136

கொங்கு மண்டலச் சதகம் என்னும் இந்நூல் கொங்கு மண்டலத்தின் வரலாற்றுச் சுருக்கமாக அமைந்துள்ளது .

கார்மேகக் கவிஞர் இந்நூலைப் படைத்துள்ளார் .

• அறப்பளீசுவர சதகம்

கொல்லி மலையில் உள்ள ஒரு சிற்றூர் அறப்பள்ளி என்பது .

இவ்வூரில் எழுந்தருளியுள்ள கடவுள் மீது பாடப்பட்டதே அறப்பளீசுவர சதகம் .

அம்பலவாணக் கவிராயர் இந்நூலை இயற்றி உள்ளார் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. சதகம் என்பது எந்த மொழிச் சொல் ?

அதன் பொருள் என்ன ?

விடை

2. சதகம் என்ற சொல் முதன் முதலில் தமிழில் எந்த இலக்கியத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது ?

விடை

3. சதக இலக்கிய வகைகளைச் சுட்டுக .

விடை

4. சதக இலக்கியங்களின் நோக்கங்களில் ஐந்தினைக் குறிப்பிடுக .

விடை

5. தமிழில் முதல் சதக நூல் எது ?

விடை

6. ஐந்து சதக நூல்களின் பெயர்களைச் சுட்டுக .

பழமொழி விளக்கம் எனும் தண்டலையார் சதகம்

தண்டலை என்பது சோழ நாட்டுக் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள சிவத் தலங்களுள் ஒன்று .

' திருத் தண்டலை நீள்நெறி ' என்பது இதன் முழுப்பெயர் .

இத்தலத்திலுள்ள சிவபெருமான் மீது படிக்காசுப் புலவர் பாடிய நூலே தண்டலையார் சதகம் ஆகும் .

நண்பர்களே !

இதுவரையும் சதக இலக்கியங்கள் பற்றிப் பொதுவான செய்திகளை அறிந்தோம் .

இனித் தண்டலையார் சதகம் பற்றிய சிறப்புச் செய்திகளை அறிய இருக்கின்றோம் .

5.2.1 நூல் ஆசிரியர் வரலாறு

இந்நூலை இயற்றிய புலவர் படிக்காசுப் புலவர் ஆவார் .

தொண்டை நாட்டைச் சார்ந்தவர் .

இவர் இல்லறத்தில் இருந்து பின்பு துறவறம் பூண்டவர் .

அதனால் இவர் படிக்காசுத் தம்பிரான் என்றும் சொல்லப்படுகின்றார் .

திருவாரூர் வைத்தியநாத நாவலரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றார் .

காயல்பட்டினம் சீதக்காதி முதலியோரிடம் புலமைக்காக வெகுமதிகள் பெற்றவர் .

இறையன்பு மிகுந்தவர் .

பல தலங்களுக்கும் சென்று வழிப்பட்டுள்ளார் .

தில்லையில் தங்கி இருந்தபோது கையில் பொருள் இல்லை .

தில்லை சிவகாமி அம்மையைப் பாடினார் .

ஐந்து பொற்காசுகள் அம்மையின் அருளால் வீழ்ந்தன .

காசுகள் விழும்போது ' புலவருக்கு அம்மையின் பொற்கொடை ' என்ற ஒலி எழுந்தது .

அவற்றைத் தில்லைவாழ் அந்தணர்கள் பொன் தட்டில் வைத்துப் பல சிறப்புகளுடன் புலவருக்கு அளித்தனர் .

இக்காரணத்தால் இவருக்குப் ' படிக்காசுப் புலவர் ' என்ற பெயர் வழங்கலாயிற்று .

இப்புலவர் தருமபுர ஆதீனம் ஆறாவது குரு மகா சந்நிதானம் திருநாவுக்கரசு தேசிகரிடம் ஞானோபதேசம் பெற்றார் .

ஒரு நாள் தில்லையில் கூத்தப் பிரானது திருமுன்பு இருந்த திரைச்சீலை தீப்பற்றி எரிந்ததை யோகக் காட்சியால் உணர்ந்தார் .

தம்முடைய கைகளைப் பிசைந்தார் .

அங்கே பற்றிய தீ அணைந்தது .

இவ்வாறாக அருளிச் செயல்கள் பலவற்றைப் புலவர் நிகழ்த்தி உள்ளார் .

இவரால் இயற்றப்பட்ட நூல்கள்

தொண்டை மண்டல சதகம்

தண்டலையார் சதகம் சிவந்து எழுந்த பல்லவன் உலா

பாம்பு அலங்காரம் வருக்கக் கோவை

திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை

5.2.2 தண்டலையார் சதகம் - ஓர் அறிமுகம்

' ' பழமொழி விளக்கம் எனும் தண்டலையார் சதகம் ' ' என்பது இந்நூலின் முழுப்பெயர் .

திருக்குறள் , நாலடியார் முதலிய நீதி நூல்களில் பல்வேறு அறங்கள் கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள் .

அதுபோன்ற அறங்கள் பலவற்றைத் தண்டலையார் சதகம் எடுத்துரைக்கிறது .

இந்நூலுக்குப் பழமொழி விளக்கம் என்ற மற்றொரு பெயரும் உண்டு .

' ' இசைந்த பழமொழி விளக்கம் இயம்பத்தானே ' '

' ' விளங்கு பழமொழி விளக்கம் அறிந்துபாட ' '

( தண் .

சத. 1 , 2 )

என வரும் காப்புச் செய்யுட்களால் இதனை அறியலாம் .

இந்தச்சதகப் பாடல்களின் ஈற்றடியில் உலகில் வழங்கும் ஏதேனும் ஒரு பழமொழி இடம்பெற்று இருக்கும் .

தண்டலைப் பதியில் கோயில் கொண்டிருக்கும் ' நீள்நெறி நாதர் ' ' இச்சதகத்தின் தலைவர் ஆவார் .

இந்நூலுள் நூறு என்ற எண்ணிக்கையை விடக் கூடுதலாகப் பாடல்கள் உள்ளன .

அவை பிற்காலத்து இடைச் செருகலாக இருக்க வேண்டும் என்று ந.வீ. செயராமன் கருதுவார் .

சதகத்தின் பாடுபொருள்

இந்த நூலில் உள்ள பாடுபொருளைக் கருத்து அடிப்படையில் ஏழாகப் பிரிக்க இயலும் .

கீழேயுள்ள வரைபடம் அதைச் சுட்டுவதைப் பாருங்கள் .

5.3.1 இல்லறத்தின் சிறப்பு

இல்லறம் பற்றிய செய்திகளை இச்சதகம் விவரித்துள்ளது .

கற்பின் மேன்மை , புதல்வர் பெருமை , விருந்தோம்பல் முதலிய இல்லற நெறிகள் போற்றப்பட்டுள்ளன .

தண்டலையார் சோழவள நாட்டில் மௌனமாய்ப் பெருந்தவம் செய்த சௌபரி என்ற முனிவர் , பற்றற்ற நிலையை விட்டு நீங்கி மீளவும் இல்லறத்தை விரும்பி வாழ்ந்தார் ; திருவள்ளுவர் போன்று மனைவி வாசுகியுடன் இல்லற வாழ்வை நடத்தி நின்றார் .

அதனால் இல்லற வாழ்வே சிறப்பானது ஆகும் .

துறவற வாழ்வும் பிறர் பழித்தல் இல்லாயின் அழகியது ஆகும் .

இதனைப்

புல்லறிவுக்கு எட்டாத தண்டலையார்

வளம்தழைத்த பொன்னி நாட்டில்

சொல்லற மாதவம்புரியும் சௌபரியும்

துறவறத்தைத் துறந்து மீண்டான்

நல்லறமாம் வள்ளுவர்போல் குடிவாழ்க்கை

மனைவியுடன் நடத்தி நின்றால்

இல்லறமே பெரியதாகும் துறவறமும்

பழிப்பின்றேல் எழிலது ஆமே

( தண் .

சத. 5 )

( புல்லறிவு = அற்ப அறிவு , பொன்னி நாடு = சோழநாடு , சௌபரி = ஒரு முனிவர் )

என்ற பாடல் விவரிக்கும் .

சௌபரி முனிவர் மீன்களின் வாழ்க்கையைக் கண்டு மீண்டும் இல்லறத்தை ஏற்றுள்ளார் .

துறவறத்திலிருந்து இல்லறம் மேற்கொண்டதால் இல்லறமே சிறப்பானதாகும் என்று புலவர் கூறியுள்ளார் .

இல்லறம் புரியும் மகளிர் கற்புடன் திகழவேண்டும் என்பதைப் புலவர் வலியுறுத்திக் கூறியுள்ளார் .

இதற்காகக் கற்புடை மகளிரின் புராணக் கதைகளை மேற்கோள்களாகக் காட்டியுள்ளார் .

முக்கண்ணராகிய சிவன் உறையும் தண்டலையார் நாட்டில் கற்புடைய மகளிரின் பெருமையைச் சொல்ல முடியுமோ ?

நெருப்பை ஒத்தவளாகிய சீதை அந்நெருப்பையே குளிரச் செய்தாள் .

தன்னிடம் தகாத வார்த்தை பேசிய வேடனை எரித்தவள் தமயந்தி .

மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிப் பால் கொடுத்தவள் அநசூயை .

சூரியன் உதிப்பதைத் தடுத்தவள் நளாயினி .

முனிவர்களின் சாபம் கற்புடை மகளிரை அணுகாது என்பதைக் ‘ ’கொக்கென்று நினைத்தனையோ கொங்கணவா ’’ என்று கூறி மெய்ப்பித்தவள் ஒரு பெண் .

இதனைப் பின்வரும் பாடல் விளக்கும் , முக்கணர் தண்டலைநாட்டில் கற்புடை மங்கையர்

மகிமை மொழியப் போமோ

ஒக்கும்எரி குளிரவைத்தாள் ஒருத்தி வில்வேடனை

எரித்தாள் ஒருத்தி மூவர்

பக்கம்உற அமுதுஅளித்தாள் ஒருத்தி எழு

பரிதடுத்தாள் ஒருத்தி பண்டு

கொக்கெனவே நினைத்தனையோ கொங்கணவா

என்றே ஒருத்தி கூறினாளே

( தண் .

சத. 6 )

( முக்கணர் = சிவன் , எழுபரி = ஏழு குதிரைகளைப் பூட்டிய தேரினை உடைய சூரியன் , கொங்கணவர் = முனிவர் )

இவ்வாறாகக் கற்புடை மகளிரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கூறுவதன் மூலம் இல்லற மகளிர்க்குக் கற்பு நெறி வலியுறுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது .

5.3.2 நன்மக்கட்பேறு

இல்லறத்தின் பெரும்பயனாக நன்மக்கள் பேறு சுட்டப்பட்டுள்ளது .

பொற்சபையில் நடம் புரியும் தண்டலை ஈசனே !

நன்மை பயக்கும் பிள்ளை ஒன்று பெற்றால் அக்குலம் முழுவதும் நலம் பெறும் .

அவ்வாறு அல்லாமல் அறிவு இல்லாத பிள்ளை ஒரு நூறு பெற்றாலும் நலமாவது உண்டோ ?

ஆண்டுதோறும் பன்றி பல குட்டி போட்டாலும் என்ன பயன் உண்டாகும் ?

யானை கன்று ஒன்று ஈன்றதனால் சிறந்த பயன் உண்டாகும் .

ஒரு பிள்ளை பெற்றாலும் நல்ல பிள்ளையாகப் பெறுவதே மக்கட்பேறு என்று புலவர் வலியுறுத்துகிறார் .

பயன் இல்லாத பலரைப் பெறுவது வீண் என்பதைப் பன்றி , யானை பழமொழி மூலம் விளக்கி உள்ளார் .

5.3.3 விருந்தோம்பற் பண்பு

இல்லறத்தாரின் தலையாய கடமைகளில் ஒன்றாகிய விருந்தோம்பலைப் புலவர் வலியுறுத்திக் கூறியுள்ளார் .

தண்டலையார் வளநாட்டில் இல்வாழ்க்கை நடத்துவோர் நல்லோர் ஆவார் .

விருந்தினர் ஒருவர் ஆகிலும் இல்லாமல் உண்ட பகல் , பகல் ஆகுமோ என்று இல்லறத்தாரை வினவுகின்றார் .

சுற்றத்தினராய் வந்த விருந்தினர்க்கு மரியாதை செய்து அனுப்பி மேலும் இன்னும் பெரியோர் எங்கே என்று வருவிருந்தினரை எதிர்பார்த்து உண்பதே சிறந்த இல்லறமாகும் .

விருந்து இல்லாது உண்ணுகின்ற உணவு மருந்தாகும் .

இதனைத்

திருஇருந்த தண்டலையார் வளநாட்டில்

இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர்

ஒருவிருந்தாகிலும் இன்றி உண்டபகல்

பகலாமோ உறவாய் வந்த

பெருவிருந்துக்கு உபசாரம் செய்துஅனுப்பி

இன்னம்எங்கே பெரியோர் என்று

வருவிருந்தோடு உண்பதல்லால் விருந்தில்லாது

உணுஞ்சோறு மருந்து தானே

( தண் .

சத. 9 )

என்று புலவர் விவரித்துள்ளார் .

உயர்ந்த பண்புகள்

மனிதர்க்கு உரிய உயர்ந்த குணங்கள் சிலவற்றைத் தண்டலையார் சதகம் கூறியுள்ளது .

இந்தப் பண்புகள் சிலவற்றை இனி அறியலாமா ?

5.4.1 இனிமை

மனிதர்கள் முகம் மலர்ந்து இன்சொல் பேசுவதே சிறந்த பண்பாகும் என்கிறார் புலவர் .

கல்லும் உருகும் சொற்களை உடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்ட தண்டலையார் வளநாட்டில் கரும்பினால் மூடிய சர்க்கரைப் பந்தலிலே தேன்மழை பொழிந்து விடுவது இயல்பு தானே .

பொற்குடையும் பொன்னாலாகிய அணிகலனும் கொடுப்பதை விட இனிமையாகப் பேசுவதே நன்மையாகும் .

அதுவும் தாமரை மலர் போன்று முகம் மலர்ந்து மரியாதையோடு இனிமையான சொல்லைச் சொல்லிப் பேசுதல் வேண்டும் ( தண் .

சத. 10 )

இன்சொல்லைப் போன்றே நன்றி மறவாமையும் சிறந்த பண்பாகக் கூறப்பட்டுள்ளது .

ஆலம் விதை சிறியதாக இருந்தாலும் உருவம் பெரியதாகும் . தினை அளவு ஒருவருக்குச் செய்த உதவியானது பனை அளவாய்ப் பெரியதாகித் தோன்றும் .

தண்டலையார் வளநாட்டில் உப்பிட்டவர்களை உயிர் உள்ளவரையும் மக்கள் நினைப்பர் .

இதனைத்

துப்பிட்ட ஆலம்விதை சிறிது எனினும்

பெரியதாகும் தோற்றம் போலச்

செப்பிட்ட தினைஅளவு செய்தநன்றி

பனைஅளவாய்ச் சிறந்து தோன்றும்

கொப்பிட்ட உமைபாகர் தண்டலையார்

வளநாட்டில் கொஞ்ச மேனும்

உப்பிட்ட பேர்கள்தமை உளவரையும்

நினைக்கும் இந்த உலகம் தானே

( தண் .

சத. 12 )

( துப்பிட்ட ( துப்பு + இட்ட ) = பவளநிறம் உடைய , ஆலம் = ஆலமரம் , கொப்பு = ஒருவகைக் காது அணி )

என்று புலவர் விவரித்து உள்ளார் .

5.4.2 பொறுமை

மனிதர்க்கு இருக்க வேண்டிய உயர்ந்த குணங்களில் பொறுமை மிக முதன்மையான இடத்தை வகிக்கின்றது .

பொறுமைக்குப் பாண்டவர் வரலாற்றைப் புலவர் எடுத்துக் காட்டி விவரித்துள்ளார் .

கொடிய துரியோதனன் முதலானவர்கள் திரௌபதியின் அரையில் கட்டப்பட்டிருந்த சேலையை உரித்தனர் .

அப்பொழுதும் பஞ்ச பாண்டவராகிய ஐவரும் மனம் அழியவில்லை .

தமக்குரிய பொருளை அபகரித்து முழுதும் அழித்தாலும் , உதைத்தாலும் , பழியுண்டாகும்படி செய்தாலும் பொறுத்தவரே உலகை ஆள்வர் .

பொறாது பொங்கி எழுபவர் காடாளப் போவர் ( தண் .

சத. 17 ) என்று பொறுமையைப் பற்றிப் புலவர் கூறியுள்ளார் .

இதனைக்

கறுத்தவிடம் உண்டுஅருளும் தண்டலையார்

வளநாட்டில் கடிய தீயோர்

குறித்து மனையாள் அரையில் துகில்உரிந்தும்

ஐவர்மனம் கோபித்தாரோ

பறித்து உரியபொருள் முழுதும் கவர்ந்தாலும்

அடித்தாலும் பழிசெய் தாலும்

பொறுத்தவரே உலகாள்வர் பொங்கினவர்

காடுஆளப் போவர் தாமே

( தண் .

சத. 17 )

( கறுத்தவிடம் = பாற்கடலைக் கடையும்போது தோன்றிய நஞ்சு , ஐவர் = பாண்டவர் )

என்ற பாடல் விளக்கும் .

இவ்வாறாகப் புலவர் மானுட குல மேன்மைக்கு வேண்டிய பண்புகள் பலவற்றையும் எடுத்து விளக்கி உள்ளதை அறிய முடிகின்றது .

தீய பண்புகள்

மானுட குல கீழ்மைக்குரிய தீய பண்புகளைப் பற்றியும் பல கருத்துகளை வழங்கியுள்ளார் .

5.5.1 சிறுமை

மனித குலத்தை அழித்துவிடும் தீய பண்புகள் சிலவற்றையும் புலவர் விவரித்துள்ளார் .

மனிதர்க்கு ஆகாத இப்பண்புகளைத் தீய பண்புகள் என்று குறிப்பிடலாம் .

சிறுமை உடைய சிறியோர் இயல்பினைப் புலவர் ஒரு பாடலில் படம் பிடித்து உள்ளார் .

ஐயம் இல்லாமல் கற்றாலும் கேட்டாலும் உறுதிப் பொருளைச் சொன்னாலும் உலகில் சிறியோர் அடங்கி நடந்து நற்கதி அடையமாட்டார்கள் .

கங்கை நதிக் கரையில் படர்ந்தாலும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரைக்காயாக ஆகாதே என்று சிறியோர் இயல்பு கூறப்பட்டுள்ளது .

( தண் .

சத. 14 )

5.5.2 பொய்மை

பொய்யுரைத்தலின் கேட்டினைப் புலவர் விளக்கி உள்ளார் .

இதுவும் மனித குலத்திற்கு ஆகாத தீய பண்புகளுள் ஒன்றாகும் . பொய் சொல்லும் வாயினருக்கு உண்ண உணவு கிடைக்காது .