163

3.4.2 இத்தாலியின் விடுதலை

ஒரு சமயம் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய இத்தாலி நாடு அந்நியர் படையெடுப்பால் சீர்குலைந்தது .

இத்தாலிய நாடு சிசிலி , ரோம் , வெனிஸ் , நேபில்ஸ் எனத் துண்டு துண்டாகப் பிரிந்தது .

ஒற்றுமையிழந்து தளர்ந்து போனது .

மக்களும் தன்னம்பிக்கை இழந்தனர் .

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பா முழுவதும் தேசிய உணர்வு பெருகவேண்டிய அரசியல் அவசியம் நேர்ந்தது .

நெப்போலியன் படையெடுப்பு , ஒற்றுமையாக இருந்தால்தான் , இத்தாலி உரிமைகளைப் பெறமுடியும் என்ற விழிப்புணர்வைத் தூண்டியது .

இத்தாலி நாட்டின் இந்நிலையைக் கண்ட மாஜினி ( Mazzini ) என்ற மக்கள் தலைவன் இத்தாலி நாட்டின் பெருமையை மீண்டும் நிலைநாட்ட மக்களுக்குத் தொடர்ந்து உற்சாக மூட்டினான் .

தேசமே பெரிது என்ற எண்ணத்தை மக்கள் உள்ளத்தில் ஆழமாக விதைத்தான் .

வாலிபர் சபை ஒன்றை உருவாக்கி நாட்டின் ஒருமைப்பாட்டை வற்புறுத்தினான் .

ஆஸ்திரிய , பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான குடியரசு இயக்கத்தினையும் வளர்க்க உறுதி கொண்டான் .

மாஜினியின் எழுச்சி பெறும் உரையால் - தொடர்ந்து அவன் மேற்கொண்ட முயற்சியால் மீண்டும் மீண்டும் பல படையெடுப்புகளை இத்தாலி மக்கள் எதிர்கொண்டனர் .

பஞ்சத்தையும் பசியையும் பொருட்படுத்தாமல் தேசமே பெரிதெனப் போராடினர் .

இத்தாலி மக்களின் இந்தப் பண்பு பாரதியைப் பெரிதும் கவர்ந்தது .

இந்திய நாடும் அடிமைப்பட்டு ஒற்றுமை குலைந்து நின்ற நிலையில் அவர்களைப் போல் நம் மக்களும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட வேண்டுமென்று ஏங்கினார் .

அதன் வெளிப்பாடே மாஜினியின் பிரதிக்ஞை என்ற பாடலாகப் பிறந்தது .

மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும்

வீழ்ச்சியின் உணர்ச்சி மீதாணை

பொலிவுறு புதல்வர் தூக்கினில் இறந்தும்

புன்சிறைக் களத்திடை யழிந்தும்

( மாஜினியின் சபதப் பிரதிக்கினை : 5 )

( பொலிவுறு = எழுச்சியுறு , புன்சிறை = இழிந்த சிறை )

இந்த அடிகளில் மாஜினி தன் நாட்டுத் தலைவர்களையும் மக்களையும் பற்றிக் கூறுவது நம் நாட்டின் விடுதலைக்காகப் போராடித் தூக்குமேடை ஏறிய இளைஞர்களையும் ; மக்கள் பட்ட துயரங்களையும் ; சிறையில் தள்ளப்பட்டுக் கொடுமைகளை அனுபவித்த பெருந்தலைவர்களையும் பற்றிப் பாரதியை எண்ணிப் பார்க்க வைக்கிறது .

அது மட்டுமன்றி அவர்கள் பிறந்த நாட்டினின்றும் வேற்று நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்ட கொடுமையையும் நினைத்துப் பார்க்கிறார் .

அவர்களின் பிரிவைத் தாங்காது அருமை நாட்டின் தாய்மார்கள் விட்டகண்ணீரும் அவர் மனத்தில் தோன்றுகிறது .

மாஜினியின் அந்த வார்த்தைகள் எத்துணை யதார்த்தமாய் பாரதியைத் தாக்கியிருக்கும் ?

நீங்களே அந்த பாடல் அடிகளைப் படித்து அதன் தன்மையை எண்ணிப் பாருங்கள் !

வேற்றுநாடுகளில் அவர்துரத் துண்டும்

மெய்குலைந்து இறந்துமே படுதல்

ஆற்றகி லாராய் எம்அரு நாட்டின்

அன்னைமார் அழுங்கணீ ராணை

( மாஜினியின் சபதப் பிரதிக்கினை : 6 )

( துரத்துண்டும் = துரத்தப்பட்டும் , மெய்குலைந்து = உடல்தளர்ந்து , ஆற்றகிலாராய் = தாங்க முடியாதவராய் , அழுங்கணீர் = அழுகின்ற கண்ணீர் )

இத்தாலியின் நிலையையே ஒத்திருந்தது பாரதநாட்டின் நிலையும் .

மாஜினியின் சபதத்தைக் கூறுவதின் வாயிலாக நம் மக்களுக்கு விழிப்பூட்ட நினைக்கிறார் பாரதி .

அடிமை எங்கிருந்தால்தான் என்ன ?

அடிமை , அடிமைதானே ?

ஏகாதிபத்தியத்தின் கொடுமையில் சிக்கிய தேசங்களின் நிலைமை ஒன்று போல இருப்பதை உணர்ந்து , விடுதலையும் உயர்வும் பெற ‘ இணக்கம் ஒன்றுதான் ’ மார்க்கமென்று பாரதி அறிவிக்கிறார் .

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு

( வந்தே மாதரம் , 4 )

என்பதில் மாஜினியின் குரலும் பாரதியின் குரலும் இணைந்து ஒலிக்கவில்லையா ?

3.4.3 பெல்ஜியத்திற்கு வாழ்த்து

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பிரான்ஸ் , ஸ்பெயின் , ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் பிடியில் சிக்கி அவதிப்பட்ட நாடு பெல்ஜியம் .

ஏகாதிபத்தியக் கொடுமையை எதிர்த்துத் தொடர்ச்சியாக அது நடத்திய போர்களை நினைத்துப் பார்த்து வியப்படைகிறார் பாரதி .

பல்லாயிரம் பேர் நாடு கடத்தலுக்கும் , தூக்குமேடைக்கும் பலியானபோதும் அஞ்சாமல் தன்மானம் காக்கப் போராடிய பெல்ஜிய மக்களின் தீரம் அவர் உள்ளத்தை வெகுவாக ஈர்த்தது .

கோழைத்தனத்தாலும் அறியாமையாலும் பெல்ஜியம் வீழ்ந்துபடவில்லை ; அறத்தினால் - வண்மையினால் - மானத்தால் - வீரத்தால் - துணிவால் வீழ்ந்தது .

ஆயினும் அதை வீழ்ச்சியாக பாரதி மனம் ஏற்கவில்லை .

வெற்றி என்பதுதான் என்ன ? கொடுமைகள் வலிமையுடையாரால் வெற்றியடையும் போது அதை வெற்றியாகவா கருத முடியும் ?

( இங்கு ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ளலாமா ?

அசோக சக்கரவர்த்தி கலிங்கத்தில் பெற்றது வெற்றியா ?

இல்லை , இனி போரே செய்வதில்லையென அவர் முடிவு செய்தது வெற்றியா ?

உலகத்தை வெற்றிகொண்டு நடைபோட்ட அலெக்சாண்டர் புருஷோத்தமனை வெற்றிகொண்டதை வெற்றி எனலாமா ?

இல்லை , தன் நாட்டைப் பலிகொடுக்க விரும்பாத புருஷோத்தமன் அலெக்சாண்டரை எதிர்த்துப் போராடி , தோல்வி கண்டது வெற்றியா ?

சிந்தித்துப் பாருங்கள்) பெல்ஜியம் என்ற சிறிய நாடு ஸ்பானியப் பேரரசை எதிர்த்தது எத்துணைச் சிறப்பு வாய்ந்தது !

அஞ்சி , அஞ்சி அடிமையாகாமல் மீண்டும் மீண்டும் போர் செய்து , வீரத்தால் மேம்பட்டு நின்ற பெல்ஜியம் பாரதியின் உள்ளத்தை ஈர்த்ததில் வியப்பில்லை .

வீரத்தால் வீழ்ந்து விட்டாய்

மேல்வரை உருளும் காலை

ஓரத்தே ஒதுங்கித் தன்னை

ஒளித்திட மனமொவ் வாமல்

பாரத்தை எளிதாகக் கொண்டாய்

பாம்பினைப் புழுவே என்றாய்

நேரத்தே பகைவன் தன்னை

நில்லென முனைந்து நின்றாய்

( பெல்ஜியத்திற்கு வாழ்த்து , 4 )

( வரை = மலை , முனைந்து = எதிர்த்து )

அஞ்சி ஒதுங்குவது ராஜதந்திரம் என்று கருதாமல் எதிர்த்துப் போராடிய பெல்ஜியத்தின் வீரமே வீரம் !

பிணிவளர் செருக்கினோடும் பெரும்பகை எதிர்த்தபோது

பணிவது கருத மாட்டாய்

பதுங்குதல் பயனென்று எண்ணாய்

( பெல்ஜியத்திற்கு வாழ்த்து , 5 )

( பிணி = துன்பம் , செருக்கினோடு = அகந்தையோடு , பதுங்குதல் = பின்வாங்குதல் )

என்ற அடிகளை நினைக்கும் போது பெல்ஜியத்தின் தார்மீகக் கோபமும் , போர்க்குணமும் , ஏகாதிபத்திய எதிர்ப்பில் இழப்புகளுக்காக வருந்தாமல் ஈடுபட்ட தீரமும் தெளிவாக விளங்குகின்றன .

இந்திய மக்களும் இப்படி இருக்க வேண்டுமென விரும்புகிறார் பாரதி .

இப்படியில்லையே என ஏங்குகிறார் .

3.4.4 உருஷ்யப் புரட்சி

உலகத்தின் பல நாடுகளில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளைப் பாரதி கவனத்தோடு நோக்கியிருக்கிறார் .

ஆயினும் ருஷ்ய நாட்டின் புரட்சி அதிகமாகவே அவர் கவனத்தை ஈர்த்துள்ளது .

சோவியத் புரட்சியை யுகப்புரட்சி என்கின்றார் .

ஏகாதிபத்தியத்தின் கையில் சிக்குண்டு வருந்திய உலக நாடுகள் அனைத்திற்கும் நம்பிக்கை தரும் நன்மருந்தாகியது அந்தப் புரட்சி .

சோவியத் அக்டோபர் புரட்சியைப் பற்றி எழுதும்போது அதன் பொருளாதார அரசியல் முக்கியத்துவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் .

ஜார் மன்னர்களின் கொடுங்கோன்மை வீழ்ந்தது என்று மகிழும் போது இந்திய நிலையை ஒப்பிட்டுப் பார்க்கிறது அவர் உள்ளம் .

இங்கும் அந்தக் கொடுங்கோன்மை வீழுங்காலம் வருமென நம்பிக்கை கொள்கிறார் .

இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன்

ஜாரெனும்பே ரிசைந்த பாவி

( புதிய ருஷியா , 2 )

( பேரிசைந்த = பெயர்கொண்ட )

பாவி என்ற சொல் பாரதியின் சீற்றத்தையும் வெறுப்பையும் காட்டுகின்றதல்லவா ?

இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்

இவ்வா றாங்கே

செம்மை யெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகித்

தீர்ந்த போதில்..............

( புதிய ருஷியா , 4 )

( செம்மை = நன்மை )

புரட்சி தோன்றுகிறது .

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் !

எத்தனை நாட்கள் கொடுமையைத் தாங்க முடியும் ?

எதற்கும் ஓர் எல்லையுண்டல்லவா ? அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீர் கொடுங்கோலாட்சியை வீழ்த்தியது .

குமுறிய மனங்களின் வெளிப்பாடு புரட்சியாக வெடித்தது .

கொடுங்கோன்மை வீழ்ந்ததை எண்ணி மகிழ்கிறார் பாரதி .

மகிழ்ச்சித் துள்ளலாக வருகிற அந்த வார்த்தைகளைப் பாருங்கள் !

என்ன மகிழ்ச்சி கொடுங்கோல் சாய்ந்ததில் !

சமயமுள படிக் கெல்லாம் பொய்கூறி

அறங்கொன்று சதிகள் செய்த

சுமடர் சட சடவென்று சரிந்திட்டார்

புயல் காற்றுச் சூறை தன்னில்

திமுதிமுவென மரம் விழுந்து காடெல்லாம்

விறகான செய்தி போலே

( புதிய ருஷியா , பாடல் .

6 )

( சுமடர் = இழிந்தோர் , சூறை = சுழல் ( சுழல்காற்று )

உவமை எத்தனை இயல்பாக வந்து விழுகிறது .

புயற்காற்றில் பெருமரம் வீழ்ந்தால் எப்படியிருக்கும் ?

விழும்போது ஏற்படும் சத்தம் .

கற்பனை செய்யும்போதே காட்சி கண்ணில் விரிகிறதல்லவா ?

கிளையோடும் கொம்புகளோடும் இலைகளோடும் மரம் வேரோடு முறிந்து விழுவதுபோலக் கொடுங்கோன்மையும் வீழ்ந்தது .

இந்தப் புரட்சி உலகுக்கே ஒரு செய்தியைப் பிரகடனப்படுத்தியது .

அது என்ன ?

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுற குடிமைநீதி உருஷ்யாவில் எழுந்ததுபோல் எங்கும் எழவேண்டும் என்ற செய்திதான் .

இந்தியாவிலும் அக்குடியாட்சி மலரவேண்டும் என்று பாரதி விரும்புகிறார் .

மலரும் என்று நம்புகிறார் .

சோஷலிசக் கோட்பாடு

உலகுக்கு அவமானம் தரக்கூடிய இந்தப் பொருளாதார ஏற்றத் தாழ்வைத் தகர்த்து சோஷலிசத்தை உருவாக்கியதற்காக உருஷ்யாவை அவர் பாராட்டுகிறார் .

ஆரம்பத்தில் பலரால் வெறுக்கப்பட்ட இக்கோட்பாட்டின் உயர்வை நன்கு புரிந்து கொண்டு பலநாடுகளும் பின்பற்றும் விதத்தில் லெனின் ( Lenin ) அவர்களும் பிறரும் செயல்படுவதைப் பாரதி நன்கு பாராட்டுகிறார் .

பொதுவுடைமைக் கொள்கையானது ஜெர்மனி , ஆஸ்திரேலியா , துருக்கி ஆகிய இடங்களில் வலிமை பெறுவதையும் விட ஆசியாவில் மிகப்பெரிய பகுதியான ஸைபீரியாவிலும் இந்த முறை வந்துவிட்டது எனக் கூறியும் மகிழ்கிறார் .

பிரான்ஸ் , இங்கிலாந்து முதலிய வல்லரசுகள் இக்கோட்பாட்டை விரும்பாமல் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறாகப் பிரச்சாரம் செய்ததைப் பாரதியார் அம்பலப்படுத்துகிறார் .

உருஷ்யாவின் சமுதாய , அரசியல் , பொருளாதார மாற்றங்களை ஏற்றுக் கொண்ட பாரதியார் , அங்கு நடந்த அக்டோபர் புரட்சியின்போது சிந்தப்பட்ட ரத்தத்துளிகளுக்காக வருந்துகிறார் .

ஒருகாலத்தில் தீவிரவாதியாக இருந்த பாரதி பொதுவுடைமை நெறியைப் பாராட்டிய போதும் அந்நெறியைப் பரப்ப ஆயுதமேந்தக்கூடாது என்று எண்ணினார் .

பிஜித்தீவின் கரும்புத் தோட்டத்தில் துன்பப்படும் பெண்களின் நிலையை எண்ணி வருந்துகிறார் .

நம் நாட்டுப் பெண்களுக்கு மட்டுமன்றி அங்குள்ள பிறநாட்டு மக்கள் அனைவர்க்காகவும் வருந்துகிறார் .

3.4.5 பெண்விடுதலை

பாரதியின் பல்வேறு விடுதலைச் சிந்தனைகளை நீங்கள் வேறு ஒரு பாடத்தில் படிக்கப் போகிறீர்கள் .

அதில் விரிவாகப் பெண் விடுதலைச் சிந்தனைகளையும் படிக்கவிருக்கிறீர்கள் .

அதனால் பெண் விடுதலை பற்றிய சில கருத்துகளை மட்டும் இங்குக் காண்பது பொருத்தமாக இருக்கும் .

பெண் விடுதலை

பெண்ணுக்கு விடுதலை வேண்டும் .

பெண்ணுக்கு விடுதலை இல்லையென்றால் பின் இங்கே வாழ்வில்லை ; வளமில்லை .

அதனால் பெண்ணை அடிமையென்று எண்ணாதே என்கிறார் .

மேலும் " ஆணுக்கு ஆண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயத்தைக் காட்டிலும் ஆணுக்குப் பெண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயம் மிகப் பெரிது " என்பார் .

பெண்ணடிமை தீர...

‘ நம் பெண்கள் அடிமைகள் ; அதில் சந்தேகமில்லை ’ என்று மேலும் கூறுவார் .

பெண்ணடிமை தீர , பாரதி கூறும் தீர்வு ; ‘ அடிமைப்பட்டு வாழமாட்டோம் ; சமத்துவமாக நடத்தினாலன்றி உங்களுடன் சேர்ந்திருக்க விரும்போம் ’ என்று வெளிப்படையாகத் தெளிவாகச் சொல்லவேண்டும் என்று மேலும் விரித்துப் பேசுவார் .

வையம் தழைக்கும் வழி

வையம் தழைக்கும்வழி நாட்டின் வளர்ச்சி , சமூக வளர்ச்சி , மனித மேம்பாடு ஆகியவை ஆண் , பெண் வளர்ச்சியை ஒட்டியே அமையும் .

பெண்கள் அறியாமையில் மூழ்கி அடிமைகளாய் இருக்கும்போது ஆண்கள் சுதந்திரம் பெறுவது என்பது இயலாதவொன்று .

பெண்கள் அறிவு பெறவேண்டும் .

ஆணும் பெண்ணும் நிகராகக் கொண்டு அறிவில் ஓங்கும்போதே விடுதலையைப் பெறமுடியும் . வையம் தழைக்க வழி பிறக்கவும் முடியும் .

சில பெண்விடுதலைப் போர்கள்

தென்னாப்பிரிக்காவில் நடந்த பெண் விடுதலைப்போர் , துருக்கியில் நடந்த பெண் விடுதலைப் போர் , ஐரோப்பாவில் மகளிர் சுதந்திரமாக இருத்தல் ஆகியவற்றை எடுத்துக் கூறி ,

தமிழ்நாட்டு மக்கள் மட்டும் தமது மனுஷ்யப் பதவியை ருசுப்படுத்த வழி செய்யாது இருப்பது ஏன் ?

( பாரதியின் கட்டுரைகள் .

பக்.150 )

என்று வினவி , சியூசூன் என்ற சீனத்துப் பெண்ணுரிமைக் கவிஞரின் பாடலைத் தமிழில் பெயர்த்துத் தந்து ஊக்கமூட்டுகிறார் .

3.5 உலக நோக்கில் சமத்துவச் சிந்தனை

மனிதர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் சமம் .

உயர்ந்தவர் , தாழ்ந்தவர் என்பதில்லை என்ற நிலை உருவாக வேண்டும் .

சமத்துவம் நிலவ வேண்டுமென்றால் விடுதலை அடையவேண்டும் .

அதனால்தான் விடுதலைக் கோட்பாட்டை அழுத்தமாகக் கொண்ட பாரதி சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்கிறார் .

ஏற்றத் தாழ்வு நிறைந்த உலகை மாற்றியமைக்க வேண்டும் என்று வேட்கை கொள்கிறார் .

உருஷ்யாவின் விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டதில் வியப்பேதும் இல்லை .

மேலும் ‘ ஏழைகளே இல்லாமல் செய்வது உசிதம் ’ ; ஒரு வயிற்று ஜீவனுக்கு வழியில்லாமல் யாருமே இருக்கலாகாது என்கிறார் பாரதி .

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனிஉண்டோ ?

மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனிஉண்டோ ?

( பாரத சமுதாயம் , சரணங்கள்-1 )

( நோக = வருந்த )

என்று வினவி ,

எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம் எல்லோரும்

இந்தியமக்கள்

எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர்விலை எல்லோரும்

இந்நாட்டு மன்னர் ,

( பாரத சமுதாயம் , சரணங்கள் - 4 )

எனப் பாடுகிறார் .

3.5.1 தனிமனிதச் சமத்துவம்

உயர்ந்த குலம் , தாழ்ந்த குலம் என்று ஏதுமில்லை ; எல்லோரும் ஓர் இனம் .

எல்லோரும் இந்திய நாட்டு மக்கள் ; எல்லோரும் சமம் ; எல்லோரும் மதிப்புடையவர்கள் ; எல்லோருமே இந்நாட்டு மன்னர்கள் தாம் .

ஏனென்றால் விடுதலை பெற்ற மனிதன் யாருக்கும் அடிமையில்லை ; யாருடைய ஆளுகையிலும் அவன் இல்லை .

ஆளப்படுவோரும் ஆள்வோரும் இல்லையாதலால் எல்லோரும் சமம் என்கிறார் .

உடம்பின் நிறம் அந்தந்த நாட்டின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தது .

அதனால் நிற வேறுபாடு மனித வேறுபாட்டுக்கு இடமளிக்கக் கூடாது .

இக்கருத்தை ‘ முரசு ’ கவிதையில்

வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் - அதில்

மானுடர் வேற்றுமையில்லை

எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் - இங்கு

யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்

( முரசு .

17 )

என்பதோடு அமையாமல்

நிகரென்று கொட்டு முரசே ! - இந்த

நீணிலம் வாழ்ப ரெல்லாம்

தகரென்று கொட்டு முரசே ! - பொய்மைச்

சாதி வகுப்பினை எல்லாம்

( முரசு .

18 )

( நிகர் = சமம் , நீணிலம் = நீள் நிலம் ; பரந்த உலகம் , தகர் = அழி , போக்கு )

என்றும் கூறுகிறார் .

பொய்யான சாதி , சமய வேறுபாடுகள் தகர்ந்து போனால் எல்லோரும் சமமாக ஆகலாம் . இதற்கு எது அடிப்படை ?