167

4.5 வேளாண்மை ( Agriculture )

வேளாண்மை என்பது நிலத்தைப் பண்படுத்தித் தானியங்கள் முதலியவற்றை விளைவிக்கும் தொழிலைக் குறிக்கும் .

4.5.1 விவசாயம்

கிராமங்கள் நிறைந்த நாடு இந்தியா .

நன்செய் புன்செய் பயிர்கள் விளையும் விவசாய நாடாக விளங்கியது .

விவசாயத் துறையிலும் அறிவியல் முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிறார் பாரதி .

பள்ளிப் பருவத்திலேயே மாணவச்செல்வங்களுக்கு , குறிப்பாகத் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு , விவசாயத் தொழிலில் தகுந்த ஞானமும் அனுபவமும் பெற வழிகாட்ட வேண்டும் .

பள்ளிப் படிப்பு முடிந்ததும் விவசாயம் செய்தால் , தொழில் இல்லை என்று யாரும் சோம்பியிருக்க வேண்டியதில்லை என்றார் .

எல்லோரும் தொழில் செய்தால் இல்லை என்ற சொல்லே இல்லை என்று ஆகிவிடும் அல்லவா ?

4.5.2 தோட்டக்கலை ( Horticulture )

இந்தக் கலை , பூ , காய் , பழம் ஆகியவற்றைத் தரும் செடி கொடிகளையும் , மரங்களையும் பராமரிக்கும் முறையைக் குறிப்பது ஆகும் .

பாரதியார் தம் கட்டுரையில் இதைத் ‘ தோட்டப் பயிற்சி ’ ( பக் : 392 ) என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் .

நன்செய் புன்செய்ப் பயிர் மட்டுமல்லாமல் தோட்டப் பயிர்களைப் பராமரித்து வளர்ப்பதிலும் மாணவர்கள் அனுபவம் பெற வேண்டும் .

என்று கூறுகிறார் பாரதியார் .

( பாரதியார் கட்டுரைகள் , பக் : 392 ) விவசாயம் என்ற ஒன்றையே நம்பியிருப்பதை விட , உணவுப் பொருள்களாக விளங்கும் காய் , கனி முதலியவற்றைப் பயிர் செய்து பலனடைய வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கூறினார் போலும் .

இக்காலத்து அழகுக்காக வீடுகளில் வளர்க்கப்படும் செடி , கொடி , பூ போன்றவற்றை வளர்த்து அதுவே ஒரு தொழிலாக வளர்ச்சியடைந்துள்ளதைக் காணலாம் .

நோயின்றி வாழ்வதற்குத் தேவையான உணவுப் பொருள் எவை என்று கண்டறிந்து மாணவர்கள் அவற்றைப் பயிர் செய்து வளமுடன் வாழலாம் .

4.6 பொறியியல் ( Engineering )

இது இயந்திரம் முதலியவற்றை உருவாக்குதல் , பராமரித்தல் முதலியவற்றைக் குறிக்கும் .

ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் விளைவால் புதுப்புது இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன .

அதனால் மேலை நாடுகளில் பெரிய தொழிற்சாலைகள் தோன்றின .

தொழில் வளம் பெருகியது .

அது போல் இந்தியாவும் தொழிலில் முன்னேறும் என்ற நம்பிக்கை பாரதிக்கு இருந்தது .

இந்தியர் ஏதும் அறியாதவர் என வெள்ளைக்காரர் நினைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் பெரிய தொழில் முதல் குடிசைத் தொழில் வரை இந்திய நாட்டு மக்கள் செய்வார்கள் என்பதை ,

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்

ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்

குடைகள் செய்வோம் உழுபடைகள் செய்வோம்

கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம்

நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்

ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்

( பாரத தேசம் - 9,10 )

( உழுபடை = உழுவதற்குப் பயன்படும் கருவிகள் , நடையும் = சாலையில் செல்லும் சக்கர வண்டி , பறப்பும் = வானவெளியில் செல்லும் விமானம் போன்றவை , ஞாலம் = உலகம் )

என்று பாடியிருக்கின்றார் .

அக்காலத்தில் விஞ்ஞானக் கதைகளில் கூறப்பட்ட பல கருவிகள் இக்காலத்தில் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தப்படுகின்றன .

அவர்கள் கற்பனை செய்த ‘ மந்திரக் கண்ணாடி ’ இன்றைய தொலைக்காட்சி , ‘ புஷ்ப விமானம் ’ தான் ஆகாய விமானம் .

எதிரொலியின் பிரதிபலிப்புத்தான் வானொலி .

பாரதியின் உழுபடை இப்போதுள்ள டிராக்டர் எனக் கொள்ளலாம் .

இதுபோல் பாரதியும் தொலைதூரத்தில் ஒருவர் பேசுவதைக் கேட்கும் வகையில் கருவி கண்டுபிடிக்கப்பட வேண்டுமென்று பாடுகிறார் .

காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்

( பாரத தேசம் - 7 )

மேலும் பாரதியார் ,

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்

பண்ணி மலைகளென வீதி குவிப்போம்

( பாரத தேசம் - 8 )

என்ற பாடலில் பட்டாடை , பருத்தி ஆடை முதலியன செய்வதில் பாரதநாடு புகழ்பெற்றது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் .

4.7 உடற்கல்வி ( Physical Education )

உடற்கல்வி என்பது விளையாட்டு , பயிற்சி முதலியவற்றின் மூலம் உடல் ஆரோக்கியத்திற்காக அளிக்கப்படும் படிப்பைக் குறிக்கும் .

இதைச் ‘ சரீரப் பயிற்சி ’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் பாரதி . ( பாரதியார் கட்டுரைகள் , பக் : 393 )

‘ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ’ ( Health is wealth ) என்பது பழமொழி .

நோய் இல்லாமல் வாழ்வதற்கான வழிகளாகப் பாரதி கூறுவதைப் பாருங்கள் .

4.7.1. உடல் உழைப்பு

தன் வேலையைத் தானே செய்ய வேண்டும் ( self - help ) என்ற மகாத்மா காந்தியின் கொள்கையை அனைவரும் கடைப்பிடித்தால் உடற்பயிற்சி யில்லாமல் உழைப்பின் மூலம் நலமுடன் வாழலாம் .

கிணற்றில் நீர் இறைத்தல் , தோட்டத் தொழில்கள் செய்தல் , தன் துணிகளைத்தானே துவைத்தல் போன்ற அன்றாட வேலைகளைச் செய்வதால் உடற்பயிற்சி பெறலாம் என்று கூறுகிறார் பாரதியார் .

( பாரதியார் கட்டுரைகள் , பக் : 393 )

4.7.2 உடற்பயிற்சி

உடலை ஆரோக்கியமாகவும் , வலிமையாகவும் வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் செயல்களைக் குறிக்கும் , உழைப்பின் மூலம் பெறும் பயிற்சியோடு உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும் , உழைப்பின் மூலம் உடலின் அனைத்து உறுப்புகளும் பயிற்சி பெறும் என்று கூற முடியாது .

குறிப்பிட்ட ஒரு வேலையைச் செய்பவர்களுக்கு அந்த வேலையைச் செய்யும் உறுப்புகள் தவிர ஏனைய உறுப்புகளுக்குப் போதுமான அளவு பயிற்சி கிடைக்காது , அந்தக் குறையைப் போக்க உடற்பயிற்சி தேவைப்படுகிறது .

அனைத்து உறுப்புகளும் நன்றாகச் செயல் பட்டால்தான் ஆரோக்கியமாக வாழமுடியும் .

ஆகவே , உடற்பயிற்சி கொடுக்க இப்போது பல கருவிகள் வந்துள்ளன .

அவற்றைப் பயன்படுத்தி உடல் நலம் பெறலாம் .

மாணவர்களுக்குப் பள்ளிப் படிப்பு மட்டும் போதாது என்பது அவரது எண்ணம் .

ஆரோக்கியமில்லாமல் படிப்பு மட்டும் கொடுத்தால் படிப்பு வீணாகும் .

அற்ப ஆயுளில் இறக்க நேரிடும் .

சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும் ?

ஆகையால் மாணவர்கள் உடற்கல்வி பெறும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும் என்று வலியுறுத்துகிறார் .

4.8 அறிவியல் அணுகுமுறை

பாடங்கள் இருமுறைகளில் கற்பிக்கப்படுகின்றன .

1. வாய்மொழியாகக் கற்பித்தல்

2. செய்முறை ( Practical ) மூலம் கற்பித்தல்

4.8.1 வாய்மொழியாகக் கற்பித்தல்

தொடக்கக் காலத்தில் பாடங்கள் வாய்மொழியாகவே கற்பிக்கப் பட்டன .

அறிவியல் வளர வளர வாய்மொழியால் மட்டுமே அனைத்தையும் கற்பிக்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது .

பெரும்பாலும் மொழிக்கல்வி , வரலாறு போன்ற பாடங்கள் வாய் மொழியாகவும் , கரும்பலகையில் எழுதியும் கற்பிக்கப்பட்டன .

இவை போதாது என்ற நிலையில் , இதற்கு அடுத்த கட்டமாகப் படங்கள் தேவைப்பட்டன .

ஆகையால் , ஆசிரியர் பாடத்திற்குத் தகுந்த படங்களைக் காட்டிக் கற்பித்தனர் .

இது மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது .

வாய்மொழிக் கல்விக்கு மேலாக மாணவர் மனத்தில் பாடத்தைப் பதியச் செய்யப் படங்கள் உதவின .

பாரதியார் புவியியல் பாடங்களைக் கற்பிக்கும் போது , பூமியின் , படங்கள் , கோளங்கள் , வண்ணப் படங்கள் முதலிய துணைக்கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று தம் கட்டுரையில் குறிப்பிடுகிறார் .

( பக் : 382 ) அப்போதுதான் அந்தப் பாடங்கள் மாணவர்களின் மனத்தை விட்டு அகலாது நிற்கும் .

ஆனால் அறிவியல் துறை வளர்ந்தபோது மேலே கூறிய கற்பித்தல் முறைகளை விடச் செய்முறைவழிக் கற்பித்தல் இன்றியமையாததாகி விட்டது .

4.8.2 செய்முறை வழிக் கற்பித்தல்

இது பாடங்களை மாணவர்களுக்கு விளக்குவதற்காக , செய்து காட்டிக் கற்பிக்கும் முறையைக் குறிக்கும் .

‘ ஐரோப்பிய ஸயன்ஸின் ஆரம்ப உண்மைகளைத் தக்க கருவிகள் மூலமாகவும் பரீக்ஷைகள் ( செய்முறை ) மூலமாகவும் பிள்ளைகளுக்குக் கற்பித்துக் கொடுத்தல் மிகவும் அவசியமாகும் ’

( பாரதியார் கட்டுரைகள் , பக் : 389 ) என்று பாரதியார் கூறுவது செய்முறை வழிக் கற்பதன் தேவையை உணர்த்துகிறது .

பாடங்களை வாய்மொழியாகவும் , வண்ணப் படங்கள் மூலமாகவும் கற்பிப்பதைவிடச் செய்முறை வழிக் கற்பிப்பது வலிமையானது ; சக்தி வாய்ந்தது .

இதில் மாணவர் ஆசிரியருடன் கலந்துரையாடிப் பங்கேற்கும் நிலையும் , மாணவர்கள் தாமே செய்து பார்த்துப் படிக்கும் வாய்ப்பும் உள்ளது .

ஆகவே , கற்றலும் கற்பித்தலும் இந்த முறையில் சிறப்பாக நடைபெறும் .

வேதியியல் பாடத்தில் வேதியியல் மாற்றம் , வேதியியல் சிதைவு ஆகியனவற்றைச் செய்முறை மூலம் கற்பித்தல் மிகவும் அவசியம் என்று பாரதியார் தம் கட்டுரையில் கூறுகிறார் .

பாடம் கற்பிக்கும் போது இயன்ற அளவு தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்பது அவரது கோரிக்கை .

( பாரதியார் கட்டுரைகள் , பக் : 389 , 390 ) இது தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியார் கொண்ட ஆர்வத்தைக் காட்டுகிறது .

4.9 தொகுப்புரை

இவ்வாறு இந்தப் பாடம் பாரதியாரின் அறிவியல் நோக்கைத் தெளிவாகக் காட்டுகிறது .

பாரதியாரின் பாடல்கள் , கட்டுரைகள் ஆகியனவற்றின் வழி ஆங்காங்கே புவியியல் , வானவியல் , உயிரியல் , வேதியியல் , வேளாண்மை , பொறியியல் , உடற்கல்வி போன்றவற்றைப் பற்றி அவர் அறிந்த உண்மைகளும் , அவர் வாழ்ந்த காலத்தில் பேசப்பட்ட உண்மைகளும் இங்குத் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. சுழலும் பூமியில் பொருள்கள் ஏன் சிதறவில்லை ?

அவற்றை நிலை நிறுத்துவது யார் ?

[ விடை ] 2. பாரதி காட்டும் புது மூலக் கூறுகள் எவை ?

[ விடை ]

3. தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு என்ன பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் ?

[ விடை ]

4. நலமுடன் வாழ என்ன செய்ய வேண்டும் ?

[ விடை ]

5. அறிவியல் பாடத்தைக் கற்பிக்கச் சிறந்த முறை எது ?

தமிழ்க் கவிதை வரலாற்றில் பாரதியுகம்

5.0 பாட முன்னுரை

சங்க காலத்தில் தோன்றிய தமிழறிஞர்கள் எல்லாம் வளமான இலக்கியங்களைப் படைத்துப் பெருமை சேர்த்தனர் .

அவர்கள் படைத்த பாடல்களுள் காதல் பற்றிய பாடல்கள் அக இலக்கியங்கள் என்று பெயர் பெற்றன .

வீரம் , புகழ் , கொடை , கல்வி முதலியன பற்றிய பாடல்கள் புற இலக்கியங்கள் என்று வழங்கப்பட்டன .

இந்த இலக்கியங்கள் மொழி , நாடு , அரசு , சமுதாயம் , பண்பாடு முதலியவை பற்றிக் கூறின .

கடைச்சங்க காலத்தில் மனிதனை மனிதனாக வாழச் செய்வதற்கான கருத்துகளைக் கூறும் திருக்குறள் , பழமொழி , நாலடியார் போன்ற அறநூல்கள் தோன்றின .

கடைச்சங்க காலத்தை அடுத்துச் சிலப்பதிகாரம் , மணிமேகலை , சீவகசிந்தாமணி , குண்டலகேசி , வளையாபதி என்னும் பெருங்காப்பியங்கள் தோன்றின .

அதன் பின்னர் வீடு பேறு அடைதலையே தலையாய குறிக்கோளாகக் கொண்டு , நாயன்மார்களும் ஆழ்வார்களும் முறையே சிவபெருமானையும் , திருமாலையும் பாடி வழிபட்டனர் .

அவர்கள் இறையுணர்வு மேலீட்டால் பாடினர் .

ஆகையால் இவற்றில் சமுதாயத்தையோ , நாட்டின் நிலையையோ , அரசியலையோ பற்றி மிகுதியாக அறிய முடியவில்லை .

இதையடுத்து முகமதியர் , தெலுங்கர் போன்ற அந்நிய ஆட்சியின் ஆதிக்கங்கள் தமிழ்ப் புலவர்களின் செல்வாக்கைத் தேய்த்தன .

தமிழ்ப்புலவர்கள் கற்றவர்கள் மட்டுமே பொருள் உணரக் கூடிய வகையில் கலம்பகம் , சித்திர கவி , யமகம் , திரிபு போன்ற இலக்கியங்களைப் படைத்தனர் .

சிற்றரசர்கள் , செல்வச் சீமான்கள் ஆகியோரை பொருள் பெறும் நோக்கத்துடன் மட்டுமே பலவாறு புகழ்ந்து பாடியிருக்கின்றனர் .

அந்தப் பாடல்கள் சமுதாயப் பாடல்களாக , தேசியப் பாடல்களாக அமையவில்லை .

தாயுமானவரும் இராமலிங்க அடிகளாரும் தம் பாடல்களில் சமூகச் சிந்தனையைச் சிறிதளவு கொண்டு வர முனைந்துள்ளனர் .

ஆயின் , சமூகச் சிந்தனைகளையே பாடுபொருளாகக் கொண்டு முதன் முதலாகப் பாடியவர் பாரதியே .

சமூகத்தின் எல்லா நிலையினரும் பயன்பெறும் வகையில் எளிய நடையில் பாடினார் .

அன்றாடச் சொல் வழக்கைக் கவிதையில் கொண்டு வந்த பெருமை பாரதியாரையே சாரும் .

5.1 தாயுமானவரும் இராமலிங்க அடிகளும்

கம்பர் காலத்திற்குப் பின்பு எண்ணங்களை வெளியிடுவதில் பழைய முறைகளும் ஒரே மாதிரியான வடிவங்களும் சலிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் .

பாரதியார் காலத்திற்கு முன்பு வாழ்ந்த தாயுமானவர் , இராமலிங்க அடிகள் ஆகியோர் சிறிதளவு சமுதாயச் சிந்தனை உடைய பாடல்கள் பாடியிருக்கின்றனர் .

தாயுமானவர் ,

எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும் நின்

தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே

என்றும் ,

எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே

( பராபரக் கண்ணி , 65,221 )

என்றும் பாடியிருப்பது எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பார்க்கும் பரந்த உள்ளம் வேண்டும் என்று விரும்பியதை உணர்த்துகிறது .

உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் இன்புற வேண்டுமென்று உள்ளன்புடன் வேண்டியதையும் காட்டுகின்றது .

இராமலிங்க அடிகள் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் .

என்று நீரின்றி வாடும் அஃறிணைப் பொருளுக்காகவும் இரங்கிப் பாடுகிறார் .

அவர்கள் காலத்திலும் இந்தியா ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுத் தான் இருந்தது .

ஆனால் அவர்கள் நாட்டின் விடுதலைக்காகப் பாடவில்லை .

ஆன்மீக விடுதலையை நோக்கமாகக் கொண்டே பாடியிருக்கின்றனர் .

அவர்களுடைய குறிக்கோள் நாட்டுக் காதல் அல்ல , இறைக் காதல் .

தாயுமானவர் இறைவன் மீது கொண்ட பக்தியால் ,

பத்தர் அருந்தும் பரமசுகம் யானருந்த

எத்தனை நாள் செல்லும் இயம்பாய் பராபரமே

( பராபரக்கண்ணி , 270 )

என்று பாடுகிறார் .

சிவபெருமானின் திருவடி அடைய வேண்டும் , சிவபக்தர்கள் பெறும் பேரின்பம் பெற வேண்டும் என்பது அவர் விருப்பம் . இராமலிங்க அடிகள் பாடிய ,

இனி ஏதுறுமோ என்செய்கேன்

எளியேன் தனைநீ ஏன்றுகொளாய்

கனியே கருணைக் கடலே என்

கண்ணே ஒற்றிக் காவலனே

( திருவருட்பா - இரண்டாம் திருமுறை , 933 )

( ஏன்று கொளாய் = ஏற்றுக் கொள்வாய் , ஒற்றி = திருவொற்றியூர் )

என்னும் பாடல் தமக்கு ஏது நிகழுமோ என்று அஞ்சித் தம்மை ஏற்றுக் கொள்ளுமாறு இறைவனிடம் கேட்பதாக விளங்குகிறது .

5.2 பாரதியாரின் தனித்தன்மை

பாரதியாரின் சிந்தனை , சொல் , செயல் ஆகிய அனைத்தும் அவருக்கு முன்பு வாழ்ந்த புலவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தது .

பாரதநாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்ட காலத்தில் , சமுதாயம் தாழ்வுற்று வறுமையடைந்திருந்த நிலையில் , பாரத நாட்டு மக்கள் அடங்கி , ஒடுங்கி , அஞ்சி வாழ்ந்த சூழ்நிலையில் பாரதி தோன்றினார் .

அவருடைய வரவு , பாரதிதாசன் சொல்வது போல் , ‘ நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா ’வாக ஒரு புதிய விழிப்பை , விடியலைத் தோற்றுவிப்பதாக அமைந்தது .

பிற புலவர்களை விட அவரிடம் நாட்டுப் பற்று , மொழிப்பற்று , சமுதாய உணர்வு ஆகிய சிந்தனைகள் எழுச்சி பெற்று விளங்கின .

பாரதியின் மனம் புதுமை மீது மிகுந்த விருப்பம் கொண்டதாக விளங்கியது .

இருப்பினும் பழையதைப் போற்றியிருக்கிறார் .

பழமையில் புதுமை படைத்து , முற்றிலும் புதிய வகைகளைத் தந்து தமிழ்க் கவிதைகளுக்குப் புதுப் பொலிவு கொடுத்திருக்கிறார் .

தமிழ்க் கவிதை வரலாற்றில் புதிய பாதையை வகுத்து வழிகாட்டியிருக்கிறார் பாரதி .

இந்த மறுமலர்ச்சி யுகத்தைப் ‘ பாரதி யுகம் ’ என்று சிறப்பித்துப் பேசலாம் என்பார் பி.ஸ்ரீ( பாரதியார் இதயம் , பக் : 16 )

யுகம் என்றால் என்ன ?

யுகம் என்ற சொல்லுக்கு நீண்ட காலம் என்பது பொருள் .

பாரதியார் நாட்டு விடுதலைக்காகவும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடியவர் .

ஆகையால் மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று தம் மனத்தில் பட்டதைக் கவிதையில் சொல்லோவியமாகப் படைத்து விடுகிறார் .

அதுவே பாடுபொருளாக அமைந்து விடுகிறது .

பாரதி தமக்கு முன்பு வாழ்ந்த புலவர்கள் பாடிய பாடுபொருள் போல் பாடியது மட்டுமன்றிப் புதிய வடிவம் , எளிய மொழி நடை முதலியவற்றைக் கையாண்டிருக்கிறார் .

பாரதியாரின் விடுதலை வேட்கையும் சமுதாயச் சீர்திருத்த எண்ணமும் அவரை அவ்வாறு பாடத் தூண்டியிருக்கக் கூடும் .

பெரும்பான்மையான பாடல்களில் பாடுபொருள் ஒன்றாக இராமல் பலவாக விளங்குகின்றன .

அது மட்டுமன்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒரு முறை சொன்னதை மீண்டும் அவர் கூறுவதையும் காண முடிகிறது .

அடி மேல் அடித்தால் அம்மியும் நகரும் அல்லவா ?

பாரதி வாழ்ந்தார் என்று இறந்த காலத்தில் கூறாமல் பாரதி வாழ்கிறார் , பாரதி வாழ்வார் என்று நிகழ் காலத்திலும் எதிர் காலத்திலும் கூறும் வண்ணம் அவர் தோற்றுவித்த யுகம் இக்காலத்தும் தொடர்கிறது .

பாரதியாரின் அடிச்சுவட்டில் பாரதிதாசன் , கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை , நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை போன்ற பல கவிஞர்கள் பாடியிருக்கின்றனர் .

5.3 பாடுபொருள்

ஒரு கவிதையை முழுமையாக அறிந்து கொள்ள அதன் இரண்டு நிலைகள் குறித்து நோக்க வேண்டும் .

ஒன்று பாடு பொருள் , மற்றொன்று பாடலின் வடிவம் .

இவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பன .

ஆயினும் இரண்டாகப் பார்ப்பது தேவை .

இதன் மூலம் பாடலின் இயல்புகளை அறிய முடியும் .

பாடலின் பொருளுக்கேற்ப அதன் வடிவமும் மாறுபடுகின்றது .

பாரதி இவை இரண்டிலும் புதுமை படைத்துப் புதுயுகக் கவிஞராக விளங்குகிறார் .

பாடுபொருளின் வழியில் பாரதியின் தனித்தன்மை துலங்கும் வகையினை முதலில் காண்போம் .

பாடு பொருள் என்பது கவிதையின் கருவாக அமையும் கருத்து / தகவல் / செய்தி ஆகும் .

இந்தக் கரு தன் அனுபவ வெளியீடாகவோ அல்லது பிறர் அனுபவ வெளியீடாகவோ விளங்கும் .

ஒரு நாடும் அந்த நாட்டில் வாழும் மக்களும் அமைதியாகவும் சிறப்பாகவும் வாழ வேண்டும் .

இவை இரண்டும் இல்லாத காலத்தில் பிறந்த பாரதியின் உள்ளத்தில் விடுதலை உணர்வு எழுந்தது .

அடிமைகளாக வாழ்கின்றோம் என்னும் உணர்வு கூட பாரத நாட்டு மக்களுக்கு அன்று ஏற்படவில்லை .

நாட்டு மக்களின் நிலை கண்டு வருந்திய பாரதி விடுதலை உணர்வு கொண்ட பாடல்கள் பல பாடியிருக்கிறார் .

5.3.1 நாடும் மொழியும்

பாரதியார் பாடல்களில் பாரத நாட்டின் பாரம்பரியப் பெருமை , அந்நியர் எதிர்ப்பு , தாயின் மணிக்கொடி , சுதந்திரத்தின் பெருமை , தமிழ் மொழி , தமிழ்நாடு முதலிய கருத்துகள் பாடுபொருளாய் விளங்குகின்றன .

இந்தப் பாடல்கள் பாரத நாட்டு மக்களிடம் நாட்டின் நிலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தின .

ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு அந்நிய நாட்டவர் பலர் இந்தியாவின் மீது படையெடுத்திருந்தனர் .

அப்போதெல்லாம் பாரத நாட்டு மக்கள் அவர்களை வெளியேற்ற ஒன்று திரண்டு எழவில்லை . ஆனால் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மேலோங்கியிருந்தது .