160

( மகாத்மா காந்தி பஞ்சகம் , 5 )

என்று பாரதியார் பாடுகின்றார் .

இவ்வடிகளில் பாரதியார் உணர்த்தும் செய்தி என்ன ?

i ஒத்துழையாமை நெறி ‘ நெருங்கிய பயன் ’ தருவது ; அது இந்தியாவிற்கு ‘ நல்ல கதி ’- போற்றக்கூடிய விரும்பக் கூடிய நல்ல நிலையினை - அளிக்கக் கூடியது .

ii அதை உணர்ந்து வையகம் ( உலகம் ) ‘ பகைத் தொழில் ’ மறந்து , ‘ நல்லறத்தே ’ வாழ்வதாக .

2.2 பெண் விடுதலை

பண்டைக் காலத்தில் பாரத நாட்டில் பெண்களுக்குப் பெருமதிப்பு இருந்தது .

பெண்ணை ‘ வாழ்க்கைத் துணை ’ என்று காட்டினார் வள்ளுவர் .

ஒளவையார் என்ற பெண்பாற் புலவர் தூதுவராகச் சென்றதைப் புறநானூறு காட்டுகிறது .

பெண்களைச் சக்தியின் உருவமாகக் கருதியது பாரத நாடே .

பெண்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் குறையலாயின .

பெண்களுக்குக் கல்வி அறிவு தேவை இல்லை என்ற நிலை ஏற்பட்டது .

பெண்கள் அடிமைபோல் நடத்தப்பட்டனர் .

பெண்களுக்கு உரிய சமூக அந்தஸ்து ( social status ) மறுக்கப்பட்டது .

மக்கள் தொகையில் பாதியாக விளங்கும் பெண்களுக்குக் கல்வியறிவு இல்லையென்றால் சமூகம் மேம்பட முடியாது என்றுணர்ந்த சான்றோர்கள் பெண் கல்வியை வற்புறுத்தினர் .

பாரதியும் பெண்கள் கல்வியறிவு பெற வேண்டும் என வலியுறுத்தினார் .

2.2.1 பாரதியாரும் நிவேதிதா தேவியும்

பாரதியிடம் இயல்பாகவே காணப்பட்ட சுதந்திர எண்ணம் , அரசியல் மறுமலர்ச்சி , சமூகச் சீர்திருத்தம் , பெண் விடுதலை பற்றிய அக்கறை யாவும் நிவேதிதாவைச் சந்தித்த பின் மேலும் தீவிரமடைந்து பாரதியைக் செயல்பட வைத்தன .

பெண்ணுக்குச் சமூக விடுதலை கிடைக்காமல் நாட்டிற்கு அரசியல் விடுதலை அடைவதில் பலன் இல்லை என்ற எண்ணத்திற்கு வித்திட்டவர் நிவேதிதா .

கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்திற்குப் பாரதியார் சென்றபோது , நிவேதிதா தேவி பாரதியாரிடம் , " உன் மனைவியை நீ ஏன் அழைத்து வரவில்லை " என்று கேட்டாராம் .

அதற்குப் பாரதியார் , " இன்னும் மனைவியைச் சமமாகப் பாவித்துப் பொது இடத்துக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் எங்களிடையே ஏற்படவில்லை , தவிர காங்கிரசுக்கு என் மனைவியை அழைத்து வருவதால் பயன் என்ன ? " என்று கூறினாராம் .

பாரதியாரின் பதிலைக் கேட்ட நிவேதிதாதேவி மிகுந்த கோபம் கொண்டு , " பெண்களுக்குச் சம உரிமையும் , தகுந்த கல்வியும் கொடுக்காவிட்டால் சமூகம் எப்படிச் சீர்திருத்தம் பெறும் , மனைவியை உன் வலது கை என மதித்து வா " என்று உபதேசம் செய்தாராம் .

( பாரதி வாழ்க்கைச் சித்திரம் , பக் : 28 ) இந்த நிகழ்ச்சியே பெண் விடுதலை , பெண்ணுக்குச் சமஉரிமை என்னும் பொருள் பற்றி , பாரதியார் சிந்தனைகள் எழுச்சியுறக் காரணமாயின .

அதன் விளைவாக அவர் படைப்புகளில் அவை வேகத்தோடும் வீச்சோடும் வெளிப்பட்டன .

2.2.2 பெண் விழிப்புணர்வு

பெண் விடுதலை பெற வேண்டுமானால் அவள் விழிப்புணர்வு பெற வேண்டியது முதல் தேவை .

விழிப்புணர்வு ( awareness ) என்பது கவனத்துடன் செயல்படுவதற்குரிய அறிவைக் குறிக்கும் .

அதனால் பெண்களிடம் அவர்களுடைய உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார் பாரதியார் .

வங்காளப் பிரிவினைக்குப் பிறகு வங்கப் பெண்மணிகள் சுதேசிய இயக்கத்தில் மேற்கொண்ட முயற்சிகளைக் கண்டு வியப்புற்ற பாரதி தமிழ் நாட்டுப் பெண்களும் அவற்றையறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ‘ சக்கரவர்த்தினி ’ பத்திரிகையில் சுதேசிய எண்ணத்தைப் பற்றி எழுதினார் .

ஆண்களுக்கு அடங்கியே வாழ்ந்து பழகிய தமிழ்நாட்டுப் பெண்களுக்குப் பிறநாட்டுப் பெண்கள் எவ்விதம் இருக்கிறார்கள் என்று எடுத்துக்காட்ட விரும்பினார் .

எனவே , பெண் உரிமைக்காகப் போராடிய இயக்கங்களைப் பற்றி ‘ தர்மயுத்தம் ’ என்னும் தலைப்பில் ,

" துருக்கி நாட்டில் பெண்களுக்குள்ளே , நடந்த விடுதலைக் கிளர்ச்சி , தென் ஆப்பிரிக்காவில் ‘ பியேட்டர் மாரிஸ்பர்க் பட்டணத்தில் 1910-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘ பெண்கள் விடுதலைச் சங்கம் , ’ பிருத்தானியா , ‘ ஸ்திரி சாம்ராஜ்யம் ’ ஆகிய பெண்ணுரிமை இயக்கங்களைத் தமிழ் நாட்டுப் பெண்களுக்கு அறிமுகப்படுத்தினார் .

எல்லா நாடுகளிலும் பெண்கள் சுதந்திரம் பெற்று மனித இனத்தை மேன்மைப் படுத்த முயற்சி செய்கிறார்கள் .

தமிழ் நாட்டுப் பெண்கள் இதற்காக எந்த முயற்சியும் செய்யாமலிருக்கிறார்களே ஏன் ? "

என்று வினா எழுப்பி அவர்களைச் சிந்திக்கச் செய்தார் .

( பாரதியாரும் சமூகச் சீர்திருத்தமும் , பக் : 121 )

2.2.3 பெண்ணுரிமை இயக்கம்

ஆசியாவில் பெண்விடுதலைக்காகப் போராடிய சீனநாட்டு சியூசீன் என்ற பெண்ணைப் புகழ்ந்து அப்பெண் இயற்றிய பெண்ணுரிமை இயக்கப் பாடலைத் தமிழாக்கம் செய்தார் .

புதுச்சேரியில் கூடிய மகளிர் கூட்டத்தில் தம் மகள் சகுந்தலா பாரதியைக் கொண்டு அந்தப் பாடலைப் பாடச் செய்தாராம் .

( பாரதியும் சமூகச் சீர்திருத்தமும் , பக் : 122 ) அப்பாடலில் ,

விடுதலைக்கு மகளிரெல்லோரும்

வேட்கை கொண்டனம் ;

( பல்வகைப் பாடல்கள் , பெண்விடுதலை - 1 )

என்று பெண்கள் விடுதலை மீது விருப்பம் கொண்டதாகப் பாடியிருக்கிறார் .

மண்ணுலகில் உள்ள உயிர்கள் எல்லாம் கடவுள் என்றால் பெண்ணும் தெய்வம் அல்லவா ?

என்று கேட்டு அவளைத் தெய்வமாக மதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ,

மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்

மனையாளும் தெய்வ மன்றோ ? , , , , ,

( பாரதி அறுபத்தாறு , பெண் விடுதலை - 45 ) எனத் தெளிவுபடுத்துகின்றார் .

பாரதி நடத்திய தர்மயுத்தத்தின் பலன் என்ன ?

தமிழ் நாட்டில் ‘ பெண் விடுதலைக் கட்சி ’ தொடங்கப்பட்டது .

அந்தக் கட்சிக்குச் சதாசிவ அய்யர் என்ற நீதிபதியின் மனைவி மங்களாம்பிகை தலைவியானார் .

அவருக்குத் துணையாக நின்றார் அன்னிபெசன்ட் அம்மையார் .

பெண்கள் முன்னேற்றத்தில் தீராத ஆர்வம் கொண்டவர் பாரதி .

அவர்கள் நகை , ஆடை போன்ற வீண்ஆடம்பரங்களை விட்டுவிட வேண்டும் என்று எச்சரித்தார் .

அது தான் பெண் விடுதலைக்கு வழி வகுக்கும் என்பது அவர் எண்ணம் .

வேல்ஸ் இளவரசியின் எளிமையைப் பாராட்டி அதைப் பின்பற்றத் தூண்டினார் .

2.2.4 பெண் கல்வி

பெண்கல்வியின் அவசியத்தை எடுத்துக்காட்ட விரும்பிய பாரதி பிற்காலத்தில் சமூக சீர்திருத்தவாதியாக விளங்கிய டாக்டர் .

முத்துலக்ஷ்மி ரெட்டி எஃப் .

ஏ. பரீட்சையில் தேறின செய்தியையும் , பிற்காலத்தில் ‘ சிஸ்டர் ’ என்று அழைக்கப்பட்ட ஆர்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மாள் மெட்ரிகுலேஷனில் தேறிய செய்தியையும் ‘ சக்கரவர்த்தினி ’ பத்திரிகையில் வெளியிட்டார் .

( சக்கரவர்த்தினி , 1906 ஜனவரி , பக் : 143 )

பெண்களுடைய படிப்பில் பெற்றோர்கள் அக்கறை செலுத்த வேண்டுமென்று கூறினார் .

பெண்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றால்தான் இந்திய நாடு முன்னேறும் என்று நினைத்தார் .

அதனால் ,

மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்

வாணி பூசைக் குரியன பேசீர்

( சரஸ்வதி தேவியின் புகழ் - 10 )

என்று கலைமகளைப் பற்றிப் பெண்கள் பேச வேண்டும் என்று வலியுறுத்துகிறார் .

கலைமகள் யார் ?

கல்விக்கு அதிபதி .

கல்வித் தலைவியாம் கலைமகளைப் பற்றிப் பேசினால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது அவரது எண்ணம் .

பெண் விடுதலை இயக்கத்தை நாட்டு விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாகவே பாரதியார் கண்டார் .

2.2.5 பெண் உரிமை

சமுதாயத்தில் உள்ள பழக்க வழக்கங்களால் பெண்களுக்குப் பல உரிமைகள் மறுக்கப்பட்டன .

அந்த உரிமைகளை வழங்கினால் பெண்கள் விடுதலை அடைவது திண்ணம் என்று நம்பிய பாரதியார் , பெண்களுக்குரிய உரிமைகளாகக் கூறுவதைப் பாருங்கள் .

பெண் வயதுக்கு வருமுன்பு திருமணம் செய்து கொடுக்கக் கூடாது .

அவர்களுக்கு விருப்பமில்லாத ஒருவனை மணம் செய்து கொள்ள வற்புறுத்தக் கூடாது .

பெண் குழந்தைகளுக்குச் சொத்தில் சமபாகம் கொடுக்க வேண்டும் .

கணவன் இறந்த பின்பு மறுவிவாகம் செய்ய அனுமதிக்க வேண்டும் .

விவாகம் செய்யாமல் கைத்தொழில் முதலியன செய்து கௌரவமாக வாழ விரும்பும் பெண்களை அங்ஙனம் வாழ இடம் கொடுக்க வேண்டும் .

பெண்கள் கணவனைப் பிரிந்து வாழ விரும்பினால் அதற்கு இடமளிக்க வேண்டும் .

அவளை அவமானப் படுத்தக்கூடாது .

பெண்களுக்கு உயர்தரக் கல்வி கற்க வாய்ப்பளிக்க வேண்டும் .

என்பனவாகும் .

இவ்வுரிமைகள் பெற்றால் சமுதாயம் முன்னேறும் .

இவ்வுரிமைகளையும் விரைந்து அளிக்க வேண்டும் என்கிறார் .

( பாரதியும் சமூகச் சீர்திருத்தமும் , பக் : 133 )

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. வங்காளப் பிரிவினை மக்களிடம் எந்த உணர்வை ஊட்டியது ?

[ விடை ]

2. தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் பெயரைக் குறிப்பிடுக , [ விடை ]

3. தீவிரவாதியாக இருந்த பாரதியார் மிதவாதியாக மாறக் காரணம் என்ன ?

[ விடை ]

4. பாரதியிடம் பெண்ணுரிமைச் சிந்தனைகள் எழக் காரணமாக இருந்தவர் யார் ?

[ விடை ]

5. பாரதி கூறும் பெண் உரிமைகளில் மூன்றினைக் குறிப்பிடுக .

2.3 சாதி விடுதலை சாதி விடுதலை என்பது சில பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கும் இந்திய சமூகத்தின் கட்டுப்பாடுகள் அகற்றப்படுகின்ற நிலையைக் குறிக்கும் .

இந்தியாவில் பல்வேறு சாதிப் பிரிவுகள் காணப்பட்டன .

வெகு காலத்திற்கு முன்பு அரசர் , அந்தணர் , வணிகர் , வேளாளர் என்ற நால்வகைப் பிரிவுகள் தொழிலின் அடிப்படையில் காணப்பட்டன .

நாட்கள் செல்லச் செல்லப் பல்வேறு தொழில்கள் தோன்றின .

ஒரு தொழில் செய்வதன் அடிப்படையில் ஒருவருக்கு வழங்கப்பட்ட பெயர் நாளடைவில் அத்தொழில் செய்யாவிடினும் நிலைத்து நின்றது .

இத்தகைய சாதிப்பிரிவால் மக்களிடையே ஒற்றுமையில்லாமல் இருந்தது .

சாதிச் சண்டைகள் மிகுந்திருந்தன .

இந்தப் பலவீனமே ஆங்கிலேயருக்குப் பலமாக அமைந்தது .

இத்தனை சாதிப் பிரிவுகள் உள்ள நாட்டில் இவர்கள் எப்படி ஒன்றுபடுவார்கள் என்று இந்தியர்களை மலிவாக எடைபோட்டனர் .

சமூகச் சீர்திருத்த எண்ணம் கொண்ட பாரதியார் , இந்தியாவில் காணப்பட்ட ஒற்றுமையின்மைக்குக் காரணம் சாதி சமய வேறுபாடுகள் என்று உணர்ந்தார் .

அந்த உணர்வுகளை மக்கள் விட்டுவிட்டால் நாட்டில் ஒற்றுமை ஓங்கும் என்பதறிந்தார் .

அதற்காகவே , அந்தணர் , அந்தணர் அல்லாதவர் ஆகிய எல்லோரும் ஒன்றே என்ற கருத்தில் ,

ஜாதி மதங்களைப் பாரோம் .

வேதிய ராயினு மொன்றே - அன்றி

வேறு குலத்தின ராயினு மொன்றே !

( வந்தே மாதரம் - 1 )

........................ஜாதியில்

இழிவு கொண்ட மனிதரென்பது

இந்தியாவில் இல்லையே

( விடுதலை !

விடுதலை !

விடுதலை ! - 2 )

என்று சாதி சமயம் அற்ற சமுதாயம் அமையக் குரல் கொடுத்தார் .

தமிழ் நாட்டின் தென் மாவட்டத்திலுள்ள எட்டையபுரம் ஜமீனைச் சேர்ந்த கழுகுமலை என்ற ஊரில் மறவர்களுக்கும் சாணார்களுக்கும் ஏதோ தகராறு ஏற்பட்டு விட்டது .

அப்போது உற்சவ நேரம் .

வீதியில் தேரில் சுவாமியை அழைத்து வருவது அங்கு மரபு .

ஆனால் தகராறு காரணமாகத் தேரை விடக்கூடாது என்று மறித்தார்கள் .

அச்சமயம் கழுகுமலையின் கண்காணிப்பாளராக இருந்த வேங்கடராயர் கலகம் நடந்த இடத்தைப் பார்வையிடச் சென்றார் , ’இவன் யாரடா , பார்ப்பான் வழக்குத் தீர்க்க வந்தவன் ’ என்று சொல்லி யாரோ அவரைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டனர் .

இந்தச் சம்பவம் பாரதியின் நெஞ்சை வேதனைக்கு உள்ளாக்கியது .

சாதிச் சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும் , சாதி விடுதலை மிகவும் அவசியம் என்று அவர் கருத இந்த நிகழ்ச்சியும் ஒரு காரணமாயிற்று .

ஆகையால் இந்தியா விடுதலை பெற வேண்டுமென்றால் மக்கள் தம் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று பாரதி பாடிய பாடலைப் பாருங்கள் .

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

( பாரத நாடு , வந்தே மாதரம் - 1 )

( தாழ்வு = மதிப்புக்குறைவு )

இந்தியர்கள் தமக்குள் உயர்ந்த சாதி , தாழ்ந்த சாதி என்று வழக்கிட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட பாரதியார் .

சாதிகள் இல்லையடி பாப்பா !

குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

( பாப்பாப் பாட்டு - 15 )

( தாழ்ச்சி = குறைவு )

என்று குழந்தையைப் பார்த்துப் பாடுகிறார் .

2.3.1 தீண்டாமை

இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் தீண்டத் தகாதவர்களாக வைக்கப்பட்டிருந்தனர் .

இந்த அவலத்தைச் சுட்டிக் காட்டவே பாரதியார் ‘ ஆறில் ஒரு பங்கு ’ என்னும் சமூகச் சீர்திருத்தக் கதை எழுதினார் .

அதன் முகவுரையில் பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு சாதி , ஓர் உயிர் .

தொழில் வெவ்வேறாக இருக்கலாம் .

ஆயினும் உயர்வு தாழ்வு கூடாது என்றார் .

ஆறில் ஒரு பங்கு என்னும் நூலை உழவுத் தொழில் புரியும் பள்ளர் , பறையர் முதலிய வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன் என்று எழுதினார் .

( பாரதியாரும் சமூகச் சீர்திருத்தமும் , பக் : 98 ) பறையன் , பள்ளன் என மரியாதைக் குறைவாகச் சமுதாயத்தில் கூறப்பட்ட சொற்களைப் பறையர் , பள்ளர் என மரியாதையுடன் உயர்த்திக் கூறியவர் பாரதியே . பறையன் என்று கூறுவது இன்று சட்ட விரோதம் .

பாரதி கண்ட கனவு நனவாகியது .

அவர்கள் இன்று விடுதலை பெற்று விட்டார்கள் .

இன்னும் சில தளைகள் அவர்கள் நீங்கி முழு விடுதலை அடைய வேண்டும் .

அதுவே பாரதி கண்ட இலட்சியக் கனவு .

தென் ஆப்ரிக்காவில் ‘ இன ஒதுக்கல் ’ கொள்கை மூலம் அந்நாட்டு மக்கள் இந்தியர்களை ஒதுக்கியதைச் சுட்டிக்காட்டி , நாம் பள்ளர் பறையருக்குச் செய்ததை எல்லாம் அந்நிய நாடுகளில் பிறர் இந்தியருக்குச் செய்கிறார்கள் என்று குறிப்பிட்டார் பாரதியார் .

இப்படி பாரதியைத் தவிர வேறு யார் கூற முடியும் ?

விடுதலை பெற வேண்டுமாயின் , சில வகுப்பினரைத் தீண்டத்தகாதவராகக் கருதும் மனப்போக்கை இந்து மக்கள் மாற்றினாலன்றி விடுதலை கிடைக்காது என்று மகாத்மா காந்தி கூறியதையும் சுட்டிக் காட்டுகிறார் .

( பாரதியாரும் சமூகச் சீர்திருத்தமும் , பக்.103 )

எல்லோருக்கும் விடுதலை

பாரதியார் விடுதலை பற்றிப் பாடும்போது , ‘ விடுதலை !

விடுதலை !

இங்குப் பறையருக்கும் விடுதலை ! ’ என்று முதலில் பறையரைப் பற்றிப் பாடுவது அந்தச் சாதி மக்கள் சமுதாயத்தில் பட்ட துன்பத்தைப் புலப்படுத்துகிறது .

மேலும் அப்பாடலில் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டு அடங்கிக் கிடந்த தீயர் , புலையர் , பரவர் , மறவர் , குறவர் ஆகிய அனைவருக்கும் விடுதலை என்று ஆணையிடுகிறார் .

அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார் .

பாரதியின் நம்பிக்கை நம்மையும் நம்பிக்கை கொள்ளச் செய்கிறது .

எல்லோருக்கும் எல்லாமும்

எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ வேண்டும் என்பதைக் குறிக்கும் ‘ பாரத சமுதாயம் ’ என்ற பாடலில் ,

எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம்

எல்லோரும் இந்திய மக்கள்

( பாரத சமுதாயம் - 4 )

என்ற சமத்துவ சமூக நீதியைப் பாரதியார் காட்டுகிறார் .

பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக எழுந்த சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் என்னும் முப்பெரும் முழக்கத்தை எவ்வாறு செயல்படுத்தலாம் ?

சாதிப் பிரிவை ஒழித்தால் செயல்படுத்தலாம் .

இந்த எண்ணம் ,

தகரென்று கொட்டு முரசே !

பொய்மைச்

சாதி வகுப்பினை யெல்லாம்

( முரசு - 18 )

( தகர் = அழி )

என்னும் பாடலில் சாதிப் பிரிவைத் தகர்த்து எறிய ஆணையிடும் குரலாய் ஒலிக்கிறது .

‘ போகின்ற பாரதம் ’ என்ற பாடலில் ,

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ

( போகின்ற பாரதம் - 4 )

என்ற பாடலடி சாதி உணர்வு கூடாது என்று வலியுறுத்துவதைக் காட்டுகிறது .

2.3.2 சாதி ஒழிப்பு

சாதி ஒழிப்பு என்பது சாதிப் பிரிவை இல்லாமல் ஆக்கும் செயலைக் குறிக்கும் .

சாதிப்பிரிவை ஒழிக்க உதவும் ஆயுதம் எது ?

கல்வி .

கல்வி என்னும் ஆயுதத்தால் வீழ்த்தலாம் .

பாரதியார் இதை ,

வாழி , கல்வி செல்வம் எய்தி

மனம் மகிழ்ந்து கூடியே

மனிதர் யாரும் ஒருநி கர்ச

மானமாக வாழ்வமே !

( தேசியப் பாடல்கள் , விடுதலை -2 )

( எய்தி = அடைந்து )

என்ற பாடலடிகளில் உணர்த்தியிருக்கிறார் .

பாரதியின் நடுவு நிலைமை

பாரதியார் தம் சாதியினரான அந்தணர்களிடம் உள்ள தவறைச் சுட்டிக் காட்டத் தயங்கவில்லை . முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார்