147

புயல் காற்றுச் சூறை தன்னில்

திமுதிமுவென மரம் விழுந்து காடெல்லாம்

விறகான செய்தி போலே

( புதிய ருஷியா , பாடல் .

6 )

( சுமடர் = இழிந்தோர் , சூறை = சுழல் ( சுழல்காற்று )

உவமை எத்தனை இயல்பாக வந்து விழுகிறது .

புயற்காற்றில் பெருமரம் வீழ்ந்தால் எப்படியிருக்கும் ?

விழும்போது ஏற்படும் சத்தம் .

கற்பனை செய்யும்போதே காட்சி கண்ணில் விரிகிறதல்லவா ?

கிளையோடும் கொம்புகளோடும் இலைகளோடும் மரம் வேரோடு முறிந்து விழுவதுபோலக் கொடுங்கோன்மையும் வீழ்ந்தது .

இந்தப் புரட்சி உலகுக்கே ஒரு செய்தியைப் பிரகடனப்படுத்தியது .

அது என்ன ?

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுற குடிமைநீதி உருஷ்யாவில் எழுந்ததுபோல் எங்கும் எழவேண்டும் என்ற செய்திதான் .

இந்தியாவிலும் அக்குடியாட்சி மலரவேண்டும் என்று பாரதி விரும்புகிறார் .

மலரும் என்று நம்புகிறார் .

சோஷலிசக் கோட்பாடு

உலகுக்கு அவமானம் தரக்கூடிய இந்தப் பொருளாதார ஏற்றத் தாழ்வைத் தகர்த்து சோஷலிசத்தை உருவாக்கியதற்காக உருஷ்யாவை அவர் பாராட்டுகிறார் .

ஆரம்பத்தில் பலரால் வெறுக்கப்பட்ட இக்கோட்பாட்டின் உயர்வை நன்கு புரிந்து கொண்டு பலநாடுகளும் பின்பற்றும் விதத்தில் லெனின் ( Lenin ) அவர்களும் பிறரும் செயல்படுவதைப் பாரதி நன்கு பாராட்டுகிறார் .

பொதுவுடைமைக் கொள்கையானது ஜெர்மனி , ஆஸ்திரேலியா , துருக்கி ஆகிய இடங்களில் வலிமை பெறுவதையும் விட ஆசியாவில் மிகப்பெரிய பகுதியான ஸைபீரியாவிலும் இந்த முறை வந்துவிட்டது எனக் கூறியும் மகிழ்கிறார் .

பிரான்ஸ் , இங்கிலாந்து முதலிய வல்லரசுகள் இக்கோட்பாட்டை விரும்பாமல் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறாகப் பிரச்சாரம் செய்ததைப் பாரதியார் அம்பலப்படுத்துகிறார் .

உருஷ்யாவின் சமுதாய , அரசியல் , பொருளாதார மாற்றங்களை ஏற்றுக் கொண்ட பாரதியார் , அங்கு நடந்த அக்டோபர் புரட்சியின்போது சிந்தப்பட்ட ரத்தத்துளிகளுக்காக வருந்துகிறார் .

ஒருகாலத்தில் தீவிரவாதியாக இருந்த பாரதி பொதுவுடைமை நெறியைப் பாராட்டிய போதும் அந்நெறியைப் பரப்ப ஆயுதமேந்தக்கூடாது என்று எண்ணினார் .

பிஜித்தீவின் கரும்புத் தோட்டத்தில் துன்பப்படும் பெண்களின் நிலையை எண்ணி வருந்துகிறார் .

நம் நாட்டுப் பெண்களுக்கு மட்டுமன்றி அங்குள்ள பிறநாட்டு மக்கள் அனைவர்க்காகவும் வருந்துகிறார் .

3.4.5 பெண்விடுதலை

பாரதியின் பல்வேறு விடுதலைச் சிந்தனைகளை நீங்கள் வேறு ஒரு பாடத்தில் படிக்கப் போகிறீர்கள் .

அதில் விரிவாகப் பெண் விடுதலைச் சிந்தனைகளையும் படிக்கவிருக்கிறீர்கள் .

அதனால் பெண் விடுதலை பற்றிய சில கருத்துகளை மட்டும் இங்குக் காண்பது பொருத்தமாக இருக்கும் .

பெண் விடுதலை

பெண்ணுக்கு விடுதலை வேண்டும் .

பெண்ணுக்கு விடுதலை இல்லையென்றால் பின் இங்கே வாழ்வில்லை ; வளமில்லை .

அதனால் பெண்ணை அடிமையென்று எண்ணாதே என்கிறார் .

மேலும் " ஆணுக்கு ஆண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயத்தைக் காட்டிலும் ஆணுக்குப் பெண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயம் மிகப் பெரிது " என்பார் .

பெண்ணடிமை தீர...

‘ நம் பெண்கள் அடிமைகள் ; அதில் சந்தேகமில்லை ’ என்று மேலும் கூறுவார் .

பெண்ணடிமை தீர , பாரதி கூறும் தீர்வு ; ‘ அடிமைப்பட்டு வாழமாட்டோம் ; சமத்துவமாக நடத்தினாலன்றி உங்களுடன் சேர்ந்திருக்க விரும்போம் ’ என்று வெளிப்படையாகத் தெளிவாகச் சொல்லவேண்டும் என்று மேலும் விரித்துப் பேசுவார் .

வையம் தழைக்கும் வழி

வையம் தழைக்கும்வழி நாட்டின் வளர்ச்சி , சமூக வளர்ச்சி , மனித மேம்பாடு ஆகியவை ஆண் , பெண் வளர்ச்சியை ஒட்டியே அமையும் .

பெண்கள் அறியாமையில் மூழ்கி அடிமைகளாய் இருக்கும்போது ஆண்கள் சுதந்திரம் பெறுவது என்பது இயலாதவொன்று .

பெண்கள் அறிவு பெறவேண்டும் .

ஆணும் பெண்ணும் நிகராகக் கொண்டு அறிவில் ஓங்கும்போதே விடுதலையைப் பெறமுடியும் .

வையம் தழைக்க வழி பிறக்கவும் முடியும் .

சில பெண்விடுதலைப் போர்கள்

தென்னாப்பிரிக்காவில் நடந்த பெண் விடுதலைப்போர் , துருக்கியில் நடந்த பெண் விடுதலைப் போர் , ஐரோப்பாவில் மகளிர் சுதந்திரமாக இருத்தல் ஆகியவற்றை எடுத்துக் கூறி ,

தமிழ்நாட்டு மக்கள் மட்டும் தமது மனுஷ்யப் பதவியை ருசுப்படுத்த வழி செய்யாது இருப்பது ஏன் ?

( பாரதியின் கட்டுரைகள் .

பக்.150 )

என்று வினவி , சியூசூன் என்ற சீனத்துப் பெண்ணுரிமைக் கவிஞரின் பாடலைத் தமிழில் பெயர்த்துத் தந்து ஊக்கமூட்டுகிறார் . 3.5 உலக நோக்கில் சமத்துவச் சிந்தனை

மனிதர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் சமம் .

உயர்ந்தவர் , தாழ்ந்தவர் என்பதில்லை என்ற நிலை உருவாக வேண்டும் .

சமத்துவம் நிலவ வேண்டுமென்றால் விடுதலை அடையவேண்டும் .

அதனால்தான் விடுதலைக் கோட்பாட்டை அழுத்தமாகக் கொண்ட பாரதி சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்கிறார் .

ஏற்றத் தாழ்வு நிறைந்த உலகை மாற்றியமைக்க வேண்டும் என்று வேட்கை கொள்கிறார் .

உருஷ்யாவின் விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டதில் வியப்பேதும் இல்லை .

மேலும் ‘ ஏழைகளே இல்லாமல் செய்வது உசிதம் ’ ; ஒரு வயிற்று ஜீவனுக்கு வழியில்லாமல் யாருமே இருக்கலாகாது என்கிறார் பாரதி .

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனிஉண்டோ ?

மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனிஉண்டோ ?

( பாரத சமுதாயம் , சரணங்கள்-1 )

( நோக = வருந்த )

என்று வினவி ,

எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம் எல்லோரும்

இந்தியமக்கள்

எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர்விலை எல்லோரும்

இந்நாட்டு மன்னர் ,

( பாரத சமுதாயம் , சரணங்கள் - 4 )

எனப் பாடுகிறார் .

3.5.1 தனிமனிதச் சமத்துவம்

உயர்ந்த குலம் , தாழ்ந்த குலம் என்று ஏதுமில்லை ; எல்லோரும் ஓர் இனம் .

எல்லோரும் இந்திய நாட்டு மக்கள் ; எல்லோரும் சமம் ; எல்லோரும் மதிப்புடையவர்கள் ; எல்லோருமே இந்நாட்டு மன்னர்கள் தாம் .

ஏனென்றால் விடுதலை பெற்ற மனிதன் யாருக்கும் அடிமையில்லை ; யாருடைய ஆளுகையிலும் அவன் இல்லை .

ஆளப்படுவோரும் ஆள்வோரும் இல்லையாதலால் எல்லோரும் சமம் என்கிறார் .

உடம்பின் நிறம் அந்தந்த நாட்டின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தது .

அதனால் நிற வேறுபாடு மனித வேறுபாட்டுக்கு இடமளிக்கக் கூடாது .

இக்கருத்தை ‘ முரசு ’ கவிதையில்

வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் - அதில்

மானுடர் வேற்றுமையில்லை

எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் - இங்கு

யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்

( முரசு .

17 )

என்பதோடு அமையாமல்

நிகரென்று கொட்டு முரசே ! - இந்த

நீணிலம் வாழ்ப ரெல்லாம்

தகரென்று கொட்டு முரசே ! - பொய்மைச்

சாதி வகுப்பினை எல்லாம்

( முரசு .

18 )

( நிகர் = சமம் , நீணிலம் = நீள் நிலம் ; பரந்த உலகம் , தகர் = அழி , போக்கு )

என்றும் கூறுகிறார் .

பொய்யான சாதி , சமய வேறுபாடுகள் தகர்ந்து போனால் எல்லோரும் சமமாக ஆகலாம் .

இதற்கு எது அடிப்படை ?

அன்புதான் .

அன்பு எங்கு வேரோடி வளம் பெறுகிறதோ அங்கு ஏற்றத்தாழ்வுக்கு ஏது இடம் ?

அதனால் அன்பென்று கூறி முரசு கொட்டுகிறார் .

அது எதை முழங்குகிறது ?

உங்களால் யோசிக்க முடிகிறதா ?

சிந்தித்துப் பாருங்களேன் ! சரி , பாரதி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம் .

மக்கள் அத்தனை பேரும் நிகர் என்று முரசு கொட்ட வேண்டுமாம் .

சமத்துவத்தை விழையும் பாரதியின் உள்ளம் மேலும்

அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்

அத்தனை பேருக்கும் ஒன்றாம்

சிறியாரை மேம்படச் செய்தால் - பின்பு

தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்

( முரசு , 28 )

என்றும் கூறுகிறார் .

( மேம்பட = உயர்வு அடைய )

இப்படி வாழ்ந்தால் சமத்துவம் எப்படி வராமற் போகும் என்று கேட்கிறார் .

வாழ்க்கை அப்படி அமைந்தால் தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும் என்று கூறுகிறார் .

எந்த இடத்தில் வேற்றுமை ஏதுமின்றிச் சமத்துவம் நிலவுகிறதோ அங்குத் தெய்வம் வாழும் ; அச்செயலை மேற்கொள்வாரைத் தெய்வம் வாழ்த்தும் என்கிறார் .

3.5.2 பொருளாதாரச் சமத்துவம்

சோவியத் புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதாரச் சமத்துவம் , பெண்ணுரிமை ஆகியவற்றைப் பாரதி பெரிதும் பாராட்டினார் .

அதைப்போல நாமும் அந்நிலை பெற வேண்டுமென்ற ஏக்கத்தை வெளியிடுகிறார் பாரதி .

நாட்டு விடுதலையை மட்டுமன்றி , பொருளாதார ஏற்றத்தாழ்வினின்றும் விடுபட வேண்டும் .

எல்லோரும் எல்லாம் அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டவர் பாரதி .

அதனால் உருஷ்யாவின் புரட்சி பெரும் மகிழ்ச்சியைத் தந்ததோடு எல்லா இடங்களிலும் அது பரவ வேண்டுமென்று ஆசைப்படுகிறார் பாரதி .

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த உலகை மாற்றியமைக்க வேண்டுமாயின் பொருளாதாரச் சமத்துவம் நிலவ வேண்டும் .

இல்லையென்றால் ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையே பெரிய இடைவெளி நேர்ந்து விடும் என்கிறார் பாரதி .

நவீன ஐரோப்பியச் சித்தாந்தம்

மனித ஜாதி முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதி மானிடருக்குள்ளே இயற்கையாலும் மானிடர் தாமாகவே ஏற்படுத்திக் கொண்ட அர்த்தமில்லாத கட்டுப்பாடுகளாலும் எத்தனை வேறுபாடுகள் காணப்பட்டாலும் , இந்த வேறுபாடுகளைக் கருதிச் சிலருக்கு அதிக சௌகரியங்களும் , பலருக்குக் குறைந்த சௌகரியங்களும் , சிலருக்கு மதிப்பும் , பலருக்கு அவமதிப்பும் சிலருக்கு லாபங்களும் பலருக்கு நஷ்டங்களும் ஏற்படுத்தியிருப்பது தவறு என்பதும் , ஒவ்வொருவரும் சகோதரரைப் போல் பரஸ்பர அன்புடனும் மரியாதையுடனும் வாழ்வதே நியாயம் என்பதும் நவீன ஐரோப்பியச் சித்தாந்தங்களிலே மிகவும் முக்கியமான சித்தாந்தமாகும்

என்று பாராட்டும் பாரதியின் உள்ளத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் .

பொருளாதார ஏற்றத்தாழ்வை அவமானத்துக் குரியதாகக் கருதுகிறார் .

அதனைத் தகர்த்த , சோஷலிசத்தை உருவாக்கியதற்காக உருஷ்யாவை அவர் பாராட்டுகிறார் .

செல்வத்தால் பெருகிய ஏற்றத்தாழ்வை அகற்ற வேண்டுமென்ற கொள்கை ஐரோப்பாவில் மும்முரமாகப் பரவுவதாக உணர்ந்து மகிழ்கிறார் .

ஏழைகளுக்கு நியாயம்

உலகத்துச் செல்வர் சகல ஜனங்களுக்கும் பொதுவாகிய பூமியைத் தங்களுக்குள்ளே பங்கிட்டெடுத்துக் கொண்டு பெரும்பகுதியார் சோறின்றி மாளும்படி விடுகிறார்கள் .

ஏழைகளைக் காப்பாற்ற வேண்டாமா என்று கேட்டால் ' அவர்களுடைய கர்மத்தினால் அவர்கள் ஏழைகளாய் இருக்கிறார்கள் .

அதற்கு நாங்களா பொறுப்பு ?

நாங்களென்ன ஏழைகளுக்குக் காவலாளிகளா ? '

என்று கேட்கிறார்கள் .

உலகம் மாறுகிறது .

ஏழைகளுக்கு நியாயம் செய்ய வேண்டும் என்கிறார் .

பொருளாளிகள் அன்பையும் சமத்துவ நினைப்பையும் கைக்கொண்டால் உலகத்தில் அழிவுகள் நேராமல் காக்கலாம் என்று எச்சரிக்கிறார் .

பொருளாதாரச் சமத்துவம் கூட வன்முறையால் வருவதை எதிர்க்கிறார் .

3.5.3 ஆண் , பெண் சமத்துவம்

ஆண் , பெண் சமத்துவத்தைப் பற்றிப் பல்வேறு இடங்களில் மிகவும் வற்புறுத்திக் கூறுகிறார் பாரதி .

‘ பெண்ணை அடிமை என்று கருதாதே .

ஆத்மாவும் சக்தியும் ஒன்று ; ஆணும் பெண்ணும் சமம் ’ என்பார் .

இன்னொரு இடத்தில் ‘ ஆண்களும் பெண்களும் ஸமானமான ஆத்ம இயல்பும் ஆத்ம குணங்களும் உடையோராதலால் பெண்களை எவ்வகையிலும் இழிந்தவராகக் கருதுதல் பிழை ’ என்று குறிப்பிடுகிறார் .

இதை உணர்ந்து செயல்படாத மக்களை நோக்கி ,

‘ ஆணுக்கு ஆண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயத்தைக் காட்டிலும் ஆணுக்குப் பெண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயம் மிகப்பெரிது ’ ( பாரதியார் கட்டுரைகள் : 113 ) என்கிறார் .

இதற்கென்ன காரணம் ?

பாரதியே விளக்குகிறார் .

பலம் குறைந்த உயிரைப் பலம் மிகுந்த உயிர் துன்பப்படுத்தலாம் என்ற விதி எல்லா உயிர்களிடத்தும் காணப்படுகிறது .

மனிதர்கள் அதை எல்லையில்லாமல் செய்கிறார்கள் என்கிறார் .

மேலும் சமத்துவத்தை வேண்டிப் பெண்களைத் தர்மயுத்தம் தொடங்கும்படிக் கூறுகிறார் .

" அடிமைப்பட்டு வாழமாட்டோம் ; சமத்துவமாக நடத்தினாலன்றி உங்களுடன் சேர்ந்திருக்க விரும்போம் என்று வெளிப்படையாகத் தெளிவாகச் சொல்ல வேண்டும் . எல்லா வகையிலும் உனக்கு சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமென்றால் உன்னுடன் வாழ்வேன் .

இல்லாவிட்டால் இன்று இராத்திரி சமையல் செய்ய மாட்டேன் .

எனக்கு வேண்டியதை பண்ணித் தின்று கொண்டிருப்பேன் " ( பாரதியார் கட்டுரைகள் : பக்.258 ) என்று அறப்போராட்டத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார் .

ஆண் , பெண் சமத்துவத்தை மிகவும் வலியுறுத்த என்ன காரணம் ?

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில்

ஓங்கி வையம் தழைக்கும்

( புதுமைப்பெண் , 3 )

( நிகர் = சமம் , ஓங்கி = விளங்கி )

என்கிறார் .

ஆண் , பெண் சமத்துவம் பற்றி மிளகாய்ப்பழச் சாமியார் என்ற ஒரு கற்பனைப்பாத்திரம் ( பாரதியாரின் கதையில் வருவது ) கூறுவதுபோல பாரதி கூறுவதும் நம் கவனத்தை ஈர்க்கிறது .

ருஷியாவிலே கொடுங்கோல் சிதறிப் போய் விட்டதாம் .

ஐரோப்பாவிலே ஏழைகளுக்கும் பெண்களுக்கும் நியாயம் வேண்டுமென்று கத்துகிறார்களாம்

உலக முழுமைக்கும் நான் சொல்லுகிறேன் .

ஆண் , பெண்ணுக்கு நடத்தும் அநியாயம் சொல்லுக்கடங்காது .

அதை ஏட்டில் எழுதியவர் இல்லை ; அதை மன்றிலே பேசியவர் யாருமில்லை .

பெண்ணுக்கு ஆண் நியாயம் செய்வது அதையெல்லாம் விட முக்கியமென்று நான் சொல்கிறேன் .

பூமண்டலத்தில் துக்கம் ஆரம்பமாகிறது .

ஆணும் பெண்ணும் சமானம் .

பெண் சக்தி - பெண்ணுக்கு ஆண் தலைகுனிய வேண்டும் .

பெண்ணை ஆண்அடித்து நசுக்கக் கூடாது .

இந்த நியாயத்தை உலகத்தில் நிறுத்துவதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் ’

‘ ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது .

இருபாலோரும் சமானமாகவே கருதப்படுவார்கள் .

உருஷ்யச் ( நாட்டு ) சட்டம் கூறுமிடத்திலே நாம் ஐரோப்பிய நாகரிகத்தின் கருத்தை அனுசரித்தல் மிக மிக மிக மிக அவசரம் ’

அவசரம் என்பதற்கு முன் எத்தனை மிக !

பாரதி ஏன் இப்படிக் கூறுகிறார் ?

எண்ணிப் பாருங்களேன் !

3.6 உலகநோக்கில் சகோதரத்துவம்

உலகிலுள்ள அனைவரையும் சகோதரர்களாக எண்ணி அவர்தம் மகிழ்ச்சியில் மகிழ்ந்து , துன்பத்தில் துயரமுற்று , அவர்களோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் நேயம் சகோதரத்துவம் எனலாம் .

மனிதர்களாகப் பிறந்தவர் யாராயினும் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இல்லை .

ஆணாயினும் பெண்ணாயினும் வேறுபாடில்லை .

எந்நாட்டைச் சார்ந்தவராயினும் , எம்மதத்தைச் சார்ந்தவராயினும் , எச்சாதியைச் சார்ந்தவராயினும் , எவ்வினத்தைச் சார்ந்தவராயினும் மானிடர் எல்லோரும் சமமே .

பாரதி எல்லா விஷயங்களிலும் இத்தகைய சமத்துவத்தையே விரும்புகிறார் .

சமத்துவம் எங்கு நிலவும் ?

சுதந்திரம் உள்ள இடத்தில்தானே சமத்துவம் வேர்கொள்ள முடியும் ?

அடிமைக்கு ஏது சுதந்திரம் ?

சுதந்திரமில்லையென்றால் எப்படித் தானாகச் செயலாற்ற முடியும் ?

தானாகச் செயலாற்ற முடியாதபோது கட்டுண்ட நிலைதானே ?

அதனால் முதலில் விடுதலை .

பின்னர் சமத்துவம் .

சமத்துவ உணர்வு வந்துவிட்டால் வேற்றுமைகள் மறைந்துவிடும் .

சகோதரத்துவம் தானாக மலர்ந்துவிடும் என்கிறார் .

3.6.1 இறைவன் எங்குமுளன்

‘ தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவன் கண்ணுடையவன் ’ என்பது முன்னோர் கொள்கை .

‘ உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று .

நீ , நான் , முதலை , ஆமை , ஈ , கருடன் , கழுதை - எல்லோரும் ஒரே உயிர் .

அந்த உயிரே தெய்வம் ’

இதிலிருந்து நாம் என்ன அறிந்து கொள்கிறோம் ?

ஒவ்வொரு மனிதனுடைய அறிவிலும் தெய்வம் மறைந்து நிற்கிறது என்பதைத்தானே ?

இதைப்பற்றி இராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்கிறார் ? ‘ ஈசன் ஒளி ; எல்லாப் பொருள்களிலும் திரைக்குள் மறைந்ததுபோல் நிற்கும் ஒளியே தெய்வம் ’ என்கிறார் .