146

3.3.1 பாரதியும் ஷெல்லியும் ( Shelley , P.B)

ஷெல்லி பெரும் புரட்சிக் கவிஞன் .

பாரதி புரட்சி இலக்கியப் பாரம்பரியத்தில் தமக்கு முன்னோடியான ஷெல்லியிடம் ஈடுபாடு கொண்டிருந்ததில் எந்தவித வியப்புமில்லை .

ஷெல்லியின் பாடல்களைப் பாரதி விரும்பிக் கற்றார் .

தமக்கு ‘ ஷெல்லிதாசன் ’ என்ற புனை பெயரையும் சூட்டிக் கொண்டார் .

‘ ஷெல்லி சங்கம் ’ என்ற பெயரில் ஒரு சங்கத்தையும் ஏற்படுத்தி , அதில் ஷெல்லியின் நூல்களைப் படித்துக் காட்டி வந்தார் .

அவருடைய கவிதைகளைப் பிறரும் அனுபவிக்கும்படி செய்தார் .

அந்த அளவுக்கு ஷெல்லியிடம் பாரதிக்கு ஈடுபாடு இருந்தது .

ஷெல்லியின் தாக்கம்

பாரதியார் மற்ற கவிஞர்களால் தாக்கம் பெற்றதைவிட ஷெல்லியால் தாக்கம் பெற்றதை அவர் கவிதைகள் எதிரொலிக்கின்றன .

இருவர் மனத்திலும் சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் என்ற மூன்று பெரும் கோட்பாடுகள் பதிந்து இருந்தன .

மனித மேம்பாட்டையே இருவரும் குறிக்கோளாகக் கொண்டனர் .

இலட்சியங்கள்

நிறுவனங்களுக்கு எதிராகக் கலகம் செய்வது , புரட்சி மனப்பான்மை , பெண் விடுதலைக்காக உழைத்தல் , எல்லாவற்றையும் விட ஷெல்லியுடைய இலட்சியக் கோட்பாடுகளாகிய சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் ஆகியவை பாரதியைப் பெரிதும் கவர்ந்தன .

அவற்றையே பாரதியும் தம் இலட்சியமாகக் கொண்டார் .

3.3.2 பாரதியும் வால்ட் விட்மனும் ( Walt Whitman )

ஷெல்லிக்கு இணையாகப் பாரதியைப் பெரிதும் கவர்ந்தவர் அமெரிக்கக் கவிஞரும் அறிஞருமான வால்ட் விட்மன் .

பாரதியின் வசன கவிதைக்குத் தூண்டுகோலாய் அமைந்தவர் வால்ட் விட்மன் .

அவருடைய ‘ புல்லின் இதழ்கள் ’ ( The Leaves of Grass ) என்ற கவிதையே பாரதியின் வசன கவிதைக்கு அடித்தளமிட்டது .

பொதுப் பண்புகள்

பெண் விடுதலை பற்றி பாரதி , விட்மனைப் போலவே விரிவாகப் பாடுகிறார் .

இருவரும் பூமி மீதும் வாழ்க்கை மீதும் மக்கள் மீதும் பற்றுடையவர்கள் .

அதனாலேயே நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கவிதைகள் படைத்தார்கள் .

அவரவர் நாட்டின் தனித்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென்று விரும்பினர் .

சுருங்கிய தேசியம் என்ற வட்டத்திலிருந்து விரிந்த உலகளாவிய பார்வைக்குப் பரிணமிக்க விட்மனின் கவிதைகளும் கட்டுரைகளும் பாரதிக்குப் பெரிதும் உதவின என்பதை உறுதியாகக் கூறலாம் .

அனைத்துயிருடனும் ஒன்றிய நிலை

இயற்கையில் தம்மை மறந்தவர் விட்மன் .

வயல்வெளிகளில் காட்சிதரும் விலங்குகளோடும் பறவைகளோடும் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டு ( அவற்றின் மகிழ்ச்சியில் ) மகிழ்ந்தவர் விட்மன் .

பாரதியும் உலகத்தைக் கண்டு எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று பாடி மகிழ்ந்தவர் .

காக்கை , குருவி , கடல் , மலை போன்றவற்றோடு தம்மை இணைத்துக் கொண்டு மகிழ்கிறார் .

விட்மனின் ஜனநாயகக் குரலும் பாரதியைப் பெரிதும் ஈர்த்தது .

பாரதியின் உலகளாவிய நோக்கிற்கு விட்மன் உரமூட்டியதோடு பெரும் தூண்டுதலாகவும் அமைந்ததைத் தெளிவாக அறியலாம் .

3.3.3 பாரதியும் பைரனும் ( Byron , G.G)

கிரேக்க நாட்டின் நாகரிகம் உலகமறிந்தது .

அதுதன்னிலை கெட்டு , அன்னியருக்கு அடிமையானதையும் கலைகளெல்லாம் மங்கி நின்ற நிலையினையும் எண்ணி பைரன் வருந்துகிறார் .

பாரதியும் இந்திய நாட்டின் அடிமை நிலையை எண்ணி ஏங்குகிறார் .

பெருமை பல பெற்ற பாரதநாடு அடிமைப்பட்டு அல்லல் உறுவதைக் கண்டு வருந்துகிறார் .

ஷெல்லி போற்றிய பைரன் மீது ஷெல்லிதாசனாகிய பாரதிக்கு ஈடுபாடு ஏற்பட்டதில் வியப்பில்லை .

பைரனை விரும்பிப் படித்தவர் பாரதி .

‘ பைரனுக்கும் பாரதிக்கும் இடையே நிலவிய உறவு இவர்களிடம் மேலோங்கி நின்ற விடுதலைத் தீயே ’ என்று சுத்தானந்த பாரதி கூறுவார் .

‘ விடுதலைக்காகப் போராடும் பாரதிக்கு ஓர் ஒளியூட்டும் கண்ணியமான எடுத்துக்காட்டாக , பைரன் திகழ்ந்திருக்க வேண்டும் ’ என்பார் கா.மீனாட்சிசுந்தரம் .

3.3.4 பாரதியும் கீட்ஸும் ( Keats , John )

உணர்ச்சி மிகுந்த கவிஞன் கீட்ஸ் .

இளம் வயதிலேயே மரணம் அடைந்தவர் .

உணர்ச்சி மிகுந்த கவிஞனாகிய கீட்ஸின் கவிதைகள் பாரதிக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின .

கீட்ஸின் அழகு தத்துவம் பாரதியின் குயில்பாட்டில் வெளிப்பட்டது என்பர் திறனாய்வாளர் .

அழகைத் தேடும் தேடல் அது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என மகிழும் பாரதிக்குக் கீட்ஸின் அழகுணர்ச்சி வசப்பட்டதில் என்ன ஆச்சரியம் ?

‘ உண்மையே அழகு .

அழகே உண்மை ’ என்பதில் இருவருமே இணைந்து போகின்றனர் . 3.3.5 பிற அறிஞர்கள்

மேலும் பல மேலைநாட்டு அறிஞர்கள் பாரதியின் இதயத்தைக் கவர்ந்துள்ளார்கள் .

பாரதி தம் கட்டுரைகளிலும் அமெரிக்கா , ஜப்பான் , சீனா , பிரான்ஸ் போன்ற மேல்நாட்டு அறிஞர்களின் கருத்துகளைத் தமிழர்க்கும் பாரதநாட்டு மக்களுக்கும் விழிப்புணர்வு தோன்ற ஆங்காங்கே சுட்டிக் காட்டியுள்ளார் .

தொழில் என்னும் கட்டுரையில் சீனஞானி சீஇங் , உருஷ்ய ஞானி டால்ஸ்டாய் ( Tolstoy ) , அமெரிக்க ஞானியாகிய தோரோ ( Thoreau ) , கார்லைல் ( Carlyle ) ஆகிய ஆங்கில ஆசிரியர்களைப் போற்றுகிறார் .

பாரதியும் உலக அறிஞர்களும்

இவையனைத்தும் நமக்குத் தெளிவாகக் காட்டுவன யாவை ?

பாரதி உலக அறிஞர்கள் பலரை நன்கு படித்துள்ளார் ; அவர்களின் கருத்துகளைத் தம்வயமாக்கிக் கொண்டுள்ளார் .

அவர்களின் உணர்வு ஒத்த கருத்தாக்கங்களின் தாக்கமும் அவருக்கு இருந்திருக்கிறது .

அதன் காரணமாக அவருடைய நாட்டு விடுதலை , பெண் விடுதலை , அழகைத் தேடும் தேடல் , சமத்துவக் கோட்பாடு ஆகியவை உரம் பெற்றதோடு அவருடைய கவிதைகளிலும் கட்டுரைகளிலும் அவை வேகத்தோடும் வீச்சோடும் இடம் பெற்றன என்பதைத் தெளிவாக அறியலாம் .

பொது நலத்தொண்டர்கள்

ஒன்றை இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும் .

பாரதியின் உள்ளத்தை ஈர்த்தவர்கள் அனைவருமே தம் மக்களுக்கும் , தம் நாட்டிற்கும் மட்டுமன்றி உலக மக்களுக்கும் பொருந்தும் சிந்தனைகளைத் தந்தவர்கள் .

எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டு மக்களின் விடுதலை மையப் பொருளாக அமைந்தது .

மக்களின் சமத்துவத்திற்காக அவர்கள் எழுதினார்கள் ; போராடினார்கள் ; வாழ்ந்தார்கள் .

பாரதிக்கும் பேச்சும் மூச்சும் மக்களைப் பற்றியதாகவே இருந்தது .

அப்படிப்பட்டவரின் உள்ளத்திற்கு மேற்கூறிய பெரியோர்களின் எழுத்தும் செயலும் வலுவாக அமைந்ததில் என்ன வியப்பு ?

3.4 உலகநோக்கில் விடுதலைச் சிந்தனை

பாரதி கூறியிருப்பது போல நன்மையும் அறிவும் எங்கிருந்தாலும் அவற்றைத் தழுவி வாழ்வதில் குறையொன்றுமில்லை ; மாறாக வளம்பல சேர்க்கும் .

. நன்மையும் அறிவும்

எத்திசைத் தெனினும் யாவரேகாட்டினும்

மற்றவை தழுவி வாழ்வீராயின்

அச்சமொன்றில்லை..........

( தமிழச்சாதி - அடிகள் 119-122 )

தம் கோட்பாட்டிற்கு இணங்கவே பாரதியும் பிறநாட்டு நல்லறிஞர் நூல்கள் பலவற்றைக் கற்றார் .

தெளிவடைந்தார் .

தேனீயைப் போல் திரட்டித் தம்வயமாக்கிக் கொண்டார் .

சீன , ஜப்பானியக் கவிதைகள் மொழிபெயர்ப்பு , அமெரிக்கக் கவி வால்ட் விட்மனின் படைப்புகள் , ஷேக்ஸ்பியர் ( Shakespeare ) , டென்னிசன் ( Tennyson ) , வோர்ட்ஸ் வொர்த் ( Wordsworth ) , பைரன் , கீட்ஸ் , ஷெல்லி என்ற அனைத்து அறிஞர்களின் படைப்புகளைச் சுவைத்தார் .

வெறும் இலக்கிய இன்பத்திற்காக அன்று ; அவற்றுள் இழையோடிய , மானுட விழுமியங்களால் , அவற்றுள் பின்னிப் படர்ந்த மானிட நலன் காக்கும் உணர்வு எழுச்சிகளால் , கவரப்பட்டு ( சமூக அக்கறையோடும் மக்கள் மீது கொண்ட அளவிட இயலாத அன்பினாலும் ) அவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டார் .

மேற்குறிப்பிட்ட உலக அறிஞர்களின் வாயிலாக , விடுதலை , சமத்துவம் , சகோதரத்துவம் எனும் முப்பெரும் கோட்பாடுகளில் பாரதியார் ஈடுபாடு கொண்டார் .

3.4.1 விடுதலை - விளக்கம்

விடுதலை என்பது யாது ?

பாரதியே கூறுகிறார் .

அதை முதலில் பார்க்கலாமா ?

‘ மனித உயிர்களுக்கு இருவித நிலைமை தான் உண்டு .

எதுவும் தன் விருப்பப்படி செய்து , அதனால் ஏற்படக் கூடிய இன்ப துன்பங்களுக்குத்தான் பொறுப்பாளியாக இருப்பது ஒரு நிலைமை .

அதுதான் சுதந்திரம் ’

( பாரதியார் கட்டுரைகள் பக் : 99 )

பாரதியே ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் ( Herbert Spencer ) சொல்லுவதை மேற்கோளாகக் காட்டுகிறார் .

‘ பிறருக்குத் தீங்கில்லாமல் அவனவன் தன் இஷ்டமானதெல்லாம் செய்யலாம் என்பதே விடுதலை ’ அதாவது ‘ பிறருக்குக் காயம் படாமலும் , பிறரை அடிக்காமலும் வைய்யாமலும் , கொல்லாமலும் அவர்களுடைய உழைப்பின் பயனைத் திருடாமலும் மற்றபடி ஏறக்குறைய நான் எது பிரியமானாலும் செய்யலாம் என்ற நிலையில் இருந்தால் மாத்திரமே என்னை விடுதலையுள்ள மனிதனாகக் கணக்கிடத் தகும் ’

பாரதியின் பரந்த நோக்கு

தமிழ்நாட்டைச் சார்ந்த பாரதி , தமிழ்நாட்டில் உள்ள தேசியத் தலைவர்களாகிய வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்றோரையும் புகழ்ந்து பாடியுள்ளார் .

தமிழ்நாட்டின் எல்லையைக் கடந்து இந்திய தேசிய அளவிலான , பாலகங்காதரதிலகர் , சத்ரபதி சிவாஜி , மகாத்மா காந்தி போன்ற சிறந்த தலைவர்களையும் சிறப்பித்துக் கூறியுள்ளார் .

அவற்றிற்கும் மேலாக , உலகளாவிய நிலையில் அவரது பார்வை செல்கிறது .

உலகநாடுகளிலுள்ள தலைவர்களைப் பற்றியும் , உலகில் உள்ள நாடுகளில் ஏற்பட்ட விடுதலை இயக்கங்கள் பற்றியும் புகழ்ந்து கூறுகிறார் .

3.4.2 இத்தாலியின் விடுதலை

ஒரு சமயம் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய இத்தாலி நாடு அந்நியர் படையெடுப்பால் சீர்குலைந்தது .

இத்தாலிய நாடு சிசிலி , ரோம் , வெனிஸ் , நேபில்ஸ் எனத் துண்டு துண்டாகப் பிரிந்தது .

ஒற்றுமையிழந்து தளர்ந்து போனது .

மக்களும் தன்னம்பிக்கை இழந்தனர் .

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பா முழுவதும் தேசிய உணர்வு பெருகவேண்டிய அரசியல் அவசியம் நேர்ந்தது . நெப்போலியன் படையெடுப்பு , ஒற்றுமையாக இருந்தால்தான் , இத்தாலி உரிமைகளைப் பெறமுடியும் என்ற விழிப்புணர்வைத் தூண்டியது .

இத்தாலி நாட்டின் இந்நிலையைக் கண்ட மாஜினி ( Mazzini ) என்ற மக்கள் தலைவன் இத்தாலி நாட்டின் பெருமையை மீண்டும் நிலைநாட்ட மக்களுக்குத் தொடர்ந்து உற்சாக மூட்டினான் .

தேசமே பெரிது என்ற எண்ணத்தை மக்கள் உள்ளத்தில் ஆழமாக விதைத்தான் .

வாலிபர் சபை ஒன்றை உருவாக்கி நாட்டின் ஒருமைப்பாட்டை வற்புறுத்தினான் .

ஆஸ்திரிய , பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான குடியரசு இயக்கத்தினையும் வளர்க்க உறுதி கொண்டான் .

மாஜினியின் எழுச்சி பெறும் உரையால் - தொடர்ந்து அவன் மேற்கொண்ட முயற்சியால் மீண்டும் மீண்டும் பல படையெடுப்புகளை இத்தாலி மக்கள் எதிர்கொண்டனர் .

பஞ்சத்தையும் பசியையும் பொருட்படுத்தாமல் தேசமே பெரிதெனப் போராடினர் .

இத்தாலி மக்களின் இந்தப் பண்பு பாரதியைப் பெரிதும் கவர்ந்தது .

இந்திய நாடும் அடிமைப்பட்டு ஒற்றுமை குலைந்து நின்ற நிலையில் அவர்களைப் போல் நம் மக்களும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட வேண்டுமென்று ஏங்கினார் .

அதன் வெளிப்பாடே மாஜினியின் பிரதிக்ஞை என்ற பாடலாகப் பிறந்தது .

மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும்

வீழ்ச்சியின் உணர்ச்சி மீதாணை

பொலிவுறு புதல்வர் தூக்கினில் இறந்தும்

புன்சிறைக் களத்திடை யழிந்தும்

( மாஜினியின் சபதப் பிரதிக்கினை : 5 )

( பொலிவுறு = எழுச்சியுறு , புன்சிறை = இழிந்த சிறை )

இந்த அடிகளில் மாஜினி தன் நாட்டுத் தலைவர்களையும் மக்களையும் பற்றிக் கூறுவது நம் நாட்டின் விடுதலைக்காகப் போராடித் தூக்குமேடை ஏறிய இளைஞர்களையும் ; மக்கள் பட்ட துயரங்களையும் ; சிறையில் தள்ளப்பட்டுக் கொடுமைகளை அனுபவித்த பெருந்தலைவர்களையும் பற்றிப் பாரதியை எண்ணிப் பார்க்க வைக்கிறது .

அது மட்டுமன்றி அவர்கள் பிறந்த நாட்டினின்றும் வேற்று நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்ட கொடுமையையும் நினைத்துப் பார்க்கிறார் .

அவர்களின் பிரிவைத் தாங்காது அருமை நாட்டின் தாய்மார்கள் விட்டகண்ணீரும் அவர் மனத்தில் தோன்றுகிறது .

மாஜினியின் அந்த வார்த்தைகள் எத்துணை யதார்த்தமாய் பாரதியைத் தாக்கியிருக்கும் ?

நீங்களே அந்த பாடல் அடிகளைப் படித்து அதன் தன்மையை எண்ணிப் பாருங்கள் !

வேற்றுநாடுகளில் அவர்துரத் துண்டும்

மெய்குலைந்து இறந்துமே படுதல்

ஆற்றகி லாராய் எம்அரு நாட்டின்

அன்னைமார் அழுங்கணீ ராணை

( மாஜினியின் சபதப் பிரதிக்கினை : 6 )

( துரத்துண்டும் = துரத்தப்பட்டும் , மெய்குலைந்து = உடல்தளர்ந்து , ஆற்றகிலாராய் = தாங்க முடியாதவராய் , அழுங்கணீர் = அழுகின்ற கண்ணீர் )

இத்தாலியின் நிலையையே ஒத்திருந்தது பாரதநாட்டின் நிலையும் .

மாஜினியின் சபதத்தைக் கூறுவதின் வாயிலாக நம் மக்களுக்கு விழிப்பூட்ட நினைக்கிறார் பாரதி .

அடிமை எங்கிருந்தால்தான் என்ன ?

அடிமை , அடிமைதானே ?

ஏகாதிபத்தியத்தின் கொடுமையில் சிக்கிய தேசங்களின் நிலைமை ஒன்று போல இருப்பதை உணர்ந்து , விடுதலையும் உயர்வும் பெற ‘ இணக்கம் ஒன்றுதான் ’ மார்க்கமென்று பாரதி அறிவிக்கிறார் .

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு

( வந்தே மாதரம் , 4 )

என்பதில் மாஜினியின் குரலும் பாரதியின் குரலும் இணைந்து ஒலிக்கவில்லையா ?

3.4.3 பெல்ஜியத்திற்கு வாழ்த்து

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பிரான்ஸ் , ஸ்பெயின் , ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் பிடியில் சிக்கி அவதிப்பட்ட நாடு பெல்ஜியம் .

ஏகாதிபத்தியக் கொடுமையை எதிர்த்துத் தொடர்ச்சியாக அது நடத்திய போர்களை நினைத்துப் பார்த்து வியப்படைகிறார் பாரதி .

பல்லாயிரம் பேர் நாடு கடத்தலுக்கும் , தூக்குமேடைக்கும் பலியானபோதும் அஞ்சாமல் தன்மானம் காக்கப் போராடிய பெல்ஜிய மக்களின் தீரம் அவர் உள்ளத்தை வெகுவாக ஈர்த்தது .

கோழைத்தனத்தாலும் அறியாமையாலும் பெல்ஜியம் வீழ்ந்துபடவில்லை ; அறத்தினால் - வண்மையினால் - மானத்தால் - வீரத்தால் - துணிவால் வீழ்ந்தது .

ஆயினும் அதை வீழ்ச்சியாக பாரதி மனம் ஏற்கவில்லை .

வெற்றி என்பதுதான் என்ன ?

கொடுமைகள் வலிமையுடையாரால் வெற்றியடையும் போது அதை வெற்றியாகவா கருத முடியும் ?

( இங்கு ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ளலாமா ?

அசோக சக்கரவர்த்தி கலிங்கத்தில் பெற்றது வெற்றியா ?

இல்லை , இனி போரே செய்வதில்லையென அவர் முடிவு செய்தது வெற்றியா ?

உலகத்தை வெற்றிகொண்டு நடைபோட்ட அலெக்சாண்டர் புருஷோத்தமனை வெற்றிகொண்டதை வெற்றி எனலாமா ?

இல்லை , தன் நாட்டைப் பலிகொடுக்க விரும்பாத புருஷோத்தமன் அலெக்சாண்டரை எதிர்த்துப் போராடி , தோல்வி கண்டது வெற்றியா ?

சிந்தித்துப் பாருங்கள்) பெல்ஜியம் என்ற சிறிய நாடு ஸ்பானியப் பேரரசை எதிர்த்தது எத்துணைச் சிறப்பு வாய்ந்தது ! அஞ்சி , அஞ்சி அடிமையாகாமல் மீண்டும் மீண்டும் போர் செய்து , வீரத்தால் மேம்பட்டு நின்ற பெல்ஜியம் பாரதியின் உள்ளத்தை ஈர்த்ததில் வியப்பில்லை .

வீரத்தால் வீழ்ந்து விட்டாய்

மேல்வரை உருளும் காலை

ஓரத்தே ஒதுங்கித் தன்னை

ஒளித்திட மனமொவ் வாமல்

பாரத்தை எளிதாகக் கொண்டாய்

பாம்பினைப் புழுவே என்றாய்

நேரத்தே பகைவன் தன்னை

நில்லென முனைந்து நின்றாய்

( பெல்ஜியத்திற்கு வாழ்த்து , 4 )

( வரை = மலை , முனைந்து = எதிர்த்து )

அஞ்சி ஒதுங்குவது ராஜதந்திரம் என்று கருதாமல் எதிர்த்துப் போராடிய பெல்ஜியத்தின் வீரமே வீரம் !

பிணிவளர் செருக்கினோடும் பெரும்பகை எதிர்த்தபோது

பணிவது கருத மாட்டாய்

பதுங்குதல் பயனென்று எண்ணாய்

( பெல்ஜியத்திற்கு வாழ்த்து , 5 )

( பிணி = துன்பம் , செருக்கினோடு = அகந்தையோடு , பதுங்குதல் = பின்வாங்குதல் )

என்ற அடிகளை நினைக்கும் போது பெல்ஜியத்தின் தார்மீகக் கோபமும் , போர்க்குணமும் , ஏகாதிபத்திய எதிர்ப்பில் இழப்புகளுக்காக வருந்தாமல் ஈடுபட்ட தீரமும் தெளிவாக விளங்குகின்றன .

இந்திய மக்களும் இப்படி இருக்க வேண்டுமென விரும்புகிறார் பாரதி .

இப்படியில்லையே என ஏங்குகிறார் .

3.4.4 உருஷ்யப் புரட்சி

உலகத்தின் பல நாடுகளில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளைப் பாரதி கவனத்தோடு நோக்கியிருக்கிறார் .

ஆயினும் ருஷ்ய நாட்டின் புரட்சி அதிகமாகவே அவர் கவனத்தை ஈர்த்துள்ளது .

சோவியத் புரட்சியை யுகப்புரட்சி என்கின்றார் .

ஏகாதிபத்தியத்தின் கையில் சிக்குண்டு வருந்திய உலக நாடுகள் அனைத்திற்கும் நம்பிக்கை தரும் நன்மருந்தாகியது அந்தப் புரட்சி .

சோவியத் அக்டோபர் புரட்சியைப் பற்றி எழுதும்போது அதன் பொருளாதார அரசியல் முக்கியத்துவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் .

ஜார் மன்னர்களின் கொடுங்கோன்மை வீழ்ந்தது என்று மகிழும் போது இந்திய நிலையை ஒப்பிட்டுப் பார்க்கிறது அவர் உள்ளம் .

இங்கும் அந்தக் கொடுங்கோன்மை வீழுங்காலம் வருமென நம்பிக்கை கொள்கிறார் .

இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன்

ஜாரெனும்பே ரிசைந்த பாவி

( புதிய ருஷியா , 2 )

( பேரிசைந்த = பெயர்கொண்ட )

பாவி என்ற சொல் பாரதியின் சீற்றத்தையும் வெறுப்பையும் காட்டுகின்றதல்லவா ?

இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்

இவ்வா றாங்கே

செம்மை யெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகித்

தீர்ந்த போதில்..............

( புதிய ருஷியா , 4 )

( செம்மை = நன்மை )

புரட்சி தோன்றுகிறது .

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் !

எத்தனை நாட்கள் கொடுமையைத் தாங்க முடியும் ?

எதற்கும் ஓர் எல்லையுண்டல்லவா ?

அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீர் கொடுங்கோலாட்சியை வீழ்த்தியது .

குமுறிய மனங்களின் வெளிப்பாடு புரட்சியாக வெடித்தது .

கொடுங்கோன்மை வீழ்ந்ததை எண்ணி மகிழ்கிறார் பாரதி .

மகிழ்ச்சித் துள்ளலாக வருகிற அந்த வார்த்தைகளைப் பாருங்கள் !

என்ன மகிழ்ச்சி கொடுங்கோல் சாய்ந்ததில் !

சமயமுள படிக் கெல்லாம் பொய்கூறி

அறங்கொன்று சதிகள் செய்த சுமடர் சட சடவென்று சரிந்திட்டார்