உழப் பார்க்கும் தரிசுஎன்று
கொழுப் பாய்ச்சுவேன்
சுருதி எண்எழுத்து உண்மைப்
பெரிய நம்பியைக் கேளாத்
துட்டர் செவி புற்று எனவே
கொட்டால் வெட்டுவேன்
பெருமாள் பதிநூற்று எட்டும்
மருவி வலம் செய்யார்தம்
பேய்க்காலை வடம் பூட்டி
ஏர்க்கால் சேர்ப்பேன்
திருவாய் மொழிகல்லாரை
இருகால் மாடுகள் ஆக்கித்
தீத்தீ என்று உழக்கோலால்
சாத்துவேன் ஆண்டே
( முக் .
பள். 12 )
( போது = பொழுது , தாள் = திருவடி , வன்பால் = வரட்டுநிலம் , கொழு = உழும் கருவி , சுருதி = வேதம் , கொட்டு = மண்வெட்டுங்கருவி , பதிநூற்றெட்டு = வைணவத் திருத்தலங்கள் 108 , வடம் = கயிறு , திருவாய்மொழி = வைணவ இலக்கியம் .
ஆண்டே = தலைவனே )
உழவர் வாழ்க்கை
உழவர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்ட முக்கூடற் பள்ளுவில் , பள்ளன் , பள்ளி ஆகியோரிடம் நடைபெறும் சண்டைகளும் , பிறவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளன .
• மூத்த பள்ளியின் முறையீடு
மழை வெள்ளம் வந்து ஆற்றில் நீர் பெருகி உழவு வேலை தொடங்கும் சூழ்நிலை உருவாயிற்று .
இந்நிலையில் பள்ளன் இளைய பள்ளியிடம் காதல் கொண்டு வேலை மறந்து கிடக்கிறான் .
இதனால் மூத்த பள்ளி பண்ணைக்காரனிடம் முறை இடுகின்றாள்
ஆட்டுக்கிடைக்குக் காவலாகப் போக வேண்டிய பள்ளன் இளையாளைப் பிரிய மனம் இன்றி அவள் குடிசையிலேயே தங்கி விட்டான் ஆண்டே !
( ஆண்டே = ஆள்பவர் / தலைவர் ) இப்படி அவளுடன் படுத்துக் கிடக்கும் பள்ளன் , பண்ணை வேலைகளைக் கெடுத்துவிடும் கள்ளன் ஆவான் .
அவளுக்காக மடலேறவும் ( விரும்பிய பெண்ணை மணந்து கொள்ளப் பழங்காலத்தில் ஆண்கள் மேற்கொண்ட ஒரு வழக்கம் மடலேறுதல் ) துணிந்தவன் .
காமப்பேய் பற்றி இருக்கும் உடலினை உடையவன் .
அவனுடைய கள்ளத்தனமான செயல்களை இன்னமும் நீர் அறியாது இருக்கின்றீர் .
இவனைச் சிறையிலே போட்டால்தான் வேலையிலே ஈடுபடுவான் ஆண்டே ( முக் .
பள். 85 , 86 )
வரவை மீறிச் செலவு செய்பவனுக்குத் தரித்திரந்தான் வளர்ந்து கொண்டே போகும் .
கூத்தாட்டக்காரர்களுக்கும் கொட்டுக்காரர்களுக்கும் வாரி வாரி வழங்கி ஊதாரி ஆகிவிட்டான் ஆண்டே !
காளை மாடுகள் சிலவற்றை அந்தப் புதியவனுக்குத் தந்து விட்டான் .
மற்றும் சிலவற்றை வில்லடிப் பாட்டுக்காரனுக்கு அளித்து விட்டான் .
பரத்தியிடம் ( நெய்தல் நிலப்பெண் ) வாங்கிய கருவாட்டிற்கும் கள்ளிற்கும் பணம் கொடுப்பதற்காக இருந்த ஐந்து பசு மாடுகளையும் கொண்டுபோய் விற்றுவிட்டான் .
இப்படிச் செய்வது அவமானம் அல்லவா என்ற எண்ணத்தையும் விட்டுவிட்டான் .
ஆண்டையே !
இவன் இரண்டு கால்களிலும் விலங்கைப் பூட்டி வைப்பீரே !
( முக் .
பள். 87 )
இவன் பலராலும் ஏசப்படுவதற்கு என்றே வந்து பிறந்தானோ ?
வரவரக் கூச்சம் என்பதையே கூட மறந்துவிட்டான் .
வயலில் உழுவதைப் பற்றி இவன் கொஞ்சமும் நினைப்பது இல்லை .
என்னைத் தேடி ஒரு கனைப்புக் கூடக் கனைப்பது இல்லை .
( முக் .
பள். 91 )
அவளுக்கு மீனைக் கொண்டு போய்க் கொடுப்பான் .
கருவாட்டு ஊனைக் கூட எனக்குக் காட்டாமல் அவளுக்கு மறைத்துக் கொண்டு போவான் . நான் ஏதாவது சொன்னால் வீம்புக்காக என்னைப் போட்டு அடிப்பான் .
அவள் சொன்னால் பாம்பையும் கூடப் பிடிப்பான் .
இவ்வாறு மூத்த பள்ளி முறையிடுவதைப் பின்வரும் பாடல் விவரிக்கும் :
மீனைக் கொண்டு அளிப்பான் - கருவாட்டு
ஊனைக் கொண்டு ஒளிப்பான் - நான் சொன்னால்
வீம்புக்கு அடிப்பான் - அவள் சொன்னால்
பாம்பையும் பிடிப்பான்
( முக் .
பள். 90 )
( ஊன் = தசை )
இவ்வாறாக மூத்த பள்ளி பலவாறாகப் பள்ளன் மேல் முறையீடு செய்கிறாள் .
இதனால் பண்ணைக்காரன் சினம் கொள்கிறான் .
திருமுக்கூடல் அழகர் ஏரிப் பற்றுகளிலே நீ ஆடு வைத்துத் தந்த விதமோ ?
மருதூர்ச் சங்காத்தி ( சங்காத்தம் -
நட்பு ) வீட்டிலே கிடந்து உறங்கிய உறக்கமோ ?
நின் நெஞ்சைத் தொட்டுப் பாரடா ?
என்று சொல்லிப் பண்ணைக்காரன் சினத்தால் கண்கள் சிவந்தவனாகிறான் .
அங்கே வந்த பள்ளனின் காலிலே மரக்கட்டையைச் ( தண்டனைக் கருவி ) சேர்த்து அவனைக் காவலில் வைக்கிறான் .
பின்னர் மூத்த பள்ளி மனம் இரங்கி வேண்டப் பண்ணைக்காரன் பள்ளனை விடுவிக்கிறான் .
3.5.1 பள்ளரின் தொழில்
பள்ளன் விடுதலை ஆனவுடன் உழவுத் தொழில் தொடங்குகிறது .
உழவு முகூர்த்தம் செய்வதற்காகச் சோதிடர்கள் நல்ல நாள் குறிக்கிறார்கள் .
சப்தமி திதியும் , ( சப்தமி நாள் ) புதன்கிழமையும் , சுவாதி நட்சத்திரமும் கூடிய நல்ல நாள் குறிக்கப்படுகிறது .
இந்த நல்ல நாளில் நாள் ஏர் பூட்டப் பள்ளன் செல்கிறான் .
( முக் .
பள். 114 )
சாத்தன் , பெரியான் , கூத்தன் முதலாகச் சேரியிலுள்ள பள்ளர் எல்லாம் கூடிக் குரவை இட்டு ஏர்மங்கலம் பாடி நாளேர் பூட்டி உழவைத் தொடங்கினார்கள் ( முக் .
பள். 115 )
ஏர்பூட்டி உழுது பின்பு அங்குள்ள பள்ளர்களை எல்லாம் கூப்பிட்டான் , பள்ளன் .
எல்லோருடனும் கூடித் தொழுது தெய்வக் கடன்களை எல்லாம் செய்து கழித்தான் .
அதன்பின் விதைகளை எடுத்துத் தெளிக்கத் தொடங்கினான் .
( முக் .
பள். 121 ) விதைகள் முளைக்கத் தொடங்கின .
நாற்றுகள் வளர்ந்தன .
முறையாகத் தண்ணீர் விடப்பட்டது .
அழகருடைய முக்கூடல் நகரிலே நாற்று நடுவதற்குரிய நாள் குறிக்கப்பட்டது .
உழத்திகள் முக்கூடல் அழகரின் திருப்பாதங்களை வணங்கினர் .
நாற்று முடிகளை எடுத்து நெற்றியிலே வைத்துக் கொண்டு நாலுதிசையும் நோக்கி வாழ்த்திக் கும்பிட்டார்கள் .
பிறகு வயலில் நடத் தொடங்கினர் .
( முக் .
பள். 125 )
பதிந்த நடவுகள் தேறிப் பசுமை நிறம் கொண்டன .
பின்பு குருத்து அடர்ந்து நிலத்தில் பரந்து செறிந்தன .
கதிர் விட்டு முற்றின .
கதிர்கள் எல்லாம் நன்றாக முற்றி விளைந்த செய்தியைப் பண்ணைக்காரனிடம் பள்ளன் சென்று சொன்னான் .
பின்பு அறுவடைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன .
நாட்கதிர் கொள்வதற்குத் தெய்வ வழிபாடுகளைச் செய்தனர் .
உரிய பொருள்களையும் படையலாக இட்டனர் .
( முக் .
பள். 138 ) பின்பு கதிர்களைக் கட்டிக் கொண்டு வந்து எருமைகளை விட்டுக் கதிர் அடித்தனர் .
தூசிகளைத் தூற்றித் தூய நெல்மணிகளைக் குவித்துப் ' பொலிபொலி ' என்ற மங்கல ஒலியோடு அளந்து கட்டினர் ( முக் .
பள். 139 )
எது எதற்கெல்லாம் நெல் அளந்து கொடுக்கப்பட்டது என்பதைப் புலவர் பட்டியல் இட்டு உள்ளார் .
அடியார்க்குச் சோறிடும் தினச்சத்திரம் பெரியநம்பி அய்யங்காருடைய திருமாளிகைச் செலவு ஏழு திருப்பதிகள் காவை வடமலையப்பப் பிள்ளையன் மடம் முதலியவற்றிற்கு நெல் கொடுக்கப்பட்டது .
மேலும் ஆடித் திருநாளுக்கு 1000 கோட்டைகள் பங்குனித் திருநாளுக்கு 1000 கோட்டைகள் மண்டகப்படி ( திருவிழாக்காலங்களில் செய்யும் செலவு ) சாத்து ( கடவுளுக்கு மாலை முதலியன அணிவித்தல் ) வகைகளுக்கு 1000 கோட்டைகள் நா வாணர்களுக்கும் மறையவர்களுக்கும் ( அந்தணர் ) 4000 கோட்டைகள் தினப்பூசைக்கு 8000 கோட்டைகள் ( முக் .
பள். 141-149 ) இவ்வாறாக வயல் வேளாண்மை முடிந்து நெல் பங்கிட்ட முறை விளக்கப்பட்டுள்ளது .
3.5.2 உழவுத் தொழிலின் ஆதாரம்
உழவுத் தொழிலைத் தொடங்குவதற்கு மழை வேண்டும் .
உழவர்கள் / பள்ளர்கள் மழை வேண்டி வழிபாடு நடத்துகின்றனர் .
மழை பெய்வதற்கான அறிகுறியும் தோன்றுகிறது .
அது மிகவும் சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது .
• மழை வழிபாடு
அழகருடைய நல்ல நாட்டிலே மழை வளம் சிறக்க வேண்டும் என்று மன்னர்கள் வழிபாடு நடத்துகின்றனர் ; மழை வரம் வேண்டுகின்றனர் ; சேரியிலே குரவை ஒலிக்கத் தெய்வத்தைப் போற்றினர் ( முக் .
பள். 32 )
பூலா உடையாருக்குப் பொங்கல் இட்டுத் தேங்காயும் கரும்பும் நிறைய படைத்தனர் .
குமுக்கா உடையார் அய்யனுக்குக் குங்குமத்தையும் சந்தனத்தையும் கலந்து சாத்திப் போற்றினர் .
கரையடிச் சாத்தானுக்குக் காப்புக் கட்டி ஏழு செங்கிடாய்களை வெட்டிப் பலியிட்டனர் .
புலியூர் உடையார் ஏற்றுக் கொள்ளுமாறு சேவலைச் சாத்திர முறைப்படி பலியிட்டனர் .
சாராயத்தையும் , பனையில் இருந்து இறக்கும் கள்ளையும் வடக்குவாசல் செல்லி உண்ணுமாறு வைத்தனர் .
பள்ளர்கள் எல்லோரும் ஒன்று கூடினர் .
பண் பாடிப் போற்றினர் .
கூத்தாடித் தொழுதனர் .
அழகரின் திருநாமங்களை ஏத்தினர் .
( முக் .
பள். 33 , 34 ) ( பூலா உடையார் , கரையடிச் சாத்தான் , புலியூர் உடையார் , செல்லி - நாட்டுப்புறத் தெய்வங்கள் )
• மழை அறிகுறி
பள்ளர்கள் அனைவரும் மழை வேண்டித் தெய்வங்களை வழிபட மழைமேகம் சூழ்ந்தது .
மழைக் குறி தென்பட்டது .
எல்லாத் திசைகளில்இருந்தும் மேகங்கள் வரத் தொடங்கின .
நண்பர்களே !
இந்த மழைக் குறி பற்றிப் புலவர் பாடிய பாடல் சிறந்த இசைநயமும் அழகுணர்வும் கொண்டது .
அறிவியல் செய்தி பொதிந்தது .
நாளைய தினம் ஆற்றிலே வெள்ளம் வர இருப்பதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன .
தென்மேற்குத் திசையிலே மலையாள மின்னல் மின்னிக் கொண்டுள்ளது .
தென் கிழக்குத் திசையிலே ஈழத்து மின்னல் மின்னிக் கொண்டுள்ளது .
நேற்றும் இன்றும் மரக்கொம்புகளைச் சுற்றியவாறு காற்று அடிக்கிறது .
கிணற்றிலே உள்ள சொறித்தவளைகள் கூப்பாடு போடுகின்றன .
நண்டுகள் தம் வளைகளுள் மழை நீர் புகுந்து விடாதபடி வாயில்களைச் சேற்றினால் அடைக்கின்றன .
மழை நீரைத் தேடிக் கோடி வானம்பாடிகள் அங்கும் இங்கும் பறக்கின்றன .
இவ்வாறாக மழை வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன .
இதனை விவரிக்கும் பாடல் வருமாறு :
ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்றுதே குறி - மலை
யாளமின்னல் ஈழமின்னல்
சூழ மின்னுதே
நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக்
காற்று அடிக்குதே - கேணி
நீர்ப்படு சொறித் தவளை
கூப்பிடுகுதே சேற்று நண்டு சேற்றில் வளை
ஏற்று அடைக்குதே - மழை
தேடி ஒருகோடி வானம்
பாடி யாடுதே
போற்றுதிரு மால்அழகர்க்கு
ஏற்றமாம் பண்ணைச் - சேரிப்
புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்
துள்ளிக் கொள்வோமே
( முக் .
பள். 30 )
3.5.3 விதை வகைகளும் மாட்டு வகைகளும்
உழவர்கள் பயன்படுத்திய நெல்விதைகளைப் பற்றியும் , மாட்டுவகைகளைப் பற்றியும் விரிவான செய்திகள் இடம் பெற்றுள்ளன .
• விதை வகைகள்
முக்கூடற்பள்ளு உழவுத் தொழிலை மையமாக வைத்துப் பாடப்பட்டது .
உழவுத் தொழிலுக்கு அடிப்படையான வித்து ( விதை ) , மாடு , ஏர் ஆகியன பற்றிய விரிவான விளக்கங்களும் அவற்றின் வகைகளும் இங்கே கூறப்பட்டுள்ளன .
இவை பழங்கால வேளாண்மைக் கலைச் சொல்லாக விளங்குவதை அறிய முடிகிறது .
சீரகச் சம்பா , நெடுமூக்கன் , மூங்கிற் சம்பா , கருங்குறுவை , புனுகுச் சம்பா , பூம்பாளை முதலிய இருபதுக்கும் மேற்பட்ட நெல்விதை வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன ( முக் .
பள்.109 )
• மாட்டு வகைகள்
மேலே கூறப்பெற்ற பெயர்கள் நெல்வகையின் பெயர்களாகும் .
இதைப் போல் மாட்டுவகைகளுக்கும் பெயர்கள் கூறப்பட்டுள்ளன .
குடைக் கொம்பன் , குத்துக் குளம்பன் , கூடு கொம்பன் , மயிலை , மட்டைக் கொம்பன் , கருப்பன் , மஞ்சள்வாலன் , வெள்ளைக்காளை முதலிய இருபதுக்கும் மேலான பல்வகை மாடுகளின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன ( முக் .
பள். 110 )
இப்பெயர்கள் மாட்டு வகைகளைக் குறிக்கும் .
3.5.4 பள்ளியர் ஏசல்
அறுவடைக்குப் பின் ஒவ்வொருவருக்கும் உரிய நெல் பங்குக் கணக்குகளைக் கூறிவந்த பள்ளன் மூத்த பள்ளி கணக்கை மட்டும் விட்டுவிட்டான் .
இதனால் மூத்தபள்ளி பள்ளன் மீதிலே கொடுமை சொல்லத் தொடங்கினாள் .
' ' குடும்பன் மிகவும் கெட்டிக்காரன் !
அவன் செய்த கர்வ மிகுந்த செயல்களையும் வஞ்சகமான செயல்களையும் நீங்களே கேளுங்களடி பள்ளியர்களே !
பள்ளனுக்கு எப்போதும் அந்த மருதூர்ப் பள்ளி மீதுதான் ஆசை. பிள்ளையார் அடி வயலிலே ( நெல் விளையும் வயல்களுக்கு வழங்கப்படும் பெயர் ) உறை நெல் ( உணவுக்குரிய நெல் ) எடுத்தான் .
அதை அவள் கூலி நெல்லுடன் கலந்து அவள் பெட்டியிலே வைத்து விட்டான் .
எனக்குள்ள பங்கைக் கூட எனக்குத் தராமல் எல்லாவற்றையும் உழப்பிப் போட்டுவிட்டான் .
மண்ணும் கல்லும் அதனோடு கொஞ்சம் நெல்லும் கல்லும் பங்கு தந்தோம் என்று பேருக்கு எனக்குத் தந்தானடி பள்ளியரே ' ' என்று முறையிட்டாள் ( முக் .
பள். 150-152 )
இதனைக் கேட்ட இளைய பள்ளி , ' ' பள்ளியரிடம் முறையிட்டு என்னைப் பழித்து என்னடி பேச்சு முக்கூடற்பள்ளி , உன் பழைய செல்வம் எதையாவது எனக்குக் கொடுத்தானோ ?
தொண்டை கட்டிப் போகும்படி கூவாதேடி ' ' என்று திருப்பித் திட்டுகிறாள் ( முக் .
பள். 153 )
நாவி ( புனுகுபூனை ) என்றாய் !
பூனை என்றாய் !
மருதூர்ப்பள்ளி !
இந்த நாவி நான்தானடி ; பூனை மட்டுமல்ல , மூளி ( அழகில்லாத / குறை உடைய ) நாயும் நீதானடி .
சாகத்துடிப்பவள் போல் ஆட்டம் போட வேண்டாம் முக்கூடற் பள்ளி !
மிஞ்சிப் பேசில் நெஞ்சை யறுப்பேன் அஞ்சிப் பேசடி !
மருதூர்ப் பள்ளி !
உன்னைப் போல மந்திரமும் தந்திரமும் எனக்கு வகையாக வந்ததானால் பள்ளன் எனக்கு வசமாக மாட்டானோ ?
சந்தியில் கிடக்கும் மாங்கொட்டையடி நீ முக்கூடற் பள்ளி !
உன்னைப் போலச் சாரங்கெட்ட மருதூர்க்காரி என்றோ என்னையும் நினைத்தாய் ?
( முக் .
பள். 160 )
3.5.5 பிற செய்திகள் இதில் முக்கூடற்பள்ளு காட்டும் அக்காலச் சமயநிலையும் இலக்கியச் சிறப்பும் விளக்கப்படுகின்றன .