உலா. 256-262 )
( தோகையர் = மகளிர் , தமர் = சுற்றத்தார் , ஆரம் = மாலை , அயிராவதம் = பட்டத்துயானை , கோரம் = பட்டத்துக் குதிரை , படாகை = கொடி )
இவ்வாறாகப் பேதைப் பருவ மகளின் செயல்கள் விவரிக்கப் பட்டுள்ளன .
பேதைப்பருவம் மிகவும் இளம்பருவம் .
எனவே காமச் செயல்கள் எதுவும் புனைவது வழக்கம் இல்லை .
• மங்கை மன மயக்கம்
உலா வரும் தலைவனைக் கண்டு மங்கைப் பருவ மாது ஒருத்தி மயக்கம் கொள்கிறாள் .
இதனை ஆசிரியர் நயம்படப் புனைந்துள்ளார் .
மங்கையின் எழில் வருணனை முதலில் இடம் பெறுகிறது .
மங்கை முத்துகளைப் பதித்தது போன்ற பல் வரிசைகளை உடையவள் ; பொன் மலையில் பிறந்த வயிரம் போன்றவள் ; நாகலோக மன்னனது மணி முடியில் வெளிப்பட்ட நாக மணியை ஒத்தவள் ; திருமாலாகிய சோழனைக் கூடுவதற்காகச் சோழநாட்டில் வந்து பிறந்த திருமகள் ; இதனைப் புலப்படுத்தும் பாடல் அடிகள் .
நிலையிற் சிறந்த நிகரிலா மேரு
மலையிற் பிறந்த வயிரம் - தொழத்தகும்
முன்னை உலகம் முழுதும் தரும்முரக
மன்னன் அபிடேக மாணிக்கம் - முன்னவன்
பாற்கடல் நீங்கு நாள்நீங்கிப் பழம்படியே
நாற்கடல் நாயகனை நண்ணுவாள்
( இராச .
உலா. 349-356 )
( மேரு = மலை , உரக மன்னன் = நாகர் உலகத்து மன்னன் , அபிடேகம் = மன்னன் திருமுடி , முன்னவன் = முதல்வன் , நண்ணுதல் = பொருந்துதல் )
மேலும் மங்கையின் சிறப்பினைப் புலவர் புலப்படுத்துகிறார் .
அன்னப் பெடையின் ஒலியோ என்று எண்ணுமாறு ஒலிக்கும் மழலையை உடையவள் ; நாகமணியைக் கோத்து அணியும் அரைக் கச்சினை உடையவள் ; குபேரனது சங்கநிதியில் ( குபேரனது நிதிகளில் ஒன்று ) தோன்றிய முத்துமாலையை அணிந்தவள் ; அவனது பதும நிதியில் தோன்றிய நவமணிகள் ( ஒன்பது மணிகள் ) பதித்த வளை அணிந்தவள் .
இத்தகைய மங்கைப் பருவத்தாளைச் சூழ்ந்து பாணரும் விறலியும் சோழனது புகார் நகரச் சிறப்பினைப் பாடுகின்றனர் .
அந்தச் சமயத்தில் மாது ஒருத்தி விரைந்து வந்து தலைவியே !
கங்கைத் துறைவனும் பொறையனும் தமிழ் நாடனும் ஆகிய இராசராசன் நாளை பவனி வருகிறான் என்று கூறினாள் .
உடனே மங்கை மிகவும் மகிழ்ந்து உலாவைக் காண்பதற்கு விரும்பினாள் .
ஆனால் உலா மறுநாள் என்பதால் இரவுப் பொழுது தடையாக நின்றது .
இதற்காக வருந்தினாள் .
( இராசராச .
357-382 )
மன்னனைக் காண முடியாமல் மங்கை மதி மயங்கினாள் .
மங்கையர்க்குப் பகைவனான நிலவை வேண்டாமல் சோழனது குலமுதல்வனாகிய சூரியனின் ஒளி தன் மீது பட விரும்பினாள் .
காதலர் உயிரைக் கொல்லும் பொதியமலைத் தென்றலை வெறுத்தாள் ; புலிக்கொடி பறக்கும் பொன்மலையிலிருந்து வரும் வாடைக்காற்றை விரும்பினாள் .
தனக்கு எதிராகப் போர் செய்ய வரும் கடல் ஒலி அடங்க விரும்பினாள் ; தன் தலைவனாகிய திருமால் பள்ளி கொண்ட பாற்கடலை விரும்பினாள் .
மழையை விரும்பிப் பாடிக் கூவும் வானம்பாடிப் பறவைக்கு , நஞ்சை ஊட்டித் தலைவன் பெயரைப் பாடும் பறவைக்கு அமுதத்தை ஊட்ட வேண்டினாள் .
இரவுப் பொழுதை யுகமாக நீளச்செய்யும் குயிலை விரட்ட வேண்டினாள் .
விடியலைக் கூவி அழைக்கும் கோழியை விரும்பினாள் .
இவ்வாறாக மங்கையாகிய தலைவி இரவுப்பொழுதைக் கழித்தாள் .
இதனைப் பின்வரும் அடிகள் விவரிக்கும் .
தென் மலயத் தென்றலை ஓட்டிப் புலி இருந்த
பொன் மலய வாடாய் புகுதென்னும் - முன்மலையும்
கார்க்கடல் வாய்அடங்க நாயகன் கண்வளர்ந்த
பாற்கடல் வாராய் பரந்து என்னும் - மேற்பரந்து
கார் பாடும் புள்வாய்க் கடுப்பெய்து அமுது இறைவன்
பேர் பாடும் புள்வாயிற் பெய்க என்னும் -
( இராச .
உலா. 385-390 )
( தென்மலயம் = பொதியமலை , வாடை = காற்று , கார்க்கடல் = கரிய நிறக்கடல் , கார் பாடும் புள் = வானம்பாடி , கடு = நஞ்சு )
இவ்வாறு இரவு முழுவதும் காதல் நோயினால் வாடிய தலைவி பொழுது விடிந்ததும் மன்னனை வரவேற்கத் தயார் ஆனாள் .
மலர்ச் சோலைக்குச் சென்று மலர் பறித்து எடுத்து வந்தாள் . • மன்னனின் உலா
தலைவியும் மலர்களைப் பறித்துச் சோலையில் இருந்து வெளிப்பட்ட போதே மன்னனும் உலா வந்தான் .
மகளிரும் மங்கை நல்லாளும் எதிரே நின்று மலர்களைத் தூவினர் ; கையில் மலர்களைக் கொடுத்தனர் .
பருவம் அல்லாத காலத்திலும் மலர்ந்த மலர்களைக் கண்டு பரிசிலாக அவன் ஏற்றுக் கொண்டான் .
மங்கையின் அரிய பட்டாடையும் சேலையும் வளையலும் மேகலை மணியும் மன்னனைக் கவர்ந்தன .
பலமுறை மங்கையையே நோக்கி நின்றான் .
மங்கை இதனைக் கண்டு நாணினாள் .
மன்னன் மணி முடியையும் பட்டத்து யானையையும் பதினான்கு உலகத்தையும் மங்கைக்கே கொடுப்பவன் போலப் பலமுறை பார்த்துப் பின்பு அவளை விட்டு நீங்கினான் .
இலகும் சுடர்முடியும் யானையும் ஈர்ஏழ்
உலகும் கொடுப்பானே ஒப்பப் - பலகால்
கொடாத திருநோக்கம் முற்றும் கொடுத்து
விடாது களிறு அகல விட்டான் .
( இராசராச .
427-430 )
( ஈர்ஏழ் = பதினான்கு , நோக்கம் = பார்வை , களிறு = யானை )
இவ்வாறாக மன்னன் உலாப் போகும் காலத்தில் மங்கைப் பருவத்தாள் காம நிகழ்ச்சிகளைப் புலவர் சுவைபடப் புனைந்துள்ளதைப் படித்து மகிழலாம் .
• திருமகள் போன்றவள்
மன்னன் உலாப் போகும் காலத்தில் பேரிளம்பெண் ஒருத்தியின் மனநிலையை ஆசிரியர் புனைந்துரைத்துள்ளார் .
இத்தலைவி பவனி வரும் சோழ மன்னனை நேர் நின்று நோக்கினாள் .
பரந்த விழிகளின் வெண்மை சிவப்பு நிறமாக மாறியது .
அவள் நெற்றித்திலகம் குறு வியர்வையால் மறைந்தது .
அவளது மழலைச் சொற்கள் தடுமாற்றம் அடைந்தன .
மனத்தெளிவு மன மயக்கமாக மாறியது .
நாணம் தொலைந்தது .
கூந்தலாகிய மேகம் அவிழ்ந்து தொங்கியது .
இதனைப் பின்வரும் வரிகள் விவரிக்கும் .
கண்டனை மேதினியாள் காந்தனை வந்துய்யக்
கொண்டனை என்று குறுகுவாள் - கண்டு
மலர்க்கண் வெளுப்புச் சிவப்பூர மற்றத்
திலகம் குறுவியரால் தேம்ப - பல குதலை
மாற்றம் தடுமாற்றம் எய்த மனத்துள்ள
தேற்றம்பித் தேற்றம் சிதைவிப்ப - ஏற்று
துகில் அசைந்து நாணும் தொலைய...
( இராச .
உலா. 717-723 )
( கண்டன் = சோழனுடைய பட்டப்பெயர் , மேதினியாள் = திருமகள் , காந்தன் = கணவன் , குறுகுவாள் = நெருங்குவாள் , திலகம் = நெற்றிப்பொட்டு , வியர் = வியர்வை , குதலை = மழலை , தேம்ப = மறைய , பித்தேற்றம் = மயக்கம் , துகில் = உடை )
இவ்வாறாக மன்னனைக் கண்ட பேரிளம் பெண்ணின் நிலையைப் புலவர் கூறியுள்ளதை அறியலாம் .
• பேரிளம் பெண்ணின் காதல்
உலா வரும் சோழ மன்னனை நேருக்கு நேர் நின்று பேரிளம் பெண் வேண்டுகோள் விடுக்கிறாள் .
தம்மை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறாள் .
தங்களின் நிலையை விவரிக்கிறாள் .
' ' தலைவனே !
குளிர்ச்சி இல்லாத நிலவு எங்களுடையது .
உண்மையை அறியாத மயக்க உணர்ச்சியை உடையோம் .
விடியல் பொழுதையே அறியாத இரவினை உடையோம் .
நீங்காத காதலை உடையோம் .
ஓரிடத்திலும் தங்காத மேகலை அணியை உடையோம் .
கொங்கையினை இறுக்கி நில்லாத கச்சினை உடையோம் .
மனத்தாலும் நினைப்பதற்கு அரிய பெருமையை உடையவன் நீ. ஆதலால் எங்கள் விண்ணப்பத்தையும் நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் ' ' என்று வேண்டுகிறாள் .
இவ்வாறு பேரிளம் பெண் கூறியது கேட்டு மன்னன் சிறுநகை செய்தான் . பின்பு முத்துமாலை முதலான பல்வேறு அணி மணிகளும் அவளுக்குத் தர ஏவலர்க்கு ஆணை இட்டான் .
ஆனாலும் அவள் அவற்றை ஏற்காமல் காதல் துயரால் வாடிச் செவிலியர் மீது மயங்கி வீழ்ந்தாள் .
இவ்வாறாக மன்னன் மீது ஏழ்பருவ மகளிரும் மயக்கம் கொண்டு நிலை தடுமாறப் பதினான்கு உலகத்தையும் உடையவன் உலாச் சென்றான் .
பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாக
மாதர் மனம்கொள்ளா மால்கொள்ளச் - சோதி
இலகுடையான் கொற்றக் குடை நிழற்ற ஈர்ஏழ்
உலகுடையான் போந்தான் உலா .
( இராச .
உலா. 779-782 )
( மாதர் = பெண்கள் , மால் = மயக்கம் , சோதி = ஒளி , சோதி இலகுடையான் = திருமால் )
நண்பர்களே !
இதுவரையும் இராசராசசோழன் உலாவில் இருந்து சில காட்சிகளை அறிந்து இருப்பீர்கள் .
மீண்டும் அக்காட்சிகளை நினைவுபடுத்திப் பாருங்கள் .
தொகுப்புரை
நண்பர்களே !
இதுவரையும் உலா இலக்கியம் பற்றி என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் ?
உலா என்றால் என்ன என்பது பற்றியும் உலாவின் இலக்கண வரையறை பற்றியும் அறிந்து இருப்பீர்கள் .
உலாவின் அமைப்பு முறையை அறிந்து இருப்பீர்கள் .
உலா இலக்கியத்தின் தோற்றம் வளர்ச்சி மாற்றம் பற்றித் தெரிந்து கொண்டீர்கள் .
இருபதாம் நூற்றாண்டு உலா பற்றிய செய்திகளை அறிந்தீர்கள் இருப்பீர்கள் .
சிறப்பு நிலையில் இராசராச சோழன் உலாவின் ஆசிரியர் - பாட்டுடைத் தலைவன் - இலக்கியச் சிறப்புகள் முதலியவை பற்றி விரிவாகத் தெரிந்து கொண்டு அறிந்தீர்கள் .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. மூவர் உலா என்று எவற்றைக் குறிக்கிறோம் ?
விடை
2. இராசராச சோழன் உலாவின் ஆசிரியர் யார் ?
விடை
3. ஒட்டக்கூத்தர் எந்தெந்த மன்னர் காலத்தில் அவைக்களப் புலவராக இருந்தார் ?
விடை
4. இராசராச சோழன் உலா கூறும் முன்னோர் சிறப்புகள் நான்கினைத் தருக .
விடை
5. உலாவில் மங்கைப் பருவ மகளிரின் காதல் நோயைப் புலவர் எவ்வாறு வருணித்து இருக்கிறார் ?
சதக இலக்கியம்
பாடமுன்னுரை
தமிழ் இலக்கிய வகைகளுள் சதக இலக்கியமும் ஒன்றாகும் .
தமிழ் இலக்கிய வரலாற்றில் சதக இலக்கியம் இடைக்காலத்து வரவு .
பல்லவர் காலத்திற்கு முன்பு சதக இலக்கியம் பற்றிய குறிப்புகளைத் தமிழ் இலக்கியங்களில் காண முடியவில்லை .
முதன் முதலாக மாணிக்கவாசகர் காலத்தில்தான் ' சதகம் ' என்ற சொல்லைத் தமிழ்ச் சூழலில் அறிய முடிகின்றது .
மாணிக்கவாசகர் திருச்சதகம் என்ற பெயரில் நூறு பாடல்களைத் திருவாசகத்தில் இயற்றி உள்ளார் .
சதகம் என்ற பெயரில் தனியொரு சிற்றிலக்கியமாக வளர்ச்சி பெற்ற காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு எனலாம் .
நண்பர்களே !
இப்பாடத்தின் மூலம் சதக இலக்கியம் பற்றிய செய்திகளை நாம் அறிய இருக்கிறோம்
சதகம்
சதகம் என்ற சொல் வடமொழிச் சொல் .
வடமொழியில் சதம் என்றால் நூறு என்று பொருள்படும் .
சதம் என்ற சொல்லின் இடையில் ' க ' என்ற ஓர் எழுத்து கூடிச் சதகம் என்று ஆகின்றது .
இவ்வாறு இடையில் ' க ' என்ற ஓர் எழுத்து வருதலைக் ' க - பிரத்தியயம் ' என்று வடமொழி அறிஞர்கள் கூறுவார்கள் .
சதகம் என்ற வடமொழிச் சொல்லுக்கு ' ' நூறு கொண்டது ' ' என்பது பொருள் ஆகும் .
நூறு எண் கொண்டதைச் சதகம் என்று வழங்குதலால் நூறு எண்ணிக்கை அளவுள்ள பாடல்களைக் கொண்டு அமையும் இலக்கியத்தையும் சதகம் என்ற வடமொழிப் பெயராலேயே அழைத்தனர் .
5.1.1 இலக்கண வரையறை
கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைத்தியநாத தேசிகரே தமது இலக்கண விளக்கப் பாட்டியலில் முதன் முதலாகச் சதகத்தின் இலக்கணத்தைக் கூறியுள்ளார் . விளையும் ஒருபொருள் மேலொரு நூறு
தழைய உரைத்தல் சதகம் என்ப
( இலக் .
வி. 847 )
என்ற நூற்பா சதக இலக்கணத்தைக் கூறுகிறது .
அகப்பொருள் பற்றியோ அல்லது புறப்பொருள் பற்றியோ நூறு செய்யுள்களில் உரைப்பது சதகம் ஆகும் என்பது மேல் நூற்பாவின் பொருள் ஆகும் .
பயிலும் ஓர் பாட்டாய் நூறு உரைப்பதுதான் சதகம்
( சுவாமிநாதம் .
168 )
என்று , சுவாமிநாதம் எனும் பாட்டியல் நூற்பாவும் மேல் கருத்தையே உறுதி செய்கின்றது .
பொருள் அமைப்பை விடப் பாடல்களின் எண்ணிக்கைக்கே இந்நூற்பாக்களில் முதன்மை தரப்பட்டுள்ளது .
5.1.2 சதக இலக்கியங்களின் வகை
சதக இலக்கியங்களை மூன்று வகைகளாகப் பிரித்து உள்ளனர் .
கொங்கு மண்டலச் சதகம் முதலியன வரலாற்று நூல்களில் அடங்கும் .
போற்றி வகையில் அமைந்த நூல்கள் துதி நூல் வகையில் அடங்கும் .
உலகியல் நீதி கூறும் சதகங்கள் நீதி நூல் வகையில் அடங்கும் .
5.1.3 சதக இலக்கியங்களின் நோக்கங்கள்
சதக இலக்கியங்கள் பல்வேறு நோக்கங்களைக் கொண்டனவாக விளங்குகின்றன .
முதல் சதகமாகிய கார்மண்டலச் சதகம் ஒரு மண்டலத்தின் பெருமையை விரித்துரைப்பதாக அமைந்துள்ளது .
ஒரு நாட்டின் ஆட்சி , மன்னர் , இயற்கை வளம் முதலியவற்றை விவரித்துள்ளது .
சமய நோக்கம் கொண்டனவாகச் சில சதகங்கள் விளங்குகின்றன .
சமய நோக்கம் என்பது சமயத்தைப் பரப்புதல் , வேற்றுச் சமயத்தை மறுத்தல் எனும் இரு நிலையில் அமையும் .
கதை கூறுவதை நோக்கமாகக் கொண்டு மகாபாரதச் சதகம் அமைந்துள்ளது .
சமுதாய நீதி கூறும் நோக்கில் சில சதகங்கள் அமைந்துள்ளன .
குமரேச சதகம் இதற்குத் தக்க எடுத்துக்காட்டு .
வாழ்வியல் நடைமுறைகளைப் பல்வேறு சதகங்கள் எடுத்துக் கூறுகின்றன .
சகுனம் , நம்பிக்கை முதலியனவாக அவை அமைந்துள்ளன .
சமயத் தத்துவத்தைச் சில சதகங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன .
தமிழ் மொழியின் சிறப்பு , கல்வியின் பெருமை முதலியனவும் நோக்கங்கள் ஆகும் .
சமுதாயச் சீர்திருத்தம் , உடல் நலம் பேணல் , முன்னோர் மொழியைப் போற்றுதல் முதலியனவும் சதக இலக்கியங்களின் நோக்கங்கள் ஆகும் .
5.1.4 தமிழில் சதக நூல்கள்
சதகம் தனியொரு சிற்றிலக்கியமாக வளர்ச்சி பெற்ற காலம் கி.பி. 11-ஆம் நூற்றாண்டு ஆகும் .
சதகம் என்ற சொல்லை மாணிக்கவாசகர் காலத்திலேயே அறிகிறோம் .
அவிநாசி ஆறைகிழார் இயற்றிய கார்மண்டலச் சதகம் என்னும் இலக்கியமே சதக இலக்கியங்களில் காலத்தால் மூத்த நூலாகத் திகழ்கிறது .
அடுத்துப் படிக்காசுப் புலவர் , தொண்டை மண்டலச் சதகம் என்ற நூலை இயற்றினார் .
இவர் பாடிய தண்டலையார் சதகம் , சதக இலக்கியத்தின் ஒரு திருப்பு முனை ஆகும் .
பழமொழிகளைச் செய்யுள்தோறும் வைத்து இச்சதகத்தை அவர் பாடியுள்ளார் .
தொடர்ந்து 18-ஆம் நூற்றாண்டு வரை சதகம் , மிகுதியாக இயற்றப்படும் பெருமையைப் பெற்றிருந்தது .
சில சதகங்கள் வருமாறு :
• கார்மண்டலச் சதகம்
தமிழ்நாட்டின் பெரும்பகுதியாக விளங்கியது கார்மண்டலம் ஆகும் .
இது கருநாடு , கருநாடகம் எனவும் பிற்காலத்தில் அழைக்கப்பட்டது .
இங்கு வாழ்ந்த வேளாளர் குடியினரின் பெருமையை உரைப்பதே கார்மண்டலச் சதகம் ஆகும் .
இதனை ஆறைகிழார் எனும் புலவர் இயற்றி உள்ளார் .
• தொண்டை மண்டலச் சதகம்
தொண்டை நாட்டைச் சிறப்பித்து இச்சதகம் இயற்றப்பட்டுள்ளது .
படிக்காசுப் புலவர் இதனை இயற்றி உள்ளார் .
• சோழமண்டலச் சதகம்
சோழ நாட்டைப் பற்றியும் அந்நாட்டு மன்னர்கள் , புலவர்கள் , வள்ளல்கள் பற்றியும் பாடுவது சோழ மண்டலச் சதகமாகும் .
இதனை ஆத்மநாத தேசிகர் இயற்றி உள்ளார் . • கொங்கு மண்டலச் சதகம்