செல்வம் , அதிகாரம் ஆகியன தனி உடைமையாய் ஆகிவிடக் கூடாது .
பாரதியின் இந்தத் தீர்வு இன்று பலராலும் பேசப்படுகின்றது ; தேர்தல் அறிக்கைகளில் இடம் பெறுகின்றது .
ஆனால் நடைமுறைப் படுத்தப்படவில்லை .
சமஉடைமைச் சமுதாயம் நீண்ட நாளாக நம் கனவு .
அது நனவாகும் நாளில் பாரதி நம்மோடு மேலும் நெருக்கமாக வந்து புன்னகைப்பார் .
6.4.2 சென்றிடுவீர் எட்டுத் திக்கும்
தமிழ்மொழி யாமறிந்த மொழிகளில் இனிமையானது என்றார் பாரதியார் .
ஆனால் தமிழர்களால் அது பேணி வளர்க்கப்படவில்லை .
அதிலே தேக்கநிலை ஏற்பட்டு விட்டது .
புதுமைப் பூக்கள் , காலமாறுதலுக்கேற்ற புதிய மணங்கள் தமிழில் தோன்றாத நிலை உண்டாகியது .
தமிழை வளர்க்க என்ன செய்வது ?
பாரதி தீர்வு தருகிறார் .
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல்
உலகமெலாம் தேமதுரத் தமிழ் பரப்புதல்
பிறநாட்டுச் சாத்திரங்களை மொழி பெயர்த்தல்
புதுநூல்கள் பற்பல தமிழில் இயற்றுதல்
வெள்ளம் போல் கலைப் பெருக்கும் கவிப்பெருக்கும் மிகச் செய்தல் .
இந்த ஐந்து பணிகளையும் பாரதியே செய்து காட்டினார் .
இன்று தமிழ் நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ் இல்லையே என்கிறார் பாரதிதாசன் .
நம் கல்வி மொழியாக ஆங்கிலம் ; நிர்வாக மொழியாக ஆங்கிலம் ; நம்மை ஆளும் மொழியாக இந்தி ; வழிபாட்டு மொழியாகச் சமஸ்கிருதம் ; இசை மொழியாகத் தெலுங்கு என்ற நிலை மேலும் மேலும் பரவலாகி வருகிறது .
தமிழ் வளர்ச்சிக்கான செயல் முறைகளும் தொலைநோக்கும் நமக்கு வேண்டும் .
நிறைய மொழிகளைக் கற்று , அவற்றிலுள்ளவற்றைக் கொண்டு தமிழை மேலும் செழுமைப்படுத்த வேண்டும் .
பாரதியார் நமக்கு இவற்றை நாள்தோறும் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார் .
6.4.3 சாதிகள் இல்லையடி பாப்பா
இந்தியா சாதியின் அடிப்படையிலான சமூக அமைப்பைக் கொண்டது .
எனவே சாதியின் பெயரால் இன்றளவும் பல சண்டைகள் , போராட்டங்கள் நடைபெறுகின்றன .
இதை உணர்ந்த பாரதி ,
சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
( பாப்பா பாட்டு , 15 )
என்றார் .
சாதி உணர்வு என்பது அநாகரிகத்தின் அடையாளம் .
ஆனால் அதை மனிதனிடமிருந்து மாற்ற முடியவில்லை .
சாதிக் கலவரங்களால் உயிர் உடைமை இழப்புகள் நிகழ்ந்த வண்ணமாகவே இருக்கின்றன .
இதற்கு என்ன செய்வது ?
மதம் மாறலாம் ; சாதியை மாற்றிக் கொள்ள முடியாது ; முடியவே முடியாதா ?
இராமானுஜர் , இறையடியவர் எல்லோரும் சமம் என்றும் , அனைவரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்றும் கூறினார் .
அவ்வாறே செய்தும் காட்டினார் .
பாரதியும் அதைச் செய்தார் .
கனகலிங்கத்திற்கும் அவருடைய நண்பர்க்கும் பூணூல் மாட்டி " இன்று முதல் நீர் பிராமணர் " என்றார் .
இஃது என்ன சாதி மாற்றம் ?
இது மாற்றமில்லை .
சாதிகள் இல்லை என்ற அறிவிப்பு .
நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் - இந்த
நாட்டினில் இல்லை ; குணம் நல்லதாயின்
எந்தக் குலத்தினரேனும் - உணர்வு
இன்பம் அடைதல் எளிதெனக் கண்டோம் .
( உயிர் பெற்ற தமிழர் பாட்டு - ஜாதி 5 )
ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உணர்வு வேண்டும் . சீர்திருத்தம் பேசும் - விரும்பும் - கடைப்பிடிக்கும் எந்தச் சமூகத்திலும் பாரதி இருப்பார் .
6.5. பாரதி வாழ்கிறார்
மனிதரில் மூவகையினர் உள்ளனர் .
1. வாழும் போதே இறந்து போனவர்கள் .
2. வாழ்வு முடிந்து இறந்து போனவர்கள் 3. வாழ்க்கை முடிந்தும் இறவாத நிலையினர் .
பாரதி மூன்றாம் வகைக்குரியவர் .
நம் நாட்டையும் மொழியையும் சமூகத்தையும் நினைக்கும் போதெல்லாம் அவர் நம் முன் வருகிறார் .
இராமனும் கண்ணனும் , இயேசுவும் புத்தரும் , சங்கரரும் இராமானுஜரும் செத்துப் போய்விட்டார்கள் ; நான் சாகாதிருப்பேன் என்று வைர நெஞ்சுறுதியோடு முழங்கியவர் .
அவர் எழுதாமலும் , பேசாமலும் போயிருந்தால் , ‘ வாழ்கிறார் ’ என்று கூற முடியாது .
அத்வைத நிலைகண்டால் மரண முண்டோ ?
( பாரதி அறுபத்தாறு , மரணத்தை வெல்லும் வழி , - 4 )
என்பது பாரதி வாக்கு .
தம்முடைய இலட்சியங்களாலும் , தொண்டாலும் , வாழ்கின்ற மாமனிதர் பாரதியார் .
அவரை நினைவு கூரும் வண்ணம் நாம் இருப்பதற்கு அவர் வாழ்ந்த பெருவாழ்வே காரணமாகும் .
6.5.1 எதிர்கால நோய்கள்
இந்தியாவை இன்று வந்து சூழ்ந்துள்ள எத்தனையோ சமூக நோய்கள் அகற்றப்படாமலிருக்கும் போது எதிர்காலத்திலும் பல புதிய நோய்கள் வந்து தாக்கும் அச்ச நிலை உள்ளது .
இந்தியாவின் அகத்திலும் புறத்திலும் பலப்பல பகைகள் பெருகியுள்ளன .
புறப்பகை அண்டை நாட்டினால் தோன்றி வளர்ந்து கொண்டே வருகிறது .
இதனைத் தடுக்க என்ன செய்வது ?
அகத்தே பகையின்றி ஒருமைப்பாடு குலையாமல் இருப்பதே புறத்தே கொடும் பகை செயல்படாதவாறு தடுக்கும் .
அகத்தே ஆயிரம் ஆயிரமாய் வேறுபாடுகள் மலிந்து கிடக்கின்றன .
பாரதிதாசன் கூறுவது போல் ,
வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் என்றால்
சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும் .
( சஞ்சீவி பர்வதத்தின் சாரல் , 144-145 )
( பேதம் = வேறுபாடு )
என்ற நிலை பெரும் அறைகூவலாகி இந்திய ஒருமைப்பாட்டை அவ்வப்போது அச்சுறுத்தி வருகிறது .
வெடிகுண்டு வீச்சுகள் , தீவைப்புகள் , இயந்திரத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுடுதல் நிகழ்வுகள் , வானூர்திக் கடத்தல்கள் என்பன அடிக்கடி நிகழ்கின்றன .
இவை எதிர்காலத்தில் மேலும் தீவிரப்படலாம் .
இவற்றைத் தடுப்பது எங்ஙனம் ?
சாதிபேதங்கள் கடந்த காலத்திலேயே உச்ச நிலைக்குப் போய்விட்டன .
சாதி ஒழிப்புச் சீர்திருத்தங்கள் இன்று புகைந்து போய்விட்டன .
கலப்பு மணங்கள் ஒரு பக்கம் பெருகினாலும் , சாதிக் கட்டுப்பாடுகள் , சாதியிலிருந்து விலக்கங்கள் ஆகியனவும் பெருகி வருகின்றன .
இவற்றைத் தடுப்பது எப்படி ?
இன்று பெண் படிக்கிறாள் ; பணி செய்கிறாள் ; அலுவலகத்தை ஆளுகிறாள் ; நாட்டையே ஆளும் திறன் பெற்று உயர்ந்திருக்கவும் காணுகிறோம் .
ஆனாலும் பெண்ணினம் விடுதலையும் உரிமையும் பெற்று விட்டதாகக் கூறமுடியவில்லை .
பெண்ணின் பணிச்சுமை கூடியிருக்கிறது .
அலுவலகத்தில் பணி செய்பவள் அடுப்பங்கரையிலும் பணி செய்கிறாள் .
இதனைப் போக்குவது எப்படி ?
சமூக அமைப்பில் வர வர அறம் தேய்ந்து வருகிறது .
அறத்தின் மீது கொண்ட நம்பிக்கை குறைந்து வருகிறது .
இவற்றைச் சரி செய்வது எவ்வாறு ?
மேலே கூறியவற்றுக்கெல்லாம் பாரதி மருந்தும் மந்திரமும் வைத்திருக்கிறார் .
அவர் சிறந்த நாட்டு மருத்துவர் ; நாட்டுப் பற்று மிக்க மருத்துவர் .
6.5.2 மருந்தும் மந்திரமும்
பாரம்பரியப் பெருமையும் நாட்டுப்பற்றும்
எதிர்காலத்தில் அச்சுறுத்தும் பலநோய்களையும் எதிர்கொள்ள வேண்டுமெனில் நாட்டுப்பற்று என்னும் மருந்தும் , வந்தே மாதரம் என்ற மருந்தும் வேண்டுமெனப் பாரதி அறிவுறுத்துகின்றார் .
ஒருவரது பாரம்பரியத்தைப் பற்றிய அறிவும் பெருமையும் வேண்டும் என்கிறார் .
மாரத வீரர் மலிந்த நன்னாடு
மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன்னாடு பூரண ஞானம் பொலிந்த நன்னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம் பெரும் நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே
( எங்கள் நாடு , 2 )
( மாரத வீரர் = பெரிய இரத வீரர் )
இந்த உணர்வைக் காப்பாற்றும் கல்வியும் , ஞானமும் வரும் தலைமுறையினர்க்கு ஊட்டப் பெற வேண்டும் .
ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அந்நியர் வந்து புகல் என்ன நீதி ?
( வந்தே மாதரம் , 3 )
என்ற வலிமைமிக்க ஒருமைப்பாடு வேண்டும் .
வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமை வேண்டும் .
இந்து , முசுலீம் , கிறித்தவர் , சீக்கியர் என்ற மத வேறுபாடுகள் இந்தியர் என்ற ஒருமையில் கரைய வேண்டும் .
இந்திய தேசியக் கொடி ஏற்றப்படுகிறது .
கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்
( மாதாவின் துவஜம் , 4 )
தமிழர் , கேரளர் , தெலுங்கர் , துளுவர் , கன்னடர் , ஒட்டியர் , மராட்டர் , இந்துஸ்தானத்தர் , ராஜபுத்ரர் , பாஞ்சாலர் ஆகிய எல்லாரும் சேர்ந்து கொடியினைக் காக்கின்றனர் .
அரசாங்கம் , குடிமக்கள் எல்லாருடைய நலன்களையும் சமமாய் மதித்து காக்கும் போது , கொடிக்கு மரியாதை தோன்றுகிறது .
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லாமல் பட்டினி கிடக்க விடாத சமூகத்தில் நாட்டுப்பற்று தானே வேர்விடும் .
சாதி ஒழிப்பு
சாதியைக் கொண்டு மனிதனை மதிப்பிடாமல் குணங்களைக் கொண்டு மதிப்பிடும் நிலையைப் பாரதி அறிவுறுத்துகின்றார் .
‘ வேதியராயினும் வேறு குலத்தவராயினும் ஒன்றே ’ என்று அவர் பாடினார் .
அவர் சாதியிலிருந்து விலக்கப்பட்டதற்குச் சிறிதும் வருத்தப்படவில்லை .
எல்லோருக்கும் பூணூல் போட்டுப் பிராமணராக்கிவிட வேண்டுமென்று அவர் கருதுகின்றார் .
அவருடைய சீர்திருத்தத்தால் இன்று பிராமணீயம் வலிமை குன்றிவிட்டது .
சாதி ஒழிப்புச் சிந்தனையால் , முற்போக்கு எண்ணம் கொண்டவர்களிடையே பாரதியார் இன்றும் வாழ்கிறார் .
பெண் உரிமை
ஸ்திரீகள் தமக்கிஷ்டமான பேரை விவாகம் செய்து கொள்ளலாம் விவாகம் செய்து கொண்ட புருஷனுக்கு ஸ்திரீ அடிமையில்லை உயிர்த்துணை : வாழ்க்கைக்கு ஊன்று கோல் : ஜீவனிலே ஒரு பகுதி
( தமிழ் நாட்டின் விழிப்பு , பாரதியார் கட்டுரைகள் பக்.261 )
என்று கூறிப் பெண்கள் ‘ சாத்விகப் புரட்சி ’ யால் தம் உரிமையை நிலை நாட்டிக் கொள்ள வேண்டும் என்கிறார் .
கைம்பெண்களின் மறுமணத்தைப் போற்றுகிறார் .
பெண்கள் பல தீமைகளிலிருந்தும் விடுபடுவதற்குக் கல்வி ஒன்றே வழிவகுக்கும் என்ற அவரின் கூற்று உண்மையாகி விட்டது .
இன்று ஆண்களை விட எண்ணிக்கையில் மிகுதியாகப் பெண்கள் படிக்கிறார்கள் ; தங்கள் விருப்பத்திற்கும் தகுதிக்கும் ஏற்ப மணமகனைத் தேர்ந்து கொள்கின்றனர் .
இது பாரதி காண விழைந்த கனவு .
அந்த கனவு மெய்ப்பிக்கப்பட்டு விட்டது .
குழந்தைக் கல்வி
சமூக அமைப்பில் ஒவ்வோர் அங்கத்தையும் வளர்ந்தபின் திருத்துவது இயலாது .
குழந்தை நிலையிலேயே கோணல் வளர்ச்சி இல்லாதவாறு ஒழுங்குபடுத்த வேண்டும் .
அறத்தில் நம்பிக்கை , ஒழுக்கத்தில் உறுதி , நன்னெறிகள் ஆகியவற்றை இளம் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும் .
பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ் சொல்ல லாகாது பாப்பா
தேம்பி அழும் குழந்தை நொண்டி - நீ
திடம் கொண்டு போராடு பாப்பா
( பாப்பா பாட்டு , 7 , 10 )
என்றவாறு குழந்தைகளுக்குக் கற்பிக்கும் நெறி காட்டுகின்றார் பாரதி .
எதிர்காலச் சமூக நலிவுகளுக்குப் பாரதியாரின் சொற்கள் மருந்தென்று கூறத்தக்கன ; மந்திரமாகக் கூறித் தீமை அகற்றிக் கொள்ளத் தக்கன .
6.5.3 சாகாததோர் சரித்திரம் இது , என்றும் அழியாத ஒரு வரலாறு கொண்டவர் பாரதி என்பதைக் குறிக்கும் .
‘ அச்சமில்லை அச்சமில்லை ’
ஒரு கூட்டம் சோர்ந்து தளர்ந்து இருக்கிறது .
என்ன நடக்குமோ என்று அச்சம் கொண்டிருக்கிறது .
பணம் , அதிகாரம் , மேல்சாதி போன்ற ஆதிக்க சக்திகளை எதிர்த்து ஆயிரம் பேராக இருந்தாலும் எதிர்த்துப் போராட முடியுமா என்று அவர்கள் கருதுகின்றனர் .
அவர்கள் குடிசைகள் எரிக்கப்பட்டு விட்டன .
அவர்களின் உறவினர் நெருப்பில் வெந்து மடிந்து விட்டனர் .
அவர்கள் அன்றாடம் உழைத்த உழைப்பில் கஞ்சி குடிப்பவர்கள் .
அவர்கள் ஒன்று திரண்டு அடுத்து என் செய்வது எனத் தேம்பித் திகைத்து நிற்கையில் ஓர் இளைஞன் அவர்களின் முன்னால் நின்று ,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே !
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே !
( அச்சமில்லை , 2 )
என்று பாடினான் ; கூட்டத்தினர் ஆன்ம பலம் பெற்றனர் .
ஒன்று கூடி ஆதிக்க சக்திகளை எதிர்த்துச் சத்தியாக்கிரப் போர் தொடுக்க முடிவெடுத்தனர் .
பாரதியே அவர்களின் போர்க்குரல் ; இன்றல்ல என்றைக்கும் .
சமய ஒருமைப்பாடு
ஒரு வழிபாட்டுக் கூட்டம் கூடுகிறது .
இந்து முசுலீம் கிறித்துவர் எனப் பல சமயத்தினரும் கூடினர் .
எந்தச் சமயப் பாடலைப் பாடுவது ?
ஒரு நொடி தான் தயக்கம் .
பின்பு சிலர் முழங்கினார் :
ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான் ;
கருநிறம் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன் ;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே ; அதனியல் ஒளியுறும் அறிவாம்
( புதிய ஆத்திசூடி , காப்பு 1-8 )
இது எல்லார்க்கும் நிறைவு .
இந்தச் சமரச ஞானப் பாடலில் பாரதி வாழ்கிறார் .
பெண் உயர்வு
காலைச் செய்தித்தாளில் பரபரப்பு .
பெண் உயிரோடு எரிக்கப்பட்டாள் ; வரதட்சணைக் கொடுமை காரணமாம் .
விசாரணை நடக்கிறதாம் .
கொன்ற கணவன் செல்வாக்கு மிக்கவனாம் ; எப்படியும் வெளி வந்து விடுவான் என்று ஊர் பேசிற்று .
பெண்கள் திரண்டனர் ; கூட்டம் கூட்டினர் என்ன பேசுவது ?
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் ;
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோமென்று கும்மியடி !
சாதம் படைக்கவும் செய்திடுவோம் ; தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம் .
( பெண்கள் விடுதலைக்கும்மி , 6,7 )
எல்லோரும் ஒன்றிணைந்து பாடுகின்றனர் .
பாரதி , வானிலிருந்து தம் மீசையை முறுக்கி கொள்கிறார் . இவைபோல எத்தனையோ !