மன்னர்களுக்கு இடையே பிரிவுகளை ஏற்படுத்தினர் .
பிரிவுகளைப் பயன்படுத்தி நாட்டு அரசியலில் பங்கு பெற்றனர் .
பிறகு அரசியலில் முழுமையாக ஈடுபட்டனர் .
இவ்வாறு இந்தியா முழுவதையும் தம் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர் .
இந்திய மக்கள் அடிமைப்பட்டனர் .
அரசியலில் சுரண்டப்பட்டனர் .
இக்கொடுமையை எதிர்த்துப் போராட முன்வந்தவர்களுள் பாரதியாரும் ஒருவர் .
அந்நியராகிய ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து இந்திய மக்கள் விடுதலை பெற வேண்டும் .
அதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிப் பல பாடல்களைப் பாடியுள்ளார் .
2.5.1 ஒற்றுமை
இந்தியா சாதியின் அடிப்படையிலான சமுதாய அமைப்பு உடையது .
எனவே மக்களிடையே பல பிரிவுகள் இருந்தன .
ஒற்றுமை ( Unity ) இல்லாமல் இருந்தது .
மக்களிடையே ஒற்றுமை இருந்தால்தான் , எல்லோரும் ஓர் இனம் என்ற உணர்வு இருந்தால் தான் , அந்நியரை எதிர்க்க முடியும் என்று நம்பினார் பாரதியார் .
எனவே இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பது பற்றிப் பாடுகிறார் .
அந்நியரின் அரசியல் ஆதிக்கத்தால் பல துன்பங்களை அனுபவித்தனர் இந்தியர் .
இதிலிருந்து விடுதலை பெற வேண்டும் .
இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?
அந்நியர்களை எதிர்த்துப் போராட வேண்டும் .
எவ்வாறு போராட வேண்டும் ?
ஒற்றுமையுடன் போராட வேண்டும் .
இல்லாவிட்டால் நாம் எல்லோரும் அழிந்து விடுவோம் என்கிறார் பாரதியார் .
ஆட்சியில் அமர்ந்திருக்கும் அந்நியர்கள் , நம்மைச் சுரண்டுகிறார்கள் .
அந்தச் சுரண்டலை ஒழிக்க - ஆட்சியை நீக்க ஒற்றுமையுடன் போராடுவோம் .
இல்லாவிட்டால் அழிந்து விடுவோம் என்று எச்சரிக்கிறார் .
2.5.2 அடிமை மோகம்
இந்தியர்களில் சிலர் ஆங்கிலேயரின் ஆட்சியை ஆதரித்தனர் .
ஆங்கிலேயரின் கீழ் அடிமையாக வாழ்வதையும் விரும்பினார்கள் .
ஏன் என்றால் அவர்களுக்கு ஆங்கிலேயரால் பல சலுகைகள் கிடைத்தன .
இத்தகைய அடிமைமோகம் கொண்டவர்களைப் பார்த்துப் பாரதியார் ,
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் !
என்று மடியும் எங்கள் அடிமையில் மோகம் ?
( சுதந்திர தாகம் , 1 )
( மடியும் = அழியும் )
என்று வினவுகிறார் .
மேலும் , அடிமை மோகம் கொண்டவர்களே , இனியாவது அந்த மோகத்தை விட்டு நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்ளுங்கள் என்று வேண்டுகிறார் .
அற்பமான அடிமைத் தனத்தை விரும்பி நீங்கள் பேணிப் பாதுகாத்து முன்னர் வாழ்ந்திருக்கலாம் .
அது ஓர் இழிவான செயல் என்று எண்ணி நாணம் அடையுங்கள் .
அதன் காரணமாக உங்களுக்கு வந்த இகழ்ச்சிகள் நீங்க வேண்டும் எனில் , அந்நியருக்குத் தொண்டு செய்யும் அந்த அடிமை மோகத்தைத் ‘ தூ ’ என ஒதுக்கி விடுங்கள் என்று வேண்டுகிறார் பாரதியார் .
புல்லடிமைத் தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக்கு இனி மனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி .
( தேசிய கீதங்கள் , வந்தேமாதரம் , 1,6 )
( புல் , புல்லிய = அற்பமான , பேணி = பாதுகாத்து , பண்டு = பழைய / முன்னர் , தூவென்று = ‘ தூ ’ என , தள்ளி = ஒதுக்கி )
2.5.3 அஞ்சாமை
இந்தியா , அந்நியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற வேண்டுமானால் , அந்நியர்களை எதிர்க்கும் துணிவு வேண்டும் .
அந்தத் துணிவைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் ?
எதைக் கண்டும் அஞ்சக் கூடாது . அஞ்சாமையே துணிவைக் கொடுக்கும் .
அதனால் எதைக் கண்டும் அஞ்சாதீர்கள் என்று வேண்டுகிறார் பாரதியார் .
எனவே , கோழையாய் ( coward ) இருக்கின்றவர்களையும் , எதைக் கண்டும் அஞ்சுகின்றவர்களையும் பார்த்து ,
வலிமை யற்ற தோளினாய் போ போ போ
கிலிபிடித்த நெஞ்சினாய் போ போ போ
( நிகழ்கின்ற ஹிந்துஸ்தானமும் வருகின்ற ஹிந்துஸ்தானமும் , போகின்ற பாரதத்தை சபித்தல் - 1 )
( அற்ற = இல்லாத , கிலி = அச்சம் )
என்று கூறித் துரத்துகிறார் .
அதே நேரத்தில் வருங்கால பாரத மக்களைப் பார்த்து ,
ஒளி படைத்த கண்ணியாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
( நிகழ்கின்ற ஹிந்துஸ்தானமும் வருகின்ற ஹிந்துஸ்தானமும் , வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்-1 )
என்றும் அழைக்கின்றார் .
அஞ்சாமையும் துணிவும் இருந்தால்தான் அந்நியர் ஆட்சியை இந்த நாட்டிலிருந்து அகற்ற முடியும் என முழுமையாக நம்பினார் பாரதியார் .
அவர் நம்பிக்கை வீண்போகவில்லை .
அவர் வாழ்ந்த காலத்தில் கிடைக்காத விடுதலை அவருக்குப் பின்னாவது கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடையலாம் .
2.6 தொகுப்புரை
இந்தியப் பெரு நாட்டின் விடுதலைக்காகப் போராடிய பாரதியார் அரசியலில் நுழைந்த சூழல் , விடுதலை இயக்கத்தில் அவர் மேற்கொண்ட பணி , தீவிரவாதியாகச் செயல்பட்ட பாரதி மகாத்மா காந்தியின் அறப்போரில் ஈடுபாடு கொண்டு மிதவாதியாகத் தம்மை மாற்றிக் கொண்ட நிலை முதலியன பற்றி இப்பாடத்தில் இதுவரை படித்தறிந்தீர்கள் .
மேலும் பெண்களின் விடுதலை , பெண் உரிமை , சாதி விடுதலை , சமய விடுதலை , அரசியல் விடுதலை பற்றிப் பாரதியார் தம் பாடலில் கூறியுள்ள கருத்துகளையும் , உண்மையான விடுதலை என்பது வெறும் அரசியல் விடுதலை அல்ல ; சாதி , சமய , இன , பால் பாகுபாடுகளில் இருந்து விடுபடுவதே உண்மையான விடுதலை என்பதையும் தெளிவுபடுத்த இப்பாடத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. பாரதி சாதிகள் இல்லையடி பாப்பா என்று குழந்தையைப் பார்த்துப் பாடியதன் காரணம் கூறுக .
[ விடை ]
2. பாரதியின் ‘ ஆறில் ஒரு பங்கு ’ என்னும் கதை எதை உணர்த்துகிறது ?
[ விடை ]
3. சமயங்கள் எதற்காகத் தோன்றின ?
[ விடை ]
4. பாரதியார் எதைத் தெய்வமென்று காட்டுகிறார் ?
[ விடை ]
5. அரசியல் விடுதலை பெறுவதற்கான சிறந்த வழி எது ?
பாரதியாரின் உலகளாவிய நோக்கு
• 3.0 பாடமுன்னுரை
பாட்டின் திறத்தால் வையத்தைப் பாலித்திட நினைத்தவர் பாரதி .
நமக்குத் தொழில் கவிதை , நாட்டுக்குழைத்தல் , கணநேரமும் சோராதிருத்தல் என்று தன் வாழ்வின் இலட்சியத்தைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர் .
பாரதி வாழ்ந்த காலத்தில் இந்திய நாடு அடிமைப்பட்டுக் கிடந்தது .
தாழ்வு அடைந்து , வறுமை மிஞ்சி , விடுதலை தவறி , பாழ்பட்டு நின்ற சூழல் .
நெஞ்சில் உரமின்றி நேர்மைத் திறமின்றி மக்கள் , எதைக்கண்டும் அஞ்சிய காலம் ; இத்தகைய சூழலில் பாரதி பிறந்து வளர்ந்தார் .
அவர் வளர்ந்த சூழலிலிருந்து முற்றும் மாறுபட்ட ஒரு கவிஞனாக உருப்பெற்றார் .
புதுநெறி காட்டிய பேராளனாகத் திகழ்ந்தார் .
பாரதியின் சமகாலத்துப் புலவர்களை நோக்கும்போது , பாரதியின் தனித்துவம் புலனாகும் .
ஒரு யுகக் கவிஞனாக அவர் வளர்ந்ததும் வாழ்ந்ததும் தெளிவாகும் .
அனைவர்க்கும் சொந்தமானவர்
எந்த ஒரு படைப்பாளரும் பிறந்த நாட்டிற்கு மட்டும் சொந்தமாக மாட்டார் .
அவர் உலகச் சொத்தாகக் கருதத் தக்கவர் .
எந்த நாட்டில் , எந்தக் காலத்தில் , எந்தச் சமயத்தில் எந்த மொழியில் அவர் தம் படைப்பை அளித்திருந்தாலும் அவர் மக்கள் மீது அக்கறை கொண்டவராக இருப்பாரேயானால் அவர் அனைவர்க்கும் சொந்தமானவர் .
அப்படிப்பட்டவர்களிலே ஒருவராகத் திகழ்பவர் பாரதி .
உலகக்கவி
பாரதியை வேதாந்தக் கவியென்பார் ஒரு சிலர் ; சமுதாயச் சீர்திருத்தக் கவியென்பார் வேறுசிலர் ; தேசியக் கவியென்பார் மற்றும் சிலர் ; பக்திக் கவியென்பார் மேலும் சிலர் ; புரட்சிக்கவியென்று போற்றுவர் சிலர் .
இவையனைத்தும் பாரதி என்பது உண்மைதான் .
ஆயினும் எந்தக் குறுகிய வட்டத்திற்குள்ளும் பாரதி என்ற கவிஞனை அடைக்க இயலாது ; அவர் காற்றைப் போல் சுதந்திரமானவர் ; கடலைப்போல் ஆழமானவர் ; விரிந்த மனம் கொண்டவர் .
அனைத்துலக மக்களையும் அரவணைத்துச் செல்லும் அற்புத உள்ளம் கொண்டவர் . அதனாலேயே அவர் உலகக்கவியாக உருவானார் ; மகாகவி எனப் போற்றப்பட்டார் .
அவரது உலகளாவிய நோக்கை இப்பாடம் தொகுத்துக் கூறுகிறது .
3.1 உலகளாவிய நோக்கு
‘ பாரதியின் உலகளாவிய நோக்கு ’ என்ற இப்பாடத்தில் பாரதியின் உலகளாவிய பாங்கு எத்தகையது எனப் பார்க்கலாமா ?
உலகளாவிய நோக்கு என்றால் என்ன ?
இதுதானே உங்கள் உள்ளங்களில் எழும் கேள்வி ?
சாதி , சமயம் , உயர்வு , தாழ்வு , ஏழை , பணக்காரன் , ஆண் , பெண் , கற்றவன் , கல்லாதவன் , நாடு , மொழி , இனம் இவையனைத்தையும் கடந்து நின்ற கவிஞன் மனம் உலக முழுவதையும் தழுவிச் செல்ல வேண்டும் .
என் சாதி , என் மதம் , என் மொழி , என் நாடு , என் மக்கள் என்றில்லாமல் இந்த வரையறைகளை எல்லாம் தகர்த்துக் கொண்டு அனைத்துலக மக்களும் எனது சகோதரர்கள் ; அனைத்துலக மக்களின் துன்பமும் எனது துன்பம் ; அனைத்துலக மக்களும் சமம் என்று நினைக்கின்ற சமநோக்கு உலகளாவிய நோக்கு எனலாம் .
3.1.1 மானிடத்தின் பொது உணர்வுகள்
இன மொழி வேறுபாட்டால் உணர்வு வேறாகுமோ ?
எவை மாறுபட்டாலும் உணர்வுகள் வேறாவதில்லை .
நாட்டுக்கு நாடு மொழி , இனம் , பண்பாடு இவற்றில் வேற்றுமையுண்டு .
அப்படியிருக்கும்போது எப்படி உலகளாவிய சிந்தனையை ஒருவர் கொள்ள முடியும் என்று தோன்றுகிறதா ?
உண்மைதான் .
நிலம் , நிறம் , மொழி , இனம் , பண்பாடு எல்லாமே வேறாக இருக்கலாம் .
ஆனால் மனித சமூகத்தின் - மானிடத்தின் ( Humanity ) உணர்வுகளில் வேறுபாடுகள் எதுவும் இல்லை .
அதாவது உண்மை , பொய்மை , இன்பம் , துன்பம் , ஆசை , நிராசை , நம்பிக்கை , அவநம்பிக்கை , வீரம் , அச்சம் , ஏக்கம் , ஏமாற்றம் போன்ற உணர்வுகள் எல்லோருக்கும் ஒன்றுதானே ?
ஒருவர்க்கு மகிழ்ச்சி தருவது பிறர்க்குத் தராமல் இருக்கலாம் ; ஒருவர் ஏங்குவதற்குப் பிறர் ஏங்காமல் இருக்கலாம் .
ஆனால் அடிப்படை உணர்வுகளில் மாற்றமில்லை .
உலக மக்கள் அனைவரும் அனுபவிக்கின்ற - அடைகின்ற உணர்வுகள் இவை !
3.1.2 மானிடத்தின் பொதுத் துயரங்கள்
உணர்வுகளுக்குக் கூறியது போலவே அந்த உணர்வுகளால் உருவாகும் துயரங்களும் ஒன்றாகவே உள்ளன .
அவற்றை அனுபவிக்கின்ற அளவு வேண்டுமாயின் மாறலாம் ; குறையலாம் ; கூடலாம் .
ஆயினும் துயரங்கள் பொதுவானவைதாம் .
அதனால் தான் ஓரிடத்தில் மனித இனத்தின் துயரம் பேசப்படும்போது அந்தத் துயரத்தை அனுபவிக்கும் மக்கள் உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் அவர்களுக்கும் அது பொதுவாகிறது ; பொருத்தமாகிறது .
உதாரணமாக வறுமையில் வாடும் மக்களின் துயரம் எந்த நாட்டு மக்களைப் பற்றியதாக இருந்தால்தான் என்ன ?
அது பொதுவானதுதானே ?
ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறையால் அடிமைப்படும் மக்கள் யாராக இருந்தால் தான் என்ன ?
அது பொதுவானதல்லவா ?
எண்ணிப் பாருங்கள் !
3.2 பாரதியின் உலக நோக்கு
பாரதி என்ற மானிடனின் உலக நோக்கிற்கு எது அடிப்படை ?
அவர் காலத்தில் வாழ்ந்த பிற மக்களில் பெரும்பாலோர்க்கு அத்தகைய எண்ணம் இல்லையே , அப்படியானால் பாரதிக்கு இச்சிந்தனைக்கு அடித்தளமாக அமைந்தது எது ?
அணிசெய் காவியம் ஆயிரங் கற்பினும்
ஆழ்ந்திருக்குங் கவிஉளம் காண்கிலார்
( சுயசரிதை : 22 )
என்ற பாரதியின் கவிதை வரிகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன .
இலக்கியவாதிகளின் படைப்புகளில் ஆழ்ந்து , அங்குப் பொதிந்து கிடக்கும் எழுத்தாளரின் உளப்பாங்கைச் சீர் தூக்கிப் பார்ப்பது படிப்பவர்க்கு அழகு .
அவ்வழியில் பாரதியின் கவிதைகளில் ஆழ்ந்திருக்கும் அவர் கவியுள்ளத்தை நோக்கினால் அது பாரதியின் உள்ள உயர்வையும் உலகளாவிய அவர்தம் நோக்கையும் தெளிவாகக் காட்டி நிற்கும் .
3.2.1 பாரதி என்ற மானிடன்
பாரதி என்ற மானிடன் தமிழகத்தை மட்டும் எண்ணிப் பார்க்கவில்லை .
பாரத நாட்டையும் ஒருங்கிணைத்துப் பார்த்தார் .
அப்படிப் பார்க்கும்போதே உலகப் பார்வையைப் பெற்றார் .
இங்குள்ள மக்களின் பிரச்சனையைத் தேசியப் பிரச்சனையாக , உலக மக்களின் பிரச்சனையாக அவர் உள்ளம் பார்த்தது .
அதனால் அவர் தமிழர்கள் பிரச்சனையைப் பேசினாலும் இந்தியர்களின் பிரச்சனையைப் பேசினாலும் அது உலகப் பிரச்சனையாகியது .
அவற்றைத் தீர்க்க அவர் கூறிய தீர்வுகள் , செயல்பாடுகள் அனைவர்க்கும் பொருந்துவதாயின .
பாரதி என்ற படைப்பாளர் , கவிஞர் ஒரு மானிடராக உயர்ந்து நிற்கிறார் .
இந்த மானிடர் சக மனிதர்களின் துக்கங்களில் பங்கு கொள்பவர் ; சக மனிதர்களின் சிக்கல்களைக் கண்டு வருந்துபவர் .
வெறும் வருத்தத்தோடு நின்றுவிடாமல் அவர் ஏக்கங்களும் தவிப்பும் செயல்பாடுகளாய் உருவாயின ; சக மனிதர்களைத் தட்டியெழுப்பும் பள்ளியெழுச்சியாக அமைந்தது .
போர்க்கோலம் கொள்ளச் செய்யும் முரசொலியாக முழங்கியது . எங்கெல்லாம் மக்கள் துயரமடைந்தார்களோ அங்குள்ள மக்களின் துயரத்தை எண்ணிப் பார்த்து , இங்குள்ள மக்களை எழுச்சியுறச் செய்தவர் ; வேறு வேறு நாடுகளில் நடக்கின்ற நிகழ்ச்சிகளை எல்லாம் துல்லியமாகக் கணித்து , அவற்றைப் பாராட்டியவர் ; அதன் வழி தம் மக்களைச் செயல்திறம் கொண்டவர்களாக உருவாக்க நினைத்தவர் பாரதி .
எந்த இன மக்கள் எங்குத் துயரத்தில் மூழ்கினாலும் அவர்களுக்காகப் பெரிது வருந்தும் பண்பை இயல்பாகக் கொண்டிருந்தார் பாரதி .
இதற்கு எது அடிப்படையாக அமைந்தது ?
3.2.2 அத்வைதம் வகுத்த அடிப்படை
பாரதி இந்து சமயத்தைச் சார்ந்தவர் ; ஆயினும் எந்தச் சமயத்தின் மீதும் அவருக்கு வெறுப்பில்லை , பகைமையில்லை ; உயர்வு தாழ்வு என்ற எண்ணமில்லை .
எல்லாச் சமயங்களும் சமம் என்றே எண்ணினார் .
மதித்தார் .
ஆயினும் தாம் சார்ந்த சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் .
தம் சமயத்தை நேசித்ததாலேயே பிற சமயத்தையும் நேசித்தவர் ; மதித்தவர் .
வேதாந்தக் கோட்பாட்டில் ஈடுபாடு உடையவர் ; ஆயினும் வெற்று ( empty / hollow ) வேதாந்தியாக அவர் உருவாகவில்லை .
அவர் எப்போதும் மக்களைப் பற்றியே கவலை கொண்டிருந்தார் .
அவர்கள் எந்நாட்டவராயினும் எச்சமயத்தைச் சார்ந்தவராயினும் எச்சாதியைச் சார்ந்தவராயினும் சமமாகவே மதித்தார் .
கிறித்துவர்களையும் , இஸ்லாமியர்களையும் தம் சகோதரர்களாக எண்ணினார் .
பாரதி வேதாந்திதான் ; ஆனால் வேதாந்தத்தின் உட்பொருளை உணர்ந்த பாரதி உண்மையான வேதாந்தி .
வேதாந்தத்தின் உட்பொருளாவது , அனைவரிடத்திலும் இறைவன் இருக்கிறான் , அனைவரும் சமம் என்பதாகும் .
பக்தியாளன்தான் பாரதி ; ஆனால் வெறித்தனமில்லாத பக்தியாளர் .
இந்து மக்கள் வழிபடும் அத்தனை தெய்வங்களையும் வழிபடுபவர் ; ஆயினும் ஆயிரம் தெய்வங்களைப் பாடினாலும் தெய்வம் ஒன்று என்பதில் நம்பிக்கை கொண்டவர் .
ஏனென்றால் ஓர் உருவம் , ஒரு நாமம் இல்லாத இறைவனுக்கு ஆயிரம் திருநாமங்கள் சூட்டி மகிழ்ந்த மக்களின் உள்ளத்தை நன்கறிந்தவர் .
அதனால் தான் அல்லாவையும் ஏசுவையும் வேறுபடுத்திப் பார்க்கும் மனம் அவர்க்கில்லை .
அத்வைதக் கொள்கை தந்த கொடையிது .
ஆமாம் .
அத்வைதக் கொள்கை என்றால் என்ன ?
நீங்கள் அறிவீர்களா ?
அத்வைதக் கொள்கை
‘ அத்வைதம் ’ என்பதன் பொருள் ; ‘ இரண்டாகத் தோன்றும் எவையும் இரண்டல்ல , ஒன்றே ’ என்பதாம் .
அதாவது தெய்வம் ஒன்றுதான் ; அதை எந்தப் பெயராலும் அழைக்கலாம் .
பெயரில் என்ன இருக்கிறது ?
அந்தத் தெய்வம் உன்னிடத்திலும் இருக்கிறது ; என்னிடத்திலும் இருக்கிறது .
ஏன் உலகப் பொருள்கள் அனைத்திலும் உள்ளது .
அனைத்து சீவன்களிலும் உள்ளது .
அதாவது அசையும் அசையாப் பொருள்கள் அனைத்திலும் இருப்பது .
அப்படியாயின் எல்லாச் சாதியிலும் மதத்திலும் இருப்பதுதானே ?
எல்லோரிடமும் இருப்பவர் இறைவன் என்றால் வேற்றுமைக்கு இடம் ஏது ?
பாரதியின் உலகளாவிய நோக்கிற்கு அடிப்படை வகுத்தது இந்த அத்வைதக் கோட்பாடுதான் .
இதற்கு மேலும் உரமிட்ட பிற தூண்டுதல்களை இனிப் பார்க்கலாமா ?
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. பாரதி பாட்டின் திறத்தால் எதைச் செய்ய நினைத்தார் ?
[ விடை ]
2. பாரதி வாழ்ந்த காலத்தில் இந்திய நாடு எப்படியிருந்தது ?
[ விடை ]
3. உலகளாவிய நோக்கு என்றால் என்ன ?
[ விடை ]
4. மானிடத்திற்குப் பொதுவான ஏதேனும் இரு உணர்வுகளையும் இரு துயரங்களையும் குறிப்பிடவும் .
[ விடை ]
5. பாரதியின் உலகளாவிய நோக்கிற்கு எது அடிப்படையாக அமைந்தது ?
3.3 உலக நோக்கிற்கு உரமிட்ட தூண்டுதல்கள்
பாரதியின் பரந்த உள்ளத்திற்குத் தூண்டுகோலாய் அமைந்தவை சில. அவற்றுள் விழுமிய கருத்துகள் எங்கிருந்தாலும் யார் எழுதியதாக இருந்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனமும் அவர்களைப் போற்றும் போக்கும் பாரதியிடம் இயல்பாக இருந்த பண்புகள் .
அதனாலேயே அவருடைய கோட்பாடுகளுக்கு ஒத்த கருத்துடைய மேலைநாட்டுக் கவிஞர்கள் தம் கவிதைகள் , கருத்தாக்கங்கள் அவரைக் கவர்ந்தன .
அவை அவருக்குப் பெரிதும் தூண்டுகோலாய் அமைந்ததோடு பெருமளவு தாக்கத்தையும் ( impact ) ஏற்படுத்தின .
அத்வைதக் கொள்கை அவருடைய உலகளாவிய நோக்கிற்கு வேராய் ( root ) அமைந்ததுபோல் மேலைநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளும் அறிஞர்களின் கருத்தாக்கங்களும் அந்த வேர்கள் ஆழமாயும் உறுதியாயும் பரவி நிற்க உரமாய் அமைந்தன . பாரதியின் உலக நோக்கிற்கு உரமிட்ட தூண்டுதல்களைத் தந்த ஒரு சிலரின் கோட்பாடுகளைச் சுருக்கமாக இங்குக் காணலாமா ?