137

பொருளும் நிலைத்து நிற்காது .

சிவனின் முடியைப் பிரம்மன் கண்டார் எனத் தாழை மலர் பொய் உரைத்தது .

ஆனால் அது வாழ்ந்தது உண்டோ ?

( தாழைமலர் பொய் சொன்னதால் அது வழிபாட்டுப் பொருளில் இருந்து நீக்கப்பட்டது) பொய்யுரைத்தவன் வாழ்ந்தது இல்லை என்பதே மெய்ம்மை ஆகும் .

இதனை

...........................பொய்சொல்லும் வாயினர்க்குப் போசனமும்

கிடையாது பொருள் நில்லாது

மைசொல்லும் காரளிசூழ் தாழைமலர்

பொய்சொல்லி வாழ்ந்தது உண்டோ

மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி

வாழ்வதில்லை மெய்ம்மை தானே

( தண் .

சத. 31 )

( போசனம் = உணவு , அளி = வண்டு , மெய் = உண்மை )

என்று புலவர் விவரிப்பர் .

‘ அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் ’ என்ற பழமொழி மூலம் அற்பர்களின் குணங்களைச் சதகம் விளக்கி உள்ளது .

அறிவுடையோர்க்கு வாழ்வு வந்தால் மிகவும் வணங்கிக் கண்ணோட்டம் செய்வர் .

அற்பருக்கு வாழ்வு வந்தால் கண் இருந்தும் குருடராய்ச் செருக்கு உற்றுப் பலருக்கும் துன்பம் செய்வர் .

( தண் .

சத. 57 )

5.5.3 வஞ்சனை

வசை மிகும்படி தகாத செயல்களைச் செய்து மற்றவர் பொருளை வலிந்து பறித்துத் தானம் செய்வோர் உண்டு .

இது பசுவினைத் துன்புறுத்திக் கொன்று அதன் தோலினால் செருப்புச் செய்து அச்செருப்பைத் தானமாகத் தருவதற்கு ஒப்பானது .

உலகில் பிறர் வாழும் குடியை வஞ்சனையால் கெடுப்பவர் உள்ளனர் .

இவ்வாறு வஞ்சனையாகக் கெடுப்பதற்கு நினைத்தாலும் சொன்னாலும் அத்தகையோன் தானாகவே கெடுவான் என்பது உண்மை .

இதனைப் பின்வரும் பாடல் விளக்கும் ,

மண்ணுலகில் பிறர்குடியை வஞ்சனையில்

கெடுப்பதற்கு மனத்தி னாலே

உன்னிடினும் உரைத்திடினும் அவன்தானே

கெடுவான்என்பது உண்மை அன்றோ

( தண் .

சத. 65 )

( உன்னிடினும் = நினைத்திடினும் )

இவ்வாறாகப் புலவர் மனித குலத்திற்கு ஆகாத தீய குணங்கள் பலவற்றைத் தண்டலையார் சதகத்தில் வெளிப்படுத்தியுள்ளதை அறிய முடிகின்றது .

அரசர் நீதி

தண்டலையார் சதகம் உலக நீதியைக் கூறுவது போலவே அரச நீதி சிலவற்றையும் கூறி உள்ளது .

5.6.1 கொடுங்கோல் கொடுமை

திறமை இல்லாத அமைச்சர் அவையினில் நியாயம் இருப்பது இல்லை .

அரசர்க்கு எல்லா அறிவுரையும் கூறவும் நியாய வழிகளைச் சொல்லவும் அமைச்சர் வேண்டுமே அன்றி வேறொருவர் சொல்லுதல் ஆகாது .

( தண் .

சத. 63 ) சிவபெருமான் திருத்தொண்டிற்குக் குறை செய்பவர்கள் , நீண்ட கோலை உடையராய்ப் பயனற்ற வீணனைப் போல நியாயம் செய்வர் .

இவர்கள் நாட்டில் மழைதான் பெய்யுமோ ?

விளைச்சல்தான் உண்டோ ?

கொடுங்கோல் அரசன் வாழுகின்ற நாட்டை விடக் கடும்புலி வாழுகின்ற காடு நன்மை உடையது ஆகும் .

( தண் .

சத. 55 ) என்று கொடுங்கோல் மன்னன் நாட்டைப் பற்றிப் புலவர் கூறியிருப்பதை அறிய முடிகிறது .

நல்ல அமைச்சர் துணையும் இல்லாமல் நீதி கெட்டு ஆரவாரமாக ஆட்சி செய்யும் மன்னனது நாட்டை விடக் காடே சிறந்தது என்கிறார் புலவர் .

5.6.2 செங்கோல் சிறப்பு

செங்கோல் செலுத்தும் மன்னனையே உலகம் போற்றி வணங்கும் . மன்னன் அறநெறி வழுவாமல் ஆட்சி நடத்த வேண்டும் .

செங்கோல் வளையாமல் உலகை ஆளுதல் வேண்டும் .

நாடு பல்வேறு வளங்களைப் பெறுவதாய் மன்னன் ஆட்சி அமைதல் வேண்டும் .

இவ்வாறு ஆட்சி செய்யும் மன்னனையே மக்கள் தெய்வம் என்பார்கள் .

இதற்கு மாறாகக் கொடுங்கோல் செலுத்தி ஆட்சி செய்யும் அறியாமை உடைய அரசனும் அவன் அமைச்சனும் மீளா நரகத்தில் அழுந்துவார்கள் .

இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும் :

நாற்கவியும் புகழவரும் தண்டலையார்

வளநாட்டில் நல்ல நீதி

மார்க்கமுடன் நடந்து செங்கோல் வழுவாமல்

புவிஆளும்வண்மை செய்த

தீர்க்கமுள அரசனையே தெய்வம் என்பார்

கொடுங்கோன்மை செலுத்தி நின்ற

மூர்க்கமுள்ள அரசனும் தன்மந்திரியும்

ஆழ்நரகில் மூழ்கு வாரே

( தண் .

சத. 38 )

( புவி = உலகம் , வண்மை = வளமை , மூர்க்கம் = மூர்க்கத்தனம் / கொடுமை )

இவ்வாறு அரச நீதி பற்றிப் புலவர் பாடியுள்ளதை அறிய முடிகின்றது .

தொகுப்புரை

நண்பர்களே இதுவரையும் சதக இலக்கியம் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா ?

இனி இதுவரை அறிந்த செய்திகளை மீளவும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள் .

இதுவரை என்னென்ன செய்திகளைத் தெரிந்து கொண்டோம் ?

சதகம் என்றால் என்ன என்பது பற்றித் தெரிந்து கொண்டோம் .

சதக இலக்கண வரையறையையும் வகைகளையும் அறிந்து கொண்டோம் .

சதக இலக்கியங்களின் பொதுவான நோக்கங்கள் பற்றிய செய்திகளை அறிந்து கொண்டோம் .

பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார் சதகம் என்னும் நூல் பற்றிச் சிறப்பு நிலையில் செய்திகளை அறிந்து கொண்டோம் .

தண்டலையார் சதக ஆசிரியர் வரலாறு , நூல் அமைப்பு ஆகியன பற்றித் தெரிந்து கொண்டோம் .

தண்டலையார் சதகம் விவரிக்கும் இல்லறநெறி , உயர்ந்த பண்புகள் , தீய பண்புகள் , அரசியல் நெறி முதலிய செய்திகளை அறிந்து கொண்டோம் .

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1. தண்டலையார் சதகம் - நூலாசிரியர் பெயரைக் குறிப்பிடுக .

விடை

2. தண்டலையார் சதகத்தின் முழுப்பெயரைக் குறிப்பிடுக .

விடை

3. தண்டலையார் சதகத்தின் பாடுபொருள் வகையைக் குறிப்பிடுக .

விடை

4. இல்லற நெறி குறித்துத் தண்டலையார் சதகம் என்ன கூறுகிறது ?

விடை

5. உயர்ந்த பண்புகள் , தீய பண்புகள் - இவற்றைப் பட்டியல் இடுக .

விடை

6. கொடுங்கோன்மை பற்றிச் சதகம் குறிப்பிடுவதை விளக்குக .

அந்தாதி இலக்கியம்

பாட முன்னுரை

தமிழ் இலக்கிய வகையில் அந்தாதி இலக்கியமும் ஒன்று .

அந்தாதி தனி ஓர் இலக்கிய வகையாகப் பிற்காலத்தில் உருவெடுத்தது .

ஆனாலும் அதன் கூறுகள் சங்க இலக்கியத்திலேயே காணப்படுகின்றன .

ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட அந்தாதி இலக்கியங்களை ' அந்தாதி ' எனும் கட்டுரை ( க. காந்தி , 1980 ) பட்டியல் இட்டுள்ளது .

சிற்றிலக்கிய வகையில் மிகுதியான நூல்களைப் பெற்றவற்றுள் அந்தாதியும் ஒன்று .

நண்பர்களே !

இந்தப் பாடம் அந்தாதி இலக்கியங்களின் பொதுத் தன்மைகளை அறிமுகப்படுத்துகிறது .

மேலும் அபிராமி அந்தாதியைச் சிறப்பு நிலையில் விளக்குகிறது . அந்தாதி

அந்தாதி என்பது அந்தம் , ஆதி ஆகிய இரு சொற்களால் ஆன வடமொழித் தொடர் ஆகும் .

இத்தொடரில் உள்ள அந்தம் என்பது ' முடிவு ' என்றும் ஆதி என்பது ' முதல் ' என்றும் பொருள்படும் .

முடிவை முதலாகப் பெற்று அமைவது அந்தாதி ஆகும் .

ஒரு செய்யுளின் இறுதியில் உள்ள எழுத்தோ , அசையோ , சீரோ , அடியோ அடுத்து வரும் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது அந்தாதி ஆகும் .

அந்தாதி குறைந்தது இரண்டு அடிகளுக்கும் அல்லது இரண்டு செய்யுட்களுக்கும் இடையே காணப்படுவது .

இரண்டு அடிகளுக்கு இடையே அமைவதை அந்தாதித் தொடை என்றும் இரண்டு செய்யுட்களுக்கு இடையே அமைவதை அந்தாதிச் செய்யுள் என்றும் கூறுவர் .

தமிழ் இலக்கியப் பரப்பில் அந்தாதித் தொடை அமைப்பே அந்தாதிச் செய்யுள் அமைப்பிற்கு வழி காட்டியது எனலாம் .

அந்தாதி அமைப்பு , மனப்பாடம் செய்வதற்கும் எளிதாக நினைவு கொள்வதற்கும் ஏற்றதாக அமைந்திருப்பதால் புலவர்களால் அதிக அளவில் பாராட்டப்பட்டுள்ளது .

6.1.1 அந்தாதியின் தோற்றம்

சங்க இலக்கியங்களிலேயே அந்தாதி அமைப்பு உண்டு .

பதிற்றுப்பத்து நான்காம் பத்தினை இதற்குச் சான்றாகக் கூறலாம் .

பல சிற்றிலக்கியங்களின் தோற்றத்திற்குக் காரணராக விளங்கிய பக்தி இயக்கப் புலவர்களே அந்தாதி இலக்கியத்தின் தோற்றத்திற்கும் காரணம் ஆகி உள்ளனர் .

இன்று கிடைக்கும் அந்தாதி இலக்கியங்களுள் காலத்தால் முற்பட்டது , காரைக்கால் அம்மையார் பாடிய ' அற்புதத் திருவந்தாதி ' ஆகும் .

பதினோராம் திருமுறையை ' அந்தாதி மாலை ' என்று கூறும் வழக்கு உண்டு .

அவ்வாறு கூறுவதற்கு அத்திருமுறையில் எட்டு அந்தாதி இலக்கியங்கள் அமைந்திருப்பது காரணமாகின்றது .

6.1.2 அந்தாதி முறைப்பாடல்கள்

மாணிக்கவாசகர் திருவாசகத்தில் திருச்சதகம் , நீத்தல் விண்ணப்பம் , கோயில் மூத்த திருப்பதிகம் .

கோயில் திருப்பதிகம் , குழைத்த பத்து , யாத்திரைப் பத்து ஆகிய பகுதிகளை அந்தாதி முறையில் பாடியுள்ளார் .

திருமூலர் , திருமந்திரத்தில் பல பாடல்களை அந்தாதியாக அமைத்துள்ளார் .

நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி ஆயிரம் பாடல்களும் அந்தாதித் தொடையால் அமைந்துள்ளன .

சிற்றிலக்கிய வகைகளில் இரட்டைமணிமாலை , அட்டமங்கலம் , நவமணிமாலை , ஒருபா ஒருபது , இருபா இருபது , மும்மணிக்கோவை , மும்மணி மாலை , நான்மணி மாலை , கலம்பகம் ஆகியன அந்தாதித்து முடியும் நிலையைத் தம் இலக்கணமாகக் கொண்டு உள்ளன .

6.1.3 புகழ்பெற்ற அந்தாதிகள்

புகழ்பெற்ற அந்தாதி நூல்கள் சிலவற்றை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே !

1 ) திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி

இந்நூலை இயற்றியவர் அதிவீரராம பாண்டியர் ஆவார் .

கரிவலம் வந்த நல்லூரில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமான் மீது இந்த அந்தாதி பாடப் பெற்றுள்ளது .

2 ) திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி

இந்நூலைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றியுள்ளார் .

திருச்செந்தூர் முருகனின் திருவருள் இந்நூலுள் புகழப்பட்டுள்ளது .

3 ) சடகோபர் அந்தாதி , சரஸ்வதி அந்தாதி

இந்த இரண்டு நூல்களையும் கம்பர் இயற்றியதாக அறிய முடிகின்றது .

திருமால் அடியவராகிய சடகோபரைத் தலைவராகக் கொண்டு சடகோபர் அந்தாதி அமைந்துள்ளது .

சடகோபரே நம்மாழ்வார் என்று அழைக்கப்பெற்றார் .

கல்விக் கடவுள் கலைமகள் ( சரஸ்வதி ) மேல் பாடப்பெற்றது சரஸ்வதி அந்தாதி .

4 ) திருவரங்கத்து அந்தாதி

மணவாள தாசர் என்று அழைக்கப்படும் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் திருவரங்கத்து அந்தாதியை இயற்றி உள்ளார் .

திருவரங்க நாதனின் அருட்செயல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன .

6.1.4 அந்தாதி வகைகள்

பாட்டியல் நூல்கள் அந்தாதியின் வகைகளைச் சுட்டி உள்ளன .

அந்தாதி இலக்கியங்களை அந்தாதி எனும் பெயரால் பாட்டியல் நூலார் குறிப்பிடவில்லை .

அந்தாதி வகைகளின் பெயரைத்தான் குறிப்பிட்டுள்ளனர் .

பன்னிரு பாட்டியல் இதனை அந்தாதித் தொகை என்று குறிப்பிட்டுள்ளது .

சிற்றிலக்கியங்களுள் அந்தாதி வகைகளாக ஒலியந்தாதி , பதிற்றுப் பத்தந்தாதி , நூற்றந்தாதி , கலியந்தாதி ஆகியன தென்படுகின்றன .

இவை அல்லாமல் கலித்துறை அந்தாதி , கலியந்தாதி , வெண்பா அந்தாதி ஆகியவற்றிற்கும் பாட்டியல்கள் இலக்கணம் வகுத்துள்ளன .

இவை தவிர வேறு சில அந்தாதி வகைகளும் காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர் .

பாட்டியல் நூல்கள் காட்டிய அந்தாதிகள் தவிர மேலும் பல புதிய வகை அந்தாதிகள் காணப்படுகின்றன .

செய்யுள் வகை , பாடல்களின் எண்ணிக்கை , அவற்றில் அமைந்த அணி நலன்கள் , பாடல்களை உச்சரிக்கும் செயல் முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவை பல்வேறு வகையினவாகப் பெருகி உள்ளன .

6.1.5 அந்தாதியின் பொருள் வகைப்பாடு

அந்தாதி இலக்கியங்கள் தலங்கள் , தல இறைவன் , சான்றோர்கள் , தொண்டர்கள் , புலவர்கள் , வள்ளல்கள் , முதன்மைபெற்ற நிகழ்ச்சிகள் முதலியன குறித்து அமைந்தனவாக உள்ளன . பக்திப் பெருக்கினை உணர்த்துவதே பெரும்பான்மை அந்தாதிகளின் குறிக்கோள் எனலாம் .

சில அந்தாதிகள் அகத்திணைத் துறைகளைக் கொண்டும் விளங்குகின்றன .

சான்றுக்குத் திருவிடைமருதூர் அந்தாதியைக் கூறலாம் .

திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதியினைக் குட்டித் திருவாசகம் என்று கூறுவர் .

கயிலைபாதி காளத்திபாதி அந்தாதியில் இரு தலங்களின் மேன்மை போற்றப்பட்டுள்ளது .

அம்மை பாதி அப்பன்

பாதி அந்தாதியில் பாட்டுடைத் தலைவர் இருவர் ஆவார் .

தண்டபாணி சுவாமிகளின் குருநாதன் அந்தாதியில் ' அருளுக்கு ஏங்குதல் ' எனும் ஒரு பொருண்மையே எல்லாப் பாடல்களிலும் காணப்படுகின்றது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. அந்தாதி என்றால் என்ன ?

அதன் பொருளை விளக்குக .

விடை

2. முதல் அந்தாதியாகக் கருதப்படும் அந்தாதி எது ?

விடை

3. அந்தாதியாக அமையும் சிற்றிலக்கிய வகைகள் நான்கினைச் சுட்டுக .

விடை

4. புகழ்பெற்ற அந்தாதி நூல்களுள் நான்கினைச் சுட்டுக .

விடை

5. அந்தாதியின் பொருள் வகைப்பாட்டைக் கூறுக .

அபிராமி அந்தாதி

அந்தாதி இலக்கியங்களுள் சிறந்ததாகப் போற்றப்படுவது அபிராமி அந்தாதி ஆகும் .

அபிராம பட்டர் இந்நூலின் ஆசிரியர் .

திருக்கடவூரில் எழுந்தருளியுள்ள அபிராமி இந்த அந்தாதியின் பாட்டுடைத் தலைவி ஆவாள் .

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் திருக்கடவூர் என்பது .

இது மூர்த்தி , தலம் , தீர்த்தம் என்ற மூன்று சிறப்புகளை உடையது .

பாற்கடலில் தேவர்கள் அனைவரும் அமுதத்தைக் கடைந்து எடுத்து வந்து இத்தலத்தில் வைத்தனர் .

மீண்டும் எடுக்க முயலுகையில் அக்குடமே உருவமாகச் சிவன் தோற்றமளித்ததைக் கண்டனர் .

அமுதம் கிடைக்காத நிலையில் திருமாலையும் சிவனையும் வேண்டினர் .

திருவருள் கிடைக்கவில்லை .

அம்பிகையை வணங்க மறந்த பிழை உணர்ந்து சிவபிரானையும் அபிராமியையும் பூசித்து வணங்கினர் .

பின் அமுதம் கிடைத்தது .

ஊரில் கடம் ( குடம் ) அமையப் பெற்றதால் கடவூர் என்ற பெயர் வந்தது .

இத்தலத்தில் உள்ள அபிராமி அம்மை மீது அளவற்ற பக்தி செலுத்தி வந்த அபிராம பட்டர் இயற்றிய நூலே அபிராமி அந்தாதி ஆகும் .

காப்புச் செய்யுள் ஒன்றும் நூற்பயன் செய்யுள் ஒன்றும் சேர இந்த அந்தாதி நூற்று இரண்டு செய்யுட்களை உடையது .

6.2.1 நூலாசிரியர்

அபிராம பட்டர் சோழநாட்டுத் திருக்கடவூரில் பிறந்தவர் , அந்தணக் குலத்தவர் , சோதிடத்தை நன்கு பயின்றவர் , பரம்பரையாகச் சிறந்த பக்தி நெறியுடைய குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தவர் .

தமிழ் , வடமொழி ஆகிய இரு மொழிப் புலமையும் உடையவர் .

அம்பிகையை வணங்கித் திருவருள் இன்பத்தில் திளைத்துப் பித்தரைப்போல் சமயவெறி கொண்டு உலாவினார் .

இவருடைய பக்தி நெறியை அறியாத சிலர் இவரை அந்தண நெறிக்கு அப்பாற்பட்ட செயல்களைச் செய்கின்றார் என்று இழித்துப் பேசினார்கள் .

அபிராம பட்டர் அதற்கெல்லாம் செவி சாய்த்தார் இல்லை .

• மன்னரும் பட்டரும்

அந்நாளில் தஞ்சையில் அரசாண்டவர் மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோசி .

காவிரிப் பூம்பட்டினத்திற்குச் சென்று புகார் முகத்தில் ( காவிரியாறு கடலில் கலக்கும் இடம் ) குளித்துவிட்டு மீண்டவர் , திருக்கடவூரில் தங்கினார் .

வழக்கம்போல் அங்குத் தங்கிய மன்னர் அபிராமியைத் தொழுது வெளியேறும்போது சந்நிதியில் பட்டரைக் கண்டார் .

யோகநிலையினை எய்தியவராகத் தோன்றிய அன்னாரைக் கண்டபின் அருகே இருந்தவர்களை அழைத்து இவர் யாவர் என வினவினார் .

அருகே வந்தோர் மன்னவருடைய கேள்விக்கு , இந்த மனிதர் பித்துப் பிடித்தவர் போன்றுள்ளார் , அந்தணர்க்குரிய முறையைக் கடந்து ஒரு தேவதையை வழிபட்டுக் கொண்டுள்ளார் என்றனர் .

மன்னர் அவரோடு பேச வேண்டும் என்று விரும்பினார் .

பிரதமை நாளாகிய அன்று , ' ' அமாவாசை இன்று உண்டா ?

எவ்வளவு நாழிகை இருக்கிறது ? ' ' என்று பட்டரை நோக்கி மன்னர் கேட்டார் .

பட்டரின் உள்ளத்தில் முழுமதியாக , அன்னையின் திருமுகம் ஒளிவீசிக்கொண்டிருந்தது . இத் தரிசனத்தைக் கண்டு திளைத்தபடி இருந்த பட்டர் இன்று பௌர்ணமி அல்லவா ?