இவர்களுள் பரலி சு.நெல்லையப்பர் , வ.ராமசாமி , ஆராவமுத ஐயங்கார் , பாரதிதாசன் என்ற கனக சுப்புரத்தினம் ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர் .
இவர்கள் தவிர பாரதியாரின் குடும்ப வாழ்க்கை இயன்ற வரையில் எந்த இடையூறும் இல்லாமல் நடைபெற உதவியவர்கள் என்ற முறையில் சிட்டி குப்புசாமி ஐயங்கார் , சுந்தரேச ஐயர் , கிருஷ்ணசாமி செட்டியார் , பொன்னு முருகேசம் பிள்ளை , பாரதியாரின் வீட்டில் வேலை பார்த்து வந்த அம்மாக்கண்ணு என்ற பெண்மணி ஆகியோரையும் இங்கே குறிப்பிட வேண்டும் .
1.4.5 இலக்கியப் படைப்புகளும் சமூகச் சீர்திருத்தமும்
1912ஆம் ஆண்டு பாரதியார் வாழ்க்கையில் உழைப்பு மிகுந்த ஆண்டு எனலாம் .
இந்த ஆண்டில்தான் அவர் பல அற்புதமான இலக்கியங்களைப் படைத்தார் ; குயில் பாட்டு , கண்ணன் பாட்டு , பாஞ்சாலி சபதம் என்னும் முப்பெரும் காவியங்களை இயற்றினார் ; பகவத் கீதையைத் தமிழில் மொழி பெயர்த்தார் ; பதஞ்சலி யோக சூத்திரத்திற்கு உரை எழுதினார் .
பாரதியார் புதுச்சேரியில் பற்பல நற்செயல்களைச் செய்தார் .
இந்தியாவைப் பற்றியுள்ள சாதி வேற்றுமையும் தீண்டாமைக் கொடுமையும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் மிகுந்த கவனம் செலுத்தினார் .
எல்லோரையும் ஒரு குலமாகவே கருதிய அவர் , அனைவர்க்கும் வழிகாட்டியாகவே வாழ்ந்தார் .
1913ஆம் ஆண்டில் கனகலிங்கம் என்ற ஆதி திராவிடச் சகோதரருக்குப் பூணூல் அணிவித்தார் .
இதில் குறிப்பிடத்தக்க ஒரு வியப்பு என்னவென்றால் , பாரதியார் தாம் பூணூல் அணிவதை நீண்ட காலத்திற்கு முன்பே விட்டு ஒழித்திருந்தார் .
அவர் தமது புதுச்சேரி வாழ்க்கையின்போது சிறிது காலம் தாடி மீசை வளர்த்து வந்தார் ; வைணவ ஆழ்வார்களைப் போலவே திருநாமமும் தரித்துக் கொண்டார் .
பாரதியார் 1908 முதல் 1918 வரை ஏறத்தாழ பத்து ஆண்டுகள் வனவாசம் செய்து , காவியங்கள் பலவற்றைப் படைத்தும் , மொழி பெயர்ப்புப் பணிகள் புரிந்தும் , பத்திரிகைகளில் படைப்புக்கள் பலவற்றை வெளியிட்டும் தமிழன்னைக்குப் புதிய அணிகளையும் , பாரத மாதாவுக்குப் பல தேசிய அணிகளையும் அணிவித்து மகிழ்ந்தார் .
பாரதியாரின் புதுவை வாழ்க்கையைத் ' தமிழ் இலக்கிய உலகின் பொற்காலம் ' என்றே ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர் .
1.4.6 ஆங்கிலேயரிடம் சிறைப்படுதல்
' அரண் இல்லாச் சிறையில் விலங்கு இல்லாக் கைதி ' யாகப் புதுவையில் வாழ்ந்து வந்த வாழ்க்கை கசந்ததால் , பாரதியார் புதுச்சேரியை விட்டு வெளியேறுவது என்று முடிவு செய்தார் .
அதன்படி 1918ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் அவர் தம் குடும்பத்துடன் புதுச்சேரியை விட்டுக் கிளம்பினார் .
பாரதியார் பிரிட்டிஷ் எல்லையில் கால் வைத்ததுதான் தாமதம் ; வில்லியனூருக்கு அருகில் ஆறாவது மைலில் தலைமைக் காவலர் ஒருவரால் கைது செய்யப்பெற்றார் ; கடலூர் சிறைச்சாலையில் இரண்டு நாள் அவரை வைத்திருக்கும்படி நீதிபதி உத்திரவிட்டார் .
பாரதியார் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்த ' சுதேசமித்திரன் ' ரெங்கசாமி அய்யங்கார் , எஸ்.துரைசாமி ஐயர் ஆகியோர் அவரது விடுதலைக்காக முயற்சி எடுத்தனர் .
22 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு , சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு , 1918 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் நாள் பாரதியாரை விடுதலை செய்தது ஆங்கில அரசு .
சிறையில் இருந்து வெளிவந்த அவர் , சென்னை வந்து , அதன் பிறகு தமது மனைவியின் ஊரான கடையத்திற்குச் சென்றார் .
1.5 பாரதியாரின் கடைசி மூன்று ஆண்டுகள்
பாரதியார் வாழ்க்கையின் கடைசி மூன்று ஆண்டுகளிலும் துயரமும் , சோதனைகளும் , ஏமாற்றங்களும் தாம் கலந்து இருந்தன .
ஆயினும் கொள்கைப் பிடிப்பில் தளராமலும் , மனம் சோராமலும் பாரதியார் அனைத்தையும் எதிர்கொண்டார் .
மக்கள் தூற்றியதைப் பொருட்படுத்தாமல் தம் சீர்திருத்தப் பணிகளைத் தொடர்ந்தார் .
கவிஞன் என்ற பெயருக்கு மாசுபடாமல் கௌரவம் காத்தார் .
இந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் கடையத்திலும் ஓர் ஆண்டு சென்னையிலும் வாழ்ந்தார் .
1.5.1 பாரதியாரைக் கடையத்து மக்கள் தூற்றுதல்
பாரதியார் ஏறத்தாழ இரண்டு ஆண்டுக் காலம் கடையத்தில் வாழ்ந்தார் .
அங்கு இருந்தபடியே ' சுதேசமித்திர ' னுக்குக் கட்டுரைகள் எழுதி வந்தார் ; ' கலா நிலையம் ' என்ற ஓர் அமைப்பை நிறுவி , அதன் வாயிலாகத் தமிழ்ப்பணி புரிய விரும்பினார் .
தனி மனித சுதந்திரம் சாதி , சமய வேறுபாடற்ற சமுதாயம் ஆண் , பெண் நிகர் கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகச் செய்தல் முதலான தம் சீரிய கனவுகளை முற்போக்கான சிந்தனைகளைச் செயற்படுத்த முற்பட்டார் ; ஆயின் , கடையம் மக்களோ அவரைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் தூற்றினர் .
இதனால் சலிப்பும் சோர்வும் உற்றார் பாரதியார் .
1.5.2 கனவுகள் பொய்த்தாலும் ஊக்கம் தளராமை
கடையத்தில் பாரதியாருக்கு இருக்க விருப்பமில்லை .
எனவே , அவர் திருவனந்தபுரம் , எட்டயபுரம் ஆகிய ஊர்களிலும் சிறிது காலம் வாழ்ந்தார் .
எட்டயபுரத்தில் தங்கியிருந்த சமயத்தில் 1919ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் நாள் தமக்கு உதவி செய்ய வேண்டி வெங்கடேச எட்டப்ப பூபதி ஜமீன்தாருக்கு இரு சீட்டுக்கவிகள் எழுதினார் .
இவற்றின் வாயிலாகப் பாரதியாரின் உள்ளப் பாங்கினை நம்மால் நன்கு அறிந்துகொள்ள முடிகின்றது .
பன்னிரண்டு ரூபாய்க்குச் சேவகம் செய்துவந்த பழைய சுப்பையாவாகத் தம்மைக் கருதாமல் , கவியரசனைப் புவியரசன் தக்கபடி ஆதரிக்க வேண்டும் என்பதை இச்சீட்டுக்கவிகள் விளக்குகின்றன .
வறுமையில் உழன்றாலும் தன்மானம் இழக்கத் துணியாத பாரதியாரின் செம்மையான உள்ளப் பண்பே இங்குச் சுடர் விட்டு நிற்கின்றது எனலாம் .
பாரதியாருக்கு ஜமீன்தாரிடம் இருந்து உதவி கிடைக்கவில்லை .
அவரது வாழ்க்கையில் சோதனைகள் தொடர்ந்தன .
என்றாலும் , மனம் கலங்காத பாரதியார் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதன் மூலம் தம் கவலைகளை மறந்தார் ; திருநெல்வேலிக்கு அடிக்கடி வந்து கவிதைகள் பாடி மக்களை மகிழ்வித்தார் .
1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை சென்றபோது ராஜாஜி இல்லத்தில் பாரதியார் காந்தியடிகளைச் சந்தித்தார் ; காந்தியடிகள் தொடங்கப் போகும் இயக்கத்திற்குத் தம் வாழ்த்துகளைத் தெரிவித்தார் ; அன்று மாலை திருவல்லிக்கேணிக் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் ' வாழ்க நீ எம்மான் ' என்ற பாடலால் காந்தியடிகளை மனங்குளிர வாழ்த்திப் பாடினார் .
சென்னையில் சிலநாள்கள் தங்கி இருந்துவிட்டு , மீண்டும் கடையம் புறப்பட்டார் பாரதியார் .
பின்னர் , அவர் கானாடு காத்தான் , காரைக்குடி ஆகிய ஊர்களுக்குச் சென்று வந்தார் ; தம் கவிதைத் திறத்தாலும் சொல்வன்மையாலும் மக்களைக் கவர்ந்தார் .
1920 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் நாள் பொட்டல்புதூரில் ' இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை ' என்ற பொருள் பற்றி உரையாற்றினார் .
இந்நிலையில் தமது நூல்களை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் பாரதியார் உள்ளத்தில் எழுந்தது ; தமது நூல் வெளியீட்டுத் திட்டத்தை விளக்கி மதுரை நண்பர் சீனிவாச வரதனுக்குக் கடிதம் எழுதினார் ; நூல் வெளியீட்டுத் திட்டத்தை விளக்கிச் சுற்றறிக்கையாகவும் பலருக்கு அனுப்பி வைத்தார் .
வழக்கம் போலவே இம் முயற்சியிலும் பாரதியாருக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை .
1.5.3 மீண்டும் சென்னையில் பத்திரிகைப்பணி
1920ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ' சுதேசமித்திரன் ' பத்திரிகையில் பணியாற்ற வருமாறு மீண்டும் ரெங்கசாமி ஐயங்காரிடமிருந்து பாரதியாருக்கு அழைப்பு வந்தது ; அதனை ஏற்று அவர் சென்னை சென்றார் ; ' சுதேசமித்திர ' னில் துணையாசிரியராகப் பொறுப்பேற்றார் ; தம் இயற்பெயரிலும் , ' காளிதாசன் ' , ' சக்திதாசன் ' என்னும் புனைபெயர்களிலும் தம் படைப்புகளை எழுதிவந்தார் . சென்னையில் பாரதியார் முதலில் தம்புச்செட்டித் தெருவிலும் , பின்னர் திருவல்லிக்கேணியில் துளசிங்கப்பெருமாள் கோயில் தெருவிலும் வாழ்ந்து வந்தார் .
இக்காலகட்டத்தில் பாரதியாருக்கு வ.வே.சுப்பிரமணிய ஐயர் , குவளைக் கிருஷ்ணமாச்சாரியார் , சுரேந்திரநாத் ஆர்யா , துரைசாமி ஐயர் ஆகியோருடன் மீண்டும் கலந்து உறவாடும் வாய்ப்புக் கிடைத்தது .
இவர்களுடன் உரையாடிப் பொழுதுபோக்குவது பாரதியாரின் அன்றாடத் தொழில் ஆயிற்று .
பத்திரிகையில் பணியாற்றிய நேரம் போக , மீதியுள்ள நேரத்தில் அவர் வெளியூர்களுக்குச் சென்று சொற்பொழிவுகள் ஆற்றினார் : கூட்டங்களில் உணர்ச்சி மிக்க குரலில் பாடினார் .
1921 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் நாள் அவர் கடலூர் சென்று பேசினார் .
1.5.4 கோயில் யானை தூக்கி எறிதல்
பாரதியார் சென்னையில் வாழ்ந்த காலகட்டத்தில் இறை வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் .
நாள்தோறும் பார்த்தசாரதி கோயில் சென்று வழிபாடு செய்துவந்தார் .
அக்கோயில் யானையுடன் மிக நெருங்கிப் பழகினார் ; யானைக்குத் தேங்காய் , பழம் முதலியன கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டார் .
அந்த யானைக்கு ஒரு நாள் திடீரென்று மதம் பிடித்துக் கொண்டது .
வழக்கம்போல் பாரதியார் யானையிடம் சென்றார் ; அங்கே இருந்தவர்கள் எச்சரித்தும் கேளாமல் அதற்குத் தின்பண்டம் அளித்தார் .
கோயில் யானை பாரதியாரைத் துதிக்கையால் தூக்கிப் போட்டுவிட்டது .
காயமுற்று , உணர்விழந்த நிலையில் யானைக்குச் சற்றுத் தொலைவிலேயே விழுந்த பாரதியாரை , குவளையூர் கிருஷ்ணமாச்சாரியாரே துணிவுடன் வந்து காப்பாற்றினார் .
பாரதியாருக்குத் தலையிலும் உடம்பிலும் காயம் ஏற்பட்டதால் , உடனடியாக இராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பெற்றது .
சில நாட்களில் அவர் உடல்நலம் பெற்றார் .
என்றாலும் , முன்பு போல் உடம்பு அவ்வளவு தெம்பாக இல்லை .
வழக்கம் போல் ' சுதேசமித்திரன் ' அலுவலகம் சென்று அவர் தமது பத்திரிகைப் பணிகளைக் கவனித்து வந்தார் ; வெளியூர்களுக்குச் சென்று அவ்வப்போது சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் வந்தார் .
1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு நாளில் பாரதியார் ஈரோடு சென்றார் ; ஈரோட்டை அடுத்த கருங்கல்பாளையத்தில் இருந்த வாசகசாலை ஆண்டு விழாவில் ' மனிதனுக்கு மரணமில்லை ' என்ற பொருள் பற்றிச் சொற்பொழிவாற்றினார் ; ஆகஸ்ட் 2ஆம் நாள் ஈரோட்டில் வாய்க்கரையில் ' இந்தியாவின் எதிர்கால நிலை ' என்பது பற்றி உரையாற்றினார் .
முதல்நாள் ஆன்மிகச் சொற்பொழிவு ; அடுத்த நாள் அரசியல் சொற்பொழிவு .
ஆன்மிகத்தையும் அரசியலையும் உயிர் மூச்சாகக் கொண்டிருந்த பாரதியாரின் இறுதிச் சொற்பொழிவுகள் இவையே ஆகும் .
1.5.5 மகாகவியின் மரணம்
யானையால் தாக்குண்ட அதிர்ச்சியினின்றும் பாரதியார் ஓரளவு நலம் பெற்றார் என்றாலும் , உடல் மட்டும் முழுவதும் தேறவில்லை .
1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் அவரது உடல்நிலை சீர்கெட்டது ; வயிற்றுக் கடுப்பு நோய் அவரை வாட்டியது .
ஏற்கனவே உடல் நலிவுற்றிருந்த நிலையில் நோயை எதிர்த்து நிற்பதற்கு உரிய ஆற்றல் பாரதியாரின் உடலில் இல்லை .
மருந்து உண்ணுமாறு நண்பர்களும் உறவினர்களும் வற்புறுத்திக் கூறியதைப் பாரதியார் பொருட்படுத்தவில்லை .
இந்நிலையில் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் நோயின் கடுமையால் பாரதியார் பெரிதும் துன்புற்றார் ; அன்று நள்ளிரவு தாண்டி ஒரு மணியளவில் , அவர் உயிர் பிரிந்தது ஆம் ; தமது முப்பத்தொன்பதாம் வயது முடியும் முன்னரே மரணமடைந்தார் மகாகவி பாரதி .
1.6 தொகுப்புரை
கவிஞர் , பேச்சாளர் , பத்திரிகை ஆசிரியர் , சீர்திருத்தவாதி , முற்போக்குச் சிந்தனையாளர் , பெண்ணியப் போராளி , மனிதாபிமானி , தேசியவாதி , அஞ்சா நெஞ்சினர் , அசைவிலா ஊக்கம் கொண்டவர் , கூடி வந்த இன்னல்களுக்கு இடையேயும் கொள்கைகளை விட்டுக் கொடுக்காதவர் என்ற பல அடை மொழிகளுக்கும் உரியவர் மகாகவி பாரதியார் .
மரணத்தைக் கண்டு மனம் கலங்காதவர் , ' மனிதனுக்கு மரணமில்லை ' என்று முழங்கியவர் , ' காலா ' என்றன் கால் அருகே வாடா !
சற்றே உனை மிதிக்கிறேன் ' என்று காலனை ( யமனை ) ஏளனம் செய்தவர் , தமது 39ஆம் வயது முடியும் முன்னரே காலமாகி விட்டார் !
தமிழ் மொழிக்கும் , தமிழ்ச் சமுதாயத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு ( contribution ) அளவிடற்கு அரிது .
தமிழ்மொழி உள்ள அளவிற்கும் அவர் பெயர் நிலைக்கும் , ஆம் , அறிஞர் வெ.சாமிநாத சர்மா சொன்னது போல்
" தமிழ்மொழியிலே இனிமை இருக்கிறவரையில்
கவிதையிலே உணர்ச்சி இருக்கிறவரையில் , நாட்டிலே
பெண்மைக்கு மதிப்பு இருக்கிறவரையில் பாரதியார்
வாழ்ந்து கொண்டிருப்பார் " !
( நான் கண்ட நால்வர் , பக்.261 )
சிறப்புரை
தன்மதிப்பீடு : வினாக்கள் - II
1. ' தமிழ்ப் பத்திரிகையின் தந்தை ' எனப் பாராட்டப் பெற்றவர் யார் ?
[ விடை ]
2. பாரதியார் மொழிபெயர்த்த ' வந்தே மாதரம் ' என்ற புகழ்பெற்ற பாடலின் ஆசிரியர் யார் ?
[ விடை ]
3. பாரதியார் பணியாற்றிய இரு பத்திரிகைகளின் பெயர்களைச் சுட்டுக .
[ விடை ]
4. பாரதியார் கலந்துகொண்ட காங்கிரஸ் மாநாடுகளின் பெயர்களைத் தருக .
[ விடை ]
5. ' சுயராஜ்யம் வேண்டும் ' என்ற தாரக மந்திரத்தினை முழங்கியவர் யார் ?
[ விடை ]
6. ' சுயராஜ்யம் எமது பிறப்புரிமை , அதை அடைந்தே தீருவோம் ' என முழங்கிய தலைவர் யார் ? [ விடை ]
7. ' இந்தியா ' பத்திரிகையின் மூன்று இலட்சியங்கள் யாவை ?
[ விடை ]
8. பாரதியார் பத்திரிகைத் துறையில் நிகழ்த்திய ஒரு புரட்சியை எடுத்துக்காட்டுக .
[ விடை ]
9. புதுச்சேரி வாழ்க்கையின்போது பாரதியாருக்குப் பேருதவி புரிந்தவர் யார் ?
[ விடை ]
10. பாரதியாரின் பெண் மக்கள் இருவரின் பெயர்களைச் சுட்டுக .
[ விடை ]
11. பாரதியார் புதுச்சேரி வாழ்வின்போது படைத்த நூல்கள் யாவை ?
[ விடை ]
12. பாரதியார் யாருக்குப் பூணூல் அணிவித்தார் ?
[ விடை ]
13. பாரதியார் எட்டயபுரம் மன்னருக்கு எழுதிய சீட்டுக்கவியில் தம்மைப் பற்றி எங்ஙனம் குறிப்பிட்டிருந்தார் ?
[ விடை ]
14. பாரதியாரின் இறுதிச் சொற்பொழிவுகளாக அமைந்தவை எவை ?
[ விடை ]
15. மகாகவி மரணம் எப்போது நிகழ்ந்தது ?
[ விடை ]
பயில்முறைப்பயிற்சி
பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை எளிதில் நினைவு கூர உதவும் ஒரு பயிற்சியாகும் இது. பாரதியின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்ச்சிகளைக் குறித்துக் கொள்ளுங்கள் .
இதற்காகப் பாடத்தை விரைவாக மீண்டும் ஒருமுறை திரும்பிப்பார்க்க வேண்டியிருக்கும் .
அவ்வாறு நீங்கள் குறித்துக்கொண்ட நிகழ்ச்சிகள் கால வரிசைப்படி - கீழே கண்ட வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளில் இருக்கின்றனவா என ஒப்பிட்டுப் பாருங்கள் .
இனிவரும் பாடங்களைப் படிக்கும் பொழுது - பாரதியாரின் தேசிய , இலக்கிய , சமுதாய வளர்ச்சியினை முற்றிலும் உணர்ந்து தெளிவதற்கு - இக்குறிப்புகளை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டியதிருக்கும் .
தேவைப்படின் , இக்குறிப்புகளில் மாறுதல்களைச் செய்யவும் , கூடுதலாகச் செய்திகளைச் சேர்க்கவும் வேண்டியிருக்கும் .
பாரதியார் கவிதை உலகம் - 2
பாரதியாரும் தமிழும்
1.0 பாடமுன்னுரை
பாரதி ஒரு தேசியக் கவிஞர் ( National Poet )
தாம் ஓர் இந்தியன் என்பதில் எவ்வளவு பெருமை கொண்டாரோ , அதைப் போலவே தாம் ஒரு தமிழன் என்பதிலும் பெருமை கொண்டார் .
தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார் .
வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் , தமிழின் பெருமையைப் பேசி மகிழ்ந்தார் .
தமிழின் பெருமை உலகளாவிய நிலையில் பரவ வேண்டும் என்று விரும்பினார் .
தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைப் புகழ்ந்து பாடினார் .
தமிழ் இனம் எத்தகைய பாரம்பரியப் பெருமை உடையது என்பதனை எண்ணி எண்ணி மகிழ்ந்தார் .
இவை பற்றிய பாரதியின் கருத்துகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன .
1.1 பாரதி - தமிழைப் பற்றி... .
• தமிழின் பெருமை
பாரதி ஒரு பன்மொழிப் புலவர் .
தாய்மொழியாகிய தமிழைத் தவிர , ஆங்கிலம் , பிரெஞ்சு , சமஸ்கிருதம் , தெலுங்கு , இந்தி முதலிய மொழிகளை நன்கு கற்றிருந்தார் .
எனவே , தமக்குத் தெரிந்த பிற மொழிகளுடன் தமிழ் மொழியையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார் .
தம் தாய் மொழியாகிய தமிழ் மொழி இனிய மொழியாகவும் சிறந்த மொழியாகவும் இருப்பதை எண்ணி மகிழ்கிறார் .
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்
( பாரதியார் கவிதைகள் : தேசியகீதம் , தமிழ் : 1 )
என்று புகழ்ந்து பாடுகிறார் .
• தமிழ்ப் புலவர் பெருமை
அடுத்த நிலையில் , தாம் அறிந்த புலவர்களிலே தமிழ்ப் புலவர்களாகிய கம்பனையும் , வள்ளுவரையும் , இளங்கோவையும் போலச் சிறந்த புலவர்களை வேறு எங்கும் பார்க்கவில்லை என்கிறார் பாரதியார் .
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் , இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை , வெறும் புகழ்ச்சியில்லை
( தேசிய கீதங்கள் , தமிழ் : 2 )
( யாம் = நான் , யாங்கணுமே = எங்குமே )
• தமிழ்ச் சொல்லின் பெருமை
பாரதியார் குழந்தைகளுக்காகப் பாடிய ‘ பாப்பா பாட்டில் ’ குழந்தைகளுக்குப் பலவிதமான அறிவுரைகளைக் கூறுகிறார் .
தாய்நாட்டின் பெருமை , தாய்மொழியின் பெருமை ஆகியவற்றையும் குழந்தைகளுக்கு உரைக்கிறார் .
அவ்வாறு கூறும்பொழுது தமிழ்ச் சொற்களின் பெருமையினை எடுத்துரைக்கிறார் .
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
( பல்வகைப்பாடல்கள் , பாப்பா பாட்டு : 12 )
1.1.1 தமிழ் மொழி உணர்வு
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கில மொழி செல்வாக்குப் பெற்றிருந்தது .
தமிழ் தனக்கு உரிய இடத்தைப் பெறவில்லை .
தமிழர்களும் தமிழில் பேசுவதை விட , ஆங்கிலத்தில் பேசுவதையே விரும்பினர் .
எனவே ஏடுகளிலும் , வீடுகளிலும் , அலுவலகங்களிலும் ஆங்கிலமே ஆட்சி செலுத்தியது .
கல்வியும் ஆங்கிலத்தின் வாயிலாகவே கொடுக்கப்பட்டது .
தமிழுக்கு உரிய இடத்தில் ஆங்கிலம் இருந்தது .
தமிழ் இரண்டாம் தர நிலையில் துணைப்பாடமாகும் தன்மையிலேயே அமைந்திருந்தது .
இதைப் பார்த்த பாரதியார் மிகவும் வேதனை அடைந்தார் .
தமிழைக் கற்காமல் பிற மொழிகளையே கற்பவர்களையும் , அவ்வாறு கற்பதையே பெருமையாகக் கருதுவோரையும் பார்த்து ,
வேறுவேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டுவார்த்தை கற்கிலாய் போ போ போ
( பாரதியார் தேசிய கீதங்கள் , போகின்ற பாரதம் : 3 )
( வீட்டுவார்த்தை = தாய்மொழி )
என்று சினந்து கூறுகின்றார் .
தமிழுக்கு உரிய இடம் கிடைக்க வேண்டும் .
தமிழர்களுக்குத் தமிழ் உணர்வு ஊட்ட வேண்டும் .
அப்பொழுதுதான் தமிழ் மொழி வாழும் , வளரும் .
அதற்கு என்ன செய்ய வேண்டும் ?
பாரதி என்ன கூறுகிறார் என்று பார்க்கலாமா ?
• தமிழ் வழிக் கல்வி
தமிழ்நாட்டில் , தமிழ் வழியாகவே கல்வி கற்பிக்க வேண்டும் .
அப்பொழுதுதான் புதிய புதிய சொற்களை உருவாக்க முடியும் .
இதனால் தமிழ் மொழி தலைமை பெற்று வளருவதற்கான வாய்ப்பும் உண்டாகும் .
இந்தக்கொள்கையைத் ‘ தேசியக்கல்வி ’ எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் வெளியிட்டுள்ளார் பாரதி .
• தெருவெல்லாம் தமிழ் முழக்கம்
மேலும் , எங்கும் எதிலும் தமிழ் இருக்க வேண்டும் .
எல்லாத் துறைகளிலும் தமிழைப் புகுத்த வேண்டும் .
அப்பொழுதுதான் தமிழ் செழிக்கும் .
இதனை ,
. ஒரு சொற் கேளீர் !
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் !
( தேசிய கீதங்கள் , தமிழ் : 2 )
( சேமம் = நலம் , உற = அடைய )
எனத் தம் பாடலின் மூலம் வெளிப்படுத்துகிறார் .
1.1.2 புதிய படைப்புகள்
உலகத்தில் உள்ள செம்மொழிகளுள் ( Classical Languages ) தமிழ்மொழியும் ஒன்று .
தமிழ் மொழியின் இலக்கியங்களும் , இலக்கண வளமும் தொன்மையும் அதைச் செம்மொழிகளுள் ஒன்றாக இடம்பெறும் சிறப்பினை நல்கின .
ஆனால் அந்தச் சிறப்பு நிலைபெற்று இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் ? ஆக்கபூர்வமான பணிகள் சிலவற்றைத் தமிழுக்குச் செய்யவேண்டும் என்கிறார் பாரதியார் .