அவற்றுள் ஒன்று புகழ்பெறும் தன்மையிலமைந்த பல புதிய படைப்புகள் தமிழில் வரவேண்டும் என்பதாகும் .
• உலகெலாம் தமிழோசை ஒலிக்கட்டும்
தமிழைத் தமிழ் நாட்டிலுள்ள தெருக்களில் எல்லாம் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று கூறிய பாரதியார் , அதை உலகம் எல்லாம் பரவும் வகை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார் .
எனவே ,
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்
( தேசிய கீதங்கள் , தமிழ் : 1 )
என்று அறிவுறுத்துகின்றார் .
பின்னர் தமிழ் மொழி வளம் பெற வழி கூறுகின்றார் .
• மொழிவளம் சேர்க்கும் வழிமுறை
தமிழ் இனிய மொழி .
இலக்கிய , இலக்கணச் சிறப்புடைய மொழி .
தொன்மையான மொழி .
இத்தகைய தமிழ் மொழியை வளப்படுத்த வேண்டுமானால் பிறநாட்டிலுள்ள சிறந்த அறிஞர்களின் நூல்களைத் தமிழில் பெயர்த்து எழுதவேண்டும் , மேலும் புகழ் தரக்கூடிய புதிய நூல்களைப் படைக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் பாரதி .
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
( தேசிய கீதங்கள் , தமிழ் : 3 )
( சாத்திரங்கள் = நூல்கள் , பெயர்த்தல் = மொழிபெயர்த்தல் , இறவாத = அழியாத )
எல்லாக் காலத்திலும் எல்லோருக்கும் பொருந்துகின்ற , எல்லோரும் ஒத்துக் கொள்கின்ற உயர்ந்த கருத்துகளைக் கொண்டிருக்கும் இலக்கியங்கள் புகழுடைய இலக்கியங்களாகத் திகழும் .
அத்தகைய புகழுடைய இலக்கியங்களைப் படைத்துத் தமிழை வளப்படுத்துங்கள் என்கிறார் பாரதியார் .
அதோடு மட்டும் அல்லாமல் , உலகிலுள்ள சிறந்த பல்துறை அறிஞர்களின் உயர்ந்த சிந்தனைகளும் தமிழ் மொழியில் இடம்பெறும் வகையில் அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதவேண்டும் என்கிறார் பாரதியார் .
அறிவியலில் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில் , அறிவியல் கூறுகள் , மேலைநாட்டு மொழிகளில் இருப்பதைப் போலத் தமிழில் இல்லை .
அறிவியல் கூறுகளைப் பற்றிச் சொல்லும் திறமை தமிழ்மொழிக்கு இல்லை என்றும் தமிழ் மொழி மெல்ல மெல்ல அழிந்து விடும் என்றும் ஓர் அறிவிலி உரைத்தான் .
அந்த அறிவிலியின் சொல் மெய்யாகி விடுமோ என்று பாரதி அஞ்சுகிறார் .
எனவே , அந்த அச்சத்தை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்
( தேசியகீதங்கள் , தமிழ்த்தாய் : 10 )
( புவி = உலகம் , மிசை = மேல் , ஓங்கும் = புகழ் அடையும் )
என்று கூறுவதாகப் பாரதியார் குறிப்பிடுகிறார் .
இந்த நிலையை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் ?
உலகிலுள்ள பல நாடுகளுக்கும் செல்லுங்கள் .
தமிழை வளப்படுத்துவதற்காக , நீங்கள் செல்லும் இடங்களில் அல்லது நாடுகளில் உள்ள கலைச் செல்வங்கள் அனைத்தையும் சேகரியுங்கள் .
நீங்கள் சேகரித்த அத்தகைய செல்வங்களை எல்லாம் தமிழில் சேர்த்துத் தமிழை வளப்படுத்துங்கள் என்கிறார் .
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்குச் சேர்ப்பீர்
( தேசியகீதங்கள் , தமிழ்த்தாய் : 11 )
( திக்கு = திசை , கொணர்ந்து = கொண்டு வந்து )
1.2 பாரதி - தமிழரைப் பற்றி
ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு .
மனிதன் பேசும் மொழி , அவன் அணியும் ஆடை , உண்ணும் உணவு , வாழும் முறை , செய்யும் பணி , நம்பிக்கை உணர்வு ஆகியவை பண்பாட்டை வெளிப்படுத்தும் கூறுகளாகும் .
தமிழரின் பண்பாட்டுப் பெருமையைப் பாரதி புகழ்ந்துரைக்கிறார் .
முதலில் தமிழரின் நம்பிக்கையும் கடமை உணர்வும்
வெளிப்படுத்தப்படுகின்றன .
1.2.1 நம்பிக்கையும் கடமை உணர்வும்
ஒருவனது உள் உணர்வுகளும் , நம்பிக்கைகளும் அவன் பேசும் பேச்சிலும் , அவன் செயல்களிலும் வெளிப்படும் .
அவை அவனது பண்பாட்டை வெளிப்படுத்தும் . • தமிழரின் மனவுறுதி
தமிழர்கள் பல்வேறு காரணங்களால் ஆப்பிரிக்கா , சாவா , சுமத்திரா , மலேயா , சிங்கப்பூர் , பர்மா போன்ற பிற நாடுகளுக்குச் சென்றனர் .
அங்குப் பல்வேறு வகையான துன்பங்களை அனுபவித்தனர் .
இருப்பினும் பாரம்பரியமாகத் தங்கள் முன்னோர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளிலிருந்து கொஞ்சம் கூட நெகிழாமல் வாழ்ந்து வந்தனர் .
குறிப்பாகச் சமய நம்பிக்கையைப் பொறுத்த வரையில் அதைத் தங்கள் பண்பாட்டுக் கூறாகப் பாதுகாத்து வந்தனர் .
இதனை ,
ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத்துள்ள
பற்பல தீவினும் பரவி இவ்எளிய
தமிழச் சாதி , தடிஉதை யுண்டும்
கால்உதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
தெய்வம் மறவார் , செயுங்கடன் பிழையார்
எதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்
( தேசியகீதங்கள் , தமிழச்சாதி : 31-36 , 43-45 )
( காப்பிரி நாடு = நாகரிகம் இல்லாத நாடு , பூமிப்பந்து = பந்துபோன்று உருண்டையான நில உலகம் , தடி உதையுண்டும் = தடியால் உதைபட்டும் , கால் உதையுண்டும் = காலால் உதைபட்டும் , கயிற்றடியுண்டும் = கயிற்றால் அடிபட்டும் , தெய்வம் மறவார் = தாம் வணங்கும் தெய்வங்களை மறக்காதவர்கள் , ஏதுதான் வருந்தினும் = எதை நினைத்து வருந்தினாலும் )
என்று புலம் பெயர்ந்த தமிழர்களின் சமய நம்பிக்கையினையும் , கடமை உணர்வினையும் புகழ்ந்து கூறுகிறார் பாரதியார் .
• சமயப்பற்று
தமிழர்கள் சென்று குடியேறிய நாடுகளில் தமிழர்களுக்கு அறிமுகம் இல்லாத பிற சமயங்கள் இருந்தன .
சூழலுக்கு அடிமையாகியோ , எப்படியாவது வாழவேண்டும் என்பதற்காகவோ அவர்கள் தாம் சென்றடைந்த நாடுகளிலுள்ள சமயங்களைத் தழுவவில்லை .
தங்களுக்கு ஈடுபாடு உடைய , முழுநம்பிக்கை உடைய , தங்கள் சமயத்தையே உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தனர் .
இன்றைக்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் , தங்களது அடையாளச் சின்னமாக , தங்கள் தனித் தன்மையைப் புலப்படுத்த , முருகன் கோயில்களை அமைத்தும் , மாரியம்மன் கோயில்களை அமைத்தும் , காவடி எடுத்தல் , அலகு குத்துதல் , தீ மிதித்தல் போன்ற சமயச் சடங்குகளைப் பின்பற்றியும் வாழ்ந்து வருகின்றனர் .
இவை அவர்கள் தமது பண்பாட்டை உறுதியாகப் பின்பற்றி வருவதற்கு உரிய சான்றுகளாகத் திகழ்கின்றன .
• கடமை உணர்வும் கடின உழைப்பும்
உழைப்பின் அருமையை உணர்ந்தவர்கள் தமிழர்கள் .
எனவேதான் வணிகர்களாகவும் , ஒப்பந்தக் கூலிகளாகவும் தாம் குடிபெயர்ந்து சென்ற நாடுகளிலெல்லாம் , தம் உழைப்பால் பிறரின் நன்மதிப்பைப் பெற்றதோடு , தாமும் தம் உழைப்பால் முன்னேறினர் .
கடமை உணர்வுடன் எப்பொழுதும் உழைக்க வேண்டும் என்ற மனப்பான்மை ஓர் இனத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் என்பர் .
கடல் கடந்து சென்றாலும் தம் கடமையிலிருந்து வழுவாதவர்கள் தமிழர்கள் என்று புகழ்கிறார் .
இந்தப் பண்பாட்டைத் தாம் சென்ற நாடுகளில் விடாமல் பாதுகாத்தவர்கள் தமிழர் என்பதால் பாரதியார் ‘ செய்யுங்கடன் பிழையார் ’ என்று சுட்டிக்காட்டிப் பாராட்டுகிறார் .
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. கல்வியை எந்த மொழியில் கொடுக்க வேண்டும் என்று பாரதியார் குறிப்பிடுகின்றார் ?
[ விடை ]
2. தமிழ் வளம் பெற என்ன செய்ய வேண்டும் ?
[ விடை ]
3. பாரதியார் மிகவும் விரும்பும் மூன்று தமிழ்ப்புலவர் யாவர் ?
[ விடை ]
4. புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள் இன்னமும் எவற்றைத் தங்கள் அடையாளச் சின்னங்களாகக் கொண்டுள்ளனர் ?
1.3 பாரதி - தமிழ் இனத்தைப் பற்றி
தமிழ் இனத்தைப் பற்றி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் ,
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
( தமிழன் பாட்டு : 1-2 )
எனவும்
தமிழன் என்று ஓர் இனமுண்டு
தனியே அவர்க்கு ஒரு குணமுண்டு
( தமிழன் இதயம் : 1-2 )
எனவும் பெருமையாகப் பாடினார் .
தமிழன் தனித்தன்மை வாய்ந்தவன் .
அவனது தனித்தன்மையால் அவன் தலைநிமிர்ந்து இறுமாப்புடன் ( பெருமையுடன் ) நிற்பதற்குத் தகுதி உடையவன் என்கிறார் இராமலிங்கம் பிள்ளை . பாரதியாருக்கும் தமிழ் இனத்தைப பற்றி மிகுந்த பெருமை உண்டு .
தாம் தமிழன் என்பதிலும் பெருமிதம் கொண்டவர் பாரதி .
எனவே , தமிழ் இனத்தின் பெருமையைப் பல பாடல்களின் வழியாகப் புலப்படுத்துகின்றார் .
1.3.1 தொன்மை
உலகிலுள்ள தொன்மையான இனங்களுள் தமிழ் இனமும் ஒன்று .
தமிழினத்தின் தொன்மைச் சிறப்பைப் போற்றும் பாரதியின் பாடல்கள் பல.சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாக இருப்பவன் சிவன் .
இறைவனாகிய சிவபெருமானால் உருவாக்கப்பட்டவளே தமிழ்த்தாய் .
அகத்திய முனிவரால் அமைக்கப்பட்டதே தமிழ்மொழி என்கிறார் பாரதியார் .
ஆதிசிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றுஓர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்
( தேசியப்பாடல்கள் , தமிழ்த்தாய் : 1 )
( மைந்தன் = புதல்வன் , வேதியன் = அறவோன் , நிறைமேவும் = முழுமையாகப் பொருந்தும் )
என்று குறிப்பிடுகிறார் பாரதியார் .
ஆதிசிவனுக்கும் அகத்தியருக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு ?
வழக்கில் இருக்கும் ஒரு கட்டுக் கதை இந்தத் தொடர்பை விளக்குவதாக அமைந்துள்ளது .
இமயமலையில் , சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தது .
திருமணத்தைப் பார்த்து மகிழ்வதற்காக உலகிலுள்ள முனிவர்களும் , வானுலகத்திலுள்ள தேவர்களும் கூடினார்கள் .
அதனால் , இமயமலையைச் சார்ந்த வடபுலம் தாழ்ந்தது .
உடனே , சிவபெருமான் அகத்தியரை நோக்கித் தென்புலத்திற்குச் சென்று பொதியமலையில் அமரச் சொன்னார் .
அகத்தியரும் அவ்வாறே , தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள பொதியமலையில சென்று அமர்ந்தார் .
உடனே , ஒரு பக்கம் சாய்ந்த வடபுலம் தென்புலத்திற்கு நிகராக உயர்ந்து சமமானது .
அந்த நிகழ்ச்சியிலிருந்து அகத்தியர் பொதிய மலையில் தங்கியதாகவும் , தமிழ் இலக்கண நூல் எழுதியதாகவும் கதை வழங்கி வருகிறது .
அகத்தியரின் மாணவர்களில் ஒருவர் தொல்காப்பியர் என்றும் குறிப்பிடுவர் .
எனவே , பாரதியார் தமிழ் இனத்தின் தொன்மையைக் குறிப்பிடுவதற்கு , அகத்தியர் இலக்கணம் எழுதியதைச் சுட்டிக் காட்டுகிறார் .
மேலும் தமிழரின் தொன்மையைக் குறிப்பிடும்போது காலவரையறை சொல்ல முடியாத காலத்தில் வாழ்ந்தவர் தமிழர் என்பதனை ,
...........................ஆயிரம்
ஆண்டின் முன்னவரோ ஐயாயிரமோ ?
பவுத்தரே நாடெலாம் பல்கியகாலத்
தவரோ ?
புராணமாக்கிய காலமோ ?
( தேசியப்பாடல்கள் , தமிழச்சாதி : 97-100 )
( முன்னவரோ = முன்னால் தோன்றியவரோ , பவுத்தர் = புத்தமதப் போதகர்கள் , பல்கிய = பெருகிய )
என்று வினவுகிறார் .
வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மையான காலத்தைச் சார்ந்தவர்கள் தமிழர்கள் என்பது பாரதியார் கருத்து .
1.3.2 வீரம்
தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு அகம் , புறம் என்று பாகுபாடு செய்து வாழ்ந்து வந்தார்களோ , அவற்றிற்கு ஏற்ப இலக்கியம் படைத்த பெருமைக்கும் உரியவர்கள் என்று குறிப்பிடுகிறார் பாரதியார் .
• புறம்
புறம் என்றால் குடும்ப - அதாவது இல்லற வாழ்க்கைக்குப் புறம்பான , போர் , கொடை போன்ற நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டது .
இதை அ டிப்படையாகக் கொண்டு அமைந்த இலக்கியங்கள் புற இலக்கியங்கள் என்று வழங்கப்பட்டன .
புற இலக்கியங்களில் சிறப்பு வாய்ந்தது புறநானூறு .
இதில் பண்டைய தமிழ் மன்னர்களின் வீரமும் படைவீரர்களின் வீரமும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது .
புறநானூறு கூறும் வீரப்பரம்பரையில் வந்த தமிழர்களைப் பற்றிப் பாரதியார் பெருமையாகப் பாடியுள்ளார் .
• கடல் கடந்த போர்
தமிழர்கள் கடல்கடந்து வாணிபம் செய்ததுபோல் , கடல்கடந்து சென்று போரும் நிகழ்த்தி உள்ளனர் .
இலங்கை , சாவகம் , கடாரம் போன்ற தீவுகளைக் கடல் கடந்து வென்றுள்ளனர் .
சோழ அரசர்களுள் சிறப்பு உடையவனாகிய முதலாம் இராசராசசோழன் , கடாரம் வரை சென்று அதை வென்ற காரணத்தினாலேயே ‘ கடாரம் கொண்டான் ’ என அழைக்கப்பட்டான் .
அதைப்போல , இலங்கைமீது படையெடுத்துச் சென்று , சோழ அரசன் இராசராசன் வெற்றி பெற்றுள்ளான் .
இராசராசேசுவரம் என்ற இடத்தில் கோயில் ஒன்றும் கட்டினான் . அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு , தன் ஆட்சியையும் பரப்பினான் .
இத்தகைய , வரலாற்று உண்மையை அடிப்படையாகக் கொண்டு , பாரதியார் ,
சிங்களம் புட்பகம் சாவகம் - ஆதிய
தீவு பலவினும் சென்று ஏறி - அங்குத்
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு
( தேசியப்பாடல்கள் , தமிழ்நாடு : 8 )
( ஆதிய = முதலிய , நின்று = நிலைநிறுத்தி , சால்புற = பெருமை விளங்க , )
என்று தமிழர் வீர வரலாற்றைக் குறிப்பிடுகிறார் .
மேலும் வானத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்த உச்சியைஉடைய இமயமலையைக் கூடத் தமது வீரத்தினால் அழிக்கக் கூடியவர்கள் தமிழர்கள் என்கிறார் பாரதியார் .
இதனை ,
விண்ணை இடிக்கும் தலைஇமயம் - எனும்
வெற்பை அடிக்கும் திறனுடையார்
( தேசிய கீதங்கள் , தமிழ்நாடு : 9 )
( விண் = வானம் , இடிக்கும் = தொடும் , தலை = உச்சி , வெற்பு = மலை , அடிக்கும் = அழிக்கும் )
இவ்வாறு தமிழர்களின் வீரமரபைப் போற்றிப் பாடிய பாரதியின் பாடல்கள்பல .
1.3.3 காதல்
பண்டைய தமிழர் அக வாழ்க்கைக்குச் சிறப்பிடம் கொடுத்திருந்தனர் .
சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்கள் காதல் இலக்கியத்தைப் பற்றியே அமைந்துள்ளன .
பாரதியாரும் , தமிழர்களின் அக இலக்கிய மரபை அடிப்படையாகக் கொண்டு தம் பாடல்களை அமைத்துள்ளார் .
தாம் எழுதிய குயில்பாட்டில் , காதலின் பெருமையைப் பாரதியார் குறிப்பிடுகிறார் .
இறைவன் உலகத்தைப் படைத்தார் .
ஆனால் இந்த உலகத்தில் உயிர்கள் வாழ்வதற்குக் காதல்தான் காரணம் என்கிறார் பாரதியார் .
காதல் இல்லாவிட்டால் இந்த உயிரினமே அழிந்துவிடும் என்கிறார் .
காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின் !
சாதல் சாதல் சாதல்
( குயில்பாட்டு : குயிலின் பாட்டு )
( சாதல் = இறத்தல் )
காதல் என்பது மனிதர்களிடம் மட்டுமல்லாமல் , உயிர் இனங்கள் அனைத்திடமும் இருக்கின்ற ஒன்று .
அதுதான் , உயிர் இனங்களிடையே ஓர் உறவை - ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது .
எனவே , உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணமான காதல் இல்லாவிட்டால் உலகம் இயங்காது அழிந்துவிடும் என்கிறார் பாரதியார் .
இவ்வாறு தமிழர்கள் தம் அகவாழ்வில் சிறப்பிடம் கொடுத்திருந்த காதலின் பெருமையினைப் புகழ்ந்து பாடியுள்ளார் .
1.4 பாரதி - தமிழ்நாட்டைப் பற்றி
தேன் எவ்வாறு இனிமையைக் கொடுக்கிறதோ , அதைப்போலவே , ‘ செந்தமிழ் நாடு ’ என்று சொன்ன உடனேயே , அதைக் கேட்கும் காதிற்கும் தேனின் சுவைபோல் , இன்பம் கிடைக்கும் என்கிறார் பாரதியார் .
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே
( தேசிய கீதங்கள் , தமிழ்நாடு : 1 )
( போதினிலே = பொழுதில் )
தேன் வந்து பாயுது காதினிலே என்பதற்கு நேரடியான பொருள் கொள்ளக்கூடாது .
இங்கு இனிமைக்குத்தான் தேன்சுட்டப்படுகிறது .
வேறு எதற்காகவும் இல்லை .
தமிழ்நாடு என்ற சொல்லே கேட்கும் காதுகளுக்கு இன்பம் நல்கும் என்றால் , தமிழ்நாட்டின் பெருமைகள் முழுவதையும் அறிந்தால் அது எவ்வளவு இன்பத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள் !
தமிழ் மீது பாரதி கொண்ட தீராக் காதலைப் புரிந்து கொள்ள முடிகிறதா ?
இயற்கை வளம் மிகுந்த நாடு தமிழ்நாடு .
கல்விச் சிறப்புடைய நாடு தமிழ்நாடு .
அறவோர்களும் , புலவர்களும் தோன்றியமையால் , உலகப் புகழ் வாய்ந்த நாடு தமிழ்நாடு .
தமிழ்நாட்டின் இத்தகையச் சிறப்புகளை எல்லாம் உள்ளடக்கி , பல பாடல்களைப் பாரதியார் பாடியுள்ளார் .
1.4.1 இயற்கை வளம்
மலைவளம் , கடல்வளம் போன்ற இயற்கை வளம் மிகுந்த நாடு தமிழ்நாடு . இயற்கையாக அமைந்த ஆறுகள் பல இங்கு உள்ளன .