168

இதைக் கண்ட பாரதி அவர்களுக்கு நாட்டுப் பற்றை வளர்க்கும் வண்ணம் தேசியப் பாடல்கள் பல பாடியிருக்கிறார் .

தம் தாய் நாட்டின் பெருமைக்காகக் கவிதையைக் காணிக்கையாகப் படைத்த பாரதியார் , தாய் நாடு உயர வேண்டுமெனில் தாய் நாட்டின் அங்கமாக விளங்கும் பல்வேறு மொழிகள் , மாநிலங்கள் ஆகியவை வளம் பெற வேண்டும் என்று கருதியிருக்கிறார் .

தாய்மொழி என்பது மதர் டங் ( mother tongue ) என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் ஆகும் .

தாய்மொழி என்னும் சொல்லுக்கு ‘ வீட்டு வார்த்தை ’ என்ற தூய தமிழ்ச் சொல்லைப் போகின்ற பாரதம் என்னும் பாடலில் பாரதி கூறியிருப்பதைக் காணலாம் .

இங்ஙனம் தமிழ் உணர்வையும் தேசிய உணர்வையும் இணைத்து ,

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே

( செந்தமிழ் நாடு - 1 )

என்று தமிழோடு தேசியத்தையும் , நாட்டையும் போற்றுகிறார் .

5.3.2 தேசியத் தலைவர்களும் பிற நாடுகளும்

பாரதியார் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட தேசபக்தத் தலைவர்களைப் பாடுபொருளாகக் கொண்டு பாடல்கள் பாடியிருக்கிறார் .

மேலும் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட இத்தாலி நாட்டு மாஜினியைப் பற்றி பாடியுள்ளார் .

மக்கள் புரட்சி நடைபெற்ற பெல்ஜியம் , உருசியா போன்ற நாடுகளும் அவருக்குப் பாடுபொருளாக ஆயின .

மேலே கூறியவற்றைப் பற்றி விரிவாக ( C0112 ) : பாரதியாரின் தேசியப் பாடல்கள் , ( C0115 ) : பாரதியார் பாடல்களில் சமுதாய நோக்கு , ( C01121 ) : பாரதியார் படைப்புகளில் தமிழியல் சிந்தனைகள் முதலிய பாடங்களில் படித்திருப்பீர்கள் .

5.3.3 சமுதாய முன்னேற்றம்

பாரதியார் , பாரத சமுதாயத்தில் காணப்பட்ட குறைகளைக் கண்டு வருந்தி , சமுதாய ஒற்றுமையின்மைக்குக் காரணம் சாதி சமய வேறுபாடு என்று உணர்ந்தார் .

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாட்டைத் தம் பாடல்கள் வழி உணர்த்துகிறார் .

இயற்கையின் அழகைப் பாடினார் , ஆற்றலைப் போற்றினார் , உழைப்பைப் புகழ்ந்தார் .

மூட நம்பிக்கையை வெறுத்தார் .

தீண்டாமையை ஒழிக்க ஆறில் ஒரு பங்கு என்னும் கதை எழுதினார் .

இறை உணர்வைப் போற்றினார் .

தொழிலை மதித்தார் .

மக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி காட்டும் பாடல்கள் பாடிக் குவித்தார் .

பாரதி போல் வேறு எந்தக் கவிஞரும் முதன்முதலாகப் பல வகையான பாடுபொருள்களைக் கொண்ட பாடல்கள் பாடவில்லை .

பாரதியார் பாடல்களின் பாடுபொருள் அவருடைய புதுமை உள்ளத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றது .

பெண்கள் முன்னேற்றம்

பாரதியார் இந்திய சமுதாயத்தில் உள்ள சீர்கேடுகளைக் களைந்தால் மட்டுமே இந்தியா முன்னேற்றம் அடையும் என்று கருதினார் .

சமுதாயம் முன்னேற வேண்டுமென்றால் மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கும் பெண்கள் முன்னேற வேண்டும் என்று அவர்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினார் பாரதி .

ஆகவே , பெண்ணுக்கு விடுதலையும் வாழ்வும் வேண்டும் என்று பாடியிருக்கிறார் .

பெண் விடுதலையை மையக் கருத்தாகக் கொண்டு பாரதி பாடிய ,

பெண்ணுக்கு விடுதலை நீரில்லை என்றால்

பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை

( பாரதி அறுபத்தாறு , பெண் விடுதலை - 45 )

என்னும் பாடல் பெண்ணுக்கு விடுதலை இல்லை என்று சொன்னால் இந்த உலகத்தில் வாழ்க்கையே இல்லை என்று காட்டுகிறது .

இந்தியாவில் மட்டுமன்றிக் கடல் கடந்து அடிமைப்பட்டு வாழும் பெண்களின் விடுதலைக்காகவும் பாரதி பாடியிருக்கிறார் .

ஆங்கிலேயர் ‘ பிஜி தீவி ’ல் உள்ள கரும்புத் தோட்டத்தில் வேலை செய்ய இந்தியப் பெண்களை அழைத்துச் சென்றனர் .

அங்கு அவர்களை அடிமைப்படுத்தியது மட்டுமன்றி போகப்பெருளாகவும் பயன்படுத்திய கொடுமையை ,

. செக்கு

மாடுகள் போலுழைத்து ஏங்குகின்றார்

நெஞ்சம் குமுறுகிறார் - கற்பு

நீங்கிடச் செய்யும் கொடுமையிலே

( கரும்புத் தோட்டத்திலே - 4 )

என்று பாடி அவர்கள் விடுதலை பெறக் குரல் கொடுக்கிறார் பாரதி .

திரையிட்டு முகம் மறைத்தல்

இஸ்லாமியர் வரவால் இந்தியப் பெண்கள் திரையிட்டு முகத்தை மறைக்கும் பழக்கத்தைப் பாரதியார் சிறிதளவும் விரும்பவில்லை .

தேவையற்ற பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ,

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி - பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்

பண்டை

ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ ?

( கண்ணம்மா என் காதலி , 18-1,2 )

என்று பாடி , இந்திய நாட்டுப் பெண்கள் இந்தியப் பண்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் .

இது பாரதியாரின் சுதேச உணர்வை வெளிப்படுத்துகின்றது .

பெண் விடுதலை பெறும் வழி

பெண் விடுதலை பெற சாத்வீக முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று விரும்பினார் பாரதி .

பெண்ணுக்கு அநீதி இழைப்பவர் யார் ?

ஆண்கள் .

அந்த ஆண்கள் பெண்களுக்கு அண்ணன் , தம்பி , தந்தை , மாமன் , மைத்துனன் , கணவன் , காதலன் என்னும் உறவுகளால் கட்டுண்டிருக்கிறார்கள் .

அவர்களை ஆயுதங்களால் எதிர்க்க இயலாது .

எனவே சாத்வீக முறைப்படி ஆண்களுக்குப் புத்திவரும்படி செய்ய வேண்டுமென்று பாரதி எடுத்துரைக்கிறார் .

தென் ஆப்ரிக்காவில் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை மகாத்மா காந்தி நியாயத்தால் வெல்ல நினைத்த அதே முறையைத் தான் பெண்கள் கையாள வேண்டும் என்கிறார் பாரதி .

பண்பாட்டைப் பேணுதல்

ஐரோப்பாவில் மனிதர்கள் தாங்கள் விரும்பியவருடன் வாழலாம் என்று கூறும் விடுதலைக் காதலை ( free - love ) வன்மையாகக் கண்டிக்கிறார் பாரதி .

இந்தியப் பண்பாட்டிற்கு ஒவ்வாத பழக்கங்களை விட்டு விடக் கூறுகிறார் .

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாரத நாட்டு மக்களால் கட்டிக் காக்கப்பட்டு வருவது இந்திய நாட்டுப் பண்பாடு .

அதுவே இந்திய நாட்டின் சமூக மூலதனம் ( social capital ) ஆகும் .

அந்தச் சமூக மூலதனம் குறைந்தால் கலாச்சாரச் சீரழிவு ஏற்படும் .

ஆகவே .

சமூக மூலதனத்தைக் காக்கும் எண்ணத்தில் விடுதலைக் காதலைக் கண்டித்துப் பாடுகிறார் பாரதி .

தனி மனிதன் உயர்ந்தால் சமுதாயம் உயரும் .

சமுதாயம் உயர்ந்தால் நாடு உயரும் .

ஆகவே ,

காதலிலே விடுதலை யென்று ஆங்கோர் கொள்கை

கடுகி வளர்ந்திடு மென்பார் யூரோப்பாவில் .

வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்

விடுதலையாம் காதலெனிற் பொய்மைக் காதல் !

ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்

அப்போது பெண்மையும் கற்பழிந் திடாதோ ?

( பாரதி அறுபத்தாறு , 55-56 )

என்று காதலிலே விடுதலை என்ற போக்கைக் கண்டிக்கிறார் பாரதி .

இல்லற வாழ்க்கையின் உயர்வை எக்காரணம் கொண்டும் அவர் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை என்பதை இப்பாடல் காட்டுகிறது .

5.3.4 குழந்தைகள்-எதிர்கால வித்துகள் - சமுதாயச் சிற்பிகள்

இன்றைய குழந்தைகள் எதிர்காலத் தலைவர்கள் .

மனித வாழ்வில் குழந்தைப் பருவமே மிக முக்கியமானது .

இவ்வுண்மையை உணர்ந்து , குழந்தைகள் முறையாக வளர்க்கப்பட்டால் நாட்டிற்கு நன்மை பயக்கும் .

பாப்பாப் பாட்டுத் தமிழ் இலக்கியத்தில் புதுத்துறை .

பாரதியாருக்கு முன்பு யாரும் குழந்தைப் பாடல் பாடவில்லை .

குழந்தைகளின் உள்ளம் எதையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளதாகும் .

பெற்றோரும் மற்றவரும் கூறும் நல்ல கருத்துகள் அவர்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதியும் .

எனவே , குழந்தைகளின் மனம் கொள்ளும் வகையில் அறிவுரை கூறுகிறார் பாரதி .

குழந்தையை அச்சுறுத்தியோ , கட்டுப்படுத்தியோ ஒன்றைக் கூறினால் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் .

ஆகவே , குழந்தையின் மனவியல் ( psychology ) அறிந்த பாரதி , பாப்பாவை அன்போடு அழைத்து ,

ஓடி விளையாடு பாப்பா - நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா - ஒரு

குழந்தையை வையாதே பாப்பா

( பாப்பா பாட்டு - 1 ) ( வையாதே = ஏசாதே , பழித்துரைக்காதே )

என்று பாடியிருக்கிறார் .

இதில் சோம்பியிருத்தல் ஆகாது , யாரையும் வசை சொல்லக் கூடாது , நாய் , பசு போன்ற விலங்குகளிடம் அன்பு காட்ட வேண்டும் , பாடம் படிக்க வேண்டும் , பொய் சொல்லக் கூடாது , தாய் நாட்டுப் பற்று வேண்டும் , சாதி வேறுபாடு கூடாது , ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றெல்லாம் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுகிறார் .

பாரதிக்குப் பெருமை சேர்த்த பாடல்களுள் ஒன்று சிறுவர்க்கு ஏற்ற எளிய சொற்களில் பாடலை இயற்றியிருப்பதாகும் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. பாரதியாருக்கு முன்பு சமுதாயச் சிந்தனை உடைய பாடல்களைப் பாடியவர்கள் யார் ?

[ விடை ]

2. கவிதையை முழுமையாக அறிந்து கொள்ள உதவும் இரு நிலைகள் எவை ?

[ விடை ]

3. பாரதியாரின் பாடுபொருள்களில் சிலவற்றைக் குறிப்பிடுக .

[ விடை ]

4. பிஜி தீவில் இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளாகப் பாரதி கூறுவன யாவை ?

[ விடை ]

5. பெண்கள் விடுதலை பெறுவதற்குப் பாரதி காட்டும் வழி யாது ?

5.4. வடிவம்

ஒரு கவிதையின் பாடுபொருளுக்கு , பாடலின் கருத்துக்கு ஏற்ற புற அமைப்பு அல்லது உருவம் வடிவம் எனப்படும் .

பொதுவாக இது பாடலின் யாப்பு நிலையைக் குறிக்கும் .

தமிழ்க் கவிதை வரலாற்றில் புதிய கவிதை வகைகளைப் படைத்தவர் பாரதி .

காலமாறுதலுக்கேற்ப , புதிய இலக்கிய வகைகள் தோன்றுதல் இயல்பு .

இந்த மாற்றங்கள் நான்கு வகைப்படும் .

அவை ,

1. பழைய வடிவமும் பழைய பாடுபொருளும்

2. பழைய வடிவமும் புதுப் பாடுபொருளும்

3. புது வடிவமும் பழைய பாடுபொருளும்

4. புது வடிவமும் புதுப் பாடுபொருளும்

என்பனவாகும் .

5,4.1 பழைய வடிவமும் பழைய பாடுபொருளும்

பாரதியார் பழைய தமிழ் இலக்கியங்களை வழுவறக் கற்றுத் தேர்ந்தவர் .

முன்னோர் கூறியதைப் பொன்போல் போற்றி அந்த இலக்கியங்களில் உள்ள பாடுபொருள் , வடிவம் ( யாப்பு ) முதலியவற்றைப் பின்பற்றிப் பாடல்கள் பல பாடியிருக்கிறார் .

பரிசில் வேண்டிப் பாடப்படும் சீட்டுக்கவியும் , ஓலைத் தூக்கும் பாரதியார் பாடியிருக்கிறார் .

மாணிக்க வாசகரின் நீத்தல் விண்ணப்பம் , போற்றித் திரு அகவல் போன்று மகாசக்திக்கு விண்ணப்பம் , போற்றி அகவல் ஆகிய பாடல்கள் இயற்றியிருக்கிறார் .

அருணகிரிநாதரின் திருப்புகழ் என்னும் நூலின் செல்வாக்கால் பாரதியார் மகாகாளியின் புகழ் , சிவசக்தி புகழ் , சக்தி திருப்புகழ் முதலிய பாடல்கள் புனைந்துள்ளார் .

ஒருவர் இறந்த உடன் அவரை நினைத்து மனம் வருந்திப் பாடும் இரங்கற்பாவான கையறுநிலைப் பாடல் , இன்னது செய்யாவிடில் இன்னன் ஆகுக என்னும் பாடுபொருள் கொண்ட வஞ்சினம் முதலிய பாடல்களும் பாடியிருக்கிறார் .

சிந்துக்குத் தந்தை என்று பாராட்டும் வகையில் ‘ சிந்து ’ யாப்பில் பல பாடல்கள் பாடியிருப்பதைக் காணலாம் .

ஒரே யாப்பில் அமைந்த 10 பாடல்கள் கொண்டது ஒரு பா ஒரு பஃது ஆகும் .

பாரதி , வெண்பா யாப்பில் பாடிய ‘ இளசை ஒருபா ஒரு பஃது ’ என்னும் பாடலின் வடிவமும் கருப்பொருளும் பழையதே ஆகும் .

5.4.2 பழைய வடிவமும் புதுப் பாடுபொருளும்

பழைய வடிவத்தில் புதுப் பாடுபொருளையும் பாரதியார் கையாண்டிருக்கிறார் .

பாமரரும் பாடலின் பொருள் புரிந்து கொள்ளும் அளவு இவருடைய பாடல்கள் எளிமையானவை .

மேலும் , பாரதியார் தம் பாடல்களை இசையுடன் பாடியதாலும் அவர் பாடல்கள் அனைவரையும் சென்றடைந்தன என்று கொள்ளலாம் .

பாரதியின் காலத்திற்கு முன்புள்ள பாடல்கள் கடின நடையில் விளங்கின .

அந்தப் பாடல்களில் இரண்டைப் பாருங்கள் .

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி

துத்தித் துதைதி துதைந்தத்தா தூதுதி

( தனிப்பாடல் திரட்டு - 313 )

இந்தப் பாடல் ‘ த ’கர எழுத்துகளை மட்டுமே கொண்ட தகர வருக்கப்பாடல் .

இந்தப் பாடலைப் பிரிக்கும் முறை

( தத்தி - சுற்றிச் சென்று , தாது - பூவின் மகரந்தம் , ( தேன் , பூவிதழ் , மலர் ) , ஊதுதி - ஊதுகின்றாய் .

( அருந்துகின்றாய் ) , தத்துதி - பாய்ந்து செல்கின்றாய் .

துத்தி - ' து ' ' தி ' என , துதைதி - ஒலித்து , துதைந்து - நெருங்கி , அணுகி ) இதன் பொருள் : வண்டே , நீ சுற்றிச் சென்று மகரந்தத்தை ஊதுகின்றாய் மகரந்தத்தை ஊதிய பின்னர்ப் பாய்ந்து செல்கின்றாய் .

' து ' ' தி ' என ஒலித்து மலர்களை அணுகுகின்றாய் .

சண்ட வெந்தழல்ப சித்த ழன்றுலகு

தன்னை யுண்ணஎழு தன்மைபோல்

கண்ட மொன்பதும் எரிந்தி டத்தெறு

கடுங்கொ ழும்பொறிகள் சிந்தின

கொண்ட லிற்புகை பரந்து சுற்றின

கொடுஞ்சு டர்ப்படு கொழுந்துபோய்

அண்ட முற்றன பரந்த தந்தர

மதற்கும் அப்புறம் எழுந்ததே

( அரிச்சந்திர புராணம் - 557 )

பாடலைப் பிரிக்கும் முறை .

வெந்தழல் பசித்து அழன்று உலகு தன்னை

கடும் கொழும் பொறி

பரந்தது அந்தரம் அதற்கும் அப்புறம்

மேற்கூறிய சொற்களை இவ்வாறு பிரித்துப் படித்தால் மட்டுமே பொருள் விளங்குகிறது .

இங்ஙனம் பிரிப்பதற்கு யாப்பு இலக்கணம் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும் .

அவ்வாறு இல்லாமல் எளிய சொற்களை இயல்பாக இணைத்துக் காட்டுகிற முறையையே எளிய நடை அல்லது புதிய நடை என்கிறோம் .

இந்த நடையைத் தான் பாரதி பின்பற்றினார் .

பாரதியின் எளிய நடையிலமைந்த பாடலைப் பாருங்கள் .

தேடியுனைச் சரண் அடைந்தேன் தேச முத்துமாரி !

கேடதனை நீக்கிடுவாய் , கேட்ட வரம் தருவாய்

சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி ,

பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்தும் தீரும்

( தேசமுத்துமாரி - 1,4 )

இந்தப் பாடல் யார் காதில் விழுந்தாலும் அவர்கள் அதைப் பாடும் அளவு மக்கள் பேசும் மொழியில் எளிமையாக உள்ளது .

இப்போது முன்பு கூறிய பாடல்களுக்கும் பாரதியார் பாடலுக்கும் உள்ள வேறுபாடு புரிகிறதல்லவா ?

இதுவே பாரதியின் சிறப்புக்கும் வெற்றிக்கும் காரணம் .

பாரதி தாம் சொல்ல வந்த செய்தி மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் மிகவும் கவனம் செலுத்தியிருக்கிறார் .

அவர் சொல்ல வந்த செய்தி : இன்று நாளை என்று நாட்களைத் தள்ளி போடாமல் இன்றே செய்க !

இப்போதே செய்க !

என்று சொல்லும் அளவிற்கு இன்றியமையாதவை .

அவை நாட்டு விடுதலை , சமுதாய முன்னேற்றம் முதலியனவாகும் .

ஆகவே , மக்கள் மொழியில் மிக எளிமையாகப் பாடியதால் அவர் எண்ணம் நிறைவேறியது .

பாட்டின் பொருளுக்கும் வடிவிற்கும் இயைபு உண்டு .

உணர்த்தப்படும் பொருளும் அதை உணர்த்தும் வடிவமும் பிரிக்க முடியாதன .

கவிதை வடிவ வகையில் , தமக்கு முன்னவர்களான இளங்கோவை , கம்பரை , வள்ளுவரை வழிகாட்டியாகக் கொள்கிறார் .

ஆயினும் தம் புரட்சி நோக்கில் அமைந்த புதுமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார் .

பாரதியாரின் கவிதைகள் தேசிய கீதங்கள் 60 , தோத்திரப் பாடல்கள்-62 , ஞானப் பாடல்கள் 30 , முப்பெரும் பாடல்கள்-3 , சுயசரிதை-8 , பிற பாடல்கள் -5 , நீதி நூல்கள் - 3 , பல்வகைப் பாடல்கள் - 66 வசன கவிதைகள் - 7 , பாரதி அறுபத்தாறு என 237 தலைப்புகளில் பாடல்கள் காணப்படுகின்றன .

( பாரதியார் கவிதைகள் , பூங்கொடி பதிப்பகம் , சென்னை , 2001 ) இவற்றில் வெண்பா , ஆசிரியப்பா போன்ற பாவகைகளும் ஆசிரிய விருத்தம் , கலித்துறை , வஞ்சித்துறை ஆகிய பா இனங்களும் கண்ணி , சிந்து , தாழிசை முதலிய இசைப்பாடல் வகைகளும் பயின்று வருகின்றன .

இதைப் பற்றி , பாக்களும் பாவினங்களும் ( D03121-3124 ) என்ற பாடத்தில் விரிவாகக் காணலாம் .

பொருளைச் சிறப்பித்துக் கூறப் பாரதி பல்வகைப் பழைய வடிவங்களைக் கையாண்டு அவற்றுள் புதுப்பாடுபொருளைப் புகுத்தியிருக்கிறார் .

நான்மணிமாலை

பாரதியின் விநாயகர் நான்மணி மாலை என்னும் பாடல் அந்தாதி அமைப்பில் ( அந்தாதி என்பது இலக்கிய வகைகளில் ஒன்று .

ஒரு பாடலின் இறுதி எழுத்து , அசை , சீர் , அடி இவற்றில் ஏதேனும் ஒன்று அடுத்த பாடலில் முதலில் வருமாறு பாடுவது அந்தாதி .

அந்தம் = முடிவு , ஆதி = தொடக்கம் ) 40 பாடல்களில் அமைந்துள்ளது .

இதற்கு முன்னோடியான நூல் பட்டினத்தாரின் ‘ கோயில் நான்மணிமாலை ’ எனக் கொள்ளலாம் .

கோயில் நான்மணிமாலை சிவபெருமானின் சிறப்புகளைக் கூறும் நிலையில் காணப்படுகிறது .

ஆனால் விநாயகர் நான்மணிமாலை வெளிப்படையாக விநாயகர் பெயரில் அமைந்திருந்தாலும் அதன் பாடுபொருள் கவிஞரின் நூறாண்டுவாழ்வு வேண்டல் ( 7,20 ) பல சமய இறைவரைக் குறிப்பிடல் ( 8 ) , தம் தொழிலைக் கூறல் ( 25 ) , நாட்டைத் துயரின்றி அமைக்கும் நோக்கம் கூறுதல் ( 28 ) விடுதலைக்கு இசையாத மனத்தைக் கடிதல் ( 36 ) முதலிய பாடுபொருள்களைக் கொண்டதாய் , கோயில் நான்மணி மணிமாலையின் பாடுபொருளில் இருந்து வேறுபட்டு விளங்குகிறது .

ஆத்திசூடி மனிதரை நன்னெறிப் படுத்துவதற்கான ஓரடி நீதிக் கருத்துகளை ஒளவையார் ஆத்திசூடியில் கூறியிருக்கிறார் .