நாயக்கர் என்ற சொல் தலைவன், படைத்தலைவன் என்ற பொருளுடையது. விஜயநகரத்தின் அரசப்பிரதிநிதியைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் இஃது ஒரு சாதிப் பெயராக மாறிவிட்டது. நாயக்கர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்.
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் வம்சவழி
ஆட்சிக் காலம் ஆண்ட நாயக்க மன்னர்கள்
1529 – 1564 விசுவநாத நாயக்கர்
1564 – 1572 கிருஷ்ணப்ப நாயக்கர் I
1572 – 1595 வீரப்ப நாயக்கர்
1595 – 1601 கிருஷ்ணப்ப நாயக்கர் II
1601 – 1609 முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் (கிருஷ்ணப்ப நாயக்கரின் (II) உடன் பிறந்த சகோதரர் விசுவப்ப நாயக்கரின் மகன்)
1609 – 1623 முத்து வீரப்பர் I (முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் மூத்த மகன்)
1623 – 1659 திருமலை நாயக்கர் (முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் இளைய மகன்)
1659 முத்து வீரப்ப நாயக்கர் II
1659 – 1682 சொக்கநாத நாயக்கர் (இராணி மங்கம்மாள் கணவர்)
1682 – 1689 முத்து வீரப்பர் III
1689 – 1706 இராணி மங்கம்மாள் (சொக்கநாதரின் மனைவி)
1706 – 1732 விஜயரங்க சொக்கநாதர் (சொக்கநாதரின் மகன்)
1732 – 1736 மீனாட்சி (விஜயரங்கநாதரின் மனைவி)
இதோ முறுக்கிய மீசையும் உருட்டி வழிக்கும் விழிகளும் கொண்ட திருமலை நாயக்கர் சிலையைக் காணுங்கள்! இது மதுரைக் கோயிலில் உள்ளது. இவர் 1623 முதல் கி.பி. 1659 வரை மதுரை நாட்டை ஆட்சி செய்த புகழ் மிக்க பெருமன்னர். தன் ஒப்பற்ற கலை ஆர்வத்தால் மதுரை நகரைக் கலையழகு கொஞ்சும் ஏதன்ஸ் நகரம் ஆக்கினார். திருமலை மன்னர் தம் முன்னோர்கள் வழியில் திருச்சியைத் தலைநகராகக் கொண்டிருந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையைத் தலைநகராக மாற்றினார். மைசூர், திருவனந்தபுரம் ஆகிய அரசுகளை இவர் வென்றார். விஜயநகரத்தோடு போரிட்டு வென்று முழுஉரிமை படைத்த மன்னரானார். இவர் 75 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தார். இவர் காலத்தில் மறவர் சீமை எனப்பட்ட இராமநாதபுரம், சிவகங்கை, திருவாடானைப் பகுதிகளில் அமைதி நிலவியது. சேதுபதி அரசரான இரகுநாததேவர் திருமலை மன்னருக்கு உறுதுணையாக இருந்தார்.
சொக்கநாத நாயக்கரின் மனைவியே இராணி மங்கம்மாள். இவர்களின் மகன், முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சி செய்த போது, அவுரங்கசீப் என்ற மொகலாய மன்னர், தம் செருப்பை, நாடெங்கும் ஊர்வலமாக அனுப்பினார். அச்செருப்புக்கு எல்லாரும் மரியாதை செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வீரமிக்க முத்துவீரப்பர் அந்தச் செருப்பைத் தன் காலில் அணிந்து கொண்டு “உங்கள் மன்னர் இன்னொரு செருப்பை அனுப்பவில்லையா?” எனக் கேட்டார். ஏழே ஆண்டுகள் வாழ்ந்த முத்து வீரப்பர் இறந்த போது அவர் மனைவி கருவுற்றிருந்தாள். பிள்ளையைப் பெற்றுவிட்டு அவ்வரசியும் உயிர் விட்டாள். இதனால் சொக்கநாத நாயக்கரின் மனைவி மங்கம்மாள் அரசப் பொறுப்பை ஏற்றார். இராணி மங்கம்மாள் வீரமிக்கவர். அவர் தன் தளபதி நரசப்பய்யாவின் துணையால் தஞ்சை, மைசூர், திருவனந்தபுரப் படைகளை வென்றார். தம் கணவர் காலத்தில் இழந்த பகுதிகளை மீட்டார். மங்கம்மாள் செய்த அறச் செயல்கள் பலப்பல. சாலைகள், தண்ணீர்ப் பந்தல்கள், வாய்க்கால் சீரமைப்பு, சாலை ஓரம் மரம் நடுதல், அன்ன சத்திரங்கள் ஆகியன மங்கம்மாள் ஆட்சியில் சிறப்புநிலை அடைந்தன.
நாயக்கர் காலத்தில், கிறித்துவர் சமயப் பிரசாரம் செய்யத் தடையில்லாமல் இருந்தது. பெர்னாண்டஸ் என்ற போர்த்துக்கீசியப் பாதிரியார், 1592-இல் மதுரையில் நாயக்க மன்னர் இசைவு பெற்று, முதல் மாதா கோயிலைக் கட்டினார். இராபர்ட்-டி-நொபிலி பாதிரியார், நாயக்கர் காலத்தில் பெரும் அளவில் இந்துக்களைக் கிறித்துவராக்கினார். கி.பி.1630இல் பாதிரிமார்கள் மதமாற்ற முயற்சியில் இறங்கியதற்காக மதுரையிலும் மறவர் சீமையிலும் மிகுதியும் துன்புறுத்தப்பட்டார்கள். திருமலை நாயக்கர் தலையிட்டுப் பாதிரிமார்களைக் காப்பாற்றினார்.
இதோ, கம்பீரமான மதுரைக் கோபுரத்தைக் காணுங்கள்! தென்னிந்தியக் கட்டடக் கலைக்கும், சிற்ப ஓவியச் சிறப்புகளுக்கும், தெய்வீக அழகுக்கும் இடமான இந்தக் கோயிலின் பகுதிகளைக் காணுங்கள்! மீனாட்சி, சொக்கநாதர் சன்னதிகளில் பெரிய துவாரபாலகர் உருவங்களை திருமலை மன்னர் அமைத்தார். கொடிக்கம்பங்கள், பலிபீடங்கள் ஆகியன இவரால் அமைக்கப்பட்டன.
கொடிக்கம்பம்
நன்னுதல் அங்கயற்கண்ணி
தனக்கு நலம்பெ றவே
உன்னதமாகும் கொடிக்கம்பம்
மாபலி பீடமுடன்
சொன்னம் அளித்துப் பொன் பூசுவித்தான்
சுகபோகன் எங்கள்
மன்னன் திருமலை பூபன்
மதுரை வரோதயனே
மீனாட்சி திருமலைமன்னர் துவாரபாலகர்
என்று திருப்பணிமாலை என்ற நூல் திருமலை மன்னரின் கோயில் திருப்பணிகளைக் குறிக்கின்றது.
(நன்னுதல் = நல் நுதல் (நெற்றி), சொன்னம் = சுவர்ணம் (தங்கம்), வரோதயன் = வர+உதயன் (வரத்தின் பயனாகத் தோன்றியவன்), அங்கயற்கண்ணி = அம் கயல் கண்ணி (அழகிய கயல் மீனை ஒத்த கண்களையுடையவளாகிய மீனாட்சி)
கோயில் ஆட்சி, அபிடேக பண்டாரம் என்பவரிடம் இருந்தது. நிர்வாகம் சீர்கேடு அடைந்த நிலையில் இருந்தது. மீனாட்சி அம்மை ‘திருமலை! என்னை ஒருவரும் கவனிக்கவில்லையே’ என நாயக்கர் கனவில் தோன்றிக் கூறினாராம். உடனே, மன்னர் தாமே கோயில் நிர்வாகத்தை ஏற்றுப் பல அறக்கட்டளைகளை ஏற்படுத்திக் கோயில் நிர்வாகத்தை ஒழுங்கு செய்தார்.
இதோ தருமிக்குப் பொற்கிழி அளித்த சோமசுந்தரர் திருக்கோயிலைக் காணுங்கள்! மாணிக்க மூக்குத்தி ஒளிவீசக் கிளியுடன் கொஞ்சும் எழில்மிகு மீனாட்சி அம்மையைக் காணுங்கள்! தெப்பக்குளம், ஆயிரங்கால் மண்டபம், முக்குறுணிப் பிள்ளையார், 124 சிற்பத் தூண்களைக் கொண்ட வசந்த மண்டபம் ஆகியன திருமலை மன்னரின் கோயிற்பணிகளுக்குச் சான்றுகளாகும்.
முக்குறுணிப் ஆயிரங்கால்மண்டபம் தெப்பக்குளம்
பிள்ளையார்
ஏன் பள்ளி கொண்டீர் ஸ்ரீரங்க நாதரே? என்ற பாட்டு இறைவனை எண்ணித் துதிப்பார்க்கு இன்பம் தருவதாகும். திருமலை நாயக்கர், சொக்கநாத நாயக்கர், இராணி மங்கம்மாள், விஜயரங்க சொக்கநாதர் எனப் பலரும் திருவரங்கம் திருக்கோயிலுக்குப் பணி செய்துள்ளனர். நாயக்க மன்னர்களின் தலைநகரமாகத் திருச்சிராப்பள்ளி விளங்கியமையால், அதன் பக்கத்தில் இருந்த திருவரங்கம் அவர்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கியது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளின் வரலாற்றை, விஜயநகர வேந்தரான கிருஷ்ண தேவராயர் ஆமுக்தமாலியதா என்ற தெலுங்கு நூலாகப் படைத்துள்ளார். இன்றும் திருவரங்கத் திருக்கோயிலில், விஜயரங்க சொக்கநாதர் மற்றும் அவருடைய மனைவி மீனாட்சி திருவுருவங்கள் உள்ளன.
நாயக்க மன்னர்கள், கலைகளில் ஈடுபாடு உள்ளவர்கள். தமிழ்நாட்டுக்கு அவர்களால் அருமையான கட்டடங்களும், சிற்பங்களும், ஓவியங்களும் கிடைத்தன. மிகப்பெரிய கோயில் மண்டபங்களும், துவாரபாலகர் சிலைகளும் இவர்களால் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் திருமலை நாயக்கர் காலத்தில் 64 கோயில்களில் கோபுரங்கள் எழுப்ப முயன்று பணக்குறையாலோ வேறு காரணத்தாலோ திருப்பணிகள் நின்றுவிட்டன. மதுரை இராய கோபுரமும் அவற்றில் ஒன்றாகும். ஒரு சமயம் கல்லில் உருவம் செதுக்கிக் கொண்டிருந்த சிற்பி, தன் உதவியாளரிடம் வெற்றிலைச் சுருளுக்குக் கை நீட்டினான்.
உதவியாள் எங்கோ போயிருந்தான். சிற்பத்தைப் பார்த்துக் கொண்டே பின்புறம் கையை நீட்டியபடி வெற்றிலை பாக்குக் கேட்டதை, அங்கு வந்த மன்னர் திருமலை கண்டு அவரே வெற்றிலைச் சுருள் மடித்துக் கொடுத்தார். அரசரே தனக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்ததை அறிந்த சிற்பி, தன் விரல்களை வெட்டிக்கொண்டான். மன்னர் அவ்விரல்களுக்கு மாற்றாகப் பொன்னால் விரல்கள் செய்து அளித்தார். இஃது உண்மையோ கதையோ, மன்னரின் கலை ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக இச்செய்தி விளங்கக் காணலாம். மீனாட்சி கோயிலில் உள்ள பிட்சாடனர் சிலை, மோகினி வடிவம், காளியின் நடனம், சிவனின் ஊர்த்துவ தாண்டவச்சிலை போன்றவற்றை வேறு எங்கும் காண இயலாது. ஆயிரங்கால் மண்டபத்தில் இருக்கும் அரிச்சந்திரன், குறவன், குறத்தி சிலைகள் அற்புதமானவை.
கலைகள் வளர்ந்தன. கட்டடம், சிற்பம், ஓவியம், இசை ஆகிய கலைகளில் பலர் வல்லவராய் இருந்தனர். தெலுங்கு இசை, நாட்டில் பரவியது. தெலுங்குப் பண்பாட்டுக் கூறுகள் தமிழர்க்கு அறிமுகமாயின. கோயில்கள், பண்பாட்டின் கருவூலங்களாகத் திகழ்ந்தன. நாயக்கர் காலச் சிற்பங்கள், திராவிடச் சிற்ப இலக்கணம் பொருந்தியவை. இவை அளவில் பெரியன. மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டவை.
குறத்தி குறவன் அரிச்சந்திரன்
ஓ! எவ்வளவு பெரிய மகால் என்று பார்த்து அதிசயப்படுகின்றீர்களா? வேண்டாம்! திருமலை மன்னர் கட்டியதில் நான்கில் ஒருபகுதிதான் இப்போது உள்ளது. எஞ்சிய பகுதிகள் இடிக்கப்பட்டுவிட்டன. இது இத்தாலிய நாட்டுச் சிற்பியால் வரைபடம் வரைந்து அமைக்கப்பட்டது. இதோ இந்த மகாலில் இன்று எஞ்சியுள்ள சொர்க்க விலாசம் என்ற பகுதியைப் பாருங்கள்! 40 அடி உயரமுள்ள வழுவழுப்பான சுதைத்தூண்கள் தாங்கும் மண்டபத்தைக் காணுங்கள். இதுதான் அரசர் அரியணையில் இருந்து ஆட்சி செய்த இடம். இரண்டு குதிரைச் சிற்பங்கள் அழகு செய்யும் படிகளைக் கடந்து இந்த இடத்தை அடையலாம். ஆண்டுதோறும் அங்கயற்கண்ணி அம்மையிடம் செங்கோலைப் பெற்றுவந்து மன்னர், இந்த மண்டபத்தில் உள்ள அரியணையில் அமர்வது வழக்கம். நவராத்திரி விழாவின்போது, ஒன்பது நாள்களிலும் இந்தச் சொர்க்க விலாசத்தில் மன்னர் கொலு இருப்பார். பழுதடைந்த இந்தப் பளிங்கு வண்ண மாளிகையை கி.பி. 1868இல் நேப்பியர் பிரபு, மூன்று இலட்ச ரூபாய் செலவு செய்து பாதுகாத்தார்.
மகால் முகப்பு தூண்கள்
நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சௌராட்டிரப் பகுதியிலிருந்து சௌராட்டிரர்கள் தமிழகத்தில் குடியேறினர். இவர்களைப் பட்டுநூல்காரர் எனத் தமிழர் குறிப்பிட்டனர். இவர்கள், மங்கம்மாள் காலத்தில், பிராமணரைப்போலத் தமக்கும் பூணூல் போட்டுக் கொள்ளும் உரிமை வேண்டிப் பெற்றனர் என்பர்.
கலை ஈடுபாடு மிகுந்திருந்த இக்காலத்தில், பெருஞ்செல்வர்களும், உயர் அதிகாரிகளும், மகளிர் பலரை மணக்கும் வழக்கம் இருந்தது. மகளிர் பலர் இசை, நடனம் முதலான கலைகளில் சிறந்து விளங்கினர்.
கோயிலுக்குப் பொட்டுக்கட்டும் வழக்கம் என்ற பெயரில் பெண்களைத் தாழ்குடிப் பெற்றோர் கோயிற் பணிக்காக விட்டனர். ஆனால் உயர்குடிச் செல்வர் இம்மகளிரைத் தம் உடல் வேட்கைக்கு ஆளாக்கிக் கொண்டனர்.
திருமலை மன்னர், மாசி மாதத்தில் நிகழ்ந்து வந்த திருக்கலியாண விழாவையும், தேரோட்டத்தையும் மக்கள் கலந்து கொள்ள வசதியாகச் சித்திரை மாதத்திற்கு மாற்றினார். இந்தத் திருவிழாவில், எட்டாம் நாளில் மீனாட்சி அம்மைக்கு முடிசூட்டி, அவரிடமிருந்து மன்னர் செங்கோல் வாங்கும் நிகழ்ச்சி சேர்க்கப்பட்டது. இதுவே மதுரையில் பெரிய திருவிழா ஆகும்.
வைகாசி மாதத்தில் வசந்த விழா நடத்தப் பெற்றது. ஆவணி மாதத்தில் பத்து நாட்கள் சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்றன. பத்து நாள் நிகழ்ச்சிகளில் ஒன்று, இறைவன் விறகு விற்ற நிகழ்ச்சியாகும். இதோ அந்தத் திருவிளையாடலைக் காணுங்கள்! இறைவன் விறகு விற்பவனாக வந்து பாட்டுப்பாடி இறுமாப்பு கொண்டிருந்த இசைப்பாடகர் ஏமநாதனைத் தோல்வியுறச் செய்து, பாண்டிய மன்னனின் அவைக்களப் பாடகன் ஆகிய பாணபத்திரனுக்கு அருள் செய்த இதனை, யார் மறக்க முடியும்? புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா நடைபெற்றது.
இவற்றைத் தவிர, வேறு பல திருவிழாக்களும் நிகழ்ந்தன. அவற்றில் தெப்பத்திருவிழா தைப்பூச நாளன்று நடத்தப் பெற்றது.
பாடம் - 2
• தெய்வங்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள் ஆகியோரைப் பாடுதல்.
• சிலேடை என்ற இருபொருள் அமையப் பாடுதல்.
• பலரையும் கவரவேண்டும் என்ற கருத்தில் பெண்களை வருணித்தல்.
• தம் புலமையை வெளிக்காட்டும் எண்ணத்தோடு பாடுதல்.
ஆகியன சிற்றிலக்கியங்கள் படைத்தோரின் நோக்கங்களாக இருந்தன.
வகை விளக்கம் உதாரணம்
கலம்பகம் பல பூக்களால் தொடுத்த மாலை போன்று, பல
பாவினங்கள், பல உறுப்புக்கள் கலந்து பாடுவது. நந்திக் கலம்பகம்
திருவரங்கக் கலம்பகம்
மதுரைக் கலம்பகம்
கோவை தலைவன்,தலைவியருடைய களவுஒழுக்கம், கற்பு ஒழுக்கம்
பற்றிப் பலதுறைகளில் (400) பாடுவது. திருக்கோவையார்
பாண்டிக்கோவை
திருவெங்கைக்கோவை
பரணி போரில் 1000 யானைகளைக் கொன்ற வீரனைப் பற்றிப
பாடுவது. கலிங்கத்துப்பரணி
தக்கயாகப்பரணி
இரணியவதைப்பரணி
பள்ளு பள்ளர் (உழவர்)களின் வாழ்க்கையை விளக்கும்
நாடகச் சிற்றிலக்கியம். முக்கூடற்பள்ளு
குருகூர்ப்பள்ளு
திருவாரூர்ப்பள்ளு
பிள்ளைத்தமிழ் தெய்வங்களையும், தமிழ்ப் பெரியோர்களையும்
குழந்தையாகக் கருதி,அவர்களைப் புகழ்ந்து
பாடுவது. மீனாட்சியம்மைபிள்ளைத்தமிழ்,
முத்துக்குமாரசாமி
பிள்ளைத்தமிழ்,
சேக்கிழார் பிள்ளைத்தமிழ்.
உலா தலைவன் வீதியில் உலா வரும்பொழுது ஏழு
வெவ்வேறு பருவ நிலையில் உள்ள பொது
மகளிர் காமுறுவதாகப் பாடுவது மூவர் உலா
ஏகாம்பரநாதர் உலா
சொக்கநாதர் உலா
தூது தலைவனிடம் மையல்
கொண்ட தலைவி தென்றல், வண்டு, கிளி, மயில், மேகம்
போன்றவற்றைத் தன் ஆற்றாமையை இயம்பத்
தூது அனுப்புவதாகப் பாடுவது. தமிழ் விடுதூது
கிள்ளை விடுதூது
பண விடுதூது
அந்தாதி ஒரு பாடலின் இறுதிப்
(அந்தம்) பகுதியை அடுத்த பாடலில் முதலாக (ஆதி)
அமைத்துப் பாடுவது. பொன்வண்ணத்தந்தாதி
திருவரங்கத்தந்தாதி
அபிராமி அந்தாதி
குறவஞ்சி தலைவனிடம் கொண்ட காதல் (குறம்) நிறைவேறுமா எனக்
குறப்பெண்ணிடம் தலைவி குறி கேட்பதாக அமைவது. திருக்குற்றாலக் குறவஞ்சி
பெத்லேகம் குறவஞ்சி
சரபேந்திர பூபாலக்குறவஞ்சி
மடல் தான் விரும்பிய காதலரை அடையப் பெறாத காதலர் பனை
மடலால் செய்த பரியின் மீது அமர்ந்து பாடுவது. பெரிய திருமடல்
சிறிய திருமடல்
வருணகுலாதித்தன் மடல்
“இவர்கள் பெரும்பாலும் தோத்திரப் பிரியர்களாக இருந்தனர். தம்மைப் பற்றிப் புகழ்ந்து பாடிப் பிரபந்தங்கள் முதலியன இயற்றிய கவிஞர்களையே இவர்கள் போற்றி வந்தனர். இவ்வகைப் பாடல்களைக் குறித்து :
கல்லாத ஒருவனைநான் கற்றாய் என்றேன்
காடறியும் மறவனைநா டாள்வாய் என்றேன்
பொல்லாத ஒருவனைநான் நல்லாய் என்றேன்
போர்முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்
மல்லாரும் புயம்என்றேன் சூம்பல் தோளை
வழங்காத கையனைநான் வள்ளல் என்றேன்
இல்லாத சொன்னேனுக்கு இல்லை என்றான்
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.
என்று ஒரு புலவர் இரங்குகின்றார். இப்பாடலிற் குறிக்கப் பெற்றோரைப் போன்றுள்ளவர்கள் மீது தூது, மடல், நொண்டி, காதல் முதலிய பிரபந்தங்கள் உண்டாயின. இப்பிரபந்தங்கள் உண்டாகும் சூழ்நிலை காவியம் தோன்றுதற்குச் சிறிதும் இடந்தரமாட்டாது என்பது வெளிப்படை”.
உடன்பிறந்தாருக்குள் அரசுரிமைச் சிக்கல், படைத்தலைவர், அமைச்சர் ஆகியோர் அரசனுக்குப் பழுது எண்ணுதல், பொருள்களின் உற்பத்திக் குறைவால் பஞ்சம், வேறு ஊர்களுக்குக் குடிபெயர்தல், விலங்குகள் ஊருக்குள் புகுந்து துன்பம் விளைத்தல், பகை அரசர்கள் ஊருக்குள் புகுந்து கொள்ளையிடுதல் ஆகியன நாயக்கர் கால ஆட்சியில் நிகழ்ந்தன என்பர் வரலாற்று அறிஞர். மார்ட்டின் பாதிரியார் என்பவர் தமிழ்நாட்டு மக்களின் அக்கால வாழ்க்கைநிலை குறித்துக் கூறுகையில்,
“மதுரை நாட்டு மக்கள் எளிமையாகவும் சிக்கனமாகவும் வாழ்ந்தார்கள். அவர்கள் பெருவாணிகம் செய்பவர்களாக இல்லை. உள்நாட்டில் கிடைக்கும் உணவு, ஆடை ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் மனநிறைவு எய்தினர்”
என்று குறிப்பிடுகின்றார் (கி.பி.1699ஆம் ஆண்டு). பெருவாணிகத்தைத் தமிழர்கள், ஆங்கிலேயர், டச்சுக்காரர், போர்ச்சுக்கீசியர் ஆகியோரிடம் படிப்படியாக இழக்கத் தொடங்கினர். தமிழ்நாட்டின் முத்துக்களும் ஆடைகளும் வணிகம் என்ற அளவில் கொள்ளை போயின.
வேளாண் தொழிலாளி
கறுக்கும் கிடாய் மருப்பின்
முறுக்கு மீசையும் – சித்ரக்
கத்தரிகை யிட்ட வன்னக்
கன்னப் பரிசும்
குறுக்கில் வளைதடி சேர்த்து
இறுக்கும் கச்சையும் – செம்பொற்
கோலப் புள்ளி உருமாலும்
நீலக் கொண்டையும்
சறுக்கும் தொறும் குதிப்பும்
சுறுக்கும் தலை அசைப்பும்
தடிசுற்றி ஏப்ப மிட்டே
அடிவைப்பதும்
மறுக்கும் மதுவெறிகொண்டு
உறுக்கும் சிரிப்பும் தோன்ற
வடிவழகக் குடும்பன்
தோன்றி னானே.
(கிடாய் மருப்பின் = ஆட்டுக் கிடாயின் கொம்பு போன்ற, சித்ரக்கத்தரிகை = அழகான கத்தரிக்கோல், வன்னக் கன்னப்பரிசு = கன்னங்களின் இருபுறமும் சீர்செய்த முடி, வளைதடி = ஆயுத வகை, உருமால் = மேல் துண்டு)
முக்கூடற்பள்ளு நூலில் வரும் வேளாண் தொழிலாளி, ஈடற்ற பெருமாள் அன்பன். பிற சமயங்களை ஏற்றுக் கொள்ளாத இவனுடைய இரண்டாம் மனைவி, சைவ சமயத்தவள். வைணவ சமய உண்மைகளை மறுப்போரை வெட்டி வீழ்த்தத் தயங்க மாட்டேன் என்கிறான் இவன். இத்தகைய இலக்கியங்களில் நம் வேளாண் துறைப் பண்பாடு மேலோங்கித் தெரிவதை மறுக்க இயலாது. விதைகளின் வகைகள், ஏர்க்காலின் வகைகள், மாடுகளின் குணம், குறிகள் (அடையாளங்கள்), மீன் வகைகள் ஆகியன எல்லாம் தெளிவாகக் கூறப்படுகின்றன. இயற்கை வளப்பம் மிகுந்த நாட்டில் விருந்தோம்பல் தழைக்கின்றது. விருந்தோம்பல் பண்பாட்டை இயற்கையின் குறியீடாகப் புலவர் காட்டுகின்றார். “வருவிருந்தினர்க்கு உபசரிப்பது போல் தாழை சோறிட வாழை குருத்து அளிக்கும்” என்று பாடுகிறார்.
தாழை மகரந்தங்களைச் சிந்துவதும், அதற்குக் கீழே நிற்கும் வாழை தன்னுடைய குருத்து இலையை நீட்டி, சோறு போன்ற மகரந்தத் தாதுக்களைப் பெற்றுக் கொள்வதும் விருந்தினரை உபசரிப்பது போன்று தோன்றுகிறது.
பெண்கள் மடலேறுவது என்பது நிகழ்வது இல்லை. ஆண்களே மடலேறுவர். மடலேறுதல் என்பது காதல் மிகுந்த தலைவன் தன்னுடைய காதலியைத் தான் அடைய முடியாத சூழலில் மேற்கொள்ளும் செயலாகும். பெண்ணைப் பெற்றோர் காதலுக்குத் தடையானபோது தலைவன் பனை மடலால் செய்த குதிரை ஊர்ந்து, தன் காதலியின் உருவம் தீட்டிய ஓவியத்தைக் கையில் பற்றி, ஊர்மக்கள் அறிய, இவள் என்னால் காதலிக்கப்பட்டவள் என்று அறிவிப்பான். இதுவே மடலேறுதல் ஆகும். இப்படிப்பட்ட செயலைப் பெண்கள் செய்ய இயலுமா?
கடல்அன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்கது இல். (குறள், 1137)
என்று கூறுகிறார் வள்ளுவர். உள்ளத்தில் கடல் போலக் காம உணர்ச்சி இருந்தாலும் பெண்கள் மடலேற மாட்டார். அவ்வாறு ஏறாமையே பெண்ணின் பெருமையாகும். ஆயினும் பக்தி உலகில் பெண்களும் மடலேறுவதாகப் பாடுவதாக இருக்கின்ற ஓர் இலக்கிய உத்தியை இறையன்பர்கள் மேற்கொண்டனர். திருமங்கை ஆழ்வார் நாராயணனை மோகித்த பெண் மடலேறுவதாகப் பெரிய திருமடல், சிறிய திருமடல் என்ற இரண்டு இலக்கியங்களைப் படைத்துள்ளார்.
விலங்கு, பறவை, மேகம், தென்றல் காற்று போன்ற ஒன்றிடம் உரைப்பதாகவே புலவர் பாடுவர். கோவை நூல்களிலும் காதலே பாடுபொருளாய் விளங்கினும், வள்ளல் ஒருவரைப் பாடல்தோறும் பெயர் விளங்கப் புனைய வேண்டும் என்ற விருப்பமே, நூல் தோன்றக் காரணமாகும். எனவே பெண்களும், பெண்கள் பங்கு பெறும் அகப்பொருளும் கவர்ச்சிப் பொருள்களாய்ப் புலவர்களால் இலக்கியப் படைப்பிற்குக் கொள்ளப் பெற்றமையினை நாம் அறியலாம். பெண்ணைப் புனைந்து புனைந்து பாடும் பாங்கிலேயே கவிதையின் செழிப்பு விளங்கியது.
புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன்
கயலே மணந்த கமலம் மலர்ந்து ஒரு கற்பகத்தின்
அயலே பசும்பொன் கொடிநின்றது
ஓர் உருவகக் காட்சியைக் காட்டுகின்றார். கூந்தலைச் சுமந்து பிறைபோன்ற நெற்றியைக் கொண்டு, வில் போன்ற புருவங்களோடு, மீன் போன்ற கண்களையும், தாமரை போன்ற முகத்தையும், கொண்ட கொடி போன்ற பெண் என்பது இவ்வுருவகத்தால் பெறப்படும் பொருள் ஆகும்.
பாடம் - 3
தமிழகத்தில் சென்னப்பட்டினம் என அன்று பெயர் பெற்றிருந்த சென்னையை விலைக்கு வாங்கிய ஆங்கிலேயர் தமிழ்நாடு முழுவதும் தம் ஆட்சியைப் பரப்பினர். ஆர்க்காட்டு நவாபாகிய ராஜா சாகேப்பைத் தோல்வியுறச் செய்ய ஆங்கிலேயர் தமிழரை மதத்தின் பேரால் பிரித்தனர்; சந்தா சாகேப், மகமது அலி என்ற உறவினர் தம்முள் பகை கொள்ளச் செய்தனர். சூழ்ச்சிப் போர்களாலேயே ஆங்கிலேயர் தமிழகத்தை வென்று கைக்கொண்டனர். தமிழர்களிடையே இருந்த ஒற்றுமை இல்லாமையை இராபர்ட் கிளைவ் என்ற ஆங்கிலத் தளபதி சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். இன ஒற்றுமை இல்லாமை, மதச்சண்டை, சாதிப் பிரிவினை, தீண்டாமை ஆகியனவே நம் நாடு ஆங்கிலேயர்க்கு அடிமைப்படக் காரணமாயின.
கட்டபொம்மன்
வெள்ளையரை எதிர்த்து வீரமுழக்கம் செய்த வீரபாண்டியக் கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கில் இடப்பட்டான்; மருது சகோதரர்களும் கொல்லப்பட்டனர். புலித்தேவர் மறைந்தார். வெள்ளை ஆதிக்கம் தமிழகத்தில் வலுப்பெற்றது.
தமிழகத்தின் குறுநிலப் பகுதிகள் பலவும் வெள்ளையர்க்கு அடிமைப்பட்டன. வழிவழி வந்த வீரப்பண்பாடு, துப்பாக்கி பீரங்கிப் படைகளின் முன் நிற்க முடியாமல் முனை மழுங்கியது. வீரபாண்டியக் கட்டபொம்மன், புலித்தேவன், மருது சகோதரர்கள் ஆகியோரின் விடுதலை முயற்சிகள் தோல்வி கண்டன. சேதுபதி மன்னர்களில் ஒருவரான முத்துராமலிங்க சேதுபதி வெள்ளையர்களின் சிறையில் கிடந்து நலிந்து துயருற்று இறந்தார். தமிழகத்தின் இந்திய விடுதலைப் போர் வேர் கொண்டு வலுவான அமைப்பைப் பெற்றது. அயல் நாட்டினர் நம்மை ஆள்வதா என்ற உணர்ச்சி அழுத்தம் பெற்றது. துறவிகள், தவசிகள், ஞானியர், கற்ற அறிஞர்கள் ஆகியோர் இந்திய விடுதலை உணர்வை வளர்த்தனர். அவர்களில் சிலர் பணி குறிப்பிடத்தக்கது. திருப்பூர்க் குமரனின் தியாகம் தமிழர்களின் விடுதலைப் போர்வேட்கையை வெளிப்படுத்தியது. ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் அந்நிய ஆட்சியை எதிர்த்துக் கப்பலோட்டினார். வெள்ளையர்களால் நாற்பது ஆண்டுச் சிறைவாசம் அளிக்கப் பெற்றார். சிறையில் சிதம்பரனார் செக்கிழுத்தார், கல் உடைத்தார்.
இராமலிங்க சுவாமிகள்
வடலூர் இராமலிங்க சுவாமிகள் வள்ளலார் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர். சாதி மதம் கடந்த சமரச வாழ்வை உலகுக்கு உரியதாக அறிவுறுத்தியவர். வடநாட்டில் விவேகானந்தரைப் போலவே தமிழகத்தில் இராமலிங்க வள்ளலாரும் ‘கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக’ எனப் பாடி அந்நிய ஆட்சியை வெறுத்தார். தமிழ்க்கல்வி, தமிழர் பண்பாடு ஆகியவற்றின் வலிமையை எடுத்துரைக்கும் வண்ணம் அவர் எழுத்து அமைந்தது.
இந்தியப் பண்பாட்டின் கூறுகளை இன, மத, மொழி, கால, இட வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட பொதுவான நம்பிக்கைகள், பொதுப்படையான வாழ்க்கை நெறிகள் என்ற இரண்டு பகுதிகளாகப் பார்க்கலாம். வாழ்க்கை நெறிகளுக்கு உட்பட்ட கூறுகளை நம் வசதிக்காகச் சிறு உட்கூறுகளாகக் கொள்ளலாம்.
பொதுவான நம்பிக்கைகள்
• நல்வினை, தீவினைகளில் நம்பிக்கை
• மறுபிறப்புப் பற்றிய எண்ணம்
வாழ்க்கை நெறிகள்
குடும்பம்
• வரையறுக்கப்பட்ட உரிமைகளும், இல்லறக் கடமைகளும் கொண்ட பெண்.
• தன் விருப்புரிமையுடைய ஆண்.
• குடும்ப அமைப்பில் பிடிப்பு.
• கணவன் மனைவி உறவு நிலையானது, பிறவிதோறும் தொடர்வது என்ற கருத்து.
• பொருள் ஈட்டுவதோடு, பிறர்க்கு உதவுதல், ஒப்புரவு, ஈகை போன்ற பண்புகளுக்கும் வாழ்க்கை இடமளிக்க வேண்டும் என்ற கோட்பாடு.
சடங்குகளும் நம்பிக்கைகளும்
• சமயம் சார்ந்த வாழ்க்கைச் சடங்குகளில் பற்றும் விடாப்பிடியும்
• விதியின் தீர்ப்பு என வருவதை ஏற்றுக் கொள்ளுதல்.
• காரணத்தை ஆராயாமல் சிலவற்றைப் பாரம்பரிய உணர்வுடன் பின்பற்றும் நெறி.
சாதியப் பாகுபாடு
• சாதியப் பாகுபாடுகளைத் தள்ளிவிடாமலும் அவற்றிலேயே மீண்டு விடாத அளவுக்கு அழுந்திவிடாமலும் அமைந்த ஒரு நடுவுநிலை.
• திருமணம், மகப்பேறு, தெய்வ வழிபாடு, நோன்பு, இழவு, இறந்தார், நினைவு ஆகியவற்றில் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு சாதிக்குள்ளும் சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றல்.
பிணி தீர்த்தல்
• பேய், ஆவி நம்பிக்கை
• செய்வினை, மந்திரித்தல், பில்லிசூனியம் வைத்தல் ஆகியவற்றில் நம்பிக்கை
• இலை தழை, பட்டை வேர் பிற இயற்கை மூலங்களிலிருந்து மருந்து ஆக்கிக் கொள்ளும் அறிவு.
சமயம் போற்றல்
• கோயில்களைச் சார்ந்த வாழ்க்கைப் போக்கு
• புண்ணியத் தலப்பயணம், புண்ணிய நதிகளில் ஆடுதல்.
• பெரியோரைப் போற்றுதல், மரியாதை வழக்கங்களைப் பேணுதல்.
ஆகியன எல்லாம் இந்தப் பொதுப் பண்பாட்டில் அடங்கும்.
1. கைம்மாறு கருதாமல் அறம் செய்வதை ஒரு நியதியாகக் கருதுதல்.
2. கூட்டுக் குடும்ப வாழ்வில் சண்டைகள் சச்சரவுகளுக்கிடையில் அறுந்து போகாத ஓர் இறுகிய உறவுப்பிணைப்பு.
3. எவ்வளவு தாழ்ந்த வறுமையிலும் விருந்தோம்பும் ஈரம்.
4. புலால் உண்ணுதல், உயிர்ப் பலியிடல் ஆகியவற்றுக்கிடையிலும் சீவகாருணியத்திற்கும் இடம் கொடுத்தல்.
5. எந்தச் சூழலிலும் அழிந்து போகாத மனித நேயம்.
6. சமய சாதி வட்டங்களைத் தாண்டிப் பிறரோடு உறவுக்குக் கைநீட்டும் பண்பு.
7. தம்முடைய கோட்பாடுகளையே பெரிதென்று வியந்து கொள்ளாத சமரசம்.
8. நட்பு, காதல், அன்பு, நேயம் ஆகியவற்றுக்காகத் தம்மையே பலி கொடுத்து விடும் தியாகம்.
9. அடுத்த வீடு, தெரு, ஊர் ஆகியவற்றில் உள்ளவர்களோடு விலகியிருக்க முடியாத ஒட்டுறவு.
10. மறுமை உலக வாழ்வைவிட இருக்கும் உலக வாழ்வைச் செம்மையாகப் பேணும் மனம்.
11. வறுமையில் நற்பண்புகளை இழந்து விடாத நிலை
ஆகியவற்றில் தமிழ்நாடு அதிக அழுத்தம் கொண்டிருந்தது.
அதிசயம், ஆச்சரியம், அநீதி, அநியாயம், உபயோகம், கிராமம், சத்து, சாட்சி, தாமதம், சுலபம்
- சமஸ்கிருதம்
தகராறு, வசூல், லாயக்கு, ரத்து
மகசூல், முகாம், பக்கிரி, மாமூல், மிட்டாய், டமாரம், சோம்பு, சொக்காய், கொலுசு, பவனி, பவிசு,
ஒட்டாரம், கண்ணராவி, லாகிரி
- அரபி
இரவிக்கை, எக்கச்சக்கம்
- தெலுங்கு
டப்பி, டப்பா, சௌடால், தாயத்து, பேமானி, பேட்டி, போணி, இனாம்,
கசகசா, கச்சா, கசாப்பு
- இந்தி
சப்பாத்தி, தமாஷ், திவால், நகாசு, கலாட்டா, ஏலம், சாவி, கோப்பை, சன்னல், அலமாரி
- உருது
மேசை, கடிதம், கிராதி, மேஸ்திரி, டிக்கெட், டிகிரி, டிபன், சினிமா, ஓட்டல், ஏக்கர், சோப்பு, பேனா,
பென்சில்
- போர்த்துக்கீசு
ஈரங்கி, ஐட்டம், ஒரிஜினல்
- ஆங்கிலம்
போன்ற சொற்கள் இன்று தமிழில் வந்து கலந்து சில சமயங்களில் விலக்க முடியாதனவாகவும் உள்ளன. இச்சொற்கள் பண்பாட்டுப் பாதிப்பையும் காட்டும். ஓட்டல், சோப்பு, சினிமா போன்ற சொற்கள் வெறும் சொற்களாக மட்டும் இல்லை. இவை தமிழர்களுக்கு நன்கு அறிமுகமானவை. தமிழர் வாழ்வில் ஆழமான பதிவை ஏற்படுத்தி உள்ளவையும் ஆகும்.
அவையாவன:
1. பெண் ஒருத்தி கணவர் பலர்க்கு மனைவியாதல், அதனைக் கற்பறம் என்று போற்றுதல்.
2. வேறொருவனைப் பிள்ளைப்பேற்றுக்காகச் சேர்தல்.
3. வரதட்சணை அளித்தல்
தவிரவும், “ஊழையும் உப்பக்கம் காண்”கின்ற வினைத்திட்பம் போற்றிய தமிழகத்தில் தவம், மந்திரம், கழுவாய் ஆகியவை பற்றிய கருத்துகளை இதிகாசங்கள் எடுத்துரைத்தன. இவ்வகையைச் சார்ந்த கருத்துகள் வருமாறு:
1. கடுந்தவம் இயற்றி மேல்நிலை எய்திய முனிவர்களின் கோபமும் சாபமும்
2. வாள்வலிமை, வில்வலிமை போன்றவற்றைவிடத் தவமியற்றிப் பெற்ற மந்திரத் தொடர்புடைய கணைகளின் வலிமையால் பெறும் போர் வெற்றி
3. எப்படிப்பட்ட தவறுகளையும் கழுவாய் செய்து துடைத்துவிட முடியும் என்ற நிலை
இக்கருத்துகள் அனைத்திற்கும் இதிகாசங்கள் தத்துவ முலாம் பூசின.
ஐரோப்பியர் வரவால் தமிழர் பண்பாட்டில் நிகழ்ந்த மாற்றங்களை எல்லாம் எண்ணுங்கள்!
• கல்விச் சீரமைப்பு
திண்ணைப் பள்ளிக்கூடம், அந்தந்த ஆசிரியர் வகுத்துக் கொள்ளும் பாடத்திட்டம் என்ற வகையில் ஒரு திட்டமிடாத கல்வியாக அமைந்து இருந்தது; அதனை உயர் கல்வி நிலையில் கொண்டு சென்று, பல்கலைகக்கழகங்கள் நிறுவிய பெருமை ஐரோப்பியர்க்குரியது. படித்தபிறகு பட்டம் பெறுதல், வேலை வாய்ப்புக்குரிய படிப்புகள், அப்படிப்புகளுக்குப் பாடத்திட்டங்கள், தேர்வுகள் எனக் கல்விமுறை பல வரையறைகளைப் பெற்றது. இதோ மாநிலக் கல்லூரியை நோக்குங்கள். இக்கல்லூரி முதல்வராக இருந்த ஸ்டாதம் துரையின் வெண்பளிங்குச் சிலையைப் பாருங்கள். நூற்றாண்டைக் கடந்த இந்தக் கல்லூரி, நூற்றாண்டைக் கடந்த சென்னைப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களால், பி.ஏ., பி.எஸ்ஸி., எம்.ஏ., எம்.எஸ்ஸி என்று பட்டம் பெறும் ஒரு நாகரிக மாற்றம் நம்மிடையே ஏற்பட்டது.
அது மட்டுமா? கல்வி பெரும்பாலும் பெண்ணுக்குத் தேவையில்லை என்ற கருத்து ஐரோப்பியர் வரவுக்குப் பின் மாறிவிட்டது. தமிழ்நாட்டின் முதல் பெண் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் ஐரோப்பிய நாகரிகத் தாக்கத்தால் மருத்துவராக உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. அடுப்பு நெருப்போடு மட்டும் நெருக்கமான உறவு கொண்டிருந்த தமிழ்ப் பெண்கள் இன்று அணுமின் நிலையத்தில் பணியாற்ற வாய்ப்பளித்தது ஐரோப்பியப் பண்பாட்டின் தாக்கமே.
• அறிவியல் ஏற்றம்
தமிழ்நாட்டில் பாம்புகள் மிகுதி. நல்ல பாம்பு எனும் கொடுமை மிக்க நஞ்சுடைய பாம்பு பலரால் வழிபாடே செய்யப்பட்டது. பாம்புப் புற்றுகளில் முட்டையும் பாலும் வைத்து வணங்கும் நம்பிக்கை இன்றுகூட நம் மக்களிடம் உள்ளது. இத்தகைய கொடிய பாம்புகள் கடித்தால் மருத்துவம் செய்வதை விட மந்திரித்துக் கொள்வதே தக்கது என்று தமிழர் எண்ணியிருந்தனர். கொள்ளைநோய், அம்மை போன்றவை தெய்வத்தின் சினத்தால் வந்தவை என்று கருதியிருந்தனர். இப்படிப்பட்ட நம்பிக்கைகளை அறவே நீக்கி எந்த நோய்க்கும் மருத்துவம் செய்து கொள்வது தக்கது என்ற கருத்தை ஐரோப்பிய நாகரிகம் நம்மிடையே உண்டாக்கியது. பாம்புக்கடிக்கும், வெறிநாய்க்கடிக்கும், அம்மை, கொள்ளைநோய் ஆகியவற்றுக்கெல்லாம் மருந்து கண்டுபிடித்துத் தந்தது ஐரோப்பிய அறிவியல்.
ஆழமான கிணறு :
கைப்பிடிச் சுவர் இல்லை. இதில்தான் நம் கிராமத்துப் பெண் இடுப்புமுறியத் தண்ணீர் இறைப்பாள். இதோ மணல் பரந்த ஆறு: இதில் தான் நம் முன்னோர் ஊற்றுத் தோண்டித் தண்ணீர் பெற்றனர். இப்போது ஊரெங்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குடிநீர்த் தொட்டிகள் இயங்குகின்றன.
மின்சாரம் கிராமங்களில் நிலையாக அப்பிக் கொண்டிருந்த இருளைத் துடைத்துவிட்டது. ஊரெங்கும் ஒளிமெழுகும் வழிகள் இரவைப் பகலாகக் காட்டுகின்றன. கழிப்பறை அமைப்பு இன்று தூய்மை பேணுகின்றது. இவற்றையெல்லாம் நம்மிடையே கொண்டு வந்து தந்தது ஐரோப்பிய நாகரிகமே.
• உணவு, உடைப்பழக்கங்கள்
ஐரோப்பியர் வரவால் நம் உடைகளில் தாம் எவ்வளவு மாற்றங்கள் பாருங்கள்! கால்சராய், மேலே Coat எனப்படும் குப்பாயம், அழகிய கழுத்துப்பட்டி (Tie), கால்களில் Boot எனப்படும் மூடிய காலணி, காலுறைகள் எனத் தோற்றத்திற்கு ஏற்றமும் மதிப்பும் கூட்டியுள்ள மாற்றங்கள் தோன்றியுள்ளன. உணவில் கூட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல குடும்பங்கள் இன்று பிறந்த நாள் கேக் வெட்டுகின்றன. கோதுமை ரொட்டி உணவு பரவலாகி உள்ளது. ரொட்டி, வெண்ணெய், பழக்கூழ் ஆகியவை பலரின் காலை உணவாகியுள்ளன.
• பயண வசதிகள்
ஐரோப்பியர் வரவால் பரந்த இந்த உலகம் சுருங்கி விட்டதா? வானூர்தியில் பறந்து பறந்து போய்த் தூர துருவங்களைத் தொட்டு விட்டுத் திரும்பும் வேக விளையாட்டு அல்லவா இப்போது நிகழ்கிறது! தொடர்வண்டிகள் பந்தயக் குதிரைகளைப் போல் பறக்கின்றன. பேருந்துகள் மாநிலத்தின் வெவ்வேறு முனைகளை விரைவாகத் தொட்டுத் திரும்புகின்றன.
• வேளாண் வளர்ச்சி
இதோ இந்த வயற்காட்டைப் பாருங்கள். செந்நெல் வயல்களும் கரும்புத் தோட்டங்களும், புன்செய்க் கொல்லைகளும் இவ்வளவு செழுமையாய் முன்பு இருந்தனவா? இல்லை. வீரிய விதைகள், தீவிர சாகுபடித் திட்டங்கள், ஊட்டமளிக்கும் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பருவந்தோறும் தக்க செய்நேர்த்திகள், புதிய பயிர் வகைகள் ஆகியவற்றால் இன்று வேளாண்மை மிகுந்த பயன் தருவதாக அமைந்துள்ளது.
மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று
ஆனைகட்டி போரடிக்கும் அழகான தென்மதுரை
என்ற நிலை மாறி வேளாண் தொழில் இயந்திரத் தொழில் நுட்ப உதவியால் இன்று வேகப்படுத்தப்பட்டுள்ளது.
கைத்தொழில் என்பதெல்லாம் இன்று இயந்திரங்களின் உதவியால் செய்யப்பெறும் தொழிலாகி விட்டது. வீட்டில்தான் எத்தனை இயந்திரங்கள்! பழைய அம்மிக்கல் திருமணத்தின் போது மிதிப்பதற்குக் கூடக் கிடைக்காமல் போய்விட்டது.
• அச்சுப்பொறியும் அறிவு வளர்ச்சியும்
ஐரோப்பியர் வரவால் நம்மிடம் ஏற்பட்ட ஒரு பெரிய மாறுதல் அச்சுப்பொறியால் ஏற்பட்டதாகும். ஓலைச்சுவடிகளிலிருந்து மெல்ல அழிந்து கொண்டிருந்த நூல்களை அச்சுவடிவில் கொண்டு வர அவர்களின் வருகை தானே உதவியது. நில இயல், பயிரியல், விலங்கியல், உயிரியல் என்று பலப்பல துறைகளுக்குரிய நூல்கள் எழுதப் பெற்றன. தமிழில் புத்தம் புதுக்கலைகள், பஞ்ச பூதத்தின் செயல்கள் விளக்கப்பட்டன.
பொதுவாகவே அறிவு ஆராய்ச்சி ஆகியவற்றில் மக்களுக்கும் ஒரு நம்பிக்கையை உண்டாக்க ஐரோப்பியர் பண்பாடு உதவியது. பேய், பிசாசு, ஏவல், பில்லி சூனியம், வேதாளம், காட்டேறி, கருப்பு என்ற அறிவு சாராத நம்பிக்கைகள் மெல்ல நம்மை விட்டு அகன்றன.
• ஆங்கில ஆதிக்கம்
இன்று தமிழனின் பேச்சைக் கவனியுங்கள். நான்கைந்து சொற்களுக்கு இடையே ஆங்கிலச் சொல் புகுந்துவிடுகிறது. அவ்வளவு ஏன்? ஒரு திரைப்படப் பாடல் கேளுங்கள்! அல்லது தொலைக்காட்சித் தொடரைப் பாருங்கள்! ஆங்கிலச் சொற்கள் கலந்து வழங்கப் பெறுதலைக் காணலாம்.
உணவு தரு விடுதிகளைக்
‘கிளப்’ என வேண்டும் போலும்!
உயர்ந்த பட்டுத்
துணிக்கடைக்கு ‘சில்கு ஷாப்’
எனும் பலகை தொங்குவதால்
சிறப்புப் போலும்!
என்று இந்த நிலையை எண்ணிப் பாரதிதாசன் வருந்துகின்றார்!
• தமிழின் நலிவு
ஆங்கிலம் தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகவும், அலுவல் மொழியாகவும், கல்வி மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் பன்னெடுங்காலம் இருக்கும் நிலை ஏற்பட்டதால் தமிழ் நலிந்தது. தமிழ் பலதுறைகளிலும் வளர்தல் தடைப்பட்டது. அறிவியலைக் கற்பிப்பதற்கு ஆங்கிலமே பொருத்தமான மொழி என்ற தவறான கருத்து நிலவியது.
ஐரோப்பியர் வாணிகத்தின் காரணமாக இந்தியாவிற்கு வந்தவர். இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், தமிழகத்திலிருந்தும், அரிய கலைச்செல்வங்களையும் மதிப்புமிக்க செல்வப் பொருட்களையும் ஐரோப்பியர் கொண்டுபோய்விட்டனர்.
• சுயமரியாதை இழப்பு
இவை மட்டுமா? ஆங்கிலேய அதிகாரிகளைத் ‘துரைமார்கள்’ என்று அழைத்த தமிழர்கள் அவர்களுக்கு வேலைக்காரர்கள் ஆயினர். தொண்டு செய்யும் அடிமைக் கூலிகளாகிச் சுயமரியாதை இழந்தனர்.
அரசியல் சூழ்ச்சி வலையால் தமிழர்களைப் பிரித்து அடிமைப்படுத்திய ஐரோப்பியர், பல பிரிவுகளைத் தமிழர்களிடையே வளர விட்டனர். பிரித்தாளும் சூழ்ச்சியால், செல்வர்களுக்குப் பட்டங்கள் கொடுத்தனர். கூலிக்காரர்களுக்கு அலுவலக வேலை தந்தனர். ஆங்கிலப் பண்பாடு உயர்ந்தது என்ற மாயையினை உண்டாக்கினர்.
உரிமைக் கிளர்ச்சி, விடுதலை இயக்க முயற்சி ஆகியவற்றை ஐரோப்பியர் நலியச் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக் கணக்கானோரைச் சிறைக்கூடத்தில் தள்ளிச் சித்திரவதை செய்தனர்.
• பரம்பரைப் பழக்கங்களின் மறைவு
அடுத்து நாம் மிகவும் ஆழ்ந்து கருதவேண்டிய ஒன்றை இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும். தமிழ்க் கல்வி, தமிழ் மருத்துவம், தமிழ்க்கலை என்பன படிப்படியாக மறக்கப்பட்டன. தமிழ்நாட்டு மூலிகைகளின் பெயர்களும், அவற்றின் மருத்துவப் பண்புகளும் நினைவிலிருந்து நீங்கிவிட்டன.
தமிழர் சீயக்காய், ஆவாரம்பொடி, பயற்றமாவு, புற்றுமண் போன்றவற்றைத் தேய்த்து ஓடும் நீரில் நீராடும் வழக்கமுடையவர்கள். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கத்தினர். இவையெல்லாம் ஐரோப்பியர் வரவால் குலைந்தன. சோப்பு, சவர்க்காரம், ஷாம்பு, முகத்திற்குப் பவுடர் என ஆடம்பர சாதனங்கள் பெருகின.
தமிழ்மக்களின் வருவாயில் குறிப்பிடத்தக்க ஒரு பங்கு புறவயமான ஆடம்பரப் பொருள்களின் பொருட்டாக வாரி இறைக்கப்படும் வழக்கம் உருவாயிற்று. புற அழகைக் கவர்ச்சியாகக் காட்டும் ஒப்பனைப் பொருள்களில் இந்தியப் பெண்களுக்கு மேலை நாகரிகத்தால் ஓர் ஈடுபாடு ஏற்பட்ட நிலையில், வலிமைமிக்க தமிழர் பண்பாட்டின் கூறுகளான சில நல்ல பழக்கங்கள் நழுவத் தொடங்கின. மஞ்சள் பூச்சு, மாக்கோலப் புனைவு, வீட்டிற்கு முன் சாணம் தெளித்தல், வாழை இலை உணவு ஆகியவை தமிழர் வாழ்விலிருந்து நீங்கி வருகின்றன. பதநீர், இளநீர், நீராகாரம் ஆகியவற்றின் இடத்தைக் காப்பி, தேநீர், ஐஸ்கிரீம் ஆகியவை பிடித்துக் கொண்டன. திருமணத்தை வாழ்நாள் பிணைப்பாகவும், இரண்டுயிரின் ஒருமைப்பாடாகவும் கருதிய நிலை தளர்ந்தது. மணமுறிவு, மணவிலக்கு ஆகியன நம்மிடையே புகுந்துவிட்டன. ‘மூன்றாவது முறையாக விவாகரத்து செய்தார்’ என்று செய்தியோடு ஒரு பெண்ணைக் குறித்து எழுதும் புதுமை தமிழகத்தில் காணப் பெறுகின்றது.
இந்தியா முழுவதும் தோன்றிய விடுதலைக் கிளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தமிழகம் தன் பங்கை உரிய வகையில் ஆற்றியது. இந்த நிலையில் தமிழர்களுக்கு அந்நியப் பொருள்கள், அந்நியத் துணி, அந்நிய நாகரிகம் ஆகியவற்றில் ஒரு மோகம் பிறந்தது.
மேற்றிசை வாழும் வெண்ணிற மாக்களின்
செய்கையும் நடையும் தீனியும் உடையும்
கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை
யவற்றிலும் சிறந்தன ஆதலின் அவற்றை
முழுதுமே தழுவி மூழ்கிடின் அல்லால்
தமிழச்சாதி தரணிமீ திராது
என்று ஒருசாராரும், வேற்று நாகரிகம், வேற்றவர் பொருள் எதனையும் ஏற்கலாகாது என ஒருசாராரும் போரிட்டு நாட்டைக் கெடுத்தனர் என்பர் பாரதியார். நன்மையும் அறிவும் எந்தத் திசையிலிருந்துவரினும் அவற்றை ஏற்றுக் கொள்ளலே தருமமென்பர் அவர். இதுவே தமிழ்ப் பண்பாடாக இருந்தது. தன் விழுமிய நாகரிகக் கூறுகளை அயலவர்களுக்குக் கொடுத்தும், பிறரிடமிருந்து கொள்வன கொண்டும் உயிர்ப்பு அறாமல் தழைத்தது தமிழ்ப் பண்பாடு.
1. பெண் அறிவும் ஆற்றலும் உடையவள்.
2. குடும்பப் பண்பையும் தமிழினப் பண்பையும் கட்டிக் காப்பவள் பெண்.
3. நீதிநெறிகளை யாரும் மறந்துவிடக்கூடாது.
4. நல்லோர் துன்பப்பட்டாலும் இறுதியில் இன்பம் எய்துவர்.
5. தெய்வம் நல்லோரைக் காக்கும்.
என்பன போன்ற கருத்துகள் சித்திரிக்கப்பட்டன. சமூகக் கேடுகளாக அக்காலத்திலிருந்த தீண்டாமை, மது அருந்துதல், சாதிக் கட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்த்துச் சிறுகதைகள் தீட்டப்பெற்றன. இந்திய விடுதலைக் கருத்தையொட்டிப் பல நாடகங்கள் எழுதவும் நடிக்கவும் பெற்றன. சமூகச் சீர்திருத்த உணர்வும் நாட்டு விடுதலை உணர்வும் வெள்ளமெனப் பொங்கிப் பரவின.
அக்கால உலகிருட்டைத் தலைகீழாக்கி
அழகியதாய் வசதியதாய்ச் செய்து தந்தார்
இக்கால நால்வருணம் அன்றி ருந்தால்
இருட்டுக்கு முன்னேற்றம் ஆவதன்றிப்
புக்கபயன் உண்டாமோ?
என்று பாரதிதாசன் குறிப்பது போல் வருணாசிரமத்தை எதிர்த்துக் கொடி தூக்கப்பட்டது. இந்தியாவிற்கு விடுதலை வேண்டுமெனில் எல்லோரும் வேற்றுமை துறந்து ஒன்றுபட வேண்டுமென்பது வற்புறுத்தப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் அடைந்த கொடுமை ஒவ்வொன்றும் சமூக வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இதன் உச்சநிலையைச் சித்திரிப்பதாக வைக்கம் போராட்டம் அமைந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழையும் உரிமை வேண்டி இப்போராட்டத்தை முன்னின்று நடத்தினார் பெரியார் ஈ.வே.இராமசாமி. தமிழ்நாட்டில் சோழவந்தான் காந்தி ஆசிரமத்தில் பயின்ற பார்ப்பன மாணவர்களுக்கும், ஏனைய மாணவர்க்கும் தனித்தனித் தண்ணீர்ப் பானைகள் வைப்பதைக் கண்டிப்பதில் பெரியார் முன்நின்றார். பின்னர் இவர் காங்கிரசிலிருந்து விலகி நீதிக்கட்சியைச் சார்ந்து, பின் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கித் திராவிடர் கழகம் என்ற இயக்கத்தைக் கண்டார். ஓமகுண்டம், தாலிக்கயிறு, வடமொழி மந்திரம், சடங்குகள் இல்லாமல் மாலை மாற்றிக்கொள்ளும் சீர்திருத்தத் திருமணத்தை இவர் வழக்கத்திற்குக் கொண்டு வந்தார்.
தில்லையாடி வள்ளியம்மாள்
தில்லையாடி வள்ளியம்மாள் என்ற தமிழ்ப்பெண் அப்போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். அவரின் தியாகமும் நெஞ்சுரமும் அண்ணலைப் பெரிதும் கவர்ந்தன. அவரைத் தம் பொதுவாழ்க்கையின் வழிகாட்டி என அண்ணல் பின்னர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் ஈரோடு நாகம்மை என்ற அம்மையார் விடுதலைப் போராட்டத்தில் ஒரு பெண் தலைவியாகப் பெரும்பங்கு ஆற்றினார். தென்னாட்டில் போராட்டம் நிகழ்த்த வேண்டும் என்றால் நாகம்மையாரைக் கேட்டுத்தான் கூறவேண்டும் என்று காந்தியடிகள் அவரின் தலைமையைப் பாராட்டியுள்ளார்.
பாடம் - 4
ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின்
வாராது போல் வந்த மாமணியைத் தோற்போமோ?
என்று பாரதி வருந்திப் பாடுவது போல, இந்தியா என்ற பாரதம் தான் வளர்த்துக் கொண்ட பண்பாடு தேய்ந்து போகுமோ என்ற கவலை கொண்டது. நாட்டைப் பற்றிய கவலை, அதைக் காத்துப் பேண வேண்டும் என்று ஆர்வத்திற்கு வித்திட்டது. ஆர்வம் அந்நியரை எதிர்க்கின்ற வீரத்தையும் அனைவரையும் ஓரணியில் கொண்டு வருகின்ற சாதனையையும் நிகழ்த்தியது.
“இந்தியாவை வீழ்த்தியது எது, பிரிட்டிஷ் வாளா? அன்று பின்னை எது? இந்திய வாளே. சாதிமதவெறி, சம்பிரதாயச் சிறுமை, கண்மூடி வழக்க ஒழுக்கம், தீண்டாமை, பெண்ணடிமை, இந்து முஸ்லீம் வேற்றுமை முதலிய இரும்பு எஃகுத்துண்டங்கள் வாளாக வடிந்தன. அவ்வாள் -அவ்விந்திய வாள் இந்தியாவை வீழ்த்தியது”
இந்தக் கருத்தே தமிழர்களுக்கும் பொருந்தும். கல்வியறிவு இல்லாமையால் எதற்கும் பயம். சிப்பியைக் கண்டால் அஞ்சும் அச்சம், மந்திரம் பில்லி சூனியம் இவற்றில் நம்பிக்கை ஆகியவற்றால் தமிழகமும் வெள்ளையர்க்கு அடிமைப்பட்டது.
வானம் பொழியுது பூமி விளையுது
மன்னன் கும்பினிக்கு ஏன் கொடுப்பேன்?
சீனிச்சம்பா நெல்லு ஏன் கொடுப்பேன்? அந்தச்
சீரகச்சம்பா நெல்லு ஏன் கொடுப்பேன்?
என்னைப் போல் வெள்ளாண்மை இட்டானோ துரை
இங்கிலீசு வெள்ளைக் காரனுந்தான்?
என்று நாட்டுப்புறப் பாடலில் கட்டபொம்மனின் வீரத்தை மக்கள் பாடுகின்றனர். கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள், புலித்தேவர் ஆகியோர் வெள்ளையரை எதிர்த்து வீரமுரசு அறைந்தனர். எல்லாப் பாளையக்காரரும் அன்று ஒன்றுபட்டிருந்தால் தமிழகம் வெள்ளையர்க்கு ஆட்பட்டிராது. ஒற்றுமை இல்லாமை, தமிழர்களின் பெரிய குறைகளில் ஒன்றாகும்.
திலகர் பாரதியார் வ.உ.சிதம்பரம்
“மிதவாத வழியைப் பின்பற்றத் திலகர் உடன்பட வில்லை என்பது சரித்திரம். திலகரின் இந்தத் தீர்மானம் மனமறிந்து கஷ்டங்களை வருவித்துக் கொண்ட தீர்மானமாகும்……….. தீர்மானத்துக்கு மனம் உவந்து ஆதரவு அளித்த பெரியார்களில் பாரதியார் ஒருவர்.”
என்று கூறுகிறார். படிப்படியாகத் தீவிரவாதம் தமிழகத்தில் காந்தியடிகளின் வழிக்கு வந்து விட்டது. மிதவாதம், தீவிரவாதம் என்ற இரண்டும் காந்திய நெறியில் இயங்கும் பரிணாமம் ஏற்பட்டது.
வாழ்கநீ எம்மான்! இந்த
வையத்து நாட்டில் எல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மகாத்மா நீ வாழ்க! வாழ்க!
என்று போற்றும் நிலை உருவாகியது. ஆனால் இதற்குப் பல ஆண்டுகள் முன்னரே தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் காந்தியடிகள் நிகழ்த்திய உரிமைக் கிளர்ச்சியில் பங்கேற்று அவர் மனத்தைக் கவர்ந்திருந்தனர். தென்னாப்பிரிக்காவில் அண்ணல் புரிந்த கிளர்ச்சியில் பெருமளவு தமிழர் பங்கேற்றனர்; நாகப்பன், வள்ளியம்மை என்ற இருவர் போராட்டத்தில் உயிரிழந்தனர். காந்தியடிகள் பின்னாளில்
“….இப்போரில் தமிழ்மக்கள் புரிந்த துணையைப் போல வேறு எவ்விந்தியரும் புரியவில்லை. அவர்களுக்கு நன்றியறிதல் காட்ட அவர்கள் நூல்களைப் பயில வேண்டுமென்று நினைத்தேன். அப்படியே அவர்கள் மொழியைப் பயில்வதில் மிக ஊக்கமாக ஒரு திங்கள் கழித்தேன். அம்மொழியைப் பயிலப் பயில அதன் அழகை உணரலானேன்…”
என்று தம் பத்திரிகையில் எழுதியுள்ளார்.
குத்தீட்டி ஒருபுறத்தில் குத்த வேண்டும்
கோடாரி ஒருபுறத்தைப் பிளக்க வேண்டும்
ரத்தம்வரத் தடியால் ரணமுண் டாக்கி
நாற்புறமும் பலர்உதைத்து நலியத் திட்ட
அத்தனையும் நான் பொறுத்தே அகிம்சை காத்தும்
அனைவரையும் அதைப் போல நடக்கச் சொல்லி
ஒத்துமுகம் மலர்ந்து உதட்டில் சிரிப்பி னோடும்
உயிர்துறந்தால் அதுவேஎன் உயர்ந்த ஆசை
என்று கூறுகிறார். தன்னை வருத்திக் கொண்டு பிறரைத் திருத்துவதே அகிம்சை நெறி. அன்னி ஞிமிலி என்ற சங்ககாலப் பெண் அரசரின் கொடுமைகளை எதிர்த்து உண்ணா நோன்பால் அரசர் மனத்தை மாற்றினார். இந்த உண்ணா நோன்பு அறமே காந்தியடிகளால் ஒரு பெரிய ஆயுதமாகக் கொள்ளப்பட்டது.
‘லெக்கி’ என்ற இங்கிலாந்து வரலாற்று ஆசிரியர் என்ன சொல்கிறார் தெரியுமா?
“பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் பலவித இந்தியத் துணிகளும் சிறப்பாக மஸ்லின்களும் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அவை அந்நாட்டில் கம்பளமும் பட்டும் நெய்வோரைக் கதிகலங்கச் செய்தன. 1700-இலும் 1721-இலும் பார்லிமெண்ட்டில் சட்டங்கள் இயற்றப்பட்டு இந்தியத் துணிகள் தடுக்கப்பட்டன.”
இந்த நிலை மாறி இந்தியாவிலிருந்து பருத்தியைக் கொண்டுபோய் மான்செஸ்டர் நகரில் ஆடையாக்கி இந்தியச் சந்தைக்குக் கொண்டுவரும் நிலை தோன்றியது. கிளைவ் இந்தியா வந்தபோது இங்கிலாந்து 74,575,000 டாலர் கடனில் இருந்தது. இந்தியச் சந்தையில், இந்தக் கடன் நீங்கி இங்கிலாந்தில் செல்வம் கொழித்தது. இந்த நிலையை மாற்றவே கதர் இயக்கம் தோன்றியது. கையால் நூற்றுக் கையால் நெய்த ஆடையைப் பலரும் ஏற்றனர். அந்நியத்துணியை மக்கள் வெறுத்து ஒதுக்கினர். இதனால் இங்கிலாந்தின் பொருளாதாரம் நலிந்தது.
நெருங்கிய பயன்சேர் ஒத்துழையாமை
நெறியினால் இந்தியாவிற்கு
வரும் கதி கண்டு பகைத்தொழில் மறந்து
வையகம் வாழ்க நல்லறத்தே!
என்று இந்த ஒத்துழையாமை இயக்கத்தை பாரதியார் வாழ்த்துகிறார். இளைஞர்களே! கல்லூரிகளை விட்டு வெளியேறுங்கள்! வழக்கறிஞர்களே! நீதிமன்றங்களை விட்டுவிலகுங்கள்! மக்கள் பிரதிநிதிகளே! சட்டசபைகளைப் புறக்கணியுங்கள் என்று காந்தியடிகள் கூறியதை ஏற்றுத் தமிழகத்தில் பலர் ஒத்துழையாமைப் பணியில் ஈடுபட்டனர். பலர் தாம்பெற்ற பட்டங்களைத் துறந்தனர். இந்நிலையில் காங்கிரசிலிருந்து சிலர் பிரிந்து சட்டசபைக்குள் நுழைந்து போராடலாம் என்று முயன்றனர். அம்முயற்சி தோல்வியுற்றது. வெள்ளையர் ஆட்சி தந்த பல நன்மைகளைத் தமிழக இளைஞர்கள் வெறுத்து ஒதுக்கினர்.
உப்புச் சத்தியாக்கிரகம் என்ற புகழ்பெற்ற அறப்போரைக் காந்தியடிகள் வட இந்தியாவில் ‘தண்டி’ என்ற இடத்தில் நடத்தினார். உப்புக்கு வரிவிதித்ததைக் கண்டித்து எழுந்த இந்தப் போராட்டம் தமிழகத்திலும் நிகழ்ந்தது. போராட்டத்திற்குத் தலைமை தாங்கி மூதறிஞர் ராஜாஜி நடைப்பயணத்தைத் தொடங்கினார்.
வேதாரணியத்தில் உப்புக் காய்ச்ச முயன்று கைதாயினர் பலர். 1930இல் திருச்சியிலிருந்து வேதாரணியத்திற்குப் புறப்பட்ட நடைப்பயணத்தில் பாடப்பெற்ற பாட்டை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை எழுதியிருந்தார்.
கத்தியின்றி ரத்தமின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும் யாரும் சேருவீர்!
என்று தொடங்கும் அந்தப் பாட்டு வரலாற்றுப் புகழ் பெற்றதாக விளங்கியது.
இந்துக்களின் மனம் புண்படக் கூடாது என்பதற்காக முஸ்லீம்கள் பசுவதை செய்வதைக் கைவிடுவதென்று முடிவு கட்டினர். தமிழ்நாட்டில் இந்த நல்லிணக்கம் முழுமையானதாகவே இருந்தது. இந்து முஸ்லீம் கலவரங்கள் இங்கு நிகழவில்லை. 1936, 1937ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்த இசுலாமிய மாநாடுகளில் திரு.வி.கலியாணசுந்தரனார் தலைமை தாங்கி இசுலாமிய சமயச் சிறப்பையும், இசுலாமிய இந்து சமயங்கள் ஒத்துப்போக வேண்டிய தேவையையும் சிறப்பாக வலியுறுத்தியிருக்கிறார். தமிழர் பண்பாட்டில் என்றும் மதவெறி ஊடுருவியதில்லை; எனவே இங்கே ஒரு ‘நவகாளி’ நிகழவில்லை. (இசுலாமியரும் இந்துக்களும் தாம் சகோதரர் என்ற உண்மையை மறந்து, ஒருவரோடு ஒருவர் மோதி, இரத்த ஆற்றைப் பெருக்கெடுக்க வைத்த இடம் வங்காளத்தில் உள்ள நவகாளி ஆகும்.)
ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்
அந்நியர் புகல்என்ன நீதி
என்று பாரதி பாடியதற்கேற்ப ஓர் ஒருமை உணர்வு பிறந்தது. தமிழகத்தில் இந்த ஒருமைப்பண்பு நன்கு வெளிப்பட்டது. காங்கிரஸ் மேடையிலே ஐயர், ஐயங்கார், ஆச்சாரியார், முதலியார், செட்டியார் எனத் தலைவர்கள் பலர் வேறுபாடின்றி உட்கார்ந்திருந்தனர். இமயமலையில் ஒருவன் இருமினால் குமரியிலிருந்து மருந்துகொண்டு ஓடுவோம் என்று பாரதிதாசன் கூறுவது போல ஓர் உணர்ச்சியடிப்படையிலான ஒற்றுமை உருவாகியது.
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே – இதைத்
தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே
எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே! -பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே!- இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே! -கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே!
என்று பாரதியார் பாடும் பாட்டு இந்த ஒருமைப்பாட்டைக் காட்டும். வேறுபாடுகளை மறந்து கடலெனத் திரண்ட சமூகத்தின் ஆன்ம வலிமையை வெள்ளை அரசு எதிர்த்து நிற்க முடியவில்லை
“அன்னி பெசண்ட் நிகழ்த்திவரும் கிளர்ச்சியால் நாட்டில் சுயராஜ்ய வேட்கை வளர்ந்திருப்பது கண்கூடு.. பெசண்ட் அம்மையார் கிளர்ச்சியால் நலம் விளைகிறதா தீமை விளைகிறதா என்று பார்த்தேன். நலம் விளைதல் கண்டேன்; துணை போகிறேன்..”
என்று மேடையில் பேசினார். பெசண்ட் அம்மையாரைத் திரு.வி.க. ஆதரித்தார்; கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம்பிள்ளை எதிர்த்தார். காங்கிரசிலேயே இவ்வளவு வேறுபாடுகள் இருக்கவும், ‘ஜஸ்டிஸ்’ கட்சி என்ற நீதிக்கட்சி சுய ஆட்சிக் கிளர்ச்சியை எதிர்த்தது. ஜஸ்டிஸ் கட்சி பிராமணர் அல்லாதார் நலத்திற்காகப் போரிட்டது. இவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் தமிழகத்தில் அமைதி நிலவும் வகையில் தலைவர்களிடையே நேசம் இருந்தது.
கொள்கைகளில் மாறுபட்டவர்களாயிருந்தாலும் தமிழகத் தலைவர்கள் மனித நேயத்தையும் சான்றாண்மையையும் விட்டுக் கொடுக்கவில்லை. எடுத்துக்காட்டுக்கு ஒன்று காணலாம். பெரியார் ஈ.வெ.இராமசாமி நாத்திகர். திரு.வி.க. ஒருமுறை பெரியார் இல்லத்தில் தங்கினார்; காலையில் ஆற்றுக்குச் சென்று குளித்துக் கரை ஏறினார். நாத்திகரான பெரியார் அவர்க்குத் திருநீறு (விபூதி) அளித்தார். திரு.வி.க. வியப்படைந்தார். பெரியார் விருந்தினர் கடமை என்றார். இந்தப் பண்பாடு தமிழரின் சகிப்புத்தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு இல்லையா?
“கதவடைப்பும் வேலை நிறுத்தமும் அடிக்கடி நிகழ்ந்தன. ஒவ்வொரு வேலை நிறுத்தமும் சமதர்ம வேதத்தின் ஒருபடலம் என்பது என் கருத்து”
என்று திரு.வி.க. கூறுகிறார். மார்க்சியம் என்ற பொதுவுடைமைக் கொள்கை இத்தொழிற்சங்க அமைப்பால் தமிழ்நாட்டில் வேர் ஊன்றியது. திரு.வி.க. கூறுகிறார்:
“மகம்மதுவின் தெய்வ ஒருமையும் கிறிஸ்துவின் அன்பும் புத்தர் தர்மமும் அருகர் (சமணர்) அகிம்சையும் கிருஷ்ணன் நிஷ்காமியமும் குமரன் அழகும் தட்சிணாமூர்த்தியின் சாந்தமும் பொதுமை அறத்தை வேராகக் கொண்டவை. அப்பொதுமை அறம் ஏன் ஓங்கவில்லை? சில தடைகள் மறிக்கின்றன. அவை யாவை? சாம்ராஜ்யங்கள், மடங்கள், சம்பிரதாயங்கள், கட்டுப்பாடுகள், கண்மூடி வழக்க ஒழுக்கங்கள் முதலியன. இவற்றைப் படைத்து வளர்ப்பது எது? முதலாளி தொழிலாளி வேற்றுமை. இவ்வேற்றுமையை ஒழிக்கவல்லது பொருட் பொதுமை. பொருட்பொதுமை மகம்மதுவின் தெய்வ ஒருமையும் கிறிஸ்துவின் அன்பும் பிறவும் மன்பதையில் கால் கொள்வதற்குத் துணை செய்யும் ஆற்றல் வாய்ந்தது என்னும் நுட்பம் எனக்குப் புலப்பட்டது. அதனால் மார்க்சியம் என் உள்ளத்தைக் கவர்ந்தது.”
எளியோரின் வாழ்க்கை நலம் கருதிய நோக்கில் தொழிலாளர் இயக்கம் தோன்றி வளர்ந்தமை இக்கூற்றின் வழியாக அறியலாம்.
துன்பப் பழஞ்சுமையைத் – தூக்கித்
தூளாக்கி யிட்டுச் சுதந்தர பூமியில்
இன்பப் பயிர்வளர்ப்போம் – மாந்தர்
எல்லோரும் சேர்ந்து புதுமைக்கனி உண்போம்
என்று ச.து.சு.யோகியார் என்ற விடுதலைக் கவிஞர் பாடுகிறார். தமிழகத்தில் விடுதலை இயக்கக் கிளர்ச்சியில் நூற்றுக்கணக்கானவர் மடிந்தனர். பல்லாயிரவர் சிறைபுகுந்தனர். ஓர் ஒருமை உள்ளம் உருவாகிய காலமாக அக்காலம் திகழ்ந்தது
வ.உ.சிதம்பரம் பாரதி
விஞ்ச் துரையோடு அவர் நிகழ்த்திய வீர உரையைப் பாரதியார் கவிதையாகப் படைத்துள்ளார். சிறையில் கிடந்து நலிந்த சிதம்பரம் பிள்ளைக்குச் சிலநாள் உணவு அனுப்பிய ஒருவரும் சிறைக்குள் தள்ளப்பட்டார்.
கொடுத்தனன் உணவு கொஞ்சநாள்; அதனைத்
தடுத்திட அவனைத் தள்ளினன் சிறையுள்
என்று வ.உ.சி. எழுதுகிறார். சாக்குத்துணியில் கால்சட்டை, கைச்சட்டை, குல்லா அணிந்து சிறையில் சிதம்பரம் பல தொழில் புரிந்தார்.
அவன் என்னைச் சணல்கிழி யந்திரம் சுற்றெனச்
சுற்றினேன். என்கைத் தோல் உரிந்து ரத்தம்
கசிந்தது. என்னருங் கண்ணீர் பெருகவே
திங்கட் கிழமை ஜெயிலர் என் கைத்தோல்
உரிந்ததைப் பார்த்தான். உடன் அவன் எண்ணெய்
ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாய்ப்
பகலெல்லாம் வெயிலில் நடந்து தள்ளிட
அனுப்பினன். அவனுடைய அன்புதான் என்னே!
என்று சுயசரிதையில் கூறுகிறார். விடுதலை இயக்க மென்ற வேள்விக்குச் சிதம்பரனார் தம் இரத்தத்தை நெய்யாக ஊற்றினார் எனக் கூறின் மிகை ஆகாது.
சுப்பிரமணிய பாரதி கவிதைகளால் விடுதலை உணர்வை எழுப்பியவர். தாகூரைக் காட்டிலும் பாரதியே இந்திய தேசியத்தின் குரலைக் கவிதையில் உணர்வுற எழுப்பியவர்.
மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பரோ
என்று எல்லா இன்பங்களையும் இழந்து துன்பப்பட்டவர் பாரதி. பாரதி ஒரு பெரிய சீர்திருத்தவாதி. தீண்டாமையைக் கடுமையாக அவர் எதிர்த்தார். சாதியில் தாழ்த்தப்பட்ட தம்போலா என்பவர் வீட்டில் போய் உட்கார்ந்து அவர் உணவு உண்டார். கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்டவர்க்குப் பூணூல் அணிவித்து இன்று முதல் நீ பிராமணன் என்று கூறினார். இதோ பாரதியார் பாட்டை இசைத்தட்டிலிருந்து கேளுங்கள்.
“சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”
திரு.வி.க.
“உங்களை நோக்கி விண்ணப்பம் செய்கிறேன். கூட்டத்தை அமைதியாக நடத்தப் போகிறீர்களா? குழப்பத்தில் முடிக்கப் போகிறீர்களா? கூட்டம் அமைதியாக நடந்தால் நான் உயிருடன் வீட்டுக்குத் திரும்புவேன். இல்லையேல் இக்கடலில் பாய்ந்து உயிர் துறப்பேன். என்ன செய்யப் போகின்றீர்கள்? என்னை வீட்டுக்கு அனுப்பப் போகிறீர்களா? கடலுக்கு அனுப்பப் போகிறீர்களா?”
என்று கேட்டார். கூட்டம் அலை அடங்கிய கடலானது. இத்தகைய பண்பாட்டை வளர்த்தவர் திரு.வி.க. திரு.வி.க. அவர்களின் இல்லறம் தமிழ்ப் பண்பாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டு. ஆறே ஆண்டுகள்தாம் அவர் மனைவி வாழ்ந்தார். அக்காலத்தில் திரு.வி.க. அவருக்கு திருக்குறளைக் கற்பித்தார். பொருளின் மீது நாட்டமில்லாத அறவாழ்வு இவர்களுடையது.
பெரியார் ஈ.வெ.இராமசாமி தமிழகக் காங்கிரசின் பெருந்தலைவர்களில் ஒருவராக இருந்தவர். பெரியார் காந்தியடிகளிடம் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். திரு.வி.க. பெரியாரைப் பற்றிக் கூறுகையில்,
பெரியார் ஈ.வே.இராமசாமி
“முன்னாளில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தொண்டு செய்தவர் என்ற முறையில் எவர்க்கேனும் பரிசில் வழங்கப் புகுந்தால் முதற்பரிசில் நாயக்கருக்கே செல்வதாகும். தமிழ்நாட்டுக் காங்கிரஸ் நாயக்கர் உழைப்பை நன்றாக உண்டு கொழுத்தது. அவர் காங்கிரஸ் வெறி கொண்டு நாலாபக்கமும் பறந்து பறந்து உழைத்ததை யான் நன்கு அறிவேன்”
என்கிறார். காங்கிரசிடம் மனம் மாறுபட்டுப் பிரிய வேண்டிய சூழலில் பெரியார் ஜஸ்டிஸ் கட்சியைச் சார்ந்தார். பின் சுயமரியாதை இயக்கத்தை வளர்த்தார். பின் திராவிடர் கழகத்தை உருவாக்கினார். அவரது 70 ஆண்டுக்கால வாழ்க்கை தமிழக அரசியல் வரலாற்றில் புறக்கணிக்க இயலாத ஒன்று. தமிழர் பண்பாட்டில் சீர்திருத்தம் என்ற பகுதியில் பெரியாரே பேரிடம் பெறுவார். வைக்கம் நகரில் பெரியாரே மாபெரும் போரில் ஈடுபட்டுத் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துச் சிறை சென்றார். வைக்கம் வீரர் என்ற சிறப்புப் பெயர் பெரியாருக்கு உரியது.
தமிழக விடுதலைக்குச் சுப்பிரமணிய சிவா ஆற்றிய தொண்டு மறக்க முடியாதது. வ.உ.சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் ஆற்றிய அனல் கக்கும் சொற்பொழிவுகள் வெள்ளையரசைக் கதிகலங்கச் செய்தன. சுப்பிரமணிய சிவா வெள்ளை அடக்கு முறையை எதிர்த்துச் சிறை சென்றார். சிறை வாழ்வு அவருக்குத் தொழு நோயைத் தந்தது. சிவா திலகர் வழி நின்றவர். தீவிரத் தேசியவாதம் தமிழகத்தில் வளர வழிசெய்தவர்.
வ.வே.சுப்பிரமணிய ஐயர் இலண்டனில் வழக்கறிஞர் கல்வி பயிலும் போது புரட்சி வீரர் வீரசாவர்க்கரைச் சந்தித்து அவருடைய முயற்சிகளுக்குத் துணை நின்றவர். பாரதி நடத்திய இந்தியா பத்திரிகையில் இவர் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் தேச பக்திக் கனலை வளர்த்தன. வீரசாவர்க்கர் ஐயரை ‘என் அன்பிற்குரிய ரிஷி’ என்று அழைத்துக் கடிதம் எழுதியுள்ளார். மணியாச்சியில் ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்ற புரட்சி இளைஞர் வாஞ்சிநாதனுக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்தவர் ஐயர்தான் என்று கூறப்படுகிறது. ஐயர் திருக்குறளை அழகாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். திரு.வி.க.விற்குப் பிறகு தேசபக்தன் நாளிதழ் பொறுப்பை ஏற்றார். ஐயரின் விடுதலை இயக்கப் பணிகள் தமிழக விடுதலை வரலாற்றில் முக்கிய பக்கங்களாகத் திகழ்கின்றன.
ஈரோட்டு நாகம்மையார் பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களின் துணைவியார். தம் கணவரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுச் சிறைபுகுந்தார். ‘தென்னாட்டில் போராட்டம் நிகழ்த்த வேண்டுமாயின் ஈரோட்டு நாகம்மையாரைக் கேட்டுத்தான் கூற வேண்டும்’ என்று காந்தியடிகள் ஒரு முறை கூறினார்.
இராஜாஜி என் மனசாட்சியின் குரல் என்று ஒரு முறை காந்தியடிகள் கூறினார். சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் என்ற பெயர் இராஜாஜி எனப் பலராலும் மதிப்போடும் அன்போடும் கூறப்பெற்றது. தீண்டாமை, மது ஆகிய தீமைகளை இராஜாஜி மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடினார்.
“இராஜகோபாலாச்சாரியாரும் யானும் கதராண்டியானோம். (கதர்த் துணியை உடுத்தியமையால்) அரசராயிருந்த ஆச்சாரியார் ஆண்டியானார். சத்தியாக்கிரகப் போர்க்களத்தில் நின்றோம்.”
என்று திரு.வி.க. எழுதுகிறார். நீண்ட சிறைவாசத்தை இராஜாஜி மனமுவந்து ஏற்றார். உப்பு சத்தியாகிரகத்தில் தமிழகத்தின் தலைவராயிருந்து வேதாரண்யத்தில் இவரே இக்கிளர்ச்சியை நிகழ்த்தினார். விடுதலை பெற்ற இந்தியாவில் இராஜாஜி கவர்னர் ஜெனரலாகவும் பின்பு தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் பணியாற்றினார்.
தீரர் என்று போற்றப்பட்ட சத்தியமூர்த்தி தமிழ்நாட்டுக் காங்கிரசை வளர்த்தவர். சத்தியமூர்த்தி மேடைப் பேச்சில் வல்லவர். சட்டமன்றத்தில் சத்தியமூர்த்தி ஆற்றிய பணி பலரைக் கவர்ந்தது. பெருமைக்குரிய தமிழக முதல்வராக இருந்த கர்மவீரர் காமராஜ் சத்தியமூர்த்தியால் உருவாக்கப் பெற்றவர் ஆவர்.
“அய்யர் பாரதியாரைத் தலையங்கம் எழுதும்படி விட்டதில்லையாம். அரசியலில் பாரதியார் அதிதீவிரவாதி என்ற சாக்கே தலையங்கம் எழுதாதபடி அவர் தடுக்கப்பட்டதற்குக் காரணமாயினும், வேறு விஷயங்களைப் பற்றிக் கூடப் பாரதியார் சொந்தமாகக் கட்டுரைகள் எழுதும்படி விடப்பட்டதில்லையாம்”
என்று கூறுகிறார். இந்தக் கட்டுப்பாட்டாலேயே பாரதி மித்திரனைவிட்டு வெளியேறினார். இந்தியா பத்திரிகை அவருடைய வீர சாகசங்களை வெளிப்படுத்தியது. ஆனந்தவிகடன், கல்கி பத்திரிகைகளின் வாயிலாகப் பேராசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆற்றிய பணிகள் மிகச் சிறந்தவை. நையாண்டி செய்யும் போக்கில் வெள்ளையர்களின் நிர்வாகத்தைக் குத்திக் காட்டிய அவருடைய எழுத்தாற்றல் பலரால் சுவைக்கப்பட்டது. வ.வே.சு.ஐயர், டி.எஸ்.சொக்கலிங்கம், இந்து பத்திரிகை ஆசிரியர் கஸ்தூரிரங்க ஐயங்கார் ஆகியோர் பத்திரிகை ஆசிரியர்களாக ஆற்றிய பணிகள் மிகவும் குறிப்பிடத்தக்கன. தமிழ்நாட்டுப் பத்திரிகை உலகம் பல தடைகளையும் அடக்கு முறைகளையும் தாண்டி விடுதலை உணர்வை மக்களிடையே எழுப்பியது. அடிமை என்ற நிலை மாறி உரிமை மிக்க வாழ்வு மலர இவை செய்த பண்பாட்டுப் புரட்சி வரலாற்றில் என்றும் நின்று நிலவுவதாகும்.
பாடம் - 5
மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை?
தோப்பில் நிழலா இல்லை?
தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த்தெருவில்
தமிழ்தான் இல்லை
(தணிப்பரிதாம் = தணிப்பு அரிதாம், தணிப்பது (நீக்குவது) அரிதானதாகும்.)
என்று பாரதிதாசன் கூறுமாறு ஆயிற்று.
நிலப்பரப்பில் தமிழ்நாடு சில பகுதிகளை இழந்தது. தமிழ் மொழி வழங்கும் இடங்களும் சுருங்கியமையால் பலவகையான நெருக்கடிகளுக்கு ஆளாகித் தமிழர் தம் அடையாளத்தை இழந்துகொண்டு இருக்கும் நிலை நிகழ்காலத்திற்குச் சொந்தமாயிற்று. பெரும்பான்மையான தமிழர்கள் நிலம், மொழி ஆகியவற்றில் ஏற்பட்ட இழப்புகள் குறித்துக் கவலைப்படவில்லை.
சாதியம் என்ற இந்தப் பண்பாட்டுக் குறையைக் களைந்து கொள்ளத் தமிழர்களால் முடியும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என வாழ்ந்தவர்கள் அவர்கள். ‘கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்’ எனக் கேட்டவர்கள் அவர்கள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என அறிவுறுத்தியவர்கள் அவர்கள். ‘சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே’ என வருந்தியவர்கள் அவர்கள். இன்று சாதிக் கலப்பு மணங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. சாதி பார்க்காமல் ஏனைத் தகுதிகளைப் பார்த்து மணம் செய்து கொள்வோர் எண்ணிக்கை மிகுதியாயுள்ளது. பெரியாரின் நீண்ட காலப் பேருழைப்பின் பயன் இது எனக் கூறவேண்டும்.
தற்குறியாய், உலகியல் அறியா மூடமாய், அடுப்பங்கரை ஒன்றே அறிந்தவளாய், நகைகளின் சுமைதாங்கியாய், அலங்காரப் பதுமையாய், ஆணுக்கு அடிமையாய், மண்ணெண்ணெய்க்குப் பலிப்பொருளாய், வரதட்சணையால் முடிவு செய்யப்படும் வாழ்க்கைப் பொருளாய்ப் பெண் இருந்த காலம் மாறிவிட்டது. எனினும் தமிழ்ச் சமூகம் முழுமையும் பெண்ணைப் போற்றுவதாகவும் ஆணுக்குச் சமமாகக் கருதுவதாகவும் கூறமுடியவில்லை. பெண் குழந்தையைக் கருவில் அழிப்பது, பிறந்தபின் எருக்கம்பால் ஊட்டிக் கொல்வது போன்ற இரக்கமற்ற செயல்கள் சமூகத்தின் சில பகுதிகளில் நிகழாமலில்லை.
குன்றக்குறவன் ஒருவன் கடவுளை வேண்டிப் பெண் பெற்றான் என்று ஐங்குறுநூறு கூறுகின்றது. இக்கருத்தும்
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திட வேண்டு மம்மா
என்று கவிமணி கூறிய கருத்தும் இன்று சில பகுதிகளில் போற்றப் பெறவில்லை.
பெண்ணென்று பூமிதனிற் பிறந்துவிட்டால் – மிகப்
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்
என்று பாரதி கூறுவது போலப் பெண்கள் துன்பப் பிறவிகளாக அல்லற்படுவதும் நம் பண்பாட்டின் ஒரு கூறுதான்.
இன்று பெண்ணியக்கம் வலிமை பெற்றுள்ளது. பெண் போராடும் உள்ளம் பெற்றுள்ளாள். தமிழர் பண்பாட்டில் கண்ணகியும் கண்ணம்மாவும் உயிர்ப்புற்று உலா வருகின்றனர். காவல்துறையில், ஆட்சித் துறையில், வான்படை, கப்பல் துறைகளில், பொறியியல், மருத்துவ அறிவியல் துறைகளில் பெண்கள் பங்கேற்கும் மறுமலர்ச்சி தமிழகத்திலும் தோன்றியுள்ளது.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா, மொரீசியசு, ரீயூனியன், தென் ஆப்பிரிக்கா, பிரான்சு, பிஜித்தீவு, மேற்கிந்தியத் தீவுகள், தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கெல்லாம் சென்று குடியேறினர் தமிழர்.
இலங்கையில் தமிழர் அடைந்த இன்னல்கள் எண்ணிலவாகப் பெருகிவிட்டதை இன்றைய வரலாறு காட்டுகின்றது. அகதிகளாகத் தமிழகம் நோக்கிக் கண்ணீர் வற்றி உலர்ந்த கண்களோடு பல்லாயிரவர் தமிழகத்திற்குள் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
வளைகுடா நாடுகளிலும், அமெரிக்காவிலும் சென்று பொருள் தேடிவரும் தமிழர் தாயகம் திரும்பி வசதியான வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர். இந்நாடுகளைத் தவிர இந்தியாவின் வடபகுதியில் பல நகரங்களிலும் சென்று பிழைப்பு மேற்கொண்ட தமிழர் பலர். அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மொரீசியசு போன்ற நாடுகளில் சென்ற தலைமுறைகளில் சென்று தங்கிவிட்ட தமிழர்கள் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் மறந்துவிட்டனர். தங்கள் மூதாதையர் தமிழ்நாட்டுக்காரர்கள் என்பதைத் தவிர இவர்களுக்கு வேறு ஏதும் தெரியவில்லை.
வீட்டு அமைப்பு
வாசலில் குரோட்டன்ஸ் வளர்க்கும் நாகரிகம்.
கதவுகள் அடைக்கப்பட்டு ‘நாய் ஜாக்கிரதை’ அறிவிப்பு.
‘உத்திரவின்றி உள்ளே வரக்கூடாது’ அறிவிப்பு.
திண்ணைகள் இல்லாத வீட்டமைப்பு.
பக்கத்து வீட்டுக்காரர்களைப் பற்றி ஏதும் தெரியாத அடுக்கு வீட்டமைப்பு.
சில அன்றாட சமூகக் காட்சிகள்
‘இன்று ரொக்கம் நாளை கடன்’ என்று கடைகளில் ஏமாற்றும் அறிவிப்பு.
‘இங்கு விற்கப்படும் பலகாரங்கள் நெய்யில் செய்யப்பட்டவை அல்ல’ – உணவுவிடுதிகளில் நயமான அறிவிப்பு.
‘மதுபானம் உடலைக் கெடுக்கும்’ ‘மது அருந்தாதீர்கள்’ என மதுப்புட்டிகளில் அறிவிப்பு.
‘எச்சில் துப்பாதீர், சுவரொட்டி ஒட்டக்கூடாது’ போன்ற எச்சரிக்கைகள்.
ஆண் – பெண் படங்களோடு கழிப்பறைகள்.
பொதுவிடங்களில் நீர் பருகச் சங்கிலி கட்டிய குவளைகள்.
‘இலஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ கூடாது’ என்று அலுவலகங்களில் அறிவிப்புகள்.
‘ஒரு ரூபாய்க்கு ஒரு கோடி – நாளை குலுக்கல்’ பேருந்து நிலையங்களில் இந்நாட்டு மன்னர்களின் கூவல்கள்.
இவையெல்லாம் நம் பண்பாட்டில் விளைந்துள்ள மாற்றங்களைக் காட்டுவன.
மக்கட் தொகை மிகுதியாக இருக்கக்கூடிய சூழல், நுகர்வுப் பொருள்களைப் பெறுவதில் ஒரு பெரும் துன்பத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில் விருந்தோம்பல் என்பது மறக்கப்பட்ட ஒரு பண்பாக இருக்கிறது. வரவேற்பறை, முகமன் பேச்சு, அதிகப்படியான நிலையில் ஒரு தேநீர் என்ற அளவில் நெருக்கமான உறவுகள் கூடக் கத்தரிக்கப்படுகின்றன. தாய் பிள்ளை உறவுக்கிடையிலும் கூட வேற்றுமை உருவாகியுள்ளது. மருமகள் வருகை, சொத்துப்பிரிவினை போன்றவை பேதங்களை உண்டாக்கியிருக்கின்றன. கருச்சிதைவு, வரதட்சிணை, பெண் வெறுப்பு, குறுக்கு வழியில் பொருள் ஈட்டும் முயற்சி, விளம்பரப் புகழ் பெற்றுவிடும் ஆர்வம் ஆகியன பண்பாட்டைப் பெரிதும் சிதைத்திருக்கின்றன. இந்நிலையில் நகரங்களும் சிற்றூர்களும் எந்த நிலையில் உள்ளன எனக் காணலாம்.
வாசலில் கோலமிடுதல், கோலத்தின் நடுவே பரங்கிப்பூவை வைத்தல், திண்ணையையும் தெருவையும் சாணமிட்டு மெழுகுதல், தரையோடு போடப்பட்ட அடுப்பு, பெரும்பாலும் மண்பாண்டங்கள், புளியிட்டுத் துலக்கிய பித்தளைக் குடம் தவலைகள், சுரைக்கொடி படர்ந்த கூரைவீடுகளுக்கு இடையே ஒன்றிரண்டு ஓட்டு வீடுகள், மாலையில் திண்ணை மாடத்தில் விளக்கேற்றுதல், பெண்கள் தலையைப் பின்னலிட்டுப் பூச்சூடிக் கொள்ளுதல், மகளிர் வெள்ளி செவ்வாய்க் கிழமைகளிலும் ஆடவர் புதன் சனிக்கிழமைகளிலும் எண்ணெய் முழுக்கு ஆடல், மகளிர் காது மூக்குக் குத்திக் கொள்ளுதல், உடம்பிற்குச் சீயக்காய், ஆவாரந்தூள், செம்பருத்தி இலை ஆகியவற்றைத் தேய்த்து நீராடல், மணமான மகளிர் காலில் மெட்டி அணிதல், கழுத்தில் தாலிக்கயிறு, காலில் கொலுசு, கையில் வளையல் அணிதல், மாமன், மாமன் மகன், அத்தை மகன் என உறவுமுறையில் திருமணம் செய்தல், திருமணத்திற்குமுன் பரிசம் போடுதல், திருமணத்தில் மாலை மாற்றிக் கொள்ளுதல், தாலி கட்டுதல், மெட்டியிடுதல், அம்மி மிதித்தல், நலுங்கு வைத்தல் ஆகிய சடங்குகள் நடைபெறும். இவையெல்லாம் இன்றைக்கும் மிக உள்ளொடுங்கிய சிறிய கிராமங்களில் தவறாது காணப்படும் பண்பாட்டுக் களங்களாகும்.
(அரைஞாண் பூட்டுதல் என்பது பச்சிளம் குழந்தைக்குத் தெய்வப் பாதுகாப்பு கருதித் தெய்வத்தின் படைக்கலன்களைப் பொன்னால் உருவாக்கிக் கயிற்றில் கோர்த்து அணிவித்தல் ஆகும்.
பூப்பெய்துதல் ஆவது பெண் பருவம் அடைகின்ற நிகழ்ச்சியைக் கொண்டாடும் சடங்கு ஆகும்.
வளைகாப்பு என்பது கருவுற்ற பெண்ணுக்குத் தெய்வம் பாதுகாப்புத் தர வேண்டி, தெய்வத்தை வாழ்த்தி வணங்கி, வளையல் இடுவதாகும்.
தாலி பெருக்கிக் கட்டுதல் ஆவது புது மணப்பெண் ஆடி மாதத்தில் தாலியைப் புது மஞ்சள் கயிற்றில் சேர்த்துக் கட்டிக் கொள்வதாகும்.)
மகளிர் எட்டுமுழம், பதினாறுமுழம் கொண்ட நூற்சேலைகளை உடுத்துவர்; சிறப்பு நாட்களில் பட்டுச்சேலை உடுத்துவர். திருமணம் போன்ற நாட்களிலும், சிறப்பு விருந்துகளிலும் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொள்ளுதலும் உண்டு.
இதுபோலப் பல பழக்கங்கள் கிராமத்திலிருந்து இன்றும் விடைபெறவே இல்லை.
கணவன் இறந்தபின் கிராமங்களில் மகளிர் பூச்சூட்டுதலோ பொட்டிட்டுக் கொள்வதோ இல்லை. பிணத்தைப் பெரும்பான்மை எரித்தலும், சிறுபான்மை புதைத்தலும் மேற்கொள்ளப்படும். இறந்த மறுநாள் பால் தெளிப்பு, பதினாறாம் நாள் காடாற்று கருமாதி ஆகியன நிகழும். பிணத்திற்கு மூத்த மகனே தீயிடுவான். நீர்க்குடம் உடைத்தல், எலும்புகளை ஆற்றில் கரைத்தல் ஆகியன குறிக்கத்தக்க இறப்புச் சடங்குகளாகும். இறந்தவரின் நினைவு நாளைப் போற்றுதல், அவர்களுக்குப் படையலிடுதல் ஆகியன இன்றும் வழக்கிலிருக்கும் சடங்குகளாகும்.
பாடம் - 6
இல்லை, நிகழ்கின்ற காலத்தைத்தான் நிறுத்த முடியுமா? அது முடியாத மாயவேலை. காலம் எத்தனைச் சுவடுகளை, தழும்புகளைப் பூமியின் மேனியில் ஏற்படுத்தி இருக்கிறது? சங்க காலக் கோயில்கள், கோட்டைகள், கொத்தளங்கள் எங்கே? இருந்ததற்கான சுவடுகளே இல்லை! கச்சியும் (காஞ்சிபுரம்) கடல் மல்லையும் (மகாபலிபுரம்) பல்லவர் நினைவாகக் காட்சி தருகின்றன. தஞ்சைக் கோயிலும் பிற கோயில்களும் சோழர் நினைவாக, மாமதுரைப் பெருநகரம் பாண்டியர் நினைவாக இன்றும் பார்க்கிறோம். சேர நாட்டின் சுவடுகளைக் காணோம். இடிந்து சிதைந்து கிடக்கும் பல கோயில்கள், கோட்டைகள் நம் பழம்பண்பாட்டின் உருவங்கள் இல்லையா?
ரோமாபுரி மட்டும் ஆண்டு ஒன்றுக்கு ஆறு இலட்சம் பொன் மதிப்புள்ள பொருள்களைத் தமிழகத்திடமிருந்து பெற்றது. தொண்டி, முசிறி, கொற்கை, காவிரிப் பூம்பட்டினம் ஆகிய துறைமுகங்கள் இரவு பகலாகச் செயல்பட்டன. தாலமி போன்ற யவன ஆசிரியர்கள் இந்தத் துறைமுகங்களைக் குறிப்பிடுகின்றனர்.
“பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி” என்று தமிழ் இலக்கியம் பேசுகின்றது. பொன்னொடு வந்து மிளகைக் கொண்டு போகும் கப்பல்களைக் கொண்ட முசிறி என்பது இதன் பொருள். இவ்வாறு பெரிய அளவு வணிகம் செய்யக் கூடிய வளமான பொருளாதாரம் படைத்திருந்த தமிழகம் பிற்காலத்தில் வளம் இழக்கக் காரணம் யாது? பண்டைக் காலந்தொட்டு வணிக வளம் மிக்க தமிழகம், பிற்காலத்தில் நலிவுற்றதற்கு யார் காரணம்? காணலாமா?
புகழ் பெற வேண்டுமென்று விரும்பியவன், தன் வீட்டில் அளவில்லாது கிடக்கும் உணவுப் பொருளைப் பிறர்க்கு வாரி வழங்கினான். வயல் விளைத்துக் கொடுத்தது. வீடு முழுவதும் நெல், பிற தானியங்கள். அவனுக்கு உரிய பல வீடுகளிலும் கொட்டிக் குவித்து வைக்கப்பட்ட கூலங்கள் (தானியங்கள்). அடுத்த அறுவடை வருவதற்குள் செலவிட்டாக வேண்டும். வறியவர்க்கும் புலவர்களுக்கும் வழங்கினால் வாழ்த்துவார்களே! வழங்கினான்; இவ்வாறு வழங்குதல் வழக்கமாயிற்று; அடுத்த தலைமுறையில் இவ்வழக்கம் தொடர்ந்தது; இரத்தத்தில் ஊறிய பண்பாயிற்று. இந்தப் பண்பு எப்போது மெலிவடைந்தது?
நாணயம் என்ற ஒன்று வழக்கத்திற்கு வந்தபிறகு இந்த வழக்கம் படிப்படியே குறைந்தது. விளைச்சலைப் பணமாக்கி, பணத்தை வங்கியில் செலுத்தி வைப்பாக்கி, அதற்கு வட்டி கண்டு, செல்வம் பெருக்கி வாழும் நிலையில் ஈகை, ஒப்புரவு ஆகியன நலிவுற்றன. பண்பாட்டில் ஒரு மாற்றம் தோன்றியது. வீட்டில் வடித்து வைத்த சோறும் குழம்பும் வீணாகுமுன் யாருக்காவது கொடுத்து மகிழும் வழக்கம் பதனப் பெட்டி (Fridge) வந்தவுடன் மாறிவிடவில்லையா – அதுபோலத்தான் பணப் புழக்கம் தோன்றிப் பண்டங்களின் புழக்கம் குறைந்தவுடன் பண்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. பொருளாதார மாற்றங்களாலும், அறிவியல் வளர்ச்சியாலும் பண்பாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் பல மாற்றங்கள் தோன்றிவிட்டன.
• அயலவர் தொடர்பு
தமிழன் வடவேங்கடம் தென்குமரிக்கு இடையில் உள்ளடங்கிய சிற்றூர்களில் வாழ்ந்தபோது அவனுடைய புற நாகரிகத்திலும் மாற்றமில்லை. வேற்றவர்கள் வந்து புகுந்து ஆட்சியைப் பிடித்து அவனை அடிமையாய் ஆக்கினர். ஆண்ட மக்களோடு ஏற்பட்ட பழக்கம் சில புதிய அலைகளைத் தமிழனின் வாழ்க்கைக் கரைகளில் மோதச் செய்தது. பிறகு தமிழன் பிழைப்புக்காகப் பல நாடுகளுக்கும் சென்றான். அங்கங்கே கண்ட நாகரிகக் கூறுகளில் சிலவற்றுக்குத் தன் வாழ்விலும் இடம் கொடுத்தான். தன் பண்பாட்டுக் கூறுகளை அயலவர்க்குக் கொடுத்து அயலவரின் பண்பாட்டுக் கூறுகளை இவன் தழுவிக் கொண்டான். பண்பாட்டு மாற்றங்கள் இவ்வண்ணமே நிகழ்ந்தன.
• களப்பிரர்
• பல்லவர்
• மாலிக்காபூர்
• விஜய நகர நாயக்கர்
• மராட்டியர்
• ஆங்கிலேயர்
• பிரெஞ்சுக்காரர்
ஆகியோர் வெவ்வேறு காலங்களில் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்தனர். தமிழரசர்கள் வலிமை குன்றியபோதும், தங்களுக்குள் பகைகொண்ட போதும், திறமையில்லாத அரசர்கள் ஆண்டபோதுமே இந்தப் படையெடுப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. மேலே கண்ட அயலவர்களைக் குறித்துச் சிறிது காணலாமா?
கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், ஈழம் வென்றான் என்றெல்லாம் சிறப்புப் பெயர் பெற்றனரே! ஏன் அவர்கள் நாடே கொள்ளை போயிற்று? கவனிக்க வேண்டிய கேள்வி அல்லவா இது? தமிழர்கள் வட இந்தியாவை, இலங்கையை, மாலத்தீவுகளை எல்லாம் வென்றார்களே, அப்பகுதிகளை நிலையாகத் தம் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டு வந்தனரா? தம் கொடியும் படையும் நிறுவித் தம் ஆட்சி அங்கு நடக்க வழி கண்டனரா? இல்லை. தோற்ற அரசர்கள் தம் காலில் விழுந்து வணங்கியவுடன் அவர்களிடமே நாட்டைக் கொடுத்துவிட்டுத் திரும்பிவிட்டனர். ஆண்டுக் கணக்கில் தமிழ் அரசர்கள் தாம் வென்ற நாட்டில் இருப்பதில்லை. ஆனால் ஆங்கிலேயர்களைப் பாருங்கள்! தாம் வென்ற நாடுகளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆட்சி நடத்துவர்; தம் மக்களைக் குடியேற்றுவர்; தம் பண்பாட்டை அயல் மண்ணில் வேர் ஊன்றச் செய்வர். தமிழ் அரசர்களின் பெருந்தன்மையும், சொந்த ஊருக்குத் திரும்பிவிட வேண்டுமென்ற ஊர்ப் பற்றும் அவரது ஆட்சியும் பண்பாடும் அயல் நிலங்களில் பரவாமல் தடுத்து விட்டன.
இன்றுள்ள தமிழர் பண்பாட்டில் என்னவெல்லாம் வந்து சேர்ந்திருக்கின்றன? தொடக்க காலத்தில் தமிழர் பண்பாட்டில் புலால் உண்ணுதல் பெருமளவு இருந்தது. ஆடு, கோழி ஆகியவற்றைக் கடவுளுக்குப் படையல் என்ற பெயரில் அறுத்தனர். கொழுத்த பசுவை அடித்து உண்டனர். இந்த நிலையில் மாற்றம் வந்தது. சைவம் என்ற ஒரு நெறி பலர் வாழ்வில் இடம் பெற்றது. புலால் உண்பவர்கள் கூட மாதத்தில் சில நாள் சைவமாக விளங்கக் காணலாம். திருவள்ளுவர் புலால் உண்ணுதலைக் கண்டித்திருக்கிறார்.
• பெண்ணிய வளர்ச்சிபெண்கள் பெரும்பாலும் வீட்டோடு அடங்கியிருந்த நிலையிலிருந்து அலுவலகம் செல்பவர்களாகவும், மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளிலிருந்து பல்வேறு தொழில்நுட்பத் துறைகளிலும் பங்காற்றுபவராகவும் மாறியுள்ளனர். பெண்கள் உரிமை வேண்டிப் போராடும் நிலை உருவாகியுள்ளது. ஆண் பெண் சமம் என்ற உணர்வு தோன்றியுள்ளது. ஆணாதிக்கச் சமூகம் என்ற நிலை மாறியுள்ளது. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு ஆகிய குணங்களைக் கொண்டிருந்த பெண் இன்று தேவைக்கேற்ப அக்குணங்களைத் தள்ளிவைக்கப் பழகியிருக்கிறாள்.
• தனிக்குடித்தன முறை
கூட்டுக் குடித்தன முறை மாறித் தனிக் குடித்தன முறை வளர்ந்திருக்கின்றது. திருமணம் ஆன பின் கணவனும் மனைவியும் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்துசெல்வது இயல்பாகிவிட்டது.
• புறத்தோற்றங்களில் மாற்றம்புறத் தோற்றத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மேலே துண்டு மட்டும் போட்டிருந்த ஆடவன் சட்டை அணிகிறான்; அலுவலக உடை என்று ஐரோப்பியர் அணியும் உடை மாதிரியைப் பின்பற்றுகிறான். குடுமி வைத்திருந்த நிலையிலிருந்து ‘கிராப்’ வெட்டிக் கொள்ளும் நிலைக்கு மாறியிருக்கிறான். 18 முழப் புடைவையிலிருந்து பெண் 11 முழத்துக்கு மாறியிருக்கிறாள். கைம்பெண் வெள்ளை உடை உடுத்தும் நிலை மாறியிருக்கிறது; நகர நாகரிகத்தில் கைம்பெண் பொட்டு வைத்துக் கொள்கிறாள்.
• திருமணச் சடங்குகளில் மாற்றம்திருமணச் சடங்குகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. திருமணத்திற்கு முன்னரே வரவேற்பு நிகழ்கின்றது. அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் ஆகியன விடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. பதிவுத் திருமண எண்ணிக்கை பெருகியுள்ளது.
• திருமண உறவு
உறவு முறைக்குள் திருமணம் என்பது மாறிக் காதல் மணங்களும் கலப்பு மணங்களும் பெருகியுள்ளன. திருமண விளம்பர எண்ணிக்கை செய்தித்தாள்களில் பெருகியுள்ளது.
• வாழ்க்கைத் தரம்
பெண்ணும் பொருளீட்டுவதால் வீட்டு வருவாயும் வாழ்க்கைத் தரமும் கூடியுள்ளன. குடிசைகளின் எண்ணிக்கை குறைந்து சிமெண்ட்டால் கட்டப் பெற்ற அழகிய வீடுகள் தோன்றியுள்ளன. குழந்தைகளின் எண்ணிக்கையைப் பெற்றோர் முடிவு செய்து கொள்கின்றனர். அயல் நாடுகளுக்குப் பெண்கள் போவதில்லை என்ற நிலை மாறி ஏராளமான பேர் குடிபெயர்ந்து போகும் நிலை தோன்றியுள்ளது.
• நல்லன
ஒரு கிராமத்து இளைஞன் ஏர் கலப்பையோடு, இரண்டு மா வயலில் உழுது, தன் தேவைகளைப் பெருக்கிக் கொள்ளாமல், சுருக்கமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
என்பது அவனது தேவையைக் கூறும் கூற்றாகும். இன்று அதே கிராமத்து இளைஞன் டிராக்டர் ஓட்டுகிறான்; வீரிய விதை பற்றியும், நீலப் பச்சைப் பாசி பற்றியும், செயற்கை உரம் பற்றியும் பேசும் அளவு அறிவியல் முறையில் அவனது தொழிற்கல்வி விரிவடைந்துள்ளது. நோய்களுக்கு விரைவான வலிமைமிக்க மருத்துவம் கிடைக்கிறது. சாவு எண்ணிக்கை குறைந்துள்ளது. பிறப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொருள் முதலீடு, தொழில்மயமாதல் போன்றவற்றால் வாழ்க்கை வசதிகள் கூடியுள்ளன. விரைவு வண்டிகளில் மனிதன் ஏறிச் சென்று பொழுதை மிச்சப்படுத்துகிறான். இவையெல்லாம் நல்லன.
• தீயன
மேற்கூறியவற்றுக்கு மாறாகச் சில தீயனவும் தமிழர் பண்பாட்டில் புகுந்துவிட்டன. இன்று மனிதனுக்கு மனிதன் இடைவெளி பெருகிவிட்டது. உடம்பால் மிக நெருங்கி வாழும் வாழ்க்கையில் உள்ளக் காப்பு இல்லை. அடுக்கு வீடுகளில் வாழ்பவர்களுக்கு அடுத்த வீட்டுக்காரர் யார் என்று தெரியாமல் ஆண்டுக்கணக்காக வாழும் நாகரிகம் தோன்றியுள்ளது. பொருள் தேடுவதற்காக விரைந்து இயங்கும் முயற்சியில் வாழ்க்கையின் உயர் பண்புகள் கரைந்துவிட்டன. பொருள் தேடும் அவாவால் குற்றங்கள் மலிந்து விட்டன; சிறைக் கூடங்களில் குற்றவாளிகள் பலராக உள்ளனர். மதுப் பழக்கம் சமூகத்தின் மேல் தட்டிலும் கீழ்த் தட்டிலும் விலக்க முடியாததாக ஆகியிருக்கிறது. இரவு விடுதிகள், பாலியல் குற்றங்கள் பெருகியுள்ளன. எது அறம் என்பதில் நெகிழ்ச்சி தோன்றியிருக்கிறது. இவ்வாறு தீயனவும் தமிழர் பண்பில் இடம் பெற்று விட்டன.
• எப்படிப் புகுந்தன?
புதுமைக் கவர்ச்சி, புறத் தோற்ற மாறுபாடுகளில் நாட்டம், அறத்தில் நாட்டக்குறைவு, பொறி புலன்களின் மீது எல்லையற்ற நுகர்வு விருப்பம், செயற்கையை விரும்பி ஏற்கும் மனம், ஆடம்பர உணர்வு, போலி மதிப்பு ஆகியன தீய பண்புகளைப் பிற நாடுகளிலிருந்து தமிழர் தழுவக் காரணமாகும்.
மணவிலக்கு இன்று தமிழர் வாழ்வில் மெல்லத் தலை நீட்டியிருக்கிறது. பிரிந்து போவது இயலாது என்றும், திருமணம் என்பது உயிரோடு ஏற்பட்ட பிணைப்பு என்றும் எண்ணிக் கொண்டிருந்த எண்ணம் தகர்ந்து விட்டது. மணவிலக்கு பெற்ற பெண் விளம்பரம் செய்து மாப்பிள்ளை தேடுகிறாள். இது எப்படி நிகழ்கிறது? திருமணத்தைப் பற்றித் தமிழர் கொண்டிருந்த அடிப்படைக் கோட்பாடு மாறிவிட்டது. மேலை நாட்டுக் கலாச்சாரத் தாக்கம் தமிழர் வாழ்வுப் பிணைப்பை மாற்றி யிருக்கிறது. தமிழர் உணவு, உடை, பழக்கவழக்கம் ஆகியவற்றில் உலகம் முழுவதும் பரவியுள்ள ஐரோப்பியத் தன்மை குடியேறியிருக்கிறது. நாட்டைப் பிடித்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஆண்டவர்களோடு நாமும் பழகியதால் நாம் அவர்களைப் பார்த்து வாழப் பழகியதன் விளைவு இது.
1. பழியென்றால் உயிரை விட்டு விடும் மான உணர்வு.
2. பொது நலத்திற்காகத் தன்னை அழித்துக் கொள்ளும் மாண்பு.
3. செல்வம் என்பது பிறர்க்குக் கொடுத்து மகிழ என நினைத்த பெருந்தகவு (Value) .
4. செல்வர்க்கும் அதிகாரத்திற்கும் அஞ்சாத தறுகண்மை (பேராண்மை).
5. எளிமை வாழ்வில் செம்மை நெறிகள்.
6. நாணத்தையும் அச்சத்தையும் அணிகலனாகக் கொண்ட பெண்மை.
7. பெண்மைக்கு அரணாக நின்ற ஆண்மை.
8. மொழி, நாடு என்பவற்றிற்காக உழைக்கும் நோக்கம்.
9. உலகோர் எல்லோரையும் தழுவிக் கொள்ளும் மனித நேயம்.
இந்தப் பண்புகளை இன்று அரிதாகப் பார்க்கிறோம். இன்றைய தமிழ்ச் செய்திதாளில் வந்த செய்திகளை நாம் எழுதுகிறோம்; படியுங்கள்.
• பாங்கில் கொள்ளையடித்த கும்பல் கைது.
• மனைவியைக் கணவனே வெட்டிக் கொன்றான்! கள்ளக் காதலே காரணம்!
• வரப்புத் தகராறில் மூவருக்கு அரிவாள் வெட்டு.
• பேருந்தில் சக பிரயாணியிடம் கொள்ளை.
• நிலம் வாங்குவதில் தகராறு. போலிக் கையெழுத்திட்டு மோசடி.
• நிறுவனத்தில் இரண்டு கோடி ஊழல். குற்றப்பத்திரிகை தாக்கல்.
• இளம் பெண்ணைக் கடத்திக் கற்பழிப்பு. சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி ஏமாற்றினார்!
• கள்ள நோட்டுக் கும்பல் பிடிபட்டது.
• மூன்று லட்ச ரூபாய் பெறுமான சாராயம் அழிப்பு. போலீஸ் தீவிரம்!
• வரதட்சணைக் கொடுமையில் பெண் எரிப்பு! மாமனார் மாமியார் கணவருக்குச் சிறை.
இவையெல்லாம் எங்கே நிகழ்கின்றன? திருவள்ளுவரும், இளங்கோவடிகளும், கம்பரும், நாலடியார் பாடிய சமண முனிவர்களும் தோன்றிய தமிழ்நாட்டில்தான். நல்ல பண்புகள் கழிந்தன; தீய பண்புகள் மிகுந்தன. ஏன் என்று காண்போமா?
• ஏன் கழிந்தன?
பழங்காலத்தில் மூன்று கேடுகளைக் கூறுவார்கள். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்பன அவை. இவற்றை ஒரு வரையறையோடு அளவாகத் துய்த்து நிறைவடையும் உள்ளத்தை மனிதன் – தமிழன் இழந்துவிட்டான். உலகெங்கும் மேற்கூறிய தவறுகள் நிகழ்கின்றன. ஆனால் இவை தமிழ்நாட்டில் நடக்கலாமா?
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
எனப் புகழ் பெற்றதாயிற்றே.
ஒரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளில்
48 விழுக்காடு (சதவீதம்) – பெண் காரணமாகக் குற்றம் செய்தவர்கள்
29 விழுக்காடு (சதவீதம்) – பணம், நகை திருட்டுக் குற்றம் செய்தவர்கள்
11 விழுக்காடு (சதவீதம்) – நிலத் தகராறு, பாகப் பிரிவினை, சொத்து இவை
காரணமாகக் குற்றம் செய்தவர்கள்.
12 விழுக்காடு (சதவீதம்) – பிற குற்றம் புரிந்தவர்கள்
இன்று பாலியல் குற்றங்கள் பெருகி விட்டன. மறைவாகவும், வரையறையோடும், கணவன் மனைவி என்ற உறவுக்குள்ளும் நிகழவேண்டிய பாலுறவு இன்று எல்லா மறைவுகளையும் வேலிகளையும் தாண்டிப் பொது வீதிக்கு வந்துவிட்டது. ஒழுக்கக்கேடு இன்று சமூகத்தில் இழிவாக எண்ணப்படவில்லை. அறநெறியின்றிப் பொருள் சேர்ப்பது குற்றம் என்ற நோக்குக் குறைந்து வருகிறது. தண்டனையிலிருந்தும் சட்டத்தின் கிடுக்கிப் பிடியிலிருந்தும் தப்பித்துக் கொள்ளும் வழிகளை மனிதனின் அறிவு கண்டுள்ளது. இந்த நிலையில் நற்பண்புகள் விலகித் தானே போகும்!
தமிழன் இழந்தவற்றுள் பெரும் வருத்தம் தருவது எது? அவன் மெல்ல மெல்லத் தமிழன் என்ற அடையாளத்தை மறந்ததுதான்! அவனுடைய வாழ்க்கையிலிருந்து பல கட்டங்களில் தமிழ் விலக்கி வைக்கப்பட்டிருப்பதுதான். பல மொழிப் பண்டிதனாக அவன் மாறிவிட்டானா? அப்படி ஒன்றும் இல்லை!
வணக்கம் பலமுறை சொன்னேன் தமிழ்மகள் கண்ணே!
என்ற திரைப்படப் பாடல் நீங்கள் கேட்க வில்லையா? எத்தனை பேர் வணக்கம் கூறக் கேட்கிறோம். குட் மார்னிங் என்பது எவ்வளவு இயல்பாக வருகின்றது! சீனர்கள் தங்கள் மொழியை இழக்கவில்லை; பிரெஞ்சுக்காரர் தம் மொழியை இழக்கவில்லை. தமிழன் தன் மொழியை இழந்து நிற்கிறான். பண்பாட்டில் ஏற்பட்ட மாபெரும் இழப்பு இது.
ஆக்கங்களே இல்லையா எனக் கேட்கலாம். ஏன் இல்லை? இதோ, நோக்குங்கள்!
1. கல்வி நீரோடை போல எல்லார்க்கும் உரியதாகிவிட்டது. நூற்றுக்கு நூறு விழுக்காடு கற்ற சமூகம் உருவாகிவிட்டது.
2. புதுமைகள் பலப்பல வீட்டிலும் நாட்டிலும் தோன்றியுள்ளன.
3. மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்நுட்பத் துறைகள் பெருக வளர்ந்து நாட்டு மக்களின் வாழ்க்கை நலன்களைக் கூட்டியிருக்கிறது.
4. தமிழ்நாடு உலகனைத்தையும் உற்றுப் பார்க்கிறது; உலகெங்கினும் தமிழர்கள் பரந்துள்ளனர்; உலகம் தமிழ்நாட்டை உற்றுப் பார்க்கிறது. திருக்குறளை இசையோடு படிக்கிறது. திருவாசகம் கேட்டு அழுகிறது.
5. தமிழன் அமெரிக்கப் பெண்ணை மணந்து கொண்டு ஆஸ்திரேலியாவில் குடியேறி ஆங்கிலத்தைத் தாய்மொழி போல் ஆங்கிலேயர் வியக்கப் பேசி, ஜப்பானில் கருவிகள் வாங்கி உலகச் சந்தையில் வணிகம் செய்து, வீட்டுக்கு வந்து தன் அம்மா இறந்த செய்தி கேட்டு அழுது கலங்கிக் குழந்தை போலாகிச் சடங்குகளிலும், பழக்கவழக்கங்களிலும்தான் தமிழன் என்பதை நினைந்து வாழ்கிறான்.
6. குடும்பம் மனைவி, குழந்தை, தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, தாய்மாமன், மைத்துனன் எனத் தலைமுறைகளுக்கு உறவு வலை பின்னிக்கொண்டு வாழ்கிறான்.
7. விமானத்தில் பறக்கும்போது வயது மிகுந்து வருதல் உணர்ந்து பட்டினத்தார் பாடலை மெல்ல மனம் அசை போட மூதாதையர்கள் வாழ்ந்த சுவட்டை மறக்காமல் பற்றிக் கொள்கிறான்.
இப்படி எத்தனையோ? தமிழனுடைய தாய் பாசத்தையும், தங்கை பாசத்தையும் மையமாக வைத்து எத்தனையோ திரைப்படங்கள் காசு பண்ணிவிட வில்லையா?
• உன்னதக் காதல்
எவ்வளவு வெட்கம் இந்தப் பெண்ணுக்கு! தன்னோடு வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்று வயதான இந்தக் கணவனை இந்த வயதான பெண் பிறர் முன்னிலையில் அத்தான் என்று உறவு முறை சொல்லி அழைப்பதற்கும் கூசுகின்றாளே!
இதோ சிலந்திக் கூடு கட்டியது போல் முகம் சுருங்கிக் கண் பார்வை மழுங்கிக் கூனல் விழுந்த கிழவி கொல்லைப் பக்கம் உட்கார்ந்திருக்கிறாள். இவளுடைய கணவன், காதலன், உயிர்த் தலைவன் தெருத் திண்ணையில். என்ன சொல்கிறான் இந்தக் கிழவன்?
புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு
சதிராடும் நடையாள் அல்லள்
தளர்ந்து விழும் மூதாட்டி!
மதியல்ல முகம் அவட்கு!
வறள்நிலம்; குழிகள் கண்கள்
எதுஎனக்கு இன்பம் நல்கும்?
இருக்கின்றாள் என்ப தொன்றே!
இருக்கின்றாள் என்றாலே போதுமாம். உடம்பைத் தாண்டி, ஐம்புலன்களைத் தாண்டி, ஆன்மாக்களின் சங்கமமாய் விளங்கும் இந்த உன்னதக் காதல்தான் தமிழ்ப் பண்பாட்டின் வேர்!
• மாற்றங்களின் ஊடே ஒரு நிலைபேறு
வேட்டியும் துண்டும் விடை பெற்றுக்கொண்டிருக்கின்றன. சேலையும் மேற்சட்டையும் அளவு குறைந்து ‘சுடிதார்’ கவுனாய், குட்டைப் பாவாடையாய், வண்ணச் சராயாக மாறிக்கொண்டிருக்கின்றன. தாம்பூலச் சிவப்பை ‘லிப்ஸ்டிக்’ பிடித்துக் கொண்டது.
குதி உயர்ந்த செருப்பால் நடைமாறிக் கொண்டிருக்கிறது. வேர்க்கின்ற கோடையிலும் இறுக்கும் ‘டை’யை அவிழ்க்க மனம் இடம் கொடுக்கவில்லை. தொலைபேசியில் ஒரு ஹலோ; அம்மாவை மம்மியாக்கும் அன்பு; ஆசையாய்ப் படிக்க ஒரு ‘இங்கிலீஷ் மீடியம்’; கொச்சையாய்ப் பிழையாய்க் கொஞ்சம் தமிழ். இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டபோதும், இந்தப் போர்வைகளுக்கெல்லாம் உள்ளே உள்ளத்தின் அடித்தளத்தில் தமிழ்ப் பண்பாடு கொலுவிருக்கத்தான் செய்கிறது. இதோ இந்த உள்ளத்தை அசைக்க
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே!
என்ற ஒரு பாட்டுப் போதாதா? இப்பாட்டில் உள்ள சமயக் கருத்து உலகின் பல மூலையிலும் உள்ள தமிழனை உலுக்கவில்லையா? அன்பினுக்கு இரங்கும் ஒரு எளிய தமிழ் உள்ளம் கசிந்து நிற்கும் அந்த உருக்கம் எந்த மனிதனையும் அசைக்குமே! மாற்றங்களுக்கு நடுவில் தமிழ்ப் பண்பாடு அடித்தளத்தில் பெரிய மாற்றமின்றி இருக்கிறது.
• பண்பாட்டு வங்கியில் புதிய ஆக்கங்கள்
தமிழன் இன்று உலக மனிதனாக உருவெடுத்திருக்கிறான். அவனுடைய அறிவு அகன்றுள்ளது. பல்துறை வித்தகத்தை எல்லாம் அவன் தமிழில் கொண்டுவர முயல்கின்றான். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா நாடுகளில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் குடியேறி அந்தந்த நாடுகளின் பொருளாதார அச்சாணியாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். அவனுடைய வாழும் எல்லை மிகப் பெரிதாகி இருக்கிறது; அவனது சிந்தனை வீச்சு துருவங்களை அசைக்கிறது. இவ்வாறு தமிழன் தன் பண்பாட்டு வங்கிக்குப் பல ஆக்கங்களைச் சேர்த்து வருகிறான்.
தமிழர் பண்பாட்டில் நிலை பேறானவை எவை? தமிழர் வாழ்க்கை ஒரு மையத்தைவிட்டு அதிகம் விலகவில்லை. அது எந்த மையம்? இதோ ஒரு சுமைதாங்கிக் கல் நிற்கிறது பாருங்கள்! எதற்கு? யாராவது சுமையோடு வருபவர்கள் இறக்கி வைத்து ஓய்வு கொள்ளவாம். இதோ ஒரு கல் நட்டு வைக்கப்பட்டுள்ளதே ஏன்? பசு மாடுகள் உடம்பில் தினவு ஏற்படும்போது உராய்ந்து கொள்ளவாம். இதற்கு ஆ உரிஞ்சு கல் என்று பெயராம். இதோ ஒருவர் கீற்றுப் பந்தலிட்டு நீரும் மோரும் வைத்துக் கொண்டு கோடை வெயிலில் உட்கார்ந்திருக்கிறாரே யாருக்காக? வழிப் போவோர்களுக்காகவாம். எறும்புகளின் புற்றில் ஒரு பெண் அரிசியைத் தூவுகிறாள் பாருங்கள்!
உண்ணுமுன் ஒருத்தி காக்கையை ஏன் அழைக்கிறாள்? காக்கை உண்ட பிறகே உண்ண வேண்டுமாம். இப்படி அஃறிணை உயிர்களிலிருந்து உயர்திணை மனிதர்கள் வரையில் எல்லா உயிர்க்கும் ‘தருமம்’ செய்து வாழும் உள்ளம், வாழ்க்கையின் நிகழ்ச்சிகளில் அறம் அடிப்படையாகி உள்ள நிலை இதுவே தமிழ்ப் பண்பாட்டின் நிலைபேற்றுக்குக் காரணம்.
எல்லார்க்கும் நல்லன செய்யவேண்டும். தீயவற்றை மறந்தும் செய்யக் கூடாது. தீமை பிறர் செய்து வருவதில்லை. அதற்கு நம் விதியே காரணம். நம் துன்பம், நம் நோய், நம் வறுமை இவற்றுக்கெல்லாம் யாரும் காரணமில்லை. நாமே, நம் விதியே, நம் முன்னை வினையே காரணம் என்று கருதும் மனம் யாருக்கு என்ன தீங்கு செய்ய முடியும்? இதுவும் பண்பாட்டின் நிலைபேற்றுக்கான காரணமே!
பாலைப் பொழிந்துதரும் பாப்பா – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா
வண்டி இழுக்கும் நல்ல குதிரை – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு – இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.
என்று எளிய உயிர்களையும் சுற்றமாக்கி வாழும் பண்பாடு என்றும் நிலைபெற்ற பண்பாடாக இருப்பதில் என்ன வியப்பு?