159

அவர்களின் ஆற்றலைப் பிறநாட்டார் பாராட்ட வேண்டும் .

அதற்கு உரிய மரியாதையைச் செய்ய வேண்டும் என்கிறார் பாரதியார் .

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

சொல்வதில்ஓர் மகிமை இல்லை

திறமான புலமையெனில் வெளிநாட்டார்

அதை வணக்கம் செய்தல் வேண்டும்

( தேசியகீதங்கள் , தமிழ் : 3 )

தமிழர்கள் தங்கள் பழம்பெருமையைப் பேசுவதில் பெரும் மகிழ்வு கொள்கின்றனர் .

பெருமையாகக் கருதுகின்றனர் .

அதிலேயே இன்பங்கண்டு வாழ்கின்றனர் .

ஆக்கபூர்வமான எந்தச் செயலும் செய்யாமல் , பழம்பெருமையைப் பேசுவதிலேயே பொழுதைப் போக்குகின்றனர் .

அவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களைப் பார்த்தே பாரதியார் , இவ்வாறுகூறுகிறார் .

நமக்குள்ளே நம் பழம் பெருமைகளைப் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை .

இன்றையச் சூழலில் நமக்கு இருக்கும் பெருமை என்ன ?

உலக மக்களிடம் நமக்கு எந்த இடம் இருக்கிறது ?

என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் .

உலக மக்கள் , நம் பழம் பெருமைகளால் நம்மை மதித்ததுபோல் , இன்றும் நாம் மதிக்கப்பட வேண்டுமானால் , நாம் நம் புலமையை அறிவு ஆற்றலை மேலும் மேலும் வளர்க்க வேண்டும் .

பிற நாட்டவர் வாழ்த்தி வணங்கிப் பாராட்டும் வகையில் நாம் வாழ வேண்டும் என்று வேண்டுகிறார் பாரதியார் .

1.6 தொகுப்புரை

தாம் ஒரு தமிழன் என்பதில் பெருமை கொண்ட பாரதியார் , தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் .

தமிழ் மொழியின் பெருமையையும் , வளத்தையும் குறிப்பிடுகிறார் .

ஆங்கில ஆட்சிக்காலத்தில் , ஆங்கிலத்தின் செல்வாக்கால் , தமிழ் இரண்டாம்தர நிலைக்குத் தள்ளப்பட்டதை உணர்ந்தார் .

எனவே எங்கும் எதிலும் தமிழ் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார் .

தாய்மொழியின் வாயிலாகவே கல்வி கொடுக்க வேண்டும் என்று வேண்டினார் .

தமிழர் பண்பாட்டுச் சிறப்பினைக் குறிப்பிடும்போது , தமிழர்கள் கடல் கடந்து சென்றாலும் எத்தகைய உறுதியான நம்பிக்கையையும் , கடமை உணர்வினையும் கொண்டிருக்கின்றனர் என்பதைச் சுட்டுகின்றார் .

தமிழர்களின் வழிபாட்டின் மூலம் வெளிப்படும் பண்பாட்டுப் பெருமையையும் எடுத்துரைக்கின்றார் .

தமிழ் இனம் எத்தகைய தொன்மை வாய்ந்தது என்பதனையும் , தமிழர்கள் வீரத்தையும் காதலையும் எவ்வாறு போற்றிப் பாதுகாத்தனர் என்பதனையும் பாரதியார் கூறுகிறார் .

தமிழ்நாட்டில் இயற்கையாக அமைந்த ஆறுகள் பலவும் எவ்வாறு நீர் வளத்தை வழங்குகின்றன என்றும் குறிப்பிடுகிறார் .

வள்ளுவன் போன்ற அறவோர்களாலும் தமிழ்நாடு பெற்ற கல்வி வளத்தைக் கூறுகிறார் .

தமிழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்து , தமிழ்நாட்டை எவ்வாறு வளப்படுத்தினர் என்பதையும் சுட்டுகிறார் .

விடுதலை பெற்று வாழும் பெண்கள் தங்கள் கணவர்க்குத் துணையாக இருந்து , செய்ய வேண்டிய கடமைகளையும் செய்து , ஓர் எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழவேண்டும் , பழம் பெருமைகளையே பேசி மகிழ்ந்து , நாட்களை வீணாக்காமல் , தம் அறிவு ஆற்றலால் வெளிநாட்டார் வணங்கி வாழ்த்தும்படி தமிழர்கள் வாழவேண்டும் என்று வேண்டுகிறார் பாரதியார் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. தமிழ்த்தாய் யாரால் உருவாக்கப்பட்டவள் என்று பாரதியார் குறிப்பிடுகின்றார் ?

[ விடை ]

2. பண்டைய தமிழ் மன்னர்களின் வீரம் எந்தப் பாடல்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன ?

[ விடை ]

3. பல தீவுகள் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்கள் எந்த எந்தக் கொடிகளை அங்குப் பொறித்தனர் ?

[ விடை ]

4. காதலின் சிறப்பினைப் பாரதியார் எவ்வாறு பாடுகின்றார் ?

[ விடை ]

5. தமிழ்நாட்டின் நீர்வளத்திற்குக் காரணம் என்ன ?

[ விடை ]

6. தமிழ்நாடு எவ்வாறு வான் புகழ் பெற்றது ?

[ விடை ]

7. வெளிநாட்டார் வணங்குவதற்குத் தமிழர்கள் செய்ய வேண்டியது எது ?

பாரதியாரும் இந்திய விடுதலை இயக்கமும்

2.0 பாட முன்னுரை

" எதுவும் தன் விருப்பப்படி செய்து அதனால் ஏற்படக் கூடிய இன்ப துன்பங்களுக்குத் தான் பொறுப்பாளியாக இருப்பது தான் விடுதலை " ( பாரதியார் கட்டுரைகள் , பக் : 99 )

தீரத்திலே , படைவீரத்திலே , நெஞ்சில் ஈரத்திலே , ( ஈரம் - இரக்கம் ) உபகாரத்திலே உயர்ந்த நாடு என்றெல்லாம் பாரதியார் மிகவும் போற்றிப் பாடிய பாரத நாடு முன்னாளில் எப்படி இருந்தது ? இன்று காண்பது போல் ஒன்றுபட்ட இந்தியாவாக இருந்ததா ?

இல்லை .

நாடு சிறு சிறு பகுதிகளாகப் பிரிந்திருந்தது .

அவற்றை அரசர்களும் , குறுநில மன்னர்களும் ஆண்டு வந்தனர் .

இந்தியா ஒரு தலைமையின் கீழ் இயங்கவில்லை .

மேலும் மக்களிடையே காணப்பட்ட பல்வகையான வேறுபாடுகளின் காரணமாக ஒற்றுமையின்மை நிலவியது .

இதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டனர் வெளிநாட்டினர் .

வாணிகம் செய்ய வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலிலும் தலையிட்டனர் .

ஆட்சியையும் கைப்பற்றினர் .

இவ்வாறு இந்தியா அந்நியருக்கு அடிமைப்பட்டது .

இங்ஙனம் அடிமைப்பட்ட இந்தியாவின் அடிமைத்தனத்தை எண்ணி வருந்தி , அந்நியர் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பலரும் போராடினார்கள் .

அந்த விடுதலைப் போராட்டத்தில் பாரதியாரும் தம்மை இணைத்துக் கொண்டார் .

மேலும் தம் உணர்வுகளைத் தாம் இயற்றிய பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினார் .

அவை பற்றிய செய்திகள் இந்தப் பாடத்தில் இடம் பெறுகின்றன .

2.1 விடுதலை இயக்கம்

இந்திய தேசிய காங்கிரஸ் இந்திய விடுதலை இயக்கத்தில் பெரும்பங்கு வகித்தது .

இந்திய விடுதலைக்காக இடையறாது போராடியது .

தென்னாப்பிரிக்காவில் அறப்போராட்டத்தை நடத்திய காந்தியடிகளின் இந்திய வருகையால் இந்திய விடுதலை இயக்கம் ஒருமுகப்பட்டது .

மகாத்மாவின் போராட்ட முறை இந்திய விடுதலைக்கு வழி வகுக்கும் என்ற தொலை நோக்குப் பார்வை பாரதியாரை இந்திய விடுதலை இயக்கத்தில் இணையச் செய்தது .

2.1.1 பாரதியாரின் அரசியல் நுழைவு

‘ இந்திய தேசிய காங்கிரஸ் ’ என்ற சபை இந்திய விடுதலைக்கான இயக்கத்திற்கு எழுச்சி ஊட்டிக் கொண்டிருந்த காலம் அது. 1898-ஆம்ஆண்டு இங்கிலாந்து நாட்டுஅரசின்அரசப்பிரதிநிதியாகக் கர்சன்பிரபு இந்தியாவில் பொறுப்பேற்றார் .

துவக்க முதலே இந்திய விரோதப் போக்கில் தீவிரமாக இருந்தார் கர்சன் பிரபு .

அது இந்திய விடுதலை இயக்கத்திற்குப் புது வேகத்தை அளித்தது .

ஜி. சுப்பிரமணிய அய்யர் சுதேசமித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்தவர் .

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய சுயாட்சியை ஆதரித்து இந்தியர்களுக்கு அதிகமான அரசுப்பணிகள் அளிக்க வேண்டும் என்று வீரமுழக்கமிட்டார் .

1905-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் நாள் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார் .

இசுலாமியர் பெரும்பான்மையாக இருந்த பகுதி கிழக்கு வங்காளம் எனவும் , இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதி மேற்கு வங்காளம் எனவும் வழங்கப்பட்டது .

நிர்வாகத்தின் பொருட்டு வங்காளத்தைப் பிரிப்பதாகக் காரணம் சொன்னார் கர்சன் பிரபு .

ஆனால் , அது இந்து , இசுலாமியர் ஆகியோரின் ஒற்றுமையைக் குலைக்கும் நோக்கில் அமைந்த பிரிவினையாகும் .

வங்காளப் பிரிவினையின் காரணமாக இந்தியா முழுவதும் புத்துணர்ச்சி பிறந்தது .

இந்தப் புதிய உணர்ச்சியைக் கோபால கிருஷ்ண கோகலே ‘ தேசிய உணர்ச்சி ’ என்று குறிப்பிட்டார் .

வங்காளப் பிரிவினையால் அங்குள்ள இந்துக்களும் , இசுலாமியர்களும் ஓரணியில் நின்று வெள்ளையரை எதிர்த்தனர் .

வங்காள மாணவர்களிடம் ‘ சுதேச உணர்வு ’ எழுந்தது .

அதாவது இந்திய நாட்டில் விளைந்த - உற்பத்தியான பொருள்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் அரும்பியது .

அவர்கள் ‘ சுதேச விரதம் ’ ( ஆங்கில நாட்டுப் பொருட்களை நிராகரிப்பது ) மேற்கொண்டனர் .

சென்னை நகர மாணவர்கள் வங்காள மாணவர்களை வாழ்த்த , சென்னைக் கடற்கரையில் கூட்டம் நடத்தினர் .

ஜி.சுப்பிரமணிய அய்யர் தலைமை தாங்கினார் .

‘ வங்கமே வாழ்க ! ’ என்று வங்காளத்தை வாழ்த்திப் பாடிய பாடலுடன் பாரதியாரின் அரசியல் நுழைவு தொடங்கியது .

2.1.2 பாரதியும் சுதேச உணர்வும்

வங்காளத்தில் எழுந்த சுதேச உணர்வு நாட்டின் எல்லாப் பாகங்களிலும் பரவ வேண்டும் என்று தேசபக்தத் தலைவர்கள் விரும்பினர் .

பாரதியார் தமிழ்நாட்டு மக்களிடையே சுதேச உணர்வு வளரப் பாடுபட்டார் .

ஆகவே ‘ சுதேசமித்திரன் ’ , ‘ சக்கரவர்த்தினி ’ ஆகிய பத்திரிகைகளில் வங்காளத்தில் எழுந்த சுதேச இயக்கம் பற்றியும் , சுதேச இயக்கத்தில் பங்கு கொண்ட வங்காளப் பெண்கள் குறித்தும் கட்டுரைகள் எழுதினார் .

பெண்களும் தாய்நாட்டிற்காகப் போராடும் தகுதியும் , திறமையும் , உரிமையும் உள்ளவர் என்று சுட்டிக்காட்டினார் .

விடுதலை இயக்கத்தில் பங்கு கொள்ளுமாறு அவர்களைத் தூண்டினார் .

சுதேச உணர்வில் தமிழ்நாடு முன்னணியில் இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் .

சுதேச உணர்வை எப்படி வெளிப்படுத்த வேண்டும் ?

சுதேச விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் வெளிப்படுத்த வேண்டும் .

தேசபக்தத் தலைவர்கள் சுதேசிய விரதத்தைக் கடைப்பிடிக்குமாறு மக்களிடம் கூறினர் .

சுரேந்திரநாத் பானர்ஜி சுதேசிய விஷயத்தில் காட்டிய ஊக்கத்தைப் பாரதி ,

நமது நாட்டில் சுதேசிய விதையிட்டு , அவ் வயலின்கண் குடிலிட்டுக் கொண்டு இடைவிடாது காப்பவர் இம்மகான் என்பதை யாரும் மறுக்கார் என்று தமிழ்நாட்டு மக்களுக்குப் புலப்படுத்தினார் .

( மகாகவி பாரதி வரலாறு , பக் : 150 )

சுதேசிய உணர்வு நாடு முழுவதும் பரவினால்தான் விடுதலை கிடைக்கும் என்று பாரதி நம்பினார் .

ஆங்கிலேயர் , தம் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை விற்கும் சந்தையாக இந்தியாவை மாற்றினர் .

இந்தியாவிலுள்ள கைத்தொழில்கள் நலிந்தன .

எனவே , இந்தியரும் ஆங்கிலேயரை விடச் சிறந்த பொருள்களை உற்பத்தி செய்யும் திறமை உடையவர் என்று காட்டும் வகையில் பெருமிதத்தோடு ,

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்

பண்ணி மலைகளென வீதி குவிப்போம்

ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்

உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்

( பாரத தேசம் , 8 & 12 )

( பண்ணி = செய்து , உவந்து = மகிழ்ந்து )

என்று பாடினார் .

இந்திய மக்கள் சுதேச உணர்வுடன் செயல்பட்டால் ஆங்கிலப் பொருட்களை வாங்கத் தேவையில்லை என்றும் விளக்கினார் .

2.1.3 பாரதியும் தீவிரவாதமும்

நாட்டின் எல்லாத் திசைகளிலும் சுதேசிய உணர்வு மேலோங்கி , ‘ வந்தே மாதரம் ’ என்னும் மந்திரச் சொல்லே எங்கும் எதிரொலித்தது .

( வந்தே மாதரம் என்றால் ‘ தாயை வணங்குகிறோம் ’ என்று பொருள்படும் - இந்திய நாடு தாயாக மதிக்கப்பட்டது )

காசியில் காங்கிரஸ்

அந்தச் சமயத்தில் காங்கிரசின் 21-வது சபை காசியில் கூடியது .

காங்கிரஸ் சபைக்குக் கோபால கிருஷ்ண கோகலே தலைமை தாங்கினார் .

அவர் சுதேசியம் , அந்நியப் பொருள்கள் விலக்கு என்கிற கொள்கைகளுக்கு ஆதரவாகப் பேசினார் .

ஆனால் ஆங்கில அரசுடன் ஒத்து இருந்து அரச நம்பிக்கையுடன் கூடிய சுய ஆட்சி பெறவேண்டும் என்று அவர் விரும்பியதை அவருடைய பேச்சு உணர்த்தியது .

கோகலேயின் நிதானப்போக்கு , ஆங்கில அரசுடன் ஒத்துப்போகவேண்டும் என்ற கொள்கை முதலியவை பாலகங்காதர திலகருக்குப் பிடிக்கவில்லை .

முதன் முதலாக அவர் சாத்வீக எதிர்ப்புக் கொள்கையை ( தீவிரவாதக் கொள்கையை ) இந்தக் காங்கிரஸ் சபையில் வெளியிட்டார் .

பாலகங்காதர திலகர் கருத்தைப் பலர் ஆதரித்தனர் .

அவர்கள் ‘ நமக்கு நாமே துணை ’ என்ற கொள்கையின் அடிப்படையில் நாட்டுப் பணிகளை ஆற்ற வேண்டும் என்று கருதினர் .

அதற்கு , அன்னியப் பொருள்களை நிராகரிப்பது ஒன்றே சிறந்த வழி என்று கண்டனர் .

பாரதி , லாலா லஜ்பதிராய் , அரவிந்தர் , விபின சந்திர பாலர் ஆகியோர் பாலகங்காதர திலகரின் கொள்கையை ஏற்றுக்கொண்டனர் .

கல்கத்தாவில் காங்கிரஸ் கூட்டம்

1906-இல் கல்கத்தாவில் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது .

அக்கூட்டத்தில் , மிதவாதிகள் அன்னிய நாட்டுப் பொருள்களை நிராகரிக்கக்கூடாது என்று கூறிப் பாலகங்காதர திலகரைப் பற்றி அவதூறாகப் பேசினர் .

பாரதி இப்போக்கைக் கண்டித்தார் .

இந்தக் கூட்டத்தின் போது காங்கிரஸில் தீவிரவாத மிதவாத எண்ணங்கள் கொண்ட இரு பிரிவுகள் இருந்தன என்பது வெளிப்பட்டது .

கூட்டத்தில் ‘ இந்தியாவுக்குச் சுய ராஜ்ஜியம் தேவை ’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

சுய ராஜ்ஜியம் என்றால் என்ன ?

சுயராஜ்ஜியம் என்பதற்குப் பாரதி , " ஸ்வ என்றால் தனது என்று அர்த்தமாகிறது .

யாருடையது ?

பாரத தேவியினுடையது .

பாரத தேவி தன்னைத்தானே பரிபாலனம் செய்து கொள்வது ‘ ஸ்வராஜ்யம் ’ ஆகும் " என்று குறிப்பிட்டதாகச் சீனி .

விசுவநாதன் தம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார் .

( மகாகவி பாரதி வரலாறு , பக்.252 ) மேலும் மதுவிலக்கு , பெண் கல்வி , சுதேசக் கல்வி ஆகியவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்பதும் தீவிரவாதிகளின் எண்ணங்களாகும் .

பாரதி , சகோதரி நிவேதிதா என்பவரைக் கல்காத்தாவில் சந்தித்தார் .

பாரதியாரிடம் இருந்த விடுதலை இயக்க உணர்வுக்கு எழுச்சியும் , வேகமும் , முழுமையும் கொடுத்தவர் சகோதரி நிவேதிதா .

அந்தச் சந்திப்பிற்குப் பின்னரே பாரதி விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார் .

பாலகங்காதர திலகர் , விபின் சந்திர பாலர் , லாலா லஜபதிராய் , அரவிந்தர் ஆகியோர் தீவிரவாதத்தைச் சேர்ந்தவர்கள் .

கோபால கிருஷ்ண கோகலே , மேத்தா போன்றோர் மிதவாதக் கட்சியைச் சேர்ந்தவர்கள் .

பாரதி பாலகங்காதர திலகர் வழியில் நின்றார் .

அதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்ட விபின் சந்திர பாலரை அழைத்தார் .

பாலகங்காதர திலகரின் சொற்பொழிவைப் ‘ புதிய கட்சியின் ( தீவிரவாதம் ) கொள்கை ’ எனப் பாரதி அறிவித்துத் தம்மைப் புதிய கட்சியின் உறுப்பினராக வெளிப்படுத்தினார் .

பாரதி தீவிரவாதத்தில் ஈடுபாடு கொண்டதால் தான் இத்தாலி நாட்டு மாஜினியைப் பாடுகிறார் . ஆயுதம் கொண்டு போர் செய்வதிலும் இரகசிய சங்கங்கள் வைத்துப் போரிடுவதிலும் நம்பிக்கை கொண்டார் .

அதற்கேற்ப அவருடைய நண்பர்கள் வ.உ.சிதம்பரம் பிள்ளை , சுப்பிரமணிய சிவா ஆகியோரும் தீவிரவாதிகளாகவே விளங்கினர் .

அது போல் சுவாமி விவேகானந்தரின் தம்பி பூபேந்திரர் சிறந்த தேசபக்தரும் புரட்சிவாதியும் ஆவார் .

இவர்களின் செயல்பாடு ஆங்கில அரசை நிலை குலையச் செய்தது .

2.1.4 பாரதியும் ஆங்கில அரசும்

தீவிரவாதிகளின் போக்கால் அமைதி இழந்த ஆங்கில அரசு தீவிரவாதிகளைத் தண்டிக்க நினைத்தது .

பாரதி மீதும் வழக்குத் தொடரும் நோக்கில் அவரைக் கண்காணித்தது .

அரசாங்கத்திற்கு விரோதமாகச் சதி செய்பவர்களைத் தண்டிக்கச் சட்டம் இயற்றியது .

பாலகங்காதர திலகர் அரச நிந்தனை செய்யும் விதத்தில் ‘ கேசரி ’ பத்திரிகையில் எழுதினார் என்று கைது செய்யப்பட்டார் .

பாரதி இதைக் கண்டித்தார் .

ஆங்கில அரசு ‘ இந்தியப் ’ பத்திரிகையின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் கிருஷ்ணசாமி சர்மா , சுரேந்திரநாத் ஆரியா , ஜி.சுப்பிரமணிய அய்யர் ஆகியோரைக் கைது செய்தது .

அதனால் இந்தியா பத்திரிகை தொடர்ந்து வெளிவர இயலவில்லை .

பாண்டிச்சேரியில் பாரதி

ஆங்கில அரசு பாரதியைக் கைது செய்யச் சமயம் பார்த்திருந்தது .

அதனால் பாரதி தம் நண்பர்களின் அறிவுரைப்படி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரிக்குச் சென்றார் .

அங்குச் சென்று இந்தியா பத்திரிகையை மீண்டும் தொடங்கினார் .

அமைதி , ஒழுங்கு , அபிவிருத்தி ஆகியவையே தங்கள் கொள்கையென விளக்கினார் .

1911-ஆம் ஆண்டு நெல்லை மாவட்ட ஆட்சியாளர் ஆஷ் துரையை ‘ மணியாச்சி ’ என்னுமிடத்தில் வைத்து வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றார் .

இக்கொலைக்கும் பாரதிக்கும் தொடர்பு இருக்கும் என்று ஆங்கிலேயர் சந்தேகப்பட்டனர் .

‘ பாரதியாரின் கனவு ’ , ‘ ஆறில் ஒரு பங்கு ’ என்னும் இரண்டு படைப்புகளும் தடை செய்யப்பட்டன .

பாரதி அவை காதல் பாட்டும் , சமூக சீர்திருத்தக் கதையுமே ஆகும் என்று விளக்கம் தந்தார் .

ஆயினும் அதற்குப் பலனில்லை .

பாரதியார் கைது

முதல் உலகப்போரில் பிரிட்டன் இந்தியரின் உதவியை நாடி வெற்றி பெற்றது .

காங்கிரசில் தலைவர்கள் தங்கள் பகையை மறந்தனர் .

பிரிட்டன் வெற்றி பெற்றதால் தமக்கு ஆபத்து இல்லை என்று கருதிய பாரதி 1918-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் நாள் சென்னைக்குப் புறப்பட்டார் .

சென்னைக்கு வரும் வழியில் கடலூரில் அவரை ‘ அரசியல் கிளர்ச்சியாளர் ’ என்று காரணம் காட்டி ஆங்கில அரசு கைது செய்தது .

பாரதி தம் நிலை பற்றி விவரமாகச் சென்னை மாகாண கவர்னருக்குக் கடிதம் எழுதினார் , பலனில்லை .

இறுதியில் இந்தியாவின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்ட குடிமகனாக வாழ்வதாகவும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதாகவும் எழுத்து பூர்வமாகக் கொடுத்த நிபந்தனையின் பேரில் 1918-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் நாள் விடுதலையானார் .

2.1.5 பாரதியும் காந்தி அடிகளும்

அரசியல் உலகில் காந்தியடிகளின் செல்வாக்கு மேலோங்கித் தீவிரவாதிகளின் பங்கு குன்ற ஆரம்பித்தது .

இக்காலக் கட்டத்தில் படிப்படியாகப் பாரதி காந்தியின் அரசியல் குணங்களைப் போற்றவும் கடைப்பிடிக்கவும் முன் வந்தார் .

தென்னாப்பிரிக்காவில் அநியாயத்தை நியாயத்தால் வென்ற காந்தியின் கொள்கை வழி இந்தியாவில் விடுதலை இயக்கம் செயல்படவேண்டும் என்று பாரதி விரும்பினார் .

மகாத்மா காந்தி என்னும் மந்திரசக்தி பெரும்பான்மை மக்களை அவரது தலைமையின் கீழ் ஒன்றுபடச் செய்தது .

இது பாரதியிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது .

தாம் இருந்த கட்சிதான் சிறந்தது என்றோ , தம் கொள்கையே மேலானது என்றோ விடாப்படியாக இல்லாமல் காலத்துக்கு ஏற்ப மாற்றம் தேவை என்பதை உணர்ந்தார் பாரதி .

தம்மை மாற்றிக் கொண்டார் .

இந்தியாவை வாழ்விக்க வந்த மகாத்மா என்று அவரைப் பாராட்டினார் .

அந்தப் பாராட்டைக் கீழ்க்காணும் அடிகளில் காணலாம் .

பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை

வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க !

( மகாத்மா காந்தி பஞ்சகம் , 1 )

2.1.6 பாரதியும் மிதவாதமும்

துவக்க காலத்தில் தீவிரவாதக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட பாரதி பின்னர் ஏன் மிதவாதப் போக்கினை ஏற்றுக் கொண்டார் ?

அரசியல் உலகில் காந்தியடிகளின் கோட்பாடுகளே மேலோங்கும் என்ற தொலைநோக்குப் பார்வை அவரை மாற்றியது .

இந்தியாவின் விடுதலை சாத்விக முறையில்தான் கிடைக்கும் என்ற உணர்வு , மகாத்மா காந்தி காட்டிய அறவழியில் நின்று போராடத் தூண்டியது .

அந்த அறவழியை ,

நெருங்கிய பயன்சேர் ‘ ஒத்துழையாமை ’

நெறியினால் இந்தியாவிற்கு

வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து வையகம் வாழ்க நல்லறத்தே