133

இவ்வாறாக ஒருவர்க்கு ஒருவர் ஏசிக்கொள்ளும் பள்ளிகளின் ஏசல் இறுதியில் சமயச் சண்டையாக / சமயப்பூசல் ஏசலாக மாறுகிறது .

சிவனை ஒருத்தியும் திருமாலை ஒருத்தியும் பழித்து உரைக்கின்றனர் .

ஏசலில் சிவன் , திருமால் ஆகியோரின் திருவிளையாடல் , அவதாரச் செயல்கள் குறிப்பிடப்படுகின்றன .

அவதார நிகழ்ச்சிகள் குறிக்கப்படுவதில் உள்ள ஒரு செய்தியை இங்கே குறிப்பிட வேண்டும் .

ஒரு அவதாரத்தில் உள்ள நிகழ்ச்சியை வேறொரு அவதாரத்தின் பெயரால் சுட்டப்படுவதைக் கூறலாம் .

உதாரணமாக அகலிகை நிகழ்ச்சி இராமாவதாரத்தில் வருகிறது .

ஆனால் பாடல் அகலிகைக்கு விமோசனம் கொடுத்தவன் கண்ணன் என்று குறிப்பிடுகிறது .

சாதிக்கிற தந்திரம் எல்லாம் உனக்குத்தான் வரும் மருதூர்ப்பள்ளி !

நரிகளைப் பரிகளாக மாற்றிச் சாதித்தவன் உங்கள் சிவபெருமான் தானடி ; இப்படிப் பேசிச் சாதிக்க வருகிறாய் முக்கூடற் பள்ளி !

கல்லையும் பெண்ணாகச் சாதித்தவன் உங்கள் கண்ணன் தானடி ( முக் .

பள். 162 )

பெண் ஒருத்திக்காக ஆசைப்பட்டுப் பொன் மயமான பனிமலை ஏறிப் போனவன் உங்கள் சிவபெருமான் அல்லோடி என்றும் .

காதல் கொண்டு தம்பியோடு சீதை பொருட்டாகக் கடல் கடந்து போனான் உங்கள் கண்ணன் அல்லோடி என்றும் பள்ளியர்கள் பேசுவதைக் கீழ்வரும் பாடல் காட்டுகிறது .

மாதொருத்திக்கு ஆசைப்பட்டுப்

பொன்னின் மாயமாம் - பனி

மலையேறிப் போனான் உங்கள்

மத்தன் அல்லோடி

காதலித்துத் தம்பியுடன்

சீதை பொருட்டால் - அன்று

கடலேறிப் போனான் உங்கள்

கண்ணன் அல்லோடி

( முக் .

பள். 165 )

( மத்தன் = சிவன் )

அடுத்து வருவது பெரியபுராணத்தில் வரும் செய்தி .

சுந்தரமூர்த்தி நாயனார் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிவபெருமான் ஒரு முதியவர் வடிவில் சென்று , திருமணத்தைத் தடுத்தார் ; சுந்தரர் தமக்கு அடிமை என்று வாதிட்டார் .

இதனால் கோபமுற்ற சுந்தரர் அந்த முதியவரைப் பார்த்துப் ' பித்தரோ நீர் ! ' என்று கேட்டு ஏசுகிறார் .

( தடுத்தாட்கொண்டபுராணம் ) இந்தச் செய்தியையே மூத்த பள்ளி இங்கே குறிப்பிடுகிறாள் .

சுந்தரன் திருமணத்திலே வல்வழக்குப் பேசிச் சென்று அவன் வாயால் வையக் கேட்டு நின்றான் உங்கள் ஐயன் ( சிவன் ) அல்லோடி .

சிசுபாலன் புலிபோல எழுந்து நின்று வையவே சபை நடுவிலே ஏழை போல ஒடுங்கி நின்றான் உங்கள் நீலவண்ணன் ( கண்ணன் ) அல்லோடி !

வலிய வழக்குப் பேசிச் சுந்தரன் வாயால் அன்று

வையக் கேட்டு நின்றான் உங்கள் ஐயன்

அல்லோடி

புலிபோல் எழுந்து சிசுபாலன் வையவே - ஏழை

போல நின்றான் உங்கள் நெடுநீலன் அல்லோடி

( முக் .

பள். 167 )

( சிசுபாலன் = பாரதத்தில் வரும் ஒரு பாத்திரம் , நீலன் = திருமால் )

இடுப்பிலே சுற்றிக் கட்டுவதற்கு நாலுமுழத் துண்டு கூட இல்லாமல் புலித் தோலை உடுத்திக் கொண்டான் உங்கள் சோதி ( சிவன் ) அல்லோடி .

கற்றையாகச் சடையைக் கட்டி இடுப்பில் மர உரியையும் ( ஆடை ) கட்டிக் கொண்டான் சங்கு கையனாகிய உங்கள் திருமால் அல்லோடி

சுற்றிக் கட்ட நாலுமுழத் துண்டும் இல்லாமல் - புலித்

தோலை உடுத்தான் உங்கள் சோதி அல்லோடி

கற்றைச் சடை கட்டி மரஉரியும் சேலைதான் - பண்டு

கட்டிக் கொண்டான் உங்கள் சங்குக் கையன்

அல்லோடி

( முக் .

பள். 169 )

( சோதி = சிவன் , சங்குக் கையன் = திருமால் )

ஏறிச் செல்வதற்குத் தக்க ஒரு வாகனமும் இல்லாமல் மாட்டின்மேல் ஏறித் திரிந்தான் உங்கள் ஈசன் அல்லோடி ! வீறாப்பான பேச்சு என்னடி ?

அந்த மாடு கூட இல்லாமல் போனதால்தான் பறவை ( கருடன் ) மீது ஏறிக் கொண்டான் உங்கள் கீதன் அல்லோடி !

ஏறவொரு வாகனமும் இல்லாமையினால் - மாட்டில்

ஏறியே திரிந்தான் உங்கள் ஈசன் அல்லோடி

வீறு சொன்னது என்ன மாடுதானும் இல்லாமல் - பட்சி

மீதில் ஏறிக்கொண்டான் உங்கள் கீதன் அல்லோடி

( முக் .

பள். 171 )

( பட்சி = பறவை , கீதன் = திருமால் )

இவ்வாறு பேசிக்கொண்டே வந்த இருவரின் ஆத்திரமும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டே வந்தது .

அவர்கள் பேச்சிலே ஒத்துப் போகும் எண்ணமும் பிறந்தது .

' ' மருதூர்ப் பள்ளி என்னதான் கோபப்பட்டாலும் சீர் அழியச் சொல்லலாமோ ? ' ' என்று மூத்தபள்ளி கேட்க இளையபள்ளி ' ' முதலில் வைதவரை வாழ்த்தினவர் உலகத்தில் உண்டோ ' ' என்று வினவிச் சமாதானம் ஆனாள் ( முக் .

பள். 173 )

' ' நீயும் பொறு .

நானும் பொறுத்தேன் .

நம் உறவினர்கள் சூழ்ந்திருக்க நாம் இருவருமே ஒற்றுமையாகக் கூடி வாழலாம் ' ' என்று கூறிய பள்ளியர் முக்கூடல் அழகர் பாதங்களை வாழ்த்திப் பாடுகின்றனர் .

சமாதானம் ஆகி ஒன்று சேர்கின்றனர் .

இவ்வாறாகப் பள்ளியர் சண்டை முடிவுக்கு வருவதோடு முக்கூடற் பள்ளு நிறைவு பெறுகின்றது .

சைவ , வைணவப் பூசல் அந்தக் காலத்தில் இருந்ததை ஏசல் வெளிப்படுத்துகிறது .

என்றாலும் இரு சமயங்களின் பிணைப்பை நிறைவாக வலியுறுத்தி முழுமை பெறுகிறது .

பள்ளியர் ஏசுவது என்பது திட்டிக் கொள்வதாக ஆகாது .

ஏசுதல் என்ற உத்தி மூலம் சமயப் பெருமையைக் கூறுவதே நோக்கமாகும் .

• சிலேடை

விதை வகைகள் மாட்டுவகைகள் முதலியவற்றைக் கூறும் புலவர் சிலேடை நயம் தோன்றுமாறு பாடலை அமைத்துள்ளார் .

ஒரு சில சான்றுகளைப் பார்ப்போம் .

• ஆயிரம் மல்லியன்

மாடுகள் பற்றிப் பண்ணைக்காரனிடம் கூறிவரும் பள்ளன் ஆயிரம் மல்லியன் எனும் மாடு மேல்திசை நோக்கி ஓடிப்போனது ; அது எங்குப் போயிற்றோ இன்னமும் திரும்பி வரக்காணோம் என்று கூறுகிறான் .

இக்கூற்றில் ஒரு சிலேடை மறைந்துள்ளது .

ஆயிரமல்லியன் என்பது ஆயிரமல்லி என்ற ஊரில் வாங்கிய மாடு என்று பொருள்படும் .

இதனைப் பிரித்து ஆயிரம் அல்லியன் என்று பொருள் காணமுடியும் .

ஆயிரம் அல்லி மலர்களை மலரச் செய்த சந்திரன் என்று ஒரு பொருள் உண்டு .

ஆயிரம் இதழ்களை உடைய தாமரையை மலரச் செய்த சூரியன் எனவும் ஒரு பொருள் உண்டு .

இவ்வாறு மலரை மலரச் செய்தவன் மேல் திசையில் மறைந்தான் என்பது இத்தொடரின் சிலேடைநயம் ஆகும் .

( முக் .

பள்.70 )

' ஒற்றைக் கொம்பன் எனும் காளையைத் தாண்டவராயன் என்பவன் உள்ளூர்க் கோயிலில் அடைத்து வைத்துவிட்டான் என்று ஒற்றைக் கொம்பன் காளையைப் பற்றிப் பள்ளன் கூறினான் .

இத்தொடரிலும் ஒரு சிலேடை உள்ளது .

ஒற்றைக் கொம்பனாகிய யானைமுகனைத் ( விநாயகன் ) தாண்டவராயனாகிய சிவபெருமான் ( நடராசன் ) தன்னோடு கோயிலிலேயே வைத்துக் கொண்டான் என்பது சிலேடை ஆகும் .

( முக் .

பள்.71 )

இவ்வாறு புலவர் சிலேடைநயம் தோன்றுமாறு பாடல்களை அமைத்தவிதம் படித்து இன்பம் அடையத்தக்கது .

தொகுப்புரை

நண்பர்களே !

இதுவரையும் இந்தப் பாடத்தின் மூலம் என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை ஒரு முறை மீள நினைத்துப் பாருங்கள் !

பள்ளு என்றால் என்ன என்பது பற்றியும் பள்ளுவின் தோற்றம் பற்றியும் செய்திகளை அறிந்து கொண்டோம் .

பள்ளு இலக்கிய அமைப்பைப் புரிந்து கொண்டோம் .

முக்கூடற் பள்ளு பற்றிய பொதுவான செய்திகளையும் இலக்கியச் சிறப்புகளையும் அறிந்து கொண்டோம் .

பள்ளர்களின் வாழ்க்கை முறை , வேளாண் தொழில் , சமய நிலை பற்றிய செய்திகளை முக்கூடற் பள்ளு வழியே அறிந்து கொண்டோம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. முக்கூடல் என்ற பெயர் தோன்றக் காரணம் என்ன ? விடை

2. முக்கூடற் பள்ளுவின் காலம் எது ?

விடை

3. முக்கூடற் பள்ளு சிறப்பித்துக் கூறும் கடவுள் பெயர் என்ன ?

விடை

4. முக்கூடல் நகரின் சிறப்பினைப் புலப்படுத்துக .

விடை

5. பள்ளியர் ஏசலில் சமயம் எவ்வாறு இடம் பெற்றுள்ளது ?

உலா இலக்கியம்

பாட முன்னுரை

தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளில் உலா இலக்கியமும் ஒன்று .

சங்ககாலம் தொடங்கி இன்று வரை உலா இலக்கியத்தின் கூறுகளை இலக்கியங்கள் கூறியுள்ளன .

என்றாலும் பல்லவர் காலத்தில்தான் முதல் உலா நூல் கிடைத்துள்ளது .

உலாவிற்கான இலக்கணம் தொல்காப்பியத்தில் காணப்படுகிறது .

இந்த இலக்கியங்கள் உலா என்ற பெயரில் வழங்கி வந்தாலும் வேறு சில பெயர்களும் இவற்றிற்கு உண்டு .

வலம் வருதல் , ஊர்வலம் வருதல் , பவனி , பவனி உலா , உலாப்புறம் , உலா மாலை என்று இவ்வுலா இலக்கியத்திற்குப் பல பெயர்கள் உள்ளன .

நண்பர்களே !

சுவையும் நயமும் நிறைந்த இத்தகைய தமிழ் இலக்கியங்களுள் ஒன்றாகிய உலா இலக்கியம் பற்றி இப்பாடத்தில் அறிய இருக்கிறோம் .

உலா பற்றிய செய்திகள் இங்குத் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன .

உலா

உலா என்னும் சொல் ' உலா வருதல் ' எனும் குறிப்பு உடையது .

உலாத்துதல் , உலாவுதல் என்னும் பொருள் உடையது .

தலைவன் ஒருவன் உலா வருதலும் அவனைக் கண்டு மகளிர் மனம் மகிழ்தலும் உலா இலக்கியத்தின் பொருள் ஆகின்றது .

உலா வருதலைப் ' பட்டணப் பிரவேசம் ' , என்றும் ' ஊர்வலம் ' என்றும் கூறுவர் .

இறைவனின் திருமேனியோ , மன்னனோ உலா வருவது பழங்காலத்து மரபு .

யானை , குதிரை , தேர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் ஏறி உலாவருவது உண்டு .

உடன் வருவோர் அவர்களைச் சூழ்ந்து வருவர் .

இசைக்கருவிகள் முழங்கும் .

இவ்வாறாக வீதியில் பவனி வருவதை உலா வருதல் என்று கூறுவர் .

உலா வரும் தலைவன் மீது ஏழு பருவ மகளிர் காதல் கொண்டு வாடுவர் .

அவர்தம் வாட்டத்தைப் புலவர்கள் கற்பனை நயத்தோடு பாடுவர் .

பாட்டுடைத்தலைவரான இறைவன் அல்லது மன்னனின் பெருமை பேசப்படும் .

4.1.1 உலாவின் இலக்கணம்

உலா எனும் சிற்றிலக்கியம் தனியொரு இலக்கியமாகப் பிற்காலத்தில் உருப்பெற்றது .

ஆனால் அதற்கும் முன்பு உலா பற்றிய இலக்கணக் கூறுகள் காணப்படுவதையும் அறிய முடிகின்றது .

• தொல்காப்பியத்தில் உலா இலக்கணம்

உலாவிற்கான இலக்கணம் தொல்காப்பியத்திலேயே அமைந்துள்ளது .

ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப

வழக்கொடு சிவணிய வகைமையான

( தொல் .

பொருள் .

புறம் .

25 )

இந்நூற்பாவிற்குப் பழைய உரையாசிரியர் இளம்பூரணர் உரை எழுதி உள்ளார் .

அது வருமாறு :

நகர வீதிகளில் விருப்பத்திற்குரியவர்கள் உலா வருவது உண்டு .

அவ்வாறு வரும் தலைவர்களைக் கண்டு மகளிர் காதல் கொள்வதும் உண்டு .

ஆண் மகனுடைய பண்புகளை விரித்துக் கூறுவது பாடாண் திணை எனப்படும் .

இந்தப் பாடாண் திணையில் பெண்கள் தலைவன் மேல் கொள்ளும் காதலைப் பாடுவதும் அடங்கும் .

இக்கருத்து மேலே கூறப்பெற்ற நூற்பாவால் பெறப்படுகிறது . இக்கருத்தே பிற்காலத்தில் ' உலா ' தனி இலக்கியமாக உருவாவதற்குக் காரணமாகியது .

• பாட்டியல் நூல்களில் உலா இலக்கணம்

அவிநயம் , பன்னிரு பாட்டியல் முதலான பாட்டியல் நூல்கள் உலா பற்றி விரிவான விளக்கங்களைக் கூறி உள்ளன .

பன்னிரு பாட்டியல் உலா இலக்கியப் பாடுபொருளை இரண்டு வகையாகப் பிரித்துள்ளது .

• முதல் நிலை

முதல் நிலைப் பகுதியில் பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள் கூறப்படும் .

பாட்டுடைத் தலைவனின் குடிச்சிறப்பு - நீதிமுறை - கொடைப்பண்பு - உலாச் செல்ல நீராடுதல் - நல்ல அணிகளை அணிதல் - நகர் முழுவதும் மக்கள் வரவேற்றல் - நகர வீதிகளில் களிறு முதலியவற்றின் மீது ஏறி வருதல் - முதலிய செய்திகள் இப்பகுதியில் பாடப் பெறும் .

• பின் எழு நிலை

பாட்டுடைத் தலைவன் உலா வரும்போது பெண்டிர் அவன் மீது காதல் கொண்டு வாடுவர் .

இப்பகுதியை விவரிப்பது பின் எழுநிலை ஆகும் .

காதல் கொள்ளும் மகளிரை ஏழுவகையாகப் பாட்டியல் நூல்கள் பிரித்து உள்ளன .

1 ) பேதை - வயது ஐந்து முதல் ஏழு வரை

2 ) பெதும்பை - வயது எட்டு முதல் பதினொன்று வரை

3 ) மங்கை - வயது பன்னிரண்டு முதல் பதின்மூன்று வரை

4 ) மடந்தை - வயது பதினான்கு முதல் பத்தொன்பது வரை

5 ) அரிவை - வயது இருபது முதல் இருபத்தைந்து வரை

6 ) தெரிவை - வயது இருபத்தாறு முதல் முப்பத்தொன்று வரை

7 ) பேரிளம் பெண் - வயது முப்பத்திரண்டு முதல் நாற்பது வரை

பாட்டுடைத் தலைவனைக் கண்டு விரும்புவதாகப் பாடும் எழுபருவ மகளிர்க்கு உரிய விளையாடல்களைப் பன்னிரு பாட்டியல் பட்டியல் இட்டுள்ளது .

4.1.2 உலாவின் தோற்றமும் வளர்ச்சியும்

தொல்காப்பியத்தில் உலா இலக்கியத்திற்கான தோற்றுவாய் காணப்படுகிறது .

ஆனால் முழுமை பெற்ற உலா நூல்களை அறியமுடியவில்லை .

ஆயின் இறைவன் / தலைவன் உலாச் சென்றமைக்கான இலக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளன .

சங்க இலக்கியத்தில் உலாவின் கூறுகளைக் காண முடிகின்றது .

இறைவன் உலா வருதல் கூறப்பட்டுள்ளது .

திருச்சின்னங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன .

இசைக் கருவிகள் முழங்குகின்றன .

மகளிர் மாடமாளிகையில் இருந்து அக்காட்சியைக் கண்டு களிக்கின்றனர் .

சிலப்பதிகாரத்தில் வரும்

மங்கல அணி எழுந்தது

தலைக்கோல் வலம் வந்தது

முதலிய தொடர்கள் உலாவின் கூறுகளாக விளங்குகின்றன .

மங்கல அணி உலாச் சென்றபோதும் தலைக்கோல் உலாச் சென்றபோதும் வெண்குடை முதலிய சின்னங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன .

திருநாவுக்கரசர் தாம் வாழ்ந்த காலத்தில் திருவாரூரில் நடைபெற்ற திருவாதிரைத் திருவிழாவைப் பற்றிக் கூறியுள்ளார் .

இறைவன் திருத்தேரில் ஏறித் திருத்தொண்டர் குழாம் புடைசூழ உலாச் சென்றதை வருணித்துள்ளார் .

( தேவா .

4.21.8 )

உதயணனுக்கும் வாசவதத்தைக்கும் திருமணம் நிகழும் முன்பு உலாச் செல்கின்றனர் .

இதனைப் பெருங்கதை கூறுகின்றது .

உதயணன் வீதி உலா வருவதை நகர் வலம் கண்டது எனும் பகுதி சிறப்புடன் விளக்கி உள்ளது .

சீவக சிந்தாமணியில் சீவகன் உலா குறிக்கப்பட்டுள்ளது .

வேடர்கள் கவர்ந்து சென்ற ஆநிரைகளைச் ( பசு ) சீவகன் மீட்டு வருகிறான் .

மீட்டு வந்த வெற்றிப் பெருமிதத்தோடு வீதி உலாச் செல்கிறான் .

சீதையை மணம் செய்து கொள்ளும் முன்பு இராமன் மிதிலை வீதிகளில் உலா வருகின்றான் .

இதனை உலாவியற் படலம் விவரிக்கிறது .

முத்தொள்ளாயிரம் போன்ற தொகுப்பு நூல்களிலும் உலாச் செய்திகள் இடம் பெற்று உள்ளன .

மூவேந்தர்களாகிய சேரர் , சோழர் , பாண்டியர் ஆகியோர் மகளிர்க்குக் காம நோய் உண்டாக வீதி உலாச் செல்கின்றனர் .

இதனை முத்தொள்ளாயிரம் கூறுகின்றது .

பல்லவர் காலத்தில்தான் முதல் உலா படைக்கப்பட்டுள்ளது .

சேரமான் பெருமாள் நாயனார் படைத்த திருக்கயிலாய ஞான உலாவே உலா நூல்களில் காலத்தால் முந்தியது . இதனை ஆதி உலா என்றும் கூறுவர் .