153

இது இக்காலத்துப் புதுக் கவிதையின் அமைப்பில் உள்ளது .

புதுக்கவிதைக்கு வித்திட்டவர் பாரதி எனக் கொள்ளலாம் .

வசன கவிதையில் காட்சி , சக்தி , காற்று , கடல் , ஜகத் சித்திரம் , விடுதலை , தந்தையும் மகனும் கடவுளும் என்ற தலைப்புகள் பாடுபொருள்களாக விளங்குகின்றன .

கடல் , காற்று முதலியவை பற்றிக் காப்பிய இலக்கியங்கள் கூறினாலும் அவற்றின் சக்தி முதலியவை பற்றி பாரதி போல் வேறு யாரும் பாடியதில்லை .

மேலும் , அவர் தத்துவக் கருத்துகளையும் ஆங்காங்கே கூறிச் செல்கிறார் .

பாரதியார் , காட்சி என்ற தலைப்பில் இன்பம் , ஞாயிறு என்னும் இரு பிரிவுகளைக் கூறி , உலகமும் உலகில் உள்ள அனைத்தும் இன்பம் பயப்பது என்று காட்டுகிறார் .

அதற்குச் சான்றாக ,

உணர்வே , நீ வாழ்க , நீ ஒன்று , நீ ஒளி

நீ ஒன்று , நீ பல

நீ நட்பு நீ பகை

நன்றும் , தீதும் நீ

நீ அமுதம் , நீ சுவை , நீ நன்று , நீ இன்பம்

( வசன கவிதை , காட்சி , இன்பம் : 7 )

என்னும் பாடல் விளங்குகிறது .

ஞாயிறு உலகிற்கு ஒளியும் வெம்மையும் மட்டுமன்றி மழையும் பொழிவதைக் காட்டுகிறார் பாரதி .

தமிழ் இலக்கியங்களில் ஞாயிறு பற்றிய செய்திகள் பல கோணங்களில் கூறப்பட்டுள்ளன .

உயிர் வாழ ஞாயிற்றின் ஒளி தேவை .

பாரதி ஞாயிறு பற்றிக் கூறுவதைக் கேளுங்கள் .

ஞாயிறு ,

நீ ஒளி , நீ சுடர் , நீ விளக்கம் , நீ காட்சி

மின்னல் , இரத்தினம் , கனல் , தீக்கொழுந்து

இவையெல்லாம் நினது நிகழ்ச்சி ,

நீ சுடுகின்றாய் , வாழ்க ; நீ காட்டுகின்றாய் வாழ்க

உயிர் தருகின்றாய் உடல் தருகின்றாய் !

நீர் தருகின்றாய் , காற்றை வீசுகின்றாய் , வாழ்க !

( வசன கவிதை , ஞாயிறு-2 )

என்றெல்லாம் ஞாயிற்றின் குணங்களை எளிமையாகக் குறிப்பிடுகிறார் .

கடலைப் பற்றிப் பாடும் போது பாரதி அதன் அளப்பரிய ஆற்றலைக் காட்டுகிறார் .

முதல் அடியில் ,

கடலே காற்றைப் பரப்புகின்றது .

காற்று இல்லையேல் உலகில் உயிர்கள் வாழ இயலாது .

அந்தக் காற்றை இயக்கும் மிகப் பெரிய ஆற்றல் கடலுக்கு உண்டு .

கடலில் இல்லாத ஆற்றலே இல்லை .

எனவே , பாரதி அதை , ‘ உயிர்க்கடலில் இருந்து எங்களுக்கு நிறைய உயிர் மழை கொண்டு வா ’ என்று காற்றைக் கேட்கிறார் .

கடலில் உள்ள அலைகள் கரைப்பகுதியை நோக்கி வரும்போது அவை திரட்டிக் கொண்டு வருகிற சக்தி , அளவிடற்கரியது .

அது நுகரப்படாத திறன் ( untapped potential ) ஆகும் .

அத்தகைய திறன் இருப்பதால்தான் அது காற்றை இயக்குகிறது போலும் !

கடல் நீரின் மேற்பரப்பில் படுகிற கதிர் வீச்சால் கடல்நீர் கொதிப்படைகிறது .

சூரிய வெப்பத்தைக் கடல் பரப்புச் சேமித்து வைக்கிறது .

கொதிப்படைந்த கடல் நீர் , நீராவியாக மாறி உலகைக் காக்கும் மழையாகப் பொழிந்து அனைத்து உயிர்களையும் வாழ வைப்பதால் ‘ உயிர் மழை ’ என்று அழைக்கிறார் பாரதி .

ஞாயிறு , சக்தி , காற்று , கடல் முதலியவை ஆற்றல் உள்ளவை .

ஆற்றல் உள்ள அனைத்தும் உயிருடையவை என்பது பாரதியின் எண்ணம் .

ஆகவே ஞாயிறு , சக்தி முதலியவற்றிற்கு உயிர் உண்டு .

ஜகத் சித்திரம் என்னும் தலைப்பில் உள்ள வசன கவிதையில் உலகில் உள்ள வானம் , மலை , குயில் , கிளி முதலியன இன்பமாக இருக்க மனம் மட்டும் துன்பமாக இருப்பதைக் கூறிக் கலங்குகிறார் .

அதை மாற்ற விரும்பி அவர் பறவைகளை அழைப்பது , எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியதைக் காட்டுகிறது .

ஸர்வ நாராயண ஸித்தாந்தத்தின் முடிவு எல்லாம் ஒன்றுக்கொன்று சமம் என்பதை எடுத்துரைக்கிறார் .

உலகில் தற்கொலை செய்வது பெரிய குற்றம் என்பதையும் கூறிச் செல்கிறார் பாரதி .

இவ்வாறு வசன கவிதையில் பாரதி புதுமையைப் புகுத்தியிருப்பதை நீங்கள் காணலாம் .

5.5 பாரதி காட்டிய பாதையில் இருள் மூடிக்கிடந்த இந்திய நாட்டுக்கு ஒரு விடியலாக இருந்தது பாரதி காட்டிய பாதை .

அப்பாதையில் நடைபயின்ற பாரதிதாசன் , கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை , நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை முதலியவர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவர் .

ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவது உண்மை .

பாரதியாரில் இருந்து உருவானவர் பாரதிதாசன் .

பாரதி , தம்மை வந்து வணங்கிய பாரதிதாசனை ‘ எழுக நீ புலவன் ’ என்று வாழ்த்தினாராம் .

தமக்குப் பாதை காட்டியவர் பாரதி என்பதை ,

சுப்பிரமணிய பாரதி தோன்றியென்

பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார்

( புரட்சிக் கவிஞர் பாவேந்தனார் : வாழ்த்து )

என்று பாரதிதாசன் குறிப்பிட்டிருக்கிறார் .

5.5.1 வழிபாடு

சக்தி வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பாரதி .

முற்போக்கான கருத்துகள் பல கூறினாலும் , தம் தேவைகளை நிறைவேற்றப் பராசக்தியிடம் வேண்டி நிற்கும் பழமை வாதியாகவே விளங்குகிறார் .

பாரதியிடம் கொண்ட பற்றால் பாரதிதாசனும் முதன்முதலில் " எங்கெங்கு காணினும் சக்தியடா " என்று பாடியிருக்கின்றார் .

பாரதி , பாரதிதாசன் இவர்களைப் போல் கவிமணியும் தம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அழகம்மையைப் போற்றிப் பாடியிருக்கிறார் .

5.5.2 தேசம்

பாரதியைச் சிறந்த தேசிய கவிஞராக உலகுக்கு அறிமுகப்படுத்தியதே தேசியப் பாடல்கள்தாம் .

அவை பிற கவிஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கின .

பாரதிதாசன் தேசியப் பாடல்கள் பாடியிருப்பினும் அதை விட மிகுதியாக மக்களாட்சி , அதன் இயல்பு இவை பற்றியே பாடியுள்ளார் .

பாரதிதாசன் வாழ்ந்த காலத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது .

சுதந்திரம் பெறுவதற்கு முன்பு சுதந்திரம் அடைந்து விட்டதாகக் கற்பனை செய்து பாரதி பாடியது போல் பாரதிதாசனும் கி.பி.1950-இல் இந்தியா குடியரசு நாடு என்று அறிவிப்பதற்கு முன்பே இந்தியாவில் மக்களாட்சி மலர வேண்டும் என்று விரும்பிக் கவிதைகள் இயற்றியிருக்கிறார் .

அதன் அடிப்படையில் தான் அவருடைய படைப்புகளான கடல் மேல் குமிழிகள் , வீரத்தாய் , புரட்சிக்கவி , பாண்டியன் பரிசு முதலியவை விளங்குகின்றன .

கீழே இடம் பெறும்

நாட்டினிலே குடியரசு நாட்டி விட்டோம்

இந்நாள் நல்லபல சட்டங்கள் அமைத்திடுதல் வேண்டும்

( கடல் குமிழிகள் , அடி-409 , 410 )

என்ற பாடல் மக்களாட்சியின் தேவையை , சிறப்பை உணர்த்துகிறதல்லவா ?

மேலும் ,

எல்லார்க்கும் தேசம் எல்லார்க்கும் உடைமை எலாம் எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே

( வீரத்தாய் - அடி 256,257 )

என்னும் பாடலடிகள் நாட்டில் ஏற்றத் தாழ்வின்றி அனைவரும் சமம் , என்ற பொதுவுடைமைக் கருத்தை அவர் வலியுறுத்துவதைக் காட்டுகின்றன .

இமயம் முதல் குமரிவரை அலையடித்துப் பொங்கியது போன்ற தேசிய விடுதலைப் போராட்டம் பற்றிக் கவிமணி மிகுதியான பாடல்கள் பாடவில்லை .

இதற்கான காரணம் உண்டு .

கவிமணி வாழ்ந்த குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்டது .

இங்குப் பண்டைச் சேர மரபின் சந்ததியினர் ஆட்சி செய்தினர் .

அவர்கள் வெள்ளையருக்குத் திறை செலுத்தி வந்த போதிலும் வெள்ளையரின் நேரடியான ஆதிக்கம் திருவிதாங்கூரில் இல்லை .

மன்னர்கள் குடிமக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழ்ந்தனர் .

ஆகவே , இந்தியாவின் பிற பகுதிகளில் ஏற்பட்ட அளவுக்கு விடுதலைப் போராட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஏற்படவில்லை .

எனவே , கவிமணி , தேசியப் பாடல்கள் மிகுதியாகப் பாடவில்லை போலும் .

இருப்பினும் வ. உ. சிதம்பரம் பிள்ளை சிறை சென்றதை ,

- ஐயன்

சிதம்பரம் அன்று சிறை

சென்றிலனேல் , இன்று

சுதந்திரம் காண்பாயோ

சொல்

( வ.உ.சிதம்பரம் பிள்ளை - 2 )

என்று உளமாரப் பாராட்டியிருக்கிறார் .

நாமக்கல் கவிஞரும் பாரதியைப் போன்று விடுதலைப் பாடல்கள் பாடியதற்குக் ‘ காந்தி அஞ்சலி ’ என்ற தலைப்பில் உள்ள பாடல்களே தக்க சான்று .

காந்தியென்ற சாந்தமூர்த்தி

தேர்ந்துகாட்டும் செந்நெறி மாந்தருக்குள் தீமை குன்ற

வாய்ந்த தெய்வ மார்க்கமே

( காந்தி அஞ்சலி )

இப்பாடலில் காந்தியின் அரசியல் நெறியைப் பாராட்டுகிறார் நாமக்கல் கவிஞர் .

இது போலவே பாரதி பாடிய ஏனைய பாடுபொருள்களான தேசியத் தலைவர்கள் , சமுதாய முன்னேற்றம் , இயற்கை முதலிய பாடுபொருள்களையும் , அவருடைய எளிய நடையையும் , பழகு தமிழில் அமைந்த சொற்களையும் , யாப்பு வகையையும் அடியொற்றிப் பாரதிதாசன் , கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை , நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை , பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்ற புலவர்கள் பாடியிருக்கின்றனர் .

அவற்றில் சில பாடல்களைப் பார்க்க ஆவலாக உள்ளதல்லவா ?

ஏழைச் சிறுமியர் நிலை

சமூகத்தில் புரையோடிச் செல்லரித்து வந்த மூட வழக்கங்களை , குருட்டு நம்பிக்கைகளை வேரறுக்கப் பாரதியாரையும் , பாரதிதாசனையும் போல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் கவிதை இயற்றிருக்கிறார் .

நாட்டில் நிலவும் வறுமை , பட்டினி , பசி கண்டு நெஞ்சம் கரைந்தவர் பாரதி .

கவிமணியும் அவரைப் போல் ஏழைகளின் அவல நிலையையும் ஏக்கங்களையும் ,

அன்னப்பால் காணாத ஏழைகட்கு - நல்ல

ஆவின்பால் எங்கே கிடைக்கும் அம்மா

காப்பி காப்பியென்று கத்துவீரே - அதைக்

கண்ணிலே கண்டதும் இல்லை யம்மா !

( ஏழைச் சிறுமியர் மனப்புழுக்கம் - 8,11 )

என்ற பாடல்களில் சின்னக் குழந்தைகளே தம் வாயால் தங்கள் அவல நிலையைக் கூறுவதாகச் சித்தரித்துள்ளார் .

குழந்தையின் குதூகலம்

பாரதி குழந்தைகளுக்காகப் பாடியது போன்று கவிமணி குழந்தைச் செல்வம் என்னும் நூலைக் குழந்தைகளுக்கே உரிமையாக்கி வைத்தார் .

குழந்தையைக் குதூகலப்படுத்தும் பாடல் ஒன்றைப் பாருங்கள் .

சிங்கார மான வண்டி

சீமையிலே செய்த வண்டி

மாடில்லை குதிரையில்லை

மாயமதாய்ப் பறந்திடும் பார்

அக்காளும் தங்கையும் போல்

அவைபோகும் அழகைப் பார்

( மலரும் மாலையும் , சைக்கிள் , 2,4 , 8 )

இந்தப் பாடல் பாரதியாரின் பாட்டை எதிரொலிப்பது போல் உள்ளது அல்லவா ?

படிப்பும் உழைப்பும் தேவை

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் , கல்வி , உழைப்பு ஆகியவற்றின் தேவையை ,

படிப்புத் தேவை - அதோடு

உழைப்பும் தேவை - முன்னேற

படிப்புத் தேவை..

வீரத் தலைவன் நெப்போ லியனும்

வீடு கட்டும் தொழிலாளி

ரஷ்யா தேசத் தலைவன் மார்சல்ஸ்டாலின்

செருப்புத் தைக்கும் தொழிலாளி

விண்ணொளி கதிர் விவரம் கண்ட

சர்.சி.வி. ராமனும் தொழிலாளி

( பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதைகள் )

என்று வரலாற்றுப் புகழ் பெற்ற மேதைகளைச் சான்று காட்டிச் சிறப்பாகப் பாடியிருக்கிறார் .

பாடல்கள் எளிமையாக இருக்கின்றன அல்லவா ?

இவ்வாறு பாரதியார் உருவாக்கிய புதுயுகத்தில் பல கவிஞர்கள் பாடல்கள் இயற்றியுள்ளனர் .

இன்றும் அவரைப் பின்பற்றிக் கவிதைகள் இயற்றும் அளவு பாரதியின் செல்வாக்கு நிலைத்து நிற்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது .

பாரதியின் அடியொற்றிப் பாடிய ஒரு குழுவும் , பாரதிக்குத் தாசனாக விளங்கிய பாரதிதாசனை அடியொற்றிப் பாடுகிற ஒரு குழுவுமாகக் கவிஞர்களைக் கூறும் மரபும் இன்றும் நின்று நிலவுகிறது .

5.6 தொகுப்புரை

தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு புதிய யுகத்தைப் பாரதி தோற்றுவித்த செய்திகள் இங்குத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன .

அவர் , முந்தைய புலவர்கள் பாடிய வடிவத்தையும் பாடு பொருளையும் மனத்தில் கொண்டு பாடியிருப்பது புலனாகிறது .

பழைய வடிவங்களில் காலத்திற்கு ஏற்பப் புதுப் பாடு பொருள்களைக் கொண்டும் பாடல்கள் பாடியிருப்பது தெரிய வருகிறது .

அவை நாடு , கொடி , சுதந்திரம் ஒற்றுமை , பெண்கள் முன்னேற்றம் , சாதி சமய ஒழிப்பு , உலகியல் வாழ்வுக்கான அறிவுரை முதலியனவாகும் .

அவர் புதிதாகப் படைத்த யாப்பு வடிவங்களான வசன கவிதை , சுய சரிதை ஆகியவை பற்றியும் விளக்கிக் கூறும் முயற்சி இந்தப் பாடத்தில் மேற்கொள்ளப்பட்டது . பாரதியாரின் பாடல்களின் தாக்கத்தினால் தோன்றிய புலவர்களில் சிலரையும் இனம் காட்டுகிறது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. பாரதியார் கையாண்ட பழைய வடிவங்களில் மூன்றின் பெயர் தருக .

[ விடை ]

2. பாரதியார் ஆத்திசூடி என்னும் நீதி நூலை எழுதத் தூண்டுதலாக இருந்தவர் யார் ?

[ விடை ]

3. திருப்பள்ளி எழுச்சிப் பாடலில் பாரதியார் யாரைத் துயில் உணர்த்துகிறார் ?

[ விடை ]

4. பாரதியார் , புது வடிவத்தில் தந்த பழைய பாடுபொருள் கொண்ட கவிதை எது ?

அதன் வாயிலாக நீவிர் அறிந்து கொள்வது என்ன ?

[ விடை ]

5. பாரதி புதிதாகப் படைத்த வடிவம் ( யாப்பு ) எது ?

[ விடை ]

6. பாரதி காட்டிய வழியில் நடைபயின்ற கவிஞர்கள் யார் ?

பாரதியார் வாழ்கிறார்

6.0 பாடமுன்னுரை

உடம்பைப் பொய்யென்று கூறும் ,

காயமே இது பொய்யடா - வெறும்

காற்றடைத்த பையடா !

( சித்தர் பாடல் )

( காயம் = உடம்பு )

என்ற இந்தக் கருத்துச் சரியானதா ?

பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லக் கழிந்து போவது தான் வாழ்வின் இலக்கணமா ?

நீரிற் குமிழி , நீர்மேல் எழுத்து என்றெல்லாம் சொல்லத் தக்கதுதான் நம் உடம்பா ?

எலும்பும் சதையும் , குருதியும் நரம்பும் கொண்டு அமைந்த இவ்வுடல் பரிணாமத்தின் ஒரு குறியீடு .

வளர்ச்சியில் இவ்வுடல் அழிவதும் உண்மையே .

ஆனால் இத்தகைய அழியக் கூடிய உடம்பைக் கொண்டு எண்ணற்ற மனிதர்கள் , பலப்பல அழியாத , நிலையான செயல்களைச் செய்துள்ளார்களே !

கோபர்னிகஸ் , கலீலியோ , நியூட்டன் , டார்வின் , ஐன்ஸ்டீன் என்ற அறிவியல் அறிஞர்களும் , அலெக்சாண்டர் , அக்பர் , சிவாஜி , நெப்போலியன் , விக்டோரியா அரசியார் , ஜான்சிராணி போன்ற மாவீரர்களும் , திருவள்ளுவர் , சாணக்கியர் , மாக்கியவெல்லி , பிளேட்டோ , அரிஸ்டாடில் , வால்டேர் , ரூசோ போன்ற அரசியல் மேதைகளும் , கௌதமபுத்தர் , மகாவீரர் , கன்பூசியஸ் , இயேசுகிறிஸ்து , முகமது நபி , விவேகானந்தர் போன்ற சமய ஞானிகளும் , ஆபிரகாம் லிங்கன் , அண்ணல் காந்தியடிகள் , மார்ட்டின் லூதர் கிங் போன்ற சான்றாண்மைச் செல்வர்களும் இறந்து விட்டார்களா ?

இவர்களுடைய முகங்களும் , எழுத்துகளும் பேச்சுகளும் மக்கள் நினைவிலிருந்து மறைந்து விட்டனவா ?

இல்லை .

இவர்கள் வாழ்கிறார்கள் ; என்றும் வாழ்வார்கள் .

செவியினால் நுகரப்படும் அறிவுப்பொருள்களின் சுவைகளை உணராமல் , வாயினால் உண்ணப்படும் உணவிலேயே ஆர்வம் காட்டும் மக்களால் இந்த உலகத்திற்கு எந்தப் பயனும் இல்லை .

அவர்கள் வாழ்ந்தாலும் வாழ்ந்தவர்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர் .

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்

( குறள் : 420 )

( மாக்கள் = மக்கள் , அவியினும் = அழிந்தாலும் , என் = என்ன )

உண்டு உடுத்து உறங்கிப் பின் இறந்துபடும் எண்ணற்றவர் இருப்பினும் இல்லாது போயினும் ஒன்றே அல்லவா ?

எனவே மனித வாழ்வு நிலையற்றது தான் .

எனினும் , அதனைக் கருவியாகக் கொண்டு அரியன செய்து சாகாத்தன்மை பெறலாம் என அறிகிறோம் .

இதற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ்பவர் பாரதியார் .

அவர் இன்றும் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது பற்றிய செய்திகள் இப்பாடத்தில் கூறப்படுகின்றன .

6.1 மனித வாழ்வு

ஒருவர் பிறந்ததிலிருந்து இறக்கும் வரையில் , இடையில் உள்ள காலப்பகுதியை வாழ்க்கை என்று கூறுகிறோம் .

உயிரோடு இருப்பது மட்டுமல்லாமல் , உயிர்ப்போடு இருப்பது தான் வாழ்வு என்று குறிப்பிடப்படுகிறது .

இது பொருள் பொதிந்ததாக இருப்பது தான் உயிர்ப்பு எனப்படும் .

பொருள் என்பது குறிக்கோளை மேற்கொண்டிருப்பதாகும் .

இந்தக் குறிக்கோளை முடிவு செய்ய , நமது உடல் பற்றியும் நாம் வாழும் உலகம் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் .

6.1.1 நிலையும் நிலையின்மையும்

‘ வாழ்வாவது மாயம் ; மண்ணாவது திண்ணம் ’ என்ற நிலையில்லாமை உடம்புக்கே உரியது . பொய் உடம்பு கொண்டு ஈட்டும் புகழுடம்பு நிலையானது .