புகழ் உடம்பு முழுமை அடையும் போது , பூத உடம்பு அழிந்து விடும் .
இது அறிவு ஆற்றல் உடையவர்க்கே அமையும் என்பதனை ,
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது
( குறள் : 235 )
( நத்தம் = ஆக்கம் , சாக்காடு = சாதல் , வித்தகர் = அறிவு ஆற்றல் உடையவர் )
என்றார் திருவள்ளுவர் .
நிலையின்மைக்குள் ஒரு நிலைபேறு உண்டாக்கும் ஆற்றல் சிலருக்கு வாய்க்கின்றது .
அவர்கள் தங்கள் உடம்பு அழிந்த பின்னும் வாழ்கின்றனர் .
6.1.2 சிலரே வாழ்கின்றனர்
கோடிக்கணக்கான மனிதர்களில் சிலரே அவர்கள் இறந்த பின்னரும் மக்கள் மனத்தில் நிலைத்து வாழ்ந்து வருகின்றனர் .
பலப்பல தலைமுறைகள் சென்ற பின்னும் நினைந்து போற்றப்பெறுகின்றனர் .
அதற்குக் காரணம் யாது ?
அவர்கள் தம்மை நினையாது வாழ்ந்தமையே .
பிறருக்காக வாழ்ந்தவர்கள் பெருமை பெற்றார்கள் .
நினைக்கப் பெற்றார்கள் .
நல்லோர் இமயமலையைப் போல் , நெடுந்தூரத்திலிருந்தே
பிரகாசிக்கின்றனர் ; ஆனால் தீயோர் இரவின் இருளூடு
எய்த அம்புகளைப் போல் , கண்ணுக்கே புலனாவதில்லை .
( தம்ம பதம் , 21-15 )
என்கிறார் புத்தர் .
‘ மனிதர் பலர் மடிந்தனர் ; பார்மீது நான் சாகாதிருப்பேன் ’ என்கிறார் பாரதி .
வாழும் சிலரில் , பாரதி ஒருவராகத் திகழ்கின்றார் .
6.1.3 பொய் உடம்பும் புகழ் உடம்பும்
மனிதனின் பூத உடம்பு வீழ்வதாகிய சாவும் ஓர் இயற்கை நிகழ்வேயாம் .
ஆனால் வாழும் காலத்துச் செய்யும் அருஞ்செயல்களால் , தசை உடம்பாகிய பொய் உடம்பு வீழ்ந்த பின்னும் , புகழ் உடம்பாகிய மெய் உடம்பு பெற்று விடுகின்றனர் மனிதரில் மிகச் சிலர் .
இப்புகழ் உடம்பிற்கு எந்த ஊழியிலும் முடிவு என்பது இல்லை .
உலகம் நிலை இல்லாத ஒன்று .
நேற்று உயிரோடு இருந்த ஒருவர் இன்று உயிரோடு இல்லை என்பது தான் உலகத்தின் இயல்பாக உள்ளது என்பதனை ,
நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்உலகு
( குறள் : 336 )
( நெருநல் = நேற்று )
என்று பூத உடம்பாகிய பொய் உடம்பைக் குறித்து வள்ளுவர் குறிப்பிடுகிறார் .
மேலும் , மேற்குறிப்பிட்டவாறுள்ள நிலையில்லாத உலகத்து நிலைத்து நிற்பது புகழ் ஒன்றே என்பதனை ,
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இல்
( குறள் : 233 )
( ஒன்றா = தனக்கு இணையில்லாத , பொன்றாது = இறவாது )
என்று புகழுடம்பாகிய மெய் உடம்பு குறித்து வள்ளுவர் குறிப்பிடுகிறார் .
6.1.4 பாரதி பெற்ற நிலைபேறு
முப்பத்தொன்பது ஆண்டுகளே மண்ணுலகில் வாழ்ந்த பாரதி நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்த மனிதர்களும் பெற முடியாத புகழையும் , நிலைபேற்றையும் பெற்றுவிட்டார் .
காலா !
உனை நான் சிறுபுல்லென மதிக்கிறேன் ; என்றன்
காலருகே வாடா !
சற்றே உனை மிதிக்கிறேன்
( காலனுக்கு உரைத்தல் )
என்றும் ,
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான் தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர்புகழ் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான் ;
பார்மீது நான்சாகா திருப்பேன் காண்பீர் !
( பாரதி அறுபத்தி ஆறு - 6 )
என்றும் கூறியது மெய்யாகி விட்டது .
அவருடைய எலும்பையும் தோலையுமே காலன் கவர்ந்து கொள்ள முடிந்தது .
ஆனால் அமரகவி இசைத்த கவிதைகள்...
சாதிகள் இல்லையடி பாப்பா...
செந்தமிழ் நாடென்னும் போதினிலே....
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி....
சிந்துநதியின் மிசை நிலவினிலே....
நெஞ்சு பொறுக்கு திலையே...
தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில்..
யாமறிந்த மொழிகளிலே....
பாயுமொளி நீயெனக்கு...
சின்னஞ்சிறு கிளியே...
இப்படி எத்தனையோ பாடல்கள் நம் செவியில் காலங் காலமாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றன .
தொடக்கக் கல்வியிலிருந்து பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பட்டம் பெறுவது வரையில் பாரதி பலராலும் கற்கப் பெறுகிறார் .
தேசிய ஒருமைப்பாட்டின் குரலையும் , தமிழ்மொழியின் எதிர்கால வளர்ச்சியையும் , பொதுவுடைமைக் குறிக்கோளையும் , உலகளாவிய மனிதநேயத்தையும் இன்று உலகின் பல திசைகளிலிருந்தும் பாரதியின் பாட்டு எதிரொலிக்கின்றது .
6.2 பாரதி வாழ்ந்த சூழல்
பாரதி எட்டயபுரத்தில் பிறந்தார் .
திருநெல்வேலியில் பயின்றார் .
காசிக்குச் சென்றார் .
பிறகு எட்டயபுரம் திரும்பி வந்தார் .
மதுரையில் சில திங்கள் தமிழாசிரியராகப் பணி செய்தார் .
சென்னையில் நான்காண்டுகள் பத்திரிகைப் பணியாற்றினார் .
1908 முதல் பத்தாண்டுகள் புதுவையில் தங்கி
எழுத்துப்பணி பல செய்தார் .
1918-இல் கடையத்திற்குச் சென்று பின் மீண்டும் சென்னைக்குத் திரும்பினார் , 1921-இல் பாரதி இறந்து விட்டார் .
பாரதி வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியும் , புதுவையில் பிரெஞ்சுக்காரர் ஆட்சியும் இருந்தன .
பொதுநிலையில் தமிழகத்திலும் , இந்தியாவின் பிற பகுதிகளிலும் புதுவையிலும் ஒரே வகையான சூழலே நிலவியது .
எழுத்தறிவில்லாத பெரும்பான்மை மக்கள் .
வறுமையில் பழகிய சமூகம் .
எந்தக் கொடுமையையும் இழிவையும் தலைவிதி என ஏற்கப் பழகிய மனப்பாங்கு கொண்ட குடிமக்கள் .
மூடப் பழக்கங்களும் மூட நம்பிக்கைகளும் மலிந்த வாழ்க்கை முறை .
அச்சத்தில் உரிமைகளை வேண்டாத மனநிலை .
தம்முடைய உடைமைகளைப் பாதுகாக்க அறியாத மடமை .
தம் நாட்டை யார் ஆண்டால் என்ன என்ற கவலையற்ற உளப்போக்கு
புதுமை , புரட்சி , சீர்திருத்தம் ஆகிய எவற்றுக்கும் இடமின்றி வளர்ந்த பத்தாம் பசலி எண்ணங்கள் .
இவையே அக்காலச் சூழலில் குறிக்கத்தக்க பண்புகள் .
அக்கால இலக்கிய முயற்சிகள் எல்லாம் கடவுளையும் , செல்வந்தர்களையுமே குறித்து அமைந்தன .
இந்தச் சூழலில் தோன்றிய பாரதி ஓர் எதிர் நீச்சல்காரராக உருவெடுத்தார் .
6.2.1 எட்டயபுரத்தில்
வாழ்நாள் முடிந்த பின்னரும் ஒருவர் ‘ வாழ்கிறார் ’ என்று கூறப்பட வேண்டுமாயின் அவருடைய வாழ்வில் அதற்குரிய அடித்தளங்கள் அமைந்திருக்க வேண்டும் .
எட்டயபுரத்தில் வாழ்கின்ற போதே ,
தாய்மொழிக் காதல்
நாட்டுப்பற்று
மன்னரையும் செல்வந்தரையும் மதிக்காத சுயமரியாதை உணர்வு
ஆகியன அவரிடத்தில் அமைந்திருந்தன .
தம்மை ஆங்கிலக் கல்விக்கு உட்படுத்தியமை குறித்துக் கூறும் போது , வாதும் பொய்மையும் என்றவி லங்கினம்
வாழும் வெங்குகைக்கு என்னை வழங்கினன்
( சுயசரிதை .
27 )
( வாது = வீண் விவாதம் , வெங்குகை = கொடிய குகை )
என்று கூறக் காணலாம் .
இத்தகைய உணர்ச்சியைக் கொண்ட மனிதன் விடுதலைப் பண் பாடுகின்ற வானம்பாடியாக மலர்ந்ததில் வியப்பில்லை .
பொருள் செய்வதையே நோக்கமாகக் கொண்ட தந்தை ; பாரதி ஐந்து வயதுச் சிறுவனாய் இருக்கும் போதே உயிர்நீத்த தாய் ; சிருங்காரச் சுவையில் ஈடுபட்டு அத்தகைய இலக்கியங்களைச் சுவைப்பதே வாழ்வெனக் கருதிய மன்னர் ; தூதும் அந்தாதியும் கலம்பகமும் ( சிற்றிலக்கிய வகைகள் - இவை பற்றிய விளக்கம் சிற்றிலக்கியம் குறித்த பாடத்தில் காண்க ) பாடிப் பரிசில் பெற்றுக் கொண்டிருந்த புலவர் கூட்டம் என்ற சூழலில் வாழ்ந்த பாரதியின் வாழ்க்கையில் மேலும் துன்பங்கள் ஏற்பட்டன .
இதனை ,
தந்தை போயினன் பாழ்மிடி சூழ்ந்தது ;
தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர்
சிந்தையில் தெளிவில்லை ; உடலினில்
திறனுமில்லை ; உரன் உளத்தில்லையால்
மந்தர் பாற் பொருள் போக்கிப் பயின்றதாம்
மடமைக் கல்வியால் மண்ணும் பயனிலை
எந்த மார்க்கமும் தோன்றிலது என் செய்கேன் ?
ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே ?
( சுய , 46 )
என்று குறிப்பிடுகின்றார் .
( பாழ்மிடி = பாழான வறுமை , தரணி = உலகம் , உரன் = வலிமை , மந்தர் = அறிவு குறைந்தவர் , மார்க்கம் = வழி )
தந்தையும் இறந்து விட்டார் .
தமக்கு ஆறுதல் கூறுவதற்கு யாருமில்லை .
அதனால் மனக்குழப்பம் , உடலிலும் உள்ளத்திலும் வலிமை இல்லை .
கல்வியினாலும் பயனில்லை .
வழி எதுவும் தெரியாமல் இருக்கும் நான் ஏன் பிறந்தேனோ என வருந்துகிறார் பாரதியார் .
ஆனாலும் இந்தத் துன்பங்கள் பாரதியின் குறிக்கோள் மிக்க வாழ்க்கைப் பயணத்தை மாற்றவில்லை .
எட்டயபுரத்திலிருந்து பாட்டுக்குயில் சென்னைக்குப் பறக்கின்றது .
6.2.2 சென்னையில்
பாரதியார் ‘ சுதேசமித்திரன் ’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து ஆற்றிய பணி , சென்னை வாழ்க்கை , இந்தியா வாரப் பத்திரிகைப்பணி சூரத்நகரில் நிகழ்ந்த காங்கிரஸ்மாநாட்டுப் பணி , வ.உ.சிதம்பரம் பிள்ளை , சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகள் ஆகியன பாரதியின் புகழைப் பெருக வைத்தன .
மிதவாதியான கிருஷ்ணசாமி ஐயர் பாரதியின் ‘ சுதேச கீதங்களை ’ உலகிற்கு அறிமுகப்படுத்துகிறார் .
பின்பு 1908-இல் ‘ ஸ்வதேச கீதங்கள் ’ என்ற தலைப்பில் பதினாறு பாடல்கள் பாரதியாரால் வெளியிடப் பெறுகின்றன .
23.1.1908 அன்று சுதேசமித்திரன் ஏட்டில் வந்த விளம்பரத்தைச் சீனி .
விசுவநாதன் அப்படியே தருகிறார் .
அது கீழ்வருமாறு :
விபின் சந்திர பாலர் , தமக்கு விதிக்கப்பட்ட தண்டனை முடிவுற்று விடுதலை பெற்ற நாளைச் சென்னையில் பாரதி பெருவிழாவாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார் .
இந்திய விடுதலை வரலாற்றில் குறிப்பிடத்தக்க இந்த நிகழ்ச்சிக்குப் பாரதியாரே தலைமை தாங்கினார் .
பாரதியாரின் நினைவை அழியாமல் போற்றும் இந்த நிகழ்வைக் குறித்து , அவர் 7.3.1908-இல் சுதேசமித்திரனில் வெளியிட்ட அறிக்கையே கூறுவதைக் கேட்கலாம் .
நாளது பிலவங்க வருஷம் மாசி மாதம் 27-ந் தேதி திங்கட்கிழமையன்று ( 9.3.1908 ) மகரிஷி பாலர் தமது யாகத்தைமுடித்து விட்டுக் காரியத்தை நிறைவேற்ற வருகிற புண்ணியதினம் .
அன்று நடைபெறும் ஊர்கோலம் முதலியவைகளைச் சிறப்பாய் நடத்த மயிலாப்பூர் மகாஜனங்களின் உதவி அவசியமாதலால் , அவர்கள் ( மாணவர்கள் உட்பட ) தாங்களாகவே மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயில் தெரு , 8 நெ. கதவு இலக்கமுள்ள ஜாதீய பிரதம பாடசாலையிலாவது , தலையாரித் தெரு , 10 நெ. வீட்டிலாவது வாலண்டியராகப் பதிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் .
( மகாகவி பாரதி வரலாறு , பக்.307 )
இந்தக் கூட்டத்தில் 20,000 பேர் கலந்து கொண்டதாகக் காவல்துறைக் குறிப்புக் கூறுகின்றது .
சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் பாரதி பேசிய பேச்சு விடுதலைக் கனலை எழுப்புவதாக அமைந்தது .
காவல்துறையிலிருந்து பெற்ற அப்பேச்சைச் சீனி .
விசுவநாதன் அளிப்பதைக் காணலாம் .
கனவான்களே !
அன்றாடம் மக்கள் சிறைக்கு அனுப்பப்படுவதும் விடுதலை செய்யப்படுவதும் காணவும் கேட்கவும் செய்கின்றீர்கள் .
ஆனால் நீங்கள் அவற்றைப் பற்றி அக்கறை படுவதில்லை .
பின் ஏன் இன்று இங்குக்கூடிஇருக்கிறீர்கள் ?
ஒரு மகாராஜாவையோ , பெருத்த விருது பெற்றவரையோ மதிக்கும் பொருட்டு இங்கு நீங்கள் வரவில்லை .
விபின் சந்திர பாலர் விடுதலை பெற்றதைக் கொண்டாடவே கூடி இருக்கிறீர்கள் . பாலர்அவர்களின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு நாம் இங்கு வரவில்லை .
சுயராஜ்யத்தில்- தாய்நாட்டுப் பற்றில் - நம்பிக்கை வைத்திருப்பதால் இங்கே கூடி இருக்கிறோம் .
நம் தேச நலனுக்காக நாம் பாடுபட்டு வருகிறோம் .
பாலர் அவர்களும் இவை போன்ற கருத்துடையவர் .
இவை பொருட்டு எழுந்த துன்பங்களை யெல்லாம் அனுபவித்திருக்கிறார் .
நாமும் நம் சக்திக்கு இயன்றவரை சுயராஜ்ய கொள்கைக்காகவும் , தேசப்பற்றுக்காகவும் துன்பங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் .
ஆகவே , நாம் அனைவரும் ஒன்று கூடிச் சுதேசிய சுயராஜ்யக் கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படவோ - போராடவோ முன்வர வேண்டும் .
( அரசாணை எண் 923 ( நீதித் துறை ) நாள் 4-7-1908 )
( மகாகவி பாரதி வரலாறு பக்.311 )
இத்தகைய அச்சமின்மையே இந்திய விடுதலைப் போரினை உருவாக்கியது .
அந்நிய அரசின் அடக்குமுறை பாரதியைக் கட்டுப்படுத்த முடியவில்லை .
உச்சிமீது வான் இடிந்து வீழினும் அச்சமில்லை என்ற கவிஞர் அவர் .
சாக்ரடீசுக்கும் , திருநாவுக்கரசர்க்கும் , காந்தி அண்ணலுக்கும் இந்த அச்சமின்மை இருந்தது .
பேரரசுகளுக்கு அறைகூவல் விடுக்கும் இந்தப் பேராண்மையினால் , பாரதியின் பெயர் விடுதலை வரலாற்றில் நிலைத்து விட்டது .
சென்னையில் இதனைப் போல நிகழ்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பாரதியின் ஆளுமை வெளிப்பட்டது .
விடுதலை வரலாற்றில் கவிஞர்கள் உணர்ச்சி பொங்கப் பாடுவார்கள் ; சற்று மிகுதியாகப் போனால் , இயக்கக்கிளர்ச்சிகளில் பங்கேற்பர் .
ஆனால் பாரதி அதனை முன்னின்று நடத்த வல்லவராக இருந்திருக்கிறார் என்பது கருதத்தக்கது .
தமிழ்நாட்டிலிருந்த காங்கிரஸ் இயக்கத்தோடு கூட அவர் உறவுடையவராக இல்லை ; அவர் தாமே ஒரு தனி இயக்கமாக விளங்கினார் .
எவரிடமும் அனுமதி பெறாமல் நேரே சென்று காந்தியடிகளைக் கண்டு தாம் நடத்தும் கூட்டத்திற்கு வர இயலுமா என்றும் கேட்டார் .
இந்திய விடுதலை பற்றி எண்ணும் எவரும் பாரதியை விலக்கிவிட முடியாதபடி அவருடைய சுவடு வரலாற்றில் பதிந்துள்ளமையினைக் கண்டுகொள்ளலாம் .
6.2.3 புதுவையில்
பாரதியின் பாடல்களில் , வேதாந்தப் பாடல்கள் , சக்திப்பாடல்கள் , பெண்விடுதலைப் பாடல்கள் , சுயசரிதை , வசனகவிதை ஆகியனவும் கண்ணன் பாட்டு , குயில்பாட்டு , பாஞ்சாலி சபதம் என்ற முப்பெரும்பாடல்களும் , பாரதி புதுவையில் இருக்கும்போது தான் பாடப்பெற்றன .
அரவிந்தர் , வ.ராமசாமி , வ.வே.சு.ஐயர் , சுரேந்திரநாத் ஆர்யா , பாரதிதாசன் , கனகலிங்கம் ஆகியவர்கள் புதுவையில் பாரதியோடு தொடர்புடையவராக இருந்தார்கள் .
படைப்பிலக்கியப் புதுமைகள்
பாரதியார் இன்றும் பேசப்பெறுவதற்குரிய நிலையில் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன .
அவற்றுள் ஒன்று அவரது எளிமையான நடை. பாரதிக்கு முன் ‘ பாட்டு இலக்கியம் ’ இல்லை .
செய்யுள் இலக்கியமே இருந்தது .
அந்தச் செய்யுளுக்கு உரை இருந்தால்தான் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது .
செய்யுட்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரைகள் எழுந்தன .
எவ்வளவுக் கெவ்வளவு எளிமையாக இல்லாமல் இருக்கிறதோ அவ்வளவுக் கவ்வளவு செய்யுள் இலக்கியம் மதிப்புடையதாகக் கருதப்பட்டது .
பாரதிக்கு இந்தக் கருத்து உடன்பாடாக இல்லை .
மக்கள் அனைவருக்கும் விளங்கும் எளிய தமிழில் பாட்டு இலக்கியப் படைப்பு இருக்க வேண்டுமென்று பாரதி கருதினார் .
பாரதியார் புதுவையில் அரவிந்தரிடம் ரிக் வேதப் பாடல்களை முறையாகக் கற்றுக் கொண்டார் .
அவற்றைத் தமிழில் மிக எளிமையாகப் பாட்டு வடிவத்தில் கொண்டு வந்தார் .
ரிஷிகள் : எங்கள் வேள்விக் கூட மீதில் ஏறுதே தீ !
தீ ! - இந் நேரம் பங்க முற்றே பேய்க ளோடப் பாயுதே !
தீ !
தீ ! - இந்நேரம்
அசுரர் : தோழரே , நம் ஆவி வேகச் சூழுதே தீ !
தீ ! - ஐயோ நாம் வாழ வந்த காடு வேக வந்ததே தீ !
தீ ! - அம்மாவோ !
( அக்னி ஸ்தோமம் , 1-2 )
மேற்குறிப்பிட்டவாறு அவர் எழுதினார் .
பாரதியின் இந்த எளிய பாடல்களைக் குறித்துக் கூறுங்கால் ,
பாரதியாரை ஒரு மகாகவி ஆக்குவதற்கு மேற்கூறிய பாடல்களே போதும் .
ஆயினும் அவர் இம்மட்டோடு நின்றுவிடவில்லை , மக்களுக்கு நிரந்தரமான விடுதலையையும் , இன்பத்தையும் அளிக்க விரும்பித் தம் ஆத்மானுபவத்தையும் தீர்க்க தரிசனத்தையும் சக்திப் பாடல்களிலும் வேதாந்தப் பாடல்களிலும் மக்கள் பேசும் எளிய நடையில் விளக்கமாகப் பாடியிருக்கிறார் .
( புதுவையில் பாரதி , ப.கோதண்டராமன் பக். - 50 )
என்று கூறக் காணலாம் .
பாரதியின் புதுவை வாழ்க்கை , தமிழில் அவர் பல சோதனை முயற்சிகளை மேற்கொள்ளக் களம் அமைத்துத் தந்தது .
தமிழில் சுயசரிதை நூலாசிரியர் வரலாறுகள் பல நமக்குக் கிடைப்பதில்லை .