165

பள்ளத்தில் விழுந்திருக்கும் குருடரெல்லாம்

விழி பெற்றுப் பதவி கொள்ளப்

( தமிழ் -4 )

பாடியவர் பாரதி .

அவரைப் பலரும் பல கோணங்களில் பார்ப்பர் .

அவர் ஒரு விடுதலைக்கவி .

சமூகச் சீர்திருத்தவாதி , புரட்சிக்கவி , தேசியக்கவி , பக்திக்கவி என்றெல்லாம் பாராட்டுவர் .

இவை எல்லாவற்றுக்கும் மேலாகப் பாரதி உலகக் கவி என்பதும் அவருடைய உலகளாவிய நோக்கு எத்தன்மையது என்பதையும் இப்பாடத்தில் படித்தீர்கள் .

விடுதலை , சமத்துவம் , சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளைத் தம் உயிரைவிட மேலாகப் போற்றியவர் பாரதியார் .

நாட்டுச் சுதந்திரம் , பெண்விடுதலை , பொருளாதார விடுதலை ஆகியவற்றை உலகளாவிய நோக்கில் பார்த்த பாரதியின் சிந்தனைகளை நீங்கள் அறிந்து கொண்டீர்கள் .

சமத்துவம் என்பது என்ன என்பதையும் மானுடர் தமக்குள் மாறுபாடில்லை ; மதங்களுக்குள் ஏற்றத்தாழ்வில்லை ; ஆண் , பெண்ணுக்குள் உயர்வு தாழ்வில்லை ; யாரும் யாருக்கும் அடிமையில்லை என்பதையும் புரிந்து கொண்டிருப்பீர்கள் .

எல்லா மனிதருக்குள்ளும் எல்லாப் பொருள்களுக்குள்ளும் இருப்பது தெய்வம் .

இதை உணர்ந்தபின் , எல்லோரும் சமம் என்று தெளிவு பெறுவீர்கள் .

அத்தெளிவின் பயனாக உலகத்து மக்களையெல்லாம் சகோதரர் என்று பாவிக்கும் எண்ணமும் அவர்தம் மகிழ்ச்சியில் , துன்பத்தில் பங்கு கொள்ளும் சகோதரத்துவமும் தோன்றும் .

பாரதி , தம் வாழ்நாள் முழுவதும்

இதற்காகவே வாழ்ந்ததும் , அந்தக் கோட்பாடு உடைய உள்நாட்டு வெளிநாட்டுத் தலைவர்களைப் போற்றியதும் தெளிவாகப் புலப்பட்டிருக்கும் .

பாரதியின் உலகளாவிய நோக்கு என்பது உலகத்தார் அனைவர் மீதும் செலுத்தும் நேயமாகும் .

எனினும் மனிதநேயம் என்ற வட்டத்தில் மட்டுமே பாரதியை நிறுத்த இயலாது .

ஏனென்றால் அவர் அசையும் அசையாப் பொருள்கள் அனைத்தின் மீதும் எல்லையற்ற அன்பு கொண்டிருந்தார் .

அளப்பரிய அந்த அன்பு அசையும் பொருள்களையும் அசையாப் பொருள்களையும் அரவணைத்து நின்றது .

பாரதியின் இந்த உலகளாவிய நோக்கு அற்புதமானது .

நினைக்க நினைக்க வியப்பைத் தருவது !

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1. பாரதியின் முப்பெரும் கோட்பாடுகள் யாவை ?

[ விடை ]

2. சுதந்திரம் என்பது என்ன ?

[ விடை ]

3. பாரதியின் சர்வதேச அணுகுமுறைகள் எதன் அடிப்படையில் அமைகின்றன ?

[ விடை ]

4. பாரதி ஈடுபாடு கொண்ட இரு இந்தியத் தலைவர்களைக் குறிப்பிடவும் [ விடை ]

5. எதைத் தகர்க்க வேண்டுமென்று பாரதி முரசு கொட்டுகிறார் ?

[ விடை ]

6. பாரதியைக் கவர்ந்த பிறநாட்டு நிகழ்ச்சிகள் இரண்டைக் குறிப்பிடவும் .

[ விடை ]

பாரதியாரின் படைப்புகளில் அறிவியல் நோக்கு

4.0 பாட முன்னுரை

உலகில் இருப்பவற்றையும் , இயற்கை நியதிகளையும் கவனித்தும் சோதித்தும் , நிரூபித்து வகைப்படுத்தியும் காரண காரியத்தோடு பார்க்க வேண்டும் என்று நினைப்பது அறிவியல் நோக்கு .

ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அதன் அணுகுமுறை மிகவும் முக்கியமானது .

பழையன கழிதலும் புதியன புகுதலும் தவிர்க்க முடியாதவை .

இன்றைய உலகொடு இந்திய சமுதாயம் இணைந்து முன்னேற வேண்டுமென்றால் புதியன புகுத்தப்பட வேண்டும் .

பாரதி வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் வேளாண்மையே முக்கியமான தொழிலாக இருந்தது .

அதே சமயம் , மேலை நாடுகள் தொழில் யுகத்தில் இந்தியாவை விட ‘ ஒரு யுகம் ’ முன்னின்றன .

இந்திய நாட்டு மொழி , கலை , பண்பாடு அனைத்தும் அவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருந்தன .

பழையன பாராட்டுவோரும் புதியன போற்றுவோரும் காணப்பட்டனர் .

இவற்றுள் எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது ?

தெளிவற்ற நிலையில் இருந்த தமிழ் மக்களுக்கு ,

.நன்மையும் அறிவும்

எத்திசைத் தெனினும் , யாவரே காட்டினும்

மற்றவை தழுவி வாழ்வீ ராயின் அச்சமொன்றில்லை .

( தமிழச் சாதி , அடி : 119-122 )

( தழுவி = ஏற்றுக் கொண்டு )

என்று பாரதியார் வழிகாட்டி அறிவுரை கூறுகிறார்

பழையன எல்லாம் சிறந்தவை என்று கூற முடியாது .

அவையே எல்லாமாகி விடுவதில்லை .

பழையன பயனற்றுப் போகும் போது அவற்றைத் தயங்காது நீக்கி விட வேண்டும் .

அதைப்போல் , புது உலகில் மலரும் நல்லனவற்றை ஏற்றுக் கொள்ள மனக் கதவுகள் திறந்திருக்க வேண்டும் .

மனத்தில் சரியென்று பட்ட வழியைத் தயங்காது ஏற்பது அறிவியல் உலகின் பண்பாடு .

அதற்கு வழிகாட்டுவது அறிவியல் பார்வை .

பாரதியிடம் அப்பார்வை காணப்பட்டது .

‘ பாரதியின் பாடல்களின்கற்பனை வளம் இருக்கும் அளவிற்கு அல்லது அதற்கு மேலும் கருத்து வளம் காணப்படுகிறது .

அவரிடம் தமிழையும் நிலையான தத்துவத்தையும் காண்கிறோம் .

பாரதியின் இந்தத் தெளிவிற்குத் துணை நின்றது அவரது அறிவியல் பார்வை ’

என்பார் அறிஞர் வா.செ. குழந்தைசாமி ,

அறிவியல் துறையின் பிரிவுகளான புவியியல் , வானவியல் , உயிரியல் , பொருளறிவியல் , பொறியியல் , வேளாண்மை , உடற்கல்வி ஆகியன பற்றியும் , அறிவியல் பாடங்கள் கற்பிக்கும் அணுகு முறை பற்றியும் பாரதி கூறியதை அவர் பாடல்களிலும் கட்டுரைகளிலும் பார்க்க முடிகிறது .

குறிப்பாகத் தேசியக் கல்வி என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரையில் இவற்றை விளக்கிச் செல்கிறார் .

அவை பற்றிய விவரங்களை இப்பாடத்தில் பார்க்கலாம் .

4.1 புவியியல் ( Geography )

பூமியின் நிலப்பரப்பு , கடல் , தட்பவெப்பம் முதலியன பற்றி விவரிக்கும் பாடம் புவியியல் என அழைக்கப்படும் .

4.1.1 தட்பவெப்பம்

தட்பவெப்பம் என்பது ஓர் இடத்திலுள்ள குளிர்ச்சியையும் வெம்மையையும் குறிப்பது .

இந்தியா பல மாநிலங்களைக் கொண்டது .

ஒரு மாநிலத்திலுள்ள தட்பவெப்பம் மட்டும் அறிந்திருந்தால் போதாது ; எல்லா மாநிலங்களிலும் உள்ள தட்பவெப்ப நிலையையும் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்கிறார் பாரதியார் .

அப்போது தான் ஒரு மாணவன் தன் தாய்த்திரு நாட்டின் முழு விவரமும் அறிய முடியும் என்பது அவரது எண்ணம் .

அத்துடன் அமெரிக்கா , ஐரோப்பா , ஆப்ரிக்கா , ஆசியா , ஆஸ்திரேலியா முதலிய கண்டங்களிலுள்ள தட்பவெப்ப நிலையை அறியும் உலக அறிவும் பெற முடியும் என்பது அவருடைய முடிவு .

4.1.2 காற்று

உலகில் வான வெளியெங்கும் நிறைந்திருப்பதும் , உயிரினங்கள் உயிர் வாழச் சுவாசிப்பதும் , உணரக்கூடியதுமான ஒன்றே காற்று .

இயற்கையில் வீசும் காற்று , உடம்புக்கு உற்சாகமும் மனத்துக்கு மகிழ்ச்சியும் தரும் .

மெல்லிய தென்றல் காற்றாக இயங்கி வாழ்க்கைக்கு இன்பம் தருவதும் உண்டு ; அதே காற்று , அனைத்து உயிர்களுக்கும் துன்பம் செய்யும் புயலாக உருவெடுத்து மக்களை அழிப்பதும் உண்டு .

இந்தக் காற்றில் உயிர் வாழ உதவும் பிராணவாயு கலந்துள்ளது .

பிராணவாயு இல்லாவிடில் உயிர்கள் இறந்துவிடும் .

அதுவே உடலை இயக்கும் ஆற்றல் .

அதன் ஆற்றலைப் பாருங்கள் .

காற்றே வா ,

இலைகளின் மீதும் , நீரலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த

ப்ராண - ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு

( வசன கவிதை .

காற்று - 6 )

என்று அதன் செயலைப் பாரதியார் காட்டுகிறார் .

மரம் , செடி , கொடி முதலியன ஒளிச் சேர்க்கையின் ( photosynthesis ) போது ( காற்றிலுள்ள கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு சூரிய ஒளி , பச்சையம் ( chlorophyll ) இவற்றின் உதவியால் ) உணவுப் பொருளைத் தயாரிக்கும் .

இந்தச் செயல் நடைபெறும் போது பிராணவாயுவை வெளிவிடும் .

காற்றானது இலைகளையும் , நீரின் அலைகளையும் உராய்ந்து வருவதால் இலைகள் வெளியிடும் புத்தம் புது பிராணவாயு கலந்த குளிர்ந்த காற்று வீசும் என்று பாரதி பாடியதாகக் கொள்ளலாம் .

தமிழ்நாடு வெம்மை மிகுந்தது .

ஆகையால் , குளிர்ந்த காற்றை விரும்பிய பாரதி இவ்வாறு பாடினார் போலும் .

காற்றின் பல்வேறு நிலைகளை , செயல்முறைகளை விரித்துக் கூறுகின்றார் பாரதி .

பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறிவிடுகிறது .

நீரிலே சூடேற்றினால் ‘ வாயு ’ வாகி விடுகிறது .

தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகி விடுகிறது .

அத்திரவத்திலே சூடேற்றினால் ‘ வாயு ’ வாகின்றது ( வசன கவிதை , காற்று - 12 )

இந்தப் பாடல் திடப்பொருளைச் சூடேற்றினால் அது திரவமாகவும் , வாயுவாகவும் மாறுவதைத் தெளிவாகக் காட்டுகிறது .

புயல்

பெரும்புயல் தோன்றக் காரணம் காற்று .

காற்றுப் புயலாக மாறும் நிலையை ,

காற்றே நீரில் சூறாவளி காட்டி , வானத்தில் மின்னேற்றி ,

நீரை நெருப்பாக்கி , நெருப்பை நீராக்கி , நீரைத்

தூளாக்கித் தூளை நீராக்கிச்சண்டமாருதம் செய்கின்றான்

( வசன கவிதை , காற்று - 2 )

( சூறாவளி = மிகுந்த வேகத்துடன் வீசும் காற்று , மின் = மின்னல் , சண்டமாருதம் = பெருங்காற்று ) என்ற பாடல் விளக்குகிறது .

வெம்மையும் காற்றும்

வெப்பத்தால் காற்றின் எடை குறையும் .

அப்போது வெப்பம் குறைந்த இடத்தை நோக்கிக் காற்று செல்லும் என்ற உண்மையை அறிந்தவர் பாரதி .

வெம்மை மிகுந்த பிரதேசங்களில் இருந்து வெம்மை குன்றிய பிரதேசங்களுக்குக் காற்று ஓடி வருகிறது .

அவ்வாறு வரும்போது , அது மேகங்களை ஓட்டிக் கொண்டு வருகிறது .

அதனால் மழை பெய்கிறது .

மழை பெய்யக் கடலும் காற்றுமே காரணம் என்ற உண்மையை உணர்த்துகிறார் .

( வசன கவிதை , கடல் - 2 ) .

4.1.3 கடல்

உப்புக் கரிக்கும் நீர் நிறைந்த அலைகள் எழும் பெரும் பரப்பு கடல் .

உலகில் மூன்று பாகம் கடலாக உள்ளது .

காற்றைப் பரப்புவது கடலென்று காட்டுகிறார் பாரதி .

புவிஈர்ப்பு விசையின் காரணமாகத் தான் கடல் நீர் வெளியில் சிதறவில்லை என்ற உண்மையைப் பாரதியார் உணர்த்துகிறார் .

கடலின் மேற்பரப்புச் சூரிய வெப்பத்தால் ஆவியாகி மேலே செல்கிறது .

அது குளிர்ச்சி அடையும் போது மழையாகப் பெய்கிறது .

மழை இல்லாவிடில் உலகில் உயிர் வாழ இயலாது .

ஆகையால் , காற்றைப் பார்த்து , ‘ உலகிலுள்ள உயிர்கள் வாழ நீர் கொடுக்கும் கடலில் இருந்து நீரைச் சுமந்து கொண்டு வா. எங்கள் விருப்பம் எல்லாம் நிறைவேறி உலகம் செழிப்புற்று விளங்க இன்பம் தரும் மழையைப் பொழியச் செய் ’ என்கிறார் பாரதி .

உயிர்கள் வாழ நீர் வழங்கும் மழையை ‘ உயிர் மழை ’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் .

காற்றே , உயிர்க் கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர்

மழை , கொண்டு வா .

எங்கள் தாபமெல்லாம் தீர்ந்து உலகம் தழைக்குமாறு

இன்ப மழை பெய்தல் வேண்டும்

( வசன கவிதை , கடல் - 2 )

( தாபம் = விருப்பம் , தீர்ந்து = நிறைவேறி , தழைக்கும் = செழிக்கும் )

4.2 வானவியல் ( Astronomy )

‘ வானவியல் ’ என்பது விண்ணில் உள்ள விண்மீன்கள் , கோள்கள் முதலியவற்றைப் பற்றிக் குறிப்பது ஆகும் .

பாரதியார் , ‘ பூமி சாஸ்திரம் ’ என்ற கட்டுரையில் வானவியலைப் பற்றிக் குறிப்பிடுகிறார் .

ஞாயிறு , நிலா , காற்று இவை வானிலும் ஆகாயத்திலும் விளங்குபவை .

இவை பற்றிய பாரதியின் எண்ணங்களைப் பார்ப்போமா ?

‘ ஸுர்ய மண்டலத்தைப் பற்றியும் , அதைச் சூழ்ந்தோடும் கிரகங்களைப் பற்றியும் , நக்ஷத்திரங்களைப் பற்றியும் , இவற்றின் சலனங்களைப் பற்றியும் பிள்ளைகளுக்கு இயன்றவரை தக்க ஞானம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் ’

என்று தம் கட்டுரையில் ( பக் : 382 ) வலியுறுத்துகிறார் .

பாரதியார் வாழ்ந்த காலத்திற்குப் பிறகு வானவியல் வெகுவாக முன்னேறி விட்டது .

விண்ணில் உள்ள கோள்கள் சூரியனைச் சுற்றியே இயங்குகின்றன .

ஆகவே , அது ‘ சூரிய குடும்பம் ’ என்று வழங்கப்படுகிறது .

சூரியன் மிகவும் வெப்பமாக இருப்பதால் மனிதன் அங்குச் செல்ல இயலவில்லை .

சூரியனிடமிருந்து ஒளிபெற்றுத் தண்ணொளி வீசும் நிலவில் 1969-இல் நீல் ஆம்ஸ்டிராங் என்னும் அமெரிக்க விண்வெளி வீரர் முதன் முதலாகக் காலடி எடுத்து வைத்தார் .

இக்காலத்து , மனிதர்கள் விண்வெளியில் பறக்கும் அளவு வானவியல் துறை முன்னேறி விட்டது .

செவ்வாய்க் கிரகம் பற்றி ஆராய்ந்து அறியும் நோக்கத்தில் விண்வெளிக் கலன்கள் அனுப்பப்படுகின்றன .

ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த சாதனையாளர்கள் சாதாரண மனிதர்கள்தாம் .

அவர்கள் தம்முடைய கடின உழைப்பால் சாதனை படைக்கின்றனர் . ஆகையால் அறிவியல் கலையின் அனைத்துப் பிரிவையும் பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் சேர்த்து உரிய முறையில் கற்பிக்க வேண்டும் .

முயற்சியும் , உழைப்பும் கொண்ட மாணவர்கள் அந்த அறிவைப் பெற்றுப் பல புதிய உண்மைகளைக் கண்டறிய முயல்வர் என்று பாரதியார் கருதுகிறார் .

ஓய்வின்றி உழைத்தால் ஐரோப்பாக் கண்டம் போல் அறிவியல் துறையில் இந்தியா வளர்ந்து விடும் என்று பாரதியார் நம்பினார் எனக் கொள்ளலாம் .

4.2.1 வானம்

பூமிக்கு மேல் தெரியும் கரிய நீல வெளி வானம் எனப்படும் .

நிலவில் மனிதன் காலடி வைத்தபோது பாரதி உயிரோடு இல்லை .

ஆனால் அதற்கு முன்பே வானை அளந்து அதைப் பற்றி ஆராய வேண்டுமென்று பாடியிருக்கிறார் .

வான சாஸ்திரத்தில் சிறந்த அறிஞர்கள் சந்திர குப்த மன்னன் சபையில் இருந்ததாக வரலாறு காட்டுகிறது .

ஆரியபட்டர் என்பவர் வானசாஸ்திரத்தில் வல்லவர் .

அவர்களோடு அந்தத் துறையின் வளர்ச்சி நின்று விடக் கூடாது , மேலும் தொடர வேண்டும் என்பது பாரதியின் விருப்பம் .

இந்த விருப்பத்தை ,

மந்திரம்கற் போம்வினைத் தந்திரம் கற்போம்

வானை யளப்போம் கடல்மீனை யளப்போம்

( பாரத தேசம் - 11 )

என்ற பாடலின் மூலம் வெளிப்படுத்துகிறார் .

அறிவியல் உண்மை மட்டும் தெரிந்தால் போதாது .

அதைச் செயல்படுத்தும் திறமையும் தெரிந்திருக்க வேண்டும் .

அதன் உதவியால் வானை அளக்கலாம் , கடல் மீனின் இயல்பை அறியலாம் என்று விளக்குகிறார் .

கோள்கள்

சூரியனைப் போன்ற பெரு விண்மீனின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு அதைச் சுற்றி வரும் விண்வெளிப் பொருள்கள் கோள்கள் ஆகும் .

வானில் உள்ள விண்மீன்கள் , கோள்கள் , துணைக்கோள்கள் ஆகியவை எண்ணிலடங்காதன ; அந்த அண்டங்கள் மிகுந்த வேகத்தில் இயங்கக் கூடியன ; பூமியிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளன ; ஒன்றிற்கொன்று மிகுந்த இடைவெளியில் இருக்கின்றன என்பன போன்ற அறிவியல் கருத்துகளைச் சொல்லோவியமாகத் தருகிறார் பாரதியார் .

விண்டுரைக்க , அறிய , அரியதாய்

விரிந்த வான வெளியென நின்றனை .

அண்ட கோடிகள் வானில் அமைத்தனை

அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை

மண்டலத்தை அணுவணு வாக்கினால்

வருவ தெத்தனை அத்தனை யோசனை ,

கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை

( மகாசக்தி வாழ்த்து - 1 )

( அண்ட கோடிகள் = விண்மீன்கள் , கோள்கள் , துணைக்கோள்கள் முதலிய அனைத்தையும் உள்ளடக்கி எல்லை காணமுடியாத வகையில் பரந்து விரிந்திருக்கும் பெருவெளி .

யோசனை = 9 மைல் தூரம் , சமைத்தனை = படைத்தனை )

இந்தப் பாடல் அண்டங்களின் இயக்கத்திற்குக் காரணமான ஆற்றலைப் பற்றியும் அவற்றின் இயக்கத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறது .

இடைவிடா இயக்கம்

மேலும் , கோள்கள் அனைத்தும் இயங்குவதால் அவை உயிருடையவை .

அவை இடைவிடாமல் இயங்குகின்றன என்பதை ,

பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது !

அகில முழுதும் சுழலுகிறது !

சந்திரன் சுழல்கின்றது , ஞாயிறு சுழல்கின்றது

. வானத்து மீன்களெல்லாம் ஓயாது சுழன்று

கொண்டே தான் இருக்கின்றன !

( வசன கவிதை , காற்று - 13 )

( விசை = வேகம் , அகிலம் = உலகம் )

என்ற பாடல் வாயிலாக வெளியிடுகிறார் .

சுழல வேண்டுமென்றால் இயக்கமாகிய ஆற்றல் தேவை .

இயங்குகிறது என்றால் அவை உயிருடையன என்று பொருள் ஆகிறது .

உயிருள்ளவை என்று கருதப்படும் மனிதன் , மரம் , செடி , கொடி , விலங்குகள் மட்டுமல்லாமல் இந்த உலகிலுள்ள கோள்களையும் உயிருடையதாய்ப் பார்க்கிறார் பாரதி .

கோள்களின் இயக்கம் எதை உணர்த்துகிறது ?

விண்ணிலுள்ள கோள்கள் கால நேரம் தவறாமல் தம் கடமைகளைச் செய்கின்றன .

அவை முறையாக இயங்காவிடில் உலகில் இயக்கமே நின்றுவிடும் .

மனிதனும் அதுபோல் இமைப்பொழுதும் சோராமல் காலம் தவறாமல் உழைக்க வேண்டும் என்பதை அவை உணர்த்துகின்றன . 4.2.2 ஞாயிறு