131

பள்ளு என்றால் என்ன ?

' பள் ' என்ற சொல் உகர விகுதி பெற்று பள்ளு என்று ஆகி உள்ளது .

பல்லு , கள்ளு , முள்ளு என்ற வழக்காறுகளை இதற்குச் சான்றாகக் காட்டலாம் .

உழவுத் தொழிலுக்குச் சிறந்த இடம் மருதம் .

இது பயிர்த்தொழில் செய்வதற்குத் தக்கவாறு தண்ணீர் தங்கும் பள்ளமான இடங்களை உடையது .

பள்ளங்கள் நிறைந்த இடத்தில் வேலை செய்வோரைப் பள்ளர் என்று குறிப்பிட்டனர் .

பள்ளர்கள் பாடும் பாடலே பள்ளு என்று கூறுவர் .

பள்ளு இலக்கியம் பிற்காலத்தில் இலக்கிய வடிவைப் பெற்றாலும் அதன் கூறுகள் பண்டைய இலக்கியங்களிலேயே தென்படுகின்றன .

பள்ளு இலக்கியம் முழு வடிவைப் பெறுவதற்குப் பல்வேறு கூறுகள் துணை செய்திருக்க வேண்டும் .

இவற்றைப் பின்வருமாறு பட்டியல் இடமுடியும் .

1 ) தொல்காப்பியர் ' புலன் ' என்னும் செய்யுள் பற்றிக் கூறும் செய்திகள் பள்ளு இலக்கியத்தின் தோற்றம் பற்றிய செய்திகளோடு ஒத்துள்ளன .

புலன் என்பது சேரி மொழிகளால் அதாவது வழக்கு மொழிகளால் புனையப்படுவது .

( தொல் .

பொருள் .

542 )

2 ) தொல்காப்பியர் கூறும் ஏரோர் களவழி எனும் புறத்துறையையும் இங்குக் கூறுதல் வேண்டும் .

ஏரோர் களவழி என்பது உழவர்களின் நெல்களத்தில் நிகழும் செயல்கள் ஆகும் .

( தொல் .

பொருள் .

75 )

3 ) பன்னிருபாட்டியல் கூறும் உழத்திப் பாட்டும் பள்ளு இலக்கியத் தோற்றத்திற்குக் காரணமாகும் .

உழத்திப் பாட்டு என்பது உழவுப் பெண்களின் பாடல் என்று பொருள்படும் .

4 ) சிலப்பதிகாரம் சுட்டும் முகவைப் பாட்டு ( 10:137 ) ( களத்தில் நெல் அடிக்கும்போது பாடும் பாட்டு ) ஏர்மங்கலம் ( 10:135 ) ( முதல் ஏர் பூட்டி ஓட்டும்போது பாடப்படும் மங்கலப்பாட்டு ) ஆகியனவும் பள்ளு இலக்கியத் தோற்றத்திற்குக் காரணங்கள் .

இவ்வாறான கூறுகளே பிற்காலத்தில் இணைந்து பள்ளு இலக்கியமாக உருப்பெற்றன என்று கூறுவார் ந.வீ. செயராமன் .

• முதற்பள்ளு

இப்பொழுது கிடைக்கும் பள்ளு இலக்கியங்களில் திருவாரூர் தியாகப் பள்ளு என்பதுதான் முதற்பள்ளு இலக்கியம் என்ற கருத்து உண்டு .

முக்கூடற் பள்ளு முதற்பள்ளு என்பாரும் உள்ளனர் .

1642-இல் இயற்றப்பட்ட ஞானப் பள்ளே முதற்பள்ளு என்ற கருத்தும் உண்டு .

சில பள்ளு இலக்கியங்கள் வருமாறு :

கதிரைப் பள்ளு

தென்காசிப் பள்ளு

மோகனப் பள்ளு

வைசியப் பள்ளு

வேதாந்தப் பள்ளு

வையாபுரிப் பள்ளு

செந்தில் பள்ளு

சிவ சயிலப் பள்ளு

இவ்வாறாக ஏராளமான பள்ளு இலக்கியங்கள் தோன்றி உள்ளன .

பள்ளு இலக்கிய எண்ணிக்கையை எண்ணி அறிய முடியாது என்பதை

நெல்லு வகையை எண்ணினாலும்

பள்ளு வகையை எண்ண முடியாது

என்ற பழமொழி கூறுகின்றது .

பள்ளு இலக்கியப் பொது அமைப்பு

பள்ளு இலக்கியங்களில் நூல் படைக்கும் மரபு போற்றப்பட்டுள்ளது .

காப்பு , கடவுள் வணக்கம் , பாயிரம் ஆகியன முறையாகப் படைக்கப்பட்டுள்ளன .

நூலின் தொடக்கமாகப் பள்ளன் தோன்றித் தலைவனின் உயர்வை விளக்குவான் .

பின்பு பள்ளன் பள்ளியர் தம் குடிப் பெருமைகளைக் கூறுவர் .

இவற்றைத் தொடர்ந்து நாட்டு வளம் , நகர்வளம் கூறப்பெறும் .

மழையின் வரவு பற்றிக் குறி அறிந்து மழை வேண்டிப் பாடப்படும் . பின்பு மழை பொழியும் .

ஆற்றில் வெள்ளம் பெருகி ஐந்து வகை நிலங்களும் நீர் பெறும் .

உழவு தொடங்குவதற்கான பக்குவமான சூழ்நிலை உருவாகும் .

• பள்ளனும் பள்ளியரும்

பண்ணைக்காரன் வரும்போது , பள்ளியர் அவனிடம் பள்ளனைப் பற்றி முறையிடுகின்றனர் .

இளைய பள்ளியின் அழகில் மயங்கிக் கடமையை மறந்த பள்ளனைப் பண்ணைக்காரன் கடிந்து உரைக்கிறான் .

பள்ளன் தன் தவறுகளை மறைக்கப் பண்ணைக்காரனிடம் வித்துவகை , மாட்டு வகை , ஏர் வகை முதலியவற்றைக் கூறுகின்றான் .

• மூத்தபள்ளி முறையீடு

மூத்த பள்ளி பண்ணைக்காரன் முன்பு தோன்றுகிறாள் .

தன்னை ஒதுக்கி வாழும் பள்ளனைப் பற்றிக் கூறி முறை இடுகிறாள் .

அதனைக் கேட்ட பண்ணைக்காரன் சினந்து பள்ளனைக் குட்டையில் ( மரத்தால் பிணிக்கும் கருவி ) மாட்டி விடுகிறான் .

பின்பு மூத்த பள்ளி மூலம் விடுவிக்கப்படுகிறான் .

• பயிரிடும் பள்ளியர்

பண்ணையில் பயிர் இடும் வேலை தொடங்குகிறது .

நிலத்தை உழுது விதைக்கிறார்கள் .

பயிர் முளையிட்டு வளர்கிறது .

நாற்று நடுகிறார்கள் .

களை அகற்றி நீர் பாய்ச்சுகின்றனர் .

பயிர் விளைகிறது .

முற்றிய கதிரை அறுத்து நெல்லடித்துக் குவிக்கிறார்கள் .

உழவு வேலையில் பள்ளியர் பங்குபெறும் நிகழ்ச்சிகள் பாடல்கள் மூலம் காட்சிப்படுத்தப் படுகின்றன .

• பள்ளியர் மோதல்

பள்ளன் நெற்கணக்குக் கூறுகின்றான் .

பள்ளியர் இருவரும் கலகம் இட்டு ஒருவரை ஒருவர் ஏசிப் பேசுகின்றனர் .

இறுதியில் இருவரும் மனம் பொருந்தி வாழ இசைகின்றனர் .

நல்ல விளைவையும் நல்ல வாழ்வையும் அருளிய இறைவனை வேண்டிப் பணிவதோடு பள்ளு முடிவடைகிறது .

இதுவே பள்ளு இலக்கிய நோக்கமாகவும் அமைகிறது .

மேலே கூறிய செய்திகளே பள்ளு இலக்கிய அமைப்பாக விளங்குகின்றன .

பெரும்பான்மைப் பள்ளு இலக்கியங்கள் இந்த அமைப்பு முறையிலேதான் அமைந்துள்ளன .

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1. பள்ளு இலக்கியங்கள் மிகச் சிறப்புடன் உருவான காலம் எது ?

விடை

2. பள்ளு என்ற சொல்லின் அடிச்சொல் எது ?

விகுதி எது ?

விடை

3. பள்ளு இலக்கியத் தோற்றத்திற்கு உறுதுணையாக விளங்கிய இலக்கிய இலக்கணக் கூறுகளைப் பட்டியல் இடுக .

விடை

4. பழைய பள்ளு இலக்கியங்களில் ஐந்தின் பெயரைச் சுட்டுக .

விடை

5. பள்ளு இலக்கியங்களில் முதன்மைப்படுத்தப்படும் தொழில் எது ?

முக்கூடற் பள்ளு

தமிழ்நாட்டில் வளமான ஒரு பகுதி திருநெல்வேலி மாவட்டம் .

திருநெல்வேலியை ' நெல்லை ' என்றும் கூறுவர் .

இதோ தாமிரபரணி ஆற்றைக் காணுங்கள் .

திருநெல்வேலிக்கு வடகிழக்கே சித்திரா நதி , கோதண்டராம நதி ஆகிய இரு நதிகளும் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் இடம் முக்கூடல் என்று அழைக்கப்பட்டது .

இவ்வூரில் எழுந்து அருளி இருக்கும் அழகர் என்னும் தெய்வத்தின் மீது பாடப்பட்டதே முக்கூடற் பள்ளு ஆகும் .

நண்பர்களே !

இதுவரை பள்ளு இலக்கியம் பற்றிய பொதுவான செய்திகளைப் பார்த்தோம் .

இனி முக்கூடற் பள்ளு பற்றிச் சிறப்பு நிலையில் செய்திகளை அறிய இருக்கிறோம் .

• பெயர்க் காரணம் முக்கூடற் பள்ளு என்பது இடத்தால் பெற்ற பெயர் ஆகும் .

முக்கூடல் இன்று சீவலப்பேரி எனக் குறிக்கப்படுகிறது .

பாண்டியன் மாறவர்மன் ஸ்ரீவல்லபன் கி.பி. 12- ஆம் நூற்றாண்டில் தன் பெயரில் ஓர் ஏரி கட்டினான் .

அது ஸ்ரீவல்லபன் ஏரி எனப்பெயர் பெற்றது .

இதனால் இவ்வூர் சீவலப்பேரி என வழங்கப்படுகிறது .

இங்கு மூவேந்தர் கல்வெட்டுக்களுடன் கூடிய தொன்மையான திருமால் கோயில் உள்ளது .

இங்குக் கோயில் கொண்டிருக்கும் திருமாலை ' அழகர் ' என்றும் ' செண்டு அலங்காரர் ' என்றும் முக்கூடற் பள்ளு புகழ்ந்து போற்றுகின்றது .

• காலம்

இந்நூலின் காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு எனலாம் .

காவை வடமலைப் பிள்ளையன் , ஆறை அழகப்ப முதலியார் , திருமலைக் கொழுந்துப் பிள்ளையன் ஆகிய செல்வர்கள் முக்கூடற் பள்ளில் பாராட்டப்பட்டுள்ளனர் .

இவர்களின் காலம் கி.பி. 1676 முதல் கி.பி. 1682 வரை ஆகும் .

எனவே முக்கூடற் பள்ளுவின் காலத்தை 17-ஆம் நூற்றாண்டு என்று கணக்கிடலாம் .

• ஆசிரியர்

இந்நூலின் ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை .

புலவர் பெயரை அறிய முடியாவிட்டாலும் அப்புலவர் இயற்றமிழ் , இசைத்தமிழ் , நாடகத்தமிழ் ஆகிய முத்தமிழையும் நன்கறிந்த கவிஞர் என்பதைப் பாடல்கள் புலப்படுத்தி உள்ளன .

• நூலின் தன்மை

பாத்திரங்கள் நாடகத் தன்மையுடன் அறிமுகப்படுத்தப் படுகின்றன .

மேலும் உரையாடல் வழியே கதை நிகழ்த்தப்படுகின்றது .

இந்நூல் இயல் , இசை , நாடகம் கலந்த முத்தமிழ் நூல் என்று கூறுவது மிகையாகாது .

சிறந்த சந்த நயமும் நாட்டுப்புறவியல் கூறுகளும் வளமான கற்பனைகளும் , உவமைகளும் நிறைந்து முக்கூடற் பள்ளு விளங்குகிறது .

நண்பர்களே !

இந்நூலின் சிறப்புகள் பற்றி இனி அறிய இருக்கிறீர்கள் .

முக்கூடல் நகர்ச் சிறப்பு

புலவர் முக்கூடல் நகரின் சிறப்பினைக் கற்பனை நயம்பட விவரித்துள்ளார் முக்கூடலில் அழகர் கோயில் கொண்டிருக்கும் கோயிலின் கோபுரம் மிக உயரமானது .

மேகத்திரள் அந்தக் கோபுரத்தைச் சூழ்ந்து நிற்கும் ; வானத்திலிருந்து மழைத்துளிகள் படியும் .

கொடி மரத்துக் கொடிகள் வானத்தையே மூடி மறைத்துக் கொண்டு இருக்கும் .

பேரண்டப் பறவைகள் கோயிலின் உச்சியை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் .

பொற்கோயிலின் முற்றத்தில் உள்ள மழைநீரில் அன்னங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் .

சூரியன் , கோயிலின் மதிற்சுவர்களில் தான் புகுந்து செல்வதற்குரிய வழியைத் தேடிக் கொண்டிருப்பான் .

இவ்வாறாக முக்கூடல் நகரைப் புலவர் வருணித்துள்ளார் .

இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும் .

கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும்

கொடிகள் வானம்

படிதர மூடும்

கண்ட பேரண்டம் தண்டலை நாடும்

கனக முன்றில்

அனம் விளையாடும்

விண்ட பூமது வண்டலிட்டு ஓடும்

வெயில் வெய்யோன் பொன்

எயில் வழி தேடும்

அண்டர் நாயகர் செண்டலங் காரர்

அழகர் முக்கூடல்

ஊர் எங்கள் ஊரே

( முக் .

பள். 20 )

( கொண்டல் = மேகம் , அண்டையில் = அருகில் , படிதர = பரவ , பேரண்டம் = பறவை , கனகம் = பொன் , முன்றில் = முற்றம் , அனம் = அன்னம் , விண்ட = விழுந்த , வெய்யோன் = ஞாயிறு , அண்டர் = தேவர் , செண்டு = கைத்தடி )

முக்கூடல் அழகர் கோயிலைப் பாடிய புலவர் அடுத்து நகர அழகைப் பாடுகின்றார் .

• வீதியும் சோலையும்

ஒளி வீசும் சிறந்த மணிவகைகள் பதித்த மாளிகைகளை உடையன வீதிகள் .

வீதிகளின் நெருக்கம் அதிகமாக இருக்கும் . மலர்ச் சோலைகளில் திரியும் வண்டு இனங்கள் தம் ரீங்காரப் பண்ணினைப் பாடும் .

அப்பாடல் இரும்பு உள்ளங்களையும் உருகச் செய்துவிடும் .

நால்வகை வருணத்து மக்களும் தம் வேற்றுமையை மறந்து ஒன்றுபட்டு நீதியைப் பெருக்குவர் .

நீர் நிலைகளில் உள்ள வாளை மீன்கள் நீர் முகப்பார் குடங்களில் புகும் .

புகுந்து குடத்தை நெருக்கும் .

இளம் எருமை மாடானது கழனிகளிலே உள்ள நீர்ப்பூக்களை மேயும் ; அதில் உள்ள மதுவை உட்கொண்டு செருக்கித் திரியும் .

மேட்டு நிலங்களில் எல்லாம் குளிர்ந்த மலர்கள் இதழ் விரித்து மலர்ந்திருக்கும் .

இவ்வாறாக முக்கூடல் நகரின் இயற்கை வளத்தையும் செயற்கை வளத்தையும் புலவர் பாடியுள்ள திறத்தை அறிந்து மகிழலாம் .

இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும் .

சோதி மாமணி வீதி நெருக்கும்

சுரும்பு பாடி

இரும்பும் உருக்கும்

சாதி நால்வளம் நீதி பெருக்கும்

தடத்து வாளை

குடத்தை நெருக்கும்

போதில் மேய்ந்து இளமேதி செருக்கும்

புனம் எல்லாம் அந்தண்

மலர் விண்டு இருக்கும்

( முக் .

பள். 24 )

( சோதி = ஒளி , சுரும்பு = வண்டு , தடம் = நீர்நிலை / குளம் , வாளை = மீன் , போது = பூ , மேதி = எருமை , விண்டிருக்கும் = விரிந்திருக்கும் )

முக்கூடல் நகரே அன்றி வடகரை நாடு , தென்கரை நாடு , மருதூர் ஆகியவற்றின் வளங்களையும் சுவையாக இப்பள்ளு விவரிக்கிறது .

3.4.1 குடிச்சிறப்பு

மூத்த பள்ளி , இளைய பள்ளி , பள்ளன் ஆகியோரின் அறிமுகமும் , அவர்களின் குடிச்சிறப்பும் நூலின் தொடக்கத்தில் சிறப்புடன் எடுத்துக் கூறப்பட்டுள்ளன .

• மூத்த பள்ளியின் தொல்குலம்

சித்திரா நதியானது முக்கூடலுக்கு வடப் பக்கமாக ஓடுவது .

அதற்குத் தென்பக்கமாக ஓடுவது பொருநை ஆறு ஆகும் .

இவ்விரு நதிகளும் தோன்றி ஓடிவந்து முக்கூடலில் ஒன்று கலந்த காலம் மிகத் தொன்மையான காலம் ஆகும் .

உலகம் தோன்றிய தொடக்கக் காலத்திலேயே அவை ஒன்று கலந்தன .

அப்படி அவை ஒன்று கலந்த காலம் தொட்டு வழி வழியாகத் தோன்றி வரும் மிகப் பழமையான குடும்பத்தில் பிறந்தவள் மூத்தபள்ளி ஆவாள் .

( முக் .

பள். 13 )

• இளைய பள்ளியின் பெருமை

செஞ்சி நாட்டிலும , கூடலாகிய மதுரை நாட்டிலும் தஞ்சை நாட்டிலும் , தம் ஆணையைச் செல்வாக்குடன் செலுத்தும் ஆட்சியாளன் வட மலையப்பப் பிள்ளையன் ஆவான் .

அவர் ஊரும் இளையபள்ளி ஊரும் ஒன்றே ஆகும் .

வடமலையப்பப் பிள்ளையன் உலக நன்மைக்காக ஐந்து குளங்களை வெட்ட நினைத்தான் .

குளம் வெட்ட , சக்கரக்கால் நிலை இட்ட போது ( குளம் வெட்டுவதற்குரிய எல்லைகளை அளந்து எல்லைக் கற்கள் பதிப்பித்த போது ) அந்த நாளிலேயே இளைய பள்ளி பண்ணையில் வந்து சேர்ந்தாள் என்று இளைய பள்ளியின் பெருமை பேசப்பட்டுள்ளது .

( முக் .

பள். 15 )

• பள்ளன்

பள்ளனின் பெருமை சமய உணர்வு அடிப்படையில் கூறப்பட்டுள்ளது .

முக்கூடல் அழகர் திருவடிகளைக் கருதாத மனத்தை உடையோரும் உள்ளனர் .

அவர்களின் மனத்தைத் தரிசு நிலம் என்று எண்ணி , கொழுப் பாய்ச்சி உழுபவன் பள்ளன் ஆவான் .

சுருதிகள் போற்றும் எட்டு எழுத்துகள் ( ஓம் நமோ நாராயணாய ) வைணவத்தில் முதன்மை பெற்றவை .

இந்த எழுத்துகளைப் பெரிய நம்பியைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாத துட்டர்களின் காதுகளைப் பாம்புப் புற்றுகள் என்று கருதி வெட்டி எறிபவன் பள்ளன் .

பெருமானுடைய நூற்று எட்டுத் திருப்பதிகளையும் வலம் செய்து வணங்காதவர் கால்களை வடத்தால் பிணித்து ஏர்க்காலில் சேர்த்துக் கட்டுபவன் பள்ளன் .

திருவாய்மொழிப் பாசுரங்களைக் கல்லாதவர்களை இருகால் மாடுகளாக ஆக்கி ஏரிலே பூட்டித் ' தீத்தீ ' என்று கோலால் அடித்து ஓட்டுபவன் பள்ளன் .

இவ்வாறாகப் பள்ளனின் பெருமை கூறப்பட்டுள்ளது .

இதனைப் பின்வரும் பாடல் விளக்கக் காணலாம் :

ஒருபோதும் அழகர் தாளைக் கருதார் மனத்தை வன்பால்