தூண்டு நூற் கணத்தோடு தனியனாய்த்
தோழமை பிறிதின்றி வருந்தினேன்
( சுயசரிதை : 4 )
இளமைக்கால ஏக்க உணர்வை இப்பாடலில் அழகுறப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் பாரதி .
காற்றை வேலியிட்டுத் தடுக்க முடியுமா , என்ன ?
அல்லது , கடலுக்குத் தான் மூடிபோட்டு அடைத்து விடமுடியுமா ?
பிறவிக் கவிஞன் பாரதியின் கவித்திறமையைப் பள்ளிக்கூடம் மூட்டைகட்டி ஒதுக்கி வைக்க முடியவில்லை .
" ஏழெட்டு வயதிலேயே மோகனமான பகற்கனவுகள் காண்பதிலும் , சிங்கார ரசமுள்ள கவிகள் இயற்றுவதிலும் பிரியம் கொண்டார் .
பசி , தாகம் கூட அவருக்குத் தெரிவதில்லை ” என்கிறார் பாரதியின் சரித்திரத்தைப் பின்னாளில் எழுதிய அவர் மனைவி செல்லம்மா .
ஆம். பள்ளிப் படிப்பிலே அறிவு சென்றிடவில்லை என்றாலும் , கவிதை புனையும் ஆர்வம் மட்டும் அவர் உள்ளத்தின் ஆழத்தில் வளர்ந்த வண்ணமாகவே இருந்து வந்தது .
நாட்டிலும் காட்டிலும் நாளெல்லாம் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தார் அவர் .
பள்ளிப் படிப்பினிலே மதி
பற்றிட வில்லை எனிலும் தனிப்பட
வெள்ளை மலரணை மேல் அவள்
வீணையும் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருள் அமுதும் கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத்தேன் அம்மா !
( ' ஸரஸ்வதி காதல் ' 1 )
( அவள் = கல்விக் கடவுள் ஆகிய ஸரஸ்வதி ; விள்ளும் = உணர்த்தும் )
என்று பின்னாளில் ' ஸரஸ்வதி காதல் ' என்னும் தலைப்பில் பாடிய தோத்திரப் பாடலில் பாரதியார் தமது இளமைப் பருவத்து அனுபவத்தை நினைவு கூர்ந்துள்ளார் .
1.1.5 புலமைக்குப் பெருமை
1893ஆம் ஆண்டில் சுப்பையாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓர் அனுபவம் சிறப்பானது .
எட்டயபுர மன்னருடைய அவைக் களத்தில் சிவஞான யோகியின் தலைமையில் புலவர்கள் கூடியிருந்தனர் .
அப்புலவர்கள் பதினொரு வயது சுப்பையாவின் கவிபாடும் திறனைக் கண்டு வியந்தனர் .
அவர் நாவில் கலைமகள் தாண்டவமாடுவதைக் கண்டு ' பாரதி ' ( கலைமகள் ) என்ற பட்டத்தினை அவருக்கு வழங்கினர் .
புலவர்கள் வழங்கிய இந்தப் பட்டமே சுப்பையாவின் பெயருக்கு மகுடமாக என்றென்றும் நிலைத்துவிட்டது .
அன்று முதல் சுப்பையா சுப்பிரமணிய பாரதி ஆனார் .
1.1.6 பாரதி விரும்பாத ஆங்கிலக்கல்வி
சின்னஞ்சிறு வயதில் யாருக்குமே கிடைக்காத பட்டம் புலவர்களால் தம்மகனுக்கு வழங்கப் பெற்றதை நினைத்து உள்ளூர மகிழ்ச்சியடைந்தாலும் , தம் மகன் படித்துப் பட்டம் பெற்று உயர்பதவியில் அமர வேண்டும் என்றே பெரிதும் ஆசைப்பட்டார் சின்னசாமி ஐயர் .
எனவே , அவர் பாரதிக்கு ஆங்கிலக் கல்வியைக் கற்பிக்க வேண்டி , அவரை 1894ஆம் ஆண்டில் திருநெல்வேலி இந்துக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார் .
ஆங்கிலக் கல்வியில் பாரதிக்குச் சற்றும் விருப்பம் இல்லை .
அவர் மனத்தில் பெரும் கசப்பை ஏற்படுத்தியது அக்கல்வி .
பின்னாளில் தம் ' சுயசரிதை ' யில் ஆங்கிலக் கல்வியை ' அற்பர் கல்வி ' என்றும் ' பேடிக் கல்வி ' என்றும் பலவகையில் தூற்றுகிறார் .
இக்கல்வியினால் அவர் பெற்ற பயன் என்ன என்று சொல்கிறார் பாருங்கள் :
செலவு தந்தைக்கு ஓர்ஆயிரம் சென்றது ;
தீது எனக்குப் பல்ஆயிரம் சேர்ந்தன ;
நலம்ஓர் எள்துணையும்கண்டிலேன் அதை
நாற் பதாயிரம் கோயிலில் சொல்லுவேன் !
( சுயசரிதை : 29 )
வேண்டா வெறுப்பாக ஆங்கிலக் கல்வியைத் தொடர்ந்த பாரதியார் 1897ஆம் ஆண்டு வரை படித்தார் .
அப்போதைய ஐந்தாம் படிவம் என்ற பத்தாம் வகுப்புக் கல்வியை முடித்தார் .
1.1.7 பள்ளிச் சிறுவனுக்குப் பால விவாகம்
பாரதியாருக்குப் பள்ளி நாட்களிலேயே அவருடைய பதினான்கு வயதிலேயே திருமணம் நிகழ்ந்தது .
1897ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் நாள் கடையத்தைச் சேர்ந்த செல்லப்பா ஐயரின் புதல்வி செல்லம்மாள் என்ற ஏழு வயதுச் சிறுமிக்கும் பாரதிக்கும் அவரது தந்தையார் திருமணம் செய்து வைத்தார் .
1.1.8 தந்தையார் செல்வச் சரிவும் உயிர் இழப்பும்
பாரதிக்குத் திருமணம் நடந்து ஓராண்டு கழிந்தது .
இந்த நிலையில் அவரது வாழ்வில் ஒரு பெரும்துயரம் நிகழ்ந்தது .
பாரதியின் தந்தையார் தம் செல்வத்தை இழந்து வறுமைக்கு ஆளானார் .
பலப்பல வாணிகம் ஆற்றி மிக்க பொருள் சேர்த்துப் பெருவாழ்வு வாழ்ந்த சின்னசாமி ஐயர் துயரக்கடலில் வீழ்ந்தார் . இதனால் உள்ளம் குன்றித் தளர்ந்த அவர் 1898ஆம் ஆண்டு ஜூன் மாதம் மரணமடைந்தார் .
ஐந்து வயதில் தாயை இழந்த பாரதியார் பதினைந்து வயதில் தந்தையையும் இழந்து தனிமரமாய் நின்றார் .
தந்தை இறந்த பின்னர் , யாரும் ஆதரவு காட்ட இல்லாத நிலையில் அகதியைப் போல் ஆனார் பாரதியார் .
தம் அவல நிலை குறித்துச் சுயசரிதையில் அவர் பாடியிருக்கும் அடிகள் வருமாறு :
தந்தைபோயினன் , பாழ்மிடி சூழ்ந்தது ;
தரணி மீதினில் அஞ்சல் என்பார்இலர் ;
சிந்தையில்தெளிவு இல்லை ; உடலினில்
திறனும்இல்லை ; உரன்உளத்து இல்லையால்
எந்தமார்க்கமும் தோற்றிலது என் செய்கேன் ?
ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே ?
( சுயசரிதை : 46 )
( மிடி = வறுமை ; தோற்றிலது = தோன்றவில்லை )
ணி
விக்டோரியா மகாராணி மரணமடைந்து , ஏழாம் எட்வர்டு பதவி ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சியை ஒட்டி , கர்ஸன் பிரபு தில்லியில் ஒரு தர்பார் நடத்தினார் .
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற எட்டயபுரம் மன்னர் , திரும்பும் வழியில் பாரதியாரைச் சந்தித்துத் தம் அரண்மனைக்கு வரும்படியாகக் கேட்டுக் கொண்டார் .
இந்த அழைப்பினை ஏற்று , பாரதியார் 1902 ஆம் ஆண்டு காசியில் இருந்து எட்டயபுரம் திரும்பினார் .
இது குறித்துச் செல்லம்மாள் பாரதி தம் நூலில் பதிவு செய்திருப்பது வருமாறு :
“ காசியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் , பாரதியாருக்கு வடநாட்டிலேயே தங்கிவிட வேண்டுமென்ற எண்ணம் இருந்தது .
அந்த எண்ணத்தை மாற்றி அவரைத் தென்னாட்டுக்கு அழைத்து வந்தவர் எட்டயபுரம் மகாராஜாதான் .
மகாராஜா பாரதியாரைச் சந்தித்துத் தம்முடன் எட்டயபுரம் வந்து இருக்கும்படி அழைத்தார் .
அவரைத் தட்டிச் சொல்ல மனமின்றி , ஊருக்கு வந்து என்னையும் அழைத்துக் கொண்டு எட்டயபுரத்தில் குடித்தனம் ஆரம்பித்தார் ” ( பாரதியார் சரித்திரம் , பக். 35 )
எட்டயபுரம் சமஸ்தானத்தில் பாரதியார் பணியில் அமர்ந்தார் .
மன்னருக்குப் பத்திரிகைகள் , புத்தகங்கள் படித்துக் காட்டுவது , அரசவைக்கு வருகின்ற வித்துவான்களுடன் கலந்துரையாடுவது , வேதாந்த , தமிழ் நூல்களை ஆராய்ச்சி செய்வது இவைதாம் பாரதியாரின் அன்றாட அலுவல்கள் .
எட்டயபுர வாழ்க்கை செல்லம்மாளுடன் இணைந்து மனையறம் நடத்தும் வாய்ப்பினைப் பாரதியாருக்கு நல்கியது .
இக்கால கட்டத்தில் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர்களான ஷெல்லி , பைரன் , கீட்ஸ் போன்றோரது கருத்துகளால் பாரதியார் பெரிதும் ஈர்க்கப்பட்டார் .
குறிப்பாக அக்கவிஞர்களின் விடுதலை உணர்வு அவரை மிகவும் கவர்ந்தது .
இதனை , “ அந்தக் காலத்தில் அவர் ' ஷெல்லிதாசன் ' என்னும் புனைபெயருடன் பத்திரிகைகளுக்குச் சில வியாசங்கள்கூட எழுதியதுண்டு ” ( பாரதியார் சரித்திரம் , பக். 29 ) எனச் செல்லம்மா பாரதி தம் நூலில் நினைவு கூர்ந்துள்ளார் .
1.2.3 மதுரையில் ஆசிரியர் பணி
விடுதலை உணர்வில் தீராத வேட்கை கொண்டிருந்த பாரதியாருக்கு நாளடைவில் சமஸ்தானப் பணி சலிப்பைத் தந்தது .
1904ஆம் ஆண்டு அவர் அப் பணியில் இருந்து விடுதலை பெற்றார் ; எட்டயபுரம் ஊரை விட்டும் வெளியேறினார் .
தம் மனத்திற்கு உகந்த பணி ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்து அவர் மதுரைக்கு வந்தார் .
மதுரையில் புலவர் கந்தசாமி நடத்திய ' விவேகபாநு ' என்ற பத்திரிகையில் 1904ஆம் ஆண்டு ஜூலை மாத இதழில் பாரதியாரின் ' தனிமை இரக்கம் ' என்ற பாடல் வெளியாயிற்று .
இதுவே அச்சு வடிவில் வெளிவந்த பாரதியாரின் முதல் பாடலாகும் என்பர் ( தமிழகம் தந்த மகாகவி , பக். 18 )
மதுரையில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் பாரதியார் தற்காலிகமாகத் தமிழாசிரியராகப் பணியாற்றினார் ; 1.8.1904 ஆம் ஆண்டு முதல் 10.11.1904 ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ மூன்று மாத காலம் அப்பணியில் இருந்தார் .
அதிலும் அவரது மனம் முழுமையாக ஈடுபடவில்லை .
பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தையே பாலித்திட விழைந்தவர் அல்லவா அவர் ?
எனவே , மதுரையிலே ஒரு தமிழாசிரியராக மட்டும் தம்வாழ்க்கையைச் சுருக்கிக்கொள்ள அவர் விரும்பவில்லை .
தன்மதிப்பீடு : வினாக்கள் - 1
1. பாரதியாரின் பிறந்த நாளைச் சுட்டுக .
[ விடை ]
2. பாரதியாரின் செல்லப் பெயர் யாது ?
[ விடை ]
3. தந்தையார் ' கணக்குப் போடு ' என்றபோது , பாரதியார் என்ன செய்தார் ?
[ விடை ]
4. பாரதியார் எத்தனை வயதில் தம் தாயை இழந்தார் ?
[ விடை ]
5. பாரதியார் தாம் இளமையில் அனுபவித்த தனிமைத் துயரினைப் பற்றி எங்ஙனம் பாடியுள்ளார் ?
[ விடை ]
6. சுப்பையா சுப்பிரமணிய பாரதி ஆனது எப்போது ?
[ விடை ] 7. பாரதியார் நெல்லை சென்றது எதற்காக ?
[ விடை ]
8. பாரதியாருடைய துணைவியாரின் பெயரைச் சுட்டுக .
[ விடை ]
9. தமது தந்தையார் இறந்த அவலத்தைப் பாரதியார் எங்ஙனம் குறிப்பிட்டுள்ளார் ?
[ விடை ]
10. பாரதியார் காசி நகருக்குச் செல்லக் காரணமாக இருந்தவர் யார் ?
[ விடை ]
11. பாரதியார் வைத்துக்கொண்ட புனைபெயர் ஒன்றினைச் சுட்டுக .
[ விடை ]
12. அச்சு வடிவில் வெளிவந்த பாரதியாரின் முதல் பாடல் எது ?
[ விடை ]
13. பாரதியார் மதுரையில் எங்கே தமிழாசிரியராகப் பணியாற்றினார் ?
1.3 பத்திரிகை ஆசிரியர் பணியும் விடுதலை இயக்க ஈடுபாடும்
கவிதையே தொழில் எனக் கொண்டு , இமைப்பொழுதும் சோராது நாட்டிற்கு உழைக்க விரும்பினார் பாரதியார் .
அவருடைய கவிதை ஓட்டத்திற்கும் , விடுதலை உணர்ச்சிக்கும் துணையாக நின்றன பத்திரிகைகள் .
எழுச்சி ஊட்டும் கவிதைகள் , உணர்ச்சி ஊட்டும் கட்டுரைகள் இவற்றை மக்கள் மத்தியிலே எடுத்துச் செல்வதற்குப் பத்திரிகைகள் உதவின .
எஞ்சிய நேரங்களில் பொதுக்கூட்டங்களைக் கூட்டினார் , சோம்பியிருந்த மக்களுக்குத் தம் பாடல்கள் மூலமும் , சொற்பொழிவுகள் மூலமும் உணர்ச்சி ஊட்டினார் ; விடுதலை வேட்கையை மக்களிடையே பெருகவிட்டார் .
1.3.1 சுதேசமித்திரனும் , சக்கரவர்த்தினியும்
'
சுதேசமித்திரன் ' அக்காலத்தில் தேசிய இயக்கத்திற்குத் துணையாய்ச் செயலாற்றிய பத்திரிகை ஆகும் .
' தமிழ்ப் பத்திரிகையின் தந்தை ' எனப் பாராட்டப் பெற்ற ஜி.சுப்பிரமணிய ஐயர் தாம் சுதேசமித்திரனின் உரிமையாளராக இருந்தவர் .
அவர் 1904ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாரதியாரைச் சுதேசமித்திரன் ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொண்டார் .
சுப்பிரணிய ஐயரிடம் பாரதியார் , பத்திரிகைப் பயிற்சியை முறையாகப் பெற்றதோடு , அவரது அரிய வழிகாட்டுதலில் நாடறியும் கவிஞரானார் .
தேசிய இயக்கத்திற்குப் புதிய உயிரும் உருவமும் கொடுத்தார் .
சுதேசமித்திரனில் பணியாற்றிய வேளையில்தான் பாரதியாருக்குத் தங்கம்மாள் என்னும் மகள் பிறந்தார் .
1905ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் நாள் வங்காளம் பிரிக்கப்பட்டது .
இந்தப் பிரிவினையால் பாரத நாடு முழுவதும் தேசிய உணர்ச்சி அலையெனப் பொங்கி எழுந்தது ; அது கிளர்ச்சியாக வெடித்தது .
இந்த அலையின் வீச்சு பாரதியாரின் உள்ளத்திலும் மோதியது ; இதன் விளைவாக அவர் , தீவிர அரசியலில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார் .
இந்த நிலையில் தமது தீவிரமான கருத்துகளையும் கொள்கைகளையும் ' சுதேசமித்திரன் ' பத்திரிகையில் வெளியிட இயலாதது குறித்து வருந்தினார் .
தம்முடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் எந்த ஒரு தடையும் இல்லாமல் சுதந்திரமாக வெளியிடும் நோக்கோடு அவர் தொடங்கிய புதிய தேசிய இதழே ' சக்கரவர்த்தினி ' ஆகும் .
' சுதேசமித்திர ' னில் பணியாற்றிக் கொண்டே அவர் ' சக்கரவர்த்தினி ' யிலும் அவ்வப்போது எழுதிவந்தார் .
1905ஆம் ஆண்டு நவம்பர் மாதச் ' சக்கரவர்த்தினி ' இதழில் பங்கிம் சந்திரரின் ' வந்தே மாதரம் ' என்ற புகழ்பெற்ற பாடலின் மொழிபெயர்ப்பை விளக்கக் குறிப்போடு வெளியிட்டார் பாரதியார் .
1.3.2 காங்கிரஸ் மாநாடுகளும் தேசியத் தலைவர்களின் தொடர்பும்
1905ஆம் ஆண்டு காசியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும் , 1906ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்டார் பாரதியார் .
தாதாபாய் நவுரோஜி தலைமையில் நடைபெற்ற கல்கத்தா காங்கிரஸ் மாநாடு இந்திய தேசிய இயக்க வளர்ச்சியில் புதிய வரலாறு ஒன்றைப் படைத்தது .
அந்த மாநாட்டில்தான் நவுரோஜி நாட்டிற்குச் ' சுயராஜ்யம் வேண்டும் ' என்ற தாரக மந்திரத்தினை முழங்கினார் .
அந்த மாநாடு பாரதியாரின் அரசியல் வாழ்வில் மட்டுமன்றி , தனிவாழ்விலும் ஒரு திருப்புமுனையை மாற்றத்தை ஏற்படுத்தியது .
அம் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பாரதியார் , அச்சமயம் டம்டம் நகரிலே இருந்த நிவேதிதா அம்மையாரைத் தரிசித்து அருளுபதேசமும் ஆசியும் பெற்றார் .
1.3.3 ' இந்தியா ' பத்திரிகையின் தொடக்கம்
கல்கத்தா மாநாட்டில் இருந்து சென்னை திரும்பிய பாரதியாரின் உள்ளத்தில் தேசிய உணர்ச்சி கரை புரண்டு ஓடியது ; அவரது பார்வையில் புதிய ஒளி வீசியது ; ' சுயராஜ்யம் எமது பிறப்புரிமை ; அதை அடைந்தே தீருவோம் ' என முழங்கிய பால கங்காதர திலகரின் தலைமையை அவர் ஏற்றுக்கொண்டார் .
இந்நிலையில் மிதவாதியான சுப்பிரமணிய ஐயரின் தலைமையில் இயங்கிய ' சுதேசமித்திர ' னில் பாரதியார் தமது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் , சுதந்திரமாகவும் முழுமையாகவும் வெளியிட இயலாமல் தவித்தார் ; அவற்றை வெளியிடுவதற்குச் சரியான கருவி தனிப்பத்திரிகை ஒன்றைத் துவங்குவது தான் என்று தெளிந்தார் .
' ஆங்கில மோகம் ' தலைவிரித்தாடிய அந்தக் காலகட்டத்தில் தமிழிலே நல்லதொரு பத்திரிகை நடத்த வேண்டும் என்ற தீவிரமான முயற்சியில் ஈடுபட்டிருந்தார் மண்டயம் திருமலாச்சாரியார் ; தாம் புதிதாகத் துவங்க இருக்கும் பத்திரிகைக்குப் பாரதியாரே தகுதியான , சிறந்த பொறுப்பாசிரியர் ஆவார் என்பதை உணர்ந்தார் .
இருவரது சந்திப்பின் விளைவாக , 1906ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற மூன்று தாரக மந்திரங்களைத் தனது இலட்சியங்களாகக் கொண்டு ' இந்தியா ' பத்திரிகை வெளிவரத் தொடங்கியது .
தீவிரமான எண்ணமும் உணர்வும் கொண்ட தேசபக்தர்களின் வீரமுரசாக விளங்கியது அப்பத்திரிகை .
' இந்தியா ' பத்திரிகையின் முகப்புப் பக்கத்தில் சுதந்திர உணர்வை ஊட்டத்தக்க நாட்டு நடப்பைக் காட்டக்கூடிய கருத்துப் படங்களை ( Cartoons ) வெளியிட்டார் பாரதியார் .
இம் முறையை முதன்முதலில் பத்திரிகைத் துறையில் கையாண்டு வெற்றி கண்டவர் பாரதியாரே ஆவார் .
இது தவிர வேறு பல புதிய உத்திகளையும் ' இந்தியா ' பத்திரிகையில் புகுத்திப் பத்திரிகைத் துறையில் பெரும் புரட்சி செய்தார் அவர் .
இதனால் ' இந்தியா ' பத்திரிகை மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றது .
இந்தச் சமயத்தில் பாரதியாரை வ.உ.சிதம்பரனார் சந்தித்தார் ; இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆயினர் . ' இந்தியா ' பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிக்கொண்டே ' பால பாரத் ' என்ற ஆங்கில வாரப் பத்திரிகையையும் பாரதியார் வெளியிட்டார் ; ' இந்தியா ' பத்திரிகையின் இணைப்பத்திரிகையாகவே அதனை வெளியிட்டார் .
1.3.4 கடற்கரைக் கூட்டங்களும் தேசிய எழுச்சியும்
பத்திரிகைப் பணியோடு பாரதியார் அமைதி அடைந்து விடவில்லை ; ஓய்வு நேரத்தில் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் அவர் கூட்டம் கூட்டிப் பேசினார் .
' வந்தே மாதரம் ' என்று முழங்கினார் ; நாட்டில் எங்கும் சுதந்திர ஆர்வத்தை ஊட்டினார் .
கோழையான ஜனங்களுக்கு உண்மைகளைக் கூறினார் ; எழுச்சியூட்டும் தேசிய இயக்கப் பாடல்களைப் பாடினார் .
இந்தக் கால கட்டத்தில் மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார் , எஸ்.துரைசாமி ஐயர் , வி.சர்க்கரைச்செட்டியார் , டாக்டர் நஞ்சுண்ட ராவ் , சுரேந்திரநாத் ஆர்யா ஆகியோரின் நட்பும் தொடர்பும் பாரதியாருக்குக் கிடைத்தன .
1907ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் நாள் பஞ்சாப் சிங்கம் லாலா லஜ்பத்ராய் நாடு கடத்தப்பட்டார் .
அதனை ஒட்டிச் சென்னையில் மே மாதம் 17ஆம் நாள் விபின் சந்திர பாலர் பேசினார் .
அவரது ஆவேசமான , உணர்ச்சிமயமான சொற்பொழிவு தேசிய எழுச்சிக்கு உரம் ஊட்டியது .
விபின் சந்திர பாலரின் சென்னை வருகைக்கும் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கும் காரணமாக இருந்தவர் பாரதியார்தான் .
1.3.5 சூரத் காங்கிரஸ் மாநாடும் தீவிரவாத ஆதரவும்
சூரத் நகரில் 1907ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் நாள் 23ஆவது காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது .
தமிழ்நாட்டில் இருந்து மிகுதியான எண்ணிக்கையில் சார்பாளர்களை ( delegates ) அழைத்துச் செல்வதில் தீவிரம் காட்டினார் பாரதியார் .
அம் மாநாட்டின் போது திலகர் , அரவிந்தர் , லஜ்பத்ராய் போன்ற தலைவர்களை அவர் நேரடியாகச் சந்தித்து அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார் .
குறிப்பாக , இக் காலகட்டத்தில் பாரதியார் திலகரின் தீவிரவாதக் கொள்கையை முற்றிலும் ஆதரிக்கத் தொடங்கினார் .
சூரத்தில் இருந்து சென்னை திரும்பிய பாரதியார் , முன்னைக் காட்டிலும் முனைப்பாகப் பல புதிய பணிகளில் ஈடுபட்டார் .
தீவிரவாதிகளுக்கு என்று ' சென்னை ஜனசங்கம் ' என்ற ஓர் அமைப்பைத் தோற்றுவித்தார் ; சென்னையில் வெளிநாட்டுப் பொருள்கள் புறக்கணிப்பு இயக்கத்தையும் முழுமூச்சோடு நடத்திக்காட்டினார் ; திலகரின் கட்டளையை ஏற்று ' சுயராஜ்ய தினத்தைச் ' சென்னையில் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடினார் .
1.4 பாண்டிச்சேரியில் பத்து ஆண்டுகள்
பாண்டிச்சேரி என்று அழைக்கப்படும் புதுச்சேரி அக்காலத்தில் பிரஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது .
1908 முதல் 1918 வரையிலான பத்து ஆண்டுகளைப் பாரதியார் புதுச்சேரியில் கழித்தார் .
சூழ்நிலைகளின் கட்டாயத்தால் புதுச்சேரிக்கு வந்த பாரதியாருக்குப் புதிய சூழலும் புதிய நண்பர்களும் இசைவாகவே அமைந்தனர் .
இலக்கியப் படைப்புகள் , சமுதாயச் சீர்த்திருத்தம் , அரசியல் விடுதலை ஆகிய அனைத்திலும் அரிதான சாதனைகளைச் செய்து காட்டினார் .
1.4.1 பாண்டிச்சேரிக்குச் சென்ற பின்னணி
பாரதியார் ' இந்தியா ' பத்திரிகையில் வாரந்தோறும் நாட்டு நடப்பைக் காட்டும் படங்கள் , பாடல்கள் , கட்டுரைகள் , கருத்துப் படங்கள் ( cartoons ) , தலையங்கங்கள் ( editorial ) ஆகியவற்றை வெளியிட்டார் ; அவற்றின் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டினார் .
சுருங்கக் கூறின் , ' இந்தியா ' பத்திரிகையையே கேடயமாகக் கொண்டு ஆங்கில அரசுடன் மோதினார் பாரதியார் .
இதன் விளைவாக , ' இந்தியா ' பத்திரிகையை அடக்கி ஒடுக்கும் நோக்கோடு அரசு கொடியதோர் அச்சுச் சட்டத்தை ( Press Act ) 1908ஆம் ஆண்டில் பிறப்பித்தது ; ' இந்தியா ' பத்திரிகை வெளியிடுவதற்குக் காரணமானவர்களைக் கைது செய்யும் உத்தரவையும் போட்டது .
எனவே , இந்தச் சூழ்நிலையில் எந்த நேரமும் பாரதியாருக்குப் ' பிடிவாரண்டு ' ( கைது செய்வதற்கான உத்தரவு ) வரலாம் என்பதை அவரது நெருங்கிய நண்பர்கள் உணர்ந்தனர் ; சென்னையில் இருந்து ' பிடிவாரண் ' டில் அகப்பட்டுக் கொள்வதைவிடப் , புதுச்சேரி சென்று , அங்கிருந்து கொண்டே நாட்டுக்குத் தொண்டு புரியலாம் என்று அவர்கள் பாரதியாரிடம் வற்புறுத்திக்கூறினர் ; அவரைப் புதுச்சேரி செல்லவும் இசைய வைத்தனர் .
அதன்படி 1908ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாரதியார் புதுவை சென்றடைந்தார் .
புதுச்சேரியில் சிட்டி குப்புசாமி ஐயங்காரின் வீட்டில் நண்பர் சீனிவாஸாச்சாரியார் தந்த அறிமுகக் கடிதத்தால் தங்க இடம் பெற்றார் பாரதியார் .
ஆனால் , அங்கே அவரால் நீண்ட காலம் தங்கியிருக்க முடியவில்லை .
சென்னை அரசினரின் தூண்டுதலின் பேரில் பிரஞ்சுக் காவல்துறையினர் குப்புசாமி ஐயங்காரை மிரட்டினர் .
எனவே அவர் பாரதியாரை வேறு இடம் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டார் .
இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் பாரதியார் தவித்தபோது எங்கிருந்தோ வந்தார் குவளையூர்க் கிருஷ்ணமாச்சாரியார் .
அவர் இறுதிவரை
பாரதியாருக்குத் துணையாக நின்றார் ; தனிமையிலும் துயரத்திலும் உதவியாக இருந்தார் .
1.4.2 ' இந்தியா ' பத்திரிகையின் மறுபிறவி
1908ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் ' இந்தியா ' பத்திரிகை சென்னையில் இருந்து வெளிவருவது நின்று போய் இருந்தது .
ஆனால் , பாரதியார் புதுச்சேரி வந்த ஒரு மாதத்திற்குள் அச்சகமும் புதுச்சேரிக்கு இரகசியமாக வந்து சேர்ந்தது ; மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரும் புதுவைக்கு வந்து சேர்ந்தார் .
அக்டோபர் 20ஆம் நாள் மீண்டும் ' இந்தியா ' புதுவை மண்ணில் இருந்து புதுப்பொலிவுடன் வீரமுரசு கொட்டத் தொடங்கியது .
ஆம். பாரதியார் பிரஞ்சு எல்லையில் வாழ்ந்து கொண்டே , பிரிட்டிஷ் அரசின் மீது போர் தொடுத்தார் .
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு சுதந்திர இயக்க வளர்ச்சிக்கு முன்னைவிட வலிமையோடும் வேகத்தோடும் விறுவிறுப்போடும் தொண்டாற்றினார் ; அரசின் அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் அஞ்சாமல் , மனம் கலங்காமல் தமது பத்திரிகைப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வந்தார் .
1.4.3 இளைய மகள் சகுந்தலாவின் பிறப்பு
பாரதியார் புதுவைக்கு வரும்போது , அவருடைய துணைவியார் செல்லம்மா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார் .
எனவே , செல்லம்மாவை அவரது சகோதரர் கே.ஆர். அப்பாத்துரை கடையத்திற்கு அழைத்துச் சென்றார் .
பாரதி மிகுந்த ஆர்வத்துடன் மகாகவி காளிதாசனின் ' சாகுந்தலம் ' என்னும் வடமொழி நாடகத்தைப் படித்துவந்த சமயத்தில் கடையத்தில் செல்லம்மாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது .
குழந்தைக்குச் ' சகுந்தலா ' என்று பெயர் வைக்கும்படி கடிதம் எழுதினார் பாரதியார் .
குழந்தை பிறந்த ஆறுமாதத்திற்குள் செல்லம்மாளும் புதுச்சேரி வந்து சேர்ந்தார் .
1.4.4 நண்பர் கூட்டம்
அரவிந்தர் , வ.வே.சுப்பிரமணிய ஐயர் ஆகியோரின் கூட்டுறவால் 1910ஆம் ஆண்டில் பாரதியாரின் அரசியல் வாழ்க்கை , கலைத்துறை வாழ்க்கை ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டன .
இவ்விரு அறிஞர்களின் உறவால் பாரதியார் அமைதியும் , ஆறுதலும் , வேதாந்த , இலக்கிய இன்பமும் பெற்றார் . இதற்கிடையில் , பாரதியாருக்குப் புதுச்சேரியில் நண்பர்கள் நிறையக் கிடைத்தனர் .