166

பூமிக்கு இன்றியமையாத வெப்பத்தையும் , ஒளியையும் கொடுத்து உதவும் விண்மீன் ஞாயிறு ( சூரியன் ) ஆகும் .

பாரதியார் விநாயகரையும் , பராசக்தியையும் அனைத்துமாய்ப் பார்த்துப் பரவசமடைந்தது போல் ஞாயிற்றையும் பார்த்து ,

நீ ஒளி , நீ சுடர் , நீ விளக்கம் , நீ காட்சி

மின்னல் இரத்தினம் கனல் தீக்கொழுந்து

உயிர் தருகின்றாய் !

உடல் தருகின்றாய் ,

வளர்க்கின்றாய் மாய்க்கின்றாய்

( வசன கவிதை , ஞாயிறு - 2 )

என்று பாடி , அது எல்லாவற்றிலும் கலந்திருப்பதாகக் காட்டுகிறார் .

இது மாணிக்கவாசகர் பாடிய ,

வான்ஆகி மண்ஆகி வளிஆகி ஒளிஆகி

ஊன்ஆகி உயிர்ஆகி உண்மையும்ஆய் இன்மையும்ஆய்

( திருவாசகம் , அறிவுறுத்தல் - 4 )

என்ற பாடலை நினைவூட்டுவதைக் காணலாம் .

ஞாயிறு , கடலில் , மின்னலில் , இரத்தினத்தின் ஒளியில் , நெருப்பில் , தீக் கொழுந்தில் , இன்னும் பிறவற்றில் நிறைந்து இருப்பதாகப் பாரதியார் பாடுகிறார் .

ஒளிவிடும் அனைத்திலும் இருப்பது ஞாயிறே என்பது அவர் எண்ணம் .

அது உடலையும் , உயிரையும் வளர்க்கிறது ; நீர் தருகிறது ; காற்றாக வீசுகிறது - என அது எல்லாமாக விளங்குவதாகக் காட்டுகிறார் .

இதில் வானவியல் கருத்துகள் பொதிந்துள்ளன .

ஒரு கணத்தில் பத்தாயிரம் மைல் வேகத்தில் இயங்கும் ஆற்றல் உடைய ஞாயிற்றின் இயல்பை ,

காத மாயிரம் ஓர் கணத்துள்ளே

கடுகியோடும் கதிரினம்

( சூரிய தரிசனம் - 2 )

( காதம் = 10 மைல் தூரம் , கணம் = மிகக் குறைந்த காலம் , கடுகி = விரைந்து )

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன .

பூமி , சந்திரன் , செவ்வாய் , புதன் , சனி முதலிய கோள்கள் ஞாயிற்றில் இருந்து ஒளிபெற்று ஒளிரும் என்ற அறிவியல் உண்மையை வசனகவிதையில் ( ஞாயிறு - 10 ) தெரிவிக்கிறார் .

கோள்களை அவர் ‘ வீடு ’ என்று சொல்கிறார் .

பூலோகம் , மண்ணுலகில் உள்ள உயிர்களுக்கு வீடாக விளங்குகிறது .

கோள்கள் எல்லாம் தீப்பந்தத்திலிருந்து பொறிகள் வீசுவது போல , ஞாயிற்றினிலிருந்து வெடித்து வெளிப்பட்டன என்று குறிப்பிடுகிறார் .

கோள்கள் மட்டுமா சூரியனிடமிருந்து ஒளி பெறுகின்றன ?

மனிதனும் ஒளி பெறுகிறான் .

மனிதனுக்கு இருப்பது ஊனக்கண் .

ஒளியின் உதவியின்றி அவனால் எதையும் பார்க்க இயலாது .

ஞாயிற்றின் வித்தை

ஞாயிற்றின் வெப்பத்தால் கடலின் மேற்பரப்புச் சூடாகிறது , பின்பு ஆவியாகி மேலே செல்கிறது .

மேலே சென்ற நீராவி குளிர்ச்சியடைந்து மீண்டும் மழையாகப் பெய்கிறது .

மழைக்குக் காரணம் ஞாயிறு என்ற அறிவியல் உண்மையை பாரதி ,

ஞாயிறு வித்தை காட்டுகிறான்

கடல் நீரைக் காற்றாக்கி மேலே கொண்டு போகிறான்

அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகிறான்

மழை இனிமையுறப் பெய்கின்றது

( வசன கவிதை - 11 )

( ஞாயிறு = சூரியன் )

என்று காட்டுகிறார் .

ஞாயிறு இருளை நீக்கும் நிலையைப் பாரதியார் ,

ஞாயிறே , இருளை என்ன செய்து விட்டாய் ?

ஓட்டினாயா ?

கொன்றாயா ?

விழுங்கி விட்டாயா ?

இருள் நினக்குப் பகையா ? இருள் நின் உணவுப் பொருளா ?

நீங்கள் இருவரும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளா ?

முன்னும் பின்னுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி உங்கள் தாய் ஏவி யிருக்கிறாளா ?

( வசன கவிதை , ஞாயிறு - 5 )

( முன்னும் பின்னும் = பகலும் இரவும் )

என்று பாடுகிறார் .

இப்பாடலில் ஞாயிற்றையும் இரவையும் பார்த்து நீவிர் ஒரு தாயின் குழந்தைகளா ?

பகலிலும் இரவிலுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி உங்கள் அன்னை ஆணையிட்டிருக்கிறாளா ?

என்று அவர் பாடியிருப்பது சுவையாக உள்ளது .

4.2.3 நிலவு

நிலவு ஞாயிற்றினிடமிருந்து ஒளி பெற்று இரவில் தண்ணொளியாக வீசுகிறது .

அறிவியல் ஆய்வு வளர்ச்சியினால் மனிதன் நிலவை அடைந்தான் .

முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்சன் இதை ‘ மனித குலத்தின் ராட்சச முன்னேற்றம் ’ ( Giant leap of Mankind ) என்று கூறினார் .

பாரதியும் நிலவின் தன்மையை அறிவதில் ஆர்வம் கொண்டு , சந்திர மண்டலத்தின் இயல்பை அறிய முற்படவேண்டும் என்ற கருத்தில் ,

‘ சந்திரமண் டலத்தியல் கண்டு தெளிவோம் ’

( பாரத தேசம் - 11 )

என்று பாடியிருக்கிறார் .

4.3 உயிரியல் ( Biology )

இது உயிர் வாழ்வன பற்றிய அறிவியல் ஆகும் .

இதன் கீழ்த் தாவரங்களைப் பற்றி விவரிக்கும் அறிவியல் துறையும் ( Botany ) விலங்குகள் குறித்து விவரிக்கும் அறிவியல் துறையும் ( Zoology ) அடங்கும் .

4.3.1 தாவரவியல் ( Botany )

தாவரங்கள் இல்லையென்றால் உலகில் வேறு எந்த உயிரினமும் வாழ முடியாது .

தாவரங்கள் குறித்தும் மாணவர்கள் கற்க வேண்டும் என்று விரும்புகிறார் பாரதி .

உலகில் புல் பூண்டு , செடி கொடிகள் முளைக்க மழை தேவை .

மழை பெறக் காடுகள் தேவை என்பதை உணர்த்த பாரதி ,

காவியம் செய்வோம் , நல்ல காடு வளர்ப்போம்

( பாரத தேசம் - 12 )

என்று குறிப்பிடுகிறார் .

காட்டின் இன்றியமையாமையை மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு பாடியிருக்கிறார் .

ஜகதீச சந்திர வஸு - ஜகதீச சந்திர போஸ் சாதனை

( பொதுவாக ஜகதீச சந்திர போஸ் என்ற பெயரை ஜகதீச சந்திர வஸு என்று எழுதுகிறார் பாரதியார்)

ஜகதீச சந்திர வஸு

' ஐந்துக் ( விலங்கு ) களைப் போலவே விருக்ஷாதிகளுக்கும் உணர்ச்சியிருக்கிறது .

ஆகவே மண் , செடி , ஜந்து , மனுஷ்யன் அத்தனைக்குள்ளும் ப்ராண சக்தி இருக்கிறது ’

( பாரதி கட்டுரைகள் - பக் .50 )

என்று கூறியிருப்பது செடிகளுக்கு உயிர் இருக்கிறது என்று கண்டுபிடித்ததைக் காட்டுகிறது .

இதையெல்லாம் பாரதி ஏன் கூறுகிறார் ?

ஜகதீச சந்திர போஸைப் போல் பல அறிஞர்கள் உருவாக வேண்டும் என்ற ஆர்வத்தில் கூறுகிறார் .

‘ செடிக்கு விஷத்தைக் கொடுத்தால் மூர்ச்சைப் போடுகிறது .

மறுபடி தெளிய மருந்து கொடுத்தால் தெளிகிறது .

செடியின் சந்தோஷம் , சோர்வு , வளர்ச்சி , சாவு ஆகிய எல்லா நிலைமைகளையும் .

பார்க்கும் போது , செடியின் நாடியுணர்ச்சிக்கும் இதர மனுஷ்ய மிருகாதி ஜந்துக்களின் நாடியுணர்ச்சிகளுக்கும் பேதமில்லை என்பது ருஜுவாகிறது ( நிரூபணமாகிறது ) ’

( பாரதி கட்டுரைகள் , பக் : 50,51 )

என்று பாரதி எழுதியிருப்பது மனிதரைப் போல் செடிக்கும் நாடியுணர்ச்சி இருப்பதைக் கண்டுபிடித்த ஜகதீச சந்திர போஸின் அறிவைப் போற்றும் நிலையில் உள்ளது .

4.3.2 விலங்கியல் ( Zoology )

உலகில் வாழும் உயிரினங்கள் பற்றிய தெளிவான அறிவு மாணவர்களுக்குத் தேவை என்று பாரதி எண்ணினார் .

இந்த உலகம் முழுவதிலும் பல்லாயிரக் கணக்கான உயிர்கள் உள்ளன .

அவை கண்ணுக்குத் தெரிபவை , கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் ( microscopic forms ) என்று இருவகைப்படும் .

உயிரினங்கள் பற்றி பாரதி ,

உயிரே நினது பெருமை யாருக்குத் தெரியும் ? நீ கண் கண்ட தெய்வம் .

எல்லா விதிகளும் நின்னால் அமைவன .

எல்லா விதிகளும் நின்னால் அழிவன .

உயிரே .

நீ காற்று , நீ தீ , நீ நிலம் , நீ நீர் , நீ வானம் .

தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ .

பறக்கின்ற பூச்சி , கொல்லுகின்ற புலி , ஊர்கின்ற புழு ,

இந்தப் பூமியிலுள்ள எண்ணற்ற உயிர்கள் , எண்ணற்ற

உலகங்களிலுள்ள எண்ணே யில்லாத உயிர்த் தொகைகள்

( வசன கவிதை , காற்று - 15 )

என்று பாடுகிறார் .

காற்றில் ஒரு சதுர அடி இடத்திற்குள் இலட்சக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றன .

பெரிய உயிரின் உடலுக்குள் பல சிறிய உயிர்களும் , சிறிய உயிர்களுள் அதைவிடச் சிறிய உயிர்களும் வாழ்கின்றன .

பெரிது சிறிது என்னும் இருவேறு நிலைகளிலும் எண்ணற்ற உயிர்கள் உள்ளதை விளக்குகின்றார் பாரதியார் .

4.3.3 மருத்துவம்

கண்ணுக்குத் தெரியாத நுட்பமான பூச்சிகளினால் விஷக் கிருமிகள் , நோய்கள் உண்டாகின்றன .

இவை தண்ணீர் , காற்று முதலியவற்றின் மூலமாகப் பரவுகின்றன , என்று ஐரோப்பியர் கூறியதைப் பாரதி முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை .

மனம் மகிழ்ச்சியாகவும் இரத்தம் சுத்தமாகவும் இருப்பவர்களைப் பூச்சிகளால் ஒன்றும் செய்யமுடியாது என்பது பாரதியார் எண்ணம் .

நோயை எதிர்க்கும் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கினால் ( resisting power ) பூச்சிகளைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை .

நீரும் , காற்றும் , நிலமும் இல்லாமல் உயிர் வாழ முடியாது .

ஐரோப்பியர் கூறுவதன் அடிப்படையில் பார்த்தால் இவை மூன்றையும் கண்டு அஞ்ச வேண்டிய நிலை ஏற்படும் .

இத்தகைய எண்ணம் மாணவர் மனத்தில் சிறுவயதில் அழுத்தமாகப் பதிந்து விடும் .

அவர்கள் அதைக் கண்டு அஞ்சுவர் .

அவ்வாறு அச்ச மேற்படுத்துவதை , பாரதி விரும்பவில்லை .

ஆகையால் , நோய் வருமுன்பு உடலைப் பேண வேண்டும் என்று கூறுகிறார் .

மனிதர்கள் பூச்சியால் சாகமாட்டார் .

கவலையாலும் , பயத்தாலுமே சாகிறார்கள் என்று எண்ணுகிறார் .

இரத்தம் சுத்தமாக இருந்தால் நலமுடன் வாழ முடியும் என்ற உண்மையை இங்கு உணர்த்துகிறார் பாரதி .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. மேலை நாடுகளில் உள்ள தட்ப வெப்ப நிலையை இந்திய மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் .

ஏன் ?

[ விடை ]

2. காற்று இலைகளையும் நீரின் அலைகளையும் உராய்வதால் என்ன கிடைக்கும் ?

[ விடை ]

3. அறிவியல் கலை சார்ந்த பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்று பாரதி கூறக் காரணம் என்ன ?

[ விடை ]

4. ஞாயிற்றினிடமிருந்து ஒளிபெறும் கோள்கள் யாவை ?

[ விடை ]

5. தாவரங்களுக்கு உயிர் உண்டு என்று கண்டறிந்தவர் யார் ?

[ விடை ]

6. நோய் நெருங்காதிருக்க என்ன செய்ய வேண்டும் ?

4.4 பொருளறிவியல் ( Physical Science )

இது பொருள்களின் இயல்பை விளக்கும் அறிவியல் துறையைக் குறிப்பிடும் .

இதன் கீழ் இயற்பியல் , வேதியியல் ஆகிய இரு துறைகளும் அடங்கும் .

4.4.1 இயற்பியல் ( Physics )

பொருள்களின் தன்மை , இயற்கைச் சக்திகளின் இயக்கம் , மாற்றம் முதலியவற்றை விவரிக்கும் ஓர் அறிவியல் ஆகும் .

சக்தி ( Energy )

ஒரு செயலைச் செய்யக் கூடியதாக ஆக்கும் ஆற்றல் , திறன் இவையே சக்தியாகும் .

இயற்கையில் காணும் பொருள்களினூடே சக்தி கலந்துள்ளது .

இதனால் தான் பாரதி , இயற்கையென் றுனையுரைப்பார் - சிலர்

இணங்கும் ஐம்பூதங்கள் என்றிசைப்பார்

செய்கையின் சக்தியென்பார் - உயிர்த்

தீயென்பர் , அறிவென்பர் , ஈசனென்பர்

( சிவசக்தி - 1 )

என்று சக்தியை இயற்கை , ஐம்பூதம் , தீ , அறிவு , கடவுள் , வானம் , பூமி , நான்கு திசைகள் ஆகிய அனைத்திலும் பார்க்கிறார் .

இந்தச் சக்தியானது , நிலை சக்தி , ( potential energy ) இயங்கு சக்தி ( kinetic energy ) என இரு நிலைகளில் காணப்படுகின்றது .

சக்தி இல்லாவிடில் உலகில் எந்தச் செயலும் நிகழாது .

இந்தச் சக்தியின் ஆற்றல் இக்காலத்தில் பல நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது .

நீரில் இருக்கும் சக்தி மின்சக்தியாகப் பயன்படுகிறது .

காற்றின் வேகத்தால் காற்றாடி சுழல்வது இயந்திர சக்தி ( Mechanical energy )

அந்தச் சக்தி மின்சக்தியாகக் ( Electrical energy ) காற்றாலையில் மாற்றப்படுகிறது .

இதுபோல் அணு ( Atom ) வும் அணு மின்சக்தி எடுக்கப் பயன்படுகிறது .

இவற்றைக் கொண்டு ஆக்கபூர்வமான பணிகளைச் செய்ய இயலும் .

ஆகவே தான் பாரதி சக்தியை எல்லாவற்றிலும் கண்டு வணங்குகிறார் , போற்றுகிறார் .

புவி ஈர்ப்புவிசை ( Gravitational force )

பரம்பொருளின் அருளைப் பாடவந்த பாரதி அவரது கொடையாகப் புவிஈர்ப்பு விசையைக் கூறுகிறார் .

இந்த விசை சந்திரனில் ஆறில் ஒரு பங்காக இருக்கிறது .

மேல் நோக்கிப் எறியப் படும் பொருள்கள் ஈர்ப்பு விசை இல்லையெனில் கீழே விழாது .

ஈர்ப்பு விசையால் மண்ணுலக மக்கள் பெறும் நன்மையைப் பாருங்கள் .

விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கி

யிருக்கும் கடல்நீர் அந்தச் சுழற்சியிலே தலைகீழாக

கவிழ்ந்து திசைவெளியில் ஏன் சிதறிப் போய்விடவில்லை ?

பராசக்தியின் ஆணை !

கிணறு நம் தலையிலே கவிழ்கிறதா ?

அவள் மண்ணிலே ஆகர்ஷ்ணத் திறமையை நிறுத்தினாள்

அது பொருள்களை நிலைப்படுத்து கின்றது !

( வசன கவிதை , கடல் -1 )

( சுழலும் = சுற்றும் , சுழற்சி = சுழல்வது , ஆகர்ஷ்ணத்திறமை = இழுக்கும் சக்தி )

இவ்வாறு சக்தியையும் புவிஈர்ப்பு விசையையும் பாடி அதன் ஆற்றலைக் கண்டு வியக்கிறார் .

பூமி உருண்டையானது அது தன்னைத் தானே சுற்றிவரும் போது , பூமியில் உள்ள கடல் நீர் தலைகீழாகக் கவிழ்ந்து ஆகாயத்தில் சிதறவில்லை .

பூமியிலுள்ள கிணற்று நீர் சிந்தவில்லை .

இந்தச் செயல்களெல்லாம் எப்படிச் சாத்தியமாகின்றன என்று வியக்கிறார் .

உலகைத் தோற்றுவித்த அன்னையாகிய பராசக்தியே தம் கருணையால் கடல் , மலை போன்றவற்றை அந்தந்த இடங்களில் நிலை பெயராது நிற்க ஆணையிட்டிருக்கிறாள் என்று நம்புகிறார் .

4.4.2 வேதியியல் ( Chemistry )

பொருள்களின் மூலக் கூறுகளையும் அந்த மூலக் கூறுகள் எவ்வாறு எந்தச் சூழ்நிலையில் ஒன்றோடு ஒன்று வினைபுரிகின்றன என்பதையும் குறிக்கும் அறிவியல் துறையாகும் .

வேதியியல் பற்றிய தெளிவான அறிவு பாரதிக்கு உண்டு .

உலகில் உள்ள மூலப் பொருள்கள் எழுபது , மண்ணுலகில் காணப்படும் பொருள்கள் அனைத்தும் , எழுபது மூலப் பொருள்களின் சேர்க்கையால் உள்ளன என்று தம் கட்டுரையில் குறிப்பிடுகிறார் .

( பாரதி கட்டுரைகள் பக் : 391 )

வழக்கத்திலுள்ள பொன் , வெள்ளி , செம்பு , கந்தகம் ஆகியவை மட்டுமன்றி , பழக்கத்தில் இல்லாத குரோமியம் , தித்தானியம் , யுரேனியம் என்பனவற்றோடு , புதிதான ரேடியம் , ஹீலியம் ஆகியவற்றையும் பட்டியலிட்டுப் பகுத்துக் காட்டும் அளவு அவருடைய வேதியியல் நூல் அறிவு விரிந்துள்ளது .

திடநிலை , திரவநிலை , வாயு நிலை ஆகிய மூன்று நிலைகளில் காணப்படும் பொருள்களைப் பற்றிக் கற்பிக்க வேண்டுமென வலியுறுத்துகிறார் .

இத்துடன் வேதியியல் மாற்றம் , வேதியியல் சிதைவு போன்றவற்றையும் , அணுவைப் பற்றியும் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார் .

இயற்பியல் , வேதியியல் , மருத்துவம் , விலங்கியல் , தாவரவியல் ஆகிய பாடங்கள் பாடத்திட்டத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்பட வேண்டிய பாடங்கள் என்றும் கூறுகிறார் .

( பாரதி கட்டுரைகள் பக்.392 )

தங்கம் முதலிய பொருள்களைப் பூமியிலிருந்து வெட்டியெடுக்க வேண்டுமென்றும் ( பாரத தேசம் - 3 ) . கல்லுக்குப் பட்டை தீட்டி வயிரமாக்குதல் , செம்புக்கு முலாம் பூசித் தங்கமாக்குதல ( electro plating ) போன்ற அறிவியல் கலைகளில் இந்தியர் சிறந்து விளங்க வேண்டுமென்றும் அவர் விரும்பியிருக்கின்றார் .

அவர் பாடிய ,

கல்லை வயிர மணியாக்கல் - செம்பைக்

கட்டித் தங்கமெனச் செய்தல்

( வரம் கேட்டல் - 8 )

என்ற பாடல் அவர் எண்ணத்தைப் புலப்படுத்துகிறது . இவ்வாறு இயற்பியல் , வேதியியல் பற்றிய முழு அறிவுத் தேவை என்பதை விரிவாகத் தம் கட்டுரையில் கூறுகிறார் பாரதி .