142

காவிரி ஆறு , தென் பெண்ணை ஆறு , பாலாறு , வைகை முதலிய பல பெரிய ஆறுகள் தமிழ் நாட்டிற்கு வளம் சேர்க்கின்றன .

எனவே , தமிழ்நாட்டின் வளத்தைக் குறிப்பிடும்போது பாரதியார் ,

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்

கண்டதோர் வையை பொருநைநதி - என

மேவிய ஆறு பலஓடத் - திரு

மேனி செழித்த தமிழ்நாடு

( தேசியகீதங்கள் , தமிழ்நாடு : 3 )

( மேவிய = பொருந்திய , மேனி = உடல் ( இங்குத் தமிழ்நாட்டின் பகுதி )

என்று குறிப்பிடுகிறார் .

இத்தகைய நீர்வளம் பொருந்திய தமிழ்நாட்டில் , பிற செல்வங்கள் எல்லாம் செழித்திருந்தன என்று கூறுகிறார் பாரதியார் .

1.4.2 கல்வி வளம்

தொடக்கக் காலம் முதலே , தமிழ்நாட்டில் புலமை மிக்க பலர் இருந்தனர் .

திருவள்ளுவர் முதல் கம்பர் வரையிலும் கல்வியில் சிறந்த பல புலவர்கள் இருந்தனர் .

சங்க காலத்தில் ஒளவையார் , காக்கைப் பாடினியார் , வெள்ளிவீதியார் போன்ற பெண் புலவர்கள் பலரும் இருந்தனர் .

இதனால் தமிழ்நாடு பெருமை பெற்றிருந்தது .

எனவே பாரதியார் ,

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல

பல்வித மாயின சாத்திரத்தின் - மணம்

பாரெங்கும் வீசும் தமிழ்நாடு

( தேசியகீதங்கள் , தமிழ்நாடு : 6 )

( பார் = உலகம் , வீசும் = பரவும் )

என்று தமிழ்நாட்டைப் புகழ்ந்து கூறுகிறார் .

கம்பனின் கல்விச் சிறப்பை அறிந்த மக்கள் அவரைக் ‘ கல்வியில் பெரியவர் கம்பர் ’ என கூறி மகிழ்வர் .

வடமொழியில் எழுதப்பட்ட இராமாயணத்தைத் தழுவி , கம்பன் எழுதிய இராமாயணம் தமிழில் உள்ள தலைசிறந்த படைப்புகளில் ஒன்று .

இதன் பெருமையை அறிந்தே , மலையாளம் போன்ற மொழிகளில் , கம்பனின் இராமாயணத்தை மொழிபெயர்த்துள்ளனர் .

இத்தகைய சிறப்பு வாய்ந்த கம்பன் பிறந்ததும் தமிழ்நாடு .

அதனால் தமிழ்நாடு பெருமை பெற்றது என்று குறிப்பிடுகிறார் பாரதியார் .

• உலகப்புகழ்

தமிழ்நாட்டின் பெருமை உலகளாவிய நிலையில் பரவுவதற்குக் காரணமாக இருந்தவர் வள்ளுவர் .

உலகிலுள்ள பெரும்பாலான அறநூல்கள் எல்லாம் சமயச் சார்புடையன .

ஆனால் வள்ளுவரால் இயற்றப் பெற்ற திருக்குறள் , எந்த ஒரு சார்பும் இல்லாது எல்லோருக்கும் , பொருந்துகின்ற ஒன்று .

எல்லாக் காலத்திற்கும் பொருந்துகின்ற ஒன்று .

எனவே இதை ‘ உலகப் பொதுமறை ’ என்று அழைப்பர் .

உலகிலுள்ள பல மொழிகளில் இதனை மொழிபெயர்த்தனர் .

எனவே , திருக்குறள் எனும் உலகப் பொதுமறையை இயற்றியமையால் , திருவள்ளுவர் உலகப் புகழ் பெற்றார் .

அதனால் தமிழ்நாடு உலகப் புகழ் பெற்றது .

இந்த உண்மையினைப் பாரதியார் ,

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

( தேசியகீதங்கள் , தமிழ்நாடு : 7 )

( வான் = உயர்ந்த )

என்று வியந்து பாராட்டுகிறார்

சேக்ஸ்பியரால் இங்கிலாந்து நாடு புகழ்பெற்றது என்பர் .

ஹோமரால் கிரேக்க நாடு புகழ் பெற்றது என்பர் .

அதைப்போல வள்ளுவரால் தமிழ்நாடு உலகப் புகழ் பெற்றது என்கிறார் பாரதியார் .

திருக்குறளிலுள்ள கருத்துகள் உலகநோக்கு ( Universal ) உடையன .

அதனால் உலகளாவிய நிலையில் பரவின .

தம் கருத்துகளால் உலக மக்களின் மனத்தில் இடம் பெற்றார் வள்ளுவர் . அதனால் புகழ் பெற்றார் .

அந்தப் புகழ் , தமிழ் நாட்டினை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றது என்று குறிப்பிடுகிறார் பாரதியார் .

இவ்வாறு , புலமை மிகுந்த ஒளவையாராலும் , இளங்கோவடிகளினாலும் தமிழ்நாடு பெருமை பெற்றது என்றும் பாரதி குறிப்பிட்டுள்ளார் .

1.4.3 வணிகவளம்

பண்டைய தமிழ் மக்கள் உலகிலுள்ள பல நாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் .

குறிப்பாக , மேற்கே , உரோம் , எகிப்து முதலிய நாடுகளுடனும் , கிழக்கே சீனம் , மலேயா , சிங்கப்பூர் முதலிய நாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் .

ஏலம் , இலவங்கம் போன்ற நறுமணப் பொருள்களைத் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தனர் .

இத்தகைய ஏற்றுமதி இறக்குமதி வணிகம் சிறப்பாக நடந்ததாகவும் அதற்கான சுங்க வரிகள் வசூலிக்கப்பட்டதாகவும் பட்டினப்பாலை என்ற நூல் குறிப்பிடுகிறது .

தமிழர்கள் தாம் தொடர்பு கொண்ட நாடுகளில் தம் பண்பாட்டுக் கூறுகளையும் எடுத்துச் சென்றனர் .

இதனால் வாணிபத் தொடர்பு கொண்ட நாடுகளிலெல்லாம் தமிழர்களின் புகழ் பரவியிருந்தது .

தமிழர்கள் கடல்கடந்து வாணிபம் செய்து தமிழ்நாட்டை வளப்படுத்தியதோடு தமிழர்களின் பெருமை உலகமெலாம் செல்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தினர் .

இதனைப் பாரதியார் ,

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்

தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை

ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக

நன்று வளர்த்த தமிழ்நாடு

( தேசியகீதங்கள் , தமிழ்நாடு : 10 )

( மிசிரம் = எகிப்து , யவனரகம் = கிரேக்கம் , படைத்தொழில் = போர்த் தொழில் )

என்று குறிப்பிடுகிறார் .

வாணிபவளம் சேர்த்ததோடு , அறிவு வளர்ச்சியும் , கலைவளர்ச்சியும் தமிழ்நாட்டிற்கு அளித்தனர் .

தமிழர்களின் புகழ் , அவர்கள் வணிகத்தின் பொருட்டுச் சென்ற இடங்களிலெல்லாம் பரவியது என்கிறார் பாரதியார் .

1.5 பாரதி - தமிழர் வாழ்வு பற்றி

தமிழ்மக்கள் முன்னர் மாண்போடு வாழ்ந்தார்கள் ; இப்பொழுது எத்தகைய நிலையில் வாழ்கிறார்கள் ?

இதனைப் பற்றிப் பாரதி பல பாடல்களில் பாடியுள்ளார் .

தமிழர்கள் தம் முன்னோர்களைப் போல் , மாண்புடையவர்களாக வாழவேண்டும் என்று விரும்பினார் பாரதியார் .

தமிழர்களுடைய குடும்ப வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் , எத்தகைய ஆற்றல் வாய்ந்தவர்களாக அவர்கள் வாழ வேண்டும் என்பனவற்றையும் கூறுகிறார் பாரதியார் .

1.5.1 குடும்ப வாழ்க்கை

தமிழர்கள் கணவன் மனைவியாக வாழும் குடும்ப வாழ்க்கையையே ஓர் அறமாகக் கருதி வாழ்ந்தனர் .

எனவே குடும்ப வாழ்க்கையை ‘ இல்லறம் ’ ( இல் = வீடு ) என்றே அழைத்தனர் .

அவ்வாறு அறமாகக் கருதி வாழும் வாழ்க்கையில் கணவன் மனைவியாகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் , அன்புடையவராகவும் , ஒத்துழைப்பு நல்குபவராகவும் , இருக்கவேண்டும் .

மற்றவர்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் அன்பு , இரக்கம் , தியாகம் , தொண்டு , பொறுமை ஆகிய நல்ல பண்புகளுடன் , திகழவேண்டும் .

இல்லற வாழ்க்கை மேலும் மேலும் சிறப்பு அடையத் துணை செய்ய வேண்டும் என்பது பாரதியின் கருத்து .

இதனை வலியுறுத்தவே ,

காதல் ஒருவனைக் கைப்பிடித்தே , அவன்

காரியம் யாவினும் கைகொடுத்து

மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும்

மாட்சி பெறச் செய்து வாழ்வமடி

( பல்வகைப்பாடல்கள் , பெண்கள் விடுதலைக்கும்மி : 8 )

( கைப்பிடித்தே = திருமணம் செய்தே , காரியம் = செயல்பாடுகள் , கைகொடுத்து = உதவி செய்து , மாதர் = பெண்கள் , மாட்சி = மேம்பாடு , )

என்று குறிப்பிடுகிறார் .

1.5.2 அறிவு ஆற்றல்

தொல்காப்பியர் , வள்ளுவர் , இளங்கோ , கம்பர் , ஒளவையார் போன்ற அறிவு ஆற்றல் மிகுந்த சான்றோர்கள் பலர் வாழ்ந்த பெருமைக்கு உரியது தமிழ்நாடு .

அந்தச் சான்றோர்களின் வாழ்க்கை முறை , பிறருக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது .

அத்தகைய சான்றோர்கள் மேலும் உருவாக வேண்டும் .

அவர்களின் ஆற்றலைப் பிறநாட்டார் பாராட்ட வேண்டும் .

அதற்கு உரிய மரியாதையைச் செய்ய வேண்டும் என்கிறார் பாரதியார் .

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

சொல்வதில்ஓர் மகிமை இல்லை

திறமான புலமையெனில் வெளிநாட்டார்

அதை வணக்கம் செய்தல் வேண்டும் ( தேசியகீதங்கள் , தமிழ் : 3 )

தமிழர்கள் தங்கள் பழம்பெருமையைப் பேசுவதில் பெரும் மகிழ்வு கொள்கின்றனர் .

பெருமையாகக் கருதுகின்றனர் .

அதிலேயே இன்பங்கண்டு வாழ்கின்றனர் .

ஆக்கபூர்வமான எந்தச் செயலும் செய்யாமல் , பழம்பெருமையைப் பேசுவதிலேயே பொழுதைப் போக்குகின்றனர் .

அவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களைப் பார்த்தே பாரதியார் , இவ்வாறுகூறுகிறார் .

நமக்குள்ளே நம் பழம் பெருமைகளைப் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை .

இன்றையச் சூழலில் நமக்கு இருக்கும் பெருமை என்ன ?

உலக மக்களிடம் நமக்கு எந்த இடம் இருக்கிறது ?

என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் .

உலக மக்கள் , நம் பழம் பெருமைகளால் நம்மை மதித்ததுபோல் , இன்றும் நாம் மதிக்கப்பட வேண்டுமானால் , நாம் நம் புலமையை அறிவு ஆற்றலை மேலும் மேலும் வளர்க்க வேண்டும் .

பிற நாட்டவர் வாழ்த்தி வணங்கிப் பாராட்டும் வகையில் நாம் வாழ வேண்டும் என்று வேண்டுகிறார் பாரதியார் .

1.6 தொகுப்புரை

தாம் ஒரு தமிழன் என்பதில் பெருமை கொண்ட பாரதியார் , தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் .

தமிழ் மொழியின் பெருமையையும் , வளத்தையும் குறிப்பிடுகிறார் .

ஆங்கில ஆட்சிக்காலத்தில் , ஆங்கிலத்தின் செல்வாக்கால் , தமிழ் இரண்டாம்தர நிலைக்குத் தள்ளப்பட்டதை உணர்ந்தார் .

எனவே எங்கும் எதிலும் தமிழ் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார் .

தாய்மொழியின் வாயிலாகவே கல்வி கொடுக்க வேண்டும் என்று வேண்டினார் .

தமிழர் பண்பாட்டுச் சிறப்பினைக் குறிப்பிடும்போது , தமிழர்கள் கடல் கடந்து சென்றாலும் எத்தகைய உறுதியான நம்பிக்கையையும் , கடமை உணர்வினையும் கொண்டிருக்கின்றனர் என்பதைச் சுட்டுகின்றார் .

தமிழர்களின் வழிபாட்டின் மூலம் வெளிப்படும் பண்பாட்டுப் பெருமையையும் எடுத்துரைக்கின்றார் .

தமிழ் இனம் எத்தகைய தொன்மை வாய்ந்தது என்பதனையும் , தமிழர்கள் வீரத்தையும் காதலையும் எவ்வாறு போற்றிப் பாதுகாத்தனர் என்பதனையும் பாரதியார் கூறுகிறார் .

தமிழ்நாட்டில் இயற்கையாக அமைந்த ஆறுகள் பலவும் எவ்வாறு நீர் வளத்தை வழங்குகின்றன என்றும் குறிப்பிடுகிறார் .

வள்ளுவன் போன்ற அறவோர்களாலும் தமிழ்நாடு பெற்ற கல்வி வளத்தைக் கூறுகிறார் .

தமிழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்து , தமிழ்நாட்டை எவ்வாறு வளப்படுத்தினர் என்பதையும் சுட்டுகிறார் .

விடுதலை பெற்று வாழும் பெண்கள் தங்கள் கணவர்க்குத் துணையாக இருந்து , செய்ய வேண்டிய கடமைகளையும் செய்து , ஓர் எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழவேண்டும் , பழம் பெருமைகளையே பேசி மகிழ்ந்து , நாட்களை வீணாக்காமல் , தம் அறிவு ஆற்றலால் வெளிநாட்டார் வணங்கி வாழ்த்தும்படி தமிழர்கள் வாழவேண்டும் என்று வேண்டுகிறார் பாரதியார் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. தமிழ்த்தாய் யாரால் உருவாக்கப்பட்டவள் என்று பாரதியார் குறிப்பிடுகின்றார் ?

[ விடை ]

2. பண்டைய தமிழ் மன்னர்களின் வீரம் எந்தப் பாடல்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன ?

[ விடை ]

3. பல தீவுகள் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்கள் எந்த எந்தக் கொடிகளை அங்குப் பொறித்தனர் ?

[ விடை ]

4. காதலின் சிறப்பினைப் பாரதியார் எவ்வாறு பாடுகின்றார் ?

[ விடை ]

5. தமிழ்நாட்டின் நீர்வளத்திற்குக் காரணம் என்ன ?

[ விடை ]

6. தமிழ்நாடு எவ்வாறு வான் புகழ் பெற்றது ?

[ விடை ]

7. வெளிநாட்டார் வணங்குவதற்குத் தமிழர்கள் செய்ய வேண்டியது எது ?

பாரதியாரும் இந்திய விடுதலை இயக்கமும்

2.0 பாட முன்னுரை

" எதுவும் தன் விருப்பப்படி செய்து அதனால் ஏற்படக் கூடிய இன்ப துன்பங்களுக்குத் தான் பொறுப்பாளியாக இருப்பது தான் விடுதலை " ( பாரதியார் கட்டுரைகள் , பக் : 99 )

தீரத்திலே , படைவீரத்திலே , நெஞ்சில் ஈரத்திலே , ( ஈரம் - இரக்கம் ) உபகாரத்திலே உயர்ந்த நாடு என்றெல்லாம் பாரதியார் மிகவும் போற்றிப் பாடிய பாரத நாடு முன்னாளில் எப்படி இருந்தது ?

இன்று காண்பது போல் ஒன்றுபட்ட இந்தியாவாக இருந்ததா ?

இல்லை .

நாடு சிறு சிறு பகுதிகளாகப் பிரிந்திருந்தது .

அவற்றை அரசர்களும் , குறுநில மன்னர்களும் ஆண்டு வந்தனர் .

இந்தியா ஒரு தலைமையின் கீழ் இயங்கவில்லை .

மேலும் மக்களிடையே காணப்பட்ட பல்வகையான வேறுபாடுகளின் காரணமாக ஒற்றுமையின்மை நிலவியது .

இதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டனர் வெளிநாட்டினர் . வாணிகம் செய்ய வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலிலும் தலையிட்டனர் .

ஆட்சியையும் கைப்பற்றினர் .

இவ்வாறு இந்தியா அந்நியருக்கு அடிமைப்பட்டது .

இங்ஙனம் அடிமைப்பட்ட இந்தியாவின் அடிமைத்தனத்தை எண்ணி வருந்தி , அந்நியர் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பலரும் போராடினார்கள் .

அந்த விடுதலைப் போராட்டத்தில் பாரதியாரும் தம்மை இணைத்துக் கொண்டார் .

மேலும் தம் உணர்வுகளைத் தாம் இயற்றிய பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினார் .

அவை பற்றிய செய்திகள் இந்தப் பாடத்தில் இடம் பெறுகின்றன .

2.1 விடுதலை இயக்கம்

இந்திய தேசிய காங்கிரஸ் இந்திய விடுதலை இயக்கத்தில் பெரும்பங்கு வகித்தது .

இந்திய விடுதலைக்காக இடையறாது போராடியது .

தென்னாப்பிரிக்காவில் அறப்போராட்டத்தை நடத்திய காந்தியடிகளின் இந்திய வருகையால் இந்திய விடுதலை இயக்கம் ஒருமுகப்பட்டது .

மகாத்மாவின் போராட்ட முறை இந்திய விடுதலைக்கு வழி வகுக்கும் என்ற தொலை நோக்குப் பார்வை பாரதியாரை இந்திய விடுதலை இயக்கத்தில் இணையச் செய்தது .

2.1.1 பாரதியாரின் அரசியல் நுழைவு

‘ இந்திய தேசிய காங்கிரஸ் ’ என்ற சபை இந்திய விடுதலைக்கான இயக்கத்திற்கு எழுச்சி ஊட்டிக் கொண்டிருந்த காலம் அது. 1898-ஆம்ஆண்டு இங்கிலாந்து நாட்டுஅரசின்அரசப்பிரதிநிதியாகக் கர்சன்பிரபு இந்தியாவில் பொறுப்பேற்றார் .

துவக்க முதலே இந்திய விரோதப் போக்கில் தீவிரமாக இருந்தார் கர்சன் பிரபு .

அது இந்திய விடுதலை இயக்கத்திற்குப் புது வேகத்தை அளித்தது .

ஜி. சுப்பிரமணிய அய்யர் சுதேசமித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்தவர் .

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய சுயாட்சியை ஆதரித்து இந்தியர்களுக்கு அதிகமான அரசுப்பணிகள் அளிக்க வேண்டும் என்று வீரமுழக்கமிட்டார் .

1905-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் நாள் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார் .

இசுலாமியர் பெரும்பான்மையாக இருந்த பகுதி கிழக்கு வங்காளம் எனவும் , இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதி மேற்கு வங்காளம் எனவும் வழங்கப்பட்டது .

நிர்வாகத்தின் பொருட்டு வங்காளத்தைப் பிரிப்பதாகக் காரணம் சொன்னார் கர்சன் பிரபு .

ஆனால் , அது இந்து , இசுலாமியர் ஆகியோரின் ஒற்றுமையைக் குலைக்கும் நோக்கில் அமைந்த பிரிவினையாகும் .

வங்காளப் பிரிவினையின் காரணமாக இந்தியா முழுவதும் புத்துணர்ச்சி பிறந்தது .

இந்தப் புதிய உணர்ச்சியைக் கோபால கிருஷ்ண கோகலே ‘ தேசிய உணர்ச்சி ’ என்று குறிப்பிட்டார் .

வங்காளப் பிரிவினையால் அங்குள்ள இந்துக்களும் , இசுலாமியர்களும் ஓரணியில் நின்று வெள்ளையரை எதிர்த்தனர் .

வங்காள மாணவர்களிடம் ‘ சுதேச உணர்வு ’ எழுந்தது .

அதாவது இந்திய நாட்டில் விளைந்த - உற்பத்தியான பொருள்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் அரும்பியது .

அவர்கள் ‘ சுதேச விரதம் ’ ( ஆங்கில நாட்டுப் பொருட்களை நிராகரிப்பது ) மேற்கொண்டனர் .

சென்னை நகர மாணவர்கள் வங்காள மாணவர்களை வாழ்த்த , சென்னைக் கடற்கரையில் கூட்டம் நடத்தினர் .

ஜி.சுப்பிரமணிய அய்யர் தலைமை தாங்கினார் .

‘ வங்கமே வாழ்க ! ’ என்று வங்காளத்தை வாழ்த்திப் பாடிய பாடலுடன் பாரதியாரின் அரசியல் நுழைவு தொடங்கியது .

2.1.2 பாரதியும் சுதேச உணர்வும்

வங்காளத்தில் எழுந்த சுதேச உணர்வு நாட்டின் எல்லாப் பாகங்களிலும் பரவ வேண்டும் என்று தேசபக்தத் தலைவர்கள் விரும்பினர் .

பாரதியார் தமிழ்நாட்டு மக்களிடையே சுதேச உணர்வு வளரப் பாடுபட்டார் .

ஆகவே ‘ சுதேசமித்திரன் ’ , ‘ சக்கரவர்த்தினி ’ ஆகிய பத்திரிகைகளில் வங்காளத்தில் எழுந்த சுதேச இயக்கம் பற்றியும் , சுதேச இயக்கத்தில் பங்கு கொண்ட வங்காளப் பெண்கள் குறித்தும் கட்டுரைகள் எழுதினார் .

பெண்களும் தாய்நாட்டிற்காகப் போராடும் தகுதியும் , திறமையும் , உரிமையும் உள்ளவர் என்று சுட்டிக்காட்டினார் .

விடுதலை இயக்கத்தில் பங்கு கொள்ளுமாறு அவர்களைத் தூண்டினார் .

சுதேச உணர்வில் தமிழ்நாடு முன்னணியில் இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் .

சுதேச உணர்வை எப்படி வெளிப்படுத்த வேண்டும் ?

சுதேச விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் வெளிப்படுத்த வேண்டும் .

தேசபக்தத் தலைவர்கள் சுதேசிய விரதத்தைக் கடைப்பிடிக்குமாறு மக்களிடம் கூறினர் .

சுரேந்திரநாத் பானர்ஜி சுதேசிய விஷயத்தில் காட்டிய ஊக்கத்தைப் பாரதி ,

நமது நாட்டில் சுதேசிய விதையிட்டு , அவ் வயலின்கண் குடிலிட்டுக் கொண்டு இடைவிடாது காப்பவர் இம்மகான் என்பதை யாரும் மறுக்கார்

என்று தமிழ்நாட்டு மக்களுக்குப் புலப்படுத்தினார் .

( மகாகவி பாரதி வரலாறு , பக் : 150 )

சுதேசிய உணர்வு நாடு முழுவதும் பரவினால்தான் விடுதலை கிடைக்கும் என்று பாரதி நம்பினார் .

ஆங்கிலேயர் , தம் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை விற்கும் சந்தையாக இந்தியாவை மாற்றினர் .

இந்தியாவிலுள்ள கைத்தொழில்கள் நலிந்தன .

எனவே , இந்தியரும் ஆங்கிலேயரை விடச் சிறந்த பொருள்களை உற்பத்தி செய்யும் திறமை உடையவர் என்று காட்டும் வகையில் பெருமிதத்தோடு ,

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும் பண்ணி மலைகளென வீதி குவிப்போம்