சொல்
( வ.உ.சிதம்பரம் பிள்ளை - 2 )
என்று உளமாரப் பாராட்டியிருக்கிறார் .
நாமக்கல் கவிஞரும் பாரதியைப் போன்று விடுதலைப் பாடல்கள் பாடியதற்குக் ‘ காந்தி அஞ்சலி ’ என்ற தலைப்பில் உள்ள பாடல்களே தக்க சான்று .
காந்தியென்ற சாந்தமூர்த்தி
தேர்ந்துகாட்டும் செந்நெறி
மாந்தருக்குள் தீமை குன்ற
வாய்ந்த தெய்வ மார்க்கமே
( காந்தி அஞ்சலி )
இப்பாடலில் காந்தியின் அரசியல் நெறியைப் பாராட்டுகிறார் நாமக்கல் கவிஞர் .
இது போலவே பாரதி பாடிய ஏனைய பாடுபொருள்களான தேசியத் தலைவர்கள் , சமுதாய முன்னேற்றம் , இயற்கை முதலிய பாடுபொருள்களையும் , அவருடைய எளிய நடையையும் , பழகு தமிழில் அமைந்த சொற்களையும் , யாப்பு வகையையும் அடியொற்றிப் பாரதிதாசன் , கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை , நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை , பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்ற புலவர்கள் பாடியிருக்கின்றனர் .
அவற்றில் சில பாடல்களைப் பார்க்க ஆவலாக உள்ளதல்லவா ?
ஏழைச் சிறுமியர் நிலை
சமூகத்தில் புரையோடிச் செல்லரித்து வந்த மூட வழக்கங்களை , குருட்டு நம்பிக்கைகளை வேரறுக்கப் பாரதியாரையும் , பாரதிதாசனையும் போல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் கவிதை இயற்றிருக்கிறார் .
நாட்டில் நிலவும் வறுமை , பட்டினி , பசி கண்டு நெஞ்சம் கரைந்தவர் பாரதி .
கவிமணியும் அவரைப் போல் ஏழைகளின் அவல நிலையையும் ஏக்கங்களையும் ,
அன்னப்பால் காணாத ஏழைகட்கு - நல்ல
ஆவின்பால் எங்கே கிடைக்கும் அம்மா
காப்பி காப்பியென்று கத்துவீரே - அதைக்
கண்ணிலே கண்டதும் இல்லை யம்மா !
( ஏழைச் சிறுமியர் மனப்புழுக்கம் - 8,11 )
என்ற பாடல்களில் சின்னக் குழந்தைகளே தம் வாயால் தங்கள் அவல நிலையைக் கூறுவதாகச் சித்தரித்துள்ளார் .
குழந்தையின் குதூகலம்
பாரதி குழந்தைகளுக்காகப் பாடியது போன்று கவிமணி குழந்தைச் செல்வம் என்னும் நூலைக் குழந்தைகளுக்கே உரிமையாக்கி வைத்தார் .
குழந்தையைக் குதூகலப்படுத்தும் பாடல் ஒன்றைப் பாருங்கள் .
சிங்கார மான வண்டி
சீமையிலே செய்த வண்டி
மாடில்லை குதிரையில்லை
மாயமதாய்ப் பறந்திடும் பார்
அக்காளும் தங்கையும் போல்
அவைபோகும் அழகைப் பார்
( மலரும் மாலையும் , சைக்கிள் , 2,4 , 8 )
இந்தப் பாடல் பாரதியாரின் பாட்டை எதிரொலிப்பது போல் உள்ளது அல்லவா ?
படிப்பும் உழைப்பும் தேவை
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் , கல்வி , உழைப்பு ஆகியவற்றின் தேவையை ,
படிப்புத் தேவை - அதோடு
உழைப்பும் தேவை - முன்னேற
படிப்புத் தேவை..
வீரத் தலைவன் நெப்போ லியனும்
வீடு கட்டும் தொழிலாளி
ரஷ்யா தேசத் தலைவன் மார்சல்ஸ்டாலின்
செருப்புத் தைக்கும் தொழிலாளி
விண்ணொளி கதிர் விவரம் கண்ட
சர்.சி.வி. ராமனும் தொழிலாளி
( பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதைகள் )
என்று வரலாற்றுப் புகழ் பெற்ற மேதைகளைச் சான்று காட்டிச் சிறப்பாகப் பாடியிருக்கிறார் .
பாடல்கள் எளிமையாக இருக்கின்றன அல்லவா ?
இவ்வாறு பாரதியார் உருவாக்கிய புதுயுகத்தில் பல கவிஞர்கள் பாடல்கள் இயற்றியுள்ளனர் .
இன்றும் அவரைப் பின்பற்றிக் கவிதைகள் இயற்றும் அளவு பாரதியின் செல்வாக்கு நிலைத்து நிற்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது . பாரதியின் அடியொற்றிப் பாடிய ஒரு குழுவும் , பாரதிக்குத் தாசனாக விளங்கிய பாரதிதாசனை அடியொற்றிப் பாடுகிற ஒரு குழுவுமாகக் கவிஞர்களைக் கூறும் மரபும் இன்றும் நின்று நிலவுகிறது .
5.6 தொகுப்புரை
தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு புதிய யுகத்தைப் பாரதி தோற்றுவித்த செய்திகள் இங்குத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன .
அவர் , முந்தைய புலவர்கள் பாடிய வடிவத்தையும் பாடு பொருளையும் மனத்தில் கொண்டு பாடியிருப்பது புலனாகிறது .
பழைய வடிவங்களில் காலத்திற்கு ஏற்பப் புதுப் பாடு பொருள்களைக் கொண்டும் பாடல்கள் பாடியிருப்பது தெரிய வருகிறது .
அவை நாடு , கொடி , சுதந்திரம் ஒற்றுமை , பெண்கள் முன்னேற்றம் , சாதி சமய ஒழிப்பு , உலகியல் வாழ்வுக்கான அறிவுரை முதலியனவாகும் .
அவர் புதிதாகப் படைத்த யாப்பு வடிவங்களான வசன கவிதை , சுய சரிதை ஆகியவை பற்றியும் விளக்கிக் கூறும் முயற்சி இந்தப் பாடத்தில் மேற்கொள்ளப்பட்டது .
பாரதியாரின் பாடல்களின் தாக்கத்தினால் தோன்றிய புலவர்களில் சிலரையும் இனம் காட்டுகிறது .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. பாரதியார் கையாண்ட பழைய வடிவங்களில் மூன்றின் பெயர் தருக .
[ விடை ]
2. பாரதியார் ஆத்திசூடி என்னும் நீதி நூலை எழுதத் தூண்டுதலாக இருந்தவர் யார் ?
[ விடை ]
3. திருப்பள்ளி எழுச்சிப் பாடலில் பாரதியார் யாரைத் துயில் உணர்த்துகிறார் ?
[ விடை ]
4. பாரதியார் , புது வடிவத்தில் தந்த பழைய பாடுபொருள் கொண்ட கவிதை எது ?
அதன் வாயிலாக நீவிர் அறிந்து கொள்வது என்ன ?
[ விடை ]
5. பாரதி புதிதாகப் படைத்த வடிவம் ( யாப்பு ) எது ?
[ விடை ]
6. பாரதி காட்டிய வழியில் நடைபயின்ற கவிஞர்கள் யார் ?
பாரதியார் வாழ்கிறார்
6.0 பாடமுன்னுரை
உடம்பைப் பொய்யென்று கூறும் ,
காயமே இது பொய்யடா - வெறும்
காற்றடைத்த பையடா !
( சித்தர் பாடல் )
( காயம் = உடம்பு )
என்ற இந்தக் கருத்துச் சரியானதா ?
பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லக் கழிந்து போவது தான் வாழ்வின் இலக்கணமா ?
நீரிற் குமிழி , நீர்மேல் எழுத்து என்றெல்லாம் சொல்லத் தக்கதுதான் நம் உடம்பா ?
எலும்பும் சதையும் , குருதியும் நரம்பும் கொண்டு அமைந்த இவ்வுடல் பரிணாமத்தின் ஒரு குறியீடு .
வளர்ச்சியில் இவ்வுடல் அழிவதும் உண்மையே .
ஆனால் இத்தகைய அழியக் கூடிய உடம்பைக் கொண்டு எண்ணற்ற மனிதர்கள் , பலப்பல அழியாத , நிலையான செயல்களைச் செய்துள்ளார்களே !
கோபர்னிகஸ் , கலீலியோ , நியூட்டன் , டார்வின் , ஐன்ஸ்டீன் என்ற அறிவியல் அறிஞர்களும் , அலெக்சாண்டர் , அக்பர் , சிவாஜி , நெப்போலியன் , விக்டோரியா அரசியார் , ஜான்சிராணி போன்ற மாவீரர்களும் , திருவள்ளுவர் , சாணக்கியர் , மாக்கியவெல்லி , பிளேட்டோ , அரிஸ்டாடில் , வால்டேர் , ரூசோ போன்ற அரசியல் மேதைகளும் , கௌதமபுத்தர் , மகாவீரர் , கன்பூசியஸ் , இயேசுகிறிஸ்து , முகமது நபி , விவேகானந்தர் போன்ற சமய ஞானிகளும் , ஆபிரகாம் லிங்கன் , அண்ணல் காந்தியடிகள் , மார்ட்டின் லூதர் கிங் போன்ற சான்றாண்மைச் செல்வர்களும் இறந்து விட்டார்களா ?
இவர்களுடைய முகங்களும் , எழுத்துகளும் பேச்சுகளும் மக்கள் நினைவிலிருந்து மறைந்து விட்டனவா ?
இல்லை .
இவர்கள் வாழ்கிறார்கள் ; என்றும் வாழ்வார்கள் .
செவியினால் நுகரப்படும் அறிவுப்பொருள்களின் சுவைகளை உணராமல் , வாயினால் உண்ணப்படும் உணவிலேயே ஆர்வம் காட்டும் மக்களால் இந்த உலகத்திற்கு எந்தப் பயனும் இல்லை .
அவர்கள் வாழ்ந்தாலும் வாழ்ந்தவர்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர் .
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்
( குறள் : 420 )
( மாக்கள் = மக்கள் , அவியினும் = அழிந்தாலும் , என் = என்ன )
உண்டு உடுத்து உறங்கிப் பின் இறந்துபடும் எண்ணற்றவர் இருப்பினும் இல்லாது போயினும் ஒன்றே அல்லவா ?
எனவே மனித வாழ்வு நிலையற்றது தான் .
எனினும் , அதனைக் கருவியாகக் கொண்டு அரியன செய்து சாகாத்தன்மை பெறலாம் என அறிகிறோம் .
இதற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ்பவர் பாரதியார் .
அவர் இன்றும் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது பற்றிய செய்திகள் இப்பாடத்தில் கூறப்படுகின்றன .
6.1 மனித வாழ்வு ஒருவர் பிறந்ததிலிருந்து இறக்கும் வரையில் , இடையில் உள்ள காலப்பகுதியை வாழ்க்கை என்று கூறுகிறோம் .
உயிரோடு இருப்பது மட்டுமல்லாமல் , உயிர்ப்போடு இருப்பது தான் வாழ்வு என்று குறிப்பிடப்படுகிறது .
இது பொருள் பொதிந்ததாக இருப்பது தான் உயிர்ப்பு எனப்படும் .
பொருள் என்பது குறிக்கோளை மேற்கொண்டிருப்பதாகும் .
இந்தக் குறிக்கோளை முடிவு செய்ய , நமது உடல் பற்றியும் நாம் வாழும் உலகம் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் .
6.1.1 நிலையும் நிலையின்மையும்
‘ வாழ்வாவது மாயம் ; மண்ணாவது திண்ணம் ’ என்ற நிலையில்லாமை உடம்புக்கே உரியது .
பொய் உடம்பு கொண்டு ஈட்டும் புகழுடம்பு நிலையானது .
புகழ் உடம்பு முழுமை அடையும் போது , பூத உடம்பு அழிந்து விடும் .
இது அறிவு ஆற்றல் உடையவர்க்கே அமையும் என்பதனை ,
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது
( குறள் : 235 )
( நத்தம் = ஆக்கம் , சாக்காடு = சாதல் , வித்தகர் = அறிவு ஆற்றல் உடையவர் )
என்றார் திருவள்ளுவர் .
நிலையின்மைக்குள் ஒரு நிலைபேறு உண்டாக்கும் ஆற்றல் சிலருக்கு வாய்க்கின்றது .
அவர்கள் தங்கள் உடம்பு அழிந்த பின்னும் வாழ்கின்றனர் .
6.1.2 சிலரே வாழ்கின்றனர்
கோடிக்கணக்கான மனிதர்களில் சிலரே அவர்கள் இறந்த பின்னரும் மக்கள் மனத்தில் நிலைத்து வாழ்ந்து வருகின்றனர் .
பலப்பல தலைமுறைகள் சென்ற பின்னும் நினைந்து போற்றப்பெறுகின்றனர் .
அதற்குக் காரணம் யாது ?
அவர்கள் தம்மை நினையாது வாழ்ந்தமையே .
பிறருக்காக வாழ்ந்தவர்கள் பெருமை பெற்றார்கள் .
நினைக்கப் பெற்றார்கள் .
நல்லோர் இமயமலையைப் போல் , நெடுந்தூரத்திலிருந்தே
பிரகாசிக்கின்றனர் ; ஆனால் தீயோர் இரவின் இருளூடு
எய்த அம்புகளைப் போல் , கண்ணுக்கே புலனாவதில்லை .
( தம்ம பதம் , 21-15 )
என்கிறார் புத்தர் .
‘ மனிதர் பலர் மடிந்தனர் ; பார்மீது நான் சாகாதிருப்பேன் ’ என்கிறார் பாரதி .
வாழும் சிலரில் , பாரதி ஒருவராகத் திகழ்கின்றார் .
6.1.3 பொய் உடம்பும் புகழ் உடம்பும்
மனிதனின் பூத உடம்பு வீழ்வதாகிய சாவும் ஓர் இயற்கை நிகழ்வேயாம் .
ஆனால் வாழும் காலத்துச் செய்யும் அருஞ்செயல்களால் , தசை உடம்பாகிய பொய் உடம்பு வீழ்ந்த பின்னும் , புகழ் உடம்பாகிய மெய் உடம்பு பெற்று விடுகின்றனர் மனிதரில் மிகச் சிலர் .
இப்புகழ் உடம்பிற்கு எந்த ஊழியிலும் முடிவு என்பது இல்லை .
உலகம் நிலை இல்லாத ஒன்று .
நேற்று உயிரோடு இருந்த ஒருவர் இன்று உயிரோடு இல்லை என்பது தான் உலகத்தின் இயல்பாக உள்ளது என்பதனை ,
நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்உலகு
( குறள் : 336 )
( நெருநல் = நேற்று )
என்று பூத உடம்பாகிய பொய் உடம்பைக் குறித்து வள்ளுவர் குறிப்பிடுகிறார் .
மேலும் , மேற்குறிப்பிட்டவாறுள்ள நிலையில்லாத உலகத்து நிலைத்து நிற்பது புகழ் ஒன்றே என்பதனை ,
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இல்
( குறள் : 233 )
( ஒன்றா = தனக்கு இணையில்லாத , பொன்றாது = இறவாது )
என்று புகழுடம்பாகிய மெய் உடம்பு குறித்து வள்ளுவர் குறிப்பிடுகிறார் .
6.1.4 பாரதி பெற்ற நிலைபேறு
முப்பத்தொன்பது ஆண்டுகளே மண்ணுலகில் வாழ்ந்த பாரதி நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்த மனிதர்களும் பெற முடியாத புகழையும் , நிலைபேற்றையும் பெற்றுவிட்டார் . காலா !
உனை நான் சிறுபுல்லென மதிக்கிறேன் ; என்றன்
காலருகே வாடா !
சற்றே உனை மிதிக்கிறேன்
( காலனுக்கு உரைத்தல் )
என்றும் ,
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர்புகழ் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான் ;
பார்மீது நான்சாகா திருப்பேன் காண்பீர் !
( பாரதி அறுபத்தி ஆறு - 6 )
என்றும் கூறியது மெய்யாகி விட்டது .
அவருடைய எலும்பையும் தோலையுமே காலன் கவர்ந்து கொள்ள முடிந்தது .
ஆனால் அமரகவி இசைத்த கவிதைகள்...
சாதிகள் இல்லையடி பாப்பா...
செந்தமிழ் நாடென்னும் போதினிலே....
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி....
சிந்துநதியின் மிசை நிலவினிலே....
நெஞ்சு பொறுக்கு திலையே...
தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில்..
யாமறிந்த மொழிகளிலே....
பாயுமொளி நீயெனக்கு...
சின்னஞ்சிறு கிளியே...
இப்படி எத்தனையோ பாடல்கள் நம் செவியில் காலங் காலமாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றன .
தொடக்கக் கல்வியிலிருந்து பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பட்டம் பெறுவது வரையில் பாரதி பலராலும் கற்கப் பெறுகிறார் .
தேசிய ஒருமைப்பாட்டின் குரலையும் , தமிழ்மொழியின் எதிர்கால வளர்ச்சியையும் , பொதுவுடைமைக் குறிக்கோளையும் , உலகளாவிய மனிதநேயத்தையும் இன்று உலகின் பல திசைகளிலிருந்தும் பாரதியின் பாட்டு எதிரொலிக்கின்றது .
6.2 பாரதி வாழ்ந்த சூழல்
பாரதி எட்டயபுரத்தில் பிறந்தார் .
திருநெல்வேலியில் பயின்றார் .
காசிக்குச் சென்றார் .
பிறகு எட்டயபுரம் திரும்பி வந்தார் .
மதுரையில் சில திங்கள் தமிழாசிரியராகப் பணி செய்தார் .
சென்னையில் நான்காண்டுகள் பத்திரிகைப் பணியாற்றினார் .
1908 முதல் பத்தாண்டுகள் புதுவையில் தங்கி
எழுத்துப்பணி பல செய்தார் .
1918-இல் கடையத்திற்குச் சென்று பின் மீண்டும் சென்னைக்குத் திரும்பினார் , 1921-இல் பாரதி இறந்து விட்டார் .
பாரதி வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியும் , புதுவையில் பிரெஞ்சுக்காரர் ஆட்சியும் இருந்தன .
பொதுநிலையில் தமிழகத்திலும் , இந்தியாவின் பிற பகுதிகளிலும் புதுவையிலும் ஒரே வகையான சூழலே நிலவியது .
எழுத்தறிவில்லாத பெரும்பான்மை மக்கள் .
வறுமையில் பழகிய சமூகம் .
எந்தக் கொடுமையையும் இழிவையும் தலைவிதி என ஏற்கப் பழகிய மனப்பாங்கு கொண்ட குடிமக்கள் .
மூடப் பழக்கங்களும் மூட நம்பிக்கைகளும் மலிந்த வாழ்க்கை முறை .
அச்சத்தில் உரிமைகளை வேண்டாத மனநிலை .
தம்முடைய உடைமைகளைப் பாதுகாக்க அறியாத மடமை .
தம் நாட்டை யார் ஆண்டால் என்ன என்ற கவலையற்ற உளப்போக்கு
புதுமை , புரட்சி , சீர்திருத்தம் ஆகிய எவற்றுக்கும் இடமின்றி வளர்ந்த பத்தாம் பசலி எண்ணங்கள் .
இவையே அக்காலச் சூழலில் குறிக்கத்தக்க பண்புகள் .
அக்கால இலக்கிய முயற்சிகள் எல்லாம் கடவுளையும் , செல்வந்தர்களையுமே குறித்து அமைந்தன .
இந்தச் சூழலில் தோன்றிய பாரதி ஓர் எதிர் நீச்சல்காரராக உருவெடுத்தார் .
6.2.1 எட்டயபுரத்தில் வாழ்நாள் முடிந்த பின்னரும் ஒருவர் ‘ வாழ்கிறார் ’ என்று கூறப்பட வேண்டுமாயின் அவருடைய வாழ்வில் அதற்குரிய அடித்தளங்கள் அமைந்திருக்க வேண்டும் .