16

உயிர்எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டும் சேர்த்து முப்பது முதல் எழுத்துகளும் எவ்வாறு பிறக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டீர்கள் .

இனி அடுத்த நிலையில் சார்புஎழுத்துகளின் பிறப்பினைப்பற்றித் தெரிந்து கொள்வோம் .

நீங்கள் முந்தைய பாடங்களில் சார்புஎழுத்துகள் பத்து என்று படித்து இருப்பீர்கள் .

அவை ,

( 1 ) உயிர்மெய்

( 2 ) ஆய்தம்

( 3 ) உயிரளபெடை

( 4 ) ஒற்றளபெடை

( 5 ) குற்றியலிகரம்

( 6 ) குற்றியலுகரம்

( 7 ) ஐகாரக்குறுக்கம்

( 8 ) ஒளகாரக்குறுக்கம்

( 9 ) மகரக்குறுக்கம்

( 10 ) ஆய்தக்குறுக்கம்

ஆகியன .

சார்புஎழுத்துகளைப் பத்து என்று வகைப்படுத்தியிருப்பது நன்னூல் .

ஆனால் தொல்காப்பியம் சார்பெழுத்துகளை மூன்று என்று மட்டுமே தெரிவிக்கின்றது .

அவை ,

( 1 ) குற்றியலிகரம்

( 2 ) குற்றியலுகரம்

( 3 ) ஆய்தம்

ஆகியன .

சார்பெழுத்துகள் பிறக்கும் முறையினைப் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளைத் தனித்தனியே காண்போம் .

3.5.1 சார்பெழுத்துகள் பிறப்புப் பற்றித் தொல்காப்பியம்

தொல்காப்பியம் முப்பது முதல்எழுத்துகளின் பிறப்பினை விளக்கிய பின்னர்ச் சார்புஎழுத்துகளின் பிறப்பினை எடுத்துக் கூறுகின்றது .

தாமே தனித்து வரும் இயல்பில்லாமல் சில எழுத்துகளைச் சார்ந்துவரும் இந்தச் சார்புஎழுத்துகள் மூன்றும் தத்தமக்குச் சார்பாகிய எழுத்துகளின் பிறப்பிடத்திலேயே பிறக்கும் என்று தொல்காப்பியம் விளக்குகிறது .

( எழுத்து .

3 : 10 )

ஆய்தம் மட்டும் குற்றெழுத்தைச் சார்ந்து வரும் எனினும் , அது தலையில் தங்கி வெளிப்படும் காற்றினால் பிறப்பதால் , உயிரோடு சேர்ந்து வரும் , வல்லெழுத்தினைச் சார்ந்தே பிறக்கும் .

வல்லின மெய்கள் தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எனத் தொல்காப்பியம் கூறுவதை முன்பு கண்டீர்கள் .

3.5.2 சார்பெழுத்துகள் பிறப்புப் பற்றி நன்னூல்

நன்னூல் சார்பெழுத்துளைப் பத்து என்று பட்டியலிட்டுக் கூறியிருப்பதை முன்னரே அறிந்து கொண்டீர்கள் .

இந்தப் பத்தினுள் ஆய்தம் பிறக்கும் இடம் தலை ஆகும் .

ஆய்தம் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சி வாயைத் திறத்தல் .

இது நீங்க , எஞ்சியிருக்கும் ஒன்பது சார்புஎழுத்துகளும் தத்தம் முதல் எழுத்துகள் பிறக்கும் இடத்தில் பிறப்பன .

அந்த முதல் எழுத்துகளுக்குத் தேவைப்படும் முயற்சியே இவை பிறப்பதற்குத் தேவைப்படுவன .

இதனை ,

ஆய்தக்கு இடம்தலை ; அங்கா முயற்சி ; சார்புஎழுத்து ஏனவும் தம்முதல் அனைய ( நூற்பா .

86 )

என்னும் நன்னூல் நூற்பா விளக்குகின்றது .

எழுத்துகளின் பிறப்புக்குப் புறனடை

இதுவரை , தமிழில் உள்ள எழுத்துகள் ஒவ்வொன்றும் பிறக்கின்ற இடமும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சியும் குறித்து விரிவாக அறிந்து கொண்டீர்கள் .

எனினும் இந்த எழுத்துகளுக்குச் சொல்லப்பட்ட பிறப்பு விதிகள் அந்தந்த எழுத்துகளை இயல்பாக ஒலிக்கின்ற போது மட்டும் பொருந்துவன .

இந்த எழுத்துகளை உயர்த்தியோ , தாழ்த்தியோ அல்லது நடுத்தரமாகவோ ஒலிக்கும் போது இவற்றில் சில மாறுதல்கள் எழுகின்றன .

இதனைத் தெரிவிப்பதே புறனடை ( விதிவிலக்கு ) எனப்படும் .

இதனை ,

எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிதுஉள வாகும் ( நூற்பா .

87 )

என்று நன்னூல் விளக்குகின்றது . இந்நூற்பாவில் எடுத்தல் என்பது உயர்த்தி ஒலித்தல் என்றும் , படுத்தல் என்பது தாழ்த்தி ஒலித்தல் என்றும் , நலிதல் என்பது நடுத்தரமாக ஒலித்தல் என்றும் பொருள்படும் .

எனவே எழுத்துகளுக்கான பிறப்பு விதிகள் அவற்றை உயர்த்தியும் தாழ்த்தியும் ஒலிக்கும் போது சிற்சில மாற்றங்களோடு அமைகின்றன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் .

மெய்யெழுத்துகளின் பிறப்பும் மொழியியல் கருத்தும்

எழுத்துகளின் பிறப்புக் குறித்து இலக்கண நூல்கள் தெரிவித்த பொதுவான கருத்துகளை மொழியியல் அறிஞர்களின் கருத்துகளோடு ஒப்பிட்டு அறிந்தீர்கள் .

பின்னர் உயிர்எழுத்துகளின் பிறப்புக் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவித்த கருத்துகளையும் மொழியியல் கருத்துகளோடு ஒப்பிட்டுத் தெரிந்து கொண்டீர்கள் .

இந்தப்பாடத்தில் மெய்யெழுத்துகளின் பிறப்புக் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவித்திருக்கும் கருத்துகளை மொழியியல் கருத்துகளோடு பொதுவாக ஒப்பிட்டுக் காண்போம் .

தொல்காப்பியமும் நன்னூலும் மெய்யெழுத்துகள் பிறக்கின்ற இடத்தை அடிப்படையாக வைத்து மூன்று வகையாகப் பிரித்துள்ளன .

அவை :

வல்லின மெய்கள் - பிறப்பிடம் நெஞ்சு ( நன்னூல் ) ; தலை ( தொல் . )

மெல்லின மெய்கள் - மூக்கு

இடையின மெய்கள் - கழுத்து ( மிடறு )

மொழியியல் அறிஞர்களும் மெய்யொலிகளை முதலில் அவை பிறக்கின்ற இடத்தை வைத்துப் பிரிக்கின்றனர் .

அடுத்த நிலையில் அந்த மெய்யொலி பிறப்பதற்கு முயற்சியில் ஈடுபடும் உறுப்புகளின் அடிப்படையில் பிரிக்கின்றனர் .

எனவே மொழியியல் அறிஞர்கள் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து வெளியிட்டுள்ள பாகுபாடு , இலக்கண நூல்கள் கூறும் பிறப்பிலக்கண அடிப்படையில் அமைந்திருக்கும் சிறப்பு வெளிப்படக் காண்கிறோம் .

பிறப்பிடம் குறித்த செய்திகள் ஒப்பிட்டு அனைத்தையும் ஆராய்வது மிகவும் நீண்டு விடும் .

எனவே , மெல்லின மெய்களின் பிறப்பிடத்தை மட்டும் ஒப்பிட்டுக் காண்பது போதுமானதாக அமையும் .

மொழியியல் அறிஞர்கள் மெல்லின மெய்களை அவற்றின் பிறப்பிடம் நோக்கி ‘ மூக்கொலி ’ ( Nasal ) என்று வரையறுக்கின்றனர் .

இந்த மூக்கொலிகளுள் ஒன்றாகிய மகரம் பிறப்பதை ,

இதழ்இயைந்து பிறக்கும் பகார மகாரம் ( எழுத்து .

3 : 97 )

என்று தொல்காப்பியமும் ,

மீகீழ் இதழ்உறப் பம்மப் பிறக்கும் ( நூற்பா .

80 )

என்று நன்னூலும் தெரிவிக்கின்றன .

மொழியியல் அறிஞர்கள் மகரத்தை முதலில் மூக்கொலி என்று வகைப்படுத்தி விட்டுப் பின்னர் அது ஈரிதழ் ஒலி என்று விளக்கிக் கூறுகின்றனர் .

தொகுப்புரை

இந்தப் பாடத்தில் தமிழில் மெய்யெழுத்துகளின் வரிசையில் வல்லின , மெல்லின , இடையின மெய்கள் அடுக்கப்பட்டிருக்கும் முறை விளக்கப்பட்டது .

வல்லின , மெல்லின , இடையின மெய்களின் பிறப்பிடங்கள் விளக்கப்பட்டன .

மூவகை மெய்யெழுத்துகளுக்கும் பிறப்பிடம் வெவ்வேறாக அமைகின்றன என்றாலும் பிறப்பு முயற்சியில் வல்லின மெல்லின மெய்கள் ஒத்திருப்பதை இலக்கண நூல்கள் விளக்குகின்றன .

‘ க் ங் , ச் ஞ் , ட் ண் , த் ந் , ப் ம் , ற் ன் ’ என்ற வகையில் இவ்வெழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் உறுப்புகளின் முயற்சி விளக்கப்படுகின்றது .

இடையின மெய்களின் பிறப்பினை விளக்கும் போது நன்னூல் ய , ர , ழ , ல , ள , வ என்று பிரித்துக் கொண்டு அவற்றின் பிறப்பின் தன்மையை வெளிப்படுத்துகின்றது .

மெய்யெழுத்துகளோடு , சார்புஎழுத்துகளின் பிறப்பும் இப்பாடத்தில் விளக்கப்பட்டது .

சார்பெழுத்துகளின் எண்ணிக்கையும் எடுத்துக்காட்டப்பட்டது .

மெய்யெழுத்துகளின் பிறப்பினைக் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவித்த கருத்துகளின் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் தொகுத்துக் காட்டப்பட்டன .

தமிழ் இலக்கண நூல்கள் எழுத்தொலிகளின் பிறப்புக் குறித்துக் கூறியுள்ள செய்திகளையே மொழியியல் அறிஞர்களும் தெரிவித்துள்ளனர் என்பது மெல்லின மெய்களைக் கொண்டு விளக்கப்பட்டது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. இடையின மெய்களை நன்னூல் எவ்வகையில் பிரித்து விளக்குகின்றது ?

விடை

2. ய் , ர் , ழ் - மெய்கள் எவ்வாறு பிறக்கின்றன ?

விடை

3. ல் , ள் , வ் - மெய்கள் எவ்வாறு பிறக்கின்றன ?

விடை

4. தொல்காப்பியமும் நன்னூலும் கூறும் சார்பெழுத்துகளைப் பட்டியலிடுக .

விடை

5. சார்பெழுத்துகள் எவ்வாறு பிறக்கின்றன ?

விடை

6. எழுத்துப் பிறப்பிற்குத் தெரிவிக்கப்படும் புறனடையை விளக்குக .

விடை

7. மெய்யொலிகளின் பிறப்புக் குறித்துத் தமிழ் இலக்கண நூல்களும் மொழியியல் அறிஞர்களும் தெரிவிக்கும் கருத்துகளை ஒப்பிடுக .

பதம் - பொது அறிமுகம் பாட முன்னுரை

தமிழ் எழுத்துகள் தனித்தனியே வருகின்றபோது அவற்றிற்குரிய மாத்திரை முதலிய செய்திகளை , நீங்கள் முன்னரே அறிந்து கொண்டீர்கள் .

தமிழ் எழுத்துகள் எவ்வாறு பிறக்கின்றன என்பதையும் இதற்கு முந்தைய மூன்று பாடங்களில் தெரிந்து கொண்டீர்கள் .

இப்போது தனித்தனியே இருக்கும் எழுத்துகள் சொல்லாக உருவாகும் முறையை இந்தப் பாடத்தில் தெரிந்து கொள்ளலாம் .

பதம் என்பதன் பொருள் வரையறை

ஓர் எழுத்துத் தனியே வந்து பொருளைத் தந்தால் , அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருளைத் தந்தால் அது பதம் எனப்படும் .

பதம் என்பது ‘ சொல் ’ ( word ) என்று பொருள்படும் .

சொல் என்பதை உணர்த்த ‘ மொழி ’ என்ற சொல்லையும் பயன்படுத்தலாம் .

எனவே பதம் , சொல் , மொழி ஆகிய மூன்று சொற்களும் , பொருள் தரக்கூடிய தனி எழுத்தை அல்லது எழுத்துகளின் கூட்டத்தைக் குறிப்பன எனக் கொள்ளலாம் .

இதனை நன்னூல் ,

எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம்

( நூற்பா - 127 )

என்ற நூற்பாவில் விளக்குகிறது .

இந்த நூற்பாவில் பின்வரும் செய்திகள் வெளிப்படையாகப் புலப்படுகின்றன ; அவை ,

( 1 ) எழுத்துத் தனித்தும் வரலாம் .

( 2 ) ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வரலாம் .

( 3 ) ஆனால் அது பொருள் தருதல் வேண்டும் என்பதே இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் .

இந்த நூற்பா உட்கருத்தாக மற்றொரு பொருளையும் தெரிவிக்கிறது .

எழுத்துத் தனித்து வந்தாலும் , எழுத்துகள் தொடர்ந்து வந்தாலும் பொருள் தரவில்லை என்றால் அது பதமாகாது ; சொல்லெனக் கருதப்படமாட்டாது என்பதே அந்தக் கருத்தாகும் .

எனவே , இந்த நூற்பாவில் உயிர்ப்பாக இருப்பது ‘ பொருள் தருதல் ’ என்னும் தொடராகும் .

முதலில் தனித்துவரும் எழுத்துப் பதமாவதற்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம் .

ஆ , ஈ - இவ்விரண்டு எழுத்துகளும் தனித்தனியே வந்து பொருள் தருகின்றன .

‘ ஆ ’ என்பது பசு என்னும் பொருளையும் , ஈ என்பது பெயர்ச்சொல்லாக இருந்தால் பூச்சியாகிய ஈ என்னும் பொருளையும் , வினைச்சொல்லாக இருந்தால் ‘ தா ’ என்னும் பொருளையும் உணர்த்துகின்றன .

எனவே ஆ , என்பது ஒரு பதமாகிறது .

ஈ என்பது மற்றொரு பதமாகிறது .

தனித்து வரும் எழுத்துப் பதமாகாமல் இருப்பதற்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம் .

ச , க என வரும் குற்றெழுத்துகள் தனியே வருகின்றபோது அவை எந்தப் பொருளையும் உணர்த்துவதில்லை .

எனவே பதமாகவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம் .

இரண்டாவதாக , எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருகின்ற போது பதமாகின்றதற்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம் .

தலை , தலைவி , தலைவன் என வரும் சொற்களை எடுத்துக் கொள்ளுங்கள் .

தலை - இரண்டெழுத்துகள் வந்து பொருள் தந்துள்ளது .

தலைவி - மூன்றெழுத்துகள் வந்து பொருள் தந்துள்ளது .

தலைவன் - நான்கு எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருகின்றது .

எழுத்துகள் தொடர்ந்து வந்தாலும் பொருள்தராமல் இருப்பின் பதம் ஆகாததற்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம் .

கப , கபம , கிகருந என வருவனவற்றில் எழுத்துகள் தொடர்ந்து வந்துள்ளன .

ஆனால் இவை பொருள் தரவில்லை என்பதால் பதமாக ஆவதில்லை .

இதனை நன்கு மனத்தில் பதித்துக் கொள்ள வேண்டும் .

4.1.1 ஓரெழுத்து ஒருமொழியும் , தொடர்எழுத்து ஒரு மொழியும்

எழுத்துகள் தனித்து வந்து பொருள் தருவதும் , தொடர்ந்து வந்து பொருள் தருவதும் பதம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது .

அவ்வாறு ஓர்எழுத்து மட்டும் தனித்து நின்று பொருள் தருமானால் அது ஓர்எழுத்து ஒருமொழி என்று அழைக்கப்படுகின்றது .

பல எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருமானால் அது தொடர் எழுத்து ஒருமொழி என்று அழைக்கப்படுகின்றது .

இந்த இருவகைச் சொற்கள் ( மொழி ) குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளைக் காண்போம் .

தொல்காப்பியர் கருத்து

தொல்காப்பியர் எழுத்துகளை விளக்கி விட்டுச் சொல் தோன்றும் முறையை எடுத்துக்காட்டுகிறார் .

தொல்காப்பியர் , சொல் மூன்று முறைகளில் தோன்றும் என்று வகுத்துரைக்கிறார் .

அவை ,

( 1 ) ஓர்எழுத்து ஒருமொழி

( 2 ) ஈர்எழுத்து ஒருமொழி

( 3 ) பலஎழுத்து ஒருமொழி

.ஆகியன. இக்கருத்தை , ஓர்எழுத்து ஒருமொழி ஈர்எழுத்து ஒருமொழி இரண்டுஇறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே ( எழுத்து .

2 : 45 )

என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குகின்றது .

எனவே மேலே கண்ட மூவகை நிலைகளையும் இனித் தனித்தனியே காண்போம் .

4.2.1 ஓர்எழுத்து ஒருமொழி

தமிழில் உள்ள உயிர்எழுத்துகள் பன்னிரண்டில் நெடில்எழுத்துகளாக இருக்கும் ஏழு எழுத்துகளும் ஓர்எழுத்து ஒருமொழிகள் என்பதை ,

நெட்டெழுத்து ஏழே ஓர்எழுத்து ஒருமொழி

( எழுத்து .

2 : 43 )

என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குகின்றது .

இந்நூற்பா , ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ , ஒள எனவரும் ஏழு நெடில் எழுத்துகளும் பொருள் தருவன .

எனவே இவை ஓர்எழுத்து ஒருமொழிகள் என்று விளக்குகின்றது .

இந்த நெடில்எழுத்துகள் ஒவ்வொன்றிற்கும் என்ன பொருள் என்பதைக் காண்போம் .

வ.எண் எழுத்து பொருள்

( 1 ) ஆ பசு

( 2 ) ஈ ஈ

( 3 ) ஊ இறைச்சி

( 4 ) ஏ அம்பு

( 5 ) ஐ அழகு , தலைவன்

( 6 ) ஓ மதகுநீர் தாங்கும் பலகை

( 7 ) ஒள இந்த எழுத்திற்குப் பொருள் இல்லை

மேலே கண்டவற்றுள் ‘ ஒள ’ என்னும் எழுத்து ஓர்எழுத்து ஒருமொழி ஆவதில்லை .

எனவே இந்நூற்பாவிற்கு உரை கூறும் அறிஞர்கள் , இந்த நூற்பா உயிர்எழுத்துகளுக்கும் உயிர்மெய்எழுத்துகளுக்கும் பொது என்பதால் ‘ ஒள ’ என்பதை உயிர்மெய்யில் வரும் ‘ கௌ , வௌ ’ முதலியவற்றை உணர்த்துவதாகக் கருதவேண்டும் என்று தெரிவிக்கின்றனர் .

எனவே உயிர்எழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஆறு மட்டுமே ஓர்எழுத்து ஒருமொழி என்பதைப் புரிந்து கொள்ளலாம் .

உயிர் எழுத்துகளில் நெட்டெழுத்துகளைப் பற்றிக் கூறிய தொல்காப்பியம் , குற்றெழுத்துகள் ஐந்தும் ஒர்எழுத்து ஒருமொழியாக வருதல் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகின்றது .

குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே

( எழுத்து .

2 : 44 )

என்பது தொல்காப்பிய நூற்பா .

இந்த நூற்பாவைக் காணும்போது அ , இ , உ , எ , ஒ என வரும் குற்றெழுத்துகளில் அ , இ , உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டுப் பொருளை உணர்த்துவன என்பது நினைவுக்கு வரும் .

எ என்னும் எழுத்து வினாப்பொருளை உணர்த்தும் என்பதும் நினைவுக்கு வரும் .

ஆனால் இவற்றை ஏன் ஓர்எழுத்து ஒருமொழி என்று குறிப்பிடவில்லை என்ற வினா நமக்கு எழக்கூடும் .

அ , இ , உ இம் மூன்றும் சுட்டெழுத்துகள் ; எ என்பது வினா எழுத்து .

சுட்டெழுத்துகளும் வினா எழுத்தும் ‘ இடைச் சொற்கள் ’ என்னும் பிரிவில் அடங்குவன .

இடைச்சொல் என்பது தனியே வந்து பொருள் தரக்கூடியது அல்ல .

அது பிற சொற்களோடு ( பெயர் , வினை ) சேர்ந்து வந்தே பொருள் தரும் .

எனவே தனியே நின்று பொருள் தராத காரணத்தால் சுட்டெழுத்துகளான அ , இ , உ ஆகியவையும் ‘ எ ’ என்னும் வினா எழுத்தும் ஓர்எழுத்து ஒருமொழி என்னும் இலக்கண வரம்பிற்குள் வரவில்லை என்பது தெளிவாகிறது .

4.2.2 ஈர்எழுத்து ஒருமொழி

தொல்காப்பியர் சொல் தோன்றும் முறையில் அடுத்ததாகக் கூறுவது ஈரெழுத்து ஒருமொழி ஆகும் .

இரண்டு எழுத்துகள் சேர்ந்து வந்து பொருள் தருமானால் , அது ஈர்எழுத்து ஒருமொழி எனப்படும் .

அணி , மணி , கல் , நெல் எனவரும் சொற்களில் இரண்டு எழுத்துகள் இணைந்து வந்து பொருள் தருவதைக் காணலாம் .

இவை ஈர்எழுத்து ஒருமொழிக்கு எடுத்துக்காட்டுகள் .

4.2.3 தொடர்எழுத்து ஒருமொழி

பல எழுத்துகள் சேர்ந்து வந்து பொருள் தருவதைத் தொடர்எழுத்து ஒருமொழி என்று அழைப்பர் .

இரண்டுக்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருமானால் அது தொடர்எழுத்து ஒருமொழி ஆகும் என்கிறார் , தொல்காப்பியர் .

கல்வி , கொற்றன் , பாண்டியன் என வரும் சொற்களைப் பாருங்கள் .

( 1 ) கல்வி - என்பதில் மூன்று எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருகின்றன .

( 2 ) கொற்றன் - இதில் நான்கு எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருகின்றன .

( 3 ) பாண்டியன் - இதில் ஐந்து எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருகின்றன .

ஆக , தொல்காப்பியம் , ஒன்று , இரண்டு , பல என்னும் அடிப்படையில் எழுத்துகள் இணைந்து வந்து பொருள் தருவதை விளக்குகிறது . நன்னூலார் கருத்து