17

பதம் என்பதன் இலக்கணத்தை வரையறை செய்யும்போது , எழுத்துத் தனித்துப் பொருள் தரின் அல்லது தொடர்ந்து நின்று பொருள் தரின் அது ‘ பதம் ’ எனப்படும் என்று நன்னூல் விளக்கியதைக் கண்டோம் .

அவ்வாறு ஓர்எழுத்து ஒருமொழியாக அமையும் தமிழ் எழுத்துகள் எத்தனை என்பதை நன்னூல் பட்டியலிட்டுக் காட்டுகின்றது .

அவற்றை ,

உயிர் ம வில் ஆறும் , தபநவில் ஐந்தும் கவசவில் நாலும் , யவ்வில் ஒன்றும் , ஆகும் நெடில் , நொ , து ஆம் குறில் இரண்டோடு ஓர் எழுத்து இயல்பதம் ஆறேழ் சிறப்பின

என்னும் நூற்பாவின் ( 128 ) வழி நன்னூல் விளக்குகிறது .

4.3.1 ஓர்எழுத்து ஒருமொழி

நன்னூல் மேற்காணும் நூற்பாவில் விளக்கும் செய்திகளைப் பின்வருமாறு பட்டியலிட்டுக் காணலாம் .

உயிர் , மவில் ஆறும் ( 1 ) உயிர்எழுத்துகள் 6

' ம ’ வருக்கத்தில் ஆறு 6 ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ

மா , மீ , மூ , மே , மை , மோ

தபந - இல் ஐந்தும் ( 2 ) ‘ த ’ வருக்கத்தில் ஐந்து 5 ‘ ப ’ வருக்கத்தில் ஐந்து 5 ‘ ந ’ வருக்கத்தில் ஐந்து 5 தா , தீ , தூ , தே , தை

பா , பூ , பே , பை , போ

நா , நீ , நே , நை , நோ

கவச - இல் நாலும் ( 3 ) ‘ க ’வருக்கத்தில் நான்கு 4 ‘ வ ’வருக்கத்தில் நான்கு4 ‘ ச ’வருக்கத்தில் நான்கு 4 கா , கூ , கை , கோ

வா , வீ , வை , வௌ

சா , சீ , சே , சோ

ய வில் ஒன்றும் ( 4 ) ‘ ய ’ வருக்கத்தில் 1 யா

குறில் இரண்டும் ( 5 ) ‘ நொ , து ’ - குறில் 2 நொ , து

மொத்தம் 42

மேலே பட்டியலில் காட்டியபடி தமிழில் ஓர் எழுத்து ஒரு மொழியாக அமைவன 42 என்று நன்னூல் வகுத்துள்ளது .

இப்போது இந்த 42 ஓர் எழுத்து ஒருமொழிகளும் உணர்த்தும் பொருள்களைக் காண்போம் .

இவற்றுள் பல சொற்களின் பொருள் உங்களுக்குத் தெரிந்திருக்கும் .

சில சொற்களை நாம் பேச்சு வழக்கிலே பயன்படுத்துகிறோம் .

பேச்சு வழக்கில் இல்லாத இலக்கிய வழக்குச் சொற்களும் இதில் இடம் பெற்றுள்ளன .

அவற்றின் பொருள்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளுதல் வேண்டும் .

எனவே மேலே கண்ட 42 எழுத்துகளும் உணர்த்தும் பொருள்களையும் ஒவ்வொன்றாகக் காண்போம் .

இந்த 42 எழுத்துகளை மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ளலாம் .

அவை ,

( 1 ) உயிர்எழுத்துகள் - 6

( 2 ) உயிர் மெய் நெடில் எழுத்துகள் - 34

( 3 ) உயிர் மெய்க் குறில் எழுத்துகள் - 2

மொத்தம் - 42

என்று அமையும் .

4.3.2 ஓர்எழுத்து ஒருமொழியில் உயிர் எழுத்துகள்

ஓர்எழுத்து ஒருமொழியாக வரும் உயிர்எழுத்துகள் ஆறும் நெடில்எழுத்துகள் என்பதை இங்கு மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவது நல்லது .

தொல்காப்பியம் கூறும் ஓர்எழுத்து ஒருமொழிகள்பற்றி விளக்கும்போது , இவற்றின் பொருள்கள் எடுத்துக் கூறப்பட்டன .

எனினும் நினைவில் நிற்க வேண்டி மீண்டும் அவற்றின் பொருள் இங்குச் சுட்டப்படுகின்றன .

எழுத்து பொருள்

ஆ - பசு ,

ஈ - ஈ ,

ஊ - இறைச்சி ,

ஏ - அம்பு ,

ஐ - அழகு , தலைவன் ,

ஓ - மதகு நீர் தாங்கும் பலகை .

4.3.3 ஓர்எழுத்து ஒருமொழியில் உயிர்மெய் எழுத்துகள்

உயிர்மெய் நெடில் எழுத்துகளில் , ம , த , ப , ந , க , வ , ச , ய என வரும் எட்டு வருக்கங்களில் வருபவை மட்டுமே ஓரெழுத்து ஒரு மொழிகள் ஆக வந்துள்ளன .

‘ ம ’ வருக்கத்தில் ( 6 )

மா - பெரியது ,

மீ - மேல் , மூ - மூப்பு ,

மே - மேல் ,

மை - மசி ,

மோ - மோத்தல் ( நீர் மோத்தல் - முகத்தல் )

‘ த ’ வருக்கத்தில் ( 5 )

தா , தீ , தை இவற்றின் பொருளை நீங்கள் அறிவீர்கள் .

தூ என்பது தூய்மை , வெண்மை என்றும் ,

தே - என்பது கடவுள் என்றும் பொருள்படும் .

‘ ப ’ வருக்கத்தில் ( 5 )

பா , பூ , பே , பை , போ என வருவனவற்றில் பூ , பை , போ ஆகியவற்றின் பொருள் உங்களுக்குத் தெரியும் .

பா என்பது பாடல் என்றும்

பே என்பது அச்சம் என்றும் பொருள்படும் .

‘ ந ’ வருக்கத்தில் ( 5 )

நா , நீ , நே , நை , நோ இவற்றில் நா , நீ எனவரும் இரண்டு எழுத்துகள் உணர்த்தும் பொருள்களை நீங்கள் அறிவீர்கள் .

நே என்பது அன்பு என்று பொருள்படும் .

நை என்பது வருத்தம் , துன்பம் என்று பொருள்படும் .

நோ என்பது துன்பம் என்று பொருள்படும் .

‘ க ’ வருக்கத்தில் ( 4 )

கா , கூ , கை , கோ இவற்றில்

கா - காப்பாற்று , சோலை

கூ - பூமி

கோ - மன்னன் , தலைவன் .

‘ வ ’ வருக்கத்தில் ( 4 )

வா , வீ , வை , வௌ இவற்றில் வா , வை எனவரும் இரு எழுத்துகளின் பொருளை நீங்கள் அறிந்திருப்பீர்கள் .

வீ - மலர்

வௌ - திருடல் , கவர்தல்

‘ ச ’ வருக்கத்தில் ( 4 )

சா , சீ , சே , சோ இவற்றில் சா என்பது இறத்தல் என்று பொருள்படும் .

சீ இகழ்ச்சிக் குறிப்பாக வரும் ; ஒளி என்றும் பொருள்படும் .

சே எருது ( காளை )

சோ மதில் .

‘ ய ’ வருக்கத்தில் ( 1 )

யா என்பது ஒருவகை மரம் .

• உயிர்மெய்க் குறில்

நொ , து - ஆகிய உயிர்மெய்க் குறில் எழுத்துகள் இரண்டும் ஓர்எழுத்து ஒருமொழிகளாக அமைகின்றன .

நொ என்பது ‘ வருத்து ’ அல்லது ‘ துன்புறுத்து ’ என்ற பொருளையும் , து என்பது ‘ உண் ’ என்னும் பொருளையும் உணர்த்தும் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. பதம் என்பதன் பொருள் வரையறை கூறுக .

விடை

2. ஓர்எழுத்து ஒருமொழி என்றால் என்ன ?

விடை

3. தொடர்எழுத்து ஒருமொழியை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக .

விடை

4. தொல்காப்பியர்வழி நின்று சொல் தோன்றும் முறைகளை விளக்குக .

விடை

5. தொல்காப்பியர் கூறும் ஓர்எழுத்து ஒருமொழிகள் எத்தனை ?

விடை

6. நன்னூலார் கூறும் ஓர்எழுத்து ஒருமொழிகள் எத்தனை ?

அவற்றை வகைப்படுத்துக .

தொல்காப்பியம் - நன்னூல் கருத்து ஒப்பீடு ஓர்எழுத்து ஒருமொழி குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்துக் காண்பது மிகவும் பொருத்தம் ஆகும் .

4.4.1 ஒற்றுமைகள்

( 1 ) தொல்காப்பியமும் நன்னூலும் ஓர்எழுத்தே ஒருமொழியாக வரும் என்பதைக் குறிப்பிடுகின்றன .

( 2 ) பெரும்பாலும் நெட்டெழுத்துகளே ஓரெழுத்து ஒருமொழிகளாக வரும் என்பதை இரு நூல்களும் குறிப்பிடுகின்றன .

4.4.2 வேற்றுமைகள்

( 1 ) தொல்காப்பியம் ஓர்எழுத்து ஒருமொழிகளாக உயிர்எழுத்துகளை மட்டுமே தெரிவிக்கிறது .

நன்னூல் உயிர்எழுத்துகளோடு உயிர்மெய் எழுத்துகளிலும் வரும் ஓர்எழுத்து ஒருமொழிகளைக் கூறுகின்றது .

( 2 ) தொல்காப்பியம் ஏழு உயிர் நெடில் எழுத்துகளையும் ஓர்எழுத்து ஒருமொழிகள் என்று வகுத்துள்ளது .

நன்னூல் , உயிர் நெடில்களில் ‘ ஒள ’ வை நீக்கி விட்டு , ஆறு நெடில்களை மட்டுமே ஓர்எழுத்து ஒருமொழி என்று வரையறுக்கின்றது .

( 3 ) தொல்காப்பிய நூற்பா குற்றெழுத்துகளில் எதுவும் ஓர்எழுத்து ஒருமொழியாக வருவது இல்லை என்று தெரிவிக்கின்றது .

ஆனால் நன்னூல் உயிர்மெய் எழுத்துகளில் இரண்டு குற்றெழுத்துகள் ( நொ , து ) ஓர்எழுத்து ஒருமொழியாக வருவன என்பதைக் கூறுகின்றது .

தமிழ் எழுத்துகள் சொற்களாவதன் தனித்தன்மை

தமிழில் எழுத்துகள் இணைந்து பொருள் தரும் நிலையில் மொழியாக ( சொல்லாக ) உருவாகின்றன .

அவ்வாறு சொற்களாக மாறுகின்றபோது எழுத்துகளில் மாற்றங்கள் நிகழ்கின்றனவா என்னும் ஒரு வினா நம்முன் தோன்றக் கூடும் .

தமிழில் எழுத்துகள் தனித்து ஒலிக்கும்போது எந்த ஒலியைப் பெற்று இருக்கின்றனவோ அதே ஒலியைத் தான் அவை சொற்களில் வந்து அமையும்போதும் பெறுகின்றன .

ஓர் எழுத்து சொல்லாக வரும் போதும் , அல்லது பல எழுத்துகள் சேர்ந்து ஒரு சொல்லாக உருவாகும்போதும் எழுத்தின் ஒலிகளில் மாற்றம் நிகழ்வதில்லை என்பதே தமிழ் எழுத்துகளின் தனித்தன்மை ஆகும் .

இக்கருத்தை அரிய உவமை ஒன்றின் மூலம் நன்னூல் உரையாசிரியர் விளக்குகின்றார் .

“ எழுத்துகள் இணைந்து சொற்கள் உருவாகும்போது அது மணம் தரும் நறுமணப் பொடிகள் ( மஞ்சள் , சுண்ணம் போன்றவை ) கலந்த கலவையாக இருத்தல் கூடாது .

அது வண்ணமலர்களால் தொடுக்கப்பட்ட மாலையாகத் திகழவேண்டும் ” என்பதே அந்த உவமை ஆகும் .

இந்த உவமை உணர்த்தும் பொருள் என்னவெனில் , சுண்ணப் பொடியில் கலந்துள்ள நறுமணப் பொடிகளைத் தனித்தனியே பிரித்து எடுக்க முடியாது .

அதைப்போல அல்லாமல் , சொற்களில் அமைந்திருக்கும் எழுத்துகள் தங்கள் ஒலி அடையாளங்களை இழந்து விடுதல் கூடாது .

மாறாக , மலர் மாலையில் காணப்படும் பூக்கள் இணைந்து நின்றாலும் , அவை மாலையில் இருப்பது தனித்தனியாகத் தென்படுகின்றது .

இதைப் போலவே தமிழ் எழுத்துகள் சொற்களில் அமையும் போது அவை ஒவ்வொன்றும் தத்தம் ஒலிஅமைப்பை இழக்காமல் இருக்கின்றன என்பதை இந்த உவமை உணர்த்துகிறது .

இக்கருத்தை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளங்கிக் கொள்ளலாம் .

தமிழில் எ - ண் - ண - ம் என்று நான்கு எழுத்துகள் சேர்ந்து ‘ எண்ணம் ’ என்ற சொல் உருவாகிறது .

இந்த நான்கு எழுத்துகள் தனித்தனியே ஒலிக்கும்போது எழும் ஒலி ‘ எண்ணம் ’ என்ற சொல்லாகும் போதும் மாறிவிடுவதில்லை .

எனவே தமிழ் எழுத்துகள் தனித்து ஒலிக்கும் போதும் , இணைந்து நின்று சொல்லில் அமையும் போதும் தங்கள் ஒலியின் தன்மையைப் பெரும்பாலும் இழப்பதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் .

பதத்தின் வகைகள்

நன்னூல் , பதம் என்பதை வரையறுக்கும் முதல் நூற்பாவிலேயே பதத்தின் வகைகளையும் வகுத்துக்காட்டியுள்ளது .

நன்னூல் பதத்தை இரண்டு வகையாகப் பிரித்துள்ளது .

அவை ,

( 1 ) பகாப்பதம்

( 2 ) பகுபதம்

ஆகியன .

இதனை ,

எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம் : அது பகாப்பதம் பகுபதம் என இருபாலாகி இயலும் என்ப ( நன்னூல் நூற்பா - 127 )

என விளக்குகின்றது .

இந்த இருவகைப் பதங்களும் எவ்வாறு அமையும் என்பதைக் காண்போம் .

4.6.1 பகாப்பதம்

இது இரண்டு எழுத்துகள் முதலாக ஏழ் எழுத்து ஈறாகத் தொடர்ந்து வரும் என்பது நன்னூல் கூறும் இலக்கணம் ஆகும் .

எடுத்துக்காட்டுகள்

அணி ( 2 ) , அறம் ( 3 ) , அகலம் ( 4 ) , இறும்பூது ( 5 ) , குங்கிலியம் ( 6 ) , உத்திரட்டாதி ( 7 )

என வருவனவற்றைப் பாருங்கள் .

இவற்றில் இரண்டு முதல் ஏழு எழுத்துகள் தொடர்ந்து வந்து சொல்லாகப் பொருள் தருகின்றன .

4.6.2 பகுபதம்

பகுபதம் என்னும் பிரிவிற்குள் வரும் சொற்கள் இரண்டு முதலாக ஒன்பது எழுத்துகளைக் கொண்டிருக்கும் .

பகுபதத்திற்கு எடுத்துக்காட்டுகள் :

கூனி ( 2 ) , கூனன் ( 3 ) , குழையன் ( 4 ) , பொருப்பன் ( 5 ) , அம்பலவன் ( 6 ) , அரங்கத்தான் ( 7 ) , உத்திராடத்தாள் ( 8 ) , உத்திரட்டாதியான் ( 9 )

அடைப்புக்குள்ளே இருக்கும் எண்கள் அந்தச் சொற்களில் அடங்கியிருக்கும் எழுத்துகளின் எண்கள் ஆகும் .

பகாப்பதம் பகுபதம் ஆகிய இரு பதங்களின் இலக்கணங்களை அடுத்த பாடத்தில் விரிவாகக் காண்போம் . தொகுப்புரை

ஓர் எழுத்து தனித்து வந்தோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தோ பொருள் தருமானால் அது ‘ பதம் ’ அல்லது மொழி எனப்படும் .

பதம் , மொழி ஆகிய இரு சொற்களும் ‘ சொல் ’ என்று பொருள்படுவன .

ஓர்எழுத்துத் தனித்து வந்து பொருள் தந்தால் அது ஓர்எழுத்து ஒருமொழி எனப்படும் .

பல எழுத்துகள் தொடர்ந்து ( சேர்ந்து ) வந்து பொருள் தந்தால் அது தொடர்எழுத்து ஒருமொழி எனப்படும் .

இதனால் உணரப்படும் மற்றொரு கருத்து என்னவெனில் , ஓர்எழுத்துத் தனித்தோ அல்லது எழுத்துகள் தொடர்ந்தோ வந்து பொருள் தரவில்லை என்றால் அது சொல்லாவதில்லை என்பதாம் .

எனவே ‘ பொருள்தருதல் ’ என்னும் நிலைப்பாடே எழுத்து அல்லது எழுத்துகள் சொல்லாவதற்கு இன்றியமையாததாகும் .

ஓர்எழுத்து ஒருமொழி குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் விளக்கிக் கூறியுள்ளன .

தொல்காப்பியம் சுருங்கச் சொல்லிய ஓர்எழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கையை நன்னூல் விரித்துக் கூறியுள்ளது .

ஓர்எழுத்து ஒருமொழிகள் அனைத்தும் நெடில் எழுத்துகளாகவே வரும் என்பது அடிப்படைக் கருத்தாக அமைகின்றது .

குறிப்பாக , உயிர்எழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஆறும் ஓர்எழுத்து ஒருமொழிகள் ஆகும் , உயிர்மெய் எழுத்துகளில் நெட்டெழுத்துகள் முப்பத்தி நான்கும் , உயிர்மெய்க் குற்றெழுத்துகளில் இரண்டும் என , 42 எழுத்துகள் ஓர்எழுத்து ஒருமொழிகளாக வருவன என்று நன்னூல் தெரிவிக்கின்றது .

தொல்காப்பியம் ஓர்எழுத்து ஒருமொழி , ஈரெழுத்து ஒருமொழி , தொடர்எழுத்து ஒருமொழி என்ற பகுப்பின் வழி செய்திகளை விளக்குகிறது .

நன்னூல் தொடர்எழுத்து ஒருமொழியைப் பகாப்பதம் , பகுபதம் என்று பெயரிட்டுப் பகுத்துக் காட்டுகிறது .

பகாப்பதம் என்பது இரண்டு முதல் ஏழு எழுத்துகளைக் கொண்ட சொல்லாகும் .

பகுபதம் இரண்டு முதல் ஒன்பது எழுத்துகளைக் கொண்ட சொல்லாகும் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. ஓர்எழுத்து ஒருமொழி குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளை ஒப்பிடுக .

விடை

2. தமிழ் எழுத்துகள் சொல்லாவதற்குக் கூறப்படும் உவமையை விளக்குக .

விடை

3. பதத்தின் வகைகளைக் கூறுக .

விடை

4. பகுபதத்திற்கு எடுத்துக்காட்டுகள் தருக .

விடை

5. பகாப்பதத்திற்கு எடுத்துக்காட்டுகள் தருக .

பகாப்பதமும் பகுபதமும் - பகுதி I

பாட முன்னுரை

எழுத்து , தனித்தோ அல்லது தொடர்ந்தோ வந்து பொருள் தருமானால் அது ‘ பதம்‘ எனப்படும் என்பதை முந்தைய பாடத்தில் அறிந்து கொண்டீர்கள் .

மேலும் அந்தப் ‘ பதம்‘ என்பது ‘ பகாப்பதம்‘ , ‘ பகுபதம்‘ என இருவகைப்படும் என்பதையும் தெரிந்து கொண்டீர்கள் .

பகாப்பதம்

இப்பாடத்தில் பகாப்பதம் , பகுபதம் ஆகியவற்றின் வகைளைக் காண்போம் .

பகுபதத்தின் உறுப்புகள் பற்றியும் அறிந்து கொள்வோம் .

5.1.1 பகாப்பதத்தின் இலக்கணம்

பிரித்தால் பொருள் தராத பதமே பகாப்பதம் ஆகும் .

அது இடுகுறியாக வழங்கிவரும் ; நெடுங்காலமாக ஒரே தன்மையுடையதாக அமைந்திருக்கும் .

( இடுகுறி = காரணம் இன்றி இடப்பட்டு வழங்கி வரும் சொல் )

எடுத்துக்காட்டு :

‘ மழை பொழிகிறது‘ இந்த வாக்கியத்தில் மழை , பொழிகிறது என்ற இரு பதங்கள் ( சொற்கள் ) உள்ளன .

பொழிகிறது என்பதை , பொழி + கிறு + அது என்று பிரிக்கலாம் .

‘ பொழி‘ என்பதைப் பிரிக்கமுடியாது .

பொ , ழி எனப்பிரித்தால் இரண்டு எழுத்துகளுக்கும் பொருள் இல்லை .

அதே போல , ‘ மழை‘ என்பதும் பிரித்தால் பொருள் தராதது , ஆகவே ‘ மழை‘ , ‘ பொழி‘ ஆகிய இரண்டும் பகாப்பதம் ஆகும் .

இப் பகாப்பதம் நான்கு வகைப்படும் .

அவை ,

( 1 ) பெயர்ப்பகாப்பதம்

( 2 ) வினைப் பகாப்பதம்

( 3 ) இடைப் பகாப்பதம்

( 4 ) உரிப் பகாப்பதம்

ஆகியன .

5.1.2 பகாப்பதத்தின் வகைகள் ( 1 ) பெயர்ப் பகாப்பதம் :