14

பண்பாட்டு வரலாறு - 2

பாடம் - 1

காப்பியங்கள் காட்டும் தமிழர் பண்பாடு

1.0 பாட முன்னுரை

கவிதையால் செய்யப்பட்டது காப்பியம். காப்பியத்தைத் தொடர்நிலைச் செய்யுள் என்றும் கூறுவர். தமிழில் ஐந்து பெருங்காப்பியங்கள் உள்ளன. இவற்றைத் தவிரப் பிற காப்பியங்களும், சிறு காப்பியங்களும் உள்ளன. காப்பியங்களுக்குப் பல தகுதிகள் உள்ளன. அவற்றில் இரண்டு தகுதிகள் முக்கியமானவை.

நிகரில்லாத தலைவனைப் பெற்றிருக்க வேண்டும்.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருளைக் கூறுவனவாக இருக்க வேண்டும்.

இனிக் காப்பியங்கள் தோன்றிய காலத்தில் தமிழர் பண்பாடு எந்த நிலையில் இருந்தது என்பதை இந்தப் பாடத்தில் காணலாம்.

1.1 காப்பியங்கள் ஐந்து-ஒரு விளக்கம்

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்பன ஐந்து பெருங்காப்பியங்கள். இவற்றை இயற்றியவர்கள் யார் தெரியுமா?

நூலின் பெயர்     ஆசிரியர்

சிலப்பதிகாரம்     இளங்கோவடிகள்

மணிமேகலை     சீத்தலைச் சாத்தனார்

சீவகசிந்தாமணி     திருத்தக்கதேவர்

வளையாபதி     ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை

குண்டலகேசி     நாதகுத்தனார்

இவற்றில் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்றும் சமண சமயத்தைச் சார்ந்தவை. எஞ்சிய இரண்டும் பௌத்த சமயத்துக்கு உரியவை. இந்தக் காப்பியங்கள் கதைகளின் வழியாக மக்களுக்குச் சில நீதிகளைச் சொல்லத் தோன்றியவை. இவை தோன்றிய காலம் வருமாறு :

சிலப்பதிகாரம்     கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

மணிமேகலை     கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

சீவகசிந்தாமணி     கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு

வளையாபதி     கி.பி. பத்தாம் நூற்றாண்டு

குண்டலகேசி     கி.பி. பத்தாம் நூற்றாண்டு

இந்த ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி ஆகிய மூன்றும் முழுவதுமாகக் கிடைக்கின்றன. வளையாபதியில் 72 செய்யுட்களும், குண்டலகேசியில் 224 செய்யுட்களுமே கிடைக்கின்றன.

1.2 சிலப்பதிகாரம்

அலை கொழிக்கும் பூம்புகார்க் கடலைக் காணுங்கள்! அன்றைய பூம்புகார் கடலால் கொள்ளப்பட்டு விட்டது. அதன் நினைவாகத்தான் கரையில் இன்று நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டுள்ளன. கண்ணகிக்கு எழுப்பப்பட்டுள்ள கோட்டம் காணுங்கள்! ‘ஒரு முலை இழந்த திருமாவுண்ணி’ என்று நற்றிணை இவள் கதையைக் குறிக்கின்றது.

சேரன் செங்குட்டுவன் தன் மனைவி வேண்மாளோடு மலைவளம் காணச் சென்றான். உடன் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரும் சென்றார். அப்போது குன்றக்குறவர்கள் செங்குட்டுவனைக் கண்டு மலையில் தாங்கள் கண்ட காட்சியைக் கூறினர். “காட்டில் வேங்கை மரத்தின் கீழே ஒரு பெண் தன் மார்பகத்தை இழந்த நிலையில் துயரம் மிக வந்து நின்றாள். வானவர்கள் போற்றத் தன் கணவனோடு அவள் வானகம் அடைந்தாள்” என்று குன்றக்குறவர் கூற அங்கிருந்த சீத்தலைச் சாத்தனார் கண்ணகி பற்றிய கதையைச் செங்குட்டுவனிடம் கூறினார். செங்குட்டுவன் மனைவி ‘நம் நாடடைந்த இப்பத்தினிக் கடவுளை வழிபடல் வேண்டும்’ என்றாள். இமயத்திலிருந்து கல்லெடுத்து வந்து கண்ணகிக்கு உருச்சமைத்து வழிபாடு செய்வதெனச் செங்குட்டுவன் முடிவு செய்தான்.

இளங்கோவடிகள்

செங்குட்டுவன் வடநாட்டின்மீது படையெடுத்துச் சென்று, கண்ணகிக்குக் கல் கொண்டு வந்தான். தமிழ் மன்னரின் வீரத்தை இகழ்ந்துரைத்த கனக விசயர் அக்கல்லைச் சுமந்து வந்தனர். வஞ்சி மாநகரில் பத்தினிக் கோட்டம் சமைத்துச் செங்குட்டுவன் விழாச் செய்தான். விழாவிற்கு இளங்கோவடிகளும் சென்றார். அப்போது கண்ணகி தேவந்தி என்னும் பார்ப்பனத் தோழிமீது தோன்றினாள். கண்ணகியின் ஆவி தேவந்தியை ஆட்கொண்டது. அந்த நிலையில் கண்ணகி இளங்கோவின் வரலாற்றைக் கூறினாள். உள்ளம் நெகிழ்ந்த இளங்கோ கண்ணகியின் வரலாற்றைச் சிலப்பதிகாரமாக வடித்தார்.

1.2.1 சிலம்பின் செய்தி சிலப்பதிகாரம்   காண

சிலப்பதிகாரத்தின் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். என்றாலும்  சுருக்கமாகக் கேட்பது நினைவுபடுத்திக் கொள்ள உதவும்.

பதினாறு வயதுடைய கோவலனுக்கும் பன்னிரண்டு வயதுடைய கண்ணகிக்கும் திருமணம் நிகழ்கின்றது. மணமக்கள் தனி வீட்டில் குடும்பம் நடத்துகின்றனர். கோவலன் கலைகளின் காதலன்; ஆடல் பாடலில் மிகவும் விருப்பம் கொண்டவன்; யாழ் இசைப்பதில் வல்லவன். பூம்புகாரில் ஆடல் அரசியாகத் திகழும் அழகுப் பாவை மாதவியின் ஆடல் நிகழ்ச்சியைக் கண்டு கோவலன் மனம் மயங்குகின்றான்.

மாதவியின் வீட்டு வேலைக்காரி கடைத் தெருவில் ‘இந்த மாலையை விலை கொடுத்து வாங்குபவர் மாதவியை அடையலாம்’ என விலை கூறுகின்றாள். கோவலன் அந்த மாலையை வாங்கிக் கொண்டு மாதவியின் வீட்டிற்குச் சென்று அவளுடன் வாழ்கின்றான். கோவலன் செல்வம் கரைகின்றது. மாதவியோடு மனம் வேறுபடுகின்றான். மாதவியைப் பிரிந்து கண்ணகியை வந்தடைகின்றான்.

இழந்த பொருளை மறுபடியும் ஈட்ட நினைக்கிறான். கண்ணகி தன் காற்சிலம்புகளைக் கழற்றிக் கொடுக்கிறாள். கோவலன் இரவில் கண்ணகியை அழைத்துக் கொண்டு இழந்த பொருளை ஈட்டும் கருத்தோடு மதுரை செல்கிறான். அங்கே மாதரி என்ற ஆயர்குலப் பெண்ணிடம் கண்ணகியை அடைக்கலமாக்கிச் சிலம்பை விற்க நகருக்குச் செல்கிறான். அங்கு அரண்மனைப் பொற்கொல்லனிடம் சிலம்பைக் காட்டுகிறான். அப்பொற்கொல்லன் அரசியின் சிலம்பைத் திருடியவன். அக்குற்றத்தை மறைக்க இதுதான் சமயம் என அவன் நினைக்கிறான்.

பொற்கொல்லன் அரண்மனைக்குப் போகிறான். அப்போது அரசவையில் ஆடல் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. ஆடல் மகளிர் கோலத்தில் அரசன் தன்னை மறந்தான் என்று கருதி அரசி மனம் வேறுபட்டு அந்தப்புரம் செல்கிறாள்.

அரசியைத் தேற்றுவதற்கு அரசன் அந்தப்புரம் செல்லும் வழியில் பொற்கொல்லன் அரசனைக் காண்கிறான். சிலம்பைத் திருடிய குற்றத்தைக் கோவலன் மீது சுமத்துகிறான். அரசன் ஆணையால் கோவலன் கொலை செய்யப்படுகிறான்.

இச்செய்தி கேட்ட கண்ணகி குமுறி எழுந்து பாண்டியன் அவைக்குச் சென்று வழக்கு உரைக்கிறாள். முடிவில் உண்மையுணர்ந்த பாண்டியன் அரியணையிலிருந்து கீழே வீழ்ந்து உயிர் விடுகிறான். அரசியும் அவனைத் தொடர்ந்து உயிர் பிரிகிறாள். கண்ணகி மதுரையைத் தீக்கு இரையாக்கச் செய்கிறாள். பின்பு சேர நாடடைந்து குன்றின் மேல் வேங்கை மர நிழலில் நிற்கிறாள். குன்றக் குறவர்களிடம் தான் உற்ற துன்பம் பற்றிக் கூறுகிறாள். பின்பு வானுலகோர் அவள் கணவனுடன் வந்து அவளை அழைத்துச் செல்கின்றனர். கண்ணகியின் இந்த வரலாறு செங்குட்டுவனிடம் கூறப்படுகிறது. செங்குட்டுவன் இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டி வஞ்சி நகரில் கண்ணகிக்குக் கோயில் கட்டுகிறான். இதுதான் சிலம்பின் கதை.

சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று நீதிகள் எவை எனத் தெரியுமா? அவை :

அரசியலில் பிழை செய்தவர்களுக்கு அறமே யமன்.

பெருமை மிக்க பத்தினியைப் பெரியோர் தொழுவார்.

ஊழ்வினை தொடர்ந்து வந்து பற்றியே தீரும்

என்பன ஆகும். இவற்றை உணர்த்தவே சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது.

1.2.2 கலை மணம் கமழும் சிலம்பு சிலப்பதிகாரம் ஓர் இசைக் கருவூலம்; ஆடல் கலைக் களஞ்சியம். அதன் கதையில் ஒரு முக்கிய பாத்திரம் மாதவி; ஆடல், பாடல், அழகு மூன்றிலும் சிறந்தவள். அவளது அரங்கேற்றம் அரங்கேற்று காதை என்ற பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆடலாசிரியன், பாடல் ஆசிரியன், மத்தளம் கொட்டுவோன், யாழ் இசைப்பவன், ஆடும் பெண் ஆகியோர்க்கு உரிய தகுதிகள் எல்லாம் கூறப்பட்டுள்ளது. 1800 ஆண்டுகளுக்கு முன்பே ஓர் ஆடலரங்கத்தின் நீளம், அகலம், உயரம் பற்றிக் கூறும் கலை நூல் இதுவே.

அழகு மிக்க பெண்களுக்கு ஐந்தாவது வயது தொடங்கி ஏழாண்டுகள் ஆடல் பாடல் பயிற்றுவிப்பர். பயின்று முடித்தபின் மன்னர் காண அரங்கேற்றம் நிகழும். இவ்வகையில் பயின்று அரங்கேறிய மாதவி ஆடும் பதினொரு ஆடல்கள் சிலப்பதிகாரத்தில் கூறப்படுகின்றன.

1.கொடுகொட்டி                இறைவன் கை கொட்டி ஆடும் ஆடல்

2.பாண்டரங்கம்               இறைவன் வெண்ணீறு அணிந்து வெளுத்த நிறத்துடன் ஆடும் ஆடல்

3. அல்லியம்                     திருமால் கம்சனை வதைக்க ஆடிய ஆடல்

4. மல்                                  திருமால் மல்லனை வெல்ல ஆடிய மல்லாடல்

5. துடி                                  முருகன் சூரனைக் கொல்லக் கடல் நடுவில் ஆடிய துடிக்கூத்து

6. குடை                              அரக்கரை வெல்ல முருகன் ஆடிய குடைக்கூத்து

7. குடம்                              திருமால் அநிருத்தனை விடுவிக்க ஆடிய குடக்கூத்து

8. பேடு                             காமன் பெண்மைக் கோலத்தோடு ஆடிய பேடியாடல்

9. மரக்கால்                     கொற்றவை மரக்கால் கொண்டு ஆடிய ஆடல்

10. பாவை                    திருமகள் கொல்லிப் பாவையாய் ஆடிய ஆடல்

11. கடையம்                இந்திராணி ஆடிய கடைசிக் கூத்து

என்பன அப்பதினோரு ஆடல்கள். புராணக் கருத்துகள் இவ்வாடல்களில் கலந்து இருந்தன என்பதை ஆடல்வகையின் விளக்கங்கள் காட்டுகின்றன. பாடுவோர் ஒவ்வொரு ஆடலுக்கும் ஏற்பப் பண் கூட்டுவர். பண்கள் நூற்று மூன்று என்பார், உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார். பழந்தமிழகத்தில் ஒவ்வொரு நிலத்துக்கென ஒரு யாழ் வகையும் ஒரு பண்ணுமிருந்தன. இவை காலப்போக்கில் பெருகி வளர்ந்தன. யாழ் என்பது பண்டைய இசைக்கருவி. பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் எனப் பிற்காலத்தே இதனை நால்வகையாக்கினர்..

மகரயாழ்                                       சகோடயாழ்                            பேரியாழ்

1.2.3 சிலம்பு : ஒரு பண்பாட்டுக் கருவூலம் பெண் வழிபாடு :

சிலப்பதிகாரம் தமிழ்ப் பண்பாட்டின் கருவூலம் என்றே கூறலாம். அது காட்டும் பண்பாட்டில் மிகவும் குறிப்பிடத்தக்கது பத்தினி வழிபாடாகும். சங்க காலத்தில் இறந்த வீரனுக்குக் கல்லெடுத்து வழிபடுவதற்குக் கூறப்பட்ட செயல்களெல்லாம் சிலம்பில் கண்ணகிக்குக் கூறப்படுகின்றன.

கல்லைக் காணுதல், அதனைத் தேர்ந்து கொள்ளுதல், நீரில் ஆட்டுதல், கோட்டத்தில் நிலை நிறுத்துதல், வாழ்த்துதல் ஆகியன வீரர்க்கே என்றிருந்தன. இவற்றைக் கண்ணகிக்குரியனவாக ஆக்கிப் பத்தினி வழிபாட்டை அக்காலத்தவர் போற்றியிருக்கின்றனர். பத்தினி மழையைத் தரக் கூடியவள் என்ற கருத்து மேலும் வளர்ச்சி பெற்ற நிலையில் கடவுளாக உயர்த்தப்பட்டதைக் காணுகிறோம்.

பத்தினிக் கோட்பாடு:

இளங்கோவடிகள் சமயம் பற்றிய கருத்துகளைக் கூறியிருப்பினும் பத்தினிக் கோட்பாடு என்னும் பெண்மையின் உயர்நெறியையே இக்காப்பியத்தில் சிறப்புறப் போற்றியுள்ளார். கண்ணகி கணவனைப் பிரிந்து வருந்தும்போது அவளுடைய பார்ப்பனத் தோழி தேவந்தி, “சோமகுண்டம் சூரிய குண்டம் என்னும் பொய்கைகளில் மூழ்கிக் காமவேளைத் தொழுதால் கணவனைப் பெறலாம்” என்கிறாள். கண்ணகி அதற்கு, அது “பெருமை தருவதன்று” என்கிறாள். இதுவே தமிழர் பண்பாட்டு நெறியென அடிகளால் காட்டப் பெறுகின்றது.

அறம் பிறழ உயிர் பிரியும் அரச மாண்பு :

அறநெறி தவறியதை அறியும் அரசன், அது தன் மானத்துக்கு ஊறு என உணர்கிறான்; உடனே தன் உயிர் துறந்து அறத்தை நிலைநிறுத்துகிறான். ‘உயிர் நீப்பர் மானம் வரின்’ என்ற பழந்தமிழரின் பண்பாடு இங்குப் போற்றப்படுகிறது.

தமிழரசரின் உணர்வு ஒருமை :

தமிழரசர்கள் மூவரும் தனித் தனியே தம் பகுதியை ஆண்டிருந்தாலும் அவர்களிடையே உணர்வு ஒருமை இருந்தது. தமிழரசரைப் பழித்தமை கேட்டு நான் அமைதியாக இருக்க இயலாது என ஆர்த்தெழுகிறான் செங்குட்டுவன். தன் உயிரை விட்டு நீதி காத்த நெடுஞ்செழியனுக்காகச் செங்குட்டுவன் பரிவு கொள்கிறான். அரசர்களிடம் இத்தகைய பண்பாடு அக்காலத்தில் நிலவியது.

அறத்தின் வலிமை:

சிலப்பதிகாரம் அறம் வலிமை மிக்கது என்று காட்டும் நூல். கோவலன் ஏன் கொலை செய்யப்பட்டான்? அவன் போன பிறவியில் ஒருவன் கொலை செய்யப்படக் காரணமாக இருந்தான். அதனால் இந்தப் பிறவியில் கோவலன் கொலை செய்யப்பட்டான். கோவலனை ஆராயாமல் கொன்றதனால் அரசன் உயிரைவிட நேர்ந்தது. அதிகாரம் மிக்க அரசனையே வீழும்படியாகச் செய்தது எது? அதுதான் அறம். அறத்திலிருந்து தவறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்கமுடியாது என்று காட்டுகிறது சிலப்பதிகாரம்.

அறத்தின் சிறப்பைச் சிலப்பதிகாரம் உரைப்பதை இன்னொரு நிகழ்ச்சியாலும் அறியுங்கள்! தேவன் ஒருவன், அழகும் ஒளியும் உடையவன்; ஆயினும் கருங்குரங்கின் கையை உடையவனாக இருந்தான். இவ்வளவு அழகுடைய இவனுக்குக் குரங்குக் கை ஏன் வந்தது என்று பலரும் கேட்டனர். ஒருவன் அதற்கு விடை கூறினான். சாயலன் என்ற வணிகனுடைய மனைவி துறவிகள் பலருக்கு நாள்தோறும் உணவிடும் வழக்கம் மேற்கொண்டு இருந்தாள். அவ்வாறு உணவிடும் போது ஒரு கருங்குரங்குக்கும் உணவிட்டுக் காப்பாற்றினாள். அக்குரங்கு இறந்த பின்னர் அதன் நினைவாகத் தானம் செய்தாள். அதனால் அக்குரங்கு காசி அரசனுக்கு மகனாகப் பிறந்தது. அவ்வாறு தோன்றிய இளவரசன் பின் பல நல்ல அறங்களைச் செய்து தேவகுமாரன் ஆயினான். தனக்காக ஒருத்தி தானம் செய்ததால் குரங்குப் பிறவி நீங்கிற்று என்பதைக் காட்ட இத்தேவகுமாரன் குரங்குக் கையைக் கொண்டிருக்கிறான் என்று ஒரு கதை சொல்லப்பட்டுள்ளது. அறத்தின் வலிமையை இப்படிப் பல நிகழ்ச்சிகளால் எடுத்துரைக்கின்றது சிலப்பதிகாரம்.

ஊழ்வினையில் நம்பிக்கை :

ஒரு பிறவியில் செய்த நன்மைகளும் தீமைகளும் அடுத்த பிறவியில் செய்தவனை வந்து அடைந்தே தீரும் என்ற கருத்து ‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ என்று சிலப்பதிகாரத்தால் வற்புறுத்தப்படுகிறது. சிலப்பதிகாரக் கதைப்படி முற்பிறவியில் கோவலன் செய்த தீவினையால் இப்பிறவியில் வெட்டுப்பட நேர்ந்தது என அறிகிறோம். இது பாண்டியனின் தவறு அன்று; ஊழ்வினையின் முடிவு என்பது சிலம்பு கூறும் கருத்தாகும். தெய்வமாகிய கண்ணகியும் பாண்டியன் தீதற்றவன் எனக் கூறக் கேட்கிறான் செங்குட்டுவன். நெடுங்காலமாகவே இந்தியச் சமயங்கள் பலவும் ஊழ்வினை என்பதை அழுத்தமாகப் பரப்பி வந்திருக்கின்றன. கோவலன் பல துன்பங்கள் அடைந்து வருந்துவதைப் பார்த்த மாடலன் என்பான்.

இம்மைச் செய்தன யானறி

நல்வினை

உம்மைப் பயன்கொல்

(சிலப், மர்ரே பதிப்பு: 15-91)

என்று கூறுகிறான்.

இதன் பொருள் என்ன எனத் தெரியுமா? இந்தப் பிறவியில் நீ செய்ததெல்லாம் யானறிந்த வரையில் நல்ல வினைகளே. ஆனால் இப்போது நீ வருந்துவதற்கு முற்பிறவிச் செயல்களே காரணம் போலும் என்பதாகும். (இம்மை – இப்பிறவி; உம்மை – முன்பிறவி).

1.3 மணிமேகலை

மாதவியின் மகள் மணிமேகலை. அழகும் இளமையும் உடைய மணிமேகலை இந்திர விழாவில் ஆடவருவாள் என்று பூம்புகார் மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். ஆனால் மாதவியோ தானும் துறவு பூண்டு தன் மகள் மணிமேகலையையும் துறவு நெறிப்படுத்துகிறாள். மணிமேகலையைக் காணும் உதயகுமரன் என்ற சோழ இளவரசன் அவள் அழகில் மயங்கிப் பின்தொடர்கிறான். மணிமேகலா தெய்வம் மணிமேகலையை உதயகுமரனிடமிருந்து காப்பாற்றுவதற்காக மணிபல்லவம் என்ற தீவிற்குத் தூக்கிச் சென்று விடுகிறது.

அமுத சுரபி

அங்கு மணிமேகலை ‘அமுதசுரபி’ என்ற பாத்திரத்தைப் பெறுகிறாள். அள்ள அள்ளக் குறையாமல் சோறு வந்து கொண்டே இருக்கும் அதிசயமான பாத்திரம் அது. மணிமேகலை அந்தப் பாத்திரத்துடன் வந்து பூம்புகாரில் அறம் செய்கிறாள். உதயகுமரன் மணிமேகலையைத் தொடர்ந்து வருகிறான். அவனிடமிருந்து தப்ப மணிமேகலை காயசண்டிகை என்ற கந்தருவப் பெண் வடிவம் கொள்கிறாள். இந்நிலையில் காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் என்பான் தன் மனைவியைத் தேடி வருகிறான். அவன் உதயகுமரன் மேல் சந்தேகம் கொண்டு அவனை வாளால் வெட்டி விடுகின்றான். உதயகுமரன் இறந்தவுடன் அவன் தாய் மணிமேகலைக்குக் கொடுமை பல செய்கிறாள். மணிமேகலை அவளைத் திருத்தி அறநெறியைப் பின்பற்றச் செய்கிறாள். மணிமேகலை நாடெங்கும் பௌத்த தருமத்தைப் பரப்புகிறாள். இதுவே மணிமேகலை நூல் கூறும் கதை. மணிமேகலை வலியுறுத்திக் கூறும் தலைமையான அறம் எது எனத் தெரியுமா?

மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

(மணி, மர்ரே பதிப்பு, 11: 95)

என்பதுதான். இதன் பொருள் என்ன? உலகில் வாழ்கின்றவர்களுக்கெல்லாம் உணவு கொடுத்தவர்கள் உயிர் கொடுத்தோராவர் என்பதாகும்.

1.3.1 மணிமேகலை காட்டும் அறம் மணிமேகலை பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்கத்துடன் எழுதப் பெற்ற நூல். சங்க காலத்தில் ஆளுமை பெறாத சமய உணர்வு படிப்படியாக வளர்ந்திருப்பதை மணிமேகலை காட்டுகிறது. சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் சமணத் துறவியாகக் காட்சி தருகிறார்; அவரும்கூடக் கண்ணகியின் ஆற்றலுக்குக் குறைந்தவராகவே காட்டப் பெறுகிறார். மணிமேகலையின் கதைத் தலைவியே பௌத்த சமயத்தைப் பரப்புகின்றாள். தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சமயம் மனித வாழ்வில் பேரிடம் பெற்றதை மணிமேகலை வெளிப்படுத்துகிறது.

மணிமேகலை பத்தினிப் பெண்களை மூவகைப்படுத்திக் கூறுகின்றது.

(அ) கணவன் இறந்தவுடன் எரி மூழ்கி இறப்பவர்

(ஆ) தனியே எரி வளர்த்து இறப்பவர்

(இ) கணவனை நினைந்து கைம்மை நோன்பேற்பவர்

என மணிமேகலை இவர்களை வகைப்படுத்துகின்றது.

மணிமேகலை மனிதர் உடம்பை இழிவானதாகக் கருதி உரைக்கின்றது. உடம்பு புலால் நிறைந்தது; மூத்துத் தளர்வது; பிணி கூடுவது; குற்றம் புரிவது; கவலையின் கொள்கலம் என்று கூறி இதனைப் புறக்கணிப்பதே சரியானது என்கின்றது.

1.3.2 மணிமேகலை கூறும் பண்பாட்டு நெறிகள் மணிமேகலை ஆரியர்தம் பண்பாட்டையும், தமிழர் பண்பாட்டையும் ஒப்பிடும் வகையில் உரைக்கின்றது. ஆபுத்திரன் என்பவன் வேள்வியில் பலி கொடுப்பதற்கெனப் பார்ப்பனர் கட்டி வைத்திருந்த பசுவை அவிழ்த்து விடுகிறான். அதைக் கண்ட பார்ப்பனர்கள் அவன் பிறவி இழிந்தது என்று தூற்றுகின்றனர். அவன் அமைதியாக “உங்கள் முனிவர்கள், பசு வயிற்றிலும் மான் வயிற்றிலும் நரி வயிற்றிலும் பிறந்தவர்களாயிற்றே” என்று மறுமொழி கூறுகிறான். ஆபுத்திரன் ஊரை விட்டு விரட்டப்படுகிறான். ஆபுத்திரனுக்குத் தெய்வம் அமுதசுரபியை அளிக்கிறது. அமுதசுரபி கொண்டு ஆபுத்திரன் அறம் செய்கிறான். பிறர் பசி தீர்க்க அதனைப் பயன்படுத்த முடியாத நிலையில் கோமுகி என்ற பொய்கையிலே அதனை விட்டெறிந்து விட்டு உண்ணா நோன்பிருந்து உயிர் விடுகிறான். அப்பாத்திரமே பிறகு மணிமேகலையின் கையை அடைகிறது. மணிமேகலை சிறைச்சாலையை அறச்சாலை ஆக்குகின்றாள்.

பெண்களின் கற்பு, தவசிகளின் நோன்பு ஆகியவற்றை அரசன் பாதுகாக்காவிட்டால் அவை இடர்ப்படும் என இந்நூல் கூறுகின்றது. எது பெரிய அறம் என்ற வினாவிற்கு மணிமேகலை கூறுவது கேளுங்கள்!

அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்

மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் இல்லது கண்டதில்

(மணி, மர்ரே பதிப்பு – 25:228)

என மொழிகின்றது. வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் இவை என அறிந்து அவற்றை எல்லார்க்கும் வழங்குவதே பண்பாடு எனத் தெரிவித்துள்ளது அக்காலச் சமூகம்.

1.3.3 மணிமேகலை காட்டும் பல சமயங்கள் மணிமேகலையின் காலத்தில் பல சமயங்களும் சமயப் பிரிவுகளும் தோன்றிவிட்டன. சமய நெறியடிப்படையிலான பண்பாடு அக்காலத்திலிருந்தே தொடங்கி விட்டது. வைதிகவாதி, சைவவாதி, பிரமவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி, பௌத்தவாதி எனப் பல நெறியினர் தமக்குள் போரிட்டுக் கொண்டனர் என அறியலாம். சமய அடிப்படையில் நல்வினை, தீவினை ஆகிய இருவினை பற்றிய நம்பிக்கை சமுதாயத்தில் அழுத்தமாக ஏற்பட்டது. அறத்தின் பயனாகவே எல்லாச் சிறப்பும் வரும் என்று சாத்தனார்

கூறுகின்றார். இந்தியச் சமயங்கள் பலவற்றினும் நல்வினை தீவினை பற்றிய கருத்துகள் வளரத் தொடங்கிவிட்டன. உடம்பு, செல்வம், இளமை, இன்பம் ஆகியன நிலையாக இருக்கமாட்டா என்றும், செய்யும் வினையின் பயனை நுகர்ந்தே ஆக வேண்டுமென்றும் மணிமேகலை மொழிகின்றது. மறுபிறப்பைப் பற்றிய கருத்தும் வலிமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பௌத்த சமயம் வைதிக சமயத்துக்கு மாறானது என்றும், தமிழகத்தில் வைதிகம், பௌத்தம் ஆகிய இரு நெறிகளும் பரவின என்றும் மணிமேகலைவழி அறியலாம். சமயச் சார்பற்ற தமிழ்ப் பண்பாட்டில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் சமயம் தன் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. வசிட்டர், அகத்தியர் ஆகியோரின் பிறப்புப் பற்றிய கதைகள், உதயணன் கதை, அகலிகை கதை, தீக்கடவுளின் மனைவி கதை, பரசுராமன் அசுரர்களை அடக்கிய கதை, வடநாட்டில் பிறந்து இறந்தவர்கள் அடுத்த பிறவியில் தென்னாட்டில் பிறந்த கதை, திருமால் உலகு அளந்த கதை, கண்ணன், பலராமன் நப்பின்னையோடு நடனமாடிய கதை, திருமாலின் வயிற்றிலிருந்து பிரமன் தோன்றிய கதை ஆகியன மணிமேகலையில் இடம்பெறுகின்றன. பௌத்த சமயம் இக்கதைகளையெல்லாம் தமிழகத்தில் சேர்த்தது.

1.4 சிந்தாமணி

சிந்தாமணி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியம். முழுவதும் விருத்தம் என்ற பாட்டு இனத்தால் எழுதப் பெற்றது. இந்நூல் 13 இலம்பகங்களையும் 3145 செய்யுட்களையும் கொண்டது. இலம்பகம் என்றால் உட்பிரிவு என்பது பொருள். இந்நூலில் வரும் கதைத் தலைவன் சீவகன் எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறான். எனவே இது மணநூல் எனப் பெயர் பெற்றது. என்றாலும் மக்களின் உடம்பும், உடம்பால் அடையப் பெறும் இன்பமும், தேடும் பொருளும், இளமையும், உலகமும் நிலையாக இல்லாமல் அழிவன என்றும் அதனால் முத்தி பெறும் முயற்சியை நாடுங்கள் என்றும் இந்நூல் ஆசிரியர் கூறுகிறார்.

1.4.1 சிந்தாமணி கூறும் கதை சச்சந்தன் என்ற அரசன் விசயை என்ற தன் மனைவியின் அழகில் மயங்கி ஆட்சி செய்வதை மறந்து அந்தப்புரத்திலேயே இருக்கிறான். கட்டியங்காரன் என்ற தீய அமைச்சன் சச்சந்தனைக் கொன்றுவிட்டு நாட்டைக் கைப்பற்றிக் கொள்கிறான். விசயை ஒரு மயிற் பொறியில் ஏறித் தப்புகிறாள்; சுடுகாட்டில் ஒரு மகனைப் பெற்றெடுக்கிறாள். அம்மகனைக் கந்துக்கடன் என்ற வணிகன் எடுத்துச் சென்று சீவகன் என்று பெயரிட்டு வளர்க்கிறான். சீவகன் இளைஞனாய் வளர்ந்து அரிய செயல்களால் பெண்களின் உள்ளத்தைக் கவர்ந்து எட்டுப் பேரைத் திருமணம் செய்து கொள்கிறான்; கட்டியங்காரனை வென்று அரசைக் கைப்பற்றுகிறான். பின்பு உலகில் அனைத்தும் அழியக் கூடியன என்பதை உணர்ந்து துறவு கொள்கிறான். இதுவே சிந்தாமணி கூறும் கதையாகும்.

1.4.2 சிந்தாமணி காட்டும் அறங்கள் புலால் உண்ணுதல் தீயது. அச்செயல் ஒருவரை நரகத்திற்கு அனுப்பும். கள் அருந்துதல் தவறானது. தீவினைகள் செய்யாமல் ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல் கடமையாகும். வாழ்க்கை என்பது எப்படிப்பட்டது தெரியுமா?

பேதைமை என்னும் வித்திற்

பிறந்துபின் வினைகள் என்னும்

வேதனை மரங்கள் நாறி

வேட்கைவேர் வீழ்த்து முற்றிக்

காதலும் களிப்பும் என்னும்

கவடுவிட்டு அவலம் பூத்து

மாதுயர் இடும்பை காய்த்து

மரணமே கனிந்து நிற்கும்

(சீவக, மர்ரே பதிப்பு: 1389)

என்கிறார். அறியாமை (பேதைமை) என்ற விதை வேதனை என்னும் மரத்தை உண்டாக்கியது. ஆசைகள் (வேட்கை) என்ற வேர்கள் ஓடின. காதல், மகிழ்ச்சி என்ற கிளைகளை (கவடு) அம்மரம் உண்டாக்கியது. துன்பம் (அவலம்) என்ற பூப் பூத்தது. துயரம் (இடும்பை) என்ற காய் காய்த்தது. மரணம் என்ற பழத்தைத் தந்தது என்பது இப்பாட்டுக் கூறும் செய்தியாகும். இதனால் நல்வினைகளைச் செய்ய வேண்டும் என்பதும், ஆசைகளை நீக்க வேண்டும் என்பதும் அறியப்படுகின்றன. எளியவர்க்கு உதவுதல், பெண்களின் கற்பைப் பாதுகாத்தல், காமம் என்ற வலையில் சிக்காமல் இருத்தல், நண்பர்களுக்குத் தக்க சமயத்தில் உதவுதல், செய்ந்நன்றியைப் போற்றுதல், பிறர் செய்யும் தீமையைப் பொறுத்துக் கொள்ளுதல் போன்ற அறங்கள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன.

1.4.3 சிந்தாமணியும் சமண நெறிகளும் சிந்தாமணி ஒரு சமண சமய நூல். வினைகளின் விளைவாகவே பிறவிகள் உண்டாகின்றன என்ற சமண சமயக் கருத்தை இந்நூலிற் காணலாம்.

சாதலும் பிறத்தல் தானும்

தம்வினைப் பயத்தின் ஆகும்

(சீவக, மர்ரே பதிப்பு: 269)

என்று கூறும் இந்நூல். சாவுக்கு வருந்துதலும், பிறத்தலுக்கு மகிழ்தலும் அறிவில்லாச் செயல்களாகும். நம் பிறவிகள் ஆற்றுமணல் போல் எண்ண முடியாதவை. நல்ல காட்சி, நல்ல ஞானம், நல்ல ஒழுக்கம் போன்ற உயர்ந்த நெறிகளை ஒருவர் கடைப்பிடித்தால் பிறவித் துன்பம் வந்து சேராது. ஒவ்வொரு மனிதனும் ஒரு போர் செய்ய வேண்டும். எப்படிப்பட்ட போர்?

மெய்ஞ் ஞானம் எனும் தேர்

உயிரைப் பாதுகாக்கும் உணர்வு எனும் குதிரை

சன்மார்க்க அறிவு எனும் யானை

கருணை எனும் படைவீரர்

நல்லொழுக்கம் எனும் உடம்புக்கு இடும் கவசம்

மெய்ப் பொருள்கள் எனும் வாளும் கேடயமும்

என்று கொண்டு போர் செய்தால் இருவினை (நல்வினை, தீவினை)யால் வரும் தீமை நீங்கும். சமண சமயத்திற்கு உரிய இத்தகைய நெறிகளை இந்நூல் கூறுகின்றது.

1.5 வளையாபதியும் குண்டலகேசியும்

வளையாபதி ஒரு சமண நூல். குண்டலகேசி ஒரு பௌத்த நூல். இரு சமயங்களும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக் கொண்டு இந்நூல்களைப் படைத்தன. “மனமே! நல்ல நெறியில் நின்றால் வீடுபேறு பெறலாம்” என்று வளையாபதி கூறுகின்றது. “குழந்தைப் பருவம் செத்துப் போகின்றது. இளமைப் பருவம் இறந்து போகின்றது. காளைப்பருவம் நீங்கிப் போகின்றது; மூப்பு வருகின்றது. எனவே ஒவ்வொரு நாளும் நாம் செத்துக் கொண்டிருக்கின்றோம். நாம் இந்த நிலை நினைத்து அழ வேண்டாமா? என்று குண்டலகேசி கேட்கின்றது. வளையாபதியும் குண்டலகேசியும் நிலையாமையினை எடுத்துரைக்கும் நூல்களாகும்.

1.5.1 வளையாபதி கதை நவகோடி நாராயணன் என்பவன் ஒரு வைர வாணிகன். அவன் தன் குலத்தில் ஒரு பெண்ணையும் வேறு குலத்தில் ஒரு பெண்ணையும் மணந்து வாழ்கிறான். வணிகர்கள் இவன் வேறு குலத்துப் பெண்ணை மணந்ததற்காக இவனைத் தங்கள் குலத்தை விட்டு ஒதுக்குகின்றனர். இதனால் நாராயணன் தன் வேறு குல மனைவியைத் தள்ளி வைத்து விடுகிறான். அவள் காளியை வேண்டித் தனக்கு வாழ்வு தருமாறு கேட்டுக் கொள்கிறாள். அப்பெண்ணுக்கு ஒரு மகன் பிறந்து வளர்ந்து இளைஞன் ஆகிறான். இவன் தன் தந்தையைப் பற்றி அறிந்து புகார் நகரம் சென்று வணிகர்கள் கூடிய அவையில் தன் தந்தை நாராயணனே என்று கூறுகிறான். காளிதேவியும் சாட்சி கூறுகிறாள். குடும்பம் ஒன்றுபடுகிறது.

இதுவே வளையாபதியின் கதையென்பர். இக்கதை வளையாபதிக் காப்பியத்திற்கு உரியதில்லை என்பாரும் உள்ளனர்.

1.5.2 குண்டலகேசி கதை குண்டலகேசி-காளன் சந்திப்பு

பத்திரை என்பவள் ஒரு வணிகர் குலப் பெண். இவள் ஒருநாள் தன் மாளிகையின் மேல் தளத்தில் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். பந்து தெருவிற்குச் சென்று விடுகிறது. அதை எடுக்கப்போகும் போது தெருவில் அரண்மனைச் சேவகர்கள் காளன் என்ற குற்றவாளியைக் கொலைத் தண்டனை நிறைவேற்றுவதற்காக இழுத்துச் செல்கின்றனர். காளன் தீயவன்; என்றாலும் அழகன். காளனைக் கண்டவுடன் பத்திரை அவனிடம் காதல் கொள்கிறாள். பத்திரையின் தந்தை அரசனிடம் கூறிக் காளனை மீட்டு அவனுக்குப் பத்திரையை மணம் செய்து கொடுக்கிறான். பத்திரையும் காளனும் இனிது வாழ்ந்து வரும்போது ஒருநாள் பத்திரை தன் கணவனை விளையாட்டாக “நீ கள்வன் அல்லவா?” என்று கூறுகிறாள். இதனால் கோபம் கொண்ட காளன் கோபத்தை மறைத்துக் கொண்டு அவளை மலைக்கு அழைத்துப் போகிறான். மலை உச்சிக்குச் சென்றவுடன் அவளைக் கொல்லப் போவதாகச் சொல்கிறான். உடனே அவள் இறக்குமுன் ‘உங்களை வலம் வந்து வணங்கிப் பின் இறக்கிறேன்’ என்று கூறி வலம் வருவது போல் நடித்து அவனை மலை உச்சியிலிருந்து தள்ளிக் கொன்று விடுகின்றாள்.

பத்திரை பல சமய நீதிகளையும் கற்றுத் துறவு பூண்டு பௌத்த சமயம் சேர்கிறாள். மழிக்கப்பட்ட அவள் கூந்தல் குண்டலம் போலச் சுருண்டு வளர்ந்தது. எனவே அவள் குண்டலகேசி எனப்பட்டாள். இதுவே குண்டலகேசி கூறும் கதை.

1.5.3 இரு நூல்களும் உணர்த்தும் பண்பாடு சமயங்கள் தமிழர் வாழ்வில் மதிப்புப் பெற்ற நிலையை இவ்விரண்டு நூல்களும் காட்டுகின்றன. புண்ணியம் பாவம் பற்றிய கருத்துகள் தமிழர்களிடம் ஆழமாக வேர் கொண்டன. தருக்க முறையால். அதாவது வாதப் பிரதி வாதங்களின் வழியாக, கருத்துகளை நிறுவும் நிலை வளர்ந்தது. மனித வாழ்க்கை நிலையற்றது என்ற கருத்து வலிமை கொண்டது. அரசர் குலத்தையே கதைக்குக் கருப் பொருளாய்க் கொண்டிருந்த நிலை மாறியது. பெண்களும் துறவேற்பது என்ற நெறி வளர்ந்தது. இவை இவ்விருநூல்களும் காட்டும் பண்பாட்டுச் செய்திகளாகும்.

1.6 தொகுப்புரை

தமிழர் பண்பாட்டு வரலாற்றில் காப்பியங்கள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. பெண்களின் ஏற்றத்தைக் காப்பியங்கள் பேசுகின்றன. சமயக் கருத்துகளைக் காப்பியங்கள் அடித்தளங்களாகக் கொண்டுள்ளன. நீதிகளைக் கதைகள் வழியாகக் கற்பிக்கும் நெறியைக் காப்பியங்கள் வளர்த்தன.  இவற்றை இந்தப் பாடம் விளக்கியிருக்கிறது.

பாடம் - 2

கலைகள் வளர்த்த பண்பாடு

2.0 பாட முன்னுரை

கலை என்பது பண்பாட்டின் வளர்ச்சியில் தோன்றுவது. கலையின் அடிப்படை, அழகு உணர்வே. எனவே கலைகளை அழகுக்கலைகள் என்று கூறினர். மனிதன் காட்டில் வாழ்ந்த காலத்திலேயே அவனிடம் பண்பாடு முளைவிடத் தொடங்கிவிட்டது. அதனால்தான் இலைதழைகளால் உடை உடுத்தக் கற்றுக் கொண்டான்; குகைகளில் ஓவியங்கள் வரையத் தொடங்கினான்; கற்களால் செய்யும் கருவிகளில்கூட அழகு உணர்வு புலப்படத் தொழில் திறம் காட்டினான். மண்ணால் செய்த பாண்டங்களிலும் அழகிய உருவம் படைக்கச் செய்தான். பண்டைக்காலத்திலிருந்தே கலைகள் படிப்படியாக வளர்ந்தன; கூடவே அவை மனிதனின் பண்பாட்டையும் வளர்த்தன.

2.1 வாழும் கலைகள்

கலைகளை நம் முன்னோர் அறுபத்து நான்கு என எண்ணினர். இஃது ஒரு கற்பனையே! தமிழ் நூல்களில் முதன்முதலில் சிலப்பதிகாரமே கலைகளை அறுபத்து நான்கு என்று குறிப்பிடுகிறது. சில கலைகள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. நிலைபெற்ற கலைகளாக அறிஞர் சிலவற்றைக் குறிக்கின்றனர்.

இசைக்கலை              ஆடற்கலை            ஓவியக்கலை            சிற்பக்கலை           கட்டடக்கலை

இசைக்கலை, ஆடற்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டடக்கலை, ஆகிய ஐந்து கலைகள் உலகம் எங்கும் வாழும் கலைகளாகும்.

பாடலும் இசையும் மனிதரை மட்டுமன்றி, பறவை விலங்கு, மரம்செடி கொடிகளையும் மயங்க வைப்பதாகத் தமிழ் இலக்கியத்திலும், புராணக் கதைகளிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.

நடராசர்

இதோ! காலைத்தூக்கி நின்று ஆடும் நடராசப் பெருமான் தோற்றத்தைப் பாருங்கள். உலகம் எல்லாம் இந்தக் காட்சியில் ஒன்றி விடுகிறதே! ஏன்? அதுதான் ஆடற்கலை.

தஞ்சைக் கோபுரத்தின் சுவரோவியம் பார்த்திருக்கிறீர்களா? சுந்தரரின் அழகான ஒவியத்தில் மயங்காத மாந்தர் இல்லை. இதோ! மாமல்லபுரச் சிற்பம் பாருங்கள். குகைக் கோயில்களைக் காணுங்கள். சிற்ப, கட்டடக்கலை மாட்சிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்!

மாமல்லபுரச் சிற்பம்                                   குகைக் கோயில்

2.1.1 கலையும் வாழ்வும் கலையைத் தெய்வமாகப் போற்றினர் கலைஞர்கள். தமிழ்நாட்டில் இடைக்காலத்தில் கலைகளின் தெய்வம் நாமகள் என்ற கருத்துத் தோன்றியது. கலைத் தெய்வமாகிய கலைவாணி தங்களுக்கு எதையும் செய்வாள் எனக் கலைஞர்கள் நம்பினர். தமிழிலும் ஒரு கதை உண்டு. இதனை உண்மை நிகழ்ச்சியாகக் கொள்ள வேண்டாம்.

கம்பருக்கு அம்பிகாபதி என்று ஒரு மகன் இருந்தான். அவன் சோழ மன்னனின் மகள் அமராவதியைக் காதலித்தான். சோழ அரசனுக்கு இந்தச் செய்தி தெரிந்தவுடன் அம்பிகாபதியின் தலையை வெட்டிக் கொன்றுவிட ஆணையிட்டான். மன்னனிடம் உயிர்ப்பிச்சை வேண்டினார் கம்பர். நூறு பாடல்கள் காதல் கலக்காமல் பாடினால் உயிர்ப்பிச்சை தருவதாக மன்னன் கூறினான்.

அம்பிகாபதி பாடத் தொடங்கினான். கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்து எண்ணிவிட்டதால் 99 பாடல்கள் பாடியவுடன் நூறு பாடல்கள் பாடிவிட்டதாகக் கருதிக் கொண்டு நூறாவது பாடலாக அமராவதியை வருணித்துக் காதல் சுவை ததும்பப் பாடிவிட்டான். என்ன பாடினான் அவன்?

“சற்றே சரிந்த குழலே அசைய ஒருத்தி வருகிறாள்; முத்துவடம்

அசையும்

மார்போடு அவள் பொன்னாலாகிய தேர்போல் அசைந்து வருகிறாள்”

என்று பாடினான். விடுவானா அரசன்? வெகுண்டான்! ஆனால் கம்பர் தொடர்ந்து பாடினார்.

கொட்டிக்கிழங்கு விற்றுவரும் கிழவி ஒருத்தி மேலே சொன்னவாறு குழல் சரியவும், முத்துவடம் அசையவும் தெருவில் வருகிறாள் என்று பாடினார். அரசன் ஆளை அனுப்பித் தெருவில் பார்த்தால் உண்மையிலேயே அப்படி ஒரு கிழவி கிழங்கு விற்றுக்கொண்டு வருகிறாள். யார் அவள்? கலைமகள்தான் கம்பரைக் காப்பாற்ற அப்படி வந்தாளாம்!

கதை இருக்கட்டும் நண்பர்களே! காவியம் படைக்கும் கலைஞன் நினைத்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம் என்பதைத்தான் இந்தக் கதை அறிவுறுத்துகின்றது என்பதை மறுக்க முடியுமா?

2.1.2 கலைஞர்கள் உள்ளம் கலையில் தோய்ந்த உள்ளம் பொருளுக்காக அலையாது. தன் கலையைப் பொருளுக்கு விற்கவும் உடன்படாது. தன் கலையில் மனதைப் பறிகொடுத்து நிற்கும் ஓர் ஏழைக்குக் கட்டுப்பட்டு நிற்பான் கலைஞன்; ஆனால், தன் கலையை மதிக்காத செல்வர்களைப் பொருட்படுத்தமாட்டான்.

புலவரின்பரிசு – அரசருக்கு!

பழங்காலத்தில் புலவர் ஒருவர் அரசனைப் பாடிப் பரிசுபெற எண்ணினார். ஆனால் அரசன் அவரைச் சந்திக்க உடன்படவில்லை. புலவர் கோபமுற்று வேறு ஒரு வள்ளலை நாடிச் சென்றார். அங்கு அவ்வள்ளலைப் பாடி யானைகளைப் பரிசாகப் பெற்றுக் கொண்டு வந்தார். வரும் வழியில் தன்னைக் காண மறுத்த அரசனின் வாயிலில் தான் பரிசாகப் பெற்றுவந்த யானைகளைக் கட்டிப்போட்டு ‘இவற்றை என் பரிசாக ஏற்றுக்கொள்’ என்று கூறிச் சென்றார். இவ்வாறு திறம் மிக்க கலைஞரின் உள்ளம் பண்பட்டு விளங்கியதைத் தமிழக வரலாற்றிலும், இலக்கியத்திலும் காண முடிகிறது.

தன் தகுதியை மதிப்பவரை மதித்தல்.

உணர்ச்சி ஒத்த நிலையில் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லாதவர் ஆயினும் அவரிடம் நீங்காமல் பழகுதல்.

தன் கலைத்திறத்தை விரும்பிப் பாராட்டுவோரிடம் நேயம் கொள்ளுதல்.

வறுமையை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளுதல்.

தன் உரிமைகளை எந்த நிலையிலும் இழக்க உடன்படாதிருத்தல்.

ஆகியன கலைஞர்களின் உளப் பண்புகளாக இருந்தன

தமிழகக் கலைகள்

தமிழகம் கலைகளின் இருப்பிடம். ஒவ்வொரு கலைக்கும் இதோ ஒரு உதாரணம் கூறுகிறேன், கேளுங்கள்!

டி.என்.இராஜரத்தினம்

“காற்றினிலே வரும் கீதம்…” இந்தத் தேனிசைக் குரல் யாருடையது தெரியுமா? இசைப் பேரரசியாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரல் இது! இதோ, இந்தத் தோடிப்பண் ஆலாபனை…. இது நாதசுரச் சக்கரவர்த்தி டி.என்.இராஜரத்தினம் பிள்ளையுடையது.

இதோ, இந்தத் தட்சிணாமூர்த்திச் சிற்பத்தைப் பாருங்கள்! இதோ திருமலை நாயக்கர் மகாலைக் காணுங்கள்! 216 அடி உயரத் தஞ்சைக் கோபுரத்தைப் பாருங்கள்!

தட்சிணா                    திருமலைமகால்                   தஞ்சைக்                      சித்தன்ன

மூர்த்தி                      நாயக்கர்                              கோபுரம்                    வாசல் ஓவியம்

சித்தன்னவாசல் ஓவியங்களைப் பாருங்கள்! இவையெல்லாம் தமிழகத்தின் அரிய கருவூலங்கள் ஆகும்.

2.2 இசைக்கலை

இசையால் கட்டுப்பட்ட யானை

கொல்லையில் கம்புக் கதிர்கள் நன்கு காய்த்திருந்தன. யானை அவற்றைத் தின்பதற்கு வந்து விட்டது. யானையின் வாய்க்குள் கதிர் புகுவதைவிடக் கால்பட்டு அழிவதல்லவா அதிகமாகி விடும்? எனவே அந்தக் கொல்லையைக் காக்கப் பரண்போட்டு அமர்ந்திருந்த பெண் குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள்; பாடிக்கொண்டே இருந்தாள். விடியும்வரை பாடிக்கொண்டே இருந்தாள். யானை தலையை அசைத்துக்கொண்டே கேட்டுக்கொண்டு இருந்தது. பொழுது புலர்ந்துவிட்டது. மக்கள் சந்தடி தொடங்கிவிட்டது. யானை கதிர்களை உண்ணாமல் போய்விட்டது. இவ்வாறு விலங்குகள்கூட இசைக்குக் கட்டுப்படும் என்றால் மனிதர்கள் கட்டுப்பட மாட்டார்களா என்ன?

2.2.1 பாட்டும் பண்ணும் பாட்டு என்பது பரந்துபட்ட ஓசை உடையது. பாட்டுக்குப் பண் உண்டு. பண்ணை இராகம் என்பர். பண்கள் நூற்று மூன்று ஆகும் என்று பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. பருந்தும் அதன் நிழலும் போலப் பாட்டும் பண்ணும் இயைந்து செல்ல வேண்டும் என்பர். பண்ணுக்குரிய அடிப்படையைச் சுரம் என்றும் கோவை என்றும் கூறுவர். இக்காலத்தில் சரிகமபதநி என்ற ஏழு சுரங்கள் உள்ளன.

சுரம்                    தமிழ்ச்சொல்                   வடசொல்

ச                            குரல்                                சட்ஜமம்

ரி                             துத்தம்                                 ரிஷபம்

க                     கைக்கிளை                             காந்தாரம்

ம                           உழை                                   மத்திமம்

ப                          இளி                                            பஞ்சமம்

த                       விளரி                                             தைவதம்

நி                        தாரம்                                        நிஷாதம்

ஏழு சுரங்கள்

இந்த ஏழு சுரங்களின் பெயர்கள் பண்டைக்காலத்தில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என அழைக்கப்பட்டன. இன்று இப்பெயர்கள் சட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற வடமொழிப் பெயர்களாக வழங்குகின்றன. தூய தமிழாக இருந்த பண்களின் பெயர்கள் பல இன்று வடமொழிப் பெயர்களாக மாறியுள்ளன.

2.2.2 இசைக் கருவிகள் பண்டைக்காலத்து இசைக் கருவிகள் புல்லாங்குழலும் யாழும் ஆகும். மாடுகளை மேய்த்த ஆயன் காட்டில் மூங்கிலில் வண்டுகள் உண்டாக்கிய துளைகளில் காற்றுப் புகுந்து உண்டாக்கும் ஓசை கேட்டுப் புல்லாங்குழலை உருவாக்கிக் கொண்டான்; மரக்கிளைகளில் கொடிகள் படர்ந்திருக்க அவற்றின் இடையே காற்றுப் புகுந்து வெளிப்பட்டபோது உண்டான ஓசை கேட்டு ‘யாழ்’ என்னும் இசைக் கருவியைப் படைத்துக் கொண்டான்.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்

(குறள்: 66)

என்று வள்ளுவர் இவ்விரண்டு இசைக் கருவிகளையும் குறிப்பிடுகின்றார்.

இசைக் கருவியின் வகைகள்

உடுக்கை

இசைக் கருவிகள் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி என நான்கு வகைப்படும். மத்தளம், கிணை, முழவு, பேரிகை, உடுக்கை, முரசு, பறை ஆகியன தோற் கருவிகள் ஆகும். புல்லாங்குழல், சங்கு, கொம்பு ஆகியன துளைக் கருவிகள் ஆகும். யாழ், வீணை என்பன நரம்புக் கருவிகள் ஆகும். பாண்டில், தாளம் என்பன கஞ்சக் கருவிகள் ஆகும். (கஞ்சக்கருவி = உலோகத்தாலான இசைக்கருவி)

2.2.3 இசை இலக்கணம் இசைக்கு இலக்கணம் கூறும் நூல்கள் பல பண்டைக்காலத்தில் இருந்தன. பண்களில் முதலில் தோன்றியது முல்லைப் பண் என்று இசை இலக்கணம் கூறும். இந்த முல்லைப் பண் அரிகாம்போதி என இன்று வழங்கப்படுகின்றது. திரை இசையில் “சந்திரனைத் தொட்டது யார் …” என்று ஒரு பாடல் வருகிறதல்லவா. அது, இந்த அரிகாம்போதிதான்!

குறிஞ்சிப் பண் இன்று நடபைரவி என வழங்கப்படுகின்றது. இன்றைய திரை இசையில் ‘பூங்காற்று திரும்புமா’ என்றொரு திரைப் பாடல் வருகிறதல்லவா? அது, இந்த நடபைரவிதான்!

மருதப்பண் இன்று கரகரப்ரியா என வழங்கப்படுகின்றது. இன்றைய திரை இசையில் ‘அறியாப் பருவமடா கண்ணா …’ என்ற திரைப்பாடல் இந்தக் கரகரப்ரியாதான்!

நெய்தற் பண் இன்று தோடி என வழங்கப்படுகின்றது. இன்றைய திரை இசையில் ‘கங்கைக் கரை மன்னனடி’ என்று தொடங்கும் பாடல் இந்தப் பண்ணில்தான் ஒலிக்கின்றது.

இந்தப் பண்களைப் பொழுது அறிந்து இசைக்க வேண்டும் என்பர். இரவில் நட பைரவி, காலையில் கரகரப்ரியா, மாலையில் அரிகாம்போதி, முன்னிரவில் தோடி என்ற வழக்கம் நடைமுறையில் இருந்திருக்கிறது. ஒவ்வொரு உணர்ச்சி வெளிப்படும் செயலுக்கும் ஒரு பண் என்ற முறை இருந்திருக்கிறது.

பொழுது                                     பண்டைய                              இன்றைய பண்

தமிழ்ப் பண்

காலை                                       மருதப்பண்                            கரகரப்பிரியா

மாலை                                   முல்லைப்பண்                        அரிகாம்போதி

முன்னிரவு                            நெய்தற்பண்                             தோடி

பின்னிரவு                             குறிஞ்சிப்பண்                          நடபைரவி

பண்ணும் பொழுதும்

இதோ ஒரு தாலாட்டுப் பாடல் கேளுங்கள். பூவே செம்பூவே.. இது நீலாம்பரி.

இதோ, முகாரிப் பண்ணில் ஒரு பாடல் கேளுங்கள்! கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் …

இப்படித்தான் பொருளுக்கும் வேளைக்கும் தகுந்தாற் போல் இசை பல பண்களைப் பெற்றுள்ளது. பண்டைத் தமிழ் இசை பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்தில் விரிவாகக் கிடைக்கின்றன.

2.3 சிற்பக்கலை

அரக்கு, சுதை, மரம், மெழுகு, தந்தம், பஞ்சலோகம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செய்யப்படுகின்றன. உலோகத்தினாலும் கல்லினாலும் அமைக்கப்பட்ட சிற்ப வடிவங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன:

பிரதிமைஉருவங்கள் என்பன சிலரை அப்படியே சிலை வடிவம் போல உருவாக்குவனவாகும்.

தெய்வ உருவங்கள் என்பன சிவன், முருகன், திருமால் முதலிய கடவுள் உருவங்கள் ஆகும்

கற்பனை உருவங்கள் என்பன காமதேனு, கற்பகமரம் போன்றவை ஆகும்.

இயற்கை உருவங்கள் என்பன மரம், செடி, கொடிகளாகும். சிற்பக் கலை தொன்மையான கலைகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது

பிரதிமை                    தெய்வ                  கற்பனை               இயற்கை

உருவங்கள்                 உருவங்கள்             உருவங்கள்            உருவங்கள்

2.3.1 கல்லும் சொல்லாதோ கவி மரத்தால் ஒரு யானை செய்தார்கள். யானை அச்சாக அவ்வாறே இருந்தது. அது யானை என்று கருதிப் பார்த்தவர்களுக்கு அது மரம் என்று நினைக்கத் தோன்றவில்லை. அது மரம் என்று கருதிப் பார்த்தவர்களுக்கு அது யானை என்று நினைக்கத் தோன்றவில்லை. இதைத்தான் திருமந்திரம் என்ற நூல்

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

(திருமந்: 2290)

என்று கூறுகிறது. இது சிற்பக்கலையின் பெருமையை உணர்த்துவது!

மதுரை மீனாட்சியம்மன் கோயில்

சிலைகள் பலவற்றை மனிதர்கள் மெய்ம்மறந்து பார்க்கக் காரணம் என்ன? கல்லில் சமைத்த உருவம் அதைக் கல் என்பதை மறக்கச் செய்து

விடுகிறது.

இதோ மதுரை மீனாட்சியம்மன் கோயில் முகப்பிலுள்ள தூண் சிற்பங்களைப் பாருங்கள்! சிவபெருமானின் ஆடல் காட்சிகளைக் கல் வடிவத்தில் பார்த்திருக்கிறீர்களா? இவற்றைக் கல் என்று நினைக்கத் தோன்றுகிறதா? இதுதான் கலையின் மாட்சி!

2.3.2 தெய்வத் திருமேனிகள் உமை மற்றும் சிவன்

உலோகத்தால் செய்யப்பட்ட தெய்வத் திருமேனிகள் பல நம் கோயில்களில் இடம் பெற்றிருக்கின்றன. இதோ, செப்புத் திருமேனியில் அழகிய சிலையாய் உருவாகியுள்ள உமை மற்றும் சிவனின் தோற்றங்களைக் காணுங்கள்!

சுந்தரமூர்த்தி நாயனார்

வள்ளி தெய்வானை உடனாகிய சிக்கல் சிங்காரவேலரின் படிமம் காணக் காணத் திகட்டாதது. வட களத்தூர் கல்யாண சுந்தரர் திருமேனி பொழுது எல்லாம் பார்த்து இன்புறத்தக்கது. காதில் வளையம், தலையில் பாம்பு முடி, கழுத்தில் அணிகலன்களோடு கூடிய சிவபெருமானின் தோற்றம் காண்போரைக் களிப்புறச் செய்யும். இதோ, தேவாரம் பாடிய சுந்தரமூர்த்தி நாயனார் உருவத்தைப் பாருங்கள் இவற்றைப் போல ஆயிரக்கணக்கான உருவங்கள் நம் கோயில்களில் குடிகொண்டு உள்ளன

2.3.3 சிற்பிகளும் சிற்பங்களும் தமிழகத்தில் சிற்பங்களை வடித்த சிற்பிகள், தெய்வ உருவங்களை உருவாக்கிய போது சில நெறிமுறைகளைக் கடைப்பிடித்தார்கள். அவையாவன :

மனித உருவில் தெய்வ வடிவம்

மனித உருவம் போலத் தெய்வ உருவங்களைச் சமைத்தாலும் மனிதர்களைப் போல எலும்பும் நரம்பும் தசையமைப்பும் கொண்டவர்களாகத் தெய்வங்கள் வடிக்கப் பெறுவதில்லை; படைப்பதில்லை.

நான்கு கைகள், ஆறு கைகள், பன்னிரண்டு கைகள், ஆறு முகங்கள், யானைத் தலை போன்ற வேறுபட்ட வடிவங்களில் கலைநுட்பங்கள் வெளிப்படத் தெய்வ உருவங்கள் படைக்கப்பெறும்.

சிற்பங்களிலேயே ஆடை அணிகலன்கள், பூணூல் ஆகியன அமைந்திருக்கும் வகையில் சிற்பங்கள் வடிக்கப்பெறும்.

சிற்பங்களின் அளவுகளிலும் நிறைய வேறுபாடுகள் உண்டு. 12 அடி 15 அடி உயரம் கொண்ட சிலைகளும் படைக்கப்பெறும்.

சிற்பிகள் அழகியல் மற்றும் உடற்கூறு இலக்கணங்களைப் பயின்றவர்களாக இருந்தனர். சிற்பிகளுக்கென்று தனி இலக்கண நூல்களும், பயிற்சி முறைகளும் இருந்தன. மயன் எனும் தெய்வச் சிற்பி இருந்ததாகவும் அவன் பல அரிய சிற்பங்களை உருவாக்கியதாகவும், உயர்ந்த கட்டடங்களை எழுப்பியதாகவும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

2.4 ஓவியக்கலை

ஓ என்ற எழுத்தே ஓவியம் என்ற பொருளுடையதாகப் பண்டைக் காலத்தில் இருந்தது. கற்காலத்திலேயே ஓவியக்கலை உருவாகத் தொடங்கி விட்டது. மனிதன் குகைகளில் வாழ்ந்த போதே ஓவியம் தீட்டியிருக்கிறான். வேட்டையாடி உணவுப் பொருள்களைத் தேடிக்கொண்ட காலத்திலும் ஓவியம் படைத்திருக்கிறான். தமிழகத்தில் கீழ்வாலை, முத்துப்பட்டி, அணைப்பட்டி, வேட்டைக்காரன் பாளையம் ஆகிய ஊர்களில் வேட்டையாடுவதைக் குறிக்கும் பழைமையான பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. கோயில் சுவர்கள், அரண்மனைப் பள்ளியறைகள், கொலு மண்டபங்கள் ஆகிய இடங்களில் வரையப் பெற்ற ஓவியங்கள் இன்னும் தமிழகத்தில் அழியாமல் கிடைக்கின்றன. ஓவியத்திற்கு என்றே தனி இடம் இருந்தது என்பதைச் சித்திரமாடம் என்ற சொல் வெளிப்படுத்தும்.

2.4.1 ஓவியப்பாவை பெண்ணின் அழகை ஓவியத்திற்கு ஒப்பிடுவது வழக்கம். ஓவியம் போன்ற பெண் என்றும் ஓவியப்பாவை என்றும் கூறுவர்.

உயிர்பெற எழுதப்பட்ட

ஓவியப் பாவை ஒப்பாள்

(சீவக: 2048)

என்று சீவக சிந்தாமணி கூறுகின்றது. கொல்லி மலையிலே ஒரு பெண்ணின் ஓவியம் வரையப் பட்டிருந்ததாம். அதனைப் பார்ப்பவர்கள் உயிரைப் பறிகொடுக்கும் அளவிற்கு அதன் அழகில் மயங்கி விழுந்து விடுவார்களாம்.

இரதியின் ஓவியம்

இப்படி ஒரு கதை (ஓவியப் பாவையைப் பற்றிய) நம் நாட்டில் நிலவுகிறது. தமிழக ஓவியங்களில் பெண்களுக்கு முதன்மை இடம் அளிக்கப்பட்டுள்ளது. மன்மதன் எனும் தெய்வ அழகனின் மனைவியான இரதியின் ஓவியம் திருப்பரங்குன்றத்தில் இருந்ததாகக் குறிப்பு உள்ளது.

2.4.2 ஓவியச் செய்தி ஓவியம் பேசுவது போல் இருக்க வேண்டும். ஏதோ ஒரு செய்தியை உணர்த்துவது போல் இருக்க வேண்டும். “தன்னைவிட்டுத் தன் கணவன் பிரிந்து போய்விடுவானோ என்று அஞ்சுகிறாள் ஒரு பெண். போகாதீர்கள்! என்று சொல்ல நினைக்கிறாள். வாய் வரவில்லை ஆனால் அவள் நிற்கும் நிலையும் கண்ணில் இழையோடும் சோகமும் அந்தக் கருத்தை ‘ஓவியச் செய்தி’ போல உணர்த்தியதாகப்” புலவர் ஒருவர் பாடுகின்றார். ஓவியம் ஒரு கதை சொல்வதாக அமையலாம்; ஒரு நீதியை அறிவுறுத்துவதாகவும் அமையலாம்.

2.4.3 ஓவியரும் ஓவியங்களும் தமிழக ஓவியங்களில் பழைமையானவை காஞ்சி கயிலாசநாதர் கோயில் ஓவியங்களும், பனைமலைக் கோயில் ஓவியங்களும், சித்தன்னவாசல் குகைக் கோயில் ஓவியங்களும், திருமலைப்புரம், மலையடிப்பட்டி ஓவியங்களும், தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயில் ஓவியங்களும் ஆகும்.

காஞ்சி கயிலாசநாதர்                   சித்தன்னவாசல்

குகைக் கோயில் ஓவியம்

தஞ்சைக் கோயில்                              பனைமலைக்

ஓவியம்                                               கோயில் ஓவியம்

கி.பி. 600க்கு முற்பட்ட கோயில்கள் செங்கல், மரம், சுண்ணாம்பு ஆகியவற்றால் கட்டப்பட்டவை. அவை அழிந்துபோய் விட்டன. அவற்றில் வரைந்த ஓவியங்கள் பற்றியும் நமக்குச் செய்திகள் கிடைக்கவில்லை. நமக்குக் கிடைப்பனவற்றுள் காலத்தால் முற்பட்டது சித்தன்ன வாசல் ஓவியமே! அரசன் அரசி ஓவியம், தாமரைப் பொய்கை ஓவியம் ஆகியன அழகுமிக்கவை. அவையும் இன்று மெல்ல அழிந்து வரும் நிலையில் உள்ளன. இந்த ஓவியங்களைத் தீட்டிய ஓவியர்களைப் பற்றிய செய்தி ஏதும் நமக்கு கிடைக்கவில்லை. எனினும் கேவாத பெருந்தச்சன், குணமல்லன் சாத முக்கியன், கலியாணி, கொல்லன் சேமகன், இராசராசப் பெருந்தச்சன் போன்ற பெயர்கள் மட்டும் அறியப்படுகின்றன.

2.5 கட்டடக்கலை

யானைகளின் மீது உயர்த்திய கொடிகளோடு நுழையக்கூடிய பெரிய வாயில்கள், குன்றைக் குடைந்து சமைத்ததுபோல் அகன்ற இடைவெளி கொண்ட முகப்புகள், சுதையால் வெள்ளியைப் போல் பளபளப்பாகச் சாந்துபூசிக் கண்ணாடிபோல் இழைக்கப் பெற்ற சுவர்கள், கொடியும் மலரும் இயற்கைக் காட்சிகளும் என வீடுதோறும் வரையப் பெற்ற இனிய ஓவியங்கள் என்றவாறு அமைந்த பெரிய வீடுகளைப் பழங்காலத்தில் நகர் என்றே குறித்தனர். பண்டைக்காலத்தில் கட்டப்பெற்ற மாபெரும் அரண்மனைகள் எல்லாம் அழிந்து விட்டன. ஆனால் கோயில்கள் பல அழியாமல் இன்னும் தமிழர் கட்டடக்கலைப் பெருமையின் மாண்பைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.

2.5.1 கோயிற் கட்டடக்கலை செங்கணான் என்ற சோழ வேந்தன் பல்லவர் காலத்திற்கு முன்பே, அதாவது கி.பி. 600க்கு முன்னர் சிவபெருமானுக்கு எழுபத்தெட்டுக் கோயில்களைக் கட்டினான் என்று அறியப்படுகிறது. பல்லவர்கள் காலத்தில் மலைகளைக் குடைந்து செய்த குகைக் கோயில்களும், கருங்கற்களை அடுக்கிச் செய்த கற்கோயில்களும் சமைக்கப் பெற்றன. திருநாவுக்கரசர் எனும் சைவக்குரவர் தம் காலத்தில் இருந்த கோயிற் கட்டட வகைகளைப் பற்றிக் கூறுகிறார்.

அவையாவன:

கரக்கோயில்

கொகுடிக்கோயில்

ஞாழற் கோயில்

இளங்கோயில்

மணிக்கோயில்

ஆலக்கோயில்

கோயிற்                                                          சிறப்பு                                           எடுத்துக்காட்டு

கட்டட

வகை

கரக்                                              வட்டமான விமானம                                திருக்கடம்பூர்

கோயில்

கொகுடிக்கோயில்                                                    வட்ட விமானத்தின் மேல்                        திருக்கருப்பறியலூர்

கர்ண (தோடு வடிவக்) கூடம்

ஞாழற்

கோயில்                                                                   ஞாழல் (ஒருவகை மரம்)

போன்று (குடை விரிந்த) அமைப்பு உடையது     (இன்று இல்லை)

இளங்கோயில்

பெருங்கோயிலைப்

கடம்பூர                                                                                   பழுதுபார்க்கும்

பொழுது தெய்வ

உருவைத்

தற்காலிகமாக

வைக்கும் கோயில்

்மணிக்

கோயில்

ஆறு அல்லது

எட்டுப்

பட்டைகளைச்

சிகரத்தில்

கொண்டது

சீனிவாசநல்லூர்

ஆலக்கோயில்

மிக அகன்று

தாழ்ந்த மேற்                                                                                                                                                                                                                                                                                          (இன்று இல்லை)

கூரையுடைய

கோயில்

கோயிற் கட்டட வகை.

வட்டமான விமானத்தை உடைய கோயில் கரக்கோயில் (திருக்கடம்பூர்) ஆகும். வட்டமான விமானத்தின் மேலே தோடு போன்ற அமைப்புடைய கர்ண கூடத்தைக் கொண்டது கொகுடிக் கோயில் (திருக்கருப்பறியலூர்) ஆகும். ஞாழல் என்பது அடர்ந்த மலர்கள் பூக்கும் ஒருமரம். இந்த மரம் போன்று குடை விரிந்த அமைப்புடையது ஞாழற் கோயில். இவ்வகைக் கோயில் இன்று இல்லை. இளங்கோயில் என்பது பெருங்கோயிலைப் பழுது பார்க்கும்போது தெய்வ உருவைத் தற்காலிகமாக வைக்கும் கோயில் ஆகும். இதனைப் பாலாலயம் என்றும் கூறுவர் (கடம்பூர்). மணிக் கோயில் என்பது ஆறு அல்லது எட்டுப் பட்டைகளைச் சிகரத்தில் கொண்டதாகும் (சீனிவாசநல்லூர்). ஆலக்கோயில் என்பது ஆலமரத்தின் கீழ் அமைந்தாற்போல அகன்று விரிந்த சிறப்புடைய கோயிலாகும். கோயிற் கட்டடக் கலையில் குறிப்பிடத்தக்கவை தூண்கள், மேற்கூரையின் உள்பகுதி, கோபுரம், தெய்வ உருவங்கள் ஆகியவை ஆகும்.

2.5.2 அரண்மனைகள் கோட்டை கொத்தளங்கள், அகழிகள், கொலு மண்டபங்கள், யானை குதிரைக் கொட்டடிகள், அந்தப்புரங்கள் போன்றவற்றோடு கூடியது அரண்மனை. பண்டைக்காலத்து அரண்மனைகள் பலவும் அழிந்துவிட்டன. உறையூர், பூம்புகார், கருவூர், மதுரை, வஞ்சி ஆகிய நகரங்களிலிருந்த அரண்மனைகள் இன்று இல்லை.

செஞ்சி                                       நாயக்கர்

மகால்

இதோ, மூன்றில் ஒரு பகுதியாகக் குறுகி விட்ட திருமலை நாயக்கர் மகால், தஞ்சை மராட்டியர் கால அரண்மனை, செஞ்சி தேசிங்குராசனின் அரண்மனை ஆகியன சிதைந்த நிலையில் இன்றும் உள்ளன.

2.5.3 கட்டடக்கலை மாட்சி தஞ்சை                       திருவரங்கம்

கழுகுமலை                       மதுரை

இராசராசசோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயில், நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் பல செய்யப் பெற்ற மதுரை மீனாட்சி கோயில், திருவரங்கத் திருக்கோயில், மாணிக்கவாசகர் பணி செய்த திருப்பெருந்துறைக் கோயில், கழுகுமலைக் குடைவரைக் கோயில்கள் ஆகியன தமிழர்களின் கட்டடக்கலை மாட்சியைச் சுட்டிக் காட்டி நிற்கின்றன. வாழும் வீட்டை உறுதி மிக்கதாகக் கட்டிக் கொள்வதில் பண்டைத்தமிழர் கவனம் செலுத்தவில்லை. வழிபடும் திருக்கோயில்கள் காலத்தை வென்று நிற்கும்படி கட்டினர். எகிப்தின் பிரமிடுகள், கிரேக்கச் சிலைகள், உரோமானிய கலைக் கூடங்கள், பைசா நகர்க் கோபுரம், ஆக்ராவின் தாஜ்மகால் ஆகியவற்றுக்கு நிகராகத் தமிழகக் கோயிற் கட்டடக் கலை விளங்குவதை இன்றும் காணலாம்.

2.6 தொகுப்புரை

தமிழர், கலைகளில் பெரு விருப்பமுள்ளவர். இவர்களின் கலைப் பாணியைத் தமிழகக் கோபுரங்களில் காணலாம். இன்றும் தமிழகக் கலைகள் கோயில்களாலேயே பாதுகாக்கப்படுகின்றன. யானை போன்ற விலங்குகளை மயக்கும் ஆற்றல் தமிழ்ப் பெண்ணின் இசைக்கு இருந்தது. சிலப்பதிகாரம் ஓர் இசைக்களஞ்சியமாக அல்லவா திகழ்கின்றது!

மாமல்லபுரத்தில் கல்யானை, மதுரையில் சிவபெருமான் ஆடற்கோலம், சித்தன்னவாசலில் அரசன் அரசி ஓவியம் ஆகியன எல்லாம் தமிழரின் சிறந்த கலை மாதிரிகள் அல்லவா? இவற்றைக் குறித்து இப்பாடத்தில் ஓரளவு தெரிந்து கொண்டீர்கள். தொடர்ந்து போகலாமா?

பாடம் - 3

அறநூல்கள் வளர்த்த பண்பாடு

3.0 பாட முன்னுரை

ஒரு பண்பாட்டின் சிறப்பு அதன் ஒழுக்கநெறி வரையறை – எவற்றைக் கொள்ள வேண்டுமென்றும், எவற்றைத் தள்ள வேண்டுமென்றும் பகுத்துணர்ந்து நடந்து கொள்வதே என்று விளக்கம் கூறுவர் அறிஞர். மனிதன் பிற மனிதர்களோடு முரண்படாமலும், தன் அறிவை இழந்து விடாமலும், சமூக ஒப்புரவுக்கு மாறாகத் தனி மனித நிலையை வேறுபடுத்தாமலும், வாழ்க்கை மெய்ம்மைகளை உணர்ந்து கொண்டு அவற்றைப் புறக்கணிக்காமலும் வாழும் வாழ்க்கை நெறியை ஒவ்வொரு மொழியிலும் அற நூல்கள் கற்பிக்கின்றன. பொருள் தேடுதலே வாழ்க்கை, இன்பம் துய்த்தலே வாழ்க்கை என்ற நிலைகள் வாழ்க்கையின் உயிர்ப்பை இழந்துவிடச் செய்யும் எனக் கருதியது தமிழினம். எனவே பல அற நூல்களைத் தமிழ்ச் சான்றோர் இயற்றினர். இந்நூல்கள் காட்டும் பண்பாட்டை இங்குக் காணலாம்.

3.1 தமிழில் அற நூல்கள்

சங்க இலக்கியங்களிலேயே ஆங்காங்கு உரிய அறக் கருத்துகளைக் கூறுவதற்குப் புலவர்கள் தவறவில்லை. சமூகப் போக்கில் மாறுதல்கள் விளைய வேண்டும் என விரும்பிய சான்றோர்கள் அவ்வப்போது அறநூல்களை வரைந்தனர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பதினொரு நூல்கள் அறநூல்கள். இவை அக்காலப் பண்பாட்டை உருவாக்கப் பெரிதும் காரணமாயிருந்தன. அவையாவன:

திருக்குறள்

நாலடியார்

நான்மணிக்கடிகை

இன்னா நாற்பது

இனியவை நாற்பது

திரிகடுகம்

ஆசாரக் கோவை

பழமொழி

சிறுபஞ்சமூலம்

முதுமொழிக்காஞ்சி

ஏலாதி

மேற்கூறிய பதினொரு நூல்கள் தமிழரின் அறவாழ்வைக் காட்டுவன. இவை தவிர, பிற்காலத்தில் ஒளவையார், குமரகுருபரர், அதிவீரராம பாண்டியர், சுப்பிரமணிய பாரதியார் போன்ற புலவர் பெருமக்கள் நீதிநூல்களை இயற்றியுள்ளனர். சிறுவர்க்கெனவே ஆத்திசூடி, மூதுரை, நல்வழி, கொன்றைவேந்தன் (இயற்றியவர்: ஒளவையார்), வெற்றிவேற்கை (இயற்றியவர்: அதிவீரராம பாண்டியன்), நன்னெறி (இயற்றியவர்: சிவப்பிரகாசர்) போன்ற நீதிநூல்கள் எழுதப்பட்டன. சதகம் எனப்படும் நூறு பாடல்கள் கொண்ட நீதி நெறித் தொகுப்புகளும் தோன்றின.

3.2 திருக்குறள் போற்றும் அறவாழ்வு

தமிழரின் அறவாழ்வைக் காட்டும் நூல்களில் திருக்குறளின் பங்கு மிகவும் உயரியது. திருக்குறள் ஒரு சமூகத்தளத்தில் நின்று பாடப்பட்டது எனினும், உலகனைத்திற்கும் பொதுவான தன்மைகள் அந்நூலில் மிகுதியாயுள்ளன. கடுமையான குறிக்கோள்களை நடைமுறைக்கு ஒவ்வாத நிலையிலிருந்து பேசாமல், வாழ்க்கையை உயர்ந்ததாகவும், இனியதாகவும் ஆக்கிக் கொள்வதற்குப் பயன்படும் ஒரு பண்பாட்டு வழிகாட்டியாகத் திருக்குறள் விளங்குகின்றது. திருக்குறள் காட்டும் அறநெறிக் கோட்பாடுகள் பிறிதொரு பாடத்தொகுப்பில் (‘வள்ளுவரின் வாழ்வியல் தத்துவம்’) விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. இப்பாடத்தில் ஒழுக்கம், கள் உண்ணாமை, ஊன் உண்ணாமை, வரைவின் மகளிர் – இவை பற்றிய கருத்துகளை மட்டும் காண்போம்.

3.2.1 திருவள்ளுவர் கூறும் கள் உண்ணாமை சங்க காலச் சமூகம் கள் குடிப்பதைத் தவறென்று குறிக்கவில்லை. விருந்தோம்புவதில் கள் ஒரு தகுதியான இடத்தைப் பெற்றிருந்தது. ஆனால் திருவள்ளுவர் கள் குடித்தல் தீய பழக்கமென்பதை அறிவுறுத்தத் தயங்கவில்லை. கள் குடிப்பதால் வரும் கேடுகளைத் திருவள்ளுவர் கள் உண்ணாமை என்ற அதிகாரத்தில் கீழ்க்காணும் வகைகளில் கூறுகின்றார்:

கள் மயக்கம்

கள் குடிப்பவரைக் கண்டு பகைவர் அஞ்சமாட்டார்.

கள் குடிப்பவர் புகழை இழந்துவிடுவர்.

கள் குடிப்பவர் சான்றோரால் மதிக்கப்படமாட்டார்.

கள் குடிப்பவரைத் தாயும் வெறுப்பாள்.

கள் குடிப்பவரை நாணம் என்னும் உணர்ச்சி நீங்கிவிடும்.

கள் குடித்தல் அறியாமையின் விளைவாகும்.

கள் குடித்தலும் இறப்பும் வேறுபட்டவை அல்ல.

கள் குடிப்பவரைக் கண்டு பிறர் நகைப்பர்.

கள் குடிப்பதனால் பிறர் அறியாமல் இருந்த குற்றங்கள் எல்லாம் வெளிப்படும்.

கள் உண்பவனைத் திருத்துதல் இயலாது.

கள் உண்ணும் பழக்கத்திற்கு அடிமையாகிய ஒருவன், சுய நினைவில் இருக்கும் போது, கள் உண்டு மயங்கிய ஒருவனைக் கண்டால் திருந்தக் கூடும்.

ஒரு மனிதனைப் பண்பாட்டு உயர்நிலையிலிருந்து கீழே தள்ளிவிடும் இக்கொடிய பழக்கத்தைத் திருவள்ளுவரே முதன்முதலில் இந்த அளவுக்குக் கண்டித்துள்ளார்.

3.2.2 ஒழுக்கம் விழுப்பம் தரும் நல்ல நெறியில் வாழ்வது என்பது உடலுக்கும் மனத்திற்கும் நல்லது; சமூக அமைதிக்கும் இனியது. இன்று ஒழுக்கமின்மையே ‘எய்ட்ஸ்’ நோயை உருவாக்கியுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று கூறியுள்ளார்.

சங்க காலத்தில் பெரிதும் கடியப்படாத பரத்தைமையினையும் வள்ளுவர் கண்டிக்கின்றார். பொருள் கொடுத்து பெண் ஒருத்தியைத் தழுவுவது பிணத்தைத் தழுவுவதைப் போன்றது என்கிறார். சங்ககாலப் பண்பாடு பரத்தைமையைக் கண்டித்து மொழியவில்லை. ஆணின் ஒழுங்கைச் சங்கச் சமூகம் பெரிதும் வற்புறுத்தவில்லை. பரத்தை என்ற பெண்பாற் சொல் மட்டுமே சங்க இலக்கியத்தில் உண்டு. அதற்கு நிகராக ஆண்பாலுக்கும் பொருந்தப் பரத்தன் என்ற சொல்லைத் திருவள்ளுவரே ஆளக் காண்கிறோம் (குறள், 1311).

விலைமாதரின் தோளைச் சேர்வோர் கீழ்மக்கள் என்றும், அவ்வுறவு நரகத்தை ஒத்தது என்றும் வள்ளுவர் கூறுகின்றார்.

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு. குறள் – 919)

ஒழுக்க வரையறை இல்லாத பெண்களின் தோள்களைச் சேர்தல் இழிந்த மக்களுக்கு உரிய செயலாகும்; அச்செயல் சேற்றில் விழுந்து புரள்வது போலக் கீழானதாகும் என்பது மேற்சொன்ன குறளின் பொருளாகும்.

3.2.3 ஊன் உண்ணாமை திருவள்ளுவர் அருள் உணர்வின் அடிப்படையில் புலால் உணவையும் மறுக்குமாறு அறிவுறுத்துகின்றார். சங்க காலத்தில் கபிலர், ஒளவையார் போன்ற பெரும் புலவர்களும் ஊன் உணவின் பெருமை பேசக் காண்கின்றோம். ஆனால் திருவள்ளுவர்,

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிதுஊன் உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள். (குறள் – 251)

புலால் மறுப்பு

என்கின்றார். தன் உடம்பைப் பெருக்க வைத்துக்கொள்ள வேறொன்றின் ஊனை உண்பவன் எங்ஙனம் அருள் உணர்வைக் காட்ட முடியும் எனக் கேட்கிறார். சமண பௌத்த சமயங்களும் புலால் உண்ணுதலைக் கண்டித்திருக்கின்றன. தமிழகத்தில் அதைக் கண்டிக்கும் முதல் குரல் திருவள்ளுவருடையதாக இருந்திருக்கிறது. தமிழர் அருள் உணர்வு மிக்கவர். ஒரு பூங்கொடி, ஒரு மயில் பறவை என அஃறிணை உயிர்களும் துயருறுதல் கூடாது என நினைத்த சமூகத்தில் ஊன் உணவைச் சரியானதென்று கருத முடியாத நிலை தோன்றியதில் வியப்பில்லை. வைதிக சமயம் வேள்வியில் உயிர்க்கொலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது.

பசுவைப் புனிதமாகக் கருதுவதாகக் கூறும் வைதிக சமயம் முற்காலத்தில் வேள்வியின் பொருட்டுக் கொலைப்படுத்தப் பசுவைக் கட்டி வைத்திருந்ததனை மணிமேகலை குறிப்பிடுகின்றது. ஆயிரம் வேள்விகள் கூடப் பெரிதில்லை; ஓர் உயிரைக் கொல்லாத நோன்பே பெரியது என்கிறார் திருவள்ளுவர். புண்ணை யாராவது உண்பார்களா என அவ்வுணவில் ஓர் அருவருப்பை ஏற்படுத்துகிறார். திருவள்ளுவர் கண்ட இப்பண்பாடே அருளாளர்களின் சமயமாக வளர்ந்து இராமலிங்க வள்ளலாரின் உயிரிரக்கம் எனப்படும் சீவகாருணிய அறமாக ஓங்கியது. தமிழர்களில் பலர் சைவ உணவினராகவும், புலால் உண்பவர்களில் பலர் மாதத்தில் சில நாட்களேனும் நோன்பு மேற்கொள்வோராகவும் அமைவது இப்பண்பாட்டின் வளர்ச்சியால்தான் என அறியலாம்.

3.2.4 வாழ்க்கையில் இருநிலைகள் தமிழர் பண்பாட்டில் மிகக் குறிப்பிடத்தக்க இரண்டு நிலைகள் இல்லறமும் துறவறமும் ஆகும். பிரம்மசரியம், சந்நியாசம், கிரகஸ்தம், வானப் பிரஸ்தம் என்ற நான்கு நிலைகளை வடமொழி கூறுகின்றது. வடமொழி இதிகாசங்களில் இடம்பெறும் முனிவர்கள் காடுகளில் வாழ்ந்தாலும் மனைவி மக்களோடு வாழ்ந்தனர். அரசியல் துறையிலும் அவர்களுக்குப் பங்கு இருந்தது. மேனகை போன்ற பெண்களிடம் அவர்கள் மனத்தைப் பறிகொடுத்ததும் உண்டு. துருவாசர், விசுவாமித்திரர் போன்றோர் அடங்காச்சினம் கொண்டவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.  அம்முனிவர்கள் நீங்காத சாபங்களை இடுவோராகவும் இருந்துள்ளனர். தமிழர் பண்பாடு கண்ட இல்லறம் துறவறம் இவற்றினின்றும் வேறானவை.

இல்லறம் எதற்கு?

இல்லறம் எதற்கு என்ற வினாவிற்குச் சங்க இலக்கியமான குறிஞ்சிப் பாட்டு விளக்கம் கூறுவதைக் கேளுங்கள்!

விருந்து உபசரித்தல்

“பலரும் உண்ணும்படி அகலமாகக் கதவு திறந்து கிடக்கும் வாசலையுடைய பெரிய வீட்டில், சோற்றை வருகின்றவர்களுக்கெல்லாம் இல்லையென்னாமல் இட வேண்டும். அதனால் வீடு பொலிவு பெற வேண்டும். விருந்தினர் உண்டது போக மிஞ்சியிருக்கும் உணவை மனைவியாகிய நீ இட நான் உண்ண வேண்டும். அவ்வுயர்ந்த இல்லறம் நம்மைக் கரையேற்றும்”

என்று தலைவன் தன் காதலியிடம் கூறுகின்றான். ஒருவன் திருமணம் செய்து கொள்வதே விருந்தோம்பல் என்னும் கடமையைச் செய்ய என்று கூறும் பண்பாடு தமிழருடையதாக இருந்திருக்கின்றது.  வேளாண் சமூகத்தின் அடிப்படைப் பண்பாடு இதுதான். வீடு முழுவதும் நிறைந்திருக்கும் தானியத்தை அடுத்த விளைச்சல் வந்து சேருமுன் செலவழிக்க வேண்டும். விருந்து செய்யவும் விழாக் கொண்டாடவும் வேண்டும். பொருளாதார உலகில் ‘பணம்’ வந்துவிட்ட பிறகே, விளைச்சல் பொருள் பணமாக மாற்றப்பட்ட பிறகே இந்த விருந்திடும் உள்ளம் சுருங்கியிருக்கிறது.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு (குறள் – 86)

என்று விருந்து செய்தலை இடைவிடாத கடமையாகத் திருவள்ளுவர் கூறுகின்றார். எனவே இல்லறத்தின் தலையாய கடன் விருந்தோம்பலாகும்.

எது துறவறம்?

மனைவி, மக்கள், சுற்றத்தார் என நெருங்கிய உறவு வட்டத்தில் அன்பு காட்டி வாழ்ந்த ஒருவன் இல்லறத்தின் தேவைகளை நிறைவு செய்த நிலையில், தன்னை அடுத்த அயலார்க்கும், ஊரார்க்கும், பிறர்க்கும், பிற பிற உயிர்களுக்கும் நல்லன ஆற்றும் வகையில் அருள் உணர்ச்சி பெற வேண்டும். இதுவே துறவு. துறவு என்பது பற்று நீக்கி வாழ்வதன்று; பற்றின் விரிவு. துறவு நிலை அடையும் ஒருவன் தன் வீட்டிலுள்ளவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருந்த நிலை மாறி எல்லா உயிர்க்கும் அன்பு செய்வோராக மாறுகிறான். இதுவே துறவறம் எனப்பட்டது. அருள் என்பது அன்பின் குழந்தை என்கிறார் திருவள்ளுவர். எனவே திருவள்ளுவர் கூறும் துறவறம் நாட்டில் ஒவ்வொருவர்க்கும் உரியது என அறியலாம்.

3.2.5 சில நம்பிக்கைகள் தமிழர் பண்பாட்டில், நல்வினை, தீவினை, ஊழ், மறுபிறப்பு ஆகியவற்றுக்குப் பேரிடமுண்டு. வினைகளின் பயன் தொடர்ந்து அடுத்தடுத்த பிறப்புகளைத் தரும் எனத் தமிழர் நம்பினர். திருவள்ளுவரும் இக்கருத்துக்களைக் கொண்டிருந்தார்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்        (குறள்-371)

என்று ஊழின் வலிமையைத் திருவள்ளுவர் கூறுகின்றார். எனினும் ஊழையும் விலக்க முடியும் என்பதே வள்ளுவரின் புரட்சி நோக்கமாகும்.

ஊழையும் உப்பக்கம் காண்பர்

ஆள்வினையோடு தொடர்ந்து முயல்பவர் ஊழின்

தாக்குதலை வென்றுவிட முடியும் என்கிறார்

வள்ளுவர்.

விதி வலியது மாற்ற முடியாதது என்று கூறி அழியும்

குருட்டு நம்பிக்கை கொண்ட சமூகங்களைப் போல

அல்லாமல் முயற்சியின் வலிமையை வற்புறுத்திய

சமூகமாகத் தமிழ்ச் சமூகம் காட்சி தருகின்றது.

3.2.6 வாழ்க்கைக் கடமைகள் பொருள் ஈட்டுதல், குடும்பத்தைப் பாதுகாத்தல், பிள்ளைகளை வளர்த்தல், சமூகத் தொண்டு செய்தல் போன்ற பல கடமைகள் மனிதர்களுக்கு உள்ளன. தனி மனிதனாயினும் அவனும் சமூகத்தில் ஓர் உறுப்பினன். அவ்வகையில் வீட்டுக்கும் நாட்டுக்கும் ஆற்றவேண்டிய கடமைகளைத் தமிழ் அறநூல்கள் எடுத்துரைக்கின்றன.

பொருள் ஈட்டுதல்

வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது என்பதைத் தமிழினம் உணர்ந்திருந்தது. பொருள் உடையவரே அறத்தைச் செய்யும் இன்பத்தைத் துய்க்கவும் முடியும் என்பதைத் திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார். இரண்டு யானைகள் போரிடும் போது அக்காட்சியை மலை மேலிருந்து பார்ப்பதைப் போலப் பாதுகாப்புடையது பொருள் உடையவன் நிலை என்கிறார். அன்பு பெற்றெடுத்த குழந்தை அருள். அது பொருள் என்னும் செவிலித் தாயால் வளர்க்கப்படும் என்று கூறுகின்றார்.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு (குறள் – 752)

என்பது உலக நடைமுறையை உணர்ந்து கூறும் குறளாகும். பொருளை முயற்சியால் அறவழிகளில் தேடி நற்செயல்களுக்காக அதனைச் செலவிட வேண்டுமென்பது தமிழர் வாழ்க்கை நோக்கமாகும். பழியஞ்சிப் பிறரோடு பகுத்துண்டு, ஒப்புரவும் ஈகையும் கொண்டு பண்போடு வாழ்வோர் சான்றாண்மை உடையவர் ஆவர். இத்தகையோர் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் ஆவர். இவர்கள் மறைந்த பின்னும் தெய்வமென்று போற்றப்படுவர் என வள்ளுவர் கூறுகின்றார்.

பலர்க்கும் உரிய கடமைகள்

வாழ்க்கையில் ஒவ்வொருவர்க்கும் கடமை இருக்கிறது. தந்தை, தன் மகனைக் கற்றவனாகவும் அவையில் முன்நிற்பவனாகவும் ஆக்க வேண்டும். மகன், ‘இவனுடைய தந்தை நோன்பு நோற்று இவனைப் பெற்றிருக்கின்றான்’ என்று கூறுமாறு சிறந்து விளங்க வேண்டும். மனைவி, தற்காத்துத் தற்கொண்டானைப் பேணி, புகழை நீங்காமல் காத்து நற்பண்புகளில் சோர்வற்றவள் ஆதல் வேண்டும். அரசர், தன்கீழ் வாழும் குடிமக்களை உயிரெனக் கருதிக் காத்துக் காட்சிக்கு எளியனாகவும் கடுஞ்சொல்லன் அல்லனாகவும் விளங்க வேண்டும். அமைச்சர், வேந்தனுக்கு உறுதுணையாய்ச் சொல்வன்மை, வினைத்தூய்மை உடையவராதல் வேண்டும். உழவர், விளைநிலத்தை நாள்தோறும் சென்று கண்டு, அதனைக் காவல் செய்து பயிர்களுக்குச் செய்யத்தகுவன செய்தல் வேண்டும். ஆசிரியன், மெய்ப்பொருளை எல்லாரும் அறிந்து கொள்ள உரைப்பவனாக ஆதல் வேண்டும். மாணவன், செல்வர் முன் வறியவர் போல ஆசிரியர் முன் தாழ்ந்து நின்று கற்றல் வேண்டும். கணவன், தென் புலத்தார் தெய்வம் விருந்து சுற்றத்தார் தான் எனப்படும் ஐவர்க்கும் உரியன செய்ய வேண்டும். வணிகர், வாணிகத்தை நடுவுநிலைமை தவறாமல் செய்ய வேண்டும். சான்றோர், அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை ஆகிய ஐந்து பண்புகளைக் கொள்ளவேண்டும். இவ்வாறு வாழ்க்கையில் ஒவ்வொருவர்க்கும் உரிய கடமையை வற்புறுத்தும் தமிழரின் அறநூல் சாதி, மதம் ஆகியவற்றைப் போற்றவில்லை.

3.2.7 மனத்தூய்மையே அறம் தமிழ் அறநூல்கள் புறத்தூய்மையைவிட அகத்தூய்மையையே வற்புறுத்துகின்றன. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறி மனத்தில் மாசு இன்மையையே அறம் என்று கூறுகின்றது, தமிழ் அறம். சடங்குகள், ஆசாரங்கள், கழுவாய்கள் ஆகியவற்றுக்குத் தமிழர் வாழ்வில் பேரிடமில்லை. துறவி என்பவன் மொட்டையடித்துக் கொள்வதா, சடைமுடி கொள்வதா என்பன போன்ற வினாக்களுக்கு இங்கு இடமில்லை. புறப் புனைவுகள், வேடங்கள் ஆகியவற்றைத் தமிழர் போற்றவில்லை. மனத்தின்கண் தூய்மை, எவ்வாறு செயல்படுகின்றார் என்பவற்றைப் பொறுத்தே ஒருவர் சமுதாயத்தில் எத்தகையவர் என்பதை முடிவு செய்தனர். உருவு கண்டு போற்றுதலும் தூற்றுதலும் தமிழர்க்குப் பொருந்தாச் செயல்களாகும்.

3.3 சமய நோக்கும் அறங்களும்

நாலடியார் போன்ற பிற்கால அறநூல்களும் வாழ்க்கைக்குரிய நெறிகளைக் கூறினும் அவற்றைத் தத்தம் சமயக் கண்ணோட்டத்துடன் கூறுகின்றன. இவை தோன்றிய காலத்தில் சமயம் வாழ்க்கையில் இன்றியமையாத கூறாகிவிட்டது. இல்லறத்தை வெறுத்த துறவை இந்நூல்கள் போற்றுகின்றன. இடைக்காலத் தமிழகத்தில் துறவு மதிப்புக்குரியதாகி விட்டது. வீட்டில் பலரும் இறக்கக் கண்ட ஒருவனை நிலையாமை உணர்வு பற்றிக் கொண்டது. வாழ்க்கையை வெறுத்துப் பார்க்கும் நோக்குத் தோன்றிவிட்டது.

கணம் கொண்டு சுற்றத்தார் கல்லென்று அலறப்

பிணம் கொண்டு காட்டு உய்ப்பார்க் கண்டும்-மணம்

கொண்டு ஈண்டு

உண்டு உண்டு உண்டு என்னும் உணர்வினாற் சாற்றுமே

டொண் டொண் டொண் என்னும் பறை

(நாலடி, மர்ரே: 3.5)

(காட்டு உய்ப்பார் = காட்டிற்குக் கொண்டுபோவார்)

என்கிறது நாலடியார். தமிழர் சமூக வாழ்வில் சமண பௌத்த சமயங்கள் மதிப்புப் பெற்றன. பிற சமயங்களும் தத்தம் நெறிகளை மக்களிடையே பரப்பிச் சமூக அமைப்பில் பல சமய வட்டங்கள் தோன்ற வழி வகுத்தன. மத மாற்றங்கள், போற்றுதல் தூற்றுதல்கள், மதப் போராட்டங்கள் ஆகியன இடைக்காலத்தில் தொடங்கிவிட்டன. மனித உடம்பையும் பெண்ணையும் சமயங்கள் இழிவாகக் கருதின. எனினும் தமிழர் பண்பாடு இவற்றுக்கு முழுமையாக இடம் கொடுத்துவிடவில்லை.

3.3.1 தமிழர் கண்ட பொதுமைக் கண்ணோட்டம் எதனையும் நடுவுநிலைமையோடு சிந்திக்கும் முதிர்ச்சி பெற்றிருந்த தமிழ்ச் சமூகம், சமயங்கள்பால் ஒரு பொதுமைக் கண்ணோட்டத்தையும், பொறை நோக்கையும் கடைப்பிடிக்கத் தலைப்பட்டது. சமயங்கள் கற்பித்த நன்னெறிகளைத் தமிழ்ச் சமூகம் ஏற்றுத் தன் பண்பாட்டுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டது. கல்வி ஒன்றே வேறுபாடுகளைக் களைந்து மனிதனை உயர்த்தவல்லது என்பதை அற நூல்கள் தெளிவுபட உரைக்கின்றன. அறிவுடையோனுக்குக் குலம் என்பது இல்லை என்ற தமிழ்ச் சமூகக் கருத்து அதன் பண்பாட்டு உயர்ச்சியைக் காட்டும்.

தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்

காணின் கடைப்பட்டான் என்று இகழார் – காணாய்

அவன் துணையா ஆறு போயற்றே, நூல் கற்ற

மகன் துணையா நல்ல கொளல்.

(நாலடி, மர்ரே: 14.6)

என்று சாதி வேறுபாட்டைக் கருதாமல், அவரவர் செயல்கண்டு மனிதனை மதிக்கும் பண்பைச் சில சமயங்கள் உருவாக்கின. தோணி ஓட்டுகிறவன் எந்த வருணத்தினன் என்று பார்த்தா பயணம் செய்வர்? அதுபோலக் கல்வியாளன் எக்குலத்தவனாக இருந்தால் என்ன என்ற கருத்து வருணாசிரம நெறியைத் தவிடுபொடி செய்துவிட்டது.

3.4 பழமொழி காட்டும் பண்பாடு

மக்கள் உணரும் வகையில் எளிய மொழிகளிலும் தெரிந்த மொழிகளிலும் அறத்தைக் கூறவேண்டுமென்று சான்றோர் விரும்பினர். சமூகம் அறநெறியில் தவறாது இருக்க வேண்டும் எனக் கருதிய பெரியோர் அவ்வப்போது தாம் உணர்ந்தவற்றை எடுத்துக் கூறினர். ஒரு மொழியில் இஃது அறம், இஃது அறமில்லை எனக் கூறும் நூல்கள் அம்மொழி வழங்கும்

சமுதாயத்தின் பண்பாட்டைக் காட்டும். தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டை உணர நீதி நூல்கள் சான்றாகும். நட்பு இருவரைப் பிணைப்பது. தீ நட்பு, கூடா நட்பு ஆகியவற்றைக் கொள்ளாது நல்ல நட்பைத் தேர்ந்து கொள்ள வேண்டும். நட்பில் பிழை பொறுத்தல் வேண்டும். நண்பனிடம் குறை கண்டால் அதற்காகச் சினம் கொள்ளக் கூடாது. இதனைப் பழமொழி நானூறு எவ்வாறு கூறுகின்றது?

நண்பு ஒன்றித் தம்மாலே நாட்டப் பட்டார்களைக்

கண் கண்ட குற்றம் உள எனினும் காய்ந்து ஈயார்

பண் கொண்ட தீஞ்சொல் பணைத் தோளாய் – யார்  உளரோ

தம்கன்று சாக்கறப் பார்.

(பழ, மர்ரே: 16)

கன்று சாகுமாறு பால் கறக்கலாமா? கூடாது. அதுபோல நட்பு தீய்ந்து போகுமாறு சினந்து கொள்ளலாமா? கூடாது. இதுபோல அழகிய பழமொழிகள் பலவற்றை உரிய நீதிகளோடு விளக்குவது பழமொழி நானூறு. ஒருவனுக்கு ஒரு பொருள் கிடைக்க வேண்டும் என்று இருந்தால் அதை யாராலும் தடுத்தல் இயலாது. இதனைப் பழமொழி எப்படிக் கூறுகின்றது தெரியுமா?

கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்

விழுமியோன் மேற்சென்றதனால் விழுமிய

வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால

தீண்டா விடுதல் அரிது.

(பழ, மர்ரே: 62)

(கழுமலம் – சீர்காழி எனப்படும் ஊர். விழுமியோன் – கரிகாலன் என்ற பெயருடைய சோழன். உறற்பால – வந்து அடைய வேண்டியவை)

கரிகாலன் சிறுவனாக இருந்தபோது அரசுரிமை இழந்து எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தான். அப்போது பட்டத்து யானை அரசனைத் தேர்ந்தெடுப்பதற்காக அனுப்பப் பெற்றது. அந்த யானை வேறு எவரையும் நாடாமல் கரிகாலனைத் தேடி வந்து அரசனாகத் தேர்ந்தெடுத்தது. வரவேண்டுமென்ற விதி இருந்தால் வராமல் போகுமா? இவ்வாறு பல நீதிகளை உணர்த்தி மக்களை வழிப்படுத்துகிறது பழமொழி. பண்பாட்டு நெறிகள் பலவற்றைப் பழமொழி கற்பிக்கின்றது.

அவற்றுள் சில :

கன்றை விட்டுத்தான் பசுவிடம் பால் கறக்கலாம். அம்பு விட்டுக் கறக்க முடியுமா?

ஏர்க்காலில் ஆணி போன்ற நடுவு நிலைமையோடு எந்த நிலையிலும் பணி செய்ய வேண்டும்.

பெரியவர்களைத் தகுதி அற்ற சொற்களால் குறை கூறுவது நிலாவைப் பார்த்து நாய் குரைப்பது போன்றது.

3.5 மருந்து நூல்கள் காட்டும் பண்பாடு

சில நூல்களுக்கு மருந்துகளின் பெயர்களைப் புலவர்கள் வைத்துள்ளார்கள். ஏன் தெரியுமா? மருந்து நோயைத் தீர்ப்பது போல இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள நீதியும் மனத்தின் குறையைப் போக்கும் என்பதற்காக ஆகும். ஏலாதி என்பது ஒரு நூல். ஏலக்காய், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு என்ற ஆறு மருந்துச் சரக்குகள் சேர்த்துச் செய்தது ஏலாதி எனப்படும். இது போல ஆறு பொருள்களைக் கூறுவது இந்நூல்.

நிறை உடைமை, நீர்மை உடைமை கொடையே

பொறை உடைமை, பொய்ம்மை புலாற்கண் மறை உடைமை

வேய் அன்ன தோளாய் இவை உடையான் பல் உயிர்க்கும்

தாய் அன்னன் என்னத் தகும்.

(ஏலாதி, மர்ரே: 6)

இதன் பொருள்: ‘மூங்கில் போன்ற தோளை உடையவளே! நிறைந்த பண்பு, அன்பு, கொடைக் குணம், பொறுமை, பொய் கூறாமை, புலால் உண்ணாமை என்ற ஆறு பண்புகள் கொண்டவன் எல்லா உயிர்க்கும் தாய் போன்றவன்’ என்பதாகும். இவ்வாறே திரிகடுகம் என்ற நூலும், சிறுபஞ்சமூலம் என்ற நூலும் மருந்துப் பெயர்களைக் கொண்டு நீதிக் கருத்துகளைக் கற்பிக்கின்றன.

3.6 பிற்கால நீதி நூல்களும் பண்பாடும்

பிற்காலத்தும் பல நீதி நூல்கள் தோன்றியுள்ளன. ஒவ்வொரு காலத்திலும் பெரியோர்கள் மற்றவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் பண்பாட்டைக் காக்கும் நீதிகளைக் கூறியுள்ளனர். ஒளவையார், குமரகுருபரர், அதிவீரராம பாண்டியர், சுப்பிரமணிய பாரதியார் போன்ற புலவர் பெருமக்கள் இவ்வாறு நீதி நூல்கள் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இயற்றியவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

3.6.1 நீதி நெறி விளக்கம் காட்டும் பண்பாடு நீதி நெறி விளக்கம் என்ற நூல் குமரகுருபரர் என்ற புலவரால் இயற்றப்பட்டது. இவர் துறவியாகிச் சைவ மடம் ஒன்றைத் திருப்பனந்தாள் என்ற ஊரில் தோற்றுவித்தார்.

கற்றார்க்குக் கல்வி நலனே கலனல்லால்

மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – முற்ற

முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா ; யாரே

அழகுக்கு அழகு செய்வார்.

கற்றவர்களுக்கு ஆபரணம் என்பது கல்விதான். அதுவே பெரிய அழகு. அந்த அழகுக்கு மேல் அழகு செய்ய வேண்டுவதில்லை. இது போன்ற நீதிக் கருத்துகளை இந்நூல் கூறுகின்றது. பிறரை இகழாதீர்கள். ஒழுக்கத்தைப் போற்றுங்கள், எல்லோருக்கும் வழங்கி உண்ணுங்கள் என்பன போன்றவை இந்நூலில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளன.

3.6.2 சதகங்கள் காட்டும் பண்பாடு சதம் என்றால் நூறு என்று பொருள். சதகம் என்பது நீதி கூறும் நூறு பாடல்கள் கொண்ட நூல் என்பது பொருள். பல சதக நூல்கள் தமிழில் உள்ளன. உயர்ந்த பண்பாட்டு நெறிகளைக் கூறுவன இந்நூல்கள். தாம் அழிந்தாலும் தம் குணம் அழியாதவை எவை என்று குமரேச சதகம் கூறுவதைக் கேளுங்கள்.

தங்கமானது தழலில் நின்று உருகி மறுகினும்

தன்னொளி மழுங்கிடாது

சந்தனக் குறடுதான் மெலிந்து தேய்ந்தாலுமே

தன்மணம் குன்றிடாது.

பொங்குமிகு சங்குசெந் தழலில்வெந் தாலுமே

பொலிவெண்மை குறைவுறாது.

போதவே காய்ந்துநன் பால் குறுகினாலும்

பொருந்துசுவை போய்விடாது

துங்கமணி சாணையிற் தேய்ந்துவிட்டாலும்

துலங்குகுணம் ஒழியாதுபின்

தொன்மைதரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது

தூயநிறை தவறாகுமோ

மங்கள கல்யாணி குறமங்கை சுரகுஞ்சரியை

மருவுதிண் புயவாசனே

மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு

மலைமேவு குமரேசனே.

பெரியோர் இறந்தாலும் அவர்கள் பெருமை மறையாது என்பதற்குப் பல உதாரணங்கள் இதில் தரப்பட்டுள்ளன.

3.6.3 சிறுவர்களுக்கான நீதி நூல்கள் ஒளவையார் பாடிய ஆத்திசூடி இரண்டு அல்லது மூன்று சொற்கள் கொண்டது.

அறம் செய விரும்பு

ஆறுவது சினம்

இயல்வது கரவேல்

ஈவது விலக்கேல்

போன்ற தொடர்களைக் கொண்ட எளிமையான நூல் இது. இதனை அடுத்துப் பலப்பல ஆத்திசூடிகள் தோன்றின. முனை முகத்து நில்லேல் என்று ஒளவையார் கூறினார். இதன் பொருள் போர் முனைகளில் போய் நிற்காதே என்பதாகும். பாரதியார் இதனை மாற்றி முனை முகத்து நில் என்று தன் ஆத்திசூடியில் கூறினார். ஒளவையார் பாடிய கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி, அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை போன்றவையும் சிறுவர் கற்பதற்குரிய நல்ல அறநூல்களாகும்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

என்பன கொன்றை வேந்தன் எனும் நூலில் காணப்படும் செய்திகள் ஆகும்.

3.7 தொகுப்புரை

சமூகம் நன்கு விளங்க அறநூல்கள் தேவை. தனி மனிதன் ஒழுக்கமுடையவனாக இருக்க அறநூல்கள் அடிப்படையாகும். இவ்வகையில் பலப்பல நூல்கள் தமிழகத்தில் தோன்றி தமிழர் பண்பாட்டைக் காத்துவந்துள்ளன. கள் மனிதனின் அறிவைக் கெடுப்பது. அதனைக் குறித்துப் பத்துக் குறள்பாக்களில் திருவள்ளுவர் கூறியிருப்பதைக் கண்டீர்கள். திருவள்ளுவர்தான் கள்ளுண்ணுதலை முதன் முதலாகக் கண்டித்த அறநூல் ஆசான். ஒருவன் – ஒருத்தி என்ற நிலையில் வாழும் இல்லறமே உயர்ந்தது என்பதையும் திருவள்ளுவர் வற்புறுத்தியுள்ளார். எல்லா உயிர்க்கும் அருள் உணர்வு பூண்டு வாழ்வதே துறவறம். திருக்குறளுக்குப் பின்வந்த அறநூல்கள் பலவும் பண்பாடு மிக்க வாழ்க்கை நடத்தத் தேவையான நீதிகளை வற்புறுத்தியுள்ளன. இவற்றையெல்லாம் நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்.

பாடம் - 4

சைவ வைணவச் சமயங்கள் வளர்த்த பண்பாடு

4.0 பாட முன்னுரை

சிவம் என்ற சொல்லிலிருந்து சைவம் என்ற சொல் தோன்றியது. விஷ்ணு என்ற சொல்லிலிருந்து வைணவம் என்ற சொல் தோன்றியது. இவை இரண்டும் தமிழகத்தின் பழைமையான சமயங்கள். இவற்றின் கொள்கைகள், இச்சமயங்களை வளர்த்த பெரியவர்கள் பற்றி இங்குக் காணலாம்.

4.1 சமயங்கள் என்ற நதிகள்

இறைவன் ஒரு பெரிய கடல். கடலை யாராவது அளக்க முடியுமா? அதற்குக் கரைகள்தாம் உண்டா? இறைவனும் அப்படித்தான்! அந்தப் பெருங்கடலை நோக்கிச் சமயங்கள் என்ற ஆறுகள் ஓடுகின்றன. சைவம் ஓர் ஆறு; வைணவம் ஓர் ஆறு; பௌத்தம் ஓர் ஆறு; சமணம் ஓர் ஆறு; இசுலாம் ஓர் ஆறு; கிறித்தவம் ஓர் ஆறு. இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ! மதங்கள் எல்லாம் இறைவனை வழிபடும் மார்க்கங்களே. வழிகள் வேறுபடலாம். ஆனால் குறிக்கோள் ஒன்றுதான். அதனால்தான் இராமலிங்க அடிகள் இறைவனைக் குறிப்பிடுகையில்,

பொங்குபல சமயம்எனும் நதிகளெலாம்

புகுந்து கலந்து இடநிறைவாய்ப் பொங்கிஓங்கும்

கங்குகரை காணாத கடலே!

என்று பாடுகிறார். சமயங்கள் என்ற ஆறுகள் மனிதர்களின் மனஅழுக்கைப் போக்கித் தூய்மை செய்வன ஆகும்.

4.1.1 சமயங்கள் தோன்று முன்பு சமயங்கள் தோன்று முன்பே கடவுள் நம்பிக்கையும் வழிபாட்டு நெறிகளும் வழக்கத்தில் இருந்தன. அவரவர்களுக்கு விருப்பமான முறையில், வாழ்க்கை நெறிகளுக்கு ஏற்ற வகையில் வழிபாடு இருந்தது. கண்ணப்ப நாயனாருடைய வழிபாடு இதற்கு எடுத்துக்காட்டாகும். சிவபெருமானுக்கு இறைச்சியை அவர் படைத்தார். ஏன்? அவருக்குச் சைவ சமய நெறிகள் தெரியாது. அன்பு நிறைந்த அவர் செயல்களில் இறைவன் குறை காணவில்லை. குறவர்கள் ஆட்டை அறுத்துத் தினையரிசி பரப்பி முருகனை வழிபட்டனர்; முனிவர்கள் நீராடித் துவராடை (காவி வண்ண உடை) உடுத்து உச்சிக் கைகூப்பி முருகனை வழிபட்டனர். முருகன் இவ் இரண்டையும் ஒருநோக்கோடு கண்டதாக இலக்கியம் கூறுகின்றது. அவரவர் குடும்பமும் குலமும் அறிந்திருந்த வகையில் வழிபாடு இருந்தது.

4.1.2 தமிழரின் கடவுட்கொள்கை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் வாழ்வில் கடவுள் நம்பிக்கை மற்றும் கடவுளைப் பற்றிய சில கோட்பாடுகள் இருந்தன. இறந்தவரைப் புதைத்தல், புதைத்த இடத்தில் மரங்களை நட்டு வளர்த்தல், மரங்களைக் கடவுளாகக் கருதி வழிபடுதல் ஆகிய பழக்கங்கள் பழந்தமிழர் வாழ்வில் இடம்பெற்றிருந்தன. மரத்தைக் கடவுள் மரம் என்று குறிப்பிட்டுள்ள நிலை அறியப்படுகின்றது. மரத்தின் அடிப்பகுதி, நீர்த்துறை, மன்றம் எனப்படும் பலர் கூடுமிடம், தெருக்கள் சந்திக்கும் இடம் ஆகிய இடங்களில் கடவுட் படிமங்களை வைத்து வழிபட்டனர். மரத்தை நட்டுக் கடவுளாக வழிபட்ட நிலையிலிருந்தே லிங்க வழிபாடு தோன்றியிருக்க வேண்டுமென்று அறிஞர் கருதுகின்றனர். இன்றும் தமிழ்நாட்டுக் கோயில்கள் சிலவற்றில் மரங்களும் கல்லால் உருவாக்கப் பெற்ற கம்பங்களும் தெய்வங்களாக வழிபடப்படுகின்றன.

4.2 பெண்மையைப் போற்றிய சைவம்

சைவ சமயத்தினர் கொல்லாமையைப் பெரிதும் போற்றினர். புலால் உணவை மறுத்தவர் சைவர் என இன்றும் கூறப்பெறுவதைக் காணலாம். சைவம், சாதி வேற்றுமை, தீண்டாமை ஆகியவற்றுக்கு இடம் தரவில்லை. இவற்றைச் சைவர் தீமைகள் எனக் கருதி ஒதுக்கவும் செய்தனர். சிவபெருமான்மீது அன்பு செலுத்தும் அடியவர்களிடையே எந்தப் பாகுபாடும்

இல்லை என்பது சைவர் கொள்கையாக இருந்தது. வைதிக நெறி பரப்பிய கோத்திரம், வருணம் ஆகியவற்றுக்குச் சைவ சமயம் இடம் கொடுக்கவில்லை. இறைவன் ஒருவன். அவனை அன்பு நெறியால் அடையலாம்; இறைவன் அருளால் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என்பது சைவ சமயத்தின் மெய்ப்பொருளாகும். சைவம் பெண்களுக்கும் உரிமை கொடுத்தது. பெண்களும் முத்தி அடைய முடியும் என்று சைவம் கற்பித்தது.

4.2.1 சாதி வேற்றுமை கருதாத சைவம் திருஞானசம்பந்தர் பிறப்பால் பிராமணர். நந்தனார் தாழ்த்தப்பட்டவர். சேரமான் பெருமாள் அரசர். கண்ணப்பர் வேடர். இவர்களிடையே எந்தவித வேறுபாட்டையும் சைவம் கற்பிக்கவில்லை. நந்தனாரின் அன்பின் பெருமையை இறைவன் தில்லைவாழ் அந்தணர்களுக்கு உணர்த்துகிறான். கண்ணப்பர் என்ற வேடர் பற்றிச் சிவகோசரியார் என்ற முனிவரிடம் சிவபெருமான் கூறும்போது “அவனுடைய வடிவம் எல்லாம் அன்பு; அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியது” என்று கூறுகிறார். கண்ணப்பரைப் போல இறைவனிடம் அன்பு செலுத்த யாரால் முடியும் என்று முற்றும் துறந்த பட்டினத்தார் கூறுகின்றார். மனிதர்களைச் சாதியால் பிரித்துப் பார்க்காதது சைவம். சுந்தரர் அந்தணர் குலத்தில் பிறந்தார்; அரசரால் வளர்க்கப்பட்டார்; வேறு குலத்துப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்.

4.2.2 எது மெய்ப்பொருள்? கண்ணப்பர்

உலகில் உண்மையான பொருள் ஒன்றே! அது சிவம் என்பது சைவர்களின் கொள்கையாகும். உயிர்கள் தாம் செய்யும் பாவபுண்ணியங்களுக்கு ஏற்பப் பிறவிகளைப் பெறுகின்றன. இறைவனைத் தொழுது தீவினை தவிர்த்து உயிர்கள் பிறப்பு நீங்கலாம் என்று சைவம் கூறுகின்றது. வினையை ஒருவன் அனுபவித்தே ஆகவேண்டும். “பிறவாமை வேண்டும்; வினை காரணமாக மீண்டும் பிறப்பு இருந்தால் இறைவனை மறவாத நெஞ்சம் வேண்டும்” என்பதே அடியவர்களின் வேண்டுகோளாக இருந்தது. அழுதும் தொழுதும் இறைவனை வேண்டி அவன் அருளைப் பெறலாம் என்பது அடியவர்களின் நம்பிக்கை. சிவத்தை உணரும் ஞானமே மெய்யறிவாகும். அந்த ஞானம் வீடுபேற்றைத் தரும் என அடியவர் கருதினர்.

4.2.3 பெண்மையைப் போற்றிய சைவம் இசைஞானியார்

சைவ உலகில் பெண்களை இழிவாகக் கருதும் நிலை இல்லை. பரவையார், சங்கிலியார், இசை ஞானியார், காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார் ஆகியோர் சைவம் வளர்த்த பெண்மணிகள். காரைக்காலம்மையார் இறைவனின் அருள் பெற்றவர். இறைவன் ஆடும்போது அந்த ஆடலுக்குரிய பாடலைப் பண்ணோடு இசைத்த மூதாட்டி. சைவக்கோயில்களில் உள்ள 63 நாயன்மார்களின் உருவச் சிலைகளைப் பார்த்திருக்கிறீர்களா?

காரைக்காலம்மையார்

மங்கையர்க்கரசியார்

எல்லோரும் நின்று கொண்டிருக்கக் காரைக்காலம்மையார் உட்கார்ந்திருப்பார். இறைவன் இவரை அம்மையே! என அழைத்தான். மங்கையர்க்கரசியார் பாண்டியனின் மனைவி. இவரைத் திருஞான சம்பந்தர் “மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச்செல்வி பாண்டிமாதேவி” என்று பாடுகின்றார். செம்பியன்மாதேவி என்ற சோழர்குல அரசி சிவபெருமானுக்குப் பல கோயில்களைக் கட்டிய பெருமைக்கு உரியவர். இவர் பெயரால் தமிழகத்தில் ஓர் ஊர் உள்ளது.

4.3 நாயன்மார்களும் பண்பாடும்

நாயன்மார்களின் வாழ்க்கையிலிருந்து பலப்பல நற்பண்புகள் அறியப் பெறுகின்றன. குணம் என்ற குன்று ஏறி நின்ற பெரியோர்கள் அவர்கள்!

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு (குறள்; 997)

என்று திருக்குறள் கூறுவது போலத் தமக்குத் துன்பம் செய்தவர்களுக்கும் நல்லனவற்றையே செய்யும் பண்பை நாயன்மார்களிடம் காணலாம். திருக்கோயிலூர் மன்னராக விளங்கியவர் மெய்ப்பொருள் நாயனார். திருநீறு பூசியவர்களைத் தம் மனத்திற்கு உகந்தவர்களாகப் போற்றி வழிபாடு செய்பவர் இவர். இவருடைய பகைவன் முத்தநாதன் மனத்தினுள் இவரை வீழ்த்தும் கருத்துக் கொண்டிருந்தான். அதனால் ஒரு குறுவாளை ஓலைச் சுவடிக்கிடையில் மறைத்து எடுத்துக் கொண்டு, திருநீறுபூசிச் சிவனடியார் போலக் கோலம் கொண்டு நாயனாரைச் சந்தித்தான். இறைவனுக்குரிய மெய்ப்பொருளைக் கற்பிப்பதாகக் கூறிக் குறுவாளால் அவரைக் குத்தினான். அப்போது முத்தநாதனைப் பாய்ந்து கொல்ல வந்த தம் மெய்க்காப்பாளரான தத்தனை, நாயனார் பார்த்தார். “தத்தா இவர் நம்மவர், இவரை இடையூறில்லாமல் செல்ல விடு” என்றார். மெய்ப்பொருள் நாயனாரின் வரலாறு, சான்றாண்மைப் பண்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். திருநாவுக்கரசரைச் சுண்ணாம்பு வேகவைக்கும் அறையில் அடைத்து வைத்தார்கள்; உணவில் நஞ்சு கலந்து கொடுத்தார்கள்; யானையை ஏவிக் கொல்ல முயன்றார்கள்; கல்லிலே கட்டிக் கடலிலே எறிந்தார்கள். எல்லாவற்றிலும் அவர் பிழைத்துக் கொண்டார். தம்மை இவ்வாறெல்லாம் செய்ய ஆணையிட்ட அரசனை அவர் வசை மொழியவில்லை. அரசனுக்கு எதிராக இயக்கம் நடத்தவில்லை. இத்தகைய பண்பாடு நாயன்மார்கள் வாழ்க்கையில் காணப்படுகின்றது.

4.3.1 அப்பரும் சம்பந்தரும் அப்பரும் சம்பந்தரும்

திருநாவுக்கரசரின் மற்றொரு பெயர் அப்பர். அப்பர் என்ற பெயரை யார் வழங்கினார் என்பது தெரியுமா? திருஞானசம்பந்தர்தான் திருநாவுக்கரசரை அப்பர் என்று அழைத்தார். சம்பந்தர் ஏறிவந்த பல்லக்கை அப்பர் சுமந்தார். இருவரும் வேதாரணியம் என்ற திருமறைக்காட்டில் கோயில் கதவு திறக்கவும் மூடவும் பாடினர். திருநாவுக்கரசர் வேளாளர் மரபைச் சார்ந்தவர். திருஞானசம்பந்தர் அந்தணர் குலத்தவர். எனினும் இருவரிடையே வேறுபாடில்லாமல் இருந்தது. இதுவே சைவம் வளர்த்த பண்பாடு.

4.3.2 அப்பரும் அப்பூதியும் திங்களூர் என்ற ஊரில் அப்பூதி என்று ஒரு அந்தண நாயனார் இருந்தார். இவர் திருநாவுக்கரசரிடம் (அப்பர்) பேரன்பு கொண்டிருந்தார். தம் பிள்ளைகளுக்கெல்லாம் திருநாவுக்கரசு என்றே பெயர் சூட்டினார். வீட்டிலுள்ள பொருள்களெல்லாம் திருநாவுக்கரசு என்றே பெயர் கொண்டன. திருநாவுக்கரசரின் பெயரால் அறச்சாலைகள் நிறுவினார்; தண்ணீர்ப்பந்தல் வைத்துத் தருமம் செய்தார். இவர் அப்பரைப் பார்த்ததில்லை. ஒருநாள் அப்பர் திங்களூருக்கு வந்தார். தம் பெயரே எங்கும் விளங்குவது கண்டார். அப்பூதியை அவருடைய இல்லத்தில் வந்து கண்டார். “உங்களுடைய பெயரில் தருமம் செய்யாமல் வேறொரு பெயரில் தருமம் செய்ய வேண்டிய காரணம் என்ன” என்று கேட்டார். அப்பூதி இதுகேட்டுக் கோபம் கொண்டார். “கல்லில் கட்டிக் கடலில் போட்டபோதும் கரையேறிய அப்பரின் பெருமை அறியாத நீர் யார்” என்று அப்பூதி கேட்டார். பிறகு தம்முன் நிற்பவர் அப்பரே என்று அறிந்து அவரைப் பணிந்தார். அப்பூதியின் அன்பு எல்லை அற்றது. தம் மகனைப் பாம்பு தீண்டி அவன் இறந்த நிலையிலும் அவர் அப்பருக்கு விருந்து செய்யத் தயங்கவில்லை. “பெரியவருக்கு அமுது செய்யும் வேளையில் இவன் இடையூறு செய்தான்” என்று மகனைக் குறித்து எண்ணினார். வருணப் பாகுபாடு இவர்கள் வாழ்க்கையில் மதிப்பு இழந்துவிட்டது.

4.3.3 சுந்தரரும் சேரமான் பெருமாளும் சுந்தரர்

சுந்தரர் இறைவனுடைய தோழர். தம்பிரான் தோழர் என்று அழைக்கப்பட்டவர். சேரமான் பெருமாள் சேரநாட்டு மன்னர். சுந்தரரும் சேரமான் பெருமாளும் நண்பர்கள். நட்பு என்றால் எந்த அளவு என்று காணுங்கள்! சுந்தரருக்கு வான் உலகத்திலிருந்து அழைப்பு வந்தது. சிவபெருமான் சுந்தரரை அழைத்துவர இந்திரனின் வெள்ளை யானையை அனுப்பியிருந்தார்.

சுந்தரரும் சேரமான் பெருமாளும்

சுந்தரர் யானைமீது ஏறியவுடன் தம் மனைவிமார்களை எண்ணவில்லை; தம் நண்பர் சேரமான் பெருமாள் தம்முடன் வரவில்லையே என்று கருதினார். இதனை அறிந்த சேரமான் தம் குதிரையில் ஏறினார். குதிரையின் காதில் நமச்சிவாய மந்திரத்தை ஓதினார். அந்த அளவில் சேரமான் குதிரை சுந்தரரின் யானையை வலமாகச் சுற்றி அதன் முன்னே சென்றது. இறைவன் பெயர் எதையும் செய்ய வல்லது என்பதை இந்நிகழ்வு காட்டும்.

4.4 வைணவம் வளர்த்த பண்புகள்

திருமாலிடம் அன்பு பூண்டவர்கள் வைணவர்கள்; அவனே முழுமுதல் தெய்வம் என்ற கருத்துடையவர்கள். உலகம் எல்லாவற்றையும் உயிர்கள் எல்லாவற்றையும் காக்கும் தொழிலைத் திருமால் செய்கிறார் எனக் கூறுகிறது வைணவம். இறைவனிடம் ‘நீயே சரணம்’ என்று அடைக்கலம் கொண்டால் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபடலாம் என்று கூறுகிறது வைணவம். இந்திரலோகத்தை ஆளும் பேற்றைவிடத் திருமாலின் இணையடிகளைத் தொழும்பேறு உயர்ந்தது என்கிறார் ஆழ்வார்.

பச்சைமா மலைபோல் மேனிப் பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே!

(நாலா, மர்ரே: 872)

என்பது தொண்டரடிப்பொடியாழ்வாரின் கூற்றாகும்.

4.4.1 வைணவம் காட்டும் சமரசம் திருமாலும் சிவனும் இணைந்த காட்சி

“அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவர் வாயில் மண்ணு” என்பது பழமொழி. இரு சமயங்களுக்கிடையே பெரிய வேறுபாடுகள் இல்லை. அறியாதவர்கள் வேறுபாடுகளைக் கற்பித்து மதச்சண்டைகளை உருவாக்கி விட்டனர். ஆழ்வாருக்குத் திருமாலும் சிவபெருமானும் வேறு வேறாகத் தோன்றவில்லை.

தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்

சூழ் அரவும் பொன்நாணும் தோன்றுமால் சூழும்

திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு

இரண்டுருவும் ஒன்றாய் இணைந்து

(நாலா, மர்ரே: 2344)

என்கிறார் பேயாழ்வார். தாழ்சடை, மழுவாயுதம், அரவு (பாம்பு) ஆகியன சிவபெருமானுக்கு உரியன; நீண்டமுடி, சக்கரம், பொன்நாண் ஆகியன திருமாலுக்கு உரியன. இவையெல்லாம் ஒன்றாகத் தோன்றுகின்றன என்கிறார் ஆழ்வார். இதுவே தமிழர் கண்ட சமரச ஞானம்.

4.4.2 வைணவ மெய்ப்பொருள் உலகத் தோற்றத்திற்கு முதற்காரணம், துணைக்காரணம், நிமித்த காரணம் என்ற மூன்றாகவும் இருப்பவன் திருமால். ஒரு பானை உருவாவதற்கு முதற்காரணம் மண்; பானையை உருவாக்கும் குயவன் நிமித்த காரணம்; சக்கரம் துணைக்காரணம். இதேபோல உலகம் உருவாக அனைத்துமாகவும் இருப்பவன் திருமால் என்கிறது வைணவம். வைணவத்தில் பக்தி நெறி என்பது விரதம், தவம், தியானம், பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சி ஆகியவற்றையெல்லாம் உட்கொண்டது. இந்த நெறி எல்லாராலும் பின்பற்ற முடியாது. எனவே வைணவம் பிரபத்தி நெறி என்ற ஒன்றை வகுத்துத் தந்தது. பிரபத்தி என்றால் சிறந்த பக்தி என்பது பொருள். இந்த நெறிக்குக் கட்டுப்பாடுகள் இல்லை. நீராடுதல், மந்திரம் சொல்லுதல் போன்றவையெல்லாம் பிரபத்தி நெறியில் இல்லை.

புகழ் ஒன்று இல்லா அடியேன் உன்

அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!

என்ற எளிமையே இறைவனை அடையப் போதுமானது.

4.4.3 திவ்வியப் பிரபந்தம் ஆழ்வார்கள் பன்னிருவரும் பாடிய நாலாயிரம் பாசுரங்கள் திவ்விய பிரபந்தம் எனப்பெறும். இது திராவிட வேதசாகரம் அதாவது தமிழ் வேதக்கடல் எனப்பட்டது. நாலாயிரத்தில் 1296 பாசுரங்கள் நம்மாழ்வாரால் பாடப்பட்டவை. நம்மாழ்வார் ஆழ்வார்களில் தலைமையானவர். இவர் பாடிய 1296 பாசுரங்களில் 1102 பாசுரங்கள் திருவாய்மொழி எனப்படும்.

இதனை,

“சாந்தியினை நேராக உடைய நல்ல

சடகோபர் அமுதத்தைத் தாமே உண்டு

தீந்தமிழ் என்று ஒருகோடி வேதமாகும்

செய்ய திருவாய்மொழிந்தார் ……”

என்று பிற நூலும் பாராட்டக் காணலாம். “வடமொழி வேத வேதாந்தங்களில் தோன்றுகிற ஐயந்திரிபுகளைத் திருவாய்மொழியினைக் கொண்டு தெளிகின்றோம்” என்று வேதாந்த தேசிகர் என்ற பேரறிஞர் கூறுகின்றார். இந்தத் திருவாய்மொழிக்கு ஐந்து உரைகள் உள்ளன.

4.5 வைணவப் பெரியார்கள் வளர்த்த பண்பாடு

வைணவப் பெரியார்கள் திருமாலின் அவதாரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள். இராம அவதாரத்தையும் கிருஷ்ண அவதாரத்தையும் மனம் குளிரப் பாடுபவர்கள். கொடியவர்களை அடக்கி நல்லோர்களைக் காக்கின்ற இறைவனின் திருக்குணத்தை இவர்கள் பெரிதும் போற்றக் காணலாம். மனிதர்களைப் பாடுவதில்லை என்று உறுதி பூண்ட பெரியோர்கள் இவர்கள்.

என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள்!

மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்

(நாலா, மர்ரே: 3212)

என்று கேட்கிறார் நம்மாழ்வார். இந்தப் பொருள் எதற்கு? எத்தனை நாளைக்குப் போதும்? என்று கூறி இறைவனைப் பாடி இந்தச் சன்மத்தை அதாவது பிறவியை ஒழித்துக் கொள்வதே நல்லது என்கிறார் அவர். இறைவனையே வணங்கும் பெருமை, அடியார்களின் முன் எளியவராய்ப் பணிந்து வாழும் தன்மை, இறைவனின் அவதாரப் பெருமைகளைப் பேசுதல் ஆகியவற்றை வைணவப் பெரியோர்கள் தம் பண்புகளாகக் கொண்டிருந்தனர்.

இராமானுஜர் வைணவ சமயத்தை நாடெங்கும் பரப்பியவர். வைணவர்களால் மதிப்புக்குரியவராக வணங்கப்பட்டவர். அவர் ஒருமுறை திருப்பதி சென்றார். திருப்பதி கோயில் நிர்வாகப் பொறுப்பிலிருந்த பெரிய திருமலைநம்பி என்ற முதியவர் இராமானுஜரை வரவேற்க ஏழு மலைகளையும் கடந்து கீழே வந்து காத்திருந்தார். இராமானுஜர் அவரிடம் “என்னை வரவேற்க யாராவது ஒரு சிறியவரை அனுப்பியிருக்கக் கூடாதா?” என்று கேட்டார். அதற்குத் திருமலைநம்பி “நானும் அதைத்தான் நினைத்தேன். ஆனால் என்னைவிடச் சிறியவர் யாரும் இல்லையே” என்றார். இந்த எளிமை வைணவர்கள் வளர்த்த பண்பாடாகும்.

4.5.1 சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள்

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் பெண். அவர்தாம் ஆண்டாள். திருவில்லிப்புத்தூர் நந்தவனத்தில் பெரியாழ்வார் தாம் கண்டெடுத்த குழந்தையைக் கோதை என்று பெயர் சூட்டி வளர்த்தார். இக்கோதையே ஆண்டாள் எனும் ஆழ்வார். பெரியாழ்வார் திருமாலுக்கென்று கட்டி வைத்த மாலையை ஆண்டாள் தான் சூடிக்கொண்டு கண்ணாடியில் பார்த்து மகிழ்வாள். ஒருநாள் இதைக்கண்ட ஆழ்வார் ஆண்டாளைக் கோபித்துக்கொண்டார்; மாலை புனிதம் கெட்டுவிட்டது என்றார். ஆனால் திருமால் பெரியாழ்வார் கனவில் தோன்றி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையே தமக்கு வேண்டும் என்று கேட்டார்.

பெரியாழ்வாரும் ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த மாலையைத் திருமாலுக்குச் சூட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டார். இறுதியில் ஆண்டாள் திருமாலோடு இரண்டறக் கலந்தார். பெரியாழ்வார்,

ஒருமகள் தன்னை உடையேன்

உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல வளர்த்தேன்

செங்கண்மால் தான்கொண்டு போனான்

(நாலா, மர்ரே: 299)

என்று பாடுகிறார். ஆண்டாளின் திருப்பாவை, தமிழகத்து வீதிகளில், மார்கழி மாதத்தில் பாடப்பெறுகின்றது.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!

(நாலா, மர்ரே: 273)

4.5.2 குலசேகரர் பன்னிரண்டு ஆழ்வார்களில் மற்றொருவர் குலசேகரர். இவர் சேரமன்னர். திருமாலிடம் பேரன்பு கொண்டவர். திருப்பதி மலைமீது மீனாகவும் வண்டாகவும் குருகுப் பறவையாகவும் நடந்து செல்லும் படியாகவும் விளங்க வேண்டுமென்று நெஞ்சுருகப் பாடும் அவர்,

“எம்பெருமான் பொன்மலையில் ஏதேனும் ஆவேனே”

(நாலா, மர்ரே: 1440)

என்று கூறுகிறார். குலசேகரர் ஒருமுறை இராமாயணக் கதை கேட்டுக் கொண்டிருந்தார். காட்டில் இருந்த இராமனோடு போரிடக் கரன் முதலான 14000 வீரர்கள் திரண்டனர் என்று கதை சொல்லும் பாகவதர் சொல்லிக் கொண்டிருந்தார். குலசேகரர் நடப்பது கதை என்பதை மறந்தார். அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கப் போவதாக நினைத்தார்; இராமனைக் காப்பாற்ற வேண்டுமென்றும் கருதினார். எனவே தம் அமைச்சரை அழைத்து ‘நம் படைகளை உடனே புறப்படச் செய்யுங்கள். இராமனைக் காக்க வேண்டும்’ என்று கூறினார். அந்த அளவு பெருமாள்மீது குலசேகரருக்கு அன்பு இருந்தது. தானே தசரதனாக இருந்து அவர் பாடியுள்ள பாடல்கள் கல்லையும் உருக்கிவிடும். இது மட்டுமா? இந்த அரசர் தன்னையே தசரதனாக நினைத்துக் கொண்டு, இராமன் காட்டுக்குப் போவது பற்றிக் கருதினார், அவர் உள்ளம் அழுதது.

4.5.3 இராமானுஜர் வைணவ சமயத்தைப் பிற்காலத்தில் வளர்த்த பெருமை இராமானுஜரையே சாரும். இவர் பெரிய சீர்திருத்தவாதி. இவர் எம்பெருமானார் என்றும் யதிராஜர் என்றும் அழைக்கப்பட்டார். திருக்கோஷ்டியூர் நம்பி என்ற பெரியவர் “யாருக்கும் சொல்லக்கூடாது, நீ மட்டும் கேட்டுக்கொள்” என்று கூறிய நாராயண மகா மந்திரத்தை இராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோயில் மதிலேறி நின்று ஊரார் எல்லாரும் கேட்க உரைத்தார். “குருவாகிய நான் சொன்னதை விட்டு விட்டுத் தவறு செய்த உனக்கு நரகம் கிடைக்கும் என்பது தெரியுமா?” என்று கேட்டார் திருக்கோஷ்டியூர் நம்பி. அதற்கு இராமானுஜர் “தெரியும். நான் ஒருவன் நரகத்துக்குப் போனாலும் மகாமந்திரம் கேட்ட எல்லாரும் வைகுந்தமாகிய சொர்க்கத்துக்குப் போவார்களே என்றுதான் அப்படிச் செய்தேன்” என்றார். இராமானுஜர் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பூணூல் அணிவித்து அவர்களைத் திருக்குலத்தார் என்று அழைத்தார். சமய உலகில் இராமானுஜர் வளர்த்த பண்பாடு மிகவும் போற்றத்தக்கது.

4.6 தொகுப்புரை

சைவமும் வைணவமும் தமிழ்நாட்டில் பக்தி இயக்கத்தை வலிமை மிக்கதாக வளர்த்தன. கோயில்கள் பெருக இந்தச் சமயங்கள் ஆற்றியுள்ள தொண்டு மிகவும் பெரியது. சாதி பேதமற்ற சமரசத்தை இந்தச் சமயங்கள் வளர்த்தன; தமிழை வளர்த்தன; மக்களிடையே கலந்து பழகும் ஒரு சமுதாய உணர்வையும் இவை உருவாக்கின. திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், குலசேகரரும், இராமானுஜரும் பேணிவளர்த்தது நம் தமிழ்ப் பண்பாடு. வேறுபட்ட சமயங்களுக்கிடையில் ஒரு பண்பாட்டுக் கயிறு ஊடாடிக்கிடப்பதை நாம் காணலாம். இதுவே தமிழகத்தின் மிகப் பெரிய வலிமை. இச்செய்திகள் இப்பாடத்தின் வழியே கூறப்பட்டன.

பாடம் - 5

சமண பௌத்த சமயங்கள் வளர்த்த பண்பாடு

5.0 பாட முன்னுரை

இந்தியாவின் வடபகுதியில் வழங்கிய வேதங்களின் அடிப்படையான வாழ்க்கை நெறியைத் தழுவிய சமயம் வைதிக சமயம் எனப்பட்டது. இந்த வைதிக சமயத்திற்கு மறுப்பாக எழுந்தவை சமணம், பௌத்தம் எனும் இருபெரும் சமயங்களாகும். சமண சமயக் கொள்கைகளை உலகத்தில் பரப்பியவர் தீர்த்தங்கரர்கள் எனப்பட்டனர். இதுவரையில் தோன்றிய தீர்த்தங்கரர்கள் இருபத்து நால்வராவர். முதல் தீர்த்தங்கரர் விருஷபதேவர் என்றும் ஆதிநாதர் என்றும் வழங்கப்படுகிறார். இந்த விருஷபதேவரே ஆதிபகவன் என்றும் சிலர் கூறுவர். இருபத்து நான்காவது தீர்த்தங்கரர் மகாவீரர் ஆவார். தென்னாட்டில் சமண சமயம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் புகுந்ததாக அறிஞர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் சமண சமயத்தை விசாக முனிவர் என்பவரே பரப்பியதாகக் கூறுகின்றனர்.

பௌத்த சமயம் கௌதம புத்தரால் உருவாக்கப் பெற்றது. அரச குலத்தில் பிறந்த சித்தார்த்தர் உலகத் துன்பங்களைக் கண்டு அவற்றிலிருந்து மனித குலம் விடுதலை பெறவேண்டுமென்று கருதினார். அதன்பொருட்டுத் தோற்றுவிக்கப் பெற்றதே பௌத்த சமயமாகும். தமிழகத்தில் பௌத்த சமயம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே புகுந்து விட்டதாக அறிஞர்கள் கூறுகின்றனர். இவ்விரண்டு சமயங்களைக் குறித்தும் அவை தமிழர்கள் பண்பாட்டில் விளைவித்த மாற்றங்கள் குறித்தும் இங்குக் காணலாம்.

5.1 வட இந்தியச் சமயங்கள்

வட இந்தியாவில் ஆரிய நெறியினரால் உண்டாக்கப் பெற்ற நான்கு வேதங்கள் வைதிக சமயம் உருவாக அடித்தளமாக அமைந்தன. வேத நெறியைக் கூறுவதே வைதிக சமயமாகும். அக்னி, வாயு, வருணன், இந்திரன், எமன் முதலான பல தெய்வங்களை வழிபாடு செய்து கொண்டிருந்த வைதிக சமயம் ஒரு தெய்வக் கொள்கை உடையதாக உருப்பெற்றது. அச்சமயத்தால் குறிப்பிடப்பெற்ற ஒரு தெய்வம் பிரஜாபதியாகும். மனிதன் செய்யும் கருமங்களுக்குத் தகுந்தாற்போலப் பிறவிகள் அமையும் என்ற கருத்தை வேதங்கள் கூறுகின்றன. உயிரானது பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை; புதிதாக உண்டாகிவிடுவதும் இல்லை; உண்டாகி இல்லாமல் போவதும் இல்லை; உயிர் மரணம் அடைவதும் இல்லை. இறப்பை அடைவது உடல் மட்டுமே என்று வைதிக சமயத்தின் முக்கியமான நூலாகிய பகவத்கீதை கூறுகின்றது.

வைதிக சமயத்திற்கு எதிராக வடநாட்டில் தோன்றிய சமயங்கள் லோகாயதம், சமணம், பௌத்தம் ஆகியனவாகும். இவற்றில் சமணமும், பௌத்தமும் மக்களிடையே மிகப்பெரிய ஆதரவைப் பெற்றன. இதற்குக் காரணமானவர்கள் மகாவீரரும் புத்தரும் ஆவார்கள்.

5.1.1 வைதிக மறுப்பு வைதிக சமயம் கூறிய ஆத்மாவைப் பற்றிய கொள்கையில் சமண பௌத்த சமயங்கள் மாறுபாடு கொண்டிருந்தன. ஆத்மாக்கள் பல என்பது சமணர்களுடைய கருத்தாகும். உலகத் தோற்றத்திற்கு மூலப்பொருள் ஒன்றில்லை. அவை பலவாகும். அவற்றை ஜீவன், அஜீவன் என்று இரண்டு வகைப்படுத்தலாம் என்பது சமணர்களுடைய கொள்கையாகும். பௌத்த சமயம் கடவுளைப் பற்றியோ ஆத்மாவைப் பற்றியோ ஒன்றும் கருத்துத் தெரிவிக்கவில்லை. ஒரு பொருளைக் காணுதல் அதனைப் பற்றிக் கருதுதல் ஆகியவற்றின் வழியாகவே உண்மையை அறியமுடியும் என்று கூறும் பௌத்தம், வேத விளக்கங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறு வைதிக சமயத்தை மறுத்த இருபெரும் சமயங்களாகச் சமணமும் பௌத்தமும் திகழ்கின்றன.

5.1.2 கடவுள் சிந்தனையில் மாறுபாடு வைதிக சமயம் பல்வேறு தெய்வங்களை வழிபட்ட நிலையிலிருந்து பிரஜாபதி அல்லது விசுவகர்மன் எனும் ஒரு தெய்வம் உள்ளதென்ற கருத்துக்கு வந்தது. நானே கடவுள் என்று ஒவ்வொரு ஆத்மாவும் உணரவேண்டுமென்பதே வைதிக சமயத்தின் கருத்தாகும். சமண சமயம் இந்த உலகத்தைப் படைக்க ஒரு கடவுள் வேண்டியதில்லை என்று கூறுகின்றது. உலகம் படைக்கப்பட்டது என்றும் சமணர் கூறுவதில்லை. கடவுள் இல்லை என்ற வாதத்தைத் தோற்றுவித்தவர் சமணர்களே ஆவர். சமணம் அறிவு பக்குவம் அடைந்த மனிதனைக் கடவுள் நிலைக்கு உயர்த்தி வழிகாட்டச் செய்கின்றது. பௌத்தர் கடவுளைப் பற்றிய எக்கருத்தும் கொண்டவர்களாக இல்லை. வினையைத் தனக்கு உரியவர்களோடு சேர்க்க ஒரு கடவுள் வேண்டியதில்லை என்பது பௌத்தக் கொள்கையாகும். இவ்வாறு கடவுளைப் பற்றிய கருத்தில் சமணம், பௌத்தம் வைதிகத்தோடு மாறுபடுகின்றன.

5.1.3 புதிய அறநெறிகள் சமண, பௌத்த சமயங்கள் தமிழர்கள் பண்பாட்டில் பல புதிய அறநெறிகளை வகுத்தளித்தன. அவற்றில், கொல்லாமை ஒன்று.

வைதிக சமயத்தில் உயிர்ப் பலிகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. பழந்தமிழர் வாழ்விலும் வழிபாட்டிலும் பலியிடுதல் இடம் பெற்றிருந்தது. சமண, பௌத்த சமயங்களின் நுழைவிற்குப் பிறகு தமிழ்நாட்டில் கொல்லாமை ஒரு பெரிய அறமாகக் கருதப்பட்டது. அதேபோலக் கள்ளுண்ணுதலும் புறக்கணிக்கத்தக்க ஒரு செயலாகச் சமண, பௌத்த சமயங்களால் கூறப்பட்டது. தமிழ்நாட்டிலே பண்டை இலக்கியங்கள் கள்ளுண்ணுதலைத் தவறானதாகக் கூறவில்லை. திருக்குறள் போன்ற அறநூல்கள் கள்ளுண்ணுதலைக் கண்டிக்கின்றன. அதற்குக் காரணம் சமண, பௌத்த சமயங்களின் பரவலே என்று அறிஞர் கூறுகின்றனர். உயிர், உடம்பு, பொருள், இளமை ஆகியன நிலையாக நில்லாமல் மறைந்துவிடக் கூடியன. அவற்றை உணர்ந்து ஒரு மனிதன் அறத்தைச் செய்பவனாக மாறவேண்டுமென்று சமண, பௌத்த சமயங்கள் வற்புறுத்தின. துறவுநெறி, பணிவு, மனித நேயம் என்று சமண, பௌத்த சமயங்கள் கற்பித்தன. இந்நெறிகள் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தின.

5.2 சமணம்

துறவு கொண்டவர்களே வீடுபேறு பெறலாம் என்று சமண மதம் கூறுகின்றது. உயிர், உடம்பு முழுதும் பரவி நிற்கிறது. உடம்பின் உருவத்திற்கேற்றபடி உயிரின் அளவு அமையும். எறும்பின் உயிரும், யானையின் உயிரும் ஓர் அளவுடையனவல்ல. உயிர்கள் நல்ல அறிவும், நல்ல ஞானமும் பெற்று வினைகள் நீங்கி வீடுபேறு அடையலாம் என்பன சமணர்களின் கொள்கையாகும். இந்தச் சமயம் தமிழ்நாட்டில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி மக்களிடையே நல்ல மதிப்பைப் பெற்றது.

5.2.1 தமிழ்நாட்டில் சமணர் சந்திரகுப்த அரசருடைய சமய குரு பத்திரபாகு முனிவர் என்பவர். சந்திரகுப்தருடைய நாடாகிய மகத நாட்டில் பஞ்சம் பரவுவதை அறிந்து பத்திரபாகு முனிவர் பன்னிரண்டாயிரம் முனிவர்களோடு தென்னாட்டிற்கு வந்தார். அவர்களோடு சந்திரகுப்த அரசரும் வந்ததாகக் கூறுகின்றனர். பத்திரபாகு முனிவருடன் வந்த அவருடைய சீடர் விசாக முனிவர் என்பவரே தமிழ்நாட்டில் சமண சமயத்தைப் பரப்பியவர் ஆவார். தமிழ் நாட்டு மக்களுள் பலர் சமண சமயத்தைத் தழுவினர். சங்ககாலப் புலவர்களுள் சமண சமயத்தைத் தழுவியவர்கள் இருந்தனர்.

5.2.2 சமண நெறிகள் வாழ்க்கையை இல்லறம், துறவறம் என இரண்டாகச் சமணர் பார்த்தனர். உலகத்தைத் துறந்து வீடுபேற்றைக் கருதித் தவம் செய்வதைச் சமண முனிவர் வற்புறுத்தினர். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை ஆசையிலிருந்து விலக்கி அடக்குதல், கொல்லாமை, வாய்மை, பிறர் பொருளைத் திருடாமை, பற்று இல்லாமை ஆகியவற்றை இந்தத் துறவு நெறி வற்புறுத்தியது. சமண முனிவர்கள் புழு பூச்சிகளுக்குக்கூடத் துன்பம் செய்யாமல் வாழும் நெறியை வற்புறுத்தினர். கடுமையான நோன்புகளை இந்த முனிவர்கள் கடைப்பிடித்தனர். நீராடுதல், பல் தேய்த்தல் போன்ற செயல்கள்கூடப் பிற உயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் என்று கருதிச் சமண முனிவர் அவற்றைச் செய்வதில்லை. இல்லறத்தில் இருந்த சமணர் கொல்லாமை, வாய்மை, பிறர் பொருளைத் திருடாமை, பிறர் மனைவியை விரும்பாமை, பொருள்மீது அளவற்ற ஆசை இல்லாமை ஆகிய ஐந்து நெறிகளைக் கடைப்பிடித்தனர். இவைகளே சமணர்கள் தம் வாழ்வில் மேற்கொண்ட நெறிகளாகும்.

5.2.3 சமணர் பண்பாடு மனிதர்கள் அனைவரையும் சமமாக நோக்கும் பண்பைச் சமணர் வளர்த்தனர். உயர்வு தாழ்வு இல்லை என்பது அவர்கள் கருத்தாகும். துன்பப்படுபவர்களுக்கு உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி என்ற நான்கு தானங்களைச் செய்வதையே சமணர் பெரிய அறமாகக் கொண்டனர். தமிழர்கள் பண்பாட்டிலும் இத்தகைய கருத்துகளுக்கு இடமிருந்ததால், சமண சமயம் தமிழ்நாட்டில் பெருமதிப்புப் பெற்றது. தாய் மொழியை வளர்க்கும் ஆர்வம் உடையவர்களாகச் சமணர் இருந்தனர். மக்கள் அறியாத மொழிகளில் எழுதுவதை அவர்கள் தவிர்த்தார்கள். மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற உயிர்க்கொலை செய்யும் தொழில்களைச் சமணர்கள் போற்றவில்லை. அன்பு, அருள் ஆகியன சமணர்களின் அடிப்படைக் கொள்கையாய் இருந்தன. தமிழர்கள் பண்பாட்டில் அன்பும் அருளும் பெறுவதற்குச் சமணர்கள் காரணமாக இருந்தனர்.

5.3 பௌத்தம்

புத்தரால் தோற்றுவிக்கப் பெற்றதால் இந்தச் சமயம் பௌத்தம் எனப்பட்டது. உலக வாழ்க்கையை வெறுத்த சித்தார்த்தர் கடுமையான தவம் மேற்கொண்டு புத்தர் ஆனார். ஆசையே துன்பங்களுக்குக் காரணம் என்று அவர் உணர்ந்த உண்மையை உலகத்திற்கு அளித்தார். புத்தரான பிறகு ஒருநாள் அவர் அரச மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்தபோது சுஜாதை என்பவள் அவருக்குப் பால் உணவு ஒன்றை அளித்தாள். பசுக்களில் சிறந்த பசுவைத் தேர்ந்தெடுத்து, அதன் பாலைக் கறந்து அதைப் பலமுறை பக்குவம் செய்து சுவை சேர்த்து உலகத்தில் எங்கும் கிடைக்காத உணவாக அதை உருவாக்கியிருந்தாள். புத்தர் அதனை அருந்தினார். அவரிடம் உணவின் சுவையைப் பற்றிக் கேட்டார். புத்தர் புலன்களுக்கு அடிமையாகாதவராக இருந்ததனால் அந்த உணவு அவரைப் பெரிதும் கவரவில்லை. எனினும், நன்றாக இருந்தது என்று கூறினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு புத்தரை சுந்தன் என்ற வேடன் விருந்துக்கு அழைத்தான். வருவதாகப் புத்தரும் வாக்குறுதி கொடுத்துவிட்டார். விருந்தின் போது என்ன உணவு செய்திருக்கிறாய்? என்று கேட்டார். நல்ல பன்றியை நான் உணவாக்கி வைத்திருக்கிறேன் என்று சுந்தன் கூறினான். வாக்குறுதி கொடுத்துவிட்ட புத்தரால் அதனை மீற முடியவில்லை. பற்று இல்லாமல், சுவைக்கு அடிமை ஆகாமல் அந்த உணவை உட்கொண்டார்.

இரவில் வயிற்றுவலியால் புத்தர் துடித்தார். இறப்பு அவரை நெருங்கியது. அப்போது தனக்குப் பக்கத்திலிருந்த ஆனந்தர் என்ற சீடரிடம் “புத்தருக்கு சுஜாதை அளித்த பாலுணவும், சுந்தன் கொடுத்த இறைச்சி உணவும் ஒன்றுதான். புத்தரின் இறப்புக்கு சுந்தன் அளித்த உணவு காரணமில்லை என்று கூறுங்கள்” என்று கூறினார். இவ்வாறு எதையும் ஒரு பற்றில்லாமல் அணுகும் வாழ்க்கை முறையைப் பௌத்தம் வகுத்துத் தந்தது.

5.3.1 தமிழ்நாட்டில் பௌத்தர் அசோகச் சக்கரவர்த்தி வடநாட்டு மௌரிய மன்னர்களுள் குறிப்பிடத்தக்கவர். அவர் வெட்டி வைத்த கல்வெட்டுக்களில் தமிழ் நாட்டில் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் மருத்துவ நிலையங்கள் அமைத்தது குறித்துக் குறிப்புகள் உள்ளன. தர்ம வெற்றி என்ற அகிம்சை நெறியைத் தமிழ்நாட்டில் பரப்புவதை அம்மன்னர் தம் குறிக்கோளாகக் கொண்டார். இச் செய்திகளிலிருந்து அசோகர் காலத்திலேயே பௌத்தம் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டது என்பதை அறியலாம். தமிழ்நாட்டின் வழியாக இலங்கைக்கும் பௌத்தம் சென்றது.

5.3.2 பௌத்த நெறிகள் பற்றின் காரணமாகவே பிறப்பும் இறப்பும் உண்டாகின்றன. பற்றைத் துறந்தால் பிறப்பு இறப்பு நீங்கி வீடுபேறு அடையலாம் என்று பௌத்தம் கூறுகின்றது. வீடுபேறு அடைவதைப் பௌத்தம், நிர்வாணம் எனக் குறிப்பிடுகிறது. இந்த நிலையை அடைவதற்கு நான்கு உண்மைகளை அடையவேண்டும் என்று பௌத்தம் கூறுகிறது. அவையாவன:

துக்கம்

துக்க உணர்வுக்குக் காரணம்

துக்கத்தை நீக்கும் வழி

துக்கத்தை நீக்குவதற்குரிய மருந்து

பௌத்தம் ஐந்து வகையான நெறிகளைக் கடைப்பிடிக்குமாறு வற்புறுத்தியது. அவற்றைப் பஞ்சசீலம் என்று அவர்கள் கூறுவர். அவையாவன :

கொல்லாமை

பிறர் பொருளை விரும்பாமை

தவறான இன்பத்தைக் கொள்ளாமை

பொய் பேசாமை

கள் அருந்தாமை

தமிழகத்தில் பௌத்த நெறிகள் பலராலும் விரும்பப்பட்டன. இவை நல்ல நெறிகளாக மக்களால் கடைப்பிடிக்கப்பட்டன.

5.3.3 பௌத்தர் பண்பாடு பௌத்தத் துறவிகளின் கூட்டத்தைச் சங்கம் என்றழைத்தனர். இந்தச் சங்கம் பௌத்த சமயக் கொள்கைகள் பரவுவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தது. இவ்வாறு சமயப் பெரியோர் அருளுணர்ச்சி உடையவராகவும் பண்பாடு மிக்கவராகவும் இருந்தனர். இவர்கள் துன்பங்களைத் தாங்கிப் பழகினர். பிறருக்குத் துன்பம் செய்வதை அறவே வெறுத்தனர்.

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற் குரு

(குறள்; 271)

என்ற திருக்குறள் கூறும் நெறியே அவர்கள் நெறியாக அமைந்தது. வரும் துன்பத்தைத் தாங்குதல், பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை இவையே தவத்திற்கு உரியன என்பது இதன் பொருள். பெண்களுக்கும் சமய உலகில் பேரிடம் உள்ளது என்பதைப் பௌத்தம் வற்புறுத்தியது. மணிமேகலை என்ற பெண் துறவு பூண்டு பலருக்கும் ஞானத்தைக் கற்பித்ததை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

5.4 சமணர் தமிழ்த் தொண்டு

சமண சமயம் தமிழகம் வந்த பிறகு தமிழறிஞர்கள் பலர் சமணத்தைத் தழுவினர். ஊன் உணவு இல்லாத காய்கறி உணவை இப்போது சைவ உணவு எனக் கூறுகிறோம். ஆனால், பழங்காலத்தில் இவ்வகை உணவு ஆருகத உணவு எனப்பட்டது. ஆருகதம் என்பது சமணத்தின் மற்றொரு பெயர் ஆகும். மகாவீரர் என்ற சமணப் பெரியவர் மோட்சம் அடைந்த நாளே தீபாவளி ஆகும். இதனை இந்து சமயம் பிற்காலத்தில் தங்களுடைய விழாவாக ஆக்கிக் கொண்டது. இவ்வாறு மக்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்திய சமணர்கள், இலக்கிய, இலக்கணங்கள், நிகண்டுகள், சிறு பிரபந்தங்கள் ஆகியவற்றை இயற்றித் தமிழை வளமுடையதாக்கினர்.

5.4.1 இலக்கியம் சங்க காலத்தில் சமண அறிஞர் பலர் இலக்கியப் பணிகளைச் செய்துள்ளனர். ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் சமண சமயக் கருத்துகள் பலவற்றைக் கூறும் நூலாகும். சீவக சிந்தாமணி சமண முனிவராகிய திருத்தக்க தேவரால் இயற்றப்பட்டதாகும். ஐம்பெரும் காப்பியங்களில் வளையாபதி என்ற மற்றொரு காவியமும் சமணர் அளித்த நன்கொடையாகும். நாலடியார், பழமொழி நானூறு, ஏலாதி, சிறுபஞ்சமூலம், அறநெறிச்சாரம் ஆகிய அறநூல்கள் சமணர் அளித்தவையேயாகும்.

5.4.2 இலக்கணம் தொல்காப்பியம் உயிர்களை ஆறு வகையாகப் பகுத்துக் கூறுகின்றது. அது சமண சமயத்தைச் சார்ந்த கருத்தாகும் என அறிஞர்கள் கூறுகின்றனர். கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூல் என்னும் இலக்கண நூலும் இதற்குப் பின்னர்த் தோன்றிய நேமிநாதம், நம்பி அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய இலக்கண நூல்களும் சமணர் படைத்து அளித்தவையேயாகும். தமிழில் அதிக இலக்கண நூல்களை எழுதிய பெருமை சமணர்களையே சார்ந்ததாகும்.

5.4.3 பிற நூல்கள் செய்யுள் நூல்களுக்கு விரிவாக உரை எழுதுகின்ற ஒரு நிலையைச் சமணர்கள் வளர்த்தனர். இது கல்வி பெறுவதற்கு அடிப்படையாக ஆயிற்று. தொல்காப்பியத்திற்கு முதன்முதல் உரை எழுதியவர் இளம்பூரணர் என்ற சமணரே ஆவார். இவர் தமிழ்ப் பண்பாட்டு நிலையைத் தழுவி அந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார். அவரை அடுத்து உரை ஆசிரியர் பலர் தோன்றியுள்ளனர்.

இந்தக் காலத்தில் அகராதி என்ற நூல் வகையை நாம் அறிவோம். அந்த அகராதிகளுக்கு மூல நூல்கள் என்று குறிப்பிடப்படுவன நிகண்டுகள் என்பனவாகும். நிகண்டுகள் என்பன செய்யுள் வடிவில் உள்ள அகராதிகளேயாகும். அந்த நிகண்டினைத் தோற்றுவித்த பெருமை சமணர்களையே சாரும். திவாகரம், சூடாமணி, பிங்கலந்தை என்ற நிகண்டுகள் சமணர்களால் படைக்கப்பட்டன.

சிறு காப்பியங்கள் எனச் சொல்லப்படும் ஐந்து நூல்களைச் சமணர்கள் இயற்றித் தந்தனர். மேருமந்தர புராணம் என்ற புராண நூலைத் தந்தவரும் சமணரே ஆவர். இவ்வாறு பலவகை நூல்களைத் தந்த பெருமை சமணர்களுடையதாகும்.

5.5 பௌத்தர் தமிழ்த் தொண்டு

சமயப் போராட்டத்தில் பௌத்த நூல்கள் பல அழிந்துவிட்டன. இன்று தமிழிலுள்ள பௌத்த நூல்கள் மிகச் சிலவேயாகும். இலக்கியம், இலக்கணம், பிரபந்தம் என்ற மூன்று வகையான படைப்புகளைப் பௌத்தர் தமிழுக்கு அளித்துள்ளனர்.

பௌத்தரின் தமிழ்ப் படைப்புகள்

இலக்கியம்

காப்பியம்

மணிமேகலை, குண்டலகேசி

* பிற

விம்பிசார கதை, சித்தாந்தத் தொகை, திருப்பதிகம்.

இலக்கணம்

வீரசோழியம்

* இம்மூன்று நூல்களும் காலத்தினால் அழிந்தவை. குண்டலகேசி முழுமையாகக் கிடைக்கவில்லை.

5.5.1 இலக்கியம் தமிழில் இன்றைக்கு முழுமையாக கிடைக்கும் பௌத்த இலக்கியம் மணிமேகலை என்ற ஒன்றாகும். இது சிலப்பதிகாரக் கதையைத் தொடர்ந்து எழுதப்பெற்ற ஒரு காப்பியமாகும். கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளாகிய மணிமேகலை பௌத்த நெறியைத் தழுவி அறங்கள் பல செய்ததை இந்நூல் கூறுகின்றது. இந்த நூலை எழுதியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்பவர் ஆவார். வைதிக சமயத்தை இந்த நூல் கடுமையாக மறுத்து உரைக்கின்றது. இந்தச் சமயத்திற்குரிய மற்றொரு காவியம் குண்டலகேசி ஆகும். இந்த நூல் கிடைக்காது போயினும், இதன் செய்யுள்கள் சில பிற நூல்களில் எடுத்தாளப் பெற்று நமக்குக் கிடைக்கின்றன. இதேபோல விம்பிசார கதை என்ற நூலும் நமக்குக் கிடைக்கவில்லை. இது விம்பிசாரன் என்ற அரசனுடைய கதையாகும்.

5.5.2 இலக்கணம் பௌத்த சமயத்திற்குரிய இலக்கண நூல்களில் நமக்கு முழுமையாக இன்று கிடைப்பது வீரசோழியம் என்ற நூலாகும். இந்த நூலை இயற்றியவர் புத்தமித்திரனார் என்பவர். கச்சியப்ப சுவாமிகள் கந்தபுராணத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் பொழுது, திகடசக்கரம் எனத் தொடங்கும் பாட்டைப் படித்தார். ‘திகழ் + தச + சக்கரம்’ என்பதே திகடசக்கரமாகும் என்பது அவர் கருத்து. இவ்வாறு அளித்தற்கு இலக்கணம் எங்கே உள்ளது என்று அவையில் இருந்தவர்கள் கேட்டார்கள். இந்த இலக்கணம் வீரசோழியம் என்ற நூலில் காணப்படுகிறது என்று சுட்டிக் காட்டிய பின்னர் அவையோர் அவ்வாறு சொற்கள் சேர்வதை ஒத்துக் கொண்டார்கள். இந்த நூல் வடமொழி நெறியைத் தழுவி இருந்தாலும், தமிழர்களுக்குரிய பண்பாட்டைக் கூறத் தவறவில்லை.

5.5.3 பிற நூல்கள் சித்தாந்தத் தொகை என்ற பௌத்த நூல் ஒன்று அச்சமயத்தின் சாத்திரக் கருத்துகளைக் கூறுவதாக அமைந்தது. ‘நல்வாய்மை அறிந்தவரே பிறப்பறுப்பார்’ என்று இந்த நூல் கூறுகின்றது. திருப்பதிகம் என்ற நூல் புத்தர் மீது இயற்றப்பெற்ற தோத்திர நூலாகும். இந்நூலில் தானம், சீலம் முதலான நல்ல குணங்களை உடைய பெருமானாகப் புத்தர் பேசப்படுகிறார். இவ்விரு நூல்களும் இன்று கிடைக்கவில்லை.

5.6 தொகுப்புரை

தமிழர் பண்பாட்டில் சமணம் பல புதிய விளக்கங்களை ஏற்படுத்தியது. சல்லேகனை என்ற ஒரு நோன்பு சமணர்களால் குறிப்பிடப் படுகின்றது. கொடிய நோய், பெருந்துன்பம் ஆகியவை காரணமாக உடம்பை வருத்திக் கொண்டு உண்ணா நோன்பு இருந்து வடக்குத் திசை நோக்கி உட்கார்ந்து உயிர் விடுவது இந்த நோன்பின் நெறியாகும். இதனைச் சங்க காலத்து அரசர்களாகிய கோப்பெருஞ்சோழனும், பெருஞ்சேரலாதனும் கடைப்பிடித்தனர். பள்ளி, பள்ளிக்கூடம் ஆகியன சமணர்கள் கொண்டுவந்த சொல் வழக்குகள் ஆகும்.

பௌத்த சமயத்தினர் வழிபட்ட பௌத்தக் கோயில்கள் ஐயனார் கோயில் எனப் பெறும். இக்கோயில்கள் பிற்காலத்தில் சைவ சமயத்திற்குரியனவாக மாறிவிட்டன. புத்தரைத் திருமாலின் அவதாரம் என்று இந்துக்கள் கருதத் தொடங்கினர். யாகங்கள் செய்யக்கூடிய வழக்கம் பௌத்த சமயத்தால் தமிழ்நாட்டிலிருந்து நீங்கியது.

இவ்வாறு பல மாற்றங்களை உருவாக்கிய பௌத்தமும் சமணமும் தமிழர்கள் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றன.

பாடம் - 6

இசுலாம் கிறித்துவம் வளர்த்த பண்பாடு

6.0 பாட முன்னுரை

நபிகள் நாயகம் இறைவனால் அனுப்பப் பெற்ற தூதர்களுள் ஒருவர். கடவுள் ஒருவரே என்ற கோட்பாட்டை உலகம் முழுதும் பரப்பும் நெறி அவருடையது. இப்பெருமானார் புதிய நெறியைப் போதிக்கவில்லை. முன்பு பல நபிமார்கள் (தூதர்கள்) போதித்த நெறியை நபிகள் நாயகம் முழுமைப்படுத்தியுள்ளார். அவரே அச்சமயத்தின் இறுதித் தூதர் ஆவார். அவர் வழியாகவே திருக்குரான் என்ற திருமறை நூல் உலகிற்கு வழங்கப் பெற்றது. இசுலாம் என்ற சொல்லுக்கு அடிபணிதல் என்பது பொருளாகும். நற்பண்பே இசுலாம் எனக் கூறுவர். இந்த நெறி தமிழகத்தில் புகுந்து தமிழ் மக்களால் ஒரு சமயம் என்று ஏற்றுக்கொள்ளப் பெற்றுப் பல வழிபாட்டுத் தலங்கள் உருவாகின. இச்சமயத்தின் தாக்கம் தமிழர் பண்பாட்டிலும் நிகழ்ந்தது.

கிறித்துவ சமயம் இயேசுநாதரால் தோற்றுவிக்கப் பெற்று உலகம் எங்கும் பரவியது. இயேசுநாதரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பல அற்புதங்களைக் கொண்டவை; அவர் சிலுவையில் அறையப்பட்டது உலக மக்களை உலுக்கியது. கருணை, அன்பு, அருள் ஆகிய நல்ல பண்புகளைக் கிறித்துவம் உலகிற்கு வழங்கியது. முன்பு இருந்த மதங்களிலிருந்து பலர் கிறித்துவ சமயத்திற்கு மாறினர். கிறித்துவ சமயம் தமிழர் பண்பாட்டில் தனக்குரிய பங்களிப்பைச் செய்தது.

இவ்விரு சமயங்களும் தமிழர் பண்பாட்டில் ஆற்றிய பங்கு குறித்து இங்குக் காணலாம்.

6.1 புதிய இரு மார்க்கங்கள்

தமிழகத்தில் இசுலாமிய, கிறித்துவ சமயங்களின் தோற்றம்

இசுலாம், கிறித்துவம் ஆகிய இரு சமயங்கள் தமிழகத்திற்கு வந்த வரலாறு ஆயத்தக்கது. வணிகத் தொடர்பு என்ற அளவில் அரபு நாட்டிற்கும் தமிழகத்திற்கும் முன்பே தொடர்பு இருந்தது. பண்பாட்டு நிலையில் இத்தொடர்பு பிற்காலத்தில் நிகழ்ந்தது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இசுலாம் தமிழகத்தில் ஒரு சமயம் என்ற அளவில் புகுந்தது. மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் இசுலாம் தொடக்கத்தில் பரவியது. கிறித்துவ சமயம் தொடக்கத்தில் வணிகத் தொடர்பால் தமிழகம் வந்ததேயாகும். பிறகு சமயம் பரப்புதல் என்ற நோக்கத்தில் கிறித்துவ அறிஞர்கள் தமிழகம் வந்தனர். இத்தாலி, பிரான்சு, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வந்த கிறித்துவ அறிஞர்கள் கிறித்துவ சமயத்தைப் பரப்பினர். கிறித்துவமும் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களிலேயே முதலில் பரவியது.

6.2 இசுலாம்

இறைவனுக்கு அடிபணிவதையும், இறைவன் ஒருவனுக்கே எல்லாப் புகழும் உரியன என்பதிலும் இசுலாமியர் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தனர். நபிகள் பெருமான் இசுலாம் மதத்தின் அடிப்படைச் செய்திகளைக் கூறியுள்ளார். இறைவன், வானவர், வேதம், தூதர், இறுதித் தீர்ப்பு ஆகிய ஐந்தின் மீது நம்பிக்கைக் கொள்ளுதல், நன்மை தீமைகளை எந்நிலையிலும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய ஆறும் இசுலாம் மதத்தின் அடிப்படைச் செய்திகளாகும்.

இசுலாம் மதத்திற்கு ஐந்து அடிப்படைக் கடமைகள் உள்ளன.

இறைவனை ஏற்று முகமதை தூதராகக் கொள்ளுதல் (கலிமா)

தொழுகை

நோன்பு

தான் ஈட்டும் வருவாயில் 2½ விழுக்காடு ஏழை எளியவர்களுக்கு வழங்குதல்.

புண்ணியப் பயணம் மேற்கொள்ளுதல்

ஆகிய ஐந்தும் மேற்கூறிய கடமைகளாகும். மேற்கூறிய ஆறு அடிப்படைச் செய்திகளும், ஐந்து அடிப்படைக் கடமைகளும் இசுலாம் மதத்தில் இன்றியமையாதன. இசுலாம் மதத்தைத் தழுவிய தமிழர், இந்நெறிகளைத் தவறாது கைக்கொண்டனர்.

6.2.1 தமிழகத்தில் இசுலாம் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே இசுலாம் மதத்தைப் பற்றிய செய்திகள் தமிழகத்தில் அறியப்பட்டிருந்தன. இசுலாம் மார்க்கத்தைப் பற்றிய சிந்தனை பலருக்கு இருந்தது. சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் ஆகிய பாண்டிய அரசர்கள் தங்களுக்குள் போராடிக் கொண்டு வடஇந்தியாவிலிருந்து மாலிக்காபூரை அழைத்தனர். மாலிக்காபூரின் வரவு தமிழகத்தில் இசுலாமிய ஆட்சிக்கு வழி வகுத்தது. இதன் விளைவாக இசுலாம் தமிழகத்தின் தென் மாநிலங்களில் ஓங்கிப் பரவியது. மதுரையை ஆண்ட சுல்தான் இபுராகிம், தமிழர்கள் இசுலாம் மதத்தில் சேரப் பெரிதும் வழி வகுத்தான். காயல்பட்டினம், கீழக்கரை, இராமநாதபுரம் போன்ற பகுதிகளில் வணிகம் செய்து கொண்டிருந்த பலர் இசுலாம் மதத்தைத் தழுவினர். படிப்படியாக இசுலாம் தமிழகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சமயமாக மாறியது.

6.2.2 இசுலாமியத் தமிழர் இசுலாம் மதத்தின் உயர் கொள்கைகள் சமத்துவம், சகோதரத்துவம் என்பன. வைதிக சமயத்தின் பல சமயக் கடவுட் கோட்பாடு, பிற சமய ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக் கொடுமை ஆகியன தமிழர்களுடைய உள்ளத்தில் வருத்தத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தபோது சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதித்த இசுலாம் தமிழர்களைக் கவர்ந்தது. தமிழர்களே இசுலாமியர்களாக மாறியதால் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் ஒரு புதிய மதமாக இல்லாமல் ஒரு மார்க்கமாகவே திகழ்ந்தது என்றும் கூறுவர். மஸ்தான் சாகிபு பாடல்களும், தாயுமானவர் பாடல்களும் பொது நிலையிலும் வேறுபாடு காண இயலாது.

“குணங்குடியான் தனைப் பரவினார்க்குப்

பவப் பிணி நீங்கும்”

அதாவது, குணங்குடி மஸ்தான் சாகிபை வழிபட்டவர்க்குப் பிறவியாகிய நோய் நீங்கும் என்று இந்து சமயத்தைச் சார்ந்த சரவணப்பெருமாள் ஐயர் பாடுகின்றார். “குருவினொடு தெய்வம் நீயே” என வேங்கடராய பிள்ளைக் கவிராயர் போற்றுகின்றார். குணங்குடி மஸ்தான் சாகிபு போன்ற இசுலாமியத் தமிழர் பலர் வாழ்ந்த பெருமைக்குரியதாகத் தமிழ்நாடு திகழ்ந்தது.

6.2.3 இசுலாமியர் பணிகள் தமிழில் காப்பியங்கள், மெய்ஞ்ஞான இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் எனப் பலவகையான படைப்புகளை இசுலாமியர் படைத்தனர். பல புதிய வகையான இலக்கியங்களையும் உருவாக்கினர். இசுலாமியச் சிற்றிலக்கியங்கள் எண்ணிக்கையில் பல நூறாகத் திகழ்கின்றன. அரபு, பாரசீக, உருதுச் சொற்கள் தமிழில் நிறையக் கலந்ததற்கு இசுலாமே காரணமாகும். கிஸ்தி, மகசூல், பசலி, பட்டா, மிராசு, தாசில்தார், மனு, கஜானா, ஜமாபந்தி, வாரிசு, நமுனா போன்ற நிர்வாகச் சொற்கள் பல தமிழில் வந்து கலந்ததற்கு இசுலாமிய சமயம் தழுவிய ஆட்சிகள் காரணமாகும்.

காப்பியங்கள்

இசுலாமியக் காப்பியங்களில் மிகவும் புகழ்பெற்றது சீறாப்புராணம் ஆகும். இதனை இயற்றியவர் உமறுப்புலவர் ஆவார். வள்ளல் சீதக்காதியின் தூண்டுதலால் உமறுப்புலவர் இந்தக் காப்பியத்தை இயற்றினார். தமிழிலக்கிய வரலாற்றில் பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டு வரை பெரும் காப்பியங்கள் தோன்றவில்லை. இந்தக் குறையை நீக்கும் வகையில் பதினேழாம் நூற்றாண்டில் சீறாப்புராணம் தோன்றியது. இந்நூல் 5027 பாடல்களைக் கொண்டது. சீறாப்புராணத்தைத் தவிர குத்துபநாயகம், திருக்காரணப்புராணம், தருமணிமாலை ஆகிய காப்பியங்களும் தமிழில் தோன்றின.

சிற்றிலக்கியங்கள்

தமிழில் அந்தாதி, உலா, கலம்பகம், கோவை, மாலை, பரணி, தூது போன்ற சிற்றிலக்கியங்கள் உள்ளன. இந்தச் சிற்றிலக்கியங்களுக்குரிய மரபைத் தழுவி இசுலாமியரும் பலப்பல சிற்றிலக்கியங்களைத் தந்துள்ளனர். மக்காக் கலம்பகம், மதினாக் கலம்பகம், நாகூர்க் கலம்பகம் போன்ற கலம்பகங்களும், நபிநாயகம் பிள்ளைத் தமிழ், முகைதீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ் போன்ற பிள்ளைத்தமிழ் நூல்களும், நாகை அந்தாதி, மதீனத்து அந்தாதி, திரு மக்கா திரிபு அந்தாதி ஆகிய அந்தாதிகளும், இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள் படைத்த சிற்றிலக்கியச் செல்வங்களாகும். இவற்றைத் தவிர கிஸ்ஸா, படைப்போர், மசலா, முனா ஜாத்து, நாமா என்ற புதிய வகைச் சிற்றிலக்கியங்களையும் இசுலாமியத் தமிழர் படைத்தனர். கிஸ்ஸா என்பது கதை சொல்லுதல் என்ற பொருள் கொண்டதாகும். படைப்போர் என்பது வீரப்போர்ப்பாட்டு ஆகும். மசலா என்பது வினா விடை வடிவமான இலக்கியமாகும். முனாஜாத்து என்பது இறைவனோடு இரகசியமாகப் பேசுதல் என்ற பொருள் உடையதாகும். நாமா என்பது இறைவனின் பெருமையைப் பலபடப் பாடுவதாகும்.

6.2.4 பண்பாட்டு நெறிகள் கொள்ளை, களவு, பாலியல் கேடு, கையூட்டு, பொய், புறங்கூறுதல், பொறாமை, செருக்கு, பிறர் உள்ளத்தைப் புண்படுத்துதல், முறைகேடாகப் பொருள் ஈட்டுதல், பிறர் பொருளைக் கவர்தல், அளவுகளில் குறைத்து விற்றல், பண்டங்களைப் பதுக்குதல் ஆகியவற்றைத் தீய ஒழுக்கங்களாக இசுலாம் கருதுகின்றது. தமிழ் அற நூல்களும் இவற்றையெல்லாம் கடிந்து கூறி இருக்கின்றன. பெற்றோரைப் பேணிக் காத்தல், குடும்பப் பொறுப்பை மனைவியே ஏற்றல், ஆணுக்குச் சமமாகப் பெண்ணைக் கருதுதல் போன்றவை நற்குணங்களாக இசுலாம் மதத்தில் எடுத்துரைக்கப்படுகின்றன. இவை பழந்தமிழ் நெறிக்கும் ஒத்தனவாகும். இசுலாம் தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு தமிழ்நாட்டிற்குரிய சடங்குகள், பழக்கவழக்கங்கள் பல இசுலாமிய சமயத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. திருமணத்தில் தாலி கட்டுதல், குத்து விளக்கு ஏற்றுதல், பாட்டன் பெயரைப் பேரனுக்கு இடுதல், சகுனம் பார்த்தல், நல்ல நேரம் பார்த்தல், வாண வேடிக்கை ஆகியன இசுலாமியத் தமிழர்களின் வாழ்வியல் நிகழ்ச்சிகளிலும் இடம் பெற்றன.

நல்லவை யார் கூறினும், நல்லவை எத்திக்கிலிருந்து வரினும் அவற்றின் மெய்யுணர்ந்து ஏற்கும் பரந்த நோக்கும் விரிந்த பார்வையும் தமிழ்ப் பண்பாட்டுக்கு உரியது. இப்பண்பு இருந்திராவிட்டால் வேற்று நில, வேற்றுநாட்டுச் சமயங்கள் இம்மண்ணில் காலூன்றி இருக்க முடியாது. இச்சமயங்கள் இம்மண்ணில் நிலை கொள்ளவிட்டது மட்டுமன்றி, தம் சமயக் கருத்துகளைப் பற்றியும், தம் சமயப் பெரியோர்களைப் பற்றியும் இம்மண்ணின் மொழியிலேயே இலக்கியங்களைப் படைக்கும் அளவிற்கு, அவற்றிற்கு உரிமையும் வளமையும் சேர்த்துப் பேணியது தமிழ்ப் பண்பாடு.

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு       குறள்; 365)

என்று வள்ளுவர் கூறிய அறிவு இலக்கணத்தைப் பின்பற்றி வாழ்ந்த தமிழர் மெய்ப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அதன் வெளிப்பாடு எத்தன்மைத்து ஆயினும், ஏற்றுப் போற்றியவர் என்பது தெளிவு.

6.3 கிறித்துவம்

வணிகத்திற்காகத் தமிழகம் வந்த ஐரோப்பியர்கள் இந்தியாவில் தங்கள் மதத்தைப் பரப்பினர். பாதிரிமார் பலர் ஐரோப்பியாவில் இருந்து தமிழகம் வந்தனர். மதத்தைப் பரப்புவதற்குத் தமிழறிவு தேவையாக இருந்தது. பாதிரிமார்கள் தமிழைக் கற்றுப் பேசவும், எழுதவும், நூல்கள் இயற்றவும் தொடங்கினார்கள். தமிழகத்தில் நிலவிய சாதிக் கொடுமையும், வருணாச்சிரமத்தின் கொடும்பிடியும், கீழ்த்தட்டு மக்கள் கிறித்துவராகக் காரணமாயின. கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டும் வேறுபாடின்றி எல்லாருக்கும் வழங்கப்பட்ட நிலையைக் கண்டு தமிழர் பலர் கிறித்துவ சமயத்தைச் சார்ந்தனர். கிறித்துவம் தமிழகம் புகுந்த பிறகு பல கிறித்துவ சமய நூல்கள் அச்சிடப்பட்டன. படிப்பறிவு வளர்ந்தது. உணவு உடை போன்றவற்றில் சில மாற்றங்களைக் கிறித்துவப் பாதிரிமார் செய்து கொண்டது போலவே கிறித்துவம் தழுவிய தமிழரும் தங்கள் உணவிலும் உடையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டனர். பல இடங்களில் கிறித்துவக் கோயில்கள் கட்டப்பட்டன. பள்ளிகள், கல்லூரிகள் பல இச்சமயத்தினரால் உருவாக்கப்பட்டன.

6.3.1 தமிழகத்தில் கிறித்துவம் தமிழ்நாட்டில் நுழைந்த கிறித்துவம் தமிழில் பலப்பல புதுமைகளைக் கொணர்ந்தது. தமிழ் நூல்களை அச்சிடுதல், செய்தித்தாள் வெளியிடுதல், ஒப்பிலக்கண ஆராய்ச்சி, அறிவியல் நூல்களைத் தமிழில் ஆக்குதல், பயண நூல்கள் படைத்தல் போன்ற பல புதுமைகளுக்குக் கிறித்துவர்களே அடிப்படை வகுத்தனர். ராபர்ட் டி நொபிலி என்ற இத்தாலியப் பாதிரியார் தம்முடைய பெயரைத் தத்துவ போதக சுவாமி என்று மாற்றிக் கொண்டார். இவர் சந்தனம் அணிதல், பூணூல் போட்டுக் கொள்ளுதல், குடுமி வைத்துக் கொள்ளுதல் போன்ற இந்து ஐயர்களுக்கு உள்ள பழக்கங்களை எல்லாம் கடைப்பிடித்தார். இவர் எழுதிய நூல்களில் தமிழ் – போர்ச்சுகீச அகராதி என்ற நூல் ஒன்று ஆகும்.

வீரமாமுனிவர்

இத்தாலியில் பிறந்த மற்றொருவர் சி.ஜெ. பெஸ்கி என்பவர். இவர் தமிழகம் வந்து வீரமாமுனிவர் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். இவரே தேம்பாவணி என்ற புகழ்மிக்க கிறித்துவத் தமிழ்க் காப்பியத்தைப் படைத்துத் தந்தவர். இவர்களைப் போன்ற பலரால் தமிழகத்தில் கிறித்துவம் தழைக்கத் தொடங்கியது. இரண்டு நூற்றாண்டுக் காலத்தில் பல கிறித்துவத் திருத்தலங்கள் தமிழ்நாட்டில் நிலை பெற்றன. இதோ நாகைக் கடற்கரையில் அமைந்துள்ள வேளாங்கண்ணித் திருக்கோயிலைக் காணுங்கள்!

வேளாங்கண்ணி   திருக்கோயில்

பல சமயத்தவரும் வந்து வழிபடும் இதன் திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். இதே போல் பூண்டி மாதா கோயில் விழாக் கோலம் கொண்டு விளங்கும் காட்சியும் பலரைக் கவர்வது ஆகும். தமிழகத்தில் வேளாங்கண்ணி, பூண்டி, தரங்கம்பாடி ஆகிய வழிபாட்டிடங்கள் இன்று கிறித்துவ சமயப் பண்பாட்டின் சின்னங்களாகத் திகழ்கின்றன.

6.3.2 கிறித்துவத் தமிழர் தமிழ்நாட்டுக் கிறித்துவர்களில் அந்தோணிக் குட்டி அண்ணாவியார், அரிகிருஷ்ண பிள்ளை, கனகசபைப்புலவர், குமாரகுலசிங்க முதலியார், சாமிநாத பிள்ளை, மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர். இவர்களில் வேதநாயகம் பிள்ளை தமிழில் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர். தமிழ் உரைநடையின் வளர்ச்சிக்கு இவர் செய்த தொண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது. இவர் எழுதிய சர்வ சமய சமரசக் கீர்த்தனை சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகும். ஜான் பனியன் எழுதிய Pilgrims Progress என்னும் நூலைத் தழுவி, கிருஷ்ண பிள்ளை இரட்சணிய யாத்திரிகம் என்ற சிறந்த காப்பியத்தைப் படைத்தார். குறிப்பிடத்தக்க மற்றொருவர் வேதநாயக சாஸ்திரி ஆவார். இவர் பாடிய நூல்களில் பெத்தலேகம் குறவஞ்சி மிகச் சிறந்த குறவஞ்சி நூலாகும். தமிழ்நாட்டுக் கிறித்துவர்கள் பல வகையிலும் தமிழ் வளர்த்த பெருமைக்குரியவர்கள் ஆவர். நாவல், சிறுகதை, நாடகம் என்ற மூன்று துறைகளிலும் இவர்களின் பணிகள் தொடர்கின்றன.

6.3.3 மிகச் சிறந்த பணிகள் தமிழில் எ, ஏ என்ற இரு எழுத்துகளுக்கும் ஒ, ஓ என்ற இரு எழுத்துகளுக்கும் வரிவடிவில் பெரிய வேறுபாடு இல்லாமல் இருந்தது. பல நேரங்களில் அவற்றைப் படிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதனை நீக்க வீரமாமுனிவரே முதலில் வழிவகுத்தார். ஏ, ஓ என்ற புதிய எழுத்து வடிவங்களை இவர் உருவாக்கினார்.

போப் ஐயர்

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த போப் ஐயர் திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலக மக்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தினார். அயர்லாந்தில் இருந்து வந்த கால்டுவெல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய திராவிட மொழிகளை ஆராய்ந்து அவற்றை ஓர் இன மொழிகள் என உலகத்திற்கு முதலில் அறிவித்தார். ஐரோப்பிய அறிஞர்களாலேயே தமிழ் அகராதிகள் முதலில் உருவாகத் தொடங்கின. நாட்டுப் பாடல்களையும் பழமொழிகளையும் தொகுத்த பணியும் ஐரோப்பியர் ஆற்றியதே ஆகும்.

6.4 இசுலாம் மதத்தின் தாக்கம்

முன்பே பல மதங்கள் நிலவிய தமிழகத்தில் இசுலாம் என்ற சமயமும் புகுந்தது. ஒவ்வொரு மதமும் பல புதிய கூறுகளைத் தமிழகத்தின் பழைய பண்பாட்டில் கலக்கச் செய்தது; பல புதிய கூறுகளைத் தமிழர் பண்பாட்டிலிருந்து இம்மதங்களும் பெற்றன. இப்படிக் கொள்ளவும் கொடுக்கவும் ஆக அமைந்த ஒரு பண்பாடாக அமைந்தது தமிழர் பண்பாடு. இந்து அரசர்கள் இசுலாமிய சமயத்தைப் புறக்கணிக்கவில்லை. திப்புசுல்தான் இந்துக் கோயில்களுக்கு வழங்கிய மானியங்களைக் காந்தியடிகள் பாராட்டி உள்ளார். அதே போலத் தமிழக அரசர்களும் இசுலாமியப் பள்ளி வாசல்களைப் பாதுகாத்துள்ளனர். பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து இசுலாம் மதத்தின் ஈர்ப்பு தமிழகத்தில் ஏற்பட்டது. கடிகை முத்துப்புலவர் என்பவரிடம் கல்வி பயின்று உமறுப் புலவர் சீறாப்புராணம் பாடினார். பழந்தமிழ்க் காப்பிய நிலையிலேயே சீறாப்புராணத்தின் நாடு, நகர்ப் படலங்கள் இயற்றப் பெற்றுள்ளன. படிக்காசுத் தம்பிரான், நமச்சிவாயப் புலவர் போன்றோர் கீழக்கரையில் வாழ்ந்த மெய்ஞ்ஞானி சதக்கத்துல்லா அப்பாவிடம் நெருக்கமான அன்பு கொண்டிருந்தனர். இவ்வாறு தமிழக வரலாற்றில் இசுலாம் ஒரு நீக்க முடியாத இடத்தைப் பெற்றிருந்தது.

6.4.1 வியக்கத்தக்க ஒற்றுமைகள் இசுலாம் மதத்தின் நுழைவால் தமிழகப் பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடுமையான சாதிப்பிரிவுகளின் கட்டு, வருணாச்சிரமத்தில் ஏற்பட்ட இறுக்கம் ஆகியவை இசுலாம் மதத்தின் நுழைவால் தமிழகத்தில் தளர்ந்தன. இசுலாமிய ஞானிகளாகிய சூஃபிகளுக்கும் தமிழ்ச் சித்தர்களுக்கும் இடையே ஒரு நெருக்கமான ஒற்றுமை காணப்படுகிறது. ஞான நூல்கள் என்ற வகையில் தாயுமானவர், பட்டினத்தார், சிவவாக்கியர் ஆகியோருடைய பாடல்களுக்கும், பீரப்பா, பீர் முகம்மது வலியுல்லா, சின்ன ஆலிம் அப்பா ஆகியோருடைய பாடல்களுக்கும் நிரம்ப வேறுபாடு இல்லை. இராமலிங்கர் போதித்த சமரச ஞான நெறி அவர்களுடைய பாடல்களில் எதிரொலிக்கக் காணலாம்.

“மஸ்தான் சாகிபின் பாடல்களில் காணப்படும் இந்து சமயக் கோட்பாடுகள், கொள்கைகள், தத்துவங்கள் இவற்றைக் கொண்டு பார்த்தால் மஸ்தான் சாகிபு இசுலாமிய வழி செல்லும் ஒரு சூஃபியா? அல்லது இந்து யோக நெறி செல்லும் ஒரு சித்தரா? அதுவுமின்றேல் சமய சமரசத்தை விரும்பும் சன்மார்க்க வாதியா? என அறிய வேண்டியுள்ளது”

என அறிஞர் அ.ச. அப்துல் சமது குறிப்பிடுவது நோக்கத்தக்கதாகும்.

“அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய்

ஆனந்த பூர்த்தியாய்”

எனத் தாயுமானவர் பாடுகிறார். இதனையும்,

“அங்கு இங்கு என ஒண்ணா அகண்ட பரிபூரணமாய்

எங்கும் நிறைந்த இறையே”

என்று மஸ்தான் சாகிபு பாடுவதையும் நாம் கருத்தில் கொண்டால் இரு சமய ஞானிகளின் அணுகுமுறையிலும் உள்ள ஒற்றுமை புலனாகும்.

6.4.2 நல்லிணக்கம் செய்குத் தம்பிப் பாவலர்

இசுலாமும் சைவ வைதிக சமயங்களும் நல்லிணக்கம் பூண்டு தமிழ்ப் பண்பாட்டை வளமைப்படுத்தியுள்ளன. கோட்டாற்றுச் செய்குத் தம்பிப் பாவலர் இராமாயண மகாபாரதங்களை நுணுகிக் கற்றவராக விளங்கியிருக்கிறார். வெள்ளிக்கிழமையில் இசுலாமியர் ஒரு சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம். அப்போது குத்பா என்ற சிறப்புச் சொற்பொழிவு நடத்தப்படும். அதனைத் தமிழில் நடத்தலாமா எனக் கேட்டபோது கல்வத்துநாயகம் அவர்கள் ஏழாவது வானத்திலும் தமிழ் மொழியிலேயேதான் பேசுகிறார்கள் என்று கூறினார்கள்.

திருமால் துருக்க நாச்சியாரை மணந்து கொண்டார் என்ற கதையும், இந்துக்கள் பலர் நாகூர் தர்க்காவில் நேர்த்திக் கடன் நேர்ந்து கொள்வதும், பள்ளி வாசல்கள் கட்டுவதற்கு இந்துக்கள் நிலம் உதவியதும், தமிழகச் சிற்றூர்களில் மாமன் மைத்துனன் உறவோடு இந்துக்களும் இசுலாமியரும் பழகிக் கொள்வதும், இரு சமயங்களுக்கு இடையே இருந்த நல்லிணக்கத்தைக் காட்டும் எடுத்துக்காட்டுகளாகும்.

6.4.3 இசுலாமும் இன்பத் தமிழும் பழந்தமிழ் மரபுகளை இசுலாம் புறக்கணிக்காமல் பேணியது. காப்பியங்கள் கலம்பகம், அந்தாதி, உலா, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், மாலை போன்ற நூல்களை எல்லாம் மரபு பிறழாமல் பாடிய பெருமை இசுலாமியரையே சாரும். காசிப்புலவர், திருப்புகழ் ஒன்று பாடியுள்ளார்.

“சித்தர் தடர் துட்டக் குபிரரை

வெட்டிச்சிறை யிட்டுப் புவிமகள்

தக்கத்து நெளிக்கர் தகுதகு- திகுதாதோ

தித்தித்திமி தித்தித் திமிதிமி

தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு வெனவாடி

திக்குத்திகு திக்குத் திகுதிகு”

என்று போர்க்கள வருணனையை அருணகிரிநாதரைப் போலவே பாடக் காணலாம்.

“அரசியல் இயற்கை நீத்தான்; அன்னையைப் பிதாவை நீத்தான்;

சரதநண் பினரை நீத்தான்; தன்குலத் தினரை நீத்தான்;

பரிசனம் எவையும் நீத்தான்;பரிகரி சிவிகை நீத்தான்;

விரைசெறி குழலி னாள்தன் வேட்கையை நீத்தி லானே;”

என்று ராஜநாயகக் காப்பியத்தில் வரும் பாடல், கம்பராமாயணத்தில் சீதையிடத்து மட்டும் ஆசையை விட்டுவிடாமல் துன்புற்ற இராவணனைக் குறித்துக் கம்பர் பாடும் பாடலோடு அப்படியே ஒத்துச் செல்வதைப் பார்க்கலாம். பல புதிய வருணனைகள், உவமைகள், அணிநலன்கள் ஆகியன தமிழில் தோன்றுவதற்கு இசுலாம் வழிவகுத்தது.

6.5 கிறித்துவத் தாக்கம்

கிறித்துவம் தமிழுக்குச் சேர்த்த வளம் பற்றிப் பார்க்கலாம்.

6.5.1 புதுமைகள் தமிழகத்தில் கிறித்துவம் பல புதுமைகளைக் கொண்டு வந்தது. அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. பாதிரியார் குடுமி வைத்துக் கொண்டு மத போதனை செய்ய, தமிழ் மக்கள் குடுமி நீக்கிக் ‘கிராப்’ வெட்டிக் கொண்டனர். ஐரோப்பிய உடை பலரை அணி செய்தது. நகரப் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொண்டு உதட்டுச் சாயம் பூசிக் கொண்டனர். மதுப்பழக்கம் பலரைத் தொற்றிக் கொண்டது. சிகரட் புகைக்கும் பழக்கம் பரவியது. கிளாரினெட், பாண்டு வாத்தியம் ஆகியவை பல இடங்களில் ஒலித்தன. மேல்நாட்டுக் காய்கறிகள் நம் உணவுப் பட்டியலில் சேர்ந்தன. ஆங்கில ஆண்டு எல்லோருக்கும் பழக்கமாகிவிட்டது.

ஆங்கில மொழியமைப்பில் தமிழில் உரைநடை எழுதுவோர் பெருகினர். ஆங்கிலத் திறனாய்வு நெறி தமிழ்நூல்களில் புகுந்து அலசியது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற நிலை பரவலாகியது. ஆங்கிலம் கலந்து பேசுதல் இயல்பாகியது. இயேசுநாதரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் பலர்க்கு அறிமுகமாயின. ஆண் பெண் சமம் என்ற கருத்துநிலை பரவலாகியது.

6.5.2 நல்லிணக்கம் இந்துக்களும் கிறித்துவர்களும் நல்லிணக்கமாய்த் தமிழ்நாட்டில் வாழ்ந்தனர். கிறித்துவப் பாதிரியார் தங்களை ‘ஐயர்’ என்று கூறிக் கொண்டனர். எளிய மக்கள் பலர்க்கு அலுவலக வேலை கிடைத்தது. ‘மாதா’வின் வழிபாடு பொதுவானதாகக் கருதப்பட்டது. வேளாங்கண்ணி மாதாவுக்கு வேண்டுதல்கள் இந்துக்களாலும் செய்யப்பட்டன. கிறித்துவக் கல்வி நிலையங்களில் இந்துக்கள் பாகுபாடின்றிச் சேர்ந்து படித்தனர். கிறித்துவத் தொண்டு நிறுவனங்கள் தமிழகத்தில் துன்பப்பட்ட பலரை அரவணைத்தன. மிஷின் ஆஸ்பத்திரிகள் செய்த தொண்டு பலரை அடைந்தது. அந்தோணி, மேரியம்மா, சூசை, பாத்திமா போன்ற பெயர்கள் வேறுபாடின்றிப் பலர்க்குத் தெரிந்தவை ஆகின. துரை என்ற பெயர் பெருவழக்குப் பெற்றது. கிறித்துவப் பாதிரியாரும், தமிழ்த் துறவியரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தைப் போதித்தனர்.

6.5.3 கிறித்துவர் வளர்த்த தமிழ் தமிழ் வளர்ச்சியில் கிறித்துவர் பங்கு அளவற்றது. உரைநடை வளர்ச்சியில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டது கிறித்துவர்களாலேயே ஆகும். பைபிள், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. திருக்குறள், புறநானூறு, நாலடியார் ஆகிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலக அரங்கில் அறிமுகமாயின. திராவிட மொழிகளைக் குறித்துச் சிந்தனைகள் தொடங்கின. அறிவியல் ஆராய்ச்சி முறை தமிழில் கால் கொண்டது. அகராதிகளைக் கொண்டு மொழியை அணுகும் முறை தமிழ்நாட்டில் பரவியது. ஒப்பிலக்கிய முயற்சிகள் உருவாயின. தேம்பாவணி போன்ற காப்பியங்களும், திருக்காவலூர்க் கலம்பகம், சுகுணசுந்தரி கதை போன்ற கதைகளும், கீர்த்தனை நூல்களும், பெத்லேகம் குறவஞ்சி போன்ற நூல்களும், இரட்சணிய யாத்ரிகம் போன்ற செய்யுள் படைப்புகளும் தமிழுக்குப் பெருமை சேர்த்தன. மேலை இலக்கியப் பாங்கு தமிழில் குடியேறியது. தமிழ், பல துறைகளில் வளர்வதற்குக் கிறித்துவர் அடித்தளம் அமைத்தனர்.

6.6 தொகுப்புரை

இசுலாம், கிறித்துவம் என்ற இரு புது நெறிகள் தமிழகத்தில் தோன்றித் தமிழர்களைக் கவர்ந்தன. இசுலாமியரும் கிறித்துவரும் எங்கிருந்தோ மொத்தமாக யவனரைப் போலவும் மங்கோலியரைப் போலவும் குடியேறியவர்கள் இல்லை. இங்கு வாழ்ந்த தமிழரே அச்சமயங்களைத் தழுவினர். எனவே பண்பாட்டு நெறிகளில் அடிப்படை மாற்றங்கள் நிகழவில்லை. இச்சமயம் சார்ந்தவர்களால் தமிழ் நல்ல வளர்ச்சியடைந்தது. புதிய புதிய இலக்கிய வடிவங்களும், கற்பனைகளும் வளர்ந்திருக்கின்றன என்று கூறலாம்.