞ்சி நிலம்

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களைக் குறவர், குறத்தியர் என்று அழைத்தனர். இவர்கள் தினை பயிரிடுதல், தேன் எடுத்தல், வேட்டையாடல் போன்ற தொழிலைச் செய்தனர். இவர்களது கடவுள் முருகன்.

முல்லைநிலம்

முல்லைநிலம்

முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் ஆயர், ஆய்ச்சியர் எனக் குறிக்கப்பட்டனர். இவர்கள் ஆடு, மாடு மேய்த்தலைத் தங்கள் தொழிலாகக் கொண்டிருந்தனர். முல்லை நிலக் கடவுள் திருமால். திருமாலைக் கண்ணன் என்றும் அழைப்பார்கள். கண்ணனாகிய திருமால் ஆயர்குலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறான்.

மருதநிலம்

மருதநில மக்கள் உழவர், உழத்தியர் என்போர் ஆவர். இந்நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள், நெல், கரும்பு முதலியவற்றைப் பயிர் செய்தார்கள். வாணிகத்தையும் செய்தனர். மருத நிலத்தில் விளைந்த நெல் முதலிய தானியங்களைப் பிற நிலத்தைச் சார்ந்தவர்களுக்குக் கொடுத்து, பண்டமாற்ற வாணிபம் செய்தனர். இந்திரன், மருத நிலக் கடவுள்.

நெய்தல் நிலம்

நெய்தல் நிலம்

நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்களைப் பரதர் என அழைத்தனர். மீன் பிடித்தல், உப்புத் தயாரித்தல், கடல்கடந்து வாணிபம் செய்தல் முதலிய தொழில்களை இவர்கள் செய்தார்கள்.

நெய்தல் நிலக்கடவுள் வருணன். மழைதரும் கடவுளாக வருணனை வழிபாடு செய்தனர். வருண பகவானால் மழைவரும் என்று நம்பினர். கடல்நீர், சூரிய வெப்பத்தால் நீராவியாக மாறி, மழையைத்தரும் மேகம் ஆகிறது. மழை தோன்றுவதற்குக் காரணமாக நெய்தல் நிலம் இருப்பதால், மழைக்கு உரிய காரணகர்த்தாவாக வருணனை வழிபட்டனர்.

பாலை

பாலை

பாலை நிலத்தில் வாழ்ந்தவர்கள் எயினர், எயிற்றியர் என்று கூறப்படுகின்றனர். வழிப்பறி செய்தல் அவர்கள் இயல்பாகச் சுட்டப்படுகிறது. நிலம் வளமில்லாது வறட்சியாகும்போது நிலத்தில் வாழ்வோரும் தம் வறுமையின் காரணமாக இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருக்கலாம்.

3.1.4 நிலம் சார்ந்த இலக்கியம் சங்ககாலத் தமிழ்ப்புலவர்களின் கவிதைகளின் ஊற்று அவர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த நிலமே. ஐந்து நிலத்திற்கும், ஐந்து வகையான திணையை அமைத்து அவற்றின் அடிப்படையில் தம் பாடுபொருளை வைத்து இலக்கியம் படைத்த பெருமை சங்க காலப் புலவர்களுக்கு உண்டு. முல்லைநில வாழ்க்கையில் மனைவி அந்திப்போதில் கணவன் வரவுக்காகக் காத்திருத்தலையும், குறிஞ்சி வாழ்க்கையில் நள்ளிரவில் காதலர் கூடி மகிழ்ந்திருத்தலையும், மருத வாழ்க்கையில் விடியற் காலையில் கணவனும் மனைவியும் ஊடல் அல்லது மனப்பிணக்குக் கொண்டிருத்தலையும், நெய்தல் வாழ்க்கையில் முன்னிரவில் கணவன் வரவு நோக்கி வருந்தி நிற்கும் மனைவியின் வருத்தத்தையும் இலக்கியங்கள் அழகாகப் பாடுகின்றன.

3.2 தமிழக வரலாறு

அன்பர்களே! நாம் தமிழக வரலாற்றை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

1. முற்காலம்

2. இடைக்காலம்

3. பிற்காலம்

என்ற மூன்று பகுதிகளாக இவ்வரலாற்றைக் காணலாம்.

3.2.1 வரலாற்றுக்கு முந்தைய காலம் இந்தியத் துணைக்கண்டத்தைப் (Subcontinent) படத்தில் காணுங்கள். என்ன தோன்றுகிறது உங்களுக்கு?

வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில்

வாழும் குமரிமுனை பாப்பா

கிடக்கும் பெரியகடல் கண்டாய் – இதன்

கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா

(பாரதி – பாப்பாப்பாட்டு: 13)

என்று பாரதியார் பாடியது நினைவிற்கு வருகிறதா இல்லையா? ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா இந்த உருவத்தில் இல்லை. இமயமலையும் வடஇந்தியப் பகுதிகளும் கடலுக்குள் இருந்தன. இன்று இந்துமாக்கடலாக உள்ள இடம் பெரிய நிலப்பரப்பாக இருந்தது. அப்பெரும்பரப்பு குமரிக்கண்டம் அல்லது லெமூரியா (Lemuria) எனப்பட்டது. அங்கே குமரிமலை என்று பெயர் பெற்ற நீண்ட மலைத்தொடர் இருந்தது. பஃறுளியாறு எனப் பெயர் பெற்ற ஆறு இருந்தது. அவையெல்லாம் ஒரு பெரிய கடல் வெள்ளத்தால் அழிந்தன. தெற்கே இருந்த நிலப்பகுதி கடலில் மூழ்கியபின் வடக்கே கடலுக்குள்ளிருந்து இமயமலையும் அதனைச் சார்ந்த நிலப்பகுதிகளும் வெளியே தோன்றின. இதுதான் பழைய இந்திய வரலாறு.

3.2.2 சிந்துவெளி நாகரிகம் மனிதன் முதன் முதலாகப் பரிணாம அடிப்படையில் (Evolution) குமரிக்கண்டத்திலேயே தோன்றியதாக அறிஞர் கருதுகின்றனர். குமரிக்கண்ட மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்த நிலையில் வடஇந்தியப் பகுதிகளில் சென்று குடியேறினான். அங்குச் சிந்துநதிக்கரையின் சமவெளிப்பகுதியில் அவன் அழகிய குடியிருப்புகளையும், நகரங்களையும் உருவாக்கினான். அந்த நகரங்களே இன்று மண்ணிலிருந்து தோண்டி எடுக்கப்பெற்றுள்ள மொகஞ்சதாரோ, ஹரப்பா என்னும் நகரங்களாகும். இங்குத் தோன்றிய நாகரிகமே சிந்துவெளி நாகரிகம் எனப்படும். இதனைத் தோற்றுவித்தவர் தென்னாட்டிலிருந்து சென்று பரவிய திராவிடரே ஆவர்.

ஹரப்பா

1920ஆம் ஆண்டு ஹரப்பா என்ற பழைய நகரம் மண்ணுக்கடியில் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கல்லறை ஒன்றும், மட்பாண்டங்களும், விலங்குகளின் எலும்புகளும், சில முத்திரைகளும் இங்குக் கிடைத்தன.

ஹரப்பா பஞ்சாப் பகுதியில் ராவி, சட்லெஜ் ஆறுகளுக்கு இடையில் லாகூர் – முல்ட்டான் தொடர்வண்டி வழியில் உள்ளது. எம். எஸ். வாட் (M.S. Watt) என்னும் அறிஞர் ஹரப்பாவின் அகழ்வாய்வுகள் என்னும் நூலில் ஹரப்பா பற்றிக் கூறும் செய்திகள் வியப்பளிக்கின்றன. இந்த நகரத்தின் சுற்றளவு 4 கிலோ மீட்டராகும். இங்கு ஆறு பெரிய மண்மேடுகள் உள்ளன. இவற்றில் பெரியது 29,000 செ. மீ. நீளமும், 23,000 செ. மீ. அகலமும், 1,800 செ. மீ. உயரமும் உடையது. இந்த மண்மேடுகள் எட்டு அடுக்குகளைக் காட்டுகின்றன. எட்டுமுறை புதுப்பிக்கப்பட்ட நகரம் என்பதை இந்த அடுக்குகள் காட்டுகின்றன. கி.மு. 3,500க்கும் கி.மு. 2,750க்கும் இடைப்பட்ட காலத்தின் நாகரிகம் என்று இதனைக் கருதலாம்.

மொகஞ்சதாரோ

மொகஞ்சதாரோ நகரம் நிலத்தின் அடியில் புதையுண்டிருப்பது 1922-இல் கண்டறியப்பட்டது. சிந்து ஆற்றின் மேற்குப் பகுதியில் உள்ளது. இந்நகரை அகழ்ந்தபோது நாற்கோணமுள்ள ஒரு முற்றம், முற்றத்தைச் சூழ முப்பது சிற்றறைகள், சில நாணயங்கள் ஆகியன காணப்பெற்றன. அங்கே சில எழுத்து முத்திரைகளும் கிடைத்தன. மொகஞ்சதாரோ ஏழு அடுக்குகளையுடைய நிலப்பகுதியைக் காட்டிற்று. வரிசை வரிசையான வீடுகள், நீண்ட தெருக்கள், பெருமாளிகைகள், நீராடும் குளம், மண்டபங்கள், கழிவுநீர்ப் பாதைகள், மட்பாண்டங்கள், பல நிறந் தீட்டப்பெற்ற பானைகள், பொம்மைகள், அணிவகைகள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன. இதன் காலம் கி.மு. 3,250 முதல் கி.மு. 2,750ஆக இருக்க வேண்டும் என்பர்.

மொகஞ்சதாரோ ஓர் உயர்ந்த நாகரிகத்தைக் காட்டுகின்றது. காற்றோட்டமும் வெளிச்சமும் தடையின்றி அமையும் வகையில் பெருந்தெருக்களும் குறுந்தெருக்களும் அமைக்கப்பட்டிருந்தன. கழிவுநீர்க் கால்வாய் அப்பெருநகரில் அமைந்த முறைபற்றிக் கூறப்படுவது கவனிக்கத்தக்கது.

“மொகஞ்சதாரோவில் கால்வாய் இல்லாத நெடுந் தெருவோ குறுந்தெருவோ இல்லை. கால்வாய்கள் அனைத்தும் ஒரே அளவில் வெட்டிச் சுட்டுத் தேய்த்து வழவழப்பாக்கிய செங்கற்களால் அமைந்தவை. பொதுவாக எல்லாக் கால்வாய்களும் 50 செ.மீ. ஆழமும் 22 செ.மீ. அகலமும் உடையனவாக இருக்கின்றன. இக்கால்வாய்களைப் போலவே இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கழிவுநீர்க் கால்வாய்களும் இத்தகைய சிறந்த முறையில் செய்யப்பட்ட செங்கற்களைக் கொண்டே கட்டப்பெற்றவை ஆகும். இவ்வீட்டு வடிகால்கள் தெருக் கால்வாயுடன் சேரும் இடங்களில், சதுர வடிவில் செங்கற்கள் கொண்டு கட்டப்பெற்ற சிறு குழிகள் அமைந்துள்ளன. அக்குழிகள் 22 செ.மீ. சதுரமும் 45 செ.மீ. ஆழமும் உடையவை. அக்குழிகளில் 90 செ.மீ. உயரமுடைய தாழிகள் புதைக்கப் பட்டுள்ளன. அத்தாழிகளின் அடியில் சிறிய துளைகள் இருக்கின்றன. வீட்டு வடிகால்கள் வழியே கழிவுநீருடன் குப்பை கூளங்கள் வந்த தாழிகளில் விழுதல் இயல்பு. தாழிகளின் அடியில் உள்ள சிறிய துளைகள் வழியே கழிவுநீர் தொட்டியில் நிரம்பித் தெருக்கால்வாயில் கலக்கும். அந்நீருடன் வந்த குப்பை கூளங்கள் தாழியின் அடியிலேயே தங்கிவிடும். நகராண்மைக் கழகப் பணியாட்கள் அக்குப்பை கூளங்களை அவ்வப்போது தாழிகளிலிருந்து அப்புறப்படுத்தித் தூய்மை செய்வர். “ஆ! இச்சிறந்த முறை வேறு எந்தப் பண்டை நகரத்திலும் இருந்ததாக யாம் கண்டதில்லை; கேட்டதுமில்லை” என்று சர் ஜான் மார்ஷல் போன்றோர் கூறிப் பெருவியப்பு எய்தியுள்ளனர்”

என்று கூறுவதிலிருந்து மிகப்பெரிய ஒரு நாகரிகம் மண்ணுக்கடியில் புதைந்து போனதை அறியலாம்.

புதையுண்ட நாகரிகத்தின் பெருமை

சிந்து வெளியில் வாழ்ந்தோர் பெரும்பாலோர் வணிகர்கள். மேற்காசிய நாடுகளோடும், காஷ்மீர், மைசூர், நீலகிரி, ராஜபுதனம் போன்ற உள்நாட்டுப் பகுதிகளோடும் அவர்களுக்கு வாணிகத் தொடர்பிருந்தது. தங்கம், செம்பு, தகரம், வெள்ளி, விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை அவர்கள் இறக்குமதி செய்தனர். வணிகத்தில் பயன்படுத்தப்பட்ட எடைக் கற்கள் தசாம்ச முறையில் அமைந்துள்ளன. முகத்தல், நீட்டல் அளவைகளும் அம்முறையிலேயே அமைந்துள்ளன.

இந்த முத்திரைகளில் யோக நிலையில் அமர்ந்திருக்கும் சிவபெருமான் உருவம் குறிக்கத்தக்கது. திராவிட நாகரிகத்தின் சமயப் பண்பாடு இதன் மூலம் வெளிப்படுகிறது. ஆற்றைத் தலையிலிருந்து கீழே விடும் சிவனின் வடிவம் கவனிக்கத்தக்கது. நீண்ட காலம் இத்தெய்வம் பற்றிய கருத்து திராவிடர்களிடையே இருந்திருக்கின்றது. சங்க இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகையில் யோகநிலையில் அமர்ந்த கடவுள் உருவம் பற்றிய வருணனை உள்ளது. இக்காலத்தில் அவ்வடிவைத் தட்சிணாமூர்த்தி எனக் கூறுகின்றனர். கையில் தண்டமும் நீர் கொண்ட கரகமும் இத்தெய்வம் கொண்டிருந்ததாகக் கலித்தொகை குறிக்கின்றது. திராவிடப் பண்பாட்டின் அடிப்படையான சமயச் சிந்தனையை இவ்வுருவம் உணர்த்துகின்றது. இன்றும் சிவன் கோயில்களின் முதல் திருச்சுற்றில் தெற்கு நோக்கி அமர்ந்த வடிவில் இருக்கும் இவ்வுருவம் காணத்தக்கது.

3.2.3 பண்டைக் காலம் தமிழ்நாடு சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்னும் மூன்று பகுதிகளையுடையது. தொன்மையான குடிகளுக்கு எடுத்துக்காட்டாகச் சேர சோழ பாண்டியர் குடிகளைக் குறிப்பது வழக்கம். வால்மீகி இராமாயணம் சேர சோழ பாண்டிய நாடுகளைக் குறிப்பிடுகின்றது. கிரேக்கத் தூதர் மெகஸ்தனீஸ் தம் இண்டிகா என்ற நூலில் சேர சோழ பாண்டியரைக் குறிக்கின்றார். அசோகனின் பிராமிக் கல்வெட்டில் சேரலபுத்திரர் எனச் சேரர் குறிப்பிடப்படுகின்றனர்.

சேரநாடு

சேரநாடு மலை சார்ந்தது. சங்க இலக்கியங்களில் “சாரல் நாடன்” என்ற வழக்கு உள்ளது. சாரல் நாடு என்பதே சேரநாடு என மருவியிருக்க வேண்டும். சேரநாட்டில் குட்டநாடு, குடநாடு, பூழிநாடு, குன்றநாடு, மலைநாடு, கொங்குநாடு, பொறைநாடு முதலிய உட்பகுதிகள் இருந்தன. அயிரைமலை, நேரிமலை, செருப்புமலை, கேப்பாக்கோட்டை, உம்பற்காடு, நறவுத் துறைமுகம், முசிறித் துறைமுகம், தொண்டித் துறைமுகம் ஆகிய குறிப்பிடத்தக்க இடங்கள் சேரநாட்டிற்குரியவை. சேர அரசர்களில் வஞ்சி மாநகரையும் சிலர் மாந்தை நகரையும் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர்.

சோழநாடு

சோழநாடு தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை ஓரமாக உள்ளது. வங்கக் கடற்கரையில் இதன் தலைநகராகிய பூம்புகார் இருந்தது. கடலைக் கிழக்கு எல்லையாகவும் புதுக்கோட்டைக்கு அருகில் ஓடும் வெள்ளாற்றைத் தெற்கு எல்லையாகவும் கொண்டிருந்தது பழைய சோழநாடு. உறையூர், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய இருபெருநகரங்கள் அக்காலத்தில் சோழர்க்கு உரியனவாக இருந்தன.

உறையூர் காவிரி ஆற்றின் தென்கரையில் இன்றைய திருச்சி நகரின் ஒருபகுதியாக உள்ளது. தாலமி என்னும் யவன ஆசிரியர் இவ்வூரை ஓர்தொவுர என்று குறிக்கின்றார்.

காவிரி வடகரையில் அமைந்த காவிரிப்பூம்பட்டினம் பூம்புகார் என்னும் பெயருடையது. காவிரி புகும் பட்டினம் என்பதே மருவிக் காவிரிப்பூம்பட்டினம் என்றாயிற்று. இப்பட்டினம் பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டது. இவ்விரு பகுதிகளுக்கும் நடுவே பெரிய கடைத்தெருக்கள் இருந்தன. பெரிப்புளூஸ் என்னும் பயணநூல் இவ்வூரைக் கமரா எனக் குறிக்கின்றது. குடந்தை, கழார், கோயில்வெண்ணி, போர், குராப்பள்ளி, தலைச்செங்காடு, பிடவூர், வல்லம் ஆகிய ஊர்களும் சோழநாட்டில் புகழ் பெற்றிருந்தன.

பாண்டிய நாடு

பாண்டிய நாடு சங்க காலத்தில் மூன்று பக்கமும் கடலை எல்லையாகக் கொண்ட தென்தமிழ்நாடாக விளங்கிற்று. இம்மூன்று கடல்களையும் அயல்நாட்டவரான யவனர் எரிதிரையக்கடல் எனக் குறித்தனர். இன்று தீவாக இருக்கும் பாம்பன் பகுதி பாண்டிய நாட்டோடு ஒருசேர இணைந்திருந்தது. பாண்டிய நாட்டின் மேற்குக்கரை இன்றைய தென்திருவாங்கூர் வரை பரவியிருந்தது. பொதிகைமலையை ஆண்ட ஆய் என்னும் வள்ளல் பாண்டிய அரசர்களைச் சார்ந்திருந்த ஒரு குறுநில மன்னர். பாண்டிய நாட்டின் வடக்கு எல்லை தென்வெள்ளாறு ஆகும். திண்டுக்கல் மலை, கோடைமலை, பன்றிமலை ஆகிய மலைப்பகுதிகள் பாண்டிய நாட்டின் வடபகுதியில் இருந்தன.

பாண்டியரின் தலைநகர் மதுரை. தாலமி இதனை மதௌர என்று குறிக்கின்றார். மருதமரங்கள் மிகுதியாக இருந்தமையால் இந்நகர் மருதையெனப் பெற்றுப் பின் மதுரை எனத் திரிந்ததென்பர். வையையாற்றின் தென்கரையில் அமைந்தது இவ்வூர். வையையாற்றில் அமைந்த திருமருதந்துறை அக்காலத்தில் புகழ்மிக்க நீராடுதுறையாக விளங்கிற்று. பாண்டிய நாட்டின் புகழ்மிக்க துறைமுகம் கொற்கையாகும். இத்துறைமுகம் வளைகுடாப் பகுதியில் அமைந்தது. விலையுயர்ந்த முத்துக்கள் இப்பகுதியில் கிடைத்தன. இம்முத்துக்கள் அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மற்றொரு துறைமுகமான தொண்டி பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையில் இருந்தது.

3.2.4 இடைக்காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு சங்க காலம் மறைந்தது. களப்பிரர் என்னும் அயலவர் தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செலுத்தினர். இவர்கள் காலத்தில் நீதி நலிவுற்றது. இவர் காலத்தை வரலாற்றில் இருண்ட காலமென்பர். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் தமிழ்நாட்டின் வடபகுதியைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். மகேந்திரவர்ம பல்லவன் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் “தொண்டை நாடு” எனப்பெற்ற தமிழகப் பகுதி பல்லவ நாடாக விளங்கி அவர்களின் ஆட்சி சேரநாட்டிலும் பரவியது. பல்லவர் காலத்தின் மிகப்பெரிய கலைச்சின்னம் மாமல்லபுரமாகும்.

இதோ கடற்கரையில் இருக்கும் மாமல்லபுரத்தைக் காணுங்கள்! கற்களை அடுக்கிக் கட்டாமல் பாறைகளைக் குடைந்து செதுக்கப்பட்ட கோயில்களையும் ரதங்களையும் இங்குக் காணலாம்.

பகீரதன் கங்கையாற்றை நிலவுலகத்திற்குக் கொண்டு வந்ததைக் குறிக்கும் சிற்பம் மிகச் சிறப்பாக இல்லையா? அதோ அந்தக் கல்யானை எவ்வளவு அழகாக இருக்கிறது? இதன் அழகை ரசித்தவர் அந்த இடத்தை விட்டு அகல்வார்களா?

பல்லவர்கோன் கண்ட மல்லை – கோலப்

பாரெங்கும் தேடினும் ஊரொன்றும் இல்லை

என்ற பாட்டுக் கேட்கிறதல்லவா?

சங்ககாலச் சோழர் பூம்புகார், உறையூர் ஆகிய தலைநகரங்களை யெல்லாம் விட்டுக் குறுநில மன்னராய்ப் பழையாறை என்ற ஊரில் வாழ்ந்தனர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இந்தச் சோழர் மீண்டும் தலையெடுத்தனர். விஜயாலய சோழன் என்பவன் தஞ்சாவூரைத் தலைநகராக்கிக் கொண்டு சோழப் பேரரசை நிறுவினான். இந்தச் சோழர்குடியில் பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய இராசராசன் தமிழகத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றினான்.

இதோ காணுங்கள்! தஞ்சாவூர் 216 அடி உயரமுள்ள கோபுரத்தைக் கொண்ட தஞ்சைப் பெருவுடையார் கோயிலை. இதனைக் கட்டிய பெருவேந்தன் இராசராசனே சைவத் திருமுறைகளைத் தொகுக்கக் காரணமாக இருந்தவன். இவன் மகன் இராசேந்திரன் கங்கைக்கரை வரையில் படையெடுத்து வெற்றி கொண்டான். ஈழநாட்டையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வந்தான்.

சோழர்களுக்குப் பின் தெற்கே பாண்டியர் ஆட்சி ஓங்கியது. பாண்டியர்க்குப் பின் மதுரை நாயக்க அரசர்களால் ஆளப்பட்டது.

சமயங்களின் தோற்றம்

சங்க காலத்தில் வைதிகம், பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் தமிழ்நாட்டுக்கு வெளியேயிருந்து தமிழகத்திற்கு வந்தன. அதற்குமுன் தமிழர் சமயநெறி ஒரு பொதுமையைத் தழுவியிருந்தது. இயற்கை நெறிப்பட்டதாக அவர்கள் வழிபாடு இருந்தது. சங்க காலத்தின்பின் சமண பௌத்த வைதிக நெறிகள் தமிழ்நாட்டில் ஓங்கின. இடைக்காலத்தில் சைவமும் வைணவமும் புதிய எழுச்சி பெற்றன. சமண பௌத்த சமயங்கள் மெல்லச் செல்வாக்கு இழந்தன. சைவ சமயத்தைத் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் மக்களிடையே பரப்பினர். வைணவ சமயத்தைப் பரப்புவதில் நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார் போன்றோர் பெருமுயற்சி மேற்கொண்டனர்.

வருணமும் சாதிகளும்

வைதிக சமயத்தின் தாக்கத்தால் சங்க காலத்திலேயே வருணப் பாகுபாடு புகுந்துவிட்டது. மேலோர் கீழோர் என்ற பாகுபாடு மெல்ல வளரத் தொடங்கிவிட்டது. வேள்வி செய்தல் (யாகம் செய்தல்) அரசர்களாலும் ஆதரிக்கப்பட்டது. நான்கு வருணக் கோட்பாடு தமிழகத்திற்குள் செல்வாக்குப் பெறத் தொடங்கியது. திருவள்ளுவர் பிறப்பால் உருவாக்கப்படும் உயர்வு தாழ்வுகளை மறுத்தார். சமண பௌத்த சமயங்கள் வருணப் பாகுபாடுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. சாதி வேறுபாடுகள் பெருகி வளர்ந்த காலத்தில் சைவ வைணவ சமயங்களும் அவ்வேறுபாட்டை ஒத்துக்கொள்ளவில்லை. நந்தனார் என்ற தாழ்த்தப்பட்டவர் சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். திருப்பாணாழ்வார் என்ற தாழ்த்தப்பட்டவர் ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். இவற்றையெல்லாம் மீறிச் சாதிகள் வளர்ந்தன. சாதிகளின் வளர்ச்சியில் தீண்டாமை என்ற கொடுமையும் தோன்றிவிட்டது

.

பக்தி இயக்கம்

நால்வர்

இதோ இந்த நால்வர் உருவங்களைப் பாருங்கள்! இதோ பன்னிரண்டு ஆழ்வார்களைக் கவனியுங்கள்! இவர்கள் தாம் இந்தியாவின் பக்தி இயக்கத்தின் ஊற்றுக்கண்கள். ஊர் ஊராகச் சென்று இசையோடு பாடிப் பக்தி இயக்கத்தை வளர்த்தவர்கள் இவர்களே! ஒவ்வொரு தலமும் புனிதமானதாகக் கருதப்பட்டு இவர்களால் பாடப்பெற்றன.

தில்லை

இதோ சிதம்பரம் எனப்படும் தில்லையம்பலத்தைக் காணுங்கள்! ஆனந்தக் கூத்தனாக நடராசன் ஆடும் புகழ்மிக்க நடனம் மாபெரும் பிரபஞ்ச உண்மையை உணர்த்துவதாக அறிஞர் கூறுகின்றனர். திருநாவுக்கரசர் இறைவனின் திருநடனத்தைப் பற்றிப் பாடுவது கேளுங்கள்!

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்

குமிண்சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியிற்

பால்வெண்ணீறும்

இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!

(தேவாரம், 4-ஆம் திருமுறை:81.3)

இதோ! தமிழகத்தின் திருவரங்கத்தில் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டுள்ள அரங்கநாதனை

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர்உளானே!

(நாலாயிரத் திவ்விய பிரபந்தம், திருமாலை : 2)

என்று தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் பாடுவதைக் கேட்கலாம். தமிழர் பண்பாட்டில் பக்தி இயக்கம் பேரிடம் பெற்றுவிட்டது.

3.2.5 பிற்காலம் நாயக்கர் ஆட்சி

தென்னாட்டில் ஆந்திரப் பகுதியில் தோன்றிய விஜயநகரப் பேரரசு மதுரையையும் வென்று தன் ஆட்சியின்கீழே கொண்டு வந்தது. மதுரை, திருச்சி, தஞ்சை ஆகிய பகுதிகள் நாயக்க மன்னர்களால் ஆளப்பெற்றன. நாயக்கர் ஆட்சியில் மதுரையில் கட்டிடக்கலை சிறப்படைந்தது. இதோ திருமலை நாயக்கர் மகாலைக் காணுங்கள். இன்று மூன்றில் ஒருபகுதிதான் இருக்கிறது. இரண்டு பகுதிகள் இடிந்து தரைமட்டமாகிவிட்டன. நாயக்க மன்னர்களில் புகழ் பெற்றவர் திருமலை மன்னர். இவர் மதுரை மீனாட்சியிடம் பெரும் பக்தி கொண்டவர். தூணில் திருமலை மன்னர் சிற்பமாய் விளங்குவதைக் காணுங்கள்.

திருமலை மன்னர் சிற்பம்                                      திருமலை நாயக்கர் மகால்

ஆங்கிலேயர் ஆதிக்கம்

தமிழ்நாடு குறுநில மன்னர்களாலும், பாளையப்பட்டுத் தலைவர்களாலும் சிறுசிறு ஆட்சிப் பகுதிகளாக மாறியது. ஒருவர் ஒருவரோடு மோதி அழிந்து கொண்டிருந்தனர். இந்த நிலையிலேயே ஆங்கிலேயர் ஆதிக்கம் தமிழகத்திற்குள் நுழைந்தது. விடுதலை வேட்கை கொண்ட குறுநிலத் தலைவர்கள் சிலர் ஐரோப்பியப் படைகளோடு மோதி அழிந்தனர். 1639இல் சென்னையில் குடியேறிய ஆங்கிலேயர் 1640இல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். 19ஆம் நூற்றாண்டில் தேசிய அளவில் விடுதலை உணர்வு தோன்றியது. போராட்டங்கள் தொடர்ந்தன. அண்ணல் காந்தியடிகள் தலைமையில் அகிம்சை நெறியில் மாபெரும் விடுதலைப் போராட்டம் நிகழ்ந்தது. 1947இல் சுதந்திரம் பெறப்பட்டது. இந்தியக் குடியரசு தோன்றி மொழிவாரி மாநிலங்கள் பிரிந்து, மக்களாட்சி அடிப்படையில் பொதுத் தேர்தல்கள் நடந்து, இன்று இந்தியா உலகில் பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது; தமிழ்நாடு வேளாண்மை, தொழில் துறை, கல்வி, பொருளாதாரத் துறைகளில் மேம்பாடு அடைந்து வருகிறது.

அயலவர் ஆட்சிக்காலம்

தமிழர் பண்பாட்டில் ஆரியர், தெலுங்கர், இசுலாமியர், ஐரோப்பியக் கிறித்தவர், மராட்டியர் எனப் பல அயலக மக்களின் பண்பாட்டுத் தாக்கங்கள் ஏற்பட்டன. ஆரியர் தமிழகத்தை ஆள்பவராக இல்லையெனினும் அவர்களின் நம்பிக்கைகளும் சடங்குகளும் பலப்பல தமிழர்களிடையே பரவிவிட்டன. சகுனம் பார்த்தல், பிராயச்சித்தம் செய்தல், புரோகிதத் திருமணம் போன்றவை தமிழர்களிடையே வேகமாகப் பரவின.

வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் தம் மொழி, பண்பாட்டுப் பழக்கங்களை மறக்கத் தொடங்கினர். ஆங்கில மோகம் தமிழர் வாழ்க்கையில் வேர்பிடித்துக் கொண்டது. முந்நூறு ஆண்டுக்கால ஐரோப்பிய ஆட்சி தமிழகத்தின் உரிமைகளை அறவே நசுக்கிவிட்டது. உப்பு விளைக்கின்ற உரிமை இல்லாமல் அதற்காகப் போராட வேண்டியதாகி விட்டது. சரக்குக் கப்பல் ஓட்டும் முயற்சியில் இறங்கி வ.உ. சிதம்பரம் பிள்ளை என்ற தேசத்தலைவர் நாற்பதாண்டுக் காலச் சிறைவாசம் பெற்றார்.

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்

நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?

(பாரதி – சுதந்திரப்பயிர், கண்ணிகள்: 5)

என்று பாரதியார் அயலவர் ஆட்சிக் கொடுமையைப் பாடுகிறார்.

3.3 பண்பாட்டு வரலாற்று மூலங்கள்

தமிழ்நாட்டின் பண்பாட்டையும் வரலாற்றையும் காட்டும் மூலச்சான்றுகள் பல உள்ளன.

1. இலக்கியப் பதிவுகள்

2. கல்வெட்டுகள்

3. அகழ்வாய்வுகள்

4. அயலகப் பயணிகளின் குறிப்புகள்

என்பவை இந்த வகையில் முக்கியமானவை. இவற்றை ஆதாரங்களாகக் கொண்டு தமிழகப் பண்பாட்டையும் வரலாற்றையும் மீட்டுருவாக்கம் (Reconstruction) செய்ய இயலும்.

3.3.1 இலக்கியப் பதிவுகள் பண்பாட்டுப் பதிவுகளாகப் போற்றத்தக்க இலக்கியங்கள் சங்ககாலத்தில் எழுதப்பெற்ற பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும், கி.பி. முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டு அளவில் தோன்றிய திருக்குறள், சிலப்பதிகாரம், கி.பி. ஆறிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை தோன்றிய சைவத் திருமுறைகள், வைணவ இலக்கியமான நாலாயிரத் திவ்விய பிரபந்தம், பெரிய புராணம், கம்ப இராமாயணம் ஆகியவை, கி.பி. பதினைந்து வரை தோன்றிய சிற்றிலக்கியங்கள். ஐரோப்பியர் வருகைக்குப்பின் தோன்றி வளர்ந்த உரைநடை, நாவல், சிறுகதை, நாடகங்கள் ஆகியன எல்லாம் பண்பாட்டு மீட்டுருவாக்கம் செய்யத்தக்க கருவிகளாகும். இலக்கியம் காட்டும் சான்றாதாரம் ஒன்றை இங்கு எடுத்துக்காட்டாகக் காணலாம்.

சேரநாட்டின் அரசவை கூடியிருக்கிறது. அரசன் இமயவரம்பனும், அவனுடைய மகன்கள் இருவரும் அமர்ந்திருக்கின்றனர். அப்போது நிமித்திகன் (சோதிடன்) ஒருவன் வருகிறான். இமயவரம்பனை அடுத்து அரசாளும் பேறு இளைய மகனுக்கே உண்டென்று கூறுகிறான். மூத்த அரசகுமரனாகிய செங்குட்டுவன் துன்பம் நீங்கும் வகையில் இளையவன் நிமித்திகனைக் கோபத்தோடு பார்த்துவிட்டு அரசவையைவிட்டு வெளியேறுகிறான். வெளியேறிய இளங்கோ துறவுக்கோலம் பூண்டு அரசவைக்குள் நுழைகிறான். அந்த இளங்கோவே இளங்கோ அடிகள். இந்தக் கதை சிலப்பதிகாரத்தின் இறுதியில் இடம்பெறுகிறது. நெடுஞ்சேரலாதன், செங்குட்டுவன், இளங்கோ ஆகிய மூவர் வரலாற்றையும் கூறுவதோடு இளங்கோ அடிகளின் பண்பாட்டுப் பெருமையையும் கூறக் காணலாம்.

3.3.2 அகழ்வாய்வுகள் முதுமக்கள் தாழி

இதோ பாருங்கள்! எவ்வளவு பெரிய தாழி! இதனை முதுமக்கள் தாழி என்று கூறுவர். பழங்காலத்தில் மிக வயது மூத்தவர்களை இத்தகைய பெரிய பானைகளில் வைத்துப் புதைத்து விடுவது வழக்கம். இதைப்போன்ற தாழிகள் தமிழகத்தில் நிகழ்ந்த அகழ்வாய்வுகளில் கிடைத்திருக்கின்றன. இறந்தவர்களைத் தாழியில் இடுதல், புதைத்தல், எரித்தல் போன்ற வழக்கங்கள் இருந்திருக்கின்றன. தாழியில் இடும்போது, அவர்கள் பயன்படுத்திய சில பொருள்களையும் அவர்களோடு புதைப்பது வழக்கமாய் இருந்திருக்கிறது. அகழ்வாய்வுகளில், பழங்காலத்துப் பானை ஓடுகள், மணிகள், சிறு கலங்கள், உமி, இரும்புக் கருவிகள், கற்கருவிகள் ஆகியன கிடைக்கின்றன. ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த கொடுமணல், நாகைப்பட்டின மாவட்டப் பூம்புகார், தஞ்சை மாவட்டப் பழையாறை, தாராசுரம், திருநெல்வேலி மாவட்டத்து ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் நிகழ்ந்துள்ள அகழ்வாய்வுகள் குறிப்பிடத்தக்கன.

3.3.3 கல்வெட்டுகள் கருவூர் கல்வெட்டு

கருவூர் மாவட்டத்தில் புகளூர் என்ற ஊரில் உள்ள மலையில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டைக் காணுங்கள்! இந்தக் கல்வெட்டு என்ன சொல்கிறது தெரியுமா? ஓர் இயற்கைக் குகைத்தளத்தில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. ஆற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்ற சமணப் பெரியவருக்குச் செல்லிரும்பொறை என்ற சேர அரசனின் மகன் பெருங்கடுங்கோனின் மகன் இளங்கடுங்கோன், இளவரசாக இருந்தபொழுது இந்தக் குகைத் தளத்தை உருவாக்கிக் கொடுத்ததை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. மூன்று தலைமுறை அரசர்களை இக்கல்வெட்டுக் குறிக்கின்றது.

மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன்

கோ ஆ . . . . . . . ல்லிரும்பொறை மகன் பெருங்

கடுங்கோன் மகன் கடுங்கோன் இளங்கடுங்கோ

இளங்கோ ஆக அறுப்பித்த கல்.

இதுபோலப் பலப்பலக் கல்வெட்டுகள் தமிழர் வரலாற்றையும் பண்பாட்டையும் காட்டுகின்றன. ஐரோப்பியர் வரவு அகத்திலும் புறத்திலும் நம்மிடம் பல மாற்றங்களைச் செய்துவிட்டன. அவை எல்லாவற்றையும் நன்மைகள் என்று கூறிவிடுவதற்கில்லை. நம் பண்பாட்டில் சில நலிவுகளையும் ஐரோப்பியப் பண்பாடு ஏற்படுத்திவிட்டது.

3.3.4 அயலகப் பயணிகளின் செய்திகள் தாலமி, பிளினி ஆகிய அயல்நாட்டுப் பயணநூலாரும் பெரிப்ளூஸ் என்னும் நூலின் ஆசிரியரும் பழங்காலத்தில் தமிழ்நாடு மேற்கு நாடுகளுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பினை விளக்குகின்றனர்.  தமிழ்நாட்டின் விலை உயர்ந்த முத்துக்கள் ரோமாபுரியில் அரசகுடியினரால் விரும்பி ஏற்கப்பட்டன. தமிழ்நாட்டிலிருந்து மிளகு, ஏலம், இலவங்கம், யானைத்தந்தம், சந்தனம், அகில் ஆகியன மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகியிருக்கின்றன. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பாண்டியநாடு வந்த மார்க்கோபோலோ குதிரைகளை இறக்குமதி செய்வதில் பாண்டியநாடு பெரும் பொருளைச் செலவிட்டதைக் கூறுகின்றார். வாசப் என்பவரும் ஆண்டு ஒன்றுக்குப் பாண்டியர்களுக்காக மலபார் கடற்கரையில் 1400 குதிரைகள் வந்து இறங்கின என்கிறார். மார்க்கோபோலோ கூறும் செய்திகளில் மிகவும் கவனிக்கத்தக்கன கீழ்வருமாறு :

மார்க்கோபோலோ

பாண்டியநாட்டு மக்கள் நாள்தோறும் இருமுறை குளித்தனர்.

குளிக்காதவர்களைத் தூய்மைக் குறைவாகக் கருதினர்.

நீரை உதட்டுக்கு மேலே தூக்கிப் பருகினர்.

வலது கையால் சாப்பிட்டனர்.

மன்னராயினும் தரையில் உட்கார்ந்து பேசுவதைக் குறைவாகக் கருதவில்லை.

3.4 தமிழ்ப் பண்பாட்டு மையங்கள்

தமிழ்ப் பண்பாட்டின் மையங்களாக இன்று நாம் காணத்தக்க இடங்கள் பல. வரலாற்றுச் சிறப்புப் பெற்ற ஊர்களும், இறைத் தொண்டிற்கும் கலைப்பணிக்கும் பெயர் பெற்ற கோயில்களும் தமிழ்ப் பண்பாட்டின் விளக்க வாயில்களாகத் திகழ்கின்றன.

3.4.1 வரலாற்றுப் புகழ்வாய்ந்த இடங்கள் தமிழகத்தின் தலைநகரங்களான பூம்புகார், உறையூர், கருவூர், மதுரை, காஞ்சி, திருச்சி, தஞ்சாவூர் ஆகியனவும், துறைமுகப் பட்டினங்களான முசிறி, கொற்கை, தொண்டி ஆகியனவும், கலை வளர்த்த இடங்களான மாமல்லபுரம், கழுகுமலை, குடுமியாமலை, கங்கை கொண்ட சோழபுரம், சிதம்பரம் ஆகியனவும் வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களாகும். ஆவுடையார் கோயில், திருவலஞ்சுழி, திருவீழிமிழலை, நாமக்கல் ஆகிய ஊர்களும் கவின்கலை மாட்சிமிக்க இடங்களாகும். இதோ திருவலஞ்சுழியில் உள்ள பலகணியைப் பாருங்கள். ஒரேகல்லில் அமைந்தது இது. இதன் நேர்த்தியான வேலைப்பாடு யாரையும் மயங்கச் செய்யும்.

3.4.2 கோயில்கள் கோயில்களில் பழைமையான திருவாரூர்க் கோயிலைக் காணலாம். கோயில் ஐந்து வேலிப்பரப்பு; குளம் ஐந்து வேலிப்பரப்பு. ஆயிரக்கால் மண்டபம், தியாகேசர் திருவுலா, ஆழித்தேர் ஓட்டம் ஆகியன இங்குக் காணத்தக்கன.

சிதம்பரம் நடராசர் திருக்கூத்து, சிவகாமியம்மையின் நின்றகோலம், இறைவனோடு ஆடித் தோற்ற காளி, அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் நான்கு கோபுர வாயில்கள் வழியாக வந்து வழிபட்ட மாட்சி, சோழப் பெருவேந்தர்கள் பொன் வேய்ந்த தில்லைக் கோபுரம், சிவகங்கைக்குளம் ஆகியன இங்குக் காணத்தக்கன.

ஸ்ரீரங்கம்

வைணவப் பெருங்கோயில்களில் திருவரங்கம் எனப்படும் ஸ்ரீரங்கம் மிகச் சிறந்தது. பள்ளிகொண்ட நிலையில் உள்ள அரங்கநாதர் திருவுருவம், ஆண்டாள் முத்தியடைந்த வரலாறு, மார்கழி மாதத்தில் பாடப்பெறும் திருப்பாவை ஆகியன இங்கு மிகச்சிறப்புடையன.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழியே பிறந்துவிட்ட தமிழகத்தில் கோயில்களால் கலைகளும் அறங்களும் வளர்ந்தன.

“காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே”

என்ற பாட்டைக் கேட்டு மனத்தில் அசைவு தோன்றாதார் இருக்க முடியுமா? சிக்கல், கோனேரிராஜபுரம் கோயில்களில் உள்ள சண்முகர், நடராசர் திருமேனி அழகை யாரேனும் மறக்க முடியுமா?

ஆதி தமிழிசையின் அடையாளங்களாக விளங்கும் திருமுறை இசையும், நாதசுரமும், தமிழகக் கோயில்களில் இன்றும் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் உயிர்மூச்சாக விளங்குவது கலை. அதன் வெளிப்பாட்டை இன்றும் கோயில்களில் காணலாம்.

3.5 தொகுப்புரை

தமிழ்நாட்டின் நில வரலாறு, மக்கள் பிரிவுகள், தொழில்கள், சாதிமதப் பிரிவுகள், அயலவர்க்கு அடிமைப்பட்டமை, விடுதலைப் போராட்டம், அதன் பயன்கள், தமிழக வரலாற்றின் பண்பாட்டின் மூலச்சான்றுகள் ஆகியன இப்பாடத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாக வேங்கடமும் தெற்கு எல்லையாகக் கன்னியாகுமரியும் இருந்தன. இன்று வடக்கு எல்லை மாறிவிட்டது. தமிழகம் நானிலப் பகுப்பு உடையது. ஆயர், குறவர், உழவர், பரதவர் என நானிலத்து மக்களைக் குறிப்பது பழங்கால வழக்கம். தமிழர் நாகரிகம் சிந்துவெளியிலிருந்து அறியப்படுகின்றது. மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களின் அகழ்வாய்வுகள் பழந்தமிழர் நாகரிகச் சிறப்பை உலகுக்குக் காட்டுகின்றன. சேர சோழ பாண்டி வேந்தர்களால் ஆளப்பட்ட பண்டைக்காலம், சமயங்களின் எழுச்சி பெற்ற இடைக்காலம், அயலவர் ஆட்சி ஓங்கிய பிற்காலம் எனத் தமிழக வரலாறு மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. தமிழக வரலாற்றை அறிவதற்கு இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், அகழ்வாய்வுகள், அயலகப் பயணிகளின் குறிப்புகள் ஆகிய பல சான்றுகள் உள்ளன. தமிழகத்தில் இயற்கை வளமிகுந்த பகுதிகளும், கலைநலம் பொலியும் கோயில்களும் தமிழகப் பெருமையை இன்றும் காட்டிக் கொண்டிருக்கின்றன. இச்செய்திகளை இப்பாடத்தின் வழியாக அறிந்திருக்கிறீர்கள் அல்லவா?

பாடம் - 4

பண்பாட்டு வரலாற்றுச் சான்றுகள்

4.0 பாட முன்னுரை

நாகரிகமும் பண்பாடும் மிகுந்த பழமையான நாடுகளுள் தமிழகமும் ஒன்று. உலகில் இதுவரை இருபத்தி மூன்று நாகரிகங்கள் அரும்பி, மலர்ந்து அவற்றுள் இரண்டே நாகரிகங்கள் இன்றளவில் நின்று நிலவுகின்றன. அவை சீன நாகரிகமும், தமிழர் நாகரிகமும் என்பது வரலாற்றுப் பேரறிஞர் டாக்டர். தாயின்பி (J.A. Toynbee)-யின் கருத்து. உயர்ந்த பண்பாடு மிகுந்த மக்களே சிறந்த நாகரிகத்தை வழங்க முடியும். எனவே, தமிழர்களின் பண்பாடே, அவர்களைச் சிறந்த நாகரிக மக்களாக உலகிற்கு அறிமுகப்படுத்தியது.

பொதுவாகப் பண்பாடுகளை அறிவதற்கான அடிப்படைச் சான்றுகளாகப் பல அமைந்துள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள இலக்கியங்கள், கலைகள், அகழ்வு ஆராய்ச்சிகள், கல்வெட்டுகள், நாணயங்கள் முதலியவை பண்பாட்டுக் கூறுகளை அறிந்து கொள்வதற்குரிய சான்றுகளாக உள்ளன. தமிழர் பண்பாட்டைத் தெரிந்து கொள்வதற்கு, இத்தகைய சான்றுகள் பல காணப்படுகின்றன. அவற்றைப் பற்றிய கருத்துகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

4.1 இலக்கியம்

இலக்கியம் மக்கள் வாழ்க்கையில் இருந்து மலர்கிறது. எனவே, இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. இலக்கியத்தின் பாடுபொருளாக அமைவதும் வாழ்க்கையே. வாழ்க்கை முறையே பண்பாட்டை வெளிப்படுத்தும் வாயில். தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளை இனம் காண்பதற்குத் தமிழ் இலக்கியங்கள் சான்றாக அமைந்துள்ளன.

கவிதை என்பது மெய்ம்மையின் நகல் என்று பிளேட்டோ எனும் அறிஞர் குறிப்பிடுவார். வாழ்க்கையை நகல் எடுத்துக் காட்டுவது இலக்கியம். இலக்கியம் அது படைக்கப்படும் காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டையும் எடுத்துரைக்கும். அதற்குத் தமிழ் இலக்கியங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.

தமிழகத்தில் ஒரு நீண்ட நெடிய தமிழ் இலக்கிய மரபு இருந்திருக்கிறது என்பதற்குச் சான்றாய்த் திகழ்பவை தமிழ் இலக்கியங்கள். இவ்விலக்கியங்களைப் படைத்த புலவர்கள், தாம் வாழ்ந்த சூழலை மிகவும் சிறப்பான முறையில் எடுத்துக்காட்டியுள்ளனர். ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்கள், அவர்களின் உணவு வகை, தொழில்வகைகள், கலைகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றைத் தாம் இயற்றிய இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர்.

4.1.1 அகப்புறப் பண்பாடு தலைவியை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ளான். அவன் நினைவாகவே இருக்கும் தலைவி, தலைவனைக் காண்பதற்கு விரும்புகிறாள். தலைவனைக் காண விழையும் துணிச்சலோடு செல்லும் அவளது நெஞ்சு, நாணத்தோடு திரும்பி வருகிறது. இந்தச் செயல் அடிக்கடி அவள் நெஞ்சுள் நிகழ்கிறது. இவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கும் தன் நெஞ்சைப் பார்த்துத் தலைவி,

பெரும்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல

வரும் செல்லும் பேரும் என்நெஞ்சு

(முத்தொள்ளாயிரம்: 88)

(நல்கூர்ந்தார் = வறுமையுடையவர்,  பேரும் = மீண்டும் வரும்)

என்று குறிப்பிடுகிறார்.

செல்வந்தர் வீட்டில் அவர்களைக் காணச் சென்ற வறியவர்கள், கதவு அடைத்திருப்பதைக் கண்டு, தட்டித் திறக்கச் செய்யத் தைரியம் இல்லாமல், வெறும் கையோடு திரும்பி வரவும் விருப்பம் இல்லாமல், போவதும் வருவதுமாக இருந்தால் எப்படி இருக்குமோ, அவ்வாறு தலைவனைக் காணச்சென்ற தன் நெஞ்சம் இருக்கிறது என்று தலைவி கூறுகிறாள். அவளது நெஞ்சம் தலைவனிடம் வெட்கத்தோடு போவதும், திரும்பி வருவதும் செல்வந்தரை நாடிச் செல்லும் வறியவர்க்கு உவமையாகச் சொல்லப்பட்டுள்ளது.

இப்பாடலில், உவமைச் சிறப்பு ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் தமிழ்ப் பண்பாடு பற்றிய செய்தியும் புலப்படுகிறது. தன்னை நாடி வரும் வறியவர்களுக்கு உதவும் தமிழரின் ஈகைப்பண்பு தெரிகிறது. அது மட்டுமா? வறுமையின் காரணமாக மானமிழந்து எப்படியாவது பொருளைப் பெறவேண்டும் என்ற எண்ணம் வறியவர்களுக்கு இல்லை; பிறரிடம் சென்று யாசிக்க அவர்கள் மனம் இடம் தரவில்லை; அந்தச் செயலுக்கு நாணுகிறார்கள்; வறுமை அவர்களைத் துரத்துகிறது; தன்மானம் தடை செய்கிறது. இவ்வாறு அவர்கள் மனம் போராடக் காரணம் என்ன? மானத்தோடு வாழ விரும்பும் அவர்களது பாரம்பரியம்.

மேலும், காதல் வாழ்க்கையில் தலைவனைப் பிரிந்து வாழும் தலைவியின் துயரம் மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டப்படுகிறது. நாணமும் பயிர்ப்பும் உடைய பெண்ணின் தயக்கம் திரும்பி வரச் செய்கிறது. தலைவன்மீது கொண்ட அன்பு போகச் செய்கிறது. இது தலைவி தலைவன் மீது கொண்ட காதலையும், பிரிவினால் அவள் அடையும் துன்பத்தையும் வெளிப்படுத்துகின்றன. காதலர்களிடையே காணப்பட்ட அன்பை இப்பாடல் நமக்குப் புலப்படுத்துகிறது.

தமிழர்கள் தம் வாழ்க்கையை அகம் புறம் என்று பிரித்து வாழ்ந்தனர். தலைவனுக்கும் தலைவிக்கும் இடையேயுள்ள காதல் வாழ்க்கை அகத்துள் அடங்கும். அதற்குப் புறம்பான போர், கொடை போன்றவை புறமாகக் கருதப்படும். மேற்குறிப்பிட்ட இந்தப் பாடலில் முதல் வரி புறமும் இரண்டாவது வரி அகமும் ஆக அமைந்திருக்கிறது. இது இரண்டு வகைப் பண்பாட்டிற்கும் தமிழர் கொடுத்த சிறப்பை வெளிப்படுத்துகிறது.

4.1.2 பரந்துபட்ட மனமும் பண்பாடும் தொன்றுதொட்டே தமிழர்கள் உலகளாவிய நோக்கும் பரந்துபட்ட மனமும் கொண்டவர்கள். அதற்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் பல சான்றுகள் பகர்கின்றன.

இந்த உலகத்திலுள்ள மானிடர் யாவரும் ஓர் இனமே. எனவே அவர்கள் நம் உறவினர்கள். அதனால் அவர்கள் வாழும் ஊரும் நமது ஊர்களே. இத்தகைய ஒரு பரந்த மனப்பான்மையை

யாதும் ஊரே; யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

(புறம் : 192)

(யாதும் = எந்த ஊரும், கேளிர் = உறவினர், தீது = தீமை, வாரா = வராது)

என, கணியன் பூங்குன்றன் எனும் புலவர் குறிப்பிடுகிறார்.

சங்க காலத்தைச் சார்ந்த இந்தப் பாடலில் வரும் கருத்து, இந்தியச் சிந்தனைகளிலேயே மிகவும் புரட்சிகரமான ஒன்று. சாதிய அடிப்படையிலான இந்தியச் சமுதாய அமைப்பில், எல்லை கடந்த ஓர் உலகளாவிய பார்வை, தமிழர் பண்பாட்டின் உயர்ந்த நிலையைக் கூறுகிறது. மிகவும் பிற்பட்ட காலத்தில்தான் பெர்டர்ன் ரசல் (Bertand Russel) போன்றோர் ஓர் – உலகக் கோட்பாட்டை (One World) வெளியிட்டனர். ஆனால் தமிழர்கள் காலவரையறை சொல்ல இயலாத காலத்திலேயே உலகளாவிய தம் பரந்துபட்ட நோக்கை வெளிப்படுத்தியுள்ளனர். சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் சிந்தனை முதிர்ச்சியை எண்ணிப்பாருங்கள்.

4.1.3 நன்மையும் தீமையும் இதற்கு முன்பகுதியில் சுட்டிய பாடலின் இரண்டாவது வரியைச் சற்று நோக்குங்கள்!

தீதும் நன்றும் பிறர் தர வாரா

நமக்கு வரும் தீமையும் நன்மையும், பிறரால் நமக்கு வராது. நமது செயல்களாலேயே நமக்கு வந்து சேரும் என்பது இந்த வரியின் பொருள். இதனால் வெளிப்படும் செய்தி என்ன? சற்று சிந்தித்துப் பாருங்கள்!

பிறருக்குத் தீங்கு விளைவிக்க நினைக்காத மன இயல்பு வேண்டும். அத்தகைய பண்பாடு கொண்ட தமிழர் அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிடுகிறது இல்லையா?

4.1.4 பொதுநலமும் பண்பாடும் இந்த உலகத்தில் பல தீமைகள் நிகழ்கின்றன. இதற்குக் காரணம் தன் நலத்திற்காக எத்தகைய தீமைகளையும் செய்யத் துணியும் தீயவர்கள் பலர் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். இருந்தாலும் இந்த உலகம் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம்? சுயநலம் கருதாத பல நல்லவர்கள் இருக்கின்றார்கள். எத்தகைய நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கடலுள் மாய்ந்த இளம் பெரும்வழுதி எனும் புலவர் கீழ்க்குறிப்பிடும் பாடலில் சுட்டிக் காட்டுகிறார்.

உண்டால் அம்ம, இவ்வுலகம், இந்திரர்,

அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே. முனிவிலர்

துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழியெனின்

உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;

அன்ன மாட்சி அனைய ராகித்,

தமக்கென முயலா நோன்தாள்,

பிறர்க்கென முயலுநர் உண்மையானே

(புறம் : 182)

(தமியர் = தனித்து, இலரே = இல்லாதவர், முனிவு = கோபம், துஞ்சலும் இலர் = சோம்பி இருக்க மாட்டார்கள், அயர்வு = சோர்வு, அன்ன = அத்தகைய, மாட்சி = சிறப்பு, முயலா = முயற்சிக்காத, நோன்தாள் = வலிய முயற்சி)

தேவர் உலகத்தில் வாழ்பவர்கள் இந்திரர்கள். இவர்கள் உண்ணும் உணவு அமிழ்தம். இந்த அமிழ்தத்தை உண்ணுவதாலேயே இவர்களுக்குச் சாவு இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த அமிழ்தமே கிடைத்தாலும், சுயநலத்துடன் தாம் மட்டும் உண்ண மாட்டார்கள். எந்தச் சூழலிலும் சினம் கொள்ளமாட்டார்கள். பிறருக்கு நன்மை செய்வார்கள். பழியான ஒன்றைச் செய்வதற்கு உலகமே பரிசாகக் கிடைத்தாலும் பழியான செயல்களைச் செய்ய மாட்டார்கள். இவ்வாறு பிறருக்காக வாழும் பொதுநலம் படைத்தோர் இருப்பதால்தான் இந்த உலகம் வாழ்கிறது.

மேற்குறிப்பிட்ட பாடலின் வாயிலாக நாம் பெற்றுக் கொண்ட செய்தி யாது? தமிழர்கள் எவ்வளவு பெரிய சிறப்புக்குரிய பொருள் கிடைத்தாலும், தவறான செயல்களில் ஈடுபட மாட்டார்கள். பொது நலத்திற்காகவே எதையும் செய்வார்கள் – செய்ய வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்ந்திருக்கிறார்கள். அவ்வாறு வாழவும் வற்புறுத்தி அறிவுரை கூறியுள்ளனர். இது அவர்களது பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகிறது.

தமிழ் இலக்கியங்கள் தரும் இத்தகைய செய்திகள் எல்லாம் இலக்கியம் எவ்வாறு பண்பாட்டை வெளிப்படுத்துவதற்குரிய வாயில்களாகத் திகழ்கின்றன என்பதனை இயம்பும்.

4.2 கலைகளும் பண்பாடும்

‘கலை என்பது உணர்வின் வெளிப்பாடு. அது உணர்வை வெளியிடுவதுடன் பிறருக்கு அவ்வுணர்வை ஊட்டும் பெருமை உடையது’ என்பார் டால்ஸ்டாய். கலை கருத்தின் உறைவிடம்; அழகின் பிறப்பிடம்; மகிழ்ச்சியின் மாட்சி; நாகரிகத்தின் ஒளிவிளக்கு; பண்பாட்டின் உரைகல் என்று குறிப்பிடுவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கலையில் தமிழர்கள் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தனர். பல அரிய கலைகளைப் படைத்தனர். கலை உணர்வு கொண்ட தமிழர்களின் பண்பாட்டைத் தெரிந்து கொள்வதற்கு அவை அடிப்படைச் சான்றுகளாக அமைந்துள்ளன.

4.2.1 கட்டடக் கலை சிற்பம், ஓவியம் ஆகிய கலைகளுக்கு அடிப்படையாக அமைந்திருப்பது கட்டடக்கலை. தொழில்நுட்பம், அழகு, கற்பனை ஆகிய மூன்றும் இணைந்த ஒன்று கட்டடக்கலை.

மனித இனப் பண்பாட்டின் முன்னேற்றத்தைத் தெளிவாக அறிவதற்குக் கட்டடக்கலையே சான்று பகர்கின்றது.

கட்டடக்கலையும் தமிழர் பண்பாடும்

தொடக்கக் காலத்தில் சிறு குடிசை கட்டியதிலிருந்து, அரிய கலைகளின் கருவூலமாகக் காட்சியளிக்கும் கோயில்கள் கட்டப்பட்ட காலம் வரையிலும் கட்டடக்கலை பல்வேறு வகையான வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த வளர்ச்சி எதைக் காட்டுகிறது? தமிழர் தமது சமூக – சமயச் சூழல்களையும், வாழ்க்கை முறைகளையும் நோக்கங்களையும், நம்பிக்கைகளையும் வெளிப்படுத்துவதற்கு ஓயாமல் உழைத்து வந்திருக்கின்றனர். அவற்றின் வாயிலாகத் தம் பண்பாட்டுக் கூறுகளையும் புலப்படுத்தியுள்ளனர் என்பவை புலனாகும்.

தஞ்சைப் பெருவுடையார் கோயில்

சோழப் பேரரசில், முதலாம் இராசராசன் மிகச் சிறந்த ஒரு மன்னன். வெற்றி வீரனாகத் திகழ்ந்த இராசராசன், சிறந்த சமயப் பற்றும் கலைத்திறனும் உடையவன். அவன் எழுப்பியது தஞ்சைப் பெருவுடையார் கோயில்.

வியப்பு மிகு விமானம்

இக்கோயிலின் விமானம் அழகு மிகுந்த பிரமிடு போன்ற தோற்றம் உடையது. இதில் வெளிப்படும் கலையழகும், கட்டமைப்பும், நுட்பமும் தமிழர்களின் பண்பாட்டை உலகிற்கு எடுத்துரைக்கும் ஒரு சின்னம். இதன் விமானம் மாபெரும் தோற்றத்தோடு அழகு மிகுந்த வடிவம் உடையது. இதன் உயரம் 64.5 மீட்டர். இதோ அதைப் பாருங்கள்!

விமானத்தின் அடித்தளம் சதுரமாகவும் செங்குத்தாகவும் அமைந்திருக்கிறது. உச்சியில் கலசம் பொருத்தப்பட்ட வளைமாடம் (dome) உள்ளது. பதினாறு மாடங்களைக் கொண்ட பிரமிட் போன்ற உடற்கட்டு மேல்நோக்கி, வடிவில் குறுகிக் கொண்டே செல்லும். இதன் முடியின் பரப்பு அளவு, அடித்தளத்தின் பரப்பு அளவில் மூன்றில் ஒரு பகுதியாகும். அம்முடியின் அமைப்பு சதுரமான மேடைபோல் அமைந்துள்ளது. அதன் மீது, உள்நோக்கி வளைந்த கழுத்து அமைப்போடு கூடிய சிகரம் அமைந்துள்ளதைக் காணலாம்.

நிழல் விழாக் கலசம்

கோயிலின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள கலசத்தின் நிழல் கீழே தரையில் விழுவதே இல்லை. ஞாயிறு எத்திக்கிற்குச் சென்றாலும் கலசத்தின் நிழல் தரையில் விழாத வகையில், அதை அமைத்திருப்பது, தமிழர்கள் கட்டடக்கலையில் அடைந்துள்ள உயர்ந்த நிலையை வெளிப்படுத்துகிறது. அவர்கள் மதிநுட்பத்தையும் ஆற்றலையும், முருகியல் உணர்வினையும் உணர்த்துகிறது. சோழர்காலத் தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பிற்குத் தஞ்சைப்பெருவுடையார் கோயில் ஒரு சிறந்த சான்று.

4.2.2 ஓவியக் கலை தொல் பழங்காலம் முதலே மனிதன் தன் உள்ளத்தில் எழுந்த அழகு உணர்ச்சியைப் புறத்தே வடிவ அமைப்பில் காட்ட முயன்றான். அதன் வெளிப்பாடே ஓவியக்கலை.

குகைகளில் வாழ்ந்து வந்த கற்கருவிக் கால மனிதனும், குகைகளின் சுவர்களிலும், கூரைகளிலும் தான் கண்ட விலங்குகளையும், தன்னுடன் வாழ்ந்த மக்களையும், தனக்குக் கிடைத்த செம்மண்ணையும், கரியையும் குழைத்து ஓவியங்கள் வரைந்து, தன் கலை ஆர்வத்தைக் காட்டினான். மனிதனின் அழகு உணர்ச்சியையும், உள்ள நெகிழ்ச்சியையும் ஊற்றாகக் கொண்டு தோன்றிய ஓவியம் தமிழர்களின் பண்பாட்டைப் புலப்படுத்துவதற்குரிய அடிப்படைகளில் ஒன்று.

ஓவியக் கலையும் தமிழர் பண்பாடும்

போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரர்களுக்கு நினைவுச் சின்னமாக, கல்லில் அவர்களது உருவத்தினைச் செதுக்கி அவர்களது பெயரும், புகழும் பொறித்து நடுகல் நட்டு வழிபாடு செய்யும் வழக்கம் தமிழர்களிடம் இருந்தது. அவ்வாறு கற்களிலே வீரர்களின் உருவங்களைச் செதுக்குவதற்கு முன்னர், கல் தச்சர், தாங்கள் செதுக்க விரும்பும் உருவத்தை முதலில் வரைந்து பார்ப்பர். பின்பு அந்த ஓவியத்தைச் சுற்றிலும் செதுக்கிக் கல்லில் உருவம் அமைப்பார்கள். இதிலிருந்து ஓவியக் கலை உணர்வு தமிழர்களுக்கு இருந்திருக்கிறது என்பது பெறப்படும். மேலும், மகளிரும், ஆடவரும் தங்கள் தோள்களிலும், மார்புகளிலும் சந்தனக் குழம்பினால் மான், மயில், வல்லிக்கொடி முதலிய ஓவியங்களை வரைந்தனர் என்பது தொல்காப்பியத்தின் முலம் அறிய முடிகிறது.

மடலேறுதல்

அகப்பொருள் துறையில் ஒன்று மடலேறுதல். தலைவி மீது காதல் கொண்டுள்ள தலைவன், தன் காதலை ஊரார்க்கு வெளிப்படுத்த பனைக் கருக்கால் (மடலால்) குதிரை ஒன்று செய்து, அதன்மேல் அமர்ந்து தலைவியின் ஊரின் வீதிகளில் உலாவருவான். அப்பொழுது தன் கையில், தான் விரும்பும் தலைவியின் உருவத்தை ஓவியமாக வரைந்து, ஊரார் அறிய “இவளைத்தான் நான் விரும்புகிறேன்” என்று காட்டிக் கொண்டே வருவான். ஓவியத்தில் இருக்கும் உருவத்தைக் கொண்டு, அந்தப் பெண் யார் என்பதை அடையாளங்கண்டு கொள்வர். அந்த அளவுக்கு உருவ ஒற்றுமையுடன் அந்த ஓவியம் வரையப்பட்டிருக்கும். அது ஓர் உருவத்தைப் பார்த்த உடனே ஓவியமாக வரையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது.

தலைவி மீது தனது காதலை வெளிப்படுத்த தலைவியின் உருவம் பொருந்திய ஓவியத்தையும் ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறான் தலைவன். இது பண்டைத் தமிழ் மக்கள், முருகியல் உணர்வுக்கும் அதன் வெளிப்பாடான ஓவியத்திற்கும், காதலரிடையே உள்ள காதல் வெளிப்பாட்டிற்கும் கொடுத்த சிறப்பைப் புலப்படுத்தும்.

4.3 அகழ்வாராய்ச்சி

உலகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்த பண்டைய மக்கள், தனித்தும் பிறரோடு கலந்தும் பலவகை நாகரிகங்களையும் பண்பாட்டையும் வளர்த்து வந்தனர். கற்கால மக்கள் செம்பைப் பயன்படுத்தத் தொடங்கியதும் கல்லால் செய்யப்பட்ட பல பொருள்களைப் புறக்கணித்துவிட்டனர். பயன் இல்லாத மண்பாண்டங்களை விலக்கினர். இவ்வாறு நீக்கப்பட்ட அப்பொருள்கள் கவனிப்பு இல்லாமல் நாளடைவில் மண்ணுக்குள் புதையுண்டன.

மேலும் பண்டைய மக்கள் நல்லிடங்களைத் தேடி அடிக்கடி இடம் மாறித் திரிந்தனர். ஆதலின் ஆங்காங்குப் பழுது அடைந்த பொருள்களை விட்டுவிட்டுச் சென்றனர். அப்பொருள்கள் நாளடைவில் மண்ணுக்குள் புதைந்தன. ஆற்று ஓரங்களிலும் கடற்கரை ஓரத்திலும் வாழ்ந்த மக்கள் இயற்கைச் சீற்றத்திற்கு அஞ்சி இடம் பெயர்ந்தனர். இயற்கைச் சீற்றத்தாலும் பல்வேறு காரணங்களினாலும் மக்கள் பயன்படுத்தியவை மண்ணுள் மறைந்தன. ஆற்றின் அடியில் புதையுண்டன. பல சமவெளிகளில் மண்மேட்டினுள் புதைந்தன.

இங்ஙனம் புதைந்து கிடப்பவற்றைக் கண்டுபிடிக்க மண்மேடிட்ட இடங்களைத் தோண்டிப் பார்த்தனர். அவ்விடங்களில் காணப்படும் பல திறப்பட்ட பொருள்களை ஆய்ந்தனர். அவற்றைப் பற்றிய உண்மை மற்றும் அவற்றைப் பயன்படுத்திய மக்களின் வாழ்க்கை முறை ஆகியவை பற்றி அறிய முயன்றனர். இத்தகைய முயற்சியே அகழ்வாராய்ச்சி.

அகழ்வாராய்ச்சிகளின் பயன்

அகழ்வாராய்ச்சியின் வாயிலாக உண்மைச் செய்திகளையும் அவற்றைப் பயன்படுத்திய பண்டைய மக்களைப் பற்றிய செய்திகளையும் அறிந்து கொள்ள முடியும்.

அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் தொல் பழங்கால மக்களின் பண்பாட்டுக் கூறுகளான வாழ்க்கை முறை, நம்பிக்கை, சடங்கு, வழிபாடு, பேசிய மொழி, கலையார்வம் முதலியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

4.3.1 மொகஞ்சதாரோ – ஹரப்பா உணர்த்தும் பண்பாடு கி.பி. 1922-ஆம் ஆண்டுவரை வேத கால நாகரிகமே இந்தியாவின் தொல் பழங்கால நாகரிகமெனக் கூறப்பெற்று வந்தது. ஆனால் 1922-ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறையினர் சிந்து மாநிலத்தில் மொகஞ்சதாரோ என்னும் இடத்திலிருந்த ஒரு பெரிய மண்மேட்டைத் தோண்டி அகழ்வாராய்ச்சி நிகழ்த்தினர். அதன் வாயிலாக, அங்கு மண்ணுக்கு அடியில், ஓர் அழகிய நகரம் புதைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல மேற்குப் பஞ்சாப் மாநிலத்தில், ஹரப்பா என்னும் நகரம் புதைந்து கிடப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விடங்களில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடத்தி, மண்ணுக்கு அடியில் புதைந்து கிடந்த இந்த இரு நகரங்களைப் பற்றிய செய்திகளை உலகறியச் செய்தவர், தொல்பொருள் ஆய்வியல் அறிஞர். சர். ஜான் மார்ஷல் (Sir John Marshall) என்பவர். இப்புதையுண்ட நகரங்களைப் பற்றிய செய்திகளின் தொகுப்பு. பிற்காலத்தில், சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilization), ஹரப்பா பண்பாடு (

arappan Culture) என்ற தலைப்புகளில் அறியப்படலாயின.

சிந்துவெளி நாகரிகமும் தமிழர்களும்

சிந்துவெளி நாகரிகத்தைத் திராவிடர் நாகரிகம் (தமிழர் நாகரிகம்) என்று கூறுவதற்கு அங்குத் தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களும், வெளிப்பட்ட கட்டட அமைப்பும், பயன்படுத்திய நாணயங்களும் சான்றாக அமைந்துள்ளன. இவ்வுண்மையை, சர். ஜான் மார்ஷல், சர். மார்டிமர் வீலர் (Sir Mortimer Wheeler), ஹிராஸ் பாதிரியார் (Father

eros) போன்ற தொல்லியல் அறிஞர்கள் தங்கள் ஆய்வு முடிவுகளாக வெளியிட்டுள்ளனர். மேலும் டாக்டர் எச்.ஆர். ஹால் (Dir.

.R.

all) என்ற வரலாற்று அறிஞர், சமீப கிழக்கின் தொன்மை வரலாறு (Ancient

istory of the Near East) என்ற நூலிலும் பல சான்றாதாரங்களுடன் நிறுவியுள்ளார்.

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் என்பவரும், மொகஞ்சதாரோ முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள் தமிழ் – பிராமி எழுத்துகளை ஒத்திருக்கின்றன என்று குறிப்பிடுகின்றார். மேலும் அங்குக் கிடைத்துள்ள பல தகவல்கள் எந்த வகையில் தமிழோடும் தமிழர்களோடும் தொடர்புடையன என்பதையும் தம் ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளார்.

மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் எனவும், தமிழர் நாகரிகமும் பண்பாடும் இந்திய நாடு முழுவதும் பரவியிருந்தது எனவும் வரலாற்றுப் பேராசிரியர் கே.கே. பிள்ளை போன்றோர் குறிப்பிடுகின்றனர்.

சிந்துவெளி புலப்படுத்தும் தமிழ்ப்பண்பாடு

சிந்து வெளியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட நகரங்களின் இல்லங்கள் வரிசையாகக் கட்டப்பட்டுள்ளன. மாட மாளிகைகள், மண்டபங்கள், நீராடும் குளம், கழிவு நீர்ப்பாதைகள் ஆகியவையும் காணப் பெறுகின்றன. எளிமையான வீடுகளிலும் தனித்தனியே சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறை முதலியன இடம் பெற்றிருந்தன.

கற்பனையும், அழகும், தொழில் நுட்பமும் பொருந்திய கட்டடக் கலை மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியைப் புலப்படுத்தும் என்பதை முன்னரே பார்த்தோம். மனிதன், தன் வாழ்க்கை நோக்கத்தையும், அழகு உணர்வோடு கூடிய பயன்பாட்டையும், தான் அமைக்கும் கட்டடங்களில் வெளிப்படுத்து கின்றான். இது அவனது பண்பாட்டுக் கூறுகளில் சிறப்புடையது. சிந்துவெளி நாகரிகம் வாயிலாக வெளிப்படும் தமிழர் பண்பாடு இதைத்தான் நமக்குப் புலப்படுத்துகிறது.

4.3.2 அரிக்கமேடு அகழ்வராய்ச்சி உணர்த்தும் பண்பாடு புதுச்சேரிக்கு அருகாமையில் உள்ள அரிக்கமேடு என்ற இடத்தில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சியும் தமிழர் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துகின்றது.

அரிக்கமேடு அகழ்வராய்ச்சியில் கிடைத்தவை

இங்கு மண்பாண்டங்கள் பல கிடைத்துள்ளன. விற்பனைச் சாலைகள், பண்டகச் சாலைகள் முதலியவை இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இவற்றிலிருந்து என்ன புலப்படுகிறது? தொல் பழங்காலத் தமிழ் மக்கள் செம்மைப்பட்ட வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்தனர் என்பது புலப்படுகிறது. இத்தகைய வாழ்க்கை முறை அவர்களது தொன்மையான பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.

4.3.3 ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி உணர்த்தும் பண்பாடு இந்தியாவிலேயே மிகப் பெரிய அகழ்வாராய்ச்சியாகக் கருதப்படுவது, திருநெல்வேலி பக்கத்திலுள்ள ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியாகும். இங்கு மனித எலும்புக்கூடுகள், மெருகிட்ட மண்பாண்டங்கள், இரும்பாலான சில கருவிகள், பொன்னாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட அணிகலன்கள், சிறு வேல்கள் ஆகியவை அடங்கிய தாழிகள் பல கிடைத்துள்ளன.

தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று தாழிகள் அமைத்தல். இறந்தோரைப் புதைப்பதற்காகத் தாழிகளை நம் முன்னோர் பயன்படுத்தி உள்ளனர். அத்தாழிகளில் இறந்தோரைப் புதைக்கும் பொழுது, அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும், விரும்பிய பொருள்களையும், இறந்தோர் உடலுடன் புதைத்த பழைய மரபை அகழ்வாராய்ச்சியின் மூலம் அறிய முடிகிறது. இன்றைக்கும் சில இடங்களில் இந்தப் பழைய மரபு பின்பற்றப்படுகிறது.

தாழிகளைத் தோண்டி எடுத்ததின் மூலம், தமிழர் பண்பாட்டுக் கூற்றை வெளிப்படுத்தும் பழக்க வழக்கத்தையும், நம்பிக்கையையும் அறிய முடிகிறது.

4.4 கல்வெட்டுகள்

பழங்கற்கால மக்கள் ஓரிடத்திலும் நிலையாகத் தங்கி வாழ்ந்து வந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டே இருந்தனர். பெரும்பாலும் சமவெளியில் வாழ்ந்து வந்தனர். சிற்சில நேரங்களில் காட்டு விலங்குகளுக்கு அஞ்சி மலைக் குகைகளில் ஒடுங்கி வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

தமிழிலுள்ள படிக்கும் நிலையிலுள்ள மிகப் பழைய வரி வடிவம், தமிழ் – பிராமி வரிவடிவமாகும். தமிழகப் பிராமிக் கல்வெட்டுகள் பிராகிருதச் சொற்கள் கலந்து தமிழ் மொழியிலே எழுதப்பட்டன எனப் பேராசிரியர் கே.கே.பிள்ளை, கமில் சுவெலபில், பேராசிரியர் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் போன்றோர் குறிப்பிடுகின்றனர்.

கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள செய்திகளிலிருந்து, கல்வெட்டு எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். அவற்றின் மூலம் அவர்களது பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்து கொள்ளலாம்.

4.4.1 கல்வெட்டு உணர்த்தும் பண்புகள் தமிழகத்திலுள்ள மாங்குளம் என்ற பகுதியில் ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது. இது நெடுஞ்செழியன் என்ற மன்னன், சமண குருக்களுக்குக் குகைத்தானம் செய்த செய்தியைக் குறிப்பிடுகிறது.

இன்னொரு இடமாகிய புகளூர் என்ற பகுதியில் ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது. இதில் நெடுஞ்செழியன் என்ற மன்னன், சமண குருக்களுக்குக் குகைத்தானம் செய்த செய்தி இடம் பெற்றுள்ளது.

மேற்குறிப்பிட்ட கல்வெட்டுச் செய்திகளிலிருந்து பண்டைத் தமிழ் மன்னர்களின் ஈகைக் குணத்தை அறிய முடிகிறது.

கல்வெட்டுச் செய்திகள்

மேலும் அரசாங்கம் பெற்ற வரிகள், கோயில் அலுவலர்களின் தனித்தனிப் பணிகள், கோயிலைச் சார்ந்த நகைகள், சொத்துகள் உட்பட, பல செய்திகள் சோழர் காலக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இவை அக்கால ஆட்சி முறையையும், வழிபாட்டையும் அறிந்து கொள்வதற்கு உரிய சான்றுகளாக உள்ளன.

4.5 நாணயங்கள்

பண்பாட்டுக் கூறுகளை அறிவதற்குக் கல்வெட்டுகள் எவ்வாறு ஒரு மூலமாக அமைந்துள்ளதோ, அதைப்போல, நாணயங்களும் அமைந்துள்ளன.

கூடி வாழத் தொடங்கிய மனிதன், கொடுக்கல் வாங்கலைப் பண்டமாற்றுதலிலேதான் தொடங்கினான். பின்னர் பொருட்களின் பெறுமதியைக் குறிக்கும் மையப் பொருட்களாகச் சோழிகள், குன்றிமணிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினான்; பிற்காலத்தில், பொருட்களின் பெறுமதியைத் தகுந்த முறையில் ஈடு செய்யும் சாதனங்களாக நாணயங்கள் உருவாக்கப்பட்டன. நாணயங்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்திலேயே காணப்படுகின்றன.

நாணயங்கள் வெளிப்படுத்தும் செய்திகள்

நாணயங்களின் அமைப்பு, பயன்படுத்திய உலோகங்கள், அடையாளங்கள், குறியீடுகள், எண்கள் முதலியன அக்கால மக்களின் இயல்புகளைச் சுட்டிக் காட்டுகின்றன. இவை பயன்படுத்தப்பட்ட இடங்கள் குறிப்பிட்ட காலத்து அரசியல், வாணிபம், பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்துவனவாகவும் திகழ்கின்றன.

4.5.1 சோழர் கால நாணயங்கள் சங்க காலச் சேரர் தலைநகரான கரூரில், அமராவதி ஆற்றுப்படுகையில், சங்ககாலச் சோழர் காசு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. காசின் முன்பக்கத்தில் காளை உருவம் நின்ற நிலையில் காணப்படுகிறது. காளையின் கீழே நந்திப் பாதச் சின்னங்கள் காணப்படுகின்றன. பின்பக்கத்தில் புலி உருவம் கோடுகளினால் வரையப்பட்டுள்ளது. காசின் வடிவம் நீள்சதுர வடிவத்தில் அமைந்துள்ளது. காசில் உள்ள காளை, அச்சுக் குத்திய வெள்ளி முத்திரை நாணயங்களில் உள்ள காளையைப் போலவே உள்ளது. எனவே இந்தச் செப்புக்காசு வார்ப்பு முறையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்தக் காசில் வார்ப்பு முறையும், முத்திரை முறையும் கலந்து உள்ளது. இந்தக் காசின் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என ஆறுமுக சீதாராமன் போன்ற தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே, கி.மு. 3-ஆம் நூற்றாண்டளவில் வார்ப்பு முறையில் காசைத் தயாரிக்கவும், பயன்படுத்தவும் தமிழர்கள் அறிந்திருக்கின்றனர். இது அவர்களின் மேம்பட்ட வாழ்விற்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது.

4.5.2 பாண்டியர் நாணயங்கள் முதன் முதலாக முத்திரை நாணயங்களை வெளியிட்டவர்கள் பாண்டியர்கள். இதைத் தொடர்ந்து செப்பு நாணயங்களை வெளியிட்டார்கள். இவர்கள் வெளியிட்ட செப்பு நாணயம் சதுர வடிவமானது. முன்பக்கத்தில் இடது பக்கம் நோக்கி நிற்கும் குதிரை காணப்படுகிறது. இதன் தலையின் கீழ் ஆமைகள் இரு தொட்டிகளில் உள்ளன. பின்பக்கத்தில் உருவகப்படுத்தப்பட்ட மீன் உள்ளது. தமிழ் – பிராமி வரி வடிவடிவத்தில் பெருவழுதி என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இது கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கும் என்று நம்புகின்றனர்.

இதில் காணப்படும் ஆமை, வேள்வியோடு தொடர்புடையது. இது பாண்டியர் வேள்வி மீது கொண்டிருந்த ஈடுபாட்டினை வெளிப்படுத்துகிறது. இதைப்போல, நாணயத்தில் இடம் பெற்ற அடையாளங்களைக் கொண்டு, அக்கால மக்களின் நம்பிக்கை, அரசர்களின் இயல்புகள் ஆகிய பண்பாட்டுக் கூறுகளை அறிய இயலும்.

4.5.3 உரோமானிய நாணயங்கள் தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் உரோம நாட்டுடன் வாணிபத் தொடர்பு இருந்திருக்கிறது. இதற்குத் தமிழகத்தில் கிடைத்த உரோமானியக் காசுகள் சான்று பகர்கின்றன.

சேரநாட்டின் மிளகு, பாண்டிய நாட்டின் முத்து, சோழநாட்டின் துணிவகைகள் உரோமநாட்டு மக்களை மிகவும் கவர்ந்தன. உரோமானியர்கள், பொன், வெள்ளி ஆகியவற்றால் செய்த காசுகளைக் கொடுத்து தமிழ்நாட்டிலுள்ள மேற்குறிப்பிட்ட பொருட்களை வாங்கியுள்ளனர். இதற்குச் சான்றாகப் பல உரோமானியக் காசுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளன.

எடுத்துக்காட்டாக, உரோமானிய வெள்ளிக் காசு ஒன்று கொங்கு நாட்டிலுள்ள திருப்பூரில் கிடைத்துள்ளது. இது ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற தமிழர்களின் குறிக்கோளுக்கு ஏற்ப, கடல் கடந்தும் பிற அயல்நாடுகளுடன் தமிழர்கள் கொண்ட வணிகத் தொடர்பைப் புலப்படுத்துகிறது.

இத்தகைய தொடர்பால், கருத்துப் பரிமாற்றங்களும், பண்ட மாற்றங்களும், பண்பாட்டுத் தாக்கங்களும் நிகழ்ந்துள்ளமையை அறிய முடிகிறது.

4.6 மெய்க்கீர்த்திகள்

மன்னர்களின் ஆணை, ஊர் மன்றச் செயல்கள், புலவர் பாடல்கள் போன்றவை துவக்கத்தில் ஓலைகளில் எழுதப்பெற்றன. பின்னர் அழியக்கூடிய ஓலையிலிருந்து அழியாத் தன்மை உடைய செப்பேடுகளில் செய்திகள் பொறிக்கப்பட்டன. இதில் திருத்தி அமைக்கும் வாய்ப்பு இருந்தது. உலோகத் தகடுகளால் ஆகிய செப்பேடுகளும் மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட போர்களினால் அழிந்தன. எனவே வன்மைப் பொருளாகிய கல்லில், அரசர்களின் ஆணைகள், ஆட்சி முறை, போர்கள், பண்பு நலன்கள் ஆகியவற்றைப் பதிவு செய்தனர். அவையே பிற்காலத்தில் மெய்க்கீர்த்தி என அழைக்கப்பட்டன.

மன்னர்களைப் பற்றிய உண்மையான (மெய்) செய்திகளை, குறிப்பாக அவர்கள் புகழைப் புகழ்ந்து கூறுவதால் அதை மெய்க்கீர்த்தி என அழைத்தனர்.

(மெய் = உண்மை, கீர்த்தி = புகழ்)

முதலாம் இராசேந்திரனின் மகன் இராசாதிராசனைப் பற்றிய மெய்க்கீர்த்தி கீழ்க்குறிப்பிடுமாறு கூறுகிறது.

வீரமே துணையாகவும்

தியாகமே அணியாகவும்

கொண்ட மாமன்னன்

இம்மெய்க்கீர்த்தி, இராசாதிராச மன்னன், சிறந்த வீரனாய்த் திகழ்ந்தான் என்பதையும், மக்களின் நலத்திற்காக எத்தகைய தியாகத்தைச் செய்வதற்கும் துணிந்தவன் என்பதையும் வெளிப்படுத்துகிறது.

இதிலிருந்து என்ன புலப்படுகிறது? மன்னன், மக்களைப் பகைவரிடம் இருந்து காப்பாற்றும் ஆற்றல் மிகு வீரனாகவும், மக்களின் நலத்திற்காக, எதையும் தியாகம் செய்யும் மனப்பக்குவம் பெற்றவனாகவும் இருந்திருக்கிறான் என்பது புலப்படுகிறது. அத்தகையோரை மக்கள் விரும்பினார்கள் என்பதுவும், அத்தகையோரைப் பற்றியே மெய்க்கீர்த்திகள் எழுதினார்கள் என்பதுவும் தெரிகிறது. இவ்வாறு மெய்க்கீர்த்திகளும், பண்பாட்டுக் கூறுகளை அறிவதற்குரிய வரலாற்றுச் சான்றுகளாகத் திகழ்கின்றன.

4.7 தொகுப்புரை

தமிழ் மக்களின் பண்பாட்டை அறிந்து கொள்வதற்குரிய சான்றுகளாக, அமைந்துள்ளவை பல. அவற்றுள் இலக்கியம் சிறப்பு வாய்ந்தது. பண்டைத் தமிழ் இலக்கியங்கள், காதலர்களிடையே உள்ள அன்பை வெளிப்படுத்துகின்றன. மேலும் தம் வறுமை நிலையிலும் மானத்தோடு வாழ விரும்பும் மக்களையும் எடுத்துக் காட்டுகின்றன. சாதி சமய வேறுபாடு இன்றி உலகிலுள்ள அனைவரும் உறவினரே என்று எண்ணும் தமிழர்களின் பரந்த மனப்பான்மையையும் புலப்படுத்துகின்றன. பிறருக்குத் தீமை செய்ய நினைத்தால், தனக்கும் தீமை விளையும். எனவே பிறருக்கு நன்மை செய்யுங்கள். இத்தகைய பரந்த மனப்பான்மையும், சுயநலமில்லாத பொதுநலமும் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்ற தமிழர்களின் மனப்பக்குவத்தையும் அதன் வெளிப்பாடான பண்பாட்டுக் கூறுகளையும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

இலக்கியங்களைப் போல, தமிழர்களின் கலைகளும் தமிழர்களின் பண்பாட்டைப் புலப்படுத்துவதற்கு உரிய சான்றுகளாகத் திகழ்கின்றன. மனிதனின் அழகு உணர்ச்சியையும், முயற்சியையும், வளர்ச்சியையும் வெளிப்படுத்தும் கட்டடக்கலை தமிழர்களின் பண்பாட்டிற்கு உரிய சிறந்த சான்று. எடுத்துக்காட்டாகத் தஞ்சாவூரில் அமைந்துள்ள பெருஉடையார் கோயிலும், பிற ஓவியங்களும் தமிழர் பண்பாட்டிற்குச் சான்று பகர்கின்றன.

அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்த தகவல்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், மெய்க்கீர்த்திகள் ஆகியவையும் தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன.

பாடம் - 5

தமிழர் பண்பாட்டு அடிப்படைகள்

5.0 பாட முன்னுரை

தமிழர் பண்பாட்டில் குறிப்பிடத்தக்க சில அடிப்படைகள் உள்ளன. இப்பண்பாட்டு அடிப்படைகளைக் கூர்ந்து நோக்கினால்

1. இயற்கையோடு நெருக்கமான உறவு

2. பலரும் போற்ற வாழும் புகழில் விருப்பம்

3. பழி வராமல் தற்காத்துக் கொள்ளும் பண்பு

4. எல்லா உயிர்களிடத்தும் அன்பு

5. மானுட வாழ்வில் நாகரிக வரம்புகளை மீறாமை

6. மனத்தின் தூய்மையை எல்லாவற்றுக்கும் மேலாகப் போற்றுதல்

7.மானத்தையும் ஒழுக்கத்தையும் உயிரைவிட மதிப்புமிக்கனவாகக் கொள்ளுதல்

ஆகிய ஏழு செய்திகள் புலப்படும். இவற்றின் விளக்கத்தை இப்பாடத்தில் காணலாம்.

5.1 பண்பாட்டு அடிப்படைகள் - I

திரைப்படம் பார்க்கும் நாம், சில காட்சிகள் நம் பண்பாட்டுக்கு ஒவ்வாதன என்று கருதுகிறோம். ஆங்கிலப் படத்தில் காதலன் காதலியை முத்தமிடுவது காட்டப்பெறுகிறது. தமிழ்ப்படத்தில் அத்தகைய காட்சியைக் காட்ட அனுமதி இல்லை. ஏன்? அதுதான் பண்பாடு. இத்தகைய காட்சியைத் தமிழர் பண்பாடு ஒத்துக் கொள்ளவில்லை. முத்தம் என்பது வாழ்க்கையில் இல்லையா? இருக்கிறது. ஆனால் இது பிறர்முன் நிகழ்வதில்லை. தாய் குழந்தையை முத்தமிடும் காட்சி அனுமதிக்கப்படுகிறது. ஆனால் காதலர் முத்தம் காட்சிப் பொருளாக அனுமதிக்கப்படுவதில்லை. வயது வந்த பெண்ணைத் தந்தை அன்புடன் தழுவிக்கொள்ளும் நிகழ்ச்சியைத் தமிழர் இல்லங்களில் காணமுடியாது. இவையெல்லாம் பண்பாட்டின் தனித்தன்மைகள். இவற்றுக்கு ஓர் அடிப்படை இருக்கிறது. அந்த அடிப்படை பாலுணர்வில் சில நாகரிக வரம்புகளைப் பேணுதலாகும். இத்தகைய அடிப்படைகள் சிலவற்றை இங்கே காணலாம்.

5.1.1 புகழ் புகழ்பெற வேண்டும் என்ற விருப்பம் உலகத்தில் எல்லார்க்கும் உரியதுதான். செய்தித்தாளில் பெயர் வருவது, புகைப்படம் வெளியிடப்படுவது, பலர்முன் மாலை சூட்டப்பெறுவது, பலர் கையொலி எழுப்பிப் பாராட்டுவது, மேடையில் புகழ்ந்து உரைக்கப் பெறுவது, தெருக்களில் வளைவுகள் வைத்து வரவேற்பது, ஊர்வலமாக அழைத்து வருவது ஆகியவற்றில் பலரின் கவனத்தைக் கவர்தற்கு வாய்ப்புகள் உள்ளன. மற்றவர்களைவிட நாம் சிறந்தவர் என்ற பெருமித உணர்வில் பலர்க்கும் நாட்டம் இருக்கவே செய்யும். இந்தப் புகழ் விருப்பமே சமூகத்தில் பல அறச்செயல்கள் நடக்க அடிப்படையாகும். தமிழரின் புகழ்விருப்பம் சில தனித்தன்மைகளைக் கொண்டது.

பெரிய கோபுரத்தைக் கட்டியவனின் பெயரை எங்கும் காணவில்லை.

கல்லணையைக் கட்டியவன் பெயர் எங்கும் பொறிக்கப் பெறவில்லை.

திருப்பரங்குன்றச் சிற்பங்களைச் செய்தவன் பெயர் தெரியவில்லை.

தமிழ்விடுதூது என்னும் சிறந்த நூலை எழுதிய ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.

இன்னும் எத்தனையோ? தங்கள் பெயரை வெளியிட்டுப் புகழ்தேடிக் கொள்ளாத நல்ல உள்ளங்கள் இருக்கின்றன. இவர்கள் நல்ல செயல்கள் நடந்தால் போதும் நம் பெயர் தெரிய வேண்டியது இல்லை என்ற உணர்வுடையவர்களாக இருந்தனர்.

புகழ்எனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்

(புற: 185-5)

என்று சங்ககாலப் புலவர் கூறுகின்றார். புகழுக்காக உயிரையும் கொடுப்பார்கள். பழியை உலகத்தோடு சேர்த்துத் தந்தாலும் பெறமாட்டார்கள். இத்தகைய தன்னலமற்ற பெரியோர்களால்தான் உலகமே நிலைபெற்றிருக்கிறது என்று அப்புலவர் பாடுகின்றார்.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதுஒன்று இல்

(குறள் :233)

என்பர் திருவள்ளுவர். இதன் பொருள் என்ன தெரியுமா? புகழுக்கு நிகராக இந்த உலகத்தில் இறவாது நிற்பது வேறொன்றில்லை என்பது இதன் பொருள்.

5.1.2 வீரம் வீரப்பண்பு பெருமை தரத்தக்க பண்புகளில் ஒன்று. ஆண்மக்களுக்கு வீரம் திருமணத்திற்குரிய ஒரு தகுதியாகவும் கருதப்பட்டது. வில்லை முறிப்பவர்கள், குறிபார்த்து ஒன்றை வீழ்த்துபவர்கள், காளையை அடக்குபவர்கள், பகைவர் கொண்டு சென்ற பசுமாடுகளை மீட்டு வருபவர்கள் ஆகியோரை மணந்து கொள்ளப் பெண்கள் முன்வந்த நிகழ்ச்சிகள் பல உள்ளன. வீரம் இரண்டு வகைப்படும்.

புறத்தே வரும் பகையைத் தன் போர்த்திறனால் வெல்லுதல்.

அகத்தே தோன்றும் மன அசைவுகளை, ஆசைகளை, புலன் விருப்பங்களை அடக்கி ஆளுதல்.

முதலாவது வீரத்தைவிட இரண்டாவது வீரம் பெருமைக்குரியதாக இருந்தது. புலன்களை வென்ற சமய முனிவர் மகாவீரர் என்று அழைக்கப்பட்டார். பழந்தமிழர் வீரப்பண்பாட்டில் குறிப்பிடத்தக்க கூறுகள் உண்டு. அவையாவன :

தனக்குச் சமமானவனோடு மட்டும் போரிடுதல்.

முதுகு காட்டுபவனைத் தாக்காமை.

மார்பில் வந்து தைத்த வேல் முதுகை ஊடுருவிப் போதல் மானக்கேடு என்று கருதுதல்.

போரில் மார்பில் புண்பட்டு இறப்பவரே வானஉலகம் செல்ல முடியும் என்ற நம்பிக்கை.

யானையை அடக்கி வெல்லும் வீரம் ஆண்மகனுக்கு வேண்டுமெனக் கருதினர் பழந்தமிழர். மார்பில் தொண்ணூற்றாறு புண்களை ஒரு சோழ அரசன் பெற்றிருந்ததாக வரலாறு கூறுகின்றது. போர்க்களத்தில் வீரன் ஒருவன் கையிலே இருந்த வேலை ஓர் ஆண்யானையின்மீது செலுத்தினான். அடுத்தபடி வந்த யானையைத் தாக்க என் செய்வது என்று கருதியபோது அவன் உடலில் தைத்திருந்த வேல் நினைவுக்கு வரவே அதனைப் பறித்து மகிழ்ச்சியடைந்தான் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

5.1.3 மானம் சேரன் வடக்கிருத்தல்

தனது நிலையிலிருந்து ஒருவன் தாழ்வு அடையக்கூடாது. அப்படித் தாழ்வு அடைய வேண்டிய நிலை வருமானால் அவன் உயிர் வாழக்கூடாது. இதைத்தான் மானம் என்பர். காட்டிலே திரியும் கவரிமானைப் பாருங்கள். மயிரை இழந்தால் கவரிமான் இறந்துவிடும். மனிதனும் மானத்தை இழக்க வேண்டிய சூழலில் உயிரை விட்டுவிட வேண்டும் என்று கருதினர் தமிழர்.

கரிகாலன் என்ற சோழ அரசனும், பெருஞ்சேரலாதன் என்ற சேர அரசனும் போரிட்டனர். கரிகாலனின் வேல் சேரனின் மார்பில் தைத்து ஊடுருவி முதுகுவழியே போயிற்று. மானம் போய்விட்டதாகக் கருதிய சேரன் வடக்கு நோக்கி உட்கார்ந்து உண்ணாநோன்பிருந்து உயிர் விட்டான். மானம் மிக்க அரசன் ஒருவன் வரலாறு இது. மானத்தைப் பிற்காலத்தில் தன்மானம், சுயமரியாதை என்றும் கூறினர்.

5.2 பண்பாட்டு அடிப்படைகள் - II

இல்லறம் செய்பவர்களுக்குச் சில கடமைகளை நம் பண்பாடு வகுத்துக் கொடுத்துள்ளது. தன் மனைவி மக்களுக்கென்று மட்டும் பொருள் சம்பாதித்து வாழ்கின்ற வாழ்க்கையாக அஃது இருக்கக் கூடாது. தம் வீட்டுக்கு வருகின்ற விருந்தினரை வரவேற்றுப் பேணுதல், பிறருக்குப் பொருள் வழங்குதல், முடிந்த உதவிகளைச் செய்தல், பொது நன்மைக்காகத் தாம் சில துன்பங்களைத் தாங்குதல் ஆகியன பண்பாட்டுச் செயல்கள் என்று போற்றத்தக்கன. இப்பண்பாட்டுச் செயல்களின் அடிப்படைகளை இங்குக் காணலாமே!

5.2.1 விருந்தோம்பல் தமிழகத்தில் உள்ள தென்மாவட்டத்தில் உள்ள இளையான்குடி என்ற ஓர் ஊர் உள்ளது. இங்கே மாறனார் என்று ஒருவர் இருந்தார். அவர் உழவுத்தொழில் செய்பவர். அவருக்குச் சிறிதளவு நிலம் இருந்தது. அதில் வந்த வருவாயைக் கொண்டு விருந்தினர்க்கு உணவு படைத்து வந்தார். ஒரு மழைக்காலம். இரவுநேரம். அப்பொழுது ஒரு விருந்தினர் அவரைத் தேடி வந்தார். மாறனார் வீட்டில் அரிசி ஒரு மணிகூட இல்லை. காலையில்தான் வீட்டிலிருந்த விதை நெல்லைக் கொண்டுபோய் நாற்றங்காலில் விதைத்து விட்டு வந்திருந்தார். ஒன்றும் இல்லை என்று சொல்ல மனம் இல்லை. விருந்தாளியை வீட்டில் காத்திருக்கக் கூறிவிட்டுக் கொட்டும் மழையில் வயலை நோக்கி நடந்தார். காலையில் விதைத்த விதைநெல்லை அரித்தெடுத்தார். வயலில் முளைத்திருந்த கீரையையும் பறித்து வந்தார். மாறனார் மனைவி நெல்லைக் குத்தி அரிசியாக்கிச் சோறு சமைத்தார். கீரையையும் சமைத்தார். விருந்தினர்க்கு உணவு இடப்பட்டது. வந்த விருந்தினர் யார் தெரியுமா? மாறனாரின் விருந்தோம்பும் பண்பாட்டைச் சோதிக்க வந்த சிவபெருமானே அந்த விருந்தாளியாவார். இந்தச் செய்தி காட்டும் விருந்தோம்புதல் வழக்கமான எல்லைகளைக் கடந்தது இல்லையா?

5.2.2 ஈகையும் ஒப்புரவும் முல்லைக்குத் தேர்

ஈகை என்பது பொருள் வசதியுள்ளவர்கள் இல்லாதவர்களுக்குப் பொருள் அளவில்லாமல் வாரி வழங்குவதாகும். கடையெழு வள்ளல்களைப் பற்றி நீங்கள் கேட்டதில்லையா? பாரி என்பவன் முல்லைக்கொடி வாடுகிறதே என்று தேரைக் கொடுத்தான். முல்லைக் கொடிக்குப் போய்த் தேரை வழங்குவதா என்கிறீர்களா? எதற்கு எதைக் கொடுப்பது என்று தெரியாத இந்தத் தன்மைக்குத்தான் கொடைமடம் என்று பெயர். கொடுப்பவன் தன் தகுதியும் உள்ள உயர்வும் புலப்படக் கொடுக்கும்போது கொடைப்பொருளும் உயர்ந்ததாகி விடுகிறது.

மயிலுக்குப் போர்வை

பேகன் என்பவன் என்ன செய்தான் தெரியுமா? ஒரு மழைக்காலத்தில் மயில் குளிரில் உலாவிக் கொண்டிருந்தபோது அது குளிரில் வருந்துவதாகக் கருதி ஓர் அழகிய போர்வையைக் கொடுத்தானாம். ஒரு தேரையும் போர்வையையும் கொடுத்த இந்த வள்ளல்களின் செயல்களிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகின்றது?

ஒரு கொடியும் பறவையும்கூடத் துன்பப்படக்கூடாது என்று அவர்கள் நினைத்தார்கள் என்றால் அரசர்களாகிய அவர்கள் தம் ஆட்சியில் மக்களை எப்படிக் காப்பாற்றியிருப்பார்கள் என்பதை உணரமுடியும் அல்லவா? உண்டாரை நெடுங்காலம் வாழவைக்கக்கூடிய நெல்லிக்கனியை அதியமான் ஒளவையாருக்குக் கொடுத்தான். ஆய் வள்ளல் தன்னை நாடி வந்த பரிசிலர்களுக்கு யானைகளைத் தந்தான். காரி என்பவன் எந்த நேரத்திலும் எளியவர்களுக்குப் பெரும்பரிசில்கள் தந்தவன். ஓரி தன்னை அடையாளம் தெரியாதவர்களிடம் தன் பெயரையும் சொல்லாமல் பொன்னையும் மணியையும் பரிசில்களாகத் தந்தவன். நள்ளி என்பவன் தான் இன்னான் என்று பிறரிடம் தெரிவிக்காமல் பிறருக்கு வேண்டியன எல்லாம் கொடுத்து விருந்தோம்பியவன். இத்தகைய வள்ளன்மைப் பண்பு தமிழகத்தில் தொடர்ந்து வந்துள்ளது.

ஒப்புரவு என்பது உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் தம்மால் முடிந்த உதவிகளை எந்தப் பயனையும் எதிர்நோக்காமல் செய்தலாகும். மேகம் மழை பொழிவது போல் வழங்குதல் ஒப்புரவாகும். மருந்துமரம் இலையும் கனியும் காயும் பட்டையும் கொடுத்து உதவுதல் ஒப்புரவாகும்.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு

(குறள் : 215)

என்கிறார் திருவள்ளுவர். இதோ ஓர் ஊருணியைப் பாருங்கள். ஊருணி என்றால் குடிநீர்க்குளம் என்று பொருள். ஊருணியில் நிறைந்த நீரை எல்லா மக்களும் கொள்ளுவது போல அறிஞனின் செல்வமும் எல்லார்க்கும் பயன்படும் என்கிறார். ஒப்புரவு தமிழரின் குறிப்பிடத்தக்க பண்பாகும்.

5.2.3 பொதுநலம் பேணுதல் தமிழர் பொதுநலம் கருதி வாழும் பண்புடையவர். இதோ இந்தக் கல்லைப் பாருங்கள். இக்கல்லுக்குப் பெயர் ஆவுரிஞ்சுகல் என்பதாகும். பசுவுக்கு முதுகு தினவெடுத்து அரிக்கும்போது உராய்ந்து கொள்ள இந்தக் கல் பயன்படும் என்று கருதிப் பசுக்கள் உலாவும் இடங்களில் இதனை நட்டு வைப்பர். ஒரு விலங்கின் தேவையைக்கூட நினைந்து செயலாற்றும் பண்பாட்டைப் பாருங்கள்.

பழங்காலத்தில் வீடு கட்டும்போது சிட்டுக்குருவிகள் வந்து தங்குவதற்கு மரத்தடுப்பு வைத்திருப்பார்கள். இது மனிதநேயத்தைக் காட்டும் செயல் இல்லையா? இப்படிச் சிறிய உயிர்களையெல்லாம் பாதுகாப்பவர்கள் பிறர்க்குத் தீமை செய்பவர்களாக இருக்க முடியாது இல்லையா? இதுதான் தமிழர் பண்பாட்டின் அடிப்படையாகும்.

தமிழர்களின் பழைய கதைகளிலும் இந்த பொதுநலப்பண்பு விளங்கக் காணலாம். சிபிச் சக்கரவர்த்தி என்ற சோழவேந்தன் தன்னிடம் அடைக்கலம் என்று வந்த புறாவுக்கு ஈடாகத் தன் சதையை அரிந்து கொடுத்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.

5.3 பண்பாட்டில் மக்கள் பங்களிப்பு

தமிழர் நீண்ட காலமாகக் கடைப்பிடித்த வாழ்க்கை நெறிகளும் பண்புகளுமே அவர்தம் பண்பாடாக உருவம் பெற்றுள்ளது. ஒவ்வொரு தமிழனும் இதற்குத் தன் பங்களிப்பைச் செய்து வந்துள்ளான்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை

அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி

ஆரம் படைத்த தமிழ்நாடு

(பாரதியின் தமிழ்நாடு : 7)

திருவள்ளுவர்

இதோ திருவள்ளுவரின் நெடிய சிலையைக் காணுங்கள்! இதோ இளங்கோவடிகள். அவர் உருவாக்கிய கண்ணகி கையில் சிலம்புடன் நிற்கும் கோலம் காணுங்கள். தமிழ்ப் பண்பாட்டை உருவாக்கிய பெரியோர்கள் எல்லாம் சென்னைக் கடற்கரையில் சிலைவடிவில் நிற்பதைக் காணுங்கள். தமிழர் பண்பாட்டிற்குத் தகுந்தாற்போல் இராமாயணக் கதை நிகழ்ச்சிகளை மாற்றி எழுதினானே கம்பன் அவன் புன்னகைப்பது காணுங்கள்.

5.3.1 ஆண் தமிழர் பண்பாட்டில் ஆண்மகனுக்கெனச் சில பங்களிப்புகள் இருந்துள்ளன. போர்ச்சூழல் நிரம்பிய பழைய காலச் சமூகத்தில் ஆணின் பங்கு பெரிதாக இருந்தது.

வினையே ஆடவர்க் குயிரே

என்று கூறுகிறது பழைய இலக்கியம். இதன் பொருள் என்ன தெரியுமா? ஆண்மக்களுக்குத் தொழில்தான் உயிர் என்பது இதன் பொருள். ஒரு குடும்பத்திற்கு வேண்டிய பொருளை ஆண்மகன் சம்பாதிக்க வேண்டும். சமூகத்தில் பிறர்க்கு உதவவும் அறம் செய்யவும் வேண்டும். பொருளை அவன் தேடியாக வேண்டும். பொருள் தேடுவது என்பது எளிதான செயலா? மனைவி மக்களைப் பிரிந்து சென்று, உடம்பை வருத்திப் பொருளைச் சம்பாதிக்க வேண்டும்.

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண்

(குறள்: 615)

என்கிறார் திருவள்ளுவர். அப்படியென்றால் என்ன? இன்பத்தை விரும்ப மாட்டான். தொழிலைப் பெரிதென்று கருதுவான். இப்படிப்பட்டவன்தான் தன் உறவினரின் துன்பம் துடைக்கும் தூண் போன்றவன் என்பதாகும்.

5.3.2 பெண் தமிழ்ச் சமூகத்தில் பெண் எப்படிப்பட்டவள் தெரியுமா? பெண்ணைக் குடும்ப விளக்கு என்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு பண்புகளைக் கொண்டவள் அவள். அச்சம் என்பது அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சுதல். அதாவது தவறு செய்ய அஞ்சும் மனம் பெற்றிருத்தல். நாணம் என்பது வெட்கம். மடம் என்பது தனக்கென்று அறிவு இருந்தாலும் தந்தை, தாய், கணவன் ஆகிய பெரியோர்கள் காட்டிய வழியில் அவ்வழியிலிருந்து தவறாமல் செல்லும் போக்கு. மூத்தோர் கற்பித்த வழியில் ஆராய்ச்சி செய்யாமல் நடப்பதே மடம். பயிர்ப்பு என்பது தனக்கு அறிமுகம் இல்லாதவற்றிடமிருந்து ஒதுங்கி நிற்கும் மனப்பாங்கு. இந்நான்கும் தமிழ்ப்பெண்ணின் பண்புக் கூறுகள். ஆனாலும் அவள் வீரமில்லாதவளாகவும் போர்க்குணம் இல்லாதவளாகவும் இருக்க மாட்டாள். சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல அவள் செயல்படுவாள். ஒரு பெண்பாற்புலவர் பாடும் பாட்டின் கருத்தைக் கேளுங்கள்!

“பெற்றுப் பாதுகாத்தல் என்னுடைய கடமையாகும்.

வீரனாக்குதல் தந்தைக்குள்ள கடமையாகும்.

வேலை அடித்துத் திருத்திக் கொடுத்தல் கொல்லனுடைய கடமையாகும்.

நல்லொழுக்கத்தைக் கற்பித்தல் அரசனுடைய கடமையாகும்.

ஒளிவிடும் வாட்படையால் போரில் ஆண்யானைகளை வென்று வருதல் ஆண்மகனது கடமையாகும்”

என்கிறார் புலவர்.

வீரக்குடியிற் பிறந்த பெண் இப்படித்தான் இருப்பாள். முதல்நாள் போரிலே தந்தை இறந்துவிட்டான். மறுநாள் கணவன் இறந்துவிட்டான். இந்த நிலையில் இன்றும் போர்ப்பறை கேட்கிறது. என்ன செய்வாள்? வீரக்குடும்பத்துப் பெண் என்ன செய்தாள் தெரியுமா? தனக்கு ஒரே ஒரு மகன் இருப்பதை நினைந்தாள். அவனை அழைத்து வந்து வெள்ளையாடை உடுத்தித் தலையை ஒழுங்குசெய்து. போருக்குப் போ என அனுப்பினாள்.  இந்தச் செய்தியைப் புறநானூற்றில் காணலாம்.

5.3.3 சான்றோர் ஒரு சமூகத்தின் பண்பாட்டு உருவாக்கத்தில் சான்றோர்க்குப் பெரும்பங்கு உண்டு. அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற ஐந்து பண்புடையவர் இச்சான்றோர். இவர்களைக் கொள்கைச் சான்றோர் என்றும், புலன்களைக் கட்டுப்படுத்தி அடங்கிய நிலையில் இருப்பவர் என்றும் குறிப்பிடுவர். ஒரு மகனைச் சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடன் என்பர். சான்றோர் என்பவர் அரசன் தவறு செய்தாலும் அஞ்சாமல் திருத்துபவர்.

கோவூர் கிழார்

கோவூர் கிழார் என்ற சான்றோர் தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியைக் காணுங்கள்! கிள்ளிவளவன் என்று ஓர் அரசன் இருந்தான். அவன் மலையமான் என்ற அரசன் மீது படையெடுத்துச் சென்று வென்றான். மலையமானின் மகன்கள் இருவரையும் சிறைப்பிடித்து வந்து யானையை ஏவி அவர்களைக் கொல்லுமாறு கூறினான்.  இதைப் பொறுக்காத கோவூர் கிழார் என்ற சான்றோர் கிள்ளிவளவனிடம் சென்றார்.

“அரசே! நீ புறாவொன்று அடைக்கலமாக வந்ததென்று காப்பாற்றிய சிபிச் சோழன் மரபில் வந்தவன். இந்தச் சிறுவர்களோ புலவர்களின் வறுமைத் துயரைத் துடைக்கும் வள்ளலின் பிள்ளைகள். யானையைக் கண்டவுடன் தம் அழுகையை மறந்து ஒருவித அச்சத்தோடு இச்சிறுவர்கள் இருக்கிறார்கள். இத்தகைய துன்பத்தை இவர்கள் இதற்குமுன் கண்டதில்லை. இது நான் கூறவிரும்பும் செய்தி. பிறகு நீ விரும்பியதைச் செய்துகொள்”

என்று கூறினார். உடனே கிள்ளிவளவன் சிறுவர்களைக் கொல்லாமல் விட்டுவிட்டான். பொன்னாலும் மணியாலும் முத்தாலும் செய்யப்பட்ட அணிகலன்கள் கெட்டுப் போகுமானால் அவற்றைச் சரி செய்து கொள்ளலாம். சான்றோர்களின் உயர்ந்த பண்புகள் கெட்டுவிடுமானால் திருத்திப் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாது.

5.4 காதல் பண்பாடு

காதல் என்பது பாலுணர்ச்சியால் பருவமுற்ற ஆணும் பெண்ணும் ஒருவர்பால் ஒருவர் கொள்ளும் ஈடுபாடு. மற்றவர்கள் அறியாதவாறு காதலர்கள் தங்கள் பார்வையால் அன்பைப் பரிமாறிக் கொள்வார்கள். காதல் என்பது உயிரோடு பிணைந்தது. நினைத்தவாறு திருமணம் முடியாவிட்டால் காதலர் இறப்பைத் தேடிக்கொள்ளவும் அஞ்சமாட்டார்கள். காதல் கொண்ட உள்ளம் மாறுவதோ, விட்டுக் கொடுப்பதோ இல்லை. உலகெங்கினும் எல்லாப் பண்பாடுகளிலும் காதல் உறுதியானதாகவும் தெய்வீகமானதாகவும் இருக்கிறது. அப்படியானால் தமிழர் பண்பாட்டில் காதலுக்குரிய சிறப்பிடம்தான் யாது? போன பிறவியிலே கணவன் மனைவியாக இருந்தவர்கள்தாம் இந்தப் பிறவியிலும் கணவன் மனைவி ஆகிறார்கள்; இனிவரும் பிறவிகளிலும் இவர்களே கணவன் மனைவியராக இருப்பார்கள் என்ற நம்பிக்கை தமிழர் பண்பாட்டில் உள்ளது.

இம்மை மாறி மறுமை ஆயினும்

நீயாகியர் என்கணவனை

யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே

(குறுந்தொகை : 49)

என்று குறுந்தொகை கூறுகிறது. இதன் பொருள் என்ன தெரியுமா? இந்தப் பிறவி மாறி அடுத்த பிறவியிலும் நீதான் என் கணவன் நான்தான் உன் மனைவி என்பதுதான் இதன்பொருள். நீயாகியர் என் கணவனை என்றால் நீயே என் கணவன் ஆவாய் என்பது பொருள். யானாகியர் நின்நெஞ்சு நேர்பவள் என்றால் யானே உன் நெஞ்சில் இருப்பவள் என்பது பொருள். எனவே காதல் என்பது ஏதோ திடீரென்று இருவர் சந்தித்துக் கொள்வதில் ஏற்பட்டு விடுவதன்று என்பது தெரியவரும்.

5.4.1 களவும் கற்பும் திருமணத்திற்கு முன் ஒருவனும் ஒருத்தியும் பிறர் அறியாதவாறு காதல் கொள்வர். தாயும் பிறரும் அறியாதவாறு சந்தித்துக் கொள்வர். இதனைத் தமிழர் பண்பாடு களவியல் என்று போற்றுகின்றது.  தலைவியின் தோழி களவுக் காதலுக்குத் துணை செய்வாள். மெல்ல மெல்லக் களவுக் காதலை ஊரார் அறிவர்; அறிந்து மூக்கில் விரல்வைத்து இரகசியமாகப் பேசுவர். ஊரார் இவ்வாறு மறைமொழியாகப் பேசும் நிலை அம்பல் எனப்படும். பின்னர் எல்லாரும் அறியுமாறு தலைமக்களின் காதலைப் பேசுவர். இதனை அலர் தூற்றுதல் என்பர். இந்நிலையில் தோழியும் தலைவியும் தலைவனைத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யத் தூண்டுவர். தலைவியின் காதல் அறிந்த பெற்றோர் தலைவியை வீட்டிலேயே வைத்துப் பாதுகாப்பர். பெற்றோர் முதலில் களவுக்காதலை அனுமதிக்க மாட்டார்கள். பின்பு தலைமக்களின் உள்ள உறுதி அறிந்து உடன்படுவர். பெற்றோர் உடன்படாத நிலையில் தலைவனும் தலைவியும் யாரும் அறியாதவாறு வேற்றூர் செல்வர். இதற்கு உடன்போக்கு எனப் பெயர்.

திருமணத்திற்குப் பின் நிகழும் வாழ்க்கையைக் கற்பு என்று கூறுவர். கற்பு என்பதற்குக் கல்வி என்பதே பொருள். ஒன்று மறியாத பேதையாக இருந்த தலைமகள் எப்படி இதையெல்லாம் கற்றுக் கொண்டாள் என்று பெற்றோர் வியந்து பேசுவர். தலைவன் வீட்டில் வசதியற்ற சூழ்நிலை இருப்பினும் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வாள். தன் முயற்சியால் அந்தக் குடும்ப நிலையை உயர்த்துவாள். “ஒரே ஒரு பசு மாடு மட்டுமே இவள் வந்தபோது இந்த வீட்டில் இருந்தது. இப்போது வருகின்றவர்களுக்கு எல்லாம் விருந்து அளிக்கும் விழாவுடையதாக இந்த வீடு மாறிவிட்டது” என்று வியந்து போற்றும் அளவுக்குத் தலைவி பாடுபடுவாள். கற்பு வாழ்க்கையில் அறவோர், அந்தணர், விருந்தினர் ஆகியோரை இல்லறத்தார் பாதுகாப்பர்.

5.4.2 திருமணம் திருமணம் என்பது ஒரு சடங்கு. ஒருவனையும் ஒருத்தியையும் கணவன் மனைவி என ஆக்கும் இந்நிகழ்ச்சி ஒரு பண்பாட்டின் அடையாளம். மிகப் பழங்காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டுதல் இல்லை. வீட்டிற்கு முன்பு இட்ட திருமணப் பந்தலில் மணமக்களை நீராட்டுதல், மக்களைப் பெற்ற மூத்த மகளிர் நெல்லும் மலரும் தூவி வாழ்த்துதல், உழுந்தால் செய்யப்பட்ட களியை எல்லார்க்கும் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளே இருந்தன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து தீ வளர்த்தல், தீயை வலம் வருதல், பார்ப்பனர் மந்திரம் ஓதல், அம்மி மிதித்து அருந்ததி காட்டுதல் போன்ற வழக்கங்கள் தமிழர் திருமணத்தில் புகுந்தன. இடைக்காலத்தில் நகரமக்கள் வாழ்வில் திருமணம் வேதநெறிச் சடங்காகவே இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் இந்த நிலை மாறியது. பகுத்தறிவு சார்ந்த திருமணங்கள், தமிழ்த் திருமணங்கள் ஆகியன நடைபெறத் தொடங்கின.

5.4.3 குடும்பக் கடமைகள் குடும்பத்தின் தலைவனாகிய ஆண் பொருளைச் சம்பாதிக்க வேண்டும். மனைவி குடும்ப வருவாய்க்குத் தக்க நிலையில் குடும்பத்தை நடத்த வேண்டும். வறுமையை எதிர்த்துத் தலைமக்கள் போராடுவர். பழங்காலக் குடும்ப நிகழ்ச்சி ஒன்றைக் குறுந்தொகை என்ற இலக்கியம் சொல்வதைக் கேளுங்கள்!

“காந்தள் மலர் போன்ற விரலால் முற்றிய தயிரைப் பிசைந்தாள். பிசைந்த விரல்களை உடுத்திய ஆடையில் துடைத்துக் கொண்டாள். குவளை மலர் போன்ற அவள் கண்களில் குழம்பைத் தாளித்த மணம் சென்று பொருந்தியது. இவ்வாறு தலைவி சமைத்த இனிமையும் புளிப்புமுடைய குழம்பைக் கணவன் இனிதாயுள்ளது என்று உண்டான். அதனால் தலைவியின் மனம் மகிழ்ந்தது.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குடும்பக் கடமைகளை விளக்கும் குடும்ப விளக்கு என்ற நூலைப் படைத்துள்ளார். இந்த நூலில் பெண் கல்வி கற்றவளாய், இசை முதலிய கலைகள் அறிந்தவளாய், கடைவீதி வணிகம் செய்யத் தெரிந்தவளாய், பொதுத் தொண்டில் விருப்பம் உள்ளவளாய்ப் படைக்கப்பட்டுள்ளாள்.

பறந்தனள் பச்சைப் பசுங்கிளி; மாடு

கறந்தனள்; வீட்டை நிறம் புரிந்தனள்;

செம்பு தவலை செழும்பொன் ஆக்கினாள்;

பைம்புனல் தேக்கினாள்; பற்ற வைத்த

அடுப்பினில் விளைந்த அப்பம் அடுக்கிக்

குடிக்க இனிய கொத்துமல்லி நீர்

இறக்கிப் பாலொடு சர்க்கரை இட்டு

நிறக்க அன்பு நிறையப் பிசைந்த

முத்தான வாயால் முழுநிலா முகத்தாள்

“அத்தான்” என்றனள்; அழகியோன் வந்தான்.

இவ்வாறு குடும்பக் கடமைகளைச் செய்யும் பெண்ணைக் காட்டுகிறார். ஆண்மகன் வீட்டின் புறத்தே வேலை செய்வான். போர் உண்டாகும்போது பங்கேற்பான்.

வேறுநாடு சென்று பொருள் ஈட்டி வருவான். வேட்டையாடுதல், கடலில் மீன் பிடித்தல், ஆனிரைகளை மேய்த்தல், வயலை உழுதல் போன்ற அந்தந்த நிலத்துக்குரிய பணிகளைச் செய்வான்.

5.5 சமயப் பண்பாடு

சங்க காலம் வரையில் தமிழ்நாட்டில் சமயம் ஓர் ஆழமான இடத்தைப் பெறவில்லை. கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் தமிழர் வாழ்வில் சமயம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றது. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ சமணர்; அவருடைய அண்ணன் செங்குட்டுவன் சைவன்; இளங்கோவின் நண்பர் சீத்தலைச் சாத்தனார் பௌத்தர். இந்தச் சமய வேறுபாடுகள் அவர்களைப் பிரித்து வைக்கவில்லை. வைதிக சமயம், பௌத்தம், சமணம், ஆசீவகம், சாங்கியம், சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் தமிழகத்தில் ஒவ்வொரு காலத்தில் வளர்ந்தன. பிற்காலத்தில் சமயப் போராட்டங்கள் நிகழ்ந்தன. சான்றோர் இப்போராட்டங்களைக் கண்டித்துச் சமரச வாழ்வை வற்புறுத்தினர்.

பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்

புகுந்துகலந்து இடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்

கங்குகரை காணாத கடலே!

என்று இராமலிங்க அடிகளார் சமயங்கள் என்ற ஆறுகள் எல்லாம் இறைவன் என்ற கடலை அடைகின்றன என்றார். தமிழகத்தில் சமயப் போர்கள் பூசல்கள் குறைவாகவே நிகழ்ந்துள்ளன. பிற்காலத்தில் இசுலாம், கிறித்தவம் ஆகிய சமயங்கள் தமிழகத்தை அடைந்தன.

5.5.1 நல்லிணக்கம் சமணர்களுக்கு மலைகளில் குகைகளை அரசர்களும் வணிகர்களும் செய்து தந்தனர். சைவநெறியில் வந்த அரசனின் அவையில் சமண பௌத்த நூல்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. பௌத்த இலக்கண நூலாகிய வீரசோழியம் வீரராசேந்திரன் என்ற சைவநெறி தழுவிய சோழன் பேரால் அமைந்தது. நாகைப்பட்டினத்தில் புத்தவிகாரை கட்டுவதற்கு இராசராச சோழன் இடமளித்தான். தில்லையில் ஒரே வளாகத்தில் நடராசர் சன்னதியும் கோவிந்தராசப் பெருமாள் சன்னதியும் இன்றும் அமைந்து வழிபாடு செய்யப்படுகின்றன. வள்ளல் சீதக்காதி பிற சமயப் புலவர்களை ஏற்றுப் பாராட்டிப் பொருள் உதவி செய்துள்ளார். ஜீவரத்தின கவி என்பவர் மதீனா நகர்மீது கலம்பகம் பாடியுள்ளார். இரண்டாம் சரபோசி மன்னரைச் சுவார்ட்சு பாதிரியாரே வளர்த்து அரசராவதற்கு உதவி செய்தார். இன்றும் கம்ப இராமாயணத்தை ஆராய்ந்து நூல்கள் படைக்கும் இசுலாமியர், தேம்பாவணியில் ஈடுபடும் சைவர், சைவ சித்தாந்த சாத்திரம் கற்கும் கிறித்துவர், சீறாப்புராணத்தை விரித்துரைக்கும் வைணவர் தமிழ்நாட்டில் உள்ளனர். சமய நல்லிணக்கம் தமிழர் பண்பாட்டின் இயற்கையான பண்பாகும்.

5.5.2 மனிதநேயம் புத்தர் மயங்கி வீழ்ந்து கிடக்கிறார். ஆடு மேய்க்கும் சிறுவன் அவரைக் காண்கிறான். தான் அவரைத் தொடக்கூடாது எனக்கருதி ஆட்டை இழுத்து வந்து அவர் முகத்துக்கு அருகில் நிறுத்திப் பாலைக் கறந்து அவர் வாயில் விழச்செய்கிறான். புத்தர் மூர்ச்சை நீங்கிக் “கலயத்தில் பாலைக் கறந்துதர” வேண்டுகிறார். அவன் நான் தாழ்ந்த குலத்தவன் என்கிறான். உடனே புத்தர் “ஓடுகின்ற இரத்தத்தில், ஒழுகும் கண்ணீரில் தேடிப்பார்த்தாலும் சாதி தெரிவதில்லை அப்பா! இரத்தம் எல்லார்க்கும் சிவப்பு நிறம். கண்ணீர் யாரிடத்திருந்து வந்தாலும் கரிக்கும் தன்மையுடையது. இதில் உயர்வு ஏது? தாழ்வு ஏது” என்று கூறி அவனிடம் பால் பெற்று அருந்துகின்றார். சாதி வேறுபாடின்மையைப் புத்தரும் ஞானியர் பலரும் எடுத்துக் கூறியுள்ளனர். கொலை செய்த கொடியவராயிருந்தாலும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும் அதுவே சீவகாருணியம் என்று இராமலிங்க வள்ளலார் கூறியுள்ளார்.

அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு!

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!

அணைந்து கொள் உன்னைச் சங்கமம் ஆக்கு!

மானிட சமுத்திரம் நானென்று கூவு

பிரிவிலை எங்கும் பேதமில்லை

உலகம் உண்ணஉண் உடுத்த உடுப்பாய்

என்று பாரதிதாசன் மனிதநேயம் கொண்டு புதிய உலகம் படைக்கத் தூண்டுகிறார்

5.5.3 உயிரிரக்கம் கொல்லாமை என்பது ஓர் அறம். ஊன் உணவு கொள்பவர்கள் கூடச் சில காலங்களில் அவ்வகை உணவை விலக்கி நோன்பு நோற்கின்றனர். உயிர்கள் பசி முதலிய துன்பத்தால் வருந்தும்போது அதனைப் போக்க வேண்டியது செல்வமுடையவர் கடமையாகும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

(குறள்: 322)

என்று இல்லாதவர்க்கு உணவிடுதலைத் திருவள்ளுவர் பெரிய அறம் என்கிறார். கண்ணியும் வலையும் தூண்டிலும் கண்டபோதெல்லாம் உள்ளம் நடுங்கினேன் என்கிறார் இராமலிங்க வள்ளலார். வண்டுகள் பூக்களில் தேன் அருந்தும்போது இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தேரின் மணிகளை ஒலி செய்யாதவாறு இழுத்துக் கட்டிவிட்டான் அருள் உணர்வுடைய தலைவன் என்று கூறுகிறது பழந்தமிழ் இலக்கியம். தேர் செல்லும்போது மழைக்காலத்தில் தம்பலப் பூச்சிகள் சக்கரத்தில் சிக்காதவாறு ஒதுக்கி ஓட்டினான் என்றும் அவ்விலக்கியம் கூறுகின்றது. எந்த உயிரையும் பாதுகாப்பதே மனிதனின் கடமையாகக் கருதியது தமிழ்ப் பண்பாடு.

5.6 தொகுப்புரை

இதுவரை இந்தப் பாடம் கூறிய கருத்துகளை நினைத்துப் பார்ப்போமா? தமிழர் பண்பாட்டில் சில போற்றத்தக்க அடிப்படைகள் உள்ளன. புகழை அவர்கள் விரும்புவர். அதற்காக உயிரையும் கொடுப்பர். மானத்தை எந்த நிலையிலும் எதற்காகவும் இழக்க மாட்டார்கள். மானம் போகக்கூடிய நிலை வந்தால் உயிரை விட்டுவிடுவர். போரிலும் நேர்மையைக் கடைப்பிடிக்கும் வீரம் அவர்களுடைய பண்பாகும். விருந்தோம்பல், பிறர்க்கு உதவி செய்தல், பொருள் மிகுதியாக இருக்கும் நிலையில் அளவில்லாமல் பிறர்க்கு வழங்குதல், எல்லா உயிரிடத்தும் இரக்கம் பாராட்டுதல், மனிதர் யாவரையும் சமமாக மதித்துப் போற்றுதல் ஆகிய பிறபண்புகள் அன்றைய மக்களிடம் இருந்தன. இப்பண்புடையோர் சான்றோர் எனப் பெற்றனர். இவையே இப்பாடத்தின் வழியாக நாம் அறிந்தன அல்லவா?

பாடம் - 6

பழங்காலத் தமிழ்ப் பண்பாடு

6.0 பாட முன்னுரை

தமிழ்நாட்டின் வரலாற்றில் சங்க காலம் எனப்பெற்ற காலம் பொற்காலம் என்பது அறிஞர்களின் கருத்தாகும். அக்காலத்தில் மொழி, பண்பாடு, கல்வி, மெய்யுணர்வு ஆகியன மிக உயர்ந்த நிலையில் இருந்தமையால் அக்காலத்தைப் பொற்காலம் என்றனர்.

அப்படியாயின் அன்றைய வாழ்வு எப்படி இருந்தது? அந்த உலகம் யாரால் இருந்தது. இதோ கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய அரசன் கூறுவதைக் கேளுங்கள்!

“தேவர்களுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும் அதனைத் தாம் மட்டும் தனியே உண்ணமாட்டார். யார்மீதும் வெறுப்புக் கொள்ள மாட்டார். பிறர்க்கு வரும் துன்பம் கண்டு அவர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சி அத்துன்பத்தை நீக்கும் வரையில் கண் துயில மாட்டார். புகழ் தரக்கூடிய செயலென்றால் அதற்குத் தம் உயிரையும் கொடுப்பார். பழி வருவதாயின் அதன்பொருட்டு உலக முழுதும் பெறும் வாய்ப்பு வந்தாலும் அதனை ஏற்க மாட்டார். அவர்கள் தமக்கென்று முயற்சி செய்யும் தன்னலமற்றவர். பிறர்க்கென்றே முயற்சி மேற்கொள்வர். அத்தகையோர் இருப்பதால்தான் இந்த உலகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.”

இதுதான் இளம்பெருவழுதியின் உரை. இவ்வாறு வாழ்ந்த பலர் அக்காலத்தில் இருந்தனர். இப்படிப்பட்ட பண்பாடு உடையவரே நாட்டின் பெரிய செல்வம் ஆவர். இத்தகையோர் பேணிப் பாதுகாத்த தமிழ்ப் பண்பாடு பற்றிய கருத்துகள் இப்பாடப் பகுதியில் விளக்கப்படுகின்றன.

6.1 பண்டைக்காலப் பண்பாடு - ஒரு விளக்கம்

வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோளை அடைவதையே பண்டைக் காலத் தமிழர் மிகச் சிறந்த பண்பாட்டுக் கூறாகக் கருதினர்.

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே (புறம் :214)

(குறும்பூழ் = சிறு பறவை, வறுங்கை = வறிய கை)

என்று பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் கூறுகின்றார். இதன் பொருள் என்ன தெரியுமா? யானையை வேட்டையாட வேண்டும் என்று போகின்றவன் யானையை எளிதாகப் பெற்றுவிடக்கூடும். ஒரு சிறிய பறவையை வேட்டையாட வேண்டும் என்று போகின்றவன் அது கிடைக்காமலும் திரும்பக்கூடும். எனவே ஒருவன் உயர்ந்த குறிக்கோளைப் பெறவேண்டும் என்பது இதன் பொருள். பிறர்க்கு உதவ வேண்டும்; தன்னலமின்றி வாழவேண்டும்; நல்லவைகளைச் செய்ய இயலாவிட்டாலும் தீயவைகளைச் செய்யவே கூடாது.

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

அல்லது செய்தல் ஓம்புமின் (புறம் : 195)

என்கிறார் புலவர் ஒருவர். மேலும் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர் பண்டைத் தமிழர். அறத்திலிருந்து தவறுதல் கூடாது; தவறினால் பழிவரும் என்று கருதினர். அப்பழி தாங்க முடியாதது என எண்ணினர். எனவே அறம் செய்வதைப் பண்பாட்டின் ஒரு கூறாகக் கருதிச் செயல்பட்டனர்.

6.1.1 சங்கங்களும் சங்க காலமும் சங்ககாலம் என்று அக்காலம் கூறப்படுவதன் காரணம் யாது? சங்கம் என்றால் கூட்டம், ஒரு தொகுப்பு, திரட்சி என்பது பொருள். பௌத்தர்களும், சமணர்களும் துறவிகளின் கூட்டத்தைச் சங்கம் என்று குறித்தனர். புலவர்களின் கூட்டம் சங்கம் என்ற பெயரைப் பெற்றது. புலவர்களின் சங்கம் இருந்தமையால் அக்காலம் சங்ககாலம் எனப்பட்டது. பழந்தமிழ் நாட்டில் மூன்று சங்கங்கள் இருந்தன. அக்காலத்தில் ஒன்றை ஒன்று அடுத்துவந்த இம்மூன்று சங்கங்களும் தமிழ் வளர்ச்சிக்குத் துணைபுரிந்தன.

முதற்சங்கம் பாண்டி நாட்டின் தென்பகுதியைக் கடல் கொள்வதற்கு முன்பிருந்த பாண்டியர் தலைநகரில் இருந்தது. அச்சங்கத்தில் அகத்தியர் போன்ற பெரும்புலவர்கள் இருந்தனர். அச்சங்கம் நெடுங்காலம் நிலைபெற்றிருந்தது. பின்பு அந்நகரைக் கடல் கொண்டபின் அச்சங்கமும், அச்சங்கம் உண்டாக்கிய நூல்களும் அழிந்தன.

பிறகு, கபாடபுரத்தில் இரண்டாம் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அச்சங்கத்திலேயே தொல்காப்பியர் இடம் பெற்றிருந்தார். புலவர் பலர் பலவகை நூற்களை இச்சங்கத்தில் இருந்து படைத்தனர். கபாடபுரம் கடலால் கொள்ளப்பட்டது. மூன்றாம் சங்கம் இன்றுள்ள மதுரையில் தோற்றுவிக்கப் பட்டது. இச்சங்கத்திலேயே பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் பதினெட்டுச் சங்க நூல்கள் அரங்கேறின.

சங்கங்கள் மூன்றும் இருந்த காலம் பற்றித் தெளிவாக அறிய முடியவில்லை. எனினும், மூன்றாம் சங்கமாகிய கடைச்சங்கம் கி.பி. 300 வரை இருந்தது என்று உறுதியாகக் கூறப்படுகிறது.

இடம்     காலம்     பெரும்புலவர்     இயற்றிய நூல்கள்

முதற் சங்கம்     கடல் கொண்ட பாண்டியர் தலைநகர் பழைய தென்மதுரை     அறுதியிட்டுக் கூற முடியவில்லை     அகத்தியர்     அகத்தியம்

இடைச் சங்கம்     கபாடபுரம்     அறுதியிட்டுக் கூற முடியவில்லை     தொல்காப்பியர்     தொல்காப்பியம்

கடைச் சங்கம்     மதுரை     கி.பி.300 வரை     கபிலர்

பரணர் ஒளவையார் திருவள்ளுவர்     பத்துப்பாட்டு எட்டுத்தொகை திருக்குறள்

சந்திரகுப்தன் மகனான பிந்துசாரன் கி.மு. 301 முதல் 273 வரை அரசாண்டவன். இவன் தமிழகத்தைத் தவிர்த்த தென்னாட்டுப் பகுதிகளை வென்றான். அவனால் தமிழகத்தை வெல்ல முடியவில்லை. ஏனெனில் தமிழகத்தில் வலிமைமிக்க தமிழரசர் கூட்டணி ஒன்று இருந்தது. தமிழரசர் கூட்டணி ஒன்று 113 ஆண்டுகளாக வலிமை பெற்றிருந்தது என்று கி.மு. 165இல் கலிங்க அரசனாக இருந்த காரவேலனின் கல்வெட்டு ஒன்று குறிக்கின்றது. மௌரியர் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்ததனைச் சங்க இலக்கியங்களான அகநானூறும் புறநானூறும் குறிக்கின்றன. எனவே பல்லவர் தமிழ்நாட்டை ஆள்வதற்கு முற்பட்ட காலத்தைச் சங்க காலம் எனக் குறிக்கலாம். சங்க இலக்கியங்கள் காட்டும் வரலாற்றுக் குறிப்பின் அடிப்படையில் கி.மு. மூன்று முதல் கி.பி. மூன்று வரையிலான அறுநூறு ஆண்டுக் காலத்தைச் சங்ககாலமெனக் கொள்ளலாம்.

6.1.2 வழிகாட்டும் பண்பு சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும். அவற்றில் பத்துப்பாட்டு என்பது

1. திருமுருகாற்றுப்படை

2. பொருநராற்றுப்படை

3. சிறுபாணாற்றுப்படை

4. பெரும்பாணாற்றுப்படை

5. முல்லைப்பாட்டு

6. மதுரைக்காஞ்சி

7. நெடுநல்வாடை

8. குறிஞ்சிப்பாட்டு

9. பட்டினப்பாலை

10. மலைபடுகடாம்

என்ற பத்துப்பாடல்களையும் கொண்ட தொகுப்பாகும். இப்பத்தில் மலைபடுகடாம் என்பதற்குக் கூத்தராற்றுப்படை என்ற பெயரும் உண்டு. எனவே பத்து நூல்களில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படை என்னும் நூல்வகைக்கு உரியன.

ஆற்றுப்படை என்றால் வழிப்படுத்துதல் என்று பொருள். வள்ளல் ஒருவனிடம் செல்வம் பெற்று வறுமை நீங்கிய ஒருவன், திரும்பி வரும் வழியில் காணுகின்ற வறியவன் ஒருவனிடம், “இன்னாரை அடைந்தால் நீயும் செல்வன் ஆகலாம்” எனக் கூறி வழிகூறுதலாகும்.

6.1.3 புலவரைப் போற்றிய பண்பு கபிலர் என்ற புலவர் சேரன் வாழியாதன் அரசவையில் இருந்தார். அரசன் அப்புலவரின் கையைப் பிடித்துப் பார்த்தான். அது மிகவும் மென்மையாக இருந்தது. ‘என்ன உங்கள் கை மிகவும் மென்மையாக உள்ளதே’ என்றான் அரசன். அதற்குக் கபிலர் ‘கறிசோறு சாப்பிட்டு வருந்துவதைத் தவிர இந்தக் கைகள் வேறு என்ன கடுமையான தொழிலைச் செய்கின்றன?’ என்று கூறினார். இவ்வாறு புலவர்கள் அரசர்களின் நிழலில் இனிது வாழ்ந்தனர்.

முரசுகட்டில் அரசர்களின் வீரமுரசத்தை வைப்பதற்கு உரியது. ஒருமுறை சேரமானின் முரசை நீராட்டிக் கொண்டு வரச் சென்றிருந்தார்கள். அந்த வேளையில் அரசனைக் காணவந்த மோசிகீரனார் என்ற புலவர், நடந்துவந்த களைப்பால் முரசுகட்டிலில் அறியாமல் ஏறிப்படுத்து உறங்கி விட்டார். முரசு வைக்கும் கட்டிலில் வேறு யாராவது உட்காருவதுகூட அம்முரசுக்குரிய அரசனை அவமானப்படுத்தும் செயலாகும்.

முரசு நீராடி வந்தது. அரசனும் வந்தான். யாரோ ஒருவர் முரசுகட்டிலில் உறங்குவதைக் கண்டு அரசன் சினம் கொண்டான். வாளை உருவி வெட்டிவிடவும் கருதினான். ஆனால் உறங்குபவர் புலவர் ஒருவர் என்பதை உணர்ந்தவுடன் அவன் மனம் மாறியது. புலவர் தன்னை மறந்து வியர்வையோடு உறங்குவது கண்டு மனம் உருகினான். விசிறி ஒன்று எடுத்துப் புலவரின் வியர்வை தீர விசிறினான்.

இவை போலும் நிகழ்ச்சிகள் பல பழங்காலத்தில் நிகழ்ந்துள்ளன என்பதற்குப் பண்டை இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள் மன்னர்கள் புலவர்களைப் போற்றிய பண்பாட்டை வெளிப்படுத்துகின்றன.

6.2 எட்டுத்தொகை நூல்கள் - I

எட்டுத்தொகை நூல்கள் என்பன

1. நற்றிணை

2. குறுந்தொகை

3. ஐங்குறுநூறு

4. பதிற்றுப்பத்து

5. பரிபாடல்

6. கலித்தொகை

7. அகநானூறு

8. புறநானூறு

என்பன. இவற்றில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்ற ஐந்தும் காதல் வாழ்க்கை பற்றிய பாடல்களாகும். காதல் வாழ்வு பற்றிப் பேசுவது அகப்பொருள் எனப்படும். பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய இரண்டும் வீரவாழ்வு பற்றியவை. வீரத்தையும், வெளியுலக வாழ்வையும் பற்றிப் பேசுவது புறப்பொருள் எனப்படும். பரிபாடல் இரண்டு பொருளும் பற்றிய நூலாகும். இனி இவை காட்டும் பண்பாட்டைத் தனித்தனியே காணலாம். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் அக, புறப்பொருள்களாக வகைப்படுத்தப் பட்டிருப்பதை அட்டவணையில் காண்க.

பத்துப் பா ட் டு

அகப்பொருள் (காதல் வாழ்க்கை) பற்றியது     புறப்பொருள் வெளியுலக வாழ்க்கை      (வீரவாழ்வு) பற்றியது

1.     திருமுருகாற்றுப்படை

2.     பொருநராற்றுப்படை

3.     சிறுபாணாற்றுப்படை

4.     பெரும்பாணாற்றுப்படை

5.      முல்லைப்பாட்டு

6.      மதுரைக்காஞ்சி

7.      நெடுநல்வாடை

8.      குறிஞ்சிப்பாட்டு

9.      பட்டினப்பாலை

10.     மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)

எட்டுத் தொகை

1. நற்றிணை

2. குறுந்தொகை

3. ஐங்குறுநூறு

4. பதிற்றுப்பத்து

5. பரிபாடல்

6. கலித்தொகை

7. அகநானூறு

8.     புறநானூறு

6.2.1 நற்றிணையில் பண்பாடு ஆயர்

நற்றிணையில் தமிழர் பண்பாட்டுக் கூறுகள் நன்கு விளக்கம் பெற்றுள்ளன. இந்நூல் ஆயர்களின் வாழ்க்கை முறையைத் தெளிவாகக் காட்டுகின்றது. முல்லை மலரையும் பனங்குருத்தையும் சேர்த்துத் தலைமாலையாகச் சூட்டிக் கொள்ளும் ஆயனைக் காணுங்கள். அவன் தோளில் ஓர் உறியும் தோல் பையும் விளங்குவதைப் பாருங்கள். உறியிலே அவனுக்குரிய உணவு; தோற்பையில் தீக்கடை கோல் முதலியன உள்ளன. முதுகில் ஒரு பனை ஓலைப் பாயைக் கட்டியிருக்கிறான். கையில் கோல் கொண்டு இருக்கும் ஆயன் சில சமயம் அக்கோலை ஊன்றி அதன் மீது ஒரு காலை ஊன்றி ஒடுங்கிய நிலையில் இருப்பான். ஆடு மாடுகளை நெறிப்படச் செலுத்த இவன் வீளை (Whistle) ஒலியும் எழுப்புவான். இது ஆயர்களின் வாழ்க்கை முறையைக் காட்டுகிறது.

குறிஞ்சிக் காவலர்

மலை சார்ந்த குறிஞ்சி நில ஊர்களில் இரவு முழுவதும் குறிஞ்சிப்பண்ணைப் பாடிக்கொண்டு தூங்காமல் காவலர் வலம் வருவர். நெய்தல் நில ஊர்களில் காவலர் யாமம் தவறாமல் மணியடித்து ஓசை எழுப்பித் ‘தலைக்கடை புறக்கடை வாயில்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்பர்.

நெய்தல் பரதவர்

இரவில் நெய்தல் நிலப் பரதவர் திமிங்கல வேட்டையாடுவர். மீன்களைப் பிடித்துக் கொண்டு விடியற்காலையில் கரைக்குத் திரும்புவர். புன்னைமர நிழலில் அமர்ந்து கள் அருந்துவர். மேற்குறிப்பிட்ட நற்றிணைச் செய்திகள், பண்டைத் தமிழர்களின் வாழ்க்கை முறையையும், பண்பாட்டுச் செம்மையினையும் வெளிப்படுத்துகின்றன.

ஆடை

அக்காலத்தில் மெல்லிய ஆடை வகைகள் நேர்த்தியாக நெய்யப்பட்டன. துகில், நுண்துகில், அம்துகில், கலிங்கம், பூங்கலிங்கம், நூலாக்கலிங்கம் என அவை பல வேறு வகைப்பட்டன. பாலை நிலத்தவர் துவராடை உடுத்தியிருந்தனர். மலைநில மக்கள் நாணல் பின்னிய உடை உடுத்தியிருந்தனர். மகளிர் தழையாடை உடுத்தலும் உண்டு.

மனச்செம்மை

மக்களின் மனச் செம்மையையும் சால்பையும் நற்றிணையில் சில காட்சிகள் விவரிக்கின்றன. தேரின் உருளையில் நண்டுகள் நசுங்காதவாறு பாகன் தேரை ஓட்டினான். மருந்து மரமாக இருந்தாலும் அம்மரம் பட்டுப் போகும்படி அதனிடம் பயனைக் கொள்ள மாட்டார். இரவுப் பொழுதில் விருந்தினர் வந்தாலும் வீட்டில் உள்ளவர் மகிழ்ச்சியோடு அவர்களை வரவேற்றனர். இவையெல்லாம் நற்றிணை புலப்படுத்தும் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகள்.

6.2.2 குறுந்தொகையில் பண்பாடு குறுந்தொகையில் மக்களின் பண்பட்ட உள்ளம் நன்கு வெளிப்படுகின்றது. குறுந்தொகையில், தமிழ் மக்களின் அகவாழ்க்கை சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. காதலர்களின் அன்பின் தன்மையும், அதனை அவர்கள் வெளிப்படுத்திய பாங்கும் படித்துச் சுவைக்கத் தக்கன. காதலர்கள் ஒருவருக்கொருவர் பேசும் உரையாடல்களிலிருந்து, பண்டைத் தமிழர்கள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் முதலியனவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

தலைவனைப் பார்த்துத் தலைவி கூறும் கூற்றாக வரும் பாடல் ஒன்றில், இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இனி வரும் பிறவிகளிலும், உன் நெஞ்சினுள் நிறைந்து நிற்கும் காதலி நானாகத்தான் இருக்க வேண்டும் எனச் சுவைபடக் கூறுகிறாள்.

இம்மை மாறி மறுமை யாயினும் நீயாகியர் என்கணவனை, யானாகியர் நின் நெஞ்சுநேர் பவளே

(குறுந்தொகை : 49)

காதலர்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் அன்பின் பிணைப்பினை, இதைவிடச் சுவையாகச் சொல்ல இயலுமா? இதில், காதலர்கள், ஒருவருக்கொருவர் எத்தகைய அன்பு உள்ளங்கொண்டு வாழ்ந்தனர் என்பதுவும், அந்தக்கால மக்கள் எந்த விதமான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர் என்பதும் சிறப்பாக வெளியிடப்படுகிறது. மேலும் பண்டைத் தமிழர்களுக்குப் பல பிறவிகளில் நம்பிக்கை இருந்திருக்கிறது என்பதுவும் புலப்படுகிறது. இவை தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளாகத் திகழ்கின்றன.

6.2.3 ஐங்குறுநூற்றில் பண்பாடு ஐங்குறுநூற்றில் பண்பாடு பற்றிய செய்திகள் பல உள்ளன. அக்காலத்தில் ஓர் ஊரை அடுத்திருந்த பகுதி சேரி எனப்பட்டது. குறிப்பிட்ட சாதியினர் வாழுமிடத்தைச் சேரி என்று அக்காலத்தவர் கூறுவதில்லை. அக்காலத்தில் பகல் பன்னிரண்டு மணி முதல் இரவு பன்னிரண்டு மணி வரை உள்ள பொழுது பாதிநாள் எனக் கணக்கிடப்பட்டது. பகல் பன்னிரண்டு மணியிலிருந்தே நாளைக் கணக்கிடுவது அக்கால வழக்கமென்பது இதனால் அறியப்படும். மகனுக்குத் தந்தை தன் தந்தையின் பெயரை வைத்தல் அக்கால மரபாகும். தந்தை பெயரன் என அதனால் பேரனைக் குறித்தனர். இவையெல்லாம் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளாக ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது.

6.3 எட்டுத்தொகை நூல்கள் - II

மேலே நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகிய மூன்று நூல்களில் பண்பாடு அமைந்த பாங்கைக் கண்டோம். இப்பகுதியில் எஞ்சியுள்ள ஐந்து நூல்களில் பண்பாடு பற்றிய செய்திகளைக் காண்போம்.

6.3.1 பதிற்றுப்பத்தில் பண்பாடு அக்காலச் சேரநாட்டுப் பகுதியில் விளங்கிய பண்பாடு பதிற்றுப்பத்தால் அறியப்படுகின்றது. சேரநாட்டில் அக்காலத்திலேயே வேதநெறிக்கு மதிப்பிருந்தது. அந்தணர்க்கு அந்நாட்டு வேந்தர் மிக மதிப்பளித்தனர். அரசர்கள் தவம் செய்வதால் பெரும் செல்வங்கள் கைகூடும் எனக் கருதினர். பெருஞ்சேரல் இரும்பொறை என்ற அரசன் தன் புரோகிதனைத் தவம் செய்து வருமாறு அறிவுறுத்தினான். அவ்வரசன் மன அமைதி, செல்வம், மகப்பேறு, கொடை, தெய்வ உயர்வு ஆகியன தவத்தால் அமையும் எனத் தெரிவித்துப் புரோகிதனைத் தவம் செய்யக் காட்டிற்கு அனுப்பினான். சேரநாட்டு அயிரைமலையில் கொற்றவை கோயில் இருந்தது. போரில் வெற்றி வேண்டி அரசர் அயிரைமலைக் கொற்றவையை வழிபட்டனர். பாலைக் கௌதமனார் என்ற அந்தணப் புலவர் வேண்டிக் கொண்டதற்கேற்பப் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்ற சேர அரசன் பத்துப் பெரு வேள்விகளைச் செய்வித்தான்.

இவை, பதிற்றுப்பத்திலிருந்து பெறும் பண்டைய தமிழர் பற்றிய செய்திகளாகும்.

6.3.2 பரிபாடலில் பண்பாடு பரிபாடல் பாண்டி நாட்டுப் பழக்க வழக்கங்கள் சிலவற்றைக் குறிப்பிடுகின்றது. கண்ணன், பலதேவன் ஆகிய இருவரையும் அக்காலத்தவர் பெரும்பெயர் இருவர் எனக் கூறினர். இவ்விரு தெய்வங்களுக்கும் மதுரைக்குப் பக்கத்தில் உள்ள அழகர்மலையில் கோயில் இருந்தது. இம்மலை அக்காலத்தில் திருமாலிருஞ் சோலைமலை எனப்பட்டது. மக்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று இம்மலையில் திருமாலையும் பலதேவனையும் வழிபட்டனர். தலைவன் பரத்தையோடு சேர்ந்து வையையில் நீராடியதைப் பரிபாடல் காட்டுகின்றது. மக்கள் வையையாற்றுப் புதுவெள்ளத்தில் நீராடும்போது பொன்னால் செய்த நத்தை, நண்டு, இறால், வாளைமீன் ஆகியவற்றை நீரில் விட்டனர். மார்கழி மாதத்தில் திருவாதிரை நாளில் ஆகமம் அறிந்த பூசகர் விழா நடத்தினர். அப்போது பெண்கள் தைந்நீராடல் எனப்பெறும் நோன்பை மேற்கொண்டனர். ‘நிலம் மழை பெற்றுக் குளிர்க’ என்று மகளிர் கூறி நீரில் மூழ்கி ஆடும் நீராடல் அம்பா ஆடல் எனப்பட்டது. இவ்வழக்கமே பிற்காலத்தில் பாவை நோன்பாகியிருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில் மண்டபத்தில் பல ஓவியங்கள் வரையப் பெற்றிருந்தன. நாள், மீன்கள், சூரியன் முதலான கோள்கள் எவ்வெவ்விடத்தில் இராசிச் சக்கரத்தில் நிற்கின்றன என்பது குறித்த ஓவியம் ஒன்று வரையப்பட்டிருந்தது. இரதி, மன்மதன் குறித்த ஓவியம் ஒன்று இருந்தது. கௌதம முனிவன், இந்திரன், அகலிகை, இந்திரன் கொண்ட பூனை வடிவம் ஆகிய உருவங்கள் ஓவியமாக ஆக்கப்பட்டிருந்தன. இவ்வாறு பாண்டிய நாட்டுப் பழக்க வழக்கங்களாகிய தமிழர் பண்பாட்டுக் கூறுகள் பரிபாடல் மூலம் வெளிப்படுகின்றன.

6.3.3 கலித்தொகையில் பண்பாடு கலித்தொகையில் இடம்பெறும் ஏறு தழுவுதல் பற்றிய செய்தி தமிழர் பண்பாட்டில் குறிக்கத்தக்கதாகும். காடும் காடு சார்ந்த நிலமுமாகிய முல்லை நிலப்பகுதியில் இந்த வீரவிளையாட்டு நிகழ்ந்தது. கொம்பு சீவப்பட்ட எருதுகளை அடக்கிய வீரர்களைப் பெண்கள் விரும்பி மணம் முடித்தனர். தொழுவில் ஏறுகள் கட்டவிழ்த்து விடப்படும். இளைஞர்கள் நீர்த்துறையிலும் ஆலமரத்திலும் மாமரத்திலும் உறையும் தெய்வங்களை வணங்கியபின் தொழுவில் பாய்ந்து காளைகளோடு போராடுவர். மகளிர் பரண்மீது நின்று ஏறுதழுவும் காட்சியைக் காண்பர். வீரர் சிலரின் மார்பில் காளைகள் கொம்புகளால் குத்தும். குடர் வெளியே தள்ளப்படும். ஏறுகளை அடக்கும் வீரர்கள் மக்களால் போற்றப்படுவர். ஏறு தழுவல் முடிந்தபின் ஊர்மன்றத்தில் மகளிரும் மைந்தரும் கைகோத்துக் குரவையாடுவர். ஏறு தழுவுதற்குத் தயங்கும் ஆயர் இளைஞனை ஆயர் மகள் கணவனாக ஏற்றுக்கொள்ள மாட்டாள். ஆயர் பெண் எருமையின் கொம்பைத் தெய்வமாக வைத்து வழிபட்டுத் திருமணத்தை நடத்துவர்.

கலித்தொகை கீழ்க்கண்ட வாழ்வியல் உண்மைகளை எடுத்துச் சொல்கிறது. இவை இக்கால மாந்தரின் மனச்செம்மையையும், முதிர்ச்சியையும் காட்டுகின்றன.

செல்வம் நிலையில்லாதது.

யாவர்க்கும் தீங்கு செய்பவன் இறுதியில் கெட்டு ஒழிவான்.

கொடைப்பண்பு இல்லாதவனின் செல்வம் அவனைச் சேர்ந்தவரைப் பாதுகாக்காது.

அறிவற்றவர் தம் இறுதி பற்றியும் முதுமை பற்றியும் எண்ண மறந்து விடுவர்.

நிலவு நாள்தோறும் தேய்வது போல இளமையும் அழகும் தேயும்.

நேர்மையற்ற முறையில் தேடிய பொருள் இம்மையிலும் மறுமையிலும் பகையே தரும்.

இளமை, காமம் ஆகியன நாள்தோறும் கழிவன.

சோம்பர் இல்லாதவன் செல்வம் வளரும்.

பொருள் இல்லாதவன் நடத்தும் இல்லறம் இன்பம் தராது.

6.3.4 அகநானூற்றில் பண்பாடு அகநானூற்றில் அக்காலத் தமிழர் திருமணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. வீட்டுக்கு முன் உள்ள முற்றவெளியில் பந்தல் இடப்பட்டு மணல் பரப்பப்படும். பந்தலைச் சுற்றிலும் மலர் மாலைகள் தொங்கவிடப்படும். மனையின்கண் விளக்கு எரிந்து கொண்டிருக்கும். உழுத்தம் பருப்புடன் அரிசி சேர்த்துச் சமைத்த பொங்கல் விருந்து படைக்கப் பெறும். சந்திரன் உரோகிணியுடன் சேரும் நல்லோரையில் மக்களைப் பெற்ற வாழ்வரசியர் மணமகளை நீராட்டிக் ‘கற்பில் வழுவாது, பல பேறுகள் தந்து கணவனுடைய விருப்பத்திற்கு உரியவளாய்த் திகழ்க’ என வாழ்த்துவர். மணமக்களைப் பெரியோர் நெல்லும் மலரும் கொண்டு வாழ்த்துவர். இறைச்சியோடு சேர்ந்த நெய்ச்சோறு ஆக்கிப் படைத்தலும் இம்மணவிழாவில் நிகழும். மணமுழவும் பெரிய முரசமும் ஒலிக்கும். அப்போது வாகை இலையை அறுகம்புல்லின் அரும்புடன் சேரக்கட்டுவர். வெண்மையான நூலில் இலையும் அரும்பும் கொண்ட மாலையைச் சூட்டி மணமகளை அலங்கரிப்பர். இத்திருமணங்களில் எரி வளர்த்தல், தீவலம் வருதல், மந்திரம் கூறுதல் ஆகியன இல்லை.

ஒவ்வோர் ஊரிலும் அக்காலத்தில் பொதியில் எனப்படும் ஊர்மன்றம் ஒன்று இருந்தது. அங்குக் கந்து எனப்படும் மரத்தூண் நடப்பட்டிருந்தது. அதனை மக்கள் வழிபட்டனர். இதிலிருந்தே இலிங்க வழிபாடு வளர்ந்திருக்க வேண்டும். காக்கும் தெய்வமான திருமாலின் ஐந்து படைகளின் (சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம்) உருவம் கொண்ட ஐம்படைத்தாலி என்ற அணியைச் சிறுபிள்ளைகளுக்குப் பெற்றோர் அணிவித்தனர். மலையின்மீது கார்த்திகை நாளில் விளக்கிட்டு வழிபடுதல் அக்கால வழக்கமாகும். தினைக்கதிரை உண்ண வந்த களிற்றுயானை (ஆண் யானை)யினைத் தினைப்புனம் காவல் காத்த பெண் குறிஞ்சிப்பண் பாடி, அதனை நின்ற நிலையிலிருந்து அகலாமல் உறங்கச் செய்தாள் என்று அகநானூறு கூறுகின்றது.

பண்டைக்காலத் திருமணமுறை, உணவு முறை, வழிபாடு, சிறுவர்களுக்கு ஐம்படைத்தாலி அணியும் வழக்கம் முதலிய பண்பாட்டுக் கூறுகளை அகநானூறு வெளியிடுகிறது.

6.3.5 புறநானூற்றில் பண்பாடு புறநானூற்றை அக்காலப் பண்பாட்டுக் களஞ்சியம் என்று கூறலாம். அரசர்களுக்கு அஞ்சி வாழாத கல்விச்செருக்கு புலவர்களிடம் இருந்தது எனப் புறநானூறு கூறுகின்றது. தம்மை மதிக்காமல் பரிசளிக்க வந்த வேந்தர், காலந்தாழ்த்திப் பரிசளித்த கொடையாளி, அதுபோல் தகுதியறியாது பரிசில் வழங்க முயன்ற மன்னர் ஆகியோர் கொடையை அக்காலப் புலவர்கள் ஏற்கவில்லை.

“எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே” (புற: 206-13)

“பெரிதே உலகம் பேணுநர் பலரே”            (புற: 207-7)

“உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்”   (புற: 197-16)

என்பன போன்ற உயர்ந்த சிந்தனைக் கூற்றுகள் புறநானூற்றில் உள்ளன.

பிசிராந்தையார்

பண்பாட்டில் நட்பு சிறந்த இடம் பெறுகிறது. கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு உலகில் எங்கும் காண இயலாதது. கோப்பெருஞ் சோழன் சோழ நாட்டு அரசன்; ஆந்தை பாண்டி நாட்டிலுள்ள பிசிர் என்ற ஊரைச் சார்ந்த புலவர். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததில்லை. ஆனால் இருவரிடையே உயிர்நட்புப் பொருந்தியது. கோப்பெருஞ்சோழன் தன் மக்களோடு மனம் மாறுபட்டு வெறுப்புற்ற நிலையில் உயிர் துறக்க எண்ணினான். வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பு கொண்டு உயிர்விடும் செயலை அக்காலத்தில் வடக்கிருத்தல் என்பர்.

சோழன் வடக்கிருந்தான். திருவரங்கம் என்ற ஊரில் காவிரிக்கரையில் சோழன் வடக்கிருந்தபோது தன் பக்கத்தே இருந்த சான்றோரிடம் ‘என் நண்பன் ஆந்தை என்னைத் தேடி வருவான். நான் உயிர்நீத்தபின் வந்தால், எனக்கு அருகே அவனுக்கும் உயிரடக்கம் கொள்ள இந்த இடத்தை நான் அளித்தேன் என்று கூறுங்கள்’ என்று கூறி உயிர் விட்டான். அவன் சொன்னபடியே ஆந்தையும் வந்தார். நிகழ்ந்தது அறிந்து அவ்விடத்தேயே இருந்து அவரும் உயிர் நீத்தார். பொன்னும் மணியும் முத்தும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் மாலை சமைக்கும்போது பக்கத்தில் நெருங்கி வந்து விடுதல் போலச் சான்றோர்கள் சான்றோரையே சேர்வர் என்று புலவர் ஒருவர் இந்நிகழ்வு குறித்துப் போற்றினார்.

குமணன்

புலவர் ஒருவர் பரிசில் பெறுவதற்காகத் தன் தலையையே கொடுக்க முன் வந்தான் குமணன் என்னும் மன்னன். புலவர் ஒருவர் வறுமையைத் துடைக்க வசதியற்ற நிலையில் கொடையாளி ஒருவன் தன் வாளை அடகு வைத்தான்; மற்றொருவன் பகைவர்மீது போர் தொடுக்கவும் கருதினான்.

பூதப்பாண்டியன் என்ற அரசன் ‘பகைவரை நான் வெல்லாவிடில் நான் என் மனைவியைப் பிரிந்த குற்றத்திற்கு ஆட்படுவேனாக’ என்று சூள் உரைத்தான். பூதப்பாண்டியன் இறந்தபின் கைம்மை நோன்பு ஏற்க விரும்பாத அவன் மனைவி உடன்கட்டை ஏறினாள். சோழன் நலங்கிள்ளி ‘பகைவரை நான் வெல்லாவிடின் என் கழுத்திலுள்ள மாலை பொது மகளிர் மார்பில் புரண்ட குற்றத்தை எய்தட்டும்’ என்றான். சேர அரசன் ஒருவன், ‘என் மனைவி இறந்த பிறகும் நான் உயிர் வாழ்கிறேனே’ என்று மனம் நொந்தான். புறநானூறு தமிழர் வரலாற்றின் கருவூலம். அது தமிழர்களின் வீரப் பெருமையையும், மன்னர்களின் கொடைச் சிறப்பையும், புலவர்களின் பெருமிதத்தையும், நட்பின் சிறப்பினையும் வெளிப்படுத்துகிறது.

6.4 சில பண்பாட்டு நிகழ்வுகள் (அகம்)

பழங்காலத் தமிழக வரலாற்றில் சுவைமிக்க நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. பெருமையும் மகிழ்ச்சியும் அடையத்தக்க நிகழ்ச்சிகளும், தமிழர் பண்பாட்டிற்கு விளக்கம் என்று கூறத்தக்கனவும் அக்காலத்தில் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இப்பகுதியில் காணலாம்.

6.4.1 ஆதிமந்தி ஆதிமந்தி என்பவள் கரிகாற்சோழனின் மகள். இவளுடைய கணவன் ஆட்டனத்தி என்பவன் சேர இளவரசன். ஆட்டனத்தி ஆடற்கலையில் வல்லவன். ஒருமுறை சோழன் கழாஅர் என்னும் காவிரி ஆற்றுத் துறையில் ஒரு நீர்விழாக் கொண்டாடினான். வெள்ளம் பரந்து வந்த காவிரியில் ஆட்டனத்தி குளித்து நீந்துகையில் நீரினால் இழுத்துச் செல்லப்பட்டான். ஆதிமந்தி அழுது புலம்பினாள். காவிரியாற்றின் கரையில் தொடர்ந்து ஓடிக் கணவனைத் தேடினாள். மருதி என்ற மீனவனின் மகள் வெள்ளத்தில் மூழ்கிய ஆட்டனத்தியை நாகைப்பட்டினத்துக் கடற்கரையில் மீட்டுக் கொண்டு வந்தாள். ஆதிமந்தி கணவனை மீண்டும் பெற்றதனால் கற்புக்கரசி என்று போற்றப்பட்டாள். இந்த வரலாற்று நிகழ்ச்சியைப் பாரதிதாசன் உட்படப் பலர் சுவையான நாடகமாகவும் காப்பியமாகவும் வடித்துள்ளனர்.

6.4.2 தரையில் விழுந்த பூ தலைவன் ஒருவன் தான் காதல் கொண்ட தலைவியிடம் ஒரு முல்லைச் சரத்தைக் கொடுத்தான். வெளியில் தெரியுமாறு அதனைச் சூடிக்கொள்ள முடியுமா? யார் கொடுத்த பூ என்று கேட்க மாட்டார்களா? எனவே கூந்தலில் உள்ளே அந்த மலர்ச்சரத்தை வைத்து முடித்துக் கொண்டாள். இவ்வாறு மலரை முடிந்ததை மறந்து விட்டாள். வளர்ப்புத்தாய் கூந்தலை ஒப்பனை செய்ய மறுநாள் அழைத்தபோது அவள் முன் போய் உட்கார்ந்தாள். தாய் கூந்தலை அவிழ்த்து விட்டவுடன் அவள்முன் அப்பூ விழுந்தது. ‘யார் கொடுத்தது இப்பூ’ என்று தாய் திடுக்கிட்டு எழுந்தாள். தோழியின் வழியாகக் காதலர் உறவு வெளியாயிற்று. திருமணத்திற்கு ஒத்துக்கொண்டு பெற்றோர் மண ஏற்பாடுகளைச் செய்தனர். ஒரு மலர்ச்சரம் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திவிட்டது பார்த்தீர்களா? தமிழர்களின் அகவாழ்க்கையில் காதல் பெறும் சிறப்பு இது போன்ற பல நிகழ்ச்சிகளின் மூலம் சங்ககால அக இலக்கியங்களில் வெளிப்படுத்தப்படுகிறது.

6.4.3 விக்கலுக்குத் தண்ணீர் தாயும் மகளும் வீட்டில் இருந்தார்கள். மகளோடு சிறுவயதில் முன்பு தெருவில் விளையாடும் ஒருவன் இப்போது இளைஞனாய் வளர்ந்திருக்கிறான். அவன் இவர்களின் உறவுமுறைக்காரனும் ஆவான். அவன் இப்பெண்கள் இருக்கும் வீட்டிற்கு வந்தான். திண்ணையிலிருந்து கொண்டு ‘வீட்டில் இருப்போரே! குடிக்கத் தண்ணீர் கொடுங்கள்’ எனக் கேட்டான். தாயும் தன் மகளைப் பார்த்து ‘அவனுக்குத் தண்ணீர் கொடுத்துவா’ என்றாள். தண்ணீர் எடுத்துச் சென்று இளைஞனிடம் அப்பெண் கொடுக்கும்போது அவன் அவள் கையைப் பற்றினான். அவள் உடனே ‘அம்மா இவன் செய்ததைப் பார்த்தீர்களா?’ என்று அலறினாள். தாய் உடனே ‘என்ன செய்தி’ என்று கேட்டு விரைந்து வந்தாள். இப்போது அன்புடைய அத்தலைவனைக் காட்டிக் கொடுக்கத் தலைவி விரும்பவில்லை. ஏனென்றால் அவன்மீது அவளுக்கும் காதல் இருந்தது. எனவே ‘ஒன்றுமில்லையம்மா! தண்ணீர் குடித்தவுடன் இவனுக்கு விக்கல் வந்துவிட்டது’ என்றாள். தாய் உடனே அவன் முதுகைத் தடவி விக்கல் நீக்க முயன்றாள். அவனோ திருட்டுத்தனமாகத் தலைவியைப் பார்த்துச் சிரித்தான். அருமையான இந்தக் காதல் நாடகத்தில் தமிழர் பண்பாடு விளக்கமாகத் தெரியும்.

6.5 சில பண்பாட்டு நிகழ்வுகள் (புறம்)

மேலே காதல் வாழ்வில் சில சுவையான நிகழ்ச்சிகளைப் பார்த்தோம். இங்கு வெளியுலக வாழ்வில் குறிப்பாக வீரப்பண்பாடு வெளிப்படும் சில நிகழ்வுகளைக் காணலாம்.

6.5.1 சூளுரைத்த தாய் நாட்டில் போர் மூண்டுவிட்டது. வயதில் முதிர்ந்த தாய் ஒருத்தியின் மகனும் போர்க்களம் போயிருந்தான். போர் முடிவு என்ன ஆயிற்றோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் முதியவள். அப்போது பண்பில்லாத சிலர் அந்த முதியவளிடம் வந்து ‘அம்மா! உன் மகன் முதுகிலே காயம்பட்டு இறந்துவிட்டான்’ என்று பொய் கூறிச் சென்றனர். முதியவள் துடித்து விட்டாள். என் மகன் முதுகிலே புண்பட்டிருந்தால் அவனுக்குப் பால் கொடுத்த மார்பை அறுத்து எறிவேன் என்று சபதம் செய்தாள். வீட்டிலிருந்த வாளைக் கையிலே எடுத்தாள். போர்க்களத்திலே போய் ஒவ்வொரு பிணமாகப் புரட்டிப் பார்த்தாள்.

அங்கே அவள் மகன் மார்பிலே புண்பட்டு இறந்து கிடந்ததைக் கண்டாள். அப்போது அவனைப் பெற்ற நாளில் அடைந்த மகிழ்ச்சியைவிட அதிகமாக அந்தத் தாய் மகிழ்ந்தாள். இப்படி ஒரு வீரநிகழ்ச்சியைச் சங்ககால இலக்கியம் நமக்குக் காட்டுகிறது.

6.5.2 அறிவுறுத்திய புலவர் பாண்டிய அரசன் குடிமக்களிடம் நிலவரி அதிகம் வாங்க முற்பட்டான். குடிமக்கள் துன்பப்பட்டனர். இதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாய் இருக்கப் புலவர் பிசிராந்தையார் மனம் இடம் கொடுக்கவில்லை. உடனே அரசனிடம் சென்றார். ‘அரசே! நல்ல விளைந்த வயலில் அறுவடை செய்த நெல்லைச் சோறாக்கி உருண்டை உருண்டையாய்க் கொடுத்தால் யானைக்குப் பலநாள் உணவாகும். அப்படி இல்லாமல் யானையையே வயலில் புகவிட்டால் அதன் வாயில் புகுவதைவிடக் கால்பட்டு அழிவது அதிகமாகும். அதுபோல முறையாகவும் அளவாகவும் வரி வாங்கினால் அழிவு வராது; ஆக்கம் உண்டாகும்’ என்று அறிவுறுத்தினார். அரசனும் இந்த அறிவுரையை ஏற்றான். இவ்வாறு புலவர் பலர் அரசர்களை நெறிப்படுத்திய காட்சிகள் பழைய இலக்கியத்தில் உள்ளன.

6.6 தொகுப்புரை

தமிழக வரலாற்றில் சங்க காலம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும். அன்று காதல் வாழ்விலும் வீர வாழ்விலும் சிறந்த பண்பாடு நிலவியதை மேலே கண்ட இலக்கியங்கள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. பரிசு பெற்று வருபவர், செல்வமின்றி வருந்தும் வறியவருக்கு வளமைபெற வழிகாட்டுதல்; செல்வமிக்க அரசர்கள், புலவரைப் போற்றி அவர்கள் முன் அடங்கி ஒழுகுதல்; பாய்ந்து வரும் காளையை இளைஞன் பற்றி அடக்கித் தன் வீரத்தைக்காட்டிப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுதல்; வைதிகச் சடங்குகள் அற்ற திருமணம்; மனத்துன்பம் ஏற்பட்ட காலத்தில் வடக்குத் திசைநோக்கி அமர்ந்து உண்ணாநோன்பு கொண்டு உயிரை விடுதல் ஆகியன தமிழர் பண்பாட்டில் குறிக்கத்தக்க சில கூறுகளாகும். இச்செய்திகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளமையினை நீங்கள் அறிந்தீர்களா?