‘ தெய்வம் எது ?
ஜகத்தின் உயிர்தான் தெய்வம் ! ’ அப்படியாயின் எல்லாப் பொருள்களிலும் இருப்பது தெய்வந்தானே ?
எங்கும் நிறைந்திருப்பது ஒரே சக்தி
அதனால் எல்லா மதங்களும் உண்மைதான் ; ஒரு மதமும் முழு உண்மையன்று .
மதப்பிரிவுகளைக் கருதி மனிதர் பிரிந்துவிடக் கூடாது .
எல்லா மதங்களும் ஒரே தெய்வத்தைத்தான் வணங்குகிறார்கள் .
பெயர் தான் வேறு வேறு .
பல்வேறு இடங்களிலிருந்து ஓடிவரும் நதிகள் இறுதியில் சங்கமம் ஆவது கடலில்தான் .
அதைப்போலவே பல்வேறு மதங்கள் .
வேறு வேறு கடவுள் பெயரைக் கூறினாலும் இறுதியில் ஒரு சக்தியையே அது குறிக்கிறது .
அப்படியிருக்க மதங்களுக்குள் ஏன் வீண்போராட்டமும் பிணக்கும் ?
இதில் உயர்வு தாழ்வுக்கு ஏது இடம் ?
என்னுள்ளும் உன்னுள்ளும் பிறருள்ளும் இருப்பது ஒரே சக்திதான் ; இறைவன்தான் .
அவனை இயேசு என்றாலும் அல்லா என்றாலும் ஒன்றுதான் .
பின் ஏன் இந்த மயக்கம் ?
3.6.2 பாரதியின் அரவணைக்கும் உள்ளம்
நமக்குத் தொழில் கவிதை என்று முழங்கிய பாரதி , கவிதைத் திறத்தால் என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறார் ?
பாட்டுத் திறத்தால் வையத்தைப் பாலித்திட வேண்டுமாம் .
நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் களையப்பட வேண்டுமென்று விருப்பமாம் .
எப்படி அவர் உள்ளம் விழைகிறது பார்த்தீர்களா ?
மானிடச் சாதியை ஒன்றெனக் கொண்ட பாரதி உள்ளம் பரந்த உள்ளம் .
அனைவரையும் அரவணைத்துச் செல்லும் உள்ளம் அது. அதனால்தான்
கடமையாவன தன்னைக் கட்டுதல்
( விநாயகர் நான்மணிமாலை-8 )
என்று தனிமனித நிலையைக் கூறிய பாரதி அடுத்து
பிறர்துயர் தீர்த்தல் , பிறர் நலம் வேண்டுதல்
( விநாயகர் நான்மணிமாலை-8 )
என்று கூறுவதோடு அமையாது
அல்லா !
யெஹோவா .
என்று உலகில் வேறு வேறு பெயர்களில் போற்றும் இறைவன் ஒருவரையே போற்ற வேண்டும் என்கிறார் .
தெய்வம் ஒன்று என்றால் மக்கள் அனைவரும் ஒன்றுதானே ?
சமம்தானே ?
சகோதரர்கள்தானே ?
சிந்தித்துப் பாருங்கள் !
3.6.3 பாரதியின் வேண்டுகோள்
விநாயகர் நான்மணிமாலையில் பாரதி எதை வேண்டுகிறார் ?
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண்மீதுள்ள மக்கள் , பறவைகள் ,
விலங்குகள் , பூச்சிகள் , புற்பூண்டு மரங்கள்
யாவும் என்வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும் தேவதேவா !
( விநாயகர் நான்மணிமாலை - 32 )
( என்வினையால் = என் செயலால் , இடும்பை = துன்பம் , இணங்கி = ஒற்றுமையாய் )
இப்படிப்பட்ட நெஞ்சம்
காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம் ( ஜெயபேரிகை , 3 )
என்று பிரகடனப்படுத்துவதில் என்ன வியப்பு ?
காயிலே புளிப்பதென்ன கண்ணபெருமானே !
கனியிலே இனிப்பதென்ன கண்ணபெருமானே !
( கண்ணபெருமானே , 1 )
என்று வியந்து கேட்பவர்
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா ! - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா , நந்தலாலா
( நந்தலாலா , 4 )
( தீண்டும் = தொடும் )
என்று தன்னைமறந்து மெய்சிலிர்க்கும் பாரதி , ஆத்திசூடியில் ‘ பரம்பொருள் ஒன்றே ’ என உறுதிபடக் கூறுகிறார் .
வேறு என்னதான் கேட்கிறார் ?
பெண்விடுதலை வேண்டும் ; பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும் ; வானம் இங்கு தென்படவேண்டும்
( மனதில் உறுதி வேண்டும் , 2 )
( பயனுற = பயன் அடைய , வானம் = சொர்க்கம் )
என்பார் .
எப்போதும் அவர் நினைவெல்லாம் , பேச்செல்லாம் , செயலெல்லாம் மக்கள் , மக்களே ; அதுமட்டுமா ?
எங்கும் தெய்வம் .
எல்லாம் தெய்வம் .
உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை ,
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்கு
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்
வெயிலளிக்கும் இரவி , மதி , விண்மீன் , மேகம்
மேலுமிங்கு பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்து தெய்வம்
( பாரதி அறுபத்தாறு - 18 )
இப்படிக் கூறுகிற மனம் தன் நாட்டைப் பற்றி மட்டுமே தன் இன மக்களைப் பற்றி மட்டுமே நினைக்குமா ?
எண்ணிப் பாருங்கள் .
3.6.4 சகோதரத்துவம் மலர்ந்தால்
பாருக்குள்ளே சமத்தன்மை - தொடர்
பற்றும் சகோதரத் தன்மை
யாருக்கும் தீமை செய்யாது - புவி
யெங்கும் விடுதலை செய்யும்
( முரசு - 30 )
என்று சகோதரத்துவத்தின் மேன்மையை அழுத்தமாகக் கூறுகிறார் .
நாடு , மொழி , இனம் என்ற வேறுபாடுகளையெல்லாம் கடந்து மனிதகுலம் முழுமையும் மட்டுமன்றி அசையும் அசையாப் பொருள்கள் அனைத்தையும் அரவணைக்கத் துடிக்கிறார் .
சகோதரத்துவம் என்னும் உணர்வின் மொத்த உருவமாகிறார் .
இவருடைய உலகளாவிய நோக்கு வியத்தற்குரியது .
கம்பருக்குப்பின் அதாவது ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்குப்பின் ஒரு கவிஞன் தமிழ்நாட்டில் தோன்றியிருக்கிறான் என்று பாரதியைப் பற்றி ஒரு அறிஞர் பாராட்டியிருப்பது உண்மை ; வெறும் புகழ்ச்சியில்லை .
பாரதி உலகளாவிய நோக்குடைய மகாகவிகளில் ஒருவர் ; அவர் தமிழ்நாட்டில் பிறந்தது தமிழும் தமிழரும் தமிழ்நாடும் செய்த தவப்பயன் எனப் பெருமிதம் கொள்ளலாம் .
3.7 தொகுப்புரை
பள்ளத்தில் விழுந்திருக்கும் குருடரெல்லாம்
விழி பெற்றுப் பதவி கொள்ளப்
( தமிழ் -4 )
பாடியவர் பாரதி .
அவரைப் பலரும் பல கோணங்களில் பார்ப்பர் .
அவர் ஒரு விடுதலைக்கவி . சமூகச் சீர்திருத்தவாதி , புரட்சிக்கவி , தேசியக்கவி , பக்திக்கவி என்றெல்லாம் பாராட்டுவர் .
இவை எல்லாவற்றுக்கும் மேலாகப் பாரதி உலகக் கவி என்பதும் அவருடைய உலகளாவிய நோக்கு எத்தன்மையது என்பதையும் இப்பாடத்தில் படித்தீர்கள் .
விடுதலை , சமத்துவம் , சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளைத் தம் உயிரைவிட மேலாகப் போற்றியவர் பாரதியார் .
நாட்டுச் சுதந்திரம் , பெண்விடுதலை , பொருளாதார விடுதலை ஆகியவற்றை உலகளாவிய நோக்கில் பார்த்த பாரதியின் சிந்தனைகளை நீங்கள் அறிந்து கொண்டீர்கள் .
சமத்துவம் என்பது என்ன என்பதையும் மானுடர் தமக்குள் மாறுபாடில்லை ; மதங்களுக்குள் ஏற்றத்தாழ்வில்லை ; ஆண் , பெண்ணுக்குள் உயர்வு தாழ்வில்லை ; யாரும் யாருக்கும் அடிமையில்லை என்பதையும் புரிந்து கொண்டிருப்பீர்கள் .
எல்லா மனிதருக்குள்ளும் எல்லாப் பொருள்களுக்குள்ளும் இருப்பது தெய்வம் .
இதை உணர்ந்தபின் , எல்லோரும் சமம் என்று தெளிவு பெறுவீர்கள் .
அத்தெளிவின் பயனாக உலகத்து மக்களையெல்லாம் சகோதரர் என்று பாவிக்கும் எண்ணமும் அவர்தம் மகிழ்ச்சியில் , துன்பத்தில் பங்கு கொள்ளும் சகோதரத்துவமும் தோன்றும் .
பாரதி , தம் வாழ்நாள் முழுவதும்
இதற்காகவே வாழ்ந்ததும் , அந்தக் கோட்பாடு உடைய உள்நாட்டு வெளிநாட்டுத் தலைவர்களைப் போற்றியதும் தெளிவாகப் புலப்பட்டிருக்கும் .
பாரதியின் உலகளாவிய நோக்கு என்பது உலகத்தார் அனைவர் மீதும் செலுத்தும் நேயமாகும் .
எனினும் மனிதநேயம் என்ற வட்டத்தில் மட்டுமே பாரதியை நிறுத்த இயலாது .
ஏனென்றால் அவர் அசையும் அசையாப் பொருள்கள் அனைத்தின் மீதும் எல்லையற்ற அன்பு கொண்டிருந்தார் .
அளப்பரிய அந்த அன்பு அசையும் பொருள்களையும் அசையாப் பொருள்களையும் அரவணைத்து நின்றது .
பாரதியின் இந்த உலகளாவிய நோக்கு அற்புதமானது .
நினைக்க நினைக்க வியப்பைத் தருவது !
தன்மதிப்பீடு : வினாக்கள் - II
1. பாரதியின் முப்பெரும் கோட்பாடுகள் யாவை ?
[ விடை ]
2. சுதந்திரம் என்பது என்ன ?
[ விடை ]
3. பாரதியின் சர்வதேச அணுகுமுறைகள் எதன் அடிப்படையில் அமைகின்றன ?
[ விடை ]
4. பாரதி ஈடுபாடு கொண்ட இரு இந்தியத் தலைவர்களைக் குறிப்பிடவும் [ விடை ]
5. எதைத் தகர்க்க வேண்டுமென்று பாரதி முரசு கொட்டுகிறார் ?
[ விடை ]
6. பாரதியைக் கவர்ந்த பிறநாட்டு நிகழ்ச்சிகள் இரண்டைக் குறிப்பிடவும் .
[ விடை ]
பாரதியாரின் படைப்புகளில் அறிவியல் நோக்கு
4.0 பாட முன்னுரை
உலகில் இருப்பவற்றையும் , இயற்கை நியதிகளையும் கவனித்தும் சோதித்தும் , நிரூபித்து வகைப்படுத்தியும் காரண காரியத்தோடு பார்க்க வேண்டும் என்று நினைப்பது அறிவியல் நோக்கு .
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அதன் அணுகுமுறை மிகவும் முக்கியமானது .
பழையன கழிதலும் புதியன புகுதலும் தவிர்க்க முடியாதவை .
இன்றைய உலகொடு இந்திய சமுதாயம் இணைந்து முன்னேற வேண்டுமென்றால் புதியன புகுத்தப்பட வேண்டும் .
பாரதி வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் வேளாண்மையே முக்கியமான தொழிலாக இருந்தது .
அதே சமயம் , மேலை நாடுகள் தொழில் யுகத்தில் இந்தியாவை விட ‘ ஒரு யுகம் ’ முன்னின்றன .
இந்திய நாட்டு மொழி , கலை , பண்பாடு அனைத்தும் அவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருந்தன .
பழையன பாராட்டுவோரும் புதியன போற்றுவோரும் காணப்பட்டனர் .
இவற்றுள் எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது ?
தெளிவற்ற நிலையில் இருந்த தமிழ் மக்களுக்கு ,
.நன்மையும் அறிவும்
எத்திசைத் தெனினும் , யாவரே காட்டினும்
மற்றவை தழுவி வாழ்வீ ராயின்
அச்சமொன்றில்லை .
( தமிழச் சாதி , அடி : 119-122 )
( தழுவி = ஏற்றுக் கொண்டு )
என்று பாரதியார் வழிகாட்டி அறிவுரை கூறுகிறார்
பழையன எல்லாம் சிறந்தவை என்று கூற முடியாது .
அவையே எல்லாமாகி விடுவதில்லை .
பழையன பயனற்றுப் போகும் போது அவற்றைத் தயங்காது நீக்கி விட வேண்டும் . அதைப்போல் , புது உலகில் மலரும் நல்லனவற்றை ஏற்றுக் கொள்ள மனக் கதவுகள் திறந்திருக்க வேண்டும் .
மனத்தில் சரியென்று பட்ட வழியைத் தயங்காது ஏற்பது அறிவியல் உலகின் பண்பாடு .
அதற்கு வழிகாட்டுவது அறிவியல் பார்வை .
பாரதியிடம் அப்பார்வை காணப்பட்டது .
‘ பாரதியின் பாடல்களின்கற்பனை வளம் இருக்கும் அளவிற்கு அல்லது அதற்கு மேலும் கருத்து வளம் காணப்படுகிறது .
அவரிடம் தமிழையும் நிலையான தத்துவத்தையும் காண்கிறோம் .
பாரதியின் இந்தத் தெளிவிற்குத் துணை நின்றது அவரது அறிவியல் பார்வை ’
என்பார் அறிஞர் வா.செ. குழந்தைசாமி ,
அறிவியல் துறையின் பிரிவுகளான புவியியல் , வானவியல் , உயிரியல் , பொருளறிவியல் , பொறியியல் , வேளாண்மை , உடற்கல்வி ஆகியன பற்றியும் , அறிவியல் பாடங்கள் கற்பிக்கும் அணுகு முறை பற்றியும் பாரதி கூறியதை அவர் பாடல்களிலும் கட்டுரைகளிலும் பார்க்க முடிகிறது .
குறிப்பாகத் தேசியக் கல்வி என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரையில் இவற்றை விளக்கிச் செல்கிறார் .
அவை பற்றிய விவரங்களை இப்பாடத்தில் பார்க்கலாம் .
4.1 புவியியல் ( Geography )
பூமியின் நிலப்பரப்பு , கடல் , தட்பவெப்பம் முதலியன பற்றி விவரிக்கும் பாடம் புவியியல் என அழைக்கப்படும் .
4.1.1 தட்பவெப்பம்
தட்பவெப்பம் என்பது ஓர் இடத்திலுள்ள குளிர்ச்சியையும் வெம்மையையும் குறிப்பது .
இந்தியா பல மாநிலங்களைக் கொண்டது .
ஒரு மாநிலத்திலுள்ள தட்பவெப்பம் மட்டும் அறிந்திருந்தால் போதாது ; எல்லா மாநிலங்களிலும் உள்ள தட்பவெப்ப நிலையையும் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்கிறார் பாரதியார் .
அப்போது தான் ஒரு மாணவன் தன் தாய்த்திரு நாட்டின் முழு விவரமும் அறிய முடியும் என்பது அவரது எண்ணம் .
அத்துடன் அமெரிக்கா , ஐரோப்பா , ஆப்ரிக்கா , ஆசியா , ஆஸ்திரேலியா முதலிய கண்டங்களிலுள்ள தட்பவெப்ப நிலையை அறியும் உலக அறிவும் பெற முடியும் என்பது அவருடைய முடிவு .
4.1.2 காற்று
உலகில் வான வெளியெங்கும் நிறைந்திருப்பதும் , உயிரினங்கள் உயிர் வாழச் சுவாசிப்பதும் , உணரக்கூடியதுமான ஒன்றே காற்று .
இயற்கையில் வீசும் காற்று , உடம்புக்கு உற்சாகமும் மனத்துக்கு மகிழ்ச்சியும் தரும் .
மெல்லிய தென்றல் காற்றாக இயங்கி வாழ்க்கைக்கு இன்பம் தருவதும் உண்டு ; அதே காற்று , அனைத்து உயிர்களுக்கும் துன்பம் செய்யும் புயலாக உருவெடுத்து மக்களை அழிப்பதும் உண்டு .
இந்தக் காற்றில் உயிர் வாழ உதவும் பிராணவாயு கலந்துள்ளது .
பிராணவாயு இல்லாவிடில் உயிர்கள் இறந்துவிடும் .
அதுவே உடலை இயக்கும் ஆற்றல் .
அதன் ஆற்றலைப் பாருங்கள் .
காற்றே வா ,
இலைகளின் மீதும் , நீரலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த
ப்ராண - ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு
( வசன கவிதை .
காற்று - 6 )
என்று அதன் செயலைப் பாரதியார் காட்டுகிறார் .
மரம் , செடி , கொடி முதலியன ஒளிச் சேர்க்கையின் ( photosynthesis ) போது ( காற்றிலுள்ள கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு சூரிய ஒளி , பச்சையம் ( chlorophyll ) இவற்றின் உதவியால் ) உணவுப் பொருளைத் தயாரிக்கும் .
இந்தச் செயல் நடைபெறும் போது பிராணவாயுவை வெளிவிடும் .
காற்றானது இலைகளையும் , நீரின் அலைகளையும் உராய்ந்து வருவதால் இலைகள் வெளியிடும் புத்தம் புது பிராணவாயு கலந்த குளிர்ந்த காற்று வீசும் என்று பாரதி பாடியதாகக் கொள்ளலாம் .
தமிழ்நாடு வெம்மை மிகுந்தது .
ஆகையால் , குளிர்ந்த காற்றை விரும்பிய பாரதி இவ்வாறு பாடினார் போலும் .
காற்றின் பல்வேறு நிலைகளை , செயல்முறைகளை விரித்துக் கூறுகின்றார் பாரதி .
பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறிவிடுகிறது .
நீரிலே சூடேற்றினால் ‘ வாயு ’ வாகி விடுகிறது .
தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகி விடுகிறது .
அத்திரவத்திலே சூடேற்றினால் ‘ வாயு ’ வாகின்றது
( வசன கவிதை , காற்று - 12 )
இந்தப் பாடல் திடப்பொருளைச் சூடேற்றினால் அது திரவமாகவும் , வாயுவாகவும் மாறுவதைத் தெளிவாகக் காட்டுகிறது .
புயல்
பெரும்புயல் தோன்றக் காரணம் காற்று .
காற்றுப் புயலாக மாறும் நிலையை ,
காற்றே நீரில் சூறாவளி காட்டி , வானத்தில் மின்னேற்றி ,
நீரை நெருப்பாக்கி , நெருப்பை நீராக்கி , நீரைத் தூளாக்கித் தூளை நீராக்கிச்சண்டமாருதம் செய்கின்றான்