144

இத்தனை சாதிப் பிரிவுகள் உள்ள நாட்டில் இவர்கள் எப்படி ஒன்றுபடுவார்கள் என்று இந்தியர்களை மலிவாக எடைபோட்டனர் .

சமூகச் சீர்திருத்த எண்ணம் கொண்ட பாரதியார் , இந்தியாவில் காணப்பட்ட ஒற்றுமையின்மைக்குக் காரணம் சாதி சமய வேறுபாடுகள் என்று உணர்ந்தார் .

அந்த உணர்வுகளை மக்கள் விட்டுவிட்டால் நாட்டில் ஒற்றுமை ஓங்கும் என்பதறிந்தார் .

அதற்காகவே , அந்தணர் , அந்தணர் அல்லாதவர் ஆகிய எல்லோரும் ஒன்றே என்ற கருத்தில் ,

ஜாதி மதங்களைப் பாரோம் .

வேதிய ராயினு மொன்றே - அன்றி

வேறு குலத்தின ராயினு மொன்றே !

( வந்தே மாதரம் - 1 )

........................ஜாதியில்

இழிவு கொண்ட மனிதரென்பது

இந்தியாவில் இல்லையே

( விடுதலை !

விடுதலை !

விடுதலை ! - 2 )

என்று சாதி சமயம் அற்ற சமுதாயம் அமையக் குரல் கொடுத்தார் .

தமிழ் நாட்டின் தென் மாவட்டத்திலுள்ள எட்டையபுரம் ஜமீனைச் சேர்ந்த கழுகுமலை என்ற ஊரில் மறவர்களுக்கும் சாணார்களுக்கும் ஏதோ தகராறு ஏற்பட்டு விட்டது .

அப்போது உற்சவ நேரம் .

வீதியில் தேரில் சுவாமியை அழைத்து வருவது அங்கு மரபு .

ஆனால் தகராறு காரணமாகத் தேரை விடக்கூடாது என்று மறித்தார்கள் .

அச்சமயம் கழுகுமலையின் கண்காணிப்பாளராக இருந்த வேங்கடராயர் கலகம் நடந்த இடத்தைப் பார்வையிடச் சென்றார் , ’இவன் யாரடா , பார்ப்பான் வழக்குத் தீர்க்க வந்தவன் ’ என்று சொல்லி யாரோ அவரைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டனர் .

இந்தச் சம்பவம் பாரதியின் நெஞ்சை வேதனைக்கு உள்ளாக்கியது .

சாதிச் சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும் , சாதி விடுதலை மிகவும் அவசியம் என்று அவர் கருத இந்த நிகழ்ச்சியும் ஒரு காரணமாயிற்று .

ஆகையால் இந்தியா விடுதலை பெற வேண்டுமென்றால் மக்கள் தம் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று பாரதி பாடிய பாடலைப் பாருங்கள் .

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

( பாரத நாடு , வந்தே மாதரம் - 1 )

( தாழ்வு = மதிப்புக்குறைவு )

இந்தியர்கள் தமக்குள் உயர்ந்த சாதி , தாழ்ந்த சாதி என்று வழக்கிட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட பாரதியார் .

சாதிகள் இல்லையடி பாப்பா !

குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

( பாப்பாப் பாட்டு - 15 )

( தாழ்ச்சி = குறைவு )

என்று குழந்தையைப் பார்த்துப் பாடுகிறார் .

2.3.1 தீண்டாமை

இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் தீண்டத் தகாதவர்களாக வைக்கப்பட்டிருந்தனர் .

இந்த அவலத்தைச் சுட்டிக் காட்டவே பாரதியார் ‘ ஆறில் ஒரு பங்கு ’ என்னும் சமூகச் சீர்திருத்தக் கதை எழுதினார் .

அதன் முகவுரையில் பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு சாதி , ஓர் உயிர் .

தொழில் வெவ்வேறாக இருக்கலாம் .

ஆயினும் உயர்வு தாழ்வு கூடாது என்றார் .

ஆறில் ஒரு பங்கு என்னும் நூலை உழவுத் தொழில் புரியும் பள்ளர் , பறையர் முதலிய வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன் என்று எழுதினார் .

( பாரதியாரும் சமூகச் சீர்திருத்தமும் , பக் : 98 ) பறையன் , பள்ளன் என மரியாதைக் குறைவாகச் சமுதாயத்தில் கூறப்பட்ட சொற்களைப் பறையர் , பள்ளர் என மரியாதையுடன் உயர்த்திக் கூறியவர் பாரதியே .

பறையன் என்று கூறுவது இன்று சட்ட விரோதம் .

பாரதி கண்ட கனவு நனவாகியது .

அவர்கள் இன்று விடுதலை பெற்று விட்டார்கள் .

இன்னும் சில தளைகள் அவர்கள் நீங்கி முழு விடுதலை அடைய வேண்டும் .

அதுவே பாரதி கண்ட இலட்சியக் கனவு .

தென் ஆப்ரிக்காவில் ‘ இன ஒதுக்கல் ’ கொள்கை மூலம் அந்நாட்டு மக்கள் இந்தியர்களை ஒதுக்கியதைச் சுட்டிக்காட்டி , நாம் பள்ளர் பறையருக்குச் செய்ததை எல்லாம் அந்நிய நாடுகளில் பிறர் இந்தியருக்குச் செய்கிறார்கள் என்று குறிப்பிட்டார் பாரதியார் .

இப்படி பாரதியைத் தவிர வேறு யார் கூற முடியும் ? விடுதலை பெற வேண்டுமாயின் , சில வகுப்பினரைத் தீண்டத்தகாதவராகக் கருதும் மனப்போக்கை இந்து மக்கள் மாற்றினாலன்றி விடுதலை கிடைக்காது என்று மகாத்மா காந்தி கூறியதையும் சுட்டிக் காட்டுகிறார் .

( பாரதியாரும் சமூகச் சீர்திருத்தமும் , பக்.103 )

எல்லோருக்கும் விடுதலை

பாரதியார் விடுதலை பற்றிப் பாடும்போது , ‘ விடுதலை !

விடுதலை !

இங்குப் பறையருக்கும் விடுதலை ! ’ என்று முதலில் பறையரைப் பற்றிப் பாடுவது அந்தச் சாதி மக்கள் சமுதாயத்தில் பட்ட துன்பத்தைப் புலப்படுத்துகிறது .

மேலும் அப்பாடலில் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டு அடங்கிக் கிடந்த தீயர் , புலையர் , பரவர் , மறவர் , குறவர் ஆகிய அனைவருக்கும் விடுதலை என்று ஆணையிடுகிறார் .

அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார் .

பாரதியின் நம்பிக்கை நம்மையும் நம்பிக்கை கொள்ளச் செய்கிறது .

எல்லோருக்கும் எல்லாமும்

எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ வேண்டும் என்பதைக் குறிக்கும் ‘ பாரத சமுதாயம் ’ என்ற பாடலில் ,

எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம்

எல்லோரும் இந்திய மக்கள்

( பாரத சமுதாயம் - 4 )

என்ற சமத்துவ சமூக நீதியைப் பாரதியார் காட்டுகிறார் .

பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக எழுந்த சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் என்னும் முப்பெரும் முழக்கத்தை எவ்வாறு செயல்படுத்தலாம் ?

சாதிப் பிரிவை ஒழித்தால் செயல்படுத்தலாம் .

இந்த எண்ணம் ,

தகரென்று கொட்டு முரசே !

பொய்மைச்

சாதி வகுப்பினை யெல்லாம்

( முரசு - 18 )

( தகர் = அழி )

என்னும் பாடலில் சாதிப் பிரிவைத் தகர்த்து எறிய ஆணையிடும் குரலாய் ஒலிக்கிறது .

‘ போகின்ற பாரதம் ’ என்ற பாடலில் ,

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ

( போகின்ற பாரதம் - 4 )

என்ற பாடலடி சாதி உணர்வு கூடாது என்று வலியுறுத்துவதைக் காட்டுகிறது .

2.3.2 சாதி ஒழிப்பு

சாதி ஒழிப்பு என்பது சாதிப் பிரிவை இல்லாமல் ஆக்கும் செயலைக் குறிக்கும் .

சாதிப்பிரிவை ஒழிக்க உதவும் ஆயுதம் எது ?

கல்வி .

கல்வி என்னும் ஆயுதத்தால் வீழ்த்தலாம் .

பாரதியார் இதை ,

வாழி , கல்வி செல்வம் எய்தி

மனம் மகிழ்ந்து கூடியே

மனிதர் யாரும் ஒருநி கர்ச

மானமாக வாழ்வமே !

( தேசியப் பாடல்கள் , விடுதலை -2 )

( எய்தி = அடைந்து )

என்ற பாடலடிகளில் உணர்த்தியிருக்கிறார் .

பாரதியின் நடுவு நிலைமை

பாரதியார் தம் சாதியினரான அந்தணர்களிடம் உள்ள தவறைச் சுட்டிக் காட்டத் தயங்கவில்லை .

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார்

மூன்று மழை பெய்யுமடா மாதம்

இன்னாளி லேபொய்மைப் பார்ப்பார் - இவர்

ஏது செய்தும் காசுபெறப் பார்ப்பார்

( மறவன் பாட்டு - 5 )

( ஏது = எதுவும் , பார்ப்பார் = அந்தணர் )

என்ற பாடல் பாரதியின் நடுவு நிலைமைப் பண்பைக் காட்டுகிறது . கனகலிங்கம்

தாழ்ந்தகுலத்தில் பிறந்த இரா.கனகலிங்கத்தைத் தம்முடன் சேர்த்து வைத்துக் கொண்டார் .

இங்ஙனம் சாதிப்பிரிவை ஒழிக்கும் செயலில் தாமே முன்மாதிரியாக இருந்து வாழ்ந்து காட்டினார் பாரதி .

சாத்திரமா ?

சதியா ?

ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு நீதி சொல்லும் சாத்திரத்தைக் கண்டிக்கும் வகையில் அது சாத்திரமல்ல ‘ சதி ’ என்றார் .

சூத்திர னுக்கொரு நீதி தண்டச்

சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி

சாத்திரஞ் சொல்லிடுமாயின் அது

சாத்திரமன்று சதியென்று கண்டோம்

( உயிர் பெற்ற தமிழர் பாட்டு - ஸ்மிருதிகள்-13 )

( சூத்திரர் = அந்தணர் அல்லாதோர் , பார்ப்பு = அந்தணர் )

இவ்வாறு சாதிப் பிரிவுகளை நீக்கிச் சமூக நீதிக்கு வழிகாட்டினார் பாரதியார் .

2.4 சமய விடுதலை

இறைத் தத்துவத்தையும் ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்ட நெறிமுறைக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட நிலையைக் குறிப்பது சமய விடுதலை .

சமயங்கள் எல்லாம் மனிதனை ஒன்றுபடுத்தவே தோன்றின .

ஆனால் சமயத்தின் பெயரால் மனிதர்கள் வேறுபட்டு , ஒற்றுமையின்றி இருந்தனர் .

பாரதி இதைக் கண்டு வருந்தினார் .

பாரத நாட்டு மக்களிடம் காணப்பட்ட சமயக் காழ்ப்பு ( வெறுப்பு ) உணர்ச்சி நீங்கப் பாடுபட்டார் .

எல்லோரும் தம் வேற்றுமைகளை நீக்கி ஒன்றுபட்டு வாழ்வதற்கான வழியைத் தேடினார் .

அந்த வழி அறிவென்று கண்டார் .

2.4.1 அறிவே தெய்வம்

பாரதியார் கொள்கைப்படி பார்த்தால் ‘ சமயம் ’ என்பது மக்களுக்குக் கடவுள் உணர்வை ஊட்டி அவர்களைக் கடவுள் நெறியில் நிறுத்துவது .

மக்களிடம் காணப்படும் பொறாமை , ஆசை , அறியாமை முதலியவற்றை நீக்கி அன்பு , அருள் , அறம் முதலிய நற்குணங்களைத் தருவது , மக்களைத் தெய்வத் தன்மைப் பெறச் செய்வது என்பனவாகும் .

ஆகவே , தெய்வம் பல சொல்லி வாழும் மனிதர்களைப் பார்த்து , அறிவைத் தெய்வமாகக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிடும் பாரதி உண்மையும் தெய்வமென்று காட்டுகிறார் .

உண்மை அறிவின் ஒரு பகுதி அல்லவா ?

ஆகவே ,

மாடனைக் காடனை வேடனைப் போற்றி

மயங்கு மதியிலிகாள் ! - எத

னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்று

ஓதி அறியீரோ ?

( அறிவே தெய்வம் - 2 )

( மதியிலி = அறிவு இல்லாதவர் , ஓதி = சொல்லி )

என்று அறிவே தெய்வம் என்று உணர்த்துகிறார் .

அறிவின் வழி நடந்தால் பிணக்கும் , போரும் இல்லாமல் வாழலாமே !

தெய்வம் ஒன்று

உலகில் உள்ள மக்கள் அனைவரும் வணங்கும் தெய்வம் ஒன்றே .

நெருப்பை வணங்கும் அந்தணர் , மேற்குத் திசையை நோக்கி வணங்கும் இஸ்லாமியர் , சிலுவையின் முன் நின்று இயேசுவை வணங்கும் கிறித்துவர் ஆகியோர் கும்பிடும் தெய்வம் ஒன்றே .

அது எல்லாப் பொருளிலும் கலந்து நிற்கிறது .

ஒவ்வொரு மதத்தவரும் குறிப்பிடும் இறைவன் பெயர்தான் வேறுபட்டுள்ளது என்று மக்களை நல்வழிப்படுத்தும் வகையில் ,

யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள்

யாவினும் நின்றிடும் தெய்வம்

பாருக் குள்ளே தெய்வமொன்று இதில்

பற்பலச் சண்டைகள் வேண்டாம்

( முரசு - 13 )

என்று சண்டையில்லாமல் வேற்றுமை நீங்கி வாழ முழக்கமிடுகிறார் .

எல்லாச் சமயத்தைச் சேர்ந்தவர்களும் பாரதத் தாயின் வயிற்றில் பிறந்தவர்களே .

அவர்கள் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர்கள் .

எனவே , சமய உணர்வை நீக்கி எல்லோரும் ‘ பாரதத் தாயின் மக்கள் ’ என்ற பரந்த மனப்பான்மையை வளர்க்க ஆசைப்பட்டார் .

எல்லோரும் ஒன்று சமய வேறுபாட்டின் அடிப்படையில் இந்திய மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி செய்தனர் ஆங்கிலேயர் .

வங்காளப் பிரிவு இந்துக்களும் இசுலாமியர்களும் வேற்றுமை பாராட்ட வித்திட்டது .

சமய வேறுபாடின்றி இந்தியர்கள் ஒன்று பட்டு நின்றால் பாரதநாட்டின் பொது எதிரியான வெள்ளையர்களை இந்திய மண்ணிலிருந்து வெளியேற்ற முடியும் என்று எண்ணினார் பாரதியார் .

சாதிச் சண்டையும் , சமயச் சண்டையும் இந்திய மக்களிடம் இருக்கும் வரை தம்மை வெளியேற்ற முடியாது என வெள்ளையர்கள் எண்ணினர் .

இந்த எண்ணத்தை இந்திய மக்களுக்குத் தெரிவிக்கக் கருதிய பாரதியார் ,

ஜாதிச் சண்டை போச்சோ ? - உங்கள்

சமயச் சண்டைப் போச்சோ ?

நீதி சொல்ல வந்தாய் !

கண்முன்

நிற்கொ ணாது போடா !

( தொண்டு செய்யும் அடிமை - 2 )

( நிற்கொணாது = நிற்காமல் )

என ஒரு வெள்ளைக்காரன் இந்தியக் குடிமகனைப் பார்த்து ஏளனமாகக் கேட்பது போல் நாடக அமைப்பில் உரையாடல் அமைத்து இருப்பது சுவையான கற்பனை .

அதற்கு விடைதருவார் போல

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்

அன்னியர் வந்து புகல் என்ன நீதி ?

( வந்தே மாதரம் 1,3 )

என அமைத்திருப்பது பாரதியின் உள்ளத்தை வெளிப்படுத்துகிறது .

பாரதியாரின் சமயக் கொள்கை

பாரதியாரின் சமயக் கொள்கை குறித்து அவரது மாணாக்கர் ரா.கனகலிங்கம் ,

‘ சமய உணர்ச்சியைக் கொண்டே , பக்தியாகிய சக்தி ஆயுதத்தைச் சுழற்றிக் கொண்டே , வேற்றுமை உணர்ச்சிகளை வெட்டிக் களைந்து சமதர்ம விதையை ஆழமாக விதைத்துச் சிறந்த நற்பயனை விளைவித்துக் கொள்ளலாம் என்பது பாரதியார் கனவு ’ ( பாரதியார் இதயம் , பக் , 51 )

என்று கூறியிருக்கிறார் .

பாரதியார் எந்தவொரு சமயத்தையும் பெரிதெனக் கொள்ளாமல் வேற்றுமைகளுக்குள்ளே ஒற்றுமை காண முற்பட்டார் .

‘ ஸ ரி க ம ப த நி ’ என்ற ஏழும் வெவ்வேறான எழுத்துகள் .

ஆயின் அவற்றை இராகமாகப் பாடும்போது மனத்தை ஈர்க்கும் இனிய ஓசை கேட்கிறது அல்லவா ?

அதுபோல் எல்லாச் சமயங்களிலுமுள்ள சிறந்த கருத்துகளை மக்கள் உணர வேண்டும் .

அப்போதுதான் இந்தியர் இசைந்து வாழலாம் என்று நம்பினார் .

வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இந்த நாட்டின் தனிச்சிறப்பல்லவா ?

செயல் வீரர்

பாரதியார் சொல் வீரராக இல்லாமல் செயல் வீரராக இருந்தார் .

பிற சமயத்தவரோடு எவ்விதம் பழக வேண்டும் , அந்தச் சமயங்களை எவ்விதம் மதிக்க வேண்டும் என்பதைப் பற்றிக் கூறியது மட்டுமன்றி மற்றவர்களுக்குத் தாமே வழி காட்டினார் வாழ்ந்தும் காட்டினார் .

இயேசுவையும் , அல்லாவையும் இதயங்கனிந்து பாடித் துதித்தார் .

இந்த மகத்தான சமயப் புரட்சியைத் துவக்கிய பெருமை பாரதிக்கு உண்டு .

தாயுமானவரும் வள்ளலாரும் நடந்த பாதையில் பாரதி தம் அடிச்சுவடுகளைப் பதித்துச் செல்கிறார் .

தீயினைக் கும்பிடும் பார்ப்பார் - நித்தம்

திக்கை வணங்கும் துருக்கர்

கோயிற் சிலுவையின் முன்னே - நின்று

கும்பிடும் யேசு மதத்தார்

( முரசு - 12 )

என்று எம்மதமும் சம்மதமாகக் கொண்டு வாழ்ந்தார் .

பெயர்கள் வடிவங்கள் பலவானாலும் அவை ஒரே தெய்வத்தைக் குறிப்பிடுகின்றன என்று நம்பினார் .

ஆகையால் வேற்றுமை உணர்வின்றி எல்லா மதத்தின் கடவுளையும் பாடித் துதித்தார் .

இவ்வாறு பாரத மக்கள் சமய உணர்விலிருந்து விடுதலை பெற உழைத்தார் பாரதி .

அவர் கனவு கண்ட ‘ சமதர்மக்கொள்கை ’ இந்தியாவில் வளர்ந்து பரவினால் அங்கே பேணுகின்றோம் என்கின்ற பெருமைக்கும் பீழையுறுகின்றோம் ( சார்ந்திருக்கின்றோம் ) என்ற சிறுமைக்கும் இடமிருக்காது அல்லவா ?

ஒரு நாட்டின் விடுதலை என்பது அந்நியரிடமிருந்து பெறும் விடுதலை மட்டுமல்ல .

முதலில் தம் நாட்டிற்குள் காணப்படும் தேவையற்ற கட்டுப்பாட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பழக்க வழக்கங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும் .

அவற்றிலிருந்து விடுபட்டால் அந்நியரிடமிருந்து எளிதில் விடுதலை பெறலாம் .

இந்த நோக்கில் முதலில் பெண் விடுதலை , சாதி விடுதலை , சமய விடுதலை முதலியனவற்றைக் கூறி , இறுதியில் அரசியல் விடுதலையை வற்புறுத்துகின்றார் பாரதியார் .

2.5 அரசியல் விடுதலை

ஆங்கிலேயர் வணிகத்தின் பொருட்டு இந்தியாவிற்கு வந்தவர்கள் . மெல்ல மெல்ல , இந்திய நாட்டின் அரசியலில் நுழைந்தனர் .